“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது.

நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 வயது நிரம்பிய அந்தப் பெண் கருப்பு புர்கா மற்றும் ஊதா நிற ஹிஜாப் அணிந்து, முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த பதாகையில், “மிஸ்டர் மோடி, நான் இந்தூலேகா. என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?” என எழுதப்பட்டிருந்தது.

இந்துலேகா பார்த்தன் என்ற அந்த இளம்பெண்ணின் படம் வைரலாகிக்கொண்டிருக்கிறது. முசுலீம் அல்லாத ஒரு முசுலீமைப் போல உடைந்து பிரிவினையாளர்களுக்கு பாடம் புகட்டியிருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர். ஒரு முஸ்லீமாக உடையணிந்துள்ளனர். “நம்முடைய பிரதமருக்கு என்னுடைய கருத்தைச் சொல்ல இதுவே சிறந்த வழி என நான் நினைத்தேன். அவர் சொன்னதை நான் எதிர்க்கிறேன் என்று அவரிடம் சென்று சொல்ல முடியாது” என இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் இந்துலேகா கூறுகிறார்.

இந்துலேகா

“ஆனால் நான் ஒருபோதும் அவதூறான அல்லது இழிவான எதையும் சொல்லவில்லை, நான் சொல்வது சரி என்று எனக்குத் தெரியும்” என காவி ட்ரோல்களின் தாக்குதலுக்கு பதில் சொல்லியிருக்கிறார் இந்துலேகா.

எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்று கூறும் அவர், “எனக்கென தெளிவான அரசியல் சிந்தனை உள்ளது. இருப்பினும், எனக்கு அரசியல் கட்சிகளைப் பிடிக்கவில்லை. ஆகவே, போராட்டம் எந்த அரசியல் கட்சியினாலும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கேள்விப்பட்டபோது, நான் பங்கேற்க நினைத்தேன்” என்கிறார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறார் என்பதையும் இந்தூலேகா கூறுகிறார். “இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சிஏஏ திருத்தம் மற்ற அனைத்து திருத்தங்களையும் செல்லாததாக்குகிறது. நீங்கள் ஒரு மதத்தை முழுவதுமாக விலக்க முடியாது. இது இந்துத்துவாவுடன் நாம் எவ்வாறு முன்னகர்ந்து கொண்டிகிறோம் என்பதையே காட்டுகிறது” என்றும் அவர் தெளிவாகக் கூறுகிறார்.

இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்

உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் பிறகு அந்தப் பொய் உண்மையென்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதை எப்போது இந்த நாடு உணர்ந்துகொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. வானொலியும், செய்தித்தாளும் மட்டுமே ஊடகங்களாக இருந்த ஹிட்லர் காலத்திலும், பல்வேறு செய்தி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கோயபல்ஸின் கூற்று உண்மையாகவே இருக்கிறது. அதன் தீவிரத்தன்மை இக்காலத்தில் அழிவு சக்தியாக மாறிவிட்டது

இஸ்ரோ விஞ்ஞானிகளோடு மானசீகமாக கை கோர்த்து இன்று எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் கொஞ்ச நாளுக்கு முன் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டபோது யாரும் அவர்களோடு இருக்கவில்லை.

மோதி அரசு சந்த்ரயான் – 2 ஏவுவதற்கு கொஞ்சம் முன் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சங்கமான ஸ்பேஸ் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் இஸ்ரோ சேர்மன் டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு கோரிக்கை வைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தைக் குறைத்திருக்கும் மத்திய அரசின் ஆணைகளை ரத்து செய்து உதவுங்கள் என அவரிடம் வேண்டிக்கொண்டது. ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு இந்த ஊதியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு எந்த வழியுமில்லை என்று விளக்கிச்சொன்னது .

ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சென்ற ஆண்டு அரசு இஸ்ரோவை தனியார் மயமாக்குவதற்கு முயன்றபோது யாரும் எதுவும் பேசவில்லை.

சென்ற ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரோ இரண்டு தனியார் கம்பெனிகள் மற்றும் ஒரு பொதுத்துறை அமைப்புடன் இணைந்து 27 செயற்கைக்கோள்கள் உருவாக்க ஒப்பந்தம் செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இஸ்ரோவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. நேவிகெசன் சேட்டிலைட் தயாரிக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை தனியார் துறைக்குக் கொடுத்துவிட்டது.

தனியார் துறைக்கு இப்படியாக 27 செயற்கைகோள்கள் உருவாக்கும் பணியை ஒப்படைத்ததால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிக்கும் அஹமதாபாத் கிளையின் ஸ்பேஸ் அப்ளிகேசன் செண்டரின் இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா மிகவும் கோபமடைந்தார்.

சிவன் அவர்களுக்குப் பிறகு தபன் மிஸ்ரா இஸ்ரோவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவான நிலையில் அவர் தனியார்மயமாவதை எதிர்த்த காரணத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இஸ்ரோவின் ஆலோசகராக மட்டும் நியமிக்கப்பட்டார்.

இஸ்ரோவின் சேர்மன் கே. சிவன் அவர்கள்,

“தபன் மிஸ்ரா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் க்கு தகவல்களை(ரிப்போர்ட்) தர வேண்டும்” என ஒரு ஆணை பிறப்பிக்கிறார்

அப்போது தபன் மிஸ்ரா போன்ற சிறந்த விஞ்ஞானிக்கும் சிவனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு கலையப்பட்டதாக அப்போது செய்திகள் எழுந்தன.

கே.சிவன் மேல் ஐயாவுக்கு அவ்வளவு இரக்கம் பொங்கி வழிந்தது ஏன் என்பது இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். யாருடைய கையசைவில் இந்த உயர் பதவிக்கு அவர் வந்தார் என்பதும் புரிந்திருக்கும்.

தபன் மிஸ்ராவை இவ்விதம் பதவியிறக்கம் செய்தது தொடர்பாக நாட்டின் பல அறிவியல் துறை சார் விஞ்ஞானிகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதி இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஆல்ஃபா டிசைன் கம்பெனியானது பனாமா பேபர்ஸில் இணைந்ததாகும். இந்தக் கம்பெனியானது பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக்கித் தரும் கம்பெனியாகும்.

அதானி சமூகத்துடன் இந்தக் கம்பெனிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆல்ஃபா டிசைன் டெக்னாலாஜிஸ், டிபெண்ஸ் ஃபார்ம் எலக்ட்ரானிக்கின் முக்கியமான இந்திய கூட்டாளியுமாகும். அதன் பெயரானது இந்தியாவில் கமிசன் வழங்கியது தொடர்பான பனாமா பேப்பர்சில் முத்ன்மையாக வந்திருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஸ்ரோவுக்குள் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் ஊடகங்களின் குரலாக வெளிப்படுத்தவும், அனைத்து விசயங்களையும் உங்கள் முன்னால் வைக்கும் துணிவும் ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவை உங்களுக்கு ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளை மட்டுமே படம்பிடித்துக்காட்டுகின்றன. நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கவில்லையென்றால் அவை உங்களை முட்டாளாகவே வைத்திருக்கும்

கிரிஸ் மாள்வியா
தமிழாக்கம்: Naanarkaadan Sara

சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதில், “1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும்,

2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும்,

3) எதிர்காலத்தில் பேசும் கணினிகள் என்று வந்தால், அதற்கு சம்ஸ்கிருத மொழி மட்டுமே சாத்தியமாகும் என்பதை உறுதி செய்யவும் கோரியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘சம்ஸ்கிருதம் அறிவியல் மொழி என்பதை அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசா NASA ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனென்றால், அதன் எழுத்து வடிவமும், பேச்சு வடிவமும் நன்றாக ஒத்துப்போகிறது. நாசாவே அதை ஒத்துக்கொண்டுள்ள போது, இந்தியாவில் அதனை கொண்டு வர என்ன பிரச்னை இருக்கப் போகிறது? அனைத்துக் கோள்களில் உள்ள மொழிகளுக்கும் தலையாய மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே!” என்ற பேராசையை தெரிவித்துள்ளார்.

வேதங்கள் மற்றும் புராணங்கள் சம்ஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ளன. எனவே, சம்ஸ்கிருதத்தை விட பழமையான மொழி ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்’ என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.

IIT & NIT போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதுதான் வேலையா ? என்ற கேள்விக்கு அப்பால்… பாஜக அமைச்சர் முன்வைத்த இக் கருத்துக்கள் சரியானதா எனப் பரிசீலினை செய்வோம்!

தெரிந்து கொள்ளுங்கள், ரமேஷ் போக்கிரியால் :-

“சம்ஸ்கிருத மொழியை விட பழமையான மொழி இருந்தால் தெரியப்படுத்துங்கள் !” எனக் கேட்டுள்ளீர்கள்.

1) இந்தியாவில் தொன்மையாக எழுத்து வரிவடிவங்கள் கொண்ட 18 மொழிகள் நிலவியது ; அவற்றில் சமஸ்கிருதம் இல்லை. பழந்தமிழ் மொழியான திராவிடி / தமிழி மற்றும் பிராகிருதம் தான் தொன்மையான சிறப்புமிகு மொழிகளாக திகழ்ந்திருந்தன.

2)வேதப் பாடல்களை மட்டுமே பாடும் வளர்ச்சியுறாத மொழியாக இருந்த வேத மொழி என்பது வேறு; செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் என்பது வேறு மொழியாகும்.

சமஸ்கிருதத்தின் முன்மொழியாக வேதமொழியை சொல்ல முயற்சிப்பது அடிப்படையில் தவறானதாகும்.

உலகின் பல்வேறு பகுதிகளில், இதுவரை கண்டறியப்பட்ட சுமார் 1500 தொன்மையான கல்வெட்டுகளில் வேதமொழியும் இல்லை ; சமஸ்கிருதமும் இல்லை. கிபி 2 ம் நூற்றாண்டு வரை, பெஷாவரில் துவங்கி தமிழ்நாடு வரை எங்குமே சமஸ்கிருத கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் படவில்லை. சமஸ்கிருத மொழி இலக்கியங்களை பரவலாக கிபி. 2 ம் நூற்றாண்டிலிருந்து தான் அறிய முடிகிறது.

3) இந்தியாவில், 19 ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட மொழிகள் பட்டியலில், 179 மொழிகள், 544 பேச்சு மொழிகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றில் சமஸ்கிருதம் இல்லை.

கர்நாடக மாநிலத்தில், சிமோகா மாவட்டத்தில், இரண்டு கிராமங்களில் மட்டும், புதுக்கோட்டையிலிருந்து குடிபெயர்ந்த சில பிராமண குடும்பங்கள் சமஸ்கிருதம் பேசுகின்றனர். அதுவும் கூட தமிழ் + கன்னடம் + சமஸ்கிருதம் கலந்த ஒருவகையான கலப்பு சமஸ்கிருதமே !

சமஸ்கிருதம் மக்கள் பேசாத, ஒரு செத்த மொழியாகும். பிராமணர்கள் மட்டுமே பாதுகாக்கும் மொழியாகும்.

4) அரசர்கள் / ஆட்சியாளர்கள் தான் சமஸ்கிருதம் வளர்த்தனர். கிமு 3 முதல் கிபி 1 வரையில், வட இந்தியாவில் உருவான மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் பிராகிருதம்தான் ஆட்சி மொழியாக இருந்தது ; அதுவே மக்களின் பேச்சு மொழியாகவும் இருந்தது.

கிபி 1 – ம் நூற்றாண்டு வரையில், சமஸ்கிருதத்திற்கு வரி/எழுத்து வடிவம், இலக்கியம் இல்லை. சமஸ்கிருதம் மக்களிடம் இருந்து உருவாகவில்லை; செயற்கையாக பிராமணர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய மொழியாகும்; பேச்சு மொழி இல்லை. அன்றைய சமூகப்பொருளாதார தேவைக்கு ஏற்ற நிலபிரபுத்துவ சக்திகளின், அரசர்களின் ’புனிதமான, பண்பாடு மிக்க, தூய்மையான ( ! )’ மொழியாக அறிவிக்கப்பட்டது. அடிப்படையில் அது பிராமணர் மொழியாகும்.

5) பிராமணர் ஏற்றமும் சமஸ்கிருத எழுச்சியும் :-

கிமு 5 மற்றும் 4 -ம் நூற்றாண்டுகள் புத்தர் மற்றும் மகாவீரர் காலகட்டம் ஆகும். கிமு 3 அசோகர் காலகட்டமாகும். பிராமணிய மதத்தை வீழ்த்தி பவுத்தம், சமணம் கோலோச்சிய காலகட்டம் ஆகும். பிராகிருதம் செல்வாக்கு பெற்று இருந்தது.

கிமு 2 முதல் கிபி 5 வரையில் மஹாயான பவுத்தம் சமஸ்கிருதத்தை ஏற்றது; சமணமும் தொடர்ந்தது. கிபி 2 ம் நூற்றாண்டில் இருந்து, பவுத்தம் மற்றும் சமண மதங்களில் பிராமணர்கள் கை ஓங்கியது. சாதீயம், சமஸ்கிருதம் அவற்றிலும் வளர்ந்தது. பவுத்த, சமண நூல்கள், இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்டன. கிபி 4 ம் நூற்றாண்டில் இருந்து வட இந்திய ஆட்சியாளர்கள் மீது பிராமணர்கள் தான் செல்வாக்கு செலுத்தினர். சமஸ்கிருதம் போற்றி வளர்க்கப்பட்டது.

தென்னிந்தியாவில் சாதவாகனர் ஆட்சியில் பிராகிருதம்தான் செல்வாக்கு செலுத்தியது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் தான் சமஸ்கிருதம் தமிழகத்தில் நுழைகிறது. சோழர்கள் ஆட்சியில், சாதீய- நிலவுடமை முறை உறுதிப்படுத்தப் பட்ட பிறகு, வழிபாடுகளில் சமஸ்கிருதம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமஸ்கிருதம், ஒரு தேவ பாஷையாக நீண்ட காலம் நீடித்து நிற்பதற்கான காரணம், ஆட்சியாளர்கள் மீதான பிராமணர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகும்.

இந்தியாவிலேயே தலையாய மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை, அமைச்சர் அனைத்து கோள்களிலும் உள்ள மொழிகளுக்கும் தலையாய மொழி என்பது தவறானது மட்டுமல்ல! மக்கள் வாழாத கோள்களிலும் சமஸ்கிருதம் என்பது முட்டாள்தனமானது;
செத்த மொழிக்கு சந்தனம் பூசுவது ஏன்?

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலான, ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியை மக்கள் மத்தியில் திணிப்பது; பிராமணர் உருவாக்கிய சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவது, இதை நாம் ஒருநாளும் அனுமதிக்கக்கூடாது.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்

ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது.

பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் சங்கங்களே கூறுகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.

இந்த நிலையில் நூறு இலட்சம் கோடி ரூபாய்க்கு கட்டமைப்பு வேலைகளுக்கு செலவிடப் போவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். எங்கேயிருந்து கடன் வாங்கப் போகிறார்கள்? எதில் செலவு செய்யப் போகிறார்கள் என்பது போன்ற எந்த விபரங்களையும் அவர் சொல்லவில்லை. இதனால் குடிமக்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்; முதலாளிகள் பலன்பெறுவர்.இந்த வரவு செலவு அறிக்கையினால் மாணவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பொது மக்களுக்கோ, மருத்துவத்துறைக்கோ பலன் ஏதுமில்லை.

