அருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி

சில நாட்களுக்கு முன் ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கல்வி ஆசிரியர், குறிப்பாக மாற்று திரைப்பட கலாச்சாரத்திற்காக அயராமல் செயல்புரிந்த அருண்மொழி அவர்கள் திடீரென்று நம்மிடமிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டார். நாற்பது ஆண்டுகால நண்பர், என்னைவிட நான்கு வயது இளையவர் என்பதால் அந்த செய்தியை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானவர்களில் நானும் ஒருவன். உடனே அந்த துயர்மிகு செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். யாரிடம் பேசி உள்ளிருக்கும் குமுறலையும், கோபத்தையும், சோகத்தையும் பகிர்ந்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அடுத்தநாள் அருண்மொழியுடன் இடைவிடாத தொடர்பில் இருந்த நீண்டகால நண்பர் இயக்குநர் சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களை தொலைபேசியில் அழைத்தேன். அவரிடம் பேசும் போது என் குரல் தழுதழுத்தது. ஆனால் முழுமையாக அழமுடியவில்லை. அவரை நேரில் சந்திருந்தால் நிச்சயமாக அழுதிருப்பேன். ஆகையால் நெஞ்சிலிருக்கும் வலி அப்படியே உறைந்து நிற்கிறது.

சுவர்ணவேல் அவர்களிடம் பேசிய பிறகு முகநூலை திறந்து பார்த்தால் அதில் அருண்மொழியைப் பற்றி எண்ணற்ற அஞ்சலி குறிப்புகளையும் இரங்கல் செய்திகளும் குவிந்திருந்தன. அதை பார்த்ததும் என் குழுறலும் கோபமும் ஓரளவுக்கு அடங்கியது என்றால் அந்த குறிப்புகள் என்னை ஒரு பெரும் வியப்பிலும் ஆழ்த்தியது. காரணம் ருத்ரைய்யா அவர்கள் மறைந்தபோது இந்த அளவிற்கு அவருக்கு அஞ்சலி குறிப்புகளோ அல்லது இப்படியான அஞ்சலி கூட்டங்களோ நடக்கவில்லை.

1987ல் ஜான் ஏப்ரஹாம் இறந்த போது ஞானி, நாகர்ஜூனன், பன்னீர்செல்வம் மற்றும் நானும் சேர்ந்து ஒரு இரங்கல் கூட்டத்தை சென்னையில் கூட்டியப்போது அதற்கு எங்களைத் தவிர இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஏன்? அன்று எங்களிடம் முகநூல் வாட்ஸப் கருவிகள் இல்லை என்பது நிஜம் என்றாலும் அன்றைய தமிழ் கலாச்சாரத்தின் நிலமை அது. மாறாக கேரளாவில் ஒடிஸா என்ற அமைப்பு அவருக்காக பெரும் கூட்டம் ஒன்றை கூட்டி அவர் பங்களிப்பை கொண்டாடியது. ருத்ரைய்யா இந்த முகநூல் வாட்ஸப் காலத்தில்தான் காலமானார் என்றாலும் அவருக்கும் இன்று அருண்மொழிக்கு கிடைத்துள்ள பரவலான ஆதரவு கிடைக்கவில்லை? ஏன்?

இறுதிவரை ருத்ரைய்யா அவர்கள் ஒரு தனித்தீவாகவே இயங்கினார். நம் நினைவு வந்தால் தொலைபேசியில் அழைப்பார் இல்லையேன்றால் அவரைப் பார்த்து நாட்கள் ஆகிவிட்டனவே அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய நாம்தான் அவர் இருக்கும் இடத்தை தேடி செல்லவேண்டும். எந்த சமூக நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ள மாட்டார். அவரும் இறுதிவரை நிறைய நடந்தார். ஆனால் பெரும்பாலும் தனியாகவே.

இதற்கு மாறாக தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை போல் ஒரு நாடகம் பார்க்க சென்றாலோ அல்லது ஒரு ஆவணபடத்தை பார்க்க சென்றாலோ அல்லது பல வெளிநாட்டு கலாச்சார துறைகளில் நடக்கும் திரைப்பட கூட்டங்களுக்கு சென்றாலோ, அல்லது திரைப்பட சோசைட்டிக்கு சென்றாலோ அல்லது திரைப்பட விழாவிற்கோ அல்லது புத்தகத்திருவிழாவிற்கு சென்றாலோ அங்கெல்லாம் அருண்மொழி இருப்பார். அதனால் அவரை நேருக்கு நேராக பார்த்திருக்காதவர்கள் நம் போன்றவர்களிடையே மிகவும் குறைவு என்பதே நிஜம்.

குறிப்பாக பல நண்பர்களின் முயற்சிகளையும் ஆர்வமுள்ள இளைஞர்களையும் அரவணைத்து ஆதரித்து ஊக்குவிக்க அவர் என்றுமே தயங்கியதில்லை. நம் படைப்புகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் நம் முயற்சிகளை பாராட்டுவார். அவருடைய நட்பு வட்டம் இதனாலேயே மிகவும் அகலமானது.

அருண்மொழி தனது வாழ்க்கையில் எத்தனையோ முட்டுக்கட்டைகளை கடந்து வந்தார். ஆனால் ஏதாவது சோகத்தையோ அல்லது கோபத்தையோ அல்லது வேறு எந்தவிதமான அறிகுறியோ அவர் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. ஒரு இடத்தில் வேலை போய்விட்டது என்றால் அதைப்பற்றி கவலை படாமல் வேறு ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டு அடுத்த வேலை ஒன்றில் இறங்கிவிடுவார். அவர் முடிதான் நரைக்க துவங்கியதே தவிர நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எப்படி இருந்தாரோ அப்படிதான் அவர் இறுதி வரை இருந்தார்.

