ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!

த.நீதிராஜன்

சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார்.

தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார்.

1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர்.

நிலங்கள், வீடுகள் வழங்கல், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் எனும் பணிகளில் தொடங்கி, தீண்டாமையையும் சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக, பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் அவர் உருவாக்கியவையே.

மண்டல் கமிஷன் பரிந்துரைத்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்கச் செய்வதற்கான ஆதாரமான பணிகளையும், அதனை பாதுகாப்பதற்கான பணிகளையும் செய்தவர் அவரே.

சிறுபான்மை மதங்களுக்கு உள்ளே இருக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பாதுகாத்தார். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என இந்திய சமூகத்தில் துன்பப்படுகிற ஒவ்வொரு மனிதர் மீதும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது. அவருக்கான தீர்வு இருந்தது. அதற்கான உழைப்பு இருந்தது.

பி. எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தின் அடியாழத்தில் மிக நெருக்கமான உறவுகளை அவர் உருவாக்கிக்கொண்டார். 70 ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையிலான அவரது சமூகப் பார்வை மிகவும் ஆழமான, தத்துவப் பார்வையாக இயல்பாக உருவாகியிருந்தது. அது அவரை இன்றைய சம கால இந்தியத் தலைவர்களைவிட உயரத்தில் நாட்டின் பிரச்சனைகளை பார்க்க வைத்தது.

சுருக்கமான சொன்னால், இந்த சமூகம் பற்றிய அம்பேத்கரின் லட்சியக் கனவை நிறைவேற்றுபவராக, இரண்டாம் அம்பேத்கராக நம் மத்தியில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அவர் இன்று காலை டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய்க்கான சிகிச்சை பயனளிக்காமல் தனது உழைப்பை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்! உங்களின் செயல்களுக்கும் கருத்துகளுக்கும் மரணமில்லை.

த.நீதிராஜன், செயல்பாட்டாளர்

அவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…!

தீ. ஹேமமாலினி

அந்தமான் நிக்கோபர் பிரதேசத்தின் வடக்கு சென்டினலீசு தீவிற்கு (Northern Sentilese Island) சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் சென்டினல் (Sentinel) பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக பலரும் தற்போது விவாதித்து வருகிறார்கள்..

அந்தமான் நிக்கோபர் பகுதியில் உள்ள 572 தீவுகளில், சுமார் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்..

இப்பிரதேசத்தின் தொல் பழங்குடிகளாக ஜாரவா, சென்டினல், ஷாம்பென், ஓங்கே, கிரேட் அந்தமானீஸ் போன்றோர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீக்ரிட்டோ வகை பழங்குடி இனத்தைச் சேர்ந்த சென்டினல் பழங்குடியினரை இந்திய மானிடவியல் துறை கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானவர்கள் என்று கூறினாலும், இவர்கள் 60,000 ஆண்டுகள் பழமையானவர்கள் என்றும், ஆப்பிரிக்காவில் தோன்றி ஆசியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் மனித இனத்தின் சக பிரிவே இவர்கள் எனும் கருத்தையும் சர்வதேச ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்..இவர்களின் தோற்றம், மரபணு, வாழ்வியல் பற்றி இன்றுவரை மானிடவியலாளர்கள் (Anthropologists) விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்..

அடிப்படையில் விலங்குகள் மற்றும் மீன்களை வேட்டையாடி வாழும் முறையை தற்போதும் கடைபிடித்து வரும் சென்டினல் மக்கள் வெளியுலக வாசிகளின் தொடர்புகள் சற்றும் இல்லாமல்/விரும்பாமல், பொது சமூக ஓட்டத்திலிருந்து முற்றிலும் விலகி வாழ்ந்து வருபவர்கள்..

சென்டினலீசு தீவு வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஓர் சிறிய தீவு. இதனைச்சுற்றிய 3 கடல் மைல் பகுதியில் வெளியாட்கள் பிரவேசிப்பது இந்திய அரசின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சென்டினல் (Sentinel) என்றால் “காவலாளி” என்று பொருள்படும்..

உலகின் பாதுகாக்க வேண்டிய மக்களாக கருதப்படும் இவர்கள் வெளியின மனிதர்களை அவர்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்கள் மீது ஈட்டி, வில் அம்பினால் கடுமையாக தாக்கி தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.. இதில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.. இப்படியான தாக்குதல்கள் அனைத்தும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே..

பொதுவாக நம்மிடம் பகிரப்படும் சென்டினல் தீவு மக்களின் புகைப்படங்கள் அவ்வப்போது கப்பலில் அல்லது விமானத்திலிருந்து தூரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளே..

பிரித்தானியர்கள் தங்கள் கணக்கெடுப்பின் படி 1901 முதல் 1921 வரை 117 சென்டினல்கள் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.. தொடர்ந்து 1931ல் 50 பேர், 1991ல் 23 பேர், 2011ல் 15 பேர், 2001ல் 49 பேர் என்கிறது இந்திய அரசின் சென்செஸ் (Census) கணக்கெடுப்பு.. ஆயினும் தற்போது சுமார் 300 பேர் வரை இருக்கலாம் என்று மானிடவியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதுவும் துல்லியமான தகவலில்லை..

1800-ல் மோரிசு வைடல் போர்ட்மேன் (Portman) என்ற பிரித்தானிய நிர்வாகியின் தலைமையில் சென்ற குழுவொன்று உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை அறியும் பொருட்டு வெற்றிகரமாக இத்தீவிற்கு சென்றது.

பின்னர் இவர்களால், வயது முதிர்ந்த தொல்குடியின தம்பதிகள் மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் வலுக்கட்டாயமாக தீவின் முக்கிய நகரான போர்ட் ப்ளேயருக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆனால் அந்த மொத்த நபர்களும் தொடர்ந்து விரைவாக நோய்வாய்ப்பட்டதோடு வயோதிகர் இருவரும் இறந்தே போயினர். எஞ்சியிருந்த குழந்தைகள் சில பரிசுப் பொருட்களுடன் அவர்களுடைய சொந்த இடத்திற்கே திருப்பிக் கொண்டு விடப்பட்டனர்.. வெளியாட்கள் மூலம் நோய்த் தொற்று இவர்களுக்கு விரைவாக பரவுவதே இத்தகைய இறப்புகளுக்கு காரணம்..

பொதுவாகவே அவர்களது உடற்கூறுகள் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.. நமது உடலிலிருந்து அவர்களுக்கு பரவும் வைரஸ் தொற்று மிக விரைவில் அவர்களது உடலில் பரவி அவர்களது உயிரைப் பறித்து விடும்..

மேற்கிந்திய தீவில் கால் வைத்த கொலம்பஸ் குழுவினரால் பரவிய “சிஃபிலிஸ் (Syphilis)” வைரசாலும், ஆஸ்திரேலியாவில் நுழைந்த வெள்ளையர்கள் அளித்த கம்பளியில் பொதிந்திருந்த கிருமிகளாலும் ஏராளமான தொல் பழங்குடியினர் சாகடிக்கப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

சென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்திய மானிடவியலாளர் திரிலோக்நாத் பண்டிட் (T.N. Pandit) மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரியில் நிகழ்த்தப்பட்டது.
பல வருடங்களாக அவர்களை கண்காணித்த பண்டிட் குழு சிலமுறை அங்கு சென்று வந்தனர். பின்னர் நடந்த ஒரு தொடர்பில் தேங்காய்களை அவர்களே வந்து வாங்கிக் கொண்டதே இன்று வரை பெருமையான ஒன்றாக பேசப்படுகிறது.

இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு “தவிர்ப்பு வளையமாக” அறிவித்திருந்தது.. ஆனால் வருத்தம்படும்படியாக கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசால் அந்தமான் தீவுகளின் 29 தீவுகளில் “வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதி” அனுமதி ( Restricted Area Permit-RAP) 2022 வரை அகற்றப்பட்டுள்ளது..

மேலும் மத்திய அரசால் அந்தமானின் போர்ட் பிளேயர் முதல் தீவின் வடக்கிலுள்ள டிக்லிபூர் வரை 240 கி.மீ தூரத்திற்கு சுமார் 2500 கோடியில் போடப்படவுள்ள நீளமான இரயில் பாதை இத்தீவின் இயற்கை சூழலியலுக்கும், தொல்குடிகளின் வாழ்வியலுக்கும் அதி தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்..
இதற்கெதிரான பிரச்சாரங்கள் சூழலியல் ஆர்வலர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன..

சமீபத்தில் தீவில் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து போதுமான அளவுக்கு இருந்தும், ஜாரவா பழங்குடியினரை பெருமளவு பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்ட “டிரங்க் ரோடு (Trunk Road)” நெடுஞ்சாலைக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இச்சாலையை பொதுப் போக்குவரத்திற்கு அனுமதிக்க உச்சநீதிமன்றத்தால் 2013 ல் தடை விதிக்கப்பட்டு, தற்போது சில கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது..

கூடவே ஜப்பானுடன் இணைந்து இப்பகுதியில் டீசல் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் துவங்க சுமார் பத்தாயிரம் கோடி ஒப்பந்தம் ஒன்றையும் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. உண்மையில் அருகில் உள்ள தீவுகளில் நடைபெறும் சீன ஆதிக்கத்திற்கு மாற்றாகவே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை “வளர்ச்சி” எனும் பெயரில் எடுத்து வருகிறது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால் இதன் பின்னணியில் பொதிந்துள்ள இன்னும் இதர அரசியல் நோக்கங்கள் தெரியவரும்.
மொத்தத்தில் இதனால் ஆகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது தீவின் இயற்கைச் சூழலும், அதையொட்டி வாழும் தொல்குடிகளுமே..

இன்னொரு புறம் மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு, கலாச்சார நெருக்கடிகளும் ஏராளம்..

கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் கூட இவர்கள் அவ்வளவாக பாதிக்கப்பட்டவில்லை..
சுனாமிக்குப் பின்னர் சென்டினலீசு தீவு மக்களின் நிலையை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது..அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானாலும், சென்டினலீசு தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர். அவர்கள் சுனாமி வரப்போவதை முன்னரே அறிந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று தப்பியுள்ளனர்..

இராணுவத்தின் மூலம் மருத்துவ உதவி,உணவு போன்றவற்றை வீச முற்பட கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இராணுவ ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டியதும் நடந்தது..

அந்தமான் நிக்கோபார் அரசு 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் மக்களின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடத் தமக்கு எவ்வித எண்ணமோ, திட்டமோ இல்லை எனவும், அது ஒரு தனித்த வாழ்விடப் பகுதி என்றும் கூறியுள்ளது.. ஆனாலும் மறைமுகமாக இங்கு பழங்குடி மக்களை வளர்ச்சி எனும் பெயரில் ஒழித்துக் கட்டும் பணிகளே தொடர்ந்து நடக்கிறது..

முன்னதாக, அந்தமான் தீவில் உள்ள பழங்குடியின மக்கள், 1800-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டபோது ஏராளமான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. தீவின் பல லட்சம் பழங்குடி மக்கள் பல்வேறு காரணங்களால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்..
இன்றும் இன அழிப்பு என்பது வேறுவிதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

“போ” எனும் பழங்குடியினத்தை சேர்ந்த கடைசி 85 வயது முதியவர் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்..
உலகில் “போ” இன மொழியைப் பேசிய கடைசி நபரும் அவர்தான்..

சில ஆண்டுக்கு முன்பு அப்பகுதிக்கு சுற்றுலா சென்றவர்களும், உள்ளூர் காவலர்களும் சேர்ந்து ஜாரவா பழங்குடியினரை நடனம் ஆடவைத்ததோடு மது உள்ளிட்ட பொருட்களை வீசியெறிந்த அருவருக்கத்தக்க நிகழ்வையும் பார்த்தோம்..உலகில் தொல்குடிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பு அவ்வளவே..

சுற்றுலா வாசிகள், சொகுசு விடுதிகள், கடத்தல்காரர்கள், நில ஆக்கிரமிப்புகள், கனிம வளக் கொள்ளையர்கள், வளர்ச்சியின் பேரால் நடக்கும் அழிவுகள் என்று தொடரும் பேரழிவுகளால் அந்தமான் தீவுகளின் இயற்கை சூழல் மட்டுமல்ல அதனையே முற்றிலும் சார்ந்து வாழும் பழங்குடியினர் அனைவருமே விரைவில் ஒட்டு மொத்தமாக அழிந்து போவார்கள்..

நாகரிகம், வளர்ச்சி, நவீனம் ஆகியவற்றின் பெயரால் ஆப்பிரிக்கா தொடங்கி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அந்தமான் வரை வரலாற்றில் சாகடிப்பட்ட கோடிக்கணக்கான தொல்குடிகளின் கேவல்கள் இப்புவியெங்கும் நிறைந்துள்ளன..

வனங்களை,மலைகளை,வன உயிரினங்களை தொல்குடிகளை முற்றாக அழித்தொழித்து, நெடுஞ்சாலைகளையும் கட்டிடங்களையும் தொழிற்சாலையையும் உருவாக்கி வாகனப் பெருக்கம், கேளிக்கை விடுதிகள், நச்சுக் காற்று, மக்கள் நெரிசல், குப்பை மேடுகள் என்று உருவாக்குவதன் வழி நாம் சாதித்ததுதான் என்ன?

தொல்குடிகள் இப்புவியின் ஆதி எச்சங்கள்..
மலைகளைப் போல..
மரங்களைப் போல..
வனங்களைப் போல..
காட்டாற்றைப் போல..

வளர்ச்சியின் வாடை தீண்டாமல்
அவர்களை தனித்து வாழவிடுவோம்..
அவர்களாவது பிழைத்திருக்கட்டும்..

தீ. ஹேமமாலினி, மானிடவியல் ஆய்வாளர்

50 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலம்: கல்ராயன் மலை பழங்குடியினர் துயரை கண்டுகொள்ளாத அரசு

சந்திரமோகன்

சந்திர மோகன்

செம்மரக்கட்டை வெட்ட ஆந்திர வனங்களுக்குச் சென்று போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், சிறைகளில் சிக்கிச் சீரழியும் செய்திகள் வரும்போது மட்டுமே, பரபரப்புடன் பேசப்படும் கல்ராயன் மலைப் பழங்குடியினர் பல்லாயிரக்கணக்கானோர் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான பின்னரும் தங்களுடைய நிலங்களுக்கு பட்டா உரிமையை பெறமுடியவில்லை.

