ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!

த.நீதிராஜன்

சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார்.

தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார்.

1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர்.

நிலங்கள், வீடுகள் வழங்கல், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் எனும் பணிகளில் தொடங்கி, தீண்டாமையையும் சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக, பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் அவர் உருவாக்கியவையே.

மண்டல் கமிஷன் பரிந்துரைத்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்கச் செய்வதற்கான ஆதாரமான பணிகளையும், அதனை பாதுகாப்பதற்கான பணிகளையும் செய்தவர் அவரே.

சிறுபான்மை மதங்களுக்கு உள்ளே இருக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பாதுகாத்தார். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என இந்திய சமூகத்தில் துன்பப்படுகிற ஒவ்வொரு மனிதர் மீதும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது. அவருக்கான தீர்வு இருந்தது. அதற்கான உழைப்பு இருந்தது.

பி. எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தின் அடியாழத்தில் மிக நெருக்கமான உறவுகளை அவர் உருவாக்கிக்கொண்டார். 70 ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையிலான அவரது சமூகப் பார்வை மிகவும் ஆழமான, தத்துவப் பார்வையாக இயல்பாக உருவாகியிருந்தது. அது அவரை இன்றைய சம கால இந்தியத் தலைவர்களைவிட உயரத்தில் நாட்டின் பிரச்சனைகளை பார்க்க வைத்தது.

சுருக்கமான சொன்னால், இந்த சமூகம் பற்றிய அம்பேத்கரின் லட்சியக் கனவை நிறைவேற்றுபவராக, இரண்டாம் அம்பேத்கராக நம் மத்தியில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அவர் இன்று காலை டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய்க்கான சிகிச்சை பயனளிக்காமல் தனது உழைப்பை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்! உங்களின் செயல்களுக்கும் கருத்துகளுக்கும் மரணமில்லை.

த.நீதிராஜன், செயல்பாட்டாளர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன.

எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு:

“கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!

நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் –

 1. கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.

 1. மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?

 2. பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.

 3. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?

 4. இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.

 5. நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 6. தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாக இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

 7. கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.

 8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர் தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.

 9. நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

 10. நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.

 11. உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.”

விமர்சகர் ராஜன் குறை, தியாகு மீது வைத்த விமர்சனம்:

“கலைஞர் குறித்த விவாதத்தில் தோழர் தியாகு விரிந்த வரலாற்றுப் பார்வையில் சில விமர்சனங்களைக் கூறியது தவறில்லை. விமர்சனத்தை சினத்தால் எதிர்கொள்ளாமல், சினம் காத்து விமர்சனப்பார்வையை வலுப்படுத்தும் விதமாகவே உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

தோழர் தியாகு மார்க்ஸின் “மூலதனம்” நூலை மொழிபெயர்த்தவர். அரசியல் தத்துவப் பயிற்சி உள்ளவர். அவரைப் போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கும் பரிசீலனைகள் என்னவென்று பட்டியல் இட விரும்புகிறேன்.

 1. இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசங்களில், கணிசமான மக்கள் தொகை கொண்ட தேசங்கள் எதிலாவது சமத்துவம், அதிகாரப் பரவல் போன்ற அரசியல் இலட்சியங்கள் முழுமையடைந்துள்ளனவா? அதற்கான சாத்தியமாவது தெளிவாகத் தென்படுகிறதா?

 2. இடது சாரி புரட்சி நிகழ்ந்த தேசங்களில் தனிநபர் ஆளுமைக் கலாசாரம், வழிபாடு தவிர்க்கப்பட்டுள்ளதா? சீன அதிபர் ஆயுட்கால அதிபராக அறிவிக்கப்பட்டிருப்பது எதைக்குறிக்கிறது? அறிவிக்கப்படாத ஆயுட்கால அதிபராகத் தோற்றம் தரும் விளாடிமீர் புடினின் ரஷ்யாவில் நடப்பது என்ன?

 3. பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கம், அதிகாரப் பகிர்வு போன்றவற்றை சுதந்திரவாதம், பொதுவுடமை இரண்டிற்குமான இலட்சியங்கள் என்று கொண்டால் இன்று உலக நாடுகளில் இவை எப்படி உள்ளன? எங்குமே இந்த இலட்சியங்கள் எட்டப்படவில்லை என்றால் முதலீட்டிய கால அரசியலை எப்படி புரிந்துகொள்வது?

 4. கலைஞர் போன்ற ஒரு முழு இறையாண்மை பெறாத மக்கள் தொகுதியின் தலைவரின் செயல்பாடுகளை எப்படிப்பட்ட சட்டகத்தில் வைத்து விமர்சனம் செய்யவேண்டுமே? உலகில் எங்குமே எட்டப்படாத இலட்சியங்களின் அடிப்படையிலா? அல்லது வெகுஜன அரசியலுக்கு உரிய சமரசங்கள் அடங்கிய சாத்தியங்களின் அடிப்படையிலா?”

இந்நிலையில் தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கும் விமர்சனத்தின் மீது வைக்கப்பட்ட எதிர்வினைகளுக்கும் தியாகு தெரிவித்துள்ள கருத்து:

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் // பரந்து கெடுக்க உலகியற்றியான்” என்பது குறள்நெறி. மனிதர்கள் யாவரும் சரிநிகர். நான் யாரிடமும் எந்தப்பிச்சையும் கேட்டதில்லை. எனக்கு யாரும் எந்தப்பிச்சையும் இட்டதுமில்லை. தண்டனைக் குறைப்பு என்பது சட்டப்படியான உரிமை. இந்த உரிமயை ஏற்றுச் செய்வது அரசின் கடமை. நன்றிக் கடன் என்பதெல்லாம் அடிமைச் சிந்தனை. கலைஞர் சட்டப்படி எனக்குச் செய்த உதவிக்கு நன்றி. ஆனால் அதற்காக என் அரசியலை நான் மாற்றிக்கொள்ள முடியாது. கலைஞருக்கு நான் ஓர் உதவி செய்தால் அவர் தன அரசியலைக் கைவி்ட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? நான் தனிப்பட்ட யாருக்கும் நன்றிக் கடன்பட்டவன் அல்ல. என் பெற்றோருக்கே நன்றிக் கடன்பட்டவன் அல்ல என்னும் போது கலைஞருக்கு நன்றி என்ற பேரால் அவரது அரசியலை மறுத்துப் பேசக் கூடாது என்பது எப்படி நியாயம்? ஒன்று உறுதி: நான் என் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவன். இறையன்பர்கள் இறைவனுக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவர்கள் அல்லவா? அதே போலத்தான். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.”

”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 25,417 பேர் கொண்ட அந்தப் பட்டியலில், மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான இடங்களை நகர்ப்புற மாவட்டங்களே கைப்பற்றியுள்ளன.

மருத்துவக் கல்வி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 2939 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1390 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1344 பேரும் மருத்துவக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர். இந்த இரு மாவட்டங்களும் சென்னை மாவட்டத்தின் நீட்சி என்பதாலும், இவற்றின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வருவதாலும் இவற்றையும் சென்னையாகவே கருத வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னையிலிருந்து மட்டும் 5646 மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர். கலந்தாய்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களில் 21 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர், மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து 12,585 பேர் கலந்தாய்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் 50 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த மாவட்டங்களில் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ, எந்தெந்த மாவட்டத் தலைநகரங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ அந்த மாவட்டங்களில் இருந்து தான் அதிகம் பேர் மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தின் பின்தங்கிய ஊரக மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அனுப்பும் மாவட்டங்கள் பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நீலகிரி (148 பேர்), திருவாரூர் (204 பேர்), பெரம்பலூர் (211 ), நாகப்பட்டினம் (297), அரியலூர் (316), கரூர் (343), இராமநாதபுரம் (350), சிவகங்கை (373), தேனி (414), புதுக்கோட்டை (423 பேர்) ஆகிய 10 ஊரக மாவட்டங்களிலும் சேர்த்து கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் எண்ணிக்கை 3019 மட்டும் தான். இது கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் வெறும் 12.11% மட்டும் தான். முதல் 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 50% இடங்களையும், கடைசி 10 மாவட்டங்களின் மாணவர்கள் 12.11% இடங்களையும் பெறுவதிலிருந்தே நகர்ப்புறங்களுக்கும் ஊரகப்பகுதிகளுக்கும் உள்ள இடைவெளியை உணர முடியும்.

இந்த எண்ணிக்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே. இவர்களில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் சேர்த்து சுமார் 5,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்புகளில் 90 விழுக்காட்டை நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதில் மாணவர்களின் தவறு எதுவும் இல்லை. மாநிலப் பாடத்திட்டத்திட்டத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத வகையில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படுவதும், அத்தேர்வுக்கு தயாராவதற்கான தரமான பயிற்சி ஊரக மாணவர்களுக்கு கிடைக்காததும் தான் இதற்குக் காரணமாகும்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும், கலந்தாய்வில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ள மாணவர்களில் 12 பேர் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப் பட்டிருப்பதாக கூறப்படும் போதிலும், நீட் தேர்வில் இழைக்கப்படும் சமூக அநீதிகளுக்கு அது மட்டுமே தீர்வு ஆகி விடாது. பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டாலும் கூட நீட் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறுவது, பயிற்சிக் கட்டணம் செலுத்துவது போன்றவை ஏழை ஊரக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.

நீட் தேர்வு என்ற பெயரில் இழைக்கப்படும் அனைத்து சமூக அநீதிகளுக்கும் ஒரே தீர்வு அத்தேர்வை ரத்து செய்வது மட்டும் தான். நீட் தேர்வு செல்லுமா, செல்லாதா? என்பது தொடர்பாக இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்; குறைந்தபட்சம் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியும். எனவே, அதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இது.

யார் நீ ரஜினி?

மாதவராஜ்

மாதவராஜ்

தனித்தனியாகவோ, குழுக்களாகவோ, கட்சியாகவோ ஓரளவுக்கு மக்களிடம் பெரியாரின் அம்பேத்கரின் மார்க்ஸின் கருத்துக்களும், பார்வைகளும் செல்வாக்கு கொண்ட நிலமாக தமிழகம் இருக்கிறது. தங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றின் நோக்கத்தையும், விளைவையும் ஆராயும் இயல்பு கொண்டதாய் இருக்கிறது. அதிகாரத்தால், ஆதிக்கத்தால் தான் வஞ்சிக்கப்படுவதை அறிந்துகொள்கிறது. அதுதான் அரசுக்கு எதிரான கலகக் குரல்களும், போராட்டங்களும் இங்கு தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. ஜனநாயகத்தின் அடையாளம் இது.

இந்துத்துவாவிற்கும் சரி, கார்ப்பரேட்களுக்கும் சரி, மக்கள் என்பவர்கள் புழுக்கள் போன்ற மலிவானவர்கள். மதிப்பற்றவர்கள். மேலே இருந்து வரும் ஆணைகளையும், அறிவிப்புகளையும் அப்படியே ஏற்று நடக்கக் கூடிய அடிமைகள். அவ்வளவுதான். மக்களின் போராட்டங்கள் என்பது அவர்களுக்கு சகிக்க முடியாத ஒன்று. சர்வாதிகாரத்தின் அடையாளம் இது.

இந்த ஜனநாயகத்திற்கும், அந்த சர்வாதிகாரத்துக்கும் இடையேயான போர்க்களமாகி இருக்கிறது தமிழகம். சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி. அதன் ஒவ்வொரு காரியத்தையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுகின்றனர் மக்கள்.

மக்களின் வெப்பம் படர்ந்த அரசியல் உணர்வையும், போராட்டக் குணத்தையும் ஊதி அணைக்க இந்துத்துவா சக்தி ஏவி விட்டிருக்கிற பூதமே நடிகர் ரஜினி. ரஜினியின் ரசிகர்கள் அரசியல் ரிதியாக தங்களுக்கு அடிமைகளாக இருக்கத் தகுதியானவர்கள் என கணக்கும் போட்டிருக்கின்றனர். ரஜினியை, ரஜினி ரசிகர்களை வைத்து போராட்டங்களுக்கு எதிரான சிந்தனைகளை மக்களிடம் விதைக்க முயற்சிக்கின்றனர். அதுதான் நேற்று ரஜினியை “போராட்டம், போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என நறநறவென கோபப்பட வைத்தது.

இந்த ஆட்டத்திலும் இந்துத்துவா சக்தி தோற்றுப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்று ரஜினி என்னும் அந்த பூதம் தமிழகம் முழுவதும் அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது. சி.பி.எம் தலைவர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோவிலிருந்து, தினகரன், சரத்குமார் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆள் ஆளாளுக்கு ரஜினியை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். பல்வேறு இயக்கங்களும் கண்டனக்குரல் எழுப்புகின்றனர்.

“போராட்டம் இல்லாமல் சமூக நீதி இல்லை”, “போராட்டம் இல்லாமல் உரிமைகள் வென்றெடுக்கப்படவில்லை” “போராட்டம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை”, “போராட்டம் இல்லாவிட்டால் தமிழகம் சுடுகாடாகி விடும்” என முழக்கங்கள் தமிழகத்திலிருந்து தெறித்தபடி மேலெழும்பி வருகின்றன.

கிறுகிறுவென தலைசுற்றிக் கிடக்கிறது ஜனநாயகத்தின் காலில் ரஜினி பூதம்.

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

12814779_1162842547082600_7331833625090669592_n
Karl Max Ganapathy

ஜி. கார்ல் மார்க்ஸ்

திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்…” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான்.

திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் திமுகவுக்குமான வேறுபாடு மாத்திரம் அல்ல மாறாக இதுவொரு தேர்தல் சாராத இயக்கத்துக்கும் வாக்கரசியல் கட்சிக்குமான அடிப்படை வேறுபாடு. இது இந்திய அளவில் செயல்படுகிற தலித் இயக்கங்கள் உள்ளிட்ட எல்லோருக்குமே பொருந்தும். திகவின் வழிமுறைகளை திமுக முழுவதுமாக வரித்துக்கொள்ள முடியாது. அப்போதும் சரி இப்போதும் சரி… இனி எப்போதுமே கூட.

இந்த அரசியல் புரிதலுக்கு வராதவரை அதிருப்தியடைவதை நம்மால் நிறுத்திக்கொள்ளமுடியாது. இயக்கத்துக்கும் கட்சிக்குமான அணுகல் முறைகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து திருமாவளவன் பேசியிருப்பதைக் கேட்டால் இன்னும் தெளிவாகப் புரியும். அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மற்றும் சந்தையூர் விவகாரம் போன்றவற்றில் தேர்தல் சாராத தலித் இயக்கத்துக்கும் தேர்தல் சார்ந்த தலித் கட்சிக்குமான அணுகல் முறையில் வேறுபாடு இருக்கவே செய்யும்.

இவ்வாறு சொல்கிறபோது பிரதானமான கேள்வி வருகிறது. இது சமரசங்களைப் பூசி மெழுகுவதாகாதா…? சீரழிவுகளுக்கு முட்டுக்கொடுப்பதாகாதா…? என்பதே அது. இதற்கு ஆம் அல்லது இல்லை என்கிற ஒற்றை பதில் கிடையாது என்பதே எனது அரசியல் புரிதல். ஏனெனில் சமூக இயங்கியல் அப்படியான ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அதிலும் குறிப்பாக சாதி என்பது பல கண்ணிகளுடன் செயல்படுகிற நுண்ணிய அலகு.

நாம் கவனம் செலுத்த வேண்டியது எதில் என்றால், தனது எல்லா சமரங்களுடனும் தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற ஒரு அரசியல் கட்சி தன் மீதான விமர்சங்களை எதிர்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மையுடன் இருக்கிறதா, அது சார்ந்த உரையாடல்களுக்கு முகம் கொடுக்கிறதா, தனது உறுப்பினர்களிடம் இருக்கும் சாதிய மேட்டிமை மனநிலையை கொஞ்சமாவது நெகிழ்த்தும் வழிமுறையை தனது அரசியல் பண்பாகக் கொண்டிருக்கிறதா, கட்சிக்குள் இருக்கும் வேறுபட்ட சாதிப் பிரதிநிதிகளுக்குள் குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் கூடிய இணக்கப்பாட்டை அது சாத்தியப்படுத்துகிறதா, அந்தப் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு அவர்கள் சார்ந்த சாதிகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வளர்க்கும் பண்பாக கீழ் மட்டத்தில் தொழிற்படுகிறதா என்கிற மதிப்பீடுகளையே.

இந்த அளவுகோலின்படி பார்த்தால் திமுக ஒப்பீட்டளவில், அதன் போதாமைகளுடன் சிறப்பாகவே செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதன் போதாமைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டுமெனில் கருணாநிதி கட்சித் தலைமைக்கு வந்த காலகட்டத்தில் இருந்த சாதியச் சூழல் குறித்த அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்கவேண்டும். தனது எல்லா சாதிய மேட்டிமைத்தனங்களுடனும், சுதந்திரத்துக்குப் போராடிய கட்சி எனும் அடையாளத்துடனும், தனது முதலாளித்துவ எச்சங்களைக் கைவிடாமல் அப்போது ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். அதன் மீதான தேர்தல் சாராத பெரியாரிய இயக்கம் தொடுத்த விமர்சனங்கள் ஏற்படுத்திய திறப்பின் வழியாக மக்களிடம் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கிறது திமுக.

அதிலிருந்துதான் திமுகவின் சாதனைகள் தொடங்குகின்றன. ஆனால் மிக நுணுக்கமாக நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு புள்ளி என்னவெனில் அரசு என்று வருகிறபோது, நாம் திமுகவின் வழிமுறையைக் காங்கிரசின் முந்தைய வழிமுறையுடன் பொருத்திப் பார்த்துதான் விமர்சிக்கவேண்டுமே தவிர திகவின் வழிமுறையோடு அல்ல. இங்குதான் திமுகவை விமர்சிப்பவர்கள் சறுக்குகிறார்கள். அந்த சறுக்கல் இப்போதும் தொடர்கிறது. இப்போதும் திமுகவை அதிமுகவுடன் ஒப்பிட்டுப் பரிசீலிக்காததன் அபத்தம் அதனால்தான் நேர்கிறது.

சமரசங்கள் என்று வருகிறபோது, ஒப்பீட்டு அளவில் கண்டிக்கும் அலகாக நெறிப்படுத்தும் அலகாக பெரியாரியத்தை திமுகவுக்கு இருக்கமுடியுமே தவிர, திகவின் அரசியல் நோக்கங்களை அப்படியே ஆட்சியில் செயல்படுத்தும் ஒரு கட்சியாக திமுகவைப் பார்க்க முடியாது. ஏனெனில் அது அதிகாரத்துக்கு வந்தததே குறைந்த பட்ச சமரசங்களின் வழியாக என்கிற போது அதிகாரத்துக்கு வந்தவுடன் அது தனது சமரச வழிமுறையை அப்படியே கைவிட்டு விட முடியாது. அவ்வாறு செய்யுமெனில் அது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு, இல்லாது போய்விடும் சாத்தியங்களே அதிகம். அந்த வெற்றிடம் அந்த கொள்கைக்கு எதிரான கருத்தை வைத்திருக்கும் கட்சிகள் வளர உதவும் என்பது அதன் உபவிளைவாக இருக்கும். இந்த கருத்தாக்கம் இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியதே.

முழுக்கவும் வெளியில் இருந்து எப்போதும் அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதை விட அதில் பங்கு பெறுவதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்னும் அண்ணாவின் வழிமுறை திராவிட இயக்கத்துக்கு எல்லா வகையிலும் நேர்மறையாகவே பங்களித்தது. அதுவே அண்ணாவின் சாதனை. ஆகவே நாம் அண்ணாவை பெரியாருக்கு எதிராக நிறுத்தி அவரை மதிப்பிடுவது பிழை. இணையாக நிறுத்தி மதிப்பிடும்போதுதான் நாம் குறைகளையும் நிறைகளையும் நேர்மையாகப் பரிசீலிக்கமுடியும். ஏனெனில் முன்னவர் இயக்கவாதி. பின்னவர் அரசியல்வாதி. இருவரும் அவரவர்களின் சிறப்புகளுடனுமே போதாமையுடனுமே இருக்கமுடியும். இருக்கவும் செய்கிறார்கள்.

அந்தவகையில் கருணாநிதியின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதது.

ஏனெனில் அண்ணாவுக்கு இருந்த சாதிய உயர்வு நிலை கருணாநிதிக்குக் கிடையாது. அவர் தமிழகத்தில் இருக்கும் மிகச் சிறுபான்மையான ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்தவர். அந்தஸ்திலும் எண்ணிக்கை பலத்திலும் வலு குறைந்த அவரது சாதியப் பின்னணி, திமுகவை அவர் நகர்த்திய விதத்தில் அண்ணாவின் வழிமுறையில் இருந்து முழுக்கவும் வேறாக இருந்தது. அது சமூகத்தளத்திலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே நான் மதிப்பிடுகிறேன்.

குறிப்பாக, கட்சியில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்சிக்குள் இருக்கும் சாதிய உறுப்புகளுக்கு இடையில் முரண்கள் நீடிப்பதை உறுதி செய்பவராகக் கருணாநிதி இருந்தார். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் அதனளவில் தனது எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டடைந்து போராடிக்கொண்டிருக்கும் தன்மையை அவர் ஊக்கப்படுத்தினார்.

எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் கூட சமூக அந்தஸ்தில் உச்சத்தில் இருந்த சாதிகளை மிகத் திட்டமிட்ட வகையில் உடலுழைப்பு சாதிகளுக்கு எதிராக நிறுத்தியதிலும், உடலுழைப்பு சாதிகள் கட்சி அதிகாரப் படிநிலையில் மேலெழுகிற போது அதன் இயல்பில் மூளை உழைப்பு சாதிகள் அவர்களை கட்டுக்குள் வைப்பதுமான ஏற்பாடுகளை உருவாக்கி நிலை நிறுத்திய வகையிலும் அவரது கட்சி அரசியல் என்பது இந்திய அளவில் முன்னுதாரணம் இல்லாதது. அவர் அரசியல் சாணக்கியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்குப் பின்னால் அதன் “முழு அர்த்தத்திலான சாணக்கியத்தனம்” உண்டுதான். இந்த வழிமுறையை அவர் கூட்டணிக் கட்சிகளிடமும் பயன்படுத்தினார்.

இந்த நுண்ணரசியலின் வழியாகவே கட்சிக்குள் ஒரு சமன்பாட்டை அவர் உருவாக்கி வைத்தார். இந்த சமன்பாட்டில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதன் பொருட்டு அவர் தனது அரசாட்சியின் போது கைகொண்ட வெளிப்படையான சமரசங்கள், சாதியொழிப்பின் மீது அக்கறை இல்லாதவர் என தலித் இயக்கங்கள் அவரை விமர்சிக்கவும், அதே சமயத்தில் “ஒரு தாழ்ந்த சாதிக்காரனின் கீழ் சாதிப்பற்று” என உயர் மற்றும் ஆதிக்க சாதிகள் அவரைத் தூற்றவும் வழியமைத்துக்கொடுத்தது.

கட்சிக்கு உள்ளே அவர் கட்டமைத்திருந்த இந்த சாதியச் சமன்பாடுகளை என்பதுகளில் தோன்றி மேலெழுந்து வந்த “சாதி அடையாள அரசியல்” எனும் அலை பெருமளவில் பாதித்தது. குறிப்பாக வன்னியர்களின் எழுச்சி மற்றும் அவர்கள் சங்கமாகத் திரண்டது ஆகியவை. அவர் மிக வேகமாக அதைப் புரிந்துகொண்டார். கட்சியின் உள்ளே வன்னியப் பிரதிநிதுத்துவத்தை மறுவரையறை செய்யத் தொடங்கினார். அதே காலகட்டத்தில், தலித் அடையாளத்துடன் புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளை பெரும் ஆசுவாசமாக உணர்ந்தார். அவர்களை வன்னியர் சங்கத்தைக் களத்தில் எதிர்கொள்ளும் அமைப்பாக இனங்கண்டார். அவர்களை அரவணைத்தார்.

