“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு’ அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ்.

கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் எனக்குச் சொந்த ஊர். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி படித்து இருந்தேன். 1974இல் சென்னைக்கு வேலைதேடி வந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆறுமாத காலம் எரிவாயு நிரப்பும் ஒப்பந்தப் பணியாளராகப் பணி புரிந்தேன். பின்பு 1975ஆம் ஆண்டு டியுசிஎஸ் என்கிற திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகச் சேர்ந்தேன்.

இயல்பிலேயே இருந்த தன்னூக்கம் என்னை தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடச் செய்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் 25 தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து சென்னை நகரம் முழுவதும் சைக்கிளிலேயே நான்கு நாட்கள் பயணித்து எல்லாக் கடைகளுக்கும் போய் தொழிலாளர் பிரச்சினையைப் பேசினோம். அதைத் தொடர்ந்து நடந்த சங்கப் பேரவையில் புதியவர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். பூ.சி.பாலசுப்பிரமணியம் செயலர் ஆனார். 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தொழிற்சங்க அனுபவங்களைச் சொல்லுங்களேன்…

1981ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்துநாள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் ஒன்றை தொடங்கினோம். டியுசிஎஸ் பொறுப்பில் ரேஷன் கடை, மண்ணெண்ணெய், மளிகை, எரிவாயு விநியோகம் என சென்னையில் இருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. புதிய பணியாளர்களை நியமிக்க அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். காவல்துறையைக் கொண்டு எங்கள் போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க அரசு முடிவெடுத்திருந்தது.

அப்போது கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக இருந்த மரியாதைக்குரிய பிரகாசம் அவர்களும் தொழிலாளர் துறை துணை ஆணையாளராக இருந்த செல்லத்துரை அவர்களும் தந்த ஆலோசனையின்படி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டு நாங்கள் பணிக்குத் திரும்பிவிட்டோம்.

அடையாளம் தெரியாதவர்களை வைத்து ரேஷன் கடைகளை சூறையாடும் நிலைமையெல்லாம் இருப்பதாக உணர்ந்ததால் அந்தப் போராட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தோம். மாதவரத்தைச் சார்ந்த சி.கெ.மாதவன் எங்கள் சங்கத்தின் தலைவர். சங்கம் தொடங்கிய 1952ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளிகள்தான் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்கள்.

1978ஆம் ஆண்டுதான் வெளியிலிருந்து சி.கெ.மாதவன் அவர்களை தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்தோம்.போராட்டத்தை ஒத்திவைத்து பணிக்கு செல்ல வேண்டிய நிலை குறித்து அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

எங்கள் போராட்டம் முடிந்த ஆறுமாதத்திற்குப் பிறகு மதுரையில் உள்ள பால்பண்ணைத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாதவரம் பால்பண்ணைத் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். இரவோடு இரவாக 1200 பேரை வேலைநீக்கம் செய்து காலையில் புதிய ஆட்களை பணிக்கமர்த்தினார்.

எனவே, டியுசிஎஸ்ஸிலும் ஆவினிலும் தொடர்ந்து கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. நாங்கள் போடும் கோரிக்கை நோட்டீசை அவர்கள் பால்பூத் முன்பு ஒட்டுவார்கள். அவர்கள் போடும் நோட்டீசை நாங்கள் டியுசிஎஸ் கடைகள் முன்பு ஒட்டுவோம். இந்தக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை.

இந்த இரண்டு சங்கங்களுக்கும் மாதவன்தான் தலைவர் என்பதால், அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்காகவே 1200 தொழிலாளர்களை எம்ஜிஆர் பணிநீக்கம் செய்தார். சிகெஎம் தலைமையில் ஊர்வலம் என்றால் ஆயுதம் தாங்கிய போலீஸ் பந்தோபஸ்துக்கு வரும். அவ்வளவு வலிமையாய் தொழிற்சங்கங்கள் செயல்பட்ட காலம் அது.

உங்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்களாமே!

அரசுத் துறைகளிலேயே ஊழல் மலிந்த துறை என்றால் அது கூட்டுறவுதான்.ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும். கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1987ல் போராடி வந்தோம். அப்போது டியுசிஎஸ் சங்கத்தின் தனி அலுவலராக இருந்த கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் திரு. ஆர்.எஸ்.நடராஜன் அவர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர் பெரிய ஊழல் அதிகாரி. ஒரு பொய்யான குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்வதற்கு காவல்துறை மூலம் முயற்சி செய்தார்.

