“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.

கனகா வரதன்

திருநங்கை, திருநம்பி, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) மற்றும் பல பைனரி அல்லாத பாலின அடையாளங்களை கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கான “திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” அம்மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே இன்று மத்திய அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இப்பொழுது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துடனும், பிற்போக்கு மனப்பான்மையுடனும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட இம்மசோதா மாற்றுப்பாலின சமூகத்தின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர்-26 அன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறைந்த பட்சம் தேர்வு குழுவிற்கு அனுப்பி மறுஆய்வு செய்யுங்கள், மக்களின் குறைகளை கேட்டறியுங்கள் என்பதை கூட ஆளும் அரசு ஏற்க தயாராக இல்லை.

மாற்றுப்பாலின மக்களுக்காக தனி நபர் மசோதாவை கொண்டுவந்தவரும், அம்மக்களுக்காக தொடர்ந்து குரலெழுப்புபவருமான திருச்சி சிவா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை, “பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்பதாக இருந்தது. மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதிபலிப்பாக ஒலித்த அக்குரல் ஒரு கட்டத்தில் வேண்டுகோளாகவும் மாறியிருந்தது. காசுமீர் மாநில உரிமைகள் பறிப்பு முதல் பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்து பாசிச போக்குடன் ஆளும் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களின் வரிசையில் இன்று திருநர் மசோதாவும் இணைந்துள்ளது.

பெரும் நெருக்கடிகளுக்கிடையே தங்கள் சொந்த பொருளையும், நேரத்தையும், மூலதனங்களையும் செலவு செய்து கிட்டதட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மசோதாவிற்கு எதிராக தொடர் சனநாயக போராட்டங்களை மேற்கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கும், தோழமை சக்திகளுக்கும் இன்றய தினம் பெரும் மன உளைச்சலை தரக்கூடிய ஒரு கருப்பு நாளாகவே இருக்கும். ஆளும் அரசால் புக்கணிக்கப்பட்ட எல்லா ஒடுக்கப்பட்ட சமூகத்தை போலவும் மாற்றுப்பாலின சமூகமும் ஒரு நீண்ட சட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் நிராகரிக்கப்பட்ட, மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதான கோரிக்கைகளில் சில,
திருநர் நபர்களின் அடையாளத்திற்கான அங்கீகாரம் இந்த மசோதா திருநர் மக்களின் அடிப்படை உரிமையான பாலினத்தை சுய நிர்ணயம் செய்யும் உரிமையை மறுக்கிறது. திருநர் மக்களின் கோரிக்கை எங்கள் சொந்த பாலினத்தை அடையாளம் காண்பது எங்களின் அடிப்படை உரிமை (இது இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமை, 21 வது பிரிவின் கீழ் ஒரு பகுதியாக அமைகிறது), இந்த உரிமையை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் நல்சா தீர்ப்பிலும், புட்டசாமி தீர்ப்பிலும் இதை அங்கீகரித்து உள்ளது.

நல்சா தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள், சுயமாக பாலினத்தை அடையாளம் காணும் உரிமையை வழங்குங்கள். எந்தவொரு அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை இல்லாமல் பாலினத்தை ஆண், பெண் அல்லது திருநராக சுயமாக அடையாளம் காணும் உரிமையை அங்கீகரியுங்கள். சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களில் பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான வழிமுறைகள் சுய அடையாளத்தின் அடிப்படையில் அமைந்திடல் வேண்டும்.

இடஒதுக்கீடு இம்மசோதா எந்த ஒரு இடஒதுக்கீட்டையும் வழங்கவில்லை. திருநர் மக்களின் கோரிக்கை இடஒதுக்கீட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் உடனே இந்த மசோதாவில் நிறுவ வேண்டும். பொது மற்றும் தனியார் துறையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநர்களுக்கென பிரத்யேக (கிடைமட்ட) இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இடஒதுக்கீட்டின் விழுக்காடானது திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளடக்கிய திருநர் மற்றும் இன்டர்செக்ஸ் நபர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு தீர்மானிக்கப்பட வேண்டும்.

குற்றங்களும் தண்டனைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், திருநர் நபர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று மசோதா கூறுகிறது. இது மாற்றுப்பாலின மக்களுக்கு எதிரான நேரடியான பாகுபாடாகும்.

திருநர் மக்களின் கோரிக்கை மாற்றுப் பாலினத்தவருக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு இணையாக இருந்திடல் வேண்டும்.

குடும்பம் மற்றும் மேம்பாடு

இந்த மசோதாவில் திருநர் குழந்தைகள், அவர்கள் பிறந்த குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது. பிறப்பு குடும்பங்கள் பெரும்பாலும் இந்நபர்களுக்கு எதிரான வன்முறையின் முதல் தளமாக இருந்தாலும் இம்மசோதா அதை முற்றிலும் மறுதலிக்கிறது. அதுமட்டுமின்றி இத்தகைய நிலைமைகளில் இருந்து தப்பிக்க திருநர் நபர்களுக்கு பிற திருநர் சமூக உறுப்பினர்களின் உதவி இருந்தால், சமூக உறுப்பினர்கள் 4 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் எனவும் வரையறுக்கிறது.

திருநர் மக்களின் கோரிக்கை

பாரம்பரிய ஹிஜ்ரா குடும்பங்கள் மற்றும் திருநங்கை ஜமாத் அமைப்புகளை அங்கீகரித்து சேர்க்க வேண்டும்.
“மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு” என்ற கட்டமைப்பை கைவிட்டு “திறன் மேம்பாடு” திட்டங்கள் மற்றும் மையங்களை அமைத்தல் தேவை. இந்த மையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி திருநர் ஆணையத்தின் பரிந்துரையின் படி அமைந்திட வேண்டும்.

கனகா வரதன், சமூக செயல்பாட்டாளர்.

தினமணியின் பார்ப்பனீய விஷமத்தனம்!

சந்திரமோகன்

தினமணி தமிழ் நாளேட்டில், நடுப்பக்கத்தில் “இட ஒதுக்கீடு சலுகை : விட்டுக் கொடுக்க தயாரா? ” என்ற தலைப்பில், பூ.சேஷாத்ரி என்ற தினமணியில் பணியாற்றும் பார்ப்பனர் கட்டுரை எழுதியுள்ளார்.

எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள் & பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.

1) “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது ” எனத் துவங்கி, “பொருளாதாரத்தில் மேம்பட்ட SC &ST பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இட ஒதுக்கீடு எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும் ” என முடிக்கிறார்.

பொருளாதாரத்தில் மேம்பட்ட என்பதற்கு “ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் – 5 ஏக்கர் நிலமா ” என அவர் எந்த அளவுகோளும் சொல்லவில்லை ; எவ்வளவு பேர் வருவார்கள் என்றும் சொல்லவில்லை. பார்ப்பன குசும்பும், காழ்ப்புணர்ச்சியும் இத்துடன் நிற்கவில்லை.

