“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி.

மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை மிக கவனகமாக காவல்துறை செய்துள்ளது. அந்த ஆகால மரணத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தவிர கூடியிருந்த பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் வேறு எந்த கோரிக்கையையும் பிரதானமாக எழுப்பவில்லை. அவரை கைது செய்யும்வரை உடலை வாங்க முடியாது என்று சொன்னார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருவதற்கு முன்பு அனைத்து கூட்டத்தையும் கலைக்க வேண்டும் என்பதில்தான் காவல்துறை குறியாக இருந்துள்ளது.

வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் கூடிய பொதுமக்களை எப்படியும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் காவல்துறைக்கு இருந்ததின் விளைவே அந்த திடிர் தாக்குதல். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களைத்தான் “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” என்று மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி கூறினார்.

அப்போது அவர்கள் சொன்ன பதில் “நாங்கள் சோத்தைதான் திங்கிறோம், வேறு எதுவையும் அல்ல” என்றும் “எங்கள் வீட்டிலும் இதேபோல சின்ன குழந்தைகள் உள்ளது” என்று சொல்லி உள்ளனர். திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ முன்னணி தலைவர் கார்கி உள்ளிட்ட 12 நபர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்ததும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 12 நபர்கள் மீது கைது செய்து தனி வழக்கும் மேட்டுப்பாளையம் காவல்துறை பதிவு செய்து கைது செய்தது.

நீதி கேட்டவர்களை அடித்து விரட்டும் போலீசு…

அப்போதுதான் “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?” என்று சொல்லி நாகை திருவள்ளுவனை டி.எஸ்,பி. மணி அடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களையும் காவல்துறை அணுகும் முறை எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் நியாமான உரிமைகளை கூட கேட்கக் கூடாது என்பது ஜனநாயக வன்முறையே. பாதிக்கப்பட்ட நபர்கள் மீதே வழக்கு பதிவு செய்வது சட்டத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும். ஒரு பதட்டமான சூழலில் கவனமாக செயல்பட வேண்டிய அரசு எதற்கு அவசர அவசரமாக கூட்டத்தை கலைப்பதையும், இரவோடு இரவாக அனைத்து உடல்களையும் எரிப்பதும் எதனை மறைக்க அல்லது யாரை காப்பாற்ற என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது.

காவல்துறை நடந்துகொண்ட முறை எல்லோருக்கும் தெரியும், எல்லா தொலைக்காட்சியும் ஒளி பரப்பியது. ஆனால் கைது செய்தவர்கள் மீது பொது சொத்துக்கள சேதப்படுத்திய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எதனை சேதப்படுத்தினார்கள் என்று நீதிமன்றத்தில் கேட்டபோது ஒரு போலிசின் பைக்கை சேதப்படுத்தினார்கள் என்று காவல்துறை தரப்பு சொல்கிறது. அதற்கான ஆதாரம் கேட்டபோது இதோ வருகிறேன் என்று ஒரு போலீஸ்காரர் வெளியே சென்று இரண்டு கற்களை எடுத்து வந்து கொடுக்கிறார். “என்ன இது” என்று கேட்ட போது ‘இந்த கல்லை வைத்துதான் பைக்கை அடித்தார்கள்’ என்று காவலர் சொல்கிறார் (இதைத் தான் (கற்களை) அந்த மூளையில் தேடிக்கொண்டு இருந்தீர்களா”).

அந்த கல்லின் வரலாறு புவியியல் எல்லோருக்கும் தெரிந்த பின்பு நீதிபதியே “பொது சொத்தை சேதப்படுத்திய பிரிவு, மற்றும் அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவையும் நீக்குகிறார். சாதாரண பிரிவில் நீதிபதி காவல் அடைப்பு ஆணையை பிறப்பிக்கிறார். கோவம் கொண்ட காவல்துறை ஓரிரு நாளில் அனைவரும் வெளியே வந்து விடுவார்கள் என்று தெரிந்தபின்பு கோவை சிறையில் அடைக்க வேண்டிய வெண்மணி உள்ளிட்டவர்களை 1500 பேரை வைக்கும் அளவு கொண்ட கோவை சிறையில் இந்த 12 பேரை வைக்கும் அளவுக்கு இடமில்லை எனக்கூறி, அவர்களை சேலம் சிறைக்கு அழைத்து போவது அதிகாரத்தின் உச்சம்.

டி.எஸ்.பி.மணி தலைமையில் நடந்த மனித உரிமை மீறலை (சாதி பெயரை சொல்லி அடித்தது உட்பட அனைத்தையும் புகாராக எழுதி நீதிமன்றதில் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிபதி நியாயம் உணர்ந்து மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் பணி அற்புதம். “நம் கற்கும் கல்வி நமது சமூகத்துக்கு பயன்பட வேண்டும், அதுவே பெற்ற கல்வியின் பயன் ” என்ற சட்ட மேதை அம்பேத்கர் வரிகளை நேரம் உணர்ந்து நடைமுறைப்படுத்திய அனைத்து தோழமைகளின் பணியும் அற்புதம்.

அ.கரீம் முகநூலில்…

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள்

மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.

அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.

அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியி்ன் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 உயரமும் கொண்ட கருஙகல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளீகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.

இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.

மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.

இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.

இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.

நள்ளிரவில் கனமழையில் ஏற்கெனவே சிதிலமாகியிருந்த சுவர் இடிந்து விழுந்து விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிவாங்கியது. இந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் ஏற்கெனவே வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள், எழுத்தாளர்; வழக்கறிஞர்.

”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”

ஆரா

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

இன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று ஊடகங்களில் திருமாவளவன் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். ‘வெண்மணி விவகாரத்தில் இடதுசாரிகளின் தியாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதை நன்றி உணர்வோடு கூற விடுதலைச் சிறுத்தைகள் கடமைப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.

வெண்மணியை வர்க்கப் போரின் அடையாளமாகவே நிலை நிறுத்தியது கம்யூனிஸ்டு கட்சி. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெண்மணிக்குள் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி செலுத்துகிறேன் என்று நுழைந்து இதை தலித் படுகொலை என்று கூறினர். அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும், சிறுத்தைகளுக்கும் ஓர் கருத்து வேறுபாடு தோன்றியது. அது அங்கே களத்திலும் காணப்பட்டது.

வெண்மணிப் படுகொலைகள் நடந்ததற்கு முக்கியக் காரணம் என்று தன் கட்டுரையில் பட்டியலிடும் ரவிக்குமார் 1. கூலி உயர்வுக் கோரிக்கை, 2. சாதியப் பாகுபாடு, 3. நிலவுடமை என்று கூறுகிறார். அதற்குப் பின்னான இரு பத்திகளில் வெண்மணியில் நடந்தது ஒரு சாதியப் படுகொலை என்கிறார்.

கீழத் தஞ்சை மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள், அதன் பின் சாதி இந்துக்கள் என்ற நிலையில் இதை ஓர் வர்க்கப் போராக பார்ப்பதா சாதிக்குள் குறுக்கி தலித் பிரச்னையாக பார்ப்பதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சீனிவாச ராவ் ஆண்டான் -அடிமைத் தனத்தை எதிர்த்தே புரட்சி செய்தார். இடதுசாரிகளின் கூலி, உரிமைப் போராட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மாகொடிய படுகொலையின் நினைவு நாளில், இடது சாரிகள் என்ற தடமே இல்லாமல் ஓர் வெகுஜன இதழில் கட்டுரை எழுதிவிட்டு… சரித்திரத்தை மாற்றுகிறார்கள் என்று பிறர் மீது நாம் குற்றம் சொல்ல என்ன முகாந்திரம் இருக்கிறது!

ஆரா, பத்திரிகையாளர்.

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி

இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக ‘தமிழ் இந்து’ எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும்.

காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு இந்திய விடுதலையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல செங்கொடி சங்கத்தையும் பொதுவுடைமை இயக்கங்களின் பெயரையும் மறைத்து விட்டுத் தஞ்சைக் களஞ்சியில் நிலவிய நிலவுடைமைத்துவக் கொடுமைகளுக்கு எதிராக நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களை நினைவு கூர இயலாது.
தஞ்சையில் இருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய கோயில்கள், மடங்கள், பண்ணகள் கைகளில் குவிந்துள்ளதே அங்கு பண்ணை அடிமை முறை ஆழமாக இறுகியிருந்ததற்குக் காரணம். இந்தப் பண்ணை அடிமை முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர். இவர்களோடு குத்தகை வார விவசாயிகளும் இருந்தனர். இவர்களிலும் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர்.

பண்ணைகள் விவசாயத் தொழிலாளர்களையும் வார விவசாயிகளையும் கொத்தடிமைகள் போல் நடத்தினர். இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் செங்கொடி இயக்கம். இது 25 ஆண்டுகளில் பல களங்களைக் கண்டது. கூலிகளாகவும் வார விவசாயிகளாகவும் இருந்தவர்கள் ஒன்று திரண்டனர். ஒவ்வொரு போராட்டத்திலும் களப்பலி கொடுத்துப் படிப்படியாக முன்னேறினர்.

இந்தப் போராட்டங்கள் கூலி உயர்வு போன்ற பொருளாதாரக் கோரிக்கை களுக்காக மட்டுமல்லாமல் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுக்கு எதிராகவும் நடந்தவை. அதனால்தான் “போடீ என்று சொன்னால் போடா என்று சொல்; அடித்தால் திருப்பி அடி” என்று பி. சீனிவாச ராவ் முழங்கினார். இந்த முழக்கம் தஞ்சைத் தரணி மட்டுமல்லாமல் நிலப்பிரபுத்துவம் நிலவிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது.
ஆனால் போராட்டங்கள் ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

களப்பலிகளை விதைத்து ஒவ்வொரு வெற்றியாகப் பெற்றது. 12 படியாக இருந்த வாரம் 16, 18 25, 55 என உயர்ந்தது; மறுபக்கத்தில் சாணிப்பால், சவுக்கடி, நுகத்தடியில் பூட்டுதல் போன்ற தண்டனைகள் மாறின. மொத்தத்தில் நில உடைமைத்துவத்தின் இறுக்கம் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்த இடங்களில் எல்லாம் தளர்ந்தது. இந்த வயிற்றெரிச்சல் தான் நெல் உற்பத்தியாளர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடுதான் வெண்மணி படுகொலைகள்.

பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் இதனை வர்க்கக் கண்ணோட்ட அடிப்படையில் நிலவுடைமைக் கொடுமைக்கு எதிராக வளர்த்தெடுத்தாலும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுகளை ஒழிக்கும் கோரிக்கைகளையும் முன்னெடுத்தனர். இதில் பெரும்பான்மையோர் தலித் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.

அவர்கள் இப் போராட்டங்களைச் சமூகப் படிநிலை அடிப்படையில் முன்னெடுத்திருக்காவிட்டாலும் அக் கோரிக்கைகளையும் உள்ளடக்கியதுதான் செங்கொடி இயக்கம். ஆனால் அவர்கள் இதனை வர்க்கப் போராட்டமாகக் காட்டிக்கொள்வதைப்போல சமூகப் போராட்டமாகக் காட்டிக் கொள்வதில்லை.

ஆகவே தான், கீழத்தஞ்சைப் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு கள ஆய்வான ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ புத்தகத்தின் துணைத் தலைப்பில் ’தலித்’ என்ற சொல்லைச் சேர்த்து ’தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு’ எனத் தலைப்பிட்டேன்.
இப் போராட்டங்களில் செங்கொடி சங்கம் இல்லாத இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களும் சிறப்பாக இயங்கியுள்ளன.

இப் போராட்டங்களின் விளைவாகக் காவிரி கடைமடை மாவட்டங்களில் நிலப்பகிர்வு அதிகமாக நடைபெற்று நிலக்குவியல் தகர்க்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்த தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் உழுத நிலங்களுக்கு உடைமையாளர்களாக உள்ளனர்.

ஆனால் இன்று எல்லா உரிமைகளும் பறி போகும் நிலைமை உள்ளது. காவிரி கடைமடைப் பகுதிகளில் எதிர்காலத்தில் விவசாயம் இருக்குமா என்பது தெரியவில்லை. தஞ்சையைப் பாலைவனமாக்க கார்ப்பரேட்டுகளும் மத மோதல்களைத் தூண்ட பாசிசமும் கை கோர்த்துள்ளது.

இடதுசாரி சக்திகளும் அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளும் இணைந்து போராட வேண்டிய இச் சூழ்நிலையில் தமிழ் இந்து தலையங்கம் விஷமத்தனமாக இருக்கிறது. இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளின் அணி சேர்க்கையை வலியுறுத்தும் தோழர் ரவிகுமாரும் இதே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அப்பணசாமி, எழுத்தாளர்; மூத்த பத்திரிகையாளர்.

புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

இரா.வினோத்

திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை.

ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த மகள் சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, ‘சாதி பிரச்சினை வரும்’ எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு ‘பெண் கேட்டு’ள்ளார்.

அதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் ‘தலைமறைவு’ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே ‘ரகசியமாக’ வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் – சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.

முதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ”காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்”என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் – சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.

இதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், ‘எதுக்கு இந்த பக்கம்?’ என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ”ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்”என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர் கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் – சுவாதியை அடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, ‘பிரிந்து போய்விடுமாறு’ மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.

அம்பேத்கர் டி -ஷர்ட்

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை. சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

நந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி – ஷர்ட் துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, ‘சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.

இதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் – சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துகொள்ள முடியவில்லை

இந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.

சாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ‘ஒற்றுமை அவசியம்’ என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.

என்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும்? எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது? எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும்? புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள்? மனசாட்சி உள்ள மனிதர்களால் தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌ சாதாரணமாக கடந்து போக முடிகிறது?

இத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், ‘தலித் தலைவர்களால்’ ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? எதையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.

எதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.

எங்கிருந்து வருகிறது வெறி?

சாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார். ‘பொசுக்’னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்? பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.

ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல் புரட்டி போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.

புயலை விட சாதி கோரமானது!

இரா.வினோத், பத்திரிகையாளர்.

ஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை!

சந்திரமோகன்

ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். பிறகு ஒசூருக்கு திரும்பி வந்து நந்தீஸ் ஒரு மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த வாரம் இருவரும் காணாமல் போனார்கள். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர். காவல் துறை உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து அவர்கள் இருவரும் நந்தீஸ்-சுவாதி தான் என்பதை உறுதி செய்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ் சுவாதி…

இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், காட்டுமிராண்டி தனத்தின் உச்சமாக முகங்கள் எரித்து கருக்கப் பட்டிருப்பதும் படுகோரமாக உள்ளது. (பிணங்களின் புகைபடங்கள் பகிர்ந்து கொள்ள முடியாத அளவு கோரமாக உள்ளது. ) சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதாகவும் தகவல் உள்ளது.

ஒரு ரவுடி கும்பல் மூலம் சுவாதியின் பெற்றோர்கள் இக்கொலையை நடத்தியிருக்கிறார்கள்; பெற்றோர் தரப்பில் சிலர் சரணடைந்ததாகவும், சுவாதியின் தந்தை ஒசூர் காவல்நிலையத்தில், “தாங்கள் தான் அவர்களை ஆணவக் கொலை செய்ததாக” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்கொடுமை சட்டங்களையும் மீறி காட்டுமிராண்டி ஆணவக்கொலைகள் தொடரும் என்றால் தமிழகத்தில் சாதி ஒழிப்பு பண்பாட்டு புரட்சி அவசர அவசியமாகிறது! பிற்பட்ட சாதியினர் மத்தியில் சாதி ஒழிப்பு பரப்புரை தீவிரமடைய வேண்டியது. மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது! நூறு பெரியார்கள் தேவைப்படுகிறார்கள் !

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

பா. ஜெயசீலன்

முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது.

யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்கறது இல்லடா இப்போ பிரச்சனை..நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனகரதுதாண்டா பிரச்னை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரை போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும் போதும் தோன்றும்.

அம்பேத்கர் தலித்துகளிடம் கல்வியை வலியுறுத்தியதற்கும் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு கல்வி ஆலோசனை தருவதற்க்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அம்பேத்கர் தலித்துகளிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நவீன இந்தியாவின் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதன் மூலமான பொருளாதாரவலிமையை பெறுவதற்கும், தலித்துகளின் மேல் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான ஒரு வலுவான ஆயுதமாக கல்வியை பார்த்தார், வலியுறுத்தினார். ஆனால் சாதி ஹிந்துக்கள் தங்களிடம் நீதியை, ஜனநாயகத்தை வலியுறுத்தும். தலித்துகளிடம் “தம்பி இப்ப எல்லாம் யாருத்தம்பி சாதி பாக்குறா. அம்பேத்கர் எல்லாம் தலித்தா பொறந்து பெரிய ஆள வரலியா..அதுபோல நீங்களும் நல்லா படிச்சு வாங்க தம்பி” என்று பெரிய மனதோடு ஆலோசனை சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

அதாவது நான் எவ்ளோவ் பெரிய முட்டாள் நாயாக பைசாவுக்கு பெறாதா சாதியை நம்பும் அறிவிலியாக இருந்தாலும் நான் என் சாதி தரும் திமிரோடும் துடுக்கோடும் நடமாடுவேன் ஆனால் நீ என்னிடம் நீதியை கோரினால் நீ அம்பேத்கருக்கு இணையானவனாக இருக்கவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் சென்று பட்டம் பயின்று வந்தால் போனால் போவுது என்று கொஞ்சமாய் மரியாதை தருவோம் இதுதான் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு தரும் ஆலோசனை. இதே ஆலோசனையை மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும் தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறது. மாரி அவருடைய திரைக்கதையின் ஊடாகவும், சாதி ஹிந்துவான கதாநாயகியின் தந்தையின் குரல் மூலமாகவும்(“நல்லா படிங்க தம்பி…எதிர்காலத்துல எது வேணும்னா மாறலாம் இல்லையா”)தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறார்.

பரியனின் நண்பனாக வரும் சாதி ஹிந்து கதாபாத்திரம் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. அந்த பரியனின் நண்பனாக வரும் கதாபாத்திரம்தான் பெரும்பான்மையான சாதி ஹிந்து இளைஞர்களின் மனதை பிரதிபலிப்பதாகவும், அந்த இளைஞன் கதாபாத்திரம் பரியனின் வாழ்க்கையில் வந்த இன்னொரு தேவதை என்றெல்லாம் யார் சொல்கிறார்கள்? சாதி ஹிந்துக்களே சொல்லிக்கொள்கிறார்கள். சரி அந்த கதாபாத்திரத்தை மாரி எப்படி கையாண்டிருக்கிறார்?

கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் நேர்த்தியான சிகையலங்காரம், மீசை, நெற்றியில் தீற்றிய சந்தனம், கவனமாக அயர்ன் பண்ணப்பட்ட சட்டை என்று புழங்க பரியனின் நண்பன் கதாபாத்திரம் மிக கவனமாக ஒரு கோமாளியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிதுங்கும் தொந்தி, கோமாளிக்கான முக பாவனைகள், செய்கைகள் என்று அந்த கதாபாத்திரம் ஒரு காமெடி பீஸாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு என்று எந்த அரசியல் நிலைப்பாடோ, கருத்தோ, கோட்பாடோ, பார்வையோ கிடையாது.ஒரு வகையில் இயக்குனரால் ஒரு ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு உருண்டை பிடித்த சாணியை போல வடிவமைக்கப்பட்டுள்ள பரியின் கதாபாத்திரத்தை போலவே இந்த கதாபாத்திரமும் ஒரு தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு முட்டாள் கோமாளி கதாபாத்திரம் என்று புரிந்துகொள்வதற்கான வெளியை மாரியே உருவாக்கி தந்துள்ளார்.

எனவே இரண்டு தாழ்மையுணர்ச்சி கொண்டுள்ள உருட்டப்பட்ட சாணி உருண்டைகள் நட்பு பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? ஒடுக்கப்பட்டவரின் அரசியல் பேச விரும்பிய மாரிக்கு கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் கதாபாத்திரம் கோமாளியாகவும் பரிக்கு தோள்கொடுக்கும் நண்பன் கதாபாத்திரம் கம்பீரமானவனாகவும் ஏன் தோன்றவில்லை என்பதை நீங்கள் யோசித்தால் இந்த திரைப்படம் ஏன் தலித்துகளின் கலை அரசியலை சிறிதும் உள்வாங்கவில்லை என்பதும் இன்னும் சொன்னால் எப்படி தலித்துகளின் கலை அரசியலுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது என்பதையும் உணரமுடியும்.

இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் போன்ற எல்லா சம்பவங்களின் போதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான விவாத நிகழ்ச்சிகள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் சாதி வெறி பன்றிகள் திரும்ப திரும்ப முன்வைத்த பொறுக்கித்தனமான வாதங்களில் ஒன்று வசதியாக வளர்ந்த எங்கள் சாதி பெண்கள் தலித்துகளை திருமணம் செய்துகொண்டு சென்றால் சிரமப்படுவார்கள்.தலித்துகளால் எங்கள் பெண்களை பார்த்து கொள்ள முடியாது என்பது. எதோ தமிழகத்து சாதி ஹிந்துக்கள் forbes வெளியிடும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருபவர்களை போலவும் தமிழகத்திலேயே ஏழைகள் உள்ள சாதி என்று உள்ளதென்றால் அது தலித் சாதிதான் என்னும் பொருள்பட பேசுவதை கேட்கிறோம். ஆனால் உண்மை என்னவென்று நமக்கு தெரியும். வன்னியர்களும், தேவர்களும், கௌண்டர்களும் தங்கள் சாதிக்குள் சோற்றுக்கு வழியில்லாத எத்தனை பேர் உள்ளனர் என்று தெரிந்தும் தலித்துகள் தங்கள் வீட்டு பெண்களை மணம்முடித்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர் என்று நம்புவதையே விரும்புகிறார்கள்.

பரியின் அப்பா icici வங்கியில் மானேஜராக இருந்து ஜோவின் அப்பா ஆடுதிருடுபவராக இருந்திருந்தாலும் பரியின் முகத்தில் மூத்திரம்தான் விட்டுயிருப்பார்கள். ஏனென்றால் இங்கு பிரச்சனை என்பது சாதி வெறியும் சாதியை நம்பும் பன்றிகளும்தான். மாரிக்கு இந்த அடிப்படை பிரச்னையை எதிர்கொள்ள நேர்மையோ, அறிவோ, தைரியமோ இல்லை. அதனால் சாதி ஹிந்துக்கள் அச்சச்சோ என்று உச்சு கொட்டக்கூடிய ஒரு ஆபாசமான உலகை கட்டிமைக்கிறார். அதாவது குலசாமிக்காக மட்டுமே ஆணவ கொலைகள் செய்யும் பெரியவரும், எம்பொண்ணையும் கொன்னுருவாங்கடா என்று பரியிடம் அழும் தகப்பன்களும் புழங்கும் அதிரிபுதிரியான கற்பனா உலகம் மாரியினுடையது. மாரி பரியின் கதாபாத்திரத்தை சோற்றிற்கு வழியில்லாத ஒருவனாகவும் கதாநாயகி ஜோ தனது பெயரில் ஒரு கல்யாண மண்டபத்தை கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவளாகவும் வடிமைக்கிறார். இளவரசன் திவ்யா விஷயத்தில் இளவரசனின் பொருளாதார நிலை என்பது திவ்யாவை விட மேலானதாக இருந்ததாகவே நாம் அறிந்தோம். இருந்தும் இளவரசனுக்கு நடந்ததை நாம் அறிவோம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஆணவ கொலையில் கூட அந்த பைய்யன் நல்ல பொருளாதார பின்னணியையும், கல்வியையும் கொண்டவனாகவே இருக்கிறான். இருந்தும் அவன் கொல்லப்பட்டான்.

நிலைமை இப்படியிருக்க மாரி படைக்கும் பரி சோற்றிற்கு வழியில்லாத, தனது பென்சாயல் கொண்ட கூத்தாடி தகப்பனை வண்டிக்காரராக புனையும் கதாபாத்திரமாக வடிவமைத்து சாதி ஹிந்துக்கள் நிஜத்தில் வைக்கும் புனைவான கருத்துருவாக்கத்திற்கு இவர் புனைவில் நிஜம் சேர்க்கிறார். sairat திரைப்படத்தின் மீதும் எனக்கு இதே விமர்சனம் உண்டு. ஆனால் sairat படத்தில் அந்த பையன் தனக்கு ஏற்பட்டுள்ளது காதல் என்று பிரகடனப்படுத்தும் தைரியத்தோடுவாது இருந்தான். மாரியின் பரி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டையும் உருளுதடி என்று கடைசிவரை காதல் என்ற வார்த்தையை குறிப்பாக மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் சொல்ல அஞ்சுகிறான்.

மூஞ்சில் மூத்திரம் விட்டதுக்கு revenge எடுக்க வகுப்பறை பெஞ்சில் பெயர் எழுதிவைப்பது, “FLAMES” விளையாட்டு விளையாடும் தேவதை சாதிஹிண்டு நண்பனிடம் கோபித்துக்கொள்வது, பெண்கள் கழிவறையில் தள்ளிவிட்டு தாழ்ப்போட்டு சிறுபிள்ளைத்தனமான ரௌடியிசம் செய்வது, சென்னை சட்டக்கல்லூரி வன்முறையை ஒத்த காட்சிகளை சம்மந்தமில்லாமல் ட்ரைலரிலும், படத்திலும் பயன்படுத்தியது, இளவரசனின் சாவிற்கு எந்தவகையிலும் நீதி கோராதா ஒரு கதையில் இளவரசனின் கதையை சாதி ஹிந்துக்கள் விசிலடிக்கும் வியாபாரமாக்கியது என்று எத்தனையோ பிழைகள், எரிச்சல்கள். இருந்தாலும் இறுதியாக பரிக்கும், ஜோவிற்குமான என்னவென்று பெயர்வைக்கமுடியாத அந்த உன்னதமான, புனிதமான, காவியமான, கலாபூர்வமான, ஸ்ஸ்ப்ப்ப்ப்பா உறவை மாரி மிகக்கவனமாக பெயரிடாமல் தன்னுடைய படத்தையும் மதித்து படம் பார்க்கவரும் சாதி ஹிந்துக்கள் கிஞ்சித்தும் டென்ஷன் ஆவாதபடி தவிர்த்துள்ளார்.

இறுதிக்காட்சியில் கூட அது என்னானு தெரியத்துக்குள்ளாற அத பிச்சு போட்டிங்களே பாஸு என்றுதான் பரி சொல்கிறானே தவிர ஆமாம் எனக்கு அவளை பிடித்திருக்கிறது அவளை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. மாரி கேட்கும் நீதி என்பது உங்கள் பெண்களை எங்கள் பையன்கள் காதலித்தால் என்ன தப்பு என்பதை அல்ல..மாறாக எங்கள் பையன்கள் சும்மா தமாஸுக்கு உங்கள் பெண்களிடம் பேசினால் கூட அடித்து எங்கள் மூஞ்சில் மூத்திரம் விட்டு உங்கள் மூத்திரத்தை வீண்செய்யலாமா? உங்களுக்கு எதாவது urinal infection வந்துவிடப்போகிறது என்கின்ற அக்கறையில்தான் சொல்கிறேன் என்கின்ற ரீதியில் படத்தை முடிக்கிறார்.

இறுதிவரியாக “நீங்கள் நீங்களா இருக்கிற வர நாங்க நாயா இருக்கணும்னு நீங்க நினைக்கிற வர எதுவும் மாறாது” என்ற வசனத்தை விட ஒரு ஆபாசமான வசனத்தை யாரும் எழுதிவிட முடியாது. இந்த வசனம் சாதிஇந்துக்களின் மனநிலையிலும் தலித்துகளின் மனநிலையிலும் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று மாரி யோசித்துதான் எழுதினாரா..என்னுமோ மயிரு போங்க..

காலாவில் ஒரு அசாத்தியமான பாய்ச்சலை நிகழ்த்தி, தலித் கலையிலக்கிய தளத்தில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிறுவிய ரஞ்சித் இந்தப் படத்தை தயாரித்துள்ளது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ரஞ்சித் அடிக்கடி “நான் கடினப்பட்டு இழுத்துவந்த தேரை முன்னிழுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பின்னுழுத்து விடாதீர்கள்” என்ற அம்பேத்கரின் வரியை மேற்கோள் காட்டுவார். தலித் கலையிலக்கிய தளத்தில் ரஞ்சித் ஒரு அடி முன்நகர்த்திய தேரை தலைவன் மாரி ஒத்தையாளாக 10 அடி பின்னிழுத்து விட்டிருக்கிறார்.

பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.

”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”

காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,

“சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சார்ந்த ஆதிக்கக் சமூகத்தைச் சேர்ந்த சுமன் என்பவரின் குடும்பத்தினர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததை தடுக்கக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சாதியினர். காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கடந்த 4 ஆண்டுகாலமாக அலட்சியம் செய்து வந்த காரணத்தால் இரண்டு சமூகத்தினருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா முடிந்த நிலையில், ஆதிக்க சமூகத்தை சார்ந்தவர்கள் வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலின மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் சண்முகநாதன் (எம்.பி.ஏ. பட்டதாரி) மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதி ஆதிக்க சக்தியினர் நிகழ்த்திய இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு காவல்துறை உரிய நேரத்தில் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், காவல்துறையும் சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து பட்டியலின மக்கள் மீது நடத்தப்படுத் சாதிய ரீதியான வன்கொடுமை தாக்குதல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்காமல், ஆதிக்க சாதியினருக்கு துணை போவது வெட்கக்கேடான செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

காவல்துறையினரின் பொறுப்பற்ற செயலின் காரணமாகவே இந்த படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இந்தப் படுகொலைக்கு காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும். எனவே, இந்தக் கொலைக்கு காரணமான ஆதிக்க சமூகத்தை சார்ந்த கொலை கும்பலை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஐம்பது லட்சமும், படுகாயமுற்று மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஐந்து லட்சமும் வழங்கிட வேண்டும். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும், படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உயரிய சிகிச்சையும் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது!

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன. மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். குஜராத்தில் தலித்  ஒருவர் தன்னுடைய பணியிடத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் சிராஜ் என்பவர் இறைச்சிக்காக காளை மாட்டை வெட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் சிராஜ்(45) மற்றும் அவருடைய நண்பர் ஷகிலை(35) அடித்துள்ளனர். இதில் சிராஜ் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். ஷகில் பலத்த காயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இறைச்சிக்காக மாட்டை வெட்டுவது குறித்து தகவல் அறிந்து 70 கி.மீ தொலைவிலிருது குண்டர் படை வந்து தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தக் கொலை தாக்குதல் நடத்திய நான்கு குண்டர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

குண்டர்கள் அளித்த புகாரின் பேரில் ஷகில் மீது பசுமாட்டை வெட்டுதல் தடை சட்டத்தின் வழக்கு பதிந்துள்ளது காவல்துறை. ஷகில் மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது மத்திய பிரதேச காவல்துறை. ம.பி.யில் 2012 முதல் பசுமாட்டை வெட்டும் தடை சட்டம் இருந்துவருகிறது.

சிராஜ் மற்றும் ஷகில் குடும்பத்தினர் குண்டர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். சிராஜ், தையல்காரர். ஷகில் கார் ஓட்டுநராக உள்ளார்.

பசுபாதுகாப்பு குண்டர்கள்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த முகேஷ் வானியா என்ற தலித் தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் கட்டிவைத்து அடித்ததில் அவர் இறந்திருக்கிறார். அவருடைய மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை தலித் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய ட்விட்டரில் விடியோவுடன் பதிந்துள்ளார்.

“துலுக்கப்பட்டி பிரச்சனை தீவிரமானதல்ல!”: எழுத்தாளர் அன்புசெல்வம்

அன்பு செல்வம்

அன்பு செல்வம்

பொம்மினாயக்கன்பட்டி (எ) துலுக்கப்பட்டி கிராமத்தில் உள்ள‌ தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே உருவாக்கப்பட்டப் பிரச்சனையை மோதலின் உச்சமாகவும், நிரந்தரப் பகை முரணாகவும் பார்க்க முடியாது.

2002 -ல் ஒரு மாணவர் பயிற்சிக்காக அந்த கிராமத்தில் ஒரு வாரம் தங்கி இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது கிடைத்த கதைகள் பொம்மினாயக்கன்பட்டி எப்படி துலுக்கப்பட்டியாக மாறியது என்பதைச் சொல்கிறது. அந்த ஊர் வழியாக‌ ஒரு பாட்டி தலையில் கூடை சுமந்து செல்கிறாள். சுமை தாங்க முடியாமல் அந்த கூடையை இறக்கி, மூடி வைத்து விட்டு போய் விடுகிறாள். கூடையைத் திறந்து பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியானார்கள். வெட்டப்பட்ட ஒரு தலை மட்டும் ரத்தம் சொட்ட உயிரோடு துடித்துக் கொண்டிருந்தது. அந்த தலை கொஞ்ச நேரம் பேசுகிறது. நாயக்கமாரில் அண்ணன்மார், தம்பிமார் ஒழுக்கம் இல்லாமல் போனதால் ஒருவருக்கொருவர் மோதி வெட்டிக் கொண்டார்கள். அதில் நானும் வெட்டப்பட்டேன். நீங்களும் அதே போல இருக்காதீர்கள். வெளியே எங்கு போனாலும் நான் நாயக்கமார்னு சொல்லாதீர்கள் என சொல்லிவிட்டு அந்த தலையிலிருந்து உயிர் பிரிந்து விட்டது. இதைக் கேட்ட பொம்மிநாயக்க வகையறாக்கள் நமது தலையையும் பாதுகாக்க வேண்டுமானால் நாம் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என முடிவெடுத்ததாக‌ அந்த கதை நீள்கிறது. இது நடந்து நூறாண்டு இருக்கலாம் என்கிறார்கள். உள்ளூரில் உள்ள சில‌ இஸ்லாமியர்கள் நாங்கள் நாயக்கர்கள் இல்லை, வெளியில் இருந்து வந்த பட்டானி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கதை இருக்கிறது. (இதில் எதை ஏற்பது – நிராகரிப்பது என்பது ஒரு பக்கம்).

தற்போது 1200 இஸ்லாமிய குடும்பம் இருக்கிறது. பொம்மி வகையறா நாயக்கர்கள் இஸ்லாமியர்களாக‌ மாறினார்களோ, இல்லையோ பறையர்கள் இஸ்லாமியர்களாக மாறிய வரலாறு கொண்ட கிராமம் இது. மொத்தம் உள்ள‌ 500 பறையர் குடும்பங்களில் 20 குடும்பம் இன்னமும் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் நில உடமையாளர்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12 குடும்பங்கள் (பெண் கொடுத்தது, பெண் எடுத்தது என்கிற வகையில்) இஸ்லாத்துக்கு மாறி பெரியகுளம் பகுதியில் குடியேறி இருக்கிறார்கள். பிரச்சனைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பின் புலத்தில் “நிலம்”, “பெரும்பான்மை – சிறுபான்மை”, கொஞ்சம் பழைய காலத்து பாகுபாடு என‌ எல்லாமும் கலந்திருக்கிறது.

இங்குள்ள இஸ்லாமியர்கள் வெளிநாடு சென்றதில் பொருளாதார வளம் அவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது, பெரும்பாலான இஸ்லாமியர்கள் விவசாயம் செய்பவர்கள். ஊருக்கு உள்ளேயும், அதைச் சுற்றியும் இருக்கிற அதிக பட்ச நிலம் அவர்கள் கைவசம். கிராமத்துக்கென பொதுவளம் இல்லை என்பது நீண்ட நாள் குறை. இதில் தலித்துகள் புழங்குவதற்கான பொது வளம் முற்றிலும் சுருங்கி விட்டது. எல்லா நிகழ்வுக்கும், புழக்கத்துக்கும் பள்ளிவாசல் தெருவையும், பேருந்து நிறுத்தத்தையும் விட்டால் வேறு வழியில்லை. இது அவ்வப்போது சிறு, சிறு மோதலாக வெளிப்படுவது உண்மை தான். ஆனால் பண்பாட்டு ரீதியாக இரு சமுகங்களும் இணக்கமாகவே இருந்து வருகிறார்கள்.

அண்மைக்காலத்தில் தான் சில தீய சக்திகள், இந்துத்துவ வெறி கொண்டு தங்களின் சுயநல அரசியலை, சந்தர்ப்பவாதமாக்கிக் கொள்ள இது போன்ற மோதலை உருவாக்கி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

● கிராமத்தின் பெரும்பாலான வளங்கள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது மறுப்பதற்கில்லை. இதை கவனத்தில் கொண்டு, தலித் பயன்பாட்டுக்கு கூடுதலான பொது வளங்கள் தேவைப்படுகின்றன. அதை பெறுவதற்கு திட்டங்கள் வேண்டும்.

● ஒரு கிராமத்தை வலுப்பெறச் செய்யும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவுக்கு இக்கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து, விடுபட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த கண்காணிப்புகள் தேவை.

● பொதுவாக தலித் சமூகங்களில் இருந்து இஸ்லாம் தழுவி இருக்கிறவர்களின் வாழ் நிலை மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக‌ நல்லிணக்கத் திட்டங்கள் தேவை.

● தற்போது உருவாக்கப்பட்டுள்ள அமைதிக்குழு வரவேற்கப்பட வேண்டியது. நீண்டகால நோக்கில் இக்குழு கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.

கட்டுரையாளர்  அன்புசெல்வம், “சாதி இன்று” அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

 

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே? ஒரு நேரடி ஆய்வு அறிக்கை

1. முன்னுரை

சந்தையூரில் உள்ள அருந்ததியர் மக்களின் அனுபவத்தை மையமாக வைத்து நாங்கள் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். சந்தையூர் – இந்திரா காலனி, ராஜகாளி அம்மன் கோவில் சுவர் கட்டப்பட்டதன் நோக்கில், பறையர் மக்களால், அருந்ததியர் மக்களுக்கு ஏற்பட்ட சாதிய பாகுபாடுகள் நிறைந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இது “தீண்டாமைச் சுவர்” தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

அதே போன்று, இந்தச் சுவரைப் பற்றி, சந்தையூர் பறையர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் / இயக்கங்கள் / கட்சிகள், பொது வெளியில் வைக்கும் எண்ணற்ற வாதங்களில், “ஆதிக்க சாதித் தமிழர்கள்” பயன்படுத்தும் அதே சொல்லாடல்கள், சரளமாக இங்கும் அருந்ததியர்கள் மீது கொட்டப்படுகிறது. இதை நாங்கள், அருந்ததியர்கள் மீது பறையர்கள் காட்டும் “சாதிய ஆதிக்கம்” என்றே கவனப்படுத்துகிறோம்.