1970களை லட்சியவாதிகளின் காலம் என்று சொல்லலாம். அந்த காலக்கட்டத்தில் கல்லூரியிலிருந்து தேரியவர்கள் கலாச்சார முதலீடு அதிகம் உள்ள குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்றால் மேலை நாடுகளுக்கு பறந்துவிடுவார்கள். கொஞ்சம் வசதியற்ற பின்னணியிலிருந்து வந்தால் அவர்கள் துபாய் போன்ற நாடுகளிலோ அல்லது அரசு துறையில் ஏதாவது ஒரு பணியில் சேர்ந்துவிடுவார்கள். அன்று சென்னையில் இருந்த தனியார் துறையோ மிகவும் சிறியது. அந்த நிறுவனங்களை கைவிட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவற்றில் பணியில் சேரவேண்டும் என்றால் ஏதாவது ஒரு சாதி அல்லது மதத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். இந்த சூழலுக்கு எதிராக இரண்டு விதமான இளைஞர்கள் இருந்தார்கள். இவர்கள் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் வெளியே இயங்க முயன்றார்கள். ஆகையால் இந்த இரண்டு தரப்பினர்கள்தான் அந்த காலத்தின் லட்சியவாதிகள்.

இவற்றில் ஒரு தரப்பு அடிப்படை சமூக மாற்றமே புதியதோர் விடிவை உருவாக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் தீவிரமாக தங்களை இடது சாரி இயக்கங்களில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். இவர்களில் மிகவும் துடிப்பும் அவசரமும் இருந்தவர்கள் தங்களை ஆயுத போராட்டத்தை முன்வைத்த நக்ஸல்பாரி இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். அவர்களில் சிலர் என்கவுண்டர் கொலைகளின் மூலம் களையெடுக்கப்பட்டனர்.

இரண்டாவது தரப்பினர் தங்களை கலை உலகத்தில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
கலை உலகம் என்று சொல்லும்போது அன்று நான்கு கலைகளில்தான் இவர்களின் இருப்புகளுக்கு வழி இருந்தது. அவை எழுத்து கலை, நாடக கலை, ஓவிய கலை மற்றும் சினிமா கலை. ஆனால் முதல் மூன்று கலைகளில் ஏதாவது ஒரு பணியிலிருந்துக்கொண்டு படைப்புகளை உருவாக்கமுடியும். மாறாக சினிமா கலைக்கு இரவு பகல் என்று பாராமல் நமது முழுநேரத்தையும் தீவிரமாக செலவிடுவதை தவிர வேறு வழியில்லை. இப்படிதான் அருண்மொழி என்ற லட்சியவாதி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ருத்ரைய்யா அவர்கள் அவள் அப்படித்தான் எடுக்கப்போகிறோர் என்று தெரிந்தவுடன் அரசு தொலைக்காட்சியில் இருந்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு அவர் குழுவில் ஐக்கியமாகிவிட்டார். கிராமத்து அத்தியாயம் என்ற ருத்ரைய்யாவின் இரண்டாவது படம் தோல்வியடைந்து அதற்கு பிறகு அவருக்கு படங்கள் எடுப்பது சாத்தியமற்ற ஒன்றாக ஆகிவிட்டாலும் கே. ஹரிஹரன் என்ற இயக்குநருடன் இணைந்து ஏழாவது மனிதன் என்ற படத்தின் துணை இயக்குநராகவும் துணை வசனகர்த்தாகவும் பணியாற்றினார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தாலும் அது வியாபார உலகில் வெற்றிப் பெறவில்லை. இருந்தாலும் பாளை என். சண்முகம் என்ற தயாரிப்பாளருடன் அந்த படத்தில் உருவான நட்பின் வழியாக அருண்மொழி காணிநிலம், ஏர்முனை போன்ற படங்களை உருவாக்கினார்.

இதற்கு பிறகு அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை யாழினி முனிசாமி அவர்கள் அருண்மொழியுடன் எடுத்த பேட்டி மிகவும் சீராக பட்டியலிட்டு விவரித்துள்ளது. இந்தப் பேட்டியை காஞ்சனை பிலிம் சொசைட்டி முகநூலில் நவம்பர் 10 அன்று பதிவு செய்துள்ளது. அந்த கோப்பை இதனுடன் இணைத்திருக்கிறேன். எல்லோரும் அதை நிச்சயம் வாசிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அவள் அப்படித்தான் என்ற படத்திற்கு பிறகு கமலஹாசன், சுஜாதா மற்றும் சந்திரஹாசன் அவர்கள் நடித்த ராஜா என்னை மன்னித்துவிடு என்ற படத்தை ருத்ரைய்யா இயக்க துவங்கினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் குழுவில் உதவி இயக்குநராக நான் இணைந்தேன். அந்த தருணத்தில்தான் எனக்கும் அருண்மொழிக்கும் ஒரு அறிமுகம் ஏற்பட்டது. அந்த படத்தில் பல சிக்கல்கள் ஏற்பட அதை ஒதுக்கிவிட்டு ருத்ரைய்யா அவர்கள் கிராமத்து அத்தியாயம் என்ற படத்தை கடகடவென்று உருவாக்க துவங்கினார். அதனுடைய பெரும்பாலான காட்சிகள் ஆத்தூர் அருகே உள்ள தம்பம்பட்டியிலும் இறுதிகாட்சிகள் கொல்லி மலையிலும் உருவாக்கப்பட்டன. அந்த குழுவினருடன் கழித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக அருண்மொழி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். பயங்கர உழைப்பாளி. சோர்வு என்பதை அவர் முகத்தில் நான் என்றும் கண்டதில்லை.

