குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!

முருகானந்தம் இராமசாமி

குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு கொள்ளிக்கட்டையில் தலையைச்சொரியும் வேலை என நினைத்தேன். அதுவும் மயிருள்ள மண்டையிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை என்றால் கபாலம் வரை கிர்ரென்று இறங்கத்தான் செய்யும். மண்டை மேல்மாடி காலியாயிருப்பது கூட பிரச்சனையில்லை. மண்டைக்குள்ளும் சரக்கில்லை என்பவன் இதைச்செய்யாமலிருந்தால்தான் அதிசயம்.

வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளால் பெரிய பிரச்சனை என்பது சங்கிகள் வெகுகாலமாக இடும் ஊளை. காரணம் அவர்கள் பெரிதும் இஸ்லாமியர்கள் என்பது அவர்களின் கணிப்பு. எனவே வேகமாக ஊளையிட்டார்கள்.

வங்கதேசத்துடனான எல்லை வரையறை பல சிக்கல்களை உடையதாக நாற்பதாண்டுகளுக்கு மேல்நீடித்தது. வங்கம் இந்தியா, வங்கதேசம் என இருநாடுகளுக்குள் வந்தாலும் ஒரே தேசிய இனத்தவர்கள், மொழி மற்றும் மானிடவியல் ரீதியாகவும் ஒரே வகைப்பாட்டிற்குள் அடங்குபவர்கள், என்பதால் தோற்றம் மற்றும் மொழி கொண்டு அவர்களை எளிதில் பிரித்தறிய இயலாது. எனவே மேற்குவங்கம், மற்றும் வங்கதேச எல்லைப்புறங்களில் பரஸ்பரம் அரசியல் எல்லைகள் இரு தரப்பு குடிமக்களாலும் பொருட்படுத்தப்படதில்லை.

இலங்கை ஒருவேளை இந்திய தீபகற்பத்துடன் இணைந்த நிலப்பரப்பாக இருந்தால் இலங்கை தமிழர்களை எப்படி பிரித்தறிவது கடினமோ அதுபோல. இந்த சிக்கல்கள் பஞ்சாபிலும் உண்டு. பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் இருக்கிறது. அவர்களும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள். ஆனால், பாகிஸ்தான் இந்தியா உறவுபோல இல்லாமல் வங்கதேசத்துடனான உறவு பெரிய நெருடல்கள் இல்லாதது என்பதால் எல்லைகள் ஒப்பீட்டளவில் கண்காணிப்பு குறைவானவை. எனவே. அரசியல் எல்லைகள் பெரிதாக நெருடுவதில்லை.

வங்க தேசத்தவர்கள் பெரிதும் 1971 ல் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் மோதலில் வெளியேறினர். இந்திரா காந்தி வங்க தேச போரில் இந்தியா இறங்க அங்கிருந்து வரும் அகதிகளால் இந்தியாவிற்கு ஏற்படும் நெருக்கடிகளையும் ஒரு காரணமாக முன்வைத்ததை இங்கு கவனிக்க வேண்டும்.

ஆனால், எண்ணிக்கையில் எத்தனை பேர் வங்கதேசத்திலிருந்து குடியேறினார்கள் என்பது ஒரு தொன்மம். கருப்புப்பண தொன்மம் போல… திட்டவட்டமான தரவுகள் இல்லை. அதற்கு வாய்ப்புமில்லை.

எனவே, இதை கடந்தகாலத்திற்குள் விடை தேடி கண்டடைய முடியாது. எதிர்காலம் குறித்த முறையான திட்டமிடலில்தான் விடைகாணமுடியும் எனக்கருதி மன்மோகன் சிங் அரசு வங்கதேச எல்லை மறுவரையறையை நிறைவு செய்து ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தி இந்த திசையில் ஒரு வெளிச்சத்தை அடைந்தது. முன்னோக்கி செல்லும் எந்த அரசும் அப்படியே சிந்திக்கும். யாருக்கும் சிறுகீறல்கூட நிகழாமல் சாதித்த அரசநய வெற்றி அது.

இப்போது அசாமிற்கு வருவோம்… அசாமின் வெகுநாளைய பிரச்சனை அசாமில் வங்காளிகளின் ஆதிக்கம் பரவுவதற்கெதிரான அஸ்ஸாமிய எதிரப்புணர்வு. அதுவும் தெற்கு அஸ்ஸாமில் வங்காளிகள் வலிமையாக இருக்கிறார்கள். நன்கு கவனிக்க வேண்டும். இந்த அஸ்ஸாமியரின் வங்காள எதிர்ப்புணர்வு வங்கதேச அரசியல் எல்லை சார்ந்தோ, இந்து முஸ்லீம் மதரீதியாகவோ உருப்பெறவில்லை. வங்காள ஆதிக்கப்பரவலுக்கெதிரான அஸ்ஸாமிய தேசிய இனத்தின் எதிர்ப்பு; இதுபலகாலமாக கனன்ற நெருப்புதான், அஸ்ஸாம் கண பரிஷத் இதன் அரசியல் திரட்சியாக உருப்பெற்றது.

இப்போது இதை பா.ஜ.க வழக்கம்போல ஊதிப்பெரிதாக்கியது. அதிகாரத்திற்காக அது எப்போதும் நாத்தொங்க அலையும் மிருகம்தான். அதிகாரத்தை அடைவதற்கு வங்காளிகளை வெளியேற்றுவோம் என பொதுவாக ஊளையிட்டது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டை கையிலெடுத்தது. 1971 க்குமுன் தாங்கள் அங்கு வசித்ததை நிரூபிக்க இயலாதவர்கள் நாடற்றவர்கள் என ஆனார்கள். இவர்கள் கிட்டத்தட்ட 19 லட்சம் பேர். இங்கேதான் சிக்கல் முளைத்தது அதில் எதிர்பார்த்தபடி இல்லாமல் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் இந்துக்களாயிருப்பதுதான்.

அதே கருப்புப் பண கதைததான் பிள்ளையாரை பிடிக்க முடியாமல் இப்போதும் ஒரு குரங்குதான் கிடைத்தது. இந்த குரங்கின் கையில்தான் இப்போது வடகிழக்கு மாநிலங்கள் சிக்கியிருக்கின்றன. இப்போது பிரச்சனை மதரீதியாக தான் நடத்தும் கேவல அரசியலின் நிகர விளைவாக நாடற்றவர்களான இந்த இந்து வங்காளிகளை குடிமக்களாக்கி கொள்ளவே இந்த அவசரக்கோல குடியுரிமை திருத்த மசோதா.