இந்தப் பாராளுமன்றம், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியிருக்கிறது. இதனால் 77 சத தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பிலிருந்து விலகிவிடுவர். அவர்களால் தொழிலாளர் துறையில் தாவா எழுப்ப முடியாது; நீதிமன்றம் போக முடியாது. ஏற்கெனவே வெள்ளைக்காரர்கள் காலத்தில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற, தொழிற்சங்க உரிமைகளை ஒரே உத்தரவின் மூலம் இரத்து செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்குரிய சங்கம் அமைக்கும் உரிமைகளை இந்த திருத்தங்கள் நீர்த்துப் போகச் செய்கின்றன.

குறைந்த பட்ச ஊதியமாக மாதம் 18,000 ரூபாய் தர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால் தொழிற் சங்கங்கள் கொடுத்த ஆலோசனைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு , முதலாளிகள் கோரியபடி நாளொன்றுக்கு 178 ரூபாய் சம்பளம் என்று அரசு கூறுகிறது; (மாதம் 5000 ரூபாய்க்கும் குறைவாக ) அதுவும் 26 நாட்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறுகிறது. தேவைப்பட்டால் பூகோளரீதியாக குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இதன்மூலம் ஏற்கெனவே அதிகமாக வாங்கி வரும் தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படும். மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் என்று அரசு முதலீட்டாளர்களுக்கு இதன்மூலம் கூற விரும்புகிறது. தொழிலாளர் சம்மந்தமான முடிவுகளை நிதி அமைச்சர் எடுத்து தொழிலாளர் துறையை கையகப்படுத்தி விட்டார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது; எந்தவிதமான ஆய்வுகளும் கிடையாது; குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது என்ற நடவடிக்கைகளினால் பெருமுதலாளிகள் பலன்பெறுவர்.இத்தகைய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஏஐடியுசி கடந்த ஆகஸ்டு இரண்டாம் நாள் கண்டன இயக்கங்களை நடத்தியது. இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்படும். இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெறுகிறது.

அமர்ஜித் கௌர் (கோப்புப்படம்)

அணுஆயுத துறையில் பணிபுரிவோரின் பாதுகாப்பு அம்சங்கள் வேறு. சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் நோய் வேறு;மின்துறையில் பணியாற்றுவோரின் துறைசார்ந்த பாதுகாப்பு கவசங்கள் வேறு.ஆனால் இந்திய அரசு எல்லாத் தொழிலுக்கும் சேர்த்து ஒரே சட்டத்தை(Occupational Safety & Health) கொண்டுவந்துளளது. ஒவ்வொரு தொழிலுக்கும் என தனித்தனியான பாதுகாப்புச் சட்டங்கள் வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதன் மூலம் இந்த அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

உலகில், வேலையளிப்போரில் இரண்டாம் இடத்தை வகிக்கும் இரயில்வே துறையின், பெரம்பூர் இரயில் பெட்டி ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இருபது பொதுத்துறை வங்கிகளை ஆறு வங்கிகளாக மாற்ற இந்த அரசு முடிவெடுத்து உள்ளது.இதனால் சாதாரண மக்களுக்கு பலன் ஏதுமில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்ற 36 பேர் வங்கியில் இருந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளனர். வங்கியில் உள்ள பொதுமக்களின் சேமிப்பை பாதுகாக்க, வங்கிகளை இணைக்கும் சட்டம் உதவாது. இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலைளை தனியாருக்கு கொடுக்க இந்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால் ஆவடி தொழிற்சாலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இதுபோன்ற மக்கள் சார்பான கொள்கைகளுக்காக தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

முப்பது வருடம் பணி முடித்த, 55 வயதான தொழிலாளர்களின் நிலைபற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எல்லாத்துறைகளையும் கேட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப எண்ணியுள்ளது. இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற நிறுவனங்களில் இருக்கும் எல்லா நிதியையும் ஒரே நிதியாக்கி பிரதமர் தலைமையில் அதை நிர்வாகம் செய்ய அரசு எண்ணியுள்ளது. அதாவது அந்த தொகையை அரசு எடுத்துக் கொள்ள பார்க்கிறது. இது தொழிலாளர், முதலாளிகளின் பணமாகும். இதில் அரசின் நிதி ஏதுமில்லை.

மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவர்களை ‘ஆண்டி இந்தியன்’ என்றும் ‘அர்பன் நக்சல்’ என்றும் முத்திரை குத்தி கருத்துரிமையை பறிக்கின்றனர். 370 பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக மோடி மாற்றிவிட்டார். இதனால் பதற்றம் அதிகமாகும்; ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கும். இதனால் மக்களின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிடப்படும் தொகை குறையும். தனக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து தொழிலாளர் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை மோடி பறிக்கிறார்.

வெள்ளைக்காரன் காலத்திலேயே போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை என்பது மாற்றப்படுகிறது. வேலைநேரம் என்ன என்பதை அந்தந்த அரசுகள்(appropriate government) முடிவு செய்யும் என்று சொல்லுவதன் மூலம் எட்டு மணி நேர வேலை என்பதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் தொழிலாளிவர்க்கம் எப்பாடுபட்டும் தனது உரிமைகளுக்காக போராடும். அதற்குரிய முன்முயற்சிகளை ஏஐடியுசி எடுக்கும் ” என்று அமர்ஜித் கௌர் கூறினார்.

இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.

சிந்தாதிரிப்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேட்டியின் போது தமிழ்நாடு ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.இரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

ஆழி செந்தில்நாதன்

ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது?

இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று கூட இதை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் போல சித்தரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் தொகுதி அல்லது மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. வெறுமனே குரல் கொடுப்பதற்காகவும் அவர் அங்கே செல்லவில்லை. இந்திய அரசமைப்பின்படி உச்சபட்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தில் இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்த்தே அவரும் செயல்படுகிறார். தன் தொகுதியில் பாலம் கட்டுவதற்கான நிதியைக் கோருவதற்காக அவர் அங்கே செல்லவில்லை. அவர் ஒரு சட்டமியற்றி – Law Maker.

சட்டமியற்றும் (legislative) அவையான பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதை நிறைவேற்றும் பொறுப்பு காபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு (executive) இருக்கிறது. அந்தச் சட்டம் மீறப்படாமல் பாதுகாக்கப்படவே நீதித்துறை (judiciary) இருக்கிறது. ஆனால் மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்தான் உச்சபட்ச அதிகாரமுள்ளவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தனிக்குரலாக ஒலிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் தமிழக எம்.பிகள். குறிப்பாக தோழர்கள் தொல். திருமாவளவன், கனிமொழி, ஆ ராசா, ரவிக்குமார், ஏ கணேசமூர்த்தி, சு வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மீது ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பே இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையிருந்த ஆட்சிகளின்போது மக்களவை அல்லது மாநிலங்களவையில் அண்ணாவும் சம்பத்தும் செழியனும் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆக்கபூர்வமாகவும் எதிர்க்குரலாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மொழித்திணிப்பு இருக்காது எனறு ஈ வி கே சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உறுதிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு.

எங்கள் நாட்டுக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் பேசும் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று குரல் கொடுத்த அண்ணா, இந்திய அரசின் நிதிக்கொள்கை, வெளியுறவுக்கொள்கை உட்பட எல்லா மத்திய அரசு அதிகாரங்களையும் கிழித்துத் தொங்கப்போட்டார். போர்க்காலத்தில் அரசோடு சேர்ந்தும் நின்றார்.

எமர்ஜென்சியின் போது இரா செழியன் இந்திரா காந்திக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியதை நாம் மறக்கமுடியுமா? அவரது அந்தப் புகழ்பெற்றப் பேச்சு எல்லோருக்கும் பாடநூல்.

எத்தனை தடவை வைகோவும் கணேசமூர்த்தியும் திருச்சி சிவாவும் அண்மையில் கனிமொழியும் தமிழ்நாட்டின் குரலை ஒலிக்கச்செய்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் எனறு தமிழ்நாட்டுக்காக இங்கே தான் வங்காளத்து கம்யூனிஸ்ட் பூபேஷ் குப்தா குரல்கொடுத்தார். இந்த அரங்கில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்சி, பிஸி மக்களுக்கான சமூக நீதிக்குரல்களை திராவிடக் கட்சிகளின் எம்பிகள் எழுப்பினார்கள். இதே மன்றத்தில்தான் எங்கள் நிதியைத் தின்று தீர்க்கின்றன வட மாநிலங்கள் என்று ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். இப்படி எவ்வளவோ சொல்லமுடியும்.

எனவே மாநிலக் கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் ஒன்றுதான். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிற திமிர்.

தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது, மோடிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடும் மோடி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் வருந்த வேண்டிய நிலைமை வரும் என்கிற நிலை ஏற்படுமானால், ஆள்பவர்கள்தான் தேச விரோதிகளாக ஆவார்கள்.

ஆழி செந்தில்நாதன், பதிப்பாளர்; அரசியல் விமர்சகர்.

இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம்

அறிவழகன் கைவல்யம்

தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல.

மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, உறுதியை, ஆளுமையை முற்றிலுமாக சிதைத்து ஊற்றி மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

1) பனால் ஆன உச்ச நீதிமன்றம்

உச்சிக்குடுமிகளின் மன்றமாக இருந்தாலும், கொஞ்சமேனும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை வேறு வழியின்றிக் காப்பாற்றி வந்த நீதிபதிகள், தெருவுக்கு வந்தார்கள், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள். வழக்குகளை யாருக்கு வழங்குவது என்பதில் அரசியல் தலையீடுகளும், நம்பிக்கையின்மையும் தலைதூக்கி இருப்பதாக அவர்கள் பிரஸ் மீட்டில் சொன்னது ஏதோ சட்டப் பஞ்சாயத்து அல்ல. ஒட்டு மொத்த நீதித்துறையின் மீதான காவிகளின் தாக்குதல். இந்திய நீதித்துறை அதன் உள்ளடக்கத்தால் பன்னாட்டு அளவில் மதிக்கப்பட்ட சூழலை மோடியும் அல்லக்கைகளும் மாற்றினார்கள். பன்னாட்டளவில் இந்திய நீதித்துறையின் தரத்தை முற்றிலுமாக கீழிறக்கி இந்தியாவின் மானத்தை வாங்கியது சாட்சாத் மோடியும் அல்லக்கைகளும் தான் தேச பக்தாளே.

2) ரிசர்வ் வங்கியை திவாலாக்கும் மோடி கும்பல்.

மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் அறிவித்த மனமதிப்பீட்டு நடவடிக்கை, ரகுராம்ராஜன் தெறித்து ஓடியது பிறகு ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்து 30 லட்சம் கோடியை காவிப் பண்டாரங்களுக்குக் கொடு என்று உர்ஜித் படேலையும் தெறிக்க விட்டு, அல்லக்கை சக்திகாந்த தாஸை உட்கார வைத்திருப்பது. இதன் மூலமாக ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு என்று உணரப்படுகிற ரிசர்வ் வங்கியின் தரத்தைக் குறைத்து நாசமாக்கி உலக அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சியை சிதைத்த மோடியையும் அவரது அல்லக்கைகளையும் கொண்டாடும் தேச பக்தாளே உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா தேசபக்தி பற்றிப் பேச?

3) சிபிஐ கூத்துக்கள்

ராகேஷ் அஸ்தானா காவிகளின் அடிவருடி, பிறகு ஏதோ ஒரு பஞ்சாயத்தில் உளவு பார்க்க அலோக் வர்மாவை உள்ளே நுழைத்தார் மோடி, பிறகு இருவரையும் லீவில் அனுப்பி அல்லக்கை நாகேஸ்வர ராவை கொண்டுவந்திருக்கிறார். இந்திய உளவுத்துறையின் நம்பிக்கையின்மை முற்றிலுமாக உடைக்கப்பட்டு இப்போது அவர்களும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இவ்வளவு வெளிப்படையாக சிபிஐ வீதிக்குக் கொண்டு வரப்பட்டது சாட்சாத் மோடி சாபின் ஆட்சியில் தான்.

4) மோடிக்கு முறுக்கு சுட்ட தேர்தல் கமிஷன்

குஜராத் தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தேர்தல் தேதியை திருட்டு மோடி கும்பலின் பணப்பட்டுவாடாவுக்காக தள்ளிப் போட்ட தேர்தல் கமிஷன் மாமாக்கள், பிறகு ஆம் ஆத்மீயின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை சட்டங்களுக்கு அப்பாற்பட்டு செல்லாது என்றார்கள், உச்சநீதிமன்றம் தலையிட்டு மோடியின் நடுமண்டையில் கொட்டியது. இன்னும் பல மாநிலத்து தேர்தல் காலச் சேட்டைகள் செய்யும் ஒரு சில்லுண்டி மாமாவாகிப் போன தேர்தல் கமிஷன் இந்தியாவின் அமைப்பு இல்லையா தேச பக்தாள்?

5) பலமிழந்த சி ஐ சி மற்றும் ஆர் டி ஐ

பல்வேறு சட்டப்பாதுகாப்பில்லாத மாற்றங்களை தகவல் அறியும் உரிமையில் புகுத்தி அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, சுதந்திரத்தை அழித்து நாசமாக்கிய காவிக் கூட்டம் தேச பக்தக் கூட்டம் என்றால் உண்மையான தேச பக்தர்களை என்னவென்று அழைப்பது பக்தாள்?

6) ரபேல் ஊழலில் மாமா வேலை பார்த்த மோடியா தேசபக்தர்?

கடைசியாக இந்து போன்ற பார்ப்பனப் ஏடுகள் வேறு வழியே இன்றி இப்போது எழுதத் துவங்கி இருக்கும் ரபேல் ஊழல் தான் மோடியின் சூப்பர் டூப்பர் ஹிட், ஏழை அம்பானிகளின் பாக்கெட்டில் 30 ஆயிரம் கோடியை அலேக்காகத் தூக்கிப் போட்டு தேர்தல் நிதியாகவோ ஹவாலாவாகவோ பின்வாசலில் பெற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி மோடி தேச பத்தர் என்றால் நீங்கள் எல்லாம் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்று நாடு முழுக்க சிரிக்கப் போகும் காலம் வரப்போகிறது.

தேச பக்தி என்றால் தேசத்தின் மீதும் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கிற அந்த தேச நிறுவனங்களின் மீதும் இருக்கிற நம்பகத்தன்மையை குலைக்கும் மோடியையும் மோடியின் அல்லக்கைகளையும் துதி பாடுவதை நிறுத்தி நேர்மையைப் பேசுவது.

நீங்களாவது நேர்மையைப் பேசுவதாவது, தேசபக்தாள் என்றாலே பக்கா பிராடுகள் என்றுதானே பொருள் இந்தியாவில்.

அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.

மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?

CPIMLஅறிக்கை
இன்னும் மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய தேசத்துரோக வழக்கில் டில்லி காவல்துறை ஜேஎன்யு மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காரணம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜேஎன்யு மாணவர் தலைவர்களும் நாடெங்கும் உள்ள மாணவர், இளைஞர் இயக்கங்களும், இந்தியாவின் பொருளாதாரத்தை அதன் சமூக இழையை நாசமாக்கும் மோடி ஆட்சிக்கு எதிரான மிகவும் துடிப்பான, தீவிரமான குரல்களில் ஒன்றாக எழுந்துள்ளன.

