ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன்

  • ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர்
  • ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர்
  • பேஸ் கிச்சன் மேனேஜர்
  • ஸ்டோர் மேனேஜர்

-ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது.

முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும்.

தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் ஃபுட் பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் இது. நமக்கிருந்த பரபரப்புகளில் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.

ஐஆர்சிடிசி நிர்வாகம் தலையிட்டு, இப்படியெல்லாம் சாதி அடிப்படையில் ஆளெடுக்கக்கூடாது என்றும், எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறும் கூறியிருககிறதாம். இந்த விளம்பரத்தைப் பத்திரிகைக்குக் கொடுத்ததற்காக நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காண்டிராக்டர் தெரிவித்திருக்கிறார். (செய்தி: இந்தியா டுடே)

மேற்படி விளம்பரத்திற்கு உடனடியாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுவே இந்த நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது எனலாம். ஒருவேளை சமூக ஊடக விழிப்புணர்வாளர்கள் இதைக் கவனிக்காமல் அல்லது பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால்?

எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஐஆர்சிடிசி கூறிய அளவில் சரிதான். ஆனால், பிரைவேட் என்று போய்விட்டதால், அனைத்துச் சமூகத்தினருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் இட ஒதுககீடு, ரயிலின் சமையலறைப் பெட்டியிலிருந்த தானிய மூட்டை திருடப்பட்டது போல, துடைத்தழிக்கப்பட்டுவிட்டதே?

முடிந்துபோன ஒரு நிகழ்வின் செய்தியை எதற்காக நினைவூட்ட வேண்டும்? முடிந்து போய்விட்டதா என்ற கேள்வி முடியாமல் தொடர்வதால்தான். தனியார்மய எதிர்ப்பு நாட்டின் பொதுச்சொத்தை யாரோ கொள்ளைகொண்டு போவதைத் தடுப்பதற்கு மட்டுமேயல்ல, சமூகநீதிப் பொது அறம் கடத்தப்படாமல் காப்பதற்கே என நினைவூட்டத்தான்.

அ. குமரேசன் மூத்த பத்திரிகையாளர்.

#நிகழ்வுகள்: எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்: ஓர் உரையாடல்

எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்’ என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஒருங்கிணைக்கிறது ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு. இன்று நடைபெறும் உரையாடல் குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் சென்று மன்னிப்புக் கேட்டிருப்பதை அறிவீர்கள். ஒரு பத்திரிகை ஆசிரியர், தான் வெளியிட்ட கட்டுரை ஒன்றுக்காக கேட்டிருக்கும் இந்த மன்னிப்பு பத்திரிகை சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகச் செயல்பாடு முதலானவற்றை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு பத்திரிகை ஆசிரியர் மதவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து மன்னிப்புக் கேட்கும் அந்தக் காட்சி ஊடக அறத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பத்திரிகையாளர்களை பதற வைத்திருக்கிறது. தமிழக இதழியல் வரலாற்றில் அது ஒரு தலைகுனிவான தருணம்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், திருவில்லிபுத்தூர் ஜீயருடன்
 
மதவெறியின் பேரில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள் – அறிவுத் துறையினர் கொல்லப்படுவதையும், அச்சுறுத்தப்படுவதையும் காண்கிறோம்.இதை மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டியது அவசியமில்லையா?

‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உரையாடல் நிகழ்வுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கைக் கொண்டோர் அனைவரையும் அழைக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக

ஆர்.விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
கோவி.லெனின், பொறுப்பாசிரியர், நக்கீரன்
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

அசீப், மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மையம்

மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

 
நாள்: 2018 ஜனவரி 31, புதன் கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல்.

இடம்: சி.ஐ.டி.யு அரங்கம், நம்பர் 11, லாயர் ஜெகந்நாதன் தெரு, கிண்டி, சென்னை – 32
(சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி செல்லும்போது, லீ மெரிடியன் ஹோட்டலுக்கு முன்பு உள்ள பாலாஜி மருத்துவமனையை ஒட்டி உள்ளே செல்லும் தெரு…)


ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

அ. குமரேசன்

அ. குமரேசன்

ஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம்.

ஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) அசைவ உணவும் உண்டாம்.