எத்தனையோ ஆண்டுகள் கழித்து பால கைலாசம் அவர்கள் புதுயுகம் சானலை புதிய தலைமுறை என்ற நிறுவனத்தின் கீழ் துவங்கி அதன் தலைமை இயக்குநராக அதை நிர்வகித்தப்போது மறுபடியும் நானும் அருண்மொழியும் இணைந்து தமிழ் திரைப்பட உலகைப் பற்றி ஒரு தொடரை உருவாக்குவதில் ஈடுபட்டோம். ஆனால் பால கைலாசமிடமிருந்த புதிய திட்டங்களையெல்லாம் கறந்துவிட்ட பிறகு அந்த நிர்வாகம் அவரையும் அவர் தேர்வு செய்து பணியில் அமர்த்தியிருந்த எல்லோரையும் வெளியேற்றியது.

இருந்தாலும் இதனால் சிறிது கூட மனம் தளராமல் உடனே தனது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு பள்ளியை துவங்கி அருண்மொழி அதை முன்னெடுத்து செல்ல பம்பரமாக சுழன்றார். இதற்கிடையில் நிறைய ஆளுமைகளின் பேட்டிகளை, எனது உள்பட, அவர் காமிராவில் பதிவு செய்தார். இவற்றையெல்லாம் அருண்மொழியின் “நிறைவற்ற படைப்பாக” தொகுத்து வெளியிடும் படி இயக்குநர் கே. ஹரிஹரன் பலமுறை கூறினாலும் அதை அருண்மொழி செய்யவில்லை. அவருடைய மாணவர்கள்தான் அதை சீரான தொகுப்புகளாக கொண்டுவரவேண்டும்.

கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி குறிப்பு எழுதவேண்டிய கடமையே. அந்த வரிசையில் இது எனது ஐந்தாவது அஞ்சலி குறிப்பு.

அருண்மொழி சிரித்தால் அவருக்கு வாய்விட்டுதான் சிரிக்க தெரியும். அதை நினைக்கும்போது என் நெஞ்சு வலி கொஞ்சம் குறைகிறது. வாழ்க அவரது புகழ்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுபடியும் ஹைதராபத்தில் பணியில் இருப்பதாலும் அதிக வேலை பளுவின் காரணமாகவும் நேருக்கு நேராக இங்கு இந்த சபையில் கலந்துக்கொள்ளமுடியாமல் போனதிற்கு வருந்துகிறேன்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திரை எழுத்தாளர்.

இயக்குநர் அருண்மொழிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரியார் திடலில் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே…

அஞ்சலி: இயக்குநர் அருண்மொழி

இயக்குநர் அருண்மொழி கடந்த சனிக்கிழமை (9-9-2019) அன்று காலமானார். தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது அருண்மொழியின் பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்‘ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் ‘காணிநிலம்‘ எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் ‘ஏர்முனை‘ எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்…

நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55நிமிட படமிது.

பண்ணை வேலையார் ‘சோடாமாணிக்கம்’, காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று…

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

மூன்றாவது இனம் :

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா – 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் ‘நூரி’யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த ‘ஆஷா பாரதி’ எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

‘இரண்டாம் பிறவி’ (1998) ‘கூடவாகம்’ (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி ‘தோழி‘ எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions :

1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது ஆர்.ஆர்.சீனிவாசனின் ‘ஒரு நதியின் மரணம்’ ஆவணப்படம். இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் ‘விடியல் வரும்‘ (45 நி) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் ‘Key Maker ‘ , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன், இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார் இயக்குநர் அருண்மொழி.

முகநூல் பதிவு

நிழலழகி 13: ஓவியா புகழ்பாடும் நாம் மஞ்சுவை என்ன செய்தோம்?

கே. ஏ. பத்மஜா

Aval Appadithan | Tamil | C.Rudhraiya | 1978

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மிக பெரிய அலை அடித்தது என்றால், அது ஓவியா அலைதான். வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் ஓவியா ஆர்மி உறுப்பினராக மார்தட்டிக் கொண்டனர். தமிழகத்தின் மொத்த வாழ்வியல் பாடமும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருக்கும் நபர்கள்தான் கற்றுத் தருவதாகவும், அதில் ஓவியாதான் மனிதகுல மேன்மையானவர் என்ற அளவிற்கு அவர் பேசும் வார்த்தைகள் கூட பொன்மொழிகளாய் பொறிக்கப்பட்டு வந்தது.

‘அவள் அப்படித்தான்’… ருத்ரையா இயக்கத்தில் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினி நடித்து 1978-ல் வெளிவந்த படம். உண்மையில் இந்தப் படம் வெளிவந்தவுடன் கொண்டாடப்படவில்லை. பல பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தும் படம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதற்கு காரணம், படத்தில் பேசப்பட்ட விஷயம். சில நல்ல இயக்குனர்கள் இந்தப் படத்தை பற்றி பேச ஆரம்பித்து, புகழ ஆரம்பித்த பிறகுதான் படம் கவனிக்கப்பட்டது. இன்றும் 40 வருடங்கள் தாண்டியும் திரைப்பட கல்லூரியில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் புகுத்தும் அளவிற்கு தரம் உயர்ந்து நிற்கும் ஒரு படம் இது.

ஸ்ரீப்ரியா, ரஜினி, கமலின் நடிப்பு, ருத்ரையாவின் இயக்கம் என்றெல்லாம் படத்தை பக்கம் பக்கமாய் வருணித்தவர்கள் கூட மஞ்சு கதாபாத்திரத்தையும், அது சமூகத்துக்கு கொடுத்த சட்டையடியையும் பற்றி அடக்கி வாசித்தனர். சிலர் இதெல்லாம் பெண்ணிய-வியாதி என்ற அளவிற்கு ஏளனமாய் பார்த்தனர்.

