ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன்

 • ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர்
 • ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர்
 • பேஸ் கிச்சன் மேனேஜர்
 • ஸ்டோர் மேனேஜர்

-ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது.

முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும்.

தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் ஃபுட் பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் இது. நமக்கிருந்த பரபரப்புகளில் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.

ஐஆர்சிடிசி நிர்வாகம் தலையிட்டு, இப்படியெல்லாம் சாதி அடிப்படையில் ஆளெடுக்கக்கூடாது என்றும், எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறும் கூறியிருககிறதாம். இந்த விளம்பரத்தைப் பத்திரிகைக்குக் கொடுத்ததற்காக நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காண்டிராக்டர் தெரிவித்திருக்கிறார். (செய்தி: இந்தியா டுடே)

மேற்படி விளம்பரத்திற்கு உடனடியாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுவே இந்த நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது எனலாம். ஒருவேளை சமூக ஊடக விழிப்புணர்வாளர்கள் இதைக் கவனிக்காமல் அல்லது பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால்?

எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஐஆர்சிடிசி கூறிய அளவில் சரிதான். ஆனால், பிரைவேட் என்று போய்விட்டதால், அனைத்துச் சமூகத்தினருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் இட ஒதுககீடு, ரயிலின் சமையலறைப் பெட்டியிலிருந்த தானிய மூட்டை திருடப்பட்டது போல, துடைத்தழிக்கப்பட்டுவிட்டதே?

முடிந்துபோன ஒரு நிகழ்வின் செய்தியை எதற்காக நினைவூட்ட வேண்டும்? முடிந்து போய்விட்டதா என்ற கேள்வி முடியாமல் தொடர்வதால்தான். தனியார்மய எதிர்ப்பு நாட்டின் பொதுச்சொத்தை யாரோ கொள்ளைகொண்டு போவதைத் தடுப்பதற்கு மட்டுமேயல்ல, சமூகநீதிப் பொது அறம் கடத்தப்படாமல் காப்பதற்கே என நினைவூட்டத்தான்.

அ. குமரேசன் மூத்த பத்திரிகையாளர்.

நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ

சுபவீ

கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன்.

கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், ‘இடக்கு மடக்கான’ பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன. .

நான் விடை சொல்வதற்கு முன்பே அடுத்த கேள்வியைக் கேட்டுவிடும் அவரது போக்கை மனத்தில் வைத்துக் கொண்டு, “நீங்களெல்லாம் நண்பர் பாண்டேயிடம் பாடம் படித்துக் கொண்டு வருகின்றீர்களோ?” என்று நேர்காணல் முடிந்தபின், வேடிக்கையாகக் கேட்டேன். எப்படி இருந்தாலும், வளரும் இளைஞர் நீங்கள், வளருங்கள் என்று வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்தநாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாஜக வினரும், நாம் தமிழர் கட்சியினரும் அதனைப் பரப்பினார்கள். நான் விடை சொல்ல முடியாமல் தடுமாறியதாகவும், என் நிலை பரிதாபமாக இருந்ததாகவும் பதிவுகள் இட்டனர். நேர்காணலில் நான் தொற்றுப் போய்விட்டதாக எழுதினர்.

பாஜக வை விட என்னை எதிர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நாம் தமிழர் தம்பிகள்தாம். ஆர்எஸ்எஸ் நண்பர்களாவது என்னை எதிர்ப்பதும், மிரட்டுவதுமாக இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர்கட்சியினரோ, நான் இறந்துபோய்விட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தம்பி சீமானே ஒரு பேட்டியில்,, அவர் (நான்) இறந்துபோய்விட்டார் என்று
சொன்னார். உடனே அவர் தம்பிகள் அடுத்தநாள், என் படத்திற்கு மாலை அணிவித்தும், சவப்பெட்டியில் என் உடல் இருப்பது போன்று படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர். சீமான் மேடையில் இருக்கும்போதே, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில், திமுக வை நான் ஆதரிப்பது குறித்துப் பேசுகையில், “நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவி சுபவீ” என்று பேசினார். சீமான் கண்டித்ததாய்த் தெரியவில்லை. (மகிழ்ந்திருப்பாரோ!)

இப்படி ஒரு சாரார் அந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்க, என்னிடம் அன்பு கொண்ட நண்பர்கள் பலர் வருத்தப்பட்டனர். அந்த நேர்காணலுக்கு நீங்கள் போயிருக்கக் கூடாது என்றனர். இவ்வளவு மென்மையாகப் பேசியது சரியில்லை என்றனர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர்.

“எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால் குற்றமில்லை” என்று நான் சமாதானம் சொன்னேன்.

இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில நாள்களுக்குப் பிறகுதான் அது எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அங்கு பணியாற்றிய சில பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுநாள் கருப்பு உடையுடன் அலுவலகம் வந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜென்ராம் அவர்களை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மறுத்துவிட்டார்.

இதனால் கோபம் மொண்ட நிர்வாகம், ஜென்ராம் அவர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 23.07.19 அன்று பணி நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், காவேரி தொலைகாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சோஷலிச தொழிலாளர் மையம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது. நண்பர் வன்னி அரசு போன்றவர்கள்,ஜென்ராம் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, இனிமேல் காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். .

நான் மிகவும் மதிக்கும் மூத்த ஊடகவியலாளரான ஜென்ராம் அவர்களும், நான் அறிந்திராத அந்தப் பெண் ஊடகவியல் நண்பர்களும், என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் என்னை நெகிழ வைக்கின்றன. அந்தப் பெண்களை நினைக்கும்போது, நான் பெற்ற பிள்ளைகளை விட, பெறாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை உணர முடிகிறது.

நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும்.

ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை. யாருக்கோ எதோ ஒரு மரியாதைக் குறைவு நடந்தால் நமக்கென்ன என்று இருக்காமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தோழர் ஜென்ராமுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமல் தோற்றுப்போனேன். அவரை விடுங்கள், அவராவது என் நண்பர், அந்தப் பெண் பிள்ளைகள் யார், அவர்களுக்கு நான் இதுவரையில் என்ன செய்திருக்கிறேன்? அவர்கள் ஏன் எனக்காகத் தங்கள் பணியிலும், வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்?

கண்கள் கலங்குகின்றன. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், கருத்துரிமையின் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்புக்கும் முன்னால் நான் தோற்றுத்தான் போனேன்!!

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி

இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக ‘தமிழ் இந்து’ எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும்.

காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு இந்திய விடுதலையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல செங்கொடி சங்கத்தையும் பொதுவுடைமை இயக்கங்களின் பெயரையும் மறைத்து விட்டுத் தஞ்சைக் களஞ்சியில் நிலவிய நிலவுடைமைத்துவக் கொடுமைகளுக்கு எதிராக நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களை நினைவு கூர இயலாது.
தஞ்சையில் இருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய கோயில்கள், மடங்கள், பண்ணகள் கைகளில் குவிந்துள்ளதே அங்கு பண்ணை அடிமை முறை ஆழமாக இறுகியிருந்ததற்குக் காரணம். இந்தப் பண்ணை அடிமை முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர். இவர்களோடு குத்தகை வார விவசாயிகளும் இருந்தனர். இவர்களிலும் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர்.

பண்ணைகள் விவசாயத் தொழிலாளர்களையும் வார விவசாயிகளையும் கொத்தடிமைகள் போல் நடத்தினர். இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் செங்கொடி இயக்கம். இது 25 ஆண்டுகளில் பல களங்களைக் கண்டது. கூலிகளாகவும் வார விவசாயிகளாகவும் இருந்தவர்கள் ஒன்று திரண்டனர். ஒவ்வொரு போராட்டத்திலும் களப்பலி கொடுத்துப் படிப்படியாக முன்னேறினர்.

இந்தப் போராட்டங்கள் கூலி உயர்வு போன்ற பொருளாதாரக் கோரிக்கை களுக்காக மட்டுமல்லாமல் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுக்கு எதிராகவும் நடந்தவை. அதனால்தான் “போடீ என்று சொன்னால் போடா என்று சொல்; அடித்தால் திருப்பி அடி” என்று பி. சீனிவாச ராவ் முழங்கினார். இந்த முழக்கம் தஞ்சைத் தரணி மட்டுமல்லாமல் நிலப்பிரபுத்துவம் நிலவிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது.
ஆனால் போராட்டங்கள் ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

களப்பலிகளை விதைத்து ஒவ்வொரு வெற்றியாகப் பெற்றது. 12 படியாக இருந்த வாரம் 16, 18 25, 55 என உயர்ந்தது; மறுபக்கத்தில் சாணிப்பால், சவுக்கடி, நுகத்தடியில் பூட்டுதல் போன்ற தண்டனைகள் மாறின. மொத்தத்தில் நில உடைமைத்துவத்தின் இறுக்கம் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்த இடங்களில் எல்லாம் தளர்ந்தது. இந்த வயிற்றெரிச்சல் தான் நெல் உற்பத்தியாளர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடுதான் வெண்மணி படுகொலைகள்.

பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் இதனை வர்க்கக் கண்ணோட்ட அடிப்படையில் நிலவுடைமைக் கொடுமைக்கு எதிராக வளர்த்தெடுத்தாலும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுகளை ஒழிக்கும் கோரிக்கைகளையும் முன்னெடுத்தனர். இதில் பெரும்பான்மையோர் தலித் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.

அவர்கள் இப் போராட்டங்களைச் சமூகப் படிநிலை அடிப்படையில் முன்னெடுத்திருக்காவிட்டாலும் அக் கோரிக்கைகளையும் உள்ளடக்கியதுதான் செங்கொடி இயக்கம். ஆனால் அவர்கள் இதனை வர்க்கப் போராட்டமாகக் காட்டிக்கொள்வதைப்போல சமூகப் போராட்டமாகக் காட்டிக் கொள்வதில்லை.

ஆகவே தான், கீழத்தஞ்சைப் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு கள ஆய்வான ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ புத்தகத்தின் துணைத் தலைப்பில் ’தலித்’ என்ற சொல்லைச் சேர்த்து ’தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு’ எனத் தலைப்பிட்டேன்.
இப் போராட்டங்களில் செங்கொடி சங்கம் இல்லாத இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களும் சிறப்பாக இயங்கியுள்ளன.

இப் போராட்டங்களின் விளைவாகக் காவிரி கடைமடை மாவட்டங்களில் நிலப்பகிர்வு அதிகமாக நடைபெற்று நிலக்குவியல் தகர்க்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்த தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் உழுத நிலங்களுக்கு உடைமையாளர்களாக உள்ளனர்.

ஆனால் இன்று எல்லா உரிமைகளும் பறி போகும் நிலைமை உள்ளது. காவிரி கடைமடைப் பகுதிகளில் எதிர்காலத்தில் விவசாயம் இருக்குமா என்பது தெரியவில்லை. தஞ்சையைப் பாலைவனமாக்க கார்ப்பரேட்டுகளும் மத மோதல்களைத் தூண்ட பாசிசமும் கை கோர்த்துள்ளது.

இடதுசாரி சக்திகளும் அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளும் இணைந்து போராட வேண்டிய இச் சூழ்நிலையில் தமிழ் இந்து தலையங்கம் விஷமத்தனமாக இருக்கிறது. இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளின் அணி சேர்க்கையை வலியுறுத்தும் தோழர் ரவிகுமாரும் இதே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அப்பணசாமி, எழுத்தாளர்; மூத்த பத்திரிகையாளர்.

இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!

மலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது.

‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ்.

இது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ ட்ரோல்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடினர். சில இந்துத்துவ அமைப்புகள் ஹரிஷின் கைகளை வெட்டப்போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.

இதனால், தொடர்கதையை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்தார் ஹரிஷ். தகுந்த சூழல் வரும்போது நாவலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அடங்கிய ஒரு வாரத்தில் ‘மீசை’ நாவல் வெளியாகியுள்ளது. டிசி புக்ஸ் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது.

கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்

‘கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம்.

கருணாநிதி அவர்கள் தமது 95 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த ஆண்டை எட்டிப் பிடிக்க இருக்கிறார். வழக்கமான வயது முதுமையின் காரணமாகவும், இன்றுள்ள உலகியல் சுற்றுச் சூழலினாலும், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு சிறந்த சிகிச்சை பெற்று மீண்டு கொண்டிருக்கிறார்.

கருணாநிதி உடல்நலத்தின் மீதான கவலை, ஆர்வம் உலகெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்களின் நல்லெண்ணம் விழைவைப் பெற்று நல்ல வண்ணம் சீராகி வருகிறது. வைதீக மூடநம்பிக்கைகளைத் திணிக்காதீர். கட்சி, ஜாதி, மதம், மாநிலம், கொள்கை இவற்றையெல்லாம் தாண்டி அந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்துடன், கருணாநிதி உடல்நலம் தேறிவர வேண்டுமென்று விழையும் நல்ல உள்ளங்கள் கோடானு கோடி.

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாற்றுக் கட்சி, மாற்று கருத்துடையவர்களையும் அன்புடன் வரவேற்று மருத்துவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, கருணாநிதியின் உடல்நலம் சீராகி வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நமது கொள்கை எதிரிகள் வைதீக மூடநம்பிக்கைக்கு கருணாநிதியால் ஏற்க முடியாததை நுழைத்துவிடும் சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் முயற்சியில் ஈடுபட்டு விடுவார்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாவரும் வழிவகுத்து விடக்கூடாது. அதற்கு பகுத்தறிவு இயக்கமான தி.மு.க. தலைவரின் விருப்பங்கள், கொள்கைகள், விழைவுகளுக்கு முற்றிலும் மாறான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடக்கூடாது என்று அந்த அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன.

எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு:

“கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!

நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் –

 1. கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.

 1. மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?

 2. பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.

 3. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?

 4. இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.

 5. நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 6. தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாக இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

 7. கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.

 8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர் தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.

 9. நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

 10. நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.

 11. உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.”

விமர்சகர் ராஜன் குறை, தியாகு மீது வைத்த விமர்சனம்:

“கலைஞர் குறித்த விவாதத்தில் தோழர் தியாகு விரிந்த வரலாற்றுப் பார்வையில் சில விமர்சனங்களைக் கூறியது தவறில்லை. விமர்சனத்தை சினத்தால் எதிர்கொள்ளாமல், சினம் காத்து விமர்சனப்பார்வையை வலுப்படுத்தும் விதமாகவே உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

தோழர் தியாகு மார்க்ஸின் “மூலதனம்” நூலை மொழிபெயர்த்தவர். அரசியல் தத்துவப் பயிற்சி உள்ளவர். அவரைப் போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கும் பரிசீலனைகள் என்னவென்று பட்டியல் இட விரும்புகிறேன்.

 1. இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசங்களில், கணிசமான மக்கள் தொகை கொண்ட தேசங்கள் எதிலாவது சமத்துவம், அதிகாரப் பரவல் போன்ற அரசியல் இலட்சியங்கள் முழுமையடைந்துள்ளனவா? அதற்கான சாத்தியமாவது தெளிவாகத் தென்படுகிறதா?

 2. இடது சாரி புரட்சி நிகழ்ந்த தேசங்களில் தனிநபர் ஆளுமைக் கலாசாரம், வழிபாடு தவிர்க்கப்பட்டுள்ளதா? சீன அதிபர் ஆயுட்கால அதிபராக அறிவிக்கப்பட்டிருப்பது எதைக்குறிக்கிறது? அறிவிக்கப்படாத ஆயுட்கால அதிபராகத் தோற்றம் தரும் விளாடிமீர் புடினின் ரஷ்யாவில் நடப்பது என்ன?

 3. பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கம், அதிகாரப் பகிர்வு போன்றவற்றை சுதந்திரவாதம், பொதுவுடமை இரண்டிற்குமான இலட்சியங்கள் என்று கொண்டால் இன்று உலக நாடுகளில் இவை எப்படி உள்ளன? எங்குமே இந்த இலட்சியங்கள் எட்டப்படவில்லை என்றால் முதலீட்டிய கால அரசியலை எப்படி புரிந்துகொள்வது?

 4. கலைஞர் போன்ற ஒரு முழு இறையாண்மை பெறாத மக்கள் தொகுதியின் தலைவரின் செயல்பாடுகளை எப்படிப்பட்ட சட்டகத்தில் வைத்து விமர்சனம் செய்யவேண்டுமே? உலகில் எங்குமே எட்டப்படாத இலட்சியங்களின் அடிப்படையிலா? அல்லது வெகுஜன அரசியலுக்கு உரிய சமரசங்கள் அடங்கிய சாத்தியங்களின் அடிப்படையிலா?”

இந்நிலையில் தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கும் விமர்சனத்தின் மீது வைக்கப்பட்ட எதிர்வினைகளுக்கும் தியாகு தெரிவித்துள்ள கருத்து:

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் // பரந்து கெடுக்க உலகியற்றியான்” என்பது குறள்நெறி. மனிதர்கள் யாவரும் சரிநிகர். நான் யாரிடமும் எந்தப்பிச்சையும் கேட்டதில்லை. எனக்கு யாரும் எந்தப்பிச்சையும் இட்டதுமில்லை. தண்டனைக் குறைப்பு என்பது சட்டப்படியான உரிமை. இந்த உரிமயை ஏற்றுச் செய்வது அரசின் கடமை. நன்றிக் கடன் என்பதெல்லாம் அடிமைச் சிந்தனை. கலைஞர் சட்டப்படி எனக்குச் செய்த உதவிக்கு நன்றி. ஆனால் அதற்காக என் அரசியலை நான் மாற்றிக்கொள்ள முடியாது. கலைஞருக்கு நான் ஓர் உதவி செய்தால் அவர் தன அரசியலைக் கைவி்ட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? நான் தனிப்பட்ட யாருக்கும் நன்றிக் கடன்பட்டவன் அல்ல. என் பெற்றோருக்கே நன்றிக் கடன்பட்டவன் அல்ல என்னும் போது கலைஞருக்கு நன்றி என்ற பேரால் அவரது அரசியலை மறுத்துப் பேசக் கூடாது என்பது எப்படி நியாயம்? ஒன்று உறுதி: நான் என் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவன். இறையன்பர்கள் இறைவனுக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவர்கள் அல்லவா? அதே போலத்தான். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.”

மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை:

சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட இழிவான வழிகளை கைக்கொண்டுள்ளனர்.

பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்தில் கவிதையொன்றை மேற்கோள் காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன் இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதேவிதமான நிலையை ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக எழுத்தாளர் வைரமுத்துவும் எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரிஷ் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான்.

மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக யோக ஷேம சபா என்கிற அமைப்பினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகள் சமூக வலைத்தலைங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மனவுளைச்சலுக்காளான ஹரிஷ் தனது நாவலை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அவரை இந்த முடிவுக்கு நெட்டித்தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைகிறது.

மக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாதென்றும் எழுத்தாளர் ஹரிஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காக திரண்டுள்ள ஆதரவினால் உத்வேகம் பெற்று ஹரிஷ் தனது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

 • சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்.
  ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்.
  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

பா.ஜ.கவின் சார்பாக ஊடகங்களுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடும் பொறுப்பில் இருக்கும் திருப்பதி நாராயணன் பெரும்பாலும் தன்னைத்தானே அனுப்ப தனக்கே உத்தரவிட்டுகொள்வார். இதனால் ஏனைய பா.ஜ.க ஊடக பேச்சாளர்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்று கேள்வி. ஆனால் தமிழ் நாட்டில் தனது பண்ணையார் உடல் மொழியாலும் அராஜக நடவடிகைகளாலும் அதிகமான வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானவர் திருப்பதி நாராயணன். அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண் தெய்வங்கள் தொடர்பான ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக புதிய தலைமுறை கார்திகேயன்மேல் காவி பயங்கரவாத கும்பல் மேற்கொண்டுவரும் தாக்குதல் தற்செயலானதல்ல. இது தொடர்பாக திருப்பதி நாராயணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் ’கார்த்திகேயன் வேறு கார்த்திகைச் செல்வன் வேறு, நாம் கார்த்திகேயனை திட்டவேண்டுமே தவிர கார்த்திகைச் செல்வனை திட்டக் கூடாது’ என்று பயிற்சி கொடுக்கிறார். கார்க்திகேயனுக்கும் கார்த்திகைச் செல்வனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தக் கும்பல்தான் இந்து மதத்தைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் , ‘ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது’ என்று.

இந்த விவகாரத்தில் திருப்பதி நாராயணனின் கருத்து ‘’ தவறான,குரூரமான, கேவலமான ஹிந்து மதத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்தோ, கிருஸ்துவ தெய்வங்கள் குறித்தோ பேசிவிட்டு ரோட்டில் நடக்க முடியாது. உங்கள் நண்பரை அல்லது உங்களுக்கு தெரிந்தவரை ஒரு கவிதை எழுதி விட்டு ரோட்டில் நடந்து போக சொல்லுங்கள். வெட்டி போட்டு விடுவார்கள். ’’ என்பதுதான். ராமகோபாலனிலிருந்து ஹெச்.ராஜாவரை முகமது நபிகள் பற்றியும் அவரது துணைவியார் பற்றியும் இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றியும் எவ்வளவு ஆபாசமாக இழிவாக கேவலமாக பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரஙகள் இருக்கின்றன. நாராயணன் ஆசைப்படுவதுபோல யாரும் யாரையும் வெட்டிபோட்டுவிடவில்லை. ஏன் கவிஞர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்திற்குள் இருந்தே ’’இத்தனை நபிகளில். ஏன் ஒரு பெண் நபி இல்லை?’ என்று கேட்டதற்காக சில அடிப்படைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.. அவரை யாரும் வெட்டிப்போட்டுவிடவில்லை. கிறிஸ்தவ மதம் மீது இங்கு எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கபட்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் யாரும் வெட்டிபோட்டுவிடவில்லை. மாறாக நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டுகொன்ன்றவர்கள் இந்த்துவா வெறியர்களதான். நாராயணன் தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது.

திருப்பதி நாராயணன் ‘சமூக வலைத்தளங்களில் நம் நண்பர்கள் / கட்சியினர் மிகவும் வேகமாக, உணர்ச்சிப்பெருக்கோடு தங்களின் ஆதங்கங்களை, கோபத்தை பதிவு செய்து இந்த விமர்சனத்தை கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கார்த்திகேயனை தொடர்ந்து கண்டித்து கொண்டிருப்பது நமது தெய்வங்களை பழித்து பேசுபவர்களை இனியும் நாம் சகித்து கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தியுள்ளது’’ என்று சங்கிகளை உற்சாகபடுத்துகிறார். மாதவிலக்கான பெண்களை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும் கூற்றுக்கு எதிராக பெண் தெயவங்கள் அந்த மூன்று நாட்களும் பெண் தெய்வங்கள் எங்கே இருப்பார்கள்? என இந்துமதத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார். அதை இந்து மதத்தைச் சேர்ந்த கார்திகேயன் கேள்வி கேட்கிறார். அதுவும் இவர்கள் கேட்பது இஸ்லாமிய , கிறிஸ்துவ பெண்களுக்கு கோயிலில் நுழைய உரிமை கேட்டு போராடவில்லை. இந்துக்களான இவர்கள் இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதில் மதப்பிரச்சினை எங்கே வந்தது? இந்த லட்சணத்தில் திருப்பதி நாராயணன் சொல்கிறார்.

