திருமணஞ்சேரி கோயிலில் நடக்கும் கொள்ளை!

கொடுமைக் கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ஒரு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுனுச்சாம் அந்தக் கதையாக இருக்குது இந்த காலத்துல கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் நிலைமை.

திருமணஞ்சேரி என்றாலே பலருக்கும் தெரியும், தஞ்சைக்கு அருகிலுள்ள மாயவரத்திற்கும் குத்தாலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது இத்திருத்தளம். திருமணம் ஆக வேண்டி ஆண்களும் பெண்களும், அன்றாடம் பல்வேறு ஊர்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு வந்து செல்வது உண்டு. இக்கோயிலில் கல்யாணசுந்தரரும், கோகிலாம்பிகையும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். காரணம் திருமணம் ஆகாதவர்கள் கல்யாணசுந்தருக்கு மாலைச் சார்த்தி அர்ச்சனை செய்து வழிப்பட்டால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறுகின்றனர் பக்தர்கள். சினிமாத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நடிகை, நடிகர்களும் கூட திருமணம் ஆகவேண்டி இந்த கோயிலுக்கு வருகின்றனர். திருமணம் ஆன தம்பதிகள் தங்களுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக மீண்டும் வந்து வழிபடுகின்றனர்.

thirumancheri

இத்தனைச் சிறப்புகளுடைய இத்திருத்தளத்தின் வாயிலில் நுழையும் போதே அவர்களின் பர்சுகளில் உள்ள பணத்திற்கு வேட்டு வைக்கின்றனர் இங்கு வியாபாரம் செய்பவர்கள். ஆமாங்க நானும் இந்த கோயிலுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சென்றிருந்தோம். வாயிலில் மிகக்குறைவான அளவே கடைகள் இருந்தன. அப்போதே மனதிற்குள் சிறு சந்தேகம் எழுந்தது. எங்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நச்சரித்தனர் அப்பகுதியில் மாலை விற்பனை செய்பவர்கள். திருமணம் ஆக வேண்டி சென்றால் கண்டிப்பாக இரண்டு மாலைகள் வாங்கிச் செல்லவேண்டும் என்றனர்.

  • இரண்டு மாலையின் விலை ரூ. 200 எனக்கூறி ஒரு பையில் போட்டுக்கொடுத்தனர். என்னடா இரண்டு மாலையை இவ்வளவு சிறிய பைக்குள்ள அடக்கிவிட்டார்களே என்று பிரித்துப்பார்த்தால் 1 ஜான் அளவுள்ள அரலிப்பூவை மாலைன்னு சொல்லி எல்லாரோடத் தலையிலும் கட்டிவிட்டார்கள்.. 5 ரூ. பூவை மாலைன்னு சொல்லி 200 ரூபாய்க்கு வாங்குபவர்கள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டும் தான். தொடங்கியது முதல் ஏமாற்றம்.
  • பத்தாத குறைக்கு குங்குமம், மஞ்சளையும் நீட்டினர். இச்சிறிய பாக்கெட்டின் விலை 20 ரூபாயாம். இரண்டாவது ஏமாற்றம்.
  • உள்ளே சென்றதும் சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு அர்ச்சனை செய்துமுடித்ததும் குருக்கள் சொன்னார் நீங்கள் அனைவரும் வெளியில் இருந்து மாலைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இந்தப்பொருட்களை நாங்கள் கடவுளுக்கு அணிவிப்பது இல்லை. வேண்டுமென்றால் வெளியில் உள்ள இராகு கேதுவிற்கு சாத்திவிட்டு செல்லுங்கள் என்றார். அமைதியாக பிரார்த்தனை செய்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இது தாங்க எல்லாருக்குமே பெரிய ஏமாற்றம்.
  • சரி ஏமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் பிரார்தனை ஒரு வழியாக நன்றாக முடிந்தது. வீட்டிற்குச் செல்லலாம் என்று வெளியில் வந்தால் பாவிப்பயலுங்க இந்த ஊருக்கு பேருந்தே கிடையாதுன்னு சொல்றாங்க. ஒரு நாளைக்கு அரசுப்பேருந்து 3 லிருந்து 4 மட்டுமே வந்து செல்கிறது. ஆனால் பேருந்து நிலையம் மட்டும் ஒன்றுக்கு இரண்டா பெரிய அளவில் அம்மா பேருந்து நிலையம்னு கட்டி வச்சுருக்காங்க. பக்கத்துல உள்ள குத்தாலம் பஸ் ஸ்டாப்புக்கு போனால் எல்லா ஊருக்குமே பஸ் கிடைக்கும். சும்மா இருந்தவன் வாய்க்கு தீனி போட்ட மாதிரி இருக்கு இப்பகுதி ஷேர் ஆட்டோக்காரங்களுக்கு. வெறும் 6 கி.மீ தூரம் போறதுக்கு தலைக்கு 40ரூபாயம் வாங்குறாங்க. யப்ப்பா எப்படியல்லாம் கொல்லையடிக்கிறாங்க.

மொத்தத்துல ஏமாற்றத்துல ஆரம்பிச்சு ஏமாற்றத்துலதான் முடிகிறது இந்தக்காலத்து கோவில் வழிபாடும்.

– கவிதா

1 comments

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.