“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு’ அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ்.

கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் எனக்குச் சொந்த ஊர். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி படித்து இருந்தேன். 1974இல் சென்னைக்கு வேலைதேடி வந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆறுமாத காலம் எரிவாயு நிரப்பும் ஒப்பந்தப் பணியாளராகப் பணி புரிந்தேன். பின்பு 1975ஆம் ஆண்டு டியுசிஎஸ் என்கிற திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகச் சேர்ந்தேன்.

இயல்பிலேயே இருந்த தன்னூக்கம் என்னை தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடச் செய்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் 25 தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து சென்னை நகரம் முழுவதும் சைக்கிளிலேயே நான்கு நாட்கள் பயணித்து எல்லாக் கடைகளுக்கும் போய் தொழிலாளர் பிரச்சினையைப் பேசினோம். அதைத் தொடர்ந்து நடந்த சங்கப் பேரவையில் புதியவர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். பூ.சி.பாலசுப்பிரமணியம் செயலர் ஆனார். 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தொழிற்சங்க அனுபவங்களைச் சொல்லுங்களேன்…

1981ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்துநாள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் ஒன்றை தொடங்கினோம். டியுசிஎஸ் பொறுப்பில் ரேஷன் கடை, மண்ணெண்ணெய், மளிகை, எரிவாயு விநியோகம் என சென்னையில் இருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. புதிய பணியாளர்களை நியமிக்க அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். காவல்துறையைக் கொண்டு எங்கள் போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க அரசு முடிவெடுத்திருந்தது.

அப்போது கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக இருந்த மரியாதைக்குரிய பிரகாசம் அவர்களும் தொழிலாளர் துறை துணை ஆணையாளராக இருந்த செல்லத்துரை அவர்களும் தந்த ஆலோசனையின்படி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டு நாங்கள் பணிக்குத் திரும்பிவிட்டோம்.

அடையாளம் தெரியாதவர்களை வைத்து ரேஷன் கடைகளை சூறையாடும் நிலைமையெல்லாம் இருப்பதாக உணர்ந்ததால் அந்தப் போராட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தோம். மாதவரத்தைச் சார்ந்த சி.கெ.மாதவன் எங்கள் சங்கத்தின் தலைவர். சங்கம் தொடங்கிய 1952ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளிகள்தான் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்கள்.

1978ஆம் ஆண்டுதான் வெளியிலிருந்து சி.கெ.மாதவன் அவர்களை தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்தோம்.போராட்டத்தை ஒத்திவைத்து பணிக்கு செல்ல வேண்டிய நிலை குறித்து அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

எங்கள் போராட்டம் முடிந்த ஆறுமாதத்திற்குப் பிறகு மதுரையில் உள்ள பால்பண்ணைத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாதவரம் பால்பண்ணைத் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். இரவோடு இரவாக 1200 பேரை வேலைநீக்கம் செய்து காலையில் புதிய ஆட்களை பணிக்கமர்த்தினார்.

எனவே, டியுசிஎஸ்ஸிலும் ஆவினிலும் தொடர்ந்து கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. நாங்கள் போடும் கோரிக்கை நோட்டீசை அவர்கள் பால்பூத் முன்பு ஒட்டுவார்கள். அவர்கள் போடும் நோட்டீசை நாங்கள் டியுசிஎஸ் கடைகள் முன்பு ஒட்டுவோம். இந்தக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை.

இந்த இரண்டு சங்கங்களுக்கும் மாதவன்தான் தலைவர் என்பதால், அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்காகவே 1200 தொழிலாளர்களை எம்ஜிஆர் பணிநீக்கம் செய்தார். சிகெஎம் தலைமையில் ஊர்வலம் என்றால் ஆயுதம் தாங்கிய போலீஸ் பந்தோபஸ்துக்கு வரும். அவ்வளவு வலிமையாய் தொழிற்சங்கங்கள் செயல்பட்ட காலம் அது.

உங்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்களாமே!

அரசுத் துறைகளிலேயே ஊழல் மலிந்த துறை என்றால் அது கூட்டுறவுதான்.ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும். கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1987ல் போராடி வந்தோம். அப்போது டியுசிஎஸ் சங்கத்தின் தனி அலுவலராக இருந்த கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் திரு. ஆர்.எஸ்.நடராஜன் அவர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர் பெரிய ஊழல் அதிகாரி. ஒரு பொய்யான குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்வதற்கு காவல்துறை மூலம் முயற்சி செய்தார்.

பின்பு சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே நான் உட்பட ருக்மாங்கதன், வேணு என சங்க முன்னணித் தோழர்கள் 15 பேரை சட்ட விதிமுறைகளை மீறி வேலைநீக்கம் (டிஸ்மிஸ்) செய்தார். அப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

தேர்தல் முடிந்து 1989ல் திமுக அரசு பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவுத் துறையில் அவர் செய்த ஊழலை விசாரிக்கச் சொல்லி கலைஞரிடம் மனு கொடுத்தோம்.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். ஓய்வு பெறும் நாளன்று அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நான்கைந்து வருடங்களில் இறந்தும் விட்டார். வழக்கு நிலுவையிலேயே இருந்ததால், இறக்கும்வரை ஓய்வூதியப் பலன்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக ஊழல் அதிகாரிகள் நேர்மையான தொழிற்சங்கங்களை விரும்புவதில்லை என்பதுதான் எனது அனுபவம்.

கூட்டுறவு அமைப்பை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

நுகர்வோர், பால், விவசாயி, மீன், நெசவாளி என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திமுக, அதிமுக ஆட்சியில் தனி அலுவலர்களை நியமித்து கூட்டுறவு அமைப்பையே நாசப்படுத்தி விட்டார்கள். உண்மையான பயனாளிகளை மட்டுமே கூட்டுறவு அமைப்புகளில் சேர்க்க வேண்டும். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மாதிரிக் கூட்டுறவுச் சட்டத்தை அமலாக்க வேண்டும். அதன்படி கூட்டுறவு அமைப்புகளில் ஏற்படும் நட்டத்திற்கு நிர்வாகக்குழு இயக்குநர்களையும் பொறுப்பேற்கச் செய்யமுடியும்.

உற்பத்தியாகும் இடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு மலிவாக விற்பனை செய்யவேண்டும். தும்கூரில் புளி வாங்கினார்கள். குல்பர்காவில் துவரம் பருப்பு வாங்கினார்கள். நெல்லூரில் அரிசி வாங்கினார்கள். இப்போது இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வியாபாரிகளிடம் பொருளை வாங்குகிறார்கள். இதனால் நுகர்வோருக்கும் பலனில்லை; விவசாயிகளுக்கும் பலனில்லை; கூட்டுறவு அமைப்புகளுக்கும் பயனில்லை. கூட்டுறவின் நோக்கமே சிதைந்து கொண்டிருக்கிறது.

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா

கூட்டுறவுத் துறையில் ஊழியராக இருந்த உங்களுக்கு பத்திரிகைத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

தொழிற்சங்கப் பணிகளில் முனைப்பாகச் செயலாற்றி வந்த்தால் தினமணியில் பணியாற்றி வந்த சந்தான கிருஷ்ணன், சுகதேவ், இராயப்பா போன்ற பத்திரிகையாளர்களின் நட்பு எனக்கு ஏற்பட்டது. எங்கள் தொழிற்சங்கம் சார்பில் ‘போரணி’, ‘போர்க்களம்’, ‘போர்க்குரல்’ என்கிற பத்திரிகைகளை அவ்வப்போது நடத்தி வந்தோம். திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க.திருநாவுக்கரசு அவர்களிடமிருந்து (இவர் டியுசிஎஸ்சின் முன்னாள் பணியாளர்) ‘நக்கீரன்’ இதழுக்கான உரிமையை வாங்கி 1980ல் நடத்தினோம். அதற்கு க.சுப்பு அவர்கள் ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டார். நக்கீரன் இதழை புலனாய்வு இதழாகக் கொண்டுவந்தோம்.

திமுக சார்பாக வில்லிவாக்கம் தொகுதியில் நின்று அவர் தோற்கடிக்கப்பட்டிருந்த சமயம் அது. அந்தவகையில் முதல் முதலாக புலனாய்வு பத்திரிகையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். மாதம் இருமுறை இதழாக ஆறு மாதங்கள் கொண்டுவந்து விட்டோம். கட்சி சாராமல் நடத்தினோம். அதிமுகவை எதிர்த்து காங்கிரசை எதிர்த்து திமுகவை விமர்சித்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.

‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சொல்லி திமுக காங்கிரசோடு ஓரணியில் இருந்த நேரம் க.சுப்பு திமுகவில் இருந்த காரணத்தால் அவரால் கட்சியின் நெருக்கடியைத் தாங்க முடியவில்லை. சுதந்திரமாக பத்திரிகையை நடத்தவும் முடியவில்லை. ஆனால் பத்திரிகையை எங்களிடம் விட்டுக்கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் அவரோடு சேர்ந்து இயங்க எங்களால் முடியவில்லை. எனவே ‘நக்கீரன்’ இதழை அவரிடம் கொடுத்துவிட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.

அதோடு உங்கள் முயற்சியை கைவிட்டு விட்டீர்களா?

இல்லை. நக்கீரனுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அடுத்த பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை வந்தது. எனவே இளவேனில், க.சந்தானகிருஷ்ணன், கேரள மணி, வேணு (டியுசிஎஸ்), மீனாட்சிசுந்தரம் இவர்களோடு சேர்ந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பொதுநலத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.

அப்போது பத்திரிகையாளர் இரா.ஜவகர் அவர்களிடம் ‘வசந்தம் வருகிறது’ என்ற பத்திரிகை(title) இருந்தது. அதை வாங்கி ‘வசந்தம்’ என்ற பெயரில் நடத்தினோம். ‘வருகிறது’ என்பதை சிறிய எழுத்துக்களில் போட்டுவிடுவோம்.சென்னையிலேயே 4000 பிரதிகள் விற்பனை ஆகும். அப்போது வடசென்னை, தென்சென்னை என இரண்டு முகவர்கள்தான் இருந்தார்கள். வாசகர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆசிரியராக தாம்பரம் வழக்கறிஞர் எஸ்.சி.சிவாஜி இருந்தார்.

எங்கள் வளர்ச்சியைப் பார்த்து, நாங்கள் கணக்கு வைத்திருந்த கனரா வங்கியின் மேலாளர், இதனை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றினால் வங்கிக் கடன் தருவதாகச் சொன்னார். எனவே ‘டான் பப்ளிகேஷன்ஸ்’ (இரஷ்யா – தான் நதி) என்று கம்பெனியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் செய்தோம். ஆனால் இதில் ஆசிரியராக இருந்த சிவாஜிக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் திமுக எம்பியாக இருந்த கம்பம் நடராஜன் இறந்ததையொட்டி நடந்த பெரியகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியிலிருந்த அதிமுக தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் செய்தது. தெருவெங்கும் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டன;பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. எனவே ‘இனி ஒரு எம்.பி எப்போது சாவார்’ என தலையங்கம் எழுதியிருந்தோம். காவல்துறை நெருக்கடி தந்தது. மேலும் சண்முகம் செட்டியார் எனச் சொல்லிக்கொண்டு ‘வசந்தம்’ என்கிற பெயர் தனக்கானது என சொல்லிக்கொண்டு ஒருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வளவுதான்! அத்தோடு அந்த இதழும் நின்று போனது.