‘எஸ் வி சேகர் விவகாரத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டபிறகும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டு, அவர் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியவர்கள் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் கவிதையை, சொற்களை, எழுத்துக்களை போற்றி பாதுகாக்க முற்படுவது முறையாகாது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று முற்போக்குகள் ஏற்றுக்கொள்வார்களேயானால், அந்த பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோவது வக்கிர சிந்தனையே என்பதை உணர வேண்டும்.தமிழகத்தில் நாத்திக சிந்தனையாளர்கள் 0.01 விழுக்காடே உள்ளனர் என்கிற நிலையில், பெண் தெய்வங்களை அவமானப்படுத்தும் யாரையும், எந்த கருத்துக்களையும் ஹிந்து பெண்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.’

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்? அதற்குப் பெயர் நாத்திகமா? எஸ்.வி சேகர் ‘ ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் யாரிடமாவது படுத்துதான் சலுகை பெறுகிறார்கள்’ என்று சொன்னதும் இந்துப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் ஒன்றா? என்ன உளறுகிறோம் என்றுகூட தெரியாத பேத்தல்.

மேலும் உடல் சார்ந்து விஷயங்கள் எதுவும் இந்துக் கடவுள்கள் மரபில் பேசபட்டதே இல்லையா? நமது கோயில் பிரகாரங்களில் காணப்படும் நிர்வாண சிலைகள் மற்றும் ஆண் பெண் உறவுக் காட்சிகள் உடல் சார்ந்த அனைத்தையும் இந்துமதம் புனிதமாக கருதுகிறது என்பதையே காட்டுகிறது. நமது புராணங்களை சங்கிகள் கொஞ்ச நேரம் புரட்டிப்பார்க்க வேண்டும். யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் கீழ்கண்ட விஷயஙகளை சுட்டிக்காட்டுகிறார்.

‘சக்தி பீடங்களில் தலையாயது அஸ்ஸாமில் இருக்கும் ‘காமாக்யா’. ஆண்டுக்கு ஒருமுறை (அதாவது ஜூன் மாதம் மூன்றாம் வாரம்) இங்கே தேவிக்கு மூன்று நாட்கள் ‘தீட்டு’ ஆகிறதாம். போலவே -செங்கனூர் பகவதியம்மனுக்கு மாதாமாதம் ‘தீட்டு’ ஆவதாக ஐதீகம். இந்த தீட்டுத்துணிக்கு மார்க்கெட்டில் செம டிமாண்டாம். இதை வைத்து பூஜை செய்பவருக்கு சகல சம்பத்துகளும் கிடைக்குமென்று நம்பிக்கை.சக்தி வழிபாடான ‘சாக்தம்’, பெண்களின் மாதாந்திர உடல் செயல்பான ‘தீட்டு’வை, புனிதமான நடைமுறையாக கருதுகிறது.’

இந்துமதத்ததைப் பற்றியோ அதற்குள் இருக்கும் கலாச்சார பன்முகத்தனமை பற்றியோ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி சங்கிகள் இந்துமதத்தை மற்றவர்கள் அவமதிப்பதாக அலறுகிறார்கள்.

எந்த தர்க்கமும் இல்லாமல் ‘ இந்து மதத்தை அவமதிக்கிறார்கள் என்று போலியான காரணங்களை உருவாக்கி கூச்சல் போடுவது என்பது கருத்து சுதந்திரத்தையும் ஊடகங்களையும் ஒடுக்குவதற்கான தொடர் நிகழ்வு. ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து ஒரு மேற்கோளை பயன்படுத்தியதற்காக எவ்வளவு களேபரத்தை உண்டாக்கினார்கள் என்று பார்த்தோம். ஊடகங்களில் சங்கிகளுக்கு மண்டியிடாத ஊடகவியாலளர்களை மிரட்டுவது , அந்த நிறுவன நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றவைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களில் பணியாற்றும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளார்களை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டமிட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படுகிகின்றன. ஜென் ராம், குணசேகரன், நெல்சன் சேவியர், செந்தில், கார்த்திகைச் செல்வன் வரிசையில் இப்போது கார்த்திகேயன் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.கவை கடுமையாக விமர்சிக்கும் என்னைபோன்றவர்களை விவாதங்களில் தவிர்க்கும்படி அழுத்தங்கள் ஊடகங்களுக்கு தரப்படுகின்றன. நாள் முழுக்க சங்கிகளின் ஊது குழலாக பெரும்பாலான ஊடகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அதற்காக நடுநிலையான ஊடகவியலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும்[’ பா.ஜ.கவிற்குகோபம் வராத எந்த தலைப்பை விவாதிக்கலாம், அதற்கு யாரை அழைக்கக் கூடாது , பா.ஜ.க தரப்பில் இருந்து அதற்கு என்ன எதிர்வினை வரும்’’ என்பதுதான் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகத்திலும் விவாதிக்கப்படுகிறது. இதைவிட துயரமான நிலை வேறொன்றும் இல்லை. எமெர்ஜென்சியைவிட மோசமான காலம் இது. எமெர்ஜென்சியைக்கண்டு பயப்படாத ஊடகங்கள் இன்று திருப்பதி நாராயணன் போன்ற ஒரு மூன்றாம்தர பேச்சாளரைக் கண்டு அஞ்சுகின்றன. சங்கிகள் இந்த ஊடகங்களின் மீது எவ்வளவு தாக்குதலை தொடுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களைப் போய் மறுபடி மறுபடி தாஜா செய்கின்றன.

திருப்பதி நாராயணன் சார்… இந்தப் பதிவை படித்துவிட்டு எல்லா தொலைக்காட்சிக்கும் போன் செய்து ” இனி மனுஷ்ய புத்திரனை அழைக்காதீர்கள் ‘’ என்று உத்தரவு போடாதீர்கள்.. என்ன இருந்தாலும் நாம் ‘ ஸ்டுடியோ தோழர்கள்’ இல்லையா?

மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

சென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா?

சந்திரமோகன்

சந்திர மோகன்

சென்னை – சேலம் 8 வழி விரைவுச் சாலைக்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 2791 ஹெக்டேர் நிலங்களை எடுக்க விரும்புவதாக #தேசியநெடுஞ்சாலைகள்சட்டம்_1956 உட்பிரிவு 3 A (1) ன் அடிப்படையில், ஒரு அறிவிக்கையை Notification மத்திய அரசாங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் (சேலம், தருமபுரி ) வெளியிட்டுள்ளன.

1) இத்தகைய ஒரு அறிவிக்கை வெளியான பின்னர், இச் சட்டத்தின் உட்பிரிவு 3 B (POWER TO ENTER) அடிப்படையில், அதிகாரம் பெற்ற அலுவலர்‌கள் நிலத்தை பார்வையிடலாம், அளக்கலாம் /Survey எனச் சொல்கிறது. ஆனால், இச்செயல்கள் விதிமுறைப்படி செய்ய வேண்டும் என 3B சொல்கிறது.

விதிமுறைகள் என்ன?

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சட்டம் 1988 (NHAI Act 1988) உட்பிரிவு 30 ( Power to Enter) என்ன சொல்கிறது என்றால்… “தாங்கள் நிலத்தை அளக்க/சர்வே செய்ய வருகிறோம்” என நில உரிமையாளருக்கு எழுத்துப் பூர்வமாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் ; குறைந்த பட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவித்தாக வேண்டும். அப்படி செய்யாமல் எந்தவொரு அதிகாரியும் நிலத்தில், வீட்டில், அவரது அத்துக்குள் செல்ல கூடாது.

NHAI Rules 1990 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1990 சொல்வது என்னவெனில், இச் சட்டத்தின் உட்பிரிவு 30 ன் அடிப்படையில், நிலத்தில் அதிகாரிகள் நுழைய வேண்டும் என்றால், Form B யில் நில உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்; வழங்கியதற்கான அத்தாட்சியாக அவரிடம் கையெழுத்தையும் பெற வேண்டும்.

2013_சட்டம்சொல்வதுஎன்ன? ( Right to Fair compensation & Transparency in Land acquisition, Rehabilitation & Resettlement Act- 2013) சர்வே /அளக்க விரும்பும் அரசாங்க அதிகாரிகள் நில உரிமையாளர்கள் இல்லாத போதோ அல்லது அவரது எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமலோ நிலத்தின் உள்ளே நுழையக் கூடாது.

குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னால் தகவல் தராமல் உள்ளே நுழைக் கூடாது. ஒரு நிலத்தில் நிலத்தின் உரிமையாளர் இல்லாமலேயே சர்வே செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றால், 60 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் தந்து விட்டு தான் நுழைய வேண்டும் என்கிறது.

1956சட்டம் 1988சட்டம் 2013சட்டம் எதையுமே தமிழக அரசாங்கம் கடைபிடிக்கவில்லை. சொந்த நாட்டு மக்களை, அவர்கள் ஏழைகள் என்பதால் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, அலட்சியமாக அணுகுகிறது; எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தின் உள்ளே நுழைகிறது; அச்சுறுத்துகிறது.

நிலம் வீடு வாழ்வாதாரம் பறிபோகிறதே என அழுது தவிக்கும் இந்த ஏழை விவசாயிகளுக்கு சட்டத்தின் வாய்ப்பு மறுக்கப்படுவதை கரிசனத்துடன் கவனித்து, உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து suomotto வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்குமா?

ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறுமா? சட்டத்தின் ஆட்சி நிலைக்குமா?

சந்திரமோகன், சமூக -அரசியல் செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

“வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா?”

ஜமாலன்

ஜமாலன்

பாலகுமாரன் இன்றைய மத்திய வயதுகளால் நிரம்பி வழியும் முகநூல் எளக்கிய கர்த்தாக்களுக்கு காதலை, பெண் உடலை, நடுத்தர வர்க்க வாழ்வை எல்லாம் ”மெத்து மெத்து” என்று மென்மையாக எழுதிக்காட்டியவர். நள்ளிரவில் மாடி ஏறிவரும் கள்ளப் பெண்களின் கைகளில் வீசும் ஊசல் ரச வசனையைக்கூட நுட்பமாக உணர்ந்து எழுதியவர். பெரும் வாசகர்கள் குறிப்பாக வாசகிகளைக் கொண்டவர். அவரது மரணம் வருந்ததக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாலகுமாரனின் பெரும்பாலான நாவல்கள் அவை உச்சத்தில் இருந்த காலத்தில் வாசித்திருக்கிறேன்.

ஆனால், பாலகுமாரன்தான் மத்தியதர வாழ்வை எழுதிக்காட்டியவர், சிறுபத்திரி்க்கை இலக்கியவாதிகள் யாரும் அவரை கர்வத்தால் ஏற்பதில்லை, வெகுசன வாசிப்பை அதிகப்படுத்திய அவரது எழுத்தமுறையை பயலவில்லை என்றெல்லாம் அட்வைஸ்களை அள்ளிவீசும் அண்ணாமலைகளுக்கு.. வெகுசன எழுத்து என்ற போர்வையில், சமூகத் தீமைகளை பரப்புவதும், வாசிப்பாளனை மந்தையைாக உருவாக்குவதும், வாசகர்களை நுகர்வாளர்களாக மாற்றும் வெகுசன ஊடக வியாபாரத்தை பெறுக்குவதும் என்பதைத் தவிர அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? தமிழ் வெகுசன மனநிலையை பார்ப்பனிய அழகியலாக, பார்ப்பனிய நடுத்தரவர்க்க வாழ்வாக மாற்றியதும், இன்றைய அரசியலில் ஏற்பட்டிருக்கும் எடுபிடி அரசு உருவாக காரணமான, பாசக காவிகளின் அரசியலை தேவை என உள்ளுக்குள் ஏற்ற மத்தியதரவர்க்க அறிவாளிகள் மனநிலையை கட்டமைத்த சந்தைப் பண்டம் தவிர வேறு என்ன எழுதிக்கிழித்தார்கள் இவர்கள்.

அந்த பண்டங்களை தங்கள் பண்டங்களாக மாற்ற முயலும் தமிழக பதிப்பக சரக்கு மாஸ்டர்களே இப்படியான அஞ்சலிக் குறிப்பில் சிறுபத்திரிக்கையாாளர்களை சாடிப் புலம்புவார்கள்.

பாலகுமாரனை ஒருகாலத்தில் விரும்பி எல்லோரும் வாசித்தார்கள் என்றால் காரணம் அன்று பத்திரிக்கை ஜாம்பவான்களாக இருந்த சாவி, மணியன் போன்றவர்களின் அடுத்த தலைமுறை தமிழ் வார, மாத ஊடகப்பத்திரிக்கைகளில் வந்தது. அந்த இளைஞர்களின் வருகையோடு வந்தவரே பாலகுமாரன். ஒரு தலைமுறை மாற்றம் வெகுசன எழுத்து ஊடகத்தில் நிகழ்ந்தது. மாலன் போன்ற இளம் பத்திரிக்கையாளர்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற தொடர் நாவலாசிரியர்களோடு அந்த இடத்தை நிரப்ப உருவானவரே பாலகுமாரன்.

ஏதோ ஒரு உன்னத எழுத்து வீழ்ந்துவிட்டதான பாவனையைவிட்டு, உண்மையாக பாலகுமாரன் எழுத்துக்களினால் உருவாக்கப்பட்ட சமூக மாதிரிகளை, வடிவமைப்புகளை, அழகியலை அது நுகர்வை எப்படி மாற்றியமைத்தது என்பதையும், பார்ப்பனிய வாழ்முறையை உன்னதப்படுத்தி சராசரி மக்கள் மனத்தளத்தில் எப்படி ”ஈஷிக்கொண்டு” நுழைந்தது என்பதை பேசுவதே அவருக்கு செய்யப்படும் மரியாதையாக இருக்கும். பாலகுமாரன் தான் என்ன எழுதுகிறோம் என்பது பற்றிய தெளிவுடன் இருந்தவராகத்தான் தெரிகிறார். இவர்கள் குறிப்பாக சில சிறுபத்திரிக்கை, பதிப்பகத்தார்கள் புலம்புவதைப்போல ஏதோ உன்னத சிகரத்தை தொட்டவர் என்கிற பாவனை எல்லாம் அதிகம்.

பாலகுமாரன் அவர்களது மரணம் வருந்ததக்கது, அவரது மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜமாலன், எழுத்தாளர்; இலக்கிய விமர்சகர்.

காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்

‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது.

‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவில்,

“கமல் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் சினிமாவை ஒரு கலையாகவும் சமூகப் பிரச்சினைகளுக்கான ஒரு உரையாடலாகவும் மாற்ற அவர் தொடர்ந்து ஆசைப்பட்டிருக்கிறார். 2000 த்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் மாற்று சினிமாவை உருவாக்கும் பல இயக்குனர்கள் வரிசையாக உருவானதற்கு கமல் போன்ற முன்னோடிகள் வர்த்தக சினிமாவின் எல்லைக்குள் நின்று செய்த பரிசோதனைகளும் ஒரு காரணம். ஆனால் ரஜினியைப்பற்றி யோசித்துப்பாருங்கள். கொடூரமான மசாலா சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை தாண்டி ரஜினி சினிமா என்ற கலை குறித்து ஒரு துளியும் அக்கறை காட்டியதில்லை. பி.வாசுக்களை தாண்டி அவரது சினிமா ஆர்வம் சென்றதில்லை. கமல் தனது வித்தியாசமான முயற்சிகளால் தானும் மூழ்கி தயாரிப்பாளர்களையும் மூழ்கடித்துக்கொண்டிருந்த காலத்தில் ரஜினி தனது பரிசுத்தமான மசாலா வெற்றிகளில் மட்டும் கவனமாக இருந்தார். இதைத்தான் நாற்பது வருடமாக தோற்காத குதிரை என தன்னைப்பற்றி மார் தட்டுகிறார். பட்டை கட்டிய குதிரைகள் எந்த ரிஸ்கும் இல்லாமல் ஓடுவது ஆச்சரியமல்ல.

ஆனால் அப்பேர்பட்ட ரஜினி திடீரெனெ ரஞ்சித் போன்ற தீவிர அரசியல் பார்வைகொண்ட ஒரு இளைஞரை தேர்ந்தெடுக்கிறார். கபாலி மூலமாக ரஜினியின் தலித் பிம்பம் ஒன்று அவசர அவசரமாக கட்டமைக்கப்படுகிறது. ரஜினியின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் எந்த சமூக – அரசியல் பார்வையும் இல்லாதது. எந்த ஒரு மாற்று சினிமா இளம் இயக்குரையும் தன் பக்கம் அண்டவிடாத ரஜினி ரஞ்சித்துக்கு எப்படி அந்த வாய்பை அளித்தார்?

அம்பேத்கரியத்தையும் தலித்தியதையும் விழுங்க முயற்சிக்கும் இந்துத்துவா அரசியல் ரஜினி மூலமாக ரஞ்சித்துகளை பயன்படுத்தி ஒரு இந்துத்துவா ப்ராண்ட் தலித்தியத்தை தமிழகத்தில் வளர்பதுதான் நோக்கமா? ஒரு இயக்குனராக மட்டும் ரஞ்சித் தன் வாழ்வை முடித்துக்கொள்ளக்கூடாது என காலா ஆடியோ ரிலீசில் பேசுவதன் அர்த்தம் இதுதான்.

ரஜினியின் பல அரசியல் முகமூடிகளில் ஒரு முகமூடியாக ரஞ்சித்தும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று எழுதியுள்ளார்.

தமிழ் ஸ்டுடியோ அருண் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் இயக்குநர் ரஞ்சித், ரஜினியுடனான கூடா நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ஒரு பாலியல் வக்கிரம் என்றால் ரஜினி ஒரு அரசியல் வக்கிரம். இந்த பார்ப்பன அடிவருடி வந்து தலித் அரசியல் பேசிதான் தலித் மக்களுக்கு உண்மையில் விடிவு காலம் வரப்போகுதா? ஒடுக்கப்பட்ட மக்கள் போராடும்போது கூட ஏன் சண்டை போடுகுறீர்கள், மற்றவர்களோடு ஒத்துப்போங்கள் என்று சொல்லக்கூடிய புத்திசாலிதான் ரஜினி. ரஞ்சித் உண்மையில் சினிமாவில் தலித் அரசியல் பேச விரும்பினால் ரஜினியுடனான கூடா நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ரஞ்சித்திற்கு கிடைத்திருக்கும் இந்த் எல்லா அங்கிகாரங்களும் ரஜினியின் பட இயக்குனர் என்பதால்தான். இந்த படம் முடிந்து அடுத்து ரஞ்சித்திற்கு சில காலம் இந்த எபெக்ட் இருக்கலாம். அதன் பிறகுதான் ரஞ்சித் கலை செய்யும் கலகக்காரனா அல்லது பணம் செய்யும் வியாபாரியா என்பது தெரிய வரும். ரஜினி எனும் அரசியல் வக்கிரத்திற்காக காலா படத்தை எதிர்ப்பதுதான் இப்போதைய என் நிலைப்பாடு” என அந்தப் பதிவில் விளக்கியுள்ளார் அருண்.

மற்றொரு பதிவில்,

“உண்மையில் ரஞ்சித் ரஜினி கூட்டணியை விமர்சிக்கும் என்னை போன்றவர்கள்தான் ரஞ்சித் மீதான அக்கறை கொண்டவர்கள். ரஞ்சித்தின் அட்டக்கத்தி மீதோ, ரஞ்சித் சினிமாவில் பேச விரும்பும் தலித் அரசியல் குறித்தோ எனக்கும் பேருவகைதான். ஆனால் அதனை ரஜினி எனும் சினிமா மற்றும் அரசியல் அரைவேக்காட்டு மனிதருடன் சேர்ந்து செய்வதில்தான் பிரச்னை. நண்பர்கள் சொல்வது போல், ரஜினி மூலம் பேசினால் பரவலாக சென்றடையும். உண்மைதான். ஆனால் இந்த பரவலாக என்பதன் பின்னணியில்தான் காலம் காலமாக அயோக்கியத்தனங்கள் நடந்து வருகிறது. நம்முடைய அரசியலில் இருந்துக்கொண்டு, நாம் செய்ய விரும்பும் மாற்றத்தை, பேச விரும்பும் அரசியலை பேசுவதுதான் அறம். ரஜினியோடு ரஞ்சித் கூட்டணி சேர்ந்தால், ரஜினி மூலம் தலித் அரசியல் பரவலாக போய் சேரும் என்பது, மோடி அம்பேத்கரின் கொள்கைகளை பேசினால், அவர் பிரதமர் என்பதால் பரவலாக போய் சேரும் என்பதற்கு சமம். உண்மைதானே. ஒரு பக்கம் அம்பேத்கரின் கொள்கைகளை பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் குஜராத் இனக்கலவரம், மாட்டுக்கறி உண்ண தடை என்கிற எல்லா பாசிசத்தையும் மோடி அரங்கேற்றுவார். ஆனால் நமக்கு தேவை, மோடி அம்பேத்காரின் கொள்கைகளை பேசுகிறார், இதையெல்லாம் மன்னிக்கலாம் என்பதா?

தவிர ரஞ்சித் செய்ய விரும்பும் எல்லா ஆக்டிவிஸத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அதெல்லாம் மக்கள் பணத்தில் நடக்க வேண்டும். ரஜினியை வைத்து படமெடுத்தால் கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக கிடைக்கும். ஆனால் அதில்தான் ரஞ்சித் ஆக்டிவிஸம் செய்ய நினைத்தால் அதை ஆக்டிவிஸமாக கருத முடியாது. விஷமாகத்தான் கருத முடியும். இங்கே முழு விமர்சனமும் ரஞ்சித் ரஜினியோடு கூட்டணி சேர்ந்ததுதான் தவிர, ரஞ்சித் என்கிற கலைஞன் மீதல்ல. நமக்கு பணம் தேவை, பரவலாக நம்முடைய கொள்கைகளை கொண்டு போய் சேர்க்க ஒரு நல்ல மாஸ் தலைவர் தேவை என்று எல்லாவற்றிற்கும் இன்னொருவரை பின்தொடர்ந்துதான் ஆக வேண்டுமா? விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியோடு வைக்கும் கூட்டணியை போன்று அருவருப்பானது, ரஞ்சித் ரஜினி கூட்டணி. ஏன் அரசியலோடு எல்லாவற்றையும் பிணைத்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டால், ஆம், அப்படித்தான் செய்தாக வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்க விரும்பலாம், ரஞ்சித் தலித் அரசியல் பேச விரும்பலாம். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் படத்தை நாங்கள் வெறுமனே படமாக மட்டும்தான் பார்க்க வேண்டுமா என்ன?

