கல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?

இலியாஸ் முகமது ரஃபியூதீன்

‘மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடக்கிறது; Depression can be cured. என்னிடம் பேசலாம்’ என்ற வாக்கியங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அகக் காரணங்களை சரிசெய்து விடலாம். புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?

ஃபாத்திமா நம்மிடம் பேசியிருக்கலாம் என்று கூறும் ஐஐடி நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தேன். பேசியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? ‘இன்னும் ஒரு செமஸ்டர் தான். பொறுத்துக் கொள்’ என்று சொல்லியிருப்பார்கள். பாத்திமாவின் வேதனை நிச்சயம் புரிந்திருக்காது.

‘எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமிய பெண் என்ற அடிப்படையில் தொல்லைக்கு உட்பாடுவாளோ என்று அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய? அவள் பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே’ என்று அழுகிறார் ஃபாத்திமாவின் தாய். இந்தப் பிரச்சனையை எப்படி சரிசெய்வது?

ஃபாத்திமாவுக்கு நீதி கேட்டு அலிகர் முசுலீம் பல்கலை மாணவர்கள் போராட்டம்…

நாங்கள் யாரும் லாயக்கற்றவர்கள் கிடையாது. ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். “The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number. To a thing. Never was a man treated as a mind” என்ற மாபெரும் உண்மையைத் தனது இறுதி கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா. நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?

பெரும்பான்மை இந்துக்களே, பார்ப்பனியத்த்திற்கு வளைந்து கொடுக்கும் இந்து அடையாளம் கொண்ட நாத்திகர்களே.. உங்கள் பெரும்பான்மையின் கள்ள மௌனத்தால் தான், நாங்கள் தூக்கில் தொங்க விடப்படுகிறோம்; காணாமல் ஆக்கப்படுகிறோம்; உங்கள் பெரும்பான்மையின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி படுத்தவே, எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; உங்கள் பெரும்பான்மையின் பெயரால் எங்களைக் கொல்ல சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

உங்கள் பெற்றோரும் உறவினரும் இந்துத்துவத்திற்கு வாக்களிக்கும் போது, எங்கள் பெற்றோர் எங்கள் பிணங்களை வாங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்; உங்கள் பெற்றோரோடு நீங்கள் செல்லமாக ஆத்திக – நாத்திக சண்டை போடும்போது, எங்கள் பெற்றோர் எங்கள் பிணங்களோடு சாலையில் அமர்ந்திருக்கிறார்கள்; போராடுகிறார்கள்; தோற்றுப் போய், செத்துப் போகிறார்கள்.

மிகுந்த வலியோடு இதனை எழுதுகிறேன். நேருக்கு நேராக, களத்தில் பார்ப்பனியத்தோடு சண்டையிடுபவர்களை நான் குறை சொல்லமாட்டேன். அவர்கள் மட்டுமே எங்களுக்குத் தோழர்கள்.

இலியாஸ் முகமது ரஃபியூதீன், ஊடகவியலாளர்.

 

 

’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு…

இந்த வருட தொடக்கத்தில் (ஜனவரி 2016) ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு 12 நாட்களுக்கும் மேலாக அதே வளாகத்தில் கூடாரம் அமைத்து போராடி வந்த, ஆராய்ச்சி மாணவர் ரோகித், ஒரு ஞாயிறு மாலை தற்கொலை செய்து கொண்டார்.

”சிலருக்கு அவர்களுடைய பிறப்பே சாபம்தான்”: தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் கடைசி கடிதம்

இந்நிலையில், வெமுலா தலித் என்பதற்கான சான்றுகள் இல்லை என்றும் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியே காரணம் என்றும்  அவரின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. அந்த கமிஷன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

விசாரணை அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரோஹித் வெமுலாவின் நண்பர்கள் அவருடைய கடைசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். வெமுலா மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் “என் பெயர் ரோஹித் வெமுலா” என்று தொடங்கி  பல்வேறு விஷயங்கள் குறித்து வெமுலா பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் ரோஹித், “சமீபத்தில் பல்கலைக்கழக விடுதியிலிருந்து ஐந்து தலித் மாணவர்கள் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. அவர்கள் கொடுத்த அறிவிக்கையில் நாங்கள் பல்கலைக்கழகத்தின் பொது இடத்திலோ, விடுதி, பல்கலைக்கழக அலுவலக பகுதிகளிலோ நாங்கள் உலவுவது கிரிமினல் செயல் என சொல்லப்பட்டிருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

 

பேராசிரியர் குரு பிணையில் விடுதலை

ராமாயண ராமனை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட மைசூர் பல்கலைக்கழக தலித் பேராசிரியர் B.P. மகேஸ் சந்திர குரு, 24-ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ராமனை விமர்சித்த வழக்கு மட்டுமல்லாது, ரோஹித் வெமுலா தற்கொலை சம்பவத்துக்காக மோடி-ஸ்மிருதி இரானியை விமர்சித்த வழக்கும், பகவத் கீதையை எரித்த வழக்கு என கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே பல வழக்குகள் போடப்பட்டன. கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பேராசிரியரை தலித் பகுஜன் சிந்தனையாளர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். மைசூர் பல்கலைக் கழகம், சிண்டிகேட் முடிவின் படி பேராசிரியர் குருவை இடைநீக்கம் செய்யப்போவதாக சொல்லியிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. குரு, விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிண்டிகேட் முடிவு திரும்பப் பெறப்படும் எனத் தெரிகிறது.

பேராசிரியர் குரு, மைசூர் பல்கலையில் ஊடகப் பிரிவில் பணியாற்றுகிறார். கர்நாடகாவின் அறியப்பட்ட பகுத்தறிவாளர், சமூக செயற்பாட்டாளர்.

செய்தி மூலம்: ஃபார்வர்டு பிரஸ்

தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான் ரோஹித் வெமுலா: மாவட்ட நிர்வாகம் அறிக்கை

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா(26) கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக பல்கலைக் கழக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  தலித் மாணவர் என்பதாலேயே ரோஹித் வெமுலா பல நெருக்கடிகளைச் சந்தித்ததும் அதை எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியதும் அதற்காக பல்கலைக் கழக விடுதியிலிருந்து இன்னும் சில தலித் மாணவர்களுடன் வெளியேற்றப்பட்டதும் நிகழ்ந்தவை.

ரோஹித் வெமுலா இறப்புக்குப் பின், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து சர்ச்சைகளைக் கிளப்பினர். ரோஹித்தின் தந்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சர்ச்சை எழுந்தது.   ஆறு மாதங்களுக்குப் பின் இந்தச் சர்ச்சைகளுக்கு அரசு ரீதியான விளக்கத்தை அளித்துள்ள குண்டூர் மாவட்ட நிர்வாகம்.

குண்டூர் ஆட்சியர், தேசிய ஆதி திராவிடர் ஆணையத்துக்கு அளித்துள்ள அறிக்கையில்,

“குண்டூர் தாசில்தாரிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா, ஹிந்து மாலா சாதியைச் சார்ந்தவர், இந்தச் சாதி ஆந்திர மாநிலத்தில் ஆதி திராவிடர் எனும் பகுப்பின் கீழ் வருகிறது.   வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளதாக இவர்களுடைய குடும்பம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலாவின் தாய்வழிப் பாட்டி சொன்னதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆணையம், ரோஹித்தின் தற்கொலைக் காரணமான துணைவேந்தர் அப்பா ராவ், மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட ஐவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆட்சியர் தரும் சாதி சான்றிதழை வைத்து வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தரப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இது சாத்தியம் என்றும் ரோஹித்துக்காக வாதாடும் வழக்கறிஞர் குன்ரதன் தெரிவித்திருக்கிறார்.

ரோஹித்தின் தாயார் ராதிகா வெமுலா, விவகாரத்து ஆனவர். தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலா சாதியினர் வசிக்கும் கிராமத்தில் வசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். அதோடு தான் வதேரா என்ற பிற்படுத்தப்பட்ட சாதி குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர் என்றும் ராதிகா தெரிவித்திருந்தார்.

தி இந்து (ஆ) வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

 

ரோஹித் வெமுலா தங்கியிருந்த இடத்தை இப்படித்தான் அப்புறப்படுத்துகிறார் துணைவேந்தர் அப்பா ராவ்!

ஹைதராபாத் பல்கலைக் கழக விடுதியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் வெமுலா உள்ளிட்ட தலித் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த இடத்தில்தான் தங்கள் உடைமைகளுடன் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

rohith

பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி, மன உளைச்சல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார் ரோஹித் வெமுலா. வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு,  இதே இடத்தில் அவருடைய நண்பர்கள் இருப்பிடம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பல்கலைக்கழகம் திரும்பிய துணைவேந்தர் அப்பாராவ், இந்த இருப்பிடத்தை அகற்ற உத்தரவிட்டார்.

ப்ரேமா ரேவதி

ஒளிமிகுந்த தாரகையானவனின் நினைவை விட்டுவைத்தால் நம்மை முற்றிலுமாக எரித்துவிடும் என்று அடித்து உடைத்து வெளியேற்ற ஹைதராபாத் பாஜக துணைவேந்தர் அப்பாராவ் தலைமையிலான குண்டர்படை களமிறங்கி இருக்கிறது. நெருக்கடிகளுள் ரோஹித் உழலும்போது பார்த்திருந்துவிட்டு அவன் மீளா பயணம் சென்றபின் கொதித்து எழுந்து பின் இப்போது அவனது போராட்டத்தின் நினைவை அவனது தோழர்களின் உறுதியை குலைக்கும் நெருக்குதல் மீள நடக்கும்போது மீண்டும் பார்வையாளர்களாய்…

 

மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி கூறியிருந்தார். இதனைச் சுட்டிக் காட்டி அன்னையர் தினத்தன்று கன்னய்ய குமார் அவருக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.

“அன்புக்குரிய ஸ்மிருதி இரானி அவர்களே…அனைத்து பல்கலைக்கழகங்க மாணவர்களின் அன்னையாக அறிவித்துக்கொண்ட தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் காட்டிவரும் தாயன்பின் கீழ் கற்பதற்கு நாங்கள் கடினமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய ஆட்சியின் கீழ், காவல்துறையினரின் குண்டாந்தடி மற்றும் பட்டினிக்கிடையிலும் எப்படிப் பயிலுவது என்று நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இன்று ஒரு நண்பர் என்னைக் கேட்டார்: நீங்கள், மோடியின் ஆட்சியின் கீழ், ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது சொந்தத் தாய் மட்டுமல்லாது, பசு என்கிற தாய், இந்தியா என்கிற தாய், கங்கை என்கிற தாய் மற்றும் ஸ்மிருதி என்கிற தாய் என இருக்கையில், எப்படி ரோஹித் வெமுலா இறக்க முடியும்? இதற்கு என்னிடம் விடை இல்லாததால் அதே கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன், தாயே. தாய் ஸ்மிருதியின் அமைச்சகம் தான் ரோஹித் வெமுலாவைத் தண்டிக்க வேண்டும் என்று பல கடிதங்கள் எழுதியதாகவும், ஏழு மாதங்களுக்கும் மேலாக அவனது கல்வி உதவிப்பணத்தை நிறுத்தி வைத்ததற்குப் பொறுப்பாகும் என்றும் அந்த `தேச விரோத’ மாணவ நண்பர் எனக்கு மேலும் எழுதியிருக்கிறார். இந்தியா போன்ற மாபெரும் நாட்டில் ஒரு தாய் தன் குழந்தையைத் தற்கொலைக்குத் தள்ள முடியுமா? ஜோடனை செய்யப்பட்ட வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு ஒருதலைப்பட்சமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் தன் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளை ஒரு தாயால் ஏற்க முடியுமா? 11 நாட்களாக பட்டினியால் வாடும் உங்கள் குழந்தைகள் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். உங்களுக்கு நேரமிருப்பின் தயவுசெய்து பதில் கூறுங்கள். அந்த நண்பர் மேலும் உங்களை, “தேச விரோதிகளின் பகுத்தறிவுக்கு விரோதமான தாய்’’ என்றும் விளித்திருக்கிறார். உண்மையின் அடிப்படையிலான உங்களின் பதில் மூலமாக இந்தக் குற்றச்சாட்டு பொய் என்று மெய்ப்பிப்பீர்கள் என நம்புகிறேன்.’’

நன்றி:தீக்கதிர்

 

ஜிசாவின் தாய்க்கு ஆறுதல் சொன்ன ரோஹித் வெமூலாவின் தாய்…

அண்மையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.

“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ்.
நேர்காணலின் தமிழாக்கம் இங்கே…

உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா?

ஃபாண்ட்ரி திரைப்படத்தை உருவாக்கும்போது, நான் எவ்வித எதிர்ப்பார்ப்பும் கொள்ளவில்லை. நான் மனம் சொன்னதை மட்டும் கேட்டேன். அதேபோலத்தான் சய்ரத் படமாக்கும்போதும். மக்கள் எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது குறித்து சிந்தித்திருக்கிறேன்; ஒருவேளை நான் நல்ல படைப்பை தராமல் போகலாம். ஃபாண்டரியிலிருந்து இந்தப் படம் வேறுபட்டது. இதில் வணிகத்தன்மை கூடுதலாக இருக்கும். ஃபாண்ட்ரியை விரும்பிய பலருக்கு சய்ரத்தில் நான்கு பாடல்கள் இருப்பது கோபத்தைக் கூட வரவழைக்கலாம்.
எப்படியென்றால் சய்ரத் மூலம் ஒரு கிளாசிக் காதல் கதை தர முயற்சித்திருக்கிறேன். மராத்தி சினிமாவில் இதுபோன்ற முயற்சிகள் குறைவு. பெரும்பாலான காதல் படங்கள் நகைச்சுவைப் படங்களாக இருக்கும். இது என்னுடைய முழுநீள திரைப்படம்; ஃபாண்ட்ரிக்கு முன்னதாக இதை எழுதினேன். எப்படி இதை எழுதுவது என தெளிவில்லாமல் இருந்தேன். இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு, வேறு பணிகளுக்கு நகர்ந்துவிட்டேன்.

நீங்கள் பல இடங்களில் ஃபாண்ட்ரியில் முதன்மை கதாபாத்திரமான ஜப்யா நான் தான் எனக் கூறியிருக்கிறார்கள்? சய்ரத்தில் உங்களுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு உள்ளது?

சய்ரத் என்னுடைய கதை அல்ல. உண்மையில் இது பிரபஞ்சம் முழுமைக்குமான கதை. கதாபாத்திரங்களை மெருகேற்றும்போது, எழுத்தாளராக-இயக்குநராக அதில் நான் வாழ்கிறேன். நான் இந்த உதாரணத்தைச் சொல்வேன் – ஒரு தபால்காரர் ஒரு கிராமவாசிக்கு கடிதத்தைப் படித்துக் காட்டும்போது, அந்தச் செய்தி பரிமாற்றத்தில் தானும் ஒரு அங்கமாகிறார்.

நான் முன்பொரு காலத்தில் ஆழ்ந்த காதல்வயப்பட்டிருந்தேன்.  அவளும் எனக்கு இணையான காதல் உணர்வுகளைக் கொண்டிருப்பாள் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவேயில்லை. எப்படியோ என் உணர்வுகள் இவர்கள் இருவருக்குள்ளும் வந்திருக்கிறது. அவன் பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கிறான், அவளும் அப்படியே. என்னுடைய காதலை மாற்ற என்னால் இயலவில்லை. படத்தில், இந்தக் கருவின் கட்டுப்பாட்டை தீர்மானிப்பவன் நான், என்னுடைய உணர்வுகளை தள்ளி வைத்துவிட்டேன்.

ஃபாண்ட்ரியில் பெரும்பாலான காட்சிகள் வறண்ட நிலத்தின் பின்னணியில் இருக்கும். ஆனால் சய்ரத் வித்தியாசமான சூழல், இனிமையான சூழலில் படமாக்கியிருக்கிறோம். சோலாபூர் அருகே உள்ள கர்மாலா என்கிற என்னுடைய கிராமத்தில் சென்ற பிப்ரவரியிலிருந்து மே வரைக்கும் சய்ரத்தை படமாக்கினோம். ஒருபுறம் உஜ்ஜைனி நீர்த்தேக்கத்தால் பசுமையான வனமும் இன்னொரு புறம் வறண்ட நிலமும் உள்ள வித்தியாசமான சூழல். இதை படத்தில் டீஸரில் பார்க்கலாம். படிக்கட்டுகளுடன் கூடிய கிணறைக் கூட அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். இன்னும் ஏராளமான அழகிய இடங்கள் இங்கே உண்டு.

நிதர்சன வாழ்க்கையின் கடுமையான பக்கத்தைச் சொன்ன ஃபாண்ட்ரி, உயர்சாதி பெண்ணை விரும்பும் ஒரு தலித் சிறுவனின் கதை. சய்ரத்தின் காதல் கதை நம்பிக்கையூட்டக் கூடியதா?

காதலைச் சொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. சய்ரத், நடக்கவியலாத ஒரு காதல் கதை. நான் அதற்குள் எதையும் அடுக்க முயற்சிக்கவில்லை. சமூக பிரச்சினைகளாக, சாதி, பால் பேதங்கள் போன்றவை காற்றில் கலந்துள்ளன. வான்வெளியைத் தாண்டி போகாதவரை, ஈர்ப்புவிசை  உள்ள எல்லா இடங்களிலும்; இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஒடுக்குமுறை உள்ளது.

ஃபாண்ட்ரியில் எந்த இடத்தில் சாதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது, ஆனால், அதில் சாதி இருந்தது. அதேபோல்தான் சய்ரத்திலும். வெவ்வேறு சாதியைச் சார்ந்த, வர்க்கத்தைச் சார்ந்த இருவர் காதல் வயப்படுகிறார்கள்.

இப்போது வரை நீங்கள் அனுபவித்த கதைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வது பற்றி சிந்தித்ததுண்டா?

நான் ஏன் என்னுடைய கோளத்திலிருந்து விடுபட வேண்டும்? நான் பரந்துபட்டவன் என்பதை நிரூபிப்பதற்காகவா? நான் கிறிஸ்டபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை. இந்த நிமிடம்வரை, என்னுடைய வாழ்நாள் அனுபவங்களும் என்னுடைய கவலைகளும் சாதியையும் மனிதநேயம் தொடர்பான விஷயங்களையுமே சார்ந்திருக்கிறது. நான் இவற்றிலிருந்து விடுபடும்போது, வேறு விதமான படங்களை உருவாக்குவேன்.

சில மாதங்களுக்கு முன்பு ரோஹித் வெமுலா குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தீர்கள். சாதி பற்றிய பொதுமக்களின் விவாதங்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?

என்னுடைய நண்பர் பிரதீப் அவாதெ அந்தக் கவிதையை எழுதியவர், அதை நான் பதிவு செய்திருந்தேன். சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் குறித்து தீவிர விவாதங்கள் நடக்கின்றன. மக்கள் பொறுமை குறைவானவர்களாக இருக்கிறார்கள். யாரும் அடுத்தவருடைய கருத்தைக் கேட்பதைக் கூட விரும்புவதில்லை என்பதே என்னை கவலையடையச் செய்கிறது. அவர்களுடைய முடிவுகளில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். உரையாடல் நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எல்லோரும் ஒரே நாட்டில் வசிக்கிறோம், யவருமே தேச விரோதிகள் அல்ல.  எல்லோரும் தேசத்தைப் பற்றி கரிசனத்துடன் இருக்கும்போது, எதனால் பிரச்சினை வருகிறது என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆற்றில் கல் எறியும் வரை, ஆற்றின் உள்ளே சலசலப்பு இருப்பதை நீங்கள் உணர்வதில்லை. அதுபோலத்தான் சாதியும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் பொதுமக்களின் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் அறிய முடிகிறது.

தனிப்பட்ட முறையில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்களா? ஃபாண்ட்ரியின் வெற்றிக்குப் பிறகு நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறீர்களா?

நான் என்னை சாதியற்றவனாகத்தான் கருதுகிறேன். சாதியத்தின் பிரச்சினையை பேசுகிறேன், இதன் மூலம் நாம் தீர்வைத் தேடி நகர முடியும். நான் நட்சத்திரம் அல்ல. ஆனால், என்னை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்; இவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். மக்கள் என்னுடைய பதிவுகளை விரும்புகிறார்கள், பகிர்கிறார்கள். முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் கெட்டவர்களாக பிறப்பதில்லை. சிலருக்கு சாதிய விவாதங்களில் நான் பங்கெடுப்பதில்லை என்கிற கோபம் உண்டு. ஆனால் இப்போது அத்தகைய விவாதங்களில் நான் கலந்துகொள்கிறேன்.

fandry 1

ஃபாண்ட்ரியின் எழுத்தும் இயக்கமும் எப்படி சாத்தியமானது?

என் மனதில் முழு கதையும் வடிவம் பெறாதவரை நான் எழுத அமருவதில்லை. 2011-ஆம் ஆண்டு, ஃபாண்ட்ரியை 40 நாட்களில் எழுதி முடித்தேன். காட்சிகளை எழுதும் போது நான் அழுதுகொண்டே எழுதியிருக்கிறேன். மும்பையில் உள்ள என் சகோதரரின் ஒற்றை அறையில் அடைந்துகொண்டு, நிமிர்வதற்கும் நடப்பதற்கும் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். பெரும்பாலும் என் சகோதரரும் அவருடைய மனைவியும் குழந்தைகளும் உறங்கச் சென்றுவிட்ட பிறகு எழுதுவேன். காலையில் தூங்குவேன். இந்த முழு செயல்முறையும் அழுத்தங்கள் பீறிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஃபாண்ட்ரியின் நிதர்சனம் என்னை காயப்படுத்தியது. இன்று, அது என்னுடைய அடையாளமாகியிருக்கிறது, மரியாதையாகியிருக்கிறது.

ஃபாண்ட்ரியின் எழுத்து செயல்முறை எனக்கு பயிற்சியாக இருந்தது, என்னால் மற்றொரு திரைக்கதையை எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதுதான் என்னை சய்ரத் என்ற வண்ணமயமான இளமை ததும்பும் கதை எழுத உதவியது.

ஃபாண்ட்ரியைப் போல, சய்ரத்திலும்  உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள்…

சய்ரத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தொழில் முறை நடிகர்கள் அல்ல. கதாநாயகி ரிங்கு ராஜ்குரு, சைஸ் ஜீரோ நாயகி அல்ல;  உற்சாகமான கிராமத்துப் பெண். கதாநாயகன் அக்‌ஷ் தோசார், கவரக்கூடிய தோற்றமுள்ளவர். சமூக வலைத்தளங்களில் கதாநாயகனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், நாயகியை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இந்தப் பெண்ணை நீங்கள் விரும்புவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். அவள் தான் இந்த படத்தின் ‘ஹீரோ’, சய்ரத்.

என்னுடைய சகோதரனால் கண்டுபிடிக்கப்பட்டவர் அக்‌ஷ். ரிங்குவை, எனது கிராமத்தில் வைத்துப் பார்த்தேன். நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன், என்னுடைய நடிகர்கள் என்னுடன் தங்குவார்கள். ஒரு நடிகர் சிறப்பாக வெளிப்படும்போது, அதற்குரிய பாராட்டு அந்த நடிகருக்கும் இயக்குநருக்கு சமமாக தரப்பட வேண்டும் என நம்புகிறேன். ஆனால், நடிகர் சிறப்பாக வெளிப்படாதது ஒரு இயக்குநரின் தோல்வியே.

அஜய் அதுல் இசையமைத்திருக்கும் சய்ரத்தின் பாடல்கள் பெரும் கவனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இசையும் உங்களுடைய படத்தில் முக்கியமான அங்கமா?

காதல் படங்கள் எப்போதும் இசையில்லாமல் இருந்ததில்லை. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன, அவற்றை என்னுடைய வழியில் படமாக்கியிருக்கிறேன். இசை என்று வரும்போது நான் உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளை எடுப்பவன். ஃபாண்ட்ரி முடிந்தபிறகு,  அஜய், அதுலுடன் சய்ரத் குறித்து பேசினேன். அப்போது Yad lagli உருவானது. சிம்பொனி, ஆர்கெஸ்டிராவை வைத்து வேறுபட்ட ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள்.

சினிமாவை தொழிலாக ஏன் தெரிவு செய்தீர்கள்?

பட்டப்படிப்புக்குப் பிறகு, என்னுடைய கிராமத்தை விட்டு மாராத்தி பட்டமேற்படிப்புக்காக புனே வந்தேன். ஒரு தொழில்முறை படிப்பை படிக்கவே விரும்பினேன், ஆனால் கட்டணத்தை என்னால் செலுத்த முடியாத காரணத்தால் அது முடியவில்லை.  தொலைக்காட்சியில் வேலை பெறலாம் என மக்கள் தொடர்பியல் படித்தேன்.  Pistulya என்ற குறும்படத்தை எடுத்தபோது எனக்கு நம்பிக்கை வந்தது. ரூ. 12 ஆயிரத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படம் 2011-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது. சினிமா படிக்கும் மாணவனைவிட, திரையரங்கத்தில் வேலைப் பார்ப்பவரைவிட நான் அதிக படங்களைப் பார்த்தேன். என்னுடைய கிராமத்தில் ஒரு நாளில் இரண்டு படங்களைப் பார்ப்பேன். அதனால் படமாக்குவதின் சூட்சுமங்கள் எனக்கு எளிதாக பிடிபட்டன.

ஜேஎன்யூவில் ஏழாவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: ’வீதிக்கு வா தோழா’ தமிழகத்திலிருந்து எழும் ஆதரவு பாடல்!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஏழுநாட்களாக, பல்கலை நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து 14 மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து வழக்கறிஞர் திவ்யா பாரதி, பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதன் இணைப்பு கீழே…

 

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா?: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் முரண்படுகிறீர்களா என்பது உள்ளிட்ட தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

தமிழில் : ச.வீரமணி.

2016ல் யார் வெற்றி பெறுவார்கள்? இடதுமுன்னணி கூட்டணியா? அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியா?

இது ஒரு போராட்டம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட கடந்த சில சுற்று தேர்தல்கள் நடந்தபோது இருந்த நிலை இன்று கிடையாது. இந்த முறை, அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம். … ஒரு நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற்றால், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொள்ளும் என்றே நான் நினைக்கிறேன்.

கேரளா குறித்து என்ன சொல்கிறீர்கள்? அங்கே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கூட்டணியா?

இந்த முறை அங்கே அரசாங்கம் அமைக்கப்போவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கூட்டணிதான் என்பது நிச்சயம்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் உடன்பாடு, கேரளாவில் காங்கிரசுக்கு எதிராகப் போராட்டம். முரண்பாடாகத் தெரியவில்லையா?

எவ்விதத்திலும் முரண்பாடு கிடையாது. ஏனெனில் மேற்கு வங்கத்தில் நாங்கள் காங்கிரசுடன் எவ்விதமான அரசியல் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ வைத்துக்கொள்ளவில்லை. இரு கட்சித் தலைமையும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, கைகுலுக்கிக் கொள்ளவும் இல்லை, ஒன்றிணைந்து செல்வோம் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. வங்கத்தில் உள்ள நிலைமை, வழக்கமான நிலைமைகளிலிருந்து வேறுபட்டது. திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் எக்காரணம் கொண்டும் பிளவுபட்டுவிடக் கூடாது என்று அடிமட்டத்திலிருந்து பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு அடிமட்டத்திலிருந்து எழுச்சி வருமானால் நீங்கள் ஏன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது?

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இதுதொடர்பாக ஓர் அரசியல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதில் தேர்தல் உத்திகள் நெகிழ்வுத் தன்மையுடன் இருந்திடும் என்று கூறியிருக்கிறோம். ஆனால் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியுடன் எவ்விதமான கூட்டணியும் இருக்காது என்றும் கூறியிருக்கிறோம். ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கைகளைப் பொறுத்த வரையில், மிக மிக ஆழமான முறையில் வித்தியாசங்கள் உண்டு.

ஒரு வேளை மேற்குவங்கத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், நீங்கள் இருவரும் சேர்ந்து அரசாங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பொருத்தமற்றதெனக் கூறுகிறீர்களா?

அத்தகையதொரு நிலைமை எழும்போது நாங்கள் அதுபற்றி விவாதிப்போம். … நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியதைப்போல, காங்கிரசுடன் கூட்டணி கிடையாது, புரிந்துணர்வும் கிடையாது. இது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் முடிவாகும். கட்சியின் அடுத்த அகில இந்திய மாநாடுதான் இதனை மாற்ற முடியும். அதனை மாற்றுவதற்கான அதிகாரம் எவரொருவருக்கும் இல்லை. எனவே அது நீடிக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பீர்களா?

அதுபோன்று நிலை உருவானால் என்னவென்று பார்ப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த அகில இந்திய மாநாடு நடைபெறும்போது, கீழேயிருந்து அதுபோன்று நிர்ப்பந்தங்கள் வரும்போது எப்படி கட்சியின் அகில இந்திய மாநாடு முடிவு எடுக்கும்?

அவசரநிலைக் காலத்தில் கூட, ஜனதா கட்சி அரசாங்கத்திற்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுச் சொத்துரிமையாகும். இதனை “வெளியிலிருந்து ஆதரவு’’ என்றும் கூறலாம்.

முதல் முறையாக, மேற்கு வங்கத்தில் கட்சியின் மாநில செயலாளர் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். கேரளாவில் இது ஏன் நடைபெறவில்லை?

வங்கத்தில் உள்ள வழக்கத்திற்கு மீறிய நிலைதான் காரணம் என்று மீண்டும் கூறுகிறேன். சாதாரணமாக, எமது கட்சியின் மாநில செயலாளர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஏனெனில் கட்சி ஸ்தாபனம் முக்கியம். ஆனால், வங்கத்தில், டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்க் கட்சியின் முகமாக முன்னேறி வந்திருக்கிறார். வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற அரசியலில் போராட்டங்களின் அடையாளமாக அவர் இருந்து வருகிறார். எனவே, இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும், அது முக்கியம் என்று கட்சி கருதியது.

surya

டாக்டர் சூர்யகாந்த மிஸ்ராவுக்கு இணையாக கேரளாவில் யார் உங்கள் தலைவர்? மாநிலத்தில் எதிர்க்கட்சியின் முகமாக பினராயி விஜயன் மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியவர்களுக்கிடையே யார்?

முகம் என்பது எப்போதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள்-சுத்தியல்தான். அதன்பின்னர் சில தனிநபர்களின் முகங்கள். பினராயி விஜயனும் மக்களின் அடையாளமாக முன்னேறியுள்ளார். … வடக்கே இருந்து தெற்கே வரை பிரம்மாண்டமான நடைபயணம் அவர் தலைமையில் நடந்திருக்கிறது. அங்கே எழுந்த அனைத்துப் பிரச்சனைகளிலும், அங்கே நாங்கள் முன்வைத்த மாற்றுக் கொள்கைகள் அனைத்திலும் அவர் இருந்தார்… அதேபோன்று வி.எஸ்.அச்சுதானந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். பல ஆண்டு காலமாக அவரும், அவரது பங்களிப்பும் இருந்து வருகிறது. அவர் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்புடன் போற்றப்படும் தலைவர். கொள்கைகள் மற்றும் அரசியல் அறநெறி, ஊழலுக்கு எதிராக நிற்பது போன்றவற்றில் அவரின் நிலைப்பாடு மிகவும் உறுதிவாய்ந்தவைகளாகும். எனவே, இவ்விரு முகங்களுமே அங்கே இருக்கின்றன. அவர்கள் கட்சியின் கூட்டு முகமாகும்.

புத்ததேவ் பட்டாச்சார்யா ஏன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை?

வங்கத்தில் இன்னும் ஐந்து கட்டங்கள் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அவர் ஒரு மாபெரும் தலைவர், பேச்சாளர். பொருத்தமான நேரத்தில் அவர் பிரச்சாரத்திற்கு வருவார்.

ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு தலித் குழுக்கள் போன்று புதிய சக்திகள் பல உருவாகியிருக்கக்கூடிய நிலையில், இடதுசாரிகள் தங்கள் ஆற்றலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா?

மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறுவது புதிதாகப் பிறத்தல் என்பது போலாகிவிடும். ஆயினும் இடதுசாரிகள் புதிய நிலைமைகளுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுதான் மார்க்சியத்தின் அடிநாதமாகும் என்று நான் நம்புகிறேன். துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான ஆய்வு, அதுவே சாராம்சம். துல்லியமான நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கும் போது, துல்லியமான ஆய்வுகள் மாறவில்லை என்றால், நீங்கள் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல. … ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே புடம் போட்டுக் கொண்டும் இயங்கிக் கொண்டும் இருந்திட வேண்டும். ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, இடதுசாரிகள் பின்னே இளைஞர்களே இல்லையே என்று கேள்வி கேட்டீர்கள்… இப்போது ஜேஎன்யுவில் கன்னய்யாவைப் பார்க்கிறீர்கள், ஹைதராபாத்தில் ரோஹித்தைப் பார்க்கிறீர்கள், புனே திரைப்படக் கல்லூரியில் என்ன நடந்தது? அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இடதுசாரி அமைப்பிலிருந்து ஒரு மாணவி போட்டியிட்டு மாணவர் பேரவைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இடதுசாரிகளின் இடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடித்துக்கொண்டு விட்டதா? இடதுசாரிகள் மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே இருக்கிறதா?

நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது இருந்த அளவிற்கு செல்வாக்கு இப்போதும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?அவர்கள் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போதிலும், அதே செல்வாக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தில்லி மற்றும் பீகார் தேர்தல்களின் போது உள்ள நிலைமையை பரிசீலித்தோமானால், 2014இல் அவருக்கிருந்த செல்வாக்கை இங்கே நடைபெற்ற தேர்தல்களில் அவரால் பிரதிபலிக்க முடியவில்லையே. இவ்வளவு வேகமாக அவர் வீழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இதுபோன்ற வீழ்ச்சியை வேறெங்கும் பார்த்தது இல்லை.

இடதுசாரிகள் ஈர்க்கக்கூடிய விதத்தில் இருக்கிறார்களா என்பது கேள்வியே இல்லை. பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதே கேள்வி. பல பிரச்சனைகளில் இடதுசாரிகள் கூறுவதைத்தான் ஆம் ஆத்மி கட்சியும் கூறுகிறது. ஆயினும் தில்லி போன்ற இடங்களில் அவர்களுக்குத் தங்கள் கருத்துக்களை, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு பலம் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அம்சங்களில் நாங்கள் பின்தங்கி இருந்தோம். … ஆனால் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். சற்றே தாமதித்து விட்டோம், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போது நாங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஒரு சக்தியாக இருக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. இதனை மேலும் மேம்படுத்துவோம்.

Narendra_Modi_1525585f

நரேந்திர மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது இருந்த அளவிற்கு செல்வாக்கு இப்போதும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர்கள் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட போதிலும், அதே செல்வாக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தில்லி மற்றும் பீகார் தேர்தல்களின் போது உள்ள நிலைமையை பரிசீலித்தோமானால், 2014இல் அவருக்கிருந்த செல்வாக்கை இங்கே நடைபெற்ற தேர்தல்களில் அவரால் பிரதிபலிக்க முடியவில்லையே. இவ்வளவு வேகமாக அவர் வீழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இதுபோன்ற வீழ்ச்சியை வேறெங்கும் பார்த்தது இல்லை.

பீகாரில் ஏற்பட்டதுபோன்ற கூட்டணிகள் உருவாவது முன்னேற்றத்திற்கான வழியா?

இன்றைய நிலைமை மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவசரநிலைக் காலத்தின் கடைசி மாதங்களில் இருந்த நிலைமையை ஒத்திருக்கிறது. முழுக்க முழுக்க அன்றைக்கிருந்த நிலைமை போன்றில்லை என்றபோதிலும், அந்தத் திசைவழியில் நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனை ஒருமுகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். பல்கலைக் கழகங்களின் மீதான தாக்குதல்கள், சகிப்பின்மை பிரச்சனை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் தலித்துகள் தூக்கிலிடப்பட்ட கொடுமை… இதுபோன்று நாட்டின் பல முனைகளிலும் இந்துத்துவா கும்பல்கள் பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக மக்களின் சீற்றமும் எதிர்ப்பும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விதத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மிக வேகமான முறையில், மிக விரிவான அளவில் எதிர்ப்பியக்கங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதன்காரணமாகத்தான் எவரும் எதிர்பாராத அளவிற்கு பீகாரில் பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒரு மகா கூட்டணியை அமைத்தன. இப்படி ஓர் ஒற்றுமை கட்டப்பட வேண்டும் என்று, கட்சிகளின் அடிமட்ட ஊழியர்கள் தங்கள் கட்சித் தலைமைக்கு நிர்ப்பந்தங்களை அளித்தனர். இதனைக் கட்சித் தலைமைகளும் உணர்ந்தன. தில்லியில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகள் எப்படி இருந்த போதிலும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபம் மக்களிடம் ஆழமாக இருந்தது.

நிலைமைகள் சாதகமாக இருக்கக்கூடிய சூழலில்கூட, மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்திட, உங்கள் கட்சியின் அகில இந்திய மாநாடு முகம் சுழிப்பது ஏன்?

1977அரசாங்கமாக இருந்தாலும் சரி, 1989 வி.பி.சிங் அரசாங்கமாக இருந்தாலும் சரி, 1996 ஐக்கிய முன்னணி அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது 2004 ஐமுகூ அரசாங்கமாக இருந்தாலும் சரி – அவை கடைப்பிடித்த கொள்கைகள் அனைத்துமே இறுதியில் நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானவைகளாகவே முடிந்தன என்பதையே எங்கள் இறுதி ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவேதான் அவை ஒவ்வொன்றுடனும் எங்களுக்கு முறிவு ஏற்பட்டுவிடும். குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அந்த அரசாங்கங்கள் மீறியதன் அடிப்படையிலேயே இத்தகைய முறிவு ஏற்பட்டது.

அத்தகு ஆட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஓர் அங்கமாக இருந்திருந்தால், அந்த ஆட்சிகள் கொள்கைகளை `மீறுவது’ நடந்திருக்காது அல்லவா?

இது வெறும் ஊகம்தான். இந்த விசயத்தில் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ள விரும்பினோம். நீங்கள் சொல்வதுபோல் அரசாங்கத்தில் ஓர் அங்கமாக ஆகியிருந்தால், பின் நாங்களும் அவர்களின் தவறுகளுக்குத் துணை போனவர்களாகிவிடுவோம்.

vemula

ஹைதராபாத் மற்றும் ஜேஎன்யு பல்கலைக் கழக விசயங்களுக்கு வருவோம்… வளாகங்களில் இயங்கும் ஜெய் பீம் (அம்பேத்கரிய) குழுக்கள், சமூக மாற்றத்திற்கான இடதுசாரி சித்தாந்தத்தின் பிரதிநிதிகள்தான் (proxy) என்று ஏபிவிபி கூறுகிறதே.

அது அவர்களின் கற்பனையான சிந்தனையே.

செவ்வணக்கம் (லால் சலாம்) என்பதற்கும் ஜெய் பீம் என்பதற்குமான வித்தியாசம் என்ன? பல்கலைக் கழக வளாகம் இரு தரப்பும் சந்திக்கும் ஒரு மையமாக உருவெடுக்கிறதா?

ஜெய் பீம் என்பது சில சமயங்களில் முழுக்க முழுக்க தலித் உரிமைகளுக்கான ஒரு மார்க்கமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. செவ்வணக்கம் என்பது எங்களுடைய முழக்கமாகும். தலித் உரிமைகள்கூட, தலித்துகளுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும்போதுதான் அமல்படுத்திட முடியும். அதற்கு சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது அவசியம். அங்கேதான் சந்திப்புப் புள்ளி உருவாகிறது. ஜெய் பீம் முழக்கமும், லால் சலாம் (செவ்வணக்கம்) முழக்கமும் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) முழக்கத்துடன் ஒருங்கிணைந்திட வேண்டும். அதுவே, இடதுசாரிகள் மற்றும் தலித் குழுக்களுக்கு இடையிலான சந்திப்புக் குவி மையமாகும்.

kannaiya

கன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர்கள் இயக்கத்தின் மூலம் உருவானவர்கள். நாம் இப்போது சற்றுமுன் பேசினோமே அதுபோன்ற இடதுசாரிகள் – தலித் குழுக்களுக்கு இடையிலான சந்திப்புக் குவி மையத்தின் மூலம் உருவானவர்தான் ரோஹித். கன்னய்யாவும் அப்படியே. இவ்வாறு இவ்விரு இயக்கங்களுக்கும் இடையிலான நேச உறவு மற்றும் புரிதலின் மூலம் உருவானவர்கள்தான் இவ்விருவருமே. இவ்விரு இயக்கங்களுக்கும் இடையே நேசமும் புரிதலும் ஏற்படுவது நாட்டிற்கு மிக மிக நல்லது, ஆக்கப்பூர்வமானது. இடதுசாரிகள் விரும்புவது என்னவெனில், இவ்வாறு நடைபெறும் நட்புறவு ஒரு சரியான திசைவழியில் அமைந்திட வேண்டும், இல்லையேல் அது தவறான பாதையில் இயக்கத்தை சிதறடித்துவிடும். இப்படிப்பட்ட நேச உறவுகள் தொழிலாளர் வர்க்கத்திற்கிடையேயும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இன்றைய தினம் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரிகளின் தலைமையிலான தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுக்கும்போது அவற்றுடன் ஐஎன்டியுசி, பிஎம்எஸ் போன்ற சங்கங்களும் இணையும் என்று இதற்குமுன் எவரேனும் கற்பனை செய்து பார்த்திருக்கிறோமா?

நன்றி: தீக்கதிர்.

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

ப்ரேமா ரேவதி
ப்ரேமா ரேவதி
ப்ரேமா ரேவதி

மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என ஒரு கணம் திகைத்து போனேன். பிரஷாந்த் மருத்துவமனை வாசலில் இருக்கும் ஆட்டோ சங்க தோழர்கள் அந்த அதிவசதி சாலையில் நீலக் கொடிகளைக் கட்டி வருபவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் அணிவில்லைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இறங்கி சென்று நாங்களும் அவற்றை அணிந்துகொண்டோம். ஜெய் பீம் என்ற வாழ்த்துடன். விவரிக்க முடியாத ஒரு பெருமையும் நெகிழ்வும் வார்த்தைகளற்று அங்கே பரிமாறப்பட்டது.

ஜெய் பீம்! மனதில் ஒரு பெரும் உத்வேகத்தை கூட்டும் இம்முழக்கம் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளான அதுவும் அவரது 125ம் பிறந்த நாள் நிகழ்வில்  கேட்டதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் இதன் முன்பான வருடங்களில் இல்லாத ஒரு அழுத்தம் இன்றைய ஜெய் பீமில் இருந்தது. வெறும் தட்டையான அடையாளமாக தன்னை குறுக்கும் இவ்வுலகை விட்டு விண்மீண்களோடு வாழப்போன அந்த இளைஞன் “இறுதியாக ஒருமுறை” என சொல்லிப்போன ஜெய் பீமின் கனம் நிறைந்திருந்தது அதில். அந்த இறுதி ஜெய் பீம் இந்தியா முழுவதும் எதிரொலித்த பேரெழுச்சியின் வலி நிறைந்த வீரியம் கொண்டு இன்றைய ஜெய் பீம் இருந்ததாகவே பட்டது.

Ambetkar 1

அம்பேதகர் மணிமண்டபம் ஏப்ரல் 14ல் எப்போதும் அணியும் விழாக்கோலத்தை இன்றும் கொண்டிருந்தது. இன்றைய நிகழ்வில் ரோஹித்தின் முகம் பல பதாகைகளில் காணக் கிடைத்தது. எப்போதும் போல அம்பேத்கரின் முகம் பதித்த பல விதமான அணிவில்லைகள், ஒட்டுவில்லைகள், புத்தரின் சிலைகள், நாட்காட்டிகள், இன்னும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மணிமண்டபத்தில் கொலுவிருந்தன. பலப் பல கட்சிகளும் குழுக்களும் கொடியேந்தி பறையொலி அதிர வந்து வீர வணக்கம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வருடமும் போலவே புத்தர் கலைக் குழுவின் பறைக் கலைஞர்களும் பறை அடியை பயிலும் அனைத்து சாதி மாணவர்களும் வந்து பறையடித்து “சாவுக்கு அடிக்க மாட்டோம், சாதி எதிர்ப்பு போராட்டத்திற்கு அடிப்போம்! இது பாண்டியன் மீது ஆணை” என வட தமிழகத்தில் 90களின் எழுச்சியில் சாவுக்கு பறை அடிக்க மாட்டோம் இழிதொழிலை ஏற்க மாட்டோம் எனப் போராடியதால் கொல்லப்பட்ட பாண்டியனின் நினைவை அந்த மண்டப சுவர்கள் அதிர பறையடித்து நினைவு படுத்தினார்கள்.

Ambetkar 2

இந்த ஆண்டு நான் மிக மதிக்கும் இரு நண்பர்களுக்கு அம்பேத்கர் பேரொளி விருது வழங்கப் பட்டது. மிக துணிச்சலான களப் போராளியும், தீவிரமான எழுத்து வன்மை கொண்டவரும் தொடர்ந்து தலித்துகளின் மீதான வன்முறைகளை பதிவு செய்து வரும் தோழி ஜெயராணிக்கு விருது வழங்கப் பட்டது. அம்பேத்கரை அவரவர் தேவைக்கு கத்தரித்து எடுத்துக்கொள்ளும் நிலை இன்று இருக்கிறது அம்பேத்கரின் மிக முக்கிய கூறான அதிகாரத்திற்கு எதிராய் நின்று சாதி ஒழிப்பை பேசியதும், நவீன இந்தியாவின் தந்தை என்ற முறையில் அவர் பண்படுதலே பண்பாடு என மொழிந்து அனைவரையும் சமத்துவமாய் பண்படச் சொன்னதையும் அவர் தனது ஏற்புரையில் சொன்னது பொருத்தமாய் இருந்தது.

தலித் மக்களின் வரலாற்றை தலித் அறிவுச் செயல்பாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை தேடித்தேடி எழுதி வரும் மிக முக்கியமான பணியை ஆற்றிக் கோண்டிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கமும் இந்த அம்பேத்கர் பேரொளி விருதை பெற்றார். எந்த புகழையும் நாடமால் தலித் சமூகத்துக்காக எவ்வளவோ வழிகளில் பணிபுரிந்த பல மூதாதையர்களின் முன்னால் தனது பணி ஒன்றும் பெரிதானதில்லை என திருச்சியில் 50களில் தலித் பெண்களுக்கான பள்ளியை நடத்திய வீரம்மாள், அவருக்குப் பிறகு அதை தொடரும் காமாட்சி போன்றோரின் நினைவுகளை பகிர்ந்தார். மேற்கு மாவட்டங்களில் கல்விப் பணியாற்றிவரும் சந்துரு, எழுத்தாளர் வே.மதிமாறன், சமூக செயல்பாட்டாளர் திரு.தேவதாஸ் மற்றும் சுவேதா ஜெயசங்கர் ஆகியோருக்கும் விருது வழங்கப் பட்டது.

Ambetkar 3

ஒவ்வொரு ஆண்டும் பல பகுதி குழந்தைகள் மணிமண்டபத்திற்கு வருகின்றனர். முழக்கமிடுகின்றனர். விளையாடுகின்றனர். ஓவியங்கள் வரைகின்றனர். அம்பேத்கரின் புத்தரின் முகங்களும் நீல நிறமும் அவர்களின் பிரிய வரைபொருட்களாக இருக்கின்றன. நான் மிக மதிக்கும் இரு இளம் பெண்ணியவாதிகளான ஆரம்பா மற்றும் தாரகை எனும் சிறுமிகள் உள்ளிட்ட ஒரு பெரும் சிறுவர் குழாம் ஒவ்வொரு ஆண்டும் மிக உயிர்ப்பான அம்பேத்கர் பாடல்களை பாடியும் ஒயில் பறை என ஆடியும் தமது வழிகாட்டியான அம்பேத்கருக்கு வணக்கம் செலுத்துகின்றனர். கடம்பாடி கிராமத்திலிருந்து இருளர் மற்றும் தலித் குழந்தைகளுக்கு அம்பேத்கர் குறித்த ஓவிய முகாம் ஒன்றை நடத்தி அவர்களுடைய ஓவியங்களையும் அக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார் ஓவியர் சந்துரு. நீங்கள்ளாம் ஏன் வந்திருக்கீங்க? எனக் கேட்ட உடன் அவர்களில் ஒரு சிறுவன், “நாங்கள்ளாம் அம்பேத்கர்” எனச்சொன்னான். அவனை விட மூத்தவன் ஒருவன், “நாங்கள்ளாம் அம்பேத்கரோட மாணவர்கள்” என்று முடித்தான். 

பல விதமான உணவு வகைகள் அங்கு வருபவர்களுக்கு வழங்கப் பட்டன. குடிநீரும் மோரும் பல முறை கிடைத்தது சுட்டெரிக்கும் சூரியனில் மிக இதமாக இருந்தது. நிகழ்வின் துவக்கத்தில் பேசிய பேராசிரியர் தயானந்தன் “நீங்க எந்த தலித் கிராமத்துக்கு போனாலும் உங்களுக்கு உணவு கிடைக்கும். கஞ்சியாவது கிடைக்கும் ஏனெனில் அது அவர்களுடைய பௌத்த பண்பாட்டின் விழுமியம். மதம் தொலைந்து போனாலும் அழியாமல் அவர்களிடையே எஞ்சி இருக்கிறது” எனச் சொன்னதை நடைமுறை படுத்துவதாகவே இந்த உணவு விநியோகங்கள் இருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் பேரொளி விருது பெற வந்த தோழர் சந்தன மேரியின் உவகை எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் இராமநாதபுரத்தில் வாழ்பவர். மிகுந்த சாதீய வன்மம் இன்றளவும் செயல்படுகிற தென்மாவட்ட சாதி எதிர்ப்பு களங்களில் செயல்பட்டவர் படுபவர். அவரால் சென்னை மாநகரத்தின் சாலைகளெல்லாம் ஒட்டப்பட்டிருந்த அம்பேத்கர் சுவரொட்டிகளை நம்பவே முடியவில்லை. “நான் விழுப்புரத்திலிருந்து வரேன். விடியக்காலை சென்னைக்குள்ள நுழைஞ்சதில இருந்து தூங்காம பாத்துட்டே இருந்தேன். இவ்வளவு சுவரொட்டி, கொடி, பேனரு அம்பேத்கர் முகம் போட்டு… எங்க ஊரில ஒரு ஓரமா ஒரு ஃபோட்டோவ வெச்சு நாங்க வருஷம் தோறும் கொண்டாடுவோம். ஆனா இங்க திருவிழா மாதிரியில்ல நடக்குது.” என கண்கலங்கி கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அம்பேத்கர் முன்னிறுத்திய அறிவு பாரம்பரியத்திற்கு இதுபோன்ற திருவிழாக்கள் தேவையா? இது பொருத்தமானதுதானா என சிலர் பேசுகிறார்கள். ஆனால் தலித் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், களப் போராளிகள் என ஒவ்வொரு வருடமும் முக்கியமான ஆளுமைகளை இந்த திருவிழா கௌரவிக்கிறது. இது அறிவுசார் செயல்பாடுதான். பல நூறு புத்தகங்கள் இந்த திருவிழாவில் விற்கப்படுகின்றன. பல புதிய நட்புகள், உறவுகள் ஏற்படுகின்றன. அம்பேத்கரின் எழுத்துக்கள் தரும் அறிவு உவகை ஒன்றென்றால் இதுபோன்ற கூடல்கள் அவர் வாழ்நாளெல்லாம் எடுத்துரைத்த சக வாழ்விற்கும் தோழமைக்கும் வித்திடுகின்றன.

”சகோதரத்துவத்திற்கு என்ன  ஆட்சேபணை இருக்கமுடியும்? ஒன்றைக் கூட என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஒரு லட்சிய சமூகம் என்பது இயங்கும் நிலையில் இருக்கவேண்டும், அதன் ஒரு பகுதியில் நிகழும் மாற்றத்தை பிற பகுதிகளுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பல வழிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு லட்சிய சமூகத்தில் பல நலன்கள் இருக்கவேண்டும் அவை பிரக்ஞைபூர்வமாக தெரிவிக்கப்படவும் பகிர்ந்துகொள்ளப்படவும் வேண்டும். சகவாழ்விற்கு பல்வேறு சுதந்திரமான தொடர்புகொள்ளும் புள்ளிகள் இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் சமூக சவ்வூடுபரவுதல் நிகழவேண்டும். இதுதான் சகோதரத்துவம், இது சனநாயகத்தின் மற்றொரு பெயரே ஆகும். சனநாயகம் என்பது வெறும் ஒரு ஆட்சி வடிவமல்ல. முதன்மையாக, அது பகிர்ந்துகொள்ளக்கூடிய இணைந்த அனுபவங்களிலான கூட்டு வாழ்க்கையின் ஒரு முறைமை ஆகும். அது அடிப்படையில் ஒருவர் தனது சக மனிதர்கள் மீது காட்டும் மதிப்பும் மரியாதையும் சார்ந்த அணுகுமுறையாகும்.” என அம்பேத்கர் சாதியை அழித்தொழித்தல் எனும் தனது முக்கியமான அறைகூவலில் சொல்லியிருக்கும் சகவாழ்வை வாழ தலித்துகள் நீட்டும் அன்புக் கரமாகவே இத்திருவிழா இருக்கிறது. நீட்டப்பட்ட அக்கரத்தை பற்ற சாதி இந்து சமூகம் தன்னை தகுதிப் படுத்திக் கொள்ளும் பணி மிக தேவையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.

ப்ரேமா ரேவதி, எழுத்தாளர்; சமூக செயற்பாட்டாளர்.

முகப்பு ஓவியம்: Rajkumar sthapathy

”என்கவுண்டர் செய்துவிடுவோம்” ஹைதராபாத் பல்கலை மாணவர்களை மிரட்டிய தெலுங்கானா போலீஸ்

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மார்ச் 22 அன்று துணை வேந்தர் அப்பாராவிற்கு எதிராகநடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்களுடன் சேர்ந்து கைதான பேராசிரியர்கள் கேஒய் ரத்தினம் மற்றும் தத்தகத்தா சென்குப்தா தில்லி வந்துள்ளனர். தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்நடைபெற்று வரும் “உயர்கல்வியில் சாதி’’ என்னும் தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். ஹைதராபாத் மத்தியபல் கலைக்கழகத்தில் தாங்கள் கைது செய்யப்பட்ட விதம்தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இடைக்கால துணை வேந்தராக இருந்த, எம்.பெரியசாமி, மாணவர்கள் போராட்டத்தில் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில், கல்வி உதவிப் பணத்தை உயர்த்துவது பாகுபாடு எதிர்ப்பு அலுவலர் என்னும் பதவியை உருவாக்குவது, பல்கலைக் கழகத்தின் அனைத்துக் குழுக்களிலும் தலித்/பழங்குடியினரின் முறையான பிரதிநிதித் துவத்திற்கு உத்தரவாதப் படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். இப்பரிந்துரைகள் அனைத்தும் மார்ச் 24 அன்று நடைபெறவிருந்த அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்தன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அப்பா ராவ் திரும்பி வந்தார்.

அவ்வாறு தடுத்தும் நிறுத்திவிட்டார். அவரது முதல் நடவடிக்கையே அகடமிக் கவுன்சில் கூட்டத்தை ஒத்திப்போட்டதுதான். “அப்பா ராவ் வளாகத்திற்குத் திரும்பிவருவதற்கான தார்மீக அடிப்படை என்ன இருக்கிறது? ரோஹித் மரணத்திற்கு இதுவரை அவர் மரியாதை செலுத்த வில்லை. ரோஹித் தற்கொலையில் அவரது பங்களிப்புகுறித்து நடைபெறும் நீதித்துறை விசாரணை இன்னும்நிலுவையில் இருக்கிறது. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் செய்ததெல்லாம் யூ டியூப் வீடியோவில் `வலி’ ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது மட்டும்தான்.

எங்கள் சார்பாகத் தலையிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது ஆசிரியர்களைக் கைது செய்யாதீர்கள் என்று சொல்லவும் இல்லை. நாங்கள் சிறையிலிருந்த சமயத்தில் வளாகத்தில் மாணவர்களுக்கான உணவை வெட்டினார், தண் ணீரை வெட்டினார், ஏடிஎம் சேவைகளை வெட்டினார். மார்ச் 22 அன்று துணைவேந்தர் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே மாணவர்கள் “மிகவும் நாகரிகமானமுறையிலும், ஜனநாயக ரீதியாகவும் ஆர்ப்பாட்டம்’’ செய்து கொண்டிருந்தபோது நான் (ரத்தினம்) அங்கே சென்றேன். அப்போது போலீஸ் வந்தது. மாணவர்களைத் தரதர என்று இழுத்துச் சென்றனர். ஆண் போலீஸ்காரர்கள், மாணவிகளையும் இவ்வாறே இழுத்துச்சென்றனர், அவர்களைப்பலமுறை அடித்தனர். “என் மாணவர்களை அடிக்காதே’’ என்று நான் சத்தம்போட்டேன். அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? என் பெயரைக் கேட்டார்கள். திரும்பத் திரும்பக் கேட்டார்கள். பிறகு என்னையும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.

போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு வேன் சுமார் 40 நிமிடங்கள் ஆனது. அந்த 40 நிமிடங்களும் போலீசார் மாணவர்களை இரக்கமின்றி அடித்துக்கொண்டே இருந்தனர். ஒரு மாணவனின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. அவர் அதைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு போலீஸ்காரர், அக்கண்ணாடியை எடுத்து அம்மாணவனின் முகத்தில் குத்தினார். வேனில் நடந்த சம்பவங்களை முழுமையாகச் சொல்வது மிகவும் கடினம்.

சென்குப்தாவும் தன் உணர்வுகளை இவ்வாறே வெளிப்படுத்தினார்.“காவல்துறையினரும் இதர படையினரும் என் கவுண்ட்டர் செய்துவிடுவோம், தெலுங்கானா போலீஸ் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களை மிரட்டினர்.’’கைது செய்யப்பட்ட மாணவர்களையும், ஆசிரியர் களையும் 2-3 காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர். சுமார் 24 மணி நேரம் வரை எவருக்கும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. எங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளக்கூட அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் செய்த முதல் வேலை, எங்கள் செல்போன்களை பிடுங்கிக் கொண்டதுதான். நாங்கள் அவற்றைத் திரும்பப் பெற்றபோது, அவற்றில் நிகழ்வுகள் நடந்தசமயத்தில் நாங்கள் பதிவு செய்து வைத்திருந்த ஆடியோ மற்றும் வீடியோ நிகழ்வுகள் அனைத்தையும் அழித்திருந்தார்கள். போலீசாரின் அடக்குமுறை எங்களை நசுக்கிவிடும் என்று அப்பாராவ் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அன்றைய தினம் நூற்றுக்கணக்கான ரோஹித்துகள் உருவானார்கள் என்பதை அவர் உணரவில்லை.

தீக்கதிர்.

இது சிரியாவா? பாகிஸ்தானா? ஹைதராபாத் பல்கலையில் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்

கல்பனா கண்ணபிரான்

ரோஹித் வெமுலாவின் தற்கொலையிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் கற்க மறுக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அங்கே மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை வெளிஉலகிற்குத் தெரியாமல் மூடிமறைத்துவிட்டால் போதும் என்கிற ரீதியில் தன் நிர்வாக எந்திரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்கலைக் கழகத்தில் நடைபெற் றுள்ள நிகழ்வுகள் மிகவும் வலியை ஏற்படுத்து கின்றன. திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துணை வேந்தர் வளாகத்திற்குள் நுழைந்ததானது, பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பெரும்திரளாகக் கூடி தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கின் றனர். இதன் காரணமாக ஒருபக்கத்தில் ஏபிவிபி மாணவர்களும், மறுபக்கத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மாணவர்களும் மோதக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றது. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ஏனெனில், ரோஹித் வெமுலா தற்கொலையையால் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர் பல்கலைக் கழக வளாகத்திற்குள் அசாதாரணமான முறையில் அமைதி நிலவி வந்தது, கல்வியாண்டும் முடியக்கூடிய தருணத்தில் இருந்தது.

பல்கலைக்கழகத்திற்குள் நடை பெற்ற விசயங்களை முதலில் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் மூலமாகத்தான் நாங்கள் பார்த்தோம். பல்கலைக் கழக மாணவர்களையும் அவர்களுடன் இருந்த ஒருசில ஆசிரி யர்களையும் காவல்துறையினர் தங் களிடம் இருந்த குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தனர். பின்னர் அந்த செய்தியில், இதனைத் தொடர்ந்து சுமார் 30 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டி ருப்பதாகவும் கூறப்பட்டது. முனைவர்கள் தத் தாகதா சென்குப்தா மற்றும் கே.ஒய்.ரத்னம் ஆகியோரும் கைது செய்யப்பட்ட வர்களில் இருந்தார்கள். உண்மையில் டாக்டர் ரத்னம் அங்கே இருந்த மோசமான நிலைமையைச் சரிசெய்வதற்காக மோதலில் ஈடுபட்டிருந்த இரு பிரிவின ருக்கும் இடையே சமாதானத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான், காவல்துறையினர் டாக்டர் ரத்னத்தை அடித்து நொறுக்குவதை பலரும் பார்த் திருக்கின்றனர்.

சம்பவங்களை மூடிமறைக்க முயற்சி

இவ்வாறு மாணவர்களும் ஒருசில ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒருசில மணிநேரம் காவல் நிலையத்தில் வைத்திருந்து அவர்களை விட்டுவிடுவார்கள் என்றுதான் நான் (மிகவும் பாமரத்தனமாக) நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இரவு முழுவதும் காவல்நிலையத்திலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்து, விடுதலை செய்யப்படுவதற்கான அடையாளங்கள் எதுவுமே தெரியாதபோது, கைது செய்யப்பட்ட மாணவர்களுடனும் ஆசிரியர் களுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொண்டிருந்த கார்த்திக் பிட்டு என்னும் ஆசிரியரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக மார்ச் 23 அன்று மியாபூர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்குரைஞரையும் அனுப்பினேன். அவரிடமிருந்தும் மற்றும்பல வழிகளிலும் எனக்குக் கிடைத்த தகவல்கள் என்னவெனில், காவல்துறை யினரின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று எவருக்குமே தெரியவில்லை என்பதேயாகும். என்ன நடக்கும் என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். மாலை 5 மணியாகிவிட்டது. காவல்நிலையத்தின் முன் ஏராளமான வழக்குரைஞர்களும், மாணவர்களும் காத்துக் கொண்டிருந் தார்கள்.

அப்போதும் காவல் துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துஒன்றும் தெரியாததால் நான் மீண்டும் கார்த்திக் பிட்டுவைத் தொடர்பு கொண்டேன். அவர், காவல்துறையினர் தலைமை நீதிபதியை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். அதே சமயத்தில், மாலை 7 மணியளவில், என் வழக்குரைஞர் எனக்கு ஒரு செய்திஅனுப்பினார். அதில், கைது செய்யப் பட்டவர்கள் தொடர்பான காவல் அடைப்புக் குறிப்புகள் இன்னமும் தயாராகாததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வில்லை என்றார். கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நான் உடனே மீண்டும் கார்த்திக் பிட்டுவிற்கு செய்தி அனுப்பினேன். இந்தத்தகவலை தலைமை நீதிபதியின் பார்வைக்குக் கொண்டு செல்லுமாறும், கைதுசெய்யப்பட்டோரை உடனே விடுவிக்குமாறு அவரைக் கோருமாறும் அதில் கேட்டுக் கொண்டேன். அவர்கள் அவரை சந்தித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அமைச்சர்களுடன் நன்கு தொடர்பு களைக் கொண்டிருந்த என் நண்பர் ஒருவரிடம் உள்துறை அமைச்சரையும், முதல்வரையும் இதில் தலையிடச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்உள்துறை அமைச்சரைச் சந்தித்திருக் கிறார்.

