BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்

தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறார். தடைம்ஸ் தமிழ்.காமிற்காக இந்த நேர்காணலை செய்தவர் பீட்டர் துரைராஜ்.

ஆர்.பட்டாபிராமன்

கேள்வி : பி.எஸ்.என்.எல். கடுமையான நெருக்கடியில் இருக்கிறதே, இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: தொலைத்தொடர்பு துறையே நெருக்கடியில் இருக்கிறது. அது பிஎ.ஸ்.என்.எல். நெருக்கடியாக சித்தரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ், ஜியோ, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் வருவாய் மார்க்கெட்டையும் பிடித்திருக்கிறார்கள்; வாடிக்கையாளர் மார்கெட்டையும் பிடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத்துறை 7 இலட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. ஆனால், இதில் பி.எஸ்.என்.எல். வாங்கியுள்ள கடன் 15,000 கோடி மட்டுமே. ஆனால் பி.எஸ்.என்.எல் மட்டுமே கடன் பொறியில் சிக்கித் தவிப்பது போல சித்தரிக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்போகாம் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு 40,000 கோடி வருவாயில் இருந்த நிறுவனம்; பிறகு கடனில் சிக்கியபோது அவரது அண்ணன் முகேஷ் அம்பானிதான் 350 கோடி ரூபாய் கொடுத்து தனது தம்பி அனில் அம்பானியை காப்பாற்றினார். ரிலையன்ஸ் ஜியோவின் வருகை இந்த நெருக்கடியை இந்தத் துறையில் தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே தொலைபேசித்துறைதான் (DoT), இந்த துறையில் ஏகபோகமாக இருந்தது. அது ரிலையன்ஸ் ஜியோ ஏகபோகமாக மாறும் சூழல் இருக்கிறது. ரிலையன்சை தவிர மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. தொலைத்தொடர்பு தொழிலுக்கு கடன் கொடுக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. தொலைத்தொடர்பு தொழிலின் வருவாய் குறைந்து உள்ளது; இலாபம் குறைந்து உள்ளது. ஒரு சந்தாதாரர் மூலம் கிடைக்கும் சராசரியான வருவாய் (Average Revenue Per User) குறைந்துள்ளது. ARPU என்று சொல்லுவார்கள். ஆனால் பி.எஸ்.என்.எல். மட்டும்தான் நெருக்கடியில் இருப்பதாக பேசுகிறோம்.

கேள்வி : தொழிலாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சம்பளமே வழங்காதபோது ‘பென்ஷன் பிதாமகன் ஓ.பி.குப்தா’ என்ற நூலை வெளியிட்டவர் நீங்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்று உங்கள் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் முகநூலில் எழுதி வருகிறார்ரகளே?

பதில்: ஓ.பி.குப்தா ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் அரசு ஊழியர்களுக்கு சங்கம் நடத்தியவர். ஆள் எடுப்பு தடைச் சட்டம் அமலில் இருந்தபோதே ஒரு இலட்சம் காண்டிராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வைத்தவர். அவர் இருந்திருந்தால் பேச்சுவார்த்தையில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். தொழிலாளர்களை அணி திரட்டுவதில், அரசாங்கத்தை அணுகுவதில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் வத்திருக்கிற நெருக்கடி பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு வந்துள்ள நெருக்கடி. இதை ஒரு தனிநபர் சார்ந்த விஷயமாக பார்க்க முடியாது.

கேள்வி : பி.எஸ்.என்.எல். ஏன் நஷ்டம் அடைந்தது?

பதில்: 2009 வரை பி.எஸ்.என்.எல். இலாபமாகத்தான் இயங்கியது. 2012 ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல். தனது கையிருப்பில் இருந்த 40,000 கோடியில் இருந்து, 18,500 கோடி ரூபாயைக் கொடுத்து 3G அலைக்கற்றையை வாங்கியது. ஆனால் ,மற்ற தனியார் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி அலைக்கற்றையை வாங்கின.