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஷங்கர், முருகதாஸ், போன்ற இயக்குனர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நல்ல சினிமா பற்றி நான் பேசினால் அதை விட அயோக்கியத்தனம் வேறில்லை. சில நண்பர்களுக்கு இதிலும் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியாது. ஷங்கர், முருகதாஸிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏன் நல்ல சினிமா பற்றி பேசக்கூடாது. பேசுங்களேன் என்பார்கள். அதைத்தான் நான் எப்போதும் வலியுறுத்தி பேசுகிறேன். அரசியல் என்பது அறம் சார்ந்தது. நான் யாரையெல்லாம் எதிர்க்க விரும்புகிறேனோ, எந்த கட்டமைப்பை எதிர்ப்பு பேசுகிறேனோ அது சார்ந்தவர்களிடம் பெரும் பணம் பெற்று, நான் ஒரு புதிய சினிமாவை உருவாக்குவது என்பது அறம் அரசியல் என்கிற வகையில் மிகுந்த அயோக்கியத்தனம் வாய்ந்தது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் விரிவாக எழுதுகிறேன். ஆனால் இங்கே வந்து கருத்து பதியும் நண்பர்கள், தனிப்பட்ட வன்மம், நீ என்ன செய்த கிழிச்ச, என்கிற ரீதியில் பேசினால் நாட்டம் எனக்கல்ல, உங்களுக்குத்தான். எனக்கு ரஞ்சித்தை ஒரு கலைஞனாக மீட்டெடுக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறது. அதற்காக ரஞ்சித்தின் கூடா நட்பை விமர்சிப்பேன். ரஜினியை எப்போதும் கடுமையாக விமர்சிப்பேன். இந்த சமூகத்திற்கு, சினிமாவிற்கு என எல்லாப்பக்கமும் ரஜினியினால் கேடுதான் விளையும் தவிர, ஒரு நல்ல மாற்றமும் கிடைக்காது. மாற்றம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. ரஜினியினால் கிடைக்க கூடிய எதிர்விளைவுகள் மிக அதிகமானவை. ரஜினி முன்வைத்த ஹீரோயிசம் இன்று வரை பல மட்டங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அட்டக்கத்தி தினேஷ், நான் கோட் சூட் போடுவேன்டா, என்று சொல்லும்போது ஒரு சமூகம் ஆர்ப்பறிக்குமா? எனில் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அந்த வசனத்தை ரஜினி சொன்னால்தான் ரசிப்பார்கள். கைத்தட்டுவார்கள். காரணம் வசனமல்ல, சொல்வது ரஜினி. நமக்கு தேவை ரஜினி கோட் சூட் போடவேண்டுமா, அட்டக்கத்தி தினேஷ் (இங்கே அட்டக்கத்தி தினேஷ் என்பது தலித் குறியீடு) கோட் சூட் போடவேண்டுமா?” என கேட்கிறார்.

ரஞ்சித் மேல் ஏன் இத்தனை கோபம்? வெறுப்பு? விமர்சனங்கள்? என கேள்விகளை முன்வைக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஸ்மி. அவர் எழுதிய முகநூல் பதிவில்,

“இத்தனை வருடங்களாய் ஆதிக்க சாதிகளின் கூடாரமாய் இருந்த தமிழ் வணிக சினிமாவில் அவர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் பேச முனைகிறார். அது சாதி தந்த சவுகரியங்களில் ஊறிப்போனவர்களுக்கு நமைச்சலை ஏற்படுத்துகிறது சரி.

வெளியில் முற்போக்கு முகமூடிகள் அணிந்தாலும், உள்ளுக்குள் இன்னும் மனுவிற்கு சலாம் போடும், மீண்டும் அந்த சாதி தரும் சவுகரியங்களை அனுபவித்துக் கொண்டே முற்போக்கு பேசும் கூட்டத்திற்கு கருப்பு, சேரி, போராட்டம், உரிமையை மீட்போம் என்ற குரல்கள் மூளைக்குள் புகுந்து எரிகின்றன சரி.

ஆனால் இது எதுவும் இல்லாத சிலருக்கும் ரஞ்சித் மேல் ஏன் கோபம்? விமர்சனம்? தமிழ் சினிமாவின் நடைமுறைகள் தெரிந்துதான் பேசுகிறார்களா? இங்கு அத்தனையையும் முடிவு செய்வது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? இதனூடே இருந்துகொண்டே, அதிலும் தன் அரசியலை பேசிக்கொண்டே, பொதுவெளியிலும் காட்டமாக தன் அரசியலை முன்வைக்கும் ஒரு கலைஞனை இதற்குமுன் தமிழ் சினிமா கண்டதில்லை என்று நான் நம்புகிறேன்.

மெட்ராஸ் வெளிவந்தபோதில் இருந்தே ரஞ்சித்தை ஒழித்துக்கட்ட எத்தனை முயற்சிகள் நடந்தன? இப்போதும் நடக்கின்றன. முகநூலில் சாதி எதிர்ப்பு பேசினாலே நம் தொழிலில் அலுவலகங்களில் எத்தனை எத்தனை தடைகள் வருகிறது? இதில் தமிழ் சினிமாவில், உள்ளேயும் வெளியேயும் ரஞ்சித் பேசும் அரசியலுக்கு எப்பேற்பட்ட தடைகள் வந்திருக்கும்? அதை தெரிந்துகொண்டே, அதற்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல், தான் நம்பும் அரசியலையே படமாக இயக்கியும் தயாரித்தும் பேசியும் செயல்பட்டும் வரும் ஒரு மனிதனை ஆராதிக்க வேண்டாம்… ஆனால் ஆதரிப்பது சமூகக்கடைமை என்று கருதுகிறேன்.

ஆதரிப்பது என்றால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு என்பதல்ல அர்த்தம். ரஞ்சித்தின் திரைப்படங்களை, அரசியலை, செயல்பாடுகளை தாராளமாக விமர்சிக்கலாம். ஏன் அவரிடமே கூட விமர்சிக்கலாம். ஆனால் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை விமர்சிக்கும் அதே தொனியில் காலாவையோ ரஞ்சித்தின் பிற படங்களையோ விமர்சிப்பது நியாயமற்றது.

தமிழ் வணிக சினிமாவின் அத்தனை சட்டகங்களுக்குள் தான் ரஞ்சித் இத்தனையையும் செய்துகொண்டிருக்கிறார். ஒருநொடியில் அதை உடைத்துவிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. வணிக சினிமாவில் இந்த அரசியலை பேசவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. நீங்கள் விரும்பும் சினிமாவில் பேச இன்னும் நேரமெடுக்கும். ஆனால் அதையும் ரஞ்சித் செய்கிறார். பரியேறும் பெருமாள் என்றொரு படத்தை தயாரிக்கிறார். அது நிச்சயம் சமரசமற்ற அரசியல் படமாகத்தான் உருவாகியிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன். தான் வணிக சினிமாவில் சந்தித்த Limitations, இதுபோன்ற விமர்சனங்களுக்கான முகாந்திரங்கள் அந்த படத்தில் இல்லாமல்தான் அதை உருவாக்குகிறார் ரஞ்சித். இப்படித்தானே மாற்றங்கள் துவங்கும்? இது அடுத்தடுத்து நாம் விரும்பும் சினிமாவிற்கு வழிகோலும். இதை இப்படித்தான் நான் பார்க்கிறேன்.

ரஞ்சித் ரஜினியோடு இணைவதுதான் பிரச்சினை என்றால், அட்டகத்தியும் மெட்ராஸும் வந்தபோது நீங்கள் ரஞ்சித்தை கொண்டாடியிருக்க வேண்டுமே? அந்த படங்களை தயாரித்ததுமே கூட வணிக சினிமா தயாரிப்பாளர்கள்தானே? இவர்கள் சொல்லும் அத்தனை மாற்றங்களும் வரும். படிப்படியாக. ஓவர் த நைட்டில் இல்லை. ரஜினி சார்ந்த விமர்சனங்களையும் அது தன் அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவதையும் ரஞ்சித்தும் உணர்ந்தேதான் இருப்பார். ஆனால் அது சாத்தியப்பட, தீர்மானிக்கும் இடத்திற்கு அவர் வரவேண்டும். உடனடியாக ரஜினியை புறந்தள்ள வேண்டும், இப்படி செய்யவேண்டும் அப்படி செய்யவேண்டும் என்று சொல்வது, ரஞ்சித்தை ஒழித்துக்கட்ட காத்திருக்கும் கூட்டத்திற்கு தான் பயன்படுமே தவிர வேறெதற்குமில்லை.

‘என்ன பெரிய கம்யூனிஸ்ட்டுனு சொல்ற.. ஆனா அமெரிக்க முதலாளி உருவாக்குன ஃபேஸ்புக்ல தான கம்யூனிசம் எழுதிட்டு இருக்க?’ என்று சிலர் கேட்பார்கள். அதற்கு ஒப்பானதாய் இருக்கிறது ரஞ்சித் குறித்த இந்த விமர்சனங்கள் !!” என இயக்குநர் ரஞ்சித் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார் ஹாஸ்மி.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில், “ ‘புகழ்பெற்ற’ நடிகர்களை வைத்துப் படமெடுப்பதில் சிக்கல் இல்லை. ‘சூப்பர் ஸ்டார் பிம்பம்’ கொண்டவர்களை ‘திரும்பத் திரும்ப’ வைத்துப் படம் எடுப்பதுதான் சிக்கல்” என்கிறார்.

அவர் தனது பதிவில், “எ.கா. ஹாலிவுட் எனில் ஆலிவர் ஸ்டோன் படங்களைப் பாருங்கள். அவர் படங்களில் நடிக்காத ஹாலிவுட் ‘புகழ்பெற்ற’ நடிகர்கள் எவரும் இல்லை. அந்தப் படங்கள் அனைத்தும் இயக்குனர் படங்கள். வேறுபட்ட ஜானர்களில் அவரது அரசியலைச் சொல்லும் படங்கள்.

இந்தியாவில் ‘சமாந்தர சினிமா’ இயக்குனர் நிஹ்லானி படங்கள் பாருங்கள். அவரது படங்கள் அனைத்திலும் இந்தியாவின் ‘புகழ்பெற்ற’ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவை அனைத்தும் இயக்குனரின் படங்கள். வேறுபட்ட ஜானர்களில் அவரது அரசியலைச் சொல்லும் படங்கள்.

தமிழில் அப்படி ஒருவரைச் சொல்ல முடியாது. காரணம்? இங்கு நடிகருக்கு ‘உகந்த’, ‘பிம்பக் கட்டமைப்பு’ மற்றும் ‘ஹீரோ வழிபாட்டு’ ஜானருக்குள் ‘புனைவுக் கதை’ செய்து, அதற்குள் ‘மட்டும்தான்’ தமது அரசியலை ‘நுழைக்கும்’ வகையில் இங்கு இயங்க முடிகிறது. இயங்குகிறார்கள்.

தலித் வரலாறும் நாயகர்களும் தமிழில் இல்லையா? ஏன் தாதா ஜானரின் பின்னணியில் தொடர்ந்து தலித் அரசியல் சொல்லும் படங்கள்? இவை தமிழில் பொருளாதார ரீதியில் புரூவ்ட் சப்ஜக்ட் மற்றும் ஜானர். இதனால்தான் இங்கு மாற்றங்கள் இந்த வகையில் நிகழமுடியாது எனச் சொல்கிறோம்.

மலையாளத்தில் இடதுசாரி மற்றும் நக்சலைட் ஓரியன்டட் படங்களில் கூட ‘நட்சத்திர’ நடிகர்கள் நடிக்கிறார்கள். அநேகமாக, இப்படியான படங்களில் நடிக்காத ‘புகழ்பெற்ற’ நடிகர்களே அங்கு இல்லை. காரணம் அங்கு அரசியல் முனைப்புடன் ‘பிம்பங்களைத் தனதாக’ முன்வைக்கிற நடிகர்களின் மரபு இல்லை.

எந்த அரசியல் ஈடுபாடும்-செயல்பாடும் இல்லாமல் சினிமாவை வைத்து ‘ஸ்டிரெயிட்ட்டாக’ முதலமைச்சர் கனவு காணும் ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும்” என்கிற ராஜேந்திரன்,

“மூன்று அடுக்குகளாக ரஞ்ஜித் எனும் பினமினாவைப் பார்க்கலாம்.

1.ரஞ்ஜித் தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.

2.ஒரு திரைஇயக்குனர் கமிட்டட் அரசியல் பேசுகிறார்.

3.தனது நடைமுறை அரசியலுக்கும் திரை அரசியலுக்கும் ஒரு தொடர்ச்சியைப் பேண முயல்கிறார்.

கலை, இலக்கியம், திரை, மேடை, இசைநிகழ்வு, தயாரிப்பு என அனைத்திலும் ஒரு ஓர்மையை விழைகிறார். நிச்சயம் இது தன்னேரில்லாத ஒரு நிகழ்வு.

‘காஸ்ட்லஸ் கலக்டிவ்’ உருவாக்கம் அவரது செயல்பாட்டின் ‘உச்சம்’ எனக் கருதாமல் ரஜினி பட இயக்குனரானது (அதுவும் தொடர்ந்து இரு படங்கள் மற்றும் அதனது பொருள் மதிப்பு போன்றன) ‘உச்சம்’ எனக் கருதுபவர்கள் தான் இங்கு பிரச்சினை.

அவரது ‘உச்சம்’ என்பது அவரது ‘அட்டகத்தி’ எனும் எளிய சினிமாவும் ‘காஸ்ட்லஸ் கலக்டிவ்’ எனும் கலக இசை உருவாக்கமும்தான். பிரம்மாண்டங்களோ தொடர்ந்த தாதா ஜானரோ ஒரு படைப்பாளியின் ‘உச்சபட்சமான’ வெளிப்பாட்டு வடிவங்களாக நிச்சயம் இருக்க முடியாது” எனவும் சொல்கிறார்.

“இதனை போஸ்ட் ட்ருத் யுகம் என்கிறார்கள். அதாவது ‘பின் உண்மை’ யுகம். உண்மை எனப்படும் வஸ்து போயே போச்சு. பொய்யுக்கும் உண்மைக்கும் வித்தியாசம் காணவே முடியாது. இதற்கு பகுதிக் காரணம் ஊடகப் பெருக்கம். இந்தப் பகுதிக்கும் சேர்த்து முழுக்காரணம் இந்த ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல் கம் அரசியல்வாதிகள்.

வெளிநாடுகளுக்குச் சென்று ‘நான் காந்தி பிறந்த மண்ணில் இருந்து வருகிறேன்’ என்று சொல்கிற ஸ்டேட்ஸ்மென் அதே காந்தியைக் கொன்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். அம்பேத்ருக்கு பிரம்மாண்டச் சிலை வைத்து ‘நானும் அம்பேத்கரும் ஒன்று’ எனச் சொல்லும் அதே ஸ்டேட்ஸ்மெனின் மாநில பள்ளிக் கல்வித்துறை அம்பேத்கர் நூற்களைத் தணிக்கை செய்கிறது. இதில் எது உண்மை எது பொய்? இவர் நல்லவரா கெட்டவரா?

ரஜினி படங்கள் உருவாக்கும், முன்வைக்கும் பிம்பங்களை அண்மைக்கால தமிழ்நில உண்மைகளுடன் வைத்துப் புரிந்து கொண்டு, நடைமுறையில் அவர் முன்வைக்கும் ஆன்மீக அரசியலுடன் வைத்துப் பாருங்கள். எது உண்மையான ரஜினி? படங்கள் சொல்லும் ரஜினியா? அல்லது நடைமுறை ரஜினியா? எது உண்மை? எது பொய்? போஸ்ட் ட்ரூத் யுகத்தில் வலதுசாரிகள் ஏமாற்றலாம். இடதுசாரிகள் மயங்கக் கூடாது. மயக்கவும் கூடாது..

ரஜினி-எம்.ஜி.ஆர் குறித்த ‘குறிப்பான’ ஒப்பீட்டை பிறிதொரு தருணத்தில் செய்வோம். தமிழ் சினிமாவில் பிம்பக் கட்டமைப்புக்கும் அரசியல் அதிகாரம் பெறுதலும் என்பதற்குமான சிறந்த எடுத்துக் காட்டு எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருடன் தான் ‘நெருக்கமானவர்’ என்பது முதல் ‘அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்பது வரை நடைமுறையில் எம்.ஜி.ஆராக முனைபவர் ரஜினி.

‘தென்னிந்திய அணைகளை சாவதற்கு முன் இணைப்பது என் கனவு’ என்பது இதில் அடிஷனல் மேடை டயலாக்.

ரஜினி இது வரை உருவாக்கிய பிம்பம். வல்லவன். நல்லவன். ஊழலை ஒழிப்பவன். பெண்களின் காவலன். கடவுளின் குழந்தை. உடைமை மறுப்பாளன் அதனை மக்களுக்குத் தருபவன். காவல்துறை சாகசவாதி. தாதாவானாலும் நல்ல தாதா. அறுதியில் கடவுள் அருளால் இத்தனையும் செய்யும் கடவுளின் வாரிசு.

ரஞ்ஜித் இந்த ஒப்பனையில் தலித் புரட்சியாளன் எனும் சிறகை அவரது தலையில் சொருகலாம்.

சூப்பர் ஸ்டாரின் படங்கள் அவரது படங்களாக அறியப்படுமே அல்லாது ரஞ்ஜித்தின் படங்களாக அல்ல. பாட்ஷாவின் நீட்சியாகவே ரஞ்ஜித்தின் படங்கள் அமையும். பெண்களின் காவலன், ஊழல் ஒழிப்பாளன், கடவுளின் குழந்தை, அடிஷனலாக தலித் மக்களின் கதாநாயகன் என ஒரு சில தலித் மக்களை நம்பச் செய்யலாம். சூப்பர் ஸ்டார் பிம்பம் என்பதன் சமூகச் செயல்பாடு இதுதான்.

சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் வரிசையில் ரஞ்ஜித். இதுதான் யதார்த்தம்.

நடைமுறையில் காலா ஆடியோ மேடையில் ரஜினிதான் ‘நதிகள் இணைப்பு’ அரசியல் பேச முடியும். ரஞ்ஜித் தனது ‘தலித்’ அரசியல் பேச முடியாது. மிஞ்சி மிஞ்சிப் போனால், ரஜினியின் எளிமையில் இருக்கும் ‘பவரை’த்தான் காலாவில் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்ல முடியும். இதுதான் சூப்பர் ஸ்டார் நட்சத்திர அமைப்பும் பிம்பக் கட்டமைப்பும் செயல்படும் எல்லை. இதனை ரஞ்ஜித்தினால் மட்டுமல்ல எவராலும் மீறிச் செல்ல முடியாது.

வித்தியாசமாகச் செய்வதானால் ஒரு அற்புதமான முதியவயதுக் காதல் கதையையோ அல்லது இன்னுமொரு பாசமலர் கதையையோ ரஜினியை வைத்துச் சொல்ல முடியும். எ.கா. மகேந்திரனின் ரஜினி படங்கள்.

புரட்சிகர அரசியலை ரஜினியை வைத்துச் சொல்லவே முடியாது. அது ரஜினியின் ஆன்மீக அரசியலின் கருணாமூர்த்தி எனும் பிம்பக் கட்டமைப்பின் பகுதியாகவே ஆகும்” என வெவ்வேறு பதிவுகளில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் யமுனா ராஜேந்திரன்.

ஜெயச்சந்திர ஹாஸ்மி தன்னுடைய மற்றொரு பதிவு ரஞ்சித் நிலைப்பாடு எத்தகையது என விளக்க முற்படுகிறார்…

“ரஞ்சித் ரஜினி மூலம்தான் தனது தலித் கருத்தியலை சொல்கிறார் எனும் வாதமே தவறு. தனது அத்தனை படங்களில் பேசுபொருளாக தன் அரசியல்தான் இருக்கும் என்பதை ரஞ்சித் பலதடவை மிகத்தெளிவாக விளக்கியபின்னும் கபாலி காலாவில் மட்டும் தலித் அரசியல் பேசுவது போல் கட்டமைக்கப்படுகிறது. அட்டக்கத்தியில் இருந்தே அவர் தனது படங்களில் தலித் கருத்தியல் தான் பேசி வருகிறார். தினேஷ், கார்த்தியை தொடர்ந்து இப்போது ரஜினி. அவ்வளவுதான். நாளை மீண்டும் தினேஷை வைத்து எடுத்தாலும் இதே அரசியல்தான்.

• தலித் அரசியலைத்தான் எடுப்பேன் என்று சொல்லும் இயக்குனர் ஒருவர், ரஜினியை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்ததற்காக அந்த படத்தில் தலித் அரசியலை பேசாமல் தவிர்த்தால் அதுதான் சந்தர்ப்பவாதம். ஆனால் நாயகன் யாராக இருந்தாலும், சூழல் எப்படி இருந்தால், நான் என் படங்களில் பேசும் அரசியலில் இருந்து விலகமாட்டேன் என்று ரஞ்சித் உறுதியாக நிற்பதுதானே அறம்?

• என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள்? ரஜினி உள்ளே வந்தவுடன் ரஞ்சித் தனது அரசியலை மாற்றிக்கொள்ள வேண்டுமா? அல்லது ரஜினியே வேண்டாமென்று ஒதுக்க வேண்டுமா? முன்னது அரசியல்பிழை. பின்னது இருத்தல் பிழை. இந்த அரசியல்தான் பேசுவேன் எனும் இயக்குனருடன் இணைய நாயகர்கள் வருகையில், அவர்களது நிஜவாழ்வு அரசியலை/செயல்பாட்டை பார்த்துதான் ரஞ்சித் அவர்களுடன் இணையவேண்டுமெனில் ஒன்று ரஞ்சித்தே தான் நடிக்கவேண்டும். இல்லை ஒரு புதுமுகத்தை வைத்து படமெடுக்க வேண்டும். அடுத்து, சினிமா எனும் வணிகம் எப்படி இயங்குகிறது என்று தெரிந்தவர்கள் ரஞ்சித் எப்படி கத்தியின் மேல் நடக்கிறார் என்று அறிவார்கள். இங்கு சொல்லும் எந்த அறிவுரையின்படி நடந்தாலும் கத்தி ரஞ்சித் தலைக்குதான். He is playing his cards very carefully.

