மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது.

போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது.

இந்த பலிக்கு பாஜகவினர் உண்டாக்கிய அசாத்திய சூழலே காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!

“இரண்டு குஜராத்தி குண்டர்கள் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் ஐ.பி. சிங் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து ’நாம் அமைதியாக இருக்கும்போது, இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்’ என எழுதியிருந்தார்.

‘இந்த நாடு பிரதம அமைச்சரை தேர்ந்தெடுத்ததா அல்லது விளம்பர விளம்பர அமைச்சரை தேர்ந்தெடுத்ததா? நாட்டின் பிரதமர் டீ-சர்ட் மற்றும் தேநீர் கோப்பைகளை விற்பதைப் பார்க்க நன்றாகவா உள்ளது? என வினவுயுள்ளார் அவர்.

இந்த விமர்சனம் காரணமாக திங்கள்கிழமை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டிருக்கிறார் ஐ.பி.சிங். தனது நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் முப்பது ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். உட்கட்சி ஜனநாயகத்தை இழந்திருக்கும் நிலையில் உண்மையைப் பேசுவதுகூட குற்றம்தான்” எனக் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வரும்நிலையில், பாஜகவினரில் சிலரும் மோடி -ஷா மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

கோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது!

காந்தி படுகொலை வழக்கு விசாரணையின்போது, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது இந்து மகா சபை.

நாதுராம் கோட்சே-வின் மரண நாளை வலதுசாரி அமைப்பான இந்து மகா சபை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடியது. காந்தி படுகொலை குற்றவாளியான கோட்சே, அம்பாலா சிறையில் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்.

இந்து மகா சபையை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கோட்சே மற்றும் காந்தி படுகொலையில் மற்றொரு குற்றவாளியான நாராயண் ஆப்தே ஆகியோரின் படங்களுக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர்.

இந்து மகாசபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சொல்வதுபோல, ‘இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட இவர்களின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

“நாங்கள் ஒரு கோரிக்கை மனுவை மத்திய பிரதேச முதலமைச்சர், மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்திருக்கிறோம். கோட்சே-வின் வாக்குமூலத்தை பள்ளிப்பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை” என்றார் பரத்வாஜ்.

காந்தி படுகொலையில் தொடர்புடையோர் நீதிமன்ற கூண்டிலில்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கோட்சேவின் வாக்குமூலத்தை வெளியிடவில்லை எனவும் குறைபட்டுக்கொண்டார் அவர்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த, 2017 நவம்பர் 15ல் கோட்சேவின் கழுத்தளவு சிலையை தனது அலுவலகத்தில் நிருவியது இந்து மகாசபை. நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் அதை நீக்கியது.

“மாவட்ட நிர்வாகம் எடுத்துச் சென்ற கழுத்தளவு சிலையை திரும்பத் தர ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்கிறார் பரத்வாஜ்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கொண்டாட்டங்களுக்கு ம.பி. காங்கிரஸ் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

“இந்த நிகழ்ச்சி வன்முறையைக் கொண்டாடியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே” என காங்கிரஸ் ஊடக பிரிவைச் சேர்ந்த பூபேந்திர குப்தா கண்டித்துள்ளார்.

நன்றி: அவுட்லுக் இந்தியா.

தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!

தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
லாரன்ஸ் ஃபெர்லிங்கிட்டி
(கலீல் ஜிப்ரானின் இதே தலைப்பிட்ட கவிதையை முன்வைத்து)
—-
எந்த தேசத்தில் மக்கள்
ஆட்டு மந்தைகளாக உள்ளனரோ
எங்கு மேய்ப்பர்கள்
அவர்களை
வழி தவறச் செய்கின்றனரோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

எந்த தேசத்து தலைவர்கள் பொய் பேசுகின்றனரோ
எங்கு சான்றோர் வாய்ப் பேச்சற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனரோ
எங்கு சிறுமதியாளர்கள் குரல் காற்றில் கலந்து
உரத்து ஒலிக்கின்றதோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
வெற்றிவாகைச் சூடிய தலைவனை வாழ்த்த மட்டும்
குரல் உயர்த்தும்
அடாவடித்தனத்தை வீரமென விளிக்கும்
வன்முறை மூலமும் சித்திரவதை செய்தும்
பூமியை ஆள நினைக்கும்
மக்கள் உள்ள தேசத்துக்காக
மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
தன் மொழியன்றி வேறு மொழியறியா
தன் பண்பாடு அன்றி வேறு பண்பாடு அறியா
தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
பணத்தை உயிர் மூச்சாக நினைக்கும் தேசத்துக்காக
வயிறு முட்ட உண்டு தூங்கும் தேசத்துக்காக

மனம் இரங்குங்கள்
அத்தகைய தேசத்துக்காக
தமது உரிமைகள் அழிவதை
தமது விடுதலை
வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை
அனுமதிக்கும் மக்களுக்காக

என் தேசமே, உனது கண்ணீர்
விடுதலையை விரும்பிய இனிய நாடே

தமிழில் – வ. கீதா

சாந்தா கொச்சாருக்கு வழங்கிய பத்ம பூஷன் விருதைத் திரும்பப்பெறு : சி.எச்.வெங்கடாசலம்

தன் கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் ரூ. 5000 கோடியைக் கடனாகக் கொடுத்து ஐசிஐசிஐ வங்கிக்கு நட்டம் ஏற்படுத்திய சாந்தா கொச்சாருக்கு வழங்கி இருந்த பத்ம பூஷண் விருதை திரும்ப பெற வேண்டும் என்று சென்னையில் சமீபத்தில்(3.2.2019) நடந்த வங்கி ஊழியர் சங்க மாநில மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இப்படி கறாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக திவால் நடவடிக்கைகள் மூலம் ( Insolvency / Bankruptcy Code ) மூலம் வங்கியிலிருந்து கடன் வாங்கியவர்களை காப்பாற்ற இந்த அரசு முனைகிறது.

வங்கித் தீர்வு என்ற பெயரில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வங்கிகள் 1,56,000 கோடி ரூபாய்கள் லாபத்தை ஈட்டியுள்ளன. அதைவிட அதிகமாக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு இலாபம் இருந்தும் இரண்டு இலட்சம் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு உள்ளன. காண்டிராக்ட் மூலம் இளைஞர்களை வைத்து வேலை வாங்குகிறார்கள்.

வங்கியில் படிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்கு (எட்டுவயது வரை) உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவ விடுப்பு வழங்கப்பட உள்ளது” என்றார் சி.எச்.வெங்கடாசலம்.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இ. அருணாச்சலம் நன்றி கூறினார்.

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

என்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்?’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.

பாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்?

உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுத்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தபோதே, முடிவுகள் எப்படி வரும் என்பதை யூகிக்க முடிந்தது. இடைத்தேர்தல் வரலாறுகளை (சமீபத்திய) எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும். ஆளும் அரசுகள் தங்களுடைய கவுரப்பிரச்னையாக ஒவ்வொரு இடைத்தேர்தலையும் கருதி, கீழே இறங்கி பணியாற்றும். பணவிநியோகம், அதிகாரத்தை பயன்படுத்துதல் போன்றவை சர்வசாதாரணமாக இருக்கும். ஆளும் கட்சியின் அத்தனை தலைவர்களும் தொகுதியில் முகாமிடுவார்கள். உ.பி. இடைத்தேர்தல், ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு மிக மிக முக்கியமானது. ஆதித்யநாத் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி கண்ட தொகுதி அது. 1989 முதல் பாஜகவின் கீழ் உள்ள தொகுதி. கடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்யநாத் வென்றார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி கண்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய, உ.பி. யின் வெற்றி மிக முக்கியமானது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதைக் கோடிட்டு காட்டுவதாக உ.பி. முடிவுகள் அமையும். அந்த வகையிலும் மாநில முதலமைச்சர் எம்.பி. ஆக இருக்கும் ஆதித்யநாத்தின் தொகுதி, துணை முதல்வரின் தொகுதி என்ற முறையிலும் கோரக்பூர் தொகுதியிலும் புல்பூர் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலை நாடே உற்று நோக்கியது. பாஜகவும் முக்கியத்தை உணர்ந்தேதான் களம் கண்டது.

ஆனால், ஏன் பாஜக தோற்றது? உ.பியைப் பொறுத்தவரை பாஜக=ஆதித்யநாத், அந்த வகையில் ஆதித்யநாத் ஏன் தோற்றார்? எதிர் எதிராக நின்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சியும் கைக்கோர்த்ததே அதித்யநாத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியே இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றது. பகுஜன் சமாஜ்கட்சி போட்டியிடவில்லை. ஆனால், முழு ஆதரவு தந்தது. இந்திய அளவிலும்கூட இந்தக் கூட்டணி பலரை புருவம் உயர்த்தச் செய்தது. ஐந்தரை லட்சம் தலித் வாக்குகள், ஒன்றரை லட்சம் மீனவ சமூகத்தின் வாக்குகள், இஸ்லாமிய சமூக வாக்குகள் என வாக்கு பிரிந்து போகாமல், சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது, மூன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. அந்த வாக்குகளும் பிரிந்து போகாமல் இருந்திருக்குமானால் வாக்குவித்தியாசம் அதிகமாக இருந்திருக்கும். காங்கிரஸ் தன்னுடைய பலத்தை உணர்ந்து பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமானால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், தங்களுடைய கோட்டையிலேயே தோல்வி என்பதை பாஜக மிக கூர்ந்து கவனிக்கும். தேர்தல் திட்டமிடலை கவனத்துடன் செய்யும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன .

வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.

எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் பார்த்தது போலவே இந்திய பொருளாதாரத்தின் மீதும் வெகுமக்கள் மீதும் சொல்லவொன்னா சுமைகளை இது சுமத்தி உள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதற்காக சொல்லப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. ஏறக்குறைய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட எல்லா பணமும் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது;அதனால் கறுப்பு பணம் நல்ல பணமாக மாற்றப் பட்டுவிட்து; ஒருவர் கூட இதனால் தண்டிக்கப்படவில்லை .கள்ளநாணயம் சட்டபூர்வமாக மாற்றப்பட்டுவிட்டது .
தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக இராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களும் தீவிரவாத தாக்குதல்களினால் உயிர் இழந்து உள்ளனர்.உண்மையைச் சொல்லப் போனால் ஊழலின் அளவு இருமடங்கு அதிகரித்து உள்ளது.

மறுபுறத்தில் மூன்றிலொரு பங்கிற்கு மேல் ஜி்டிபியில் முக்கிய பங்கு வகிக்கும் , 60 சத தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் அமைப்புச்சாராத்துறை நிலைகுலைந்து உள்ளது . தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைப்பு,நிலைகுலைந்துள்ள பொதுவிநியோக துறை, ஆதார் அட்டை மூலம் போடப்படும் நிபந்தனைகள் போன்ற காரணங்களால் மிக வறிய மக்கள் மேலும் அல்லல் படுகின்றனர்.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை என மூன்று துறைகளும் மந்தமாகி உள்ளன. இது வேலையின்மையை அதிகரித்து, விவசாய நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது.இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை; அவர்கள் சமூக ,பொருளாதார பாதுகாப்பின்மைக்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை முன்னெப்போதும் இல்லாத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கிராமப்புறங்களில் விவசாய நெருக்கடி முற்றி மக்களின் வாழ்க்கைத்தரம் குலைந்துவிட்டது.பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்களின்,உள்நாட்டு முதலாளிகளின் நலனை பாதுகாக்கின்றன வகையில் அரசினுடைய கொள்கைகள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.இதனால் சாதாரண மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த நாட்டு பொருளாதாரத்தையும், வெகுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 8 ம் நாள் அன்று கண்டனநாள் என அனுசரிக்க உள்ளனர்.

மோடி அரசாங்க மானது , 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் , உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆண்டுதோறும் இரண்டு கோடி போருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்; அதாவது பாஜக ஆட்சிக்காலத்தில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

எப்படிப்பட்ட போராட்ட முறையை முடிவு செய்வது என்பதை நாடு முழுவதும் உள்ள இடதுசாரி கட்சிகளின் அந்தந்த மாநிலக்குழுக்கள் முடிவு செய்யும். அனைத்து மக்களும் திரண்டு வந்து இந்த அரசுக்கு எதிராக , அதனுடைய கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன. ஜனநாயக, மதச்சார்பற்ற மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் சேரவேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக் கொள்கின்றன.

CPM/CPI/CPI(ML)/RSP/AIFB/SUCI கூட்டறிக்கை.

கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மூழ்கியது நாள்… மிதந்தது மும்பை!

கதிரவன் மும்பை

மும்பையில் இரவு பகலாக கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்து முடங்கியது, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, மேலும் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு என நகர்கிறது மும்பை பெருநகரம்.

இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு, அலைபேசி பிரச்சனை, வங்கி செயல்பாடு சுணக்கம், பஸ், ட்ரெயின் போக்குவரத்து தாமதம் என மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சிரகவில்லை.

2005 ஜூலை 26 இந்த நாளை மும்பை மக்கள் மறக்க மாட்டார்கள், அன்றும் இதே போல் ஒரு பெருமழை பெய்தது அன்று பெய்த மழையின் அளவு 228 மி மீ ஆகும், நேற்று பெய்த கனமழையின் அளவு 315.8 மி மீ ஆகும்..

# மும்பையில் கனமழையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

# டோல் கேட் களில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் டோல் கேட் கட்டணத்துக்கு தடை விதித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தர விட்டுள்ளார்.

# மும்பையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், இதனால் இன்று அரசு அலுவலகங்களில், பேரிடர் பணிகள், மீட்பு பணிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதுமானது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

# மீட்பு பணிகளுக்கு அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில், அதில் ஈடுபட தயாராக இருப்பதாக கடற்படை மற்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, மும்பை, தென் மும்பை, தென் குஜராத், கொங்கன், கோவா மற்றும் விதர்பா பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே இருந்தவர்களும், பணிக்கு சென்றவர்களும் இரவு முழுவதும் மழைக்கிடையே பல இடங்களில் தங்கி இருந்து காலையில் தான் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். பல பேர் மழையையும் பொருட்படுத்தாமல் பல கிலோ மீட்டர் நடந்தே விட்டு சென்றுள்ளார்கள். பல மக்கள் விடிய விடிய நடந்தே வீட்டுக்கு சென்றுள்ளார்கள், வழியில் பல இடங்களில் டீ, உணவு என பொது மக்கள் அங்கங்கே வழங்கியது மனித நேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இன்று மும்பையில் கனமழை பெய்ய வில்லையென்றாலும், மும்பைவாசிகளுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. மும்பையில் கனமழைக்கான அறிகுறி இருப்பதாக பேசப்படுகிறது.

 

#கோரக்பூர் படுகொலை: யோகி பதவி விலக வேண்டும் !

இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்துக்கு சற்று முன்பு, கோரக்பூரின் அரசு மருத்துவமனை ஒன்றில் 79 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நமது ஜனநாயகத்தின், அரசியலின் ஆரோக்கியம் சந்திக்கிற நோய் பற்றிய கொடூரமான வெளிப்பாடாக இருக்கிறது.

அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு பெருஞ்சோகம் நடந்து அதனால் உயிரிழக்கவில்லை. மத்தியிலும் உத்தரபிரதேசத்திலும் உள்ள அரசாங்கங்களின் தான்தோன்றித்தனத்தால், கொடூரமான அலட்சியத்தால் உயிரிழந்தன.

ஆக்சிஜன் தடைபட்டதால் குழந்தைகள் உயிரிழந்த பிஆர்டி மருத்துவ கல்லூரியில் இருந்து அரை கி.மீ தொலைவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தனக்கு 56 அங்குல மார்பு இருப்பதாகவும் தான் பிரதமரானால் மூளை வீக்க நோயால் குழந்தைகள் உயிரிழப்பதற்கு முடிவு கட்டுவதாகவும் மோடி அறிவித்தார். இப்படி அறிவித்து மூன்று ஆண்டுகள் கழித்து அந்த 56 அங்குல மார்பு, அதன் உள்ளீடற்ற வாக்குறுதிக்காக வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை.

வறியவர்களின் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது யோகி – பாஜக அரசாங்கத்துக்கு ஒரு பொருட்டே இல்லை, மாறாக, மதரசாக்களில் உள்ள குழந்தைகளை வந்தே மாதரம் சொல்ல நிர்ப்பதில்தான் அதன் ஆற்றல் செலுத்தப்படுகிறது என்பதை, அதன் அரசியல் முன்னுரிமைகள் என்ன என்பதை இந்த உயிரிழப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.

கொலைகார யோகி அரசாங்கத்தின்பால் தங்கள் விசுவாசத்தைக் காட்ட, கொல்லப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களையும் வந்தே மாதரம் சொல்ல நிர்ப்பந்திப்பார்களா? கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டு காவல்துறையினரால் ஆட்டோவில் ஏற்றி விரட்டப்பட்டுள்ளார்கள்.

யோகி ஆதித்யநாத் தொடர்ந்து அய்ந்து முறை கோரக்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் வறிய மக்களின் உடல்நலம் காப்பதை விட மதவெறி வெறுப்பையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுவதிலேயே அவர் அக்கறை காட்டியுள்ளார்.

இதுபோன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படும் என்று மிகவும் இரக்கமற்ற விதத்தில் சொல்லி, பாஜக தலைவர் அமித் ஷா இந்த கொலைகள் பெரிய பிரச்சனையில்லை என்று சொல்லப் பார்க்கிறார்.

மிகவும் நேர்மையற்ற, வெட்கம்கெட்ட விதத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இறந்துபோன குழந்தைகளின் உடல்களை, மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்துகிறார். தனியார் மருத்துவமனைகள் நடத்த நிலமும் உள்கட்டுமான வசதிகளும் அரசாங்கங்கள் செய்து தர வேண்டும் என்கிறார். ஆக்சிஜன் உருளைகளும் முக்கியமான மருத்துவ உள்கட்டுமான வசதி என்பதை அவர் மறந்துவிட்டாரா? அவற்றுக்கு அரசாங்கம் ஏன் நிதி அளிக்கவில்லை?

எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், மருத்துவ வசதிகள் வறிய மக்களுக்குச் சென்று சேர விடாமல் பணத்தடையை உருவாக்கி விடுகின்றன; அல்லது வறிய மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் மருத்துவமனையில் செலவழிக்க நிர்ப்பந்தப்படுத்தி, அவர்கள் சிந்தும் ரத்தத்தில் லாபம் சம்பாதிக்கின்றன.