காக்கைச் சிறகினிலே இதழைத் தொடங்கிய வரலாற்றைச் சொல்லுங்களேன்!

2010ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது எங்கள் சங்கத்திற்கு ஏ.எம்.கோபு தலைவராக இருந்தார். அவர் ஏஐடியுசி அலுவலகத்தில் வந்து நான் பணிபுரிய வேண்டும் என்று அழைத்தார். இதற்கிடையில் நண்பர்கள் கூடுமிடம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக திருவல்லிக்கேணியில் ஒரு அறை எடுத்தோம். மாலைப் பொழுதுகளும் விடுமுறை நாட்களிலும் நிறையப் பேசுவோம் விவாதிப்போம்.

வைகறை, க.சந்திரசேகரன், இரா.எட்வின் போன்ற நண்பர்களுடன் இணைந்து காக்கைச் சிறகினிலே இதழைக் கொண்டுவந்தோம். 2011 அக்டோபரில் முதல் இதழ் வெளியானது. மறு ஆண்டே ‘கரிசல் விருது’ கி.ராஜநாராயணன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பல விருதுகள். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சுதேசிமித்திரன் தமிழ் இதழ் விருது வழங்கி மகிழ்வித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு!

நக்கீரன்

நக்கீரன்

வேணு சீனிவாசன் முன் ஜாமீன் பெற்றதை விட அவருக்கு ஆதரவாகக் குருமூர்த்திப் பதறுவதுதான் நிறையச் சிந்திக்க வைக்கிறது. கோவில்களை மீட்பது என்பது சங்பரிவாரின் வெகுநாள் கனவு. நாத்திகர்கள் அறங்காவலர்களாக இருப்பதால்தான் கோவில்களின் களவு நடக்கிறது என்பது அவர்களுடைய வெகுநாள் கூச்சல். இப்போது ஆத்திகரான வேணு சீனிவாசனின் நிர்வாகத்தின் கீழ் நடந்துள்ள களவால் அவர்களுக்குத் தொண்டைக் கட்டிவிட்டது. திருடுவது என்று முடிவு செய்துவிட்டால் நாத்திக ஆத்திக வேறுபாடு, சைவ வைணவ வேறுபாடெல்லாம் கிடையாது.

மோட்ச தலமான காசி விஸ்வநாதர் கோவிலில் 1983-ல் 2 கிலோ தங்கம் திருடியதற்காக அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டது; 1993-ல் தமிழகச் சிதம்பரம் நடராஜர் கோவில் வைர நகை திருட்டில் திருடியவர் 300 தீட்சிதர்களுக்குள்தான் இருக்கிறார் என்று கைலாசநாத சங்கரர் தீட்சிதர் என்பவரே தெரிவித்தது; 1995-ல் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி நகை திருட்டு தொடர்பாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டது ஆகியவை சைவ கோவில் திருட்டுகளுக்குச் சில மாதிரிகள்.

தங்க நகைக்குப் பதிலாக முலாம் பூசப்பட்ட நகை வைக்கப்பட்ட அழகர்கோவில் திருட்டு (1994), திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் கிருஷ்ணன் நம்பூதிரி கைது (1995), தற்போது திருவரங்கம் கோவில் போன்றவை வைணவ கோயில் மாதிரிகள். பட்டியல் வெகு நீளம் என்பதால் இங்கே மாதிரிகளோடு நிறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் நடந்த தொடர் திருட்டுக்களுக்காக 1960லேயே சர். சி. பி இராமசாமி அய்யர் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் கோயில் பணத்தை எடுத்து பங்கு சந்தையில் பயன்படுத்திய அர்ச்சகர்கள் பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் ஆத்திகர்கள்தானே? நிலவுடையாளர்களின் அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்டதே கோயில் என்கிற சொத்துடைமை நிறுவனம். எளிய மக்களின் நாட்டார் கடவுள்களுக்கு இதுபோன்ற சொத்துகள் கிடையாது என்பதால் அவை நிறுவனம் ஆகவில்லை.

அந்தக் காலத்திலேயே கோயில் சார்ந்த பார்ப்பனர்களின் களவுக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. கோயிலில் செய்த தவறுக்காகப் பார்ப்பனர் ஒருவருக்கு 20 காசு தண்டம் விதிக்கப்பட்டது என்கிறது ஊட்டத்தூர் விக்கிரமச் சோழன் 13 ஆம் ஆட்சியாண்டு கி.பி 1131 கல்வெட்டு. இதே ஊட்டத்தூர் கோயில் இறைவியின் நகைகளைப் பார்ப்பனர் ஒருவர் திருடியதற்குச் சான்றாக 1199-ல் பதியப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இருக்கிறது. மூன்றாம் இராசராசனின் 23ஆம் ஆட்சியாண்டு கி.பி 1239 சிவபுர கல்வெட்டில் இரு சிவ பார்ப்பனர்கள் கோயில் பணம் நகைகளைத் திருடி காமக்கிழத்தியிடம் தந்ததால் அதை விசாரிக்கச் சென்ற அரச வீரர்களையும் அடித்த செய்தியை தெரிவிக்கிறது. இவையும் சில மாதிரிகளே.

அந்தநாள் முதல் இந்தநாள் வரை காட்சி மாறவில்லை. நிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. கோயில்களை நடுவண் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இவர்களது அண்மை காலக் குரல். இந்நேரத்தில்தான் தன் பொறுப்பில் கோயில் இருந்தபோது கணக்கு வழக்குகளைத் துல்லியமாக வைத்திருந்த அந்த ஈரோட்டு கிழவர் நினைவுக்கு வந்து தொலைகிறார்.

நக்கீரன், எழுத்தாளர்.

தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே!

நக்கீரன்

நக்கீரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. காவிரியின் மீதான தமிழகத்தின் பல உரிமைகள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. வழக்கத்துக்கு மாறாக நிலத்தடி நீரை கணக்கிட்டு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பு அமுங்கி போய்விட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தையாவது நடைமுறைக்குக் கொண்டு வா என்கிற அளவுக்கு நாம் சுருக்கப்பட்டு விட்டோம். இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. உச்சநீதிமன்றம் சவ்வு மிட்டாய் தின்று கொண்டிருக்கிறது.

ஆழிப்பேரலைக்குப் பின்னர் நமக்கு ‘சுனாமி’ என்ற சொல் அறிமுகமானது போல் இன்று ‘ஸ்கீம்’ எனும் சொல் புழக்கத்துக்கு வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘ஒரு கண்காணிப்புக் குழு’ என்று கர்நாடகம் பொருள் கொள்கிறது. தமிழ்நாடோ ‘இல்லை, அது காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்று அடித்துச் சொல்கிறது. பாவம் தற்குறியான நடுவண் அரசோ அதற்கு என்ன பொருள் என்று உச்சநீதிமன்றத்திடமே விளக்கம் கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இனிதான் அகராதியைத் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அது அகப்பட எத்தனை நாளாகுமோ தெரியாது. அதுவரை காவிரிப்படுகை உழவர்களின் எதிர்காலமும், தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரமும் இந்த ஒற்றைச் சொல்லில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

Scheme என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்றோ அல்லது அது ஒரு அலுவல் சொல் மட்டுமே என்று நம்புவதற்கு முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கீம் என்றால் அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கும் என்று உடனே ஏன் உறுதிப்பட நீதிமன்றத்தால் கூற முடியவில்லை என்பதில்தான் அய்யம் தொடங்குகிறது. இதற்கு விளக்கம் கேட்டு நடுவண் அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கிறது. அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இப்படியான ஒற்றைச் சொல் அரசியல் ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல.

1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு அன்றைய ஜவகர்லால் நேரு அரசினால் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அரசு அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி ஒன்று வழங்கப்பட்டது. அதை ஆங்கிலத்தில், ‘English may continue as a official language as long as non-Hindi speaking people want it’ என்று குறிப்பிட்டனர். ஆனால் இதிலுள்ள may என்கிற சொல்லுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புத் தொடங்கியது. இலக்கண ரீதியாக may அல்லது will சரியான சொல்லே. ஆனால் may என்னும்போது இருந்தாலும் இருக்கலாம் அல்லது இல்லை என்றாலும் இருக்கலாம் என்கிற தொனி வந்துவிடுகிறது. எனவே அந்த may என்கிற சொல்லை எடுத்துவிட்டு shall என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுப்பட்டது. ஏனெனில் அதற்குக் கட்டாயமாக என்கிற பொருள் வந்துவிடுகிறது.

இந்த முன்மாதிரியை வைத்து பார்க்கும் போது ’ஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டபட்டவரும், தற்போது எதிர்கட்சிகளால் பதவி நீக்கம் கோரி நாடாளுமன்றத்தில் ’இம்பீச்மெண்ட்’ கொண்டு வரப்படவிருக்கும் ஒரு நீதிபதியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் இச்சொல் இடம் பெற்றிருக்கிறது. Scheme என்கிற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் ‘திட்டம்’ என்று பொருள் கூறும் அதேவேளை ’சூழ்ச்சிமுறை’ என்றும் பொருள் கூறுகிறது.

இதில் எந்தப் பொருளை நாம் எடுத்துக் கொள்வது?

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

போபால் நச்சு வாயு கசிவிலிருந்து ஹோமப் புகை மனிதர்களை காப்பாற்றியதா?

நக்கீரன்

நக்கீரன்

புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை. அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட அனைத்து புகைகளுக்கும் எதிராகச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஓர் ஆன்மீகச் சடங்கு அறிவியல் கருத்தாக திரித்துச் சொல்லப்படுகிறது. ஹோமத்தில் இடப்படும் சமித்துகளில் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால் அப்புகை உடலுக்கு நன்மையைத் தருமாம். அப்படியானால் கணபதி ஹோமம் நடைபெறும் ஒரு வீட்டின் கூடத்தில் புகை நிறையும்போது நன்மை தரும் அப்புகையைச் சுவாசிக்காமல் ஏன் அவ்விடத்தை விட்டு அகன்றுச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த போலி அறிவியலுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒரு வரலாற்று நிகழ்வையும் இட்டுக்கட்டியுள்ளனர். இதைக் கேட்கின்ற பக்தர்களும் யோசிக்கும் திறனிழந்து இந்தப் போலி அறிவியலை வியந்து தம் பங்குக்கு அதை நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள். அந்தச் செய்தி இதுதான்.

