இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள்

மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.

அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.

அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியி்ன் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 உயரமும் கொண்ட கருஙகல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளீகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.

இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.

மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.

இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.

இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.

நள்ளிரவில் கனமழையில் ஏற்கெனவே சிதிலமாகியிருந்த சுவர் இடிந்து விழுந்து விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிவாங்கியது. இந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் ஏற்கெனவே வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள், எழுத்தாளர்; வழக்கறிஞர்.

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என பியூசிஎல் அறிக்கை விடுத்துள்ளது.  

“மார்க்சிய – இலெனினியச் செயற்பாட்டாளர் பத்மா அவர்கள் 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச் சிறைவாசிக்குரிய மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.

திசம்பர் 13ஆம் நாளன்று மதியம் 1 மணிக்கு அவர் மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல் நிலை மோசமான காரணத்தால், இரண்டரை மணி நேரம் கழித்து, மதியம் மூன்றரை மணிக்கு, மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திசம்பர் 20 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் மீண்டும் அவரது உடல் நிலை மிக மிக மோசமானதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சிறைவாசிகள் கடும்நோயினால் பாதிக்கப்படும் பொழுது, அவர்களை மருத்துவமனை – சிறைச்சாலை என இழுத்தடிப்பது மனிதநேயமற்றது மட்டுமல்ல, சட்டத்திற்கும் புறம்பானதும் கூட!

எனவே சிறையாளி பத்மா அவர்கள் முழு உடல்நலம் பெறும் வரை அவரை மருத்துவ மனையிலேயே வைத்திருக்க வேண்டும் எனவும், அவருக்கு முறையான உயரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோருகிறது.

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்
க. சரவணன், மாநிலப் பொதுச் செயலர்”

வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

டி. சத்வா

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதும் இறந்து போவதும் மக்களின் தனியுரிமை என்றும் அரசு இதில் தலையிட கூடாது என்றும் செந்தமிழன் போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது நியாயமானதா அல்லது சட்டபூர்வமானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டபிரிவு 25 மக்களின் நம்பிக்கைகளில் அரசு தலையிட கீழ்கண்ட மூன்று விதிவிலக்குகளை வழங்கியுள்ளது.

1. Public order (சட்டம் ஒழுங்கு)
2. Morality
3. Health (பொது சுகாதாரம்)

இதில் சுகாதாரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக பொது சுகாதார சட்டமும் அமலில் உள்ளது.

ஆகையால் வீட்டு பிரசவம் தனியுரிமை என்று கருத இயலாது. இதில் தாய் மட்டுமல்லாது பிறக்க போகும் குழந்தையின் நலனை காப்பாற்றும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டுகளை கட்டாயப்படுத்துவது போல மருத்துவமனை பிரசவத்தையும் அரசு கட்டாயம் என்று அறிவிக்க இயலும்.

குறிப்பு: அரசு மருத்துவமனைகளில் தரமான இலவச பிரசவ சேவை கிடைக்கிறது. கூடுதலாக ரூ. 18,000 ஊக்க தொகையும் உண்டு.

டி. சத்வா, மருத்துவர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018 மே 22, 23 தேதிகளில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட உண்மைகள் அறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பாக 2018 மே 27, 28 தேதிகளில் களஆய்வு நடைபெற்றது. ஜி.செல்வா (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்புக் குழு) தலைமையில், வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி (சென்னை உயர் நீதிமன்றம்), பேராசிரியர் வி.பொன்ராஜ்(திருநெல்வேலி), நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.மல்லிகா (கோவில்பட்டி), எஸ்.அரிகிருஷ்ணன் (தென்சென்னை), சு. பேச்சிமுத்து (தூத்துக்குடி), ஏ. பொன்னுதுரை (ஊடகக் குழு – சிபிஎம், சென்னை) ஆகியோர் இந்தஆய்வில் ஈடுபட்டனர்.

கள ஆய்வில் சந்திப்பு மற்றும் ஆய்வு செய்யப்பட்ட இடங்கள்

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த குடும்பத்தினர், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், மக்கள்திரளாக போராட்டத்தில் பங்கெடுத்த திரேஸ்புரம், பாளையங்கோட்டை ரோடு, மடத்தூர், குமரெட்டியாபுரம், அண்ணா நகர், மில்லர்புரம் ஆகிய பகுதிகள், மாவட்டஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு, ஸ்டெர்லைட் ஆலை வாயிலில் கழிவுகள் கொட்டப்பட்ட இடம்; அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்ட மருத்துவர்கள், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம், வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம், வாலிபர் – மாணவர் – மாதர் சங்க நிர்வாகிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பிணை மனு விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அமர்வு, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்த ஆயர்கள், செல்வராசு, சுந்தரமைந்தன் ஆகிய தனி நபர்கள், அமைப்புகள், இடங்கள் இக்கள ஆய்வுக் குழுவினால் விவரங்கள் சேகரிப்பதற்கான தளங்களாக அமைந்தன.

போராட்டத்திற்கான பின்புலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் ஆலைக்கு எதிராக மக்களின் கடும்எதிர்ப்பும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மனுக் கொடுத்தல், பொதுக்கூட்டம், கதவடைப்பு, பேருந்துநிறுத்தம், சாலை மறியல், மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, பேரணி, முற்றுகை, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது எனப் பல வகையான இயக்கங்கள் பலதரப்பட்டவர்களால் நடத்தப்பட்டுள்ளன. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் கடும் அடக்குமுறை, தடியடி, கைது,சித்ரவதை, பழிவாங்கல் எனப் பல வகையான ஒடுக்குமுறைகளை மக்கள் எதிர்கொண்டு வந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட எண்ணற்ற பாதிப்புகளை ஆதாரத்துடன்அரசுக்கு அளிக்கப்பட்ட போதும், ஆலையை மூடுவதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி முனைவர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழு அளித்த பல ஆய்வு விவரங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து ஏற்படும் பாதிப்புகளை விளக்கி 21.09.2004-ல் வெளியிட்ட அறிக்கைபெரும் அதிர்ச்சியை மக்களிடத்தில் உண்டாக்கியது. ஆனால், அதற்குப் பின்பும் ஆலையின் உற்பத்தியை 70,000 டன்னிலிருந்து 1,00,000 டன்னுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிகரித்துள்ளது. பின்னர் படிப்படியாக நான்கு லட்சம் டன் உற்பத்தியாக எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் காயம்,கந்தக அமிலக் குழாய் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு,நச்சுப் புகையால் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவ்வப்போது மயங்கி விழுதல், குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுதல், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து அரசின் உதவியோடு ஆலை விரிவாக்கத்தை ஸ்டெர்லைட் செய்து கொண்டே வந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகள் எதையும் ஆலை நிர்வாகம் மதிக்கவில்லை. மேலும் மக்களின் உயிருக்கு ஆபத்துவிளைவிக்கும் இந்த ஆலையை மூடக் கோரி ஸ்டெர்லைட்ஆலை எதிர்ப்புக் குழு என்ற பெயரில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். ஆலையின் அருகாமையில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தொடங்கிய தொடர்போராட்டம் தூத்துக்குடியில் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் எதிரொலித்தது. மிக அமைதியான முறையில்ஆலையை மூடக் கோரி கிராமங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இப்போராட்டங்களுக்கு ஆதரவாகபல்வேறு கட்சிகள், அமைப்புகள் செயலாற்றி வந்தன. போராட்டத்தின் 100-ஆவது நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி செல்வதெனஅறிவித்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது;மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரியது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து பதில் கூற வேண்டுமெனக்கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரால்அமைதிப் பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவினருக்குஅழைப்பு விடுத்து கூட்டம் 20-ஆம் தேதியன்று நடைபெற்றது.

2018 மே 22, துப்பாக்கிச் சூடு

2018 மே 22 அன்று போராட்டத்தின் 100 ஆவது நாளையொட்டிய பேரணி குறித்து அனைத்து விவரங்களும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் அறிந்து வைத்திருந்துள்ளன. பேரணிக்கு முன்பாக 20 ஆம் தேதியன்றுசமாதானக்கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடத்தி உள்ளனர்.இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. மேலும் போராட்டக் குழுவினரில் ஒரு பிரிவினர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் இடத்தில், 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் மற்றொரு பிரிவினர் திட்டமிட்டபடி 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகமுற்றுகை எனவும் அறிவிக்கிறார்கள்.

21 ஆம் தேதியன்று எஸ்.எல்.வி. மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை ஒருபிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது போராட்டத்தில் பங்கேற்கக்கூடியவர்கள் இடையே உள்ள ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதற்கும் முற்றுகைப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பதை குறைப்பதற்கும் உதவுமென ஆட்சியரும் காவல்துறையும் கருதி இருக்கக்கூடும். ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்ற ஒரே கோரிக்கைக்காக 22 ஆம் தேதியன்று கடற்கரை அருகிலிருந்து பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் என சகல பகுதி மக்களும் பாளையங்கோட்டை ரோடு வழியாக பேரணியாக சென்றனர்.

எந்த அமைப்பும் தங்களதுகொடிகளை எடுத்து வரக்கூடாது என முடிவு எடுத்திருந்ததனால் யாருடைய கைகளிலும் கம்போ பைப்போ எதுவும்இல்லை. பேரணி தெற்கு காவல்நிலையத்தை அடைந்தபோது,பேரணிக்குள் காவல்துறையினர் மாடுகளை உள்ளே விரட்டியுள்ளனர். இதன் காரணமாக அங்கு சிறு குழப்பம்ஏற்பட்டுள்ளது. அடுத்து வி.வி.டி. சிக்னல் அருகில் போலீஸ்பேரிகாட் போட்டு தடுத்துள்ளனர். அதையும் மீறி மக்கள்பேரணி செல்கிறது. மடத்தூர், மில்லர்புரம், பிஎன்காலனி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் பேரணியில் இணைய கூட்டத்தின் அளவு அதிகமானது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இப்பேரணியைத் தடுக்ககாவல்துறையினர் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பேரணியில் வந்த ஒரு பகுதியினர் ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலுக்குச் சென்றனர். முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்கு சென்ற பண்டாரம்பட்டி சந்தோஷ் என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு, அவரின் மண்டை உடைக்கப்பட்டு காவல் துறை வாகனத்தினுள்ளே தூக்கிப் போடப்பட்டார். அங்கு வாகனம் ஒன்று எரிவதைசந்தோஷ் பார்த்துள்ளார். அந்நேரத்தில் மக்கள் யாரும் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழையவில்லை.

எனவே ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் வாகனத்தை எரித்ததாக சொல்வது பொய் என சந்தோஷ், மாணவர் சங்க நிர்வாகி கலைராஜிடம் தெரிவித்துள்ளார். சந்தோஷ் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய போது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். தன்னையும் போலீஸ் சாகடித்து விடுவார்கள், காப்பாற்றுங்கள் என அவர் சொன்னது ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் உதவியின் காரணமாகவே உயிர் பிழைத்து தான் சிகிச்சைபெற முயன்றதாக தெரிவித்துள்ளார்.

முதலில் மக்களை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறவிட்டு, காவல்துறை பின்னோக்கிச் சென்றுள்ளது. இவ்வாறு இரண்டு, மூன்று முறை முன்னேறுவதும் பின்னே செல்வதுமாக இருந்துள்ளது.இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லத்தியால் மட்டுமின்றி ரீப்பர் கட்டைகள், இரும்பு பைப்புகள், கற்களைக் கொண்டும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்; பின்புறத்திலிருந்தும் பக்கவாட்டிலிருந்துமே போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டாலும், அது மக்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில்தான் வீசப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் வெறுப்படைந்த மக்களில் சிலர், தற்காப்புக்காக கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

குண்டடிபட்டுக் காயமடைந்த மக்களை உரிய முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற காவல்துறைஅனுமதிக்கவில்லை. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்குவதை காவல்துறையினர் தடுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரு சக்கர வாகனத்தின் மூலமாகவே பொதுமக்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இறந்தது யார்? அடிபட்டது யார்? என்கின்ற பதற்றத்தோடு மக்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கும் சேர்த்து பீதியூட்டும் வகையில் மருத்துவமனைக்கு வெளியே தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் 23.05.2018 அன்று காவல்துறை நடத்தியுள்ளது. இதில்வேடிக்கை பார்த்தவர்கள், அத்தெரு வழியே சென்றவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த உறவினர்கள், நண்பர்களும்காவல் துறையின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்கள் பலரும் சிகிச்சை முறையாகத் தரப்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு துணையாக இருந்தவர்களும் காவல் துறையினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் ஏன் நீங்கள்சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என கேட்டபோது, சிகிச்சை எடுத்தால் எங்களையும் போலீஸ் வழக்குல சேத்துடும். வீட்டுக்கு ஒருத்தர் மேல கேஸ் போட்டது போதாதா என தங்களுடைய ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட மக்களோடு போலீசுக்கும் சிகிச்சை கொடுத்தபோது, போலீஸைத் தொட்ட கையால எங்களைத்தொட்டுசிகிச்சை செய்யாதீங்க என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக மருத்துவமனை டீன் கூறினார்.