ஆனால், சிக்கல் இங்கு என்னவென்றால் அஸ்ஸாமியர்களின் கோரிக்கை குடியுரிமையை நிறுவ இயலாத வங்காளிகள் யாராக இருப்பினும் வெளியேற்ற வேண்டும் என்பதிலிருந்து அவர்கள் பின்வாங்காமல் நிற்பதே. அதனால்தான் அஸ்ஸாம் எரிகிறது. கூடவே திரிபுராவும்! இங்கும் வங்காளிகளுக்கும் பழங்குடியினருக்குமான மோதலில் பிரிவினைவாத பழங்குடியினர் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டுவைத்தே வங்காளிகள் ஆதிக்கம் மிகுந்த சி.பி.எம். ஐ தோற்கடித்தது. இதில் அவலம் என்னவென்றால் திரிபுரா பா.ஜ.க முதல்வரின் தந்தை வங்கதேசத்திலிருந்து வந்தவர்!

வங்காளிகள் – அஸ்ஸாமியர்கள் இடையோன மொழி பண்பாட்டு மோதலை இந்து முஸ்லீம் மோதலாக உருமாற்றி ஒப்பேற்றலாம் அதன்மூலம் ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களை நெருப்பு வளையத்திற்குள் நிறுத்தலாம். அதன்வழியே இந்துக்களை திரட்டலாம் என்கிற பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் அரசியலின் புதியவடிவமே இது. வங்கப்பிரிவினை இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்க கோட்டையின் அடித்தத்திலிருந்து உருவப்பட்ட முதல் செங்கல்லாக அமைந்தது. நரேந்திர மோடி நவீன கர்சன்பிரபுவாக ஆவதற்கான சாத்தியம் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு இந்த தேசம் தரும் விலை என்ன என்பதை காலமே தீர்மானிக்க வேண்டும்.

முருகானந்தம் இராமசாமி, அரசியல் செயல்பாட்டாளர்.

#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…

வியாழக்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி குறித்து சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார்…

“விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்?

பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது.

காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை பார்ப்பது, தலையை ஒருபுறமாக சாய்த்து கோணலாக சிரிப்பது, அல்லது வெறுமனே கிண்டலடிக்கும் வடிவிலான சிரிப்பை வெளிப்படுத்துவது போன்ற பல செய்கைகளை நீங்கள் அவரிடம் காணலாம்.

இவை எதுவும் மற்ற நெறியாளர்களிடம் காண இயலாது. மூத்த நெறியாளர்கள் ஜென்ராம், வெங்கட், குணா (செந்திலை அதிகம் பார்க்க வாய்ப்பில்லை, ஜீவசகப்தனை பார்த்ததேயில்லை- உபயம் அரசு கேபிள்) ஆகியோரது விவாதங்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தலையாட்டுவது மிக அரிதாக நடப்பதை பார்க்கலாம். அது அனேகமாக ஆமோதிப்பதற்காக மட்டும் நடக்கும்.

பாண்டேயின் உடல் மொழியும், குரல் ஏற்ற இறக்கமும் (டோனாலிட்டி) எதிரிலிருப்பவரின் கருத்தின் மீது மறுப்பையும், அலட்சியத்தையும், எள்ளளையும் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் இதனை சகிக்க மறுப்பதால் (தன்னையறியாமல்) ஆத்திரமடைந்து எதிர்வினை செய்கிறார்கள். பொதுவாக மனிதர்கள் வார்த்தைகளில் இருந்து வெறும் 7 சதவிகிதத்தை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனையவற்றை உடல்மொழியும் வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கமும் புரியவைக்கின்றன. ( நான் நன்றாக இருக்கிறேன் என சோகமான குரலில் சொன்னால் நீங்கள் என்ன புரிந்துகொள்வீர்கள்… என் வார்த்தைகளையா அல்லது உணர்வையா? )

பேச்சாளர்கள் பாண்டேயின் உணர்வுக்கு எதிர்வினை செய்ய முனைந்துதான் சிக்கிக்கொள்கிறார்கள். அதன் சமீபத்து விக்கெட் பழ.கருப்பையா.

பாண்டேயின் பாணி ஒரு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு ஒருக்காலும் உதவாது, வேண்டுமானால் சுவாரஸ்யமான வாதத்துக்கு உதவலாம்.

நான் சொல்வதில் ஐயமிருந்தால் ஒரேயொரு சோதனையை செய்துபாருங்கள்.
ஒரு தீவிரமான உரையாடலில் எதிரேயிருப்பவர் பேச்சுக்கு பாண்டே பாணி உடல்மொழியோடு “ அருமை அருமை அருமை” என அவரது மாடுலேஷனோடு பதில் சொல்லிப்பாருங்கள்.. (விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல)”

வில்லவன் இராமதாஸின் பதிவுக்கு வினவு தளத்தின் பொறுப்பாளர் கன்னையன் இராமதாஸின் எதிர்வினை…

“வில்லவன், உங்களுடைய கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. விவாதங்களில் கேள்வி கேட்கும் நெறியாளர்கள் பாண்டே துவங்கி நீங்கள் பாராட்டும் ஏனையோர் வரை தங்களது விவாதங்களின் அடிப்படையை அல்லது திசை வழியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் தமது சொந்த அரசியல் கண்ணோட்டங்களிருந்தே பெறுகிறார்களே அன்றி உடல் மொழியில் அல்ல. உடல் மொழியில் 73 சதவீதமும், வார்த்தையில் அதாவது குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தோடு தொடர்புடைய பொருளில் 7 சதவீதமும் மட்டுமே எதிரில் இருப்போரிடம் சென்றடைகிறது என்பது மிகவும் அபத்தமானது.