மற்றொரு புறம் இதற்கு நேர்மாறாக, தமிழக அரசாங்கம் அமைத்த உயர்நிலைக் கமிட்டி 1998 ல் 4170 கல்ராயன் பழங்குடியினருக்கு மட்டுமே தலா 1 ஹெக்டேர் ( சுமார் 2.5 ஏக்கர்) நிலம் தருவதாக ஒப்புக் கொண்டு 20 ஆண்டுகளான பின்னரும் கூட அதையும் வழங்கவில்லை என்பதற்காக, கடந்த ஏப்ரல் 19,20, 21 தொடர்ந்து மூன்று நாட்களாக வெள்ளிமலையில் சுமார் 10,000 பழங்குடியினர் அணிதிரண்டு போராடினார்கள் என்பதும்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் துவங்கி கீழ்மட்டம் வரையுள்ள ஒரு அதிகாரி கூட வந்து அவர்களை சந்திக்கவில்லை என்பதும், தமிழக அரசாங்கம் சிறிது கூட கவலைப்படாமல் அவர்களை அலட்சியம் செய்துவிட்டது என்பதும் கூட கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

கல்வராயன் மலை பழங்குடியினர் பிரச்சினை என்பது வன உரிமை சட்டத்தை FRA 2006 அமல்படுத்தினார்களா, அதனடிப்படையில் அவர்களது நிலங்களுக்கு பட்டா உரிமை கொடுத்தார்களா, இல்லையா என்ற பிரச்சினை /கேள்வி இல்லை.

மாறாக, காலங்காலமாக உழுதுப் பயிரிட்டு வரும் தங்களுடைய நிலங்களுக்கு “ரெவின்யூ பட்டா” வழங்குவதாக ஒப்புக் கொண்டு வழங்காமல் ஏமாற்றுகிறது தமிழக அரசாங்கம். “உரிமையுள்ள தங்களுடைய நிலங்களை அளந்து ஆவணப்படுத்தி தரவேண்டும் ” என்பதற்காக பழங்குடிகள் நீண்ட நெடியப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கல்வராயன் மலை விவரங்கள்

கல்வராயன் மலையானது சுமார் 1000 ச.கி.மீ பரப்பளவில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி – 4000 அடி உயரத்தில், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலத்தின் பரப்பு மட்டுமே 57,344 ஹெக்டேர் (1,40,000 ஏக்கர்) ஆகும். கோமுகி, மணிமுத்தாறு பாயும் இந்த மலையின் கீழே இன்னாடு, வெள்ளிமலை, சேராப்பட்டு,பாலப்பட்டு,கோமுகி ஆகியவை முக்கியமான பகுதிகளாகும்.

மலையின் சொந்தக்காரர்கள் நிலமற்றவர்களான வரலாறு

500 ஆண்டுகளுக்கு முன்னர், மன்னராட்சியில் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் (கிபி 1509-1529) கல்ராயன் மலையில் பழங்குடி விவசாயிகளிடம் வரி வசூலிக்க “ஜாகீர்தாரி முறை” கொண்டு வரப்பட்டது. மூன்று ஜாகீர்தார்களிடம் பரம்பரையாக வரி வசூலிக்கும் உரிமை தரப்பட்டது. ஜடய கவுண்டன் ஜாகீர் (40 கிராமங்கள்), குரும்ப கவுண்டன் ஜாகீர் (40 கிராமங்கள்), அரிய கவுண்டன் ஜாகீர் (11 கிராமங்கள் ) ஆகியோர் மற்றும் அவர்களது வாரிசுகளால் நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட, கல்ராயன் பழங்குடியினர் கடுமையாக சுரண்டப்பட்டனர்; கொத்தடிமைகளாக்கப் பட்டிருந்தனர்.

1963 இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ், டிசம்பர் 31,1965 ல் வருவாய் துறை அரசாணை 355 ன் கீழ் சட்டத்தின் படி கல்ராயன் மலை நிலங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட, 23.8.1976 ல் தான் தனது நேரடியான ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. யார் நிர்வாகம் நடக்கிறது, யார் வரி வசூலிக்கிறார்கள் என்றே தெளிவில்லாத நிலைமையில் எவ்வித ஆவணங்களையும் பழங்குடிகள் பெறமுடியவில்லை. அப்போது இருந்த 28,250 பழங்குடியினரில் பலரும் தாங்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த இந்த நிலங்கள் மீது எவ்வித ஆவணங்களும் வைத்திருக்கவில்லை.

1.10.77 ல் நிலவரித் திட்டப்பணி மேற்கொள்ள பட்டது. அதனடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டது.

1) பூர்விக காடுகள் 35,395 ஹெக்டேர் (87,425 ஏக்கர்)

2)உழவு நிலம் (காடு புறம்போக்கு எனச் சொல்லப்பட்டது) 10,113 ஹெக்டேர் (சுமார் 25,000 ஏக்கர்)

அதாவது 25,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயிரிட்ட உழவு காடுகள் அல்லது புனல் காடுகள் வகைப்பட்டதாகும்.

பழங்குடியினர் நில உரிமைகள் முறைப்படுத்தப் படாததால், தமிழ்நாடு வனத்துறை புதிய ஜாகீர்தாரர்களாக மாறி ஒடுக்குவது துவங்கியது. “கல்ராயன் மலை முழுவதும் “காடு” RF Reserved Forest தான், அதில் பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் இல்லை” எனத் தொடர்ந்து கைதுகள், சித்திரவதைகள், தாக்குதல்கள், வழக்குகள் தொடுத்தனர்.

நிலவரித் திட்டத்தில் இறுதியாக பட்டா வழங்கப்பட்டவை, 8154 ஹெக்டேர் (20,000 ஏக்கர்) மட்டுமே! இதிலும் கூட வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பாதுகாக்கப்பட்ட காடு என தகராறுகள் செய்து வருகின்றனர். ஆடு மாடுகள் மேய்ப்பது முதல் புற்கள் பறிப்பது, விறகிற்காக காய்ந்த குச்சிகளை சேகரிப்பது வரை கடுமையான தண்டனைகளாக்கப் பட்டது. பணம், கோழி, ஆடுகள் எல்லாம் ஏழைப் பழங்குடிகளிடம் வனக் காவலர்கள் பிடுங்கிச் சென்று ஆட்டம் போட்டனர்.

தமிழக வனத்துறை கோருவது போல உண்மையிலேயே கல்ராயன் மலைப் பகுதி முழுவதும் காடுகள் தானா, உழவு செய்யப்பட்ட நிலங்களே இல்லையா என்பதை, ஜாகீர்தாரி முறையில் நிலவிய வரிவிதிப்புகளோடு ஒப்பிட்டு முதலில் சரிபார்த்து கொள்வோம்.

ஜாகீர்தாரி முறையில் வரி விதிப்பும், உரிமைகளும்

1)கலப்பாடி வரி- உழுவதற்கு வரி
2) கொடுவா வரி – மரங்கள், கட்டைகள் வெட்ட வரி
3) பில்லு வரி – புல் பறிக்க வரி
4)புனல்காடு வரி – இடம் மாற்றி செய்யும் சாகுபடி நிலத்துக்கு வரி
5)ஆட்டு வரி – ஆடுகளை மேய்ப்பதற்கு வரி
6)கால்நடை வரி -மாடுகள் மேய்க்க வரி

போன்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளது. இவை தெரிவிக்கும் செய்தி என்னவெனில், கல்ராயன் மலையில் பருவத்திற்கு ஏற்ப மலைச் சரிவுகளில் மரங்கள் அகற்றப்பட்டு தற்காலிக சாகுபடி செய்யப்பட்ட /இடம் மாற்றி செய்யும் புனல்காடு/பொனக்காடு விவசாயம் துவங்கி, உழவுக்காடு வரையும், பல்வேறு பழங்குடியினர் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் உரிமைகள் இருந்தது; அவை வரிவிதிப்பு மூலமாக சட்டப்பூர்வமானதாக்கப் பட்டிருந்தது என்பதாகும். ஆனால், தமிழக வனத்துறையால் பழங்குடியினரின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
த.நா. அரசாங்கம் வனத்துறையின் அட்டூழியங்கள் தொடர்ந்ததால்…. “தங்களுக்கு நிலம் மீதான உரிமையில் நீதி கிடைக்கவில்லை” என கல்ராயன் பழங்குடியினர் 1985ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். (மனு எண் 1210/85).

இதற்கிடையில் வருவாய் துறை ஆணை எண் 1168 (தேதி 25.7.89) மூலம், பழங்குடியினர் நில அடமானம் செய்யக் கூடச் என வாழ்வாதார நடவடிக்கைகளை முடக்கினர்.

ரிட் மனு 1210/85 ன் மீது, 24.2.94 ல் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. கல்ராயன் மலை பழங்குடியினர் மூன்று மாத காலத்தில் நில ஒப்படைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்; அவற்றை பரிசீலித்து அரசாங்கம் ஆறு மாத காலத்தில் முடித்து தர வேண்டும்.

இந்த வழிகாட்டுதலின் மீது எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொறுப்பற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகம், 13.6.95 ல் “மனுக்கள் எதுவும் வரவில்லை ” என உதாசீனப் படித்துவிட்டது. இதை ஒட்டி தமிழக சட்டமன்றத்திலும் இப் பிரச்சினை எழுப்பப் பட்டது.

5.8.95 ல் த.நா. நில நிர்வாக ஆணையர் (திரு. இளங்கோவன் IAS) வருவாய் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். அதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை மனிதாபிமானத்துடன் பழங்குடி மனுதாரர்களை நேரில் சந்தித்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரினார். ஆட்சியர் சரிபார்ப்புக்கு பின்னர் நில ஒப்படை செய்ய வேண்டும் எனவும், கல்ராயன் மலை நிலப் பிரச்சினையை பிற மலைகளில் உள்ள நிலவுரிமை பிரச்சினை மாதிரி அணுகக் கூடாது எனவும், தமிழகத்தில் மலை நில விற்பனை மீதுள்ள பொதுவான தடை இங்கு பொருந்தாது எனவும், கல்ராயன் மலை பழங்குடியினர் பயன்பாட்டில் உள்ள நிலங்களை, த.நா. வன பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெளிவாக பரிந்துரைத்தார்.

ஆனாலும், அப்போதிருந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளவேயில்லை. இதற்கு பிறகு, வருவாய் துறை அமைச்சர் தலைமையில் 17.8.98 ல் நடைபெற்ற கூட்டத்தில், IAS, IPS தகுதி வாய்ந்த வருவாய், நிர்வாக, வனத் துறைகளைச் சார்ந்த ஏழு அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

மெத்தப் படித்த அந்த உயர்நிலைக் குழு அதுவரையிலான மொத்த விவகாரத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, வெறும் 4217 பழங்குடி குடும்பங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும், தலா 1 ஹெக்டேர் வீதம் அவர்களுக்கு மட்டும் நிலம் வழங்கலாம் எனப் பரிந்துரைத்தது.

த.நா. வருவாய் துறை மற்றும் வனத்துறை எப்படி எல்லாம் கல்ராயன் பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்சினையில் அநீதி இழைத்துள்ளனர் என்பதை அம்பலப்படுத்தும் வகையில், உயர்நிலைக் கமிட்டி கூட்ட குறிப்புகள் minutes உள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற டாக்டர் பரம்ஜித் சிங் சித்து அவர்கள் வருவாய் துறை செயலாளருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதம் / அறிக்கை (எண் பி 8/7218/98-2 தேதி 7.3.99) பல்வேறு உண்மைகளை பொதுச் சமூகத்திற்கு விளக்குகிறது. கல்ராயன் பழங்குடியினர் நில உரிமை விசயத்தில், தனது பரிந்துரைகளை வருவாய் துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

பரம்ஜித் சிங் சித்து அறிக்கையின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு

1) நிர்வாகம் என்ற பெயரால், கல்ராயன் மலை ஜாகீர்தாரர்களின் கொடுஞ் சுரண்டலுக்கு உள்ளான பழங்குடியினர், 1975 எமர்ஜென்சி நிலை அகற்றப்பட்ட பின்னர் தான், கொத்தடிமைகளாக இருந்த நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

2) தங்களுடைய விவசாய/சாகுபடி நிலங்களை சமவெளியில் உள்ள விவசாயிகள் கழனி, நிலம், வயல்,கொல்லை எனப் பல்வேறு பெயரில் அழைக்கின்றனர். ஆனால், இங்குள்ள பழங்குடியினர் #காடு என்ற பெயரில் சாகுபடி நிலத்தை அழைக்கின்றனர்.

ஆனால், கல்ராயன் மலை நிலத்தை செட்டில்மண்ட் செய்த அதிகாரிகள், உழவு செய்த “காடு” என்பதை தவறாக வனம்/ Forest என வியாக்கியானம் செய்து,கிராம ஆவணங்களில் தவறாக வகைப்படுத்தி விட்டனர்.

3) எனவே, செட்டில்மெண்ட் ஆவணங்களில்….

காடு புறம்போக்கு 35,395 ஹெக்டேர்கள் எனவும், காடு புறம்போக்கு என அறிவிக்கப்பட்ட சாகுபடி நிலம் 10,113 ஹெக்டேர்கள் எனவும் வகைப்படுத்தி பிரித்து விட்டனர்.

1983 ல் த.நா. அரசாங்கம் நியமனம் செய்த பாரஸ்ட் செட்டில்மெண்ட் அதிகாரிகள் ” காடு புறம்போக்கு ” என்பதை RF Reserve Forest /காப்புக் காடுகள் என அறிவித்துவிட்டனர்.

இதற்கிடையில் 31.5.1993 தேதியில் Forest settlement officer பணியிடம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், காடு புறம்போக்கு என்பதை காப்புக் காடுகள் RF ஆக மாற்றுவது என்பது இதுவரை நிறைவு பெறவில்லை.

4)” காடு புறம்போக்கு ” என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் இன்னமும் 3274 ஹெக்டேர் (8087 ஏக்கர்) பழங்குடியினர் பயன்பாட்டில் /சாகுபடியில் உள்ளது. அவை தரிசாக மறுவரை செய்து பழங்குடியினருக்கு வழங்க வேண்டும். அதற்கான பிரத்தியேகமான/தனியான அலுவலர் களை நியமிக்க வேண்டும்.

5) மேலும் கூடுதலாக, எந்த நிலமெல்லாம் சாகுபடிக்கு தகுதியானதாகவும், பழங்குடியினர் பயன்பாட்டிலும் இருக்கிறதோ, அத்தகைய நிலங்கள் எல்லாம் “காடு புறம்போக்கு ” என்ற வரையறை யிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

6) ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 4217 குடும்பங்கள் அல்லாத பிற நிலமற்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வு /சர்வே மேற்கொள்ள வேண்டும்.

7)இரண்டு ஆண்டு காலத்தில், இப் பணிகளை முடித்து தர, சிறப்பு அலுவலர்கள் (தாசில்தார் முதல் கடைநிலை ஊழியர் வரை) 78 பேர் புதிதாக ஆளெடுக்க வேண்டும். இதற்கு சம்பள ஒதுக்கீடு ரூ.1,09,43,250 தேவைப்படும்.

