இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!

டி. தருமராஜ்

பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதையுமே எழுதப்போவது இல்லை என்று தான் முடிவு செய்திருந்தேன்.

ஆனால், எனது நண்பர்கள் அடையும் மனக் கலக்கம் என் விரதத்தைக் கலைத்திருக்கிறது.

எதையுமே எழுதுவதில்லை என்று தீர்மானித்திருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அவை இன்னமும் உயிரோடு இருக்கின்றன.

தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு நாத்திகக் கிறித்தவனான எனக்கு பொக்கென்று இருந்தது. இந்தப் பொக்கை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதே எனக்கு விளங்காமல் இருந்தது.

சில நெருக்கடியான நேரங்களில் இப்படி தோன்றக்கூடும். அதை, வெறுமை, ஆயாசம், இயலாமை என்று எப்படி சொல்லிப் பார்த்தாலும் சரியாக வரவில்லை. ஆனால், எதுவோ இன்னமும் மிச்சமிருப்பது போலவும், அது உங்களோடு உங்களை தின்று கொண்டிருப்பது போலவும் படும் உணர்வு.

நமது நண்பர்கள் சிலரும் கூட இதே மாதிரியான உணர்வுகளால் தாக்கப்பட்டிருப்பதை அவர்களின் பதிவுகளும் கட்டுரைகளும் காட்டுகின்றன.

அதனால், அவர்களுக்கு ஒரு இலவச தப்பித்தல் வழிமுறையைச் சொல்லித்தரலாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

ஒரு இஸ்லாமியராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது பெளத்தர் போன்ற வேறு சமய அடையாளங்களுடனோ அல்லது பகுத்தறிவுவாதியாகவோ அல்லது நாத்திகராகவோ இந்தத் துயரத்தை நீங்கள் கடக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதைக் கடப்பதற்கு மிக எளிய சூத்திரம் –

கண்ணை மூடிக் கொண்டு, நீங்களும் அந்தப் பெரும்பான்மை இந்துக்களில் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நினைத்த மறுகணத்திலிருந்து உங்கள் மனம் இறகு போல இலகுவாவதை உணர்வீர்கள்.

அந்த இனம் புரியாத அழுத்தம் இப்பொழுது உங்களை விட்டு விலகிச் செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

ஒரு இந்துவாக, அந்த த் தீர்ப்பை எதிர் கொள்வது எல்லாவற்றிலும் எளிது என்பதை நீங்களே இப்பொழுது உணரத் தொடங்குவீர்கள்.

இந்துவாக உணரும் நீங்கள் இந்தப் பிரச்சினையை கடப்பதற்கான வழிமுறைகள் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.

  1. ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து பெருமை கொள்ளுதல்.
  2. அல்லது சஞ்சலப்படுதல்.
  3. அல்லது வெட்கப்படுதல்.
  4. அல்லது கோப ப்படுதல்.
  5. அல்லது ஆவேசப்படுதல்.
  6. அல்லது நியாயப்படுத்துதல்.

நீங்கள் இந்துவாக இல்லாத பட்சத்தில் இதில் எதையும் நீங்கள் செய்ய முடியாது என்பது தான் இன்றைய நிலவரம்.

டி. தருமராஜ், பேராசிரியர்; எழுத்தாளர். 

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

டி. தருமராஜ்

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

தமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது போலும்! யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இது தமிழின் இன்னொரு துர்பலம். எது எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் குப்பையில் வீசி விடுகிற அலட்சியம். இந்த மூன்று பண்டிதர்களையும் அப்படியொரு தமிழ் குப்பையிலிருந்தே தேடி எடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த மூன்று பேரிடமும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன: அவர்களுக்கு தமிழ் தான் மூச்சு; இந்து மதத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்திக் கொண்டவர்கள்; பைபிள் பரிச்சயம் உண்டு (ஏதேன் தோட்டக் கதையை அறிந்தவர்கள்); தமிழ் பண்பாடு குறித்து ஆழ்ந்த அக்கறை காட்டியவர்கள்; ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்; தத்தம் சாதியடையாளத்தில் அரசியல் செய்யாதவர்கள்… இப்படி நிறைய ஒற்றுமைகள். எனக்கு உவப்பானது அவர்களது தேசியக் கற்பனைகள்!