ஆரோக்கியமான குடும்பச் சூழல் இல்லாத வளரிளம் பருவம், காதல் என்ற தூண்டிலில் அன்பெனும் துடுப்பில் மாட்டிக்கொண்டு இரையானது. தான் சாயும் தோளில் எல்லாம் அன்பை எதிர்பார்க்கும்போது ஆண்கள் வெறும் தன்னுடைய உடம்பை அனுபவிக்கத்தான் வருகின்றனர் என்ற வெறுப்பும், தொடர் ஏமாற்றமும் ஆண் சமூகத்தையே தன் மனதிற்குள் கீழ்த்தரமாய் வெறுக்க வைப்பதும், இனி பொறுக்கமாட்டேன் என்று பதிலடி கொடுக்க தயாராவதும், இறுதிவரை அன்பிற்கு ஏங்குவதும், கலங்குவதும் உயிர்த்து எழுவதும் என்றிருக்கும் மஞ்சுவை இந்தச் சமூகம் அடையாளப்படுத்திய விதம்தான் ‘அவள் அப்படித்தான்’.

மஞ்சு இந்த சமூகத்திடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும்தான். ஆனால், அவளுக்கு கிடைத்த போலியான அன்பு அவளை உடைத்துப் போட்டாலும் தைரியமாக அவள் தன்னைத் தானே கட்டி எழுப்பினாள் மதில் சுவருடன்.

அவள் சுயத்தை மதிக்காத சமூகம், அவளை நசுக்க நினைக்கும்போது அதை துச்சமாய் தூக்கி எறிந்தாள். யாருக்காகவும் தன்னுடைய சுயத்தை மாற்றிக்கொள்ள முற்படவில்லை. நாம் யாருக்காக மாறினாலும் யாரையும் முழு திருப்திப்படுத்த முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தாள்.

aval_2111456f

மஞ்சுவும் அழுதாள்; ஆனால் மறுமுறை அதே விசயத்திற்கு அழக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தாள். அவளுக்கு இந்தச் சமூகம் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முகமூடி மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியபோது, அதை தூக்கி எறிந்து தன் நிஜ அடையாளங்களுடன் வலம் வந்தாள். அவள் பாதைகளில் பூக்கள் இல்லை; அது கொஞ்சம் கரடு முரடான பாதை; அதிகம் பயணித்திடாத, பாதங்கங்கள் படாத பாதை. இந்தப் பயணத்தில் சோர்ந்து போகும்போது அவளை புரிந்துகொள்ள, தோள்கொடுக்க, உற்சாகம் அளிக்க அவள் சித்திரமான ஒரு துணையைப் பெறவே ஆசைப்பட்டாள்.

முகத்திற்கு முன்பு ஒன்றும், முகத்திற்கு பின் ஒன்றும் பேசும் சக அலுவலர்களை அவள் கண்டுகொள்ளவில்லை. அவளைப் பார்த்து பொறாமையில் புறணி பேசிய பெண்களை அவள் முகத்திற்கு நேராய் சாடினாள். அவள் உடலையும், நடத்தையையும் மதிப்பீடு போட்ட ஆண்களை கண்டு அவள் பயந்து ஓடவில்லை; முகத்திற்கு நேராய் எதிர்த்து அவர்கள் வாயை அடைத்தாள்.

ஆரம்ப காலத்தில் குடும்பத்தில் தனக்கு கிடைக்காத நிம்மதி, கல்லூரியில் தனது சிநேகிதனிடம் கிடைத்தபோது மஞ்சு அவன் மீது காதல் என்றும், அது கடைசி வரை தனக்கு சந்தோஷம் கொடுக்கப்போகிற ஒரு துணை என்றும் நம்புவாள். பின்னாளில் மஞ்சு தனக்கு இருந்த ஈர்ப்பை காதல் என்று நம்பிய தனது அறியாமையை எண்ணி நகைப்பாள். ஆம், காலம் அவளிற்கு அத்தனைப் பக்குவத்தை கொடுத்து இருந்தது.

தொடர் குடும்பப் பிரச்சனைகள் வீட்டில் இருக்கவிடாமல் வெறுக்க வைத்தபோது அவள் ஆறுதல் தேடி தஞ்சம் புகுந்த வீட்டிலும் ஏமாற்றம். ஆம், அங்கே அவள் காதல் என்று நம்பிய விஷயம், அவள் உடல் வேட்கையோடு முடியும். மஞ்சு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதும் அவன், தான் அவளை ஒரு தங்கையாய் தான் பார்த்தேன் என்பான். நமக்கு ஒரு நபருடன் என்ன மாதிரியான உறவு என்று உறுதிபடுத்திக்கொள்ள தெளிவில்லாத நிலைக்கு முன்பே உடல் தேவையை பூர்த்தி செய்துகொண்டு தன் வசதிக்கேற்ப இது வெறும் நட்பு, அண்ணன் – தங்கை, அக்கா – தம்பி என்று எல்லாம் சாக்கு சொல்லித் தப்பிக்க நினைக்கும் கோழைகளை விட பாலியல் தொழிலாளர்களை நாடுவோர் மேலானவர்கள் என்று அவள் வெளிப்படுத்திய விதம் முகத்திற்கு நேராய் எச்சில் துப்பியதற்குச் சமம்.

தியாகு போன்ற ஆண்களுக்கு ஒரு பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால், அல்லது தன்னுடைய ஆசைக்கு அடிபணிய மறுத்தால் அவளை வெறும் வாய் வார்த்தையிலே அனுபவிப்பதும், அவள் நடத்தையை கேவலமாய் பேசுவதும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

அருண் (கமல்) தன் மேல் காட்டுவது அன்பா, பரிதாமா என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள். மஞ்சு அன்பிற்காய் ஏங்கினாள்; ஆனால் அந்த அன்பை பிச்சையாக யாரும் தனக்கு கொடுக்க வேண்டாம் என்று வைராக்கியமாய் இருந்தாள்.