2) “10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார்” என மொட்டையாக ஒரு கருத்து சொல்லுகிறார். எப்போது தெரிவித்தார்? கல்வி, வேலைவாய்ப்பு விசயத்தில் சொன்னாரா? என்பது பற்றி எல்லாம் விளக்கவில்லை. பலரும் இவ் விசயத்தில் குழம்புகிறார்கள்.

இரட்டைவாக்குரிமை பற்றிய விவாதத்தில் தான் அம்பேத்கர் , மக்கள் மன்றங்களில் 10 ஆண்டு கால அரசியல் இட ஒதுக்கீடு பற்றி முன்மொழிகிறார். காந்தி தலையீட்டால் இரட்டை வாக்குரிமை முடிவுக்கு வந்துவிட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே! சாதீயஅமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடுதொடர வேண்டும் என அம்பேத்கர் பல இடங்களில் தெரிவித்து உள்ளார்.

3) அம்பேத்கர் இயக்க ஆய்வாளர் சுஹாஸ் சோனாவணே என்பவர் ‘தலித் அமைப்புகளோ, அம்பேத்கரியவாதிகளோ அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரவில்லை; இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை ; இது தேவையில்லாதது” எனக் கூறிவிட்டாராம். !😢

எனவே பூ.சேஷாத்ரி அய்யர் தாங்களாகவே பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததுபோல … பொருளாதாரத்தில் மேம்பட்ட SC & ST யினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என விட்டு தரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள முன்னேறிய சாதிகளுக்கு, வசதி படைத்த பார்ப்பனர்கள் விட்டு கொடுக்கலாமே! பின்வரும் RTI தகவல் ஒன்றை பாருங்கள்!

Kind Attention : பூ.சேஷாத்ரி & வைத்யநாதன்!

1- ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த பதவிகள் – 49.
‘இவர்களில் 39 பிராமணர்கள்.
SC’ ST – 4. ஓ.பி.சி – 06

2- துணை ஜனாதிபதி செயலகத்தின்
பதவிகள் – 7
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்சி – எஸ்டி – 00. ஓ.பி.சி. -00

 1. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
  பிராமணர்கள். 17
  SC’ . ST- 01 . ஓ.பி.சி.-002

4- பிரதமரின் அலுவலகத்தில்
மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள். 31
SC ST – 02 OBC – 02

 1. விவசாயத் திணைக்களத்தின்
  மொத்த இடுகைகள் – 274.
  பிராமணர்கள். 259
  SC’ . ST-05. ஓ.பி.சி.-10
 2. மொத்த அமைச்சகத்தின்
  பாதுகாப்பு அமைச்சகம் 1379.
  பிராமணர்கள். 1300
  SC’ ST- 48. ஓ.பி.சி. -31

7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 209.
பிராமணர்கள். 132
SC’ ST- 17. ஓ.பி.சி. -60

8 – நிதி அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 1008.
பிராமணர்கள். 942
SC’ ST- 20. ஓ.பி.சி.-46

9 – பிளானட் அமைச்சகத்தில்
மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள். 327
SC’ ST-19. ஓ.பி.சி.-63

10- தொழில் அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 74.
பிராமணர்கள். 59
SC. SI- 4. ஓ.பி.சி. -9

11- கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. பிராமணர்கள். 99
SC- SI. 00 ஓ.பி.சி. -22

12 – கவர்னர் மற்றும் லெப்டினன்ட்
கவர்னர் ஒட்டுமொத்தம் – 27
பிராமணர்கள். 25
-SC- SI. 00. ஓ.பி.சி. -2

13- தூதுவர்கள் வெளிநாட்டில்
வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள். 140
SC’ ST-00. ஓ.பி.சி.-00

14- மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.
பிராமணர்கள். 100
SC’ . ST -03. OBC- 05

15 – மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் 26.
பிராமணர்கள். 18
SC’ . ST- 01. ஓ.பி.சி.-7

16- உயர் நீதிமன்ற நீதிபதி 330.
பிராமணர்கள். 306
SC’. ST- 04. ஓ.பி.சி. -20

17 – உச்ச நீதிமன்ற நீதிபதி 26.
பிராமணர்கள். 23
SC’. ST-01: ஓ.பி.சி.-02

18- மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
பிராமணர்கள். 2750 SC & ST
-300 மற்றும் 350 ஓ.பி.சி..

கோயில்கள், வழிபாட்டு தலங்கள், திருமணங்கள் & கருமாதிகளில் பிராமணர்கள் வாய்ப்பு 99% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைகளைப் பெற்றனர்.

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றது.)

பூ.சேஷாத்ரி அய்யர் அவர்களே!

இது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்ற வகையான தகவல் ஆகும். மத்திய, மாநில அரசுகளின், பொதுத்துறையின் கணிசமான உயர்பதவிகளை, இடைநிலை பதவிகளை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது தாங்கள் அறியாத செய்தியல்ல! (தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், IT துறைகளை ஆக்கிரமித்துள்ள பார்ப்பனர்கள் பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. )

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பார்ப்பனர்கள் தாமாகவே முன்வந்து “இத்தகைய அரசுப் பணிகள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் – ஏழை பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் ” என்று சொன்னால், உயர்சாதி ஏழைகள் பயனடைய வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

தாங்கள் இதைப் பற்றியும் கட்டுரை ஒன்றை தினமணியில் எழுத வேண்டும்.

பின்குறிப்பு :

அய்யா,
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

பிச்சைமுத்து சுதாகர்

நாடக மாமேதை “எஸ் வி ஷேகர்” தான் சார்ந்த பிராமண சமூக மாணவர்கள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக முக நூலில் பதிவிட்டுள்ளார். சரி, அவர் சார்ந்த சமூகத்திற்காக பேச அவருக்கு உரிமை இருக்கிறது என்று யோசித்தால் அப்பதிவில் உலக மகா பொய்யை வடி கட்டாமல் இறக்கி உள்ளார். இதுதான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்துள்ளது.

ஒரு பொய்யை ஷேகர் போன்ற ஆட்கள் உண்மை என இவ்வளவு தைரியமாகச் சொல்லும் போது ஒரு உண்மையை என்னைப் போல் படித்தவன் சொல்லாமல் போனால் பெரும் பாவம் வந்து சேரும்.

மிஸ்டர் ஷேகர் நீங்கள் சொல்வது போல் “வெறும் 35 மார்க்” வாங்கிய எந்த தலித் மாணவனுக்கு மருத்துவர் சீட் கிடைத்துள்ளது. ஆதாரத்தோடு நிரூபியுங்கள். இந்த பதிவை நான் பப்ளிக் மோடில் உங்களுக்காக‌ ஓப்பனாகவே வைத்துருக்கிறேன்.

