ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் அறிவியல் படங்களில்கூட சிலுவைகளைக் காட்ட ஹாலிவுட் இயக்குநர்கள் தவறுவதில்லை. அம்மன் படங்களுக்கு இணையாக பைபிளை முன்னிறுத்தியும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ‘சினிமா அறிவியலின்’ உச்சம் பெற்ற ஹாலிவுட்டில் மூடநம்பிக்கை, மத பரப்புரை, பேய் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களே அதிகமாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, ஆணாதிக்கக் கூறுகளை சத்தமில்லாமல் திணிக்கும் படங்களும் அதிகம். உதாரணத்துக்கு உறவு மீறல் சித்தரிப்புகள் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை ஆணாதிக்க விசம் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

2017-ஆம் ஆண்டில் வெளியான ‘டூலிப் ஃபீவர்’ (Tulip fever) என்ற ஆங்கிலப் படம், இங்கிலாந்தில் தயாரானது. 17-ஆம் நூற்றாண்டில் ஆம்ஸ்டர்டாமில் நடப்பதாக எழுதப்பட்ட டெபோரா மொகாச் -இன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

கதை இதுதான். ஆனாதைகள் இல்லத்தில் வளரும் சோபியா, தனது சகோதரிகள் நியூயார்க்கில் உள்ள உறவினரிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக தன்னைவிட வயதில் மூத்த, மனைவியை இழந்த கார்னீலிசை திருமணம் செய்துகொள்கிறாள்.

சோபியாவை குழந்தை பெற்றுத்தரப்போகும் எந்திரமாகப் பார்க்கிறார் கார்னீலிஸ். சோபியாவுக்கு இந்த அன்பில்லாத எந்திரத்தனமான வாழ்க்கை கசக்கிறது. இன்னதென்று சொல்ல முடியாத ஒன்றை இழந்துவிட்ட சோகத்தோடு சோபியா நாட்களை கடத்துகிறாள். அப்போது, இந்தப் பொருந்தா ஜோடியை ஓவியமாக வரைய இளம் ஓவியர் ஜான் அந்த வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்.

முதல் பார்வையிலேயே சோபியாவும் ஜானும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குள் கிளர்ந்தெழும் காதல் உணர்வை கார்னீலிசுக்குத் தெரியாமல் வளர்க்கிறார்கள். அப்போது டூலிப் மலர்கள் மீதான மோகம் நாடெங்கும் பரவுகிறது. புனித உர்சுலா தேவாலயத்தில் உள்ள சகோதரிகள் டூலிப் மலர்களை வளர்ப்பதாக கேள்விப்பட்டு, அதைத் திருடி விற்று சோபியாவுடன் நியூயார்க் செல்ல திட்டமிடுகிறான் ஜான்.

ஒரு கட்டத்தில் சோபியாவின் காதல் விவகாரம் கார்னீலியசுக்குத் தெரிய வருகிறது. அவர் அந்த இடத்தில் புனிதராக மாறி, அவர்களை மன்னிக்கிறான். சோபியா, கார்னீலியசுக்கு ‘துரோகம்’ செய்துவிட்டதாக எண்ணி வருந்தி, ஜானுக்கும் தெரியாமல் எங்கோ சென்று விடுகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழித்து, ஜான் வரைந்த சோபியாவின் ஓவியத்தைப் பார்த்து புனித உர்சுலா தேவாலயத்திலிருந்து ஒரு சகோதரி, ஜானிடம் தேவாலயத்தில் ஓவியம் வரையும்படி பணிக்கிறார். தேவாலயத்துக்கு வரும் ஜான், அங்கே சகோதரியாக உள்ள சோபியாவைப் பார்க்கிறான். இருவரும் மெல்லிய புன்சிரிப்புடம் கடந்துபோவதாக படம் முடிக்கப்படுகிறது.

இதை எழுதியவர் ஒரு பெண். ஆனால் ஆணாதிக்க மதம் பரப்பும் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கிறது அவருடைய எழுத்து. சோபியாவின் வறுமையை பயன்படுத்தி, தன்னைவிட வயதில் இளையவள் என்றபோதும், அவளை ஒரு உடலாகவே பார்க்கிற கார்னீலியஸ் மீது எழுத்தாளர் எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல், அவரை புனித ‘ஏசு’வாக்கி விடுகிறார்.

கிடைக்காத அன்புக்காக ஏங்கி, தன் காதலனுடன் வாழ முயலும் சோபியாவை, ‘நீதி’ சொல்லி, கணவனுக்கு துரோகம் செய்கிறவளாகவும் அந்த துரோகத்துக்குப் பரிகாரமாக அவளை தேவாலயத்தில் சகோதரியாகவும் காட்டுவதன் மூலம், உறவு மீறலில் ஈடுபடும் பெண்களை ‘தக்க பாடத்தை’ புகட்டுகிறார் இதை எழுதியவர்.

ஒரு பணக்கார கிழவனின் உடல் மீதான இச்சையை, வெறித்தனத்தை புனிதப்படுத்திவிட்ட எழுத்தாளர், இளம் வயதில் இருக்கும் இயற்கையான உணர்வுகளை வெளிப்படும் கதாநாயகர்களை கூண்டில் ஏற்றி குற்றவாளிகள் போல நிற்க வைக்கிறார். இந்தப் பிற்போக்குத்தனத்தை அப்படியே திரையில் காட்டியிருக்கிறது ‘டூலிப் ஃபீவர்’.

ஆண்களுக்கான உணர்வுகளை உயர்ந்த இடத்தில் வைக்கும் இத்தகைய சினிமாக்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களை மோசமானவர்களாகவும் காமவெறி பிடித்தவர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு இளம் சிறுமிக்கு வயதான ஒரு கிழவனுக்குமான பால் உறவை புனிதப்படுத்தி ‘லோலிதா’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்க முடியும். ஆனால், தன்னைவிட 10 வயது இளையவனை காதலிப்பதாக சினிமா எடுத்தாலும் அதில் அந்தப் பெண்கள் சித்தரிக்கப்படும் விதமும் அதில் இவர்கள் சொல்லும் நீதியும் மேற்கத்திய படங்களில் எத்தகைய ஆணாதிக்க சூழல் நிலவுகிறது என்பதை பறைசாற்றும்.

பிரைம் (Prime- 2005) என்றொரு ஹாலிவுட் படம், உமா த்ரூமன் நடித்தது. இந்தப் படத்தில் உமா த்ரூமன் விவகரத்தான 30 வயதுகளில் உள்ள பெண். இவரும் தன்னைவிட 13 வருடங்கள் இளையவரான பிரையான் க்ரீன்பர்க்கும் காதல் வயப்படுகிறார்கள். உமா த்ரூமன் ஆரம்பத்தில் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். பிரையான் தன்னுடைய வயதை சற்றே உயர்த்தி சொல்லி, சம்மதிக்க வைக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.

உமாவுக்கு மனநல ஆலோசனை சொல்லும் மெரில் ஸ்டீரீப் தன் மகன் தான் உமா காதலிக்கும் நபர் என்பதை அறிந்துகொண்டு, அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். யூத மத பின்னணியில் உள்ள பிரையானின் குடும்பம் மிக மிகத் தயங்கி உமாவை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனாலும் தீராத சமூகம் ஏற்படுத்திய குற்றவுணர்வின் காரணமாக, இணக்கமான உறவு என்றபோதும் தன் காதலனைவிட்டுப் பிரிகிறார் உமா.

சில ஆண்டுகள் கழித்து, ஒரு உணவகத்தில் எதேச்சையாக பிரையானை சந்திக்கிறார் உமா. இருவரும் புன்னகைத்துக் கொள்வதாக படம் முடிகிறது.

இந்த வயது வித்தியாசம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்திருந்தால் அந்தக் கதையின் போக்கு வேறுமாதிரியாக இருந்திருக்கும்; முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். காதலர்கள் பிரிவதற்கான பிரச்சினையும் வேறாக இருந்திருக்கும்.

ஆனால், பெண்ணுக்கு வயது வித்தியாசம் ஒரு பெரிய தடை. மேற்கத்திய சமூகங்களிலும் இந்த வயது வித்தியாசம் மிகப்பெரிய விலக்கத்துக்கு உள்ளானதாக இருக்கிறது. காத்ரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்த ’த ரீபாண்ட்’ (The rebound- 2009) என்றொரு படம். இதே கதைபோன்றதொரு கதைக்கருவுடன் இதே போன்றதொரு முடிவை சொன்ன படம்.

இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகிகள் முறையான மணவிலக்கு பெற்றவர்கள். அவர்கள் காதலிக்கும் நபர்கள்கூட வேறு உறவுகளில் பிணைக்கப்படாதவர்கள். ஆனால் வயது வித்தியாசம் என்ற ‘தடை’ ஒன்றே இவர்கள் காதலை விட்டுத்தர போதுமானதாக இந்தப் படங்கள் வலியுறுத்துகின்றன, கிட்டத்தட்ட பழமைவாதிகளின் குரலில் இந்தப் படங்கள் பேசுகின்றன.

வெகுஜென படங்களை மட்டுமே இங்கே உதாரணத்துக்கு எடுத்திருக்கிறேன். இதுவே ‘உலகப் படங்களில்’ எனில் அத்தனை பிற்போக்குத்தனமானவையாக சித்தரிப்புகள் உள்ளன. ஒரு பெண்ணுக்குள்ள தேவை, ஆணுடனான பாலுறவு மட்டுமே என்பதே அந்தப் படங்களில் பொதுவான கதைக்கரு. மட்டுமிஞ்சிய பாலுறவு காட்சிகள் அந்தப் படங்களை ‘உலகப் படங்கள்’ என சொல்ல போதுமானவையாக உள்ளன. அவற்றின் பெயர் குறிப்பிடுவதுகூட ஒருவகையில் பெண்களை இழிவுபடுத்துவதாகவே கருதுகிறேன்.

தாராளவாதத்தை முதன்மைப்படுத்தும் மேற்குலக படங்களே இப்படியென்றால், அவற்றை பிரதியெடுத்து இயங்கும் இந்தியப் படங்கள், குறிப்பாக தமிழ் சினிமாக்கள் பெண்களின் உறவு சிக்கல்களை காட்சிப்படுத்தும் விதம் பிற்போக்குத்தனத்தை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘புரட்சி’கரமான படமாகக் கருதப்படும் ‘மறுபடியும்’ படத்தின் நாயகி, தன் கணவனின் துரோகத்துக்காக அவரை விவாகரத்து செய்கிறார். புரட்சி அந்த அளவில் மட்டும் என நினைத்த இயக்குநர், தனக்கு ஆதரவாக உள்ள நண்பரின் காதலை நாயகி நிராகரிப்பதாக முடிக்கிறார். விவகரத்தானாலும் தன் முன்னாள் மனைவி கடைசி வரை இன்னொருவனின் கைப்படாதவளாகவே வாழ்நாளை கழிக்க வேண்டும் என்கிற ‘ஆழமான’ கருத்தை விதைத்து விட்டுச் செல்கிறது இந்தப் படம்.

‘நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துகள்’…

அதுபோல, ராதிகா நடிப்பில் வெளியான டெலிஃபிலிமான ‘சிறகுகள்’ (1999) லண்டனில் அப்பாவியான ஒரு பெண், தன் கணவனின் உறவு மீறலால் பாதிக்கப்பட்டு அவரை விவாகரத்து செய்வதை பேசியது. இதிலும்கூட காதலோடு வருபவரை நிராகரிப்பதாகவே கதை முடிக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்வில் ராதிகா இருமுறை விவாகரத்து செய்து, மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனாலும், ‘முற்போக்கு’ போனியாகாது என்கிற கணக்கில் காலம் முழுக்க கண்ணீரிலே பிள்ளைகளுக்கு குண்டி கழுவும் ஆயாவாகவே அந்தப் பெண் சாக வேண்டும் என கதையை முடிக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராதிகா.

ஆக மொத்தத்தில் பெண் உணர்வற்ற உடலாக, ஆண்களின் உடமையாக பிற்போக்கு சமூகம் எப்படி கட்டமைத்திருக்கிறதோ அதை அப்படியே பிரதி எடுக்கின்றன இந்த சினிமாக்கள். புரட்சி போல தெரியும் ஆனால் புரட்சியல்ல. சீர்திருத்தம்போல தெரியும் ஆனால் சீர்திருத்தம் அல்ல. ஆணுக்குள்ள அத்தனை உரிமையும் குறைந்தபட்ச உரிமைகளையாவது புரிந்துகொள்வது ஒரு திரைக்கலைஞருக்கு உள்ள நேர்மையான சமூக அக்கறையாக இருக்க முடியும். தனிப்பட்ட நபர்களை உணர்வளிக்க முடியாது. ஆனால், பொது சமூகமாக இந்த ஆணாதிக்கக் கூறுகளிலிருந்து விடுபடும் வழியைக் கண்டடைந்தால் பெண்ணை உணர்வுள்ளவளாகக் கருதும் படங்கள் வெளிவரலாம்!

நன்றி: திரையாள்.

அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி

சில நாட்களுக்கு முன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கல்வி ஆசிரியர், குறிப்பாக மாற்று திரைப்பட கலாச்சாரத்திற்காக அயராமல் செயல்புரிந்த அருண்மொழி அவர்கள் திடீரென்று நம்மிடமிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டார். நாற்பது ஆண்டுகால நண்பர், என்னைவிட நான்கு வயது இளையவர் என்பதால் அந்த செய்தியை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானவர்களில் நானும் ஒருவன். உடனே அந்த துயர்மிகு செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். யாரிடம் பேசி உள்ளிருக்கும் குமுறலையும், கோபத்தையும், சோகத்தையும் பகிர்ந்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அடுத்தநாள் அருண்மொழியுடன் இடைவிடாத தொடர்பில் இருந்த நீண்டகால நண்பர் இயக்குநர் சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் பேசும் போது என் குரல் தழுதழுத்தது. ஆனால் முழுமையாக அழமுடியவில்லை. அவரை நேரில் சந்திருந்தால் நிச்சயமாக அழுதிருப்பேன். ஆகையால் நெஞ்சிலிருக்கும் வலி அப்படியே உறைந்து நிற்கிறது.

சுவர்ணவேல் அவர்களிடம் பேசிய பிறகு முகநூலை திறந்து பார்த்தால் அதில் அருண்மொழியைப் பற்றி எண்ணற்ற அஞ்சலி குறிப்புகளையும் இரங்கல் செய்திகளும் குவிந்திருந்தன. அதை பார்த்ததும் என் குழுறலும் கோபமும் ஓரளவுக்கு அடங்கியது என்றால் அந்த குறிப்புகள் என்னை ஒரு பெரும் வியப்பிலும் ஆழ்த்தியது. காரணம் ருத்ரைய்யா அவர்கள் மறைந்தபோது இந்த அளவிற்கு அவருக்கு அஞ்சலி குறிப்புகளோ அல்லது இப்படியான அஞ்சலி கூட்டங்களோ நடக்கவில்லை.

1987ல் ஜான் ஏப்ரஹாம் இறந்த போது ஞானி, நாகர்ஜூனன், பன்னீர்செல்வம் மற்றும் நானும் சேர்ந்து ஒரு இரங்கல் கூட்டத்தை சென்னையில் கூட்டியப்போது அதற்கு எங்களைத் தவிர இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஏன்? அன்று எங்களிடம் முகநூல் வாட்ஸப் கருவிகள் இல்லை என்பது நிஜம் என்றாலும் அன்றைய தமிழ் கலாச்சாரத்தின் நிலமை அது. மாறாக கேரளாவில் ஒடிஸா என்ற அமைப்பு அவருக்காக பெரும் கூட்டம் ஒன்றை கூட்டி அவர் பங்களிப்பை கொண்டாடியது. ருத்ரைய்யா இந்த முகநூல் வாட்ஸப் காலத்தில்தான் காலமானார் என்றாலும் அவருக்கும் இன்று அருண்மொழிக்கு கிடைத்துள்ள பரவலான ஆதரவு கிடைக்கவில்லை? ஏன்?

இறுதிவரை ருத்ரைய்யா அவர்கள் ஒரு தனித்தீவாகவே இயங்கினார். நம் நினைவு வந்தால் தொலைபேசியில் அழைப்பார் இல்லையேன்றால் அவரைப் பார்த்து நாட்கள் ஆகிவிட்டனவே அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய நாம்தான் அவர் இருக்கும் இடத்தை தேடி செல்லவேண்டும். எந்த சமூக நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ள மாட்டார். அவரும் இறுதிவரை நிறைய நடந்தார். ஆனால் பெரும்பாலும் தனியாகவே.

இதற்கு மாறாக தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை போல் ஒரு நாடகம் பார்க்க சென்றாலோ அல்லது ஒரு ஆவணபடத்தை பார்க்க சென்றாலோ அல்லது பல வெளிநாட்டு கலாச்சார துறைகளில் நடக்கும் திரைப்பட கூட்டங்களுக்கு சென்றாலோ, அல்லது திரைப்பட சோசைட்டிக்கு சென்றாலோ அல்லது திரைப்பட விழாவிற்கோ அல்லது புத்தகத்திருவிழாவிற்கு சென்றாலோ அங்கெல்லாம் அருண்மொழி இருப்பார். அதனால் அவரை நேருக்கு நேராக பார்த்திருக்காதவர்கள் நம் போன்றவர்களிடையே மிகவும் குறைவு என்பதே நிஜம்.

குறிப்பாக பல நண்பர்களின் முயற்சிகளையும் ஆர்வமுள்ள இளைஞர்களையும் அரவணைத்து ஆதரித்து ஊக்குவிக்க அவர் என்றுமே தயங்கியதில்லை. நம் படைப்புகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் நம் முயற்சிகளை பாராட்டுவார். அவருடைய நட்பு வட்டம் இதனாலேயே மிகவும் அகலமானது.

அருண்மொழி தனது வாழ்க்கையில் எத்தனையோ முட்டுக்கட்டைகளை கடந்து வந்தார். ஆனால் ஏதாவது சோகத்தையோ அல்லது கோபத்தையோ அல்லது வேறு எந்தவிதமான அறிகுறியோ அவர் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. ஒரு இடத்தில் வேலை போய்விட்டது என்றால் அதைப்பற்றி கவலை படாமல் வேறு ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டு அடுத்த வேலை ஒன்றில் இறங்கிவிடுவார். அவர் முடிதான் நரைக்க துவங்கியதே தவிர நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எப்படி இருந்தாரோ அப்படிதான் அவர் இறுதி வரை இருந்தார்.

1970களை லட்சியவாதிகளின் காலம் என்று சொல்லலாம். அந்த காலக்கட்டத்தில் கல்லூரியிலிருந்து தேரியவர்கள் கலாச்சார முதலீடு அதிகம் உள்ள குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்றால் மேலை நாடுகளுக்கு பறந்துவிடுவார்கள். கொஞ்சம் வசதியற்ற பின்னணியிலிருந்து வந்தால் அவர்கள் துபாய் போன்ற நாடுகளிலோ அல்லது அரசு துறையில் ஏதாவது ஒரு பணியில் சேர்ந்துவிடுவார்கள். அன்று சென்னையில் இருந்த தனியார் துறையோ மிகவும் சிறியது. அந்த நிறுவனங்களை கைவிட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவற்றில் பணியில் சேரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு சாதி அல்லது மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். இந்த சூழலுக்கு எதிராக இரண்டு விதமான இளைஞர்கள் இருந்தார்கள். இவர்கள் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் வெளியே இயங்க முயன்றார்கள். ஆகையால் இந்த இரண்டு தரப்பினர்கள்தான் அந்த காலத்தின் லட்சியவாதிகள்.

இவற்றில் ஒரு தரப்பு அடிப்படை சமூக மாற்றமே புதியதோர் விடிவை உருவாக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் தீவிரமாக தங்களை இடது சாரி இயக்கங்களில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். இவர்களில் மிகவும் துடிப்பும் அவசரமும் இருந்தவர்கள் தங்களை ஆயுத போராட்டத்தை முன்வைத்த நக்ஸல்பாரி இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். அவர்களில் சிலர் என்கவுண்டர் கொலைகளின் மூலம் களையெடுக்கப்பட்டனர்.

இரண்டாவது தரப்பினர் தங்களை கலை உலகத்தில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
கலை உலகம் என்று சொல்லும்போது அன்று நான்கு கலைகளில்தான் இவர்களின் இருப்புகளுக்கு வழி இருந்தது. அவை எழுத்து கலை, நாடக கலை, ஓவிய கலை மற்றும் சினிமா கலை. ஆனால் முதல் மூன்று கலைகளில் ஏதாவது ஒரு பணியிலிருந்துக்கொண்டு படைப்புகளை உருவாக்கமுடியும். மாறாக சினிமா கலைக்கு இரவு பகல் என்று பாராமல் நமது முழுநேரத்தையும் தீவிரமாக செலவிடுவதை தவிர வேறு வழியில்லை. இப்படிதான் அருண்மொழி என்ற லட்சியவாதி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ருத்ரைய்யா அவர்கள் அவள் அப்படித்தான் எடுக்கப்போகிறோர் என்று தெரிந்தவுடன் அரசு தொலைக்காட்சியில் இருந்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு அவர் குழுவில் ஐக்கியமாகிவிட்டார். கிராமத்து அத்தியாயம் என்ற ருத்ரைய்யாவின் இரண்டாவது படம் தோல்வியடைந்து அதற்கு பிறகு அவருக்கு படங்கள் எடுப்பது சாத்தியமற்ற ஒன்றாக ஆகிவிட்டாலும் கே. ஹரிஹரன் என்ற இயக்குநருடன் இணைந்து ஏழாவது மனிதன் என்ற படத்தின் துணை இயக்குநராகவும் துணை வசனகர்த்தாகவும் பணியாற்றினார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தாலும் அது வியாபார உலகில் வெற்றிப் பெறவில்லை. இருந்தாலும் பாளை என். சண்முகம் என்ற தயாரிப்பாளருடன் அந்த படத்தில் உருவான நட்பின் வழியாக அருண்மொழி காணிநிலம், ஏர்முனை போன்ற படங்களை உருவாக்கினார்.

இதற்கு பிறகு அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை யாழினி முனிசாமி அவர்கள் அருண்மொழியுடன் எடுத்த பேட்டி மிகவும் சீராக பட்டியலிட்டு விவரித்துள்ளது. இந்தப் பேட்டியை காஞ்சனை பிலிம் சொசைட்டி முகநூலில் நவம்பர் 10 அன்று பதிவு செய்துள்ளது. அந்த கோப்பை இதனுடன் இணைத்திருக்கிறேன். எல்லோரும் அதை நிச்சயம் வாசிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அவள் அப்படித்தான் என்ற படத்திற்கு பிறகு கமலஹாசன், சுஜாதா மற்றும் சந்திரஹாசன் அவர்கள் நடித்த ராஜா என்னை மன்னித்துவிடு என்ற படத்தை ருத்ரைய்யா இயக்க துவங்கினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் குழுவில் உதவி இயக்குநராக நான் இணைந்தேன். அந்த தருணத்தில்தான் எனக்கும் அருண்மொழிக்கும் ஒரு அறிமுகம் ஏற்பட்டது. அந்த படத்தில் பல சிக்கல்கள் ஏற்பட அதை ஒதுக்கிவிட்டு ருத்ரைய்யா அவர்கள் கிராமத்து அத்தியாயம் என்ற படத்தை கடகடவென்று உருவாக்க துவங்கினார். அதனுடைய பெரும்பாலான காட்சிகள் ஆத்தூர் அருகே உள்ள தம்பம்பட்டியிலும் இறுதிகாட்சிகள் கொல்லி மலையிலும் உருவாக்கப்பட்டன. அந்த குழுவினருடன் கழித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக அருண்மொழி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். பயங்கர உழைப்பாளி. சோர்வு என்பதை அவர் முகத்தில் நான் என்றும் கண்டதில்லை.

எத்தனையோ ஆண்டுகள் கழித்து பால கைலாசம் அவர்கள் புதுயுகம் சானலை புதிய தலைமுறை என்ற நிறுவனத்தின் கீழ் துவங்கி அதன் தலைமை இயக்குநராக அதை நிர்வகித்தப்போது மறுபடியும் நானும் அருண்மொழியும் இணைந்து தமிழ் திரைப்பட உலகைப் பற்றி ஒரு தொடரை உருவாக்குவதில் ஈடுபட்டோம். ஆனால் பால கைலாசமிடமிருந்த புதிய திட்டங்களையெல்லாம் கறந்துவிட்ட பிறகு அந்த நிர்வாகம் அவரையும் அவர் தேர்வு செய்து பணியில் அமர்த்தியிருந்த எல்லோரையும் வெளியேற்றியது.

இருந்தாலும் இதனால் சிறிது கூட மனம் தளராமல் உடனே தனது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு பள்ளியை துவங்கி அருண்மொழி அதை முன்னெடுத்து செல்ல பம்பரமாக சுழன்றார். இதற்கிடையில் நிறைய ஆளுமைகளின் பேட்டிகளை, எனது உள்பட, அவர் காமிராவில் பதிவு செய்தார். இவற்றையெல்லாம் அருண்மொழியின் “நிறைவற்ற படைப்பாக” தொகுத்து வெளியிடும் படி இயக்குநர் கே. ஹரிஹரன் பலமுறை கூறினாலும் அதை அருண்மொழி செய்யவில்லை. அவருடைய மாணவர்கள்தான் அதை சீரான தொகுப்புகளாக கொண்டுவரவேண்டும்.

கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி குறிப்பு எழுதவேண்டிய கடமையே. அந்த வரிசையில் இது எனது ஐந்தாவது அஞ்சலி குறிப்பு.

அருண்மொழி சிரித்தால் அவருக்கு வாய்விட்டுதான் சிரிக்க தெரியும். அதை நினைக்கும்போது என் நெஞ்சு வலி கொஞ்சம் குறைகிறது. வாழ்க அவரது புகழ்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுபடியும் ஹைதராபத்தில் பணியில் இருப்பதாலும் அதிக வேலை பளுவின் காரணமாகவும் நேருக்கு நேராக இங்கு இந்த சபையில் கலந்துக்கொள்ளமுடியாமல் போனதிற்கு வருந்துகிறேன்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திரை எழுத்தாளர்.

இயக்குநர் அருண்மொழிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரியார் திடலில் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே…

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்

ஈஸ்வரி

சென்னை போக்குவரத்தில் சூப்பர் டீலக்ஸ் பேருந்து வரவினால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இத்தகையை பேருந்துகளினால் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி கரைந்தது.

சாதாரண பேருந்து கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகம்! இதனால் அத்தி பூத்தாற்போல் வரும் சாதாரண பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு திருவிழா கூட்டத்தை போல ஏறும் ஆண்களுக்குக்கிடையே இடிப்பட்டு ஏறும் பெண்களின் நிலை சொல்லி மாளாது. அலுவலகத்திலும் வீட்டிலும் உழைப்பு சுரண்டலினால் சக்கையாய் பிழியப்பட்டு வரும் பெண்கள் இக்கூட்டத்தில் யார் நம்மை உரசுகிறார்கள், யார் நமது அங்கங்களை தொடுகிறார்கள், யார் வக்கிரத்தின் உச்சத்தில் ஆடையை பிசு பிசுக்க வைக்கிறார்கள், தனது ஆடை விலகுதல் மூலம் யார் இன்பம் அடைகிறார்கள் என்பதை அவ்வப்போது எழும் கூச்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட அனைத்து பாலியல் வக்கிரத்தை தீர்க்க கொள்ள சூப்பர் டீலஸ் ஆண்களுக்கு வசதிதான். அதுபோல தான் தற்பொழுது திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் டீலஸ் படமும் இருக்கிறது. கொண்டாடப் படவேண்டிய நேர்த்தியான திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் அபாரம்! ஆனால், அது யாருக்கான திரைப்படம்? யாருக்கு பயன்பட போகின்ற படம்? பெண்களின் உடல் ஆண்கள் உறவு கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதா? பெண் எப்போதும் பாலியல் பண்டமா?

சமமான அளவில் சுதந்திரமாக இருக்கும் ஆணும் பெண்ணும் மட்டுமே ஒடுக்குமுறையற்ற, சுதந்திரமான பாலியல் உறவுகளை உருவாக்க முடியும். எனவே, பெண்விடுதலை இல்லாமல் பாலியல் ஒடுக்கு முறைகளுக்கு தீர்வு காண முடியாது.

  1. படத்திற்கு வருவோம் முகிலனின் மனைவி, தன் முன்னால் காதலனை சந்திக்கும் பொருட்டு உடலுறவு கொள்ள நேரிடுகிறது. அதில் காதலன் இறந்துவிட, இறப்பு கணவனுக்கு தெரிய வருகிறது.

“நான் எனது குற்றத்தை ஒத்து கொண்டு காவல் துறையிடம் சரண்அடைந்து விடுகிறேன்” என்று கூறுகிறாள் அவள். தன்னைத்தான் ஊர் இவ்வளவு கேவலமான பொண்டாட்டியை கட்டிருக்கிறேன் என்று பழி தூற்றும், அதன் காரணமாக இந்த உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டு விவாகரத்து செய்து கொள்ளாம் என்று கணவன் கூற அதற்கு மனைவி சம்மதிக்கிறாள். உடலை அப்புற படுத்தும் முயற்சியில் இருவரும் ஈடுபடுகின்றனர். இதனை மறைமுகமாக நோட்டம் விட்டு கொண்டு வந்த காவல் அதிகாரி ஒருவன் இதனை கண்டுபிடித்து விட, இதனை அனைத்தையும் மறைக்க வேண்டும் என்றால் உன் மனைவியை தன்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று காவல் அதிகாரி கேட்கிறார். தன் மனைவியை அதற்கு தயார் படுத்துகிறான் அந்தக் கணவன்!

இறுதியாக கைவிலங்கு பூட்ட பட்ட கணவன் கையறு நிலையில் இருக்கும் மனைவி
அப்போது எங்கிருந்தோ விழும் டிவி காவல் அதிகாரின் தலையில் விழுகிறது. இறுதியில் கணவன் மனைவி காப்பாற்றப் படுகிறார்கள்.

ஆணாதிக்கத்தை ஊட்டி வளர்த்து கொண்டிருக்கும் சமூகத்தின் பின்னணியில் இதைப் பார்ப்போம். படத்தில் (முகிலன் மனைவி) தனக்கு பிடிக்காத ஆணுடன் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து தனக்கு பிடித்த இணையுடன் கை கோர்த்து செல்வதை விடுத்து, ஒரு ஆணின் ஒடுக்கு முறை மற்றும் சமூகத்தின் ஒடுக்கு முறையினாலும் பெண் தனது முன்னால் காதலனுக்கு பாலியல் பண்டமாக மாற்றப்படுகிறாள். மற்றும் இந்நாள் கணவனுக்கான அவன் சமூதாய மதிப்பீட்டைக் காப்பாற்ற ஆணின் பகடையாய் மாற்றப்பட்டு மற்றோரு ஆணுடன் உடல் உறவு கொள்ள கணவன் மூலமாகவே உந்தப்படுகிறாள்.

கற்பு, நெறிமுறை கோட்பாடு, போன்ற வற்றை உடைகிறேன் என்ற பெயரில் இறந்து போன மனைவின் முன்னால் காதலின் ஆண் குறி தன்னை விட பெரிதா என்று சொல்லி கொண்டு பார்வையின் வழியாக பிணத்தில் ஆண் குறி நீளத்தை தேடுவது என்பது ஒட்டு மொத்த வக்கிரத்தின் பிரதிபளிப்பு.

கணவன் முகிலன் ஒரு இடத்தில் பதிவு செய்கின்றான்: இதற்கு முன்பு தனக்கு 3 பெண்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்புகளை எல்லாம் தான்தான் முறித்து கொண்டேன்; அப்பெண்கள் அல்ல என்று கூறி விட்டு ஒருவித பெருமிதம் கொள்கிறான்.

முன்னால் காதலன் தவிர வேறு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளதா என்று முகிலன் மனைவியை பார்த்து கேக்கும் போது வெளிப்படையாக அறிவிக்காமல் காதில் சொல்லும் போது பின்னால் சங்கின் ஒலி.

மனைவியின் முன்னால் காதலன் பிணத்துடன் பேசிக்கொண்டு வரும் அவன், ‘பிணத்துடனே செட்டான உன்னால் ஏன் நமக்குள் செட் ஆகவில்லை’ என்ற கேள்வியை முன் வைக்க அதற்கு பதில் சொல்லப்படுவதில்லை.

நிலவுடைமை சிந்தனையும், முதலாளித்துவ சிந்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஆணாதிக்க கட்டமைப்பில்,பெண்களின் உடல் வெறும் பாலியல் கருவி இச்சமூகம் நியாயப் படுத்தி கொண்டிருக்கிற வேளையில் இத்திரைப்படம் மேலும் பார்வையாளர்களின் ரசனையை மட்டுப்படுத்துகிறது. அதற்கு துணை போகின்ற வேலையைத்தான் படம் முழுக்க கையாண்டு உள்ளார் இயக்குநர்.

  1. க்ரூப் ஸ்டடி என்ற பெயரில் ஆபாச படம் பார்க்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் ஒரு வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது அதில் நடித்திருப்பது தன் அம்மா என்பதை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவன் டிவியை உடைக்கிறான். தன் அம்மாவை கொலை செய்ய நினைத்து கூர்மையான ஆயுத்துடன் செல்ல அது தவறுதலாக அவன் வயிற்றில் குத்த, அதனை அறிந்த தந்தை தான் அந்த ஆபாச வீடியோவை பார்த்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த தன்னை கர்த்தர் காப்பாற்றியது போல் மகனையும் காப்பாற்றுவார் என்கிறார். கிருஸ்தவ மதத்திற்கு மாறிய அற்புதம் மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தன் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி கொண்டு ஜெப கூடத்திற்கு அழைத்து செல்கிறான் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் தன் மகனை மீட்டு எடுத்து மருத்துவமையில் சேர்க்கிறாள் அந்த தாய். ஆனால் அவளிடம் காசு இல்லை. அற்புதத்திற்கு தன் கடவுள் மீது சந்தேகம் வர கடவுளின் சிலை உடைக்கப்பட்ட அதில் உள்ள சில வைரங்கள் அதன் மூலம் தன் மகன் காப்பாற்றப்படுகிறான்.

அற்புதத்தின் மனைவி -லீலா. தான் நடித்த ஆபாச வீடியோவை மகன் பார்த்ததை உணர்ந்த அவள் “ஒரு லட்சம் பேர் பாக்குறது தப்பில்லைனா நான்கு பேர் நடிக்கிறது எப்படி தப்பாகும்” என்ற கேள்வியை தன் மகன் முன் வைக்கிறார்.

பொள்ளாச்சி போன்ற கூட்டு பாலியல் வக்கிரத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்ட 273 பெண்களும் அந்த ஒரு லட்சம் பார்வையாளருக்கத்தான் வன்புணர்வு செய்யப்பட்டார்களா? என பொருத்தி பார்க்கவேண்டும். ஆம், தன் சந்தையை விரிவ படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் முதலாளித்துவம் இதைத்தான் சொல்கிறது இந்த வசனம்.

மக்களுக்கு கேடு தரக்கூடிய குடிக்கிற பானம் முதல் உண்கிற உணவு வரை, பண்பாடு, கலாச்சாரம் முதல் அனைத்திலும் தன் உற்பத்தியை பெருகிவிட்டு இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் குடிக்க வேண்டும், இதனைத்தான் பார்க்க வேண்டும் என்று உருவாக்கிய நிலையில், லீலா கதாபாத்திரத்தின் மூலம் நியாயப்படுத்தி கொண்டாட வைக்கிறது இந்த கொடூரமான முதலாளிய சந்தை.

ஆதி சமூகத்தின் ஆடை சுதந்திரத்தையும், வருகிற சமூத்தின் ஆடை சுதந்திரம் எப்படி இருக்கும் என்று தன் மகனிடம் பேசும் லீலா அவர் தன் கணவன் அற்புதம் கிருஸ்தவமதத்தை தழுவிய பின்னும், கையாலாகாத தன் கணவனிடம் இருந்து விடுபட்டு ஏன் பொருளாதார ரீதியான தன்னை நிலை நிறுத்தி கொள்ளாமல் மகனின் மருத்துவ செலவிற்காக அனைவரின் முன் மன்றாடுகிறார்?

பொருளாதார சுகத்திரத்தை பேச மறுத்து வெறும் உடல் அரசியலை மட்டும் பேசும் முதலாளித்துவ பெண்நிலைவாதிகள் கருத்தைத்தான் இயக்குநர் லீலாவின் மூலம் பேச வைத்துள்ளார். வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்களா? என்று மகன் கேட்டக ஆபாசப் படத்தில் தனது கதாபாத்திரத்தை விரும்பித்தான் நடித்துள்ளேன் என்று ஒரு பெண்ணின் வாயால் கூறவைத்திருப்பது இன்னும் அதிகப்படி.

ஆபாச பண்பாட்டினால் பெண்களின் இருத்தலே கேள்விக்குள்ளாகி பல்வேறு வக்கிரதை அசரே ஊக்குவித்து கொண்டாடுகின்ற இன்றைய காலத்தில் இத்தகைய சந்தையில் பெண்ணையே தனது விருப்பத்தின் பெயரில் துணைக்கு அழைத்தல் முதலாளியத்தின் உச்ச வக்கிரமாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆபாச வீடியோவில் நடித்தது மற்றோரு பெண் என்றால் தன் இந்திரியத்தை இயல்பாக வெளியேற்றி விட்டு கடந்து சென்று இருப்பார்கள். ஆனால், அதில் நடித்தது தன் மனைவி, தன் அம்மா என்று தெரிய வரும் போதுதான் பொங்கி எழுகின்றன ஆண் கதாபாத்திரங்கள்.

  1. தன் கணவனுக்காக தனது குழந்தையுடன் 7 வருடமாக காத்திருக்கும் மனைவிக்கு கணவன் திருநங்கையாக திரும்பி வந்திருப்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. ஒரு மனைவி இறந்தாலோ அல்லது விட்டு பிரிந்தாலோ கணவன் உடனடியாக மற்றோரு திருமணத்திற்கு தயாராகின்ற ஆணாதிக்க கட்டமைப்பில் அத்தகைய சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுவது இல்லை.

ஆனால் இப்படத்தில் இக் கட்டமைப்பில் கல் எறிவதற்கு பதிலாக தன் மகளிடம் “இப்படி அவன் (திரு நங்கை) திரும்பி வருவான் என்று தெரிந்து இருந்தால் நீ யாரையாவது இழுத்து கொண்டு ஓடிருக்கலாமே” என்று அம்மாவின் ஆறுதல் மொழிகள். கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிட பெற்றவர்களுக்கு அவர்களின் மறுமணத்தை ஆதரிக்காமல் சமூத்தில் அவர்களை அங்கிகரிக்க மறுத்து பின் வாசல் வழியாக ஓட சொல்வது தான் இயக்குநரின் பெண்ணிய சிந்தனையா?

அதைவிட திருநங்கையாகக்கூட திரும்பி வந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும் என்று அன்பின் வழியில் கருணை அற்ற இரகத்தினை போதித்தல் மூலம் பெண்ணின் உணர்வுகளை இன்னமும் அதல பாதளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது இந்தப் படம்.

ஷில்பாவின் கதாபாத்திரம் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்குள் அனுதினமும் நேரடியா பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவரின் கதாபாத்திரத்தை தன்னால் முடிந்த அளவிற்கு,
தன் பண்டம்(படம் )சந்தை படுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அக்கதாபாத்திரத்தை இயக்குநர் கேலிக்கூத்தாகி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவல் ஆய்வாளனை ஷில்பா மூலமே “அவர் எனக்கு புருஷன் மாதிரி” என்று சொல்லுவது எல்லாம் காவல் துறையினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அத்துணை திருநங்கைகளையும் கொச்சைபடுத்திய விதத்தை துளி அளவும் ஏற்று கொள்ள முடியாது.

படம் முழுவதும் பெண்களின் மைய கதாப்பாத்திரம் அனைத்தும் பொருளாதார தன்னிலை அடைந்தவராக காட்டாமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேலைக்கு செல்லும் பெண், வேலைக்கு செல்லாத கணவனிடம் மதியம் சாப்பாடு சமைத்து எடுத்துக் கொண்டு வா என்று கட்டளை இட்டு செல்வது, மிகப்பெரிய அபத்தமான பதிவாகவே உள்ளது. சமமான உழைப்பு பிரிவினையும், பொருளாதார சுகத்திரத்தை பேச தயாராக இல்லாத அறை வேக்காட்டுத்தனம்தான் இது.

மேற்கண்ட அனைத்து படி நிலைகளின் சாராம்சத்தை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக பாலியல் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் எல்லாக் கொடுமைகளையும், இன்னல்களையும் இயல்பாக காட்டுதல், மற்றோன்று தான் பாலியல் பண்டமாக மாற்றப்படுவதையே பெண்களுக்கான விடுதலையாக சொல்லுதல் ஆகிய இரண்டையும் தெளிவாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

நமது நிலவுடைமை சமூகத்தில் பெண்ணின் மதிப்பீடுகள் அனைத்தும் ஆணுக்கு கீழ் ஆனவள் என்றும் கணவன் எத்தயைய குணம் கொண்டவனாக இருந்தாலும், பரதேசியாக, பிறன் மனைவியை விரும்பினாலும், துரோகம் இழைத்த கணவனுக்கு நல்ல மனைவியாக இருக்கவேண்டும்.

மறுபுறம் ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு, பெண் சமூக உற்பத்தியில் மலிவான கூலிக்கு பெரும் அளவில் பெண்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. இதனால் பெண்கள் படிப்பதற்கு, தொழிலுக்கு என்று சமூகத்தை நோக்கி வரவேண்டிய தேவையையும் அதிகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் பெண்ணுக்கு போலியான சுந்ததிர மாயையை உருவாக்கி தந்துள்ளது அந்த அமைப்பு.

மேற்கண்ட இரண்டு வகையிலும் ஆணாதிக்க கட்டமைப்பை வலுவாக்கியுள்ளது. தரகு முதலாளிகளின் பெரும் லாபத்திற்காக பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை நுகர்வு பண்டங்களாக மாற்றுதல் அல்லது அவர்களே விரும்பி நடிக்கிற சினிமாவாகட்டும் அல்லது ஆபாச படங்களும் அவர்களின் லாபவெறிக்கே….

மேலும் சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை தமது இச்சைகளுக்காக பயன்படுத்துவதும்,தனக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஆணை தூக்கி எறியாமல் அவளை ஒரு கள்ள உறவு மூலம் சுதந்திரத்தை அடைய சொல்லுவதும் இதனால் அவள் சுதந்திரத்தை வேறு வழியில் திருப்பிவிடுதல் மூலம் அதுவும் ஆண்களுக்கே சாதகமாக பயன்படக்கூடிய சூழ்நிலைதான் நிலவுகிறது.

நிலவுடமை கருத்துக்களை தூக்கி எறியாமல் கற்றற்ற பாலியல் உறவுகளின் மூலம் ஆண்களுக்கு கன்னியாக(பொறி) மாற்றப்படுகிறார்கள். இதனால் பெண்கள் தனக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை கொடூரமாக கொலை செய்வதும், ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டுவதும், தன் இச்சைக்கு அடிபணிய வைப்பதும், கூட்டு வன்புணர்ச்சிகளை மேற்கொள்வதும் இதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு ஆளும் வர்க்கமும் பெரும் அளவில் துணை போகக்கூடிய அளவில் செயல்படுகிறது.

இத்தயை சமூக சூழ்நிலையையுடன் நாம் படத்தை பொருத்தி பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அனைத்து நிலவுடைமை கருத்துக்களையும் தாங்கி பிடித்து கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு முழுக்க முழுக்க வால் பிடித்து கொண்டு, பாலியல் சார்ந்த உறவில் முற்போக்கு சொல்ல வருகிறேன் என்று கூறிக் கொண்டு அனைத்து பிற்போக்கு தனத்தையும் உள்ளடக்கிய ஒரு செக்ஸ் டீலக்ஸாக மட்டுமே திரைக்கதை முழுவதும் கரும்புகையை படம் மெங்கும் வெளியேற்றி கொண்டு செல்கிறார் இயக்குநர்.

கதை நேர்த்தி என்ற பெயரில் உலகத்தில் தீமை, நன்மை என்றும், இன்று தவறு என்று சொல்லுவது நாளை சரியென்று சொல்லப்படும், இதுதான் இயற்கை என்றும், அநீதிக்கு எதிராய் எழும் குரல்கள் அனைத்தையும தற்செல் நிகழ்விற்குள் அடக்கம் செய்துவிட்டார் இயக்குநர்.

இச்சமூத்தில் பல்வேறான ஒடுக்கு முறைகளை இந்த ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிடுகின்ற சூழ்நிலையில் பாலியல் ரீதியான சுரண்டல்களையும், ஒடுக்குமுறையையும் மற்றோரு வடிவத்தில் கையாலுக்கின்றது இந்தப் படம்.

பெண்ணை பண்டமாகி மனித இனத்திற்கான மதிப்பை இந்த சமூகம் மறுக்கிற வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. திரைத்துறையும் அதற்கு விதி விலக்கு அல்ல. அனைத்து ஆபாச பண்பாட்டையும் தங்கிப் பிடித்து கொண்டு பெண்களின் உடல்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க நிலவுடமை பண்பாட்டையும், ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கத்தை தூக்கி எறிய வீரம் செறிந்த போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாக்க இயலுமே தவிர கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடுவது ஒருபோதும் தீர்வு ஆகாது.

ஈஸ்வரி, ‘திரையாள்’ இதழின் ஆசிரியர். தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் பொதுச்செயலாளர்.

இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ !

வினி சர்பனா

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்…

ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ இருப்பார்கள் லாட்ஜ் லேகிய டுபாக்கூர் வைத்தியர்கள். அப்படிப்பட்ட, லாட்ஜ் லேகிய வைத்தியர் போல்தான் படம் முழுக்க பாலியல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜா.

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் வீட்டில் இணைந்திருக்கும்போது திடீரென்று காதலன் இறந்துவிட்டால்?

பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் நண்பர்களுடன் ‘ஏ’ படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தமாதிரி படத்தில் தனது அம்மாவே நடித்திருப்பதைப் பார்த்தால்?

அம்மாவை விட்டு ஓடிப்போன அப்பா பலவருடங்கள் கழித்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது அந்த அப்பா திருநங்கையாக மாறி திரும்பிவந்தால்? என்னென்ன நடக்கும் என்பதுதான் கதை.