மருத்துவமனைகள் நடத்த அரசாங்கங்களிடம் நிதி இல்லை சொல்வது அப்பட்டமான பொய். கோரக்பூரின் பிஆர்டி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கும் மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவம் அளிக்க ஆண்டுக்கு வெறும் ரூ.40 கோடிதான் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் ஒதுக்க மருத்துவ கல்லூரியின் முதல்வர் பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதைக் கூட மத்திய அரசாங்கம் அளிக்கவில்லை.

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் மோடி அரசாங்கம் ரூ.1.54 லட்சம் கோடி அளவுக்கு அதிபணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி தந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2 ஜி ஊழலில் கொள்ளை போன அளவுக்கான நிதியாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனை திருப்பிக் கேட்காமலேயே தடையேதுமின்றி அவற்றுக்கு கடன் வழங்கப்படுவதை மட்டும் உறுதி செய்ய முடிகிற மோடி அரசாங்கத்தால், கொள்ளை நோய் பரவுகிற கோரக்பூரின் வறிய மக்களுக்கு இருக்கிற ஒரு மருத்துவமனையில் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பதை தடுக்க தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்ய மட்டும் எப்படி மறுத்துவிட முடிகிறது?

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கைகளில் குழந்தைகளின் ரத்தம் படிந்துள்ளது. குழந்தைகளின் இந்த கொடூரமான படுகொலைக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.

எம்எல் அப்டேட் தொகுப்பு 20, எண் 34, 2017 ஆகஸ்ட் 15 – 21

ஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தை முற்றிலுமாக இன்னும் 8 மாதத்தில் கைவிடுவது என்றும், அதற்கு ஏதுவாக மாதந்தோறும் ரூ. 4/- அதிகப்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளது. வறட்சி, வேலையின்மை, ஏழ்மை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதலாகும் இது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மக்களை எச்சரித்தது. பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் அனைத்துவித மானியங்களையும் ரத்து செய்து விடும் என்று கூறியிருந்தது. இப்போது மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் உரம் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. அதேப்போன்று ரேசன் மானியத்தை முற்றிலுமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இப்போது மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு மானியத்தை கைவிடுவது என்ற இந்த முடிவோடு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்குமான மானியத்தையும் இந்த அரசு கைவிட்டு விட்டது. அதே சமயம் கார்ப்பரேட்டுகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஆண்டு தோறும் ஊக்கத் தொகை, வாராக் கடன் வசூலிக்கப்படாத வரி, சொத்து வரி நீக்குதல், கார்ப்பரேட் வரியை குறைத்தல் என்று மிகப்பெரிய அளவிற்கு மானிய மழையையே பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அரசு என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

மத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த மானிய ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.”

மாட்டிறைச்சி கொலை; ஓடும் ரயிலில் கும்பல் வன்முறைக்கு பலியான 16 வயது சிறுவன்

ஹரியானாவில் உள்ள தனது கிராமத்துக்கு டெல்லியிலிருந்து ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த 16 வயது ஜுனைத், கும்பல் வன்முறைக்கு பலியானார். தனது சகோதரர்கள் நால்வருடன் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட டெல்லியிலிருந்து மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார் ஜுனைத்.

தங்களுடன் பயணித்த சக பயணிகள் இவர்களை மத ரீதியாக கேலி செய்ய ஆரம்பித்திருக்கிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததை அறிந்துகொண்டு ஜுனைத் உள்ளிட்ட நால்வரையும் அடிக்க ஆரம்பித்துள்ளனர். கும்பல் வன்முறையிலிருந்து தப்பிக்க சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர்.  டெல்லியிலிருந்து 20 கிமீ தூரத்தில் அசாவதி என்ற இடத்தில் ரயில் நின்றவுடன் ஜுனைத் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சகோதரர்களால் கொண்டு செல்லப்பட்ட ஜுனைத் இறந்துவிட்டார்.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ரயில் பெட்டி ரத்த வெள்ளத்தில் காட்சியளிப்பதாக தெரிவிக்கிறது என்டிடீவி.  தாக்குதலுக்கு உள்ளான மற்ற மூவரும் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டர்வரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா?

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்தது. அதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விவாதம் ஒன்றை நடத்தியது. அந்த விவாதத்தை நெறியாள்கை செய்தவர் நிதி ரஸ்தான் என்ற பத்திரிகையாளர்.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரதிநிதி, மனித உரிமை செயல்பாட்டாளர், திமுக பிரதிநிதி, பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் கட்சியில் இருக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். அதுகுறித்து நிதி ரஸ்தான் கேட்ட கேள்விக்கு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா என்பவர், “உங்களுக்கு(எண்டீடிவிக்கு) மறைமுக அஜெண்டா இருக்கிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதற்கு இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை பேச வேண்டாம் என அறிவுறுத்தினார் நிதி. சம்பித் பாத்ரா தொடர்ந்து ‘மறைமுக அஜெண்டா’ குறித்து பேச நீங்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் என அறிவித்தார் நெறியாளர்.

இந்நிலையில் இந்த வெளியேற்ற நிகழ்வுதான் எண்டீடிவி நிறுவனர் வீட்டில் சிபிஐ சோதனைக்குக் காரணம் என பலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

NDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு

எண்டீடிவி இணை நிறுவனரான பிரனாய் ராயின் டெல்லி மற்றும் டெராடூனில் உள்ள வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 48 இழப்பு ஏற்படுத்தியதற்காக பிரனாய் ராய் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ராய் மீதும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரான பிரனாய் ராய் தன்னுடைய மனைவி ராதிகா ராயுடன் இணைந்து 1988-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது எண்டீடிவி நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார்.

2015-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தின் மீது சட்டவிரோதமான வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அது குற்றச்சாட்டு பொய்யானது என எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் வங்கி முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை இன்று நடத்தப்பட்டிருக்கிறது. எண்டீடிவி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

எண்டீடிவி ஊடகங்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் போக்குகளை தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுதான் சிபிஐ ரெய்டுக்கு காரணம் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் இரண்டு அணு உலைகள்!

கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்படுவதற்கான ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தானது. ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர், ரஷ்ய அதிபர் புதினுடன் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலை நிறுவுவதற்காக தேவைப்படும் ரூ. 50 ஆயிரம் கோடியில் பாதித் தொகையை ரஷ்யா கடனாக வழங்கும் எனவும் இந்திய அணுசக்தி கழகம் மீதித்தொகையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகள் மூலம் 6000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி: ஆபாச நூல்களுக்கு வரிவிலக்கு; குழந்தை நூல்களுக்கு 12% வரியா?

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட  12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜூலை, 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட முடிவெடுத்திருக்கும் நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் அடிப்படையில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பயன்படுத்தும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கூட்டெழுத்து பயிற்சி புத்தகங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும். இந்த வரிவிதிப்பால் குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் கையெழுத்துத்திறன் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ஆபாச (மஞ்சள்) புத்தகங்கள் உட்பட இதர புத்தகங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் புத்தகங்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

ஒரு பக்கம் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்க முயற்சிக்கும் மத்திய அரசு மறுபக்கம்  குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு 12 சதவீதம் வரி விதித்துள்ளது.  மத்திய பாஜக அரசின் இச்செயல் குழந்தைகளின் மீது மோடி அரசிற்கு உள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.

எனவே, சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக திரும்பப் பெற்று குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!

கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளானது.

எடியூரப்பா தீண்டாமையை கடைப்பிடிக்கிறார் என அந்த ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த எடியூரப்பா, “சமூகத்து ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க விரும்பினேன். அதில் ஏன் குற்றம் கண்டிபிடிக்கிறார்கள்?” என கேட்டிருக்கிறார்.

தீண்டாமையை ஒழிக்கப்போன இடத்தில் தீண்டாமை கடைப்பிடித்ததாக எடியூரப்பாவின் செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..

குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில் குழந்தைகளை கடத்த வருகிறார்கள் என்கிற வதந்தி செய்தியை நம்பி, ஒரே நாளில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்பே ஜாம்ட்ஷெட்பூரில்  மூன்று குழந்தைகளுக்கு தந்தையான முகமது நயீம் என்பவர் அடித்துகொல்லப்படும் காட்சி வீடியோ பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

ML Update May 16-22

முழுமையாக மூன்று ஆண்டுகளாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் பாஜக பல சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கிறது. தேர்தல்களில் தோல்வியடைந்த இடங்களில் கட்சி தாவல்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது என்ற பொருளில் கடந்த காலங்களில் பாஜகவின் ஆதிக்கம் இப்போது கூடுதலாக போல் இருந்ததில்லை. தனது பாசிச நிகழ்ச்சி நிரலை கட்டவிழ்த்து விட, அதை மக்கள் மீது செலுத்த சங்பரிவார் இந்த தருணத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.

வெறுப்புப் பேச்சு பேசுவதை வழக்கமாக கொண்ட, உத்தரபிரதேசத்தில் பல மத வன்முறை வழக்குகளில் முதன்மை குற்றவாளியான, குண்டர்களை கொண்டு தனிப்படை அமைக்கும் சிற்பியான யோகி ஆதித்யநாத் போன்ற ஒருவர் நாட்டின் மக்கள் தொகை அதிகமான ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக்கப்படுகிறார். நாடு முழுவதும் பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை தாக்குகிறார்கள். படுகொலை செய்கிறார்கள்.

