இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள்

மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.

அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.

அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியி்ன் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 உயரமும் கொண்ட கருஙகல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளீகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.

இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.

மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.

இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.

இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.

நள்ளிரவில் கனமழையில் ஏற்கெனவே சிதிலமாகியிருந்த சுவர் இடிந்து விழுந்து விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிவாங்கியது. இந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் ஏற்கெனவே வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள், எழுத்தாளர்; வழக்கறிஞர்.

வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்.

“இந்துக்களிலேயே உன்னதமானவர்” என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய‌ சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக‌ காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள்.

காந்தியின் தொடக்ககாலப் புரிதல்

காந்தி, அம்பேத்கர் இருவரும் சாதியமைப்பை வெவ்வேறு வகைகளில் அணுகியவர்கள். சில இடங்களில் நெருக்கமாகவும் – விலகியும் நின்று எதிரொலித்து இருக்கிறார்கள். ஒருவகையில் இச்சமூகத்தின் பொதுப் பிரச்சனையான சாதி – தீண்டாமை இருவராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அடிப்படையில் நமக்குத் தேவையான பகுதி இது தான். சாதிகளின் தோற்றத்தை விளக்க முற்படுகிற பலர் அதை வருணம், பிராமணியம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு மட்டுமே பார்த்துவிட முடியுமா என்பது கேள்வி தான். அது வட்டாரம், காலம், ஒழுங்கு போன்ற‌ சூழலுக்கு ஏற்ப எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது? காலப்போக்கில் ஒவ்வொரு குழு, இனம், குலம், பண்பாடு என எப்படி விரிவடைந்திருக்கிறது? என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடைந்து வருகிற‌ சாதியை அணுகுவதில் இருக்கிற பிரச்சனை அது. காந்தியின் புரிதலும் அத்தகைய‌ வளர்ச்சி மாற்றங்களில் இருந்து உருவானது தான். ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை அனுபவத்தோடு காந்தியின் புரிதலை ஒப்பிட முடியாது.

1916 – ல் இந்திய சாதியமைப்பை அம்பேத்கர் பேசியபோது, காந்தி தீண்டாமைப் பிரச்சனைகளைப் பேசினார். “தீண்டாமை பாவகரமான செயல். அதை பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றார். “சாதியமைப்பு இந்து மதத்தை அழிவிலிருந்து காப்பாற்றி வருகிறது” என்கிற அவரின் தொடக்ககால (1920 – 21) நம்பிக்கை சாதிமறுப்பாளர் மத்தியில் இன்று வரைக்கும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. “ஒருவருடைய‌ பிறப்பு சார்ந்த அடையாளமும், பரம்பரைச் சட்டமும் எல்லா காலத்துக்கும் உரியது. அதை மாற்ற நினைப்பது பெரும் குழப்பத்துக்கு வழி வகுக்கும்.” என்கிற முன் முடிவும் தலித்துகள் காந்தியை வெறுக்கக் காரணமாக அமைந்தது. 1927 -லிருந்து 1932 செப்டம்பர் 24, பூனா ஒப்பந்தம் வரையிலும் சாதி மற்றும் வர்ணாஸ்ரம அமைப்பின் மீது அமர்ந்தவாறே எல்லா அரசியல் பிரச்சனைகளையும் அணுகினார் என்பது மறுப்பதற்கில்லை.

காந்தியின் பல‌ வாதங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவு ரீதியாக தொடக்கத்திலிருந்தே நிராகரித்தார். இந்திய விடுதலை, சமூகம், அரசியல், வர்ணாஸ்ரமம், கர்மா, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை போன்றவற்றில் அவருக்கு இருந்த பிரச்சனையை சித்தாந்த ரீதியாக விமர்சித்தார். கடிதம் மூலம் எழுதியும் வந்தார். அது காந்தியை அம்பேத்கருடன் தொடர்ந்து போராட வைத்தது. இறுதிக் காலத்தில் கோரே போன்றோர் வலியுறுத்திய கருத்துக்களும் காந்தியிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1930 -க்கு முன் இருந்த‌ சாதி பற்றிய புரிதலை கொஞ்சம் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அது தான் காந்தியை சாதி மறுப்புத் திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த பேருண்மைகள் நாம் எதிர்பார்க்கிற‌ நன்மைகளுக்கு எதிரானது கிடையாது. ஆனால் விரோதமானது என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

பிற சாதியினருடன் சேர்ந்து உண்ணுதல் – சாதி மறுப்புத் திருமணம்

“சாதி என்பது அடக்குமுறையின் மற்றொரு பெயர். அது ஒருவரை தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை” என்கிற வாதம் காந்தியிடம் ஏற்பட்ட‌ இன்னொரு மாற்றம். நுட்பமாகப் பார்த்தால் 1921 -ல் நவஜீவன் இதழில் எழுதிய‌ சாதி, வருணம் பற்றிய‌ அவரின் கருத்தை அவரே மறுப்பதாக இருக்கிறது. பிற‌ சாதியினருடன் சமமாக‌ அமர்ந்து உண்ணுவது, சாதி மறுப்புத் திருமணத்தின் மீதான‌ கட்டுப்பாடு மற்றும் குறுக்கீடு இந்து மதத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் இந்த இரண்டு தடைகளும் இந்து மதத்தின் வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது என்றார். அதற்கு உபகாரமாக “பிற சாதியினருடன் சேர்ந்து உண்ணுதல் – சாதி மறுப்புத் திருமணம்” என்கிற இறுதி முடிவுக்கு வந்தடைந்தார். இந்த இரண்டையும் ஒருபோதும் ஆட்சேபிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதற்கான செயல்பாடுகளையும் திட்டமிட்டார்.

வெவ்வேறு மதங்களை மறுத்த‌ திருமணம் அதற்கு முதல்படி. 1930 -ல் எழுத்தாளர் ஹுமாயூன் கபீர் – சாந்தி லதா தாஸ் குப்தாவுக்கும், 1935 -ல் நேருவின் உறவினரான ப்ராஜ் குமார் நேரு – மக்டினோ ஃப்ரிட் (யூதர்) தம்பதி திருமணத்திற்கு தார்மீக ஆதரவளித்தார். இந்த இரண்டு திருமணங்களும் செல்வாக்கான‌ குடும்பங்களுக்கு உரியது. அதே சமயம் வலுவான‌ மத அடையாளம் சார்ந்தது. ஆனால் வருணம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது என்கிற அவரது கருத்தை இந்த நிகழ்வு மறுபரிசீலனை செய்கிறது. “பரம்பரைத் தொழில்கள் மீது கொண்டிருந்த நிலையான புரிதலில் இருந்து விலகி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற வகைமைக்குள் வருகிறார். வர்ணா அமைப்பு இப்போது உடைந்து விட்டது. சாதியை நவீன கருத்தில் நான் நம்பவில்லை. வளர்ச்சிக்கான பாதைக்கு தடையாகவும், முடமாகவும் இருப்பதாகப் பார்க்கிறேன். அல்லது நான் நம்புகிற மனிதத் தன்மைக்கும், நம்பிக்கைக்கும் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. ஆனால் திருமணம் புனிதமானது. அதில் பரஸ்பர நட்பு இருக்க வேண்டும்” என்கிறார்.

1931 ஆகஸ்டில் அம்பேத்கருடன் நிகழ்ந்த‌ முதல் சந்திப்பு காந்திக்கு மகிழ்ச்சியாக இல்லை. அம்பேத்கரின் காங்கிரஸ் அரசியல் விமர்சனங்கள் அவரை வெகுவாகப் பாதித்தது. இரட்டை வாக்குரிமையில் நிலை தடுமாறிய காந்தி 1932 – பூனா ஒப்பந்தம் கொடுத்த நெருக்கடியால் ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். அது தலித்துகளுக்காக தனி வேலைத் திட்டத்தை வரையறுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உருவான காங்கிரஸ் அரசும் தலித்துகளுக்கான நலத்திட்டங்களை அறிவித்தது.

இக்காலக் கட்டத்தில் (1933 – 1934) அகமண‌ விவாகங்களை விமர்சித்து அவர் மேற்கொண்ட தீண்டாமைக்கு எதிரான சுற்றுப்பயணம் முக்கியமானது. அது பலத்த எதிர்ப்பை சந்தித்தது. ஹிந்து மகா சபையினர் அவர் சென்ற இடத்தில் எல்லாம் கறுப்புக் கொடி காட்டினார்கள். பூனாவில் நடந்த ஒரு கூட்டத்தில் மனித மலத்தை வீசினார்கள். நீ பிராமணன் இல்லை, உனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நீ எங்களின் சடங்கு – சம்பிரதாயங்களை கேள்விக்குள்ளாக்குகிற பனியா” என்று விமர்சித்தார்கள். வைதீகமும் – முற்போக்கும் வரிந்து கட்டியது. 1937 -ல் சேவாகிராம் இல்லத்தில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற முடிவு சனாதனிகள் விரும்பாதது. அன்றைக்கு காந்தியை சந்தித்த வல்லபாய் படேல் “தீண்டாமையிலிருந்து விடுபட்டு, படிப்படியாக‌ சாதி மறுப்புத் திருமணத்தை நோக்கி நகருகிறீர்கள் போலத்தெரிகிறதே” என சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு காந்தி பாமர‌ மக்களுக்கு வேண்டுமானால் தீண்டாமையிலிருந்து விடுபடுவது போதுமானதாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றோருக்கு “அவர்களைத் தொடுவது மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி . . . அவர்களோடு சேர்ந்து உண்ணுவதிலும், திருமணம் வைத்துக் கொள்வதிலும் வெகுஜன இந்துக்களுக்கு இருக்கிற தடைகளை தகர்ப்பதாக இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

சாதி மறுப்புத் திருமணத்துக்கு ஆதரவு

பாப்லோ நெரூடா சொல்வதைப்போல வாழ்க்கையை வாழ்க்கையிலிருந்தே திட்டமிடுவதும் மாற்றத்துக்கான குறியீடு தான். காந்திக்கு தனது மகனின் திருமண அனுபவத்தில் இருந்த‌ புரிதல் 1940 -களில் இல்லை. சற்றேரக்குறைய மாறிவிட்டது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தலித் பெண்ணுக்கும், உயர்சாதி ஆணுக்கும் நடக்கிற காதல் திருமணங்களை ஆதரிக்கத் தொடங்கினார். ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாக வேண்டும். “1940 மார்ச் இறுதியில் ராதாமதாப் என்கிற பிராமண இளைஞர், இந்து மதச் சடங்குகளின்படி ஆயிரம் பேர் சூழ ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மாணவராக இருக்கும்போது கால்பந்து விளையாடுவதற்காக ஒரு தலித் கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது அவருடன் இருந்த சக மாணவர்கள் கூட்டாக‌ சேர்ந்து, நாம் தலித் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என‌ உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்த உறுதிமொழியிலிருந்து பலர் பின்வாங்கி விட்டனர். ஆனால் நான் அதில் உறுதியாக இருந்தேன். எங்கள் சாதியினர் கடுமையாகத் திட்டினார்கள். ஆச்சாரம் கெட்டு, தெய்வ குத்தம் ஆகிவிடும் என எச்சரித்தார்கள். பிராமணர் உள்ளிட்ட‌ உயர்சாதி மக்களோடு தலித்துகள் சமமாக அமர்ந்து மணமகளின் தந்தையிடம் தாம்பூலம் வாங்கியதை நினைத்துப் பார்க்கிறேன்” என ராதாமதாப் தனது அனுபவத்தை காந்தியிடம் பகிர்ந்து கொண்டார். வேதங்களையும், சாஸ்திரங்களையும் புரட்டிப்போட்ட ராதாமதாப்பின் வாக்குமூலம் காந்தியை பிரமிக்க வைத்தது.

பொதுவாக காந்தி எல்லோரையும் தன் பக்கம் கவர அசாதராணமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. ராதாமதாப்பின் அனுபவம் அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது. அந்த சமயத்தில் இரண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பகிரங்கமாக‌ ஆதரித்தார். டாக்டர் சௌந்தரம் (பிராமணர்) – ஜி. ராமச்சந்திரனுக்கும் (சூத்திரர்), கோவா காங்கிரஸ் தலைவர் டாக்டர். ஏ.ஜி. டெண்டுல்கர் (உயர்சாதி இந்து) – இந்துமதி (தீண்டப்படாதவர்) தம்பதிக்கும் நடந்த காதல் திருமணம் அது. ஒரு தலித்தும், தலித் அல்லாதவரும் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே என்னுடைய ஆசிர்வாதம் அந்த தம்பதிக்கு உண்டு என்றார். அவரது மரணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் (1946) சாதி மறுப்புத் திருமணங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார். இனி சேவாகிராமம் ஆசிரமத்தில் நடைபெறும் எந்த திருமணமாக‌ இருந்தாலும் அதில் ஆணோ அல்லது பெண்ணோ நிச்சயம் ஒரு தலித்தாக இருக்க வேண்டும் என தீர்க்கமாக அறிவித்தார். சாதி ஒழுங்குகள் கூர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் பின்விளைவுகளை யோசிக்காமல் முடிவெடுப்பதும் ஆளுமைக்குரிய அடையாளம்.

