மனம்பிறழ்ந்த தமிழக காவல் துறை: ப. ஜெயசீலன்

ப. ஜெயசீலன்

2011 ஆகஸ்ட் 4, லண்டன்…29 வயது கருப்பின இளைஞர் லண்டன் போலீசால் சுட்டு கொல்லப்பட்டார். நமது போலீஸ் வழக்கமாக சொல்லும் அதே காரணத்தையே லண்டன் போலீசும் சொன்னது. அந்த இளைஞர் எங்களை நோக்கி சுட்டார். நாங்கள் தற்காப்புக்காக அவரை சுட்டு கொல்ல வேண்டியதாகிவிட்டது என்று அறிக்கை வெளியிட்டது. ஏற்கனவே தங்கள் மீதான போலீஸ் அடக்குமுறைகளால் மிகுந்த ஆவேசத்தில் இருந்த இங்கிலாந்து வாழ் கறுப்பினத்தவர்கள் மிகுந்த ஆவேசம் கொண்டு போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த போராட்டம் ஒரு பெரிய கலவரமாக வெடித்தது. ஆகஸ்ட் 6 முதல் 11 முதல் நடந்த அந்த கலவரம் இங்கிலாந்து வரலாற்றில் அதற்க்கு முன் கண்டிராதது.

ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் இங்கிலாந்து முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட 20 கோடி பவுண்ட்(ரூபாய் அல்ல) மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களாலும், கலவர நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் 5 பேர் பலியானார்கள். அப்பொழுது டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தார். உலகின் அதிநவீன சிறப்பு பயிற்சிபெற்ற, அதிநவீன தொழிநுட்ப வசதிகளை பெற்ற, மிக நவீனமான ராணுவத்தையும், போலீஸ் துறையையும் கையில் வைத்திருந்த அவர் நினைத்திருந்தால் கலவரத்தை 1 மணிநேரத்தில் அடக்கி ஒடுக்கியிருக்க முடியும். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெரும்பாலான ராணுவ வீரர்கள் கண்ணிலேயே பார்த்திராத துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் பயன்பாட்டில் வைத்திருக்கும் உலகின் தலைசிறந்த காவல் துறையில் ஒன்றாக கருதப்படும் லண்டன் காவல் துறையின் கமிஷனர் நினைத்திருந்தால் அந்த கலவரத்தை நசுக்கியிருக்க முடியும். ஆனால் இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து காவல் துறையும் மிக மிக கவனமாகவும், நிதானமாகவும் இந்த கலவரத்தை அனுகியது. கலவரம் செய்பவர்களின் கோபத்தில் உள்ள தார்மீக நியாயத்தையும், அதில் ஈடுபடுபவர்கள் தங்களது சொந்த நாட்டு மக்கள் என்பதை மனதில் கொண்டும், தாங்கள் இழைக்கும் சிறு தவறு கூட தங்கள் சமூகத்தில் நிரந்தர பிளவையும், வெறுப்பையும் விதைத்துவிடும் என்னும் கவலையிலும் பொலிஸாலோ, ராணுவத்தாலோ இன்னும் ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது என்று மிக உறுதியாக நின்று அந்த கலவரத்தை அடக்கினார்கள்.