இதில், முதல் சம்பவம் கடந்த வருடம் சென்னை திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம்தான். ஆனால், அச்சம்பத்தில் இருவரும் திருமணமாகாதவர்கள். காதலன் இறந்த துக்கம்… வேதனை… சுற்றுச்சூழல் கொடுத்த மன அழுத்தத்தின் காரணமாக அந்த இளம்பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

அதுவும், இப்படத்தில் வரும் காட்சியில் இறந்துபோன காதலனுக்கு கடைசியாக வந்த போன்கால் காதலி சமந்தாவிடமிருந்து என்பதால் ஈஸியாக காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிடும் என்பதுகூட தெரியாமல்காதலனின் மரணத்தை மறைக்க ப்ளான் பண்ணும் காட்சிகளில் ரசிகர்களை மிகவும் ஈஸியாக ஏமாற்றுகிறார் இயக்குநர். அதுவும், அவர்களுடைய காரிலேயே பிணங்களை வைத்துவிட்டு கிளம்புகிறார்கள்.

சமந்தா காதலனுடன் அப்படி இருந்ததை கணவனிடம் விவரிக்கும் வார்த்தை உச்சரிப்பு, அதையே போலீஸிடமும் உச்சரிப்பது எதார்த்தமாக இல்லை.

ஆர்.சி. எனப்படும் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் சிலை வழிபாடு செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள், யாரும் உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஜெபித்துக் கொண்டிருப்பதில்லை.

வேலூர் சி.எம்.சி உள்ளிட்ட மருத்துவமனைகளை கொண்டுவந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ததே கிறிஸ்தவ சி.எஸ்.ஐ பிரிவினர்தான்.

புதிதாக மதம் மாறிய பெந்தகோஸ்தே கிறிஸ்துவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. ஒரு அடையாளத்திற்காக சிலுவைக்கு முன்னால் ஜெபிப்பார்கள். பெரும்பாலும் வெள்ளைநிற உடை உடுத்தியிருப்பார்கள். ஏதாவது, ஒரு சபைக்குச்செல்வார்கள். இப்படி, பலப்பிரிவுகளில் ஒரு சிலர்தான் மருத்துவமனைக்கே செல்லாமல் எல்லாவற்றிற்கும் அற்புதம் நடக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி, அறியாமையில் இருப்பவர்கள் அனைத்து மதத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க, மிஷ்கின் காதாப்பாத்திரத்தின்மூலம் ஒரு சிறுபான்மை மதத்தை இழிவுபடுத்திவிட்டு பகத் ஃபாசில் கதாப்பாத்திரத்தின் மூலம், தேசப்பற்று போல் சாதிப்பற்று இருந்தால் என்னத் தவறு? என்று கேட்டு சாதிவெறியை ஊக்குவித்திருக்கிறார் இயக்குநர்.

அதுமட்டுமா? வக்கிரம் பிடித்த சப்- இன்ஸ்பெக்டர் பெயரும் கிறிஸ்துவ பெயரான பெர்லின்.

பாசிச பா.ஜ.கவுக்கு ஆதரவாக படம் எடுத்தால் சென்சார் போர்டில் ஈஸியாக அனுமதி கிடைத்துவிடுகிறது என்று நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் தற்போதைய இயக்குநர்கள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது விஜய்சேதுபதியின் திருநங்கை கதாப்பாத்திரம்தான். காவல்நிலையங்களில் சிக்கிக்கொள்ளும் சராசரி திருநங்கைகள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒருநாள் அப்படியொரு கொடூரத்தை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள். அவரைச்சுற்றி நடக்கும் காட்சிகள் அனைத்தும் நெகிழ வைக்கின்றன. ஆனால், டீன் ஏஜ் பருவத்தை அடையத்தொடங்கும்போதே தான் ஆண் இல்லை… ஒரு பெண் என்பதை முழுமையாக உணர ஆரம்பித்துவிடுவார்கள் திருநங்கைகள். அதனால், அவர்களுக்கு ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு ஏற்படும். திருமணமாகும்வரை தன்னை எப்படி உணராமல் இருந்தார் என்பது கேள்விக்குறி. ஆனால், குடும்ப நிர்பந்தத்தின் காரணாமாக திருமணம் செய்துகொள்வதுமுண்டு. திருநங்கைகளின் வாழ்வியல் வலியை விஜய்சேதுபதியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதற்கு பாராட்டுகள்!

தியாகராஜன் குமாரராஜா சேலம் சித்த வைத்திய சாலை சிவராஜிடம் உதவியாளராக இருந்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எந்தக் காரணத்தைக்கொண்டும் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழைத்தவிர வேறு சான்றிதழ் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே சிரமப்பட்டு படம் முழுக்க ஆபாச வார்த்தைகளை அள்ளிக்கொட்டி, மெனக்கட்டிருக்கிறார்.

அதுவும், குழந்தைகள்… பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் சிறுவர்கள் ‘ஏ’ படம் பார்ப்பதை மட்டுமே மையப்படுத்தியும் பெண்களைக் கண்டால் ஏங்குவது போலவும் எடுத்து தவறான பாதைக்குத்தான் படத்தின்வழி கொண்டு செல்கிறார்.

பெண்களை இழிவுபடுத்தும் “தே…” போன்ற வசனங்களை அதிகம் வைத்து, தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதற்கு “அவரே சாட்சி”.

எஸ்.ஜே. சூர்யா, சாமி போன்ற இயக்குனர்கள் எப்படி காணாமல் போனார்களோ, அப்படித்தான் பாலியல் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர்கள் தொடர்ந்து நீடிக்க முடியாது. படம் சுமார் டீலக்ஸ்தான். ஆஹோ… ஓஹோ என்று கொண்டாடும் அளவுக்கு சூப்பர் டீலக்ஸ் இல்லை!

” டிஸ்லைக்ஸ்”!!!

வினி சர்பனா, பத்திரிகையாளர்.

பேரன்பு: வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது எப்படி?

கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி

மகள்களை பெற்ற ஆப்பாக்களுக்கு மட்டுமல்ல. மகன்களை பெற்ற அப்பாக்களுக்கும் பொறுப்பு உண்டு. அதனால் பேரன்பு திரைப்படத்தை என்னால் அமேசானில் வரும் வரை பார்க்க முடியவில்லை. சற்று தாமதமான விமர்சனம் தான் என்றாலும் இந்தப் படத்தை பற்றி தாமதமானாலும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் தற்போது எழுதுகிறேன். இதனை விமர்சனம் என்று சொல்வதைக் காட்டிலும், அனுபவப் பகிர்வு என்றே குறிப்பிட வேண்டும். ஒரு ஓடையைப் போல தெளிவான நீரோட்டம் போலச் செல்லும் கதை இது. அதனை மூக்கு உரச அனுபவித்து குடிப்பது மட்டுமே சாத்தியம். அவ்வாறான ஒரு அனுபவமே இது.

பேரன்பு திரைப்படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விட்டேன். அதை பார்த்துக் கொண்டிருந்த போது என் அருகில் கேம்ப் ஃபயருடன் நண்பர் இரவுக் குளிரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அது அத்தகைய படத்தைப் பார்ப்பதற்கான சரியான சூழல் என்று தோன்றியது. கதையின் போக்கில் மேலோட்டமாக காணும் போது அதன் சூழல் முக்கிய கதாபாத்திரமாக விளங்குகிறது. தொடக்கத்தில் லாபியுடனான ஒரு வீடு, பின் ஆளில்லாத புகை மூட்டமான தனி வீடு, பின் ஒரு குறுகலான லாட்ஜ், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம், வாடகை வீடு, கடைசியாக வயலுடனான பண்ணை வீடு என முக்கிய கதாபாத்திரங்களின் நிலையை ஒத்து சூழலும் கூடவே பயணிக்கிறது.

மம்முட்டியின் கதாபாத்திரம் தனக்கு பாதகம் செய்யும் குடும்பத்திற்கும் ஒரு பிரச்சனை இருக்கும் என்று கருதி அவர்களை மன்னிப்பதாக ஒரு புறம் மிகவும் நல்ல வகையில் சித்தரிக்கப் படகிறது. தன் மகளுக்காக அவர் செய்யத் துணியும் காரியங்களை கண்டு ஒரு கணம் வாயடைத்தே போகிறோம். மற்றொரு புறம், தன் பெண்ணுடைய நிலையை அறிந்தவுடன் வீட்டிற்கு வருவதை நிறுத்திய பொறுப்பற்ற கணவனாக, திருநங்கைகளை சமூகத்தில் காணும் அதே கண்ணோட்டத்தில் இவரும் தவறாக புரிந்து கொள்ளும் சாதாரணனாக, தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று புரிதலில்லாத கணவனாக, மனைவியில்லாத கணவன் வேரொரு பெண்ணிடம் சில நிமிட சபலத்தில் விழும் இச்சைகள் கொண்ட மனிதனாகவும் அவர் சித்தரிக்கப் படுகிறார். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள Duality (இரட்டை தன்மை) விளக்கும் அற்புதமான காட்சியமைப்புகள் இவை. மம்முட்டி மெகா ஸ்டார் என்று டைடில் கார்டில் போடப்பட்டிருந்தாலும் ஒரு கார் ட்ரைவராக, குல்லா அணிந்த தந்தையாக, கோடு போட்ட சட்டை அணிந்த மற்றுமொரு கணவனாக அனைத்து ஒப்பனைகளிலும் பொருந்திப் போகிறார். பொதுவாக ஒரு ஸ்டாரின் மனைவி கதாபாத்திரம் சில நிமிடங்களுக்கு வந்தாலும் அது ஒரு தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என்கிற க்ளீஷேவை உடைத்து கடைசி வரை மம்முட்டியின் முதல் மனைவியின் முகத்தை சரியாக காட்டவே இல்லை. இது அவருடைய கதாபாத்திரத்தின் உணர்ச்சியை மதித்து திட்டமிட்டு அவருடைய Identity ஐ மறைக்க முற்பட்டு செய்யப்பட்டது என்பதாலேயே இயக்குநர் மீதான மதிப்பு கூடுகிறது. எல்லா பெண்களும் அன்னை தெரேசாவாக இருந்து விடுவதில்லை. அவர்களை அவ்வாறு இருக்கச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இயலாது.

மம்முட்டியின் தமிழ் உச்சரிப்பு இக்கதையில் மிகவும் கவனத்துடன் கையாளப் பட்டிருக்கிறது. சில இடங்களில் அவர் பின்னணியில் பேசுவது இயக்குநர் ராம் பேசுவது போலவே உள்ளதை சிலர் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு காட்சிகளுக்கும் கூடவும் குறைவும் இல்லாத முக பாவங்களை வெளிப்படுத்தும் அவர் தன்னுடைய முதிர்ந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். மகளுக்காக ஜிப்ரிஷ்-ல் பேசியும் ஆடியும் காட்டும் போது ஒரு கணம் ஏனோ மூன்றாம் பிறை கமல் நினைவில் வந்து போனார்.

மம்முட்டியின் மகளாக நடித்துள்ள சாதனாவின் கதாபாத்திரம் பல்வேறு படிமங்களை கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை அப்பாவை முதலில் வேற்று மனிதனாகப் பார்க்கிறாள். பின்பு அவளுக்கும் குருவிக்குமான நெறுக்கத்தை காணும் போது தான் அப்பாவுக்கு அவளை பற்றி புரியத் தொடங்குகிறது. இந்த இடத்தில்,

“மனுசங்க இல்லாத இடமா…குருவிங்க சாகாத இடமா ஒரு இடம்
வேணும்” என்கிற வசனம் அதற்கு முந்தைய காட்சியில் மனிதர்களின் சுயநிலத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அப்பாவுக்கும் மகளுக்குமான இணக்கத்தை உருவாக்க சில நிமிடங்களை எடுத்துக் கொண்டு மெதுவாக நகரும் திரைக்கதை, அஞ்சலியின் வருகையில் சுவாரசியமாகிறது. எப்போதும் போல தன் மகளுடைய நிலையை சுட்டிக் காட்டி மற்றொரு பெண்ணிடம் ஆதாயம் தேடும் ஆணிக மாறி விடுவாரோ என்கிற யோசனை ஏற்படும் வேளையில் மம்முட்டி அஞ்சலியின் மாமனாக வருபவரை வீட்டிற்கு அழைத்து வந்து செய்யும் வந்து அளப்பறை, ஒரு ஆவணப் படம் போல் செல்லும் கதையில் ட்ராமாவை கூட்டுகிறது.

சாதனா தன்னுடைய புதிய அம்மாவாக அஞ்சலியை பார்க்கத் தொடங்கும் முன்பு அவளை விட்டு பிரிகிறார் அஞ்சலி. அதற்கான காரணமாக ஒரு முக்கிய பொருளியல் சார்ந்த பிரச்சனையை வைத்து பேசியுள்ளது இயக்குநரின் சாதுர்யத்தை காட்டுகிறது. இயற்கையை அரசியல் எப்படி விழுங்க கழுகு போலக் காத்திருக்கிறது என்பதை முதல் காட்சியில் இருந்தே காட்டத் தொடங்கி விடுகிறார் இயக்குநர்.
சாதனாவின் நடிப்பு மிக முக்கியமான சில காட்சிகளில் கம்பியின் மேல் நடப்பது போன்ற ஆபத்தால் சோதனைக்கு உள்ளாகியிருந்தது. அதனை எளிதாகக் கடந்து சாதித்துள்ளார்.

அவருடைய பிரச்சனையான Spastic cerebral palsy-ன் தாக்கம் சாதனா பூப்பெய்தும் போது எவ்வாறு அவளை மாற்றுகின்றது என்பதை அவளுடைய முகபாவனைகளை வைத்தே எளிதில் பேசி விடுகிறார் இயக்குநர். முகத் தசைகளை பக்கவாட்டில் இழுத்துக் கொண்டபடி அதில் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிகிறது. இத்தகையவர்களை தெருவில் மார்கழியில் புணரும் நாயை கல்லால் அடிப்பது போல யோசனையின்றி நடத்தும் சமூகத்தை கிழித்தெறியும் வசனமாக,

“நீங்க சர்ச் நடத்துறீங்க. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை” என மம்முட்டி கூறும் போது,

“சர்ச்சும் ஊருக்குள்ள தானே இருக்கு?” என்று கேட்கும் அந்த கதாபாத்திரம் மேலும் பேசும் வசனம், கனத்த இதயத்துடன் சில நாட்கள் நம்மை விட்டு நீங்காமல் தொடர்ந்து வருகிறது.
சாதனாவின் குறைபாடு ஒரு நோயல்ல. அதற்கு எந்த நாட்டு மருந்திலும் தீர்வில்லை என்கிற உண்மையை கதை பேசும் போது, என் இரண்டாம் நாவலில் “வெண்புள்ளிகள்” பற்றிய காட்சிகள் எனக்கு நினைவுக்கு வந்தது. நானும் என் மனைவியும் (வெண்புள்ளிகள் கொண்ட பெண்) ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம், என் மனைவியின் வெண்புள்ளிகளை காட்டி இதற்கு தீர்வுண்டு என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக சொல்வார். நான்,

“இது ஒரு நோயல்ல. தீர்வு இல்லை என்று ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்களை கவனிக்காதீர்கள்” என்பேன். என் மனைவிக்கு இது ஒரு பொருட்டே இல்லை என்றாகி விட்டது. ஆயினும் அதற்கு அம்மன் கோயிலுக்கு போனால் சரியாகிவிடும் என்று ஒருவர் சொல்வதை கேட்கும் போது சிரிப்பு வரும். இந்தப் படத்திலும் அத்தகைய ஒருவர் வருகிறார். மற்றொரு குறி சொல்லும் பெண் சாதனா நன்றாக படித்து டாக்டர் ஆவார் என்று பொருத்தமே இல்லாமல் ஜோசியம் சொல்கிறார். இவர்கள் எல்லோரும் நம்மை சுற்றித் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளும் இதெல்லாம் மற்றொருவருக்கு பிரச்சனையை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது படி அவர்களுடைய நம்பிக்கை கடிவாளம் போட்டிருக்கிறது. இந்த அதிகம் தொடப்படாத பிரச்சனையை தொட்டதற்கே இயக்குநருக்கு என் பாராட்டுக்கள்.

திருநங்கையாக வரும் அழகுப் பதுமை பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் அழும் போது கண்ணில் மை கலைந்து பெண் போலவே காட்சி தருவதும், பெண்ணுக்கான நாணத்துடன் தன்னை அவர் அழைத்து செல்கிறார் என்பதை வைத்து கனவு காண்பதும், தன்னிடம் செக்ஸ் தொடர்பான செய்தியை பெறுவதற்கு அவர் அழைத்து வந்தார் என்பதை அறிந்து கோபத்தில் எழுந்து செல்வதும் மிக மிக அருமையான காட்சியமைப்புகள். சுதந்திரத்தை தேடும் அவருடைய முகத்தை காற்றோட்டத்தில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

யுவனின் இசை இந்தக் கதையில் மற்றொரு தூண். சூழலுக்கும் காட்சிகளுக்கும் ஏற்றபடி அவர் புதிதாக இசைத் துணுக்குகளை இறக்கிக் கொண்டே இருக்கிறார். ஒரே ட்யூனை உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி மாற்றி மாற்றி போட்டுக் கொண்டே இருக்கும் செயற்கை தனத்தில் இருந்து தப்பிக்க இந்த படம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. பாடல்கள் திரைக்கதையோடு ஒட்டியே வருகிறது.

இயக்குநர் ராமின் மெனக்கெடலை இடையிடையில் பேசியிருக்கிறோம். தனியே அவருடைய முயற்சியை வெற்றியாக்கிய சிறப்பம்சத்தை குறித்து பார்க்க வேண்டும். இக்கதையை இயற்கையின் பல்வேறு முகங்களை காண்பித்து அதனை மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு காட்டியிருப்பது தான் வெறுமையான ஒரு சோகக் கதையை மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக மாற்றியுள்ளது. இயற்கையின் நல்ல முகத்தையும் கெட்ட முகத்தையும் மாற்றி மாற்றி காட்டியிருப்பது இவ்வாழ்க்கையின் சுக துக்கங்கள் மாறி மாறி வரும் என்பதனை உணர்த்துகிறது. அதனை எப்படி கடந்து வருவது என்பதை தான் இக்கதை அற்புதமாக விளக்குகிறது.

மனநலம் குன்றியவர்களின் வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. அது ஒரு தனி உலகம். அதற்குள் நுழைய தனித்திறமை தேவைப்படுகிறது. சிலருக்கு அது வாய்க்கிறது. சிலர் அந்த சோதனையில் கறிந்து பொசுங்கிப் போக நினைக்கிறார்கள். சிலர் கடலுக்கு அடியில் மூழ்கிப் போக நினைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இந்தக் கதையில் வருவது போன்ற பேரன்பு மிக்க துணை கிடைத்தால்? அந்த சோதனையை கடந்து வரலாம் இல்லையா? அத்தகைய ஒரு உத்வேகத்தை உருவாக்கிக் கொள்ளவே இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு மட்டுமில்லாது, நாம எல்லாம் எவ்ளோ நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் என்பதை உணரவும் இதைப் பார்க்க வேண்டும்.

கண்ணன் ராமசாமி, எழுத்தாளர்.

ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 திரைப் படமாகும். எந்திரன்/ரோபோ + நம்பமுடியாத முட்டாள் தனமான கற்பனைகள் + தொழில்நுட்ப பிரமாண்டம் = 2.0 படம். லைகா கம்பெனியின் 600 கோடி ரூபாய் வியாபாரம்!

“இது பறவைகளை பாதுகாக்கும் படம்; சுற்றுசூழலை வலியுறுத்தும் படம்” என்றெல்லாம் சில பதிவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர் ; இன்னும் சிலர் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டும் இருக்கலாம். இப் படத்துக்கு முற்போக்கு முகாமிலிருந்து வந்துள்ள பாராட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மனித குலத்தின் அலட்சியத்திற்காக, விரக்தியுற்ற ஒரு பசுமை போராளியை கொலைகார வில்லனாக காட்டுவது தான் கதைக் கரு. ஒரு ராட்சச பறவை/பறவை மனிதனின் ஏற்படுத்தும் நாசத்தை எந்திரன்/ரோபோ தடுப்பது தான் படம். விஞ்ஞானி வசீகரன்/ரஜினி எதிர் டாக்டர் பஷிராஜன்/அக்சய் குமார் தான் திரைப்பட மாந்தர்கள்.

படத்தின் கதை:

செல்போன்களின்அளவற்ற பயன்பாட்டால் பறவைகள் & சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பசுமை போராளி டாக்டர் பஷிராஜன் கருதுகிறார். பறவைகள் காக்கப்பட வேண்டும் என அரசு, கார்ப்பரேட், மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

சென்னையில் பல இலட்சம் பேருடைய செல்போன்கள் காணாமல் போகிறது ; அரசாங்கம் விஞ்ஞானி வசீகரன் உதவியை நாடுகிறது. அவர் 5வது சக்தி பயன்படுத்தி எந்திரன்/ரோபோ சிட்டி உதவியுடன் கண்டு பிடிக்கிறார்.

மனிதனின் செயல்களையும் சக்திகளையும், பூமியில் இதுவரை மனித இனம் கண்டிராத ஒரு தீய சக்தி பயன்படுத்தினால் அது எவ்வகை இழப்புகளை ஏற்படுத்தும் எனவும் எந்தவிதமான தர்க்கம் / லாஜிக் இல்லாமல் இயக்குநர் ஷங்கர் கதை சொல்லியிருக்கிறார்.

எந்திரன் முதல் பாகத்தில் சிட்டியை தவறான ரோபோவாக்கி அதனாலேயே அழியும் வில்லனின் மகன், அதேபோல் அழிவு சத்தியை பயன்படுத்த நினைக்கிறார். அதை தடுக்க சிட்டியை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரனை நாடுகின்றனர். அவரும் சிட்டியை நியூ வெர்ஷனில் உருவாக்கி அழிவு சக்தியிலிருந்து மீட்டெடுக்கிறார். இது தான் படம். #சுற்றுச்சூழல்பாதுகாக்கமக்கள்அல்லதுசெயற்பாட்டாளர்கள்நடத்தும்போராட்டம் #அல்லஇந்தப்படம்.

தோழர்களே ! தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சாபக்கேடு ஷங்கர், ரஜினிகாந்த் போன்றவர்களின் படங்கள். முட்டாள் தனமான ஷங்கர் படத்துக்கு புளகாகிதம் அடைந்து உங்களால் எப்படி பாராட்டி எழுத முடிகிறது? உங்களைப் போன்றவர்கள்தான் எல்லா மதிப்பீடுகளையும் நீர்த்துப் போகச் செய்கிறீர்கள். செயற்கை அறிவு, டெக்னிகல் கற்பனை, பிரமாண்டம் கண்டு திகைத்துப் போய் விடுகிறீர்கள்.

“இந்த மனநிலைதான் இந்தியா வல்லரசாக வேண்டும் என நினைக்கும் மத்தியதரவர்க்க மனநிலை.

தமிழ் சினிமாவுக்கு ஷங்கரின் படங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டது ?

முட்டாள் தனமான கற்பனைகளுடன், அவரது படங்களில் சில வகை ஆபத்தான பண்புகள் உண்டு.

1)சமூகப் பிரச்சினைகளில் பார்ப்பன மேலாண்மையை முன்னிறுத்துவது

2) செயற்கை அறிவை டெக்னிகல் ஜோடனைகளுடன் பெருசாக்கி மூளையைக் காயடிப்பது, பகுத்தறிவு – அறிவியல் மனப்பான்மைக்கு முடிவு கட்டுவது

3)தனிமனித (ஆண்) சாகசம் : அ) ஒருநாள் முதல்வராக புரட்சி செய்யும் #முதல்வன் ஆ)அநீதியான அமைப்பை ஒரு #இந்தியன் மூலமாக ஒழித்துக் கட்டுவது இ)சிறுசிறு குற்றங்களை எல்லாம் ஒழித்துக் கட்டும் #அந்நியன் … எட்சட்ரா

4) ஆணாதிக்க அணுகுமுறையும், பெண்களை முக்கியத்துவமற்ற அழகு பதுமைகளாக/செக்சியான பண்டங்களாக மட்டுமே காட்டுவதும் ஆகும். 2.0 படத்திலும் பார்பி பொம்மை ரோபாவாக நிலா என்ற பெயரில் ஆமி ஜாக்ஸன் காட்டப்படுகிறார்.

நாம் புரிந்து கொள்ள வேண்டியவை :-

சிட்டுக் குருவிகள், பறவைகள், வன உயிர்கள், மரங்கள், வனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் ஆட்சியாளர்கள் கூட்டாக கொள்ளை அடிக்கின்றனர்.  அவர்கள்தான் எதிரிகள்! ஷங்கர், ரஜினி போன்றவர்கள்தான் எதிரிகள்! செல்போன்கள் எதிரிகள் அல்ல!அறிவியல் பகுத்தறிவு பார்வை நமக்கு வேண்டும்!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

பா. ஜெயசீலன்

முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது.

யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்கறது இல்லடா இப்போ பிரச்சனை..நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனகரதுதாண்டா பிரச்னை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரை போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும் போதும் தோன்றும்.

அம்பேத்கர் தலித்துகளிடம் கல்வியை வலியுறுத்தியதற்கும் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு கல்வி ஆலோசனை தருவதற்க்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அம்பேத்கர் தலித்துகளிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நவீன இந்தியாவின் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதன் மூலமான பொருளாதாரவலிமையை பெறுவதற்கும், தலித்துகளின் மேல் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான ஒரு வலுவான ஆயுதமாக கல்வியை பார்த்தார், வலியுறுத்தினார். ஆனால் சாதி ஹிந்துக்கள் தங்களிடம் நீதியை, ஜனநாயகத்தை வலியுறுத்தும். தலித்துகளிடம் “தம்பி இப்ப எல்லாம் யாருத்தம்பி சாதி பாக்குறா. அம்பேத்கர் எல்லாம் தலித்தா பொறந்து பெரிய ஆள வரலியா..அதுபோல நீங்களும் நல்லா படிச்சு வாங்க தம்பி” என்று பெரிய மனதோடு ஆலோசனை சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

அதாவது நான் எவ்ளோவ் பெரிய முட்டாள் நாயாக பைசாவுக்கு பெறாதா சாதியை நம்பும் அறிவிலியாக இருந்தாலும் நான் என் சாதி தரும் திமிரோடும் துடுக்கோடும் நடமாடுவேன் ஆனால் நீ என்னிடம் நீதியை கோரினால் நீ அம்பேத்கருக்கு இணையானவனாக இருக்கவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் சென்று பட்டம் பயின்று வந்தால் போனால் போவுது என்று கொஞ்சமாய் மரியாதை தருவோம் இதுதான் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு தரும் ஆலோசனை. இதே ஆலோசனையை மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும் தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறது. மாரி அவருடைய திரைக்கதையின் ஊடாகவும், சாதி ஹிந்துவான கதாநாயகியின் தந்தையின் குரல் மூலமாகவும்(“நல்லா படிங்க தம்பி…எதிர்காலத்துல எது வேணும்னா மாறலாம் இல்லையா”)தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறார்.

பரியனின் நண்பனாக வரும் சாதி ஹிந்து கதாபாத்திரம் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. அந்த பரியனின் நண்பனாக வரும் கதாபாத்திரம்தான் பெரும்பான்மையான சாதி ஹிந்து இளைஞர்களின் மனதை பிரதிபலிப்பதாகவும், அந்த இளைஞன் கதாபாத்திரம் பரியனின் வாழ்க்கையில் வந்த இன்னொரு தேவதை என்றெல்லாம் யார் சொல்கிறார்கள்? சாதி ஹிந்துக்களே சொல்லிக்கொள்கிறார்கள். சரி அந்த கதாபாத்திரத்தை மாரி எப்படி கையாண்டிருக்கிறார்?

கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் நேர்த்தியான சிகையலங்காரம், மீசை, நெற்றியில் தீற்றிய சந்தனம், கவனமாக அயர்ன் பண்ணப்பட்ட சட்டை என்று புழங்க பரியனின் நண்பன் கதாபாத்திரம் மிக கவனமாக ஒரு கோமாளியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிதுங்கும் தொந்தி, கோமாளிக்கான முக பாவனைகள், செய்கைகள் என்று அந்த கதாபாத்திரம் ஒரு காமெடி பீஸாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு என்று எந்த அரசியல் நிலைப்பாடோ, கருத்தோ, கோட்பாடோ, பார்வையோ கிடையாது.ஒரு வகையில் இயக்குனரால் ஒரு ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு உருண்டை பிடித்த சாணியை போல வடிவமைக்கப்பட்டுள்ள பரியின் கதாபாத்திரத்தை போலவே இந்த கதாபாத்திரமும் ஒரு தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு முட்டாள் கோமாளி கதாபாத்திரம் என்று புரிந்துகொள்வதற்கான வெளியை மாரியே உருவாக்கி தந்துள்ளார்.

எனவே இரண்டு தாழ்மையுணர்ச்சி கொண்டுள்ள உருட்டப்பட்ட சாணி உருண்டைகள் நட்பு பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? ஒடுக்கப்பட்டவரின் அரசியல் பேச விரும்பிய மாரிக்கு கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் கதாபாத்திரம் கோமாளியாகவும் பரிக்கு தோள்கொடுக்கும் நண்பன் கதாபாத்திரம் கம்பீரமானவனாகவும் ஏன் தோன்றவில்லை என்பதை நீங்கள் யோசித்தால் இந்த திரைப்படம் ஏன் தலித்துகளின் கலை அரசியலை சிறிதும் உள்வாங்கவில்லை என்பதும் இன்னும் சொன்னால் எப்படி தலித்துகளின் கலை அரசியலுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது என்பதையும் உணரமுடியும்.

இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் போன்ற எல்லா சம்பவங்களின் போதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான விவாத நிகழ்ச்சிகள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் சாதி வெறி பன்றிகள் திரும்ப திரும்ப முன்வைத்த பொறுக்கித்தனமான வாதங்களில் ஒன்று வசதியாக வளர்ந்த எங்கள் சாதி பெண்கள் தலித்துகளை திருமணம் செய்துகொண்டு சென்றால் சிரமப்படுவார்கள்.தலித்துகளால் எங்கள் பெண்களை பார்த்து கொள்ள முடியாது என்பது. எதோ தமிழகத்து சாதி ஹிந்துக்கள் forbes வெளியிடும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருபவர்களை போலவும் தமிழகத்திலேயே ஏழைகள் உள்ள சாதி என்று உள்ளதென்றால் அது தலித் சாதிதான் என்னும் பொருள்பட பேசுவதை கேட்கிறோம். ஆனால் உண்மை என்னவென்று நமக்கு தெரியும். வன்னியர்களும், தேவர்களும், கௌண்டர்களும் தங்கள் சாதிக்குள் சோற்றுக்கு வழியில்லாத எத்தனை பேர் உள்ளனர் என்று தெரிந்தும் தலித்துகள் தங்கள் வீட்டு பெண்களை மணம்முடித்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர் என்று நம்புவதையே விரும்புகிறார்கள்.

பரியின் அப்பா icici வங்கியில் மானேஜராக இருந்து ஜோவின் அப்பா ஆடுதிருடுபவராக இருந்திருந்தாலும் பரியின் முகத்தில் மூத்திரம்தான் விட்டுயிருப்பார்கள். ஏனென்றால் இங்கு பிரச்சனை என்பது சாதி வெறியும் சாதியை நம்பும் பன்றிகளும்தான். மாரிக்கு இந்த அடிப்படை பிரச்னையை எதிர்கொள்ள நேர்மையோ, அறிவோ, தைரியமோ இல்லை. அதனால் சாதி ஹிந்துக்கள் அச்சச்சோ என்று உச்சு கொட்டக்கூடிய ஒரு ஆபாசமான உலகை கட்டிமைக்கிறார். அதாவது குலசாமிக்காக மட்டுமே ஆணவ கொலைகள் செய்யும் பெரியவரும், எம்பொண்ணையும் கொன்னுருவாங்கடா என்று பரியிடம் அழும் தகப்பன்களும் புழங்கும் அதிரிபுதிரியான கற்பனா உலகம் மாரியினுடையது. மாரி பரியின் கதாபாத்திரத்தை சோற்றிற்கு வழியில்லாத ஒருவனாகவும் கதாநாயகி ஜோ தனது பெயரில் ஒரு கல்யாண மண்டபத்தை கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவளாகவும் வடிமைக்கிறார். இளவரசன் திவ்யா விஷயத்தில் இளவரசனின் பொருளாதார நிலை என்பது திவ்யாவை விட மேலானதாக இருந்ததாகவே நாம் அறிந்தோம். இருந்தும் இளவரசனுக்கு நடந்ததை நாம் அறிவோம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஆணவ கொலையில் கூட அந்த பைய்யன் நல்ல பொருளாதார பின்னணியையும், கல்வியையும் கொண்டவனாகவே இருக்கிறான். இருந்தும் அவன் கொல்லப்பட்டான்.

நிலைமை இப்படியிருக்க மாரி படைக்கும் பரி சோற்றிற்கு வழியில்லாத, தனது பென்சாயல் கொண்ட கூத்தாடி தகப்பனை வண்டிக்காரராக புனையும் கதாபாத்திரமாக வடிவமைத்து சாதி ஹிந்துக்கள் நிஜத்தில் வைக்கும் புனைவான கருத்துருவாக்கத்திற்கு இவர் புனைவில் நிஜம் சேர்க்கிறார். sairat திரைப்படத்தின் மீதும் எனக்கு இதே விமர்சனம் உண்டு. ஆனால் sairat படத்தில் அந்த பையன் தனக்கு ஏற்பட்டுள்ளது காதல் என்று பிரகடனப்படுத்தும் தைரியத்தோடுவாது இருந்தான். மாரியின் பரி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டையும் உருளுதடி என்று கடைசிவரை காதல் என்ற வார்த்தையை குறிப்பாக மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் சொல்ல அஞ்சுகிறான்.

மூஞ்சில் மூத்திரம் விட்டதுக்கு revenge எடுக்க வகுப்பறை பெஞ்சில் பெயர் எழுதிவைப்பது, “FLAMES” விளையாட்டு விளையாடும் தேவதை சாதிஹிண்டு நண்பனிடம் கோபித்துக்கொள்வது, பெண்கள் கழிவறையில் தள்ளிவிட்டு தாழ்ப்போட்டு சிறுபிள்ளைத்தனமான ரௌடியிசம் செய்வது, சென்னை சட்டக்கல்லூரி வன்முறையை ஒத்த காட்சிகளை சம்மந்தமில்லாமல் ட்ரைலரிலும், படத்திலும் பயன்படுத்தியது, இளவரசனின் சாவிற்கு எந்தவகையிலும் நீதி கோராதா ஒரு கதையில் இளவரசனின் கதையை சாதி ஹிந்துக்கள் விசிலடிக்கும் வியாபாரமாக்கியது என்று எத்தனையோ பிழைகள், எரிச்சல்கள். இருந்தாலும் இறுதியாக பரிக்கும், ஜோவிற்குமான என்னவென்று பெயர்வைக்கமுடியாத அந்த உன்னதமான, புனிதமான, காவியமான, கலாபூர்வமான, ஸ்ஸ்ப்ப்ப்ப்பா உறவை மாரி மிகக்கவனமாக பெயரிடாமல் தன்னுடைய படத்தையும் மதித்து படம் பார்க்கவரும் சாதி ஹிந்துக்கள் கிஞ்சித்தும் டென்ஷன் ஆவாதபடி தவிர்த்துள்ளார்.

இறுதிக்காட்சியில் கூட அது என்னானு தெரியத்துக்குள்ளாற அத பிச்சு போட்டிங்களே பாஸு என்றுதான் பரி சொல்கிறானே தவிர ஆமாம் எனக்கு அவளை பிடித்திருக்கிறது அவளை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. மாரி கேட்கும் நீதி என்பது உங்கள் பெண்களை எங்கள் பையன்கள் காதலித்தால் என்ன தப்பு என்பதை அல்ல..மாறாக எங்கள் பையன்கள் சும்மா தமாஸுக்கு உங்கள் பெண்களிடம் பேசினால் கூட அடித்து எங்கள் மூஞ்சில் மூத்திரம் விட்டு உங்கள் மூத்திரத்தை வீண்செய்யலாமா? உங்களுக்கு எதாவது urinal infection வந்துவிடப்போகிறது என்கின்ற அக்கறையில்தான் சொல்கிறேன் என்கின்ற ரீதியில் படத்தை முடிக்கிறார்.

இறுதிவரியாக “நீங்கள் நீங்களா இருக்கிற வர நாங்க நாயா இருக்கணும்னு நீங்க நினைக்கிற வர எதுவும் மாறாது” என்ற வசனத்தை விட ஒரு ஆபாசமான வசனத்தை யாரும் எழுதிவிட முடியாது. இந்த வசனம் சாதிஇந்துக்களின் மனநிலையிலும் தலித்துகளின் மனநிலையிலும் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று மாரி யோசித்துதான் எழுதினாரா..என்னுமோ மயிரு போங்க..

காலாவில் ஒரு அசாத்தியமான பாய்ச்சலை நிகழ்த்தி, தலித் கலையிலக்கிய தளத்தில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிறுவிய ரஞ்சித் இந்தப் படத்தை தயாரித்துள்ளது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ரஞ்சித் அடிக்கடி “நான் கடினப்பட்டு இழுத்துவந்த தேரை முன்னிழுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பின்னுழுத்து விடாதீர்கள்” என்ற அம்பேத்கரின் வரியை மேற்கோள் காட்டுவார். தலித் கலையிலக்கிய தளத்தில் ரஞ்சித் ஒரு அடி முன்நகர்த்திய தேரை தலைவன் மாரி ஒத்தையாளாக 10 அடி பின்னிழுத்து விட்டிருக்கிறார்.

பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.

“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன?” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி?

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

“குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள? ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நினைவுக்கு வந்தது.

இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் கல்லூரியில் சேர்ந்தற்கு காரணம் ஒரு காங்கிரஸ் எம்.பி (அல்லது எம்.எல்.ஏ) என்று யதார்த்தமாக முகநூலில் எழுதியிருந்தார். இப்போதும் அப்படி வெள்ளந்தியாகவே ஒரு படத்தை இயக்கி உள்ளார். நாம் இந்தப் படத்தில் என்ன கதாப்பாத்திரமாக இருக்கிறோம் என்று எண்ணத் தோன்றும்.

2005 ஆண்டு நடைபெறும் கதை.திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயை வைத்துக் கொண்டு வேட்டையாடி பிழைப்பு நடத்தும் ஒரு தலீத் இளைஞன் சட்டம் படிக்க கல்லூரி செல்கிறான். அங்கு நடைபெறும் சம்பவங்களின் கோவைதான் ‘பரியேறும் பெருமாள்’ கதை.அது ஆண் பெண் இருவரும் படிக்கும் கல்லூரி. கல்லூரியில் சேரும் போது என்ன நிகழும்?

பரியேறும் பெருமாளுக்கு புரட்சிகர எண்ணமெல்லாம் இல்லை. SFI நடத்தும் மாணவர் போராட்டத்தை கடந்து செல்கிறான். மாஞ்சோலை போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. தன் கிராமத்து இளைஞர்களைப் போல அல்லாமல் தன்னை மோதுபவர்களைக் கண்டு விலகிச் செல்கிறான். கடலில் விழுந்த ஒரு கட்டுமரம் தப்பித்தவறி கரை சேர்வது போல சட்டக்கல்லூரியில் சேர்கிறான். முதலாமாண்டு அவனை ராகிங் செய்கிறார்கள்; மூன்றாம் ஆண்டு அவன் ராகிங் செய்கிறான். இந்தக் காலகட்டத்தில் நடக்கும் கதைதான் இது.

இவன் நண்பன் யோகி பாபு. அற்புதமான நடிப்பு. பரியேறும் பெருமாளாக நடிக்கும் கதிருக்கு ஈடாக நன்றாக நடித்து உள்ளார். யோகி பாபு என்ன சாதியாக இருப்பார் என்று படம் நடக்கும் போதே நம்மை யோசிக்க தோன்றுகிறது. இது இப்படத்தின் வெற்றி. யோகி பாபுவுக்கு தன் நண்பன் நன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எண்ணம் இல்லை. அவர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது ஆங்கிலம்தான்.

இக்கதையின் நாயகியுடன் அவன் பழகக் காரணம் ஆங்கிலம்தான். இவன் மீதுள்ள பச்சாதாபம்தான் அவளை பேச வைக்கிறது. கதையை நடத்தி செல்கிறது. ஆனால் அநியாயத்திற்கு ஒன்றும் தெரியாதவளாக இருக்கிறாளே ?

நம் சமூகத்தில் நடந்துள்ள எல்லா சாதீய ஒடுக்குமுறைகளும் இந்தப் படத்தில் வந்து செல்கின்றன. தடித்த வார்த்தைகளைப் பேசுவதால் இதனை கலைப்படம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். மனைவியோடு, நண்பணோடு, குடும்பத்தோடு ரசித்துப் பார்க்க கூடிய படம். சாதீயம் குறித்து உங்களுக்கு ஒரு தீவிரமான பார்வை இருந்தால் இதில் சொல்லப்படும் செய்திகள் விரிந்த பொருளை தரலாம். இல்லையென்றால் சாதாரணமான கதையாக உங்களுக்குத் தென்படலாம். பல ஆழமான செய்திகள் படிமங்களாக, போகிற போக்கில் சொல்லப்படுகின்றன.

இந்தப் படம் நம் முன் வைக்கும் எளிய கேள்வி? இந்த சமூக கொடுமையில் உங்கள் பங்கு என்ன? ஒரு ஊர்காரனாக, ஒரு நண்பணாக, அரசு இயந்திரம் போன்ற அதிகார மையங்களில் ஒரு துளியான உங்கள் பங்கு என்ன என்பதுதான். இது நம் ஒவ்வொருவரின் சமூக மனசாட்சியை பிடித்து உலுக்கும் கேள்வி.

சாதி இந்துவின் ‘செயற்பாட்டாளனாக’ வரும் பெரியவர். அப்பப்பா ஒரு வித்தியாசமான வில்லன். இதுவரை யாரும் பார்காத வில்லன். இவரைப் போன்றவர்களை நாம் எப்படி எதிர் கொள்வது? கதாநாயகியின் அண்ணனாக வருபவன் இந்த வில்லனின் வழித்தோன்றல்தான். சாதிக்காக உண்மையாக அழுகிறானே?

சமூக அழுத்தம் பரியேறும் பெருமாளை இயக்குகிறது. தன் தந்தை தன் கண் முன்னே படும் அவமானங்களை எதிர்கொள்ள வைக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு தேவதையாக ‘ கவிதா சொர்ணவல்லி’ போன்ற ஆசிரியர்கள் வருவார்கள். கல்லூரி முதல்வர்போல அமைதியாக உதவுவார்கள். தான் எதிர்கொள்ளும் சிறுமைகளை எதிர்கொண்டு முன்னேறுவான். அம்பேத்காரிய, மார்க்சிய, பெரியாரிய தத்துவங்களின் அமலாக்கத்தை இது போன்ற படங்கள் விரைவு படுத்தும்.

பீட்டர் துரைராஜ்; சினிமா-புத்தகங்கள் குறித்து டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார். 

பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

ஆணவக் கொலைகள் குறித்து செய்திகளில் பார்க்கும்போதும், படிக்கும்போதே அதன் கொடூரம் நடுங்கச் செய்யும். இதனாலே இந்த படத்தைப் பார்க்க தயங்கினேன். ஆனால், படத்தை திரையரங்கில் பார்த்தபோது ‘நல்லவேளை இவ்ளோ நல்ல படத்தை நான் தவறவிடவில்லை’ என்று நிம்மதி கொண்டேன்.

‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு’ – இப்படி முழுமையாக சொன்னால்தான் அம்மா சத்தியமா முழுமையாக இருக்கும். மனிதனை மிருகம் ஆக்க வேண்டும் என்றால் சாதி, இன, நிற பாகுபாடு என்ற மூன்று மந்திரம் போதும். எவ்வளவு படித்த மனிதனிற்குள்ளும் இந்த மிருகம் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய நிறத்தால் ஒரு மனிதன் கொல்லப்படுகிறான் என்பது எல்லாம் எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்று நான் பலமுறை யோசித்தது உண்டு. யாரும் கண்ணால்கூட பார்க்க முடியாத சாதியை சாமி மாதிரி வைத்து காப்பாற்ற எத்தனை கொலைகளும் செய்யத் துணிகிறான்.

இந்தப் படத்தில் கருப்பியின் மரண வீட்டிற்குச் சென்ற பார்வையாளர்களை தனக்குள் புதைத்து கொள்கிறார் பரியேறும் பெருமாள். இதனாலேயே படத்தின் மீதி முழுவதும் நாம் பரியாக வாழ்ந்து விடுகிறோம். சின்ன வயதில் இருந்தே எந்த குழந்தையிடமும் ‘என்ன ஆக போற?’னு கேட்டால், “டாக்டர், போலீஸ்” என்று சொல்லும்போது ‘ஏன் அப்படி ஆக வேண்டும்’ என்பதற்கு ஒரு பின் காரணமும் யோசித்து வைத்திருப்பர். இது சிறுவயதில் வேடிக்கையாக இருந்தாலும், அது அவர்களுக்குள் ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதுவே அவர்கள் வெறிகொண்ட லட்சியமாக மாறிவிடும். அப்படித்தான் இந்த ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பிஎல் மேல ஒரு கோடு’.

படத்தின் முதல் பாதியில் ஆங்கிலம் தெரியவில்லை என்று அவனை எவ்வளவு அவமானம் படுத்தும்போதும், அது தன்னுடைய இயலாமை என்ற ரீதியில் அதைக் கடந்து போகும் பெருமாள் தனக்கு புரிகிற மாதிரி சொல்லித் தரும் ஜோ தேவதையாக தெரிவதில் இருந்தே பிள்ளைகளுக்கு நடத்துவது புரிகிறதா என்ற புரிதல் கூட இல்லாத – அதைச் சிறிதும் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் தேவதைக்கு எதிர்பதமாக தான் இருக்கிறார்கள் என்பது உண்மை.

சாதி, சாமி என்ற இல்லாத எதை மனிதன் கொண்டாடும்போதும் அங்கே உயிர் பலி என்பது உறுதி. சாதி வெறி என்பது எல்லாம் சமுதாயத்திலும் ஊறிப் போய் இருக்கிறது என்பதற்கும் அதை வேறோடு அழிப்பது மட்டுமே வழி என்பதற்கும் சான்று படத்தில் வரும் முதியவர். அவரை திரையில் காணும்போது எல்லாம் நமக்கு நா வரண்டு ஒரு படபடப்பை உண்டு பண்ணுகிறார். யாரும் நினைக்காத வேலையில் அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு செல்லும்போது இதுவரை சாதி வெறியில் உயிரை பலி கொடுத்த பல காதல் ஜோடிகள் இப்படி ஓர் அரக்கன் கையில் நொடிப் பொழுதில் இறந்து இருப்பார்கள் என்று நினைக்கும்போது பதற்றம் ஏற்படுகிறது.