இந்த அறிக்கை ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி, முன்னுரையாகவும். இரண்டாம் பகுதி, ஆய்வு முறை பற்றியும். மூன்றாம் பகுதி, சந்தையூரைப் பற்றிய அறிமுகமாகவும். நான்காம் பகுதி, பிற தீண்டாமை சுவர்கள் பற்றிய ஒரு பார்வையாகவும், ஐந்தாம் பகுதி, தீண்டாமைச் சுவர் மற்றும் அருந்ததியர்களின் அனுபவங்கள் பற்றியும். ஆறாம் பகுதி, பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதத்தை ஒரு திறனாய்வு நோக்கில் அணுகியும். ஏழாம் பகுதி, இந்த பிரச்சினையில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட விசயங்களை தொகுத்தும் தந்திருக்கிறோம்.

2. ஆய்வு முறை

ஆறு நபர்கள் கொண்ட குழு, பல்வேறு கட்டங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். ஆய்வில் கலந்து கொண்டவர்கள்,

a. தோழர். சூர்யா, சமூகப்பணி செயல்பாட்டாளர்.

b. Dr. ரவிச்சந்திரன், தலித் கேமரா நிறுவனர்.

c. தோழர். கதிரவன், பத்திரிக்கையாளர்.

d. தோழர். ராம்குமார், ஆய்வு மாணவர்.

e. தோழர். பிரபாகரன், ஆய்வாளர்.

f. தோழர். பிரபாகர், ஆய்வு மாணவர்.

இக்குழுவில், மூவர் அருந்ததியர்கள் (S.C.), இருவர் பறையர்கள் (S.C.) மற்றும் ஒருவர் கைக்கோளர் (O.B.C). நாங்கள் சில அருந்ததியர்களை, சாதி ஒழிப்புச் செயல்பாட்டாளர்களை / முனைவர்களை / பேராசிரியர்களை அணுகி, சந்தையூர் தீண்டாமைச் சுவர் பற்றிய அனுபவங்களை களஆய்வு செய்து, “நியாயமான” அறிக்கை வெளியிட வேண்டினோம். ஆனால், பயம், அச்சுறுத்தல், பிரச்சினை கண்டு விலகிச் செல்லுதல், தலித் விடுதலையின் மீது அக்கறையின்மை போன்ற காரணங்களினால் யாரும் முன் வரவில்லை. இறுதியில், நாங்களே அந்த பணியை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். இந்தக் குழுவில், போதுமான அளவில் முழுமையான பிரதிநிதித்துவம் இல்லாமைக்கு மேற்குறிப்பிட்ட காரணிகளே முக்கியக் பங்கு வகுக்கின்றன.

இந்த ஆய்வு, “Qualitative Research” என்ற முறையைச் சார்ந்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள, அருந்ததியர்களிடத்தில் நேர்காணல் எடுக்கப்பட்டு உண்மை சாட்சியங்களாக தொகுக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று, சந்தையூர் பிரச்சினையை சார்ந்து, பறையர்களும் / பறையர் சார்பாக பேசிய / பதிவு செய்த / சமூக வலைதளங்களில் எழுதிய சொல்லாடல்களையும் சேகரித்தோம். மேலும், சந்தையூர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் நிலை தரவுகளை தேடி எடுத்தோம்.

சந்தையூர் பறையர்கள், இந்தப் பிரச்சினை தொடர்பாக, நாங்கள் எடுக்க முயற்சித்த நேர்காணலுக்கு எவ்வித ஒத்துழைப்பையும் முதலில் தரவில்லை. ராம்குமார் மூன்று முறை பறையர்களை சந்திக்க முயற்சி செய்தும் அவர்களிடம் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை. ரவிச்சந்திரன் பல முறை முயற்சித்து, தோழர். வெ.பு. இன்குலாப் (தெற்கு மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), தோழர். வெ. கனியமுதன் (துணை பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) மற்றும் தோழர். எவிடன்ஸ் கதிர் (சாட்சியம் நிறுவனம்) நேர்காணல் கொடுக்க சம்மதித்தார்கள். மேற்குறிப்பிட்ட தோழர்களின் பெயர்களை பயன்படுத்திய பிறகே, சந்தையூரில் உள்ள சில பறையர் ஆண்கள் நேர்காணல் கொடுக்க சம்மதித்தனர். அதுவும், கேமராவில் அவர்களுடைய நேர்காணலை பதிவு செய்ய முற்றிலுமாக மறுத்து விட்டனர்.

3. சந்தையூர், ஒரு அறிமுகம்

சந்தையூர் கிராமம், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ளது. அந்த கிராமம், பேரையூரிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு தேவர், செட்டியார், பிள்ளை, ஆசாரி, நாவிதர், வண்ணார், தேவேந்திரர், அருந்ததியர், பறையர் என பல்வேறு சாதிச் சமூகங்கள் வாழ்கிறார்கள்.

அருந்ததியர் மற்றும் பறையர்கள் ஊருக்கு வெளியிலுள்ள சேரியில் வாழ்கின்றனர். இவ்விருவரும் அருகருகே வாழ்ந்தாலும், பறையர் குடி, அருந்ததியர் குடி என்று தனித்தனி உட்பகுதிகளாக இருக்கிறது. அரசு ஆவணத்தில் இந்திரா நகர் என்று இருந்தாலும், பொதுவாக இந்திரா காலனி என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சுமார் 70 லிருந்து 80 அருந்ததியர் குடும்பங்களும், 30 லிருந்தது 35 பறையர் குடும்பங்களும் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் மூன்று தேவர் குடும்பமும் வாழ்கின்றனர். தேவேந்திரர் அருகிலுள்ள கீழப்பட்டி கிராமத்தில் வாழ்கின்றனர். இதர சாதி சமூகங்கள் ஊர்ப் பகுதியில் வாழ்கின்றனர்.

சந்தையூர் கிராமத்தில் நிறையக் கோவில்கள் இருந்த போதிலும், அருந்ததியர் மற்றும் பறையர் மக்கள் வசிக்கும் பகுதியில் ராஜகாளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன. இவற்றில், ராஜகாளியம்மன் கோவில் பறையர் மக்களும், காளியம்மன் கோவில் அருந்ததியர்களாலும் வழிபடுகின்றனர். விநாயகர் கோவிலை இரு சமூதாய மக்களும் வழிபடுகின்றனர்.

காமராஜர் ஆட்சி காலத்தில், இந்த ஊரில் ஆதிதிராவிடர் குடியிருப்பை உருவாக்க, 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை, அரசு தந்தது. அதில், 1 ஏக்கர் 05 சென்ட் நிலம், தனிநபர் பட்டாக்களாக 14 அருந்ததியர் குடும்பத்திற்கும், 7 பறையர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள 55 சென்ட் நிலம், இரண்டு சமூக பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இது பட்டா எண். 193ல் வருகின்றது. ராஜகாளியம்மன் கோவில் சுற்றி உள்ள பொது நிலம் தான் இப்பொழுது பிரச்சினைக்கு உரிய இடமாக அங்கு இருக்கிறது. பறையர்கள் இதை தங்களுக்குரியது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள் / அருந்ததியர்கள் இதை பொது [நத்தம் புறம்போக்கு] நிலம் என்று சொல்கிறார்கள். இது பட்டா எண். 194ல் வருகின்றது.
இந்திரா காலனி, பேரையூரிலிருந்து சந்தையூருக்கு வரும்பொழுது, சந்தையூர் கிராமத்தின் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது. அந்த நிறுத்தத்தை ஒட்டி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இக்காலனி இரண்டு பிரிவுகளாக உள்ளது. அருந்ததியர் மற்றும் பறையர் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு நடுவே ராஜகாளியம்மன் கோவில் (மற்றும் ஒரு காலி இடம் உள்ளது). அதைச் சுற்றி ஒரு பெரிய சுவர் (தீண்டாமைச் சுவர்) உள்ளது. அருந்ததியர்கள் வழிபடும் கோவில் மற்றும் விநாயகர் கோவிலைச் சுற்றி எந்த ஒரு சுற்றுச் சுவரும் இல்லை.

ராஜகாளியம்மன் கோவிலுக்குப் பின் புறத்தில் ஒரு சாவடி உள்ளது. அது பறையர் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ராஜகாளியம்மன் கோவிலுக்கு மேற்குப் பக்கத்தில் காளியம்மன் கோவிலும் அதை ஒட்டி ஒரு சாவடியும் உள்ளது. இது அருந்ததியர் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி அருந்ததியர் குடியிருப்புகளும் அதன் பின்புறத்தில் பறையர் குடியிருப்புகளும் இருக்கின்றன. இந்த இரு கோவில்களுக்கும் இடையே ஒரு பொதுவழிப் (சிமெண்ட்) பாதை உள்ளது.

காலம்காலமாக, அருந்ததியர் மற்றும் பறையர் விவசாயக் கூலிகளாக இருந்து வருகின்றனர். அத்துடன், அருந்ததியர்கள் இறப்புச் சடங்குகள் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செய்கின்றனர். பறையர் மக்கள் கூடை பின்னும் தொழில் செய்தனர், ஊர் வேலை அவர்கள் செய்தது கிடையாது. ஒரு காலத்தில், இரண்டு தரப்பு மக்களும், ஏழ்மையான நிலையில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் மாட்டு இறைச்சியும், இறந்த மாட்டு இறைச்சியும் உண்டு வாழ்ந்துள்ளனர். அருந்ததியர், பறையர்களுக்கு மாட்டு இறைச்சியைப் பகிர்ந்து கொடுத்து உள்ளனர். ஒரு காலத்தில், இரண்டு சமூகத்து மக்களும் சுமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனாலும், இரண்டு சமூக மக்களிடையே திருமண உறவு என்பது எப்போதும் இருந்ததில்லை.

கடந்த பதினைந்து வருட காலத்தில், பறையர்கள் கல்வியிலும், பொருளாதார நிலையிலும் முன்னேறி உள்ளார்கள். பலர் அரசாங்கப் பணியிலும் மற்றும் நகரங்களிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சில வருடத்திற்கு முன்னரே, அருந்ததியர்கள் முன்னேற்றத்திக்கான பாதையில் நுழைந்து உள்ளனர். ஒரு அருந்ததியர் ஆசிரியராக வேலை செய்கிறார். பல ஆண்கள் கேரளா மாநிலம் சென்று வேலை செய்கிறார்கள். இன்றளவும், நிறைய தினக்கூலி வேலைக்கும், இறப்பு சடங்குகள் செய்வதற்கு இவர்கள் செல்கின்றனர். அருந்ததியர்கள் வசிக்கும் பெரும்பாலான வீடுகள் அரசால் கட்டப்பட்ட வீடுகளே. வறுமையின் காரணமாக இவர்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. அருந்ததியர் மக்கள் அதிகமாக இருந்தாலும், அவர்கள் சாதியிலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் பறையர்களைவிட கீழான நிலையிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக, பறையர்கள், அருந்ததியர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

4. தீண்டாமைச் சுவர்கள், ஒரு பார்வை

சந்தையூர் தீண்டாமைச் சுவரை புரிந்து கொள்ள மற்றும் ஒரு சுவர் எப்போது தீண்டாமைச் சுவராக பார்க்கப்படுகிறது / கருதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள, அதே போல் இருக்கும் / இருந்த சுவர்களை பற்றி படிப்பது / ஆராய்வது அவசியமானது. கடந்த பத்து வருடங்களில், தமிழகத்திலும் / தென்னிந்தியாவிலும் எண்ணற்ற தீண்டாமைச் சுவர்கள் சார்ந்த பதிவுகளும் / அதை அகற்றுவதற்கு போராட்டங்களும் அவ்வப்போது நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. எடுத்துக்காட்டாக, திருச்சி மேலப்புதூர் கல்லறைக்கு நடுவே கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் (Natarajan, September 2010); சேலத்தில் 42வது வட்டத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் (The Hindu, August 2011), உத்தபுரம் தீண்டாமைச் சுவர், வடயம்பாடி தீண்டாமைச் சுவர் மற்றும் கோவை தீண்டாமைச் சுவர். இவைகளில், இந்த ஆய்வுக்கு, மூன்று தீண்டாமைச் சுவர்களை பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.

4.1. உத்தபுரம் தீண்டாமை சுவர்

உத்தபுரம் என்ற ஊர் மதுரை மாவட்டத்தில், தமிழ் நாட்டில் உள்ளது. அந்த ஊரில், “ஆதிக்க சாதிகளுக்கும்,” தலித்களுக்கும் இடையே ஒரு சண்டை 1989ல் ஏற்பட்டது (அதற்கு முன் 1948ல் மற்றும் 1964ல் இந்த இரு சமூகங்களுக்கிடையே சண்டைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளது). அந்தச் சண்டைக்கு பிறகு, ஒரு 600 அடி தீண்டாமைச் சுவரை ஆதிக்க சாதிகள் கட்டி எழுப்பினார்கள். இந்தச் சுவர் காரணமாக, அடுத்த பக்கம் செல்ல, 2.50 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை தலித்துகளுக்கு ஏற்பட்டது (Mathew October, 2015).

அந்த ஊரில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2007ஆம் ஆண்டு ஒரு களஆய்வு நடத்தினார்கள். அந்த ஆய்வில் தீண்டாமையின் பல பரிமாணங்கள் உள்ளதை அவர்கள் பதிவு செய்தார்கள். உதாரணத்துக்கு, முத்தாலம்மன் கோவில் மற்றும் அங்கு உள்ள அரச மரத்துக்குச் சென்று வழிபட தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதே போல, தலித் மக்களின் வீட்டு விழாக்களின் போது, தெருவில் தோரணம் கட்ட, தெருவை அலங்கரிக்க அனுமதி இல்லை (Imranullah March, 2012). தேசிய அளவில், பல ஊடகங்கள், இந்த ஆய்வறிக்கை பற்றி பேசினார்கள் / எழுதினார்கள். அதைத் தொடர்ந்து, தலித் அமைப்புகளின் போராட்டங்கள், சாதி ஒழிப்புக் கொள்கை கொண்ட அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் ஊடகங்களின் நெருக்கடி காரணமாக 2008ம் ஆண்டு ஒரு பகுதி (180 மீட்டர்) சுவரைச் தமிழக அரசு இடித்தது (Mathew October, 2015).

அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதிகள் இதை ஏற்க மறுத்து விட்டனர். சுவர் இடித்த அன்று அவர்களில் பலர் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். பின் அக்டோபர் 1, 2008 அன்று, ஆதிக்க சாதிகள், அந்த ஊரில் வசிக்கும் 70 தலித் குடும்பங்களின் வீடுகள் மீது தங்களுடைய காழ்ப்புணர்ச்சியைக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில், சுரேஷ் என்ற ஒரு தலித் இளைஞர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார் (Ibid.).

பல வழக்குகள் இரண்டு தரப்பினர்கள் மீதும் அரசு பதிவு செய்தது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்ய, S. திருப்பதி (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களைக் கொண்டு ஒரு-நபர் ஆணையம் ஒன்றை உருவாக்கியது. அவர் கொடுத்த அறிக்கையில், தலித் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்ததை எடுத்துக் காட்டி இருந்தார் (Ibid.).

பின்பு, அக்டோபர் 20, 2011 அன்று, மதுரை S.P. அவர்கள் முன்னிலையில் ஒரு சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இரு சமுதாயப் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். முடிவில், இரு தரப்பும், ஒரு உடன்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். முக்கிய உடன்பாடுகள்: தலித்கள் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபடலாம், ஆனால், கோவில் நிர்வாகத்தை ஆதிக்க சாதிகள் பார்த்துக் கொள்வார்கள், தலித் மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிப்பதால் சுவரை (தீண்டாமைச் சுவரை) முழுவதும் இடிக்க தேவையில்லை, இரண்டு தரப்பு மக்கள் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெற்றுக் கொள்வது (Ibid.).

இந்த உடன்பாடு எட்டிய பிறகு, நவம்பர் 10, 2011 அன்று, அந்த ஊரின் தலித்துகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலுக்கு உள்ளே சென்றார்கள். சில ஆதிக்க சாதி ஆண்கள் தலித் மக்களை வரவேற்கவில்லை. அதே போல, அந்த சமூகத்தில் உள்ள சில பெண்கள், தலித் மக்கள் நுழைந்து விட்டார்களே என்று வீதியில் அழுதார்கள் (Ibid.).

4.2. வடயம்பாடி தீண்டாமை சுவர்

வடயம்பாடி என்ற ஊர் கேரளா மாநிலம், எர்னாகுளம் மாவட்டத்திலுள்ளது. இறவி ராமன் கர்த என்றொரு நாயர் (உயர் சாதி இந்து) பஜனை பாட ஒரு அறை ஒன்றை கட்டினார், அந்த ஊரில். பல ஆண்டுகளுக்கு பிறகு, அந்த இடத்தை நாயர் சேவை சங்கம் (NSS) சொந்தம் கொண்டாடி, அந்த இடத்தை விரிவு படுத்தி, ஒரு கோவிலை கட்டினார்கள். அதன் பெயர், பஜனை மடம் கோவில். அந்த கோவிலை சுற்றி 95 சதவிகிதம் நிலம், காலி நிலமாக இருந்தது. அதை சுற்றி மூன்று தலித் மற்றும் ஆதிவாசி குடியிருப்புகள் இருக்கின்றது (புலையர் மற்றும் நாயக்கர்). அந்த புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக அங்கு உள்ள தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்கள் (180 இப்போது) பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் சார்ந்த விசயத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள் (Jayarajan, February 2018).

மார்ச், 2017ல், NSS ஒரு சுவரை அந்த காலி இடத்தை சுற்றி கட்டினார்கள். முதலில், தலித் / ஆதிவாசி மக்கள் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொன்னார்கள். பிறகு, அந்த கோவிலில் தலித் மக்கள் நடத்தும் “தேச விளக்கு” பண்டிகையால், அங்கு உள்ள தெய்வத்தின் புனிதம் கெட்டு போவதாக சொல்லி அந்த பண்டிகையை நிறுத்தினார்கள். மேலும், அந்த காலி நிலம், NSSக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார்கள் (Ibid.).

ஒரு பகுதி சுவரை, தலித் மக்களும் / இயக்கங்களும் ஏப்ரல் 14, 2017 (அம்பேத்கர் பிறந்தநாளன்று) அன்று உடைத்தார்கள். அதன் பின், இந்த சுவரை எதிர்த்து, தலித் மக்களும் / இயக்கங்களும் சுமார் ஒரு வருட காலம் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதன் இடையே, RTI மூலம் தாலுகா அலுவலகத்தில், அந்த நிலம் சார்ந்த அவணங்கள் கேட்கப்பட்டது. எங்களால் அந்த நிலத்தின் பட்டாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று பதில் சொன்னார்கள், அரசு அதிகாரிகள் (Counter Currents, January 2018).
பல மாதங்களாக, ஊடகங்களின் பார்வை போராடும் மக்கள் மீது பெரிதாக இல்லை. ஜனவரி 21, 2018 அன்று, காவல் துறை அதிகாரிகள் போராடும் மக்கள் மற்றும் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான நடவடிக்கையின் விளைவாக, ஊடகங்கள் இந்த பிரச்சினையின் பக்கம் திரும்பியது. தலித் எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் காவல் துறையின் செயலை வன்மையாகக் கண்டித்தனர். மாவோயிஸ்ட் அமைப்பு தூண்டுதல் காரணமாகத் தான் தலித் மக்கள் போராடுகிறார்கள் என்று கேரளா காவல் துறை, கூச்சம் இல்லாமல் குற்றம் சுமத்தியது. R.S.S. அமைப்பு ஒரு படி மேலே சென்று, மாவோயிஸ்ட் மற்றும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள், இந்தப் போராட்டத்தை நடத்துவதாக சொன்னார்கள் (Ameerudheen, January 2018). அந்த மாநிலத்தை ஆளும் CPI(M)ன், ஒரு M.L.A., இது சிவில் பிரச்சினை, சாதி பிரச்சினை இல்லை (தீண்டாமை இல்லை) என்று சொல்கிறார் (Jayarajan, February 2018).

அந்த இடத்தைச் சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை பல அமர்வுகளைத் தாண்டிச் சென்றது. தற்காலிகச் சமரசம் ஒன்று ஏற்பட்டு இருப்பதாக ஆட்சியர் அவர்கள் பிப்ரவரி, 2018ல், அறிவித்தார். “எந்த ஒரு புதிய கட்டமைப்புகளும் கட்ட கூடாது, வழக்கு முடியும் வரை. அந்த பகுதியை தலித் மக்கள் பயன்படுத்த அனுமதி உண்டு,” என்று அதில் குறிப்பிடப்பட்டது (Ibid.).

4.3.கோவை தீண்டாமைச் சுவர்

கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில், வேடபட்டி ஊராட்சியில், நாகராஜபுரம் உள்ளது. அந்த ஊரில், தலித் / ஆதிவாசி இன மக்கள், 600 – 700 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள் – அருந்ததியர், தேவேந்திரர், பறையர், நரிக்குறவர் சமூகத்தினர் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், ஒரு தனியார் நிறுவனம், முக்கிய சாலை பக்கத்தில் உள்ள நிலத்தை வாங்கி, வீட்டு மனைகள் போட்டார்கள். இந்த நிலத்துக்கு பின் புறம், தலித் / ஆதிவாசி இன மக்கள் வசிக்கும் இடம் உள்ளது. வீட்டு மனைகள், தலித் / ஆதிவாசி இன மக்கள் வசிக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருந்தால், மனைகளின் மதிப்பு குறையும் என்று ஒரு சுவரைக் கட்டினார்கள். அந்தச் சுவர், ஒரு மீட்டர் அகளம், 10 அடி உயரம், ஒரு கிலோமீட்டர் நீளம் இருந்தது.

இதனால், முக்கியச் சாலைக்குச் செல்ல, தலித் / ஆதிவாசி இன மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தத் தீண்டாமைச் சுவரைப் பற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஒரு மனு கொடுத்து இருந்தார்கள், பாதிக்கப்பட்ட மக்கள். இந்தச் செய்தி, தினசரி நாளிதழ்களில் வந்து இருந்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு, R.D.O., தாசில்தார் மற்றும் இது சார்ந்த அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்தார்கள். பின், இரண்டு இடங்களில், அணுகு சாலை அமைக்க அந்தச் சுவர்கள் இடிக்கப்பட்டது. மாநகராட்சிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய அணுகு சாலையைக் கொடுக்காமல் அந்தச் சுவரை அவர்கள் கட்டி இருந்தார்கள்.

இப்போது, சந்தையூர் தீண்டாமைச் சுவருக்கும், மேலே குறிப்பிட்ட தீண்டாமைச் சுவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் பார்ப்போம்:

a. உத்தபுரம் தீண்டாமைச் சுவர் மற்றும் வடயம்பாடி தீண்டாமைச் சுவர் ஆகியவை இருந்த இடங்கள், புறம்போக்கு நிலம். சந்தையூர் தீண்டாமைச் சுவர் இருக்கும் இடமும் புறம்போக்கு நிலம்.

b. உத்தபுரத்தில் ஆதிக்க சாதிகள் தலித்களிடம் கையெழுத்து வாங்கிய பிறகே தீண்டாமைச் சுவரை கட்டினார்கள். அதே போன்று, சந்தையூரில் பறையர்கள் அருந்ததியர்களிடம் கையெழுத்து வாங்கிய பிறகே தீண்டாமைச் சுவரைக் கட்டினார்கள். இந்த இரண்டு இடத்திலும், ஆதிக்க சாதியின் அச்சுறுத்தல் காரணமாகத் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது.

c. இதுநாள் வரை, ஆதிக்கச் சாதியினர் எந்த ஒரு இடத்திலும் தாங்கள் கட்டியது தீண்டாமைச் சுவர் தான் என்று ஏற்றுக் கொண்டதில்லை, சந்தையூர் பறையர்களும் அவ்வாறே நடந்துகொள்கின்றனர்.

d. உத்தபுரத்தில் தலித்துகள் முத்தாலம்மன் கோவிலுக்கு உள்ளே நுழைந்த பிறகு (மற்றும் சாதித் தமிழர்களின் ஆதிக்கத்தை சிறிதளவு உடைத்த பிறகு), தீண்டாமைச் சுவர், சாதாரண சுவரானது (தலித் மக்கள் பார்வையில்). அதே போலத்தான், இரண்டு அணுகு சாலை வந்த பிறகு, கோவையில் இருந்த தீண்டாமைச் சுவர், சாதாரண சுவரானது.

e. வடயம்பாடி தீண்டாமைச் சுவர் பிரச்சினை என்பது கோவிலில் நுழையும் பிரச்சினை இல்லை, கோவிலை சுற்றி உள்ள காலி நிலத்தின் (புறம்போக்கு நிலம்) உரிமைக்கான பிரச்சினை. சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினையும் அதுவே. பல காலமாக, அருந்ததியர்களும், பறையர்களும் சேர்ந்து உபயோகித்த நிலத்தை திடீர் என்று பறையர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் / சாதிய ஆதிக்கத்தை காட்டுகின்றார்கள்.

f. மேலும், வடயம்பாடி தீண்டாமைச் சுவர் பிரச்சினை, ஒரு சிவில் நிலப் பிரச்சினை என்று வாய்கூசாமல் ஒரு CPI(M) M.L.A. ஒருவர் சொன்னார். அதே சொல்லாடலை தான், பறையர்கள் சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினையில் பயன்படுத்துகின்றார்கள். சிவில் நிலப் பிரச்சினை என்று சொன்னால் அங்கு தீண்டாமை இல்லை என்று உறுதிப்படுத்தப்படும்.

g. நாகராஜபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் சொந்த நிலத்தில் கட்டப்பட்டது. சொந்த நிலமாக / புறம்போக்கு நிலமாக இருப்பினும், கட்டப்பட்டதற்கான காரணம் தனக்கு கீழ் உள்ள சாதிய சமூகத்தை ஒதுக்குவதற்காக எனில் அது தீண்டாமைச் சுவரே.

h. தங்கள் கோவிலுக்கு உள்ளே ஆதிக்க சாதியினரை நுழையக் கூடாது என்று, ஒரு வேளை, தலித் மக்கள் ஒரு சுவரை கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது தீண்டாமையா? இல்லை, சாதிய எழுச்சியா? (எங்கள் பார்வையில்) அது சாதிய எழுச்சியே! இந்து வர்ண அமைப்பில், கீழ் உள்ள சாதிகள், தனக்கு மேல் உள்ள சாதிகள் மேல் தீண்டாமையை கடை பிடிக்க முடியாது (reverse discrimination is impossible within the Hindu caste code).

i. சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினை என்பது இரு பட்டியல் இன சாதிகளுக்கு இடையே நடப்பது (அருந்ததியர் மற்றும் பறையர்). ஆகையால், தீண்டாமைக்கு உள்ளே தீண்டாமை சாத்தியமா? என்று பலர் கேட்கிறார்கள். இந்த கேள்வி, எந்த நிலைப்பாட்டில் இருந்து எழுப்புகிறார்கள் என்றால், “பட்டியல் இன சாதிகள் (மற்றும் பாலினம்) அனைத்தும் சமதளத்தில் இயங்குகின்றது.” இந்து வர்ண அமைப்பு என்பது சாதிய படிநிலைகளால் ஆனது, பட்டியல் இன சாதிகள் அதற்கு விதிவிலக்கில்லை.

j. அதேபோலத்தான், தலித் பெண்ணியமும் (Dalit Feminism), ஆதிக்க சாதித் தமிழர்களுக்கு (ஆண் + பெண்) எதிராக களம் காணும் அதே வேளையில் தலித் ஆண்களின் தீண்டாமை / ஆதிக்கத்துக்கு எதிராகவும் களம் காண்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் தலித் ஆண்கள், தலித் பெண்கள் மீது தீண்டாமையை, ஆதிக்கத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.

சந்தையூர் தீண்டாமை சுவர்…

5. தீண்டாமைச் சுவரும், அருந்ததியர் மக்களின் அனுபவங்களும்

பறையர்களால், அருந்ததியர்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை / ஒடுக்குமுறை சார்ந்த எட்டு அனுபவங்களை மட்டும் இதில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். நேரமின்மை, பக்கங்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களால், பல ஒடுக்குமுறை சார்ந்த அருந்ததியர்களின் அனுபவங்களை இங்கு எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. உதாரணமாக, அங்கன்வாடியில் நடக்கும் சாதிய தீண்டாமை, தண்ணீர் தொட்டி கட்ட மறுப்பு தெரிவித்தது, காளியம்மன் கோவில் சுவர் கட்ட மறுப்பு தெரிவித்தது, 11 அடி சாலையில் நடந்த பிற தீண்டாமை அனுபவங்கள். பாதுகாப்பு கருதி, நாங்கள் இந்த அனுபவங்களில் வரும் நபர்களின் பெயர்களை மறைத்து புனைப்பெயர்கள் கொடுத்துள்ளோம்.

5.1. திரு. விக்னேஸ்வரனின் அனுபவம்

அந்த நிகழ்வு, இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது. அப்போது, அவர் சந்தையூரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்ற மாணவராக இருந்திருக்கிறார். படிப்பில், சுமாராகவும் இருந்திருக்கிறார். இதை பார்த்த அவருடைய பள்ளியில் படிக்கும் சில பறையர் மாணவர்களுக்கு சாதிய அடிப்படையில் பொறாமை இருந்தது, “நீ இதை போல் விளையாட்டில் பரிசுகள் வாங்கக் கூடாது,” என்றும், “சக்கிலியனாகிய நீ, எங்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்கள். பல சூழ்நிலைகளில், பள்ளியில் நடக்கும் பச்சைக் குதிரை விளையாட்டின் போது, அருந்ததியர் மாணவர்கள் தாண்டும் நிலை வரும் போது, பறையர் மாணவர்கள் குனிய மறுத்து உள்ளனர்.

அந்த ஆண்டு, அவர் விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசுகள் பெற்றிருந்தார். கோபம்கொண்ட சந்தையூர் பறையர் மாணவர்கள், ஒரு நாள், விக்னேஸ்வரன் அந்த 11 அடி சாலையை கடக்கும் போது, காளிராஜ் மற்றும் அவரது தம்பிகள், விக்னேஸ்வரனை தாக்கி உள்ளனர். ஒரு கல்லை கொண்டு அவர் முதுகில் தாக்கியதில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த இரண்டு அருந்ததியப் பெண்கள், பறையர் மாணவர்களிடமிருந்து விக்னேஸ்வரனை காப்பாற்றினார்கள். மூச்சு திணறல் காரணமாக, அவர் மூன்று நாட்கள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு பின், பள்ளிக்கு சென்றால் வேறு ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பள்ளிப் படிப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவிட்டு, ஆந்திர அருகில் ஒரு முறுக்கு கம்பனிக்கு வேலைக்கு சென்று இருந்தார்.

5.2. திரு. ஈஸ்வரன் அவர்களின் அனுபவம்

ஈஸ்வரன் தற்பொழுது சந்தையூர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார். சிறப்பாக படிக்கும் மாணவர் என்று பலரும் இவரை பாராட்டுகின்றார்கள்.
அந்த நிகழ்ச்சி 2016ம் ஆண்டு நடந்தது. ஒரு நாள், அவர் சைக்கிள் ஒட்டிக் கொண்டு அந்த 11 அடி பாதையில் வந்துள்ளார். அப்பொழுது தங்கபாண்டி என்றொரு பறையர் (சுமார் 36 வயது இருக்கும்) ஈஸ்வரனை தடுத்து, “இந்த பாதையில் ஏன்டா நீ சைக்கிள் ஓட்டி வந்த? இது எங்களுடைய பாதை அதனால் தான் இந்த சுவர் கூட கட்டி உள்ளோம்,” என்று மிரட்டி, தாக்கியுள்ளார். ஈஸ்வரன் அழுது கொண்டே அவருடைய அப்பாவான திரு. முனியாண்டி அவர்களிடம் சொன்னார். அவர் ஊர் தலைவர் திரு. குருசாமி அவர்களிடம் நடந்த விசயத்தை சொல்லி முறையிட்டுயிருக்கிறார். முனியாண்டி தற்போது ஊர் வேலை செய்து வருகிறார்.

5.3. திரு. காளிமுத்து அவர்களின் அனுபவம்

இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 2013ல் நடந்தது. ஒருநாள், காளிமுத்து அவர்கள் வீட்டிற்கு அவருடைய உறவினர், குமார், என்பவர் தேனியில் இருந்து வந்திருந்தார், அவர் கொத்தனார் தொழில் செய்து வருபவர். காளிமுத்துவின் மகள் பிறந்தநாள் விழா அழைப்பின்பேரில் அவர் அங்கு வந்து இருந்தார்.

குமார் அவர்கள் அருந்ததியர் பழைய தெருவில் வீடு கட்டும் பணிக்காக அங்கு இரண்டு நாள் தங்கிருந்தார். ஒரு நாள் மதியம், வேலையை முடித்துவிட்டு உணவிற்காக திரும்பி அருந்ததியர் புதிய தெருவுக்கு வரும்போது, அவரும், அதே பகுதியை சேர்ந்த காளிமுத்துவும் முள்வேலி இருந்த இடத்தின் வழியாக எதார்த்தமாக வந்துள்ளனர். முதலில் அமைதியாக இருந்த பறையர்கள், அவர்கள் வேலைக்கு சென்று திரும்பும் போது, அங்கிருந்த பறையர் இளைஞர்கள் சிலர், “நீங்கள் இந்த வழியில் வரக்கூடாது, நீங்கள் வரக்கூடாது என்று தான் நாங்கள் முள்வேலி போட்டோம்,” என்று கூறியுள்ளனர். அதற்கு, குமார் அவர்கள், “நான் வெளியூர் எனக்கு அதைப்பற்றி தெரியாது,” என்று கூற, அருகில் இருந்த காளிமுத்து அவர்கள், “நீங்க அப்படி சொல்ல முடியாது, இது பொது இடம். இதனால் தானே ஏற்கனவே சகாயம் கலெக்டர் அவர்கள் முள்வேலியை எடுத்தார்,” என்று கூறியுள்ளார்.

அதற்கு, பறையர் இளைஞர்கள் காளிமுத்துவை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அதனால், அவருடைய தோள்பட்டை மற்றும் கை பாதிப்புக்குள்ளானது. இதை தடுக்க வந்த காளிமுத்துவின் தம்பி, பழனி அவர்களையும் தாக்கினார்கள். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளது. அருந்ததியர் தரப்பிலிருந்து இந்த கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளது. கருப்பையா அவர்கள் (பறையர்) வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்து இருந்த கற்களை கொண்டு எரிந்ததில் அருந்ததியர் பெண்களின் மண்டை உடைந்தது.

வேடிக்கை என்னவென்றால், இந்த கலவரத்தை ஆரம்பித்த பறையர்கள் மீது கொலை மிரட்டல் (506) வழக்கும், அருந்ததியர்கள் மீது 307 வழக்கும் (கொலை முயற்சி) பதியப்பட்டது. இன்றும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அருந்ததியர் மாணவர் ஒருவர், இந்த வழக்கு காரணமாக, பள்ளி இடைநிற்றல் செய்து விட்டார்.

5.4. தை பொங்கல் அன்று நிகழ்ந்த சம்பவம்

அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான விநாயகர் கோவில் முன்பு, வாகனங்கள் வழிப்பாதையில் நிறுத்தி இடையூறு செய்யாமல் இருக்க, அருந்ததியர் மக்கள் கற்களை வைத்திருந்தார்கள். பொங்கல் திருவிழா என்பதால் ஒலி பெருக்கியை வைத்துள்ளனர்.

சனவரி 13, 2017ல், தை பொங்கலுக்கு முதல் நாள், விநாயகர் கோவிலுக்கு முன்பு இருந்த கற்களின் மீது பறையர் பெண்கள் அமர்ந்து இருந்தனர். இதை பார்த்த, அருந்ததியர் பெண்கள் அங்கு சென்று, “ஏற்கனவே, நம் இரு சமூகத்திற்கும் பிரச்சினை இருந்து வருகிறது, இந்த சமயத்தில் நீங்கள் இங்கே அமர்ந்து இருப்பதை, அருந்ததியர் ஆண்கள் பார்த்து ஏதாவது சொன்னால், மீண்டும் பிரச்சினை வரும்,” என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட பறையர் பெண்கள் கோவமாக திட்டவே, பிரச்சனை பெரிதாக மாறி, இரு சமூக மக்களுக்குள் மோதல் ஏற்பட்டது. சில நிமிடங்களில், பறையர்கள் அந்த கற்களை அவர்கள் வழிபடும் ராஜகாளியம்மன் கோவிலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். பின் அருந்ததியர் மக்களை இழிவாக வசைப்பாடியுள்ளனர். அதன் பிறகு அந்த கற்களை, ஒலி பெருக்கியை உடைத்து நொறுக்கினார்கள். அந்த கற்கள் மற்றும் ஒலி பெருக்கியின் மொத்த மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும். இது போன்று பல இழப்புகள் பறையர்களால் அருந்ததியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில், அருந்ததியர் மக்கள் மீதும் பறையர் மக்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், இந்த நிகழ்வு நடந்த பொழுது இல்லாத, அருந்ததிய சமூக பட்டதாரி ஒருவர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை நடத்த, அருந்ததியர் மக்கள், குறிப்பாக கருப்பையா அவர்கள் வளர்த்த ஆடுகளையும், சில மாடுகளையும் விற்றுள்ளார்கள். இதனால், இவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

5.5. திருமதி. பாப்பாத்தி அவர்களின் அனுபவம்

பாப்பாத்தி அவர்கள், வயது 46, அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர். இவருடைய கணவர் திரு. பெரிய கணேசன், ஒரு தினக்கூலி. இவருக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர்.

ஒரு நாள், அந்த நாய், பறையர் மக்கள் வழிபடும் ராஜகாளியம்மன் கோவிலை சுற்றியுள்ள காலி
நிலத்துக்கு உள்ளே சென்று விட்டது. இதை பார்த்த ராஜதுரை என்ற பறையர் தன் அரிவாளால் அந்த நாயை தாக்கி உள்ளார். அதனால், அந்த நாயின் காலில் அடி பட்டு உள்ளது. அத்துடன் நிற்காமல், தன் அரிவாளை எடுத்துக் கொண்டு பாப்பாத்தி அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளார். எல்லோரும் வேலைக்கு சென்றிருந்ததினால், வீட்டில் யாரும் இல்லை.