“இவை அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்”என அவ்வறிக்கையில் நில நிர்வாக ஆணையரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

நில நிர்வாக ஆணையர் இக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.நா. அரசு செயலாளருக்கு 28.4.99 ல் அறிக்கை அனுப்பி வைத்தார். அது கிடப்பில் போடப்பட்டது.

இதற்கு பின்னர், பத்தாண்டுகள் கழித்து, 20.7.2008 ல் திரு. M.குழந்தைவேல், தனி வட்டாட்சியர் (கல்வராயன் மலை) வெள்ளிமலை, சங்கராபுரம் வட்டம்- அவர்கள் மீண்டும் ஒரு குறிப்புரையை த.நா.அரசுக்கு அனுப்பினார்; 3274 ஹெக்டேர் நிலங்களை மீள தரிசாக மாற்றம் செய்து பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

அதற்குப் பிறகு பத்தாண்டுகள் ஆன பின்னரும் கூட, கல்ராயன் பழங்குடியினருக்கு நிலவுரிமை வழங்க வேண்டிய த.நா அரசின் செயற்பாட்டில் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை.

ஒரு அரசாங்கத்தின் கிரிமினல் அலட்சியத்தின் உச்சம் இது! வெறுங்கனவாய் பழங்கதையாக செல்கிறது கல்ராயன் பழங்குடியினர் நிலவுரிமைக்கான போராட்டங்கள்! கல்ராயன் மலைப் பழங்குடியினருக்கு ஆதரவாக பொதுச் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்! பழங்குடியினர் நீதிக்காணப போராட்டத்தில் துணை நிற்க வேண்டும்!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் 24.9.2017 அன்று திருவண்ணாமலை மாவட்டம் , தன்டராம்பட்டு , தானிப்பாடி கண்ணன் திருமண மன்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிக‌ள் மற்றும் பொது உறுப்பினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட 18.பட்டி நிர்வாகிகள் தருமன் & பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக மாநாட்டு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

பொதுக்குழு நிகழ்ச்சியை மாநில நிர்வாகிகள் மாரிமுத்து, அண்ணாமலை, வரதராஜன், மோகன், வேலூர் அண்ணாமலை போன்றோர் தலைமை தாங்கி வழிநடத்தினர். பொது செயலாளர் அண்ணாமலை வேலயறிக்கை முன்வைத்து விளக்கம் அளித்தார். பொருளாளர் வேலூர் அண்ணாமலை வரவு -செலவு அறிக்கையை முன்வைத்தார். பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அறிக்கை மீதும், தங்கள் வேலைப் பகுதியில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் பேசினர். வேலை அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.
பொதுக்குழுவில் ஆலோசனைகள் வழங்க நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

எனது உரையின் முக்கியமான கருத்துக்கள பின்வருமாறு

விழிப்புணர்வு பெறாத ஒரு சமூகம் படுகிற துன்பங்களை, பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகிகள் உரைகள் வெளிப்படுத்தின. ஒரு சமூகம் விழிப்புணர்ச்சி பெறவில்லை என்றால் என்னென்ன நடக்கும்?

1) ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பேசும்பொழுது, ஈரோடு மாவட்ட மலையாளிப் பழங்குடியினர் பல ஆண்டுகளாக தங்களால் “பழங்குடி” என ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியவில்லை ; ஒரு அரசு வேலைவாய்ப்பு கூட பெறமுடியவில்லை என்று வேதனையை பகிர்ந்து கொண்டார். ஆனால்….அவர்கள் வாழ்கிற பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள சேலம் மாவட்ட மேட்டூர்-கொளத்தூரில் உள்ள போலிப்பழங்குடி கொண்டாரெட்டிகள் சுமார் 25,000 பேர் பழங்குடி சான்றிதழ் பெற்றது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான உயர்கல்வி & மத்திய மாநில அரசாங்க வேலைவாய்ப்புகளை அபகரித்து கொண்டு விட்டனர்.

2)விழுப்புரம் மாவட்ட தலைவர் பேசியபோது, “கல்வராயன் மலைப்பகுதி ஜாகீர்தாரி முறையிலிருந்து 1975 க்குப் பிறகுதான் உரிமை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பழங்குடியினருக்கு முறையாக நில உரிமைகள் மாற்றப்படாததால்… மலைப்பகுதியின் சுமார் 15,000 ஏக்கர் நிலங்களை வனத்துறை காப்புக் காடுகள் RF என அபகரித்து கொண்டு, பழங்குடியினரை அவரவர் நிலங்களிலிருந்து வெளியேற்றினர்.
கல்வராயன் மலைப்பகுதி இனாம்தாரி எஸ்டேட்களாக இருப்பதால், வன உரிமை சட்டம் அமலாவதற்கு சிக்கல்கள் இருக்கிறது”- என்றார்.

70,000 ஹெக்டேர் நிலம், அதாவது சுமார் 2 இலட்சம் ஏக்கர் நிலம், விழுப்புரம் & சேலம் மாவட்டங்களின் கல்வராயன் மலையில் வருகிறது. சுமார் 30,000 ஏக்கர் நிலங்களை அன்னியர்கள் (அரசியல்வாதிகள் , பணக்காரர்கள்) சட்டவிரோதமான வழிகளில் அபகரித்து விட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘கல்வராயன் மலைப் பகுதிக்கு வன உரிமை சட்டம் பொருந்துமா?’ எனப் பேசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

3) திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மட்டுமே, மலையாளி பழங்குடியினர் மிக அதிகமாக 50,000 க்கும் கூடுதலானோர் வாழ்கின்றனர். வாழ வழியில்லாமல் வேலை வாய்ப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் செம்மரம் வெட்டும் வேலைக்காக திருப்பதி வனங்களுக்கு சென்று சிக்கிச் சீரழிந்தனர் ; செத்தனர், சிறைகளில் வாடினர்….

இவை எல்லாம் தான் தமிழகப் பழங்குடியினர் வாழ்க்கை நிலைமைகள்….

பழங்குடியினர் பற்றிய அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினர் நலனுக்காக/பாதுகாக்க அட்டவணை 6 மற்றும் 5 யை உருவாக்கியுள்ளது. 6 வது அட்டவணை 6 th schedule அசாம் மற்றும் வடகிழக்கு மாநில பழங்குடியினரை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. பிற மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகள் பாதுகாக்கப்பட 5 வது அட்டவணை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு இதன் கீழ் வரவில்லை. த.நா.யை 5வது அட்டவணையில் கொண்டு வர மலையாளி பேரவையும் கூட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இவ் விஷயத்தில்
தமிழக அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. மாறாக, வன உரிமை சட்டம் 2006 யை கூட அமல்படுத்த உண்மையாக செயல்படவில்லை. “த.நா.ல் வன உரிமை சட்டப்படி பழங்குடியினருக்கு பட்டா உரிமை வழங்கக் கூடாது ” என ஓய்வுபெற்ற வன அதிகாரி 2008 ல் தொடுத்த வழக்கை காரணம் காட்டி கிடப்பில் போட்டது. 2015 ல் தான், பழங்குடி இயக்குநர் வழக்கில் தன்னை இணைத்து கொண்டார்.

“ஏன் இன்னமும் அமல்படுத்தவில்லை ?” உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்தபிறகு தான் தமிழக அரசாங்கம் அமலாக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 27, 285 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 4471 பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறது.

இதுவும் கூட எந்தளவு நேர்மையாக, சரியாக நடந்தது என அறிக்கை வெளியிடப்பட்டால் தான் தெரியும்.

அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றி வைக்கும் அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் டாக்டர். அம்பேத்கர் கூறியது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் அதை அமலாக்கம் செய்யும் நிர்வாக அமைப்பின் Executive கையில் உள்ளது.” நிர்வாக அமைப்பு சரியில்லை என்றால்… அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய எந்தவொரு சமூகநீதிக் கோட்பாடுகளும் அமலுக்கு வராது; மக்களுக்கு போய் சேராது.

தமிழக பழங்குடியினர் நலம் – மாநில அரசின் செயல்பாடு என்ன?

மிகவும் பின்தங்கிய நிலையில், பொருளாதாரத்தின் விளிம்பில் வாழும் தமிழக பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசாங்கம் 2015-16 ல் ஒதுக்கிய நிதி 1.10 % மட்டுமே ஆகும். அதாவது ரூ.218 கோடி மட்டுமே! அதாவது மக்கள் தொகை சதவீதத்திற்கு ஏற்ப தான் ஒதுக்கீடு வழங்குமாம்!

எவ்விதமான கரிசனமோ, கூடுதல் அக்கறையோ கிடையாதாம்!

2015-16 ல் செய்த செலவுகளையும், 2017-18 திட்ட ஒதுக்கீடு விவரங்களையும் பரிசீலனை செய்வோம்.

கல்விக்கு கணிசமான நிதியை ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். மாநிலத்தில் எழுத்தறிவு 80 % ஆக இருக்கும் போது, பழங்குடியினர் எழுத்தறிவு 54 % என்பதால் அந்த நிதியும் கூட போதாது. இது ஒருபுறமிருக்க, பிற சில செலவினங்களை பார்ப்போம்.

மலைக் கிராமங்களில்
பிரசவத்திற்கான மருத்துவ வசதிகள் இல்லாததால், இன்றும் கூட பழங்குடி கர்ப்பிணிப் பெண்கள் இறக்கும் நிலை இருக்கும் பொழுது…
சுகாதாரம் & மருத்துவம் என்பதற்காக 1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

பழங்குடியினர் நலவாரியம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூ.2000 மட்டுமே யாகும். துணைத் திட்டத்தின் Sub plan கீழ் மேம்பாட்டு ஆணையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1000 மட்டுமே!

“கல்வராயன் மலை மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக சிறப்பு திட்டங்கள் அமலாக்க வேண்டும் ” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்ட பிறகு தான் வெறும் 11 இலட்சம் நிதியை ஒதுக்கி, “கல்வராயன் மலை நிர்வாக அமைப்பு ” என்பதை அறிவித்துள்ளார்கள்.

பள்ளிக் கல்வி விஷயத்தில், 42 விடுதிகளில் பயிலும் 2782 மாணவ, மாணவியர்களுக்காக உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.41.53 இலட்சம் தான் …அதாவது ஒரு மாணவருக்கு மாதம் உணவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 125 ரூபாய் தான்!

ஆனால், பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் அரசு சாரா NGO தொண்டு நிறுவனங்களுக்கு நிதி என்ற வகையில் தரப்பட்ட நிதி சுமார் ரூ.140 இலட்சம் ஆகும். பழங்குடியினர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு நிதி ஒதுக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், NGO க்கள் பெயரில் கொள்ளையடிக்க நிதியை ஒதுக்கியது.

மலைகளில் சாலைகளே இல்லாமல் பழங்குடியினர் துன்பப்படும் போது, சாலைகள் போட ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 10.80 இலட்சம் தான்! மின்சாரத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ. 2000 மட்டுமே

2017-18 ம் ஆண்டு மாநில நலத் திட்ட (ரூ.55,000 கோடி) செலவினத்தில் பழங்குடியினருக்கு ஒதுக்கியது ரூ.607 கோடி மட்டுமே!

படித்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். செம்மரக்கட்டை வெட்டச் சென்ற இளைஞர்களில் பலரும் படித்த இளைஞர்கள். ஆனால், தாட்கோ’ வில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது: 288 தொழில் முனைவோருக்கு மொத்தம் ரூ.10.80 கோடி மற்றும் படித்த இளைஞர்களுக்கு பயணிகள் வாகனம் வாங்க 56 பேருக்கு ரூ.2.24 கோடி மட்டும் தானாம்!

படித்த பழங்குடியினர் வேலை வாய்ப்பு என்னவானது?

பழங்குடி இளைஞர்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு உணர்வு உயர வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் வேலை வாய்ப்பு பெறமுடியாது.

தமிழகத்தில் பழங்குடிகள் என்ற பெயரில் போலிகள் நிறைந்துள்ள நிலையில்…. அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளை அவர்கள் பறித்துக் கொண்டு இருப்பது குறித்த விழிப்புணர்வும், இயக்கமும் உருவாகாமல் நிலையை தலை கீழாக மாற்ற முடியாது.

தமிழகத்தில் போலிப் பழங்குடி சான்றிதழ் பெற்றோர் ஒரு இலட்சத்திற்கும் மேலாக இருப்பர். 1971-81 காலகட்டத்தில் போலிகள் எண்ணிக்கை அசுர வேகம் பெற்றது. பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை / சென்சஸ் கணக்கெடுப்பில் தமிழகத்தில் பழங்குடியினர் மக்கள் தொகை சராசரி உயர்வு 10% ஆகும். ஆனால், 1971-81 ல் மட்டுமே 67 % உயர்வு என கணக்கு வந்தது. (1971 ல் 3,11,515 பேர், 1981ல் 5,20,226 அதாவது 2 இலட்சம் பேர் உயர்வு என்றது, சென்சஸ்).

1961 க்கும் 2011 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போலிகள் என்னென்ன பெயர்களில் சான்றிதழ் பெற்றனர் என்பதை கவனிக்க வேண்டும். 1961 ல் வெறும் 8 பேராக இருந்த கொண்டா ரெட்டி 1991 ல் 31,517 ஆக உயர்ந்தது. 1961 ல் 6459 ஆக இருந்த #காட்டுநாயகன், காட்டு நாய்க்கன் என்ற போலிகளால் 2011 ல் 46,672 என அதிகரித்தது. (உண்மையான காட்டுநாயகன் நீலகிரி மற்றும் அருகாமையில் வயநாடு-கேரளா வில் வசிக்கும் அருகி வரும் தொல் பழங்குடியாகும்.) 1961 ல் 112 ஆக இருந்த குறுமன் (நீலகிரி பழங்குடி) பெயரில் குரும்பக் கவுண்டர் போலிகள் பழங்குடி சான்றிதழ் வாங்கியதால், 2011 ல் அது 30,965 ஆகியது. இதே போல் வெறும் 2 பேராக இருந்த மலை வேடன் 2011 ல் 7215 ஆக மாறியது. இதேபோல் மலை குறவன் 2011 ல் 19,645 ஆக மாறியது.

#இவையனைத்தும்வெறும்சான்றிதழ்கள்அல்ல! #அரசுவேலைவாய்ப்புகள்!

1981 க்குப் பிறகு தான் … போலிகள் நுழைவு பற்றி பல்வேறு அமைப்புகள் பிரச்சினையை கிளப்பின; பல்வேறு கமிட்டிகள் அறிக்கை தந்தன. 1989 க்குப் பிறகுதான் பழங்குடி சான்றிதழ் வழங்குவதை வருவாய் கோட்டாட்சியர் RDO பொறுப்பில் முறைப்படுத்துகிறார்கள்.