இந்திய மக்கள் முன், ஆடைகள் இல்லாத அரசராக மோடியை அடையாளப்படுத்தும் இந்த இளைய குரல்களின் நம்பகத்தன்மையை போக்க, அவற்றை அச்சுறுத்த, நசுக்க எடுக்கப்படும் முயற்சியாகத்தான், டில்லி காவல்துறை இந்த பொய்யான தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னயா குமார் மற்றும் பிற மாணவர்கள் மீது போடப்பட்ட இதே தேசத் துரோக நடவடிக்கைகளுக்காகத்தான், அவர்களை தண்டிக்க ஜேஎன்யு நிர்வாகம் எடுத்த முயற்சிகளை, சட்டவிரோதத் தன்மை, காரணகாரியமற்ற தன்மை, நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, 2018 ஜூலையில் டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2016 பிப்ரவரி 6 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக டில்லி அரசாங்கம் உத்தரவிட்ட நீதி விசாரணையில், தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள், மக்களுக்கு தவறான தோற்றம் தரும் நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, ஊழலை ஒழிப்பது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக மோடி அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

மாறாக, மோடியின் அலுவலகமே, அவரது அரசாங்கமே, இந்தியா இது வரை காணாத படுமோசமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளின், ஊழல்களின் உறைவிடமாக இருக்கிறது. அவரது ஆட்சி, கொலைகார பணமதிப்பகற்றத்தை, ஜிஎஸ்டியை கொண்டு வந்த, இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிய, கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை அழித்த, இந்திய பல்கலை கழகங்கள் மீது தாக்குதல் தொடுத்த, இன்னமும் உருவாக்கப்படாத கல்வி வர்த்தக மய்யங்களான ஜியோ பல்கலைகழகம் போன்றவற்றை முன்னகர்த்துகிற, அறிவியல் என்ற பெயரில் இருண்மைவாத அபத்தங்களை முன்தள்ளுகிற, உரிமைகளுக்காகப் போராடுகிற விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த, அவர்கள் மீது தாக்குதல் தொடுத்த ஆட்சியாகும்.

தேசத் துரோக சட்டப் பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை, இப்போது, பஞ்சாப் மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீது, அசாமில் மதச்சார்பற்ற அரசியல்சாசனத்தைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்படுகிற மனித உரிமைப் போராளிகள் மீது, உத்தரபிரதேசத்தில் கும்பல் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் ஆயுதங்களே!

ஜேஎன்யு முதல் வாரணாசி இந்து பல்கலை கழகம் வரை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் மோடி ஆட்சிக்கு பாடம் கற்பித்தனர்; ஆயினும் எதிர்க்கருத்து சொல்பவர்கள் மீது, ஜனநாயகத்தை பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, முத்திரை குத்தும் அதே பழைய தந்திரங்களை மீண்டும் பிரயோகிக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.

அம்பானியின் ஜியோ பல்கலைகழகத்தின் வடிவில், உயர்கல்வியை அழித்து, இருண்மைவாத மதவெறிக்கு, கார்ப்பரேட் வழிபாட்டுக்கு வழிவகுக்கும் ஆட்சியின் நோக்கத்துக்கு எதிராக ஜேஎன்யு ஆசிரியர்களும் மாணவர்களும் துணிச்சல்மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னையா, உமர், அனிர்பன் ஆகியோருடன் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காஷ்மீர மாணவர்கள் இந்தப் பொய்யான தேசத்துரோகக் குற்றச்சாட்டு தொடர்பாக மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும். இந்த மாணவர்களும் காஷ்மீரின் பிற மாணவர்களும் இளைஞர்களும் ஏற்கனவே எதிர்கொள்ளும் தவறான சித்தரிப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றை, இந்தத் தேசத்துரோக குற்றச்சாட்டு மேலும் அதிகரிக்கும்.

ஜேஎன்யு மாணவர்களை தேசத் துரோகிகள் என்று, தேச விரோதிகள் என்று பழிக்க, பொய் காணொளி காட்சிகளையும் பொய்ச் செய்திகளையும் வெளியிட்ட பிரச்சார அலைவரிசைகள், ஜேஎன்யு மாணவர்களை, அவர்கள் எழுப்பிதாகச் சொல்லப்படும் முழக்கங்கள் அடிப்படையில், இந்தியாவை துண்டாடும் கும்பல் என்று, மீண்டும் முத்திரை குத்துகின்றன.

வன்முறையை தூண்டாத வெறும் முழக்கங்கள் மட்டும் தேசத் துரோகம் ஆகாது என்று கேதார்நாத் சிங் எதிர் பீகார் அரசு, பல்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளது. ஆயினும் எதிர்ப்புக் குரல்களின் நம்பகத்தன்மையை அழிக்க, தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

இன்று, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து, இந்துக்கள் எதிர் இசுலாமியர்கள் என்று இந்தியாவை உடைத்து, குடியுரிமை திருத்த மசோதா மூலமும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டின் மூலமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தை உடைத்து, ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை, நீதிமன்றங்கள் ஆகியவற்றை சீர்குலைத்து இந்தியாவின் ஜனநாயத்தை உடைத்து, ஊடக சுதந்திரத்தை, பேச்சுரிமை, வெளிப்பாட்டு உரிமைகளை உடைக்க முயற்சி செய்து இந்தியாவை துண்டாடும் கும்பல் மோடி ஆட்சிதான் என்பதை மறுக்க முடியாது.

இந்த துண்டாடும் கும்பல், இந்திய மக்களின் உறுதியை உணர்வை உடைக்க முடியாது. நமது நாட்டை, அதன் ஜனநாயகத்தை அழித்துவிட முயற்சி செய்யும் இந்த ஆட்சிக்கு வருகிற மக்களவைத் தேர்தல்களில் இந்தியா நிச்சயம் பொருத்தமான பதில் தரும்.

பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் 

வி.களத்தூர் எம்.பாரூக் 

இந்திய ரிசர்வ் வங்கி 29.08.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி ரூ. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய்  தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ. 15.31 இலட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியை சந்தித்திருப்பது தெளிவாக தெரிகிறது.

ரூ. 13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதையும்கூட திரும்ப வராத பணம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இன்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஏறத்தாழ ரூ. 8,000 கோடி வரையில் ரூ. 500, ரூ 1000 தாள்கள் இருக்கின்றன. அதேபோல் நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலும் ரூ. 500, ரூ 1000 இருந்து வருகின்றன. அந்த தாள்களை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுவும் வந்து சேர்கின்றபோது இந்த ரூ. 13,000 கோடி என்பது பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கிறது.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பிரயோசனத்தையும் தேசத்திற்கு அளிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. வெறும் ரூ. 13,000 கோடியை பணமதிப்பிழப்பு செய்ய மிகப்பெரிய விலையை இந்த தேசம் கொடுத்திருக்கிறது. 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 1.5% இழந்திருக்கிறது. இதனால் ரூ. 2.25 இலட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பழைய தாள்களை மாற்றுவதற்கு மக்கள் பட்ட துன்பங்களை சொல்லிமாளாது. எவ்வளவு பெரிய துயரம் அது. நினைக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. இப்படி இந்த தேசத்தின் கட்டுமானத்தையே முழுவதுமாக சிதைத்த ஒரு திட்டமிடாத நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு இருந்திருக்கிறது.

கருப்பு பண ஒழிப்பை நோக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் கருப்பு பணம் உண்மையில் ஒழிந்ததா என்ற கேள்வியை எல்லோரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள். ‘ஊழல், கருப்பு பணத்தின் கோரப்பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்காக தனது அரசு புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ 1000  நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்துவிட்டதாக’ பிரதமர் மோடி 08.11.2016 அன்று தொலைக்காட்சியில் அறிவித்தார்.

‘தேச விரோத, சமூக விரோத கும்பல் பதுக்கி வைத்திருக்கும் ரூ. 500, ரூ 1000  நோட்டுக்கள் இனி வெற்றுக் காகிதங்களாகிவிடும்’ என்று கர்சித்தார். அந்த உரையின்போது ஏறக்குறைய 18 முறை ‘கறுப்புப்பணம்’ என்ற வார்த்தையை பிரயோகித்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட பிரமான பத்திரத்திலும் ‘கருப்பு பண’ ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே மத்திய அரசு  கூறியது. மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ‘காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவால் பயன்பட்டுவரும் 4 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் முடக்கப்படும்’ என்று ஆணித்தரமாக வாதித்தார்.

2017 ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ரூ. 3 இலட்சம் கோடி வரையிலான கருப்பு பணம் வங்கிகளுக்கு திரும்ப வராது’ என்று பெருமை பொங்க பேசினார். இன்று இவைகள் எல்லாம் பொய்யாகி மக்கள் முன் அம்பலமாகி நிற்கிறது. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணத்தையோ லஞ்சத்தையோ ஒழிக்க இயலாது. மொத்த கருப்பு பணத்தில் 1% மட்டுமே ரொக்கமாக இருக்கிறது. மீதியனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் இருப்பாகவோ இருக்கிறது’ என்று அப்போது பலரும் எடுத்துரைத்தனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி வகையறாக்கள் கேள்வி கேட்ட எல்லோரையும் தேச விரோதிகளாக, கருப்பு பணத்தின் ஆதரவாளராக சித்தரித்தனர்.

‘பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் நோக்கம் கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் என்றால் அந்நடவடிக்கை 0.01% கருப்பு பணத்தைக்கூட ஒழிக்கவில்லை’ என்று பேராசிரியர் அருண்குமார் சுட்டுகிறார். ‘தொடக்கத்தில் இது கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டாலும் இது ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்து தரப்பு மக்களையும், துறைகளையும் தாக்கியுள்ள மேலும் தாக்க போகின்ற ஒரு தரைவிரிப்பு குண்டு வீச்சு என்றுதான் வர்ணிக்க வேண்டியுள்ளது’ என்று பொருளாதார பேராசிரியர் க.ஜோதி சிவஞானம் குறிப்பிடுகிறார். இவர்களை போன்ற தீர்க்கதரிசிகள் சொன்னவைகள்தான் இன்று உண்மையாக வெடித்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டதால் மோடி அரசு மாற்றி மாற்றி பேச ஆரம்பித்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவில்லையென்றாலும் இது கள்ளப்பணத்தை ஒழிக்கும் என்று சொன்னார்கள். அதுவும் விரைவிலேயே வெளுத்துவிட்டது. பிடிபட்ட கள்ளப்பணமோ வெறும் 0.001% தான். ரூ 15.44 இலட்சத்தில் வெறும் ரூ. 400 கோடிதான் கள்ளப்பணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை பிடிப்பதற்காக மக்களிடம் 86% புழக்கத்தில் இருந்த ரூ. 15.44 இலட்சத்தை மதிப்பு நீக்கம் செய்த மோசடி அரசாக உலகிலேயே மோடி அரசாக மட்டுமே இருக்க முடியும். இதுவும் கேள்விக்கும், கேலிக்கும் உண்டானது. ‘2017-2018 நிதியாண்டில் 5,22,783 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக’ ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே கள்ளப்பணம் ஒழிக்கப்படவில்லை என்பதற்கு போதுமான சாட்சியாகும்.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப்பணத்தையும் தடுக்க முடியவில்லை, பணமில்லா பரிவர்தனையும் சாதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை சிதைத்ததும்; தேசத்தின் பொருளாதார கட்டுமானத்தை நொறுக்கியதும்தான் பணமதிப்பிழப்பு செய்தது. இதற்கெல்லாம் மோடி என்ன பதில் வைத்திருக்கிறார். ஏன் மௌனியாக நிற்கிறார்.

கட்டுரையாளர் வி.களத்தூர் எம்.பாரூக் கீற்று, டைம்ஸ் தமிழ் இணையதளங்களில் எழுதிவருகிறார். தொடர்புக்குthasfarook@gmail.com

ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!

கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக 180கி.மீ. தூரத்தை ஐந்து நாட்கள் நடந்து மாநில தலைநகரில் போராட்டம் நடத்தினர். அதிகமாக விவசாய தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரத்தை ஆளும் பாஜகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தங்களுடைய துயரங்களை துடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால், அந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மூலம் அவர்கள் போராடினார்கள். வயல்களில் ஓயாத பணிகளால், நீர் பாயாத நெல்வயலைப் போல பிளந்து வெடித்த வெறும் பாதங்களில், நடந்தே அத்தனை தூரம் வந்ததால் ரத்தம் கசிந்தது. கரிசனம் கொண்ட மும்பைவாசிகள் வாழ்நாளிலெல்லாம் ஊருக்கு உணவளிக்க உழைக்கும் அவர்களுக்கு உணவளித்து, பாதங்களுக்கு செருப்பு அணிவித்து தங்களுடைய நன்றியை செலுத்தினார். ஆனால், அரசுகள் என்ன செய்கின்றன. செருப்பை கழற்றி அடித்தார்போன்று விவசாயிகளை சுரண்டுகின்றன.

விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்ட இயலாமல் தற்கொலை செய்துகொண்ட தன்னுடைய 38 வயது மகன் சோம்நாத்தின் மரணத்துக்கு நீதி கேட்டு, 77 வயதனான விஸ்வநாத்தும் அவருடைய 60 வயது மனைவி மீராபாயும் இந்தப் பேரணியில் பங்கேற்றார்கள். ரூ. ஒன்றரை லட்சம் கடனுக்காக வங்கி செய்த உருட்டல் மிரட்டல் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் சோம்நாத்.

மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, கர்நாடகா, தமிழ்நாட்டிலும்கூட சொச்ச லட்சங்களை கடன் வாங்கி,விவசாயம் பொய்த்துப்போன விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றன அரசுகள். எந்தவித அதிகாரமும் இல்லாத ஏழை விவசாயிக்கு கடன் கொடுப்பதிலும் அதை கறாராக வசூலிப்பதிலும் அதீத கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் வங்கிகள், கார்ப்பரேட்டுகளுக்கு எப்படி கடனை வாரி வாரி வழங்கியிருக்கின்றன என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது த வயர் இணைய ஊடகம்.

2016-ஆம் ஆண்டு அரசு வங்கிகள் (ஆள்பவர்களால் அதிகாரம் செலுத்தக்கூடிய) விவசாய கடன் என்கிற பெயரில் கிட்டத்தட்ட ரூ. 59 ஆயிரம் கோடியை 615 வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கின்றன. ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு ரிசர்வ் வங்கி இந்த விவரங்களை அளித்திருக்கிறது.

மற்ற கடன்களைக்காட்டிலும் விவசாயக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில், குறைந்த விதிகளின் (ஏட்டளவில் குறைந்த விதிகள்) அடிப்படையில் சிறு விவசாயிகளும் பயன்படும்படி அளிக்கப்படுவதாக அரசு சொல்கிறது. தற்போது 4% வட்டியில் விவசாயக் கடன்கள் அளிக்கப்படுகின்றன.