பின்பு சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே நான் உட்பட ருக்மாங்கதன், வேணு என சங்க முன்னணித் தோழர்கள் 15 பேரை சட்ட விதிமுறைகளை மீறி வேலைநீக்கம் (டிஸ்மிஸ்) செய்தார். அப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

தேர்தல் முடிந்து 1989ல் திமுக அரசு பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவுத் துறையில் அவர் செய்த ஊழலை விசாரிக்கச் சொல்லி கலைஞரிடம் மனு கொடுத்தோம்.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். ஓய்வு பெறும் நாளன்று அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நான்கைந்து வருடங்களில் இறந்தும் விட்டார். வழக்கு நிலுவையிலேயே இருந்ததால், இறக்கும்வரை ஓய்வூதியப் பலன்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக ஊழல் அதிகாரிகள் நேர்மையான தொழிற்சங்கங்களை விரும்புவதில்லை என்பதுதான் எனது அனுபவம்.

கூட்டுறவு அமைப்பை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

நுகர்வோர், பால், விவசாயி, மீன், நெசவாளி என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திமுக, அதிமுக ஆட்சியில் தனி அலுவலர்களை நியமித்து கூட்டுறவு அமைப்பையே நாசப்படுத்தி விட்டார்கள். உண்மையான பயனாளிகளை மட்டுமே கூட்டுறவு அமைப்புகளில் சேர்க்க வேண்டும். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மாதிரிக் கூட்டுறவுச் சட்டத்தை அமலாக்க வேண்டும். அதன்படி கூட்டுறவு அமைப்புகளில் ஏற்படும் நட்டத்திற்கு நிர்வாகக்குழு இயக்குநர்களையும் பொறுப்பேற்கச் செய்யமுடியும்.

உற்பத்தியாகும் இடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு மலிவாக விற்பனை செய்யவேண்டும். தும்கூரில் புளி வாங்கினார்கள். குல்பர்காவில் துவரம் பருப்பு வாங்கினார்கள். நெல்லூரில் அரிசி வாங்கினார்கள். இப்போது இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வியாபாரிகளிடம் பொருளை வாங்குகிறார்கள். இதனால் நுகர்வோருக்கும் பலனில்லை; விவசாயிகளுக்கும் பலனில்லை; கூட்டுறவு அமைப்புகளுக்கும் பயனில்லை. கூட்டுறவின் நோக்கமே சிதைந்து கொண்டிருக்கிறது.

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா

கூட்டுறவுத் துறையில் ஊழியராக இருந்த உங்களுக்கு பத்திரிகைத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

தொழிற்சங்கப் பணிகளில் முனைப்பாகச் செயலாற்றி வந்த்தால் தினமணியில் பணியாற்றி வந்த சந்தான கிருஷ்ணன், சுகதேவ், இராயப்பா போன்ற பத்திரிகையாளர்களின் நட்பு எனக்கு ஏற்பட்டது. எங்கள் தொழிற்சங்கம் சார்பில் ‘போரணி’, ‘போர்க்களம்’, ‘போர்க்குரல்’ என்கிற பத்திரிகைகளை அவ்வப்போது நடத்தி வந்தோம். திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க.திருநாவுக்கரசு அவர்களிடமிருந்து (இவர் டியுசிஎஸ்சின் முன்னாள் பணியாளர்) ‘நக்கீரன்’ இதழுக்கான உரிமையை வாங்கி 1980ல் நடத்தினோம். அதற்கு க.சுப்பு அவர்கள் ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டார். நக்கீரன் இதழை புலனாய்வு இதழாகக் கொண்டுவந்தோம்.

திமுக சார்பாக வில்லிவாக்கம் தொகுதியில் நின்று அவர் தோற்கடிக்கப்பட்டிருந்த சமயம் அது. அந்தவகையில் முதல் முதலாக புலனாய்வு பத்திரிகையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். மாதம் இருமுறை இதழாக ஆறு மாதங்கள் கொண்டுவந்து விட்டோம். கட்சி சாராமல் நடத்தினோம். அதிமுகவை எதிர்த்து காங்கிரசை எதிர்த்து திமுகவை விமர்சித்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.

‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சொல்லி திமுக காங்கிரசோடு ஓரணியில் இருந்த நேரம் க.சுப்பு திமுகவில் இருந்த காரணத்தால் அவரால் கட்சியின் நெருக்கடியைத் தாங்க முடியவில்லை. சுதந்திரமாக பத்திரிகையை நடத்தவும் முடியவில்லை. ஆனால் பத்திரிகையை எங்களிடம் விட்டுக்கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் அவரோடு சேர்ந்து இயங்க எங்களால் முடியவில்லை. எனவே ‘நக்கீரன்’ இதழை அவரிடம் கொடுத்துவிட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.

அதோடு உங்கள் முயற்சியை கைவிட்டு விட்டீர்களா?

இல்லை. நக்கீரனுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அடுத்த பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை வந்தது. எனவே இளவேனில், க.சந்தானகிருஷ்ணன், கேரள மணி, வேணு (டியுசிஎஸ்), மீனாட்சிசுந்தரம் இவர்களோடு சேர்ந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பொதுநலத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.

அப்போது பத்திரிகையாளர் இரா.ஜவகர் அவர்களிடம் ‘வசந்தம் வருகிறது’ என்ற பத்திரிகை(title) இருந்தது. அதை வாங்கி ‘வசந்தம்’ என்ற பெயரில் நடத்தினோம். ‘வருகிறது’ என்பதை சிறிய எழுத்துக்களில் போட்டுவிடுவோம்.சென்னையிலேயே 4000 பிரதிகள் விற்பனை ஆகும். அப்போது வடசென்னை, தென்சென்னை என இரண்டு முகவர்கள்தான் இருந்தார்கள். வாசகர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆசிரியராக தாம்பரம் வழக்கறிஞர் எஸ்.சி.சிவாஜி இருந்தார்.

எங்கள் வளர்ச்சியைப் பார்த்து, நாங்கள் கணக்கு வைத்திருந்த கனரா வங்கியின் மேலாளர், இதனை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றினால் வங்கிக் கடன் தருவதாகச் சொன்னார். எனவே ‘டான் பப்ளிகேஷன்ஸ்’ (இரஷ்யா – தான் நதி) என்று கம்பெனியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் செய்தோம். ஆனால் இதில் ஆசிரியராக இருந்த சிவாஜிக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் திமுக எம்பியாக இருந்த கம்பம் நடராஜன் இறந்ததையொட்டி நடந்த பெரியகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியிலிருந்த அதிமுக தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் செய்தது. தெருவெங்கும் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டன;பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. எனவே ‘இனி ஒரு எம்.பி எப்போது சாவார்’ என தலையங்கம் எழுதியிருந்தோம். காவல்துறை நெருக்கடி தந்தது. மேலும் சண்முகம் செட்டியார் எனச் சொல்லிக்கொண்டு ‘வசந்தம்’ என்கிற பெயர் தனக்கானது என சொல்லிக்கொண்டு ஒருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வளவுதான்! அத்தோடு அந்த இதழும் நின்று போனது.

காக்கைச் சிறகினிலே இதழைத் தொடங்கிய வரலாற்றைச் சொல்லுங்களேன்!

2010ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது எங்கள் சங்கத்திற்கு ஏ.எம்.கோபு தலைவராக இருந்தார். அவர் ஏஐடியுசி அலுவலகத்தில் வந்து நான் பணிபுரிய வேண்டும் என்று அழைத்தார். இதற்கிடையில் நண்பர்கள் கூடுமிடம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக திருவல்லிக்கேணியில் ஒரு அறை எடுத்தோம். மாலைப் பொழுதுகளும் விடுமுறை நாட்களிலும் நிறையப் பேசுவோம் விவாதிப்போம்.

வைகறை, க.சந்திரசேகரன், இரா.எட்வின் போன்ற நண்பர்களுடன் இணைந்து காக்கைச் சிறகினிலே இதழைக் கொண்டுவந்தோம். 2011 அக்டோபரில் முதல் இதழ் வெளியானது. மறு ஆண்டே ‘கரிசல் விருது’ கி.ராஜநாராயணன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பல விருதுகள். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சுதேசிமித்திரன் தமிழ் இதழ் விருது வழங்கி மகிழ்வித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

கட்டட தொழிலாளர் சங்கத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கே. இரவி (66). தமிழ்நாடு ஏஐடியுசியின் துணைப் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். கட்டுமான தொழிலாளர் நிலமை பற்றி தடைம்ஸ்தமிழ்.காமிற்காக பேசுகிறார். இந்த நேர்காணலை செய்தவர் பி. பீட்டர் துரைராஜ்.