1994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் “SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996” உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

மாநில கூர்நோக்கு குழு அமைக்கப்பட்ட
பிறகும் #போலிகள் தங்கள் சங்கங்கள் மூலமாக வழக்குகள் என வலுவாக எழுந்து வருகின்றனர். மலையாளி பேரவையின், வேறு சிலரின் தொடர் முயற்சிகள் காரணமாக, 31,517 என்பதிலிருந்து கொண்டா ரெட்டி போலிகள் 2011 ல் 9,847 என சரிந்து விட்டனர். எனவே தான், சஞ்சீவி போன்ற போலிகள் பாஜக கட்சி ஆதரவுடன், மலையாளி பழங்குடிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுகிறார்.

போலிகளுக்கு எதிராக, வேலை வாய்ப்பு உரிமையை வென்று எடுக்க பழங்குடி இளைஞர் சமுதாயம் ஊக்கமாக எழுந்து வரவேண்டும்.

பிரிட்டிஷ் காலனிய வனச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்!

இந்திய அரசாங்கம் நிறைவேற்றிய “வன உரிமை சட்டம் -2006” யை அமல்படுத்த பணியாற்றாத தமிழக அரசாங்கம், வனங்களை பராமரிக்க பழங்குடியினரை கையாள பயன்படுத்தி வரும் அடிப்படை சட்டம் 1882 ம் ஆண்டு த.நா.வனச் சட்டம் ஆகும்.

கடந்த 1.7.2016 ம் ஆண்டில், சேலம் மாவட்ட வாழப்பாடி வனச் சரக அலுவலர், நொய்யமலைப் பகுதியில் கிளாக்காடு பொ.கந்தசாமி என்ற மலையாளி பழங்குடியிடம் ரூ.20,000 அபராதம் விதித்து வசூலித்தனர். அவர் செய்த குற்றம் “புதர், செடி கொடிகளை வெட்டி சுத்தம் செய்தார்” என்பதாகும். என்ன அநியாயம்!

இதே காலனிய ஆட்சிக் கால சட்டத்தை வைத்துக் கொண்டு தான், கள்ளக்குறிச்சி DFO விவசாய நிலங்களை சமப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தும் பழங்குடியினரை தாக்குகிறார்.

த.நா.வனச் சட்டம் 1882 என்ற காலனிய சட்டம் உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில், வன உரிமை சட்டம் 2006 ன் கீழ், சிறு வனப் பொருட்கள் மீதான உரிமைகளை தமிழகப் பழங்குடிகள் என்றும் பெற முடியாது.
நிலத்தின் மீதான உரிமைகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஏற்கெனவே பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு மலைகளில் மொத்தம் 50,000 ஏக்கர் வரை நிலங்கள் பழங்குடியினர் கைகளை விட்டு சென்று விட்டது. த.நா.ல் ரெவின்யூ GO 15-40 மூலம் பழங்குடியினர் நிலங்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும்…அதிகாரிகள் மதிப்பதில்லை.

வேறு மாநிலங்களில் பழங்குடியினர் நில பாதுகாப்பு சட்டங்கள் உள்ளது. மஹாராஷ்டிரா பழங்குடியினர் நிலம் மீட்டெடுப்புச் சட்டம் – 1974 கூட உள்ளது. ஆனால்…
தமிழகம் 5 வது அட்டவணையில் இணைக்கப்படவில்லை. பழங்குடியினர் நிலங்களை பாதுகாக்கும், பறிபோன நிலங்களை மீட்டெடுக்க சட்டங்கள் உருவாக்கப் படவில்லை.

#பல்லாயிரக்கணக்கில்_அணிதிரள்வீர்!

நிலம், வேலை வாய்ப்புகள், வனத்தின் மீதான உரிமைகள் எனப் பழங்குடியினர் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் மீது மாபெரும் இயக்கம் ஒன்றை உருவாக்க, தயாரிக்க ” பழங்குடியினர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு” நோக்கி செல்ல வேண்டும்.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

முகப்பில் உள்ளது மாதிரிப்படம்.

“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!

’ஒடியன்’ லட்சுமணன்

பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார்.

அதிலொரு கோரிக்கை

‘பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து’

2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், NTCA வை திரும்பப்பெறல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளோடு பண்பாட்டுக்கோரிக்கைகளையும் முன்னெடுப்பது உற்சாகமளிக்கிறது.

இது எனக்கு 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது

காரமடை வனச்சரகத்தில், அடர்ந்த வனம் தாண்டிப்போனால் , அரக்கடவு என்னும் இருளர் பதிக்கு போகமுடியும்.அந்த பதியில் வசித்தவேட்டைமூப்பன், தன் மகன் சொடங்கனுக்கு இனச்சன்று (Community certificate) கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

நமக்கு கொடுப்பதுபோல் அவ்வளவு எளிதில் கம்யூனிட்டி சர்ட்டிபிக்கேட் பழங்குடிகளுக்கு கிடைத்துவிடாது. அந்த அப்ளிகேசனே 30 பக்கத்தில் ஒரு புக்லெட் போல இருக்கும். பல கட்ட விசாரணை நடக்கும்.

ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என நினைக்கிறேன். தாசில்தார்அலுவலகத்திலிருந்து ஊழியர் ஒருவர் அந்த விசாரணைக்காக அரக்கடவுக்கு வந்திருந்தார். வந்தவர் வேட்டையின் வீட்டை கண்டுபிடித்து சேரைக் கொண்டுவரச்சொல்லி வாசலில் இருந்த ஊஞ்சமரத்தின்கீழ் அமர்ந்துகொண்டார்.

நின்னே காங்காக்கு ஆப்பீசர் வந்திருக்கான் என்ற தகவல்போனதால் வேட்டை
அடித்துப்பிடித்து வனத்துக்குள்ளிருந்து களாக்காய் மூட்டையோடு வந்து நின்றார்.

கேள்விகளை, கேட்டுக்கேட்டு ஓப்பன் பேடில் வைத்திருந்த தாளில் டிக் அடிக்கத் தொடங்கினார் ஆபீசர். அதில் ஒரு கேள்வி மதம் குறித்தது…

‘நீ கிருஷ்டீனா’ என்று கேட்டார்

வேட்டை குழப்பமாகி என்னைப்பார்த்தார். நீங்க பேசக்கூடாது என்று ஆஃபீசர் ஏற்கனவே கட்டளை போட்டிருந்ததால் நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

‘கிருஷ்டீனா? இல்ல இந்துவா? ரெண்டில் எதுன்னு கேக்கேன்.. எதுக்கு இப்புடி திருதிருன்னு முழிக்கறே’ அதட்டிக் கேட்டார்

“நான் கிருச்சுடீனும் இல்லே… இந்துவும் இல்லே”

“அப்புறோ..?” நக்கலாகக்கேட்டார்.

‘வெறும்இருளந்தான்’ பளிச்சென்று சொன்னார் வேட்டை.

வந்தவர் குழப்பத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்.

“அய்யோ.. நீ என்ன சாமீப்பா கும்படறே..
ஏசுவையா.. பெருமாளையா?”

“பானையக் கும்படறேன்… பாட்டன் பூட்டன் முண்டும். எலும்பும் வெச்சிருக்கும் பானையக்கும்படறேன்..”

ஆபீசர் டென்சாகி தலையில் கைவைத்துக்கொண்டார்.

‘பெசாது கூரே’ எம்த்து கூரையில கெடக்கு வேணுமின்னா வந்து பாத்துக்க’என்று சடசடவென்று சொல்லிவிட்டு அவர் கையைப்பிடித்து இழுத்தார்.

அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது

“ஏப்பா இவுரு என்னசாமிய கும்பிடுறார்?” அங்கே வந்த பீட் வாட்சரிடம் கேட்டார்.

“நீங்க சொன்ன ரெண்டையும் கும்பிடமாட்டாங்க பூட்டன் பாட்டன்தா சாமி”

“சரி இந்துன்னு போட்டுக்கலாமா.. இந்துன்னே போட்டுக்கறேன்” ஜீப்பை கிளப்பிப் போயேவிட்டார்.

இந்த சம்பவத்தைத்தான் ஒடியன் இரண்டாம் பதிப்பில் ஒரு கவிதையாக சேர்த்திருந்தேன்.

என்னாக்கு எத்து பேரே

இச்சா லெதுகே ஆப்பீசா

இந்து இருளங்கெ

இலேந்தே கிருத்துவ இருளங்கே

நேமு ரெண்டாலும் இல்லே

வெறூம் இருளந்தே

நீ .. காங்கே

எமக்குந்து பெசாது கூரே கெடாக்கு

பெசாதுகூரை: ஒரு சின்ன தடுப்பஅறை நம்ம சாமி ரூம்ன்னு சொல்லுவோமே அது மாதிரி. அங்கே இருக்கும் ஒரு பானையில் மூத்தவர்களின் சில எலும்புகளும் ஆடைகளும் சேர்த்துவைத்திருப்பார்கள். எங்கே வெளியே போனாலும்.. விதைக்கத் தொடங்கினாலும் நல்லது கெட்டதுன்னாலும் பெசாதுகூரையில் இருக்கும் அந்த பானையை வணங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.

ஆமாம் அவர்கள் வெறும் இருளர்கள்தான். நாம்தான் நமக்கான மதத்துக்குள் அவர்களை கரைத்தோம் நமது கடவுளை அவர்களிடம் திணித்தோம். அவர்களின் வாழ்வை வனத்தை, பண்பாட்டை, மொழியை சூரையாடினோம்.

பழங்குடிகளோடும் அவர்களின் வாழ்வோடும் இரண்டறக்கலந்துவிட்ட தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்கம் ஆதிவாசிகள் அரசியலின் அடிநாதத்தை ஆன்மாவைத் தொட்டு எழுவது உத்வேகமளிக்கிறது.

இதை அவர்கள் செய்யாமல் யார் செய்யமுடியும்?

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்னும் ஓயாமல் ஒதுங்காமல் பழங்குடிகளுக்கான உரிமைப்போரை தொடர்ந்து முன்னெடுக்கும் . PL Sundaram S MohankumarVpg Erode கடம்பூர் ராமசாமி.மற்றும். ஏனைய தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயற்பாட்டாளர்.

வீடியோ: மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா? கறுப்பர் நகரம் நாவலாசிரியர் கரன் கார்க்கி அறியப்படாத சென்னையைப் பற்றி பேசுகிறார்…

மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

மல்கன்கிரி- ஓடிசாவில் பழங்குடியினர் மிக அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அரசின் அலட்சிய போக்கினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் இறந்துள்ளனர். என்ன நடக்கிறது – குழந்தைகளின் இறப்புக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்றான Japanese Encephalitis என்னும் நோய் கொசுவினால் பரவக்கூடியது. தடுப்பூசியின் மூலம் தடுக்கப்படக் கூடிய இந்த நோயினால் ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆண்டிலும் இதுபோல குழந்தைகள் இறந்தனர்.

இது போக பல்வேறு நோயிகளினாலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7000 குழந்தைகள் இறந்துள்ளனர். அங்குள்ள சமூக அமைப்புகள் தொடர்ச்சியாக போராடியும் குழந்தைகள் இறப்பை தடுக்க எந்தவிதமான முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை. இந்த வருடமும் அக்டோபர் முதல் வாரம் முதலே குழந்தைகள் தொடர்ச்சியாக இறப்பதை பற்றிய செய்திகள் வரத் தொடங்கினாலும், போர்க்கால அடிப்படையில் மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மிகவும் காலதாமதமாக அரசு அமைத்த உயர்மட்ட மருத்துவ குழுவோ வெறும் 5 மாதிரிகளை மட்டும் ஆய்வு செய்து Japanese Encephalitis னால் சில குழந்தைகளும் அந்த பகுதிகளில் விளையும் விஷ விதைகளை தவறுதலாக உண்டதால் மற்ற குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அங்குள்ள அடிப்படை மருத்துவ வசதிகளின் குறைபாடுகளை பற்றியோ குழந்தைகளின் ஊடச்சத்தின்மையை பற்றியோ எதுவும் பேசாது பழங்குடியினரின் அறியாமை தான் இறப்புகளுக்கு காரணம் என்று கூறி அரசின் மீது விழுந்த பழியினை களைய முயன்றது. “பானா சகுண்டா” எனப்படும் அந்த விதை காலங்காலமாக பழங்குடியினர் உண்ணும் விதை தான். அதை உண்டது தான் காரணம் என்றால் ஏன் இதற்கு முன்னர் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை? ஏன் இப்போது மட்டும் குழந்தைகள் இறக்கின்றனர்? ஒரு வேலை அதுவே காரணமாக இருந்தாலும் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் எப்படி தானாக விஷ விதைகளை உண்டிருக்க முடியும்?மேலும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சில குழந்தைகள் கூட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளனர். எதனால் திடீரென்று இறந்தார்கள்? ஆக நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்த பிறகும் இறப்புக்கான உண்மை காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்காக குழந்தைகளை பலி கொடுக்கிறதோ அரசு என்ற ஐயமும் எழுகிறது. இப்படி சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், பன்றிகளின் மூலம் தான் நோய் பரவுகிறது என்று கூறி பன்றிகளை அழித்து அங்கு பன்றி வளர்ப்பை சார்ந்திருக்கும் பழங்குடியினரின் வாழ்வாதாரங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது அரசு. இவை அனைத்தையும் கண்டும் கார்பரேட் ஊடகங்களோ எந்தவித சலனமுமின்றி கள்ள மௌனம் காக்கிறது.

இன்றளவும் தினம் 2-3 குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஓடிசா நவீன் பட்நாயக் அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க “மேக் இன் ஓடிசா” நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான முதலீடுகள் பழங்குடியினர் பகுதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதில் முதலீடாக வரவுள்ளது. மல்கன்கிரி பகுதியிலும் புதிதாக 5 கனிமச்சுரங்கங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, கடந்த மாதத்தில் மட்டும் மல்கன்கிரி மாவட்டத்தில் ஏறத்தாழ 650 பழங்குடியினர் மாவோயிச அனுதாபிகள் என்று போலியாக குற்றம்சாட்டப்பட்டு வலுகட்டாயமாக சரணடைய வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்க படவேண்டியது.

மல்கன்கிரி குழந்தைகள் இறப்பில் அரசின் அக்கறையின்மையையும் செயலின்மையையும் இந்த பின்னணியில் தான் பார்க்க வேண்டியுள்ளது. இப்படி கார்பரேட்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பொருட்டே பல்வேறு வழிகளில் ஒடிசா முழுவதிலுமுள்ள பழங்குடியினர் மீது அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. ஒருபுறம் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்புனர்வுகளின் மூலமாகவும் மறுபுறம் பழங்குடியினரின் இளைய தலைமுறையையே அழிப்பது என்று தொடர்ச்சியாக பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்களின் இருப்பிடத்தை விட்டே வெளியேற்ற முயல்கிறது அரசு. அடிப்படை உரிமைகளை மறுப்பதன் மூலமாகவும் தொடர்ச்சியாக பழங்குடியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் அவர்களின் வாழ்வாதரங்களை அழிப்பதன் மூலமாகவும் சப்தமில்லாமல் ஒரு இன படுகொலையையே நடத்திக் கொண்டிருக்கிறது நவீன் பட்நாயக் அரசு.