அருண் போன்ற ஆண்கள் மஞ்சுவிற்காய் இரக்கப்பட்டாலும், அவளை காதலித்தாலும், அவளை திருமணம் செய்ய கொஞ்சம் தைரியம் திரட்ட தயங்கி பின்வாங்கத்தான் செய்கின்றனர். பெண்ணியம் பேசுதல், பெண்சுதந்திரம் தேவை போன்றவை பேனா மையில் வழிந்தாலும், திரையில் கட்ட நினைத்தாலும், கொஞ்சம் மேம்பட்டு சிந்தித்தாலும் மஞ்சு போன்ற பெண்களைத் திருமணம் செய்யும் முடிவில் கொஞ்சம் பின்வாங்கத்தான் செய்கின்றனர்.

பெண்சுதந்திரம் என்று ஒன்று தேவை என்று கூட அறியாத பெண்களுக்கு வாழ்க்கை அத்தனை பாடாய் தெரிவதில்லை. ஆனால் மஞ்சு போன்ற கொஞ்சம் கண்விழித்த பெண்களுக்கு இந்த உலகம் தங்களை அடிமை படுத்துவதையும், ஏமாற்றுவதையும் உணர்ந்த பெண்களுக்கு வாழ்க்கை தினம் தினம் ஒரு மரண போராட்டம்.

மஞ்சு உங்களோடு பயணிக்க முடியாது என்று புரிந்து கொஞ்சம் நிறுத்த சொல்லி வெளியேறுகிறாள்.

இதை வாசித்தபோது உங்கள் மனதில் ‘பிக் பாஸ்’ ஓவியா நிழலாடி இருப்பார். ஆம், அதான் மஞ்சுவின் வல்லமை. அவள் தினம் தினம் இறக்கிறாள்; மறுபடியும் தானாய் பிறக்கிறாள்… “அவள் அப்படித்தான்”. ஒரு நல்ல திரைபடமும், புத்தகமும் எந்த காலத்தோடு ஒப்பிட்டாலும் அந்தக் காலத்தோடு இணைத்து போகும்போது அது இரவா காவியமாக உயிர் வாழ்கிறது.

மஞ்சு, ஓவியா போன்ற பெண்களை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஆர்வம், அத்தகையோர் நமக்கு நெருக்கமாகும்போது அவர்களைப் புரிந்துகொள்வதில் காட்டுவதில்லை. ஒரு விலையுயர்ந்த செல்பேசி கூட ஆறே மாதத்தில் பழைய மாடல் ஆகிவிடுகிறது. ஆனால், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு சமூகத்தில் பெண்களுக்கு இருந்த பிரச்சினை இன்னும் பழுதடையாமல் அப்படியே இருக்கிறது. அவள் அப்படித்தான் என்று முத்திரை குத்தப்பட்டு இன்னும் பல கேள்விகளையும், பதில்களையும் நமக்குள் முடிவில்லாமல் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

(தொடரும்)

நடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்

நடிப்பு குறித்த பிரத்யேக விடயங்களைத் தாங்கி ‘நடிப்பு’ என்கிற பெயரில் ஓர் இதழ் வருகிறதென்று நான் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீப்ரியாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தாங்கி வந்திருந்த ‘நடிப்பு’ என்ற இதழின் முன் அட்டைப் படத்தை முகநூலில் பார்த்தேன். அட்டைப்படத்தின் வடிவமைப்பு என்னை ஈர்த்தது. தம்பிச் சோழன், அதைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த முகப்புப் படம், தனித்துத் தெரிந்தது, அது ஆவலைத் தூண்டியது. தம்பிச் சோழன் நடிப்புக்கென பிரத்யேகமாக வெளியிட்டு வரும் இதழ் என்பதையும் இது மூன்றாவது இதழ் என்பதையும் அறிந்தேன். வெகுஜென சினிமா இதழ்கள், தீவிர சினிமா இதழ்கள் என சினிமா தொடர்பான இதழ்கள் கணிசமாக வந்துகொண்டிருக்க, ‘நடிப்பு’ என்கிற இதழை கொண்டுவர சோழனை தூண்டியது எது? நடிப்புக்கென ஓர் இதழ் அவசியமா? வாசகருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துமா? நாடகத்திலிருந்து சினிமாவுக்கான பயணம்; பயணங்களின் கதைகள், அனுபவங்கள் என தம்பிச் சோழனுடன் நீண்ட உரையாடலிலிருந்து…

உங்க ஊர் எது? உங்களைப் பற்றிய அறிமுகத்திலிருந்து பேசலாமா?

“தேன்கனிக் கோட்டை(கிருஷ்ணகிரி மாவட்டம்) உச்சனபள்ளி சொந்த ஊர். என்னோட பேர் ராஜ்குமார். காரணம் அப்பா கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர். வீட்ல தெலுங்கு பேசுவோம். ஊர்ல கன்னடம் பேசுவாங்க. படிச்சது தமிழ். எங்க அப்பா ஒரு பொறுப்பில்லாத மனிதர். நிறைய வசதி இருந்து, ஊதாரித்தனமா இருந்ததால, வீட்டுக்குள்ள பிரச்சினை. எங்க அம்மா மூன்றாவது மனைவி. இவர் இப்படியே இருந்தா நான் செத்துதான் போனேன்னு சொல்லிட்டிருந்தாங்க. எங்க அம்மா என்கிட்ட அப்படி சொன்ன மூணு மாசத்துல செத்துட்டாங்க. என்னோட ஒன்பது வயசுல கிணத்துல் குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. இதுக்குக் காரணம் எங்க அப்பாதான்னு தெரிஞ்சதால அவர் மேல வெறுப்பு வந்தது. அது கடைசி வரையிலும் மாறலை. அப்பாவும் செத்த பிறகுதான் நான் ஏன் அப்படி இருந்தேன்னு தோணுச்சி.