தமிழக அரசின் மருத்துவப் படிப்பிற்கான 2016 ஆம் ஆண்டின் கட் ஆப் மார்க் மதிப்பெண்ணை இணைத்திருக்கிறேன். மீண்டும் இங்கே தருகிறேன். கண்ணில் ஜலம் விட்டுப் பாருங்கள்.

பிராமணர்கள் வரும் ஓ.சி பொதுப் பிரிவிற்கும் பி.சி பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 0.25. அப்படியே பட்டியல் இனத்திற்கான கட் ஆப் வித்தியாசம் 2.75.

உண்மை இவ்வாறு இருக்க எதற்கு அண்டா பொய் சொல்ல வேண்டும்.

ஆக இடை நிலை சாதிகளுக்கும், பட்டியல் இன மக்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டுவதுதானே உங்கள் நோக்கம் .

அப்புறம் இன்னொரு பதிவில் நீட் தேர்வு கொடுமையால் இறந்து போன அரியலூர் சகோதரி அனிதாவிற்கு “கல்வியைத் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என அட்வைஸ் செய்கிறீர்கள்”.

இதையே ஏன் நீங்கள் சார்ந்திருக்கும் பிராமண மாணவர்களுக்கு சொல்லலாமே.

எனக்கு தெரியும் உங்களைப் போன்ற பொய்யர்கள் ஒரு நாளும் சொல்ல மாட்டீர்கள். உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும். அதுதானே.

ஷேகர்களின் பலமே கூசாமல் பொய்யை பேசி விட்டு பைனல் டச்சாக ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகனை கோர்த்து விடுவது. நம்மவர்களின் பலவீனமே அதை என்ன ஏதென்று படிக்காமல் அடுத்தவனுக்கு பகிர்வது.

ஷேகர் உங்களைப் போல எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனக்கு தெரிந்த தமிழ் மொழியிலேயே சொல்கிறேன்

“படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோன்னு போவான்” ‍ -பாரதியார்.

இப்படி பொய்யாய் புழுகித் திரியும் நீங்கள் ஐயோவென போகும் காலம் வெகு விரைவில் இல்லை.

இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து,  உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களால் மட்டுமே 49.5 % இடஒதுக்கீட்டில் இடங்களைப் பெறமுடியும். சிபிஎஸ்இ நீட் தகவல் 2017 வெளியீட்டில் ‘க்ரீமி லேயர் விண்ணப்பதாரர்கள், ஓபிஸி பிரிவின் கீழ் வராதவர்கள்,  இட ஒதுக்கீடு பெறாத (Unreserved (UR) ) என்ற பிரிவை குறிக்கும்படி’ சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு, ஓசி விண்ணப்பதாரர்கள் பெற்ற இந்திய அளவிலான ரேங்கை குறிப்பிட்டால் மட்டும் போதும். இந்த ஆண்டு, ரேங்குடன் சேர்த்து இட ஒதுக்கீடு பெறாத என்ற தகவலையும் சேர்த்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது அந்த வெளியீடு.

உதாரணத்துக்கு, இந்த புதிய அறிவிப்பின் மூலம், இந்திய அளவில் 80,000வது ரேங்க் வாங்கிய ஓசி மாணவர், இட ஒதுக்கீடு பெறாத பிரிவின் கீழ் 40,000வது ரேங்க் பெற முடியும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 2013 ஆம் ஆண்டு, வருமான உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் 12 இலட்சம் ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 9 இலட்சம் ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டும் என்று வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் மண்டல்குழு பரிந்துரைத்தவாறு 27 விழுக்காடு இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு நிரப்ப முடியாமல், பாதி அளவுதான் ஒதுக்கீடு செய்கின்ற நிலைமை இருப்பதால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.
தற்போதுள்ள நிலையில் (கிரீமிலேயர்) வருமான உச்ச வரம்பு 6 இலட்சம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தால் வருமான உச்ச வரம்பை ரூ.15 இலட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

 

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் வசந்தா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2013-இல் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஏ. செல்வம், பொன். கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்,

“நாட்டில் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக ஐஐடி திகழ்கிறது. இது பிற கல்வி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நியமனங்கள், ஐ.ஐ.டி., விதிமுறைகளுக்கு முரணாக நடந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்வுகள் கடந்த 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றவை.

அந்தத் தேர்வுகளில் தேர்வானவர்கள் எல்லோரும் தற்போது ஓய்வு பெற்றிருப்பார்கள். பேராசிரியர்கள் நியமனத்தின் முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுவதால், எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே, சி.பி.ஐ., விசாரிக்கும்படி ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்கிறோம். மனுதாரர் வசந்தா ஓய்வு பெற்று விட்டார். எனவே, 1995-ஆம் ஆண்டு ஜூலை 27 முதல் இணைப் பேராசிரியராகவும், 1997-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் ஓய்வு பெற்ற நாள் வரை பேராசிரியராகவும் பணி செய்ததாக அவரைக் கருத வேண்டும்.

மேலும் அந்தத் தேதிகளில் இருந்து இந்தப் பதவிகளுக்கு வழங்கவேண்டிய ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் வசந்தாவுக்கு ஐஐடி கல்வி நிறுவனம் வழங்கவேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

17 ஆண்டுகள் நடந்த இந்த சட்டப் போராட்டம் குறித்து, பேரா. வசந்தா கந்தசாமி சொல்லும்போது,

“இறுதியாக தீர்ப்பு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது பற்றி 1997-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தேன். இறுதியாக, நீண்ட இருளுக்கும் ஒடுக்குமுறைக்கும் வெளிச்சம் கிடைத்துள்ளது.

தகுதியில்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்ட நான்கைந்து பேரால் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பாதிக்கப்படுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும்.

என்னுடைய பணியில் முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களை நான் இழந்துவிட்டேன். என்னுடைய ஆய்வுப் பணிகளும் நூல்களும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் மெட்ராஸ் ஐஐடி எனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் புறக்கணித்தது. 600 ஆய்வுக் கட்டுரைகளையும் 81 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் ஐஐடி என்னை பேராசிரியராக வர தகுதி இல்லை என நினைக்கிறது.

 

சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் நான் துணை வேந்தராகவும் வந்திருப்பேன். என்னுடைய இழப்பீட்டை எப்படி அவர்கள் நிவர்த்தி செய்ய முடியும்?” என்கிறார் கனலுடன்.

பேரா. வசந்தாவின் இணையதளம், உலக அளவில் முக்கியமான தரவு தளமாக உள்ளது. ஒரு நாளில் 10 ஆயிரம் பேர் வந்து பதிவேற்றப்பட்டுள்ள இ- புத்தகங்களை பார்வையிடுவதாக தெரிவிக்கிறார் வசந்தா.