போபால் நச்சுக்காற்றுக் கசிந்தபோது போபால் நகரத்தின் ஓரிடத்தில் அதிகாலையில் புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்ததாம். அப்போது ஹோமத்தில் இருந்து எழுந்த புகை அவ்வீடு முழுக்க நிரம்பியிருந்ததாம். அதனால் அந்த நேரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கிளம்பிய நச்சுக்காற்று அங்கு நுழைய முடியாமல் விலகி சென்றுவிட்டதாம். இதனால் அவ்வீட்டில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்து விட்டார்களாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் ஹோமம் என்பது எவ்வளவு நன்மை என்று பரப்புரை நடைப்பெறுகிறது.


Photo by David Davies on Visualhunt / CC BY-SA

இந்தத் திரைக்கதை வசனத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று ஊகிப்பதில் நமக்குச் சிரமம் இருக்காது. அடுத்தமுறை அணுஉலையில் கசிவு ஏற்படும்போது இந்த ஆன்மீக அறிவியல் கூட்டத்தை அனுப்பி ஹோமம் வளர்க்க சொல்லலாம். இது போபால் நச்சுக்காற்று நிகழ்வைக் குறித்துக் கொஞ்சமும் அடிப்படை அறிவற்றுப் புனையப்பட்ட கட்டுக்கதை. நச்சுக்காற்றுக் கசிந்தபின் நகரமே பீதியின் பிடியில் அகப்பட்டு அலைக்கழிந்து கொண்டிருந்தது. வீட்டு விலங்குகள் அலறுகின்றன. பறவைகள் பதறிப் பறக்கின்றன. குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என ஒட்டுமொத்த மனிதகுலமும் கதறிக் கண்ணீர்விட்டு திக்குத் தெரியாது ஓடினர். அப்படிப்பட்ட நேரத்தில் சாவகாசமாகத் தன் புதுமனைபுகு விழாவை நடத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் யார் எனத் தெரியவில்லை.

இந்த ஹோமத்தின் பெருமைக் குறித்து என்னிடமே ஒருவர் நேரடியாகப் பீற்றினார். வலிய வந்து வலையில் சிக்கியவரைச் சும்மா விடுவேனா? சில கேள்விகள் கேட்டேன். “புதுமனை குடிப்போகும் நேரம் எது?”

“பிரம்ம முகூர்த்தம்”

“அப்படியென்றால்…?”

“அதிகாலை நாலரையில் இருந்து ஆறு மணி வரை”

“போபால் நச்சுக்காற்று கசிந்த நேரம் எது தெரியுமா?”

“தெரியாது”

“பரவாயில்லை. நானே சொல்கிறேன். நச்சுக்காற்று கசிந்ததை அறிவிக்கும் ஆலையின் அபாயச்சங்கு ஒலித்த நேரம் நள்ளிரவு 12:30. அதற்கு முன்னரே நச்சுக்காற்று கசிய தொடங்கிவிட்டது. ஹோமம் நடந்ததாக நீங்கள் சொல்லும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து அடங்கிவிட்ட நேரம். பின் எப்படி நீங்கள் சொல்வது பொருந்தும்?”

அவர் திணறி முழிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. போபால் நச்சுக்காற்றால் அனைவரும் இறக்கவில்லை. நச்சுக்காற்று வீசிய திசையில் உடல்நலப் பாதிப்போடு உயிர் பிழைத்தவர்களும் இருந்தார்கள். சில இடங்களில் நஞ்சின் அளவு குறைந்திருந்தது. அதற்குக் காரணம் ஹோமப் புகை அல்ல, புங்கை மரங்கள்.

போபாலில் மீதைல் ஐசோ சயனைட் நச்சுக்காற்று வெளியேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த புங்கை மரங்களும் வேப்ப மரங்களும் இந்த நச்சுக்காற்றை உண்டு, இலையுதிர்த்து மொட்டையாகின. இதே இடத்திலிருந்த மலைவேம்பு, மா, விளா, வில்வ மரங்களில் எந்த மாறுதலும் இல்லை. அதாவது நச்சுக்காற்றை உட்கொண்டு அதைக் குறைக்கும் திறன் இம்மரங்களுக்கு ஏனோ இல்லை என அறிஞர் பி.எஸ்.மணி அவர்கள் ‘சர்வே ஆஃ போபால் இந்தியா’ அறிக்கையை முன் வைத்து விளக்குகிறார்.

இதற்காகத்தான் ஒரு அபாயகரமான தொழிற்சாலையை அமைக்கும்போது அதனைச் சுற்றிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மரத்துத்தும் ஒரு திறன் இருக்கிறது. இதுபோல் எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் வகை மரங்களுக்குக் கந்தக டை ஆக்சைடை தன் இலைகளில் படிய வைத்துக்கொள்ளும் திறன் உண்டு. ஆனாலும் பேரிடர் நிகழும்போது அது இம்மரங்களின் தாங்கு திறனையும் அவை தாண்டிவிடும் என்பதே உண்மை.

இப்படிப் புங்கை மரத்துக்குக் கிடைக்க வேண்டிய புகழை, சில புளுகு மூட்டைகள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். எனவே சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, இதுபோன்ற புளுகு மதவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் சூழலியலாளர்களுக்கு இருக்கிறது.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு நெடிய உறக்கத்துக்குப் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு பாதிப்பு பற்றி ஆராய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை பலி காத்திருக்கிறதோ!

குறுவை சாகுபடிக்கான நீரை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து விடுவது வழக்கம். ஒருவேளை இது தள்ளிப்போய் ஜூன் 20க்கு பிறகு திறக்கப்பட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் குறுவை அறுவடையில் ஒரு விழுக்காடு குறையும் என்பது உழவர்களின் பட்டறிவு. குறுவை ஏற்கனவே கனவாக மாறிய நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பிய சம்பா சாகுபடியும் இந்தாண்டில் காலி. மேட்டூர் நீர் இல்லை, பருவமழை இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்கிற நிலை. இனி உழவர்களின் எதிர்காலம் என்ன? இழப்பீட்டு தொகையும், காப்பீட்டு தொகையும் இந்தக் கார்ப்பரேட் ஆட்சி காலத்தில் இனி எத்தனை காலத்துக்குத் தொடரும்?

காவிரி நீர் கிடைக்காமல் போனதின் அரசியல் காரணங்கள் ஒருபுறமிருக்க, இந்நிலைமைக்கான சூழலியல் காரணங்களையும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இவை நம் முன்னோர்கள் அறிந்த செய்திதான். ஆனால் நாம் அதைக் கைப்பற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். காவிரிப்படுகை வேளாண்மை பொய்த்துப் போவதற்கு மொத்தம் மூன்று காரணிகள் உள்ளன. முதலாவது மேட்டூர் அணையில் நீர் இல்லாமை, இரண்டாவது பருவமழை பொய்த்தல், மூன்றாவது நிலத்தடி நீர் குறைதல் அல்லது உப்பாதல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இம்மூன்றுமே சூழலோடு தொடர்புள்ளவை என்பதை அறியலாம்.

முதலில் காவிரிப்படுகை மண்ணின் தன்மையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும். குறுவைக்கு மேட்டூர் அணை திறந்த 15 நாளில் முன்பு இப்படுகையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும். வயலில் பாய்ச்சப்படும் நீர் வழியாக இது உயராது. மாறாக வாய்க்கால்கள் வழியாகத்தான் நீர் இறங்கி நிலத்தடி நீர் உயரும். வயலின் மேலேயுள்ள உழுத மண்ணுக்கும், அடியிலுள்ள ஊற்று மண்ணுக்கும் இடையே களிமண் ஒரு தகடு போல எங்கும் பரவியுள்ளது. இதை ஊடுருவி அவ்வளவு விரைவாக நீர் கீழே இறங்க முடியாது. ஆனால் படுகை மாவட்டங்களில் குருதி நாளங்களைப் போல எங்கும் நெருக்கமாகப் பின்னி பரவியுள்ள வாய்க்கால்களின் அடிப்பகுதி மணற்பாங்காக இருப்பதால் நீர் கீழே இறங்கும். இதற்கும் நிலத்தடியே உள்ள ஊற்றுமண் படுகைக்கும் தொடர்பு இருந்தது. எனவே நிலத்தடி நீர்மட்டம் 15 நாளில் உயர்ந்து இந்நிலமெங்கும் நிரம்பும்.

1970களின் தொடக்கத்தில் குறுவைக் காலத்தில் மேட்டூர் அணை திறந்தபின் நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை காவிரிப்படுகைப் பகுதி பாசனத்துக்கு அனுப்பப்பட்ட நீரின் அளவு 20,000 கோடி கன அடியாகும். இதில் அய்.நா. வல்லுநர்களின் அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கணக்கிட்ட போது பயிர்களின் தேவைக்காக மட்டும் வயல்களில் கட்ட வேண்டிய இன்றியமையாத நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதி 9000 கோடி கன அடி நீர் வாய்க்கால் படுகைகளின் வழி ஊற்றுமண் பகுதிக்கு இறங்கி நிலத்தடி நீராக மாறிவிடும் என்று விவரித்துள்ளார் பொதுப்பணித்துறை மேனாள் தலைமைப் பொறியாளராக இருந்த பா. நமசிவாயம் அவர்கள்.

ஆனால் இன்று நீர்வரத்தும் இல்லை. வாய்க்கால்களில் மணலும் இல்லை. ஆயினும் நிலத்தடி நீர் ஊறுவதற்கு இயற்கை இன்னும் தம் பங்கை அளித்து வருகிறது. குறுவைக்கு மேட்டூர் நீர் கிடைக்காத நிலையில் வசதியுள்ள உழவர்கள் முழுக்க நிலத்தடி நீரை பயன்படுத்த, வடகிழக்கு பருவமழையும் பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்குள் ஒளிந்துக்கொண்டுவிட்டது. வேளாண்மையும் பொய்த்துவிட்டது. வரும் கோடையில் வரலாற்றிலேயே முதன்முறையாகக் காவிரிப்படுகை மாவட்டம் பேரளவிலான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்துக்கு நான்கு மழைப் பருவங்கள் இருந்தன. தென்மேற்கு பருவமழை (32%), வடகிழக்கு பருவமழை (47%), குளிர்கால மழை (5%), கோடை மழை (15%). வடஇந்திய பகுதிகளில் ஏறக்குறைய கோடையிலேயே மழைக்கிடைக்கும். அதையொட்டியே குளிர்க்காலமும் வந்துவிடும். எனவே மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். ஆனால் தமிழகத்தில் மழைக்காலமும் குளிர்க்காலமும் ஒன்று சேர்ந்து முடிந்துவிடும். எனவே அதற்குப் பின்னால் மண்ணில் ஈரப்பதம் இருக்காது. இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரியில் கிடைத்துவந்த குளிர்கால மழை தாளடி சாகுபடிக்கு உதவியது. இன்று குளிர்காலமழை முற்றிலும் மறைந்துவிட, கோடை மழையும் குறைந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை குறைந்து போனதற்கு மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகளின் அழிவும் ஒரு காரணம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். கர்நாடகத்துக் காப்பித் தோட்டங்களும், தமிழகத்து தேயிலைத் தோட்டங்களும் நம் நீரை திருடிவிட்டன. 60 நாட்கள் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் கூட 15 நாட்களிலேயே அடித்துப் பெய்ந்துவிடுவதோடு அளவும் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்கள் என்ன?