அசைவ உணவுகள் அ-அசைவ உணவுகளோடு கலந்துவிடுகின்றன. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு என்கிறது நிர்வாகம். அத்துடன், உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோஹானி கூறியிருக்கிறார்.

நம்ம கேள்விக்கு வருவோம்:

உயர் வகுப்புகளில் அ-அசைவ உணவுகளோடு அசைவ உணவுகள் கலக்காதா? கலக்காது என்றால் அது எப்படி சாத்தியமாகிறதோ அந்த ஏற்பாட்டை சாதா வகுப்பிலும் செய்ய வேண்டியதுதானே?

உயர் வகுப்புகளில் உணவு வீணாகாதோ? செலவு பிரச்சனையில்லையோ? அல்லது அதற்கெல்லாம் சேர்த்து டிக்கெட்டில் தீட்டிவிடுகிறார்களா?

உயர் வகுப்புகளின் பயணம் செய்பவர்கள் யார்? அவர்களுடைய உணவுத் தேவைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை!

விமானப் பயணிகளில் அதிகமானவர்கள் சாதா வகுப்பில்தான்தான் செல்கிறார்கள். சிக்கனத்தின் பெயரால் அவர்களுடைய உணவு விருப்பத்தில் கை வைக்கப்படுகிறது. இது அ-அசைவத் திணிப்புப் பிரச்சாரத்தோடு சேர்ந்ததா இல்லையா? நானும் அ-அசைவ உணவுக்காரன்தான். ஆனால் அந்தப் பழக்கத்தை எந்தப் பெயராலும் மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாகப் புகட்ட மாட்டேன்.

விமானப் பயணங்களில் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எது எதற்கோ ஊழியர்களோடு வம்புச் சண்டையில் ஈடுபட்டு ரகளை செய்கிறார்கள். நிர்வாகத்தின் இந்த அப்பட்டமான உணவு உரிமை மீறலை எதிர்த்து ஏன் பிரச்சனை எழுப்பக்கூடாது?

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

அம்பேத்கர் பிறந்த நாளை ‘தண்ணீர் தின’மாகக் கொண்டாடும் மத்திய அரசு; சாதி ஒழிப்பை நீர்க்கச் செய்யும் முடிவு!

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

கடந்த நான்கு நாட்களின் பரபரப்புகளில் நழுவிவிட்ட இந்தச் செய்தி இன்றுதான் கண்ணில் பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை ‘தண்ணீர் தினம்’ என்று அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

“நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியதில் மையமான பங்காற்றிய அம்பேத்கர், நீராதாரங்கள் நிர்வாகம் குறித்த ஒரு திட்டவட்டமான அகில இந்தியக் கொள்கையையும் முன்வைத்தவர். இதனை மக்கள் அறியச்செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது,” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.

“சுதந்திர இந்தியாவின் பன்னோக்கு அணைத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர். தாமோதர் பள்ளத்தாக்கு அணை, ஹிராகுட் அணை உள்ளிட்ட பல திட்டங்களின் உந்துசக்தியாக இருந்தவர் அவர்,” என்று மத்திய நீர் ஆணையம் இவ்வாண்டு அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்ரல் 14) கெண்டாட்டத்தையொட்டி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.

உலக அளவிலேயே நீர் ஒரு முக்கிய நெருக்கடியாக, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக மாறிவரும் நிலையில், நீராதார நிர்வாகத்தில் அம்பேத்கரின் தொலைநோக்கு சிறப்பானதொரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ற, இன்றைய அறிவியல் புரிதல்களோடு கூடிய அணுகுமுறைகளும், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் நேர்மையும் தேவைப்படுகின்றன.

அரசமைப்பு சாசனச் சிற்பி என்பதாக மட்டுமே இது வரையில் அம்பேத்கரைக் காட்டி வந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் மையமான, தலையாய போராட்டமும் வாழ்க்கை அர்ப்பணிப்பும் எதற்காக என்பதை மறைத்து வந்திருக்கிறார்கள்.