சூரியன் மறையாத நாட்டின் அரசகுடும்பமும், இங்கிலாந்து பிரதமரின் வீடும், அந்த நாட்டின் ராணுவ தலைமையகமும் இருக்கும் லண்டன் மாநகரத்தின் போலீஸ் கமிஷனரின் அதிகாரத்தோடும், வலிமையோடும் ஒப்பிட்டால் தூத்துக்குடி asp செல்வ நாகரத்தினமோ, பரமக்குடியில் 7 பேரை சுட்டு கொன்ற செந்தில்வேலனோ லண்டன் கமிஷனரின் குசுவுக்கு கூட சமமான ஆள் கிடையாது என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் லண்டன் போலீஸ் காட்டிய நிதானத்தையோ, பொறுமையையோ கொஞ்சமும் கடைபிடிக்காமல் தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை அடக்குவதாய் கூறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளார்கள் என்பது பதைபதைக்க வைக்கிறது. நாம் உண்மையில் அரசியல் சாசனத்தின் படி நடக்கும் ஒரு ஜனநாயக அமைப்பில்தான் இருக்கிறோமா என்பது கேள்விக்குறியாகிறது. உண்மையிலேயே நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள்தானா என்ற கேள்வியும் எழுகிறது. இவையெல்லாவற்றையும் விட தமிழக காவல்துறையினரின் இருப்பை பற்றியும், ஒரு அமைப்பாக அந்த அமைப்பின் மனோ நலன் பற்றியும் எனக்கு தீவிரமான கவலைகள் எழுகின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற அதே வாரத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் பங்கேற்ற Women’s March on Washington பெண்களின் உரிமைகளை கோரி நடைபெற்றது. உலகின் இணையற்ற வல்லரசின் அதிபர் வசிக்கும் ஒரு நகரில் 5 லட்சம் பேர் பேரணி செல்லவும், ஆர்பாட்டம் நடத்தவும் வாஷிங்ட்ன் காவல்துறை அனுமதி அளித்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. இது தொடர்பாக பேட்டியளித்த வாஷிங்டன் கமிஷனர் இதை தங்களது நாட்டின் ஜனநாயக பெருமையாக பார்ப்பதாக பேட்டியளித்தார். அந்த வாஷிங்டன் கமிஷனரின் அதிகாரத்திற்கும் பலத்திற்கும் முன்பு மயிரளவு கூட பெறாத கமிஷனர் ஜார்ஜ் ஜல்லிக்கட்டு போராட்டத்தை காவல்துறையை ஏவி ரவுடித்தனம் செய்து ஒடுக்கினார்.

நமது காவல்துறைக்கு என்னதான் பிரச்சனை? ஏன் இப்படி அதன் அதிகாரிகள் பொறுக்கித்தனம் செய்வதை policing என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்? அவிழ்த்துவிடப்பட்ட வேட்டைநாய்களின் குணநலன்களை அவர்கள் கொண்டிருப்பதன் காரணம் என்ன? ஒரு அமைப்பாக நமது காவல்துறை ஏன் மனப்பிறழ்வு நோயிற்கு ஆட்பட்டிருக்கிறது? ஏன் அவர்களுக்கு சில்லறைத்தனமான அடக்குமுறை சாகசங்களில் ஆர்வம் ஏற்படுகிறது? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சீருடை கூட அணியாமல், செருப்பில்லாத வெறுங்காலுடன் வண்டி மீது ஏறிநின்று தன்போக்கில் கூட்டத்தை பார்த்து சுடும் போலீஸின் முகத்திலிருக்கும் தீர்க்கமும், தெளிவும், கிளர்ச்சியும் மனதை உறையவைக்கிறது. இவர்கள்தான் நமது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயுத பயிற்சி பெற்று நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது மிகுந்த மனஉளைச்சல் ஏற்படுகிறது.