கேள்வி : கட்டட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளாரே?

பதில்: இப்படி ஒரு கோரிக்கையை கட்டட தொழிலாளர்களோ, சங்கமோ கேட்கவில்லை. கட்டட தொழிலாளர்கள் எத்தனை பேர் சாப்பிடுவார்கள், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை. உணவுப் பண்டங்களின் முழு உற்பத்திச் செலவை (மற்றவர்களுக்கு தரும் சலுகை விலை அல்ல) வாரியம் தரவேண்டும். கூட்டுறவு நிறுவனமான டியூசிஎஸ் அம்மா உணவகத்திற்கு காய்கறி, அரிசி போன்ற பொருட்களை வழங்கியதற்காக 40 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி தர வேண்டியுள்ளது. நிதி நெருக்கடியில் அம்மா உணவகம் தள்ளாடுகிறது. வாரியத்தில் உள்ள நிதியை, அம்மா உணவகத்திற்காக தமிழக அரசு எடுத்துக் கொள்ளப் பார்க்கிறது..

கேள்வி: இதனால் பலன் ஏதுமில்லை என்று சொல்லுகிறீர்களா?

பதில்: கட்டுமான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ,பி.ஃஎப், போனஸ், மகப்பேறு உதவி போன்ற ஒன்பது விதமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ அமலானால் கட்டுமான தொழிலாளி மட்டும் இல்லாமல், அவர் குடும்பத்தினரும் மருத்துவ உதவி பெறுவர். மகப்பேறு உதவி சட்டப்படி ஆறுமாத சம்பளத்திற்கு ஈடான தொகையை தரவேண்டும். குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூபாய்15,000 என்று வைத்துக் கொண்டால் 90,000 ரூபாயாவது ஒரு பிரசவத்திற்கு தர வேண்டும். ஆனால், இப்போது 6000 ரூபாய் மட்டுமே வாரியம் தருகிறது. அதற்குரிய Formula (சூத்திரம்)படி தருவது இல்லை. இது போன்ற நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

 நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருகிறார்களே?

பதில்: அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஒரு தொழிலாளிக்கு, அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதாவது 15000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளிக்கு அதில் பாதி அதாவது 7,500 ரூபாயாவது ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அதில் பாதியை அவர் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கட்டுமான தொழிலாளிக்கு மாதம் 1000 ரூபாய்தானே ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால், வாரியத்தில் 2763 கோடி ரூபாய் நிதி உள்ளது. இதை வைத்து ஓய்வூதியத்தை அதிகமாக்கித் தரலாம்.

கட்டட தொழிலாளர்களை உரிமைபெற்ற தொழிலாளர்களாக்க அரசு தயாராக இல்லை. அவர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் மதிப்பதில்லை.

கேள்வி: நல வாரியத்தில் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் இருக்கிறார்கள் அல்லவா?

பதில்: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், எல்பிஎப் என எந்த மத்தியச் சங்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளாக, எட்டு உறுப்பினர்களையும் அதிமுக தொழிற்சங்க ஆட்களை வைத்து தமிழக அரசு நிரப்பி உள்ளது.

அப்படியே அந்த வாரியம் தொழிலாளர்களுக்கு சாதகமாக ஏதும் முடிவு எடுத்தாலும் அதை அமலாக்க முடியாது. அரசுதான் அதில் முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஆலோசனை வாரியம் உள்ளிட்ட எந்த முத்தரப்பு குழுக்களும் (முதலாளி + அரசு + தொழிலாளி) செயல்படுவதில்லை.

அதனால்தான் ‘தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு கமிட்டியாக கட்டுமான வாரியம் செயல்பட வேண்டும்’ என்று நாங்கள் கேட்கிறோம். அதில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் கட்டட சங்கத்தில் தேசிய அளவில் பணிபுரிகிறீர்கள். இது பற்றி?

பதில்: நான் ஏழு ஆண்டுகளாக அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் மகாசம்மேளனத்தின் (All India Confederation of Building and Construction Workers) பொதுச் செயலாளராக இருக்கிறேன். இந்தியா முழுவதும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சீரான, ஒரே மாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். ஒரு மாநிலத்தில் பதிவு செய்து கொண்ட கட்டுமான தொழிலாளிக்கு மற்ற மாநிலத்திலும் பலன் கிடைக்க வேண்டும். மத்திய சட்டப்படி ஒன்று முதல் இரண்டு சதம் வரை நலவரி வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு சதம்தான் நலவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டு சதமாக உயர்த்த வேண்டும்.

