“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”

டாக்டர். ஷாலினி

டாக்டர். தொல் திருமாவளவன் கோயில்களின் ஆபாச சிலைகளை பற்றி விமர்சித்தார். அதற்கு காயத்ரி ரகுராம் என்பவர், அது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று, தொ. திரு. வின் விரைகளை பற்றி பேசினார். அதாவது ஆபாசத்திற்கு எதிரான புகாருக்கு பதில் இன்னும் கொஞ்சம் ஆபாசம்.

அதற்கு பிறகு ரொம்பவும் விசித்திரமாக அவர் பா ம காவின் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு தூது அனுப்பி, அடியாள் வேண்டும் என்று வெளிபடையாகவே கேட்கிறார்.

இந்த காயத்ரி மாதிரி டுபுக்குக்கள் எல்லாம் நமக்கு பெரிய பொருட்டே இல்லை என்றாலும் அங்கங்கே முளைக்கும் பதர்களை அவ்வப்போது கிள்ளி ஏறிய வேண்டியது நம் எல்லோரது கடமை.

அம்மா காயத்ரி,

1) ஹிந்து கோயிலில் ஆபாசமான சிலைகள் உண்டு. அதை பற்றி பேச எல்லா மனிதருக்கும் உரிமை உண்டு, முக்கியமாக திரு தொல் திருமாவளவனுக்கு மிக அதிக உரிமை உண்டு. காரணம் அவர் தொன்மை தமிழர். Indigenous stock. ஹிந்து என்ற வார்த்தையை பிரிடிஷ்காரன் உபயோகித்த காரணத்தை அடிப்படையாக வைத்து பார்த்தால் திருமாவளவன் தான் நிஜ ஹிந்து. நீங்கள் எல்லாம் பிற்காலத்தவர். அவர் மதத்தை அவரே விமர்சிக்கிறார். உங்கள் ஸ்மார்த்த மதத்தைத்தை இன்னும் விமர்சிக்கவே ஆரம்பிக்கலையே, அதற்குள் ஏன் இந்த அவசர ரியாக்‌ஷன்?!

2) விரைகள் இருந்தால் தான் வீரமா? எனக்கு விரைகள் இல்லை. ஆனால் எனக்கு வீரம் உண்டு. உங்கள் வீட்டு ஆண்களுக்கு விரைகள் இருக்கும், அதனால் அவர்கள் வீரர்கள் ஆகிவிட மாட்டார்கள். விரை = வீரம் என்பதே ஒரு செக்ஸிட் கிலீஷே! அதை நீங்களும் பயன்படுத்தினால் இது உங்கள் அறிவுக்கு அழகா? வளர்ந்து வரும் அரசியல்வாதி நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருந்தால் தானே எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரும்?!!

3) டாக்டர் ராமதாஸ் அடியாட்கள் சப்ளை செய்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏன் உங்கள் ஆர். எஸ். எஸ். சில் இதை விட அதிக பயங்கர ஆயுத பிரயோகத்தில் தேர்ச்சிபெற்ற மாவீரர்கள் இருப்பார்களே! அவர்கள் பாவம் வெட்டியாக வாய் சவடால் தானே அடித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை அழைத்து அடியாளாக வைத்துகொள்ளுங்கள். ஆனால் நீங்கள் முயன்றாலும் அது நடக்காது. காரணம் நீங்கள் ஒரு பெண். உங்கள் உத்தரவை அவர்கள் ஏற்க மாட்டார்கள். காரணம் அவர்கள் ஸ்மார்த்தர்கள். அவர்களுக்கு பெண்கள் வெறும் உடம்புகள்.

என்னது? இந்த விஷயமே உங்களுக்கு தெரியாதா? அது தானே பார்த்தேன். விஷயம் தெரிந்தால் நீங்கள் இந்த கட்சியையே தேர்வு செய்திருக்க மாட்டீர்களே!!

அதனால் அன்பு சகோதரி, முதலில் போய் படியுங்கள்:
ஸ்மார்த்த மதத்தில் நரபலி
ஸ்மார்த்த மதத்தில் பெண்களில் நிலை
ஸ்மார்த்த மதத்தின் ஆரம்பகால உணவு முறை
ஸ்மார்த்த மதத்தின் வரலாறு
ஸ்மார்த்தர்கள் விக்ரக வழிபாடு செய்யக்கூடாது
ஸ்மார்த்தர்கள் இந்துக்கள் அல்ல….