இப்போது நீராதார நிர்வாகம் தொடர்பான அவரது, பேசப்படாத இன்னொரு பங்களிப்பை மக்களுக்குத் தெரியப்படுத்துவது வரவேற்கப்பட வேண்டியதுதான். இனி ஆண்டுதோறும் ஏப்ரல் 14 தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் அறிவித்திருக்கிறார். அம்பேத்கரின் மையமான, தலையாய போராட்டமும் வாழ்க்கை அர்ப்பணிப்பும் எதற்காக என்பதை மறைக்கிற இன்னொரு உத்தியாகிவிடக்கூடாது… உத்தியாக விடக்கூடாது.

பிறப்பால் மனிதர்களைப் பாகுடுத்துகிற சமுதாய இழிவின் அடிவாரமான சாதியம் தகர்க்கப்படுகிற வரையில், சமத்துவம் ஊன்றப்படுகிற வரையில் நடைபெற வேண்டிய போராட்டத்தை அவர் தொடங்கினார். நாம் தொடர்வோம். போராட்டத்தின் முதல் கட்டமாகச் சட்டப்படி சாத்தியமாகியிருக்கிறது, ஆனால் சமூக நடப்பில் நெடுங்கனவாகவே நீடிக்கிறது சாதி ஒழிப்பு. அதை நனவாக்கிய புதிய வரலாறு எழுதப்படும் வரையில் அம்பேத்கரின் போராட்ட நெருப்பில் தண்ணீரைக் கொட்ட அனுமதியோம்.

அ. குமரேசன், தீக்கதிர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.

திரையரங்கில் தேசிய கீதமும் தேசப்பற்றுடன் சில கேள்விகளும்

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்


சமுதாயத்தில் சில பிரச்சனைகள் அறிவுப்பூர்வமாகக் கையாளப்படுவதற்கு மாறாக உணர்ச்சிப்பூர்வமானதாக மாற்றப்படுவது எப்போதுமே ஆபத்தானது. சிந்திப்பதற்கும் முன்னேறுவதற்கும் முட்டுக்கட்டை போடுவது. மக்களிடையே பகைமையைத் தூண்டுவது.
அவ்வாறு உணர்ச்சிகள் கிளறிவிடப்படுகிறபோதெல்லாம் தலையிட்டு நிதானத்திற்குக் கொண்டுவருகிற பெரும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால், தேசப்பற்றையும், தேசிய கீதத்தையும் சம்பந்தப்படுத்தி உச்சநீதிமன்றமே ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பது, அப்படி உணர்ச்சிவயப்படுத்தும் திருப்பணியால் திசை திருப்ப முயல்கிற சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் தேசிய கீதம் திரையிடப்பட வேண்டும், பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும், அவர்கள் வெளியே செல்லாமலிருக்கக் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் டிசம்பர் 1 அன்று ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனால் குடிமக்கள் மனதில் தேசப்பற்று உணர்வு வளரும் என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆணைக்குக் காரணமான பொது நல மனுவைத் தாக்கல் செய்தவர் தேசிய கீதம் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையே வைத்திருந்தார். திரையரங்குகளில் அதனைத் திரையிடுவதற்கு ஆணையிட வேண்டும் என்று அவர் கோரியதாகத் தெரியவில்லை. இருந்தாலும் நீதிபதிகள் தாங்களாக இந்த இடைக்கால ஆணையை அளித்துள்ளனர்.

ஏன் திரையரங்குகளுக்கு மட்டும் இந்த ஆணை? மக்கள் கூடுகிற இடம் என்றால், விளையாட்டு மைதானங்கள், இசை நிகழ்ச்சிகள், நடனக் கூடங்கள், சொற்பொழிவு மன்றங்கள், கட்சிக் கூட்டங்கள், ஊர்க் கொண்டாட்டங்கள் என்று விரித்துக்கொண்டே போகலாம். அங்கெல்லாம் தேசப்பற்று வளர்க்கப்பட வேண்டாமா? எல்லா மதங்களின் வழிபாட்டுத் தலங்களில், ஆன்மீக உரை நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுகிறார்களே, அந்த இடங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தப் பொருத்தமற்றவையா?