• முக்கியமாக… ரஞ்சித் ரஜினியுடன் இணைவது குறித்து தி.மு.க நண்பர்கள் மிக காட்டமாக விமர்சிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. திராவிடக் கொள்கைகள் மக்களிடம் பரவ ஒரு நட்சத்திரம் வேண்டும் என்று எம்.ஜி.ஆரை உள்ளே அழைத்து வந்தது அண்ணா தானே? அது அரசியல் சாணக்கியத்தனம், இது மட்டும் அரசியல்பிழையா? எம்.ஜி.ஆரோடு திராவிடக் கொள்கைகள் வளரவில்லையா? ரஜினி ரஞ்சித்தை பயன்படுத்துகிறார் என்றால் எம்.ஜி.ஆரும் அதைத்தானே செய்தார்? சொல்லப்போனால் மொத்தத்தையும் சுவீகரித்துக்கொண்டாரல்லவா எம்.ஜி.ஆர்? வணிக சினிமாவிற்கு அரசியலுக்குமான அத்தியாயமே தமிழகத்தில் அதிலிருந்துதானே துவங்குகிறது?

இதில் எந்த இடத்திலும் ரஜினிதான் தலித்துகளின் விடிவெள்ளி, மீட்பர், அரசியல் விடுதலைக்கான கருவி என்று ரஞ்சித்தோ, ஏன் ரஜினி ரசிகர்களோ கூட கூறி நான பார்க்கவில்லை. சர்காசம் என்ற பெயரில் இவர்களேதான் அதையும் கூறிக்கொள்கிறார்கள். அரசியலிலிருக்கும் ஒரு தலைவர், தனது கருத்துக்களை பரப்ப, சினிமாவில் இருக்கும் ஒருவரை அரசியலுக்கு அழைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால், சினிமாவில் இருக்கும் ஒருவர், சினிமாவில் இருக்கும் இன்னொருவரை தனது அரசியல் பேச பயன்படுத்திக்கொள்ளக் கூடாதா? அண்ணா செய்தது தவறு, மீண்டும் அப்படி நிகழக்கூடாது என்றுதான் விமர்சிக்கிறோம் என்பவர்களன்றி மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என கருதுகிறேன்!!” என்பது அவருடைய கருத்து.

”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்!

சர்ச்சைகளுக்கு இடையே தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது தருவார், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்குவார்கள் என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து 68 பேர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.  புறக்கணித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர். இதனையடுத்து 11 பேருக்கு மட்டும் தேசிய விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
திரைப்பட விருது விழாவை புறக்கணித்த 68 திரைக்கலைஞர்கள் வெளியிட்டுள் கடிதம்:
நம் நாட்டின் பல்வேறு மாநில திரைப்படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களாகிய நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். நாங்கள் இந்த 65 ஆவது தேசிய திரைப்பட விருதை, எங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட முக்கிய பாராட்டாகவும், ஊக்கமாகவும் கருதுகிறோம். மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பிதழ் கடிதத்துடன் இந்த உயரிய விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தோம். எங்கள் அயராத உழைப்பு மற்றும் கனவுகளை நோக்கிய அற்பணிப்பை சிறப்பிக்கும் பெருமைமிகு தருணத்தை எதிர்பார்த்து குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருந்தோம்.
பெரும்பான்மையான விருதுகள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் மூலமாக வழங்கப்பட மாட்டாது என்கிற செய்தியை, விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக திரு. சைத்தன்ய பிரசாத் மூலமாக அதிந்துகொண்டோம். தீவிர நெறமுறைகளின் கீழ் செயல்படும் இந்த விழாவின் முக்கயமான இந்த அம்சத்தை எங்களுக்கு தெரிவிக்க தவறியதை ஒரு நம்பிக்கை துரோகமாக நாங்ள் உணர்கிறோம். 65 ஆண்டுகாலமாக பின்பற்றப்படும் பாரம்பரியத்தை தலைகீழாக மாற்றியமைத்ததை துரதிஷ்டமாக கருதுகிறோம்.
பாராட்டுக்கள் எளிதில் கிடைத்திடாத துறையில் திரைப்படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களாகிய நாங்கள் எங்கள் கனவுகளோடு உறுதியுடன் இருக்கிறோம். தேசிய திரைப்பட விருதுகள் மூலம் எங்கள் வாழ்நாளில் ஒரு முறைதான் கிடைக்கும் இத்தகைய பெருமைமிக்க கௌரவத்தை நாங்கள் இழந்துவிடுவோம் என்பதை அறிந்து மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளானோம். மற்ற விருதுகள் போலல்லாமல் தேசிய திரைப்பட விருதென்பது நடுநிலையான அசல் விருதாக கருதப்படுகிறது. இந்த விருதின் கண்ணியமும் மாண்பும் காப்பாற்றப்பட வேண்டும் மேலும் எந்த படிநிலையும் இந்த நிகழ்வில் இருக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த விருது சுமார் 11 நபர்களுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் மற்றும் மீதமுள்ளா சுமார் 120 நபர்களுக்கு அவரால் வழங்கப்படமாட்டாது என்பதை அறிந்து மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளானோம். இந்த விவகாரம் குறித்து நாங்கள் மாண்புமிகு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரிடம் விவாதித்தோம், ஆனால் உறுதியளித்தபடி இதுவரை எந்தவிதமான பதிலும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. எங்கள் ஏமாற்றத்ததை வெளிப்படுத்துவதைத் தவிற வேறு வழி இல்லாத நிலையில் எங்கள் திறமைக்காகப் பெருமிதமடைவதற்குப் பதிலாக மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். எங்கள் மனக்குறைக்கு ஒரு பதிலைப் பெறாத சூழ்நிலையில், நாங்கள் விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பதைத் தவிற வேறு வழியில்லை. இந்த விருதை நாங்கள் புறக்கணிக்க விரும்பவில்லை, ஆனால் எங்கள் அதிருப்தியை தெரிவிப்பதற்காக இந்த விழாவில் கலந்துகொள்ளாமல், இன்னும் ஒரு தீர்வுக்காக காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டு, கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் வழங்காத தேசிய திரைப்பட விருதை வாங்க மாட்டோம் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 68 தேசிய திரைப்பட விருதாளர்கள் தேசிய திரைப்பட விருது விழாவை புறக்கணித்த நிலையில், தமிழ்த் திரைப்படத்துறையில் தீவிரமாக இயங்கும் ஒளப்பதிவாளர் செழியன், தனது முதல் முழு நீள திரைப்படமான To Let படத்திற்காகவும், இந்துத்துவத்திற்கும் சாதியத்திற்கும் எதிராக தனது Fandry, Sairat ஆகிய இரு திரைப்படங்களை முன்னிறுத்திய இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுளே தனது An Essay of the Rain படத்திற்காகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடமிருந்து தேசிய விருது பெற்றுள்ளனர்.
– பாரதி சண்முகம்

”பொண்ணுங்க சமையல் கத்துங்க, பசங்க அப்பாவோட உழைப்பை கத்துங்க”: நடிகர் விவேக்கின் சர்ச்சை ட்விட்!

நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோடை விடுமுறையில் மாணவர்கள் எப்படி பொழுதை கழிக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

“மாணவ செல்வங்களே, குழந்தைகளே, கோடையை கொண்டாடுங்கள். விளையாட்டுக்குப் பின் நிறைய தண்ணீர் அருந்துங்கள். பெண்களே! உங்களுடை அம்மாவுக்கு அடுப்பறையில் உதவுங்கள்; சமையல் கற்றுக்கொள்ளுங்கள். பையன்களே! உங்களுடைய அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில் சென்று குடும்பத்துக்காக அவர் எப்படியெல்லாம் உழைக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள். பிணைப்பு உறுதியாகும்!” என ட்விட்டில் சொல்லியிருக்கும் விவேக்கின் ‘கருத்து’ கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பாலின பாகுபாட்டை சமூகத்திலிருந்து அகற்றும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், பெண்கள் பணிபுரிவது அதிகரித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் சமையல் கற்க வேண்டும் என்பதும் ஆண் குழந்தைகள் அப்பாவின் உழைப்பை கற்க வேண்டும் என்பதும் அடிப்படைவாதம் ஆகாதா என பல பெண்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், ஆண்கள் மட்டுமே குடும்பத்துக்காக உழைக்கிறார்கள் என்பதையும், பெண்கள் வீட்டில் ‘ஜாலியாக’ சமையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விவேக் என்னும் பிரபலம் சொல்கிறார். இது எத்தகைய மூடக் கருத்து என்றும் பல பெண்கள் எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.

பா.ஜீவசுந்தரி

“பாலினப் பாகுபாட்டை இந்த ஜோக்கர் எப்படி நோகாம சொல்லிக் குடுக்குறாரு. சினிமா காமெடியன்களெல்லாம் ஏன்யா வில்லனாவே இருக்கீங்க.” என காட்டமாக கருத்தை தெரிவித்துள்ளார் எழுத்தாளரான பா. ஜீவசுந்தரி.

பெண் குழந்தைகள் அடுப்படியிலேயே இருந்தால் போதுமா? ஆண் பிள்ளைகள் அப்பா போலவே தனக்கு வரும் மனைவியை அதிகாரம் செய்துகொண்டு, காலாட்டிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாமா? இரு குழந்தைகளும் வீட்டின் அனைத்து வேலைகளையும் கற்க வேண்டும் என்பதைத்தானே கரடியாய்க் கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் பெண் குழந்தைகள் எப்படியும் படித்து வேலைக்குப் போகப் போகிறார்கள். அத்துடன் வழக்கம் போல கூடுதல் சுமையாக சமையல், மற்றும் வீட்டு வேலைகள். இதில் உடைப்பு வேண்டாமா? ஆண் பிள்ளைகள் வீட்டு வேலைகள், சமையலை எப்போதுதான் கற்பது? கால மாற்றத்துக்கேற்ப மாற்றங்கள் வீட்டுக்குள் முதலில் நிகழ வேண்டாமா?அதிலும் ஆண் பெண் பாகுபாடு காட்டுவது சரியல்லவே. இரு பாலரும் அனைத்து வேலைகலையும் பழக வேண்டும்” என தனது முகநூலில் எதிர்வினையாற்றியிருக்கும் பா. ஜீவசுந்தரி,

இவர்கள் கருத்து சொல்வதை விட பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கலாம்” என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் தனது பாலின பாகுபாட்டை வளர்க்கும் ட்விட்டுக்கு எதிர்ப்பு வந்தும் உணராத விவேக்,

“அன்பு நண்பரே! தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்துப் பெற்றோரும் ஆமோதிப்பர். என்னை புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி.” என்கிறார்.

எஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை

ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை மலினப்படுத்திய எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை…

“பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் சித்தரித்து எழுதப்பட்ட அவதூறு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். ’ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்’ என வக்கிரமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததை அடுத்து, உடனே அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறார்.

நேற்று சொன்ன கருத்தை இன்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குக் கூட துணிச்சலோ, நேர்மையோ இல்லாத இந்த ஜந்துக்கள் தங்களை ஆகப்பெரிய அறிவுஜீவிகளாக கருதிக்கொள்கின்றன. இவர்கள் எழுதும் குப்பை ட்விட்டுகளையும், ஸ்டேட்டஸ்களையும் ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டால் மயிலாப்பூர் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைகாரன் கூட இவர்களை மதிக்கமாட்டான்.

எனினும், ’திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழ்நாட்டில் பெரியார் சிலை அகற்றப்படும்’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதி, கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், ‘அதை நான் எழுதவில்லை. என்னுடைய அட்மின் எனக்குத் தெரியாமல் எழுதிவிட்டார்’ என்று சொன்னார் இதே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா. அவருடன் ஒப்பிடும்போது ’அதை ஷேர் செய்தது நான் அல்ல’ என மறுக்கவில்லை என்பதால், எஸ்.வி.சேகர் துணிச்சல் மிக்கவர்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த துணிச்சல் எஸ்.வி.சேகரின் சொந்த மனநிலையில் இருந்து வரவில்லை. ’வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று சொன்ன சங்கராச்சாரியின் மரபு அது. இப்படி எல்லாம் இவர்கள் பேசிவிட்டு; இன்னமும் பேசிக்கொண்டு, இங்கே உலவ முடிகிறது, உயிர்வாழ முடிகிறது என்பதுதான் தமிழ்மண்ணின் அவலம்; அவமானம்.

இப்போது எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள் திடீரென மேலெழுந்து வந்து, தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் சவுண்ட் விடுவதன் காரணம், தமிழகத்தில் எழுந்திருக்கும் மிக வலுவான பா.ஜ.க. எதிர்ப்பு; மத்திய அரசு எதிர்ப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்கு நோட்டாவைக் கூட தாண்ட முடியாத அளவுக்கு இங்கே தாமரையின் தண்டு அழுகிப்போய்விட்டது. அந்த துர்நாற்றத்தில் இருந்து பிறக்கிறது இவர்களின் ஊளைச் சத்தம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே ஓரணியில் ஆர்ப்பரித்து எழுந்தது. தமிழகம் வந்த நரேந்திர மோடியை #Gobackmodi என ட்விட்டர் ஹேஸ்டேக்கில் உலக அளவில் அலறவிட்டார்கள் தமிழர்கள். ’எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓட்டு கேட்டு உள்ளே வர வேண்டாம்’ என வாசலில் எழுதி தொங்கவிடுகிறார்கள் மக்கள். இந்த அவமானம் பொறுக்க முடியாத பார்ப்பன கும்பல் உண்மைகளை வெளியில் கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறது. எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் பதிவை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று, ஊடகப் பணிக்கு வரும் பெண்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். சவால் நிறைந்த செய்திக் களம், பணி நேரத்தை நீட்டிக்கும் பிரேக்கிங் செய்திகள், இரவு நேர ஷிப்ட் என பெண்களுக்கு என தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இங்கே இல்லை. தங்கள் அறிவை, உழைப்பை அளித்துதான் ஒவ்வொரு படியும் முன் செல்கிறார்கள். இந்த உண்மையின் சிறுதுளியும் தெரிந்துகொள்ளாத எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன பொறுக்கி, தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களை character assassination செய்கிறார். இனியும் இதை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

இது ஊடகத்தில் பணிபுரியும் பெண்களின் பிரச்னை அல்ல. எஸ்.வி.சேகர், அவர்களை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. உடன்பணிபுரியும் ஆண்களையும் அவர் character assassination செய்திருக்கிறார். ஊடக முதலாளிகள் இந்த அடிப்படையில்தான் தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றனர் என அவர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார். எனவே இது நாம் அனைவரும் இணைந்து கூட்டுக்குரலில் கண்டிக்க வேண்டிய பிரச்னை.

இணைந்து நிற்போம். இன்று ஏப்ரல் 20, மாலை 4 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.சேகரை கைது செய்யக்கோரி புகார் கொடுக்க பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்”.

ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஈழ விவகாரத்தில் சீமான் மக்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள் அம்பலமாகத் தொடங்குகின்றன, ஆனால் நாம் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம் இதில் இருக்கிறது. அது சீமானின் பொய்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்ததில் வைகோ நெடுமாறன் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்பதுதான். ஏனெனில் உணர்வுத்தளத்தில் நின்று மக்களிடம் நிறைய பொய் சொன்னவர்கள் இந்த இரண்டு பேரும். அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்த மேடையில் நின்றுகொண்டுதான் சீமான் ஈழ வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். ஆனால் இன்று சீமான் மட்டும்தான் பொய்யர் போலவும் இந்த இரண்டு பேரும் உத்தமர்கள் போலவும் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

வைகோவைக் கூட பொய்யர் என்பதை ஒரு பகுதி மக்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் நெடுமாறன் பொய்யர் என்றால் துணுக்குறுவார்கள். ஏனெனில் பொய் என்பதன் வரையறை, இங்கு எல்லாரும் நினைப்பதைப் போல “உண்மைக்கு மாறான ஒன்றை உரைப்பது” என்பதாக அறியப்பட்டிருக்கிறது. அல்ல. அரசியலில் பொய்யின் பரிமாணம் என்பது வேறு. அது உண்மையைச் சொல்லாமல் இருப்பது, மக்களிடம் பரவும் பொய்யை அற்ப அரசியல் காரணங்களின் அடிப்படையில் அனுமதிப்பது, கள்ள மவுனம் சாதிப்பது என்பதாக அதன் அலகுகள் விரிவடைகின்றன.

மேலும் ஒரு பொய்யின் வழியாக ஒருவர் அடைய சாத்தியம் உள்ள பொருளியல் ஆதாயம் ஒரு கணக்கீடாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் தவறு. அந்த அடிப்படையில்தான் வைகோவும் நெடுமாறனும் புனிதர்களாகக் கட்டமைக்கப்படுகிறார்கள்.

நேரடியான பொய்களுக்கு உதாரணம், சீமானுக்கு பிரபாகரன் துப்பாக்கி சுட பயிற்சியளித்தது, இந்தியா ராணுவத்திடமே இல்லாத நவீன துப்பாக்கிகளை பிரபாகரன் சீமானுக்குக் காண்பித்தது, ஆமைக்கறி உணவளித்தது போன்ற சீமானின் சில்லரைப் பொய்கள். நாம் தமிழர் தம்பிகளைத் தவிர மீதி இருக்கும் தமிழக சிறுவர்கள் அனைவரும் இதைக் கேட்கையில் சிரித்துவிட்டுக் கடந்துவிடுவார்கள். இதெல்லாம் சீக்கிரம் வெளுக்கும் என்று சீமான் சொல்லும்போதே எல்லாருக்கும் தெரியும். இப்போது வெளுக்கிறது. அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

கொஞ்சம் ஆழமான பொய்களுக்கு உதாரணத்தைப் பார்ப்போம். ஈழ மக்கள் மீது அன்பு கொண்டிருந்த தமிழ் மக்களை உணர்வு ரீதியாகச் சுரண்டியதில் வைகோவுக்குப் பெரும் பங்கு உண்டு. கொஞ்சம் உற்று கவனித்தாலொழிய வைகோவின் பொய் தெரியாது. இன்று ஈழத்தில் விடுதலைப் புலிகள் முழுக்கவும் ஒழிக்கப்பட்டிருக்கும் சூழலில், பிரபாகரன் உள்ளிட்ட அதன் தலைமைகள் யுத்த நெறிகளுக்கு மாறாக குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கும் சூழலில் இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயலும் வைகோவின் செயலில் மறைந்திருப்பது இந்த சீமான் ரக பொய்யின் பண்பட்ட வடிவம்தான். (இப்போது போய் பாருங்கள். சங்கே முழங்கு யூடியூப் வீடியோவில் அவர் பிரபாகரன் பற்றி சொன்னது மட்டும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.)

நான் பிரபாகரனுடன் ஒரு மாதம் தங்கி போர்ப் பயிற்சி எடுத்தவன் என்று வைகோ அன்று சொன்னதன் நீட்சிதான் இன்று சீமான் சொல்லும் பொய்கள். அப்போது யாரும் வைகோவைப் பார்த்து சிரிக்கவில்லை. ஏனெனில் அப்போது வைகோவின் அரசியல் சமரசங்கள், வெற்று வாய் ஜாலங்கள், புரட்டு முஸ்தீபுகள் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு அம்பலப்பட்டிருக்கவில்லை. ஆனால் மநகூ காலத்தில் அவர் முழுக்கவும் வெளிப்படுத்திக்கொண்டார். அதனால்தான் “தம்பி… செயல்தலைவர் ஸ்டாலின்…” என்ற அவரது இப்போதைய கர்ஜனை வெறும் ஊளையாக மக்கள் பரப்பை எட்டுகிறது.

மிகவும் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில், பிரபாகரன் இறந்ததை வைகோதான் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருக்கவேண்டும். ஒரு போராளியின் மரணமாக அதை கவுரவப்படுத்தியிருக்கவேண்டும்.

வைகோவால் அதை ஏன் செய்யமுடியவில்லை, அதைத் தடுப்பது எது என்கிற கேள்விக்குள் நுழையும்போது அது நம்மை நெடுமாறனின் பொய்யில் கொண்டுபோய் நிறுத்தும். அது என்ன?

புலிகள் விவகாரத்தில் நெடுமாறனின் அரசியல் நிலைப்பாடு என்ன? புலிகள் இந்திய அரசுடன் இணக்கமாகப் போகவேண்டும். இல்லையெனில் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இலங்கை புலிகளை அழித்துவிடும். அது இந்திய இறையாண்மைக்கும் ஆபத்தாக முடியும். மேலும் ஈழ விடுதலை என்பது புலிகள் இந்தியாவுடன் கொண்டிருக்கும் நல்லுறவின் அடிப்படையிலேயே சாத்தியம் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. போர் உச்சத்தில் இருந்த அதன் இறுதி காலத்தில் கூட நெடுமாறன் எழுதிய தினமணி கட்டுரை இந்த சாராம்சத்தையை பேசியது.

ஆனால் எதார்த்தம் என்ன? இந்தப் போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான் என்றார் ராஜபக்சே. அதை இந்தியா இதுவரைக் காத்திரமாக மறுக்கவில்லை. எங்கெல்லாம் தனது போர்க்குற்றங்களுக்காக சர்வதேசப் பரப்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டதோ, தனிமைப்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அந்நாட்டை முழு மூச்சில் காப்பாற்றும் வேலையைச் செய்து அந்த உண்மையை இந்தியாவும் உறுதி செய்தது. இப்போதும் செய்கிறது.

இந்த அரசியல் உண்மையை நெடுமாறன் கும்பல் எங்ஙனம் தமிழர்களிடம் இருந்து மறைத்தது. அன்றைய கருணாநிதியின் பதவி வெறி பிடித்த ஊழல் அரசை, “ஈழ துரோக அரசாக” மக்கள் முன் கட்டியமைத்தது. அதனால் விளைந்த மக்கள் வெறுப்பை தனது அரசியல் வாழ்வு முழுக்கவும் ஈழத்திற்கு எதிர்நிலை எடுத்திருந்த ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியாக மாற உதவி செய்தது. மேலும் மன்மோகன் சிங்கைச் சுற்றி இருக்கும் மலையாள அதிகாரிகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளே இத்தகைய சீரழிவுக்குக் காரணம், அவர்கள்தான் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த திசையில் வழிநடத்துகிறார்கள் என்று இந்த விவகாரத்தை மிகவும் எளிமைப்படுத்தி அந்த இன அழிப்பின் பின்னிருந்த சர்வதேச சக்திகளின் பங்களிப்பு மக்கள் மத்தியில் விவாதமாக மாறாமல் பார்த்துக்கொண்டது.

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது. ஈழ வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில்தான் இப்போது எவ்வளவு மலைப்பாக இருக்கிறது. எப்படியெல்லாம் மனம் கசிகிறது. ஆனால் இவர்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் உலவுகிறார்கள். கிஞ்சித்தும் கூச்சமின்றி ம. நடராசனைக் கூட விடுதலைப் போராளியாக விதந்தோதுகிறார்கள்.

