ஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்!

சூழலியல் செயல்பாட்டாளர்கள் -1

இந்திய சுதந்திரத்துக்கு முன், குறு நில மன்னர்களாலும் ஆங்கிலேய அதிகாரிகளாலும் நம் காடுகளில் இருந்த சிங்கம், புலி, சிறுத்தை, யானை போன்ற பெரிய விலங்குகள் வேட்டையாடி அழித்தொழிக்கப்பட்டன. அதிருஷ்டவசமாக, அதில் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து இறுதி சமயத்தில் தாங்கள் அழித்த வன உயிர்களின் காப்பாளர்களாகவும் மாறினர். உதாரணத்துக்கு குஜராத்தின் சிங்கங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜுனாகாரின் நவாப், இதே ரீதியில் போனால் அவை அழிவை சந்திக்கும் என உணர்ந்து அவற்றை ‘கிர்’ வனத்தில் பாதுகாத்தார். இவரையும் விடவும் பிரபல வேட்டையாடியாக இன்னும் விளங்குபவர், அதிகம் விற்பனையாகவும் வேட்டையாடி இலக்கியம் எழுதிய ஜிம் கார்பெட் !

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஜிம் கார்பெட்டின் குடும்பம், இப்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிதாலில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜிம் கார்பெட்டின் கவனம் இயற்கையின் மீது திரும்பியது. பின்னாளில் பிரபலமான வேட்டையாடியாகவும் எழுத்தாளராகவும் சூழலியல் பாதுகாவலராகவும் அறியப்பட காரணமாக இருந்தது!

ரயில்வேயில் பணியாற்றிய காரணத்தால் இந்தியாவில் பல பகுதிகளுக்கு பயணப்பட்டார் ஜிம் கார்பெட் . இதில் பஞ்சாப், பீகார் மாநிலங்களும் அடங்கும். அப்போது குமாயூன், கர்வால் ஆகிய பகுதிகள் கிராம மக்களை கொன்று உண்ணும் புலிகள், சிறுத்தைகளை வேட்டையாடும்படி கார்பெட்டுக்கு வேண்டுகோள் விடுத்தனர் மக்கள். வேட்டையாடிய களம் இறங்கியவர் 30 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்றார்.

வேட்டையாடுதல் அந்தக் காலக்கட்டத்தில் குற்றமாக்கப்படவில்லை. ஆனபோதும் விலங்குகளை வேட்டையாடும் புலி, சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகள் ஏன் மக்களை கொல்கின்றன என்கிற கேள்விக்கு விடை தேடினார் கார்பெட்.

“மனிதர்கள் புலிகளின் இயற்கையான இரைகள் அல்ல. காயத்தின் காரணமாகவோ அல்லது வயது முதிர்வின் காரணமாகவோ காட்டு வாழும் விலங்குகளை வேட்டையாட முடியாமல், வேறு வழியின்றியே அவை மனிதர்களை கொன்று புசிக்கின்றன” என தனது நூல் ஒன்றில் எழுதியிருக்கிறார்.

குமாயூன் புலிகள், எனது இந்தியா உள்ளிட்ட ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை அனுபவ இலக்கியங்கள் (The Man Eating Leopard of RudraprayagMy IndiaThe Temple Tigers and More Man-Eaters of Kumaon) புலிகள், சிறுத்தைகள் குறித்த இவருடைய கருத்துக்கள் இவரை ஒரு வேட்டையாடி என்பதைக் கடந்து, காட்டு விலங்குகள் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதைக் காட்டுகின்றன.

புலிகளை “பரந்த இதயம் கொண்ட பண்புக்கும் தைரியத்துக்கும் பெயர் போனவை.” என்றும் “சிறுத்தைகள் நேரில் கண்டிராத ஒருவரால் அதன் நிறத்தின் அழகையும் இந்திய காடுகளின் தெய்வீகமான மிகவும் அழகான விலங்கை அறியாதவர்கள்” என்றும் தனது படைப்பில் வர்ணித்திருப்பார் கார்பெட்.

1920களிலேயே இந்திய புலிகளை ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். இவர் எழுதிய 12க்கும் மேற்பட்ட வேட்டை இலக்கியங்கள், இந்திய வனங்களின் வளத்தை அறிந்துகொள்ள இன்றளவும் ஆவணங்களாகவும் உதவுகின்றன. இந்திய காட்டுயிர்கள் குறித்த பல சொற்பொழிகளையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு காட்டுயிர்கள் குறித்தும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சொல்லித்தந்தவர். பிரபலமான வேட்டையாடியாக இருந்து பிரபலமான சூழலியலாளராக அறியப்பட்டார் ஜிம் கார்பெட்.

இந்திய சுதந்திரத்துக்கு சில காலம் கழித்து 1955-ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை விற்றுவிட்டு கென்யாவில் குடியேறினார் கார்பெட். அவர் வசித்த வீடு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் அருங்காட்சியகமாகவும் அவருடைய சூழலியல் செயல்பாட்டை போற்றும் வகையில் உத்தரகாண்டின் ஹெய்லி தேசிய பூங்காவுக்கு, ‘ஜிம் கார்பெட் தேசிய பூங்கா’ என பெயரிட்டு பெருமைபடுத்தியது இந்திய அரசு.

இந்திய வனங்களும் எப்படி நெருக்கமாக இருந்தரோ, அதுபோல இந்திய கிராமப்புற மக்களுடனும் கார்பெட் நெருக்கமான உறவை பேணினார். தான் வசித்த பகுதியில் இருந்த சோட்டி ஹால்தானி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அவர்களை வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அந்த கிராமத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பினார். 1925ல் கட்டப்பட்ட இந்த சுவர் இன்றும் மக்களை காக்கிறது. கார்பெட்டின் நினைவை அக்கிராம மக்கள் இன்றளவும் நினைவு கூறுகின்றனர்.

எனது இந்தியா’ என்ற நூலை ‘எனது இந்திய ஏழை நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன்…” என எழுதிய அவர், “இவர்கள் ஏழைகள், பட்டினியால் வாழும் லட்சக்கணக்கானவர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடன்தான் இவர்களை நேசிக்கும் நானும் வாழ்ந்தேன். எனவே, என் மரியாதைக்குரிய ‘இந்தியாவின் ஏழை’ நண்பர்களுக்கு இந்த நூலை சமர்பிக்கிறேன்” என நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறார் கார்பெட்.

ஜிம் கார்பெட் கென்யாவில் குடியேறிய பிறகு, ஆப்பிரிக்க காட்டுயிர்கள் குறித்து எழுதியதோடு, அத்தகைய சூழலிலேயே வாழ்ந்து மடிந்தார்; ஒரு முன்னோடி சூழலியல் பாதுகாவலராக..!

நன்றி: யாதும்

பிளாஸ்டிக் தடை: சட்டத்தை குப்பையில் போடும் ஓட்டல் சரவணபவன்!

இர. அருள்

தமிழ்நாட்டின் முன்னணி சைவ உணவக நிறுவனமான ஓட்டல் சரவணபவன், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அப்பட்டமாக மீறிவருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலையும், எதிர்காலத்தையும் காப்பாற்றும் இந்த தடையை அனைவரும் வரவேற்று முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த தடை குறித்த அரசாணை 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, அதுகுறித்த முறையான அறிவிப்புகள், விளம்பரங்களுக்கு பின்னர் 1.1.2019 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. (இந்த தடைகுறித்து 25.7.2018 பசுமைத் தாயகம் நாளில் பசுமைத் தாயகம் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது).

இந்நிலையில், இப்போதும் கூட, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஓட்டல் சரவணபவன் பார்சல் விநியோகம் செய்கிறது. 5.1.2018 ஆம் நாள் ஓட்டல் சரவணபவன், கோடம்பாக்கம் கிளையில் பார்சல் வாங்கியபோது அளிக்கப்பட்ட பொருட்கள் படத்தில் உள்ளன. அவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை ஆகும்.

படத்தில் உள்ள – பிளாஸ்டிக் டப்பாக்கள், பைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், சரவணபவன் என்கிற லோகோவுடன் உள்ள கைப்பையும் கூட தடை செய்யப்பட்டது தான். ஏனெனில், இது துணிப்பையோ, மறுசுழற்சி செய்யத்தக்க பையோ அல்ல. மாறாக, ‘நான் ஓவன்’ என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பை இதுவாகும். இவ்வாறாக, ஓட்டல் சரவணபவன் அப்பட்டமாக சட்டத்தை மீறுகிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.

சராசரி கடைக்காரர்களிடம் சோதனை நடத்துவது தேவையான நடவடிக்கை தான். ஆனால், அதை விட மிக முக்கியம், பெயர் பெற்ற பெரிய நிறுவனங்கள், பிராண்ட் நிறுவனங்களில் சோதனை நடத்துதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பரிமுதல் செய்தல், தண்டம் விதித்தல் மிக மிக அவசியமாகும்.

எனவே, ஓட்டல் சரவணபவன் உள்ளிட்ட பெரிய நிறுவங்களில் பிளாஸ்டிக் தடை விதிகள் முழுமையாக செயலாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

இர. அருள், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் arulgreen1@gmail.com

Did Vedanta PR firm access NGT order before publication: how deep is the rot?: Nityanand Jayaraman

Nityanand Jayaraman

Evidence released by Anti-Sterlite People’s Movement spokesperson Fatima in Thoothukudi today suggests that persons close to Vedanta may have had access to a “DRAFT” version of the NGT order well before the actual order was made public. Fatima has said she would file a police complaint seeking a probe into the matter, and has urged the Government to do the same.

The revelation lends strength to allegations on social media that Vedanta had illegally compromised judicial confidentiality and integrity.

“This is a very serious breach of judicial process. If it is proven that Sterlite’s PR agency accessed the order even before it was pronounced, it will indicate how far the company has gone to protect itself,” said Justice D. Hariparanthaman, a retired judge of the Madras High Court.

The evidence emerged after a “draft” version of a Microsoft Word file containing the order circulated by media people during the early afternoon of 15.12.2018 was analysed for information regarding its origins. The file, reportedly circulated by Sterlite’s private PR agency, was titled “Final Order of VEDANTA DRAFT ORDER-15.12.2018.docx.” A closer look at its analytics revealed that it was created by an author named “NGT PA” at 07.39.00 that day and modified instantly by author named Aabhas Pandya. (See Screenshot.jpg)

Coincidentally, one Mr. Aabhas Pandya also happens to be the Senior Group Head at Adfactors, a PR firm that claims to specialise in public relations, media relations and crisis communications among other things. Adfactors manages Vedanta’s account, and Pandya is listed as contact person in Vedanta communiques. https://www.marketscreener.com/…/Vedanta-Srinivasan-Venkat…/

The Delhi police must verify if the Aabhas Pandya mentioned in the analytics of the .docx file is the same as the head of Vedanta’s PR agency.

A PDF version of the order began doing the rounds in social media at around 2 p.m. However, this file too was titled “Final Order of VEDANTA DRAFT ORDER-15.12.2018.pdf.” This file was also created by author named “NGT PA” but at 08.01.17+00.00 which is Coordinated Universal Time for 1.31 p.m. Indian time. That is around the time that the order was uploaded on the website.

RESTING IN CONFIDENCE

Vedanta was clearly confident of a favourable order despite the findings of illegalities by the Agarwal Committee. Within hours of the NGT order, a ship carrying 25,000 tonnes of copper concentrate for Sterlite Copper arrived in VOC Port in Thoothukudi from Peru, triggering speculation that the long arms of Vedanta had breached the judicial process. Not only that, the final order is starkly different from the report of the Committee. Committee’s findings have been misrepresented, and recommendations substantially changed in a manner than helps Vedanta.

Take, for instance, what the Order says on the matter of violations in the manner the copper slag has been handled:
Para 52 of the Order reads: “With regard to (ii), copper slag is not found to be hazardous nor has been found to be obstructing the flow even on visit of the site by the Committee. Physical barrier could be directed to be constructed for the entire area.”

This is in direct contrast to the findings of the Committee, which noted that the river was dry at the time of its visit.

Para 22(i) of the Committee report states:
“As per our naked eyes, the slag was dumped alongside the bank of the river Uppar. The river was dry at this moment, but according to the Collector and others, this dry bed gets filled up with the storm water during the monsoon season which occurs from October to December.”

Similarly, adverse findings by the Committee on matters that would have delayed or defeated the prospects of reopening the factory have been neutralised in the Order.

On the matter of greenbelt, the Committee found that “there was hardly any greenery inside the factory premises and that it was a concrete jungle. . .” and recommended that the “Appellant company should be directed that they shall develop a green belt of 25 mtrs width around the battery limits of the factory.”

Fact aside that this requirement has been in violation since 1995 when it was first imposed as a license condition, the NGT has done away with the recommendation on this front by stating incorrectly that the matter is covered by the 2013 Supreme Court judgement.

NGT’s treatment of two other recommendations of the Committee are noteworthy. Recommendations “s” and “t” of the Committee state that the chimney stack should either be increased to the legally mandated height or emissions made compliant by bringing production down to match stack height. Recommendation “u” directs the company to transport its copper ore concentrate in closed conveyance or a pipe conveyor.

While implementation of these recommendations would have offered some degree of protection to citizens, the NGT refuses to engage with them and instead refers the matter to a joint committee of TNPCB and CPCB which will once again take a view on the matter after giving “due hearing to the appellant.” Once again, the principles of natural justice are applied to Vedanta without a reciprocal offer to the citizens of Thoothukudi.

This slideshow requires JavaScript.

OPEN COURT CONCEPT

On 10.12.2018, the NGT announced that its order would be uploaded on its website on or before 17.12.2018. That in itself was irregular. Section 23(1) and (2) of NGT Rules require that “Every order of the Tribunal shall be signed and dated by the Members constituting the sitting of the Tribunal, which pronounced the order” and that “The order shall be pronounced in open court.” http://www.greentribunal.gov.in/FileDisplay.aspx…

While the NGT has some leeway in creating its own procedures, the Open Court Concept is a constitutional principle binding even the Supreme Court. Article 145(4) of the Constitution states that “No judgement shall be delivered by the Supreme Court save in open court. . .”

The matter was not listed for hearing on 15.12.2018 – the date of uploading of the order. Neither has it been listed in the Causelist for hearing on 17.12.2018 suggesting that the order will not be read in open court.

This lapse is not merely technical in nature. In uploading the order on Saturday during the vacation of the Supreme Court without the benefit of an open court pronouncement, parties and interveners have effectively lost their right to request a stay on the operationalising of the order until they have an opportunity to approach the higher court.

The NGT’s handling of this highly sensitive case has come under severe criticism with civil society interveners alleging bias, favoured treatment to Vedanta and violation of principles of natural justice. The Tribunal headed by Justice A.K. Goel refused to grant interveners any status to present arguments and denied them access to the report of the Committee appointed by it. An application by intervener Fatima seeking reconstitution of the Committee with a retired judge of impeccable integrity to replace Justice (Retd) Tarun Agarwal who was named as a beneficiary in the Ghaziabad PF scam was ignored by the Tribunal. The order disposes all applications of the interveners without hearing.

However, the allegations of bias now pale in comparison with the new revelations that suggest a breach in the confidentiality of a judicial order, and fuel suspicions regarding the integrity of due process.

At the very least, Vedanta and Adfactors have some explaining to do. At worst, the very order of the NGT is thrown in question.

Nityanand is a Chennai-based writer and social activist, and has been a part of the campaign to hold Vedanta accountable for Sterlite Copper’s pollution in Thoothukudi.

தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன்

நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சமயம் கடந்த 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. வனத்தையும் அதன் இயற்கை வளங்களையும் ஆங்கிலேய அரசாங்கம் சொத்தாக பாவித்தது. அதன் அடிப்படையில் வனத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த சமயம் உருவாக்கிய வனக்கொள்கை உதவியது. வனத்தில் வாழ்ந்து அந்த வனத்தை நிர்வகித்து வந்த பழங்குடி மக்கள் உரிமைகளை அதன் பின்னிட்டு இழந்தனர்.

தமிழகத்தைப் பொருத்து 2015 ஆண்டு கணக்கெடுப்பின் படி 26,345 சதுர மைல்கள் வனத்தின் பரப்பளவு. இது நிலப்பரப்பில் 20.26 சதவிகிதம். இவற்றில் காப்புக்காடுகள் பெரும்பாலானவை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வரையறை செய்யப்படாத நிலப்பகுதியும் இதில் அடங்கும். வனம்
இயற்கையின் பெரும் கொடை மட்டுமல்ல. அது அடிப்படை வாழ்வாதாரத்தின் அடிப்படை. கானுயிர்கள் ,மனிதர்கள் என பலரின் வாழ்க்கை இணைந்த பகுதி வனம்.

காலனிஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முதல் வனக்கொள்கையானது காலனி ஆதிக்க நலனையும் அந்த ஆட்சிக்கு தக்கபடி வன சுரண்டலையும் அனுமதித்த்து. நாடு விடுதலையடைந்த பின்பு 1952 ஆண்டு இரண்டாவதாக விடுதலை இந்தியாவின் வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. பழைய காலனி ஆதிக்க சிந்தனை மற்றும் வனத்தையும் பழங்குடி மக்களையும் சுரண்டும் வகையிலும் மேலும் கூடுதலாக வனத்துறையின் தயவில் பழங்குடி மக்கள் வாழ நிர்பந்திக்கப்பட்ட அவலம் நிகழ்ந்த்து.

பின்னர் 1988 ஆண்டு வனத்தின் பரப்பு குறைந்து வருவதாகவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும், வனத்தின் பாரம்பரியத்தையும் மண் அரிப்பை தடுக்கவும், நீர் பிடிப்புப் பகுதியில் உள்ள ஆறு மற்றும் குளங்களின் பராமரிப்பு , பாலை வனங்களின் பரவலை தடுத்தல், சமூக காடுகள் என்ற நோக்கங்களை முன் வைத்து உருவாக்கப்பட்ட்து. ஆனால் பழங்குடி மக்கள் வனத்திலிருந்து அன்னியப்படும் வகையில் செயல்பாடுகள் அமைந்தன. கானுயிர் பாதுகாப்பு என்பது வெறும் வனத்துறை சார்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. பழங்குடிகள் அன்னியப்படுத்தப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

வனத்துறையினர் மற்றும் கானுயிர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நிகழ்ந்த இந்த தொடர் அச்சுறுத்தல்களின் வெளிப்பாடாய் உச்சநீதிமன்றத்தில் பழங்குடிகளை வெளியேற்றினால்தான் வனம் பாதுகாக்கப்படும் என கருத்து முன் வைக்கப்பட்ட்து. அதன் விளைவாய் பழங்குடிகளை வன நிலங்களிலிருந்து வெளியேற்றும் நிகழ்வும் நடந்தேறியது. நாடு முழுவதும் பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இப் போராட்டத்தில் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியான பாதிப்புகளை அறிந்த பின் மத்திய பழங்குடி நலத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் இந்தியாவில் பழங்குடி மக்களுக்கு வரலாற்று அநீதி நிகழத்தப்பட்டதாக கூறியது.

அதன் தொடர்ச்சியாக சமூக சனநாயக, பழங்குடி செயல்பாட்டாளர்களின் தொடர் முயற்சியால் 2006 ஆண்டு வன உரிமைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட்து. பாரம்பரியமாக மூன்று தலைமுறை நிலத்தில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு மற்றும் வனத்தில் வாழும் பிற மக்களுக்கு அதிகபட்சம் நான்கு ஹெக்டேர் விவசாய பூமி வழங்க சட்டம் வகை செய்தது.

இச் சட்டம் இதற்கு முன்பு இருந்த வனச்சட்டங்களின் படி வனத்தினை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகளுக்கு மாற்றாக கிராம சபை என்ற கூட்டு சமூகம் வனத்தை நிவகிக்கும் அதிகாரத்தை வழங்கியது. அரசுதுறைகளால் வனம் பாதுகாக்கப்படவில்லை என்பதால் சமூகம் இணைந்து வனத்தையும் அதன் பாரம்பரிய சூழலை பேண வழிவகைசெய்தது. இதனால் இந்த சட்ட்த்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் இந்த சட்டம் 2016 வரை நடைமுறைக்கு வராமல் வனத்துறையினர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி சட்டத்தின் பயன் நிறைவேற்றுவதை தடுத்து வைத்தனர். தமிழகம் வெறும் ஒரு சதவிகித பட்டாக்கள் கூட வன உரிமைச்சட்டத்தின் படி இன்றளவும் வழங்கவில்லை.

இச் சூழலில் சமூகத்தில் மாறி வரும் அரசியல், பொருளாதார நிலைகளில் கடும் முதலாளியம் (crony capitalism) என்ற அரசாங்கத்தினை நடத்துவதிலிருந்து அதன் ஆட்சியாளர்களை மற்றும் அதிகாரிகளை தீர்மானிக்கும் வரை அணைத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் இசைவு கீழ் நடைபெறும் இன்றைய சூழலில் 2018 ஆண்டுக்கான வனக்கொள்கையினை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.  கடந்த 2016 ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு பழங்குடி செயல்பாட்டாளர்களால் எதிர்ப்பை எதிர்கொண்ட வனக்கொள்கையின் மறு வடிவமே இந்த புதிய வனக்கொள்கை.

வனத்தை இயற்கையின் காப்பு என்ற கொள்கை நிலைபாட்டிற்கு எதிராக வனத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடலும், வனச்சூழலை பணமதிப்பில் மதிப்பிடுவதில் துவங்குகின்றது இந்த வரைவுக் கொள்கை.மேலும் வனத்திற்காக ஒரு வன கழகத்தையும், வனச்சூழல் தகவல் அமைப்பை உருவாக்குவது என்றும் இக் கொள்கை உள்ளது. கடந்த 1988 ஆண்டு இருந்த வன காப்பு மற்றும் பழங்குடிகள் மற்றும் வனத்தில் வசிப்போரின் வாழ்வாதாரம் என்ற கோட்பாடுகளுக்கு பதிலாக வன உற்பத்தி (forest production) என்ற கொள்கையினை வெளிப்படுத்துகின்றது. காட்டினை சார்ந்து உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக காடு பார்க்கப்படுகின்றது. தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி (industrial plantation) என்ற உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பதும் சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் அச்சுறுத்தலான யூக்கலிபிட்டஸ் என்ற தைல மரம் மற்றும் நெட்டுலிங்க மரங்களை வளர்த்து தொழிற்சாலைகளுக்கு தருவது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வனத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து எதையும் குறிப்பிடாத வகையிலும் உள்ளது. மேலும் வன மக்களின் தேவைகளை பாதிக்கின்ற வகையில் தொழிற்சாலைகளுக்காக எதும் செய்யக்கூடாது என்ற பழைய கொள்கை கைவிடப்படுகின்றது. வன உரிமைச்சட்டத்தின் படி அமைக்கப்பட்ட கிராம சபையின் செயல்பாடுகள் புதிய வனக்கொள்கையால் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

வனத்தை பழங்குடி மக்களும் வனம் சார்ந்த பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்களும் நிர்வகிப்பதற்கு பதிலாக அரசு மற்றும் தனியார் பங்கேற்ப்பு (public private partnership) என்ற கொள்கை முன் வைக்கப்படுகின்றது. இது வனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் வெளிப்பாடு. பொதுத்துறை நிருவன்ங்கள் தனியார் மயமாக்கம் செய்யப்படும் முன் இந்த கோட்பாட்டைச் சொல்லியே தனியார் மயம் துவங்கும் என்பதே வரலாறு. கடந்த காலங்களில் நடைமுறையில் வனத்துறையின் செயல்பாடுகளால் தோல்வியடைந்த கூட்டு வன நிர்வாகம்(join forest management ) என்ற கோட்பாடும் தனியார் உடன் இணைத்து முன் வைக்கப்படுகின்றது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த வனக்கொள்கையானது இன்றளவும் வரைவு நிலையில் உள்ளது. மத்திய பழங்குடி அமைச்சகம் இந்த வரைவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் மேலும் பல பழங்குடி இயக்கங்கள் வனத்தை வெறும் இலாப நோக்கில் பார்க்கும் இந்த கொள்கை முடிவால் வனமும் அதை சார்ந்த மக்களின் நலனும் பறிக்கப்படும் என்றும் அரச வன்முறைகளைக்கொண்டு அடக்கி ஒடுக்கி தனியார் கம்பெனிகள் ,கார்பரேட்டுகள் மக்களையும் வாழ விடாமல் ,வனத்தையும் அழித்துவிடக்கூடும் என அஞ்சுகின்றனர். தங்களின் எதிர்ப்பை பகிர்ந்துள்ளனர்.

மத்திய அரசின் வனக்கொள்கையை ஒட்டி ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் மாநில வரைவுக் கொள்கையினை உருவாக்கவேண்டும். ஆனால் மத்திய அரசின் கொள்கையே இன்னும் முடிவாகவில்லை. மத்திய அரசு வனக் கொள்கையானது முடிவாகா நிலையில் அவசரமாக தமிழக அரசு 2018 ஜீன் மாதம் தனது மாநில வனக் கொள்கையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு காட்டும் இந்த அவசரம் மத்திய அரசாங்கம் முடிவு செய்யாத கொள்கையினை மாநில அரசுகளை விட்டு நிறைவேற்றிக்காட்டும் கார்பரேட் தந்திரம் என பழங்குடி செயல்பட்டாளர் சி.ஆர்.பிஜாய் போன்றோர் கருதுகின்றனர்.

இது முற்றிலும் முரணானது. இந்த கொள்கையானது புலிகள் காப்பக பகுதியிலிருந்து பழங்குடி மக்களையும் பிற மக்களையும் அப்புறப்படுத்தப்போவதாக கூறுகின்றது. இது வன காப்புச்சட்டத்தில் கானுயிர் பூங்கா அமைப்பதற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களும், விலங்குகளும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சூழலை உருவாக்குவது என்ற கோட்பாடுக்கு எதிரானது. மேலும் வெறும் ஒரு சதவிகிதம் கூட வன உரிமைச்சட்ட்த்தை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, வன உரிமைச்சட்ட்த்தின் வழி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் கார்பரேட் கம்பெனிகளின் இலாபத்திற்க்காய் அவர்களின் வாழ்வாதரத்திலிருந்து விரட்டப்படுகின்றனர். சொந்த மக்களின் மீது அரசு போரை நடத்துகின்றது. நாடு முழுவதும் தனியார், கார்பரேட் இலாபத்தை முன்னிருத்தும் கொள்கை சமூக அமைதிக்கும் சனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல்.