கொலை செய்வதைவிட கொடுமையானது, ஒருவரை அவமானப்படுத்துவது. அது அவர்களை மனதளவில் கொன்றுவிடும். கத்தியை விட கூர்மையான ஆயுதம் நாக்கு என்பர். ஆம், பலரை கூனி, குறுகி அடக்கி வைத்து இருப்பதும் சாதி வெறியில் உளவியல் துன்பம் கொடுத்து, அவனை சிந்திக்க விடாமல் நடுநடுங்க செய்வதும் இன்றளவும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்று சொல்லும் அரசுப் பள்ளிகள் சிலவற்றில் குழந்தைகளை சாதிய ரீதியில் அணுகி, கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படும்போதும் சீறிப் பாய்வது இல்லை. சட்டங்கள் எல்லாம் சாதியை ஒழிப்பதற்கு என்று அறிவு ஜீவித்தனமாய் பேசுவதும், சட்டம் எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று நம்புவதும் முட்டாள் தனம். உளவியல் ரீதியாய் கூட சக மனிதனை அவமானப்படுத்தாமலும், பாகுபாடு இல்லாமலும் பார்க்க முடிகிறதோ அன்று மட்டுமே சாதி ஒழியும்.

கூத்து கட்டும் நடன கலைஞராய் வரும் பெருமாளின் அப்பா எந்த இடத்திலும் தன்னுடைய தன்னம்பிக்கையையும், கலை ஆர்வத்தையும் விட்டு கொடுக்காத மரியாதைக்குரிய மனிதர். “உங்க அப்பாவ இன்னைக்கு நேத்தா அவமானப்படுத்துறாங்க” என்று சொல்லும் அம்மாவின் வார்த்தையில் இந்த சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பு, நம்பிக்கை எல்லாம் போய் வெறுமை மட்டுமே இருக்கிறது என்பது புரியும்போது நமக்குள் யாரோ செருப்பை கொண்டு அறைந்தது போல் இருந்தது.

கருப்பி ஓர் இனத்தின் அடையாளமாய், ஓர் உணர்வின் அடையாளமாய், ஒரு விடுதலையின் அடையாளமாய், ஒரு மாற்றத்தின் அடையாளமாய் என்றும் நமக்குள் சுற்றி வருவாள். முதல் காட்சியில் நாய்க்கு நேருவது தொடர்ந்து மனிதனுக்கும் நிகழும்போது அந்த இடத்தில மனிதன் எவ்வளவு கேவலமாய் சக மனிதனால் சாதி வெறிகொண்டு நடத்தப்படுகிறான் என்பது சாதி வெறி ஆட்டத்தின் உச்சம். எல்லா நிலையும் மாறும் என்று ஜோ வின் அப்பாவை போல நாமும் நம்புவோம் இப்போதைக்கு.

ஆணவக் கொலைகள், சாதிய பாகுபாட்டின் நீள அகல ஆழம் சொல்லும் இந்தப் படம் மனிதனை மனிதன் எவ்வளவு கேவலமாய் பார்க்கிறான் என்பதை காட்டும் ஒரு பாடம். பல வருடங்கள் கழித்து சாதி இல்லாத ஒரு சமூகமாய் இந்தச் சமூகம் மாறி இருந்தால் பல ஆணவக் கொலைகள் மறைக்கப்படாமல் அவர்கள் பட்ட துயருக்கு இது ஒரு சான்றாய் அமையும்.

கே. ஏ. பத்மஜா, சினிமா பத்தி எழுத்தாளர்.

‘மேற்குத் தொடர்ச்சிமலை’ கதாநாயகர்களை கண்டுபிடிக்க முடியாத ஒரு சினிமா: பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ் 

பீட்டர் துரைராஜ்

அண்ணாசாலையில் உள்ள தேவியில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தை பார்த்து விட்டு என் சகோதரருடன் பல்லாவரத்திற்கு திரும்பி வந்தேன்.வருகின்ற வழியில் தொடர்ந்து இந்தப் படத்தைப்பற்றி பேசி வந்தோம்.அதில் வரும் காட்சி அமைப்பு பற்றி, வசனம் பற்றி, கதை பற்றி,அல்லது கதை இல்லாதது பற்றி பல விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி வந்தோம்.

வீட்டிற்கு வந்தவுடன் இதில் யார் ஹீரோ என்று என் மகன் கேட்டான்.மொபைல் போனில் தேடித்தான் -அந்தோணி என்று சொன்னேன்.இதனை இப்போது எழுதுகையில் அதில் கைப்பை, குடையோடு எப்போதும் தென்படும் ‘ சாக்கோ’ தோழர்தான் ஹீரோ என்று தோன்றுகிறது.

வீதி நாடகம் என்று சொல்லுவார்கள்.இதனை வீதி சினிமா என்று சொல்லலாமோ? திரையில் வசனங்கள் ஒரு சில இடங்களில் பேசும்போது பார்வையாளர்கள் பேசுவது போல இருக்கிறது. இந்தப் படத்தை ஐந்தாவது முறையாக பார்த்துக் கொண்டு இருப்பதாக, படம் வெளிவந்த இரண்டாம் நாளே எழுத்தாளர் கொற்றவை முகநூலில் தெரிவித்து இருந்தார்.

மலை என்றால் சுற்றுலா, குளிர்,ஜாலி என்றுதானே நம் மனதில் தோன்றும். ஆனால் இப்படத்தில் தோன்றுவதோ எளிய மக்கள்; ஒப்பனை இல்லாத மக்கள்; கறுத்த மக்கள்; நடிக்கத் தெரியாத மக்கள். மூட்டை தூக்கும் தொழிலாளியாகட்டும்,கிராம பெரியவராகட்டும்,கங்காணியாகட்டும், நண்பனாகட்டும்; அனைவரும் ‘வெள்ளந்தியாக’ வந்து செல்லுகிறார்கள். படத்தில் வில்லன் என்று யாரையும் சொல்ல முடியுமா? இந்தச் சமுதாயத்தில் உள்ள விதிகளுக்கு உட்பட்டுதானே லோகுவும் உரம்,விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்கிறார்? இதில் அவரை மட்டும் குறை சொல்ல காரணம் என்ன? லோகுவை போன்ற ஒருவனை இந்தச் சமுதாயத்தில் நாம் சமூக அந்தஸ்து உள்ள மனிதராக பார்ப்பது இல்லையா?

மொத்தத்தில் இந்தக் கதை அழகாக நகர்கிறது.”மனதிற்குள் ஏனோ ஓராயிரம் எடைகளை சுமக்கும் ஒரு உணர்வைத் தருகிறது” என்று எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் கூறுவது உண்மைதான்.

அந்த ‘சாக்கோ’ தோழர் அற்புதமான பாத்திரம். இப்படத்தின் கதாநாயகன் அவராக கூட இருக்கலாம். மலையாளத்தில் இடுக்கி. மலைப்பகுதிகளில் தோட்ட தொழிலாளிகளோடு அன்றாடம் புழங்கும் சாக்கோ ஒரு அற்புதமான தோழன். அவன் தன் கைப்பையை எப்போது கீழே வைப்பான்? மக்களின் நலனே அவனுக்கு முக்கியம். அதனால்தான் கட்சியில் இருக்கிறான். கட்சித் தலைமை நெறி பிறழும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. எதிர்க்கக் கூடியஆன்ம பலம் அவனுக்கு இருக்கிறது. இவனைப் போன்றவர்களால்தான் கட்சி இருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அட்டை வைத்து இருக்கும் தோழர்களுக்கு இந்தப் பாத்திரம் மேலும் விரிந்த பொருளைத் தருமோ என்னமோ? இதனை மையமாக வைத்து ஒரு தனியான விவாதமே நடத்தலாம்.

கதாநாயகன் ரங்கசாமிக்கு நிலம் வாங்க வேண்டும். இதுதான் அவனுடைய ஆகப் பெரிய இலட்சியம். இந்த ஆசைதான் அவனை இயக்குகிறது.இது ஒரு எளிய மனிதனின் சாதாரண கனவு. அவன் மனைவி அவனோடு ஒத்திசைவாக வருகிறாள். நல்ல தேர்வு.

மலையில் இருக்கும் மக்களை நம் முன்னே காட்சிப்படுத்தி இருக்கிறார்.அதில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் முழுமை பெற்றவை.அவர்களின் ஒவ்வொரு வசனங்களும்,செய்கைகளும் விரிந்த பொருளைத் தருவன. மலையாளி , தமிழன் என்ற வேறுபாடு வேண்டாம்; இந்து- முஸ்லிம் ஒற்றுமை என்பதெல்லாம் போகிற போக்கில் வருகிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை,இயக்கத்தை லெனின் பாரதி செய்துள்ளார். இந்தப் படம் பார்த்து முடிக்கையில் லெனின் பாரதியின் அனுபவம் என்ன? வயது என்ன? அவர் எத்தனை மாதங்கள் இதனை மனதில் சுமந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது. அவரை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.இந்தப் படத்தை எடுத்தால் போட்ட பணம் திரும்பி வருமா என்ற நினைப்பு இல்லாமல் இதனை தயாரித்த விஜய்சேதுபதிக்கும் வாழ்த்துகள்.

சமூக வலைத் தளங்களால் இந்தப் படம் வெற்றி அடைந்து வருகிறது.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். சினிமா, இலக்கியம் குறித்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.

Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்

பீட்டர் துரைராஜ்

“ஹோமாசெக்‌ஷூவல்களை வக்கிரமான ரேபிஸ்டுகளாகவும் கொலைக்கார்களாகவும் மட்டும் ‘வேட்டையாடு விளையாடு’ படம் சித்தரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இறமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறது.ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல;அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளம் ஆகும்” என்று ஞாநி தனது ‘ஓ’ பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் எழுதினார்.

ஞாநி இருந்தால் பாராட்டும்படியான, லெஸ்பியன் உறவு குறித்த ஒரு ஆவணப்படம் Ladies and Gentle women தமிழில் முதலில்(2017) வெளிவந்துள்ளது.பெரியார் திடலில் ஞாயிறன்று அரசியல் ஆவணப்படங்கள் (Political Documentaries ) என்ற முழுநாள் நிகழ்வை ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் இந்த 44 நிமிடப்படம் திரையிடப்பட்டது.

இயக்குநர் மாலினி ஜீவரத்னம்

தன்பாலின உறவு ஒரு நோயல்ல என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவித்து உள்ளது. தன்பாலின உறவு குற்றமா என்ற விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் லெஸ்பியன் தொடர்பான உறவுகள் வெளிப்படையாக பேசப்படும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. எனினும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக தற்கொலைகள், கொலைகள நிகழ்கின்றன; ஆனால் அவை விபத்தாக காட்டப்படுகின்றன.

இந்தச் சூழலில் தன்பாலின உறவு பற்றிய இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.பொது புத்தியை மாற்றுவதில் இந்த திரையிடல்கள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன.

இந்தப் படத்தை இயக்கிய மாலினி ஜீவரத்னம் தன்னை லெஸ்பியன் என அறிவித்துக்கொண்டவர்.  தான் எதிர்கொண்ட சமூக புறக்கணிப்பின் வெளிப்பாடுதான் இந்த ஆவணப்படம் ‘ என்று திரையிடலில் கலந்து கொண்டு மாலினி பேசினார்.

“இந்தப் படத்தில் தன் பாலின உறவு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது செய்நேர்த்தியிலும்; பின்னணி குரல், இசையிலும் நன்றாக உள்ளது.” என்று அமுதன் கருத்து தெரிவித்தார். இந்தப் படத்தில் பொதுமக்கள், ஆய்வாளர், உளவியலாளர்கள் என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காதலும் இயல்பாக,அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இதனை தயாரித்து உள்ளார். DYFI யும், காரைக்குடி கம்பன் கழகமும் மாலினிக்கு விருது கொடுத்துள்ளன.அனைவரும் இந்தப் படத்தை பார்க்கலாம். வாழ்த்துகள் மாலினி.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்

ப. ஜெயசீலன்

spoilers எதுவும் இல்லை..தைரியமாக படிக்கலாம்.

art (கலை)
“the expression or application of human creative skill and imagination, typically in a visual form such as painting or sculpture, producing works to be appreciated primarily for their beauty or emotional power”
அழகியல் சார்ந்தும், உணர்வெழுச்சி சார்ந்தும், ஓவியம்/சிற்பம் முதலான காட்சி வடிவங்கள் பிரயோகித்து/துணைகொண்டு வெளிப்படும் மனிதர்களின் படைப்பு திறன் மற்றும் கற்பனை திறன்.

மேல்சொன்னது கலை என்பதற்கான வரையறை. ஒரு பொருள்/வெளிப்பாடு எப்படி/எதனால் கலையாக மாறுகிறது?. ஒரு படைப்பு கலையாக மாறுவதற்கு காலம்/வெளி (time and space) முக்கிய காரணியாக விளங்குகிறது. இரண்டு உதாரணங்கள். நீங்கள் தினமும் அணியும் ஜீன்ஸ் பேண்டுக்கு தற்காலத்தில் எந்த கலாபூர்வ அந்தஸ்தும் கிடையாது. அது வெறும் அழுக்கு ஜீன்ஸ். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அகழ்வாராய்ச்சியில் உங்களது ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அது விலைமதிக்க முடியாதா புராதான கலை பொருளாக அது கருதப்படும். இங்கு அதன் கலைத்தன்மையை “காலம்” தீர்மானிக்கிறது. உங்களது குழந்தை தினமும் பேப்பரில் நிறைய வரைகிறார்கள். நீங்கள் அதை கலை பொருளாக பார்ப்பதில்லை. ஆனால் ஈழ இறுதியுத்தத்தில் அங்கு சிக்குண்டு இறந்த குழந்தைகளின் கிறுக்கல்களை நீங்கள் ஒரு கண்காட்சியாக்கினால் அங்கு வருபவர்களின் பார்வையில் அந்த கிறுக்கல்கள் அற்புதமான ஓவியங்களாக தெரியும். இங்கு அதன் கலைத்தன்மையை தீர்மானிப்பது யுத்தத்தில் இறந்த குழந்தைகளின் கிறுக்கல்கள் காட்சியாக்கப்பட்டிருக்கும் அந்த அரங்க “வெளி”. ஒரு வெளிப்பாடு எப்படி கலையாக, கலைக்கான மதிப்பை பெறுகிறது என்று இப்பொழுது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதன் அடிப்படையில்தான் “காலா” அற்புதமான கலை படைப்பாக விஸ்வரூபமெடுக்கிறது.

“காலா” இதுவரை வந்த எல்லா ரஞ்சித் படங்களை போலவே பல்வேறு தளங்களில் விரிகிறது. ரஞ்சித்தின் யுக்தி என்பது ஒரு கதையின் ஊடாக வெவ்வேறு தளங்களில்,வெவ்வேறு அரசியல்/நம்பிக்கைகள்/கலாச்சாரம்/பின்னணி கொண்டவர்களிடம் வெவ்வேறான உரையாடல்களை நிகழ்த்தும் சாகசம். ரஞ்சித் மிக லாவகமாக காலாவிலும் இதை செய்கிறார். உதாரணத்திற்கு “கபாலி”யை நீங்கள் ஒரு action drama என்ற வகைமைக்குள் கண்டு களிக்க விரும்பினால் உங்களால் அதை எளிதாக செய்ய முடியும். நீங்கள் அதே படத்தை தலித்திய அரசியல் பேசும் படமாகவும் பார்க்க முடியும். ஒரே படத்தின் ஊடாக ரஞ்சித் பல்வேறு தளங்களில் தனது பார்வையாளனிடம் காத்திரமாக விவாதிக்கிறார். இது அவரது உள்ளடக்கம் சார்ந்த கதை சொல்லும் முறை. இதை தவிர்த்து இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு,அரங்கமைப்பு என்று அவரது படங்கள் பல்வேறு தளங்களில் மிக நுட்பமான கலாபூர்வமான வெளிப்பாட்டு தளங்களில் இயங்குகிறது. நான் நம்புவதை போலவே இந்திய தலித்துகள் அமெரிக்க கருப்பினத்தவரின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று ரஞ்சித் நம்புகிறார். நான் நம்புவதை போலவே ரஞ்சித்தும் அமெரிக்க கருப்பினத்தவரின் எழுச்சியில் அவர்களின் கலைவடிவங்கள் பெரும் சமூக பண்பாட்டு புரட்சிக்கு உதவின என்று நம்புகிறார். அதனால்,அவரால் தனது திரைப்படங்களின் ஓவ்வொரு துறையையும் கூர்மையான கத்தியை போல பயன்படுத்த முடிகிறது. காலாவில் அவர் மிக நுட்பமாக, ஒரு மனோநல மருத்துவரின் சாமர்த்தியதோடு தனது கருத்துக்களை தனது பார்வையாளனுக்கு கடத்துகிறார். பேச நிறைய இருக்கிறது. ஆனால் அவரின் “காலா” பேசும் சமகால காவி அரசியல் பயங்கரவாதத்தை எப்படி time/space துணைகொண்டு ஒரு முக்கியமான கலைபடைப்பாக மாற்றியிருக்கிறார் என்பதை பற்றி மட்டுமே இந்த கட்டுரை.

இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டு, அமெரிக்கா தாலிபான்களுக்கு எதிரான போரை அறிவித்த காலத்தில் மேற்கத்திய செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அரபு மொழி பேசும், தாடி வளர்த்து, தொப்பி அணிந்த தாலிபான் தீவிரவாதிகளை காட்டி வந்தார்கள். தீவிரவாதம் பற்றிய செய்தியோ, தீவிரவாத தாக்குதலோ உலகின் எந்த மூலையில் என்ன காரணத்திற்கு நடந்தலும் அந்த செய்தி ஒளிபரப்பாகும்போது அரபு மொழி பேசும் தாடி,தொப்பி அணிந்த யாராவது அல்லது பின்லேடன் பேசும் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. இதன் மனோவியல், உளவியல் தாக்கங்கள் இன்றுவரை மேற்கத்திய நாடுகளில் தொடர்கிறது. இஸ்லாமிய அடையாளத்துடன் யாரிருந்தாலும் அவர்களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி வெறுக்கும், அஞ்சும் நிலை மேற்கத்திய சமூகங்களில் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் போன்ற மிக முற்போக்கான நாடுகள் கூட பொது இடங்களில் பர்தா அணிய சென்றாண்டு தடைவிதித்ததை நாம் பார்த்தோம். இதுதான் காட்சி ஊடகங்களின் வலிமை. காட்சி ஊடகங்களில் நாம் பார்க்கும் காட்சிகள் நாம் நினைத்து பார்த்திராத மனோவியல் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஒரு காட்சி ஊடகத்தை கையாளும் திறன் பெற்ற ஒருவரால் ஒரு சாமானியனை வெகு லாவகமாக manipulate செய்ய முடியும். கமலின் விஸ்வரூபம் அதற்கு ஒரு classic example. படத்தின் தீவிரவாத காட்சிகளின் போது இஸ்லாமியரின் வேண்டுதல் முறையை/இசையை ஒரு பின்னணி இசைபோல பயன்பட்டிருக்கும். அதுபோன்ற காட்சிகளை பார்க்கும் பார்வையாளனுக்கு படம் முடிந்து வெளிவந்த பின்பும் அந்த நமாஸ் இசை ஆழமாக பதிந்திருக்கும். அவரது தெருவில் தொழுகை செய்யும் இஸ்லாமியரை பார்த்தாலோ, தொழுகை ஓசை கேட்டாலோ இயல்பாக அவர்களது மனதின் ஓரத்தில் அதை தீவிரவாதத்தோடு தொடார்புபடுத்தும், அச்சம்/வெறுப்பு கொள்ளும். காலம் காலமாக இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் தலித்துகளுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும், பெண்களுக்கும் எதிராக தெரிந்தும்/தெரியாமலும் மிக நுட்மாக நடத்தப்பட்டு வந்த இது போன்ற உளவியல் தாக்குதலை ரஞ்சித் முறியடித்ததோடு நில்லாமல் காலாவில் வலுவான எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இந்தியாவில் சம காலத்தில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பார்ப்பனிய அடிப்படைவாத ஹிந்துத்வ பாசிஸ்டுகளுக்கு எதிரான குரல்கள் ஓவ்வொன்றாக விலைக்கு வாங்கப்படுகின்றன, அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கொன்று மௌனிக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு வடிவங்கள் முழுமையாக அவர்களால் கையகப்படுத்தப்படுகின்றன, பட்டிருக்கின்றன. தலித்துகளின் சேரிகளில் புட்டு விரும்பி சாப்பிடும் பிரம்மாண்ட விநாயகர்கள் தொந்தி தள்ளி உட்காந்திருக்கிறார்கள். நாடார், தேவர், கவுண்டர் என்று தமிழ்நாட்டின் சாதிகள் பார்ப்பனிய மதத்தின் முன் மனமுவந்து மண்டியிட்டு நிற்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. உண்மையை சொல்ல வேண்டுமானால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக்தின் கலாச்சார பண்பாட்டு தளத்தில் பார்ப்பனியம் வலுவாக காலூன்றியிருக்கிறது. இந்த “கால/வெளியில்” தான் காலா தனது எதிர்பரசியல் மூலம் தன்னை ஒரு முக்கியமான கலைபடைப்பாக நிறுவிக்கொண்டுள்ளது.

காலா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர் ரஞ்சித்

ரஞ்சித் இதில் குறியீடாக எதையும் பேசவில்லை. மிக நேரடியாக காவிகளின் புனித பிம்பமான ராமரை எதிர்கொள்கிறார். விஷ்ணுவின் இன்னொரு பெயரான “ஹரி”யை தனது பெயராக கொண்ட, விஷ்ணுவின் அவதாரமான ராமரை பூஜிக்கும் ஹரி தாதா ஒரு சில்லறைத்தனமான சைக்கோ மண்டையனாக, தனது புனித நூல்களின் வழி(வால்மீகி எழுதிட்டாரு..கொன்னுதானே ஆகணும்) கொன்றொழிப்பதையும், ராமருக்கு பூஜை செய்வதையும், அதிகாரம் என்பதை மற்றவர்களின் உரிமையை பிடுங்கி அடையும் சந்தோஷமாக கருதிகொள்ளும், நவீன சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல் இன்னமும் தனது மூதாதையர்களின் கத்தியை துரு பிடிக்காமல் பார்த்து கொள்ளும் ரத்தவெறி பிடித்த சில்லறை பயலாகவும் ரஞ்சித் கையாண்டு இருக்கிறார். ஹரிதாதவின் உளவியல் மிக நுட்பமாக பார்ப்பனிய கருத்தாக்க உளவியலை உள்ளடக்கியதாக இருக்கிறது. சரினா கதாபாத்திரத்தை ஹரி தாதா காலில் விழ எதிர்பார்க்கும் காட்சியில் ஹரிதாதாவின் முகத்தில் தெரியும் ஒரு sadistic ஏக்கம் பார்ப்பனிய கருத்தாக்கத்தின் nutshell என்று சொல்லலாம்.

ஹரிதாதாவின் கோமாளித்தனங்களை, சைக்கோத்தனங்களை பார்க்கும் அதே வேளையில் நாம் ஹரிதாதாவின் எதிர் வடிவமான காலா கதாபாத்திரத்தை பார்க்கிறோம். அம்பேத்கரின், புத்தரின், லெனினின், பெரியாரின் அடையாளங்கள் சூழ அடையாளப்படுத்தப்படும் காலா பிறரின் சுயமரியாதையை மதிப்பவனாகவும், சுயமரியாதையை வலியுறுத்துபவனாகவும், கடைபிடிப்பவனாகவும் இருக்கிறார். பார்பனீயத்துக்கு எதிரான எல்லா கருத்தாக்கங்களின், சிந்தனைகளின் தொடக்கமும்/மையமும் இந்த புள்ளிதான். காலா கதாபாத்திரமும் அதன் கண்ணியமான செயல்பாடுகளின் மூலம் நமக்கு ஹரி தாதா ஒரு சில்லறைத்தனமானவர் என்றே உணர்த்துகிறது. மிக குறிப்பாக வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்டு, அதிகாரத்தின் துணைக்கொண்டு ஹரி தாதா தனது பாதக செயலை செய்து கொண்டிருக்கும் போது ராமரை பூஜித்து கொண்டிருப்பதும், அந்த பூஜை காட்சிப்படுத்தபட்ட முறையும் தான் ரஞ்சித் காவிகளின் மீது நிகழ்த்திய வலுவான மனோவியல் தாக்குதல். காலா பார்த்தவர்களுக்கு இனி ராமரின் சிலை என்பது ஹரி தாதாவை சில மாதங்களுக்காவது நினைவுபடுத்தும். ஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது. ரஜினி என்னும் நட்சத்திரத்தை இயக்கக்கிடைத்த வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி சமகாலத்தில் சொல்லியே தீரவேண்டிய கருத்தை, சொல்லியே தீரவேண்டிய அரசியலை சொல்லி தனது அரசியலுக்கும்/கலைக்கும் மீண்டுமொருமுறை உண்மையாய் நடந்திருக்கிறார்.

இதனை தவிர்த்து காலா, சரினா இடையிலான அந்த restaurant காட்சி தனிப்பட்ட முறையில் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்ட்ட matured காதலர்களுக்கு இடையேயான private conversation மற்றும் காதல் காட்சிகளிலேயே one of the best என்பது எனது எண்ணம். அந்த இருவருக்குமான காட்சிகளில் வழியும் காதல் மிகவும் sensual and romantic.

காலாவில் இன்னும் பாராட்ட பல்வேறு தளங்கள் குறிப்பாக பெண்கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட முறை, மிக கவித்துமான அழைப்பை பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயங்கங்களுக்கு பறையிசையோடு விடுக்கும் இறுதிக்காட்சி, காலாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே படம் நெடுகிலும் விரியும் உறவு/நட்பு, இசை/பாடல் அரசியல்(சந்தோஷ் நாராயணன் பெருங்கலைஞன்) என்று நிறைய இருக்கிறது. சில குறைகளும் இருக்கிறது. ஆனால் considering the time and space without any doubt kala establishes itself as a terrific piece of art work and ranjith once again proves himself as a kick ass director.

அம்பேத்கரின் கருத்தியல் தாங்கி நிற்கும் வேங்கை மவன் ரஞ்சித் ஒத்தைல நிக்கான். கம்பீரமாக.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

நடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை

மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

நடிகையர் திலகம் படம் பார்த்தேன். என் இளம் வயதில் நான் கண்ட மறக்க முடியாத புகைப்படங்களில் ஒன்று நடிகை சாவித்ரி கோமா நிலையில் எலும்புக்கூடாக கிடக்கும் கோலம். அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்ச்சி இப்போதும்கூட மனதில் மிஞ்சியிருக்கிறது. சாவித்ரியின் கதையை காட்டுகிறது நடிகையர் திலகம். நான் வெகுநாட்களுக்குப் பிறகு கண்டு மனம் கசிந்த ஒரு திரைப்படம். இது ஒரு ஒரு நடிகையின் கதை அல்ல. வாழ்வில் எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு சென்று அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்த ஒரு கலைஞரின் கதை. இந்திய சினிமாவில் பல கலைஞர்களின் கதையும் இதுதான்.. போராட்டம், வெற்றி, காதல், துரோகம், அவமானம், சுய அழிவு என சாவித்ரி கடந்துவந்த அத்தனை பரிமாணத்தையும் இந்தப்படம் தொட முயற்சிக்கிறது. தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் ஆதிக்கங்களின் நடுவே தன் தனித்துவமான இருப்பை நிறுவியர் சாவித்ரி.

சாவித் ரியின் கதையை அந்தக் காலகட்டத்தின் துல்லியமான பின்புலத்தில் இயக்குனர் சொல்ல முயற்சிக்கிறார். சாவித்திரி யின் படங்களின் காட்சிகளோடு திரைக்கதையும் எடிடிங்கும் நகர்ந்தது செல்கிறது . ‘ சிவக்குமார் என்ற ஒரு புதுப்பையன் நடிக்க வந்திருக்கான்’ என்ற வசனத்தைக் கேட்கும்போது காலம் குறித்த ஒரு மெல்லிய அதிர்ச்சி புன்முறுவலை ஏற்படுத்துகிறது. சாவித்திரி போன்ற ஒரு ஆற்றல் மிகுந்த நடிகையின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு சவால். கீர்த்தி சுரேஷ் அந்த சவாலை ஏற்று சாவித்ரியை மறுவார்ப்பு செய்கிறார். துல்கர் சல்மான் தன் அழுத்தமான நடிப்பால் ஆக்ரமிக்கிறார். ஆனால் துல்கரின் குரலும் உடல்மொழியும் அதிகப்படியான ஆண்மைத்துவம் கொண்டது. பெண்மை மிளிரும் ஜெமினி கணேசன் குறித்த நம் பிம்பத்தோடு துல்கரை பொருத்திக்காண முடியவில்லை.

சாவித்ரி போன்ற ஒரு புகழ்படைத்த பெண்ணின் கணவனாக இருப்பதன் மனச்சிக்கல்கள் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் வழியே துல்லியமாக பதிவாகிறது. ஜெமினி கணேசன் கலை வாழ்வில் சிவாஜி கணேசனிடம் தோல்வியடைகிறார். சாவித்திரியிடம் ஆளுமை சார்ந்து தோல்வியைச் சந்திக்கிறார். சாவித்ரி யானைமேல் ஏறி ஊர்வலம்போகும்போது ஜெமினியைப் பார்த்து ‘ யானையேற பயப்படுகிறார்’ என பெண்கள் கேலி செய்வதும் சாவித்ரி ‘ என்னால்தான் நீங்கள் குடிக்கிறீர்களா?” என்று கேட்கும்போது ‘ என் தோல்விக்கும் நீதான் உரிமை கோருவாயா? ‘ என்று ஜெமினி பொங்குவதும் நேர்த்தியான இடங்கள். ஜெமினியும் சாவித்திரியும் ஒருவர் மற்றவரின் மனோரீதியான வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள். இது அப்படித்தான் நிகழ முடியும்.

படத்தில் சாவித் ரியின் போதை மறுவாழ்வு மையம் தொடங்கும் முயற்சிகள், சாவித் ரியின் கதையை தேடிச்செல்லும் பத்திரிகையாளரின் காதல் கதை எல்லாம் படத்தை சற்றே நலிவடையச் செய்கின்றன. சாவித் ரியின் கதையை ஒரு காவிய துயரமாக காணும் க்ளைமாக்ஸை நோக்கிச் செல்வதற்குப் பதில் இயக்குனர் பிற்பாதியில் சற்றே தடுமாறுகிறார்.

சாவித்ரியின் வெற்றி ஆண்களால் ஆளப்பட்ட ஒரு துறையில் மேல் எழுந்து வந்த ஒரு பெண்ணின் வெற்றி. சாவித்ரியின் தோல்வி மாபெரும் கலைஞர் ஒருவர் வாழ்வின் தீவினைகளோடு ஆடிய சூதாட்டத்தின் தோல்வி.

நடிகையர் திலகம் நீண்ட காலம் நெஞ்சில் நிற்கும் ஒரு படமாக இருக்கும்.

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“தோழர்களே!

நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்.

நமது இந்த முயற்சியை முறியடிக்க,தொடர்ச்சியாக தலித் விரோத இந்துத்துவ சக்திகள் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன.

ஒருசில தற்குறி தலித்களை வைத்து ‘லெட்டர் பேடு’ அமைப்புகளை உருவாக்கி தங்களது அடிமைகளாக வைத்துக்கொள்வதை நாம் அறிவோம். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக போஸ்டர் போடுவது, நமது அமைப்புக்கு எதிராகப் பேசுவது என பச்சைத்துரோகத்தைச் செய்து வருகிறார்கள். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

இன்று தலித்துகளுடைய இந்தத் திரட்சி நமது போராளித்தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்
அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சாதிய- இந்துத்துவ
சக்திகள் கவனமாக உள்ளனர். இதற்கென கோடிக்கணக்கில் செலவு செய்து நம்முடைய அணி திரட்சியை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர்.

அதில் ஒன்று தான் சினிமாவைப் பயன்படுத்தும் உத்தியாகும். தலித் மக்களின் கதை போல அடையாளப்படுத்தும் முயற்சியாகும். இதனை நாம் எச்சரிக்கையாக அணுகவேண்டும்.

இந்த எச்சரிக்கை உணர்வோடு தான் நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் ‘காலா’ படத்தின் பின்னணி அரசியல் குறித்து எழுதினார்.இது இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிரானது என்று நமது தோழர்கள் புரிந்துகொண்டதுதான் வேதனைக்குரியதாகும்.

அண்ணன் ரவிக்குமார் அவர்கள் நமது இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற ஒரு அறிவுச்சொத்து.
எழுச்சித்தமிழரின் தோளோடு தோள் நிற்கும் நம்பிக்கைக்குரிய தோழமை. மிகச்சிறந்த
தலித் ஆளுமை. அப்படிப்பட்டவரைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.

தலித் விடுதலை பயணம் இன்னும் இன்னும் போராடி பெற வேண்டியிருக்கிறது. ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.அதை நோக்கி பயணம் செய்வோம். ரசிக மன நிலை தலித் விடுதலைக்கு
எதிரானது. சினிமாவை சினிமாவாக பார்ப்போம், ரசிப்போம்!”

’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு நியாயம் இருக்கு, காஞ்சி மடாதிபதிக்காக ஏன்?” என கேட்டுள்ளார்.

சமூக-அரசியல் விமர்சகர் ராஜசங்கீதன், ராக்கெட் அறிவியலுக்கு எலுமிச்சை பழத்தை வைக்கிற முட்டாள்தனம் போன்றது தனுஷின் அறிவிப்பு என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வந்த விமர்சனங்கள் சில இங்கே…

 

“அருவி”யே அழகியே!

ப.ஜெயசீலன்

In a mature state of mind we don’t see anything as black or white…we start seeing the grey shades..அருவிக்கு மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பகுக்க போதுமான அனுபவங்களை வாழ்க்கை அளித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லா மனிதர்களுமே இங்கு கெட்டவர்கள் தான் என்ற முடிவை அடைய அவளுக்கு போதுமான காரணம் இருக்கிறது . ஆனால் அழகி அருவி மனிதர்களின் நல்லவை,கெட்டவை தாண்டிய சாம்பல் நிறத்தை தேடி ஆராய்ந்து, அவர்களுக்குள் அவர்களே கண்டடையாமல் இருக்கும் பரிசுத்தமான அன்பை கண்டடைந்து அவர்களுக்கு பரிசாய் தருகிறாள்.

அருவி சமீபத்தில் நான் பார்த்த அல்லது இதுவரை நான் பார்த்த தமிழ் சினிமாவிலேயே ஒரு அற்புதமான முயற்ச்சி, சினிமா. இப்படி எனக்கு தோன்ற முதன்மையான காரணம் தமிழ் திரை இயக்குனர்களுக்கு அரிதாய் கைகூடும் politically and morally correct என்னும் புரிதல் அருவி திரைப்படத்தின் இயக்குனருக்கு அருவியில் கைகூடியிருக்கிறது. அருவியின் இயக்குனர் இந்த சமூகத்தால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட, கவனிக்கப்படாதா, புரிந்துகொள்ளப்படாதா HIV பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, நேர்மையோடு ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

அந்த நோய்பற்றிய விழிப்புணர்வுக்காக நமது அரசாங்கம் பெரும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நோயை பயமுறுத்தும் பொருளாக,shock value காக இயக்குனர் பயன்படுத்தாமல், மிக கவனத்தோடும், பொறுப்புணர்வோடும் பிரச்சாரத்தொனியில்லாமல் HIV பாதித்தோரின் பக்கம் நின்று ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

அந்த திரைக்கதையின் ஊடாக வாழ்க்கையை பற்றிய, மரணத்தை பற்றிய தத்துவவிசாரணையாக அருவி விழுகிறது. end of the day all we need is to stay alive and to be loved. எல்லா உயிரினங்களின் அடிப்படை தேவையும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டும்தான் உயிரியலின் அடிப்படையாக இருந்து எல்லா ஜீவராசிகளையும் இயக்குகிறது. ஆனால் இவை இரண்டுமே நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகவும், பல்வேறு புறக்காரணிகளாலும், நிச்சயமற்ற தன்மைகளாலும் இயக்கப்படும்/கட்டுப்படுத்தப்பட்ட விஷயங்களாவும் இருக்கின்றன. இந்நிலையில் நாம் நம்மோடு இருப்பவர்களிடம் நமது குறைந்தபட்ச அன்பையும், அரவணைப்பையும் எப்போதும் பகிர்ந்துகொள்வதின் மூலமே நிச்சயத்தன்மையற்ற இந்த வாழ்வை அர்த்தத்தோடு கடக்க முடியும். அதைத்தான் அருவி மிக மென்மையாக வலியுறுத்துகிறாள்.

மிக எளிமையான ஆனால் ஒரு கவித்துமான திரைக்கதையாய் அருவி அமைந்திருக்கிறது. மிக எளிமையான சம்பவங்களை மிக உணர்வுப்பூர்மான ஒன்றாக மாற்றும் லாவகத்தை இயக்குனர் அருவியின் திரைக்கதையில் செய்திருக்கிறார். பெயர் தெரியாத பனியாராகாரம்மா கதையும், ks ரவிக்குமார் பாணி கதை என அருவி உதாசீனப்படுத்தும் கதையையே இறுதி காட்சியை அமைத்ததும் என்ன எளிய ஆனால் effective திரைக்கதையாய் அமைந்திருக்கிறது. பார்ப்பனிய தனத்தின், ஹிந்துத்வ அடிப்படைவாதத்தின் மீதான பிரச்சாரமற்ற விமர்சனத்தின் (இது நான் உணர்ந்தவை மட்டுமே) மூலம், பச்சாதாபத்தை கோராமல் இயல்பாக இன்னொரு மனுஷியாய் உலவும் திருநங்கை கதாபாத்திரம் என இயக்குனரின் சமூக/அரசியல் பார்வையும் வெளிப்படுகிறது.

அருவியின் இயக்குனர் நவீன திரைமொழியை மிக இயல்பாக கையாள்கிறார். குறிப்பாக ஒளிப்பதிவும், காட்சி அமைப்புகளும் சர்வேதச தரம் வாய்ந்தவை. எனக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு பிரமாண்டத்தை பற்றி உள்ள புரிதல் பற்றி எப்பொழுதுமே எரிச்சல் உண்டு. குறிப்பாக ஷங்கரின் படங்களில் வரும் கோமாளித்தனமான அற்ப அபத்தங்களை பற்றி தனியாக கட்டுரை எழுதலாம். உண்மையில் திரைப்படத்தில் பிரமாண்டம் என்பது பார்வையாளனுக்கு ஏற்படும் அகஎழுச்சியை சார்ந்தது. ஒரு காட்சியின் grandeur என்பதின் நோக்கமும் பார்வையாளனுக்கு அந்த அகஎழுச்சியை தருவதற்காகத்தான். அந்த வகையில் அருவியில் அருவி கதாபாத்திரம் மருத்துவமனை படுக்கையில் இன்னும் எவ்வளவு நாள் தான் உயிரோடு இருப்பேன் என்று கேட்கையில் அவளை attend செய்து கொண்டிருக்கும் வயதான, ஒடிசலான, தலைமுடி முற்றிலும் நரைத்து, சன்னமான பின்னல் போட்டிருக்கும் பெண் மருத்துவர் பின்னால் கேமரா டாப் ஆங்கிளில் அருவியின் மருத்துமனை கட்டிலை நோக்கிருக்க அந்த மருத்துவர் சொல்லும் ” உனக்கென்ன நீ நல்லாத்தானே இருக்க..தைரியமா இரு” என்று அருவியிடம் சொல்லும் காட்சி என்னை பொறுத்தவரை ஒரு பிரமாண்டமான காட்சி அமைப்பு. இன்னொரு காட்சியை சொல்லவேண்டுமானால் அருவி தனது கூந்தலை அல்லிமுடிந்தவாறு corridorஇல் நடக்கும் காட்சி. மிக நுட்பமாக woman sensibilitiesஐ உள்வாங்கிக்கொண்ட ஷாட் இது. இது போன்ற எளிமையான ஆனால் மிக நுட்பமான கலாபூர்வமான காட்சிகளால் நிரம்பியிருக்கிறது அருவி.

விமர்சன பார்வையில் சில தர்க்கரீதியான கேள்விகளையும், திரைக்கதையின் intensityயை குறைக்கும் வகையில் அமைந்த சில நல்ல ஆனால் தேவையற்ற நகைச்சுவை காட்சிகளையும் சொல்லலாம். ஆனால் மொத்தமாக as a whole film aruvi comes out clean.

4,5 வருடங்களுக்கு முன்பு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அற்புத நடிகர் சான் பென் இயக்கிய In to the wild என்னும் திரைப்படத்தை ஒரு மதிய நேரத்தில் பார்த்தேன். அந்த படம் பார்க்கும் பொழுதோ அல்லது பார்த்து முடித்த பின்போ நான் பெரிதாக எதுவும் உணரவில்லை. ஆனால் படம் பார்த்து சில நாட்கள் கழித்து ஏன் இன்றுவரை அந்த கதையின் நாயகன் எடுத்த சில முடிவுகள் குறித்தும், அவனது கதாபாத்திரம் என்ன மாதிரியான மனோநிலைகளை கொண்டிருந்திற்கும் என்றும் நான் இன்றுவரை நான் யோசிப்பது உண்டு. அந்த படம் எனக்கு பிடித்த படம் என்று இல்லை. ஆனால் என்னை மிக ஆழமாக பாதித்த படம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு உணர்வுநிலைகளுக்கு அருவியும் என்னை அழைத்து சென்றது. அது போன்ற ஒரு அகயெழுச்சியை அருவியும் தமிழ் சூழலில் பலருக்கும் வழங்கியிருக்கும் என்றெ நம்புகிறேன். அருவியின் இயக்குனர் தான் அடைந்திருக்கும் political correct என்னும் statureஐ அடுத்து வரும் படங்களிலும் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நியாப்படுத்துவார் என்று நம்புகிறேன். அருவியின் போஸ்டர் டிசைன் தொடங்கி அருவியின் எல்லா பங்களிப்பாளர்களும் மிக சிறப்பாக தங்கள் பங்கை வழங்கியிருக்கிறார்கள். easily தமிழ் சினிமாவில் அருவி ஒரு முக்கியமான படம்.

அருவி அழகி. படத்தின் இறுதிக்காட்சியில் அருவியிடம் peter எழுதித்தந்தது எனக்கும் சேர்த்துதான். You are such a sweetheart. I love you aruvi.

ப.ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.

அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி

ப. ஜெயசீலன்

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பற்றி வந்த நேர்மறையான விமர்சனங்களினாலும், பாடல்களிலும் அதை காட்சிப்படுத்துவதிலும் இருந்த நவீன அணுகுமுறையின் காரணமாகவும் தூண்டப்பட்டு அந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன். நமது சமூகத்தில் நவீனத்துவம் குறித்தும், முற்போக்குத்தனம் குறித்தும் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு குதர்க்கமான, கோமாளித்தனமான புரிதலிருக்கிறது.

பிற்போக்குவாதிகளை பொறுத்தவரை மேற்கத்திய ஆடைகளை அணிந்து ஆங்கிலம் பேசுவதே ஒருவனின் நவீனத்தை அளவிடும் கருவி. சாதியின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்வதும், இந்தக்காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்வதும்தான் அவர்களுடைய முற்போக்குத்தனத்தின் எல்லை. அடிப்படை அரசியல், சித்தாந்த அறிவற்ற/புரிதலற்ற இயக்குனர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டம்தான் இந்திய/தமிழ் சினிமா. அந்த தோட்டத்தில் ஆந்திராவில் பூத்திருக்கும் இன்னொரு அரைகுறை தற்குறிதான் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டிகாரு. படம் பார்க்காதவர்களுக்காக சுருக்கமாக அர்ஜுன் ரெட்டியின் கதை.

அர்ஜுன் ரெட்டி மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ஆண்மை பிதுங்கி வழிந்து ஓடும் அழகோடும், திமிரோடும், துடிப்போடும், அறிவோடுமிருக்கும் ஒரு மிக பணக்கார இளைஞன். அவனுக்கு அடக்கம் ஒடுக்கமாக தெய்வீகத்தன்மையோடு பரதம் எல்லாம் ஆட தெரிந்த துளு பெண்ணான ப்ரீத்தி என்ற ஜூனியர் பெண்ணிடம் பார்த்ததும் காதல். ரெட்டிகாரும் ப்ரீத்தியும் முற்போக்கு நவீனவாதிகள் என்பதால் இரண்டுபேரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் காதலாகி கசிந்துருகி கலவிக்கொள்கிறார்கள். ப்ரீத்தின் வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிந்து டென்ஷனாகிறார்கள். ப்ரீத்தியின் அப்பா எல்லா சாதிவெறி கோமாளிகளை போலவே நம்ப சாதியென்ன பெருமையென்ன ரெட்டிகாருக்கெல்லாம் எனது பெண்ணை மணமுடிக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார். தனது பெயரிலேயே ரெட்டி என்னும் சாதிப்பேரை வைத்திருக்கும் அர்ஜுன் ரெட்டிகாரு ப்ரீத்தியின் அப்பாவின் சாதிவெறியை ஏசிவிட்டு, பிரீத்தியிடம் இன்னும் 6 மணிநேரத்தில் நீ குடும்பத்தை விட்டு என்னிடம் வா என்று சொல்லிவிட்டு சென்று morphine என்னும் போதையை ஏற்றி கொண்டு மட்டையாகிவிடுகிறான். நடுவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு ப்ரீத்திக்கும் வேறொருவருடன் திருமணமாகி 3 மாதம் கர்பமாகவும், ரெட்டிகாரு வெறித்தனமாக தண்ணியையும், கிடைக்கும் பெண்களையும் போட்டுகொண்டு காதல் தோல்வி விரக்தியில் இருந்து ஒருவழியாக மீண்டு, ஒருவழியாக 3 மாதம் கர்ப்பமாய் இருக்கும் ப்ரீத்தியை சந்திக்க ப்ரீத்தி சொல்கிறாள் வயிற்றில் வளர்வது உனது பிள்ளை, நான் எனது கணவனின் விரல் கூட என்மீது பட விடவில்லை என்று.இரண்டு நவீன புரட்சியாளர்களும் ஒன்று சேர்க்கிறார்கள்.சுபம்.