இதில் மிக முதன்மையானது பருவநிலை மாற்றம் ஆகும். இதை ஏதோ நமக்குத் தொடர்பு இல்லாத செய்தி என்று இனி கடந்துவிட முடியாது. வரும் காலத்தில் வேளாண்மைக்கு அடிப்படையான பருவமழையைத் தீர்மானிக்கப் போவது இதுதான். அண்ணாமலை பல்கலைக்கழகப் பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆய்வு நடுவத்தின் அறிக்கையின்படி 2010 – 2040 காலப்பகுதியில் காவிரிப்படுகை மாவட்டத்தில் மேலும் 6-7 விழுக்காடு மழைக் குறையும் எனத் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி வெப்பநிலையும் ஒரு பாகை செல்சியஸ் அளவு உயருமாம். இது சுருக்கமாகத் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் இப்பகுதி நீரின்றி அமையப் போகிறது என்பதைதான். இந்தச் செய்திகள் எல்லாம் அறியாதவர்களாகவே பெரும்பாலான நம் உழவர்கள் இருக்கிறார்கள். ஆற்றில் நீர் வரும் அல்லது மழை பெய்யும் அல்லது நிலத்தடி நீர் என்றும் இருக்கும் என்பதெல்லாம் இனி கற்பனைதான் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எனவே இனி உழவர்களைக் காக்கும் உரையாடல்களில் சூழலியல் சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற வேண்டியது அவசியமாகும்

கர்நாடகத்திலிருந்து வரவேண்டிய நீர் வராமல் போனதன் அரசியலில் தேசிய ஒற்றுமை என்பது கேவலப்பட்டுக் கிடக்கிறது. காவிரிப்படுகையை எரிப்பொருள் கிடங்காக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கமுக்கத் திட்ட அரசியலும் இதில் ஒளிந்திருப்பதை நாம் அறிவோம். நம் அரசியல் கட்சிகளுக்கோ கார்ப்பரேட் கழிவறைகளை யார் கழுவிக்கொடுப்பது என்பதில்தான் போட்டியே. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அரசுகளுக்கு அக்கழிவறைகளைப் பாதுகாப்பதுதான் முதன்மை பணி. இதில் இவர்கள் ஏன் உழவர்களைக் காக்க போகிறார்கள்?. வேளாண்மையை முற்றிலும் அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான இந்த அமைப்பு முறையை (System), சூழலியல் அரசியல் பார்வையோடு மாற்றியமைப்பதே உழவினைத் தொழுதுண்டு பின் செல்லும் நம் அனைவரின் முதல் கடமை.

ஒளிப்படம்: சூ. சிவராமன்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

சென்னையில் அடித்த புயலில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்து விட்டன. இயற்கையாக வீழ்ந்த மரங்களோடு மீட்பு படையினர் வருவதற்கு முன்னதாக ஆங்காங்கே செயற்கையாகவும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக ஊடகத் தோழர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்கை பச்சை அயோக்கியத்தனமானது. வருங்காலத்தில் திரும்பவும் புயலடித்தால் இம்மரங்கள் தங்கள் இடத்தின் மேல் வீழ்ந்து விடாதிருக்க இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடாம். மரங்களற்ற சென்னை எப்படி அமையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கான்கிரீட் கட்டிடங்கள் நிறைந்த ஒவ்வொரு நகரமும் ஒரு வெப்ப தீவுதான். குறைந்த எண்ணிக்கையில் மரங்களுள்ள இந்திய நகரங்களுள் சென்னையும் ஒன்று. ஒரு நகரத்துக்குக் குறைந்தது 20% பசுமைப்பரப்பு தேவை. சென்னையில் மூன்று வகைப் பசுமைப்பரப்பு இருக்கிறது. 1. வீடு போன்ற தனியார் இடத்தில் உள்ள மரங்கள். 2. பூங்கா, சாலையோர மரங்கள். 3. கிண்டி, வண்டலூர் போன்ற காடுகள். இந்த மூன்று வகையையும் சேர்த்தாலும் சென்னையின் பசுமைப்பரப்பு போதாது என்பதே உண்மை. இந்நிலையில் புயல் இப்பசுமைப் பரப்பை மேலும் குறைத்திருக்கிறது. இதன் எதிர்காலம் இனி எப்படி அமையும்?

வெப்பம்:

மரங்களற்ற இடத்தின் காற்று எளிதில் வெப்பமடையும். இதனால் காற்றின் ஈரப்பதம் குறையும். ஒவ்வொரு 11பாகை செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கும் காற்றின் ஈரப்பதம் பாதியாகக் குறையும். அதாவது காற்றில் 100% ஈரப்பதம் இருந்தால் வெப்பக் காற்று அதை 50% அளவுக்குக் குறைத்துவிடும். இவ்விதம் ஈரப்பதம் குறைந்த வெப்பக் காற்று நிலத்தைவிட்டு சற்றே உயரே எழும்பி பிற இடங்களின் மேல் வீசத் தொடங்கும்போது அதன் பாதையில் உள்ள மண் மரம் ஆகியவற்றிலுள்ள ஈரத்தையும் உறிஞ்சிவிடும். ஏன் மனிதரின் உடல் ஈரத்தையும் கூட இவ்வெப்பக் காற்று உறிஞ்சிவிடும். பாலைப் பகுதிகளில் கூடத் தாவரங்கள் சிறிதளவு வளர்ந்து விட்டால் வெப்பத்தின் கடுமை அங்கு 5பாகை செல்சியஸ் குறைகிறது. எனவே சென்னைக்குத் தேவை மீண்டும் மரங்கள். மரங்களை இழந்ததால் சென்னையின் வெப்பம் 2பாகை செல்சியஸ் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சாலையோர மரங்கள் இழப்பால் அங்கு 3.1பாகை செல்சியஸ் வெப்பம் மிகும்.

தண்ணீர்:

மரங்கள் என்பவை தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள். பெய்யும் மழையை நிலத்தடி நீராக மாற்றக்கூடியவை. மரங்கள் இல்லாத இடத்தை விட மரங்கள் இருக்கும் இடத்தில் 25% நீர் உட்புகும். காட்டில் 10% மரங்களை வெட்டினால் கூட அங்கு 40% நீர் உட்புகாமல் வழிந்தோடிவிடுகிறது எனும்போது ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்து தற்போது மரங்களும் அழிந்த சென்னையின் நிலைமை இனிதான் தெரியவரும்

தூசி:

சிற்றூரில் கூட ஆண்டொன்றுக்கு ஒரு ச.கி.மீட்டருக்கு 19 டன்கள் தூசி படிகிறது. நகரங்களில் 35 டன்கள் தூசி. அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமென்றால் இன்னும் அதிகம். கல்கத்தாவில் 6000 தொழிற்சாலைகள் வெளியிடும் தூசி 600 டன்கள் அங்குள்ள வாகனங்கள் வெளியிடும் தூசி 358 டன்கள். ஒரு செய்தி சொல்லட்டுமா? இது 1981ஆம் ஆண்டின் பழங்கணக்கு. அப்படியானால் இன்றைய கணக்கு? ஆனால் சாலையோர மரங்கள் வாகனம் வெளியிடும் தூசியில் 70% அளவை குறைத்திடும். இது புரிந்தால் மரங்களின் இழப்பையும் நாம் புரிந்து கொள்ள முடியும்

ஒளி/ஒலி:

கதிரொளியை கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் முறையே 60%, 45% அளவுக்குப் பிரதிபலிப்பதால் கண்களுக்கு ஊறு நேருகின்றன. ஆனால் ஆலமரங்கள் போன்றவை வெறும் 9% அளவே ஒளியை பிரதிபலிக்கின்றன. அதுபோல நகரம் என்றாலே ஒலி மாசு. பொதுவாக ஒலி பகலில் 90 டெசிபலாகவும், இரவில் 80 டெசிபலாகவும் இருக்கின்றன. 45 டெசிபல் அளவு 3 நிமிடங்களுக்கு நீடித்தாலே 50% பேருக்குத் தூக்கம் கலைந்திடும். சாலையில் 50 அடி அகலத்துக்கு மேல் மரங்கள் இருந்தால் அவை ஒலியை 20-30 டெசிபல் அளவுக்குக் குறைத்திடும். இனி என்ன செய்யப் போகிறது சென்னை?

உடல்நலம்:

மரங்கள் என்பது உயிர்வளி (ஆக்சிஜன்) தொழிற்சாலை என்பதை நாம் அறிவோம். மரங்கள் கூடினால் வீசும் காற்றில் உயிர்வளி கூடும். நம் மூச்சுக்காற்றிலும் உயிர்வளி கூடும். குருதியிலும் உயிர்வளி கூடும். இதனால் நம் உடல் திசுக்களின் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, நோய் எதிர்ப்புத் திறனும் கூடும். நகரில் மரங்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள் காற்றிலுள்ள நச்சுயிரிகளை (கிருமிகளை) கொல்லக்கூடியவை. பூங்கா உள்ள இடத்தைவிடப் பூங்கா இல்லாத இடத்தின் மேலுள்ள காற்றில் 200 மடங்கு நச்சுயிரிகள் மிகுந்திருப்பதாக ருஷ்ய அறிவியலாளர்கள் ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு எக்டேரில் உள்ள மரங்கள் ஆண்டுக்கு 1.8 கோடி க.மீ காற்றைத் தூய்மைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு 200 மனிதர்கள் வெளியிடும் 8 கிலோ காற்றைத் தாம் இழுத்துக்கொண்டு காற்று நஞ்சாகாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆனால் சென்னையில் ஓடும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் ஒரு மனிதரின் ஓராண்டுக்கு தேவையான உயிர்வளியை ஏற்கனவே அழித்துக் கொண்டிருக்கையில் மரங்களையும் இழந்த சென்னை இனி என்ன செய்யப் போகிறது? எனவேதான் சென்னைக்கு உடனடியாகத் தேவைப்படுவது அதன் நுரையீரலே.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

முகப்புப் படம்: மகேஸ்வரி.

அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்?: நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

 

மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை நான்கு பருவ காலங்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் முதலீட்டியம் இன்னொன்றையும் கூடுதலாகச் சேர்த்து இதனை அய்ந்து பருவ காலங்களாக மாற்றியுள்ளது. அந்த அய்ந்தாவது காலம் விடுமுறை காலம் என அழைக்கப்படும் வணிகக்காலம் ஆகும். இந்த 5 காலத்துக்கும் தகுந்தாற்போல் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்வீடன் நாட்டின் எச்&எம் நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வணிக ஆடை நிறுவனமாகும். இதன் வணிக உத்தி என்னவெனில் இந்நிறுவனத்தின் ஆடைகள் நெடுநாட்கள் உழைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை. மிகக்குறைந்த விலை, அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவையே இதன் வெற்றியின் கமுக்கம். அதாவது ஆடைகளை வெகு குறைந்த காலத்துக்கு மட்டும் பயன்படுத்திப் பின் எறிந்து விடுவதாகும். இதற்காகவே தற்போது அங்குள்ள சில சில்லறை வணிக நிறுவனங்கள் புதிதாக 26 நாகரிக ‘பருவ காலங்களை’ கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு வாரங்களை மட்டுமே கொண்டதாகும். அந்தளவுக்கு நுகர்வு வெறி அங்குத் திணிக்கப்பட்டுள்ளது. இந்நுகர்வு வெறியை ஈடுசெய்யவே ஆசிய நாடுகளிடத்து புதிய புதிய ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் திணிக்கப்படுகின்றன.

இன்னொரு கதை ஹைத்தி என்ற குட்டி நாட்டின் கதை. இந்நாட்டுக்கு அய்க்கிய அமெரிக்காவின் ‘மியாமி அரிசி’ என்னும் பண்ணைகளில் பயிரிடப்பட்ட அரிசி பெருமளவில் மலிவு விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் சத்துமிகுந்த ஹைத்தியின் உள்நாட்டு அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அத்தோடு ஹைத்தியில் வேளாண்மைக்குக் கொடுத்து வந்த மானியமும் நிறுத்தப்பட்டது. வேளாண்மை அழிந்து உழவர்கள் நகரத்துக்குத் தொழிற்சாலைகளின் கூலிகளாக இடம் பெயர்ந்தனர். என்ன தொழிற்சாலை தெரியுமா? ஆடை உற்பத்தி தொழிற்சாலை. (தஞ்சை உழவர் குடிகள் திருப்பூருக்குக் குடிப்பெயர்ந்தது நினைவுக்கு வரலாம்). உலக வங்கியும், யுஎஸ்எய்ட் என்ற அமைப்பும் இணைந்தே இச்செயலை செய்தன.

ஹைத்தி மக்களின் உணவு உற்பத்தி திறனானதாக இல்லை. மாறாக இவர்கள் தம்முடைய திறன்களைச் செலுத்தி உலகப் பொருளாதாரத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார் மக்களாட்சி நாடுகளுக்குச் சீர்திருத்த உதவி செய்யும் அமைப்பாகத் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி ஒருவர். இதன் பொருள் இந்நாட்டு மக்கள் தற்சார்பை இழந்து பாதிப் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை அமெரிக்கர்களுக்கு உள்ளாடை தைத்துக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே.

இவ்விடத்தில்தான் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டம், தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமங்களுக்கு மிகப் பெரிய சாயத் தொழிற்சாலை வருவதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பல தொழிற்சாலைகளால் நமது ஆறுகள் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்க இந்நிலத்துக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்க வருகிறது இதுபோன்ற தொழிற்சாலைகள். உலகில் நீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளில் 17-20% ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளே ஆகும் என உலக வங்கியே தெரிவித்துள்ளது. சாயக் கழிவு நீரில் 72 வகையான நச்சு வேதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதும் அதில் 30 வகை எவ்வகையிலும் நீக்கப்பட முடியாதது என்றும் பஞ்சாப் ஃபேசன் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது.

இதுவரை 3600க்கும் மேற்பட்ட வண்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சாயமேற்றுதல் பிரிண்டிங் இரண்டுக்கும் சேர்த்து 8000 வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு 8000 கிலோ உற்பத்தி செய்யும் ஒரு நடுத்தர ஆலைக்கு 16 இலட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். இவற்றில் சாயமேற்றுதலுக்கு 16% நீரும், அச்சிடுவதற்கு 8% நீரும் தேவைப்படுகிறது. என்று நேச்சுரல் சயின்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

ஏற்கனவே இத்தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்த இடங்களில் உயிர்வளி(ஆக்சிஜன்) பற்றாக்குறை ஏற்பட்டு மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்துள்ளன. இக்கழிவுநீரில் பெரும் பாக்டீரியா வைரஸ்களால் நோய் பெரும் அபாயமும் உண்டு. இதுதவிர இவ்வாலைகளின் பாய்லர்களிலிருந்து சல்பர்டைஆக்சைடும் காற்றில் உமிழக் காத்திருக்கிறது. பணக்கார நாடுகளின் நுகர்வு பசிக்காக இவ்வளவையும் நம் தலையில் கட்டிவிட்டு நம்மை இரையாக்க வருகின்றன இத்தகைய தொழிற்சாலைகள். இங்கு ஏற்கனவே உற்பத்தியாகும் ஆடைகளே நம் தேவையை விட அதிகமாக இருக்கிறதே இதில் அயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்?

இப்போது எச்&எம் நிறுவனத்தின் நாடான ஸ்வீடன் நாட்டையே எடுத்துக் கொள்வோம். அந்நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சிட்டி ஆஃப் வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. காரணம் அங்கு ஒரு சாயக் கழிவு ஆலைகளும் கிடையாது. வளர்ச்சி, அந்நிய செலாவணி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பருத்தி விளைவிக்கத் தெரிந்த வெளிநாட்டினருக்கு, பின்னாலாடை தொழில்நுட்பம் தெரிந்த வெளிநாட்டினருக்கு, அதற்கான இயந்திரங்களையும் உற்பத்தி செய்யத் தெரிந்த வெளிநாட்டினருக்கு இந்த ஆலையையும் அவர்கள் நாட்டிலேயே அமைத்துக் கொண்டால் நிறைய அந்நிய செலாவணி அவர்களுக்கு மிச்சமாகுமே, பிறகு அவர்கள் ஏன் அதைச் செய்வதில்லை?

சாயநீரை இந்நிலத்தில் கழித்து விட அரசியல் சோரம் போகும் கூட்டம் இங்கிருக்கிறது என்பதே காரணம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டதற்குச் சாயம் போகும் நோட்டே நல்ல நோட்டு என்று சொன்ன நாடல்லவா இது. இந்தச் சாயத்தைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறது? இனி நமக்குத் தேவை நம் சூழலை மாசு செய்யாத தொழில்களே. நொய்யலும் பவானியும் மாசுப்பட்டபோது பாதிக்கப்பட்டது அதன் அருகமை மாவட்டங்கள் மட்டுமல்ல. அதன் கழிவுகள் இறுதியில் வந்து சேர்ந்த காவிரி படுகை மாவட்டங்களும்தான். தமிழ்நிலம் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு நம் அனைவருக்குமானதே.

ஒரத்துப்பாளையத்தை நினைவில் கொண்டு, விருதுநகர் மட்டுமல்ல எந்த இடத்தில் வந்தாலும் நாம் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! வருகிற 30.11.16, புதனன்று காலை 10.30 மணியளவில் கருத்து கேட்பு கூட்டம்.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

இயற்கை கடிகாரம்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கார்க்காலம். அப்போதிருந்த எங்கள் வயலுக்குச் சென்றிருந்தேன். அடைமழைப் பிடித்துக்கொண்டதில் பகலிரவு தெரியவில்லை. கடிகாரமும் இல்லாததால் நேரத்தை அறிய முடியவில்லை. இரவுப்போலவே இருந்தது. அப்போது அங்கிருந்த பெரியவர், ‘தம்பி, பொழுது சாய்ஞ்சிடுச்சே கிளம்பலீயா” என்று கேட்டார். எனக்குத் திகைப்பு. எந்தக் கடிகாரத்தில் இவர் மணி பார்த்தார்? அவரிடமே கேட்டேன். “இது என்ன கம்பசித்திரமா தம்பீ, அதோ பாருங்கள் பீர்க்கம் பூ பூத்திடுச்சு’ என்றார். இதையே வேறு வகையில் சொல்லியிருக்கிறது சங்க இலக்கியத்தின் ஐங்குறுநூறு பாடல் ஒன்று.

‘வான்பிசிர்க் கருவியில் பிடவுமுகை தகைய
கான்பிசிர்க் கற்கக் கார் தொடங்கின்றே’ (461)

வான் மழையால் பிடவத்தின் அரும்புகள் அரும்பின. காடு அம்மழையை ஏற்றுத் துளியைச் சிந்த கார்ப்பருவம் தொடங்கிற்று என விளக்கும் இப்பாடலின் தொடர்ச்சிதான் அப்பெரியவர். பிடவத்திற்குப் பதிலாகப் பீர்க்கம் பூ. இது மாலை நேர கடிகாரம் என்றால் காலை நேரக் கடிகாரம் ஒன்று உண்டு. அதைச் சொல்லியவள் தமிழ் கவிஞர்களின் நிரந்தரத் தோழி ஆண்டாள்.

கீசுகீசு எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

ஆண்டாள் மார்கழி மாத காலையில் சென்று தம் தோழிகளைப் பாவை நோன்புக்கு அழைக்கிறார். அவ்வாறு அழைக்கும் பாடல்களில் ஒன்றுதான் மேற்கண்ட பாடல். இவ்விடத்தில் எனக்கொரு கேள்வி எழுந்தது. ‘ஆண்டாள் எத்தனை மணிக்கு சென்று தன் தோழிகளை எழுப்பினார்?’ அவரது பாடல்களிலேயே அதற்கான விடை இருக்கிறது. ஆனைச்சாத்தன் என்பது கரிச்சான் குருவி. கரிச்சான் குருவி எப்போது கத்தும் என்று தெரிந்தால் ஆண்டாள் தோழிகளை எழுப்பிய நேரம் தெரிந்துவிடும். நமக்குச் சேவல் கூவுவதே தெரியாது. இதில் மற்ற பறவைகள் கூவும் நேரத்தை எப்படி அறிவது?

இதற்கும் ஓர் உழவுக்குடி பெரியவரிடம்தான் விடைக் கிடைத்தது. ஆனால் அவர் அவ்வளவு எளிதாக விடையைச் சொல்லி விடவில்லை. பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார். ”ரா முழுக்க ஒரு குருவி கத்திக்கிட்டு இருக்குமே, அது என்ன குருவி சொல் பிறகு உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்’ என்றார். நல்லவேளையாக எனக்கு விடை தெரிந்திருந்தது. ’ஆள்காட்டி’ என்றேன். அவர் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்ல அணியமானார்.

“மார்கழி மாசத்துலே குளிரு மட்டுமல்லாமல் பனி மூட்டமும் அதிகமாக இருக்கும். அதனால கிழக்கு வெளுக்கிறது அவ்வளவு சீக்கிரமா தெரியாது. அந்த நேரத்துலே வீட்டை சுத்தி இருக்கிற காக்க குருவிங்க கத்துறதை வச்சுதான் நாங்க மணியைத் தெரிஞ்சுக்கிட்டு காலங்கார்த்தால வயலுக்குப் போவோம்” என்றார்.