சாதிமறுப்புத் திருமணம் சாத்தியமா?

காந்தியை விமர்சிப்பவர்கள் அவர் முன்னுக்குப் பின் முரணாக எதையாவது சொல்லுவார் என கருத்துக் கூறுவது உண்டு. உண்மை தான். சாதிமறுப்புக்காக தலித்துகள் சத்தியம் பேசினால், காந்திக்காக கோயில் கட்டுகிறோம் என விமர்சிக்கப்படுவோம். ஆனால் முன்னுக்குப் பின் முரணான‌ காந்தி ஏற்படுத்திய தாக்கம் அவர் சுற்றுப்பயணம் செய்த பல மாநிலங்களில் இன்னமும் பிரதிபலிக்கிறது. நவீன வார்த்தைகளில் முற்றாக‌ சாதியை ஒழிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் சாதி, வருணங்களுக்கு இடையே தாறுமாறான‌ கலப்பைத் தொடங்கி இருக்கிறது. இந்த கலப்பு இன வாதத்துக்கும், தூய்மை வாதத்துக்கும் கிடைத்த பேரிடி.

இந்திய மானுட வளர்ச்சிக் கணக்கெடுப்பு – 2005 (IHDS) -ன் அறிக்கையோடு செய்யப்பட்ட ஒரு ஆய்வு இதை கொஞ்சம் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் நடக்கிற‌ சாதி மறுப்புத் திருமணங்கள் 5%. இதில் 96.5% காதல் திருமணங்கள். அதிகம் வடமாநிலங்களில் தான் நடக்கிறது. பஞ்சாப் 12.2% – மேற்கு வங்கம் 9.3% – குஜராத் 8.2% பெற்று முதலிடம் வகிக்கிறது. மும்பையிலிருந்து வெளியான இன்னொரு ஆய்வு கோவா, பஞ்சாப், சிக்கிம், குஜராத் மாநிலங்களைக் காட்டுகிறது. ஆனால், கல்வியிலும் இதர வளர்ச்சியிலும் முன்னோடியாகக் கருதப்படுகிற‌ தென்னிந்தியாவில் 9.71% மட்டுமே. அதிலும் முற்போக்கு, புண்ணியபூமி என்றெல்லாம் வருணிக்கப்படுகிற தமிழ் நிலப்பரப்பில் 2.2% என‌ ஆய்வு சொல்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிக, மிகக் குறைவு. சாதி – தீண்டாமை ஒழிப்பில் நாம் பார்க்கத் தவறிய‌ வெற்றிடம் இது. இங்கு சாதி மட்டுமல்ல, அதனை எதிர் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் முழக்கங்களும் கற்பிதமாகவே இருந்து வருவதை தரவுகள் மெய்ப்பிக்கிறது. இத்தணை ஆண்டுகளாக நாம் பேசிய‌ சமூகநீதி, மதச்சார்பின்மை, இன‌ அடையாளம், மொழிவழி தேசியம், காந்தியம் எல்லாம் சாதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது.

காந்தியும் – ஆணவக் கொலையும்

காந்தியின் மரணத்துக்கு எது காரணமாக இருக்கும் என்கிற அரசியலை இப்போது கையிலெடுத்திருக்கிறோம். ஆனால் சாதி மறுப்புத் திருமணத்தை தேடாமலே விட்டு விட்டோம். அவ்வாறு தேடியிருந்தால் எல்லோரையும் போல வாழ விரும்பிய‌ காதலர்களை ஆணவக் கொலைகளில் இழந்திருக்க மாட்டோம். கடந்த மூன்றாண்டுகளில் காதலித்து திருமணம் செய்து கொண்ட 80 பேர் கொல்லப்பட்டிருப்பதாக “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” சொல்கிறது. உடுமலைப்பேட்டை சங்கருக்கு நிகழ்ந்த ஆணவக்கொலையில் மரண தண்டனை கிடைத்தும், தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என போராடி வருகிறோம். மனித உரிமைகளை மதிப்பதற்கும், மனித மாண்பைப் போற்றுவதற்கும் சட்டங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம். சாதிக்கும் அப்பாற்பட்ட‌ ஒரு காந்தியைப் போன்ற தோழனை அடையாளம் காண முடியாமலும் தவிக்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டியது, தலித்துக்கும் உயர்சாதிக்கும் இடையே நடக்கிற‌ காதல் திருமணங்கள் தலித்துகளைக் கொல்வதில்லை. ஆனால் ஒரு தலித்துக்கும் இடைநிலைச் சாதிக்கும் இடையே நடக்கிற காதல் திருமணம் சடுதியில் கொன்று விடுகிறது. எழுந்து வரும் புதிய சாதியவாதத்தில் இது குறித்த‌ மனம் திறந்த‌ ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சாதிமறுப்புத் திருமணங்களில் மரணங்கள் மட்டுமே பிரச்சனை இல்லை. அதை சரி செய்வதற்கான‌ புரட்சிகர‌ வேலைத்திட்டங்களும் சிதைந்து கிடக்கின்றன. 2013 -ல் மத்திய அரசு கொண்டு வந்த ‘டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமணத்திட்டம்’ தன்னளவில் பெயராக நிற்கிறது. அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கான இயக்கங்கள் இல்லை. ‘தமிழகத்தில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள எவருமே முன்வரவில்லை’ என மாநிலங்களவையில் சமூக நலத்துறை அமைச்சர் விஜயபாலா சொல்கிறார். இவற்றுக்கு மத்தியிலும் “சாதிமாறி திருமணம் செய்பவர்களை பஞ்சாயத்து அமைப்புகளோ, பெற்றோர்களோ தடுக்கக் கூடாது” என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சாதிமறுப்பை விரும்புகிற‌ காந்திகளுக்குத் தான் இங்கே கடும் பஞ்சம்.

இறுதியாக‌

புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் காந்தியைப் புறக்கணிப்பதற்கும், வட்டார – தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பதற்கும் இடமளிக்கிற‌ காலச்சூழலை மாற்றியாக வேண்டும். நாம் நேசிக்கிற‌ மாபெரும் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்ற செயல் அது. எழுபதாண்டு நினைவில் அவரவருக்கு ஏற்ற காந்திகளில் காதலர்களின் சாதிமறுப்புக்கும் ஒரு காந்தி மிச்சம் இருக்கட்டும்.

கட்டுரையாளர் : அன்புசெல்வம், “சாதி இன்று” அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

பி-கு : இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகள் Exploring the Myth of Mixed Marriages in India (Journal of Comparatively Family Studies) ஆய்விலிருந்தும் Mark Lindley -ன் “Changes in Mahathma Gandhi’s Views on Caste and Inter Marriage” கட்டுரையிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?

மாதவராஜ்

மாதவராஜ்

இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த, திருமணமான பெண்தான் வேண்டும் என்று பார்த்திருக்கின்றனர். நிர்மலா குல்கர்னி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண் அவர்களுக்கு சமைத்துக்கொடுத்திருக்கிறார்.

சில நாட்கள் கழித்து நிர்மலா பிராமணர் அல்ல என்பதும் அவர் நிர்மலா யாதவ் என்றும் அறிய நேர்ந்திருக்கிறது. மேதா விநாயக் கோல் காவல்நிலையத்தில் தங்கள் மதச்சடங்குகளை, உணர்வுகளை நிர்மலா புண்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கின்றனர். ஆள்மாறாட்டம், கடும் ஆத்திரமூட்டல், உள்நோக்கத்துடன் அமைதியை குலைத்தல் என்னும் பிரிவுகளில் நிர்மலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்? பெற்ற உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்? இதில் என்ன ஆள் மாறாட்டம் வாழ்கிறது? எந்த அமைதி குலைக்கப்பட்டு விட்டது?

வர்ணாசிரம முறைகளைக் கொஞ்சம் கூட தளர்த்திக்கொள்ள முடியாமல் இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நிர்மலா சமைத்த உணவு செரித்து, அவர்கள் மூளையில் போய் அடைத்துக் கொண்டது போலும்!

தீண்டாமையை வலியுறுத்தும் இந்த ஜென்மங்களை வன்கொடுமைச் சட்டத்தில் முதலில் பிடித்து உள்ளே போட வேண்டும்!

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

 

’சாதிக்காரர்’ கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை; மனைவிக்காக பாறைகளைக் குடைந்து கிணறு வெட்டிய நம்பிக்கையாளர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது தேசிய செய்தியாகியுள்ளது. வறண்ட நிலங்களும் வறண்ட குடங்களுமாக மக்கள் தண்ணீர் குடங்களுடன் வரிசை கட்டி நிற்பது தினசரிகளில் காண முடிகிறது. இத்தகைய பஞ்ச நிலையிலும் ‘சாதியத்தை’ பிடிவாதமாகக் கடைப் பிடிக்கும் மனிதம் அற்றவர்களை இந்திய மண்ணில் மட்டுமே காண முடியும்.

மகாராஷ்டிர மாநிலத்தின் வாசிம் மாவட்டத்தில் கலாம்பேஷ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபுராவ், ஒரு ஏழை தலித் தொழிலாளி. மற்ற இடங்களைப் போல இவருடைய கிராமத்திலும் தண்ணீர் பஞ்சம். ‘சாதிக்காரர்கள்’ மட்டுமே கிணறு வைத்திருந்தார்கள். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, தண்ணீர் பெற்று வரவேண்டும். ஒருகட்டத்தில் அந்தத் தண்ணீரையும் தரமறுத்து அவமதித்து அனுப்பப் பட்டிருக்கிறார் பாபுராவின் மனைவி சங்கீதா.

“நான் அந்தக் கிணறின் உரிமையாளர் பெயரை சொல்ல விரும்பவில்லை; எங்களுடைய மண்ணுக்கு கெட்ட பெயர் தர நான் விரும்பவில்லை. நாங்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் எங்களுக்கு தண்ணீர் தரமறுத்தார்கள் என்பதை நான் உணர்ந்தேன். அது போன மார்ச் மாதத்தில் ஒரு நாள். நான் அன்று அழுதேன். தண்ணீருக்காக இனி யாரிடமும் கையேந்தக் கூடாது என முடிவெடித்தேன். அடுத்த சில மணி நேரத்தில் அருகில் இருக்கும் மலேகான் நகருக்குப் போனேன். கிணறு வெட்டத் தேவையான உபகரணங்களை வாங்கினே” என்கிற பாபுராவ், தனி ஒருவராக 40 நாட்கள் பாறைகளைக் குடைந்து குடைந்து 15 ஆழத்துக்கு கிணறு வெட்டி தண்ணீரை வரவழைத்திருக்கிறார்.

பாபு ராவ் தன் மனைவி சங்கீதாவுடன் (TOI photo by Shailesh Mishra)

இந்த இடத்தில் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் என எந்தவித உறுதியும் இல்லாமல்தான் தோண்டத் தொடங்கியிருக்கிறார் பாபுராவ். கடவுளை வேண்டிக் கொண்டு வெட்ட ஆரம்பித்தேன், என் நம்பிக்கைக்கு பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்.

தினப்படி வேலை செய்யும் பாபுராவ், தன்னுடைய வருமானத்தை இழந்தால் குடும்பத்தை நடத்த முடியாது என்பதால், தினமும் பணிக்குச் செல்லும் முன் நான்கு மணி நேரம் கிணறு தோண்டும் பணியைச் செய்துவிட்டுக் கிளம்புவார். பணியிலிருந்து திரும்பி வந்து மீண்டும் இரண்டு மணி நேரம் கிணறு தோண்டுவார்.

“இந்த நாட்களில் என்னுடைய உணர்வு எப்படி இருந்தன என எல்லாம் விளக்க இயலவில்லை. எனக்கு தண்ணீர் வேண்டும் அவ்வளவுதான். என்னைப் போன்று இங்கிருக்கும் மக்கள் இனி ஒருபோதும் ‘சாதிக்காரர்கள்’ வீடுகளுக்கு தண்ணீர் கேட்டுப் போகக் கூடாது என்பதுதான் உறுதியோடு என்னை இயக்கியது” என்கிற பாபுராவ் பி. ஏ மூன்றாம் ஆண்டு வரை படித்தவர்.