விவசாய சங்க பிரதிநிதியான கிரண் குமார் வீசா , “நிறைய பெரிய நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்கின்றன. அவர்களும் விவசாய கடன்கள் பிரிவில்தான் வங்கிக் கடன்களைப் பெறுகிறார்கள். ‘ரிலையன்ஸ் ஃபிரஷ்’ போன்ற நிறுவனங்களும் விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்யும் நிறுவனங்களின் பிரிவிலேயே வருகின்றன. அவர்கள் விவசாய பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் செய்கிறார்கள். அவர்கள் வங்கி கடன்களை விவசாய கடன்கள் பிரிவின் கீழ் வாங்கிறார்கள். குடோன்கள் கட்டுவதற்கும் இன்னபிற இதுதொடர்பான பணிகளுக்கும் அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கி அந்தத் துறைசார்ந்தவர்களுக்கு கடன் தருவதில் முன்னுரிமை தரவேண்டுமென வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. வேளாண்மை, சிறு-குறு தொழில்கள், ஏற்றுமதி, கல்வி, வீட்டுவசதி, சமூக கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான துறைகளுக்கு வங்கிக் கடனில் சலுகைகள் தரப்படவேண்டும். இவற்றை முன்னுரிமை துறை கடன்கள் (priority sector lending-PSL)என்பர்.

முன்னுரிமை துறை கடன் கொள்கைபடி, வங்கிகள் அளிக்கும் மொத்த கடனில் 18% சிறிய, வறிய நிலையில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறைக்கு வழங்க வேண்டும். கிரண்குமார் வீசா சொல்கிறார், “இந்தக் கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் போகிறது. இதன் விளைவாக விவசாயிகள் கடன்களை பெற முடிவதில்லை”.

மேலும் அவர் தொடர்ந்தார், “உண்மையில், பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை கடன் கொள்கைப்படி கடன் பெறுவது மிகவும் எளிது. மற்ற கடன்களைக் காட்டிலும் விவசாய கடனுக்கு வட்டியும் குறைவு. பெரிய அளவில் கடன் கொடுப்பதால் தங்களுடைய செல்வமும் அப்படியே இருக்கும் என வங்கிகள் நினைக்கின்றன”.

த வயர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்ட கடன் விவரங்களை கேட்ட நிலையில், அவ் வங்கியின் மும்பை மண்டலம் மட்டுமே விவரங்களை அளித்துள்ளது. மும்பை நகர கிளை, ரூ. 29.95 கோடியை மூன்று வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கிறது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் ரூ. 10 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே வங்கி கிளை, ரூ. 27 கோடிக்கும் அதிகமான கடனை ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு அளித்திருக்கிறது. இந்தக் கடனைப் பெற்ற பயனாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா, விவசாயிகள் என்கிற பெயரை உச்சரித்து வேளாண் கடன்களை பெரிய நிறுவனங்கள் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார். “விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம் என்று சொல்வதன் பொய்முகம் இதுதான். ரூ. 100 கோடி கடன் கொடுக்கக்கூடிய வகையில் இவர்களெல்லாம் என்ன விவசாயம் செய்கிறார்கள்? எல்லாம் பாசாங்குத்தனமானவை. தொழில்சாலைகளுக்கெல்லாம், விவசாயின் பெயரால் ஏன் கடன் தரப்படுகிறது?” என்கிற வினாக்களையும் அவர் எழுப்புகிறார்.

வங்கிகள் தங்களுடைய வேலையை எளிதாக்கிக்கொள்ள, பெரிய கடன்களை வேளாண் கடன்கள் என்ற பெயரில் வழங்குவதாகச் சொல்கிறார் சர்மா. “ரூ. 100 கோடியை எளிதாக ஒரு நிறுவனத்துக்கு தந்துவிட முடியும். அதுவே, விவசாயிகளுக்கு தருவதென்றால் குறைந்தபட்சம் 200 பேருக்கு தர வேண்டும். பெரும் கடன்கள் மூலம் தங்களுடைய பணம் ஒரே இடத்தில் இருக்கும் அதே சமயம் 18% ஒதுக்கீட்டை நிறைவேற்றியது போலவும் இருக்கும் என்ற காரணத்தாலேயே இப்படி செய்கின்றன” என்கிறார் அவர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 8.5 லட்சம் கோடியை வேளாண் கடனாக வழங்கியது. இது 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. த வயர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற தகவலில், இதில் பெருமளவு பெரிய கடனாக அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வேளாண் அறிஞர்கள் இந்த நிதி வேளாண் துறை நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் போவதாக சொல்கிறார்கள்.

விவசாய கடன், அடிப்படை விவசாய உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கு என வேளாண் கடன்கள் மூன்று கிளை பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் அமைத்தல் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகத்தான் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் க்ளினிக்குகள் மற்றும் வேளாண் வர்த்தக மையங்கள் விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகவும் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி அளித்த டேட்டாவின் படி பெரிய அளவிலான கடன்கள், வேளாண் கடன்கள் என்கிற பெயரில் 2016-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டில் 604 வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 52,143 கோடியை கடனாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 86.33 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு ரூ. 60,156 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 91.28 கோடி. இதே கடன் வழங்கும் முறை, முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு, ரூ. 56 ஆயிரம் கோடி கடனை 665 வங்கிக் கணக்குகள் பெற்றுள்ளன. சராசரியாக ரூ. 84.30 கோடி. 2012-ஆம் ஆண்டில் ரூ. 55, 504 கோடி 698 வங்கிக்கணக்குகள், சராசரியாக ஒவ்வொன்றும் ரூ. 79.51 கோடியை பெற்றுள்ளன.

“ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக விவசாயம் பொய்த்துபோய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுகிறார். விவசாயிகள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை அரசு அளிக்கிறது என்பதை ஒரு சாதாராண விவசாயியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கேதார் சிரோகி என்ற விவசாயி.

உத்தரபிரதேசம் இட்டாவாவில் வசிக்கும் சஞ்சீவ் என்ற விவசாயி, நான்கு ஏக்கரில் விவசாயம் செய்கிறார். “வாங்கும் விவசாய கடனில் பெரும்பகுதி தரகருக்கு தரவேண்டியிருக்கிறது. பல அழுத்தங்களின் காரணமாகத்தான் விவசாயி கடன் பெறுகிறார், அதற்கும் வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும், வங்கி அதிகாரிகளின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க இந்த 615 வங்கி கணக்குக்கு சொந்தக்காரர்கள் யார், அவர்கள் ஏன் வேளாண் கடன் என்கிற பெயரில் கடன் பெறுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது” என்கிறார் அவர்.

வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா சொல்வது போல் விவசாயிக்கு தனியாகவும் வேளாண் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு தனியாகவும் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். ‘வேளாண்மை’ என்ற முத்திரையுடன் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படக்கூடாது. இதை நிதியமைச்சரிடன் நேரடியாக சொன்னபோதும் இதுவரை ஒரு எதிர்வினையும் வரவில்லை என்கிறார் சர்மா.

https://thewire.in/agriculture/modi-govt-gave-agricultural-loans-worth-rs-59000-crore-to-615-accounts-in-one-year

ஓட்டுநர் இருக்கைக்குகூட வழியில்லை…இதில் புல்லட் ரயில் பெருமைகள் வேறு!

ஜம்முவிலிருந்து ஹரா செல்லும் ரயிலில் ஓட்டுநர் இருக்கையில் பழுதடைந்து செங்கல்லை இருக்கையாக பயன்படுத்தும் படங்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்திருக்கிறார் சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி. மத்திய ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து கடும் விமர்சனங்களை எழுதிவருகிறார் சஞ்சீவ் பட். ஓட்டுநர் இருக்கையைக்கூட சரிசெய்து தராத ரயில்வே நிர்வாகம், புல்லட் ரயில் குறித்து பேசிக்கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் அவர் விமர்சித்திருக்கிறார்.

எண்ணெய் சுத்திகரிப்பு குறித்த இந்தியா சவுதி அரேபியா ஒப்பந்தம்: அரசில்- பொருளாதார பலன்கள் என்ன?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

இம்மாதம் இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் அமைப்பது குறித்த ஒப்பந்தம் அது. முதலில் இதன் பின்னுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது எவ்வளவு இந்திய ரூபாய்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம் . அப்போதுதான் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். நாம் நிறைய சைபர்களை ஊழல்களில் எண்ணிப் பார்த்துதானே வெறுப்படைந்திருக்கிறோம். இப்போது ஒரு பெரிய தொகையில் முதலீடு. அதனால் சந்தோஷமாக சைபர்களை எண்ணலாம். ஒரு பில்லியன் டாலர் என்பது 6,500 கோடி ரூபாய். ஆக மொத்த மதிப்பு 2860000000000 ரூபாய்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் மதிப்பு அதல பாதாளத்திற்குப் போயிருக்கிறது. 2013 ல் நூற்று பத்து டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, 2016 ன் தொடக்கத்தில் 30 டாலர் அளவுக்கு வீழ்ந்தது. (2009ல் ஒரு பேரலின் விலை 160 டாலராக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான் இந்த விலை வீழ்ச்சி எவ்வளவு கொடூரமானது என்பது புரியும்.) கிட்டத்தட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் திவாலாகும் நிலைக்குச் சென்றன. இன்று கொஞ்சம் கொஞ்சமாக பேரல் 70 டாலருக்கு உயர்ந்திருக்கிறது. அது மேலும் உயரக்கூடும் என்பதே நிபுணர்கள் கணிப்பு. உலக எண்ணெய் சந்தைக்கும் உலக அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நிறைய தகவல்கள் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. குப்பைகளை ஒதுக்கிவிட்டு உண்மைகளைத் தேட நிறைய பொறுமை வேண்டும் என்பதே அதைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்.

நாம் இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்துக்கு வருவோம். இந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதியும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் மாற்றுப் பொருளாதார வழிமுறைகளில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு சவூதி ஆளாகியிருக்கிறது. அதன் திட்டங்களில் ஒன்றாக ஆசிய நாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஒப்பந்தத் தொகையில் ஐம்பது சதவிகிதம் வரை சவுதியின் முதலீடு இருக்கும் என்று தெரிகிறது. நாம் ஈராக்கிடம் இருந்துதான் அதிக அளவிலான எண்ணையை இறக்குமதி செய்கிறோம். சவுதி அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் சவுதி இங்கு கவனம் குவிக்க விரும்புகிறது. அமைய இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் உலக அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்பது தகவல். நம்மிடம் ஏற்கனவே இருக்கும் reliance refinery அந்த வகையினங்களில் உலகில் இருக்கும் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தியதில் மோடியின் பங்கு இருக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்பந்தம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கிறபோதுதான் முழு விபரம் தெரியும். அம்பானி, அதானி போன்றவர்கள் நிச்சயம் இதன் உள்ளே வருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதன் பின்னுள்ள பொருளாதார நலன்கள் என்ன?

முதலில் இந்த சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மாணிக்க அதை design செய்யும் எஞ்சினியர்களுக்கான வேலை வாய்ப்பு. இப்போதும் கூட இந்தியப் பொறியாளர்கள் இந்த திறனில் அட்டகாசமானவர்கள். உலகில் இருக்கும் எல்லா மிகப்பெரிய Engineering கம்பெனிகளும் இந்தியாவில் அலுவலகம் வைத்திருக்கிறார்கள். சென்னை அதில் முக்கியமான கேந்திரம்.

அதனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் நிறைய பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும். அது சார்ந்த கம்பெனிகள் சுறுசுறுப்படையும். இரண்டாவது கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள். Pipes, flanges, plates, valves என தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு. எப்படியும் முப்பது சதவீதத்தில் இருந்து ஐம்பது சதம் வரை உள்ளூரிலேயே பொருட்களை கொள்முதல் செய்ய இந்த கூட்டமைப்பு திட்டமிட்டாலே, அது manufacturing sectorக்கு மிகப்பெரிய சந்தையைத் திறந்துவிடும். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதுமான தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பாய்ச்சலை இது வழங்கும். நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரும். இருக்கும் நிறுவனங்கள் நிச்சயம் போதாது. After Sales Service நிறுவனங்கள் அடுத்த கட்டத்துக்கு விரிவடையும்.

மேலும், சுத்திகரிக்கட்டப்பட்ட எண்ணெயை விட கச்சா எண்ணெயை வாங்கி இங்கேயே சுத்திகரிப்பதன் மூலம் மக்களுக்கு இப்போது தருவதை விட குறைந்த விலையில் எண்ணையை அரசு விற்க முடியும். ஆனால் அதை செய்யாமல், வழக்கம் போல நம்மைக் குனியவைப்பார்கள் என்று நம்புவதற்கே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு சுத்திகரிக்கப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் அதனால் வரும் பொருளாதார நலன்கள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருக்கும். சுற்றுச் சூழலுக்கு வரும் பாதிப்பு என்று பார்த்தால் நிச்சயமாக அதன் பாதிப்புகள் உண்டுதான். ஆனால் அவற்றைக் குறைக்க முடியும். அதில் கவனம் செலுத்தவேண்டியது அரசின் பொறுப்பு.

வலதுசாரி ஆட்கள் மேல் எனக்கு இந்த விஷயத்தில் நம்பிக்கை உண்டு. கலாச்சார விஷயத்தில் இந்தியர்களிடம் மட்டும் அவர்கள் கறாராக இருப்பதைப் போல மாசுக் கட்டுப்பாடு விஷயத்திலும் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் இது நடப்புக்கு வரும்போது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கும் என்றும் நினைக்கிறேன். பிஜேபி ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்களும், மற்ற மாநிலங்களில் அவர்களது கவர்னர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளும் இனி பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்க கண்ணும், கருத்தும், குறியுமாக உழைப்பதைப் பார்த்தால் இந்த எண்ணம் நாளுக்கு நாள் உறுதியாகிறது.

இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. ஆனாலும் கூட ஆளும் பிஜேபி அரசு இதன் சாத்தியத்துக்கு உரிமை கோரமுடியும். ஏனெனில் பொருளாதார திசையில் ஒரு அரசின் சாதனை என்ற வகையில் இது ஒரு மைல்கல். சென்ற ஆண்டு சவுதி சென்ற போது L&T யின் construction site க்கு போயிருந்தார் மோடி. ஒரு பிரதமர் தனது நாட்டு தொழில் நிறுவனம் ஒன்றின் இடத்திற்கே போனதும் தொழிலாளர்களுடன் உணவருந்தியதும் இந்திய அளவில் முன்னுதாரணம் இல்லாதது. மேற்கத்திய நாடுகளில் இது சர்வ சாதாரணம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் மேற்கத்திய அரசியல் தலைவர்கள் தங்களது நாட்டு நிறுவனங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகமூட்டுவார்கள். இந்தியத் தலைவர்கள் அதில் சோம்பல் மிகுந்தவர்கள்.

மோடி அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இந்திய மக்களை இந்தியாவில் சந்திப்பதில்தான் அவருக்கு ஒவ்வாமை. குறிப்பாக உள்நாட்டில் போகுமிடங்களில் எல்லாம் சங்கிகளைப் பார்த்துத் தொலையவேண்டுமே என்று கடுப்பாவார் போல. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் எல்லாம் அப்படித்தான். இந்தியர்களைத் தவிர மீதி எல்லோரிடமும் அவர்கள் கனிவாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் இந்தியராக இருந்தால், அவர்களுக்கு சோறு கூட போடாமல் தேச அபிமானத்தைக் காப்பார்கள்.