மாலையில் பாப்பாத்தி அவர்கள், வீட்டிற்கு திரும்புகையில், சில பறையர் இளைஞர்களை கடந்து சென்று உள்ளார். அப்பொழுது, ராஜதுரை மற்றும் செல்லபாண்டி இருவரும், “உன் வீட்டு நாய், எங்கள் கோவில் சுவற்றுக்குள் நுழைந்து விட்டது. ஆகையால், உன் மகனை அனுப்பு, நாங்கள் அவனை வெட்ட வேண்டும். ஒருவேளை, அவன் சாவை தடுக்க வேண்டும் என்றால், உன் மகளை அனுப்பு ஒரு நாள் வைத்து இருந்து நாங்கள் அனுப்புகிறோம்,” என்று கேவலமான வார்த்தைகளால் வசை பேசினார்கள். இந்த வார்த்தையை கேட்ட அந்த அம்மா, அந்த இளைஞர்கள் காலில் விழுந்து அழுது, மன்னிப்பு கேட்டு உள்ளார். உடனே அருந்ததியர் மக்கள் கூடி பேசி அந்த பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்கள். மறுநாள் அந்த அம்மா வேலைக்கு செல்கையில், பறையர் இளைஞர்கள், “சக்கிலிச்சி,” என்று அழைத்து வம்புக்கு இழுத்து உள்ளார்கள். இதை பாப்பாத்தி அவர்கள், ஊர் தலைவர், குருசாமி அவர்களிடம் முறையிட்டு உள்ளார்.

5.6. 11 அடி நடை பாதையை கட்ட தடுத்த சம்பவம்

அந்த நடை பாதை, 11 அடி அகலம், 65 அடி நீளம். அது ஒரு பள்ளமான பகுதியில் அமைந்து இருந்தது. அருந்ததியர் மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். அந்தப் பாதையின், ஒரு பக்கம் தீண்டாமைச் சுவரும், மற்றொரு பக்கம், பறையர்களின் வீடுகளும் உள்ளது. மழை நாட்களில், அந்தப் பாதையில் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். அப்பொழுது, ஓரமாக செல்லலாம் என்று சென்று, அந்தத் தீண்டாமைச் சுவரை தொட்டு விட்டால், பறையர் மக்களிடம் வசை வாங்க நேரிடும். சில சமயம், இதனால் பறையர்கள் அடித்தும் இருக்கிறார்கள்.

இப்படி இருக்க, அந்தப் பாதையை உயர்த்தி, ஒரு சாலை அமைத்தால், பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும் என்று அருந்ததியர்கள் எண்ணினார்கள். பின்னர், அரசாங்கத்திடம் சாலை அமைக்க ஒப்புதலும் வாங்கி வந்தார்கள். அந்த முயற்சியைப் பறையர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இது அவர்களுடைய நிலம் என்றும், அருந்ததியர்கள் அதில் நடக்க மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறோம் என்றும், அதை அருந்ததியர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறினார்கள்.

5.7. திரு. கருத்தப்பாண்டி அவர்களின் அனுபவம்

இவர் கூலி வேலைக்காக கேரளா சென்று வருபவர். அதுபோல சென்ற வருட இறுதியில் ஒரு முறை வீட்டிற்கு வந்தபொழுது, இந்நிகழ்வு நடந்துள்ளது. இவருடைய வீட்டு நாய், பறையர் பகுதி நாயுடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்த கருத்தப்பண்டியும் மற்றும் அவரது நண்பர்களும், அவருடைய நாயை கூப்பிட்டுள்ளனர். இந்த சமயத்தில், அவ்வழியே சென்ற இரண்டு பறையர் பெண்கள் தங்களைத் தான் கிண்டல் செய்வதாக எண்ணி, அவர்கள் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கூறினார்கள். அந்த இளைஞர்கள், கருத்தபாண்டி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.

அதற்கு கருத்தப்பாண்டி, “நாங்கள் நாயை தான் அழைத்தோம், அவர்களை கிண்டல் செய்யல,” என்று சொன்னதற்கு, பறையர் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண்கள் புகார் கொடுக்க காவல் நிலையம் வரவில்லை. காவல் நிலையத்தில், வழக்கு பதியாமல், அருந்ததிய இளைஞர்களை அடித்து, பத்து நாள் காவல் நிலையம் வந்து, கையொப்பமமிட கூறியிருக்கின்றனர்.

5.8. திருமதி. முத்துலட்சுமி அவர்களின் அனுபவம்

திரு. காளிமுத்து மற்றும் முத்துலட்சுமி, வயது 27, தம்பதிக்கு ஒரே மகள், செல்வி. சந்திரலேகா, இரண்டரை வயது. இரண்டு வருடம் முன்பு (2016), ஒரு நாள், அவர்களின் மகள், ராஜகாளியம்மன் கோவில் சுற்று சுவருக்கு உள்ளே சென்று விட்டார். இதை பார்த்த முத்துலட்சுமி அவர்கள், உடனே உள்ளே சென்று அவசரம், அவசரமாக அந்த குழந்தையை வெளியே தூக்கி வந்து உள்ளார். சில பறையர் இளைஞர்கள் இதை பார்த்து விட்டார்கள். அவர்களில் காளிராஜ் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் முத்துலட்சுமியை, “ஏண்டி சக்கிலி தேவிடியா, நீங்கெல்லாம் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று தான் சுவரை எழுப்பி உள்ளோம், அதையும் மீறி உள்ளே செல்கிறாய் என்றால் உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்,” என்று வசைபாடினார்கள். உடனே முத்துலட்சுமி மன்னிப்பு கேட்டு உள்ளார். அதை பொருட்படுத்தாமல், காளிராஜ் என்பவர் தொடர்ந்து கேவலமாக திட்டியுள்ளார். உடனே, முத்துலட்சுமி சென்று தலைவர் குருசாமி அவர்களை சந்தித்து முறையிட்டு உள்ளார். சரி நாங்கள் இதற்கு முடிவு கட்டுகிறோம் என்று உறுதி அளித்துள்ளார், குருசாமி.
இந்த அனுபவங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, கீழ்க்கண்ட விசயங்களை நம்மால் உணர முடிகிறது.

a. சாதிய ஆதிக்கம் / தீண்டாமை மனோபாவம் பறையர்களின் குழந்தைகள் வரை பரவி உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

b. சந்தையூரில் உள்ள பெரும்பாலான அருந்ததியர் ஆண்கள் வேலை செய்ய கேரளா செல்கின்றனர். அதனால், பறையர் மக்களால் கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய ஒடுக்குமுறைகள், அருந்ததியர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

c. மேலும், அருந்ததியர் மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரம், இந்த சாதிய ஒடுக்குமுறைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

d. சாதியம், அருந்ததியர்கள் வீட்டு விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. விலங்குகள் மீதும் அருந்ததியர் முத்திரை குத்தப்படுகிறது.

e. பறையர்களின் சமூக மூலதனம் மற்றும் அரசியல் பொருளாதாரம், அருந்ததியர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்த பக்க பலமாக உள்ளது.

அருந்ததிய மக்கள் மலையில் குடியேறி போராட்டம்

6. பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதம், ஒரு திறனாய்வு

எங்கள் பார்வையில், பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை இரண்டு பிரிவுகளாக பார்க்க முடியும். ஒன்று, கோப்புகள் சார்ந்த வாதம். இரண்டு, சமூகம் சார்ந்த வாதம். முக்கிய நபர்கள் / பொறுப்பில் உள்ளவர்கள் வைக்கப்படும் வாதங்களை மட்டுமே நாங்கள் இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் பார்த்த வரை, பறையர்கள் பல தருணங்களில், கோப்புகள் சார்ந்த வாதத்தையே முதன்மையாக வைக்கிறார்கள்.

6.1. ராஜகாளியம்மன் கோவில் சுவர் உள்ள இடம் 194 / 14 என்ற பட்டாவில் இருப்பதாகவும், அது பறையன் குடியிருப்பு என்று சொல்கிறார்கள்.

 • அருந்ததியர்கள் வாய்மொழி வரலாறை பார்க்கையில், சந்தையூர் – இந்திரா காலனியில் உள்ள அந்த நிலத்தை (i.e., ராஜகாளியம்மன் கோவில் சுற்றி இருந்த காலி நிலம்) பறையர் மற்றும் அருந்ததியர் மக்கள் பல ஆண்டுகளாக சேர்ந்தே பயன்படுத்தி வந்தார்கள்.
 • தோராயமாக, 2007 – 2008 ஆம் ஆண்டில், ஒரு முள்வேலியை பறையர்கள் அந்த காலி நிலத்தை சுற்றி போட்டார்கள். அருந்ததியர் மக்கள் செல்ல, இரண்டு அடி நடைபாதைக்கு இடம் விட்டு அந்த வேலியை அமைத்திருந்தார்கள்.
 • அது பறையன் குடியிருப்பு என்றால் ஏன் இரண்டு முறை அருந்ததியர்களிடம் ஒப்பந்தம் போட வேண்டும்?
 • அரசு ஆவணங்களை பார்த்தால், பட்டா எண். 194 என்பது புறம்போக்கு நிலம் என்றே சொல்கிறது. சென்னை உயர் நீதிமன்ற (மதுரை கிளையில்) வெளியிட்டு உள்ள தீர்ப்பில் அது புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர் என்று கூறியுள்ளது. மேலும், மதுரை மாவட்ட நிர்வாகத்தை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளது.

6.2. பேரையூரில் 2014ல் நடந்த சமாதான கூட்டம் மற்றும் சந்தையூரில் 2015ல் நடந்த சமாதான கூட்டம். இந்த கூட்டங்களில் அருந்ததியர் தலைவர்கள் சுவர் கட்ட சம்மதம் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.

 • இந்த அமர்வுகள், இரு சாதி மக்களும் சில உடன்பாடுகளை எட்ட நடத்தப்பட்ட கூட்டங்கள். பறையர் தலைவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள், இந்த ஒப்பந்தங்கள் சட்ட ரீதியாக செல்லாது.
 • உள்ளூர் அருந்ததியர் தலைவர்களின் தொடர் (சுமார் ஐந்து வருடம்) விண்ணப்பத்தின் / அழுத்தத்தின் விளைவாக, அப்போதைய ஆட்சியர், திரு. சகாயம் அவர்களின் உத்தரவுப்படி, 02/05/2012 அன்று முள்வேலி அகற்றப்பட்டது.
 • அதன் பின், 09/05/2012 அன்று நடைபெற்ற ஒரு சமாதான கூட்டத்தில் (வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட்சியர் முன்நிலையில்) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்று, முள்வேலி ஆக்கிரமிப்பினை 02/05/2012 அன்று அகற்றப்பட்டதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை. இரண்டு, நத்தம் புறம்போக்கில் யாரும் வேலி அமைக்கக் கூடாது. மூன்று, இரு தரப்பினரும் புறம்போக்கில் உள்ள பாதையை சமமாக பயன்படுத்திக் கொள்ளவும். நான்கு, மேற்படி இந்நிலத்தில், சிமெண்ட் சாலை மற்றும் இதர பணிகள் தொடங்குவதற்கு முன்பாக வருவாய் துறையினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
 • இந்த 2014 மற்றும் 2015 அமர்வுகள் / ஒப்பந்தங்கள், வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் போடப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக உள்ளது. எந்த சூழ்நிலையில், சந்தையூர் அருந்ததியர் தலைவர்கள் இந்த கூட்டங்களை அணுகினார்கள்? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது.
 • இந்த இரண்டு அமர்வுகளின் ஒப்பந்தங்களை எடுத்து பார்த்தால், உடன்பாடுகளில் பெரிய வேற்றுமையில்லை. ஒரு சிறிய வேற்றுமை என்னவென்றால், 2014ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 10 அடி நடைபாதை கொடுக்க முன் வந்த பறையர்கள், 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 11 அடி கொடுக்க முன் வந்தார்கள்.
 • எங்கள் குழுவுக்கு, இதில் உள்ள உடன்பாடுகளை விட, ஒப்பந்தங்கள் போடப்பட்ட விதம், அதில் உள்ள கையெழுத்துகள் சார்ந்தே கேள்விகள் எழுந்தது. ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது, ஆதிக்க சாதித் தலைவர்கள் (பறையர்கள் உட்பட), அருந்ததியர் தலைவர்கள் மேல் அதிக நெருக்கடியை கொடுத்துள்ளார்கள். 2015ம் ஆண்டு, (ஜமின்தார்) விஜய வெங்கடேஷ் பாண்டியன் முன்நிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பறையர் தரப்பில் வைத்துள்ள அசல் ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்தின் எண்ணிக்கையும், அருந்ததியர் தரப்பில் வைத்துள்ள அசல் ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்தின் எண்ணிக்கையும் ஒரே போலில்லை.

6.3. சந்தையூர் போராட்டம் என்பது அருந்ததியரின் 3% உள் இடஓதுக்கீடை 6% ஆக்கும் முயற்சி.

 • அருந்ததியர் இயக்கங்கள் 6% உள் இடஓதுக்கீடை கேட்பது மக்கள் தொகை அடிப்படையில். இந்த விடயத்தில், தீண்டாமை அல்லது சாதிய ஒடுக்குமுறை அடிப்படையில் அவர்கள் உள் இடஓதுக்கீட்டை உயர்த்த கேட்கவில்லை (Alagarsamy, March 2018).
 • அதே போல, இந்த இரண்டு விசயத்தையும் முடிச்சு போடுவது, ஒரு பொருத்தமற்ற வாதமாகும். மேலும், இது சந்தையூர் பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியாகும் (Ibid.).

6.4. ராஜகாளியம்மன் கோவில் சுவர் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை. சிவில் பிரச்சினை என்றால் ஊடகம் திரும்பி பார்க்க மாட்டார்கள் ஆகையால் ஒரு பரபரப்பை (sensationalize) ஏற்படுத்த “தீண்டாமைச் சுவர்” என்று சொல்கிறார்கள்.

 • வடயம்பாடி தீண்டாமைச் சுவர் (கேரளா) பிரச்சினையில், CPI(M) M.L.A. ஒருவர் எந்த நிலைப்பாடை எடுத்தாரோ, அதே நிலைப்பாடை தான் பறையர் அமைப்புகளும் / கட்சிகளும் இங்கு எடுக்கிறார்கள்.
 • இது ஒரு சிவில் பிரச்சினை என்று சொல்லும் போது, தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
 • “பறையர் சமூகத்தின் மீது ஆதிக்கச் சாதிகளால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகள் மட்டுமே [முக்கிய] செய்தியாக வெளியிடப்பட்டு … ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அதே நேரம், … பறையர்கள், … அருந்ததியர்கள் மீது அரங்கேற்றி வரும் வன்கொடுமைகளை செய்தியாகக் கூட வெளியிட பறையர் சமூகத்தினர் பெருந்தடைக்கல்லாக உள்ளனர்” (ACCA, March, 2018).

6.5. தொண்டு நிறுவனங்கள் தரும் பணத்தை வைத்து தோழர். ஜக்கையன் போராட்டம் நடத்துகிறார்.

 • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் தொண்டு நிறுவனங்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரியும்.
 • சந்தையூர் பிரச்சினையில், ஒரு முக்கியமான நபர், தோழர். கதிர் அவர்கள். அவர் வைத்து உள்ள சாட்சியம், ஒரு தொண்டு நிறுவனம். இதே கேள்வி அவர் மேல் ஏன் வைக்கப்படுவது இல்லை.

6.6. ஆதிக்க சாதித் தமிழர்கள் தூண்டி விட்டு இந்த போராட்டம் நடக்கிறது – ஒருவர் மின்சாரம் கொடுக்கிறார், மற்றொருவர் சாப்பாடுக்கு பணம் கொடுத்தார்.

 • இது எப்படி உள்ளது என்றால், அருந்ததியர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள் சொந்தமாக சிந்திக்க / செயல்பட தெரியாதவர்கள் என்று சொல்வது போல் உள்ளது.
 • ஆதிக்கச் சாதிகளுடன் உறவே இருக்கக்கூடாது என்று இருந்தால், எதற்கு ஜமின்தார் அவர்களிடம் சென்று (2015ல்) பஞ்சாயத்து செய்ய கேட்க வேண்டும்?
 • அதே ஆவணத்தை காட்டி, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம், உடன்பாடு எட்டிய பிறகே, சுவர் கட்டினோம் என்று சொல்ல வேண்டும்.
 • 6.7. சந்தையூரில், ஆதிக்க சாதிகள் தலித் மக்கள் மீது பல தீண்டாமை கொடுமைகளை கடை பிடிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இரட்டை டம்ளர் முறை உள்ளது. இந்த நிலையை எதிர்த்து போராடுவதை விட்டு, உட்சாதி முரண்பாடுகளை கூறு தீட்ட கூடாது.
 • சந்தையூரில், பறையர்கள் செய்யும் சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமையை எப்பொழுது பேசலாம், எப்படி பேசலாம், எப்பொழுது பேசக்கூடாது என்று சொல்ல பறையர்களுக்கு உரிமை இல்லை.
 • ஒரு பொது வெளியில், பறையர்கள் செய்யும் கொடுமையை சொன்னால், தலித் ஒற்றுமை உடைந்து விடும் என்று சொல்வது, வேடிக்கையாக உள்ளது. இந்த அணுகுமுறை, தந்தைவழி மரபாக (paternalistic) உள்ளது.
 • பறையர்களின் சாதி ஆதிக்கத்தின் குறியீடு, அந்த தீண்டாமைச் சுவர். அந்த சுவரின் ஒரு செங்கலைக் கூட எடுக்க முடியாது என்று சவால் விடுவது, தான், தலித் ஒற்றுமைக்கான செயல்பாடா?
 • இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் இருக்கிறது என்றால் பறையர்கள் ஏன் போராட வில்லை?

6.8. இது உட்சாதி முரண்பாடு.

 • பட்டியல் இன மக்களில், தேவேந்திரரும், பறையரும், அருந்ததியரும் மற்றும் புதிரை வண்ணாரும் தனித்தனி சாதிகள்.
 • அருந்ததியருக்கு உட்சாதி என்று சொன்னால், அருந்ததியர், சக்கிலியர், பகடை, மாதிகா போன்றோர் தான். பறையரும், அருந்ததியரும் வெவ்வேறு சாதிகள்.
 • சாதியப் படிநிலையில், பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர்களுக்கு கீழ் தேவேந்திரரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதிக்கு கீழ் பறையரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதி + பறையர் சாதிக்கு கீழ் அருந்ததியரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதி + பறையர் சாதி + அருந்ததியர் சாதிக்கு கீழ் புதிரை வண்ணாரும் இருக்கிறார்கள்.
 • உட்சாதி என்று சொல்லும் போது, பட்டியல் இன மக்கள், ஒரு சம நிலையில், வேறுபாடுகளுடன் இருப்பது போல் ஒரு பிம்பம் உருவாகிறது. அது உண்மை இல்லையே.

6.9. சந்தையூர் அருந்ததியர் மக்கள் சொல்வது பொய் / கூட – குறைத்து பேசுகிறார்கள்.

 • அருந்ததியர் மக்கள் பட்ட அனுபவத்தை சொன்னால், அது முழுவதும் பொய் என்று முத்திரையிடுவது, ஒரு கீழ்த்தரமான செயல். இதே தான் ஆதிக்க சாதிகள் PoA Act சார்ந்த விசயத்தில் செய்கிறார்கள் (தலித் மக்கள் போடும் அனைத்து PoA Act வழக்குகளும் பொய் என்கிறார்கள்).
 • அருந்ததியர் / பறையர் மக்கள் கூட – குறைத்து பேசுகிறார்கள், என்று சொல்பவர்கள், எந்த விசயத்தை கூட சொல்கிறார்கள், எந்த விசயத்தை குறைத்து சொல்கிறார்கள், என்று சொல்வது இல்லை. இப்படி ஒரு சொல்லை பயன்படுத்தி விட்டு, கோப்புகள் சார்ந்த விசயங்கள் மட்டும் பேசும் கூட்டமாக இவர்கள் இருக்கிறார்கள்.

6.10. சக்கிலியர் (அருந்ததியர்) மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் / ஊர் வேலை செய்கிறார்கள் – அவர்கள் எங்கள் (பறையர்) கோவில் உள்ளே வந்தால், எங்கள் கோவிலின் புனிதம் கேட்டு விடும்.

 • ஒரு காலத்தில், பறையர்களும், அருந்ததியர்களுடன் சேர்ந்து மாட்டு இறச்சி சாப்பிட்டு உள்ளார்கள்.
 • ஒரு கட்டத்தில், பார்ப்பனியத்தை அந்த காலனி பறையர்கள் ஏற்றுக் கொண்டார்கள் (மாட்டு இறச்சி சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள்). அதன் பிறகு, அருந்ததியர்கள் மேல் தீண்டாமையை (புனிதம் / அசுத்தம் போன்ற நிலைப்பாடு) கடை பிடிக்க தொடங்குகினார்கள்.
 • இங்கு பார்ப்பனியத்தை குற்றம் சொல்வதா? இல்லை, சந்தையூர் பறையர்களை குற்றம் சொல்வதா?

6.11. சந்தையூர் அருந்ததியர் மக்கள் அப்பாவிகள்.

 • அருந்ததியர்கள் தன்மானம், சுய மரியாதை, உரிமைக்காக போராடும் போது அவர்களை சிறுமைப் படுத்தும் விதமாக “அப்பாவிகள்,” என்று முத்திரை குத்துகிறார்கள்.
 • கிட்டத்தட்ட இரண்டு மாதமாக, தேன்மலையாண்டி கோவில் பக்கத்தில் உள்ள மலைப் பகுதியில் குடியேறி போராட்டம் நடத்துகிறார்கள்.
 • வீட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாதுகாப்பற்ற இடத்தில், கூடாரம் அமைத்து, குழந்தைகளை, முதியவர்களை வைத்துக்கொண்டு போராடுகிறார்கள் என்றால் அவர்களின் மன உறுதியை அது காட்டுகிறது. ஒரு திருமணமும், ஒருவரது இறப்பும் போராட்ட களத்தில் நடந்துள்ளது.
 • அருந்ததியர்கள் தங்களுடைய வரலாற்றில், ஒரு முக்கியமான போராட்டத்தை கட்டமைத்து, நடத்திக் கொண்டிருக்கும் அந்த மக்களை “உங்களுக்கு ஒன்றும் தெரியாது,” என்று சொல்வது ஒரு கீழ்த்தரமான வாதம்.

6.12. ஒரு கட்சி (ஆதித்தமிழர் கட்சி) மக்களை (அருந்ததியர்களை) கடத்திச் சென்று மலையில் வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள்.

 • மலையில் போராடிக் கொண்டு இருக்கும் அருந்ததியர் மக்களை சுலபமாக யார் வேண்டுமானாலும் சந்தித்து விடலாம், பேச முடியும்.
 • அவர்களுக்கு யாரும் வாய் பூட்டு போட வில்லை மற்றும் நடிக்க கற்றுக் கொடுக்கவில்லை. சிறு பிள்ளை முதல் வயதான பாட்டி வரை தைரியமாக கேமரா முன்னாள் பேசுகிறார்கள்.
 • பறையர்கள் இந்திரா காலனியிலேயே இருந்தாலும், அவர்களிடம் பேச நுழைவுச்சீட்டு (i.e., தோழர். கதிர், தோழர். இன்குலாப், தோழர். கனியமுதன் அவர்கள் அனுப்பினார்கள்) வாங்கி வர வேண்டியுள்ளது.
 • திருமதி. சின்னத்தாய் என்னும் அருந்ததியர் ஒருவர் சொன்னார்கள், அங்கு (இந்திரா காலனியில்) போராடி ஏதாவது சண்டை அருந்ததியர்களுக்கும், பறையர்களுக்கும் வந்து விட்டால், மறுபடியும் எங்கள் மீது வழக்குகள் போடுவார்கள். வழக்கு நடத்த எங்களிடம் காசு எங்கு உள்ளது. ஏற்கனவே, எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு ஆடுகளை விற்று தான் வழக்கறிஞருக்கு கட்டணம் கட்டுகிறார்கள்.

6.13. தமிழக அரசு, ஒரு வேளை, ராஜகாளியம்மன் கோவில் சுவர் இருக்கும் இடம் புறம்போக்கு நிலம் என்று அதை இடிக்க முயன்றால், நாங்கள் விட மாட்டோம். அந்த ஊரில் உள்ள மற்ற புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவில் சுவர்களை இடித்த பின்பே, இந்த சுவரை அரசு தொட முடியும்.

 • இந்த வாதம், “அவர்களை நிறுத்தச் சொல், நாங்கள் நிறுத்துகிறோம்,” என்பது போல் உள்ளது. அப்படி என்றால், உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வேறுபாடு.
 • ஆதிக்க சாதித் தமிழர்கள் + சாதித் தமிழர்கள், பார்ப்பனர் செய்யும் தீண்டாமையை (மற்றும் சாதிய ஒடுக்குமுறையை) மட்டும் பேசுவார்கள், சுய சாதி விமர்சனம் பெரும்பாலும் செய்ய மாட்டார்கள் / மறுப்பார்கள். கேட்டால், அது R.S.S. / தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டு தமிழர்களை பிரிக்க பார்க்கிறார்கள், என்பார்கள்.
 • அதே சொல்லாடலை, இங்கு (பெரும்பாலான) பறையர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள், அருந்ததியர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள் மீது வைக்கிறார்கள். இங்கு கேட்டால், அது ஆதிக்க சாதி தமிழர்கள் / தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டு தலித் மக்களை பிரிக்க பார்க்கிறார்கள், என்கிறார்கள்.

6.14. சந்தையூர் – இந்திரா காலனியில், எண்ணிக்கையில் அருந்ததியர் மக்கள் அதிகம் (சுமார் 80 குடும்பங்கள்), பறையர் மக்கள் குறைவு (சுமார் 35 குடும்பங்கள்). ஆகையால், அருந்ததியர்கள் தான் பறையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

 • இந்த நாட்டில், எண்ணிக்கையில் குறைவானவர்கள் பார்ப்பனர்கள், ஆகையால், அவர்கள் பிற சாதிகள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கூற முடியுமா?
 • சமூக மூலதனம், அரசியல் பொருளாதாரம் யாரிடம் அதிகமாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அதைப் பொறுத்துத்தான் ஆதிக்கம் வெளிப்படும்.

6.15. சந்தையூர் பிரச்சினையில், ஒரு அரசியல் என்னவென்றால், இது ஆதித்தமிழர் கட்சிக்கும், தமிழ்ப்புலிகள் கட்சிக்கும் நடக்கும் யுத்தம் – அருந்ததியர் மக்களை யார் கைப்பற்றுவது.

 • சந்தையூர் பிரச்சினைக்கு யார் காரணம் என்று பறையர் அமைப்புகள் / கட்சிகளிடம் கேட்டால், ஒரு நீளமாக பட்டியில் வைத்துள்ளார்கள். அதில் பரவலாக அனைவரும் வருகிறார்கள், தங்களை தவிர.
 • மார்ச் 22, 2018 அன்று, தமிழ்ப்புலிகள் கட்சி தோழர்கள், அந்த தீண்டாமைச் சுவரை சேதப்படுத்துகிறார்கள் (ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது என்று சொன்ன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்களின் ஆதிக்க பேச்சை ஏளனம் செய்ய). சந்தையூர் பறையர் மக்கள் புகாரை ஆதித்தமிழர் கட்சி தோழர்கள் மீது கொடுத்தார்கள்.
 • சந்தையூர் பறையர்களை வழி நடத்தும் தோழர். கதிர் அவர்களுக்கு நன்கு தெரியும், யார் உடைத்தது என்று. பிறகு ஏன், தோழர். ஜக்கையன் மற்றும் தோழர். பணிச்சாமி மீது வழக்கு? அது தான் கதிர் அவர்களின் 21 வருட கள அனுபவம் கற்றுக் கொடுத்த, ஒரு சாணக்கிய நகர்வு!
 • நான்கு – ஐந்து நாட்களுக்கு பிறகு, நெல்லை நீதிமன்றத்தில் தமிழ்ப்புலிகள் தோழர்கள் சரணடைந்தனர்.
 • ஆதித்தமிழர் கட்சிக்கும், தமிழ்ப்புலிகள் கட்சிக்கும், இந்த சந்தையூர் பிரச்சினையில் வெவ்வேறு அணுகுமுறை இருக்கலாம். ஆனால், அது தீண்டாமைச் சுவர் தான் என்பதிலும், அதை இடித்தே தீர வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

6.16. பறையர் கோவிலுக்கு ஒரு அருந்ததியர் பூசாரியாக இருக்கட்டும், அருந்ததியர் கோவிலுக்கு ஒரு பறையர் பூசாரியாக இருக்கட்டும்.

 • அங்கு அருந்ததியர் மக்கள் நடத்துவது கோவில் நுழையும் போராட்டம் இல்லை.
 • கோவிலை சுற்றி உள்ள காலி நிலத்தை (நத்தம் புறம்போக்கு நிலம்), பறையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அருந்ததியர்கள் மேல் தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறையை கையாள்கிறார்கள். அதனை எதிர்த்து தான், அருந்ததியர்கள் போராடுகிறார்கள்.

7. நாங்கள் கற்றுக்கொண்டவை

a. தலித் அமைப்புகளின் / கட்சிகளின் கருத்தியல் சார்ந்த புரிதலும், கள எதார்த்த நிலவரமும், வெவ்வேறாக உள்ளது. மக்களை அரசியல்படுத்த தவறி இருப்பது, இதன் மூலம் தெரிகிறது.

b. நிலைமை இப்படி இருக்க, சந்தையூரை, களஆய்வு செய்தவர்கள் முன் கண்டிப்பாக இரண்டு கேள்விகள் எழுந்து இருக்கும். ஒன்று, கள எதார்த்த நிலையை பதிவு செய்வதா? இரண்டு, பரந்த தலித் ஒற்றுமைக்கான வேலை திட்டங்களை முன்னெடுப்பதா?

c. பெரும்பாலான பறையர் அமைப்புகள் / களஆய்வு செய்தவர்கள் / கட்சிகள், முதல் கேள்விக்கு முக்கியத்துவம் தந்தால், இரண்டாவது கேள்வி பாதிக்கப்படும் என்று பதிவு செய்கிறார்கள். முதல் கேள்விக்கு விடை தேடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றும், கொம்பு சீவி விடுபவர்கள் என்றும், ஆதிக்கச் சாதிகளால் ஆட்டு வைக்கும் பொம்மைகள் என்றும் பெயரிடுகிறார்கள். முதல் கேள்வியை தவிர்த்து விட்டு, இரண்டாவது கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்த பணி என்று சுய சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார்கள்.

d. எங்கள் குழு இந்த தர்க்கத்தை மூன்று காரணத்திற்காக ஏற்க மறுக்கிறோம். ஒன்று, முதல் கேள்வியின் தேடலில், இரண்டாவது கேள்வியின் பதில் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டு, தலித் ஒற்றுமைக்கான சுமையை அருந்ததியர்கள் மேல் சுமத்துவது தவறு. மூன்று, பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது மறுபடியும் குற்றம் சுமத்துவது போல் உள்ளது.

e. தமிழர் ஒற்றுமையைப் / விடுதலையைப் பற்றி பேச / தலைமையேற்க ஒடுக்கப்பட்ட மக்களே / தலைவர்களே தகுதியானவர்கள். அதே போல, தலித் ஒற்றுமையை / விடுதலையைப் பற்றி பேச / தலைமையேற்க அருந்ததியர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

f. பறையர் அறிவுசார் மக்கள், நாங்கள் அனைவரும் (தலித் மக்கள்) ஒரே குடும்பம் என்று சொல்லும் போது, உள்ளே இருக்கும் வெவ்வேறு சாதிகளுக்கு இடையில் இருக்கும் முரண்பாடுகளும் / ஏற்றத்தாழ்வுகளும் / சாதிய ஆதிக்கமும் பூசி மறைப்பது தெரிகிறது. இந்த சொல்லாடல், பறையர் ஆதிக்கத்தை தொடர உதவியாக இருக்கும். களத்தில், நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று இரு சமூகமும் தெளிவாக சொல்கிறார்கள்.

g. கல்வி, சமூக மூலதனம் (social capital), அரசியல் பொருளாதாரம் (political economy) போன்ற கூறுகள், பறையர் சாதி எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு உள்ளது. பறையர் மக்களின் சாதிய எழுச்சி, ஒரு பக்கம், ஆதிக்கச் சாதி தமிழர்களின் ஆதிக்கத்தை குறைத்துள்ளது என்றாலும், மறுபக்கம், அதே பறையர் சாதி எழுச்சி, அருந்ததியர் மக்கள் மீதான சாதிய ஆதிக்கமாக மாறி உள்ளது.

h. அம்பேத்கரிய / பெரியாரிய பொதுவுடைமை தத்துவங்களை கடந்து, சந்தையூர் பிரச்சினையில் சாதி வென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனியத்தை / நில ஆதிக்கச் சாதித் தமிழர்களின் பண்புகளை உள்வாங்கிய சந்தையூர் பறையர் மக்களை பாதுகாக்க பெரும்பாலான பறையர்கள் / பறையர் அமைப்புகள் / கட்சிகள் அணிதிரண்டுள்ளனர்.

i. சாதி எழுச்சி அரசியலை, ஆண்ட / வீர பரம்பரை அரசியலை முன்னெடுப்பதால் வந்த விளைவின் ஒரு வெளிப்பாடே சந்தையூர் தீண்டாமைச் சுவர். சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுக்க தவறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

j. தொடர் போராட்டங்கள், சந்தையூர் அருந்ததியர்களை அரசியல்படுத்தி உள்ளது. “தலித் எழுச்சி” என்னும் பறையர் சாதி எழுச்சி அரசியலில் சிக்கிக்கொள்ளாமல், சாதி ஒழிப்பு அரசியல் தான் தங்கள் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று உணர்ந்துள்ளார்கள். சாதி ஒழிப்பு அரசியலுக்கு ஒரு வழிமுறையாக உள்ள மதமாற்றத்தை தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள், அதுவே பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். புத்தமா? இஸ்லாமா? கிருத்துவமா? என்ற தேடலில், இஸ்லாம் என்ற முடிவு நல்ல முடிவாக தெரிகிறது. புத்த மதத்தை தழுவி பறையர் ஆளுகைக்குள் மீண்டும் சிக்க மறுத்திருப்பது இந்த சூழலில் முக்கியமான அரசியல் நிலைப்பாடாகும்.

Reference list

ACCA, March 2018, சந்தையூர் தீண்டாமைச் சுவர் – ஆய்வின் அறிக்கை, Keetru, <https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34767-2018-03-18-02-56-14&gt;

Alagarsamy, P March 24, 2018, Facebook Post, accessed on March 28, 2018, <https://m.facebook.com/story.php?story_fbid=1325401300937227&id=100004021101835&gt;

Ameerudheen, TA January 31, 2018, Police action against Dalit villagers protesting a ‘caste wall’ bares old fissures in Kerala, Scroll, accessed on March 10, 2018, <https://scroll.in/article/866524/police-action-against-dalit-villagers-agitating-against-a-caste-wall-bares-old-fissures-in-kerala&gt;

Counter Currents, January 25, 2018, A Caste Wall In ‘Progressive’ Kerala, accessed on February 22, 2018, <https://countercurrents.org/2018/01/25/caste-wall-progressive-kerala/&gt;

Imranullah, M March 21, 2012, Uthapuram wall is no Berlin wall, The Hindu, Madurai, accessed on March 1, 2018, <http://www.thehindu.com/news/cities/Madurai/uthapuram-wall-is-no-berlin-wall/article3024288.ece&gt;

Jayarajan, S February 5, 2018, Dalits protesting against Kerala ‘caste’ wall to move protest to Secretariat, The News Minute, accessed on March 3, 2018, <https://www.thenewsminute.com/article/dalits-protesting-against-kerala-caste-wall-move-protest-secretariat-75949&gt;

Mathew, P October 21, 2015, Uthapuram ‘wall’ demolished years ago, still no peace between Dalits and caste Hindus here, The News Minute, accessed on March 3, 2018, <https://www.thenewsminute.com/article/uthapuram-%E2%80%98wall%E2%80%99-demolished-years-ago-still-no-peace-between-dalits-and-caste-hindus-here&gt;
Natarajan, S September 14, 2010, Indian Dalits find no refuge from caste in Christianity, BBC News – South Asia, accessed on March 5, 2018 <http://www.bbc.com/news/world-south-asia-11229170&gt;

The Hindu, August 10, 2011, Demolish ‘untouchability wall of Salem’ immediately: Front, accessed on March 5, 2018, <http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/demolish-untouchability-wall-of-salem-immediately-front/article2341701.ece&gt;

பதிவு 6-04-2018 அன்று வாசிப்புக்காக மேம்படுத்தப்பட்டது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

சிதைக்கப்பட்டு படுகொலையான வைத்தீஸ்வரி…

மு.ரா. பேரறிவாளன்

சகோதரி வைத்தீஸ்வரி வேலை பார்க்கும் கடை வழியாகதான் தினமும் பலமுறை சென்று வந்திருக்கிறேன் என்ற உணர்வே மனவலியை அதிகமாக்குகிறது..

கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு மேலாக கடத்தி வைத்திருந்து வன்புணர்ச்சி செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் என தெரியவருகிறது.

வைத்தீஸ்வரியின் வாய் மற்றும் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து சொருகியிருக்கிறார்கள்.

காலை வைத்தீஸ்வரியின் மரணத்தை அறிவித்த காட்சி ஊடகம், “16 வயது பெண் மரணம், கற்பழித்து கொல்லப்பட்டதாக பெற்றோர் புகார்” என்று செய்தி போடுகிறார்கள். நிர்வாண நிலையில் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கிடக்கிற பெண்ணை, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவள் என ஒப்புக்கொள்ளவே, இந்த ஈனபுத்தி ஊடகங்கள் தயங்குகிறது என்றால் ஊடகங்களின் யோக்கியதை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

அப்புறம், காக்க காக்க, சாமி போன்ற படங்களை பார்த்தாவது சட்டம் ஒழுங்கின் காப்பிரைட்தாரர்கள் குறித்து நாம் சற்று ஆறுதலடைந்து கொள்வோமாக.. வைத்தீஸ்வரி கொலைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறது, அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் என்று, யாரோ ஒரு மனசாட்சி உள்ள காவலர் சொன்ன செய்தியை கேட்டு விசிக நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுப்பதற்கு முன்பாகவே ஒத்திகைகள் கட்சிதமாக அரங்கேறிவிட்டதாக விசிக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

vaitheeswari
வைத்தீஸ்வரி

காலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரை, கிடப்பில் போட்டுவிட்டு, வைத்தீஸ்வரியை காதலித்த இளைஞனை கொலையாளியாக்கிட அனைத்து முயற்சிகளும் நடப்பதாக விசிக தரப்பும், பரதூர் கிராமவாசிகளும் தெரிவிக்கிறார்கள்.. வைத்தீஸ்வரியின் உடலில் நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களை, இவர்கள் கூறுவதைப்போல தனி நபர் செய்துவிடுவது சாத்தியமில்லை என்று மக்கள் அடித்து பேசுகிறார்கள்.
வைத்தீஸ்வரி கொலையில் ஏற்கனவே குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஒரு நபர், ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புள்ள நபர் என தெரியவருகிறது.