செய் நேர்த்தியும், அழகியலும், தொழில் நுட்ப தரமும் சிறப்பாக பங்காற்றியுள்ள இந்த படம் நெடுகிலும் சந்தீப் ரெட்டிகாரு எவ்வளவு அற்பமான/ஆபத்தான கருத்துக்களை உடையவர் என்பதும், நவீனம் என்னும் பெயரில்/புரிதலில் எவ்வளவு ஆபத்தான/அற்பமான கருத்துக்களை அவர் மீட்டுருவாக்கம் செய்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த இந்திய படங்களிலேயே கேட்ட மிக ஆபாசமான பொறுக்கித்தனமான வசனம் இந்த படத்தில்தான் வந்தது. ஒரு காட்சியில் அர்ஜுன் ப்ரீத்தியிடம் சொல்கிறான் “அழகான பெண்களுக்கு எப்பொழுதுமே அசிங்கமான குண்டான பெண்கள் நல்ல தோழியாய் அமைவார்கள். there is something about ugly fat chicks. அவர்கள் நாய்குட்டிகளை போல விசுவாசமானவர்கள்”. இதுதான் சந்தீப் ரெட்டிகாருவின் நிஜமான முகம். இந்த மேல்சொன்ன வசனத்தை அர்ஜுன் கதாபாத்திரம் ஏதோ கண்டடைதலுக்கரிய உண்மையை தான் அறிந்து வைத்திருப்பதை போல சொல்லும். ஒரு நல்ல திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு ஒரு consistency இருக்கும். ஒரு காட்சியில் இப்படி சொல்லும் அர்ஜுன் இன்னொரு காட்சியில் air india விமான பணிப்பெண்கள் ஆண்ட்டிகளை போல உள்ளதாக கிண்டலடிக்கும் ஒரு நண்பனிடம் பெண்களை objectify செய்வது தனக்கு பிடிக்காது என்று அறசீற்றம் கொள்கிறான்.

ப்ரீத்தியின் தந்தை தனது பெண்ணை வேறு சாதியில் திருமணம் செய்து வைக்கமுடியாது என்று சொன்னவுடன் டென்ஷனாகும் அர்ஜுன் கதாபாத்திரம் படம் நெடுகிலும் ஒரு சில காட்சிகள் தவிர்த்து தனது பெயரை வாய்நிறைய அர்ஜுன் ரெட்டி அர்ஜுன் ரெட்டி என்றே சொல்லிக்கொள்கிறது. ப்ரீத்தியின் அப்பாவின் சாதிப்பற்றை கேள்விக்குட்படுத்தும் அர்ஜுன் கதாபாத்திரம் தனது பெயரில் தொங்கும் ரெட்டி அடையாளத்தை கேள்விக்குட்படுத்தவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அர்ஜுன் ரெட்டி படத்தின் பல காட்சிகளில் நிச்சயதார்த்தம், திருமணம், இன்ன பிற சடங்குகள் மிக நேர்த்தியான பார்ப்பனிய ஹிந்துத்வ அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளில் அர்ஜுன் கதாபாத்திரம் அந்த சடங்கு சம்பிரதாயங்களை (என்ன இருந்தாலும் நம்ம culture பிரதர்) முழுவதுமாய் உள்வாங்கி அந்த சடங்குகளுக்கு உடன்படுகிறது. அதாவது பெயரில் சாதியை வைத்துக்கொண்டு, பார்ப்பனியத்தை கடைபிடித்துக்கொண்டு என்னஜி பெரிய சாதி மயிறுனு..மனுஷங்க தான் ஜி முக்கியம் என்று பிதற்றும் போலி முற்போக்குத்தனத்தின் திரை வடிவமே அர்ஜுன் கதாபாத்திரம். சாதியை ஒரு முரணாக வைத்து கதை செய்திருக்கும் சந்தீப் ரெட்டிகாரு தனது படத்தின் பெயரிலேயே ரெட்டியை தொங்கவிடுவது எவ்வளவு கோமாளித்தனம்?

அர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க செயல்பாடுகளும், முரட்டுத்தனங்களும் ரசிக்கத்தக்க சுவாரசியமான ஆண் கதாபாத்திரம் என்பதை நிறுவும் வகையிலேயே இயக்குனர் படைத்துள்ளார். ஒரு காட்சியில் அர்ஜுன் கதாபாத்திரம் அவனது தந்தையை விட வயது முதிர்ந்தவராக தெரியும் வீட்டு வேலையாளை “டே இங்க வாடா” என்று கத்தி அழைத்து தனக்கு போதைமருந்தை வாங்க மருந்தகத்திற்கு அனுப்புகிறான். இந்த காட்சி ஒரு இயல்பான நிஜமான காட்சி என்னும் கோணத்தில் அணுகப்பட்டிருக்கிறதே தவிர அர்ஜுன் கதாபாத்திரத்தின் சாதி ஹிந்து மனோநிலைதான் தன் தந்தையை விட வயதில் மூத்த ஒருவரை ‘டே’ என்று அழைத்து அவருக்கு கட்டளையிடும் அதிகாரத்தை தருகிறது என்பதை இயக்குனர்,வசனகர்த்தா ரெட்டிகாரு உணர்ந்தவராக தெரியவில்லை.

ப்ரீதியுடனான பிரிவிற்கு முழு காரணம் அர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க திமிரும், சாதி ஹிந்து மனோநிலைதான் என்று பார்வையாளர்களுக்கு தோன்றும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தாலும் இயக்குனர் ரெட்டிகாரு அர்ஜுன் கதாபாத்திரத்தை சாதி ஹிந்து ஆண்கள் தங்களை ரிலேட் செய்து கொள்ளும் வகையில் அமைத்ததினால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கியமான காரணம் அவர் அமைத்த இறுதிக்காட்சி. ப்ரீத்தி திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும், மூன்று மாதம் கர்ப்பமாய் இருந்தாலும், அவள் தன்னுடைய கனவனின் நிழல் கூட தன்மீது விழவில்லை என்று சொல்கிறாள். ஆணாதிக்க சிந்தனையில், பார்ப்பனிய சித்தாந்தத்தில் ஊறிய சாதி ஹிந்துவுக்கு இதைவிட என்ன பெரிய சந்தோசம் இருக்க முடியும்? உடனே அர்ஜுன் ப்ரீதியிடம் வா செல்லம் நாம போகலாம்..கலயாணமாவது வெங்காயமாவது என்று கூட்டி கொண்டு கிளம்புகிறான்.இதுதான் விமர்சகர்கள் நவீன சினிமா என்றும், முற்போக்கு சினிமா என்றும் அர்ஜுன் ரெட்டிகாருவை தூக்கிவைத்து கொண்டாட சொல்லும் காரணம். இதுவே முற்போக்குத்தனம் என்றால் ப்ரீத்தி கதாபாத்திரம் அர்ஜுன் நான் உன்னை நினைக்காத நாளேயில்லை..ஒவ்வொரு நாள் எனது கணவனை புணரும்போது நான் உன்னோடான புணர்தலுக்காகத்தான் ஏங்கினேன். எனக்கு பிறக்க போகும் குழந்தை உன்னை போலிருந்தாள் நான் ஆச்சர்யப்படமாட்டேன். உன்னை நினைத்து நினைத்து எனது கணவனை புணர்ந்து நான் மனதளவில் மிகவும் வெறுமையாக இருக்கிறேன். வா நாம் இனிமேலாவது ஒன்றாய் இருப்போம் என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன சொல்லியிருப்பார்கள்? படம் நமது கலாச்சாரத்தை சீரழிப்பதாய் உள்ளது என்று சொல்லியிருப்பார்கள். படம் ஊத்தியிருக்கும். எனவே சந்தீப் ரெட்டிகாரு ஒரு பக்குவமான ஹைதெராபாதி பிரியாணியை செய்வது போல சாதி ஹிந்துக்களுக்கான ஒரு பிற்போக்கு தனத்தை திரைக்கதையாய் வடித்திருக்கிறார். மேற்கத்திய ஆடைகளை அணிந்து, ஆங்கிலம் பேசி, ஆணாதிக்க மனோநிலையோடு, சாதியின்,பார்ப்பனியத்தின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்லும் அர்ஜுன் ரெட்டி, கல்யாணம் ஆன பின்பும் கற்போடு காத்திருக்கும் ப்ரீதியோடு இணைவது திரைப்படம் வெற்றியடைய போதுமானதுதான் இல்லையா?. அர்ஜுன் ரெட்டி படம் நெடுகிலும் ஆணாதிக்க சாதி ஹிந்து மனோநிலையில் கட்டமைக்கப்பட்ட காட்சிகளாகவே தொடர்ந்து விரிகிறது. மேல்சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் எரிச்சலூட்டக்கூடியவைகளாக அமைந்த விஷயங்கள் மட்டுமே. இவையில்லாமல் அந்த திரைப்படத்தை திரைக்கதை சார்ந்து, திரைக்கதை நிறுவும் அரசியல் சார்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்க நிறைய உள்ளது.

தெலுங்கு சினிமாவில் வலுபெற்றுவரும் அல்லது தொடர்ந்துவரும் பார்ப்பனிய அடிப்படைவாதம் கவலைக்குரியது. ஏனென்றால் தெலுங்கு சினிமா பாகுபலி போன்ற அசாத்தியமான வணிக சினிமாவின் மூலம் மிக லாவகமாவும், நேர்த்தியாகவும் பார்ப்பனிய அடிப்படைவாதத்தை நிறுவுகிறது, நியாப்படுத்துகிறது. அந்த திரைப்படங்களின் தாக்கம் தென் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தக்கூடிய வல்லமையோடு இருப்பது கவலையளிக்கிறது. தனது கடுமையான உழைப்பை தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்க கூடிய நடிகர் விக்ரம் இன்னபிற அரசியல் முதிர்ச்சியற்ற மற்ற தமிழ் நடிகர்களை போலவே மிக ஆபத்தான சமூக விரோத பிற்போக்கு படங்களில் நடித்தவர்தான். அவர் இப்பொழுது தமிழ் சினிமாவின் பிற்போக்கு சக்திகளில் முக்கியமான இடத்தை உரிமைகோரக்கூடிய படங்களை தொடர்ந்து தளராமல் இயக்கிவரும், சமூக அரசியல் பிரஞையற்ற, பெண்களுக்கு எதற்கு பேண்டில் ஜிப்பிருக்கிறது போன்ற வசனங்களை நகைச்சுவை என்று கருதக்கூடிய இயக்குனர் பாலாவை இயக்குனராய் கொண்டு அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தனது மகனை அறிமுகப்படுத்துகிறார் என்பது கவலைக்குரியது. நியமாக குப்பைத்தொட்டியில் எரிந்திருக்கக்கூடிய அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களுக்கு கிடைக்கும் வெற்றியும், அந்த படங்களுக்கு கிடைக்கும் முற்போக்கு லேபிளும் நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.

ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.

நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

The Dirty Picture | Milan Luthria | Hindi | 2011

அது ஓர் இரவு. நாங்கள் படுக்கைக்கு ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தோம். என் எட்டு வயது மகள் என்னருகில் படுத்துக்கொண்டு, “அம்மா, இந்த மாதிரி ஏன் உங்களுக்கு பெருசா இருக்கு? எனக்கும் நான் வளர வளர அது பெருசாகுமா?” என்று கேட்டாள். அவள் இப்படிக் கேட்பதும் நான் “ஆம்” என்று பதில் சொல்வதும் முதல் முறையல்ல. ஆனால், இந்த முறை அவள் அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். “ஏன் அப்படி வளருது? அதைப் பார்க்க அசிங்கமா இருக்குதுல்ல?” இம்முறை அவள் மனதில் உருவாகியிருக்கும் களையைக் கிள்ளிப் போட வேண்டியது கடமை என்று உணர்ந்தேன். உடனே அவளிடம், “நீ பிறந்தபோது உனக்கு சின்ன கைகள், கால்கள், விரல்கள் என்றுதான் இருந்தது. நீ வளர வளர உனது கை, கால் வளருவது போல மார்பும் ஓர் உறுப்பு அதுவும் வளர்கிறது. உனக்கு உனது கை, கால், பல் வளர்வது நினைத்து அசிங்கமா இருந்தது இல்லையே, அப்போ இதுவும் அசிங்கம் இல்லையே?” என்றேன். அவளுக்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்த திருப்தியில் கண்ணயர்ந்தேன்.

  • ‘தி டர்ட்டி பிக்சர்’ 2011 ஆம் ஆண்டு மிலன் லுத்ரியா இயக்கத்தில் வித்யா பாலன், நஸ்ருதீன் ஷா, துஷார் கபூர், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் வெளிவந்த இந்தி படம். மறைந்த கவர்ச்சி நடிகை ‘சில்க்’ ஸ்மிதா வாழக்கையைப் பற்றிய படம் என்றெல்லாம் பரவலாய் பேசப்பட்டாலும், ராஜ்த் அரோரா தனது கற்பனையையும், சினிமா வட்டத்தில் தங்கள் வாழக்கையை தொலைத்த பல முன்னணி நடிகைகளின் உண்மை நிலையின் வெளிப்பாட்டையும் திரைக்கதையாக வடித்துள்ளதை திரை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு ஓடி நகரத்திற்கு வரும் ரேஷ்மா (வித்யா பாலன்) சினிமா வாய்ப்புக் கேட்டு பல இடங்களில் நிராகரிப்பும், அவமானமும் அடைகிறார். எனினும், தன் மீதான நம்பிக்கையைத் துளியும் இழந்திருக்க மாட்டாள். ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் தன்னை முழுவதுமாய் அடையாளப்படுத்தி புதிய வாய்ப்பிற்காக காத்திருக்கும் ரேஷ்மாவிற்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும். வர்த்தக நோக்கில் படம் சரியாய் ஓடவில்லை என்பதும், அதில் இயக்குனர் ரேஷ்மாவின் கவர்ச்சி நடனப் பாடலை நீக்கி விட்டார் என்றும் தெரியும்போது, மீண்டும் அந்தப் பாடலை இணைத்து தன்னுடைய படத்தை வெற்றிப் படமாய் மாற்றுவார் தயாரிப்பாளர் செல்வா கணேஷ்.

தன்னுடைய சிறு வயது முதல் கனவு நாயகனாகிய சூர்யாகாந்த் (நஸ்ருதீன் ஷா) உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது, புளியம் கொம்பைப் பிடித்து உச்சிக்கு வந்த வேகம் என்றாலும், அவள் சந்தித்த சறுக்கல்களே நமக்குப் பாடம். சினிமாவில் நடிப்பது மட்டுமே தனது ஒரே லட்சியம் என்று புரிந்துகொண்ட சில்க், அந்தப் போராட்டத்தை தனியாகத்தான் போராட வேண்டும் என்று தெரிந்தும், துணிந்து வீட்டை விட்டு புறப்படுவாள். தன்னுடைய கனவு நாயகன் சூர்யாகாந்த உடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்கு ஆசை நாயகியாகவும் மாறும் சில்க், சூர்யகாந்த் திருமணமானவர் என்று தெரிந்தும் அவர் மீது காதல் வயப்படுவாள். ஒரு கட்டத்தில் சூர்யாகாந்த தன் மனைவியை விட தன்னை கேவலமாக நடத்துவதை உணர்ந்த சில்க், அவரை விட்டுச் செல்வாள். பின்னனி குரலில் சில்க் முதல் முதலாய் சிந்திக்கத் தொடங்கி விட்டாள்; தன்னைச் சுற்றி நடப்பதை உணர தொடங்கிவிட்டாள் என்று வரும்.

ஆம், பல பெண்கள் இன்று தாங்கள் அன்பு செலுத்துவது போல் இந்த உலகம் நமக்கு பதில் அன்பு செலுத்தும் என்று நம்பி அவர்களை சுற்றி பின்னப்படும் சதிவலையை உணர்வது இல்லை. விழித்து எழும் நாளில் எல்லாம் கை மீறி போய்விடுகிறது. தனக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கும்போது சில்க் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ‘கவர்ச்சி என்பதை சீ… சீ… என்றெல்லாம் சொல்லிவிட்டு, அந்தரங்கத்தில் அவற்றைப் பார்த்து அகம் மகிழத்தான் செய்கிறோம்’ என்பதை மேடை ஏற்றி இருப்பார். நம் வீட்டு பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று கட்டுப்படுத்தும் ஆண்கள், அண்டை வீட்டு ஆன்டியின் ஆடை விலகுவதை ரசித்து ரகசியமாய் சுய இன்பம் கொள்பவர்கள்தானே? அப்படிப் பார்த்தால் பிரச்சினை மனதிலும் பார்வையிலும்தான் இருக்கிறது. அது கவர்ச்சியில் இல்லை. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடிவந்த நடிகையை ‘கவர்ச்சி நடிகை’ என்ற முத்திரையுடன் மறைய வைத்ததற்கு, அவருக்கு வாய்ப்பு கொடுத்த, கொடுக்காத இயக்குனர்கள் மட்டும் காரணம் இல்லை; அவரை அப்படி அடையாளப்படுத்தி அவர் அங்கங்களை ரசித்த ரசிகர்களும் சேர்ந்துதான் காரணம்.

சினிமா உலகம் அவருக்கு வேண்டிய வரவேற்பை கொடுக்கத் தவறியது ஒரு பக்கம், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் நம்பிய யாரும் அவர் மீது உண்மையான அன்பை செலுத்த முடியாமல் அவரை விரக்தியின் எல்லா பரிமானத்தையும் பார்க்கவைத்தது அவரது கவர்ச்சி நடிகை என்ற அடையாளம். தன்னுடைய இந்த நிலையை எண்ணி வாழ்க்கையை வெறுத்து போகும் சில்க் தனக்கான முடிவை தானே தேடிக் கொள்வார். உண்மையில் சில்க் இன்று நம்முடன் உயிருடன் இல்லை என்றபோது, மக்கள் சில்க்கின் கவர்ச்சியை பற்றி பேசுவதிலை. மாறாக அவரது நடிப்பையும் அழகையும் குணத்தையும் நிறத்தையும் போற்றிப் புகழ்கிறார்கள். ஒருவேளை இதை நாம் செய்ய வேண்டிய காலத்தில் சரியான பார்வையுடன் செய்து இருந்தால், சில்க் போன்ற ஒரு சிறந்த நடிகையை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்தப் படம் பார்த்தபோது உணர்ந்தேன். இந்தப் படத்தை பல திரை ஆர்வலர்கள் திட்டி தீர்த்தபோதும், வித்யா பாலனுக்காக நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். எந்த விதத்திலும் உடல் வாகில் சில்கிற்கு சம்பந்தமே இல்லாத வித்யா பாலன், தனது நடிப்பின் மூலம் சில்க்காக மட்டுமே அவரைப் பார்க்க வைத்திருப்பார்.

நடிப்பில் உச்சியில் இருந்தபோதும் இப்படி சில்க் வாழ்க்கையை பிரதிபலிக்க போகிற ஒரு படம் என்றபோதும், அதை துணிச்சலாய் எடுத்து நடித்த வித்யா பாலன் நடிப்பை பற்றி சொல்லவேண்டும் என்றால், ‘அவர் ஒரு திரவ நிலை; அவர் ஏற்கும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுவார்’. சில்க் போன்ற நிலழகியை வித்யா பாலன் போன்ற நிழலழகி வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்தான்.

நிழலழகி 20: அழுக்குகளை அடித்துச் செல்லும் ‘அருவி’!

 

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Aruvi | Arun Prabu Purushothaman | Tamil | 2017

ஓர் அருவியில் குளித்துவிட்டு வரும்போது ஏற்படும் புத்துணர்வு ‘அருவி’ படம் எனக்குத் தந்தது. மேலிருந்து கீழ் நோக்கி எங்கும் பாய்ந்துச் செல்லும் அருவி போல மனிதர்களுக்கு உள்ளும் வெளியும் இருக்கும் பல அழுக்குகளை அடித்துச் சென்றாள் இந்த அருவி.

‘அருவி’… அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு இறுதியில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம். 2016 ஆம் ஆண்டே பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற அருவி இப்போதுதான் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுகத் திரைக்கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டிருப்பது கூடுதல் கவனிப்பு.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் அப்பாவின் பாசத்தில் வளரும் பெண் அருவி. அவள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளால், அவளை சமூகம் கையாண்ட விதமும், அவள் சமூகத்தை எதிர்கொண்ட விதமும்தான் அருவியின் கதை. இப்படிச் சொன்னால் அது நான் உங்களை ஒரு நிஜ அருவிக்கு அழைத்துச் சென்று, அந்த அருவியின் சிறப்புகள் என அதன் உயரம், அகலத்தை மட்டும் சொல்லும் ஒரு சாதாரண விஷயமாய் மாறிவிடும். ஆம், இந்த அருவியில் அவரவர் ரசிக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன.

அருவியாய் நடித்த அதிதி பாலன் பள்ளிப் பருவ பெண்ணாய் நமக்கு அறிமுகம் ஆகும்போதே அவள் நாம் பள்ளியில் செய்த எல்லா சேட்டைகளையும் செய்து நமக்கு நெருக்கமான தோழியாய் மாறிவிடுகிறாள். பெரிய லட்சியம் எல்லாம் ஏதும் இல்லாமல் மிகச் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழும் பெண் அருவி.

அப்பா, அம்மா, தம்பி, பள்ளித் தோழிகள் என்ற சின்ன உலகத்தில் சந்தோஷமாய் இருக்கும் அருவிக்கு அப்பா என்றால் தனிப் பிரியம். எல்லா குடும்பத்திலும் பெண்பிள்ளைகளுக்கு அப்பாவை அதிகம் பிடிப்பதும், அப்பாவிற்கு பெண்ப்பிள்ளை என்றால் ஒரு தனிச் செல்லம் கொடுப்பதும் என்ற விதியின் கீழ் அமைந்த அழகான குடும்பம் என்பதால், ஒரு விதத்தில் அருவியின் குடும்பத்துடனும் நம்மில் பலரும் நெருக்கம் ஆகிவிடுகிறோம்.

கல்லூரிப் படிப்பு புதிய நட்பு, புதுக் கலாச்சாரம் என்று வளர்ந்து வரும் அருவிக்கு அம்மா கண்டிப்பாய் இருக்கும்போது அப்பாவின் சலுகைகள் கிடைக்கிறது. ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்து கால தாமதமாய் திரும்பி வரும் அருவியை அப்பா “குடிச்சு இருக்கியா?” என்று கேட்கும்போது, அருவி தன் பார்வையில் “உங்கள் மகளை சந்தேகப்படுறீங்களா?” என்ற தொனியில் முறைத்துவிட்டு கதவை வேகமாய் சாத்துவாள். சில நாட்களில் அருவிக்கு இப்படி ஒரு கொடிய நோய் இருக்கிறது என்று தெரியும்போது, அவளுக்கு ஆதரவாய் இருக்க வேண்டிய குடும்பம், அவள் நடத்தையைச் சந்தேகப்பட்டு அவமானபடுத்தி அப்பாவால் வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவாள். சிறுவயதில் தனக்கு சிகரட் வாடை பிடிக்கவில்லை என்று சொன்ன அருவிக்காக புகைப்பிடிப்பதை நிறுத்திய அப்பா. அந்த அளவுக்குப் பேரன்புகொண்ட அப்பா, அருவிக்கு இந்த வியாதி வந்ததற்கு அவளது செய்கைகள் காரணம் இல்லை என்று சொல்வதை நம்பவில்லை என்பதை அவர் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் புகைப்பிடிப்பதை பார்த்ததும் அருவி உணர்வாள்.

குடும்பம் என்பது தேவையான நேரத்தில் பாதுகாப்பையும் அரவணைப்பையும் கொடுப்பதற்கு அன்றி வேறு எதற்கு என்று வெறுத்துப் போகும் அருவி வீட்டை விட்டு வெளியேறி தோழி ஜெஸ்ஸி வீட்டில் தங்குவாள். அம்மா இல்லாமல் அப்பாவுடன் வளர்வாள் ஜெஸ்ஸி. அப்பாவுடன் மது அருந்திக்கொண்டு எதைப் பற்றியும் பேசும் அளவிற்கு சுதந்திரம் ஜெஸ்ஸி வீட்டில். ஆனால் அங்கும் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அருவி, எமிலி என்ற திருநங்கையுடன் நட்பு கிடைத்து ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேருகிறாள். அப்பாவிற்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது என்று தெரியவரும் அருவி, பணத்தை ஏற்பாடு செய்து அப்பாவை பார்க்க போகும்போது அவரைப் பார்க்கவிடாமல் தடுக்கப்படுகிறாள்.

போலியான சமூகம், பெண்ணை உடல் இச்சைகாக மட்டுமே பார்க்கத் துடிக்கும் ஆண்கள், வறட்டு கெளரவம்… இப்படி பல விஷயங்களில் சலித்துப் போகும் அருவி மது, புகையையும் தொடத் தயங்கவில்லை. தனக்கு நியாயம் வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீதி கேட்டு நிற்கும் அருவி, அந்தத் தொலைக்காட்சி நிகழிச்சியில் நடக்கும் போலித்தனங்களைக் கண்டு இன்னும் அதிகமாய் வெறுத்துப் போகிறாள். எல்லாம் புகழ்ச்சிக்கும், பணத்திற்காகவும் நடந்து வரும் மாயை என்று தெளிவு கொண்டு தன்னிடம் தப்பாக நடந்து கொண்டவர்கள் ‘மன்னிப்பு’ கேட்டாள் போதும் நான் கிளம்புகிறேன், வேறு ஏதும் வேண்டாம் என்பாள். சிறிது நேரத்தில் அவளுக்கு இருக்கும் அந்த வியாதியைப் பற்றி தெரிந்ததும் அங்கு இருக்கும் ஒவ்வொருவரின் ஏளனப் பார்வையும் அவளை உயிருடன் கொல்லும். அந்தக் கோபமும் ஆத்திரமும் அருவிக்கு அவர்கள் மேல் திரும்பும்.

வாழ்வதற்குத் தேவை அன்பு மட்டும்தான்; ஆனால் நாமோ மாயமான புகழ்ச்சி, பெருமை, பதவி, அந்தஸ்து என ஏதேதோ அழுக்குகளைப் போற்றிக்கொண்டு நமக்குள் இயல்பாய் இருக்கும் அன்பை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கும் நமக்கும் புரிய வைப்பாள் அருவி.

அந்த அருவி அன்பென்னும் மெல்லிய நூலால் நம் இயதங்களை ஒன்று சேர்க்கையில் எடுத்த ஆயுதம் “ட்ருத் ஆர் டேர்” விளையாட்டு. எங்கோ இறந்த பணியார பாட்டிகாக கண்ணீர் வடித்த அரசியல்வாதிக்கு இந்த அன்புதான் வாழ்க்கை என்று விளையாட்டாய் கற்று கொடுத்த அருவி நம்மையும் அந்தப் பணியார பாட்டிக்கும், களத்து தோசைக்கும் கண்ணீர் விடவைத்துவிட்டாள்.

அருவி ஒரு தீவிரவாதி, அவளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இருப்பவர்களின் பாதுகாப்புக்காக வெளியில் போராடும் போலீஸும், செய்திச் சேனல்களும் தங்கள் பங்கிற்கு பரபரப்பை கூட்டிக் கொண்டே போக, உள்ளே அருவியை ஏளனமாய்ப் பார்த்த எல்லோரும் அருவியுடன் சேர்ந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது எத்தனை ஆனந்தமாய் வாழ வேண்டிய வாழ்க்கையை நாம் வெளியில் தேவையில்லாத பரபரப்பாய் காட்டிக் கொள்கிறோம் என்று நம்மை நாமே நையாண்டி செய்துகொண்டது போல் இருந்தது.

இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரியும் நாளில், வாழ்க்கை இவ்வளவுதான் என்ற உண்மை உணரும் நாளில் எந்த விஷயமும் மனிதனை அச்சுறுத்த முடியாது என்பதை உணர்ந்த அருவி, அதன் பிறகு அவள் சந்தித்த எல்லோரையும் துணிச்சலாய் எதிர்கொள்கிறாள். வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அருவியின் கடைசி நாட்களில் அவள் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் அப்பாவின் அரவணைப்பில் அருவி சேரும்போது நாமும் ஒரு நிம்மதியுடன் கனத்த பாதையைக் கடந்து வந்த மனதுடன் இருக்கையில் சாயும் போது அரங்கில் வெளிச்சம் பரவுகிறது.


நான் முன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு பரதம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், சலங்கைக்கு நூறு ரூபாய் கேட்டிருந்தார். “அப்பா ‘நாளைக்கு தரேன்’னு சொன்னார் மிஸ்” என்றேன். அதற்கு அப்பாவை ஏதோ தரக்குறைவாக பேசிய அந்த நடன ஆசிரியரிடம் நான் இனி நடனம் கற்கப் போகமாட்டேன் என்று அடம்பிடித்து வேறு நடன பள்ளியில் சேர்ந்தேன். அப்பா எனக்கு அந்த வயதில் மிகப் பெரிய உலகம்.

பின்னர், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் சாலையில் என் பின்னால் வந்தப் பையன் என்னுடன் பேச நெருக்கமாய் வந்தான். அவனுக்கு பயந்து என் சைக்கிளை வேறு பாதையில் திருப்பினேன். என்னை விடாமல் பின் தொடர்ந்தவன் இன்னும் நெருக்கமாய் வந்து என்னோடு ஏதேதோ பேச ஆர்ம்பித்தான். பயத்தில் காது அடைத்து இருந்த எனக்கு மூச்சும் அடைத்தது எதிர்பாராத விதமாய் அந்தச் சாலையில் வந்த என் அம்மா இதை எல்லாம் பார்த்தபோது . அம்மா என் அருகில் வந்து என்னை திட்டுவதைப் பார்த்து அவன் மாயமாய் மறைந்து விட்டான். தேவையான அளவு பூஜை கொடுத்த பின்னும் மறுநாள் காலை அப்பாவிடம் தான் பார்த்ததை அம்மா சொன்னார். அப்பா அவர் பங்கிற்கு திட்டும்போது குத்திய அவரின் ஒரே ஒரு கேள்வி: “அவனை நீதான் வரச்சொன்னியா பேச?”. இதைக் கேட்டதும் கோபத்தில் கையில் இருந்த ஜியாகிரபி கைடை பறக்கவிட்டு எழுத்துச் சென்றேன். அதன் பிறகு அப்பாவுடன் இரண்டு ஆண்டுகள் பேசவே இல்லை.

அருவிக்கும் அவளது அப்பாவுக்குமான பாசப் பிணைப்பும், பின்னாளில் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் வெளிக்காரணிகளால் தன் மகளைப் புறக்கணித்த அப்பாவையும் பார்த்தபோது ஏதோ என் அப்பாவும் எனக்கு நினைவுக்கு வந்து சென்றார். அருவியைப் பார்த்த பெண்கள் பலருக்கும் தங்கள் அப்பாவை நினைவுகூர்வது உறுதி என்பதால் இதைப் பகிர்கிறேன்.


அருவியைப் போன்ற மனநிலையும், வெவ்வேறு வடிவிலான பிரச்சினைகளும் கொண்ட பெண்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களது தந்தையின் ஆதரவும் புரிதலும் துணையாக இருக்க வேண்டும். அது கிடைத்தால், தனிப்பட்ட விஷயங்கள் ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் என்று நம்புகிறேன்.

வாழ்வது எளிது; மனிதனாக வாழ்வதற்கு அன்பு தேவை என்று உணர்த்திய குறும்புப்பெண் அருவியின் அழகில் என்றும் நிழலாடலாம்.

அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

சிவராஜ்

சிவராஜ்

விழிமீறும் கண்ணீரையும், நாவைப் பிறழச்செய்யும் சொற்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி, குரல்வளை கவ்வலின் எச்சிலை விழுங்கிக்கொண்டே இவ்வெழுத்துக்களை எழுதுகிறேன்.

இந்தத் திரைப்படம் ஏதோவொரு வகையில், மனிதர்களாலும் சூழல்களாலும் உண்டாக்கப்பட்டு மனதின் அடியாழத்தில் தங்கியிருந்த நிறைய கசப்புகளையும் வன்மங்களையும் அக்கக்காக பெயர்த்தெடுத்து, நம்மை திரும்பத்திரும்ப கூண்டிலேற்றுகிறது. நம் சுயத்தை கண்முன் நிறுத்தி நிலைகுலையச் செய்யும் கேள்விதனை விடாமல் எழுப்பி சுயசுத்தத்தை நொடிக்குநொடி யாசிக்கவைக்கிறது இதன் திரைமொழி. இவ்வளவு விரிந்த ஒரு அன்போடு இந்த உலகத்தை ஒருவன் தன்னுடைய படைப்பின் வழியாக அணுகிவிட முடியுமா என்று என்னை நானே இப்பவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பவித்ரா – இத்திரைப்படம் கண்டுற்ற கணந்தொட்டு என் நினைவின் தூசுச்சாம்பலில் இருந்து கங்காக கனன்று ஞாபகத்துள் எரிந்து கொண்டிருக்கிறாள்.(அவள் பெயரை மாற்றி இருக்கிறேன்… காரணம் தெரியவில்லை). அவளைப்பற்றி நான் பேசியே ஆகவேண்டும். பதினைந்து வருடம் முன்பாக இப்படம் வந்திருந்தால் அது அவளின் உலகத்தையே உயிர்ப்பித்திருக்கும். அவளை அவளாகவே வைத்திருந்திருக்கும்.

காலக்கணக்கில் குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்கள் முன்பிருக்கலாம். திடீரென்று ஒருநாள் மாலை, பிசிக்ஸ் மாஸ்டர் தொலைபேசியில் அழைத்து கூப்பிடுகிறார். நானும் எப்பவும்போல பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன். சாயங்காலம் பள்ளி முடிந்து எல்லாப் பிள்ளைகளும் வீடுசென்ற பிறகு, தாமதமாகக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் போகிற கிராமத்து மாணவர்கள் மட்டும் அங்கிருந்தனர். ஆறாவது ஏழாவது படிக்கும் அந்தக் குட்டிப்பயல்கள் எல்லாம் பள்ளிக்கூட தண்ணீர்த்தொட்டியின் அருகில் வளர்ந்திருக்கும் நெல்லி மரத்துக்கு கீழே உதிர்ந்துகிடந்த நெல்லிக்காய்களை பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

பக்கத்திலேயே அங்கு, நடுத்தர வயதிலான ஒரு அம்மா நின்றிருந்தார். எங்கள் பிசிக்ஸ் சார் அம்மரத்தடிக்கு வருகிறார். கொஞ்ச நேரம் அந்த தாயுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசப்பேச அந்தத்தாய் உடைந்து அழுவதை நான் தூரமிருந்து பார்க்கிறேன். அந்த அம்மாவை உட்காரவைத்து ஆறுதல்படுத்தி தொடர்ந்து பேசியபடியே இருக்கிறார். சிறுவர்கள் எல்லாம் கிளம்பிப்போனப் பிறகு அந்த அம்மா அங்கு இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார்.

பிசிக்ஸ் சார் தனியாக வந்து பள்ளிக்கழிவறைக்கு அருகில் நின்று இரண்டு சிகரெட்களை அடுத்தடுத்து வேகவேகமாக ஊதித்தள்ளுகிறார். அவர் அடைந்திருந்த பதட்டத்தை உணர முடிந்தது. நான் அவரிடம் போகிறேன். “எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடா” எனச்சொல்லிவிட்டு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்கிறாள். “பவித்ரா” “அவள எப்டியாவது சரி பண்ணிடனும்டா. ஆனா என்ன செய்யன்னு தெரியலடா” என்று திரும்பத்திரும்ப அவள்சார்ந்த பதட்டங்களையே சொல்லிக்கொண்டே இருந்தார்.

அருவி படத்தில் ஒரு காட்சி

அடுத்தநாள் மசங்கல் மூன்றுமணிவாக்கில் மீண்டும் என்னை பள்ளிக்கு வரச்சொல்கிறார். திரும்பவும் நான் அவரைப்பார்க்கப் போகிறேன். அவர் பள்ளிக்கூட ஆய்வுக்கூடதுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மணிமேகலை டீச்சர் “சிவராஜ் வந்திருக்கான்” என அவரிடம் சொல்ல பிசிக்ஸ் மாஸ்டர் என்னை உள்ளே வரச்சொல்கிறார். ஆய்வுக்கூடத்துக்குள் போனால் அங்கு பவித்ரா உட்கார்ந்திருந்தாள். அவர், அப்போதும் அவளின் அருகமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

“நீங்க எவ்ளோ சொன்னாலும் மூனு நிமிசத்துக்கு மேல, நீங்க சொல்றது எதுவுமே கேக்குறதில்ல. எனக்கு சண்முகத்தோட முகமும் அவனோட குரலுந்தான் எனக்கு ஞாபகம் வந்துட்டே இருக்கு. அவன் இப்ப எங்க இருப்பான்? அதுமட்டுந்தான் எனக்குள்ள தோணிக்கிட்டே இருக்கு. நான் என்னங்க சார் பண்றது?” என்று அவள் அழுது புலம்புகிறாள். கதியற்று நிற்பவனைப் போல செய்வதறியாது, பிசிக்ஸ் சார் அவளருகில் நிற்கிறார்.

அவளைப்பற்றி தெரிந்துகொள்கையில், தலீத் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிறுபெண் அவள். அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அப்பா கிடையாது.கூத்தம்பட்டி என்கிற குக்கிராமத்தைச் சார்ந்தவள். அவள், ஒரு பையனை விரும்புகிறாள். அவன் அங்குள்ள உயர்சாதிப் பையன். பவித்ரா வகுப்பிலேயே நன்றாக படிக்கிறவள், முதல் அல்லது இரண்டாம் தரம் வரக்கூடியவள். கவிதைகளை, கட்டுரைகளை அவ்வளவு ஆர்வமெடுத்து தீவிரமாக வாசிக்கக்கூடிய பெண்ணவள்.

“நீ முதல்தரம் எடுக்கக்கூடியவள். அவன் உயர்சாதிப் பையன்” என விடாமல் எங்கள் சார் சொன்னபோதும் “நீங்க என்ன குற்றச்சாட்டு அவனப்பத்தி சொன்னாலும் என் மண்டைக்குள்ள நிக்காது சார். அவன் இப்ப என்ன பண்ணிட்டு இருப்பான்? அவன் முகம், அவன் குரல் இதுதான் ஞாபகத்துக்கு வந்துட்டே இருக்கு” என்று பைத்தியம்போல சொல்லிக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் ஐந்து வருடம் வயது வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்த அவன் வீட்டார் அவனை வெளியூருக்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், என்ன பிரச்சனை என்று கடைசிவரை என்னிடம் அவர் சொல்லவில்லை.

ஒருமாதம் கழிந்து அவர் என்னோடு அந்தப் பதட்டத்தைப் பகிர்கிறார். “அவ ரெண்டுமாசம் கர்ப்பமா இருக்காடா. எப்டியாச்சும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு அவங்க அம்மா சொல்றாங்கடா. ஆனா, கொஞ்சநாள் கழிச்சு பண்ணலாம்ன்னு நான் முயற்சி பண்றேன்டா. ஏன்னா, சாதி ரீதியா பெரிய பிரச்சன ஆய்டும். இத எப்டி சமாளிக்குறது? அவ ரொம்ப சின்னப்பொண்ணு வேற” என முடிவெடுக்க முடியாமல் என்னென்னமோ சொல்லி உளறுகிறார். இந்தச் சிக்கல் அப்படியே தொடர நாட்கள் கடந்துபோகிறது. கொஞ்சநாட்களிலேயே அவள் பள்ளிக்கு வருவது நின்றுபோகிறது.

எதிர்பாராமல் ஒருநாள், சாயங்காலம் ஏழு எட்டு மணிவாக்கில் பிசிக்ஸ் சாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர், தனது ஸ்கூட்டரில் என்னையும் ஏற்றிக்கொண்டு அவசரஅவசரமாக அவள் வீட்டுக்கு விரைந்து போகிறார். அப்பொழுதான் நான் முதன்முறையாக பவித்ராவுடைய வீட்டுக்குச் செல்கிறேன்.
அவள் என்ன செய்திருக்கிறாள் என்றால்… அவளின் அப்பா குடித்துப்போட்ட சாராய பாட்டில்களை எடுத்துக்கொட்டி அதைத் தூள்தூளாக உடைத்துப் பொடியாக்கி… அதை… அதை… சமைக்கிற ரவையில் கலந்து உப்புமா செய்து சாப்பிட்டுவிடுகிறாள். அந்தக் கண்ணாடிச் சில்லுகள் எல்லாம் அவள் தொண்டையிலிருந்து பிறப்புறுப்பு வரை அங்குலமங்குலமாகஉள்ளுறுப்புகளை கிழித்துச் சிதைத்து துளைகள் முழுக்க இரத்தம் கசிய அவள் சாய்ந்து கிடக்கிறாள். கற்பனை செய்திடமுடிந்திராத ஒரு தற்கொலையை அவள் தனக்கு நிகழ்த்திக் கொண்டாள்.

பிசிக்ஸ் சார், அவள் காலைக் கட்டிப்பிடித்து “நான்தான் உன்ன கொன்னுட்டேன்” “நான் தான் உன்ன கொன்னுட்டேன்” என சத்தம்போட்டு அழுது, கத்திக்கத்தி அலறுகிறார். நான் பிணமாக உறைந்து நிற்கிறேன்.

இந்த ‘அருவி’ யைப் பார்க்கும்போது எனக்கு நிஜமாகவே தோன்றியது ‘அந்தக் கண்ணாடிச் சில்லுகள் கிழித்த இரத்தம் தான் இந்த அருவியின் ஒவ்வொரு சொல்லாக இருக்கிறது’. ஒரு பத்தாண்டுகள் முன்புமட்டும் இப்படம் வந்திருந்தால்…

யாரைக் குறித்தும், எந்த மனிதனைக் குறித்த ஒரு கசப்போ, ஒரு சின்னக் குற்றச்சாட்டோ இல்லாத ஒரு அதிதூய தன்மையைக் குறித்து இப்படம் பேசுகிறது.

‘ஒரு பாவமன்னிப்புக்கான படமாகவே’ என்னைப்பொறுத்தவரையில் இப்படத்தை நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் நம்முடைய பேச்சின் கீழ்மைகளையும், அருவருக்கத்தக்க அசிங்கங்களையும் கண்முன்னாடி நேர்நிறுத்தி நம்மை ஏதோவொரு வகையில் சொல்லகப்படாத ஒருவித சுயதூய்மைக்கு இட்டுச்செல்கிறது.

திரைப்படம் முடிந்து, இருண்ட திரையரங்கின் கதவு திறந்து வெளிச்சம் உள்வருகையில், கலங்கமில்லாத ஒரு வெளி திறப்படைந்ததைப் போலவே உள்ளுணர்வு கொள்கிறேன்.

அடக்கமுடியாத கண்ணீரோடு அபி வந்து என்னைக் கட்டியணைத்து, “அண்ணா, எனக்கு பொன் கொழந்த பொறந்தா சத்தியமா அருவின்னுதான் பேரு வப்பேண்ணா” என்று வாசலில் வைத்துச் சொன்னாள்.

இறுதியாக… இந்தத் திரைப்படத்துக்காக மெனக்கெட்டு விரும்பியுழைத்த அத்தனை உயிர்களையும் பவித்ராவின் தூய அன்பும் கருணையும் சூழட்டும்.

பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்.

சிவராஜ், செயல்பாட்டாளர், குக்கூ குழந்தைகள் இயக்கம். தும்பி இதழின் ஆசிரியர்.

நிழலழகி 19: மதிவதினியின் ஆழமான அறப்போர்!

Aramm | Gopi Nainar | Tamil | 2017

கே. ஏ. பத்மஜா

நயன்தாரா என்றால் ஆண்களுக்கு மட்டும் அல்ல; பெண்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டு. அதுவும் ‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்று ஆடிய நயன், ‘ஊரெல்லாம் உன்னை பார்த்து வியந்தாரா’ என்று தன்னை செதுக்கிய விதம் சினிமாவுக்கான அர்ப்பணிப்பு. அழகையும் கவர்ச்சியையும் தாண்டி, தமிழ்த் திரையுலகம் அவரிடம் நடிப்பை வாங்காமல் இருந்தபோதும், தனக்கான இடத்தை தனித்துவத்துடன் ஏற்படுத்திய நயன்தாராவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமைக்கான அங்கீகாரத்தை தந்த படம் ‘அறம்’.

2017 ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பல நல்ல விமர்சனங்களை அள்ளி கொண்டிருக்கும் படம் “அறம்”. ஒரு நல்ல கதையை கோர்வையாய் நேர்த்தியாய் ஒரு இயக்குனர் திரையில் காட்ட விரும்பும்போது, ஒரு நல்ல கலைஞன் அதை சிதையாமல் சுமந்து செல்ல தேவைப்படுகிறான். அந்த வகையில் சிறிதும் அறத்தை குறைக்காமல் தன்னுடைய கம்பீர நடிப்பால் அறம் சேர்த்து உள்ளார் கலெக்டர் மதிவதனியாக வந்த நயன்தாரா.

நான் நடத்தும் ஒரு சிறு மழலைப் பள்ளிக்கு சுகாதார சான்று, அங்கீகாரம் என்று ஒவ்வொரு சான்றும் வாங்கப் போகும்போது அரசு அலுவலகங்களில் பெருகிக் கிடைக்கும் ஊழலை, அதற்குக் காரணமாய் இருக்கும் அதிகாரிகளின் முகத்தில் காரி உமிழத் தோணும். பல அதிகாரிகள் சோம்பேறிகளாய் தங்கள் நாற்காலியை தேய்த்துவிட்டுப் போவதற்கு என்றே சட்டம் எல்லாம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதோ என்றும் தோணும். ஒவ்வோர் அலட்சியத்திற்கும் ஒன்று அல்லது பல உயிரை விலையாய்க் கொடுத்து நாம் பாடம் கற்கிறோம். நாயகி என்றால் அவள் கவர்ச்சியான உடையில் வந்து போகவேண்டும் என்ற தமிழ் வர்த்தக சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றி வெறும் மூன்றே புடவையில் முழுப்படத்தையும் நடித்தும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றாத நயன்தாரா சிறந்த நடிகை என நிரூபித்து உள்ளார்.