சமூக,சனநாயக, பழங்குடி ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கவனம் கொள்ளவேண்டும். வாழ்வாதாரம் இழக்கப்படும் மக்கள் மண்ணிலிருந்து விரட்டப்படும் சோகம் கொடுமையானது. சனநாயக சமூகத்தில் வனத்தை பாதுகாப்ப்பது மிக அவசியம். அது வனத்துறை அல்லது அரசு தலையீடுகளால் சாத்தியமில்லை. பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மக்கள் அதன் சமூகம் நிர்வகிக்கும் வகையில் வனத்தை சனநாயகப்படுத்துவதில் உள்ளது.

ச. பாலமுருகன், மனித உரிமை செயல்பாட்டாளர்.

நெல் ஜெயராமன்: மீட்கப்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

சந்திரமோகன்

1960 களின் பிற்பாதியில், இந்திய வேளாண்மையில் ஏகாதிபத்திய தலையீடு ஆக பசுமை புரட்சி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. வீரியரக ஒட்டு விதைகள் + ரசாயன உரங்கள்+ பூச்சி மருந்துகள் + அரசு நிதி/கடன் உதவி = பசுமை புரட்சி என அறிமுகப்படுத்தப் பட்டது.

குறைந்த நாள் பயிர்கள் அதிக உற்பத்தி என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் ஏகாதிபத்திய பசுமைப் புரட்சி சதி திட்டம் அறிமுகமானது. கிலோ கணக்கில் உரங்களை சாப்பிடுகிற, பூச்சிகளுக்கு எளிதில் இரையாகிற, குறைந்த நாள் நெல் பயிர்கள் (பிலிப்பைன்ஸ் மணிலா ஆராய்ச்சி சாலைகளில் தயாரான IR 8 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள்) விவசாயத்தில் ஊடுருவியது.

விளைவாக, பத்தாண்டுகளில், ஒருபுறம்
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல்வேறு பாரம்பரியமான நெல் ரகங்கள், கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்கு வழக்கொழிந்து விட்டன. மற்றொரு புறம் ஏகாதிபத்திய சக்திகள் “ஆராய்ச்சி” என்ற பெயரால், இங்கிருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் விதைகளை குவிண்டால் கணக்கில் அமெரிக்காவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் எடுத்துச் சென்று நம்மை, பாரம்பரிய நெல் விதைகள் அற்ற ஓட்டாண்டிகளாக ஆக்கிவிட்டார்கள்.

பசுமைப்புரட்சியின் கை ஓங்கியிருந்த இந்த கால கட்டத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டவர் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா #நம்மாழ்வார். அவருடன் காவிரி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில், அவர் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் ‘நெல்’ ஜெயராமன்.

சமீப காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர், இன்று காலையில் இறந்து விட்டார்.

வாழ்க்கை பின்னணி :-

இயற்பெயர் இரா. ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா விவசாயி; விவசாய குடும்பத்தில் வழக்கமான கடன் தொல்லைகள் காரணமாக தமக்கு இருந்த விவசாய நிலங்களை விற்று கடனை அடைத்துவிட்டு, திருத்துறைப்பூண்டியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலையைத் துவக்கினார்.

சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்த நேரம், அவருடைய பேச்சைக் கேட்டு, விவசாயியாகத் தனது வாழ்க்கையை மீட்டார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றார் ஜெயராமன்.

அந்த பயணத்தின்போது விவசாயிகள் நம்மாழ்வாருக்கு பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகள் வழங்கியுள்ளனர். நம்மாழ்வார் அவர்கள், அவற்றை ஜெயராமனிடம் கொடுத்து அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்பச் சொன்னார். அன்று முதல் மறைவதற்கு சில நாள்களுக்கு முன்பு வரைக்கும் பாரம்பர்ய நெல்லை மீட்பது, பரப்புவது என்ற பணியில் தனது மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார், நெல் ஜெயராமன்.

2005-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கும்பளங்கி எனும் கிராமத்தில், ’நமது நெல்லைக் காப்போம்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. அதில் நெல் ஜெயராமன் கலந்து கொண்டபோது, கேரளா விவசாயிகள், அவர்களின் பாரம்பர்ய நெல்லைப் பற்றி பேசும்போது, நம்முடைய பாரம்பர்ய நெல்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்று தீவிரமாக சிந்திக்க துவங்கினார். அப்போதிருந்தே தமிழக விவசாயிகள் பலரிடமும் நேரில் சென்றும் நெல் சேகரிக்க தொடங்கியுள்ளார். இப்படி பல வழிகளில் நெல் சேகரிக்க பாடுபட்டதால்தான், இன்று பலராலும் ’நெல்’ ஜெயராமன் என அழைக்கப்படுகிறார்.

இதுவரைக்கும் ஏராளமான பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார். விவசாயிகளிடம் இருந்து விதைநெல்லாக மட்டுமல்லாமல், நெல் நாற்றுகளாகவும் வாங்கி வந்து நடவு செய்தும் பாரம்பர்ய ரகங்களை மீட்டெடுத்தவர்.

169 வகையான பாரம்பரிய ரக நெல் விதைகள் அவரால் மீட்கப்பட்டது.

‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை… என்பதெல்லாம் நமது மண்ணின் பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும்.

“தமிழகத்தில், புயல், மழை, வெள்ளம், வறட்சியையும் தாங்கி வளர்கிற ரகங்கள் இருந்தன. விதைச்சு விட்டுட்டா பிறகு அறுவடைக்குப் போனா போதும் என்ற நெல் ரகங்கள் இருந்தன. கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்களில் குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டால் விளைச்சல் நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிராக போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா… வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்… ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும் ” என்பார், நெல் ஜெயராமன்.

ஒரு சமயம் பனங்காட்டுக் குடவாழை நெல்லைத் தேடி அலைந்திருக்கிறார். அந்த நெல், கடலோர மாவட்டங்களில் விளையும் தன்மை கொண்டது. வேதாரண்யம் பக்கத்தில் இருக்கும் ஒரு விவசாயி வைத்திருப்பது கேள்விப்பட்டு அங்கே சென்றிருக்கிறார். சளைக்காமல் தொடர்ந்து ஆறுமுறைக்குமேல் அவரிடம் சென்று கேட்டிருக்கிறார். இவரும் இரண்டு பிடி நெல் நாற்றை வாங்கி வந்து நடவு செய்து பனங்காட்டு நெல் விதையை உற்பத்தி செய்தார். இதுபோல பல நெல் ரகங்களையும் கஷ்டப்பட்டுத்தான் சேர்த்திருக்கிறார். அனைத்துமே தமிழர்களின் பாரம்பரி்ய நெல் ரகங்கள் என்பதுதான் அதன் சிறப்பு ஆகும்.

நெல் திருவிழா !

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நண்பர் நரசிம்மன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் மையம் அமைத்தார். 60 நாள் முதல் 180 நாள் வரை சாகுபடி செய்யக்கூடிய பாரம்பர்ய நெல் விதைகளை அம்மையத்தில் சேமித்து வைத்திருக்கிறார். அங்கேயே வருடம்தோறும் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்.

நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்கு இரண்டுகிலோ வீதம் விதை நெல்லை வழங்கி வந்தார். நெல் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். பாரம்பர்ய விதைகளைப் பரப்பும் நோக்கில் பல கருத்தரங்குகளில் உரையாற்றி இருக்கிறார். இயற்கை விவசாயம் சார்ந்து பல பயிற்சி வகுப்புகளையும் நடத்தி இருக்கிறார். அதற்கென ஒரு நெல் வங்கியும் இயங்கி வருகிறது.

இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்திருக்கின்றன. பாரம்பரி்ய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர். #நமதுநெல்லைக்காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் தீவிர கொள்கை செயற்பாட்டாளர்.

பாரம்பரிய நெல்லின் ஒவ்வொரு விதையிலும் நெல் ஜெயராமன் நீடித்திருப்பார். `நெல்’ ஜெயராமன் என தனது பெயரையே கெசட்டில் மாற்றிக்கொண்ட நெல் ஜெயராமன் அவர்களுக்கு எமது அஞ்சலி !

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

காட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்

சந்திரமோகன்

சந்திர மோகன்

கடந்த சில நாட்களில், சேலம் மாவட்டத்தில் வனங்களிலிருந்து வெளியேறி கிராமங்களுக்கு நுழைந்த காட்டு எருமை Indian Bison பற்றிய செய்திகள் பரபரப்புடன் வெளியாகியுள்ளன.

முதல் செய்தி:

1) சேர்வராயன் மலைப் பகுதியிலிருந்து வெளியேறி கன்னங்குறிச்சி கிராமத்தில் நுழைந்த காட்டெருமையை “மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்தில் கொண்டு போய் விடுகிறோம் ” என்ற பெயரில் அதை கொன்று விட்டனர்.

இரண்டாம் செய்தி:

2) விளாம்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஏழு காட்டெருமைகள் குள்ளம்பட்டி வனப்பகுதியில் நுழைந்துள்ளன; அவற்றை வெளியேற்ற வனத்துறை முயற்சி செய்கிறது.

குள்ளம்பட்டி எட்டுவழி சாலை பாதையில்தான் காட்டெருமைகள் அலைந்து கொண்டிருக்கின்றன என்பது மிகவும் கவனத்தை கோரும் தகவல் ஆகும்.

காட்டெருமைகள் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ள எட்டு வழி சாலை:

சேலம் – சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அலைன்மெண்ட்டானது, ஏற்கனவே சரக்குப் போக்குவரத்து மும்முரமாக இயங்கி வருகிற சேலம் வாணியம்பாடி சென்னை தடத்தின் சேலம் அரூர் நெடுஞ்சாலையின் அக்கம் பக்கமாகவே அமைகிறது. இந்த அரூர் மெயின் ரோட்டின் மேற்கு புறத்தில் சேர்வராயன் மலையும், கிழக்கு புறத்தில் அருநூத்து மலையும் கல்வராயன் மலையும் அமைந்துள்ளன.

எட்டு வழிச் சாலை செல்லும் குள்ளம்பட்டி வெள்ளியம்பட்டி குப்பனூர் அடிமலைப்புதூர் கிராமங்கள் வனங்களுக்கு மிக அருகாமையில் உள்ளவையாகும்; வன விலங்குகள் நடமாட்டம், மனிதர்- விலங்குகள் இடையே மோதல், பாதிப்பு பற்றிய தொடர் செய்திகள் ஊடகங்களில் அடிபடும் பகுதியும் ஆகும்.

சேர்வராயன் மலைக்கும் அருநூற்று மலைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 2 கி.மீ ஆகும். இரண்டு வனப்பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான காட்டெருமைகள், சிலவகை மான்கள், காட்டுப் பன்றிகள், குள்ளநரிகள்,கீரிகள், முயல்கள், மயில்கள் வாழ்கின்றன. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்கின்றன; தங்குகின்றன; திரும்புகின்றன.

கரடிகள், எறும்பு திண்ணிகள், மலைப் பாம்புகள், செந்நாய்கள், தேவாங்குகள், உடும்புகள் போன்றவை அருகி வருகின்றன /அழிந்து வருகின்றன. Endangered species ஆக மாறிவிட்டன.

விலங்கு சங்கிலியில் / Animals Chain விலங்குகளை அடித்து சாப்பிடும் சில மாமிச பட்சிணிகளின் (உதாரணம் : சிறுத்தைபுலி, கழுதைப்புலி, செந்நாய் …) எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் வேறு சில விலங்குகள் எண்ணிக்கை பெருகவும் செய்கின்றன.

காட்டெருமைகளும் அதன் வழித்தடமும்:

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972, முதல் பட்டியல், பகுதி 1 பாலூட்டிகள் [ The Wildlife Protection Act 1972, Schedule 1, Part 1 Mammals ] என்பதின் கீழ் வரிசை எண் 8 E ஆக வகைப்படுத்தப் பட்டுள்ள Gaur or Indian Bison, சர்வதேசிய அளவில் பாதுகாக்கப் படவேண்டிய விலங்கு இனமாகும். (IUCN Category).

இந்தியாவில் யானைக்கு அடுத்த படியாக மிகப்பெரிய தாவரங்கள் சாப்பிடும் விலங்கு காட்டெருமை ஆகும். புற்கள், செடி கொடிகள், இலைகள், பெரண்டைகள், பழங்கள் போன்றவை இவற்றின் உணவாகும். அதனுடைய சாணம் செடி கொடிகளுக்கான இயற்கையான உரமாகும். சாணம் மூலமாக காட்டெருமைகள் வெளியேற்றும் விதைகள் புதியதாக செடி கொடி மரங்களை உருவாக்க உதவுகிறது. பல்லுயிர் பெருக்கத்தில் இப்படியாக முக்கிய பங்கு வகிக்கிறது.

சராசரியாக 800 கிலோ துவங்கி 1300 கிலோ வரை எடை உள்ளதாகும். சில கி.மீ தூரத்தில் தனது உணவு, தண்ணீர், தங்குமிடம் ஆகியவற்றை அமைத்துக் கொள்கிறது. (யானைகள் போல நீண்ட தூரம் பயணம் செய்வதில்லை.). ஒரு பெண் காட்டெருமை தலைமையில் 15 முதல் 20 வரையில் ஒரு கூட்டமாக/மந்தையாக வாழ்கிறது. எண்ணிக்கை பெருகும் போது புதியதொரு மந்தையை உருவாக்கி கொள்கிறது.

1930 வரை தான், சேர்வராயன் மலைப் பகுதியில் சிறுத்தைகள் இருந்ததாலும், பின்னர் பலநூறாக இருந்த கழுதைப் புலிகள் மற்றும் செந்நாய்கள் போன்றவை பெரிதும் குறைந்து போனதாலும், சில நூறுகள் மட்டுமே என்று இருந்த காட்டெருமைகள் எண்ணிக்கை தற்சமயம் 5000 எண்ணிக்கையை எட்டி விட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எனினும், தமிழக வனத் துறையிடம் இந்த பகுதிகளில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை பற்றி எந்த ஆய்வும், விவரங்களும் இல்லை. த.நா வனத்துறையிடம் 2005ம் ஆண்டிற்குப் பிறகு Forest Working Plan என்பதே இல்லை என்பது விவாதிக்கப் படவேண்டிய முக்கிய பிரச்சினை ஆகும்.

டேனிஸ்பேட்டை முதல் அருநூற்றுமலை வரையிலான பைஸன் காரிடர்

சேர்வராயன் மலையின் மேற்கு புறமுள்ள டேனிஸ்பேட்டையில் துவங்கி, கிழக்கில் மஞ்சவாடி கணவாய் & அருநூற்று கணவாய் வழியாக கல்வராயன் மலை வரையிலான வனப் பகுதிகளில், காட்டெருமை வழித்தடம் /வாழ்விடம் விரிந்து அமைந்துள்ளது. 8 வழி பசுமை சாலை வனப் பகுதியில் இரண்டு கி.மீ தூரம் அமையத் திட்டமிடப் பட்டுள்ள மஞ்சவாடி கணவாயின் வெள்ளையப்பன் கோவில் அருகிலிருந்து தான், தினமும் காட்டெருமைகள் இடம் மாறுகின்றன.

சேர்வராயன் மலையிலிருந்து அருநூத்து மலைக்கு அங்கிருந்து இங்கும்:

இந்தப் பகுதியில் வசிக்கும் காட்டெருமைகள், உணவுக்காக குப்பனூர் ஊராட்சிக்குட் பட்ட கோணக்கல் கரடு என்கிற சுமார் 1300 ஏக்கர் பரப்பளவுள்ள மேய்ச்சல் புறம்போக்கு பகுதிக்குச் செல்கின்றன. வண்டிச் சோலை கரடு வரை இதன் மேய்ச்சல் பகுதி வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டியை தொட்டு கூட்டாத்துப்பட்டி ஊராட்சி வரை விரிவடைந்து சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கும் செல்கிறது.

சேர்வராயன் மலை ஏற்காட்டில் காப்பித் தோட்டங்கள் பெருக்கத்தினால், மேய்ச்சல் நிலப்பரப்புகளை இழந்ததாலும் … காட்டெருமைகளுக்கு இந்த பகுதி முக்கியமானதாக மாறிவிட்டது. இன்றளவும், கோணக்கல் கரட்டில், காட்டெருமைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியை ஊடறுத்து எட்டுவழி சாலை செல்வதாக திட்டமிடப்பட்டு உள்ளது.

விலங்குகள் பயன்படுத்தும் பல்வேறு நீர்நிலைகள் மீதும் இந்த ராட்சத சாலை செல்லத் திட்டமிடப்பட்டு உள்ளது. Access controlled Express way என்ற பெயரில் அரண்கள் போல சுவர்கள் அமைக்கப்பட்டால் வழித்தடம் அடைபட்டு போகும். இரவு நேர வாகன வெளிச்சம், ஒலி மாசு விலங்குகளின் நடமாட்டத்தை, செயல்பாட்டை பாதிக்கும். வன விலங்குகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழையும். மனிதன் விலங்கு மோதலில் இருதரப்பு உயிர்களும் பறிபோகும்.

தேவையா இந்த அழிவு?

மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் MOEF குறிப்பான வழிகாட்டுதலாக Specific ToRல் இந்த வனப் பகுதியை தவிர்க்க சொல்லிய போதும், கடந்த ஜூன் முதல் வாரத்தில், தமிழக அரசாங்கம் இந்தப் பகுதியிலுருந்து தான் “சர்வே” என்ற பெயரில் ஏழை, சிறு,குறு விவசாயிகள் மீது அராஜகமாக தாக்குதலை தொடுத்தது என்பது நினைவு கூரத் தக்கது.

மத்திய அரசே! Attention Wildlife Advisory Board காட்டெருமைகள் முதலாவது பட்டியலில் இடம் பெறுவதால்… சேர்வராயன் மலை முதல் அருநூத்து மலை வரையிலான இப்பகுதியை Bison காட்டெருமைகள் சரணாலயமாக அறிவித்திடுக! எட்டுவழி பசுமை விரைவுச் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காதே!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்

நித்தியானந்த் ஜெயராமன்

பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு 0.0579 சதவிகிதம் என்று அனுமானித்ததன் மூலம், ஆர்செனிக் உமிழ்வுகளின் அளவையும் மிகக்குறைவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட்டின் இறக்குமதி தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், 2009-இல் இருந்து 2010 வரை அந்நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட்ட, செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு, 0.12 முதல் 0.64 சதவிகிதம் வரை இருந்துள்ளது என்பதே. இந்தக் குறைந்த தரத்திலான தாதுவை வாங்குவதற்காக, ஏற்றுமதியாளர் 4.8 கோடிகள் விலைக்குறைப்பு செய்தார் என்றும் அந்தத் தரவு தெரிவிக்கிறது.

போதுமான அளவு பசுமை வளையங்கள் அமைக்காதது, தேவையான அளவைவிடக் குறைந்த உயரத்தில் புகைபோக்கிகளை அமைத்தது, போன்ற தரங்குறைந்த மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளும், அதிக அளவிலான ஆர்செனிக் உமிழ்வுகளும், இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீவிரமான நச்சுத்தன்மை மிக்க சூழலை உருவாக்கியிருக்கும் என்று இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை ஆதரவுக் குழு கூறியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யின் கெமிக்கல் எஞ்சினியரிங் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர். டி. சுவாமிநாதன் அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துப்படி, ஸ்டெர்லைட்டின் சல்ப்யூரிக் ஆசிட் ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரத்திலான புகைபோக்கிகளின் விளைவாக, அந்த ஆலையில் இருந்து 1.6 கி.மீ தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 125 மைக்ரோகிராம்/மீட்டர் க்யூப் ஆக இருக்கும். காற்றின் திசையைப் பொறுத்து, டி.வீரபாண்டியபுரம், மேலவிட்டான், பண்டாரப்பட்டி போன்ற கிராமங்களும் பாதிக்கப்படும். உருக்கு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள புகைபோக்கிகளின் உயரம், 60 மீட்டராக உள்ளது. ஆனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி அது 102.8 மீட்டராக இருக்க வேண்டும். இந்தப் புகைபோக்கிகளில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகளின் விளைவாக, அங்கிருந்து 811 மீட்டர் தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 104 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் என்ற அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் காற்றுத் தரத்தின் நிர்ணயங்களின் படி, சல்பர்-டை-ஆக்ஸைடின் அளவு 80 மைக்ரோகிராம்/மீட்டர் கியுப் என்ற அளவிலேயே இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அளவுகளுமே இதை விட அதிகமாக உள்ளன.

ஆர்செனிக்கால் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதும் இல்லாமல், அதன் மூலம் இலாபமும் ஈட்டியுள்ளது ஸ்டெர்லைட். பசுமை வளையங்கள், காற்று மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவை அமைப்பதற்கு குறிப்பிட்ட அளவு நிலம் தேவைப்படும். மாசுக் கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்புகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததன் மூலம் இன்னும் செலவைக் குறைத்துள்ளது அந்நிறுவனம்.

வருடத்திற்கு 400,000 டன் உற்பத்தி செய்யும் உருக்கு ஆலைக்கு, 2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியின்படி, திடக்கழிவு கிடங்கிற்கு 65 ஹெக்டேர் நிலம், காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்கு 1.5 ஹெக்டேர் நிலம் என, மொத்தம் 172.17 ஹெக்டேர் நிலம், இந்நிறுவனத்தின் கைவசம் இருக்க வேண்டும். ஆனால் அதனிடம் இருப்பதோ 102.31 ஹெக்டேர் மட்டும் தான். சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கும் பொழுது, தன்னிடம் இருப்பதாக கூறிய நிலத்தின் அளவை விட இது மிகக் குறைவு.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைச் சுற்றி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும் அடர்ந்த தாவரச் செறிவே பசுமை வளையங்கள் எனப்படும். நன்கு உருவாக்கப்படும் பசுமை வளையங்கள், தொழிற்சாலைகளின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, ஸ்டெர்லைட் போன்ற பெரிதான, நச்சுப்படுத்தும் தொழிற்சாலைகள், 500 மீட்டர் அகலத்துடனான பசுமை வளையங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தனக்காக அதை 25 மீட்டராக குறைத்துக் கொண்டுள்ளது ஸ்டெர்லைட். அதற்கான நிலம் தன்னிடம் இல்லை என்பதால் இதைக்கூட நிறைவேற்றவில்லை அந்நிறுவனம்.

2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச் சூழல் அனுமதியில், 172.17 ஹெக்டேர் நிலத்தில், 43 ஹெக்டேருக்கு பசுமை வளையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கையில் இருந்ததோ 102.31 ஹெக்டேர்கள் தான். ஆதலால் அந்நிறுவனம் அதை அமைக்க தவறி விட்டது.

மேலும் தகவல்களுக்கு : நித்தியானந்த் ஜெயராமன் – 9444082401

சென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

“சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைக்கு அழிக்கப்பட உள்ள அடர்ந்த வன நிலங்களின் குறைந்த பட்ச அளவு 120 ஹெக்டேர் [300 ஏக்கர்], நீளம் 10 கி.மீ முதல் 13 கி.மீ வரை இருக்கும்” என NHAI திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுவாஞ்சூர், ஆரணி அருகே நம்பேடு, போளூர் அருகே அலியாள மங்கலம், செங்கம் அருகே ராவண்டவாடி (கவுத்தி மலை பகுதி), மஞ்சவாடி (சேர்வராயன் மலை), சேலம் அருகேயுள்ள ஜருகு மலை ஆகிய பகுதிகளில் அடர்ந்த வனங்கள், காட்டு மரங்கள், வன விலங்குகள், அரிய உயிரினங்கள் அழிக்கப்பட உள்ளன. தமிழக வனத்துறை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்படவுள்ள அழிவு பற்றி மட்டும் பார்ப்போம்:-

சேர்வராயன் மலையின் கிழக்கு புறத்தில் மஞ்சவாடி கணவாய் பகுதியில், சுமார் 1.78 கி.மீ நீளத்தில் மலைப் பகுதியில், சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் “வால்” போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதை பிளந்து கொண்டு தான் பசுமை சாலை செல்கிறது.

இதனால் சுற்றுச்சூழல் இயற்கைக்கு என்ன பாதிப்பு?

கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரமுள்ள இந்த வனப் பகுதி, காட்டு மரங்கள், புற்கள் (Grass), செடிகொடிகள், பிரண்டைகள் ஆகியவற்றை கொண்டுள்ள, காடுவாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வனமாகும். ஈட்டி, கருங்காலி, வேப்ப மரங்கள், நாக மரங்கள் துவங்கி 5 ஆண்டுகள் வளர்ச்சியுள்ள தேக்கு, சந்தன மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். சாலை நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். வனத்திலுள்ள மரங்கள் தான் நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கின்றன ; சுற்றுச் சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடு & கார்பன் மோனோ ஆக்சைடு போன்றவற்றை உறிஞ்சிக் கொண்டு, ஆக்சிஜனை/ சுத்தமான காற்றை நமக்கு வழங்குகின்றன.

மூங்கில் தோப்புகள் அழிவதால்….

இத்தகைய உயரம் குறைந்த இடத்தில் தான் மூங்கில்கள் பெருமளவில் விளைகிறது. மூங்கிலின் அடிப்பகுதி பெருமளவில் கார்பன்டையாக்சைடு உறிஞ்சும் ஆற்றல் மிக்கது; ஆழமான வேர்கள் இல்லாததால் குறைவான நீரையே எடுத்துக் கொள்ளும் ; அதே சமயம் சுற்றிலும் ஈரப் பதத்தை பாதுகாக்கும். மூங்கில் அரிசி மற்றும் குருத்து மூங்கில் உணவாக பயன்படுகிறது. இன்றளவும் கூட அப்பகுதியில் உள்ள மலையாளிகள் /பழங்குடியினர் மூங்கில் அரிசியை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். [மூங்கில் குருத்துக்கள் யானைகளுக்கும் கூட உணவாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னர், பன்னர்கட்டா – ஒசூர்-தொப்பூர் மஞ்சவாடி கல்ராயன் மலை என விரிந்திருந்த யானை வழித் தடம், சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையால் தடுக்கப்பட்டு விட்டது, வேறு ஒரு செய்தியாகும்]…

செங்குட்டை ஏரியின் அழிவால்…..

இன்றும் கூட/கோடையிலும் தண்ணீர் உள்ளது. சேர்வராயன் மலையின் மான்கள், கேழா மான்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள், செந் நாய்கள், குள்ள நரிகள்,காட்டு முயல்கள், கீரிகள் என அனைத்து வன விலங்குகள் வந்து தாகம் தணிக்கும் ஏரி இந்த செங்குட்டை ஏரியாகும்.