சிகிச்சைக்காக அரசு எந்தப் பணத்தையும் ஒதுக்கவில்லை. மருத்துவர்களின் சொந்த பணத்திலிருந்து ரூ.5,00,000 எடுத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதரதேவைகளை நிறைவேற்றியதாகத் தெரிவித்தனர். அதேநேரத்தில் காவல்துறையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனைக்குள் வந்தவர்களை, சில மருத்துவர்களே போலீசிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர். மருத்துவமனை டீன் மே 27 ஆம் தேதி தெரிவித்த தகவலின்படி 108 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிக் குண்டுகள் எலும்புவரை பாய்ந்துள்ளதால் சிகிச்சை பெறவேண்டிய 6 பேர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 20 போலீசார் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 2 பேர் தாங்களாகவே தனியார் (மதுரை வேலம்மாள், மீனாட்சி மிஷன்) மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டனர்.

பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் தெரிவித்தவை

l உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 99 நாட்களாகக் கிராம அளவில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒருமுறை கூட மாவட்ட ஆட்சியர்சந்திக்காதது ஏன்?

l தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யாரும் முன்வராதது ஏன்?

l குழந்தைகளைக் கையில் ஏந்திக் குடும்பம் குடும்பமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி சென்ற மக்களை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு சாகடித்தது எந்த விதத்தில் நியாயம்?

l துப்பாக்கிச் சூடு நடத்துகிற பட்சத்திலும் முழங்காலுக்கு கீழே சுட்டு கூட்டத்தை கலைக்க வாய்ப்பிருந்தும் அதைச்செய்யாமல் உயிரை பறிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சுட்டுக்கொன்றது ஏன்?

l ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர், மேலும், மருத்துவமனை, திரேஸ்புரம், அண்ணா நகர், குடோன் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

l நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சட்டவிரோ
தமாகத் தெற்கு காவல்நிலையம், புதுக்கோட்டை, வல்லம், துப்பாக்கிச் சூடு மைதானம் போன்ற இடங்களில் அடைத்து, அடித்து சித்ரவதை செய்யப்பட்டது ஏன்?

l மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகள், வைத்திருந்த பொருட்கள், வாகனத்தின் சாவி போன்றவைகளை காவல்துறையினர் பிடுங்கி வைத்துக்கொண்டு தரமறுப்பது ஏன்?

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?

இப்படியாக பல கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. இதில் இருவரின் கருத்துக்கள் கவனத்திற்குரியவை. 75 வயது முதியவர் ஒருவர் இப்போராட்டம் குறித்து தெரிவித்தது: முன் எப்போதையும்விட இப் போராட்டம் மூன்று விதங்களில் முக்கியத்துவம் உடையது.

ஒன்று- சாதி, மதம் கடந்து அனைத்துப் பிரிவினரும் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாய் நடத்தியது.

இரண்டு- அதிக எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு, ஈடுபாடு, தலைமை வகித்து நடத்தியது.

மூன்று- வழக்கறிஞர்கள் ஒற்றுமையோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக பணம் வாங்காமல் வழக்காடியது.

இக்கருத்தை வேறு ஒரு தளத்தில் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெரிவித்தார். ஒரு சாதி, ஒரு மதப் பிரிவினரின் போராட்டம் என்ற அடையாளத்தைத் தாண்டி, அனைத்துப் பகுதி மக்களின் போராட்டமாக ஸ்டெர்லைட் போராட்டம் இந்த முறை மாறியது. அதுபோல ஒரு பகுதி மக்களின் போராட்டம் என்பதைத் தாண்டிமாவட்டம் தழுவிய போராட்டமாக விரிவடைந்தது. இதைஸ்டெர்லைட் நிர்வாகம் புரிந்துகொண்டது. எனவே, அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கத் திட்டமிட்டது என்றார்.

பரிந்துரைகள்

l உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வு நடைபெற வேண்டும்.

l துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி, காவல்துறையினர் ஆகியோரை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

l இதுவரை சுற்றுப்புறச் சூழலுக்கு நேர்ந்துள்ள கேடுகளுக்கான இழப்பீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடமிருந்து பெற வேண்டும்.

l காவல்துறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சையும் இழப்பீடும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் இன்றித் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

வெளியீடு
மனித உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

முகநூலில் பிரதமர் கார்ட்டூன் பதிவிட்ட திருப்பூர் தொழிலாளி கைது; பியூசிஎல் கண்டனம்

திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் பணியாற்றும் பிரபாகரன் என்ற தொழிலாளர் முகநூலில் பிரதமரை ‘தவறாக’ சித்தரித்து படம் போட்டதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது புகார் கொடுத்தவர் உள்ளூர் பாஜக பிரமுகர் சின்னசாமி. இந்த புகாரின் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறையால் தனிப்படை அமைக்கப்பட்டு பிரபாகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபாகரன் கைது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என மக்கள் கண்காணிப்புக் குழு தேசியக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள முகநூல் பதிவில,

“பிராபாகரனை கைது செய்வதன் மூலம் ஒட்டுமொத்தம் சமூக வலைத்தள செயல்பாடுகளை முடக்கிவிட முடியும் என ஆட்சியாளர்களும் காவல்துறையும் கருதுவது அடிப்படை சனநாயக உரிமைகளுக்கு எதிரானது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஸ்ரேயா எதிர் இந்திய யூனியன் வழக்கில் முகநூல் பதிவுகளை குற்ற செயல் போல கருதி கைது செய்யக்கூடாது என 66 A IT act சட்டப்பிரிவை நீக்கியுள்ளது. அந்த தீர்ப்பு இந்த கைதுக்கும் பொருந்தும்.

மக்களின் கேளிக்கும்,விமர்சனத்திற்கும் அஞ்சும் ஒருவர் நாட்டின் பிரதமராக ஆகியிருக்க தேவையில்லை.

ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவதை விட அடிப்படை உரிமைகளை மதிப்பதே காவல் துறைக்கு அழகு. பிரபாகரன் கைது அப்பட்டமான மனித உரிமை மீறல் இதனை கண்டிக்கின்றோம். அவர் விடுவிக்கப்படவேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெண்ணின் கையை முறிக்கும் பெண் போலீஸ்!

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டிறைச்சி திருவிழாவில் கலந்துகொண்ட ஆய்வு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஐஐடி வளாகம் முன்பு இன்று காலை போராட்டம் நடத்தியது. இதில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களை கைது செய்ய முயற்சித்தது தமிழக காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாக மறுக்க, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை முறுக்கத் தொடங்கினார் பெண் காவலர் ஒருவர். இந்தக் காட்சி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது.

போலீஸின் இந்தச் செயலுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

நெடுவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை

மனுவேல்

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இரயில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, பொய் வழக்கு போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நான்கு SUMS தோழர்கள் உட்பட 7 பேர் இன்று வரை சிறையில் உள்ளனர்.

தோழர் வளர்மதி (Sums Valarmathi) திருச்சி பெண்கள் சிறையில் உள்ளார். அங்கு அவரும், தோழர் சுவாதியும் சிறை அதிகாரிகளின் ஆசியுடன், சிறைக் காவலர்களால் பலமுறை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தோழர் வளர்மதியும், சுவாதியும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, போலி வாக்குறுதிகளைக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தபின்னர், சிறைத்துறை மீண்டும் பலவிதமான வன்முறையில் ஈடுபடத் துவங்கியது.

உண்ணாவிரதம் இருந்ததற்கு தண்டனை என்று கூறி, சிறைத் தொலைப்பேசியை பயன்படுத்தக் கூடாது, பி.சி.பி பணத்தை (அதாவது, அவர்களது சிறைக் கணக்கில் உள்ள பணத்தை) அவர்கள் பயன்படுத்துவதை தடுப்பது, பெற்றோருக்கு கடிதம் எழுத அனுமதி மறுப்பது, அடிப்படைத் தேவைகளான நேப்கின், சோப்பு, எண்ணெய் ஆகியவற்றை தர மறுப்பது என்று தொடர் சித்திரவதையில் சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதித்துறை நடுவர்
(மாஜிஸ்ட்ரேட்) முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, தோழர் வளர்மதி சிறையில் நடந்த வன்முறைகள் குறித்து நடுவரிடம் ஒரு மனு அளித்துள்ளார்.

அம்மனுவின் மீது எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத நீதித்துறை நடுவர் அந்த மனுவை அதே சிறைக்கு ஃபார்வர்ட் செய்துள்ளார்.

இந்நிலையில், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தோழர் வளர்மதியிடம் வந்துள்ள சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் ”இன்ஸ்ப்பெக்சன் நடக்க உள்ளது, அதனால் உன்னை மற்ற சிறைவாசிகள் இருக்கும் பொதுத் தொகுதிக்கு மாற்றப் போகிறோம்” என்று கூறியுள்ளனர். இன்ஸ்பெக்சன் நடைபெறும்போது தாங்கள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கவில்லை என்று காட்டுவதற்காக இவ்வாறு ஒரு நாடகம் ஆட சிறைத் துறை திட்டமிட்டுள்ளதை அறிந்த தோழர் வளர்மதி வர மறுத்துள்ளார்.

உடனே, சிறைக் காவலர்கள் தோழர் வளர்மதியை அடித்து, கை கால்களை பிடித்து தூக்கிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று மாணவிகள் மீது வன்முறை ஏவப்படுவதை கண்டு கோபமுற்ற மற்ற சிறைவாசிகள் “ஏன் இந்த பெண்களிடம் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?” என்று தட்டிக் கேட்டுள்ளனர். நிறைய சிறைவாசிகள் கூடி கேட்டவுடன், அடங்கிக் கிடந்த சிறைவாசிகள் ஒன்று கூடுகிறார்களே என்று பதட்டமான சிறை நிர்வாகம், சிறைக் காவலர்களைக் கொண்டு சிறைவாசிகள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்துள்ளது. தோழர் வளர்மதியும் கட்டாயமாக “உயர் பாதுகாப்புத் தொகுதிக்கு” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருபுறம், பாசிச நீதிமன்றம் தோழர்களுக்கு பிணை வழங்காமல் பிணை மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது.

இன்னொருபுறம், சிறைத்துறை தோழர்கள் மீது தொடர் வன்முறையை ஏவி வருகின்றது. என்ன செய்யப் போகிறோம்?

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ்

‘கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) சுமார் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து அகில இந்திய அளவில் அமைக்கப்பட்ட PUCL உண்மை அறியும் குழு அறிக்கை இந்தக் கலவரத்தில் காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து இந்த வன்முறைகளை நிகழ்த்தின என்பதை மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தது.

அடுத்த இரு மாதத்தில் (Feb 1997) அங்கு நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் பலர் குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைகளில் இருந்தனர். இன்னும் கூட சுமார் 40 க்கும் மேற்பட்டோர் சிறைகளில் உள்ளனர்.

இந்தத் தொடர் வெடி குண்டு தாக்குதலை ஒட்டி நடைபெற்ற போலீஸ் தேடுதலில் கோவை முஸ்லிம்கள் மீது பல அத்துமீறல்கள் நடைபெற்றன. ஓடி ஒளிந்த ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை நாங்கள் அமைத்த ஒரு உண்மை அறியும் குழு வெளிக் கொணர்ந்தது. கோவைக் கலவரங்கள் குறித்த இப்படியான மூன்று உண்மை அறியும் குழு அறிக்கைகள் தொகுக்கப்பட்டு என்னுடைய முன்னுரையுடன் ஒரு குறு நூலாகவும் வெளி வந்துள்ளது.

கலவரங்கள் நடந்தபோது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.அப்துல் நாசர் அவர்களை மகாத்மா காந்தியின் பேரரும், பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியருமான துஷார் காந்தி அவர்கள் சந்தித்து போலீஸ் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக துஷார் காந்தி சென்னை வந்தபோது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இதை ஒட்டி நாசர் அவர்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து அனுமதி பெற்று கோவைக்குச் சென்று அங்கு பலரையும் சந்தித்து வந்து முதல்வரிடம் தான் கண்டவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அனுபவங்களை நாசர் அவர்கள் “கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்” எனும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் வாய் மொழியாகக் கூறியவற்றுக்கு இளம் எழுத்தாளர் பழனி ஷஹான் எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆழி பதிப்பகம் அந்நூலை வெளியிட்டுள்ளது. அதற்கு நான் ஒரு விரிவான முன்னுரை எழுதியுள்ளேன்.