அவர் இதில் தலையிடுவதில் தனக்குள்ள இயலாமையைத் தெரிவித்திருக்கிறார். முதல்வரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நகரத்தின் மறுகோடியில் வசித்ததால், என் நண்பர் ஒருவரிடம் என்னை வளாகத்திற்குக் கூட்டிச்செல்லுமாறு கேட்டுக் கொண் டேன். அவரிடம், நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று போய் பார்ப்போம் என்றேன். அங்கே சென்றபோது, அவர்கள் எங்களிடம் உணவும் தண்ணீ ரும் வேண்டும் என்று வேண்டினார்கள். அங்கே தண்ணீர் விநியோக வழிகளை அடைத்து வைத்திருப்பதால், பாட்டில்களில் உள்ள தண்ணீர் போதுமானதாக இருக்காது. தண்ணீர் லாரிகளை வரவழைக்கலாமா என்று பார்த் தால், காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதும், போகும் பாதைகளை அடைத்து வைத் திருப்பதும் அந்த யோசனையை உடனடி யாக கைவிட வைத்தது. வாயிலின் அருகே எவ்விதமான வாகனமும் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை, வெளியாள் யாரும் உள்ளே செல்லவும் அனுமதிக்கப் படவில்லை. ஆயினும் எப்படியோ நண்பர்கள் சிலர் மூலமாக உணவுப் பொட்டலங்கள் நள்ளிரவு வரை உள்ளே சென்றுகொண்டிருந்ததை நான் தெரிந்துகொண் டேன். மாணவர்கள் ஏதோ உள்ளேயே சமைத்ததாகவும் தெரிந்து கொண்டேன்.

இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை மிகவும் கவலையுடன் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை பார்ப்பதற்காக மியாபூர் காவல்நிலையத்திற்குச் சென்றேன். அங்கே எவரும்இல்லாததால் வெகு நேரம் காத்திருந்துவிட்டு நான் அங்கிருந்து திரும்பிவிட் டேன். பின்னர் அன்றிரவே (மார்ச் 23 இரவே), மாஜிஸ்ட்ரேட் முன்வு ஆஜர்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்றும்அங்கிருந்து செர்லாபள்ளி சிறைக்குகாவல் அடைப்பு செய்து அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல மேலும் 50 மாணவர்கள் கைது செய்யப்பட இருப்பதாகவும், அவர்களுக்கான முதல் தகவல் அறிக்கையும் தயாராக இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

ஆசிரிய சமுதாயம் கிளர்ந்தெழாததேன்?

இன்று (வியாழக்கிழமை) மாலை,கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள்அனைத்தின்மீதும் திங்கள்கிழமைவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டேன். எனவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திங்கள்கிழமை வரை, அதாவது ஒரு வாரத்திற்கு, சிறையில் இருந்தாக வேண்டும். முழுமை யாக ஒரு வாரம் சிறையில், என்ன காரணத்திற்காக?மிகவும் மனஉளைச்சலை ஏற்படுத் திய விசயங்கள் என்னவெனில் தன் சொந்த மாணவர்களையே கைது செய்ததை பல்கலைக்கழக நிர்வாகம் மறைத்ததற்கான காரணம் என்ன? அது தொடர்பாக விசயங்களை மூடிமறைப் பதேன்? கைது செய்யப்படாது பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் மின்சாரமின்றி, தண்ணீரின்றி, உணவின்றி பல வழிகளிலும் கொடுமைகளைச் செய்வது ஏன்? பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவந்த என் ஆசிரியநண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். இவ்வாறு மிகவும் மோசமான முறையில் மாணவர்களும், சில ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயமும் ஏன் கிளர்ந்தெழ வில்லை என்று அவரிடம் கேட்டேன். நமக்குள் வித்தியாசங்கள் இருக்கலாம், அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் காவல்துறையினரால் மாணவர் கள் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாகவும், சட்டவிரோதமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டது தொடர் பாகவும், எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி கண்டித்திருக்க வேண்டாமா? நம்முடைய நாட்டின் கிரிமினல் சட்டங் களின் அடிப்படைக் கொள்கைகளை மீறி இருப்பதைக் கண்டித்திருக்க வேண் டாமா? இதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

“இல்லை, ஊடகங்கள் தவறானதகவல்களை அளித்துக் கொண்டிருக் கின்றன. வளாகத்திற்குள் அனைத்தும் நன்றாகவே நடக்கின்றன.’’“கைதுகள் மற்றும் போலீசாரின் வன் முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்?’’“துணை வேந்தரை `கொலை செய்ய முயற்சி’ நடந்திருக்கிறது. மூத்த ஆசிரியர் இதனைப் பார்த்திருக்கிறார்.’’

ஏபிவிபியினர் கைதாகாதது ஏன்? காயம்படாததேன்?

“உண்மையா?’’ நான் கேட்டேன், “கொலை செய்ய முயற்சியா? எனக்குத் தெரிந்தவரை இதுவரை அதுபோன்ற குற்றச்சாட்டுக்களை நான் எங்கேயும் பார்க்கவில்லையே. அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? எப்படி இருந்தாலும், கைது செய்யப்பட்ட 30 பேரும் நேரடியாக இதற்குக் காரணமா? இருதரப்பினருக்கு இடையிலே நடைபெற்ற மோதலில் ஏபிவிபி மாணவர்களை மட்டும் கைது செய்வதிலிருந்து எப்படி ஒதுக்கித் தள்ளினீர்கள்? அங்கே நடைபெற்ற மோதலுக்கு இருதரப்பினருமே காரணம் இல்லையா? மாணவர்களை அடித்து நொறுக்குவதற்கு 200 பேர் தேவையா? போலீசாரின் குண்டாந்தடியால் ஏபிவிபி மாணவர் எவராவது காயப்பட்டிருக்கிறாரா? இந்த சம்பவத்திற்காக பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரையும் உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீரின்றி அவதிக்குள்ளாக்குவது தேவையா?’’ அவரிடமிருந்து இவற்றுக்கு எந்தப் பதிலும் இல்லை. எனக்கு நிலைமை தெளிவாகப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையில் ஏபிவிபி மாணவர்கள் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், கைது செய்யப்பட் டிருந்தால் அதனையும் நான் கடுமையாக எதிர்த்திருப்பேன், நீங்களும் அதனை எதிர்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருப்பேன்.துணை வேந்தரும், அவரது நிர்வாக மும், அவரது சகாக்களும் (கணிசமான அளவிற்கு அவருடன் இருக்கிறார்கள்) நிராயுதபாணியான மாணவர்கள்மீது அளவுக்குமீறிய விதத்தில் காவல்துறை யினரை ஏவுவதற்கு எப்படி இவர்கள் அனுமதித்தார்கள்? தங்களுடைய சொந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சிறையில் அடைக்கப் பட்டதைக் குறித்து சந்தோஷமாக இருக்கிற இவர்களைப்பற்றி எப்படி நாம் புரிந்துகொள்வது?

தங்களுடைய சொந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சிறையில் அடைக்கப்பட்டதைக் குறித்து சந்தோஷமாக இருக்கிற இவர்களைப்பற்றி எப்படி நாம் புரிந்துகொள்வது?

கட்டுரையாளர் : சர்வதேச சமூகவியல் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய சமூகவியல் சங்கத்தில் ஆயுள் உறுப்பினர்.

தமிழில்: ச.வீரமணி

நன்றி:தீக்கதிர்.

சந்திரசேகர் ராவ்காரு மாணவர்களை பட்டினி போட்டு ஒடுக்குவதுதான் நல்ல அரசாங்கத்தின் லட்சணமா?

 

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

அன்பார்ந்த சந்திரசேகர் ராவ்காரு,

தங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள இன்று (புதன்) முழுவதும் முயற்சி செய்தேன். பல செய்திகள் அனுப்பப்பட்டும், உங்கள் ஊழியர்கள் அவற்றைப் பெற்ற போதிலும் பதிலேதும் இல்லை. உங்களைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இக்கடிதத்தை மிகவும் மனவேதனையுடனும் கோபத்துடனும் எழுதுகிறேன். குறிப்பாக, தியாகி பகத்சிங் நினைவு தினத்தன்று இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுவதில் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகிறேன். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நேற்றைய செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மாணவிகள் மீது காவல்துறையினர் இழி வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்குதலை நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குழாய்களில் தண்ணீர் வராமல் அடைத்து வைத்திருக்கின்றனர்; மாணவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு வைஃபி இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, விடுதி மெஸ்ஸில் உணவு பரிமாறப்படாமல் மாணவர்கள் பட்டினி போடப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாணவர்களே உணவைத் தயார் செய்கையில் அவர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் தொடுத்துள்ளனர். விடுதிகளை மூடிவிடுமாறு துணை வேந்தர் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.நாட்டின் உன்னதமான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழும் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மாணவர் சமுதாயத்தினர் மீது தெலுங்கானா காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கொடூரமானத் தாக்குதல் கண்டு நாட்டிலுள்ள எங்களைப் போன்ற பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டுள்ளோம். துணை வேந்தரின் தகாத நடவடிக்கைகள்தான் ரோஹித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டதற்கும், அதனைத் தொடர்ந்து அவர் விடுப்பில் செல்வதற்கும் காரணங்களாகும். இத்தகு சூழலில் துணை வேந்தருக்கு எதிராக செயல்படுவதற்குப் பதிலாக தெலுங்கானா காவல்துறையினர் மாணவர்கள் மீது தங்கள் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

துணைவேந்தர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியதற்கு எதிராக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். மாநில அரசின் ஒப்புதலுடன் காவல்துறையினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைதான் துணைவேந்தர் மீளவும் திரும்பி வருவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. பல்கலைக் கழக அகடமிக் கவுன்சில் கூட்டம் மார்ச் 24 (வியாழன்) அன்று பொறுப்பு துணை வேந்தரின் தலைமையில் நடைபெற இருந்தது என்றும், துணை வேந்தர் திடீர் என்று திரும்ப வந்து அதனை ரத்துசெய்துவிட்டார் என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. மேற்படி அகடமிக் கவுன்சில் கூட்டத்தில், வளாகத்தில் பாகுபாடு எதிர்ப்புக் குழு அமைக்கப்படுவது தொடர்பாகவும், பல்கலைக் கழகத்தின் அனைத்துக் குழுக்களிலும் போதுமான அளவிற்கு தலித்/பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்திடுவது தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி உதவித்தொகையை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட இருந்தது.

இந்த நிலையில் துணை வேந்தர் திரும்பிவந்ததே தனக்குத் தெரியாது என்று பொறுப்புத் துணைவேந்தர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கணிசமான அளவிற்கு வாழும் தலித்/பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னுடைய தலைமையின்கீழ் தெலுங்கானா அரசாங்கம் விளங்கும் என்று உங்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அரசாங்கமும், நிர்வாகமும் துணை வேந்தரின் முடிவுகளுடன் நிச்சயமாக ஒத்துப்போக முடியாது. அப்படியிருந்தும் தெலுங்கானா போலீஸ், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலை நடத்தி இருக்கிறதே ஏன்? ரோஹித் வெமுலாவின் மரணத்தால் ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்து இன்னமும் மீளாத மாணவர்கள் மீது இத்தாக்குதல் நடந்திருக்கிறது. பல்கலைக் கழக சம்பவங்களுக்குக் காரணமான துணைவேந்தருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் திரும்பவும் வலியுறுத்துகிறேன்.

பல்கலைக் கழக மாணவர் சமுதாயத்தின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உங்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமையாகும். காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது. அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட வேண்டும். துணை வேந்தருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு மத்திய பல்கலைக் கழகமாக இருப்பதால், அவரை நீக்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்திட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தீக்கதிர்

ரிசர்வ் படை, அதிரடிப் படை கட்டுப்பாட்டில் கல்விக் கூடம்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கிறது?

ரோகித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பின் ஜனவரி 24 முதல் “காணாமற் போன” துணை வேந்தர் அப்பா ராவ் போடிலி சென்ற செவ்வாய் அன்று (மார்ச் 22) பல்கலைக் கழக வளாகத்திற்குத் திரும்பியபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அப்பா ராவ் ஒரு துணை வேந்தருக்கு இருக்க வேண்டிய நேர்மை, அறக் கடப்பாடு ஏதுமற்ற ஒரு எடுபிடி. ரோகித் வெமுலாவின் “தற்கொலைக்கு” ஸ்மிருதி இரானி தொடர்ந்து அனுப்பிய கடிதங்கள் காரணமாக இருந்ததை அறிவோம். இப்படியான கடிதங்கள் மேலிருந்து அனுப்பப்பட்டாலும் ஒரு தகுதி மிக்க துணை வேந்தர் அதில் உண்மை இல்லாத பட்சத்தில் உரிய பதிலை அனுப்பிவிட்டு மாணவர்களைப் பாதுகாக்கவே செய்வார். ஆனால் பணம் கொடுத்துத் துணை வேந்தர் பதவியை விலைக்கு வாங்கும் இன்றைய சூழலில் துணை வேந்தர்கள் அரசின் எடுபிடிகளாகத்தான் செயல்படுகின்றனர்.

என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். ரோகித் தூக்கில் தொங்கினான். அன்று ஓடியவர்தான் அப்பா ராவ். நாங்கள அங்கு சென்ற போது அப்பா ராவின்படத்தை ஒட்டி ‘காணவில்லை’ என போராடும் மாணவர்கள் பல்கலைக் கழகம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர்.

இந்த அப்பாராவ் சென்ர செவ்வாய்கிழமை அன்று மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு வந்துள்ளார். அறிந்த மாணவர்கள் அவரது இல்லத்தின் முன் நின்று அவரைத் திரும்பிப்போ என முழக்கமும் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர். ரோகித் வெமுலாவின் “தற்கொலை” விசாரணையைப் பொருத்த மட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளையும் உள்ளடக்கியே அவ்விசாரணை நடைபெறுகிறது. வன்கொடுமைச் சட்டப் பிரிவு 1- ன்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை முடியும் வரை பதவியில் இருக்க இயலாது. அதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் அவருள்ளேயே நிழையக் கூடாது என முழக்கமிட்டுள்ளனர். அப்போது முழக்கமிட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து யாரோ சிலர் அப்பா ராவின் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.

அதை ஒட்டி மிகப் பெரிய அளவிலங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

48 மணி நேரம் தண்ணீர், உணவு, மின்சாரம் எல்லாம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மீது காவல்துைறை கடும் வன்முறையை மேற்கொண்டது. பெண் மாணவிகள் பாலியல் சீண்டல்களுக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். மூன்று பேராசிரியர்கள் (முனைவர்கள் டோந்தா பிரசாந்த், லிங்க சாமி, வெங்கடேஷ்) மற்றும் 27 மாணவர்களோபோடு கைது செய்யப்பட்டு செர்லபள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லும்போதே வேனில் வைத்து இவர்கள் அடிக்கப்பட்டுள்ளனர்.

துணை வேந்தர் வீட்டைத் தாக்கியதாலதான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று எனக் காவல்துறை கூறியுள்ளது. பாலியல் தாக்கல் செய்யவில்லை எனவும் மறுத்துள்ளது. ஆனால் மாணவியர் அந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

துணை வேந்தர் வீடு தாக்கப்பட்டதைப் பொறுத்த மட்டில் அதைச் செய்தது பாஜக வின் மாணவர் அமைப்பான ABVP மாணவர்கள்தான் கூட்டத்தில் புகுந்து கற்களை வீசினார்கள் என மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ABVP மாணவர் தலைவனும், ரோகித்தின் மீது பொய்ப்புகார் கொடுத்து அவரது மரணத்திற்குக் காரணமானவனுமான சுஷில் குமார், “யாகூப் மேமனின் ஆதரவாளர்கள்தான் துணை வேந்தரின் வீட்டைத் தாக்கியது எனத் திமிராகக் கூறியுள்ளான்.

48 மணி நேரம் உணவு தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் தவிக்க விட்டதைப் பற்றிக் கேட்டபோது பல்கலைக்கழகப் பதிவாளர் சுதாகர்,”சமையல் பணியாளர்கள் துணை வேந்தருக்கு ஆதரவாக வேளை நிறுத்தம் செய்தனர்” எனக் கூறியுள்ளார். துணை வேந்தர் அப்பாராவ், “மானவர்கள் பணியாளர்களை அடித்து விட்டனர். அவர்கள் வேலைக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.

அந்த 48 மணி நேரம் ATM ம் வேலை செய்யவில்லை. உதய் பானு எனும் மாணவர் தெருவில் வைத்து சமைக்க முயன்ற போடு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பல்கலைக் கழக வளாகத்திற்குள் இப்போது பெரிய அளவில் மய ரிசர்வ் படை (CRPF) மற்றும் அதிரடிப் படை (RAF) குவிக்கப்பட்டுள்ளது.

கடும் வன்முறையை ஏவி மாணவர்களை ஒடுக்குவது என மோடி அரசு இறங்கியுள்ளது. தங்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையால் ஒரு தலித் மாணவன் இறந்துள்ளான், அது நாடெங்கும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிந்தும் இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை மோடி அரசு செய்துள்ளது. தெலங்கானா அரசு அத்துடன் இணைந்து வன்முறையில் இறங்கியுள்ளது. இப்போது 26 வரை பல்கலைக் கழகம் மூடப்பட்டுள்ளது. டெல்லி JNU மாணவர் தலைவன் கன்னையா குமார் நேற்று (23) வந்தபோது அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வெளியார்களுக்கு அனுமதி இல்லை என அவர் தடுக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடையாளம் தெரியாத சிலர் பைக்கில் வந்து கற்களையும் செருப்புகளையும் வீசியுள்ளனர்.

ABVP மாணவர்களும் அப்பாராவும் திட்டமிட்டே இது நடத்தப்பட்டுள்ளதுஅப்பாராவை அவர்களே மீண்டும் வளாகத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். மாணவர்கள் சிலர், ஆசிரியர்கள் சிலர் ஆகியோரின் பட்டியலை அவர்கள் கையில் வைத்துக் கொண்டுள்ளனர். ரோகித் தன்னைத் தாக்கியதாகப் பொய்ப் புகாரைத் தந்து அவரது மரணத்திற்குக் காரணமான ABVP தலைவன் சுஷில் குமார் என்ன துணிச்சலாக “யாகூப் மேமனின் ஆட்கள்” தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லியுள்ளான் என்பதைக் கவனியுங்கள்,

130 களில் ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் எத்தகைய பாசிச வன்முறைகளில் இறங்கினரோ அதே வடிவில் இன்று மோடி அரசு களம் இறங்கியுள்லது. பல்கலைக் கழகங்கள் இன்று அவர்களின் இலக்காகியுள்ளன.

#ரோஹித் வெமுலா: பட்டினியால் தவிக்கும் மாணவர்களுக்காக உணவு சமைத்த மாணவரை அடித்த போலீஸ்; உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் மாணவர்

ரோஹித் வெமுலாவின் மரணத்துக் காரணமான ஹைதராபாத் பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ், இரண்டு மாத விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்புவதாக அறிவித்தார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டில் ஈடுபட்டவர்களை மிக கடுமையான முறையில் ஒடுக்கி, பல மாணவர்கள் கைது செய்தது போலீஸ். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பல்கலை நிர்வாகம், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது, மின்சாரத்தை நிறுத்தியது. கடந்த இரண்டு உணவு, தண்ணீர் இன்றி மாணவர்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பட்டியாக இருந்த மாணவர்கள் தங்களுக்காக உணவை தாங்களே சமைக்க முற்பட்டனர். அப்படி சமைத்துக் கொண்டிருந்த உதய் பானு என்ற ஆய்வு மாணவரை மூர்க்கமாக தாக்கியது போலீஸ். உதய் பானு தற்போது ஹைதராபாத் மருத்துவமனை ஐசியூவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

#ரோஹித்வெமுலா: பல்கலைக்கு திரும்பிய துணைவேந்தர்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்த போலீஸ்

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வாளர் ரோஹித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் உள்பட தலித் மாணவர்கள் ஐவரை பல்கலைக் கழகம் மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதன் காரணமாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்கலை வேந்தருக்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான்குக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். இதன் பின்னணியில் பாஜக எம்பி தத்தாத்ரேயா இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ்,  ஆய்வுக்கான ஊக்கத் தொகையும் நிறுத்தினார். இந்நிலையில் ரோஹித் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

ரோஹித் தற்கொலை விவகாரம், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்த நிலையில், பல்கலை வேந்தர் அப்பா ராவ் காலவரையற்ற விடுப்பில் சென்றார். அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பின், துணைவேந்தர் அப்பா ராவ், பணிக்குத் திரும்புவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பினார். அப்பா ராவின்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், அவர்களை குண்டுகட்டாக தூக்கி, கைது செய்தது போலீஸ்.

கண்ணகி நகர் தலித் சிறுவனை தவறாக அழைத்துச் சென்று அடித்து உதைத்த போலீஸ் : ஆள்மாறாட்டம் என்று தெரிந்தவுடன் நடுரோட்டில் வீசி செல்லப்பட்ட கொடூரம்!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின் 3-வது மகனான 17 வயது முகேஷ்,  ஒரு சுமை தூக்கும் தொழிலாளி.  வெள்ளிக்கிழமை இரவு, நள்ளிரவு 11 மணி அளவில் அப்பகுதிக்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு, ‘நாம் தேடிவந்தது இவன் அல்ல’ என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் கிடந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளனர்.

காயம் இருந்ததால் முகேஷை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். ‘போலீஸ் அடித்த தால்தான் காயம் ஏற்பட்டது என்று கூறக்கூடாது’ என அங்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரும் அவர்களை வற்புறுத்தியுள்ளனர்.

 வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ்காரர், ‘சம்பவம் குறித்து பிரச்சினை கிளப்பினால், முகேஷ் மீது பல வழக்குகள் தொடருவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.

இந்நிலையில், முகேஷை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பத்திரிகையாளர் அ. குமரேசன், “சட்டத்துக்குப் புறம்பாகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்றால், சட்டத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை?” என கேட்கிறார்.

“சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுவனை வெள்ளிக்கிழமை (மார்ச் 11) இரவு 11 மணிக்கு வீட்டிலிருந்து போலிஸ்காரர்கள் பிடித்துச்சென்று அடித்து உதைத்திருக்கிறார்கள். போகிற வழியிலேயே, தவறான ஆளைப் பிடித்து வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டு, சிறுவனை வழியிலேயே கல்லும் முள்ளும் நிறைந்த இடத்தில் ரத்தக்காயங்களோடு போட்டுவிட்டு, பெருந்தன்மையோடு பத்து ரூபாய் கொடுத்து, “பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்விடு… நடந்ததை வெளியே சொல்லாதே…” என்று சொல்லிவிட்டுப் போனார்களாம். பையனின் முணகல் கேட்டு வழியில் சென்றவர்கள் உதவிசெய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அடிபட்ட சிறுவனின் தந்தையிடம், “இதைப் பிரச்சனையாக்கினால் பையன் மேல நிறைய கேஸ்களைப் போட்டுவிடுவோம்,” என்ற போலிஸ் ஸ்டேஷனிலிருந்து அன்பான அறிவுரை கூறினார்களாம்.

சரியான பையனைத்தான் பிடித்துச் சென்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம், இப்படிக் கொண்டுசெல்லும் வழியிலேயே அடித்து உதைத்துக் காயப்படுத்தும் அதிகாரத்தை போலிஸ்காரர்களுக்கு யார் கொடுத்தது?

அந்தப் போலிஸ்காரர்கள் அப்போது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. குடிப்பதற்கு ஊற்றிக்கொடுத்த யாரோ ஒரு ஆசாமிக்கு விசுவாசமாகத்தான் இந்த அதிகார மீறல் நடந்ததா?

சிறார்ப் பருவத்தில் இருப்போர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விதிகளைத் தூசியென மதித்து ஒதுக்கும் துணிவு எப்படி வந்தது?

சட்டத்துக்குப் புறம்பாகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்றால், சட்டத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை?

ரோஹித் வெமுலா, முகேஷ் என யாரானாலும் அதிகாரக் கரங்கள் இப்படிக் குதறுவதற்குத்தான் நீளுமா?

சாதிய இழிவுகளும் அதிகார மீறல்களும் ஒழிக்கப்பட்ட பெருமைமிகு நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொண்டால் அது தேசப்பற்றா, தேசத்துரோகமா?” என்று கேள்வியை முன்வைக்கிறார் அவர்.

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ்

கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி).

இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து பேசவைத்தாலும் அது கார்ல் மார்க்சின் அறிவோடு ஒப்பிடுகையில் பாமரத்தனமாகவே இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் நான் கொண்டிருந்த கருத்துக்கள் எனது இன்றைய புரிதலின் வழியே பார்க்கையில் பாமரத்தனமாகவே இருக்கின்றன, இது எல்லோருக்கும் பொருந்தும். உங்கள் அறிவோ அல்லது எதிர்பார்ப்போ அதீதமானதாக இருக்கையில் இன்னொருவரது திறமையில் குறைகள் காண்பது தவிர்க்க இயலாது.

கண்னையாவின் பேச்சில் தவறான புரிதல்கள் இருந்திருக்கலாம், முரண்படவேண்டியவை இருந்திருக்கலாம் ஆனால் அதில் அதைத்தாண்டி கவனிக்க வேண்டியவையும் அங்கீகரிக்கவேண்டியவையும் பகிர வேண்டியவையும் ஏராளமாக இருக்கின்றன.

முதலில் இன்றைய மாணவர் சமூகத்தின் மீதிருக்கும் மோசமான பிம்பத்தை கண்ணையா உடைத்திருக்கிறார். ஆழமான புரிதலற்றவர்கள், எளிதில் பயந்துவிடுபவர்கள், பொறுப்பற்றவர்கள் என்பதாக நீளும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தன் செயல்பாட்டால் பதில் சொல்லியிருக்கிறார். இந்துத்துவத்தின் புதிய சோதனைச்சாலையாக உள்ள டெல்லியில் காவிமயமான காவல் மற்றும் நீதித்துறையினால் அச்சுறுத்தப்பட்ட பிறகும் அவர் தன் குரலை இன்னும் உரக்க ஒலித்திருக்கிறார். பாதுகாக்க மறுத்து ஒதுங்கிய போலீஸ், கேமராக்களுக்குகூட பயப்படாமல் வெறித்தனமாக தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் இன்னமும் அதிகாரத்தோடு உள்ள டெல்லியில் நின்றுதான் இவற்றை அவர் பேசுகிறார். அவர் பாமரத்தனமாக பேசுகிறாரா அல்லது அறிவுஜீவித்தனமாக பேசுகிறாரா என்பதெல்லாம் அந்த காவி குண்டர்களுக்கு புரியாது, சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும் கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் பேசும் எல்லோரும் அவர்கள் பார்வையில் ஒழிக்கப்படவேண்டியவர்கள். அந்த சூழலிலும் அவர் அஞ்சாமல் பேசுகிறார்.

கம்யூனிசம் தலித்தியம் ஆகியவை ஒரு தீண்டத்தகாத சொல்லாக இருக்கும் உயர்கல்விக் கூடங்களில் இருந்து ஜெய் பீமும் லால் சலாமும் ஒலிக்கிறது. மாணவன் போராடி கைது செய்யப்பட்டால் எதிர்காலம் பாழாகிவிடும் எனும் மிரட்டல் எல்லா மட்டத்திலும் உள்ள ஒரு நாட்டில் ஒரு பிஎச்டி மாணவன் ஜாமீனின் வந்த சில மணிநேரங்களில் அதே வாக்கியங்கள் பேசுகிறான். நீதிமன்றம் மறைமுகமாக சொல்கிறது நீ அரசியல் செய்யாதே என்று, உள்துறை அமைச்சர் நைச்சியமாக சொல்கிறார் நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று… ஆனாலும் இந்த இளைஞன் தன் அரசியலை இன்னும் தீவிரமாக பேசுகிறார்.

மூன்றாயிரம் ரூபாயில் ஜீவனம் செய்யும் ஏழைக்குடும்பத்து இளைஞனின் குரல் நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை மக்களுக்காக ஒலிக்கிறது. உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு தூக்குக் கயிறை தயாராக வைத்திருக்கும் தேசத்தில் ஒரு தலித் மாணவனின் குரல் கண்டு காவிக்கூடாரம் பதறுகிறது. கண்ணையாவின் பேச்சைக் கொண்டாட வேறொரு காரணமும் வேண்டுமா என்ன?

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தலித் மக்களை தலைவராக்காது எனும் கருத்து விஷமத்தனமாக பரப்பப்படும் தேசத்தில் கம்யுனிசம் பேசும் ஒரு தலித் இளைஞனை ”ஒரு தலைவன் உருவாகிவிட்டான்” என்கின்றன ஊடகங்கள். அதனை பெருமகிழ்ச்சியோடு பகிர்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

பாஜக முதல் குப்பை தமிழ் சினிமாக்கள் வரை அனைவரும் சேர்ந்து அச்சுறுத்தும் வார்த்தையாக மாற்றிய ஆஸாதி எனும் சொல்லை மக்களுக்கு மீட்டுக்கொடுத்திருக்கிறார் கண்ணையா குமார்.

ஒடுக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு ரோகித்தைபோல வாழ்வை முடித்துக்கொண்டு போராட வேண்டாம், சிறைக்கு சென்று இன்னொரு வாழ்வை துவங்கும் போராட்ட வடிவத்தை கையிலெடுக்கலாம் எனும் நம்பிக்கையை கண்னையா கொடுத்திருக்கிறார்.

பெரும்பான்மை உள்ள ஆணவத்தில் செயல்படும் பாசிஸ்டுகளின் பிடரி மயிரை பிடித்து உலுக்குகிறான் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இளைஞன். கொண்டாட  ஏன் தயங்கவேண்டும்?

கண்ணையா கருத்துகள் எதிலேனும் முரண்படுகிறீர்களா, தவறில்லை. அவர் தேர்தல் அரசியலால் தடம் மாறிவிடுவார் என்கிறீர்களா, மறுப்பதற்கில்லை. ஆனால் தலித்களை கம்யூனிசத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் தேசந்தழுவிய கபடத்தனத்தின்மீது விழுந்திருக்கும் முதல் அடிதான் கண்ணையா குமாரின் பேச்சும் அவருக்கு எழும் ஆதரவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிக வலுவாக இருந்தது தலித் மக்களிடம்தான். கம்யூனிசத்தை வலுவிழக்க வைக்க எடுக்கப்பட்ட அதிமுக்கிய நடவடிக்கை தலித் மக்களை கம்யூனிசத்தில் இருந்து விலக்கி வைப்பது. அதற்காகவே அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்ட தலித் கட்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. தலித் மக்களிடம் செயல்பாடும் என்.ஜி.ஓக்களுக்கு திடீர் ஆதரவு கிட்டியது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தலித் மக்களுக்கு எதிரானவை எனும் பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது. அது ரோகித் வெமுலா தற்கொலை வரை நீடிக்கிறது (கம்யூனிச இயக்கங்கள் அங்கீகரிக்க மறுத்ததுதான் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளியது என சொன்ன தலித் இயக்க நண்பர்களும் இருக்கிறார்கள்).