இப்படியெல்லாம் வெளிநாட்டு முதலீடுகள் வருகிறபோது, இப்போது அணிவதைப் போன்ற போலியான கலாச்சார முகமூடிகளை அணியமுடியாது என்பது மோடிக்குத் தெரியும். குஜராத்தில் மது விலக்கு அமலில் இருந்தாலும், தொழில் நிமித்தமாக நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் எல்லா ரக மதுவும் கிடைக்கும். நுனி நாக்கு ஆங்கிலத்துடன் ஊற்றித் தருவதற்கு குஜாராத்தி பெண்கள் உண்டா என்பது நீங்கள் அவர்களது நிறுவனத்திற்கு உறுதி செய்யப்போகும் லாபத்தைப் பொறுத்தது. இப்போதும் எனது நண்பர்கள் குஜராத்துக்கு தொழில் முறைப் பயணம் என்றால் ஆர்வமாகத் தான் போகிறார்கள்.

அதனால் நான் மோடியை நம்புகிறேன். அவர் நிறைய முதலீடுகளை இதியாவிற்கு ஈர்க்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். சர்வதேசப் பரப்புடன் இந்தியா எவ்வளவு விரைவாக பிணைக்கபடுகிறதோ அவ்வளவு விரைவாக அது தற்போதைய பாசிச நடைமுறையில் இருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள முடியும் என்கிற கனவே இதற்கு அடிப்படை. எப்போதும் துயரமான சம்பவங்களையே சமூக ஊடகங்களில் படிக்க வேண்டியிருக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து படித்து சந்தோஷப்படலாம். அந்த அளவுக்கு அது தகுதி வாய்ந்ததுதான்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்

பெண்கள் மீதான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர தனது அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று காட்ட பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ‘மகள்களை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த முழக்கம் வெற்று வாய்வீச்சு என்பதை யதார்த்தம் காட்டுகிறது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

சண்டிகரிலும் சட்டிஸ்கரிலும் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் ‘மகள்களை காப்போம்’ முழக்கத்தின் போலித்தன்மையை தெளிவாகக் காட்டுகின்றன. சண்டிகரில் அரியானா பாஜக தலைவரின் மகன் விகாஸ் பராலாவும் அவரது நண்பரும் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்று கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின், அதாவது மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சண்டிகர் காவல்துறை, கடத்தல் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்படும் என்று துவக்கத்தில் சொன்னது; ஆனால் பிறகு அதில் இருந்து பின்வாங்கி, அதன் மூலம் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலையாவதை உறுதி செய்தது. மறுபக்கம் புகார் கொடுத்த பெண்ணை அவமானப்படுத்தும் இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பிரச்சாரமும் நடந்தது; பாஜகவின் அதிகாரபூர்வ தேசிய பேச்சாளர் ஷாய்னா என்சியும் சுபாஷ் பராலாவின் சகோதரி மகன் குல்தீப் பராலாவும்தான் இதை நடத்தினார்கள்.

குல்தீப் பராலா மீதும் அவரது மற்றொரு உறவினர் விக்ரம் பராலா மீதும் காரில் ஒரு சிறுமியை கடத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நடந்துகொண்டிருக்கிற இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சண்டிகர் காவல்துறையினர் முயற்சியால் நீர்த்துப்போகின்றன என்றும் இப்போது தெரிய வருகிறது. பாஜக அரியானா தலைவரின் மகனும் உறவினர்களும் பெண்களை பின்தொடரும், அவர்களை கடத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரிய வரும்போது, அரியானா பாஜகவின் துணை தலைவர் ரம்வீர் பாட்டி, பாதிக்கப்பட்ட பெண் அந்த இரவில் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கிறார்; தங்களது மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ள தவறியதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிற கட்சிகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சுமத்தும் பழக்கம் உடையவர்கள்தான்; ஆனால், பாஜக விசயத்தில் பெண்களின் நடத்தை பற்றிய ஆணாதிக்கக் கருத்துக்கள் நேரடியாக சங்பரிவார் கருத்தியலில் இருந்து உருவாகின்றன. பெண்களை ஆண்களின் ‘பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும்’ வைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கருத்தியல் சங்பரிவார் கருத்தியலாளர்கள் எழுத்திலும் அதன் சமீபத்திய நட்சத்திரமான யோகி ஆதித்யநாத் எழுத்திலும் வெளிப்படுகின்றன. அதனால்தான் 2014ல் அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், பெண்களின் தூண்டுகிற ஆடைகள்தான் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்றும் சுதந்திரம் வேண்டும் என்று சொல்லும் பெண்கள் ‘ஆடைகளின்றி திரிய வேண்டும்’ என்றும் சொன்னார்; அதனால்தான் அரியானா அரசு அதிகாரி ஜவஹர் யாதவ், ஜேஎன்யு பெண்கள் ‘பாலியல் தொழிலாளர்களை விட மோசமானவர்கள்’ என்றார். அதனால்தான், அரியானாவின் பாஜக அரசாங்கம், பெண்களின் முகத்திரைதான் மாநிலத்தின் பெருமை, கவுரவம் என்று போற்றி விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.

பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று சொல்கிற அவர்கள், ஆளும்கட்சியான பாஜகவின் தலைவர்களின் உறவினர்கள் பெண்களை பின்தொடர்வதை, அவர்களை கடத்துவதை அனுமதிக்கிறார்கள்; காவல்துறை இந்த புகார்களை மென்மையாக கையாளும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

அதிகாரம் படைத்தவர்கள், பெண்களை பின்தொடரும் குற்றத்தில் ஈடுபடும்போது, அவை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் மூடிமறைக்கும் தனது வரலாறு பற்றி பாஜக பெருமை பேசுகிறது. 2009ல் அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்று பரவலாக நம்பப்படுகிற ‘தலைவருக்காக’ ஒரு பெண்ணை அவர் நீண்ட காலம் சட்டவிரோதமாக கண்காணித்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. ‘ஒரு தந்தைக்காக அவரது மகளைக் காப்பாற்ற’ அந்த சட்டவிரோத கண்காணிப்பு நடந்தது என்று 2013ல் பாஜக விளக்கமளித்தது. ஒரு பெண்ணை பின்தொடர ஒரு முதலமைச்சர் அரசு எந்திரத்தை பயன்படுத்தியதை நியாயப்படுத்த முனையும் ஓர் ஆணாதிக்க விளக்கமே இது.

அதிகாரமும் அதன் விளைவாக தண்டனை பற்றிய அச்சம் அற்றுப் போவதும் பாலியல் வன்முறையை தூண்டும் என்பதை சண்டிகர் சம்பவம் காட்டுகிறது என்றால், சட்டிஸ்கரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஆணாதிக்க பாதுகாப்புவாத கருத்தியல் பாலியல் வன்முறைக்கு எப்படி வழிவகுக்கிறது, துணிவு தருகிறது என்பதை நிகழ்த்திக் காட்டுவதாக உள்ளது.

மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையாலும் சட்டிஸ்கர் காவல்துறையாலும் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிற, படுகொலை செய்யப்படுகிற சம்பவங்கள் அதிகரித்து வருகிற பின்னணியில் உள்ளூர் தொலைகாட்சி ஒன்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையும் சேர்ந்துகொண்டு பஸ்தாரில் படையினரின் இருத்தலை நியாயப்படுத்த ரக்ஷா பந்தன் பண்டிகையை பயன்படுத்தினர்.

பஸ்தாரின் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்களை ‘பாதுகாக்க’ மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை ‘சகோதரர்களும்’ வேண்டுமென கருதுகிறார்கள் என்று முன்னிறுத்தப் பார்த்தார்கள். ஆனால் தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள். இந்த பிரச்சனை மீது விசாரணை மேற்கொண்டுவரும் சட்டிஸ்கர் காவல்துறையினரிடம் நீதி கிடைக்கும் என்று இந்த மாணவிகள் எதிர்ப்பார்க்க முடியுமா?

பாதுகாப்புப் படையினர் மீதான பாலியல் வன்முறை வழக்குகள், மிரட்டல்களால் கைவிடப்படும் நீண்ட மோசமான வரலாறு கொண்டது சட்டிஸ்கர். சண்டிகர் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தங்கள் பணியை ஆற்றுகிற ஊடகங்கள், சட்டிஸ்கர் சம்பவத்திலும் அப்படி நடந்துகொள்ள தவறுகின்றன.

அரசியல் மூளைச்சலவை செய்ய அசாமில் இருந்து பெண் குழந்தைகளை கடத்துவதாக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. ரூபா கங்குலி உள்ளிட்ட மேற்குவங்க பாஜக தலைவர்கள் மீது குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இசுலாமிய ஆண்களிடம் இருந்து ‘மகள்களை காப்போம்’ என்று இந்துக்களுக்கு சொல்வதற்காக பாஜக முன்வைக்கிற மகள்களை காப்போம் முழக்கம், பாஜக அரசாங்கங்களின் கண்காணிப்பில் பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாக்கப்படுவதால், கேலிக்குள்ளாகிறது.

நாட்டு குடிமக்கள் அனைவரும், பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு சரியான பதிலடி தர வேண்டும்; பெண்களின், சிறுமிகளின் சுதந்திரம், சமத்துவம் ஆகிய உரிமைகளை அறுதியிட வேண்டும்; பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தின் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

– ML UPDATE Weekly

நிதி ஆயோக்கின் புதிய தலைவர் ராஜீவ் குமார்: கும்பலாட்சியில் புதிய வரவு ….

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அரவிந்த் பனாகரிய ராஜினாமாவை அடுத்து, நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக திரு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ராஜினாமாவின் போது எழுந்த விவாதங்கள் கூட பனகாரியா விஷயத்தில் நடைபெறவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் இது குறித்து வாய் திறக்கவில்லை.நிதி ஆயோக்கின் புதிய தலைவர் குறித்து செய்திகள் பத்திரிக்கைகளில் வரத் தொடங்கியுள்ளன. மாறாக, பனகாரியா ஏன் பதவியை விட்டு விரட்டப்பட்டார் அல்லது ஓடினார் என்ற செய்தி இல்லை!

தற்போது பதவிக்கு வருகிற ராஜீவ், சிறந்த மோடி பக்தர். அவரது கட்டுரைகள் அனைத்தும் மோடிக்கு துதி பாடுவதை வழக்கமாகக் கொண்டவை. செல்லாக் காசு அறிவிப்பு ,புதிய வரி விதிப்பு கொள்கை போன்றவற்றை தீவிரமாக ஆதரித்தவர். புதிய பதவிக்கு இத்தகுதிகள் போதும்!

ராஜீவ் குமார், மத்திய கொள்கை ஆய்வு மையம், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சங்கம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இந்திய பொருளாதார துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கு ஆலோசகராக பணியாற்றியவர். இவை போக பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். மோடி முன்னுள்ள சவால்கள் என சில ஆண்டுகளுக்கு முன்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ராஜீவ், லிபரல் பொருளாதாரவாதி. உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தை இந்தியாவில் தீவிரப்படுத்த முனைகிற லிபரல்வாதி. இவரது கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை , சுதந்திர வர்த்தகப் பாதைக்கு திறந்துவிடுவதற்கு கோருபவை.

மோடியின் முதல் மூன்றாண்டு ஆட்சி காலத்தில்,தீவிர பொருளாதார சீர்திருத்த நடவைக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிற ராஜீவ்,மோடியின் இரண்டாம் சுற்று ஆட்சியில் இது நடைபெறும் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நிதி ஆயோக்கின் துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் அமர்த்தப்பட்டுள்ளார்.

மோடியின் இரண்டாம் சுற்று சீர்திருத்தம் என ராஜீவ் கூறுவது, விவசாயம், ரயில்வே, மருந்து பொருள்கள், பாதுகாப்பு போன்ற துறைகளை முற்றிலும் தனியார்மயப்படுத்துவது. நீதித்துறையை சீர்படுத்துவது. இந்த இலக்கை நோக்கி வேலை செய்வதற்கு ஏற்ப ராஜீவ் தற்போது பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல, சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சந்தையின் மாயக் கையை நம்பி திறந்துவிடுகிறார்கள். வேலையற்ற வளர்ச்சி, அதிகரிக்கிற சர்வதேச கடன்கள், வங்கி திவால் நிலைகள் என நாடே பெரும் நெருக்கடியை நோக்கி சென்றுகொன்டுள்ள நிலையில், சொந்த செலவில் இவர்கள் சூனியம் வைத்ததுக் கொள்கிறார்கள்.

அதிதீவிர வலது கும்பலான ஆர் எஸ் எஸ் சின் சுதேசி கோஷத்தையும் அவர்களுடான நல் உறவையும் பணகாரியாவும் ராஜனும் கண்டுகொள்ளாமல் போனது அவர்களுக்கு எதிராக திரும்பியது என கூறலாம் .இந்த சவாலை ராஜீவ் குமார் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.

மேலும் ராஜீவ் குமார், எதையும் சற்று வெளிப்படையாக பேசக் கூடிய பண்பு உள்ளவராகத் தெரிகிறார். வேகமாக வளர்ந்து வருகிற நாடு என இந்தியாவை சொல்லாதீர்கள், சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் என தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். மோடியின் கும்பல் ஆட்சியில் புது வரவாக வந்துள்ள, ராஜீவ் குமார் என்ன செய்தாலும், தனது கும்பலுக்கு சொந்த சவக்குழி வெட்டுவதை தவிர வேறு ஏதும் செய்ய முடியாது நிலைதான் இன்றைய எதார்த்தமாக உள்ளது…!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

 

“மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்

அமுதன் ராமலிங்கம் புஷ்பம் (46 வயது)  பரவலாக அறியப்பட்ட ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர். ஆவணப்படங்களை இயக்குதல், திரையிடுதல் , கல்லூரிகளில் வகுப்பு எடுத்தல், பயிலரங்குகள் நடத்துதல் என்பதை முழுநேரப் பணியாக செய்துவருபவர். மதுரையைச் சார்ந்த இவர் இப்போது சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். த டைம்ஸ் தமிழுக்காக ஆர்.பி. அமுதனுடன் பீட்டர் துரைராஜ் நடத்திய நேர்காணல் இது.

கேள்வி: ஆவணப்படங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

பதில்: என் அப்பா ஒரு கம்யூனிஸ்டு , அம்மா தீவிர எம்ஜிஆர் ரசிகை. இது போதாதா ? இரண்டு பேரின் கலவைதான் நான். என் வீட்டில் தோழர்கள் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். எட்டாவது படிக்கும் போதே நான் சினிமா இயக்குநராவேன்  என்றுதான் சொன்னேன் . 1994  ல் நான் கல்லூரியில் எம்.ஏ. படிக்கும்போது  BBC எடுத்த Children of Chernobyl  என்ற படத்தை திரையிட்டேன்.

கே: உங்களுக்கு முன்னோடி என்று யாராவது இருக்கிறார்கள்?