இந்த விவகாரத்தில், இறுதியாக வியாபாரத்துக்கு வந்த சீமான் குளத்து ஆமை என்றால் வைகோவும் நெடுமாறனும் கடல் ஆமைகள் அவ்வளவே!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா

பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதால்தான் வசைபாடுகிறார்கள்” என்று தெரிவித்தார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்” என சமூக-அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூலில் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள பதிவில்…

“‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா 2014 ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது வைகோ வை உடன் வைத்துக்கொண்டே சொன்னார்.

அப்போது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நேரடியான பெரியார் இயக்கங்களே அமைதியாகத்தான் இருந்தன.

‘எதிர்க்கட்சியா இருக்கும்போதே நம்மள இவனுங்க ஒண்ணும் பண்ணல, இப்ப நாம ஆளும் கட்சி அதுவும் திரிபுராவிலேயே கம்யுனிஸ்ட் கட்சியை வீழ்த்திவிட்டோம்’ என்ற திமிரில் ‘பெரியார் சிலையை இடிப்பேன்’ என்று துணிந்து சொல்ல முடிந்தது எச். ராஜாவால்.

இந்த நான்கு ஆண்டுகளில் பெரியார் என்கிற பெரும் நெருப்பு, இளைஞர்கள் மத்தியில் பற்றி எரிகிறது. தந்தை பெரியார் குறித்து யார் இழிவாகப் பேசினாலும் அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்,

பெரியார் எதிர்ப்பு விடுதலை புலி ஆதரவாளராகவே இருந்தாலும், புலிகளின் தீவிர ஆதரவாளராக இருக்கிற பெரியாரிய இளைஞர்களே, ‘நீ பெரியார் எதிர்ப்பாளனாக இருந்தால் ஓடி போ’ என்று விரட்டியடித்தார்கள்.

இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிற பெரியாரின் இந்த அரசியல் எழுச்சியே பிரபல அரசியல் கட்சி தலைவர்களையும் உடனடியாகக் கடுமையான வார்த்தைகள் கொண்டு எச். ராஜாவை கண்டிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியார் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பெரியார் எதிர்ப்பாளர்கள் கூட எச். ராஜா வை கண்டிக்க வைத்த சிறப்பு, தீவிர பெரியாரிஸ்டுகளாக இருக்கிற எனது அருமை இளைஞர்களையே சேரும்.

குறிப்பாக இணையத்தில் இளைஞர்களின் பெரியாரியல் எழுச்சி, எச். ராஜா வை மட்டுமல்ல, இனி பெரியாரை சுற்றி வளைத்து மூக்கை தொடுவது போல் விமர்சிக்கிற எவரையும் விடாது.

எனக்கு அடுத்தத் தலைமுறை பெரியாரியலில், என்னையும் தாண்டியிருக்கிறது. எவ்வளவு பெரிய மகிழ்ச்சி எனக்கு இது.” என எழுதியுள்ளார்.

 

“அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”

தமிழ் தாயி பாட்டுக்கு உட்காந்திருக்கட்டும் இல்லை படுத்திருகட்டும்.

அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை அதுவும் தனியாக.

இதைத்தான் ஒழித்துக்காட்டியது திராவிட இயக்கம்.

வணக்கம்:

நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்த சமூகத்தை, அப்படிச் சொல்லுவது தான் பெருமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ’வணக்கம்’ என்று சொல்ல வைப்பதற்காக வீதியில் இறங்கி, காண்போரையெல்லாம் ‘வணக்கம் அண்ணே’, வணக்கம் தம்பி, வணக்கம் அய்யா, வணக்கம் வணக்கம் என்று தங்கள் மாலை நேரத்தை வணக்கத்திற்காகவே செலவிட்டது திராவிடம்.

துண்டு/சால்வை போர்த்துதல்:

அங்கவஸ்திரத்தை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்று பல சாதிய குறியீடுகள் இருந்தன, அதில் ஒன்று மேல் சாதியினரை கண்டால் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும். உங்கள் வீட்டு சுப காரியங்கள் ஞாபகம் வருகிறாத ஏன் ஐயர் முன் துண்டை இடுப்பில் கட்டினீர்கள் என்று. இதை ஒழிக்கத்தான் திராவிட மேடைகளில் அனைவருக்கும் துண்டு/சால்வை தோளில் போர்த்தினார்கள்.

அவர்களே:

இப்பொழுது அவர்களே என்று மேடைகளில் பேசும் போது அட போங்கைய்யான்னு போர் அடிக்கதல்லவா, அப்போது டேய் முனியா டேய் தங்கசாமி என்று அழைத்தவர்களை திரு முனியன் அவர்களே, திரு தங்கசாமி அவர்களே இன்னும் ஆயிரம் பேர் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்கவே திருவும் அவர்களேவும் அத்தனைமுறை சொன்னனர் திராவிட இயக்கத்தினர்.

இன்னும் ஆயிரமிருக்கு அவர்கள் அழித்த குறியீடுகள்.

வசந்த் தங்கசாமியின் முகநூல் பதிவு.

விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள்.

பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று ஜிக்னேஷ் கூறுகிறார் (இதை அப்போது அங்கிருந்த எழுத்தாளர் சல்மா உட்பட பலரும் சுட்டிகாட்டியுள்ளனர்) இதற்கு அங்கிருந்த , குறிப்பாக ஆங்கில ஊடக நிருபர்கள் , அதிலும் குறிப்பாக டைம்ஸ் நவ் நிருபரான, தமிழகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தலைமையில்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதை  தன்னுடைய டிவிட்டரில், ஷபீரே பதிவு செய்திருக்கிறார் .

ரிபப்ளிக்  டிவி வெளியேறாவிட்டால்  பேட்டியளிக்க முடியாது  என்று ஜிக்னேஷ் சொல்ல, எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார் என்று ஷபீர் தலைமையிலான   நிருபர் கும்பல் தகராறு செய்ய, அங்கே களேபரம் ஆகி இருக்கிறது. பின் “உங்கள் பேட்டியை புறக்கணிக்கிறோம்” என்று இந்த நிருபர்கள் விலக, ஜிக்னேஷும்  கிளம்பிச் சென்று விட்டார்.   இந்த சம்பவம் ட்விட்டரில் தேசிய அளவில் trend ஆகிறது. அதை ஷேர் செய்து ஷபீர் புல்லரித்தும் கொள்கிறார் . இதையடுத்து “ஜிக்னேஷ் தீவிரவாதி,  பயங்கரவாதி” என்று மோடி ஆதரவாளர்கள் தாக்கத்தொடங்கி விட்டனர்.

அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை வெளியேற சொல்லி ஜிக்னேஷ் மட்டும்தான் சொல்லி இருக்கிறாரா ? என்றால், இல்லை…. ஜே.என்.யூ பல்கலை  மாணவி ஷேலா ரஷீத்,  காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர்,  சசி தரூர் என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. குறிப்பாக சஷி தரூர் விவகாரத்தில், அவரின் வீட்டின் முன்னே வேட்டையாடும் ஒரு நாயின் குரூரத்துடன் ரிபப்ளிக் டிவி காத்திருந்தது ஊரறிந்த சாட்சி. இதை எதிர்த்து அவர் நீதிமன்றம் செல்ல, “சுனந்தா புஷ்கர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சஷி தரூரை எந்த ஒரு ஊடகமும் வற்புறுத்த முடியாது என்றும் அது தொடர்பாக அமைதியை கடைப்பிடிப்பது அவருடைய அடிப்படை உரிமை” என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீவிரவாத வலதுசாரித்தனத்தின்  அடிமையாக மாறியிருக்கும் அர்னாப், தன்னுடைய தொலைக்காட்சி மூலம் என்ன செய்கிறார்? இடதுசாரிகளை இந்தியத் துரோகிகளாக காட்சிப்படுத்துகிறார். இஸ்லாமியர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாகத் தொடர்ந்து முத்திரை குத்துகிறார்.  ஜேஎன்யூவின் இளம் தலைவரான ஷேலா ரஷீதை – காஷ்மீர் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றே ஒவ்வொரு முறையும், வசைபாடுகிறார். அவர்களின் செயல்கள் கவனத்தை ஈர்க்கும்போதேல்லாம், தன் விஷத்தை ரிபப்ளிக் என்கிற ஊடகத்தின் மூலம் கக்குகிறார் அர்னாப். குறைந்தபட்ச அறத்துடன், குறைந்தபட்ச மனிதத்துடன்  நடந்துகொள்பவர்கள் எப்படி அர்னாப் போன்ற ஒருவருக்கு ஆதரவாக நிற்க முடியும்.

குறிப்பாக,  தலித் புரட்சியாளர் என்ற வெளிச்சம் ஜிக்னேஷ் மேவானி  மீது விழத்தொடங்கியது முதலே  அவரை இழிபடுத்தி செய்திகளை வெளியிடுவதை முதல் வேலையாக வைத்திருக்கிறது ரிபப்ளிக் டிவி. சில நாட்களுக்கு முன் ஜிக்னேஷ், ஷேலா, மற்றுமொருவர் என்று மூன்று பேர் காபி அருந்தும் புகைப்படம் ஒன்றை, மோடி ஆதரவாளர்கள் கீழ்த்தரமாக போட்டோஷாப் செய்து வெளியிட, அதை தன்னுடைய டிவிட்டரின் பகிர்கிறது ரிபப்ளிக்.

0.jpg

இப்படி தனிப்பட்ட முறையிலான வன்மத்தை கக்கும் ரிபப்ளிக் தொலைக்கட்சியிடம் ஜிக்னேஷ் ஏன் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் ? ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க முடியாது என்று சொல்வது அவருடைய அடிப்படை உரிமை அல்லவா ???

“ஜெயாவிடம் இப்படி அதிகாரம் செய்ய முடியுமா” என்று டிவிட்டரில் ஒருவர், ஷபீரிடம் கேட்கிறார். அதற்கு “ஜெ, கரு” இருவரும் இப்படி மோசமாக (ஜிக்னேஷப் போல) நடந்துகொள்ள மாட்டார்கள்” என்று ஷபீர் பதில் அளிக்கிறார்.

ஜெ.வின் ஆட்சியில்  கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் மீது அதிமுக குண்டர்களால்  நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலும், குறிப்பாக ஜெயஸ்ரீ என்கிற பெண் நிருபரின் மண்டை உடைக்கப்பட்டதும்  ஷபீர் என்கிற முன்னாள் ராஜ் டிவி நிருபருக்கு கண்டிப்பாக தெரிந்தே இருக்கும்.

அவ்வளவு ஏன், ஊடகங்களை நோக்கி காரி துப்பிய விஜயகாந்தை இந்த நிருபர்களால் புறக்கணிக்க முடிந்தது. ஆனால், .”ஜெ.விடம் கேள்வி கேளுங்கள்”  என்று விஜயகாந்த் சொன்னதை செய்ய முடிந்ததா?

விஜயகாந்தின் கேள்வியையடுத்து  2015 dec.29-ம் தேதி தலைமைச் செயலக வாசலில் நிருபர்களும் காத்துக்கிடந்தார்கள்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றிய விகடன் செய்தியின் ஸ்க்ரீன் ஷாட் கீழே

Capture.JPG

இதுதான் ஜெயலலிதா. இது Silly-யான வேலையாக தெரியவில்லை போல ஷபீர் என்கிற முன்னாள் ராஜ் டிவி நிருபருக்கு.  அவ்வளவு ஏன்….  பிரபல தமிழ் தொலைகாட்சிகளின் தற்போதைய நிருபர்களின் பதிவுகளைப் படியுங்கள்…

Untitled.png

ஜெ.எப்போதுமே அதிகார பீடம்தான். ஆனால் டீ விற்று வாழ்க்கையில் முன்னேறியதாக தன்னை முன்னிறுத்தும் நம்முடைய பிரதமர் இந்த நான்கு வருடங்களில் எப்போதாவது ப்ரெஸ் மீட் என்ற ஒன்றை நடத்தி இருக்கிறாரா ? அல்லது அர்னாப் போன்ற அடிமையைத்தவிர வேறு யாரிடமாவது one to one உட்கார்ந்திருக்கிறாரா ??? இவர்களைக் கேள்வி கேட்க, இவர்கள் முன் solidarity காண்பிக்க என்றாவது ஷபீர் தலைமையிலான நிருபர் கும்பலுக்கு துணிவு உண்டா? ஜிக்னேஷ் மேவானி என்கிற தலித் தலைவருக்கு எதிராக மட்டும் இவர்கள் இப்படியான அதிகாரத் தொனியை காட்டுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாகத்தானே இருக்கிறது.

ஷபீர் அஹமத் என்கிற ஒரு செய்தியாளர் தமிழ்நாடு போன்ற பெரியாரின் மண்ணில் இருப்பதால்தான் அவர் இன்னமும் இஸ்லாமிய தீவிரவாதியாக காட்சிப்படுத்தப்படாமல் இருக்கிறார். இதுவே அவர் வடமாநிலத்தில் பிறந்திருந்து, அமீத் ஷாவையோ அல்லது ஷாவின் வீட்டு நாயை விமர்சித்திருந்தால் கூட “பாகிஸ்தானுக்கு” நாடு கடத்தப்பட்டிருப்பார்.

இஸ்லாமிய இனத்துக்கெதிராக, ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு எதிராக  விஷமழை பொழிந்து கொண்டிருக்கும் அர்னாபின் தொலைக்காட்சியை கண்டித்து , அதே விஷத்தை தங்கள் தலையில் ஏற்றி பாம்புக்குட்டிகளாக அலைந்து கொண்டிருக்கும் அர்னாபின் நிருபர் குழுவை கண்டித்துதானே இது போன்ற போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் ஷபீர்.

ஜிக்னேஷை புறக்கணித்ததாக காலர் தூக்கி விட்டு எக்காளமிடும் ஷபீர் போன்ற நிருபர்களிடம் நினைவுபடுத்த….

“பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை”

என்கிற martin niemöller-ன் கவிதை எப்போதும் கைவசம் இருக்கிறது. நீதிபதிகளே மக்கள் முன் வரும் காலமிது. நீங்கள் இறங்கி வரும்போது உங்களுக்காக பேசுவதற்கு யாருமில்லாத ஒரு சூழலையே நீங்கள் உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்.

அதற்கு முன்,  உங்களின் டிஆர்பி வெறிக்காகத்தான் ஜிக்னேஷ். அவரின் வெற்றிகளுக்கு  சிறுதுளி அளவு கூட உங்களுக்குப்  பங்கில்லை என்பதை  புரிந்து கொள்ளுங்கள். 

 

 

 

 

 

 

 

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.

ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும்.

அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும் என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார். இதர பெண்களைப் போல் சாதாரண மணவாழ்வை ஆண்டாள் வாழவில்லை என்றே வைணவ நூல்கள் கூறுகின்றன. இவற்றைக் கொண்டு ஓர் ஆய்வாளர் அத்தகைய ஒரு முடிவுக்கு வந்தால் அது பாவமா? தேவதாசி முறையே இல்லை என்று இந்த மனுவாதியால் கூற முடியுமா? அதை கடவுளின் பெயரால் பராமரித்தது வருணாசிரமவாதிகளே என்பதற்கு ஆழ்வார்கள் வாழ்வு பற்றிய “குரு பரம்பரை” நூலிலேயே ஆதாரம் உள்ளது.

எச். ராஜாவின் இந்த கொலை மிரட்டலை அனுமதித்தால் மெய்யான வரலாற்று ஆய்வுகளே தமிழகத்திலும் காணாமல் போய்விடும். தமிழகமும் வடமாநிலங்கள் போல பிராமணய உத்தரவுகளால் நிறைந்துவிடும். இந்து மதம் பல பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பிரிவுதான் பிராமணிய மதம். அதைச் சார்ந்தோர் “இந்து மதம்” என்பதன் பெயரால் உத்தரவுகள் போடுகிறார்கள். எச் ராஜா போன்றவர்கள் காத்தவராயனையும் மதுரைவீரனையும் முனியாண்டியையும் கருப்பணசாமியையும் வழிபடுவார்களா? மாட்டார்கள் என்பதை பஞ்சம, சூத்திர இந்துக்கள் உணர்ந்து கொண்டால் இவரைப் போன்றவர்களின் உண்மை சொரூபம் வெளிப்பட்டுப் போகும்.

பேராசிரியர். அருணனின் முகநூல் பதிவு.

முகப்பு ஓவியம் நன்றி: மணிஷா ராஜு

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

“அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார்.

“பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் உடலை மேம்படுத்தும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை சொல்லித்தருவதை நான் வரவேற்கிறேன்.  ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் சமூகத்தின் மீதான தாக்குதல் நடக்கும்போது நாட்டை பாதுகாக்க பயன்படும் என நான் நம்புகிறேன்.

எவராவது என்னிடம் ஏன் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனக் கேட்டால், நான் சொல்வேன்…நாட்டுக்கு அரசியமைப்பு சட்டம் இருக்கிறது, ஜனநாயகம் இருக்கிறது, ராணுவம் இருக்கிறது. நான்காவதாக ஆர்.எஸ். எஸ். உள்ளது என சொல்வேன்” என்று பேசிய அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை கைவிட்டதாகவும் பேசியிருக்கிறார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

மேலும்,

“மதசிறுபான்மையினர் ‘மதசார்பின்மை’ என்பதை தங்களுடைய பாதுகாப்புகாக பயன்படுத்துகிறார்கள். ஆனால், மதசார்பின்மை என்பதற்கான பொருள் அதையும் கடந்தது. அதாவது ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் பாதுகாக்கக்கூடியது. ஒருவரின் கண்ணியம்,  பாகுபாடற்ற அணுகுமுறையுடன், சார்பற்று அமைய வேண்டும். மதசார்பின்மை என்பது ஒரு மதத்தை பாதுகாப்பது என தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது” என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பேசியுள்ளார். சிறுபான்மையினர் எப்போது அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள் என்றால், பெரும்பான்மையினருக்கு கிடைக்காததை தங்களுக்குள்ள உரிமைகளாக கோரும்போதுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது.  இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து  நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.

ருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.

‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வரும், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.

இதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில், தான் impotent என்ற வார்த்தையை எந்த அர்த்ததில் பயன்படுத்தினேன் என ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

முதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது.

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனர்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

நான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.

நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தான். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.

மேலே கூறிய ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த சர்ச்சை பற்றி அடுத்து வரும் டிவிட்டரில் கானாலாம். எனவே நான் டிவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.

யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்

அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது.  இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து  நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.

‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வரும், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.

இதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.

“வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா

ஓவியா

தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழர் வயப் படுத்தியதிலும் சிற்றிதழ்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல்வேறு விசயங்களை பொது மக்கள் வழிக் கருத்துக்களாக வெளிக் கொணர்ந்ததிலும் ஏன் பெண்மயப் படுத்தியதிலும் ஒரு முன்மாதிரியை உண்டுபண்ணியது நீயா நானா நிகழ்ச்சியாகும். நிச்சயமாக நீயா நானா விக்கென தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு தனித்த பெருமையான இடம் உண்டு. பெண்ணுரிமைக்கான குரல்களை நீயா நானாவைப் போல் அழுத்தமாக பதிவு செய்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவது இன்றளவும் கூட சிரமம்தான்.

எனக்கு பல நேரங்களில் வாய்ப்பளித்தற்காக பேசுகிறேன் என்று நினைப்பார்களே என்ற கூச்சத்தாலேயே நான் நீயா நானாவை எங்கும் பதிவு செய்து பேசியதில்லை. ஆனால் இப்போது இதனைச் சொல்ல வேண்டிய தருணம் என்பதால் சொல்கிறேன். இந்த அளவுக்கு எங்கள் மனதில் பெருமைக்குரிய இடம் பெற்றிருக்கும் நீங்கள் இப்போது நடந்து கொண்டிருப்பது என்னைப் போன்றோரை மிகவும் வருந்த செய்து விட்டது ஆண்டனி.

விஜய் டிவி பொழுது போக்கு நிகழ்ச்சிகளைத் தருவதை முதன்மையாகக் கொண்ட ஊடகம் என்பதும் நீயா நானாவும் அது போன்ற விவாதங்களை பல நேரத்தில் நடத்தும் என்பதையும் நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால் தமிழகப் பெண்கள் அழகா கேரளப் பெண்கள் அழகா என்பது ஆண்களின் பார்வையை அப்பட்டமாக வெளிப் படுத்தும் ஒரு தலைப்பு. சில நேரங்களின் இது போன்ற ஒரு தலைப்பை வைத்து விட்டு நிகழ்ச்சியை நீங்கள் சிறப்பாக நடத்திச் சென்றது உண்டு. நீங்கள் இதனை எப்படி கையாண்டிருந்தீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனாலும் அந்தத் தலைப்பும் உங்கள் பிரமோவும் ஒரு பதட்டத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கிய போது நீங்கள் ஒரு நேர்மறையான உரையாடலை அவர்களிடம் நடத்தியிருக்கலாம். சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். நீங்கள் சனநாயகபூர்வமாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

அதிலும் நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் குடும்பப் பெண்கள் என்ற சொற்றொடரை நீங்கள் பயன்படுத்தியது மிகவும் தவறு. நீங்கள் மிக நியாயமாகக் கேட்ட ஒரு கேள்வி திருமாவளவன் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற பெரிய தலைவர்கள் கண்டனம் செய்த போது கூட பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வராத தடை இதில் எப்படி நீங்கள் ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்தவுடன் வந்தது என்ற நியாயமான கேள்வி இதில் கரைந்து போய் விட்டது.

மொத்தத்தில் இது ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சி. இப்படி நடக்காமலிருக்க நீங்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

பெண்களை பண்டமாகப் பார்ப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று போராடிய அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக சுசீலா ஆனந்த், கீதா நாராயணன் ஆகியோருக்கு.

எது அழகு? எது அசிங்கம்?

ஜமாலன்

ஜமாலன்

கருப்பு-வெள்ளை என்பது கீழைத்தேயவியல் எனப்படும் ஓரியண்டிலஸத்தில் உருவாக்கப்பபட்ட ஒரு பின்காலனியச் சிந்தனை. இது புரியாது கருப்புத்தோலும் வெள்ளை முகமூடியும் கொண்ட பின்காலனிய மனநிலையின் விளைவுதான் நிறம் மற்றும் அழகு பற்றிய பொதுபுத்தி மனநிலை. ஃபிரான்ட்ஸ் ஃபனானின் ”கருப்பு தோலும் வெள்ளை முகமூடியும்” என்ற நூல் ஃபனானின் மற்றொரு முக்கிய நூலான ”The Wrethced of the Earth” என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சார்த்தர் கூறியதைப்போல ஐரோப்பிய மனசாட்சியை உலுக்கும் இந்நூல்களை வாசித்தால் பின்காலனியம் உருவாக்கிய நமது வெள்ளை முகமூடி கிழித்தெறியப்படும். உடலில் தமிழன் இந்தியன் இஸ்லாமியன் இந்து கிறித்துவன் சைவன் சாதியாளனாக ஆணாக இருக்கலாம் சிந்தனையில் உள்ளத்தில் வெள்ளையனாக இருக்கும் தீண்டாமை பார்க்கும் விதேசிகளே நாம்.