கல்பனா சாவ்லா விருது பெற்ற இவர், 13 ஆய்வு மாணவர்களுக்கும் 100க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்களுக்கு கணிதவியல் உயர்கல்வியில் உதவியிருக்கிறார். பேரா. வசந்தாவின் இந்த சட்டப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முறை வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி, டெக்கான் கிராக்கல் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனதுக்கு எதிரானது”: குஜராத் நீதிமன்றம்

 

உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் பாஜக அரசின் அவசரச் சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது. அவ்வாறான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, படிட்தார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கடந்த மே 1-ம் தேதியன்று அவசரச் சட்டம் ஒன்றை பிறபித்தார். அரசின் புதிய அவசரச் சட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உடைய உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, குஜராத்தில் ஏற்கெனவே இடஒதுக்கீடு பட்டியலில் இல்லாத- அதேநேரம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பதுதான் இந்த அவசரச் சட்டத்தின் சாரம்.

ஆனால், இதை எதிர்த்து சமூக ஆர்வலரான ஜெயந்த் பாய் மனனி என்பவர், அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல், திடீரென இப்படி ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குஜராத் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் செல்லாது என்றும், அது ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.

குஜராத்தில் உயர்சாதியினராக இருப்பவர்கள் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம், தற்போது நாட்டில் அமலில் இருக்கும் சமூகரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரத்தால் தூண்டிவிடப்பட்ட ஒன்றே ஆகும். இப்போராட்டத்தை காரணம் காட்டி பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன் மூலம் உயர்சாதியினரின் வாக்குகளை முழுமையாக கைப்பற்றிவிட முடியும் என கணக்கு போட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அந்தக் கணக்கை தகர்த்துள்ளது.

தலித்துகளுக்கு மேயர் பதவி: 10 ஆண்டு கால நீதிமன்றப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், ரமேஷ்நாதன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், “நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தி உள்ளபடியும், தலித் மக்கள் அதிகமுள்ள மாநகராட்சியில், அந்த மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.7 சதவீதம் தலித் மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

எனவே, சென்னை மாநகராட்சி மேயர் பதவி தலித் மக்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டுகளில் இதற்கு முரண்பாடாக நடைபெற்று வந்துள்ளது.

இதேபோல் சேலம் மாநகராட்சி மேயர் பதவியானது, தலித்துகள், பெண்கள் என சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த மாநகராட்சியிலும், துணை மேயர் பதவியில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை. எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் உள்ள பெண்கள் என்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை தலித்துகளுக்காக மட்டும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல, துணை மேயர் பதவிகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

UPSC தேர்வில் முதலிடம் பெற்ற டினா பெயரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை திணிக்கும் மோடி பக்தர்கள்!

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற அமைப்பை சட்டப்பூர்வமாக உருவாக்கவும் பயன்படுத்திக்கொண்டார். வயதுவரம்பு, தேர்வு எழுதும் எண்ணிக்கை ஆகியவற்றை தளர்த்தி பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடும்கூட அவரது போராட்டத்தால் கிடைத்தவையே.

1950ல் இந்த இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் உருவாகிவிட்ட போதிலும் 2006ஆம் ஆண்டுதான் அதன் போட்டித்தேர்வில் ஒரு பிற்படுத்தப்பட்டவர் – ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முத்தியாலுராஜூ ரேவு மூன்றாவது தடவையாக தேர்வெழுதி – தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. அதற்கும் பத்தாண்டுகள் கழித்தே 2016ல் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் – டினா டபி – தேசிய அளவிலான முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த காலஇடைவெளி, சாதியடுக்கில் இவர்கள் வகிக்கும் இடத்தை சூசகமாக தெரிவிப்பது போலிருக்கிறது.

டினா டபியின் குடும்பப் பின்புலத்தை பரிசீலித்தால் அவர் மூன்றாம் தலைமுறை படிப்பாளியாக இருக்கக்கூடுமென யூகிக்கமுடிகிறது. எடுத்தயெடுப்பில் முதல் தடவை எழுதிய தேர்விலேயே அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கு இந்த குடும்பப் பின்புலம் பெரிதும் அவருக்கு உதவியிருக்கிறது. எனவே அவர் தனது சாதிக்குரிய இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியமின்றி பொதுப்பட்டியலுக்குள் சென்றுவிட்டார். தன்னளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் அடுத்தநிலையில் இருக்கிற பட்டியல் சாதிக்காரர் ஒருவர் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இதன்மூலம் வழிவிட்டிருக்கிறார். இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட குடும்பங்களே ஆதாயம் அடைகின்றன என்கிற குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை முத்தியாலுராஜூ ரேவு போலவே டினாவும் தன்போக்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

13244862_1107732979270194_40256814112717231_n

அந்த சாதிப் பிள்ளைங்கெல்லாம் ஒருவேளை பாஸ் பண்ணலாம், ஆனால் மெரீட்டிலோ டாப்பராகவோ வரமுடியாது என்கிற இளக்காரப் பேச்சுக்கிடையில் தான் ஒவ்வொரு தேர்விலும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பலரும் பொதுப்பட்டியலுக்குரிய மதிப்பெண்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர். ஆனாலும் அவர்களை அவரவர் சாதிப்பட்டியலுக்குள் தள்ளியடைத்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள 50 சதவீத இடங்களையும் ‘உயர்த்திக்கொண்ட சாதியினர்’ தமக்குத்தாமே ஒதுக்கிக்கொள்கிற நுண்மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மீறிய ஒரு தீர்மானகரமான வெற்றியை ஈட்டியுள்ளார் என்பதால்தான் டினா கொண்டாடப்படுகிறார்.

டினாவின் இந்த வெற்றியை கவனம் குவித்து படித்த, கடினமாக உழைத்த ஒரு தனிமனித முயற்சிக்கு கிட்டிய பலன் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த கூட்டுழைப்பே அதன் எந்தவொரு தனிமனித வெற்றிக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது. ( இந்தக் கூட்டுழைப்பின் பலனை அனுபவிக்கும் பலர், தமது சொந்த சமூகத்திற்கு எதையும் திருப்பியளிக்காதவர்களாக, தமக்கு கிடைக்கவிருக்கிற அதிகாரத்தைக் தமது சொந்தநலனுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவர்களாக சுருங்கி விடுவது பேரவலம்.)

பொது வெளியில் நடமாடுவதற்கும் கல்வி உரிமை உள்ளிட்ட சமூகநீதியை மீட்டுக் கொள்வதற்குமாக தலித்துகளும் பெண்களும் இடையறாது நடத்திவரும் நெடியப் போராட்டத்தினூடான வாய்ப்புகளால்தான் டினா போன்றவர்கள் ஆற்றலோடு வெளிப்படுகின்றார்கள். அறிவும் தகுதியும் நாடாளும் திறமும் குறிப்பிட்ட சாதிகளுக்கே/ ஆண்களுக்கே உரியது என்கிற பிறப்புவாத கற்பிதத்தை எதிர்த்து கருத்தியல்தளத்திலும் களங்களிலும் நீடிக்கும் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்து வலுப்படுத்துகிறது டினாவின் தேர்ச்சி.