இரண்டு இயக்கங்களையும் ஒன்றை மற்றதற்கு எதிராக நிறுத்துவதன் மூலம் திமுகவை அதன் கட்டமைப்பு சிதையாமல் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அதில் வெற்றியும் அடைந்தார். இந்த சாதிய முரண்கள் எதுவும் அவர் உருவாக்கியது அல்ல. இருக்கும் ஒன்றை பயன்படுத்துவது. manipulate செய்வது. ஆனால் கருத்தியல் தளத்தில் திகவின் விழுமியங்களுக்கு எதிரானது இது. ஆனால் இன்றைய காவிகளின் திட்டமிட்ட ஊடுருவலுடன் ஒப்பிட, ஒரு அரசியல் கட்சி தான் கைகொள்ளும் அரசியல் வழிமுறை என்று திமுக தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் சாத்தியங்களையும் கொண்டது.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் சாதியாகத் திரண்ட போதும் கருணாநிதி இதே வழிமுறையைத்தான் கையாண்டார். இந்த சாதி சார்ந்த சமரசங்களைத்தான் தேவைப்பட்ட இடங்களில் வெட்டியும் ஒட்டியும் தமிழ் தேசியம் பயன்படுத்திக்கொண்டது. அவருக்கு எதிரான கருத்தாக அதைத் திரட்டி மக்கள் முன் வைத்தது. ஆனால் அதை மிகத் தந்திரமாக செய்தது. சாதிக்கு எதிரான விமர்சனமாக அந்த வழிமுறைகள் திரண்டுவிடாமல் அதன் தவறான விளைவுகளுக்கு மட்டும் கருணாநிதியைப் பொறுப்பாக்கியது. இப்போதும் செய்கிறது. சாதிக்கு எதிராக அதன் நல்லிணக்கத்துக்கு ஆதரவாகக் கருணாநிதி செய்தவற்றில் ஒரு பகுதியைக் கூட செய்யாத தமிழ் தேசிய இயக்கங்கள், மக்களுக்கு எதிராக கருணாநிதியையும் திமுகவையும் நிறுத்தியதில் அடைந்த வெற்றி என்பது இவ்வாறு சாதிக்கப்பட்டதுதான்.

வெளியே மிக நாகரிகமாகத் தோற்றமளித்தாலும் தமிழர்களின் சாதிய அருவறுப்பு முகத்தை வேறு யாரையும் விட மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர் கருணாநிதி. அதனால்தான் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்று அவர் அதை அரசியலில் கையாண்டார். ஏனெனில் அதை விமர்சிக்கும் தார்மீகம் யாருக்கும் இருந்திருக்கவில்லை என்பதே. எல்லாரும் தனித்தனி கணக்குகளுடன் இருந்தபோது அந்தக் கணக்குகளுக்கு இடையேயான தந்திரக் கண்ணிகளை நெய்ததன் வழியாகவே அவர் தனது அரசியலை நகர்த்தினார். அதன் வழியாக இணக்கத்தையும் சாத்தியப்படுத்தினார். அதுவே இப்போதும் திமுகவின் அரசியலாக இருக்கிறது.

இதுவே, சமூக நீதி என்று வருகிறபோது வேறு எந்த தமிழகக் கட்சியையும் விட நிறைய சாதித்தது திமுக என்பதை மறுக்க முடியாததாக வைத்திருக்கிறது. அதுவே கருணாநிதியின் சாதனை. வரலாற்றில் வெளிச்சம் என்பது இருட்டின் இன்னொரு பகுதி அல்ல. அதன் உள்ளீடாக அதிலேயே இருப்பது அது. அதனால்தான் திமுக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத இன்றியமையாத தரப்பாக தன்னை நிறுவிக்கொள்கிறது. திமுகவின் சாதனைகளும் தோல்விகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தே இருக்கும். ஆம், ஒன்றில்லாமல் மற்றது இல்லை!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுக்கிறார் சமூக செயல்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான ஆர். பி. அமுதன். மாக்ஸ் முல்லர் பவன் மற்றும் மறுப்பக்கம் அமைப்பு இணைந்து நடத்தும் இந்தத் திரைப்பட விழாவில்  15 படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை தொடங்கி மூன்று நாட்கள் விழா நடக்கவிருக்கிறது. திரையிடலுடன் இசை, நடனம், கவிதை வாசிப்பு, ஒளிப்பட கண்காட்சி, விவாதம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன என்கிறார் ஆர்.பி. அமுதன்.

“என்னுடைய செயல்பாட்டுக்கு ஆவணப்படங்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன். சமூக நீதி கேள்விக்குறியாகிற இந்தக் காலக்கட்டத்தில் சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுப்பதை அவசியமாக கருதுகிறேன்” என்கிறார் ஆர். பி. அமுதன்.

இந்த விழாவில் தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி, சட்டீஸ்காரி, நிகோபரீஸ் ஆகிய மொழிகளில் தயாரான ஆவணப்படங்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படுகிறது.

 

செப்டம்பர் 14 நிகழ்வுகள்:

10 am Inauguration
Songs by Dalit Subbiah and team
Inaugural address: Pralayan, playwright/director
Felicitation by Someetharan, filmmaker, Kiruba Munusamy, advocate
Key note address: Dr.Swarnavel, filmmaker /writer/teacher, Michigan State University

காலை 11 மணி: Sikkidre Shikari, Illdidre Bhikari (Bird Trapper or Beggar!)
Dir: Vinod Raja; 79 min; Kannada and Vaagri Boli with English Subtitles.

12:20 Interaction with
MD Muthukumaraswamy, folklorist
Vinod Raja, filmmaker
Madhu Bhusan, co-producer / activist
Kumudha Susheel, member of Hakki Pikki Community
12:50 Inauguration of Photo Exhibition- curated by Amirtharaj Stephen
1:00 Lunch break

மதியம் 2 மணி: Nuclear Hallucinations
Dir: N.Fatima; 54 min; Tamil with English subtitles
2:55 Interaction with Dr.SP Udhayakumar, activist
பிற்பகல் 3.25 மணி: 18 Feet
Dir: Renjit Chellur; 77 min; Malayalam with English subtitles
4:45 Interaction with Prince Ennares Periyar, filmmaker
மாலை 5.15 மணி:  Invoking Justice
Dir: Deepa Dhanraj; 86 min; Tamil with English subtitles
6:45 Interaction with Sherifa, activist, Sudha Ramalingam, advocate
7:15 Paraiyattam by Buddhar Kazhai Kuzhu

செப்டம்பர் 15 நிகழ்வுகள்

Day 2 : 15 September; Friday
காலை 10 மணி: Yaadhum
Dir: Kombai Anwar; 56 min; Tamil with English subtitles
11:00 Interaction with Kombai Anwar
காலை 11.30 மணி: Nicobar, a long way
Dir: Richa Hushing; 65 min; Nicobarese, Hindi and English
12:35: Interaction Vinod Kaligai, activist, Sajit Attapuram, activist
1:00 Lunch break
மதியம் 2 மணி: The Hunt – Dir: Biju Toppu; 40 min; Chhattisgarhi, Hindi, English
2:40 Interaction with Prof A Marx
பிற்பகம் 3.10 மணி: I am Bonnie
Dir: Farha Katun,Satarupa Santra, Saurabh Kanti Dutta; 45 min; Bengali with English subtitles
Interaction with Living Smile Vidhya, theatre practitioner
மாலை 4.20 மணி: Seruppu (Footwear)
Dir: Amudhan R.P.; 64 min; Tamil with English subtitles
5:20 Interaction with Fr.Kumar, activist, Vijialakshmi, journalist, Vijay Anand, media person, Maga Tamizh Prabarakaran, filmmaker
6:00 Social Justice and Films – special talk by Dr. Binitha Thampi, IIT Madras
6:30 Poetry Reading: Moderated by Sa Vijayalakshmi, journalist
Poems by Kavin Malar, journalist / writer
Ra The Muthu, writer
Tha Jeevalaksmi, advocate
Era Suryadoss, writer
7:30 Man Puzhu Manithargal – designed and directed by Bagu and Arunmozhi; written by Konangi

செப்டம்பர் 16 நிகழ்வுகள்

Day 3: 16 September; Saturday
காலை 10 மணி: Accsex
Dir: Shweta Ghosh; 52 min; Hindi and English
11:00 Interaction with Aiswarya Rao, activist
காலை 11.20 மணி: Our Family
Dir: Anjali Monteiro and KP Jayasankar; 56 min; Tamil with English subtitles
12:20 Interaction with Ranjani Murthy, researcher / activist
நண்பகல் 12.45 மணி: Short films by Jeyachandra Hashmi
To Let (2:40 min)
Kalavu (1:47 min)
12:50 Interaction with Hashmi
1:00 Lunch break
பிற்பகல் 2 மணி:Death of a River
Dir: RR Srinivasan; 60 min; Tamil with English subtitles
3:00 Interaction with RR Srinivasan, filmmaker and Yazhan Aathi, poet
பிற்பகல் 3:20: Kakkoos
Dir: Divya Bharathi; 108 min; Tamil with English subtitles
5:10 Interaction with Divya Bharathi, filmmaker; Suseela Anand, activist
மாலை 5.30 மணி: The Unbearable Being of Lightness
Dir: Ramachandra PN; 45 min; English
Interaction with Amshan Kumar, filmmaker
6:30 Closing Ceremony
Felicitations:
Salma, poet
Sukirtharani, poet
Bava Chelladurai, writer
Aloor Shanavas, filmmaker / activist
Special lecture by Venkatesh Chakravarthy – Dean, Media Studies, SRM University
Celebrating Poramboke – music, films and talk
With Nityanand Jeyaraman, activist/researcher

நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?

பிரபாகரன் அழகர்சாமி

 1. சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சி.பி.எஸ்.ஈ நிறுவனமே இந்த தேர்வை நடத்துவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 95% மாணவர்களுக்கு இழப்பு.

 2. கடந்த ஆண்டுவரை பொதுப்போட்டியில் கணிசமான எண்ணிக்கையில் இடம்பிடித்துவந்த, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மாணவர்களுக்கு பெரும் இழப்பு!

 3. லட்சக்கணக்கில் செலவுசெய்து கோச்சிங் வகுப்புகளுக்கு போகமுடியாத அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இழப்பு!

 4. நல்ல கோச்சிங் சென்டர்கள் பெரிதும் பெருநகரங்களிலேயே இருப்பதால், சிறு நகரங்களையும், கிராமங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு இழப்பு!

 5. கடந்த ஆண்டுவரை மருத்துவக் கல்லூரிகளில் பெரிய அளவில் மாணவிகளே இடம்பிடித்திருந்தனர். ஆனால் இனி, லட்சக்கணக்கில் செலவுசெய்து பெண் பிள்ளைகளை நீட் கோச்சிங் அனுப்ப பெற்றோர்கள் தயங்குகிறார்கள் என்பதால், கணிசமான அளவிலான மாணவிகள் பெற்றுவந்த இடங்கள் பறிபோகும். எனவே பெண் பிள்ளைகளுக்கு இழப்பு!

 6. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 140 இடங்களில் வெறும் 5 இடங்கள் மட்டுமே இந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இழப்பு!

 7. நீட் தேர்வினை ஒரு மாணவர் மூன்று முறைகூட முயற்சி செய்யலாம் என்பதால், நடப்பு ஆண்டில் +2 எழுதுகிற மாணவர்களுக்கு இழப்பு.

 8. இந்த ஆண்டு தமிழ் வழியில் நீட் தேர்வினை எழுதியவர்களுக்கு, பொதுவான கேள்வித்தாள் இல்லாமல், தனி கேள்வித்தாள் கொடுக்கப்பட்ட சதிச்செயலின் மூலம், தமிழ் மீடியம் மாணவர்களுக்கு இழப்பு.

 9. தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் கணிசமான அளவு இடம்பிடித்துவந்த முதல் தலைமுறையாக கல்லூரி செல்கின்ற மாணவர்களுக்கு இழப்பு!!

 10. போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!

பிரபாகரன் அழகர்சாமி, சமூக -அரசியல் விமர்சகர்.

இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து,  உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களால் மட்டுமே 49.5 % இடஒதுக்கீட்டில் இடங்களைப் பெறமுடியும். சிபிஎஸ்இ நீட் தகவல் 2017 வெளியீட்டில் ‘க்ரீமி லேயர் விண்ணப்பதாரர்கள், ஓபிஸி பிரிவின் கீழ் வராதவர்கள்,  இட ஒதுக்கீடு பெறாத (Unreserved (UR) ) என்ற பிரிவை குறிக்கும்படி’ சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு, ஓசி விண்ணப்பதாரர்கள் பெற்ற இந்திய அளவிலான ரேங்கை குறிப்பிட்டால் மட்டும் போதும். இந்த ஆண்டு, ரேங்குடன் சேர்த்து இட ஒதுக்கீடு பெறாத என்ற தகவலையும் சேர்த்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது அந்த வெளியீடு.

உதாரணத்துக்கு, இந்த புதிய அறிவிப்பின் மூலம், இந்திய அளவில் 80,000வது ரேங்க் வாங்கிய ஓசி மாணவர், இட ஒதுக்கீடு பெறாத பிரிவின் கீழ் 40,000வது ரேங்க் பெற முடியும்.

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, ஒவ்வொரு அங்குலத்திலும் நொடிக்குநொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி என்று ஹரியானா முழுவதையுமே அறிவிக்குமளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்கு சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.

*
ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்திலுள்ள மிர்ச்பூர் ஏற்கனவே சாதிய வன்கொடுமைக்காக அறிப்பட்டதுதான். 1700 ஜாட் குடும்பங்களும் 525 தலித் குடும்பங்களும் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பார்ப்பனர்களும் மிர்ச்பூரில் வசிக்கிறார்கள். சாதியத்தை ஏற்கிற யாவருமே பார்ப்பனர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறபடியால் அவர்களது எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. மிர்ச்பூரின் ஜாட் ஜமீன்தார்களில் ஒருவன் ஹோசியார் சிங். தன் மகனுக்கு ஓரினப்புணர்ச்சியில் நாட்டமிருப்பதையறிந்து அவனது உறவாளிகளைக் காட்டுமாறு அவனை வெளுத்தெடுக்கிறான். உறவாளிகளை காட்டிக்கொடுக்க விரும்பாத மகனோ மூன்று தலித்துகளின் பெயர்களை கூறிவிடுகிறான். ஹோசியார் சிங்கும் அவனது மனைவி நங்கி சிங்கும் தலித் குடியிருப்புக்குள் புகுந்து இரண்டு தலித் இளைஞர்களையும் அவர்களது தாய்மார்கள் மூவரையும் பிடித்து அடித்திருக்கிறார்கள். அவர்களை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்றிருக்கிறார்கள். 2.5.2007 அன்று நடந்த இவ்வன்கொடுமை நாடு தழுவிய கண்டனத்தைப் பெற்றாலும் அதற்காக சாதியவாதிகள் அகங்காரத்தை விட்டுவிடுவார்களா என்ன?

19.4.2010. குடிவெறியில் நிதானமிழந்த ஜாட் இளைஞர்களின் கும்பலொன்று இருசக்கர வாகனத்தில் தலித் குடியிருப்புக்குள் நுழைந்திருக்கிறது. கரன்சிங் என்கிற தலித் வளர்க்கும் நாய் (ரூபி) அந்த கும்பலின் கொட்டத்தைப் பார்க்கச் சகியாமல் குரைத்திருக்கிறது. உடனே ராஜீந்தர் பாலி- ஜமீன்தார் ஒருவரின் மகன், செங்கல்லால் நாயைத் தாக்கியிருக்கிறான். இதை ஆட்சேபித்த கரன்சிங்கின் உறவினரான யோகேஸ் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். அங்கு வந்த கரன்சிங், பிரச்னை பெரிதாகிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் கும்பலிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பிவைத்திருக்கிறார். இயல்புக்குத் திரும்பமுடியாத கரன்சிங் தங்களது சமுதாயத்தலைவர் வீர் பானுடன் போய் ஜாட்டுகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் வீர் பான் ஜாட்டுகளால் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட்டுகளின் விபரீதத்திட்டத்தை யூகித்த தலித்துகள் நர்னான்ட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 2007ல் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தவரும், மிர்ச்பூர் ஜாட் தலைவன் ஒருவனுடைய மருமகனின் நண்பனுமான வினோத் குமார் காஜல் என்பவன்தான் இப்போதும் காவலதிகாரி. தன் நண்பனோடு தலித் குடியிருப்புக்குப் போன அந்த அதிகாரி புகாரை திரும்பப் பெறுமாறு தலித்துகளை மிரட்டியுள்ளான். 21.4.2010 காலையில் அந்தக் காவலதிகாரியும் வட்டாட்சியரும் அழைத்ததன் பேரில் தலித்துகள் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த நேரத்தில் ஜாட்டுகள் தலித்துகளின் 18 வீடுகளை கொள்ளையடித்துவிட்டு தீயிட்டு பொசுக்கினர். போலியோவினால் நடக்கவியலாத சுமன்(17) என்கிற பெண்ணை வீட்டுக்குள் வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். மகளைக் காப்பாற்ற தாராசந்த் வீட்டுக்குள் ஓடியபோது ஜாட்டுகள் கதவைப் பூட்டி இருவரையும் எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.

தலித்துகளின் போராட்டத்தால் காவலதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டான். குற்றம்சாட்டப்பட்ட 43 பேரில் 29 பேர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே கால்நடைப் பராமரிப்புத்துறை வளாகத்தில் ஜாட்டுகள் மகாபஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்கள். அங்குள்ள அரசாங்க அலுவலகம்கூட சாதிச்சங்க கட்டிடம்போல் இயங்குகிறது. 43 காப் பஞ்சாயத்துகளின் 2000 பேர் அங்கு கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும், காவலதிகாரியை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ரயில் மறியல் செய்வோம் என்றும் அரசையே மிரட்டினார்கள். அதன்படியே பிற்பாடு ரகளையும் செய்தார்கள்.

இனி மிர்ச்பூரில் குடியிருக்கமுடியாது என்பதால் தலித்துகளில் சிலர் அக்கம்பக்கமுள்ள ஊர்களுக்குச் சென்றுவிட, 70 குடும்பங்கள் வேத்பால் தன்வர் என்பவரது இடத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து ஆறுவருடங்களாக வசித்துவருகிறார்கள். தலித்தல்லாத அந்த மனிதாபிமானிக்கும் மிரட்டல்தான்.

இந்த வன்கொடுமை வழக்கு உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சுற்றியலைந்துகொண்டிருக்கிறது. நீதிமன்ற ஆணைப்படி மத்திய பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி ஏந்தி ஊரில் காவல் இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம், மீண்டும் உங்கள் இடத்துக்கு வந்து குடியேறுங்கள் என்று தலித்துகளுக்கு தைரியமூட்டவோ, வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று ஜாட்டுகளை எச்சரிக்கவோ திராணியில்லாமல் மத்திய பாதுகாப்புப்படையினர் அங்கு தண்டத்துக்கு நின்றிருக்கிறார்கள். யாரிடமிருந்தும் அவர்கள் யாரையும் காப்பாற்றவில்லை. ஒருவேளை ஜாட்டுகள் தங்களையும் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் அவர்கள் தினமும் துப்பாக்கியைத் துடைத்து ரவையை நிரப்பிக்கொள்கிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மிர்ச்பூரின் இந்த வரலாற்றைத்தான் ஜெயக்குமார் ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’ என்கிற ஆவணப்படமாக எடுத்துள்ளார். பார்ப்பனீயவாதிகள் மனிதத்தன்மையற்றவர்கள், வன்முறையாளர்கள் என்பதற்கான மற்றுமொரு கொடிய சாட்சியம் இப்படம்.

***

சாதியாணவப் படுகொலைகள் குறித்து தான் எடுத்துவரும் ஆவணப்படத்திற்காக ஜெயக்குமார் அலைந்த காலத்தில்தான் மிர்ச்பூர் வன்கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறார். படத்தை அப்படியே நிறுத்திவிட்டு தன் குழுவினரோடு மிர்ச்பூருக்கு விரைந்த அவருக்கு ஊருக்குள் நுழைவதே உயிரச்சம் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது. ஜாட்டுகள் வாய் திறக்க மறுத்ததோடு அவர்களது நடமாட்டத்தையும் கண்காணித்திருக்கிறார்கள். எனவே ஊருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகமில்லை. ஆயினும் ஊர் எரிக்கப்பட்டது, மகள் -தந்தை படுகொலை, இடப்பெயர்ச்சி போன்றவற்றுக்கான காணொளித்துண்டுகள் கிடைக்காத நிலையில் அவற்றை அனிமேஷன் செய்து பொருத்தமாக இணைத்திருக்கிறார்.

தலித்துகளுக்கு நிலபுலமென்று பெரிதாக ஏதுமில்லாவிட்டாலும் அருகாமை நகரங்களுக்குப் போய் உழைத்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருந்திருக்கிறார்கள். உள்ளூர் நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையை ஜாட்டுகளை பின்னுக்குத் தள்ளி ஏலமெடுத்தவர் கரன்சிங். ஐம்பதாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டி உள்ளூர் பூலான் தேவி கோயில் திருவிழாவை நடத்துவதற்கான ஏலத்தை தரம்வீர் என்கிற தலித்தே எடுத்திருக்கிறார். ஜாட்டுகளின் பார்வையில் இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள். ஆகவே நாய் குரைத்ததால் வந்த வினை இது என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாய் குரைத்திருக்காவிட்டாலும் ‘அதற்குகூட லாயக்கில்லாதவர்களா நாங்கள்?’ என்று வம்பிழுத்து தாக்கியிருப்பார்கள். தாக்குவது என்கிற தீர்மானத்தை செயல்படுத்திட நாய் குரைத்தது ஒரு சாக்கு, அவ்வளவுதான்.

பார்ப்பனீயத்தை ஏற்றவர்களின் வசிப்பிடம் ஊர். அதிலிருந்து மாறுபட்ட வாழ்முறை கொண்ட தலித்துகளின் குடியிருப்புகளோ ஊராரின் ஆளுகைக்கு கீழ்ப்பட்ட சேரி/காலனி /அம்பேத்கர் நகர்/ கீழ்த்தெரு என்பதாக பலவந்தமாக பிணைக்கப்பட்டுள்ளது. தனிப்பெயருமின்றி சேரிகள் அந்தந்த ஊரின் பெயரை முன்னொட்டாக கொண்டுள்ளன. வாழ்வாதாரத்திற்கு ஊராரைச் சார்ந்திருக்கும் நிலையும் இதனோடு சேர்ந்திருக்கிறது. ஊர்களிலிருந்து விடுவிக்கப்பட்ட, சுயாதீனமான வாழ்வாதாரங்களையும் அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்ட சுதந்திரமான தனிக் குடியேற்றப்பகுதிகளை – அதாவது தனி ஊர்களை- தலித்துகளுக்கென அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்றார் அம்பேத்கர். அதற்கான தேவையை சாதியவாதிகளே தீவிரப்படுத்துகிறார்கள் என்பதை மிர்ச்பூரும் உணர்த்துகிறது.

தாக்குதல் பற்றிய விவரணைகள் மூலம் வெளிப்படும் மூர்க்கத்தையும் ஆணவத்தையும் தந்திரத்தையும் ஏற்கனவே எங்கோ பார்த்திருப்பதுபோல நமக்குத் தோன்றும். ரொம்பவும் மூளையைக் கசக்கவேண்டாம், மிர்ச்பூரில் நடந்ததென்னவோ அதுதான் தருமபுரியிலும் நடந்தது. மிர்ச்பூருக்குச் சென்ற உண்மையறியும் குழுவிடம் ‘அவர்கள் நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டு தங்களது வீடுகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள், அந்தப் பெண்ணையும் அவளது தகப்பனையும் கொன்றுவிட்டார்கள்’ என ஜாட் வழக்கறிஞர் அசோக் சிங் தெரிவித்தாராம். பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம்சாட்டும் இந்த உத்தியே தருமபுரியிலும் கையாளப்பட்டது.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஊரைவிட்டு வெளியேறி ஆறுவருடங்களாக தங்கியுள்ள இடத்தை மையத்தில் வைத்து முழுவிசயத்தையும் பேசுகிறது படம். நீதிக்கான தலித்துகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியவர்களின் நேர்காணல்கள் பிரச்னையின் பரிமாணங்களை உணர்த்துகின்றன. அரசின் அலட்சியம், கட்சிகளின் சவடால், ஒவ்வொரு நாளையும் கழிப்பதிலுள்ள இடர்ப்பாடுகள், கடந்தகாலத்தை திரும்பிப்பார்க்க விரும்பாமை, ஏனிங்கு கிடக்கிறோம் என்பதறியாமல் தமதியல்பில் விளையாடிக் களிக்கும் குழந்தைகள், எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் வாழ்வின் மீதான பற்று- என விரியும் காட்சிகள், தங்களுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு இயல்பான வாழ்க்கைக்குள் சென்றுவிட முடியாதா என்கிற அவர்களின் ஏக்கத்தையும் எத்தனத்தையும் குறிக்கின்றன.

ஊரின் பெயரை மாற்றிக்கொண்டால் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் பொருந்தும் தன்மையை படம் கொண்டிருக்கிறது. சடசடத்தெரியும் தீக்குள்ளிருந்து எழும் ஒரு பெண்ணின் தீனமான கதறல் வளர்ச்சி, வல்லரசு என்கிற ஆரவார முழக்கங்களுக்கிடையில் அமுங்கிப்போகலாம். ஆனால் அந்தக் குரலை தனக்குள் பொதித்து வைத்திருந்து வரலாறு மீண்டும் எழுப்புவதற்கு இந்தப் படம் துணை செய்யும்.