பிஎஸ்என்எல்- ன் செயல்பாடு குறித்து ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் எல்.கே.அத்வானியும் உறுப்பினராக இருந்தார். அந்தக்குழுவில் பி.எஸ்.என்.எல்.-ம், தொலைபேசித்துறையும் (DoT) தெரிவித்துள்ள காரணங்களில் ஒன்பதாவது காரணம்தான் ஊழியர் சம்மந்தப்பட்டது. ஆனால் நாடாளுமன்றக் குழு அறிக்கையைப் பார்க்காமலேயே, ஊழியர்கள் அதிகமாக இருப்பதுதான் அதன் நட்டத்திற்கு காரணம் என்று பத்திரிக்கைகளும், ஊடகங்களும் சொல்லுகின்றன; அதைப் பெரிதுபடுத்துகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் பி.எஸ்.என்.எல். சேவை தருகிறது; குன்றுகள் நிறைந்த பகுதிகளுக்கு சேவை தருகிறது; அந்தமான் போன்ற பகுதிகளில் உள்ள சிறு, சிறு தீவுகளுக்கு சேவை தருகிறது. மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் சேவை தருகிறது. இங்கிருந்தெல்லாம் இலாபம் கிடைப்பதில்லை. அதேபோல இஸ்ரோவிற்கு (ISRO) பணம் செலுத்திதான் சாட்டிலைட் தொடர்பை வாங்குகிறது. இவையெல்லாம் அதன் நட்டத்திற்கு முக்கியமான காரணங்களாகும். இதுபோன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனமே மூடப்பட்டு விடுமோ என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை.

கேள்வி : இதனைப் போக்க என்ன வழி ?

பதில் : தொலைபேசித்துறையை ஒரு கேந்திரமான துறையாக மத்திய அரசும், நிதி ஆயோக் -ம் அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் செலவு செய்ய கட்டுப்பாடு இருக்காது. நஷ்டம் அடைந்தாலும் தபால்துறையை அரசு நடத்துகிறதல்லவா? அரசாங்கத்தின் நேரடியான கவனத்தை பி.எஸ்.என்.எல். பெறும். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் பி.எஸ்.என்.எல்.- ஐதான் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்போது இரயில்வே துறையில் ரிலையன்ஸ் போன் உபயோகிக்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். பொதுப் பணித்துறை (BSNL Public Works Organization) என்ற கட்டுமான பிரிவு இருக்கிறது; இது வெளி மார்கெட்டுகளில் கட்டுமான வேலையை (Civil Works) செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு காரணம் கருதி இராணுவ தளவாட ஆலைகள் பி.எஸ்.என்.எல்.- ஐத்தான் பயன்படுத்துகின்றன. 2011 முதல் 2017 வரை பி.எஸ்.என்.எல். சேவையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை தரப்பட்டது; தெருத் தெருவாக சிம் கார்டு விற்றார்கள்; வாடிக்கையாளர் சேவைகள் மேம்படுத்தப்பட்டன; தொலைபேசி வருமானம், பிராட்பேண்ட் வருமானம் என பிரிக்கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் போதுமான வெற்றியைத் தரவில்லை. இந்த சூழலில்தான் பி.எஸ்.என்.எல். ஐ புத்தாக்கம் (revival), சீரமைப்பு (restructure) செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்படி செய்வதற்கு ஏற்கெனவே வழிமுறைகள் உள்ளன. ஆனால் பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு இத்தகைய நடவடிக்கைகள் புதிது.

கேள்வி : பி.எஸ்.என்.எல். ஐ புத்தாக்கம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் என்ன ?

பதில்: ஏர் இந்தியா நிறுவனம் 50,000 கோடி ரூபாய் கடனில் இருந்தது. பத்து ஆண்டுகளில் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு 30,000 கோடி ரூபாய் கடனை வழங்கியது. ஊழியர்களுக்கு போனஸ் தரக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால் இன்செண்டிவ் என்ற பெயரில் ஏர் இந்தியா பணம் தருகிறது. அதேபோல 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பொதுத்துறைக்கு 2012 ஆம் ஆண்டு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய அரசு 4500 கோடி ரூபாய் பண உதவி கொடுத்தது. ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கச் சொன்னது. 2018 ல் அது இலாபம் ஈட்டியது. ஓய்வு பெறும் வயதை 60 ஆக மீண்டும் உயர்த்தி விட்டார்கள். இந்த அனுபவங்கள் நமக்கு முன்பு உள்ளன. ஆனால் பி.எஸ்.என்.எல்.-ன் கடன் 15,000 கோடி மட்டுமே.