இந்ந்நிலையில், நூல் வெளிவந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது தமிழகக் காவல்துறை தன் கெடுபிடிகளைத் தொடங்கியுள்ளது. பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களை இந்த நூலை ஏன் வெளியிட்டீர்கள் என விசாரித்துள்ளனர். எழுத்து வடிவம் கொடுத்த காரணத்திற்காக ஷஹானையும் விசாரித்துள்ளனர். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாசர் அவர்களை உங்கள் நூல் காவல்துறைக்கு எதிராக உள்ளது, உங்களை விசாரிக்க வேண்டும் என அழைத்துள்ளனர். முறையாகச் சம்மன் அனுப்புங்கள் வருகிறேன் என அவர் பதிலிறுத்துள்ளார்.

நூல் ஒன்றை எழுதியதற்காக இரண்டாண்டுகளுக்குப் பின் ஒரு முன்னாள் மக்கள் பிரதிநிதி விசாரிக்கப்படக் கூடிய அவலம் தமிழக எடுபிடி அரசு எங்கே போய்க் கொண்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
அமைகிறது.

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் காவல்துறைகள் அத்துமீறல்களுக்குப் பெயர்போனவை. இவை நடத்தும் போலி என்கவுன்டர் படுகொலைகள் உலகப் பிரசித்தம். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முல்லா அவர்கள், தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கிரிமினல் கும்பல்களைக் காட்டிலும் ஒருங்கு திரட்டப்பட்ட போலீஸ் கும்பல் மோசமானது எனக் குறிப்பிட்டார் (1961). போலீசில் நல்லவர்களும் உள்ளார்களே எனக் கூறி காவல்துறை தீர்ப்பை மறு பரிசீலனைச் செய்ய விண்ணப்பித்தபோது “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” என அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

எத்தனையோ நூற்றுக்கணக்கான வழக்குகளில் காவல்துறையை நீதிமன்றங்கள் இப்படிக் கண்டித்துள்ளன. ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட எத்தனையோ காவல் அதிகாரிகள் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான உணமை அறியும் குழு அறிக்கைகளில் மனித உரிமை அமைப்புகள் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளன. விமர்சித்துள்ளன. கண்ணியம் மிக்க காவல்டுறை அதிகாரிகளே இப்படியான கொடுமைகளைச் சுட்டிக்காட்டி நூல்களை எழுதியுள்ளனர்.

காவல்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.

மக்கள் பிரதிநிதி ஒருவர் முதல்வர் அனுமதி பெற்றுச் சென்று வந்த தன் அனுபவங்களைப் பதிவு செய்ததற்காக இப்படிக் கெடுபிடி செய்வது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஜனநாயக உரிமைகளில் நம்பிக்கை உடைய அனைவரும் தமிழகக் காவல்துறையின் இந்தக் கெடுபிடிகளைக் கண்டிப்போம்.

அ. மார்க்ஸ், எழுத்தாளர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மீது நிழத்தப்பட்ட மோசமான வன்கொடுமைகள் சமூகத்தின் பேசுபொருளாகியுள்ளன. தாம்பரம் ஹாசினி பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது குழந்தை நகைகளுக்காக கொல்லப்பட்டு குப்பையில் தூக்கிவீசப்பட்டிருக்கிறார். கொடூரமாக கொல்லப்பட்டதற்கான தடயங்கள் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காணக் கிடைக்கின்றன. அரியலூரில் நந்தினி என்ற பதின் பருவ சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் சமூக சீரழிவை எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் கருத்தாளர்கள். சமூக ஊடகங்களில் வந்த சில கருத்துகள் இங்கே:

ஊடகவியலாளரும் கவிஞருமான நாச்சியாள் சுகந்தி, ‘தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் பச்சிளம் குழந்தைகளின் பாலியல் வன்புணர்வு மரணம்-கொலை, யாருடைய மனசாட்சியையும் உலுக்குவதாக இல்லை’ என்கிறார்.

சுகந்தி நாச்சியாள்
சுகந்தி நாச்சியாள்

“அரசு இனி எல்லாவற்றுக்கும் வாய் மூடிதான் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரைத் தவிர என்ன வழியுண்டு என்று யோசிக்க முடியத வேதனையில் இருப்பர்.
சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது ஒரு பக்கம் நடக்க வேண்டும். பெண் வழக்கறிஞர்கள் மட்டுமில்லாது ஆண் வழக்கறிஞர்கலூம் இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதையும் குற்றவாளிகள் தப்பியோடாமல் இருக்கவும் நியாயமாக போராட வேண்டும். அதற்கு முன்பு, பாலியல் வன்முறைக்கு எதிரான ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்

ஊடகங்கள் இந்த சம்பங்கள் தொடர்ந்து நடப்பதன் காரணம், மனநிலை குறித்து திரும்பத் திரும்ப பேச வேண்டும். பள்ளியிலும் கல்லூரிகலும் இனிமேலாவது இதுகுறித்து ஓபனாகப் பேசுவது காலத்தின் கட்டாயம்

அம்மாக்கள் தங்கல் வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இதுகுறித்து ிபுரிதலை உருவாக்குவது அவசியம். கலாச்சாராம், பண்பாடு, பேச கூச்சம் என்று சொல்லிக்கொண்டிருந்தால்
நாமும் மறைமுக காரணமாகிறோம்.

தயவுசெய்து அந்தக் குழந்தையின் படங்களை போடாதீர்”

எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் சொல்லும் சில கருத்துகள் கீழே:

இளங்கோ கிருஷ்ணன்
இளங்கோ கிருஷ்ணன்

என் நண்பர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலுடன் பகிர்ந்துகொண்டது இது. அவரின் தந்தை நண்பரின் மூன்று வயதுக் குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறராம். நண்பரின் மனைவி அதைப் பார்த்துவிட்டு புகார் சொல்லப்போகவே அவர் தனது தந்தையை அழைத்துக் கேட்டிருக்கிறார். அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாராம். நண்பரால் தாங்க முடியவில்லை… அவர் தந்தையின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டவர் என்பதால் இந்த அதிர்ச்சியை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. அவர் தந்தை ஒரு முன்னாள் தலைமையாசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ரமேஷ்-பிரேம் ஒரு கட்டுரையில் ‘ தமிழ் சமூகம் தன் நனவிலியில் ஓயாது காமத்தைச் சுமந்து அலைகிறது’ என்று சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. நண்பரின் தந்தை ஓர் உதாரணம் மட்டுமே… இப்படித்தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. கிட்டதட்ட சைல்டு அப்யூஸுக்கு ஆளாகாத பெண் குழந்தைகளே இங்கு இல்லை என்று தோன்றுகிறது. இல்லை இது வெறும் காமம் சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை என்றும் தோன்றுகிறது.

நாம் இன்னமும் நாகரிகமான குடிமைச் சமூகமாக மாறுவதற்கான முதிர்ச்சி நம்மிடம் இல்லை என்ற கருத்து எனக்கு அடிக்கடி தோன்றும். குழந்தைகள் மீதான வன்முறையைப் பார்க்கும்போது இந்தக் கருத்து வலுப்படவே செய்கிறது. போதுமான அளவு தனி மனிதனாகத் தன்னை உணராத, இன்னும் சொல்லப்போனால் தனி மனிதனுக்குத் தேவைப்படும் பொறுப்புணர்வுகள் பற்றிய போதமே இல்லாத ஒரு பொல்லையான, உள்ளீடற்ற ஜனநாயகத்தைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

போதுமான அளவு தனிமனித பிரக்ஞை வளராத சமூகம் என்பதால்தான் மற்றமை மீதான ஒடுக்குதல் என்பது இயல்பாக வருகிறதோ என்றும் தோன்றுகிறது. அது ஜாதியோ, பாலினமோ, குழந்தையோ தன்னைவிட பலவீனமான ஓர் உடலை சுரண்டுவது, ஒடுக்குவது, அழிப்பது என்பது மற்றமை மீதான காழ்பிலிருந்தே உருவாகிறது. இந்த மற்றமை மீதான காழ்ப்பு என்பது தன்னிலை பற்றிய மதிப்பீடின்மை, மிகை மதிப்பீடு ஆகியவற்றில் இருந்து உருக்கொள்கிறது போலும்… சுய பிரக்ஞையுள்ள முதிர்ச்சியான தனிமனித இருப்பு என்பது, தன் சக மனித இருப்பைப் பொருட்படுத்துவது. பொருட்படுத்துவது என்றால் விட்டுக்கொடுப்பது என்று புரிந்துகொள்ள வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் அதுவும் நம் அளவு முக்கியமான இருப்பே என்கிற சகஜ மனநிலை… இது உருவாகாததே பல பிரச்னைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். குறிப்பாக பாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண்களுக்கு உள்ள ஆதிக்க உணர்வும், உடமையுணர்வும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. மற்றமையின் இருப்பு என்ற ஒன்றே ஆணுக்குத் தோன்றுவது இல்லை. அது, தன் இருப்பால் ஆனது அல்லது அதன் எதிர்வினையால் உருவாவது என்கிற மனோபாவமே உள்ளது.

மூன்று வயதுக் குழந்தையிடம் பாலின்பம் தேடும் அளவிலா நம்மிடம் பாலியல் வறுமை உள்ளது என்று ஆயாசமாக உள்ளது. உண்மையில் பாலியல் தேவை அல்ல அது குறித்த ஹைப்புகளே நம் முக்கியமான பிரச்னையாக உள்ளன. பெண்ணுடல் குறித்து ஆணுக்கு உருவாகும் மிகை கற்பனை அவன் பால்யத்தில் கருக்கொள்கிறது. முதுமை வரையிலும் அவன் மீள முடியாததாய் இருக்கிறது. பாலியல் குறித்து வெளிப்படையாய் பேச முடியாத சூழல் ஒரு முக்கியமான பிரச்னை.

பாலியல் கல்விதான் இதற்குத் தீர்வு என்று முடித்துவிட முடியுமா தெரியவில்லை. பாலியல் கல்வி தேவைதான். ஆனால் அது மட்டுமே முழுமையான தீர்வாகாது. முதலில் சிவில் சமூகம் என்றால் என்னவென்ற பாடத்தை ஆழமாகக் கற்பிக்க வேண்டி உள்ளது. நீ என்பதற்கும் மற்றமை என்பதற்குமான அரசியல் உறவு, சமூக உறவு எதுவென போதிக்க வேண்டி உள்ளது. நம் தாத்தாக்கள், அப்பாக்களுக்கு இல்லாத சிக்கல் இது… குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ அவற்றின் இருப்பு நம் இருப்பைச் சார்ந்ததே தவிரவும் நமக்கானது அல்ல… ஆரோக்கியமான குடிமைச் சமூகத்தில் மற்றமையின் இருப்பு என்பது தன்னிலைக்கு மேலும் அல்ல கீழும் அல்ல சமமுமல்ல… அவை இரண்டும் வெவ்வேறானவை… வேறு வேறு தனித்தன்மை உள்ள பூரணங்கள்அல்லது பூர்ணமின்மைகள்.

சமூக – அரசியல் செயல்பாட்டாளர் திவ்ய பாரதி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார்…

திவ்ய பாரதி
திவ்ய பாரதி

“கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் குழந்தைகளின் நிர்வாண/அரைநிர்வாணமான சிதைவுற்ற உடல்களை மீண்டும் மீண்டும் பகிராதீர்கள். அதையெல்லாம் பார்த்து குற்ற உணர்ச்சியோ, அரசியல் விழிப்போ அடையும் சொரணையுள்ள சமூகம் நமதல்ல”.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் போலீஸார் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர். இது ஊடகங்களில் வெளியாகி கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆறு வாரங்களில் விசாரணை அறிக்கையை அளிக்க காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலையில் இந்துத்துவக் கையாளாக ஜெ. அரசு செயல்படுகிறதா?

சி.மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

ராம்குமார் மரணம் தற்கொலை என்று சொல்லப்படுகிறது. மின்சாரக் கம்பியைப் பிடித்து தன்னைத் தானே கொன்றுகொண்டுள்ளார் என்பது செய்தி. அதேசமயம், “ராம்குமார் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுவதாக ராம்குமார் வக்கீல் கூறியுள்ளார்“ என்று தினத்தந்தியின் வலைமனை செய்தி சொல்கிறது.