“சேவல் கூவுறதை வைத்தா?” என்று கேட்டேன்.

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு இது ஒண்ணுதான் தெரியுது. அதுவும் சேவல் கூவுறதை காதாலே கூடக் கேட்டிருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் அலாரம்தானே? எங்களுக்கு எந்த அலாரம் இருந்துச்சு? எல்லா நேரத்தையும் குருவிங்கத்தான் சொல்லும்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
அவர் சொன்ன பறவைகள் மணிக் கணக்கை சொல்லத் தொடங்கினார்

கரிச்சான் குருவி மூணு மணிக்கு கத்தும்.

bird-1
குயில் நாலு மணிக்கு கூவும்.

bird-2
சேவல் நாலரை மணிக்கு கூவும்.

bird-3
காக்கா அஞ்சு மணிக்கு கத்தும்.

bird-4
கௌதாரி அஞ்சரை மணிக்கு கத்தும்.

bird-5
மீன்கொத்தி ஆறு மணிக்கு கத்தும்.

bird-6

என் கேள்விக்கு உடனே விடை கிடைத்துவிட்டது. அப்படியானால் ஆண்டாள் தன் தோழிகளைச் சென்று எழுப்பிய நேரம் அதிகாலை மூன்று மணி.

இப்படி ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு கடிகார கணக்கு இருந்திருக்கிறது. இருந்துக்கொண்டும் இருந்திருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இதை அறியலாம். ஆனால் இன்று நமக்கும் இயற்கைக்குமான இடைவெளி எத்தனை கிலோ மீட்டர்?

ஒளிப்படங்கள்: ஏ. சண்முகானந்தம்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

அறிமுகம்: கலை இலக்கிய சூழலியல் இதழ் ‘ஓலைச்சுவடி’!

தமிழில் கலை இலக்கிய சூழலியல் இதழாக மலர்ந்துள்ளது ‘ஓலைச்சுவடி’.  இதழின் ஆசிரியர் கி.ச. திலீபன் பகிர்ந்துகொண்ட குறிப்புகள் இங்கே:

‘மீட்சியும் உயிர்த்தெழுதலுமே மேலதிக அர்த்தம் உடையது’ ஓலைச்சுவடிக்கு படைப்பு கேட்பதற்காக அணுகியபோது அய்யா வண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவை. ஓலைச்சுவடி மீண்டும் உயிர்கொள்கிறது. ஓலைச்சுவடியின் இரண்டாவது இதழே அதன் மறுபிறப்பாக இருக்கிறது என்பதை நினைக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளுக்கு உரித்தான பல அம்சங்களுடன் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலைச்சுவடியின் முதல் இதழ் வெளியானது. ஒரு இதழைத் தொடங்கி நடத்துவதற்கு பொருளாதார வலு இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பற்றுப் போனதால் ஓலைச்சுவடி அது மேற்கொண்டு வெளிவரவில்லை. வெறும் நினைவாக மட்டுமே இருந்த ஓலைச்சுவடியை உயிர்ப்பிக்க நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்தக் கால இடைவெளியில் நான் சிலவற்றைக் கற்றுணர்ந்திருக்கிறேன். விருப்பப்பட்ட இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். இவை எல்லாம் உணர்த்தியது ஒன்றே ஒன்றைத்தான். இங்கே செயல்படுவதற்கான பெரிய களம் இருக்கிறது. செயலாற்றுவது மட்டுமே நமது பணியாக இருக்க வேண்டும்.

கலை இலக்கியம் என்பதோடு நில்லாமல் சூழலியலையும் இணைத்து ஓலைச்சுவடியைக் கொண்டு வந்திருக்கிறேன். கலை இலக்கியத்துக்கும் சூழலியலுக்கும் நீண்டதொரு இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் ‘சூழலியல்’ கருத்தாக்கங்களுக்கான தேவை இருக்கிறது. அவற்றை முதன்மைப்படுத்துவது இதழியலின் கடமை என்றே சொல்ல வேண்டும். என் மதிப்புக்குரியவர்கள் இந்த இதழில் பங்காற்றியிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். சொல்லப்போனால் உண்மையில் ஓலைச்சுவடி இப்போதுதான் பிறக்கிறது. நீண்டு கிடக்கும் பயணப்பாதையில் அது மெல்லவே தவழ்ந்து, நடைபழகிச் செல்லும். மழலை மணத்தோடு இந்த இதழை உங்கள் முன் வைக்கிறேன்.

இதழ் வடிவமைப்பு : திலீப் பிரசாந்த், அட்டைப்பட ஓவியம் : நாகா

இதழில்…

நக்கீரன் நேர்காணல் – கி.ச.திலீபன்
இயக்குனர் பெலா தார் நேர்காணல் – மார்டின் குட்லாக், தமிழில் இரா.தமிழ்செல்வன்

கட்டுரைகள்

நிலம் என்னும் நற்றாய் – பாமயன்
காவிரி… கர்நாடகம்… காடுகள் – இரா. முருகவேள்
மொழியில் உயிர்பெறும் கடல் – வறீதையா கான்ஸ்தந்தின்
ஜாரியா – ஓர் அகத்தேடல் – பு.மா.சரவணன்

சிறுகதைகள்

நாலு மூலைப்பெட்டி – க.சீ.சிவக்குமார்
போலி மீட்பன் – செம்பேன் உஸ்மான் (தமிழில் : லிங்கராஜா வெங்கடேஷ் )

கவிதைகள் – வா.மு. கோமு, பா. திருச்செந்தாழை, ஷாராஜ் , சு. வெங்குட்டுவன்

தானாவதி நாவல் விமர்சனம் – பிரவீன்குமார்

மழையும் ஆயுதம்!: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

கடந்த ஒரு வாரமாகவே கீழத்தஞ்சைப் பகுதியில் பனிமூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பனி என்பது அதிசயமே. மார்கழியில் வரவேண்டிய பனி பருவமழைக் காலத்தில் நிலவுவது மக்களுக்கு வியப்பாக இருக்கிறது. இது பருவநிலை மாற்ற அறிகுறியா என்றும் தெரியவில்லை. பொதுவாகப் பனி பெய்தால் மழை இருக்காது என்பதால் உழவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து வரும் நீர் போதாத நிலையில் பருவமழை இம்மாத இறுதியில் வரும் என்கிற வானிலை அறிவிப்புதான் இப்போது இருக்கும் ஒரே ஆறுதல்.

மழை என்பது இயற்கை நிகழ்வாக மட்டுமே இருந்த காலம் இன்று இல்லை. அது ஒரு சூழலியல் ஆயுதமாக மாறி வெகு காலமாகிறது. இதற்கான சதித் திட்ட வரலாறு வியட்நாமில் இருந்தே தொடங்குகிறது. வியட்நாம் போரின் போது ஒரு பருவமழைக் காலத்தில் மஞ்சுக் கூட்டத்தினூடே அய்க்கிய அமெரிக்க இராணுவத்தின் WC 130 வகை வானூர்திகள் பறந்தன. அவற்றில் குண்டுகளோ, ஆயுதங்களோ இல்லை. எந்தவொரு இலக்கையும் தாக்கும் எண்ணமும் அவற்றுக்கு இல்லை. இவ்வளவு நல்லெண்ணத்தோடு அய்க்கிய அமெரிக்க இராணுவ வானூர்திகள் பறக்குமா? உறுதியாகப் பறக்காது என்று நமக்குத் தெரியும்.

ஆனால் அவ்வானூர்திக்கு வேறொரு நோக்கம் இருந்தது. அதில் ஆயுதங்களுக்குப் பதிலாக ‘டிரை ஐஸ்’ எனப்படும் பெரும்பாலும் சில்வர் அயோடைட் அல்லது ஈய அயோடைட் நிரப்பப்பட்டிருந்தன. ஏறக்குறைய நிமிடத்துக்கு 7 கிலோ வீதம் அதை மஞ்சு திரள்களினூடே கொட்ட முடியும். அதனால் செயற்கை மழையை உருவாகும். .

பருவமழையின் கால அளவை மேலும் ஒன்றரை மாதம் நீட்டிக்கவே இந்த ஏற்பாடு. வியட்நாம் உழவர்களுக்கு மழைப்பொழிய வைப்பதில் அய்க்கிய அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை இருக்க முடியாது. பின் எதற்காக இம்முயற்சி? இதுவொரு இராணுவ நடவடிக்கை. இதற்கு ‘ஆபரேசன் பாப்பாய்’ என்று பெயர். இந்தப் பாப்பாய் குழந்தைகளைச் சிரிக்க வைக்கும் கேலிப்படப் பாப்பாய் அல்ல. அய்க்கிய அமெரிக்க இராணுவத்தைச் சிரிக்க வைக்கும் பாப்பாய்.

ஹோ சி மின் தலைமையிலான புரட்சி படையணியின் முன்னேற்றத்தை முடக்கி வைக்கவே இந்த ஏற்பாடு. அப்புரட்சி படையின் தொடர் கெரில்லா தாக்குதலிலிருந்து தப்பித்துச் சில காலம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக மட்டுமன்றி, அப்படையின் நடமாட்டத்தையும் முடக்குவதே இதன் நோக்கம். இச்செயற்கை மழையால் அப்படையணி பயன்படுத்தும் சாலைகள் சேதமாகும். மலைப் பாதைகளில் நிலச்சரிவு உண்டாகி அது மூடப்படும். ஆற்றின் குறுக்கேயுள்ள பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். இப்போது புரிந்ததா இவர்களின் நல்லெண்ணம்?

1967, மார்ச் 20 முதல் 1972 ஜூலை 5ந்தேதி வரை தேவைக்கு ஏற்றாற் போல் இந்நடவடிக்கை நீடித்தது. இதன் துணை விளைவாக வியட்நாம் உழவர்களின் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால், அவர்களின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முடிந்தது. கெரில்லாப் படை முன்னேற்றம் தடுக்கப்பட்டதால் அய்க்கிய அமெரிக்கப் படைக்கு அன்றைய மதிப்புக்கு 9 இலட்சம் டாலர் மிச்சம். செலவோ எண்பதாயிரம் டாலர்தான்.

அறமற்ற செயலான இச்செயற்கை மழைப் பற்றி அய்க்கிய அமெரிக்க நாளிதழ்களில் செய்தி வெளியான போது அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் முதலில் அதை மறுத்தது. ஆனால் பின்னர் இராணுவ தலைமையகமான பென்டகனின் கமுக்கக் கோப்புகள் கசிந்து அம்பலமானதால் வேறு வழியின்றி அது ஒப்புக்கொள்ள நேரிட்டது. ஆக இராணுவத் தேவைக்காகப் பிறந்ததே செயற்கைமழை தொழில்நுட்பம். இதுதான் இன்று ஒரு நாட்டில் மழை இல்லாக் காலத்தில் மழைப் பெய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் போலத் திரிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சில்வர் அயோடைட் அய்க்கிய அமெரிக்காவின் சூழலியல் பாதுகாப்பு முகமையின் ‘தூய குடிநீர் சட்டத்தின்படி ஒரு அபாயகரமான வேதிப் பொருள். செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்விக்கும்போது அது தீமை பயப்பதாக மாறும். செயற்கை மழையை ஆய்வு செய்ததில் அதில் சில்வர் அயோடைட் இல்லை என்பது ஒரு வாதம். ஆனால் இத்தகைய ஆய்வானது ஆண்டுக்கு இரு இடங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது..