 இது உண்மை எனில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாக பேசும் பல்வேறு பாசிச எண்ணம் கொண்டோரையும், செயல்பாட்டில் உள்ளோரையும் உங்களுடைய உளவியல் ஆய்வு நல்லோர் என்று விடுதலை செய்து விடும். இவையெல்லாம் சமூக அறிவியல் அதாவது சொல்லிலும் செயலிலும் நடைமுறை சாராத வெறுமனே வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு மிரட்டுவதோடு தவறான புள்ளிவிவரங்களையும் கொண்ட முதலாளித்துவ பாணி கல்வி நிறுவனங்களின் பார்வை மட்டுமே. வைகுண்டராஜனின் காசில் பேசும் நெறியாளர்களும், பச்சமுத்து தொலைக்காட்சிகளில் தந்திரமாக மழை வெள்ளத்தின் குற்றவாளிகளான அரசையும், ஆக்கிரமிப்பு முதலாளிகளையும் – பொத்தேரியை ஆக்கிரமித்த பாரிவேந்தரையும் உள்ளிட்டு – காப்பாற்றும் பொருட்டு நிகழ்ச்சிகளின் தலைப்பையும், விவாத நோக்கையும் மாற்றுகிறார்களே அவர்களின் உடல் மொழி நீங்கள் பாராட்டும் வகையில் ‘காந்தி’ போல இருப்பினும் இவர்களின் அதாவது அந்த தொலைக்காட்சிகளின் செல்வழியை உங்களது ஆய்வு கண்டுபிடிக்கும் வகையில் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கொள்கைகளை சமூக சேவகர்கள் வேடத்தில் கத்தும் இந்துமதவெறியர்களும் அவர்களின் இதயக்குரலாக பேசும் பாண்டே போன்றோரும் ஒருவகையில் பழைய வகையிலான காட்டுக்கத்தல் போடும் பிற்போக்கு வாதிகள் மட்டுமே. சொல்லப்போனால் இவர்கள் தந்திரமாக பேசுமளவு இன்னும் அப்டேட் செய்து கொள்ளவில்லை. ஆனால் நடுநிலையின் பெயரில் நல்லவிதமான உடல்மொழியில் பேசுவோர்கள்தான் நரித்தனமாக பேசி எதிரில் இருப்போரை மயக்குகிறார்கள். ஒரு முறை தமிழக முஸ்லீம் அமைப்பு ஒன்றை அனேகமாக த.மு.மு.க என்று நினைக்கிறோம், அழைத்த சென்னை அமெரிக்க தூதரகம் அவர்களது வாதத்தை கேட்டதாம். அது யூடிபில் நபிகள் படம் குறித்த பிரச்சினை. இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்ட துணை தூதர், “உங்கள் வாதங்களை நேர்த்தியாக வைக்கிறீர்கள், நன்றி ” என்று அனுப்பிவிட்டார்கள். அடுத்த நாளே ஆப்கனிலோ, ஈராக்கிலோ குண்டு போட்டு ஆயிரம் பேரைக் கொன்றிருப்பார்கள். எனினும் அவர்கள் பாண்டே போல கத்தியோ, கோணலாகச் சிரித்தோ இல்லாமல் வெகு நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள்.

பழ.கருப்பையாக அவுட்டாக காரணம் பாண்டேவின் உடல் மொழி என்ற உங்களது ஆய்வு முடிவு உண்மையில் பாண்டே போன்றோருக்கே ஆதரவாக சென்று முடியும். ஏனெனில் பழ.கருப்பையா எனும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பெருச்சாளி இதற்கு முன் அ.தி.மு.கவில் சேரும் போது அம்மா என்ன புனிதத்தாயா இருந்தாரா, இல்லை அய்யாதான் மிஸ்டர் நேர்மையின் இலக்கணமாக இருந்தாரா?
பழ.கருப்பையா தனது சொந்த நலன் காரணமாக – அது புதிய பதவி கிடைக்கவில்லை, ஏதோ தனிநபர் முரண்பாடு, சசிகலா கும்பலோடு முரண்பாடு என்றே ஏதோ ஒரு எழவாக இருக்கலாம் – மட்டுமே அதிமுகவிலிருந்து விலகி அம்மாவை குற்றம் சாட்டுவது போல பேசுகிறார், நடிக்கிறார். பழ கருப்பையாவின் சந்தர்ப்பவாதத்தை உங்களது உளவியல் ஆய்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் ஈசி விக்கெட்டான பாண்டே மேல் உடல் மொழி என்று ஒரே போடாக போடுகிறீர்கள். பாண்டேவின் உடல்மொழியோ வாய் மொழியோ இரண்டும் வடிவம், உள்ளடக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதற்கு பொருத்தமாகவே இருக்கிறது. என்ன இந்து கொஞ்சம் பழைய டைப் மட்டுமே. எது எப்படியோ சொல்லிலும் செயலிலும் நாம் பொருத்தமாக இருந்தால்தான் இத்தகைய அப்பட்டமான நாடகத்தை புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் அதிகம் நிலைத்தகவல் போடுவதால் அந்த புரிதலை பெற முடியும் என்று தோன்றவில்லை. அரசியல் பொறுப்புணர்ச்சியோடும், கடமையுணர்வோடு மக்களிடம் வேலை செய்வது மூலமே அந்த புரிதல் கிடைக்கும் என்பதை உங்களுக்கு தோழமையோடு சொல்லிக் கொள்கிறோம். 

விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள் என்று ஆய்வு செய்யும் போது நீங்கள் பாண்டேவை மட்டும் கருத்தில் கொள்கிறீர்கள். பாண்டேவிடம் விவாதிக்கும் நபர்களின் அரசியல் சமரசங்களும், சந்தர்ப்பவாதங்களும், ஓட்டுக் கட்சி கூட்டணி நிர்ப்பந்தங்களும், என்று ஏராளமான பலவீனங்களை வைத்திருக்கின்றனர். இந்த பலவீனங்களை எடுத்து கிடுக்கிப் பிடி போடுமளவு பாண்டே யோக்கியர் இல்லை மட்டுமல்ல, கடைந்தெடுத்த அயோக்கியர் என்பதால் போகிற போக்கிலோ இல்லை வெறும் மிரட்டலிலோ நாக் அவுட் செய்கிறார். சின்ன கிரிமினல் பெரிய கிரிமினலை பார்த்தோ இல்லை பெரிய கிரிமினலை சின்ன கிரிமினலை பார்த்தோ சில தருணங்களில் பயப்படலாம். இதுவே தேர்ச்சி பெற்ற கிரிமினல் என்றால் அவரைப் போன்ற உத்தமரே இந்த உலகில் இல்லை என்று பெயரெடுக்குமளவு ‘குற்றங்குறை’ இல்லாமல் செய்வார். என்.டி.டி.வி பிரனாய் ராய் கூட அமைதியாகப் பேசும் ஒரு நெறியாளர்தான். ஆனால் அந்த டீசன்சிக்கு பின்னே உள்ள சதிகள், சமரசங்கள் கடைசியாக பீகார் தேர்தலில் பா.ஜ.க வெற்றி என்று அறிவித்து பின்னர் மன்னிப்பு கேட்டது வரை ஏராளம் அம்பலத்திற்கு வந்துவிட்டன.

பாண்டேக்கள் வில்லன்கள்தான். அதே நேரம் பழ கருப்பையாக்களை நல்லவர்களாக்கித்தான் பாண்டேக்களை வில்லன்களாக நிறுவ முடியும் என்றால் இறுதியில் பாண்டே தன்னை சுலபமாக காப்பாற்றிக் கொள்வார். பாசிஸ்டுகளின் உத்தியை எதிர் கொள்ளவதற்கு வெறுமனே டெக்னிக்கல் நுட்பம் மட்டும் அதாவது உடல் மொழியோ இல்லை பன்ஞ்லைன் பேசும் தருக்க மொழி மட்டும் போதாது. வாழ்க்கையை மக்கள் நலனில் இருந்து உள்ளது உள்ளபடி ஊடுறுவிப் பார்க்கும் பார்வையும், அந்த பார்வையை உருவாக்கும் களப்பணி சார்ந்த நடைமுறையும் வேண்டும். இல்லையேல் வார்த்தைகளை வைத்தே வாழ்க்கையை ஆய்வு செய்யும் சுயதிருப்தியிலும் அது தரும் டிஜிட்டல் பரவசமும் நம்மை அரித்துத் தின்றுவிடும்.”

நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை: அன்புமணிக்கும் இந்தக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த இந்தக் கதையின் நாயகன் திருவாளர் எகச்சு.உண்மையில் அவரது பெயர் எக்ஸ். ஆனால் தீவிர வடமொழி புறக்கணிப்பு உணர்வினால் ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று விளிக்கும் பாரம்பரியத்தில் வந்தவராதலால் தன் பெயரை எகச்சு என்று மாற்றிக்கொண்டார்.

ஆளை விழுங்கும் அளவுக்கான பசியில் கிறுகிறுவென மயக்கம் வந்தது திருவாளர் எகச்சு. அவர்களுக்கு. சாலையோர மோரிக்கல் ( பாலம்) ஒன்றில் தலைசாய்த்து அப்படியே படுத்துவிட்டார். அன்னாடம் இப்படி அடுத்த வேளை வயித்துப்பாட்டுக்கு அல்லாடும் நிலையில் இருநது தப்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அரணாக்கயிறு கோமணமில்லாம அலைந்த அம்பானி, அதானியெல்லாம் ஏதேதோ தில்லாலங்கடி திலுப்பாமாரி வேலை செய்து இன்னிக்கு பெரிய பணக்காரனுங்களா இருக்கறப்ப தன்னால் ஏன் ஆகமுடியாது என்று யோசிச்சுக்கிட்டே இருந்தவர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரில் இரண்டு கல்யாணம். ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு கல்யாணத்தில் சாப்பாட்டைபொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து யாருக்காவது விற்று அதில் வருகிற காசில் ஒரு கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்து, அது முட்டையிட்டு குஞ்சுபொறிச்சால் அஞ்சாறு உறுப்படியாகிவிடும். அதுகளை விற்று வருகிற காசில் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்த்து அது சினையாகி குட்டிப்போட்டு அப்படியே பல்கிப்பெருகிவிடும். ஆடுகளை விற்று மாடு வாங்கி அது விருத்தியான பின்பு விற்று காடுகழனி வாங்கவேண்டும். ஆடு, மாடு, காடு எல்லாம் கண்டதற்குப் பிறகு வீடொன்று கட்டிவிட்டால் இப்படி பாலத்துமேல் படுத்துக்கிடக்க வேண்டியதில்லை. வீடு கட்டியதும் தேக்குமரத்தில் கட்டில் செய்து இலவம் பஞ்சு மெத்தை போடவேண்டும்.

இவ்வளவு சொகுசும் வந்தப் பிறகு ஒத்தையில் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? லட்சணமான பெண்ணொருத்தியை கல்யாணம் செய்துகொள்ளனும். முதல் இரவில் படுக்கையறைக்குள் நுழைகிற அவள், இப்படி மொத்த கட்டில்லயும் ஒத்தையாளா படுத்துக்கிட்டா நான் எங்கே படுக்குறதாம்? கொஞ்சம் நகர்ந்து படுங்கன்னு சிணுங்கனும். உனக்கில்லாத இடமாடி செல்லம்னு நான் இப்படி தள்ளிப் படுப்பேனாம்… என்று தள்ளிப்படுத்த அவர் பாலத்தின் மீதிருந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டாராம். வீ ணுக்கு யோசனை பண்ணி இப்படி விழுந்து தொலைச்சிட்டோமேன்னு அங்கலாய்ச்சுக்கிட்டே ஆ ற்றுக்குள்ளே முழுகிப்போனாராம்.

இந்தக் கதைக்கும் ” அன்புமணி முதல்வர், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர்” என்கிற பாகப்பிரிவினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நீங்க ஒத்துக்கவா போறீங்க?

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் சமீபத்தில் வெளியான நாவல் மீசை என்பது வெறும் மயிர்.

ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

senthil kumar
செந்தில் குமார்
1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. வாடிவாசலிலிருந்து கிளம்பும் காளைகளின் திமிலின் மீது குறிப்பிட்ட தூரம் தொங்கிச் செல்வதுதான் இந்த நிகழ்வு. காளைகளின் இரு கொம்புகளையும் இணைக்கும் வகையில் அதன் அடிப்பகுதிகளில் கட்டப்பட்ட பொருளை எடுப்பதை வைத்து இதை சல்லிக் கட்டு என்றும் அழைத்திருக்கிறார்கள். இது எந்த வகையிலும் காளையை அடக்கும் நிகழ்வு அல்ல. ஒரு டன் எடையுள்ள காளையை அதில் பத்தில் ஒரு பங்கு எடை கொண்ட ஒரு மனிதன் எப்படி அடக்க முடியும். கும்பலாக காளையின் மீறி குதிக்கும்போதுகூட பலவீன காளைகள் மட்டுமே சரிந்து விழும். அப்படி செய்வது ஜல்லிக்கட்டு விதிகளின்படி தடை செய்யப்பட்ட ஒன்று. ஆங்கிலத்தில் இதை bull handling, embracing the bull என்று கூறினால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. இதை bull taming என்று கூற ஆரம்பித்ததால்தான் இதைப் பற்றி அறியாதவர்கள் ஸ்பெயினின் கொடூரமான காளை விளையாட்டுடன் தவறான புரிந்துகொண்டிருக்கும் வாய்ப்புண்டு. தமிழர்கள் எதையும் மிகைப்படுத்தித்தான் சொல்வார்கள் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்க.
2. இது ஒரு மிருக வதை, விலங்கு உரிமைப் பிரச்சனை என்கிறார்கள். முற்றிலும் தவறு. உண்மையில் இது ஒரு மனித உரிமைப் பிரச்சனை. மனித உயிர்ப் பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் டஜன்கணக்கில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். காளைகளின் கண்களில், பிற உறுப்புக்களில் மிளகாய் பொடி தூவுதல், மது ஊற்றிக் கொடுத்தல், அவற்றுக்கு ஏற்படும் காயம், வாடி வாசலில் பாய்ந்து செல்லும் போது அவற்றுக்கு ஏற்படும் பீதி ஆகியவற்றைத் தாண்டி இது ஒரு சீரியஸான பிரச்சனை.
3. விலங்குகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக, காளைகளை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு தடை கோருவதாக விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் சொல்வது போல், இந்தக் காளைகளும் அரிய இனங்களான ஓங்கோல், காங்கேயம் இனங்களும் காக்கப்பட வேண்டுமானால் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். விவசாயத் தொழிலுக்கு நவீன டிராக்டர்கள் வந்த பிறகு, மாட்டு வண்டிகள் வழக்கொழிந்த பிறகு காளைகளுக்கு உழைப்பிற்கு இங்கு தேவை பெரிதாக இல்லை. அதே நேரத்தில் குஜராத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் தமிழகத்தின் பால் மாடுகளின் சிறந்த இனப் பெருக்கத்திற்கு சிறந்த இன காளைகள் அவசியம் தேவை. ஜல்லிக்கட்டுக்கான காளை வளர்ப்பும் அது சார்ந்த பொருளாதாரமும்தான் அத்தகைய காளை இனங்களை காப்பாற்றுவதற்கான பொருளாதார சுழற்சியை உருவாக்குகிறது.
4. பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு எப்படி இருந்ததோ தெரியவில்லை. சமகாலத்தில் அதில் ஒரு சாதிய அம்சம் உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் சாதி அடுக்கில் மேலே இருப்பவர்களாக, சாதிய ஒடுக்குதலை செய்வர்களாக இருக்கிறார்கள். அந்தக் காளைகளை வாடிவாசலில் எதிர்கொள்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக, தலித்துகளாக, சாதி அடுக்கில் கீழே உள்ளவர்களாகத் திகழ்கிறார்கள். இந்த உண்மையை புறந்தள்ளிவிட்டு இந்த விவாதம் முழுமையடையாது. காளைகளுக்கு கொம்பு சீவிவிடுவது முதல் அவற்றை ஆக்ரோஷமாக, ரத்த வெறி கொண்டதாக மாற்ற முனைவது வரை உள்ள சூட்சுமம் இந்த சாதிய மனோபாவமே. உயர் சாதிக்காரன் மாட்டை கீழ் சாதிக்காரன் தெடலாமா. தொடுகிறவன் உயிரோடு திரும்பலாமா. எல்லா மாடு பிடி வீரருக்கும் டிமிக்கு கொடுக்கும் அல்லது பயங்கொடுக்கும் காளைகளைப் பற்றிய வீரக் கதைகளை இந்த சாதிய பார்வை கொண்டு பார்க்கவும்.
5. தங்களை ஜீவகாருண்ய ஆர்வலர்களாக சொல்லிக்கொள்பவர்களுக்கு ஒரு சிறிய உண்மை. கசாப்புக் கடைக்கு போகும் மாடுகளை மீட்டு நீங்கள் வைக்கும் விலங்கு மையத்தில் அந்த விலங்குகளுக்கு குறைந்தபட்ச வசதிகளையும் உணவுகளையும்தான் கொடுக்கிறீர்கள். ஆனால் நான் அறிந்தவரை காளைகளும் பால் மாடுகளும் விவசாயிகளின் வீடுகளில் அவர்களின் பிள்ளைகளில் ஒருவராக, ஓரளவுக்கு இயல்பான சூழலில் வளர்கின்றன, வாழ்கின்றன. விவசாயிகள் பொதுவாக கன்றுகளை கசாப்புக் கடைக்கெல்லாம் விற்க விரும்புவதில்லை. பூமியில் பதிந்திருக்கும் சிறந்த பச்சை தலைகளையும் மாடுகளுக்கு நாஊர வைக்கும் களனித் தண்ணியையும் குடித்து அவை வாழ்கின்றன. ஆனால் உங்கள் வீட்டு உலையில் கொதிக்கும் அரிசியை உற்பத்தி செய்து கொடுத்துவிட்டு, விவசாயிகள் ரேஷன் அரியை வாங்கித் தின்னும் அவலத்திற்கு ஆளானதுதான் கன்றுகள்கூட கசாப்புக் கடைக்கு லாரியில் பயணமாகும் அவலத்திற்கு முக்கிய காரணம். ஆனால் மாடுகளைக் காப்பதில் விவசாயிகளை தங்களின் பங்குதாரர்களாக (stakeholders) எடுத்துக்கொள்ள வேண்டிய ஜீவகாருண்யவாதிகள் அவர்களை எதிரிகளாக்கி நீதிமன்றத்தில் கேஸ் போடுகிறார்கள். கசாப்புக் கடைக்கு ரோட்டில் கடத்திச் செல்லப்படும் மாடுகளைக் கொண்ட லாரியை விரட்டிப் பிடிக்கும் ஹீரோயிஸத்திற்கு பதில் கிராமப் பொருளாதாரத்திற்கும், விவசாயப் பொருளாதாரத்திற்கு விலங்கு நல ஆர்வலர்கள் ஏதேனும் அர்த்தபூர்வமான பங்களிப்பு செய்யலாம். மாடுகள் கசாப்புக் கடைக்கு வருவது அதன் முதல் சங்கிலியிலேயே கட்டுப்படுத்தப்படும்.
6. விலங்கு நல, விலங்கு உரிமை ஆர்வலர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் மிகவும் சந்தர்ப்பவாதிகளாகத் தெரிகிறார்கள். விலங்குகளின் கறியையும் தோல்பொருட்களையும் வைத்து பல ஆயிரம் கோடி லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் நேரடியாக சண்டை போடுவது கிடையாது. அதிகபட்சமாக தோல் பொருளை வாங்கும், அசைவம் சாப்பிடும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள். என்னுடைய உடம்பின் தோல் தவிர வேறு எந்த தோலையும் (skin) பயன்படுத்தப் போவதில்லை என்று ஏதாவது ஒரு பிரபலத்தை வைத்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள். அசைவம் சாப்பிடாதீர்கள் என்று இயக்கம் நடத்துவார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பின்புலமில்லாத, படிப்பறிவு அதிகமில்லாத விவசாயிகள்தானே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிராக நேரடியாக களமிறங்குகிறார்கள்.
7. காளைகளை கொன்று முடிக்கும் ஸ்பெயினின் காளை விளையாட்டிற்குக்கூட தடையெல்லாம் இல்லை. கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் அதற்கு விதிவிலக்கு பெற்றிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு சுமார் 2,000 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிறது. பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு எதையும் அனுமதிக்க வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் உடன்கட்டை (சதி) ஏறுவதும் பாரம்பரியம், கலாச்சாரம் என்றுதான் சொல்லப்பட்டது. நமது கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் எந்த அம்சம் நீக்கப்படும் அளவுக்கு மோசமானது, எந்த அம்சங்களை நாம் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தொடரலாம் என்பதை வெளி்ப்படையான மனோபாவத்துடன் விவாதிக்க வேண்டும். இப்போதுள்ள விவாதத்திலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலும் எந்த வெளிப்படை மனோபாவமும் தெரியவில்லை. மாறாக முன்முடிவுகளே தெரிகின்றன.
8. கிரிக்கெட், கால்பந்து போன்ற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் விதிகள் இருப்பது போலத்தான் ஜல்லிக்கட்டு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் பாரம்பரியமாகவே விதிகள் உள்ளன. அதில் புதிய விதிகள் சேர்க்கப்படுவதில்கூட யாருக்கும் ஆட்சேபனை இருக்கக்கூடாது. அத்தகைய விதிகள் மீறப்படும் குறிப்பிட்ட ஜல்லிக்கட்டு நிகழ்வுகள், மாடு பிடி வீரர்கள் தடை செய்யப்படுவதிலும்கூட யாருக்கும் ஆட்சேபணை இருக்கக்கூடாது. ஒரு அணி அல்லது வீரர்கள் போதைப் பொருள் எடுத்துக்கொண்டதால் ஒட்டுமொத்த விளையாட்டையும் யாரும் தடை செய்வதில்லையே. ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்வை மீண்டும் கொண்டு வந்தது தாங்கள்தான் என்று ஓட்டுக்காக போட்டி போடும் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகள் காளையோடு விளையாடி குடல் சரிந்து கிடக்கும் பங்கேற்பாளருக்கு உயிர் காக்கும் சேவைகளைக் கொடுப்பது பற்றி ஏதேனும் செய்கிறதா. இன்று வரை ஜல்லிக்கட்டு நடக்கும் பெரும்பாலான இடங்களில் மேல் சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் இல்லை. மாட்டின் கொம்பு வயிற்றைக் கிழிப்பதால் குடல் சரிந்து பாதிக்கப்படும் ஜல்லிக்கட்டு பங்கேற்பாளர்களை சிகிச்சை பல மணி நேர பயண தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதிலேயே பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுகிறது. அதைச் செய்ய துப்பில்லாத கட்சிகள், அரசுகள்தான் ஜல்லிக்கட்டு நிகழ்வைத் திரும்பக் கொண்டு வந்து பிணங்களின் மீதாவது ஓட்டு வாங்கி ஆட்சியைப் பிடிக்க நினைக்கின்றன.
9. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு துன்புறுத்தல்கள் நிகழ்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது தடுக்கவே முடியாத ஒன்றா. அத்தகைய விதிமீறல்கள் கண்டறியப்படும் போது குறிப்பிட்ட காளைகளை, காளை வளர்ப்பாளர்களை தடை செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்று சொல்ல முடியுமா. கட்டுப்படுத்தக்கூடிய காளைகளுக்கான துன்புறுத்தல், வாடிவாசலிருந்து கிளம்பும்போது காளைகளுக்கு ஏற்படக்கூடிய பயம், குழப்பம், மிரட்சி Vs கலாச்சாரம், பாரம்பரியம், விவசாயிகளின் எஞ்சியுள்ள எளிமையான கொண்டாட்டம்… இதில் எதில் அனுமதிக்கத்தக்கது என்று திறந்த மனதுடன் அலச வேண்டாமா. இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமயமாதல் நிகழும் தமிழகத்தில் கிராமங்கள் அழிந்து, அதிக நகர்ப்புறங்கள் ஏற்பட்டு வருகின்றன. கூடவே கிராமத்து மக்களின் எளிய கொண்டாட்டங்களும் கலாச்சார நிகழ்வுகளும் அழிந்து, உலகமயமாக்கலால் திரிந்து வருகின்றன. அவர்களுக்கு எஞ்சியுள்ள சில முக்கியமான பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்று என்ற முறையில் ஜல்லிக்ட்டு நிகழ்வை அனுமதிக்க முடியாதா.
10. இந்த வாதங்களைப் படிக்கும் போது ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு ஆதரவாக பேசுவது போல் தெரியலாம். ஆனால் உடன்கட்டை (சதி) என்ற கொடிய சமூக வழக்கத்திற்கும் ஜல்லிக்கட்டும் ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. இளம் வயதில் மணம் முடித்த இளம் விதவைகள் உள்ளிட்ட பலர் கொடிய முறையில் தீயில் மரணித்தது உடன்கட்டையில் நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டில் வாழ வேண்டிய வயதில், சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரிதும் பங்களிக்க வேண்டிய பருவத்தில் ஜல்லிக்கட்டு மரணங்கள் நிகழ்கின்றன. அத்தகைய உயிரிழப்புகள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியில் அதிகம் நிகழ்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இது ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்பை அலசி ஆராய்ந்திருக்கிறோமா. சேவல் சண்டையில் ஒரு பார்வையாளர் இறந்தது பெரிய பிரச்சனையாகிறது. ஜல்லிக்கட்டு இப்போதுள்ள பாணியில் தொடர்ந்தால் ஆண்டுக்கு 25 இளைஞர்களாவது இறப்பார்கள். இது ஒரு கொடிய இழப்பு அல்லவா. இப்போது மத்திய அரசின் அறிவிக்கையில் சொல்லப்பட்டிருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை பலப்படுத்திய பிறகும் இத்தகைய மரணங்கள் தொடருமானால், ஜல்லிக்கட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தியும், சாவுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், மரணங்கள் அதிகம் நிகழும் குறிப்பிட்ட ஊர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வையோ, ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டு நிகழ்வையோ தடை செய்தால் அது நியாயமான நடவடிக்கையாகவே இருக்கும்.
செந்தில்குமார், ஃபெமினா இதழில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகத்தின்” சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில்  5176 பேரிடம்  நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல்  கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