அதிகார மமதை கொண்ட ஆட்சியாளர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்ட நேரம்தான். ‘புதிய இந்தியாவின்’ அடித்தளம் என்று மோடி இதை அழைக்கிறார். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நிலைமைகள் படுமோசமாக இருக்கின்றன. இந்திய மக்களின் அரசியல்சாசன உரிமைகள் அதிகரித்த அளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன, நமது சமூக இருத்தலை மதவெறி துருவச்சேர்க்கையும் வெறுப்பும் சூழ்ந்துகொண்டுள்ளது என்பதனால் மட்டுமல்ல; பொருளாதார பாதுகாப்பின்மை, நிச்சயமின்மை என்ற பூதம், நகர்ப்புற இந்தியாவை விரட்டத் துவங்கியுள்ளது என்பதாலும்தான்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நாட்டுப்புற இந்தியாவை விவசாய நெருக்கடி அழிவில் தள்ளியுள்ளதற்கு அக்கம்பக்கமாக, நாடெங்கும் வேலையின்மை மிகப் பெரிய அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், இந்திய பொருளாதாரம் ஒட்டுமொத்த விதத்தில் வளர்ச்சியை பதிவு செய்தபோதும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. இப்போது வளர்ச்சி விகிதமே பெருமளவு சரிந்துள்ள நிலையில், வேலை வாய்ப்பின்மை மேலும் அதிகரித்துள்ளது. பணமதிப்பகற்றுதலின் ஆறு மாத காலம் பல தொழில்களிலும் அளிப்பு – உற்பத்தி சங்கிலியை அறுத்து விட்டதால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை விவசாயம், உற்பத்தித் துறைகளுடன் நின்றுவிடவில்லை. தகவல் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் முன்செலுத்தப்படும் சேவைத் துறையிலும் – இந்தத் துறையில் பெருமளவு வேலை வாய்ப்புகள் இருந்தன – இதுதான் யதார்த்தம். அய்டி + அய்டி = அய்டி (தகவல் தொழில்நுட்பம் + இந்திய திறமை = நாளைய இந்தியா) என்ற வாய்ச்சவடால் மூலம் மோடி தனது பார்வையாளர்களைக் கவர முயற்சி செய்துகொண்டிருந்தபோது, இந்தியாவின் முக்கியமான அய்டி நிறுவனங்களில் இருந்து வந்து கெட்ட செய்தியை வர்த்தக நாளேடுகள் பின்னுக்குத் தள்ள முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வெளியேற்ற அறிவிப்பு புரட்சி அய்டி துறையை தாக்கியிருக்கிறது; பெரிய அய்டி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யவுள்ளன. இது ஒரே ஒரு முறை நடக்கப் போவதல்ல. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதிகரித்து வருகிற தானியங்கிமயம் ஆளெடுப்பை குறைக்கும்போது, இந்த வெளியேற்றுதல்களுக்கு தொழில்நுட்பம் ஒரு காரணம் என்றால், குறை சம்பள வேலைகளை இந்திய அய்டி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காணப்படுகிற பாதுகாப்பு அலை மிகவும் முக்கிய காரணமாக இருக்கும்.

திட்ட கமிசனுக்கு பதில் வந்திருக்கிற நிதி ஆயோக் நிர்வாகிகள், இந்த வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை குறைத்துக் காட்டப்பார்க்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை ‘தன்னார்வ’ இயல்பு கொண்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு விதமாகச் சொல்வதென்றால், வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, வேலை தேடும் இளைஞர்கள் கூலி, வேலை நிலைமைகள், பதவி உயர்வு போன்ற விசயங்கள் பற்றி அலட்டிக் கொள்வதால், கிடைத்த வேலையைச் செய்வதற்குப் பதிலாக, தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான இந்த விளக்கமும் அய்டி நிறுவனங்களின் ஆட்குறைப்பும் பொருந்திப் போகவில்லை.

வேலை தேடுபவர்கள் தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருப்பதுதான் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் என்று சொல்லி பிரச்சனையை மலினப்படுத்தாமல், அரசாங்கம் யதார்த்த நிலைமைகளை அங்கீகரித்து, இந்த நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் போதுமான அளவுக்கு வெற்று ஆரவாரங்களை கேட்டுவிட்டோம்; வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, துவங்கு இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற மோடியின் எல்லா ஆரவார திட்டங்களின் கூட்டு மதிப்பு மிகப்பெரிய பூஜ்ஜியம்தான்.

உண்மையில், இந்தியாவில் இன்று நாம் எதிர்கொள்வது, வேலை வாய்ப்பின்மையும், குறை வேலை வாய்ப்பும் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணி பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, கவுரவும், உரிமைகள் ஆகியவை இல்லாத வேலை வாய்ப்புகளும்தான்.

இந்திய அரசாங்கத்தின் 2013 – 2014 வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை ஆய்வின்படி, நாட்டில் உள்ள 47.5 கோடி தொழிலாளர்களில் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பணிப் பாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு இல்லை. ஒப்பந்த முறை பெருமளவில் நடைமுறையில் உள்ளது; ஆனால் நாட்டின் 66% ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இல்லை. இந்தியத் தொழிலாளர்களில் 16.5% பேர் மட்டும்தான் தொடர்ச்சியான ஊதியம் பெறுகிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 78% குடும்பங்களில் முறையான தொடர்ச்சியான ஊதியம் பெறுபவர் யாருமில்லை.

இதுபோன்ற ஒரு நாட்டின் பிரதமர் வெற்று ஆரவாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அரசாங்கம் அமர்த்தியிருக்கிற பொருளாதார அறிஞர்கள் ‘தன்னார்வ வேலை வாய்ப்பின்மை’ என்று பேசுகின்றனர்.

வேலை வாய்ப்பின்மை ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் உள்ளாற்றல்மிக்க அரசியல் ஆயுதம்தான். வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் சீற்றத்தை, விரக்தியை, தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எரிபொருளாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வேலை வாய்ப்பின்மை பசு பாதுகாப்பாளர்களின் எண்ணிக்கையை, இந்திய தெருக்களை இன்று கண்காணிக்கும் அதுபோன்ற பல கும்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

எனவே, மக்கள் நலன், ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையும் உடனடி கவனம் கோரும் பிரச்சனையே. மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி இன்று தனது எதிர்காலத் திட்டங்களாக ‘புதிய இந்தியா’, ‘நாளைய இந்தியா’ என்ற வெற்று ஆரவாரங்கள் கொண்டு நம்மை தாக்கும்போது, இதுபோன்ற வெற்று வாய்வீச்சுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று நாம் அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

விளைவுகள் பற்றி பேச வேண்டிய நேரம் இது; விவசாய நெருக்கடி மற்றும் வேலையின்மை என்ற பேரழிவுமிக்க சேர்க்கையை நாடு இனியும் பொறுத்துக் கொள்ளாது.

ML Update May 16-22

வீடியோ: Country of crony capitalism: Vijay Mallaya and a farmer not equal in any way… 

பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு?

 

சி. மதிவாணன்

சி. மதிவாணன்

பாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக்கொண்டு வந்தது. TKDL என்று அந்த நூலகத்தை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவின் பாரம்பரிய அறிவைத் திருடி தங்கள் பெயரில் காப்புரிமை வாங்கும் அந்நிய- இந்திய முதலாளிகளின் முயற்சிக்கு தானே முன்வந்து, முன்னின்று போராடி தோற்கடித்த நிறுவனம் TKDL. அது ஒரு வலைமனை களஞ்சியம். ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகளில் உள்ள 300,000 க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் கொண்டதாக TKDL வலை மனை களஞ்சியம் (online repository) உருவாக்கப்பட்டிருந்தது.20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு சமஸ்கிருதம், அராபி, உருது மூலங்களை ஸ்கேன் செய்து, கணினி மயமாக்கி வைத்திருக்கிறது. அதனை எந்த ஒருவரும் தேடி தனக்கானதைப் பெற முடியும். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் உள்ள காப்புரிமை வழங்கும் அமைப்புகள் காப்புரிமை வழங்குவதற்கு முன்பு TKDL வலை மனையில் தேடி, அங்கே பதிக்கப்பட்டிருந்தால், கம்பெனிகளுக்கு காப்புரிமை வழங்க மறுப்பார்கள். அது பாரம்பரிய அறிவுச் சொத்து அதனால், தனியார் லாபத்துக்கான காப்புரிமை கிடையாது என்பார்கள். இப்படியாக, இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள், பூசு பொருட்கள், கலவை மருந்துகள் காப்பாற்றப்பட்டு இந்திய மக்களின் சொத்தாக இருப்பதற்கு TKDL தான் காரணம்.

TKDL உருவாக்கப்படுவதற்கு முன்பு, வேம்பு, மஞ்சள் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெறப்பட்ட காப்புரிமைகளுக்கு எதிராக இந்தியா போராட வேண்டியிருந்தது. ஆனால், TKDL அமைக்கப்பட்ட பின்னர், 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்திய- அன்னிய கம்பெனிகள் கோரிய 219 காப்புரிமைகள் இக்களஞ்சியத்தின் காரணமாக மறுக்கப்பட்டன. யுனி லீவர், கோல்கேட்- பால்மலைவ், அவஸ்தான்ஜென், அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகம், இந்திய அரசின் யுனானி மருந்து ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட கம்பெனிகள்/ நிறுவனங்கள் எழுப்பிய காப்புரிமை கோரிக்கைகள் தவறானவை என்று TKDL சண்டைக்கு நின்றது. அந்த காப்புரிமை கோரிக்கைகளை தோற்கடித்தது.

