ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் அறிவியல் படங்களில்கூட சிலுவைகளைக் காட்ட ஹாலிவுட் இயக்குநர்கள் தவறுவதில்லை. அம்மன் படங்களுக்கு இணையாக பைபிளை முன்னிறுத்தியும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ‘சினிமா அறிவியலின்’ உச்சம் பெற்ற ஹாலிவுட்டில் மூடநம்பிக்கை, மத பரப்புரை, பேய் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களே அதிகமாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, ஆணாதிக்கக் கூறுகளை சத்தமில்லாமல் திணிக்கும் படங்களும் அதிகம். உதாரணத்துக்கு உறவு மீறல் சித்தரிப்புகள் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை ஆணாதிக்க விசம் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

2017-ஆம் ஆண்டில் வெளியான ‘டூலிப் ஃபீவர்’ (Tulip fever) என்ற ஆங்கிலப் படம், இங்கிலாந்தில் தயாரானது. 17-ஆம் நூற்றாண்டில் ஆம்ஸ்டர்டாமில் நடப்பதாக எழுதப்பட்ட டெபோரா மொகாச் -இன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

கதை இதுதான். ஆனாதைகள் இல்லத்தில் வளரும் சோபியா, தனது சகோதரிகள் நியூயார்க்கில் உள்ள உறவினரிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக தன்னைவிட வயதில் மூத்த, மனைவியை இழந்த கார்னீலிசை திருமணம் செய்துகொள்கிறாள்.

சோபியாவை குழந்தை பெற்றுத்தரப்போகும் எந்திரமாகப் பார்க்கிறார் கார்னீலிஸ். சோபியாவுக்கு இந்த அன்பில்லாத எந்திரத்தனமான வாழ்க்கை கசக்கிறது. இன்னதென்று சொல்ல முடியாத ஒன்றை இழந்துவிட்ட சோகத்தோடு சோபியா நாட்களை கடத்துகிறாள். அப்போது, இந்தப் பொருந்தா ஜோடியை ஓவியமாக வரைய இளம் ஓவியர் ஜான் அந்த வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்.

முதல் பார்வையிலேயே சோபியாவும் ஜானும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குள் கிளர்ந்தெழும் காதல் உணர்வை கார்னீலிசுக்குத் தெரியாமல் வளர்க்கிறார்கள். அப்போது டூலிப் மலர்கள் மீதான மோகம் நாடெங்கும் பரவுகிறது. புனித உர்சுலா தேவாலயத்தில் உள்ள சகோதரிகள் டூலிப் மலர்களை வளர்ப்பதாக கேள்விப்பட்டு, அதைத் திருடி விற்று சோபியாவுடன் நியூயார்க் செல்ல திட்டமிடுகிறான் ஜான்.

ஒரு கட்டத்தில் சோபியாவின் காதல் விவகாரம் கார்னீலியசுக்குத் தெரிய வருகிறது. அவர் அந்த இடத்தில் புனிதராக மாறி, அவர்களை மன்னிக்கிறான். சோபியா, கார்னீலியசுக்கு ‘துரோகம்’ செய்துவிட்டதாக எண்ணி வருந்தி, ஜானுக்கும் தெரியாமல் எங்கோ சென்று விடுகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழித்து, ஜான் வரைந்த சோபியாவின் ஓவியத்தைப் பார்த்து புனித உர்சுலா தேவாலயத்திலிருந்து ஒரு சகோதரி, ஜானிடம் தேவாலயத்தில் ஓவியம் வரையும்படி பணிக்கிறார். தேவாலயத்துக்கு வரும் ஜான், அங்கே சகோதரியாக உள்ள சோபியாவைப் பார்க்கிறான். இருவரும் மெல்லிய புன்சிரிப்புடம் கடந்துபோவதாக படம் முடிக்கப்படுகிறது.

இதை எழுதியவர் ஒரு பெண். ஆனால் ஆணாதிக்க மதம் பரப்பும் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கிறது அவருடைய எழுத்து. சோபியாவின் வறுமையை பயன்படுத்தி, தன்னைவிட வயதில் இளையவள் என்றபோதும், அவளை ஒரு உடலாகவே பார்க்கிற கார்னீலியஸ் மீது எழுத்தாளர் எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல், அவரை புனித ‘ஏசு’வாக்கி விடுகிறார்.