அருகி வரக்கூடிய endangered உயிரினங்களான எறும்புத் திண்ணிகள், மூங்கிலத்தான் @ மூங்கில் அணில்கள், உடும்புகள், தேவாங்குகள் போன்றவை உயிர் வாழும் பகுதியுமாகும். கூட்டம் கூட்டமாக மயில்களை இங்கு பார்க்க முடியும்; பலவகை குருவிகள், காடை கவுதாரிகள், காட்டுக் கோழிகள் ஆகியவன வாழும் பூமியாகும். இயற்கையின் ஒரு சங்கிலி அறுந்தால் மற்றொரு சங்கிலியும் அழியும்! ஒரு நெடுஞ்சாலைக்காக வனங்கள் அழிக்கப்பட்டால்……

1)மஞ்சவாடி வனம் புற்கள் நிறைந்த பகுதியாகும். இந்த புற்தரைகள் மலைப் பகுதியின் ஈரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன; மற்றொரு வகையில் புல் தாவரங்களை, மருத்துவ குணம் மிக்க பெரண்டைகளை உண்டு வாழும் விலங்குகள், இவை அழிக்கப்பட்ட உடனே இரை தேடி வனத்திற்கு வெளியே வந்து மனிதர்களிடம் இரையாகும். புற்கள் Grass இல்லாமல் பல விலங்குகள் உயிர் வாழ முடியாது.

2)கரையான், எறும்பு புற்றுகள் அழிக்கப்பட்டால், அதை உணவாக கொள்ளும் பாம்புகள், பல்லிகள், ஓணான்கள் இரை தேடி வெளியே வந்து மனிதர்களிடம் சிக்கி அழியும் அல்லது உணவில்லாமல் மெல்லச் சாகும்.

3)பறவைகளின் உணவகம், வாழ்விடம் மரங்கள் தான். அவைகள் அழிக்கப்பட்டால் பறவைகள் வெளியேறும்; உணவில்லாமல் தவிக்கும், அழியும்.

4)மற்றொரு புறம் மரங்கள் அழிக்கப்பட்டால் மனித குலத்துக்கு கேடு. சுற்றுச் சூழலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்; வெப்பம் அதிகரிக்கும்; நிலத்தடி நீர் மட்டம் சரியும்.

ஒரு வனத்தின் அழிப்புக்கு ஈடு செய்ய 50ஆண்டுகள் வேண்டும்! சுற்றுச்சூழல் சமநிலையை Eco system த்தை அவ்வளவு சீக்கிரமாக மீட்க முடியாது. ஒரு சங்கிலி அழிந்தால் உயிர் சங்கிலி அறுந்து போகும்! மஞ்சவாடி கணவாயில் அமைக்கும் நெடுஞ்சாலைக்கு இத்தகைய தாக்கம்/அழிக்கும் ஆற்றல் இருக்கும்போது, ஜருகு மலையில், கவுத்தி மலை வனத்தில், ராவண்டவாடி, அலியாள மங்கலம், நம்பேடு, சிறுவாஞ்சூர் வனங்களில் ஆங்காங்கே உள்ள குறிப்பான வன உயிரினங்கள் சமன்பாடுகளில் எத்தகைய அழிவு ஏற்படும்?

“இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும்” என்றார் எங்கெல்ஸ். வனங்களை காடுகளை அழிப்பது மற்றொரு பேரழிவு. பசுமை வழிசாலைஅழிவுப்பாதை!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அ. முத்துகிருஷ்ணன்

அ. முத்துகிருஷ்ணன்

LMES குழுவினர் ஸ்டெர்லைட்-மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள், அதை பற்றிய தகவலை அறிகிற நேரம் தூத்துக்குடியில் கடுமையான பணிச்சுமை காரணமாக உடனடியாக பார்க்க இயலவில்லை, இன்று காலை தான் அந்த காணொளியை பார்த்தேன்.

1. கோரிக்கை :
இந்த காணொளியின் அறிவியல் தான் அனைவரையும் மிரட்டுகிறது. SAMPLE COLLECTION, வேதியியல் ஆய்வகங்களில் பரிசோதனைகள், முடிவுகள் என்கிற திரையில் எண்களும் கிராபிக்சும் வண்ணங்களில் பளிச்சிடும் போது ரமணா படம் பார்க்கும் எபெக்ட் ஏற்படுகிறது. இந்த காணொளியில் செய்யப்பட்ட ஆய்வு புள்ளிவிபரங்கள் முக்கியமானவை, இந்த முழுமையான ஆய்வக அறிக்கைகளை LMES குழுவினர் வெளிப்படையாக வெளியிட வேண்டும், அதற்கு அவர்கள் தயாரா??

2. சந்தேகம் :

அது மட்டும் அல்ல இதில் காட்டப்படுவது போல் நாம் வாங்கும் குடி தண்ணீர் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் சேகரிக்கப்படும் மாதிரிகளை எந்த முறையான ஆய்வகமும் ஏற்பதில்லை என்பது நடைமுறைகளை அறிந்தவர்கள் அறிவார்கள். தூத்துக்குடியைப் பற்றிய முக்கிய விஞ்ஞானபூர்வமான ஆய்வை மேற்கொள்ள கிளம்பியவர்கள் ஏன் இதற்கான முறையான கண்ணாடி குடுவைகளை கொண்டு செல்லவில்லை. ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வரும் மாதிரிகளை ஆய்வு செய்யும் அந்த உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் எது??

3. உடல் நலக்கேடுகள் :

இந்த காணொளியில் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் மாதிரிகளை பற்றி புள்ளி விபரங்களில் பல தகவல்கள் திரையில் வருகிறது, ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் இதே தகவல்களைத் தான் தங்களின் உடல்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் வாயிலாக கூற முற்பட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் வேதியியல், பொறியியல், புள்ளியியல் படிக்காதவர்கள் என்பதால் தங்கள் பாணியில் தண்ணிய குடிக்க முடியல, மஞ்சக் கலரா மூத்திரம் போகுது, கால் எல்லாம் வெடிப்பா வருது, குழந்தைகளுக்கு தோல் எல்லாம் சுருங்கி போகுது, சிறுநீரகத்தில் கல் அடைக்குது, சிறுநீரகமே இயங்காமல் போகுது, கடுமையான இருமல் வருது, மூச்சு திணறல் வருது என்று தங்கள் வெளிப்பாட்டு மொழியில் உலகிற்கு புரிய வைக்க கடந்த 20 ஆண்டுகளாக மன்றாடி வருகிறார்கள்.

4. ரஜினியின் குரல்:

ஆனால் இந்த காணொளி முன்வைக்கும் அரசியல் தான் கவனிக்கப்பட வேண்டியவை, அது பல கேள்விகளை நமக்கு எழுப்புகிறது.

ஏசி அறையில் இருந்து யாரோ சிலர் உங்களை தூண்டிவிட்டு பாருங்கள் நீங்கள் தான் குண்டடிபட்டு செத்துப் போகிறீர்கள், அடிபட்டு கிடக்கிறீர்கள் என்பதன் மூலம் அதே ரஜினி-பொன்.ராதாகிருஷ்ணன் வகையறாக்களின் அதே குரலை பிரதிபலிக்கிறது இந்த காணொளி.

ஒரு புறம் ஆமாம் சூழல் மாசு பட்டுள்ளது கிராம மக்களுக்கு இந்த சிரமங்கள் எல்லாம் இருக்கிறது என்று கூறும் இவர்கள், அதே வேளை இந்த பாதிப்புகளால் போராடும் போராட்டக்காரர்களை உங்களை யாரோ சிலர் தூண்டிவிட்டு தான் போராடுகிறீர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள் LMES குழுவினர்.

5. ஆற்காட்டு அரசியல்:

ஸ்டெர்லைட் போராட்டத்தையும் அது தொடர்பாக இயங்கிய இருவரையும் குறிபார்த்து கொச்சைப்படுத்துகிறது. ஸ்டெர்லைட் தொடர்பாக ஃபாத்திமா பாபுவும், நித்தியானந்த ஜெயராமும் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள், இவர்கள் தான் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இலக்காக இருந்திருக்கிறார்கள், இந்த காணொளியின் இலக்கும் கூட இவர்கள் இருவரே.

வெறும் ஐந்து நாட்களிலேயே இவர்களுக்கு எல்லாம் தெளிவாக தெரிந்தது என்று அறிவிக்கும் LMES குழுவினர் ஏன் இதே இணையதளத்தில் GOOGLEல் சென்று நித்தியானந்த ஜெயராம் என்று ஒரு தேடுதலை செய்து அவர் எழுதிய கட்டுரைகளை வாசிக்கவில்லை, பேசிய பேச்சுக்களை கேட்கவில்லை என்பது நமக்கு புரியவில்லை.

இந்த LMES குழுவினர் ஏன் இதே இணையத்தில் கூகுலில் சென்று தாது மணல் கொள்ளை, தாது கொள்ளைக்கு எதிரான போராட்டம், Beach Sand Mineral Exporter, S. Vaikundarajan, perils of investigating illegal beach sand mining என்று ஒரு சிறு தேடுதலைக்கூட மேற்கொள்ளவில்லை என்பது இந்த குழுவினரின் பெரு ஆய்வின் தரத்தை வெளிப்படுகிறது.

இவர்கள் ஏன் அதை செய்யவில்லை,
இதை செய்யவில்லை என்பது LMES குழுவினர் ஏன் ஆம்பூர் தோல் தொழிற்சாலை, கூடங்குளம், நெடுவாசல், திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள், அனல் மின் நிலையங்கள், கடலூர் சிப்காட், பற்றி இதே மாதிரி கருத்து தெரிவிக்கவில்லை என்று கேட்பது போல் சிறுபிள்ளைதனமானது.

6. விவி மினரல்சுக்கு எதிரான போராட்டம்:

1990களில் தான் தாது மணல் தொடர்பான பாதிப்புகளை மக்கள் உணரத்தொடங்கினார்கள். 1990 முதல் நடந்த போராட்டங்களின் ஒரு நுனிப்புல்லையாவது அறிந்து கொள்ள LMES குழுவினர் முயன்றார்களா. எத்தனை போராட்டங்கள், குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள், தடியடிகள், பேருந்து எரிப்புகள் என ராமநாதபுரம் மாவட்டம் முதல் குமரி வரை நான்கு மாவட்டங்களின் மீது வைகுண்டராஜனுக்கு இருக்கும் இரும்புப் பிடியை இந்த உலகமே அறியும்.

4 மாவட்டங்களில் உள்ள 150 கிமீ கடற்கரையில் உள்ள கிராமங்களில் செயல்படுகிற தனியார் உளவுத்துறை முதல் இந்த கிராமங்களில் குழுக்களிடையே வாள்-ஈட்டி சகிதம் நடந்த மோதல்கள் எப்படி வெடி குண்டு கலாச்சாரமாக மாற்றப்பட்டது என்பதும், இந்த கிராமங்களின் கமிட்டிகள் எப்படி விலைக்கு வாங்கப்பட்டன என்பது வரை ஒரு முழு புத்தகமே எழுதலாம். கிராமங்கள் மட்டும் அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் அரசு நிர்வாகம் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை யாரின் செல்லப்பிள்ளையாக இயங்கினார்கள் என்பது உலகம் அறிந்த ரகசியங்கள்.

இந்த மாஃபியாக்களின் இரும்புப் பிடியை பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் ஓராயிரம் கட்டுரைகள் வெளிப்படையாக இலவசமாக இணையதளங்களில் கிடைக்கிறது. தோழர் முகிலன் அவர்கள் எழுதிய “தாது மணல் கொள்ளை” நூல் இந்த மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் தோல் உரித்துக் காட்டுகிறது.

1995ல் தாது மணலுக்கு எதிரான போராட்டத்தில் தோழர் புஷ்பராயன் அவர்கள் கை முறிக்கப்பட்டு, மண்டை உடைந்தது கிடந்தது அன்றைய ஜான்கிட் நிகழ்த்திய காட்டுதர்பார் எல்லாம் நம் காலத்து வரலாறு தான்.

2001ல் நாகர்கோவில் பொன்னார் திடலில் மரிய ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடந்த பொதுக் கூட்டம் முக்கியமானது. 2002ல் தாதுமணல் கொள்ளை பற்றி புது தில்லலியை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் வி.பி.ராபர்ட் அவர்களின் ஆவணப்படம் இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது, இந்த பிரச்சனைக்கு புதிய கவனத்தை ஏற்படுத்தியது. தாதுமணல் கொள்ளை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் பேசிய பேச்சு இங்கே குறிப்பிடத்தகது. சுப. உதயகுமார் அவர்கள் தொடக்கம் முதலே தாது மணல் கொள்ளை பற்றி பேசி வருகிறார், காலச்சுவடில் இவர் தாது மணல் பற்றி எழுதிய கட்டுரையும் முக்கியமானது.

ஆவணப்பட இயக்குனர் அமுதன் அவர்கள் RADIATION STORIES என்கிற திரைப்பட வரிசையில் தாது மணல் கொள்ளை மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாக படம் பிடித்துள்ளார். 2012 முதல் வெளியான இந்த ஆவணப்பட வரிசையைப் பார்த்த யாவரும் மனம் கனத்துப் போவார்கள்.

ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அவர்கள் தாது மணல் கொள்ளை பற்றிய எழுதிய Dancing With the Mining Cartel என்கிற கட்டுரையால் அவர் சந்தித்த கொலை மிரட்டல்கள் அவருக்கு ஆதரவாக நடந்த இயக்கங்கள், கட்டுரைகளை LMES குழுவினர் ஏன் வாசிக்க முற்படவில்லை, அறிந்து கொள்ளவில்லை. இல்லை இதை எல்லாம் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்று யாரும் அவர்களுக்கு கட்டளையிட்டார்களா??

7. பங்காளி தகராறு:

ஸ்டெர்லைட் மற்றும் விவி மினரல் ஆகிய இரு நிறுவனங்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையை இந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சிகள் முதல் அரசதிகாரிகள் வரை கச்சிதமாக பயன்படுத்தினார்கள். இரு பக்கங்களிலும் பணம் பெற்றுக் கொண்டு இதை ஒரு தீரா பங்காளித் தகராறாகவே மாற்றி குளிர் காய்ந்தார்கள். ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆதாரங்களை உருவாக்குவது வெளியிடுவது காலகால நடைமுறை.

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, என் பங்காளிக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்கிற ஸ்டெர்லைட்டின் குரல் மட்டுமே துள்ளியமாக இந்த காணொளியில் ஒலிக்கிறது. என்னை அனுமதிக்காவிட்டால் நான் யாரையும் இங்கு தொழில் செய்ய அனுமதிக்க மாட்டேன், நிம்மதியாக இருக்க மாட்டேன் என்கிற ஸ்டெர்லைட்டின் மனசாட்சியின் குரலாகவே இந்த காணொளி அப்பட்டமாக ஒலிக்கிறது. முதலாளித்துவம் இப்படித்தான் ஒன்றையொன்றை விழுங்கும்/வீழ்த்தும் என்று நாங்கள் அறியும் சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது ஸ்டெர்லைட்டின் இந்தப் போக்கு.

8. யாரை நோக்கி:

இந்த காணொளி தூத்துக்குடியில் இயங்குவதிலேயே ஸ்டெர்லைட் தான் குறைவாக மாசு ஏற்படுத்தும் ஆலை, அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா, அவர்களின் கழிவு கையாளும் திறன் எவ்வளவு தரமானது தெரியுமா என்று நம் மனங்களில் ஸ்டெர்லைட் மேல் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்துகிறது. YOUTUBEல் இந்த காணொளி யாரை நோக்கி எடுக்கப்பட்டுள்ளது (targetted audience) என்பதும் இந்த காணொளி எத்தகைய விளைவுகளை (conceived results) ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் அங்கே பதிவு செய்யப்படுகிற ஒவ்வொரு பின்னூட்டமும் (comments) உறுதிப்படுத்துகிறது.

ஸ்டெர்லைட் மட்டும் அல்ல இந்த பகுதியில் தாது மணல் கொள்ளை ஏற்படுத்தும் மாசுபாடுகள், ஸ்பிக் நிறுவனம் வெளியிடும் மாசு, அனல் மின் நிலையங்கள் கக்கும் சாம்பலால் ஏற்படும் உடல் நலம் மற்றும் நிலம் சார்ந்த பாதிப்புகள், ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்டிருக்கும் மாசுபாடுகள் என இவை அனைத்துமே மனிதர்கள் வாழ லாயக்கற்ற நிலமாக தூத்துக்குடியைச் சுற்றிய பகுதிகளை மாற்றி வருகிறது அதே வேளை மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இவை பொன் முட்டையிடும் வாத்துகளாகவும் திகழ்கிறது.

ஸ்டெர்லைட் வெற்றி, மாசுபாடு ஏற்படுத்தும் எல்லா நிறுவனங்களையும் நாம் நம் நிலத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்கிற உத்வேகத்தை தமிழகத்திற்கே ஊட்டியுள்ளது. ஆனால் இந்த காணொளியோ அப்பட்டமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளம்பரம் என்பது பார்க்கும் எவருக்கும் புரியும், ஒரு முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியாது என்பது விஞ்ஞானம் அல்ல எளிய கிராம பழமொழி. தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மிக சுலபமாக உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் உடைத்துவிடும் ஏனெனில் அந்த அரசாணையில் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அழுத்தமான காரணங்கள் இல்லை என்று கிராம மக்களே பேசும் இந்த சூழலில், அடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள் நோக்கி படித்தவர்களை, நகர வாசிகளை, வளர்ச்சி மட்டுமே வேண்டும் என்கிற மத்திய தர வர்க்கத்தை தயார் செய்யும் வேலையை தான் இந்த காணொளி செய்கிறது. கடந்த ஒருவார காலமாக தமிழ்-ஆங்கில ஊடகங்கள் முழுவதுமே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் PAID NEWS-தான் என்பதை வாசிக்கும் அனைவரும் அறிவர்.

இதுவும் கூடPAID NEWS தானா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது, உங்களுக்கு????

அ. முத்துகிருஷ்ணன், செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.

”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்

சென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை அமைப்பு பணிகளுக்காக 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் தொடங்கி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக அமையவுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 120 ஹெக்டர் அளவில் காடுகள் அழிக்கப்படும் என தெரிவந்துள்ள நிலையில், திட்டம் அமலாக்கப்பட்டால் அது மிகப்பெரும் சூழலியல் பேரரழிவாக அமையும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத்திட்டத்தால் நிலங்களை இழக்க நேரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படம் நன்றி: adventurewildlife magazine

தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே!

நக்கீரன்

நக்கீரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. காவிரியின் மீதான தமிழகத்தின் பல உரிமைகள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. வழக்கத்துக்கு மாறாக நிலத்தடி நீரை கணக்கிட்டு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பு அமுங்கி போய்விட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தையாவது நடைமுறைக்குக் கொண்டு வா என்கிற அளவுக்கு நாம் சுருக்கப்பட்டு விட்டோம். இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. உச்சநீதிமன்றம் சவ்வு மிட்டாய் தின்று கொண்டிருக்கிறது.

ஆழிப்பேரலைக்குப் பின்னர் நமக்கு ‘சுனாமி’ என்ற சொல் அறிமுகமானது போல் இன்று ‘ஸ்கீம்’ எனும் சொல் புழக்கத்துக்கு வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘ஒரு கண்காணிப்புக் குழு’ என்று கர்நாடகம் பொருள் கொள்கிறது. தமிழ்நாடோ ‘இல்லை, அது காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்று அடித்துச் சொல்கிறது. பாவம் தற்குறியான நடுவண் அரசோ அதற்கு என்ன பொருள் என்று உச்சநீதிமன்றத்திடமே விளக்கம் கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இனிதான் அகராதியைத் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அது அகப்பட எத்தனை நாளாகுமோ தெரியாது. அதுவரை காவிரிப்படுகை உழவர்களின் எதிர்காலமும், தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரமும் இந்த ஒற்றைச் சொல்லில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

Scheme என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்றோ அல்லது அது ஒரு அலுவல் சொல் மட்டுமே என்று நம்புவதற்கு முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கீம் என்றால் அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கும் என்று உடனே ஏன் உறுதிப்பட நீதிமன்றத்தால் கூற முடியவில்லை என்பதில்தான் அய்யம் தொடங்குகிறது. இதற்கு விளக்கம் கேட்டு நடுவண் அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கிறது. அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இப்படியான ஒற்றைச் சொல் அரசியல் ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல.

1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு அன்றைய ஜவகர்லால் நேரு அரசினால் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அரசு அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி ஒன்று வழங்கப்பட்டது. அதை ஆங்கிலத்தில், ‘English may continue as a official language as long as non-Hindi speaking people want it’ என்று குறிப்பிட்டனர். ஆனால் இதிலுள்ள may என்கிற சொல்லுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புத் தொடங்கியது. இலக்கண ரீதியாக may அல்லது will சரியான சொல்லே. ஆனால் may என்னும்போது இருந்தாலும் இருக்கலாம் அல்லது இல்லை என்றாலும் இருக்கலாம் என்கிற தொனி வந்துவிடுகிறது. எனவே அந்த may என்கிற சொல்லை எடுத்துவிட்டு shall என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுப்பட்டது. ஏனெனில் அதற்குக் கட்டாயமாக என்கிற பொருள் வந்துவிடுகிறது.

இந்த முன்மாதிரியை வைத்து பார்க்கும் போது ’ஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டபட்டவரும், தற்போது எதிர்கட்சிகளால் பதவி நீக்கம் கோரி நாடாளுமன்றத்தில் ’இம்பீச்மெண்ட்’ கொண்டு வரப்படவிருக்கும் ஒரு நீதிபதியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் இச்சொல் இடம் பெற்றிருக்கிறது. Scheme என்கிற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் ‘திட்டம்’ என்று பொருள் கூறும் அதேவேளை ’சூழ்ச்சிமுறை’ என்றும் பொருள் கூறுகிறது.

இதில் எந்தப் பொருளை நாம் எடுத்துக் கொள்வது?

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்

ஜெ. பிரபாகர்

அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் ‘வேதாந்தா’ தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.

பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற – தமிழ்மாந்தன் தலைமையிலான – அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.

இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.

21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.

2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.

உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.

7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, “உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.

அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.

1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.

அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.

ஆளும் பாஜகவுக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.

எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்

ஜெ.பிரபாகர், பத்திரிகையாளர்.  தொடர்புக்கு jprabakar@gmail.com.

 

விலங்குக்கும் பறவைக்கும் மதம் எதற்கு?

ஒடியன் லட்சுமணன்

odiyan
ஒடியன் லட்சுமணன்

தயவு செய்து மதங்களுக்குள் எந்த விலங்குகளையும் பறவைகளையும் சேர்க்காதீர்கள்.. அது எந்த மதமாய் இருந்தாலும் சரி தான் !

23 ஆண்டுகளாக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த ருக்கு இன்று அகால மரணமடைந்திருக்கிறது

மலைப்பிரதேசங்களில் காட்டு யானைகள் ஒரு குறிப்பிட்ட தூரம்வரும்வரைதான் நாய்கள் குலைக்கும்.. யானைகள் . கண்களில்படும் தூரத்திற்கு வந்துவிட்டால்; வேட்டைநாய்கள்கூட சகலதையும் பொத்திகொண்டு பின் ட்ராப் சைலண்டாகிவிடும் பழங்குடிகள் அப்படித்தான் கட்டுப்படுத்திப் பழக்கியிருப்பார்கள்

கட்டுபாடற்று வளர்த்திய நாய்களென்றால் குலைத்துகுலைத்தே எங்கோ போகிற யானையை எறவாரத்துக்கு கூட்டிவந்துவிடும்

அப்படி அருகில் வந்த பின்னும் ஓடமல் இருக்கும் நாயைப்பார்த்த்தால் தலையை தாழ்த்தி தும்பிக்கையை தூக்கி லேசாக ஒரு பிளிரல் பிளிரும் அவ்ளோதான்… நாய் UG ஆகிவிடும்.

இங்கோ ஒரு நாயின் குலைப்பைக்கண்டு ருக்கு மிரணடிருக்கிறது இதுவும் ஒரு கேரக்டர் அசாசிநேசன்

நாயின் குலைப்பொலியை கேட்டு மிரண்ட ருக்கு கோயில் வாளாகத்துக்குள் அங்குமிங்கும் ஓடியிருக்கிறது அப்படி ஓடியதில் அருகிலிருந்த இரும்புவேலியில் பலமாக மோதி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறது

இப்படி ஆன்மீகம் என்ற பேரில் ஒரு யானையை 23 ஆண்டுகள் நடைபிணமாக வைத்திருந்து தான் ஒரு யானை என்ற நினைவை அழித்து அநியாயமாக கொன்றிருக்கிறார்கள்.

அருணாலேச்சுவரர் இருப்பது உண்மையென்றால் ஆன்மீக ஜூக்கள் அடியோடு அழியட்டும்.

ருக்குவிற்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி!

ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

சுடானுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது…

ஆர். ராமமூர்த்தி

சுடானுக்கு இரங்கல் தெரிவிக்குமளவு நமக்கு தகுதி இருப்பதாய் தெரியவில்லை….

இந்த உலக காடுகள் தினத்தில் நாம் விட்டுவைத்த எஞ்சியிருந்த ஒரேயொரு ஒற்றை வெள்ளை காண்டாமிருகமும் தனது இணைகளான இரண்டு பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு இருவரையும் கென்யாவில் விட்டுவிட்டு இந்த உலகிலிருந்து மீண்டது….

இந்தியாவில் அசாம் பகுதியில் இருப்பது இந்திய காண்டாமிருகம். இது தவிர சுமத்ரா காண்டா மிருகம், ஜாவா காண்டா மிருகம், கருப்பு காண்டா மிருகம் மற்றும் இந்த வெள்ளை காண்டாமிருகம் என ஐந்து வகைகள் உண்டு இவற்றில் நமது இந்தியக் காண்டா மிருகமும் கொம்புகளுக்காக வெகுவாக அழிக்கப்பட்டு விட்டன.வெள்ளை காண்டாமிருகத்தில் எஞ்சியிருந்த கடைசி ஆண் காண்டா மிருகம் இந்த சுடான் மட்டுமே.இது கூட கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதமேந்திய காவலர்களால் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வந்தது. என்றால் உலகில் மனிதர்கள் இயற்கைக்கு எதிராக எப்படியெல்லாம் கொடுமையாக இருக்கிறார்கள் என யோசியுங்கள்…

இதன் இறப்புகூட நமது ஆணவத்திற்கு விடப்பட்டிருக்கும் இறுதி எச்சரிக்கை என்பதை புரிந்து நடந்து கொள்ளவில்லை என்றால் பாதிப்பென்னவோ முழுமையாக நமக்குத்தான்…

நமது பேராசையால் உலகிலுள்ள உயிரினங்களை ஒவ்வொன்றாக இழந்துவருவது பெருமைக்குரிய விசயமா ? சரியாகச் சொன்னால் இழக்கப்பட வில்லை அழிக்கப் பட்டு கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்…

இந்த பூமியும் பூமியில் உள்ள அனைத்தும் நமக்கே நமக்கு மட்டும்தான் சொந்தம் என்கிற நினைப்பை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு சிந்தித்தால்தான், எதிர்கால நமது சந்ததிகள் ஓரளவாவது நிம்மதியாக வாழ முடியும்….