பதில் : தில்லியில் செண்டிட் என்ற அரசு சார்ந்த அமைப்பு 5 நாட்கள் ஆவணப்பட பயிலரங்கம் நடத்தியது.. அதில் 25 ஆவணப்படங்கள் திரையிட்டனர்; விவாதித்தோம். பிறகு இரண்டு ஆண்டுகள் தில்லியில் பயிற்சி எடுத்தேன். இதுதான் நான் ஆவணப்படம் எடுக்கக் காரணமாயிற்று.

amudhan RP
ஆர்.பி.அமுதன்

கே: நீங்கள் இயக்கியுள்ள  ஆவணப்படங்கள் பற்றி சொல்லுங்களேன்!

ப: மார்க்சிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் படுகொலையை மையப்படுத்தி லீலாவதி என்ற ஆவணப்படத்தை நான் முதலில் 1997 ல்  இயக்கினேன். அடுத்த ஆண்டு குண்டுப்பட்டி தலித்துக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையை பற்றி  ” தீவிரவாதிகள் ” என்ற படம் இயக்கினேன். மரணதண்டனைக்கு எதிரான “தொடரும் நீதிக் கொலைகள் “, திருப்பூர் நகரைப்பற்றி கடந்த ஆண்டு ” டாலர் சிட்டி “என 19 ஆவணப்படங்கள் இதுவரை இயக்கி உள்ளேன். இப்போது ” என் சாதி ”  என்ற படம் எடுத்து வருகிறேன். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்  இந்த துறையில்  நான் ஒரு முக்கியமான முன்னோடி என்று சொல்லலாம்.

கே: ஆவணப்படங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்களா ?

ப : ஆவணப்படம் சொல்லும்  செய்தி என்பது எளிமையானது; ஆழமானது; தல மட்டத்தோடு தொடர்பு கொண்டது( local ness) ;நேரடியானது;நாணயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில்  சுயாதீனமான அரசியல் படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது ஆரோக்கியமானது. 2003 ல் நான் எடுத்த ” பீ ” ஆவணப் படத்திற்கு மதுரை மாநகராட்சி நல்ல எதிர்வினை ஆற்றியது. ஆணையாளராக இருந்த கார்த்திக் பொதுக் கழிப்பிடங்களின் பாராமரிப்பை சுய உதவிக் குழுக்களிடம் கொடுத்தார். பல இடங்களில் தமுஎகச இதனை திரையிட்டது; அப்படி திரையிட்டதே சில சமயங்களில் பின்னர்தான் எனக்கு தெரியவரும். இந்தப் படத்தினால்  துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்த விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இது ஒரு முன்முயற்சி என்று சொல்லாம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 80ம் ஆண்டு விழா பம்பாயில் நடைபெற்ற போது அதில் அரைநாள் நிகழ்வை திரைப்படங்களிற்காக ஒதுக்கி இருந்தார்கள். அதில் இந்தப்படத்தையும் ஆனந்த் பட்வர்தன் பரிந்துரையின்பேரில்  திரையிட்டார்கள். நான் இயக்கிய ” தொடரும் நீதிக் கொலைகள் ” மரண தண்டனைக்கு எதிராக சலனத்தை ஏற்படுத்திய படம்.

கே: வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் திரைப்படம் இயக்குவீர்களா ?

ப: நிச்சயமாக மாட்டேன். ஏனெனில் திரைப்படம் என்பது தனி துறை. அதற்கும் ஆவணப்படத்திற்கும் சம்மந்தமே கிடையாது .

கே: நீங்கள் ஆவணப்படம் திரையிடுவது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

ப: வெள்ளைச் சுவர்  அல்லது வெள்ளை வேட்டி இருந்தால் போதும். என்னிடம் புராஜெக்ட்டரும், லேப் டாப்பும் எப்போதும் இருக்கும். நாங்கள் 10 பேர் சேர்ந்து மறுபக்கம் என்ற அமைப்பை 1994 -ல் ஏற்படுத்தினோம். இதுவரை 1000 திரையிடல்களுக்கு மேல் செய்துள்ளோம். 1998 முதல் மதுரையில் 18 ஆண்டுகளாக , தொடர்ச்சியாக ஆண்டுதோறும்  ” சர்வதேச திரைப்பட மற்றும ஆவணப்பட விழா ” நடத்தி வருகிறோம். அரசு சாராத மூத்த திரைப்பட விழா இது. இதுவே ஒரு பெரிய சாதனைதான். சென்னையிலும் 6 ஆண்டுகளாக இந்தத் திரைப்பட விழாவை மறுபக்கம் நடத்தி வருகிறது. இது தவிர, கல்லூரிகள், சங்கங்கள், பல அமைப்புக்கள், நண்பர்கள் என எல்லா இடங்களிலும் திரையிட்டு வருகிறோம்.

கே: நீங்கள் திரையிடுகிற படங்களுக்கு எத்தனை பேர் சாதாரணமாக வருவார்கள் ?

ப: எண்ணிக்கை என்பது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. 10  பேருக்கு கூட நான் திரையிட்டுள்ளேன்; பெரிய அரங்குகளிலும் திரையிட்டுள்ளேன். மற்ற இயக்குநர்களின் படங்களையும் நாங்கள் திரையிட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை திரையிடலுக்குப் பின்பு விவாதம் நடத்துவோம். வந்தவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லுவார்கள். வந்தவர்களிடம் ஒரு intellectual stimulation நடந்தால்  அதுவே எனக்கு போதுமானது.

கே: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆவணப்பட இயக்குநர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

ப: ரவி சுப்பிரமணியம் (ஜெயகாந்தன்), அம்ஷன் குமார், ப்ரசன்னா ராமசாமி (அடூர் கோபாலகிருஷ்ணன்) போன்றோர் ஆளுமைகள் குறித்து படம் எடுத்துள்ளனர். சமூகம் சார்ந்து கீதா இளங்கோவன் (மாதவிடாய்) படங்கள் எடுத்து வருகிறார். பாரதி கிருஷ்ணகுமார், ஆர்.வி.ரமணி போன்றோரும் படம் எடுத்து வருகின்றனர். ஆர். ஆர். சீனிவாசன் , லீனா மணிமேகலை போன்றோர் அரசியல் படம் எடுத்து வருகின்றனர். தமிழ் இசுலாமியர்கள் பற்றி கோம்பை எஸ்.அன்வர் “யாதும்” என்ற படம் எடுத்துள்ளார்.
திவ்யபாரதி எம்.எல். தோழர்கள் உதவியோடு  ” கக்கூஸ் ” படம் எடுத்துள்ளார். பூவுலகின் நண்பர்கள், மே 17 இயக்கம், மகஇக  போன்ற அமைப்புகளும் படம் எடுத்து வருகின்றன.

கே: கருத்துரிமைப் பாதுகாப்பு இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

ப: பெருமாள் முருகனின் நாவலுக்கு தடை என்ற போது இதை ஆரம்பித்து இயக்கம் நடத்தினோம். பாடகர் கோவன் கைதை எதிர்த்து இயக்கம் நடத்தினோம். இதில் என் பங்களிப்பு என்று தனியாக சொல்ல முடியாது ; கூட்டு முயற்சிதான்.

கே: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பற்றி சொல்லுங்களேன் ?

ப: சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை என்று வந்தபோது அதற்கு எதிர் வினையாக அம்பேத்கர் அய்யங்காளி வட்டம் (கேரளா), அம்பேத்கர் மார்க்சு வட்டம், அம்பேத்கர் பூலே வட்டம் (மகாராஷ்டிரா) , அம்பேத்கர்  சிங்காரவேலர் வட்டம் போன்ற பல அமைப்புகள் நாடெங்கும் தோன்றின. அதில் ஒன்றுதான் இது. மதுரை, திருச்சி, கோவை, சென்னை நகரங்களில் இவை தோன்றின. இதன் மூலம் பல நிகழ்ச்சிகள் நடத்தினோம்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி அக்லாக் முகமது தாத்ரியில் படுகொலை செய்யப்பட்ட போது மாட்டிறைச்சி திருவிழா நடத்தினோம். ஏறக்குறைய தமிழ்நாட்டில் நடந்த முதல் மாட்டிறைச்சி விழா இதுதான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திடலில் நடத்தினோம்.

பெரியார், அம்பேத்கர் , மார்க்ஸ் பற்றி தொடர் வகுப்புகள் எடுத்தோம். திராவிட ஆட்சியின் கீழ் நடைபெற்ற நற்செயல்கள் குறித்து பேச ” எது வளர்ச்சி ? ” என்ற முழுநாள் கருத்தரங்கு நடத்தினோம். பூனா திரைப்பட கல்லூரி மாணவர்களின் 100-ம் நாள் போராட்ட நாளன்று முழுநாள் கலைவிழா நடத்தினோம். இத்தகைய நிகழ்வுகளில் ஏறக்குறைய எல்லா அமைப்புகளிலிருந்தும் கலந்து கொண்டனர் என்பதுதான் சிறப்புச் செய்தி. மகளிருக்கான தனியான  மகளிர் விழா நடத்தினோம்.  மத்திய அரசினை எதிர்த்து சாகித்திய அகாதமி விருதுகளைத்  திருப்பி அளித்த கர்நாடக எழுத்தாளர்களுக்கு பாராட்டுவிழா நடத்தினோம். ரோகித் வெமுலா, நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூட்டம் நடத்தினோம்.

கே : முசாபர் நகர் பாகி ஹை – ஆவணப் படம் திரையிடல் குறித்து?

ப: ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி தூண்டுதலின் பேரில் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடுவதாக இருந்த இந்தப் படத்தை திரையிட கடைசி நேரத்தில் மறுத்து விட்டது நிர்வாகம். எனவே, கல்லூரி மாணவர்கள் தங்கள் உணவுக்கூடத்தில் வேட்டியை திரையாக கட்டி திரையிட்டனர். இதனையொட்டி நாடு முழவதும் 50 இடங்களில் இதே படத்தை ஒரே நாளில் திரையிட முடிவுசெய்தார்கள். தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் திரையிட முடிவு செய்தோம். திருச்சி , மதுரையில் காவல்துறை தடுத்து விட்டது. கோவையில் பொது நிகழ்வாக இல்லாமல் நடத்தி விட்டார்கள். இங்கு சென்னையில் ஸ்பேசஸ் அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் நுங்கம்பாக்கம் காயிதே அரங்கில் நடத்திக் கொள்ள அதன் இயக்குனர் அனுமதி அளித்தார்.  எதிர்ப்பினை எதிர்த்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

கே: இதுதான் உங்களுடைய முழுநேர வேலையா? வருமானம்?

ப: என் துணைவர் தாக்‌ஷா உடையலங்கார நிபுணர். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்.நான் கல்லூரிகளுக்கு வகுப்பு எடுக்கிறேன். நாடு முழுவதும் ஆவணப்பட பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். இது தவிர ஒருசில நிறுவனங்களுக்கு in house படம் எடுக்கிறேன்; இது cooly films.

கே: உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்?
ப: பியேதர் தஸ்தாயேவஸ்கி

கே: தமிழில் பிடித்த இயக்குனர்?
ப: மகேந்திரன்

கே: தமிழில் பிடித்த படம்?
ப: உதிரிப் பூக்கள்

கே: தற்போதைய அரசியல் சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?
ப : வருகிற ஜூன் 16 முதல் 20 வரை சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விழா கேரளாவில் நடைபெற உள்ளது. கேரள அரசு இதனை நடத்துகிறது. இதில் திரையிடுவதற்காக 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மூன்று படங்களை  (ரோகித் வெமுலா, காஷ்மீர்,நேரு பல்கலைக்கழகம் தொடர்பானது) திரையிட மத்திய அரசு மறுத்து விட்டது. இதுதான் மத்திய அரசு.

ஜனநாயக சக்திகளின் தோல்விதான், முற்போக்கு சக்திகளின் தோல்வியில்தான் மோடியின் வெற்றி உள்ளது என்று நான் நினைக்கிறேன். மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார். அதனால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு விலங்கிற்கும் உள்ள உணவு, கலவி (இனப்பெருக்கம்) போல மற்றொரு  அடிப்படையான உணர்வு (basic instinct) வன்முறை. மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி, நாகரிகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மனிதர்களை மோதச் செய்வதில்தான் பாசிசச் சக்திகளின் வெற்றி இருக்கிறது. இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள்.  இல்லையென்றால் காஷ்மீரில் இராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்ட இளஞைனுக்காக மக்கள் வெகுண்டு எழாமல் விவாதம் நடத்துவார்களா என்ன?

கே: உங்கள் உழைப்பிற்கேப்ப அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்து  இருக்கிறதா?

ப: நிச்சயமாக . இந்த ஆண்டு திராவிடர் கழகம் எனக்கு ‘பெரியார் விருது’ வழங்கியுள்ளது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன். எள்னுடைய பல ஆவணப்படங்களுக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைத்துள்ளன. கடந்த மாதம் கோழிக்கோடு நகரில் நடந்த Youth Spring Film Festival ல் Honorary Director ஆக என்னை தேர்ந்து எடுத்தார்கள்; ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவார்கள், இந்த ஆண்டு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என் படத்தை திரையிட்டார்கள் , அதைப்பற்றி பேசினார்கள். இப்போது சென்னையில் பத்து இடங்களில் என்னால் படங்களை திரையிடச் செய்ய முடியும். இதைவிட என்ன  அங்கீகாரம் வேண்டும்?

நேர்காணல் செய்த பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

பதிவு ஜுன் 14 அன்று மேம்படுத்தப்பட்டது.

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது.

ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 சதவீதம் ஆகும். சீனாவின் வளர்ச்சி சதவீதமான 6.9 விட இது குறைவாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி சதவீதமான 6.0விட தற்போதைய காலாண்டின் வளர்ச்சி சதவீதம் குறைவு எனவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் அறிவித்த ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவு எதிர்பாராத பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஐசிஐ நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரசன்னா, ‘இந்த டேட்டாக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. நவம்பருக்கு பிறகான பணத்தாள் விவகாரம் காரணமாகக்கூடும்’ என்கிறார்.

 

மோடியின் எதிர்பாராத முடிவு வரி செலுத்தப்படாத பணத்தை வெளிக்கொணரும் என கருதப்பட்டது.  நேரடியாக பணத்தாள்களை செலுத்தி தங்களுக்கு தேவையானதை பெரும்பாலானவர்கள் பெற்றுக்கொள்ளும் நிலையில் அது எதிர்விளைவையே ஏற்படுத்தியது.

source:in.reuters.com

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

ML Update May 16-22

முழுமையாக மூன்று ஆண்டுகளாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் பாஜக பல சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கிறது. தேர்தல்களில் தோல்வியடைந்த இடங்களில் கட்சி தாவல்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது என்ற பொருளில் கடந்த காலங்களில் பாஜகவின் ஆதிக்கம் இப்போது கூடுதலாக போல் இருந்ததில்லை. தனது பாசிச நிகழ்ச்சி நிரலை கட்டவிழ்த்து விட, அதை மக்கள் மீது செலுத்த சங்பரிவார் இந்த தருணத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.

வெறுப்புப் பேச்சு பேசுவதை வழக்கமாக கொண்ட, உத்தரபிரதேசத்தில் பல மத வன்முறை வழக்குகளில் முதன்மை குற்றவாளியான, குண்டர்களை கொண்டு தனிப்படை அமைக்கும் சிற்பியான யோகி ஆதித்யநாத் போன்ற ஒருவர் நாட்டின் மக்கள் தொகை அதிகமான ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக்கப்படுகிறார். நாடு முழுவதும் பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை தாக்குகிறார்கள். படுகொலை செய்கிறார்கள்.