நாங்கள் பூர்வீக குடி. எங்களை பிரிட்டிஷ்காரன் “indigenous stock” என்கிற அர்த்தத்தில் ஹிந்து என்றான். நாங்கள் தான் ஒரிஜினல் இந்துக்கள், எங்கள் கோயிலை பற்றி, எங்கள் சிலைகளை பற்றி, அதன் சீர்திருத்தம் பற்றி நாங்கள் பேசிக்கொள்கிறோம்.

நீங்கள் ஹிந்து அல்ல, நீங்கள் ஸ்மார்த்தர்கள். உங்கள் மத நூற்கள் உங்களை வாயை மூடி அடிமையாய் இருக்க சொல்கின்றன…. அது கூடத்தெரியாமல் எங்களுக்கு வகுப்பெடுக்க வந்துவிடாதீர்கள்!

#yousmarthawehindu

டாக்டர். ஷாலினி, மனநல மருத்துவர்; எழுத்தாளர்.

ஆதித்ய நாத் சாதி அழுக்கிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ள 16 அடி சோப்பு: விசிக அனுப்பியது!

தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும், ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது. இது தலித் மக்களை இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தொல். திருமாவளவன்

உத்தரபிரதேசத்தில் ஆதித்தியநாத் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மேற்கு உத்தரபிரதேசப் பகுதியில் இருக்கும் சகரன்பூர் என்ற இடத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். ஆதித்தியநாத்தின் ஆதரவுபெற்ற தாக்கூர் சாதிவெறியர்கள் அந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கும் போடப்பட்டுள்ளது.

சகரன்பூர் வன்முறையைக் கண்டித்து அண்மையில் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் பேரணி நடத்தினர். அதற்குப்பிறகும்கூட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், தலித்துகள் அசுத்தமானவர்கள் என்று பொருள்படும்படியாக ஆதித்தியநாத் அரசாங்கம் சோப்பும், ஷாம்பும் கொடுத்து அவர்களை இழிவுப்படுத்தியுள்ளது. தங்களை அசுத்தமானவர்கள் எனச் சொல்லி இழிவுபடுத்திய முதலமைச்சர் ஆதித்தியநாத் முதலில் சாதி அழுக்கிலிருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் எனச் சொல்லி அவருக்கு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றை தலித்துகள் இப்போது அனுப்பி வைத்துள்ளனர்.

மத்தியில் பாசக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளன. பெரும்பான்மை பலத்தோடு உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுத்துநிறுத்தப்பட வேண்டும். அவர்களை இழிவுபடுத்திய முதல்வர் ஆதித்தியநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்”.

திமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது: திருமாவளவன் கடிதம்

திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில்,

“காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம்.

காவிரிநீர்ச் சிக்கல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை மைய அரசு வெளிப்படையாக புறக்கணித்துள்ளது. தமிழக மக்களுக்கு எதிரான மையஅரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பமாகும். கடந்த 13.10.2016 அன்று தங்களின் தலைமையில் நடந்த விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியைச் சார்ந்த சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்திலும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கலாம் என்பதை எமது கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைத்தோம்.

காவிரிநீர்ச் சிக்கலைத் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகவேண்டுமென்பதே விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாடாகும். அந்த அடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் .

24.10.2016 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் மக்கள் நல கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்களுடன் மீண்டும் கலந்தாய்வு செய்தோம்.

அப்போது, தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ள சூழலில் , திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மக்கள் நல கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளது.

அதாவது , மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது ‘பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்’ உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் சிலரை அழைத்துவந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எடுத்துரைக்கச் சொல்லியுள்ளனர். சட்டவிரோதமாக ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஹாத் அஹமத் கான் என்பவரின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்துபேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து முறைப்படி காவல்துறையினருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த சிலர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பெங்களூரு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்துத்துவ அமைப்பு ஒன்றின் நெருக்குதலுக்கு கர்னாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பணிந்துபோவதும், தயக்கமில்லாமல் வழக்கு போடுவதும் வியப்பளிக்கின்றன. இந்த நிகழ்வில் சட்டவிரோதமான எந்தவொரு பேச்சும் இடம்பெறாத நிலையில் இப்படி வழக்குபதிவு செய்திருப்பது கருத்துரிமை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது.