இப்படியாக உயிரித் திருடுகளையும் (biopiracy) TKDL தடுத்து வந்தது. அந்த அமைப்பு வரும் மார்ச் 31க்குப் பின்னர் இருக்காது. அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்று இந்திய அரசு நடத்தும் அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் ( CSIR) அறிவித்து விட்டது. அதன் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.
எனவே, இந்திய – அன்னிய மருந்துக் கம்பெனிகள் காப்புரிமையைத் தடுக்கும் அமைப்பு என்று TKDL மீது கடும் கோபத்தில் இருந்தனர். TKDLன் செயல்பாட்டால் லாபத்தைப் பறிகொடுத்த கம்பெனிகள் TKDLலை வீழ்த்த வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தனர். இறுதியில் வரும் மார்ச் 31 அன்று அதன் கதையை முடிக்க இருக்கின்றனர்.
TKDLல் 100 + ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட கூடாது. அவர்களில் பலர் ஆயுர்வேதத்தில் நிபுணர்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விற்பன்னர்கள். சம்பள உயர்வு கூட இல்லாமல் நாட்டின் அறிவுச் சொத்தைப் பாதுகாக்கும் போர்ப்படையாக இருந்தவர்கள்.

இப்போது, மோடி அரசின் புதிய கொள்கைப்படி, ஆய்வுகள் அனைத்தும் கம்பெனிகளிடம் கொடுக்கப்பட்டுவிடும். அரசு ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாது, குறுக்கீடு செய்யாது. கம்பெனிகள்தான் இனி TKDL செய்யும் வேலைகளுக்குப் பணம் தர வேண்டும். அரசு இந்த நிதியாண்டுடன் நிதி ஒதுக்கீட்டை முடித்துக்கொள்கிறது.

இனி திருட்டைத் தடுக்கும் TKDLக்கான நிதியை திருடர்களே வழங்குவார்கள். திருட்டைத் தடுத்து வந்த அறிவுச் சமூகத்தினர், அரசுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

யானைத் தலையை ஒட்ட வைத்து கணபதி ஆக்கிய ஆதி பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசிய மோடி, இந்தியாவின் பாரம்பரிய அறிவை கம்பெனிகளுக்கு விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்.

இனியும் நாம் தூங்கக் கூடாது. அறிவையும் அறிவாளிகளையும் அழிப்பதற்கான காவிகளின் முயற்சியை அனுமதிக்கக் கூடாது.

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

 

பகுத்தறிவை கண்டு பயப்படுவது ஏன்? சீத்தாராம் யெச்சூரி கேள்வி

வலதுசாரிகளும், நாக்பூர் பல்க கலைக் கழக துணை வேந்தரும் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்கொள்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாக்பூரில் ராஷ்ட்ரகந்த் துக்காதோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சீத்தாராம் யெச்சூரி சனிக்கிழமையன்று, ‘‘ஜனநாயகமும் அதன் மாண்புகளும்’’ என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இப்பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், வலதுசாரி அமைப்புகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து, திடீரென்றுஇக்கூட்டத்தை காலவரையறை யின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இம்மிரட்டலுக்கு அஞ்சாமல் கூட்டம் நடைபெற்றது. எனினும் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் நடைபெறாமல், நாக்பூரில், தீக்சாபூமி என்னுமிடத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கேபெரும் திரளாகக் குழுமியிருந்தோரிடையே சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

நம்மைப் பார்த்து துணை வேந்தர் ஏன் பயந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் இந்திய சிப்பாய்கள். நாம் நம் நாட்டின் நலன்களுக்காகப் போராடுவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்கொள்வதற்கு அஞ்சுகிற கோழைத்தனத்தைவிட பெரிதாக வேறெதுவும் இருக்க முடியாது. விவாதங்களைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். குறைந்தபட்சம் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றாவது கேளுங்கள்.

டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தின் வரைவை தாக்கல் செய்து அரசியல் நிர்ணயசபையில் பேசும்போது, நம் நாட்டில் மிகவும் மோசமாகவுள்ள சமூக, பொருளாதார முரண்பாடுகளை ஒழித்துக்கட்டாமல் போனால், இது அரசமைப்புச்சட்டம் உருவாக்குகின்ற மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பிற்கும் ஆபத்தினைக் கொண்டுவரும் என்றுமிகவும் சரியாகவே எச்சரித்திருந்தார்.

இன்றைய பாஜகவின் அரசாங்கத்தின் கீழ், அரசியல், சமூக மற்றும் பொருளாதார அநீதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மூன்று விழுமியங்கள் இன்று முற்றுகைக்கு உள்ளாகி இருக்கின்றன. இத்தாக்குதலை முறியடித்து விடுவிப்பதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள் வோம்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்களின் சாதி, நிறம், மதம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் அம் பேத்கர் அளித்திட்ட உத்தரவாதத்தை அமல்படுத்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டுநின்று செயல்படுவோம்.

இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. நாம் எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் சம அளவில் சொந்தமாகும். இதனைச் சீர்குலைத்திட பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் அனுமதித்திட முடியாது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

கேரளாவில் தங்கள் ஊழியர்கள் மீது தாக்குதல்தொடுக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் கூறிக்கொண்டிருக்கிறதே என்று ஒருவர் கேட்ட போது, “எங்கள் கட்சியின் தலைமையில் அங்கே ஆட்சி அமைக்கப்பட்ட பின் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 11 பேரில் 7 பேர்எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சரின் வெற்றிப் பேரணியில் வெடிகுண்டு வீசப்பட்டதில் எங்கள் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். யார், யாரைக் குறை கூறுவது,“ என்று யெச்சூரி கேட்டார்.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒருவர் கேட்டபோது, “உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவு, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை சரி என்று கூறுகிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது. முறைசாராத் தொழில்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதனை அரசாங்கத் தின் புள்ளிவிவரங்கள் பிரதி பலித்திடவில்லை,“ என்றார்.

நன்றி: தீக்கதிர்

http://www.theekkathir.in
epaper.theekkathir.in
http://www.facebook.com/theekkathir
https://twitter.com/Theekkathir Tamil

ஐரோம் சர்மிளாவின் தோல்விக்காக வருத்தப்பட வேண்டியதில்லை; ஏன்?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது

பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் தொண்ணூறு வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவியிருப்பது நாடு முழுக்க ஆழ்ந்த கசப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது. அவரது தோல்வி ஏன் இந்தியா முழுக்க விவாதத்தைக் கிளப்புகிறது என்றால் அதுவொரு லட்சியவாதத்தின் தோல்வி என்பதால்தான்.

இத்தகைய போராட்டங்கள் எல்லா காலத்திலும் குறியீட்டுத் தளத்தில் மட்டுமே நிகழும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதும் அது அரசியல் வெற்றியாகக் கனியாமல் போவதும் மற்றொரு காரணம். இந்த தோல்வியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இங்கு தேர்தல் வெற்றி என்பதன் பொருள் என்ன, அரசு என்பதன் ‘இருப்பு’ எதில் பொதிந்திருக்கிறது என்பவற்றிலிருந்து உரையாடலைத் தொடங்கவேண்டும்.

இங்கு ‘அரசு’ என்பதை நிர்வாக அமைப்பு என்பதாக மட்டும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அந்த புரிதல் ஒற்றைப்படையானது. நமது ஒவ்வொருவரது மனதிலும் அரசு என்பது குறித்த சித்திரம் என்ன? அரசு என்றால் அது வலுவானதாக, நிலைத்ததாக, நீடித்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான். ஆக அரசு என்று வருகிறபோது மூர்க்கமானதொரு ஒழுங்கை ஏற்படுத்தும் அதிகார அமைப்பாக நம்முள் அது விரிந்து நிலைத்திருக்கிறது. இப்படியான ஒரு கருத்தாக்கத்தை நாம் ஏன் வரித்துக்கொள்கிறோம் என்றால் நாம் நிறைய அச்சமடைபவர்களாக இருக்கிறோம் என்பதுதான் காரணம்.

யார் மீது அச்சம்? ஒவ்வொரு தனி மனிதரும் மற்ற தனிமனிதர்கள் மீது கொள்ளும் அச்சம்தான் அது. இந்த அச்சத்தில் இருந்து விடுபடுவது அத்தனை எளிதானது அல்ல. ஏனென்றால் அரசு, ராணுவம், போலீஸ் போன்ற நிர்வாக அமைப்புகளை பாதுகாப்பு வழங்கும் புற அமைப்புகளாக நாம் நம்பத்தொடங்கி நூற்றாண்டுகள் ஆகின்றன. ஏனென்றால் நமது நாகரிக வளர்ச்சி என்பது நமது பழங்குடி மனநிலையின் அமைப்பு முறையில் இருந்து விலகி வந்து அவற்றை வேறு ஒரு அமைப்பிடம் கையளிப்பது என்பதாக இருக்கிறது. எந்த பெரிய அமைப்பும் அவ்வாறுதான் உருவாகிறது. போலீஸ் என்ற அமைப்பு உருவாகிறபோது நமது தனிப்பட்ட பாதுகாப்பை அவர்களிடம் கையளித்துவிட்டு நாம் சற்று உறங்க முடியும் என நினைக்கிறோம். ராணுவம் என்று வருகிறபோது ஒரு பழங்குடி அமைப்பின் தற்காப்பு முறைகளைக் களைந்துவிட்டு நாம் குறைந்தபட்ச சுதந்திர தனிமனிதர்களாகிவிட முடியும் என்று நம்புகிறோம்.