உலகின் குறிப்பிடத்தகுந்த குறியியலாலரும், தத்தவவியலாளரும், படைப்பாளியும், சிந்தனையாளருமான உம்பர்ட்டோ ஈகோ On Beauty என்றும் On Ugliness என்றும் இரண்டு நூல்களை கலைக்களஞ்சியங்கள் போன்று தொகுத்து உள்ளார். அழகு மற்றும் அசிங்கம் (அழகின்மை) பற்றிய வரலாறு என்று பலநூற்றாண்டுகளில் வழங்கப்பட்ட ஓவியங்கள், சிறப்பங்கள் எனத் தொகுக்கப்பட்ட அந்நூலில் ஈகோ அழகு என்கிற கருத்தாக்கம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய மையவாதமாக மாறி அது மறுமலர்ச்சிக் காலத்தில் அசிங்கம் என்கிற கருத்தாக்கத்தை கண்டு பிடித்து அதை உலகளாவியதாக மாற்றியது என்பதை புரிந்தேற்கச் செய்கிறார். அழகு என்பது கலையோடு எப்படி தொடர்புறுத்தப்பட்டு எப்படி சிறிது சிறிதாக கலையை ஆக்ரமித்தது என்பதையும் தொடரச் செய்கிறார். ஒரு விவசாயி, தையற்காரன், கைவினைஞன் உள்ளிட்ட பல அன்றாட தொழிலில் ஈடுபடுபவர்களின் உற்பத்தியை அழகு அடிப்படையில் கலையற்றதாகவும் வெறும் பண்டங்களாக கருதும் மனநிலை எப்படி வந்தது? அழகு என்பது கலையோடு மறுமலர்ச்சிக்காலத்தில் இணைக்கப்பட்டதே என்பதையும் அது ஐரோப்பியமையவாத பிரபஞ்சம் பற்றிய பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்பதை விவரிக்கிறது அந்நூல்கள்.

கார்ல் மார்க்ஸ் பண்டம் என்ற கருத்தாக்கத்தை தனது மூலதனத்தில் சிதைவாக்கம் செய்து அதனுள் செறிந்துள்ள சுரண்டலையும் அதற்கான வர்க்கநலனையும் வெளிப்படுத்தியும், உழைப்பு எப்படி பண்டமயமாதலில் உடலில் இருந்து அந்நியமாக்கப்படுகிறது என்பதையும் ஆதம் ஸ்மித் முன்வைத்த உழைப்பு என்பது உழைப்புச் சக்தியாக மாற்றப்பட்டு சந்தையில் விற்கப்படுவதும், உழைப்பாளி தன்னிலையற்ற எந்திரமாகி தன் உழைப்பை தானே நுகரமுடியாத அந்நியமாதலுக்குள் ஆட்படுகிறான் என்பதையும் விவரிக்கிறார். இந்த அந்நியமாதலின் அரசியல் அழகு என்று கட்டமைக்கப்பட்ட தன்னுணர்வின் ஒரு அரசியல் வெளிப்பாடே என இதை விரித்து பொருளுரைக்கலாம். காரணம் படைப்பணர்வு என்பது அழகுடனும், அழகியலுடனும் உறவுபடுத்தப்பட்டு உள்ளது.

எட்வர்ட் சைத் தனது ஓரியண்டலிஸம் என்ற நூலில் கருப்புXவெள்ளை எப்படி மேற்கத்தியம் என்ற கருத்தை கட்டமைத்து ஐரோப்பிய மையவாதத்தை உருவாக்கியது என்பதை விவரிக்கிறார். வெள்ளை என்பதற்குள் செறிந்துள்ள இனவாத, நிறவாத அரசியல் எப்படி பின்காலனிய நாடுகளின் அழகியலாக வடிவமைந்து இன்றுவரை வெள்ளைத்தோல் வேட்கையாக மாறியுள்ளது என்பதை விவரிக்கிறார்.

நாம் நமது அரசியலை அல்லது நமது உடலில் செறிந்துள்ள இத்தகைய அழகுXஅசிங்கம் பற்றிய இனவாத நிறவாத அரசியலை வெட்டி எறியாமல் பாசிச எதிர்ப்போ அல்லது சமத்துவ அரசியலோ பேசவே தகுதியற்றவர்கள் என்பதை உணரவேண்டும்.

இந்த நிறவெறி மற்றும் அழகுXஅசிங்கம் இவைதான் இந்தியாவில் நிலவும் தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தின் பாசிச வேர். தீண்டாமையை ஒழிக்க இத்தகைய அரசியல் ஒர்மையை பெற வேண்டும் அல்லது நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் எட்வர்ட் சைத் சொன்னார் “Check your politics before enter it” என்றார். எந்த ஒன்றிலும் நுழைந்து கருத்து சொல்லும் முன், பேசுமுன், எழுதும் முன், செயல்படும் முன் நமது அரசியலை குறிப்பாக நமது உடலரசியலை ஒருநிமிடம் சோதித்து அறிவது அவசியம். கலை இலக்கியவாதிகள், கவிஞர்கள் தங்கள் படைப்புகளின் வழிதான் இந்த அழகியல் பற்றிய பார்வையை சமூகத்தில் கட்டமைக்கிறார்கள் என்பதால் அவர்கள் அதிக தன்னுணர்வுடன் இந்த அரசியலை புரிந்துகொள்வது அவசியம். அழகு என்பது என்ன? அதன் சமூகக்காரணிகள் என்ன? அதன் வெளிப்பாடு என்ன விளைவை உருவாக்குகிறது? அதன் வரலாறு என்ன? என்பது போன்றவை முக்கியம்.

எனது மொழியும் நிலமும் நூலில் ”அழகிய விளிம்புகளும் அதிகார மையங்களும்” மற்றும் ”கலாச்சார அரசியலில் கவனத்தில் இருத்த வேண்டிய புள்ளிகள்” என்ற காலக்குறி 1995 இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ”அழகிய மையங்களும் அதிகார விளிம்புகளும்” பிறகு பிரேம் நடத்திய அமீபா சிற்றிதழில் மறு பிரசுரம் ஆனது. வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து உரையாடலை தொடரலாம்.

ஜமாலன், எழுத்தாளர்.

#நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் ‘தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணிய, முற்போக்கு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.  நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது கருத்துரிமையை பறிக்கும் செயல் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் சர்ச்சை உருவான நிலையில், திங்கள் கிழமை நியூஸ் 18 தொலைக்காட்சி, ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆண்டனி, இயக்குநர், கருத்தாளர் இளங்கோ கல்லணை கருத்துரிமையை பறிக்கும் செயல் எனவும் மனிதி அமைப்பைச் சேர்ந்த சுசீலா ஆனந்த், பெண்ணிய செயல்பாட்டாளர் கீதா இளங்கோவன், பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் ஆகியோர் நீயா நானா தலைப்பில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியும் பேசினர்.  நெறியாள்கை செய்தார் மு. குணசேகரன்.

காலத்தின் குரல் விவாதத்தின் இறுதியில் ஆண்டனி, ‘குடும்பப் பெண்கள்’ என்றொரு வார்த்தையை சொன்னார். அது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. நாகரிகமான மொழியில் எழுதப்பட்ட சில பதிவுகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்…

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்:

 

பிரீடம் ஆப் எக்ஸ்பிரசன் ஈஸ் எ ரைட் ஆஸ் வெல் ஆஸ் எ ரெஸ்பான்சிபிலிடி. ‘தமிழன் அழகனா அல்லது மலையாளி அழகனா?’ என்று தலைப்பு வைத்து விவாதிப்போம். ‘தமிழகப் பெண் அழகா அல்லது தமிழீழப் பெண் அழகா?’ என இன்னொரு தலைப்பில் விவாதிப்போம். இது கருத்துச் சுதந்திரமா இளங்கோ கல்லானை? ‘மோடி புரட்சியாளரா அல்லது பிரபாகரன் புரட்சியாளரா?’ என்று இன்னொரு தலைப்பையும் ஆந்தனிக்கு எடுத்துக் கொடுங்கள். இதுவும் கருத்துச் சுதந்திரம்தானே கல்லாணை? இவை எதற்குமே நீங்கள் பொங்க மாட்டீர்களா?

நான் ஏதோ இந்த ஆந்தனி ‘இடதுசாரிப் பெண்ணியவாதிகள்’ என்றெல்லாம் சொல்லை உதிர்த்ததால் கொஞ்சம் அறிவுள்ள ஆள் நினைத்தேன். மொக்கைத் தலை என்பது இப்போதுதான் தெரிகிறது. முதல் அலை பெண்ணிலைவாதம் என்பதே குடும்பப் பெண்களின் உரிமையில் தான் துவங்கியது. வீட்டு வேலை சமூக உழைப்பாகக் கருதப்பட வேண்டும். குழந்தைப் பிறப்பு மறு உற்பத்தியாகக் கருதப்பட வேண்டும். ஓட்டுரிமை வேண்டும். குடும்பப் பெண்களும் நடைமுறைப் பெண்ணியவாதிகள்தான்.

இந்த அறிவு கூட இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். உங்களது ஆல்ட்டர் நேடிவ் தலைப்பு இன்னும் நீங்கள் பண்ணை மனநிலையில் இருந்து மீளவில்லை என்பதைக் காட்டுகிறது. நீங்கள் முன்வைக்கிற ‘குடும்பப் பெண்களை’ விட போராடும் ஈழ, காஷ்மீர், குர்திஸ் இதனோடு இடதுசாரிப் பெண்கள் அழகிகள்தான்.

ஜால்ரா போடப்போனால் எந்த இழிநிலைக்கும் வந்து சேரவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். முதலில் இதனை விவாதிப்போம். ‘அழகு’ என்றால் என்ன என்று பேசவோம். பிறகு உங்கள் நக்கல் நளினங்களைப் பற்றிப் பேசுவோம்.

கருத்துச் சுதந்திரம் என்பதை மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டும். 1. இலட்சிய நிலை. 2. நிலவும் சட்டங்கள். 3. நடைமுறை. உலகில் இன்றும் டீபேமேஷன், இம்யூனிட்டி, லைபல் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனது விரிவாக்கம் இது : 1.ஒருவரை கேவலப்படுத்த முடியாது. 2.அமெரிக்க ராணுவத்தினர் சென்று பணிபுரியும் நாடுகளில் அவர்கள் செய்யும் குற்றங்களை அந்தந்த நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தண்டிக்க முடியாது. 3.எவரையும் அவதூறு செய்ய முடியாது. இலட்சிய நிலைக்கும் சட்ட வரையரைக்கும் நிலவும் நடைமுறைக்கும் தொலைதூரம். இதுவே நாம் வாழும் உலகு.

லிபரல் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் முழுமையானது என ஒரு மாயையை விதைக்கிறது. பிரித்தானியப் படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்து பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்க முடியாது.

மார்க்ஸ் உரிமை என்பதே சொத்துறவுடன் சம்பந்தப்பட்டது என்கிறார். உரிமை அரசியலின் அல்டிமேட்டம் தனிநபரது ஏகபோகச் சொத்துரிமைதான். ஆக, உரிமை என்பது முழுமையானது அல்ல. அது பிளவுண்டது. சார்பு நிலையானது. புறநிலை-நடைமுறையில் அது வர்க்கம், சாதி, இனம், பால்நிலை, இனம், மொழி போன்றவற்றினால் ஊடறுத்துச் செல்லப்படுகிறது.

சுரண்டப்பட்டவனின் உரிமையை சுரண்டலாளன் கேட்கப் போவதில்லை. ஒடுக்கப்பட்டோர் உரிமையை ஒடுக்குமுறையாளன் கேட்கப்போவதில்லை. உரிமை என்பது ஒரு அரசியல் களம். போராட்டக் களம். கருத்துரிமையும் இவ்வாறு ஒரு போராட்டக்களம். தமிழகம் என்பதும் கேரளம் என்பதும் இரு இனங்களை மொழியும் சொற்கள். ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும் இரு தனித்தனி அடையாளங்கள். இலாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொலைக் காட்சிக்கு இதனை எக்ஸ்ப்ளாயிட் செய்ய என்ன உரிமை உண்டு? இப்படிக் கேட்பது கருத்துரிமை ஆகாதா? இதனை இலட்சிய நிலை என்பதைத் தாண்டி நடைமுறை, சட்டம் என எடுத்துச் செல்லல் ஆகாதா?

விஜய் ஒரு போதும் தனது மத அடையாளத்தை முன்னிறுத்தியது இல்லை. ஹெச். ராஜா செய்வது உரிமை மீறல். டீபேமேஷன். அரசியலைப் பேசுவதில் மதம் ஏன் ஒரு அடிப்படையாக ஆகிறது? ஆந்தனிகள் இதனை விவாதப் பிரச்சினையாக ஆக்கட்டும். இதுதான் எரியும் பிரச்சினை. ‘இவர், எவர் அழகு?’ என்பதா எரியும் பிரச்சினை? கருத்துச் சுதந்திரம் என்பது அரசற்ற சமூகம் போல ஒரு இலட்சிய நிலை. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மத, சாதி. வர்க்க, பால், இனத்துவேஷ உலகு. முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு மாயை.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கருத்துச் சுதந்திரத்தை விட ஒரு சமூகப்பகுதியின் கருத்துச் சுதந்திரம் உன்னதமானது மிஸ்ட்டர் ஆந்தனி. மைன்ட் இட்..

எழுத்தாளர் மாலதி மைத்ரி: 

நீயா நானா ஆன்டனி பதறி அடிக்க பாயும் உடல் மொழியும் ஆணவமும் பெண் கருத்தாளர்களை பேசவிடாமல் குறுக்கிடும் அராஜகமும் நீங்களெல்லாம் குடும்ப பெண்களா என்னும் திமிரும் பச்சை ஆம்பளத்தனம். ஆண்டனியின் முற்போக்கு சாயம் வெளுத்து கோரப் பல்லிளிக்கிறது. பொம்பளைங்க சேர்ந்து எங்க நிகழ்ச்சியை நிறுத்திட்டிங்களா என்ற வெறித்தனமும் விளம்பர வருவாயை இழந்த அவமானமும் தான் வெளிப்பட்டது. நடு நடுவே வெகு இயல்பா இருப்பதாக சிரிக்க முயன்றது படு அசிங்கமா இருந்தது. பெண்களின் அழகை ஒப்பிட்டுத்தான் நிகழ்ச்சி நடத்தி சம்பாரிக்கனுமென்றால் வேறு தொழில் செய்யலாம் ஆண்டனி.

இன்றைய இளம் தலைமுறை ஒப்பிட்டு அழகைப் பற்றித்தான் சிந்திக்கிறது என்னும் ஸ்டீரியோ டைப் வாதத்தை இன்று இத்தடை மூலம் இந்நிகழ்ச்சி வழியாகவும் உடைத்தெறிந்த Suseela Anand Geetha Narayanan Dhanya Rajendran க்கு நன்றி.

குடும்ப பெண்கள் வேலைக்குப் போக மாட்டார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பத்தினி இல்லை. குடும்பப் பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குப் போக மாட்டார்கள். இந்து மதவாதி வெர்சன்.

குடும்பப் பெண்கள் நீயா நானாவை எதிர்க்க மாட்டார்கள். கார்ப்ரேட் வியாபாரி ஆண்டனி வெர்சன்.

நேற்று விவாதம் முழுக்க அழகுக்கு பின்னுள்ள பிலாசவியத்தான் பேசறோம் என்றார் ஆண்டனி. பெண் பற்றிய இவரது பிலாசபி என்னன்னு இப்ப அசிங்கமா அம்மணமாகிவிட்டது.

ஊடகவியலாளர் தயாளன்:

அந்தோணியின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லும் பெண்களின் கருத்தை, அறிவுரை அதைக் கேட்க முடியாது என்று சொல்கிறார். ஆண்டனியை மிகச் சரியாக Expose செய்து விட்டார்கள் தோழர்கள் Suseela Anand Geetha Narayanan மற்றும் தன்யா குழுவினர். ஆண்டனி பதற்றத்தின் உச்சத்தில் சேரி பிகேவியருக்காக உங்களால் Big Bossஐ தடை செய்ய முடிஞ்சுதா? என்கிறார். என்ன சொல்ல வர்றீங்க. உண்மையான பிரச்சினை நீயா நானாவுக்கும், Big Bossக்குதான் போல? சேரி பிகேவியர் பத்தி நீயா நானாவுல ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கலாமே? நீயா நானா நிகழ்ச்சியை தடை செய்தது தவறு என்று கொதிக்கும் இதே ஆண்டனி பெண் தோழிகளை english speaking, elite journalistஆல் தடையை சாதிக்க முடிந்தது என்கிறார். மனிதிக்கு அவ்வளவு பவர் கிடையாது என்கிறார். காலாவதி ஆகும் ஒரு படைப்பாளியின் மனநிலையில் இருக்கிறார் ஆண்டனி. இரண்டு ஆண்கள் உட்கார்ந்து பெண்களுக்கு மார்க் போடுவதைப் போல கேரள பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கு ஓட்டிங் சிஸ்டம் நடத்திக் கொண்டு திமிராகவும் ஆணவத்தோடவும் பேசுகிறார். இப்போதும் எனக்கு அந்த நிகழ்ச்சியை தடை செய்தது தவறு என்றே கருதுகிறேன். ஆனால் ஆண்டனி பெண்கள் குறித்தும் இடதுசாரிகள் குறித்தும் பேசும்போது அவர் காட்டும் உடல் மொழி அருவருப்பாக இருக்கிறது.

கடைசியில் நீயா நானா நிகழ்ச்சி பத்தி குடும்பப் பெண்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாது என்று முத்து உதிர்த்தார் நீயா நானா ஆண்டனி.

நீயா? நானா? தடை செய்ய போராடியதைக் காட்டிலும் ஆண்டனியின் வக்கிரத்தையும் கோர முகத்தையும், அவர் வாயாலேயே குடும்பப் பெண்கள் குறித்த விளக்கத்தையும் expose செய்ததற்காக பாராட்டுகள்.

ஆண்டனியின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம்.  ஆனால் ஆண்டனியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்; உண்மையில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தால் ஆண்டனி இன்னும் மோசமாக அம்பலப்பட்டு இருக்கக்கூடும். பெண்களிடம் நாம் பேசுவோம்.

உங்கள மாதிரி பெண்களுக்கு நீயா நானா பிடிக்காது; குடும்பப் பெண்களுக்குத்தான் பிடிக்கும் என்று அவர் சொல்லும்போது இதுதான் தோன்றுகிறது

எந்த பிகர் ரொம்ப நல்ல பிகர்?
தமிழ்நாடா? கேரளாவா?
இந்த கேள்விதான் ஆண்டனியின் மனதில் இருந்திருக்க வேண்டும்..

சமூக- அரசியல் விமர்சகர் சதீஸ் செல்லதுரை:

நீயா நானா அந்தோனிக்கு ஏன் இத்தனை பதட்டம் ? நியூஸ் 18ல் பெண்களை பேச விடாமல் கதறுகிறார். சத்தமா பேசினால் சரியா இருக்கும்னு யார் சொன்னா அந்தோணி?

கவிஞர் சுகிர்தராணி:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலைமுடியை வெட்டிதரும் பெண்களை, ‘மொட்டையடித்து அழகைச் சப்பையாக்குகிறீர்கள்’ என நியூஸ் 18 விவாதத்தில் இழிவுபடுத்திய நீயா நானா ஆண்டனிக்கு இருப்பது என்னவிதமான மனநிலை?

ஆமாம்..நாங்கள் பத்தினிகள் இல்லை..கற்புக்கரசிகள் இல்லை.மொத்தத்தில் குடும்பப் பெண்களே இல்லை.

எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:

இதுவரை வெளிவந்த நீயா நானாவில் வந்த ஒருசில எபிசோட்களைப் பார்த்து கொஞ்சம் மரியாதை இருந்தது. இப்போது அந்த நிகழ்ச்சியின் கர்த்தா பேசுவதைக் கேட்ட பின் அதுவும் போய் விட்டது. ஏன் இவ்வளவு வன்மம்? பெண்களை அழைத்து நிகழ்ச்சி தயாரிப்பவர் முதலில் பெண்களை மதிக்கக் கற்கட்டும்.

குடும்பப் பெண்கள் என்பவர்கள் யார்?
என்ன ஒரு திமிர்த்தனமான பேச்சு..

செயல்பாட்டாளர் செல்வி மனோ:

ஆண்டனி சார் நீங்கள் பெண்களை சிறுமைப்படுத்துவதை எதிர்த்தது போன்றே தன்யா ராஜேந்திரனின் பதிவையும் எதிர்த்தோம். ஆனால் அவரின் தவறான கண்ணோட்டத்திற்கு பின்னால் உங்கள் தவறுகளை மறைத்துக்கொள்ளவது சிறுபிள்ளைத்தனமானது.
விவாதத்தில் சுசீலா தன்யா கீதாவின் கருத்தைகளை அனுமதிக்காமல் குரல் உயர்த்தி பேசிய போதே நீங்களும் தீலிபன் சாரும் கருத்துரிமை கோருவதற்கான தார்மீகத்தை இழந்துவிட்டீர்கள். இன்னும் ஒருபடி மேல சென்று கீதா தன் கருத்தை பதிவிட 2 நிமிடம் அனுமதி தாருங்கள் என்று கேட்டபோது “உங்கள் அறிவுரையை கேட்க வரவில்லை என்றும், மற்றவர்கள் பேச அனுமதிப்பது பழமை , குறுக்கிட்டு குரல் உயர்த்தி மற்றவர்கள் கருத்தை பிறர் கேட்க விடாமல் செய்வது புதுசு ” என்ன ஒரு நவீன சிந்தனை உங்களுக்கு.எங்கள நீங்கள் பழமைவாதிகள் என்று வேற சொல்றீங்க.


” குடும்ப பெண்கள் எதிர்க்கவில்லை” உரிமைக்காக குரல் எழுப்பிய பெண்களை பார்த்து சாதரணமாக சொல்லறீங்க. நீங்க இன்னும் கி.மு வில இருந்தே வெளியே வரல சார். உங்கள் ஆணாதிக்கத்தின் உச்சம் அம்பலப்பட்டதே அங்கதான். அந்த சொற்கள் எங்களை அவமானப்படுத்துவதாக நீங்கள் நினைத்திருந்தால் sorry sir, அது உங்களை நீங்களே அவமானம் செயது கொண்ட தருணம்.