மதிவதனிக்கு பதில் ஓர் ஆண் கலெக்டர் என்று இருந்தாலும் கதைக் கரு சிதைந்து இருக்காது. ஆனால், ஒரு பெண்ணை முன்னிறுத்தி ஒரு சமூக பிரச்சினையை எதிர்கொண்ட விதம் வியப்பு. முதல் காட்சியிலேயே தன்னை ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதை தைரியமாய் தன் தரப்பு வாதத்தை வெளிப்படுத்துகிறார் மதிவதனி. இன்று பல மேல் அதிகாரியிடம் தேவையான நேரத்தில் வாயை திறக்காததும், விளக்கம் கொடுக்காததும்தான் பல குழப்பங்களுக்குக் காரணம். பதவிக்கு வருவது மக்களின் பாதுகாப்பிற்கும் நலனிற்குமே அன்றி, அரசியல்வாதிகளுக்கு அடிமை சேவை செய்ய இல்லை என்ற தெளிவை மதிவதனியிடம் இருந்து அடிமட்ட அரசு ஊழியர்கூட படித்துக்கொள்ள வேண்டும். களத்தில் இறங்கி பார்க்கும்போது மட்டுமே நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும். வெறும் குளுகுளு அறைக்குள் இருந்துகொண்டு காகிதத்தில் சட்டம் இயற்றும்போது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எப்போதும் விரிசல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதை மதிவதனி புரியவைத்தார்.

நான் பலமுறை பார்த்தது உண்டு: அதிகாரிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனாலும் ‘எதுக்கு சார் வம்பு’ என்று கை கழுவவே நினைப்பர். ‘பேசாம வந்தோமா, கையெழுத்து போட்டு சம்பளத்தை வாங்கினோமா, கடைசி காலத்துல பென்சன வாங்கி பேர பிள்ளைகளோட நிம்மதியா இருந்தோமா’ என்ற மனபோக்கிலேயே தங்கள் வேலையை தக்கவைப்பதில் கவனமாய் இருப்பர். ஆனால் ஓர் அவசர சூழலில் துரிதமாய் முடிவெடுப்பதும், தைரியமாய் செயல்படுவதும்தான் அதிகாரத்திற்கு அழகு. அந்த அழகிற்கு அழகு சேர்த்து இருப்பார் மதிவதனி. ஓர் அதிகாரியாய் அதிகாரவர்க்கத்தோடும், அரசியல் வியாதிகளோடும் போராடுவது என்பது, வேறு ஒரு பெண் அதிகாரியாய் இருந்து இவர்களை எதிர்த்துப் போராடுவது என்பது இன்னும் கடினமானது என்பதை தனது அழுத்தமான வசனத்தில் புரியவைத்து இருப்பார் மதிவதனி.

ஆம், நமக்காய் வீதியில் இறங்கி போராட துணிந்த பல பெண் போராளிகள் கதியை நாம் கண்முன்னே காணத்தானே செய்கிறோம். குழந்தை பத்திரமாய் காப்பாற்றப்பட்டவுடன் தான் அடக்கிவைத்த அத்தனை உணர்வுகளையும், அழுத்தங்களையும் அழுகையாய் கொட்டித் தீர்ப்பாள் மதிவதனி. அந்த அழுகையில் எத்தனை அர்த்தம் வாய்ந்தது! பொதுவாக, பெண்கள் என்றால் எதற்கெடுத்தாலும் கண்ணை கசக்கிக்கிட்டு நிற்பார்கள் என்ற நிலையை உடைத்து எறிந்த மதிவதினியின் அறப்போர் இன்னும் மனதில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது. என்றும் மதிவதனி என்மனத்தில் கெத்தாய் நடப்பாள் நிழலழகியாக.

காலம் காலமாய் காதல் மட்டுமே தமிழ் சினிமாவின் சிலபஸ் என்ற வைகையில் நாயகன், நாயகி என்று கதையை வடிவமைத்து கல்லா கட்ட காசு பார்க்கும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு மத்தியில், நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் தேவை எது என அரசாங்கத்திற்கு மட்டும் இல்லாமல் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நிஜ சம்பவங்களை திரையில் விரித்து, அதை அப்படியே நம் மனதிற்குள் கடத்திய இயக்குனர் கோபி தன்னை மட்டும் நிரூபிக்கவில்லை… நயன்தாராவை சரியாய் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்தவில்லை என்பதையும் நிரூபித்துள்ளார்.

(தொடர்வோம்)

தமிழ் சினிமா உருப்பட சில வழிகள்: ஒரு இயக்குநர் சொல்கிறார்!

தனபால் பத்மநாபன்

கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பட ரிலீஸின்போது 103 MBA மாணவர்களைக் கொண்டு ஒரு ‘Massive Marketing Effort’ எடுத்தேன். அந்த முயற்சியில் இந்திய தபால்துறையும் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் இணைய உறுதி செய்தார்கள். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 103 MBA மாணவர்களுக்கு திரைத் துறையின் செயல்பாடுகளைப் பற்றி திரைத் துறையின் முக்கிய ஆளுமைகள் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அது ஒரு கனவு முயற்சியாக நின்று போனது. எங்களால் 4 வாரங்களுக்கு முன்னால் தமிழகத்தில் 100 தியேட்டர்களை உறுதி செய்ய முடிந்திருந்தால் அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கும்.இன்றைய திரைத் தொடர்புகள் அன்று இருந்திருந்தால் ஒருவேளை அந்த முயற்சி ஒரு 20% சாத்தியமாகலாம்.

ஆனால் சில கசப்பான உண்மைகள் புரிய ஆரம்பித்தது. அரசாங்கத்தின் கதவுகளைக்கூடத் திறந்துவிடலாம். ஆனால் சினிமாவின் மதகுகள் சில முதலைகளால் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் Eco System முற்றிலும் ஒரு Feudal மன நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சில மன்னர்களும் குறு நில மன்னர்களும் அவர்களை அடியொற்றிய சில அடிமைகளும் வாழும் இடம் இது. சினிமாவின் மொத்த ரத்தமும் அவர்களால் உறிஞ்சப்படுகிறது. மன்மோகன்சிங் புதிய பொருளாதாரத்தைத் திறந்துவிட்டு 27 வருடங்கள் ஆகியும் அதன் நிழல்கூட இந்தத் துறையைத் தீண்டவில்லை. அமிதாப் பச்சன் நிறுவனத்தில் இருந்து UTV வரை யாரும் இங்கே வெற்றி பெற முடியவில்லை. பன்னாட்டு வெளியீட்டு நிறுவனங்கள் கூட INOX, PVR, SATYAM போன்ற Corporate நிறுவனங்களை நம்பித்தான் வியாபாரம் செய்ய முடிகிறது. சில தவறான ஆளுமைகளின் ராஜ்ஜியத்தின் கீழ்தான் ஏறத்தாழ 20 வருடங்களாக தமிழ் சினிமா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் நம்பிக்கை கொள்ள ஒன்றுமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இவர்களை எல்லாம் மீறி வியாபார நீதியுடன் இயங்கும் ஐந்து நிறுவனங்களையாவாது எனக்குத் தெரியும். அவர்களும் தினம் தினம் இந்த முதலைகளுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். புதிய பாதைகளை இவர்கள் போராடி உருவாக்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு விஷயங்களை அரசாங்கம் உறுதியாக நடைமுறைப் படுத்தினால் மொத்த தமிழ் சினிமாவும் இந்த இருண்மையில் இருந்து மீண்டு எழும்.

1. தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண முறையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வெளிப்படையான கணக்கு வழக்குகளைக் கொண்டு வர வேண்டும்.

2. தியேட்டர்களுக்கான லைசன்ஸிங் முறையை காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் எளிமைப்படுத்த வேண்டும். முக்கியமாக 50 இருக்கைகள், 100 இருக்கைகள் அரங்குகளுக்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட லைசன்ஸிங் முறை வேண்டும்.

சுலபமாகத் தெரியும் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் நடைமுறைப்படுத்தினால் 99% குற்றங்கள் தமிழ் சினிமாவில் குறைந்துவிடும், சினிமாத் துறைக்கு தொழில் அங்கீகாரமும் வங்கி உதவிகளும் கிடைக்கும். இந்த இரண்டு கோரிக்கைகள் தமிழ் சினிமாவின் எல்லாவிதமான verticals உடன் எப்படி நேரடியாக தொடர்புடையது என்பது அனுபவசாலிகளுக்குப் புரியும். இந்தத் தொழிலை அறியாதவர்களுக்கு சில நடைமுறைகளை விளக்குகிறேன்.

கட்டண முறையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வெளிப்படையான கணக்குகள் இருந்தால் என்ன நடக்கும்?

ஒரு படத்தின் தாயாரிப்புச் செலவுகள் அதிகரிக்க மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நடிகர்களின் சம்பளம். அவர்களின் சம்பளத்தை படத்திற்குக் கிடைக்கும் முதல் மூன்று நாள்களின் வசூல்தான் நிர்ணயிக்கிறது. தியேட்டர்களில் விதிகளுக்கு உட்பட்டு டிக்கெட் கட்டணம் இருந்தால் பெரும்பாலான பெரிய படங்களின் வசூல் இப்போதிருக்கும் விகிதத்தில் இருந்து 50% குறைந்துவிடும். அப்போது நடிகர்களின் சம்பளமும் குறையும். ஒரு நடிகரின் படம் செய்த வசூல் விவரங்கள் வெளிப்படையாக இருந்தால், அதைப் பொருத்துதான் அவர்களுடைய சம்பளமும் படத்தின் தயாரிப்பு செலவும் இருக்கும். பொய்க் கணக்குகளால் தவறாக திசை திருப்பப்படும் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொள்வார்கள். தியேட்டர்களில் இருந்து தயாரிப்பாளருக்கு வந்து சேர வேண்டிய தொகை முறையாக வரும். அவரின் தயாரிப்பு செலவை முறையாக ஈடுகட்ட முடியும். கறுப்புப் பணப் புழக்கம் குறையும். அதனால் தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் இத்துறையில் முதலீடு செய்வதற்கான சூழல் குறையும். படத்தின் வசூல் சாத்தியத்தை வைத்து (வினியோகஸ்தகர்கள், தியேட்டர்காரர்களின் உத்தேச மதிப்பு) வங்கிகளில் நேரடியாகக் கடன் பெற முடியும். அதன் மூலம் cost of funding குறையும். (இப்போது வசூல் சாத்தியத்தை அல்ல, வசூலையே வெளியில் சொல்ல முடியாது; அது பெரும்பாலும் கறுப்புப் பணம் என்பதால்.) முறையாக இயங்கும் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீடு நாடு முழுவதும் இருந்து தமிழ் சினிமாவிற்குக் கிடைக்கும். AVM போன்ற நிறுவனங்கள் இப்போது ஏன் படம் தயாரிப்பதில்லை என்பதை இதனோடு இணைத்துப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திற்கு முறையாக வரி கிடைக்கும். பேராசைக்காரர்களின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும். மக்களும் முதல் அமைச்சர் கோஷங்களில் இருந்து தப்பிக்கலாம். இன்னும் இதில் விரிவாகப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ரசிகர் மன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன, ரசிகர் மன்றக் காட்சிகளில் வசூலிக்கப்படும் தொகை எவ்வளவு, இந்தக் காட்சிகளில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு போன்ற விவரங்கள், ஒரு நடிகன் தனக்கான மாய பிம்பத்தைக் கட்டமைக்க இப்போதிருக்கும் நடைமுறை எப்படி அவனுக்கு உதவுகிறது, சிறிய தரமான படங்களை எப்படி இந்த நடைமுறை நசுக்குகிறது, குடும்பத்துடன் படம் பார்க்கும் வழக்கங்கள் ஏன் குறைகிறது, இளைஞர்களின் கூடாரமாக மட்டும் தியேட்டர்கள் இப்போது இருப்பதால் அவர்களைக் கவர எடுக்கப்படும் நாலாந்தரமான படங்கள் என்று இன்னும் நிறையப் பேசலாம்.

தியேட்டர்களுக்கான லைசன்ஸிங் முறையை எளிமைப்படுத்தினால் என்ன நடக்கும்?

இப்போது நிலங்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டன. அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளின் அருகாமையில் பெரிய நிலப் பரப்பில் பெரிய தியேட்டர்கள் கட்டுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் 50 பேர், 100 பேர் வரையில் உட்கார்ந்து பார்க்கும் சிறிய தியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் லைசன்ஸிங் முறையை மாற்றி அமைத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த பட்சம் 2000 புதிய தியேட்டர்கள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது. வினியோகஸ்தகர்கள் ஊருக்கு ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை மிரட்டும் முறை அடியோடு ஒழியும். திரைப்பட வினியோக முறை ஆரோக்கியமான சூழலுக்கு மாறும். புதிய தியேட்டர்கள் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகும். படம் பார்க்கும் அனுபவமும் சிறப்பாக இருக்கும். இந்தக் காரணத்தாலும் வீட்டிற்குப் பக்கம் தியேட்டர்கள் அமைவதாலும் மக்கள் தியேட்டருக்கு வரும் பழக்கம் அதிகரிக்கும். ஒற்றைத் திரையில் இருக்கும் பெரிய தியேட்டர்கள் இரண்டு அல்லது மூன்று தியேட்டர்களாக மாறும். (இப்போதைய லைசன்ஸிங் முறையில் இதை சாத்தியப்படுத்துவது மிகவும் கடினம்.) தயாரிப்பாளர்களுக்கு தியேட்டரில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்தது இரண்டு மடங்காகும். சிறிய தரமான படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். நல்ல படங்கள் உருவாகும் சூழல் உண்டாகும். நிறைய புதிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். வினியோக முறை சீரானால் தொழிலின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான தேவைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் புற்று நோயில் இருந்து மீண்டு வர இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் உறுதியாக வைத்து திரைத் துறையினர் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
நடிகர்களின் வசனங்கள் வெறும் வெற்றுக் கோஷங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களல்ல, அந்த வசனங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் பின்னால் நிற்கும் கூட்டம்தான் உண்மையில் கோமாளிகள். தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாரின் கடிதத்தை ஒருமுறை நிதானமாக படித்துப் பாருங்கள். அது காலத்தால் கைவிடப்பட்ட கடவுளின் குழந்தை ஒன்றின் கடிதம். அவர் ஆன்மாவிற்கு மதிப்பளிப்பதாக இருந்தால் களையை அழிக்க அல்ல, ஒட்டு மொத்த திரைத் துறையும் இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக போராட முன் வர வேண்டும்.

தனபால் பத்மநாபன், கிருஷ்வேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா ஆகிய படங்களின் இயக்குநர். 

”தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும்”: இயக்குநர் மீரா கதிரவன்

கந்துவட்டிக்காரர்களால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு வரக்கூடும் என இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், அன்புச்செழியன் என்ற சினிமா பைனான்சியரின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு:

“அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் என சகலரும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.”-அசோக்குமார்.

தமிழ் சினிமாவில் நான் பார்த்த அபூர்வமான நல்ல மனிதர்களில் அசோக்கும் ஒருவர். பார்க்குமிடங்கெளில்லாம் மீரா என்று சிரித்த முகமாய் அழைப்பார். தைரியாமானவர். கடைசியாக பார்ததது ஒரு பைனான்ஸியர் அலுவலகத்தில்.

நேற்று ஜீ.வி..இன்று அசோக்குமார்..நாளை யாரோ…? அமைப்புகளையும் அரசியல் அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டும். இல்லையென்றால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்து கொள்ளும்….தமிழ் சினிமா இது போன்ற கந்துவட்டி மாபியாக்களாலும் அரசியல் கட்சிகளின் பினாமிகளாலும் தான் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த( தற்)கொலை ஒரு சாட்சியம்…

கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்”!

வினோத் மலைச்சாமி

தீயணைப்பு துறை அதிகாரி : உங்க பொண்ணு என்ன ஜட்டி மா போட்டு இருக்கு

மதிவதனி (கலெக்டர் ) : ஏன் ?

தீயணைப்பு துறை அதிகாரி: இல்ல மேடம் quality ஆன ஜட்டினா,கம்பிய ஜட்டியில் குத்து குழந்தைய மேல துக்கிடலாம்

குழந்தையின் தாய்: ஐயா …வேண்டாம் யா…10 க்கு 3ன்னு வாங்குன ஐட்டி யா….

என்று கத்தி அழும் தாயின் கண்ணீர் நம் கண் வழியாக வழிந்து விடுகிறது.

நிலத்தடி நீர் வற்றிப்போன திருவள்ளுவர் மாவட்டத்தில் நீருக்கு என்று ஒரு பெரும் தினக்கூலி கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.

அந்த தினக்கூலிகளின் அன்றாட வாழ்வாதாரம் அருகில் இருக்கும் கடலில் சிப்பி பொறுக்குவதும், உழவு நிலமாக இருந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதற்காக
அங்கே ஊன்றியிருக்கும் பிளாட் கல்லிற்கு கலர் பெயிண்டு அடிப்பதும்தான்.

மரபு ரீதியாகவே யாருக்குமே தொந்தரவு தராது வாழ்ந்து வந்த விவசாய கூலிகள், ஒரு நாள் ஆத்திரம் கொண்டு வீதியில் இறங்க, அந்த வழியாக வருகிறார் மாவட்ட ஆட்சியாளர் மதிவதனி.

பானை சோற்றில் நஞ்சு கலப்படம் இல்லா ஒற்றை சோற்றுப் பருக்காக  மதிவதனி. கொதித்த உளையாக இருக்கும் மக்களை எதிர்க்கொள்ளும்போது காந்தியாக மாற்றம் கொண்டு உங்களுக்கு குடிக்க நல்ல நீர் கிடைக்காத வரை நான் நீர் குடிக்க போவது இல்லை என்று சொல்லிச் செல்கிறார்.

அறம் படத்தில் நயன்தாரா

மற்றொரு கிராமத்தின் கருவேலமரம் காட்டில் ஊர் மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
சுயஉதவி குழு தலைவி அலைப்பேசி வழியாக ஏலம் நடத்துகிறார். அடிக்கடி தன் பார்வையில் இருந்து தவறி போகும் குழந்தை, இந்த முறையும் தவறி போக குழந்தையை தேட ஆரம்பிக்கிறாள் அந்தத் தாய்.

ஓடுகிறாள், ஓடுகிறாள் மிகப்பெரிய பரந்துபட்ட விவசாய நிலத்தில் பறவை போல அழுகை குரல் எடுத்து அந்தப் பெண் ஓடுகிறாள். மாண்டேஜ் காட்சியாக பறவைகளின் பறந்து போகும் நிழல் உழவு நிலத்தில் படருகிறது.

தேடிய மகள் நிலத்தடி நீரை எடுக்க தோண்டிய ஆழ்குழாய் கிணறுகளில் தரையில் இருந்து முதல் பாதி 36 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாள்.  அங்கே ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று கூட, பரபரப்பு நிலை நம்மை பற்றிக்கொள்கிறது.

  • ஒரு கலைஞன் உங்களை சிரிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், ரசிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், பொங்கி அழவும் நேரம் ஒதுக்குவான். படத்தின் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த திரை நகர்வுக்காக. அதுவரை கண்கலங்கி நிற்காத யாருமே கண்ணீர் விட்டு ஒரு நிகழ்வுக்காக அழுது தீர்த்து விட்டால் நீங்கள் புதிய மனிதனாக மாற்றம் கண்டு பழமையான மனிதரிடம் இருந்து வெளியே வந்து விட்டதாக பௌத்த நெறி கூறுகிறது.

அது போலத்தான் குழந்தை ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வெளியே வந்தா வரவில்லையா என இயக்குனர் கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்” வழியாக பார்க்கலாம்.

இயக்குநர் கோபி நயினார்

அறத்தை உருவாக்கியவர்கள்…

ஓம் பிரகாஸின் திறம்பட ஒளிப்பதிவு Exterior காட்சிகளை உடலும் சதையுமாக ஒட்டி இருக்கும் உணர்வாக பிரமிக்க வைக்கிறது. ஆகவே மேக்கிங் பக்கம் அசுர களம் கண்டவராக நிற்கின்றார் கோபி நயினார். ரூபன் படத்தொகுப்பு உலை கொதிக்க தொடங்கி முடியும் வரை நம்மை நாற்காலியில் கட்டி வைத்திருக்கிறது.  லால்குடி இளையராஜாவின் கலைநயம் படம் நெடுக இட்டு செல்லும் குறியீடுகள் நமக்கு அறக்கல்வியை நினைவுபடுத்துகிறது . ஆழ்துளை கிணறு வடிவாக்கம் தொடங்கி அதை ஒட்டிய கூடாரம், அதில் இருக்கும் கருவிகள் என்று எதார்த்ததில் இருந்து பிரமாண்ட இடம் நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது.

இப்படிப் பட்ட படத்தில் இந்தக் காட்சிகள் வரும் என்று ஒரு அனுமானம் இருக்கும். ஆனால் ஜீப்ரான் நம் அனுமானத்தை மடைமாற்ற பெரும் உதவி இருக்கிறார். பாடல்களை சரியாக pitch செய்து இருக்கிறார் கதை களம் மாறாமல். மேலும் “அறம்” திரைப்படம் பார்த்த ஒருவருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல ஒரு மாத காலம் ஆகலாம். காரணம் ஜீப்ரான் என்ற இசை இயக்குனர்!

இயக்குனர் கோபி நயினாருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இயக்குனர்கள் கதை களத்தை தங்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே, அதாவது ஒரு இயக்குனர் நேரடியான (நிகழ்வு நடந்த) கதை களம் நோக்கி சென்றால் தான் அந்த இடத்தின் Warm conditionயை புரிந்துகொள்ள முடியும். அவற்றை போல் நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்து மனித மண்புக்கு எதிரான இழிவையும் ஒரு நல்ல களப்பணியாளர் மட்டுமே அதை காட்சி வடிவாக்கம் செய்ய முடியும். இதை visual insight implementation என்று கூற வேண்டும். அவ்வளவு எளிதாக இதை முதல் படத்தில் கையாள்வது மிக சிரமம். வசனம் எந்த ஏற்ற, இறக்கம் இல்லாமல் மகவும் துல்லியமாக broader ideology என்று சொல்லப்படும் அம்பேத்கரிய , மாக்ஸிய கோட்பாடுகளில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. வரும்கால இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். முதல் படத்தில் வென்றும் காண்பித்து விட்டார்.

அறம் பொழிந்தோர்

நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார்.  கோபி நயினாரின் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம்.அது மட்டுமே கதையோடு ஒட்டாத செயற்கையாக இருந்தது.

ஆழ்துளைகுழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்தக் குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.  விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பு இன்மை , போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த நடிகர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் அரசியல், அதிகாரம் , அரசு நிர்வாக கட்டமைப்பு என்ற மக்கள் ஜனநாயகத்தில் சிரடுகளாய் வேர் பதித்திருக்கும் அராஜகத்திற்கு So called power politics structure யை குறிவைத்து இருக்கிறது இந்தப் படம்.

படம் முடிந்த போது தியேட்டரில் ஒருவர் கூறினார்… “நாம எல்லாம் சேர்ந்து அந்த படத்தை கைக் கொடுத்து துக்குனா இந்தப் படம் எங்கியோ போய்டும்” என்று. அறத்திற்கும் அறம் சேர்க்க கை கொடுப்போம்.

வினோத் மலைச்சாமி, குறும்பட இயக்குநர், நடிகர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

இரா. முருகவேள்

இரா.முருகவேள்

ரஜினியை விட கமலை விட ஏ.ஆர்.முருகதாஸ்தான் தமிழ் சினிமாவின் மூலம் படுமோசமான அரசியலைப் பரப்புபவர் என்று தோன்றுகிறது.  இப்போது வந்திருக்கும் ஸ்பைடர் படத்தில் மக்களின் போன் பேச்சுக்களை உளவு அமைப்பு ஒட்டுக் கேட்கிறது. அதற்கு சில விதிகள் உள்ளன. கதாநாயகன் அதை மீறி செயல்பட்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கிறான். உதவுகிறான். மலையையே புரட்டுகிறான். மக்கள் பரவசத்தில் புல்லரித்து கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். Central monitoring system என்பது குடிமக்களின் போன், இணையத் தொடர்புகளை  வேவுபார்க்க காங்கிரஸ் அரசு உருவாக்கிய திட்டம். 2009லிருந்து நடைமுறையில் இருக்கிறது. பழைய டெலிகிராப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுக்கேட்கும் திட்டம் அனைத்து மக்களையும் சந்தேகத்துக்கு இடமானவர்களாகப் பார்க்கிறது, அந்தரங்கமாக உரையாடும் உரிமையைப் பறிக்கிறது, தவறாகப் பயன்படுத்தப்பட்டு யாரை வேண்டுமானாலும் எந்த விவகாரத்தில் வேண்டுமானாலும் கோர்த்து விட இந்த எப்போதோ ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் பயன்படக்கூடும். அனைத்து ஜனநாயக குடி உரிமைகளுக்கும் எதிரானது இது என்று பலதரப்பைச் சேர்ந்த அறிவுஜீவிகளாலும் அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது..

இதற்கு எதிராகத்தான் மேற்கு நாடுகளில் ஸ்னோடன், அஸாஞ்சே, செல்ஷியா போன்றவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர்.
முருகதாஸ் முன்பு ஒரு படத்தில் சீனாவால் இந்தியா முற்றுகையிடப்படுகிறது என்று பீதியைக் கிளப்பினார். உலகமயமாக்கலுக்குத் திறந்து விடப்பட்ட இந்தியாவை ஏன் முற்றுகையிட வேண்டும் என்று புரியவில்லை. இந்த இரண்டு பேருமே நாடுகளைக் கூறு போட்டு விற்பவர்கள். கொள்ளைக் கூட்டத்துக்கும் மாபியாவுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தப்படத்தில் சுடுகாட்டில் பிறக்கும் சுடலை அழுகுரலை கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் என்ற திமிர்த்தனம் வேறு. இவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் அல்லவா? முருகதாஸுக்கு பிஜேபி சார்ப்பு இருக்கலாம் போலத் தெரிகிறது. ஆனால் அவர் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.

இரா. முருகவேள், நாவலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். 

சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி சொல்லவில்லை என்பதற்காக டி. ஆரால் அதே மேடையில் கடுமையாக வசைபாடப்பட்டார். டி. ஆரின் செய்கை சமூக ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பிய நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.”

துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

கீட்சவன்

எனக்கு ஒட்டுமொத்தமாக நிறைவு தந்த சமீபத்திய படங்களுள் ஒன்று #துப்பறிவாளன். இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு திரையை விட்டு கண்கள் அகலாத வகையில் கவனித்துக் கொண்டதே கச்சிதத்தைக் காட்டியது. வலித்துத் திணித்து உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் ஏதுமின்றி, எல்லா தரப்பு ரசிகர்களும் கடைசி காட்சி வரை இருக்கையில் நெளியாமல் பார்த்துக்கொண்டதே மிஷ்கின் திரைமொழியின் நேர்த்தியைச் சொன்னது.

நல்லவர்கள் – கெட்டவர்கள் கூட்டத்தில் அதீதமானவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை சொல்லப்பட்ட இந்தப் படைப்பு, இரு தரப்பு உணர்வுகளின் உச்சங்களையும் காட்சிப்படுத்தியது. மனிதர்களின் மகத்துவத்தையும் குரூரத்தையும் பிரித்து மேய்ந்தது. துப்பறிவாளனைப் பொறுத்தவரையில், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’சை வைத்துப் பகுப்பாய்வது, நுணுக்கமாக அணுகுவது போன்றவற்றைச் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், அதெல்லாம் எனக்குச் சரிபட்டும் வராது. ஆனால், நம் களத்துக்குப் பொருந்தும்படியும் நம்பும்படியும் காட்சிகளை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன். கனியன் பூங்குன்றனின் கெட்டப் மட்டும்தான் தனிப்பட்ட முறையில் உறுத்தலாக இருந்தது. படம் போகப் போக அந்த உறுத்தலும் போய்விட்டது.

குறிப்பாக, இந்த வகைப் படங்களுக்கே உரிய த்ரில் – சிலிர்ப்புத் தன்மைகளைத் தாண்டி, ஒவ்வொரு கதாபாத்திர உருவாக்கத்திலும் காட்சியமைப்புகளிலும் உணர்வுபூர்வமாக கையாளப்பட்ட திரைக்கதை உத்தி மிகவும் பிடித்திருந்தது. சில முக்கியக் கதாபாத்திரங்களின் பின்புலத்தைச் சொன்ன திரைக் கதைசொல்லி மிஷ்கின், சில முக்கியக் கதாபாத்திரங்களின் பின்புலத்தைக் கொஞ்சம் கூட காட்டாமல் நம் கணிப்புகளுக்கு விட்டது, பார்வையாளர்களின் படைப்புத்திறனை மதிக்கும் செயலாகவே பார்க்கிறேன். மனோகர் (பிரசன்னா), ப்ரீதா (ஆண்ட்ரியா) உள்ளிட்டோரின் பின்னணிக் கதை சொல்லப்படாததை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்களது பின்னணியை நானே வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

முக்கியக் கதாபாத்திரங்கள் உளவியல் ரீதியில் நுணுக்கமாக அமைத்ததை ஒரே ஓர் உதாரணம் மூலம் சொல்ல விரும்புகிறேன். மல்லிகாவை மனோகர் கலாய்த்துக் கொண்டிருப்பான். விரைப்பு மனிதன் கனியனுக்கு அவள் மீதான கனிவையும் காதலையும்கூட வெளிப்படுத்த தெரியாத அளவுக்கு ஒர்க்ஹாலிஸத்தின் உச்சமாக இருப்பான். ஆனால், மல்லிகாவைக் குறிவைத்தே மிரட்டல் மெசேஜ் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்ததும் கனியனுக்கு முன்னால் மனோகர் அலறியடித்து ஓடுவான். மனிதம் மிகுதியாக இருந்தாலும் மனிதர்களை அணுகும் முறையில் கனியன் தேர்ந்தவன் இல்லை; மனோகர் இயல்பானவன் என்பதையே இவை காட்டின. மல்லிகாவின் கைகளில் துடைப்பத்தைத் திணித்து வீட்டிலேயே இருக்கவைத்ததில் ஒளிந்திருப்பது மட்டமான பார்வை அல்ல; அவளுக்கு ஒருவித பாதுகாப்பைத் தரவேண்டும் என்ற தனக்குத் தெரிந்த வழியிலான பேரன்பு வெளிப்பாடு. அவளது பிரிவைத் தாளமுடியாமல் மண்டியிட்டு கதறியதன் மூலம் கனியன் பூங்குன்றன் தன் கேரக்டரை உடைத்து வெளிக்காட்டி அழவும் தயங்கவில்லை.

சரி, மேட்டருக்கு வருகிறேன். நம் சினிமாவில் கெட்டவர்கள் வீழ்த்தப்படும்போதும் சாகும்போதும் சோகமான பின்னணியை இசையை கேட்பது அரிது. ஆனால், அது மிஷ்கின் படங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. ‘அஞ்சாதே’ படத்தில் மிகக் கொடூரத் தன்மை கொண்டது பிரசன்னாவின் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் சாகடிக்கப்படும்போது, இறந்து கிடப்பது ஒயிட் ஆங்கிளில் காட்டப்படும்; அப்போது, நெஞ்சைப் பிழியும் சோகமான பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு கோடூரன் கொல்லப்படும்போது ஏனிந்த சோகம்? இது யாருடைய சோகம்? பார்வையாளர்கள் சோகத்துடன் பார்க்க வேண்டுமா? அல்லது அந்தக் கதாபாத்திரம் செத்ததில் அதன் படைப்பாளில் கவலைப்படுகிறாரா?

இப்படி பல கேள்விகள் எழுந்தன. என்றாவது ஒருநாள் மிஷ்கினை சந்திக்க நேர்ந்தால் இதைக் கேட்டுவிடுவது என்றும் முடிவு செய்திருந்தேன். அப்படி ஒரு சந்திப்பில் கேட்டேவிட்டேன். அதற்கு மிஷ்கின் சொன்ன பதில் மிகவும் நிறைவைத் தந்ததுடன், ஒரு சினிமாக் கதையையும் கதாபாத்திரத்தையும் அணுகும் விதத்தையும் ஓரளவு சொல்லிக் கொடுத்தது. அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

“என் கதையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே என் குழந்தைகள்தான். என்னிடம் உள்ள நல்ல தன்மைகளையும், நான் விரும்பும் நல்லனவற்றையும் நான் உருவாக்கும் நல்லவர்களிடம் கேரக்டர்களாக புகுத்துகிறேன். நான் விரும்பாத தீயதும் கொடூரமானதுமான அம்சங்களை கெட்டவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். ஆனால், அவர்களும் மனிதர்கள்தான். என் குழந்தைகள்தான். அவர்களது இறப்பும் என்னைச் சோகத்தில் ஆழ்த்தும். அந்தச் சோகத்தை இசையில் நிரப்ப முயல்கிறேன்.”

செம்ம.

‘துப்பறிவாளன்’ படத்தில் இதே விதமாகவே இசை அணுகப்பட்டிருக்கிறது. அவர்கள் மனிதத்தன்மைகளை தூரப்போட்ட கொடூரர்களாக இருப்பினும், அவர்கள் சாகும்போது சோக கீதமாக பின்னணி இசை அழுதது. பார்வையாளனான எனக்கும் ஒருவித சோகம் தொற்றியது. கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். நமக்கு நெருக்கமாகத் தெரிந்த மனிதர்களில் – உறவுகளில் அப்பட்டமாக மோசமான தன்மைகளை நிரம்பியவர்களையும் நாம் சந்திக்கிறோம். சில நேரங்களில் அவர்களால் துயரங்களை அனுபவிக்கிறோம். ஆனால், அவர்களில் எவரேனும் இறந்த தகவல் கேட்டால் ஒரு நிமிடம் துன்ப அதிர்ச்சியை அனுபவிக்கிறோம்தானே?!

கிராமங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு சண்டை போட்டுக்கொண்டவர்கள் மரணங்களின்போது துயரத்தில் பங்கெடுப்பதும், உடலைச் சுமந்து செல்வதும் மனிதர்களிடமே பார்க்கக் கூடிய நெகிழ்ச்சிகள். இதன் வடிவமாகவே மிஷ்கின் படைப்புகளில் கெட்டவர்களின் சாவுகளின்போது ஒப்பாரிச் சத்தம் இழையோடி, பார்வையாளர்களுக்கு அந்தக் கதாபாத்திரங்கள் மீதான கோபத்தைத் தணிக்கும் மனிதத்தைக் கடத்துவதாகப் பார்க்கிறேன். ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்: மிஷ்கினுக்குக் கிடைத்த மேன்மையான பொக்கிஷம்தான் இசையமைப்பாளர் அரோல் கொரேலி.

அடுத்த மிஷ்கின் படைப்புக்கான காத்திருப்புடன்,
கீட்சவன்

நிழலழகி 17: தங்க கூண்டில் உள்ள கிளிகள் அல்ல ஆல்தியாக்கள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Tharamani | Ram| Tamil | 2017

திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதும், நண்பர்களுடன் பேசுவதும் எனக்கு சமீபகாலமாக மிகவும் பிடித்துப்போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒருநாள் தோழி ஒருத்தி என்னிடம் “இப்போதெல்லாம் எழுதும் நோக்கத்தோடு மட்டும் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாயா?” என்று கேட்டாள். நான் எந்தப் படத்தையும் எழுதும் நோக்கோடு பார்ப்பதில்லை. ஒரு நல்ல படம் எனக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், அதை எழுத்தாக வெளியேற்றுகிறேன் என்பதுதான் உண்மை. அப்படி வேண்டா வெறுப்பாகப் பார்த்துவிட்டு இன்று வரை என்னோடு பேசிக்கொண்டே இருக்கும் படம் ‘தரமணி’.

இந்தப் படத்தை ஒரு கூட்டம் கழுவியூற்றவும், இன்னொரு கூட்டம் தூக்கிப் பிடிக்கவுமாக ஒரு மாதமாக போஸ்ட்மார்டம் செய்து பாடை ஏற்றப் பார்த்தனர். ஆனால், ‘தரமணி’ போன்ற படங்கள் நம்மை நின்று கொல்லும் என்பதுதான் நிதர்சனம். என்னுடைய மென்டர் ஏஞ்சலோ அண்ணா அடிக்கடி சொல்லும ஒரு விஷயம்: ‘கடந்த இருபது வருடங்களில் பெண்கள் அதிகம் முன்னேறிவிட்டனர். ஆனால், அதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுக்கின்றனர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஓர் ஆணிற்கு அவன் பெற்றோர்தான் முதலில் சொல்லிக் கொடுக்கவேண்டும்’ என்று சொல்வார். அப்படிச் சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்து நிற்கும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், இன்றைய பெண்களின் நிலையை எடுத்துச் சொன்னது ‘தரமணி’.

‘தரமணி’ 2017-ம் ஆண்டு இயக்குனர் ராம் படைப்பில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில், யுவன் இசையில், ராம் வர்ணனையில் வெளிவந்த படம். சௌம்யாவை (அஞ்சலி) காதலிக்கும் பிரபுநாத் (வசந்த் ரவி), அவள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு தேவையான பணத்தை திருடித் தர, அந்தப் பணத்தில் வெளிநாடு சென்ற சௌம்யாவோ பிரபுவை நிராகரிக்கிறாள். குற்ற உணர்வும், காதல் ஏமாற்றமும் நிறைந்த வசந்தை சந்திக்கும் ஆல்தியா (ஆண்ட்ரியா)… இவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உளவியல் தாக்கம், சமூகத் தாக்கம் என ஒவ்வொரு நிலையிலும் பயணிக்கிறது இப்படம்.

ஆண்ட்ரியாவின் குரலிலும், பாடல்களிலும் ஒருவித கெத்து இருக்கும். அது அவர் திரையில் எடுத்து நடிக்கும் கதாபாத்திரத்திற்குள்ளும் சர்வசாதாரணமாய் நிரப்புவார். அந்த கெத்து நடிப்பில் இருக்கும் ஒருவித தெளிவு, ஈர்ப்பு போன்ற விஷயங்கள் அவரை ஆல்தியாவாக ‘தரமணி’யில் வாழவைத்துள்ளது.

பெண்கள் படிக்க வேண்டுமா வேண்டாமா? வேலைக்குப் போகவேண்டுமா வேண்டாமா? என்ன மாதிரியான வேலைகளுக்கெல்லாம் போகலாம்? என ஆண்கள் கைகளில் முடிவுகள் விடப்பட்ட நிலையில் இருந்து நழுவி, இன்று அநேக பெண்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைப் பார்க்க வேண்டும் என்று சுயமாய் உலகைச் கற்றுவர ஆரம்பித்துவிட்டனர். உண்மையில், இன்றைய நிலையில் பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை; நல்ல இணையே.

‘கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்’ என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் பெருகிவரும் விவாகரத்து வழக்குகள். ‘என் வாழ்க்கையை வாழ எனக்கும் சம உரிமை உண்டு’ என்று உணர்த்த பெண்களை இன்று சமூகம் ‘திமிரு பிடித்தவள்’, ‘அடங்காதவள்’ என பட்டம் கட்டுகிறது.

தனது கணவன் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் எனத் தெரிந்ததும், ‘யாருக்கும் பயப்பட வேண்டாம். உனக்குப் பிடித்ததை நீ சந்தோஷமாய் செய்’ என்று விலகிக்கொள்ளும் ஆல்தியா மட்டும் அல்ல; எந்தப் பெண்ணும் தன்னை ஓர் ஆண் காதல் இல்லாமல் கடமைக்குச் சந்தோஷப்படுத்துவதை விரும்பமாட்டாள். உண்மை தெரியவரும்போது அவளால் அந்த ஆணை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அவன் தன்பாலின ஈர்ப்பாளன் என்பதை விட, தன்னிடம் அவன் முழு ஈடுபாடுடன் உறவு கொள்ளவில்லை என்ற வெறுப்புதான் அவனை விட்டு வெளியே வர முடிவெடுக்கச் செய்தது.

‘தனித்து வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. அவர்களை இந்தச் சமூகம் ஒழுக்கமாய் இருக்க விடமாட்டார்கள்’ என்ற மட்டமான எண்ணங்களுக்குச் சிறப்பாய் ஆல்தியா பதில் தந்திருப்பார். நிறுவனத்தில் தன்னை சீண்ட நினைக்கும் மேலதிகாரிக்கு கொடுக்கும் பதிலடி சாட்டையடி. பிரபுநாத் உடன் மழையில் நடக்கும் முதல் சந்திப்பில், தனிமையில் அவன் நடந்துகொண்ட கண்ணியம்தான் அவனிடம் தொடர்ந்து பழக ஆல்தியாவிற்கு வழிவகுக்கும்.

திருமண பந்தத்தை முறித்து வந்த மகளின் செயல்களில் வெறுப்படையும் தாயின் வசைச் சொல்லில் ரோஷப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தனி வீட்டில் வாழ முடிவெடுக்கும் ஆல்தியா உடன் பிரபுநாத் தங்கிக்கொள்ளலாமா எனக் கேட்பான். ஒரு கட்டத்தில் தனக்கு கணவன் தேவை இல்லை என்றாலும், தன் மகனிற்கு தந்தை தேவை என உணரும் ஆல்தியா, பிரபுநாத் காட்டும் நெருக்கத்தை ஏற்றுக்கொள்வாள். ‘ஏதாவது வேலைக்கு போகட்டா?’ என்று ஆல்தியாவிடம் கேட்கும் பிரபுவிடம், ‘ஏதோ ஒரு வேலை எல்லாம் வேண்டாம்; நல்ல வேலைன்னா போகலாம்’ என்ற விதத்தில் பதில் சொல்லுவாள். ஆம், ஆண்களிடம் பெண்கள் நேரத்தையும், பாசத்தையும் கேட்கும்போது, வேலைக்குப் போக வேண்டாமா? நாலு காசு சம்பாதித்து குடும்பத்தைப் பார்க்க வேண்டாமா?’ என வீம்பு பேசும் ஆண்களிடம், பெண்கள் இனி தைரியமாய் சொல்லலாம்: “காசெல்லாம் நான் சம்பாதிக்கிறேன்; இப்போது கொஞ்சம் நேரமும், பாசத்தையும் கொடு”.

பிரபுநாத் அதீத அன்பில் அவள் நடத்தைமேல் சந்தேகப்பட்டு சண்டை போடும்போது அவனை வீட்டை விட்டு துரத்துவாள். ஆம், ஆல்தியா தன்னுடைய நடத்தைகான அங்கீகாரத்தை எந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ எதிர்பார்க்கவில்லை. தன்னளவில் அவள் மேல் அவளுக்கு இருந்த நம்பிக்கையே அவளுக்கு போதுமானதாய் இருந்தது. ஆண்களுக்குப் பிரச்சினை என்றால் குடி, புகை முதலானவை துக்கத்தை மறைக்க தேவை என்று லைசென்ஸ் கொடுத்த சமூகம், பெண் அதைச் செய்யும்போது ‘கேவலம்’ என்று வசைபாட மட்டும்தான் செய்யும். அவளுக்கு பிரச்சினையை கேட்கவோ, ஆறுதல்படுத்தவோ, அவளை மீட்கவோ முன்வராமல், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்ளும்.

ஆல்தியாவிடம் அவள் மகன் “உன்னை ஏன் எல்லாரும் பிட்ச்னு சொல்லறாங்க? அப்படின்னா என்ன?” என்று கேட்பான். உண்மையில் அந்த சிறுபிள்ளை மனதில் பதியும்படி அப்படி வார்த்தையைச் சொன்னவர்கள், அந்த வார்த்தையை விட கேவலமானவர்கள். ஒரு பெண்ணை திட்ட வேண்டும் என்றால், அவள் நடத்தையை பற்றிப் பேசுவது அல்லது அவள் உடல் உறுப்புகளை ஆபாச வார்த்தையில் சொல்வது, ஏன் ஓர் ஆணைத் திட்ட வேண்டும் என்றால்கூட அதற்கும் அவன் வீட்டுப் பெண்களின் உடல் உறுப்புகள்தான் தெரிந்த ஒரே வசைமொழிகள். பெண்கள் வாயை மூட வைப்பதற்கும், அவர்களை அடங்க வைப்பதற்கும் பலர் உபயோகிக்கும் கேவலமான ஆயுதம் இந்த மாதிரி வார்த்தைகள். உண்மையில் ஆல்தியா இந்த உளவியல் மிரட்டலுக்குள் அடைபடவில்லை.

ஆல்தியா போன்று வசதியும் தெளிவும் மிக்க பெண்கள் மட்டுமே அன்பை எதிர்பார்த்து ஆண்களிடம் தஞ்சம் புகும்போது, வெறும் உடல் வேட்கையை முடித்துக்கொண்டு நழுவிச் செல்லும் ஆண்கள் கையில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து, ஒரு நிலையான இணையைப் பெறுகின்றனர்.

ஆல்தியா போன்ற பெண்கள் புத்திசாலிகள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்வர். தைரியமானவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே. அவர்கள் ஆண்களிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி ஆல்தியாவின் போராட்டங்களை புரிந்துகொள்ளவும், அவள் மேன்மையை உணர்த்தவும் நிழலழகியாக அவள் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

நிழலழகி 16: கோமாதா என்றும் கனவு மாமியார் தானா?

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Magalir Mattum | Bramma | Tamil | 2017

‘இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டது’ என்று சொன்னால்கூட ‘அப்படியா?’ என்று சர்வசாதாரணமாகக் கடந்து போகும் நம் மக்கள், “அந்த வீட்டுல மாமியாரும் மருமகளும் இணக்கமாக சேர்ந்துவிட்டார்கள்” என்றால், “அப்படியா!” என்று வாயைப் பிளப்பார்கள். அந்த அளவிற்கு மாமியார் – மருமகள் என்றால், அவர்கள் இருதுருவத்தில் இருந்துகொண்டு ‘போர்… ஆமாம் போர்’ என்ற ரீதியில் சண்டை போடுவதாகவே ஆண்டுடாண்டு காலமாகக் காட்டியுள்ளது தமிழ் சினிமாவும் மெகா சீரியலும்.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குள் போகும் பெண்ணை துக்கம் விசாரிப்பதுபோல் ‘மாமியார் உன்னை நல்ல வச்சுக்குறாங்களா?’ என்று கேட்கும் அக்கம்பக்கத்தினர் என இந்த உறவை இன்றுவரை ஒரு வேற்று கிரகத்து உறவாகவே மாற்றிவிட்டனர்.

‘மகளிர் மட்டும்’ – 2017 ஆம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன், மாதவன் என ஒரு நடிப்பு பட்டறைகளின் கூட்டால் உருவான படம். ஜோதிகாவை மையமாக வைத்து, அவரை முதன்மைப்படுத்திய படம்.

ஜோதிகா புல்லட் ஓட்டும் காட்சிகளாலும் புகைப்படங்களாலும் இரண்டு வருடங்களாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். ‘ஆண்கள் தோசை ஊற்றி, தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அதை வழங்க வேண்டும்’ என்றெல்லாம் படத்தின் ப்ரோமோஷனிற்கும் சூடேற்றினர். 1994 ஆம் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்துக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெண்களின் பல்வேறு பிரச்சினைகளும் இதில் பேசப்பட்டிருக்கிறது என புகழாரம் வந்துகொண்டேதான் இருக்கிறது.