ஆக, இங்கு அமைப்பு என்பது தன்னளவில் இருவேறு தோற்றம் கொண்டதாக நம்முள் இருக்கிறது. நமக்குத் தேவையான ஒன்று மற்றும் நாம் வெளியேற நினைக்கும் ஒன்று. அதே சமயம் நாம் நம்மீது செலுத்தப்படும் அதிகாரத்தை வெறுப்பவர்களாக இருக்கிறோமே தவிர அதிகாரத்தையே வெறுப்பவர்களாக இல்லை. இங்குதான் நாம் மற்றவர்கள் மீது செலுத்தும் அதிகாரத்தின் முனை இருக்கிறது. இதுதான் ஐரோம் ஷர்மிளாவின் தோல்வியைப் புரிந்துகொள்ளும் புள்ளி.

ஷர்மிளாவின் போராட்டம் என்பது இராணுவ அத்துமீறலை எதிர்ப்பதன் வழியாக குறியீட்டு ரீதியிலான அதிகார நீக்கத்தை மக்களிடம் கோருகிற ஒன்றும் கூட. ஆக ராணுவத்தை ஒரு தரப்பாகவும் மணிப்பூரின் மக்களை மற்றொரு தரப்பாகவும் புரிந்துகொள்ளும் தன்மையில் இருந்து நாம் முதலில் வெளியேற வேண்டும். அப்படி ஒரு இருமை அங்கு இல்லை.

ராணுவம் என்கிற கருத்தாக்கத்தை இல்லாதொழிப்பதும் அதன் அத்துமீறலை இல்லாதொழிப்பதும் ஒன்றின் மீது ஒன்று தம்மைப் பொருத்திகொண்டு கலந்துபோயிருக்கிறது அங்கு. இந்த முரண்களை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதில் ஐரோம் தோற்றிருக்கிறார் என்பது இந்த தோல்வியின் பின்னுள்ள காரணங்களில் ஒன்று. மேலும் அரசியல் என்பதை புனிதத்துவத்துக்கு எதிரான பாவமாக வரித்துக்கொண்டிருக்கும் மக்களின் மனநிலையும் முக்கியமான ஒரு காரணம். ஆச்சர்யமாக இருந்தாலும் இதில் உண்மை இருக்கிறது. உனக்கு ஏன் இந்த வேலை…? நீ புனிதவதி இல்லையா…? என்கிற எண்ணம்தான் அது.

ஐரோமுக்காக நம்மிடம் கசியும் கண்ணீரில் இருப்பதும் இந்த பரிதாபம்தான். இந்த அவமதிப்பில் இருந்து முதலில் ஷர்மிளாவை நாம் விடுவிக்கவேண்டும். இந்த தோல்விக்காக நாம் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் எந்த அமைப்பின் வன்முறைக்கு எதிராக அவர் போராடினாரோ அந்த அமைப்பின் பகுதியாக அவர் மாறுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறார் அவர். இதை மிகவும் எளிதான மொழியில் சொல்வதானால், சுதந்திரத்துக்குப்பிறகு காந்தி பிரதமராகியிருந்தால் அவர் மீதான நேர்மறை சித்திரங்களை அழித்துவிட்டே அவர் இறந்துபோயிருக்கக்கூடும். காந்தியின் இடம் என்பது அரசியல் அதிகாரத்துக்கு வெளியில் மட்டுமே பொருள் கொள்ளக்கூடியது. அதிகாரத்தின் மையத்தில் அது ஆவியாகிவிடும். வெளியில் இருக்கும் வரைதான் அது அறம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கும். அத்தகைய போராளிகளின் உச்சபட்ச சாத்தியமும் அவசியமும் அதுவே. ஷர்மிளாவுக்கும் இது பொருந்தும்.

ஐரோம் ஷர்மிளாவின் குறைந்த வோட்டு என்பது இரண்டாவது. முதலில் அவரது தோல்வி உறுதியாவது அவர் யாரை எதிர்த்து நின்றார் என்பதில் இருக்கிறது. முதலைமச்சர் ஒக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து நிற்கிறார் ஐரோம் ஷர்மிளா. அந்த வகையில் மக்களை மிகுந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தை செய்தவராகிறார் அவர். அவரது பதினாறு ஆண்டுகால போராட்டம் என்பது ஒரு எளிய மனுஷியின் பிடிவாதம். அதுவொரு அரசியல் அறிதல் முறையாகக் கனியவே இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த லட்சியவாத மூர்க்கத்தை அவரது தோல்வியாகக் கருதவேண்டியதில்லை. மாறாக அந்த குறியீட்டு இருப்பை கவுரவிப்பதன் மூலம் அவரை மதிக்கவேண்டும். அப்படியான குரல்களை மேலும் மேலும் உருவாக்கி நிறுத்துவதிலேயே ஜனநாயகத்தின் உயிர் இருக்கிறது. இதில் சோர்வடைய ஒன்றுமில்லை. அப்படி என்றால் அவரை தோற்கடித்ததன் மூலம் அந்த மக்கள் செய்த துரோகம் இல்லையா என்று கேட்கலாம். இல்லை என்றே நாம் நம்புகிறேன். ஏனெனில் ஐரோம் ஷர்மிளாவின் இடமும் இருப்பும் இதற்காக அல்ல என்று அந்த மக்கள் நினைத்தால் அது சரியாகவே இருக்கும். தொண்ணூறு பேர் ஷர்மிளாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நூற்று நாற்பத்து மூன்று பேர் நோட்டா பட்டனை அமுக்கியிருக்கிறார்கள்.

ஒக்ரம் இபோபி சிங்கை அந்த மக்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? சிங்கை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜேபியின் வேட்பாளரை விட இரண்டு பங்கு வாக்குகளை அவருக்கு அளித்து. என்ன சொன்னாலும் சரி, ஐரோம் ஷர்மிளா எனும் பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம் மிக்கது. காலத்தால் நிலைத்திருக்கும் கருத்துநிலை அது!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகியவை இவருடைய  நூல்கள்.

இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான  குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை.

கன்னடப்படமான கஜாவில் வரும் “ஸ்ரீகரனே ஸ்ரீநிவாசனே ” என்ற பக்தி பாடலை, சுஹானா பாடி முடித்தபோது, அந்நிகழ்ச்சியின் நடுவர்களும், பார்வையாளர்களும் ஆரவாரமான வரவேற்பை அளித்தார்கள். இஸ்லாமிய பெண் இந்து பக்தி பாடலை பாடுகிறார் என்பதற்காக அல்ல அந்த பாராட்டு. இசையில் ஒன்றி, சிறிதளவும் தவறின்றி, அந்த பாடலுக்கு தன்னை ஒப்பு கொடுத்து சுஹானா பாடிய விதம்தான் அவர்களை அப்படி பாராட்ட வைத்தது. ஆனால், சுஹானாவின் இந்த செயல் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

இதைவிளைவாக  ‘mangalore muslim’ என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில், ” பிற மதத்து ஆண்களுக்கு மத்தியில் பாடல் பாடி, பாராட்டு பெறுவது பெருமையல்ல என்றும் இஸ்லாமிய மதத்துக்கே களங்கம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றும்” கண்டனம் தெரிவித்து பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

மற்ற ஆண்களுக்கு மத்தியில் உங்கள் அழகைக்காட்டி பாடவைத்த உங்கள் பெற்றோருக்கு சொர்க்கமே கிடையாது என்றும், அந்தப்பெண்ணுக்கு எதிராக கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கடும் எதிர்ப்பின் விளைவாக சுஹானா பாடிய அந்தப் பாடல் யூ டியூபில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது

Capture.JPG

“இறைவனிடம் கையேந்துங்கள்” என்கிற பாடலை இன்றும் காலை பாடலாக கேட்கும் இந்துக்களுக்கு, இது போன்ற அடிப்படைவாதிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி பல்கலை பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை; பாஜகவின் நீதித்துறை தாக்குதல் !

சந்திரமோகன்

சந்திர மோகன்

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு, பாஜக ஆட்சி செய்யும் மஹாராஸ்ட்ராவின் கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவரோடு JNU மாணவர் ஹேம் மிஸ்ரா உட்பட நால்வர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட்டுகள் நலன் பாதுகாக்க, பழங்குடியினர் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் நோக்கத்திற்காக பேராசிரியர் சாய்பாபா மற்றும் தோழர்கள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக’வின் விருப்பப்படியே இத் தீர்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சாய்பாபா உள்பட் ஆறு பேரை கட்சிரோலி காவல்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டிக்கப்பட்டனர். சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கும் சாய்பாபா, பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறலுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதுதான் காவிப் பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு மூலக் காரணமாகும்.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

புதுக்கோட்டை, காரைக்கால் ஹைட்ரோகார்பன் திட்டம் சில தகவல்கள்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

2020 ஆண்டுக்குள்,எண்ணெய் எரிவாயு இறக்குமதியை பத்து விழுக்காட்டிற்கு குறைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப கடந்த 2015 ஆம்ஆண்டில் சிறு எண்ணெய் வயல்Discovered Small Field (DSF)கொள்கை உருவாக்கப்பட்டது.