தலித் மக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைமைக்கு வராமல் போயிருக்கலாம், ஆனால் அவர்களுக்காக உளமாற போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான். கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்களை ஒடுக்கிய பண்ணையார்களை அழித்தொழிக்க கிளம்பியவர்களில் பலர் ஆதிக்க சாதியில் பிறந்த கம்யூனிஸ்கள்தான். இடதுசாரி இயக்கங்களில் சிலகாலம் மட்டும் இருந்தவர்கள்கூட சாதியத் திமிர் அற்றவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கள்ளர் சாதியில் பிறந்த வெங்கடாசலம் எனும் கம்யூனிஸ்ட் தோழர் தலித் மக்கள் உரிமைக்காக உழைத்ததன் காரணமாக தன் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்பட்டார். அவர் நினைவாக தங்கள் பிள்ளைகளுக்கு வெங்கடாசலம் என பெயரிடும் பழக்கம் தஞ்சை தலித் மக்களிடம் இருந்தது. ஏன் ஒரு தலித்தை தலைவராக்க மறுக்கிறீர்கள் என கேள்வியெழுப்ப எல்லா நியாயமும் நமக்கு இருக்கிறது. ஆனால் அதுமட்டுமே கம்யூனிசத்தை விட்டு விலகுவதற்கான நியாயமான காரணமாக இருக்க முடியாது.

தலித் மக்கள் பங்கேற்பு கம்யூனிஸ்ட் இயக்கங்களில் குறைந்து தலித் இயக்கங்களுக்கு போனதால் இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமல்ல. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தலித் – வன்னியர் கலப்பு மணம் தருமபுரியில் மிக சாதாரண நிகழ்வு. இன்று அது ஊரையே அழித்துவிடும் அளவுக்கான பிரச்சினை. காரணம் இந்த வட்டாரங்களில் செல்வாக்காக இருந்த இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்துபோனதுதான். நாமெல்லோரும் உழைப்பாளிகள் எனும் கம்யூனிச வர்க சிந்தனை சாதிய உணர்வை ஒரு பீத்துணியைபோல ஒதுக்க வைக்கும். அந்த சிந்தனைக்கு களம் இல்லாத போது மக்களிடம் சாதிய உணர்வும் மத உணர்வும் ஊடுருவுகின்றன. இதன் முதல் மற்றும் பிரதான பலியாடுகள் தலித் மக்களும் சிறுபான்மை மக்களும்தான்.

கண்ணையாவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெளிச்சம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கம்யூனிசத்தை மீண்டும் கொண்டுசேர்க்க கிடைத்த ஒரு வாய்ப்பு. பள்ளி கல்லூரிகளிலேயே இந்துத்துவத்துக்கு அடியாட்களையும் கொடையாளிகளையும் உருவாக்கும் ஏ.பி.வி.பி போன்ற குண்டர்படைகளை அம்பலப்படுத்தி இடதுசாரி சிந்தனையை கல்வி நிலையங்களில் முன்னெடுக்க இது சரியான காலம். ஆகவே, அதற்கு ஒரு களம் அமைத்த கண்ணையாவை கொண்டாடுங்கள்… ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். இந்தியாவை சூழும் காவி இருளில் கண்ணையா ஒரு சிறு வெளிச்சம்தான். அதனை நாம் செல்ல வேண்டிய பாதையில் பயணிக்க பயன்படுத்துவோம், கொண்டாடிவிட்டு ஓய்வெடுக்க அல்ல.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடைய வலைத்தளம் https://villavan.wordpress.com.

முகப்புப் படம்: Tanushree Bhasin

“நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

ஹரிஷ் குமார் வரலாற்றுத்துறை மாணவர். இவர் 2005ஆம் ஆண்டு பல்கலைக் கழக தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து மீரட், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தந்தை ஒரு தையற்காரர்.

ஹரிஷ் குமார் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் அவரால் தன்ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இவருக்குத் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு மேற்பார்வையாளர் கிடைக்கவில்லை. இவர் சந்தித்த பேராசிரியர்கள் அனைவருமே, “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ என்று கூறி எவரும் இவருக்கு மேற்பார்வையாளராக இருக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து போராடியதன் காரணமாக ஏழு ஆண்டுகள் கழித்து ஒரு மேற்பார்வையாளர் இவருக்குக் கிடைத்தார்.

இப்போது வருகைப் பிரச்சனைகளைக் கூறி தன்னை “அலைக்கழித்து’’ வருவதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக தி இந்து செய்தியாளர், பல்கலைக் கழகத்துணை வேந்தரிடம் கேட்டபோது, அவர், “ஹரிஷ் குமார் போதுமான அளவு வருகைப் பதிவு இல்லாததால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை, அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது,’’ என்றும் “தலித் என்பதால் அவருக்கு எவ்விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை,’’ என்றும் கூறியிருக்கிறார்.

ஆயினும் அதே பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் சதிஷ் பிரகாஷ் (இவரும் ஒரு தலித் இனத்தவர்தான்), “உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் அனைத்திலுமே தலித்துகளுக்கு எதிராகப் பாகுபாடுகள் இருக்கின்றன,’’ என்றும், “வெமுலாவிற்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்கள் இங்குள்ள மாணவர்களுக்கும் உண்டு,’’ என்றும் கூறினார். ஹரிஷ் குமாரின் திறமைகள் குறித்து அவரது நண்பர்கள்அவரைப் போற்றிப் புகழ்கின்றனர். “2005ஆம் ஆண்டில் பல்கலைக் கழக மானியக் குழுவின் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.

மீரட் மற்றும் பாக்பாத் நகர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களின் மிக மோசமான நிலைமைகளை வெளி உலகத்திற்குக் கொண்டுவந்தார், நம் நாட்டின் புராதனச்சின்னங்கள் குறித்து ஓர் இதழ் நடத்திக் கொண்டிருக்கிறார். 25க்கும் மேற்பட்ட ஆய்வுத்தாள்கள் சமர்ப்பித்திருக்கிறார். தேசிய இந்தி நாளேடுகளிலும் இவரது கட்டுரைகள் எண்ணற்றவை இடம் பெற்றிருக்கின்றன,’’ என்றுஅவர்கள் கூறினார்கள்.

“உத்தரப்பிரதேசத்தில் எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் வழக்கமான சூழ்நிலையில் ஒருவர் பிஎச்டி ஆராய்ச்சிப் பட்டத்தை வாங்கிவிட முடியும்.’’ என்று டாக்டர் பிரகாஷ் கூறினார்.தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பி.எச்டி. ஆய்வுக்காக தலித்மாணவர்கள் எத்தனை பேர் பதிவுசெய்து அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர்ஆய்வினை நிறைவு செய்திருக்கிறார்கள் என்று ஒரு விண்ணப்பத்தினை ஹரிஷ் குமார் தாக்கல்செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்தே அவர் அலைக்கழிக்கப்படுவது தொடர்ந்தது என்றும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஹரிஷ்குமார் ஆளுநருக்கும், மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சருக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் கடிதங்கள் அனுப்பி இருக்கிறார்.

தீக்கதிர்.

ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்

கன்னய்யா குமார், பிணையில் வெளியாகி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் ஆற்றிய உரை, பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கும் அதைச் சார்ந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கும். இந்த வகையில் தான் கன்னய்யாவின் பேச்சுக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கேட்டபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘மாணவர்கள் அரசியல் செய்யக்கூடாது’ என்று கருத்து சொன்னார். அந்தக் கருத்து பாஜகவின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கும் பொருந்துமா என்கிற கேள்வியை பலர் முன்வைத்தனர்.

ஏபிவிபி மாணவர் அமைப்பாக செயல்படாமல் குண்டர் படையாக செயல்பட்டதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ரோஹித் வெமுலாவை தற்கொலைக்குத் தூண்டியது, ஜவஹர்லால் மாணவர் அமைப்பினரை தேச துரோக வழக்கில் சிக்கவைத்தது என இவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வெறுப்பு அரசியலுக்கு அடுத்த பலியாகியிருக்கிறார், அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின்  தலைவர் ரிச்சா சிங்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின், அலகாபாத்பல்கலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மாணவர் சங்கத் தலைவர் ரிச்சா. 1927-ஆம் ஆண்டு மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரி எஸ். கே. நேரு முதல் பெண். இத்தனை ஆண்டுகால இடைவெளியில் மீண்டும் ஒரு பெண் மாணவர் சங்கத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம், அலகாபாத் பல்கலை ஏபிவிபியின் கோட்டை. மாணவர் சங்க நிர்வாகிகளில் சங்கத் தலைவரைத் தவிர, மற்ற அனைவரும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இடதுசாரி சிந்தனை உள்ளவரான ரிச்சா சிங், இடது அமைப்பைச் சேர்ந்தவரல்ல. இவர் மாற்றுக் கருத்தியலுக்காக உருவாக்கிய ஃப்ரெண்ட்ஸ் க்ளப் என்ற அமைப்பின் மூலமாக போட்டியிட்டு வென்றனர். இடதுசாரி, தலித் அமைப்புகள் இவருக்கு ஆதரவு அளித்தன.

2013-2014-ஆம் ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த ரிச்சா சிங், முறைகேடான முறையில் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று 2016-ஆம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் செய்தது ஒரு மாணவர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்குக் குழு அமைத்து இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்னும் ஒரிரு நாளில் பல்கலை நிர்வாகம் முடிவெடுக்க இருக்கிறது.

படிப்பில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போது நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? முதல் காரணம் ஏபிவிபி அல்லாதவர் மாணவர் சங்கத் தலைவராக இருப்பது. இரண்டாவது காரணம் பெண்ணாக இருப்பது. மூன்றாவது ஏபிவிபியில் குண்டாயிசத்தை, காவி கலாச்சாரம் கல்லூரிக்குள் புகுவதைத் தடுத்தது. குறிப்பாக, சர்ச்சை புகழ், பாஜக எம் எல் ஏ யோகி ஆதித்யநாத்தை கல்லூரி விழாவுக்கு அழைத்த ஏபிவிபி அமைப்பினருக்கு எதிராக போராட்டம் நடத்தி அவர் வராதபடி செய்தது.

மற்றொரு முக்கியமான விஷயம் தலித் பெண் ஒருவரிடம் முறையற்ற நோக்கத்துடன் நடந்துகொண்ட ஒருவரை கல்லூரி பொறுப்பில் நியமித்ததற்கு ரிச்சா கடுமையாக எதிர்த்திருக்கிறார். எனவே, ரிச்சா மீது வன்மத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நிறைய காரணங்கள் கிடைத்தன.

“என்னுடைய கல்வியின் எதிர்காலமே இப்போது அச்சுறுத்தலாகியிருக்கிறது. நான் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். இந்தப் பல்கலைக்கழகம் என்னை துன்புறுத்துகிறது. ரோஹித் வெமுலா எத்தகைய கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது” என்கிறார் ரிச்சா சிங்.

ரிச்சா சிங், சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தி வயர் இணைய தளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அழைக்கப்பட்டிருந்தார். சித்தார்த் வரதராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அலுவலகத்தில் அவரை சிறைபிடித்தனர்.

 

ரோஹித் வெமுலா, கன்னய்யா குமார் விவகாரங்கள் தேசத்தின் கவனத்தை பெற்ற நிலையில்,  மீண்டும் மாணவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது ஏபிவிபி அமைப்பினரின் தலையீடு, அவர்களை ஊக்கப்படுத்தும் பாஜக அரசியல்வாதிகளின் தலையீடு எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தன்னுடைய நிலை குறித்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு பல கடிதங்கள் எழுதியும் இதுவரை மாணவர்களை குழந்தைகளாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்  ரிச்சா சிங்.

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே…

ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ்

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்  

விஜயசங்கர் ராமச்சந்திரன்
விஜயசங்கர் ராமச்சந்திரன்

இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு என்று தெரிந்துகொண்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றக் ‘கனவான்களுக்கு’ என் நன்றி.
ஊடங்கள் அவர்களுடைய பிரைம் டைமில் ஜேஎன்யூவிற்கு இடம் கொடுத்தனர், ஜேஎன்யூவை அவதூறு செய்வதற்காக மட்டுமே.

எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. குறிப்பாக ஏபிவிபி மீது வெறுப்பு இல்லை. ஏனெனில், ஜேஎன்யூவில் இருக்கும் ஏபிவிபி அமைப்பு பல்கலைக்கழகத்திற்கு வெளியிலிருக்கும் அதன் சொந்தங்களைவிட அதிக தேசிய உணர்வு கொண்டிருக்கிறது. அரசியல் வித்தகர்களாக தங்களை முன்னிறுத்திக்கொள்பவர்களுக்க் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சென்ற முறை ஏபிவிபியின் ‘மிகபுத்திசாலித்தனமான’ வேட்பாளரை நான் விவாதத்தில் எப்படி எதிர்கொண்டேன் என்று பாருங்கள். அப்போது தெரியும், நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் ஏபிவிபி அமைப்புகளுக்கு என்ன நடக்குமென்று.

ஏபிவிபி மீது எனக்கு குரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. ஏனெனில், நாங்கள் உண்மையான ஜனநாயகவாதிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புபவர்கள். அதனால்தான் நாங்கள் ஏபிவிபியை எதிரணியாகத்தான் பார்க்கிறோம். எதிரியாக அல்ல.

நண்பர்களே, உங்களை பழிவாங்கும் வேட்டையில் இறங்கமாட்டேன். அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை.

இந்தக்காலகட்டத்தில், ஜேஎன்யூ காட்டியிருக்கும் வழிக்காகவும், எது சரி, எது தவறு என்று எழுந்து நின்று சொன்னதற்காகவும், ஜேஎன்யூவிற்கு என் சல்யூட்! இது எல்லாமே தன்னெழுச்சியானது. நான் ஏன் இதைச்சொல்கிறேனென்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாமே திட்டமிடப்பட்டது. நம்முடைய செயல்கள் எல்லாம் தன்னெழுச்சியானது.
நான் இந்த நாட்டின் சட்டத்தை நம்புகிறேன். அதன் அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறேன். அதன் நீதி அமைப்பை நம்புகிறேன். மாற்றம் என்பது மட்டுமே உண்மை என்று நம்புகிறேன். அது வரும், வரவேண்டும் என்று நினைக்கிறோம். அதைக் கொண்டுவருவோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சோஷலிஸத்திற்கு ஆதரவாக நிற்கிறோம். மதச்சார்பின்மைக்கு ஆதரவாக நிற்கிறோம். சமத்துவத்திற்காக நிற்கிறோம்.

எனக்கு சிறையில் நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கெனெவே படித்து அறிந்ததையெல்லாம் நான் அங்கு அனுபவத்தில் உணர்ந்தேன்.

நான் ஏன் லால் சலாம் லால் சலாம் என்று திரும்பத்திரும்பச் சொல்கிறேன் என்று சிறையிலிருந்த காவலர்கள் கேட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் இதைக் கேட்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்! எனக்கு உணவு கொடுப்பதற்காகவும், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் காவலர்கள் வருவார்கள். ஜேஎன்யூ மாணவனாகிய நான், அதுவும் பிரம்மபுத்திரா ஹாஸ்டலைச் சேர்ந்த நான் எப்படிப் பேசாமல் இருக்கமுடியும். எனவே ஒரு காவலருடன் பேசத்தொடங்கினேன். அவரும் என்னைப் போன்றவர்தான் என்று புரிந்துகொண்டேன். யோசித்துப் பாருங்கள். சிறைக்குள் காவலர் வேலைக்கு வரும் ஒருவரின் தந்தை ஒரு விவசாயியாகவோ, தொழிலளியாவோதான் இருக்கவேண்டும். அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். நானும் பின் தங்கிய மாநிலமான பீஹாரிலிருந்து வருகிறேன். நானும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு விவாசயியின் குடும்பம். இத்தகைய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் காவல்துறைக்கு வருகிறார்கள். நான் கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள், ஆய்வாளர் வேலைகளைச் சொல்லுகிறேன். எனக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பரிச்சயமில்லை.

அந்த காவலர்: இது என்ன லால் சலாம்?

நான்: லால் என்றால் ரெவல்யூஷன் (புரட்சி)

அவர்: சலாம்?

நான்: வாழ்க. புரட்சி வாழ்க என்று பொருள்

காவலருக்கு புரியவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் தெரியுமா என்றேன். தெரியும் என்றார். இன்குலாப் என்பது புரட்சியைக் குறிக்கும் உருது மொழிச்சொல் என்றேன். எபிவிபி உறுப்பினரகளும் இன்குலாப் ஜிந்தாபத் என்று கூறுகிறார்களே என்றார். இப்போது புரிகிறதா? அவர்கள் போலிப் புரட்சியாளர்கள். நாங்கள்தான் உண்மையான புரட்சியாளர்கள் என்றேன்.

காவலர் இன்னொரு கேள்வியைக் கேட்டார். ஜேஎன்யூவில் எல்லாப் பொருட்களும் மலிவு விலையில்தான் கிடைக்கிறது, இல்லையா? என்றார். காவலர்களாகிய உங்களுக்கும் அப்படித்தானே என்றேன். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கும் அவருக்கு ஒவர்டைம் சம்பளம் கிடைக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். சமாளிக்கிறேன். நீங்கள் எல்லோரும் கூறும் ஊழல்தான் என்றார்.

அவருக்கு சீருடை அலவன்ஸாக 110 ரூபாய் கிடைக்கிறது. நீங்கள் அதைவைத்து உள்ளாடைகள் கூட வாங்கமுடியாது என்றேன். மேற்கூறிய விவரமெல்லாம் அவராகவே முன்வந்து கூறியவை. இதற்காகத்தான், இந்த வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் விடுதலை வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்றேன்.

அந்த நேரத்தில்தான் ஹரியானாவில் [ஜாட் ஜாதியினரின் இட ஒதுக்கீடு] போராட்டம் தொடங்கியிருந்தது. டெல்லி காவல்துறையிலிருக்கும் பெரும்பாலானோர் ஹரியானவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களை நான் வணங்குகிறேன். இடஒதுக்கீட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று காவலரிடம் கேட்டேன். ‘சாதியம்’ நல்லதே அல்ல என்றார். இந்த சாதியத்திலிருந்துதான் நாங்கள் விடுதலை கோருகிறோம் என்றேன். “நீங்கள் சொல்வது எதுவுமே தவறில்லை. அதில் தேசவிரோதம் என்பதே இல்லை” என்றார் அவர்.

நான் அவரிடம் இன்னொரு கேள்வியைக் கேட்டேன். “இந்த அமைப்பில் யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது?”

’இந்த லத்திக்குதான்” என்றார் அவர், தன் கையிலிருந்த குண்டாந்தடியைப் பார்த்துக்கொண்டே.

நீங்கள் உங்கள் லத்தியை உங்கள் விருப்பப்படி பிரயோகிக்க முடியுமா என்றேன்.

இல்லை என்று ஒப்புக்கொண்டார். யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்று மீண்டும் கேட்டேன்.

‘போலி ட்வீட்டுகளை பதிவுசெய்பவர்களிடம்” என்றார்.

போலி ட்வீட்டுகளை இடும் சங்கிகளிடமிருந்துதான் விடுதலை கோருகிறோம் என்றேன்.

”நீங்களும் நானும் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது,” என்றார்.

அதில் சிறிய பிரச்சினை இருக்கிறது என்றேன்.

நான் சொல்லப்போவது எல்லா பத்திரிக்கையாளர்களையும் பற்றி அல்ல. எல்லோருக்கும் ‘அங்கிருந்து’ சம்பளம் வருவதில்லை. சிலருக்கு வரலாம். ஆனால் சிலருக்கு ‘அங்கிருந்து’ மட்டுமே வருகிறது. சிலர் பாராளுமன்ற நிகழ்வுகளை செய்தியாக்குவதில் நீண்ட அனுபவம் பெற்ற பிறகு பாராளுமன்றத்திற்கே போக முயற்சிக்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரியான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

நானும் நீங்களும் இப்போது நேரடியாக பேசிக்கொண்டிருக்கிறோம். உடனே ‘இந்த பரபரப்பான செய்தியைப் பாருங்கள்’ என்று அவர்கள் கூச்சலிடுவார்கள்.

”நான் உங்களிடம் ரகசியமாக ஒன்று சொல்லலாமா” என்று காவலர் கேட்டார். “நான் நீங்கள் இங்கு வந்தபோது உங்களை அடித்து துவைக்கலாம் என்றிருந்தேன். உங்கள் பெயர் எஃப்.ஐ.ஆர் இல் (முதல் தகவல் அறிக்கையில்) இருக்கிறது. நான் உங்களிடம் பேசியபிறகு அவர்களை அடிக்கலாம் போலிருக்கிறது,” என்றார்.

அதற்குப் பிறகு அவர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். அதை இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக நாடு முழுவதிற்கும் கவனப்படுத்த விரும்புகிறேன். என்னைபோலவே அந்தக் காவலரும் ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வருபவர். என்னைப் போலவே, அவரும் படிக்க விரும்பியவர். என்னைப் போலவே இந்த அமைப்பிலிருக்கும் நோய்களைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகப் போராட நினைத்தவர். படிக்கத்தெரிவதற்கும் கற்பதற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ள நினைத்தவர். ஆனாலும் அவர் ஒரு காவலராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இங்குதான் ஜேஎன்யூ வருகிறது. அதனால்தான் ஜேஎன்யூவின் குரலை நசுக்கப்பார்க்கிறார்கள். தனியார் நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணம் கொடுத்து ஆராய்ச்சி மாணவராக வழியில்லாத விளிம்புநிலையிலிருக்கும் ஒருவர் இங்கு பிஎச்டி படிக்கமுடியும் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள்.
எல்லையில் நின்று போரிடுபவர்கள், விவசாய நிலங்களில் இறப்பவர்கள், ஜேஎன்யூ போராட்டத்தில் எழுச்சியுற்றவர்கள் – இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எழுப்பும் குரலைத்தான் ஒடுக்க நினைக்கிறார்கள்.

இந்தக் குரல்களெல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். ”அரசியல் ஜனநாயகம் போதாது, சமூக ஜனநாயகத்தை உருவாக்குவோம்” என்ரு பாபசாஹேம் கூறியதைத்தான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதனால்தான் நாம் திரும்பத்திரும்ப அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ”சோஷலிஸத்திற்கு ஜனநாயகம் இன்றியமையாதது,” என்று லெனின் சொன்னார். நாங்கள் ஜனநாயகம், பேச்சுரிமை, சமத்துவம், சோஷலிசம் என்று பேசுவதெல்லாம் ஒரு பியூனின் மகனும் ஜனாதிபதியின் மகனும் ஒன்றாகப் படிக்கும் என்ற ஒரு நிலை வருவதற்காகத்தான்.

ஜேஎன்யூவில் இருப்பவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்பவர்கள். ஆராய்ச்சிக்குத் தேவையான ஆரம்ப விவரங்களை என் அனுபவம் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு கருத்து கூற விரும்பவில்லை. ட்விட்டரில் சத்யமேவ ஜெயதே என்று பிரதமர் ட்வீட் செய்தார். பிரதமருடன் எனக்கு தத்துவார்த்த வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்கிற வாசகம் அவர் உருவாக்கியதல்ல. அது நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. ஆகவே, வாய்மை வெல்லும் என்பதில் நான் அவருடன் உடன்படுகிறேன். வாய்மை வெல்லும்.

இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திற்கும் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன். தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டு மாணவர்களுக்கு எதிரான அரசியல் கருவியாகப் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

நான் ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன். அங்கிருக்கும் ரயில் நிலையத்தில் ஒரு மந்திரவாதி இருப்பார். மந்திர வித்தைகள் செய்வார். மோதிரங்களை விற்பார். அவற்றை அணிந்தால் உங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்பார். அதேபோல் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருப்புப்பணம் திரும்பவரும் என்று சொல்வார்கள். ஹர ஹர மோடி என்பார்கள். பணவீக்கம் குறையுமென்பார்கள். கூடி உழைத்தால் வளர்ச்சி வரும் என்பார்கள்.

மக்கள் இந்த கோஷங்களையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்தியர்களாகிய நாம் விரைவில் மறக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட நாடகம் மிகப்பெரியதாக இருந்ததால், நாம் இந்த கோஷங்களை மறக்க முடியவில்லை.

கொள்கைகளை உருவாக்குபவர்கள் நம்மை மறக்க வைக்க நினைக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்துவதன் மூலம் இதைச் செய்ய நினைக்கிறார்கள். மாணவர்கள் உதவித் தொகை தொடரவேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் ரூ. 5000 ரூ. 10,000 மட்டும் தொடர்ந்து வழங்குவோம் என்று சொல்வார்கள். ஆனால் ஜேஎன்யூ உதவித்தொகையை உயர்த்தித் தருமாறு கேட்கும். அதற்காக உங்களைத் திட்டுவார்கள். கவலைப்பட வேண்டும். உதவித்தொகை என்பது நீங்கள் போராடிப்பெற்ற உரிமை.

இந்த நாட்டில் ஒரு மக்கள் விரோத அரசு இருக்கிறது. அதற்கு எதிராக நீங்கள் குரலெழுப்பினால் அதன் சைபர் செல்லிலிருந்து ஒரு திருகுவேலை செய்யப்பட்ட வீடியோவை அனுப்புவார்கள். உங்களை வசைபாடுவார்கள். உங்கள் குப்பைத் தொட்டியிலிருக்கும் ஆணுறைகளை எண்ணுவார்கள்.

இது ஒரு உன்னதமான காலம். ஜேஎன்யூ மீது நடத்தப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ’யூஜிசி அலுவலகத்தை ஆக்கிரமிப்போம்’ என்ற முழக்கத்துடன் நடந்த போராட்டத்தை நியாமற்றதாகக் காட்ட அவர்கள் நினைக்கிறார்கள்…..ரோஹித் வேமுலாவிற்கு நீதி கோரும் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜேஎன்யூ விவகாரத்தை தொலைக்காட்சியின் பிரதான நேரத்தில் ஒளிபரப்புகிறீர்கள். இது எதற்காக? முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களே, மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய்களைப் போடுவதாக மோடி அளித்த வாக்குறுதியை மக்கள் மறக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.
.
உங்களுக்கு ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன். ஜேஎன்யூவில் இடம் கிடைப்பது எளிதானதல்ல. ஜேஎன்யூவில் இருப்பவர்களுக்கு அதை மறைப்பதும் எளிதானதல்ல. நீங்கள் மறந்தால் நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருப்போம். அரசியல் அதிகாரத்திலிருக்கும் ஸ்தாபனம் வன்கொடுமைகள் செய்தபோதெல்லாம் ஜேஎன்யூ எழுந்து நின்று எதிர்த்திருக்கிறது. நாங்கள் இப்போது அதையேதான் செய்கிறோம். எல்லையில் உயிரிழக்கும் படைவீரர்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நான் அந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் மக்களவையில் இதைப் பேசிய பிஜேபி உறுப்பினர்களுக்கு ஒரு கேள்வி: இறந்த ராணுவ வீரர்கள் உங்கள் பிள்ளைகளா? லட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவாசாயிகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவர்களில் பலர் இறந்துபோன வீரர்களின் தந்தையர் அல்லவா? வயல்வெளியில் வேலை செய்யும் விவசாயி என் தந்தை. எல்லையில் போராடும் வீரர் என் சகோதரர். எனவே, ஒரு தவறான விவாதத்தை இந்த நாட்டில் துவக்கி வைக்காதீர்கள். அந்த வீரர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு? இறந்தவர்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் போரிட வைப்பவர்கள்தாம் பொறுப்பு.

தொலைக்காட்சிகளின் பிரதான நேரத்தில் விவாதம் செய்பவர்களைக் கேட்கிறேன். இந்த நாட்டின் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டும் என்பது தவறா?

யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று நம்மை கேட்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம். இந்தியாவில் யாராவது அடிமையா? இல்லை. அதனால் நாங்கள் இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை என்பது கண்கூடு. ஆனால் நாங்கள் இந்தியாவிற்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.

நாங்கள் ஜனநாயத்தைப் பற்றிப் பேசுகிறோம். சமத்துவத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஏனெனில் அவை இந்த நாட்டில் இன்றியமையாதவை. நாங்கள் இந்த நாட்டில் என்ன விடுதலை வேண்டினாலும், அதனை இந்த நாட்டின் சட்டங்களுக்கும், நீதி அமைப்பிற்கும் உட்பட்டேதான் அடைவோம். இதுதான் பாபசாஹேபின் கனவு. இதுதான் என் தோழன் ரோஹித் வேமுலாவின் கனவு. நீங்களே பாருங்கள். இந்த இயக்கத்தை என்னதான் கடுமையாக அவர்கள் அடக்க முயற்சித்தாலும், அது பெரிதாக வளர்ந்து செழித்திருக்கிறது.

நான் வேறு ஒன்றையும் என் சிறை அனுபவத்திலிருந்து சொல்லவிரும்புகிறேன். இது சுயவிமர்சனம். மாணவர்களாகிய நீங்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது அதை சிரத்தையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஜேஎன்யூ மாணவர்களாகிய நாம் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாது என்பதே அந்த விமர்சனம். பொதுமக்கள் அப்பாவிகள். எளிமையானவர்கள். அவர்களுடன் நாம் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வேறு ஒன்றும் இருக்கிறது. சிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தார்கள். ஒன்றின் நிறம் நீலம். மற்றொன்று சிவப்பு. அந்தக் கிண்ணங்களைப் பார்த்தபோது, இந்த நாட்டில் நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் அடுத்தடுத்து இருந்த கிண்ணங்களைத் தாங்கிய தட்டுதான் இந்தியா என்று என நான் உணர்ந்தேன். இந்த மாதிரி ஒரு ஒற்றுமை இந்தியாவில் ஏற்பட்டால், எல்லோருக்கும் சட்டம் பொதுவானது என்றானால். ஒவ்வொருவரின் உலகமும் மற்றவரின் நலனுக்கானது என்றானால்… அந்தக் கனவைத்தான் நாம் காணவேண்டும்.

மதிப்பிற்குரிய பிரதமர் (அவரை நான் அப்படித்தானே அழைக்க வேண்டும்?).. மதிப்பிற்குரிய பிரதமர் குருஷ்சேவைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசினார். எனக்கு அப்போது தொலைக்காட்சித் திரைக்குள் புகுந்து அவரது உடையைச் சுண்டி இழுத்து மோடிஜி நீங்கள் ஹிட்லர் அல்லது முசோலினியைப் பற்றிப் பேசவேண்டும் என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. குருஜி கோல்வால்கர் முசோலினியைப் போன்ற கருப்புத் தொப்பியைத்தானே அணிந்திருக்கிறார். நாம் சூரியனை நிலவு என்று ஆயிரம் முறை கூறினாலும் அது நிலவு ஆகாது. ஒரு பொய்யை பொய் என்றுதான் கூறமுடியும். ஒரு உண்மையை பொய்யாக்க முடியாது. அவர்களுக்கென்று ஒரு திட்டம் இருக்கிறது. அவர்களின் நலன்களுக்கேற்றவாறு அது மாறி வருகிறது.

நான் இப்போது ஒரு பெர்சனலான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறேன். நான் என் தாயுடன் மூன்று மாதங்களுக்குப்பிறகு பேசினேன். நான் ஜேஎன்யூவில் இருந்தபோது அவருடன் முறையாகத் தொடர்பிலிருக்கவில்லை. சிறைக்குச் சென்றபிறகுதான் எப்போதும் தொடர்பிலிருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் உங்களுக்கும் அதையேதான் அறிவுரையாகச் சொல்வேன். நீ மோடிஜியைப் பற்றி கிண்டலாகப் பேசினாயா என்று என் தாயிடம் கேட்டேன். ‘கிண்டலாகப் பேசவில்லை. பிறரை ஏளனம் செய்வது அவர்களுடைய உரிமை. மோடிஜியும் ஒரு தாய்க்கு மகன்தானே என்று கூறியது என் வலியிலிருந்து பிறந்த வார்த்தைகள். என்னுடைய மகன் மீது பொய்யான ராஜத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே மன் கி பாத் என்று (அகில இந்திய வானொலியில்) பேசும் அவர் மா கி பாத் (தாயின் வேதனை) என்று ஏன் பேசக்கூடாது’” என்றுதான் கேட்டேன்.