சுடான்கள் மட்டுமல்ல நம்ம ஊரில் வேட்டையாடப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு உயிரினத்தின் அழிவிற்கும் நாம் சாட்சியாக இருப்பதுகூட நமது அழிவிற்கு நாமே குழிதோண்டும் செயல்தான்….

அனைவருக்கும் தெரிந்த வாசகம்தான் ஆனால் இன்றைக்கு ஏனோ நினைவுபடுத்த மனசு நினைக்கிறது…

“மனிதர்களற்ற பூமியில் மற்ற உயிரினங்கள் சுகமாக வாழ்ந்துவிடும்.ஆனால் மற்ற உயிரினங்களற்ற பூமியில் மனிதர்களால் ஒருநாள்கூட வாழ்ந்திட முடியாது”

-மற்ற உயிரினங்களில் ஒருவகையை இன்று கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டோமே!….

இன்று “உலக காடுகள்தினம்”-இதுமாதிரி நாட்களை மட்டுமல்ல தினம்தோறும் காடுகள் தினமாக பெயரளவில் அனுசரிக்காமல் மனதளவில் உணர்ந்து கடைபிடிக்கும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆர். ராமமூர்த்தி, சூழலியல் செயல்பாட்டாளர்.

காவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முன்பு கிருஷ்ணா ஆற்றுநீர் நடுவர் அறிக்கையிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லைதானே? விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அந்தந்த நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கையைத்தானே கடைப்பிடித்திருக்கிறார்கள்? காவிரியில் மட்டும் இந்தக் கணக்கு எப்படித் திடீரென முளைத்தது? சரி இதே நிலத்தடி நீர் கணக்கு கர்நாடகத்திலும் எடுக்கப்பட்டதா?

இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகவே தஞ்சை காவிரி வடிநிலப்பகுதியில் நிலத்தடி நீர் மிகையாக இருக்கிறது என்கிற கருத்தே இந்திய பொதுப் புத்தியில் நிலவி வருகிறது. 1972-ல் காவிரி சிக்கல் தொடங்கிய போது டாக்டர் கே.எல்.ராவ் ஏற்பாட்டின்படி காவிரிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்களுக்கும் இதே கருத்துதான் இருந்தது. இந்நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆற்றுநீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கருதினர். அப்போது தஞ்சை வடிநிலத்தில் ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்ட வல்லுநர்கள் நடத்தி முடித்திருந்த ஆய்வுகளின் முடிவுகளே அதற்குக் காரணமாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு தோராயமான கணக்கே ஆகும். ஐநா குழுவினர் 3000 சதுர மைல் பரப்புள்ள தஞ்சை வடிநிலத்தில் 60 குழாய்கள் மட்டுமே இறக்கி இந்த ஆய்வைச் செய்திருந்தனர்.

ஆனால் மேற்படி ஆய்வின் ஒரு முதன்மையான செய்தியை காவிரிக் குழுவினர் கருத்தில் கொள்ளவில்லை. மேட்டூர் நீரை தஞ்சை நம்பியிருப்பது ஜூனில் இருந்து அக்டோபர் வரையான குறுவை சாகுபடிக் காலத்தில்தான். அக்காலம் இப்பகுதியில் மழை குறைவான காலம். ஜூனில் மேட்டூரிலிருந்து வரும் நீர் வாய்க்கால்களில் ஓடிய 15 நாட்களுக்குள் காவிரி வடிநிலப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். வயல்களில் கட்டும் நீர் விரைவில் கீழே மண்ணுக்குள் இறங்காது. ஏனெனில் கீழ்மட்டத்தில் உள்ள மணற்பாங்கான ஊற்று மண்ணுக்கும், மேலேயுள்ள உழுத மண்ணுக்கும் இடையில், கனத்த தகடு விரித்தாற்போலக் களிமண் திரை விரிந்து கிடக்கிறது. இத்திரை வயலில் கட்டிய நீரை, விரைவில் கீழே இறங்காமல் தடுத்துவிடும். பின் எப்படி நிலத்தடி நீர் ஊறும்?

களிமண் திரைக்கு நேர்மாறாக வாய்க்கால்களின் படுகைக்குக் கீழே மணற்பாங்காக இருக்கும்; இதனால் வாய்க்கால் வழியே பாயும் நீர் இங்கு விரைவில் கீழிறங்கிவிடும். வாய்க்கால் பகுதிக்கும், வயல்களுக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இதனால் வாய்க்காலடி நிலத்தடி நீர் களிமண் திரைக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கு பாய்ந்து அதை மிக விரைவில் நிறைத்துவிடும். ஆகவேதான் ஜூன் மாத்தில் நீர் வந்தவுடன் இங்கு நிலத்தடி நீர் மட்டம் மேலேறிவிடும்.

அப்போதைய கணக்கின்படி ஜூனில் மேட்டூர் திறந்த நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை வடிநிலப் பாசனத்துக்கு அனுப்பப்படும் நீரின் அளவு சராசரி 20,000 கோடி கன அடியாக இருந்தது. இதில் ஐ.நா. வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் பயிர்களின் தேவைக்காக வயலில் கட்டப்பட வேண்டிய நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதியுள்ள 9,000 கோடி கன அடி நீர் வாய்க்கால்கள் வழி நிலத்தடி நீராக மாறும். இந்த ஆய்வு சொல்லாமல் சொன்ன செய்தி என்னவெனில் ‘ஆற்றில் நீர் வந்தால்தான் தஞ்சை வடிநிலப் பகுதியில் நிலத்தடி நீர் தங்கும்’ என்பதே. ஆனால் காவிரிக் குழுவினரோ இந்தக் கணக்கை மனதில் கொண்டு 11,000 கோடி கன அடி நீரை மட்டும் மேட்டூருக்கு அனுப்பினால் போதாதா என்று கருதினர்.

காவிரி வடிநில நிலத்தடி நீர் என்பது குறுவை சாகுபடிக்கான நாற்றுகளை மேட்டூர் திறப்புக்கு முன் தயார் செய்யவும், தாளடிப் பருவத்தின் கடைசியில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், பருவமழைக் குறைவினால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பயன்பட்டது. இத்தனைக்கும் அன்று இன்று போல் 50% நம்பிக்கைத் தரத்தில் அல்லாது 75% நம்பிக்கை தரத்தில் நீர் வந்து கொண்டிருந்த காலம். மேலும் கர்நாடகம் காவிரியின் குறுக்கே கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளைக் கட்டியிராத காலம். ஆனால் இன்றைய காலக்கட்டம் எப்படிப்பட்டது?

காவிரி ஆற்றில் நீர் வராது போனால் தஞ்சைப் படுகையின் நிலத்தடி நீரும் வறண்டுப் போகும் என்கிற உண்மையைக் கடந்த ஆண்டு வறட்சி எடுத்துச் சொன்னது. பசுமை புரட்சியின் வேதியுப்புத் தாகத்தால் நிலத்தடி நீர் ஏற்கனவே வறண்டிருக்கிறது. பல இடங்களில் நீர் உப்பாகிவிட்டது. நிலத்தடி நீரை ஈர்க்கக்கூடிய மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. ஐட்ரோகார்பன் திட்டம் வேறு நிலத்தடி நீரை அதிவேகத்தில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. பெங்களூர் நகரக் குடிநீரைப் பற்றிக் கவலைப்பட்ட நீதிமன்றம் இதே காவிரியிலிருந்துதான் கொள்ளிடம், வீராணம் திட்டங்கள் வழியாகச் சென்னையும் குடிநீர் பெறுகிறது என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை?

இந்தத் தீர்ப்பு அன்று காவிரி ஆய்வுக் குழுவினர் கேட்ட ஒரு கேள்வியை நினைவு படுத்துகிறது. காவிரி பாசனத்தில் குறுவை, தாளடி, சம்பா என்கிற மூன்று போகங்கள் உண்டு. ஜூன் மாதம் குறுவை சாகுபடித் தொடங்கும். அதன் அறுவடைக்குப் பின்னர்த் தாளடி சாகுபடி தொடங்கி ஏறக்குறைய பிப்ரவரியில் அறுவடைக்கு வரும். சில இடங்களில் இடையில் ஒரு போகமாக மட்டும் சம்பா பயிரிடப்படும். இப்போது குறுவையே போனதால் அதைத் தொடர்ந்து வரும் தாளடியும் இல்லை என்றாகிவிட்டது. பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி மட்டுமே. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் இதுவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது..

இத்தீர்ப்பு இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவது போல் உள்ளது. இது அன்றைய காவிரி ஆய்வுக் குழுவினர் தமிழகக் காவிரிப்படுகையின் நிலவியல் அமைப்பை புரிந்துக் கொள்ளாது தமிழக அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியை ஒத்திருக்கிறது. “நீங்கள் குறுவை சாகுபடியைத் தாளடிக்குப் பின்னால் வைத்துக்கொண்டால் என்ன?”

இத்தீர்ப்பை அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாதாம். இக்காலக்கெடு முடிந்து இன்னொரு வழக்கு இன்னொரு தீர்ப்பு என்று வரும்போது அடுத்து நிலத்தடி நீரை மட்டுமல்ல வான் மழையையும் அடுத்திருக்கும் வங்காள விரிகுடா நீரையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

நக்கீரன், எழுத்தாளர். சூழலியல் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சூழலியல் சார்ந்த களப்பணிகளையும் போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.

சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு இந்தியா திரும்பிய பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய சுற்றுச்சூழல் மற்றும் ஒருங்கிணைப்பு குழு இந்திராகாந்தி தலைமையில் தொடங்கப்பட்டது. 1972 இல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கான தனித் துறையானது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 1974 இல் நீர் குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் 1981 இல் காற்று குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் அதே 1981 இல் வனப் பாதுகாப்புச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் அமலுக்கு வந்தது. சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான கொள்கை மற்றும் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி 32 துறைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதீப்பாடானது (Environmental Impact Assessment) கட்டாயமாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதியளிக்கும் குழுக்கள் ஒவ்வொரு துறைக்கும் அமைக்கப்பட்டு, அவற்றை நிர்வாகம் செய்யும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. கடற்கரைப் பகுதி மேலாண்மை, மலைப் பகுதி பாதுகாப்பு, கழிவு மேலாண்மை (பயோ மெடிக்கல், பிளாஸ்டிக், அபாயகர கழிவுகள்) உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாட்டு வாரியங்கள் கொண்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பைக் கடைபிடிக்கும் நாடாக இந்தியா 1996 ஆம் ஆண்டு உருவானது. உச்ச நீதி மன்றம் மூலமும் உயர் நீதி மன்றங்கள் மூலமும் பொது நலன் வழக்குகள் விசாரிக்கப்பட்டு முறையான தீர்ப்புகள் வழியாக நீதி வழங்கப்பட்டன.

Photo credit: Leonard J Matthews on Visual hunt / CC BY-ND

எனினும், தற்போது அனைத்தும் பின்னோக்கிச் செல்கின்றன. முதல் முறையாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான (Ministery for Environment, Forest and Climate Change (MoEFCC)) தனியான மத்திய அமைச்சர் இல்லை. அடுத்ததாக, இந்தத் துறைக்கு மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து 25 சதவீதம் குறைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மேம்பாடுகளை உறுதிசெய்யும் பொறுப்புகளில் இந்திய அரசு தனது முக்கியத்துவத்தைக் குறைத்து கொண்டது. வனப் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவு, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது அவற்றின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால் அவை அனைத்தும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் திருத்தங்களை ஏற்படுத்த வரைவு அறிக்கையை 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு அறிவித்தது. அதன்படி சுரங்கம் மற்றும் நதிக்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சிக்கலான துறைகள் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் கூடுதல் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியது. 2016 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட திருத்தம் மூலம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2000-10,000 ஹெக்டேர் அளவிலான நதிக்கரைப் பகுதி திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் மாநில அரசுகளின் அதிகாரம் தற்போது 5000-50,000 ஹெக்டேர் அளவு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது எழும் கேள்வி என்னவெனில் எவ்வளவு சிறப்பாக, ஆய்வு நடத்தி இத்தகைய குழுக்கள் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்றன என்பதே. ஆளும் தரப்பின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுகின்றவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது என்னவெனில் சுற்றுச்சூழல் சட்டங்களிலிருந்து ரியல் எஸ்டேட் துறைக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் முறையிடக்கூடாத வகையில் சட்ட திருத்தங்களை உருவாக்குதல். டிசம்பர் 9, 2016 அன்று சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மூலம் தளர்த்தப்பட்ட விதிகள் காரணமாக 1,50,000 சதுர மீட்டர்கள் வரை கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு விலக்கு அளித்தது. சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்து கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் தவிர்க்கும் சூழ்ச்சியே இந்த சட்ட திருத்தம். ஓராண்டிற்கான இந்தியாவின் மொத்த கார்பன் டைஆக்சைடு மாசு அளவில் 22 சதவீதத்தை கட்டுமானத் துறை மட்டுமே வெளியேற்றுகிறது என பசுமை தீர்ப்பாயம் குறிப்பிடுகிறது. கார்பன் டைஆக்சைடு மாசு அளவைக் குறைப்பதாக பாரிஸ் மாநாட்டில் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் ஒரு துறை மூலமாக வெளியேறும் இந்த 22 சதவீத அளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உள்ளூர் நகராட்சிகளும் பஞ்சாயத்து அமைப்புகளும் சுற்றுச்சூழல் குழுக்களை அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்பார்வையிடவே இந்தக் குழுக்கள். ஆளும் தரப்பின் எவ்வித தலையீடுமின்றி இவை தன்னிச்சையாக இயங்குமா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

பாதுகாக்கப்படும் இடங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளை கையகப்படுத்த சில முயற்சிகள் நடந்தபோது மக்கள் போராடி அவற்றிற்கு தடை வாங்கிய காலத்திலிருந்தே ஒன்று தெளிவாகப் புரிய தொடங்கியது – இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சியடைதல் என்பதே அரசின் நோக்கம் என்று. ஐக்கிய நாடுகள் அறிவிப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா கௌரவிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அசல் செயல்பாடுகளுக்கும் உலக அரங்கில் அதன் செயல்பாடுகளுக்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

(சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஏ. கே. கோஷ்ஷின் Down to Earth இணையதள கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில்: கோ. முருகராஜ்

போபால் நச்சு வாயு கசிவிலிருந்து ஹோமப் புகை மனிதர்களை காப்பாற்றியதா?

நக்கீரன்

நக்கீரன்

புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை. அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட அனைத்து புகைகளுக்கும் எதிராகச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஓர் ஆன்மீகச் சடங்கு அறிவியல் கருத்தாக திரித்துச் சொல்லப்படுகிறது. ஹோமத்தில் இடப்படும் சமித்துகளில் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால் அப்புகை உடலுக்கு நன்மையைத் தருமாம். அப்படியானால் கணபதி ஹோமம் நடைபெறும் ஒரு வீட்டின் கூடத்தில் புகை நிறையும்போது நன்மை தரும் அப்புகையைச் சுவாசிக்காமல் ஏன் அவ்விடத்தை விட்டு அகன்றுச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த போலி அறிவியலுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒரு வரலாற்று நிகழ்வையும் இட்டுக்கட்டியுள்ளனர். இதைக் கேட்கின்ற பக்தர்களும் யோசிக்கும் திறனிழந்து இந்தப் போலி அறிவியலை வியந்து தம் பங்குக்கு அதை நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள். அந்தச் செய்தி இதுதான்.

போபால் நச்சுக்காற்றுக் கசிந்தபோது போபால் நகரத்தின் ஓரிடத்தில் அதிகாலையில் புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்ததாம். அப்போது ஹோமத்தில் இருந்து எழுந்த புகை அவ்வீடு முழுக்க நிரம்பியிருந்ததாம். அதனால் அந்த நேரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கிளம்பிய நச்சுக்காற்று அங்கு நுழைய முடியாமல் விலகி சென்றுவிட்டதாம். இதனால் அவ்வீட்டில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்து விட்டார்களாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் ஹோமம் என்பது எவ்வளவு நன்மை என்று பரப்புரை நடைப்பெறுகிறது.


Photo by David Davies on Visualhunt / CC BY-SA

இந்தத் திரைக்கதை வசனத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று ஊகிப்பதில் நமக்குச் சிரமம் இருக்காது. அடுத்தமுறை அணுஉலையில் கசிவு ஏற்படும்போது இந்த ஆன்மீக அறிவியல் கூட்டத்தை அனுப்பி ஹோமம் வளர்க்க சொல்லலாம். இது போபால் நச்சுக்காற்று நிகழ்வைக் குறித்துக் கொஞ்சமும் அடிப்படை அறிவற்றுப் புனையப்பட்ட கட்டுக்கதை. நச்சுக்காற்றுக் கசிந்தபின் நகரமே பீதியின் பிடியில் அகப்பட்டு அலைக்கழிந்து கொண்டிருந்தது. வீட்டு விலங்குகள் அலறுகின்றன. பறவைகள் பதறிப் பறக்கின்றன. குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என ஒட்டுமொத்த மனிதகுலமும் கதறிக் கண்ணீர்விட்டு திக்குத் தெரியாது ஓடினர். அப்படிப்பட்ட நேரத்தில் சாவகாசமாகத் தன் புதுமனைபுகு விழாவை நடத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் யார் எனத் தெரியவில்லை.

இந்த ஹோமத்தின் பெருமைக் குறித்து என்னிடமே ஒருவர் நேரடியாகப் பீற்றினார். வலிய வந்து வலையில் சிக்கியவரைச் சும்மா விடுவேனா? சில கேள்விகள் கேட்டேன். “புதுமனை குடிப்போகும் நேரம் எது?”

“பிரம்ம முகூர்த்தம்”

“அப்படியென்றால்…?”

“அதிகாலை நாலரையில் இருந்து ஆறு மணி வரை”

“போபால் நச்சுக்காற்று கசிந்த நேரம் எது தெரியுமா?”

“தெரியாது”

“பரவாயில்லை. நானே சொல்கிறேன். நச்சுக்காற்று கசிந்ததை அறிவிக்கும் ஆலையின் அபாயச்சங்கு ஒலித்த நேரம் நள்ளிரவு 12:30. அதற்கு முன்னரே நச்சுக்காற்று கசிய தொடங்கிவிட்டது. ஹோமம் நடந்ததாக நீங்கள் சொல்லும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து அடங்கிவிட்ட நேரம். பின் எப்படி நீங்கள் சொல்வது பொருந்தும்?”

அவர் திணறி முழிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. போபால் நச்சுக்காற்றால் அனைவரும் இறக்கவில்லை. நச்சுக்காற்று வீசிய திசையில் உடல்நலப் பாதிப்போடு உயிர் பிழைத்தவர்களும் இருந்தார்கள். சில இடங்களில் நஞ்சின் அளவு குறைந்திருந்தது. அதற்குக் காரணம் ஹோமப் புகை அல்ல, புங்கை மரங்கள்.

போபாலில் மீதைல் ஐசோ சயனைட் நச்சுக்காற்று வெளியேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த புங்கை மரங்களும் வேப்ப மரங்களும் இந்த நச்சுக்காற்றை உண்டு, இலையுதிர்த்து மொட்டையாகின. இதே இடத்திலிருந்த மலைவேம்பு, மா, விளா, வில்வ மரங்களில் எந்த மாறுதலும் இல்லை. அதாவது நச்சுக்காற்றை உட்கொண்டு அதைக் குறைக்கும் திறன் இம்மரங்களுக்கு ஏனோ இல்லை என அறிஞர் பி.எஸ்.மணி அவர்கள் ‘சர்வே ஆஃ போபால் இந்தியா’ அறிக்கையை முன் வைத்து விளக்குகிறார்.

இதற்காகத்தான் ஒரு அபாயகரமான தொழிற்சாலையை அமைக்கும்போது அதனைச் சுற்றிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மரத்துத்தும் ஒரு திறன் இருக்கிறது. இதுபோல் எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் வகை மரங்களுக்குக் கந்தக டை ஆக்சைடை தன் இலைகளில் படிய வைத்துக்கொள்ளும் திறன் உண்டு. ஆனாலும் பேரிடர் நிகழும்போது அது இம்மரங்களின் தாங்கு திறனையும் அவை தாண்டிவிடும் என்பதே உண்மை.

இப்படிப் புங்கை மரத்துக்குக் கிடைக்க வேண்டிய புகழை, சில புளுகு மூட்டைகள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். எனவே சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, இதுபோன்ற புளுகு மதவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் சூழலியலாளர்களுக்கு இருக்கிறது.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு

ஆற்றல் பிரவீண்குமார்

இது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் நல்ல தண்ணீர் ஓடுகிறது. பல வருடம் தண்ணீர் வராமல் இருந்ததால் பாலம் கட்டாமலே தார் சாலைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள தொழிற்சாலைகளின் வண்டிகளை பார்க் செய்யும் இடமாக காலப்போக்கில் மாறியது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடத்தில மட்டும் 50 வண்டிகள் நிற்கும். இது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பாங்கி ஷாப் பகுதி.

‘பாலாறும் தேனாறும் ஓடவைப்போம்…’ என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வாக்குறுதிகள் தூள் பறக்கும். ஆனால் ஓடிக் கொண்டிருந்த பாலாறு… பாழாறாகிப் போச்சே என்று அங்கலாய்ப்பது மட்டுமே வேலூர் மாவட்ட மக்களின் வாடிக்கையாகிப் போச்சு.மக்களாகிய நம் பங்கும் இதில் இருக்கவேண்டும் என்று இன்னமும் நம் மக்களுக்கு உறைக்கவே இல்லை.ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு பகுதிகளில் பாலாற்றின் நிலை இதுவே.

இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது சுமார் 100 அடி ஆழம் வரை பாலாற்றில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் அடி வரை தோண்டுகிறார்கள். ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகின்றன என்கிறது ஆய்வுகள். ஆனால், மணல் கொள்ளையர்களோ ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள் என்றால் எங்கள் மக்களின் பங்குக்கு குப்பை கொட்ட வண்டி நிறுத்த ஆக்கிரமிப்பு செய்ய என்று செய்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்துத்தடுக்கப்பட்டுவிட்டது. 1992-க்குப் பிறகு பாலாற்றில் நீர்வரத்து குறைந்து போய், இப்போது முற்றிலும் மோசம். இந்த நிலை மாற வேண்டும். நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி வேண்டும். மனிதர்களுக்கு அருகில், எளிய மனிதர்களுக்கு அருகில், வாழ வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி வேண்டும்.
நகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய கல்வி வேண்டும்.

குழந்தைகள், பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு என்பதை நம்பும் கல்வி வேண்டும். பேராசை நோய்கொண்ட அரசுகள் மற்றும் பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும் கல்வி வேண்டும்.

நாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வி என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாகப் பேசும் கல்வி வேண்டும். கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நமக்கு வேண்டும்.

ஆற்றல் பிரவீண்குமார், சூழலியல் ஆர்வலர்.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

ஷாஜு சாக்கோ

தமிழகத்தில் அடுத்த பத்து நாட்களுக்கான மழைக்கு வாய்ப்புள்ள இடங்களும், பெய்யும் தினங்களும்.. இதுவும் லேசான மழை தான் என்றாலும் சில இடங்களில் பலத்த மழை இருக்கலாம். இதுவும் ஒரு தொடர்மழை தான்.. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 முதல் மீண்டும் ஒரு தொடர் மழை.. பெரும்பாலான மழை நம்மை கடந்து பின் வட இந்தியாவை நோக்கி படை எடுத்துக்கொண்டிருக்கிறது.. நாளை அங்கு பலத்த மழைக்கு வாய்ப்பு.. அதை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதனால் வட இந்தியாவில் வெள்ளம் வரலாம். இப்போது எனக்கு நதிகளை இணைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

ஆந்திராவில் இந்த வருடம் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை இருக்கும் என்றே கருதுகிறேன். அங்கே அரசன் தன் குடி மக்களின் தண்ணீர் தேவைக்கு சிந்திக்கிறான்.. மழையும் கொட்டுகிறது. தென் தமிழகத்தில் மழை மிக குறைவு.. ஒரு புயலோ காற்றழுத்த தாழ்வு நிலையோ இந்திய பெருங்கடலில் உருவாக வேண்டுகிறேன்.. ஒரு வாரம் தொடர் மழை வந்து தென் தமிழகத்தை செழிக்க வைக்க வேண்டும் என்று இந்த மழைப்பற்றி மூலம் கேட்டு கொள்கிறேன்.. மழை தேவதை இந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. புயல் கடலில் இருக்கட்டும்.. மழை கரையில் இருக்கட்டும்.. 🙂

சென்னையில் அடுத்த மழை 31ம் தேதி துவங்குகிறது.. செப்டம்பர் 6ம் தேதி பலத்த மழை தமிழகத்தின் பல இடங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..


சென்னை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,5,6

பெங்களூர் ஆகஸ்ட் 28,31 செப்டம்பர் 1,2,4,5,6

திருவள்ளூர் செப்டம்பர் 1,2,5,6

காஞ்சிபுரம், தாம்பரம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,5,6

வேலூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,5,6

திருவண்ணாமலை ‍ ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,5,6

பாண்டிச்சேரி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

திருவாரூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

சேலம், மேட்டூர், அரசர்குளம் ஆகஸ்ட் 28, 31, செப்டம்பர் 1,2,4,5,6

விழுப்புரம், பண்ருட்டி செப்டம்பர் 1,2,3,4

கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,5,6

கடலூர் செப்டம்பர் 1,2,3,4,6

தர்மபுரி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,5,6

பெரம்பலூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

நாமக்கல் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,5,6

ஈரோடு செப்டம்பர் 1,2

திருச்சி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,6

தஞ்சாவூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,6

கோயம்புத்தூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1

கரூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,6

திண்டுக்கல் ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1,2,3,4,6

மதுரை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,6

தேனி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,6

புதுக்கோட்டை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,6

ஆத்தூர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

மயிலாடுதுறை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,5,6

ராஜபாளையம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2

உடுமலைப்பேட்டை ஆகஸ்ட் 28, செப்டம்பர் 1,2

பழனி ஆகஸ்ட் 28,31, செப்டம்பர் 1,2

கும்பகோணம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,3,4,6

ராமனாதபுரம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2

திருப்பூர் செப்டம்பர் 1,2

மணப்பாறை ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2

உசிலம்பட்டி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,5

திருச்செங்கோடு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2,4,6

தென்காசி ஆகஸ்ட் 28,29, செப்டம்பர் 6

திருனெல்வேலி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1

கன்யாகுமரி ஆகஸ்ட் 28, செப்டம்பர் 1

ஷாஜு சாக்கோ, வானிலை ஆய்வாளர். முகநூல் பக்கம் Shaju Chakko.