மூன்று உயர்நிலைப் பள்ளி தோழிகள் ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா), கோமாதா (ஊர்வசி) ஆகியோரின் அற்புதமான பள்ளி விடுதி வாழ்க்கை எதிர்பாராமல் ஒருநாள் முடிந்து போகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் எங்கெங்கோ தொடர்பில் இல்லாமல் போன இந்தத் தோழிகள் உலகமானது திருமணம், சீமந்தம், குழந்தை வளர்ப்பு, பேரப்பிள்ளைகள் என பல வருடங்களில் உருண்டு செல்கிறது. ஒருநாள் இவர்கள் மூவரையும் சந்திக்கவைக்க பிரபாவதி (ஜோதிகா) எடுக்கும் முயற்சியையும், குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் இயல்பான பிரச்சினைகளையும் பேசிய படம் ‘மகளிர் மட்டும்’.

பல முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருந்தும், என்னை அதிகமாக கவனம் ஈர்த்தவர் ஊர்வசிதான். தன் உடல்மொழி, நடிப்பு, காமெடி என அத்தனையிலும் ஊர்வசி தனக்கென ஓர் அடையாளம் பெற்றுக்கொண்டே இருக்கிறார். கோமாதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி ‘இப்படி ஒரு மாமியார் கிடைத்தால் செம்ம’ என்று தமிழ்நாட்டுப் பெண்களை ஏங்க வைத்துவிட்டார். இப்படி எல்லாம் ஒரு மாமியார் இருப்பாரா என்று பல மருமகள்களை பெருமூச்சி விட வைத்துவிட்டார்.

முதல் காட்சியில் தன்னுடைய மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்தப் படபடப்பு அடங்காமல் பிரபாவதியுடன் காரில் பயணிப்பார் கோமாதா. ஆரம்பத்தில் கோமாதாவும் பிரபாவதியும் அம்மா – பெண்ணா அல்லது தோழிகளா என்றெல்லாம் யோசித்து கொண்டிருக்கும் நமக்கு, அவர்கள் மாமியார் – மருமகள் என்பது தெரியும்போது ஆச்சரியம்.

கணவன் இறந்த பிறகு, மகன் படிப்பை முடித்து வெளிநாட்டு வேலைக்கு செல்கிறான். மகன் காதல் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்தான் பிரபாவதி. மகன் இல்லாத தனிமையைப் போக்க, ‘எப்படியும் இன்னும் கொஞ்ச மாசத்துல நீ இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறவதான? இப்பவே வந்து என்கூட தங்கிடேன்’ என்று மருமகளிடம் கேட்கிறார் மாமியார். பிரபாவதியை ஒரு தோழி போல் அந்த வீட்டிற்குள் நடத்துவாள். தன்னுடைய பொழுதுபோக்கிற்காக மொட்டைமாடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் கோமாதாவிற்கு டியூஷன் பிள்ளைகள்தான் எல்லாம். அவர்களை படிக்கவைக்கும் விதம் நமக்கு சிரிப்பை வரவைக்கும்.

கோமாதா மாதிரி வாழ்க்கையில் எல்லா பொறுப்புகளையும் முடித்து விட்டு, தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கை, அன்பு போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் தெரியும். கோமாதாவின் தவிப்பை புரிந்த பிரபா, தோழிகளைத் தேட உதவுவாள். தன்னுடைய தோழிகளிடம் பிரபாவை விட்டுக் கொடுக்காத கோமாதா, அதேநேரத்தில் கண்டிப்பு, பாசம், தோழமை என அனைத்தையும் அள்ளிக்கொடுக்கும் மாமியாராக இயல்பாய் இருப்பார்.

தோழிகளுடன் இன்பமான நாட்களிலும் பிரபா மீது குறையாத அக்கறை. பழையக் காதலை சொல்லும்போது வெட்கம். தன் தோழிகளின் வாழ்க்கை நிலையை புரிந்துகொள்ளும்போதும் அவர்கள் மேல் சிறுவயதில் இருந்த பாசம் துளிகூட குறையாமல் இருப்பதும் அழகு. தோழிகளுக்கு இடையே ஓட்டப்பந்தயம் வைக்கும்போது தன்னால் ஓட முடியாததை உணர்ந்து, அந்த இடத்தை தன்னுடைய நகைச்சுவையால் நிரப்பியிருப்பார். ஆம், படம் முழுக்க நான் அதிகமாய் ரசித்தது ஊர்வசியின் நகைச்சுவை உணர்வைத்தான்.

ஒரு காட்சியில் தாஜ்மஹாலைக் காட்டி, ‘இது ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்கு கட்டியது’ என ஒரு கைடு சொல்லும்போது, “இந்த மும்தாஜ் முப்பத்தாறு வயதிற்குள் பதினான்கு பிள்ளைகள் பெற்றிருந்தாள் என்று உனக்குத் தெரியுமா?” என்று பிரபா கேட்பாள். ஆம், பெண்களின் நிலை அவ்வளவுதான். என்றோ ஒரு நாள் தனக்காக மாறுவான், தன்னைப் புரிந்துகொள்வான் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

சினிமாவில் மட்டும்தான் மூன்று மணி நேர முடிவில், கடைசிக் காட்சியில் சுவிட்ச் போட்டாற்போல் ஒட்டுமொத்த ஆண்களும் திருந்துவது நடக்கும். அதுவரை பெண்கள் அனைவருமே உண்மைகள் மறைக்கப்பட்ட தாஜ்மஹால் போலவே உலகத்தாருக்குத் தெரிவர்.

பெண்களின் பிரச்சினைகளை வெறும் சிட்டிகை அளவு மட்டுமே பேசிய படம் ‘மகளிர் மட்டும்’. ஆனாலும் மாமியார் – மருமகள் உறவை மேன்மையாகவும் சிறப்பாகவும் காட்டியத்திற்காய் இந்தப் படத்தை ரசிக்கலாம். கோமாதா போன்ற மாமியாரை திரையில் பார்த்து நிழலழகியாகக் கொண்டாடலாம்.

துப்பறிவாளன்: ”ஒரு புத்தகம் வாசிக்கிற ஃபீலிங்!”

ராஜா சுந்தர்ராஜன்

ராஜா சுந்தர்ராஜன்

பாரதியார்தான். ஒரு நாடகம் பார்த்துக்கிட்டு இருந்திருக்கார். ஒரு கேரக்டர் சாகணுமாம். நடிச்சவர் நெஞ்சைப்பிடிச்சுக்கிட்டு வசனம் பேசியிருக்கார். அது கொஞ்சம் நீளமான வசனமாப் போச்சு போல. முன்வரிசையில உட்கார்ந்திருந்த மகாகவி விருட்டுன்னு எழுந்துநின்னு, “சாகணும்னா செத்துத் தொலையேன்’டா! ஏன் வசனம் பேசிக்கிட்டிருக்கே?”ன்னு கத்திட்டு வெளியேறிப் போயிட்டாராம்.

நல்லாப் போயிக்கிட்டிருந்த படத்துல அப்படி ஒரு சீன் வருது. இங்கே வசனம் பேசுறது சாகப்போற ஆளு இல்லை. அந்த ஆளெக் காப்பாத்தவேண்டிய ஹீரோ. எனக்கானா கே.பாக்கியராஜ் மேலதான் கோபம். அவருக்கும் அந்த சீனுக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனா அவர் எவ்வளவு பெரிய ஸ்க்ரீன் ரைட்டர்? மிஷ்கின்ட்ட தோள்ல கைபோட்டுச் சொல்லியிருக்கலாம்ல? “தம்பி, இப்படியெல்லாம் வசனம் வெச்சீங்கன்னா தியேட்டர்ல சிரிப்பாங்க”ன்னு.

சிரிச்சிட்டாங்க. சிரிக்கவேண்டிய சீனாங்க அது? இன்னொன்னு, வில்லனோட பூர்வீகப் பேரு தெரிஞ்சதும், அந்தப் பேரைக் கூவி, ஷாஜி தர்ற ரீயாக்ஷன். அதுவோ க்ளைமாக்ஸ். பார்க்கிறவங்களுக்கு ஒரு பதற்றம் வேண்டாமா? ஆனா சிரிக்கிறாங்க.

வேற ஒரு வசனம் வருது. பிரசன்னா விஷாலைப் பார்த்து சொல்றது. “எத்தனையோ புஸ்தகம் படிக்கிறே, ஆனா லைஃப்ல ஒரு சின்ன விஷயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியலை”ன்னு. அதை அப்படியே மிஷ்கினுக்கு சொல்லலாம்போல இருக்கு. மிஷ்கின் புத்தகம் நிறையாப் படிப்பார்னு அவரே சொல்லியிருக்கார். சும்மாதானோ?

மிஷ்கின், ராம் இவங்கல்லாம் நல்ல டெக்னீஷியன்ஸ், ஆனா அவ்வளவுக்கு நல்ல எழுத்தாளர்கள் இல்லைன்னு தோணுது. கேமராக் கோணங்கள், காட்சிகளை எல்லாம் கடல்களுக்கு அப்பாலயிருந்து சுட்டுச்சுட்டு வெச்சிடலாம். ஆனா நம்ம நாட்டுக் கதையா அதை மாத்தணும்னா எழுதத் தெரியணும்ல? தெரியணும்னா வாழ்க்கை அனுபவம்னு ஒன்னு இருக்கணும்ல?

மல்லிகாவோட தம்பி தங்கச்சியெ கொன்னுபோட்டுக் காட்டுற ஷாட்டுக்கு ஒரு வேல்யூ அடிஷனும் கிடையாது. ஆனா அதை யாரும் பொருட்படுத்தப் போறதில்லை. ஆனா மல்லிகா சாகிற அந்த சீன்? அந்த ஒரு சீன்தான் படத்தைக் கெடுக்குது. ஒரே ஒரு சீன்தான். மத்தபடி படம் பார்க்கிறாப்லதான் இருக்கு.

Arthur Conan Doyle-ஓட கதைன்னு மொதல்ல எழுத்துப் போடுறாரு. கதையோட பேரும் போடுறாரு. இடைவேளை வரைக்கும் சினிமாப் பார்க்கிற ஃபீலிங் வரலை. ஒரு புத்தகம் வாசிக்கிற ஃபீலிங்தான் இருந்துச்சு. ஆனா படம் அந்தக் கதையெ அப்படியே ஒன்னும் தத்தெடுக்கலை. இந்தக் காலத்துக்குத் தக்க மாத்தப்பட்டிருக்கு. அது நல்லாவும் வந்திருக்கு. பெரியபெரிய கொலைகள்லாம் ஒரு சின்னத் தவறுதல்ல வந்து மாட்டிக்கிற விசயம் Conan Doyle-ஓட சொல்முறைன்னாலும், படத்துல அது மிக சுவாரஸ்யமா காட்டப்பட்டிருக்கு. வழக்கமா, நாட்டியம்போலதான் மிஷ்கின் சண்டைக்காட்சிகளை எடுப்பார். இதுல அது, முந்தின படங்கள்ல விட அபாரமா வந்திருக்கு. Ennio Morricone-யோட மவுத்-ஆர்கன் இசையிடையிட்டு வர்ற சண்டையை நான் ரொம்ப ரசிச்சேன்.

விஷால் உண்மையிலேயே நல்லாப் பண்ணியிருக்கார். பிரசன்னா அடக்கமா ஒத்தூதி யிருக்கிறார். சின்ன ரோல்னாலும் கே. பாக்கியராஜ் அதை சிறப்பாச் செஞ்சிருக்கார். “தரமணி”க்கு பிறகுங்கிறதால ஆண்ட்ரியாவைப் பார்க்க கொஞ்சம் ஏமாற்றந்தான். ஆனா அவரு என்ன பண்ணுவார், பாவம், அவருக்குத் தீனி அவ்வளவுதான்.

என்னய்யா நீ? எல்லாமே நல்லா இருக்குங்கிறே, அந்த ஒரே ஒரு எழவு வசனத்துக்காகவா இம்புட்டு வெசனப்படுறே? அழகான ஒரு மூஞ்சியில உதடு பிளந்திருந்தா ஒரு சங்கடம் வரும்ல, அதுமாதிரிதான். ஆனா அதுதான் குறைன்னு நான் சொல்லிப்புட்டேன்ல, இனி போயி பாருங்க, படம் உங்களுக்கு நிச்சயமாப் பிடிக்கும்.

ராஜா சுந்தர்ராஜன், எழுத்தாளர்.

நிழலழகி 15: ரட்சனாவும் அனிதாவும் சில உண்மைகளும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

U Turn | Pawan Kumar | Kannada | 2016

மெர்சி எனும் உன்னத ஆன்மா இந்த உலகை விட்டு நீங்கியதற்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த இதயத்துடனும், குழப்பமான மனநிலையுடனும் ஆக்ட்டிவாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாய் நடுரோட்டில் கிடந்த ஒரு பெரிய கல்லில் வண்டி ஏறியது. அடுத்த நொடி நான் தரையில் ரத்த காயங்களுடன் கிடந்தேன். உதவிக்கு யாரும் இல்லாத தனிமையான சாலை. ஒரு வழியாக சமாளித்தேன். மருத்துவமனையில் முதல் உதவிக்கு பின் ஒரு வாரகாலம் கட்டாய ஓய்வு என்ற நிலையில், நான் விழ காரணமாய் இருந்த அந்தக் கல்லை அகற்றாமல் வந்தது நினைவு வர, மறுநாள் அந்தக் கல்லை அகற்றச் சென்றேன். நான் விழுந்த இடம் குறிப்பாய் மறந்து போனதும், அந்த இடத்தில எந்தக் கல்லும் இல்லாததும் அதிகக் குழப்பம் தந்தது. இந்த குழப்பத்திலும், ஓய்விலும், வலியிலும் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோது பார்த்த படம்தான் ‘யூ-டர்ன்’.

பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், திலிப் ராஜ், ராதிகா சேத்தன் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட த்ரில்லர் திரைப்படம் ‘யூ-டர்ன்’. பெங்களூர் மேம்பாலம்; அதில் பயணிக்கும் பயணிகள் சிலரின் அத்துமீறல்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.

ரட்சானா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) ஒரு பிரபல நாளிதழில் பணிபுரிகிறார். தன்னுடைய சுய ஆர்வத்தில் பெங்களூர் மேம்பாலத்தில் போக்குவரத்தில் சிக்காமல் இருக்க குறுக்கு வழியை பயன்படுத்தும் பயணிகளை கண்காணித்து அவர்களை பேட்டி எடுக்க முயற்சிக்கிறார். இதற்கு அவள் காதலனும், நண்பனும் தேவையான உதவிகளை செய்கின்றனர். ஒரு தற்கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் ரட்சனா தான் நிரபராதி என நிரூபிக்க முயற்சி செய்கையில், அந்த மேம்பாலத்தை கடந்தவர்கள் என்று அவள் வைத்திருக்கும் குறிப்பில் இருக்கும் அனைத்து நபரும் அந்தக் கல்லை நகற்றி மேம்பாலத்தை கடந்த அதே நாளில் தற்கொலை செய்துகொண்டதாக காவல் பதிவேட்டில் இருப்பதைப் பார்த்ததும் காவல்துறையின் மொத்த சந்தேகமும் ராட்சனா மேல் குவியும். அவர்கள் அனைவரும் இறந்துள்ளனர் என்பது ரட்சனாவிற்கும் பெரும் அதிர்ச்சியை தரும். யாருக்கும் தெரியாமல் ஒரே ஒரு காவல் அதிகாரியின் துணையுடன் அந்த மேம்பாலத்தின் கல்லைக் கடக்க முயல்பவர்கள் தொடர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதும், அதன் பின் நிகழ்வதும்தான் படம்.

ரட்சனா கதாபாத்திரத்தில் கெத்து பத்திரிகையாளராய், துணிச்சலான பெண்ணாய் தன்னை வெளிப்படுத்தி இருப்பார் ஷர்ரதா ஸ்ரீநாத். ஒரு நாளில் பல ஆயிரம் பேர் கடந்து செல்லும் பாதையில் விபத்துகள் நடப்பது சாதாரணம் என்று கண்டுகொள்ளாமல் செல்லும் பல பேருக்கு மத்தியில் ரட்சனா மட்டும் அதற்கான காரணங்களை தேடுவதும் அதற்காக மெனக்கெடுவதும் அவளோடு சேர்ந்து நமக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

ஏதோ பிடிக்கப் போய் பூதம் பிடித்தக் கதையா போச்சு என்பதை போல் விபத்திற்கான காரணம் தேடிப் போக எல்லோர் சாவிற்கும் ரட்சணவிற்கும் தொடர்பு இருக்குமோ என்று காவல்துறை சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்படுவாள், பல கட்ட விசாரணையில் வெறும் தற்கொலை என்று எல்லா வழக்கையும் முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரிகளை பார்க்கும்போது. சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் நினைவில் வந்து எரிச்சல் ஊட்டுகிறது.

துணை அதிகாரி நாயக் மட்டும் இந்த தற்கொலையில் இருக்கும் மர்மத்தை புரிந்துகொண்டு ரட்சனாவிற்கு துணையாய் இருப்பார். தனக்கு உதவிய சாலையோர நாடோடி தன்னால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கியதை நினைத்து வறுத்தப்பட்டு மறுநாள் அவரிடம் மன்னிப்பு கேட்பாள். எந்தச் சூழலிலும் தொடர் சாவிற்கும் கல்லிற்கும் இருக்கும் மர்மத் தொடர்பை புரிந்துகொள்ள முடியாத ரட்சனா தானே அந்தக் கல்லை நகற்றி, உண்மை தெரிய தன்னை பலியாக்க துணிவாள்.

ஆம், அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. மேம்பால மரணத்திற்கு தன் காதலன் காரணம் என்று தெரியும்போது அவள் பதறுவாள்; இருந்தும் உண்மைக்காய் நிற்க முடிவு எடுப்பாள். இறுதியில் தன் காதலன் காரணம் இல்லை என்று தெரியும்போது, உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க துணிச்சலாக முடிவெடுப்பாள்.

“கர்மா” என்று எல்லாம் ஒன்று உலகத்தில் கிடையவே கிடையாது என்று முகப்புத்தகத்தில் ஒரு குழுவில் விளக்கமும், விவாதமும் இருந்ததாக என்னுடைய தோழி ஒருத்தி என்னிடம் சொல்லி எனது கருத்தைக் கேட்டாள். அவளிடம், “கர்மமோ, கர்மாவோ உண்டா இல்லையானு தெரியாது; ஆனா நாம ஒரு தப்பு செஞ்சா, அது நம்மை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும். நம்மை சுற்றி இருக்கிறவர்கள் அடையும் பாதிப்பு நம்மையும் தாக்கும். எனவே, நம்ம செய்ற தப்பு நிச்சயம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அதுக்கு பேர் என்ன கர்மம்னாலும் வச்சுக்கலாம்” என்றேன். யூ-டர்ன் படத்தில் ரட்சனா மூலம் வெளிப்பட்ட உண்மையும் இதுதான்!

விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்

கார்த்திக்

யூடியூபில் எங்கு திரும்பினாலும் ப்ளூ சட்டை அண்ணாச்சியை வெளுக்கிறார்கள் அஜித் ரசிகர்கள் . அதுவும் சிறுவரிலிருந்து பெரியவர் வரை ஏன் பெண்கள் கூட ஸ்லீப்பர் செல் போல காணப்படுகின்றார்கள் . இவர்கள் தயாரிப்பாளர் போல வசூல் பற்றி எல்லாம் கதறுகிறார்கள் . நேற்று ஒரு சினிமா நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன் . 12 வருடமாய் உதவி இயக்குநர் நல்ல திறமையானவர் கடுமையான உழைப்பாளி . “அஜித் மட்டுமே தான் உழைக்கிராரா சினிமாவுல ” என்றார் அஜித் சம்பளம் 50 கோடி என்றார் காசு வாங்கியதற்கு தானே வேலை செய்கிறார் . அஜித் ரசிகர்கள் படம் நல்லா இருக்கானு கேட்டா “தல கடுமையாக உழைத்து இருக்கிறார் ” என்கிறார்கள் . மூட்டை தூக்குபவனிலிருந்து எல்லாரும் தான் உழைக்கிறார்கள் . மேலே செல்ல செல்ல காசு அதிகமாகி உழைப்பு கம்மி ஆகிறது . இஃது அஜித்துக்கு தெரியாதா ?

இந்த விமர்சகர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. நோகாமல் நோம்பு தின்பவர்கள். படக்குழுவில் இருந்து காசு வரும். youtube ஹிட்ஸ் வரும் அதிலிருந்து காசு. சினிமா பற்றி ஆனா ஆவ்வண்ண தெரியாது. எடிட்டிங் கேமரா என்பார்கள் வேகமாய் போனால் நல்ல எடிட்டிங் கலராய் இருந்தால் நல்ல காமெரா அவ்வளவு தான் சொல்லத்தெரியும்.

ஒரு தேர்ந்த விமர்சகர் எல்லாம் யாரும் கிடையாது. சிலருக்கு சினிமா தெரிந்தாலும் காசு வேலை செய்துவிடும். விமர்சனம் தப்பு என்று சொல்லமாட்டேன் விமர்சிக்கிறவருக்கு சினிமா தெரியாமல் எப்படி விமர்சிக்க முடியும். இதை வேண்டுமானால் ரசிகனின் பார்வை என்று சொல்ல முடியுமா? விமர்சகன் என்றால் சினிமா தெரிய வேண்டும். ஒன்னும் தெரியாதவர்களை விமர்சகர்களாக ஆக்கியது நம் மக்கள் அப்போ உலக சினிமா வருமா என்ன விவேகம் மெர்சல் காற்று வெளியிடை போன்ற படங்களே வரும் .

ஹாலிவுட் தரம் என்கிறார்களே உண்மையில் ஹாலிவுட் தரமானதா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தானே. ஹாலிவுட் தரமென்றால் விவேகம் தரமான படம் தான்.

மக்களுக்கு வேகம் தேவைப்படுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யார் நமக்கு நெருக்கம் என்பதெல்லாம் கூட யோசிக்க நேரமில்லை. நிற்க நேரமில்லை, காதலிக்க நேரமில்லை, கவிதையை ரசிக்க நேரமில்லை, மக்கள் பிரச்சனை கேட்க நேரமில்லை. நான் நான் மட்டுமே போட்டோ எடுக்க கூட யாரையும் நம்புவதில்லை நாமே எடுப்போம். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க எடிட்டர் ஒரு காட்சி கூட மனதில் நிற்காமல் எடிட் செய்கின்றார்.
காமெரா நிற்காமல் பறக்கிறது அஜித் சுட்டுக்கொண்டே இருக்கிறார். முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.

எல்லாரும் தான் நல்லவர் மற்றவர்கள் முதுகில் குத்துபவர்கள் என்று நம்புகிறார்கள். அஜித் படங்களில் தொடர்நது தனி நபர் உழைப்பு யாரையுமே நம்பாதது முதுகில் குத்துவது தொடர்ந்து வருகிறது மக்களின் செல்ல பிள்ளை ஆகிறார்.

அதனால் ப்ளூ சட்டை ஆள் மீது வன்மத்தை காட்டுகிறார்கள். இது மன நோய். ஒரு நாயகனுக்கு கொடி தூக்குவது மன நோய். நானும் பைத்தியமாய் இருந்து தெளிந்தவன் தான். படத்தை ரசியுங்கள் வழிபடாதீர்கள்.

இருக்கும் கடவுள்கள் போதும் மக்களை சுரண்ட புது கடவுள் எதற்கு மக்களை மழுங்கடிக்கவா?

கார்த்திக், யூ ட்யூப் விமர்சகர்.

https://www.youtube.com/user/karthiparthi

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்ததை தலைப்பு செய்தியில், குமுதம் அட்டைப்படத்தில் போட்டார்கள் அந்த தலைப்பு இதுதான்
“ரஜினியைப் பின்பற்றுவது முட்டாள்தனம். Bullshit” என்று. இந்த பேட்டி குமுதத்தில் வெளி வந்ததும் ரஜினி ரசிகர்கள் பொங்கி எழுந்தார்கள். அஜித் அப்பொழுது வளர்ந்து வரும் நடிகர். அவரை அவரது மந்தைவெளி வீட்டு வாசல் வரை சென்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தர்ணா செய்தார்கள். அந்த பேட்டியை எழுதிய என்னையும் உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்கள்.

ஆனால் இதற்காக அன்று அஜித்தும் தன் வார்த்தைகளில் இருந்து பின் வாங்கவில்லை. நானும் பயந்து மன்னிப்பு கேட்கவில்லை. இருவரும் தைரியமாக ரஜினி ரசிகர்களை எதிர்த்தோம். இதை இன்றைய தல ஆக மாறி உள்ள அஜித் மறந்து இருக்கலாம். ஆனால் எனக்கு மறக்கவில்லை. இன்றைக்கு இந்த சம்பவம் இன்னமும் அழுத்தமாக நினைவிற்கு வந்ததற்கு இன்னோரு காரணம், அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனை நோக்கி தனிமனித தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதை கண்டிக்காமல் அஜித்தும் மவுனம் காக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் விவேகம் விமர்சனம் பார்த்து, ஆங்காங்கே அஜித் ரசிகர்கள் பொங்குவது மட்டுமல்லாமல் அவரையும் தொலைபேசியில் அழைத்து கெட்ட வார்த்தை பேசி திட்டுகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். இதை என்னைப் போலவே அஜித்தும் கேள்வி பட்டிருக்கலாம் . இல்லை என்று அவர் மறுக்க இயலாது. ஒரு விமர்சனத்திற்காக மாறன் மீது தொடர்ந்து தனி மனித தாக்குதலை நடத்தும் அஜித் ரசிகர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். இந்த  தனிமனித தாக்குதலை அஜித் ரசிகர்கள் செய்தாலும், அது அஜித் செய்வதாகவே கருதப் படும் தன் ரசிகர்களின் இந்த செயலை இன்னமும் அஜித் கண்டிக்காமல் இருப்பது நேர்மையான செயல் அல்ல.

தேவையில்லாமல் அஜித்தை உங்கள் செயலால் தலைகுனிய வைக்காதீர்கள் அஜித் ரசிகர்களே !பொதுவாழ்வில் விமர்சனம் என்பதை ஏற்று கொள்ள இயலாத மனநிலை தவறு . ஏன் இப்படி விமர்சனத்திற்காக இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? புரியவில்லை. அப்படியே அவரது விமர்சனம் தவறாக இருந்தால் , அவரை சட்டப்படி கேள்வி கேட்பதை விட்டு விட்டு , இப்படி சமூகத்தில் ரவுடித்தனம் செய்வது அருவெறுப்பாக உள்ளது.

அஜித் என்கிற ‘தல’ ரொம்ப நல்லவர், மனிதாபிமானம் உள்ளவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த நல்லவர் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்? இது போன்ற செயல்கள் தான் கண்டிக்கப் படாமல் , வளர விடப் பட்டு சமூக வெறித்தனமாக மாறுகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை வெளியில் அனுப்பும் போது என் சகோதரியை வெளியில் அனுப்புகிறேன் . அவரை துன்ப படுத்தாதீர்கள் என்று வேண்டுகோளுடன் அவரை வெளியில் அனுப்பிய கமல் ஹாசன் அவர்களிடம் பண்பை எல்லா நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் . தன் ஈகோ திருப்தி அடையும் வரையிலும் , தன் ரசிகர்களின் ரவுடித்தனத்தை கண்டிக்காமல் இருப்பது நல்ல ஹீரோவின் செயல் அல்ல .இந்த செயலை வெறும் ஹீரோவுக்கும் , ரசிகர்களுக்குமான செயலாக கருத இயலாது என்பதை என் தோழர்களுக்கு தெரியப் படுத்த விரும்புகிறேன்.

ஜி. விஜயபத்மா, சினிமா இயக்குநர்; பத்திரிகையாளர்.

 

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

கீட்சவன்

கீட்சவன்

இயங்கள் குறித்த புரிதலும் தெளிவும் முழுமையாக இல்லை. எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களை மனிதர்களாக அணுகுவதற்கு முயன்றுகொண்டு தோற்றுத் தோற்று எழுந்திட முற்படுவது ஒன்று மட்டுமே இசங்கள் மீது ஈடுபாடுகொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. இதனால்தான் என்னவோ #தரமணி-யை ஒரு சினிமா பார்வையாளனாக அனுபவித்து ரசிக்க முடிந்தது.

ஆம், புறக்காரணிகளால் பாதிப்புக்குள்ளாகி இயல்பாக இருக்க முயற்சிப்பதையே அதீதம் போல் பார்க்கப்படுவது பற்றி கவலைப்படாத தன்போக்கில் வாழும் ஆல்தியாவும் பிரபுவும்தான் ப்ரொட்டாகனிஸ்டுகள்.

கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து, அவரை அரவணைப்புடன் விலகும் அணுகுமுறையிலேயே ஆல்தியாவின் பக்குவம் பிடிபடுகிறது. சில மணிநேரம் பழகிய அன்னிய இளைஞனை எடைபோட்டு, அவன் ஆபத்தில்லாதவன் என்பதை உணர்ந்து உறவைத் தொடங்க முற்படும் இடத்திலும் அவளது பக்குவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் நம் சமூகம் உருவாக்கிக் கைவிட்ட பிரபு, புறம் சார்ந்த கமிட்மென்ட்ஸ் ஏதுமில்லாததால் விரக்தியில் வெட்டியாக வாழ்கிறான். எனக்கும் தனிப் பொறுப்பு சார்ந்த நிர்பந்தங்கள் இல்லாமல் போயிருந்தால், அவனைப் போல் சுற்றித் திரிந்திருப்பேன் எனக் கணிக்கிறேன்.

இணையருக்கான தேடல் தாண்டி, தன் குழந்தைக்கு தகப்பனாகவும் இருப்பதற்கான சாத்தியங்களைக் கண்டுகொண்ட பிறகே பிரபு மீதான காதலை உறுதிபடுத்துகிறாள் ஆல்தியா. அந்த டால்பின் காட்சியின் பின்னணியும், அதைக் காட்டும்போது மிதக்கும் வரிகளும் திரைக் கவிதை.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற படங்களின் தேவையைக் கிடாசி எறிந்ததில் ஐ.டி. துறைக்குப் பெரும் பங்கு உண்டு. நடுத்தர மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதில் பெறும் பங்கு வகித்த இந்தத் துறை தந்த சாதகங்களின் ஒன்றுதான் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் ஆல்தியாக்கள் எண்ணிக்கை மிகுதி ஆவதும். அத்தகைய ஆல்தியாக்களிடம் நெருங்கும்போது சந்திக்கும் தேவையற்ற அதிர்ச்சிகளை மனரீதியில் அணுக முடியாமல் தவிக்கும் நம் சமூகம் உற்பத்தி செய்த ஆண்களில் பலரது பிரதிநிதிதான் பிரபு. இவர்களுக்கு இடையிலான உறவின் நெருக்கமும், உளவியல் சிக்கல்களும் சேர்ந்து எழுப்பும் விளைவுகளும் இருதரப்பு புரிதல்கள் நோக்கியப் பயணம் என்கிற ரீதியில்தான்#taramani-யைப் பார்க்கிறேன்.

ஆல்தியாவை சக மனிதராகவே பார்க்கிறேன். அவள் எதிர்கொள்ளும் சூழல்களை நான் சந்திக்க நேர்ந்தால் என்னென்ன செய்வேனோ அதைதான் அவள் செய்கிறாள். புகைப்பது, மது அருந்துவது எல்லாமே இதில் அடக்கம். ‘அவெய்லபிளிட்டி’ என்பது இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது. அவள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கைச் சூழல், நினைத்ததைச் செய்யும் வாய்ப்பைக் கொடுக்கிறது. அவளும் அதைப் பயன்படுத்துகிறாள். அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாத புறக்காரணங்களால்தான் பெரும்பாலான பெண்கள் மாற்று வழிகளை நாடுவதில்லை என்பதாக நம்புகிறேன்.

குழந்தைகளைப் பெற்றோர் ஹேண்டில் செய்யும் காலத்தை இழந்துவிட்டோம். இப்போது, குழந்தைகள்தான் பெற்றோரை ஹேண்டில் செய்கிறார்கள். அதைக் கச்சிதமாக குட்டிப் பையன் ஏட்ரியன் காட்டிக் கொடுக்கிறான். பிரபுவைப் போன்ற பின்னணியில் இருந்து வந்து வாழ்க்கையை ஓட்டும் அஞ்சலி கதாபாத்திரமும் குழப்பவாதிகளின் பிரதிபலிப்பு.

பிரபுவின் அறியாமைச் செயல்களால் எரிச்சல் மிகுந்து கொந்தளிக்கிறாள் ஆல்தியா. அவளை அணுக முடியாமலும், பிரிய முடியாமலும் தவிக்கும் பிரபுவுக்கோ இன்னொரு பக்கம் தன் குற்ற உணர்வுகளைப் போக்க வேண்டிய கட்டாயம். இதனால் இருவருக்குமே தடுமாற்றம். ஆல்தியா நிலைதடுமாறி ஏதேதோ செய்ய, இவனோ காமம் சார்ந்த குற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அவனது தடுமாற்றம், திரைக்கதையிலும் எதிரொலிக்கிறது. போன் செக்ஸ் குற்றச் சம்பவ பகுதியே தடுமாறித் தொக்கி நிற்கிறது. அவன் மீளும்போது திரைக்கதையும் மீள்கிறது.

இதனிடையே, பிரபுவுக்கு நெருக்கமான அழகம்பெருமாள் கதாபாத்திரமும், ஆல்தியாவின் அலுவலக பக்கத்து சீட் பெண் கதாபாத்திரமும் இரு வெவ்வேறு குடும்பச் சூழலின் வாழ்வோரின் வெறுமையையும், அதை சரிசெய்துகொள்ள தேர்ந்தெடுக்கும் பாதைகளையும் எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியின் மனைவி உள்பட சின்னச் சின்ன கதாபாத்திரங்களாக காட்டப்பட்ட பெண்களின் இருட்டான பகுதிகள் எல்லாமே பெண்களைத் தாழ்த்துவதற்காக புனையப்பட்டவர்களாகப் பார்க்கவில்லை. மாறாக, நம் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் தங்கள் இணையரை உடலளவிலும் மனதளவிலும் இணையராக நடத்தாததன் விளைவாகப் பார்க்கிறேன்.

எனக்கு தரமணியில் இருந்த ஒரே சிக்கல் – வாய்ஸ் ஓவர். இயக்குநர் ராமின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி அவரது வாய்ஸ் ஓவரிலேயே படம் நிறைவடைகிறது. முதன்மை மட்டுமின்றி, உறுதுணைக் கதாபாத்திரங்களின் தன்மைகளை வாய்ஸ் ஓவர் மூலம் அறிமுகப்படுத்தியதை விட, காட்சியின் ஊடாகத் தெளிவுபடக் காட்டியது நேர்த்தி. தான் படம்பிடித்துக் காட்டிய முக்கியக் காட்சிகளுக்குத் தானே வாய்ஸ் ஓவர் மூலம் கோனார் உரை வழங்கியதை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு படைப்பை அனுபவிக்கும் பார்வையாளனின் சிந்தனையை மழுங்கடிக்கும் அம்சமாகவே இதைப் பார்க்கிறேன். இன்டன்ஸான காட்சி ஒன்றில் டீமானிட்டைசேஷனை பகடி செய்தது, அக்காட்சி மீதான கவனத்தை சீர்குலைத்தது.

ஆனால், நான் திரையரங்கில் படம் பார்க்கும்போது ராமின் வாய்ஸ் ஓவர் விவரிப்புகள், நக்கல்கள், நையாண்டிகள், கலாய்ப்புகள் அனைத்துக்குமே ஆரவாரம் பிய்த்துக்கொண்டு வந்தது. பல தரப்பு பார்வையாளர்களையும் திருப்திபடுத்த மசாலாத்தனங்களை உள்ளே திணிப்பதற்குப் பதிலாக, உருப்படியான உத்தியைக் கையாளலாமே என்ற ராமின் உத்தி வென்றுவிட்டதாகவே கருதுகிறேன்.

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் ‘சினிமா’. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன். தொழில்நுட்ப அப்டேட்டுகளுடன் உதார் காட்டலாம்; எந்த அப்டேட்டும் இல்லாமல் கூட உன்னதம் படைக்கலாம். வரையறை என்ற ஒன்று இல்லாததுதான் சினிமாவின் வரையறை.

எனவே, ‘இந்தப் படம் சினிமாவே அல்ல; திரைமொழியே இல்லை; இலக்கணமே பின்பற்றப்படவில்லை’ என்றெல்லாம் சொல்வதே அபத்தம் என்று நினைக்கிறேன். மாறாக, ‘இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை; கையாளப்பட்ட திரைமொழியில் உடன்பாடு இல்லை; இந்த சினிமா சொல்லும் கதையும் சேதியும் மோசமானது; கதை சொன்ன விதத்தில் ஒட்ட முடியவில்லை’; ஒட்டுமொத்தமாவே மொக்கையா இருக்கு; ரொம்ப கேவலமான படம்’ என்று எப்படி வேண்டுமானாலும் எதிர்மறையில் சொல்லிக்கொள்ளலாம். அது அவரவர் மனநிலையையும் ரசனையையும் சார்ந்தது.

ஆனால், ‘திரைமொழி, திரை இலக்கணம், லொட்டு லொசுக்கு’ உள்ளிட்ட பதங்களைப் பயன்படுத்தி, மேப்பில் பார்த்திடாத நாட்டைச் சேர்ந்த காது கேட்டிராத மொழிகளின் படங்களை மேற்கோள்காட்டி, வேறுபாடுகளுடன் நம் சினிமாவை கழுவியூற்றுவது எல்லாம் தன் சினிமா ஃபேக் நாலட்ஜை நிறுவ முற்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த வகையில், எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போன வாய்ஸ் ஓவர் உத்தியைக் குறையாகச் சொல்ல விரும்பவில்லை. படம் முடிந்து வெளியே வந்தபோது, என்னுள் விஷுவல்ஸ் சரியாக பதியாமல், ராமின் வாய்ஸ் ஓவரே டாமினேட் செய்ததால், இன்னொரு முறை மீண்டும் தரமணியைப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அவ்வளவுதான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தை அப்போதைய மக்கள் காண நேரும்போது, சமகாலத்தை இலக்காகக் கொண்ட வாய்ஸ் ஓவர் மேட்டர்கள் அவர்களுக்கு சமூக – அரசியல் வரலாற்றுப் பதிவாக இருக்குமா? அல்லது ஒரு திரைப்படத்தின் காட்சிகளை ஆழமாக ரசிப்பதற்கு இடையூறாக இருக்குமா என்பது தெரியவில்லை.

ஒரு படத்தின் கன்டென்ட்டுக்குள் முற்றிலும் மூழ்கிவிட முடிகிறது என்பதாலேயே தரமணியின் இசை, ஒளிப்பதிவு, ஒலி அமைப்பு என கலைகளும் தொழில்நுட்பங்களும் சார்ந்த அத்தனை அம்சங்களும் சரியான பங்களிப்பை அளித்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

மீண்டும் ஆல்தியா, பிரபு கதாபாத்திரங்களுக்கு வருகிறேன். தனக்கு தனிப்பட்ட முறையில் நேர்ந்த அத்தனை பாதகமான விஷயங்களையும் கோபமாக கொட்டித் தீர்க்கும் இணையராகவே பிரபுவைப் பார்த்தாள். அத்தகைய அணுகுமுறையின் விளைவையும் உணர்ந்தாள். ஆல்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு கால அவகாசமும் அனுபவங்களும் பிரபுவுக்குத் தேவைப்பட்டது. இதனால், இறுதி முடிவு என்பது இயல்பு மீறாததுதான் என ஏற்கிறேன்.

பெண்ணியம் என்ற பெயரில் ஆல்தியா கதாபாத்திரம் கோளாறு என கழுவியூற்றுவோரில் சிலரோ மணி சார், கார்த்தி சுப்புராஜ், கவுதம் வாசுதேவ் முதலானோர் வார்த்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்டாடியவர்கள்தான். ஒழுக்க முகாம் பூசப்படாத ஆல்தியாவைக் கண்டு அவர்கள் அதிர்வதில் ஆச்சரியமில்லை. டேஷியங்கள் பலவற்றில் தேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வசைபாடுவது, ஆல்தியாவைக் கண்டதால் வந்த தங்கள் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ என்ற ஐயம் எழாமல் இல்லை.

ஆல்தியாவை ஆண்கள் பலரும் கொண்டாடுவதற்கும் ஓர் உளவியல் காரணம் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். நிஜத்தில் ஆல்தியா போன்ற ஒருவரை நெருக்கமாக அணுகுவதற்கு உரிய பக்குவத்தைப் பெறாத காரணத்தால், முதலில் நிழலில் அவளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவாகவும் இருக்கலாம். மனிதர்களை மனிதர்களாக ஏற்கும் பக்குவத்தை ஒரு சமூகம் எட்டுவதற்கு தன் படைப்பு மூலம் உரிய பங்களிப்பைக் கொடுத்துள்ள ராம் உடன் இப்போதைக்கு ஒரு தேநீர் சாப்பிடத் தோணுது.

கீட்சவன் என்னும் புனைபெயரில் திரை கட்டுரைகள் எழுதிவரும் சரா சுப்ரமணியம் ஊடகவியலாளர்.

ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு 

ப.ஜெயசீலன்

படம் நெடுகிலும் தர்க்க பிழைகளும் கருத்து பிழைகளும் புரிதலின் போதமைகளும் நிரம்பி கிடந்தாலும் படத்தின் மூன்று முக்கிய சம்பவங்களை வைத்து இது ஏன் பெண்ணிய படமாக மாறவில்லை, இந்த திரைப்படம் எப்படி நுட்பமாக ஒரு ஆணாதிக்க தளத்தில் இயங்குகிறது  என்பதை விவரிக்கும் நோக்கில்….

 
பால்ய பருவத்தில் பெரும் துயரங்களையும் துர் மரணங்களையும் கடக்க நேரிட்டு பெரும் மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் ஒருவனை சமூகம் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு மருத்துவ உதவியை அவனுக்கு அளிக்க தவறுவதன் விளைவாக அவன் தர்க்கமற்ற கொடூரமான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு திரைப்படமாக்கி இதில் நான் உலகமயமாக்களுக்கு எதிராக பேசியிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகுமா ஆகாதா? அப்படி முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடும் “தரமணி” திரைப்படம் குறித்தான விமர்சனம்தான் இது…

 பர்ணபாஸ் வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வயதிற்குள்ளிருக்கும். தரமணி ஸ்டேஷன் கான்ஸ்டபிள். வாழ்வின் பெரும்பான்மையான இரவுகளை ஸ்டேஷனிலேயே கழித்தவர். பக்தியான கிறிஸ்துவர். வெள்ளந்தி. பொதுவாக அவரது வேலையில் பெரிய அழுத்தங்களோ நெருக்கடிகளோ இல்லை. கடைசி ரயில் போனபின்பு நிதானமாக தனது மனைவி குடுத்தனுப்பியிருக்கிற இரவு உணவை யாரவது ஒரு வழிப்போக்கனுடனோ நன்பனுடனோ ரசித்து சாப்பிட்டு விட்டு மிதமாக மது அருந்திவிட்டு கொசுவர்த்தி கொளுத்தி வைத்துவிட்டு தூங்கிவிடுவார். இதற்கிடையில் அவருடைய மனைவி வீனஸ் (தோராயமாக ஒரு 40,45 வயதிருக்கும்) தனது கணவன் சாப்பிட்டு விட்டாரா தண்ணி குடித்துவிட்டாரா சரியான நேரத்திற்கு தூங்க செல்கிறாரா என்று பர்ணபாஸிடம் மொபைலில் விசாரித்து கொண்டே இருப்பார். இதை குறித்து பர்னபாசிர்க்கு ஒரு சிலிர்ப்பு, ஒரு பெருமை. 
 
இப்படிப்பட்ட நிலையில் வீனஸ் தனக்கு தெரியாமல் வேறொரு ஆணுடன் மொபைல் போன் மூலமாக கள்ளத்தொடர்பில் இருக்கிறாள் என்று பர்ணபாஸிற்கு தெரிய வருகிறது. உடைந்து போகிறார். அந்த நம்பிக்கை துரோகம் குறித்து பெரும் ஆவேசம் அடைகிறார். வீனஸை அடித்து நொறுக்குகிறார். வீனஸின் பெண்ணுடலின் மீது தனது ஆணுடலின் எல்லா வலிமையையும் பிரோயோகித்து அவளை கொன்றுபோடும் தீவிரத்துடன் ஒரு வன்முறையை நிகழ்த்துகிறார். பிறகு ஒரு பாரில் அதீதமாக குடித்துவிட்டு வீனஸின் மீது கோபம் தீராமல் மீண்டும் வீட்டிற்கு வருகிறார். வீனஸ் தரையில் படுத்துக்கிடக்கும் கோலம் அவரது மனதை தொடுகிறது. வீனஸ் செய்த தவறை தனது மகளோ சகோதிரியோ செய்திருந்தால் அவர் எப்படி மன்னித்து ஏற்று கொண்டிருப்பாரோ அதே போல் வீனஸையும் தான் மன்னித்து வாழ்வளிப்பது என்று பெருந்தன்மையாக முடிவெடுக்கிறார், சிறப்பு.
 