டாக்டர் ஷூமேக்கர்

தமிழ்நாட்டில் சில டாக்டர்கள் ஒன்றாக இருக்கும் சமூகத்தை வெட்டிப் பிளக்கிறார்கள். மனங்களில் விஷ ஊசியேற்றுகிறார்கள். சமூகத்தின் நோய்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நேரெதிரானவர் டாக்டர் ஷூமேக்கர் எனப்படும் திரு.இம்மானுவல். அவர் பிரிந்தவற்றை ஒட்டுகிறார், கிழிந்தவற்றை தைக்கிறார், முரண்டினால் லேசாக தட்டவும் செய்கிறார். வில்லிவாக்கம் மண்ணாடி ஒத்தவாடைத்தெருவின் பிரதானச்சாலையோரத்தில் இருக்கிறது அவரது கிளினிக்.

இம்மானுவேல், ஒரு கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்டத்திற்கு காலளவுக்கு முக்கியமானது ஷூ. அவ்வப்போது பழுதாகிப்போகும் ஷூவை செப்பம் செய்ய அலைய நேர்ந்திருக்கிறது. எனவே தானே தனது ஷூவை செப்பம் செய்துகொள்ளத் துணிந்து, அத்தொழிலில் பிரசித்தமான ஒருவரைத் தேடிப்போய் தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் தன்னுடைய ஷூவை மட்டுமே செப்பம் செய்துவந்த அவர் பிறகு நண்பர்களுக்கும் செய்து கொடுத்திருக்கிறார். அவரது பெயர் பரவுகிறது. புதிய ஷூ வாங்க முடியாத ஏழைப்பையன்கள் தங்களது கிழிந்த ஷூவை சரிசெய்து கொடுக்கும்படி அவரைத் தேடி வருகிறார்கள். கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது ஆர்வத்தைப் போற்றும் விதமாக ஷூவை சரிசெய்து கொடுக்கத் தொடங்குகிறார். அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கு தன்னாலானதைச் செய்துகொடுத்த மனநிறைவு அவரை நிரந்தரமாக ஒரு கடைபோட வைக்கிறது. அவர் வேலை பார்த்துவந்த பின்னிமில் மூடப்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக முழுநேரமாக அந்தக்கடைதான் அவரது வாழ்க்கை.

தைப்பதற்கான ஷூக்களும் பந்துகளும் சூழ்ந்திருக்க அயராது ஒவ்வொன்றாக தைத்தபடி இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஷூவைக்கூட பத்திரமாக வைத்திருக்கிறார். ‘எல்லாரும் ஏழைப்பசங்கதானே, வந்து வாங்கிப்போக காசு இருந்திருக்காது’ என்கிறபோது அவரது குரலில் வெளிப்படும் கவலை கூலி பற்றியதல்ல. புதிய ‘பூட் கட்டுவதிலும்’ தேர்ந்தவரான அவர் தனது வாடிக்கையாளர்களாகிய ஏழைச்சிறார்களிடமிருந்து அன்னியப்படாதிருப்பதற்காக அந்தக் கடையை பிடிவாதமாக நடத்திவருகிறார். ‘எப்பேர்ப்பட்ட கந்தலானாலும் சரிசெய்து கொடுத்துவிடுவார், அவர் ஒரு டாக்டர்’ என்று தயா சொன்னது அப்படியே பரவிவிட்டது. சென்னை மட்டுமல்லாது அண்டை நகரங்களிலிருந்தும் அவரைத் தேடி வந்தவண்ணமிருக்கும் கால்பந்தாட்ட வீரர்கள், கோச்சுகள் அனைவருக்குமே அவர் இப்போது டாக்டர்.

***

இன்னின்ன தொழிலை இன்னின்ன சாதிகள்தான் செய்யவேண்டும் என்பார்கள். ராக்கெட் விடுறதுக்கும் ரயில் ஓட்டுறதுக்கும் எந்த சாதியை நேர்ந்துவிட்டிருக்கிறது? கட்டணக் கழிப்பிடத்தை பல சாதியினரும் ஏலமெடுத்து காசு பார்ப்பார்கள். பிந்தேஸ்வர் பதக் என்கிற பார்ப்பனரால் தொடங்கப்பட்ட சுலாப் இன்டர்நேஷனல் 600 நகரங்களில் குளிப்பறை கழிப்பறைகளை நடத்திவருகிறது. தோல் தொழிற்சாலை நடத்துவார்கள், தோல் பொருட்களை விற்பனை செய்வார்கள். இதற்காக இவர்களது சாதி அந்தஸ்து குறைந்துவிடுவிடுவதில்லை. ஆனால் இதே வேலையை தலித் பார்த்தால் கேவலம் என்று ஒதுக்கிவைப்பார்கள். இம்மானுவல் தனது சாதிக்குரியதாக அல்லாத ஷூ தைக்கும் தொழிலை உவப்போடு செய்துவருகிறார். தனது தொழில் தெரிவு குறித்து அவருக்கு தாழ்வுணர்ச்சியில்லை. ஏன் அந்த சாதிக்காரன் தொழிலை செய்கிறாய் என்று தொடக்கத்தில் அவரது அக்கா கண்டித்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினரிடம் இப்போது எந்தப் புகாரும் இல்லை. ‘அவர் தனக்கு விருப்பமான இந்த வேலையை செய்யட்டும், முடியாத காலத்தில் பேரப்பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்கிற அவரது மகனின் கூற்று இப்படத்தின் முக்கியமான செய்தி. 56 வயதிலும் இம்மானுவல் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் சற்றும் குன்றாமல் திடலில் இறங்கி ஆடுகிறார். விருப்பங்களைக் கொண்டாடி வாழத் துணிந்த அவருக்கு நூல், தோல். ஊசி, பந்து என எல்லாவற்றையும் ஒன்றுபோல் தெரிவது இயல்புதானே?

***

வெளியுலகத்தின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களின்மீது அன்போடு இயங்கும் இமானுவல் போன்ற ஒருவரது வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்று பாண்டியராஜ், வினோத் குழுவினர் அக்கறை காட்டியுள்ளனர். தனிப்பட்ட ஓர் ஆளுமையைப் பற்றிய ஆவணப்படத்திற்கான உதாரணமாக காட்டுமளவுக்கு டாக்டர். ஷூ மேக்கர் முழுமைப்பட்டிருக்கிறார்.

***
திரையுலகில் தனிக்கவனம் பெற்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்முயற்சியில் உருவான நீலம் அமைப்பு இவ்விரண்டு படங்களையும் தயாரித்துள்ளது. இதேபோல உதவ வாய்ப்புள்ளவர்கள் முன்வருவார்களேயானால் இளைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்கி பல மிர்ச்பூர்களை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரக்கூடும்.

ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்; சமூக கலை இலக்கிய இதழான புதுவிசையின் ஆசிரியர்.

புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து 64-வது மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை முன் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கவில்லை. அதற்கு பதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவினர் நாடு முழுவதும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளை நடத்தியதாக கூறி, 44 பக்கங்கள் கொண்ட “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. “தமிழை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை மடியில் தூக்கி வைத்து தாலாட்ட முன் வருவதா?” என்று புதிய கல்விக் கொள்கையின் மீதான எதிர்ப்பு மாநிலத்தில் காட்டுத் தீ போல் பரவியது. இந்நிலையில் புதிய கல்வி்க் கொள்கைக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய ஆர்பாட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின் படி பங்கேற்ற நான், “புதிய கல்விக் கொள்கையானது அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் போன்ற அனைத்திற்கும் விரோதமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினேன். இது தொடர்பாக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன். இந்த விவாதத்திற்கு பதிலளித்தப் பேசிய மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றை திணிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம். தமிழகத்தின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். நமது மொழி, கலாச்சாரம், தன்மை பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு பரிசீலித்து தமிழக அரசின் கருத்து தெரிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்நிலையில் வருகின்ற 25.10.2016 அன்று புதிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழுள்ள கட்டாய தேர்ச்சி முறை போன்றவை குறித்து கருத்துகளைக் கேட்க 64-வது “மத்திய கல்வி ஆலோசனைக் குழு” கூட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற இது போன்ற 63-வது கூட்டத்தில் மற்ற மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் சார்பில் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆனால் தமிழகத்தின் சார்பில் கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை அனுப்பி, அக்கூட்டத்தில் பங்கேற்க வைத்தது கவலையளிப்பதாக அமைந்து விட்டது.

மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இட ஒதுக்கீடு உரிமை, தமிழ் மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை, சிறுபான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவு கல்விக் கொள்கையை மாநில அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில், புதிய கல்விக் கொள்கையால் வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைக்க, அந்த கூட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சரை அனுப்பி வைக்க வேண்டும் ” என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளவதாகத் தெரிவித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 2013 ஆம் ஆண்டு, வருமான உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் 12 இலட்சம் ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 9 இலட்சம் ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டும் என்று வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் மண்டல்குழு பரிந்துரைத்தவாறு 27 விழுக்காடு இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு நிரப்ப முடியாமல், பாதி அளவுதான் ஒதுக்கீடு செய்கின்ற நிலைமை இருப்பதால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.
தற்போதுள்ள நிலையில் (கிரீமிலேயர்) வருமான உச்ச வரம்பு 6 இலட்சம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தால் வருமான உச்ச வரம்பை ரூ.15 இலட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித்.

ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து பேச அழைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டமாகனது, அவமானகரமானது. அன்புமணி, 2012-ல் 200 தலித் வீடுகள் கொளுத்தப்பட்ட தர்மபுரியிலிருந்து எம்பி ஆனவர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாமக முக்கியப் பங்கு வகித்தது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் மணம் புரிந்துகொண்டதன் பேரில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.  அந்த தலித் இளைஞர் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடைய அம்மா, இது கொலைதான் எனத் தெரிவித்தார்.

இவை அனைத்து நடந்தேறிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான திட்டமிடப்பட்ட அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது பாமக. தலித் ஆண்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் உயர்சாதி பெண்களை கவர்வதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இதை முன்வைத்து வன்முறைகளை கட்டவிழ்க்கப்பட்டு தலித்துகள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. தேர்தல் கால பலன்களை அறுவடை செய்யவே இவையெல்லாம்.

obc forum

எம்பியாக இருந்த அன்புமணி ராமதாஸ், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேரணியை நடத்தியிருக்கிறார். தலித்துகளுக்கு எதிரான பாதையை போட்டுக்கொடுத்திருக்கும் தன் தந்தையும் பாமக நிறுவனமருமான ராமதாஸின் பாதையில் இவர் பயணிக்கிறார். இதுபோன்ற ஒருவர்தான் ஓபிசி ஃபாரத்தில் சமூக நீதி குறித்து பேச வேண்டுமா? அதிகாரம் மிக்க அமைச்சர்களால் சமூக நீதியை அடைந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒருங்கிணைப்பதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

இந்த அழைப்பு அன்புமணிக்கு அனுப்பப்பட்டிருப்பது தொடர்பாக சில மாணவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் எங்களுடன் இணைய வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (25-8-2016) நடைபெறுகிறது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது:

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக மதனிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், தங்களுக்கு மருத்துவப்படிப்பில் இடமும் வழங்கப்படவில்லை; தாங்கள் கொடுத்த பணமும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறி சுமார் 50 பேர் சென்னை மாநகரக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தங்கள் குழுமத்துக்கும், மதனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரது செயல்களுக்கு தங்கள் குழுமம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. ஏனெனில், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவுக்கு மதன் எல்லாமுமாக இருந்திருக்கிறார். அவரது பெயரில் திரைப்பட நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் முதலீடு செய்து திரைப்படங்களை தயாரித்தும், வினியோகித்தும் உள்ளார். பச்சமுத்துவுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் மதன் என்பவர் முகவரி இல்லாத மிக மிகச் சாதாரண மனிதர் தான். இப்படிப்பட்ட சாதாரண மனிதரை நம்பி எவரும் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்காக மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களின் பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி பச்சமுத்துவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையிடமும் பச்சமுத்து, மதன் ஆகிய இருவரின் பெயரிலும் தான் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, தலைமறைவான மதன் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,‘‘மருத்துவப் பட்டப்படிப்பு, மேற்படிப்பு ஆகியவற்றுக்கு நுழைவுத்தேர்வு உண்டு என்றாலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 102 இடங்கள் நிரம்பிவிட்டன. இதற்குக் காரணம் எனது உழைப்பு. நான் அனுப்பிய பட்டியலிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்க வேண்டும். அவர்களிடம் வாங்கிய பணம் முழுமையாக உங்களிடம் (பச்சமுத்து) கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதனுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானதாகும்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் பொறுப்பு மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா மருத்துவ இடங்களும் மதன் மூலமே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதற்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை மதனுக்கு தரகுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களை பிடித்து தருவதற்காக பல மாநிலங்களில் முகவர்களை மதன் நியமித்திருக்கிறார். மதனுக்கு உள்ள இத்தொடர்பு மூலம் தான் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட முடிந்தது. இதை பல்வேறு ஊடக நேர்காணல்களில் பச்சமுத்துவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை பணம் வாங்கிக் கொண்டு சேர்க்கும் முகவராக மதன் செயல்பட்டார் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் பச்சமுத்து மற்றும் மதன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக தமது மூலம் தான் மாணவர் சேர்க்கை நடந்ததாகவும், 8 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பச்சமுத்துவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தமது கடிதத்தில் மதன் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மருத்துவப் படிப்பு இடங்களை பணத்திற்கு விற்பனை செய்திருப்பது உறுதியாகிறது. இந்தச் செயல் இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிரானது ஆகும். இத்தகைய முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அத்துடன், மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து இந்திய மருத்துவக் குழு(MCI) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ராமதாஸின் அறிக்கைக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவராக பாரிவேந்தர் பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறுபல கல்லூரிகளிலும் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாக சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது மருத்துவர் ராமதாசின் அன்றாட வாடிக்கை.

தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் – பார்க்கவகுலத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களிடத்தில் விரோதத்தை வளர்த்து அமைதியை கெடுக்க பார்க்கிறார் ராமதாஸ். சமூக நீதிக்காக போராடுகிறேன் என கூறும் ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்..

வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை திசை திருப்பும் முயற்சியல்லவா

மத்தியிலும், மாநிலத்திலும் கிடைத்த அரசு பதவிகளை பயன்படுத்திக்கொண்டு, கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் முதலீடு செய்து இருப்பது யார் என்பதை பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விளக்கவேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ் , இன்று பலஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் – பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா.. ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட மருத்துவர் ராமதாஸ், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி படிப்படியாக முன்னேறி உலக தரம் வாய்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னை பார்த்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

மருத்துவர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையில் பெற்றுக்கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா..

அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்துவிட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது ஊர் அறிந்த உண்மை அல்லவா..

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா..

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா.. அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா..

எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது, மற்ற மூன்று விரல்களும் தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும் வஞ்சக பாட்டிற்கு பின்பாட்டு பாட வேண்டாம் என மருத்துவர் ராமதாசைக் கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் நியாயவானா எனக் கேள்விக் கேட்ட பச்சமுத்துவுக்கு பாமக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி இப்படி ‘பதிலடி’ தருகிறார்:

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்தும், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து வைத்திருப்பது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து, மருத்துவர் அய்யா எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காமல் அய்யா அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.

அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக யாரையாவது எதிரியாக சித்தரித்து அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கம் என்று பச்சமுத்து கூறியிருப்பதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. கொளுத்தும் வெயில் குறையும் நேரத்தில் நடந்து செல்பவர்களின் நிழல், அவர்களின் உண்மையான உயரத்தைவிட அதிகமாக இருக்கும். அதேபோல், வெயில் நேரத்தில் தனது நிழலைப் பார்த்துவிட்டு தாம் ஏதோ வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவரை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்ப்பதாக பச்சமுத்து உளறியிருக்கிறார். பச்சமுத்துவிடம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அவரை எதிர்த்து அய்யா அவர்கள் அரசியல் செய்வதாகக் கூறுவது மனநிலை பிறழ்வுக்கு முந்தைய நிலை கற்பனை தானே தவிர வேறொன்றுமல்ல. அதேபோல், அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் பச்சமுத்து செய்த மோசடிகள் பற்றியது தானே தவிர பச்சமுத்து என்ற தனி மனிதர் குறித்தவையல்ல.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 102 மாணவர்கள் பச்சமுத்துவின் பினாமியான மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவ்வாறு ஏமாந்த மாணவர்கள் சமூக நீதிக் காவலரான மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பணத்தை இழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அய்யா அவர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்தார். அப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்துவுக்கு இப்போது ரூ.20,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்தது எப்படி? என்று வினா எழுப்பினார். அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மருத்துவர் அய்யா அவர்களின் வினா மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா. தம் மீது எந்த தவறும் இல்லை என்பதில் பச்சமுத்து உறுதியாக இருந்தால் தன் நிலை குறித்து விளக்கம் அளித்திருக்கலாம் அல்லது இது குறித்த விசாரணையை சந்திக்க தயார் என்று அறிவித்திருக்கலாம்.

ஆனால், தம் மீதான குற்றச்சாற்றுகளுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு வன்னிய சமுதாயத்தையும், பார்க்கவகுல சமுதாயத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பியது வன்னியர் பிரச்சினையும் அல்ல… பார்க்கவகுல சமுதாயத்தினர் பிரச்சினையும் அல்ல. மோசடி மன்னர்களை நம்பி மருத்துவப்படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பிரச்சினை. மருத்துவப் படிப்புக்கு பணத்தை வாங்கி மோசடி செய்தது குறித்து பச்சமுத்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்பதால் எவரும் பொங்கி எழுந்துவிட மாட்டார்கள். மாறாக பாரி மன்னனின் வழி வந்த அம்மக்கள் உண்மைக்காக போராடுபவர்களுக்கு துணை தான் நிற்பார்கள். வன்னியர்களும், பார்க்கவகுல மக்களும் சகோதரர்களாகத் தான் பழகி வருகின்றனர்… இனியும் அவர்கள் அப்படித் தான் பழகுவார்கள். அதுகுறித்த கவலை பச்சமுத்துவுக்கு தேவையில்லை. ‘‘சமூக நீதிக்காக போராடுவதாகக் கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒருசமுதாயத்தின் தலைவரான என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்?’’ என்றும் பச்சமுத்து வினா எழுப்பியிருக்கிறார். சமூக நீதி என்றால் என்ன? என்பதற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பச்சமுத்து விளக்கம் கேட்டுக் கற்றுக் கொள்வது நல்லது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பச்சமுத்து போன்றவர்களின் மோசடிக்கு துணை நிற்பது சமூக நீதியல்ல. இத்தகைய மோசடிகளை எதிர்ப்பது தான் சமூக நீதியாகும்.

மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்தும் பச்சமுத்து மனம் போன போக்கில் உளறியிருக்கிறார். அவை இரண்டுமே திறந்த புத்தகங்கள். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. அதை தனிநபர்கள் எவரும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. பச்சமுத்து விரும்பினால் அவரை எனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து விவரங்களையும், வன்னியர் கல்வி அறக்கட்டளை விவரங்களையும் காட்டத் தயாராக உள்ளேன் என்பதை அய்யா அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தினாலும் அதற்கு ஒத்துழைக்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அது குறித்த எந்த விசாரணைக்கு வேண்டுமானாலும் அய்யா அவர்கள் தயார். அதேபோல், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்ந்த சர்ச்சைகள் குறித்து விசாரணையை எதிர்கொள்வதற்கு பச்சமுத்து தயாரா?

மது போதையில் தள்ளாடும் ஒருவன் தனது தாயையும், மனைவியையும் பார்த்து எப்படி அவதூறாக வசைபாடுவானோ, அதேபோல் மதிப்பிற்குரிய பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்தும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்தும் உண்மை கலப்படமற்ற புகார்களைக் கூறி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவர் அய்யாவின் கால்களில் மட்டுமின்றி, அவரது இல்ல பணியாளர்கள் கால்களிலும் விழுந்து வணங்கியும் தமது விதிமீறல்களுக்கு துணை நிற்கவில்லை என்பதாலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்திவிட்ட கோபத்திலும் தான் பச்சமுத்து இப்படி அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலிருக்கிறது. இதை மருத்துவர் அய்யா அவர்கள் மன்னித்தாலும் என்னைப் போன்றவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. மருத்துவர் அய்யா மீதும், அன்புமணி இராமதாஸ் மீதும் கூறிய அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பா.ம.க. தொண்டர்கள் அவதூறு வழக்குகளை தொடுப்பர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் எந்தத் தரப்பினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்துவதும் மருத்துவர் அய்யா அவர்களின் வழக்கம். அதனால் அவர் சமூகப் போராளியாக மக்களால் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையில் தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புக்கு பணம் கட்டி ஏமாந்த மாணவர்களுக்காக குரல் கொடுத்தார். இப்போதும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் பணம் கொடுத்து ஏமாந்தது உண்மை தான் என்பதை தமது அறிக்கையில் பச்சமுத்து ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு மதன் தலைமறைவாகிவிட்டார் என்பது தான் பச்சமுத்து அவரது அறிக்கையின் முதல் பத்தியில் சொல்ல வரும் விஷயம் ஆகும். பச்சமுத்துவின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளித்தாக வேண்டும்.

 1. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றி விட்டார் என்றால் அவ்வாறு செய்வதற்காக அனுமதியை அவருக்கு தந்தது யார்? அதை பச்சமுத்து ஏன் தடுக்கவில்லை.

 2. மருத்துவப்படிப்புக்கு மதன் பணம் வசூலித்து ஏமாற்றியது உண்மை எனும் போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடங்கள் விலைக்கு விற்கப்பட்டன என்பது தானே உண்மை. அது சட்டவிரோதம் தானே. பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித் தானோ?

 3. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் படிப்பு இடங்கள் 8 ஆண்டுகளாக தம்மால் தான் நிரப்பப்பட்டதாக மதன் கடிதத்தில் கூறியிருப்பது உண்மையா… இல்லையா?

 4. மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறியுள்ளார். அப்படியானால் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்து விட்டதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருப்பது ஏன்? எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க முடியுமா?

 5. மதனுடன் தொடர்பு இல்லை என்றால், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் மதனுடன் ஒன்றாக பச்சமுத்து கலந்து கொண்டது ஏன்?

 6. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அனைத்து மாணவர்களும் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? ஒருவரிடமும் நன்கொடை வாங்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்கி மாணவர்களை சேர்ப்பதாக பச்சமுத்துவால் கூற முடியுமா?

 7. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?

 8. 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக காட்டாங்கொளத்தூர் வளாகம் ஏரிகளையும், புறம்போக்கு நிலங்களையும் வளைத்து பட்டா வாங்கி கட்டப்பட்டது தானே? அதுகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு, விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரா?

 9. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம். குழுமம் படகு சவாரி நடத்தி வருகிறது. அரசு சொத்தான ஏரியை ஆக்கிரமித்தது குற்றமில்லையா?

மேற்கண்ட எந்த வினாவுக்கும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. மதனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பச்சமுத்து முயல்கிறார். பச்சமுத்துவும், மதனும் எந்த அளவுக்கு நெருக்கம், இருவரும் இணைந்து திரைத்துறையில் அடித்த கூத்துக்கள் என்ன? என்பதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்தால் தான் முழு உண்மையும் வெளிவரும் என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும். இப்பிரச்சினையில் பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.

ஆக, மொத்தத்தில் இரண்டு கல்விக் கடவுள்களும் எப்படி கல்விச் சேவையில் ஈடுபட்டு பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆனார்கள் என்பதை பரபரஸ்பர இந்த அறிக்கைகளே எடுத்துக் காட்டுகின்றன. இதில் யார் முதலிடம் என்பதைத் தீர்மானிக்கும் பொருப்பை நேர்படப் பேசு விவாத பாணியில் மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்!

“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை 

இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

அதுபோல, துப்புரவாளர்கள்,  வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள்  50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர, லிஃப்டைப் பயன்படுத்துவதாகத் தெரிந்தால் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

வெளியிலிருந்து வரும் ஆட்களும் (கற்றறிந்த வழக்கறிஞர்கள், மதிப்பிற்குரிய நீதிபதிகள் தவிர்த்து,  50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர்த்து) லிஃப்டைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவர்களிடம் ரூ. 50 அபராதம் வசூலிக்கப்படும்.

பார் கவுன்சிலின் மேற்கண்ட சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் விவாத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத்

கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன.

1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ?

2. அவர் திமுகவையோ, அதிமுகவையோதான் ஆதரிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் உண்டா ? அவர் தன் செயல்பாடுகளை திட்டமிடவும்,, முடிவெடுக்கவும் உரிமை அற்றவரா ?

3. வைகோ என்று ஒருவர் அழைத்த ஒரே காரணத்திற்காக மட்டுமே கம்யுனிஸ்டுகள், சிறுத்தைகள், தேமுதிகவினர் ஒரே கூட்டணியில் இணைந்தார்களா ? அவர்களுக்கு என்று சுய முடிவு இல்லையா ? அல்லது அந்த அளவுக்கு அவர்கள் சிறு பிள்ளைகளா ? தேர்தல் அரசியல் தெரியாதவர்களா ?

4. பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி பலத்திலேயே வென்று ஆட்சியை பிடித்த திமுகவுடன் இந்த முறை கூட்டணி சேராமல் தனியே அக்கட்சிகளை பிரித்துவிட்டார் வைகோ என்று அவர்மீது கோபம் கொள்வதைவிட அதிமுக போல தனிப்பலம் பெற்று திமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இந்த திமுக சமூக வலைதள ஆதரவாளர்களால் ஏன் தலைமையை வலியுறுத்த முடியவில்லை ? அவ்வாறு ஏன் தலைமை செய்யவில்லை? இனி கூட்டணி தயவின்றி தேர்தலில் வெல்வோம் என்றுதானே முடிவெடுக்க வேண்டும் ? இதற்கு எதற்காக பக்கத்துக்கு வீட்டு வைகோவின் மீது பாய வேண்டும் ?

5. வைகோ பணம் வாங்கி விட்டு தங்களுக்கு தோல்வியை தந்துவிட்டார் என்று புலம்புபவர்கள் அந்த அளவுக்கு தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்களா ?

6. அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்னேகால் கோடியை தாண்டுகிறது. திமுகவின் உறுப்பினர் ஒரே கோடியை தாண்டி விட்டதா ? அதை அதிகரிக்க சமூக வலைதள திமுகஆதரவாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? பாரம்பரிய திமுகவுக்கு பிறகு உருவானதே அதிமுக. அக்கட்சி எப்படி இப்படி வளர்ந்தது ? திமுகவால் ஏன் அவ்வாறு வளர முடியவில்லை ? இதற்கான பதில் என்ன ?இதைவிடுத்து மதிமுக மீது எரிந்து விழுந்து என்ன லாபம் ?

7. திமுக தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணிக்கு விழுந்த வோட்டுகள் போலவே நோட்டாவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

8. மேற்கு மண்டலத்தில் இன்னும் வலிமை பெற முடியாத நிலையில்தான் திமுக உள்ளது.

9. இதை எல்லாம் தாண்டி அதிமுக அரசின் ஒரு பலன் கூட மக்களுக்கு செல்லாமலா அவர்கள் வாக்களித்து உள்ளார்கள் ? அதாவது performance அடிப்படையில் பார்க்காமல் வெறும் பணம் மட்டுமே வாங்கிக்கொண்டு வாக்களித்தார்கள் என்றாலும்கூட இதில் வைகோவின் பங்கு என்ன ?

10. ஆக மொத்தம், இது முதுகு வலியா, திருகு வலியா என்று தெரியாமால் அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதை தவிர வேறு என்ன ?

11. ஒருவேளை மக்கள் நலக்கூட்டணியின் பிற தலைவர்களே வைகோவின் மீது குறை கூறினால், அது சந்தர்ப்பவாதமே தவிர அறிவார்ந்த குற்றச்சாட்டாக இருக்க முடியாது எனும்போது திமுகவினர் வைகோ மீது குறை கூறுவது அவலை நினைத்து உரலை உடைப்பது போன்றது ஆகாதா ?

அதற்காக வைகோவின் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஆதரிக்கிறேன் என்பது இந்த பதிவின் அர்த்தமல்ல. அடிப்படை கேள்விகளை முன்வைத்து இருக்கிறேன். ஆரோக்கியமான விவாதம் வரவேற்கபடுகிறது.

தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்.

தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர்,

“சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் பதிலாக தமிழகத்தையும், இங்குள்ள சாதாரண மக்களையும் ஆளுமையை இழக்கச் செய்திடுகிற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பொறுத்த வரை இவ்விரு அரசியல் கட்சிகளும் ஒன்றோடொன்று நிழல் யுத்தத்தையே நடத்தி வருகின்றன. ஆனால், திவாலாக்கிடும் பொருளாதாரக் கொள்கைகளையே முழுமையாக நடைமுறையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது? எத்தகைய அரசியல் தமிழகத்தில் காணப்படுகிறது? மாநிலம் முழுவதிலும் சாதி அடிப்படையிலான அரசியலே அரங்கேற்றப்படுகிறது.

மாநிலத்தின் செயல்திறனையும் பாருங்கள். தனியார்மய நடவடிக்கைகள், இயற்கை வளங்களை சூறையாடுதல், குவாரி சுரங்கங்களை கொள்ளையடித்தல் ஆகிய ஒட்டுமொத்த பிரச்சனைகளைப் பாருங்கள். இவர்களது பொருளாதார நிலைபாட்டின் எந்தவொரு அம்சத்தைப் பார்த்தீர்களானாலும், அதில் ஊழல்களையும் முறைகேடுகளையுமே நீங்கள் காண்பீர்கள். எனவே, ஊழலைப் பொறுத்தவரை இவ்விரு அரசியல் கட்சிகளும் சமரசப் போக்குடனேயே காணப்படுகின்றன.எனவேதான் இன்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள நரேந்திர மோடி போன்ற எதேச்சதிகார, சர்வாதிகாரியை எதிர்த்து இவர்களால் குரல் எழுப்பிட இயலாது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். மாநிலத்தின் உரிமைகளை பாஜக தனது இஷ்டப்படி பறித்து வருகிறது. தமிழகமோ முற்றிலும் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது. மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாது மௌனம் காப்பதில் தில்லியில் அதிமுகவும், திமுகவும் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கின்றன. எனவே, தமிழகத்திற்கு ஓர் மாற்று தேவை. கொள்கைப்பூர்வமான ஓர் மாற்று தேவை. திராவிட இயக்கம் என்றழைக்கப்படும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த உண்மையான இயக்கத்தை தோற்றுவித்தவர்களின் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கின்ற ஓர் மாற்று தேவை” என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி; தீக்கதிர் 

“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்

கலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில்,

“மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்”!

தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும்.

குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை “அது வேறொரு மாநில விவகாரம்“ என்று சொன்ன புண்ணியவாளர் தான் இவர்.

ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு பாஜக ஆதரவை வேண்டியவர்தான் இவர். “திமுகவோடு பாஜக உறவு வைக்க வேண்டும்“ என்று சு.சுவாமி சொன்ன போது மறுக்காதவர்தான் இவர்.

இதையெல்லாம் மனதில் கொண்டால் இவரது மோடி துதியின் அர்த்தம் மேலும் தெளிவாகும்.

மதச் சிறுபான்மையோரே, சமூக நீதியாளர்களே உஷார்… உஷார். மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப்பிடிக்க தோற்கடிக்கப்பட வேண்டியது அதிமுக மட்டுமல்ல… திமுகவும்தான்” என எழுதியிருக்கிறார் .

இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான அர்த்தங்களும் அடையாளங்களும் கொண்டது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, அணிசேர்ந்துள்ள திமுக ஆகிய கட்சிகளின் பெயர்களிலும் திராவிட என்ற சொல் இருக்கிறது. ஆயினும் திராவிடக்கட்சிகள் என்று சொல்லும்போது திமுக, அதிமுக ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுவதாகிவிட்டது. என்னைப் பொறுத்தமட்டில் அவற்றை திராவிடக் கட்சிகள் என்று சொல்வதில்லை, திமுக, அதிமுக என்று மட்டுமே குறிப்பிடுகிறேன்

இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான கூறுகளில் இக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு உள்ள பங்கை மறுப்பதற்கில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதை நான் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

ஆனால் அந்த ஆக்கப்பூர்வமான கூறுகள் வரலாறாக, அதாவது பழைய கதையாக மாறிவிடவில்லையா? இன்றைக்கும் இக்கட்சிகள் அந்தக் கூறுகளை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருவதாக உண்மையிலேயே நம்ப முடியுமா?

திராவிட இயக்கம் தமிழகத்தில் பதித்த பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, சாதிய பாகுபாட்டு எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, பார்ப்பணிய எதிர்ப்பு உள்ளிட்டவை இன்று பெரிதும் நீர்த்துப்போயிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களிடையே கணிசமான அளவிற்கு இவை அந்நியப்பட்டுப் போயுள்ளன. இக்கட்சிகள் – குறிப்பாக திமுக – எந்த அளவுக்கு மாற்றுச் சிந்தனைகளை மக்களிடையே கொண்டுசென்றன? வெறும் தலைமை வழிபாட்டிலும், பதவிப் பங்கீடுகளிலுமாக மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடித்துவிடவில்லையா?

இதற்கெல்லாம் இக்கட்சிகள் ஆட்சியதிகாரத்திற்காகச் செய்துகொண்ட கொள்கை சமரசங்கள் முக்கிய காரணம் இல்லையா? அதன் விளைவுதானே பல்வேறு வடிவங்களில் தொடர்கிற பெண்களுக்கெதிரான வன்முறை முதல், சாதி ஆணவக்கொலைகள் வரை? சிறிய பெரிய கோயில்களும் வழிபட வருகிற கூட்டங்களும் பெருகிப்போனது எப்படி? அவற்றின் விழாக்களில் கலந்துக்கொள்வோராக இல்லாமல், நடத்திக்கொடுப்பவர்களாகவே திமுகவின் வட்டாரத் தலைவர்கள் மாறிப்போனது எப்படி? அதிமுக பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

இப்படியான கொள்கை சமரசங்கள் பற்றி முன்பொரு முறை கலைஞரின் நேர்காணலுக்காகக் கேட்டபோது அவர், எந்தக் கட்சிதான் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதான பதிலைத்தான் தந்தாரேயன்றி திமுகவின் சமரசங்கள் சரி அல்லது தவறு என்று சொல்ல முன்வரவில்லை.

ஆட்சி அதிகார ருசியை சுவைத்தபிறகு, சாதிய சக்திகளோடு சமரசம் செய்துகொண்டதன் வெளிபாடு தானே, சாதிய ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும் பெரிய இயக்கங்கள் எதையும் திமுக நடத்தாதது? உடுமலைப்பேட்டை சங்கர் கொலையைக் கூட அதிமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலைமை என்பதாக மட்டும்தானே சித்தரித்தார்கள்?

பார்ப்பணியத்தோடு சமரசம் செய்துகொள்ளவும் தயங்கவில்லை என்பதன் அடையாளந்தானே, பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் தளம் உருவாகத் தோதாக முன்பு அதனுடன் கூட்டணி வைக்க தயங்காதது? இப்போதும் நாடு முழுக்க மதவெறி ஆதிக்க அரசியல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், உணவு உரிமை கூட மதக்கலவர விவகாரமாக்கப்படுகிற சூழலில், புதிய விளக்கங்களோடு பெண்ணடிமைத்தனத்தைக் கெட்டிப்படுத்துகிற போதனைகள் புகுத்தப்படுகிற பின்னணியில் இக்கட்சிகளிடமிருந்து, குறிப்பாக திமுக-விடமிருந்து பெரும் கண்டனங்களோ, உறுதியான எதிர்வாதங்களோ கிளம்பவில்லையே…

கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்மமான தாக்குதல்ரகளின்போது அதை எதிர்த்துக் களம் காண வரவில்லையே…

அரசியல் என்றாலே ஒரு அசூயை உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு எல்லா மட்டங்களிலுமான கூச்சநாச்சமற்ற ஊழல் மிகப்பெரிய காரணம். சம்பாதிக்க வழியிருக்கிறது என்பதால் தானே கீழ்மட்ட உள்கட்சித் தேர்தல்களில் அடிதடி வரைக்கும் போகிறது?

எவ்வித உறுத்தலுமின்றி இயற்கைச் சமநிலைப் பாதுகாப்புகள் அழிக்கப்படுவதற்கு இவ்விரு கட்சிகளுமே உடந்தையாக இருக்கவில்லையா? ரியல் எஸ்டேட் வளைப்பு, மணல் கொள்ளை, குன்றுகள் அழிப்பு… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மறுபடி சொல்கிறேன், இவர்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதையெல்லாம் “நடுநிலை” போலித்தனத்தோடு மேற்கோள் காட்டுவதற்கு இது ஆய்வரங்க மேடையல்ல. குற்றங்களை எடுத்துக்கூறி, மாற்றங்களை வலியுறுத்தி மாற்று வழி அமைப்பதற்கான தேர்தல் களம்.

திராவிட இயக்கம் தொடங்கிய, இக்கட்சிகள் கைவிட்ட பகுத்தறிவு, சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்றவை இன்று கம்யூனிஸ்ட், விசிக தளங்களில் லட்சிய முனைப்போடு தொடர்கின்றன.

இடதுசாரிகள் இப்படியெல்லாம் இக்கட்சிகளை – குறிப்பாக திமுகவை – விமர்சிக்கிறீர்களே என்று கேட்கிற நண்பர்கள், இப்படியான விமர்சனங்களை வைத்தாக வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டீர்களே என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்களேன்…

அ. குமரேசன், தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசிரியர்.

சத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்?

செந்தில்குமார்

sendhilkumar pt
செந்தில்குமார்

 

தமிழ் சினிமா பேச தொடங்கிய காலத்திலேயே அது சமூக நீதியை வலியுறுத்தும் முற்போக்கு கருத்துக்களையும் சேர்த்தே பேச தொடங்கியது . அந்த காலகட்டத்தில் சமூக நீதியை பேசுவது சினிமாவில் பேசுவது மிக சிரமமான ஒன்று . காரணம் யாரெல்லாம் சமூக நீதிக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள் கையில்தான் சினிமாவும் இருந்தது . பிறகு அவ்வப்போது பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சமூக நீதி பற்றிய கருத்துக்கள் சினிமாவில் இடம் பெற்றாலும் கூட அது சமூக நீதியை விரைவி பரவச்செய்யும் வீரியத்தோடு வந்தது என்று சொல்ல முடியாது . நானும் முற்போக்கு சிந்தனையாளன் தான் என்று சொல்லி கொள்வதற்கான ஒரு விளம்பர உத்தியாகவே சீர்திருத்த கருத்துக்கள் பற்றிய காட்சிகளை நம் இயக்குனர்கள் பயன்படுத்தி கொண்டார்கள் . ஆனால் இது பற்றிய சரியான புரிதலோடு இருந்தவர் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் . அவருடைய பெரும்பாலான படங்களில் அரசியல் , நடப்பு அரசியல் பற்றிய சமூக புரிதல் ,சாதி மறுப்பு பற்றிய கடுமையான சாடல்களை காண முடியும்.

மணிவண்ணன் தன் படங்களின் மூலம் தன் ரசிகர்களிடம் மட்டும் அவ்வாறான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தன் சக கலைஞர்களிடமும் அவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தினார் . அப்படி அவரின் அரசியல் தாக்கத்தை சரியாக உள்வாங்கி கொண்ட ஒருவர் நடிகர் சத்யராஜ் . சத்யராஜ் பேசுகிற அத்தனை அரசியல் சங்கதிகளும் மணிவண்ணனின் பிரதிபலிப்புகளே . மணிவண்ணனின் பிரதிபலிப்பாக இருந்தாலும் கூட அவரின் அரசியலை உள்வாங்கி கொள்கிற அளவிற்கு அறிவு உள்ள ஒரு நடிகராக சத்யராஜ் இருந்தார் என்பதே உண்மை. மணிவண்ணனின் மூலம் தான் அரசியல் படுத்தப் பட்டாலும் கூட அதற்கு பிறகு நிறைய வாசிக்க ஆரம்பித்தார் சத்யராஜ் . ஒரு நடிகன் தன்னளவில் ஓரளவிற்கு அரசியல் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, ஒரு தீவிர அரசியல் செயல்பாட்டாளருக்கு உரிய தீவிரத்தோடு சமூக தேவைக்குரிய அத்தனை விசயங்களையும் படித்து வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் …

ஒருமுறை சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக அவரை நான் நேர்முகம் செய்தபோது அவருடைய வாசிப்பு , அரசியல் பற்றிய அவரின் தெளிவான நிலைப்பாடு , சமூக நீதி பற்றிய அக்கறை , தமிழ் உணர்ச்சி . ஆகியவை அவரின் மேல் ஒரு பெரிய மதிப்பை உண்டாக்கியது . இவ்வளவு விஷயம் பேசுகிற ஒரு மனிதன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை வெளிப்படுத்தி கொண்டு எளிமையாக வாழ்வது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது . மற்ற படங்களில் தன்னால் முடிந்த அளவிற்கு முற்போக்கு கருத்துக்களை பேசும் சத்யராஜ் தான் முதன் முதலில் இயக்கிய வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தன் அரசியலை முழு வீச்சில் வெளிப்படுத்தி இருப்பார் . என்னை பொருத்தவரை மணிவண்ணனும் சத்ய ராஜும் இணைந்து இன்னும் பல அரசியல் படங்களை தராமல் போனதுதான் நம் காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய அரசியல் பேரிழப்புகள்…

தமிழ் சினிமாவில் அரசியலுக்கு வர ஒரே தகுதி உள்ள நடிகர் சத்ய ராஜ் மட்டுமே ஆனால் அவர் அரசியலுக்கு வரமாட்டார். காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் . அவருக்காக அல்ல நமக்காக ….

செந்தில்குமார், ஊடகவியலாளர்.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு – இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்

1.நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை – ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் – திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை.

2.மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை – சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை.

3.தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை/ தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை – சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை.
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறை வேறானது

நடுவண் அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களது கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனித்தனியாக நுழைவு தேர்வு நடத்துகின்றன. அதாவது எய்ம்சில் சேர ஒரு தேர்வு எழுதவேண்டும், ஜிப்மரில் சேர வேறு ஒரு தேர்வு, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

(ஆந்திரா, காஷ்மீர் தவிர பிற) மாநில அரசின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் சேர்க்கை இருவிதமாக நடத்தப்படுகிறது

*இளங்கலை படிப்பிற்கு

1.இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது

2.மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது

*முதுகலை படிப்பிற்கு

1.இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது

2.மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது

3.ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே 100 சதம் இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன

*இதில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1980கள் வரை மாநில அரசிடமே முழு கட்டுப்பாடும் இருந்தது. 1980களின் இறுதியில் மத்திய அரசு இளங்கலையில் 15 சதமும் முதுகலையில் 25 சதமும் கேட்டது. அப்பொழுது என்.டி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்பார்கள்

*பிற மாநிலங்கள் இளங்கலையில் 15 சதவித இடங்களையும், முதுகலையில் 25 சதவித இடங்களையும் அளித்தன.  2005ல் முதுகலையில் 25 சதவித இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சதவித இடங்கள் ஆயிற்று.  தனியார் கல்லூரிகளில் சேர தனியாக தேர்வு மற்றும் சேர்க்கை முறை உள்ளது.

*மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் எத்தனை தேர்வு எழுதவேண்டும் என்று பார்க்கலாம்.

 1. மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
 2. மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
 3. ஏய்ம்ஸ்
 4. ஜிப்மர்
 5. பி.ஜி.ஐ. சண்டிகர்
 6. எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
 7. சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
 8. நிம்ஹான்ஸ் பெங்களூர்
 9. நிம்ஸ் ஹைதரபாத்
 10. சி.எம்.சி வேலூர்

 

*ஆகா… பத்து நுழைவு தேர்வா, பொது நுழைவு தேர்வு வந்தால் பத்திற்கு பதில் ஒன்று தானே – இப்படி ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறீர்களா ??

சற்று பொருங்கள் !! மேலும் தோண்டுவோம்…

*இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

*அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு – சி பி எஸ் சி) என்றும் உள்ளது.

இரண்டும் ஒன்றா, இல்லையே….

*இதில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே (பெரும்பாலும் மத்திய அரசின் ஊழியர்களில் குழந்தைகள்) என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

*நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்.

அதே நேரம்

*மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை

*மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

எனவே,

*மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்.

*மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்.

இந்நிலையில்,

*மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, அதாவது மேல்குடி மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வு மட்டுமே இருக்க,

*நடுத்தர மற்றும் ஏழைகள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வை இரத்து செய்ய வேண்டும்…..

என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா ?? அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது.

இதில்… தமிழ்நாட்டில் வருடந்தோறும் பிறக்கும் குழந்தைகளையும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்களா என்பது பற்றியும் கீழே இருக்கும் அட்டவணையைப் பார்க்கலாம்.

 2.JPG

 

அதே போல, மருத்துவ படிப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால், தமிழ்நாட்டில் இருந்து ஒரு வருடத்திற்கு எத்தனை மாணவர்கள் உருவாகுவார்கள் என்றும்,  நாம் எத்தனை மருத்துவ இடங்களை இழப்போம் என்றும் இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.JPG

பொது மருத்துவ தேர்வுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்த ஒரு சூழலிலும், இந்த திட்டத்திற்கு தமிழக அரசோ, கட்சிகளோ பின் வரும் காலத்தில் ஆதரவு தெரிவித்து விடாமல், இருப்பதற்கு இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. அதற்காகவே  இந்த கட்டுரை.

முதல் பதிப்பு பிப்ரவரி 11, 2016.

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மே 1- ம் தேதி முதல் கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை 24ம் தேதி 2 ம் கட்ட நுழைவுத்தேர்வை நடத்தவும், ஆகஸ்ட் 1-க்குள் முடிவை வெளியிடவும், செப்., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் நீதிமன்றம். 

பதிவு 28-04-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன.
திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி விலகியிருக்கிறார்.

இத்தகைய சாதி வெறியர்களை தளபதிகளாகக் கொண்டுதான் திமுக செயல்படுகிறது. ஆனாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தங்களை சுயமரியாதைக்காரக் கூட்டம் என்றும் கூறிக்கொள்கிறது.

சாதிவெறியன் மூர்த்தியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது.

இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தலித்துகளை ஓட்டலுக்குள் அனுமதிக்காத உரிமையாளர் மேல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

சமூகநீதிக் கட்சி's photo.
சமூகநீதிக் கட்சி's photo.

பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி  “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக  ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது.

க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்த ஃபிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் மற்றும் தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா ஆகியோரது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கருப்பு கருணாவின் முகநூல் பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கம் அல்லது மறுப்பு:

“வணக்கம் தோழர்! ஒரு பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில்( பல வேளைகளில் தவிர்க்க முடியாததுதான்) திரு.க .பொன்முடி அவர்களை சாதி வெறியராக்கி மகிழ்ந்திருக்கிறீர்கள். ஒருவர் சாதி சார்பற்றவர் என்பதை எதை வைத்துத் நீங்கள் தீர்மானிப்பீர்கள் எனத் தெரியவில்லை. சொந்த வாழ்வு அதற்குத் தகுதியானது என்பது என் துணிபு. திரு.க பொன்முடி அவர்களின் வாழ்வு இதற்கு சரியான உதாரணம். அவரது குடும்பத்தில், அவரது இரண்டு மகன்கள் உட்பட , தம்பிகள், தங்கைகள் பிள்ளைகளில் ஒருவர் கூட சொந்த சாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லை. அனைத்தும் காதல் திருமணங்கள். அவரது குடும்பத்தில் கள்ளர்,பிள்ளை,வன்னியர், தலித்( மைத்துனர் மகன்) நாயுடு, என அனைத்து சாதியிலும் உண்டு. சொந்த குடும்ப மண உறவுகளிலேயே சாதி பார்க்காத பெரியார் தொண்டருக்கு இதைவிட பெரும் அவமதிப்பு இருக்க முடியாது. பேச்சின் போக்கில் ‘ கல்யாணத்துக்கு வேணுனா சாதி பாருங்கய்யா. ஓட்டுப் போடும்போது வேண்டாம் ‘ என்று சொன்னது இவ்வளவு பெரிய அவப் பெயருக்கு காரணமாகி விட்டிருக்கிறது. இதையும் மீறிதான் பெரியாரின் தொண்டர்கள் மீது அவதூறு செய்வோம் என்றால் தொடருங்கள் உங்கள் கருத்துப் பரப்புரையை.சொந்த வாழ்க்கை ‘ மாதிரி’ ஆகாது , சொன்னதாக புனையப்பட்ட செய்திதான் முன்னுரிமை பெறும் என்பது விபரீதம். அதிலும் அகமண முறை தவிர்த்த ஒன்றை தன் குடும்பத்தில் அனுமதிக்காத வைகோவுக்கு கொடியேந்தும் தோழர்கள் நீங்கள் என்பதுதான் வேதனை. இந்தப் பதிலை பதிவு செய்யும் நான் அவரது பெரிய மகனுக்குப் பெண் கொடுத்த சம்மந்தி.”

இதற்கு கருப்பு கருணாவின் பதில்,

“1. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் என்பது தவிர்க்க இய்லாதது.உங்களுக்கு புரியும்.

2. அவரை சாதிவெறியர் என எங்கும் நான் குறிப்பிடவில்லை.அண்ணாவின் முழக்கத்தை மீறி பொது இடத்தில் பேசுகிறாரே என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
3.அதுவும்கூட ஸ்டாலினின் சமீபத்திய அவதூறு வழக்கு போடும் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில்தான் பதிவிட்டுள்ளேன்.
ஆனால் இதை விவாதிக்காமல் உடன்பிறப்புகள் எதெதையோ இங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
5. அந்த கொடியேந்தும் என்பது அரசியல் நிலைபாடு.கலைஞருக்கும்தான் ஏந்தியிருக்கிறோம்.உங்களைப்போன்ற ஆய்வாளர்கள் இதை குறிப்பிடுவதை எப்படி புரிந்துகொள்ள?
6. இந்த பதிலை நான் தருவதுகூட அவருக்கு நீங்கள் சம்பந்தி என்பதால் அல்ல.தமிழின் போற்றத்தக்க ஆய்வாளர் என்பதால்தான். நன்றி தோழர்”.