உலகத்திலேயே மலிவான விலைக்கு தொலைபேசி சேவையைத் தருவது இந்தியாதான். அதேபோல உலகிலேயே சீனாவிற்கு அடுத்த பெரிய தொலைபேசி வலைப்பின்னல் இந்தியாவில்தான் உள்ளது.

கேள்வி : பி.எஸ்.என்.எல்.- ன் புத்தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் ?

பதில்: பி.எஸ்.என்.எல்.-ஐ புத்தாக்கம் செய்வதற்கு செய்ய வேண்டிய ஆலோசனகளை தரச் சொல்லி DoT (தொலைபேசித்துறை), ஐ.ஐ.எம். அகமதாபாத்தை கேட்டது. ‘4 ஜி லைசென்சை பி.எஸ்.என்.எல். க்கு இருபது ஆண்டுகளுக்கு வேண்டாம்; பத்து ஆண்டுகளுக்கு கொடுக்கலாம்; ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும்; விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்; பி.எஸ்.என்.எல். டவர்- க்கு தனி கார்ப்பரேசனை உருவாக்க வேண்டும்; கண்ணாடி இழைகளுக்கு (optical fiber) தனி பிரிவை உருவாக்க வேண்டும்; நிலத்தை விற்பனை செய்ய வேண்டும்” என்று அது ஆலோசனை வழங்கியுள்ளது.

இது பொதுதளத்தில் விவாதிக்கப்பட வில்லை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கருத்து சொல்லவில்லை. இந்தப் பரிந்துரைகள் குறித்து பி.எஸ்.என்.எல்.-ன் கருத்து என்னவென்று DoT கேட்டது. “பி.எஸ்.என்.எல். நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு பணம் தர வேண்டும். ஏற்கெனவே 15,000 கோடி கடன் உள்ளதால் வங்கிகள் கடன் தராது. அன்றாட செலவுகளை செய்ய பணம் இல்லாததால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அவப்பெயர் உண்டாகிறது.

85 சதமான டேடா டிரான்ஸ்பர் 4ஜி மூலமாகத்தான் நடைபெறுகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் போன்ற மூன்று தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே 4 ஜி வசதி உள்ளது. 14 சதவீத டேடா டிரான்ஸ்பர் 3 ஜி மூலமாக பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் என்ற நான்கு நிறுவனங்கள் மூலமாக நடக்கிறது. ஒரு சதவீத டேடா டிரான்பர் 2 ஜி மூலமாக நடைபெறுகிறது.

4 ஜி வசதி வேண்டுமானால் 14,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். உடனடியாக 7000 கோடி ரூபாயும், 16 தவணைகளில் மீதமுள்ள 7000 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும். 4 ஜி இல்லையென்றால், கொஞ்சம், கொஞ்சமாக பி.எஸ்.என்.எல். தனது சந்தையை இழக்கும். எனவே மத்திய அரசு, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டு உள்ளது. அநேகமாக விரைவில் 4 ஜி கிடைத்து விடும் என்றே நினைக்கிறேன்.

‘கடந்த 13 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாகி விட்டது. எனவே ஊதிய உயர்வை கொடுத்துவிட்டு வி.ஆர்.எஸ். அல்லது ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கலாம்’ என பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளதாக அறிகிறோம். அதேபோல கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் கடன் வாங்க அரசின் அனுமதியை அது கோரியுள்ளது.

சம்பளம் கேட்டு போராடும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்

கேள்வி: 80,000 பேர் வேலையில் உபரியாக இருப்பதுதான் நட்டத்திற்கு காரணம் என்று சொல்வது பற்றி ?