இயற்கைச் சீற்றங்களின்போது மாநில எல்லைகள் தாண்டிப் பாய்கிற மனித நேய வெள்ளங்களில் பொதிந்திருப்பது தேசப்பற்றே அல்லவா? ஆட்சியாளர்கள் கைவிட்டபோதிலும் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பால் பங்களித்துக்கொண்டே இருப்பது தேசப்பற்றே அல்லவா? அதை மென்மேலும் வளர்த்தெடுக்க என்ன செய்யலாம் என்ற அக்கறையும் தேசப்பற்றே அல்லவா?

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அது வெறும் சடங்காக நிகழ்த்தப்படாமல், இந்த தேசம் உருவான வரலாற்றை (உண்மையான வரலாற்றை) மாணவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில் சொல்வது, தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தல் பற்றிய அறிவியல்பூர்வ புரிதல்களை ஏற்படுத்துவது, நாட்டின் குடிமக்களை நேசிக்கக் கற்பிப்பது… போன்ற செயல்கள் மூலம் தேசிய கீதத்திற்கு உணர்வுப்பூர்வமாக மரியாதை செலுத்தும் பண்பை வளர்த்தெடுக்க முடியும். எத்தனை கல்வி நிறுவனங்களில் தேசிய கீதத்தின் வரிகளுக்குப் பொருள் சொல்லப்படுகிறது?

தேசப்பற்று என்பதே தேச வரைபடத்தை வணங்குவதல்ல; தேசியக் கொடிக்கு சல்யூட் வைப்பதோ, தேசிய கீதம் பாடுவதோ மட்டுமல்ல. சக மனிதர்களை சமமானவர்களாக மதிப்பதுதான் மெய்யான தேசப்பற்று. தேசியக் கொடியின் முன் விரைப்பாக நின்று மரியாதை செலுத்திவிட்டு, அப்புறம் தேசத்தின் பிள்ளைகளைப் பிறப்பின் அடிப்படையில், பாலின அடிப்படையில், பணத்தின் அடிப்படையில் கேவலமாகக் கருதி நடத்தினால் அது தேசப்பற்றாகுமா? அதிலும், பெரும்பகுதி மக்களிடம் நாடு என்றாலே அவர்களுடைய குறுகிய சாதி/சமூக வட்டாரம்தான் என்ற எண்ணம் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக ஊறிப்போக வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதில் மதவாதத்தையும் சேர்க்கிற முயற்சி நடக்கிறது. இவர்களிடையே உண்மையான தேச உணர்வையும், தேசப்பற்றையும் கொண்டுசெல்வது எப்படி?

நீதிமன்றம் இந்தக் கோணங்களில் யோசித்து வழிகாட்டினால் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும்? மாறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் உள்ள இந்திய நாட்டில் ஒன்றுபட்டு வாழ்வதன் அழகையும் பெருமிதத்தையும் போற்றுகிற தேசிய கீதத்தின் பொருளை விளங்க வைப்பதற்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும்? உண்மையான தேசப்பற்றை வளர்ப்பதற்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும்?

அ. குமரேசன், பத்திரிகையாளர். இவருடைய தமிழாக்கத்தில் சமீபத்தில் வெளியான நூல் நந்தனின் பிள்ளைகள்; பறையர் வரலாறு. 

முகப்புப் படம் நன்றி: மிட் டே

எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம்? முடிவெடுக்க உதவும் 7 வழிகள்!

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

இன்று ஓய்வு நாள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், பிரச்சாரங்கள் ஓய்ந்ததன் மறுநாள் என்பதாலும்.

ஓய்ந்துகிடப்பதற்கான நாளல்ல, ஓய்வாகச் சிந்தித்து, பழைய நிலைமைகளையும் புதிய வளர்ச்சிப்போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சரியான முடிவுக்கு வர வேண்டிய நாள்.

அந்தச் சிந்தனையில் அடிப்படையாக இவற்றை மனதில் கொள்வது நலம்:

1) கருத்துக் கணிப்புகளைக் கண்டுகொள்ளாதீர்கள். சில ஊடகங்கள் போலப் பணம் பெற்றுக்கொண்டு செய்யப்பட்டதானாலும் சரி, சில ஆய்வாளர்களைப் போலத் தானாக முன்வந்து செய்யப்பட்டதானாலும் சரி, தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் ஜனநாயகத்திற்குக் கேடுகளே.

