#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!

பார்வையற்றவன்

இலவசம்! இலவசம்! நான் எழுதி அமேசானில் வெளியிட்ட நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை இன்று மதியம் ஒரு மணியிலிருந்து நாளை நண்பகல் 12 59 வரை இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம். இதுதான் இந்த போஸ்டின் முக்கிய செய்தி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதனைத் தொடர்ந்து நீண்ட write-up ஒன்று இருக்கிறது. சில வரிகளை மட்டும் வாசிக்கும் அன்பர்களுக்காக போஸ்டின் மெயின் மேட்டரை மேலே குறிப்பிட்டு விட்டேன்.

பார்வையற்றவர்களுக்கு என்று எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் தான் ஆகிறது. பிரெயில் எழுத்தின் வரவுதான் உலகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி கதவைத் திறந்தது. பிரெயில் அவர்களிடயே வாசிப்பு பழக்கத்தை உருவாக்கியது. கணினியும் இணையமும் அவர்களது வாசிப்பு எல்லையை விரிவடையச் செய்ததோடு அவர்களை படைப்பாளியாகவும் மாற்றியது. அதன் பிறகு, உலக இலக்கியங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்வாறு சித்திரித்து இருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவலில் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினர். அங்கே பெரும் அதிர்ச்சி எங்களுக்காக காத்திருந்தது. அதன்பிறகு பொது சமூகத்தோடு உரையாடும் நோக்கில் தங்கள் வாழ்வியலை பார்வை மாற்றுத்திறனாளிகள் எழுதத் தொடங்கினர்.

தமிழ்ச்சூழலில் பத்தடி தூரத்தில் இருந்து ஒரு பார்வை மாற்றுத்திறனாளியை வேடிக்கை பார்த்துவிட்டு எழுதியதும் சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து விட்டு நிலவைப் பார்க்கமுடியவில்லை, இயற்கையை ரசிக்க இயலவில்லை போன்றவைதான் பார்வையற்றோரின் துயரங்கள் என எழுதுவதும், பார்வை இன்மையை கொண்டு தத்துவ விசாரம் செய்வது, பார்வை மாற்றுத்திறனாளியை ஒரு தன்னம்பிக்கை நாயகனாக படைப்பதும்… அதற்கு மிகச் சிறந்த உதாரணம் உத்தம சோழனின் தேகமே கண்களாய் நாவலைச் சொல்லலாம்.

இப்படி மேலே குறிப்பிட்டவைகளே பார்வையற்றோருக்கான இலக்கியமாக சுட்டப்படுகின்றன. தன்னம்பிக்கை நாயகர்களாக சுட்டுவதுகூடத் தவறா என நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை என்ற வார்த்தை கூட நீ கீழிருந்து வந்தவன் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் ஒன்றுதான். நீங்கள் உயரத்தில் வைக்க வேண்டாம் எங்களை இயல்பானவர்களாக பாருங்கள் என்று தான் சொல்கிறோம். சாலையை கடக்கும் போது அல்லது ஏதோ ஒரு இடத்தில் எங்களை பார்க்கும் போது யாரோ ஒருவர் ”உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது” என ஒவ்வொரு முறையும் பாடுகின்றனர்.. அதைக் கேட்கும் போது எரிச்சல் தான் வருகிறது.

குக்கூ திரைப்படம் வந்தபோது, அதற்கு வந்த முக்கியமான விமர்சனம், பார்வை மாற்றுத்திறனாளிகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் படத்தோடு ஒன்ற இயலவில்லை. அவர்கள் துயரப் படுவது போல் அதிக காட்சிகள் வைத்திருந்தால் ரசிகர்களின் உள்ளத்திற்கு நெருக்கமாக சென்றிருக்கும். இங்கே கலைப்படைப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. விடுதியில் யாராவது பேசும்போது நான் கவுண்டர் கொடுத்தால், நீங்கள் ஜோகெல்லாம் அடிப்பீர்களா என கேட்கிறார்கள்.

நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை படித்துப் பாருங்கள், அங்கே பார்வை மாற்றுத்திறனாளிகள் சிரிக்கிறார்கள், கோவப்படுகிறார்கள் ஏமாற்றப்படுகிறார்கள் இப்படி எத்தனையோ விடயங்கள் அதில் இருக்கின்றன. அது உங்களுக்கு ஒரு புதிய உலகைக் காட்டும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதனோடு தொழில்நுட்பம் குறித்த ஒரு கட்டுரையையும் இணைத்துள்ளேன். அது உங்களுக்கு பல புதிய செய்திகளைச் சொல்லும். இதுபோன்ற நூல்கள் அதிகப் பேரை சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை. கொண்டு சேர்க்க உங்கள் கரங்கள் சேரும் என நம்புகிறேன். இந்த ஒரு நாள் புத்தகம் இலவசம். என்பதால் அமேசான் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தரவிறக்கி முழுமையாக படிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக என் மனதை பாதித்த ஒரு விடயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இலக்கியங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து உருவாக்கிய கட்டுக்கதைகளில் என் மனதை மிகவும் பாதித்தது, பார்வை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்யத் தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு மேட்டர் பண்ணவே தெரியாது என்பதுதான்!

இன்னும் பயங்கரமான கட்டுக்கதைகளை கட்டிவிடும் முன்னரே பார்வை மாற்றுத்திறனாளிகள் சுதாரித்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் அழைக்கிறேன், பார்வை மாற்றுத்திறனாளிகளே பெருந்திரளாக நம் வாழ்வியலைப் பற்றி எழுத வாருங்கள்.

நூதன பிச்சைக்காரர்கள் நூலை வாங்க இங்கே வாங்கலாம்.

பார்வையற்றவன் என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் பொன்.சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர். பிறவியிலேயே பார்வையை இழந்த இவர், தற்போது காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். மேலும் பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியர் இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். மேடைப்பேச்சு, பாடல் பாடுதல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், விளையாட்டு வீரர் என பன்முகத் திறமை கொண்டவர்.

இது இவரது இரண்டாவது நூல்.

 நூதன பிச்சைக்காரர்கள் நூலைப்பற்றி:

மாற்று உரை தொழில்நுட்பம் என்றால் என்ன! அங்கே அனைத்து உள்ளடக்கங்களுமென்றால் அனைத்துந்தான். நீங்கள் ரம்யா பாண்டியனை கொண்டாடும் போது விசயம் தெரியாமல் நாங்கள் தேமேன்னு இருந்தோம்.

பார்வையற்றவர்கள் என்ற சொல்லைக் கேட்கும் போதே உங்களுக்குள் கருணை பிறக்கும், உங்கள் மனம் துயரத்தில் கசிந்துருகும். அவற்றோடு அவர்களது திறமைகளைக் காணும்போது, அதுகூட வேண்டாம் அவர்களது இயல்பான செயல்பாடுகளைக் காணும்போதே, உங்களுக்கு வியப்பு மேலிடும். பார்வையற்றோர், அவர்களால் உங்களுக்குள் பிறக்கும் துயரம், கருணை, வியப்பு இதுதான் இன்று வெற்றிகரமான பொருளீட்டும் சூத்திரமாகத் திகழ்கிறது.

உதாரணமாக ஊடகத் துறையை எடுத்துக் கொள்வோம். ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் பாடலை கேட்டதும் சில்லறைகளைச் சிதற விட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட காட்சி ஊடகங்கள், ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைப் பங்கேற்பாளராகச் சேர்த்துக்கொள்கிறது. அவர்களது ரேட்டிங் உயர்வதற்காக சில சுற்றுகளுக்கு அவர் முன்னிலைப் படுத்தப் படுவார். இதுதான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அம்மேடைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்தெல்லாம் நாடகங்கள் அரங்கேற்றப்படும். ஆனால், அவர்களது ஊடகங்களில் ஒருபோதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பணி வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒரு ரேட்டிங்கிற்கான காட்சிப்பொருள் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே, இச் சூத்திரத்தைப் பொருளீட்ட வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனங்கள். இத்தகைய அமைப்புகளைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் தொடங்கி நடத்தி வருகின்றனர். விழிச்சவாலர்கள் வாழ்வில் இவ்வமைப்புகள் ஏற்றங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வமைப்புகளின் மறுபக்கத்தைப் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அழகான கட்டட அமைப்பு, கணினி கூடம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இவை போதும் வெளியிலிருந்து வருபவர் அந்நிறுவனம் சிறப்பாக இயங்குகிறது என நம்ப. அதற்குப் பின்னால் நடக்கும் மாணவர்கள் மீதான சுரண்டல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றைத்தான் “நூதன பிச்சைக்காரர்கள்” எனும் இந்நாடகம் பேசுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கதை அல்ல. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒடுக்கப்படும் பல நிறுவனங்களின் கதை.

தொடர்பிற்கு
மின்னஞ்சல்: paarvaiyatravan@gmail.com
கைபேசி: 9159669269