அவரின் இடது கன்னத்திலும் மார்பிலும் மின்சாரம் பாய்ந்த காயங்கள் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாதி கொலையின் பின்னுள்ள, இதற்கு முந்தைய விளக்கப்படாத மர்மங்களையும், கைது செய்யப்பட்டபோதே ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டதாக வெளிவந்த செய்திகளையும் சேர்த்துப் பார்க்கும்போது சந்தேகம் வலுக்கிறது.
ஒரு பெண்ணின் கொலைக்கான குற்றவாளி மிக விரைவில் கைது செய்யப்பட்டது சுவாதி மரணத்தில்தான். அந்தக் கொலையில் ராம்குமார் நேரடியாக தொடர்புகொண்டவர் என்பதை இனிதான் காவல்துறையினர் நிருபிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கொல்லப்பட்டவர் பிராமணப் பெண் என்பதால், RSS வெறியர்கள், அதுவும் பிரபல நபர்கள், பிலால் என்ற முஸ்லீம் நபர் ஒருவரைக் குற்றம் சாட்டினர். ஆனால், காவல்துறை அந்த நபர் குற்றமற்றவர் என்பதாக கையாண்டு, அவரை விசாரணைக்குத் துணையாகக் கொண்டது. ஆனால், அந்த RSS வெறியர்கள் மீது, குறைந்த பட்சம், தவறான வழியில் விசாரணையை வழிநடத்துவது, விசாரணைக்கு ஊறுவிளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, மத துவேஷத்தைத் தூண்டுவது போன்ற சட்டப் பிரிவுகளில் வழக்கேதும் பதிவு செய்யப்படவில்லை.

அதன்பின், ராஜ்குமாருக்கு ஆதரவாக ஒரு RSS வக்கீல் தானே முன்வந்து ஆஜரானார். பின்னர் அவர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் மற்றொரு RSS நபர் உண்மையான குற்றவாளியை மறைத்து வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனால், அச்சு- காட்சி ஊடகங்கள் அந்த செய்தியை விசாரணைக்கு உட்படுத்த முயற்சி செய்யவே இல்லை.

என்னைப் போன்றவர்கள் ஒரு பெண் கொலைக்கு நீதி வேண்டும், காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினோம். ஊகங்கள், சந்தேகங்கள் என்று குழப்ப விரும்பவில்லை. ஆனால், இப்போது, சாட்சியங்களைக் கொலை செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதுவும், பிராமணப் பெண்ணின் கொலையில் “மனு நீதி“ பெண்ணுக்கு விதித்தவற்றை சுவாதி மீறினார் என்பதால், அதனால் வெறுப்படைந்த மனுநீதிக் காவலர்கள் அவரைக் கொலை செய்தனர், இராம்குமார் அல்ல என்ற வாதம் இன்று முக்கியத்துவம் உள்ளதாகிறது.

காவல்துறை, அப்படியெல்லாம் செய்வார்களா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் அதுபோன்ற வழக்கைச் சந்தித்தவன். கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்….

தலித் சிறுமியை மதுரை மாவட்ட திமுக பிரமுகர் அயூப்கான் நரபலி கொடுத்தார். எமது CPI ML கட்சி அதனை அம்பலப்படுத்தியது. அப்போது திமுக ஆட்சி. நாங்கள் மதுரை DGP வரை பிரச்சனையைக் கொண்டு சென்றோம். யார் குற்றவாளி என்பதை எடுத்துச் சொன்னோம். காவல்துறை கண்டுகொள்ளவில்லை. ஆய்வறிக்கை, போராட்டம் எல்லாம் செய்து பார்த்தோம். பின்னர், தேர்தல் அறிவிக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியில் கிரைம் பிரேன்ஞ் விசாரணைக்கு வழக்கு மாறியது. திமுகவின் அயூப்கான் கைது செய்யப்பட்டார். இருந்தபோதும் அவரை இயக்கிய அழகிரி வழக்கில் சேர்க்கப்படவில்லை. அழகிரியின் பரம எதிரி “அம்மா’’ ஜெயலலிதா ஜெயித்து வந்த பின்னர் அழகிரிக்குக் குற்றத்தில் பங்கிருக்கிறது என்ற குற்றச்சாட்டை “தமிழக காவல் தெய்வத்தின்“ கீழிருக்கும் காவல்துறை கண்டுகொள்ளவேயில்லை.

நிற்க, இந்த பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட விஷயம் இதுதான். வழக்கின் துவக்க கட்டத்திலேயே நரபலியில் அயூப் கானின் கையாளாக இருந்த இரண்டு நபர்கள் காவல்துறையின் பிடியில் இருந்தபோது இறந்து போயினர். ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் மரணம். அது கொலை என்று எமது கட்சி சொன்னது. மற்றவர் வயதானதால் மரணம். இந்த மரணங்களால் பயனடைந்தது இப்போது குற்றவாளியாக இருக்கும் திமுக பிரமுகர் அயூப்கான்தான். அவர் குற்றமற்றவர் ஆக தப்பிப்பதற்கான வேலையை காவல்துறை பார்த்தது. காவல்துறை நினைத்தால் சாட்சியங்களை அழிக்க முடியும் என்பதை விளக்கவே பழைய கதையைச் சொன்னேன்.

இப்போது ராம்குமாரை அழித்து சுவாதி சார்ந்த இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றின் பெருமையைக் காப்பதற்கு, காவியின் கூட்டாளியான ஜெயலலிதாவின் காவல்துறை துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, அறியப்பட்ட சிவில் உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற நேர்மையான நீதிபதிகள் உள்ளிட்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும், அது சுவாதி கொலை பற்றிய அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

“மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”

பிரேம்

பிரேம்
பிரேம்

(சாதிச்) சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது…

பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம்சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதி மன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடி உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை தற்கொலை என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன.

சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது.

சிறையில் ஒருவர் உண்மையாகவே தற்கொலை செய்துகொண்டால்கூட அதனைக் கொலை என்று சொல்கிறது மனித உரிமைகளின் நீதி. ஆனால் விசாரணை, உடற்கூறு ஆய்வுகள் எதுவும் இன்றி ஊடகங்கள் “தற்கொலை“ என்று உறுதிப்படுத்திவிட்டன.

இனி அனைத்து சாதிச் சதிகளும், கூலிக்கொலைகாரர்களின் குற்றத் தடையங்களும் புதைக்கப்பட்டுவிடும். தமிழகத்தில் அமைதி நிலவும்.

குற்றம் செய்திருந்தால்கூட (?) ஒருவரது குடும்பத்தினரை அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ராம்குமாரின் குடும்பத்தினரை இத்தனைக் கொடுமையாகக் காட்சிக் கொலை செய்து அவமதிக்கப்பட்ட உடல்களாய் அவர்களை மாற்றிவிட்ட “ஊடகங்களின் கையில் இருந்தவை காட்சிப்படக் கருவிகள் அல்ல ரயில்நிலையத்தில் கொல்லப்பட்ட பெண்ணைப் பிளந்த கொடுவாளின் மாறுவேடம்.

சாதி கண்டு பொங்கும் மனிதாபிமானம், பெண்ணென்ற இரக்கம், தமிழகம் கொலைக்காடாக மாறிவிட்டது என்ற கூச்சல்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 70க்கு மேற்பட்ட சாதி ஆணவக்கொலைகள், இந்த ஆண்டில் இதுவரை 30க்கு மேற்பட்ட சாதிகொடுங்கொலைகள். (PUCL களஆய்வு). இதுபற்றி பெருமைப்படுகிற சாதித் தமிழர்கள் ராம்குமாரின் கொலையைக் கொண்டாடுவார்கள்.

புலனாய்வுகள் இன்றியே புலப்படுகிறது மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்.

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள்.

வாகனம் தர மறுத்த அரசு மருத்துவமனை: இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற பழங்குடி

இந்த தேசம் தலித்துகளையும் பழங்குடிகளையும் விளிம்பு நிலை மக்களையும் துச்சமாக மதிக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒடிசாவின் கலாஹண்டி அரசு மருத்துவமனையில் டிபி நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அமாங் டே, சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். அமாங்கின் கணவர் டானா மஞ்சி, தன் மனைவியின் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகன உதவியைக் கேட்டிருக்கிறார். அவர்கள் வாகன இல்லை என்று நீண்ட அலைகழிப்புக்குப் பிறகு, தெரிவித்துள்ளனர். வாகனம் அமர்த்தி தன்னுடைய கிராமத்துக்கு எடுத்துச் செல்ல பணமில்லாத நிலையில், மனைவியின் உடலை துணியால் கட்டி, தன் தோளில் சுமந்துகொண்டி சென்றிருக்கிறார்.

சுமை தாளாமல் அங்காங்கே இறக்கி வைத்து, எடுத்துச் செல்கிறார். அழுதபடியே அவர்களுடைய மகளும் கூடவே வருகிறார். இந்தக் காட்சி, ஓடிசாவின் பத்திரிகையாளர்  வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் முயற்சியால், வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவிகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

செய்தி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்

“தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால்  காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும்போது திருப்புலானி அருகிலுள்ள பாலத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்ததாகக் கூறி காவல்துறை இக்கொலையை மறைக்க முயற்சித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் எத்தகைய குற்றப்பின்னணி கொண்டவராக இருப்பினும் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அதிகாரத்தை காவல்துறையினர் தம் கையில் எடுத்துக்கொண்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களைத் தாக்கி அதன்விளைவாக அவர்கள் மரணிக்கும் நிகழ்வுகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.
என்.சி.ஆர்.பி., என்ற தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் காவல் சாவுகள் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம், மோதல் சாவுகள்(என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கு குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும், இக்கொலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற சட்டவிரோத மரணங்களைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட சேக் அலாவுதீன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத்

ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள்.

குமுதுமகா கிராமத்திற்கு அருகே 16 பேரோடு அவர்கள் பயணம் செய்த ஆட்டோவின் சக்கரம் பெய்துக் கொண்டிருந்த மழையால் சேற்றில் சிக்கிக் கொண்டது. அதை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மறைந்திருந்த அரச படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டு. ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். பலத்த குண்டு காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். சம்பவம் நடைபெற்றதும் காயமடைந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இதைக் குறித்து உண்மைக் கண்டறியும் குழுவினரிடம் அவர்கள் சொல்லும்போது, காயங்களோடு தப்பியவர்களை போலீஸ் மொத்தமாக கொன்றுவிட்டு, உண்மைகளை மறைத்துவிடுவார்கள் என்பதனாலேயே தப்பிக்க முயற்சித்தோம் என்றார்கள். இதே கந்தமாலை ஒட்டிய பலியாகுடா காட்டில் 2014ஆம் ஆண்டு பாபர் மாதம் 5 அப்பாவி மக்களை கொன்றுவிட்டு அவர்களை நக்சல்கள் என்று போலீஸ் வழக்கை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்டவர்களில் தலித்துகளும் ஆதிவாசிகளும் அடங்குவர்.

kandhamal 2

நக்சல்களின் நடமாட்டம் குறித்து தகவல் வரவே தான் அங்கு மறைந்திருந்தோம், எங்களிடையே துப்பாக்கிசூடும் நடந்தது. அப்போது தான் எதிர்பாராதவிதமாக பொதுமக்களின் ஆட்டோ குறுக்கே வந்துவிட்டது என்று சொல்கிறது போலீஸ். ஆனால் 2 வயது குழந்தை மரணம் தான் இம்முறை போலீசின் வழக்கமான கதைகளை இங்கு சொல்லமுடியாமல் போயுள்ளது. அதுவும் போலீஸ் சுட்ட திசையிலிருந்த ஆட்டோவின் ஒரு பக்கம் தான் துப்பாக்கி குண்டு துளைகள் இருக்கிறது. இரவிலும் பார்ப்பதற்கு வசதியான அதிநவீன கருவிகள் இருந்தும் ஆட்டோவில் இருந்தவர்கள் ஆயுதமற்ற அப்பாவிகள் என்பது தெரியவில்லையா என்ற கேள்விக்கு மழையில் அவற்றை பயன்படுத்த முடியவில்லை என்கிறது கந்தமால் எஸ்.பி தலைமையில் படுகொலைகள் நிகழ்த்திய போலீஸ் கும்பல். செத்தவர்கள் குடும்பங்களுக்கு 5 லட்சம் அறிவித்துள்ளது மாநில பிஜேடி அரசு. படுகொலைகளை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது பாஜக.