இதையடுத்து காவல்துறையை கண்டித்தும், பிணக்கூறாய்வு அறிக்கையின்படி செயல்படக்கோரியும்  நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு திருமாவளவன் அவர்களும் சிதம்பரம் வரவிருப்பதால், வைத்தீஸ்வரி கொலை பிரச்சனை பரபரப்பை எட்டியுள்ளது.

தோழர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தபின், வைத்தீஸ்வரி வேலை பார்த்த கடை வழியாகவேதான் வந்தேன். தமது கடை ஊழியரான பதினாறு வயது சிறுமி படுகொலைக்கான எவ்வித சலனமும் இன்றி, அந்த ஐவுளிக்கடையில் வழக்கம் போலவே வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தார்கள்..

பரதூர்வாசிகளும், விசிகவினரும் கூறுவதைப் போல, ‘வைத்தீஸ்வரியின் படுகொலையில் தொடர்புடைய கயவர்களை பிடிப்பதால், இரு சமூகங்களுக்கிடையே மோதல் வரும்’ என்ற உயரிய நோக்கத்திற்காகவெல்லாம் சம்மந்தமில்லாதவர்கள் தலையை உருட்ட முயலாமல், கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையால் கைது செய்யப்படவேண்டும்.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தீவிரமடைகிறதே தவிர குறைந்தபாடில்லை. வெட்கக்கேடு..

மு.ரா. பேரறிவாளன், சமூக செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

“பாரத் பந்த்” – கவனிக்க வேண்டியது!

அன்புசெல்வம்

அன்புசெல்வம்

வடக்கே நடந்து கொண்டிருக்கும் தலித்துகளின் ‘பாரத் பந்த்’ துக்கு ஆதரவாக‌ தமிழக தலித் இயக்கங்கள் குரல் கொடுக்கவில்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். தலித் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த, 11 தலித்துகளை பலியாக்கி அச்சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருப்பது வேதனை. அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிராக அவசியம் குரல் கொடுத்தாக வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் இச்சட்டம் இன்றைக்குப் பேசப்படுவதற்கு தமிழக தலித்துகளின் தலையீடு மிக முக்கியமானது.

2016 ஜனவரி 26 -ல் நடைமுறப்படுத்தப்பட்ட, “திருத்தப்பட்ட‌ எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் – 2015” உருவாக தமிழகத்தில் உள்ள தலித் என்.ஜி.ஓ மற்றும் தலித் இயக்கங்கள், அறிவுத்துறையினர் கடுமையாக உழைத்திருக்கின்றனர். Advocacy & Lobbying முறையில் மக்களவையிலும் (ஆகஸ்ட் 4, 2015), மாநிலங்களவையிலும் (டிசம்பர் 21, 2015) இம்மசோதா நிறைவேறுவதற்கு தமிழக தலித் செயல்பாட்டாளர்கள் விளம்பரம் இல்லாமல் உழைத்திருக்கிறார்கள். அந்த செய்தி வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம். 1989 -ல் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து, அதனை உடனடியாகத் திருத்தம் செய்தது ஒரு சாதனை தான். இந்த‌ உழைப்பை தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்கிற விமர்சனம் ஒரு புறம் இருக்கிறது.

கவனிக்க வேண்டியது !

● தற்போது இச்சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் சதிக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் இருக்கிற சமத்துவத்திற்கான‌ நீதியரசர்கள், தங்களின் எதிர்க் கருத்துக்களை துணிச்சலாக‌ வெளியிட வேண்டும்.

● மக்களைவை, மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்ட‌ ஒரு சட்டத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை வெறுமனே ஓரிரு நீதிபதிகள் மாற்றுவதில் இருக்கிற சிக்கல் குறித்து Constitutional Experts கருத்து தெரிவிக்க வேண்டும்.

● இச்சட்டம் குறித்து உச்சநீதி மன்றத்தின் நடவடிக்கைக்கு எதிராக இதற்கு மட்டும் தடை வாங்க முடியுமா? என்பதையும் ஆலோசிக்க வேண்டும்.

● இச்சட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நீதியரசர்களின் RSS தொடர்புகளை அம்பலப்படுத்தி, Morally Expose செய்ய வேண்டும்.

● கோரேகாவுன் திரட்சி மற்றும் தற்போது நடைபெற்று வரும் தலித் மக்களின் பாரத் பந்த் ஆகிய‌ போராட்டங்களை கணக்கில் கொண்டு இந்திய அளவில் Non Electoral Federation உருவாக்க முடியுமா என்பதை அனைத்து மாநில‌ தலித் இயக்கங்களும், கட்சிகளும் சிந்திக்கலாம். அது ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்.

● இதற்கு தோழமை சக்திகளான இதர கட்சிகளின் இணைந்த செயல்பாடு, ஆதரவு என்னவாக இருக்கிறது என்பது தான் இது போன்ற தருணங்களில் எழுகின்ற கேள்விகள். அதற்கு அந்தந்த தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.

கட்டுரையாளர் : அன்புசெல்வம், “சாதி இன்று” அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

சந்தையூர் கோவில் சுவர் : தலித் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர‌ !

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

சந்தையூர் சுவர் குறித்தான பிரச்சனையின் முழு விசயத்தையும் தொடக்கத்திலிருந்து கவனித்து வருகின்றோம். இதில் “பறையர் – அருந்ததியர்” என்கிற சொற்களைத் தாண்டி, தலித் ஒற்றுமை என்பதை போராடும் சில‌ குழுக்கள் முன்னெடுக்காததால் உடனுக்குடன் தலையிடாமல் அமைதி காத்து வந்தோம் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம். சமூக மாற்றத்தை விரும்பும் பல குழுக்கள் இப்பிரச்சனையை அணுகி வந்த போதிலும், அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிற, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பதையும் கவனத்தில் கொள்கிறோம். தொல். திருமாவளவன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து, வேறு ஏதேனும் இன்னொரு அரசியலை நோக்கி இப்பிரச்சனை திசை திரும்பி விடக்கூடாது என்பதாலேயே அவர் அமைதி காக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

அருந்ததியர் அமைப்புகளும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அருந்ததியர் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவே அழுத்தமாக, ஒற்றைச் சார்புக் கருத்து தெரிவிக்கின்றன. அதனையொட்டி கொளத்தூர் மணி, கு. இராமகிருஷ்ணன், மீ.தா. பாண்டியன் ஆகியோரை உள்ளடக்கி “சந்தையூர் தீண்டாமைச் சுவர் இடிப்புப் போராட்டக்குழு” என்பதையும் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். எனினும் இப்பிரச்சனையில் அருந்ததியர் அமைப்புகளோடு இணைந்து களப்பணியாற்றி வரும் ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தங்களின் முழுமையான நிலைப்பாடு இது தான் என்பதை இதுவரையிலும் அறிவிக்கவில்லை என்றே கருதுகிறோம்.

அதே சமயம் நாளுக்கு நாள் இப்பிரச்சனை புது வடிவம் எடுத்து வருவதையும் உணர்கிறோம். சந்தையூர் சுவர் குறித்தும், அங்கு சிறுபாண்மையாக இருக்கிற‌ பறையர் தரப்பில் இங்கொன்றும், அங்கொன்றுமாக பேசப்படும் கருத்துக்களை கவனத்தில் நிறுத்த மறுப்பதையும் கவனிக்கிறோம். அதையும் தாண்டி கருத்துக் கூறுபவர்களை “பறையர் பாசிஸ்ட், பார்ப்பன பறையர்கள்” என அவர்களை இழிவுபடுத்தும் அநாகரிகத்தையும், அதை தீவிரமாக முன்னெடுக்கும் அருந்ததியர் அமைப்புகளின் நடவடிக்கைகளையும் உற்று நோக்கி வருகிறோம். இத்தகைய போக்கு புதிதல்ல என்றாலும், அருந்ததியர் அமைப்புகளோடு களத்தில் நிற்கும் பிற்படுத்தப்பட்ட சக்திகள் கூட பறையர்களை அவ்வாறு அவதூறு படுத்துவதில்லை என்பதையும் கவனத்தில் வைக்கிறோம்.

இச்சிக்கலான தருணத்தில், தீர்வை நோக்கி சில விசயங்களை முன் வைக்கிறோம்.

 1. சந்தையூரில் பறையர் தரப்பு எழுப்பியுள்ள கோவில் சுற்றுச் சுவர் எவ்வகையிலும் தீண்டாமைச் சுவர் அல்ல என்பதை உறுதிபடக் கூறுகிறோம். (விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்). உயர்நீதி மன்றத்தில் சட்ட ரீதியாக சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப்பத்திர ஆவணங்களில் அருந்ததியர் தரப்பு அதை தீண்டாமைச் சுவர் என எங்கேயும் குறிப்பிடவில்லை. வழக்காடக்கூடிய வழக்கறிஞ‌ர்களும், தீர்ப்பு சொன்ன நீதிபதிகளும் அதனை தீண்டாமைச் சுவர் என எங்கேயும் குறிப்பிடவில்லை. அதே சமயம் அச்சுவரை இடிக்க வேண்டும் என தீர்ப்பில் எங்கேயும் கூறவில்லை. மாவட்ட நிர்வாகமும் இதனை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றே அறிவுறுத்துகின்றது. (இது முற்றிலும் சட்டப்பிரச்சனை சார்ந்தது – Civil Dispute).

 2. சந்தையூர் சுவர் பிரச்சனையை மீண்டும் சட்ட ரீதியாக அணுகுவதும் சரியல்ல என்றே கருதுகிறோம். அதனை நாங்களும் விரும்பவில்லை. ஆனாலும் இப்பிரச்சனை தலித் அறிவுத்துறையினரையும், செயல்பாட்டாளர்களையும் மிகுந்த நெருக்கடிக்கும், கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. தமிழகம் தாண்டி இப்பிரச்சனை வேறு வடிவம் எடுப்பதையும் விரும்பவில்லை.

 3. சந்தையூரில் சிறுபான்மையாக இருக்கும் பறையர்கள் இப்பிரச்சனையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள‌ வேண்டும், பிரச்சனையைப் பெருந்தன்மையோடு அணுக வேண்டும் என எதிர் பார்க்கிறோம். பறையர்கள் அங்கு சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக “அறமற்ற கோரிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்” என்றில்லாமல், வரலாற்று அறத்தோடும், தலித் அரசியலின் வரலாற்றுப் பொறுப்போடும், பெருந்தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அந்த சுவரின் பகுதிகளில் சில மாற்றங்கள் செய்வதற்குரிய கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 4. சந்தையூர் சுவர் பிரச்சனையில் தொடக்கத்திலிருந்து அக்கறைக் காட்டி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடனடியாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என கோருகின்றோம். இச்சந்திப்பின் மூலமாக “சந்தையூர் கோவில் சுவர், தீண்டாமைச் சுவர் இல்லை, அது ஆக்கிரமிப்புச் சுவர்” என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தால் சந்தையூர் பறையர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வருவதற்கு வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் சந்தையூர் பறையர் தரப்பும், பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனக் கோறுகின்றோம்.

சந்தையூரை முன்னிட்டு நடந்த / நடக்கும் விவாதங்கள் சுயசாதி பெருமை பேசுவதாகவும், பிறசாதி மீது அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும், பொய்யையையும், புனைவுகளையும் திட்டமிட்டு பரப்புவதாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இது சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள தலித் அரசியலுக்கு முரணாக இருப்பதாகக் கருதுகிறோம். ஆகையால் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சற்று இறங்கி வந்தால், இப்பிரச்சனையை தீர்வுக்குக் கொண்டுவர ஒரு நல்லெண்ணக்குழுவை உருவாக்க முன் வருகிறோம். சாதி ஒழிப்புக்கான, தலித் விடுதலைக்கான அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புகள், தோழமை சக்திகள், இக்கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : 1. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை அணுகுவதற்கு காரணம் இப்பிரச்சனையின் முழுவடிவத்தையும் புரிந்திருக்கிறார்கள் என அவதானிக்கிறோம். அவர்களின் வார்த்தை மற்றும் செயல்பாடுகளில் தலித் விடுதலைக்கான நல்லெதிர் நோக்கு இருப்பதாகக் கருதுகிறோம். இது வரையிலும் இப்பிரச்சனையை முன் வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் வார்த்தைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை என உணருகின்றோம்.

அன்புசெல்வம், எழுத்தாளர்; செயல்பாட்டாளர். தொடர்புக்கு : 9629775008

உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீது வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பலவும் வெளியுலகத்தின் கவனத்திற்கு வருவதேயில்லை. நிகழும் வன்கொடுமைகளில் சிறுவீதமே வழக்காக பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு வழக்கு பதிவதற்கே பெரும் போராட்டங்களை  நடத்த வேண்டியுள்ளது.  அப்போதும் கூட காவல்துறை, புகார் செய்யும் பாதிக்கப்பட்டவர்களை பணிய வைப்பதற்காக அவர்கள் மீதும்  எதிர் வழக்குகளை  பொய்யாக புனைந்து புகார்களை திரும்பப் பெற வைத்து வன்கொடுமையருக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது. வெளிப்படையான சாதிய வன்கொடுமைகள் கூட எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. களத்திலும் சட்டரீதியாகவும் போராடினால் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே தண்டனை பெறுகின்றனர். சட்டத்தினால் விடுவிக்கப்பட்ட மற்ற அனைவரும் குற்றமற்றவர்களா?

எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் திட்டமிட்டே தப்புவிக்கப்படுகிறார்கள். சாதியர்கள்  சுண்டூரு, லஷ்மண்பூர் பாத, பதானிதோலா போன்ற இடங்களில் கூட்டுக்கொலைகளை நிகழ்த்தி தலித்துகளை அழித்தொழித்த வன்கொடுமை கண்டு மனித உணர்வுள்ள எவருமே அதிர்ச்சியுற்றனர். ஆனாலும் இவ்வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆனால் கொலையாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். எனில் அவர்கள் கொலையுண்டதற்கு யார் பொறுப்பேற்பது என்பதில் நீதிமன்றம் கவனம் செலுத்தவில்லை.     இவற்றுக்கெல்லாம் முன் நடந்த வெண்மணி படுகொலையின் பிரதான குற்றவாளி, சொந்தமாக கார் வைத்திருப்பதால் அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கனம் கோர்ட்டாரால் விடுவிக்கப்பட்ட கேவலம், நீதித்துறைக்கு தீராத களங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

விசாரணையிலும் சட்ட அமலாக்கத்திலும் தொடர்புடையவர்களிடம் புரையோடியுள்ள சாதியப் பிடிமானம், எஸ்.சி/ எஸ்.டி.கள் மீதான வெறுப்பு, மெத்தனப்போக்கு, லஞ்சம், நியாயத்தை நிலைநிறுத்துவதில் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் வன்கொடுமையர்கள் தொடர்ந்து தப்பித்துவருகின்றனர். வெளிப்படையாக வன்கொடுமையை நிகழ்த்திவிட்டு காவல்துறை மற்றும் சட்டத்தின் துணையோடு வெளியே வரும் இவர்கள், நிரபராதிகளான – அப்பாவிகளான தாங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பழிவாங்கப்பட்டுவிட்டதாக பசப்புகின்றனர். அந்தச் சட்டமே நீக்கப்பட வேண்டும் என்று கோருமளவுக்கும் துணிகின்றனர். பொதுவான குற்ற வழக்குகளில் 66.7% வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாலேயே அந்த வழக்குகள் பொய்யானவை என்றாகிவிடுமா? அல்லது குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் அவசியமில்லை என்றாகிவிடுமா?

2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்றாகியுள்ளது. எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் அமலுக்கு வந்து கால்நூற்றாண்டு காலம் ஆன பிறகும்கூட, அச்சட்டத்தை அதன் மெய்ப்பொருளில் அமலாக்குவதில் உள்ள இடர்ப்பாடுகள் களையப்படாததால் தான் நிலைமை இவ்வளவு மோசமாகி வருகிறது என்று நாட்டின் நீதிபரிபாலன அமைப்புகள் உணரவில்லை. மாவட்ட அளவிலான தனி நீதிமன்றம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதற்காக எந்த நீதிமானும் துள்ளவில்லை துடிக்கவுமில்லை. மனித உரிமைக் களத்தில் தலித்துகளும் ஜனநாயக மனம் கொண்ட இதரர்களும் நடத்திய இடையறாதப் போராட்டத்தின் விளைவாக 2015ல் இச்சட்டத்திற்கு பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிலை உருவானது. வன்கொடுமைகளை வரையறுப்பது, புகார் பதிவது, விசாரணை முறை, குற்றச்சாட்டை நிரூபிக்கும் கடமையை நிறைவேற்றுவதில் காவல், நீதி மற்றும் தொடர்புடைய இதர அரசுத்துறைகளின் பொறுப்பு, தீர்ப்பின் அமலாக்கம், நிவாரணம், மறுவாழ்வு, தண்டனை மற்றும் அபராதம் ஆகிய அம்சங்களில் முந்தையச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த திருத்தச் சட்டம் முன்னேற்றகரமானது.

சட்டம் எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதன் செல்லுபடித்தன்மையானது அதை நடைமுறைப்படுத்துவதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்விசயத்தில் நீதிமன்றத்தின் தலையீடும் கண்காணிப்பும் அவசியமாகிறது. சாதிய வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதையும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஆனால் பல்வேறு விசயங்களில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒருமுறை தலித்துகள் மீது நடக்கும் சாதிய வன்கொடுமை தொடர்பாக எத்தனை வழக்குகளை தாமாக முன்வந்து பதிந்துள்ளன என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தாமாக முன்வராவிட்டாலும் பரவாயில்லை, பெரும் போராட்டத்திற்குப் பிறகு விசாரணைக்கு வரும் வன்கொடுமை வழக்குகளையாவது நீதியின் கண்ணால் பார்த்து தீர்ப்பு வழங்கப்படுமா என்றால் அதுவும் இல்லை.

வழக்குடன் தொடர்பில்லாத விசயங்களைப் பேசுவதும், அவ்வாறான அபத்தங்களை தீர்ப்புகளின் பகுதியாக்குவதும் கூட சிலநேரங்களில் நீதிமன்றங்களின் வரம்பற்ற அதிகாரத்தின் வன்முறையாகி வருகிறது. டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் எதிர் மகாராஷ்ட்ரா அரசு என்கிற வழக்கின் மேல் முறையீட்டு மனு (CRIMINAL APPEAL NO.416 OF 2018 (Arising out of Special Leave Petition (Crl.)No.5661 of 2017) மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு பொருத்தமான உதாரணமாக இருக்கமுடியும்.

பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட் என்பவர், மகாராஷ்ட்ர மாநிலம் கராட் என்னுமிடத்தில் உள்ள அரசு பார்மஸி கல்லூரியின் ஸ்டோர் கீப்பர். இவர் தனது மேலதிகாரிகளான சதீஷ் பால்கிருஷ்ண பிஷே, கிஷோர் பாலகிருஷ்ண புராடே ஆகிய இருவரும் தனது பணிப்பதிவேட்டில் எதிர்மறைக் குறிப்புகளை பதிவு செய்திருப்பதாகவும் இதற்கு சாதிய பாரபட்சமே காரணம் என்றும் கராட் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (1989)ன் கீழ் புகார் ஒன்றை 2009ல் பதிவு செய்திருக்கிறார் (Cr. NO. 3122/09 u/s 3(1)9, 3(2)(7)6 of S.C. & S.T. (Preention of Atrocities) Act). புகாரை விசாரித்து குற்றச்சாட்டில் முகாந்திரங்கள் இருப்பதை கண்டறியும் காவல் துணை கண்காணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முதல்நிலை அதிகாரிகளாக உள்ளபடியால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவ்விருவரின் துறைக்கு பொறுப்பு இயக்குநரான சுபாஷ் காசிநாத் மகாஜன் என்பவரிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறார். இவ்வாறான அனுமதியைக் கொடுக்கவோ மறுக்கவோ மகாஜனுக்கு அதிகாரம் இல்லை. அவ்வனுமதியை தரும் அதிகாரம் மும்பையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கே உண்டு. இவையெல்லாம் தெரிந்திருந்தும் இந்த மகாஜன் அனுமதியை மறுத்திருக்கிறார். தனது அதிகாரவரம்பை மீறி அனுமதியை மறுத்ததன் மூலம் மகாஜன் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றியதாக குற்றம்சாட்டி அவர் மீதும் பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறார். இவ்வழக்கு பல்வேறு நிலைகளைத் தாண்டி உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடாக வந்திருக்கிறது. இதன்மீதான தீர்ப்பினை நேற்று (20.3.2018) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது

குறிப்பிட்ட இவ்வழக்கின் மீதான தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றமானது, எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரும் புகார்களை எவ்வாறு அணுக வேண்டும், அவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிவதன் அவசியம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு/ தனியார் நிறுவன ஊழியர்கள் எனில் கைது செய்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மூலம் பழிவாங்கப்படுவதிலிருந்து அப்பாவிகளை (?) பாதுகாப்பது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடிப்பது என்று பலதையும் பேசியுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் அந்தப் புகார் நம்பகமானது தானா என்று தொடக்கநிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசு / தனியார் ஊழியர்கள் கைது செய்யப்படுவதற்கு அவரவர் நிர்வாகத் தலைமையிடமிருந்து முன்னனுமதி பெற வேண்டும்.

இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்கிற தற்போதைய நிலை கைவிடப்பட வேண்டும்.

இப்படியாக புதிய வழிகாட்டுதல் பலவற்றை அறிவித்த பின்னும் கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதான ஆத்திரம் அடங்காமல், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு அப்பாவிகள் பழிவாங்கப்படுவதாகவும் சமூகத்தை பிளவுபடுத்துவதாகவும் எஸ்.சி, எஸ்.டி.கள் மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 5347 வழக்குகள் பொய்யானவை என்று கண்டறியப்பட்ட விவரத்தை இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அது முன்வைக்கிறது. ஆனால் அதே 2016ல் தலித்துகளுக்கு எதிராக 40801 குற்ற வழக்குகள் பதியப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் வசதியாக மறந்துவிட்டிருக்கிறது. இந்த 5347 வழக்குகள் பொய்யானவை என்கிற நிலையை உருவாக்கிட வன்கொடுமையர்களும் காவல் துறையினரும் என்னென்ன தகிடுதத்தங்களை செய்திருப்பார்கள் என்பதை நாடறியும், பாவம் நமது நீதிமன்றங்கள் சமூக நடப்புகளை அறியாத பாமரத்தனத்தில் மூழ்கிக் கிடக்கின்றன போலும்.

தவறான தீர்ப்புகளை வழங்கியதற்காக இதுவரை எந்த நீதிமன்றமும் கலைக்கப்படாத போது, ஒரு சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாலேயே அந்தச் சட்டத்தை ஏன் நீக்க வேண்டும் அல்லது நீர்த்துபோகச் செய்ய வேண்டும்? பல்வேறு ஆள்தூக்கிச் சட்டங்களின் பேரால் பிடித்துச் செல்லப்பட்டு முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படாமல், விசாரணை ஏதுமின்றி ஆண்டுக்கணக்கில் சட்டவிரோத காவலிலும் சிறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். என்கவுன்டர் என்கிற பெயரால் அப்பாவிகள் பலரும் அன்றாடம் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அதுபற்றி விசாரிக்கப் புகும் நேர்மையான நீதிபதிகள் மர்மமாக சாகிறார்கள். ஆனாலும் நமது உச்ச நீதிமன்றத்தின் கவலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் எந்தவொரு அப்பாவியும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டும் தான். இது   நீதியை பாதுகாப்பதற்கான தீர்ப்பு அல்ல, சாதியைக் காப்பதற்கான தீர்ப்பு, சாதிய ஒடுக்குமுறையை காப்பதற்கான தீர்ப்பு.

மட்டற்ற சுதந்திரத்தோடு சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதற்கு தடையாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது அதன் கடுமையை குறைக்கும் படியாக திருத்தப்பட வேண்டும் என்கிற ஆதிக்கச்சாதியினரின் கோரிக்கையை இத்தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையும் தனித்தன்மையையும் அழித்தொழிக்கும் ஆதிக்கச்சாதியினரின் உட்கிடக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் சட்டமொழியில் வெளிப்படுத்தி இருக்கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் உள்ள குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பையும் அவர்கள் மீதே பழிதூற்றி பறிப்பது எவ்வகையில் நீதியாகும்? நீதிமன்றங்களை குடிமக்கள் அவமதிப்பது தவறென்றால், குடிமக்களை நீதிமன்றங்கள் அவமதிப்பது மட்டும் எப்படி சரியாகும்? நீதிமன்றங்களால் தீர்ப்பைத்தான் வழங்க முடியுமேயன்றி அவை ஒருபோதும் நீதியை வழங்கிவிடப் போவதில்லை என்கிற உண்மை இத்தீர்ப்பினால் மேலும் துலக்கமாகியுள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை அதன் மூலபலத்தோடு மீட்டெடுத்திட மத்திய அரசானது இத்தீர்ப்பின் மீது மறுசீராய்வினைக் கோர வேண்டும். ஆனால் அப்படியொரு மத்திய அரசு நமக்கு வாய்த்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர். ‘புதுவிசை’ இதழின் ஆசிரியர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும் நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம். இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமா?; துப்புரவு பணியாளரை செருப்பால் அடிக்கவைத்த சாதிவெறி

கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக,”குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடா?’ என செருப்பால் அடித்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்.

இந்த செய்தியைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர்.

“இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். ‘தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு..

எங்களை மத்தவங்க நடத்துற விதம்தான் எங்களால ஜீரணிக்கவே முடியலை.
காலையில எழுந்து குளிச்சு, சாமி கும்பிட்டுட்டுத்தான் நாங்களும் வேலைக்கு வர்றோம். ஆனா, குப்பை வண்டியைப் பிடிச்சுக்கிட்டு தெருவுல நடக்க ஆரம்பிச்சதும் ஏ… குப்பை இங்க வா!'குப்பைவண்டி… கொஞ்ச நேரம் நில்லேன் இப்படித்தான் எல்லாரும் எங்களைக் கூப்பிடுவாங்க. அந்த நிமிஷம் எங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? `அந்தக் குப்பை மாதிரிதான் நம்மளையும் நினைக்கிறாங்க’னு தோணும். தோணுறதென்ன அப்படித்தான் நினைக்கிறாங்க.

பெரும்பாலான வீடுகள்ல மாடியில நின்னுக்கிட்டு குப்பையைத் தூக்கிப் போட்டு கேட்ச்' பிடிச்சுக்கச் சொல்வாங்க பாருங்க, அதைவிட வேதனை எதுவும் இல்லை. அப்படித் தூக்கிப் போடுறவங்க சிலபேருக்கு எங்க மேல கரிசனம் இருக்கும். அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?நீ தள்ளி நின்னுக்கோ நான் ஓரமா போடுறேன் விழுந்ததும் எடுத்துக்கோ’ம்பாங்க…

காலங்காத்தால நாங்க குப்பை வாங்கப் போகும்போது, சில வீடுகள்ல நாய்குட்டியை மடியில தூக்கிவெச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க. நாங்க போனதும் குப்பையைக் கையிலகூடத் தொடாம முகத்தை ஒருமாதிரி சுளிச்சுக்கிட்டு

பலபேர் அவங்க வீட்டு குப்பையையே தொட மாட்டாங்க. அய்யோ… எங்க கொடுமையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா இந்த நாள் பத்தாது சார். நாங்க காலையில வண்டி தள்ளிக்கிட்டு வரும்போது, `வணக்கம் மேடம்! வந்து குப்பை வாங்கிக்கோங்க’னு சொல்லணும்னு சொல்லலை. சக மனிதன் மனிதனாகவே மதிக்கலைங்கறத விட அவமானம் என்ன இருக்கப்போவுது”.

போலீஸ் ஸ்டேஷனில் நின்றபடி சிறுபிள்ளையைப்போல அழும் மணியின் கண்களிலிருந்து உருகி வழிகிறது ஆண்டாண்டுகால அவமானம்.

Courtesy : suki choza

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்!

பிரபாகரன் அழகர்சாமி

மதுரை மாவட்டம் சந்தையூரில். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, அருந்ததியர் (சக்கிலியர்) சமூக மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து, தங்கள் மீது பறையர் சமூகத்தினர் நடத்திவரும் தீண்டாமை வன்கொடுகளை கண்டித்து போராடிவருகிறார்கள்.

40 நாட்களுக்கும் மேலாக அந்த மக்கள் மழையிலும் வெயிலிலும் துன்பப்பட்டு தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த மக்கள் ஏதோ வீம்புக்கு போய் அந்த காட்டில் புள்ளைக் குட்டிகளோடு உட்கார்ந்திருப்போல் ஒரு பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார்கள். இது தலித் அரசியலின் வெற்றியா தோல்வியா என்பது உங்கள் முடிவு!!!

பறையர் சமூகத்து தலித் போராளிகளின் ஆகப்பெரும் ஆதங்கமெல்லாம் அதெப்படி அந்த சுவரை தீண்டாமை சுவர் எனலாம் என்பதாகமட்டும்தான் இருக்கிறது. அதைத் தாண்டி அவர்கள் வருவதாகவே தெரியவில்லை. எத்தனை எத்தனை உண்மையறியும் குழுக்கள் அந்த ஊரை நோக்கி படையெடுத்துப்போய், கண்டுவந்த உண்மையெல்லாம் அது தீண்டாமை சுவர் அல்ல என்பதுதான். எனக்கு வாட்ஸப்பில் ஒரு உண்மை அறியும் குழுவின் அறிக்கை வந்தது. அதில், இப்போதைக்கு அதை தீண்டாமை சுவர் என்று சொல்லமுடியாது, ஆனால் இதை இப்படியே வைத்திருந்தால் தீண்டாமை சுவராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தார்கள். விநோதமான கருத்தாக இருந்தாலும், இந்த அளவிற்காகவாது உண்மையை கண்டு அறிந்திருக்கிறார்களே என்று அவர்களை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.

உத்தபுரத்தில் ஊரையும் சேரியையும் பிரித்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் போல இது அல்ல. இது வெறும் ஒரு சிறு கோவிலை சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் சுற்றுச்சுவர், அவ்வளவுதான் என்கிறார்கள் பலர். வெறும் 2- 3 அடி உயரம்கூட இல்லாத கோவிலை, வெளியில் இருந்து பார்த்துவிடாதபடி 6 அடி உயரத்துக்கு சுவர் கட்டி, அந்த சுவரில் PR என்று எழுதிவைத்திருப்பதை வெறும் சுற்றுச்சுவர் என்றுகூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சந்தையூர் அருந்ததிய மக்கள் அடுக்கடுக்காக சொல்கிற தீண்டாமை புகார்களை எப்படி பார்ப்பது? அருந்ததியர் பகுதியில் இருக்கும் அங்கன்வாடிக்கு பறையர் சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பது, அருந்ததியர் மக்கள் மாட்டுக்கறி தின்பவர்கள் என்று ஒதுக்குவது என்பதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை அந்த மக்கள் சொல்கிறார்களே.

நாடெங்கும் நூற்றுக்கணக்கான வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. தீண்டாமை என்பது ஒரே ஒரு வடித்தில்மட்டும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் செயல் அல்ல. சமூக வளர்ச்சியுடன் தீண்டாமையின் வடிவங்களும் வளர்ந்துக்கொண்டுதான் வருகிறது. தேனீர் நிலையங்களில் இரட்டை குவளைக்கு மாற்றாக ப்ளாஸ்டிக் கப்புகள் வருவதைப்போல. அப்படியிருக்கு உத்தபுரம் சுவர்தான் தீண்டாமைச் சுவர், சந்தையூர் சுவர் தீண்டாமைச் சுவர் அல்ல என்பது வெறும் அபத்தம் மட்டுமல்ல, பெரும் மோசடியும்கூட. சந்தையூர் அருந்ததியர் மக்கள் மீது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு சாட்சியாக அந்த சுவர் இருக்கிறது, அதன்பொருட்டு மட்டுமேகூட அதை தீண்டாமைச் சுவர் என்று சொல்வது முழுவதும் சரி!

தீண்டாமை என்பதுவே நோயல்ல. ஜாதி என்பதுதான் நோய். தீண்டாமை அதன் அறிகுறி (symptom). அருந்ததியர்களும் மற்ற பெரிய தலித் ஜாதிகளும் தனித்தனி ஜாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. எந்த அளவுக்கு அவர்களுக்கு இடையிலான இடைவெளி இருக்கிறது என்பதுதான் மிக முக்கியம். இத்தனை ஆண்டுகாலமாக, அருந்ததியினருக்கு சேரவேண்டிய நியாயமான ஓதுக்கீடுகளில் பெருமளவு மற்ற தலித் ஜாதியினராக இருக்கிற பறையர்களும் பள்ளர்களுமே முறைகேடாக அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக மாட்டும்தான், வெறும் 3% மட்டும் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அதன்மூலம் சில ஆயிரம் பொறியாளர்களும், சில நூறு மருத்துவர்களும், சில மாவட்ட நீதிபதிகளும், மற்றும் மாநில அரசுப்பணிகளும் கிடைக்கப்பெற்று வருகிறார்கள். மத்திய அரசு பணிகள் இன்னும் அருந்ததியர்களுக்கு எட்டாக்கனிதான். சந்தையூர் பகுதி அருந்ததியர்களில் இன்னும் ஒருவர்கூட பட்டப்படிப்பு படித்தவரில்லை என்கிறது ஒரு உண்மையறியும் குழுவின் அறிக்கை. யோசித்துப் பாருங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய நியாயமான இடஒதுக்கீட் உரிமைகளை அருந்தயர்கள் யாரிடம் இழந்துவருகிறார்கள் என்று. அருந்ததியர் மக்கள் தொகைக்கு அவர்கள் 8 – 10 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கவேண்டும். ஆனால், அதிகபட்சமாக 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேலாக அவர்கள் பெற்றதே இல்லை.

ஆதித்தமிழர் பேரவையின் ஆற்றல் மிகு களப்போராளிகளான தோழர்கள் நீலவேந்தனும், இராணியும் எதற்காக தீக்குளித்து மாண்டார்கள்? யார் அவர்களுடைய உயிரை பறித்தது? அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று தடுப்பவர்கள் மறுப்பவர்கள் யார்? அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்கு நடத்துகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. தலித் எழுச்சியின் கருத்தியல் தலைமையாக கொண்டாடப்படுகிற எழுத்தாளர் ரவிக்குமார் (விசிகவின் பொதுச்செயலாளர் ) அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார். விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுவரை அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து மழுப்பலான பதில்களைதான் கொடுத்துவருகிறார். அதிகார பரவல் குறித்து பேசுகிற அண்ணன் திருமா அவர்கள், சட்டமன்ற தொகுதி ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிப்பதாக தெரியவில்லை.

அருந்ததியர்கள் சந்திக்கிற சிக்கல்களிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருத்துவது, அருந்ததியர்களுக்கும் மற்ற தலித் ஜாதியினருக்கும் இடையே இருக்கும் சிக்கல்களை பேசினாலே, தலித் ஒற்றுமை சீர்குலைவதாக அச்சுறுத்தப்படுவதுதான். அதன் காரணமாகவே, சந்தையூர் சிக்கல்குறித்து வெகுசன ஊடகங்களில் எந்த விவாதங்களும் நிகழவில்லை. பரவலாக யாருமே பேசாதபோதே, சந்தையூர் சிக்கலைவைத்து தலித் அல்லாதோர் குளிர்காய்கிறார்கள் என்கிற ரீதியில் விசிகவின் துணைப்பொதுச் செயலாளராக இருக்கிறவரேகூட குற்றம் சுமத்த அரம்பித்துவிடுகிறார். தி இந்து, விகடன், நியூஸ் 18 போன்ற, தலித் மக்கள் பிரச்சனைகளில் அக்கறையுடன் செயல்படுகிறவர்கள்கூட, சந்தையூர் சிக்கலில் கள்ள மவுனம்காக்கவைக்கும் அளவுக்கு இருக்கிறது ஆதிக்க சக்தியாக இருக்கும் ஒரு தரப்புதலித் சமூகத்தின் லாபி!

பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்.

படம்: கதிரவன் மும்பை.

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“தோழர்களே!

நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்.

நமது இந்த முயற்சியை முறியடிக்க,தொடர்ச்சியாக தலித் விரோத இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன.

ஒருசில தற்குறி தலித்களை வைத்து ‘லெட்டர் பேடு’ அமைப்புகளை உருவாக்கி தங்களது அடிமைகளாக வைத்துக்கொள்வதை நாம் அறிவோம். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக போஸ்டர் போடுவது, நமது அமைப்புக்கு எதிராகப் பேசுவது என பச்சைத்துரோகத்தைச் செய்து வருகிறார்கள். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

இன்று தலித்துகளுடைய இந்தத் திரட்சி நமது போராளித்தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சாதிய- இந்துத்துவ
சக்திகள் கவனமாக உள்ளனர். இதற்கென கோடிக்கணக்கில் செலவு செய்து நம்முடைய அணி திரட்சியை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர்.

அதில் ஒன்று தான் சினிமாவைப் பயன்படுத்தும் உத்தியாகும். தலித் மக்களின் கதை போல அடையாளப்படுத்தும் முயற்சியாகும். இதனை நாம் எச்சரிக்கையாக அணுகவேண்டும்.

இந்த எச்சரிக்கை உணர்வோடு தான் நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் ‘காலா’ படத்தின் பின்னணி அரசியல் குறித்து எழுதினார்.இது இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிரானது என்று நமது தோழர்கள் புரிந்துகொண்டதுதான் வேதனைக்குரியதாகும்.