இதேபோல சுபகுணராஜன் தன்னுடைய பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கம்:

“தி.மு.க வின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.க.பொன்முடி அவர்கள் பேசியதாக வெளியான செய்தியொன்றின் அடிப்படையில் அவரை சாதி வெறியராக்கி கொக்கரிக்கிறது இங்கொரு முற்போக்காளர் கூட்டம். அவர்கள் அனைவருக்கும் ஒரு சில தகவல்களைச் சொல்லி,அவர்களின் மனட்சாட்சியுடன் உரையாட விரும்புகிறேன். இவர்களில் நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் அநேகம் பேர். குறிப்பாக விஜயசங்கர் ( பிரண்ட்லைன் ஆசிரியர்) கருப்பு கருணா, பிரபாகர் போன்றவர்கள். ஒருவர் தன் சொந்த வாழ்வில் சாதியைப் பேணானது உயர்ந்ததா? அல்லது துண்டை முறுக்கிக் குரல் உயர்த்திப் பொது மேடையில் பேசிவிட்டு, அக வாழ்வில் அச்சுப் பிசகாமல் அகமண முறையிலான திருமணங்கள் வழியாகத் தொடர்வது சிறப்பா? திரு.க.பொன்முடி அவர்கள் குடும்பத்தில் அவரது இரண்டு மகன்கள் இருவர் உட்பட அவரது சகோதரர்கள்,சகோதரிகள் பிள்ளைகளுக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்துள்ளார். அவரது குடும்ப உறவில் அனைத்து சாதிகளும் உண்டு. தலித் (சொந்தத் தம்பியின் மனைவி, மைத்துனர் மகனின் மனைவி), கள்ளர்,பிள்ளை வன்னியர்,செட்டியார், நாயுடு என நீழும் பட்டியல் அது. அனைத்தும் காதல், சாதி மறுப்புத் திருமணங்கள். அவற்றை முன்னின்று நடத்திய உண்மை பெரியார் தொண்டர் பொன்முடி.அவரை விமர்சிக்க தயை செய்து சாதியைக் காரணமாக்காதீர்கள். அவரை விமர்சிக்கும் உங்களில் ஒவ்வொருவரின் ‘மனசாட்சியைத்’ தொட்டுச் சொல்லுங்கள். அவர் சாதி வெறியரா? வெகுமக்கள் அரசியல் அரங்கின் ‘சமரசங்களுக்கு’ அப்பாற்பட்டு சொந்த வாழ்வை சாதிச்சிடுக்குகளுக்கு அப்பால் வைத்திருக்கும் ‘மிச்சமாயுள்ள’ பெரியார் தொண்டரை அவமதிக்காதீர்கள். அதிலும் தன் சொந்தக் குடும்பத்தில் அகமண முறை ஒன்றைத் தவிர வேறொன்றும் அனுமதிக்காத வைகோவுக்கு கொடி பிடித்துக் கொண்டு இந்த அவதூறைச் செய்ய வேண்டாம். இந்தப் பதிவைச் செய்யும் நான் அவரது சொந்தச் சம்மந்தி. ஒரு மனிதர் தன் வாழ்நாளில் ஒருபோதும் ‘ பொருட்படுத்தாத’ சாதியம் கொண்டு ஒருவரை வீழ்த்த முனைவது நீதியல்ல.”

இதற்கு ஃபிரண்ட்லைன் ஆசிரியர், விஜயசங்கர் அளித்துள்ள விளக்கம்:

நான் மிகவும் மதிக்கும் நண்பர் சுபகுணராஜன் அவர்களுக்கு, அந்த செய்தியைக் கண்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியில் அதைப் பகிர்ந்துகொண்டேன். பொன்முடி அவர்கள் அதை மறுத்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் நீங்கள் வேதனையுடன் இங்கு பகிர்ந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில் அந்தப்பதிவை நீக்கிவிடுகிறேன். அவதூறு செய்வதிலோ “கொக்கரிப்பதிலோ” எனக்கு நம்பிக்கை இல்லை. முப்பது வருட பத்திரிக்கை அனுபவத்தில் மூன்று முறைதான் அவதூறுக்கான நோட்டிஸ் வந்திருக்கிறது. அதுவும் பதில் அனுப்பியவுடன் அடங்கிவிட்டது. இன்று வரை establishmentக்குஎதிராகத்தான் சமரசமின்றி இயங்கி வருகிறேன் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட, அவற்றின் பெயரால் நடக்கும் அரசியலையும் அவலங்களையும் எதிர்த்து நிற்கும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். என்னைத் தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் நான் படித்ததும் பெரும்பாலும் எழுதுவதும் தமிழில்தான். எங்கள் வீட்டில் தமிழ் பேசித்தான் வளர்ந்தோம். சொல்லப்போனால் எனக்கு மலையாளம் பேச வராது. மொழி அடையாளத்தையும் கடந்து நிற்கிறேன் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். பொன்முடி உங்களின் சம்பந்தி என்று எனக்கு தெரியும். ஆனால் அந்தப் பதிவை பகிரும்போது ஒரு கணம் கூட உங்களை நினைக்கவில்லை. யார் அப்படிச் சொல்லியிருந்தாலும் அதை நான் கண்டித்திருப்பேன். 

உங்களை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பதிவை உடனே நீக்கிவிடுகிறேன். நம் காலை நேர நடைப்பயிற்சியின் போது நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களை miss செய்கிறேன். காட்சிப் பிழை கிடைப்பதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி! அன்புடன் விஜயசங்கர்”

மேற்கண்ட சம்பாஷணைகளில் பல தகவல்கள் கிடைக்கின்றன. சில கேள்விகள் எழுந்திருக்கின்றன. முதலாவதாக, தன்னுடைய நேரடி அனுபவத்தின் மூலம் க. பொன்முடி, சொந்த வாழ்க்கையில் சாதிமறுத்தவராக இருக்கிறார் என்கிறார் சுபகுணராஜன்.

சொந்த வாழ்க்கையில் சாதிமறுத்தவராக இருக்கும் க.பொன்முடி, பொது வாழ்க்கையில் அதுவும் பெரியாரிஸ்டாக இருக்கும் அவர், ஏன் சாதி பார்த்து கல்யாணம் பண்ணலாம்; சாதி பார்த்து ஓட்டளிக்கக் கூடாது என்கிறார்? அவர் இருப்பதுவும் பெரியார் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில்தானே? எனில், அவர் பேசியது எவ்வகையான நிர்பந்தத்தில்? க. பொன்முடிக்கு க்ளீன் சிட் கொடுக்கும் சுபகுணராஜன், க. பொன்முடியை அந்த இடத்தில் எது அப்படி பேச வைத்தது என்பதையும் விளக்குவாரா?

ஒருவர் சொந்த வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் கொள்கையோடு இருந்துகொள்ளலாம். சாதி பார்த்து தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்யலாம், அல்லது சாதியை மறுத்து திருமணம் செய்யலாம். ஆனால், அவர் பொதுவெளியில் சாதியற்றவராக  இருக்க வேண்டும் என்பதைத்தான் அரசியலமைப்பு சொல்கிறது. குறிப்பாக அரசியல் என்னும் பொதுவெளிக்கு வந்துவிட்ட ஒருவர், சாதியை முன்னிலைப்படுத்தி ஏன் பேச வேண்டும்?

விழுப்புரம் பகுதிகளில் நடக்கும் சாதிய மோதல்களையும் திமுக போன்ற சமூக நீதி பேசிய இயக்கங்கள் சாதியத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசுவதையும் தனித்தனியே பிரித்து பார்க்க முடியாது. ஒரு பெரியாரிஸ்டாக வாழும் க. பொன்முடி தன் சொந்த மாவட்டத்தில் சாதியை அழிக்க முற்பட்டரா? அல்லது சாதியைத்தை வளர்க்கும் விதமாக சாதி பார்த்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னாரா?

க. பொன்முடி என்ற பெரியாரிஸ்ட், ஒரு அரசு ஊழியராகவோ, சுபகுணராஜன் போன்று ஆய்வாளராகவோ இருந்து ‘சாதி பார்த்து கல்யாணம் செய்யுங்கள்; ஓட்டுப் போடும்போது சாதி பார்க்காதீர்கள்’ என்று சொல்லியிருந்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், அவர் அரசியல்வாதியாக சொல்லும்போதுதான் பிரச்சினை. ஓட்டுப்போடும்போது சாதி பாருங்கள் என்று சாதி சங்கத் தலைவர் ஒருவரின் வாட்ஸப் பேச்சையும் இந்த சங்கிலியோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

க. பொன்முடி ஒரு உதாரணம்தான், பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு சாதி அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளின் முகங்கள்தான் தெரிய ஆரம்பித்துள்ளன. சமூக ஊடக காலத்தில் அது வேகமாக நடக்கிறது. பொது வெளிக்கு வந்த ஒரு பேச்சு குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகாவே நாங்கள் உணருகிறோம். தனிப்பட்ட ஒருவரை குற்றவாளி ஆக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, மாறாக அவர் சார்ந்த இயக்கம், அதையும் தாண்டிய அரசியல் வெளி சாதியை எந்தவகையில் தக்க வைத்துக் கொள்ள உதவிக்கொண்டிருக்கிறது என்பதும் சாதியம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

க. பொன்முடி பேசியதாக நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டுதான் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. செய்தியை மட்டும்தான் வெளியிட்டோம். க. பொன்முடி சாதி வெறியர் என்று எந்த இடத்திலும் நாங்கள் அவதூறு செய்யவில்லை.

நாங்கள் குறு ஊடகமாக இருந்தாலும் ஆதாரத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற ஊடக அறத்தை பின்பற்றித்தான் செய்திகளை வெளியிடுகிறோம். இந்துத்துவ எதிர்ப்பாக இருந்தாலும் சரி, சாதிய எதிர்ப்பாக இருந்தாலும் சரி, ஒரு குற்றச்சாட்டை சொல்லும் முன் இந்தக் குற்றச்சாட்டு சரியானதுதானா என்று சரிபார்த்தே செய்கிறோம்.

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்…

சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது?

திமுக,அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடிப்படையில் கூட்டணி ஆட்சி என்கிற கருத்தை அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டார்கள். ஒரு கட்டாயத்தின்பேரில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். ஆனால், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இந்த நான்கு கட்சிகளும் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதில் முழுமையான உடன்பாடு கொண்டுள்ளன. நான்கு கட்சிகளுக்கும் இந்த விசயத்தில் ஒருமித்த கருத்து இருப்பதால் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது கூட்டணி ஆட்சியாக அமையும் என்பதை வெளிப்படையாக பிரகடனம் செய்திருக்கிறோம். ஆகவே, இந்த கூட்டணி மிக இலகுவாக அமைந்தது. இப்போது வலுவாக வளர்ச்சி பெற்று வருகிறது.

மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் ‘பி’ டீம் என்று சிலர் விமர்சிக்கிறார்களே.

தங்களுடைய பலவீனத்தை சிலர் இத்தகைய விமர்சனங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அதிமுக அரசு ஒரு ‘கொலைகார’ அரசு என்றும் ‘கொள்ளைக்கார’ அரசு என்றும் மிக கடுமையாக மக்கள் நலக் கூட்டணி விமர்சித்து வருகிறது. திமுககூட இந்த அளவுக்கு அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவால் உருவாக்கப்பட்ட அணியாக மக்கள் நலக் கூட்டணி இருக்குமேயானால் அதிமுகவே தன்னை இப்படி கடுமையாக விமர்சிக்க இந்த கூட்டணியை அனுமதிக்குமா? தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்ளுமா?. இது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் திட்டமிட்ட பிரச்சாரமாகும்.

சமூகக் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுகவும் அதிமுகவும் ஒரேமாதிரியாகத்தான் செயல்படுகின்றன என மக்கள் நலக்கூட்டணி விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், சிலர் திமுகவும் அதிமுகவும் ஒன்றல்ல என்று மறுக்கிறார்களே?

பதில்: 1967ஆம் ஆண்டு முதல் இந்த இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவருகின்றன. ஆனால், சமூகத்தில் முற்போக்கான மாற்றங்கள் நிகழவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், கூட்டிக் கழித்துப் பார்க்கிறபோது ஊழல், மது மற்றும் சாதியவாத, மதவாத சக்திகளின் ஆதிக்கம் ஆகியவைதான் மிஞ்சுகின்றன.அதிமுகவை பாஜகவின் இன்னொரு பிரதி என்றே சொல்லலாம். ஆனால், திமுக சமூக நீதி, பெரியாரின் கருத்துக்களைப் பின்பற்றுவது ஆகியவற்றில் அதிமுகவிடமிருந்து ஓரளவுக்கு வேறுபட்டாலும் மற்ற பிரச்சனைகளில் வேறுபடவில்லை. அதிமுக முழுமையான மதவாத, சாதியவாத அடையாளத்தை கொண்டிருக்கிறது. ஆனால், ஊழல், மது வியாபாரம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளில் அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான் என்பதை காணமுடிகிறது.

திமுக, அதிமுகவுக்கு தாங்கள்தான் மாற்று என்று பாமகவும் சொல்கிறது. மாற்றம் தேவை என்றும் அக்கட்சி கூறுகிறதே?

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தலித் வெறுப்பு அரசியலில் இருந்து வளர்ந்திருக்கிற ஒரு ஆபத்தான சக்தி. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாஜக என்றால் தலித் வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாமக. பாஜக `இந்துத்துவா’ கோட்பாட்டை, கருத்தியலை வெளிப்படையாகச் செயல்படுத்தி வருகிறது. அதிமுக,திமுக போன்று பாமக மீதும் ஊழல் வழக்கு உள்ளது. சாதிய மதவாத முத்திரை உள்ளது. எந்த வகையிலும் திமுக-அதிமுகவுக்கு ஒரு முற்போக்கான, புரட்சிகரமான மாற்று சக்தியாக பாமகவை பார்க்கமுடியாது.

தேர்தலுக்கான உடன்பாடு என்பதை தாண்டி பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய தத்துவப் பின்புலத்துடன் மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது என்று கூறலாமா?

கட்டாயமாக. அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். தேர்தல்பாதைக்கு வந்ததில் இருந்தே இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். இப்போது மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரக் கூட்டங்களில்கூட ஒரு தத்துவப் பின்புலத்தோடு இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்பதைக் கூறி வருகிறேன்.மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய தத்துவங் களின் பிரதிநிதிகளாக முறையே இடதுசாரிகளும், மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்த்திருக்கிறோம். எனவே, இது ஒரு தத்துவப் பின்னணிக்கொண்ட கூட்டணி என்பதை மனப்பூர்வமாக நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் திருவிழாவைத் தாண்டி இது தொடரும். தொடர வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தை முடித்து உள்ளீர்கள். அதில் உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன? மக்கள் நலக்கூட்டணிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? அரசியல் சாராத புதிய வாக்காளர்கள் என்ன கருதுகிறார்கள்?

இந்த நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். சொல்லப் போனால் குற்ற உணர்வோ, எவ்வித கூச்சமோ இல்லாமல் பணியாற்றுகிறார்கள். அதிமுக, திமுக கூட்டணியில் இணைந்திருந்த போது கட்சித் தொண்டர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் ஒருவகை உறுத்தல் இருந்தது. மனதுக்குள் விமர்சனங்களை வைத்துக்கொண்டுதான் செயல்படவேண்டியிருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஊழல் மற்றும் ஆடம்பர அரசியல் ஆர்ப்பாட்டங்களை சகித்துக்கொண்டே தேர்தல் பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது அத்தகைய குற்ற உணர்வுகள் ஏதும் இல்லாமல் மிகவும் சுதந்திரமாக மகிழ்ச்சியோடு கூட்டணியின் தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்த சுற்றுப்பயணத்தில் என்னால் காண முடிந்தது.

அத்துடன் கட்சி சாராத பொது மக்களும் வெகுவாக கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது மாற்றத்திற்கான ஒரு அறிகுறியாகும்.

சாதிய ஆணவக் கொலைகளை படித்தவர்களே சமூக வலைத் தளங்களில் நியாயப்படுத்தி பழிவாங்கிவிட்டோம் என்கிற அடிப்படையில் கருத்துக்களை பரப்புகிறார்கள். சாதி என்பது கிராமப்புறங்களில் மட்டும்தான் இருப்பதாக கருதமுடியுமா?

சொல்லப்போனால் கிராமத்தில் உள்ள உழைக்கும் மக்களிடம் வெறித்தனமோ வெறுப்பு அரசியலோ கிடையாது. வேறு வேறு சாதியாக இருந்தாலும் உழைக்கும் இடத்தில் அண்ணன் தம்பியாக பழகவில்லை என்றாலும் ஒருதோழமை உணர்வு இருக்கிறது. வெறுப்பு அல்லது மோதல் என்பது அவர்களிடம் இயல்பாக வெடிக்கவில்லை. இதை விதைத்து தூவி விடுவது படித்தவர்களில் சிலரும் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறவர்களும்தான். மக்களிடம் உள்ள இடைவெளியை தெரிந்து கொண்டு வாக்குவங்கியாக மாற்ற முடியும் என்று நம்பக்கூடியவர்கள்தான் உழைக்கும் மக்களிடத்திலேயே சாதி வெறியை பரப்புகிறார்கள்.படித்தவர்களில் சிலர்தான் மிகமோசமான தற்குறிகளாக சாதி, மத வெறியர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். நமது கல்வி மனிதநேயத்தை போதிக்கவில்லை. சமூக நல்லிணக்கத்தை போதிக்கவில்லை. ஒரு வகையான ஆதிக்க மனோபாவத்தையும் வெறுப்பு மற்றும் விரக்தி மனோநிலையையும் உருவாக்கியிருக்கிறது. அதுதான் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வெளிப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதி என்ன?

ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவோம் என மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டிருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சொல்லியிருக்கிறோம். ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்தா’ சட்டம் கொண்டு வருவோம். கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். ஐந்தாயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு சர்வசாதாரணமாக கொடூரமாகக் கொலை செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது. இதை ஒழிப்பதற்கு நிச்சயமாக மக்கள் நலக்கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபடும்.

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு.

vanniarasu
வன்னி அரசு

சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் உயிராய் நேசித்தவனை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் உயிர்பிழைத்து தன் காதல் கணவனுக்காக நீதி கேட்டு நிற்கும் தங்கை கவுசல்யாவை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் சாதி ஆதிக்க வெறிக்காகவே சங்கரை படுகொலை செய்தோம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் படுகொலையை நிகழ்த்திய நான்கு பேரை கைது செய்த போலீஸ் அவர்களின் கைகளை பின்னால் கட்டி, ஜட்டியோடு நிற்க வைத்துள்ள படம் ஒன்று நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நட்ட நடு ரோட்டில் பட்ட பகலில் தம்பி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் உள்ளாடைகளோடு இருக்கும் படம் வெளியானது ‘மனித உரிமை மீறல்’ என்று தாமாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இப்படி குற்றவாளிகளை அறை நிர்வாணத்தோடு எப்படி நிறுத்தலாம்? அந்த படத்தை எப்படி வெளியிடலாம் என்று மனித உரிமைகளை உயர்த்திப் பிடித்து காவல்துறைக்கும், ஊடகத்திற்கும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கையும், அதை தாமாக எடுத்துக் கொண்ட நீதிபதிகளையும் இப்படி அப்பாவியாக புரிந்துக்கொள்ளத்தான் நமக்கும் விருப்பம் ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது.

இதே தமிழகத்தில் பல காலமாக வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், குழந்தைகளின் படங்கள் சட்ட வழிகாட்டுதலுக்கு விரோதமாக போலீஸ் உதவியுடன் ஊடகங்கள் வெளியிடுகின்றன. கைவிலங்கு போடக்கூடாது என்னும் விதி மீறப்படுகிறது. தினந்தினம் காவல் நிலையங்களில் அப்பாவிகள், ஏழைகள், விளிம்பு நிலைச் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்படுகின்றனர். 5000 சந்தேக மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பதாக ஒரு உயர் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பத்திரிக்கைகளில் பெண்களை திருட்டுத்தனமாக ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். தர்மபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி விசாரணையில் திட்டமிட்டு தற்கொலை என முடிக்கப்பட்டது, சேலம் கோகுல்ராஜ் வழக்கில் நாங்கள் நான்கு நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்திய பின்னரே கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது, கோகுல்ராஜ் வழக்கை விசரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி இன்று வரை விஷ்ணுபிரியாவின் தந்தை போராடி வருகிறார், போலீசால் கடுமையாக தாக்கப்பட்டு கை உடைக்கப்பட்ட தம்பி மகேந்திரனின் படம் போலீசால் வெளியிடப்பட்டு இணையம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஆனால் அவருக்கு பிணை கிடைப்பதிலும் அவ்வளவு போராட்டம், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கண்ணகி நகரை சேர்ந்த சிறுவன் முகேஷ் பொய் வழக்கில் போலீசால் கொடூரமாக தாக்கப்பட்டு இன்று ஒரு காது கேட்கும் திறனே அவர் இழந்துள்ளார்.

இவ்வளவும் இந்த நாட்டில் தான் நடக்கிறது. இதில் ஒரே ஒரு விடயத்திலாவது இந்த மாண்புமிகு நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருந்தால் இன்று மனித உரிமை மீறலை கண்டவுடன் துடிதுடித்த அவர்களின் மனசாட்சியை நாம் பாராட்டியிருக்கலாம், கொண்டாடியிருக்கலாம் ஆனால் இன்று தன் சாதிக்கான மனசாட்சியாக துடித்தது தானே உண்மை. அதை நாம் விமர்சிக்க வேண்டாமா? பாகுபாடு காட்டும் மனசாட்சியை கண்டிக்க வேண்டாமா? சுட்டி காட்டி திருத்த வேண்டாமா? மாண்புமிகு நீதிபதி நாகமுத்து அவர்கள் நடராஜனுக்கு (சசிகலா நடராஜன்) மிகவும் நெருக்கமானவர், அவர் உறவினர் என்றும், இந்த பின்னணியில் பல குற்றச்சாட்டுகள் நீதித்துறை வட்டாரத்தில் இவர் மீது வைக்கப்படுகிறது. இவ்வாறு அவரின் சாதி மனசாட்சி துடிப்பது புதிதான விடயம் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களின் அரை நிர்வாண கோலத்திற்கு துடிப்பவர்கள், அவர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சங்கருக்காகவும், உயிருக்கு போராடும் கவுசல்யாவுக்கும் துடிக்காதது ஏன்? தமிழகத்தின் சாதிய ஆணவக் கொலைகளின் தந்தை ராமதாசிடம் சங்கர் படுகொலை குறித்து கேட்ட போது ‘இதை விட முக்கியமான விசயங்கள் பேசியிருக்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்ற குரூரமான மனநிலை தான் இந்த மாண்புமிகு நீதிபதிகளின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கோபத்திலும் வெளிப்படுகிறது. அன்று அநியாயமாக அப்சல் குருவை தூக்கில் போடுவதற்கு ‘கூட்டு மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்பட்டார் ஒரு நீதிபதி. இன்று நியாயமாக இவர்கள் எழுப்பும் கேள்விகள் கூட ‘சாதி மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்படுவதைத்தான் நாம் பார்க்கிறோம்.

எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?

ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம்.

பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று .

கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி கோப்பையை வென்றதற்காக எல்லாம் அறிக்கை சூடாக வரும்வேளையில், மண்ணில் சுட சுட கொட்டப்பட்ட ரத்தத்திற்காக இதுவரை வாய்திறக்காதது கடுப்பாக இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் அதிமுக , ஜெயா ஏன் துரிதமாக பதிலளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய வாய்கள் கொஞ்சமாவது கலைஞரையும், ஸ்டாலினையும் கேட்க வேண்டும்.

அறிக்கை விட்டால் அதை அரசியலாக்கிவிடுவார்கள் என்றால், அப்புறம் என்ன ராஜதந்திரி, பழுத்த அரசியல்வாதி என்று அடைமொழி எல்லாம் ? “மின்சாரம் உற்பத்தி செஞ்சி மின்மிகை மாநிலம் ஆக்க என்கிட்ட திட்டம் இருக்கு..ஆனா வெளிய சொன்னா காப்பி அடிச்சிடுவாங்க” என்று சொன்ன கேப்டனின் அறிக்கைக்கும், அறிக்கைவிட்டா அரசியலாகிவிடும் என்று அனுதாபிகள் விடும் அறிக்கைக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது??

இன்றும் அறிக்கை வரவில்லை எனில் கேவலம். அறிக்கை மட்டுமல்லாது, இழப்பீடு, சாதி சங்கங்கள் கலைக்கப்படும் என்ற ஸ்திரமான தேர்தல் அறிக்கைகளை உடனே தேவை. இன்றேல் மன்னார்குடி கும்பல் என்று அதிமுவை திட்டுபதற்கு கூட திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை.

உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்.

சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!