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் புதிதாக அணை கட்டுகிற கர்நாடக அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு மறைமுகமாக இசைவு தெரிவித்துள்ளது, காவிரி சமவெளிப் பாசனத்தை நம்பியுள்ள லட்ச்சக்கணக்கான விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கட்டப்போகிற இந்த புதிய அணையை கர்நாடக அரசு கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக (மூன்றாம் நபர்)சுயாதீன பொறியமைப்பின் கீழ் அணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால், தமிழகத்திற்கு வேண்டிய நீரை அது தருமானால், புதிய அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

தமிழக அரசு தரப்பு வழக்கறிகளின் இந்த யோசனையானது, உண்மையிலேயே வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையை ஒத்துள்ளது. கர்நாடக எல்லைக்குள்ளாக சுமார் 320 கி மி ஓடுகிற காவிரியின் குறுக்கு நான்கு பெரும் அணைகள் கட்டியுள்ள கர்நாடக அரசு, பெரும்பாலும் இந்த அணைகளின் வழியே, மேட்டூருக்கு உபரி நீரை மட்டுமே திறந்துவிடகிறது. மாறாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியான, நீர் பங்கீட்டை செய்தததில்லை என்பதை நமது வழக்கறிஞர்கள் சுலபமாக மறந்து விட்டனர் போலும். மேலும் கர்நாடக எல்லைக்குள்ளாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலையில் வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு காபித் தோட்டங்கள் பயிர் செய்வதைக் கூட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டலாம்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை முறையாக காப்பாற்றவில்லை எனில் காவிரி பாசனத்தை நம்பியுள்ள அனைத்து மாநில மக்களின் நிலை அதோகதிதான் என்ற எதார்த்த உண்மையை ஆணித்தனமாக சுட்டிக் கட்டி, புதிய அணை கட்டுவதால் ஏற்படுகிற இழப்பை குறிப்பிட்டாலே போதுமானது.மேலும் கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து வருகிற உபரி நீரும் ,கிருஷ்ணசாகர் அணையில் இருந்தும் வருகிற உபரி நீரும் ஒன்றுகலந்துதான் மேகதாட்டு வழியாக மேட்டூர் வந்தடைகிறது. இவ்வாறு வருவதால்தான் 93 TMC என்ற கொள்ளளவில் மேட்டூர் அணையில் நீர் தேக்கப் பட்டு,கல்லணை வழியாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியே காவிரி டெல்ட்டாவிற்கு நீர் விநியோகிக்கப் படுகிறது.

ஆக,மேட்டூர் அணையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்தின் தொடக்கப் புள்ளியில், நீர் வரத்து குறையுமானால், ஒட்டுமொத்த காவிரி டெல்டாவிற்கும் நீர் கிடைக்காது. கிருஷ்ணசாகர் நீரையும், கபினி நீரையும் சேர்ந்து தமிழகத்தை நோக்கி ஓடி வருகிற காவிரியின் குறுக்கு ஆடு தாண்டுகிற அகலத்தில் (மேக்கா -ஆடு,தாடு-தாண்டு) குறுகலாகுகிற காவிரியின் குறுக்கு அணை கட்டி தமிழகத்திற்கு வருகிற நீரை கர்நாடக அரசு தடுத்துவிட்டால், தமிழக காவிரி டெல்ட்டாவே சீர்குலையும்.

காவிரி என்பது நீர் ஓடிவருகிற ஆறு மட்டுமல்ல, அது பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களுடன் ஒன்றுகலந்துள்ள ஜீவனாக உள்ளது. இந்த ஆற்றங்கரையோரம் தழைத்த மக்களின் வாழ்வாதாரம் மட்டும்மல்ல, அம்மக்களின் பண்பாடிற்கும் ஆதாரமாக உள்ளது.

எப்போது இந்த ஆறு, பெரும் அணைகள் ஊடாக மையப் படுத்துப் பட்டு, நீர் பங்கீடுகள் கட்டுப்படுத்தப் பட்டதோ, அன்று முதல் ஒட்டுமொத டெல்ட்டா விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது. வழக்கறிஞர்கள் இந்த சிக்கலை மேலும் மோசமாக்கி வருகின்றனர்.


உலகமயம், தாராளமயம் ,தனியார் மயத்திற்கு முன்புவரை நிலச் சீர்திருத்தத்தை முறையாக மேற்கொள்ளாமை, பசுமைப் புரட்சி போன்ற காரணிகள் உழவர்களை விவசாயத்தை விட்டி வெளியேற்றியது. 90 களுக்கு பின்பு விவசாய உற்பத்தி பொருளின் வீழ்ச்சி, பாசன வசதிகளின் பராமரிப்பின்மை என்ற சிக்கல்களும் சேர்ந்து கொள்ள, இதோடு காடழிப்பு, காலநிலை மாற்றத்தால் பருவம் தப்பிய பருவமழையும் கூடுதல் காரணியாக ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும் பெரும் குலைவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. கிராமங்கள் காலியாகி வருகிறது. உயிரற்ற உடல்கள் அங்கு அலைந்துகொண்டுள்ளது. நகரங்களின் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.

 

ஒரு ஏக்கர் அரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தினக் கூலிகளாக நகரத்தில் அலைந்து திருகின்றனர். கிராமத்திற்கும் நகரத்திற்குமான முரண்பாடு மீட்கமுடியாது எல்லைக்கு சென்றுகொள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்போக்கு தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கிற தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சி அதிகார பேர நாடகத்தில் மும்முரம் காட்டுகிற கும்பல்கள், தமிழக மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது.

வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது, ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜக முயல்வது போன்ற காரணங்களுக்கு தேர்தல் ஓட்டுவங்கி அரசியலுக்கு காவிரிநீர்பங்கீட்டு விவகாரம் பெரும் வாய்ப்பாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

”மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலியும் யானையும் அவசியம்!”

எஸ். தினகரன்

எஸ். தினகரன்

இந்தியாவில் 19.4% காடுகள் உண்டு. தமிழகத்தில் சுமாராக 17% தான். யானைகளும், புலிகளும் வன ஆரோக்கியத்தின் கண்ணாடி. யானைகள் ஒரு இடத்தில் தங்கி தாவரங்களை உண்பதில்லை. காரணம் அவ்வளவு சாப்பிடும். அதனால் வலசை மேற்கொண்டபடியே இருக்கும். யானைகள் உண்ண உண்ண அவை உருவாக்கிய சிறு சிறு வெற்றிடங்கள் சிறு விலங்குகளின் போக்குவரத்துக்கான பாதையை வகுக்கும். வறண்ட காலங்களில், தந்தங்களைக்கொண்டு பள்ளம் தோண்டி நீர் அருந்தும். மிஞ்சிய தண்ணீர் பிற விலங்குகளின் தாகம் தீர்க்கும். அது மட்டுமல்ல, அதன் சாணத்தில் செடிகளுக்கான, கொடிகளுக்கான, மரங்களுக்கான விதைகளைக்கொண்டிருக்கும். தாவரப்பரவலுக்கு யானைகள் முக்கியம். சவானா காடுகளின் ஆரோக்கியம் பேணுபவை.

அதே போலப்புலிகளும். உணவுச்சங்கிலியின் உச்ச விலங்கு. மற்ற தாவர உண்ணிகளைக்கட்டுக்குள் வைத்திருக்கும். புலிக்குடும்பத்தின் ஐந்து சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு அதன் உணவுச்சங்கிலியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். புலிகளுக்கு மாற்றாக சிறுத்தைகள். இங்கே ஒரு உதாரணத்தை உங்களுக்குச்சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமெரிக்காவின் மஞ்சள்கல் சரணாலயம். 60 களில் நடந்த சம்பவம். ஓநாய்கள் இருந்த பகுதி. கடும் குளிரைச்சமாளிக்க, தோல்களுக்காக ஓநாய்கள் கொல்லப்பட்டன. படிப்படியாக ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒரு கட்டத்தில் ஓநாய்களே இல்லாமல் போனது. அதன் விளைவாக, எதிரி இல்லாததால் மான்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஓநாய்கள் இருந்தால் உணவுக்காக மான்கள் கொல்லப்படும். மான்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இனப்பெருக்க அழுத்தம் இருக்கும். ஓநாய்களின் இருப்பு, மான்களில் கார்டிசால் எனும் ஹார்மோனின் அளவை சற்று கூடுதலாய் சுரக்கச்செய்யும். விளைவாக இனப்பெருக்க அளவு மட்டுப்படுத்தப்படும். மனஅழுத்தத்தில் இருக்கும் மான்கள் அந்த விசயத்தில் சற்று மந்தமாய் இருக்கும். ஓநாய்களின் மறைவு, கார்டிசாலின் அளவைக்குறைத்து, அதில் நாட்டம் அதிகரிக்கச்செய்து ஏராளமாய் இனப்பெருக்கம் செய்துவிடும். விளைவு புல், பூண்டுகள் அதிகமாக மான்களால் நுகரப்பட்டன. மிதமிஞ்சிய நுகர்வும், தாவரப்பெருக்கமும் எதிர்மறையாயின. ஒருகட்டத்தில் நிலச்சரிவும், அவலாஞ்சியும் சரணாலயத்தை முற்றாய் அழித்துவிட்டன.’

Tiger

மீட்டெடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. பிறகு தான் ஓநாய்கள் அழிக்கப்பட்டதற்கும், காடுகள் அழிக்கப்பட்டதற்குமான தொடர்பை ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர். பின் ஓநாய்கள் சரணாலயத்தில் விடப்பட்டது. ஆண்டுகள் செல்லச்செல்ல சரணாலயம் மீண்டும் உயிர்ப்பெற்றுவிட்டதென்றாலும் 1950 களுக்கு முன்பு போல இல்லை. இப்போது புரிகிறதா ஏன் யானைகளும், புலிகளும் காக்கப்படவேண்டும் என்று.

மாடுகள் வனவிலங்குகள் அல்ல. பழக்கப்படுத்தப்பட்டவை. காட்டு மாடுகள் வேறு. வளர்ப்பு மாடுகள் வேறு. காட்டு மாடுகள் வனத்தீயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புல் அடர்ந்து மண்டி காணப்பட்டால் வெயில் காலங்களில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது. மாடுகள் புல்லைத்தின்று வாழ்வதால் புற்களின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்ந்த புற்களின் அளவும் கட்டுக்குள் இருக்கும். மதுரைக்கருகிலுள்ள சிறுமலையில் அடிக்கடி வனத்தீயைக்காசலாம். அதன் காரணம், உப்புக்கண்டங்களுக்காக, காட்டு மாடுகள் கொல்லப்படுகின்றன. அதன் எண்ணிக்கையும் குறைவாய் உள்ளது. நாட்டு மாடுகளை வனத்திற்கு மேய்க்க அழைத்துச்செல்பவர்கள் காய்ந்த புல்வெளிகளுக்குத் தீ வைப்பதும் ஒரு காரணம். எனவே யானைகள் மற்றும் புலிகளின் மரணங்கள் புவி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல! மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலிகளும், யானைகளும் அவசியம். நீங்கள் வேண்டுமானால் கோசாலைகளில் வைத்துப் பராமரித்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் இளங்கோ முத்தையாவின் ராமேசுவரத்தின் வைக்கோல் விற்பனையும், சங்கராச்சாரியாரின் கட்டளையும் குறித்த பதிவை படித்திருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

படம்: பேரா. கோகுலா

முனைவர் எஸ். தினகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர்.

சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு:

மிகச் சிறந்த..மிகச் சிறந்த…இரவாக இருக்கப் போகிறது இன்று. சென்னை மற்றும் வட மாவட்டங்களும் மற்றும் டெல்டா வரை உள்ள பகுதிகளும் கன மழை பெறும் வாய்ப்புகளை வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்த மழை பரவலாகவும் மற்றும் தீவிர மழையாகவும் இருக்க போகிறது என்று வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் சொல்கின்றன.(இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில்).

நான் 1000% உறுதியான மழை என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்ப வில்லை. ஆனால் இன்று இரவு சென்னையும் மற்றும் வட மாவட்டங்களும் அந்த அளவுக்கு உறுதியான மழை பெறப் போகின்றன என்று கூறுகிறேன். நேற்று மாதிரியே அனைத்து அறிகுறிகளும் சரியாகவே இருக்கின்றன. இன்று கடல் காற்று 50 கிலோ மீட்டர் உள்ளே வந்து விட்டது. வேலூரில் இருந்து வரும் மேகங்கள் கடல் காற்றோடு கலக்க தயாராக இருக்கிறது.

சென்னையில் இன்று இரவு மழை ஆரம்பிக்க இருக்கிறது. அதாவது முக்கிய மழை மேகங்கள் சென்னை நகரை கடக்கும் வரை தீவிர மழை பெய்து கொண்டே இருக்கும். இன்று இரவு சென்னை நகர மக்கள் இயற்கை கொடுக்கும் ஏர் கண்டிஷனரை உபயோகிக்க தயாராக இருங்கள்.

இந்த மழையை அனுபவிக்க தயாராக இருங்கள்.

எண்ணூர் ஆற்றை வரைபடத்திலிருந்து தூக்கிய சுற்றுச்சூழல் துறை

சென்னை   சுற்றுச்சூழல் மற்றும் வன துறையிலும், மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல நிறுவனத்திலும் முறைகேடுகளும் சாத்தியமான மோசடிகளையும் அம்பலப்படுத்தும் வழியில் எண்ணூர் ஆற்று பகுதியின் இரு வெவ்வேறு, முற்றிலுமாக முரண்பட்டுள்ள, CRZ வரைபடங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் என கூறி இரண்டு தனி RTI பதில்களின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜேசு ரத்தினம் அவர்களின் RTI க்கு பதிலாக 2009ல் சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட வரைபடத்தில் – இது 1996ல் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் – எண்ணுர் ஆற்றின் 6469 ஏக்கரா CRZ 1 ன் கீழ் மேம்பாடு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் (Tidal waterbody) காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017ல் RTI க்கு பதிலாக – அதாவது எண்ணூர் ஈரநிலங்களை ஆக்கிரமிப்பதை பற்றி சர்ச்சை ஏற்பட்ட பின் – அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட வரைபடத்தில் எண்னூரில் ஆறே இல்லாததுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வரைபடங்களுமே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதால், சுற்றுச்சூழல் துறையால் கொடுக்கப்பட்ட இரு தகவல்களில் ஒன்று பொய்யானது. “தகவல் அறியும் சட்டத்தின் படி தவறான தகவல் அளிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்”, என்று கூறினார் ஜேசு ரத்தினம். 2009ல் பெறப்பட்ட வரைபடம் 16 கி.மீ நீளம் உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த வரைபடம் கடற்கரை மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போகிறது. 2017ல் பெறப்பட்ட வரைபடமோ 13 கி.மீ நீளத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. வரைபடத்தில் ஆறே இல்லாது போலும் தோற்றமளிக்கிறது.

மாநில கடற்கரை மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் பத்திரிக்கை மாநாட்டில் இவ்வாவணங்களை வெளியிட்ட எண்ணூர் மீனவர்கள், Coastal Action Network (CAN) மற்றும் கடற்கரை வள மையம்.

எண்ணூர் ஆறு, திருவொற்றியூர், ஆர். கே. நகர், மாதவரம் மற்றும் பொன்னேரி பகுதிகளை வெள்ள அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது. “எண்ணூர் ஆறு ரியல் எஸ்டேட்டாக மாறினால் வட சென்னை ஒரு நீர் கல்லறையாக மாறிவிடும். அடையாறில் ஏற்பட்ட வெள்ளத்தை சென்னை நகரால் கையாள முடியவில்லை. அடையாறு என்பது ஒரு சிறிய ஆறு தான். அடுத்து வரும் மழையில் பன்மடங்கு வலிமை வாய்ந்த கொசஸ்தலையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால், மேலும் எண்ணூர் ஆற்றை இழந்து விட்டோமானால், சென்னை மாநகரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது”, என்று எச்சரித்தார், ஆர். எல். ஸ்ரீநிவாசன், எண்ணூர் அனைத்து கிராம மீனவ கூட்டமைப்பின் உறுப்பினர். கன மழையின்போது கொசஸ்தலையாறு நொடிக்கு 125,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலை விட அதிகம்.

கிடைத்து இருக்கும் ஆவணங்களின் படி, எண்ணூர் ஆற்றை மறைக்க முற்படும் வரைபடமே பொய்யானது என்று சொல்ல முடிகிறது. 2017ன் RTI பதிலில் 1997ல் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் ஒரு கடிதமும் அடங்கியுள்ளது. இக்கடிதத்தில், எண்னூரில் ஒரு பெட்ரோகெமிக்கல் பூங்காவை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசால் கோரப்பட்ட சில மாற்றங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

குறிப்பாக, அமைச்சகம், 1996ல் இந்திய அரசின் தலைமை நீர்நிலை வரைபடமாளரால் (Chief hydrographer) அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் படி எண்ணூர் உப்பங்கழியின் (backwater) எல்லைகளை மாற்றி அமைக்க, தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உப்பளங்களை CRZ அறிவிப்பாணையின் மேற்பார்வையிலிருந்து அகற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை அமைச்சகம் நிராகரித்துள்ளது. CRZ வரைபடத்தின் எல்லைகளை மாற்றி அமைக்க எந்தவொரு கோரிக்கை பற்றியோ, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவோ கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

“1996 வரைபடத்தை – எண்ணூர் ஆற்றை CRZ 1 ஆக அறிவிக்கும் வரைபடம் – நாங்கள் நம்புகிறோம். அதுவே சரியானது, ஏன் என்றால் அதுவே சட்டத்திற்கும், யதார்த்தத்திற்கும் ஒத்துப்போவதாக உள்ளது”, என்று கூறினார், கா. சரவணன், கடற்கரை வள மையம். “தலைமை நீர்நிலை வரைபடமாளர் ஒரு விஞ்ஞான துறை – இவ்வளவு பெரிய நீர்நிலையை புறக்கணிக்க சாத்தியமில்லை”, என்றும் அவர் கூறினார்.

இது குறித்து விசாரணை நடத்த, தமிழ்நாடு தகவல் கமிஷனுக்கு இரு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பேரிடரை தவிர்க்க, இந்நிறுவனங்கள், தலைமை செயலாளரையும், மாநில பேரிடர் ஆணையத்தையும் (State Disaster Management Authority) அணுகியுள்ளன.

சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன் வெளியிட்ட ஊடக அறிக்கை.

ஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா?.

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

தமிழ்நாட்டில் சேல் மீத்தேனும், நிலக்கரிபடுகை மீத்தேனும் எடுக்கவே இல்லை என ஓ.என்.ஜி.சி-யும் அரசும் கூறி வருகிற நிலையில், இதன் உண்மைத்தன்மை மற்றும் உள்ளர்த்தம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது… இதை சற்றுன் நெருங்கிப் பார்ப்போம் ….

தமிழ்நாட்டில் மீத்தேன், சேல் எரிவாவை இப்போது எடுக்கவில்லை எனக் கூறியுள்ளதே தவிர எடுக்கின்றத் திட்டம் இல்லை என ஓ.என்.ஜி.சி-கூறவில்லை.மேலும்,ஓ.என்.ஜி.சி யோ அல்லது அரசையோ பொருத்தவரை எங்கு என்ன வகை திட்டத்தை மேற்கொள்கிறோம்,என்ன திட்டத்திற்கு ஆய்வு செய்கிறோம் என வெளிப்படையாக சொல்வதில்லை.மாறாக வார்த்தை விளையாட்டுகளில் கெட்டிக்காரத்தனத்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில், தென்னக பசுமைத் தீர்ப்பயதிற்கு அளித்த பதிலில் நிலக்கரி படிம மீத்தேனும்,சேல் மீத்தேனையும் தமிழகத்தில் எடுக்கின்ற திட்டமில்லை என ஓ.என்.ஜி.சி கூறியது. ஆனால் எடுக்கின்ற முயற்சியில் உள்ளோம் என்றது. இதன் அர்த்தம் என்ன? தற்போது எடுக்கவில்லை ஆனால் வரும்காலத்தில் எடுப்பதற்கான ஆய்வுகளை மட்டும் மேற்கொள்கிறோம் என்றது. மேலும், சேல் மீத்தேன் எடுக்கின்ற கொள்கை முடிவுகள் ஏதும் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை என்றது.

இதை சொல்லிக்கொண்டே, 25-06-2017 அன்று குத்தாலம் பிளாக்கில் சேல் மீதேன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பமும் வழங்கியது ஓ.என்.ஜி.சி .சேல் மீத்தேன் எடுப்பதற்கான முன் சாத்தியப்பாட்டு அறிக்கையிலோ, கடந்த 2013 ஆம் ஆண்டில் சேல் மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும், குறைந்தபட்சமாக ஐம்பது சேல் மீத்தேன் பிளாக்குகளை கண்டறியவேண்டும் எனவும் இலக்கு நிர்ணயக்கப்படுள்ளதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? மக்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்.

ஆக, குத்தாலம் பிளாக்கில்(திருவேள்விக்குடியில்) சேல் மீத்தேன் எடுபதற்கான ஆய்வுப் பணியை ஓ.என்.ஜி.சி. மேற்கொள்வதும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதும் தெளிவாகிறது.அதேபோல காவிரிப்படுகையில், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் கைவிட்டு ஓடியது நிலக்கரிபடிம மீத்தேன் திட்டமும் வரும்காலத்தில் எடுக்கப்படலாம்.விஷயம் இல்லாமால 9.8 TCF(Trillion cubic feet) நிலக்கரிபடிம மீத்தேனும் 96 TCF ஷெல் வாயும் எங்களிடம் கையிருப்பு உள்ளது என மேக் இன் இந்தியா திட்ட இணையதளத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது?

ஒ என் ஜி நிறுவனத்தை பொறுத்தவரை, இயற்கை எரிவாவு எடுப்பதோடு எங்கெங்கு நிலக்கரி படிம மீத்தேன் உள்ளது, சேல் பாறை மீத்தேன் உள்ளது என ஆய்வு செய்து தகவல்களை திரட்டி வைத்துக்கொள்வது முதன்மையான பணியாகும். இவ்வாறு எங்கெங்கு உள்ளது என கண்டுபிடித்த இடங்களை, அந்நிய நிறுவனங்களுக்கு உள்ளூர் சூறையாடுகிற முதலாளிகளுக்கோ நூறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு கொடுப்பது மட்டுமே அரசின் பணி. மக்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன, நிலம் அழிந்தால் என்ன இருந்தால் என்ன என்பது குறித்து அரசுக்கு கவலையில்லை!

ஆக,பல்வேறு வழிகளில் காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு எடுக்கின்ற முயற்சியில் ஓ.என்.ஜி.சியும். ரிலைன்ஸ் போன்ற தனியார் கொள்ளை நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது என்பதே உண்மை. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மீத்தேன் எடுக்கிற திட்டத்தை கைவிடுவதாக கூறிய தமிழக அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஹைட்ரோகார்பன், சேல் மீத்தேன் என வெவ்வேறு பெயர்களில், காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு எடுக்கிற திட்டப்பணிகளை பல முனைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக மேற்கொண்டு வருகின்றன.

ஆதாரம் : Not exploring CBM or Shale Gas exploration in Tamil Nadu: ONGC,Business Standard,03.11.2015

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

கடுகு-தமிழர் உணவில் நீக்கமற நிறைந்திருக்குமொரு உணவுப் பொருள். வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இன்றும் சமையலுக்குப் பயன்படுவதோடு, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டது கடுகு. தேனீக்கள் வளர்ப்பிலும், பாரம்பர்ய மருத்துவத்திலும், கடுகுச் செடிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட கடுகு, பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு, மரபணு மாற்றப்பட்டு படாதபாடு படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு தற்போது மத்திய அரசு விரைந்து அனுமதியளிக்க முயற்சிக்கிறது. இதனால் இதை எதிர்த்து அகில இந்திய அளவில் ‘பொறிந்து’ கொண்டிருக்கிறது, ‘கடுகு அரசியல்’.

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மரபணு மாற்றப்பட்ட கடுகை 2002 ஆம் ஆண்டே புழக்கத்தில் விட, பன்னாட்டு பகாசுர கம்பெனியான பேயர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ப்ரோஅக்ரோ மூலம் விண்ணப்பிக்கபட்டது. ஆனால் அப்போது அது நிராகரிக்கப்பட்டது. தற்போது இதனை, 100 கோடிக்கு மேல் மக்கள் பணத்தைச் செலவழித்து, பொதுத் துறை நிறுவனமான தில்லி பல்கலைகழத்தின் மூலமாக டி.எம்.எச் 11 (DMH 11- தாரா மஸ்டர்ட் ஹைப்ரிட்) என்ற பெயரில் மறைமுகமாக இந்தியாவுக்குள் திணிக்க முயல்கிறார்கள். மரபீனி தொழில்நுட்பத்தை (மரபணுமாற்றப்பட்ட, GM பயிர்) நெறிப்படுத்தும் இந்திய அரசின் உச்ச அமைப்பான ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு’ (GEAC), மரபணு மாற்றப்பட்ட கடுகை (DMH 11 மற்றும் அதன் பெற்றோர்-ஆக மொத்தம் 3 வகை), வணிக ரீதியாக உற்பத்தி (பொது சாகுபடிக்கு) செய்யக்கோரும் விண்ணப்பத்தின் மீதான முடிவை அதிவிரைவில் எடுக்கும் அவசரத்தில் இருக்கிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO), வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் (TRIPS) மூலம், ஏற்கனவே உள்ள ஒரு உயிரியின் மரபணுக்களை மாற்றி, புதிய பண்புகளை பெற்ற உயிரியாகக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். கொழுத்த லாபமும் சம்பாதிக்கலாம். எனவேதான், விதை நிறுவனங்கள் வரிந்து கட்டிகொண்டு மரபணு மாற்று வேளைகளில் ஈடுபடுகின்றன. இதன் விளைவு, அமெரிக்காவில் பருத்தி, மக்காசோளம் போன்ற பல பயிர்கள் மரபணு மாற்றப்பட்டதாகிவிட்டது. இதனால் விவசாயிகள் அவற்றை மட்டுமே பயிரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு ரகங்ளைப் பயிரிட்டாலும் அயல் மகரந்தச்சேர்க்கை மூலமாக, மரபணு மாற்றப்பட்ட பயிரின் மரபணு, நாட்டு ரகங்களுக்குள் ஊடுருவி விடுகிறது. இதனால் அவர்கள் சட்டப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகளை விலை கொடுத்து வாங்காமல், திருட்டுத் தனமாக பயிரிடுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள் பயிரிட்டால், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் அதிகரிக்கும். இதனால்தான் பன்னாட்டு விதை மற்றும் ரசாயன கம்பெனிகள், மரபணு மாற்றப்பட்ட விதை வியாபாரத்தில் அதிக அக்கறை செலுத்துகின்றன.