அண்ணன் ரவிக்குமார் அவர்கள் நமது இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு அறிவுச்சொத்து.
எழுச்சித்தமிழரின் தோளோடு தோள் நிற்கும் நம்பிக்கைக்குரிய தோழமை. மிகச்சிறந்த
தலித் ஆளுமை. அப்படிப்பட்டவரைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.

தலித் விடுதலை பயணம் இன்னும் இன்னும் போராடி பெற வேண்டியிருக்கிறது. ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.அதை நோக்கி பயணம் செய்வோம். ரசிக மன நிலை தலித் விடுதலைக்கு
எதிரானது. சினிமாவை சினிமாவாக பார்ப்போம், ரசிப்போம்!”

சாதிய உளவியலும் பதற்றங்களும்

ஏர் மகாராசன்

ஏர் மகாராசன்

சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும்.

இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல. இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே.

மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் அது குறைந்திடப் போவதுமில்லை. ஆனால் சாதியவாதிகளுக்கு ஓர் அச்சத்தையும் பதற்றத்தையும் இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை . இதைப் பலருடைய பதிவுகள் பதற்றத்தோடு வெளிப்படுத்துவதில் தெரிகின்றன.

இந்தத் தீர்ப்பால் சாதியம் ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை. ஆயினும் சாதிய உளவியல் பதறத் தொடங்கி இருப்பதாகவே கருதுகிறேன். முற்போக்கும் புரட்சியும் பேசுகிறவர்களுக்குள்ளிருந்து நிறைய சாதிய முகங்கள் வெளியே வந்து மனித உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு என்ற சாயங்களைப் பூசித்திரிகின்றதைப் பார்க்கும் போது தான் சாதியச் சமூகத்தின் வேர்த் தடங்கள் தெரியத் தொடங்குகின்றன.

சமூக விஞ்ஞானம் பயில்கின்றவர்கள் எனச் சொல்வோரிடமே சாதியம் குடியிருக்கிற போது, சாதிய வட்டத்தோடு நெருங்கி இருக்கிற சாமானியர்களின் உளவியலை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

இடைநிலைச் சாதிகள் அல்லது உயர்த்திக் கொண்ட சாதிகளில் உள்ள சமூக சனநாயக சக்திகள் இது போன்ற தீர்ப்புக்கு ஆதரவாக நிற்கும் போது தான், சாதியக்கட்டுமானத்தை மெல்ல மெல்ல அவிழ்க்கவும் அதைக் கரைக்கவும் முடியும். மாறாக, எதையோ ஒன்றைக் காரணம் காட்டி எதிர்த்து நின்றால், சாதியவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகவே அமைந்துவிடும்.

நிலவுகிற சமூக அமைப்பில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதுவும் சாதியம் பற்றிய தளத்தில் .

முற்போக்கு புரட்சி பற்றிப் பேசும் மிகப் பலரும் கவுசல்யாவைப் பாராட்டித்தான் பேசுகிறார்கள். சாதியவாதிகள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மட்டும் எதிர்க்கிறார்கள். மரண தண்டனை மனித உரிமை எனப் பேசி பதற்றமடைகிறார்கள். சாதியம் பற்றிய உரையாடலைத் திசை திருப்புகிறார்கள். இவை யாவும் சாதியத்தை ஏதோ ஒரு வகையில் முட்டுக் கொடுக்கும் வாதங்கள் தான்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் என்றுமே தயார் தான். உயர்த்திக் கொண்ட சாதிகளே இணையத் தயங்குகின்றன .

தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தயக்கத்தை கவுசல்யா உடைத்தெறிந்து புரட்சிகரப் பெண் அறமாய் முன் நிற்கிறார் . நாம் அவரோடும் அவர் பக்கமும் நிற்பதே சாதிய ஒழிப்புப் போராட்டத்தின் அணி சேர்க்கை ஆகும்.

உயர்த்திக் கொண்ட சாதித் திமிரை ஒழித்துக் கட்டுவோம். உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்.

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல்.

முகப்புப் படம் நன்றி: ரவி பேலட்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பேரவலத்தை ஒழியுங்கள் ராகுல்: ஒரு காங். தொண்டரின் கடிதம்!

அன்புள்ள திரு ராகுல்காந்தி…

வரும் 16ம்தேதி நீங்கள் காங்கிரஸ் தலைவராக பதவியேற்பீர்கள் என அறிந்தேன்.. இதில்எனக்கு புதிதாக ஏதுமில்லை. கடந்த 2007ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அன்பின் அரசியலைப்பற்றி பேசினீர்கள். அன்றே உங்களுடன் மனப்பூர்வமாக உடன்பட்டு விட்டதால் இது எனக்கு சடங்குதான்..

ஆனால் ஒரு கட்சியாக மட்டுமின்றி நூற்றிமுப்பது ஆண்டுகளாக நவீன இந்தியாவின் உருவாக்கத்திலும் அதன் சாதனைகளிலும் போதாமைகளிலும் பங்குபற்றிய ஓர் இயக்கமாக காங்கிரஸை கருதும் எனக்கு அன்றாட வாக்கரசியலுக்கு அப்பால் பேச சில விசயங்கள் உண்டு..

அதில் முதன்மையான ஒன்றைப்பற்றி இந்த தருணத்தில் பேசியாக வேண்டும். பாரதீய ஜனதா கட்சியினர் டிசம்பர் மாதமானால் பாபர்மசூதி இந்தியாவின் அவமானச்சின்னம் என உளறுவார்கள்.. அப்போது எனக்கு 1901ல் காந்தி பேசியது நினைவுக்கு வரும். அவர் மனிதக்கழிவுகளை மனிதன் அள்ளும் சூழலையே தேசிய அவமானம் எனக் கூறினார். தனது வாழ்நாள்முழுவதும் கழிவறைகளைப்பற்றி பேசியும் சிந்தித்தும் வந்த அரசியல் ஆளுமை அவரே. ஆனால் அவர் தேசியஅவமானம் எனக் கருதிய ஒரு விசயத்தை இன்னும் ஒழிக்காமல் நாம் அடைந்து விட்டதாகக் கருதும் வளர்ச்சிக்கு எந்த வித உள்ளீடும் இல்லை..

2011ம்ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 7.50 லட்சம் பேர் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மகசேசே விருதாளர் திரு. பெஜவாடா வில்சனின் “சபாயி கர்மச்சாரி அந்தோலன்”சுமார் 10.3லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறது. 2016ல் மட்டும் 1370 பேர் கழிவகற்றும் பணியில் இறந்துள்ளதாகவும் இந்த அமைப்பு பதிவு செய்துள்ளது. இவர்களை இப்பணியில் ஈடுபடுத்தியவை இந்திய ரயில்வே மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள். இவை அரசமைப்புகளே நிகழ்திய சட்ட மற்றும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. நாம் இணைந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள்.

எப்படியிருப்பினும் இந்த தேசிய அவமானம் நம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பிக்கொண்டுள்ளது. காந்திக்கு மட்டுமல்ல சமூக அநீதிகளுக்கெதிரான மானுட சாசனமாக இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியளித்த அம்பேத்கருக்கும், நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் வழியே இந்தியாவின் துயரங்களை களைய உறுதிபூண்ட நேருவிற்கும், கூட நாம் நியாயம் செய்யவில்லை.

1993ல் உலர்கழிவறை கட்டுமானத்தடைச் சட்டத்தை திரு.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. 2013ல் மனிதக்கழிவுகளை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு சட்டத்தை திரு.மன்மோகன்சிங் அரசு நிறைவேற்றியது. இச்சட்டங்கள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அமுலாக்கங்களில் பெரிய அக்கறை காட்டப்படவில்லை என்பதே நிதர்சனம்.. அதிலும் இந்த அவலத்தை களைய 2014-15ம் நிதியாண்டில் ஐ.மு.கூ அரசு ஒதுக்கிய 439.70 கோடி மனதக்கழிவகற்றுதலை “கர்மயோகம்” என வரையறை செய்த மகான் மோடியின் ஆட்சியில அதில் பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது.

இந்த அவமானம் தேசத்திற்கே பொதுவானது என்றாலும் கூட தமிழகத்தை சேர்ந்த எங்களுக்கு இதைப்பற்றிபேச ஆறுதலான கூடுதல் தகுதி ஒன்றுண்டு. தமிழக்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் இரு முறை நகர்மன்ற தலைவராக (1951-56,1981-86) விளங்கிய காந்தியவாதியும்;
சுதந்திர போராளியுமான திரு.ஜி.எஸ்.லட்சுமண ஐயர் அவர்கள் கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து வீடுகளிலும் உலர்கழிப்பிடங்களை அகற்றி நீரடிக்கழிவறைகளை அமைத்து தனது முதல் பதவிக் காலத்திலேயே மனிதக்கழிவுகளை மனிதர் அள்ளும் இழிவை நீக்கிய முதல் நகராட்சியாக கோபியை மாற்றினார். அவரின் நிழல்தந்த ஆசுவாசத்தில் அமர்ந்தே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.. நீங்கள் இந்தியாவின் அதிகாரத்தின் மையசக்தியாக மாறும் நாளில் இருந்து மிக்குறுகிய கால வரையறைக்குள் இந்த அவலத்தை துடைத்தகற்ற வேண்டும் என்பதே இந்த தருணத்தில் எனது வேண்டுகோள்..

ஒரு குற்றவுணர்வற்ற இந்தியனாக நான் உணரும் நாள் அதுவாகவே இருக்கும். எனது தலைவராக உங்களுக்கும் கூட.

அன்புடன்,
இரா.முருகானந்தம்

தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

ஜெ. பாலசுப்ரமணியம்

ஜெ. பாலசுப்ரமணியன்

ஒரே நிறுவனத்திலிருந்து வெளியாகும் இரு செய்தித்தாள்கள் ஒரு சம்பவத்தை எப்படி பார்க்கின்றன என்பதற்கு ஒரு சான்று. தமிழ் ‘தி இந்து’வும் ஆங்கில ‘தி இந்து’வும் சாதிய விசயங்களை பார்ப்பதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. மதுரை மாவட்டம் பன்னியான் கிராமத்தில் கடந்த 30.10.2017 அன்று மாலை 5 மணி அளவில் தலித் குடியிருப்புகளை அடித்து நொறுக்கியும், பைக்குகள், ஆட்டோக்கள், சுமோ வாகனங்கள் அடித்து தாக்கப்பட்டன. இதை பதிவு செய்த ஆங்கில தி இந்து நாளிதழ் 2ஆம் பக்கத்தில் 3 பத்தி இடம் ஒதுக்கி “Temple row lead to attack on Dalit houses at Panniyan: Police bring the situation under control, arrest six” என்று தலைப்பிட்டு அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோ, பைக் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால் தமிழ் ‘தி இந்து’ 4ஆம் பக்கத்தில் ஒரே ஒரு பத்தியில் “மதுரை அருகே கோஷ்டி மோதலில் வீடுகள் சேதம் 5 பேர் கைது” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஏதும் இல்லாமல் செய்தி வெளியிட்டுள்ளது. சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கியதை எப்படி கோஷ்டி மோதலாக பார்க்க முடிகிறது என்று தெரியவில்லை.

தலித்துகள் மீதான தாக்குதல்களை ஒரு ஆங்கில நாளிதழ் எப்படி பார்க்கிறது தமிழ் நாளிதழ் எப்படி பார்க்கிறது என்பதற்கு தினந்தோறும் உதாரணங்களை தந்துகொண்டே இருக்க முடியும். ஒரே வெளியீட்டு நிறுவனமாக இருந்தாலும் ‘தி இந்து’ தமிழ் தனது எல்லைக்குள்ளே செயல்படுவதை நம்மால் உணரமுடிகிறது. கடந்த ஆண்டு நாகை மாவட்டம் கள்ளிமேட்டிலே தலித்துகளுக்கு பத்திரகாளியம்மன் கோவில் ஆடிவிழாவில் உரிமை மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பான செய்திகளை ஆங்கில ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து வெளியிட்டு வந்தபோதும், தமிழ் ‘தி இந்து’ இது சம்பந்தமாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால் ஆங்கில ‘தி இந்து’வில் நடுப்பக்க கட்டுரையை எனது ஆசிரியர் சலபதியும் நானும் சேர்ந்து எழுதிய பின்பு அதை மொழி பெயர்த்து வெளியிட வேண்டிய கட்டாயம் தமிழ் ‘தி இந்து’வுக்கு ஏற்பட்டது.

காலனிய காலங்களிலும் சாதிய விசயங்களை ஆங்கில மொழி நாளிதழ்கள் சுதந்திரத்துடனும் இந்திய மொழிப் பத்திரிகைகள் பிற்போக்குத்தனத்துடனும் விவாதித்து வந்தன. பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு முறை தனது பிபிசி வானொலி பேட்டியில் காந்தி குறித்து பேசும்போது இப்படி கூறுவார். “காந்தி ஆங்கிலத்தில் வெளியிட்ட ‘ஹரிஜன்’ இதழில் சாதிக்கு எதிராகவும் குஜராத்தியில் வெளியிட்ட ‘ஹரிஜன் பந்து’வில் சாதிக்கு ஆதரவாகவும் எழுதி வந்தார். ஆங்கில நாளிதழ்களை வாசிக்கும் பிரிட்டீஷ் வெள்ளைக்காரர்கள் மத்தியில் தன்னை சாதிக்கு எதிரான ஆளாகவும். இந்திய தனது மொழி பேசும் குஜராத்தி மக்கள் மத்தியில் வர்ணாசிரமத்தை ஆதரிப்பவராகவும் காட்டிக்கொண்டார்” என்றார். வெறும் மொழி மட்டுமல்ல, ஒரு செய்தித்தாளின் புழங்குவெளியும் அது எவ்வாறு ஒரு விசயத்தை பார்க்கிறது என்பதற்கு காரணமாக உள்ளது. தமிழ் என்பது மாநில எல்லை கொண்டது. ஆங்கிலம் என்பது அப்படி அல்ல, அதற்கு தேசிய, இந்த இணைய யுகத்தில் சர்வதேச வெளி உருவாகியுள்ளது. தமிழ் செய்திதாளை வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள், கிராமத்தவர்கள், வாங்குதிறன் குறைவாக உள்ளவர்கள். ஆங்கில செய்த்தித்தாள் வாசிப்பவர்கள் கற்றவர்கள், பணக்காரர்கள், வாங்குதிறன் கொண்டவர்கள், இவையெல்லாம்தான் அதன் பேசு பொருளை தீர்மானிக்கிறது.

ஜெ. சுப்ரமணியம், பேராசிரியர். ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943 தலித் இதழ்கள்’ நூலின் ஆசிரியர்.

தலித் மாணவி அமராவதி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் !

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகேயுள்ள முதனை கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தலித் மாணவி அமராவதி (வயது 15) கடந்த வெள்ளியன்று (22.9.2017) தற்கொலை செய்து கொண்டார். ஊடகங்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படாத செய்தியாக இருந்தாலும் அண்மைக்காலத்தில் கல்விக்கூடம் தொடர்பான‌ சம்பவங்களால் தற்கொலை செய்து கொள்ளும் தலித் மாணவ – மாணவிகளின் மரணங்கள் அதிகரித்து வருவதை உணர்த்துகிற ஒரு படுகொலை. தொடர்ந்து நிகழுகிற‌ இது போன்ற மரணங்கள் பொதுச் சமூகத்தின் வழமையான செய்தியாகவும் மாறிவிட்டதை அமராவதியின் மரணம் உணர்த்தியுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்கு நேரில் சென்றிருந்தோம். உள்ளபடியே அமராவதியின் மரணம் குறித்து பேச பலர் தயங்கினார்கள்.

முதனை கிராமத்தில் 850 தலித் குடும்பங்களும், 6000 வன்னியர் குடும்பங்களும், சிறிய அளவில் முதலியார்களும் வசித்து வருகின்றனர். அந்த சுற்று வட்டாரத்தில் பறையர்களைக் கொண்ட ஒரே காலனி குடியிருப்பு முதனை தெற்குத் தெரு மட்டும் தான். அமராவதியின் தந்தை முருகன் (மாற்றுத்திறனாளி) சாத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார். அவரது தாயார் செம்பாயி கூலி வேலை செய்பவர். மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பிள்ளைகள். அமராவதி தான் மூத்தவள்.

இங்குள்ள பா. இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமராவதி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி புரிபவர் தனலட்சுமி. வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். இதே ஊரில் வசித்து வருகிறார். அன்னை தெரசா மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். கணிதப்பாடத்தில் அமராவதி மிகவும் குறைவாக மதிப்பெண் எடுத்தார் என்பதால் ஆசிரியை தனலட்சுமி அவரை அடித்து, சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் அப்போது சிரித்து தங்களின் கேலியை வெளிப்படுத்தியள்ளனர். இச்சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தி அமராவதியுடன் படித்த சக மாணவிகளாலும், அங்கு பரவலாக, பலராலும் சொல்லப்படுகிறது.

அமராவதியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது போல் பேசப்பட்டாலும், உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை அறிய முற்பட்டு பா. இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளிக் கூடத்துக்குச் சென்றோம். பள்ளி விடுமுறை என்பதால் பூட்டப்பட்டு இருந்தது. சில‌ மாணவர்கள் உள்ளே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலான மணவர்கள் வன்னியர் சங்கத்தின் தீச்சட்டி பொறித்த மஞ்சள் பனியன் அணிந்திருந்தனர். அமராவதி மரணம் குறித்து ஒரு மாணவரோடு பேசினேன். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கலைந்து சென்றனர். ஒரேயொரு மாணவர் மட்டும் கொஞ்ச நேரம் பேசினார். “எல்லாரையும் தான் டீச்சர் அடிச்சாங்க . . . ” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த மாணவக் கூட்டத்தின் தலைவர் போன்ற ஒருவர் “வாங்கடா” என்றதும் அனைவரும் சுவர் ஏறிக் குதித்து வெளியேறினர்.

அமராவதி இயல்பாகவே நன்றாக படிக்கிற மாணவி. சம்பவத்தன்று மதியம் 3.30 மணியளவில் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்ததும் தன் புத்தகப் பையையும், துப்பட்டாவையும் தூக்கி வீசியெறிந்து விட்டு, தன் தாயாரை கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்து விட்டு, யாரிடமும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மாலை 6 மணி நெருங்கும்போது மகளைக் காணவில்லை என அவரது அம்மாவும், அக்கம் பக்கத்து உறவினர்களும் டார்ச் லைட் எடுத்துக் கொண்டு தேடினர். கொஞ்ச தூரத்தில் பெண்கள் புழங்கும் பொதுக் கழிப்பிடத்தையொட்டி உள்ள ஒரு மரத்தின் உயரமான பகுதியில் அமராவதி தூக்கில் தொங்கினார். பிறகு அங்குள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, பிரேதத்தைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்து, பிரேதத்தை எரித்தனர். அமராவதியின் தந்தை முருகன் இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் மகளின் மரணம் குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. இது வரை முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை. “எல்லாத்தையும் முடித்து விட்டு வாங்க பேசிக்கலாம்” என்பதாக காவல் துறையிலிருந்து தகவல் தரப்பட்டுள்ளது.

அமராவதியின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 2003 -ல் கண்ணகி, முருகேசனை வன்னியர்கள் கூட்டாக கொலை செய்த புதுக்கூரைப்பேட்டை (குப்பநத்தம்) 10 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. முதனை கிராமமும் அது போலவே சாதி – தீண்டாமையை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றும் ஒரு கிராமம்.

அமராவதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்

 • பள்ளிக்கூடத்தில் நடந்தது என்ன? அமராவதியை அடித்த ஆசிரியை தனலட்சுமி மீது மாவட்ட க் கல்வி அலுவலகமும், காவல் துறையும் (வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம்) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

 • தற்கொலையாகவோ, கொலையாகவோ, சந்தேகத்திற்கிடமான மரணமாக‌ இருந்தாலும் காவல்துறை விசாரணையை ஏன் இன்னும் தொடங்கவில்லை? முதல் தகவல் அறிக்கையை ஏன் இன்னும் பதியவில்லை?

 • அமராவதியின் தந்தை கொடுத்திருக்கும் புகார் மனுவில் பள்ளிக்கூட சம்பவம் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணம் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு இருக்காது என்கிற அச்சம் தான். எனவே தான் பள்ளிக்கூடத்தில் நடந்த‌ சம்பவத்தை குறிப்பிட‌ தவிர்த்து விட்டார். இதை காரணமாக வைத்து அமராவதியை தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியை தனலட்சுமி மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மௌனம் காப்பது ஏன்?

 • அமராவதியை இழந்து தவிக்கிற முருகன் குடும்பத்துக்கு சட்ட‌ ரீதியாக உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என்பதால் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் மனித உரிமை அமைப்புகளும், தலித் இயக்கங்களும் ஆதரவு அளிக்க வேண்டியுள்ளது. எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

 • பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உடனடியாக‌ இழப்பீடு வழங்க வேண்டும்.

 • விசாரணைக்கு சாதிய அச்சுறுத்தல் தடையாக இருக்குமெனில் நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட‌ வேண்டும்.

பாடம் நடத்துகிற ஆசிரியர்கள் மத்தியில் சாதிய மனோபவமும், அதன் ஆதிக்க உள்ளுணர்வும் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதால் அது வார்த்தையாகவும், வன்கொடுமையாகவும் வெளிப்பட்டு தலித் மாணவச் செல்வங்களை கொன்று விடுகிறது. அமராவதியும் அப்படித்தான் கொல்லப்பட்டிருக்கின்றார். பொதுவாக தலித் மாணவ – மாணவிகளின் இது போன்ற தற்கொலைகளை கோழைத்தனமான முடிவு என்று சொல்லி தப்பிக்கிற மனநிலை பொதுச் சமூகத்துக்கு இயல்பாகவே உண்டு. அல்லது இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது, உளவியல் ரீதியாக‌ அதை உடைத்து வெளியேற வேண்டும் என எளிதாகவும் வகுப்பெடுக்க முடிகிறது. பிரச்சனை அது மட்டுமல்ல. அடிப்படையில் பள்ளிக்கூடத்தில் அல்லது சக மாணவர் குழுவில் ஒரு தலித் சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது, வன்கொடுமைகளால் காயப்படும்போது ஏற்படும் உளவியல் வலியை யாரிடம் முறையிடுவது? அதற்கான நம்பகத் தன்மையுடைய பொது வெளி இங்கு இருக்கிறதா? பெற்றோரிடமோ, சக ஆசிரியரிடமோ, மாண‌வரிடமோ, நண்பரிடமோ நடந்ததை அப்படியே சொன்னாலும் அதை சரி செய்கிற நேர் மறை மனோபவமும், பக்குவமும், நேர்மையும் யாரிடம் இருக்கிறது? தன் உளவியல் காயத்துக்கு மருந்து கொடுக்கிற நம்பகத்தனமை கொண்ட பொது வெளி இங்கே குறுக்கப்பட்டு, சுருங்கி வருவதும் இது போன்ற மரணங்களுக்கு காரணமாக அமைகிறது. இதற்கு சாதிய மனோபவம் கூடுதலான வீச்சாக இருப்பதை அமராவதியின் மரணத்தில் கண்டுணர முடிகிறது. எனினும் அமராவதியின் மரணத்தில் அசைவற்று கிடக்கும் இச்சமூகம் சாதி – தீண்டாமை குறித்தான கேள்விகளை எழுப்பாத வரை இது போன்ற மரணங்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

அன்புசெல்வம் (26.9.2017), தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் – ICDA, புதுச்சேரி.

கோயிலில் வழிபட முனைந்த தலித்துகள் மீது தாக்குதல்…

மகனை தாக்கியதை தாங்கமுடியாத ராணி உள்ளேவிழந்து விளக்கிட முயலும் போது , ஆதிக்க சாதியினரிடமிருந்து “ஏன்டி தே…..யா முண்டே பள்ளசிறுக்கி எங்கள சாமி கும்பிட இடைஞ்சலா பண்றீங்க, என்றும் ,”எனது சேலையை பிடித்து இழுத்தனர் ,தப்பிக்க முயன்றபோது ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றொருவன் என் சட்டையை இழுத்தில் வலது கை சட்டை கிழிந்துவிட்டது, இவ்வளவு கேவலமாக கோவிலுக்கு முன்னால் வைத்து எங்கள இப்படி பன்னீட்டாங்களே, என கண்கலங்கினார்,
அவருடன் மருத்துவமனையில் இருந்த பஞ்சவர்ணம் வயது 50 என்பவரிடம் கேட்டப்போது இவ்வளவுக்கும் காரணம் போலீஸ் தாங்க, ஒரு வாரத்துக்கு முன்பே எங்க ஊர் பெரியவங்க போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்திருந்தனர், அதை அவங்க கண்டுகொள்ளாமல், எங்கள ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் திருவிழா நடத்துறாங்க, இதை கேட்கபோன எங்க பையனைகளை உருட்டுகட்டையால் பத்துபதினைந்து பேர் தாக்கியதை தாங்க முடியலையே, எங்க பிள்ளைகளை அந்த படுபாவீகிடமிருந்து கூட்டிவர போன என்னையும் தாக்கீட்டாங்களே, எனது தலைமுடியை பிடித்து இழுத்துப்போட்டு அடிச்சுட்டாங்களே ” என்று அவங்க சொல்லும் போதே நம் நெஞ்சம் கலங்கியது. கடந்த மூன்று வருடமாக அங்கு தீண்டாமை நிலவுவதை எதிர்த்து சிபிஎம் சிவகங்கை மாவட்டக்குழு வும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் தலையீடுகளை செய்து வருகிறது. மானாமதுரை நகர்காவல்நிலையம் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக உள்ளது. பாதிக்கப்பட்ட தலித் மாணவர்களை காலாண்டு தேர்வு எழுதிடவிடாமல் லாக்கப்பில் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆதிக்க சக்திகள் மீண்டும் தாக்கலாம் என்ற அச்சத்தில் சிபிஐஎம் மானாமதுரை அலுவலத்தில் இருந்தனர். இரவு 1 மணிவரை அவரகளுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிவிட்டு வந்தோம்.

மு. கந்தசாமி.

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கிருஷ்ணசாமி கூட்டனி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

கொடியன்குளம் தாக்குதலுக்கு காரனமான அதிமுகவுடன் 2011ல் கூட்டனி அமைத்து ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 பரமகுடியில் தியாகி இம்மாணுவேல் சேகரன் நிணைவேந்தல் நிகழ்ச்சியில் பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 6 உயிர்களை படுகொலை செய்தனர். சில மாதங்களில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி ஆதரவளித்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி ,2016சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி அமைத்து தோல்வி அடைந்து விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி ஒரு மாநாடோ அல்லது கூட்டமோ கூட்டினாலே சாதாரனமாக 5 ஆயிரம் பேர் கூடுவார்கள். சமிபத்தில் ஜனவரி மாதம் நெல்லையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொன்ட புதியதமிழகம் கட்சி நடத்திய மாநாட்டில் 800 பேர் மட்டுமே கலந்து கொன்டனர் அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டார்.

எங்கோ இருந்து வந்த கிருஷ்ணசாமி தன்னை பள்ளர் சமுகததை சார்ந்தவன் என்று தான் சிபிஎம்எல் கட்சி மற்றும் தலித் பேந்தர் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தாக அறிமுகம் செய்து கொன்ட மருத்துவர் என்பதால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து தலைவராக்கப்பட்டார் ,மக்களிடம் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டார். மக்களிடம் தனக்கு ஆதரவு கிடைத்ததை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இருந்து விலகி புதியதமிகம் கட்சியை 1997 டிசம்பர் மாதம் துவங்கினார். கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரை ஜாதிய ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூக மக்களை எந்த கட்சி ஆட்சியில் அரசால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கு அடுத்த தேர்தலில் அந்த கட்சியிடமே தேர்தல் கூட்டனி வைத்துக் வந்துள்ளார்.

கிருஷ்ணசாமி பள்ளர் சமுக மக்களிடம் அருகே அமர்ந்தோ சரி சமமாக உட்கார வைத்தாே தொட்டு பேசியதோ கிடையாது விலகியே இருந்து பேசுவார். பள்ளர் சமுக மக்களை அரசியல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொன்டதில்லை என்பது மாற்று தலைவர்கள் உருவாகவில்லை என்றும் வலைதளங்களில் ஆதரவாக எழுதுபவர்களின் கருத்துகளில் இருந்து நன்றாக தெரியும். பள்ளர் சமுக மக்களிடம் ஒன்றாமல் பள்ளர் சமுக மக்களுக்களை கொன்று குவித்தவர்களோடு கைகோர்த்தவர் எப்படி பளளர் சமுக மக்களின் தலைவராக இருக்க முடியும்.

தனது சுயநலத்திற்காக மக்களை வதைப்பவர்களுடன் கூட்டு சேரும் கிருஷ்ணசாமி உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட பள்ளர் சமுகத்தை சார்ந்தவரா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ளது இந்த சூழலில் தற்போது பாஜகவுடன் இணைந்து கொன்டு பள்ளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நிக்க வேன்டும் என்று பள்ளர் சமுக மக்களின் பிரதிநிதிதுவ உரிமையை பறிக்க முயற்சிக்கிறார் மற்றும் நீட் என்ற சமுகநீதிக்கும சட்டத்திற்கும் எதிரான மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல் நீட்டின் பாதிப்பால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து உயிரை மாய்த்துக் கொன்ட மாணவி அனிதா இறப்பை மட்டுமல்லாமல் தன்னை விமர்சப்பவர்களை தாறுமாறாக நாகரிகமற்று அவதூறாக பேசி பள்ளர் சமுக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களாள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

உண்மையான ஒரு ஒடுக்கப்பட்ட சமுக பிரிவை சார்ந்த நபர் இவ்வாறு நடந்து கொள்ளவோ அவதூறாக பேசாவோ வாய்ப்பில்லை , கிருஷ்ணசாமியின் ஜாதி சான்று விவகாரத்தையும் திடிரென வந்ததும் சுப்பிரமணியசாமி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பால் களம் இறக்கப்பட்டவராக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

டி. தருமராஜ்

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

தமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது போலும்! யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இது தமிழின் இன்னொரு துர்பலம். எது எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் குப்பையில் வீசி விடுகிற அலட்சியம். இந்த மூன்று பண்டிதர்களையும் அப்படியொரு தமிழ் குப்பையிலிருந்தே தேடி எடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த மூன்று பேரிடமும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன: அவர்களுக்கு தமிழ் தான் மூச்சு; இந்து மதத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்திக் கொண்டவர்கள்; பைபிள் பரிச்சயம் உண்டு (ஏதேன் தோட்டக் கதையை அறிந்தவர்கள்); தமிழ் பண்பாடு குறித்து ஆழ்ந்த அக்கறை காட்டியவர்கள்; ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்; தத்தம் சாதியடையாளத்தில் அரசியல் செய்யாதவர்கள்… இப்படி நிறைய ஒற்றுமைகள். எனக்கு உவப்பானது அவர்களது தேசியக் கற்பனைகள்!

அயோத்திதாசர் ‘இந்திர தேசம்’ என்றொரு தேசியத்தைக் கற்பனை செய்கிறார் என்றால், ஆபிரகாம் பண்டிதர் ‘கடற்கோளால் அழிந்த’ தேசமொன்றை உருவாக்கிக் கொள்கிறார்; பாவாணருக்கு இது ‘குமரிக்கண்டம்’. ஏறக்குறைய, இம்மூன்று பேர் சொல்வதும் ஒரே தேசத்தை தான் என்று சொல்வதற்கு காரணங்கள் நிறைய உண்டு.

இந்த மூன்று தேசத்திலும் ‘தமிழ்’ தான் புழங்கு மொழி. அதே போல இந்த மூன்று தேசங்களிலும் பிராமணர்கள் இல்லை. பிராமணர்கள் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள். திராவிடர்களின் வார்த்தைகளில் சொல்லப் போனால், அந்த தேசத்தை ‘நான் – பிராமின் தேசம்’ என்று கூட அழைக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படி பெயரிடவில்லை!

பிராமணர்களை ‘வந்தேறி’களாகச் சொல்வதற்கு வரலாற்றுக் காரணங்கள் இல்லை. ஆனால், அவர்களிடம் சமூகக் காரணங்கள் இருந்தன. சாதியமைப்பின் கொழுத்த லாபத்தை அனுபவிப்பவர்களாகவும், அதனை முட்டுக்கொடுத்து காப்பவர்களாகவும் பிராமணர்களே நிரூபிக்கப்பட்டிருந்தனர்.

வேடிக்கை என்ன என்றால், இதுவும் கூட பிராமணர்களின் வாக்குமூலங்கள் மூலமே நிரூபிக்கப்பட்டிருந்தத. இந்த தேசத்தின் அத்தனை நல்ல விஷயங்களுக்கும் தாங்களே ஜவாப்தாரி என்று சொல்லிக் கொள்ளும் தீரா வியாதி பிராமணர்களுக்கு உண்டு. எந்தவொரு நல்ல விஷயத்தையும் பிராமண குடுவைக்குள் அடைத்து வைப்பது அவர்களின் குணம். அந்த வகையில் இந்த நாட்டின் சாதியமைப்பையும் தாங்களே மையமாக நின்று தாங்குவதாக அவர்கள் சான்றுகளை உருவாக்கியிருந்தார்கள்.

இந்த தேசத்தின் மொழி, கலை, பண்பாடு, அறிவியல், கல்வி, நீதி, அரசியல், சமயம், தத்துவம் என்று அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு என்று சொன்னது போல, இந்த சாதிய சமூக ஒழுங்கமைப்பிற்கும் தாங்களே பொறுப்பு என்பதாகத்தான் அவர்கள் வாதம் இருந்திருந்தது. இதுவொரு அறிவீனம். ஆனால், நிறைய நேரங்களில் மூடத்தனம் தான் புத்திசாலித்தனமாக இருக்கிறது.

இது முழுக்க முழுக்க, பிராமணர்களின் அடையாளச் சிக்கலினால் உருவாகும் மனக்கோளாறு. அவர்கள் கொஞ்சம் முயன்றால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், இந்தக் கோளாறையே இயல்பாகக் கருதி வாழத்தொடங்கி விட்டதால் கொஞ்சம் கஷ்டம். சரி, விஷயத்திற்கு வரலாம்.

இப்படித் தானாகவே வந்து, சாதிய ரெளடியாக ஜீப்பில் ஏறி பிராமணர்களை விட்டுவிட்டு ஒரு கனவு தேசத்தை நிர்மாணிப்பதற்கான ஒரே காரணம் – அது, சாதியற்ற சமத்துவ தேசமாக இருக்க வேண்டும் என்பது தான்.

சாதிக் கொடுமையின் மிக மிக எளிய உருவகமாக பிராமணர்கள் இருந்தார்கள் என்பதிலிருந்தே அந்தக் கற்பனை ஆரம்பிக்கிறது. அதாவது, அது இந்திர தேசமோ, கடற்கோளால் அழிந்த தேசமோ அல்லது குமரிக்கண்டமோ, என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த தேசங்களில் சாதி வேற்றுமை இல்லை என்று சொல்வதற்கு மிக எளிய சான்று, அந்த தேசங்களில் பிராமணர்கள் இல்லை என்று நிரூபிப்பது. இதையே அந்த மூன்று கற்பனைகளும் செய்து கொண்டிருந்தன.

இந்திர தேசத்தில் பல மொழிக்காரர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்; அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு அநாகரீகக் குழு வந்து சேர்ந்தது. பூர்வ தேசத்தில் தமிழிசை செழித்து வளர்ந்திருந்தது; கடற்கோள் வந்து, அனைத்தையும் சிதைத்தது. குமரிக்கண்டத்தில் மாந்தன் தமிழனாக இருந்தான்; கடற்கோள் வந்து பிரிவினைகள் தோன்றின.

இந்தக் கற்பனைகளின் பலம் அவற்றிற்கான வரலாற்று சான்றுகளோ, தொல்லியல் சான்றுகளோ இல்லையென்று அழுத்தமாய் சொல்ல வேண்டும். அழிந்த போன இந்திர தேசத்தையோ குமரிக்கண்டத்தையோ அகழ்ந்தெடுப்பதும் அல்லது மூடத்தனம் என்று அறிவிப்பதும் சம அளவிலான முட்டாள்தனங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.

சரஸ்வதி நதியைத் தேடுவதை விடவும் இது கேவலமானது. ராமர் பாலத்தின் பொறியியல் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதை விடவும் இது அசிங்கமானது.

கதைகளை அல்ல, அவற்றின் பின்னிருக்கும் நோக்கத்தை உணர்வதே தமிழ் தேசியத்தை உணர்தல் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கற்பனைகளின் நோக்கம், சாதியற்ற சமூகமாக இருக்கிறது.

இந்த நோக்கத்தை கற்பனை செய்தவர்கள், இது அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடும் என்று நம்பவில்லை. எங்கே பொய்த்துப் போகுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் ஊறித் ததும்பிது.

அந்த அச்சத்தை போக்குவதற்கே, ‘இல்லையில்லை, சமத்துவ சமூகம் என்ற யோசனை அதிசய விஷயமில்லை; அது ஏற்கனவே இங்கு இருந்தது தான். பிராமணர்கள் வருவதற்கு முன் நாமெல்லாம் அப்படித்தான் வாழ்ந்து வந்தோம்; அதனால் சாதியற்ற சமூகம் சாத்தியமே!’ என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள்.

தங்களது சமாதானத்தை மேலும் மேலும் கற்பனை செய்து நிஜமாக்க உழைத்தார்கள் என்பது தான் மூன்று பண்டிதர்களின் சிறப்பு. அங்கே, சமாதானம் எப்படி விளங்கியது; கலைகள் எவ்வாறு விளங்கின; மொழி, பண்பாடு, சிந்தனையெல்லாம் எப்படி இருந்தன என்று தொடர்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். என்ன சொல்லப்பட்டது என்பதை விடவும், எப்படி சொல்லப்பட்டது என்பதே முக்கியமென்று நினைக்கிறேன்.

மூன்று பண்டிதர்களிடமும் காணப்படும், சமத்துவத்தை விளையும் மனதையே தமிழ் தேசியத்தின் நியாயமாக நான் பார்க்கிறேன்.

இந்தக் கற்பனை, ஒரு நொடியில் அடிப்படைவாதமாக மாறிவிடும் ஆபத்துள்ளது என்பதையும் நாம் உணரவேண்டும். இந்து ராஷ்ட்ரிய கற்பனை எவ்வாறு எல்லார் முகத்திலும் விபூதியடிக்க / குங்குமம் தீட்ட நினைக்கிறதோ அதே போல, ஒரு போதாத கணத்தில், இந்த தேசியக் கற்பனைகளும் ‘வந்தேறிவாதங்களாக’ மாறி நிற்கும்.

