“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி.

மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை மிக கவனகமாக காவல்துறை செய்துள்ளது. அந்த ஆகால மரணத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தவிர கூடியிருந்த பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் வேறு எந்த கோரிக்கையையும் பிரதானமாக எழுப்பவில்லை. அவரை கைது செய்யும்வரை உடலை வாங்க முடியாது என்று சொன்னார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருவதற்கு முன்பு அனைத்து கூட்டத்தையும் கலைக்க வேண்டும் என்பதில்தான் காவல்துறை குறியாக இருந்துள்ளது.

வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் கூடிய பொதுமக்களை எப்படியும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் காவல்துறைக்கு இருந்ததின் விளைவே அந்த திடிர் தாக்குதல். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களைத்தான் “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” என்று மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி கூறினார்.

அப்போது அவர்கள் சொன்ன பதில் “நாங்கள் சோத்தைதான் திங்கிறோம், வேறு எதுவையும் அல்ல” என்றும் “எங்கள் வீட்டிலும் இதேபோல சின்ன குழந்தைகள் உள்ளது” என்று சொல்லி உள்ளனர். திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ முன்னணி தலைவர் கார்கி உள்ளிட்ட 12 நபர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்ததும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 12 நபர்கள் மீது கைது செய்து தனி வழக்கும் மேட்டுப்பாளையம் காவல்துறை பதிவு செய்து கைது செய்தது.

நீதி கேட்டவர்களை அடித்து விரட்டும் போலீசு…

அப்போதுதான் “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?” என்று சொல்லி நாகை திருவள்ளுவனை டி.எஸ்,பி. மணி அடித்துள்ளார். ஒடுக்கப்பட்ட இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களையும் காவல்துறை அணுகும் முறை எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் நியாமான உரிமைகளை கூட கேட்கக் கூடாது என்பது ஜனநாயக வன்முறையே. பாதிக்கப்பட்ட நபர்கள் மீதே வழக்கு பதிவு செய்வது சட்டத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும். ஒரு பதட்டமான சூழலில் கவனமாக செயல்பட வேண்டிய அரசு எதற்கு அவசர அவசரமாக கூட்டத்தை கலைப்பதையும், இரவோடு இரவாக அனைத்து உடல்களையும் எரிப்பதும் எதனை மறைக்க அல்லது யாரை காப்பாற்ற என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது.

காவல்துறை நடந்துகொண்ட முறை எல்லோருக்கும் தெரியும், எல்லா தொலைக்காட்சியும் ஒளி பரப்பியது. ஆனால் கைது செய்தவர்கள் மீது பொது சொத்துக்கள சேதப்படுத்திய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எதனை சேதப்படுத்தினார்கள் என்று நீதிமன்றத்தில் கேட்டபோது ஒரு போலிசின் பைக்கை சேதப்படுத்தினார்கள் என்று காவல்துறை தரப்பு சொல்கிறது. அதற்கான ஆதாரம் கேட்டபோது இதோ வருகிறேன் என்று ஒரு போலீஸ்காரர் வெளியே சென்று இரண்டு கற்களை எடுத்து வந்து கொடுக்கிறார். “என்ன இது” என்று கேட்ட போது ‘இந்த கல்லை வைத்துதான் பைக்கை அடித்தார்கள்’ என்று காவலர் சொல்கிறார் (இதைத் தான் (கற்களை) அந்த மூளையில் தேடிக்கொண்டு இருந்தீர்களா”).

அந்த கல்லின் வரலாறு புவியியல் எல்லோருக்கும் தெரிந்த பின்பு நீதிபதியே “பொது சொத்தை சேதப்படுத்திய பிரிவு, மற்றும் அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவையும் நீக்குகிறார். சாதாரண பிரிவில் நீதிபதி காவல் அடைப்பு ஆணையை பிறப்பிக்கிறார். கோவம் கொண்ட காவல்துறை ஓரிரு நாளில் அனைவரும் வெளியே வந்து விடுவார்கள் என்று தெரிந்தபின்பு கோவை சிறையில் அடைக்க வேண்டிய வெண்மணி உள்ளிட்டவர்களை 1500 பேரை வைக்கும் அளவு கொண்ட கோவை சிறையில் இந்த 12 பேரை வைக்கும் அளவுக்கு இடமில்லை எனக்கூறி, அவர்களை சேலம் சிறைக்கு அழைத்து போவது அதிகாரத்தின் உச்சம்.

டி.எஸ்.பி.மணி தலைமையில் நடந்த மனித உரிமை மீறலை (சாதி பெயரை சொல்லி அடித்தது உட்பட அனைத்தையும் புகாராக எழுதி நீதிமன்றதில் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிபதி நியாயம் உணர்ந்து மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் பணி அற்புதம். “நம் கற்கும் கல்வி நமது சமூகத்துக்கு பயன்பட வேண்டும், அதுவே பெற்ற கல்வியின் பயன் ” என்ற சட்ட மேதை அம்பேத்கர் வரிகளை நேரம் உணர்ந்து நடைமுறைப்படுத்திய அனைத்து தோழமைகளின் பணியும் அற்புதம்.

அ.கரீம் முகநூலில்…

ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், நெற்றியில் பட்டை தீட்டியும், கழுத்தில் உருத் திராட்சை போட்டும் காவி மயமாக்கிய கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் – தமிழ் உணர்வாளர்களே வீறுகொள்வீர் என திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை:

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்குக் காவி வண்ணம் பூசி, ஏதோ அவர்பால் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டதுபோல் பா.ஜ.க. சில காலமாக நாடகமாடி வருகிறது.

இதைவிட மகா கேவலமான இழிசெயல் வேறு உண்டா?

அதேபோல, தேசப்பிதா காந்தியாருக்கு 150 ஆவது விழாவென அவரையும் கபளீகரம் செய்து, கோட்சே என்ற மராத்தி சித்பவன் பார்ப்பனர் சுட்டுக் கொன்றார் என்ற வரலாற்றுச் சுவடுகளையே அழித்துவிட்டு, காந்தியாரின் அருந்தவப் புதல்வர்கள் போல, ஓநாய் சைவமான கோலம் போல – நாடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

காந்தியாருக்கு விழா – காந்தியாரை சுட்டுக் கொன்ற வழக்கில் சிக்கிய பிறகு, பிறழ்சாட்சி, மற்ற சில காணாமற்போன ஆவணங்கள் போன்றவை யாலோ, வேறு எப்படியோ விடுதலை பெற்ற, பிரிட்டிஷ் அரசிடம், பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி, வெளியே வந்த ‘‘வீர” சவார்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு, இப்படி பலவிதமான வித்தைகள் மேல் வித்தைகள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதைபோல இப்பொழுது சங் பரிவார்க் கும்பல் உலக தத்துவ ஞானியான திருவள்ளுவரையே காவிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.

தமிழ்நாட்டை வளைத்திட இப்பொழுது ஒரு புதிய யுக்திதான் திருவள்ளுவரை காவிமயமாக்குவதாகும். திருக்குறளிலிருந்து கடவுள் வாழ்த்து என்பதை எடுத்துக் கூறி, தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் சவால் விடுகிறார்கள்.

பி.ஜே.பி.யின் சமூக வலைதளத்திலும்….

பி.ஜே.பி.யின் சமூக வலைதளத்தில் திருவள்ளு வருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டை யும் போட்டு, உருத்திராட்சத்தையும் அணிவித்து – திருவள்ளுவரை இதற்குமேல் எந்த அளவும் கொச்சைப்படுத்த முடியாது என்னும் அளவுக்குத் தங்களின் பார்ப்பனீய மோசடிக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்.

கவுதமப் புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்கியவர்கள்!

கவுதமப் புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னவர்கள் அல்லவா!