கிடைக்காத அன்புக்காக ஏங்கி, தன் காதலனுடன் வாழ முயலும் சோபியாவை, ‘நீதி’ சொல்லி, கணவனுக்கு துரோகம் செய்கிறவளாகவும் அந்த துரோகத்துக்குப் பரிகாரமாக அவளை தேவாலயத்தில் சகோதரியாகவும் காட்டுவதன் மூலம், உறவு மீறலில் ஈடுபடும் பெண்களை ‘தக்க பாடத்தை’ புகட்டுகிறார் இதை எழுதியவர்.

ஒரு பணக்கார கிழவனின் உடல் மீதான இச்சையை, வெறித்தனத்தை புனிதப்படுத்திவிட்ட எழுத்தாளர், இளம் வயதில் இருக்கும் இயற்கையான உணர்வுகளை வெளிப்படும் கதாநாயகர்களை கூண்டில் ஏற்றி குற்றவாளிகள் போல நிற்க வைக்கிறார். இந்தப் பிற்போக்குத்தனத்தை அப்படியே திரையில் காட்டியிருக்கிறது ‘டூலிப் ஃபீவர்’.

ஆண்களுக்கான உணர்வுகளை உயர்ந்த இடத்தில் வைக்கும் இத்தகைய சினிமாக்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களை மோசமானவர்களாகவும் காமவெறி பிடித்தவர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு இளம் சிறுமிக்கு வயதான ஒரு கிழவனுக்குமான பால் உறவை புனிதப்படுத்தி ‘லோலிதா’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்க முடியும். ஆனால், தன்னைவிட 10 வயது இளையவனை காதலிப்பதாக சினிமா எடுத்தாலும் அதில் அந்தப் பெண்கள் சித்தரிக்கப்படும் விதமும் அதில் இவர்கள் சொல்லும் நீதியும் மேற்கத்திய படங்களில் எத்தகைய ஆணாதிக்க சூழல் நிலவுகிறது என்பதை பறைசாற்றும்.

பிரைம் (Prime- 2005) என்றொரு ஹாலிவுட் படம், உமா த்ரூமன் நடித்தது. இந்தப் படத்தில் உமா த்ரூமன் விவகரத்தான 30 வயதுகளில் உள்ள பெண். இவரும் தன்னைவிட 13 வருடங்கள் இளையவரான பிரையான் க்ரீன்பர்க்கும் காதல் வயப்படுகிறார்கள். உமா த்ரூமன் ஆரம்பத்தில் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். பிரையான் தன்னுடைய வயதை சற்றே உயர்த்தி சொல்லி, சம்மதிக்க வைக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.

உமாவுக்கு மனநல ஆலோசனை சொல்லும் மெரில் ஸ்டீரீப் தன் மகன் தான் உமா காதலிக்கும் நபர் என்பதை அறிந்துகொண்டு, அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். யூத மத பின்னணியில் உள்ள பிரையானின் குடும்பம் மிக மிகத் தயங்கி உமாவை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனாலும் தீராத சமூகம் ஏற்படுத்திய குற்றவுணர்வின் காரணமாக, இணக்கமான உறவு என்றபோதும் தன் காதலனைவிட்டுப் பிரிகிறார் உமா.

சில ஆண்டுகள் கழித்து, ஒரு உணவகத்தில் எதேச்சையாக பிரையானை சந்திக்கிறார் உமா. இருவரும் புன்னகைத்துக் கொள்வதாக படம் முடிகிறது.

இந்த வயது வித்தியாசம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்திருந்தால் அந்தக் கதையின் போக்கு வேறுமாதிரியாக இருந்திருக்கும்; முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். காதலர்கள் பிரிவதற்கான பிரச்சினையும் வேறாக இருந்திருக்கும்.