கடந்த வாரம் மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிசூடு சம்பவத்தில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான 1528 சம்பவங்களின் உண்மைத்தன்மையைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம். காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் போலி மோதல் படுகொலைகள், கூட்டு பாலியல் வன்முறைகள், சித்ரவதை முகாம்கள், சட்டதுக்கு புறம்பான கைதுகள் என அவர்கள் நிகழ்த்தும் குற்றங்கள் எதிலும் வழக்கு பதிந்திட முடியாது, நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால் இந்திய அரசின் கூலிப் படைகள், AFSPA எனப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை நீக்க கோரி தான் போராளி இரோம் சர்மிளா கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக அறவழியில் போராடி வருகிறார். இப்போது போராளி புர்ஹான் வானி மரணத்தை தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தில் இது வரை 31 பேர் ராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளில் யார் மீதும் வழக்கு தொடக்க முடியாது. யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதுமில்லை. இது தான் இந்திய சட்டம்.

kandhamal 3

கந்தமாலில் படுகொலை செய்யப்பட்டுள்ள 5 பேரும், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ள 31 பேரும் தினந்தினம் நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் மேலும் சில எண்கள் தான். அவர்களின் பெயரும், பிறப்பும், வாழ்ந்த வாழ்க்கையும், மொழியும், கொண்டாட்டங்களும், கடவுளும், உறவுகளும், உணவும், தொழிலும், கனவுகளும் என எதுவும் நமக்கு தெரியப்போவதில்லை. அது அவ்வளவு முக்கியமானதாகவும் இப்போது இல்லை. மனித உயிர்கள் வெறும் எண்களாக சுறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவர்களெல்லோரும் ஏன் எப்படி யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் நமக்கு தெரியும்.

அடுத்த முறை காஷ்மீரில் தீவிரவாதி கொல்லப்பட்டான், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் போலீசுடனான மோதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டார்கள், இயற்கை கனிமங்களைவெட்டி எடுக்க சர்வதேச ஒப்பந்தம், மேக் இன் இந்தியா, இந்திய வளர்ச்சி விகிதம் என்று செய்திகளை பார்க்கும்போது தயவுகூர்ந்து, எங்கோ ஒரு காட்டில், மழை பெய்துக்கொண்டிருந்த சேறும் சகதியுமான சாலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கேட்பாரற்று விழுந்து கிடந்த இவர்களின் பெயர்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

குகல் டிகல் – ஆண் – 50 வயது
கிமுரி மல்லிக் – பெண் – 35
ப்ரிங்குலி மல்லிக் – 40
மிதியாலி மல்லிக் – 30
கோசே டிகல் – ஆண் குழந்தை – 2

ஜோஸ்வா ஐசக் ஆசாத், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

“என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

Nallu R Lingam
அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா?
மு.கு.: இந்த செய்தி ‘தி இந்து’ இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் கோழைகளா மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தருவார்கள்?

நல்ல வேளையாக, நான் பின்னோக்கி செல்லாததால் பதிவைக் காப்பி செய்துவிட்டேன். ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்துள்ளேன்.

செய்தி கீழே…
——————-
திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக தாக்கிய போலீஸார்: ஊருக்கு செல்லும்போது பேருந்தில் பனிக்குடம் உடைந்தது

திருவல்லிக்கேணி அரசு மருத் துவமனையில் நிறைமாத கர்ப் பிணி மற்றும் அவரது கணவரை போலீஸார் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் பனிக்குடம் உடைந்த தால் அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31). இவர்களுக்கு முத்தமிழரசி என்ற 2 வயது மகள் உள்ளார். திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் முத் தாம்பிகை சட்டம் படித்து வந்தார். அங்கேயே தமிழரசும் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-வது பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று பகல் 12 மணியளவில் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு வெளியே குழந்தை முத்தமிழரசியுடன் தமிழரசு அமர்ந் திருந்தார். அப்போது குழந்தை விடாமல் அழுதுள்ளது. அங்கி ருந்த 3 பெண் போலீஸார் இதைப் பார்த்து, ‘குழந்தையின் அழுகையை நிறுத்து. இல்லை யென்றால் குழந்தையை வெளியே தூக்கிச் சென்றுவிடு’ என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழரசு, ‘குழந்தை அழுகையை நிறுத்த மாட்டேன் என்கிறது’ என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் போலீஸார், ‘போலீஸையே எதிர்த்து பேசுகிறாயா’ என்று கூறி தமிழரசுவிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தகாத வார்த் தைகளால் திட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வார்டில் இருந்து வெளியே வந்த முத்தாம்பிகை, கணவரிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று பெண் போலீஸாரிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பெண் போலீஸாரும் நிறைமாத கர்ப்பிணியான முத்தாம்பிகை மற்றும் அவரது கணவர் தமிழரசு ஆகியோரை அடித்து உதைத்துள் ளனர். மேலும் முத்தாம்பிகையின் வயிற்றில் காலால் எட்டி உதைத் தனர். அதன்பின் மருத்துவமனை யில் உள்ள காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்று 3 பெண் போலீஸார் மற்றும் 2 ஆண் போலீஸார் சேர்த்து அடித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை வளாகத்தில் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியின் காலில் விழுந்த முத்தாம்பிகையும், தமிழரசும், “நாங்கள் ஒரு தவறும் செய்ய வில்லை. எங்களை போலீஸார் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்கு களை போட்டு கைது செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று அழுதனர்.

அவர்களை சமாதானப் படுத்திய முத்துவேல்பாண்டி, தவறு செய்த போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து “இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவே பயமாக இருக்கிறது. நாங்கள் ஊருக்கே செல்கிறோம்” என்று கூறிய தமிழரசு, மனைவி முத்தாம்பிகையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

பெண் குழந்தை பிறந்தது

பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது போரூர் அருகே முத்தாம்பிக்கை திடீரென்று வலியால் துடித்தார். அவருடைய பனிக்குடம் உடைந்தது. இதைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தை நிறுத்திய பொதுமக்கள் ஆம்புலன்ஸில் இருவரையும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதுபற்றி தமிழரசுவிடம் கேட்டபோது, “எனது மனைவிக்கு இது 10-வது மாதம். வரும் 24-ம் தேதி குழந்தை பிறக்கும் என்று திருப்பதியில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் குழந்தை பிறந்தால் உதவித் தொகை கிடைக்கும் என்பதால், சென்னைக்கு அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் அனுமதித்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. என்னையும், எனது மனைவியையும் அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவிக்கு பனிக்குடம் உடைந்து விட்டதால், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக் கிறேன். செலவுக்குக்கூட பணம் இல்லை. என்ன செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை”என்று கூறினார்.

டைம்ஸ் தமிழ் குறிப்பு: தி இந்து (தமிழ்) இணையதளத்தில் இந்தச் செய்தி தற்போது உள்ளது.

முத்தாம்பிகை தொலைக்காட்சி ஊடகங்களிடம் பேசியிருப்பது, “நான் மேல போட்டிருந்த துணியை உருவிப்போட்டு, என் கன்னத்துல பளார் பளார்னு அறைஞ்சாங்க. ஒரு போலீஸ் ஆஃபிஸர் நியம்னு என்னன்னு விசாரிக்கிறதுக்கு முன்னாடியே எங்க வீட்டுக்காரரை புடிச்சி லத்தியால அடிக்கிறார். கஞ்சா கேஸ் போட்டுடுவேன் மிரட்டுறாரு. ஒரு போலீஸ்கார்ருக்கு இவ்ளோ உரிமை இருக்கா? என்ன நடந்துதுன்னு விசாரிக்காமலேயே அடிக்கிறது தான் ஜனநாயகமா? எங்களை அடிச்சதை மக்கள் அத்தனை பேரும் பார்த்தாங்க, ஆனா யாரும் ஏன்னு கேட்கலை..” என அழுதபடியே கேட்கிறார். அவர் அழுகை ஆவேசம் தெரிகிறது. காவல்துறைக்கு கட்டற்ற சுதந்திரம் இருப்பதும் ஊடகங்கள் அடக்கி வாசிப்பதும் மக்களின் கூட்டு மனசாட்சி உறங்கிக்கிடப்பதும் அவருடைய ஆவேச கதறல் உணர்த்துகிறது.

காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

Marx Anthonisamy

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் முதலமைச்சர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.

நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக் கொள்வோம். இது தொடர்பாக சம்பவத்தன்று என்னிடம் எக்ஸ்பிரஸ். ஹிண்டு ஆகிய பத்திரிகைகளில் கருத்துக் கேட்டபோது உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்றுதான் சொன்னேன். கொல்லப்பட்ட காவலரின் மனைவி ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. பிள்ளைகள் படித்துக் கொண்டுள்ளனர் என்கிற வகையில் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது வரவேற்கத்தக்கது.

இனி இப்படி உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் இத்தகைய பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு உரிய பாதுகாப்புகள் கொடுப்பது தொடர்பாகவும் துறைவாரியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியை வெகு தொலைவில் பணியில் உள்ளார் என அறிகிறோம். அவருக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றுக்கு இடமாற்றமும் தருவீர்கள் என நம்புகிறோம்.

# # #

ஒரு நல்ல தொகை இழப்பீடாகத் தந்துள்ளமைக்கு மீண்டும் நன்றி. எனினும் இந்த அடிப்படையில் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறோம். இனி இப்படியான பணி நேர உயிரிழப்புகள், விபத்து உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் இதே அளவில் இழப்பீடு மற்றும் உதவிகள் ஆகியவை தரப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். போலிஸ்காரர்களுக்கு மட்டும்தான் இந்த நீதி என்பதாக இது அமைந்துவிடக் கூடாது.

போலீஸ்காரர்கள் சுட்டு ஆறு தேவேந்திரகுல வேளாளர்கள் பரமக்குடியில் கொல்லப்பட்டபோது இதே ஜெ அரசு எவ்வளவு இழப்பீடு தந்தது என்பதை நம்மால் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. போலீஸ் ஸ்டேஷன்களில் எத்தனை படுகொலைகள் நடக்கின்றன. சென்ற ஆண்டுகளில் நாகூரில், திருத்துறைபூண்டியில், சிதம்பரத்தில், நெல்லிக்குப்பத்தில்…. உடனடியாக நினைவுக்கு வருபவை இவை, காவல் நிலையக் கொலைகள் நடந்ததே, அம்மணி அப்போது எங்கே போயிற்று உங்களின் இந்த இரக்க மனம்.

பரமக்குடி கொலைகள் நடந்தவுடன் அது குறித்த சட்டமன்றத்திலேயே அடாவடித்தனமாக அறிக்கை விட்டது மட்டுமின்றி அடுத்த சில நாட்களில் காவலர்களுக்குப் பல சலுகைகளையும் நீங்கள் அறிவித்ததை மறக்க முடியவில்லை.

அதிமுக ஆட்சி என்றால் அது ஒரு போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும் என்றொரு கருத்து உண்டு. மீண்டும் மீண்டும் அதைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் மேடம். திருக்கோவிலூரில் ஐந்து இருளர் சிறுமிகளை பெற்றோர் முன் கடத்திச் சென்று அவர்கள் கண்முன் சாலையோர யூகலிப்டஸ் காட்டில் வைத்து வன்புணர்ச்சி செய்தார்களே உங்கள் போலீஸ்காரர்கள ஐவர், அவர்களுக்கு உங்கள் ஆட்சியில் உரிய தண்டனை வழங்கப்பட்டதா மேடம்?

இன்னும் நான் நூறு எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆனால் உங்களால் ஒரு பதிலையும் சொல்ல முடியாது.

# # #

காவலர் முனுசாமியைக் கொன்ற கும்பலில் நான்கு பேர் இருந்துள்ளனர். அவர்களுள் மூர்த்தி எனும் ஒரு பதின் வயதுப் பையந்தான் அன்று அகப்பட்டுள்ளான், அவனை அங்கேயே கைகாலை ஒடித்துச் சென்று அடித்தே கொன்றுள்ளதாகத் தெரிகிறது. கொல்லப்பட்டு பலமணி நேரம் வரை பத்திரிகையாளர்களைக் கூட உடலைப் பார்க்க விடவில்லை. அது அப்பட்டமான ஒரு போலி என்கவுன்டர்.