ஒன்றை மகிழ்ச்சியோடு இங்கே சொல்ல வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம், கல்வி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டம் நடத்தினோம். அப்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். நாங்கள் சென்னை வருவதற்குள் தில்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். கல்வி உதவி போன்ற வேறு சில கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா விலேயே முன்மாதிரியான கல்வி உதவித்திட்டத்தை ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை அரவிந்த் கெஞ்ரிவால் அரசு சிறப்பாக அமலாக்கி வருகிறது.

கேள்வி : மற்ற மாநிலங்களில் வாரியம் எப்படி செயல்படுகிறது?

பதில் : பல மாநிலங்கள் இப்படி சேகரமாகியுள்ள நிதியை தவறாக பயன்படுத்துகின்றன. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்துளளது. வி.ஆர்.கிருஷ்ணய்யரால் தொடங்கப்பட்ட National Campaign Committee for Construction workers என்ற அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதில் நாங்களும் சேர்ந்து வழக்காட இருக்கிறோம்.

தமிழ் நாட்டில் வாரிய நிதியைப் பயன்படுத்தி 100 கோடி ரூபாய் செலவில் நான்கு இடங்களில் தொழிலாளர்கள் தங்க Dormitory கட்டியுள்ளார்கள். அதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு அருகே 50 ஏக்கர் இடம் வாங்கி ஒரு Training School ,கட்டுமான தொழிலாளர்களுக்காக ஆரம்பித்தார்கள். எந்த தொழிலாளி பள்ளி சென்று பயிற்சி பெற்று கட்டட வேலைக்கு போகப் போகிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வாரியம் சம்பளம் வழங்குகிறது. இது போன்ற செயல்கள் மூலம் நிதி வீணடிக்கப்படுகிறது.

வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் தொழில் நுட்பம் அதிகமானதால் வேலை நேரம் குறைந்துள்ளது. எல்லாவிதமான சமூக நலத்திட்டங்களும் கட்டுமான தொழிலாளிக்கு கிடைக்கின்றன. இங்கும் அது சாத்தியம்தான்.

கேள்வி: வேலையில்லா காலங்களில் நிவாரணம் கேட்கிறீர்களே?

பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை,திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒரு தொழிலாளிக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட நூறு கோடிக்கு மேல் செலவாகியிருக்காது. ஆனால் அரசு அதை செய்யவில்லை.

கேள்வி : டாஸ்மாக் கடைகளுகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை உங்கள் சங்கம் நடத்தியதே ! இது சாத்தியமான ஒன்றா?

பதில்: பாதிக்கப்பட்ட தொழிலாளி தங்களது கோரிக்கை அமலாக போராடுகிறார். பெண் கட்டட தொழிலாளர்கள், குடியினால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் நடத்திய போராட்டம் இது. அவர்களே டாஸ்மாக கடைகளுக்கு பூட்டுப் போட்டார்கள். இந்தப் போராட்டம் மற்ற இடங்களுக்கும் பரவியது.

கட்டட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கே. இரவி

கேள்வி: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதாக பிரதம மந்திரி மோடி அறிவித்து உள்ளாரே ?

பதில்: இந்தியா முழுவதும் சுமாராக 40 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு ஒதுக்கி உள்ள நிதி 500 கோடி ரூபாய்.அப்படி என்றால் ஒரு நபருக்கு எத்தனை பைசா ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

மோடி அறிவித்துள்ள ஓய்வூதியம் இப்போது வராது. நாற்பது வயதான தொழிலாளி இந்த திட்டத்தில் இப்போது சேர்த்தால், அவரது அறுபதாவது வயதில், இருபது ஆண்டுகள் கழித்துதான் வரும்.அப்போது மூவாயிரம் ரூபாயின் மதிப்பு என்ன? 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அமைப்புச்சாரா தொழிலாளி, மாதாமாதம் 55 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பிரிமியம் செலுத்தினால் 60 வயது ஆனவுடன் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு Nodal Agency- ஆக LIC யை அறிவித்து உள்ளார்கள். ஏனெனில் அதற்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. இது ஒரு அரசுத் திட்டம் இல்லை. இது நாங்கள் கேட்ட ஓய்வூதியமும் இல்லை.