ஒன்றை ஒழிக்க முடியாவிட்டால், ஆலிங்கனம் செய்து அழிப்பது, ஊடுருவுவது, திரிபுவாதம் செய் வது என்பதெல்லாம் பார்ப்பனீயத்திற்கே உரித்தான ‘கல்யாண திருக்குணங்களாகும்.’

மழித்தலும், நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவரையே இந்துத்துவா சாயம் தீட்டி தங்களின் அற்பத்தனத்தை வெளிப்படுத்திவிட்டனர்.

‘‘அகர முதல எழுத்தெல்லாம்” எனும் குறளுக்கு அவாள் கூறும் விளக்கம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற குறளுக்கு பி.ஜே.பி. கூறும் விளக்கம் என்ன தெரியுமா?

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல, உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று வியாக்கியானம் செய்துள்ளது பி.ஜே.பி.

குறளில் கடவுள், மதம், கோவில், ஜாதி, ஆத்மா என்ற சொற்கள் உண்டா?

அட ‘பிரகஸ்பதிகளே!’ திருக்குறளில் ‘கடவுள், மதம், ஜாதி, கோவில், ஆத்மா’ என்ற சொற்களே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த சொற்கள் எல்லாம் திருவள்ளுவருக்குத் தெரியாது – அதனால்தான் கையாளவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?

உண்மை என்ன வென்றால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி – ஆரியத்தின் – பிறப்பில் பேதம் விளைவிக்கும் வருணாசிரமத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தும் வகையில் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறி ஆரியத்தின் பிடரியில் பெருந்தாக்குதலைத் தொடுத்தவர் திருவள்ளுவர்.

10 குறட்பாக்களுக்கு தலைமைத்துவ பண்பு நலன்கள் வகைகளே தவிர, பக்திக்கானது அல்ல என்று ஆராய்ச்சியோடு கூறியதை,

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இராவண காவியப் புகழ் புலவர் குழந்தை, நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்றோரின் திருக்குறள் விளக்கவுரையிலே குறிப்பிட்டுள்ளார்களே!

வ.உ.சி. எழுதிய திருக்குறள் உரையில் கடவுள் வாழ்த்தே திருவள்ளுவர் எழுதியதில்லை; இடைச் செருகல் என்றே கடவுள் நம்பிக்கையாளரான (கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.) எழுதியுள்ளாரே!

ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்

திருக்குறள் என்பது அய்யப்பாட்டுக்கு சற்றும் இடமில்லாத ஆரியத்துக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட சமூக சமத்துவ நூலாகும். அறம் பொருள், இன்பம்பற்றி எழுதிய திருவள்ளுவர் வீடுபற்றி எழுதாததிலிருந்தே அவரின் உள்ளம் எந்த உள்ளம் என்பது வெளிப்படை.

தமக்கு எதிரான கருத்தினைக் கூறும் வள்ளுவரை அவமானப்படுத்துவது என்பது ஒன்று – இன்னொரு வகையில் உட்கிரகித்து அழிப்பது என்பது இவர்களின் தந்திரமாகும்.

.வே.சு. அய்யர் என்ன எழுதினார்?

‘சேரன்மாதேவி’ புகழ் வ.வே.சு. அய்யர் திருக்குறளின் முதல் குறளான

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பதற்கு எழுதிய விளக்கம் என்ன தெரியுமா?

‘‘திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்ற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்து வந்து பகவனுக்கு மணமுடித்து வைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

(The Kural or The Maxims of Thiruvalluvar 1916).

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் ‘தீக்குறளை சென்றோதோம்’ என்ற வரிக்கு ‘‘தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்று சொன்னாரே!

நாகசாமிகளின் விஷமம்!

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று அண் மையில் நாகசாமி என்ற பார்ப்பனர் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டபோது, அதனைக் கண்டித் தும், மறுத்தும் சென்னை பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினோமே! (7.11.2018).

பயிர்த் தொழிலைப் பாவத் தொழில் என்று சொன்ன மனுதர்மம் எங்கே? (அத்தியாயம் 10, சுலோகம் 84).

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொன்ன திருவள்ளுவர் எங்கே?

தாய்லாந்தில் திருக்குறள் பெருமை பேசும் பிரதமர்

இந்த இலட்சணத்தில் தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, திருக் குறளைப்பற்றிப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இரட்டை வேடமும், ஊடுருவி அழிக்கும் தந்திரமும் இந்த சங் பரிவார்களுக்குக் கைவந்த கலையே!

ஆனாலும், தமிழ்நாடு ஏமாந்துவிடாது – வேட்டிக் கட்டினாலும், வீதியிலே சிரசாசனம் போட்டாலும் இந்தப் பெரியார் பூமி ஒருபோதும் ஏமாந்துவிடாது. முன்பு ஒரு எம்.பி.யைக் கொண்டு வந்து முன் னோட்டம் விட்டு மூக்கறுபட்ட பிறகுமா இப்படிப்பட்ட ஏமாற்று யுக்திகள்?

திருவள்ளுவர்மீது சாணி வீச்சு!

இந்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், தஞ்சை பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின்மீது குறிப்பாக முகத்தில் சாணியை வீசியுள்ளனர் என்று செய்தி வெளிவந்துள்ளது.

சங் பரிவார் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம்

பாரதீய ஜனதா, சங் பரிவார் என்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் எதிரானது என்று திராவிடர் கழகம் தொடர்ந்து கூறி வந் திருக்கிறது – வருகிறது. இவையெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை – உண்மையிலும் உண்மை என்பதை கண்கூடாகத் தெரிந்துகொள்வதற்கு இவற்றைவிட வேறு ஆதாரங்கள் தேவையா?

மதச்சார்பற்ற சக்திகளும், தமிழ் உணர்வாளர் களும் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பி.ஜே.பி. – சங் பரிவார்க் கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டியது புத்திசாலித்தனமாகும்.

பி.ஜே.பி.யில் உள்ள தமிழர்களே, சிந்திப்பீர்!

பி.ஜே.பி. – சங்பரிவார்க்குள் இருக்கும் தமிழர் களே இதற்கு மேலும் இந்த அமைப்புகளில் இருப்பது குறித்து சிந்திப்பீர்களாக!

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை

சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என பியூசிஎல் அறிக்கை விடுத்துள்ளது.  

“மார்க்சிய – இலெனினியச் செயற்பாட்டாளர் பத்மா அவர்கள் 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச் சிறைவாசிக்குரிய மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.

திசம்பர் 13ஆம் நாளன்று மதியம் 1 மணிக்கு அவர் மருத்துவ மனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உடல் நிலை மோசமான காரணத்தால், இரண்டரை மணி நேரம் கழித்து, மதியம் மூன்றரை மணிக்கு, மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திசம்பர் 20 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் மீண்டும் அவரது உடல் நிலை மிக மிக மோசமானதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சிறைவாசிகள் கடும்நோயினால் பாதிக்கப்படும் பொழுது, அவர்களை மருத்துவமனை – சிறைச்சாலை என இழுத்தடிப்பது மனிதநேயமற்றது மட்டுமல்ல, சட்டத்திற்கும் புறம்பானதும் கூட!

எனவே சிறையாளி பத்மா அவர்கள் முழு உடல்நலம் பெறும் வரை அவரை மருத்துவ மனையிலேயே வைத்திருக்க வேண்டும் எனவும், அவருக்கு முறையான உயரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோருகிறது.

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்
க. சரவணன், மாநிலப் பொதுச் செயலர்”

கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

ந.பன்னீர் செல்வம்

கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம்.

தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் பூசி அழிக்க இருப்பதாக தெரிவித்தோம்.சேலம் இரயில்வே கோட்ட மேலாளருக்கு சமூகநீதிக் கட்சி சார்பில் கடிமும் அனுப்பியிருந்தோம்.

சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா லிங்கம் போடப்பட்டது எங்கேயோ தவறு நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரித்து விட்டு , கோவை ரயில் நிலையத்தின் புகைப்படம் போட நடவடிக்கை எடுப்பதாக சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

கோவையின் அடையாளம் பஞ்சாலைகள்தான், இங்கு 110 பஞ்சாலைகள் இருந்தது அதனைச்சார்ந்த இயந்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலை இருக்கும் நகரம். தொழில் நகரமும் கூட, கல்விக்கு சிறந்து விளங்கும் இந்நகரத்தில்… ஈஷா ஒரு மடம் மட்டுமே , அம்மடத்தை கோவையின் அடையாளமாக மோடி கோவை வந்ததிலிருந்து காவி அடையாளத்தை திணிக்கும் முயற்சியில் உள்ளனர்..இந்தியன் எக்‌ஸ்பிரஸ் நாளிதழிலும் ஈஷாவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர்… நாம் கொடுத்த போராட்ட அறிவிப்பினால் இன்று சென்னை செல்லும் சேரன் விரைவு இரயிலிலும் சென்னையிலிருந்து கோவை வரும் இரயிலிலும் ஈஷா அடையாளம் அழிக்கப்பட்டு கோவை இரயில் நிலையத்தின் முகப்பு கோவையின் அடையாளமாக பொறிக்கப்பட்டுள்ளது.. பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, வனவிலங்குகளின் வழித் தடத்தை சூறையாடிய கும்பலை அகற்றுவதே நம் பணி… போராட்டம் வெற்றி பெற உழைத்த அனைத்து தோழர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி

ந.பன்னீர் செல்வம், சமூகநீதிக் கட்சியின் தலைவர்.

கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

மக்கள் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வழக்கறிஞர் முருகன், இயற்கைப்பாதுகாப்புக்குழு வளர்மதி, மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி மற்றும் அவர் நண்பர்கள், கதிராமங்கலம் போராட்டத்திற்காக பேராசிரியர் ஜெயராமன், நெல்லை வழக்கறிஞர் செம்மணி, கார்டூனிஸ்ட் பாலா, சுற்று சூழல் போராளி முகிலன், அறப்போர் நக்கீரன், நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், என்று பலரை எந்த வித சட்ட நியாயமுமின்றி கைது செய்து சிறையில் அடைத்து, காவல் துறை தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல் எங்கு எழுந்தாலும் மூடிவருகிறது. பெரும்பாலான கைதுகள் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி சட்ட விதிமுறைகளை பின் பற்றாமல் செய்யப்படுகின்றன.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது. (Tamilnadu has become the Police State) கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு, தர்ணா நடத்த அனுமதி மறுப்பு, ஊர்வலம் செல்லத் தடை என்பது இன்று தமிழகத்தில் காணப்படும் நிலை. இது விரிவடைந்து அரசின் மீது சமூக வலைதளங்களில் மற்றும் பிற பொது வெளிகளில் எதிர் கருத்து கூறுபவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து சிவில் சமூகத்தை அச்சுறுத்தும் பணியை அரசு செய்து வருகிறது. அடிப்படை உரிமைகள்கூட மறுக்கும் சூழல் இன்று நிலவுகிறது. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள தற்போதைய தமிழக அரசு அச்சத்தினால், காவல்துறையை எல்லா ஜனநாயகச் சக்திகளின் மீதும் ஏவிவருகிறது. இப்படி தேவையற்று கைது செய்யப்பட்டவர்களை, நீதி மன்றம் பிணையில் வெளியே விடுகிறது. இதனால் பெருத்த பாதிப்புக்கு கைதானவர்கள் உள்ளாகிறார்கள். இப்படிப்பட்டத் தங்களின் தவறான நடவடிக்கைக்கு காவல் துறை பொறுப்பேற்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்.

வளர்மதி, திருமுருகன் காந்தி போன்றோர்கள் மீது தவறாக குண்டர் சட்டம் ஏவியதால் அவர்களின் தனி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, தவறிழைத்த காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தன்னுடைய ஜனநாயக விரோத செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், பிற சம்பந்தமே இல்லாத பலர் மீது போடப்பட்ட வழக்குகள் யாவையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக்கழகம் அரசைக் கோருகிறது. மக்கள் இம்மாதிரியான காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும் என மக்களை பி.யு.சி.எல் வேண்டுகிறது. அரசின் இம்மாதிரியான ஜனநாயக குரல் நசுக்கும் போக்குக்கு எதிராக குரல் எழுப்ப பி.யு.சி.எல் தமிழகத்தின் அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் இணைத்துப் போராட முடிவு செய்துள்ளது.

– கண.குறிஞ்சி, இரா.முரளி (மாநிலத் தலைவர் மாநிலச்  செயலாளர்.)

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் ‘கார்டூனிஸ்ட்’ பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களிடையே வெகுவாக அம்பலப்பட்டுள்ளனர்.

கடந்த 23.10.2017 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே நடந்த கொடூர சம்பவம், பார்த்தோர் நெஞ்சை பதறவைத்தது. உள்ளத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. இசக்கிமுத்து என்னும் கூலித்தொழிலாளியின் குடும்பமே பட்டப்பகலில் தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டது. இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு பிஞ்சுக்குழந்தைகள் என நான்குபேரும் தீயில் கருகி மண்ணில் சாய்த்து வீழ்ந்தனர். இந்தக் கொடூரம் கந்துவட்டி கொடுமைகளின் தாக்கம்தான் என்பதை தங்களின் சாவின் மூலம் உலகுக்கு உணர்த்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமைகள் குறித்து மீண்டும் மீண்டும் முறையிட்டும் கூட அவரால் அதிகார வர்க்கத்தைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சும் கந்துவட்டிக் கும்பலுக்கு அதிகார வர்க்கம் துணை போகிறது என்பதை அறிந்து விரக்தியின் விளிம்புக்கு சென்றதன் விளைவாகவே இசக்கிமுத்துவின் குடும்பம் இந்தக் கொடூரமான முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அந்த துயரத்தைக் காட்ட கேலிச்சித்திர ஓவியர் பாலா தனது ஆற்றாமையையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தீட்டிய கோட்டோவியம் இலட்சக்கணக்கான மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாகவே அமைந்தது. அது நாகரீக வரம்புகளை மீறியதாகவும் ஆபாசம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது என்று கருதினாலும், அந்த நான்கு உயிர்களும் கருகியக் கொடுமைக்கு வேறு எப்படி எதிர்வினை ஆற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. அதுவும் வன்முறை தவிர்த்து அறவழியில் தமது கண்டனத்தை வெளிப்படுத்த, அடிவயிற்றில் பற்றி எரியும் ஆவேசத் தீயை அணைத்திட, வேறு என்ன வடிவம் தான் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கந்துவட்டிக் கொடுமைகளை ஒழிப்பதற்கு துளியளவும் முயற்சிக்காதது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது அவர்தம் புத்தியில் உறைக்கும்படி நியாயத்தை உணர்த்துவதற்கு வேறென்ன தான் வழியிருக்கிறது?

ஓவியர் பாலாவின் கோட்டோவியம் ஆபாசமானது என்றால், இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகள் வைத்துக்கொண்ட தீயில் அவர்களின் உடைகள் எரிந்து- உடல்கள் வெந்து நிர்வாணமாய் மண்ணில் வீழ்ந்து கிடந்தார்களே, அது ஆபாசமில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டப்படியான தமது கடைமைகளையாற்றத் தவறிவிட்டோம் என்றும் அதனால் தான் இத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறோம் என்றும் உணர்ந்து வெட்கப்பட வேண்டியவர்கள், அதற்கு நேர்மாறாக ஆத்திரப்படுகிறார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஓவியர் பாலாவைக் கைது செய்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மீதான பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.”