பாபுராவின் மனைவி சங்கீதா கூட, தன் கணவரின் முயற்சியை பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்காக வருத்தம் தெரிவிக்கிறார். “ஆரம்பத்தில் இவருடைய பணியை நான் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர் வெட்டிய கிணற்றில் நீர் சுரக்கத் தொடங்கிய பின் தான் நான் உதவத் தொடங்கினேன். இப்போது குடும்பத்தில் உள்ள எல்லோரும் உதவுகிறோம். இப்போது 15 அடி ஆழத்துக்கு கிணறு உள்ளது. இன்னும் 5 அடி வெட்ட வேண்டும். இதற்கு அக்கம் பக்கம் உள்ள குடும்பத்தினரும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் சங்கீதா.

 பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயஸ்ரீ, “பாபுராவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் சுரக்கிறது. இதுநாள் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தின் மற்றொரு பகுதி சென்று தண்ணீர் சுமந்துவருவோம். பல நாட்கள் அவமானத்தையும் சுமந்துவருவோம்” என்கிறவர், பாபுராவை புகழ்கிறார்.
மராத்தி சேனல் ஒன்று பாபுராவைப் பற்றி செய்தி வெளியிட, வெளியுலகத்துக்கு பாபுராவின் சாதனை தெரியவந்திருக்கிறது. மலேகான் தாசில்தார் பாபுராவுக்கு பூங்கொத்து அனுப்பிவைத்திருக்கிறார். நடிகரும் விவசாயிகளுக்கு உதவி வருபவருமான நானா பட்டேகர் இவரை விரைவில் சந்திப்பதாக தொலைபேசியில் சொல்லியிருக்கிறார். ஒரு சமூக செயல்பாட்டாளர் ரூ. 5 ஆயிரத்தை பாபுராவுக்கு அளித்திருக்கிறார்.

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது”  பெங்களூரு ப்ரெஸ்டீஜ் சாந்திநிகேதன் என்னும் கேட்டட் கம்யூனிடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகங்கள் இவை. கேட்டட் கம்யூனிடி என்னும் குடியிருப்புகள் தீண்டாமை குடியிருப்புகளாக மாறிவருவது குறித்து பெங்களூரு மிரர் A gulf, maid in B’luru என்னும் தலைப்பில் ( by Maitreyi Krishnan and Clifton D’ Rozario. (This is a guest post by the writers who are lawyers practicing in the Karnataka High Court as well as the lower courts, and members of the All India Central Council of Trade Unions) ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

ஏப்ரல் 13ந் தேதி, சிறு நகரமான பிரஸ்டீஜ் சாந்திநிகேதனில் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் வீட்டின் முற்றம் மற்றும் நீச்சல் குளப் பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகள். இங்கு பணியாட்கள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்பு சங்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டிக்கு பல குடியிருப்பு வாசிகள் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். இது வர்க்க ரீதியான பாகுபாட்டை, தீண்டாமையை வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“வீட்டுப் பணியாட்கள் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. ஒரு வீட்டின் உரிமையாளர் வரும்வரை இன்னொரு வீட்டில் வேலை செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவர்களை ஏதோ ஒரு ஒதுக்குப்புறமாக காத்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித நியாமும் இல்லை. இதில் பலர் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பெயர் சொல்லமுடியாது இந்தக் குடியிருப்பு வாசி கருத்து சொல்கிறார்.

“இதுபோன்ற சட்டதிட்டங்களால் ஏழைகளுக்கு எதிரான வேறுபாட்டை உருவாக்குகிறோம். நம் பிள்ளைகளுக்கு தவறான முன்னுதாரணமாக நாமே இருக்கிறோம்” என்கிறார் அவர்.

இந்த குடியிருப்பு வாசிகள் சங்கம், குழந்தைகளின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவிப்பு என்கிறது. அதாவது பின் வாசல் வழியாக வந்துவிட்டுப் போவதால் குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராதாம். இந்த அறிவிப்பு குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் பொருந்தாதாம்.

“எல்லா பணியாளர்களும் காவல் நிலையம் மூலம் பரிசோதிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டே உள்ளே பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது சப்பைக் கட்டு. அதோடு ஏழைகள் தவறு செய்வார்கள் என்பதற்கு படித்தவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பதற்கும் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?” அந்த குடியிருப்பில் வசிக்கும் மற்றொருவர் கேட்கிறார்.

சாந்திநிகேதன் மட்டுமல்ல பல குடியிருப்புகள் இப்படித்தான் தீண்டாமை குடியிருப்புகளாக இருக்கின்றன என்கிறது மிரர். மகாதேவபுராவில் உள்ள பிரிகேட் மெட்ரோபாலிஸ் இதுபோன்ற கட்டுப்பாடு உள்ளதாக சொல்கிறது.

கீதா மேனன், சமூக ஆர்வலர் பெங்களூருவில் இது பொதுவாக உள்ள நிலைமைதான் என்கிறார். வீட்டு உதவியாளர்களின் நலத்துக்காக செயல்படும் அமைப்பொன்றை நடத்துகிறார் இவர்.

“இங்கே இருக்கும் பெரும்பாலான குடியிருப்புகளில் சொல்லப்படாத விதிகள் பல உள்ளன. தங்கள் வீட்டுக்குள் உதவியாளர்கள் சாப்பிடுவதைக் கூட பல குடியிருப்பு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. வீட்டை சுத்தம் செய்வதற்கும், துணிகளை துவைப்பதற்கும் அவர்கள் வேண்டும். ஆனா, அவர்கள் தீண்டத்தகாதவர்கள். அவர்கள் வர வேண்டும், வேலை செய்ய வேண்டும், பேசவே கூடாது, வேலை முடிந்ததும் கிளம்பவேண்டும். இதைத்தான் பலர் எதிர்பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்” என்கிறார் கீதா.

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்

கை. அறிவழகன்

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் பாரி வேந்தர், கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச் செல்வனுக்கு ஒரு ஊடகவியலராக நன்றாகவே தெரியும் அவர் சமூக நீதிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று, ஆனாலும், தான் வேலை பார்க்கிற ஒரு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பேசுகிற அபத்தமான சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துப் பெரிய அளவில் அவரால் கேள்வி கேட்க முடியாது.

ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்குத் தடுப்பூசி போட மறுக்கிற சமூகத்தில், இன்னொரு ஒடுக்கப்பட்ட மனிதனை நீங்கள் மருத்துவராக முன்வைக்க வேண்டியிருக்கிறது, ஒரு ஒடுக்கப்பட்ட குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரைத் தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது, ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனை கல்விக் கூடங்களில் மலமள்ள வைக்காமல் இருக்க நீங்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட ஆசிரியரைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

ஏழ்மையை எமது குழந்தைகள் புரிந்து கொள்வார்கள், வறுமையை எமது குழந்தைகள் ஏற்றுக் கொண்டு வாழப் பழகி இருக்கிறார்கள், ஏழ்மை ஒரு எல்லோருக்கும் பொதுவானதாகவும், சம நீதியுடனும் இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆனால், உரிமைகளையும், சுய மரியாதையையும் இழப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தான் ஏன் பகல் உணவின் போது தனியான இடத்தில் அமர வைக்கப்படுகிறோம் என்கிற கேள்விக்கான பதிலை இலவச உணவு மட்டுமே அவர்களுக்குத் தந்து விடவில்லை, தான் ஏன் இன்னொரு தெருவுக்குள் செருப்போடு நடந்து போகக் கூடாது என்கிற கேள்வியை இலவசக் காலணித் திட்டமும், இலவசப் பயணத் திட்டமும் அவனுக்கு விளக்குவதில்லை, தன்னை விட ஏழை மாணவனின் உணவுத் தட்டைப் பயன்படுத்திய காரணத்துக்காக நான் ஏன் விரல்கள் முறிக்கப்பட்டேன் என்கிற கேள்விக்கான பதிலை பொருளாதாரம் தருவதில்லை.

ஐயா பாரிவேந்தர் அவர்களே, எல்லா ஏழைகளும் இங்கே சம நீதி பெற்றவர்கள் அல்ல, பார்ப்பன ஏழை எப்போதும் கோவில் கருவறைக்குள் போகலாம், தலித் கோடீஸ்வரனால் இன்னும் பல கோவில்களுக்குள் கூட நுழைய முடியாது, ஆதிக்க சாதி ஏழையின் பிணம் மதிப்பும், மரியாதையும் கொண்டது, ஒடுக்கப்பட்ட மனிதனின் பிணம் மதிப்பீடுகள் இல்லாத தீட்டுக் கொண்டது, சமூக நீதியை வெறும் பொருளால் பெற்று விட முடியாது பெருமகனாரே.

ஆயிரமாண்டு காலப் புறக்கணிப்பையும், சமூக அநீதியையும் நீங்கள் வெறும் பொருளால் வகைப்படுத்தினால், அதன் பின்னால் இருக்கிற சமூக உளவியல் குறித்த எந்த அக்கறையும் இல்லாத, அரசியல் நுண்ணுணர்வு இல்லாத ஒரு தட்டையான கருத்தியலைச் சார்ந்து இயங்குகிறீர்கள் என்று பொருள்.

தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக ஒரு விடையில்லாத கேள்விகளை எமது குழந்தைகள் தங்கள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள், நான் ஏன் பொதுத் தெருவுக்குள் போகக் கூடாது? நான் ஏன் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது? நான் ஏன் பொதுத் தெருவுக்குள் எனது மிதிவண்டியை ஓட்டிச் செல்லக் கூடாது? நான் ஏன் பொது அரசுப் பள்ளியில் தனி வரிசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? இது போல ஆயிரமாயிரம் உளவியல் சிக்கல்கள் மிகுந்த கேள்விகளை அவர்கள் தொடர்ந்து கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பொதுச் சமூகம் அவர்களின் முன்னாள் வைக்கிற சமூக இயங்கியல் தடைகளை எதிர் கொள்ளும் ஒரு மன எழுச்சிக்கான போராட்ட ஆற்றலை அவர்கள் தொடர்ந்து செலவழிக்கிறார்கள், பொதுச் சமூகத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்கிற ஒரு இயல்பான மனநிலையை அவர்களால் அவ்வளவு எளிதில் பெற்றுக் கொள்ள முடிவதில்லை, புறக்கணிப்பாலும், ஒடுக்குமுறையாலும் இழந்து போன கல்வி, பொருளாதார மற்றும் சமூக இருப்பின் வெற்றிடத்தை ஏழ்மையும், வறுமையும் நிரப்பிக் கொண்டு விட்டது.

இப்போது இவர்கள் இரண்டுக்கும் எதிராகப் போரிட வேண்டும், பொது சமூக உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நீதிக்கான போராட்டம், பிறகு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டம். உயர் மற்றும் ஆதிக்க சாதிச் சார்பு நிறைந்த இந்திய பொது சமூகத்தில் வாழும் ஏனைய சமூக குழுக்களுக்கும், உயர் சாதி மனநிலைக்கும் புறக்கணிப்பும், மறுப்பும் இல்லாத ஒரு உளவியல் விடுதலை இருக்கிற போது அவர்களின் செயல்திறனும், இயங்கியல் திறனும் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கிறது.

மாறாக ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் உளவியல் மற்றும் இயங்கியல் திறன்களின் ஊற்றுக் கண்களே இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை உணர்ந்து தான், உலகம் போற்றும் அறிவுத் திறனும், சமூக ஆய்வாளருமாகிய அண்ணல் அம்பேத்கர் சாதி ரீதியான இட ஒதுக்கீடு ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய அவலங்களை ஓரளவு தீர்க்கக் கூடிய மருந்தாக இருக்கும் என்று வலியுறுத்தி அதனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலிமையாக இடம் பெறச் செய்தார்.