கேள்வி: மேற்கு வங்காளம், கேரளாவில் உதவித் தொகை எப்படி வழங்கப்படுகிறது.

பதில்:1996 ல் மத்திய சட்டம் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் அதற்கான விதிகளை அரசு உருவாக்கவில்லை. அவர்கள் அரசு போகிற நேரத்தில் விதிகளை உருவாக்கினார்கள். இடதுசாரி அரசு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டாமா? மேற்கு வங்காள இடது முன்னணி ஆட்சியில் தொழிலாளர் இயக்கம் பலமாக வரவில்லை; பலன் தரவில்லை.

ஆனால் கேரளாவில் அப்படியில்லை. முன்னுதாரணமான பல திட்டங்கள் அங்கு உருவாகின.

கேள்வி: ஒரு அரசுத் துறையில் பணிபுரிந்த நீங்கள் எப்படி கட்டட தொழிலாளர் சங்கத்தில் ஈடுபாடு காட்டுகிறீர்கள்?

பதில்: 1982 ல் பெங்களூரில் கூடிய ஏஐடியுசி மாநாடு ‘அமைப்புச்சாரா தொழிலாளர்களை அமைப்பாக்கு” என்று அறைகூவல் விடுத்தது. சென்னை பெருநகர ஆட்டோ ஓட்டுநர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், வங்க கடலோர மீனவர் சங்கம் போன்றவை உருவாயின. இதையொட்டி 1989, 1990 -ஆம் வருடங்களில் சென்னை பெருநகர பகுதியில் கட்டட தொழிலாளர்களை அணி திரட்டும் பணி நடந்தது.

சி.கெ.மாதவன், ஆர்.செல்லப்பன் ஆகியோரோடு சேர்ந்து நானும் இந்த இந்த வேலைகளில் ஈடுபட்டேன். 11.8.1991 ல் திருச்சியில் கூடி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் என்ற மாநில அமைப்பை உருவாக்கினோம்.1982 ல் வந்த உடலுழைப்புத் தொழிலாளர் சட்டப்படி உள்ள திட்டங்களை அமலாக்கு, கேரளாவில் பனைமரத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள, கட்டட தொழிலாளர்களுக்கு உள்ளது போல கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை உருவாக்கு என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம்.

குலசேகரன், சுப்பு, கீதா,பொன். குமார் போன்ற தோழர்கள் கட்டட தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஏஐடியுசி தலைவர்களை அழைத்தார்கள். 1984 ல் ,கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக எம் .கல்யாண சுந்தரம், ராஜ்ய சாபாவில் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டிஆர்எஸ் மணியோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டோம். இந்த சங்கத்தை அமைப்பாக்கினோம்.

கட்டுமான தொழிலாளர்களை அரசியல் படுத்துவதில், குழுவாக இணைத்துச் செல்லுவதில் ஒரு தேக்கம் இருக்கிறது.

கேள்வி: எல்லா சங்கங்களையும் இணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தினீர்கள். அது பற்றி?

பதில் : தமிழ்நாடு முழுவதும் 4000 கட்டுமான, அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அவைகளில் பல LIC முகவரைப் போல செயல்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில் எல்லா சங்கங்களையும் ஒன்றிணைத்து ‘கட்டுமானத் தொழிலாளர் போராட்ட முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கினோம். மாவட்ட அளவிலும் சங்கங்களின் ஒற்றுமை உருவானது. அதில் கீதா, பொன்.குமார், சுப்பு போன்றவர்களும் இருந்தனர். அதற்கு என்னை மாநில அமைப்பாளராக தேர்ந்தெடுத்தனர். கூட்டாகப் போராட்டத்தை நடத்தினோம். முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதனால் கலைஞர் ஆட்சியில் சில சாதகமான ஆணைகளைப் பெற்றோம். ஆனால் இந்த கூட்டு முயற்சி தொடரவில்லை. சிஐடியு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ‘போராட்ட முன்னணி’ என்ற பெயர் இருக்க வேண்டாம், அது ஒரு அரசியல் கட்சி பெயர்போல இருக்கிறது என்றார்கள். அது கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றார்கள். தேவைப்படும்போது கூட்டுப் போராட்டம் நடத்தலாம் என்றார்கள். இதுபோன்ற காரணங்களால் அதில் தொய்வு ஏற்பட்டது.