2) தலைமுறைகளின் மூளையை அரித்துப் போட்ட மதுக் கடைகள் மூடல், தலைமுறைகளையெல்லாம் தரமற்ற திட்டங்களின் பிடியில் சிக்கவைத்த ஊழல் ஏற்பாடுகள் ஒழிப்பு போன்ற எல்லாக் கட்சிகளும் வாக்களித்துள்ள அம்சங்களை அலசிப்பாருங்கள். கடந்த காலத்திலும் இதே வாக்குறுதிகளை அளித்து, இவற்றை அமோகமாக வளர்த்துவிட்டவர்களையும், உண்மையாகவே இவற்றுக்காகக் களப்போராட்டம் நடத்தியவர்களையும் தராசில் வைத்திடுங்கள்.

3) அரசுத்திட்டங்கள் செயலாக்கத்தைக் கண்காணிக்க பொது கண்காணிபுக் குழுக்கள், சரியான விமரிசனங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கிட நெறியாளர் குழுக்கள் அமைக்கப்படும், மகளிர் ஆணையம், லோக் ஆயுக்தா உள்பட இந்தக் குழுக்கள் சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும் என்ற, நேர்மைக்கு அடித்தளமான வாக்குறுதிகள் எவரிடமிருந்து வந்திருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். விவசாயம், தொழில் உள்ளிட்டவற்றில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் மூலமாகவும், சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முலமாகவும் உண்மையிலேயே வேலை வாய்ப்புகள் விரிவடையச் செய்வதற்கான வாக்குறுதிகளை யார் முன்வைத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்குங்கள்.

4) தமிழகம் இழந்த மாண்புகளை மீட்க, சமூக சீர்திருத்த இயக்கம், சாதிக்காரர்களின் ஓட்டுகள் போய்விடுமோ என்று அஞ்சாமல் சாதி ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம், சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் இணைகளுக்கும் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற எதிர்காலத் தமிழகத்திற்குக் கம்பீரம் சேர்க்கும் துணிவான உறுதிமொழிகளை வழங்கியிருப்போர் பற்றி மனதில் பதியுங்கள்.

5) நேரடியாகவோ, மறைமுகமாகவோ கவர்ச்சிகரமான இலவசப் பொருள்களை அறிவித்திருக்கும் தந்திரங்களுக்கு மாறாக, தரமான இலவசக் கல்வியும் தரமான இலவச மருத்துவமும் மக்களின் உரிமையாக விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கைக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டிருப்போரை எண்ணத்தில் கொள்ளுங்கள்.

6) இயற்கையைச் சீற்றம் கொள்ளச் செய்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள், மலைப்பாறை கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதிபூண்டிருப்போர் பொறுப்பேற்க வேண்டியதன் கட்டாயத் தேவையை உணர்கிறீர்கள், அதற்குச் செயல்வடிவம் தர முடிவெடுங்கள்.

7) தனி நபர் சர்வாதிகாரம் அல்லது தனிக்கூட்ட அராஜகம் இந்த இரண்டாலும் தமிழகம் சுமக்க நேர்ந்த இழிவுகளைத் துடைத்தாக வேண்டும். அதிகார ருசிக்காகவும், பதவியின் பவிசுகளுக்காகவும் மத்திய அரசோடும், சாதிய-மதவாதக் கும்பல்களோடும் சமரசம் செய்துகொள்ளத் தயங்காத தனிநபர் சர்வாதிகாரத்தாலும் தனிக்கூட்ட அராஜகத்தாலும் தமிழகம் இடறிவிழ நேர்ந்த பள்ளங்களை மேடுபடுத்தியாக வேண்டும். கூட்டணியாக இயங்குவதன் நன்மைகளைப் பரிசீலியுங்கள். அதிலும் சரியானவற்றை சுட்டிக்காட்டவும் தவறுகளைத் தட்டிக்கேட்கவும் தயங்காத கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் மக்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச ஆதாயங்களை ஆராயுங்கள்.

“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

-என்ற வள்ளுவர் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுங்கள்.

மாற்றத்திற்கு வழிகோலுங்கள்.

தெளிந்த முடிவோடு நாளை வாக்குச் சாவடிக்குப் புறப்படுங்கள்.

அ.குமரேசன், ஊடகவியலாளர்.