“மொட்டை அடித்து அழகை சப்பையாக்கிட்டாங்க மனிதிகள்”
எவ்வளவு நீளம் முடிவைச்சா அழகு?!!! இளைஞர்கள் மொழி தெரிஞ்ச நீங்க சொன்னா அழகியலுக்கான வரையறையில் சேர்க்க வசதியாக இருக்கும்.

உங்களுக்கு ஊடக அறம் தெரியல அப்படின்னு நினைசசிருந்தோம்.அதை நேத்து தவிடு பொடியாக்கிட்டீங்க. எந்த அறமும் உங்களுக்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதனுடைய நீட்சிதான் தன்யாவின் பதிவிற்குள் உங்களின் ஆணாதிக்கத்தை மறைத்துக்கொள்ள முற்படுவது.

எனக்கு ஒரு சந்தேகம் சில நீயா நானா விவாதங்கள் நல்லாயிருந்துச்சே இப்படியான மனப்பான்மை உள்ள தீலிபன் மற்றும் உங்களால் எப்படி முடிந்தது?

குடும்பப் பெண்கள் . விளக்கவும்
திரு.ஆண்டனி அவர்களே.

நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆன்டனி

 

செயல்பாட்டாளர் கவிதா ராஜமுனீஸ்:

அவர் பார்வையில் குடும்ப பெண்கள் என்றால் பெண்களை எவ்வளவு இழிவு படுத்தி பேசினாலும் அதில் புரிதல் இல்லாமல் நாம் அவமதிக்க படுகிறோம் என்றே தெரியாமல் விரும்பி சுவைத்து இந்த விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் பெண்களே.

ஆவணப்பட இயக்குநர், அரசியல் செயல்பாட்டாளர் திவ்ய பாரதி:

இந்த வறட்டு பெண்ணியவாதிகள் பேசுவதை எந்த குடும்ப பெண்களும் ஏற்க மாட்டார்கள்… என்று சொன்ன நீயா நானா (ஆண்)டனி’க்கும்

சபரிமலைக்கு நல்ல குடும்பத்து பெண்கள் வர மாட்டாங்கன்னு சொன்ன அந்த சாமியார் பயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைல்ல.

எழுத்தாளர் தீபலட்சுமி:

ராஜா ராணி படத்தில் ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடூரமான முறையில் அருவருப்பாக விவரிக்கும் காட்சிகள் உண்டு. அதைக் காமெடி பகடி என்றெல்லாம் சொல்லமுடியாது. சிவாஜியில் அங்கவை சங்கவை காட்சிகளை விட 100 மடங்கு கேவலம் என்று சொல்லலாம்.  அதை நீக்கச் சொல்லிப் போராடினால் அதற்குப் பெயர் கருத்துரிமை மீறலா?

அதே போன்ற உருவம் உள்ள பெண்களின் உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் காயப்படுத்தும்? அவர்கள் எல்லாருக்கும் பெண்ணியப் புரிதலும் சுதந்திரமும் இருக்குமா? அவர்களுக்காக யார் பேசுவது?

உருவ அழகு முக்கியமில்லை என்ற தெளிவும் தன்னம்பிக்கையும் பெற்றவர்களைக் கூட‌ Deal with such shit with your own sensibility என்று தனித்து விடும் போக்குக்குப் பெயர் தான் Freedom of expression a??

அப்படியான காட்சிகள் தடைப்படுதல் தான் அவர்களுக்கான முதல் நீதி. அந்தக் காட்சிகளைக் கத்தரிக்காமல் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறது விஜய் டிவி. யாராவது எதிர்க்கிறார்களா?

அழகு என்று பொதுப்புத்தியில் இருப்பதைக் கொண்டாடுவதில் ஊடகத்துக்குப் பொறுப்பு இருக்க வேண்டாமா?

காயப்படுத்தாமல், பேச விட்டு எதிர்வினை ஆற்றுவது என்பதை அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பெண்களுக்குப் பொருத்திப் பார்ப்பதை விட, நிகழ்ச்சியைப் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்குப் பொருத்திப் பார்ப்பது தான் நியாய்ம்.

Let’s be sensitive where it truly matters.

நாடக இயக்குநர், ஆவணப்பட இயக்குநர் ப்ரசன்னா ராமஸ்வாமி:

“இவங்க பேசற எதையும் குடும்பப்பெண்கள் ஒத்துக்க மாட்டாங்க…” விஜய் டீவீயுடைய அண்டனி!!!
ஆண்கள்!!

தமிழ்ப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா விவாதத் தடை: கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

அ. குமரேசன்

kumaresan
அ. குமரேசன்

நான் கூட, எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டுதான் “தமிழகப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா” விவாத ஒளிபரப்பை விஜய் டிவி நிறுவனமும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் விலக்கிக்கொண்டார்கள் என்று நினைத்துவிட்டேன். ஆனால் காவல்துறை தலையீட்டால்தான் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டார்களேயன்றி, இப்படியொரு விவாதத்தின் பெண்ணடிமைத்தன உள்ளடக்கத்தை நேர்மையாக உணர்ந்துகொண்டதால் அல்ல என்பதை ‘நீயா நானா’ ஆண்ட்டனியின் ஆத்திரமிக்க பதிவு காட்டிக்கொடுக்கிறது. இடதுசாரிப் பெண்ணியவாதிகள்தான் தடைகோரினார்கள் என்று கூறியிருக்கிற ஆண்ட்டனி, அப்படித் தடை போடுவதன் மூலம் கருத்துச்சுதந்திர ஒடுக்குமுறையில் ஈடுபடுகிற மதவாத, சாதிய அடிப்படைவாதிகளுக்கும் இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருக்கிறார்.

“தலைப்பு அநாகரிகமா, விவாதம் அநாகரிகமா” எனக் கேட்டு அந்தத் தலைப்பு குறித்து விமர்சித்த எனது பதிவுக்கு வந்த எதிர்வினைகளில் கூட சங் பரிவாரத்தினர் உள்ளிட்ட சில அன்பர்கள், “இது மட்டும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா” என்று கேட்டிருந்தார்கள்.

மெர்சல் திரைப்படத்தில் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சர்ச்சை கிளப்பினார்கள், படத்தின் கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை விமர்சியுங்கள், பிரச்சாரம் செய்யுங்கள் அதை விடுத்துத் தடைபோடுவதா என்று கருத்துரிமைக்காக வாதாடுவோர் கேட்டார்கள். அந்த மெர்சல் சூடு அடங்குவதற்குள் இந்தச் சூடு.

பிரச்சனையின் தன்மையைப் பொறுத்து அணுகுமுறைகள் மாறும் என்று கூறலாம் என்றாலும், எந்தவொரு பிரச்சனை குறித்த கண்ணோட்டமும் மாறுபடும், எனது நியாயங்கள் இன்னொருவருக்கு அநியாயங்களாகப் புலப்படும் என்பதால் அப்படிச் சொல்லி நழுவுவதற்கு நான் விரும்பவில்லை. ஆகவே சற்றே விரிவாக எழுத வேண்டியிருக்கிறது, பொறுமையாகப் படிக்குமாறு ஆன்ட்டனியையும் இப்போது மட்டும் கருத்துரிமை பற்றிக் கவலைப்படுவோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதலில், பெண்களோ ஆண்களோ இடதுசாரிகள்தான் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பெண்ணின் சுயமரியாதை உள்ளிட்ட மானுட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதிலும் முன்னணியில் நிற்கிறார்கள் என்ற உண்மையை உரக்க வெளிப்படுத்தியதற்காக ஆன்ட்டனிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய நியாயங்களுக்காகப் போராடுவதில் இடதுசாரி பெண்ணியவாதிகளும் இடதுசாரி மனித உரிமையாளர்களும் தொடர்ந்து முன்நிற்பார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

அடுத்து, இந்தப் பிரச்சனையில் காவல்துறை தலையீட்டை நாடியவர்கள் குறிப்பாக எந்தவொரு குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சி அல்லது மகளிர் அமைப்பின் சார்பாக அதைச் செய்யவில்லை. வெவ்வேறு அமைப்புகள் சார்ந்தவர்கள், எந்த அமைப்பையும் சாராதவர்கள் என்று பல நிலைகளிலும் இருப்போர் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் பல்வேறு பிரச்சனைகளில் மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளவர்களும் கூட இதில் ஒத்த சிந்தனையோடு சந்தித்திருக்கிறார்கள்.

மூன்றாவதாக, ஆன்ட்டனி தனது அறிக்கையில், தமிழக, கேரள கல்லூரி மாணவிகள் அழகுபடுத்திக்கொள்வது பற்றி ‘அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும்’ பேசினார்கள் என்று கூறியிருக்கிறார். எது அழகு என்பதாக விவாதிக்கப்பட்டிருந்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மேனியை அழகாக வைத்துக்கொள்வதைச் சுற்றியே அந்த விவாதம் நடந்திருக்கிறது என்பது அவரது அறிக்கையிலிருந்தே தெரிகிறது. ஒருவேளை, அதில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவர், உடல் சார்ந்து அழகுபடுத்திக்கொள்வதுதான் அழகா என்று கூட கேட்டிருக்கலாம்தான். அது நமக்குத் தெரியாது. இங்கே நம் கவலையெல்லாம், இப்படி அழகான தோற்றத்திற்காக மட்டுமே மெனக்கிடுவதுதான் பெண்மை என்பதாகப் பெண்ணின் சிந்தனை சுருக்கப்பட்டிருக்கிற சமுதாயத்தில், அவ்வாறு சுருக்கியதை மேலும் மேலும் இறுக்கமாக்குகிற விவாதம் தேவையா? கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிற பெண்ணுரிமையைப் பின்னுக்கு இழுக்கிற கைங்கரியமல்லவா இது? பெண்ணின் சுதந்திரம், பெண்ணின் சுயம், பாலின சமத்துவம், திருநங்கையரின் சமத்துவம், தற்பாலின உறவாளர்களின் சமத்துவம் என மனித உரிமைக் கருத்தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேர்பிடித்துவரும் சூழலில், அந்த வேர் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்வதற்கு வழிசெய்வதற்கு மாறாக, வேரில் அமிலம் ஊற்றுவது தலைமுறைக் கொடுமை.

மதவாத-சாதியவாதிகளுக்கும் இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருக்கிறார். ‘தாலி பெண்ணின் பெருமையா சிறுமையா’ என்றொரு விவாதத்தைப் பதிவு செய்து அதை ஒளிபரப்பவிருந்த நாளில் ரகளை செய்து அதைத் தடுத்தார்கள், டிபன் பாக்ஸ் குண்டு வீசினார்கள். அப்போது அதை ஆன்ட்டனி இதே போல் கண்டித்தாரா, அல்லது அது வேறு ஒரு நிறுவனத்தின் நிகழ்ச்சிதானே என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. கண்டித்திருப்பாரானால் மகிழ்ச்சிதான். இப்போதைய மெர்சல் விவகாரம், முன்பு வந்த விஸ்வரூபம் விவகாரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் நிகழ்த்தவிருந்த இஸ்லாமியப் பெண்கள் குறித்த உரை நிறுத்தப்பட்ட விவகாரம், பி.கே. போன்ற திரைப்படங்களுக்கு எதிராக எழுந்த கலவரங்கள் விவகாரம், எழுத்தாளர்களது புத்தகங்கள் முடக்கப்பட்ட விவகாரம்… இவற்றிலெல்லாம் உங்கள் எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறீர்களா ஆன்ட்டனி? அல்லது, எல்லாப் பிரச்சனைகளிலும் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கழன்றுகொள்வீர்களா? ஏதோவொரு வகையில் இவை ஊடகத்துறை சார்ந்தவையாக இருப்பதால் இக்கேள்வியை உங்களிடம் கேட்டேன்.

இப்போது, நிகழ்ச்சி ஒளிபரப்புக்குத் தடை கோரப்பட்ட விவகாரத்திற்கு வருகிறேன். அந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள், நெறியாளர் எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினார், அதற்கு எத்தகைய பதில்கள் வந்தன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்பது உண்மையே. அதன் அடிப்படையில் தொடர்ந்து கருத்தியல் களத்திற்கான விவாதங்களை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும், அது சிந்தனைப் பரவலுக்குத் துணையாக அமையும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

“உன் கருத்தோடு முரண்படுகிறேன், ஆனால் உன் கருத்தைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாக்க உயிரையும் கொடுப்பேன்” என்ற உலகப் புகழ்பெற்ற மேற்கோளைப் போற்றி ஏற்றுக்கொண்டவன் நான். எந்தவொரு கருத்தும், எந்தவொரு எதிர்க்கருத்தும் தடை செய்யப்படக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்குக் கேள்விளை வைப்பது, இது நியாயம்தானா என்று அவர்களோடு விவாதிப்பது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களுக்கு வலுவான கண்டனக் குரல் எழுப்புவது, அந்தக் கண்டனங்களின் நியாயச் சீற்றம் கண்டு உரியவர்கள் தாங்களாக முடிவை மாற்றிக்கொள்வது… இத்தகைய அணுகுமுறையைத்தான் நான் ஆதரிக்கிறேன். ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை பறிக்கப்படுவது என்பது, அந்தக் கருத்து என்ன என்று மக்கள் கேட்பதற்கான உரிமையும் பறிக்கப்படுகிற சர்வாதிகாரமே என்று திரும்பத் திரும்ப, இத்தகைய கருத்துரிமை ஒடுக்கல் பிரச்சனைகள் வந்தபோதெல்லாம், என் போன்றோர் சொல்லி வந்திருக்கிறோம்.

இந்தக் குறிப்பிட்ட தலைப்புக்கும், அதன் உள்ளடக்கத்திற்குமான எதிர்ப்பு ஒரு சமூகக் கோபமாகப் பரிணமிக்கச் செய்ய வேண்டுமேயன்றி, நாமாகத் தடுக்கக் கூடாது என்பதே என் நிலைபாடு. ஆணாதிக்க சமுதாயத்தில், இத்தகைய பிரச்சனைகளில் அவ்வளவு எளிதாக சமூகக் கோபமாக மாற்ற முடிவதில்லைதான். ஆனாலும் அது ஒரு இயலாமையாக, உடனடித் தடையை வற்புறுத்துவதற்கான நியாயமாக மாறிவிடக்கூடாது.

குறிப்பாகப் பண்பாட்டுத் தளம் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் காவல்துறை உள்ளிட்ட அரசாங்க எந்திரத்திடம் நம்மை ஒப்படைத்துவிடக்கூடாது என்பதே என் நிலைபாடு.

அந்த அடிப்படையில், இந்த விவகாரத்தில் தடை கோரப்பட்டதை நானும் ஏற்கவில்லை. அதைக் கோருவதன் மூலம், கருத்துரிமை ஒடுக்குமுறைகளில் இறங்குகிற கட்சிகள், அமைப்புகள், மதவாதிகள், சாதியவாதிகள் உள்ளிட்டோர் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படுகிறது. இதற்கு முன் நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, கூர்மையாக விமர்சித்திருக்கிற எந்தப் பிரச்சனையிலும், குறிப்பிட்ட கருத்து அல்லது விவாதம் அல்லது நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தியதில்லை.

(இப்போதைக்கு) நிறைவாக, தடை கோரப்பட்டதை மட்டும்தான் நான் ஏற்கவில்லை. மற்றபடி இதில் ஈடுபட்ட பெண்ணுரிமையாளர்களின் அந்த அறச்சீற்றத்தில் முழுமையாக என்னையும் ஐக்கியப்படுத்திக்கொள்கிறேன். இந்தப் போராட்ட அனுபவம், மக்களையும் மனித உரிமைகளையும் இழிவுபடுத்துகிற எல்லா ஆணவங்களுக்கும் எதிரான சமூக ஆவேசமாகப் பரிணமிக்க வாழ்த்துகிறேன்.

அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்.

சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி சொல்லவில்லை என்பதற்காக டி. ஆரால் அதே மேடையில் கடுமையாக வசைபாடப்பட்டார். டி. ஆரின் செய்கை சமூக ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பிய நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.”

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கிருஷ்ணசாமி கூட்டனி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

கொடியன்குளம் தாக்குதலுக்கு காரனமான அதிமுகவுடன் 2011ல் கூட்டனி அமைத்து ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012 பரமகுடியில் தியாகி இம்மாணுவேல் சேகரன் நிணைவேந்தல் நிகழ்ச்சியில் பேரணியாக வந்த மக்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 6 உயிர்களை படுகொலை செய்தனர். சில மாதங்களில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி ஆதரவளித்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி ,2016சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டனி அமைத்து தோல்வி அடைந்து விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி ஒரு மாநாடோ அல்லது கூட்டமோ கூட்டினாலே சாதாரனமாக 5 ஆயிரம் பேர் கூடுவார்கள். சமிபத்தில் ஜனவரி மாதம் நெல்லையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொன்ட புதியதமிழகம் கட்சி நடத்திய மாநாட்டில் 800 பேர் மட்டுமே கலந்து கொன்டனர் அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டார்.

எங்கோ இருந்து வந்த கிருஷ்ணசாமி தன்னை பள்ளர் சமுகததை சார்ந்தவன் என்று தான் சிபிஎம்எல் கட்சி மற்றும் தலித் பேந்தர் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தாக அறிமுகம் செய்து கொன்ட மருத்துவர் என்பதால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து தலைவராக்கப்பட்டார் ,மக்களிடம் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டார். மக்களிடம் தனக்கு ஆதரவு கிடைத்ததை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பில் இருந்து விலகி புதியதமிகம் கட்சியை 1997 டிசம்பர் மாதம் துவங்கினார். கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரை ஜாதிய ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூக மக்களை எந்த கட்சி ஆட்சியில் அரசால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கு அடுத்த தேர்தலில் அந்த கட்சியிடமே தேர்தல் கூட்டனி வைத்துக் வந்துள்ளார்.

கிருஷ்ணசாமி பள்ளர் சமுக மக்களிடம் அருகே அமர்ந்தோ சரி சமமாக உட்கார வைத்தாே தொட்டு பேசியதோ கிடையாது விலகியே இருந்து பேசுவார். பள்ளர் சமுக மக்களை அரசியல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொன்டதில்லை என்பது மாற்று தலைவர்கள் உருவாகவில்லை என்றும் வலைதளங்களில் ஆதரவாக எழுதுபவர்களின் கருத்துகளில் இருந்து நன்றாக தெரியும். பள்ளர் சமுக மக்களிடம் ஒன்றாமல் பள்ளர் சமுக மக்களுக்களை கொன்று குவித்தவர்களோடு கைகோர்த்தவர் எப்படி பளளர் சமுக மக்களின் தலைவராக இருக்க முடியும்.

தனது சுயநலத்திற்காக மக்களை வதைப்பவர்களுடன் கூட்டு சேரும் கிருஷ்ணசாமி உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட பள்ளர் சமுகத்தை சார்ந்தவரா என்ற சந்தேகம் ஒரு பக்கம் உள்ளது இந்த சூழலில் தற்போது பாஜகவுடன் இணைந்து கொன்டு பள்ளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நிக்க வேன்டும் என்று பள்ளர் சமுக மக்களின் பிரதிநிதிதுவ உரிமையை பறிக்க முயற்சிக்கிறார் மற்றும் நீட் என்ற சமுகநீதிக்கும சட்டத்திற்கும் எதிரான மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல் நீட்டின் பாதிப்பால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து உயிரை மாய்த்துக் கொன்ட மாணவி அனிதா இறப்பை மட்டுமல்லாமல் தன்னை விமர்சப்பவர்களை தாறுமாறாக நாகரிகமற்று அவதூறாக பேசி பள்ளர் சமுக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்களாள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

உண்மையான ஒரு ஒடுக்கப்பட்ட சமுக பிரிவை சார்ந்த நபர் இவ்வாறு நடந்து கொள்ளவோ அவதூறாக பேசாவோ வாய்ப்பில்லை , கிருஷ்ணசாமியின் ஜாதி சான்று விவகாரத்தையும் திடிரென வந்ததும் சுப்பிரமணியசாமி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பால் களம் இறக்கப்பட்டவராக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்!

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய அரசு நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறது. பொதுநல வழக்காக குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கோரும் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு போட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து தமிழக அரசு எட்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டவர்கள் நீதிபதி கே.கே. சசிதரன் மற்றும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்.

நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் மறைமுக ஹிந்தி திணிப்பையும் மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய அஜெண்டாவை அமல்படுத்துவதற்கு அதிமுக அரசு வழிசெய்துகொடுப்பதாகவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு தமிழக பாஜகவுக்கும் உள்ள நெருக்கம் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழக பாஜகவின் வழக்கறிஞர்கள் பிரிவு கடந்த நவம்பர் 2016-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த பொதுசிவில் சட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். அவர் கலந்துகொண்டு பேசியதன் விவரங்களை பாஜக இளைஞரணி துணை தலைவர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சீமான் அமைக்கவிருக்கும் தமிழ்தேசியத்தில் சேரிகள் ஒழிக்கப்பட்டிருக்குமா?

யாழன் ஆதி

யாழன் ஆதி

இயக்குநர்கள் அமீர் மற்றும் பா. ரஞ்சித்தின் உரையாடல் மிக முக்கியமான ஒன்றாகப் பொதுவெளியில் மாறியிருக்க வேண்டிய ஒன்று.

ஆனால் இடையில் புகுந்து நாம் தமிழர் சீமான் தேவையற்ற கருத்துகளைக் கூறி அதன் சேர்மையைக் குலைத்துவிட்டார் என்றே கூறாலாம்.

தம்பி சீமான் ( என்னை விட வயது குறைவாகத்தான் இருப்பார். அவர் ரஞ்சித்தை அவன் இவன் என்று பேசுவதற்கு இது பரவாயில்லை தானே) அவர்கள் பேசிய இரண்டு கானொலிகளைக் கண்ட பிறகே இதை நான் எழுதுகிறேன். நாமெல்லாம் எழுதி ரஞ்சித்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்னும் நிலை எல்லாம் கிடையாது. ரஞ்சித் சுய சிந்தனையாளர். தன் வாழ்விலிருந்து கலைகளையும் கருத்துகளையும் மொழிபவர்.

சரி தம்பி சீமான், அமையவிருக்கும் தமிழ்த் தேசியத்தில் ஜாதி இருக்குமா இருக்காதா?

ஜாதி ஒழிக்க என்ன வழி என்று உங்கள் செயல் திட்டத்தைச் சொல்வீர்களா?

மொழியால் ஜாதியை ஒழிக்க முடியுமா? அப்படியானால் உலகின் பெரும் இனவாதமான கறுப்பர் வெள்ளையர் வேறுபாடு ஆங்கிலத்தால் அழிந்ததா?