இச்சமயத்தில் இதை தெரிந்து கொள்வதும் அவசியம்…

தமிழகத்தின் அரசியல் – சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்

“வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான தோழர்.தமிழரசன் சாதி ஒழித்த தமிழ்த்தேசிய விடுதலை எனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தினை துவக்கியிருந்தார்.

இந்த எழுச்சி விரைந்து பரவுவதை தடுக்க தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என ஒன்றுபட்டு நின்றிருந்த ஏழை உழைப்பாளிகளை துண்டாடினார்கள். இதற்கு சாதிவெறி பயன்பட்டது. 80களில் அரசினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் முற்போக்க்கு அரசியல் பேசிய இளைஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். சாதிபாகுபாடு இல்லாமல் இவர்கள் ஒன்றிணைந்து ஒடுக்குமுறைகளை எதிர்த்தார்கள். இதில் களப்பலியான கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு நத்தம்-நாயக்கன் கொட்டையில் நினைவுச்சின்னம் வைக்கபப்ட்டது வரலாறு.

இந்த முற்போக்கு அணியில் அனைத்து சாதி இளைஞர்களும், (*தற்போது ‘வந்தேறி’ என போலி தமிழ்த்தேசியவாதிகளால் சொல்லப்படும் இளைஞர்களும்) இணைந்து அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தினை நடத்தினார்கள். காவேரியில் நீர்விட மறுத்த கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது எனப் போராட்டம் ந்டத்திய பொழுது , (’வந்தேறி’ என கொச்சைபப்டுத்தப்படும் சமூகத்தினை சேர்ந்த) தமிழ்த்தேசிய தோழர் நெய்வேலியில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சார டவர்களை குண்டு வைத்து தகர்த்தார். இப்படியாக சிதம்பரத்திலிருந்து , தர்மபுரி வரை விரிந்து நின்ற முற்போக்கு கம்யூனிச இளைஞர் எழுச்சியை அரசு கடுமையாக முடக்கியது. குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் அரசு இதை மிகக்கொடூரமாக செய்தது.

இந்த தோழர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். சிலர் கொலைசெய்யப்பட்டார்கள், நீண்டநாள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். (^^இத்தோழர்களது வழக்குகள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் மீதான வழக்குகளுக்கு போதிய நிதி இல்லாமல் போராடும் நிலையிலேயே இத்தோழர்கள் இருப்பதை பார்க்கிறோம்^^)

இந்த முற்போக்கு அரசியல் வளரவிடாமல் தடுக்க சாதியக் குழுக்களை உருவாக்கி, சாதி மோதல்களை திட்டமிட்டு வளர்த்தெடுத்து ஏழை எளிய மக்கள் ஒன்றுபட்டுவிடாமல் தடுத்தது அரசு.. மக்கள் ஒற்றுமை சிதரடிக்கப்பட்டது.

இவ்வாறாகவே தமிழ்த்தேசிய போராட்டம், முற்போக்கு அரசியல் பின்னுக்கு தள்ளப்படும் பணியை அரசு செய்தது.,, இந்த அரசியல் இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்படுகிறது… இதை எதிர்த்து போராடாமல் தமிழ்த்தேசிய போராட்டம் வீரியம் பெறாது..: ” என்று பதிவு செய்தார்.

சாதிவெறி அரசிற்கு லாபம் தரக்கூடியது. வெள்ளையனைப் போல மக்களை பிரித்து ஆள்வதற்கு சாதிவெறி உதவுகிறது.

இதனாலேயே சாதிவெறியன்களுக்கு எதிராக அரசு கடுமையாக நடவெடிக்கை எடுப்பதில்லை. யுவராஜ் போன்ற பொறுக்கிகளை எவ்வளவு மெத்தனமாக கையாண்டது எனப்தையும், திலீபன் போன்றவர்களை கொடியை எரித்தான் என்பதற்காக சித்திரவதை செய்ததையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.

முல்லைப்பெரியாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைகால்களை உடை என்று காவல்துறை அதிகாரிகளே பேசியதை வீடியோவாக நாம் பார்த்தோம். ஆனால் பரமகுடியில் எந்த எதிர்ப்பும் செய்யாத ஒடுக்கப்பட்ட மக்களை குருவிபோல சுட்டுக் கொலை செய்தார்கள்.

இந்துத்துவ கொலைகாரர்கள், வன்முறையாளர்கள் இயல்பாக சாதிவெறியன்களுக்கு ஆதரவளிப்பதையும், சாதிவெறியர்கள் இயல்பாகவே இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதையும் வெளிப்படையாகவே பார்க்க இயலுகிறது.

மக்களிடத்தில் நீண்டகாலமாக விதைக்கப்பட்டிருக்கும் விசச்செடியான ‘சாதிவெறியை’ மரமாக மாற்றும் முயற்சியை செய்பவர்களை அம்பலப்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும் மிக முக்கியம்…

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள்.

தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒரு யூனிட் மணல் 5000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுபற்றி என்றாவது கேள்வி கேட்டிருப்பாரா மு.க.ஸ்டாலின்? இவர் அதிமுகவின் மணல் கொள்ளைக்கு பினாமியா? அல்லது பங்காளியா?

மலையை யாரோ விழுங்கிவிட்டார்கள் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிக்கை அளித்துவிட்டார். மொத்தமும் விழுங்கியது அதிமுக என்றால், திமுகவுக்கு விக்கல் எடுப்பது ஏன்? விக்கித்து நிற்பது ஏன்? இன்றுவரையிலும் சகாயம் அறிக்கை குறித்து மௌனம் காப்பது எதனால்?

நீதிமன்றத்திற்குப் போனதாலும், கோபப்பட்டு மக்கள் போராடியதாலும் தாது மணல் கொள்ளை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்கள், கொள்ளை யைத் தடுக்கவில்லை. துணை முதல்வராக மட்டுமல்ல, தாது மணல் கொள்ளைக்கு துணையாகவும் இருந்ததாக மக்கள் பேசுவது உங்கள் காதில் விழவில்லையா?போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியமனத்தில் ரேட்டுத்தான் வேறு வேறே தவிர, ‘ரேட்’ வைப்பது நிரந்தரமாய் இருப்பதை தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகமே அறியுமே!

இதுவெல்லாம் போகட்டும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பெங்களூரு சிறைக்குப் போனார். உங்கள் குடும்பத்திலும், கட்சியிலும் திகார் சிறைக்குப் போய் வந்துள்ளனர். பெங்களூருவில் இருப்பது சிறை, திகாரில் இருப்பதென்ன சொகுசுப் பங்களாவா? ஊழலைப் பற்றி உங்களால் மனசாட்சி உறுத்தாமல் பேச முடியுமா? கொஞ்சமாவது மனசாட்சிக்கு உரைத்ததால்தானே, அதிமுகவின் பொதுச் செயலாளர் சிறைக்குப் போனபோது ஒரு வாரமும் அதற்கு மேலும், நீங்களும் உங்கள் தலைமையும் மௌனம் காத்தீர்கள்? எதில் நீங்கள் வேறுபட்டீர்கள்? ஊழலில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான், தலைமை மட்டுமே வேறு.

சமூக நீதி என்பது, திராவிடப் பாரம்பரியத்தின் ஆரம்பகாலக் கொள்கை. சேஷ சமுத்திரத்தில் தலித்துகள் வீடு எரிக்கப்பட்டபோது கண்டித்தீர்களா? பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்தீர்களா? எங்கேனும் போராட்டம் நடத்திய துண்டா? இந்தப் பிரச்சனையில் நீங்கள் அதிமுகவுக்கு எந்த வகையில் மாற்று? அதிமுக மௌனம் காத்தது, நீங்கள் பேரமைதியல்லவா பூண்டிருந்தீர்கள்.

நமக்கு நாமே பயணம் போனீர்கள்? பட்டுச் சேலை கட்டிய பாட்டிகளிடம் குசலம் விசாரித்தீர்கள். கடலூருக்குச் சென்றபோது விஷ்ணுப்பிரியாவின் வீட்டிற்குப் போனீர்களா? வேஷத்திற்காகவேணும் துக்கம் விசாரித்தீரா? நாமக்கல்லும் போனீர்கள், எல்லாக் கல்லிடமும் குசலம் விசாரித்தீர்கள். மிகக் கவனமாக, கோகுல்ராஜ் வீட்டை மட்டும் விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். எந்த வகையில் அதிமுகவுக்கு நீங்கள் மாற்று என்று தலித் மக்கள் கேட்க மாட்டார்களா?

கட்சியும், கொடியும் சின்னமும் வேறு வேறு என்பதைத் தவிர வேறுபடுத்திக் காட்டுவதற்கு வேறென்ன இருக்கிறது உங்களிடையே? அராஜக ஆட்சியை அதிமுக நடத்துகிறது. அந்த ஆட்சி ஒழிய வேண்டுமென மக்கள் விரும்பு கிறார்கள். அதை நிறைவேற்றத்தான் மக்கள் நலக் கூட்டணி களத்தில் நிற்கிறது. மக்கள் மனத்திலும் நிற்கிறது.

உங்கள் ஆட்சியில் ஜனநாயகம் பட்ட பாட்டினை நாடறியும், நாங்களும் பார்த்திருக்கிறோம். தொழிற்சங்கக் கொடியேற்றப் போன தோழர் சவுந்தரராசனை, கொலைகாரனைப் போல கைவிலங்கிட்டு இழுத்துவந்தீர் கள். ஜெயலலிதாவின் போலீசுக்கும், உங்கள் போலீசுக் கும் என்ன வித்தியாசமிருக்கிறது? தொழிலாளர் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களோடு நின்ற சுகுமாறனின் ஒரு கண்ணை உங்கள் போலீஸ் லத்தியால் குத்திக் கெடுத்தது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல அத்தனையும் நடத்திவிட்டு, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்கிறீர்கள். மக்கள் இதனை நம்ப மாட் டார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டை அதிமுக நடத்தினால், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தீர்கள்.

கோரிக்கை நியாயமானது. மூடி மறைத்து நிற்கும் அதிமுகவின் நடைமுறை கேள்விக்குரியது. கேலிக்குரியது. ஜனநாயக விரோதமானது. இதே கேள்வியை உங்கள் அரசு இருந்தபோது சட்டமன்றத் திலும் மக்கள் மன்றத்திலும் உங்கள் முன் வைத்தோம். மறைப்பதற்கு ஏதுமில்லாவிட்டால், வெளியிட்டிருக்கலாமே நீங்கள்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் மறைத்ததில் உங்களுக்கும் அதிமுகவிற்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேரிடமும் போராடிய, ஆட்சிக்கு வந்தால் அவற்றை வெளியிடு வோம் என்று சொல்கிற மக்கள் நலக் கூட்டணிதானே இரண்டு பேருக்கும் மாற்று? அதனை மறைக்கத்தானே பினாமிப் பாட்டுப் பாடுகிறீர்கள்?

எஸ்.வி.எஸ் கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்ம மரணமடைந்தார்கள். இப்போதும் அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பார்க்காத அதிமுக ஒரு குற்றவாளி; அனுமதி கொடுத்தபோது, எதையுமே பார்க்காமல் அனுமதி கொடுத்த திமுக ஆட்சியை போற்றிக் கொண்டாடவா செய்வார்கள்? இந்த ஊழலில், இந்த மரணத்தில் திமுகவும், அதிமுகவும் பங்காளிகள் என்பதை தமிழகம் அறியும். இப்படி, எதனையெடுத்தாலும் ஒரு கட்சி தன் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதுபோல திமுகவும் அதிமுகவும் வல – இட மாற்றம் தவிர்த்து எந்த மாறு பாடும் இல்லாத நீங்களிருவரும் ‘உனக்கு மாற்று நான், எனக்கு மாற்று நீ’ என்று இருதுருவ அரசியல் போல் தோற்றமளிக்கும், ஒரு துருவ அரசியலை நடத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். மக்கள் துரத்தியடிக்க வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.

அதற்கு மக்கள் நலக் கூட்டணி, மாற்றுக் கொள்கை யோடும், கரையற்ற கரங்களோடும் நெறிதவறா அரசிய லோடும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து வயிறெரிவதும், இருவரின் வாய்ப்பையும் பறித்துவிடுவார்களோ என்று பரிதவிப்பதும் உங்கள் உரிமை. அதனை யாரும் கேள்விகேட்க முடியாது.

ஆனால், மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து அதிமுகவின் பினாமி என்று சொல்வது கொள்கை வாதத்திற்கு வழியில்லாமல், அவதூறு மூலம் எதிர்கொள்வதாகும். இதற்கு தமிழக மக்கள் வாக்குகளின் மூலம் பதில் சொல்வார்கள். ஊழலில் பங்காளியாக இருந்துகொண்டு, அடுத்தவர்கள் மீது சேறு வீசுவதை திருவாளர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல – திமுக, காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள் நிறுத்திக் கொள்வது உத்தமம். விவாதங்கள் கொள்கை அடிப்படையில் நடக்கட்டும்.

கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 

நன்றி: தீக்கதிர்.

தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின்.

அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் ஆனந்துக்கு அடி உதை?”

 

 *சமூக நீதிப் பாதையில் வந்த திமுக முள்வேலி இட்டு தலித்துகளை ஒடுக்கும் அளவுக்கு கொள்கையை கைவிட்டுவிட்டதா என சமூக ஊடகங்கள் விமர்சனம் எழுப்புகின்றன.

’பைத்தியக்காரத்தனம்’! : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து!

கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணா, கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே சொந்தமாகக்கூடாது என் வலியுறுத்தி வருபவர்.  மார்கழி இசைக் கச்சேரி காலத்தில் சபாக்களில் இனி பாடப் போவதில்லை, பங்கேற்பதில்லை என அறிவித்தவர். கர்நாடக இசையை எல்லோருக்குமானதாக கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையை அடுத்த ஊரூர் ஆல்காட் குப்பத்தில் ஒரு மாத காலம் இசை விழாவை முன்னின்று நடத்தினார்.

olcott vizha

ஆல்காட் குப்பத்தில் உள்ள தெருக்களில் அந்தப் பகுதி குழந்தைகள், இளைஞர்களை உள்ளடக்கி கர்நாடக இசைப் பாடல், பரத நாட்டியம், பறை இசை, வில்லுப்பாட்டு, கானாப்பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.   இந்த விழாவின் இறுதி நாளில் ஒரு நாட்டுப்புறப் பாடலுக்கு இளைஞர், குழந்தைகளுடன் டி. எம். கிருஷ்ணா நடனமாடும் காட்சியை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.

அதில் பலர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து சொல்ல, சிலர் காட்டமாக ‘பைத்தியக்காரத்தனத்தின் சிறந்த வடிவம். யாருக்கோ, எதையோ கிருஷ்ணா நிரூபிக்க முயல்கிறார்’ என்றும் ‘பறையாட்டத்தையும் பீதோவன் இசையையும் இணைப்பது எந்தவித வேறுபாடுகளை உடைக்காது. மாறாக, இதுபோன்ற அறிவிலித்தனத்தைத்தான் உருவாக்கும்’ என்றும் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

T.M. Krishna

Many discussions and arguments resulted in a month long beautiful socio-cultural engagement. Urur-Olcott Kuppam Vizha – Celebrating OnenessThere cannot be a better expression of what really happened than the link below. People from diverse social addresses came together to just feel and be in the moment, we all felt the joy of just ‘being’. Thank you Sean Roldan, Antony Das, Praveen Sparsh and friends for this gift. The conversation has just begun!

Hari Subramanian By combining paraiyattam and beethoven one cannot bridge any barrier except create more nonsense. If you really want to do something for the society leave art and plunge into education.

Arun Kumar Stupidity in its best form. Cant understand what is he trying to prove and to whom

ஞாநி சங்கரன் Arunkumar….I don’t think Krishna is trying to prove anything to anyone. He is just being what he is. It is your folly to expect others to prove something or assume that everyone all the time are doing something only to.prove something.
Bharathi Kondur Its one thing to like or not like an idea but I fail to understand how can someone be so disrespectful on that person’s own page when he is trying to do something, may be it’s helpful or not, but atleast the man is trying, that speaks a lot about his passion and interest than someone calling names and music never causes confusion in any mind unless one has a holier than thou attitude and think themselves superior Divinity is a feeling and each has their own and spreading music is his, so why condemn it when it’s beyond the realm of narrow minded people’s thinking. One shouldn’t let their mouth run on things that’s beyond their understanding. T M Krishna has no need to impress anyone, we have to appreciate his out of the box thinking and some genius here says he needs to go into education leaving music, but isn’t what he is doing education in itself, it’s sad we have such petty thoughts on an innovative and benevolent idea.

Pavan Kumar K J WooHooo! This is what is called ‘divine’!

Mamidipudi Swaroop Well done. I’m sure there will be someone calling you anti-national now. tongue emoticon

Vijay Pravin Iyer never knew tmk can also dance a bit Very soon tripping to Armin Van Buuren

Jaideep Vivekanand Fantastic effort. Hope it grows from strength to strength!

Shrikanth Mohan Vageesh Vedamoorthy Dance panna , only in the company of celebs
Srikanth Ramesh Congratulations for all those involved. This will go down in history for good.
முகப்புப் படத்தில் ஆல்காட் குப்பம் விழாவில் வில்லுப்பாட்டு இசைத்த குழுவினருடன் டி. எம். கிருஷ்ணா.

திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி?

தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக ஒரு பொது விதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், திமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் திமுகவை விமர்சிக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால், பொது மக்களிடமும் அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் பொது உடன்பாடோ பொது ஆதரவோ இல்லையெனினும் முதல் முறையாக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக விமர்சிக்கப்படும் சூழல் 2016 தேர்தல் காலத்தில் மிக பரவலாகவும் உயர்ந்த குரலாகவும் எழுந்துள்ளது.

அதிமுக மெளனம் காக்கும் சூழலும் திமுகவினர் எல்லா தளங்களிலும் பதறும் சூழலும் அரசியலை நன்கு கவனிப்பவர்களுக்குப் புரியும். திமுகவினரின் கோட்பாட்டின் படி, அதிமுக ஆட்சி செய்யும்பொழுது ஏன் திமுகவை எதிர்க்கவேண்டும் என்ற கேள்வியே பதற்றத்தில் இருந்துதான் உருவாகிறது. 2011இல் தோற்றதெல்லாம் அவர்களுக்கு கவலையும் அல்ல என்பதும் 2016இல் தோற்றுவிடக்கூடாது என்பது மட்டுமே கவலையாகவும் குழப்பமாகவும் இருக்கிறது என்பதும்தான் இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆக, “எங்களை மீள் பரிசீலனையோ திருத்தமோ செய்துகொள்ள மாட்டோம், ஆனால், ஐந்தாண்டு தேர்தல் விதியின்படி 2016 திமுகவினருக்கானது, அதில் யாரும் மாற்றி சிந்தித்துவிடக்கூடாது” என்ற ஆணவப் போக்கே அதில் தென்படுகிறது.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் பாமக கூட்டணியில் இருந்தபொழுதும் காட்டிய எதிர்க்கட்சிக்கான அரசியல் நிலையும் பொதுவுடமை கட்சிகள் அவ்வப்பொழுது தெரிவித்த எதிர் கருத்துக்களும், அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டு தீவிரமாக திமுக ஆட்சியை எதிர்த்த மதிமுகவின் நிலையும் மட்டுமே அரசியல் அரங்கில் தென்பட்டதே தவிர அதிமுகவினரின் எவ்வித சமூக அக்கறையோ, அரசியல் நிலையோ, எதிர்க்கட்சிக்கான பொறுப்போ துளியும் இல்லை. அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத ஓய்வில் இருந்தார் என்றுகூட சொல்லலாம்.

2011 தொடங்கியதும் அவரது அரசியல் விடுமுறை கழிந்து அரசியல் ஓட்டத்தில் இணைந்தார். முதல் கூட்டம் கோவையிலும் அடுத்து திருச்சியிலும் மதுரையிலும் என லட்சக்கணக்கில் தன் தொண்டர்களை திரட்டி திமுகவினரின் ஊழல், அரசியல் ஒழுங்கீனம், அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புகள், ஆட்சியின் முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு என பட்டியலிட்டு திமுகவினரின் மீதான தமிழக மக்களின் எண்ணங்களை அதிமுகவினருக்கான சாதகமான பாதையை நோக்கி திசை திருப்பினார்.

தமிழகத்தில் இயங்கிய அனைத்து நிர்வாகமும் அனைத்து தொழில்களும் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அளவிற்கான அந்நியாய ஆட்சி இதுவரை எக்கட்சியும் செய்திருக்காது என்னும் அளவிற்கு இருந்த பாதக நிலை, அதிமுகவிற்கு ஆதரவாக மாறியது. திமுகவினரின் எல்லாவிதமான தவறுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களோடு ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் திமுகவிற்கு இருந்த களங்கம் என அனைத்தையும் அதிமுகவினருக்கான சாதக அலையாக மாற்றும் தீவிர அரசியல் செய்தார். பலன் 2011இல் ஆட்சி மாற்றம்.

அது குறித்த எந்த சுயபரிசீலனையும் திமுக அன்றும் செய்யவில்லை, இன்றுவரை செய்ய துளியும் சிந்திக்கவில்லை. மேலும், திமுகவினரின் அன்றைய மந்திரிகள் தொடக்கம் மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள் வரை அதிமுக அமைச்சர்கள், தலைவர்களின் எல்லா நல்லாசியோடும் கூட்டோடும் அவரவர் பணம் குவித்த அதே வழிகளில் இன்றளவும் தொடர்ந்தே வருகிறார்கள் என்பது விகடன் உட்பட பல ஊடகங்கள் உண்மைகளை உரக்கச் சொல்லியே வருகின்றன. என்ன ஒரே வித்தியாசம், அன்று குவிந்த அதே பொருளாதரம் இன்று குவியவில்லை, குவியாது என்றாலும், எவ்வித இடைஞ்சலோ எதிர்ப்போ இன்றி தொடர்வது அனைவருமே அறிந்த ரகசியம்தானே.

தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் பயணம் செய்தாலும், “இதோ இந்த இடம் திமுகவினர் வளைத்து போட்டது அந்த பக்கம் இருப்பது அதிமுகவினர் வளைத்து போட்டது” என்ற உறுதியான குரல் பொது மக்களிடம் தென்படும். மக்களுக்கு அவ்வளவு வெளிப்படையாக எல்லா ஆக்கிரமிப்புகளும் யார் யார் பெயரில் செய்யப்பட்டது என்ற புள்ளி விவரமும் வெட்ட வெளிச்சமாக தெரியும் அளவிற்கு இரண்டு கட்சியினரும் சளைத்தவர்கள் இல்லை.

ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் என்னென்ன தொகை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்ற புள்ளிவிவரம் சராசரி பாமர குடிமகனுக்கும் அத்துபடி. இதில், பலர், போன ஆட்சியில் எவ்வளவு தொகை, இந்த ஆட்சியில் எவ்வளவு தொகை என்ற எல்லா கணக்குகளும் விரல் நுனி மனப்பாடமாக சொல்வார்கள். இவ்வகையான லஞ்சம் அரச நிர்வாகத்தாலா அரசியல் கட்சியாலா அல்லது பொது மக்களின் முழு ஒத்துழைப்பாலா என்பதும் விவாதமாக இருப்பினும், அரச நிர்வாகத்தினரின் லஞ்சம் வாங்கும் படலத்திற்கும் அமைச்சர்களின் பேரத்திற்கும் தொடர்பு உண்டென்பதில் யாருக்கும் சந்தேகம் இராது.

முன்பெல்லாம், அரசு அலுவலங்களுக்கு சென்றால்தான், அவரவர் தேவையும் தன்மையும் பொறுத்து அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். எனக்கு தெரிந்தவரையில், கடைசி ஐந்தாண்டுகளில் அரச அதிகாரிகள் உங்கள் கடைகள், தொழிலகம், வீடு என தேடி வந்து பணம் பறித்து செல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒருவர் பேருந்து நிலையத்தில் (நேரடியாக நண்பருக்கு நடந்தவை) ஒரு உணவகம் வைத்திருந்தால், அவரின் உணவகத்திற்கு அதிகாரி ஒருவர் வந்தமர்ந்து, “உங்கள் கடையில் பழைய எண்ணையில் உணவு தயாரிப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது, இதனை பொருட்படுத்தக் கூடாது என்றால், இந்த தொகையை லஞ்சமாக கொடுங்கள்” என்று பொது மக்கள் முன்னிலையிலேயே பேரம் பேசி வாங்கி செல்கிறார்.

நோர்வேயில் நண்பர்களோடு உணவகம் நடத்தும்பொழுது,  எத்தனை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எத்தனை அதிகாரிகளின் பரிசோதனை நடக்கும் என தெரிந்துகொண்டேன். நம் நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் இல்லையே என ஏங்கியும் போயிருக்கிறேன். இந்திய சட்ட முறையில் உணவக சோதனைக்கென சட்டம் இருப்பதே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால்தான் தெரியவந்தது. சட்ட புத்தகத்தில் இருப்பவைகளை பின்பற்ற சொல்லி யாரும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள். அதில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் நீங்கள் உணவகம் நடத்தலாம்; ஆனால் அதை மீறுகிறீர்கள் என உங்களை மிரட்டி லஞ்சம் வாங்க முடியும்.