மரபணு மாற்றப்பட்ட பருத்தி, மான்சாண்டோ நிறுவனத்தால் இந்தியாவில் நுழைக்கப்பட்ட 15 ஆண்டுகளில் திரட்டப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவலின் அடிப்படையில், மரபணு பருத்தியை பாதிக்கும் முக்கியமான bollworm எனப்படும் காய்ப்புழு, பூச்சிக்கொல்லிகளை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றல் பெற்றதோடு மட்டுமல்லாமல், பருத்தியை பாதிக்கும் இதரபூச்சிகளின் தாக்கமும் மேன்மேலும் அதிகரித்து வருவதையும், இதனால் பருத்தி விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாகிக் கொண்டே போவதையும், அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தும் பொழுது வரையறுக்கப்பட்ட (பூச்சிகொல்லிகளின்) அளவை தாண்டி விட்டதையும் நாம் அனுபவப் பூர்வமாக அறிவோம். இதனால், லாபமடைந்தது பன்னாட்டுக் கம்பெனிகள்தான்! விதர்பாவில் பிடி பருத்தி விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்ட அவலத்தை நாடே அறியும்.

இதே கதி, கடுகு விவசாயிகளுக்கும், தேனீ விவசாயிகளுக்கும் நேரலாம். பருத்தியாவது உணவுப்பொருள் அல்ல! மரபணு மாற்ற கடுகை அனுமதித்தால், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், நம் உணவும் நஞ்சாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதை எதிர்ப்போம்!

பன்னாட்டு கம்பெனிகளின் பணப்பசிக்கு, நாம் பலியாடுகளல்ல என்பதை பறைசாற்றுவோம்!

தமிழ்க்காடு-இயற்கை வேளாண்மை இயக்கம் & பாமரர் ஆட்சியியல் கூடம், பெரம்பலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: 944421-9993, 90477-75429, 97512-37734

வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

இயல்வாகை

ஊத்துக்குளியில் ,கதித்தமலைக்கு செல்லும் வழியில் உள்ள நந்தவனக் கிணறு எனப்படும் 300 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கிணறு , ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த கிணறு, திருப்பூரின் வளர்ச்சி ஊத்துக்குளிக்கும் நீண்டதன் காரணமாகவும், நீர்நிலைகளின் பயன்பாடும் முக்கியத்துவமும் இப்போதுள்ள தலைமுறைக்கு அறிந்துகொள்ள வாய்ப்பில்லாததன் காரணமாகவும் இப்போது சில ஆண்டுகளாக குப்பைக்களைக்கொட்டும் இடமாக மாறியுள்ளது..

கட்டுமானமே மிக அழகியலோடு உள்ள இந்தக்கிணற்றை இதற்கு முன்பே இரண்டுமூன்று முறை தூர்வாரி சுத்தம் செய்தோம்.. ஆனால் இதன் பெருமையை அறியா மக்கள் மீண்டும் மீண்டும் குப்பைகளைக் கொட்டியவண்ணம் உள்ளனர். எனவெ இம்முறை சுத்தம் செய்த கையோடு இதன் மேல் இரும்பு வலை கொண்டு மூடி பாதுகாக்க உள்ளோம்..

இவ்வேலையை இயல்வாகை அமைப்பு மூலம் குழந்தைகளும், நண்பர்களும், கொங்கு கல்லூரி பசுமைவனம் மாணவர்களுமாக சேர்ந்து செய்ய உள்ளோம்..

கிணறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்வரை இந்தப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது . வாய்ப்பிருப்பவர்கள் பங்கெடுத்துக்கொண்டு தங்களின் கரங்களை தந்துதவும்படி கேட்டுக்கொள்கிறோம்..

தொடர்புக்கு : 9500125125, 9600379698.

கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்

கிணறுகளை நாம் என்னென்ன வடிவங்களில் பார்த்திருக்கிறோம்? வட்டம், சதுரம், செவ்வகம் அல்லது ஒழுங்கற்ற வடிவம் என்பதாகப் பார்த்திருப்போம். ‘ஸ்வஸ்டிக்’ வடிவத்தில் கிணறு பார்த்தவர்கள் எத்தனை பேர்? திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறையில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ எனப்படும் ஸ்வஸ்டிக் வடிவ கிணறு ஒன்று இருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்கள் இக்கிணற்றை இப்படி வடமொழி பெயெரெல்லாம் சொல்லி அழைப்பதில்லை. அவர்கள் எளிய தமிழில் ‘நாலு மூலைக் கேணி’ என்றே அழைக்கின்றனர்.

1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு இது. `முப்பதுக்கு முப்பது சதுர வடிவிலான இக்கிணற்றில். நான்கு பக்கமும் படிக்கட்டுகள் இறங்குகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் 52 படிகள் உள்ளன. உண்மையில் இதுவொரு சதுர வடிவக் குளம், படிகள் மட்டுமே நான்கு பக்கமும் நீண்டு ஸ்வஸ்டிக் வடிவில் அமைந்துள்ளது. ஸ்வஸ்டிக் என்கிற பெயரைக் கொண்டு இதை மதம் சார்ந்த வடிவமாகச் சிலர் திரிக்க முயல்கிறார்கள். உண்மையில் இது தமிழர்களின் பொறியியல் சாதனை.

படித்துறையை நேராக அமைத்திருந்தால் மிகப்பரந்த அளவில் இடம் தேவைப்படும். அதனால் நிலத்தின் தேவையைக் குறைக்கப் படிகளை மடித்து அமைத்தனர். ஆழமாகவுள்ள இக்கிணற்றின் சிறப்புக்கூறுகளுள் ஒன்று இங்குள்ள ஒரு படித்துறையில் குளிப்போரை அடுத்தப் படித்துறையில் குளிப்போர் பார்க்க முடியாது என்பதாகும். மேலும் இது சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கிணறு. இதுபோன்று நாம் எத்தனை செல்வங்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறோம் அல்லது அழித்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

நல்லத்தங்காள் தன் பிள்ளகளைக் கிணற்றில் தள்ளிக்கொன்ற கதையைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாமோ கிணறுகளையே மூடிக் கொன்றுவிட்டோம். ஒருமுறை சென்னையில் திடீரெனப் பல கிணறுகள் மூடி தூர்க்கப்பட்டன. காரணம் நமது வாஸ்து வல்லுநர்களின் அரும்பணி. அப்போது மழைநீர் சேகரிப்பு இயக்குநராக இருந்த சேகர் ராகவன் வாஸ்துவின் பெயரில் திறந்த கிணறுகளை மூடி தூர்க்க வேண்டாம் அதில் மழைநீரைச் சேமிக்கலாம் எனக் கெஞ்சிக் கதறி வேண்டுக்கோள் விடுத்தார் பாவம்!

உண்மையில் மழைநீரை சேமிக்கக் கிணறுகளை விடச் சிறந்த அமைப்பு வேறில்லை. ஆகவே இன்று கிணறுகளை மீட்டெடுப்பது மிக மிக அவசியமாகும். தமிழகத்தின் பல இளைஞர்கள் இந்த அரும்பணியில் ஈடுப்பட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது. குறிப்பாகப் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் கிணறுகளைத் தூர் வாருவதில் முன்னணியில் இருக்கிறார்கள். இதேபோல் தர்மபுரி இளைஞர்கள் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்புக்காகத் தங்கள் சொந்த உடல் உழைப்பில் புதிதாகக் கிணறுகளைத் தோண்டிக் கொண்டிருப்பது பெருமை தரும் செய்தியாகும். இது போன்ற இளைஞர்களே தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை.

ஊர் பொதுக்கிணறு என்கிற அமைப்பு மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அதில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் புழங்குவதாக இருக்க வேண்டும். நீர் என்பது மக்களுக்கானது மட்டுமல்ல அவை அனைத்துயிர்க்குமானப் பொதுச்சொத்தாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீர் தனியாரின் கைகளுக்குச் செல்லக்கூடாது. அனைவருக்கும் சமமான பங்கும் பொறுப்பும் இருந்தால்தானே அது பொதுச் சொத்து?

நம்முடைய அறிவிக்கப்படாத நீர் கோட்பாடு என்ன தெரியுமா? நடக்க இயலாத தாவரங்களுக்குதான் நிலத்தடி நீர் சொந்தம். நடமாடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மழை நீரே சொந்தம்.

ஒளிப்படம் இணையத்தில் எடுக்கப்பட்டது.

எழுத்தாளர் நக்கீரன் ‘நீர் எழுத்து’ என்ற தலைப்பில் தனது முகநூலில் தொடர் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறார். அதன் 20வது பதிவு இது.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

நிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்!

நக்கீரன்

நக்கீரன்

இன்று நம் குழந்தைகளில் எத்தனை பேர் கிணறு பார்த்திருப்பார்கள்? தப்பித்தவறிப் பார்த்திருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் நீர் இறைத்து அல்லது குளித்து மகிழ்ந்திருப்பார்கள்? வாய்ப்பே இல்லை. கிணறு என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். ஆனால் நம் பண்பாடு கிணறுகளுடன் தோன்றிய பண்பாடு. ஆழமற்ற கிணறு போன்ற பள்ளத்தில் தேங்கிய நீர் ‘கூவல்’. கூவலை ஆழப்படுத்தினால் கிடைப்பதுதான் கிணறு. இதையடுத்துக் கூவம் என்றொரு சொல் இருந்தது. இது சென்னையின் கூவம் அல்ல. இதற்கு ஒழுங்கில் அமையா கிணறு எனப் பொருள்.

கொங்குநாடு போன்ற வன்புலமாயினும் சரி, சோழநாடு போன்ற மென்புலமாயினும் சரி அனைத்து இடங்களிலும் கிணறு இருந்திருக்கிறது. மென்புலத்தில் நிலத்தடி நீர் கிடைப்பது எளிது. அதுவே வன்புலத்தில் நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்பதறிய பல நுட்பங்கள் இருந்திருக்கின்றன. இதற்காகவே சில நூல்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. நாம் ஒருசில செய்திகளை மட்டும் இங்குக் காண்போம்.

ஆவாரம் செடி இருக்கும் நிலத்தின் அடியில் நீர் இருக்கும். இடி விழுந்த தென்னை மரம் இருக்குமிடத்தின் அடியில் நீரோட்டம் இருக்கும். அங்குக் கிணறு தோண்டினால் வற்றாத நீரோட்டம் இருக்கும். தண்ணீரற்ற வறண்ட பகுதிகளில் மிக மிருதுவான அருகம்புல் வளருமாயின் அவ்விடங்களில் ஆழத்தில் தண்ணீர் அகப்படும். ஒரு மரத்தில் ஒரு கிளை மட்டும் கீழ்நோக்கி வளைந்திருந்தால் அங்கு நீர் கிடைக்கும். கண்டங்கத்திரி முட்கள் இல்லாமல் பூக்களுடன் காணப்படின் அவ்விடத்தின் அடியில் நீர் கிடைக்கும் போன்றவை தவிர மரங்களை அடிப்படையாக வைத்தும் ஏராளமான அறிகுறிகள் சொல்லப்பட்டுள்ளன. .

புற்றுக்கண்ட இடத்தில் கிணறு வெட்டு என்றொரு பழமொழி உண்டு. ஏனெனில் கரையான் என்பவை நிலத்தடி நீர்க்காட்டிகள். நிலத்தின் கீழ் நீரிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தே அவை புற்றைக் கட்டுகின்றன. நீர்த்தன்மை நிறைந்த மண்ணைக் கொண்டே அவை புற்றினைக் கட்ட வேண்டும். எனவே பட்டறிவால் இப்படியொரு பழமொழியை உண்டாக்கி வைத்திருந்தனர். இப்போது கரையானைப் பார்த்தால் நமக்குக் கரையான் கொல்லிகள் மட்டுமே நினைவுக்கு வருகிறது.

மேற்கண்ட செய்திகளை நம்பி இன்று யாரும் கிணறு வெட்டிவிட முடியாது. வெட்டினால் பணம் காலி. ஏனெனில் கிணறு என்பதன் அடிப்படை அறிவையே நாம் இழந்தது நிற்கிறோம். முன்பு கிணறு தோண்டுவதற்கு இயற்கையை மீறாத சில வழிமுறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் முதன்மையானது நிலத்தடி நீர்வளம். இன்றுபோல் ஆயிரம் அடிகள் ஆழத்துக்கெல்லாம் அறிவற்று நாம் நீரை உறிஞ்சியதில்லை. ஆங்கிலத்தில் Aquifer என்று அழைக்கப்படுவது தமிழில் நீரகம் அல்லது நீர்த்தாங்கி என அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய நூறடி ஆழத்துக்குக் கீழேயுள்ள நிலத்தடி நீர்தான் நீரகம் ஆகும். பெரும்பாலும் நீரகத்தில் கைவைக்காத கிணறுகள்தான் நம் கிணறுகள். நிலத்துக்கும் நீரகத்துக்கும் இடையிலுள்ள Subsurface water நீரையே நாம் பயன்படுத்தி வந்தோம்.

நீர்நிலைகளை Surface water என்றும், நிலத்துக்குக் கீழுள்ள நீரை Subsurface water என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இவற்றைத் தற்காலத் தமிழில் ‘மேற்பரப்பு நீர்’ என்றும் ‘நிலத்தடி நீர்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இவற்றைவிடப் பொருத்தமான சொற்கள் மணிமேகலையில் காணப்படுகிறது. ‘பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்’ (காதை 19: 104). மேற்பரப்பு நீருக்கு ‘பரப்பு நீர்’ என்றும் நிலத்திலுள்ள நீருக்கு ‘கரப்பு நீர்’ என்றும் துல்லியமான சொற்களைத் தந்துள்ளது. இவற்றை முறையே ‘பரந்துறை நீர்’, ‘கரந்துறை நீர்’ என்றும் குறிப்பிடுவர். மணிமேகை வரியில் ‘கரப்புநீர்க் கேணியும்’ என்கிற சொல் மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது. ஏனெனில் இத்தகைய நீர் சுரக்கும் நிலப்பகுதியில் மட்டுமே நம் முன்னோர்கள் கிணறுகளை அமைத்திருந்தார்கள்.

கரப்புநீர் மழைநீரால் மட்டுமே நிலப்பகுதியில் சேமிப்பாகும். இக்கரப்பு நீர் அளவைக் குறைய விடாமல் நம் முன்னோர்கள் வைத்திருந்தார்கள் என்பதுதான் சிறப்பு. இந்நீர் வளமானது அப்பகுதியில் சேமிக்கப்படும் மழைநீர் அளவைப் பொறுத்தது என்பதால் அதனை நிலத்தடியில் சேமிக்க மரங்களின் அடர்த்தியைப் பாதுகாத்தார்கள். குறிப்பாகக் கிணற்றுக்குப் பக்கத்தில் நீரைச் சேமித்துத் தரும் பனையை வளர்த்தனர். அதுமட்டுமன்றி அருகிலுள்ள குளம் போன்ற நீர்நிலைகளையும் பாதுகாத்து வந்தார்கள். இதன் விளைவாகக் கிணற்றில் நீரளவு மாறாதிருந்தது. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட கிணறுகளும் கூடக் கரப்பு நீரையே பயன்படுத்தின.

அன்று கமலையைக் கொண்டு நீர் இறைக்கப்பட்ட கிணறுகளில் கமலை நீர் இறைக்கும் அளவும், கிணற்று நீர் ஊறும் அளவும் சமமாக இருந்தது. ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு அடுத்தச் சால் இறைக்கப் போகுமுன் கிணற்றில் நீர் ஊறிவிடும். இன்று Sustainability Water Management’ என்றழைக்கப்படும் வளங்குன்றா நீர் மேலாண்மையை அன்றே பின்பற்றியவர்கள் நாம். இதன் விளைவு நீரகம் பாதுகாப்பாக இருந்தது.

இப்படியான நீர் மேலாண்மை செய்து வாழ்ந்த நம்முடைய வயலில் வேதியுப்புக்களைக் கொட்டி; பயிருக்குச் செயற்கையாகத் தண்ணீர் தாகத்தை ஏற்படுத்தி; அதை ஈடுசெய்ய ஆயிரம் அடி ஆழத்துக்கு நீரை உறிஞ்சும் நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி; நிலத்தடி நீரை அழித்ததோடு கூடவே நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்.

ஒளிப்படம்: ஏ.சண்முகானந்தம்

எழுத்தாளர் நக்கீரன் ‘நீர் எழுத்து’ என்ற தலைப்பில் தனது முகநூலில் தொடர் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறார். அதன் 18வது பதிவு இது.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?

குமார் அம்பாயிரம்

சீமை கருவேல் மரங்கள் அகற்றப் படுவது குறித்து இருவேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது மக்களுக்கான எரிபொருள் வேலைவாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா? இம்மரத்தை வெட்டி விற்பதனால் பொருளாதார மேம்பாடெல்லாம் வராது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தழை வெட்டி போட்டவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இதன் விதைகளை மட்டும் தான் ஆடுகள் தின்கின்றன இலைகளை அல்ல. மாடுகள் அதித வறட்சியில் ரெண்டு கடி கடிக்கின்றன. நான் ஒரளவு எல்லா மரங்களடிலும் உறங்கி ஒய்வெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு மரத்தடி நிழல் பற்றியும் ஒரு கட்டுரை வனையலாம் சீமைகருவேல் மரநிழல் தாங்க முடியா உடல் வலியைத்தான் கொடுத்தது. கிளெரி செடியா சீமைகருவேல் இரண்டின் விதைகளையும் இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்ட ஆநிரைகளுக்கு சினை பிடித்தல் தள்ளிப் போவதை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன்.

இதேபோல் தான் மான் காது( silver acacia) தேன் பூ உன்னிச் புதர் ( lantana) நீலகிரி தைலமரங்கள். பாலைவன மரங்களான இவற்றுக்கு இருப்பது இலையே அல்ல இவற்றின் விதை முளைக்கும் போது இரண்டே இலைகள் விடும் பின் இலை போல் வருபவை அதன் நரம்பு தண்டுகளே. தண்டுகளின் உறிஞ்சும் இயல்பில் காற்றின் ஈரப்பத்த்தை உறிஞ்சி எடுத்து விடுகின்ற. அது இலையாக இல்லாதிருப்பதால் தான் மக்குவதிலும் நிலத்தை மூடி புல் பூண்டுகள் வளராமல் செய்து மண் அறிப்பிற்க்கு வழி செய்கிறது எண்ணற்ற மலைப்பிரதேசங்களில் பரவிவிட்ட உன்னி புதர் (lantana) சிறு பறவைக்கும் புதராகமல் நிழலாகமல் அடர்ந்து பரவி வருகிறது. இதை பயன்பாட்டுக்கு மலை கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உன்னி புதரிலிருந்து கூடைகள் முக்காலிகள் செய்யலாம் என்ற திட்டங்களும் நிசத்தில் சாத்தியமின்றி மூழ்கிவிட்டன.

குளிர்சாதன அறைக்குள் குந்திக்கொண்டு ஏழைகளின் நன்மை தீமை பற்றி கதை அளக்க வேண்டாம் களத்திற்க்கு வந்து பாருங்கள். வெயில் நிழல் பரியும்.அதித வெயில் பிரதேங்கள் தான் மழைக் காடுகளின் பூர்விகம் வெயிலை நன்கு சுவைத்து தின்று தடித்த வழவழப்பான பன்னூரு வித பச்சை காட்டும் நிழல் அடியிலும் பெரணிகளையும் பூஞ்சைகளையும் காளான்களையும் வளரவிடும் பிராந்திய தாவரங்களின் நிழல்களே மென்மையாவை.பிற நிழல்களே என்றாலும் வெட்டி எறியப்படத்தான் வேண்டும். எனவே எல்லா நிழலும் நிழலல்ல நோவாத சிரம் ஆற்றும் நிழலே நிழல். விவாதிக்கலாம் வாருங்கள். குறைந்த பட்சம் சீமை கருவேல் மரத்தடி நிழலையும் புங்கமர நிழலிலும் ஒய்வெடுத்து நீங்களே அனுபவபூர்வமாக முடிவுக்கு வரலாம்.

விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?

எளிய வழியில், அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டுமா… விதைப் பந்து தயார் செய்யுங்க. மிகவும் தொன்மையான, எகிப்திய நாட்டு விவசாய முறை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் நாட்டில், விளைநிலங்களை தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்த பகுதியில், விதைப்பந்துகளை, வானிலிருந்து தூவியே, காடுகளை உருவாக்கினர்.

விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்:
* செம்மண் அல்லது களிமண்
* தரமான மரங்களின் விதைகள்
* பசுஞ்சாணம் மற்றும் நீர்

செய்முறை: செம்மண்ணில், பாதியளவு சாணத்தை கலந்து, நீரூற்றி பிசைந்து, அதன் நடுவே, சேகரித்த விதைகளை பொதித்து, உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். முதலில், நிழலில் உலர்த்தி, பின், வெயிலில் ஒருநாள் காய வைக்கவும்.இதனால், உருண்டைகளில் வெடிப்பு வராது; சூரிய வெப்பத்தில், ஒருநாள் காய்ந்தால், அது, இறுகி விடும்.

நீங்கள் வெளியே செல்லும் போது, மரம் நட வாய்ப்புள்ள இடங்களில், இந்த விதை பந்தை வீசி விடவும். மழை வரும் வரை, அவ்விதையை எலி, எறும்பு மற்றும் பறவைகளிடமிருந்து, செம்மண், பசுஞ்சாணக் கலவை பாதுகாக்கும். ஒரு ஆண்டு வரை, இவ்விதை முளைக்க, ஏற்றதாக இருக்கும்.

 


மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில், நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் செல்ல, ஏற்ற வகையில், இலகுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை, செடியின் வேர் உண்டு, தன்னை, அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
ஆனால், வெறும் விதைகளை விதைத்தால், அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம்; வெப்பத்தால், தன் முளைக்கும் தன்மையை விதை இழந்து விடலாம்; நிலமானது, செடி வளர்வதற்கு ஏற்றதாக இல்லாமல், கடினமானதாக இருக்கலாம்; இதனால், விதை முளைக்காது. ஆனால், விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன், இலகுவதுடன், நுண்ணுயிர்களை உண்டாக்கி, நிலத்தை இலகுவாக்கி விடும்.

இயற்கையை நேசிக்கும் மனமும், ஆர்வமும் மற்றும் அதற்கான முயற்சியும் இருந்தால் போதும், விதைப்பந்துகள் தயாரித்து விடலாம். மழையை, விதைப் பந்துகளுடன் வரவேற்போம்!

நன்றி: ஆவாரை நண்பர்கள்

படம்: தாம்பரம் மக்கள் குழு

நூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “

கோவை சதாசிவம்

யானைகள்,
மனிதர்களின் சூது, வாது அறியாத ஓர் அப்பாவி விலங்கு!
மனிதர்கள் ஓட்டத்தயங்கும் சைக்கிளை சர்க்கஸ்சில் இன்னும் அவைகள் ஓட்டுகின்றன.

காலில் பிணைத்த சங்கிலி இறுகி கொப்பளிக்கும் குருதியைப் பொருட்படுத்தாமல் கோவில் வாசலில் நிற்கும் யானை
கும்பிட வருவோருக்கு
தும்பிக்கை தேயத்தேய
ஆசீர்வாதம் வழங்குகிறது!

தார்ச்சாலை சூட்டில்
பஞ்சுப் பாதம் தீ பற்ற
வாகன நெரிசலிடையே
பத்துக்காசு பிச்சை எடுத்து
பாகனுக்கு தருகிறது!

சைக்கிள் ஓட்டுகிற …
ஆசீர்வதிக்கிற …
பிச்சை எடுக்கிற யானைகளை
நீங்கள் அறிவீர்கள்!

இயற்கையின் பேருயிராய்,
காட்டின் ஆதார சக்தியாய்
உலவும் யானைகளை
உங்களுக்கு அறியச்செய்ய வேண்டும்!

காட்டு யானைகளை
அட்டகாசத்தின் குறியீடாய் சித்தரிக்கும் பத்திரிகைகள் .
பழங்குடிகளின் வில்லனாக பாவிக்கும்
“கும்கி “போன்ற திரைப்படங்கள்
யானைகளின் இருப்பை,
இயற்கைக்கு அவைகள் செய்யும் பங்களிப்பை
பதிவுசெய்யவோ, பிரதியெடுக்கவோயில்லை!

போன வாரம் மலைக்கிராம வயல் நடுவே பழங்குடிகளோடு இருந்தேன்!
அதிகாலை நேரத்தில் சிறிதும் பெரிதுமாக நான்கு யானைகள் வயல் வெளியில். அரை ஏக்கரில் விதைத்த பயிர்களை யானைகள் கால் மணி நேரத்தில் காணாமல் செய்து விடும்!

பழங்குடி யானைகளிடம் மன்றாடுகிறார்.

“என்ற வயிறு சிறுசு
எங்காடும் சிறுசு
உன்ற வயிறு பெருசு
உன்ற காடும் பெருசு
வாயே வச்சுடாதே சாமி
வயலே விட்டுப் போயிரு ”

காதுகளை ஆட்டியாட்டி
பழங்குடியின் கதறலைக்கேட்ட யானைகள் நின்று, நிதானித்து, சட்டென நகர்ந்து மறைந்தன.

யானைகளின் உருவம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது அவைகளின் கருணையும் என்று உணர்ந்த தருணமது.