பழங்குடி குழந்தைகள் இறப்பை தடுக்கத் தவறிய ஒடிசா அரசைக் கண்டித்து Resist- Youth Against Oppressionஏற்பாடு செய்துள்ள கண்டன கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி நடக்கிறது. தகவலுக்கு:  9566295902, 9444689572.

 

பழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும்

ஒடியன் லட்சுமணன்

ஒடியன் லட்சுமணன்
ஒடியன் லட்சுமணன்

537 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன் பேருக்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர்.

இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற கல்விக்கொள்கை 2016 ன் வரைவு அறிக்கை, முழுக்க முழுக்க குலக்கல்விமுறையை நோக்கி நகர்த்தும் ரகசியத்திட்டத்தோடும் அன்னியர்களின் கட்டளைக்கு கீழ்படிந்தும் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றை திரும்பப்பெறுவதுடன் பழங்குடி கல்வியாளர்குழுவை அமைத்து அவர்களின் கருத்து கேட்புக்கு பிறகு கல்விக்கொள்கை 2016 ஏற்படுத்தப்படவேண்டும்.

சில பரிந்துரைகள்

• உண்டுறைவிடப்பள்ளிகள் PPP என்னும் public private partnership மூலம் தனியாருக்கு ஒப்படைப்பதை கைவிடவேண்டும். சில உண்டு உறைவிடப் பள்ளிகள் மடங்களுக்கு கையளிக்கப்பட்டது. அங்கே சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளித்து முட்டைகூட உணவில் தவிர்க்கப்பட்டது. அதிகாலையில் எழுப்பி அவர்களுக்கு சம்பந்தமில்லாத சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்யக் கட்டயாப்படுத்தப்பட்டார்கள். இவையெல்லாம் நம்மிடம் ஆவணமாக இருக்கிறது. ஆகவே உண்டுறைவிடப்பள்ளிகளை அரசே நடத்தவேண்டும் அல்லது பழங்குடிகளின் கூட்டுறவு சங்கம், பழங்குடிகளால் இயக்கப்படும் அமைப்புகளுக்கு கையளிக்கப்படவேண்டும்

• கற்பித்தல் அந்தந்த பழங்குடிகளின் மொழியிலேயே இருக்கவேண்டும்

• பழங்குடிநலத்துறையின்கீழ் கீழ் செயல்படும் பள்ளிகளின் கண்காணிப்பும் மதிப்பீடும் ஆழமாக செய்யப்படுவதில் சுணக்கமே நீடிக்கிறது ஆகவே பழங்குடிநலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்விச்சாலைகளையும் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படவேண்டும்

• உள்ளூரில் உள்ள கற்பித்தலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பயிற்சியளித்து பள்ளிகளில் நியமிக்கவேண்டும் அதுபோலவே தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பழங்குடிகள்குறித்த Sensitization பயிலரங்குகள் வருடத்துக்கு இரண்டுமுறையாவது வழங்கப்படவேண்டும். ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையில் பழங்குடி மூத்தோரின் தலையீடு கட்டாயம் இருக்கவேண்டும்

• பழங்குடிகள் பெரும்பாலான பகுதிகளில் வேலைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்துபோவது அடிக்கடி நடக்கிறது மேலும் நாடோடிப் பழங்குடிகள் தனக்கே உரித்தான பாரம்பரியத்தோடு அடிக்கடி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று சிறப்புத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். இடப்பெயர்வாகி வாழும் இடங்களில் இங்கே படிக்கும் அதே கல்வியை இடம்பெயர்ந்து பணிபுரியும் இடங்களில் உள்ள பள்ளிகளில் கொடுக்கலாம் இதற்கென சிறப்பு card system அறிமுகப்படுத்தப்படவேண்டும் அல்லது Barefoot teachers நியமிக்கவேண்டும் அல்லது seasonal hostels ஏற்படுத்தவேண்டும்

• 100 சதவீத தேர்சியை இலக்காகக்கொண்டு 9 மற்றும் 11 ஆம் நிலையில் படிக்கும் சுமாரான மாணவர்களை பெற்றோரை அழைத்துப்பேசி வற்புறுத்தி இணங்கச்செய்து பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறர்கள் அதை கண்காணிக்க 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இடைநிற்கும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் பெறும் திட்டம் மாவட்ட கல்வி மையத்தோடு இணைக்கப்படவேண்டும் அதற்கென குழு ஒன்று ஏற்படுத்தபடவேண்டும் அந்தக்குழுவில் பழங்குடி அமைப்புகளுக்கு உறுப்பினர்பொறுப்பு வழங்கப்படவேண்டும்

• மேற்படிப்பில் இடைநிற்கும் நிலை பெரும்பாலும் கல்லூரிகளின் தூரம் காரணமாகவே நிகழ்கிறது ஆகவே 20 கிலோமீட்டருக்கு ஒரு கல்லூரி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் மேலும் extension centers மேல்நிலை பள்ளிகள் செயல்படும் பகுதிகளின் அமைக்க பெரிய பல்கலைகழகங்களை முன்வரவைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்

• சிறப்பு பணியாளர் அல்லது உளவியல் ஆலோசகர்கள் பழங்குடி பள்ளிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் நேரடி களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் குழந்தைகளின் வருகைப்பதிவுகளில் கல்வி கற்கும் ஆர்வங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படவேண்டும்

• பாடத்திட்டம் curriculum development பழங்குடிசமூகத்தை வைத்தே உருவாக்கப்படவேண்டும் மேலும் அது அவர்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இருக்கவேண்டும் அவர்களைக்கொண்டு உருவாக்கப்படமுடியாத பாடத்திட்டங்களை மறுஆய்வுசெய்யவும் அவர்களுடைய யோசனைகளை கேட்டுப்பெறும் வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும்

• Exchange classes வாரம் ஒருமுறை அருகாமை பள்ளிக்கும், மாதம் ஒருமுறை சமவெளிப்பள்ளிகளுக்கும் அழைத்துசென்று அங்கு நடக்கும் வகுப்புகளில் பங்குபெறும் திட்டம் ஏற்படுத்தப்படவேண்டும். அது மாணர்களின் கற்கும் திறனை விரிவடையச்செய்யவும் சமவெளி மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு ஏற்படுத்தும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையையும் அதிகரிக்க உதவும்

• பத்தாம் வகுப்பிலேயே கணிதமும் அறிவியலும் வரப்பெறாத மாணவர்களை A B என்று வகைப்படுத்தி மற்ற பாடங்கள் மட்டுமே படிக்கும் நிலைக்கு தள்ளுவது எதிர்காலத்தில் அறிவியல் தேவைப்படும் ஆய்வுகூடம் சம்பந்தமான பணிகளைக்கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பிருக்கிறது. இம்முறைய திணிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடி மக்களாகத்தான் இருக்கும் ஆகவே 10 ஆம் நிலைக்கு மேல்தொழிற்கல்விக்கு இடம் அளிக்கவேண்டும் அதுவும் தொழிற்பயிற்சி மையங்கள் பழங்குடிகள் பகுதியில் அமைக்கப்படவேண்டும்

• இடைநிற்றல் பெரும்பாலும் 5, 8 ,11 வகுப்பபுகளில் நிகழ்கிறது அது ஆரம்பப்பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளிக்கும் நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கும் மாறும்போது நிகழ்கிறது இதைத்தடுக்க அனைத்து வகுப்புகளும் அடங்கியே ‘ஒரேபள்ளித்திட்டம்’ விடுதி வசதியுடன் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒன்று மைக்கப்படவேண்டும்

• பழங்குடிகளின் பண்பாடு கலை மொழி ஆகியவற்றிற்கு புத்துணர்வு அளிப்பதன் மூலமே பழங்குடி குழந்தைகளின் வாழ்வும் மனமும் கல்வியும் பக்குவப்படவாய்ப்பிருக்கிறது ஆகவே இரவுகளில் முறைசார, பண்பாட்டு இரவுப்பள்ளிகள் இளையோர்கூடங்கள் போல் உருவாக்கப்படவேண்டும்

• தண்டனைப்பகுதியாக கணக்கிட்டே பழங்குடிகளின் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலைமாறி, அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கல்வியில் புதியவற்றை சாதிக்கும் எண்ணம்கொண்ட ஆசிரியர்களையே பழங்குடி பகுதிக்கு நியமிக்கப்படவேண்டும்

• பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இப்போது வெறும் கையெழுத்து பெறும் கழகமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அந்தக்கூட்டங்களை கிளஸ்டர் முறையில் ஓரிடத்தை தேர்வுசெய்து பெற்றோர்க்கான மாதாந்திரக்கல்வி விழிப்புணர்வு பயிற்சியாக மாற்றி அமைக்கவேண்டும். குறிப்பாக அவை உள்ளூர்விடுமுறை தினங்களை கணக்கில்கொண்டு நடத்தப்படவேண்டும். இது பெற்றோர்களின் கூட்ட வருகையை அதிகரிக்கவும் கல்விகுறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்

• பழங்குடிப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடத்திலேயே தங்கும் வசதிகள் செய்துதரப்படவேண்டும்

• விடுதியில் தங்கியிருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களின் ஊரில் வாரம் ஒருமுறையாவது தங்கி பொதுவகுப்புகளை நடத்தவேண்டும்

• பெரும்பாலான பழங்குடிகளின் நேரம் காலம் சமவெளி பண்பாட்டிலிருந்து மாறுபட்டது, அவர்களுடைய பள்ளி நேரத்தை பள்ளியின் நாட்களில் அவர்களோடு கலந்து மாற்றம் செய்யவேண்டும்

• பள்ளிவேலை நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளூர் விழாக்களை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்படவேண்டும் அதை தயாரிக்கும் பொறுப்பு பழங்குடிசமூக தலைமைகளிடம் விடப்படல்வேண்டும்

• குழந்தைகளின் உடல்நலம் கருத்தில் கொள்ளப்பட்டு ஊரக மருத்துவ திட்டத்தோடு இப்பள்ளிகள் இணைக்கப்படவேண்டும்

• பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் செயல்படுகிறது இந்த சத்துணவுத்திட்டங்களில் அவர்களின் பாரம்பரியமான உணவுகள் ஒரு காலத்திலும் இடம்பெற்றதில்லை வாரம் ஒருமுறையேனும் அவர்கள் உணவுகள் கொடுப்பது பள்ளியோடு இன்னும் நெருக்கமாக அவர்களை உணரச்செய்யும்

• அங்கன்வாடிகள் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 25 குழந்தைகள் வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. பழங்குடி பகுதிகளில் அந்த வரையரையறையை தளர்த்தி மாற்று முறைகளை பரிசீலிக்கவேண்டும் உதாராணமாக Community anganwadis இது உள்ளூர் ஆசிரியர்களை வளர்த்தெடுப்பதற்க்கும் உதவிகரமாக இருக்கும்

• பழங்குடிகளின் கற்றல்முறை எப்போதும் மடைமாறிவருவது அதுபோன்ற ஏதுவான சூழலும் மகிழ்சிகரமான இயல்பான கற்பித்தல்முறையை கையாளவேண்டும் கற்பிக்கும் கல்வி உபகரணங்கள் பழங்குடிகளின் வாழ்வில் இருந்தே எடுக்கப்படவேண்டும். பழங்குடிகளின் குழந்தைகள் வித்தியாசமான சமூக சூழ்நிலையிலிருந்தும் வஞ்சிக்கப்பட்ட பின்னனியிலிருந்தும் வருகிறார்கள் என்பதை உணர்ந்து கற்பிக்கும் நிலை இங்கு வேண்டும் இதுவரை கடைபிடித்துவந்த கல்விகொள்கையால் பெரும்பாலான மாணவர்கள் மிகக்கடுமையாகப்போராடி இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று தங்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. பழங்குடிகளின் கல்வியானது எப்போதும் அவர்களுக்கு உவப்பான அவர்களை மேலெடுத்துவரும் அக்கறையோடு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க சம்பந்தமில்லாதவர்களால் உருவாக்கப்பட்டு திணிக்கப்பட ஒன்றாகவே காலம்காலமாக இருந்து வருகிறது. மிகக்கூர்மையாக அப்சர்விங் திறன்கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வருகிற குழந்தைகளை, தவறான முறைகளால் பாழடிக்கின்ற வேலையை கல்விக்கொள்கைகள் இங்கே தொடர்ந்து செய்துவருகிறது.

ஒவ்வாத முறைகளையும் கற்பித்தல் திட்டங்களையும் பாடத்திட்டங்களையும் சதித்திட்டங்களையும் உள்ளடக்கி புறவாசல்வழியாக வரும் இந்தக் கல்விக் கொள்கை திரும்பப் பெறவெண்டும்.

ஒடியன் லட்சுமணன் எழுத்தாளர்; களப்பணியாளர். ஒடியன், சப்பே கொகலு நூல்களின் ஆசிரியர்.

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளீ பழங்குடியைச் சார்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் அரசுப் பணியில் ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார்.

நான் பயின்ற பல்கலைக்கழகங்கள் !

நான் எனது உலக அறிவை வெறும் கம்யூனிசப் புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறவில்லை. நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் புரட்சிகரமான கிராமப்புற வேலையும், பழங்குடியினர் வேலையும் முக்கியமானவை ஆகும்.

நீண்ட காலமாக பழங்குடியினர் பிரச்சினை, அவர்கள் மத்தியிலான வேலை என்பதை (அனைத்து இடதுசாரி செயல்வீரர்களையும் போல) நானும் பின்வருமாறு தான் புரிந்து கொண்டிருந்தேன்.

1) பழங்குடியினர் மலைகளில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அரசாங்கத்தால் புறக்கணிக்கப் படுகிறவர்கள், சாகிறவர்கள்.

2) வனத்துறை மற்றும் காவல்துறையின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் (உதாரணமாக வாச்சாத்தி சம்பவம்).

3) வன உரிமைச் சட்டம் 2006 போன்ற நல்லதொரு வாய்ப்பு அமலாக்கப் படாததால் உரிமைகள் அற்று இருப்பவர்கள்.

இவற்றிற்காகப் போராட வேண்டும்.

இந்நிலையில்….

தமிழகப் பழங்குடியினர் பிரச்சினை பற்றிய விரிந்த உலகத்தை வழங்கியவர் தோழர். K.A.குணசேகரன்.