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இசக்கிமுத்து, அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் தீ குளித்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாக இந்த தற்கொலைக்கு முயன்றது பின்னர் தெரியவந்தது.

எழுபத்தைந்து சதவீத காயங்களுடன் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் குழந்தைகளும் சிகிச்சை பலினின்றி இறந்தனர். இந்நிலையில், கந்துவட்டி கொடுமையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி காசிதர்மம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார். இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை என கூறி பணம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து இசக்கிமுத்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இசக்கிமுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 முறை மனு கொடுத்திருக்கிறார். அதன் பிறகும் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என்கிறது மாலைமலர்.

விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில்  மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள ‘நீட்’ என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால்  படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள்  சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் கார்த்திக்ராஜா, ஓடைப்பட்டி கருப்பையா, பெருங்குடி மாரிச்சாமி, அரியலூர்- சிறுகடம்பூர் நந்தினி, பெரம்பலூர்- குரும்பலூர் ஐஸ்வர்யா, திருச்சி- திருப்பாஞ்சலி கதிரேசன், வந்தவாசி- புளியரம்பாக்கம் வெங்கடேசன், ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2.மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்!

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம். அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்கென மத்திய அரசும், தமிழக அரசும் அவ்வப்போது பல்வேறு ஆணையங்களை அமைத்துள்ளன. அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் போதிய அக்கறைகாட்டவில்லை. அதற்கு மாறாக, மாநிலங்களுக்கென இருக்கும் ஒருசில அதிகாரங்களையும் பறிப்பதிலேயே முனைப்பாக உள்ளனர்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்பது பிரிவினைவாத கோரிக்கையும் அல்ல. மாநில மக்களுக்குரிய பிரச்சினைகளையும் தேவைகளையும் மத்திய அரசைவிட அந்தந்த மாநில அரசுகளே சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தமுடியும்.

” இந்திய சுதந்திரத்தை சாதித்த தேசிய இயக்கமானது, பிராந்திய உணர்வுகளைச் சரியாக உள்வாங்கிக் கட்டப்பட்டதே ஆகும். ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படுகிற மொழிகளின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்ட பிறகுதான், காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்தது. தேசிய உணர்வுக்கும் மாநிலங்களின் ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான கூட்டுறவே நாம் சுதந்திரத்தை வென்றெடுக்க உதவியது “ என 1955 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியது இன்றைக்கும் பொருந்தகூடியதாக உள்ளது..

தேசிய ஒருமைப்பாடு என்பது ’மாநில சுயாட்சி’ உரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடும், மாநில சுயாட்சியும் எதிரெதிரானவை அல்ல. அவை, கூட்டாட்சி என்னும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
உண்மையில் இந்தியாவை வலிமையானதொரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், மாநிலங்கள் தன்னாட்சியோடு செயல்படுவது அவசியமாகும்.
எனவே, இத்தகைய மாநில சுயாட்சி உரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. .

3.மத்திய – மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட வேண்டும்!

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்- 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான உரிமைக் குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. எனவே, மத்திய அரசு 1966-லேயே மத்திய மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக “நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை” அமைத்தது. அது பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அத்துடன், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பியது . அன்று தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம், இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பின்னர்,1973-இல் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை இயற்றவும்; 1979-இல் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் அதுவே தூண்டுகோலாக அமைந்தது.

அவற்றின் காரணமாக மத்திய மாநில உறவுகளை ஆராய 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007-ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. .
இந்நிலையில், தற்போதைய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்துவந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இவ்வாறான தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளில் நிலவும் சிக்கல்களை அடையாளம் காணவும், மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் கூடுதலாக அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளின் தேவைகளை ஆராயவும் ஏதுவாக, மீண்டும் ஆணையம் ஒன்றை அமைத்திடவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4.இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்!

“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்பது திராவிட இயக்கம் (திமுக), இந்திய சனநாயகத்துக்கு வழங்கிய கொடை எனலாம். 1960-களில் தமிழ்நாட்டில் வெடித்தெழுந்த மொழி உரிமைப் போராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே ‘ மாநில சுயாட்சி’ முழக்கம். 1960- களில் இருந்ததைவிட தற்போது மிகவும் முனைப்போடும் மூர்க்கத்தோடும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிப்பதில் தீவிரமாக உள்ளது.
அத்துடன், இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் வகையில், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி , ஒரே தேர்தல், ஒரே ஆட்சி” என்கிற ஃபாசிச நிலையை நோக்கி இந்தியாவைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக, தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு ‘ அதிபர் ஆட்சி ‘ முறையிலான ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை இந்தியாவில் அமைப்பதே அவர்களின் நோக்கமென தெரியவருகிறது.

1999- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்கென நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஆணையம் ஒன்றை பாஜக அரசு அமைத்தது. அப்போது நாடெங்கும் எழுந்த வலுவான எதிர்ப்பின் விளைவாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதே நோக்கத்தோடுதான் இன்றும் பாஜக அரசின் நகர்வுகள் உள்ளன என்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக முறையை பலவீனப்படுத்தி படிப்படியாக இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைத் திணிக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.

5.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்!

நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சட்ட வல்லுனர்கள் பலர் எச்சரித்துவருகின்றனர். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும்தான் இது வழிவகுக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1999-ல் இந்தப் போக்கு 68 சதவீதமாக இருந்தது, 2014-ல் அது 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சினைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகளும், மாநில நலன்களை முன்னிறுத்தும் மாநிலக் கட்சிகளும் ஓரங்கட்டப்படும். இந்தப் போக்கானது, அடித்தள மக்களை நோக்கி சனநாயகம் பரவலாவதற்குத் தடையாக அமைந்துவிடும். எனவே, மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது என்னும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்!

மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள், ‘மத்திய பட்டியல்’ ‘மாநிலப் பட்டியல்’ ‘பொதுப்பட்டியல்’ – என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது:

1)மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து அவற்றைச் செயல்படுத்தப் பணிக்கும் வகையில், சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்ட உறுப்புகளான( பிரிவுகள்) 154 மற்றும் 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.

2)அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.

3)மாநிலங்களுக்குச் சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 256, 257, 339(2), மற்றும் 344(6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.

4)பொதுப்பட்டியல் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும்;
பொதுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகுமென ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 254 திருத்தப்படவேண்டும்.

5)மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 213 (1) நீக்கப்படவேண்டும்.

6)மாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 249 நீக்கப்படவேண்டும்.

7)சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 169 திருத்தப்படவேண்டும்.

8)மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் சட்ட உறுப்பு 257(ஏ) நீக்கப்படவேண்டும்.
9)வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்காணும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 

7.ஆளுநர் பதவி ஒழிக்கப்படவேண்டும்!

ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, தம்மை நியமிக்கும் கட்சியின் முகவர்களாகவே அவர்கள் செயல்படுகின்றனர்.மத்தியில் ஆளுகிற கட்சியல்லாத பிற கட்சிகளின் அரசுகள் மாநிலங்களில் அமையுமெனில் அவற்றுக்கு தேவையற்ற நெருக்கடிகளைத் தருவதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் ஆளுநர்கள் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றனர். சிலவேளைகளில் மாநில அரசுகளைக் கலைப்பதற்கும் ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசின் ஆட்சிநிரவாகத்திற்கு ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே, ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்நிலையில்,மாநில மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8.மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும்!

மாநில அரசுகள்அனைத்துவகை பொருளாதார தேவைகளுக்கும் மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மாநில அரசுகள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. கிராமப்புற வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உட்பட மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களாகும், மத்திய அரசின் நிதி நல்கை இல்லாவிட்டால் அவற்றைத் தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) ன் படி நிதி ஆணையம்தான் மத்திய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும்.