எங்க அம்மா இறக்கிறவரைக்கும் நான் நல்ல படிப்பாளியா இருந்தேன். எங்க ஸ்கூல்ல நானும் இன்னொருத்தனும்தான் தெளிவா, தப்பில்லாம படிப்போம். ஆனா அம்மா இறந்த பிறகு படிப்புல ஆர்வம் வரலை. ஏழாவதுல வாத்தியார் வேணும்னே ஃபெயில் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் அப்பாவுக்கு எனக்கும் நிறைய பிரச்சினை. மூணு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். இங்க இருக்க முடியாது. என்ன கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்த்துடுங்கன்னு சொன்னேன். கிறிஸ்டியன் ஹாஸ்டல் எதுலேயும் என்னை சேர்க்கலை. அப்புறம் படிக்க வைக்கிறதுக்கு வசதியில்லன்னு சொல்லி கூர்நோக்கு இல்லத்துல சேர்த்துவிட்டாங்க. அடுத்து ராணிப் பேட்டையில 9-வது படிச்சேன். ஞாநியும் நாசரும் படிச்ச ஸ்கூல்ல பத்தாவது பரிட்சை எழுதினேன்.

அதுக்கப்புறம் பள்ளி படிப்பு மேல ஒருவித வெறுப்பு. அதுக்கு பல காரணங்கள்…அப்ப 17, 18 வயசிருக்கும் ஆம்பூர்ல இருந்த அக்கா வீட்டுக்குப் போயிட்டேன். அக்காவுடைய குடும்பம் கள்ளு காய்ச்சுற குடும்பம். எம் ஜி ஆர் காலத்துல வந்த தடையில சாராயம் காய்ச்சுனாங்க.  பட்டை, வெல்லம்லாம் போட்டு நல்ல சாராயம்தான் காய்ச்சுவாங்க. அடுத்தவன் வயித்தெரிச்சலுக்கு ஆளாகி நாம சம்பாதிக்க வேண்டாம்பாங்க. அந்த சாராயத்தையே அளவில்லாம குடிச்சி அக்கா வீட்டு ஆண்கள் அடுத்தடுத்து சாய்ஞ்சாங்க. நல்லா பணம் சம்பாதிப்பாங்க, திடீர்னு ரெய்டு வரும் சம்பாதிச்ச எல்லாத்தை கெணத்துல தூக்கிப் போட்டு போயிடுவாங்க. இளைஞனுக்கான கோபம் இருந்தாலும் ஒன்னு முடியாது.

இந்த நேரத்துலதான் என்னை திசை மாத்திக்க புத்தகம் படிக்கிறது கைக் கொடுத்துச்சி. ஸ்கூல வார இதழ்கள் படிப்பேன்.  இரவு சாராய வியாபாரம், பகல்ல சோடா பாட்டில் மிதிக்கிறது. அப்பா வேலைப் பார்த்தா தோல் ஃபேக்டரில வேலைன்னு போக, கிடைக்குற நேரத்துல புத்தகம் படிக்க ஆரம்பிச்சிருவேன்.

என் அப்பாவும் அக்காவும் பெருச்சாளிங்க. சம்பாதிக்கிற மொத்த பணத்தையும் வீட்டுக்குக் கொடுத்துடும்னு சொல்லுவாங்க. நான் பள்ளிக்கூடத்த விட்டு நிக்கிறதுக்கு அக்காவும் ஒரு காரணம்.  அக்கா பிளான் பண்ணிதான் என்னை நிறுத்தியிருக்கு. சம்பாதிக்கிறதுக்கு ஒரு ஆள் வேணும். வீட்ல பொண்ணு இருந்தது. அப்படியே கட்டிக் கொடுத்திடலாம்னு அவங்களுக்கு ஒரு எண்ணம். ஒரு நேரத்துல அப்பாவுக்கும் எனக்கும் சண்டை வந்தது.  என் மேல மண்னெண்ணெய் ஊத்தி கொளுத்த வந்துட்டாரு. அப்போ அங்கிருந்து சென்னை வந்தவந்தான். 3, 4 வருசத்துக்கு எங்கிருக்கின்னுகூட சொல்லலை.”

சினிமாவில் பெரிய ஆளாகணும்கிற லட்சியத்தோட வந்தீங்களா?

“பாலகுமாரனை படிச்சிட்டு நானும் எழுதணும்னுதான் சென்னைக்கு வந்தேன். எழுத்து நமக்கு சோறு போடாதுன்னு தெரிஞ்சது. அப்போ அந்த மாதிரி ஒரு நிலைமை இருந்தது. இப்பவாயிருந்தா வேறமாதிரி யோசிச்சிருப்பேன். சமையல் கேண்டீன்ல கொஞ்ச நாள் வேலைப் பார்த்தேன். அங்க இருந்த பெரியவர் ஒருத்தர் பெரிய அனுபவசாலியா தெரிஞ்சாறு. அவர் பேசிதான் சினிமான்னு திசை திரும்பிட்டேன். இதையெல்லாம் நடக்கும்போது 19 வயசு இருக்கும்.

முருகதாஸ்கிட்ட ட்ரை பண்ணிட்டிருந்தேன். மூணுமாசம் கழிச்சு வான்னு சொல்லிட்டாரு. ஊருக்குப் போயிட்டேன். ஆம்பூர் ஆடியோன்னு உள்ளூர் எஃப் எம் அதுல வேலை செஞ்சேன். கவிஞர் யாழன் ஆதி அதுல இன்று ஒரு தகவல் மாதிரி ஒரு நிகழ்ச்சில பேசுவாரு. அப்புறம் லெண்டிங் லைப்ரரி வார, மாத இதழ்களை கடைகளுக்கு கொடுக்கிறதை செஞ்சேன். நல்ல போயிட்டிருந்தது. ரமணா படம் பார்த்த உடனே நமக்கு சினிமா தான்னு முடிவு பண்ணி திரும்பவும் சென்னை வந்தேன்.