அதில், ‘தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?’ என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  தி.மு.க-விற்கு 33.9% மக்களும்,  அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே போல் கடந்த நான்கு ஆண்டுகளில் அ.தி.மு. க அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்த கேள்விக்கு “அ.தி.மு.க ஆட்சி மோசம்” என்றே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க – தி.மு.கவிற்கு மாற்றாக பிற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் திறமை கிடையாது என்று பெரும்பாலனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று  18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 15%  பேர் தெரிவித்துள்ளனர்.

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய 3 மதத்தினரிடமும் தி.மு.கதான் செல்வாக்குடன் திகழ்வதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

வரும் தேர்தலில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக தகுதி, திறமைகள் உடையவர்கள் யார்? என்ற பட்டியலில் முதல் இடத்தில் கருணாநிதியும், இரண்டாவது இடத்தில் ஜெயலலிதாவும், உள்ளனர். ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.

யாருக்கு உங்கள் வாக்கு? என்ற கேள்விக்கு தி.மு.க விற்கு 35.6% பேரும், அ.தி.மு.க விற்கு 33.1% பேரும், தே.மு.தி.க விற்கு 6% பேரும், ம.தி.மு.க விற்கு 3.9% , பா.ம.க 3.9%, பா.ஜ.க 3.8%, காங்கிரஸ் 2.% பேரும் கருத்துகணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளது” கருத்து கணிப்பின் மூலம் வெளிவந்துள்ளது.

ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்

நெல்லை ஏர்வாடி காஜா முகைதீன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, பா.ஜ.க.வின் களக்காடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்சாமி உள்ளிட்ட, சங்பரிவார் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜா கொலையான உடனேயே, ஊடகங்கள் அதை திசைமாற்ற முயன்றன. பெண் தொடர்பால் நிகழ்ந்த கொலை என்றும், காஜாவின் ஆட்டோவில் கடைசியாகப் பயணித்தவர் விபச்சார அழகி என்றும் எழுதின. எனினும் ஊடகங்களின் பொய்யை புறந்தள்ளி, காஜாவின் கொலைக்கு நீதிகேட்டு வெகுமக்கள் உறுதியுடன் போராடியதால், இப்போது உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலையானபோது, பா.ஜ.க.வின் மகளிர் அணியைச் சார்ந்த ராஜேஸ்வரி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கோணத்தில் விசாரிக்கச் சொல்லி எழுதாத ஊடகங்கள், கொலைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என முன்கூட்டியே அறிவித்தன.

‘த்தூ’ என ஊடகங்களை நோக்கி விஜயகாந்த் உமிழ்ந்தது, அநாகரிகச் செயல் என்றபோதும், அதற்கு ஆதரவு பெருகுவதற்கு காரணமே ஊடகங்கள்தான்.

ஆளூர் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்.

சிறார் நீதி சட்ட திருத்தம்: சில விமர்சனங்கள்

அ.மார்க்ஸ்

 குற்றச் செயல்களின் விஞ்ஞானமும் சமூகப் பின்னணியும்..
18 வயது முடியும் முன் அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பையன் சட்ட விதிகளின்படி விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழி வெறியுடன் குரல்கள் முன் வைக்கப்படும் பின்னணியைச் சாதகமாகிக் கொண்டு பா.ஜ.க அரசு தன் நோக்கங்களில் ஒன்றை நடைமுறைப் படுத்துவதில் முனைந்துள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் ‘சிறார்’ என்பதன் வரையறையை 18+ என்பதாக இல்லாமல் 16 ஆகக் குறைக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது. பா.ஜ.க வின் மூலதனமான உயர்சாதி, மத்தியதர வர்க்க மனநிலையும் அதற்குச் சாதகமாக இருக்கிறது. கூடுதல் போனசாகப் பா.ஜ.க அரசை வெறுக்கும் சிறுபான்மை மக்களில் சிலரும் இந்த விடயத்தில் இந்துத்துவ அரசை ஆதரிக்கும் நிலையும் உள்ளது.

இப்படி ‘சிறார்’ வரையறைக்கான வயது வரம்பைக் குறைப்பது எப்படி ஒரு நீதியற்ற செயல் என்பதை விளக்கி நான் சென்ற ஆண்டில் விரிவான பதிவு ஒன்றை இட்டிருந்தேன்.

இங்கே நான் இணைப்புக் கொடுத்துள்ள பதிவு மிக முக்கியமானது. ‘சிறார்’ என்கிற நிலை முடிந்து, மூளை வளர்ச்சி நிலை ‘முதிர்ச்சி’ அடையும் வயது குறித்து அந்தத் துறை சார்ந்த வல்லுனர் ஒருவர் பேசுவதைக் கவனியுங்கள். அவரது கருத்துக்களின் முக்கிய அம்சங்கள்…

1. தனது முடிவு எத்தகைய விளைவுகளுக்குக் காரணமாகும் என்பதை உணரும் முழுமையான முதிர்ச்சி 21 அல்லது 22 வயதில்தான் நிகழ்கிறது என்கிறார் இந்த வல்லுனர்.

2. குற்றச் செயல்களில் ஈடுபடும் மனநிலைக்கான பின்னணி குறித்து இவர் என்ன சொல்கிறார்? குடும்பப் பின்னணி, குழந்தைப் பருவத்தில் அநீதிகளுக்கு ஆட்படுதல், ஏழ்மை, கைவிடப்பட்ட நிலை, வயதுக்கு மீறியவர்களுடன் வாழ நேர்ந்த சூழல்… இவை எல்லாம் குற்ற நிலை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதைத்தான் நான் இப்படிச் சொன்னேன்: “குற்றச் செயல்களுக்குத் தனி மனிதன் மட்டும் பொறுப்பல்ல; சமூகத்திற்கும் (அதாவது உங்களுக்கும், எனக்கும்) அதில் பொறுப்புண்டு.

3. இளம் குற்றவாளிகளின் பின்னணியை ஆராய்ந்தால் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டு வருமானம் 25,000 ரூபாய்க்கும் குறைவான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள். 50 சதத்திற்கும் மேற்பட்டோர் கல்வி அறிவு பெறும் வாய்ப்பை இழந்தவர்கள், அல்லது 5ம் வகுப்பைத் தாண்டாதோர்.

நரேன் ராஜகோபாலன்

சிறார் குற்றவாளிகளின் வயதினை 18லிருந்து 16-ஆக குறைக்கும் சட்டம் நேற்று ராஜ்ய சபாவில் நிறைவேறியது. பொதுபுத்தி சிந்தனையும், தொண்டை கிழிய கத்தும் அர்னாப், பாண்டேக்கள் இருக்கும் ஊரில் இந்த மாதிரியான மூளையில்லாத சட்டங்கள் நிறைவேறாமல் போனால் தான் ஆச்சர்யம். குவிஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, பின்னாளில் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்து எம்.பியாகி இருக்கும் டெர்ரிக் ஒ ப்ரையன் ‘எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது. என்னிடத்தில் மட்டும் துப்பாக்கி இருந்திருந்தால் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளி இருப்பேன்’ என்று ஆவேசப்படுகிறார்.

என்னுடைய வட்டத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள், குறிப்பாக பெண்கள் இதை ஆஹா ஒஹோ வென்று வரவேற்கிறார்கள். ‘கடல்’ படத்தின் நாயகன் ஒரு சிறார் குற்றவாளி தான், நாயகனின் பின்புலத்தை வைத்துப் பார்த்தால் தான் அவன் ஏன் எதிர் நாயகனாகிறான் என்பது புரியும். சிறார் குற்றவாளிகளை யார் உருவாக்குகிறார்கள் ? எந்தெந்த அம்சங்களில் அவர்கள் கவரப்பட்டு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் ? 10 – 11 ஸ்பேனர் எடுத்தா, என்று சொல்லி எடுத்துக் கொடுத்தாலும் ஸ்பேனரால் அடிவாங்குகிற சிறார்கள் வன்முறை இல்லாமலும், வன்மம் இல்லாமலும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் சமூகம், எவ்வளவு குரூரமான சமூகம். இந்த சமூகம் தான் இந்த சட்டத்தினைக் கொண்டாடுகிறது.