இன்னும் மூவர் இன்னும் பிடிபடவில்லை எனவும் சிறப்புக் காவல் படை அமைத்துத் தேடப்படுகிறார்கள் எனவும் கால்துறை தரப்பில் சொல்லப்படுவதாகப் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். யாரோ இரண்டு பேர் பிடிபட்டுள்ளதாக ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதி. மற்ற மூவரையும் பிடித்துக் கொன்று விட்டுப் பின் என்கவுன்டர் கதையை விரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அது,

ஒரு பெண் காவலரின் நகையைத் திருடியவர்கள், பிடிக்கப்போன இடத்தில் ஒரு காவலரையே கொன்றவர்கள், இவர்களையெல்லாம் இப்படிப் பிடித்துக் கொல்வதுதான் சரி என்பதாக உருவாக்கப்பட்டுள்ள பொது மனநிலையை காவல்துறையும் ஜெயலலிதா அரசும் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

ஏற்கனவே சில ஆண்டுகள் முன் திருப்பாச்சி அருகில் குடிவெறியிலும் சாதி வெறியிலும் திளைத்திருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஆல்வின் சுதன் எனும் ஒரு இளம் காவல்துறை அதிகாரியை வெட்டிக் கொன்றது. அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் யார் சுதனைக் கொன்றது என அவர்களுக்கே தெரியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய அதிகபடச தணடனை வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் நடந்தது என்ன? என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை அந்தப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதே தெரிந்தது என்ன நடக்கப் போகிறது என. அந்த ஸ்பெஷலிஸ்ட் ஒரு நாள் சிறைக்குச் சென்று சும்மா இரண்டு பேரைத் தேர்வு செய்தார். அவர்களைக் கஸ்டடியில் எடுத்துக் கொண்டு வந்து கதறக் கதறச் சுட்டுக் கொன்றனர். இல்லையா? அவர்களில் ஒருவனின் இளம் மனைவிக்கும் பச்சைக் குழந்தைக்கும் என்ன இழப்பீடு அளிக்கப்பட்டது மேடம்? அந்தக் குழந்தையின் கல்விச் செலவு பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அந்த இருவருக்கும் சுதனின் கொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் காவல்துறையைப் பொருத்த மட்டில் ஒரு போலீஸ்காரர் தாக்கப்பட்டால் குறைந்தது மக்களில் இருவராவது கொல்லப்பட வேண்டும். இது எழுதப்படாத விதி. இதற்கு அரசு ஆதரவு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் ஆதரவும் உண்டு. ஏனெனில் அவர்களும் இப்படிச் செய்தவர்கள்தான்.

ஓசூர் கொலையில் ஏற்கனவே ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கஸ்டடியில் அவன் இறந்துள்ளான். இப்படியான சாவுகளில் அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் நெறிமுறைகளை வழங்கியுள்ளன. அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவீர்களா மேடம்?

இன்னும் மூவரையும் பிடியுங்கள். அவர்கள் திருடியதற்கும் காவலரைக் கொன்றதற்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுக் கொடுங்கள்.

ஆனால் நீங்கள் அப்படிச் செய்யப் போவதில்லை. எங்களுக்குத் தெரியும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என.

அ. மார்க்ஸ், ஓய்வு பெற்ற பேராசிரியர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ராகுல் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மறைந்து திரியும் ஒரு கெரில்லாவால் இப்படி மடிப்பு களையாத, புத்தம் புது சீருடைய அணிந்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

தலைச் சிறந்த மானுடவியலாளர்கள் இந்தச் சம்பவம் கொலம்பிய இராணுவம், அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்கு கெரில்லா படையினரின் சீருடைகள் அணிவித்ததை நினைவுப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது சின்ன கீறல் கூட இல்லை. இன்று அப்பகுதிக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். நாளை விரிவாக எழுதுகிறேன்.பல அதிர்ச்சி தகவல்கள் உண்டு. ( பட உதவி திரு.கண்ணன்)
____

மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா ஆகிய இருவரையும் கரம்பக்குடி போலிஸ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.சிவானந்தம் என்பவரை இருவரும் 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் கத்தியால் குத்தினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.கத்தியால் குத்த பட்டதாக சொல்லபடுகிற சிவானந்தம் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.அவரிடம் இன்று 11.06.2016 காலை 09:07 மணிக்கு 20 நிமிடம் தொலைபேசியில் பேசினேன். பூபதி கார்த்திகேயன் கரம்பகுடியில் பர்னிச்சர் கடை வைத்து இருக்கிறார்.நான் அவரிடம் 50,000 ரூபாய் கடனுக்கு பொருள் வாங்கினேன்.அதில் 42,000 ரூபாய் செலுத்திவிட்டேன்.

இந்நிலையில் கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் நான் இரண்டு சக்கர வாகனத்தில் பூபதி கார்த்திகேயன் பர்னிச்சர் கடைக்கு முன்பு சென்று கொண்டு இருந்தேன். அப்போது என்னை வழிமறித்த பூபதி கார்த்திகேயன் என்னிடம் மீத பணம் கேட்டு இழிவாக பேசினார். தாக்கவும் செய்தார்.அருகில் இருந்த துரை குணா சின்ன கத்தியால் என் கையில் குத்தினார். அப்போது அங்கு யாரும் இல்லை என்றார். நான் அவரிடம் என்ன மாதிரியான கத்தி என்றேன்.இருட்டில் நடந்தினால் கத்தியை பார்க்கவில்லை என்றார்.

பூபதி கார்த்திகேயன் கடை அருகில் நிறைய கடைகள் இருக்கின்றன. பெட்ரோல் பங் இருக்கிறது. சம்பவம் கடைக்கு முன்பு நடந்து இருக்கிறது. அதுவும் 20 நிமிடம் தகராறு நடந்ததாம். ஆனால் அங்கு யாரும் இல்லை என்று சிவானந்தம் சொல்லுவது நம்பும்படியாக இல்லை. என்ன கத்தி என்று கூட சிவானந்தத்திற்கு தெரியவில்லை.

நான் ஆலங்குடி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டேன். அங்கு மெய்யப்பன் என்கிற போலிஸ் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார் என்று கூறினார். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போலிஸ் என்னை அழைத்து வந்து இருக்கின்றனர் என்றார் சிவானந்தம். காயத்திற்கு எத்தனை தையல் போடப்பட்டு இருக்கிறது என்று கேட்டேன். தையல் போடுகிற அளவிற்கு காயம் இல்லை. சிறிய அளவில் கீறல் பட்டு இருக்கிறது என்றார். எனக்கு மனசு சங்கடமாக இருக்கிறது. அவர்களை போலிஸ் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விசாரித்து விட்டு, விட்டுவிடுவார்கள் என்று கருதினேன். பூபதி கார்த்திகேயன் எனது நெருங்கிய உறவினர். நாங்கள் இருவரும் தலித் சமூகத்தினர். வழக்கினை நடத்த விருப்பம் இல்லை என்றார். நான் அவரிடத்தில் உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்களில் பிரச்னை இருந்து இருக்கு என்று தெரிகிறது. உங்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் கத்தியால் உங்களை குத்தினார்களா என்று கேட்டேன். நான் பொய் சொல்லவில்லை சார் என்றார். உங்களை போலிஸ் பயன்படுத்தி இருக்கிறது என்று பலரும் சொல்லுகிறார்கள். இது குறித்து என்ன சொல்ல வரிங்க என்று கேட்டேன். அமைதியாக இருந்தார். உங்களுக்கு தாக்குதல் நடந்து இருந்தால் அது கண்டிக்கதக்கது. ஆனால் இரண்டு தலித்துகளை மோத விட்டு போலிஸ் தங்களது பழிவாங்கும் உணர்ச்சியை பயன்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிகிறதா? என்று கேட்டேன். ஆமாம் சார்..பூபதி கார்த்திகேயன் அண்ணன் இங்கு உள்ள கள்ள சாரத்திற்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராடி வந்தார் என்றார்.

பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் போலிஸ் ஏன் வன்மம் கொள்ள வேண்டும்? கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீது சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் மட்டும் 5 வழக்குகள் நடந்து வருகிறது .இந்த வழக்கினை நடத்தி வருபவர்கள் பெரியார் அம்பேத்கர் பண்பாட்டு மயத்தின் பொறுப்பாளர் செல்வம், பூபதி கார்த்திகேயன் துரை குணா உள்ளிட்ட தோழர்கள். காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல தலித்துகளை விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து வருபவர்.இவரின் அத்து மீறலை தொடர்ந்து இந்த தோழர்கள் எதிர்த்து வந்தனர். கள்ள சாராயமும் சாதியமும் இந்த பகுதியில் தாண்டவம் ஆடுகிறது. கள்ள சாராய கும்பலிடம் சகாயம் அன்பரசு பணம் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்கிற குற்றசாட்டுக்கு ஆளானவர்.

கரம்பக்குடி காவல் நிலையத்தில் பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் குற்ற என் ; 187/2016 பிரிவுகள் 341,294(b),323,324,506(2) இ.த.ச.கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறுகிற குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஆக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது மட்டும் அல்ல எம்.எல்.சி.வழக்காக பதிவு செய்யப்பட்டு 10.06.2016 அன்று காலை 6.00 மணி அளவில் இருவரையும் அவர்களது வீட்டில் போலிஸ் கைது செய்து இருக்கின்றனர்.

போலிஸ் அடித்து சித்ரவதை செய்து இருக்கின்றனர் என்று நூற்று கணக்கான வழக்குகள் எம்.எல்.சி.போடப்பட்டும் ஒரு வழக்கில் கூட போலிஸ் யாரையும் கைது செய்யவில்லை. வேண்டும் என்றே போலிஸ் இவர்கள் இருவரையும் கைது செய்து இருக்கிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யும் உடந்தை. நேற்று முழுவதும் கரம்பக்குடி காவல் நிலைய தொலைபேசி என்னை போலிஸ் டி ஆக்டிவ் செய்து வைத்து இருந்தனர். நேற்று 10.06.2016 அன்று எஸ்.பி.இடம்.இதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை. காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல மீறல்களை செய்து வருபவர்.இது திட்டமிட்டு போடப்பட்டு பொய் வழக்கு என்று எடுத்து கூறினேன். அப்படியா நான் விசாரிக்கிறேன் சார் என்றார். காவல் ஆய்வாளர் மீது பல புகார் இருந்தும் அவர் மீது ஏன் எஸ்.பி.இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று கேட்டேன். அதற்கு அமைதியாக இருந்தார்.

ஆக..கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீதும் புதுகோட்டை எஸ்.பி.மீதும் வேண்டும் என்றே கடமையை புறக்கணித்த வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.எஸ்.பி.மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் பனி இட நீக்கம் செய்யப்படவேண்டும்.

ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள்.

இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் காவலரை சிறையில் அடைத்தார்.

மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்

சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன்

பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? உச்சநீதிமன்றத்தின் ஒரு விசாரணை முடிவு அவர் செய்யவில்லை என்றது. அந்த கண்டுபிடிப்புகள் மேல்முறையீட்டில் உள்ளபோது, நாம் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியாது.

ஆனால், முதலமைச்சராக இருந்த மோடி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தக் கொலைகளைத் தடுத்தாரா? அன்று விழுந்த இறந்த உடல்களின் எண்ணிக்கை காட்டியது அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என்று. இந்தக் கலவரத்தின் போது இவர் உயிர்களைக் காப்பாற்ற, உண்மையிலே நினைத்திருந்தால், அது சிறந்ததாக இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை.

கடந்த 16 வருடங்களில்  குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் என்ன நடந்து என்று  இரண்டே இரண்டு முறை மட்டுமே மோடி பேசியிருக்கிறார். இந்த படுகொலை நடந்த மறுநாள், மார்ச் 1, 2002 ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில். அடுத்து முன்னாள் எம்பியும் இஸான் ஜஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜஃப்ரி வலியுறுத்தியதன் பேரில் உச்சநீதிமன்றம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கு குறித்து விசாரிக்க அமர்த்தப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு  முன்பும் மோடி பேசினார்.

இந்த இரண்டு இடங்களிலும், அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுகூரத்தக்கவை.

ஜீ தொலைக்காட்சி பேட்டியில், “ஊடகளில் வந்துள்ளபடி ஜஃப்ரி வீட்டுக்கு வெளியே இருந்த கும்பலின் மீது தாக்குதல் நடத்தினார், அவருடைய தாக்குதலால் ஆத்திரமடைந்தவர்கள் வினைக்கு எதிர்வினையாக படுகொலைகளை செய்தார்கள். இங்கே என்ன நடக்கிறதென்றால் ஒரு வினைக்கு எதிர்வினை சங்கிலியாகத் தொடர்கிறது. நான் எதை விரும்புகிறேன் என்றால் வினையும் வேண்டாம், எதிர்வினையும் வேண்டாம் என்பதையே”.

அப்போது அவர், கோத்ராவில் பிப்ரவரி 27, 2002 பயணிகள் எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவத்துடன் இந்த படுகொலைகளை இணைத்துப் பேசினார். அந்த வினைக்கு இது எதிர்வினை என்னும் படியாக.