அப்போதான் தீவிர அரசியல் இயக்கங்களோட அறிமுகம் ஏற்பட்டது. ரெண்டு வருசம் அவங்களோட இருந்தேன். ஒரு கட்டத்துல யுகபாரதி அறிமுகமானார். அமைப்புல சிக்கல் வந்தது. அப்புறம் அங்கிருந்து விலகினேன். கணையாழிலேர்ந்து வெளியே வந்து யுகபாரதி  படித்துறைன்னு ஒரு இதழ் நடத்திக்கிட்டு இருந்தாரு. அவர்தான் ஆசிரியர். மத்த வேலையெல்லாம் நான் தான் பார்த்தேன். அஞ்சு இதழ்கள்லேயும் வேலைப்பார்த்தேன்.

படித்துறையில் சம்பளம் சம்பளம் கம்மிங்கிறதால, படித்துறையை வெளியிட்ட விஜயராகவன், கூத்துப்பட்டறையில பகுதி நேர வேலை வாங்கிக் கொடுத்தார். கூத்துப் பட்டறையில இருக்க வேண்டிய ஆள்னு விஜயராகவனுக்கு என்னைப் பற்றிய ஒரு எண்ணம். கோடம்பாக்கத்துல யுகபாரதியோட அறையில் சனி, ஞாயிறுகள்ல பிரியாணி சமைப்பேன். கூத்துப்பட்டறையில் சமைச்சிக்கிட்டிருந்த அம்மா வேலையை விட்டுப் போயிட்டாங்க. அப்பதான் அந்த வேலைக்கு விஜயராகவன் என்னை அழைச்சுட்டுப் போனார்.”

தம்பிச் சோழன்
தம்பிச் சோழன்

ஸோ..நடிப்பு சமயலறையிலிருந்து தொடங்கினதா?

“ஆமாம்…ஆறு மாதத்துல பட்டறையில என் சமையல் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. சமைச்ச நேரம் போக, யோகா பண்ணுவேன், வெளிநாடுகள்லேர்ந்து வந்து யாராவது ஒர்க்‌ஷாப் நடத்தினா அதுல கலந்துக்குவேன். அந்தக் கட்டத்துல செம்பட்டை பாலான்னு ஒரு கோ ஆக்டர். செம்பட்டைங்கிற ஒரு படத்துல ஹீரோவா நடிச்சாரு. அவருக்கும் எனக்கும் கிளாஷ். நா. முத்துசாமி என் மேல வெச்சிருந்த அபிப்ராயத்துல சமையல் வேலையிருந்த என்னை ஆக்டரா ஆக்கிட்டாரு. அதுக்குக் காரணம் படித்துறையில நான் எழுதின சார்லி சாப்ளின் பத்தின ‘மகா கலைஞன்’ங்கிற 11 பக்க கட்டுரை. இதுவரைக்கும் நான் எழுதினதிலேயே மிகப் பெரிய கட்டுரை. பேசப்பட்ட கட்டுரை. இவனுக்கு எழுதவும் வருதுங்கிற அபிப்ராயம் என்னை ஏத்துக்க வெச்சது. நான் முழு நேர நடிகனாயிட்டேன்.”

கூத்துப்பட்டறை அனுபவம் எப்படி இருந்தது?

“கூத்துப்பட்டறை அனுபவம் வேறமாதிரி. மெடிடேசன், யோகான்னு எல்லாத்தையும் மாத்தி விட்டிடும். என்னை நான் செதுக்கிக்க முத்துசாமி முக்கியமான காரணம். இவ்ளோ அனுபவங்கள் உனக்கு இருக்கு. இங்க இருக்க  20 ஆக்டர்ல உனக்கு நடந்தமாதிரி யாருக்காவது நடந்திருக்கான்னா இல்ல. அத நீ சாபமா பார்க்கப் போறியா? உரமா பார்க்கப் போறியா, சுமையா நினைச்சிக்கிட்டு இருக்கப் போறீயான்னு ஒரு நாள் கேட்டாரு. அது ஒரு தெறிப்பு. அன்னியிலேர்ந்து நான் வேறமாதிரி ஆகிட்டேன். கூத்துப் பட்டறையில கத்துக்கிட்டதோட வயலின் கத்துக்கிட்டேன்; பாட்டு கத்துக்கிட்டேன்; எடிட்டிங் கத்துக்கிட்டேன்.

கூத்துப்பட்டறையில கத்துக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு பணம் கட்ட வேண்டியிருந்தது. அது என்னால முடியாதப்போ டாடா நிறுவனத்திலிருந்து என் ஜி ஓ ஒர்க் வருது அதுல போய் வேலைப்பாருன்னு முத்துசாமி சொன்னாரு. இளைஞர்கள் மத்தியில் நாடகத்தை பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தறது. தமிழ்நாட்டுல முக்கியமான கல்லூரிகள் துணையோட இந்த ப்ராஜெக்ட் நடந்தது. திருச்சி பிஷப் ஹுபர் கல்லூரியில இரண்டு வருசம் இப்போது நாம் நம்மைப் பற்றி பேசலாம் ங்கிற பேர்ல கிட்டத்தட்ட  350 -400 வீதி நாடகங்கள் போட்டோம். சமூக அரங்குன்னு இந்த வகை நாடகங்கள சொல்வாங்க.