சாதி பிறப்பின் போதே வரையறுக்கப்பட்ட ஒரு எளிதான அடையாளம் இந்த தேசத்தில், பொருளாதாரம் அப்படியில்லை, பொருளாதார இட ஒதுக்கீட்டின் அளவுகோலை வரையறுக்கும் இடங்களில் அமரப் போகும் ஆதிக்க சாதி உளவியலை நீங்கள் எப்படி வெற்றி கொள்வீர்கள், பொருளாதாரம் எந்தச் சூழலிலும் மாற்றம் பெறக் கூடிய ஒரு புறநிலைக் காரணி, சாதி எந்தச் சூழலிலும் மாற்ற இயலாத சமூக உளவியலோடு தொடர்பு கொண்ட அகநிலைக் காரணி, இதயம் அழுகிப் போயிருக்கும் ஒரு சமூகத்துக்கு நீங்கள் முகத்தை சிவப்பு நிறமாக்கும் “க்ரீம்”களை மருந்தாகக் கொடுக்க முடியாது.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கு முன்னாள் எல்லா சமூகக் குழுக்களின் உரிமைகள் மற்றும் உளவியலை ஒரே நேர்கோட்டில் நிறுத்துங்கள், பார்ப்பனரையும், ஆதிக்க சாதி உயர் சமூகக் குழுக்களையும் இவர்களது பிறப்பினாலான இலவச சமூக ஒதுக்கீட்டை முற்றிலுமாக சட்டங்களால் நீக்குங்கள், எல்லாத் தெருக்களையும், எல்லாப் பள்ளிகளையும், எல்லாக் குழந்தைகளையும் பொதுமைப்படுத்திய பிறகு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்துங்கள்.

ஒடுக்கப்பட்ட எமது குழந்தைகள் பிளவுபட்ட, கரடு முரடான, முட்களும், கற்களும் நிரம்பிய ஒற்றையடிப் பாதைகளில் இருந்து பொதுவில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பொதுச் சமூகமோ நெடுஞ்சாலையில் ஒரு சொகுசான பயணத்தில் இருக்கிறது, நீங்கள் இரண்டு பயணத்தையும் ஒன்று என்கிறீர்கள், சிறகுகள் முறிக்கப்பட்ட பறவைகளையும், இளஞ் சிறகுகளால் உயர உயரப் பறக்க முடிகிற பறவைகளையும் இரண்டும் பறவைகள் தானே என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்…

 

#Untouchableதோழா; படத்தின் ஜீவனே தீண்டாமை தான் அதைக் கொன்றுவிட்டீர்களே!

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்
பிரெஞ்ச் படத்தை இந்திய மொழியில் தயாரிக்கும் உரிமையை கரண் ஜோகர் வாங்க, அதை PVP நிறுவனம் தெலுங்கு தமிழ் உரிமை வாங்கி தோழா படம் எடுத்துஇருக்கிறார்கள். இன்ஸ்பைரேஷன் என்று சொல்லி மற்ற இயக்குனர்கள் போல் திருட்டுவேலைசெய்யவில்லை. இவர்களின்”நேர்மை”யை தொழில் தர்மத்தை நான் பாராட்டுகிறேன். உரிமை வாங்கி பண்ணுகிறோம் என்பதால் “ஈ”யடிச்சான் காப்பி அடித்து இருக்கிறார்கள்.

ஆங்கில படத்தில் உள்ள அத்தனை செட் ப்ராபர்ட்டியும் வாங்கியதுபோல் எதையும் மாற்றாமல் கார்த்தி அந்தப் படத்துல கொஞ்சமாதான் சிரிக்கிறார். நீங்க அப்படியே பண்ணினா போதும்னு எடுத்து இருக்காங்க. அந்தப்படத்துல சாப்பிட்ட தட்டு கூட இந்த படத்துல வருதுப்பா, சூப்பர் இல்லே!

ஆனால் ஆங்கில படத்தில் முக்கியமா சொன்னது “நிறவேற்றுமை”ஒரு வெள்ளைக்காரனுக்கும், கறுப்பனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு அதனாலதான் ஆங்கிலத்தில் படத்தலைப்பு கூட தீண்டாமை எனும் பொருள் வரும்படி untouchableனு பேர் வச்சிருப்பாங்க. எப்பேர்பட்ட பதிவு நிறவேற்றுமையினால் வரும் தீண்டாமை குறித்து பேசுவது?

தமிழ்ல எடுத்த புண்ணியவான்களே இஙக இருக்கிற தீண்டாமை குறித்து அருமையான பதிவா இப்படத்தை பண்ணி இருக்கலாம்ல? ஆந்திராவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் தலித் கொடுமைகள் இன்னமும் தோடர்ந்து கொண்டேதானே இருக்கிறது? படத்தின் ஜீவனே தீண்டாமை அதை கொலை செய்துவிட்டு அப்படியே நாங்க ஆங்கில படங்களை எடுத்துட்டோம்னு தயவு செய்து குதிக்காதீங்க. அருமையா சாப்பாடு சமைச்சு அத்தனையிலும் உப்பு போடாம வச்ச மாதிரி சொதப்பிட்டீங்களே ! மிக அருமையான படம் untouchable!

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர் இயக்குனர்.

”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

கொங்கு மண்டலம் சாதியத்தை தக்க வைத்துக்கொள்வதில் எத்தகைய கீழ்மையான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என சமீப கால பல நிகழ்வுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திருமண மண்டபங்களில் தீண்டாமை என சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். காங்கேயம் அதிமுக எம் எல் ஏ வுக்குச் சொந்தமான திருமணம் அது என்பது கூடுதல் கீழ்மை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஒடுக்கும் சாதியினர் நடத்தும் உணவகங்களில் தலித் மக்கள் உணவு விற்பனையும், சரிசமமாக உணவகத்தில் அமர்ந்து உண்கிற உரிமையும் மறுக்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக இருக்கிறது இந்த வீடியோ..

 

திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!

தமிழகத்தின் கொங்கு மண்டலம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தனி முத்திரை பதித்துவருகிறது. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என சாதிய வன்மத்துக்கு தலித் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கொங்கு பகுதியில் நிலவிவரும் சாதியம், தீண்டாமை குறித்து புலனாய்வு செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறது.

இதில், கொங்குமண்டலத்தின் பல பகுதிகள் குறிப்பாக, வெள்ளக் கோயில், காங்கேயம் போன்ற பகுதிகளில் தலித்துகள் கோயில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒடுக்கும் சாதியினர் நடத்தும் திருமண மண்டபங்களில் தலித்துகளுக்கு எப்போதும் வாடகை விடுவதில்லை என்றும் இந்த கள ஆய்வு செய்தி தெரிவிக்கிறது.

காங்கேயம் எம் எல் ஏவுக்குச் சொந்தமான திருமண மண்டப நிர்வாகியிடன் டைம்ஸ் நவ் செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய உரையாடலில், ‘அவங்களுக்கு(தலித்) கொடுத்தால் எங்க ஆளுங்க யாரும் இங்க வர மாட்டாங்க. அவங்களுக்குன்னு சின்ன சின்ன மண்டபம் இருக்கு அங்கதான் அவங்க போவாங்க’ என்று தெரிவிக்கிறார் நிர்வாகி. அதோடு என். எஸ். என். நடராஜனுக்கு சொந்தமான இந்த மண்டபத்தை அவர் மகன் பார்த்துக் கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார் இந்த வீடியோவில்.

வீடியோ இணைப்பு கீழே…

http://www.timesnow.tv/videoshow/4486565.cms

”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

பிரேம் பிரேம்
ப்ரேம்
ப்ரேம்
நீங்கள் சாதி பார்ப்பதில்லை ஆனால் சாதி உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது

சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட.

தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம்.

நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் தலித் அரசியலின் பின் செல்லாமல் இருப்பதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம் அதில் முதல் காரணம் இதுதான் : அவர்கள் நவீன அறிவோ- உளப்பாங்கோ இல்லாத வெற்றுச் சொல்லிகள்.

அறிவின்மை -அறமின்மை இரண்டையும் கொண்டாடிக்கொண்டு வெறிநோய் பீடித்துக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை மாற்ற உள்ள ஒரே அரசியல்- ஒரே கருத்தியல் தலித் அரசியலும் தலித்தியக் கோட்பாடும்தான் என்பதற்கு நாம் பல விளக்கங்களைத் தரலாம். ஆனால் பின் வரும் சாதிப் பாசிச, தேசிய விரோதப் பேச்சு எதனை விடவும் தலித் அரசியலின் தேவையை தெளிவாக நம் மூளையைத் தாக்கும்படி நமக்குச் சொல்லித்தருகிறது.

இளந்தமிழன் சங்கர் படுகொலை பற்றிக் கருத்துச் சொல்லக் கேட்டபோது வடதமிழர் சாதித் தலைவர் பேசாமல் எழுந்து சென்று தெளிவுபடுத்திய வன்மத்தை இந்தத் ெதன் தமிழர் சாதிவெறிக்குரல் பேசித் தெளிவு படுத்துகிறது.

நீங்களும் நானும் எங்கு இருக்கிறோம் என்பதையும் யார் நமது சொந்தங்கள் என்பதையும் இன்று ெதளிவாக்கிக்கொள்ள வேண்டும்.

82 சதவிகிதம் என்ற கணக்கு சாதியின் கணக்கா சாதிவெறியின் கணக்கா என்பதை நாம் ஒவ்வொருவரும் முடிவு செய்தாகவேண்டும்.

பின் வரும் பகுதி தமிழக அரசியலை மட்டுமல்ல தமிழ் உளவியலையும் உள்வெளியாக காட்டித்தருகிறது.

பதிவு செய்யப்பட்ட அருவருப்பூட்டும் ஒரு குரலின் வரிவடிவம் இது:

அன்பின் உறவுகளே! என் புலிப்படைத் தளபதிகளே!
நான் செங்குட்டுவன் வாண்டையார் பேசறேன்.
விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் நாம தாங்கதான் வேண்டும். ஒரு பெரிய அறிஞர் சொல்றாரு, அடுத்தவன் விமர்சனத்தில நீ வந்துட்டாலே நீ வளர்ந்துகொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.

இந்தியாவுலயே தலித்துகள நேரடியா எதிர்த்து அரசியல் பண்ணிக்கிட்டு, இவங்களயும் பிரச்சினை பண்ணிக்கிட்டு நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதற்கு நமக்கு எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். நம் மக்கள் திருமாவளவன திட்டலயா? திட்டிக்கிட்டுதான் இருப்பான், பண்ணிப் பாக்ககட்டும். இது வந்து, இவங்கள திருத்தறது நம்ம வேலயில்லை. இவங்க இப்படி திட்டிக்கிட்டே இருக்கணும். அதான் நமக்கு நல்லது.

தலித் மக்கள் இந்த மாதிரி தாறுமாறா பேசறதெல்லாம் எடுத்துப் போட்டுகிட்டே இருங்க. ஏன்னு கேட்டிங்கன்னா, தமிழகத்துல தலித்-தலித் அல்லாதவர்கள்- இவங்கள எப்படி அரசியல்ல அனாதைகளாக ஆக்கணும்னு எனக்குத் தெரியும். எப்படி இந்த திருமாவளவன திராவிடக் கட்சிகளெல்லாம் சேர்ந்து விரட்டி விட்டாங்களோ-வைக்கோ மட்டும் தேவையில்லாம சேர்ந்து வீணா போனாருன்னு வைச்சுக்குங்களேன்- வைகோ என்னக்கி போய் அங்க சேர்ந்தாரோ அப்பவே அவங்க மாவட்டச் செயலாளர்கள் எல்லாம், நெறைய பேரு அவர விட்டு போயிட்டாங்க. அவருடைய கட்சியிலிருந்து நிறைய பேரு போயிட்டு இருக்காங்க. அதனால தலித் இயக்கங்கள் அனாதையாக்கப்பட வேண்டும். தலித் மக்களும் அனாதை ஆக்கப்படணும். தலித் இயக்கத்துடய தலைவர்களும் அனாதை ஆக்கப்படணும். அதுதான் தொழில் ரகசியம்.

இப்போ இவங்க திட்டத் திட்டத்தான் அவங்களுக்கு சனியன். இவங்களுக்கு பிரச்சனையை உருவாக்கிறது- நம்ப ஒன்னும் உருவாக்க வேண்டியதில்ல, அவங்களே உருவாக்கிடுவாங்க. இப்ப அவங்க எல்லாரையும் திட்டத் திட்ட என்ன ஆகும்ணு பாத்திங்கன்னா, ஒரு கால கட்டத்தில அவங்க தனியா-மறுபடியும் அதே – எப்படி முன்ன தனியா- எப்படி பிரிச்சி – ஊரவிட்டு தனியா தள்ளிக் கொண்டு போய் – இரண்டு தெருவ கட்டி தள்ளி வச்சாங்களோ அதே மாதிரி அரசியல்லயும் பொது வாழ்க்கையிலயும் – இந்தியாவுல தலித்துகள, அரசியல்ல தலித்துகளுக்கு தனி தெரு மறுபடியும் ஒதுக்கச் சொல்லி சொல்லிடுவாங்க.