“நேற்று முந்தினம் கோத்ராவில் 40 பெண்கள், குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள், இது இயற்கையாக, இந்த தேசத்தையே, உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. கோத்ரா சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு வேண்டுமென்றே இதை செய்தார்கள். முன்பு பெண் ஆசிரியர்களைக் கொன்றார்கள். இப்போது அவர்கள் மிக மோசமான குற்றத்தை செய்திருக்கிறார்கள். அதற்கான எதிர்வினைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது”.

இங்கே சொன்ன வினை- எதிர்வினை கோட்பாட்டையே 2010ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வு குழு முன்பு மோடி, (அப்போதும் அவர் குஜராத் முதல்வாராக இருந்தார்) சொன்னார்:

“குஜராத்தின் வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் குஜராத்தின் மத வன்முறைக்கு பழைய வரலாறு  இருப்பதை தெரிந்துகொள்வார்கள். என்னுடைய பிறப்புக்கு முன்பிருந்தே, குஜராத்தில் மத வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. தற்போதிருக்கும் வரலாற்றின் படி 1714 ஆம் ஆண்டிலிருந்தே குஜாராத்தில் ஆயிரக்கணக்கான மத மோதல்கள் பதிவாகியுள்ளன.

2002, மார்ச் 1, ஜீ தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், இப்போது எட்டு வருடங்கள் ஆகிறது, சரியாக நான் என்ன வார்த்தைகளைச் சொன்னேன் என எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நான் எப்போதும் அமைதிக்காக மட்டுமே பேசினேன். நான் மக்களை வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ள எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.

என்னுடைய வார்த்தைகள் சரியாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும்பட்சத்தில் இந்தக் கேள்விக்கான தேவை இல்லை. மிகவும் அக்கறையுடனேயே எந்தவித வன்முறையும் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து என்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்”

சிறப்பு புலனாய்வுக் குழு மோடியிடம், ஜஃப்ரி உங்களை தொலைபேசியில் அழைத்தாரா என்பதையும் கேட்டது. குல்பர்க் குடியிருப்பு வாசிகளில் பலர், ரூபா மோடி என்ற பார்சி பெண் உள்பட 2009-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மோடியிடம் ஜஃப்ரி தொலைபேசியில் உதவி கேட்டார் என்றும் மோடி அதற்கு வசைகளை பதிலாகத் தந்தார் என்றும் சாட்சி கூறினர்.

மோடி சிறப்பு புலனாய்வு குழு இப்படி சொன்னார்:

“இந்தத் தொடர்பில் நான் ஒன்றை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன்; இப்படிப்பட்ட எந்தவொரு தொலைபேசி அழைப்பும் எனக்கு வரவில்லை”

அப்படியானால் அந்த அழைப்புக்கு, மோடியின் உதவியாளர்கள் பதிலளித்தார்களா? இந்தக் கேள்வியை சிறப்பு புலனாய்வு குழு கேட்கவில்லை.
சிறப்பு புலனாய்வு குழு கேட்டது: “குல்பர்க் குடியிருப்பில் வன்முறை கும்பலின் தாக்குதல் பற்றி ஏதேனும் தகவல் கிடைப் பெற்றீர்களா? ஆம் எனில், எப்போது, யார் மூலமாக? இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?மோடி சொன்னார்:

“எனக்கு நினைவு தெரிந்தவரையில், குல்பர்க் குடியிருப்பில் நடந்த தாக்குதல் குறித்து மெகானிநகர் மற்றும் நரோடா பாட்டியாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்தப்படுவதாக எனக்குச் சொல்லப்பட்டது”

எந்த அளவுகோளை வைத்தாலும் இது வியப்புக்குரிய கூற்று. இந்த வன்முறை அகமதாபாத்தில் காலையிலே தொடங்கிவிட்டது. 200 முஸ்லீம்கள் நண்பகலுக்குள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆனால், இந்த வன்முறை பற்றி இரவில்தான் தெரியும் என்று  முதலமைச்சராக இருந்த மோடி சொல்கிறார்!

 சாட்சியங்கள் சொன்ன உண்மைத்தன்மையை விசாரிக்காமல், “என்னுடைய நினைவுக்குத் தெரிந்தவரையில்” என்ற எச்சரிக்கையுடன்  மோடி பதில் சொன்னதை, அவருடைய முகமதிப்புக்காக ஏற்றுக்கொண்டது சிறப்பு புலனாய்வுக் குழு.

 மனோஜ் மிட்டா  The Fiction of Fact-Finding என்ற தனது புத்தகத்தில் மோடி ஏன் இப்படி நம்பத்தகாதவற்றை சொன்னார் என்பதற்கு காரணங்கள் சொல்கிறார்…
கோத்ரா சம்பவத்தை மட்டுமே பேசினார் என்கிற  (தூர்தர்ஷ்னில் தோன்றிய பேசியபோது கோத்ரா சம்பவம் பற்றி மட்டுமே பேசினார்) குற்றச்சாட்டை மறைக்கவே என்கிறார் மிட்டா.  தூர்தர்ஷன் பேச்சு பதிவு செய்யப்பட்டபோது, குல்பர்க் குடியிருப்பிலும் நரோடா பாட்டியாவிலும் வன்முறைகள் நடந்து முடிந்திருந்தன.  தன்னுடைய பேச்சுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இரவுதான் இந்த கொலைகள் குறித்து தெரியவந்ததாக சொல்கிறார்.
குழப்பும் நீதிசட்ட ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நிர்வாக திறன் மிக்க பொய்கள் கணிக்க முடியாதவையாக இருக்கின்றன. உண்மையில் மோடி உயிர்களை காப்பாற்ற முனைந்தாரா இல்லையா? அவர் சொன்னது நல்லதாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை – அவர் குறைந்த பட்சம் இப்படியான கொடிய குற்றங்கள் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாவது நினைத்தாரா? 1984-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த சீக்கிய படுகொலைகளைத் தடுக்க   ராஜீவ்காந்தி தவறினார், அவரால் இதைத் தடுத்திருக்க முடியாது என்பதை நம்மால் ஓரளவேனும் தீர்மானிக்க முடிந்தது.குல்பர்க் குடியிருப்பில் நடந்த படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மோடி தீரா தாகத்துடன் இருந்தாரா என்பதை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மைக்கு அப்பால் வேறெதும் இருந்திருக்க வாய்ப்பில்லை.2003-ஆம் ஆண்டும் அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது,  குல்பர்க் படுகொலையும் குஜராத் கலவரம் தொடர்பான பெரிய வழக்குகளும் மாநிலத்துக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.   14 பேர் கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி கலவர வழக்கில் இருந்து குஜராத் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் தலையீட்டில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னணியில் மனித உரிமை ஆணையம் இப்படியான மனுவை தாக்கல் செய்தது.அந்த மனு இப்படி சொன்னது:

“குற்றங்களுக்கு வழங்கப்படும் தீர்ப்புகளின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டும் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமையைக் காக்கும் வகையில், எங்களுடைய குழு வடோதரா சென்று நேரில் விசாரித்தறிந்த தகவல்களின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டம் 136 பிரிவின் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறோம். விசாரணை நீதிமன்றம் பெஸ்ட் பேக்கரி வழக்கில் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து சுதந்திரமான விசாரணைக்கு குழு அமைத்து இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் குஜராத் மாநிலத்துக்கு வெளியே வழக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறோம்”

“ஆணையம் 406 குற்றவியல் சட்ட பிரிவின் படி உச்சநீதிமன்றத்தின் முன், கோத்ரா சம்பவம்,. குல்பர்க் குடியிருப்பு சம்பவம், நரோடியா பாட்டியா சம்பவம் மற்றும் சதார்புரா வழக்கையும் குஜராத் மாநிலத்துக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறது”

பாவ்நகர் என்ற இடத்தில் முஸ்லிம்களைக் காப்பாற்றிய ராகுல் சர்மா என்ற காவல் அதிகாரி, மோடி அரசால் அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் முன்பு காவலர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள், வழக்குவிசாரணை எப்படி நடக்கிறது என்பது குறித்து சாட்சியமளித்தவர். கட்டுப்பாட்டு அறையின் டிசிபியாக இருந்த அவர், ஜாஃப்ரி தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது என குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டதற்கும் முதல் தகவல் அறிக்கையில் உள்ளதற்கு முரண்பாடு இருப்பதைக் கண்டறிந்து சொன்னார். அதற்காக அவர் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். மோடி அரசுக்கு எதிராக பேசியதன் பலனை அவர் இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

என்றாலும் 2003ஆம் ஆண்டிலிருந்து நடந்துகொண்டிருந்த விசாரணையை நிறுத்தி வைத்து, ஆர். கே. ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதற்கே ஐந்து வருடம் பிடித்தது. மாநிலத்துக்கு வெளியே வழக்கு நடத்தும் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், குல்பர்க் குடியிருப்பு உள்ளிட்ட 14 மிக மோசமான சம்பவங்களை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. 2009-ஆம் ஆண்டு இந்தத் தடை நீக்கி, சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் அரசு அமைத்த விசாரணைக்குழுவை நேரடியாக மேற்பார்வையிடச் சொன்னது. உச்சநீதிமன்றத்தால் கலவரங்கள் நடந்து ஏழு வருடங்கள் ஆன பின்னும் மோடி முதலமைச்சராக இருந்த நிலையில், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழுவிடம் இந்த வழக்கை ஒப்படைக்க முடியவில்லை என்றும் வேறு வார்த்தைகளில் சொல்லலாம்.

நன்றி: தி வயர்

லாபநோக்கில்லாமல் செயல்படும் தி வயருக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் இங்கே அளிக்கலாம் donate.

முகப்புப் படம்: ராம் ரஹ்மான்.

நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

திலீபன் மகேந்திரன்

சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம்.

திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார்.

இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!

இதைக் காரணம் காட்டி உடன் யாருமில்லை என்பதை வைத்து ஆறுமுகத்தை நிர்வாகம் வெளியேற்றிவிட்டது.

எழுந்து நகரவும் முடியாததால் மருத்தவமணை வளாகத்துக்குள்ளளேயே அவர் கிடந்தார். இதைப் பொறுத்துக்கொள்ளாத நிர்வாகம் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வளாகத்தின் வெளியில் நடுரோட்டில் அனாதையைப் போல் தூக்கி வீசிவிட்டது. இன்று காலை இது குறித்து மருத்தவமணை அதிகாரி சையத் அசீஸ் பாஷா உசைனி அவர்களிடம் தோழர் வே. பாரதி முறையிட்டார். இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் “உங்களால் என்ன முடியுமோ பாத்துக்கொள்ளுங்கள்” என்று நிர்வாகம் திமிரோடு பதிலளித்து விட்டது.

இந்த நொடியிலிருந்து அவர் எங்கள் பொறுப்பு எங்களில் ஒருவர் இரவும், பகலும் அவருடனேயே இருந்து பார்த்துகொள்வோம் என்று தோழர் பாரதி உறுதிகொடுத்தும் சையத் அசித் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

திரு ஆறுமுகத்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உரிய நடைமுறையின்றி ஆறுமுகத்தை தெருவில் தூக்கி போட்டதற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

நோயாளி ஒவ்வொருவரையும் மனித கண்ணியத்நோடு நடத்தப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி ( 10-05-2016) 3 மணி அளவில் அண்ணா வளைவு அருகில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனை வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தை தமிழ் சமூகம் அறியும் விதமாக நேரில் வந்து செய்தி எடுத்து தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு உரிமையுடன் வேண்டுகிறேன் ..

9865107107./ வே. பாரதி.

90 03 406819/ திலீபன் மகேந்திரன்

“போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்!

திலீபன் மகேந்திரன்

தோழர் ஆறுமுகம் ஒரு காலும், ஒரு கையும் செயலிழந்தவர். சென்னை அண்ணா சித்த மருத்தவமனையில் (அமைந்தகரை) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்தவர்..

நேத்து அவுங்க அக்கா (attender) இல்லாத நேரத்துல ஹாஸ்பிட்டல் தரையிலையே கழித்திருக்கிறார்.. அத அவரே சுத்தமும் பன்னிட்டாரு.. ஆனா இந்த நர்சும், செக்கியூரிட்டிங்களும் சேந்து இவர குண்டு கட்டா தூக்கி வெளிய போட்டுட்டாங்க.. நடுரோட்ல.. உச்சி வெயில் முதல் நைட்டு வர வெளியதான் கடந்தாரு.

நா யாருன்னு விசாரிச்சி ஹாஸ்பிட்டல் உள்ள பெட்ல தூக்கி வந்து போட்டேன்.. நர்ஸுங்க கிட்ட சண்ட வளத்தேன்.. எப்டி அட்டண்டர் இல்லாத நேரத்துல வெளிய அனுப்புவீங்கனு..