சமத்துவத்திற்காகவும் மனித மாண்புகளுக்காகவும் களமாடிய அம்பேத்கர் என்கிற வெல்லற்கரிய போராளியின் தோள்மீது ஏறி நிற்பதாலேயே தன்னால் இன்று சமுகத்தின் கண்களுக்கு உயரமாகத் தெரியமுடிகிறது என்பதை டினா அறிந்தேயிருக்கிறார். அதனாலேயே அவரை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தி வெளியாகும் பாராட்டுதல்களை மறுப்பின்றி ஏற்பவராகயிருக்கிறார்.

யாரோ எவரோ போல காட்டப்படாமல் டினா ஒரு தலித் என்றும் சேர்ந்தே பரவும் செய்தி, ‘உயர்த்திக்கொண்ட சாதி’யினரால் மட்டுமே டாப்பராக வர முடியும் என்று கட்டப்பட்டிருந்த பிம்பத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த மெரீட்மினுக்கிகளாகிய மோடியடிப்பொடியர்கள், அவரை ஏன் சாதிரீதியாக அடையாளப்படுத்தவேண்டும் என்று வினோதமாக கேட்கிறார்கள். தலித்துகளால் டாப்பராக வரமுடியாது என்று தாங்கள் சொல்லிவந்த வந்த பொய் அம்பலப்படுவதை தடுக்கவே இப்படி கேட்கிறார்கள். இவர்கள் இதற்காகவே முகநூலில் டினா டபி பெயரில் 35 போலிக் கணக்குகளைத் தொடங்கி மோசடியான பதிவுகளை எழுதிவருகிறார்கள்.

அப்படியான பதிவுகளில் ஒன்று – ‘என்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் உண்மையில் வருத்தப்படுகிறேன். நானறிவேன், எனக்கு ஆதர்சமளிக்கக்கூடியவர் யாரென்று- அவர் நமது பிரதமர் நரேந்திரமோடிதான். நான் ஒரு எஸ்.சி என்பதாலேயே அம்பேத்கர்தான் எனது ஆதர்சம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? ஏன் எங்கு பார்த்தாலும் இந்த ‘ஜெய்பீம்’ வாசகங்கள்? நான் அம்பேத்கரை பெரிதும் மதிப்பவள். அவர் பின்தங்கிய பகுதியினருக்காக நிறைய செய்திருக்கிறார். தலித்துகளை முன்னேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் இடஒதுக்கீட்டை ஆதரித்தவரில்லை. நமது அரசியல் சட்டத்தால் மிகக்குறைந்த காலத்திற்கே பரிந்துரைக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை வாக்குவங்கியைத் திரட்டும் கருவியாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்…’’

இந்த மோசடியைக் கண்டு மனம் வெதும்பிய டினா டபி, தனது பெயரில் 35 போலிக்கணக்குகளைத் தொடங்கி சில சமூகவிரோத சக்திகள் பரப்பிவரும் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனது உண்மையான முகநூல் பக்கத்தில் விளக்கமளித்திருப்பதை அகில இந்திய மாணவர் சங்கம் மறுபதிவு செய்துள்ளது (https://www.facebook.com/officialaisa/photos/a.654051061305057. 1073741826.537869562923208/1107732979270194/?type=3&theater)

மோடியால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒருவர் போட்டோஷாப்பிலும் பொய்ச்சான்றிதழ் தயாரிப்பதிலும் கூட வல்லவராக முடியாது என்பது தொடர்ந்த அம்பலமாகி வருகிறது. ஆகவே டினா அம்பேத்கரால் ஆகர்ஷிக்கப்பட்டாரோ இல்லையோ, நிச்சயமாக மோடியால் ஆகர்ஷிக்கப்பட்டவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற உறுதிபட சொல்லலாம்.

இந்த மோடியடிப்பொடியர்கள் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் தங்களது குரூர ஆசைக்கு அம்பேத்கரையும் டினாவையும் பயன்படுத்தப் பார்த்திருக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டுக்குதான் பத்தாண்டு காலக்கெடுவை அரசியல் சட்டம் விதித்ததேயன்றி, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எவ்வித காலக்கெடுவையும் அது விதிக்கவேயில்லை. இந்த உண்மையை மறுப்பதற்கான ஆதாரத்தை அரசியல் சட்டத்திற்குள் போலியாக உருவாக்கும் போட்டோஷாப் வேலையை அவர்கள் இந்நேரம் தொடங்கியிருக்கக்கூடும்.

நன்றி: AISA – All India Students’ Association

நன்றி: ஆதவன்விசை.பிளாக்ஸ்பாட்.இன்

#வீடியோ: இடஒதுக்கீடு ஏன் தேவை என்று சாயிஃப் அலிகான் பாடம் எடுக்கிறார்!

இடஒதுக்கீடு பற்றி வட இந்தியாவில் எதிர்மறையான பிரச்சாரமே ஓங்கிவருகிறது.  2011-ஆம் ஆண்டில் பிரகாஷ் ஜா இயக்கிய ஆராக்‌ஷான்(ஒதுக்கீடு என பொருள்) என்ற ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த சாயிஃப் அலிகான் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை ஒரு காட்சியில் சொல்கிறார். வீடியோ இணைப்பு கீழே…ஆங்கில சப் டைட்டிலுடன்

#விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

காட்டாறு

“கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல்.

வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது.

தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், சாதாரண ரசிகனும் மக்களும் என்கவுண்டர் என்ற காவல்துறையின் திட்டமிட்டப்பட்ட கொலைகளுக்கு ஆதரவான மனநிலையிலேயே இருப்பார்கள். அந்தப் பொதுப்புத்தியை உடைத்தெறியும் வகையில் மிகச்சிறப்பான திரைமொழியில் வெளியாகி உள்ளது விசாரணை. நமக்கு இப்படத்தில் ஒரு நெருடல் உள்ளது.

அவசியமே இல்லாமல், இந்தப்படத்தில் ஒரு இடத்தில், நேர்மையான அதிகாரியான இன்ஸ்பெக்டர் (சத்திரக்கனி) முத்துவேலைப் பார்த்து, அஸிஸ்ட்டெண்ட் கமிஷனர் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” என்று திட்டுகிறார்.

இயல்பாகவே, ஒவ்வொரு வார்த்தையைம் அளந்து அளந்து கவனமாகப் பேசும் பழக்கமுடையவர் இயக்குநர் வெற்றிமாறன். சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்த ஒரு திரைப்படத்தில் மிகவும் கவனமெடுத்துத்தான் வசனங்களை எழுதியிருப்பார். அப்படியானால் இந்த வசனம் வந்தது எப்படி? எதற்காக?
அந்த வசனத்தைப் பயன்படுத்தும் காட்சியைப் பொறுத்துப் பார்த்தால் தவறாக இருக்காது என்று விளக்கம் சொல்லப்படலாம்.