அதனால, இவங்க அவங்க தலயிலயே மண்ணை அள்ளிப் போட்டுக்கிறாங்க, அது நல்லதுதான். இப்ப அவங்க செய்யறது எல்லாமே, அவுங்கவுங்களுக்கு வென வச்சிக்கிற வேலய கரக்டா பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப நாம செய்ய வேண்டியது என்னன்னா? தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளும் தலித்துகள ஒதுக்க வேண்டும், அல்லது நாம சொன்ன மாதிரி எஸ்.சி கிட்ட ஓட்டு கேட்டா இங்க வராத, எஸ்.சி தெருவுல ஓட்டுக் கேட்டுட்டு எங்க தெருவுல வந்து ஓட்டுக் கேட்காத என்று சொல்லி நம்ம மக்கள் பிரச்சினைய திசைய திருப்பணும்.

தலித்- தலித் அல்லாதவர்கள் என்ற ஒரு மிகப் பெரிய பிரச்சின நடக்கப் போவுது. அதுக்குத் தகுந்த மாதிரி இவங்கள முதல் கட்டமா, அரசியல் அனாதை ஆக்கணும். இவர்களுக்கு மற்றவர்களுக்கிட்ட இருந்து கிடைக்கக் கூடிய உதவிகள தடுத்து நிறுத்தணும். அடுத்தவங்க, அடுத்த சாதிக்காரங்க யாருமே தலித்துகளுக்கு வேல கொடுக்கக்கூடாது. தலித்துகளை வேலக்கு வச்சிக்கக்கூடாது. அவங்களுக்கு நம்ப பக்கத்திலிருந்து 10 காசுகூட, நம்ம 82 பர்சன்டேஜ் வசிக்கற, வாழக்கூடிய மாற்று சாதிக்காரங்கக்கிட்ட இருந்து அவங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காம பண்ணிடம்னாலே பிரச்சின தீந்திடும். ஆல்ரெடி அவங்க பொருளாதாரத்தத் தேடி – சோத்துக்கு அலைய விட்டுடம்னாலே – மற்றபடி வாய பொத்திக்கிட்டு பேசாம இருப்பாங்க. அதுக்கு என்ன வழிங்கிறத யோசிங்க.

நம்ம மக்கள் வந்து இவங்களுக்கு எப்படி வேலையை கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு பொருளாதாரத்தக் கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு காசுவர்ற- ஒவ்வொரு காசையும் கெடுக்கலாம். இவங்களுக்கு சாப்பாடு வந்து கவர்மெண்டு போடட்டும் நமக்கென்ன? அதனால தலித்து வாக்குகள கேக்கறவங்க, நம்மகிட்ட வந்து ஓட்டு கேக்கக்கூடாது. தலித்துகளுக்கு வேல கொடுக்கிறவனுக்கு நம்ம வேல கொடுக்கக்கூடாது. இந்த மாதிரி, மிகப்பெரிய தர்க்க ரீதியான ஒரு போராட்டத்த நம்ம மனரீதியா ஆரம்பிக்கணும். இதுதான் இதுக்கு தெளிவான வழி.

எதிரிய பிரியா இருக்க விடறதனால தான் பிரச்சின. நம்ம ஆளுவ டிரைவர் வேல கொடுக்காதீங்க, அவங்க வண்டிய கூப்படாதீங்க. அவங்களுக்கு…. அவங்க, கடயில பொருள் வாங்காதீங்க. அவங்க ஆபிசரா இருந்தாங்கன்னா, அந்த இடத்துக்குப் போயி இவன்…. ஆபிசரா இருந்தா எங்க ஊருக்கு விஏஓ ஆக எஸ்.சி வேணாம்னு எல்லாரும் எழுதி கொடுங்க. அதே மாதிரி பஸ்சுல கண்டக்ரா இருந்தான்னா அவங்கிட்ட டிக்கெட் எடுக்காதீங்க, உங்களால என்னென்ன வகையில அவங்களுக்கு பொருளாதர ரீதியா- வேலை வாய்ப்புகல்ல, என்ன என்ன வகையால அரசியல் ரீதியா -எப்படி யெப்படி பண்ணணுமோ அதப் பண்ணின்னா ஆட்டோமேட்டிக்கா ஒடுங்க போறாங்க.
இப்ப எல்லாரும் பச்சையா சொல்லுங்க தலித்து கட்சி, தலித்த வச்சிறுக்கிற கட்சிகளுக்கு நாங்க வாக்களிக்க மாட்டோம், அப்படின்னு திருத்தா சொல்லுங்க. இவங்க ஓட்டு வேணாம்னு அரசியல் பண்ணறது இந்தியாவுல நாம மட்டும் தான் பண்றோம். தமிழகத்திலயே தலித் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லுகிற ஒரே இயக்கம் நமது இயக்கம்தான். இதுல தெளிவா தெரிஞ்சிக்குங்க.

இவங்களுக்கு தீர்வு என்னன்னு நெறைய பேர் கேட்டிருக்கிறாங்க. தலித் அல்லாத – தலித் மக்கள் அல்லாத, தலித் வாக்குகளை வாங்காத, ஒரு கட்சியால மட்டும்தான் நமக்கு தீர்வு ஏற்படும். நாம மட்டும்தான் அதை சொல்லி இருக்கோம். செங்குட்டுவன் வாண்டையார் மட்டும்தான் – 1999 இல இருந்து எங்களுக்கு தலித் வாக்குகள் வேண்டாம், எங்களுக்கு தலித்தோட எந்த உதவியும் வேண்டாம். அவங்க ஓட்டே எங்களுக்கு வேண்டாம், பாக்கி இருக்கிறது 82 சதவீதம் சாதிக்காரங்கள வச்சி நாங்க ஆட்சி அமைக்கின்ற போது தான் இதற்கு நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.

அதை நோக்கிய பயணத்தில தலித் அல்லாத மக்களை ஒருக்கிணைத்து, ஆட்சி அமைச்சம்னா ஆட்டோமேட்டிக்கா வாயப் பொத்திக்கிட்டு இருக்கப் போறான். அதுவரை இவர்களுக்குக் கிடைக்கிற பொருளாதார வசதி, எல்லா உதவிகளையும் எப்படி எப்படி தடுத்து நிறுத்தலாம். அப்படின்னு நீங்க யோசிங்க. வாழ்த்துக்கள்.

இது அனைத்துக் தளங்களுக்கும் பார்வேட் பண்ணிடுங்க.

[இது உருவாக்கும் கொலைகார உளவியலை எந்த அரசியல் வழியாகக் கையாள்வது என்பதைப் பற்றி நாம் இனிதான் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பேச்சுக்கு உரிய நபர் இந்திய தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியவர். சுதந்திரம் (ஆசாதி) என்று குரலெழுப்பிய கங்கையா குமார் தேசவிரோதம் அரசுக்கெதிரான சதி என்ற குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். சுதந்திரம் கேட்டால் அனாதையாக்கிக் கொல்வோம் என்கிறது இந்தக் குரல்- இந்திய நீதி என்ன செய்யப் போகிறது? ]

அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

magizh
மகிழ்நன் பா.ம
மகிழ்நன் பா.ம

இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் என சிலர் எழுதி திரிகிறார்கள்.

அவர்களின் பொருட்டு அம்பேட்கரை மீண்டும் புரட்டிப் பார்ப்போம்…

இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார்
அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது மூன்று விசயங்களை நிறுவன் விரும்புகின்றனர்

1) அண்ணல் அம்பேட்கர் கிருத்துவ இஸ்லாத்தை வெறுத்தார் என்றும்
2) கம்யூனிசத்தை வெறுத்தார் என்றும்
3) இந்துத்வ கும்பலை ஆதரித்தார்

முதலில் அம்பேட்கர் காவி கும்பலை ஆதரித்தார் என்ற அவதூற்றை எடுத்துக் கொள்வோம். அம்பேட்கரை காவி கும்பலுக்கு ஆதரவானவராக சித்தரிக்க, அவர்கள் எடுத்துக் கொள்ளும் நூல் தனஞ்ஜெய் கீர் எழுதிய “அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” நூல்தான். கொஞ்சமா அறிவிருந்து அந்த நூலை படித்தாலும், தீய நோக்கத்தோடு அந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அம்பேட்கர் கொட்டாவி விட்டார் என்று சொல்வதற்கு கூட, சாவர்க்கர் போலவே அம்பேட்கர் கொட்டாவி விட்டார் என்று எழுதும் அளவுக்கு ‘நேர்மை!) கொண்டவர்தான் தனஞ்ஜெய் கீர். இதே தனஞ்ஜெய் கீர் சாவர்க்கரை புகழ்ந்து ஒரு வாழ்க்கை வரலாற்று சாவர்க்கரை பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் என்பதும் இங்கே நினைவுக் கூறத்தக்கது. தனஞ்ஜெய் கீர் நுட்பமாக அம்பேட்கரை காவிமயமாக்க முயன்றிருப்பதை அம்பேட்கரின் நூல் தொகுப்புகளை ஆழ்ந்து கற்றால் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், அம்பேட்கர் இந்துத்வ கும்பலின் மீது துளியளவும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதற்கு முக்கியமான சான்று காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன என்ற நூலில்

1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பம்பாய் மாநாட்டில் தீண்டாமை தொடர்பான விவகாரங்களை அகில இந்திய இந்து மகா சபை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதிலிருந்தே காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பில் எவ்வளவு அக்கறையற்ற தன்மையோடு இயங்குகிறது என்பது வெள்ளிடை மலை.

தீண்டாமை ஒழிப்பில் இந்து மகா சபையை போன்ற பொருத்தமற்ற ஒரு இயக்கம் இருக்கவே முடியாது. அது ஒரு தீவிரவாத இயக்கம். அதனுடைய நோக்கமே இந்து கலாசாரத்தை அதனுடைய தீவிரத்தோடு பாதுகாப்பதுதான். அது, இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் தாக்கத்தை குறைப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்ட பச்சை அரசியல் இயக்கம். தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள சாதியை குறித்தோ, தீண்டாமை குறித்தோ பேசுமே தவிர. அதற்கு தீண்டாமை ஒழிப்பு பற்றிய நோக்கமே கிடையாது. இப்படியான இயக்கத்திடம் ஒப்படைப்பதன் மூலம் காங்கிரஸுக்கும் தீண்டாமை ஒழிப்பில் தீவிர நோக்கம் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது” என்கிறார் . ( 1945ல் காந்தியும், காங்கிரஸும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன நூல் வெளியாகியது)

அதேபோல, 15 ஏப்ரல் 1920 ஆம் ஆண்டு மன்காவில் பேசும் போது, தீண்டாமைக்கு ம் அரசியலுக்கு என்ன தொடர்பு என்று கேட்ட, தேசிய வாதிகள் தூக்கி பிடிக்கும் திலகரை பார்த்து சினம் கொண்டு, “அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக நடத்த கற்றுக் கொள்ளும் வரை தேசபக்தி என்பது சாத்தியமேயில்லை. திலகரை போன்ற தலைவர்கள் பேசுவார்களே தவிர செயலில் எதையும் செய்ய மாட்டார்கள்” என்றார்.

இந்துத்வ கும்பல் தீண்டாமையை மிக மேலோட்டமாக வாய்வார்த்தையாக பேசி கடந்து போய்விடுவார்கள் என்று சாடிய அம்பேட்கர். தீண்டாமை குறித்து மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். தீண்டாமையின் கொடூரத்தை துல்லியமாக படம் பிடித்தும் காட்டினார்

”சொத்து சேர்க்கும் பாதையை ஒரு சாராருக்கு மட்டும் திறந்துவிட்டு, பிறரை அவர்களுக்கு அண்டி பிழைக்கும்படி செய்வது மதமே அல்ல. இந்து சனாதன மதம் என்பது அப்படியானது. சர்வாதிகார கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது தொழுநோயாளிக்கு கூட சாதி இந்துக்கள் இரக்கம் காட்டுவார்கள். ஆனால், தீண்டப்படாத மனிதர்களை மதிக்கவே மாட்டார்கள். ” என்று கூறிய அம்பேட்கர்

”கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கூறிவிட்டு, சக மனிதனை விலங்குகளைவிட கேவலமாக நடத்துபவர்கள் இந்துக்கள். எறும்புக்கு சர்க்கரையை இட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இந்த வேடதாரிகளாக நடத்துகின்ற இந்த வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்.” என்று இந்துத்வத்தின் கோர முகத்தை அடையாளங்காட்டினார். பல்வேறு அரங்குகளில் போராடினார்.