சரியான முறை எதுவெனில் மாதந்திர அடிப்படையில் அம்மழைநீர் சேருமிடமான அணைப்பகுதிகள், வாய்க்கால்கள், ஏரிகள் ஆகிய இடங்களிலும், அம்மழைப் பொழியும் இடங்களின் மண்ணையும் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்வதே. மழைநீர் தூய்மையானது என்கிற கருத்தாக்கத்துக்குச் செயற்கை மழை எதிரானது. தொழில்நுட்ப சொற்களில் இதற்கு ‘மேக விதைப்பு’ எனப் பெயர். ஆனால் உண்மையில் இது ‘மேக திருட்டு’ ஆகும்.

உலகில் செயற்கை மழைக்காக அதிகம் செலவிடும் நாடான சீனா. இத்தொழில்நுட்பத்தின் மூலம் தமக்கு 10% மழை கூடுதலாகக் கிடைப்பதாகக் கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான சீன உழவர்களோ தங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை இது வேறு பகுதிக்கு கடத்திச் சென்று விடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதிலுள்ள அபாயம் எதுவெனில் ஒரு நாடு நினைத்தால் தனக்குப் பிடிக்காத நாட்டில் மழையைக் கொட்டி தீர்க்க முடியும் என்பது மட்டுமல்ல, அது அடுத்த நாட்டுக்கு கடந்து போகும் மேகங்களைத் தடுத்து அந்நாட்டுக்கு மழைக் கிடைக்காமலும் செய்ய முடியும் என்பதுதான்.

எடுத்துக்காட்டாகக் கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தொடக்கத் தினத்தன்று 1000 சில்வர் அயோடைட் ஏவுகணைகளை விண்ணில் ஏவி பெய்ஜிங் நகரில் மழைப் பெய்ய விடாமல் தடுக்க, அது பெய்ஜிங் புறநகர் பகுதிகளில் மழையைக் கொட்டித் தீர்த்தது. இன்று இது வணிகமாக மாறி சில நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் பணக்காரர்கள் வீட்டு திருமண நாளன்று அந்நிகழ்ச்சி நடைப்பெறும் பகுதியில் மழைப் பெய்யாமல் தடுப்பதற்கு இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1983, 1984-87, 1993-94 ஆகிய ஆண்டுகளில் செயற்கை மழைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. பெய்யும் மழையைச் சேமித்து வைக்கத் துப்பற்ற இத்தகைய நடவடிக்கைகள், தனியார் நிறுவனங்களை வாழ வைக்கும் திட்டமே அன்றி வேறில்லை.

செயற்கைமழை இயற்கையான நீரியல் சுழற்சியைப் பாதிக்கும். வரும் வடகிழக்கு பருவமழையாவது இயற்கையாகப் போதுமான அளவுக்குப் பெய்து நம் உணவுத் தேவையை நிறைவு செய்ய வேண்டும். மழைநீரைக் குறித்து ஒரு நீரியல் பொறியாளரான மிச்சேல் கிராவிக் சொல்லிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது.

“நீர் துளி விழும் உரிமை மனித உரிமையை விட முதன்மையானது”.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ் ஒரு சூழல் மொழி

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

ஒவ்வொரு மொழியும் அது பேசப்படும் நிலத்தின் சூழலில் இருந்தே உருவாகிறது. ஒரு நிலத்தின் சூழல் அழியும்போது அங்குப் பேசப்படும் மொழியும் அழிகிறது. காலனி ஆதிக்கத்தால் பிடுங்கப்பட்ட தம் நிலத்தை இழந்த பல பழங்குடிகள் அத்தோடு தம் சூழலையும் இழந்ததால் படிப்படியாக மொழியையும் இழந்தனர். பல மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி இறந்துவிட்டன. ஆகவே மொழியும் சூழலும் வேறு வேறு அல்ல. அவ்வகையில் தமிழ் ஒரு சூழல் மொழியாகும்.

உயிரினவளம் மிகுந்த ஒரு நிலத்தில் தோன்றும் ஒரு மொழி செறிவான சொல் வளத்தையும், பொருள் வளத்தையும் கொண்டிருக்கும். வெப்ப மண்டலப் பகுதியில் பல்லுயிர் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ் மொழி இவ்வகையில் ஒரு வளமிகு மொழியாகும். ஆங்கிலம் தோன்றிய நிலத்தில் இத்தகைய பல்லுயிர் செறிவு கிடையாது. இதுகுறித்து விரிவாகத் தனிக்கட்டுரை ஒன்று எழுதி வருவதால் ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் இங்குக் காணலாம்.

ஆங்கில மொழியில் மொட்டு என்ற சொல்லுக்கு நானறிந்த வரை Bud என்ற சொல்லும், உபரியாக Sprout, Shoot, Plumule என்கிற சொற்களும் உள்ளன. இதைப்போலப் பூ என்ற சொல்லுக்கு Flower தவிர Floweret, Bloom, Blossom, Burgeon, Effloresce போன்ற சொற்கள் உள்ளன. ஆனால் தமிழில் இவ்விரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 29 சொற்கள் உள்ளன.

அவையாவன: நனை, அரும்பு, முகை, கலிகை, சாலகம், பொகுட்டு, கன்னிகை, மொக்குள், மொட்டு, முகிழ், (முகிளம்), போது, பொதி, போகில், மலர், பூ, அலர், விரிமலர், இகமலர், தொடர்ப்பூ, வெதிர், அலரி. வீ, செம்மல், பழம்பூ, உதிரல், உணங்கல், வாடல், தேம்பல், சாம்பல்

இத்தனை சொற்களும் அதன் வளர்ச்சி படிநிலையை உற்றுக் கவனித்து உருவாக்கப்பட்ட சொற்களாகும். அவ்வளர்ச்சி படிநிலைகள் மொத்தம் ஏழு. அவை நனை, அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ ஆகியவையாகும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

This slideshow requires JavaScript.

நனை – இது தோற்றப் பருவம். உள்ளும் புறமும் ஒருவித ஈரநைப்புள்ள தேன் நனைப்புடன் காணப்பெறுவதால் நனை எனப்பட்டது. இது தேனுக்குரிய மூலச்சாறு கருக்கொள்ளும் பருவம். தவிர நனை என்பதற்குத் தோற்றம் என்ற பொருளும் உண்டு.

அரும்பு – தோற்றத்தின் அடுத்த வளர்ச்சி. அரும் பூவாக ஆவதற்கு அடிப்படைக் கொண்டதால் அரும்பூ – அரும்பு எனப்பட்டது.

முகை – அரும்பில் இதழ்கள் அகத்தே நெகிழ்ந்து, அடிப்பக்கம் சற்றே பருத்து ‘முகைத்து’ தோன்றுவதால் முகை எனப்பட்டது.

போது – முகை பருவத்துக்கு அடுத்து இதழ்கள் நெகிழ்ந்து இடைவெளிப் பெற்று முனையில் வாய் திறக்கும் பருவம் இது. முகைக்கும் மலருக்கும் இடைப்பட்ட சிறுநேரப் பருவம் இது. .

மலர் – போதுக்கு அடுத்து அவிழும் பருவம் மலர். இதழ்கள் தனித்தனியே விலகி விரிந்து நிமிர்ந்து நிற்கும்..

அலர் – காலையில் மலர் என்றால் மாலையில் அலர். புற இதழ்கள் உதிர அக இதழ்கள் விரிந்து கீழ் நோக்கி வளைந்து பரவும்..

வீ – அலருக்கு பிறகு காம்பிலிருந்து கழன்று கீழே வீழும் பருவம். வீ எனும் சொல்லுக்கு நீங்குதல் வீழ்தல் எனப் பொருள். காம்பிலிருந்து நீங்கினாலும் மணம் நீங்காது.

பூவின் இந்த ஏழு படிநிலையை உற்றுக் கவனித்த தமிழர்கள் மனிதர்களின் வளர்ச்சிப் பருவத்தையும் இதனை ஒட்டியே ஏழு பருவங்களாக அமைத்தனர்.

ஆண் – பெண்

பாலன் – பேதை
மீளி – பெதும்பை
மறலோன்- மங்கை
திறலோன்- மடந்தை
காளை – அரிவை
விடலை- தெரிவை
முதுமகன்- பேரிளம்பெண்

இவையடுத்து எட்டாம் படிநிலையாகக் காய்ந்த பூவுக்குச் செம்மல் என்ற பெயரும் உண்டு. ஆனால் அது இறப்புநிலையாதலால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுபோல் மொக்குள், மொட்டு, முகிழ் மூன்றும் ஒரே பொருள் எனினும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

நீர்க்குமிழி போல அரைக்கோள உரு அமைந்தது மொக்குள். அடிப் பருத்து உயர்ந்து மேற்பகுதி மொட்டையாகத் தோன்றுவது மொட்டு. இதழ்கள் நெகிழ்ந்து முனைக் குவிவோடு தோன்றுவது முகிழ். இச்சொற்கள் மானுட உடலியல் கூறுகளுக்கும் விரிப்படுத்தப்பட்டன.

மணம் திறக்கப்படும் பருவமான முகைக்குக் கன்னிகை என்ற பெயரும் உண்டு. பெண்ணுக்கு காதல் உணர்வு திறக்கப்படும் பருவமே கன்னிகை. ஆணுக்கு காளையர். எனவே இப்பருவத்தினர் ‘முகைப் பருவத்தினர்’ எனப்பட்டனர். அடுத்த நிலையான போது வண்டு புகுவதற்கு வாய் திறந்து இடம் கொடுப்பது ஆகும். ஆகவே கன்னி நிலையிலிருந்து கற்பை ஏற்கும் பருவமாக வகுத்தது தமிழ்.

மலர் என்பதைவிடப் பூ என்ற சொல்லையே தமிழர்கள் அதிகம் புழங்குவதற்குக் காரணம் உண்டு. அறிவியல் முறைப்படி மலராத பூக்கள் (cleistogamous flowers) பல உள்ளன. மலர்ந்த பூக்கள்தானே மலர்கள்? எனவேதான் பூக்கள் என்ற சொல் அதிகம் புழங்குகிறது.

ஒரே ஒரு பூவுக்குள் இவ்வளவு பொருள் பொதிந்திருந்தால் முழுச் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்து எவ்வளவு புதையலை வைத்திருக்கும் இம்மொழி?