ஆனால், பெண்ணுக்கு வயது வித்தியாசம் ஒரு பெரிய தடை. மேற்கத்திய சமூகங்களிலும் இந்த வயது வித்தியாசம் மிகப்பெரிய விலக்கத்துக்கு உள்ளானதாக இருக்கிறது. காத்ரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்த ’த ரீபாண்ட்’ (The rebound- 2009) என்றொரு படம். இதே கதைபோன்றதொரு கதைக்கருவுடன் இதே போன்றதொரு முடிவை சொன்ன படம்.

இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகிகள் முறையான மணவிலக்கு பெற்றவர்கள். அவர்கள் காதலிக்கும் நபர்கள்கூட வேறு உறவுகளில் பிணைக்கப்படாதவர்கள். ஆனால் வயது வித்தியாசம் என்ற ‘தடை’ ஒன்றே இவர்கள் காதலை விட்டுத்தர போதுமானதாக இந்தப் படங்கள் வலியுறுத்துகின்றன, கிட்டத்தட்ட பழமைவாதிகளின் குரலில் இந்தப் படங்கள் பேசுகின்றன.

வெகுஜென படங்களை மட்டுமே இங்கே உதாரணத்துக்கு எடுத்திருக்கிறேன். இதுவே ‘உலகப் படங்களில்’ எனில் அத்தனை பிற்போக்குத்தனமானவையாக சித்தரிப்புகள் உள்ளன. ஒரு பெண்ணுக்குள்ள தேவை, ஆணுடனான பாலுறவு மட்டுமே என்பதே அந்தப் படங்களில் பொதுவான கதைக்கரு. மட்டுமிஞ்சிய பாலுறவு காட்சிகள் அந்தப் படங்களை ‘உலகப் படங்கள்’ என சொல்ல போதுமானவையாக உள்ளன. அவற்றின் பெயர் குறிப்பிடுவதுகூட ஒருவகையில் பெண்களை இழிவுபடுத்துவதாகவே கருதுகிறேன்.

தாராளவாதத்தை முதன்மைப்படுத்தும் மேற்குலக படங்களே இப்படியென்றால், அவற்றை பிரதியெடுத்து இயங்கும் இந்தியப் படங்கள், குறிப்பாக தமிழ் சினிமாக்கள் பெண்களின் உறவு சிக்கல்களை காட்சிப்படுத்தும் விதம் பிற்போக்குத்தனத்தை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘புரட்சி’கரமான படமாகக் கருதப்படும் ‘மறுபடியும்’ படத்தின் நாயகி, தன் கணவனின் துரோகத்துக்காக அவரை விவாகரத்து செய்கிறார். புரட்சி அந்த அளவில் மட்டும் என நினைத்த இயக்குநர், தனக்கு ஆதரவாக உள்ள நண்பரின் காதலை நாயகி நிராகரிப்பதாக முடிக்கிறார். விவகரத்தானாலும் தன் முன்னாள் மனைவி கடைசி வரை இன்னொருவனின் கைப்படாதவளாகவே வாழ்நாளை கழிக்க வேண்டும் என்கிற ‘ஆழமான’ கருத்தை விதைத்து விட்டுச் செல்கிறது இந்தப் படம்.

‘நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துகள்’…

அதுபோல, ராதிகா நடிப்பில் வெளியான டெலிஃபிலிமான ‘சிறகுகள்’ (1999) லண்டனில் அப்பாவியான ஒரு பெண், தன் கணவனின் உறவு மீறலால் பாதிக்கப்பட்டு அவரை விவாகரத்து செய்வதை பேசியது. இதிலும்கூட காதலோடு வருபவரை நிராகரிப்பதாகவே கதை முடிக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்வில் ராதிகா இருமுறை விவாகரத்து செய்து, மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனாலும், ‘முற்போக்கு’ போனியாகாது என்கிற கணக்கில் காலம் முழுக்க கண்ணீரிலே பிள்ளைகளுக்கு குண்டி கழுவும் ஆயாவாகவே அந்தப் பெண் சாக வேண்டும் என கதையை முடிக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராதிகா.