இப்படி, தொடர்ந்து இந்து சானதன மதத்தின் தீங்குகளை அம்பலப்படுத்தி வந்த அம்பேட்கர் ”இந்துவாக பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன் என்று உறுதிமொழியை எடுத்தார்.” அந்த உறுதிக்கு அவர் வந்தடைய தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்தார். இந்து மதத்திற்குள்ளேயே சீர்திருத்தம் செய்துவிட முடியாதா என்று முயன்றார். ஆனால், பலனிருக்காது என்று அனுபவத்தில் கண்டுணர்ந்தார்.

”இந்து சமூகத்திலுள்ள தீங்குகளை களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம்.

ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)

இந்து மதத்தை விட்டு வெளியேற முடிவு செய்த அம்பேட்கர், பல்வேறு ஆய்வுகளின் வழியாகவே பௌத்தத்தை தழுவ முடிவு செய்தார். கிருத்துவத்தையோ, இஸ்லாத்தையோ தழுவவில்லையே தவிர, ஒப்பீட்டளவில் இந்து மதத்தைவிட அவற்றின் மீது நல் அபிப்ராயமே அம்பேட்கருக்கு இருந்தது.

”அறிவு, சொத்து, துணிமணிகள் என்பவை ஒருவனுக்கு புற அடையாளங்கள் மட்டுமே. இவற்றிற்கும் சமத்துவத்திற்கு முடிச்சுப் போடக் கூடாது என்பதுதான் கிருத்துவத்திலும், இஸ்லாத்திலும் வலியுறுத்தப்படும் அறநெறி போதனைகள். அப்படியான, அறநெறி போதனை என்பது அறவே இல்லாத மதம்தான் இந்து மதம்தான்” என்று காறி துப்பினார்.

இந்த எச்சில் ஒருவேளை சாவர்க்கரின் முகத்தில் விழுந்திருக்குமோ என்னவோ? சாவர்க்க ரொம்ப பதறுகிறார்.

”இந்து மதத்தின் மீது வன்மம் கொண்டு ஒவ்வொரு நாளும் அம்பேட்கர் இந்து மதத்தின் மீது வசைமாறி பொழிகிறார். அவர் புத்தரை பகுத்தறிவுவாதி என்கிறார், பௌத்தம் அப்பழுக்கில்லாத சிறந்த மதம் என்கிறார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாக துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்.” (1956, சாவர்க்கர் தொகுப்புகள்)

இன்றைய இந்துத்வ அல்லக்கைகள் முடிந்தால், இஸ்லாத்தை திட்டிப்பார்னு சவடால்னு விடுவது போன்று இருக்கிறதல்லவா? சாவர்க்கர் அத்தோடு விடவில்லை. அம்பேட்கரை துரோகி போன்றே சித்தரிக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே, மதமாற்றம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். நாம் மீண்டும் குருட்டுத்தனமான பிழைகளை அனுமதிக்க முடியாது. இந்த இயக்கங்களை பேரழிவை உருவாக்கும் அபாயங்களாக கருதி எதிர்க்க வேண்டும். அம்பேட்கர் இந்திய எல்லைகுட்பட்ட புத்தராக இருந்துவிட்டு போகட்டும், நமக்கு கவலையில்லை. ஆனால், அம்பேட்கரின் புகழ் உயர்த்தப்பட்டு, புத்தர் அளவிக்கு மீறி கொண்டாடப்பட்டால், அதை தேசிய, மதநலன் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

இவர்கள் மீண்டும் நம் முன் திறந்து வைத்துள்ள புத்தனின் வரலாற்றை மீளாய்வு செய வேண்டும். யவனர்கள் காலத்திலிருந்து ஜயசந்தும், புத்த அரசர்களும் படையெடுப்பாளர்களுக்கு உதவுவதை தங்களது மதக் கடமையாக நினைத்து செய்து வந்திருக்கிறார்கள்.அந்நிய அரசர்களோடு இணைந்து அவர்கள் இந்திய் அரசுக்கும், இந்து தேசத்திற்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்திருக்கிறார்கள். மீண்டும் இந்த துரோக வரலாறு வாய்ப்பில்லை என்றாலும், இந்து தேசத்திற்கு எதிரான இந்த பௌத்தத்தின் போரை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இந்த நஞ்சை உட்கொண்டு ஆய்வு செய்வதற்கு பதிலாக, அதை உட்கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்தது. (1956, சாவர்க்கர் நூல் தொகுப்புகள்)

இப்படி சாவர்க்கர் பதட்டப்பட காரணம் என்ன?

இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேட்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட சனாதன தருமத்திற்கும் நடந்த போர் என்று மதிப்பிட்டார் அம்பேட்கர். அதனால்தான், சாவர்க்கர் சினமுற்றார். ..ஏன் வேறு மதத்துல ஓன்னுமில்லையா?ங்கிற பதட்டம் அங்கிருந்துதான் வருகிறது.

ஆனால் ,, ம.வெங்கடேசன் உள்ளிட்ட பறையர்கள், அம்பேத்கரை ”இந்துத்வ அம்பேட்கர்” என்கிறார்கள். அம்பேட்கரை காவி கும்பல்தான் கொலை செய்தது என்றொரு புகார் உண்டு. ஆர்.எஸ்.எஸ் ஆனால், இவர்களது பிதாமகன், நாத்திக சாவர்க்கர் அம்பேட்கரை துரோகி என்கிறார். சாவர்க்கரின் இந்த துரோக முத்திரையை அடியொற்றிதான் உடையும் இந்தியா என்னும் நூலும் வெளியாயிற்று. அதில், கம்யூனிச, அம்பேட்கரிய, திராவிட இயக்கம் மேல்நாட்டு தூண்டுதலால் உருவானது என்ற கருத்தின் சாரத்தில் அந்நூல் உள்ளது.
அதன் அடிப்படையில்தான் ‘ஆரிய- திராவிட” கோட்பாடே பிழை என்கிறார்கள்.

”தென்னிந்தியாவின் பார்ப்பனர்களுக்கும் பறையனுக்கும் இருக்கும் தொடர்பைவிட, வட இந்திய பார்ப்பனர்களுக்கும், தென்னிந்திய பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தொடர்பு நெருக்கம் குறைவானதே.” என்ற அம்பேட்கரின் அம்பேட்கரின் சொற்களை மேற்கோள் காட்டுகிறார்கள். அதாவது ரத்த கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார். ஆகையால், தட்டையாக ஆரியர், திராவிடர் என்று இனவாதமாக பேசுவதை தவறு என்கிறார்.

இதே கருத்தை கூறிய அம்பேட்கர், “தீண்டப்படாத மக்களுக்கு இயல்பான நண்பர்களாக இருக்க வேண்டிய சூத்திரர்களே, காலாட்படையாக நின்று சாதியை பாதுகாக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்.” கூடவே, பார்ப்பனரல்லாத இயக்கம் வரலாற்று முற்போக்கு பாத்திரம் ஆற்றியிருக்கிறது என்றும் கூறுகிறார். இதன் பொருள் பார்ப்பன மேலாண்மை இல்லவே இல்லை என்று கூறவேயில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது. – (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

அம்பேட்கர் கூறும் அறிவியல் பூர்வமான காரணங்களுக்காக, இந்துத் வ கும்பல் ஆரிய – திராவிட கோட்பாட்டை மறுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அது. அது பெரியாரின் மீதான வன்மம்.

இது ஒரு பக்கம், தாங்கள் சொல்வதற்கு கூட நேர்மையாக இருக்க வக்கற்றது இந்த இந்துத்வ கும்பல் என்பதற்கு உதாரணந்தான். ஆரிய – திராவிட எதிர்ப்பு என்பது .

மக்கள் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் திட்டத்திற்கு அல்லக்கை வேலை பார்த்த இந்துத்வ கும்பலின் தலைவர் சாவர்க்கர் எழுதிய ”இந்துத்வத்தின் அடிப்படைகள்” என்னும் நூலில்

”சவால்விடவே முடியாத வெற்றிக்குதிரை அயோத்தியாவை வந்தடைந்த போது, இறையாண்மையின் பெருமைமிகு ராமச்சந்திரனின் பேரசசின் குடை விரிந்தது. வீரம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்த ராமன் ஆரிய ரத்தத்தால் மட்டும் அரியணை ஏற்றப்படவில்லை. மாறாக, தெற்கை சார்ந்த ஹனுமான், சுக்ரீவன், விபீசணன் உள்ளிட்டோரின் உதவியாலும்தான் அது நிகழ்ந்தது. அந்த நாள்தான் இந்துக்களின் பிறப்பு நாள் என்று கூட கூறலாம். ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் இணைந்து ஒரே தேசமான ஒரு தேசிய நாள் அது.”

சாவர்க்கர் கூறும் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள் யார்? அவர்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்க்ளா? சீனாவை சேர்ந்தவர்களா? அக்ரஹாரத்தை சேர்ந்தவர்களா?

திராவிட-ஆரியர் கோட்பாட்டை இனத்தூய்மை அடிப்படையிலான பிரிவினையாக தட்டையாக புரிந்து கொள்ளுதல் தவறு என்று சுட்டிக் காட்டியதை ஏதோ சுயமரியாதை இயக்கத்தின் தோல்வி போலவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தோல்வி போலவும், ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களின் போராட்ட மரபு தோற்றுப் போய்விட்டதாகவும் பல்லிக்கும் இந்துத்வ கும்பல், சாவர்க்கரை எந்த மூத்திர சந்தில் நிறுத்தி கேள்வி கேட்பதாக உத்தேசம்.

ஆங்கிலேயர் ஆட்சி தேச விடுதலை என்னும் பெயரில் சாதி பிரச்சினைகளை பற்றி பேசுவது தேவையில்லாதது என்ற போர்க்காலத்தில் பெரியாரும், அம்பேட்கரும் சமூக சீர்திருத்த தளத்தில் போராடிக் கொண்டிருந்தனர். சுயராஜ்யம் பற்றி பேசி கொண்டிருந்தவர்களிடம் அம்பேத்கர்

”பிழைப்புக்குப் போதிய ஆதாரமின்றியும், இந்துக்களுடன் ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையிலும் ஓர் இந்து கிராமத்தின் புறச்சேரிகளில் பட்டியல் வகுப்பினர் தொடர்ந்து வாழ்ந்துவரும்வரை, அவர்கள் தீண்டப்படாதவர்களாகவே இருந்துவருவார்கள், இந்துக்களின் கொடிய அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிவருவார்கள், அவர்களால் சுதந்திரமான, முழுநிறைவான வாழ்க்கை வாழமுடியாது. இத்தகைய நிலைமையில், சுயராஜ்யம் என்பது நடைமுறையில் ஓர் இந்து ராஜ்யமாகவே இருக்கும்.”

இப்படி, தீண்டப்படாத மக்களின் நன்மைக்காக சாவர்க்கரோ, கோல்வால்கரோ இன்னபிற காவி டவுசர்களோ எழுதியோ, பேசியோ, போராடியதோ உண்டா?

”இந்து ராஜ்யம் போன்ற கொடுங்கோலாட்சியில் சாதி இந்துக்களின் வல்லாட்சியிலிருந்தும், அக்கிரம அடக்குமுறையிலிருந்தும் ஷெட்யூல்டு வகுப்பினரை சிறந்தமுறையில் பாதுகாக்கும் பொருட்டும். அவர்கள் தங்களது மனிதஆளுமையை முழு அளவுக்கு வளர்த்துக் கொள்ளும் பொருட்டும் அவர்களுக்குப் பொருளாதார, சமூக பாதுகாப்பு அளிப்பது அவசியம்; அதோடு தீண்டாமையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டுவதும் முக்கியம்.” என்று அம்பேட்கர் வலியுறுத்தினாரே…இந்த காவி கும்பலின் திட்டம் என்ன? ராமராஜ்யம் என்னும் பெயரில் இந்து ராஜ்யம் அமைப்பது, பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, அதற்கு இஸ்லாமியர்களை வேரோடு அழிப்பது….. அப்படித்தானே…

அப்படிதானா? இல்லையா? எதை பற்றியும் பதில் சொல்ல வக்கற்றவர்கள்…பண்ணையார்களுக்காக, முதலாளிகளிடம் கையேந்தி கட்சி நடத்தும் பாஜக கும்பல் அடுத்த ரெடிமேட் கேள்வியை முன்வைப்பார்கள்…அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா இல்லையா? என்று ஏதோ, பெரிய கேள்வியை கேட்டுவிட்டதை போல, பல்லை காட்டுவார்கள்…

அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா இல்லையா? என்பதை விரிவாக விவாதிப்போம். அதற்கு முன் அம்பேட்கர் முதலாளிகளின் ஆதரவாளர் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. இதை ஒத்துக் கொள்ளாமல் அம்பேட்கரை புரிந்து கொள்ள முடியாது.