ஆனால் எதற்காக அப்படி வலிந்து அந்த வசனத்தை வைக்கவேண்டும்? ஒரு அதிகாரியைத் திட்டுவதற்கு வேறு வார்த்தைகளே இல்லையா? இடஒதுக்கீட்டால் அரசுப்பதவிகளுக்கு வருபவர்களுக்கு தகுதி – திறமை இருப்பதில்லை என்று பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்திக்குத் தீனி போடும் இந்த வசனம் ‘விசாரணை’ படத்திலிருந்து நீக்கப்பட வேண்டியது மிகவும் அவசரமான, அவசியமான செயல். அந்த இடத்தில் ஒரு Beep போடுவது மிகவும் எளிது தானே?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…

Anoop Manav

கிரண் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பேராசிரியர்களோ, இணை பேராசிரியர்களோ  ஒருவர் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, இதர பிற்படுத்தப்பட்ட இனத்தில் இருந்து 29 துணை பேராசியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதும் கண்டறிய பட்டுள்ளது. பல்கலைகழகத்தில்  மொத்தமுள்ள 612  பேராசிரியர்களில், 29 பேர் மட்டுமே, அதுவும் துணை பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள் என்றால், அந்த பணிக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மட்டுமே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிராமணியம் சூழ்ந்துள்ள பல்கலைகழக வளாகத்தில், பொதுபிரிவு வேலை வாய்ப்புகளில், இதர பிற்படுத்த இனத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர்கள் கூட பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

 12670241_1276123445736918_544924428401166636_n.jpg
கட்டாய இட ஒதுக்கீடு காரணமாக மட்டும், தலித் மற்றும் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ஒன்றிரண்டு பேராசிரியர்களை ஜவஹர்லால் நேரு பல்கலை பணிக்கு அமர்த்தி இருக்கிறது. அப்படியும், வகுப்பரைகளுக்கும், தலித் ஆதிவாசி பேராசிரியர்களுக்கும் வெகு தூரமே. அது போன்ற பணிகளில் மட்டுமே இருக்குமாறும், பார்த்து கொள்ளப்படுகிறார்கள். அதனால்தான் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பல மாணவர்கள், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பேராசிரியர்கள் / துணை பேராசிரியர்கள் பணிகளில் இதர பிற்படுத்த இன மக்களை நியமிக்கும் வகையில், இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் திட்டவட்டமான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் பிராமணியம் சூழ்ந்துள்ள பல்கலைகழக பல்கலை வளாகங்களில்,ஒடுக்கப்பட்ட இன மக்கள் முன்னேற முடியும்.
*(This RTI was filed by Kiran)

 

என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு

என் கதை…

தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான்.

என் அப்பா, அவரது கிராமத்தில் முதல் முதுகலை பட்டம் பெற்றவர். அந்த கிராமத்தில் அக்ரஹார பிள்ளைகள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத போதும்,பத்தாம் வகுப்பை பெயில் ஆகாமல் பாஸ் செய்த பிள்ளையை, படிக்காத பெற்றோரும், படிப்புவாசனையற்ற உற்றாரும் பெருமையோடு (என் தந்தையை) மேலும் மேலும் படிக்க வைத்தனர். இது தான் என் தந்தையின் பின்னணி.

சிறுவயதில் இருந்தே முதல் மதிப்பெண், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விவாதம், புத்தகங்கள் என என் பெற்றோர்கள் செதுக்கி செதுக்கியே வளர்த்தார்கள் என்னை. பள்ளியில் சில ஆசிரியர்கள், சாதியின் பெயரால் உதாசினப் படுத்தினாலும் சில ஆசிரியர்கள் என்னை கொண்டாடியதில், என் ஆளுமை சிதையாமல் காப்பாற்றப் பட்டேன். படிப்பிலும் மற்ற போட்டிகளிலும் வென்றதால் கல்லூரியில் நுழைந்த போதும் அவ்வாறே இருந்தேன்.

ஆனால் எனது ஆளுமையை என் கல்லூரி சிதைத்தது.

அங்கு கல்லூரி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் அடையாளம் வெறும் பதிவு எண் தான். அந்த பதிவு எண் , என் சாதியின் அடையாளமாக இருந்தது என்பதை நான் முதலில் அறிந்திருக்கவில்லை. இன்றும் என் பதிவு எண் (Roll number) மறக்கவில்லை. 922414, (92- batch, 24-branch, 14-th student which reveals my reservation category and rank by which I got selected). ஒவ்வொரு வருடமும் அந்த கடைசி 2 இலக்கங்கள் உள்ள நபர் குறிப்பிட்ட இடஒதுக்கீடில் வந்தவர். 4 வருடங்களும் நம் சாதியின் முகவரியோடு தான் விடைத்தாள்கள், நம் ஆசிரியர்களால் திருத்தப்படும். ஏனெனில் எங்கள் கல்லூரி தன்னாட்சி அதிகாரம் கொண்டது, அதனால் விடைத்தாள்கள், மதிப்பீடு எல்லாம் நமக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியரால் மட்டுமே வழங்கப்படும். ஆக எனது அதிகபட்ச மதிப்பெண் ஒரு போதும் 65 யை தாண்டியதில்லை, அது மட்டுமின்றி சராசரி எப்போதும் 50-54க்குள் தான். 50 என்பது தான் பாஸ் மார்க்.

இது கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் புரிந்தது. முதல் இரண்டு வருடங்கள், மதிப்பெண் குறைவாக வாங்க, என் தமிழ்வழி கல்வியையும், state board படிப்பையும், ஒரு சிறு டவுனில் படித்த பின்னணியும் என்று நானாக ஊகித்துக்கொண்டேன். முயன்று படித்தேன்… ஆனால் 3 மற்றும் 4 ஆவது செமஸ்டர் பின்னும் மதிப்பெண் குறைந்தே வாங்க… உற்சாகம் இழக்கலானேன்.

அதைவிட… என்னை கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய விதம்…

அந்த ஆசிரியர் பெயர் சின்னசாமி, 3 வருடங்களும் மிகமுக்கியமான தாள்களை அவர் தான் நடத்தினார். இத்தனைக்கும் அவருக்கு ஆங்கிலம் சரியாக பேச வராததால், வகுப்பு சரியாகவே புரியாது. முக்கிய லேப் வகுப்புகளுக்கும் அவர் தான் வருவார்.

அவரது லேப் வகுப்புகளில் என்னை மிக மிக இழிவாக நடத்துவார். தீண்டாமையின் உச்ச பட்ச வேதனையை அனுபவித்தேன். அவர் என்னை அழைக்கும் விதத்திலும், மற்ற ஆண் மாணவர்களின் முன் கேவலப்படுத்துவதிலும் கூனிக் குறுகிப் போகும் மனசு. இத்தனைக்கும் நான் லேபில் நன்றாகவே டெஸ்ட் செய்வேன். circuit connection, எல்லாம் சரியாக இருக்கும், ஆனாலும் ஏதோ குற்றம் சொல்வதும் viva கேட்கும் போது இழிவுபடுத்துவதும், உனக்கெல்லாம் இது வராது என அடிக்கடி சொல்வதும் என என் ஆளுமையை கிழித்து சிதைப்பதில் அவருக்கு ஒரு குரூர சந்தோசம் இருக்கும்.