இப்போதும் நான் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் விவசாய தொழிலாளர் சங்கத்தில் பணிபுரிந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப்பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1. 10.1970 ல் சென்னைக்கு வந்தேன். ஸடான்லி மருத்துவ கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து பாதுகாப்புத்துறையைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்பான கண்டோன்மெண்ட்டில் பணியில் சேர்ந்தேன். அங்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு என சங்கம் ஆரம்பித்து அந்த சம்மேளனத்தின் பொறுப்புக்கும் பின்னாளில் உயர்ந்தேன்.

கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஒரத்தநாடு பகுதியில் மருத்துவர் இளவழகன் பணிபுரிந்து வந்தார். அவரது அறிமுகம் எனக்கு ஏற்கெனவே இருந்ததால், ஒன்றுபட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராக பணி புரிந்து இருக்கிறேன். அப்போது ஆர்.நல்லக்கண்ணு அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

ஒரு சமயத்தில் வறட்சி ஏற்பட்ட போது இடைக்கழிநாட்டில், 18 கிராமங்களிலும் உள்ள மா,பலா, தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. இழப்பீடு கேட்டு போராடினோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த எஸ்.அழகர்சாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்; விவசாயிகள் சங்க தலைவர்.அவர் வழிகாட்டினார்.

குசேலரின் அண்ணணான அரங்கண்ணல் விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடினார். ஏகாட்டூர் என்ற கிராமத்தில் இருந்த தலித்துகளுக்கு வேலையை மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கிராமம் முழுவதும் சவுக்கை நட்டனர். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கறவை மாடு இரண்டு வேண்டும் என்று போராடினார்கள்; பாலைக் கறந்து சென்னைக்கு அனுப்பினார்கள். இவையெல்லாம் முக்கியமான போராட்டங்கள். இதில் நான் முழுமையாக பங்கு பெற்றேன் என்று சொல்ல முடியாது. உடன் இருந்தேன். அவ்வளவுதான்.

இருங்குன்றம்பள்ளி என்ற கிராமத்தில் இருந்த வோரியண்ட் கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியில் இருந்து வெளியான கழிவு நீர் பாலாற்றில் கலந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடந்தது. பின்னர் கழிவு நீர் விவசாய நிலங்களில் விட்டு அவை பாழாயின. அந்த ஆலை ஓ.வி.அளகேசன் என்ற முன்னாள் ரயில்வே அமைச்சரின் குடும்ப உறவினருக்கு சொந்தமானது. அவர் ஜமீன்தார். கிராமமே திரண்டு போர்களமாக இருந்தது. இது போன்ற நிகழ்வுகளில் வாலாஜாபாத் விசுவநாதன், ,வழக்கறிஞர் அங்குசாமி,ஏகாம்பரம், ஊஞ்சான் போன்றவர்கள நேரடியாக களத்தில் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. நட்ட ஈடு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இந்தப் போராட்டங்களை ஒரு வரலாறாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

ஒரு வருடம் வெண்மணி நினைவு நாளின் போது 27 கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கொடியேற்றி அன்று மாலை கடப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளில் ஆதிமூலம், ஆர்.நல்லகண்ணு,ப.மாணிக்கம் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேல்நல்லாத்தூரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த பத்து கிராமவாசிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. போராடி இருநூறு பேருக்கு மேல் வேலை பெற்றுத்தந்தோம் இதற்கான போராட்டத்தில் என் வாழ்வின் பெரும்பாலான நேரம் கழிந்தது. அதன் தொடர்ச்சியான பணி இன்றும் கூட தொடர்கிறது.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி

அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு தொழிலாளியும் 18 வயது முதல் 40 வயதுவரை மாதாமாதம் ( 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ) பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தன் பங்கிற்கு செலுத்தும். இப்படி செலுத்தி வரும் தொழிலாளிக்கு இருபது ஆண்டுகள் கழித்து 60 வயது ஆனவுடன் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட அமைப்புச்சாரா நலவாரியங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் 60 வயது ஆனவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஓரளவு நல்ல திட்டமாகும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அறிவித்துள்ள திட்டமாகும். இதற்கு சொற்பமான நிதியே (ஐநூறு கோடி ரூபாய் மட்டுமே) மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வழங்கப்டும். 41 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

இந்த திட்டத்தினால் ஏற்கெனவே நடைமுறையில் மாநில அரசால் நல்ல முறையில் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிற ஓய்வூதியத்திற்கும் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை ஏஐடியுசி நிராகரிக்கிறது. 60 வயதான அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.