ஆக மொத்தத்தில் பெண் உணர்வற்ற உடலாக, ஆண்களின் உடமையாக பிற்போக்கு சமூகம் எப்படி கட்டமைத்திருக்கிறதோ அதை அப்படியே பிரதி எடுக்கின்றன இந்த சினிமாக்கள். புரட்சி போல தெரியும் ஆனால் புரட்சியல்ல. சீர்திருத்தம்போல தெரியும் ஆனால் சீர்திருத்தம் அல்ல. ஆணுக்குள்ள அத்தனை உரிமையும் குறைந்தபட்ச உரிமைகளையாவது புரிந்துகொள்வது ஒரு திரைக்கலைஞருக்கு உள்ள நேர்மையான சமூக அக்கறையாக இருக்க முடியும். தனிப்பட்ட நபர்களை உணர்வளிக்க முடியாது. ஆனால், பொது சமூகமாக இந்த ஆணாதிக்கக் கூறுகளிலிருந்து விடுபடும் வழியைக் கண்டடைந்தால் பெண்ணை உணர்வுள்ளவளாகக் கருதும் படங்கள் வெளிவரலாம்!

நன்றி: திரையாள்.

நிழலழகி 14: “மறுபடியும்” ஒரு துளசி மறுமலர்ச்சியுடன் பிறக்கத்தான் செய்கிறாள்!

padmaja
கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

சமீபத்தில் வெளியான ‘தரமணி’ இந்த 21-ம் நூற்றாண்டின் ஆண், பெண் உறவையும், உளவியல் சிக்கலையும் விவாதத்துக்குரிய வகையில் பதிவு செய்துள்ளதாக பேசப்படும் இந்தத் தருணத்தில், நான் கொஞ்சம் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த ‘மறுபடியும்’ படத்தை திரும்பிப் பார்க்க வாஞ்சிக்கிறேன்.

‘மறுபடியும்’ 1993-ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, ரோகினி, அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த திரைப்படம். முரளிகிருஷ்ணா (நிழல்கள் ரவி) ஒரு திரைப்பட இயக்குனர். துளசி (ரேவதி) தன் வீட்டை எதிர்த்து முரளிகிருஷ்ணாவை காதல் திருமணம் புரிந்து ஐந்து வருடங்களாக சந்தோஷமான திருமண வாழ்க்கையை நடத்துவார். திருமணத்திற்குப் பிறகு கணவன்தான் உலகம் என்று வாழும் ஒரு மென்மையான மனைவி. பட இயக்கத்தின்போது கவிதா (ரோகிணி) உடன் ஏற்படும் உறவு ஒரு கட்டத்தில் துளசியை விவாகரத்து செய்துவிட்டு கவிதாவை திருமணம் செய்ய முடிவு செய்வார். துளசியின் உரிமைப் போராட்டமும், மனரீதியான போராட்டமும், தெளிவையும் நேர்த்தியாய் கோர்த்த படம் ‘மறுபடியும்’.

தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவுத் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உடைந்துபோகிறாள் துளசி. அவன் முகத்தைக் கூட பார்க்க விரும்பாத நிலையில், முரளிக்கு குடிபோதையில் கண்ணாடித் துண்டு காலில் குத்தும்போது அவனுக்கு மருத்துவ உதவி செய்யும் துளசி, அவன் தொடுதலைக் கூட அனுமதிக்க மாட்டாள். அந்தப் பெண்ணை விட்டு வரும்படி கெஞ்சி பார்ப்பாள். தன்னுடைய கணவனை தன்னிடம் திருப்பி தந்துவிடும் படி கவிதாவிடம் கெஞ்சுவாள். துணித்து குரல் உயர்த்தி சண்டை போடுவாள். தன் கணவன் தனக்காய் வாங்கிக்கொடுத்த வீடு கூட கவிதாவின் பணத்தில்தான் என்று தெரிந்ததும், அதை தூக்கி எறித்துவிட்டு சுயமரியாதையுடன் வாழப் புறப்படுவாள். தன் எஞ்சிய காலத்துக்கு விடை தெரியாமல் தவிக்கும் துளசி, வாழ்க்கையின் புது அர்த்தத்தையும், வாழ்வதற்கான புதுக் காரணத்தை தேடிக் கண்டுகொள்வாள்.