இந்தியாவெங்கும் பல்கலைக்கழக வளாகங்களை காவிமயமாக்குவதோடு கல்விச்சூழலையும் சீரழித்துவருகின்ற ஏபிவிபி அமைப்பு இப்போது மனித உரிமை அமைப்புகளைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கிரீன்பீஸ் அமைப்புக்குக் கடுமையான நெருக்கடி தரப்பட்டது. இப்போது ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பைக் குறிவைத்துள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தனது சுதந்திரதின உரையில் ‘ சகிப்புத்தன்மையற்ற பிரிவினைவாத சக்திகள் தமது கோரமுகங்களை உயர்த்த முயற்சிக்கின்றன ‘ என எச்சரித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும்விதமாகவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின்மீதான தாக்குதல் நடந்துள்ளது. அந்த அமைப்பின்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

தலித்துகளுக்கு மேயர் பதவி: 10 ஆண்டு கால நீதிமன்றப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், ரமேஷ்நாதன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், “நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தி உள்ளபடியும், தலித் மக்கள் அதிகமுள்ள மாநகராட்சியில், அந்த மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.7 சதவீதம் தலித் மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

எனவே, சென்னை மாநகராட்சி மேயர் பதவி தலித் மக்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டுகளில் இதற்கு முரண்பாடாக நடைபெற்று வந்துள்ளது.

இதேபோல் சேலம் மாநகராட்சி மேயர் பதவியானது, தலித்துகள், பெண்கள் என சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த மாநகராட்சியிலும், துணை மேயர் பதவியில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை. எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் உள்ள பெண்கள் என்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை தலித்துகளுக்காக மட்டும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல, துணை மேயர் பதவிகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்:

“2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் !

எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது!

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்;இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.

அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது! ஊழல் கறை இல்லாதது!

எனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கும் கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

மேலும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் ( 48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது.எனவே, குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.

அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் ‘கூட்டணி ஆட்சி’ உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்!

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிபடுத்தும் தமிழக பாஜக…

எல்லா இந்துக்களையும் அவரவர் உருவத்தில் வரைந்திருக்கிற இந்துக்களுக்கான கட்சி, திருமாவளவனை மட்டும் எவ்வளவு இழிவாகக் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர், இவர்கள் துரோகிகளாக சித்தரிக்கிற முஸ்லிமும் அல்ல .

மற்றவர்கள் அரசியல்வாதியாக மட்டும் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், திருமா தலித்தாக இருக்கிறார் என்பதற்காகதான் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறார். இது தேர்தலுக்கான விளம்பரம் மட்டுமல்ல, தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட இந்து சமூகத்தின், 1000 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஜாதிவெறியின் நவீன சாட்சி.

thiruma 2

#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி

* தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா?

மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஆதிக்க சாதியினர் விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள். அந்த சாவுக்குச் சென்றிருந்தேன். அவரது அண்ணன் என்னைத் தனியே அழைத்துச் சென்று “எனக்கு பயமாக இருக்கிறது. என்னையும் கொன்று விடுவார்கள்” என்று அழுதார். அப்போது அதை, ஏதோ பயத்தில் சொல்கிறார் என்று நான் நினைத்துவிட்டேன். ஆனால் மூன்றாவது நாள் அவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டார்களென்ற செய்தி வந்தது. அந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.

அப்போது அம்பேத்கர் இயக்கம் எதிலும் இணைந்து வேலை செய்ததில்லை. அரசுப் பணிக்காக மதுரைக்குப் போனேன். அம்பேத்கர் நூற்றாண்டு சமயத்தில் DPI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசினேன். அப்போது மலைச்சாமி அதன் பொறுப்பாளராக இருந்தார். மலைச்சாமி இறந்ததற்குப் பிறகு அந்தத் தோழர்கள் என்னைப் பொறுப்பாளராக அறிவித்துத் தீர்மானம் போட்டார்கள். நான் மதுரைக்குப் போய் எட்டு மாதங்கள் தான் அப்போது ஆகியிருந்தது. இது 1990 ஜனவரியில் நடந்தது. அப்போது பாரதீய தலித் பேந்தர்ஸ் என்ற பெயரில் அமைப்பு செயல்பட்டு வந்தது. மகாராஷ்டிராவில் தொடர்பிலிருந்த அத்வாலேவைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் சரியானபடி எதுவும் கூறவில்லை. அமைப்பை பாரதீய குடியரசு கட்சி என மாற்றும்படி அவர் சொன்னார். எனக்கு அதில் உடன்பாடில்லாததால் அன்று இரவே அமைப்பைக் கூட்டி கொடி, முழக்கம் ஆகியவற்றை முடிவு செய்தோம். இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் ஒரு ஆண்டு செயல்பட்டோம். “இந்திய” என்ற சொல் பலருக்கும் நெருடலாயிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நானும் பேசினேன். அப்போது பேசிய சுப. வீரபாண்டியன் “இந்திய” என்று வைத்திருப்பதை விமர்சித்துப் பேசினார். அதன்பிறகு 1992 முதல் விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். மலைச்சாமி இறந்தபோது ஒரு இரங்கல் செய்தியைக்கூட மகாராஷ்டிராவிலிருந்து கட்சி சார்பில் அனுப்பவில்லை.