அயோத்திதாசர் ‘இந்திர தேசம்’ என்றொரு தேசியத்தைக் கற்பனை செய்கிறார் என்றால், ஆபிரகாம் பண்டிதர் ‘கடற்கோளால் அழிந்த’ தேசமொன்றை உருவாக்கிக் கொள்கிறார்; பாவாணருக்கு இது ‘குமரிக்கண்டம்’. ஏறக்குறைய, இம்மூன்று பேர் சொல்வதும் ஒரே தேசத்தை தான் என்று சொல்வதற்கு காரணங்கள் நிறைய உண்டு.

இந்த மூன்று தேசத்திலும் ‘தமிழ்’ தான் புழங்கு மொழி. அதே போல இந்த மூன்று தேசங்களிலும் பிராமணர்கள் இல்லை. பிராமணர்கள் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள். திராவிடர்களின் வார்த்தைகளில் சொல்லப் போனால், அந்த தேசத்தை ‘நான் – பிராமின் தேசம்’ என்று கூட அழைக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படி பெயரிடவில்லை!

பிராமணர்களை ‘வந்தேறி’களாகச் சொல்வதற்கு வரலாற்றுக் காரணங்கள் இல்லை. ஆனால், அவர்களிடம் சமூகக் காரணங்கள் இருந்தன. சாதியமைப்பின் கொழுத்த லாபத்தை அனுபவிப்பவர்களாகவும், அதனை முட்டுக்கொடுத்து காப்பவர்களாகவும் பிராமணர்களே நிரூபிக்கப்பட்டிருந்தனர்.

வேடிக்கை என்ன என்றால், இதுவும் கூட பிராமணர்களின் வாக்குமூலங்கள் மூலமே நிரூபிக்கப்பட்டிருந்தத. இந்த தேசத்தின் அத்தனை நல்ல விஷயங்களுக்கும் தாங்களே ஜவாப்தாரி என்று சொல்லிக் கொள்ளும் தீரா வியாதி பிராமணர்களுக்கு உண்டு. எந்தவொரு நல்ல விஷயத்தையும் பிராமண குடுவைக்குள் அடைத்து வைப்பது அவர்களின் குணம். அந்த வகையில் இந்த நாட்டின் சாதியமைப்பையும் தாங்களே மையமாக நின்று தாங்குவதாக அவர்கள் சான்றுகளை உருவாக்கியிருந்தார்கள்.

இந்த தேசத்தின் மொழி, கலை, பண்பாடு, அறிவியல், கல்வி, நீதி, அரசியல், சமயம், தத்துவம் என்று அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு என்று சொன்னது போல, இந்த சாதிய சமூக ஒழுங்கமைப்பிற்கும் தாங்களே பொறுப்பு என்பதாகத்தான் அவர்கள் வாதம் இருந்திருந்தது. இதுவொரு அறிவீனம். ஆனால், நிறைய நேரங்களில் மூடத்தனம் தான் புத்திசாலித்தனமாக இருக்கிறது.

இது முழுக்க முழுக்க, பிராமணர்களின் அடையாளச் சிக்கலினால் உருவாகும் மனக்கோளாறு. அவர்கள் கொஞ்சம் முயன்றால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், இந்தக் கோளாறையே இயல்பாகக் கருதி வாழத்தொடங்கி விட்டதால் கொஞ்சம் கஷ்டம். சரி, விஷயத்திற்கு வரலாம்.

இப்படித் தானாகவே வந்து, சாதிய ரெளடியாக ஜீப்பில் ஏறி பிராமணர்களை விட்டுவிட்டு ஒரு கனவு தேசத்தை நிர்மாணிப்பதற்கான ஒரே காரணம் – அது, சாதியற்ற சமத்துவ தேசமாக இருக்க வேண்டும் என்பது தான்.

சாதிக் கொடுமையின் மிக மிக எளிய உருவகமாக பிராமணர்கள் இருந்தார்கள் என்பதிலிருந்தே அந்தக் கற்பனை ஆரம்பிக்கிறது. அதாவது, அது இந்திர தேசமோ, கடற்கோளால் அழிந்த தேசமோ அல்லது குமரிக்கண்டமோ, என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த தேசங்களில் சாதி வேற்றுமை இல்லை என்று சொல்வதற்கு மிக எளிய சான்று, அந்த தேசங்களில் பிராமணர்கள் இல்லை என்று நிரூபிப்பது. இதையே அந்த மூன்று கற்பனைகளும் செய்து கொண்டிருந்தன.

இந்திர தேசத்தில் பல மொழிக்காரர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்; அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு அநாகரீகக் குழு வந்து சேர்ந்தது. பூர்வ தேசத்தில் தமிழிசை செழித்து வளர்ந்திருந்தது; கடற்கோள் வந்து, அனைத்தையும் சிதைத்தது. குமரிக்கண்டத்தில் மாந்தன் தமிழனாக இருந்தான்; கடற்கோள் வந்து பிரிவினைகள் தோன்றின.