இந்த சம்பவம் குறித்து வீனஸின் மனசாட்சி என்னிடம் கூறியது ராமிடம் கூறாமல் போனது 
 
பர்ணபாஸ் நல்ல கணவன்தான். கடிந்து பேசியதில்லை. கை நீட்டியதில்லை. வெள்ளந்தி. கடவுள் பக்திகொண்டவன். ஆனால் அவனிடம் எந்த சுவாரசியமும் இல்லை. கல்யாணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தோணறப்போ லைட் எல்லாம் அணைச்ச பிறகு திருடன் மாதிரி மேல கால்  போடுவார். நான் அனுமதிப்பேன். மாசத்துல 4,5 நாள் இது. மத்த நாள்ல என் பக்கத்துலயே வர மாட்டாரு. இதுல கடைசி பத்துவருஷமா ராத்திரி ஸ்டேஷன் டூட்டி. கேக்கவே வேணாம். காலைல 10 மணிமாதிரி தான் வருவாரு. குளிச்சுட்டு சாப்டுட்டு படுத்தார்னா திரும்ப சாயங்காலம் தான். வடிவேல் ஜோக், புதியதலைமுறை செய்தி, angel tv அப்படினு கொஞ்ச கொஞ்ச நேரம் பார்த்துட்டு திரும்ப குளிச்சுட்டு லைட்டா இட்லி தோசை சாப்டுட்டு நைட்டுக்கு சாப்பாடு பேக்பன்னி குடுத்தா கெளம்பிடுவாரு. இதுக்கு எல்லாம் நடுவுல நான் எதுக்கு சொல்லுங்க? அவரு கால் போட்டவுடனா கால விரிக்கவும் தோசை சுடவும்தான் நானா? ஒவ்வொரு ராத்திரியும் நான்தான் போன் பண்ணி சாப்பிட்டீங்களானு கேப்பேன்…ஒரு நாள் கூட அந்த மனுஷன் நீ சாப்டியான்னு திரும்ப கேட்டதில்ல… யாருனு தெரில..திடீர்னு ஒருத்தன் என்ன கேட்டான்… நல்லா இருக்கியா, சாப்டியா, தூங்குனியா, நேத்து தலை வலிக்குதுன்னு சொன்னியே இப்போ பார்வைல்லயான்னு…அவ்ளோவ் சந்தோசமா இருந்துச்சு…சின்ன விஷயம்தான்..ஆனா எனக்கு அது அவ்வளவு தேவையா இருந்துச்சு..கொஞ்ச நாள் நான் சந்தோசமா இருந்தேன்…என்கூட யாரோ இருக்காங்கனு எனக்கு தோணுச்சு…ஆனா எனக்கு தைரியம் பத்தலை..நானே இதப்பத்தி எம்புருஷன்கிட்ட சொல்லிட்டேன்…அதுக்கு  அந்த நாயி என்ன கடிச்சு கொதறிடுச்சு…அவ ஏன் யாருனே தெரியாத ஒருத்தன் கிட்ட ஒரு தொடர்ப்பு வச்சுக்கணும்னு நெனச்சா அதுக்கு நாம எந்த வகைலாயவது காரணமான்னு எல்லாம் அந்த நாய்க்கு யோசிக்க தெரில…என்ன அடிச்சு செதச்சிட்டு குடிக்க போய்ட்டான்…அவன் அடிச்சது கூட எனக்கு பெருசா கோவம் வரல..அந்த தேவுடியா பைய்யன் அன்னைக்கு ராத்திரி வந்துட்டு வீனஸ் நான் ஒன்ன மன்னிச்சுட்டேன்னு சொன்னான் பாருங்க…….
 
தேவனே ஆண்களின் ஆண்குறி சிறுநீர் கழிக்கவும் புணர்ந்து திளைக்கவும் படைக்க பட்டதேயொழிய அது பெண்களின் மீது தீர்ப்பிடுவதற்கும் பெண்கள் செய்யாத பாவங்களை மன்னிப்பதற்கும் ஆண்களுக்கு அளிக்கபட்ட செங்கோல் அல்ல என்று அறியாமல் செயல்படும் ஆண்களை மன்னிக்காமல் கடுமையாய் தண்டியும்…
 
சவுமியா இழுத்து மூடிய இழுத்து போர்த்திய ஒரு நல்ல பெண் அமெரிக்காவிற்கு onsite வேலைக்கு போனதும் மாறிப்போகிறாள். அவள் அமெரிக்கா போவதற்கு பணம் புரட்டி குடுத்த அவளை காதலிக்கும் ஒரு நல்ல பைய்யன் பிரபுநாத்திடம்  தான் அங்கேயே வேறு ஒருவனை காதலிப்பதாகவும்  அவனையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்ல அந்த நல்ல பைய்யன் காதல் தோல்வியில் உடைந்து போய் தாடி வளர்கிறான். அவளை திரும்ப சந்திக்கும் சமயத்தில் அவள் அப்படி ஒன்றும் அமெரிக்காவில் அவளது கணவனுடன் சந்தோசமாக இல்லை என்று தெரிய வர கடவுள் இருக்கான் குமாரு என்று ஆறுதல் அடைகிறான். அவளை selfie எடுத்து குடுத்த பணத்தை கேட்டு மிரட்ட அவள் பணத்தை தருவதோடு மட்டுமில்லாமல் இவனை நல்லவன் என்று விளிக்க இவனுக்குள் இருந்த நல்லவன் அவனை குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக அங்கிருந்து ஓடிப்போகிறேன். 

ஈடுயிணையற்ற பேராண்மை கொண்ட ஒரு இந்திய ஆண்மகன்  பல்லாண்டுகளுக்கு முன்பு பெண்ணிய பார்வையோடு/புரிதலோடு  Hindu code bill என்னும் அதிஉன்னதமான பெண்களுக்கான ஒரு சட்ட கவசத்தை யோசித்து வரைவு செய்து அதை சட்டமாக்க போராடினார். இந்திய சமூகத்தின் பெரும்பான்மையான ஆண்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்தார்கள்…உண்மையான பெண்ணிய பார்வையோடு ஒரு திரைப்படம் வந்தாலும் இதுதான் நிகழும்..ஆண்கள் வெகுண்டெழுவார்கள்….ஆனால் ஆண்குறிகள் நிறைந்த பெண்ணிய பார்வைகள் கொண்ட திரைப்படங்கள் பாராட்டுக்களை நிச்சயம் அள்ளும். (இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால் சொல்ல தோன்றியதால் சொல்கிறேன்)

 

ஒரு பெண் ஒரு சமயத்தில் ஒரு ஆணுடன் காதல் வசப்பட்டால் அதன் பிறகு அவள் அவனை வாழ்நாள் எல்லாம் காதலித்து சாக வேண்டும் என்று ரிக் வேதத்தில் எழுத பட்டுள்ளதா? திருமண உறவிற்கே விவாகரத்து என்னும் exit யிருக்கும் போது காதலுக்கு அப்படி ஒரு exitயிருக்க கூடாதா? ஒரு பெண் ஒருவனிடம் sorry i don’t love you anymore என்று சொல்வது மகா பாவமா? ஒரு பெண் தான் பழகிய ஒரு ஆணை ஒரு கட்டத்தில் தவிர்த்து வேறொரு ஆணை நோக்கி நகர்ந்தாள் (என்ன காரணமாக கூட இருக்கட்டும்..பொருளாதார பயன் உட்பட) நிச்சயமாக அவள் வாழ்க்கை நன்றாக இருக்காது/இருக்க கூடாது என்று ஒரு ஆணை நம்ப தூண்டுவது எது?  மேற்கத்திய நாடுகளில் ஆணோ பெண்ணோ ஒரு உறவு முறியும்போது அவர்கள் கடைபிடிக்கும் கண்ணியமும் நிதானமும் ஏன் நம் சமூகத்தில் இன்னமும் சாத்தியப்படாமலே இருக்கிறது? குறிப்பாக ஒரு உறவை முறிப்பது பெண்ணாகயிருக்கும் பட்சத்தில் நமது சமூக ஆண்களின்  மனது ஏன் அவள் மீது தீராத வன்மம் துவேஷமும்  கொள்கிறது? ஏன் அவளது முகத்தை சிதைக்க ஆசிட் வீசுகிறது? ஏன் அவளது வாழ்வு ஒன்றும் அவ்வளவு சந்தோசமாகயில்லை என்று திரைப்படத்தில் வசனம் எழுத வைக்கின்றது?   
 
சார், மனப்பிறழ்வு நோயுள்ளவன் நிகழ்த்தும் வன்முறையை காட்டி உலகமயமாக்களுக்கு எதிராக பேசுகிறேன் என்றவர், ரெட்டை கோபுரங்களை இடித்தது பயணிகள் விமானம் அல்ல அது சரக்கு விமானம் என்னும் conspiracy theoryயை அதி உன்னதமான உண்மையை போல கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்துகொள்பவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழ்த்தேசிய எழுச்சியாக புரிந்து கொள்பவர் சமகால பெண்கள் குறித்தும், அவர்கள் வாழ்வுமுறை குறித்தும், பெண்ணியம் குறித்தும் படமெடுத்தால் அந்த படம் எப்படி சார் இருக்கும்?
 
மயிறு மாதிரியிருக்கும் சார்  
 

அப்படித்தான்  சார் தரமணி இருந்துச்சு எனக்கு

 

அல்தேயா விவாகரத்தான ஒரு இளம் தாய். ஆங்கிலோ இந்தியன். தனது சின்ன வயது மகனுடன் வசிக்கிறாள். நன்கு படித்தவள். நல்ல வேளையில் இருப்பவள். corporate வேலைக்கும் வாழ்வு முறைக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருப்பவள். அதை மிக லாவகமாக கையாள தெரிந்தவள். ஒரு எதேச்சையான சந்திப்பில் அறிமுகமாகும் பிரபுநாத் என்னும் இளைஞனுடனான நட்பு அவர்கள் இருவரையும் ஒரே அபார்ட்மெண்டில் சில மாதங்கள் ஒன்றாய் வாழும் சூழ்நிலை வரை வளர்கிறது. அல்தேயாவை  காதலிக்க தொடங்கிவிட்ட பிரபுநாத்துக்கு அவளின்  நடை உடை பாவனை வாழ்வியல்முறை தோரணை வேலை எல்லாமும் அந்நியமாகவும் அதிர்ச்சியாகவும் சங்கோஜமாகவுமிருக்கிறது. இதன் காரணமாக அவள்மீது இவன் சந்தேகமும் எரிச்சலும் பொறாமையும் ஆற்றாமையும் பதற்றமும் அடைகிறான். இந்த புள்ளியில் இடைவேளைக்கு முன் தரமணி திரைப்படத்தின்/திரைக்கதையின் மைய்ய காட்சி (high point) நிகழ்கிறது.

ஒரு சின்ன வாக்குவாதத்தில் தொடங்கிய ஒரு சண்டையில் பிரபுநாத் ஆவேசமாகி அல்தேயாவை அவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் இலவசமாய் அவளை தங்க அனுமதித்த அல்தேயாவின் நண்பனுடன் அவள் படுத்தாளா என்று நேரடியாக கேட்க அவள் ஆம் என்கின்றாள். அவனுடன் படுத்தது எப்படி இருந்தது என்று மீண்டும் ஒரு சைக்கோத்தனமான கேள்வியை அவன் கேட்க அவள் super என்கிறாள். இதனை பிரபுநாத் நம்மை போன்றே ஆங்கிலமும் முழுதாய் தெரியாத தமிழும் முழுதாய் தெரியாத தலைமுறையை சேர்ந்தவன் என்பதால் BITCH என்ற வார்த்தையை தேவுடியா என்னும் பதத்தில் (இயக்குனரே bitch என்றால் தேவுடியா என்று மொழிபெயர்த்து இருக்கிறார்) அல்தேயாவை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேருகிறான் .

கவுதம் வாசுதேவனின் மீது எனக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் “பொண்ணுங்கள அடிக்க கூடாதுனு சொல்லித்தரலய ஓம்மா” என்று அவர் எழுதிய வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். ராம் படத்தை பேசும்போது கவுதம் எப்படி? ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது.

அந்த சண்டைக்கு நடுவில் பிரபுநாத்தை அப்பா என்று கூப்பிட தொடங்கிவிட்ட அல்தேயாவின் மகன் வீட்டிற்கு வந்த பிறகும் பிரபுநாத் சண்டையை நிறுத்தாததும், அல்தேயாவை உடல் ரீதியாக பிடித்து தள்ளுவது படுக்கையில் தூக்கி எறிவது சுவற்றில் வைத்து நிறுத்துவது போன்ற காரியங்களிலும் ஈடுபடுவது நமக்கு காண கிடைக்கிறது.

ஆண்கள் ஏன் தாங்கள் விரும்பும் பெண்ணின் யோனி புதிதாக செய்து துடைத்து வைக்கப்பட்ட சொம்பைப்போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்? ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவளது கடந்த கால வாழ்க்கையை பற்றி கேட்பதென்பது அதுவும் குறிப்பாக காதல் வாழ்க்கையைப் பற்றி கேட்பதென்பது மிக மிக அநாகரிகமான அருவெறுப்பமான சில்லறைத்தனமான செயல் என்பது ஆண்களுக்கு ஏன் புரிய மறுக்கிறது? ஒரு உறவில் இருக்கும்போது ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் துணையின் கடந்த காலத்தை நோண்டி பார்க்கும் செயல் நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல என்பதையும் அதை தாண்டி ஒரு மிகவும் கீழ்த்தனமான செயல் என்பதையும் நம் சமூகம் உணர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும். ஒரு பெண்ணிடம் அதுவும் குறிப்பாக விவாகரத்தான பெண்ணிடம் அவளது கடந்தகால காதல் வாழ்க்கை குறித்தும் வாழ்கை குறித்தும் கேள்வி எழுப்பி அவளை தேவுடியா என்று தீர்ப்பிட்ட ஒரு சைக்கோ மண்டையனை உண்மையிலேயே பெண்ணியம் குறித்து அறிந்த பெண்ணோ அல்லது பெண்ணிய பார்வை கொண்ட பெண்ணோ ஏற்று கொள்ள வாய்ப்பிருக்கிறதா?

ரோட்டோர கடையில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு தொண்டை கட்டுனாப்ல குரல வச்சிக்கிட்டு “மயிர் நீக்கியவன் குதங்கிழிக்கா கவரிமான் வாழ்ந்தோலோ செத்தாலோ யாருக்கென்ன?” என்று சம்மந்தம் இல்லாமல் தமிழில் பேசுனாதான் சமூகம் நம்மள உத்து பாக்கும்..இங்க ஏன் மயிர பத்தி பேசுறனா முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட முடியாமல் போவதற்கு காரணம் மயிர்தான் என்றால் மறுக்க முடியுமா. மயிரா போச்சு,,சரி வாங்க  

இந்த சம்பவத்திற்கு பிறகு பிரபுநாத் தான் மிக மிக சில்லறைத்தனமான பொறுக்கித்தனமான அயோக்கியத்தனமான அருவெறுக்கக்கூடிய செய்கையில் ஈடுபட்டிருக்கிறேன் என்று  கூனி குறுகி கூசி ஒரு மலத்தில் உழலும் புழுவைப்போல் தன்னை உணர்ந்து தனிமையில் உழன்று புலம்பி அவள் என்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை என்னை மன்னித்தேன் என்று சொன்னால் கூட போதும் என்று உணரும் தருணத்தில் அவன் ஞானம் பெற்று அல்தேயாவின் பாதத்தில் வந்து விழுவான் என்று நாம் பெண்ணிய பார்வையோடு எதிர்பார்க்கிறோம். ஆனால் அப்படி ஆகாமல் பிரபுநாத்துக்கு இன்னொரு இடத்தில அவனது தவறை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது.

பெண்களை வெறுத்த மனநிலையில் பெண்கள் எல்லோருமே bitch (தேவுடியாக்கள்) என்ற நிலையில் அவன் பெண்களின் மீது வன்மத்துடன் சில காரியங்களை செய்கிறான். அதனூடாக ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியுடன் இவன் தனியாக இருக்கும் சமயத்தில் அந்த போலீஸ் அதிகாரி இவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறார். உண்மையில் பிரபுநாத்துக்கும் போலீஸ் அதிகாரியின் மனைவிக்கும் பாலியல் ரீதியான உறவோ, intentionனோ அந்த புள்ளியில் இல்லை. ஆனால் அந்த போலீஸ் அதிகாரி ஆவேசமாகி அவரது பொண்டாட்டியை அடித்து அவனோடு படுத்தியா என்று கேட்கிறார். அதற்கு அவள் ஆமாம் என்கிறாள். இவன் காண்டாகி அவன் எப்படி இருந்தான் என்று கேட்க அவள் super super super என்று ஆவேசம் வந்தவளாய் கத்தி அர்ப்பரிக்கிறாள். அந்த சண்டைலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு செத்தும் போகிறாள். இங்குதான் பிரபுநாத்துக்கு ஞானம் பிறக்கிறது.

ஞானம் யப்பா ஞானம்..சீதாவா காணோம்..பொழுது விடிஞ்சா போக போகுது மானம். hold on a second…சீதாவ காணம்னா ராம் தானா பதரனும்..நடுவுல யார் இந்த ஞானம்…அது ஒன்னும் இல்ல நாகூர் போயிட்டு தண்ணில முழுகி செத்த பொணத்த இழுத்து போட்டா கிடைக்கிற சமாச்சாரம் என்றும் சொல்லலாம்…

அதாவது பலரோடு படுத்ததாய் எண்ணி தான் வெறுத்து ஒதுக்கிய அல்தேயா உண்மையில் மாசுமருவற்ற தங்கம். அன்றைக்கு தன்னோடு நடந்த சண்டையின் போது வேறு ஒருவனிடம் படுத்ததாய் சொல்லி அவன் சூப்பர் என்று சொன்னது உண்மையில் தன்னுடைய egoவை தனது ஆண்மையை காயப்படுத்தும் உதாசீனப்படுத்தும் நோக்கத்தில் சொன்னது. மற்றபடிக்கு என்னதான் skirt போட்டாலும் தம் அடித்தாலும் மது குடித்தாலும் pub போனாலும் அவளது யோனி விவாகரத்துக்கு பின் புதிதாக செய்து துடைத்து வைக்கப்பட்ட சொம்புதான் என்று உணர்கிறான். ஞானம் பிறக்கிறது. கண்கள் திறக்கிறது. அவளை போய் bitch என்று ஏசிய தனது தவறை உணர்கிறான். புனிதப்பயணம் போய் சித்தனிடம் பாவம் கழித்து புது மனிதனாய் மாறுகிறான்.
இந்த புள்ளியில்தான் இந்த திரைப்படம் 100 சதவிகிதம் பெண்ணியத்திற்கு எதிரான படமாக மாறுகிறது. இளம்வயதில் விவாகரத்து பெற்று தனது மகனுடன் கடுமையான வேலை நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் அல்தேயாவிற்கு பாலியல் தேவை என்று ஒன்று இருக்குமா இருக்காதா? இருக்கவேண்டுமா இருக்கவே கூடாதா? அதற்கான வடிகால்களை அவள் தேடிக்கொள்ள அவளுக்கு உரிமை உள்ளதா கிடையாதா?  அவளுக்கு நமது சமூகம் தரும் தீர்வு என்ன?  சரி டில்டோக்களை கூட அவளும் எத்தனை நாள் பயன்படுத்துவாள்? கற்றது தமிழில் பிரபாவுக்கு எத்தனை நாள்தான் நானும் பாத்ரூம்லயே உக்காந்து கையடிப்பது என்று அற சீற்றத்தோடு கேள்வி எழுப்பி கடற்கரையில் காதல் செய்பவர்களை கொல்ல துப்பாக்கி தரும் இயக்குனர் அல்தேயாவிற்கு ஏன் எதையுமே தரவில்லை? அவள்  செங்கலை எடுத்து தேய்த்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாரா? அவள் அவளுடைய பாலியல் தேவைக்காக ஒரு ஆணையோ பல ஆணையோ நண்பர்களாக/காதலர்களாக கொண்டிருந்தால் பயன்படுத்தியிருந்தால் சரி தவறு என்று தீர்ப்பெழுத நாம் யார்? பிரபுநாத் யார்? ஒருவேளை அல்தேயா பிரபுநாத் நம்பியதை போல சந்தேகப்பட்டதை போல அவளது கடந்தகாலத்தில் இருந்துத்திருந்தால் கூட பிரபுநாத்தின் பொறுக்கித்தனமான சில்லறைத்தனமான சைக்கோத்தனமான நடவடிக்கை சரி என்று நியாப்படுத்த முடியுமா? பிரபுவுக்கு அவளுடைய கடந்த கால வாழ்வை கேள்விக்கேட்கவோ தீர்ப்பெழுதவோ என்ன அதிகாரம் இருக்கிறது?
 
பெண் நாய்/அடிமை என்னும் பொருள்படும் ஆங்கில bitch தமிழில் தேவுடியாவாக மொழிமாற்றம் அடைகையில் தரமணி என்பதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு feminism என்பதாக இருக்குமோ? இருக்கலாம்? நீட்டினால் நமது கழுத்தை…
 

ஞானம் பெற்ற பிரபு அல்தேயாவை தேடி வருகிறான். அவனிடம் அல்தேயா என்னோட மகன் உன்ன அப்பான்னு சொன்னானே..சின்ன பைய்யன்..அவன வீட்ல வச்சிட்டு என்கூட அப்படி கத்தி சண்டைபோட்டியே..உன்ன எப்படி நான் திரும்ப வீட்டுக்குள்ளாற விடுவன்னு நீ நெனச்ச ? என்று அவள் கேட்பாள் என்று எதிர்பார்க்கிறோம் …ஆனால் அவள் என் பையன் ஒன்ன அப்பான்னு சொன்னான் இல்ல..அவங்கூட கூட நடுவுல நீ ஏன் பேசல என்று சலித்து கொள்கிறாள். பிறகு என்கூட படுக்கணும்னு நெனச்சவன்கிட்ட கூட ஒரு நேர்மை இருந்துச்சு ஒரு கண்ணியம் இருந்துச்சு ஆனா என்கூட வாழனும்னு சொன்ன உன்கிட்ட சைக்கோத்தனம் மட்டும்தான் இருந்திச்சு..தயவு செஞ்சு இனிமே என்மூஞ்சுல முழிக்காத போய்டு என்று அவள் சொல்லுவாள் என்று எதிர்பார்க்கிறோம்…ஆனால் அவள் உன்னை எனக்கு பிடிக்கும்..எல்லோரும் என்கூட படுக்கணும்னு நெனச்சப்போ நீ மட்டும்தான் வாழணும்னு நெனச்ச..அதனால சொல்றேன் எங்கயாவது போய்டு..உன்னால நான் நிறைய டிஸ்டர்ப் ஆகிறேன் என்கிறாள்…

“pink” திரைப்படத்தில் அமிதாப்பச்சன் ஒரு உன்னதமான வசனம் சொல்லி இருப்பார். “no என்பது ஒரு வார்த்தை அல்ல. அது ஒரு முழுமையான வாக்கியம்.. ஒரு பெண் ஒரு ஆணிடம் no என்ற வார்த்தையை ப்ரோயோகிக்கும் போது அதற்கு no என்பதை தவிர வேறெந்த அர்த்தமும் கிடையாது..இதை ஏன் நமது சமூகத்தில் ஆண்களுக்கு சொல்லி தர தவறினோம்” என்று சொல்லுவார். நான் இந்தியாவிலிருந்த 22 ஆண்டுகளில் எனக்கும் இதை யாருமே சொல்லித்தரவில்லை. குறிப்பாக இதை சொல்லி குடுத்த ஒரு தமிழ்திரைப்படத்தை கூட எனக்கு தெரியாது. பெண்கள் பிடிக்காது என்றால் பிடிக்கிறது என்று அர்த்தம் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம் உனது காதலை நிராகரித்தால் அவள் பேதை பாவம் அறியாமல் புரியாமல் தெரியாமல் சொல்கிறாள் அவளை கடத்தி கொண்டுபோய் கட்டி வைத்து கல்லெடுத்து மண்டையை உடைப்பேன் என்று சொல்லியாவது அவளுக்கு புரியவைக்கவேண்டியது நமது கடமை உரிமை காதல் இல்லையென்றால் கால பிடிச்ச அப்போ சும்மாயிருந்தியே கிஸ் அடிச்ச அப்போ சும்மா இருந்தியே அது அப்போ லவ் தான என்று அவளையே மடக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் சினிமா போதித்ததின் விளைவுகளை நாம் தொடர்ந்து செய்தி தாள்களில் படித்து வருகிறோம். நமது ஆண்களுக்கு ஒரு பெண் no சொல்கையில் அதை எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை ஒரு பெண் சொல்லும் noவை noவாக மட்டுமே புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் மதிப்பளிப்பதும் தான் ஒரு gentleman behavior என்பதும் இன்னும் புரியவில்லை.

எதுவுமே புரியாதா பிரபுக்கு இதுவும் புரியாததால் அவள் மிக நாகரீகமாக no சொன்னபிறகும் அவளை லிப்ட் வரையாவது வந்து விடவா என்று கேட்கிறான். skirt போட்ட அப்பிராணி  அல்தேயா இதற்கும் மண்டையை ஆட்டுகிறாள். தொடரும் காட்சியில் இந்த சைக்கோமண்டையன் அருகில் அல்தேயாவும் அவள் குழந்தையும் படுத்திருக்கும் பகிர் காட்சியுடன்
ரோட்டர கடையின்  ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இயக்குனர் ஏதோ பேசும் குரல் கேட்க திரை இருட்டாகிறது…

ஓத்தா நீங்க ஓல் போட்டு திரியிற அப்போ உங்க பொண்டாட்டியோ காதலியோ அதையே செஞ்சா என்னாடா தப்பு? என்றோ

மயிராண்டி பொண்டாட்டிய  மதிக்க தெரியாத அவளது இருப்பை அங்கீகரிக்க கொண்டாட தெரியாதா ஒனக்கு அவ யார்கூட படுத்தா என்னடா ? என்றோ

 
சிக்கலான பெண்ணிய பார்வைகளை முன்வைக்காமல் புதுசாக செய்து விளக்கி வைத்த சொம்பை ஆராதிப்போம் என்னும் எளிமையான பெண்ணிய பார்வையை முன்வைத்த இயக்குனரை மெச்சியபடி ஆண்கள் சிரித்த முகத்துடன் அரங்கை விட்டு வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்…..   
நன்றி:  
தோழர் நந்தினி
வெங்கடேஷ் பாபு 
லக்ஷ்மி 
ப.ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்

ஹேமாவதி

ஹேமாவதி

இயக்குநர் ராம் அவர்களே!

தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தரமணி திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும் படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனத்தில் உருவாக்கியது என்பதே உண்மை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பாலியல் சார்ந்து பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் தற்போதுதான் பெண்கள் படிப்பு, வேலை எனத் தொடங்கி, எந்தக் கிராமத்திலிருந்தும் வேலை தேடி நகரத்திற்கு வந்து, தங்கி பணிபுரியும் சூழல் உருவாகியிருக்கிறது. இதில் வாய்ப்புக் கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆண்களைவிட பல மடங்கு திறமை உள்ளவர்கள் என்று நிரூபித்தும் காட்டி வருகின்றனர்.

தரமணி, பெண்களை உயர்வாகக் காண்பிக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையில்தான் படத்தைப் பார்த்தேன்.
பெண்கள், குடிப்பது, சிகரேட் பிடிப்பதுதான் முற்போக்கு என்று நினைத்திருக்கிறீர்கள் போலும். அதையே அழகாகவும் காட்டியுள்ளீர்கள். ஆனால், கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழும் பெண் தன் பாலியல் தேவைக்கு என்ன செய்வாள் என்பதையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இப்படத்தில் வரும் கதாநாயகி ஆண்ட்ரியாவின் முன்னாள் கணவன் ஓரினச்சேர்க்கையாளர் (GAY) என்று அறிந்ததும் அவனிடம் அமர்ந்து பேசி அவனின் மன ரீதியான உளவியலைத் தெரிந்துக்கொண்டு விருப்பத்துடன் விடை கொடுக்கிறாள்.

முற்போக்கு பேசுபவளாகவும், சுயமாக வாழ்பவராகவும் தைரியமாகத் தனது உரிமைக்காக போராடுபவளாகவும் பல இக்கட்டான சூழலிலும் தன்னந்தனியே குழந்தையைச் சிறப்பாக வளர்க்கும் ஆண்ட்ரியா, ஒரு வழிப்போக்கனுக்கு ஆதரவு கொடுப்பதும் பின் அவனுக்காகக் குடித்து விழுந்துகிடப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சி வைத்திருப்பது இயல்பாகவே இல்லை.

ஆண்களுக்கு மட்டும்தான் வருத்தம் வந்தால் குடிப்பது, சிகரேட் பிடிப்பதுபோல காட்சிகள் காட்டணுமா? அதே வருத்தத்தில் பெண்கள் இச்செயலை செய்தால் என்ன குற்றமா என்று கூட கேள்வியை முன் வைக்கலாம். ஆனால் தவறு யார் செய்தாலும் தவறுதானே.

காதல் என்றாலே குணத்தைப் பார்த்துதான் வரும். ஆனால் பலருக்கு அழகு என்று நினைத்துக்கொள்ளும் தோல்,, உடலைப் பார்த்து வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு படி மேலே போய் தன் உடலை மூடி மறைக்கும் உடையை அஞ்சலி அணிவதால் கதாநாயகனுக்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. நாயகன் வசந்த் ரவி ஒரு male chauvinist. அஞ்சலி வெளிநாடு செல்ல 3 லட்சம் திருடித் தருகிறான். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து, குற்ற உணர்வில் இருப்பதாகக் கூறுகிறான் நாயகன்.

உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அவல நிலையைப் பார்த்து தவறை உணர்ந்திருந்தால் வேலைக்குச் சென்று தன்னால் இயன்ற அளவு பணத்தை கொடுக்க முயற்சி செய்திருப்பான். வெளிநாட்டுக்குச் சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் அஞ்சலி கொடுக்கும் காசுக்காகக் காத்திருக்க மாட்டான். இதைப் பார்க்கும்போதே கதாநாயகன் வேலைவெட்டிக்கு போகாத பெரிய சோம்பேறி என்று தெரிகிறது.

கிராமத்திலிருந்து நகரத்தில் வேலை கிடைத்த பலருடைய வாழ்க்கை மறுபடியும் கிராமம் நோக்கியே போவதில்லை. நகரமே நிரந்தரமாகிவிடுகிறது. இவ்வாழ்வின் சூழலே இதற்குக் காரணம். அதேபோலத்தான் அஞ்சலி வெளிநாடு சென்றவுடன் இவளுடைய வாழ்க்கை மாறுவதும் இயல்வே.

நாயகன் வழக்கம் போல காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொண்டு சமூகம், தன் குடும்பம், தன் முன்னேற்றம் என எதைபற்றியும் கவலைப்படாமல் திரிகிறான். இடையில் ஆண்ட்ரியா நட்பு கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் தன்னால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து நிற்கும் ஆண்ட்ரியாவுக்கு உதவாமல் விடைபெற நினைக்கிறான் . இதுகுறித்து கேட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் “நீங்க மட்டும் கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வருவீங்க… நான் மட்டும் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு வாழ்க்கை கொடுக்கணுமா”, என்று கேட்கிறான். பிறகு, தங்கும் வீடு அவளுக்கு ஆறு மாதம் இலவசம் என்று தெரிந்தவுடன் நானும் வருகிறேன் என்று சுயநலமாக ஒட்டிக்கொள்கிறான்.

ஆண்ட்ரியா மனத்தில் இடம் கிடைத்த பிறகு அவனின் உண்மையான கோர முகமும் பிறவி குணமும் வெளிப்படுகிறது.. எதற்கெடுத்தாலும் சந்தேகம், இழிவாகப் பேசுவது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கைகலப்புடன் இருவரும் பிரிகிறார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய நாயகன், பின் ரிச்சார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் தொலைபேசி எண்ணை எடுத்து அவர்களிடம் பேசி வரவழைத்து பணம் பிடுங்கும் ஒரு காம வெறிபிடித்த சைக்கோவாக செயல்படுகிறான்.

போலீஸ்காரனின் மனைவி கொலை என தொடங்கி பல பெண்களிடம் பணம் பறித்து, அப்பெண்களின் குடும்ப உறவுகளை சிதைக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் திருந்தியதாக கூறி வந்தவுடன் காதலி சேர்த்துக்கொள்வராம்.

என்ன கதை இது. சட்டத்தில் குற்றம் செய்தவனுக்குத் தண்டனை கட்டாயம் உண்டு. ஆனால் படத்தின் முடிவில் அயோக்கியனை நாயகன் என்ற ஒரே காரணத்திற்காக, யோக்கியானாக்கி ஏற்றுக் கொள்ள வைப்பதை ஏற்கவே முடியாது.

இயக்குநர் ராம் அவர்களே… இப்படத்தின் மூலம் இச்சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்துதான் என்ன…?

1. ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்கிறீர்களா?

2. தைரியமாகப் பெண்கள் தன் துணையைத் தேடுவதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?

3. ஆண்களின் வார்த்தை ஜாலத்தால் பெண்களை சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்பதைச் சொல்ல வருகிறீர்களா ?

4. ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் விடுமுறை நாட்களில் பார் போன்ற இடத்திற்கு சென்று குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என்பதை ஆவணப்படுத்த முயல்கிறீர்களா?

5. பணியிடங்களில் ஆண் அதிகாரிகள் எல்லோருமே தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை படுக்க அழைப்பார்கள் என்பதை உறுதிப் படுத்துவது நோக்கமா.?

6. வெளியூரில் வேலைபார்க்கும் கண்வன் வீடுகளில் உள்ள பெண்கள் கண்ட ஆண்களோடு பயணிப்பார்கள் என்பது தான் உங்கள் எண்ணமா?

7. நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா?

8. இந்தப் படத்தை பார்க்கும் உங்கள் பெண் தோழிகள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

9. படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?

10. எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் தனித்து வாழும் பெண்களை எப்படி எல்லாம் முயற்சி பண்ணி கரைக்ட் பண்ணலாம் என்ற சமூக ஆலோசனை இந்த படத்தில் சிறப்பாக கொடுத்திருக்கிறீகள்.

11. முகம் அறியாதவன் போனில் பேசியவுடன், பாலியல் வேட்கையோடு பெண்கள் அவனை தேடிச் செல்கிறார்களா?

12. சராசரியான, பெண்களை இழிவு படுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல்.

ராம் அவர்களே.
பெண்ணுரிமை என்பது மாறுதலுக்காக ஆண்களைத் தேடிக்கொள்கிற பாலியல் உரிமையல்ல. அதேசமயம், ஒரு ஆணால் வஞ்சிக்கப்படும் போது, அதனை அந்தப் பெண், எதிர்கொண்டு மாற்று ஆணைத் தேர்ந்தெடுக்கிற வாழ்வியல் உரிமை.

பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல. குடித்துவிட்டுக் கொடுமைப் படுத்தும் கணவனெனில் விலகி தனியே வாழ முடிவெடுக்கும் சமூக உரிமை.

ஐடி துறையில் பணியாற்றுவோரின் உடைகளும் செயல்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பணியிடச் சூழல் சார்ந்த, மேற்கத்தியத் தாக்கம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். பெண்ணியம் சார்ந்தவை அல்ல.

பெண்ணிய உணர்வோடு வாழ்பவரைக் காண வேண்டுமா?
அவகாசம் இருந்தால் என்னோடு வாருங்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் என் பாட்டி இருக்கிறார் பெண்ணியத்தின் முதிய சாட்சியாக.

ஹேமாவதி, சமூக செயல்பாட்டாளர்.

#தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

ராஜசுந்தரராஜன்

ஆண்ட்ரியா உடம்பில் எந்த உறுப்பு அழகு? கால், இல்லையா? கால் என்றால் தொடை மேல்முழங்கால் முழங்கால்மொழி அதன் பின்புறக்குழி கண்டைக்கால் கணைக்கால் குதிங்கால் பாதம் பாதவிரல்கள் என எல்லாம் சேர்ந்துதான். மேலிருந்து கீழாக நனவுகிறேன், ஆகவே இது அழகுநயத்தல்; ஆராதனை இல்லை.

இயக்குநர் ராம், இந்த நடிகையில் அழகு அதுதான் என்று அடிக்கோடு இடுவதாகவே அறிமுகக்காட்சியை வைக்கிறார்.

அழகுதான் அது, ஆனால் அதனிலும் அழகு அவள் மூக்கு. இயக்குநர் சுந்தர்.சி. (அழகினை அழகாகவே வெளித்தரக்கூடிய இயக்குநர்களில் தலையாயவர்) அவர்கூட இப்படிக் காணத்தந்ததில்லை இவள் மூக்கை. (‘அர்’ விகுதி சேர்த்து மரியாதை தருவதே அரசியற்சரிவழி, ஆனால் அன்பு மேலிடுகையில் ஒருமையே சரிமொழி.)

சிறைவிழிவுகளே (side views) இதற்குக் காரணம். அந்தக் கட்டங்களில் உங்களைக் காதலித்தேன், ராம்! (ஆனால் ஆண்ட்ரியாவுக்கு கணவனாக வருகிறவனின் அர்த்தத்தில் இல்லை, ஆம்). இருளுக்குள் அவள் விளக்கோடு படியிறங்குகிற அந்தக் காட்சி, ஹைய்யோ! அந்த மூக்கின் அடிச்சரிவுக் கோணம்! (15 பாகை இருக்க வேண்டும் என்பது அகிலஉலக நிர்ணயம்) என்ன ஒரு துல்லியம்!

படம் தொடங்கியதிலிருந்து இயக்குநர் ராம், குரல்மேவலில், லொடலொடா என்று பேசிக்கொண்டே இருந்தார். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள ஆண்ட்ரியாவின் மூக்குக்காட்சிகளை ரசித்தேன் என்பதே சத்தியம்.

விடிந்து, முதற்காட்சி எங்கள் ஊர் அரங்கில்தான் போலும். இயக்குநரின் உதவியாளர்கள் எல்லாரும் வந்துவிட்டாற்போலத் தெரிந்தது. (கதாநாயகனும் வந்திருந்தார். கைகொடுத்து வாழ்த்தினேன்).

இடைவேளையில் ஒருவன் இன்னொருவனிடம், “சூப்பரா இருக்குன்னு ஸார்ட்ட சொல்லுங்க!” என்றான். “கூடவே, உங்க ஸார் ஏன் இப்படிப் பேசிப்பேசி அறுக்குறாருன்னும் கேளுங்க!” என்று சொல்ல வாய்வந்தது, அடக்கிக்கொண்டேன். அது நல்லதாய்ப் போயிற்று. அந்த ‘லொடலொடா’க்களுக்கு முடிவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பாருங்கள், அடடா! அம்முற்றும் பேசிய பேச்சுகள் இருண்ம-நகைச்சுவை! அவற்றில் உச்சம், நாயகன் தான் களவாடிய பணத்தைத் திருப்பித் தருகிற இடம்பொழுதில் வருகிற அக் குரல்மேவல்!

என்னா குணவார்ப்புகள் ஒன்றொன்றும்! தீர எழுதியெடுத்தால் மட்டுமே இதை யெல்லாம் சாதிக்க முடியும். ஆண்ட்ரியா, வாய்ப்பே இல்லை, ஒரு பர்ணபாஸ்! நாயகன், ஆனால் புதுமுகம்; விட்டுத்தரவில்லை. ஸ்ருதி டி.வி. கேமராவில் அவர், எல்லாப்புகழும் இயக்குநர்க்கே என்றார். ஆனால் அதிர்ஷ்டசாலி. இப்படி ஒரு கேரக்டர் கிடைக்க வேண்டுமே?

தான் வஞ்சிக்கப்பட்டதாக, அப்படிக்கூட இல்லை, தோற்பிக்கப்பட்டதாக உணருகையில் ஓரொருவரும் தன் கசப்புகளை வன்மங்களை சமூகத்தின் மீது கட்டவிழ்க்கிறோம். அண்ணனாக அப்பாவாக இருக்கிற அந்தப் பொலீஸ் நண்பர் நாயகனை, இல்லை தன்னைத்தானே, நியாயந்தீர்க்கையில் நம் நெஞ்சாங்குலை அறுபட்டுக் கதறுவது உண்மை.

இந்த இயக்குநரின் “தங்க மீன்கள்” உருப்படாத ஒரு தகப்பனை ரொமான்ற்றிசைஸ் பண்ணி, பிள்ளைகளைத் தற்கொலைக்கு தூண்டிய படம். இப்படித்தான் அதுபற்றி எழுதியிருந்தேன். (விருதுகள் வாங்கியது ஒரு தரநிர்ணயம் ஆகாது). அந்தப் படத்தின் பிழைகளுக்கு இந்தப்படம் ஒரு நிவர்த்தி என்று இன்று கண்டேன். பெண்மையைப் பெரிதுபேசுகிற படம். ஆனால் பெண்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே ‘A’ சான்றிதழ் சுமத்தப்பட்ட படம். (பெண்கள் குழந்தைகளை விட்டுவிட்டு வரமாட்டார்கள் இல்லையா?)

பெண்களுக்கு, உண்மையில், செக்ஸ் இல்லை; அன்பே ஆதரவே முக்கியம். ஆண்கள் தன் ஆண்மையை செக்ஸால் உறுதி செய்துகொள்ள முயல்கையில், அவள், “ஆமா, உன்னைய விட அவன் சூப்பர்” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லி அவனைத் தவிடுபொடியாக்க முடியும். நிகழாத ஒன்றை அந்தப் பொலீஸ் அதிகாரியின் மனைவி நிகழ்ந்ததாகக் குரலெடுக்கிற அந்தக் காட்சி… அடடா!

ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம். சிறுகதைபோல், நாவல்போல் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

அரங்கைவிட்டு வெளியேறிய வாசலில், ஸ்ருதி டி.வி. நண்பர் கபில் என்னை மறித்தார். என் முகம் ‘கேமரா’விலா? வேண்டாமே என்று விலகி ஓடத்தான் வழிபார்த்தேன். ஆனால் ஒரு நல்ல படம். அதுபற்றி ஏதாவது பதியவேண்டாமா? சொன்னேன், “பிரெஞ்சு டைரக்டர் கோதார் (Godard) கட்டுரைத்தனமான படங்களை எடுப்பதில் வல்லவர். அப்படி, இதுவும் பெர்ஃபெக்ட்டாக எடுக்கப்பட்ட ஒரு படம்.

ராஜசுந்தரராஜன், எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய கவிதை நூல் ‘தாய்வீடு’.

“பன்றி” யார்? : பகுதி -3 

ப. ஜெயபாலன்

வசந்த பாலன்  தனது பேச்சில் தலித்துகளின் எழுச்சி பற்றியும் அதற்கான முறைமைகள் பற்றியும் சில பார்வைகளை முன்வைத்தார். அவர் நல்ல நோக்கத்தில் தான் அந்த பார்வைகளை முன்வைத்தார் என்று நான் நம்ப முயற்சி செய்தாலும் அதிலுள்ள போதாமைகளையும் சுட்டி காட்ட விரும்புகிறேன். ரோஹித் வெமுலாவையும், முத்து கிருஷ்ணனையும் குறிப்பிட்ட வசந்த பாலன் இவர்களை தலித்துகளுக்கான போராட்ட எழுச்சியின் அடையாளமாக பார்ப்பதாகவும் ஆனால் எந்த தலித் அமைப்புகளை அவர்கள் நம்பினார்களோ அந்த அமைப்புகள் கைவிட்டதின் விளைவுதான் அவர்களது மரணங்கள் என்றும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் தீர்க்கமான கண்களோடு சொன்னவர் “நண்பர்களே(தலித்துகளை நோக்கி) நீங்கள் எந்த தலித் சங்கங்களை நம்புகிறீர்களோ அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்” அதற்கான உதாரணங்கள் தான் அந்த இரண்டு மரணங்கள் என்றார் !!!!!!!.
ரோஹித் வெமுலாவவின் முத்துகிருஷ்ணனின் மரணம் என்பது இந்திய பல்கலைக்களங்களில் பார்ப்பனிய/சாதி ஹிந்து வெறியர்கள் தலித்துகளுக்கு எதிராக, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தி கொண்டிருக்கும் எத்தனையோ கோடி அநீதிகளில் ஒன்று என்பதும், அது சாதி வெறிகொண்ட ஹிந்து சமூகம் கல்வி கற்று மேலேழுந்து வரும் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்திய/நிகழ்த்தும்  வேட்டையில் நடந்த இரண்டு கொடூரமான பச்சை படுகொலை என்பதும் மனசாட்சியுள்ள, அந்த சம்பவங்களை ஒற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகள் கட்டுரைகள் ஆகியவற்றை படித்த எவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை. ஒரு சாதி இந்துவின் மனது தெரிந்தோ தெரியாமலோ எப்பொழுதும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட குதர்க்கமான மனநிலையிலேயே சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுயிருக்கிறது. ஏனென்றால் தர்க்கத்தை பயன்படுத்துபவன் சாதியை நம்புபனாகயிருக்க முடியாது. தருமபுரி சம்பவத்தின் போதும், கோகுல் ராஜ் கொலையின் போதும் தலித்துகள் ஏன் தேவை இல்லாமல் சாதி ஹிந்து பெண்களை காதலிக்கிறார்கள்!!!!!!! என்றும், சேஷசமுத்திரம் தேர் பிரச்சனையின் போது தலித்துகள் ஏன் தேவையில்லாமல் சாதி ஹிந்துக்களின் தெருவில் தேரிழுக்க வருகிறார்கள்!!!!!!! என்றும் தற்குறி சாதி ஹிந்துக்களின் மனது குதர்க்கமாகவே ஜனநாயக விரோதமாக யோசிப்பதை அந்த சம்பவங்களின் போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய சாதி வெறியர்களின் பேச்சினூடாக கவனித்தோம். அவர்கள் யோசிப்பதை போலவே  தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் “கற்பி,ஒன்று சேர், புரட்சி செய்” என்று சொன்ன அம்பேத்கரின் பேச்சை நம்பி தலித் அமைப்புகளோடு/அமைப்புகளாய் ஒன்று சேர்ந்தால் தக்காளி ரோஹித், முத்துகிருஷ்ணன் கதிதான் உங்களுக்கு பார்த்துக்கோங்க என்கின்ற தொனியில் பேசியதை கேட்டு உண்மையில் எனக்கு அயர்ச்சி தான் ஏற்பட்டது. 
 
உண்மையில் அந்த இரண்டு உன்னதமான phd மாணவர்களின் மரணத்தில் இந்திய சாதி வெறி சமூகத்திற்கு பங்குயில்லையா? சாதி ஹிந்துக்களுக்கு பங்கில்லையா? சாதியை கற்பிக்கும் ஹிந்து மதத்திற்கு பங்குயில்லையா? இன்னமும் தலித்துகளும்/சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரத்தில் பங்குபெற முடியாமல் தடுக்க படுகிறார்களே அது காரணமில்லையா? இந்த தகவல் தொடர்ப்பு/செய்தி யுகத்தில் ரோஹித்தின் அறம் சார்ந்த போராட்டத்தை மொத்த தேசத்தோடு சேர்ந்து நீங்களும் நானும் மௌனமாக வேடிக்கை பார்த்தோமே நமக்கு அந்த மரணத்தில் பங்குயில்லையா? இது எதுவுமே இல்லாமல் ரோஹித்தும் முத்துகிருஷ்ணனும் இந்தியாவின் மனசாட்சியின் மீது காரி உமிழும் படியான கடைசி வார்த்தைகளை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் தலித் அமைப்புகளை நம்பி ஏமார்ந்து போனதால் தானா? தலித்துகளின் அறம் சார்ந்த போராட்டங்களை காத்து நிற்க வேண்டியது/முன்னெடுக்க வேண்டியது  அறம் சார்ந்த எல்லோரின் கடமையா அல்லது அது தலித்துகளின்/தலித் அமைப்புகளின் மட்டுமேயான கடமையா?
 