அவரை என்ன சொல்லி நான் ஆறுதல் படுத்த முடியும்? இந்த நாட்டில் நடப்பதெல்லாம் அபாயகரமான ஒரு நோயின் அறிகுறிகள். நான் ஒரு கட்சியையோ ஒரு தொலைக்காட்டை சானலையோ குறிப்பிடவில்லை. நோய் என்று கூறும்போது தேசம் முழுவதும் என் கண் முன்னே விரிகிறது. இந்த நாட்டு மக்களெல்லாம் போய்விட்ட பிறகு அதற்கு என்ன முகம் இருக்கும்? அதனால்தான் ஜேஎன்யூ போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்களுக்கு ஜேஎன்யூவின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. அங்கு படிப்பவர்களில் 60 சதவீதம் பெண்கள். ஜேஎன்யூ மீது என்ன குறை இருந்தாலும், அது இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்தும் ஒரு சில நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கிறது. அமுல்படுத்தாதபோது நாங்கள் போராடி அமுல்படுத்த வைக்கிறோம்.

ஜேஎன்யூவிற்கு யார் படிக்க வருகிறார்கள். நான் இதுவரை சொல்லாத ஒன்றை இப்போது சொல்கிறேன். என் குடும்பம் 3000 ரூபாய்களில் வாழ்க்கை நடத்துகிறது. இந்த நிலையில் நான் வேறு ஏதாவது பெரிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்திருக்க முடியுமா? எனவேதான் ஜேஎன்யூ மீது ஒரு பெரிய தாக்குதல் வரும்போது அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரின் மீதும் ஒரே சாயம் பூசப்படுகிறது (நான் இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பேசவில்லை; ஏனெனில், எனக்கென்று ஒரு தத்துவார்த்த வழி இருக்கிறது. சீத்தாராம் யெச்சூரி மீது ராஜத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, டி. ராஜா, கேஜ்ரிவால் ஆகியோர் மீதும். ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நிற்கும் ஊடகவியலாளர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள். மிரட்டப்ப்டுகிறார்கள். (உண்மையில், அவர்கள் ஜேஎன்யூவிற்கு ஆதரவாகப் பேசவில்லை; அவர்கள் உண்மையை உண்மையென்றும், பொய்யைப் பொய்யென்றும் மட்டுமே கூறுகிறார்கள்)

சிலர் சுய தம்பட்டம் அடிக்கும் தேசியம் எங்கிருந்து வருகிறது? நான் உண்மையாகவேல் அந்த முழக்கங்களை எழுப்பினேனா என்று சிறையில் சிலர் கேட்டனர். நான் ஆம் என்றேன். மீண்டும் எழுப்புவேன் என்றேன்.

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க முடிகிறாதா அல்லது பகுத்தறிவை முழுவதும் இழந்துவிட்டீர்களா? 61 சதவீத மக்கள் உங்களின் மனநிலைக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதற்காக இவ்வளவு விரைவில் பகுத்தறிவை இழந்துவிட்டீர்களா? உங்களின் கோஷங்களுக்கு தம்மை இழந்த சிலரையும் சேர்த்து 31 சத வீத மக்கள்தாம் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். உங்களுடைய ஹர் ஹர் கோஷத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்று அர்ஹர் (பருப்பு) விலையை மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, உங்களுடைய வெற்றி நிரந்தரமானது என்ற மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சூரியனைப் பார்த்து இது சந்திரன் என்று நூறு முறை சொன்னாலும், அது சந்திரன் ஆகமுடியுமா? நிச்சயமாக முடியாது. சூரியன் அதுவாகத்தான் இருக்க முடியும், நீங்கள் ஆயிரம் முறை பொய்யைத் திருப்பிச் சொன்னாலும்.

இதில் அழகான விஷயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் ‘கவன ஈர்ப்புத் தீர்மானம்” கொண்டுவரும் இவர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே, நாடுமுழுவதிலும் “கவனத் திருப்பில்’ தீர்மானமாக உள்ளனர். மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பி அவர்களின் திட்டத்திற்குள் சிக்கவைக்கும் வேலைதான் இது. இங்கு யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அலுவலகத்தை ஆக்கிரமிக்கும் போராட்டம் நடந்தது. தோழர் ரோஹித் ‘கொலைசெய்யப்பட்டார்’. ரோஹித் வேமுலாவுக்காக நாங்கள் குரலெழுப்பியவுடனே “மிகப்பெரிய தேசத்தூரோகத்தைப் பாருங்கள்; ராஜத்துரோகத்தின் மையம் எங்கிருக்கிறது என்று பாருங்கள்’ என்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வந்தன. ஆனால் இந்த திட்டமும் வீரியம் இழக்கும்.

அதற்காகத்தான் அடுத்த திட்டம் வருகிறது. வேறென்ன, ராமர் கோவில்தான். சிறையிலிருந்து வருவதற்கு சற்றுமுன் ஒரு காவலருடன் நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்:

அவர்: உனக்கு மதநம்பிக்கை இருக்கிறதா?

நான்: மதத்தைப் பற்றி தெரிந்தால்தான் மதநம்பிக்கையாளராக இருக்கமுடியும்.

அவர்: நீ ஏதாவது குடும்பத்தில்தானே பிறந்திருப்பாய்?

நான்: சந்தர்ப்பவசமாக, நான் ஒரு இந்து குடும்பத்தில்தான் பிறந்தேன்.

அவர்: ஆகவே, உன்னுடைய மதத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா?

நான்: எனக்குத் தெரிந்தவரை கடவுள்தான் இந்த பூமியை கடவுள் படைத்தார், அவர் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறார் என்றுதான் சொல்லமுடியும். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

அவர்: முற்றிலும் உண்மை.
.
நான்: சிலர் கடவுளுக்காக ஏதாவது ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

அவர்: பித்தத்தின் உச்சம்.

ஒரு திட்டம் அதற்கான காலத்தைக் கடந்துவிடும்போது மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. உங்களுடைய ஏமாற்று விளையாட்டினால் 180 பாரளுமன்ற சீட்டுகளில் ஒருமுறை வென்றீர்கள். இனிமேல் நடக்காது. சக்கரத்தின் அச்சு விலகிவிட்டது. ஆனாலும் மக்களின் கவனத்தை திருப்பும் முயற்சியை அவர்கள் கைவிட மாட்டார்கள். மக்கள் உண்மையான பிரச்சினைகளைப் பேசுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் மீது தாக்குதல் நடந்தது போலவே உணர்கிறீர்கள். ஆனால் இது நடப்பது முதல்முறை அல்ல. ஆர் எஸ் எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசரில் (சுப்ரமணியன்) சுவாமிஜி ஜேஎன்யூ குறித்து எழுதிய கவர் ஸ்டோரியைப் பாருங்கள். எனக்கு ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. என் ஏபிவிபி நண்பர்கள் என் உரையைக் கேட்டுக்கொண்டு இருப்பார்களேயானால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: சுவாமிஜியை அழைத்து வந்தீர்களென்றால் நாம் ஜேஎன்யூ குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கலாம். தர்க்கபூர்வமாக வாதிட்டு ஜேஎன்யூவை நான்கு மாதங்களுக்கு ஏன் மூடவேண்டும் என்று அவர் நீருபித்தால், அவருடன் நான் முழு மனதுடன் உடன்படுவேன். அவரால் முடியவில்லையெனில், அவர் நாட்டை விட்டு வெளியேறி வேறெங்காவது வசிக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொள்வேன். ஏற்கெனவே பலமுறை வெளிநாட்டில் வசித்தவர்தான் அவர்.

நம் மீது நடந்த தாக்குதல்கள் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்ப்பட்டவை. முதல் நாளிலிருந்தே இந்த திட்டம் இருக்கிறது. பழைய சுவரொட்டிகளை மாற்ற வேண்டும் என்றுகூட அவர்கள் நினைக்கவில்லை. இந்து கிராந்தி சேனா பயன்படுத்திய சுவரொட்டிகளையே ஏபிவிபியினரும் முன்னாள் ராணுவ வீரர்களும் இப்போதும் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் நாக்பூரில் திட்டமிடப்பட்டவையென்றே நிரூபிக்கின்றன. அவர்களுடைய தாக்குதல் தன்னெழுச்சியானதல்ல தோழர்களே! எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது: நாட்டில் எங்கெல்லாம் கலகக் குரல் எழுகிறதோ அதன் மூச்சையடக்கு; எப்போதெல்லாம் மக்கள் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறதோ, அவர்களின் கவனத்தை சிதறடி ; எப்போதெல்லாம் ஜேஎன்யூ வளாகத்தில் கலகக் குரல் எழுகிறதோ – அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித், ஆஷுதோஷ், அல்லது உங்களில் ஒருவரின் குரலாக இருந்தாலும் – அதற்கு தேசத்துரோக முத்திரை குத்தி ஜேஎன்யூவை மதிப்பிழக்கச் செய்!

ஆனால் நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன். இந்தப் போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை நீங்கள் அடக்க முடியாது. நீங்கள் எந்த அளவுக்கு அடக்க முயற்சிக்கிறீர்களோ, அந்த அளவு வேகமாக அது மீண்டும் துள்ளி வரும். சொந்தக்காலில் எங்கள் மண்ணில் எழுந்து நிற்கும்.

இது ஒரு நெடிய போராட்டம். நிறுத்தாமல், வளைந்துகொடுக்காமல், மூச்சுவிடும் இடைவெளிகூட இல்லாமல் இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டினை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்ல முயலும் பிளவு சக்திகளான ஏபிவிபியை ஜேஎன்யூ வளாகத்திற்குள்ளும், வெளியே பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஐயும் எதிர்த்து நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஜேஎன்யூ அவர்களை வரலாற்றினை சாட்சியாகக் கொண்டு எதிர்த்து நிற்கும். ரோஹித் வேமுலா நடத்திய, யூஜிசி ஆக்கிரமிப்பு இயக்கம் நடத்திய, நீங்களும் அமைதியை விரும்பும் முற்போக்கு சக்திளும் இன்று நடத்தும் போராட்டத்தில் நாம் வெல்வோம்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி, எங்களுடன் சேர்ந்து தொடர்ந்து நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்து என் உரையை முடிக்கிறேன்.

நன்றி!

இன்குலாப் ஜிந்தாபாத்!

தேச ஒற்றுமை நீடுழி வாழ்க!

சமூகநீதி நீடுழி வாழ்க!

விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.

பதிவு (5-3-2016) அன்று மேம்படுத்தப்பட்டது.

 

“தேசியவாதம் என்பது இந்து ராஷ்ட்ரத்துடனோ, இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்தக் கூடியது அல்ல!”: ரோமிலா தாப்பர்

இந்தியா தற்சமயம் எதிர்க்கொண்டுவரும் தேசியவாதம், தேச விரோத விவாதங்கள் குறித்து வரலாற்றிஞர் ரோமிலா தாப்பருடன் ஸியா அஸ் ஸலாம் நடத்திய நேர்காணல்.

கேள்வி : தேசத் துரோகக் குற்றச் சாட்டு என்பது அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் அரசை விமர்சனம் செய்யும் மாணவர்கள் மீது சுமத்தப்படுகின்றது. அனைத்து தனி மனித சுதந்திரத்தையும் அரசு நசுக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாமா?

பதில் : தேசத் துரோகக் குற்றச் சாட்டானது மிகவும் கவனமாக பார்க்கவேண்டிய விஷயம். அதனை அண்மைக்காலத்தில் செய்யப்படுவது போன்று போகிறபோக்கில் உச்சரிக்கக்கூடாது. ஒரு குடிமகன் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்துபவர்களுக்கு அது என்னவென்று புரிய வைப்பதோடு அது எதனைக்குறிக்கின்றது என சொல்லவேண்டியுள் ளது. அதோடு அதனுடைய தாக்க மானது எத்தகையது; அது எப்போது பொருத்தமானது என்பதை பலர் அறிவதில்லை. ஒரு நூற்றாண்டிற்குள் நாடு களுடைய எல்லைகள் மாறுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் மாறி மூன்று நாடுகளாக ஆனது.

இன்று சொல்லப்படுகின்ற தேசியவாதம் பல வகையானது. எனவே ஒரு குடிமகன் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தும் போது அரசு மிக மிக கவனத்துடனான புரிதலுடனும் அதனுடைய அர்த்தத்தின் மீது உணர்வுரீதியிலான ஈடுபாட்டோடும் செயல்படவேண்டும். அதனை போகிறபோக்கில் தவறாக பயன்படுத்தக்கூடாது. காலனியாதிக்கக் காலத்தில் காலனி அரசுகளின் மீது வன்முறையைத் தூண்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று காலனியாதிக்க அரசுகள் இல்லை. இன்று அவை மூன்று தனித்தனி சுதந்திரமான நாடுகளாக (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்) உள்ளதால் தேசத் துரோகக் குற்றச்சாட்டு இந்த அளவில் சிக்கலானதாக மாறியுள்ளது. தேசத் துரோகச் சட்டம் மாற்றப்படவேண்டும்.

கேள்வி : ஜே.என்.யு அனுபவப் பின்னணியில், அரசு கருத்துச் சுதந்திரத்தை நோக்கி பயணிக்காமல், தேசியவாதம் ஒரு சிலரால் உச்சரிக்கப் படுவதை மகிழ்ச்சியாக பார்க்கின்றது. உரத்துப் பேசுகின்ற அறிவுஜீவி யாகவுள்ள உங்களை இது எவ்வகை யில் வருத்தமடைய செய்கின்றது?

பதில் : சராசரி வாழ்வை நடத்துவதில் பலர் திருப்தியடைகின்றனர். இவர்களுக்கு அசாதாரணமான செயல் பாடுகளும் கோணங்களும் தேவைப்படுவதில்லை. ஆனால் கல்வியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் அறிவை வளப்படுத்துவதற்கு கேள்விகள் கேட்கின்ற பொறுப்பு வழங்கப் படுகின்றது. இது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்பாடே ஆகும். இவ்வாறு செய்யும்போது சராசரியான வழிமுறைகளிலிருந்து விலகிப்போகின்ற, சமூகத்திற்கு பாதகமில்லாத, விஷயங்களை சிந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்னும் நம்பிக்கைவேண்டும். எது சமூகத்திற்குபாதகமான விஷயம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

அறிவுஜீவிகள் பயமின்றி புதிய கருத்துக்களை உருவாக்க வேண்டும். ஆனால்அவர்கள் பயத்துடன் வாழ்வார்களே யானால், அந்த பயம் மக்களுக்கும் பரவிவிடும். பயத்துடனேயே வாழ்கின்ற சமூகத்தினுடைய சுற்றுச்சூழல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வளர்ப்பதை நிறுத்தி விடுவதோடு அற்பமான சராசரி வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. விரிந்த அளவிலே பார்த்தால், பேச்சு சுதந்திரத்துக்கான அனைத்து தளங்களுமே அபாயத்தில் உள்ளது போன்று தோன்றுகின்றது. இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜே.என்.யு…இத்தகைய நிறுவனங்களின் மீது வலது சாரி கட்சிகளும் மற்றும் அதனுடைய துணை அமைப்புகளும் வீசுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு முடிவேயில்லை என்பது போல தோன்றுகின்றது.

கேள்வி : இது உங்களுக்கு அவசரகால நிலையை நினைவுபடுத்துகின்றதா?

பதில் : ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கின்ற நிறுவனங்களை குலைக்கின்ற நடவடிக் கை நடக்கின்றது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்யாத, புதிய சிந்தனைகளை தேடாத நபர்களை இந்நிறுவனங்களின் மீது அதிகாரம் செலுத்தும் இடத்தில் அமர்த்துகின்றனர். ஏனெனில் அவர்கள் அமைச்சரவைகளிலிருந்து வரும் உத்தரவுகளை செயல்படுத்துவார்கள். இதுவரையில் இதுதான் பாணி. ஒரு சந்தர்ப்பத்தில் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் தரம் மிகுந்த பல புதிய பொருட்காட்சிகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர் விரைவாக விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார்! பேச்சு சுதந்திரத்தை முடக்குகின்ற முயற்சிகளெல்லாம் தன்னம்பிக்கையில்லாததோடு, சுதந்திரமான குடிமக்களின்பால் அசௌகரியமான மனநிலையைக் கொண்டுள்ள அரசைக் குறிக்கின்றது.

கேள்வி : உயர்கல்வியைத் தொடருதல் அல்லது ஆக்கப்பூர்வமான செயல்வடிவங்கள் ஆகியவற்றை செய்கின்றவர்கள் பயத்தில் வாழ்ந்தால், சாதாரண மக்களுக்கு ஏதேனும் நம்பிக்கையிருக்கின்றதா?

பதில் : தேசியவாதம் என்பது கட்டிடங்களின் மீது தேசியக் கொடியைபறக்க விடுவதிலோ தாயாக சித்தரிக்கப்பட்ட தேசத்தை புகழ்ந்து பாடுவதிலோ இல்லை. தேசியவாதமானது காலனியாதிக்கத்தை தூக்கியெறிந்திட்ட, ஆழமான விசுவாசத்தை அடையாளமாகக் கொண்ட மக்களிடத்தில் உள்ளது. சிலர் இத்தகையவற்றை ஹிந்து தேசத்துடனோ இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்திவிடுகின்றனர். தேசியவாதம் என்பது சமமான உரிமைகளைக் கொண்டு ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுடைய அடையாளத்தை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இவ்வுரிமைகள் என்பது அனைத்து பாகுபாடுகளையும் அகற்றிய, அனைத்து மக்களின் நலன் சார்ந்த, குடிமக்களே முதன்மை பெற்ற வராக கருதுகின்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

முதன்மையான அடையாளம் என்பது இந்தியாவின் குடிமகன்(ள்) என்பதோடு சாதி, மதம், மொழி, இனம் போன்ற இன்னும் பிறவற்றிற்கும் மேம்பட்டதாக இருத்தல் வேண்டும். தேசியவாதம் என்பது இந்தியாவில் ஒரு ஹிந்துவையோ பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியரையோ ஒரு பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர் என்ற முறையில் முதன்மையானவராக, ஒரு சலுகையாக பெற்றவராக அனுமதிக்கவில்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் அனைவருமே சம உரிமைகொண்ட குடிமக் கள்.

அனைத்து குடிமக்களுக்குமே அரசிடம் தங்களுக்கான கடமை களையும் கட்டுப்பாடுகளையும் விவாதிப்பதற்கான உரிமை இருக்க வேண்டும். இது அனைத்து குடிமக் களுக்கும் சமமான அளவில் மனித உரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமையவேண்டும்.

நன்றி : இந்து நாளிதழ் (ஆங்கிலம்), தீக்கதிர்

தமிழில் : பேரா.ச.இராமசுந்தரம்

ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

அவினாஷ் பாண்டே சமர்
அவினாஷ் பாண்டே சமர்

என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் விஜயம் என்ற பல வித மான நமது பிரதமரின் ராஜ தந்திரங்களையும் மீறி அந்த போக்கிரிகள் நம்மைத் தாக்கி நம் தீரமிக்க வீரர்களை கொல்லவும் செய்தனர். எனினும் அத்தாக்குதல் சமயத் தில் நீங்கள் உங்கள் தேசபக்தியை வெளிக்காட்டாதது குறித்து எனக்கு ஏமாற்றம் ஏதுமில்லை.

ஏனெனில் உங்கள் கூட்டத்திற்குத்தான் உண்மையான பகைவனுக் கெதிராக தேசபக்தியைக் காட்டும் வரலாறு கிடையாதே! ஆர்.எஸ்.எஸ்-ன் உயர்மட்ட தலைவர் கள் கேசவ் பல்ராம் ஹெட்கேவார், மாதவ் சதாசிவ கோல்வால்கர் போன்றவர்களிலிருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் குறித்து நூலகம் நூலகமாக தேடியும் ஒருவரைக் கூட காணமுடியவில்லை.

அதாவது 1925 லிருந்து 1947 வரை ஆங்கிலேயருக்கு எதிராக மௌனம் சாதித்து அவர்களின் அடிவருடிகளாக இருந்தனர் என்பதையே வரலாறு காட்டுகிறது.

அவர்கள் அப்போதே ஆங்கிலேயருக்கு எதிராக போராடியிருந்தாரெனில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் காந்தியின் நாமத்தை உச்சரிக்கும் தேவை ஏற்பட்டி ருக்காது. அவர்களின் தத்துவார்த்த முன்னோர்களின் துரோக வரலாறினால் தன் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் பாவம், பாடாய்படுகிறார் மோடி! வாழ்நாள் முழுவதும் காங்கிரஸகாரராகவே வாழ்ந்த, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த சர்தார் வல்லபாயைக் கூட மோடி திருடிக்கொள்ள நேர்ந்துவிட்டது. காந்தியுடனான வேறு பாட்டினால் காங்கிரசைவிட்டு வெளியேறினும் தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) முதல் வா னொலி ஒளிபரப்பில் காந்தியை தேசப்பிதா என அழைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தைக் கூட மோடி கவர்ந்து கொள்ள வேண்டியிருந்தது பரிதாபம்! இப்போது நீங்கள் இந்தியாவிற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி சொல்லி விட்டேன். இனிமேலிருந்து உங்களை நவீன தேச பக்தர்கள் என்று அழைக்கப் போகிறேன். ஓ! ஜே.என்.யூக்காரர்களான எங்களைப் பற்றியல்லவா பேசத் தொடங்கினேன்? இடையில் உங்கள் துரோகம் குறுக்கிட்டுவிட்டது. நல்லது, நான் இப்போது எங்கள் விசயத்துக்கு வருகிறேன்.

ஆம்! நான் ஜே.என்.யூக்காரன்தான். ஜே.என்.யூவில் சேர்வதற்கு முன்பே என்னை நான் உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டாலும், இப்போது நான் இருக்கிறபடியாக்கியது ஜே.என்.யூதான். இதன்காரணம் மிக எளிதானது. எனது பட்டப் படிப்பின்போதே அலகாபாத்தில் நான் கம்யூனிஸ இயக்கத்தில் உண்மையான இந்திய தேசத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்நாட்களிலெல்லாம் எங்களில் பெரும்பாலானோர்க்கு இந்தியா என்பது பெரிதும் மேல்சாதி, இந்தி பேசக்கூடிய வட இந்தியாவாகவே இருந்தது. இந்த இந்தியாவிற்கு அப்பாற்பட்டு வேறு எவரையும் சந்திப்பதென்பது அப்போது மிக அரிது. பாலிவுட் திரைப்படங்களின் மூலம் தான் “ஐய்யய்யோ” என அலறும் அண்ணா ரோல்களான தென்னிந்தியரையும், வில்லன் ரோல்களிலேயே வரும் வட கிழக்கு இந்திய டேனி டென்சோங்க் பாவையும் நாங்கள் அறிதாக சந்தித்தோம்.

ஜே.என்.யூவை அடைந்த பின்னரே பன்முகத்தன்மை கொண்ட உண்மையான இந்தியா என்னைப் போன்ற பலருக்கு அறிமுகமானது. அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இருந்த ஒரே ஒரு மனோதத்துவ பேராசிரியரைத் தவிர வேறு எந்ததென்னிந்தியரையும் ஜே.என்.யூவிற்கு வருவதற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை.

ஆனால் பாருங்கள், அங்குசென்ற உடனேயே எனக்கு உயிர்த்தோழியாக ஒரு கன்னடப் பெண்ணும் குறும்புக்காரத் தோழியாக ஒரு மணிப்புரியும் வாய்த்துவிட்டனர். சமூக நல மற்றும் மருத்துவ மையத்தின் 2012ஆம் ஆண்டு வகுப்பின் வெகு சீக்கிரமே உத்தரப் பிரதேசத்தவனுமான நானும், கன்னட, தெலுங்கு, சத்தீஸ்கர், தமிழ்ப் பெண் எனநால்வரும் உயிர்த் தோழர்கள் ஆனோம். அதன் பின் பத்தாண்டுகள் கழித்து ஜே.என். யூ வில் கூடப்படித்த ஒரு தமிழ்ப் பெண் ணையே மணம் செய்து கொண்டேன். கங்கை முதல் கோதாவரி வழியாக சபர்மதி வரையுள்ள இந்தியாவைப் பற்றி யெல்லாம் அதிகமாக நான் ஜே.என்.யூ தாபாக்களிலிருந்தவாறுதான் அறிந்துகொண்டேன். ஜே.என்.யூ மாணவர் இயக் கத்தில் துடிப்புடன் செயல் பட்டதன் மூலம் இன்னும் அதிகமாகவே.

தெலுங்கானா கைத்தறித் தொழிலாளர்களை வதைக் கும் பிரச்சனைகள் எல்லாம் ஏதோ செய்தித் தாளின் உள்பக்கத்தில் செருகப்பட்ட எனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனை என்பது மாறி என்னுடைய நெருங்கிய தோழிக்கு வேண்டியவர்களை பாதிக்கும் பிரச்சனையென ஆகிவிட்டது. என்னு டைய அலகாபாத் நாட்களிலேயே மணிப் பூர் ராணுவமயமாக்கலை நான் எதிர்த்து வந்த போதிலும் இப்போது அது என்னுடைய வகுப்புத் தோழர்களில் இருவரை நேரிடையாக பாதிக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஜே.என்.யூ எனக்கு அழித்த அழகிய உறவுகளோடு நான் வெறும் இந்தியனாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக நானே இந்தியாவானேன்.

ஆம்! அன்பிலா தேச பக்தர்களே, உங்களது இந்தியாவாக அல்ல! உங்களின் இந்தியா காஷ்மீர் – மணிப்பூர் எல்லைகளை விட்டு வெளியே வந்ததுமே வேறு மாதிரி – அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர் அல்லாதோரையும் மற்ற வட இந்தியரையும் மிரட்டி அடித்துத் துரத்துகிற இந்தியாவாக – மாறிவிடுகிறது.

ஆனால் என்னுடைய இந்தியா மகாராஷ்டிரத்தில் அடிவாங்குகின்ற அந்த சகோதர இந்தியாதான். என் அன்பிலா தேசபக்தர்களே, பயம்வேண்டாம். நீங்கள் என்னுடன் மோது வதற்கும் நான் உங்களுக்கு வாய்ப்பு தரு கிறேன். அதுவும் ஜே.என்.யூ. வகை கனத்த விவாதங்கள் போலல்ல. ஏனெனில்அவையெல்லாம் உங்கள் அறிவு மட்டத்திற்கு மிகையென்று எனக்குத் தெரி யும்.

விவசாயிகளெல்லாம் ஆண்மைக் குறைவினாலும், காதல் விவகாரத்தில் சிக்கியும்தான் தற்கொலை செய்துகொள் கிறார்கள் என்று மத்திய விவசாய அமைச்சர் ராதா ராமன் சிங் கூறியபோது தேச பக்தர்களே நீங்களெல்லாம் எங்கே விடுப்பில் சென்றுவிட்டீர்கள் என்று நான் கேட்கவில்லை. இன்னும் அவமானப் படுத்த பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பி னர் கோபால் ஷெட்டியோ, விவசாயிகள் தற்கொலை இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் என்று சொன்னபோது உங்கள் தேசபக்த நெஞ்சங்கள் கொதிக்கவில்லையா என்றும் நான் கேட்கவில்லை.

உச்சநீதிமன்றம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு இந்த தேசபக்த அரசின் முகத்திலறைந்தாற்போல் கேட்டதே அந்தக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள் இல்லையா என, அப்போதும் நீங்கள் எங்கு சென்றிருந்தீர்கள் என நான் கேட்க வில்லை. அன்பிலா நவீன தேசபக்தர்களே, உங்கள் மொழியிலேயே நான் பேசு கிறேன். நான் அப்சல் குருவாக ஆக வேண் டாம். அப்சரின் மகன் காலிப் எப்படி அப்ச லாக அல்ல மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படி. ஜே.என்.யூவில் எவரும் நான் அப்சல்குரு ஆக வேண்டும் என கோஷமிட்டதை நான் கேட்டதில்லை.

உங்களது வீடியோக்களிலெல்லாம் (அவையெல்லாம் இட்டுக் கட்டியவை என்று இப்போது தெரிந்துவிட்டது) இத்தகைய கோஷங்களின் போது இருட்டாகவும், முகங்கள் தெரிய வரும்போது, மந்திரம் போட்டாற்போன்று அந்த முழக்கங்கள் ‘ பசியிலிருந்து விடுதலை’ என மாறிவிடுவதையும் பார்க்க முடிகிறது. சரி என்னைப்பற்றி மறந்துவிடுங்கள்.

தேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ள பி.ஜே.பி. ஜம்மு – காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கூட்டு வைத்ததே அந்த மக்கள் ஜனநாயக கட்சி யைப் பற்றிச் சொல்லுங்கள். அக்கட்சியினர் அப்சல்குருவை தியாகி எனும் போது உங்கள் தேசபக்தி என்னவாயிற்று?

நீங்கள் அவர்களுடன் கூடி அரசு அமைத்த உட னேயே, அப்சல்குருவின் உடல் காஷ்மீரம் வரவேண்டும் என்று கோரினரே, அப்போ தெல்லாம் உங்கள் வீரம் எங்கு சென்றுமறைந்ததோ? பிடிபியின் எதிர்ப்பையும் மீறி, பிரிவினைவாதத் தலைவர் சஜ்ஜத்லேனேவை பி.ஜே.பி. அமைச்சராக்கிய போது உங்களுக்கு ஏன் அவர்களைச் சென்று அடிக்கத் தோன்றவில்லை? அன்பிலா தேசபக்தர்களே, உங்களுக்கு இருப்பதெல்லாம் மிகுந்த சந்தர்ப்பவாத தேசபக்திதான். பி.ஜே.பி-பி.டி.பி கூட்டணி யில் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு, முதற்காரியமாக, காஷ்மீரில் அமைதியாகத் தேர்தல் நடத்த உதவி யதற்கு பாகிஸ்தானுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் நன்றி தெரிவித்தாரே முஃப்தி முகமது சையது அப்போதெல்லாம் உங்கள் தேசபக்தியை எங்கு தேடினாலும் காணக்கிடைக்கவில்லையே? காஷ் மீரை பாகிஸ்தானோடு இணைக்க ஆதரிப்பவரான மஸரத் ஆலம் என்பவரை பி.ஜே.பி -பி.டி.பி ஆட்சி விடுதலை செய்ததே, அப்போது எங்கு போயிற்று உம் தேசபக்தி? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றுமிச்சமிருந்தால் அதனிடம் இதைப்பற்றி யெல்லாம் கேளுங்கள்.

இந்திய விடுதலைக்காக ஒரு சிறிதும் பாடுபடாதோரின் கண்களைக் குத்தும் இந்தியாவாவேன் நான். இந்தியாவின் பன்முகத்தன்மையைத் துடைத்தெறிந்து ஒரே போன்ற`ஹிந்து மேல்சாதி ஆண்களின் தேசியமாக மாற்ற விரும்புவர்களின் கண்களைக் குத்தும் இந்தியாவாவேன் நான்.

இந்தியாவில் எல்லாமே மிகச்சரியாக அமைந்திட வில்லை. ஆனால் அதனை ஒத்துக்கொள்வது அவற்றைச் சரி செய்யும் முயற்சி யாக பார்க்கப்படுமேயொழிய தேசத் துரோகமாக அன்று; என எண்ணும் இந்தியாவாவேன் நான். என் இந்தியாவிற்கெதிரான கோஷங்கள் எனக்கும் உவப்பாயில்லைதான். எனினும் உங்கள் இந்தியா போன்றோ அல்லது ஐ.எஸ். களின் இஸ்லாம் போன்றோ 10 முட்டாள்களின் கோபத்தினால் பலவீன மடைந்துவிடுவதில்லை என் இந்தியா.