இதனை நேரடியாக திமுக அதிமுக ஆட்சியினரோடு பொறுத்திப்பார்க்காமல் நாம் அரசியல் பேசிவிட முடியுமா?

1991 இல் அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் வாங்கிய தொகை ஒவ்வொரு ஆட்சியிலும், ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் அதிகரித்து வந்துள்ளதே தவிர மாறவோ குறையவோ இல்லை என்பதில் இருந்து இது தொடர் ஓட்டம் என்பதும் ஆட்சி மாற்றத்திற்கும் இதற்கு தொடர்பில்லை யார் வந்தாலும் சம்பள உயர்வோடு விலைவாசி உயர்வும் பின்னிப்பிணைந்ததை போல ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் லஞ்சம் தொகை என்பது ஏற்றம் கண்டுக்கொண்டே இருக்கும்.

ஏனைய காலங்களைவிட 2006-2011 மற்றும் 2011-2016 காலங்களில் நடக்கும் ஊழல், லஞ்சம், ஆக்கிரமிப்புகள், சொத்து குவிப்புகள் மலையளவு அதிகரித்து இருப்பதை உணரலாம். 2006ற்கு பிறகே, திமுகவில் ஸ்டாலின் என்ற ஒற்றை வடிவ வாரிசு அரசியல், அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று பலவடிவம் பெற்றதற்கும், அவரவர் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சர்கள்/அரசியல்வாதிகள்/நிர்வாகிகள் கூட்டில் தனித்தனி ஆவர்த்தனம் நடத்தப்பட்டதால், பல்முனை முறைகேடுகளை தமிழக மக்கள் பார்க்க வேண்டியதாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில்தான், முதல் முறையாக வெளிப்படையாக எந்த பதவிக்கு/வேலைக்கு எவ்வளவு தொகை என்ற அளவுகோல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வந்தது.

ஏற்கனவே 1991-1996, 1996-2001 மற்றும் 2001-2006 காலக்கட்டங்களிலும் ஊழல், முறைகேடுகள் நடந்திருந்தாலும் பொதுச்சமூக தளங்களில் வெளிப்படையாக எல்லாவகையான பேரங்களும் ஆக்கிரமிப்புகளும் தெரிந்து வைத்திருக்கவில்லை என கருதுகிறேன். 2006-2011 திமுக ஆட்சி காலக்கட்டம் ஊழல், லஞ்சம், முறைகேடுகளில் புதுவடிவம் எடுத்துவிட்ட நிலையில், 2011-2016 காலக்கட்டத்தில் அதிமுகவினரின் கை பெரிதளவு ஓங்கிவிட்டது எனலாம். இதன் பொருள் திமுக தொடங்கியதை அதிமுக தொடர்கிறது என்பதோ அதிமுக தொடங்கியதை திமுக தொடர்கிறது என்ற நேரடியாக எடுத்துக்கொள்வதைவிட, யார் தொடங்கினாலும் அடுத்தவர் தொடர்கிறார் என்று புரிந்துகொண்டால், இருவருமே ஒன்றோடு ஒன்று இணைந்தவர்கள் என்ற பொதுமக்களின் பொது புத்தி விளங்கும். அதனைத் தவிர்த்து அதிமுகவை குறை சொல்லும்பொழுது திமுகவினரையும் சேர்த்தே சொல்கிறார்கள் என புலம்பினால், திமுகவின் நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல ஆதரவாளர்களும் கூட்டுக் குற்றவாளியாகின்றனர்.

இப்படி நேரடியாக பொது மக்களின் சிந்தனைகளில், அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் திமுகவும் அதிமுகவும் ஒன்று என்றுதானே சொல்ல முடியும். திமுக ஆதரவாளர்கள் இதனை மறுத்துவிட முடியுமா?

ஊழல், லஞ்சம் என்ற அளவுகோலில் இருந்து பார்த்தாலே இரு கட்சியும் ஒன்றென முடிவுக்கு வர முடியும்? வேறேதுனும் கொள்கை ரீதியாக பேச வேண்டும் என்றாலும் பேசலாம். எம்ஜியாரின் விஸ்ரூபத்தால் தொடர் தோல்விகளை சந்தித்த திமுக கொள்கை கோட்பாடுகளை எல்லாம் என்றோ கைவிட்டுவிட்டது என்பது என் கணிப்பு. அதுவும் 1991 ற்கு பிறகான அரசியல் சூழலுக்கும் திமுகவின் கொள்கை கைவிடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. 1996 ஆட்சி மாற்றமே அதற்கான தொடக்கப்புள்ளி என கருதுகிறேன். அதன் பிறகு திமுக பின்பற்றிய கொள்கை ரீதியிலான எல்லா சிறு அளவிலான அசைவுகளும் அதன் வேரில் இருந்த கொஞ்ச நஞ்ச வீரியத்தில் வந்தவைகள்தானே நிகழ்கால கொள்கையால் அல்ல.

திமுகவின் தொடக்கம் சமூக நீதி என்பதற்காக, அதனால் தமிழகம் பயனடைந்தது என்பதற்காக திமுக என்ற பெயர் இருக்கும்வரை அதன் எல்லா அக்கிரமங்களையும் ஆணவங்களையும் தாங்க வேண்டியது அவசியம் இல்லை. அதுவும் இன்று இருப்பது ‘அண்ணா’வின் திமுக அல்ல; கருணாநிதியின் திமுகவின் நிழலில் மறைந்திருக்கும் ஸ்டாலின் திமுக என்ற பொழுது அண்ணா- பெரியார் கொள்கைகளின் பெயரால் இன்றைய திமுகவை ஆதரிப்பதும் கூட கொள்கை சறுக்கலாகவே முடியும் என்பது என் கருத்து.

அதற்காக தேர்தலில் அதிமுக ஆதரவு நிலைப்பாடா எடுக்க முடியும் என கேட்கலாம். இவர்கள் இருவரின் வாக்கு வங்கி அரசியலே இவ்வளவு முறைகேடுகளுக்கும் சீர்கேடுகளுக்கும் பலம். அதனை உடைக்க முயற்சிப்போம். முழுமையான மாற்று அரசியல் உடனடி சாத்தியம் இல்லை. ஆனால், இடைக்கால நிலை ஒன்று உருவானால்தான் முழுமையான மாற்றம் சாத்தியாமாகும். திமுக-அதிமுகவை தவிர பொதுமக்கள் யாரையும் ஆதரிக்கும் நிலையை உருவாக்குவோம். அவரவர் ஜனநாயக விருப்பம். ஆனால், இவ்விருவரைத் தவிர. வாக்கு வங்கி சிதைவே முதல் படியாக இருக்கும் என நம்புகிறேன்.

நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஆணவமே இவ்விருவரின் பலமாக இருக்கும்பொழுது மாற்றத்திற்கான சிந்தனை பொது மக்களிடம் நிறைந்துவிட்டது என உணர்ந்தால்தான், அவர்களால் இனி பெரும்பான்மை ஆட்சி பெற முடியாது என்ற நிலை உருவானால்தான் மாற்றம் சாத்தியம் என நினைக்கின்றேன். அதற்கான சோதனை களமாக 2016 தேர்தலை பயன்படுத்துவோம். விவாதம் இல்லாமல் பதற்றமே இல்லாமல் ஆட்சி மாற்றத்தை இவ்விரு கட்சிகளும் அடைந்து வந்த நிலை மாற்றி விவாதம் செய்வோம். இருவரின் சாதக பாதகத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவோம். மாற்றம் இன்றே நிகழாவிடினும் மாற்றம் நோக்கிய முதல் படியே 2016 தேர்தல்.

விஜய் (எ) தமிழ்ச்செல்வன், முனைவர்; அறிவியல் ஆய்வாளர்.

“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம

magizh
மகிழ்நன் பா.ம

தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது:

“எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும்

எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல்சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங் பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ, அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப்படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கையில்லை. எங்களுக்கு மனு ஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார், அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார், அவர்தான் கருத்துரிமையை பேசுகிறார். நாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எதன் பொருட்டும் விட்டு கொடுக்க மாட்டோம்.

ஜே என் யூ ஜிஹாதிக்கள் இருக்கிறார்கள், வன்முறையை பரப்புகிறார்கள் என்று சுவாமி சொல்கிறார். துணிவிருந்தால் ஆர்.எஸ் எஸ் அடிவருடிகளை அழையுங்கள். நான் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில் ”ரத்தத்தால் திலகமிடுவோம் என்றும், குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே? இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய ரத்தத்தை இந்த ஊரில் ஓட விட பார்க்கிறார்கள்?

ஆம், நீங்கள் குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். ஆங்கிலேயர்களோடு இணைந்து கொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள்.

இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியை குறித்து கவலைப்படுகிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையை பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இஸ்லாமீயர்கள் மீதும் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள்.

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், ஐந்து விரல்கள் ஒன்று போல இருப்பதில்லை. பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறீர்கள்.

இந்த நாட்டில் ஜனநாயக நாடுதானே? அது, மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித்தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கியிருக்கிறதே?

பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் போது, நம்மை பாரதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறீர்கள் என்று குற்றஞ்சுமத்துகிறார்கள்.

ஆம், நாங்கள் அழிக்க நினைக்கிறோம். சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்ப்பனிய பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம்.

இவர்களுக்கு உண்மையில் எங்கே பிரச்சினை வருகிறது?

மக்கள் ஜனநாயகத்தை குறித்து பேசும் போதும்,

செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும் போதும்,

மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும் வருகிறது.

இதை உறுதியோடு செய்யும் போது இவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறது.

இந்த காவி கும்பல் ஆங்கிலேயர்களின் அடிபொடிகள். முடிந்தால் என் மீது தேசவிரோத வழக்கு தொடுங்கள்.

ஆர்.எஸ்.எஸின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு நின்றதோடுதான் பிணைந்திருக்கிறது.

இந்த தேசத்துரோகிகள்தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழை கோருகிறார்கள்.

வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே, என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல். உங்கள் பாரத மாதாவில் எனது தாய் இல்லையென்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு கிடையாது.
இந்த நாட்டின் வறுமையில் வாடும் பெண்கள், என் அம்மா அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார். அதில் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தையில் பேசுகிறது. இந்த நாட்டின் மீது வெட்கப்படுகிறேன். இந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின்ன் மாதாக்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை.

நான் ஜெய் சொல்கிறேன். பாரதத்தின் மாதாக்களுக்கு ஜெய். பிதாக்களுக்கு ஜெய். மாதா, சகோதரிகளுக்கு ஜெய்….விவசாய, ஏழை, தலித், பழங்குடிகளுக்கு ஜெய்…
உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத் சிங் புகழ் ஓங்குக என்றோ, சுக்தேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா? அப்பொழுது நம்புகிறோம், காவி கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று…

ஆனால், அம்பேட்கரின் 125 வது பிறந்த நாள் கொண்டாடுவதா நாடகம் ஆடுகின்றீர்கள். சாதியம்தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேட்கர் கூறினாரே..உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன். அப்பொழுது நம்புகிறோம், காவி கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று…

மக்களுக்கு அப்பால் ஒரு தேசம் இருக்க முடியாது. ஒரு நாடென்ற ஒன்று உருவாக வேண்டுமென்றால், அது மக்களால்தான் உருவாகும்.
நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தேன், பாசிசம் மெல்ல மெல்ல நம்மை நோக்கி வருகிறது. அது நாளை ஊடகங்களையும் பாம்பு போல சுற்றிக் கொள்ளும். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி போல இப்போதும் நிகழும்.

ஒருவர் சொல்கிறார், எங்கள் வரிப்பணத்தில்தானே கல்லூரி நடக்கிறது. அங்கே எப்படி நீங்கள் என்கிறார்….

பல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக? சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்குதானே…? பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு நல்ல சூழலில் இருக்காது. நாடு, நாடாகவே இருக்காது..அதன் பிறகு நாடென்ற ஒன்று இருந்தால், கோடீஸ்வர கும்பலுக்காகத்தான் இருக்கும்… முழுக்க, முழுக்க சுரண்டல்தான் கலாச்சாரம் என்றாகும். ..

இந்த தேசத்தோடும், அம்பேட்கரும், பகத் சிங்கும் இந்நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள். உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்யும் கனவுதான் எங்களுடையது. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான். மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதரபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்தந்தோ, அதை கண்டிப்பாக ஜே.என்.யூவில் நடக்க விட மாட்டோம்.

ரோஹித்தின் தியாகத்திற்கு நாங்கள் எதை திருப்பி தரப் போகிறோம். கருத்துரிமையின் நிலைநாட்டும் போராட்டத்தில் துணிந்து நிற்போம். எங்கள் கோரிக்கை எல்லாம் பாகிஸ்தான், வங்காள தேசம் என்னும் பிரிவினையை கைவிட்டு, ஏழை உலகத் தொழிலாளர்கள் ஒன்று படுங்கள் என்பதுதான். சாதியவாத. முதலாளித்துவ பார்ப்பனிய கூட்டின் கொடூர முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுதான் நம் முன்னால் இருக்கும் தலையாய பணி. உண்மையான ஜனநாயகத்தையும், உண்மையான சுதந்திரத்தையும், அனைவருக்குமான சுதந்திரத்தை உறுத் செய்ய வேண்டும்.

நம் நாட்டின் ஒற்றுமைகாக இணைந்து நிற்க உறுதியேற்போம் தோழர்களே!

நாட்டை பிளக்கும், தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் இந்த கும்பலை எதிர்கொள்வோம். இறுதியாக ஒரு கேள்வியை கேட்டு என் உரையை முடிக்கிறேன் தோழர்களே…அப்சல் குரு யார்? அஜ்மல் கசாப் யார்? உடலில் பாம் கட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள தயாரான இவர்கள் யார் என்ற கேள்வி இந்த பல்கலைக்கழகத்தில் எழவில்லையென்றால், இந்த பல்கலைக்கழகம் இருந்தே பயனில்லை.

வன்முறைக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லையென்றால், வன்முறையை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்? துப்பாக்கி தூக்கிக் கொண்டு ஒருவரை கொல்வது மட்டுமே வன்முறையாகிவிடாது. தலித் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை வழங்க மாட்டோம் என்று ஜே.என்.யூவில் சொல்வது கூட வன்முறைதான். இது நிறுவனரீதியான வன்முறை இல்லையா?

நீதியை பற்றி பேசுகிறார்கள்? யார் முடிவு செய்வது? எது நீதியென்று? பார்ப்பன மேலாண்மையில் பஞ்சமர்கள் கோவிலில் நுழைய அனுமதி இல்லாதிருந்தது. அதுதானே அன்று நீதி என்று கருதப்பட்டது. ஆங்கிலேயர்கள் இருந்த போது இந்தியர்களுக்கும், நாய்களுக்கு ஹோட்டல்களில் அனுமதி இல்லை என்று எழுதி வைத்திருந்தார்கள். அதுவும் அன்று நீதி எனப்பட்டது. அன்று நாங்கல் அந்த நீதியை எதிர்த்தோம். இன்றும், ஆர்.எஸ்.எஸ் – ஏபிவிபியின் நீதியை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

உங்கள் நீதி எங்கள் நீதியை உள்ளடக்க மறுக்குமானால், உங்கள் நீதியையும், சுதந்திரத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களுக்கு அரசியல்சாசனம் உறுதி செய்திருக்கின்ற உரிமைகள் என்று கிடைக்கிறதோ, அன்றுதான் நாங்கள் இந்த சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வோம். அனைவருக்கும் சமத்துவம் உறுதி செய்யப்படும் போதுதான் நீதிபரிபாலனையை ஏற்றுக் கொள்வோம்.

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ராஜேஸ்தாஸ்  கூற்றுப்படி சராசரியாக 5000 தலித்துகளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட மரணங்கள் நடைபெறுவதாகவும், அதில் 45 சதவிகிதம் தற்கொலைகள் என கூறப்படுவதாதாகவும் தெரிவித்துள்ளார்.

“வயிற்று வலி அல்லது இதர நோய்களுக்காக இளைஞர்கள் உட்பட பல தற்கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. வயிற்றுவலி அல்லது உடல் நோவிற்காகவா இவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்களா? இத்தகைய தீவிரமான முடிவுகள் மேற்கொள்ளுமளவிற்கு நிர்ப்பந்திக்க வேறு பல காரணிகள் இருக்கக் கூடும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தி இந்து வெளியிட்டுள்ள தகவல்கள்
தி இந்து வெளியிட்டுள்ள தகவல்கள்

தமிழகததில் இளவரசன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்டு தலித் பிரிவினர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது பற்றி முறையான விசாரணை நடத்த ஏற்கனவே சிபிஐ (எம்) உட்பட பல ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு இதனைக் கண்டுகொள்ளாத போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமூலா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திட நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம்.

இப்பின்னணியில் தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தலித் பிரிவைச் சார்ந்தவர்கள் அசாதாரணமான முறையில் மரணம் அடைவதாக அதிகாரப் பூர்வமான முறையில் காவல்துறையைச் சார்ந்த முக்கியமான அதிகாரியே தெரிவித்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட குழுவினர் இத்தகைய மரணங்கள் குறித்தும், தலித் இளைஞர்கள் உட்பட தலித் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையே இல்லை என முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப அடித்துக் கூறினாலும் அக்கூற்றை மறுதலிக்கும் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறுகின்றன என்பது தான் உண்மை.

ஆகவே இப்பிரச்சனை குறித்து ஆராயவும், உண்மை நிலையைக் கண்டறிந்து அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தில் முன் நிறுத்திடவும் தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்டு அனைத்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டவும் மேற்கூறப்பட்டவாறு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்குழுவை தாமதமின்றி அமைத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது”.

”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”

பிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது.

தமிழாக்கம்: பூ.கொ. சரவணன்

yogendra yadav
யோகேந்திர யாதவ்

எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த அணுகுமுறைகளாகவே இருந்தன. பின்னர் எங்களுக்குள் எப்படி ஒரு அற்புதமான பிணைப்பு உண்டானது என்றால் ஜாதியைக் குறித்துத் தொடர்ந்து நாங்கள் சிந்தித்து வந்தோம் என்பதனால் இருக்கலாம். ஜாதியை எதிர்கொள்வதில் அவர் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஜாதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அதனோடு இணைந்து பங்காற்றும் மற்ற கூறுகள் கவனம் பெறாத பொழுது அவற்றையும் கருத்தில் கொள்வதைப் பேராசிரியர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் தொடர்ந்து செய்தார். அவரின் எம்.ஜி.ஆர். குறித்த ‘The Image Trap’ நூல் எப்படிப் பிம்பம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உருமாற்றம் அடைகிறது என்பதைப் பிரமாதமாக விளக்கும் நூல். இப்பொழுது நரேந்திர மோடி வெற்றி பெற்றதையும் அந்த நூலைக் கொண்டு புரிந்து கொள்ள இயலும்.

NCERT பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் சார்ந்து எழுந்த சிக்கலை அடுத்து என்ன இறுதித் தீர்ப்பு எழுதுவது என முடிவு செய்துவிட்டு அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களும் உறுப்பினராக இருந்தார். அந்த விசாரணைக் குழுவில் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற பாண்டியனை ஏன் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. முறையான கேள்விகளை எங்களை நோக்கி அடுக்கிய பாண்டியன் அவர்கள் இறுதியில் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து மாறுபட்டு ஒரு மறுதலிப்புக் குறிப்பை எழுதினார். இந்தியாவில் அரசியலுக்கும், அறிவுபுலத்துக்கும் இடையே உள்ள உறவை குறித்து வருங்காலத்தில் வரலாறு எழுதப்படும் பொழுது பாண்டியன் அவர்களின் அந்தக் குறிப்பு அறிவுப் புலத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்.

சமூக நீதி என்பது உலகளவில் பரந்துப்பட்ட பொருளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவில் பெரும்பாலும் அது ஜாதி சார்ந்த நீதியையே குறிக்கப் பயன்படுகின்றன. சமூக நீதிக்கான இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை குறிவைத்து இயங்கி இருக்கின்றன. சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் என்பதும் ஜாதி சார்ந்த ஒன்றாகவே இயங்குகின்றன. சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை என்கிற இந்தத் தலைப்பை ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி காண்பதன் அவசியத்தை நான் பேச விரும்புகிறேன்.

ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாதி சார்ந்த அநீதி என்பது எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதைக் கண்டோம். ஜாதிக் கொடுமைகள் இன்றும் தொடர்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் ஹைதராபாத் பல்கலையில் நடந்த நியாயமற்ற நிகழ்வுகள் வழிகோலின. இந்த நிகழ்ச்சி நமக்கு எதை நினைவுபடுத்துகிறது என்று யோசியுங்கள். நவீன அமைப்புகளில் ஜாதி எவ்வளவு ஆழமாகத் தன்னுடைய கொடுங்கரங்களைப் பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் இந்த மரணம். ஜாதிக் கொடுமைகள் உச்சபட்சமாக உள்ள இடங்களில் பெரும்பாலும் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த புகார்கள் பதியப்படுவதில்லை. எங்கு இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ, அங்கிருந்து தான் இந்த மாதிரியான விஷயங்கள் வெளிப்படுகின்றன. மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பு மிகுந்த மாணவர்களை ஹைதரபாத் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஜாதி சார்ந்த அநீதி இழைப்பு குறித்த நுண்ணிய, அதிகளவிலான புரிதல் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளது.

ரோஹித் வெமுலாவின் மரணமும், அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவராக ரோஹித் வெமுலா இல்லை என நிறுவ முயன்றார்கள். அதனைச் சார்ந்து ஜாதி வன்முறைக்கான எல்லையாகப் பட்டியல் ஜாதி சான்றிதழை அவர்கள் நிர்ணயிக்கப் பார்த்தார்கள். ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரோ, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ ஜாதி வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் நம்பவைக்க முயன்றார்கள். முதலில் ரோஹித் வெமுலாவுக்கு நிகழ்ந்த அநியாயத்தை இல்லையென்று மறுத்தார்கள், அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியா தன்னுடைய பெருமைமிகுந்த மகனை இழந்துவிட்டது’ என்று ஆழ்ந்த வருத்தம் தோன்ற கண்ணீர் வடித்தார். இவை இரண்டும் ஒரே சமயத்தில் நாடகம் போல இணைந்து நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். முதலில் ஜாதி சார்ந்த வன்முறையே இல்லை என்று மறுப்பது, பின்னர் அந்த நிகழ்வையே களமாக்கி போராடுவது, அதற்குப் பின்னர் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த நீண்ட அம்னீசியாவுக்குள் போவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்தமுறை நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படி அம்னீசியாவுக்குள் சென்று விடும் சமூகம் என்கிற சோகமான தீர்ப்பை நான் முன்முடிவோடு எழுத விரும்பவில்லை. இருந்தாலும், கடந்தகாலம் எப்படியிருந்தது என நினைவூட்ட விரும்புகிறேன்.

mss pandiyan
எம்.எஸ்.எஸ். பாண்டியன்

ஆதிக்க ஜாதியினர் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவது, மேம்படுத்துவது என்பது அதன் பொருளல்ல, இட ஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். சமூக நீதி தற்போது அடைந்திருக்கும் இடம் சமூக நீதி அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. அறுபதுகளில் தெற்கில் எழுந்த சமூக நீதி இயக்கங்கள் எண்பதுகள், தொன்னூறுகளில் வடக்கிலும் பரவியது. மத்திய பிரதேசம் போன்ற ஆதிக்கச் சாதியினரே முதல்வரான மாநிலங்களில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக ஆகமுடிகிறது. நரேந்திர மோடி தன்னுடைய அடையாளங்களில் ஒன்றாகத் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை முன்வைப்பதையும் காணலாம்.

பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்தியாவில் ஓடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெற்றியை அடைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி என்பது முந்தைய பத்ரோலக் எனும் ஆதிக்க ஜாதியினரின் ஆட்சியின் நீட்சியாகவே இருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே இருந்த வலுவான பிற்படுத்தப்பட்டோர் அரசியலை இடதுசாரிகள் தொடரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். மற்றபடி சமூக நீதி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெகு, வெகு குறைவு.
நாடாளுமன்றத்தில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டசபை இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதா துளி எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாக நிறைவேறியது. இவ்வாறு பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் பற்றி அரசியலில் எதிர்க்கருத்து வைக்கத் தயங்குகிற அளவுக்கு அவை புனிதப் பசுவாகச் சமூக நீதி அரசியலால் மாறியிருக்கின்றன. என்றாலும், சமூக நீதி அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

சமூகத்தில் பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இந்த இயக்கங்கள் போராடி வெற்றி பெற்றன. அந்த வெற்றிக்கு அவர்களே பலியாகி விட்டார்கள். தெற்கில் மேல்தட்டினராக இருந்த பார்ப்பனர்களின் இடத்தைப் பார்ப்பனர் அல்லாதோர் கைப்பற்றினார்கள். வடக்கில் இப்படி ஆழமான வெற்றி பீகாரில் மட்டுமே ஓரளவுக்குச் சாத்தியமானது. தற்போது இந்தச் சமூக நீதி அரசியல் தேக்கமடைந்து விட்டது. இட ஒதுக்கீடு என்பது தற்போது விகிதாசாரத்தில் பெருமளவில் சுருங்கிவரும் அரசுத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

கடந்த காலங்களில் ஜாதி பாகுபாடு இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் பாணி இருந்தது. தற்போது இருக்கிற ஒரே பாகுபாடு ஜாதி பாகுபாடு, அதனைத் தீர்க்கும் ஒரே வழிமுறை இட ஒதுக்கீடு என்று பெருமளவில் கருதப்படுகிறது. நாம் நான்கு முக்கியமான சமூகநீதி மறுக்கப்படும் தளங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். ஜாதி, வர்க்கம், பாலினம், கிராம-நகரப் பாகுபாடு ஆகிய இந்நான்கும் இணைந்தே பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாலே அதனைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிற செயலையே செய்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தை நிராகரிக்கும் அதேசமயம், இட ஒதுக்கீட்டை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.

இந்தத் தைரியமான அரசியலை முதலில் முன்னெடுப்பவர்கள் ஓரளவுக்கு ஓட்டுக்களை இழந்தாலும், பின்னர்ச் செல்வாக்கை மீட்பார்கள். அனைவருக்காகவும் பேசுவதைச் சமூக நீதிக் காவலர்கள் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாருக்குமான தலைவராக ஆசைப்படுவதேயில்லை. தெளிவான திட்டமிடல், பலதரப்பட்ட பிரிவினரையும் கருத்தில் கொண்டு தீர்வுகள் தருவது, உறுதியான நிலைப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் என்று சொல்கிற கட்சிகளுக்கு மாற்று எனச் சொல்லிக்கொள்ளும் இவர்களின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் எப்படி ஆதிக்க சக்திகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளன எனப் பார்த்தால் பெரிய வேறுபாடில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.

முதலில் தன்னுடைய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் பாடுபடுவதன் நியாயம் நன்றாகப் புரிகிறது. அதேசமயம், நீடித்து மக்களின் மதிப்பை பெற அனைவருக்காகவும் இயங்கும் அரசியலை கைக்கொள்ள வேண்டும். ஜனநாயகமயமாக்கல் தங்களை வந்தடையவில்லை என்று சொல்லி களம் புகுந்த இக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். பலகாலமாக மாநிலவாரியாக, சாதிவாரியாக, மொழிவாரியாகப் பிளவுபட்டு இயங்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி அவை ஒன்றுபட யோசிப்பதால் காங்கிரஸ் கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஆதிக்க ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பகுதி, பட்டியல் சாதியினரில் ஓரளவுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பாஜக ஆட்சியைப் பல இடங்களில் பிடிக்கிறது.

எனவே, பிளவை சீர்செய்து ஒன்றுபட்டுப் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பல தளங்களில் பேசவேண்டிய முக்கியமான கட்டம் இது. ரோஹித் வெமுலாவின் கடிதம் வித்தியாசமான, அழகான கடிதம். யாரையும் குறை சொல்ல ரோஹித் மறுக்கிறான். யார் முன்னும் தன்னைச் சிறியவனாக உணரவும், கடும் வன்மத்தை வெளிப்படுத்தவும் அவன் அக்கடிதத்தில் மறுக்கிறான். என்னை அழியா நம்பிக்கை கொண்டவன் என்று கூட நீங்கள் அழைக்கலாம், என்றாலும் இதனைச் சொல்கிறேன். ரோஹித் வெமுலாவின் மரணம் பலதரப்பட்ட மக்களை ஜாதி அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதுவரை இதனைப் பற்றி மூச்சு விடாதவர்களைப் பேச வைத்திருக்கிறது. பெரிய, ஆழமான, தொலைநோக்குக் கொண்ட சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அயராமல் செயல்படுவதே நாம் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் மகத்தான சமர்ப்பணம்.

கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு!

தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே… எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? – இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர்.

அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித அச்சுறுதலைப் பற்றியும் துளியும் சிந்திக்காது நீங்கள் தர்மபுரியில் அமர்ந்துகொண்டே எழுதியது, 2015 இல் GATS ஒப்பந்தம் கையெழுத்தாகப்போகிறது என்று பதறியெடுத்துக்கொண்டு, நீங்கள் என்னைப் போன்றவர்களை அழைத்து நாம் ஏதாவது செய்ய வேண்டும், நம் அடுத்த தலைமுறையின் கழுத்தில் கத்தி தொங்கப்போகிறது என்று எங்கள் செவிகளில் ஓங்கி அறைந்து, அதனை தர்மபுரியில் இருந்து என்னவெல்லாம் செய்யலாம், தமிழகம் முழுமைக்கும் என்ன செய்யலாம் என என்னைப் போன்றவர்களை ஓடவிட்டது, என செய்தியாளராக வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு ஊதியம் பெற்று சுக வாழ்வு வாழாமல், ஓடிக்கொண்டே இருக்கும் உங்களை தோழன் என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சிதான். அரசுப்பள்ளிக்கூட பாதுகாப்பு குறித்து இன்று நான் களத்தில் இறங்கி வேலை செய்ய காரணமானவர்களில் தோழரும் பாரதி தம்பியும் நீங்களும் முன்னிலை வகிக்கிறீர்கள். நீங்கள் நேரடியாகவும், பாரதி தம்பி விகடன் கட்டுரை வழியாகவும்!

கல்வி உலகில் பணம் மட்டும்தான் பிரச்சனையா தோழர்? பெரும்சவலாக இன்னொன்றும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதே, நாம் அதை பற்றி பேசுவோமா? அது வேறு ஒன்றுமில்லை, சாதி என்னும் கொடிய பாம்புதான். சத்தியமாக இதனை பேசும் முதல் நபரும் நான் அல்ல, கேட்கும் முதல் நபரும் நீங்கள் அல்ல. இருப்பினும் பேசுவோம் தோழர். திராவிட இயக்க நூற்றாண்டை எவ்வித கூச்சமும் இல்லாமல் பெருமையோடு பேசும் எல்லா திராவிட இயக்கத் தோழர்கள், நண்பர்கள், கட்சியினர் அனைவருக்கும் கேட்கும்படி உங்களோடு பேச வேண்டும் தோழர். தமிழன் என நாமெல்லாம் ஒன்றாகிவிட்டால் சாதி இல்லாமல் போய்விடும் என பொய்க்கூச்சல் போடும் நம் சக தமிழர்கள் காது கேட்கும்படி பேசுவோம்.

தோழர், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத முற்பட்டதற்கான காரணம் விகடனில் வெளியான தங்கள் கட்டுரை மட்டும் அல்ல. நான் சொல்லப்போகும் பயண அனுபவமே உங்களால்தான். உலக வர்த்தக மையத்தில் இந்தியா கல்வியை அடமானம் வைக்கப்போகிறது என்ற பதற்றத்தோடு அதனை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவேண்டிய காரணங்களை எங்களை போன்றோருக்கு எடுத்துக்கூறி உற்சாகம் ஊட்டியதோடு, அதற்கான ஆயுதமாய் நீங்களே எழுதிய ‘களவு போகும் கல்வி’ புத்தகத்தையும் கொடுத்தீர்கள். குக்கூ அமைப்பு உதவியோடு வெளியான புத்தக்கத்தை, தர்மபுரி மக்கள் மன்றத் தோழர்கள் படைச்சூழ தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வாழ்த்துக்களோடு தஞ்சை மண்ணில் உங்கள் திருமணத்திலேயே வெளியிட்டு முதல் பயணத்தையும் தொடங்கி வைத்தீர்கள்.

அதனை சுமந்துகொண்டு ஒரு வெளியீட்டு விழாவிற்கு நானும் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கொங்கு பகுதிகளில் இருக்கும் ஒரு பேரூருக்கு சென்றோம். இடத்தின் பெயரையும் பங்கு கொண்ட மற்றும் ஏற்பாடு செய்த ஏனையவர்களின் பெயரை வேண்டும் என்றே தவிர்க்கிறேன். நமக்குள்ளான உரையாடல் பிரச்சனைகளை மையப்படுத்தியே தவிர நபர்களை அல்ல என்பதால் மட்டும் இல்லை. அவர்களை பாதுகாக்கும் பொருட்டும்தான்.

அவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனக்கே உரிய வழக்காமான துணிச்சலில் சமூகத்தில் நிலவும் சாதியம் குறித்தும் இந்துத்துவ வெறியர்களின் கீழ்த்தரம் குறித்தும் பேசியவர் கொங்கு பகுதியென்பதால் யுவராஜ் என்ற சாதிவெறியன் செய்தவற்றையும் சுட்டிக்காட்டி, இதனை பேசும் எதிர்க்கும் தைரியம் இல்லையெனில் நாம் படித்துதான் என்ன பலன், உயர்ந்துதான் என்ன பயன் என கேள்வியையும் கேட்டுவிட்டு புத்தகம் தொடர்பான கருத்துக்களையும் GATS குறித்த புரிதலையும் ஏற்படுத்த பேச எத்தனித்த வேளையில், கூட்டத்தில் ஒரு குரல்.

தோழர், திராவிட மண் என்று என்னை போன்றவர்கள் பெருமையோடு வாழ்ந்த திமிர் அந்த நொடியில் சுக்குநூறாய் வீழ்ந்தது. “வட இந்தியாவில் பொதுவுடமைவாதிகளும் கூட சாதிப்பெயரோடே வாழ்கிறார்கள், தமிழகத்தில் சாதிக்கட்சித் தலைவர்கள் கூட சாதிப்பெயர் போட கூச்சப்படுகிறார்கள்” என்று பெருமை பொங்க 2012 இல் எனது கட்டுரைகளில் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த நொடி என்னை நிறைய கேள்விகள் கேட்க வைத்தது.

ஆசிரியர்களும் மாணவர்களும் நிரம்பியிருந்த அந்த கூட்டத்தில், தன்னை அக்கூட்டம் நடத்தும் அமைப்பின் பொறுப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதர், “எங்களுக்கு யுவராஜ் ஒரு கதாநாயகன் தான்; எங்கள் சாதி எங்களுக்கு உயர்வுதான்; எங்கள் மண்ணின் பெருமை எங்களுக்கு தெரியும்; அதனைக் குறித்து பேச நீங்கள் இங்கே வரவில்லை; அதுகுறித்து உங்கள் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை; புத்தகம் குறித்து மட்டும் பேசுங்கள்” என கூச்சலிட்டார். பிறகு ஏனையவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, கூச்சலிட்ட நபர் தனிமைப்பட்டு நின்று, உரை தொடர்ந்தது என்பது வேறு. ஆனால், அந்த நபரின் குரல் ஒற்றை மனிதரின் குரல் அல்ல; அங்கே பேச கூச்சப்பட்டு, பொதுவெளியில் அமைதி காத்த ‘உத்தம’ர்களின் பெருங்குரல். அந்த குரல், “யுவராஜின் கைது பிரபலம் ஆன அளவிற்கு கூட ஏன் விஷ்ணுப்பிரியாவின் கொலை மக்கள் மத்தியில் பேசப்படவில்லை” என்று எனக்கு உணர்த்திய குரல்.

அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர் இவ்வளவு சாதித்திமிரோடு வாழ்ந்துகொண்டு எதை கற்றுக்கொடுப்பார். இத்தனைக்கும் அவர் இருக்கும் அரசுப்பள்ளிக்கூடங்களில் அவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்கள் படிப்பதில்லை. ஆம் தோழர், அரசுப்பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடாரமாக மட்டும் மாறி நிற்கிறது. மீண்டும் சொல்கிறேன் இவையனைத்தும் புதியவை அல்ல; தமிழகம் அறியாததும் அல்ல; ஆனால், எவ்வித அசைவையும் இச்சமூகத்தில் கொடுக்காமல் காலங்காலமாக எல்லா ஊர்களில் வேர்விட்டு நிற்கும் இதனை இன்று பேசியாக வேண்டும் என்றே எழுதுகிறேன். கொங்குப்பகுதிகளில் பயணித்த சில நாட்களில் உறுதிபடக் கிடைத்தத் தகவல் இவை.

கொங்கு பகுதிகளில், அரசு பள்ளிக்கூடங்களில் கவுண்டர் சாதி குழந்தைகளை பெற்றோர்கள் சேர்ப்பதில்லையாம். அரசு பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கானதாம். தனியார் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்கள் எல்லாம் கவுண்டர் சாதியினர் என்பதால், அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களை பெரும்பாலும் சேர்ப்பதில்லையாம். ஏதோவொரு காரணம் கொண்டு தவிர்க்கப்படுகிறது அல்லது குழந்தைகள் விரட்டப்படுகிறார்கள்.

அரசு பள்ளிக்கூடங்களை காப்போம் என போராடும் யாரும் இதுகுறித்து வெளிப்படையாக பேசுவதில்லை என வருத்தம் உண்டு. உண்மையாக உழைக்கும் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் பாவம். இதை பேசினால் அவர்கள் செய்யும் பாராட்டத் தக்கப்பணிகளில் அவர்களுக்கு இடையூறு வரும். அவர்களும் அரசுப்பள்ளிக்கூடங்களில் இல்லையென்றால், அரசுப்பள்ளிக்கூடங்களை சவக்குழியில்தான் தள்ள வேண்டும். அவர்களுடன் பணிபுரியும் ஆசிரியர்களோடே முரண்பட்டுக்கொண்டே பல நல்ல செயல்களை செய்யும் அவர்களுக்கு இது போன்ற உணர்ச்சிமையமான பிரச்சனை, அவர்களை வீழ்த்தும் கருவியாக்கப்படும் அபாயம் உள்ளது. இதில் நான் அவர்களை குறை கூறவும் இல்லை. இழுக்கவில்லை. பொதுவெளியில், பொது மக்கள் மத்தியில் இது விவாதமாகவே இல்லையே தோழர். திராவிட இயக்கங்கள் கட்சிகளில் இது குறித்து வெளிப்படையான பேச்சுக்களே இல்லையே..
அதேபோல, இன்னொரு சம்பவத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். மதிமுக நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து திருப்பூர் செல்ல பேருந்தில் பயணமானேன். பொதுவாக, அருகில் இருப்பவர்களோடு பேசும் பழக்கம் உள்ளவன் என்பதால் எனது அருகில் இருந்த இரு நபர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். ஒருவரின் வாழ்க்கை குறித்த அறிமுகத்தை தொடர்ந்து பேச்சு எங்கெங்கோ சென்று சாதியில் நின்றது. இருவரில் ஒருவர், மிக சத்தமாக எல்லோருக்கும் கேட்கும் நிலையில், “தம்பி என்ன சாதி?” என்றார். நான் அதிர்ச்சியோடும் அமைதியோடும் இருந்தேன். அவரே தொடர்ந்து, உங்க பேச்சு கொங்கு பகுதி வாசனையோடு இருக்கு; ஆனா உங்க ஊர் தர்மபுரின்னு சொன்னீங்க, அதான் கேட்டேன் என்றார். நான் மிக சத்தமாக பொதுவெளியில் இவ்வளவு உரக்க சாதியின் பேரை கேட்கிறீங்களே, வெக்கமா இல்லையா என்றேன். மிக கீழ்த்தரமாக சிரித்துக்கொண்டே, தம்பி வெளிநாட்டில இருந்தீங்க இல்ல; அதான் தமிழ்நாட்டு கலாச்சாரம் மறந்துடுச்சு என்றார். பிறகு பேசிக்கொள்ளவில்லை.

எனது இருப்பதி நான்கு வயது வரை தமிழகத்தில்தானே வாழ்ந்தேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என்னிடம் சாதிப்பெயரைக் கேட்டவர்கள் கூட, “சாமி படத்தில் விக்ரமிடம் கோட்டா சீனிவாசராவ் கேட்பது போல சுத்தி வளைத்தோ அல்லது காதிற்குள்ளோ கேட்பார்கள். வெளிப்படையாக பேசத் தயங்கிய காலம் ஏழு வருடத்தில் மறைந்துவிட்டதா? இல்லை, பள்ளி, கல்லூரிகளில் இள வயதில் நான் இதனையெல்லாம் பார்க்கத் தவறிவிட்டேனா? இத்தனைக்கும் சாதிக்கு பெயர் போன தர்மபுரி மாவட்டத்தில் வளர்ந்து மேலே கூறிய சாதிய கொங்கு மண்டலத்தில்தானே படித்தேன். நோர்வே சென்று திரும்பியதும் இதெல்லாம் எனக்கு இப்பொழுது மட்டும் தெரிவது எதனால் தோழர்? இல்லை, இதுவரை திராவிட இயக்க பெருமைகளை உரைகளிலும் புத்தகங்களிலும் படித்துவிட்டு நானே என் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தேனா? இல்லை எனக்கு அரசியல் பாடம் எடுத்த ஆசிரியர்கள் எல்லாம் எனக்கு பொய்யாக பாடம் எடுத்துவிட்டார்களா?

சாதியம் பள்ளிகளில் கட்டுப்பாடாக இருந்த நிலையில் இருந்து வெளிப்படையாக பேசும் நிலையில், வெளிப்படையாகவே அரசுப்பள்ளிக்கூடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கென மாறி நிற்கும் நிலையில், பணம் படைத்தவர்களும் உயர் சாதியினரும் தனியார் பள்ளிகளில் மட்டும் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது அதிகரித்துவிட்ட நிலைக்கும் வெளிப்படையாக சாதியத்தின் கூறுகள் நோக்கி சமூகம் பின்னோக்கி நகர்வதற்கும் தொடர்பு உண்டா? திராவிட இயக்கங்கள் சாதியத்தைக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்த்து உண்மையென்றால், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் சாதியம் எப்படி சிதையாமல் அப்படியே நிற்கிறது? திராவிட அரசியல் கட்சிகள்தான் தவறானவை திராவிட இயக்கங்கள் கொள்கை காக்கும் ஆயுதங்கள் என்றால், அரசுப்பள்ளிக்கூட முறைகளே சாதியத்தைக் காக்கும் தளமாக மாறி நிற்பது தெரியாமல் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விகள் எழுகிறது தோழர்.

கேள்வி நான் உங்களை நோக்கி மட்டும் கேட்கவில்லை. பதிலையும் உங்களை மட்டும் தேடச்சொல்லவில்லை. சேர்ந்தே கேட்போம். சேர்ந்தே பதில் தேடுவோம். அதுவரை உரக்க பேசுவோம். இதுகுறித்த நமக்குள்ளான நட்பு உரையாடலையும் பொதுவெளியிலேயே பேசுவோம்.

தோழமையுடன்:
முனைவர் விஜய் (எ) தமிழ்ச்செல்வன்
– 1983இல் பெரியார் திடலில் சாதி மறுப்பு திருமணம் செய்த இணையரின் மூத்த மகன்.

திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?

ஸ்டாலின் ராஜாங்கம் 

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்?

60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் துணிச்சலை பெற்றிருக்கிறதா? சமூக நீதி பற்றி உரிமை பாராட்டிக்கொள்ளும் இவர்கள் மாவட்டபொறுப்புகளில் கூட இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லையே?

கட்சி நிர்வாக பொறுப்புகளை தாண்டி உயர் பொறுப்புகளில் தேவர் சாதியினர் இல்லையென்பதால்,அதிமுகவை எதிர்கொள்ளும் பொருட்டு (போட்டி இப்படி தான் நடக்கிறது)இப்போது ஐ. பெரியசாமியை துணை பொதுச்செயலாளர் ஆக்கியிருக்கிறார் புரட்சித்’தளபதி’ஸ்டாலின்.இதே தளபதி(?)தான் தேவர் ஜெயந்தி வந்தபோது நமக்கு நாமே பயணத்தை இடையில் விட்டுவிட்டு தென்மாவட்டம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.இதே வழிமுறையை தலித் சாதிகள் விசயத்தில் கடைபிடிப்பதில்லையே.’தளபதி’தலித் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்பதை இவற்றோடெல்லாம் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், தலித்திய ஆய்வாளர்.

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?

சமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன?

தலித்துகளை புறக்கணிக்கும் திமுக:

எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் இவருடைய பேனா தானாகவே எழுதுவதை நிறுத்திக் கொள்ளும். விஷ்ணுப் ப்ரியா மரணம் தொடர்பான வழக்கு குறித்து குரல் கொடுக்கும் கருணாநிதியின் அறிக்கையில் அவர் விசாரித்த கோகுல்ராஜ் கொலை என்கிற வார்த்தைகள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன.

வன்னியர்கள், கொங்கு வேளாளர்களின் கணிசமான ஓட்டுகளின் முன்னிலையில் தலித்துகள் கழுத்தறுபட்டு கொல்லப்படுவதோ, தலித் ஒடுக்குமுறைகளோ, சமூக நீதியோ துட்சம்தான். அந்த வகையில் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளுக்கு கருணாநிதி வாழ்த்து சொல்லக்கூட தயங்குகிறார். அம்பேத்கர் சிலைகள் வளையம் போட்டு பாதுகாக்கப்படுவதையும் கருணாநிதி அம்பேத்கர் புறக்கணிப்பையும் நூலாக இணைப்பது சாதி ஓட்டரசியல்.

ambedkar-periyar

இந்துத்துவத்தின் திராவிட முகம் அதிமுக:

பெயரளவில் மட்டும் திராவிடத்தை சுமந்துகொண்டிருக்கும் அதிமுக, பெரியாரை புறக்கணிப்பது ‘இயல்பான’ ஒன்று. பெரியார் வாழ்நாள் முழுதும் எதிர்த்து வந்த பார்ப்பனீய குணம் அதிமுகவுடையது. குறிப்பாக ஜெயலலிதா, அதிமுகவை தனதாக்கிக் கொண்டதிலிருந்து அதிமுகவில் பார்ப்பனமயமாக்கல் ஆரம்பமானது. தன்னை ஒரு பாப்பாத்தி என்று பெருமைப் பட்டுக் கொண்ட ஜெயலலிதா, அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிலைநிறுத்தினார்.

வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் காலில் விழ வைப்பது, தனக்காக தொண்டர்களை கோயில் கோயிலாக ஏறி இறங்க வைப்பது, சுருக்கமாகச் சொல்லப்போனால் அடிமைகளை உருவாக்குவது என தன்னைத் தவிர அத்தனை பேரையும் அடிமைகளாகப் பார்க்கும் இந்துத்துவத்தின் வர்ணாசிரம தர்மத்தை அதிமுகவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. பெரியாரின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிரானவை என்பதால் ஜெயலலிதா பெரியாரை புறக்கணிப்பதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆளும் மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில நலனுக்காக உழைத்த ஒரு தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன கொள்கை பிணக்கு வந்துவிடப்போகிறது? பெரியாரைவிட முத்துராமலிங்க தேவரின் தேவை ஜெயலலிதாவுக்கு உள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

திராவிடக் கட்சிகளின் சுயநல அரசியல் வாழ்வு இப்போது மதவாத, சாதிய அடிப்படைவாதத்துக்கு சென்று கொண்டிருப்பதைத்தான் இந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

சமூக நீதியை நிலைநாட்டுங்கள்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

“ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது; இத்தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் கூறியிருப்பது:

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று 2006 இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்தும், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் சட்டம் வகுத்துள்ள சமூக சமத்துவ உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்; இதன் மூலம் கோயில்களில் மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் என்ற பெயராலும் ஆதிக்கம் செலுத்பவர்களாக உள்ள ஒருசிலர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்பதைத் தகர்க்க வேண்டும்; அங்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார்.

1970 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம்நாள், தி.மு.க. அரசு தமிழக சட்டப் பேரவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 14.3.1972 இல் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனால், கோவிலில் அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகள் படி குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். கோவிலின் மரபு பழக்க வழக்கத்திற்கு மாறாக எவரும் அர்ச்சகராக முடியாது என்று அதே தீர்ப்பில் கூறி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை போட்டது.

மீண்டும் 2006 இல் தி.மு.க. அரசு வந்தபோது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வழி செய்யும் வகையில், இந்து அறநிலையத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டம் இயற்றியது.

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அர்ச்சகர் ஆக பயிற்சி பெறும் மாணவர் தகுதி பாடத்திட்டம், பயிற்சி முறைகள், பயிற்சிக் காலம் ஆகியவை குறித்துத் தீர்மானிக்கப்பட்டன. இதற்காக சைவ நெறி மற்றும் வைணவ நெறி பயிற்று மையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்ட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒன்றரை ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கி அவர்களை அர்ச்சகர் ஆக்க அரசு முடிவு செய்தபோது, மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.

2011 இல் ஜெயலலிதா அரசு பொறுப்பு ஏற்ற பிறகு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் மெத்தனப் போக்கு ஏற்பட்டது. வழக்கைத் துரிதப்படுத்தி, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க விரும்பாமல், இந்த வழக்கை இழுத்தடித்து ஜெயலலிதா அரசு காலதாமதம் செய்தது.

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.