இப்படி தலித்துகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படும்போதெல்லாம் தலித்துகளையே குற்றவாளியாக/காரணியாக பார்க்கும் சாதி ஹிந்துக்கள் எந்த கூச்சமமுமின்றி தலித்துகள் எப்படி போராட வேண்டும் என்ன மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தலித்துகளுக்கே பாடம் எடுக்க துணிகிறார்கள். மொத்த இந்தியாவையும் தலித்துகள் தீயிட்டு கொளுத்தினாலும் அது தவறென்று வாதாடா, குற்றம் சுமத்த எந்த சாதி ஹிந்துக்கும் எந்த தகுதியுமில்லை/தார்மீக உரிமையுமில்லை. ஏனென்றல் இந்திய சாதிய ஹிந்து சமூகம் உலக வரலாற்றில் எந்த தேசத்திலும் நிகழாத அத்தனை கோடி அநீதிகளை/வன்முறைகளை/சுரண்டல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலித்துகளின் மீது எந்த மனசாட்சியுமின்றி நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் தலித்துகளின் போராட்ட வழிமுறைமைகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்க சாதி ஹிந்துக்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எந்த மாதிரியான போராட்ட முறைகளை தலித்துகள் முன்னெடுத்தாலும் அதில் உள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நியாயத்தை உள்வாங்கி கொண்டால் அதுவே போதுமானது. ஏன் என்றால் தலித்துகளுக்கான தீர்வை சாதி ஹிந்துக்களிடம் எதிர்பார்ப்பது மாட்டிறைச்சி குழம்பில் மீன் முள்ளை தேடுவதை போன்ற முட்டாள்தனம். சாதி ஹிந்துவால் அவர்களே ஆசைப்பட்டாலும் தலித்துகளுக்கு தீர்வை சொல்ல முடியாது. உதாரணம் திரு வசந்த பாலன் அவர்கள் தலித்துகள் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு எழுச்சி கொள்ளவேண்டும் என்றும் இழிவான வேலைகளை தங்கள் குழந்தைகளுக்கு கடத்தாமலிருக்க வேண்டும் என்றும், குலத்தொழிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றும் அறிவுரை சொன்னதோடு ஏன் ட்ரைனேஜ்குள் இறங்குகிறார்கள், ஏன் விஷவாயு தாக்கி சாகவேண்டும் அதை தலித்துகள் செய்யக்கூடாது என்கின்ற ரீதியில் அவர் அறிவுரைகளையும் அருளினார்.
 
Republic of India பிறந்து 67 ஆண்டுகளுக்கு பிறகும், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், manual scavenging சட்டரீதியாக தடைசெய்யப்பிட்ட பின்னும் ஏன் ஒரு மனிதன் சாக்கடைக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறக்கிறான்? இதற்க்கு யார் காரணம்? இதற்கு யார் பொறுப்பு? எப்படி அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினராகவே இருக்கிறார்கள்? எதனால் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே வேலையில் இருக்கிறார்கள்? அவர்கள் சமூகத்தில் அதே நிலையிலிருக்க காரணமாய் இருக்கும் காரணிகள்/தத்துவங்கள் என்ன? யார் அவர்களை அந்த தொழிலிருந்து மீளாமலிருக்க நிர்பந்திக்கிறார்கள்? எது அவர்களை அவ்வாறு நிர்பந்திக்க தூண்டுகிறது? இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன? இந்த அநீதியில நானும் எனது குடும்பமும் யார் பக்கம் நிற்கிறோம்? என்றெல்லாம் ஒரு சாதி ஹிந்துவின் மனது யோசித்து நிகழும் அநீதியில தனக்குள்ள தனது குடும்பத்திற்குள்ள தனது சாதிக்குள்ள பங்கை நினைத்து வெட்கம் கொள்ளாது…அவமானம் கொள்ளாது…குற்றவுணர்ச்சி கொள்ளாது….தனது அடையாளத்திற்கு எதிராகவும், தனது சாதி நம்பிக்கைக்கெதிராகவும் சீற்றம் கொள்ளாது…தனது சாதியினரிடம் போய் அவர்களை செழுமை படுத்தாது, அவர்களிடம் கலகம் செய்யாது, அவர்கள் ஏன் அயோக்கியர்கள் என்றும் திருடர்கள் என்றும் முட்டாள்கள் என்றும் ஜனநாயக விரோதமானவர்கள் என்றும் பாடம்மெடுக்காது….ஆனால் தைரியமாக தலித்துகளிடம் வந்து “ஐயோ நீங்க பாவம்” என்று  சொல்லும்…நீங்கள் ஏன் அதுபோன்ற தொழில்களை செய்கறீர்கள் என்று செல்லமாய் கோபித்து கொள்ளும். இதைத்தான் வசந்தபாலனும் செய்தார்.

Malcolm x திரைப்படத்தில் ஒரு காட்சி. இது உண்மையாக நடந்தது. malcolm ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற சென்று கொண்டிருக்கிறார். ஒரு நன்கு படித்த, மால்கம் கருத்துக்களின் நியாயத்தை முழுவதுமாய் ஏற்று கொண்ட வெள்ளையின பெண் ஓடி வந்து மால்கமிடம் உங்கள் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கேட்டும் படித்துமிருக்கிறேன். உங்களுடன் நான் உடன்படுகிறேன். உங்கள் போராட்டத்திற்கு நான் எதாவது செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் நான் என்ன செய்வது என்ற கேள்விக்கு மால்கம் ஒற்றை வார்த்தையில் அளித்த பதில் “nothing”.

 
அதுபோல சாதி ஹிந்துக்கள் உண்மையிலேயே தலித்துகளின் போராட்டத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு தலித்துகளிடம் சொல்ல/செய்ய எதுவுமில்லை. nothing. ஆனால் அவர்கள் அவர்களுக்குள் செய்ய சுயபரிசோதனை/சுய விமர்சனம் தொடங்கி கோடி உள்ளது.

“கபாலி” வெளியான சமயத்தில் நானும், எனது தம்பியும், எனது மாமாவும் literally இரண்டு நாட்கள் ஓயாமல் கபாலி சிறந்த/தேவையான  தலித்திய திரைப்படமா அல்லது Fandry சிறந்த/தேவையான தலித்திய படமா என்று விவாதித்து கொண்டிருந்தோம். நானும் எனது தம்பியும் கபாலிதான் சமகால தலித்திய பார்வையையும்/அரசியலையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட படம் என்றும் எனது மாமா Fandry தான் நிஜமான/உண்மையான தலித்திய வாழ்வை ஆவணப்படுத்திய படம் என்னும் அளவிலும் விவாதித்தோம்/முரண்பட்டோம்/வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
 
தலித்திய கலை/இலக்கிய/சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம். 
 
1) தலித்திய வாழ்வின் சிக்கல்களை, கடினங்களை, துயரங்களை கலைவடிவதில் சாதி இந்துக்களின் மனசாட்சியின் (caste Hindus moral conscience) முன்  நிறுத்துவது… அப்படி நிறுத்துவதின் மூலம் அவர்களுடைய மனதில் ஒரு மாற்றத்தை / நெகிழ்ச்சியை எதிர்பார்ப்பது.
 
2) தலித்திய வாழ்வின் சிக்கல்களுக்கும் கடினங்களுக்கும் துயரங்களுக்கும் பின்னணியில் சாதி ஹிந்துக்களின் சாதிவெறியும் திமிரும், மனித மாண்பற்ற அவர்களின் செயல்பாடுகளும் எப்படி இயங்குகின்றன என்பதை மூர்க்கமாக கண்டித்து/தோலுரித்து  அதை தலித்துகள் நேரடியாக எப்படி எதிர் கொள்வது என்று தலித்துகளோடு விவாதிப்பது அல்லது எதிர்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்துவது.
 
ஒரு தலித்திய  பார்வையிலான கலையிலக்கிய செயல்பாடு பெரும்பாலும் மேல்சொன்ன இரண்டு வகைமைகளுக்குள் அடங்கிவிடும். மேல் சொன்ன வகைமைகளில் Fandry முதல் வகைமை. எனக்கு இந்த வகைமையில் நம்பிக்கையில்லை. இது மனசாட்சியற்ற சாதி ஹிந்துக்களின் மனதில் எந்த சலனத்தையும்/அதிர்வையும் ஏற்படுத்தாது என்பது எனது வாதம். ஹொலிவுட்டில் இந்த வகையான திரைப்படங்கள் கறுப்பின இயக்குனர்களால் நிறைய கையாள பட்டிருக்கின்றன(The pursuit of happiness, Twelve years of slave) . அதாவது கருப்பின வாழ்வியலை அமெரிக்க சமூகத்தின் மனசாட்சியின் முன் விவாத பொருளாக்குவது. ஆனால் சுவாரசியமாக அவர்களது இறுதி காட்சி பெரும்பாலும் நேர்மறையாகவே இருக்கும். அறுபதுகளில் ஓட்டுரிமைக்கு போராடிய அமெரிக்க கருப்பினத்தவர்கள் இரண்டாயிரத்தின் இறுதியில் கருப்பின ஜனாதிபதியை அடைந்து விட்டார்கள். எனவே அவர்களது சமூகத்தின் மீது அவர்களுக்கிருக்கும் நேர்மறை அணுகுமுறையை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இந்திய சமூகத்தில் தலித்துகளின் மீது நிகழும் அநீதியும்/வன்முறைம் ஆயிரமாண்டுகளுக்கு மேலானா வரலாறு கொண்டது. இந்த அடக்குமுறைக்கு எதிரான  தலித்துகளின் எதிர்ப்பரசியல்/போராட்ட வரலாறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. இதற்கு பிறகும் கூட இந்திய சாதிய சமூகம் எருமைமாட்டின் மீது மழை பெய்ததை போன்று நின்ற இடத்திலேயே அதாவது சமூக சாதிய அடுக்குமுறையில் இன்னுமும் எந்த மாற்றமும் வராமல் நின்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் என்னைப் போன்றவார்கள் இந்திய சாதிய ஹிந்து சமூகத்திற்கு மன்சாட்சியென்றோ/அறமென்றோ ஒன்று உண்மையில் உள்ளது  என்பதை நம்பவே தயாராயில்லை. 
 
இந்த இடத்தில் தான் கள்ளமௌனம் கடைப்பிடிக்கும் சாதிய சமூகத்தை உலுக்க, பதட்டம் கொள்ள வைக்க and to challenge the established socio, economic casteist beliefs/order கபாலி வருகிறான். கபாலி சாதி ஹிந்துக்கள் எதிர்வினையாற்றியே தீரவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறான், தலித்துகளை விழிப்படைய வைக்கிறான், எதிர்த்தாக்குதல் (கலை, இலக்கிய, பண்பாட்டு, அறிவு தளத்தில்) சாத்தியம் என்று தலித்துகளுக்கு செய்துகாண்பிக்கிறான். இதன் மூலம் தலித்துகளின் போராட்ட குணத்தை கூர்மையாக்குகிறான், சாதி ஹிந்துக்களின் போலி பெருமிதங்களை கேலி செய்கிறான். இதுதான் வசந்த பாலன் போன்றான சாதி ஹிந்துக்களுக்கு கபாலியின் மீது எரிச்சலையும் நிராகரிப்பையும் உணர தோன்றுகிறது. Fandry போன்ற முதல் வகையான தலித்திய படைப்புகள் கவித்துமாக நிஜத்திற்கு அருகில் நின்று (அதற்காக கபாலி நிஜமில்லை என்ற அர்த்தமில்லை..அதாவது சாதி ஹிந்துக்கள் தரிசிக்க விரும்பும் நிஜம்) இந்தியாவின் ஆன்மாவோடு/மனசாட்சியோடு ஒரு சன்னமான குரலில் உரையாடலை நிகழ்த்துகிறது. இது ஒரு சாதி ஹிந்துவுக்கு சுகமான அனுபவம். தனது ஒரே சின்ன வயது மகளை கொலை செய்து விட்டார்கள் என்று தெரிந்த உடன் “கண்டாராவோலி வெளியவாடா…அநியாயமா என் பொண்ண கொன்னுட்டீங்களேடே தாயோளி ஒன்ன வெட்டாம விட மாட்டன்டா” என்று முதல் மரியாதையில் சிவாஜியை பார்த்து ஆவேசப்படாமல் “அய்ய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமீய்” என்று தலித் கதாபாத்திரம் சொல்வதுதான் சாதி ஹிந்துக்களுக்கு இதமான மென்சோகமாக இருக்கிறது. அதாவது ஏற்கனவே சொன்னதை போல் இளையராஜாவின் சோக பாடலை ரசிப்பது போல அவர்களுக்கு இந்த வகையான ஜெயமோகனின் நாயோடிகள் வகையிலான படைப்புகள் பிடித்துத்திருக்கிறது. 
ஃபான்றி படக் காட்சி
 
இந்நிலையில் Fandry எப்படி என் போன்றவர்களுக்கும் பிடித்த படமாகிறது? எப்படி என்றால் நாகராஜ் மஞ்சுளே கடைசி ஐந்து நிமிடங்களில் Fandryயை  முதல் வகைமைகளிலிருந்து இரண்டாவது வகைக்கு நிகழ்த்தும் சாகசத்தை செய்கிறார். எல்லா ஆணுக்குமே தனது பிடித்தமான பெண்ணின் முன் கண்ணியமான/கம்பீரமான ஆணாக வெளிப்படவே ஆசை. ஒரு பெண்ணுடன் பைக்கில் போகும் போது பெயர் தெரியாத யாரோ ஒருவன் ரோட்டில் நம்மை திட்டிவிட்டாலே நமக்கு மிகவும் சங்கடமாக போய்விடுகிறது. திரும்ப இயல்புக்கு திரும்ப வெகு நேரமாகும். இந்நிலையில் இந்திய சாதிய சமூகத்தில் ஒரு தலித் சிறுவன் பதின் வயதில் ஒரு மிகவும் பின்தங்கிய சாதிய இறுக்கங்கள் நிறைந்த கிராமத்தில் தன்னோடு பள்ளியில் படிக்கும் ஒரு சாதி ஹிந்து சிறுமியின் மீது ஈர்ப்பு கொள்கிறான். அந்த சிறுவனுக்கு அவனது எல்லை தெரிகிறது. அதற்குள் நின்று அவன் அந்த சிறுமியின் முன் தனது விருப்பத்திற்கெதிரான, தன் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி சார்ந்த  அடையாளத்தை அவள் முன் கவனமாய் மறைத்து தூர நின்று ரசிக்கிறான். இதனை பின்புலமாக வைத்து மிகவும் கவித்துமான அரசியலோடு (சுவற்றில் பூலே, ஜோதிபாய், அம்பேத்கர்  படங்கள் பார்த்து கொண்டிருக்க தலித் சிறுவன் பள்ளியை விட்டு விலகி பன்னி சுமந்து செல்வது) கதையை விவரிக்கிறார். இந்நிலையில் இறுதி காட்சியில் அவன் அந்த சிறுமியின் முன் மிக கவனமாய் கட்டிக்காத்த அவனது கண்ணியம் ஊரில் சுற்றும் ஒரு பன்னியை அவனும் அவனது மொத்த குடும்பமும் பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் பறிக்கப்படுகின்றது. மிகுந்த ஆற்றாமையிலும் அவமானத்திலும் இயலாமையிலும் அவன் தனது மனதிற்கு பிடித்த சிறுமியின் முன் பன்னி பிடிப்பவனாக வெளிப்பட்டு அந்த பன்னியை தூக்கிக்கொண்டு தெருவில் சென்றுகொண்டிருக்கிறான். அப்பொழுது சாதி ஹிந்து இளைஞர்கள் இவனையும் இவனது குடும்பத்தையும் வழிநெடுகிலும் கிண்டல் செய்துகொண்டே வர ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் திடிரென்று ஆவேசமாகி அந்த கும்பலை நோக்கி கல்லெறிய தொடுங்குகிறான். சிதறி ஓடும் அவர்கள் சுதாரித்த பின் மீண்டும் அந்த சிறுவனை நோக்கி ஆவேசமாக வருகிறார்கள். இப்பொழுது அந்த சிறுவன் முன்பைவிட தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தவனாக ஒரு கல்லை எடுத்து திரையை நோக்கி வீச அந்த கல் பார்வையாளரை நோக்கி வருவதாய் காட்டி நாகராஜ் மஞ்சுளே அதை முடித்திருப்பார்.
 
நாகராஜ் மஞ்சுளே தனது படத்தின் தலைப்பையே “பன்றி” என்று வைத்து விளிப்பது உண்மையில் படத்தில் வரும் பன்றியைத்தானா? உண்மையில் அடித்து வீழ்த்த படவேண்டியது ஊரில் மலத்தில் உழலும் பன்றிகளா அல்லது சாதியை கடைபிடிக்கும்/சாதியை நம்பும் சாதி ஹிந்துக்களா? என்னை பொருத்தவரை தலித்துகளுக்கு எதிராக ஒடுக்குமுறை நிகழும் போதும் அநீதி நிகழும் போதும் மௌனியாய் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சாதி ஹிந்துக்கள்தான் உண்மையில் சாதியென்னும் மலத்தில் உழலும் பன்றிகள். திரைக்கு அப்பால் அமர்ந்து அந்த சிறுவனின் துயரத்தை, சாதிய சமூகம் அவனுக்கு எதிராய் நிகழ்த்தும் வன்முறையை அது வரை மௌனியாய் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்த சாதி ஹிந்துக்களை நோக்கித்தான் அந்த சிறுவன் கல்லெறிந்தான். அவர்களை நோக்கித்தான் அந்த கல் வந்து கொண்டிருக்கிறது.
 
பாராட்டுக்கள் :
 
அந்த நிகழ்ச்சியில் கேள்விபதிலில் வசந்த பாலன் மார்பை கசக்கும் உண்மை பற்றி பேசுகையில் சரியான நேரத்தில் அவரை கேள்விக்குக்குட்படுத்திய பெண்
 
சின்மயி விவகாரத்தை முன்னிட்டு பேசி சுய விமர்சனத்தின் தேவையை சாதி ஹிந்துக்களுக்கு வலியுறுத்திய கண்ணாடி போட்ட இளைஞர்
 
அந்த நிகழ்ச்சியில் தலித்துகளின் சார்பை/கோணத்தை நுட்பமாக உள்வாங்கி வெளிப்படுத்திய, அவரது பேச்சினூடாக மிகுந்த நம்பிக்கையை விதைத்த திரு மீரா கதிரவன் 
 
நன்றி:
 
தோழர் நந்தினி…என்னை போன்ற பலருக்கும் உரையாட புழங்க ஒரு களம் அமைத்ததற்கும், இடமளிப்பதற்கும் 
 
தமிழில் சினிமாவை வெறும் craft and making சார்ந்து  மட்டும் பார்க்காமல் தொடர்ந்து கலையினூடான அரசியலை எழுதி வரும் எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் இந்த கட்டுரையை பகிர்ந்ததற்கு 
 
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” 
 
ப. ஜெயசீலன். 

“பன்றி” யார்? : பகுதி -2

ப.ஜெயசீலன்

வாசகசாலை மற்றும் திரைக்களம் இணைந்து நல்ல திரைப்படங்கள் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். மிக முக்கியமான, மிக பாராட்டுதலுக்கு உரிய இந்த முன்னெடுப்பை அவர்கள் செய்து வருவதின் ஒரு பகுதியாக திரு. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய மராத்திய படங்களான FANDRY மற்றும் SAIRAT குறித்து அவர்கள் ஒருங்கிணைத்துத்திருந்த உரையாடல் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இதற்க்கு முன்பு ஒருங்கிணைத்த DJANGO பற்றிய கலந்துரையாடலின் போதே இவர்கள் எதன் அடிப்படையில் சிறப்பு விருந்தினர்களை தேர்வு செய்கிறார்கள் என்கின்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்வி FANDRY மற்றும் SAIRAT குறித்தான கலந்துரையாடலில் திரு வசந்தபாலன் பேச தொடங்கியபோது(அவர் பேசியதையும், கேள்விபதிலில் அவர் பேசியதையும் நீங்கள் கேட்க முயற்சி செய்யவும்) ஒயாமல் எனது மனதில் ஒலித்து கொண்டே இருந்தது.

அவர் பேசிய கருத்துக்களை மூன்று பகுதியாக பிரிக்கலாம்.
1) தலித்துகள் யார்
2) நிஜமான தலித் சினிமா என்பது என்ன
3) தலித்துகளுக்கு ஆலோசனை மற்றும் எழுச்சி கொள்ள ஊக்கமூட்டல்

அவர்பேசிய அந்த விஷயங்கள் அறிந்தோ அறியாமலோ தலித் விரோத சிந்தனையை/புரிதலை/காழ்ப்புணர்ச்சியை கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியதால்தான் தான் இந்த கட்டுரை. அவர் பேசத்தொடங்கியுவுடன் இந்தியாவில் சமகாலத்தில் வந்த திரைப்படங்களில் FANDRY, COURT மற்றும் THITHI (நான் இன்னமும் பார்க்கவேயில்லை) மிக முக்கியமான தனக்கு பிடித்தமான படங்கள் என்று கூற நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் FANDRY பற்றி பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே தலித்துகள் யார் என்று ஒரு கேள்வியை கேட்டு அவர்கள் யாரென்று சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஹிந்து பள்ளியில் படிக்கும் தனது மகன் தன்னிடம் முஸ்லீம் என்றால் யார் என்று கேட்பதாகவும்!!!!!!! சென்னையில் வசிப்பதால் மனிதர்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாகவும் தலித் என்றால் யார் என்றே தெரியாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவும்!!!!!!!!!…நகரங்கள் அதை செய்வதாகவும் சலித்துக்கொண்டு தான் சிறுவனாக இருந்தபோது விருதுநகரில் தான் கண்ட/அறிந்த தலித்துகளை பற்றி சொல்ல ஆரம்பித்தார். எடுப்பு கக்கூஸ் இருந்த தனது வீட்டிற்கு “தலித்துகள்” வந்து எப்படி தனது தாயின் மலத்தை அள்ளிக்கொண்டு தயக்கதோடு தனது வீட்டிற்கு முன் வந்து நின்று “அம்மா நான்வந்திருக்கன்மா எதாவது பண்ணுங்கமா” என்று கேட்பார்கள் என்றும், தனது தாய் மீந்து போன, ஊசிப்போன, கெட்டுப்போன உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் ஒரே தட்டில் போட்டு அவர்களுக்கு தர அவர்கள் அதை வாங்கி கொண்டு செல்வதை பார்க்க வேதனையாக இருக்கும் (கரு பழனியப்பனின் “தலித்துகள் பாவம்” கூற்றை நினைவில் கொள்க) என்றும் இப்படித்தான் தலித் என்பவர்களை நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்பவர்களுக்கு கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும்.

“you see only what you want to see” என்ற வாக்கியத்தை போல ஒரு சாதி இந்துவின் ஆழ்மனது தலித் என்பவர்களை என்னவாக நினைவில் கொள்கிறது அல்லது என்னவாக நினைவில் கொள்ள விளைகிறது என்கின்ற கேள்வி மிக முக்கியமானது. இப்பொழுது திரு வசந்த பாலன் ஒரு தலித்தாகயிருக்கும் பட்சத்தில் தலித் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு என்ன மாதிரியான பதிலை அளித்திருப்பார் என்று நாம் யோசிக்க வேண்டும். வசந்தபாலன் சொன்னதையே தலித் வசந்தபாலன் சொல்லியிருந்தால் இப்படி சொல்லியிருப்பார். “நாங்கள் அந்த வீட்டு பெண்ணின் நாற்றம் பிடித்த மலத்தை அள்ளிக்கொட்டிவிட்டு அவர்கள் வீட்டு வாசல் முன் போய் நின்று அம்மாமா என்று அழைக்கும் வரை அந்த பொம்பளை வெளியே வரவில்லை. ஒரு வழியாக வெளியே வந்த அந்த பொம்பளை மீந்து போனதையும் ஊசிபோனதையும் வந்து போடுவாள். அவளுடைய மலத்தை மீண்டும் அள்ளிவந்து அவளுடைய தலையிலேயே கொட்டிவிட்டு ஒன்னோட பீ அல்லறவனுக்கு ஒரு வாய் சோறு போட கூட வக்கில்லாத ஒனக்கு நாங்க வந்து பீயை அள்ளணுமா? உன் புருஷனையும் உன் புள்ளையும் அள்ள சொல்றி மூதி என்று திட்டத்தோன்றும்/ஆத்திரமாக வரும் ஆனால் அதை அடக்கிக்கொண்டு அந்த வீட்டிலிருந்து நகர்ந்து சென்று விடுவோம் என்று சொல்லி இருப்பார் இல்லையா? இதை கேட்பவர்களுக்கும் கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும் இல்லையா? இப்பொழுது நாம் கேட்க வேண்டிய கேள்வி தலித்துகளை யாருடைய கோணத்திலிருந்து அணுக வேண்டும்? “தலித்துகள் பாவம்” என்ற கோணம்/மனநிலை கொண்டா அல்லது மானுட சமத்துவத்திற்கு எதிராக தலித்துககளை exploit செய்யும் சாதி ஹிந்துக்கள் மீது அறசீற்றம் கொள்ளும் கோணம்/மனநிலை கொண்டா??

ஒரு சாதி இந்துவின் அதிகபட்ச மனிதம், நேயம் என்பது “தலித்துகள் பாவம்” என்னும் வரைதான் நீளும். வசந்தபாலனுக்கு தனது தாயின் மீதும், தனது தந்தையின் மீதும், தன் மீதும் எப்படி ஒரு குற்றஉணர்ச்சியோ, அருவெறுப்போ, கோபமோ ஏற்படுவது இல்லையோ அதே போல சாதி இந்துவின் மனதும் ஒரு சுய விமர்சனத்திற்கும் அற சீற்றத்திற்கும் தயாராக இருக்காது. ஆனால் “தலித்துகள் பாவம்” என்னும் அயோக்கியத்தனமான மொன்னைத்தனமான போலித்தனமான கருணையை பாவித்துகொண்டே அவர்கள் மீதான சாதி ஹிந்துக்களின் வன்முறையை வேடிக்கைபார்க்கும். anyway coming back to his reference about dalits நான் கேட்க விரும்புவது இந்த நிலத்தின் தொல்குடிகளாக அறியப்படுகிற மிக நீண்ட நெடிய வரலாற்று/போராட்ட/எதிர்பரசியல் பின்னணி கொண்ட தலித்துகளை, அதுவும் குறிப்பாக அம்பேத்கரியத்தை முன்வைத்து தலித் அரசியல்/கலை,இலக்கியம் மிகுந்த எழுச்சியை பெற்றிருக்கும் இந்த சமகாலத்தில் தேசிய/மாநில விருதுகளை பெற்ற ஒரு இயக்குனர்/கலைஞர் தலித்துகள் யார் என்று கேள்வியை கேட்டு பீ அள்ளிவிட்டு ஊசிப்போன சோற்றை வாங்கிக்கொண்டு போபவர்கள் தான் தலித் என்கிறார். அதாவது as a caste Hindu he see what he want to see in a dalit. இதை கேட்பதற்கு என்னங்க அவரு எதார்த்தமா ஒரு உண்மைய சொன்ன அதுக்கு நீங்க இப்படி உள்நோக்கம் கற்பித்தால் எப்படி என்று கேட்க தோன்றும். அவர் தலித் சினிமா என்றால் என்ன என்று சொன்ன இரண்டாம் பகுதியை அடைந்தால் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கு புரியலாம்.

திரு வசந்தபாலன் கர்நாடகா சபா ஒன்றில் ஒரு கர்நாடகா கச்சேரி பார்க்க எதேச்சையா செல்கிறார். அங்கு ஒரு அதி உன்னதமான ஏதோ ராகத்தில் யாரோ ஒருவர் பாடி முடிக்க அந்த மொத்த அவையும் ஆர்ப்பரிக்கிறது. இந்த குறிப்பிட்ட ராகத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் பாடியது இல்லை என்று அந்த ராகத்தில் ஊறிய பலர் அந்த பாடகரை பாராட்டுகிறார்கள்.இப்பொழுது வசந்தபாலனிடம் வந்து கச்சேரி எப்படி இருந்தது என்று கேட்டால் அவர் அற்புதம் என்று சொல்லலாம், தூங்கிவிட்டேன் என்று சொல்லலாம், புரியவில்லை என்று சொல்லலாம், பிடிக்கவில்லை என்று சொல்லலாம், சுமார் என்று சொல்லலாம் ஆனால் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையே தெரியாதா வசந்தபாலன் அந்த பாடகர் பாடிய ராகம் கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு என்று சொன்னால் அங்கு இருப்பவர்கள் வசந்தபாலனை யார் இந்த கோமாளி ? என்று பார்ப்பார்களா மாட்டார்களா? அதுபோன்ற ஒரு காரியத்தைத்தான் தலித் சினிமா என்பது என்ன என்று விளக்க முற்பட்டு நகைப்புக்குரிய வன்மமான கருத்துக்களை முன்வைத்தார்.

இயக்குநர் வசந்தபாலன்

அதற்குள் போவதற்கு முன் தலித்திய சினிமா தலித்திய இலக்கியம் என்றால் என்ன? தலித்துகளை பற்றி எழுதிவிட்டால் அது தலித் இலக்கியம் ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் பார்ப்பனர்களை பற்றி பெரியார் அளவிற்கு யாரும் எழுதியிருக்க முடியாது. அதனால் பெரியாரிய எழுத்துக்களை பார்ப்பனிய இலக்கியம் என்று சொல்வதில் எதாவது பொருள் உள்ளதா? தலித் கதாபாத்திரத்தை உலவிட்டால் அது தலித் சினிமா ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் முதல்வன் படத்தில் பெண்கள் கையை பிடித்து இழுக்கும் “சேரி பசங்களை” புரட்டி எடுப்பாரே அதனால் முதல்வனை தலித் படம் என்று சொல்லலாமா? நம்பியார் கூப்பிட்ட பொழுதெல்லாம் வந்து நின்றார்களே கபாலிகள் அந்த எல்லா படங்களும் தலித் சினிமாவா?…. தலித் இலக்கியம்/சினிமா என்பது தலித்துகளின் பார்வையிலிருந்து சமூகத்தை பார்ப்பது. இது ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் செய்யமுடியாது. இளவரசன் மரணம் தலித்துகளின் மனதில் ஏற்படுத்திய கோபமும் பாதிப்பும் ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் புரிந்துகொள்ளவே முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. இதைத்தான் வசந்த பாலனோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் திரு மீரா கதிரவன் அற்புதமாக தலித்துகளை புரிந்து கொள்ள “அம்பேத்கரின் கண்கள் கொண்டு பார்க்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் Sairat மற்றும் Fandry இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவின் artistic sensibilitiesஐ முழுவதுமாய் உள்வாங்கி தலித்துகளின் பார்வையிலேயே அந்த இரு படங்களையும் மீரா கதிரவன் அணுகியது, விவரித்தது அவர் மீது எனக்கு பெரும் அன்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது…ஒரு தலித்தல்லாத ஒருவர் தலித்துகளின் பார்வையில் சமூகத்தை அணுகுவது அபூர்வம். கலையின் ஊடான அரசியல் புரிதலும், ஆழ்ந்த சித்தாந்த அரசியல் புரிதலும் மட்டுமே அதை சாத்தியப்படுத்தமுடியும். கிட்டத்தட்ட வசந்தபாலன் சொன்ன எல்லா கருத்துகளோடும் மென்மையாக அதே நேரத்தில் தெளிவாக முரண்பட்டு, விளக்கி அவருடைய பேச்சில் பேசினார். ஒரு வகையில் அவருடைய பேச்சின் மற்றொரு வடிவமே/கோணமே இந்த கட்டுரை.

அம்பேத்கரின் பார்வை விடுங்கள். பொதுவாக எந்த பார்வையுமே இருப்பதாக தெரியாதவர்கள் கூட எது தலித் இலக்கியம் எது தலித் சினிமா என்று கருத்து சொல்பவர்களாகவும் அதை குறித்து தலித்துகளுக்கே பாடம் எடுப்பவர்களாவும் ஆகிறார்கள். இப்படி அவர்கள் தூண்டப்படுவதற்கு அவர்களின் சாதி இந்து மனோநிலையும் திமிரும் தவிர வேறெந்த காரணமும் இல்லை. ஏனென்றால் பார்ப்பனர்களிடமோ/சாதி ஹிந்துக்களிடமோ போய் இதை அவர்கள் செய்வதில்லை.வசந்த பாலன் தமிழில் ஒரு நல்ல தலித் திரைப்படம் கூட வரவில்லையென்றும் சேரன் எடுத்த “பாரதி கண்ணம்மா”(ஒக்காமக்க) ஓரளவு நல்ல திரைப்படம் என்று சான்றிதழ் அளித்தார். சும்மா கபாலி என்று பேர் வைத்தால், அம்பேத்கர் படத்தை காட்டினால் அது தலித் சினிமா ஆகாது(கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு) என்றும் முழங்கினார். இன்னொரு வார்த்தையில் சொன்னால் மெட்ராஸ் மற்றும் கபாலியை தலித் சினிமா என்று கொண்டாடிய எல்லா தலித்துகளும், தலித்திய தளத்தில் இயங்கியவர்களும், தலித்திய சிந்தனையாளர்களும் முட்டாள்கள் போன்றும் நிஜமான தலித் சினிமா என்பது ஷார்ட்ஸ் போட்டு கொண்டு கூவத்திலிறங்கி எடுக்கவேண்டியது !!!!!!! என்றும் பேசினார்(இதே வசந்தபாலன் கபாலி வெளியான நேரத்தில் கபாலி ஒரு தைரியமான தலித் சினிமா என்று பா ரஞ்சித்தை மேடையில் வைத்து பேசும் வீடியோ இன்னமும் youtubeல் இருக்கிறது என்பது வேறு விஷயம்). சுஹாசினி இயக்கிய “இந்திரா” திரைப்படத்தில் அனுஹாசன் தலித் பெண்ணாக நடித்ததை குறித்தும் மாடம் வைத்த தலித் வீட்டில் ஒரு குழந்தை “நிலா காய்கிறது” என்று பாட்டு பாடுவதாய் அமைக்க பட்ட காட்சியை குறித்தும் அடக்க முடியாத சிரிப்புடன் குலுங்கி குலுங்கி சிரித்தபடி விவரித்து இப்படித்தான் தமிழில் தலித்துகள் காட்சி படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னார்.தசாவதாரம் தொடக்க காட்சியில் vin diesel போன்று பைசெப்ஸ் கொண்ட குடுமி வைத்த ஐயர் ஓடி வந்து எகிறி அடித்த போது யாரும் இது வரலாற்று ரீதியாக தவறு இந்த காட்சி பார்ப்பன வாழ்வியலை பிரதிபலிக்கவில்லை என்று கமலிடம் பாடம் எடுத்தார்களா? அதை பார்த்து வசந்தபாலனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்ததா?. “இந்திரா” திரைப்படம் பார்ப்பனிய அழகியலோடு அணுகப்பட்ட ஒரு தலித் கதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அனுஹாசன் ஒரு தலித் பெண்ணாக திரையில் தோன்றும்போது வசந்தபாலனுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? தலித் பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடி ஏதாவது அவருடைய வீட்டில் உள்ளதா? மெட்ராஸ் திரைப்படம் வெளிவந்த போது கேத்தரின் தெரசா போன்ற அழகான பெண்ணை எப்படி தலித் பெண்ணாக ஏற்க முடியும் என்ற திமிர்பிடித்த தடித்தனமான கேள்விக்கும் வசந்தபாலனின் அடக்க முடியாதா சிரிப்பிற்கும் என்ன வித்தியாசம் ? இதை குறிப்பிட்டு மீரா கதிரவன் தனது பேச்சில் சொன்னார் “லைலாவை ரசிக்க மஜ்னுவின் கண்கள் வேண்டும்” என்று. இளையராஜாவின் வீட்டில் நவராத்திரியின் போது பல கர்நாடக பாடகர்களும் கூடி பாடல் பாடும் காணொளிகளை நானே youtubeல் பார்த்திருக்கிறேன். இந்நிலையில் வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது. அதை தாண்டி அவர்கள் வேறொன்றை பார்க்கும் பொழுது அவர்கள் குழப்பமும் எரிச்சலும் ஆற்றாமையும் கொள்கிறார்கள். இதுதான் வசந்தபாலனை கபாலியை நிராகரிக்க சொல்கிறது. தன்னை விட அழகாவும் கம்பீரமாகவும் துணிச்சலாகவும் வேறு சாதியில் பிறந்த அழகிய பெண்ணை விரும்பி மணந்து மகிழ்ச்சியாய் ஒரு கலகக்காரனாய் வாழும் கபாலி தலித்தே இல்லை என்று கதறி அழுதுகொண்டே ஜெயமோகன் நாயாடிகள் குறித்து எழுதிய “100 நாற்காலிகள்” (“beautifulஆன கதை” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) காண்பிக்கும் தனது கற்பிதங்களுக்கு ஏற்ற ஒரு தலித்தை வசந்த பாலன் வந்தடைகிறார். ஒரு பிராம்மண பெண்ணை மணந்து அந்த பெண்ணோடும் லட்சக்கணக்கான மக்களோடும் பவுத்தம் ஏற்ற அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறாக நம் கண்முன்னே இருக்கும்போது தான் ஒரு நாயோடி IAS ஆனாலும் அய்யர் பெண்ணை மணந்தாலும் அவன் காலம் முழுவதும் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் போராட்டம் நடத்தியே அவன் வாழ்க்கை போய்விடும் என்று அந்த நாயாடிக்கு தீர்ப்பெழுதி ஜெயமோகன் வசந்தபாலன் போன்ற சாதி ஹிந்துக்களுக்கு ஆற்றுதல் படுத்துகிறார். வசந்த பாலன் ஆறுதல் அடைகிறார்.

ஒரு கலைப்படைப்பில் “நிஜம்/உண்மை” என்று எதுமே இல்லை மாறாக “பார்வை/கோணம்” மட்டுமே உள்ளது. ஒரு கலைப்படைப்பை யாருடைய பார்வையிலிருந்து எந்த நேரத்தில் என்ன காரணத்திற்காக என்னமாதிரியான விளைவை உத்தேசித்து ஒருவன் படைக்கிறான் என்பதை பொறுத்துதான் அந்த கலைப்படைப்பின்/கலைஞனின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் குறித்து மதிப்பிட முடியும். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒரு சில்லறைத்தனமான திறமையான(நேர்மையான அல்ல)கலைஞனானல் உண்மையான, நிஜத்திற்கு நெருக்கமான செய் நேர்த்தியுள்ள (ஏனென்றால் craft can be mastered over the time) ஒரு படைப்பை உருவாக்கிவிட முடியும். அதற்க்கு வசந்தபாலன் சொன்ன ஜெயமோகன் கதையே நல்ல உதாரணம். அந்த கதை சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன ? வசந்தபாலன் பயன்படுத்திய “beautiful கதை ” என்று சாதி ஹிந்துவை இளையராஜாவின் சோக பாட்டை ரசிப்பது போல் ரசிக்க வைக்கும். தலித்துகள் குறித்து சாதி ஹிந்துவுக்கு உள்ள கற்பிதங்களை மீண்டும் புதுப்பித்து உறுதியாக்கும். ஆனால் ரஞ்சித்தின் “கபாலி” சாதி ஹிந்துக்களை பதட்டம் கொள்ள வைக்கிறான், தலித்துகளை மிகுந்து எழுச்சியும்/அடையாள அரசியலையும் முன்னெடுக்க வைக்கிறான், சமூகத்தில் பெரும் விவாதங்களை கிளப்புகிறான், திரு அன்புமணியை (பாகுபலி பேட்டியில்) ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன் ஆனால் கபாலி பார்க்கவில்லை என்று சொல்ல வைக்கிறான், வசந்தபாலன் போன்ற ஆட்களை கபாலி தலித்தே இல்லை என்று பிதற்றவைக்கிறான். ஏனென்றால் ரஞ்சித் தலித்துகள் பற்றிய உண்மையை தலித்துகளின் கோணத்தில் அணுகி “கபாலியை” தமிழ்சமூகத்தை கன்னத்தில் அறைந்து விவாதத்திற்கு அழைக்கும் விளைவை உத்தேசித்து அவரின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் என்பது என்னவென்று வெளிப்படுத்தினார்.

தலித்திய கோணம் எப்படி இருக்கும் ? உதாரணம்

திரு வசந்தபாலன் அறிந்த மலம் அள்ளும் தலித்துகள் குறித்து அவர் சொன்ன உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே ஒரு குட்டிக்கதை

புருசனும் பொஞ்சாதியுமாக அந்த வீட்டை வந்தடைகிறார்கள். இதுதான் கடைசி வீடு. இங்கு ஜோலி முடிந்து விட்டால் இன்றைய பொழுது முடிந்தது, வீட்டிற்கு போகலாம். எடுப்பு கக்கூஸ் இருக்கும் பகுதியை வந்தடைந்ததும் அம்மா சாம்பல் போடுங்கம்மா என்று ஆம்பிள்ளை கத்துகிறான். சாம்பல் வந்து விழுந்தது. அவள் அதை அள்ள குனிந்தபடி இந்த வீட்டு பொம்பள எத திம்பாலோ தெரியல நாம வளக்கிற பன்னி பீ பரவாயில்லை என்று சொல்லியபடியே அதை அள்ளி அவளது கூடையில் போட்டுக்கொள்கிறாள். மீண்டும் தண்ணி உற்ற சொல்லி அவர்கள் சத்தம் தர யாரோ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அவர்களுடைய வேலை முடிந்தது. புருசனும் பொஞ்சாதியுமாய் கூடையை குப்பை கொட்டும் இடத்தில வைத்துவிட்டு அந்த வீட்டின் முன் வந்து “அம்மாமா எதாவது இருந்தா குடுங்கம்மா” என்று நாலைந்துமுறை அழைத்தபிறகு அந்த வீட்டின் பெண் ஆடி அசைந்து ஒரு குன்டாவோடு வந்து பாத்திரத்தை தூக்கி பிடி என்று சொன்னால். இவள் தூக்கிப்பிடிக்க அழுகியதும் கெட்டதும் ஊசியதும் என்று ஏதோ வந்து விழுந்தது. எங்கிருந்துதான் அன்னைக்குன்னு அவ புருசனுக்கு அவளோ ஆத்திரம் வந்ததோ தெரில…கண்மூடி திறக்கறதுக்குள்ள அந்த பீ சட்டியை தூக்கியாந்து அந்த பொம்பள தலைமேல் கொட்டிப்புட்டன். அவ மயிறு மூஞ்சு கழுத்து மாருன்னு பீயா வழியுது…உன்வீட்டு பீயை அல்லறவவனுக்கு ஒரு நல்ல சோறு கூட போடா மனசில்லாத வக்கில்லாத மூதி உன் பீயை நாங்க அள்ளணுமா? உன் புருஷனையும் புள்ளையையும் அள்ள சொல்றி மயிறு என்று சொல்லியபடி பொஞ்சாதியாய் இழுத்துக்கொண்டு விடு விடு வென்று நடக்கத்தொடங்கிவிட்டான்.

தன்னுடைய மலத்தை முகம்முழுவதும் உடல்முழுவதும் உணர்ந்த அந்த அம்மா அந்த நாளைக்கு அப்பறம் மலம் கழிக்கவேயில்லை. நாட்களாகி வாரங்களாகி மாதங்களாகி போனது. அவர்களது வீடே மலத்தின் நாற்றம் அடிக்க தொடங்கியது. அந்த ஊரில் அவர்கள் வீட்டை பீக்காரம்மா வீடு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த குடும்பம் அந்த ஊரை காலி செய்துவிட்டு ஏதோ வடமாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அவர்கள் போனபின்பும் அந்த வீட்டிலிருந்து பீ நாற்றம் வீசியபடியே இருக்கிறது, பன்றிகள் மட்டுமே அந்த வீட்டிற்குள் இப்பொழுது போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாகராஜ் மஞ்சுளே விளிக்கும் ” பன்றி” யார் என்பதற்கான பதிலுடன் அடுத்த கட்டுரையில் முடித்து கொள்கிறேன்.

(தனிப்பட்ட முறையில் திரு வசந்தபாலன் மீதான விமர்சனமாக பார்க்காமல் ஒரு சாதி ஹிந்து திரைப்பட இயக்குனர் குறித்தான விமர்சனமாக பார்க்க வேண்டுகிறேன்)

அறிமுகம்: அருள் எழிலன் இயக்கத்தில் வீர. சந்தானம் நடித்த கள்ளத்தோணி

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

பத்திரிக்கையாளரான டி.அருள் எழிலன் கள்ளத்தோணி என்ற 24 நிமிட குறும்படத்தை இயக்கி இருந்தார். அதில் ஓவியர் வீர.சந்தானம் இலங்கை அகதியாக நடித்து இருந்தார். ஆனால் அவர் இறந்துவிடவே இயக்குநர் அருள் எழிலன் யூ டியூபில் இக்குறும்படத்தை ஜூலை 15 அன்று வெளியிட்டுள்ளார்.  

உள்நாட்டுப் போரின் உச்சத்தில் இலங்கையில் இயக்கத்தில் சேர்ந்துவிட்ட(1999) தன் மகள்- மருமகளைப் பிரிந்து , அவர்களின் கைக்குழந்தையோடு இந்தியாவில் அகதியாக இருக்கிறார் வீர.சந்தானம். இலங்கையில் போர் முடிந்துவிட்டதால் மீண்டும் அங்கு சென்று தன் பேத்தியை(ஆதிரை) அவர்கள் பெற்றோர் வசம் சேர்ப்பிக்க வேண்டும். அதற்காக அவர் அலைக்கழிக்கப்படுகிறார். இறுதியாக கள்ளத்தோணி மூலம் செல்ல முற்படுகிறார்! இதுதான் கதை.

வீர.சந்தானம் அகதியாகவே தெரிகிறார். ஒளிப்பதிவாளர் செழியன்.கயிறு திரிக்கும் ஈத்தாமொழி பகுதியில் இக்கதை நடக்கிறது. நல்ல முயற்சி. அகதிகளுக்குரிய சட்டப்பூர்வ உரிமைகள் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவின் அடிப்படையில் இருப்பதா என்பதே ஆதாரமான கேள்வி. 

அசைபோட வைக்கும் பாடல் வருகிறது. அகதிகளென்றால் பாதி சம்பளம் போதும் என்ற நிலை தெரிகிறது; நமது அரசுத்துறை வருகிறது; திபேத்திய, வங்க தேச , பர்மா அகதிகள் கூட நன்முறையில் பார்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்கிறது இப்படம். பார்த்து முடிக்கையில் மனது கனக்கிறது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இதனை திரையிடுங்கள். வாழ்த்துக்கள் அருள் எழிலன்!

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.