அவர் ஒருவர் மட்டுமல்ல, பெரும்பாலான பேராசிரியர்கள் அப்படித்தான் நடந்தார்கள். பெரும்பான்மையான ஆசிரியர்கள் பிராமணர்கள், அவர்களுக்கு மற்ற மாணவர்கள், இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் , அவ்வளவு தான். இடஒதுக்கீட்டில் வந்தவர்களை அவர்களுக்கு அறிவிருப்பதற்கான அங்கீகாரத்தை தவறியும் கொடுக்க மாட்டார்கள்.

SC/ST மாணவர்களை பெரும்பாலும் ஃபெயில் செய்வதும், அவர்களை 4 வருடங்களுக்குள் படிப்பை முடிக்க முடியாமல் year back system மூலம் 5/6/7 வருடங்கள் இழுத்தடிப்பதும் சகஜமாக அந்த புகழ்பெற்ற தேசிய மண்டல பொறியியல் கல்லூரியில் நடக்கும்.

நான் 4 வருடங்களுக்குள் படிப்பை முடிக்க முடித்தாலும் 60.02 மொத்த விழுக்காடுகள் பெற்றும் 58.23 விழுக்காடுகள் (3 வருடங்களுக்கானது) பெற்றும் “இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி” என்ற முத்திரையோடு என்னை வெளியே தள்ளியது அந்த கல்லூரி. என் ப்ராஜக்ட் கைட் திரு வெங்கட்ட ரமணி அவர்களின் சாதிய வன்மத்திற்கு, என் பொறியியல் தேர்ச்சியை பிச்சையாக, அவர் முகத்தில் தூக்கி எறியத் தோன்றியது. ஏனெனில் அந்த பிராஜக்ட் முழுவதும் நான் எவ்வாறு உழைத்தேன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அதில் கைவைத்து, என் “முதல் வகுப்பு தேர்ச்சியை” தடை செய்த அவருக்கும்… என் கல்லூரிக்கும் நான் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா

காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி அருந்தலாம்.. அது வேறு..

ஆனால் இவையிரண்டும் கிருஸ்தவ மிஷனேரிகளால் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட காலத்தில் காப்பியை உயர்சாதியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள், அதனாலேயே அதற்க்கு உயர்ந்த பண்பு கிடைக்கிறது,

கும்பகோணம் டிகிரி காப்பி பிராமணர்களின் பிராண்ட். வெள்ளையர்களின் ஆட்சியில் லட்சக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் ரத்தத்தில் உருவான காப்பி கொட்டைகள் பிராமண ஆத்துக்குள் வந்த பிறகு சாதிய உயர்வை பெற்று பிராமண பிராண்டேட் ஆக நிலைக்கிறது.

“என்கூட ஒரு கப் காப்பி, அதுல தெரிஞ்சிரும் என் மிச்ச வாழ்கையை உங்க கூட வாழமுடியுமான்னு” என்று கவுதம் மேனன் படத்தில் அனுஷ்கா உருகும் வசனம் சும்மா போற போக்குல வந்திரல.. ஊறிப் போன உயர்சாதி மேட்டுக்குடி உணர்விலிருந்து வருவது அது, அனுஷ்கா இப்படி சொல்வதாக கற்பனை செய்வோம் “என்கூட ஒரு டீ குடிக்க …” சொல்லும்போதே நம் மனம் லோக்கலாக. செட் ஆகும்.

நம்மவர்கள் ஆடியவரை “கூத்தாக” இருந்தது “கூத்தாடிகளாக” இருந்தது அவர்கள் கைப்பற்றிய பிறகு “கலையாக” “கலைஞர்களாக” வடிவம் பெறுகிறது, சமூகத்தில் இழிவான உளவியல் உள்ள தொழில் சந்தையில் மதிப்பு மிக்கதாக மாறும்போது அதை அபகரிக்கும் லாவகத்தை, சமூகத்தில் அதை உயர்ந்த பண்புடைய உளவியலாக மாற்றும் தந்திரத்தையும் நாம் கற்க வேண்டும்.

நாளை “பறை”க்கு ஒரு சந்தை வந்தால் கூச்சமே இல்லாமல் அதை அபகரித்து.”அய்யங்கார் பேக்கரி”, “ஆரிய பவன்” போல “அயங்கார் பறை இசைக்குழு” வை உருவாக்கி பறைக்கு பிராண்ட் உரிமை கோர முடியும் அவர்களால்.

மருத்துவம் உயர்ந்த சந்தையாக மாறும்போது அதுவரை காலம் காலமாக மருத்துவம் பார்த்த நாவிதர்களிடம் (அம்பட்டையர்கள்) இருந்து மருத்துவத்தை கைப்பற்றி அதே சமயம் நாவிதர்களின் சாதிய இழிவும் மாறாதவாறு பார்த்துக் கொள்ளவும் முடிகிறது அவர்களால். சொல்வார்களே “குலக் கல்வி, குலக் கல்வி” என்று. அப்படியென்றால் மருத்துவம் பார்த்த நாவிதர்களுக்கு தானே ஆங்கில மருத்துவத்தையும் படிக்க உரிமை உண்டு?

இந்த லட்சணத்தில் தகுதியும் திறமையும் இல்லாமல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் திறமையற்றவர்கள் வாய்ப்பை பெறுவதால் தான் மருத்துவத்தில் தவறு நடக்கிறது என்று வியாக்கியானம் வேறு. விகிதாசார அடிப்படையில் கூட நம்மவர்கள் மருத்துவம் படிக்க விடாமல் எதிர்ப்பு வேறு இன்று வரை.

அதையே நம்மவர்களும் மூளையே இல்லாமல் சொல்லித் திரிவார்கள். நம்மையறியாமலேயே “கரகாட்டக்காரி” என்பதும் நாட்டியப் பேரொளி என்பது பார்ப்பன உளவியலே. இந்த தேசத்தின் அனைத்திலும் அவர்கள் உளவியல் விரவி கிடக்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வெறும் வறட்டு வாதமல்ல.. எச்சரிக்கையாக கலைய வேண்டும்..

 

விஜய் ஆண்டனியை சிந்திக்க வைத்த சமூக ஊடக மக்கள்!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடஒதுக்கீடு குறித்த பாடல் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. தி டைம்ஸ் தமிழிலும் இதுகுறித்து “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள் பதிவு வெளியானது.