நான் நேரடியாக அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் எங்கள் ஊரிலுள்ள செல்லியம்மன் கோயிலில் கதவைத் திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சாதி இந்துக்கள் கோபமாகத் திட்டினார்கள். என் அப்பாவும் என்னைக் கண்டித்தார். எங்கள் ஊரில் சேரியைச் சேர்ந்த ஒருத்தரை மோட்டார் திருடினார் என்று பழி சுமத்தி பத்து விரல்களிலும் துணியைப் பந்தம்போல் சுற்றி சாதி இந்துக்கள் நெருப்பு வைத்தார்கள். அது என் மனதை மிகவும் பாதித்தது. 1990க்குப்பிறகு தென் மாவட்டங்களில் நடந்துவரும் சாதிக் கொடுமைகள் தான் தலித் அரசியலின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தின.

ரவிக்குமார், எழுத்தாளர்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்…

சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது?

திமுக,அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடிப்படையில் கூட்டணி ஆட்சி என்கிற கருத்தை அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டார்கள். ஒரு கட்டாயத்தின்பேரில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். ஆனால், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இந்த நான்கு கட்சிகளும் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதில் முழுமையான உடன்பாடு கொண்டுள்ளன. நான்கு கட்சிகளுக்கும் இந்த விசயத்தில் ஒருமித்த கருத்து இருப்பதால் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது கூட்டணி ஆட்சியாக அமையும் என்பதை வெளிப்படையாக பிரகடனம் செய்திருக்கிறோம். ஆகவே, இந்த கூட்டணி மிக இலகுவாக அமைந்தது. இப்போது வலுவாக வளர்ச்சி பெற்று வருகிறது.

மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் ‘பி’ டீம் என்று சிலர் விமர்சிக்கிறார்களே.

தங்களுடைய பலவீனத்தை சிலர் இத்தகைய விமர்சனங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அதிமுக அரசு ஒரு ‘கொலைகார’ அரசு என்றும் ‘கொள்ளைக்கார’ அரசு என்றும் மிக கடுமையாக மக்கள் நலக் கூட்டணி விமர்சித்து வருகிறது. திமுககூட இந்த அளவுக்கு அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவால் உருவாக்கப்பட்ட அணியாக மக்கள் நலக் கூட்டணி இருக்குமேயானால் அதிமுகவே தன்னை இப்படி கடுமையாக விமர்சிக்க இந்த கூட்டணியை அனுமதிக்குமா? தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்ளுமா?. இது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் திட்டமிட்ட பிரச்சாரமாகும்.

சமூகக் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுகவும் அதிமுகவும் ஒரேமாதிரியாகத்தான் செயல்படுகின்றன என மக்கள் நலக்கூட்டணி விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், சிலர் திமுகவும் அதிமுகவும் ஒன்றல்ல என்று மறுக்கிறார்களே?

பதில்: 1967ஆம் ஆண்டு முதல் இந்த இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவருகின்றன. ஆனால், சமூகத்தில் முற்போக்கான மாற்றங்கள் நிகழவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், கூட்டிக் கழித்துப் பார்க்கிறபோது ஊழல், மது மற்றும் சாதியவாத, மதவாத சக்திகளின் ஆதிக்கம் ஆகியவைதான் மிஞ்சுகின்றன.அதிமுகவை பாஜகவின் இன்னொரு பிரதி என்றே சொல்லலாம். ஆனால், திமுக சமூக நீதி, பெரியாரின் கருத்துக்களைப் பின்பற்றுவது ஆகியவற்றில் அதிமுகவிடமிருந்து ஓரளவுக்கு வேறுபட்டாலும் மற்ற பிரச்சனைகளில் வேறுபடவில்லை. அதிமுக முழுமையான மதவாத, சாதியவாத அடையாளத்தை கொண்டிருக்கிறது. ஆனால், ஊழல், மது வியாபாரம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளில் அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான் என்பதை காணமுடிகிறது.

திமுக, அதிமுகவுக்கு தாங்கள்தான் மாற்று என்று பாமகவும் சொல்கிறது. மாற்றம் தேவை என்றும் அக்கட்சி கூறுகிறதே?

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தலித் வெறுப்பு அரசியலில் இருந்து வளர்ந்திருக்கிற ஒரு ஆபத்தான சக்தி. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாஜக என்றால் தலித் வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாமக. பாஜக `இந்துத்துவா’ கோட்பாட்டை, கருத்தியலை வெளிப்படையாகச் செயல்படுத்தி வருகிறது. அதிமுக,திமுக போன்று பாமக மீதும் ஊழல் வழக்கு உள்ளது. சாதிய மதவாத முத்திரை உள்ளது. எந்த வகையிலும் திமுக-அதிமுகவுக்கு ஒரு முற்போக்கான, புரட்சிகரமான மாற்று சக்தியாக பாமகவை பார்க்கமுடியாது.