அம்புகளுக்கு தண்டனை என்ன என்பதை எய்தவர்கள் நிர்ணயிக்கும் விசித்திரத்தை சொல்லில் அடக்க முடியாது. Rule of Law என்கிற ஒன்று இருப்பதனால் தான் இந்தியா ஜனநாயக நாடு. அதைவிட்டுவிட்டு சட்டமும், சட்ட உருவாக்கமும் கொலைக்கூச்சல் பெருங்கூட்டத்துக்கு அடிபணியுமேயானால், அதற்கு பெயர் Jungle Justice. அது தான் இந்த நாட்டில் சட்டமாக மாறுமென்றால் புண்ணாக்கு ஜனநாயகத்தையும், பகுத்தறிவையும் தூக்கி குப்பையில் போடுங்கள்.

இருக்கின்ற ஏராளமான சுமையில் நம்முடைய எதிர்கால இந்தியாவுக்கு இன்னுமொரு சுமையினை தூக்கி தலையில் வைத்து அவர்களை தத்தளிக்க வைத்திருக்கும் அரசாங்கத்திற்கும், அதை முன்னெடுத்த ஊடகங்களுக்கும், சமூக வலைத்தளங்களில் ஆவேசமாக பேரூரையாற்றிய ‘நியாயவான்களுக்கும்’ மனம் நிறைந்த சாபங்கள். <பீப்> <பீப்> <பீப்> <பீப்> நல்லா இருங்க…..

நீதிபதி வர்மா கமிஷன் பாலியல் குற்றங்களுக்கு சட்டத்தை பலப்படுத்தும் விதத்தில் பல பரிந்துரைகளை செய்தார். அதில் கூட சிறுவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கவேண்டுமென்று சொல்லவில்லை. தூக்கு தண்டனையும் கோரவில்லை. நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைகளில் பலவற்றை உதாசினப்படுத்திய அரசு சிலவற்றை மட்டும் சட்டமாக்கியது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால் அந்த சட்டத்தை பலப்படுத்த போராடவேண்டும். பெண்கள் அமைப்புகளை விட வேறு யாரும் பெண்களுக்கு நீதி கிடைக்க போராட போவது கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உடனே சிலர் உங்க வீட்டு பெண் இப்படி பாதிக்கப்பட்டால் இப்படி சொல்வீங்களா என்பார்கள். அப்போதும் நான் இதே கருத்தையே வலியுறுத்துவேன். பெண்ணியவாதி கவிதா கிருஷ்ணன் ஒரு விவாதத்தில் இந்த வன்புணர்வு விடயத்தில் பொங்கி எழுபவர்கள் தந்தை, அண்ணன் போன்றவர்களால் பெண் வன்புணர்வுக்கு ஆளாகும் போது அதை மூடி மறைக்கவே முயல்வார்கள். யாரும் அந்த பெண்ணுக்கு நீதி வேண்டுமென்று பொங்கி எழமாட்டார்கள் என்றார். மேலும் இந்திய ராணுவத்தால் வன்புணர்வு செய்யப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு நீதியே கிடைக்காது. ராணுவவீரன் வன்புணர்வை தண்டிக்க சட்டமில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தம்பி அக்காவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் அக்காவின் தலையில் ஓங்கி அடித்து கொன்று விட்டான். இதை கண்ணால் பார்த்த சாட்சி இல்லை. பெற்றோர்கள் அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்கு பதிலாக இந்த பையனை காப்பாற்றினால் போதும் என்று, அவனை மனநிலை சரியில்லாதவன் போல நடிக்கவைத்து தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்தார்கள். இதுவே பக்கத்து வீட்டு பையன் இந்த பெண்ணை கொன்றிருந்தால் இந்த பெற்றோர்கள் அவனுக்கு தண்டனை கிடைக்க போராடி இருப்பார்கள்.

எனவே அந்த மாணவியின் பெற்றோருக்கு தவறான தகவலை புகட்டி அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று சிந்திக்க வைத்திட வேண்டாமென்று கேட்டுகொள்கிறேன். அந்த பையன் இனி திருந்தி வாழட்டும் . இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் அதிகபட்ச தண்டனையை அடையட்டும். (என்னை பொருத்தவரை 10 ஆண்டுகள் தண்டனை போதுமானது)

அந்த சிறுவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு சீர்த்திருத்தப்பட்டு இப்போது வெளியே வருகிறான். இனி அவன் திருந்தி வாழமாட்டான் என்பதை யாரும் சொல்ல முடியாது. குற்றத்தின் கொடூரம் மட்டும் பார்க்க முடியாது. குற்றம் புரிந்தவனின் வயதையும் பார்க்கவேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டிக்கப்படுபவர்கள் 2.5% என்று ஒரு புள்ளி விவரம் பார்த்தேன். பெண்களுக்கு எதிரான அணைத்து குற்றங்களிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை நோக்கி நகர வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தங்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். அதற்கு தான் நீதிபதி வர்மா கமிஷனை குறிப்பிட்டேன். அந்த கமிஷனில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் ஆராய்ந்து பரிந்துரைகளை கொடுத்துள்ளார்கள். இப்போ இந்த சிறுவன் விடயத்தில் கொதிப்பவர்கள் யாரும் இதை பற்றி கவனம் கொண்டதாய் தெரியவில்லை. பெண்கள் அமைப்புகள் யாரும் இந்த சிறுவனுக்கு கடும் தண்டனை கோரவில்லை…. பெண்கள் மேல் அக்கறை உள்ளதாய் காட்டி கொள்பவர்கள் முதலில் இதை செய்யட்டும். அரசும் இந்த சிறுவன் தான் இங்கே உள்ள 50 கோடி பெண்களுக்கும் எதிரானவன் போல சித்தரிக்கிறது. இவனை தண்டித்துவிட்டால் பெண்கள் நன்றாக வாழ்வார்கள் என்று பெண்களை காக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகி கொள்ள நினைக்கிறது. அதற்கு ஊடகங்களும் துணை போகிறது. ஐரோம் சர்மிளா 13 ஆண்டு உண்ணாவிரதம் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லுங்க. பல பேர் சாயம் வெளுத்துவிடும்.
வர்மா கமிஷன் பரிந்துரை அற்புதமானது. இன்னொரு புள்ளி விவரம் சொல்லுது இந்தியா பாகிஸ்தானை விட பெண்களுக்கு ஆபத்தான நாடு என்று. இதை பற்றி காதிலேயே போட்டுக்கொள்ளாத அரசு மக்களை திசை திருப்புகிறது. பெண்கள் அமைப்புகள் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்கள். சில அரசியல்வாதிகள் மட்டும் கொதிக்கிறார்கள்.