அம்பேட்கர் கம்யூனிஸ்டுகளை திட்டிவிட்டார், ஆகவே அவர் கம்யூனிஸ்டுகளின் எதிரி. அப்படியே, ஒத்துக் கொள்வோம். அம்பேட்கர் ராமனை அயோக்கியன் என்றார், பலபத்தினிக்காரன் என்றார் இந்துத்வ கும்பல் ஏற்றுக் கொள்ளுமா? கணேசன், விஷ்ணு,சிவன் உள்ளிட்ட யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற அறிவித்தாரே, காவி டவுசர்கள் அம்பேட்கரின் இந்த கூற்றை பரப்புவார்களா? ‘இந்து மதத்தின் புதிர்கள்’ நூலை பரப்புவார்களா? மாட்டார்கள்…..டவுசர் கழண்டுடும்…

சரி, அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா என்ற கேள்விக்கு வருவோம்….இந்த விசயத்தில் அவரை புரிந்து கொள்ள அவருடைய மேற்கோள்கள் சிலவற்றை வாசித்து விடுங்கள்

வர்க்க உணர்வோடுதான் அரசியல் நடத்த வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் போலி அரசியல் – அண்ணல் அம்பேத்கர், (தொகுதி 37, பக்கம் 244)

புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு, தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவோம்; தம்மிடம் யாரும் சாதி, மத வேறுபாடு பாராட்ட மாட்டார்கள் என்று தெரியவந்தால் ஒழிய, சொத்தைப் பொதுவுடைமையாக்குவதற்கானப் புரட்சி ஒன்றில் மக்கள் சேர மாட்டார்கள். புரட்சிக்குத் தலைமை தாங்குகிற சோசலிஸ்டு, தனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது. அந்த வாக்குறுதி என்பது மனதின் அடி ஆழத்திலிருந்து வரக்கூடியதாக, சமத்துவம் சகோதரத்துவம் என்ற உணர்வை உள்வாங்கிக் கொண்ட மனப்பான்மைக் கொண்டதாக இருக்க வேண்டும். – அண்ணல் அம்பேத்கர்

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு நிறைவேறக் கூடிய வெறும் லட்சிய உருவகம் அல்ல சோசலிசம். அது நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டமே ஆகும். அப்படி எனில், சோசலிஸ்டுக்கு முன் உள்ள கேள்வி, அவர் சமத்துவத்தை நம்புகிறாரா இல்லையா என்பதல்ல. அவருக்கு முன்னால் உள்ள கேள்வி, ஒரு சமூகக் கட்டமைப்பு என்கிற ரீதியிலும், கொள்கை ரீதியிலும் ஒரு வகுப்பார் இன்னொரு வகுப்பாரை அடக்கி ஒடுக்குவதும், இழிவுபடுத்துவதும் இருக்கிறது என்பதை அவர் ஒத்துக்கொள்கிறாரா? அவ்வாறே வகுப்பு வேற்றுமையை உருவாக்கும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் நீடிப்பதை அனுமதிக்கிறாரா? புரட்சிக்கு இந்திய உழைக்கும் மக்கள் ஒன்றிணைவார்களா? – அண்ணல் அம்பேத்கர்

சொத்தை மக்களுக்கு சமமாகப் பங்கிடுவது ஒன்றே உண்மையான ஒரே சீர்திருத்தம்; அது மற்ற எல்லா சீர்திருத்தங்களுக்கும் முன்னோடியாக நடந்தேற வேண்டும் என்பது, சோசலிஸ்டுகளின் வாதம். ஆனால், இந்த வாதம் எடுபடுவதற்கு வரலாற்றைப் பொருளாதார அடிப்படையில் விளக்குவது தேவை இல்லை என நான் எண்ணுகிறேன். நான் சோசலிஸ்டுகளைக் கேட்க விரும்புவது எல்லாம், சமுதாய அமைப்பை முதலில் சீர்திருத்தி அமைக்காமல் – நம்மால் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியுமா என்பதைத்தான். இந்திய சோசலிஸ்டுகள் இதுபற்றி சிந்திக்கவே இல்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. – அண்ணல் அம்பேத்கர்

அம்பேட்கரின் இந்த மேற்கோள்களை கவனத்துடன் வாசியுங்கள். அவர் இந்நாட்டில் புரட்சி வந்துவிடக்கூடாது என்று கூறவில்லை. புரட்சிக்கு அணி திரட்டுவது எப்படி என்பதை பற்றியும், புரட்சிக்கு பிறகு மக்களிடம் சமத்துவத்தை நிலைநாட்டுவது எப்படி என்பதை குறித்தும்தான் விவாதிக்கிறார். இந்த சிந்தனை அலைவரிசை கண்டிப்பாக காவி கும்பலின் அலைவரிசையோடு ஒத்துப் போவதில்லை. தீவிர இடதுசாரி குழுக்கள் சில தேர்தல் பாதையில் பயணிக்கும் கம்யூனிஸ்டுகளை மிக கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதன் பொருள் தீவிர கம்யூனிஸ்டுகள் பொதுவுடமை அரசியலை நிராகரிக்கிறார்கள் என்று எந்த மடையனும் புரிந்து கொள்ள மாட்டான். ஆனால், காவி மடப்பயல்கள் அப்படித்தான் உங்களை புரிந்து கொள்ளக் கோருவார்கள். அம்பேத்கரின் கம்யூனிஸ்டுகளோடு இருந்த சில முரண்களை வைத்துக் கொண்டு அம்பேட்கரை திரிக்கும் காவி கும்பலுக்கு அம்பேத்கரின் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டுமானால்..

எப்போதோ சொன்ன கருத்தைச் சிந்தனையுள்ள எந்த மனிதனும் முரண்படாமை என்ற பெயரால் அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான். முரண்படாமையை விடவும் பொருப்புணர்ச்சிதான் மிகவும் முக்கியமானது. பொறுப்புள்ள ஒரு மனிதன் மறுசிந்தனை செய்து, தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளை, அவன் தனது பழைய கருத்துக்களை மறப்பதற்கும் அவற்றை புனரமைத்துக் கொள்வதற்கும் போதுமான காரணங்களும் இருக்க வேண்டும். சிந்தனைக்கு ஒரு முடிவு என்பதே கிடையாது. – அண்ணல் அம்பேத்கர்(தொகுதி-1, பக்கம் 204)

தொடர்ந்து தன்னைதானே புனரமைத்துக் கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர், தனியார்மயத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எப்படி எதிர்கொண்டிருப்பார். அம்பேட்கருக்கும், பொதுவுடமை அரசியலுக்கு உள்ள தொடர்பு என்னவென்று இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இந்த 7இணைப்பில் உள்ள கட்டுரையை வாசியுங்கள். சிந்தியுங்கள்.

காவி கும்பல் அம்பேட்கரை திரிக்கும் முயற்சியை ஒருபுறம் செய்து கொண்டே அம்பேத்கரின் சிந்தனைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் தூக்கி பிடிப்பவர்கள் தேசத்துரோக முத்திரை குத்துகிறது. எந்த தேசத்திற்கு ரோஹித்தும், கண்ணையாவும் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்களோ, அது தேசமே இல்லை என்கிறார் அம்பேட்கர்.

தீண்டப்படாதவர்களை புறக்கணிப்பதில், அலட்சியம் செய்வதில் தோல்வியுறும்போது, அவர்களது தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர்; எவரேனும் ஒரு தலைவன் அவர்களிடம் விலைக்கு போகத் தயாராக இல்லை என்றால் திட்டமிட்ட முறையில் அவனைப் பழித்தூற்றுகின்றனர்; திரித்து படம் பிடித்து காட்டுகின்றனர், அவனை அச்சுறுத்துகின்றனர், அவனை அடக்கி ஒடுக்குவதற்கும், அவனது வாயை அடைப்பதற்கு சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கின்றனர்; – அண்ணல் அம்பேத்கர்

இந்தியா தன்னை இந்திய ஐக்கிய கூட்டரசுகள் என்று கூறிக் கொள்வதற்கு மன ரீதியிலும், தார்மீக ரீதியிலும் கூடத் தகுதி பெற்றிருக்கவில்லை. இந்திய ஐக்கிய கூட்டரசுகள் ஆவதற்கு நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. இந்திய யூனியன் என்பதோ இந்திய கூட்டரசுகள் என்பதிலிருந்து இதைவிடவும் வெகு தொலைவில் இருக்கிறது. – அண்ணல் அம்பேத்கர்(தொகுதி-1, பக்கம் 208)

அப்புறம், அய்யய்யோ ஜனநாயகம் போச்சே, நாடாளுமன்றத்தோட மாண்பு போச்சே, வெங்காயம் போச்சேனு கதறுபவர்களிடம் பேசும் துணிச்சல் வேண்டும் என்று கோருகிறார். ஏறக்குறைய அது கம்யூனிஸ்டுகளை நோக்கிய அறைகூவலாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்..

“நாடாளுமன்ற ஜனநாயகத்தைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள், வெளிக்கு தோன்றுவது போல் அது அப்படி ஒன்றும் மிகச்சிறந்த சரக்கல்ல.” என்று இந்தியர்களிடம் கூறுவதற்கு போதிய துணிச்சல் கொண்ட யாரேனும் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார். – அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 18, பக்கம் 139)

இப்படி அம்பேத்கரின் மேற்கொள்களை வைத்து, எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும, காவிகள் அம்பேட்கரை தமது கூடாரத்தில் சேர்க்கவே முயல்வார்கள். காரணம், அம்பேட்கரின் பெயரை சொன்னால்தான் சேரிக்குள் நுழைவுச்சீட்டு கிடைக்கும். அந்த நுழைவுச்சீட்டை வைத்து சேரி மக்களை தங்களது கலவர திட்டங்களில் ஈடுபடுத்த முடியும். நவதாராளமய சூழலில், பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் போது இந்த கலவரங்கள்தான் அவர்களுக்கு பயன்படும். காவிகள் அம்பேட்கரை திரித்து வேகமாக சேரிகளுக்குள் முன்னேறும் போது, இடதுசாரிகளுக்கு அம்பேட்கரை கைகொள்வதும், வாசித்தறிவதும் காலத்தின் தேவை.

“ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை பிணித்திருக்கும் அடிமைத்தளைகளை நொருக்கியெறிந்து விமோசனம் அடைவதற்கு உதவுவது போன்று தீண்டப்படாதோரும் தங்களது அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவதற்கு உதவ உலகம் கடமைப்பட்டிருக்கிறது. – அம்பேத்கர்”

நன்றி: மாற்று

பல்கலைக்கழகத்தில் மீண்டும் மீண்டும் கொலைகள்!

பெ. பழநி

பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு கொலை!18-ஆவதாக ரோகித் சக்ரவர்த்தி வெமூலா “கொலை” செய்யப்பட்டிருக்கிறார்!

கையில் ஆயுதத்தோடு ஒருவனை விரட்டிக் கொண்டே ஓடுகிறோம்! தப்பிக்க மலை உச்சியை நோக்கி அவன் ஓடுகிறான்! வேறு வழியில்லை! மேலும் விரட்டுகிறோம்! மலை உச்சியிலிருந்து அவனுக்கு விழுவதைத் தவிர வேறு வழியில்லை! விழுந்துவிட்டான்! “அவனே ஓடிப் போய் விழுந்துவிட்டான்” என்று சொல்வது பொய் மட்டுமல்ல! கொடூரம்!!
பாரதீய சனதாக் கட்சியின் “பிஞ்சு”களுக்கான அமைப்புதான் அகில பாரதீய வித்யார்த்தி பரீஷத். அப் பிஞ்சுகளுக்குள் அங்கே மிஞ்சி நின்றவன் சுசீல் குமார் என்பான்! தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தாக்கிவிட்டதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டு ஆகத்து மாதம் 7 ஆம் நாள் மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்கிறான். ஆனால், மருத்துவ அறிக்கை அவன் குடல்வால் நோயை முன்னிட்டுப் போனதாகச் சொல்கிறது! (கோத்ரா ரயிலில் சென்ற ராம பக்தர்கள் எரிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உருவாக்கப்பட்டு பின்னர் இசுலாமியர்கள் மீதான தாக்குதல் ஞாயப்படுத்தப்பட்டது போல! காந்தியைக் கொன்ற கோட்சே முதலில் தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டது போல!) வன்முறையை முன்னிட்டு செயற்கையான ஒரு சூழலை உருவாக்குகிறார்கள்!
பின்னர் ரோகித் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு நிர்வாகம் வழியாகத் தொடர் நெருக்கடி தருகிறார்கள். அவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுகிறார்கள்! கல்வி உதவித் தொகையை நிறுத்துகிறார்கள்! மற்ற மாணவர்களோடு இயல்பாகப் பழகுகிற வாய்ப்புகளை வெட்டுகிறார்கள்! இவையெல்லாம் தீண்டாமையின் மறுவடிவமின்றி வேறேது? மண்ணின் மக்களைச் சொந்த மண்ணிலேயே அன்னியப்படுத்துகின்றனர்! நெருக்கடியின் அழுத்தம் தாங்க இயலாமல் ரோகித் வாழ்வை முடித்துக் கொள்கிறார்!