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்”
எழுதிய முட்டாளை கண்டிக்கவேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் உள்ள அடையாள அறிவாளிகள் மத்தியிலும் இப்படி ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது. இட ஒதுக்கீட்டில் எவரும் 50% வாங்கி மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க முடியாது. ஒதுக்கீட்டில் தேர்வு பெறும் மாணவர்களும் 90%+ வாங்கித்தான் இடம் பெறுகிறார்கள்>
பணத்திமிரிலும் பேராசையிலும் தனியார் கல்லூரியில் படிப்பவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப் பாருங்கள்.
இத்தகைய திமிர் பிடித்த கருத்தாளர்கள்தான் ஆதிக்க அகங்காரத்துக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள், சமீபமாய் இவ்வகை ஆணவப்பேச்சு அதிகமாகி வருகிறது.
காலம் சுழலும் மீண்டும் இவர்கள் வாய்பொத்திக் கிடக்கும் மாற்றம் வரும், இன்னும் சில ஆண்டுகளிலேயே:
கோட்டாவில்தான் நானும் சீட் வாங்கினேன். without quota and scholarship i would never have become a doctor

வே. மதிமாறன் 

அவ்வளவுதான். சிம்பிள். போதும்.OK ரிலீஸ் பண்ணிக்க.

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – பிச்சைக்காரன்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகுணும்ன்னா;

‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,

“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்.

‘இது தாண்டா நம்ம சென்சார்’

இந்நிலையில் பாடல் வரிகளை மாற்றி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் பாடலுக்கு இசையமைத்தவருமான விஜய் ஆண்டனி.

அதற்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வில்லவன் இராமதாஸ்

இடஒதுக்கீடு குறித்து அவதூறு செய்யும் வரிகளை மாற்றியிருப்பதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்திருக்கிறார். சிம்பு, கமல்ஹாசன் போல அடாவடியாக எதிர்வினை செய்யாமல் எதிர்ப்பை மரியாதையோடு கையாண்டதற்காக அவரை பாராட்டலாம்.

கோட்டாவுல சீட்டு வாங்கி எனும் வார்த்தைகளை காசுகொடுத்து சீட்டு வாங்கி என மாற்ற வைக்கும் யோசனையையும் சமூக ஊடக நண்பர்களிடமிருந்தே அவர்கள் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

வெறும் கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சும்மா விமர்சிப்பவர்கள் என புலம்பும் மேட்டுக்குடி மக்கள் கவனிக்க..

ரோஹித் வெமூலாவை உருவாக்கிய ’வளமான சூழல்’ இதுதான்!

தன்னை உருவாக்கிய இடமான தனது வீட்டை ஒளிப்படங்களாக பதிவாக்கியிருக்கிறார் தலித் ஆய்வாளர் ரோஹித் வெமூலா. இடஒதுக்கீடு குறித்தும் கல்வி உதவித் தொகை குறித்து காழ்ப்பு உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் ரோஹித்தின் பொருளாதார பின்னணி அதற்கு பதிலளிக்கிறது. மட்டுமல்லாமல், ரோஹித்துக்கு நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகை எத்தகைய மன உளைச்சலை அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் உணர முடிகிறது.

தையல் மிஷினை வைத்து தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் தாயை நினைவு கூர்கிறார்  ரோஹித்.

rohit home 1

rohit home 3

 

 

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தால் படுகொலை செய்யப்பட்டான் தலித் ஆராய்ச்சி மாணவன் ரோகித் வெமுலா!

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தால் படுகொலை செய்யப்பட்டான் தலித் ஆராய்ச்சி மாணவன் ரோகித் வெமுலா!

பார்ப்பான இந்துத்துவ கும்பல்களின் தூண்டுதலின் பேரில் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 5 தலித் ஆராய்ச்சி மாணவர்களில் ரோகித் வெமுலாவும் ஒருவர். பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த 12 நாட்களுக்கும் மேலாக அதே வளாகத்தில் கூடாரம் அமைத்து போராடி வந்த வேளையில் ஞாயிறு  மாலை தற்கொலை செய்து கொண்டார் ரோகித்.

பார்ப்பன கொலைக் கூடாரங்களாக உள்ள இந்த பல்கலைக்கழகங்கள் இன்னும் எத்தனை தலித் ஆதிவாசி மாணவர்களை கொல்லப் போகிறது? இந்த நிறுவனங்கள் நம் மக்களின் பணத்தில், பார்ப்பன ஆதிக்கத்தை உள்ளே நிறுத்தி நம் மாணவர்களை வெளியே நிறுத்தி கொல்லும் வேலையை தான் செய்து வருகிறது. இந்த கட்டமைப்புகள், அதன் பார்ப்பன ஆதிக்க தலைமைகள் அடித்து நொறுக்கப்படுவது எப்போது? இடஒதுக்கீடு, திறமை பற்றி பேசும் கும்பலும் தான் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது. தலித் ஆராய்ச்சி மாணவன் ரோகித் வெமுலா படுகொலைக்கு நீதி எது?

பார்ப்பன இந்தியாவை காப்பாற்றி வரும் இந்த பார்ப்பன உயர் கல்வி நிறுவனங்களை அடித்து நொறுக்கி கொளுத்துவது தான் நம் மாணவர்களின் படுகொலைக்கான நீதி.

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள்

நாகேந்திரகுமார் திலகவதி

அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ… எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன், விஜய், ஜெயமூர்த்தி இன்னும் பெயர் தெரியா எவ்வளவோ பேரை தேடி தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்த படம் எனக்கு எதுவென்றால் பூவேலி, சுக்ரன்தான். அதிலும் சுக்ரனை கணக்கு வழக்கு இல்லாமல் கேட்டு மூழ்கியிருக்கிறேன்.

அந்தவகையில் நான் மதிப்பு வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் இசையில் “பாழாப்போன உலகத்திலே” (Glamour Song) எனும் பாடலும் என் ரசனைக்கு உகந்ததுதான்.

ஆனால் இந்த பாடலின் 2:18 நேரத்தில்

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்”
எனும் தற்குறித்தனமான வரிகள் வருகின்றன. இது இடஒதுக்கீடை கடைபிடிக்கும் இந்திய இறையாண்மையையே கேலி செய்வதாகும்; சமூக நீதி குறித்து மண்டையில் ஒரு மண்ணும் இல்லாத ஒரு பொறம்போக்கின் வரிகள்தான் இவை.

இந்த வரிகளை எழுதிய கழிசடைக்கோ, அனுமதித்த இயக்குனர் சசிக்கோ, பயன்படுத்திய விஜய் ஆண்டனிக்கோ மூளை எனும் அவயம் குறித்த கவனம் இல்லாமல் இருக்கலாம். ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி தமது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். வரிகள் நீக்கப்படவேண்டும்.

 

இந்தியாவில் பெண்களின் விகிதம் குறைந்து வருகிறது: அருணா ராய்

சிவகங்கையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 13-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டின் தொடக்க நாளான வியாழக்கிழமை மாநாட்டில் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் அருணா ராய் கலந்துக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அருணா ராய், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர், பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நாட்டில் தலித் மக்களுக்கான தனித்துவம் மறுக்கப்படுவதாகவும் கூறினார்.