வரியை வசூலிப்பது மத்திய அரசு, செலவுசெய்வதற்கு மட்டும் மாநில அரசு என்ற நிலை மாற்றப்படவேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும். இதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

9.ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்!

’ஒரே நாடு ஒரே வரி’ என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்னும் ‘சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு’ முறை மிகபெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும் 5% 12% 18% 28% என நான்குவகையான வரிகள் வசூலிக்கப்ப்படுகின்றன. சுமார் 60 விழுக்காடு பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கும் நாடு இந்தியா மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
அத்துடன், ‘பணமதிப்பு அழிப்பு’ நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு தணிவதற்கு முன்பே எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துவருகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மாநிலங்களை கிராமப் பஞ்சாயத்துகளின் நிலைக்குத் தள்ளிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சிபெற்ற மாநிலங்களின் வரி வருவாய் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிஎஸ்டியால் ஏற்படும் வருவாய் இழப்பை சில ஆண்டுகளுக்கு மட்டும் ஈடுசெய்வதற்காக குளிர்பானங்கள், புகையிலை, நிலக்கரி, ஆட்டோமொபைல் முதலான குறிப்பிட்ட சில பொருட்களின்மீது மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரி அரசியல் சட்டத்துக்கும் ஜிஎஸ்டி சட்டத்தின் நோக்கத்துக்கும் எதிராக உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்தியாவின் பொருளாதார நிலை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முற்றாக கைவிட்டு, மாநிலங்களுக்கும் வரிவசூலிக்கும் அதிகாரமளிக்கும் வகையில் வரிவிதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

10.மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!

மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால், பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் பிரதமாராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்குமான சூழல் உருவாகிறது. இதனால், சிறிய மாநிலங்கள் பலவகைகளில்
வஞ்சிக்கப்படும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆட்சியதிகாரப் பகிர்வு மற்றும் பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட வலுவான அதிகாரமுள்ள பதவிகள் ஆகியவற்றில் சிறிய மாநிலங்களுக்கும் சுழற்சி அடிப்படையில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அத்துடன், தற்போது மக்களவைக்கு நடைமுறையில் இருப்பதைப் போல மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலும் கேபினட் அமைச்சரவையிலும் தலித் மற்றும்
பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

11.நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!

நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியா முழுமைக்கும் ஒருங்கிணைந்த நீதிமுறை அமைப்பை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனைகள் பெறப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.

அடுத்து, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் பெரும்பாலும் மத்திய அரசின் மேலாதிக்கத்துக்கு ஊறு நேராவகையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கு எத்தகைய அதிகாரமுமில்லை என்னும் நிலையே இவற்றுக்கு காரணமாகும். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 217, 222, 223, 224, 224 ஏ ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.தேசியப் புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்கவேண்டும்!

சட்டம் ஒழுங்கைப் பேணுவது உள்ளிட்ட காவல்துறை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய அரசிடமிருக்கும் சிபிஐ என்னும் புலனாய்வு அமைப்பு மாநிலத்தில் ஒரு வழக்கை விசாரிக்கவேண்டுமெனில் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும், அல்லது நீதிமன்றத்தின் ஆணை பெறப்படவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மாநில அரசின் காவல்துறை அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் ‘தேசிய புலனாய்வு முகமை’ (என்ஐஏ ) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பயங்கரவாதக் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கென தனிச் சட்டம் ஒன்றின்மூலம் இந்த அமைப்பு உருவாக்கபட்டது. நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பயங்கரவாதக் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த தேசிய புலனாய்வு முகமை என்னும் அமைப்புக்கு அச்சட்டம் வகை செய்கிறது.

சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான வகுப்புவாத கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை ஏவிவிடக்கூடிய பேராபத்து உள்ளது.

எனவே, மாநில அரசின் காவல்துறை அதிகாரத்துக்கு எதிராகவுள்ள தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ அமைப்பைக் கலைக்கவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே அளித்திட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13.கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்!

அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போதே கல்வியைப் பொதுப் பட்டியலில் வைக்கவேண்டும் என்ற திருத்தம் சில உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. பள்ளிக் கல்விக்கு மேலுள்ள மாநில அதிகாரங்களைக் குறைத்திட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தத் திருத்தங்கள் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்களின் வாதத்தால் நிராகரிக்கப்பட்டன.

அடுத்து, உயர் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என 1965 ஆம் ஆண்டு ‘சப்ரூ கமிட்டி’ பரிந்துரை செய்தது; கல்வி முழுவதையும் பொதுப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 1971 இல் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இறுதியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம்தான் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் தற்போது ‘நீட்’ என்னும் ‘தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு’ நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்கவேண்டும் எனத் தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கும், இதனால் தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி’ என்னும் திட்டத்தைப் போன்றதொரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இவ்வாறு, மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பாஜக அரசின் அணுகுமுறை தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

14.இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்!

1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாகஉருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தமிழ்நாட்டின்மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம்மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில், அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும்; அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டும். உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்கவேண்டும். மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.

எனவே, இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343 ம், இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 351 ம் நீக்கப்படவேண்டும்; எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்தவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் நேரில் விளக்கம் அளித்தார். விளக்கம் அளிக்காத மற்ற 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் விவரம்:

தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி தொகுதி

ஆர்.முருகன் – அரூர்

மாரியப்பன் கென்னடி – மானாமதுரை

கதிர்காமு – பெரியகுளம்

ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்

பழனியப்பன் – பாப்பிரெட்டி பட்டி

செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி

எஸ். முத்தையா – பரமக்குடி

வெற்றிவேல் – பெரம்பூர்

என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்

கோதண்டபாணி – திருப்போரூர்

ஏழுமலை – பூந்தமல்லி

ரெங்கசாமி – தஞ்சாவூர்

தங்கதுரை – நிலக்கோட்டை

ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்

எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர்

ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம்

கே.உமா மகேஸ்வரி – விளாத்திகுளம்

 

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கான வினாதாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை; மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப் பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார் . அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலியிட்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவச் சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித்தல் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் வரும் 12-ஆம் தேதி விவாதம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா… பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.
பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே மருத்துவர் அய்யா அவர்கள் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதில்  24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது.  அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.
ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச்சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட  பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது  அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக்  கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத  வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான்  தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக  தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு எள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அதிமுக அரசு எண்ணெய்யாக செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்ததார். இந்த செய்தி வந்த நாளிதழை மேற்கோள் காட்டி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த செய்தி உண்மையானால் தமிழகம் வளர்வதற்கு முதல் படி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் என்பதை பார்க்காமல், பாஜக அரசு சொல்வதை அதிமுக அரசு கேட்கிறது என்பதாக எஸ். வி. சேகர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சேகர் ஆதரவாளர்களோ, நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக கைது செய்திருப்பதைத்தான் எஸ்.வி,சேகர் சொல்கிறார் என்கிறார்கள்.

https://twitter.com/SVESHEKHER/status/889333673794846721

தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!

தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் துறை 24 மணி நேரம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு ஆண்டுக்கு ஒரு முறை நிதி ஒதுக்குவது அவசியம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அளித்த விளக்கத்தில், “மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவி தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வளர்மதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்” என தெரிவித்தார்.

கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி

அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறிய போது, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என்றார்.

கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என அமைச்சர் செங்கோட்டையனிடன் தமிமுன் அன்சாரி சொன்னதாகச் சொல்வது எம் எல் ஏக்களை பிடிக்கும் குதிரை பேரம் நடந்திருப்பதையே சுட்டுகிறது. நான் பணம் வாங்க மறுத்ததை சொல்ல வந்த அன்சாரி, பேரம் நடந்ததையும் போகிறபோக்கில் சொல்லிவிட்டார்.

கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டிங் ஆபரேஷன் மூலம் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனிடம் பேரம் பேசியது குறித்து எடுக்கப்பட்ட வீடியோதான் சமூக ஊடகங்களில் இன்றைய டாபிக்!

சரவணன் அந்த வீடியோவில் எம் எல் ஏக்களை எப்படி சசிகலா அணியினர் பேரம் பேசினர் என்றும் 3 எம் எல் ஏக்களுக்கு மட்டும் ரூ. 10 கோடி பேரம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். சரவணின் பேச்சு குறித்து முகநூலில் வெளியான சில கருத்துகள்…

saravanan chandran: மிடிலை. அப்புறம் கூவத்தூரில் சத்தியா கிரகமா இருந்தார்கள்? பெட்டியும் ரொக்கமும் தங்கமும் பாட்டிலும் கட்டிலும் கலந்து வாழ்வாங்கு வாழ்ந்தது தெரியாதா என்ன? வேற எடத்துக்கு நகந்துட்டாங்க பாஸ்! இதெல்லாம் ரெம்பப் பழசு. எங்க ஒரு ஓவாவ பிடிங்க பாப்போம். புதிதாக டுவிஸ்ட் இருக்கா சொல்லுங்க?

கருப்பு கருணா:

தெய்வமே…தெய்வமே…
நன்றி சொன்னேன் தெய்வமே..
வாங்கினேன்…வாங்கினேன்..
பத்து கோடி தெய்வமே…

அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்…ச்ச்சே!

Rajarajan RJ:

கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோருக்கு கூவத்தூர் தீர்மானத்தில் பத்து கோடி கொடுக்கப்பட்டது! இவர்கள் தனிநபர்களாக இல்லாமல் தங்கள் சமூகத்தின் லாபியிஸ்டுகளாக இருந்ததால் விலை அதிகம் போல. #MLAsForSale

பிரதாபன் ஜெயராமன்:

ஆண்டபரம்பரையை 10 கோடிக்கு அடகு வைத்த கருணாஸ், தனியரசு

#MLAsForSale

Swara Vaithee:

இன்னும் கொஞ்ச நாளைக்கி பிரேக்கிங் நியூஸா போட்டு கொல்லப்போறாய்ங்க.

அது நம்மள நோக்கி தான் வருது
எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க. 🏃🏃🏃

koovathur

Ezhil Arasan:

கன்டெய்னர் ரோட்டுலேயே நின்னுச்சு..அது என்னாச்சுனு யாரும் கேக்கல..இப்ப புலனாய்வு ஒன்னுதான் குறைச்சல்..

Vinayaga Murugan:

டைம்ஸ் நவ்வை பார்த்தால் இந்த ஆட்சியை கலைச்சுடுவாங்க போலிருக்கே. நம்ம ஸ்கூட்டி என்னாகுறது?

Saravanan Savadamuthu: 

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி என்னும் கேடி..

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கப் போன வழக்குன்னு சொன்னவுடனேயே விழுந்தடிச்சு கேஸை போட்டு தூக்கி உள்ளார வைச்சாங்களே.. அது மாதிரி இதுவும் சீக்கிரமா ஒர்க்கவுட்டு ஆகும்ன்னா நினைச்சீங்களா..? ஆகவே ஆகாது..!

ஜனாதிபதி தேர்தல் முடிஞ்சவுடனேதான் இந்தப் பிரச்சினையை கேடியும், ஜெட்லியும் இதை கைல எடுப்பாங்க.. அதுவரைக்கும் ஊறப் போடுதல்தான்..!

Bala G:

இதுல கவனிக்க வேண்டியது என்னனா.. மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு அப்புறம் தான் இவ்வளவு அமவுண்டு கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிருக்காங்க..

அவ்வளவுதான் மோடியின் அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் லட்சணம்.. 😉

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

சுப. உதயகுமாரன்

சுப. உதயகுமாரன்

திரு. ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்:

[1] தனது உண்மையான, முழுமையான சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்.

[2] கடந்த ஐந்தாண்டுகளில் கட்டிய வருமானவரிக் கணக்கு விபரங்களை, தணிக்கை அறிக்கைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

[3] இதுவரை தனது சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட கருப்புப் பணமாகப் பெற்றதில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

[4] எந்தெந்த ஜோதிடர்கள், பூசாரிகள், சாமியார்கள் இவருக்கு அறிவுரைக்கிறார்கள், அல்லது முடிவுகள் எடுக்க உதவுகிறார்கள் என்கிற முழு விபரத்தை அறியத்தர வேண்டும்.

[5] நதிநீர் இணைப்புக்கு நன்கொடை தருவதாக அறிவித்த ஒரு கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தார். அந்தப் பணம் எப்படி செலவு செய்யப்பட்டது என்கிற விபரத்தைத் தர வேண்டும்.

[6] தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதத்தில் பொதுமேடை ஒன்றை அமைத்து மக்களை சந்திக்க வேண்டும்.

சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

வீடியோ: நடிகர் சத்யராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு

“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்

சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்ப பொய் சொல்வோம்” என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில்” திட்டத் துவக்க விழாவில் பேசியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, “அம்மையார் ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்” என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக் கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் அரசு விழாவில் அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.

2006 முதல் 2011 வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 7.11.2007 அன்று நடைபெற்ற 23 வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகளை கழக அரசுதான் தீவிரமாக மேற்கொண்டது. நானே பலமுறை அப்பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அந்தவகையில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் கழக அரசின் முதற்கட்ட வெற்றிதான் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலும், இப்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயிலும் என்பதை முதலமைச்சருக்கு மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அது மட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட நிதிக்காக தலைவர் கலைஞர் அவர்களின் ஆணைப்படி ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, ஜப்பான் கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்தேன். இதுபோன்ற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு மற்ற மாநிலங்கள் இரண்டரை வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி 12 மாதத்தில் பெறப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை.

அதன்பிறகு, மத்திய அரசின் “பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு” 28.1.2009 அன்று தமிழக அரசு அளித்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியளித்தது. இத்திட்டத்திற்கு “ஜெனரல் கன்சல்டன்ட்” கழக ஆட்சியில் 24.2.2009 அன்றுதான் நியமிக்கப்பட்டது. கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மேல்மட்ட ரயில் பாலம் (VIADUCT) அமைக்க 13.2.2009 அன்று முதல் டெண்டர் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் முதல் மின்மயமாக்கல் பணிகள் வரை (Electrification works) 9 டெண்டர்கள் கழக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன.

நிலைமை இவ்வாறிருக்க, மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று “இலைச்சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல்” கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்கு கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். முதலமைச்சராவது புதிதாக பொறுப்பேற்றவர். அ.தி.மு.க.விற்குள் நடைபெற்ற “அணி போட்டியில்” தற்காலிகமாக அந்த பதவிக்கு வந்திருப்பவர். ஆனால் அந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அவர்களும் “மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அனுபவமிக்க மத்திய அமைச்சர் ஒருவர் அரசு விழாவில் பங்கேற்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது. “மெட்ரோ ரயில் வேண்டாம். நாங்கள் மோனோ ரயில் விடப்போகிறோம்” என்று கூறி, இரு வருடங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததை மத்திய அமைச்சர் முழுமையாக மறைத்து, அதிமுக வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க நினைக்கலாம். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவலை ஒரு அரசு விழாவில் வெளியிடுவது மிகத் தவறானது என்பதை மத்திய அமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வருமான வரித்துறை அளித்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முதலமைச்சருடன் விழா மேடையில் பங்கேற்றதுடன், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர்” என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியிருப்பது “ஊழல் விஷயத்தில்” பா.ஜ.க.வின் உண்மை முகத்தை காட்டுகிறது. “ஊழல் ஒழிப்பு எங்கள் உயிர் மூச்சு” என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. மாநிலத்திற்கு மாநிலம் ஊழலில் சிக்கியவர்கள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை எடுப்பது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

சுயநல அரசியலுக்காக அதிமுக விஷயத்தில் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே அடகு வைத்துவிட்டு, இப்படி ஊழல் அமைச்சர்களுடன் மேடையேறும் நிலைக்கு வந்தது ஏன் என்பதை தமிழக மக்களுக்கு பா.ஜ.க. விளக்க முன் வர வேண்டும். “டெல்லி” “உத்தரபிரதேசம்” “மேற்குவங்கம்” “பீஹார்” “ஹரியானா” போன்ற மாநிலங்களில் “ஊழல் எதிர்ப்பு”, “தமிழகத்தில் அதிமுக ஊழலுக்கு அரவணைப்பு” என்ற பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மெட்ரோ ரயில் துவக்க விழாவில் ஊருக்கே அம்பலமாகி விட்டது.