சமூக நலக் கோட்பாட்டால் அழிந்ததா?

மொழிவழி அமைந்த எந்த தேசியத்திலாவது வேறுபாடுகள் களையப்பட்டிருக்கிறதா?

மொழி ஒரு பயன்பாட்டுக்கருவி என்பதைத் தாண்டி அதற்கு வேறு என்ன பயன் இருக்கிறது?

தமிழால் தேசியம் கட்டமைக்கப்படும் என்றால் ஈழத்தில் நடந்த போரால் அங்கிருக்கும் ஜாதி அழிந்துவிட்டதா?

இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்கள் ஒரே மொழிப்பேசக்கூடியவையாக இருகின்றனவே. அம்மொழிகள் அம்மக்களை ஒன்றாக்கி இருக்கிறதா?

சரி உங்கள் செயல் திட்டம் தான் என்ன தம்பி

ஊரையும் சேரியையும் குடிமாற்றம் செய்வீர்களா?

ஜாதியின் தோற்றுவாயாக இருக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேறச் சொல்வீர்களா

சேரியிலிருக்கும் நாம் தமிழர்களையாவது ரட்சிப்பீர்களா?

நீங்கள் தமிழ்த்தேசிய ஆட்சியாளராய் ஆனால் ஒரே ஆணையால் ஜாதி ஒழிந்தது என்று முதல் கையெழுத்து இடுவீர்களா..

யாழன் ஆதி, எழுத்தாளர். சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது…

“2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள ..டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கைபார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம்.” என்பதே அந்தப் பதிவு.

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் நல்லூர் காலனி பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, பல வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மற்றும் துணிமணிகளை சூறையாடியுள்ளனர். குடிசை வீடுகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களையும் விரட்டி, விரட்டி தாக்கியுள்ளனர். இந்த மோதல் காரணமாக 5 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விநாயகர் சிலைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்த சாதிக்கலவரம், பத்திரிக்கைகளில் வெறும் “விநாயகர் சதுர்த்தி கலவரமாக” மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி பற்றி சில மாதங்களுக்கு முன் நானும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தலித் செயற்பாட்டாளருமான Kiruba Munusamy கிருபா முனுசாமியும்  பேசிக்கொண்டிருந்தோம். நீலக்கொடிகள் பறந்துகொண்டிருந்த தலித்துகளின் பகுதிகளில் இப்போது காவிக்கொடிகள் பறக்க ஆரம்பித்திருப்பதை சிறிது அச்சத்துடன் அப்போது அவர் பகிர்ந்துகொண்டார். அதை நானும் உணர்ந்திருந்தேன்.

சமீபமாக,  விநாயகரை கரைப்பதற்காகாக பிரமாண்ட சிலைகளுடன் மெரீனாவுக்கு வருவதில் கடற்கரையோர மக்கள் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக சேரிப்பகுதி இளைஞர்களின் பங்கு பெருமளவில் இருப்பதை பார்த்து நான் மிகவும் அயர்ச்சியுடன் கடந்திருக்கிறேன். “இந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்ன அண்ணலின் வாரிசுகள் ஏன் இப்படித் தடுமாறி தவறான பாதையில் செல்கிறார்கள் என்று.

திலகர் என்கிற பார்ப்பனர் “இந்து மதம்” என்கிற ஒன்றை, ஒற்றை சக்தியாக கட்டமைப்பதற்காக உருவாக்கிய விநாயகர் சதுர்த்திக்கும் தமிழ்நாட்டிற்குமே என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை? ஏழாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் விநாயகர் என்கிற ஒருவரைப்பற்றிய குறிப்புகளே இல்லையே.

“தமிழர்களுக்கு விநாயகருக்கும்” என்ற கேள்விக்கே விடை கிடைக்காதபோது, “இந்துக்களாக பிறந்தாலும் மதத்தாலும், பிற சாதிக்களாலும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படாத தலித்துகளுக்கும் விநாயகருக்கும் எங்கிருந்து தொடர்பு வந்தது ? (விநாயகர் புத்தரின் குறியீடு என்றாலும், நாம் இப்போது புத்த பூர்ணிமா கொண்டாடவில்லையே. விநாயகர் சதுர்த்தியாகத்தானே விழா எடுக்கிறோம்).

“ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத்திரட்ட” என்ற காரணத்துடன் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், தற்போது பிற மதத்தினரை கலவரப்படுத்தும் ஒரு விழாவாக அல்லவா எஞ்சி நிற்கிறது. குறிப்பாக சேரிப்பகுதிகளுக்குள் வரத்தயங்கும் இந்துக்கடவுள்கள், எந்தவித பாரபட்சமுமின்றி இஸ்லாமியத் தெருவிற்குள் நுழையும் இந்த நாட்களில் இதுபோன்ற பண்டிகையை வேறெப்படிப் பார்ப்பது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வும் அரங்கேறும்போதும், அந்த சிலைகளுடன் உடன் செல்பவர்களின் உடல் மொழியில் அப்படியொரு அசாத்தியமான வெறியைப்பார்க்கமுடிகிறது. அந்த வாகனங்கள் நகரும்போது ஏதேச்சையாக அதனருகில் நிற்க நேரிடுபவர்களுக்கு அந்த வெறியும், கூச்சலும் புரியும்.

இரட்டை அர்த்த வசனங்களும், பெருங்குரலுடன் ஆபாச வசவுகளும், எறியப்படுவதோடு, பூக்களும் பொருட்களும் நம் தலையில் வீசப்படுவதையும் தடுக்க இயலாத அமைதியான சாட்சியாக மட்டுமே அதை நாம் பதிவு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக வெறுமனே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடிய காவி அமைப்புகள், தற்போது அதை இந்து மக்கள் எழுச்சி விழாவாக தமிழ்நாட்டில் அறைகூவல் விடுக்கிறார்கள்.

இந்து மத ரீதியாகவோ அல்லது இந்து மதத்தின் முக்கிய கூறுகளான சாதி ரீதியாக பார்த்தாலும் கூட தலித்துகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லாதபோது, எதற்காக இந்த கொண்டாட்டங்களில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்? எதற்காக காவிக்கொடிகளை தங்கள் உடலில் சுமக்கிறார்கள் ? எதற்காக அந்த சிலையை கரைக்க செல்கிறார்கள் ? என்று எப்போதுமே குழப்பமாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் பவுத்த சன்மார்க்கத்தை தழுவியுள்ள டாக்டர் சத்வாவோடு Satva T இதுபற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் கூறிய சில கருத்துக்கள் இதற்கு விடையளிப்பது போல் தோன்றியது.

“வெகுசன மக்களால் பண்பாட்டு கொண்டாடங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு மாற்றாக நாம் வேறு கலாச்சார பண்பாடை நாம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் நாத்திகம் – முற்போக்கு என்று மட்டும் பேசினால் அந்த வளையத்திற்குள் நம்மை போல extreme view கொண்டோர் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் இந்துவாகவே இருந்து கொண்டு தொடர்ந்து சாதி இந்துகள்ளிடம் அடிவாங்குவார்கள். மாற்று கொண்டாட்டங்களை, கலாச்சார நிகழ்வுகளை வழங்க வேண்டும்.இதை தலித்  பிரிவில் உள்ள அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பின் அதனை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நியாயமாக சொன்னால் தலித் அறிவுஜீவிகள் இந்த விடயத்தில் சொந்தமாக சிந்திப்பதை நிறுத்தி விட்டு டாக்டர். அம்பேட்கரை முதலில் படித்து புரிந்து கொள்ள முயல வேண்டும்”

இதுதான் டாக்டர்.சத்வா கூறியது. பண்பாட்டுத் தளத்தில் கொண்டாட்டங்கள் எத்தனைத்தேவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் ஒரு பகுதியாகவே தீவிர வலதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட “இந்துத்துவ பண்டிகையான” விநாயகர் சதுர்த்தியை நோக்கி தலித்துகள் செல்கிறார்கள் என்பதையும்.

ஆனால், தலித்துகளை சாதி ரீதியாக அடிமைப்படுத்துவதற்கான அத்தனை கூறுகளையும் வர்ணாசிரமங்கள் மூலம் கட்டமைத்து வைத்த,வைத்திருக்கும், அப்படியே வைத்திருக்க விரும்பும் தீவிர வலதுசாரிகள், இது போன்ற “விநாயகர் சதுர்த்தி” ஊர்வலங்கள் மூலமாக, மிகவும் தந்திரமாக சேரிகளிலுள் தங்கள் வலதுசாரித்தனத்தை புகுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முரணான ஒன்று.

ஆனால்,சேரிக்குள் புகும் வலதுசாரி காவி இயக்கங்களால் தலித் மக்களுக்கு ஏதேனும் லாபம் உண்டா என்றால் எதுவுமில்லை என்பதே என்னுடைய திட்டவட்டமான பதில். இல்லை. நாங்கள் சேரிகளுக்கு பாதுகாவலர்கள் என்று இந்த காவிகள் கூறுவார்களேயானால், நல்லூரில் வன்னியர்களின் தாக்குதலுக்கு தலித்துகள் ஆளானபோது இந்தக்காவிகள் எங்கிருந்தார்கள் ? இதற்கு அவர்களிடம் என்ன பதில் இருக்கிறது ?

அவர்களிடம் இதற்கு எந்தப்பதிலும் இருக்காது. கிடையவும்  கிடையாது. ஏனென்றால் இதே வலதுசாரிகள் வன்னியத்தெருவுக்குள்ளோ, அல்லது தேவர்களின் தெருவுக்குள்ளோ சாதி வெறியைத்தூண்டிவிடும்படியான வேலைகளையும், அங்குள்ள இளைஞர்களை சாதி மத ரீதியான வெறியர்களாக மாற்றுவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். தார்மீக அறமற்றவர்களுக்கு இதுபோன்ற பணிகள் மிக எளிதாக ஈடுபடமுடியும்.

இந்து மதத்தின் அடிபப்டையான சாதிக்கட்டமைப்பை, அந்த சாதியினால், “மதக்கொண்டாட்டங்களில்” ஈடுபடும் தலித்துகள் மிதிவாங்குவதைத் தடுக்க அல்லது அகற்ற இந்து வலதுசாரி அமைப்புகள் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் பதிலேயில்லாத கேள்விதான்.

முற்போக்கு தத்துவங்களை, கடவுள் மறுப்புக்கொள்கைகளை தலித்துகளிடம் கொண்டு செல்வதற்குமுன் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மாற்றுக்கொண்டாட்ட வழிமுறைகள் என்ன என்பதை தலித்திய அறிஞர்கள் கண்டறியவேண்டும். சாதீயக்கட்டமைப்புகளில் இருந்து வெளிவராத இந்து மதம் என்றைக்குமே தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற ஒன்றுதான், அவர்களைக் கைவிடும் ஒன்றுதான் என்பதையும் புரிய வைக்கவேண்டும். தொடர்ந்த உரையாடல்கள் மூலமே தலித் இளைஞர்களை இந்த வலதுசாரித் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க  இயலும்.

இறுதியாக அண்ணலின் “நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்ற புத்தகத்தில் இருந்து சில வார்த்தைகளை மட்டும் மேற்கோளிட்டு இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

“நாம் அனுபவித்த இயலாமைகள், நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்த அவ மானங்கள் அனைத்துமே நாம் இந்து மதத் தின் உறுப்பினர்களாக இருந்ததால்தான்.

இந்து மதத்துடனான உங்கள் தொடர்பை துண்டித்துவிட்டு வேறு ஏதேனும் மதத்தைத் தழுவுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் அப்படியான புதிய நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். நம்மை சரி சமமாக நடத்துவதும், நமக்கு சமமான நிலையும், வாய்ப்புகளும் வழங்குவது எவ்விதத் தடையுமின்றி அதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள்.

கெடுவாய்ப்பாக, நான் ஓரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்.”

*கட்டுரையாளர் பொசல்: தலித் செயற்பாட்டாளர்.

 

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்ததை தலைப்பு செய்தியில், குமுதம் அட்டைப்படத்தில் போட்டார்கள் அந்த தலைப்பு இதுதான்
“ரஜினியைப் பின்பற்றுவது முட்டாள்தனம். Bullshit” என்று. இந்த பேட்டி குமுதத்தில் வெளி வந்ததும் ரஜினி ரசிகர்கள் பொங்கி எழுந்தார்கள். அஜித் அப்பொழுது வளர்ந்து வரும் நடிகர். அவரை அவரது மந்தைவெளி வீட்டு வாசல் வரை சென்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தர்ணா செய்தார்கள். அந்த பேட்டியை எழுதிய என்னையும் உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்கள்.

ஆனால் இதற்காக அன்று அஜித்தும் தன் வார்த்தைகளில் இருந்து பின் வாங்கவில்லை. நானும் பயந்து மன்னிப்பு கேட்கவில்லை. இருவரும் தைரியமாக ரஜினி ரசிகர்களை எதிர்த்தோம். இதை இன்றைய தல ஆக மாறி உள்ள அஜித் மறந்து இருக்கலாம். ஆனால் எனக்கு மறக்கவில்லை. இன்றைக்கு இந்த சம்பவம் இன்னமும் அழுத்தமாக நினைவிற்கு வந்ததற்கு இன்னோரு காரணம், அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனை நோக்கி தனிமனித தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதை கண்டிக்காமல் அஜித்தும் மவுனம் காக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் விவேகம் விமர்சனம் பார்த்து, ஆங்காங்கே அஜித் ரசிகர்கள் பொங்குவது மட்டுமல்லாமல் அவரையும் தொலைபேசியில் அழைத்து கெட்ட வார்த்தை பேசி திட்டுகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். இதை என்னைப் போலவே அஜித்தும் கேள்வி பட்டிருக்கலாம் . இல்லை என்று அவர் மறுக்க இயலாது. ஒரு விமர்சனத்திற்காக மாறன் மீது தொடர்ந்து தனி மனித தாக்குதலை நடத்தும் அஜித் ரசிகர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். இந்த  தனிமனித தாக்குதலை அஜித் ரசிகர்கள் செய்தாலும், அது அஜித் செய்வதாகவே கருதப் படும் தன் ரசிகர்களின் இந்த செயலை இன்னமும் அஜித் கண்டிக்காமல் இருப்பது நேர்மையான செயல் அல்ல.

தேவையில்லாமல் அஜித்தை உங்கள் செயலால் தலைகுனிய வைக்காதீர்கள் அஜித் ரசிகர்களே !பொதுவாழ்வில் விமர்சனம் என்பதை ஏற்று கொள்ள இயலாத மனநிலை தவறு . ஏன் இப்படி விமர்சனத்திற்காக இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? புரியவில்லை. அப்படியே அவரது விமர்சனம் தவறாக இருந்தால் , அவரை சட்டப்படி கேள்வி கேட்பதை விட்டு விட்டு , இப்படி சமூகத்தில் ரவுடித்தனம் செய்வது அருவெறுப்பாக உள்ளது.

அஜித் என்கிற ‘தல’ ரொம்ப நல்லவர், மனிதாபிமானம் உள்ளவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த நல்லவர் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்? இது போன்ற செயல்கள் தான் கண்டிக்கப் படாமல் , வளர விடப் பட்டு சமூக வெறித்தனமாக மாறுகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை வெளியில் அனுப்பும் போது என் சகோதரியை வெளியில் அனுப்புகிறேன் . அவரை துன்ப படுத்தாதீர்கள் என்று வேண்டுகோளுடன் அவரை வெளியில் அனுப்பிய கமல் ஹாசன் அவர்களிடம் பண்பை எல்லா நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் . தன் ஈகோ திருப்தி அடையும் வரையிலும் , தன் ரசிகர்களின் ரவுடித்தனத்தை கண்டிக்காமல் இருப்பது நல்ல ஹீரோவின் செயல் அல்ல .இந்த செயலை வெறும் ஹீரோவுக்கும் , ரசிகர்களுக்குமான செயலாக கருத இயலாது என்பதை என் தோழர்களுக்கு தெரியப் படுத்த விரும்புகிறேன்.

ஜி. விஜயபத்மா, சினிமா இயக்குநர்; பத்திரிகையாளர்.

 

“நீங்கள் வெர்ஜினா?”: பீகார் மருத்துவ கல்வி நிறுவனம் விண்ணப்பத்தில் கேட்கிறது!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா? என கேட்கப்பட்டுள்ளன. மேலும் எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் போன்ற கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது செய்தி ஊடகங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுகெல்லாம் இனி ரேஷன் கிடையாது என தமிழக அரசின் கெஸட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் உணவு அமைச்சர் காமராஜ் தற்போதைய பொது வினியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, மத்திய அரசின் வினியோகத்திட்டம் தமிழகத்திற்குப் பொருந்தாது என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் கெஸட் என்பது மாநில அரசின் அதிகார பூர்வ பிரகடனம் இல்லையா? அதில் வந்தது நடைமுறைப்படுத்தப்படாது என்று சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? மத்திய அரசுக்கு பணிந்து அவர்கள் கொடுத்த திட்டத்தை அப்படியே அரசிதழில் வெளியிடுவது,. வெளியே மக்களுக்கு பயந்து அதையெல்லாம் நடைறைப்படுத்த மாட்டோம் என்று சமாளிப்பது.

தங்களது அரசு கெஸட்டில் வந்த ஒன்றை வீண் வதந்தி என்று அந்த அரசின் அமைச்சரே சொல்வதைவிட கேவலம் ஒன்றுண்டா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில்,

“கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவார் என்பது உலகறிந்த உண்மை. சந்திரலேகா மேல் ஆசிட் வீசப்பட்டது, நக்கீரன் கோபால் கைது என அரசியல் எதிரிகள் மேல் நடத்திய தாக்குதல் எத்தனை..எத்தனை…போட்ட அவதூறு வழக்குககளுக்கு அளவு உண்டா?

கமல் ஒரு நடிகர். அவர் ஜெயலலிதாவிற்கு எதிராக வாயை திறந்தால் அவர் படம் வெளிவரமுடியாது. கமலும் அவரை நம்பியவர்களும் அதில் அழிவார்கள். ஜெயலலிதாவின் அராஜகத்தை எதிர்த்துப்பேசி கலைஞரோ தளபதியோ விளைவுகளை சந்திப்பார்கள். மாபெரும் இயக்கத்தின் தலைவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. அஞ்ச மாட்டார்கள். ஆனால் கமல் போன்ற ஒருவரால் ஒரு அரசின் ஒடுக்குமுறையை எப்படி சந்திக்கமுடியும்? எப்படி விலை கொடுக்க முடியும்? அப்போது அவர் பேசவில்லை என்பதற்காக ஜெயலலிதாவின் அராஜகங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டதாக அர்ததமா?

மெளனங்கள் எல்லாமே கோழைத்தனமல்ல. அப்போது கமல் மட்டுமல்ல, ஊடகங்கள், நடுநிலையாளர்கள் யாரும் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசவில்லை. திமுகவும் சில சிறிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும்தான் தொடர்ந்து போராடின.

சர்வாதிகாரியின் வீழ்ச்சிக்குப்பிறகு மக்கள் தெருவுக்கு வந்து அவரது சிலையை உடைப்பதுபோன்றதுதான் இன்று ஆட்சிக்கு எதிராக வெடிக்கும் விமர்சனங்கள்.

ஜெயலலிதா இருக்கும் போது கமல் பேசினாரா என்று கேட்கும் அடிமைகளே…உங்களுக்கு பேச்சுவரும் என்பதை நாங்கள் தெரிநதுகொண்டதே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதானே..” என்று எழுதியிருக்கிறார்.

கதிராமங்கலம் குறித்த ஓ.என்.ஜி.சி பத்திரிகையாளர் சந்திப்பு; பத்திரிகையாளர்களுக்கு தந்த பரிசால் சர்ச்சை!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை பத்திரிகையாளர்களுக்கு விளக்குவதற்காக, அந்நிறுவனம் நட்சத்திர ஹோட்டலான சென்னை ஹையாட்டில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு ரூ. 1700 மதிப்புள்ள மதிய உணவு விருந்தும் பிராண்டட் பை ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், தனது முகநூலில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் வெற்று பையை பரிசாக தந்திருக்கிறது ஓ.என்.ஜி.சி” என விமர்சித்துள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு ‘சிறப்பு’ சலுகைகள்; வெளியான வீடியோ!

சிறையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, சிறையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். சிறையில் போதைப் பொருள் உபயோகம் உள்பட பல முறைகேடுகள் நடப்பதாக அந்த அறிக்கையில் ரூபா தெரிவித்திருந்தார். அனைத்துக்கும் மேலாக  சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு, சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றும் புகாரில் ரூபா கூறியிருந்தார்.

சர்ச்சைகளை உருவாக்கிய இந்த புகாருக்குப் பிறகு, புகார் கூறிய டிஐஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், டிஐஜி ரூபா கூறிய புகாரை மெய்ப்பிக்கும் வகையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் வீடியோவாக வெளிவந்துள்ளது.

அவருக்கு ஒதுக்கப்பட்ட சிறைக்கு அருகே உள்ள ஐந்து சிறை அறைகளும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. ஃபிளாட் டிவி ஒன்றும் அவருக்குத் தரப்பட்டுள்ளது. அதோடு, கைதிகளின் உடைகளை அணியாமல் சசிகலாவும் அவருடன் சிறைதண்டனை அனுபவிக்கும் இளவரசியும் சாதாரண உடையில் உலவுகிறார்கள். அதிகாரிகளின் ஓய்வெடுக்கும் அறை, சசிகலாவை சந்திக்க வருபவர்கள் அமர்ந்து பேச ஒதுக்கப்பட்டிருக்கிறது. 150 சதுர அடியில் சிறையில் சசிகலா தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

பெரியாரை பிச்சைக்காரராக்கி எஸ். வி. சேகர் மீம்!

நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வி. சேகர், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். பெரியாரை பிச்சக்காரராக சித்தரித்து ட்விட்டரில் போட்ட மீம் இவருடைய சமீபத்திய சர்ச்சை.

எஸ். வி. சேகரின் இந்தப் பதிவுக்கு பலர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க. கனகராஜ் தன்னுடைய முகநூலில் எஸ். வி. சேகரின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எஸ். வி.சேகர் எல்லை மீறுகிறார்.

கண்டிக்கிறேன் என சொல்வது மிகமிக மென்மையானது.
பெரியாரை ஏற்றுக்கொண்ட கட்சிகள் ஒவ்வொன்றிடமும் ஒண்டியிருந்தவர் இவர். நாளை பிஜேபியையும் இப்படி அவர் அவதூறு செய்யக்கூடும்.

கோவிலும் பிச்சைக்காரர்களும் பிரிக்க முடியாதவை என்கிறார். இறை நம்பிக்கையாளர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தனக்கு லாபம் வருமென நினைத்தால் எதையும் செய்ய தயங்கமாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.