தேர்தலுக்கான உடன்பாடு என்பதை தாண்டி பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய தத்துவப் பின்புலத்துடன் மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது என்று கூறலாமா?

கட்டாயமாக. அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். தேர்தல்பாதைக்கு வந்ததில் இருந்தே இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். இப்போது மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரக் கூட்டங்களில்கூட ஒரு தத்துவப் பின்புலத்தோடு இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்பதைக் கூறி வருகிறேன்.மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய தத்துவங் களின் பிரதிநிதிகளாக முறையே இடதுசாரிகளும், மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்த்திருக்கிறோம். எனவே, இது ஒரு தத்துவப் பின்னணிக்கொண்ட கூட்டணி என்பதை மனப்பூர்வமாக நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் திருவிழாவைத் தாண்டி இது தொடரும். தொடர வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தை முடித்து உள்ளீர்கள். அதில் உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன? மக்கள் நலக்கூட்டணிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? அரசியல் சாராத புதிய வாக்காளர்கள் என்ன கருதுகிறார்கள்?

இந்த நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். சொல்லப் போனால் குற்ற உணர்வோ, எவ்வித கூச்சமோ இல்லாமல் பணியாற்றுகிறார்கள். அதிமுக, திமுக கூட்டணியில் இணைந்திருந்த போது கட்சித் தொண்டர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் ஒருவகை உறுத்தல் இருந்தது. மனதுக்குள் விமர்சனங்களை வைத்துக்கொண்டுதான் செயல்படவேண்டியிருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஊழல் மற்றும் ஆடம்பர அரசியல் ஆர்ப்பாட்டங்களை சகித்துக்கொண்டே தேர்தல் பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது அத்தகைய குற்ற உணர்வுகள் ஏதும் இல்லாமல் மிகவும் சுதந்திரமாக மகிழ்ச்சியோடு கூட்டணியின் தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்த சுற்றுப்பயணத்தில் என்னால் காண முடிந்தது.

அத்துடன் கட்சி சாராத பொது மக்களும் வெகுவாக கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது மாற்றத்திற்கான ஒரு அறிகுறியாகும்.

சாதிய ஆணவக் கொலைகளை படித்தவர்களே சமூக வலைத் தளங்களில் நியாயப்படுத்தி பழிவாங்கிவிட்டோம் என்கிற அடிப்படையில் கருத்துக்களை பரப்புகிறார்கள். சாதி என்பது கிராமப்புறங்களில் மட்டும்தான் இருப்பதாக கருதமுடியுமா?

சொல்லப்போனால் கிராமத்தில் உள்ள உழைக்கும் மக்களிடம் வெறித்தனமோ வெறுப்பு அரசியலோ கிடையாது. வேறு வேறு சாதியாக இருந்தாலும் உழைக்கும் இடத்தில் அண்ணன் தம்பியாக பழகவில்லை என்றாலும் ஒருதோழமை உணர்வு இருக்கிறது. வெறுப்பு அல்லது மோதல் என்பது அவர்களிடம் இயல்பாக வெடிக்கவில்லை. இதை விதைத்து தூவி விடுவது படித்தவர்களில் சிலரும் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறவர்களும்தான். மக்களிடம் உள்ள இடைவெளியை தெரிந்து கொண்டு வாக்குவங்கியாக மாற்ற முடியும் என்று நம்பக்கூடியவர்கள்தான் உழைக்கும் மக்களிடத்திலேயே சாதி வெறியை பரப்புகிறார்கள்.படித்தவர்களில் சிலர்தான் மிகமோசமான தற்குறிகளாக சாதி, மத வெறியர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். நமது கல்வி மனிதநேயத்தை போதிக்கவில்லை. சமூக நல்லிணக்கத்தை போதிக்கவில்லை. ஒரு வகையான ஆதிக்க மனோபாவத்தையும் வெறுப்பு மற்றும் விரக்தி மனோநிலையையும் உருவாக்கியிருக்கிறது. அதுதான் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வெளிப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதி என்ன?

ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவோம் என மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டிருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சொல்லியிருக்கிறோம். ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்தா’ சட்டம் கொண்டு வருவோம். கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். ஐந்தாயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு சர்வசாதாரணமாக கொடூரமாகக் கொலை செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது. இதை ஒழிப்பதற்கு நிச்சயமாக மக்கள் நலக்கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபடும்.