அதிகார மமதை கொண்ட ஆட்சியாளர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்ட நேரம்தான். ‘புதிய இந்தியாவின்’ அடித்தளம் என்று மோடி இதை அழைக்கிறார். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நிலைமைகள் படுமோசமாக இருக்கின்றன. இந்திய மக்களின் அரசியல்சாசன உரிமைகள் அதிகரித்த அளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன, நமது சமூக இருத்தலை மதவெறி துருவச்சேர்க்கையும் வெறுப்பும் சூழ்ந்துகொண்டுள்ளது என்பதனால் மட்டுமல்ல; பொருளாதார பாதுகாப்பின்மை, நிச்சயமின்மை என்ற பூதம், நகர்ப்புற இந்தியாவை விரட்டத் துவங்கியுள்ளது என்பதாலும்தான்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நாட்டுப்புற இந்தியாவை விவசாய நெருக்கடி அழிவில் தள்ளியுள்ளதற்கு அக்கம்பக்கமாக, நாடெங்கும் வேலையின்மை மிகப் பெரிய அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், இந்திய பொருளாதாரம் ஒட்டுமொத்த விதத்தில் வளர்ச்சியை பதிவு செய்தபோதும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. இப்போது வளர்ச்சி விகிதமே பெருமளவு சரிந்துள்ள நிலையில், வேலை வாய்ப்பின்மை மேலும் அதிகரித்துள்ளது. பணமதிப்பகற்றுதலின் ஆறு மாத காலம் பல தொழில்களிலும் அளிப்பு – உற்பத்தி சங்கிலியை அறுத்து விட்டதால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை விவசாயம், உற்பத்தித் துறைகளுடன் நின்றுவிடவில்லை. தகவல் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் முன்செலுத்தப்படும் சேவைத் துறையிலும் – இந்தத் துறையில் பெருமளவு வேலை வாய்ப்புகள் இருந்தன – இதுதான் யதார்த்தம். அய்டி + அய்டி = அய்டி (தகவல் தொழில்நுட்பம் + இந்திய திறமை = நாளைய இந்தியா) என்ற வாய்ச்சவடால் மூலம் மோடி தனது பார்வையாளர்களைக் கவர முயற்சி செய்துகொண்டிருந்தபோது, இந்தியாவின் முக்கியமான அய்டி நிறுவனங்களில் இருந்து வந்து கெட்ட செய்தியை வர்த்தக நாளேடுகள் பின்னுக்குத் தள்ள முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வெளியேற்ற அறிவிப்பு புரட்சி அய்டி துறையை தாக்கியிருக்கிறது; பெரிய அய்டி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யவுள்ளன. இது ஒரே ஒரு முறை நடக்கப் போவதல்ல. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதிகரித்து வருகிற தானியங்கிமயம் ஆளெடுப்பை குறைக்கும்போது, இந்த வெளியேற்றுதல்களுக்கு தொழில்நுட்பம் ஒரு காரணம் என்றால், குறை சம்பள வேலைகளை இந்திய அய்டி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காணப்படுகிற பாதுகாப்பு அலை மிகவும் முக்கிய காரணமாக இருக்கும்.

திட்ட கமிசனுக்கு பதில் வந்திருக்கிற நிதி ஆயோக் நிர்வாகிகள், இந்த வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை குறைத்துக் காட்டப்பார்க்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை ‘தன்னார்வ’ இயல்பு கொண்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு விதமாகச் சொல்வதென்றால், வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, வேலை தேடும் இளைஞர்கள் கூலி, வேலை நிலைமைகள், பதவி உயர்வு போன்ற விசயங்கள் பற்றி அலட்டிக் கொள்வதால், கிடைத்த வேலையைச் செய்வதற்குப் பதிலாக, தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான இந்த விளக்கமும் அய்டி நிறுவனங்களின் ஆட்குறைப்பும் பொருந்திப் போகவில்லை.

வேலை தேடுபவர்கள் தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருப்பதுதான் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் என்று சொல்லி பிரச்சனையை மலினப்படுத்தாமல், அரசாங்கம் யதார்த்த நிலைமைகளை அங்கீகரித்து, இந்த நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் போதுமான அளவுக்கு வெற்று ஆரவாரங்களை கேட்டுவிட்டோம்; வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, துவங்கு இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற மோடியின் எல்லா ஆரவார திட்டங்களின் கூட்டு மதிப்பு மிகப்பெரிய பூஜ்ஜியம்தான்.

உண்மையில், இந்தியாவில் இன்று நாம் எதிர்கொள்வது, வேலை வாய்ப்பின்மையும், குறை வேலை வாய்ப்பும் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணி பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, கவுரவும், உரிமைகள் ஆகியவை இல்லாத வேலை வாய்ப்புகளும்தான்.

இந்திய அரசாங்கத்தின் 2013 – 2014 வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை ஆய்வின்படி, நாட்டில் உள்ள 47.5 கோடி தொழிலாளர்களில் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பணிப் பாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு இல்லை. ஒப்பந்த முறை பெருமளவில் நடைமுறையில் உள்ளது; ஆனால் நாட்டின் 66% ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இல்லை. இந்தியத் தொழிலாளர்களில் 16.5% பேர் மட்டும்தான் தொடர்ச்சியான ஊதியம் பெறுகிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 78% குடும்பங்களில் முறையான தொடர்ச்சியான ஊதியம் பெறுபவர் யாருமில்லை.

இதுபோன்ற ஒரு நாட்டின் பிரதமர் வெற்று ஆரவாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அரசாங்கம் அமர்த்தியிருக்கிற பொருளாதார அறிஞர்கள் ‘தன்னார்வ வேலை வாய்ப்பின்மை’ என்று பேசுகின்றனர்.

வேலை வாய்ப்பின்மை ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் உள்ளாற்றல்மிக்க அரசியல் ஆயுதம்தான். வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் சீற்றத்தை, விரக்தியை, தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எரிபொருளாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வேலை வாய்ப்பின்மை பசு பாதுகாப்பாளர்களின் எண்ணிக்கையை, இந்திய தெருக்களை இன்று கண்காணிக்கும் அதுபோன்ற பல கும்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

எனவே, மக்கள் நலன், ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையும் உடனடி கவனம் கோரும் பிரச்சனையே. மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி இன்று தனது எதிர்காலத் திட்டங்களாக ‘புதிய இந்தியா’, ‘நாளைய இந்தியா’ என்ற வெற்று ஆரவாரங்கள் கொண்டு நம்மை தாக்கும்போது, இதுபோன்ற வெற்று வாய்வீச்சுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று நாம் அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

விளைவுகள் பற்றி பேச வேண்டிய நேரம் இது; விவசாய நெருக்கடி மற்றும் வேலையின்மை என்ற பேரழிவுமிக்க சேர்க்கையை நாடு இனியும் பொறுத்துக் கொள்ளாது.

ML Update May 16-22

வீடியோ: Country of crony capitalism: Vijay Mallaya and a farmer not equal in any way… 

”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”

ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக ஸ்டாண்டர்ட் & புவர் என்ற பன்னாட்டு கடன் அளகீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி கணக்கில் வராத பணத்தை ஒழிக்கும் நோக்கமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். 86 சதவீத மக்கள் பயன்படுத்து பணப்பறிமாற்றம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மன்மோகன் சிங், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென், மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் பன்னாடு கடன் அளகீட்டு நிறுவனம் எஸ் & பி நிறுவனத்தின் இயக்குநர் கைரன் கரி புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, சார்பற்ற, சுதந்திர நிறுவனமாக விளங்கிய ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை செலாவணி நீக்க முடிவு கடுமையாக பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல், பொறுப்பேற்றபின் எதிர்கொள்ளும் இரண்டாவது குற்றச்சாட்டு இது. முன்னதாக வட்டி விகிதத்தை மாற்றியமைக்காததற்கு உர்ஜித் மீது விமர்சனம் எழுந்தது.

”நானும் செத்து செய்தியாகியிருப்பேன்”: ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஓர் ஆசிரியரின் அனுபவம்!

பார்வதி ஸ்ரீ

நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் எல்லாம் இருக்குமிடத்தைக்கூறி அழும் சிறியவளுக்கு சமாதனங்களைச் செய்துவிட்டு என்னிடம் தந்தார்..

“வீட்டு வாடகைக் கொடுக்கனும் டீச்சர். தினமும் வந்து 2000 எடுத்துட்டுப் போறேன். நேத்து இரண்டாவதா நிக்கும்போது பணமில்லாமப் போயிடுச்சி” என்றார்.. வங்கிக்குச் சென்றால் அங்கு அதைவிடக்கூட்டம் எனவும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துச் சென்றும் பணம் எடுக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பாவமாகத்தான் இருந்தது.

இந்நிலையில் பாதி முன்னேறியிருந்தோம்.. ஒரு நல்ல ஆத்மா பணம் இல்லை எனக் கூவிக்கொண்டே வெளியே வர “ச்சை” என புலம்பியபடியே கலைந்தது கூட்டம். டீச்சரும் புலம்பியபடியே கிளம்பினார். எதற்கும் சென்று பார்ப்போம் என உள்ளே சென்ற போது ஒரு பத்துபேர் இயந்தரத்தைச் சுற்றி நின்றிருந்தார்கள்.. அது சூடாகிவிட்டது என்றும் காத்துவரட்டும் நகருங்கப்பா என ஒருவர் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்.. அது நான் அடிக்கடி பணம் எடுக்கும் இயந்திரம். அது ஏற்கனவே 5 முறையாவது அட்டையைச் சொருகினால் தான் காசுதரும்.. இடைவிடாமல் வேலை செய்ததால் களைப்புப் போல..

இதற்கிடையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பி வந்து மறுபடியும் வரிசையில் வந்தனர். நல்லவேளை இதனால் இன்னும் ஒருமணிநேரம் நிற்க வேண்டிய நான் நான்காவதாக நின்றேன். அனைவரும் 5 முறைக்கு மேல் தேய்த்துக்கொண்டே இருந்தனர். இதில் பணம் கிடைக்காதவர்கள் அடுத்தவருக்கு வாய்ப்புவிட்டு தனிவரிசை வேறு. என் முறை வந்தது கிட்டத்தட்ட 5, 6,7 முறை அட்டையைச் செருகியும் ஏற்கவில்லை.. அனைவரிடமும் திட்டு வேறு.. பணம் எடுக்காமல் சென்றாலோ ஊருக்குச் செல்ல முடியாது.. ஒரு முறை புதியவர்கள், அடுத்தமுறை தோல்வியடைந்தவர்கள் என மாற்றி மாற்றி செருக.. எங்கள் வரிசையோ நீண்டுகொண்டே போனது.

பதற்றத்தில் வியர்த்துக் கொட்டுகிறது.. இதில் பணம் வந்தவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாகக் கருதி அவர்கள் ஒவ்வொருவரிடமும் உதவி செய்யக் கேட்டு தோல்வியே மிச்சம். இந்நிலையில் கண்கள் இருண்டு யாராவது தண்ணீர் தர மாட்டார்களா என்ற நிலை… பள்ளி விட்டு நேராகச் சென்றிருந்ததால் எனது உணவுப்பையில் இருந்த தண்ணீர் பொத்தல் கூட நினைவுக்கு வாராத அளவு மனம் இருந்தது..கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.. வங்கியில் தேவையான அளவு பணமிருந்தும் இப்படி எடுக்க முடியாத நிலை.. நாய் கையில் கிடைத்த தெங்கம்பழம் போல..

ஏனோ ஏ டி எம் வரிசையில் நின்று மக்கள் இறந்த செய்திகள் எல்லாம் நினைவுக்கு வந்தன… கடைசியாக ஒருவரிடம் கொஞ்சம் நீங்க என் அட்டையை முயற்சி செய்து பாருங்களேன் என்றேன்.. இல்லையெனில் வீடு செல்வோம் இரவு ஒரு மணிக்கு மேல் வரலாம். என்பது முடிவு..

கிட்டத்தட்ட 4:30 மணிக்கு வந்து நின்று 7:45 ஆகியிருந்தது பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.. யாராவது தேநீராவது விற்றுக்கொண்டு வரமாட்டார்களா எனப் பார்த்தேன்.. கண் தெரியவே இல்லை மயக்கநிலையில் எல்லாம் இருண்டிருந்தது.. நான் இறந்து கொண்டிருக்கிறேனோ என நினைத்தேன்..

நல்ல வேளையாக வாங்க ! வாங்க ! பின் நம்பர் அடிங்க எனக் கூச்சல் கேட்டது.. சரியாக விசைப்பொத்தானை அழுத்தும் போது எனது எண் மறந்து போனது..ஒரு நிமிடம் நிதானித்து எண்ணை அடித்து 2000 அழுத்தி ஒருவழியாக ஒரே ஒரு நோட்டு கிடைத்தது..

வெளியே வந்தேன்; சிறிது நேரம் உட்கார்ந்து நன்றாக மூச்சை இழுத்துவிட்டு தண்ணீர் குடித்தேன்.. இன்று எல்லா நாளிதழ்களிலும் எனது படத்தைப் போட்டு ஏ,டி எம் மில் மற்றுமொரு மரணம் என்ற செய்தியை நீங்கள் பார்ப்பதிலிருந்து தப்பினேன்… வயதானவர்கள், பிணியாளர்கள் இவர்களின் நிலை?

பார்வதி ஸ்ரீ, ஆசிரியர்; தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்.

மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!

ஜமாலன்

ஜமாலன்
ஜமாலன்

schadenfreude என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் “மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிக் கொள்வது.

தற்போதைய இந்திய அரசின் திடடங்கள் பொதுமக்கள் அல்லது பொதுபுத்தியின் உணர்வினை கொள்முதல் செய்கிறது தனது அரசியலுக்காக. அந்த அரசியலை நாம் schadenfreude politics எனலாம். இது ஒரு மைக்ரோ பாசிசத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும் உணர்வு. இந்திய குடிமக்களின் உடலுக்குள் இந்த உணர்வை முதலீடு செய்வதே அரசின் செல்லாக்காசுத் திட்டமும் அதன் தொடர்நடவடிக்கைகளும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பாசிஸ்டாக மாற்றும் முயற்சி. வேற்றுமையில் ஒற்றுமைக்கு பதிலாக ஒற்றுமையில் வேற்றுமையை உருவாக்கும் முயற்சி.

அரசின் செல்லாக்காசுத் திட்டம் அதன்பின் தானே முன்வந்து கள்ளப்பணத்தை தந்து அபராதம் கட்டுதல் பிறகு வருமானவரிச் சட்டத்தில் மாற்றங்கள் தற்போது தங்கநகைகள் பற்றிய வருமான வரிக் கொள்கைகளை வெளிப்படுத்தி ஒரு உரையாடலைக் கட்டமைத்தல். அப்புறம் வீடுகள் உச்சவரம்பு, சொத்துக்கள் பற்றிய மின்-புத்தக கணக்கெடுப்பு என வதந்திகளாகவும், நடைமுறைகளாகவும் ஒரு குழப்பத்தை உருவாக்கி தெளிவற்ற நிலையில் மக்கள் உள்மனதில் உணர்வுகள், சிந்தனைகள் என போராடி தாமே ஒரு முடிவிற்கு வந்து சரிதான் போலிருக்கிறது என்றும், தான்Xமற்றமை முரணில் தானை முன்வைத்து மற்றமை(அடுத்தவர்) அழிவதில் மகிழும் ஒரு மனநிலையை நுட்பமாக கட்டமைக்கிறது இந்த அரசு.