செய்திகளில் காவலர்கள் மனஉளைச்சலின் காரணமாக சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக படித்திருப்பீர்கள். அப்பொழுதெல்லாம் எனக்கு எழுந்த கேள்வி ஏன் அவர்களுக்கு தன்னுடைய உயர் அதிகாரிகளை சுட தோன்றவில்லை என்று? இதற்கான விடையில்தான் தமிழக காவல்துறையின் மனப்பிறழ்வுக்கான விடை உள்ளது. ராணுவ வீரர்கள் தங்களது உயர் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற செய்திகளை படித்திருக்கிறோம். எங்காவது காவலர் உயர் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற செய்தியை படித்திருக்கிறோமா? infact தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வது இந்திய அளவில் அதிகம் என்று படித்திருக்கிறேன். தமிழக காவல்துறையினர் மிக திறமையாக வேட்டை நாயும், செல்ல நாயும் சேர்ந்த கலவையாக காவலர்களை உருவாக்குகிறார்கள். உலக அளவில் policing என்பதை குறித்தான கருத்தாக்கங்கள் மாறிக்கொண்டிருப்பதை பற்றியோ, policing என்பதின் நவீன செயல்பாடு/பங்களிப்பு பற்றியோ நமது காவல்துறைக்கு மயிரளவு கூட கவலையில்லை. காவல்துறையினரின் சுயமரியாதையை சிதைத்து அவர்களை ஒரு பூச்சை போல உணரவைத்து பிறகு செல்ல நாய் மற்றும் வேட்டை நாய் இரண்டும் கலந்த பயிற்சியை கொடுத்து வெளியில் விடுகிறார்கள். அதனால்தான் மிகுந்த மனஉளைச்சலில் கூட தனது மன உளைச்சலுக்கு காரணமான அதிகாரியின் மீது கோபம் கொள்ளாமல் அவர்களை தண்டிக்க முனையாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுதெல்லாம் செல்ல நாயை அழைத்து பந்தை தூக்கி தூர எறிந்தால் எப்படி கண்முன் தெரியாமல் ஓடி அந்த பந்தை எடுத்துவந்து தனது எஜமானனிடம் கொடுக்கிறதோ, எப்பொழுதெல்லாம் முயல் வலைக்குள் இருந்து வெளிப்பட்ட உடன் வேட்டை நாயை அவிழ்த்துவிட்டால் எப்படி அது மூர்க்கமாக ஓடி முயலை கவ்வி எஜமானிடம் கொடுக்கிறதோ அதே போன்ற பாவத்தில் நமது காவல்துறையினரும் மிக நேர்த்தியாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்தான் அவர்களுக்கான stress buster. தங்களை தங்களது உயர் அதிகாரிகள் நாய்களை விட கேவலமாக நடத்தி, உழைப்பு சுரண்டல் செய்து, ஓய்வில்லாமல் வைத்திருக்கும் நிலையில் தூத்துக்குடி போன்ற சம்பவங்கள்தான் அவர்களுக்கு அவர்களின் வெறிநாய் மனநிலையை தீர்த்துக்கொள்ள உதவுகிறது. அந்த வெறி நாய் மனநிலை இல்லாத ஒருவரால் தான் யார் என்னவென்று தெரியாத ஒருவரை, தனது சொந்த மாநில, மொழி மக்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் பொறுக்கித்தனமாக சுட வைக்கிறது.

இதனோடு தன்னை நவீன இயக்குனராய் நிறுவிக்கொண்டுள்ள கவுதம் போன்றவர்களும், சமூக அரசியல் பார்வை கிஞ்சித்தும் அற்ற ஹரி போன்ற இயக்குனர்களும் போலீஸ் என்றால் இரண்டு ஆண்குறிகளோடு பிறந்து வந்திருக்கும் காவல் தெய்வங்கள் என்னும் ரீதியில் எடுத்த பொறுக்கித்தனமான, மடத்தனமான, பிற்போக்குத்தனமான, காரி முகத்தில் உமிழ கூடிய அளவிலான கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படங்களும் போலீசாரின் மனநிலையில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். இது போன்ற படங்களின் நாயகர்களை போல காப்பு போட்டு கொண்டு, கையை தூக்கினால் அக்குளில் சட்டை கிழிந்துவிடும் அளவில் இறுக்கமாக சட்டை போட்டுகொண்டு கோமாளிகளை போல உலவும் செல்வ நாகரத்தினம் போன்ற இளம் தலைமுறை ips அதிகாரிகளிடம் இவர்களின் படங்களின் தாக்கம் தெரிகிறது.

அமெரிக்காவில் கருப்பினத்தவரின் மீதான தொடர் தாக்குதல்கள் விரக்தி அடைந்த Micah Xavier Johnson என்ற கருப்பின இளைஞர் 2016 ஜூலை 7, டல்லாஸ் நகரில் போலீசார் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 போலீசார் கொல்லப்பட்டார்கள். 9 போலீசார் படுகாயமடைந்தார்கள். இதில் கவனிக்க படவேண்டியது இறந்துபோன யாரும் இனவெறியர்களோ அல்லது கருப்பின விராதோ செயல்களில் ஈடுபட்டவர்களோ அல்ல. அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஒரே காரணம் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது மட்டும்தான். அதாவது இனவெறி கொண்ட போலீசாரின் செயல்பாடுகளின் விலையை இவர்கள் கொடுத்தார்கள். தமிழகத்தில் பொதுமக்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒரு துறை உண்டென்றால் அது நிச்சயம் காவல்துறைதான். அவர்களின் தொடர் ஜனநாயக விரோத, மக்கள் விரோத வன்முறை செயல்பாடுகளால் மீட்டெடுக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். டல்லாஸ் நகருக்கும் தமிழகத்திற்கும் ரொம்ப தூரம்தான். ஆனால் நவீன உலகம் ஒரு சின்ன கிராமம்.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.