இன்றைய தமிழ் தேசியத்தின் அடிப்படையான சிக்கல் இது தான். பக்கத்திலிருக்கும் ஈழ தேசியத்திலிருந்தும், இங்கேயே இருக்கும் இந்துத்துவத்திலிருந்தும் தமிழ் தேசியர்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயம் இது – ‘வந்தேறிவாதம்’.

ஆனால், தமிழ் தேசியம் என்பது இதுவல்ல, தமிழர்களே! அது, சாதியற்ற சமூகத்தை கற்பனை செய்தல். அதைத் தான் அந்த மூன்று பண்டிதர்களும் செய்திருந்தார்கள். இதைத் தவிர்த்து அவர்களிடம் கற்றுக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

அயோத்திதாசரை சமூக அறிவியலாளராக சித்தரிப்பதை விடவும், ஆபிரகாம் பண்டிதரை இசையறிஞராக முன்னிறுத்துவதை விடவும், பாவாணரை மொழியியலாளராக முன்னிறுத்துவதை விடவும், அவர்கள் சாதியற்ற நிலையைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்வதே பெருமை என்று நினைக்கிறேன்.

டி. தருமராஜ், ஆய்வாளர்; எழுத்தாளர்.

தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா
தமிழர் எல்லோருக்குமான
பிணமாக மாறுவதற்கு முன்பு
ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள்

தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற
அவள் வீடு
பறத்தெருவிலிருந்தது.

ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள்
அவளது தெருவிலிருந்து
அவளது படிப்பை கெடுக்கவில்லை

பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு
என்று பறையன் அப்பா சொல்லவில்லை
படிச்சு கிழிச்சது போதும்
என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை
அடக்கமா ஒடுக்கமா இருன்னு
பறைச்சி பாட்டி சொல்லவில்லை

படிப்புதான் நமக்கு எல்லாமே
என்று எல்லா பறையர்களும் தமது
பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான்
அனிதாவின் வீட்டிலும் அவளிடம் சொன்னார்கள்

பறையிசை கேட்டபடிதான்
அவள் பள்ளிப்பாடம் படிப்பாள்
மாட்டிறைச்சி தின்றவள்தான்
கணக்கில் 100 மார்க் எடுத்தாள்
டாக்டர்தான் ஆவேன் என்று
வைராக்கியமாய் நின்றாள்
அம்பேத்கரின் பேத்தியவள்
ஜெய் பீம் சொல்லிவிட்டுத்தான் சென்றாள்

அனிதா
தமிழர் எல்லோருக்குமான
பிணமாக மாறுவதற்கு முன்பு
ரத்தமும் சதையுமான
எனது தங்கையாய்
கண்களில் தீப்பந்தம் மிளிர
பறத்தெருவில் கம்பீரமாய் வளையவந்த
பறைச்சியாய் இருந்தாள்

– ப. ஜெயசீலன்.

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கான வினாதாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை; மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப் பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார் . அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலியிட்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவச் சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித்தல் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”என தெரிவித்துள்ளார்.

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் நல்லூர் காலனி பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, பல வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மற்றும் துணிமணிகளை சூறையாடியுள்ளனர். குடிசை வீடுகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களையும் விரட்டி, விரட்டி தாக்கியுள்ளனர். இந்த மோதல் காரணமாக 5 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விநாயகர் சிலைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்த சாதிக்கலவரம், பத்திரிக்கைகளில் வெறும் “விநாயகர் சதுர்த்தி கலவரமாக” மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி பற்றி சில மாதங்களுக்கு முன் நானும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தலித் செயற்பாட்டாளருமான Kiruba Munusamy கிருபா முனுசாமியும்  பேசிக்கொண்டிருந்தோம். நீலக்கொடிகள் பறந்துகொண்டிருந்த தலித்துகளின் பகுதிகளில் இப்போது காவிக்கொடிகள் பறக்க ஆரம்பித்திருப்பதை சிறிது அச்சத்துடன் அப்போது அவர் பகிர்ந்துகொண்டார். அதை நானும் உணர்ந்திருந்தேன்.

சமீபமாக,  விநாயகரை கரைப்பதற்காகாக பிரமாண்ட சிலைகளுடன் மெரீனாவுக்கு வருவதில் கடற்கரையோர மக்கள் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக சேரிப்பகுதி இளைஞர்களின் பங்கு பெருமளவில் இருப்பதை பார்த்து நான் மிகவும் அயர்ச்சியுடன் கடந்திருக்கிறேன். “இந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்ன அண்ணலின் வாரிசுகள் ஏன் இப்படித் தடுமாறி தவறான பாதையில் செல்கிறார்கள் என்று.

திலகர் என்கிற பார்ப்பனர் “இந்து மதம்” என்கிற ஒன்றை, ஒற்றை சக்தியாக கட்டமைப்பதற்காக உருவாக்கிய விநாயகர் சதுர்த்திக்கும் தமிழ்நாட்டிற்குமே என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை? ஏழாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் விநாயகர் என்கிற ஒருவரைப்பற்றிய குறிப்புகளே இல்லையே.

“தமிழர்களுக்கு விநாயகருக்கும்” என்ற கேள்விக்கே விடை கிடைக்காதபோது, “இந்துக்களாக பிறந்தாலும் மதத்தாலும், பிற சாதிக்களாலும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படாத தலித்துகளுக்கும் விநாயகருக்கும் எங்கிருந்து தொடர்பு வந்தது ? (விநாயகர் புத்தரின் குறியீடு என்றாலும், நாம் இப்போது புத்த பூர்ணிமா கொண்டாடவில்லையே. விநாயகர் சதுர்த்தியாகத்தானே விழா எடுக்கிறோம்).

“ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத்திரட்ட” என்ற காரணத்துடன் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், தற்போது பிற மதத்தினரை கலவரப்படுத்தும் ஒரு விழாவாக அல்லவா எஞ்சி நிற்கிறது. குறிப்பாக சேரிப்பகுதிகளுக்குள் வரத்தயங்கும் இந்துக்கடவுள்கள், எந்தவித பாரபட்சமுமின்றி இஸ்லாமியத் தெருவிற்குள் நுழையும் இந்த நாட்களில் இதுபோன்ற பண்டிகையை வேறெப்படிப் பார்ப்பது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வும் அரங்கேறும்போதும், அந்த சிலைகளுடன் உடன் செல்பவர்களின் உடல் மொழியில் அப்படியொரு அசாத்தியமான வெறியைப்பார்க்கமுடிகிறது. அந்த வாகனங்கள் நகரும்போது ஏதேச்சையாக அதனருகில் நிற்க நேரிடுபவர்களுக்கு அந்த வெறியும், கூச்சலும் புரியும்.

இரட்டை அர்த்த வசனங்களும், பெருங்குரலுடன் ஆபாச வசவுகளும், எறியப்படுவதோடு, பூக்களும் பொருட்களும் நம் தலையில் வீசப்படுவதையும் தடுக்க இயலாத அமைதியான சாட்சியாக மட்டுமே அதை நாம் பதிவு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக வெறுமனே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடிய காவி அமைப்புகள், தற்போது அதை இந்து மக்கள் எழுச்சி விழாவாக தமிழ்நாட்டில் அறைகூவல் விடுக்கிறார்கள்.

இந்து மத ரீதியாகவோ அல்லது இந்து மதத்தின் முக்கிய கூறுகளான சாதி ரீதியாக பார்த்தாலும் கூட தலித்துகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லாதபோது, எதற்காக இந்த கொண்டாட்டங்களில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்? எதற்காக காவிக்கொடிகளை தங்கள் உடலில் சுமக்கிறார்கள் ? எதற்காக அந்த சிலையை கரைக்க செல்கிறார்கள் ? என்று எப்போதுமே குழப்பமாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் பவுத்த சன்மார்க்கத்தை தழுவியுள்ள டாக்டர் சத்வாவோடு Satva T இதுபற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் கூறிய சில கருத்துக்கள் இதற்கு விடையளிப்பது போல் தோன்றியது.

“வெகுசன மக்களால் பண்பாட்டு கொண்டாடங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு மாற்றாக நாம் வேறு கலாச்சார பண்பாடை நாம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் நாத்திகம் – முற்போக்கு என்று மட்டும் பேசினால் அந்த வளையத்திற்குள் நம்மை போல extreme view கொண்டோர் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் இந்துவாகவே இருந்து கொண்டு தொடர்ந்து சாதி இந்துகள்ளிடம் அடிவாங்குவார்கள். மாற்று கொண்டாட்டங்களை, கலாச்சார நிகழ்வுகளை வழங்க வேண்டும்.இதை தலித்  பிரிவில் உள்ள அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பின் அதனை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நியாயமாக சொன்னால் தலித் அறிவுஜீவிகள் இந்த விடயத்தில் சொந்தமாக சிந்திப்பதை நிறுத்தி விட்டு டாக்டர். அம்பேட்கரை முதலில் படித்து புரிந்து கொள்ள முயல வேண்டும்”

இதுதான் டாக்டர்.சத்வா கூறியது. பண்பாட்டுத் தளத்தில் கொண்டாட்டங்கள் எத்தனைத்தேவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் ஒரு பகுதியாகவே தீவிர வலதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட “இந்துத்துவ பண்டிகையான” விநாயகர் சதுர்த்தியை நோக்கி தலித்துகள் செல்கிறார்கள் என்பதையும்.

ஆனால், தலித்துகளை சாதி ரீதியாக அடிமைப்படுத்துவதற்கான அத்தனை கூறுகளையும் வர்ணாசிரமங்கள் மூலம் கட்டமைத்து வைத்த,வைத்திருக்கும், அப்படியே வைத்திருக்க விரும்பும் தீவிர வலதுசாரிகள், இது போன்ற “விநாயகர் சதுர்த்தி” ஊர்வலங்கள் மூலமாக, மிகவும் தந்திரமாக சேரிகளிலுள் தங்கள் வலதுசாரித்தனத்தை புகுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முரணான ஒன்று.

ஆனால்,சேரிக்குள் புகும் வலதுசாரி காவி இயக்கங்களால் தலித் மக்களுக்கு ஏதேனும் லாபம் உண்டா என்றால் எதுவுமில்லை என்பதே என்னுடைய திட்டவட்டமான பதில். இல்லை. நாங்கள் சேரிகளுக்கு பாதுகாவலர்கள் என்று இந்த காவிகள் கூறுவார்களேயானால், நல்லூரில் வன்னியர்களின் தாக்குதலுக்கு தலித்துகள் ஆளானபோது இந்தக்காவிகள் எங்கிருந்தார்கள் ? இதற்கு அவர்களிடம் என்ன பதில் இருக்கிறது ?

அவர்களிடம் இதற்கு எந்தப்பதிலும் இருக்காது. கிடையவும்  கிடையாது. ஏனென்றால் இதே வலதுசாரிகள் வன்னியத்தெருவுக்குள்ளோ, அல்லது தேவர்களின் தெருவுக்குள்ளோ சாதி வெறியைத்தூண்டிவிடும்படியான வேலைகளையும், அங்குள்ள இளைஞர்களை சாதி மத ரீதியான வெறியர்களாக மாற்றுவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். தார்மீக அறமற்றவர்களுக்கு இதுபோன்ற பணிகள் மிக எளிதாக ஈடுபடமுடியும்.

இந்து மதத்தின் அடிபப்டையான சாதிக்கட்டமைப்பை, அந்த சாதியினால், “மதக்கொண்டாட்டங்களில்” ஈடுபடும் தலித்துகள் மிதிவாங்குவதைத் தடுக்க அல்லது அகற்ற இந்து வலதுசாரி அமைப்புகள் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் பதிலேயில்லாத கேள்விதான்.

முற்போக்கு தத்துவங்களை, கடவுள் மறுப்புக்கொள்கைகளை தலித்துகளிடம் கொண்டு செல்வதற்குமுன் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மாற்றுக்கொண்டாட்ட வழிமுறைகள் என்ன என்பதை தலித்திய அறிஞர்கள் கண்டறியவேண்டும். சாதீயக்கட்டமைப்புகளில் இருந்து வெளிவராத இந்து மதம் என்றைக்குமே தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற ஒன்றுதான், அவர்களைக் கைவிடும் ஒன்றுதான் என்பதையும் புரிய வைக்கவேண்டும். தொடர்ந்த உரையாடல்கள் மூலமே தலித் இளைஞர்களை இந்த வலதுசாரித் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க  இயலும்.

இறுதியாக அண்ணலின் “நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்ற புத்தகத்தில் இருந்து சில வார்த்தைகளை மட்டும் மேற்கோளிட்டு இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

“நாம் அனுபவித்த இயலாமைகள், நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்த அவ மானங்கள் அனைத்துமே நாம் இந்து மதத் தின் உறுப்பினர்களாக இருந்ததால்தான்.

இந்து மதத்துடனான உங்கள் தொடர்பை துண்டித்துவிட்டு வேறு ஏதேனும் மதத்தைத் தழுவுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் அப்படியான புதிய நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். நம்மை சரி சமமாக நடத்துவதும், நமக்கு சமமான நிலையும், வாய்ப்புகளும் வழங்குவது எவ்விதத் தடையுமின்றி அதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள்.

கெடுவாய்ப்பாக, நான் ஓரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்.”

*கட்டுரையாளர் பொசல்: தலித் செயற்பாட்டாளர்.

 

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்

வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய எழுதப்பட்டு வருகின்றன. தி இந்துவின் செய்தியாக்க முறை கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதில் நான் முழுக்க உடன் படுகிறேன். ஆனால் இதில் தி இந்து ஏட்டை மட்டும் விமர்சிப்பது ஒரு பகுதி உண்மை என்றே சொல்ல வேண்டும்.செய்தி எழுதுபவர், எடிட்டர், சப் எடிட்டர் வரை இதில் பொறுப்பிருக்கிறது எனினும் அதைப் பற்றி யாரும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை.குறிப்பாக செய்தி எழுதியவர் பற்றி.அதையும் சேர்த்து பார்க்கும் போது தான் தமிழ் இதழியல் உலகில் நடந்திருக்கும் பிற புலப்படாத பக்கங்களும் தெரிய வரும்.

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.

 

தி இந்து பிராமணர்களால் நடத்தப்படும் நிறுவனம். இந்நிலையில் இத்தகு செய்திகளுக்கு அது ஏன் சம்மதிக்க வேண்டும்? தெரியாமல் நடந்து விட்ட பிழை, செய்தியாளர்களின் அனுபவம், நம்பகத்தன்மை போன்றவை மட்டுமே இதற்கான காரணங்களில்லை. வேறு சில விசயங்களும் இதில் செயலாற்றுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும், பொதுவாக அச்சு ஊடகங்கள் பலவும் ‘பாரம்பரியம்’ காரணமாக பிராமண வகுப்பினர் வசமே இருந்து வருகின்றன. அது தொடர்பான விமர்சனங்கள் இங்குள்ளன.அதே வேளையில் அதில் மாற்றங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விமர்சனங்களில் இப்புதிய மாற்றங்கள் கணக்கெடுக்கப்படுவதில்லை என்பது தான் இப்பதிவை எழுதக் காரணம்.

கடந்த சில பத்தாண்டுகளாக நடந்து வந்திருக்கும் சமூக அரசியல் அதிகார மாற்றங்களின் காரணமாக பிராமணரல்லாத தொகுப்பில் அதிலும் பெரும்பான்மை எண்ணிக்கை சாதிகள் பலவும் மையத்திற்கு வந்துள்ளன. அதன்படி ஊடகங்களிலும் எண்ணிக்கைக்கு அதிகமாகவே சேர்ந்துள்ளனர். (இங்கு ‘சமூக நீதி ‘ பற்றிய பேச்சு பிராமணர்கள் அதிகமாய் இருந்தால் மட்டுமே எழும் ) இவ்வாறு வாசகர் மற்றும் பணியாற்றுவோர் சார்ந்து உருவாகியிருக்கும் பிராமணரல்லாதோர் பெரும்பான்மை என்ற எதார்த்தத்தை இப்பாராம்பரிய நிறுவனங்கள் புரிந்து கொண்டிருக்கின்றன.

வாஞ்சிநாதன்

இப் பின்னணியில் தான் குறிப்பிட்ட பெரும்பான்மை சாதிகளின் கதைகள், அடையாளங்கள் ,வரலாறு போன்றவை இந்தச் சாதிகளால் மையத்திற்கு கொணப்படுகின்றன. நிறுவனங்களும் இதற்கு வழிவிட்டு தங்களை வணிக ரீதியாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் நடப்பது பிராமணர் பிராமணரல்லாதார் கூட்டு அல்லது சொல்லப்படாத புரிந்துணர்வு .இதற்கான மற்றொரு உதாரணத்தையும் இங்கு சொல்லலாம். கடந்த 40ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதிகமாய் விதந்தோதப்பட்டு வரும் பிம்பமாய் தேவர் இருக்கிறார். அவர் பெயர் சொல்லி புகழ்ந்து பாடும் பாடல்கள் பத்துக்கும் மேலிருக்கின்றன. இவையெல்லாம் எவ்வாறு நடந்தன? இப்போக்கை ஆரம்பித்து – தக்கவைத்து வருவது யார், எப்போதிருந்து? இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் தேவருக்கான பிம்பங்களை காப்பது தான் தேவர் சாதித் தொகுப்பிற்கு செய்யும் தொண்டாகக் கருதும் சிலர் கம்யூனிஸ்டுகள் பெயரில் வலம் வருவதையும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது. இச்செய்தி அவ் வகையிலான விளைவுகளில் ஒன்றே.

இதையெல்லாம் சேர்த்துப்பார்க்கும் போது தான் வெகுஜன நாளேடு ஒன்றில் இத்தகைய வரலாறு எழுதப்படுவதையும் அதை அந்நிறுவனங்கள் அனுமதிக்கிற கராணத்தையும் புரிந்து கொள்ள முடியும். தமிழ் ஊடகங்களில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுடைய பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சு ஏன் இங்கில்லை? குறிப்பிட்ட சாதிகளே இவ்வாறுதான் என்பது இதன் பொருளில்லை.இவர்களில் பலர் தலித் பிச்சினை உள்ளிட்ட சமூக சிக்கல்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் அய்யமில்லை. ஆனால் எல்லாவற்றை பற்றியும் நாங்களே பேசுவோம் என்கிற அதிகாரம் அதில் தொக்கி நிற்பதை பார்க்கிறோம். இந்த விதத்தில் தி இந்து மட்டுமல்ல விகடன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் இணைத்து பார்க்கப்பட வேண்டும்.

எனவே இப்பிரச்சினையில் தி இந்துவை மட்டுமல்ல அதன் செய்தியாக்க குழு, எழுதியவரின் அரசியல் என்றும் நீட்டித்து பார்க்கும் போது தான் சினிமா உள்ளிட்ட தமிழ் ஊடகத் துறையில் நெடுங்காலமாகநிலவி வரும்பிரதிநிதித்துவ ஏகபோகத்தையும் அதன்மூலம் கட்டமைக்கப்பட்டு வரும் கருத்தியல் ஏகபோகத்திற்கான காரணத்தினையும் அறிய முடியும். பாண்டே பற்றி பேச வரும் போது பாண்டேவை பேசிவிட்டு அவர் ஏன் தந்திடிவியில் அனுமதிக்கப்படுகிறார் என்றஅரசியலை பேசாது விடுவதும் இப்போது வாஞ்சி-தேவர் செய்தி பற்றி பேச வரும் போது தி இந்து பற்றி பேசிவிட்டு எழுதியவரை நோக்காமல் இருப்பதும் ஒரு அரசியல்தான். இரண்டு தரப்பின் அரசியலையும் இணைத்து பேசுவதே இன்றைய தேவை.

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்; ஆய்வாளர்.

 

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

20 வருடத்திற்கு முந்தய டாக்டர் க்ருஷ்ணசாமியின் அரசியல் பாதையை, அவருக்கே கூட நினைவுபடுத்தும் கட்டுரையாக இது அமையலாம் என்பதில் சந்தேகமில்லை.

**************

ஷோ.வா: இன்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நீங்கள். இந்த நிலையை அடைவதற்காண பயணம் கரடு முரடாக இருந்ததா ?

கி.சாமி: ஆம். மிகக் கரடுமுரடான பயணம்தான் அது. கோவையில் மிக பின் தங்கிய கிராமத்திலிருந்து வந்தவன் நான். தலித்துகள் பள்ளிக்குச் செல்வது என்பது அங்குள்ள உயர் சாதிகளால் தடுக்கப்படுகிற ஒன்றாகவே இருந்தது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த “ஆண்டைகள்” பெரும்பான்மையாக இருந்த அந்தக் கிராமத்தில், மத்தியதர விவசாயக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த என்னுடைய பெற்றோருக்கே, என்னை பள்ளிக்கு அனுப்புவது பெரும் சிரமமாக இருந்தது. தலித்துகள் (They did not like the idea of us, dalits, going to school and studying) பள்ளிக்கு செல்வதையும், கல்வி கற்பதையும் அவர்கள் ஒருபோதும் விரும்பினார்களில்லை. இத்தனைக்குப் பின்னும், என்னுடய பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பினர். ஆரம்பக்கல்வி முடிவடைந்து நான் உயர்கல்வி பயிலச்செல்லும் நேரத்தில், மறுபடியும் பிரச்சனைகள் தொடங்கியது. அந்த ஊரின் உயர்சாதி ஆட்கள் என் பெற்றோரை வரவழைத்து “எங்களது பிள்ளைகளையே நாங்கள் உயர்கல்விக்கு அனுப்பவில்லை. உங்கள் மகனை உயர்கல்வி கற்க அனுப்புமளவு தைரியம் வந்துவிட்டதா?” என்று மிரட்டினார்கள். ஆனாலும், நான் படிக்க வேண்டும் என்பதில் என் அப்பா உறுதியாக இருந்தார்.

************
ஷோ.வா: நீங்கள் உயர்படிப்பில் சேருவதற்கு உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்தச்சூழலில் உங்கள் பள்ளியில் நீங்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தீர்களா ?

கி.சாமி: பெரிய அளவிலான பாகுபாடுகள் எதையும் நான் பள்ளியில் உணரவில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் என் மீது ஆத்திரம் கொள்வதுண்டு. அதுவும் என்னுடைய பரீட்சைத்தாள்களை திருத்தும் சமயத்தில் அதிகமாகவே சீற்றமடைந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டென்றால், அது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த என்னுடைய தலைமையாசிரியர்தான் என்னுடைய வாழ்வில் முக்கியமான தருணங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பது மட்டுமே. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கு அன்பை வழங்கியபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என் மீது துவேஷம் காட்டினார்கள்.

************
ஷோ.வா: உங்கள் கல்லூரிக்காலங்களில் நக்சல்களின்பால் பெரும் ஈடுபாடோடு இருந்தீர்கள். நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றினீர்களா ?

கி.சாமி: மார்க்சிஸ்ட் அமைப்புகளின்பால் ஈர்ப்பு என்பது பள்ளியிலேயே தொடங்கிவிட்டது. அப்போது நான் என் பெயரை “ஸ்டாலின் கிருஷ்ணசாமி” என்றே எழுதினேன். அதன் மூலமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை என்னளவில் நான் எதிர்க்கத்தொடங்கினேன். மார்க்சிஸ்ட்டாக மட்டுமல்லாமல், ஆறாம் வகுப்பிலேயே நான் என்னை பகுத்தறிவுவாதியாகவும் உணரத் தொடங்கினேன். அப்போதிலிருந்து நான் கோவிலுக்குச் செல்வது கிடையாது.

************

ஷோ.வா: பின் ஏன் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியே வந்தீர்கள் ? அவர்களிடம் முரண்படத்தொடங்கினீர்களா ?

கி.சாமி: ஆமாம். அவர்களிடம் எனக்கு அதிருப்தி உருவாகத் தொடங்கியிருந்தது. 80-களில், பொங்கல் திருவிழா ஒன்றின்போது தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நான் தலித்துகளுக்கு ஆதரவாக நிற்க விரும்பினேன். ஆனால், ML அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் சாதியை ஊக்குவிக்கிறேன் என்று என் மீது குற்றம்சாட்டப்பட்டது. வர்க்க ரீதியிலான போராட்டத்தை மட்டுமே ML அமைப்பு நம்பியது. அதுவே எனக்கும் அமைப்புக்குமான முரண்பாடின் முக்கிய புள்ளி.

************

ஷோ.வா: சாதி ரீதியான போராட்டம் ஏன் ? இந்தியாவில் வர்க்கம்தான் மக்களை பிரிக்கிறது என்று நீங்கள் நம்பவில்லையா ?

கி.சாமி: இந்தியாவில், சாதிதான் ஆதிக்கத்தின், ஒடுக்குமுறையின் அடையாளம். இன்றும். ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நோயாளி எந்த பிரச்சனையால் அவதிப்படுகிறாரோ அதற்கான மருந்துகளை அளிப்பதுதான் மருத்துவரின் பணி. தன்னிடம் இருப்பில் உள்ள மருந்துகளை கொடுப்பது அல்ல. இந்தியா என்ற நாடு “சாதீய நோயால்” அவதிப்படும்போது, அதற்கு வர்க்க பிரச்சனைக்கான மருந்தை அளிப்பது சரியல்ல.வர்க்க அளவில் தலித்துகள் கூட பிற்படுத்தப்பட்டவர்களே. ஆனால், அவர்கள் ஒடுக்கப்படுவது சாதியினால் மட்டுமே. இருப்பினும், மக்களைப் பிரித்தாள்வதில் வர்க்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறதுதான்.

************

டாக்டர். கிருஷ்ணசாமி

ஷோ.வா: அப்படியென்றால்… முன்னேறிய வர்க்கம், பிற்படுத்தப்பட்ட வர்க்கம் என்று இரண்டுதானே இருக்க முடியும்?.

கி.சாமி: மருத்துவரும் மருந்துகளும் என்ற விளக்கம் கொடுத்தது இதற்காகத்தான். இந்தியாவில் சாதி அடிபப்டையில்தான் மக்கள் பிரித்தாளப்படுகிறார்கள். இந்தியாவில் சாதிதான் பிரச்சனையே. இங்கு ஒரு பார்ப்பனரால், டீக்கடை முதல் தொழிற்சாலை வரை எளிதாகத் தொடங்க முடியும். சாதியின் ஆதாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், ஒரு தலித்திற்கு அது இயலாது. சாதி என்பதுதான் சமூகத்தை சுரண்டும் விஷயமென்றால் அதைத்தான் தகர்க்க வேண்டும். சாதிதான் சமூகத்தின் மிகப்பெரும் எதிரி என்பதை மக்களை உணரச்செய்யும் வரை, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை.

************

ஷோ.வா: தலித்துகளுக்கு விடுதலைப்பெற்று தருவதுதான் உங்களின் முதலும் முக்கியமுமான குறிக்கோள் என்று முன்பொருமுறை கூறி இருந்தீர்கள். எதிலிருந்து ? யாரிடமிருந்து ?

கி.சாமி : இந்த அமைப்பில் இருந்து. இந்தியாவில் உள்ள சாதி என்கிற அமைப்பு, தலித்துகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கத் தயாராக இல்லை. சாதி என்கிற இந்த அமைப்பை முழுமையாக சிதறடிக்க வேண்டும். சாதி அமைப்பை ஆதரிப்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவோம்.

ஷோ.வா: அப்படியென்றால், தலித் என்ற அடையாளத்தில் இருந்து தலித்துகளை விடுவிக்க முயலுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

கி.சாமி: தலித்துகளை ஒற்றுமைப்படுத்துவதே எங்களின் முதற்குறிக்கோள். இங்குள்ள பெரும்பாலான நிலங்களின் உரிமையாளர்கள் அவர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயர்சாதி மக்களால் நிலங்கள் பிடுங்கப்பட்டு கூலிகளானவர்கள் தலித் மக்கள். தலித் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, ஒன்று சேர்த்து, அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதே என்னுடைய நோக்கம்.

************

ஷோ.வா: தலித்துகளின் ஒரே காவலன் என்ற நோக்கத்தில் நீங்கள் செயல்படக்கூடாது என்று சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ் கூறி இருந்தாரே ?

கி.சாமி: இதைச்சொல்வதற்கு ராமதாஸ் யார் ?

ஷோ.வா: உயர்சாதியில் பிறந்த ஏழைகளுக்காகவும் நீங்கள் போராடுவீர்களா ?

கி.சாமி: நான் வர்க்க ரீதியிலான வேறுபாடுகளைப் பற்றி பேசவில்லை. இருந்தாலும், பொருளாதார சுதந்திரத்திற்காக போராடுகிற ஒருவர், தலித்துகளை சகோதர மனப்பான்மையுடன் அணுக முன்வருவாரேயானால், கண்டிப்பாக நானும் அவர்களுக்காக போராடுவேன்தான் .

ஷோ.வா: இப்போதும் நாத்திகம் பேசுகிறீர்களா ?

கி.சாமி: ஆமாம். இப்போதும் நான் நாத்திகவாதிதான்.

************

Source:  https://m.rediff.com/news/1998/nov/10krish.htm

“பன்றி” யார்? : பகுதி -3 

ப. ஜெயபாலன்

வசந்த பாலன்  தனது பேச்சில் தலித்துகளின் எழுச்சி பற்றியும் அதற்கான முறைமைகள் பற்றியும் சில பார்வைகளை முன்வைத்தார். அவர் நல்ல நோக்கத்தில் தான் அந்த பார்வைகளை முன்வைத்தார் என்று நான் நம்ப முயற்சி செய்தாலும் அதிலுள்ள போதாமைகளையும் சுட்டி காட்ட விரும்புகிறேன். ரோஹித் வெமுலாவையும், முத்து கிருஷ்ணனையும் குறிப்பிட்ட வசந்த பாலன் இவர்களை தலித்துகளுக்கான போராட்ட எழுச்சியின் அடையாளமாக பார்ப்பதாகவும் ஆனால் எந்த தலித் அமைப்புகளை அவர்கள் நம்பினார்களோ அந்த அமைப்புகள் கைவிட்டதின் விளைவுதான் அவர்களது மரணங்கள் என்றும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் தீர்க்கமான கண்களோடு சொன்னவர் “நண்பர்களே(தலித்துகளை நோக்கி) நீங்கள் எந்த தலித் சங்கங்களை நம்புகிறீர்களோ அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்” அதற்கான உதாரணங்கள் தான் அந்த இரண்டு மரணங்கள் என்றார் !!!!!!!.
ரோஹித் வெமுலாவவின் முத்துகிருஷ்ணனின் மரணம் என்பது இந்திய பல்கலைக்களங்களில் பார்ப்பனிய/சாதி ஹிந்து வெறியர்கள் தலித்துகளுக்கு எதிராக, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தி கொண்டிருக்கும் எத்தனையோ கோடி அநீதிகளில் ஒன்று என்பதும், அது சாதி வெறிகொண்ட ஹிந்து சமூகம் கல்வி கற்று மேலேழுந்து வரும் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தும்  வேட்டையில் நடந்த இரண்டு கொடூரமான பச்சை படுகொலை என்பதும் மனசாட்சியுள்ள, அந்த சம்பவங்களை ஒற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகள் கட்டுரைகள் ஆகியவற்றை படித்த எவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை. ஒரு சாதி இந்துவின் மனது தெரிந்தோ தெரியாமலோ எப்பொழுதும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட குதர்க்கமான மனநிலையிலேயே சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுயிருக்கிறது. ஏனென்றால் தர்க்கத்தை பயன்படுத்துபவன் சாதியை நம்புபனாகயிருக்க முடியாது. தருமபுரி சம்பவத்தின் போதும், கோகுல் ராஜ் கொலையின் போதும் தலித்துகள் ஏன் தேவை இல்லாமல் சாதி ஹிந்து பெண்களை காதலிக்கிறார்கள்!!!!!!! என்றும், சேஷசமுத்திரம் தேர் பிரச்சனையின் போது தலித்துகள் ஏன் தேவையில்லாமல் சாதி ஹிந்துக்களின் தெருவில் தேரிழுக்க வருகிறார்கள்!!!!!!! என்றும் தற்குறி சாதி ஹிந்துக்களின் மனது குதர்க்கமாகவே ஜனநாயக விரோதமாக யோசிப்பதை அந்த சம்பவங்களின் போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய சாதி வெறியர்களின் பேச்சினூடாக கவனித்தோம். அவர்கள் யோசிப்பதை போலவே  தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் “கற்பி,ஒன்று சேர், புரட்சி செய்” என்று சொன்ன அம்பேத்கரின் பேச்சை நம்பி தலித் அமைப்புகளோடு/அமைப்புகளாய் ஒன்று சேர்ந்தால் தக்காளி ரோஹித், முத்துகிருஷ்ணன் கதிதான் உங்களுக்கு பார்த்துக்கோங்க என்கின்ற தொனியில் பேசியதை கேட்டு உண்மையில் எனக்கு அயர்ச்சி தான் ஏற்பட்டது. 
 
உண்மையில் அந்த இரண்டு உன்னதமான phd மாணவர்களின் மரணத்தில் இந்திய சாதி வெறி சமூகத்திற்கு பங்குயில்லையா? சாதி ஹிந்துக்களுக்கு பங்கில்லையா? சாதியை கற்பிக்கும் ஹிந்து மதத்திற்கு பங்குயில்லையா? இன்னமும் தலித்துகளும்/சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரத்தில் பங்குபெற முடியாமல் தடுக்க படுகிறார்களே அது காரணமில்லையா? இந்த தகவல் தொடர்ப்பு/செய்தி யுகத்தில் ரோஹித்தின் அறம் சார்ந்த போராட்டத்தை மொத்த தேசத்தோடு சேர்ந்து நீங்களும் நானும் மௌனமாக வேடிக்கை பார்த்தோமே நமக்கு அந்த மரணத்தில் பங்குயில்லையா? இது எதுவுமே இல்லாமல் ரோஹித்தும் முத்துகிருஷ்ணனும் இந்தியாவின் மனசாட்சியின் மீது காரி உமிழும் படியான கடைசி வார்த்தைகளை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் தலித் அமைப்புகளை நம்பி ஏமார்ந்து போனதால் தானா? தலித்துகளின் அறம் சார்ந்த போராட்டங்களை காத்து நிற்க வேண்டியது/முன்னெடுக்க வேண்டியது  அறம் சார்ந்த எல்லோரின் கடமையா அல்லது அது தலித்துகளின்/தலித் அமைப்புகளின் மட்டுமேயான கடமையா?
 
இப்படி தலித்துகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படும்போதெல்லாம் தலித்துகளையே குற்றவாளியாக/காரணியாக பார்க்கும் சாதி ஹிந்துக்கள் எந்த கூச்சமமுமின்றி தலித்துகள் எப்படி போராட வேண்டும் என்ன மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தலித்துகளுக்கே பாடம் எடுக்க துணிகிறார்கள். மொத்த இந்தியாவையும் தலித்துகள் தீயிட்டு கொளுத்தினாலும் அது தவறென்று வாதாடா, குற்றம் சுமத்த எந்த சாதி ஹிந்துக்கும் எந்த தகுதியுமில்லை/தார்மீக உரிமையுமில்லை. ஏனென்றல் இந்திய சாதிய ஹிந்து சமூகம் உலக வரலாற்றில் எந்த தேசத்திலும் நிகழாத அத்தனை கோடி அநீதிகளை/வன்முறைகளை/சுரண்டல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலித்துகளின் மீது எந்த மனசாட்சியுமின்றி நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் தலித்துகளின் போராட்ட வழிமுறைமைகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்க சாதி ஹிந்துக்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எந்த மாதிரியான போராட்ட முறைகளை தலித்துகள் முன்னெடுத்தாலும் அதில் உள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நியாயத்தை உள்வாங்கி கொண்டால் அதுவே போதுமானது. ஏன் என்றால் தலித்துகளுக்கான தீர்வை சாதி ஹிந்துக்களிடம் எதிர்பார்ப்பது மாட்டிறைச்சி குழம்பில் மீன் முள்ளை தேடுவதை போன்ற முட்டாள்தனம். சாதி ஹிந்துவால் அவர்களே ஆசைப்பட்டாலும் தலித்துகளுக்கு தீர்வை சொல்ல முடியாது. உதாரணம் திரு வசந்த பாலன் அவர்கள் தலித்துகள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு எழுச்சி கொள்ளவேண்டும் என்றும் இழிவான வேலைகளை தங்கள் குழந்தைகளுக்கு கடத்தாமலிருக்க வேண்டும் என்றும், குலத்தொழிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றும் அறிவுரை சொன்னதோடு ஏன் ட்ரைனேஜ்குள் இறங்குகிறார்கள், ஏன் விஷவாயு தாக்கி சாகவேண்டும் அதை தலித்துகள் செய்யக்கூடாது என்கின்ற ரீதியில் அவர் அறிவுரைகளையும் அருளினார்.
 
Republic of India பிறந்து 67 ஆண்டுகளுக்கு பிறகும், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், manual scavenging சட்டரீதியாக தடைசெய்யப்பிட்ட பின்னும் ஏன் ஒரு மனிதன் சாக்கடைக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறக்கிறான்? இதற்க்கு யார் காரணம்? இதற்கு யார் பொறுப்பு? எப்படி அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினராகவே இருக்கிறார்கள்? எதனால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே வேலையில் இருக்கிறார்கள்? அவர்கள் சமூகத்தில் அதே நிலையிலிருக்க காரணமாய் இருக்கும் காரணிகள்/தத்துவங்கள் என்ன? யார் அவர்களை அந்த தொழிலிருந்து மீளாமலிருக்க நிர்பந்திக்கிறார்கள்? எது அவர்களை அவ்வாறு நிர்பந்திக்க தூண்டுகிறது? இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன? இந்த அநீதியில நானும் எனது குடும்பமும் யார் பக்கம் நிற்கிறோம்? என்றெல்லாம் ஒரு சாதி ஹிந்துவின் மனது யோசித்து நிகழும் அநீதியில தனக்குள்ள தனது குடும்பத்திற்குள்ள தனது சாதிக்குள்ள பங்கை நினைத்து வெட்கம் கொள்ளாது…அவமானம் கொள்ளாது…குற்றவுணர்ச்சி கொள்ளாது….தனது அடையாளத்திற்கு எதிராகவும், தனது சாதி நம்பிக்கைக்கெதிராகவும் சீற்றம் கொள்ளாது…தனது சாதியினரிடம் போய் அவர்களை செழுமை படுத்தாது, அவர்களிடம் கலகம் செய்யாது, அவர்கள் ஏன் அயோக்கியர்கள் என்றும் திருடர்கள் என்றும் முட்டாள்கள் என்றும் ஜனநாயக விரோதமானவர்கள் என்றும் பாடம்மெடுக்காது….ஆனால் தைரியமாக தலித்துகளிடம் வந்து “ஐயோ நீங்க பாவம்” என்று  சொல்லும்…நீங்கள் ஏன் அதுபோன்ற தொழில்களை செய்கறீர்கள் என்று செல்லமாய் கோபித்து கொள்ளும். இதைத்தான் வசந்தபாலனும் செய்தார்.