உங்கள் இந்தியா உங்களுக்கு அரசியல் ஆயுதம். ஆனால் எனக்கோ என் இந்திய என் முன்னோர்களின் சாம்பல்களினால் ஆனது. என்னுடைய இந்தியா இந்த கோஷமிடுவோரை அரவணைத்து ஆறுதல்படுத்தி அவர்களை இவ்வாறு எதிர்ப்பாளர்களாக மாற்றியது எனக்கேட்கும் அளவிற்கு வலிமையும் கருணையும் ஒருங்கே வாய்ந்த இந்தியாவாகும். எனது இந்தியா அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து உங்களின் முன்னோர்களும் இதேமண்ணில் அல்லவா எரியூட்டப்பட்டனர் / புதைக்கப்பட்டனர். எனின் நீங்கள் ஏன் இதை பிளவுபடுத்தப் பார்க்கிறீர்கள் என்று வினவும் தார்மீக தைரியம் கொண்டது. மேலும்

எனது இந்தியா அவர்கள் உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்ட வர் எனில் அவர்களிடம் மன்னிப்புக்கோரி அவர்களுக்காக நீதிமன்றங்களில் போராடும் மனசாட்சியும் கொண்டது.

(நீங்கள் சொல்லக்கூடிய எதற்கும் யாரையும்சம்மதிக்க வைக்க முடியும்.) எவராயிருப் பினும், அவர் கழுத்தில் திரிசூலத்தை வைத்து கட்டாயப்படுத்தும்போது நீங்கள்கூறும் எதற்கும் அவர்களைத் தலையாட்டவைத்துவிடலாம்; ஆனால் இந்நாட் டையோ உங்களையோ நேசிக்கச்செய்து விட முடியாது. இந்நாட்டின் மக்களில் பலர்ஆங்கிலேயருக்குத் தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனரே, நினை விருக்கிறதா? வீர சாவர்கரும் அவர்களில்ஒருவராக இருந்தாரே, அது நினைவிருக்கிறதா? அப்படியானால் அவர் உண்மையாகவே ஆங்கிலேயரை நேசித்தாரா? அப்படியெனில், கோஷங்களால் பயங்கொள்கிற உங்கள் இந்தியாவிலேயே நீங்கள் இருங்கள். அப்படியும் நேர்மையற்று `ஹிந்து மகாசபையின் கோஷங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தேசியக் கொடியை எரித்த செயலானது உண்மையிலேயே உண்மையாகவே தேசத்துரோகமாகும். 1971ன் சட்டப்படி உண்மையாகவே தேசத்துரோகமாகும். நான் இந்தியாவில் தலைநிமிர்ந்து பய மற்ற நெஞ்சுடன் வாழ்வேன். நீங்கள் என்னைத் தாக்கிக்கொண்டே இருங்கள். ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். உங்களால் என்னைக் கொல்ல முடியும். ஆனாலும் என்ன, ஆங்கிலேயர் பகத்சிங்கைக் கொன்றனர். உங்களுக்குத் தெரியும் மக்கள் யாரை அன்போடு நினைவு கூறுகிறார்கள், யாரை நேசிக்கிறார்கள் என்று.இறுதியாக, நீங்கள் ஒரு வேறுபட்ட இந்தியாவில் வெறுப்புமிக்க மக்களிடம் அன்பற்ற – இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

எனினும், நான் உங்களைப் போன்று சகிப் புத்தன்மை அற்றவர் கிடையாது. நான் உங் களுக்கு ஒரு யோசனையை முன் வைக் கிறேன். நீங்கள் தலித்துக்கள், சிறுபான் மையினர், பழங்குடியினர், பெண்கள், மாணவர்கள் அல்லது உங்கள் தேசபக் தர்கள் ஆணையிடுகின்ற எவரென்றாலும் அவர்களை குருதி சொட்ட தாக்கி கொல் லுங்கள். அதே சமயம் உங்களின் ஆதர வைப் பெறுவதற்கு அவர்கள் உங்களுக்குஎன்னவெல்லாம் வாக்களித்தார்களோ- உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக் கும், உங்கள் முதியோருக்கும் நல்லவேலை, வாழ்க்கை, பாதுகாப்பு – இவற் றையெல்லாம் தேடிக்கொண்டார்கள். அப்போது நீங்கள் காண்பீர்கள் – சீருடையணிந்த படையினரின் எந்த முனை யில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று. குஜராத்தின் படேல்கள் அதை ஏற்கனவே கண்டுகொண்டார்கள்.

நான் இதை எழுதும் போது ஹரியானாவின் ஜாட்களும் இதை உணர்கிறார்கள். அதுவரை உங்கள் வாக்கியங்களை பாரத மாதா வாழ்க என்று ஆரம்பித்து, அதே பாரத மாதாவின் தாய்களையும், மகள்களையும் கொடுமைப் படுத்தியவாறே முடியுங்கள். ஆனாலும் என்ன, எந்தத் தாயும் தன் பெயரால் தன் மகள் கொடுமைப்படுத்தப்படும்போது மகிழ்வதில்லை.

உங்கள் தேசத்துரோகத்திற்குரிய,

அவினாஷ் பான்டே (சமர்)

அவினாஷ் பாண்டே சமர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர், கட்டுரையாளர்.

தமிழில் : ஜமீலா ராசிக்

நன்றி: தீக்கதிர்

கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், மாநிலங்களவையில் பேசும்போது துர்க்கையை பற்றி தவறாக நான் பேசியதாக கூறி எனக்குகொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னுடைய உரை யுடியூப்-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதை யார் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். என்னுடைய உரையில் துர்க்கையை பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், தவறான செய்தியை பரப்பி கொலைமிரட்டல் விடுக்கின்றனர். தொலைபேசியில் என்னிடம் அவர்கள் பேசியது அனைத்தும் முட்டாள்தனமானவை; என்னுடைய நாடாளுமன்ற உரையில் துர்க்கை குறித்து தவறாக எதுவும் கூறவில்லை. எனக்கு எதிராகதிட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்’ என்றார்.  இதுகுறித்து யெச்சூரி போலீசில் புகார் அளித்துள்ளார். தமக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை தில்லி மாவட்ட காவல்துறையிடம் அவர் அளித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி ஜதீன் நார்வால் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மிரட்டல் வந்த எண்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஜேஎன்யு மாணவ தலைவர் கன்னய்ய குமாரை தேசவிரோத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதை யெச்சூரி வன்மையாகக் கண்டித்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ம்தேதியன்று அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. ஆபாச எஸ்எம்எஸ்களும் அனுப்பப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்டதொலைபேசி அழைப்புகளும், 500க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் யெச்சூரிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

யெச்சூரியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உரை இங்கே…

ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம்.

தமிழாக்கம்: ச. வீரமணி

“நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை மற்றும் கடுங்கோபத் துடன் விவாதத்தைத் தொடங்குகிறேன். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத் தில் நடந்தவை, ஜேஎன்யுவில் நடந்து கொண்டிருப்பவை ஒன்று அல்லது இரண்டு கல்வி நிறுவனங்களில் மட்டும் நடந்துள்ள நிகழ்வுகள் கிடையாது.

புனே திரைப்பட இன்ஸ்டிட்யூட்டில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். சென்னை ஐஐடியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். இப்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். பர்த்வான் பல்கலைக்கழகத்திலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். இதுபோன்று எண்ணற்ற இடங்களில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல, ஐசிஎச்ஆர், ஐசிஎஸ்எஸ்ஆர் மற்றும் நேரு மெமோரியல் மியூசியம் போன்ற நிறுவனங்களிலும் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இந்நிறுவனங்கள்அனைத்திலுமே நாட்டின் சட்டங்களை மீறி ஆட்சியினரால் தலையீடுகள் தலைதூக்கி இருப்பதைப் பார்க்கிறோம். இந்நிறுவனங்கள் அனைத்தும், மத்தியபல்கலைக் கழகங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப் பட்டவைகளாகும்.

நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாடாளு மன்ற சட்டம் மீறப்படுமானால், அதில் தலையிட வேண்டியது, இத்தகைய மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டியது நம் கடமையாகும். எனவே, ஹைதராபாத் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்றவற்றில் நடந்துவரும் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ள நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாமும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ஆராய்வோம்.

உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவாக கல்வித்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்திய வரலாற்றையே, இந்து புராணங்களில் கூறப்படுவதற்கு ஏற்றவிதத்தில், மாற்றுவதற்கான முயற்சிகளை ஆட்சியா ளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். புராணங்களில் கூறப்படுபவைகளை இந்திய வரலாற்றுக்குள்ளும், இந்துமத சாஸ்திரங்களை வளமான இந்திய தத்துவஞானத்திற்குள்ளும் பொருத்திட, ஆட்சியாளர்கள் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்கள். இந்திய மதச்சார் பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களின் குறிக்கோளான இந்துராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இவற்றையெல்லாம் மேற்கொண்டு வருகிறார்கள்.

வெமுலாவுக்கு என்ன நடந்தது?

எனவே, ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இந்த அரசாங்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே இவ்வாறு தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள பிரச்சனையை சுருக்கமாக விவரிக்கிறேன். அங்கே தலித் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டு வந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்தப் பல்கலைக்கழகத் தில் தலித் மாணவர்கள் அதிகமான அளவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் அனைவருக்கும் தெரியும். ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு என்ன நடந்தது? தலித் மாணவர்கள் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அவர்களுடைய கல்வி உதவி பணம் நிறுத்தப்பட்டது. மிகவும் வறிய நிலையில் வாழும் தலித் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டு தங்கள் பையன்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய கல்வி உதவிப் பணத்தை நிறுத்துவது என்று சொன்னால் அதன் பொருள் வெளிப்படை யாய் இல்லை என்றாலும் நடைமுறையில் அவர்களைக் கொல்வது என்பதேயாகும். இவ்வாறு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. ஆனால் அரசுத் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது? இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்றதாம், அதில் தலையிடுமாறு பல்கலைக் கழகத்திற்கு மத்திய அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதுகிறார். இது ஒருதலைப்பட்சமான தலையீடாகும்.

இவ்வாறு தலையிடுவதற்கு நம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் கிடையாது. எனவே தான் நாங்கள் கூறுகிறோம், இந்த அரசு தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் அடிப்படையில் அப் பல்கலைக்கழகத்தில் நடவடிக்கை எடுக்க கட்டளையிட்டிருக்கிறது. இவ்வாறு இந்த அரசின் தலையீட்டின் மூலம் அங்கே தலித் மாணவர்கள் மத்தியில் ஒரு மோசமான நிலை மையை உருவாக்கி இருக்கிறது. அதுதான் துயரார்ந்த மரணத்திற்கு இட்டுச் சென்றிருக் கிறது. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடை பெற்ற சமயத்தில் அம்பேத்கரின் சொற்பொழிவுகளிலிருந்து ஒருசிலவற்றை மட்டும் கூறுவது அவருக்கு அஞ்சலி செலுத்தப் போது மானதல்ல என்றும், தலித்துகளை மேம்படுத்தக்கூடிய விதத்தில் துல்லியமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவாருங்கள் என்றும் கோரினோம். 60 ஆண்டுகள் கழித்து இப்போது அவரை ஏன் கொண்டாடுகிறீர்கள்? அவரின் கோரிக்கைகள் இன்னமும் ஏன் நிறைவேற்றப்பட வில்லை? பொருளாதாரக் கொள்கைகளில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டிருப்பதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் சுருக்கப் பட்டு அதன் வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் அங்கே இடஒதுக்கீடு என்பது மிகவும் சுருங்கிப்போய்விட்டது. எனவே தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினோம். தலித்துகளுக்கு எதிராக செயல்படுவோர் தண்டிக்கப்படக்கூடிய விதத்தில் தலித்/பழங்குடியினர் வன் கொடுமைச் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினோம். ஆனால் இதில் எதுவும் நடைபெறவில்லை. டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் கருதினால், தலித்துகள் குறித்து அவர் என்ன கூறினார் என்று உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை நான் இங்கே பலமுறை கூறியிருக்கிறேன். எனவே அதனை முழுமையாக திரும்பவும் கூற விரும்பவில்லை.

“நமக்கு நாமே ஓர் அரசமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை உண்டு. ஒவ்வொரு வாக்கும் ஒரேமாதிரியான மதிப்பு உடை யதுதான். ஒருவருக்கு, ஒருவாக்கு’,ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’. இந்த ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்பது மிக வேகமாகஒரு நபர், ஒரு மதிப்பு’ என்கிற முறையில் மாறவில்லை என்றால், இப்போது நாம் உருவாக்கியுள்ள அரசியல் அமைப்பே நீடித்திருக்காது. அது சுக்கு நூறாக சிதைந்து, தூக்கி எறியப்பட்டுவிடும்.’’ இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். அவர் கூறியுள்ள இந்தத் திசைவழியில் நாம் எந்த அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்? நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதிமொழியின்படி ஒரு சமத்துவ சமுதா யத்தை உருவாக்க வேண்டுமானால், நாம் “சாதி, சமயம், பாலினம் அனைத்தையும் மீறி’’ அனைவருக்கும் சமத்துவத்தை அளித்திட வேண்டும். இவ்வாறு நம் அரசமைப்புச் சட் டம் கூறுகிறது. இது அங்கே மீறப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விசயமாகும். இதில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்திருக்கிறது. தலித்துகளுக்கு எதிராகஇந்த ஆட்சியின் தலையீடு அமைந்திருக்கி றது. இதனை நாடாளுமன்றம் கணக்கில் எடுத் துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்தப் பல்கலைக் கழகம் நாடாளுமன்றத்தின் சட்டத் தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்று. நாம்தான் அதனை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது அங்கே நடைபெற்றுள்ள நடவடிக்கைகள் குறித்து நாம் தலையிடாவிட்டால், தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் நம் பொறுப்பைக் கைவிட்டோம் என்றாகிவிடும். எனவேதான் இந்தப் பிரச்சனையை மிகவும் மனக்கவலையுடனும், ஒருவிதமான கோபத்துடனும், மன வேதனையுடனும் எழுப்பியுள்ளேன்.

ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நடந்தது என்ன?

இப்போது ஜேஎன்யுவிற்கு வருவோம். நம்மில் பலர் ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டவர்கள். இந்த அமைச்சரவையில் உள்ளவர்களில் பலஅமைச்சர்கள் ஜேஎன்யுவால் உருவாக்கப் பட்டவர்களாவர். ஜேஎன்யு மாணவர்கள்மீது இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன், நானும், து.ராஜாவும், கே.சி. தியாகியும் உள்துறை அமைச்சரை சந்தித்தோம். நாங்கள் அவரிடம், “எவரேனும் தேசவிரோத நடவடிக்கை எதிலும்ஈடுபட்டிருந்தால், நம்பகமான சாட்சியத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்,’’ என்றோம். அப்போது அமைச்சர் எங்களிடம்,“அப்பாவி எவரும் தண்டிக்கப்படமாட்டார் கள்’’ என்று உறுதிமொழி அளித்தார். ஆனால்உடனேயே டுவிட்டர் பக்கத்தில், பயங்கரவாதி ஹபித் சயீத் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளித்தார் என்று வந்திருப்பதாகக் கூறி செய்தி வெளியானது. அது ஒரு தவறான டுவிட் கணக்கு என்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எனினும் இந்த அரசு அந்தத் தவறான டுவிட்கணக்கின் அடிப்படையில் இயங்கிக் கொண் டிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் மீது கடு மையாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பலமுறை இங்கே நாங்கள் கூறியிருக்கிறோம். ஆனால் அதன்பெயரில் ஒட்டுமொத்த பல் கலைக்கழகத்தையே தண்டிப்பது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த இளைஞர் கள், ஒருசமயம் சர்தார் வல்லபாய் பட்டேல்கூறியது போன்று, `இந்தியாவின் உருக்கு கம்பிபோன்ற வர்கள்’. உருக்கு கம்பிபோன்றஇவர்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்திய அய லகப் பணி, இந்திய காவல் பணி, ஊடகம், கல்விநிலையங்கள், உளவு அமைப்புகள் முதலான வற்றின் அங்கமாக இருந்து வருகிறார்கள். ஜேஎன்யு உருவாக்கி, அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் எண்ணற்ற அதிகாரி களின் பெயர்களை என்னால் கூறமுடியும். மத் திய அயல்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். நம் நாட்டின் அயல்துறை செயலாளர் ஜேஎன்யு உருவாக்கியவர்தான். மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள சிறப்புபிரிவு (ஸ்பெஷல் செல்) ஜேஎன்யு மாணவரால் தான் தலைமை தாங்கப்படுகிறது.

ஒரு உறுப்பினர்: அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஜேஎன்யு மாணவர்தான்.

சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு ஜே என்யு மாணவர்கள் இல்லாத இடங்களே கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஜேஎன்யு மீது, ஒட்டுமொத்த பல்கலைக் கழகமே தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்று கண்டனக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

இங்கு பயிலும் மாணவர்கள்நாட்டின் எதிரிகள் என்று கூறிக்கொண்டிருக் கிறீர்கள்.என்ன நடந்துகொண்டிருக்கிறது? மகாத்மாகாந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, தேசிய ஹீரோவாக இருப்பார். சீத்தாராம் யெச் சூரியும், துணைத் தலைவரும் தேச விரோதிகளாக இருப்பார்கள்! இவர்கள் கூறும் தேசியவாதம் இதுதான். மாணவர்கள் மத்தியில் தேசியவாதத்தைப் புகுத்துவதற்காக அனைத்து மத்தியப் பல் கலைக்கழகங்களிலும் மிகப்பெரிய அளவில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்றுகூறிக்கொண்டிருக்கிறீர்கள். அது 207 அடி உயரம் இருக்குமாம். மிகவும் நல்லது. நாடுமுழுவதும் ஏற்றுங்கள். ஆனால், நீங்கள் உயர்த் தும் அனைத்து தேசியக் கொடிகளையும்விட எங்கள் நெஞ்சில் நாங்கள் ஏந்தியுள்ள மூவர்ணம் மிகவும் பெரிதானது என்பதை நினை வில் கொள்ளுங்கள். தேசபக்தி குறித்து நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டிய தேவை இல்லை. இரட்டை நிலை மேற்கொண்டிருப்பவர்களிடமிருந்து நாட்டுப் பற்று குறித்து சான்றிதழ்கள் ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு மாணவர் அமைப்பிலிருந்து வந்த வன். ஜேஎன்யுவில் படித்தபோது அங்கே இருந்த மாணவர் சங்கத்திற்குத் தலைமை தாங்கினேன்.

நாங்கள் அனைவரும் அங்கிருந்து வந்தவர்கள் என்பதை மிகவும் பெரு மிதத்தோடு கூறிக்கொள்கிறேன். எங்கள் சகா ஒருவர் அசாமில் பயங்க வாதி ஒருவரால் தாக்கப்பட்டார். அவர் உடல்வெட்டப்பட்டது. அவர் இறந்து தியாகியாகி விட்டார். அவர் நிரஞ்சன் தாலுக்தார். அவர் உடல் வெட்டப்பட்டு, ஒரு சாக்குப்பையில் வைத்து கட்டப்பட்டு, கிணற்றில் வீசிஎறியப் பட்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தடயஅறிவியல் ஆய்வின் அடிப்படையில் அவரை இனங்கண்டோம். அப்போது நாங்கள் ஜேஎன்யுவில் “எங்கள் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும் இந்த தேசத்தை துண்டாட அனுமதியோம் ’’ என்றுதான் முழக்கமிட்டோம். தேசத்துரோகக் குற்றப் பிரிவின்கீழ் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார், பால கங்காதர திலகர் கைது செய்யப் பட்டிருக்கிறார், பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டதும் இந்தக் குற்றப்பிரிவின்கீழ்தான். இப்போது தேசத்துரோகக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்கள் குறித்து இந்த அரசும், தில்லி காவல்துறையும் என்ன சொல்கின்றன? மாணவர்கள்தான் தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க வேண்டுமாம். அவ்வாறு அவர்கள் தங்களை நிரபராதி கள் என்று நிரூபிக்காதவரை அவர்கள் குற்றவாளிகளே’ என்று கூறுகிறார்கள்.

இவ் வாறு இந்திய சட்டஇயலின் தத்துவத் தையே தலைகீழாய் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞராகவும் இருக்கிற அவைத் தலைவர் (அருண் ஜெட்லி) என்ன சொல்கிறார்? ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, நீதிபதியின் கண்முன்னாலேயே சில வழக்குரைஞர்கள் கன்னய்ய குமாரையும், ஊடகவிய லாளர்களையும், வழக்குரைஞர் களையும் தாக்குகிறார்கள். இது குறித்து உலகம் முழுவதும் இருந்து வெளியாகும் ஏடுகள் கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு தன்னுடைய தலையங்கத்தில், “இந்தியாவில் தற்போது கடும் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் வலதுசாரி சிந்தனை கொண்ட அவரது அரசியல் கூட்டாளிகளும் அவர்களை எதிர்ப்பவர்களை மவுனமாக்கிடத் தீர்மானித்திருக்கின்றனர்,’’ என்று எழுதியிருக்கிறது. அது மேலும், பாஜக ஆதரவாளர்களும், வழக்குரைஞர்களும் “பாரதமாதாகி ஜே’’ என்றும், “தேசத்துரோகிகளே, இந்தியாவைவிட்டு வெளியேறு’’ என்றும் கோஷமிட்டதாகவும், பத்திரிகையாளர்களையும் மாணவர்களையும் தாக்கினார்கள் என்றும் இதில் தலையிட காவல் துறை மறுத்துவிட்டது என்றும் எழுதியிருக்கிறது.

அதேபோன்று, ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் லீ மாண்டே என்று அனைவராலும் மதிக்கப்படும் இதழும் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து தலையங்கங்கள் தீட்டியிருக்கிறது. இவ்வாறு உலக ஏடுகள் எல்லாம் எழுதினால் உலகம் முழுவதும் சுற்றி இந்தியாவிற்காக எப்படி ஆதரவினைப் பெற முடியும்? எனவேதான் இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று நாங்கள் கூறுகிறோம். நம் நாட்டில் பல்வேறு நாகரிகங்கள் பின்னிப் பிணைந்து இன்றைய நவீன நாகரிகம் உருவாகி இருக்கிறது. இதன்மூலம் உலகத்திற்குஅளப்பரிய பங்களிப்பினை நாம் செய்திருக் கிறோம். ஆனால் இவை அனைத்தும் இந்து நாக ரிகத்தின் விளைவாகத்தான் என்று கூறினால் அது தவறாகும். இந்த சாதனைகளில் பல புத்த மதம் இங்கே ஆழமாக வேரூன்றிய காலத்தில் ஏற்படுத்தப்பட்டவைகளாகும். அதன்பின்னர் மேல்சாதி, கீழ்சாதி என்கிற சாதிய அமைப்புமுறை இங்கே மனு வாதிகளால் கொண்டுவரப்பட்டது. உலகத் திற்கு அளப்பரிய பங்களிப்பினைச் செய்த இந்தியாஇப்போது மனுவாதிகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. எவரேனும் நாட்டிற்கு எதிரான நிலை எடுத்தால், செயல்பட்டால் நடவடிக்கை எடுங்கள். ஆனால் இந்த அரசாங்கமோ அதன்பெயரில் ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக் கழகத் தையே தண்டித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் சின்னமாக விளங்கும் அசோக சக்கரத்தின் கீழ் அசோகரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

அவை என்ன கூறுகின்றன? நாட்டின் பிரஜைகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தை அவர் பின்பற்றுவராக இருந்தாலும், ஆட்சியாளர்களின் கடமை அவர்கள் அனை வரையும் பாதுகாப்பது என்பதேயாகும். ஆட்சியாளர்கள் போற்றிப் புகழும் பகவத்கீதை என்ன கூறுகிறது? அயல்துறை விவகாரங்கள் துறை அமைச்சர் அதனை நாட்டின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நான் ஒவ்வொரு மனிதனின் மதநம்பிக் கையையும் போற்றிப் பாதுகாப்பேன்,’’ என்று பகவத் கீதை கூறுகிறது. இதனை செய்கிறோமா? இல்லை, மாறாக ரவீந்திரநாத் தாகூர் கூறியதைப்போன்று தேசியவாதம் என்பதன் வரையறையை நான்கு சுவர்களுக்குள் சுருக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இங்கே வீற்றிருக்கிற நாம் அனைவருமே, பல்வேறு மதங்களும் செல்வாக்குடன் வளர்ந்துள்ள ஒரு நாட்டில்தான் வளர்ந்திருக்கிறோம். இங்கே இஸ்லாமும் கிறித்துவமும் செல்வாக்குள்ள மதங்களாகும். நான் ஓர் இந்து பாரம் பரிய குடும்பத்தில் பிறந்தவன். 11 வயதில் எனக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது. நான் அனைத்து வேதங்களையும் படித்திருக் கிறேன். “சீத்தாராம், இவ்வாறு வேதங்களை எல்லாம் படித்துவிட்டு எப்படி நீங்கள் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறீர்கள்?’’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆம், நான் இவ்வாறு வேதங்கள் அனைத்தையும் படித்ததால்தான், கம்யூனிஸ்ட்டாக மாறினேன். எனவே இவைகளை மீண்டும் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய தேவையில்லை. நீங்கள் எதைக் குறித்தும் விவாதிக்க, வாதிட விரும்பினால் வாருங்கள், விவாதிப்போம், வாதிடுவோம். அந்தவிதத்தில்தான் நம் தத்துவஞானம் வளர்ந்தது. ஆனால் அத்தகைய விவாதத்தை, வாதிடுவதை நசுக்கிட இன்றைய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.

நம் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அதேபோன்று பண்டிட் ஜவஹர்லால் நேருவும் அலகாபாத் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது அவர் என்ன கூறினார் தெரியுமா? “ஒரு பல்கலைக் கழகம் என்பது மனித நலம், சகிப்புத்தன்மை, காரணகாரியம் அறிதல்,துணிகரமான சிந்தனைகள், உண்மையை நுணுக்கமாக ஆய்வு செய்தல் என்பவைகளுக்காக நிற்கிறது. மனிதகுலம் உயர்ந்த குறிக்கோள்களுடன் முன்னேறிச் செல்ல அது துணைபுரிய வேண்டும். பல்கலைக் கழகங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினால், பின்னர் நாடும் நாட்டு மக்களும் மிகவும் நலமாக வாழ்வார்கள்.’’ஆயினும் நீங்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதலைத் தொடுத்திருக் கிறீர்கள். “இது தேசவிரோதமான ஒன்று’’ என்றும், “இது மூடப்பட வேண்டும்,’’ என்றும் கூறுகிறீர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பல்கலைக் கழகம் குறித்து உங்கள் ஏடான ஆர்கனைசர் தலையங்கத்தில் இவ்வாறுதான் கூறியது. “இது தேச விரோத நடவடிக்கைகளின் கூடாரமாக இருக்கிறது, இது மூடப்பட வேண்டும்’’ என்றது. இப்போது அதன் தலைவர்களும் “இது மூடப்பட வேண்டும்’’ என்கிறார்கள். எனவேதான் மத்தியப் பல் கலைக்கழகங்களில் நடைபெறும் செயல் பாடுகள் குறித்து ஆய்வுசெய்திட, ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்திட, நாடாளு மன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள் கிறோம்.

#வீடியோ: சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சோட டப்பிங் கேளுங்க!

ஹிந்தி சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, ஹிந்தி சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, நாடாளுமன்ற பேச்சையே டப்பிங் பண்ணி பார்த்திருக்கீங்களா? தமிழ்நாடு பாஜக  ஸ்மிருதி இரானியின் பேச்சை டப் செய்திருக்கிறது. இந்த வீடியோ பாருங்கள்….

பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர்.

மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் தலித் உறுப்பினர் இருக்கிறாரா? என்று கடந்த 24-ந்தேதி நான் கேட்ட கேள்விக்கு இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து விசாரணை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரூபன்வால் உயர்சாதிக்காரர். எனவே மத்திய அரசு உள்நோக்கத்துடன் இந்த விசாரணை கமிஷனுக்கு தலைவராக அவரை நியமித்து இருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் இந்த விசாரணை கமிஷனில் இன்னும் சில நீதிபதிகளை நியமிக்கலாம். ஒருவரை மட்டுமே நியமித்து இருப்பதன் மூலம் குற்றவாளிகளை மத்திய அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்றால் தன் தலையை வெட்டி எனது காலடியில் வைப்பேன் என்று ஸ்மிருதி இரானி கூறினாரே, இப்போது உங்கள் பதில் எனக்கு திருப்தி தருவதாக இல்லை. எனவே அளித்த வாக்குறுதியின்படி தனது தலையை வெட்டி வந்து அவர் எனது காலடியில் வைக்கவேண்டும்” என்று பேசி முடித்தபோது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

இந்த வீடியோவில் மீதியைப் பாருங்கள்.

தீக்கதிர் செய்தி உதவியுடன்

ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர்.  போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டதும், மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதியப்பட்டதும் நடந்தது. காவி அமைப்பினரின் பொய்ப்பிரச்சாரங்கள், ஊடகங்களின் அறமற்ற செயல்பாடுகள், மாணவர்களின் போராட்டம் என  பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியிருக்கிறது. ரோஹித்தின் மரணமும் ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தேச விரோத வழக்கும் இரு அவைகளிலும் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கின்றன. மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலையீடு காரணம் என்ற ஆதாரம் உள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சியினர் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பதவி விலகச் சொன்னார்கள்.

காவி தலைவர்கள் வழக்கமாகக் கையாளும் பாணியில், “பெற்றெடுத்த ஒரு தாயே தன்னுடைய மகனை கொல்லத் துணியமாட்டாள்” என்று உணர்ச்சித் ததும்ப சொன்னார். இவர் பேசிய நேரத்தில் ரோஹித்துக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட பேரணியில் ரோஹித்தை பெற்றெடுத்த உண்மையான தாய், ராதிகா வெமுலா டெல்லி காவல்துறையால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அவருடைய இளைய மகனும் உடன் பேரணியில் பங்கேற்றவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பதிவு செய்யாத, வெகுஜென ஊடகங்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ரோஹித் வெமுலாவின் நினைவேந்தல் நடந்ததாக எழுதின.

தகவல் இங்கிருந்து பெறப்பட்டது.

 

 

ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதன்கிழமை மாநிலங்களவையில் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தின் மீது பேசிய போது, ரோஹித் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, அவரைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என சோதிக்கஅடுத்த நாள் காலை 6.30 மணி வரை அனுமதிக்கப்படவில்லை என்று பேசியிருந்தார்.

ஆனால், ரோஹித் ஹைதராபாத் பல்கலை மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தெலுங்கானா காவலர்களும் அரசு மருத்துவரும் உடனே வந்து சோதித்தனர். இதை உறுதி செய்கிறது இந்த வீடியோ…

நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம்.

இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. செவ்வாய்கிழமை திராவிடர் விடுதலைக் கழகம் சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய நபர்களை கைசெய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது.

இதுகுறித்து வைரம் தி.வி.க தன்னுடைய முகநூலில்,

“ஜாதிவெறியர்களை கைதுசெய்…

அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர் பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்.

follow up
உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு, கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நாகை மாவட்டம் திருநாள் கொண்டச்சேரியில் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் கொண்டு செல்ல முடியாத நிலைமை குறித்து முதன்முதலில் செய்தி ஆக்கியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். ஒரு சில வெகுஜென ஊடகங்கள் என்ன பிரச்சினை என்று குறிப்பிடாமலேயே செய்தியை வெளியிட்டன. சமூக வலைத்தளங்களில் நாம் வெளியிட்ட செய்தி பரவலாக பகிரப்பட்ட நிலையில், சில மக்கள் இயக்கங்கள் இதைப் போராட்டமாக கையில் எடுத்தன. அதன்பிறகே வெகுஜென ஊடகங்களில் அது செய்தி ஆனது.

அதுபோல, ரோஹித் வெமுலா தன் நண்பர்களுடன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அம்பேத்கரின் படத்துடன் சாலைகளில் படுத்துறங்கிய காட்சியை பதிவாக்கியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம்.