நன்றி: கோவை இளஞ்சேரன், கு.வி. கிருட்டிணமூர்த்தி.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

தேயிலைத் தோட்டங்களின் பெருக்கமும் வறண்ட காவிரியும்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

ஒரு காவிரிப்படுகை மாவட்டக்காரனாக இது எனக்கொரு துயரமான ஆண்டு. என் வீட்டையொட்டியே வெறும் நான்கடியில் தொடங்கி கண்ணுக்கெட்டிய வரை வயல்கள்தாம். உழவும், நடவுப்பாட்டும், கொக்குகள் கூட்டமுமாக இருந்திருக்க வேண்டிய பசுமை வயல்கள் பழுதடைந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு வறட்சியாக இவ்வயல்களை நான் கண்டதில்லை. கடந்த 2012க்கு பிறகு குறுவைச் சாகுபடி மறுக்கப்பட்ட வயல்களே இன்னமும் வலியை தந்துக்கொண்டிருக்கையில், சம்பாவும் மறுக்கப்பட்ட இவ்வாண்டு மனதைக் குலைக்கிறது. பத்தடிக்குக் கீழ் தண்ணீர் கிடைத்து வந்த ஊரில் இவ்வாண்டு அய்ம்பது அடி ஆழத்துக்குக் கீழ் நீர்மட்டம் இறங்கியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரியில் முறையாக நீர் வராவிட்டால் என்ன நேரும் என்பதை நடப்பு நிலை உணர்த்திவிட்டது.

கர்நாடகம், காவிரி நீரைக் கொடுக்க மறுப்பதும், கடைமடைப் பாசன உரிமைக்கு எதிராகச் செயற்படுவதும், கடந்தாண்டுகளில் அது தன் பாசனப் பரப்பை சட்டவிரோதமாக விரிவாக்கிக் கொண்டதும் மறுக்க முடியாத உண்மை. இதைக் கண்டிப்பதும், நமக்கான உரிமையைப் பெற தொடர்ந்து போராடுவதும் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் இச்சிக்கலை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டியது நமது கடமையாகிறது. .

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் நிறையச் சோலைக்காடுகள் இருந்தன. புல்வெளிகளையும் உள்ளடக்கிய இக்காட்டினை பிரிட்டிசார் ‘வீண்நிலம்’ (wasteland) எனக் கருதி, அதனை அழித்துத் தைலமரம், சீகைமரங்களை நட்டனர். கூடவே தேயிலைத் தோட்டங்களையும் உருவாக்கினர். அவர்களுடைய நாட்டில்தான் இவ்வகையான நிலவமைப்பு வீண்நிலமாகக் கருதப்பட்டது. ஆனால் அது நமது சோலைக்காடுகளுக்குப் பொருந்தாது.

சோலைக்காடுகள் ஒருமுறை பெய்யும் மழையைப் பஞ்சுப்போல் ஈர்த்துக்கொண்டு மூன்று மாதங்கள் வரை கூடக் கொஞ்ச கொஞ்சமாய்க் கசியவிடும் தன்மைக் கொண்டவை. அதனால்தான் காவிரி ஒரு காலத்தில் வற்றாத ஆறாய் ஓடியது. தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அன்றைக்கே காவிரிக்கு நீரைக் கொடுத்துக் கொண்டிருந்த ஓடைகளில் சுமார் நான்காயிரம் ஓடைகள் வற்றிப் போயின. இந்தச் சிற்றோடைகள் அனைத்தும் ஒன்றிணைந்துதான் துணையாறுகளாக உருவெடுத்துக் காவிரியில் கலந்தன.

காடுகளை அழித்துத் தோட்டங்களை உருவாக்கினால் மழைப்பொழிவு நாட்கள் குறைந்துவிடும். மலேசியாவில் காடுகளை அழித்து ரப்பர் மரத்தோட்டங்கள் உருவாக்கியப் பிறகு அங்கு யுனெஸ்கோ நிறுவனம் ஓர் ஆய்வு செய்து, 1978ல் அதை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி அங்கு மழைநாட்கள் குறைந்துப் போனதோடு மழைப்பொழிவின் வேகமும் அதிகரித்து மண்ணரிப்பு நிகழ்ந்தது அறிய வந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் வேளாண்மை ஆலோசகராகத் தமிழகத்துக்கு வந்த டாக்டர். வோல்கர் என்பவர் நீலகிரியில் காடுகளின் அழிவுக்கும், மழைக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்துள்ளார். 1870லிருந்து 1874 வரை மரங்கள் வெட்டப்பட்ட காட்டுப் பகுதியில் அய்ந்து ஆண்டுகளுக்கான மொத்த மழை நாட்கள் 374 ஆகும். பின்பு அதே இடத்தில் மரங்களை வளர்த்த பின்பு 1886லிருந்து 1890 வரை ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த மழை நாட்கள் 416 ஆக அதிகரித்திருந்தன. அதாவது ஆண்டுக்கு 8 மழைநாட்கள் கூடியிருந்தன. இப்படிப்பட்ட காட்டை அழித்துதான் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தேயிலைத் தோட்ட நிலத்தின் நீர்ப்பிடிப்பு திறன் குறித்த ஆய்வொன்று கென்ய நாட்டில் நிகழ்த்தப்பட்டது. ஒரு பெருமழையின்போது அங்கிருந்த தேயிலைத் தோட்டம் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்கு நொடிக்கு 27 கனமீட்டர் நீரை வெளியேற்றியது. அங்கிருந்த இயற்கை காடோ மக்குகள் நிறைந்திருந்ததால் நீரைத் தன்னுள் உறிஞ்சிக்கொண்டு வெறும் 0.6 கனமீட்டர் நீரை மட்டுமே வெளியேற்றியது. அதாவது தேயிலைத் தோட்டத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு காடுகளைவிட 45 மடங்கு அதிகம்.

இப்படி மிகையாக வெளியேற்றப்படும் நீர்தான் பெருமழைக்காலத்தில் ஒரே நேரத்தில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து அணைக் கொள்ளளவையும் தாண்டி கடலுக்கு ஒரே தடவையில் சென்று சேர்கிறது. அணைகள் இல்லாத காலக்கட்டத்தில் காடுகள் இயற்கை அணையாகச் செயற்பட்டு வந்ததால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீரோடிக் கொண்டிருந்தது. .

காவிரியின் முதன்மை துணையாறுகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே ஓடி இவ்வாறே காவிரியில் நீரைச் சேர்த்துக் கொண்டிருந்தன. தமிழக எல்லைக்குள் ஓடும் இவ்வாறுகளில் கிடைத்து வந்த நீரின் அளவு குறைந்து போனது ஏன் என்ற கேள்விக்கு முதலில் நாம் விடைக் காணவேண்டும்.

பவானிக்கு மேலுள்ள குந்தா உள்ளிட்ட நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 16.8 டிஎம்சியாக இருந்தது. பவானி சாகரின் கொள்ளளவு 32.8 டிஎம்சி. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அளவு இன்றும் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி. சோலைக்காடுகளை அழித்துத் தேயிலை வளர்ப்பது தொடர்வதால் குந்தா நீர்தேக்கம் 1990களிலேயே மாநிலத்திலுள்ள இதர நீர்த்தேக்கங்களை விட அதிகளவில் நீர்க் கொள்ளளவை (2.7%) ஆண்டுதோறும் இழந்து வந்தது.

காவிரியில் மொத்த நீர்வளம் 1934-35 தொடங்கி 1971-72 வரை மேட்டூர் நீர்த்தேக்கத்தில் சராசரியாக 527 டிஎம்சியாக இருந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் கீழணை நீர்த்தேக்கத்திலும் காவிரியில் மொத்த நீர்வளம் கணக்கிடப்பட்டுள்ளது. கீழணை நீர்த்தேக்கத்தின் சராசரி நீர்வளம் 766 டிஎம்சியாகும். மேட்டூருக்கு கீழேயுள்ள இவ்வணையில் வந்து சேரும் நீரில் தென்மேற்கு பருவமழையால் பலன் பெறும் பவானி, அமராவதியோடு வடகிழக்கு பருவமழையால் அதிகப் பலன் பெறும் நொய்யலும் வந்து காவிரியில் கலப்பதால் இந்தளவு நீர் கிடைத்து வந்தது. இவ்வாறுகள் தந்த இந்த உபரி நீர்வளம் இன்று எங்கே போனது என்பதுதான் கேள்வி.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருநிறுவனங்களின் தேயிலைத் தோட்டங்கள் அதற்கு அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்து விரிவாக்கிக் கொண்டதாக எழுந்த புகாருக்கு இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட 99 ஆண்டுக் குத்தகைக் காலம் முடிந்தும் தேயிலைத் தோட்டங்களை இன்னும் இயங்க அனுமதித்துக் கொண்டிருப்பதும் நமது அரசுகள்தாம்.

அன்று காவிரி தோன்றும் குடகுமலைக் காட்டை அழித்து ஆங்கிலேயர்கள் காப்பியை பயிரிட்டபோது, அது குறித்துக் கவலைப்படாமல் கும்பகோணத்தில் இருந்தவர்கள், ‘பேஷ்… பேஷ்… காப்பி நன்னாருக்கு’ என்று சுவைத்ததன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். தேயிலைத் தோட்டங்களும் நமது நீரை காவு வாங்கியவையே என்பதைக் காவிரி உழவர்கள் இனியாவது உணர வேண்டும்.

இத்தேயிலைத் தோட்டங்களைத் திரும்பவும் காடாக்கினால் மழை வளம் பெருகும் என்பது அப்பட்டமான உண்மை. குத்தகைக் காலம் முடிந்த தேயிலைத் தோட்டங்களையும், காடுகளை ஆக்கிரமித்த தோட்டங்களையும் கைப்பற்றித் திரும்பவும் மறுகாடாக்க வேண்டும். ஒரு நாடு என்பது அதன் நிலத்தில் 33% காடாக இருந்தால்தான் அது இயற்கை வளமிக்கதாக விளங்கும். நம்மிடையே இருப்பது வெறும் 11% மட்டுமே. இங்கு மிகை உற்பத்திக்காகவே தேயிலைத் தோட்டங்கள் பேணப்படுகின்றன. சொந்த நாட்டு மக்கள் சோறு தின்ன நீரில்லாமல் தவிக்கையில் அயல்நாட்டினர் குடிக்கத் தேயிலை வளர்ப்பது ஒன்றும் அவசியமில்லை. இதற்காகத் தேயிலை வேளாண்மை செய்யும் சிறு உழவர்களின் மீது கையை வைக்காமல் பெருநிறுவனங்களின் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக மட்டுமல்ல, காடுகளை ஆக்கிரமித்து நம் ஆற்றின் நீரைத் தடுக்கும் தேயிலைத் தோட்ட பெருநிறுவனங்களுக்கு எதிராகவும், நம் ஆறுகளின் மணலைத் திருடி மிச்சமிருக்கும் நம் நிலத்தடி நீரையும் வற்ற வைக்கும் துரோகத் தமிழர்களுக்கு எதிராகவும் நாம் செயற்பட வேண்டிய காலம் இது.

நிழற்படம்: அருண் நெடுஞ்செழியன்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.