Malcolm x திரைப்படத்தில் ஒரு காட்சி. இது உண்மையாக நடந்தது. malcolm ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற சென்று கொண்டிருக்கிறார். ஒரு நன்கு படித்த, மால்கம் கருத்துக்களின் நியாயத்தை முழுவதுமாய் ஏற்று கொண்ட வெள்ளையின பெண் ஓடி வந்து மால்கமிடம் உங்கள் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கேட்டும் படித்துமிருக்கிறேன். உங்களுடன் நான் உடன்படுகிறேன். உங்கள் போராட்டத்திற்கு நான் எதாவது செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் நான் என்ன செய்வது என்ற கேள்விக்கு மால்கம் ஒற்றை வார்த்தையில் அளித்த பதில் “nothing”.

 
அதுபோல சாதி ஹிந்துக்கள் உண்மையிலேயே தலித்துகளின் போராட்டத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு தலித்துகளிடம் சொல்ல/செய்ய எதுவுமில்லை. nothing. ஆனால் அவர்கள் அவர்களுக்குள் செய்ய சுயபரிசோதனை/சுய விமர்சனம் தொடங்கி கோடி உள்ளது.

“கபாலி” வெளியான சமயத்தில் நானும், எனது தம்பியும், எனது மாமாவும் literally இரண்டு நாட்கள் ஓயாமல் கபாலி சிறந்த/தேவையான  தலித்திய திரைப்படமா அல்லது Fandry சிறந்த/தேவையான தலித்திய படமா என்று விவாதித்து கொண்டிருந்தோம். நானும் எனது தம்பியும் கபாலிதான் சமகால தலித்திய பார்வையையும்/அரசியலையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட படம் என்றும் எனது மாமா Fandry தான் நிஜமான/உண்மையான தலித்திய வாழ்வை ஆவணப்படுத்திய படம் என்னும் அளவிலும் விவாதித்தோம்/முரண்பட்டோம்/வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
 
தலித்திய கலை/இலக்கிய/சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம். 
 
1) தலித்திய வாழ்வின் சிக்கல்களை, கடினங்களை, துயரங்களை கலைவடிவதில் சாதி இந்துக்களின் மனசாட்சியின் (caste Hindus moral conscience) முன்  நிறுத்துவது… அப்படி நிறுத்துவதின் மூலம் அவர்களுடைய மனதில் ஒரு மாற்றத்தை / நெகிழ்ச்சியை எதிர்பார்ப்பது.
 
2) தலித்திய வாழ்வின் சிக்கல்களுக்கும் கடினங்களுக்கும் துயரங்களுக்கும் பின்னணியில் சாதி ஹிந்துக்களின் சாதிவெறியும் திமிரும், மனித மாண்பற்ற அவர்களின் செயல்பாடுகளும் எப்படி இயங்குகின்றன என்பதை மூர்க்கமாக கண்டித்து/தோலுரித்து  அதை தலித்துகள் நேரடியாக எப்படி எதிர் கொள்வது என்று தலித்துகளோடு விவாதிப்பது அல்லது எதிர்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துவது.
 
ஒரு தலித்திய  பார்வையிலான கலையிலக்கிய செயல்பாடு பெரும்பாலும் மேல்சொன்ன இரண்டு வகைமைகளுக்குள் அடங்கிவிடும். மேல் சொன்ன வகைமைகளில் Fandry முதல் வகைமை. எனக்கு இந்த வகைமையில் நம்பிக்கையில்லை. இது மனசாட்சியற்ற சாதி ஹிந்துக்களின் மனதில் எந்த சலனத்தையும்/அதிர்வையும் ஏற்படுத்தாது என்பது எனது வாதம். ஹொலிவுட்டில் இந்த வகையான திரைப்படங்கள் கறுப்பின இயக்குனர்களால் நிறைய கையாள பட்டிருக்கின்றன(The pursuit of happiness, Twelve years of slave) . அதாவது கருப்பின வாழ்வியலை அமெரிக்க சமூகத்தின் மனசாட்சியின் முன் விவாத பொருளாக்குவது. ஆனால் சுவாரசியமாக அவர்களது இறுதி காட்சி பெரும்பாலும் நேர்மறையாகவே இருக்கும். அறுபதுகளில் ஓட்டுரிமைக்கு போராடிய அமெரிக்க கருப்பினத்தவர்கள் இரண்டாயிரத்தின் இறுதியில் கருப்பின ஜனாதிபதியை அடைந்து விட்டார்கள். எனவே அவர்களது சமூகத்தின் மீது அவர்களுக்கிருக்கும் நேர்மறை அணுகுமுறையை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இந்திய சமூகத்தில் தலித்துகளின் மீது நிகழும் அநீதியும்/வன்முறைம் ஆயிரமாண்டுகளுக்கு மேலானா வரலாறு கொண்டது. இந்த அடக்குமுறைக்கு எதிரான  தலித்துகளின் எதிர்ப்பரசியல்/போராட்ட வரலாறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. இதற்கு பிறகும் கூட இந்திய சாதிய சமூகம் எருமைமாட்டின் மீது மழை பெய்ததை போன்று நின்ற இடத்திலேயே அதாவது சமூக சாதிய அடுக்குமுறையில் இன்னுமும் எந்த மாற்றமும் வராமல் நின்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் என்னைப் போன்றவார்கள் இந்திய சாதிய ஹிந்து சமூகத்திற்கு மன்சாட்சியென்றோ/அறமென்றோ ஒன்று உண்மையில் உள்ளது  என்பதை நம்பவே தயாராயில்லை. 
 
இந்த இடத்தில் தான் கள்ளமௌனம் கடைப்பிடிக்கும் சாதிய சமூகத்தை உலுக்க, பதட்டம் கொள்ள வைக்க and to challenge the established socio, economic casteist beliefs/order கபாலி வருகிறான். கபாலி சாதி ஹிந்துக்கள் எதிர்வினையாற்றியே தீரவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறான், தலித்துகளை விழிப்படைய வைக்கிறான், எதிர்த்தாக்குதல் (கலை, இலக்கிய, பண்பாட்டு, அறிவு தளத்தில்) சாத்தியம் என்று தலித்துகளுக்கு செய்துகாண்பிக்கிறான். இதன் மூலம் தலித்துகளின் போராட்ட குணத்தை கூர்மையாக்குகிறான், சாதி ஹிந்துக்களின் போலி பெருமிதங்களை கேலி செய்கிறான். இதுதான் வசந்த பாலன் போன்றான சாதி ஹிந்துக்களுக்கு கபாலியின் மீது எரிச்சலையும் நிராகரிப்பையும் உணர தோன்றுகிறது. Fandry போன்ற முதல் வகையான தலித்திய படைப்புகள் கவித்துமாக நிஜத்திற்கு அருகில் நின்று (அதற்காக கபாலி நிஜமில்லை என்ற அர்த்தமில்லை..அதாவது சாதி ஹிந்துக்கள் தரிசிக்க விரும்பும் நிஜம்) இந்தியாவின் ஆன்மாவோடு/மனசாட்சியோடு ஒரு சன்னமான குரலில் உரையாடலை நிகழ்த்துகிறது. இது ஒரு சாதி ஹிந்துவுக்கு சுகமான அனுபவம். தனது ஒரே சின்ன வயது மகளை கொலை செய்து விட்டார்கள் என்று தெரிந்த உடன் “கண்டாராவோலி வெளியவாடா…அநியாயமா என் பொண்ண கொன்னுட்டீங்களேடே தாயோளி ஒன்ன வெட்டாம விட மாட்டன்டா” என்று முதல் மரியாதையில் சிவாஜியை பார்த்து ஆவேசப்படாமல் “அய்ய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமீய்” என்று தலித் கதாபாத்திரம் சொல்வதுதான் சாதி ஹிந்துக்களுக்கு இதமான மென்சோகமாக இருக்கிறது. அதாவது ஏற்கனவே சொன்னதை போல் இளையராஜாவின் சோக பாடலை ரசிப்பது போல அவர்களுக்கு இந்த வகையான ஜெயமோகனின் நாயோடிகள் வகையிலான படைப்புகள் பிடித்துத்திருக்கிறது. 
ஃபான்றி படக் காட்சி
 
இந்நிலையில் Fandry எப்படி என் போன்றவர்களுக்கும் பிடித்த படமாகிறது? எப்படி என்றால் நாகராஜ் மஞ்சுளே கடைசி ஐந்து நிமிடங்களில் Fandryயை  முதல் வகைமைகளிலிருந்து இரண்டாவது வகைக்கு நிகழ்த்தும் சாகசத்தை செய்கிறார். எல்லா ஆணுக்குமே தனது பிடித்தமான பெண்ணின் முன் கண்ணியமான/கம்பீரமான ஆணாக வெளிப்படவே ஆசை. ஒரு பெண்ணுடன் பைக்கில் போகும் போது பெயர் தெரியாத யாரோ ஒருவன் ரோட்டில் நம்மை திட்டிவிட்டாலே நமக்கு மிகவும் சங்கடமாக போய்விடுகிறது. திரும்ப இயல்புக்கு திரும்ப வெகு நேரமாகும். இந்நிலையில் இந்திய சாதிய சமூகத்தில் ஒரு தலித் சிறுவன் பதின் வயதில் ஒரு மிகவும் பின்தங்கிய சாதிய இறுக்கங்கள் நிறைந்த கிராமத்தில் தன்னோடு பள்ளியில் படிக்கும் ஒரு சாதி ஹிந்து சிறுமியின் மீது ஈர்ப்பு கொள்கிறான். அந்த சிறுவனுக்கு அவனது எல்லை தெரிகிறது. அதற்குள் நின்று அவன் அந்த சிறுமியின் முன் தனது விருப்பத்திற்கெதிரான, தன் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி சார்ந்த  அடையாளத்தை அவள் முன் கவனமாய் மறைத்து தூர நின்று ரசிக்கிறான். இதனை பின்புலமாக வைத்து மிகவும் கவித்துமான அரசியலோடு (சுவற்றில் பூலே, ஜோதிபாய், அம்பேத்கர்  படங்கள் பார்த்து கொண்டிருக்க தலித் சிறுவன் பள்ளியை விட்டு விலகி பன்னி சுமந்து செல்வது) கதையை விவரிக்கிறார். இந்நிலையில் இறுதி காட்சியில் அவன் அந்த சிறுமியின் முன் மிக கவனமாய் கட்டிக்காத்த அவனது கண்ணியம் ஊரில் சுற்றும் ஒரு பன்னியை அவனும் அவனது மொத்த குடும்பமும் பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் பறிக்கப்படுகின்றது. மிகுந்த ஆற்றாமையிலும் அவமானத்திலும் இயலாமையிலும் அவன் தனது மனதிற்கு பிடித்த சிறுமியின் முன் பன்னி பிடிப்பவனாக வெளிப்பட்டு அந்த பன்னியை தூக்கிக்கொண்டு தெருவில் சென்றுகொண்டிருக்கிறான். அப்பொழுது சாதி ஹிந்து இளைஞர்கள் இவனையும் இவனது குடும்பத்தையும் வழிநெடுகிலும் கிண்டல் செய்துகொண்டே வர ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் திடிரென்று ஆவேசமாகி அந்த கும்பலை நோக்கி கல்லெறிய தொடுங்குகிறான். சிதறி ஓடும் அவர்கள் சுதாரித்த பின் மீண்டும் அந்த சிறுவனை நோக்கி ஆவேசமாக வருகிறார்கள். இப்பொழுது அந்த சிறுவன் முன்பைவிட தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தவனாக ஒரு கல்லை எடுத்து திரையை நோக்கி வீச அந்த கல் பார்வையாளரை நோக்கி வருவதாய் காட்டி நாகராஜ் மஞ்சுளே அதை முடித்திருப்பார்.
 
நாகராஜ் மஞ்சுளே தனது படத்தின் தலைப்பையே “பன்றி” என்று வைத்து விளிப்பது உண்மையில் படத்தில் வரும் பன்றியைத்தானா? உண்மையில் அடித்து வீழ்த்த படவேண்டியது ஊரில் மலத்தில் உழலும் பன்றிகளா அல்லது சாதியை கடைபிடிக்கும்/சாதியை நம்பும் சாதி ஹிந்துக்களா? என்னை பொருத்தவரை தலித்துகளுக்கு எதிராக ஒடுக்குமுறை நிகழும் போதும் அநீதி நிகழும் போதும் மௌனியாய் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சாதி ஹிந்துக்கள்தான் உண்மையில் சாதியென்னும் மலத்தில் உழலும் பன்றிகள். திரைக்கு அப்பால் அமர்ந்து அந்த சிறுவனின் துயரத்தை, சாதிய சமூகம் அவனுக்கு எதிராய் நிகழ்த்தும் வன்முறையை அது வரை மௌனியாய் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்த சாதி ஹிந்துக்களை நோக்கித்தான் அந்த சிறுவன் கல்லெறிந்தான். அவர்களை நோக்கித்தான் அந்த கல் வந்து கொண்டிருக்கிறது.
 
பாராட்டுக்கள் :
 
அந்த நிகழ்ச்சியில் கேள்விபதிலில் வசந்த பாலன் மார்பை கசக்கும் உண்மை பற்றி பேசுகையில் சரியான நேரத்தில் அவரை கேள்விக்குக்குட்படுத்திய பெண்
 
சின்மயி விவகாரத்தை முன்னிட்டு பேசி சுய விமர்சனத்தின் தேவையை சாதி ஹிந்துக்களுக்கு வலியுறுத்திய கண்ணாடி போட்ட இளைஞர்
 
அந்த நிகழ்ச்சியில் தலித்துகளின் சார்பை/கோணத்தை நுட்பமாக உள்வாங்கி வெளிப்படுத்திய, அவரது பேச்சினூடாக மிகுந்த நம்பிக்கையை விதைத்த திரு மீரா கதிரவன் 
 
நன்றி:
 
தோழர் நந்தினி…என்னை போன்ற பலருக்கும் உரையாட புழங்க ஒரு களம் அமைத்ததற்கும், இடமளிப்பதற்கும் 
 
தமிழில் சினிமாவை வெறும் craft and making சார்ந்து  மட்டும் பார்க்காமல் தொடர்ந்து கலையினூடான அரசியலை எழுதி வரும் எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் இந்த கட்டுரையை பகிர்ந்ததற்கு 
 
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” 
 
ப. ஜெயசீலன். 

“பன்றி” யார்? : பகுதி -2

ப.ஜெயசீலன்

வாசகசாலை மற்றும் திரைக்களம் இணைந்து நல்ல திரைப்படங்கள் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். மிக முக்கியமான, மிக பாராட்டுதலுக்கு உரிய இந்த முன்னெடுப்பை அவர்கள் செய்து வருவதின் ஒரு பகுதியாக திரு. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய மராத்திய படங்களான FANDRY மற்றும் SAIRAT குறித்து அவர்கள் ஒருங்கிணைத்துத்திருந்த உரையாடல் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இதற்க்கு முன்பு ஒருங்கிணைத்த DJANGO பற்றிய கலந்துரையாடலின் போதே இவர்கள் எதன் அடிப்படையில் சிறப்பு விருந்தினர்களை தேர்வு செய்கிறார்கள் என்கின்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்வி FANDRY மற்றும் SAIRAT குறித்தான கலந்துரையாடலில் திரு வசந்தபாலன் பேச தொடங்கியபோது(அவர் பேசியதையும், கேள்விபதிலில் அவர் பேசியதையும் நீங்கள் கேட்க முயற்சி செய்யவும்) ஒயாமல் எனது மனதில் ஒலித்து கொண்டே இருந்தது.

அவர் பேசிய கருத்துக்களை மூன்று பகுதியாக பிரிக்கலாம்.
1) தலித்துகள் யார்
2) நிஜமான தலித் சினிமா என்பது என்ன
3) தலித்துகளுக்கு ஆலோசனை மற்றும் எழுச்சி கொள்ள ஊக்கமூட்டல்

அவர்பேசிய அந்த விஷயங்கள் அறிந்தோ அறியாமலோ தலித் விரோத சிந்தனையை/புரிதலை/காழ்ப்புணர்ச்சியை கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியதால்தான் தான் இந்த கட்டுரை. அவர் பேசத்தொடங்கியுவுடன் இந்தியாவில் சமகாலத்தில் வந்த திரைப்படங்களில் FANDRY, COURT மற்றும் THITHI (நான் இன்னமும் பார்க்கவேயில்லை) மிக முக்கியமான தனக்கு பிடித்தமான படங்கள் என்று கூற நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் FANDRY பற்றி பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே தலித்துகள் யார் என்று ஒரு கேள்வியை கேட்டு அவர்கள் யாரென்று சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஹிந்து பள்ளியில் படிக்கும் தனது மகன் தன்னிடம் முஸ்லீம் என்றால் யார் என்று கேட்பதாகவும்!!!!!!! சென்னையில் வசிப்பதால் மனிதர்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாகவும் தலித் என்றால் யார் என்றே தெரியாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவும்!!!!!!!!!…நகரங்கள் அதை செய்வதாகவும் சலித்துக்கொண்டு தான் சிறுவனாக இருந்தபோது விருதுநகரில் தான் கண்ட/அறிந்த தலித்துகளை பற்றி சொல்ல ஆரம்பித்தார். எடுப்பு கக்கூஸ் இருந்த தனது வீட்டிற்கு “தலித்துகள்” வந்து எப்படி தனது தாயின் மலத்தை அள்ளிக்கொண்டு தயக்கதோடு தனது வீட்டிற்கு முன் வந்து நின்று “அம்மா நான்வந்திருக்கன்மா எதாவது பண்ணுங்கமா” என்று கேட்பார்கள் என்றும், தனது தாய் மீந்து போன, ஊசிப்போன, கெட்டுப்போன உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் ஒரே தட்டில் போட்டு அவர்களுக்கு தர அவர்கள் அதை வாங்கி கொண்டு செல்வதை பார்க்க வேதனையாக இருக்கும் (கரு பழனியப்பனின் “தலித்துகள் பாவம்” கூற்றை நினைவில் கொள்க) என்றும் இப்படித்தான் தலித் என்பவர்களை நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்பவர்களுக்கு கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும்.

“you see only what you want to see” என்ற வாக்கியத்தை போல ஒரு சாதி இந்துவின் ஆழ்மனது தலித் என்பவர்களை என்னவாக நினைவில் கொள்கிறது அல்லது என்னவாக நினைவில் கொள்ள விளைகிறது என்கின்ற கேள்வி மிக முக்கியமானது. இப்பொழுது திரு வசந்த பாலன் ஒரு தலித்தாகயிருக்கும் பட்சத்தில் தலித் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு என்ன மாதிரியான பதிலை அளித்திருப்பார் என்று நாம் யோசிக்க வேண்டும். வசந்தபாலன் சொன்னதையே தலித் வசந்தபாலன் சொல்லியிருந்தால் இப்படி சொல்லியிருப்பார். “நாங்கள் அந்த வீட்டு பெண்ணின் நாற்றம் பிடித்த மலத்தை அள்ளிக்கொட்டிவிட்டு அவர்கள் வீட்டு வாசல் முன் போய் நின்று அம்மாமா என்று அழைக்கும் வரை அந்த பொம்பளை வெளியே வரவில்லை. ஒரு வழியாக வெளியே வந்த அந்த பொம்பளை மீந்து போனதையும் ஊசிபோனதையும் வந்து போடுவாள். அவளுடைய மலத்தை மீண்டும் அள்ளிவந்து அவளுடைய தலையிலேயே கொட்டிவிட்டு ஒன்னோட பீ அல்லறவனுக்கு ஒரு வாய் சோறு போட கூட வக்கில்லாத ஒனக்கு நாங்க வந்து பீயை அள்ளணுமா? உன் புருஷனையும் உன் புள்ளையும் அள்ள சொல்றி மூதி என்று திட்டத்தோன்றும்/ஆத்திரமாக வரும் ஆனால் அதை அடக்கிக்கொண்டு அந்த வீட்டிலிருந்து நகர்ந்து சென்று விடுவோம் என்று சொல்லி இருப்பார் இல்லையா? இதை கேட்பவர்களுக்கும் கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும் இல்லையா? இப்பொழுது நாம் கேட்க வேண்டிய கேள்வி தலித்துகளை யாருடைய கோணத்திலிருந்து அணுக வேண்டும்? “தலித்துகள் பாவம்” என்ற கோணம்/மனநிலை கொண்டா அல்லது மானுட சமத்துவத்திற்கு எதிராக தலித்துககளை exploit செய்யும் சாதி ஹிந்துக்கள் மீது அறசீற்றம் கொள்ளும் கோணம்/மனநிலை கொண்டா??

ஒரு சாதி இந்துவின் அதிகபட்ச மனிதம், நேயம் என்பது “தலித்துகள் பாவம்” என்னும் வரைதான் நீளும். வசந்தபாலனுக்கு தனது தாயின் மீதும், தனது தந்தையின் மீதும், தன் மீதும் எப்படி ஒரு குற்றஉணர்ச்சியோ, அருவெறுப்போ, கோபமோ ஏற்படுவது இல்லையோ அதே போல சாதி இந்துவின் மனதும் ஒரு சுய விமர்சனத்திற்கும் அற சீற்றத்திற்கும் தயாராக இருக்காது. ஆனால் “தலித்துகள் பாவம்” என்னும் அயோக்கியத்தனமான மொன்னைத்தனமான போலித்தனமான கருணையை பாவித்துகொண்டே அவர்கள் மீதான சாதி ஹிந்துக்களின் வன்முறையை வேடிக்கைபார்க்கும். anyway coming back to his reference about dalits நான் கேட்க விரும்புவது இந்த நிலத்தின் தொல்குடிகளாக அறியப்படுகிற மிக நீண்ட நெடிய வரலாற்று/போராட்ட/எதிர்பரசியல் பின்னணி கொண்ட தலித்துகளை, அதுவும் குறிப்பாக அம்பேத்கரியத்தை முன்வைத்து தலித் அரசியல்/கலை,இலக்கியம் மிகுந்த எழுச்சியை பெற்றிருக்கும் இந்த சமகாலத்தில் தேசிய/மாநில விருதுகளை பெற்ற ஒரு இயக்குனர்/கலைஞர் தலித்துகள் யார் என்று கேள்வியை கேட்டு பீ அள்ளிவிட்டு ஊசிப்போன சோற்றை வாங்கிக்கொண்டு போபவர்கள் தான் தலித் என்கிறார். அதாவது as a caste Hindu he see what he want to see in a dalit. இதை கேட்பதற்கு என்னங்க அவரு எதார்த்தமா ஒரு உண்மைய சொன்ன அதுக்கு நீங்க இப்படி உள்நோக்கம் கற்பித்தால் எப்படி என்று கேட்க தோன்றும். அவர் தலித் சினிமா என்றால் என்ன என்று சொன்ன இரண்டாம் பகுதியை அடைந்தால் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கு புரியலாம்.

திரு வசந்தபாலன் கர்நாடகா சபா ஒன்றில் ஒரு கர்நாடகா கச்சேரி பார்க்க எதேச்சையா செல்கிறார். அங்கு ஒரு அதி உன்னதமான ஏதோ ராகத்தில் யாரோ ஒருவர் பாடி முடிக்க அந்த மொத்த அவையும் ஆர்ப்பரிக்கிறது. இந்த குறிப்பிட்ட ராகத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் பாடியது இல்லை என்று அந்த ராகத்தில் ஊறிய பலர் அந்த பாடகரை பாராட்டுகிறார்கள்.இப்பொழுது வசந்தபாலனிடம் வந்து கச்சேரி எப்படி இருந்தது என்று கேட்டால் அவர் அற்புதம் என்று சொல்லலாம், தூங்கிவிட்டேன் என்று சொல்லலாம், புரியவில்லை என்று சொல்லலாம், பிடிக்கவில்லை என்று சொல்லலாம், சுமார் என்று சொல்லலாம் ஆனால் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையே தெரியாதா வசந்தபாலன் அந்த பாடகர் பாடிய ராகம் கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு என்று சொன்னால் அங்கு இருப்பவர்கள் வசந்தபாலனை யார் இந்த கோமாளி ? என்று பார்ப்பார்களா மாட்டார்களா? அதுபோன்ற ஒரு காரியத்தைத்தான் தலித் சினிமா என்பது என்ன என்று விளக்க முற்பட்டு நகைப்புக்குரிய வன்மமான கருத்துக்களை முன்வைத்தார்.

இயக்குநர் வசந்தபாலன்

அதற்குள் போவதற்கு முன் தலித்திய சினிமா தலித்திய இலக்கியம் என்றால் என்ன? தலித்துகளை பற்றி எழுதிவிட்டால் அது தலித் இலக்கியம் ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் பார்ப்பனர்களை பற்றி பெரியார் அளவிற்கு யாரும் எழுதியிருக்க முடியாது. அதனால் பெரியாரிய எழுத்துக்களை பார்ப்பனிய இலக்கியம் என்று சொல்வதில் எதாவது பொருள் உள்ளதா? தலித் கதாபாத்திரத்தை உலவிட்டால் அது தலித் சினிமா ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் முதல்வன் படத்தில் பெண்கள் கையை பிடித்து இழுக்கும் “சேரி பசங்களை” புரட்டி எடுப்பாரே அதனால் முதல்வனை தலித் படம் என்று சொல்லலாமா? நம்பியார் கூப்பிட்ட பொழுதெல்லாம் வந்து நின்றார்களே கபாலிகள் அந்த எல்லா படங்களும் தலித் சினிமாவா?…. தலித் இலக்கியம்/சினிமா என்பது தலித்துகளின் பார்வையிலிருந்து சமூகத்தை பார்ப்பது. இது ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் செய்யமுடியாது. இளவரசன் மரணம் தலித்துகளின் மனதில் ஏற்படுத்திய கோபமும் பாதிப்பும் ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் புரிந்துகொள்ளவே முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. இதைத்தான் வசந்த பாலனோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் திரு மீரா கதிரவன் அற்புதமாக தலித்துகளை புரிந்து கொள்ள “அம்பேத்கரின் கண்கள் கொண்டு பார்க்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் Sairat மற்றும் Fandry இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவின் artistic sensibilitiesஐ முழுவதுமாய் உள்வாங்கி தலித்துகளின் பார்வையிலேயே அந்த இரு படங்களையும் மீரா கதிரவன் அணுகியது, விவரித்தது அவர் மீது எனக்கு பெரும் அன்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது…ஒரு தலித்தல்லாத ஒருவர் தலித்துகளின் பார்வையில் சமூகத்தை அணுகுவது அபூர்வம். கலையின் ஊடான அரசியல் புரிதலும், ஆழ்ந்த சித்தாந்த அரசியல் புரிதலும் மட்டுமே அதை சாத்தியப்படுத்தமுடியும். கிட்டத்தட்ட வசந்தபாலன் சொன்ன எல்லா கருத்துகளோடும் மென்மையாக அதே நேரத்தில் தெளிவாக முரண்பட்டு, விளக்கி அவருடைய பேச்சில் பேசினார். ஒரு வகையில் அவருடைய பேச்சின் மற்றொரு வடிவமே/கோணமே இந்த கட்டுரை.

அம்பேத்கரின் பார்வை விடுங்கள். பொதுவாக எந்த பார்வையுமே இருப்பதாக தெரியாதவர்கள் கூட எது தலித் இலக்கியம் எது தலித் சினிமா என்று கருத்து சொல்பவர்களாகவும் அதை குறித்து தலித்துகளுக்கே பாடம் எடுப்பவர்களாவும் ஆகிறார்கள். இப்படி அவர்கள் தூண்டப்படுவதற்கு அவர்களின் சாதி இந்து மனோநிலையும் திமிரும் தவிர வேறெந்த காரணமும் இல்லை. ஏனென்றால் பார்ப்பனர்களிடமோ/சாதி ஹிந்துக்களிடமோ போய் இதை அவர்கள் செய்வதில்லை.வசந்த பாலன் தமிழில் ஒரு நல்ல தலித் திரைப்படம் கூட வரவில்லையென்றும் சேரன் எடுத்த “பாரதி கண்ணம்மா”(ஒக்காமக்க) ஓரளவு நல்ல திரைப்படம் என்று சான்றிதழ் அளித்தார். சும்மா கபாலி என்று பேர் வைத்தால், அம்பேத்கர் படத்தை காட்டினால் அது தலித் சினிமா ஆகாது(கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு) என்றும் முழங்கினார். இன்னொரு வார்த்தையில் சொன்னால் மெட்ராஸ் மற்றும் கபாலியை தலித் சினிமா என்று கொண்டாடிய எல்லா தலித்துகளும், தலித்திய தளத்தில் இயங்கியவர்களும், தலித்திய சிந்தனையாளர்களும் முட்டாள்கள் போன்றும் நிஜமான தலித் சினிமா என்பது ஷார்ட்ஸ் போட்டு கொண்டு கூவத்திலிறங்கி எடுக்கவேண்டியது !!!!!!! என்றும் பேசினார்(இதே வசந்தபாலன் கபாலி வெளியான நேரத்தில் கபாலி ஒரு தைரியமான தலித் சினிமா என்று பா ரஞ்சித்தை மேடையில் வைத்து பேசும் வீடியோ இன்னமும் youtubeல் இருக்கிறது என்பது வேறு விஷயம்). சுஹாசினி இயக்கிய “இந்திரா” திரைப்படத்தில் அனுஹாசன் தலித் பெண்ணாக நடித்ததை குறித்தும் மாடம் வைத்த தலித் வீட்டில் ஒரு குழந்தை “நிலா காய்கிறது” என்று பாட்டு பாடுவதாய் அமைக்க பட்ட காட்சியை குறித்தும் அடக்க முடியாத சிரிப்புடன் குலுங்கி குலுங்கி சிரித்தபடி விவரித்து இப்படித்தான் தமிழில் தலித்துகள் காட்சி படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னார்.தசாவதாரம் தொடக்க காட்சியில் vin diesel போன்று பைசெப்ஸ் கொண்ட குடுமி வைத்த ஐயர் ஓடி வந்து எகிறி அடித்த போது யாரும் இது வரலாற்று ரீதியாக தவறு இந்த காட்சி பார்ப்பன வாழ்வியலை பிரதிபலிக்கவில்லை என்று கமலிடம் பாடம் எடுத்தார்களா? அதை பார்த்து வசந்தபாலனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்ததா?. “இந்திரா” திரைப்படம் பார்ப்பனிய அழகியலோடு அணுகப்பட்ட ஒரு தலித் கதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அனுஹாசன் ஒரு தலித் பெண்ணாக திரையில் தோன்றும்போது வசந்தபாலனுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? தலித் பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடி ஏதாவது அவருடைய வீட்டில் உள்ளதா? மெட்ராஸ் திரைப்படம் வெளிவந்த போது கேத்தரின் தெரசா போன்ற அழகான பெண்ணை எப்படி தலித் பெண்ணாக ஏற்க முடியும் என்ற திமிர்பிடித்த தடித்தனமான கேள்விக்கும் வசந்தபாலனின் அடக்க முடியாதா சிரிப்பிற்கும் என்ன வித்தியாசம் ? இதை குறிப்பிட்டு மீரா கதிரவன் தனது பேச்சில் சொன்னார் “லைலாவை ரசிக்க மஜ்னுவின் கண்கள் வேண்டும்” என்று. இளையராஜாவின் வீட்டில் நவராத்திரியின் போது பல கர்நாடக பாடகர்களும் கூடி பாடல் பாடும் காணொளிகளை நானே youtubeல் பார்த்திருக்கிறேன். இந்நிலையில் வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது. அதை தாண்டி அவர்கள் வேறொன்றை பார்க்கும் பொழுது அவர்கள் குழப்பமும் எரிச்சலும் ஆற்றாமையும் கொள்கிறார்கள். இதுதான் வசந்தபாலனை கபாலியை நிராகரிக்க சொல்கிறது. தன்னை விட அழகாவும் கம்பீரமாகவும் துணிச்சலாகவும் வேறு சாதியில் பிறந்த அழகிய பெண்ணை விரும்பி மணந்து மகிழ்ச்சியாய் ஒரு கலகக்காரனாய் வாழும் கபாலி தலித்தே இல்லை என்று கதறி அழுதுகொண்டே ஜெயமோகன் நாயாடிகள் குறித்து எழுதிய “100 நாற்காலிகள்” (“beautifulஆன கதை” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) காண்பிக்கும் தனது கற்பிதங்களுக்கு ஏற்ற ஒரு தலித்தை வசந்த பாலன் வந்தடைகிறார். ஒரு பிராம்மண பெண்ணை மணந்து அந்த பெண்ணோடும் லட்சக்கணக்கான மக்களோடும் பவுத்தம் ஏற்ற அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறாக நம் கண்முன்னே இருக்கும்போது தான் ஒரு நாயோடி IAS ஆனாலும் அய்யர் பெண்ணை மணந்தாலும் அவன் காலம் முழுவதும் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் போராட்டம் நடத்தியே அவன் வாழ்க்கை போய்விடும் என்று அந்த நாயாடிக்கு தீர்ப்பெழுதி ஜெயமோகன் வசந்தபாலன் போன்ற சாதி ஹிந்துக்களுக்கு ஆற்றுதல் படுத்துகிறார். வசந்த பாலன் ஆறுதல் அடைகிறார்.

ஒரு கலைப்படைப்பில் “நிஜம்/உண்மை” என்று எதுமே இல்லை மாறாக “பார்வை/கோணம்” மட்டுமே உள்ளது. ஒரு கலைப்படைப்பை யாருடைய பார்வையிலிருந்து எந்த நேரத்தில் என்ன காரணத்திற்காக என்னமாதிரியான விளைவை உத்தேசித்து ஒருவன் படைக்கிறான் என்பதை பொறுத்துதான் அந்த கலைப்படைப்பின்/கலைஞனின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் குறித்து மதிப்பிட முடியும். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒரு சில்லறைத்தனமான திறமையான(நேர்மையான அல்ல)கலைஞனானல் உண்மையான, நிஜத்திற்கு நெருக்கமான செய் நேர்த்தியுள்ள (ஏனென்றால் craft can be mastered over the time) ஒரு படைப்பை உருவாக்கிவிட முடியும். அதற்க்கு வசந்தபாலன் சொன்ன ஜெயமோகன் கதையே நல்ல உதாரணம். அந்த கதை சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன ? வசந்தபாலன் பயன்படுத்திய “beautiful கதை ” என்று சாதி ஹிந்துவை இளையராஜாவின் சோக பாட்டை ரசிப்பது போல் ரசிக்க வைக்கும். தலித்துகள் குறித்து சாதி ஹிந்துவுக்கு உள்ள கற்பிதங்களை மீண்டும் புதுப்பித்து உறுதியாக்கும். ஆனால் ரஞ்சித்தின் “கபாலி” சாதி ஹிந்துக்களை பதட்டம் கொள்ள வைக்கிறான், தலித்துகளை மிகுந்து எழுச்சியும்/அடையாள அரசியலையும் முன்னெடுக்க வைக்கிறான், சமூகத்தில் பெரும் விவாதங்களை கிளப்புகிறான், திரு அன்புமணியை (பாகுபலி பேட்டியில்) ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன் ஆனால் கபாலி பார்க்கவில்லை என்று சொல்ல வைக்கிறான், வசந்தபாலன் போன்ற ஆட்களை கபாலி தலித்தே இல்லை என்று பிதற்றவைக்கிறான். ஏனென்றால் ரஞ்சித் தலித்துகள் பற்றிய உண்மையை தலித்துகளின் கோணத்தில் அணுகி “கபாலியை” தமிழ்சமூகத்தை கன்னத்தில் அறைந்து விவாதத்திற்கு அழைக்கும் விளைவை உத்தேசித்து அவரின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் என்பது என்னவென்று வெளிப்படுத்தினார்.

தலித்திய கோணம் எப்படி இருக்கும் ? உதாரணம்

திரு வசந்தபாலன் அறிந்த மலம் அள்ளும் தலித்துகள் குறித்து அவர் சொன்ன உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே ஒரு குட்டிக்கதை

புருசனும் பொஞ்சாதியுமாக அந்த வீட்டை வந்தடைகிறார்கள். இதுதான் கடைசி வீடு. இங்கு ஜோலி முடிந்து விட்டால் இன்றைய பொழுது முடிந்தது, வீட்டிற்கு போகலாம். எடுப்பு கக்கூஸ் இருக்கும் பகுதியை வந்தடைந்ததும் அம்மா சாம்பல் போடுங்கம்மா என்று ஆம்பிள்ளை கத்துகிறான். சாம்பல் வந்து விழுந்தது. அவள் அதை அள்ள குனிந்தபடி இந்த வீட்டு பொம்பள எத திம்பாலோ தெரியல நாம வளக்கிற பன்னி பீ பரவாயில்லை என்று சொல்லியபடியே அதை அள்ளி அவளது கூடையில் போட்டுக்கொள்கிறாள். மீண்டும் தண்ணி உற்ற சொல்லி அவர்கள் சத்தம் தர யாரோ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அவர்களுடைய வேலை முடிந்தது. புருசனும் பொஞ்சாதியுமாய் கூடையை குப்பை கொட்டும் இடத்தில வைத்துவிட்டு அந்த வீட்டின் முன் வந்து “அம்மாமா எதாவது இருந்தா குடுங்கம்மா” என்று நாலைந்துமுறை அழைத்தபிறகு அந்த வீட்டின் பெண் ஆடி அசைந்து ஒரு குன்டாவோடு வந்து பாத்திரத்தை தூக்கி பிடி என்று சொன்னால். இவள் தூக்கிப்பிடிக்க அழுகியதும் கெட்டதும் ஊசியதும் என்று ஏதோ வந்து விழுந்தது. எங்கிருந்துதான் அன்னைக்குன்னு அவ புருசனுக்கு அவளோ ஆத்திரம் வந்ததோ தெரில…கண்மூடி திறக்கறதுக்குள்ள அந்த பீ சட்டியை தூக்கியாந்து அந்த பொம்பள தலைமேல் கொட்டிப்புட்டன். அவ மயிறு மூஞ்சு கழுத்து மாருன்னு பீயா வழியுது…உன்வீட்டு பீயை அல்லறவவனுக்கு ஒரு நல்ல சோறு கூட போடா மனசில்லாத வக்கில்லாத மூதி உன் பீயை நாங்க அள்ளணுமா? உன் புருஷனையும் புள்ளையையும் அள்ள சொல்றி மயிறு என்று சொல்லியபடி பொஞ்சாதியாய் இழுத்துக்கொண்டு விடு விடு வென்று நடக்கத்தொடங்கிவிட்டான்.