சங்க காலம் முதல் சமகாலம் வரை
வாழும் யானைகளின் வாழ்வை இயற்கையோடும், அறிவியலோடும் கட்டமைக்கப்பட்ட பெட்டகம் தான்…

“ஆதியில் யானைகள் இருந்தன “ நூலுக்கான அறிமுகம். நூலாசிரியர் கோவை சதாசிவம். குறிஞ்சி பதிப்பக வெளியீடு. விலை ரூ.40.

நூலை இங்கே பெறலாம்.

தாமிரபரணியில் எங்கிருக்கிறது உபரி நீர்?எந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதி? : நீதிமன்றங்கள் யாருக்கானது….

சுந்தரராஜன்

தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் “நீராதார துறை ” (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஒரு உண்மையென்னவெனில் தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (water guage) கிடையாது, அதனால் எந்த இடத்தில் ஓடும் நீரை வைத்து நீதிமன்றம் உபரி நீர் என்று சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே உபரி என்று ஒன்று இருந்தால் கூட (ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்ளுவோம்) அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?

நீர் என்பது அடிப்படை வளம், ஒரு விற்பனை பண்டம் அல்ல, இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் சொந்தமான அடிப்படை வளத்தை, ஒரு நிறுவனம் எப்படி காசுக்கு விற்க முடியும், நாம் எப்படி காசு கொடுத்து வாங்க முடியும்? அதுவும் அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியாத பொருள் அது எப்படி “உற்பத்தி செய்யும்” நிறுவனம் ஆகும்?

கடந்த 140 ஆண்டு காலமாக காணாத வறட்சியை தமிழகம் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது, மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்ப்பட்டுள்ளதை பல்வேறு தரவுகள் நமக்கு தெரிவிக்கின்றன, தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்க்கொலை செய்துள்ளார்கள் என்று செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், இவ்வளவும் தங்கள் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருப்பதை பார்த்தும் நீதிபதிகள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்குகிறார்கள் ,என்றால், இவர்கள் எந்தமாதிரியான ஒரு மனநிலையில் இருக்க வேண்டும்?

ஹிரோஷிமா நகரத்தின் மீது உலகின் முதல் அணு குண்டு வீசியவனின் மனநிலைக்கு இந்த நீதிபதிகளின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கமுடியாது.

சுந்தரராஜன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்.

பூவுலகின் போராளி!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

“பூவுலகின் நண்பர்கள்” தோழர் நெடுஞ்செழியனின் நினைவு நாள் பதிவு

சி.நெடுஞ்செழியன் (18-09-1958 – 28-02-2006)

ஹைட்ரோகார்பான் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் மக்கள் திரள் போரட்டங்கள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், தமிழகத்தின் இயற்கை வளப் பாதுகாப்பிற்காவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட அற்பணிப்புமிக்க இந்த மாபெரும் மனிதனைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம்.

சுற்றுச்சூழல் என்பது குப்பை அள்ளுவது வாழிடங்களை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்வது மரம் நடுவது என்பது மட்டுமல்ல, சூழலியல் என்பது அரசியல் பொருளாதாரத்தோடும் ஏகபோகத்தின் சுரண்டலோடும் கார்ப்பரேட் நலன்களோடு பிண்ணிப்பிணைந்தது என கால் நூற்றாண்டுக்கு முன்பாக அறிவித்து கோட்பாட்டு சமர் புரிந்தவர் தோழர் நெடுஞ்செழியன்.

இன்று சூழலியல் பிரச்சனைகளில் தலையீடு செய்கிறவர்கள்,பேசுபவர்கள் தனிநபர்களை முன்னிலைப்படுத்திக் கொள்கிற போக்கும் சட்டவதாக சட்டப்பூர்வ வழிமுறைகளில் சூழலியல் பிரச்சனைகளை அடைக்கிற போக்கும் தலைதூக்கியுள்ள நிலையில் தோழர் நெடுஞ்செழியனின் கூட்டுச் சிந்தனை கூட்டுச் செயல்பாட்டின் அடிப்படையிலான வேலை முறைகள் அக்கறைக்குரியவை.
நெடுஞ்செழியனும் அவருடைய தோழர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை நிறுவி இயங்கினார்கள். அதற்காக பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கிப் பணிபுரிந்தபோதும், எந்த இடத்திலும் தங்களையோ தங்கள் பெயரையோ படத்தையோ முன்னிறுத்தாமல் செயல்பட்ட அவர்கள் போட்டுத் தந்த பாதை முன்மாதிரி இல்லாதது.
தோழர் நெடுஞ்செழியனின் வரலாறும் பூவுலகின் நண்பர்களின் இயக்கத்தின் வரலாறும் பிரித்தறிய இயலாதவை.

பூவுலகின் நண்பர்கள் இயக்கமானது சூழலியல், மனிதஉரிமையில் ஆர்வமுள்ள, மூன்றாம் உலகப் பொருளாதார நிலைமை பற்றிசிந்திக்கக்கூடியவர்களாக இணைந்து 1985-ல் தொடங்கப்பட்டது. சூழலியல்பற்றிய செய்திகளை புத்தகங்கள், சிறு வெளியீடுகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வைஏற்படுத்தி வந்தது. இதற்காக ‘பூவுலகின் நண்பர்களே’ ஒரு வெளியீட்டகத்தையும் நடத்தியது. புதுச்சேரியிலிருந்து‘சூழல்’ என்ற மாத இதழும் கோவையிலிருந்து ‘பூவுலகு’ காலாண்டிதழும் வெளிவந்தன.

கோவை, நாமக்கல், கும்பகோணம், தூத்துக்குடி, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய ஊர்களில் ‘பூவுலகின்நண்பர்கள்’ இயக்கம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டி தாப்பர் டூபாண்ட்,பொள்ளாச்சி மாட்டிறைச்சி ஆலை, கொல்லிமலை நீர்மின்திட்டம் போன்ற சிக்கல்களை ஆராய்ந்து, அதுசூழலுக்கும் மக்களுக்கும் எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கி புத்தகங்கள்வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து அதை மக்களிடம் கொண்டு சென்றது.

புதுச்சேரி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் நெடுஞ்செழியனின் காலத்திலிருந்தே செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் ஞெகிழிக்கு (Plastic) எதிராக விழிப்புணர்வையும், அதன் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து அறிவியல்பூர்வமான அணுகுமுறையை, பார்வையை முன்வைக்கும் புத்தகங்கள், கையேடுகளை பூவுலகின் நண்பர்கள் தொடர்ச்சியாக தமிழில் தந்து வந்ததது. ஒற்றை வைக்கோல்புரட்சி, மௌன வசந்தம் (சுருக்கமான பதிப்பு), சுற்றுச்சூழல்: ஓர் அறிமுகம், சாண்ட்ரா போஸ்டலின் மூன்றாம்உலகப் போர் தண்ணீருக்காக, வந்தனா சிவாவின் பசுமைப் புரட்சியின் வன்முறை போன்ற உலகப் புகழ்பெற்றசுற்றுச்சூழல் புத்தகங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் புத்தகங்களை தமிழில் தந்திருக்கிறது.

பூவுலகின் நண்பன் தோழர் நெடுஞ்செழியன் அடிப்படையில் ஒரு மனிதஉரிமை, சமூகநீதி, சுற்றுச்சூழல் ஆர்வலர். இடதுசாரி தத்துவங்களின் அடிப்படையில் தன் அணுகுமுறைகளைஅமைத்துக்கொண்டவர். உலகமயம்-தாராளமயம்-தனியார்மயம் போன்றவற்றின் ஆயுதங்களான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்தொடர்பான சொல்லாடலை 30 ஆண்டுகளுக்கு முன்பாக குழுவாக முன்னெடுத்தவர்.
தோழரின் சிந்தனைகளை நினைவில் ஏந்தி,அவர் கனவை நினைவாக்கப் போராடுவோம்.அதுவே அவருக்கு நாம் செலுத்துகிற அஞ்சலி.

தமிழகத்தின் சுற்றுச் சூழல் முன்னோடியை நினைவு கூர்வோம்,,அவரின் சூழல் இலட்சியங்களை நிறை வேற்றுவோம்.

தோழர் நெடுஞ்செழியனின் காணொளி:

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. அந்த யானைகளை ஜக்கியின் ஆட்கள் விரட்டியடிக்கிறார். உயிர்பயத்தில் அவை வேகமாகக் கடந்து செல்கின்றன.

 

சூழலியலாளர் ராமமூர்த்தியின் முழுபதிவும் இங்கே:

நமக்கு(மனிதர்களுக்கு)முன்பாகவே இந்த மண்ணில் தோன்றியவை மற்ற உயிரினங்கள் தார்மீக ரீதியில் பார்த்தால் நம்மைவிட அவற்றிற்குதான் இந்தபூமியின் மீதான உரிமை மிக அதிகம் இதை மனித மனம் ஒத்துக்கொள்ளுமா ?…மற்ற உயிரினங்கள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரிந்திருந்தால் இந்த பூமியில் மனித இனம் பூண்டோடு என்றோ அழிக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை….

அந்த வகையில் அதன் காட்டிலேயே உட்கார்ந்துகொண்டு உலகை அமைதிப் படுத்துகிறேன்னு சொல்லிட்டு விலங்குகளை அமைதியில்லாம செய் இந்தக் காணொளியில் காணுங்கள் இதைப்பார்த்து உங்கள் மனம் மகிழ்ச்சிக்குண்டானால் நீங்கள் அங்கே போய் தியானம் செய்ய முழுத்தகுதி பெற்றவர்களாவீர்கள்… மாறாக மனம் பதைபதைத்தால் ஆசிரமத்தின் ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல் கொடுங்கள்….

சாமிக்கு முன்னாடி அனைத்துயிர்களும் சமம் என்றால் இந்த காட்டுவிலங்குகள்மீது ஏன் இந்த தாக்குதல்கள்? சாமிக்கு மனித உயிர் மட்டும் தான் உயிரென்றால் அந்த சாமியே எமக்கு தேவையில்லை….காட்டுக்குள்ள மரத்தை வெட்டியெறிந்துவிட்டு நாட்டிற்குள்ளே மரத்தை வளர்த்தால் செய்கிற குற்றம் சரியாகிவிடுமா ?

இதுபற்றி பேசும்போது ஒருவர் என்னிடம் சொன்னார் அது பட்டாபூமி அங்கு ஆசிரமம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு விவசாயம் செய்யப்பட்டு வந்ததாம் அப்படியே பார்த்தால்கூட அது வனக்காடாகவே இருக்க வேண்டாம்…தமிழ்நாட்டில் நீராதாரத்தோடு இருக்கும் சொற்பமான வளமான நிலப்பரப்பு எங்கும் ஆசிரமத்தை அமைத்துவிட்டால், பசிக்கும் வயிற்றுக்கு, நாலு மந்திரத்தை உச்சரித்து, சின்னதாக ஒரு தியானத்தை செய்தால் போதுமா?…

காட்டைக்கெடுப்பவன் சூழலைச் சிதைப்பவன் எந்தமதமானாலும் அவன் மனிதகுலத்திற்கு தீங்கை உண்டாக்குபவனே அது காருண்யாவாக இருந்தாலும் ஈஷாவாக இருந்தாலும் எல்லோருமே இயற்கை சூழலுக்கான எதிரிகள்தான்…

இங்கு குடிக்கவே நீரற்ற நிலை…நீரில்லாமல் பாசனப்பரப்பு வெகுவாக சுருங்கிவிட்டது,ஏதோ பச்சையா கொஞ்சம் நீர் இருக்கிற மலையடிவார நிலங்களை ஏதோவது ஒரு மதசாமியாரிடம் கொடுத்துவிட்டு,புதிது புதிதாய் இறக்குமதி செய்யும் பக்தர்களைப் பார்த்து வாய்பிளந்து நிற்கும் தமிழன்தான் ஊருக்கு இளைச்சவன்….ஏமாளி….”

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வம்
நியாண்டர் செல்வம்

பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது.

அதற்கு தண்டனையாக ஆயிலை சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் என அனைவரின் வணிக பாதிப்பையும் ஈடுகட்ட 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டையும் கொடுத்தது. கம்பனியின் சி.இ.ஓ பதவி விலகினார்.

எக்ஸான் கம்பனி இதுபோல அலாஸ்காவில் வால்டேஸ் எனும் கப்பலில் ஆயில்கசிவை நிகழ்த்தியதால் ஆர்ட்டிக் கடலையும் அவர்கள் சுத்தம் செய்து தந்தார்கள்.

நம் ஊராக இருந்தால் மாணவர்கள் கையில் பக்கட்டை கொடுத்து வடதுருவத்துக்கு அனுப்பி சுத்தம் செய்துதர சொல்லி இருப்பார்கள்.

ஆயில்கசிவுக்கு காரணமானது ப்ரிட்டிஷ் கப்பல்..ஆக குப்பையை அவன் போடுவான், சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

கடலில், கரையில் மாணவர்கள் ஆயிலில் வழுக்கி விழுந்து உயிர்துறந்தால் பிணத்துக்கு மலர்வலையம் வைக்க கூட எவனும் வரமாட்டான். பேஸ்புக்கில் ஒரு சோக சிரிப்பான் போட்டுவிட்டு தல 57 பட விமர்சனம் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.

ஆயில் கசிவை எப்படி கடலில் இருந்து அகற்றுவது என்பது ஆயில் கம்பனிகளுக்கு தெரியும். ஏனெனில் அவர்கள் தொழிலே இதுதான். இது பக்கட்டையும், மாணவர்களையும் வைத்து செய்யும் வேலை அல்ல இது

இங்கிலாந்து தூதரை அழைத்து ஒரு காய்ச்சு காய்ச்சி அதை சுத்தம் செய்ய கட்டளை இடாமல் என்ன சின்னபுள்ள விளையாட்டு இது?

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வன், பேலியோ டயட்  நூலின் ஆசிரியர்.

Photo: Antony Kebiston (பச்சை தமிழகம்)

வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

இப்போது சென்னையில் நடந்திருப்பதைப் போன்ற கப்பல் விபத்தும் அதன் விளைவாக கடலில் எண்ணெய் கசிவதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது தானா?

ஆமாம். இத்தகைய விபத்துக்கள் நடக்கக்கூடியவைதான்.

கசிந்திருக்கும் எண்ணெயில் உயிருக்கு ஆபத்தான H2S போன்ற வாயுக்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும், அதனால் எந்த எண்ணையை அப்புறப்படுத்த முயல்வது உயிருக்கு ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறதே உண்மையா?

கசிந்திருப்பது அத்தகைய எண்ணெய் இல்லை என்பதுதான் இப்போது வெளிவந்திருக்கும் தகவல். அத்தைகைய வாய்ப்பு இருக்குமென்றால், அரசு இவ்வளவு மெத்தனமாக இருக்காது. மொத்த இடத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பார்கள். இந்த சம்பவத்தையே முடிந்த அளவுக்கு ரகசியமாக கையாண்டிருப்பார்கள். மீனவர்களை விடுங்கள்; துறைமுகத்துக்கு எதுவும் பங்கம் வந்துவிடாமல் இருக்க அரசு வேகமாக செயல்படும். சிறிய அளவிலான அணுக்கசிவின் போதெல்லாம் அரசு அப்படித்தான் நடந்துகொள்கிறது.

மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் இத்தகைய விபத்துக்களின்போது மக்கள் சென்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவது உண்டா?

உண்டு. அத்தகைய நாடுகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லையென்று உறுதி செய்தபிறகு, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் அரசு இதை அனுமதிக்கும். பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களே அதில் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு இத்தகைய விஷயங்களில் குறைந்தபட்ச பயிற்சி இருக்கும்.

இப்போது வாளியுடன் களத்தில் இறங்கியிருக்கும் பொதுமக்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதற்குப் பெயர் ‘Mental Masturbation’. இதுவொரு நோயாக நமது சமூகத்தில் வளர்ந்து வருகிறது. யாருக்கும் பிரச்சினை இல்லாத, எந்த அரசியல் கோரிக்கையும் இல்லாத ஒரு செயலில் தம்மை இணைத்துக்கொள்வதன் மூலம், தமது குற்றவுணர்ச்சியில் இருந்து வெளியேற முயலும் ஒருவித மொன்னைத்தனம். தனது கருணையின் மீது தானே மையல் கொள்ளும் போதையும் கூட இது. இதனால் பெரிய பாதகம் ஒன்றும் இல்லை.

மக்கள் வாளிகளுடன் களத்தில் இறங்கியிருக்கக் கூடாது என்கிறீர்களா?

இறங்கலாம். அதெல்லாம் மக்களைக் குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது பார்க்கும் மேற்கு நாடுகளில் மட்டும். அங்கு வாளியுடன் பொது மக்கள் சுத்தப்படுத்த இறங்குவார்கள்; அதே சமயம் கழிவைக் கொட்ட வரும் கப்பலை மறித்து நடுக்கடலிலும் கூட போய் போராடுவார்கள். ஒரு சிவில் சமூகத்தின் போராட்டத்தை அதே கண்ணியத்தோடு அரசும் எதிர்கொள்ளும். போராட்டக்கார்களோடு உரையாடலை மேற்கொள்ளும். லத்தியால் அடிக்காது. முக்கியமாக, அவர்களது போராட்டம் முடிந்தவுடன், கடற்கரையை ஒட்டிய மக்களின் வீட்டை இடிக்காது.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.

photo: Venkat Angamuthu

வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு நெடிய உறக்கத்துக்குப் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு பாதிப்பு பற்றி ஆராய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை பலி காத்திருக்கிறதோ!

குறுவை சாகுபடிக்கான நீரை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து விடுவது வழக்கம். ஒருவேளை இது தள்ளிப்போய் ஜூன் 20க்கு பிறகு திறக்கப்பட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் குறுவை அறுவடையில் ஒரு விழுக்காடு குறையும் என்பது உழவர்களின் பட்டறிவு. குறுவை ஏற்கனவே கனவாக மாறிய நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பிய சம்பா சாகுபடியும் இந்தாண்டில் காலி. மேட்டூர் நீர் இல்லை, பருவமழை இல்லை, நிலத்தடி நீரும் இல்லை என்கிற நிலை. இனி உழவர்களின் எதிர்காலம் என்ன? இழப்பீட்டு தொகையும், காப்பீட்டு தொகையும் இந்தக் கார்ப்பரேட் ஆட்சி காலத்தில் இனி எத்தனை காலத்துக்குத் தொடரும்?

காவிரி நீர் கிடைக்காமல் போனதின் அரசியல் காரணங்கள் ஒருபுறமிருக்க, இந்நிலைமைக்கான சூழலியல் காரணங்களையும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இவை நம் முன்னோர்கள் அறிந்த செய்திதான். ஆனால் நாம் அதைக் கைப்பற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். காவிரிப்படுகை வேளாண்மை பொய்த்துப் போவதற்கு மொத்தம் மூன்று காரணிகள் உள்ளன. முதலாவது மேட்டூர் அணையில் நீர் இல்லாமை, இரண்டாவது பருவமழை பொய்த்தல், மூன்றாவது நிலத்தடி நீர் குறைதல் அல்லது உப்பாதல். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இம்மூன்றுமே சூழலோடு தொடர்புள்ளவை என்பதை அறியலாம்.

முதலில் காவிரிப்படுகை மண்ணின் தன்மையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும். குறுவைக்கு மேட்டூர் அணை திறந்த 15 நாளில் முன்பு இப்படுகையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும். வயலில் பாய்ச்சப்படும் நீர் வழியாக இது உயராது. மாறாக வாய்க்கால்கள் வழியாகத்தான் நீர் இறங்கி நிலத்தடி நீர் உயரும். வயலின் மேலேயுள்ள உழுத மண்ணுக்கும், அடியிலுள்ள ஊற்று மண்ணுக்கும் இடையே களிமண் ஒரு தகடு போல எங்கும் பரவியுள்ளது. இதை ஊடுருவி அவ்வளவு விரைவாக நீர் கீழே இறங்க முடியாது. ஆனால் படுகை மாவட்டங்களில் குருதி நாளங்களைப் போல எங்கும் நெருக்கமாகப் பின்னி பரவியுள்ள வாய்க்கால்களின் அடிப்பகுதி மணற்பாங்காக இருப்பதால் நீர் கீழே இறங்கும். இதற்கும் நிலத்தடியே உள்ள ஊற்றுமண் படுகைக்கும் தொடர்பு இருந்தது. எனவே நிலத்தடி நீர்மட்டம் 15 நாளில் உயர்ந்து இந்நிலமெங்கும் நிரம்பும்.

1970களின் தொடக்கத்தில் குறுவைக் காலத்தில் மேட்டூர் அணை திறந்தபின் நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை காவிரிப்படுகைப் பகுதி பாசனத்துக்கு அனுப்பப்பட்ட நீரின் அளவு 20,000 கோடி கன அடியாகும். இதில் அய்.நா. வல்லுநர்களின் அறிவியல் ஆய்வின் அடிப்படையில் கணக்கிட்ட போது பயிர்களின் தேவைக்காக மட்டும் வயல்களில் கட்ட வேண்டிய இன்றியமையாத நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதி 9000 கோடி கன அடி நீர் வாய்க்கால் படுகைகளின் வழி ஊற்றுமண் பகுதிக்கு இறங்கி நிலத்தடி நீராக மாறிவிடும் என்று விவரித்துள்ளார் பொதுப்பணித்துறை மேனாள் தலைமைப் பொறியாளராக இருந்த பா. நமசிவாயம் அவர்கள்.

ஆனால் இன்று நீர்வரத்தும் இல்லை. வாய்க்கால்களில் மணலும் இல்லை. ஆயினும் நிலத்தடி நீர் ஊறுவதற்கு இயற்கை இன்னும் தம் பங்கை அளித்து வருகிறது. குறுவைக்கு மேட்டூர் நீர் கிடைக்காத நிலையில் வசதியுள்ள உழவர்கள் முழுக்க நிலத்தடி நீரை பயன்படுத்த, வடகிழக்கு பருவமழையும் பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்குள் ஒளிந்துக்கொண்டுவிட்டது. வேளாண்மையும் பொய்த்துவிட்டது. வரும் கோடையில் வரலாற்றிலேயே முதன்முறையாகக் காவிரிப்படுகை மாவட்டம் பேரளவிலான நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்துக்கு நான்கு மழைப் பருவங்கள் இருந்தன. தென்மேற்கு பருவமழை (32%), வடகிழக்கு பருவமழை (47%), குளிர்கால மழை (5%), கோடை மழை (15%). வடஇந்திய பகுதிகளில் ஏறக்குறைய கோடையிலேயே மழைக்கிடைக்கும். அதையொட்டியே குளிர்க்காலமும் வந்துவிடும். எனவே மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். ஆனால் தமிழகத்தில் மழைக்காலமும் குளிர்க்காலமும் ஒன்று சேர்ந்து முடிந்துவிடும். எனவே அதற்குப் பின்னால் மண்ணில் ஈரப்பதம் இருக்காது. இந்நிலையில் ஜனவரி, பிப்ரவரியில் கிடைத்துவந்த குளிர்கால மழை தாளடி சாகுபடிக்கு உதவியது. இன்று குளிர்காலமழை முற்றிலும் மறைந்துவிட, கோடை மழையும் குறைந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை குறைந்து போனதற்கு மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகளின் அழிவும் ஒரு காரணம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். கர்நாடகத்துக் காப்பித் தோட்டங்களும், தமிழகத்து தேயிலைத் தோட்டங்களும் நம் நீரை திருடிவிட்டன. 60 நாட்கள் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் கூட 15 நாட்களிலேயே அடித்துப் பெய்ந்துவிடுவதோடு அளவும் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்கள் என்ன?

இதில் மிக முதன்மையானது பருவநிலை மாற்றம் ஆகும். இதை ஏதோ நமக்குத் தொடர்பு இல்லாத செய்தி என்று இனி கடந்துவிட முடியாது. வரும் காலத்தில் வேளாண்மைக்கு அடிப்படையான பருவமழையைத் தீர்மானிக்கப் போவது இதுதான். அண்ணாமலை பல்கலைக்கழகப் பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆய்வு நடுவத்தின் அறிக்கையின்படி 2010 – 2040 காலப்பகுதியில் காவிரிப்படுகை மாவட்டத்தில் மேலும் 6-7 விழுக்காடு மழைக் குறையும் எனத் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி வெப்பநிலையும் ஒரு பாகை செல்சியஸ் அளவு உயருமாம். இது சுருக்கமாகத் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் இப்பகுதி நீரின்றி அமையப் போகிறது என்பதைதான். இந்தச் செய்திகள் எல்லாம் அறியாதவர்களாகவே பெரும்பாலான நம் உழவர்கள் இருக்கிறார்கள். ஆற்றில் நீர் வரும் அல்லது மழை பெய்யும் அல்லது நிலத்தடி நீர் என்றும் இருக்கும் என்பதெல்லாம் இனி கற்பனைதான் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எனவே இனி உழவர்களைக் காக்கும் உரையாடல்களில் சூழலியல் சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற வேண்டியது அவசியமாகும்

கர்நாடகத்திலிருந்து வரவேண்டிய நீர் வராமல் போனதன் அரசியலில் தேசிய ஒற்றுமை என்பது கேவலப்பட்டுக் கிடக்கிறது. காவிரிப்படுகையை எரிப்பொருள் கிடங்காக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கமுக்கத் திட்ட அரசியலும் இதில் ஒளிந்திருப்பதை நாம் அறிவோம். நம் அரசியல் கட்சிகளுக்கோ கார்ப்பரேட் கழிவறைகளை யார் கழுவிக்கொடுப்பது என்பதில்தான் போட்டியே. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அரசுகளுக்கு அக்கழிவறைகளைப் பாதுகாப்பதுதான் முதன்மை பணி. இதில் இவர்கள் ஏன் உழவர்களைக் காக்க போகிறார்கள்?. வேளாண்மையை முற்றிலும் அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான இந்த அமைப்பு முறையை (System), சூழலியல் அரசியல் பார்வையோடு மாற்றியமைப்பதே உழவினைத் தொழுதுண்டு பின் செல்லும் நம் அனைவரின் முதல் கடமை.

ஒளிப்படம்: சூ. சிவராமன்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

நம்மாழ்வார் தொடுத்த போர் !