செம்மரக்கட்டை வெட்டச் சென்று திருப்பதிக் காடுகளில் சிக்கிச் சீரழிவது உட்பட, பழங்குடியினரின் பல்வேறு பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு காரணம் பழங்குடியினர் நிலம், அரசியல்வாதிகள், பணக்காரர்களால் அபகரிக்கப்படுவதும், தமிழ் நாட்டில் பழங்குடியினர் நிலத்தை பாதுகாக்க தனியாக சட்டம் இல்லாதிருத்தல்,

தமிழகத்தின் முக்கிய மலைப்பகுதிகள் செட்யூல்ட் ஏரியாவாக வகைப்படுத்தப்பட்டு, பழங்குடியினர் நிலம், வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5-வது அட்டவணையின் கீழ் தமிழகத்தைக் கொண்டு வருவது,

போலியாக பழங்குடியினர் ST எனச் சான்றிதழ் வாங்கி வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்ட போலிகள் பற்றிய எச்சரிக்கையும், அவர்களை முறியடிப்பதும்

– போன்றவை ஆகும்.

அற்பமான காரணங்கள் கூறி வன உரிமைச் சட்டம் 2006யை, தமிழகத்தில் அமலாக்க மறுத்த பொழுது, 2009- 2013ல் நூற்றுக்கணக்கான கிராமங்களில் போட்டி கிராமசபைகளை அமைத்தது, மலை / காடு சார்ந்த சிறு வனப் பொருட்களை அரசாங்கத்தை மீறித் தாங்களே எடுத்துக் கொள்வது, வனத்துறை, அரசாங்க உத்தரவுகளுக்காக காத்திருக்காமல் தங்களுக்கானத் தார் சாலை, மண் சாலையைத் தாங்களே அமைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக, பழங்குடியினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்காகவும் (Empowerment) அவர் பணியாற்றினார்; உற்சாகம் ஊட்டினார்.

இணைந்து பணியாற்றிய தருணங்கள்

2009-10 காலங்களில் தான் தோழர். கே.ஏ.குணசேகரன் அவர்களோடு நெருக்கம் ஏற்பட்டது. சேர்வராயன் /ஏற்காடு மலைப் பகுதியில், வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வந்த சட்ட விரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக தோழர்கள் சிலரோடு இணைந்து பணியாற்றி ஆய்வு செய்து உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். எமது சார்பில், 2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

வேதாந்தா’வின் கொள்ளையை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக முன்வைக்காமல், பழங்குடியினர் வாழ்வாதாரத்துடன் இணைத்து பிரச்சினையை நாங்கள் எழுப்பியதானது அவரை ஈர்த்தது; நம்பிக்கையையும் அதிகரித்தது. பின்வரும் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டோம்.

1)பழங்குடியினர் நிலம் அபகரிப்பு பற்றிய விரிவான கள ஆய்வு
2)வன உரிமைச் சட்டம் 2006 பற்றிய விழிப்புணர்வும், அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதலும்
3)2013 ல் ஆந்திரா செம்மரக் கட்டை விவகாரங்களில் பழங்குடியினர் சிக்கிச் சாவது மீதான ஜவ்வாது மலை / ஜமுனாமரத்தூர் ஆய்வு, உண்மை அறியும் குழு அறிக்கை, சிறையிலிருந்த பழங்குடி கைதிகளின் விடுதலைக்கான இயக்கம், 4)உண்மையானப் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு பங்கை, போலிப் பழங்குடியினர் அபகரித்துக் கொண்டதற்கு எதிரானப் போராட்டங்கள்…

ஆந்திர சிறைகளில் இருந்த பழங்குடித் தொழிலாளர்கள் விடுதலைக்குப் பணியாற்றிய AIPF முயற்சிகள் பற்றி அவர் பெரும் மதிப்பைக் கொண்டிருந்தார்.

பேச்சு, மூச்சு எல்லாமே…

திடீரென்று அழைப்பார்.

“காம்ரேட், இன்னைக்கு நியூஸ் பாத்திருப்பீங்க. முப்பது பேரு மாட்டியிருக்கான். கவுன்சிலிங் கொடுத்தாப் போதுமுன்னு எஸ்.பி, கலெக்டர் எல்லாம் சொல்றாங்க. டிரைபல் நிலத்தை மீட்டுத் தரதப் பத்தி எவனும் பேச மாட்டங்கறான்..”

“ஜி! பிப்த் /5th செட்யூல்ல இணைக்கனும்னு ஹை கோர்ட்ல கேஸ் போட்டிருக்கு. நளினி சிதம்பரம் பீஸ் வாங்காம நடத்துனாங்க. சாதகமா உத்தரவு வந்திருக்கு…”

“தோழர், இன்னைக்கு அங்க வரேன், இருக்கீங்களா, GR இருக்காறா ? ஒரு ட்ராப்ட் இருக்கு, உங்கள் ஒப்பினியன் வேணும்..”

பேச்சு, மூச்சு எல்லாம் பழங்குடி நலன் தான்.

அவர் பழங்குடி மத்தியில் இருந்து தோன்றிய அறிவாளி, செயல்வீரர்.
தேர்தல் காலங்களில்,அவரிடம் அரசியல் ரீதியான பலவீனங்கள் வெளிப்பட்ட போதும் கூட…

இடதுசாரிகள் கவனம் குவிக்கத் தவறிய தமிழகப் பழங்குடியினர் பிரச்சினைகளை மய்யமான விவாதப் பொருளாக கொண்டு வந்து சேர்த்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு.

தோழருக்கு செவ் வணக்கம்!

பழங்குடியினர் நிலம், வாழ்வுரிமைக்கானப் பணிகளைத் தொடர்வேன்!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சந்திர மோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

நிலங்கள் பறிபோனதால் திருப்பதி காடுகளில் சாகின்றனர்!

கல்வராயன் மலையானது, சேலம்,விழுப்புரம் மாவட்டங்களில் 600 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்த இலட்சக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்களைக் கொண்டதாகும். 50,000 ற்கும் மேற்பட்ட (தமிழ் பேசுகின்ற) “மலையாளி” பழங்குடியினர் வசிக்கும் முக்கியமான மலையும் ஆகும்.

இம் மலையிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பதிக் காடுகளுக்கு செம்மரங்களை வெட்டச் சென்றவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்; வன அதிகாரிகள் கொலை வழக்கில், 2016 மே மாதத்தில் ஆந்திர சிறைகளிலிருந்து விடுதலையான 287 தமிழர்களில் கல்ராயன் மலையைச் சார்ந்தவர்கள் 72 பேர்; பட்ட மேற்படிப்பு PG படித்து வேலை கிடைக்காமல் இருப்போர் நூறு பேர்.

அரசியல்வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை…

கல்ராயன் மலையில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் பழங்குடியினர் நிலங்கள் அரசியல்வாதிகள், முதலாளித்துவ நிறுவனங்கள் எனப் பலராலும் வாங்கப் பட்டுள்ளன ;சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டு உள்ளன.

பழங்குடியினர் நிலங்களைச் சட்டவிரோதமாக வாங்கியவர்களாக தமிழக அமைச்சர் மோகன், முன்னாள் அமைச்சர்கள் தங்கபாலு, செல்வகணபதி, வீரபாண்டி ஆறுமுகம், வாழப்பாடி ராமமூர்த்தி & சசிகலா, உதயசூரியன் MLA, முன்னாள் மாவட்ட ஆட்சியர் மகரபூசணம், சேகர் காப்பி, சன் இந்தியா கோழிப் பண்ணை, சண்முகா ஆஸ்பிட்டல், மார்வாரிகள்- பியூஸ் சேத்தியா, டாக்டர்கள், காவல்துறையினர் எனப் பெரியதொரு பட்டியலை பழங்குடியினர் சங்கம் வழங்கியுள்ளது. பறிபோன நிலங்கள் 25,000 ஏக்கருக்கும் கூடுதலானது என சமூகத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியினர் அந்நியமாதல் பற்றிய அனைத்து ஆய்வுகளும் 20%க்கு மேல் 38% வரையில் கைவிட்டு போனதாக விபரங்கள் தருகின்றன. பழங்குடியினரால் அவசரக் கடனுக்கு அடகு வைக்கப்பட்ட நிலங்கள், விற்பனை செய்யப்பட்டதாக பத்திரம் தயாரிக்கப்பட்டு, பிறகு அவையும் கைவிட்டு கை மாறிவந்துள்ளன. ஏமாந்து போயும், மிரட்டலுக்கு அஞ்சியும் நிலங்களை இழந்ததும் நிகழ்ந்தது .( விரிவான படிப்புக்கு : Raghava Rao & Baskara Rao 1989, Karuppaiyan 1990 EPW, Dr. M.Nazer 2006, Kanagaraj Easwsran 2013 ஆகியோரின் ஆய்வுகளை படிக்கவும்) 1980-1990 கால கட்டத்தில் தான், 50% சட்ட விரோத நிலப் பரிமாற்றம் நடைபெற்றது எனவும், அவற்றில் 84 % செழிப்பான நிலங்கள் எனவும் ஆய்வுகள் விவரிக்கின்றன.

தமிழகப் பழங்குடியினர் நிலங்களைப் பாதுகாக்க இதுவரையிலும் தனிச்சிறப்பான சட்டம் எதுவுமில்லை. ஆனால், மலையாளி, சோளகா பழங்குடியினர் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரெவின்யூ தமிழக நிலையாணை எண் 15-40 (Tamilnadu Standing Order -Revenue GO 15 – 40) உள்ளது. இது சில மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நிலங்களை பழங்குடி அல்லாதோர் வாங்குவதை தடை செய்கிறது ; சட்ட விரோதம் என்கிறது ; திருப்பித் தரவேண்டும் என்கிறது. இந்த அரசாணையின் கீழ் கல்வராயன் மலைஉம் வருகிறது. ஆனாலும், 35 ஆண்டுகளுக்கு மேலாக, ஊழல் அதிகாரிகளின் துணை கொண்டு, பெத்தநாயக்கன் பாளையம் பத்திரப் பதிவு சப் ரெஜிஸ்டிரேசன் அலுவலகத்தில், நூற்றுக்கணக்கான சட்ட விரோதப் பதிவுகள் நடைபெற்றுள்ளன.

ஏனிந்த அவலம்?

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, 1963 வரையில் கல்வராயன் மலையில் ஜாகீர்தாரி, இனாம்தாரி முறை தானிருந்தது. 5 ஜாகீர்தாரர்கள் இருந்தனர். பழங்குடியினர் அனுபவ பாத்தியத்தில் இருந்த நிலங்களுக்கு வரி வசூலித்தனர். முறையாக ஆவணப்படுத்துவது நடக்கவில்லை.

1963 ல் தான் இனாம்தாரி ஒழிப்புச் சட்டம் (Enam Estate Abolition Act) அமலாக்கப்பட்டது. ஜாகீர்தாரர் முறை ஒழிக்கப்பட்டது. சின்னக் கல்ராயன் மலையில் மட்டும் முழுமையாக பட்டாக்கள் வழங்கப்பட்டது. பிற ஜாகீர்தாரர்கள் நீதிமன்றம் செல்ல மலை முழுமைக்கும் பட்டா வழங்குவது தாமதமானது. எனினும், தடை விலக்கப் பட்ட பின்னர், பெரிய கல்ராயன் நாடு, ஜடைய கவுண்டன் காடு, குரும்ப கவுண்டன் நாடு, ஆரிய கவுண்டன் நாடு ஆகியவற்றில் சில ஆயிரம் பட்டாக்களே வழங்கப்பட்டது. இன்று வரை பட்டா இல்லாதவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களில் உள்ளது. இதனால் தான் வனத்துறையும், இந்த நிலங்கள் எல்லாம் “காப்புக்காடு” என்றுக் கூறி பழங்குடியினரை நிலங்களில் இருந்து வெளியேற்றுவதும் நடைபெறுகிறது.

piyush manush new

சமூக ஆர்வலர் பியூஸ் சேத்தியாவிற்கு என்னத் தொடர்பு?

பகுடுப்பட்டு ஊராட்சி ஈச்சங்காடு, ஆவுராங்காடு பகுதியில் சேலம் மார்வாரி சேட்டுகளுக்கு சொந்தமான நிலம் 200 ஏக்கருக்கும் அதிகமாக உள்ளது. அவை சட்ட விரோத பத்திரப்படி 70 ஏக்கர் நிலமாகவும், மீதி புறம்போக்கு ஆகவுமுள்ளது. (இணைப்பில் உள்ள மூங்கில் பண்ணை படங்கள் பார்க்கவும்).

மார்வாரி சேட்டுக்களின் கூட்டாளியான பியூஸ் சேத்தியா நில விற்பனைக்கான முகவராக மாறினார். (இணைப்பில் உள்ள Facebook Screen shot பாரக்கவும்). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், சட்ட விரோதமாக பழங்குடியினரிடமிருந்து ஏக்கர் ரூ.3000 என வாங்கப்பட்டு, 35000 ற்கும் அதிகமான சிறுவாரை மூங்கில்கள் வளர்க்கப்பட்டு, ஏக்கர் ரூபாய் மூன்று இலட்சம் என விற்க முயற்சிக்கிறார். இதை ஒரு கூட்டுறவு வனம் Coop forest என கதைக்கிறார்.

இங்கிருந்த அரியவகை மூலிகைகள் அழிந்து போயின; வனத்தின் பன்மைத் தன்மையில், காட்டுயிரிகளின் சமன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன என்பது மற்றொரு பிரச்சினை ஆகும்.

அரசியல்வாதிகள், முதலாளிகள் தான் மனசாட்சியைக் கொன்றவர்கள் என்றால், இயற்கை / சமூக ஆர்வலருக்கு என்ன ஆனது?

mohan

போராட்ட களத்தில்..

அரசியல்வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை சட்ட விரோதமாக அபகரித்த நிலத்தை மீட்டுக் கொடு!

தமிழகப் பழங்குடியினர் நிலங்களை மீட்க, பாதுகாக்க தனிச் சட்டம் இயற்று!

வன உரிமைச் சட்டம் 2006 உடனே அமல்படுத்து !

தமிழக மலைப்பகுதிகளை அய்ந்தாவது அட்டவணையின் கீழ் கொண்டு வந்திடு!

கல்வராயன் மலை பழங்குடி மேம்பாட்டிற்காக, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த வழக்கறிஞர்கள் கமிட்டி( டாக்டர். சுரேஷ் (PUCL)தலைமையிலானது) 2015 ஏப்ரலில் வழங்கிய பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்து !

– என்ற பல்வேறு முழக்கங்களுடன், ஆக. 20 அன்று கருமந்துறையில், இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் மாரிமுத்து அவர்களுடன், சந்திர மோகன்(AIPF) சிறப்புரை ஆற்றினார்.

தீர்வு என்ன?

கேரளாவில் இடதுசாரிகள் முயற்சியால் உருவான The Kerala ST (Restriction on Transfer of lands and Restoration of alienated lands) Act 1975 போன்றதொரு தனிச் சட்டம் தமிழகத்திற்கு அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் தமிழக அரசாங்கம் உடனே இறங்க வேண்டும்.

நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே, பழங்குடியினர் நிலங்களை மீட்டுக் கொடுக்க நிர்வாக நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசாங்கம் செய்யத் தவறினால்,
திருப்பதி வனங்களுக்குச் செல்லும் பழங்குடியினரை தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால்……
தங்களது நிலம் மற்றும் வாழ்வுரிமையை பாதுகாக்க,

பழங்குடி மக்கள் தங்களது அமைப்புகள் மூலமாக போராட்ட களத்தில் இறங்குவது தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

சந்திரமோகன், சமூக – அரசியல் செயற்பாட்டாளர்.

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ராகுல் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மறைந்து திரியும் ஒரு கெரில்லாவால் இப்படி மடிப்பு களையாத, புத்தம் புது சீருடைய அணிந்திருக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

தலைச் சிறந்த மானுடவியலாளர்கள் இந்தச் சம்பவம் கொலம்பிய இராணுவம், அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்கு கெரில்லா படையினரின் சீருடைகள் அணிவித்ததை நினைவுப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஒடியன்

ஒடியன்
ஒடியன்

ஜடையாம்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம்

கனகராஜ்.

8 வயதுகூட நிரம்பாத சிறுவன்

தந்தை மாற்றுத்திறனாளி

தாய் விவசாயிக்கூலி

தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் .

தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான்

கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் கிடைக்கிறது

இப்படிப் போய்க் கொண்டிருந்தவேளையில்

ஒரு நாள்…..

’திடீர் ஆய்வு’க்காக தொழிற்துறை அலுவலர்கள் அந்த கம்பனிக்கு வருகிறார்கள், கனகராஜை பார்க்கிறார்கள் குழந்தைய வேலைக்கு வெச்சுக்ககூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? தேவையான அளவுக்கு டோஷ் தேவையான அளவுக்கு சட்டம் விட்டு ,உரிமையாளருக்கு மொய்த்தொகையை எழுதுகிறார்கள்

ஆய்வுக்குவந்த டீமில் இருந்த ஒருவர் சிறுவனிடம்,அவனது குடும்பம் வேலைக்கு வந்த பின்னணிஎல்லாவற்றையும் கேட்டு குறிக்கத்தொடங்குகிறார் அவனது துடுக்கும் துணிவான பதிலும் அவரை ஈர்க்கிறது . ஒரு அலுவலர் என்ற நிலையில் இருந்து இறங்கி, அவனை தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் இயங்கிவந்த முறைசாரா பள்ளியில் சேர்க்கமுயற்சிக்கிறார்

அந்த அலுவலரின் வேண்டுகோளின்படி அப்பள்ளியின் ஆசிரியர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து மனதை மாற்றதொடர்சியாக முயற்சி செய்கிறார். மாதாமாதம்100 ரூபாய் வழங்க அத்திட்டம் முன்வந்தது என்பது ஓரளவுக்கு சிறுவனின் குடும்பத்தை திருப்திகரமாக்குகிறது. அவர்கள் சம்மதிக்கிறார்கள் பள்ளிக்கு குதூகலமாக செல்ல தொடங்குகிறான் அந்தப்பள்ளி வாழ்க்கை அவனுக்கு ஏனோ பிடித்துப்போகிறது

முறைசாரா பள்ளியில் கிடைத்த ஒருவருடப் பயிற்சி அவனுக்குள் கல்விகுறித்த நம்பிக்கையை ஊட்டுகிறது அதன் பின் அவனை அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துவிடுகிறார்கள்

தொடர்ந்து படிக்கிறான்

பள்ளியில் அவன் சிறந்த மாணவனாக ஜொலிக்கிறான். 10 வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணோடு தேர்வாகிறான். அதன் பின் மேல்நிலைப்பள்ளியில் 85 சதவீத மதிப்பெண் பெற்று தேர்வாகிறான். தேர்வான கையோடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்கிறான்.

குடும்பம் குதூகலிக்கிறது

குறிப்பிட்ட வருடங்களில் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிடுகிறான் . ஆனால் அதுமட்டுமே அவனுக்கு போதுமானதாக இல்லை .

இங்கே ஒரு இடைவெளிவிடுவோம்

வருடாவருடம் தொடர்ந்து நடைபெறும் கல்விவிழா  மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இது கல்விவிழா 2016

வாழ்த்துரைக்காக கனகும் அவர் சக தோழர்களும் என்னை அழைத்திருந்தார்கள். போகமுடியாத சூழல்தான் ஆனால் கலந்துகொள்வதென்று முடிவு செய்திருந்தேன்.

இந்த கல்விமையத்தின் மீது எனக்கு பெருங்காதலுண்டு

இந்தக்கல்விமையம்தான் அங்கே பழங்குடிமாணவர்களுக்கும் தலித் மாணவ்ர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இயங்கிக்கொண்டிருக்கிறது TNPSC/banking/rrb/TET போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சியளித்து தயார்படுத்தி அவர்களை வருடந்தோறும் அனுப்பிவைக்கிறது. .

சென்ற ஆண்டு மட்டும் 34 தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் (TNPSC) தேர்வுகளில் வெற்றிபெறவைத்தது

நேரம் பத்தை கடந்துவிட்டிருந்தது. உள்ளேபோகும்போது நிகழ்சி தொடங்கிவிட்டது

அரங்கம் வழக்கத்துக்கும் மாறாக இருந்தது

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் மரியாதை என்ற நிலையை மாற்றி சுற்றுவட்டப்பகுதியில் தேர்ச்சிபெற்ற தலித் பழங்குடி மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அத்தனை மாணவர்களையும் மாணவிகளையும் மேடையேற்றி நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள்

பட்டியலின,பழங்குடியின மாணவர்கள் கல்லூரிகளில் கட்டணமில்லா கல்வியை பெற வழிவகுக்கும் அரசாணை :92 குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள் .

அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு கல்விப்பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றவர்களைக்கொண்டு கலந்துரையாடலை நிகழ்த்தினார்கள்

அருந்ததிய சமூகத்திலிருந்து பல்வேறு தடைகளைத்தாண்டி 2016 ஆம் ஆண்டில் IAS தேர்வில் வெற்றிபெற்ற திரு.பா.பிரகாஷை பங்கேற்க வைத்து நம்பிக்கையூட்டினார்கள்

நிகழ்வு முடிந்து செல்லும் பழங்குடி மாணவி சுதாவை நிறுத்திக்கேட்டேன் .

பயிற்சி உபயோகமா இருந்ததா?

உங்களுக்கே தெரியும்சார் எங்க அப்பா அம்மால்லாம் படிக்கல , 12 க்கு பின்னால் என்ன படிக்கிறது எங்கபோறதுன்னுங்கூடத்தெரியாது இப்ப எங்களுக்கு ஒரு தெளிவு வந்திருக்கு .அம்மா அப்பா செய்யாதை சார்ங்க செய்யறாங்க வருகேம் பஸ் போயிறும் என்று அவசரமாக நகர்ந்தார்கள்

திரும்பி அரங்கைபார்த்தேன் கனகும் சக தோழர்களும் அரங்கத்தை சுத்தப்படுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்

தனிப்பட்டமுறையில் கனகையும் சக தோழர்களையும் நன்கறிவேன் அவர்களின் குடும்பப் பின்னணிகளையும் அறிவேன்

வகுப்புகள் நடத்தவோ பயிற்சிக்கான மெட்டீரியல் வழங்கவோ இன்னும் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் தேர்வாணைய பயிற்சிக்கு வரும் மாணவ்ர்களுக்கான தகவல்களை கல்வி சார்ந்த செய்திகளைத்தேடக்கூட ஒரு கணிணியோ இணைய வசதியோ அவர்களிடத்தில் இன்றும் இல்லை கிடைக்கும் இடத்திலும் நண்பர்களிடம் கேட்டுப் பெறுகிறார்கள்

வழியனுப்ப வாசலுக்கு வந்தார்

கனகு எப்படி சமாளிக்கறீங்க ?

படிப்பு ஒன்னுதான் எங்களுக்கு சொத்து அத எப்படியோ காப்பாத்தி இவுங்ககிட்ட கொடுக்கனும் அவ்வளவுதான் வரமாட்டீங்களோன்னு இருந்தேன் நல்லவேள வந்துட்டீங்க நன்றி .

கைகளைபிடித்துக்கொண்டார் …

பிரித்துக்கொள்ளவெகுநேரம் பிடித்தது

இந்த கனகு வேறுயாருமில்லை

வறுமையால் மூன்றாவதோடு படிப்பை கைவிட்டுவிட்டு குழந்தைத் தொழிலாளியாக ஒரு கம்பனியில் பணியாற்றியதாக மேலே படித்தோமே அதே கனகராஜ்தான் இந்தக்கனகு

தற்போது ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். முன்னணியில் இருந்து ஒரு முன்னுதரணமாக நின்று இந்த பூலே கல்வி மையத்தை இயக்குகிறார்

இந்த வருடத்திலிருந்து தொலைதூரத்திலிருக்கும் பணிரெண்டாவது மாணவ மாணவியர்களுக்கு கணித ஆங்கில பயிற்சிகளை துவக்க இருக்கிறார் மலைகளுக்குள் இருக்கும் கிராமங்களுக்கு போகவர வசதிகளில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு பஞ்சமில்லை.அதற்க்கான திட்டமிடுதலில் இருக்கிறார் கணினியும் ஸ்டடி மெட்டிரியல்களும் உடனடித்தேவையாக இருக்கிறது

நீண்டகாலத்திட்டமாக சொந்த இடத்தில் அனைத்துவசதிகளுடனும் இயங்கவேண்டும் என விரும்புகிறார்

அவருக்கு பிடித்துக்கொள்ள இன்னும் கரங்கள் வேண்டும் யாரேனும் உதவிக்கரம் நீட்டினால் இன்னும் உற்சாகமாக களத்தில் இயங்குவார்

தொடர்பு எண். கனகராஜ் 9843962567

ஒடியன், எழுத்தாளர்; செயற்பாட்டாளர்.

ஏழ்மை அல்ல; சாதி சான்றிதழ்தான் இந்த மாணவர்களின் கல்விக்கு தடை போடுகிறது!

விழுப்புரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் மாணவர்கள் 2016 மார்ச் +2 பொதுத்தர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களில் ஐந்து பேருக்கு சாதிச்சான்று இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் மேற்படிப்பில் சேரமுடியாத நிலையில் உள்ளனர்.

  1. ஏ.கண்ணப்பன். திருக்கோவிலூர் வட்டம் வடகரைதாழனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை-சாரதா தம்பதியரின் மகன் கண்ணப்பன், அரகண்டநல்லூர் அ.மே.நி.பள்ளியில் 10-ம் வகுப்பில் 430/500 மதிப்பெண்களும், +2 பொதுத்தர்வில் 921/1200 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது அண்ணன் தாமோதரனுக்கு 2006ல் சாதிசான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்தும் இவருக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை.

2. ரா.நிஷா. மரக்காணம் வட்டம் கீழ்அருங்குணம் கிராமத்தில் வசிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளி ராசேந்திரன்-நீலா தம்பதியரின் மகள் நிஷா எண்டியூர்; அ.மே.நி.பள்ளியில் 10-ம் வகுப்பில் 403/500 மதிப்பெண்களும், +2 பொதுத்தேர்வில் 786/1200 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 2012ல் இருந்து சாதிச்சான்று பெற முயற்சித்தும் இன்று வரையில் கிடைக்கப்பெறாததால் நிஷாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

3. ஆ.சசிகலா. திண்டிவனம் வட்டம் தணியல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்-சாந்தி தம்பதியரின் மூத்த மகள் சசிகலா வெள்ளிமேடுபேட்டை அ.மே.நி.பள்ளியில் 2015 ல் +2 பயின்று 662/1200 மதிப்பெண்களுடன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றும் சாதிச்சான்று வழங்கப்படாத காரணத்தால் கடந்த ஓராண்டாக மேற்படிப்பைத் தொடரமுடியவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக விண்ணப்பித்தும் இதுவரை இவருக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை.

4. இ.பவித்ரா. செஞ்சி வட்டம் ஈச்சூர் அருகே உள்ள அம்மா குளத்தில் வசிக்கும், கணவனை இழந்த மலர் என்பவரின் மூன்றாவது மகள் அப்பம்பட்டு கவரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மே.நி.பள்ளியில் பயின்று 10ம் வகுப்பில் 374/500, மதிப்பெண்களும் +2 பொதுத்தேர்வில் 598/1200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்தும் இவருக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை.

5. செ.சதீஷ் செஞ்சி வட்டம் கருங்குழி அருகே உள்ள சின்னகரம் கிராமத்தில் வசித்து வரும் க.செங்கேணி என்பவருக்கு 2004 ஆம் ஆண்டு அப்போதைய திண்டிவனம் சார் ஆட்சியர் அனில்மேஷ்ரம் சாதிச் சான்று வழங்கியுள்ளார். செங்கேணியின் மகன் சதீஷ் தற்போது செஞ்சி ராஜாதேசிங்கு அ.மே.நி.பள்ளியில் +2 பயின்றுள்ளார். இவருக்கு 2009 ல் இருந்து முயற்சித்தும் இதுவரை சாதிச்சான்று வழங்கப்படவில்லை.

இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை
புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு.

நண்பர்கள் தொடர்புகொண்டு உதவுங்கள்

9442292163 மாரி, ஆசிரியர். இவரை தொடர்பு கொள்ளவும். திருக்கோவிலூர் பகுதி குழந்தைகளுக்கு வழிகாட்டி

மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு!

ஈரோடு மாவட்ட மலையாளி என்ற பழங்குடியின மக்களை ‘மலையாளி கவுண்டர்’’ என்ற புதுப் பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மத்திய-மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெ.சண்முகம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

தமிழ்நாட்டில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன், மலையாளி கவுண்டர் ஆகிய பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தமிழக முதலமைச்சர் சார்பில் இதை வரவேற்று அறிக்கைகள் வெளிவந்தன.“மலையாளி” என்றபிரிவு தமிழக பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் – 25ல் உள்ளது. 1950ம் ஆண்டிலிருந்து இந்த பெயரில்தான் இவ்வின மக்கள் சான்றிதழ் பெற்று வருகின்றனர்.

பெயரை மாற்ற வேண்டுமென்று யாரும் கோராத நிலையில்தன்னிச்சையாக மத்தியஅரசு இவ்வாறு அறிவித்திருக்கிறதா? அல்லது மாநில அரசு மக்களின் கருத்தை அறியாமலே இத்தகைய ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியதா என்பதை தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1990ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட மலையாளிகளை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று பரிந்துரை அனுப்பப்பட்டது. மீண்டும் இம்மக்களின் வாழ்வியல் சூழல் குறித்து ஆய்வு செய்து2006ம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. எனவே, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்படுவதற்கு முன்பாக தாங்கள் அவசரமாக தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். “மலையாளி கவுண்டர்” என்பது புதிதாக ஒரு பிரிவினர் என்ற முறையில் சேர்ப்பதோ அல்லது ஏற்கனவே பட்டியலில் உள்ள “மலையாளி” என்பதை மலையாளி கவுண் டர் என்று பெயர் மாற்றுவதோ தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்.