2008ல் சேலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்ற தமிழ் மாணவருக்கும் இது போன்றே அதே பல்கலைக் கழகத்தில் நெருக்கடி! வாழ்வை முடித்துக் கொள்கிறார்! இப்படி இதுவரை மொத்தம் 18 பேர் “கொலை” செய்யப்பட்டிருக்கின்றனர்! ரோகித் வெமூலா உள்ளிட்ட சில மண்ணின் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்தவர்களுள் மத்திய நடுவண் அமைச்சர்கள் பண்டாரு தத்ரேயாவும் மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருத்தி இரானியும் அடங்குவர்! தில்லியில் நடப்பது காட்டுமிராண்டிகளின் காட்டுத் தர்பார் என்பதை இவர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
பாரதீய சனதாக் கட்சியும், ஆர்.எஸ்.எஸ், அ.பா.வி.ப. உள்ளிட்ட சங்கப்பரிவார அமைப்புகளும் இந்துத்துவா, இந்து மதம், இந்தியா உள்ளிட்ட போர்வைகளைப் போர்த்திக் கொண்டு மண்ணின் மக்களைத் தீர்த்துக் கட்டவே முயலும்! இவைகள் மதவாத அமைப்புகளல்ல! இவைகள் இனவெறி அமைப்புகள்! இவர்கள் வசதியாகப் பயணம் செய்யவே “இந்துத்துவம்” என்ற போலிக் கொள்கையையும் “இந்துக்கள்” என்ற பெரும்பான்மை மக்களையும் பயன்படுத்துகிறார்கள்!

சாதி கடந்து, மதம் கடந்து மண்ணின் மக்கள் கை கோர்க்க வேண்டிய நேரம் இதுவே! மண்ணின் மக்கள் எக் காரணத்தை முன்னிட்டும் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே சாதியையும் மதத்தையும் பிராமணீயம் பயன்படுத்துகிறது! எனவே, பிராமணீயத்தின் கொடுக்கை முறிக்க ஒரே வழி, நாம் இனமாய் இணைவதும் எழுவதும்தான்! அதுவே நாம், ரோகித்துக்கும் செந்தில் குமாருக்கும் செய்கிற வீரவணக்கமாயிருக்கும்!

முகப்பு சித்திரம்: காலித் முகமது அன்சாரி

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!

ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று.

ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்”

அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது”

நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். சீமானுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்த விவாத மேடையில் இருந்த யாரும் இந்த பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருந்தது.

திமுகவின் மனுஷ்யபுத்திரனோ, தமிழன் பிரசன்னாவோ.. அதிமுகவின் சமரசமோ, மா.கம்யூவின் அருணனோ அல்லது கட்சிசாரா இளங்கோ கல்லாணையோ, எவிடென்ஸ் கதிரோ அந்த விவாதத்தில் இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா?

இங்கு மட்டுமல்ல. அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் இடம்பெறாத இந்தியாவின் எந்த மேடைகளிலும் தமிழ்தேசியம், திராவிடம், மார்க்ஸியம், சமூகநீதி மாதிரி முன்னேற்ற சிந்தனைகளோடு மனிதமும் பார்ப்பனத் தினவெடுத்த சீண்டல்களில் தோற்கும் என்பதே யதார்த்தம். அரசியல் கற்காமலேயே அரசியலில் எல்லாம் தெரியும் என்று 2009க்கு பிறகு வாய் மட்டுமே கிழிய பேசும் காளான்கள் இதை முதலில் உணரவேண்டும்.

யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர்.

கரூர் கிராமத்தில் தொடரும் தீண்டாமை: பள்ளிகளில், டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை; புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தலித் இளைஞருக்கு அடி!

புத்தாண்டு கொண்டாடிய தலித் இளைஞர் மீது சாதிஆதிக்கச் சக்தியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியமாக காவல்துறையினர் உள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், ராயனூர்அடுத்துள்ள கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கரூர் நகரக்குழு உறுப்பினர் ஆவார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகன் கேசவன். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோடங்கிபட்டி கிளை துணைத் தலைவராக உள்ளார். புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக அன்று இரவு நண்பர்களுடன் கோடங்கிபட்டியில் புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் தனது உறவினர்கள் பொன்னுசாமி, கார்த்திக் ஆகியோருடன் சொந்த ஊரான சின்னமநாயக்கன்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சின்னமநாயக்கன்பட்டி பேருந்துநிறுத்தம் அருகே  ஆதிக்க சாதி இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு சாலையில் நின்றுள்ளனர். இளைஞர்களை பார்த்த ஆர்வத்தில் கேசவன், அவர்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்கச் சக்தியினரான இளைஞர்கள் கேசவனை சாதியின் பெயரை கூறி,தகாதவார்த்தைகளால் திட்டி, மூன்று பேர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கேசவன் மற்றும் அவரது உறவினர்களை, அங்குள்ள தலித் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், இதுவரைகுற்றவாளிகளை கைதுசெய்யவில்லை.

சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள சாதி ஆதிக்கச்சக்தியினர் கடந்த காலங்களில்அங்குள்ள தலித் மக்கள் மீதுகடுமையான தீண்டாமைக்கொடுமைகளை மேற்கொள்கின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிரந்தரமான தீர்வுகள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு கூறியதாவது, சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 120 தலித் குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட சாதி ஆதிக்கச் சக்தியினரை சேர்ந்த குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தலித் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கொடுமைகளை சாதி ஆதிக்கச் சாதியினர் செய்து வருகின்றனர். சின்னமநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி, அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு இரட்டை டம்ளர், இரட்டை தட்டு, வகுப்பறைகளில் தலித் குழந்தைகளுக்கு தனியிடம், தலித் குழந்தைகள் பள்ளியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்க முடியாது.

சாதி ஆதிக்கச் சக்தியினர் குழாயில் தண்ணீர் பிடித்து டம்ளரில் ஊற்றினால் மட்டுமே தலித் குழந்தைகள் தண்ணீர் குடிக்க முடியும். தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பொதுக்கழிப்பறைகள் உள்ளன. ஆனால் இவற்றை தலித் மக்கள் பயன்படுத்த அனுமதியில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலநிலையே உள்ளது. டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை, இருக்கைகளில் அமரக்கூடாது, சாதி ஆதிக்கச் சக்தியினர் பயன்படுத்தும் குழாய்களில் குடிநீர் பிடிக்கக் கூடாது,பேருந்துகளில் சாதி ஆதிக்கச் சக்தியினருடன் சேர்ந்து அமரக்கூடாது.

சாலைகளில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீண்டாமை கொடுமைகளை சாதிஆதிக்கச் சக்தியினர் தலித் மக்கள் மீது தொடுத்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் தீண்டாமைக்கொடுமைகள் மீது கடுமையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் எடுத்திருந்தால், தலித் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை சாதி ஆதிக்கச் சக்தியினர் நடத்தியிருக்கமாட்டார்கள். தீண்டாமையின் உச்சம்தான் இந்த தாக்குதலுக்கு காரணமாகும். தாக்குதலில் ஈடுபட்டுள்ள சாதி ஆதிக்கச் சக்தியினரை உடனடியாக கைது செய்வதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னமநாயக்கன்பட்டி மற்றும் கோடங்கிபட்டி பகுதி தலித் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தீண்டாமைக் கொடுமைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அப்பகுதி பொதுமக்களையும், ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என்றார்.

சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

கடந்த மூன்றாம் தேதி காலமான மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து. இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை. வழக்கமாக தலித்துகள் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை மழையால் உருக்குலைந்து போனதை அடுத்து இந்தக் கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்பதைவிட உரிமையைக் கோரினார்கள். நீதிமன்றத்துக்குப் போய் தங்கள் உரிமையைப் பெற்றார்கள்.

பொது பாதைக்கான நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் போலீசால் கைப்பற்றப்பட்டு தனிப்பாதை வழியாக எடுத்துச்சென்று புதைக்கப்பட்ட முதியவர் செல்லமுத்துவின் படம் இது. சாதிய அரசு கட்டமைப்பில் நாம் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதற்கு இவர் சாட்சியாகிவிட்டார்.

இந்தச் செய்தி thetimestamil.com வெளியானபின் சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. இதைப் பார்த்த இடதுசாரி, தலித்திய இயக்கங்கள் திருநாள் கொண்டச் சேரி தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டப் போவதாக அறிவித்திருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளர் போலீஸாரின் அத்துமீறிய செயலைக் கண்டித்திருக்கிறார். அதுபோல விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொல். திருமாவளவன் திருநாள் கொண்டச்சேரி மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஊடகமாக சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவமும் அதற்குப் பிறகான விளைவுகளும் எங்களுக்கு உணர்த்தியிருக்கின்றன. எங்களோடு இணைந்திருக்கும் வாசக பங்கேற்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தவர் ஜெயலலிதா: தமிழருவி மணியன்

“இன்று முதல்வராக இருக்கும் ஜெயலலிதா 2001ல் 2-வது முறையாகப் பொறுப்பேற்ற பின்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஆகமங்களில் முறையாகப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்ததோடு நில்லாமல் ஆகமப்பயிற்சி வகுப்புகள் ஆலயங்களில் அரங்கேறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.” என்று தெரிவித்திருக்கிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று காலம் முழுவதும் பெரியார் குரல் கொடுத்தார். அரசியல் ரீதியாக திராவிட இயக்கங்கள் வேறுபட்டுக் கிடந்தாலும் இந்த விவகாரத்தில் மட்டும் ஒற்றுமையுடன் தங்கள் உணர்வை வெளிப்படுத்தின.

கலைஞர் 2006ல் ஆட்சி நாற்காலியில் அமர்ந்ததும் இந்து சமயத்தைச் சார்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று அரசாணையை வெளியிட்டார். இதை எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இந்து சமூகத்தில் சாதிகளின் கட்டுமானம் இறுகிக் கிடப்பதற்கும் சாதி வேற்றுமைகள் மேலும் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் ஆதரவாக அமைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்துவாகப் பிறந்த ஒருவருக்குத் தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் இருக்கும் நிலையில் அர்ச்சகராக நியமிக்கப் படலாம் என்ற தமிழக அரசின் அரசாணையைப் புறக்கணிக்க முடியாது என்று ஒப்புக்கொள்ளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை மதச்சுதந்திரத்தை மீறும் செயல் என்று விளக்கம் வழங்கியிருக்கிறது. இதை அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயலாகக் கருத முடியாது என்றும் அது அறிவித்திருக்கிறது. நீண்ட காலம் கடைப்பிடிக்கப்படுவதனாலேயே ஒரு தவறான நடைமுறையை மாற்றக்கூடாது என்ற கருத்து பத்தாம் பசலித்தனமானது; பகுத்தறிவு சமுதாயத்திற்கு முற்றிலும் எதிரானது.

தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் போன்றவை இந்து சமுதாயத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்ததற்காக அவை சட்டத்தின் மூலம் ஒழிக்கப்படுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படவில்லையா ? அரசமைப்புச் சட்டம் 14-வது பிரிவின்படி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்திரவாதம் அளிக்கும் சமத்துவத்திற்கு எதிரான ஆகமங்கள் இருக்குமானால் அவற்றைப் புறக்கணிப்பதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். சாதிகளற்ற சமத்துவம் தான் ஒரு நாகரீக சமுதாயத்தின் உன்னத லட்சியம். அவற்றை உருவாக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் தான் நீதிமன்றங்களின் கடமைகளாக இருக்க முடியும். “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்ற பழமொழிக்கேற்ப உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பில் குழப்பம் மட்டுமே கூடு கட்டியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து உண்மையான சமூக நீதிக்கு வழி காண வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.