ஆர். ஆர். சீனிவாசன்

ஆர். ஆர். சீனிவாசன்
ஆர். ஆர். சீனிவாசன்

நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறுபக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாததாகவே உள்ளது. கடந்த 50,60 வருடமாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம், நோய்களின் பெயர்களும் நமக்கு நெறைய நேரம் தெரிவதில்லை, மருந்துக்கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், மருத்துமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, மருத்துவர்கள் கட்டடங்களுக்கு மேல் கட்டடங்கள் கட்டுகிறார்கள், வியாபாரம் அமோகம், கல்லாபெட்டி நிரம்பி வழிகிறது. 80 சதவீத மக்களின் நோயுற்ற உடல்களின் காரணம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை நோய்களினால் முடக்கிப் போட அடிப்படை காரணமாக உணவு இருக்கிறது. ஒரு பன்னாட்டு அரசியல் காரணமாக நம்முடைய உணவு முறையும், விவசாய முறையும் மாற்றப்பட்டது, நம் முந்தைய அரசின், அரசியல்வாதிகளின் துணையோடு, 1960 களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்முடைய விவசாய முறை மாற்றப்படுவதற்கு, விடுதலை கிடைப்பதற்கு முன்பே போடப்பட்ட இந்த சதிதிட்டத்திற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள் உள்ளன.

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆரம்பித்த நாளிலிருந்தே நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும், கல்வி முறையும் மாற்றப்பட்டு, அது இழிவானதாக சுட்டிக்காட்டும் போக்கு ஆரம்பித்து விட்டது. மக்களே தம்முடைய வாழ்க்கையை நாகரிகமற்றதாக எண்ணும் போக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்க ஆரம்பித்த காலத்திலிருந்து விடுதலை கிடைப்பது வரை பல்வேறு உலக நாடுகளின் விவசாய ஊடுருவல் நம்முடைய நாட்டில் இருந்தன. காந்தி புகழ்பெற்ற தலைவராயிருந்த போதிலும், அவரோடு இணைந்து பணியாற்றிய, தற்சார்பு சிந்தனைகளை விதைத்த ஜே.சி. குமரப்பா போன்றவர்களை நேருவின் படையினர் புதிய, நவீன இந்தியாவை உருவாக்குவதில் தடையாக இருக்கக்கூடும் என்று முதலிலேயே கண்டுகொண்டனர். பிரமாண்டமான இந்தியாவை உருவாக்குவற்காக ஜே.சி. குமரப்பா போன்ற சிறியவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். விவசாயத்தைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வைத்திருந்தாலும், பன்னாட்டு நவீன தொழில்நுட்பத்தை எதிர்த்து, 5000 வருட இந்திய விவசாய வரலாற்றை முன்வைத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அவருடைய எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. நாம் நோயுற்று இருப்பதின் முதல் விதை இதுதான்.

பப்ளிகேசன் டிவிசன் 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஒன்று Food weapon,(உணவு ஆயுதம்), இரண்டு weather weapon(தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்று இருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமையானவைதான், எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன்வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினையும் மாற்றி அமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமையாக்க முடியும் என்பதுதான். இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப்புரட்சி.

1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையில் இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை போரும் தொடர்கிறது. விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ். சுவாமிநாதனைத் தவிர இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் ஈடுபட்டனர், அல்லது இந்த இந்த பார்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம்பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து, நம் நிலக்காட்சிகளின் அழகையும், 500 வருட தமிழ்க்காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக்காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலைகுலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்ததே, மரணங்களும், துயரங்களும் . ஈழஇனப்படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொறு அழிவுக்குப் பின்னரும் நெறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயின் தற்கொலைகளுக்குப் பின்னும் அமெரிக்க பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்கும் மேலான கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை வழிநடத்தும் சுப.உதயக்குமார், ‘பார்பனத்துவம், அணுத்துவம்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அணுசக்தி துறையின் பெரும்பாலன அனைத்து தலைவர்களும், அதிகாரிகளும் பார்பனர்களே, இந்தியாவின் அணுசக்தி கொள்கைக்கும், அணு உலையினால் மக்கள் கொல்லப்படுவதற்கும் பார்பனர்களின் சதியே காரணம் என்று ஆராய்ந்து விளக்குகிறார் உதயக்குமார். அதே வாதம் பசுமைப்புரட்சிக்கும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து, நம்முடைய விவசாய முறை தவறு என்றும், பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்தாவிடில் உணவுத்தட்டுப்பாடு காரணமாக பஞ்சம் வந்து எல்லோரும் சாக வேண்டியதுதான் என்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் உணவுத்தட்டுப்பாடு வந்தது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதுதான். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. மேலும் இச்சதித்திட்டம் இந்திய விவசாயிகளின் மத்தியில் சுலபமாக நிறைவேற்றப்படவில்லை, நெறைய எதிர்ப்புகள் இருந்தன. அதிகாரத்தின் மூலமும், அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலியின் மூலமும், தினமணி போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சியான தலையங்களாலும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் உச்சபட்சமாக ஹலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் போன்ற கொடிய விஷங்கள் நிலங்களில் தூவப்பட்டன. அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக உள்ளது. நாம் நோயுற்றதற்கான போர் இப்படித்தான் நடந்தேறியது. இக்கொடிய வரலாற்றை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். மருத்துவர்கள் கார்ப்பொரேட்டுகளாக மாறியதும் இதனால்தான். அனேக மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பாவர்களே தவிர, நீங்கள் நஞ்சான உணவு உட்கொள்ளுகிறீர்கள், உணவை மாற்றுங்கள் நோய்கள் குணமாகும் என்று சொல்வதில்லை.

நம்மாழ்வார் குறித்த அஞ்சலிக்கட்டுரைக்கு இவ்வரலாறே அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பல்வேறு அழிவுகள் நடந்து விட்டன. சுற்றுச்சூழல் முன்னோடியான ரேச்சல் கார்சன் தன்னுடைய ’மொளன வசந்தம்’ புத்தகத்தில் முதலில் பூச்சிக்கொல்லியின் கொடுமையால் எவ்வாறு நிலமும், உயிரினங்களும் அழிந்தன என்பதை விளக்க ஆரம்பித்தார். ஒற்றைவைக்கோலில் புரட்சியை ஆரம்பித்தார் ஃபுகோகா சதித்திட்டங்கள் அம்பலமாக தொடங்கின. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அமெரிக்க எம்.எஸ். சுவாமிநாதன் சதிகளை அம்பலப்படுத்தத் தொடங்கினர். வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ரிச்சார்யா போன்றோர் ஊடகங்களில் போரின் கொடுமையை விளக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் எஸ்.என், நாகராஜன், வைகை குமாரசாமி போன்றோர் மூர்க்கமாக இதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். புளியங்குடியில் கோமதி நாயகம் விவசாய இயக்கம் இவர்களின் சிந்தனைப் புரட்சிகள் சிறப்பாக செயல்படுத்தியது. சிறுபத்திரிக்கைகள், குறுங்குழுக்கள் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்தன. இச்சூழலில்தான் விவசாயத்துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து பூச்சிக்கொல்லியின் கொடுரங்களை உணர்ந்து, புகோகாவின் தத்துவங்களைத் தரிசித்து வேலையை உதறி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு எதிராகத் தலைமையேற்று பெருந்திரள் விவசாய இயக்கமாக மாற்ற தன்னையே அர்ப்பணித்தார் நம்மாழ்வார். அன்றிலிருந்து அவர் சாகும் வரை எந்த கூட்டத்திலும் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன்களின் பேரை அவர் உச்சரிக்க மறந்ததில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானம், விவசாய வரலாற்றில் நேரடி அனுபவம், மண்ணோடும், சகதியோடும் கரைந்த விவசாய அறிவு என்று தமிழகத்தையும், உலகத்தையும் வலம் வரத் தொடங்கினார் நம்மாழ்வார். அவரது பயணங்கள் அசாத்தியமானது. தீவிரவாத இயக்களின் தலைவர்கள் போல இருஇரவுகள் அவர் ஒரே ஊரில் தங்கியதில்லை. பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு அவர் மூச்சாயிருந்தது. நோயுற்றவர்களும், விவசாயிகளும், இளைஞர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். பின் தொடர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயிகளாக மாறினர். அவரது நேரடியான விவசாய செயல் முறை விளக்கங்கள் மந்திரத்தன்மையுடையதாய் வசீகரமாக இருந்தது. சிந்தனையிலும் செயலிலும் சளைக்காத போராளியாக இருந்தார். 5000 வருட தமிழக விவசாய அறிவைத் தேடி அவற்றில் மூழ்கித் திளைத்தார். சிறு விவசாயச் செயல்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் அவரை குதூகலிக்கச் செய்தன. சிலந்தி வலைத் தொடர்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். சிலந்தி இல்லாமல் விவசாயம் இல்லை!

நான் ஒரு மாத காலம் அவரோடு இரவு பகலாக பயணித்திருக்கிறேன். பயணங்களின் கவனக்குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். தன்னைத் தேடி வந்த இளஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். வெவ்வேறு ஊர்களில் பன்முகமான விவசாய பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒரு வறட்சியான ஊரையை மக்களின் துணையோடு காடாக மாற்றியிருந்தார், வெறு மரங்கள் நடுவதே சில ஊரில் செய்தார், கால்வாயிலிருந்து மீன்கள் விவசாய நிலத்திற்கு வந்து இரவு முழுவதும் எச்சமிட்டு அதிகாலையில் கால்வய்க்குத் திரும்பும் முறைகளை சில ஊர்களில் ஏற்படுத்தியிருந்தார், கால்நடைகளோடு இணைந்த விவசாயப் பண்ணை, தேனீக்களோடு இணைந்த பண்ணை, மண்புழு எரு மட்டுமே கொண்ட பண்ணைகள் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விவசாயமுறை என்றே அவர் பணி இருந்தது. ஒரே விவசாய முறையை எல்லா ஊர்களிலும் திரும்பத் திருப்பச் செய்யும் விசயத்தை அவர் ஒரு போதும் அவர் செய்வதில்லை. பெரும்பாலும் நீரில்லாத, விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைத் தேர்தெடுத்து அதனை பசுமைப் பூமியாக மாற்றுவதில் அவருக்கு அதிகம் உற்சாகம் இருந்தது. எல்லாமே பசுமையாக மாறியது.

விவசாயத்திற்கு பிறகு, அவர் பசுமைப் புரட்சியின் கொடுமைகளை ஊர் ஊராக விளக்குவதில் நாட்டுப்புறப் பேச்சாளராக மாறியிருந்தார். 2000 த்திற்குப் பிறகு பயணம் மட்டுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. நகரங்களில் பசுமைப் புரட்சியின் விளைவுகள், விதைகளைப் பாதுகாப்பது, பன்னாட்டு அரசியல் போன்றவை விரிந்தாலும், கிராமங்களில் நேரடியான கள அனுபவம், செயல்முறை விளக்கங்கள் என்று பேச்சைக் குறைத்தார். இடது சாரி சிந்தனை, திராவிட இயக்களின் பேச்சாற்றல், பெரியாரியம், தொல் தமிழ் அறிவு, போன்றவை கலந்து கதம்பமாக மிளிரின. 1960 களில் இவ்வளவு பெரிய கொடூரம் நிறைவேறியது எப்படி என்று இடதுசாரி இயக்கங்களோ, அரசியல் இயக்கங்களோ, தெரியாமல் இருந்தன?. மக்களின் வாழ்வையும், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிப்போடும் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் எல்லா அரசியல் இயக்கங்களும் எப்படி துணை போயின? என்ற கேள்வியும் எழுப்பினார். அதற்குப் பிறகும் கூட இடது சாரி இயக்கங்கள், தன்னைத் தனியாக விட்டுவிட்டன, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தில் நானும் அவரும் ஒரு பள்ளியில் தங்கினோம், இரவு உணவு வழங்கப்பட்டது. சமையல் நன்றாக இருந்தது என்றார், பாவமாய் ஓர் அம்மாவைக் கூட்டி வந்து, இவர்தான் சமைத்தார், இவருடைய கணவர் இறந்து விட்டார், மிகவும் துயரம் என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார் பரிதாப உணர்வோடு. “அற்புதம்! உன்னைப் பிடித்த கஷ்டம் ஒழிந்தது, விட்டு விடுதலையாகி நிம்மதியாக உன் வாழ்க்கையைத் தொடரு, இனிதான் உனக்கு விடிவு காலம்” என்றார் அந்த அம்மாவைப் பார்த்து, எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டனர், பின்னர் சிரித்தனர், அவர்தான் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்பொழுதுதான் எல்லாம் கூடிவருகிறது, மெதுவாகப் பற்றிப் பரவுகிறது என்று உற்சாகமான காலகட்டத்தில் நம்மைவிட்டு மறைந்து விட்டார். எனினும் நம்மாழ்வார் என்பது ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சி, அம்மரபின் நெருப்பை அணைக்காமல் பிறருக்கு கொண்டு செல்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

ஏன் அதனை நெருப்பு என்று குறிப்பிடுகிறேன் என்றால், அது அவிக்கக்கூடியது. ஆனால் பசுமைப்புரட்சியின் சதிகாரர்களை அம்பலப்படுத்தி அவர் கூறியதை யாரும் மறந்து விடக்கூடாது, அவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும், எந்தப் பூச்சிக்கொல்லிக்காகக் கடன் வாங்கி, அதனால் மனம் உடைந்து அதே பூச்சிக்கொல்லியை அருந்தி, தான் வேலை செய்த மண்ணில் விழுந்து, கைகளால் மண்ணைக்கட்டிக் பிடித்து தற்கொலை செய்தார்களோ, அந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும், அதையே நம்மாழ்வாரின் நெருப்பு என்கிறேன். இந்த நெருப்பை நிறுத்தி விட்டால் நம்மாழ்வார் இல்லை, இந்த அரசியல் நெருப்பை அறியாமல் அவரை படிமக்குறியீடாக மாற்றுவதை எதிர்ப்போம். அவர் சாமியாரோ, அன்பானவரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை?

2012 முதல் நம்மாழ்வாரின் பணி உக்கிரமடைந்தது, பாலாறு அழிவை மக்களுக்கு செய்தியாக்கி நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். பனை காக்க நடந்தார், கெயில் கேஸ்க்கு எதிராக விவசாயிகளோடு கைகோர்த்தார், அணுஉலைகளை எதிர்த்தார், விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும் மீத்தேன் வாயுத் திட்டதை எதிர்த்தார். முதலில் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்தவர், இது கதைக்குதவாது என்று நேரடியாக மக்களைச் சந்தித்து வீரவுரையாற்றினார். உக்கிரமான போர் என்றே சொல்ல வேண்டும், அவர் இறப்பதற்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை கடுமையாக எதித்துப் பேசினார். இறுதியாக அவரின் செய்தியாக மீத்தேன் வாயுக்காக விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த கற்களையும், வேலிக் கல்லையும், பிரித்துப் போட ஆணையிட்டார், விவசாயிகள் அக்கல்லைப் பிடுங்கி வீசினார். இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர், போரைத் தொடர்ந்து நடத்துவோம், நம்மாழ்வாரை, உயிர்ப்பிப்போம்.

ஆர். ஆர். சீனிவாசன், திரை செயற்பாட்டாளர்; சூழலியல் செயற்பாட்டாளர்.

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்

மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முகிலம் மீது கரூர் மாவட்டத்தில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செயல்பாட்டாளர் முகிலன் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,

“கரூர் மாவட்டம் வாங்கலில் புதிய மணல்குவாரி அமைப்பற்கான அனுமதியை அரசு கொடுத்துள்ளது. அது சம்மந்தமாக வாங்கல் பொது மக்கள், விவசாய சங்கங்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் இனணந்து வாங்கல் புதுவாங்காலம்மன் திருமண மண்டபத்தில் மணல்குவாரி பற்றி கலந்தாலோசனை கூட்டம் நடந்த ஏற்பாடு செய்து செவ்வாய்கிழமை மாலை சுமார் 05.00 மணிக்கு தொடங்கியது. ..

கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்து தடுக்க வேண்டும் என மண்டபத்திற்குள் வந்த மணல் மாஃபியா கொள்ளையர்களின் அடியாட்கள் சுமார் 20 பேர் (ஏற்கனவே கடம்பன்குறிச்சியில் மக்களை கல்வீசி தாக்கிய அதே கும்பல்) பல்வேறு வகையில் ரகளையில் ஈடுபட்டனர். ரவுடிகள் 20 பேராக இருந்தாலும் கூட்டத்திற்கு வந்த 250 பேர் தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என அமைதியாக இருக்க, காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் அங்கு வந்து அரங்க கூட்டமாக இருந்தாலும் முறையாக அனுமதி வாங்கி கூட்டம் நடத்துங்கள் என்று கூறவே காவல்துறையின் அனுமதி பெற்று வந்து கூட்டத்தை நடத்தி முடித்தோம்…

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்களை திரட்டி இன்று மாலை வாங்கலில் புதிய மணல்குவாரி அமைக்காதே! – என இன்று 13-12-2016 செவ்வாய் கலந்தாய்வுக் கூட்டம் இரவு சுமார் 07.15 மணியளவில் முடித்து, TN66B 1139 எண் கொண்ட FORD காரில் வாங்கலில் இருந்து கிளம்பினோம். காரை 69 வயதான அய்யா.கே ஆர் எஸ் மணி மணி அவர்கள் ஓட்டி வந்தார்.

நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரத்தில் மாரியம்மன் கோவில் வீதி வழியாக கரூர் நோக்கி வந்த எங்களை (முகிலன், தமிழ்க்கவி,முருகேசன், K.R.S.மணி, சிறு குழந்தைகள் கிஷோர், தனுசு, ஹரிதாஸ்ரீ ஆகியோரை) கும்மிருட்டில் ஆள் அரவம் இல்லாத பகுதியில் மணல் லாரியை காருக்கு முன்னாள மெதுவாக போக வைத்து, காரை வேகமாக செலுத்த முடியாமல் செய்தனர். மெதுவாக சென்ற காரின் முன்பாக மணல்கொள்ளையர்களின் அடியாட்கள் பைக்குகளை காரின் குறுக்கே போட்டு வழிமறித்து, காரை நிறுத்தினர்.

நாங்கள் வந்த காரை வழிமறித்து, காரின் கதவை திறக்க முயற்சித்து முடியாததால் அனைத்து ரவ்டிகளும் காரை தங்கள் பலம் கொண்ட மட்டும் கைகளால் ஓங்கி குத்தினர். அய்யா மணி அவர்கள் காரை விட்டு இறங்கியவுடன் அவரது கையை பிடித்து திருப்பி முறுக்கவே , அவர் விட்டுவிடு இல்லைஎன்றால் நடப்பதே வேறு எனக் கூறவும் அவரது கையை விட்டு விட்டனர். காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த என்னை பித்து இழுக்க காரை ஓங்கி ஓங்கி கைகளால் அடித்தனர். காரின் கதவை வேகமாக குத்தி இழுக்கவே கார் கதவு திறந்து கொண்டது.

காரில் இருந்த என்னை வெளியே இழுத்து தாக்க முயற்சித்தும் நான் வெளியே வராததால் எனது சட்டை பனியனை பிடித்து வெறியோடு இழுத்து அதை கிழித்து எறிந்தனர். பின்பு எனது கழுத்தை நெறித்தும், வெளியில் இருந்து காலால் எட்டி காருக்குள் எட்டி உதைத்தும், கைகளால் எனது மார்பை குத்தியும் கொலைவெறியோடு உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக் கூறி தாக்குதல் செய்தனர்” என தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் தெரியவில்லை என்றும் அவர்கள் ஆறு பைக்குகளில் வந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் முகிலன்.

“அடியாட்களின் குண்டர்கள் எங்கள் காரை சுற்றி சுற்றி வந்து தாக்குதல் நடத்தி போது காரில் இருந்த மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும், தோழர். தமிழ்க்கவி போன்றவர்கள் போட்ட அபாய கூக்குரலைக் கேட்டு, பொதுமக்கள் ஓடிவருவதைப் பார்த்த மணல்கொள்ளையர்களின் அடியாட்களை தப்பி ஓடினர்..

பின்பு நாங்கள் வந்த காரை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திருப்பினோம். நாங்கள் 20 பேர் கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்று ஆட்சியரை பார்க்க வேண்டும் சொன்னதற்க்கு, ஆட்சியர் இங்கு இல்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் வாங்கல் சென்று அங்கு உங்களுக்காக காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் காத்துக் கொண்டு உள்ளனர் . அவர்களிடம் புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளார் எனக் கூறவே, நான் (தோழர் முகிலன்) வாங்கலில் காவல்துறையினர் அருகாமையிலேதான் எங்களை கொலைவெறியோடு தாக்கினர் . எனவே வாங்கல் செல்ல மாட்டோம், எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் வருகிறாரோ அப்போது வரை இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் காத்துள்ளோம் என்று சொன்னோம்.

சுமார் 20 நிமிடத்தில் கரூர் கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர், கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டில் உள்ள அலுவலகம் சென்றனர்.

சில நிமடங்களில் இங்கு(மாவட்ட ஆட்சியர் வீட்டில்) இல்லை வெளியே உள்ளார் என சொல்லப்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அவரது வீட்டில் இருந்து கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர் ஆகியோருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து எங்களைப் பார்த்து வந்தார்.அப்போது நேரம் சுமார் 08.00 மணி இருக்கும். அவர் எங்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டார்.

அவரிடம் இரவு வாங்கலில் நடந்தவற்றை தெரிவித்து, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு ஏவல்துறையாக இருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி,..

  1. அய்யா நல்லக்கண்ணு 10-07-2016 அன்று கடமன்குறிச்சி மணல்குவாரியை பார்வையிட்ட போது அவரை குவாரிக்குள் போகக் கூடாது எனக் கூறி தகராறு செய்தவர்கள் …

  2. 26.10.2016 அன்று கடம்பன்குறிச்சி- தோட்டக்குறிச்சி வரை மணல்குவாரியை பார்வையிட்ட அய்யா.நெடுமாறன் -தோழர் .மகேந்திரன் உடன் வந்தவர்களை தாக்கியவர்கள்

  3. புகலூரில் அய்யா.விசுவநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்று மணல்குவாரியை எதிர்த்து போராடாதே என கொலைமிரட்டல் விடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல்,கடம்பன்குறிச்சி மனோ ஆகியோர் மீது

நடவடிக்கை என்பது இதுவரை காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தால் எதுவும் எடுக்கப்படவில்லை . கரூர்மாவட்டம் முழுவதும் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக உள்ளது. காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு கைகட்டி சேவகம் செய்து வருகிறது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் எனக் குறிப்பிட, கரூர்மாவட்ட ஆட்சியர் “கட்டாயம் நீங்கள் இப்போது புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். அவரிடம் “இதுவரை உங்களிடம் கொடுத்த எந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால்தான் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக கரூர் மாவட்டம் உள்ளது என்றேன். அதற்க்கு அவர் கடந்த 3 மாதங்களாக எவ்வளவு மனஉளைச்சலில் நான் உள்ளேன் தெரியுமா? எனக் கூறிக் கொண்டு புகாரை கொடுங்கள் என்றார். மாவட்ட செயல்துறை நடுவர் என்ற முறையில் உங்களிடம்தான் புகார் தருகிறேன்.அதன் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றோம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேப்பர் வாங்கி மாவட்ட செயல்துறை நடுவராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இருக்கும் திரு.கோவிந்தராசு அவர்களிடம் புகார் மனுவை எழுதி கொடுத்து வந்தோம்” என தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு பெருமழை; இந்த ஆண்டு பெரும் புயல்!

தயாளன்

நிறைய பேர் மழை பொழிவது நல்லதுதான் என்ற விதத்தில் பதிவிடுகிறார்கள். ஒருவகையில் மழை வருவது நல்லதுதான். ஆனால், வரப்போவது சென்ற ஆண்டு மழையைப் போல நின்று அசராமல் பெய்யக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வரக்கூடிய மழை இல்லை. மணிக்கு 100 கிமீட்டர் வேகத்தில் வரவிருக்கும் காற்றும் நீர் நிரம்பிய புயல் மேகங்களும். “தானே” புயலின் போது கடலூரில் வலுவான பலா மரங்களே தூக்கி வீசப்பட்டன. இவ்வளவுக்கும் அவை சமவெளிகளில் இருப்பவை. சென்னை முழுவதும் நடப்பட்டிருக்கும் தூங்கு மூஞ்சி மரங்கள் வேர்ப்பிடிப்பு அற்றவை. நிறைய மரங்கள் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. 15 கிமீட்டர் வேகத்துக்குக் கூட அவை தாங்காது. 100 கிமீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் போது சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படக் கூடும்.

இன்னும் மழைக்கும், புயலுக்கும் என்ன விதமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற புரிதலுடன் அரசும் நிர்வாகமும் இயங்குவதாக சொல்ல முடியாது. விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதே மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடும். சென்ற ஆண்டு மழையின் போது மரங்கள் பெரும்பாலும் விழவில்லை. 1994 புயலின் போது வண்டலூர் zooஇல் இருந்த மரங்கள் அனைத்தும் விழுந்ததை பதிவு செய்திருக்கிறார் வெதர்மேன். 1994ல் காற்றின் வேகம் 134 கிமீ. வர்தா 100கிமீ என்று சொல்கிறார். 100 கிமீ வேகத்தில் காற்று அடிப்பது கடலூருக்கும் நாகப்பட்டிணத்திற்கும் பழக்கமானதாக இருக்கலாம். ஆனால், சென்னை போன்ற காங்கிரீட் காடுகளில் இது மிகவும் தீவிரமானது. மேலும் நடா புயலைப் போல வர்தா வறண்ட புயல் இல்லை. வர்தாவின் காற்றின் மேலடுக்கில் -90 செல்சியஸ் வரை ஈரப்பத இருப்பதாகவும் சொல்கிறார். நீர் நிரம்பிய மழை மேகங்களும் 100 கிமீட்டருக்கும் மேலான வேகத்தில் வீசும் காற்றும் ஏற்படுத்தும் சேதமும் அதன் இலக்கும் வேறாக இருக்கும். இயற்கை இடர் தராதுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும் நமது அலட்சியமும், நிர்வாகமும்தான் உண்மையான பேரிடர். இயற்கையிடமிருந்து, மேலும் ஒரு பாடத்தைக் கற்கவிருக்கிறோம். எண்ணூரில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் 10. அதிகபட்ச எச்சரிக்கை எண்ணே 11தான்.

சென்னையைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆறுதல் மின்சார இணைப்புகள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருக்கின்றன. எனவே மின்சாரத் துண்டிப்பு அதிக நேரம் இருக்காது.

சென்ற ஆண்டு நீர். இந்த ஆண்டு காற்று.

தயாளன், ஊடகவியலாளர்.