ஆனால் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக செய்யப்பட்ட பணிகள், சென்னை மாநகரின் போக்குவரத்து வசதிகளை பெருக்குவதற்காக கட்டப்பட்ட மேம்பாலங்கள், தமிழக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மலை போன்ற சாட்சியங்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. ஆகவே அதிமுக முதலமைச்சரும், பா.ஜ.க. மத்திய அமைச்சரும் “கூட்டணி” அமைத்துக் கொண்டு, இப்படி தி.மு.க.விற்கு எதிராக செய்துள்ள ஆரோக்கியமற்ற விமர்சனத்தால் மக்கள் மத்தியில் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள செல்வாக்கை இம்மியளவு கூட குறைக்க முடியாது. ஆனாலும் நாட்டு மக்களுக்கு “மெட்ரோ ரயில் திட்டம்” குறித்த உண்மைத் தகவல்களை தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளேன்.

ஆகவே, இனியாவது அதிமுக “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மெட்ரோ ரயில் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிள்ளை என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய அமைச்சர் திரு வெங்கய்யா நாயுடு அவர்களும் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி எஞ்சியிருக்கின்ற மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சரும், அதற்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

குடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு

வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் விவசாயிகள் மரணமடைந்ததாகவும் வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரம் கூறுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்ட மக்களின் சோகக் கதை!

சந்திரமோகன்

சந்திர மோகன்

அவருக்கு அன்றும், இன்றும் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய தகுதியை மறந்த வரலாறும் கூட! அய்தாண்டுகளுக்கு முன்னர், 2012 ல், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், சேலம் மாநகரின் எல்லையில் உள்ள பொதுத் துறை கம்பெனியான செயில் ரிப்ராக்டரீ கம்பெனிக்கு, “ரூ.458 கோடி ரூபாய் தமிழக அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் ” என ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

2011 வரை BSCL பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனி லிமிடெட் என்ற பெயரில், சிரமத்துடன் செயல்பட்ட பொதுத்துறை நிறுவனமானது, ஒரு வழியாக BFIR க்குச் சென்று மத்திய அரசின் புனரமைப்புத் திட்டப்படி, 2011 ல் செயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஆண்டிற்கு ரூ.20 இலாபம் ஈட்டும் நிறுவனம் ஆகும். ஓமலூர் வட்டத்தில் செங்கரடு, தாத்தையங்கார் பட்டி கிராமங்களில் 1800 ஏக்கர் திறந்தவெளி சுரங்கங்களில் மேக்னசைட் (வெள்ளைக்கல்) கனிமத்தையும் கொண்டுள்ள அரசு சார்பு நிறுவனமாகும். 1000 ற்கும் மேற்பட்டோர் (பெரிதும் ஒப்பந்த தொழிலாளர்கள்) பணிபுரியும் நிறுவனம் ஆகும். மத்திய அரசாங்கத்தின் புதிய MMDR 2015 திருத்த சட்டத்தின் படி, கடந்த சில மாதங்களாக சுரங்கங்கள் மூடப்பட்டு, வேலை- கூலி இல்லாததால், ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

(இச் சுரங்கத்தின் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த கனிம வளம் மிக்க 161 ஏக்கர் நிலமானது, Tidal Park அமைக்க வேண்டும் என கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மிரட்டி வாங்கப்பட்டது. Tidel Park இன்று வரையிலும் வரவில்லை என்பது ஒரு துணைக் கதையாகும்.)

வரலாறு கூடத் தெரியாத…

செயில் நிறுவனத்திற்கு பர்ன் கம்பெனி மாறிவிட்டது எனத் தெரிந்த பின்னர், (என்ன கோபம்,என்ன காரணம் எனத் தெரியவில்லை ) 2011 ல் அதிமுக அரசாங்கத்தின் ஆலோசனை பெயரில், எடப்பாடியாரின் வழிகாட்டுதலில், வரலாறே படிக்காத சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், “சுரங்கத்தை நடத்தி வருவதற்கான குத்தகை/நில வாடகை பாக்கியை 1943 முதல் 2009 வரையிலான 66 ஆண்டு காலத்திற்கு ரூ.458 கோடி செலுத்த வேண்டும்” என டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பினார். அதாவது இந்த மாவட்ட ஆட்சியர் SRCL யை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பணம் கட்ட சொன்னார்.
சுதந்திரம் பெற்ற பின்னர் 60 ஆண்டு காலமாக, இந்த பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஏன் நிலவாடகை வசூலிக்க வில்லை ? என்பதை பற்றி அவர் இதுவரையிலும் எங்கும் சொல்லவில்லை.

மோடி அரசாங்கத்தின் தாக்குதல்!

நாடு முழுவதுமுள்ள சுரங்கங்களை பழைய லீஸ் உரிமதாரர்களிடமிருந்து பிடுங்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க கொண்டு வரப்பட்டது, MMDR 2015 திருத்த சட்டம். திருத்தப்பட்ட “சுரங்கங்கள் & கனிமங்கள் (அபிவிருத்தி & முறைப்படுத்துதல்) சட்டம் 2015 ன் நோக்கம் பழைய உரிமதாரர்களை, பொதுத்துறை சுரங்கங்களை,சிறிய சுரங்கதாரர்களை ஒழித்துக் கட்டுவதாகும். MOEF யிடமிருந்து புதியதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு/EIA மதிப்பீடு அறிக்கை பெற வேண்டும். அதன் பிறகு தான் சுரங்கங்களை இயக்க முடியும். எனவே, 2016 லிருந்து நாடு முழுவதுமாக சுரங்கங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
MMDR 2015 திருத்த சட்டத்தின் பிரிவு 10 A (2)C பிரிவானது reprieve measure /இடைக்காலமாக மீட்கும் வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. MoEF யிடம் Clearance வாங்க தாமதமானால், மாநில அரசாங்கம் மூலம் முயற்சிக்கலாம். அதாவது புதிய சட்டத்திற்கு முன்பாக, மாநில அரசாங்கத்திடம் விருப்ப மனுக்கள் வந்தால், அவற்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தால் அனுமதி கிடைக்கும். (ஒடிசா அரசாங்கம் இந்த அடிப்படையில் 16 கம்பெனி களுக்கு அனுமதி வாங்கியது என்பது ஒரு தனிக்கதை).

தமிழக அரசாங்கம் என்ன செய்தது? கணக்கு தெரியாத மாவட்ட ஆட்சியர்?

SRCL நிர்வாகம், சுரங்க செயல்பாட்டை உயிர்ப்புடன் கொண்டு வர, “reprieve” clause உதவிக்காக தற்போது உள்ள சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்தது. மாவட்ட நிர்வாகம் உதவி செய்வதற்கு பதிலாக தாக்குதல் நடத்தியது. மாவட்ட ஆட்சியர் சொன்னார் : ” 60 மாதங்களுக்கு முன்னால் 458 கோடி ரூபாய் வழங்க உத்தரவு போட்டோம். வட்டி, கூட்டு வட்டி சேர்ந்து இப்போது ரூ.1138 கோடி கட்டுங்கள் ” இதை எழுத்துப் பூர்வமாக விளக்கி டிமாண்ட் நோட்டீஸ் வழங்கி விட்டார்.