தன்னுடைய மலத்தை முகம்முழுவதும் உடல்முழுவதும் உணர்ந்த அந்த அம்மா அந்த நாளைக்கு அப்பறம் மலம் கழிக்கவேயில்லை. நாட்களாகி வாரங்களாகி மாதங்களாகி போனது. அவர்களது வீடே மலத்தின் நாற்றம் அடிக்க தொடங்கியது. அந்த ஊரில் அவர்கள் வீட்டை பீக்காரம்மா வீடு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த குடும்பம் அந்த ஊரை காலி செய்துவிட்டு ஏதோ வடமாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அவர்கள் போனபின்பும் அந்த வீட்டிலிருந்து பீ நாற்றம் வீசியபடியே இருக்கிறது, பன்றிகள் மட்டுமே அந்த வீட்டிற்குள் இப்பொழுது போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாகராஜ் மஞ்சுளே விளிக்கும் ” பன்றி” யார் என்பதற்கான பதிலுடன் அடுத்த கட்டுரையில் முடித்து கொள்கிறேன்.

(தனிப்பட்ட முறையில் திரு வசந்தபாலன் மீதான விமர்சனமாக பார்க்காமல் ஒரு சாதி ஹிந்து திரைப்பட இயக்குனர் குறித்தான விமர்சனமாக பார்க்க வேண்டுகிறேன்)

“பன்றி” யார் ?

ப. ஜெயசீலன்

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சாதி பெயர் குறித்தான விவாதத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் திரு. கரு. பழனியப்பன் இறுதி சிறப்புரை ஆற்றுகையில் சொன்ன கருத்துக்கள் ஒரு சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கான ஆதரவு கருத்து என்னும் ரீதியில் முக நூலில் பலராலும் பகிரப்பட்டது..அதில் தலித்திய தளத்தில் இயங்குபவர்களும் அடக்கம்…உண்மையில் அவர் சொன்னது மிக ஆபாசமான அயோக்கியத்தனமான தற்குறி கருத்து. அவர் சொன்னதின் சாராம்சம் ” சாதி இந்துக்கள் தங்கள் சாதிகளின் வரலாற்று பெருமிதம் குறித்தான உவகையில் தங்கள் பெயருக்கு பின் தங்கள் சாதி பெயரை இட்டுக்கொள்வது சரியில்லை…ஏனென்றால் தலித்துகள் தங்களின் சாதி குறித்து அவமானமும் சிறுமையுற்றும் இருக்கிறார்கள்…அவர்கள் முன் சாதி இந்துக்கள் தங்கள் சாதி பெயரை சூட்டி மகிழ்வது சோற்றுக்கு வழி இல்லாதவன் முன் விருந்துண்ணும் அநாகரீகம் போன்றது” என்பதே. இவரின் கருத்தை நிதானித்து கவனித்தால் இதை விட கேவலமாக தலித்துகளை கேவலப்படுத்த முடியாது என்பது புரியும்.

வரலாற்றுரீதியாக சாதி இந்துக்கள் மங்கோலியர்கள், ஸ்பார்ட்டன்கள், சாமுராய்கள், வைகிங்ஸ் போன்று உலகை நடுங்க வைத்த  வீரர்களா? கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின்  போன்று உலக அறிவியலின் திசை வழி போக்கை மாற்றி அமைத்த மேதாவிகளா? அல்லது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அரச குடும்பங்களை போல உலகில் பாதியை ஆண்டவர்களா? அந்தளவு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வாங்க முடிந்ததா/முடியுமா? வருடா வருடம் நோபல் பரிசுகளை சாதி இந்துக்கள் வாங்கி சலித்து விட்டார்களா?. இப்படி எதுவுமே வாய்க்கப்படாத “லோக்கல் தாதாக்கள்” என்னும் அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் சாதி இந்துக்கள் தங்களை குறித்து பெருமிதம் கொள்வதற்கான காரணம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா? அப்படி ஒன்று இருந்தாலும் அது உண்மையில் வரலாற்றுரீதியாக அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள கூடியதா? இப்படி எதுவுமே இல்லாத சாதி இந்துக்களுக்கு  தங்களின் சாதி  பெயரை பின்னிட்டு கொள்வது பெருமிதம் என்று ஏன் தோன்றுகிறது? இந்த தர்க்கம் தவிர்க்கும் பிறழ்ந்த மனநிலை அவர்களுக்கு தோன்றும் காரணம் என்ன?. பதில் பார்ப்பனிய தத்துவம்.

பார்ப்பனிய வர்ணாஸ்ரம தத்துவம் என்பது அடிப்படையிலேயே அறிவியலுக்கு எல்லாவகையிலும் புறம்பானது என்பதும் ஜனநாயக விரோதமானது என்பதும் மனித நாகரீகத்திற்கு எதிரானது  என்பதும் கிஞ்சிற்று அறிவுள்ளோரும் ஏற்று கொள்ளும் உண்மை. அதன் அடிப்படையில் அமைந்த சாதிய கட்டமைப்பில் நம்பிக்கை உள்ளவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் முறையில்,  ஒரு முறைதான் சாதி பெயரை சூடி கொள்வது. இப்படி சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.

மனுதர்மம் தலித்துகளுக்கு  எதிராக சாதி இந்துக்களை எப்படி செயல்பட வைக்கிறதோ அதேபோல ஹிட்லர் வடித்தெடுத்த நாசி தத்துவம் யூதர்களுக்கு எதிரான ஜெர்மானியர்களின் எல்லா வன்முறைகளையும் வன்மங்களையும் ஊக்கப்படுத்தியது, நியாப்படுத்தியது. உலகிலேயே ஜெர்மானிய இனம்தான் உயர்வானது என்று சொல்லும் Aryan supremacy theoryயை நம்ப வைத்தது. லட்ச கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நாஜிகள் உச்சத்தில் இருந்தபொழுது  கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜெர்மானிய வீட்டிலும் ஹிட்லரின் படம் இருந்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஜெர்மனியே நாஜிக்களாக மாறிப்போனது. நாஜிக்களின் ஜெர்மனி  உலகை கிட்டத்தட்ட அதன் முன் மண்டியிட வைத்தது.

fandry 1
Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் திரு. வசந்தபாலன் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது…

அப்படிப்பட்ட ஜெர்மனியில் இப்பொழுது ஹிட்லர் என்னும் பெயர் கெட்டவார்த்தை ஆகிப்போனது. நாஜி ஜெர்மனி நிகழ்த்திய வன்முறையை மனித விரோதப் போக்கை எல்லோரும் ஒரு கொடுங்கனவாக நினைத்து கடந்து போக முயற்சிக்கிறார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியா நாட்டில் விளையாட்டுக்காக ஒரு கால்பந்து வீரர் கோல் அடித்து விட்டு நாஜி சலுயூட் அடித்தார் என்பதற்காக அவரது விளையாட்டு லைசென்ஸ் பறிக்கப்படுகிறது. ஜெர்மனியில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஹிட்லர் என்று பெயர் வைக்க எந்த ஜெர்மானியரும் துணிவதில்லை. ஏனென்றால் மனித குலத்திற்கே எதிரான கெட்டப்பெயராக அந்த பெயரும் அந்த பெயர் சார்ந்த அடையாளங்களும் மாறிப் போய் விட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம் ஹிட்லர் என்று பெயர் சூடினால், ஹிட்லர் வீரம் பற்றி பேசினால், உலகை நடுங்க வைத்த ஹிட்லரின் தேசமிது என்று பிதற்றினால்  நம்மால் விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்ட யூதர்கள் தங்களை குறித்து அவமானம் கொள்வார்கள். ஏனென்றால் நம்மை போல் பெருமையாக அவர்களுடைய அடையாளத்தை அறிவித்துக்கொள்ளமுடியாது. இந்நிலையில் அவர்கள் முன் நாம் ஹிட்லர் என்று பெயரிட்டு கொள்வது யூதர்களை பார்க்கவைத்து  விருந்துண்ணுவதை போல் இருக்கும் என்ற காரணத்தினால் அல்ல. மாறாக ஹிட்லர் குறித்து ஜெர்மானியர்களுக்கு இருக்கும் அவமானத்தாலும் குற்றஉணர்ச்சியினாலுமே தான். ஹிட்லரின் பெயர் தங்கள் மேல் விழுவதின் மூலம் எங்கே ஹிட்லரின் மனிதவிரோத கொடுஞ்செயல்களின் சாயல் தங்கள் மேல் விழுந்துவிடுமோ அன்று அஞ்சி நடுங்கி கூசிப்போகிறார்கள்.

இந்நிலையில் ஆயிரமாண்டு காலமாய் தலித்துகளின் உழைப்பை சுரண்டி தின்றவன், தலித் பெண்களை வன் புணர்ந்தவன், தலித் குடியிருப்புகளை கொளுத்தியவன், தலித்துகளின் கலை கலாச்சாரத்தை திருடிக்கொண்டவன்/அழித்தவன், பெரும்பான்மை எண்ணிக்கை தரும் தைரியத்தில் தலித்துகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவன், தலித்துகளின் நியாமான வாய்ப்புகளை பறித்தவன் என்று ஒவ்வொரு சாதி இந்துக்களின் சாதிக்கும் பின்னேயும் ஒரு அயோக்கியத்தனம் இருக்கிறது. அதனால் தங்களின் சாதியை மிக பெரிய அவமானமாகவும், சாதியை பயின்ற தங்களது மூதாதையர்களின் மடமைத்தனத்தை குறித்தும் அயோக்கியத்தனத்தை குறித்தும் அவர்கள் கூனி கூசி குறுகி சாதி பெயரை சூடும் இழி செயலிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என்று சொல்வதும் எதிர்பார்ப்பதும்தான் நியாமாக தர்க்காமாக இருக்க முடியும். ஆனால் உலகில் யாராலுமே சிந்திக்கமுடியதா அயோக்கியத்தனமான சுத்தமான சாதி இந்துவால் மட்டுமே சிந்திக்க முடிகிற கோணத்தை திரு கரு பழனியப்பன் வந்தடைகிறார். அது என்ன கோணம் என்றால் “தலித்துகள் பாவம் நாம பார்த்து எதாவது அவங்களுக்கு செஞ்சாதான் உண்டு” என்கின்ற கோணம். அதாவது சாதி இந்துக்கள் திருட்டு பசங்க சில்லறை பசங்க அயோக்கியபசங்க என்பதை மறைத்து தலித்துகள் வாழ்க்கையே சாதி இந்துக்களின் கருணையில்தான் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை கட்டமைப்பது. அதனைவிட நுட்பமாக தலித்துகளின் மீட்சி என்பது சாதிஇந்துகளின் கருணையை பொறுத்தது என்று தலித்துகளுக்கே நிறுவுவது.

ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளையர்கள் ஆஸ்திரேலியா பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்க 1998 முதற்கொண்டு மே 26ஐ national sorry day என்று கடைபிடிக்கிறார்கள். 2008ல் பிரதமராக இருந்த கெவின் ரட் மே 26ஆம் நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் சார்பாக ஆஸ்திரேலியா பூர்வகுடிகளிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கேட்போர் எவரும் அழுது விடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மன்னிப்பு கோரும் கடிதத்தை வாசித்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் நிகழ்த்திய வன்முறைக்கு  ஆஸ்திரேலியா சமூகத்தை மன்னிப்பு கோரத்தூண்டிய குற்றவுணர்ச்சி ஏன் சாதி இந்துக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் துளியும் ஏற்படுவது இல்லை? ஒருவனால் அடிமைப்படுத்தப்பட்டவன் வெட்கப்படவேண்டியவன் இல்லை மாறாக அடிமைப்படுத்துபவனே ஒரு காட்டுமிராண்டியாக தன்னையே உணர்ந்து நாகரீக சமூகத்தில் வெட்கம் கொள்கிறான் என்று சாதி இந்துக்களுக்கு எப்பொழுது புரியும்? எவனையும் ஏய்க்காத, எவன் உழைப்பையும் சுரண்டி தின்று கொழுக்காத, எவன் குடியையும் கெடுக்காத தலித்துகளின் மூத்திரத்தை குடிக்கக்கூட சாதியை பயிலும் கடைபிடிக்கும் சாதி இந்துக்களுக்கு தகுதி இல்லாத போது தலித்துகளாக அறிவித்து கொள்ள தலித்துகளுக்கு தயக்கம் இல்லை ஆனால் அவர்கள் சாதியற்ற ஒரு சமூகத்தை அண்ணலின் வழியில் கனவு காண்கிறார்கள் என்று திரு கரு பழனிய்யப்பனிடம் யார் சொல்வது?

ஒரு நாகரீகமான சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த அநீதியை இழைத்தவனிடம் நாம் முதலில் எதிர்பார்ப்பது guilt குற்றவுணர்ச்சி. அடுத்தது குற்றம் குறித்தான வேதனை remorse. இந்த நிலையில் இருந்துதான் நாம் apology, reconciliation போன்ற நிலைக்கு நகர முடியும். பழனியப்பன் அவர்களின் கருத்து நமக்கு உணர்த்தியது நம் சமூகம் இன்னும் சாதி குறித்து குற்ற உணர்ச்சியே கொள்ளவில்லை என்பதுதான். இந்நிலையில் நம் சமூகம் remorse என்னும் நிலையை அடைய இன்னும் பல ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டியிருக்கும் என்று எனக்கு தோன்ற வைத்தார் திரு. வசந்தபாலன். Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது.

தொடரும்.

மனிதம் இல்லா சாதிய தேசம்

முருகன் கன்னா

முருகன் கன்னா

உள்ளாட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரநிதிதுவம் வேன்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 1978 ஆம் ஆண்டு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேன்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.கிருஷ்னன் வழக்கறிஞர் அவர்கள் முன்வைத்துள்ளார் பின் சட்டமன்றத்தில் இந்த கோரிக்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அன்றைய பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது ஆனாலும் அதனை நடைமுறை படுத்துவதில் தாமதமே தொடரந்தது தனது தொடர்ச்சியான விடாத முயற்சியை மேற்கொன்டுள்ளார் இவருடைய போராட்டதின் காரனமாக 1984ல் இந்தியா முழுவதும் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு சட்டமான பஞ்சாயத்து ராஜ்ஜிய சட்டம் கொன்டுவரப்பட்டது

பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனாலும் சாதியவாதத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமுக மக்கள் இன்றளவும் பஞ்சாயத்து தலைவர் ஆக முடியவில்லை , நகராட்சி தலைவர் ஆக முடியவில்லை , தேர்தலில் போட்டியிட்டால் கொலை செய்வதும் நடைபெறுகிறது பெரும்பாலான இடங்களில் தேர்தலில் போட்டியிடுபவர்களோ தங்கள் சார்ந்த கட்சிகளுக்கு கட்டுபட்டவர்களாகவோ அல்லது சாதிய ஆதிக்க கூட்டத்தின் கைபாவைகளாகவும் இருக்கிறார்கள் இவைகளை கடந்து தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராகவோ , நகராட்சி தலைவராகவோ தேர்ந்து எடுக்கப்பட்டாலோ தலைவராக செயல்பட முடியாது தலைவருக்கான இருக்கையில் அமர கூட முடியாது என்ற நிலைகளே தொடர்கிறது

சமுகநீதி அடிப்படையில் சமத்துவத்தை இலக்காக கொன்ட அனைவருக்குமான பிரதிநிதுவ உரிமையும் , சாதிய ஒடுக்குமுறைகளை தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தாலும் அதனை நடைமுறை படுத்த கூடிய சமத்துவத்தை இலக்காக கொள்கை கொன்ட ஆட்சியாளர்களாக இல்லாமல் அனைவரும் மனுவின் சாதியவாதத்தை ஏற்று அதில் புறையோடி கொன்டு இருப்பவர்களே ஆட்சியாளர்களாக இருப்பதனால் அரசியல் அமைப்பு சட்டத்தையும் பயன்படுத்த மறுக்கிறார்கள் இதனால் இன்றளவும் சாதி எனும் கொடிய சிந்தனை மனிதர்களை விட்டு விலகாமல் தொடர்கிறது

எந்த ஒரு திட்டமும் முழுமையாக நடைமுறை படுத்தி பார்த்த பின்னரே அதன் மூலமாக கிடைக்கும் நிறை குறைகளை ஆராய்ந்து நிறைவாக இருப்பின் தொடர்வதும் குறைகள் அதிகம் இருப்பின் அதனை மாற்றுவதும் மிகவும் சரியான நடவடிக்கையாகும் ஆனால் இந்திய அரசியலமைப்பின் படி முழுமையாக செயல்படாத ஆட்சியாளர்கள் இன்றைக்கு சட்டத்தையும் பிரதிநிதிதுவ உரிமை முறையையும் குறை கூறுகி வருவதோடு மாற்றாக மனுவின் சாதிய சட்டத்தை நடைமுறை படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள்

உலகத்தில் எங்கே மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் சர்வதேச மனித உரிமை ஆணையம் இந்தியாவில் காலம் காலமாக தொடரும் சாதிய பயங்கரவாதத்தால் தினம் தினம் பல மனித உயிர்களை கொன்று குவிப்பதை நோக்கி கேள்வி கேட்க மறுப்பது ஏனோ தெரியவில்லை மற்றும் சாதியின் தன்மை குறித்தும் தீண்டாமையின் கொடுரம் குறித்தும் மிக சரியாக ஆய்வு செய்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சியாக கொன்டாடிய ஐக்கிய நாட்டு சபையும் இதுவரையில் எந்த கேள்வி கேட்டவில்லையே

உலகின் பல நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்று அறிவிக்கும் ஐநா சபை மனித சமுகத்திற்கு எதிராக உள்ள மனிர்களை கொன்று குவிக்கும் சாதி எனும் கொடுர தன்மையை சமுகத்தில் இருந்து அகற்றா விட்டால் இந்தியாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்போம் என்று கூற முன் வரவேன்டும் உறுதியற்ற வாழ்வை கொன்ட மக்களுக்கு பொருளாதார தடை ஒரு பொருட்டும் அல்ல

சாதிய கொடுங்கரங்களால் சாவதை விட பட்டினி சாவு மேல்.

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய கைது சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி கர்ணனின் கைதை கண்டித்து, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர் மாலதி மைத்ரி, “தலித்துகளைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதும் ஊழல் மலிந்தது நீதித்துறை என்ற தலித் நீதிபதியைக் கைது செய்வதும்தான் உச்ச நீதி இந்நாட்டில். #StandForJusticeKarnan” என்கிறார்.

பதிப்பாளர் கருப்பு நீலகண்டன், அரசியலமைப்பு படி பாரளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் மட்டுமே செய்து நீக்க முடியும் என்கிற நீதிபதி கர்ணனின் பதவியின் கண்ணியத்துக்கு ஒரு சிறிய அளவு மரியாதையும் தராமல் விரட்டி விரட்டி கைதுசெய்கிறது பார்ப்பன பண்ணையார்களால் ததும்பி வழியும் உச்சநீதிமன்றம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

தலித் அரசியல் செயல்பாட்டாளர் தி. ஸ்டாலின், “கழுத்தறுத்த யுவராஜன்கள் கூட அவனுங்களா கிடைச்சாதான் கைது. ஆனால் நீதிபதி கர்ணனோ விரட்டி விரட்டி கைது! #சட்டம் சாதியின் கரங்களில்!” என்கிறார்.

செயல்பாட்டாளர் ரமேஷ் பெரியார், “IPC 1986 section 84 (இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84) படி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தண்டிக்கவோ,கைது செய்யவோ கூடாதென்கிறது..

உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களை மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது..அந்த உத்தரவு நிலுவையிலிருக்கும் போதே…நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்திற்கு 6மாத சிறை தண்டனை மற்றும் கைது செய்வதென்பதெல்லாம் இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84ன்படி சட்ட விரோதமில்லையா…? உச்சநீதிமன்றமே சட்டத்திற்கு புறம்பாக நடக்கலாமா…?” என கேட்கிறார்.

எழுத்தாளரும், அரசியல் செயல்பாட்டாளருமான கௌதம சன்னா,

நீதித் துறையின் வீழ்ச்சி.. கர்ணன் கைது.

முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்களை அப்பட்டமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு எனும் ஆயுதத்தால் கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார். மேல்முறையீட்டு மன்றமே இதை செய்துள்ளதின் மூலம் தனி நபருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நிவாரணங்களையும் சவக்குழிக்கு அனுப்பியுள்ளது உச்ச நீதி மன்றம். இது ஐநா வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பது கூடுதல் அம்சம்.

நாடாளுமன்றம் தீர்க்க வேண்டிய பிரச்சனையை நீதிமன்ற அவைக்குள் தீர்க்கும் புது நடைமுறையை உருவாக்கி அரசமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக்கியுள்ளனர் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். ஜனநாயகத்தின் ஒரு தூண் சரிந்துள்ளது. காப்பாற்ற வேண்டிய மற்ற தூண்களும் தூங்கிக் கொண்டுள்ளன. நான்காவது தூணான ஊடகம் ஜால்றா அடித்துக் கொண்டிருக்கிறது.

எனினும் கீழமை நீதிமன்றங்களானாலும், உயர்நீதிமன்றங்களானாலும் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் தலித்துகளே. சாதி வெறி தலைவிரித்தாடும் நாட்டில், நீதித்துறையானது ஊழலும், சாதி வெறியும் மலிந்த துறை என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.

தமிழர்களும், சமூக நீதிக் காவலர்களும் வாய் முடி பேசா மடந்தைகளாக இருங்கள். அதுதானே நீங்கள் எப்போதும் செய்வது.

சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது” என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

வரதராஜ் கிருஷ்ணசாமி, “நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாள் தான் விஜய் மல்லையா வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

மல்லையா மீதும்அதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் ஒன்றில் தான் அந்த தீர்ப்பு. மல்லையா ஒரு மூறை கூட ஆஜராக வில்லை. கர்ணன் ஒரு முறை ஆஜரானார்.

இன்னொன்றும் இருக்கிறது.

ஆந்திர/ தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி நாகர்ஜூனா ரெட்டி மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. (உதவியாளர் ஒருவரை உயிரோடு கொளுத்திய வழக்கு உட்பட) சமீபத்தில் அவர் மீது impeachment தீர்மானம் ( impeachment – procedure to remove judge by passing the impeachment motion in the parliament) கொண்டு வர எம்.பிக்கள் முடிவு செய்தனர். ஆனால் முடியவில்லை. அந்த நாகர்ஜூனா ரெட்டி மீது ஒரு நடவடிக்கை கூட இந்த உச்ச நீதிமன்றம் எடுக்க வில்லை.

கர்ணன் என்னை impeach செய்யுங்கள் நான் பாராளுமன்றத்தை சந்திக்க தயராக இருக்கிறேன்என்றார். ஆனால் அது நடக்க வில்லை மாறாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தான் இந்திய நீதித்துறை.

இங்கு பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி, பஞ்சமர்களுக்கு ஒரு நீதி..

இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கர் இன்று இருந்திருப்பாரே ஆனால் இந்திய நீதித்துறையை பார்த்து காரி துப்புவார்” என்கிறார்.

எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா. முருகவேள், “அதுசரி. உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு கர்ணன் பிறப்பித்த வாரண்ட் என்ன ஆனது? என்ன பிரச்சினை இருந்தாலும் அது கல்கத்தா உயர்நீதி மன்றம் பிறப்பித்த பிடியாணைதானே? ஒருவேளை அதை உச்சநீதி மன்றம் தடை கிடை செய்து விட்டதா?

அப்புறம் மனநலம் சரியில்லை என்று பரிசோதனைக்குப் போகும் படி உத்திரவிடப்பட்ட ஒருவரை எப்படி கைது செய்து . . . ஒரே குழப்பம்.

இந்தியன் லூனசி சட்டம் . . . நீதிமன்ற அவமதிப்பு ” என்கிறார்.

 

 

 

 

அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று!

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்

இன்றைக்கிருந்து 110 ஆண்டுகளுக்கு முன் சரியாக 19.06.1907 ஆம் நாளில் பண்டிதர் அயோத்திதாசரால் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது. இன்றைக்கு போல் கிடையாது. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும் நடத்துவதும் இயக்கம் நடத்துவதற்கு ஒப்பானதாகும். எந்த ஒரு சமூக நடவடிக்கையின் தொடக்கமாகவும் பிரதான பணியாகவும் இதழ் நடத்துவதாகவே இருந்தன. அயோத்திதாசர் தமிழன் ஏடு மூலம் இயக்கமாக செயல்பட்டார். 19-ம் நூற்றாண்டின் இறுதி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று நவீனத்தின் இன்றியமையாத காலக்கட்டத்தில் இவ்விதழ் வெளியானது. பாரம்பரிய மதிப்பீடுகளை கொண்டாழுகிய நம் சமூகத்தில் காலனியத்தின் வழி அறிமுகமான புதிய விசயங்களை ஒட்டி நடந்த விவாதங்கள் புரிதல்கள் நிலை பெறல்கள் இதழ்கள் வழியாகவே நடந்தன. எனவே தான் அக்கால இதழ்கள் சமூக வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன. தமிழன் ஏடு அத்தகையவற்றுள் முதன்மையானது.

இன்றைக்கு நமக்கு வாசிக்கக் கிடைத்திருக்கும் அயோத்திதாசரின் எழுத்துகள் யாவும் இந்த இதழிலிருந்தே எடுக்கப்பட்டன. இதழொன்றில் எழுதப்பட்ட எழுத்து வாழும் காலத்திலும் இடையிலும் கவனிக்கப்படாமல் போனாலும் முற்றிலும் வேறொரு காலத்தில் வேறொரு அரசியல் சூழலில் கண்டெடுக்கப்பட்டு தாக்கம் செலுத்த முடியும் என்பதற்கு அயோத்திதாசரின் எழுத்துகளே சான்றுகளாகியுள்ளன. தமிழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அயோத்திதாசரின் சிந்தனைத் தொகுதிகள் அழுத்தமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. தமிழில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழைய இதழ்கள் தொகுப்புகளுக்கும் சிந்தனைத் தொகுப்புகளுக்கும் அயோத்திதாசர் பற்றிய தொகுப்பு முயற்சியே தூண்டுகோலாய் இருந்தன.

1907 ஜுன் 19ல் ஆரம்பிக்கப்பட்ட இதழ் வாரத்தில் புதன்கிழமை தோறும் தவறாமல் வெளியானது 26.08.1908 ஆம் நாள் இதழிலிருந்து பெயரிலிருந்த ஒரு பைசா நீக்கப்பட்டு தமிழன் என்ற பெயரிலேயே இதழ் வெளியானது. 1914 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் பண்டிதர் பரிநிர்வாணம் / மரணம் அடையும் நாள் வரையிலும் இடைவெளியின்றி வெளியானது. பின்னர் அவர் மகனாலும் அதற்கு பின்னர் ஜி.அப்பாதுரையாலும் இதழ் வெளியிடப்பட்டது.

இதழ் பண்டிதரின் முழுமையான ஆசிரியத்துவத்தில் வெளியானது. சமகால அரசியல் பற்றிய அவரது தலையீட்டு ரீதியான கட்டுரைகள் விளக்கங்கள் பதிவுகள் வெளியாகி வந்ததோடு பெளத்த நோக்கில் மூன்று நெடுந்தொடர்கள் வெளியாயின. புத்தர து ஆதி வேதம் இந்திரர் தேச சரித்திரம் ஆகிய இரண்டும் அவற்றுள் அடங்கும்.அச்சு வரலாற்றின் இன்றியமையாத காலக்கட்டத்தில் ஏட்டுப் பிரதிகளின் அச்சுப் பிரதிகள் இதழில் வெளியிடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தன. ஒளவை பாடல்கள் திரிக்குறள் ஆகியவற்றிற்கு பண்டிதரால் உறை எழுதப்பட்டன.(குறளுக்கு அவர் எழுதி வந்த உரை அவர் மரணத்தால் தத அதிகாரத்தோடு நின்று போயின ) இதழில் அயோத்திதாசர் மட்டுமல்லாது தேர்ந்த புலமை குழாத்தினர் எழுதி வந்தனர். ம.மாசிலாமணி திசி நாராயணசாமிப் பிள்ளை ஜி.அப்பாதுரை ஏபி பெரியசாமிப் புலவர் இ.ந.அய்யாக்கண்ணு புலவர் ஆகியோர் தனிக் கட்டுரைகளாகவும் தொடர்களாகவும் இந்து மத விமர்சனம் பிராமணர் எதிர்ப்பு தமிழிலக்கியம் பௌத்தம் சார்ந்து எழுதி வந்தனர். அவையெல்லாம் தொகுக்கப்பட்டால் நவீன பெளத்த மறுமலர்ச்சியின் உள்ளூர் அணுகுமுறை மேலும் துலக்கமடையும்.

அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட பௌத்த சங்கக் கிளைகளை ஒருங்கிணைப்பதற்கான ஏடாகவே தமிழன் ஏடு தொடங்கப்பட்டது. அதன்படி பெளத்த சங்கத்தார் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அரசியல் மற்றும் பண்பாடு பற்றி அடைய வேண்டிய விளக்கங்கள் சார்ந்தே அவர் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அதுவே இந்த அளவிற்கு பண்பாடு மற்றும் அரசியல் ஆழம் கொண்டதாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விசயம்.இதழில் பெளத்த சங்கக் கிளைகளின் செயற்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வந்தன. கோவில் பள்ளி நூலகம் ஆகியவற்றிற்கான இடம் கட்டிடம் வெளியீடுகள் சொற்பொழிவுகள் சமய நடைமுறைகள் நிதி வளர்ச்சி என்று அவை அமைந்தன. அயோத்திதாசரின் எழுத்துகளை மட்டும் படிக்கும் போது ஏற்படும் புரிதல் ஒரு பக்கமிருக்க தமிழன் ஏட்டை படிக்கும் போது உருவாகும் புரிதல் இன்னும் விரிவடைகிறது.

ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர்; மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அயோத்திதாசர்- வாழும் பவுத்தம், ஆணவக் கொலைகளின் காலம் ஆகியவை சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள்.

ஆதித்ய நாத் சாதி அழுக்கிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ள 16 அடி சோப்பு: விசிக அனுப்பியது!

தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும், ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது. இது தலித் மக்களை இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தொல். திருமாவளவன்

உத்தரபிரதேசத்தில் ஆதித்தியநாத் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மேற்கு உத்தரபிரதேசப் பகுதியில் இருக்கும் சகரன்பூர் என்ற இடத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார். ஆதித்தியநாத்தின் ஆதரவுபெற்ற தாக்கூர் சாதிவெறியர்கள் அந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கும் போடப்பட்டுள்ளது.

சகரன்பூர் வன்முறையைக் கண்டித்து அண்மையில் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் பேரணி நடத்தினர். அதற்குப்பிறகும்கூட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், தலித்துகள் அசுத்தமானவர்கள் என்று பொருள்படும்படியாக ஆதித்தியநாத் அரசாங்கம் சோப்பும், ஷாம்பும் கொடுத்து அவர்களை இழிவுப்படுத்தியுள்ளது. தங்களை அசுத்தமானவர்கள் எனச் சொல்லி இழிவுபடுத்திய முதலமைச்சர் ஆதித்தியநாத் முதலில் சாதி அழுக்கிலிருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் எனச் சொல்லி அவருக்கு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றை தலித்துகள் இப்போது அனுப்பி வைத்துள்ளனர்.

மத்தியில் பாசக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளன. பெரும்பான்மை பலத்தோடு உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுத்துநிறுத்தப்பட வேண்டும். அவர்களை இழிவுபடுத்திய முதல்வர் ஆதித்தியநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்”.

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!

கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளானது.

எடியூரப்பா தீண்டாமையை கடைப்பிடிக்கிறார் என அந்த ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த எடியூரப்பா, “சமூகத்து ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க விரும்பினேன். அதில் ஏன் குற்றம் கண்டிபிடிக்கிறார்கள்?” என கேட்டிருக்கிறார்.

தீண்டாமையை ஒழிக்கப்போன இடத்தில் தீண்டாமை கடைப்பிடித்ததாக எடியூரப்பாவின் செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்

நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும்” என வலியுறுத்தியிருக்கும் திருமாவளவன்.

“ஊடகச் சுதந்திரத்துக்கு ஆட்சியாளர்களாலும், அடிப்படைவாத சக்திகளாலும் அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் ஊடகச் சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உச்சநீதிமன்றமே தடை ஆணை பிறப்பிப்பது முறைதானா? என்பதை மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்” எனவும் கேட்டிருக்கிறார்,

“சட்டங்களைச் சீராய்வு செய்யும் அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கக்கூடாது என அரசியலமைப்புச் சட்ட அவையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டபோது நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் அவசியம் என வலியுறுத்திய புரட்சியாளர் அம்பேத்கர் “அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளின் பாதுகாவல் நீதிமன்றங்கள்தான்” என விளக்கமளித்ததை இங்கே சுட்டிக் காட்டுகிறோம். அப்படிப் பாதுகாவலாக விளங்கவேண்டிய நீதிமன்றமே ஊடக உரிமையைப் பறிக்கின்ற உத்தரவைப் பிறப்பிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீதிபதி கர்ணனை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அந்த உத்தரவு மனநலப் பாதுகாப்புச் சட்டம் 2017ன் பிரிவுகள் 2(1) 3(2), 3(3) 4(1) ஆகியவற்றுக்கும் , செல்வி எதிர் கர்னாடக மாநில அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றமே வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக இருப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன (The Wire 02.05.2017)

நீதிபதி கர்ணன்

நீதிபதி கர்ணனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என உச்சநீதிமன்றம் உண்மையாகவே கருதியிருந்தால் அவருக்கு எப்படி தண்டனை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறிய ஆலோசனையின்படி ஜூன் மாதத்தில் ஓய்வுபெறப் போகும் நீதிபதி கர்ணனின் வழக்கைக் கிடப்பில் போட்டிருந்திருக்கலாம் என்பதே பலரதும் கருத்தாக உள்ளது.

நீதிபதி கர்ணன் தவறிழைத்திருந்தால் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டியிருப்பதுபோல பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித்தான் அவரைத் தண்டிக்கவேண்டும். அதற்குக் குறுக்கு வழி எதுவும் கிடையாது. இது உச்சநீதிமன்றம் அறியாத ஒன்றல்ல.

“உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் கீழே பணியாற்றும் பணியாளர்கள் அல்ல, உயர்நீதிமன்றத்தையோ உயர்நீதிமன்ற நீதிபதிகளையோ கட்டுப்படுத்தக்கூடிய சட்ட அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குக் கிடையாது. பணியிலிருக்கும் ஒரு நீதிபதியை நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யலாம் என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் எச்சரிக்கை கவனத்துக்குரியதாகும்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்துவத்தை மேலும் மேலும் சார்ந்திருக்க முற்படும் இன்றைய சூழலில் ஜனநாயகத்தைக் காப்பதில் முன் எப்போதைக்காட்டிலும் இப்போது நீதிதுறைக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. அதைக் கவனத்தில் கொண்டும் நீதித்துறையின் மாண்பைக் கருதியும் நீதிபதி கர்ணன் தொடர்பான ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும்” என உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் திருமாவளவன்.

மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்! : மீனா சோமு

மீனா சோமு

மீனா சோமு

“கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது.”

கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!” -தோழர் Kotravai N

தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதிய அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் உணர்வு. தோழர் கொற்றவை போன்ற சில மார்க்ஸிய தோழர்களுக்கு மார்க்ஸ் சொன்ன “proletariat consciousness” என்றால் என்னவென்று புரியாது போல. அது தெரிந்தால் “Dalit consciousness” பற்றியும் புரியும். இப்படி அபத்தமா தலித் என்ற உணர்வை ஜாதிய உணர்வு என்று சொல்ல மாட்டார்கள். பார்ப்பன ஜாதியுணர்வும் மேல் ஜாதி என அந்தந்த ஜாதி மக்களிடையே இருக்கும் ஜாதிய உணர்வு தான் “ஜாதி மனநிலை”. “தலித் உணர்வு” என்பது அத்தகைய ஜாதிய ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு உணர்வு( நிலை). எப்போது தான் தோழர் கொற்றவை போன்றவர்களுக்கு சித்தாந்த தெளிவு ஏற்படும் என புரியவில்லை.

தொழிலாளர் புரட்சி ஏற்ப்பட proletariat consciousness முதல் கட்டமும் அவசியமான ஒருங்கிணைக்கும் நிலை. தொழிலாளர்களது வர்க்க உணர்வு ஒற்றுமை ஏற்ப்படவில்லை எனில் சோசலிச புரட்சியே சாத்தியமில்லை. அது போல ஜாதிய கட்டமைப்பை உடைக்க Dalit consciousness என்பது அவசியமான முதற்நிலை. அதை ஜாதியோடு ஒப்பிடுவது, முதலாளிகளின் வர்க்க சிந்தனையை தொழிலாளர்களது வர்க்க உணர்வோடு ஒப்பிட்டு கூறுவது போல அபத்தமானது. அத்தகைய அபத்தமான கருத்துக்களை தொடர்ந்து மார்க்ஸியவாதிகள் என சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர் (மார்க்ஸிய தூய்மைவாதிகள்) உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

தூய்மைவாதம் என்பது மத அடிப்படைவாதத்தோடு சம்பந்தப்பட்டது. இது போன்று தூய்மைவாதம் என்று அபத்தமான கருத்துக்களை முன் வைப்பவர்கள், தங்களை மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள், அடிப்படைவாதிகள் என அழைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மார்க்சிய சிந்தனையின் அடித்தளம் இல்லவே இல்லை.

நான் ஒரு தலித்தாக இருப்பதாலேயே மார்க்ஸியவாதி என என்னை உணர்கிறேன் என்று என்னால் சொல்ல இயலும்.

Fundamentalism is closely related to religious fanaticism, so please call yourself fundamentalist rather than Marxist.

I am a Dalit and I turn to be a Marxist as I naturally stand against the system which suppresses me.

மீனா சோமு, எழுத்தாளர்.