நாங்க டிஸ்சார்ஜ் பன்னியாச்சிங்க இனிமே ஹாஸ்பிட்டல்ல அலோவ்ட் கிடையாது.. வெளிய கொண்டு போய்டுங்க அப்டிங்குறாங்க.

அப்ப வெளிய கொசு கடியில கடந்து செத்தா பரவால்லையான்னு கேட்டதுக்கு.. அது தெரியாது ஆனா ஹாஸ்பிட்டல் உள்ளார சாவ கூடாதுன்னு கருத்து பேசுறாங்க..

நா அட்டண்டர் இல்லாம டிஷ்சார்ஜ் பன்னிருக்கீங்க ரிசீப்ட் தாங்கன்னு கேட்டதுக்கு . அதெல்லாம் முடியாது வேனும்னா இன்னைக்கு நைட்டு மட்டும் ஓபி ரூம்ல தங்க வச்சிக்கிறோம்னு சொன்னாங்க..

ஓபி ரூம்னா கக்கூஸ் பக்கத்துல தரையில படுத்து நேத்து நைட்டு முழுக்க தூங்குனாங்க..

இன்னைக்கு காலையில அவுங்க அக்கா வந்துட்டாங்க.. அட்மிஷம் போட்டுக்குங்கன்னா.. இல்ல சேக்க முடியாது. என்ன வேனாலும் பன்னிக்கோங்கனு சொல்றானுங்க..

நீங்க இப்டி சொன்னா நாங்க என்னங்க பன்னுவோம்னு அவுங்க அக்கா அழுதுட்டே கேட்டதுக்கு “போய் பிச்ச எடுங்கன்னு” சொல்றாங்க…

இதுல சுபேந்திரன் அண்ணாவையும் வந்து மிரட்டிட்டு போராங்க. உங்க வேலைய மட்டும் பாருங்கன்னு..

அவுங்க அக்கா வீட்டு வேல செய்ரவங்க.. இனிமே இங்கையே இருந்து தம்பிய பாத்துக்குறேன்னு சொல்லியும்.. ஹாஸ்பிட்டல்ல அலோவ் பன்ன மாட்ரானுங்க.. என்னம்மோ அவன் அப்ப ஊட்டு சொத்தாட்டம்.

எங்க வரிப்பணத்த திருடி எங்களையே சாவடிக்கிறானுங்க..

இப்ப வரைக்கும் ஹாஸ்ப்பிட்டல் வெளியதான் உக்காந்து இருக்காங்க..

அடித்து, உதைப்பதுதான் மதுவிலிருந்து விடுபட வைக்கும் வழியா? போதை மறுவாழ்வு மையத்தின் மனித உரிமை மீறல்களை வீடியோவில் பாருங்கள்!

சென்னை போரூரில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெற வந்தவரை கடுமையாக தாக்கும் காட்சி வாட்ஸப்பில் வெளியாகியுள்ளது. மதுவுக்கு இத்தகைய வழிமுறைகளில்தான் சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அதிர்ச்சியை உருவாக்கி இருக்கின்றன.

#பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்

 

வழக்குரைஞர் மில்ட்டன்

சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாய்பால் ஜனா.

1992-ல் பிலாய் தொழிலக பகுதியில் தொழிலாளர் போராட்டத்தின் பொழுது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. 18 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் காயம்பட்ட தொழிலாளர்களுக்காக மருத்துவ சிகிச்சை தந்ததற்காக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவாகிவிட்டதாக இப்போது சட்டீஸ்கர் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

‘இந்த கைதுக்கான காரணம் கேலிக்கிடமாக இருக்கிறது. இருபது வருடமாக டல்லியில் தான் இருக்கிறார் அரிதாகத்தான் வெளியே சென்றுள்ளார். நோயாளியை விட்டு அகல மறுப்பார், 24 மணி நேரமும் மருத்துவமனையில் தான் இருப்பார். அரசாங்கம் நடத்திய பல்வேறு சுகாதாரம் தொடர்பான கமிட்டிகளில் பங்கெடுத்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டார் என்று இப்போது தான் நாங்கள் கேள்விப்படுகிறோம் ’ என இந்து நாளிதழுக்கு சாய்பாலின் மனைவி அல்பனா ஜனா பேட்டியளித்துள்ளார்.

மாவோயிஸ்ட் என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வதைக்கப்பட்ட பிரபல குழந்தை மருத்துவர் பினாயக்சென் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்தவர் தான். 1980 களில் மருத்துவர்கள் சாய்பால் ஜனா, பினாயக்சென் மற்றும் ஆசிஷ் குண்டு அகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை வளர்த்து எடுத்தனர். சாய்பால் இந்த குழுவிற்கு தலைமையேற்றார். இன்று சாகித் மருத்துவமனை சட்டீஸ்கர் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது என்றால் மருத்துவர் சாய்பாலின் பங்களிப்பு முக்கியமானது.

சாய்பாலின் கைதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக பினாயக்சென் குறிப்பிட்டுள்ளார்.

‘அவர் பன்முக தன்மை வாய்ந்த மருத்துவர் . மகப்பேறு மருத்துவம், சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை , பொது மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் என தன்னுடைய வாழ்வில் திறமையான மருத்துவராக வளர்ந்துள்ளார்’ என பினாயக் சென் அவருடைய சிறப்பை பற்றி கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக அரசும், சட்டீஸ்கர் மாநில பாஜக அரசும் கனிம வளக்கொள்ளைக்காக அதானிகளுக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்காவும் தனது அத்தனை படை பரிவாரங்களையும் இறக்கி, தங்களுடைய உரிமைகளுக்காக நிராயுதபாணியாக போராடும் பழங்குடி மக்களை கடுமையாக ஒடுக்கி வருகிறது. அதுக்கு ஏதுவாக பழங்குடி மக்களின் வன உரிமை சட்டத்தை கடந்த மாதத்தில் ரத்து செய்தது.

போலீசின், சிறப்பு படைகளின் போலி மோதல்களையும், பாலியல் வன்கொடுமைகளையும், ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்களையும், ஜனநாயகவாதிகளையும் கூட விட்டுவைப்பதில்லை. பழங்குடி செயற்பாட்டாளர் சோனி சோரி மீது ஆசிட் தாக்குதல் நடத்தியது. பத்திரிக்கையாளர்கள் சந்தோஷ், சோமுரு நாக்கை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தொடர்ச்சியாக மிரட்டல்கள் கொடுத்து சட்டீஸ்கரை விட்டு வெளியேற்றியது! இப்பொழுது தலைமை மருத்துவரை கைது செய்துள்ளது!

ஹைதாரபாத்திலும், தில்லியிலும் அத்தனை ஊடகங்களும், ஜனநாயகசக்திகளும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, பாஜக பரிவாரங்களும், அரசு படைகளும் தொடர்ச்சியாக தாக்குதல் தொடுக்கிறார்கள். சட்டீஸ்கரில் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு, பழங்குடி மக்கள் மீது கொடுமையான ஒடுக்குமுறையை ஏவி வருகிறது!

வழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தொடர்புக்கு 90946 66320

மருத்துவர் சாய்பாலை கைது செய்த போலீஸ், அவரை சங்கிலி இணைக்கப்பட்ட கைவிலங்கை இட்டு இழுத்துச் செல்லும் படம் வெளியாகியுள்ளது. கொடூர குற்றவாளிகளையே கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது மனித உரிமை மீறலாக பார்க்கப்படும் சூழலில் மனித உரிமைக்காகப் பாடுபட்ட ஒருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் செல்வது கண்டனங்களை எழுப்பியுள்ளது. 

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு.

vanniarasu
வன்னி அரசு

சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் உயிராய் நேசித்தவனை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் உயிர்பிழைத்து தன் காதல் கணவனுக்காக நீதி கேட்டு நிற்கும் தங்கை கவுசல்யாவை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் சாதி ஆதிக்க வெறிக்காகவே சங்கரை படுகொலை செய்தோம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் படுகொலையை நிகழ்த்திய நான்கு பேரை கைது செய்த போலீஸ் அவர்களின் கைகளை பின்னால் கட்டி, ஜட்டியோடு நிற்க வைத்துள்ள படம் ஒன்று நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நட்ட நடு ரோட்டில் பட்ட பகலில் தம்பி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் உள்ளாடைகளோடு இருக்கும் படம் வெளியானது ‘மனித உரிமை மீறல்’ என்று தாமாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இப்படி குற்றவாளிகளை அறை நிர்வாணத்தோடு எப்படி நிறுத்தலாம்? அந்த படத்தை எப்படி வெளியிடலாம் என்று மனித உரிமைகளை உயர்த்திப் பிடித்து காவல்துறைக்கும், ஊடகத்திற்கும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கையும், அதை தாமாக எடுத்துக் கொண்ட நீதிபதிகளையும் இப்படி அப்பாவியாக புரிந்துக்கொள்ளத்தான் நமக்கும் விருப்பம் ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது.

இதே தமிழகத்தில் பல காலமாக வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், குழந்தைகளின் படங்கள் சட்ட வழிகாட்டுதலுக்கு விரோதமாக போலீஸ் உதவியுடன் ஊடகங்கள் வெளியிடுகின்றன. கைவிலங்கு போடக்கூடாது என்னும் விதி மீறப்படுகிறது. தினந்தினம் காவல் நிலையங்களில் அப்பாவிகள், ஏழைகள், விளிம்பு நிலைச் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்படுகின்றனர். 5000 சந்தேக மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பதாக ஒரு உயர் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பத்திரிக்கைகளில் பெண்களை திருட்டுத்தனமாக ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். தர்மபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி விசாரணையில் திட்டமிட்டு தற்கொலை என முடிக்கப்பட்டது, சேலம் கோகுல்ராஜ் வழக்கில் நாங்கள் நான்கு நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்திய பின்னரே கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது, கோகுல்ராஜ் வழக்கை விசரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி இன்று வரை விஷ்ணுபிரியாவின் தந்தை போராடி வருகிறார், போலீசால் கடுமையாக தாக்கப்பட்டு கை உடைக்கப்பட்ட தம்பி மகேந்திரனின் படம் போலீசால் வெளியிடப்பட்டு இணையம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஆனால் அவருக்கு பிணை கிடைப்பதிலும் அவ்வளவு போராட்டம், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கண்ணகி நகரை சேர்ந்த சிறுவன் முகேஷ் பொய் வழக்கில் போலீசால் கொடூரமாக தாக்கப்பட்டு இன்று ஒரு காது கேட்கும் திறனே அவர் இழந்துள்ளார்.

இவ்வளவும் இந்த நாட்டில் தான் நடக்கிறது. இதில் ஒரே ஒரு விடயத்திலாவது இந்த மாண்புமிகு நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருந்தால் இன்று மனித உரிமை மீறலை கண்டவுடன் துடிதுடித்த அவர்களின் மனசாட்சியை நாம் பாராட்டியிருக்கலாம், கொண்டாடியிருக்கலாம் ஆனால் இன்று தன் சாதிக்கான மனசாட்சியாக துடித்தது தானே உண்மை. அதை நாம் விமர்சிக்க வேண்டாமா? பாகுபாடு காட்டும் மனசாட்சியை கண்டிக்க வேண்டாமா? சுட்டி காட்டி திருத்த வேண்டாமா? மாண்புமிகு நீதிபதி நாகமுத்து அவர்கள் நடராஜனுக்கு (சசிகலா நடராஜன்) மிகவும் நெருக்கமானவர், அவர் உறவினர் என்றும், இந்த பின்னணியில் பல குற்றச்சாட்டுகள் நீதித்துறை வட்டாரத்தில் இவர் மீது வைக்கப்படுகிறது. இவ்வாறு அவரின் சாதி மனசாட்சி துடிப்பது புதிதான விடயம் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களின் அரை நிர்வாண கோலத்திற்கு துடிப்பவர்கள், அவர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சங்கருக்காகவும், உயிருக்கு போராடும் கவுசல்யாவுக்கும் துடிக்காதது ஏன்? தமிழகத்தின் சாதிய ஆணவக் கொலைகளின் தந்தை ராமதாசிடம் சங்கர் படுகொலை குறித்து கேட்ட போது ‘இதை விட முக்கியமான விசயங்கள் பேசியிருக்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்ற குரூரமான மனநிலை தான் இந்த மாண்புமிகு நீதிபதிகளின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கோபத்திலும் வெளிப்படுகிறது. அன்று அநியாயமாக அப்சல் குருவை தூக்கில் போடுவதற்கு ‘கூட்டு மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்பட்டார் ஒரு நீதிபதி. இன்று நியாயமாக இவர்கள் எழுப்பும் கேள்விகள் கூட ‘சாதி மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்படுவதைத்தான் நாம் பார்க்கிறோம்.