மாவட்ட ஆட்சியர் சொல்வது

5 வருடத்தில் 458 கோடி, 1138 கோடியாகிவிட்டது.மொத்த SRCL சொத்தையும் விற்றால் கூட கால்வாசி பணத்தைக் கூட கட்ட முடியாது. கம்பெனியை இழுத்து மூடி, சுரங்கத்துக்கு மூடுவிழா நடத்தி 1800-161= 1639 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்து, கொள்ளையில் ஈடுபடுவதை தவிர வேறு நோக்கம் தமிழக அரசாங்கத்திற்கு இருப்பதாக தெரியவில்லை.

சிறு சுரங்கங்களையும் ஒழித்துக் கட்டும் தமிழக அரசாங்கம்!

புதிய EIA சட்டத்தின் படி, 5 ஹெக்டேருக்கு குறைவாக அளவுள்ள சிறு கனிமங்கள் எடுக்க DEIAA என்ற மாவட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு கமிட்டி அமைக்கப்பட்டு உரிமம் வழங்க வாய்ப்பளிக்கப் பட்டது. ஆனால், அதிமுக அரசாங்கம் DEIAA அமைக்கவே இல்லை. சுரங்க உரிமையாளர்களிடமிருந்து இலஞ்சப் பணம் நேரடியாக “கார்டனுக்கு” போக வேண்டும் என்பதற்காக SEIAA என்ற மாநில அமைப்பை மட்டுமே அமைத்துக் கொண்டு வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தியது.

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உட்பட்டும், சுரங்கத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளில் இறங்காமல் காசு,பணம் பார்த்துக் கொண்டிருந்தது, அதிமுக அரசாங்கம். இறுதியாக, பசி பட்டினி கடனில் சிக்கி சீரழிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தான்! SRCL யிடம் ஆயிரம் கோடியை அதிமுக அரசாங்கம் கேட்கும் கதை, ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக 1639 ஏக்கர் நிலத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்வதை அம்பலப்படுத்துகிறது.

வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது தமிழக அரசாங்கம்!

மார்ச்.22 அன்று, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக, “பொதுத்துறையை பாதுகாக்க கோரியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்க கோரியும், ரூ.1138 கோடி கேட்கும் இத்தகைய கேவலமான அணுகுமுறையை கைவிடக் கோரியும் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

‘மட்டன் பாயா’ புகழ் அதிமுக எம்.எல்.ஏ.சத்யநாராயணனை சுற்றி வளைத்த மக்கள்!

கூவத்தூரில் இருந்து திரும்பிய தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன் காலை நடைபயிற்சிக்காக ஜீவா பூங்காவிற்கு சென்றார். அப்போது, அங்கு நடைபயிற்சிக்காக வந்திருந்த சுமார் 25 பேர் அவரை சுற்றி வளைத்து, சசிகலா அணியை ஏன் ஆதரித்தீர்கள் என்று கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை.

sathya

மக்களின் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் திணறிய எம்.எல்.ஏ அங்கிருந்து வெளியேறினார். “வோட்டு கேட்க எங்களது வீடு தேடி வரும் எம்எல்ஏ-க்கள், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது மக்களின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும், அவரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது,” என அங்கிருந்த ஒருவர் கூறினார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் கருத்து தெரிவித்த தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன், சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையும் ஆட்சியையும் சம்மந்தப்படுத்த கூடாது என கூறியிருக்கிறார்.

‘மட்டன் பாயா குடுத்து மட்டையாக்கிடுறாய்ங்க’ என்று கூவத்தூர் சொகுசு விடுதியில் சத்யநாராயணன் கூறியதை வெளியிட்டது பாலிமர் தொலைக்காட்சி.

காணொலி கீழே…

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார்.  புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில்,

“மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான “ஹேட்ரிக்” சாதனை செய்திருக்கிறது. அப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற கட்சி தலைவரை பதவியேற்றுக் கொள்ள இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் அழைத்திருக்கிறார்.

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே நோக்கமாக இருந்தது என்பதும், குறிப்பாக கடந்த 5ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் இதை பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரடியாக மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்தித்து “நிலையான அரசு அமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை மனுவினை கொடுத்து வலியுறுத்தியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதவிக்காக அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளோ, உள்கட்சி குழப்பங்களோ, அதிகாரப் போட்டியின் விளைவான கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்களோ, க்ரீம்ஸ் சாலை பட்டாசு வெடிக்கும் காட்சிகளோ, மாநிலத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் ஆபத்தாக முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை காட்டியது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்திட விரும்புகிறேன்.

புதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே தான் நான் பார்க்கிறேன். முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு, அதன் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் செயல்படாத அரசு, இப்போது சிறையில் இருக்கும் அதிகார மையத்தின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் என்று தமிழக அரசு நிர்வாகம் மேலும் ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலையை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும், மக்கள் படும் அவதிகளுக்கும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சூழலுக்கும் தீர்வு காணும் வகையில் தமிழகம் ஒரு “செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை” இந்த புதிய அரசின் மூலம் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனாலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதிலும் தெளிவு இல்லை.

பதினைந்து தினங்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அளித்திருக்கும் காலக்கெடு குதிரை பேரத்திற்கு வித்திடும் என்பது ஒரு புறமிருக்க, அவசர அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பது தமிழக நலனுக்கு உகந்ததாகவோ, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் வகையிலோ எவ்விதத்திலும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்றுக் கொள்கிறார் என்றும், அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது என்றும், நான் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக சேலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் எனது உதவியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆகவே அவசர கோலத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், “பெங்களூர் ஜெயிலுக்கு” சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற “ஆட்டுவித்தலுக்கு” ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளதாக தெரிவித்துள்ளார்.

”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் “இரு நீதியரசர் இருக்கை” அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், தமிழகத்தில் பல்வேறு வகையிலான குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன என்பதை இச்சூழலில் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், மறைந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் காலமானதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது, அவர் குற்றமற்றவரென்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, சனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

”ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்”

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது தொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, 18 ஆண்டுகள் நடந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுவித்தார். தற்போது உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணைகளையும் முழுமையாக உறுதிப்படுத்துவதாக தீர்ப்பில் கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தீர்ப்பை மனமாற வரவேற்கிறது. பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது வலு சேர்க்கும் என்றும் கருதுகிறது. ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இச்சூழலில், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போக வேண்டும். அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் சட்ட நடைமுறையின் படி, சட்டமன்றம் கூட்டப்பட்டு, உரிய முறையில் அரசாங்கம் நிறுவப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.இந்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ,அ.இ.அ.தி.மு.க வில் மௌனமாக நடந்துவந்த அதிகாரப்போட்டி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆளும் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதனை தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் பொறுப்பாகும்.டிசம்பர் 5 ஆம் தேதி திரு ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,பிப்ரவரி 5 ஆம் தேதி திருமதி வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது காபந்து அரசின் முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தான் சட்ட மன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் திருமதி சசிகலா உறுதிபடக் கூறுகின்றார். மிக காலதாமதாமாக சென்னை வந்த ஆளுநரை ,இருவரும் சந்தித்துள்ளனர். ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது உள்நோக்க முடையது.தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் செத்துமடிந்து கொண்டிருக்கின்றனர்.ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.அரசு நிர்வாகம் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க வில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க முயல்வதும் ,அதற்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதும் , அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

உடனடியாக சட்டப் பேரவை கூட்டத்தை நடத்தி, யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும்.அத்தகைய கடமையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும்.ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.