அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுடன் மக்கள் கலை இலக்கிய கழகம்,
மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் மட்டுமல்லாது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று மதுரை பெரியார் சிலை அருகே போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.