அதாவது பெரும் எண்ணெய் வயல்களின் எண்ணெய் எரிவாயுவை எடுப்பதைப் போல சிறு எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் இயற்கை எரிவாயுவை எடுப்பதை ஊக்குவிக்கிற கொள்கை திட்ட மாற்றத்தை ஏற்படுத்துவது. அதன் தொடர்ச்சியாக எண்ணெய் எடுப்பு உரிமைக் கொள்கை(NELP)விதிமுறைகளிலும் சில தளர்வுகள் செய்யப்பட்டது.அதாவது எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

எண்ணெய் எடுப்பு நிறுவனங்களுக்கு சுதந்திரமாக விலை நிர்ணயம் செய்துக் கொள்கிற உரிமை வழங்கப்பட்டன,அதன் விருப்பம் போல சந்தைப்படுத்தலும் செய்துகொள்ளலாம்,முன்பண வைப்புத் தொகை கட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் நீக்கப்பட்டன.இந்த நடைமுறை அனைத்தையும் அரசின் சார்பாக ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் (Directorate General of Hydrocarbons) மேற்கொள்கிறது. நேரடியாக எண்ணெய் எரிவாயு துறையின் கீழ் இந்த இயக்குனரகம் செயல்படுகிறது.http://www.dghindia.org/

இந்த சூழலில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்திய எண்ணெய் நிறுவனம் கண்டறிந்த சிறு எண்ணெய் வயல்களில் எண்ணெய்
எரிவாயுவை எடுக்கிற திட்டத்திற்கு(DSF) ஒப்பந்தம் கோரப்பட்டு, அதில் முதலிடம் வந்த நிறுவனத்திற்கு
ஒப்பந்தம் வழங்கப்படவேண்டும் என்ற இயக்குனரகத்தின் பரிந்துரைக்கு கடந்த 15.2.2017 அன்று அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
இது தொடர்பான பத்திரிகை செய்தியும் ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் வெளியுட்டுள்ளது.
http://dghindia.gov.in/…/58a463707a613DSF_Press_Release_150….

இதன் மூலமாகத்தான் நாம் அனைவரும் இச்செய்தியை அறியப்பெறுகிறோம். அதன் சாராம்சம் வருமாறு, இந்தியா முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டதிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 23 கடல்பகுதியிலும், 8 நிலப்பகுதியிலும் வருகிறது.

குஜராத் மாநிலத்தில் – 14
ஆந்திர மாநிலதில்- 4
ராஜஸ்தான் மாநிலத்தில்-2
தமிழகத்தில் -2
மத்திய பிரதேசம் -1
மும்பை -6
கட்ச் -1
கோதாவரி படுகை -1

31 இடங்களுக்கு, 22 நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளது. 22 நிறுவனங்களின் 4 நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனம் மீதமுள்ளவை(18) தனியார் நிறுவனம் ஆகும். இந்த 18தனியார் நிறுவனங்களின் 15 நிறுவனங்கள் தற்போதுதான் முதல் முறையாக இப்பணியை மேற்கொள்ளவுள்ளார்கள்.

இத்திட்டத்தால் வரவுள்ள மொத்த வருமானம் சுமார் 46,400 கோடி ரூபாய். இதில் அரசுக்கு வரவேண்டிய ராயல்டி மற்றும் இதர பங்குகள் சுமார் 14,300 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டுள்ளது.

 

கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு வழங்கும் மெகா குலுக்கல் பரிசுகள்!

நாடு முழுவதும் ரொக்கமில்லா மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 340 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தினமணி வெளியிட்டுள்ள செய்தியில்:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற பின்னர், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

மின்னணு பணப் பரிவர்த்தனை மூலமாக ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக குலுக்கல் முறையிலான ரொக்கப் பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைத்து மக்களும், வியாபாரிகளும் இந்தத் திட்டத்தில் அடங்குவர். ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.50 முதல் ரூ.3,000 வரையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.
அதன்படி, கிறிஸ்துமஸ் தினமான வரும் 25-ஆம் தேதியன்று முதல் குலுக்கலும், அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதியன்று மெகா குலுக்கலும் நடைபெறுகின்றன என்றார் அமிதாப் காந்த்.

யாருக்கெல்லாம் பரிசு? 
1. அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டம் (லக்கி கிருஹக் யோஜனா): குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 100 நாள்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

  1. மின்னணு வழி வர்த்தகர் திட்டம் (டிஜி-தன் வியாபார் யோஜனா): மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனையை ஏற்கும் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் தினந்தோறும் பரிசுகள் வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 வழங்கப்படும்.

  2. மெகா குலுக்கல் பரிசுகள்: மெகா குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்ற வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இதேபோல், வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.

மோடிக்கு பொருளாதாரம் புரியுமா? அவர் பெற்ற பட்டத்தை ஏன் காண்பிக்க மறுக்கிறார்?: அரவிந்த் கெஜ்ரிவால்

ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மோடி பெற்ற கல்வியறிவு என்ன? என கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.

“மோடி என்ன படித்திருக்கிறார் என தெரிந்துள்ள மக்கள் விரும்புகிறார்கள். அவரால் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியுமா?” என ட்விடியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

மோடியின் பட்டப்படிப்பு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. மோடி தன்னுடைய சிறந்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட தடை கேட்க அனுப்பியுள்ளாரா? ஏன்? மோசடி பட்டம் என்பதால எனவும் கெஜ்ரிவால் ட்விட்டியுள்ளார்.

“உள்நாட்டு போர் உண்டாக்கும் திட்டமிருக்கிறதா?”: வங்காளத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது குறித்து மமதா காட்டம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி நடத்தினார். மோடியை அரசியலிலிருந்து நீக்கியே தீருவேன் என ஆவேசத்துடன் பேட்டியளித்தார்.

இந்நிலையில் வங்காளத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

“நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… பொருளாதார எமர்ஜென்ஸிக்கு அப்பால் ஜனநாயகத்தின் மீதும் கூட்டாட்சி அமைப்பின் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம், அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?” என தெரிவித்தார் மமதா.

“இன்று வங்காளம், நாளை பிகார், உ.பி.யாக இருக்கலாம். இது அவசரநிலையைவிட மோசமான நிலைமை. உள்நாட்டிலே ரத்தம் சிந்தும் போர் மூள வைக்கும் திட்டம் உள்ளதா?” எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

சுங்கச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப் பெறும்வரை தலைமைச் செயலகத்தை விட்டு செல்லப் போவதில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இராணுவம் வெளியிட்ட குறிப்பில், இது வழக்கமான சோதனை முறைதான் என தெரிவித்துள்ளது.

சில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர்

மோடி அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் தெருக்களில் நிற்க, வெளிநாட்டினர் தெருக்களில் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் புஸ்கர் நகரில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த பயணிகள், தங்களுடைய பயணத்துக்காக வித்தைகளைக் காட்டி பிச்சை எடுத்துள்ளனர்.

ஆண்கள் இசைக் கருவிகளை வாசிக்க, பெண்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காண்பித்து புஸ்கரின் பிரம்மா கோயில் அருகே பிச்சையெடுத்த காட்சியை மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

தங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வங்கியிலிருந்தும் ஏடிஎம்மிலிருந்தும் எடுக்க முடியாததால் இப்படியான ‘முயற்சி’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லிக்குச் செல்ல பணம் திரட்டி தங்கள் நாட்டு தூதரங்களிடம் உதவி கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி விவசாயக் கடன்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்குவதற்கு நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர்,

“தற்போது ரபி பருவச் சாகுபடி நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு தடையின்றி பணம் கிடைத்திட வேண்டும். இதற்காக, விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடனுதவி வழங்குவதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடியை நபார்டு வங்கி அளிக்கும். இதனால், 40 சதவீதத்துக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெறுவர்.

ரபி பருவத்தில் விதைப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்குத் தேவையான ரொக்கப் பணம் விரைவாகவும், தடையின்றியும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தேவையான அளவு பணம் இருப்பில் வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கும், வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, பயிர்க் காப்பீடு தவணைத் தொகையை விவசாயிகள் செலுத்துவதற்கு 60 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் விதைகள் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உரம் வாங்க கடன்:

வங்கிச் சேவை பெற முடியாமல் அல்லது பணத் தட்டுப்பாடு காரணமாகவும் தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் அடிப்படையில் உரங்களை வழங்க வேண்டும் என்று உர தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் ரத்து:

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு டிசம்பர் 31 வரை சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கிகளுக்கு செலுத்துவதற்காக வணிகர்களால் பிடித்தம் செய்யப்படும் “எம்டிஆர்’ சேவைக் கட்டணமும் டிசம்பர் 31 வரை வசூலிக்கப்பட மாட்டாது என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு எப்போதும்போல் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ஒடிசாவில் இரண்டு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் மரணம்

ஒடிசா மாநிலத்தில் பழங்குடிகள் அதிகமாக வாழும் மல்கன்கிரி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்  உயிரிழந்துள்ளனர். Japenese Encephelitis என்ற ஒருவகை வைரஸ் தொற்று நோய் காரணமாக இறந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சத்து குறைபாடும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது. இந்தச் செய்தி பெரும்பாலான ஊடகங்களில் பதிவாகவில்லை. இங்கே முழு விவரத்தையும் படிக்கலாம்.