இந்தக் கற்பனைகளின் பலம் அவற்றிற்கான வரலாற்று சான்றுகளோ, தொல்லியல் சான்றுகளோ இல்லையென்று அழுத்தமாய் சொல்ல வேண்டும். அழிந்த போன இந்திர தேசத்தையோ குமரிக்கண்டத்தையோ அகழ்ந்தெடுப்பதும் அல்லது மூடத்தனம் என்று அறிவிப்பதும் சம அளவிலான முட்டாள்தனங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.

சரஸ்வதி நதியைத் தேடுவதை விடவும் இது கேவலமானது. ராமர் பாலத்தின் பொறியியல் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதை விடவும் இது அசிங்கமானது.

கதைகளை அல்ல, அவற்றின் பின்னிருக்கும் நோக்கத்தை உணர்வதே தமிழ் தேசியத்தை உணர்தல் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கற்பனைகளின் நோக்கம், சாதியற்ற சமூகமாக இருக்கிறது.

இந்த நோக்கத்தை கற்பனை செய்தவர்கள், இது அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடும் என்று நம்பவில்லை. எங்கே பொய்த்துப் போகுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் ஊறித் ததும்பிது.

அந்த அச்சத்தை போக்குவதற்கே, ‘இல்லையில்லை, சமத்துவ சமூகம் என்ற யோசனை அதிசய விஷயமில்லை; அது ஏற்கனவே இங்கு இருந்தது தான். பிராமணர்கள் வருவதற்கு முன் நாமெல்லாம் அப்படித்தான் வாழ்ந்து வந்தோம்; அதனால் சாதியற்ற சமூகம் சாத்தியமே!’ என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள்.

தங்களது சமாதானத்தை மேலும் மேலும் கற்பனை செய்து நிஜமாக்க உழைத்தார்கள் என்பது தான் மூன்று பண்டிதர்களின் சிறப்பு. அங்கே, சமாதானம் எப்படி விளங்கியது; கலைகள் எவ்வாறு விளங்கின; மொழி, பண்பாடு, சிந்தனையெல்லாம் எப்படி இருந்தன என்று தொடர்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். என்ன சொல்லப்பட்டது என்பதை விடவும், எப்படி சொல்லப்பட்டது என்பதே முக்கியமென்று நினைக்கிறேன்.

மூன்று பண்டிதர்களிடமும் காணப்படும், சமத்துவத்தை விளையும் மனதையே தமிழ் தேசியத்தின் நியாயமாக நான் பார்க்கிறேன்.

இந்தக் கற்பனை, ஒரு நொடியில் அடிப்படைவாதமாக மாறிவிடும் ஆபத்துள்ளது என்பதையும் நாம் உணரவேண்டும். இந்து ராஷ்ட்ரிய கற்பனை எவ்வாறு எல்லார் முகத்திலும் விபூதியடிக்க / குங்குமம் தீட்ட நினைக்கிறதோ அதே போல, ஒரு போதாத கணத்தில், இந்த தேசியக் கற்பனைகளும் ‘வந்தேறிவாதங்களாக’ மாறி நிற்கும்.

இன்றைய தமிழ் தேசியத்தின் அடிப்படையான சிக்கல் இது தான். பக்கத்திலிருக்கும் ஈழ தேசியத்திலிருந்தும், இங்கேயே இருக்கும் இந்துத்துவத்திலிருந்தும் தமிழ் தேசியர்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயம் இது – ‘வந்தேறிவாதம்’.

ஆனால், தமிழ் தேசியம் என்பது இதுவல்ல, தமிழர்களே! அது, சாதியற்ற சமூகத்தை கற்பனை செய்தல். அதைத் தான் அந்த மூன்று பண்டிதர்களும் செய்திருந்தார்கள். இதைத் தவிர்த்து அவர்களிடம் கற்றுக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

அயோத்திதாசரை சமூக அறிவியலாளராக சித்தரிப்பதை விடவும், ஆபிரகாம் பண்டிதரை இசையறிஞராக முன்னிறுத்துவதை விடவும், பாவாணரை மொழியியலாளராக முன்னிறுத்துவதை விடவும், அவர்கள் சாதியற்ற நிலையைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்வதே பெருமை என்று நினைக்கிறேன்.

டி. தருமராஜ், ஆய்வாளர்; எழுத்தாளர்.