இந்தப் படத்தில் துளசியின் நிலைமைக்கு ஒரு முதுகெலும்பு இல்லாத சபல எண்ணம் கொண்ட கணவன் மட்டும்தான் காரணம் என்றாலும், துளசியை இந்தச் சமூகம் எப்படி கையாண்டது என்பதுதான் நமக்கான பாடம்.

துளசியின் உயிர்த் தோழி: சிறு வயது முதல் துளசியின் எல்லா சுக, துக்கத்திலும் பங்குகொண்டு ஆலோசனை சொல்லி துணை நிற்பவள் துளசியின் கைவிடபட்ட நிலையிலும் அதே உறுதுணையைக் கொடுப்பாள்.

ஹாஸ்டல் வார்டன்: வீட்டை விட்டு வெளியேறி நிர்கதியாய் நிற்கும் துளசிக்கு தங்குவதற்கு இடம் தேவைப்படும்போது அவளுக்கு போதுமான அவகாசம் கொடுத்து அங்கு தங்கவைத்து தேவையான முதல் பாதுகாப்பைக் கொடுப்பாள்.

marupadi

கௌரி சங்கர்: நல்ல நண்பனாய் அறிமுகம் ஆகும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) துளசியின் மனப்போராட்டங்களை புரிந்துகொண்டு சந்தர்ப்பத்தை உபயோகிக்க காத்திராமல், அவள் தன் வாழ்க்கைகான புது அர்த்தத்தைத் தேட உறுதுணையாய் இருப்பான்.

கௌரியின் பாட்டி: ஒரே ஒரு வசனம்தான். துளசியின் முழு கதையையும் கேட்டுவிட்டு “நீ உங்க வீட்டுக்கு போய் இருக்கணும் அல்லது உன் கணவன் வீட்டில் வாழ்ந்து இருக்கணும்” என்பார். பாட்டியின் பார்வையில் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு குடும்பம் மட்டுமே.

கவிதாவின் தாய்: தன் மகள் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்ததும் கௌரியை “நீ துளசியிடம் திரும்பி போய்விடு. கவிதா உடன் உன் வாழக்கை சந்தோஷமாய் அமையாது” என்று புரிய வைத்து அனுப்புவாள்.

கவிதா: தன் காதல் உண்மை என்றாலும் தான் காதலிப்பது இன்னோரு பெண்ணின் கணவன் என்ற குற்ற உணர்வு ஏற்படத் தொடங்கியதும் மன நிம்மதியற்ற நிலைமைக்கு ஆளாகிறாள். எந்த விதத்திலும் வேறு பெண்ணின் கணவனை தான் சொந்தம்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்து முரளியை விட்டு விலகுகிறாள். அது ஒருவிதத்தில் துளசியிடம் அவள் கணவனை திரும்பக் கொடுப்பதுதான் நியாயம் என்ற முடிவு.

வீட்டு வேலைக்கார பெண்: சமூகத்தின் எல்லா தட்டிலும் ஒரு குடிகார கணவன், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்கும் ஆண்கள் என்று இருக்கத்தான் செய்கின்றனர் என்பதன் பிரதிபலிப்பு வேலைக்காரப் பெண். குழந்தை என்று வந்தபின் இப்படிப்பட்ட கணவனை குழந்தைக்கு அப்பாகவேனும் இருந்துவிட்டு போகட்டும் என்று சகித்துக்கொண்டு வாழ்வதும், அதற்கும் அவர்கள் தகுதி இல்லை என்ற நிலையில் அவர்களை வெட்டி எறியவும் துணித்து விடத்தான் செய்கின்றனர்.

முரளியின் உதவியாளர்: முரளியின் தவறான உறவைப் பற்றி தெரிந்தவர், அவரது உதவியாளர். முதலாளி மீது அதிக விசுவாசமும், துளசி மீது மரியாதையும் கொண்டு, இவ்விரண்டுக்கும் நடுவில் போராடுவார். ஒவ்வொரு முறையும் முரளியின் தவறைச் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஒரு நண்பன் என்ற அளவிற்கு அந்தக் குடும்பம் மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்று அதிகம் விரும்புவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் : திரையில் கூட பெண்களை ஆபாசமாக மட்டுமே பார்க்க விரும்பும் ஆண் மிருகங்கள். இவர்கள் பசிக்கு தேவை எப்போதும் பெண் என்ற மாமிசம்.