“மலையாளி கவுண்டர்” என்ற பிரிவை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். “ஈரோடு மாவட்ட மலையாளி” விசயத்தில் மேலும் காலதாமதம் செய்வதற்கான எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. “ஈரோடு” என்று ஒரு வார்த்தை சேர்க்க 25 ஆண்டுகள் எடுத்துக்கொள் வதுயாராலும் நியாயப்படுத்த முடியாது என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.மேற்குறித்து இரண்டுபிரச்சனைகளின் மீது தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பவானி சாகர் தொகுதி முன்னாள் எம் எல் ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  பி. எல். சுந்தரமும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

pl sundaram 2

pl sundaram

வேட்பாளர் அறிமுகம்: பழங்குடிகளின் தோழர் பி. எல். சுந்தரம்!

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார் பி. எல். சுந்தரம். இவர் தற்சமயம் இந்தத் தொகுதியில் எம் எல் ஏவாக இருக்கிறார். பல வளர்ச்சிப் பணிகள் காரணமாக தொகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்ற இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்

சப்பே கொகலு என்ற பழங்குடியின கதைத் தொகுப்பின் ஆசிரியர், லட்சுமணன் ஓடியன் சொல்கிறார்:

ஒரு வார்டு கவுன்சிலரைக்கூட எளிதில் சந்திக்கமுடியாத தொகுதியில் ஒவ்வொருவீடாய் ஒவ்வொரு குடும்பமாய் ஒவ்வொரு மனிதராய் தேடிச்சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர் என்ற எல்லா பந்தாக்களையும் உடைத்து வீசிவிட்டு மக்களின் தோளோடு தோள்நின்று பணியாற்றியவர்.

எத்தனையோ பழங்குடிகளின் உயர்கல்விக்கு சத்தமில்லாமல் பின் நின்றவர் .

மற்ற எம் எல் ஏக்கள் விழிபிதுங்கி நின்றபோது வனச்சட்டம் 2006 ன் சரத்துகளை கையிலெடுத்துக்கொண்டு புலிகள் சரணாலயத்தை காரணம்காட்டி தடைபோட்ட வனத்துறையோடு கடுமையாகப் போராடி பழங்குடிகளுக்கு தொகுப்புவீடுகளை சாலைகளை எண்ணிலடங்காத திட்டங்களை சாத்தியப்படுத்தியவ்ர்.

திட்டமிட்ட சதியால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட மலையாளிப்பழங்குடிகளுக்கு பழங்குடி இனச்சன்று கிடைக்க தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்

மதம்மாறிய காரணத்தால் பழங்குடி இனச்சன்று பெறமுடியாமல் தவித்த ஆயிரத்தும் மேற்பட்ட தளமலை ஆதிவாசிகளுக்காக சமரசமின்றிப்போராடி சாதிச்சன்றை பெற்றுத்தந்தவர்

பல்லாயிரம் மாணவர்களுக்கு நேரடியாகச்சென்று வங்கியில் மல்லுக்கு நின்று கல்விக்கடன்களைப் பெற்றுத்தந்தவர்

இப்படிக் குறிப்பிட இன்னும் ஏராளம் இருக்கிறது

20 ஆண்டுகளுக்கு முன்பு பனையம்பள்ளியில் சந்திக்கும்போது எவ்வளவு அர்பணிப்போடு களப்பணியாற்றினாரோ இன்னும் அதே அர்பணிப்போடு களத்தில் இருப்பவர்

இன்று எளியமக்கள் முன்நடக்க தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்

எல்லாக் கொள்கை நிலைகளையும் கடந்து ,தேர்தலில் வெல்லவேண்டும் என்று நான் விரும்புபவர்களில் பவானிசாகர் சட்டமன்றத்தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பி எல் சுந்தரமும் ஒருவர்”

வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற மிளிர்கல் நாவலின் ஆசிரியரும் தற்சமயம் வெளியாகியிருக்கும் முகிலினி நாவலின் ஆசிரியருமான இரா. முருகவேள்:

“தோழர் பி.எல்.சுந்தரம் பவானி சாகர் சட்டமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்.

வீரப்பனைத் தேடிய அதிரடிப்படை நடத்திய கொடுமைகளுக்கு எதிராகப் போரடிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கும் மற்றவர்களுக்கும் நிலப்பட்டா வழங்கப்படக் காரணமாக இருந்தவர்.

அரசுநிதியுடன் தனியார் கல்லூரி என்ற திட்டத்துக்கு தோழர் மணி போன்ற பேராசிரியர்கள் நிபுணர்கள் உதவியுடன் இவர் காட்டிய எதிர்ப்பு சத்தியிலும் காங்கேயத்திலும் வேறு சில ஊர்களிலும் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்க அடித்தளமிட்டது.

புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்ட போது வனத்துறை சட்டத்துக்குப் புறம்பாக மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்த போது முதுமலையிலும் சத்தியில் இவரும் தோழர்களும் காட்டிய எதிர்ப்பின் காரணமாகவே அடக்குமுறைகள் குறைந்துள்ளன. தெங்குமராட்டா உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்படாமல் தப்பினர்.

ஏராளமான பழங்குடி மாணவர்கள் ஈராடு கல்லூரிகளில் பயில உதவியாக உள்ளது பழங்குடி மக்கள் சங்கம். துறை நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள், உள்ளூர் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் அற்புதமான குழு தோழர் பி.எல் சுந்தரம் தலைமையிலான குழு.

பி.எல். சுந்தரத்தின் வெற்றிக்கு முடிந்ததெல்லாம் செய்வோம் தோழர்களே”.

பி. எல். சுந்தரம்
பி. எல். சுந்தரம்

பத்திரிகையாளர் ஜீவா பாரதி  கருத்துகள் இவை:

பவானிசாகர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் காம்ரேட்!

2011-2016 ஐந்து ஆண்டுகால ஆட்சி முடியும் நேரம். 2011 அதிமுக கூட்டணியில் இருந்த சி‌பி‌ஐ-க்கு பவானிசாகர்(தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக முழுநேரமாக பணியாற்றிவந்த பி‌.எல். சுந்தரம் கட்சியின் முடிவின்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொகுதி மறு சீரமைப்பின் போது சத்தியமங்கலம் தொகுதி பவானிசாகர்(தனி) தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அத்தேர்தலில் மொத்தம் 1,46,377 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பி‌.எல். சுந்தரம் 82,890 வாக்குகளும், திமுகவின் சார்பில் போட்டியிட்ட திருமதி.லோகேஸ்வரி 63,487 வாக்குகளும் பெற்றனர். 19,403 வாக்குகள் வித்தியாசத்தில் சுந்தரம் வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற பின்னர் மற்ற எம்‌.எல்‌.ஏ.க்கள் போல தொகுதியை மறந்துவிடாமல், மக்களை நேரடியாக சந்திக்க தொகுதியிலுள்ள முக்கிய பகுதிகளில் அலுவலகம் அமைத்து (சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கிறது. பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் ஆகிய பகுதிகளில் வாடகை கட்டிடம் மூலம் மக்களை சந்தித்துவந்தார்) தினம் ஒரு அலுவலகம் சென்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகளைக் கேட்டு தீர்த்துவந்தார். தொகுதியில் மக்களின் பிரச்சனையை விரைவில் தீர்ப்பதற்காக கட்சியில் முழு நேரமாக செயல்பட்டு வந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமரவைத்தார்.

தொகுதி கிராம, மலைப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் 30-க் கும் மேற்பட்டவர்களை பகுதி நேர பணியாளர்களாக செயல்பட வைத்தார். இவரின் மாத சம்பளத்தை முழுமையாக கட்சிக்கே கொடுத்து ஆச்சர்யப்பட வைத்தார். இவர் எம்‌எல்‌ஏ ஆன புதிதில் ஒரு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கினார். எம்‌எல்‌ஏ ஆனவுடன் புது கார் வாங்கிவிட்டார் என்ற பேச்சுவந்தது(வங்கி கடன் மூலம் வாங்கிய கார் இன்று வரை அவரின் நண்பரின் பெயரில் தான் இருக்கிறது) . கார் வாங்கியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தொகுதியில் இரண்டு மலைப்பகுதிகள் இருக்கிறது. தினம் ஒரு பகுதி செல்லவேண்டும் என்றால் நிச்சயம் வண்டி வேண்டும்.

ஒருமுறை அவரிடம் பேசும்போது தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரோடு போட, கட்டிடங்கள் கட்ட என பல்வேறு பணிகளுக்காக மிச்சமாகும் (கமிஷன்) தொகையைப் பெற்றுக்கொண்டு தங்கள் செலவிற்கும், தொகுதி வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று கேட்டபோது, அப்படி வாங்கிய பணத்திற்கு பேரும் லஞ்சம்தான். கட்சி அதை ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி ஆச்சர்யப்பட வைத்தார். தொகுதியில் இருந்த இரண்டு ஆளும் கட்சி எம்‌எல்‌ஏக்களும் செய்துமுடிக்காத வேலையை செய்து முடித்திருக்கிறார்.

ஒவ்வொரு சட்டப் பேரவை கூட்டத் தொடரின்போதும் சொகுசு காரில் எம்‌.எல்.‌ஏ.க்கள் வந்து இறங்குவார்கள். இவர் அரசு இயக்கும் பேருந்தில்தான் சென்றுவந்தார். இன்னும் நிறைய இருக்கிறது இவரைப் பற்றி சொல்ல. ஆனால் இது போதும்தான். ஐந்து ஆண்டுகள் செய்த வேலையை பட்டியல் போட்டு இருக்கிறார் பி‌எல் சுந்தரம். மக்கள் நலக் கூட்டணி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கிறார் இவர். இவரை வெற்றி பெற வைக்க களத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் காம்ரேட்கள்.
(தொகுதிக்காக சட்ட மன்றத்தில் எழுப்பட்ட கேள்விகள்,பேசப்பட்ட பிரச்சனைகள் ,நடத்தப்பட்ட போராட்டங்கள்,செய்யப்பட்ட வேலைகள் என பட்டியல் போட்டு இருக்கிறார்)

வாக்களிபோம் ! வெற்றி பெற செய்வோம்!”

பி. எல். சுந்தரத்தின் முகநூல் பக்கம்: PL Sundaram Mla.

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பழங்குடிகளை திரட்டி போராடிய செயல்பாட்டாளர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களை வேட்டையாடும் அரசு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வருபவருமான சோனி சூரி, மைவீச்சுக்கு ஆளானார்.

சத்திஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டம் கோண்ட் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள வனங்களை நம்பியே இவர்களுடை வாழ்க்கை இருக்கிறது. இந்நிலையில் வனங்களில் உள்ள இயற்கை வளங்களை (கனிம வளங்கள்) சுரண்டும் வகையில் இந்திய அரசு, அங்கு தனியார் சுரங்கங்களை(அதானி குழுமத்துக்கு) அனுமதித்து வருகிறது. இதற்கு அங்குள்ள பழங்குடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்குடிகளை ஒடுக்கும் வகையில் இந்திய இராணுவம் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. பழங்குடிகளை ஒருங்கிணைத்து மாவோயிஸ்ட்டுகள் ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் பாலியல் வன்முறைகளையும் போலி எண்கவுண்டர்களை நடத்திக் கொண்டிருக்கிறது பாதுகாப்புப் படை.

பாதுகாப்புப் படையின் அத்துமீறல்களை கண்காணிக்கவும் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலர் இந்தப் பகுதியில் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சோனி சூரி.

சோனி சூரி மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன், உள்ளூர் நிர்வாகத்தால் மிரட்டப்பட்டிருக்கிறார். சோனி சூரி வசித்த வீடு, ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதாகவும் அதை இடிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார் சோனி சூரி. அதே நேரத்தில் பழங்குடிகளுக்காக செயல்பட்டு வந்த சட்ட  உதவி மையம் வழக்கறிஞர்களை வெளியேறுமாறு மிரட்டப்பட்டுள்ளனர். பெலா பாட்டியா என்ற செயல்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார். மாலினி சுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஸ்டரில் இருந்து வெளியேற தயாராகிக் கொண்டிருந்த சட்ட உதவி மைய வழக்கறிஞரை சந்திக்க சனிக்கிழமை இரவு சென்ற சோனி சூரி மீது மை வீசப்பட்டுள்ளது. சக செயல்பாட்டாளருடன் பைக்கில் சென்ற அவரை வழிமறித்து மூன்று பேர் மையை வீசியிருக்கின்றனர். இந்த மையில் வேதிப் பொருள் கலந்து வீசியிருக்கிறார்கள். இதனால் எரிவது போன்ற அவஸ்தைக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சோனி.

பாஸ்டர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு எதிராக அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவருவது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுவருகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…

Anoop Manav

கிரண் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பேராசிரியர்களோ, இணை பேராசிரியர்களோ  ஒருவர் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, இதர பிற்படுத்தப்பட்ட இனத்தில் இருந்து 29 துணை பேராசியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதும் கண்டறிய பட்டுள்ளது. பல்கலைகழகத்தில்  மொத்தமுள்ள 612  பேராசிரியர்களில், 29 பேர் மட்டுமே, அதுவும் துணை பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள் என்றால், அந்த பணிக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மட்டுமே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிராமணியம் சூழ்ந்துள்ள பல்கலைகழக வளாகத்தில், பொதுபிரிவு வேலை வாய்ப்புகளில், இதர பிற்படுத்த இனத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர்கள் கூட பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

 12670241_1276123445736918_544924428401166636_n.jpg
கட்டாய இட ஒதுக்கீடு காரணமாக மட்டும், தலித் மற்றும் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ஒன்றிரண்டு பேராசிரியர்களை ஜவஹர்லால் நேரு பல்கலை பணிக்கு அமர்த்தி இருக்கிறது. அப்படியும், வகுப்பரைகளுக்கும், தலித் ஆதிவாசி பேராசிரியர்களுக்கும் வெகு தூரமே. அது போன்ற பணிகளில் மட்டுமே இருக்குமாறும், பார்த்து கொள்ளப்படுகிறார்கள். அதனால்தான் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பல மாணவர்கள், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பேராசிரியர்கள் / துணை பேராசிரியர்கள் பணிகளில் இதர பிற்படுத்த இன மக்களை நியமிக்கும் வகையில், இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் திட்டவட்டமான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் பிராமணியம் சூழ்ந்துள்ள பல்கலைகழக பல்கலை வளாகங்களில்,ஒடுக்கப்பட்ட இன மக்கள் முன்னேற முடியும்.
*(This RTI was filed by Kiran)