வெகுஜென ஊடகங்கள் விலக்கி வைத்திருக்கும் ஆழமான சமூக பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதை தன்னுடைய பணியாக தி டைம்ஸ் தமிழ் டாட் காம் செய்யும். அதற்கான பாதையை மேலே கூறியிருக்கும் சம்பவங்கள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

– ஆசிரியர் குழு.

“முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலாவின்  மரணம் சாதிய பிரச்சினையல்ல, அது ஒரு குற்றப் பிரச்சினை என கருத்து சொல்லியிருக்கிறார் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மேலும் அவர், இந்தப் பிரச்சினையை அரசியாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தி க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிசங்கர்.

“ரோஹித் வெமுலா மரணத்தை சாதியை வைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுவே இறந்தவர் முஸ்லிம் ஆக இருந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்? என்ன நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது” என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். சமூகம் சாதி, மத அடிப்படையில் எல்லாவற்றுக்கும் வினையாற்றுகிறது என்பதை வலியுறுத்தியிருந்தார்.

ரவிசங்கரின் பேட்டி சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”

பிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது.

தமிழாக்கம்: பூ.கொ. சரவணன்

yogendra yadav
யோகேந்திர யாதவ்

எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த அணுகுமுறைகளாகவே இருந்தன. பின்னர் எங்களுக்குள் எப்படி ஒரு அற்புதமான பிணைப்பு உண்டானது என்றால் ஜாதியைக் குறித்துத் தொடர்ந்து நாங்கள் சிந்தித்து வந்தோம் என்பதனால் இருக்கலாம். ஜாதியை எதிர்கொள்வதில் அவர் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஜாதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அதனோடு இணைந்து பங்காற்றும் மற்ற கூறுகள் கவனம் பெறாத பொழுது அவற்றையும் கருத்தில் கொள்வதைப் பேராசிரியர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் தொடர்ந்து செய்தார். அவரின் எம்.ஜி.ஆர். குறித்த ‘The Image Trap’ நூல் எப்படிப் பிம்பம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உருமாற்றம் அடைகிறது என்பதைப் பிரமாதமாக விளக்கும் நூல். இப்பொழுது நரேந்திர மோடி வெற்றி பெற்றதையும் அந்த நூலைக் கொண்டு புரிந்து கொள்ள இயலும்.

NCERT பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் சார்ந்து எழுந்த சிக்கலை அடுத்து என்ன இறுதித் தீர்ப்பு எழுதுவது என முடிவு செய்துவிட்டு அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களும் உறுப்பினராக இருந்தார். அந்த விசாரணைக் குழுவில் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற பாண்டியனை ஏன் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. முறையான கேள்விகளை எங்களை நோக்கி அடுக்கிய பாண்டியன் அவர்கள் இறுதியில் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து மாறுபட்டு ஒரு மறுதலிப்புக் குறிப்பை எழுதினார். இந்தியாவில் அரசியலுக்கும், அறிவுபுலத்துக்கும் இடையே உள்ள உறவை குறித்து வருங்காலத்தில் வரலாறு எழுதப்படும் பொழுது பாண்டியன் அவர்களின் அந்தக் குறிப்பு அறிவுப் புலத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்.

சமூக நீதி என்பது உலகளவில் பரந்துப்பட்ட பொருளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவில் பெரும்பாலும் அது ஜாதி சார்ந்த நீதியையே குறிக்கப் பயன்படுகின்றன. சமூக நீதிக்கான இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை குறிவைத்து இயங்கி இருக்கின்றன. சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் என்பதும் ஜாதி சார்ந்த ஒன்றாகவே இயங்குகின்றன. சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை என்கிற இந்தத் தலைப்பை ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி காண்பதன் அவசியத்தை நான் பேச விரும்புகிறேன்.

ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாதி சார்ந்த அநீதி என்பது எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதைக் கண்டோம். ஜாதிக் கொடுமைகள் இன்றும் தொடர்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் ஹைதராபாத் பல்கலையில் நடந்த நியாயமற்ற நிகழ்வுகள் வழிகோலின. இந்த நிகழ்ச்சி நமக்கு எதை நினைவுபடுத்துகிறது என்று யோசியுங்கள். நவீன அமைப்புகளில் ஜாதி எவ்வளவு ஆழமாகத் தன்னுடைய கொடுங்கரங்களைப் பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் இந்த மரணம். ஜாதிக் கொடுமைகள் உச்சபட்சமாக உள்ள இடங்களில் பெரும்பாலும் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த புகார்கள் பதியப்படுவதில்லை. எங்கு இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ, அங்கிருந்து தான் இந்த மாதிரியான விஷயங்கள் வெளிப்படுகின்றன. மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பு மிகுந்த மாணவர்களை ஹைதரபாத் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஜாதி சார்ந்த அநீதி இழைப்பு குறித்த நுண்ணிய, அதிகளவிலான புரிதல் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளது.

ரோஹித் வெமுலாவின் மரணமும், அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவராக ரோஹித் வெமுலா இல்லை என நிறுவ முயன்றார்கள். அதனைச் சார்ந்து ஜாதி வன்முறைக்கான எல்லையாகப் பட்டியல் ஜாதி சான்றிதழை அவர்கள் நிர்ணயிக்கப் பார்த்தார்கள். ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரோ, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ ஜாதி வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் நம்பவைக்க முயன்றார்கள். முதலில் ரோஹித் வெமுலாவுக்கு நிகழ்ந்த அநியாயத்தை இல்லையென்று மறுத்தார்கள், அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியா தன்னுடைய பெருமைமிகுந்த மகனை இழந்துவிட்டது’ என்று ஆழ்ந்த வருத்தம் தோன்ற கண்ணீர் வடித்தார். இவை இரண்டும் ஒரே சமயத்தில் நாடகம் போல இணைந்து நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். முதலில் ஜாதி சார்ந்த வன்முறையே இல்லை என்று மறுப்பது, பின்னர் அந்த நிகழ்வையே களமாக்கி போராடுவது, அதற்குப் பின்னர் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த நீண்ட அம்னீசியாவுக்குள் போவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்தமுறை நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படி அம்னீசியாவுக்குள் சென்று விடும் சமூகம் என்கிற சோகமான தீர்ப்பை நான் முன்முடிவோடு எழுத விரும்பவில்லை. இருந்தாலும், கடந்தகாலம் எப்படியிருந்தது என நினைவூட்ட விரும்புகிறேன்.

mss pandiyan
எம்.எஸ்.எஸ். பாண்டியன்

ஆதிக்க ஜாதியினர் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவது, மேம்படுத்துவது என்பது அதன் பொருளல்ல, இட ஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். சமூக நீதி தற்போது அடைந்திருக்கும் இடம் சமூக நீதி அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. அறுபதுகளில் தெற்கில் எழுந்த சமூக நீதி இயக்கங்கள் எண்பதுகள், தொன்னூறுகளில் வடக்கிலும் பரவியது. மத்திய பிரதேசம் போன்ற ஆதிக்கச் சாதியினரே முதல்வரான மாநிலங்களில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக ஆகமுடிகிறது. நரேந்திர மோடி தன்னுடைய அடையாளங்களில் ஒன்றாகத் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை முன்வைப்பதையும் காணலாம்.

பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்தியாவில் ஓடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெற்றியை அடைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி என்பது முந்தைய பத்ரோலக் எனும் ஆதிக்க ஜாதியினரின் ஆட்சியின் நீட்சியாகவே இருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே இருந்த வலுவான பிற்படுத்தப்பட்டோர் அரசியலை இடதுசாரிகள் தொடரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். மற்றபடி சமூக நீதி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெகு, வெகு குறைவு.
நாடாளுமன்றத்தில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டசபை இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதா துளி எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாக நிறைவேறியது. இவ்வாறு பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் பற்றி அரசியலில் எதிர்க்கருத்து வைக்கத் தயங்குகிற அளவுக்கு அவை புனிதப் பசுவாகச் சமூக நீதி அரசியலால் மாறியிருக்கின்றன. என்றாலும், சமூக நீதி அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

சமூகத்தில் பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இந்த இயக்கங்கள் போராடி வெற்றி பெற்றன. அந்த வெற்றிக்கு அவர்களே பலியாகி விட்டார்கள். தெற்கில் மேல்தட்டினராக இருந்த பார்ப்பனர்களின் இடத்தைப் பார்ப்பனர் அல்லாதோர் கைப்பற்றினார்கள். வடக்கில் இப்படி ஆழமான வெற்றி பீகாரில் மட்டுமே ஓரளவுக்குச் சாத்தியமானது. தற்போது இந்தச் சமூக நீதி அரசியல் தேக்கமடைந்து விட்டது. இட ஒதுக்கீடு என்பது தற்போது விகிதாசாரத்தில் பெருமளவில் சுருங்கிவரும் அரசுத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

கடந்த காலங்களில் ஜாதி பாகுபாடு இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் பாணி இருந்தது. தற்போது இருக்கிற ஒரே பாகுபாடு ஜாதி பாகுபாடு, அதனைத் தீர்க்கும் ஒரே வழிமுறை இட ஒதுக்கீடு என்று பெருமளவில் கருதப்படுகிறது. நாம் நான்கு முக்கியமான சமூகநீதி மறுக்கப்படும் தளங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். ஜாதி, வர்க்கம், பாலினம், கிராம-நகரப் பாகுபாடு ஆகிய இந்நான்கும் இணைந்தே பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாலே அதனைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிற செயலையே செய்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தை நிராகரிக்கும் அதேசமயம், இட ஒதுக்கீட்டை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.

இந்தத் தைரியமான அரசியலை முதலில் முன்னெடுப்பவர்கள் ஓரளவுக்கு ஓட்டுக்களை இழந்தாலும், பின்னர்ச் செல்வாக்கை மீட்பார்கள். அனைவருக்காகவும் பேசுவதைச் சமூக நீதிக் காவலர்கள் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாருக்குமான தலைவராக ஆசைப்படுவதேயில்லை. தெளிவான திட்டமிடல், பலதரப்பட்ட பிரிவினரையும் கருத்தில் கொண்டு தீர்வுகள் தருவது, உறுதியான நிலைப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் என்று சொல்கிற கட்சிகளுக்கு மாற்று எனச் சொல்லிக்கொள்ளும் இவர்களின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் எப்படி ஆதிக்க சக்திகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளன எனப் பார்த்தால் பெரிய வேறுபாடில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.

முதலில் தன்னுடைய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் பாடுபடுவதன் நியாயம் நன்றாகப் புரிகிறது. அதேசமயம், நீடித்து மக்களின் மதிப்பை பெற அனைவருக்காகவும் இயங்கும் அரசியலை கைக்கொள்ள வேண்டும். ஜனநாயகமயமாக்கல் தங்களை வந்தடையவில்லை என்று சொல்லி களம் புகுந்த இக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். பலகாலமாக மாநிலவாரியாக, சாதிவாரியாக, மொழிவாரியாகப் பிளவுபட்டு இயங்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி அவை ஒன்றுபட யோசிப்பதால் காங்கிரஸ் கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஆதிக்க ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பகுதி, பட்டியல் சாதியினரில் ஓரளவுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பாஜக ஆட்சியைப் பல இடங்களில் பிடிக்கிறது.

எனவே, பிளவை சீர்செய்து ஒன்றுபட்டுப் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பல தளங்களில் பேசவேண்டிய முக்கியமான கட்டம் இது. ரோஹித் வெமுலாவின் கடிதம் வித்தியாசமான, அழகான கடிதம். யாரையும் குறை சொல்ல ரோஹித் மறுக்கிறான். யார் முன்னும் தன்னைச் சிறியவனாக உணரவும், கடும் வன்மத்தை வெளிப்படுத்தவும் அவன் அக்கடிதத்தில் மறுக்கிறான். என்னை அழியா நம்பிக்கை கொண்டவன் என்று கூட நீங்கள் அழைக்கலாம், என்றாலும் இதனைச் சொல்கிறேன். ரோஹித் வெமுலாவின் மரணம் பலதரப்பட்ட மக்களை ஜாதி அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதுவரை இதனைப் பற்றி மூச்சு விடாதவர்களைப் பேச வைத்திருக்கிறது. பெரிய, ஆழமான, தொலைநோக்குக் கொண்ட சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அயராமல் செயல்படுவதே நாம் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் மகத்தான சமர்ப்பணம்.

ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…

கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார்

கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Untitled

இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித்தின் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக,  மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மாணவ, அமைப்பினர் கறுப்புக்கொடி காட்ட ஒன்று திரண்டனர்.

12654293_517377131778248_907410374928220642_n

போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

நட்சத்திரங்களுக்கு போக விரும்பிய காலத்தில், கார்ல் சாகனை போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன் என்று  ரோஹித் வெமுலா எழுதிய கடிதம் யாராலும் மறந்திருக்க முடியாது. 

n-HYDERABAD-UNIVERSITY-large570.jpg

ரோஹித்தின் இறுதியும், முதலுமான அந்த கடிதத்தை கார்ல் சாகனின் மனைவியும், கார்ல் சாகனின் எழுத்துக்களில், ஆராய்ச்சிகளில் துணை நின்றவருமான ஆன் துருயனுக்கு (Ann Druyan),  Mediaone TV-யின் ராஜீவ் ராமச்சந்திரன் அனுப்பி வைத்துருக்கிறார். அதற்கு ஆன் துருயன் அனுப்பியுள்ள பதிலை தமிழில் மொழி பெயர்த்து கீழே வழங்கி இருக்கிறோம்.

அன்புள்ள ராஜீவ் ராமச்சந்திரனுக்கு…

நமது நாகரிக சமுதாயம் ஒரு சார்பு நிலையை எடுத்ததன் காரணமாக அளிக்கப்பட்டிருக்கும் விலை குறித்த தெளிவான அறிகுறியை புரிந்து கொள்ள, அவரது தற்கொலை குறிப்பை படிப்பதும், அவரது இக்கட்டான சூழல் விவரங்கள் குறித்து அறிந்து கொள்வதும் அவசியமாகும். பாரபட்சத்தின் விளைவாக இழந்திருக்கும் பங்களிப்புகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் நம்மால் எப்படியாவது கணக்கிட இயலும் என்றால், அது நிச்சயம் மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என நான் நம்புகிறேன்.

ரோஹித் விவகாரம் மீது காட்டப்படும் கவனம், இது போன்ற விவகாரங்கள் மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியுமா என்பதை நீங்களே சொல்லுங்கள் ராஜீவ்.  திறமை வீணடிப்பும், அவசியமற்ற துன்பமும் நிறைந்த, இதயத்தை நொறுங்கச் செய்யும் இந்த உதாரணத்தின் மூலம் நம்பிக்கை தரும்படியான ஏதாவது அம்சத்தை கண்டுபிடிக்க முடியுமா என்று நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

ரோஹித்தின் மரணதிற்காகவும்,  இழந்த நம்பிக்கைக்காகவும் நான் என் அஞ்சலிகளை செலுத்துகிரேன்.

உண்மையுள்ள

ஆன்

Capture.JPG

*யார் இந்த கார்ல் சாகன் ?? என்று யோசிப்பவர்களுக்கு வினவு மருதன் எழுதியதில் இருந்து சில பத்திகள்.

பிரபஞ்சத்தில் நாம் ஒரு துளி மட்டுமே. கண நேரத்தில் மறைந்துவிடக்கூடியது நம் வாழ்க்கை. நீண்டு, நிலைத்து இங்கே தங்கியிருக்கவேண்டுமானால்  நம்முடைய மோசமான உள்ளுணர்வுகளையும் பழங்கால வெறுப்புகளையும் நாம் வென்று, கடந்து சென்றாகவேண்டும் என்பது கார்ல் சாகனின் பார்வை. அறிவியலை நேசித்த அதே சமயம், கடவுளின் மீதும் ஒரு கண் வைத்திருந்தார் கார்ல் சாகன். ஆனால் வெறுமனே நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து கடவுளை அவரால் ஏற்கமுடியவில்லை. நம்புவதைவிட அறிந்துகொள்வதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ரோஹித்தின் விருப்பமும் அதுவேதான். பல்கலைக்கழகத்தின் கதவுகளைக் கடந்து விரிந்திருக்கும் சமூகத்தையும் அதன் நிகழ்வுகளையும்கூட ஆர்வத்துடன் அறிந்துகொள்ள விரும்பியிருக்கிறார் ரோஹித்.

இறந்தவர்களின் சாதியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஊடகங்கள் கற்றுத்தரும் உத்தி!

சுரேந்தர்
surendar
சுரேந்தர்

புதிதாக ஒரு நோய் பரவிக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும் , பாதிக்கப்பட்டவர் – பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் சாதிச் சான்றிதழ்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவர் தலித்தா தலித் அல்லாதவரா என்கிற கேள்வி பிரதானப்படுத்தப் படுகிறது.

ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்கிறார். அவர் ஒரு தலித் இயக்கத்தில் தீவிரமாக களமாடி இருக்கிறார். அவரது போராட்டங்களுக்கு மற்றொரு இந்து மாணவர் அமைப்பு மூலமாக எதிர்ப்பு கிளம்புகிறது. கல்லூரி நிர்வாகம் , காவல் நிலையம் அளவிலேயே முடித்து வைத்திருக்கக்கூடிய இந்த பிரச்சினையைத் தூக்கிக் கொண்டு ஒரு தரப்பு ஆளும் அரசியல் கட்சியை வரவழைக்கிறது. அமைச்சகம் தலையிடுகிறது. கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரோஹித் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும்வரை இந்த போராட்டம் பக்கத்து தெருவில் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ” தலித்தாக பிறந்தது ஒரு விபத்து ” என்கிற தற்கொலை குறிப்பு ஒன்று போதும், இது சாதிய பிரச்சினையா இல்லையா என்பது.

அவரது சாதி காரணமாகவே அவரது தரப்பு நியாயம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்கிற அடிப்படையில் , இந்த பிரச்சினையில் அவர் என்ன சாதி என்கிற ஆராய்ச்சி புரிந்துகொள்ளக்கூடியது.

கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் நடந்த கொலைகளின் (என்றே நம்புகிறேன்) தொடர்ச்சியாக அந்த கல்லூரியின் தாளாளர் காவலில் அடைக்கப்பட்டு நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார். இதை செய்தியாக விகடன் e-magazine நேற்று அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் விழுந்த கமெண்டுகள் சில நாராசம். அவர்கள் சொல்ல வந்த கருத்தின் மொத்த சாராம்சம் இதுதான்.

” செத்துப்போன மாணவிகள் தலித்தாக இருந்திருந்தால் இந்நேரம் பெரும் போராட்டம் வெடித்திருக்கும் ”

செத்துப்போன மாணவிகளின் சாதிச் சான்றிதழ்களை இதில் தோண்ட வேண்டிய அவசியம் என்ன ? லட்சம் லட்சமாக பணம் வசூல் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் மோசடி செய்திருக்கிறார்கள். ஊழல் நிர்வாகத்திற்கெதிராக போராடி மடிந்திருக்கிறார்கள். இந்த பிரச்சினை அந்த அடிப்படியிலேயே எதிர் கொள்ளப்பட வேண்டும். இதில் இறந்தவர்களின் சாதி என்னவாக இருந்தால் என்ன ?

அப்படி அவர்கள் குறைபட்டுக்கொள்கிற அளவிற்கு இந்த பிரச்சினையை தமிழகம் மென்மையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே எனக்குப் படுகிறது. காரணமானவர்கள் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் சிறப்பான கவனத்தோடு இந்த வழக்கை அணுகிக்கொண்டிருக்கிறது. முதல்வரைத் தவிர அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கு தற்போது CIDக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

பேதமின்றி அனைத்துத் தமிழக சேனல்களிலும் இதுதான் பிரதான செய்தியாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் Press Conferenceல் அமர்ந்து துணிச்சலாக வாக்குமூலங்கள் தருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கல்லூரியை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்தவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றே அறிகிறேன். ஆக இதுவரை இந்த வழக்கு எந்த திசையில் செல்ல வேண்டுமோ அந்த திசையில் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இனிமேலும் செல்ல வேண்டுமானால் அரசுதான் மனது வைக்கவேண்டும்.

இதில் சம்மந்தமே இல்லாமல் சாதியை இழுப்பவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது. ஹைதராபாத்தில் சாதிய அடிப்படையில் புறக்கணிப்பு காரணமாக தற்கொலை செயதுகொண்டவரையும் கள்ளக்குறிச்சியில் ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக போராடி கொலையுண்டவர்களையும் முடிச்சு போட்டு களங்கப்படுத்துபவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் ?

இது திடீரென்று ஏற்படுத்தப்பட்டதில்லை. பிரச்சினையின் அடிப்படை என்ன , நோக்கம் என்ன என்பதையெல்லாம் விட்டுவிட்டு சாதியைப் பிடித்துத் தொங்குவது என்பது தமிழகத்தில் தினமலர் தொடங்கி வைத்த பாரம்பரியம். உதாரணத்திற்கு சீர்காழியில் இரண்டு பேர் கொடுக்கல் வாங்கல் தகராறில் அடித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் . அடுத்த நாள் தினமலரில் இப்படி செய்தி வரும் .. // சீர்காழி வைசியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சீர்காழி காலனி கலியன் மகன் முத்துவிடம் …// குறிப்பாக சாதியையும் உணர்த்துகிறார்களாம்.

வன்னியர்களை அடையாளம் காட்ட வேறொரு யுக்தியை வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் குடிபோதையில் டீக்கடையில் வம்பு வளர்த்து கைதாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் // .. டீ கடையை அடித்து நொறுக்கிய பாமக நிர்வாகி கைது .// என்று வரும். இதைப்போல் வாய்க்கால் தகராறு, சொத்துத் தகராறு , முன்விரோதம் , கள்ளக்காதல் எல்லாவற்றுக்கும் சாதியை இழுத்துவிடுவார்கள். நிற்க. இதில் தலித்தோ வன்னியரோ சம்மந்தப்பட்டிருந்தால் மட்டும்தான்.

சாதி பிரச்சனையில் கொடுமை என்றால் அதை அந்த அடிப்படையில்தான் அணுக முடியும். முன்விரோதம் காரணமாக கொலை என்றால் அதை அந்த அடிப்படியில்தான் அணுக வேண்டும். எங்கு சாதி முன்னுரிமை பெற வேண்டும் என்கிற தெளிவு இல்லாதவர்களா நாமெல்லாம் ? அல்லது தெளிவில்லாதவர்கள் போல நடிக்கிறோமா ? வயிற்று வலி என்று மருத்துவரிடம் போகிறோம். இல்லை இல்லை இதுவேண்டாம் நேற்று ஒருவருக்கு கண்களில் மெஷீன் எல்லாம் வைத்து பார்த்தீர்களே அதைப்போல் சிக்கிச்சை தான் வேண்டும் என்று கேட்க முடியுமா? அவனது பிரச்சனையும் உனது பிரச்சினையும் வேறு வேறு அல்லவா ?

அதில் ஒருவர், இறந்தவர்கள் தலித்தாக இருந்திருந்தால் இந்தியா முழுவதும் கவனப்படுத்தியிருப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இவரது ஆசை என்ன ? தமிழகத்தில் நடக்கும், நடந்த எந்த பிரச்சினைக்கும் வடநாட்டு ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதே இல்லை என்பதுதான் வரலாறு. அது தலித் பிரச்சினையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. வினோதினி மீதான ஆசிட் வீச்சு , முத்துக்குமார் , சசிக்குமார் என்று பார்த்து கொண்டுதானே இருக்கிறோம். சரி விடுங்கள் , நாகை மாவட்டத்தில் இறந்து போன தலித் பெரியவரின் சவ ஊர்வலத்தை ஊர் வழியாக கொண்டுபோக முடியாமல், நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல்துறையினரே குறுக்கு வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவலம் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குக் கூட தெரிந்திருக்காதே அய்யா.

பண்ணை அடிமைகளாக இருந்த காலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதி ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு ஊருக்கு வெளியே விவகாரம் தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டு வந்த காலம் மீண்டும் வேண்டும் என்கிறார்களா? இப்பொழுதுதான் சாதி ரீதியிலான கொலைகளுக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் பொதுவெளிக்கு விவாதத்திற்காகவாவது வர ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் பொருக்க மாட்டாமல் சம்மந்தம் இல்லாத பிரச்சினைகளுடன் முடிச்சிட்டு நீர்த்து போகச்செய்யும் நுண்ணரசியல் இது என்றே என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

இவ்வாறு தட்டையாக கேள்வி எழுப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் :

1. ஆழ்ந்த வாசிப்பும் அரசியல் தெளிவும் இல்லாமல் , தாம் படிக்கும் பேப்பர் கூறுவதே உண்மை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

2.ஒளித்து வைத்திருக்கும் சாதித்திமிரை மறைத்து வைக்க முடியாமல் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் வெறுப்புணர்வை கொட்டுபவர்கள்.

சுரேந்தரை இங்கே பிந்தொடரலாம்  Suren Surendhar.

ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

சுதிப்டோ மோண்டல்

தமிழில்: கவின் மலர்

குண்டூரில், 1971 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ரோஹித் வெமுலா பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையின் பின்னணிக்கதை தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ரோஹித்தின் வளர்ப்புப் ‘பாட்டி’ அஞ்சனி தேவியின் சில செயல்களால், அந்த அறிஞன் பின்னாளில் தன் தற்கொலைக் குறிப்பில் ”மரணத்தையொத்த விபத்து என் பிறப்பு’ என்று எழுதும்படி நேர்ந்தது.

”அது ஒரு மதிய உணவு நேரம். நல்ல வெயில். பிரஷாந்த் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வெளியே சில குழந்தைகள் வேப்பமரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுள் உண்மையிலேயே மிக அழகான சிறிய பெண் குழந்தையைக் கண்டேன். அவளால் சரியாக நடக்க்க்கூட முடியவில்லை. ஒரு வயதுக்கும் சற்று அதிகம் இருக்கும் அவளுக்கு” என்கிறார் அஞ்சனி. அச்சிறிய குழந்தைதான் ரோஹித்தின் தாய் ராதிகா.

ரோஹித் தலித் அல்ல என்று கூறும் உள்ளூர் தெலுங்கு ஊடகங்களுக்கு சாபமிட்டபடி பிழையற்ற ஆங்கிலத்தில் அஞ்சனி கதையை சொல்லத் தொடங்கினார். “இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவருக்குப் பிறந்த குழந்தை அவள். எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த ரயில்வே தண்டவாளங்களில் அவளுடைய பெற்றோர் வேலை செய்தனர். என் பெண் குழந்தையை அண்மையில்தான் இழந்திருந்தேன். எனக்கு என் குழந்தையின் நினைவு வந்துவிட்டது” என்கிறார்.

ஆனால் விநோதமாக, நம்மோடு பேசிக்கொண்டிருந்த அஞ்சனியோடு அமர்ந்திருந்த ராதிகாவால் ஆங்கிலத்தில் ஒரு சொல்கூட பேசமுடியவில்லை. உண்மையில் அஞ்சனியின் ஆங்கிலம் ரோஹித்தின் ஆங்கிலத்தைவிட சிறப்பானதாய்த் தோன்றியது.

தொழிலாளர்களாயிருந்த அப்பெற்றோரிடம் அஞ்சனி அக்குழந்தையைத் ‘தருமாறு’ கேட்டதாகவும் அவர்களும் “மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்” என்றும் கூறுகிறார். இப்படி குழந்தையைப் பெற்றுக்கொண்டதற்கு எந்த ஆவணப் பதிவும் இல்லை. “மிக எளிமையாக நடந்துமுடிந்தது”. குட்டிக்குழந்தை ராதிகா அந்த வீட்டின் ”மகளானாள்” என்று கூறுகிறார் அஞ்சனி தேவி.

”சாதியா? சாதி என்றால் என்ன? நான் வடேரா சாதியைச் சார்ந்தவள் (பிற்படுத்தப்பட்ட சாதி). ராதிகாவின் பெற்றோர் மாலா(பட்டியல் சாதி). அவளுடைய சாதி குறித்து ஒருபோதும் நான் யோசித்ததில்லை. அவள் என் சொந்த மகள் போலத்தான். என் சாதியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அவளை மண்முடித்து வைத்தேன்” என்று கூறும் அஞ்சனி தேவி, ராதிகாவுக்கும் மணிக்குமாருக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்த சாதனையையும் விளக்கினார்.
”மணியின் தாத்தா வடேரா சாதியில் மிகவும் மதிப்புமிக்க ஒருவர். அவருடன் நான் பேசினேன். ராதிகாவின் சாதியை மிகவும் ரகசியமாக வைக்கவேண்டும் என்றும் மணியிடம் அதுபற்றிக் கூறக்கூடாதென்றும் பரஸ்பரம் பேசிவைத்துக்கொண்டோம்” என்கிறார்.

அவர்களின் மணவாழ்க்கையில் மூத்த மகள் நீலிமா, பின் ரோஹித், இளைய மகன் ராஜா என்று ஐந்து ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். மணி ராதிகாவிடம் வன்முறையாகவும் பொறுப்பற்ற முறையிலும்தான் ஆரம்பத்திலிருந்து நடந்துகொண்டார். “அவர் குடித்திருந்தால் சில அறைகள் எனக்கு விழுவது சர்வசாதாரணமாக நடக்கும்” என்கிறார் ராதிகா.

திருமணம் முடிந்த ஐந்தாவது ஆண்டில் மணி ராதிகாவின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.
”பிரசாந்த் நகரில் உள்ள வடேரா காலனியில் இருந்த யாரோ ராதிகா மாலா சாதியைச் சேர்ந்தவரென்றும் அவர் வளர்ப்பு மகள்தான் என்றும் மணியிடம் கூறிவிட்டனர். அதன்பின் ராதிகாவை கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார்” என்கிறார் அஞ்சனி. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராதிகாவும் “மணி எப்போதும் தகாத சொற்களால் என்னை காய்ப்படுத்துவதுண்டு. அதிலும் என் சாதியைத் தெரிந்து கொண்டதுமுதல் அவர் மேலும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார். அநேகமாக எல்லா நாட்களிலும் அவர் என்னை அடிப்பதும், ஒரு தீண்டத்தகாதவளை ஏமாற்றி கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் கூறி தன் துரதிர்ஷ்டத்தை நொந்துகொள்வார்” என்கிறார்.

மணிக்குமாரிடமிருந்து தன் மகளையும் பேரக்குழந்தைகளையும் “காப்பாற்றியதாக” அஞ்சனிதேவி கூறுகிறார். “மணியைவிட்டு விலகி வந்ததும், 1990ல் அவர்களை மீண்டும் என் வீட்டிற்கு வரவழைத்தேன்” என்கிறார்.
ஆனால் ரோஹித்தின் பிறந்த ஊரான குண்டூருக்குச் சென்று ரோஹித்தின் நெருங்கிய நண்பரும் அவரது பி.எஸ்சி வகுப்புத் தோழருமான ஷேக் ரியாசை சந்தித்தபோது, வேறுமாதிரியான தோற்றமே கிடைத்தது. ராதிகாவும் ராஜாவும் தங்களைவிட ரோஹித் குறித்து ரியாஸ் அதிகம் அறிந்தவர் என்கிறார்கள்.
சென்ற மாதம் ராஜாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது, ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ரோஹித்துக்கு இருந்த சிக்கல் காரணமாக அவரால் வரமுடியாமல் போனது. அவருக்கு பதிலாக அவரிடத்தில் இருந்து அப்போது சடங்குகளைச் செய்தவர் ரியாஸ்.