முதலில் தெளிவற்ற குழப்பமான வாழ்நிலையில் உள்ள மக்களை தெளிவான வகுப்புகளாக (மக்கள்திரளாக வர்க்கமாக) மாற்றுதல். அடித்தட்டு மக்கள், நடுத்தரவர்க்கம், பணக்காரர்கள் (தேசிய முதலாளிகள்), கார்பரேட்டுகள். இந்த வர்க்கங்களிடையே உள்ள பொருளியல் முரணை உணர்ச்சி முரண்களாக மாற்றுதல். அதாவது அடுத்தவர்க்கம் நம்மைவிட செழிப்பாக உள்ளது அது வீழட்டும் என்கிற உணர்வாக மாற்றுதல். அந்த வீழ்ச்சியை மகிழ்ச்சியாக உணரவைத்தல். ஒரு தட்டு அடுத்த தட்டை தனது எதிரியாக பாவித்தல். ஒருவகையில் அம்பேத்கர் சொன்ன படிநிலை சமத்துவமின்மை என்கிற வருண-சாதிய சமத்துவமின்மைப்போல இந்த மக்கள்திரள் சமத்துவமின்மையை உருவாக்குதல். அதில் ஒவ்வொரு தனிஉடலையும் அடையாளம் கணச் செய்தல். நான் ஏழை நடுத்தரவர்க்கம் சாகட்டும். நான் நடுத்தர வர்க்கம் பணக்கார வர்க்கம் சாகட்டும் என்பதுபோன்ற உணர்வுகளை கட்டமைத்தல் அல்லது அதை ஆழ்தளத்திலிருந்து வெளிப்பரப்பிற்கு கொண்டுவந்து அமைப்பாக்குதல். இது ஒருவகை அரசியல் திரளுதலால் (political assemblage) வரும் உணர்வும் அடையளாளமும் ஆகும். (assemblage theory பற்றி வாசிக்க டெல்யுஸ்-கத்தாரி மற்றும் பிரைன் மஸோனியின் நூற்களை வாசிக்கலாம்). இத்திட்டம் இந்தவகையாக மக்களை திரட்டியுள்ளது.

குறிப்பாக இத்திட்டம் பெரும்பான்மையான அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளின் மீது உருவாக்கப்பட்ட தாக்குதலே. அந்த உணர்வை மறுகட்டமைப்பு செய்வதே இத்திட்டம். இது தெருமுனைப்பேச்சு துவங்கி வங்கியில் கூடும் மக்களின் அறிவுரைகள், ஆறுதல்கள் வழியாக பரவி தொலைக்காட்சி தொடர் விவாதங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல பொருளாதார புள்ளிவிபரங்கள் முகநூல் கருத்துருவாக்கங்கள் வழியாக உண்மைபோல நம்ப வைக்கப்பட்டு பொது புத்தியில் ஒரு அழிவுணர்வை உருவாக்குகிறது.

அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்தல் உணர்வை இத்திட்டத்தின் ஆதரிப்பவர்களின் குரலாக பெருக்கி ஊடகங்களால் வெகுமக்கள் மனநிலையாக கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனையும் தேசபக்தி என்கிற கருத்தியலால் நுண்பாசிசவாதிகளாக (micro fascist) மாற்ற முயல்கிறது. வரலாற்றுப் பாசிசம் மக்களிடம் அதிகாரத்தால் மேலிருந்து கட்டப்படும் ஒன்று. அதை மக்கள் உளவியலில் ஏற்கும்படி செய்வது. ஒரு ஹிட்லர் பின் மக்கள் திரள்வது. அல்லது ஒரு தலைவனை தனது விடிவெள்ளியாக ஒரு குறிப்பிட்ட இன, மதவாதிகள் கருதுவது.

மைக்ரோ பாசிசமோ ஒவ்வொரு தனிமனித உடலையும் பாசிசமாக கட்டுவது. உதாரணமாக தீண்டாமை என்ற உணர்வை உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் தங்களது ஆழ்மனதில் ஒவ்வாமையாக, அசுத்தமாக, ஒதுக்கப்பட வேண்டியதாக உணர்வது ஒருவகை மைக்ரோ பாசிசமே. இந்தியா போன்ற புன்னிய பாரத பூமிகளில் வரலாற்று பாசிசம் சாத்தியமில்லை மாறாக இந்த மைக்ரோ பாசிசமே சாத்தியம் என்பதே இன்றை பொதுபுத்தி மனநிலை வழியாக உணரமுடிகிறது என்னால்.

இது ஒரு பேரழிவிற்கான முன்தயாரிப்பு. இது இலுமினாட்டிகள் என்கிற உலகை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருக்க முனையும் உலக முதல் பணக்கார்களின் ரகசிய சமூகத்தினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. என்றாலும் இத்திட்டம் உலக முதலாண்மை(கார்பரேட்) அமைப்புகளால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமே.

இன்றைய இந்திய அரசு இவ்வாறாக தேசபக்தி என்ற பெயரால் புன்னியபாரத புத்திரர்கள் என்ற பிம்பமாக்கல் வழியாக ஒவ்வொரு இந்திய குடிமகனையும் மைக்ரோ பாசிசவாதிகளாக கட்டமைக்கிறது. அதன் குரலே தங்க நகை கட்டுப்பாடு, ரியல் எஸ்டேட் விலை குறைந்துவிட்டது, ஒவ்வொருவருக்கும் வீடு என்ற கனவு, பிளாஸ்டிக் மணி எனப்படும் கடன் அட்டைகள் பரவலாக்கம், ரொக்கமற்ற பரவர்த்தனையாக வங்கிகள் POS machines, ஸ்விப்பிங் கார்ட் பயன்பாடு என்ற நவநவநவ நாகரீகத்திட்டம் எல்லாம். இந்திய பொருளாதாரத்தை ஸ்வீப் செய்யவதால்தான் இத்திட்டம் ஸ்வீப் கார்டை முதன்மைப்படுத்துகிறது. அடிப்படை கட்டுமானங்கள் பற்றிய எந்த அக்கறையுமற்ற இவர்கள் கூவுவதும் அதிகாரத்தின் குரலாக மாறியிருப்பதும் இந்த மைக்ரோ பாசிச உணர்வால்தான். இந்த உணர்விற்கான அடிப்படையை தருவது schadenfreude என்ற உணர்வே. இது பொதுதளத்தில் ஒரு சுயகூச்சமற்ற வளர்ச்சிக்கான நல்வாழ்விற்கான உணர்வாக மாற்றப்படுகிறது.

உலக முதலாண்மை நிறுவனங்கள் (கார்பரேட்டுகள்) மற்றும் முதலாளியியத்தின், தாராளவாத முதலாளியியத்தினால் உருவாக்கப்படும் ஒரு யதார்த்தமே இந்த வளர்ச்சி என்பது பற்றிய கருத்தாக்கமும், கண்ணோட்டமும். முதலாளிய யதார்த்தம் என்பது பற்றி விரிவாக எழுதப்பட வேண்டியுள்ளது. அடுத்தடுத்து அதை விவரிக்கலாம்.

இந்த மைக்ரோ பாசிசத்தை புரிந்துகொள்ள முடியாமல் போனால் நாம் பேரழிவை சந்திக்க வேண்டி வரலாம். வளர்ச்சி என்பது அழிவின் மேல் உருவாக்கப்படுவதே. அடிப்படை தேவைகளை உருவாக்கிக் கொள்வது வளர்ச்சி அல்ல அது தேவைகள். நுகர்விற்கான தேவைகளை உருவாக்கி அதை நிரப்ப உருவானதே வளர்ச்சி. அடிப்படை தேவைகள் முழுமையடைந்து சமூகமே வளர்ச்சி பற்றி சிந்திக்க வேண்டும். நாம் சிந்திக்க வேண்டியது மரணத்தை நோக்கி விரைவாக பயணிக்கும் வளர்ச்சியா? வாழ்தலை நோக்கி மெதுவாக நகரும் அடிப்படை வசதிகளா? எது தேவை?

ஜமாலன், சிறுபத்திரிக்கை வாசகர், கலாச்சார, அரசியல் இலக்கிய விமர்சகர் , திறனாய்வாளர். கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், நவீன தொன்மங்களும் நாடோடிக் குறி்ப்புகளும், மொழியும் நிலமும் ஆகியவை இவருடைய நூல்கள்.

மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?

வி.களத்தூர் எம்.பாரூக்

farook
வி.களத்தூர் எம்.பாரூக்

“ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது” என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான்.

ஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி செல்கிறது என்பதை பார்க்கின்றபோது இந்த தாக்குதல் வழிதவறிவிட்டதை உணர முடிகிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்வது என்பது மிகப்பெரிய அசாதாரணமான நடவடிக்கைதான். அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டிராமல் அரசியல் ஆதாயங்கள் பெறுவது என்பதனை நோக்கி நடைபோட துவங்கிவிட்டதால் அதன் தோல்வியும்கூடவே துவங்கிவிட்டது. பிரதமர் மோடியால் மட்டுமே இதுபோல் துணிந்து செயல்படமுடியும் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில். இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் எடுத்தது இல்லை என்றும் பாஜகவினர் தொடர்ந்து பல இடங்களில் பேசி வருகின்றனர்.

உண்மையை அவர்கள் வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். இதுபோன்ற நாணய சீர்த்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1938 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது 10,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு 1946 ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு மீண்டும் 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. இது 1978 ம் ஆண்டு வரை நீடித்தது. பிறகு 1978 ம் ஆண்டு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 100 ரூபாய்க்கு மேல் இருந்த ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்தார். தற்போது 2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை செய்திருக்கிறார். ஆனால் மற்றவைகளை மறைத்து மோடி மட்டும்தான் இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பேசுவது அபத்தமானதாகும்.

இந்திய மட்டுமல்ல இதற்கு முன் பல நாடுகளும் இதுபோன்று நாணயச் சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன. இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம், கானா, மியான்மர், வடகொரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இங்கிலாந்து மட்டுமே தனது நோக்கத்தில் வென்றிருக்கின்றன. மற்ற நாடுகள் தோல்வியைத்தான் தழுவின. அதுபோல் இந்தியாவும் தோல்வியையே தழுவும் என்று பலரும் மதிப்பிடுகிறார்கள். காரணம் இந்தியாவில் கருப்பு பணம் பணமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்தான். பெரும்பகுதியிலான கருப்பு பணம் மனைகளாக, தங்கமாக, தொழில் முதலீடாக, கட்டிடங்களாக பரந்து விரிந்து இருக்கின்றன. இவைகளை கண்டுகொள்ளாமல் நோட்களை மட்டுமே மாற்றுவது என்பது கருப்பு பணத்தை நீடிக்கவே செய்யும்.

“இந்த அறிவிப்பு சரியானது என்று நான் நம்பவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்களை மாற்றுவது சரியான நடவடிக்கை இல்லை. இந்தியாவில் கருப்பு பணம் ரூபாய் நோட்களாக மட்டுமில்லை. தங்கமாக அதிக அளவில் புதைந்து கிடக்கிறது” வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது அறிவித்த அன்றுகூட விடியற்காலை வரை நகைக்கடைகள் திறந்திருந்து வர்த்தகம் நடைபெற்றுள்ளதை பார்க்கும்போது இதன் உண்மையை புரிந்துகொள்ள முடிகிறது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது பலரும் வரவேற்றனர். நாட்கள் செல்ல செல்ல இதன் பின்னணி, திட்டமிடுதல் இல்லாமை, மக்களின் சிரமங்களை குறைக்க தவறியமை போன்ற காரணங்களால் வெறுப்படைந்திருக்கிறார்கள். மக்கள் பெரும்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 60 க்குமேற்பட்டவர்கள் இதனால் மரணமடைந்திருக்கிறார்கள். பணப்புழக்கம் இல்லாததால் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் துயரத்தில் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து மாநிலங்களவையில் தெளிவாக பேசியிருக்கிறார் ” இங்கு ஏறத்தாழ 90 சதவிகித்தினர் முறைசாராத தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த  வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை மிக மோசமான அரசு நிர்வாகத் தோல்வியாக முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது. இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” என அரசின் நிர்வாக தோல்விகளை அம்பலப்படுத்திருக்கிறார்.

உயர் மதிப்பு 500, 1000 நோட்களால் கருப்பு பணம் உருவாவதாக சொல்லும் அரசு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு எப்படி அதைவிட கூடுதல் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்களை அச்சடித்தது. இது மேலும் கருப்பு பணத்தை உருவாக்காதா? என பலரும் வினவுகின்றனர். இதற்கு இதுவரை அரசால் சரியான விளக்கத்தை தரமுடியவில்லை.

அதேபோல் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே இதன் ரகசியம் கசிந்திருக்கிறது. அதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உஷாராகிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது. “500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததில் “மெகா ஊழல்” நடைபெற்றுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரது கட்சியினர் புதிய 2000 நோட்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஆளும் கட்சி மற்றும் தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு இந்த தகவலை கசிய விட்டுள்ளது. பல தொழில் அதிபர்களுக்கும் இந்த விவரம் தெரிந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையில் வங்கியில் டெபாசிட்களின் அளவு அதிகரித்துள்ளதே இதற்கு சான்று” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டிருக்கிறார்.

பாஜகவின் குஜராத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யாத்தின் ஏஸ் “ரூபாய் நோட்டு செல்லாது விவரத்தை முன்கூட்டியே மோடி தனது நெருக்கமானவர்களுக்கு கசியவிட்டதாகவும் அமித்சாவின் அலுவலகம் 37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன” என அவர் கூறியது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.

ராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் “அம்பானிகள், அதானிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை முன்னே தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மேற்கு வாங்க பாஜக 3 கோடிகளை வங்கியில் செலுத்தியிருக்கிறது. நவம்பர் 01 ம் தேதி 75 லட்சமும், 03 ம் தேதி ஒன்றே கால் கோடியும், நவம்பர் 08 ம் தேதி காலை 60 லட்சமும், அன்று மாலை மோடி தொலைக்காட்சியில் அறிவித்துக்கொண்டிருக்கும்போது 40 லட்சமும் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறது. இதனை இந்தியன் வங்கியும் உறுதி செய்திருக்கிறது.

இதுபோன்ற செய்திகள் நிதி அமைச்சருக்கே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு பிரதமர் மோடிக்கு நெருக்கமானர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உண்மையிலேயே நினைப்பாரானால் முதலில் அவர் கையில் இருக்கிற வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த பட்டியலையே வெளியிட மறுப்பவர் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் “2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ. 3.89 லட்சம் கோடி” என மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். அந்த தொகையை முழுமையாக மீட்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற மல்லையா, லலித் மோடி போன்றோர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது அரசின் பாதையை மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளெல்லாம் எடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். நேர்மை வேண்டும். அந்த துணிச்சலும், நேர்மையும் பிரதமர் மோடிக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

வி.களத்தூர் எம்.பாரூக், சமூக அரசியல் விமர்சகர்.