துளசியிடம் திருந்தி வரும் முரளி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பான். அப்போது, “ஒரு பெண்ணாய் நான் இப்படி ஒரு ஆணிடம் போய்விட்டு திரும்பி வந்தால் நீ என்னை ஏற்று கொள்வாயா?” என்று கேட்பாள் துளசி. முரளி மௌனமாய் ‘இல்லை’ என்று தலையை அசைப்பான்.

வேலைக்காரப் பெண்ணின் மகளை எடுத்து வளர்க்க முடிவு செய்யும் துளசி, கௌரியை தான் ஏன் கல்யாணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து இருப்பதை தெளிவாய் விளக்குவாள். தன் வாழக்கையில் அடித்த புயல் திருமண உறவை பொய்த்துப் போகச் செய்தாலும் வாழ்வதற்கான ஒரு காரணமாய் அந்தக் குழந்தை கிடைத்து இருப்பதாகவும், வாழ்க்கையில் தனக்கு துளிர்விட்டு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகம் அனுபவிப்பதாகவும், அது தன்னை புது மனுஷியை மாற்றுவதாகவும் கூறுவாள்.

பெண்சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைக்கான முடிவை தானே தேடிக்கொள்ள வேண்டிய சூழலில், அவள் செயல்களை ‘ஒரு பெண் இப்படிச் செய்யலாமா கூடாதா?’ என்று விவாதிக்காமல் இருந்தால் போதும். அவள் செயல்களுக்கு ‘ஒரு பெண் இப்படி செய்யக் கூடாது’ என்று புத்தி சொல்லாமல் இருந்தால் போதும். அதுவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் சம உரிமைக்கு சமம்.

திருமணம் என்ற ஒரு சடங்கு உலகில் தோன்றிய நாள் முதல் கணவன் இறந்ததற்குப் பிந்தைய தனித்த வாழ்வும், விவாகரத்தும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. கணவன், மனைவி என்ற திருமண பந்தத்தைத் தாண்டி ஒரு துணையை தேடும்போது அது நீடித்த நிம்மதியையும், முழு திருப்தியையும் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஒரு பெண் இந்தத் திருமண பந்தத்தில் இருந்து ஏதோ ஒரு சூழல் தனித்து விடப்படும்போது அவளுக்கு மனரீதியான போராட்டம் மட்டும் அல்லாமல், அவள் சமூக ரீதியாகவும் போராட தயாராக வேண்டியதாகிறது.

பெண் என்பவளை உடல் ரிதியாக மட்டுமல்லாம் மன ரீதியாக புரிந்துகொள்ள ஒரு ஆணிற்கு அவன் குடும்பம் கற்றுத்தர வேண்டும். காலம் காலமாய் நமது குடும்பங்கள் இதைச் செய்ய தவறியதால் வரும் சமூகச் சிக்கல்கள் ஏராளம். தமிழ் சினிமாவும் அத்தி பூத்தாற்போல் இந்தப் புரிதலை நமக்குள் புகுத்த வரும்போது அவர்களை ஒதுக்கிவிடுகிறோம். சமீபத்தில் இந்தப் போராட்டத்தை தன்னுடைய பாணியில் சொல்ல துணிந்த ‘தரமணி’ இயக்குனர் ராமை வாழ்த்தித் தட்டிக் கொடுக்கவேண்டும். மாறாக, ஒரு கூட்டம் அவரை தலையில் தூக்கி கொண்டாடுவதும், இன்னொரு கூட்டம் அவரை தலையில் கொட்டுவதுமாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இப்படி வரும் திரைப்படங்களில் திரையில் நாம் யார் என்று நம்முடைய குணங்களை கதாபாத்திரத்தோடு பொருத்திப் பார்த்துகொள்ளும்போது ‘மறுபடியும்’ நமக்குள் ஒரு புது மனிதன் பிறப்பது உறுதி.

துளசியின் முடிவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி பார்த்தால் போதும் “துளசி” போன்ற நிழலழகி மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள நிஜ அழகிகளையும் புரிந்துகொள்ள முடியும்..

தொடரும்…