பதில்: அடிப்படையில் பி.எஸ்.என்.எல்.- கும் மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சமதளப் போட்டி (Level Playing Ground) இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆயிரம் இணைப்புகள் இருந்தால் இத்தனை பணியாட்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் இல்லை. தனியார் தொலைபேசி நிறுவனங்கள் காட்டுவது ‘வேலையில்லாத வளர்ச்சி’. அரசு கொள்கைகளை பி.எஸ்.என்.எல். அமலாக்குகிறது. நஷ்டம் வந்தாலும் தொலைபேசி இணைப்பகங்களை பி.எஸ்.என்.எல். நடத்துகிறது. நக்சலைட்டுகளால் பாதிப்புக்கு உள்ளான 2650 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். இணைப்பகங்கள் உள்ளன. இதுபோன்ற பொறுப்பு எதுவும் தனியாருக்கு இல்லை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா இல்லையா ? பி.எஸ்.என்.எல். அரசியல் சட்டப்படி தொழிற்சங்க உரிமைகளை அனுமதித்துள்ளது. ஊடகத்தின் பார்வைக்கு பி.எஸ்.என்.எல். உள்ளாகி வருகிறது. பாராளுமன்றக் கண்காணிப்புக்கு, பாராளுமன்றக் குழுக்களின் கண்காணிப்பிற்கு, மத்திய அரசின் தணிக்கைக்கு, நிதி ஆயோக் கண்காணிப்பிற்கு பி.எஸ்.என்.எல். உட்படுகிறது. எனவே தனியார் நிறுவனங்களோடு பி.எஸ்.என்.எல்.- ஐ ஒப்பிடக் கூடாது.

கேள்வி : தாராளமயமாக்கலால் தொலைத்தொடர்புத்துறை எப்படி மாற்றம் அடைத்துள்ளது?

பதில்: உலகத்திலேயே மலிவான விலைக்கு தொலைபேசி சேவையைத் தருவது இந்தியாதான். அதேபோல உலகிலேயே சீனாவிற்கு அடுத்த பெரிய தொலைபேசி வலைப்பின்னல் இந்தியாவில்தான் உள்ளது.

‘தாராளயமாக்கலின் மாபெரும் அடையாளம் தொலைபேசித்துறை’ என்று என்று உலகமயமாக்கலின் இருபதாம் ஆண்டு விழாவின் போது மன்மோகன் சிங் சொன்னது உண்மைதான். இன்று 120 கோடி பேரிடம் செல்போன் வசதி வந்துள்ளது; இது உலகமயமாக்கலின் விளைவுதான். அரசு மட்டுமே மூலதனம் போட்டு இவ்வளவு பெரிய வீச்சை உருவாக்கி இருக்க முடியாது. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறதா? 10 சதம் சந்தையை வைத்துள்ள பி.எஸ்.என்.எல். 1.75 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் 90 சத சந்தையை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் இரண்டு இலட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

கேள்வி: பொதுமக்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ?

பதில்: 10 சதம் சந்தாதாரரே பி.எஸ்.என்.எல்.-ஐ பயன்படுத்துகின்றனர். தனியார் நிறுவனங்களை விட பி.எஸ்.என்.எல்.-ன் விலைக் கட்டணம் (tariff) குறைவுதான். இளைஞர்கள் தனியார் செல்வசதியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். கார்பரேட் நிறுவனங்களின் சந்தை இலாபம் தருவதாகும். ஆனால், அவை தனியார் நிறுவனங்களை பயன்படுத்துகின்றன. பொதுத்துறை வங்கிகள் பி.எஸ்.என்.எல். ஐதான் பயன்படுத்துகின்றன. மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரின் போது சென்னையில், ஒரிசாவில், சமீபத்தில் கேரளாவில் பி.எஸ்.என்.எல். ன் சிறப்பான சேவையை பார்த்து இருப்பீர்கள். எனவே சாதாரண பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு முன்னுரிமை தர வேண்டும். இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் பேர் பி.எஸ்.என்.எல். இணைப்பு வைத்துள்ளனர்.

.