ரோஹித் ஏன் தன் குழந்தைப்பருவத்தில் தனியனாய் இருந்தார் என்றும் தன் இறுதிக்கடிதத்தில் ” தவறு என்மீதும் இருக்கலாம்; உலகைப் புரிந்துகொள்வதில், அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தைப் புரிந்துகொள்வதில் நான் தவறிழைத்திருக்கக்கூடும்.” என ஏன் எழுதியிருந்தார் என்றும் தனக்கு மிகத் துல்லியமாகத் தெரியும் என்கிறார்.
”ராதிகா ஆண்ட்டியும் அவருடைய குழந்தைகளும் அவருடைய தாய்வீட்டில் வேலைக்காரர்கள் போல்தான் இருந்தார்கள். வீட்டிலுள்ள அத்தனை வேலைகளையும் அவர்கள்தான் செய்யவேண்டுமென்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மற்றவர்கள் வெறுமனே அமர்ந்திருந்தாலும் இவர்கள்தான் வேலை செய்வார்கள். ராதிகா ஆண்ட்டி மிகச் சிறிய வயதிலேயே அங்கு வீட்டுவேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார்” என்று ரியாஸ் உண்மைகளை வெளிப்படுத்துகிறார். குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1970களில் நடைமுறையில் இருந்திருந்தால், ராதிகாவின் தாய் எனப்படும் அஞ்சனி தேவி, ஒரு குழந்தையை வீட்டு வேலைக்கு உதவியாளராக வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பார்.

1985ல் ராதிகாவுக்கு 14 வயதானபோது மணிக்குமாரோடு திருமணம் நடந்தது. அதற்கும் 50 ஆண்டுகளுக்கும் முன்பே குழந்தைத் திருமணம் சட்டவிரோதமாகிவிட்டது. தான் ஒரு வளர்ப்புக் குழந்தை என்றும் மாலா சாதியைச் சேர்ந்தவரென்றும் ராதிகாவுக்குத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தபோது அவருக்கு வயது 12 அல்லது 13 இருக்கும். ”அப்போது உயிருடனிருந்த அஞ்சனியின் தாய் ராதிகாவை அடித்து, தகாத சொற்களால் திட்டியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு அருகே அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் கேட்டபோது பாட்டி தன்னை ‘மாலா தே……..’ என்று வீட்டுவேலை செய்யாததற்காகத் திட்டியதாகவும், அவளை வீட்டிற்கு அழைத்துவந்ததற்கு அஞ்சனியை சாபமிட்டதாகவும் கூறினாள்” என்கிறார் 67 வயதாகும் உப்பலப்படி தனம்மா.

ரோஹித்தின் தாயை அவர் சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே பார்த்துவரும் தனம்மா அப்பகுதியில் உள்ள மூத்தவர்களில் ஒருவர். ஒரு தலித் தலைவரும் முன்னாள் முனிசிபல் கவுன்சிலரும் கூட. அவர் அண்மையில் புதிப்பித்துக் கட்டியுள்ள வீடு கூட மாலா தலித் குடியிருப்புகளையும் வடேரா குடியிருப்புகளையும் பிரிக்கும் இடத்தில்தான் உள்ளது.

வடேரா குடியிருப்புப் பகுதியில் பல அண்டைவீட்டுக்காரர்களும்கூட ராதிகா ஒரு வேலைக்காரப் பெண் என்றே தெரியும் என்கின்றனர். தலித்தாகிய ராதிகாவை வடேரா சாதியைச் சேர்ந்த மணிக்குமாருக்கு மணம் செய்துவைத்ததன்மூலம் ஒட்டுமொத்த வடேரா சமூகத்தையே அஞ்சனி ஏமாற்றிவிட்டதாக வடேரா குடியிருப்புவாசி ஒருவர் எரிச்சல் தொனிக்கக் கூறினார்.

”ஒவ்வொரு முறை பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதும் தன் தாய் ஒரு பணிப்பெண்ணைப் போல அங்கே வேலை செய்ய வேண்டியிருப்பதால் ரோஹித்துக்கு அங்கு செல்வதென்றாலே வெறுப்புத்தான்” என்கிறார் ரியாஸ். ராதிகா ஒருவேளை வீட்டில் இல்லையென்றால் அவருடைய குழந்தைகள் அந்த வேலைகளைச் செய்யவேண்டும். ஒரு கிலோமீட்டர் தொலைவில், ரோஹித்தின் குடும்பம் ஒரேயொரு அறைகொண்ட தனிவீடு பார்த்து சென்றபின்னும் அவர்களை வீட்டுவேலைக்கு அழைப்பது தொடர்ந்தது.

குண்டூரில் ரோஹித் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்த காலம் முழுவதும் வீட்டுக்குச் செல்வது மிகவும் அரிது. அவர் அதை அறவே வெறுத்தார். ரியாஸ் மற்றும் வேறு இரண்டு பையன்களுடன் ஒரு சிறிய பேச்சுலர் அறையில்தான் தங்கினார். கட்டடத் தொழிலாளியாகவும், கேட்டரிங் வேலை செய்தும் அதற்கான தொகையைத் தந்தார். துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்; பொருட்காட்சிகளில் வேலைபார்த்தார்.

***
அஞ்சனிக்கு அவருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகள் உண்டு. இரண்டு மகள்களும் ராதிகாவின் வருகைக்குப் பின் பிறந்தனர். ஒரு மகன் பொறியாளர்; இன்னொருவர் சிவில் காண்டிராக்டர். ஒரு மகள் பி.எஸ்சி – பி.எட்; மற்றொரு மகள் பி.காம்-பி.எட்.
சிவில் காண்டிராக்டரான அஞ்சனியின் மகன் நகரத்தில் வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நன்கறியப்பட்டவர். தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான என்.ஹரிகிருஷ்ணாவுக்கு நெருக்கமானவர். தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரபலமும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா.

மகள்களில் ஒருவர் குண்டூரின் வெற்றிகரமான கிரிமினல் வழக்கறிஞருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். தான் பெற்ற மகள்களைவிட அஞ்சனிதேவி அதிகம் கல்விகற்றவர். எம்.ஏ. எம்.எட் முடித்து, முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவருடைய கணவர் அரசாங்கத்தில் தலைமைப் பொறியாளர். பிரசாந்த் நகரின் பழமையான பெரிய வீடுகளுள் ஒன்று அவர்களுடையது.

பதின்பருவ பள்ளிப் பருவத்து பெண்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் அஞ்சனிக்கு 14 வயது ராதிகாவை திருமணம் செய்துகொடுப்பது சட்டப்படி தவறு என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கல்வித்துறையில் இருந்துகொண்டு, தன் ”சொந்த மகள்” என்று விவரிக்கும் ஒரு சிறுமிக்கு கல்வி மறுத்தவர். ஆனால் தான் பெற்ற மகள்களையும் மகன்களையும் தன்னால் இயன்றவரை படிக்கவைத்துள்ளார்.
அஞ்சனி ஏன் பிழையின்றி ஆங்கிலம் பேசுகிறார் என்பதையும் அவரது ‘மகளும்’ ‘பேரன்களும்’ ஏன் பேசவில்லை என்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. ஒரு தலித் சிறுமி தன் வீட்டில் தங்கிக்கொள்ளவும், அச்சிறுமி தன்னை ‘அம்மா’ என்றழைக்கவும் அவர் அனுமதித்திருக்கிறார். ஆனால் அஞ்சனிதேவி ஓர் இரக்கமுள்ள எஜமானியாக உருவானாரேயொழிய அக்கறைகொண்ட தாயாக இல்லவே இல்லை.

ரோஹித் எம்.எஸ்சிக்காவும் பி.எச்டிக்காகவும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது தன் சொந்த வாழ்க்கை குறித்து ரகசியம் காத்தார். அனைவருக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் போல தெரியும். அவருடைய நெருக்கமான நண்பரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத் தோழருமான ராம்ஜிக்கு, ரோஹித் தன் செலவுகளை சமாளிக்க கடைநிலை வேலைகளை செய்திருக்கிறார் என்று தெரியும். ஆனால் ரோஹித்தின் “பாட்டி” வசதியானவர் என அவருக்குத் தெரியாது. ரோஹித்தின் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் பலருக்கு ரோஹித் தன் தற்கொலைக் குறிப்பில்கூட வெளிப்படுத்த விரும்பாத அவருடைய வாழ்வின் இருண்ட பக்கங்கள் எதுவும் தெரியாது.

இரண்டாம் முறையாக அஞ்சனியிடம் பேசுவதற்கு முன், ராஜா வெமுலாவை இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதற்கான அனுமதிக்காக அணுகியபோது, அவர் முதலில் அதிர்ந்துபோனார். இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிய விரும்பினார். இந்தக் கட்டுரைக்காக குண்டூரில் யாரிடமெல்லாம் பேசனோம் என்று அனைவரின் பெயர்களையும் கேட்டபின் அவர் உடைந்துபோய் பின்னர் கூறினார் – “ஆம்! இதுதான் எங்களைக் குறித்த உண்மை. இந்த உண்மையைத்தான் என் சகோதரனும் நானும் எப்படியாவது மறைத்துவிட எண்ணினோம் நாங்கள் ‘பாட்டி’ என்று அழைத்த பெண்மணி உண்மையில் எங்கள் எஜமானர் என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டோம்”

ராஜா தன் சொந்த வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை விவரித்து ரோஹித் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவித்திருப்பார் என்பதை உணரவைக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி நுழைவுத் தேர்வில் 11ஆவது இடம் பெற்று வகுப்பில் சேர்ந்ததாகக் கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர அழைப்பு வந்தவுடன் இதைவிட அங்கு படித்தால் நல்லது என்றெண்ணி அங்கு சேர விரும்பினார்.

”ஆந்திர பல்கலைக்கழகம் இடமாற்ற சான்றிதழுக்கு 6,000 ரூபாய் கட்டச் சொன்னது. என்னிடம் பணமில்லை. என் பாட்டியின் குடும்பமும் உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் ஆந்திர பல்கலைக்கழக நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களில் சிலர் 5 ரூபாயும் 10 ரூபாயும் தந்தனர். இது 2011ல் நடந்தது. அப்போது எந்த மதிப்புமில்லாத ஒரு பிச்சைக்காரனைப் போல என்னை வாழ்க்கையில் முதன்முறையாக உணர்ந்தேன்” என்கிறார் ராஜா வெமுலா.

அவர் பாண்டிச்சேரியில் கால்வைத்தநாள் முதல், கைவிடப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளுக்கான ஆசிரமம் ஒன்றில் கிட்டத்தட்ட 20 நாட்கள் இரவுகளில் தூங்கினார். “அதன்பின், பல்கலைக்கழகத்திற்கு வெளியே வசிக்கும் என்னுடைய சீனியர் ஒருவர் தனிவீட்டில் தங்கி இருந்தார். என்னை வீட்டு வேலைக்கு வரச்சொன்னார். வீட்டுவேலைகள் செய்துகொடுப்பதால் என்னை அவருடைய வீட்டில் உறங்கிக்கொள்ள அனுமதித்தார்” என்கிறார் ராஜா.

பாண்டிச்சேரியில் ஒருமுறை தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவில்லாமல் பட்டினியாய் இருந்தது குறித்துக் கூறுகிறார். “என் கல்லூரி நண்பர்கள் எல்லோரும் நல்ல வசதியுடையவர்கள். பீட்ஸாக்களும் பர்கர்களும் வளாகத்துக்கு வெளியேயிருந்து கொண்டு வருவார்கள். ஆனால் ஒருவர் கூட என்னிடம் நான் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று கேட்கமாட்டார்கள். நான் பட்டினியால் வாடுகிறேன் என அவர்களுக்குத் தெரியும்” என்கிறார்.

இத்தனை பட்டினியிலும் பற்றாக்குறையிலும் ராஜா எம்.எஸ்சி முதல் ஆண்டில் 65% மதிப்பெண்களும் இறுதியாண்டில் 70% மதிப்பெண்களும் எடுத்தார். ஆனால் ஏன் அவருடைய பாட்டி இவருக்கு உதவ முன்வரவில்லை? “இதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்” என்கிறார் ராஜா.

***
அஞ்சனியை மீண்டுமொரு முறை சந்தித்தபோது அவர் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவரின் வீட்டில் ராதிகாவுடனும் ராஜாவுடனும் இருந்தார். ராஜா இந்த சந்திப்பின்போது உடனிருக்க விரும்பாததால் வெளியே காத்திருந்தார்.

அஞ்சனியிடம் எப்படி அவருடைய ‘மகளை’ விட அவர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் என்று கேட்டபோது ராதிகா ‘அவ்வளவு அறிவாளி இல்லை” என்று பதிலுரைத்தார். சொந்தக் குழந்தைகள் எல்லாம் பட்ட்தாரிகளாக இருக்க, ரோஹித்தின் தாய் மட்டும் ஏன் 14 வயதிலேயே மணம் செய்துவைக்கப்பட்டார் என்று கேட்டபோது “ஒரு நல்ல குடும்பத்திலிருந்து பணக்காரப் பையனுடைய வரன் வந்தபோது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம்” என்றார். ஆனால் மணிக்குமாருக்கு இத்தனை கெட்டபெயர் இருக்குமென தனக்குத் தெரியாது என்கிறார். ராதிகாதான் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை என்கிறார் அஞ்சனி.

ரோஹித் தன் உடன்பிறந்தோரோரும் தாயோடும் வாழ்ந்த ஒற்றை அறை வீட்டை ரியாஸ் காண்பித்தார். ரோஹித்தும் ராஜாவும் கல்வியில் சிறந்துவிளங்கும் அறிவாளிகளாக இருந்தாலும் தங்கள் தேவைகளுக்காக பிறர் உதவியை நாடவேண்டியிருந்தது. அவர்களுடைய பாட்டி குடும்பம் பண உதவி அளிக்க ஒருபோதும் முன்வரவில்லை.

ஆனால் இந்த முறை, ரியாஸ் நடந்தவை அனைத்தையும் போட்டு உடைத்தார். ”ராதிகா ஆண்ட்டி தன் பிள்ளைகளின் மூலமாக மீண்டும் கல்விகற்கத் தொடங்கினார். அவர்களுடைய பள்ளிப் பாடங்களைக் கற்றுகொண்டு அவர்களுக்கு கற்பித்தார்” என்கிறார். தன் மகன்களோடு தன் பட்டப்படிப்பையும் ராதிகா முடித்தார்.

”ரோஹித் பி.எஸ்சி இறுதியாண்டு படிக்கும்போது, ராதிகா ஆண்ட்டி, பிஏ இரண்டாம் ஆண்டு படித்தார். ராஜா பி.எஸ்சி முதலாண்டு படித்தார். முதலில் ரோஹித் தேர்வில் வென்றார். அடுத்த ஆண்டு ஆண்ட்டி, அதற்கடுத்த ஆண்டு ராஜா வென்றார். சில நேரங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பதுண்டு. ஒருமுறை எங்கள் எல்லோருக்கும் ஒரே நாளில் தேர்வு வந்தது” என்று நினைவுகூர்கிறார் ரியாஸ்.

எடுத்துக்காட்டாக சில சம்பவங்களைச் சொல்லி ஏன் அஞ்சனியும் அவருடைய குடும்பமும், கல்வியில் சிறந்துவிளங்கிய அறிவாளிகளான இரண்டு “பேரப்பிள்ளைகளுக்கும்” உதவவில்லை என்று அஞ்சனியிடம் கேட்டபோது அதிக நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு இறுதியாக ‘எனக்குத் தெரியாது” என்றார்.

ரோஹித் வெமுலாவின் குடும்பத்தை வீட்டில் வேலையாட்களைப் போல நடத்தினார்களா? “எனக்குத் தெரியாது” என்கிறார் அஞ்சனி மீண்டும். “யார் உங்களுக்கு இதையெல்லாம் சொன்னது. எனக்கு சிக்கல் உண்டாக்கவேண்டும் என்பதே உங்கள் திட்டம். சரியா?” என்கிறார்.

குண்டூரிலிருந்து நாங்கள் சேகரித்த தகவல்களில் ஒரு தகவல்கூட உண்மையல்ல என்று அஞ்சனி கூறவே இல்லை. ஒரு கட்டத்திற்குப் பின் அவர் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களைத் தாழ்த்திக்கொண்டதன்மூலம் அந்த இடத்திலிருந்து நம்மை வெளியேறச் சொன்னார்..

ரோஹித்தின் மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் அவருடைய நெருங்கிய நண்பர் ரியாஸுடன் இருந்த பொழுதுகளே.

riyaas rohit

ரியாஸ் நம்மை அவர்கள் கூடிக் களித்த இடங்கள், சாகச இடங்கள் என அழைத்துச் சென்றார். ஆறு மணி நேரம் செலவழித்து குண்டூரில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்த சமயத்தில் ஒவ்வொரு தெருவிலும் ரோஹித்-ரியாஸ் கதையொன்று இருப்பதை உணரமுடிந்த்து.

பார்ட்டிகள், பதின்பருவ ஈர்ப்புகள், தோல்வியுற்ற காதலர் தின விருப்பங்கள் , பெண்களுக்கான சண்டைகள், சினிமா, இசை, பையன்களுடனான பார்ட்டிகள், ஆங்கில இசை, கால்பந்து வீரர்களின் சிகையலங்காரம் – இவையெல்லாம் ரோஹித் முதன்முறையாக பார்த்தவை.

தான் எப்போதும் இரண்டாவதுதான் என்றும் ரோஹித் தான் எப்போதும் கதாநாயகன் என்றும் கூறுகிறார் ரியாஸ். “ஒரு முறை வகுப்பில் அதிகமாக கேள்வி கேட்டான். ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை என்பதால் அவனை வெளியே அனுப்பிவிட்டார். ரோஹித்தின் புத்திசாலித்தனத்தை நன்கறிந்த பிரின்ஸிபால் இவ்விஷயத்தில் குறுக்கிட்டு ரோஹித் பக்கம் நின்று, வகுப்புக்குச் செல்லுமுன் கூடுதலாக தயார் செய்யுமாறு ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்” என்கிறார் ரியாஸ்.

ரோஹித்திற்கு இணையம் குறித்த நல்ல பரிச்சயம் இருந்தது. ஆசிரியர்களின் பாடத்திட்டம் எப்போதும் காலத்தில் பிந்தியிருப்பவை என அவன் அடிக்கடி அவர்களிடம் நிரூபிப்பான். ஆசிரியர்களுக்குக் கூட தெரியாத அறிவியல் இணையதளங்களை குறித்து அவன் அறிவான். வகுப்பில் மற்றவர்களைவிட எப்போதும் முன்னணியில் இருப்பான் என்கிறார் ரியாஸ்.

குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் ஒரு சிலர்தான் சாதியவாதிகளாக இருந்தனர் என்கிறார்.

”இந்த இடையீடுகள் எல்லாம் இருந்தாலும், ரோஹித்தின் வாழ்க்கை இரண்டு விஷயங்களைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. பகுதிநேர வேலை தேடுவது மற்றும் இணையத்தில் நேரம் செலவு செய்வது ஆகியவைதான். ஜூலியன் அஸாஞ்சேயின் மிகப்பெரிய விசிறி அவன் விக்கிலீக்ஸ் ஃபைல்களுடன் பல மணிநேரம் செலவு செய்வான்” என்கிறார் ரியாஸ். பி.எஸ்சி முடித்தபோது முதுநிலை படிப்புக்கான வாய்ப்புகள் ரோஹித்துக்குக் குறைவாகவே இருந்தன.

அவருடைய பி.எச்டி படிப்பு என்பது வெறும் சான்றிதழுக்காக அல்ல. அவருடைய ஆராய்ச்சி சமூக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதாக இருந்த்து. சமூக அறிவியலில் அவருக்கிருந்த அறிவு அவர் அங்கம் வகித்த அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் எஸ்.எஃப்.ஐ ஆகிய அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களுக்கு அரசியல் தத்துவங்களை கற்றுத் தந்ததால் ஏற்பட்டது என்கிறார் ரியாஸ்.

ரோஹித் மரணிப்பதற்கு ஒரு வாரம் முன்பு ரியாஸை அழைத்திருக்கிறார். “தன் பி.எச்டியை முடிக்க முடியாமல் போய்விடுமோ என தான் அச்சப்படுவதாக என்னிடம் கூறினான். எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவுடன் எதிர்நிலையிலிருக்கும் ஏபிவிபி, மிக பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும் கூறினான். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கையை இழந்திருந்தான்” என்கிறார் ரியாஸ்.

இரு நண்பர்களும் நீண்ட நேரம் பேசினர். குண்டூரில் உள்ள மூன்று நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து ஒரு தொழில் தொடங்கலாம் என்று ஆறு மாதங்களுக்கு முன்பாக ஏற்கனவே பேசிவைத்திருந்த திட்டம் குறித்து விவாதிக்கத் தொடங்கியபோது ரோஹித்தின் மனநிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. “ஒரு தொழில் தொடங்கி குண்டூரையே ஆளலாம்” என்று ரோஹித் அந்த உரையாடலில் தெரிவித்திருக்கிறார்.

அந்த உரையாடல் முழுவதிலும் பல முறை ரோஹித் தனக்கு கல்வித்தகுதி வேண்டும் என்பதால் மட்டும் பி.எச்டி முக்கியமில்லை, அந்த ஆராய்ச்சியினால் புதியனவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் சிலவற்றை உடைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்ததாக ரியாஸ் கூறுகிறார்.

பல்கலைக்கழகத்திலிருந்து நிலைமை போலவே வாழ்க்கை முழுவதும் சக மனிதர்களால் சம்மாக நடத்தப்படாமல் இருந்ததுதான் ரோஹித் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ள காரணமா?

“அவனுடைய குடும்பக் கதை அவன் வாழ்வு முழுவதும் அவனை துன்புறுத்தியது” என்கிறார் ரியாஸ். “அவன் வளர்ந்த வீட்டில் அவனிடம் சாதிப் பாகுபாடு காட்டினார்கள். ஆனால் அதற்கு அடிபணியாமல் அவன் அதை எதிர்த்தான். அவன் தன் பி.எச்டி என்கிற இறுதி இலக்கை எட்டுவதற்கு பல தடைகளை உடைத்தான். அதைத் தொடரமுடியாது எனும் நிலைமையை அவன் உணர்ந்துகொண்டபோது அவன் நம்பிக்கை இழந்துவிட்டான்” என்கிறார்.

ரோஹித் தன் அத்தனை யுத்தகளங்களுக்குப் பின்னும், நம்பிக்கை இழந்தது எப்போதெனில், அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால், “மனிதனின் மதிப்பு அவனுடைய உடனடி அடையாளமாக மட்டும் சுருக்கப்பட்டது. அண்மைய சாத்தியங்களாகிவிட்ட தேர்தல் வாக்காகவும் எண்ணாகவும் பண்டமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு மனிதன் ஒருபோதும் அவனுடைய மனமாகப் பார்க்கப்பட்டதில்லை. கனவுகளால் உருவான அற்புதமாகவும் கருதப்பட்டதில்லை. ஒவ்வொரு துறையிலும், கல்வியிலும், தெருக்களிலும், அரசியலிலும் அப்படியே. மரணிப்பதிலும் வாழ்தலிலும்கூட” என்பதை உணர்ந்தபோதுதான்.

***
தயாரிப்பு: ஷேக் சாலிக்
புகைப்படங்கள் சுதிப்டோ மோண்டல்
(நன்றி :ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

குறிப்பு: ரோஹித்தின் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று இதைப் பதிவேற்றுவது தற்செயல் நிகழ்வுதான் எனினும், தன் பிறப்பே மரணத்தையொத்த விபத்து என்று ஏன் சொன்னார் ரோஹித் என்பதற்கான சான்று இப்பதிவு. ரோஹித் பிறப்பதற்கும் முன்பே தொடங்கிவிட்டது அவரின் துயரம் என்றுதான் கூறவேண்டும். எதை எழுதினாலும் மொழிபெயர்த்தாலும் அதை பகிருங்கள் என்று கூறி இதுவரை முகநூலில் வேண்டுகோள் வைத்ததில்லை. முதன்முறையாகக் கேட்கிறேன். நண்பர்களே! இப்பதிவு அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலித் வாழ்க்கையின் மிகப்பெருந்துயரத்தைத் தாங்கிய ரோஹித்தின், அவரது தாய் ராதிகாவின், அவரது சகோதரர் ராஜாவின் இக்கதை இந்தியாவில் உள்ள, உலகில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. இதிலுள்ள தகவல்களைத் திரட்ட ஒரு செய்தியாளராக எத்தனை சிரமங்கள் இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை எழுதிய சுதிப்டோ மோண்டலுக்கு நன்றியும் சிரந்தாழ்ந்த வணக்கங்களும். 

கவின்மலர்

எழுத்தாளர், பத்திரிகையாளர். காட்சிப்பிழை இதழின் ஆசிரியர்.

ரோஹித் வெமுலாவிற்கு நீதி கேட்கும் உண்ணாவிரதத்தில் இணைந்தார் ராகுல் காந்தி:எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியது ஆர்.எஸ்.எஸ் இளைஞர் அமைப்பு…

ரோஹித் வெமுலா உயிரிழந்து 12 நாட்கள் ஆன நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  மாணவர்களை சந்தித்ததுடன், அவர்களின் போராட்டத்தில் இரவு முழுவதும் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.

hcu-candle-light-march_700x431_81454119552.jpg

தொடர்ந்து, இன்று தொடங்கியுள்ள  உண்ணாவிரத போராட்டத்திலும் ராகுல் காந்தி  காலை முதல் கலந்து கொண்டுள்ளார்.

rahul-gandhi-hcu-hunger-strike_650x400_81454126029

மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் ராகுலும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இதனிடயே ராகுல் காந்தியின் ஐதராபாத் வருகைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இளைஞர் பிரிவான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் மூடி விட்டு போராட்டம் நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வருகையை அடுத்து, பல்கலைகழகத்தின் இடைக்கால துணைவேந்தர் ஸ்ரீவட்சவா நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் பொறுப்பு துணைவேந்தராக பெரியசாமி பொறுப்பேற்றுள்ளார்.

ஐதராபாத் பல்கலைக்கு நியமிக்கப்பட்ட இடைக்கால துணைவேந்தர்: தமிழக இளைஞர் தற்கொலைக்கு காரணமானவர் என்று புகார்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் ‘பன்னியாண்டி’ என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற முனைப்போடு படித்து வந்தார்.

‘பன்னி மேய்கிறவனுக்கு இங்க என்ன வேலை?’ ‘உனக்கெல்லாம் படிப்பு வராது போய் பன்னி மேய்’ என்று சொன்ன ஆசிரியர்கள், பல வகைகளிலும் தடை போட்டு அவரை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்த முயன்ற ஆதிக்க சாதிகள் நிறைந்த துறை நிர்வாகம். 2008 பிப்ரவரி 24 அன்று தன் விடுதி அறையில் செந்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!

இதே ஐதராபாத் பல்கலையில், சில நாட்களுக்கு முன் ரோஹித் வெமுலா  என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

rohith-vemula-mumbai-lead

இந்நிலையில், ரோஹித் உட்பட ஐந்து தலித் மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டப்படும் ஐதராபாத் துணை வேந்தர் அப்பா ராவ் , விடுமுறையில் சென்றுவிட்டார்.

Appa-Rao1.jpg
அப்பா ராவ்

பல்கலைகழகத்தில் நிலவி வரும் சூழல் அமைதியடைவதற்காகவே தான் விடுமுறையில் சென்றுள்ளதாக அப்பா ராவ் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஐதராபத் பல்கலையின் இடைக்கால துணைவேந்தராக விபின் ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்றுள்ளார்.

இதனிடையே ஸ்ரீவஸ்தவாவின் நியமனத்திற்கு எஸ்.சி  / எஸ்.டி பணியாளர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. ஐதராபாத் பல்கலையில் 2008 -ம் ஆண்டு பயின்ற,   பன்னியாண்டி இன  தலித் மாணவன், தமிழகத்தை சேர்ந்த செந்தில்  தற்கொலை செய்து இறந்து போனதற்கு விபின் ஸ்ரீவஸ்தவா  முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தலித் மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஒருவரையே, மற்றொரு தலித் மாணவனுக்காக நடைபெறும் போராட்டம் பொருட்டு, விடுமுறையில் சென்றுள்ள  துணைவேந்தருக்கு மாற்றாக நியமித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

”ஊடகங்களின் அலட்சியமே ரோஹித் வெமுலாவைக் கொன்றது”

மு. குணசேகரன்

மு.குணசேகரன்
மு.குணசேகரன்

ரோகித் வேமுலாவின் துயர மரணத்துக்கு ஊடகங்கள் பின்பற்றிய அலட்சியமான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டுகிறார் நண்பர் டி.கார்த்திகேயன். இந்து நாளேட்டின் மதுரை பதிப்பின் செய்தியாளராகச் சில ஆண்டுகளுக்கு முன் சாதிய வன் கொடுமைகள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தை ஈர்த்தவை. இப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பயல்கிறார்.

வேமுலாவின் மரணம், நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளிப்பட்ட கொந்தளிப்பு, தொடர்ந்து நிலவும் பாகுபாடான சூழலும் எங்கெங்கும் மாணவர்களைக் கிளர்தெழச் செய்திருக்கிறது. ஆனால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, பல்கலைக்கழகத்தின் வெட்டவெளியில் படுத்துறங்கி வேமுலாவும் அவரது தோழர்களும் நீதிகோரிப் போராடியபோது, அதனை உரிய வகையில் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டினவா? நீக்கப்பட்டு சமூகப் புறக்கணிபபுக்கு அவர்கள் ஆட்படுத்தப்பட்டபோது நிர்வாகத்தின் தவறை ஊடகங்கள் உரிய வகையில் கண்டித்தனவா? என்றும் கேள்வி எழுப்புகிறார். அவ்வாறாக ஊடகங்கள் நடந்திருந்தால் இந்தத் துயரம் ஒருவேளை தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது அவர் எண்ணம்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் துன்பங்கள், அன்றாடம் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் உரிய அக்கறையோடு பதிவு செய்யப்படாமல் போவதற்கு, ஊடகங்களில் முடிவெடுக்கும் பீடங்களிலும் முக்கியப் பணிகளிலும் அடித்தள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உரிய பிரதிநிதித்துவத்தை இன்னும் பெறாததும, பன்மைத்தன்மை அற்ற சூழலும் முக்கியக் காரணம் என்கிறார் கார்த்திகேயன். ஒடுக்குமுறைகளை ஆழ்ந்த புரிதலுடனும் நுட்பத்துடனும் எழுதுவதில் உள்ள போதாமையையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

துயரம் நேர்ந்ததற்குப் பின்னர் குமுறுவதைக் காண்கிறோம். பக்கம் பக்கமாக திறனாய்வுக் கட்டுரைகள்.. விரிவான ஆய்வுகள். மணிக்கணக்கில் விவாதங்கள். ஆழப் புரையோடிப் போயிருக்கும் நோயைப் புரிந்துகொண்டு வருமுன் காக்கும் வினைகளே அவசியமாவை என்ற அவரது வாதம் சிந்தனைக்குரியது.

இச் சமூகப் பிரச்னை பற்றிய குமுறல்களுக்கும், விரிவான திறனாய்வுக் கட்டுரைகள், செய்தி அலசல்கள் போன்றவற்றுக்கும் ஆங்கில ஏடுகளிலும் இதழ்களிலும் தரப்படும் முக்கியத்துவம், தமிழ் இதழியலில் (அரிதான விதிவிக்குகள் தவிர) இதுகாறும் சாத்தியமாகவில்லை என்பது கசக்கும் உண்மை.

“If there had been proper media coverage on their expulsion when they started a sleep-in-protest it might have been a different issue. Unfortunately, there is a tendency to limit reporting on issues affecting Dalits to sensational stories in every media organisation in the country. This lack of integrity stems from the lack of will to diversify the newsroom. When the media houses have a diversified work force, the newsrooms become a space for exchanging shared cultural and lived experiences which not only increases productivity but also guarantees adequate representation in a country like India where we have diverse groups.

Media houses should come forward and own moral responsibility in this case and start seriously addressing the question of lack of media diversity”

hindustantimes நாளிதழில் Karthikeyan Damodaran எழுதிய The media’s caste: How it’s to blame for Rohith Vemula’s death என்ற கட்டுரையை முன்வைத்து ஊடகவியலாளர் மு.குணசேகரன் எழுதியது.)