இந்நிலையில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. நவீன் பட்நாயக் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leenus Roffun தனது முகநூலில் பகிர்ந்த கருத்து:

ஓடிசா மல்கன்கிரியில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ஒடிசா அரசின் அலட்சியத்தினாலும் உதாசீனத்தாலும் இறந்துள்ளனர். எதற்காக? மல்கன்கிரியில் உள்ள கனிம வளத்திற்காகவும் நிலத்திற்காகவும்.300 குழந்தைகள் இறந்த பின்பும் கூட ஓடிசா ஊடகங்களிலோ தேசிய ஊடகங்களிலோ பெரிய சலனம் ஏதும் இல்லை. மிகவும் கால தாமதமாக அரசின் சார்பாக அனுப்பபட்டஆய்வு குழுவோ ஆதிவாசி குழந்தைகள் விஷ விதைகளை உண்டது தான் காரணம் என்று ஆதிவாசிகள் மீது தவறை திருப்பி அரசை காக்க முயல்கிறது . அங்குள்ள அடிப்படை சுகாதார வசதிகளின் நிலையினை பற்றியோ அங்கன்வாடிகளின் நிலையினை பற்றியோ குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றியோ இந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க போதுமான திறன் அங்குள்ள மருத்துவர்களுக்கு உள்ளதா என்பதை பற்றியோ அந்த ஆய்வறிக்கை பேசவில்லை. ஒரு புறம் போலி மோதல்கள் மூலமாகவும் மற்றொரு புறம் உயிருக்கு போராடும் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை கூட மறுப்பதன் மூலமாகவும் சப்தமே இல்லாமல் ஒரு இன படுகொலையையே நிகழ்த்தி வருகிறது நவீன் பட்நாயக் அரசு ..

கருப்புப் பண ஒழிப்புக்கு இதுவரை 72 பேர் பலி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என தீடீரென அறிவித்தார்.  செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார். செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக வங்கிகளில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் தங்களது பணத்தை பெறுவதற்கும் பணத்தைமாற்றிக் கொள்வதற்கும்  மக்கள் கூடுவதால் கூட்ட நெரிசலிலும், கடும் வெயிலிலும் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது என்கிறது தீக்கதிர் நாளிதழ்.

நவம்பர் 22ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நஜஃப்கர்கில் உள்ள ஓரியண்டல் வங்கி கிளையில் சதீஸ் குமார் (49) என்ற காய்கறி வியாபாரி வரிசையில் காத்திருந்தார். காலை11.30 மணிக்கு வங்கிக்கு சென்றவர் செல் போன் மூலம் மதியம் 2 மணிக்குள் பணத்தை டெபாசிட் செய்துவிடுவேன் என்று மனைவியிடம் கூறியுள்ளார். பின்னர் 2.30 மணியளவில் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது உடையில் ரூ.50,000 பணம்இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதேபோன்று பழைய டெல்லியில் உள்ள வங்கி முன்பு 8 மணி நேரம் காத்து நின்ற 70 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும் உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோரியாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 65 வயதான ராம்நாத் குஷ்வாகா கூட்டநெரிசலில் மிதிப்பட்டு இறந்தார். குல்ரிகா கிராமத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் குஷ்வாகா தனது மகளின் பிரசவத்திற்காக பணம் எடுக்க வரிசையில் நின்றுள்ளார்.

தமிழகத்தில் ரூபாய் நோட்டு பிரச்னையால் குறித்த நேரத்தில் பணம் கட்ட முடியாமல் கோவையைச் சேர்ந்த குழந்தை ஒன்று இறந்துவிட்டது.

வங்கியில் வரிசையில் நின்றவர்கள் மட்டுமல்லாது, கடுமையான பணிச்சுமை காரணமாக வங்கி ஊழியர் 11 பேர் இறந்துள்ளதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி,

“இங்கே என்ன நடக்கிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறதா? ஏன் இந்த தனியார் நிறுவனம் மட்டும்?” என கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், இங்கே பணத்தை விநியோகிப்பது மட்டும் பிரச்னை இல்லை.  போதுமான அளவு பணத்தை வங்கிகளுக்கு மோடி அரசு அளிக்கவில்லை என்பதே பிரச்னை என்றும்

தனியார் நிறுவனங்களுக்கு பணத்தை அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு வங்கிகளுக்கு குறிப்பாக கிராமப்புற வங்கிகளுக்கு போதிய பணத்தை அளிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெபிட் கார்டு மூலம் ரூ. 2000 பெறலாம்: மத்திய அரசின் முகவராக பிக் பஜார்!

ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ டெயில் நிறுவனம் மூலமாக டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெறலாம் என பிக் பஜாரின் நிறுவனர் கிஷோர் பியானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நாளை மறுநாள் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப் புற பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களை வளர்த்துவிடுவதாக கண்டனம் எழுந்துள்ளது.

 

தூக்கம் இல்லாமல் தொடர்ந்து பணி: வங்கியிலேயே மயங்கி விழுந்த ஊழியர்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை தடை செய்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த திடீர் அறிவிப்பால் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் காத்திருக்கின்றனர். அறிவிப்பு வந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் கூட்டம் குறையவில்லை. வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணிச்சுமை தாங்காமல் 11 பேர் இறந்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடோ வங்கி கிளையில் பணியாற்றும் 45 வயதான காசாளர் வர்ஷா, 17 மணி நேர பணிச்சுமையால் பணி இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார்.  மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டு காப்பாற்றப் பட்டிருக்கிறார் வர்ஷா. மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போதிய ஊழியர்களை வங்கிகளுக்கு நியமித்து, நிலைமை சீராக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்த போதும், வங்கி ஊழியர் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

 

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதல்வர் சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய அரசை கண்டித்து, திருவனந்தபுரம் ரிசர்வ் பேங்க் முன்பாக, கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் நாளை சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற உள்ளது.

முன்னதாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் 4474 பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு /நெசவாளர் கூட்டுறவு / மீனவர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவைகளுக்கு பணம் பட்டுவாடா மற்றும் கடன் வழங்குதல் மற்றும் வசூல் பணிகளை மாநிலத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், இதன் 700-க்கு மேற்பட்ட கிளைகளும் செய்து வருகின்றன. இந்த 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற வங்கிகளாகும்.

கடந்த 31-3-2016 அன்று இந்த வங்கிகள் அனைத்தும் லாபமடைந்த வங்கியாகவும், விவசாயிகளுக்கு கடன் உரிய நேரத்தில் வழங்கும் வங்கியாகவும், மாநில அரசு/மத்திய அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் வங்கியாகவும் திகழ்கின்றன. கடந்த 14-11-2016 அன்று பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றவோ, வைப்புத் தொகையாக செலுத்தவோ கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 6000 கோடிக்கு மேற்பட்ட விவசாய கடன்கள் மற்றும் பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கிட வேண்டிய உரம், விதை மற்றும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்ய இயலாத வகையில் இச்சங்கங்களின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள்  உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடின்மையால் முடங்கி கிடக்கின்றன. தமிழகத்தின் கிராமப்பொருளாதாரம் வெறிச்சோடிப் போய்கிடக்கிறது. கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு அறிவித்து, அதன் மூலம் வெளியிடப்பட்ட இந்த ரிசர்வ் வங்கியின் ஆணையினால் சாதாரண ஏழை விவசாயிகள், விவசாயக்கூலிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பால், பட்டு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 80 லட்சத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், பால், நெசவு, மீனவர் மற்றும் பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம், பிற வங்கிகளில் செய்யப்படுவது போல் பணப்பரிவர்த்தனை செய்யவும், கிராமப்பொருளாதாரத்தை உயிரோட்டத்துடன் செயல்பட வைக்கவும்,  14-11-2016 வெளியிட்டுள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது.

செல்லாத நோட்டுக்குப் பதிலாக வங்கிகளில் வழங்கப்படும் தொகை ரூ.4,500ஆக உயர்வு

செல்லாத நோட்டு அறிவிப்பால் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.4,000 வரை ரொக்கமாகவும், மீதத்தொகை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணம் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்ட நிலையில், அதிகபட்ச தொகை வரம்பை ரூ.4,000-த்திலிருந்து ரூ.4,500ஆக அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏடிஎம்கள் மூலம் தினமும் எடுக்கப்படும் தொகைக்கான உச்சவரம்பு ரூ.2,000-த்திலிருந்து ரூ.2,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஒரு வாரத்தில் நபர் ஒருவர் ரூ.24,000 வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே: மார்கண்டேய கட்ஜு

ரூபாய் 500 மற்றும் 1,000 நோட்டுகளை திரும்பபெறும் அரசின் நடவடிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜு, இன்றைய பணவீக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் முறை குறித்து விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான கிராமங்களில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் இல்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த இந்த அரசின் ஸ்டண்டே 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு. அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மக்கள் வரவேற்பதில் இருந்தே 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே என்ற தனது முந்தைய கருத்து உறுதியாகியுள்ளதாகவும் கட்ஜு பதிவிட்டுள்ளார்.

’துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!’: மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் தாக்கு!

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடியாக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘நவீன கால துக்ளக்’ போல மோடி செயல்படுவதாக தாக்கியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான மணிஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், முகது பின் துக்ளக் ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவித்திருப்பதன் மூலம் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கு மாற்றிக்கொள்ளவிருக்கிறார். துக்ளக்கின் ஆன்மா உயிர்த்தெழுகிறது!” என்று தெரிவித்துள்ளார்.

 

நவீன கால துக்ளக் அவர்கள் மீது அணுகுண்டை வீசியிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு ரூ. 100 மதிப்பைப் போல இப்போதைய ரூ. 1000.