முதல்ல நடிகர்களா எங்க பிரச்சினையை பேச ஆரம்பிப்போம். பிறகு, ஆடியன்ஸும் அவங்க பிரச்சினையை பேசுவாங்க. பிரச்சினைகளை யோசிக்க,  பொதுத்தளத்துல வெச்சி பகிர்ந்துக்கறதுக்கு இது தூண்டுகோளா இருக்கும். பகிர்ந்துக்க முடியாதவங்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணுவாங்க. என்னோட பார்வையை மாத்துனது இந்த ஆண்டுகள்ல கிடைச்ச அனுபவம்தான். அப்பதான் நான் நடிகனா இருக்க விரும்பாம, மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கிற இயக்குநரா ஆகலாம்னு முடிவு செஞ்சேன்.

கூத்துப் பட்டறைல நடிகனா, பயிற்சியாளனா இருந்தேன். அங்க இருந்த அஞ்சு வருசத்துல உள்ள இருந்த நேரம் குறைவுதான், ஏதோ ஒரு கிராமத்துக்கோ, தள்ளியிருக்கிற பள்ளிக்கோ போயிடுவேன். அதுவும் ஒரேமாதிரியா சிஸ்டமாயிடுது.. 2010 வெளியே வந்தேன். தங்கர் பச்சான், ஜேடி-ஜெர்ரியோட வேலைப்பார்த்தேன். அது ஒருவகையான அனுபவம்”

திரைப்படம் இயக்கும் முயற்சிகள்ல இருக்கீங்க, இல்லையா?

“நாடகம் சோறு போடும்ங்கிற நிலைமை இங்க இல்ல. ஒருவேளை அதுபற்றி படிச்சிருந்தா சாத்தியமாகியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைச்ச நட்புகளாலேயும் கூத்துப்பட்டறை அனுபவத்தினாலேயும்தான் எனக்கு நாடக வாய்ப்புகள் கிடைச்சது. அது போதுமானதா இல்லை.  அப்போ நடிப்பு தொடர்பான ஒர்க்‌ஷாப்களை எடுத்தேன். ‘நிழல்கள்’ நடத்தின  பயிற்சி பட்டறைகளை நிறைய வகுப்பு எடுத்திருக்கேன். அதுல கலந்துக்கிட்ட சிலர் பேர் சினிமாவுல வேலைப் பார்க்கிறாங்க. அசோஷியேட் டைரக்டரா இருந்த ஒருத்தர் ஆக்டரை ட்ரெயின் பண்ணனும்னு விஜய் ஆண்டனியோட ‘நான்’ படத்துக்கு பரிந்துரை பண்ணாரு. அதுதான் ஆக்டர் ட்ரையினரான என்னோட முதல் படம். படம் ஹிட்டானதால பேசப்பட்டது.

விஜய் சேதுபதி அவர் எங்க போனாலும் நானும் இருக்கணும்னு விரும்புவார். விஜய் சேதுபதியோட நான், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, காக்கா முட்டை மணிகண்டன், எனக்குள் ஒருவன் டைரக்டர் எல்லோரும் சேர்ந்து ‘ஓம்காரா’ படத்தோட தமிழ் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தோம். அது பல காரணங்களால கைவிடப்பட்டது. இது நடந்தது பீட்சா, காக்கா முட்டை வர்றதுக்கு முன்னாடி. அதுக்கப்புறம் தானே புயல் வந்தப்போ தங்கர்பச்சனோட ஆவணப்படம் எடுக்கப் போயிருந்தேன்.

நடுவுல விஜய் சேதுபதி சர்ப்ரைஸா, ஒரு டைரக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனாரு. அது கார்த்திக் சுப்புராஜ்தான். பீட்சா படத்தோட கிளைமேக்ஸ் தவிர்த்த முழு ஸ்கிர்ப்டும் கொடுத்து, இதுல விஜய் சேதுபதி அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது வெவ்வேறு விதமான எமோஷனைக் காட்டுவாரு, அதுக்கு உதவி வேணும்னு பேசினாங்க. ஒர்க்‌ஷாப் நடத்தி அத செஞ்சி கொடுத்தேன். பீட்சா வெற்றிக்குப் பிறகு, என்னோட ஒர்க் பத்தி மீடியாவுல பேசினாரு விஜய் சேதுபதி. அது இண்டஸ்ட்ரில என்னை ஆக்டர் ட்ரெயினாரா ஆக்கியது.

இப்போதைக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு தயாரிப்பாளர தேடிக்கிட்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பர்சனல் கோச்சரா இருக்கேன். மத்தாப்பூ, சோழன்குடி, விளையாடவா உள்ளிட்ட சில படங்கள் செய்திருக்கேன்”

இது ரொம்ப புதுசான துறை இல்லையா?

“ஆரம்பத்துல ஸ்கிரிப்டைக் கொடுத்து ட்ரெயின் பண்ண சொல்லாங்க. இப்ப கேரக்டரை டிசைன் பண்ண சொல்றாங்க. வளர்ந்திருக்கு. வெஸ்ட்ல காஸ்டிங் டைரக்டர்னு ஒருத்தர் இருப்பார். அவர்தான் ஸ்கிர்ப்டுக்கு ஏத்தமாதிரி நடிகர்களை தேர்வு செய்வார். இங்க முழுக்க டைரக்டர்கிட்ட அந்தப் பணி விடப்படுது. ‘நீங்களும் நடிகராகலாம்’னு ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல், என்னை வரவழைச்சு ஸ்வீட் கொடுத்து, “இப்படி நான் பண்ணும்போது ஒருத்தர் இல்லாம போயிட்டாரே”ன்னு பாராட்டினார். தொழில் முறை அல்லாத நடிகர்களோட வேலை பார்க்கிறது பெரிய தலைவலின்னு சொன்னார்.  அந்த வகையில எனக்கு வாய்ப்பு இருக்கு”

nadippu
நடிப்பு இதழ் : 3

வெவ்வேறு விதமான பணிகள்…இந்த சரடோட அடுத்த இணைப்புதான் ‘நடிப்பு’ இதழ் பணியா?

“நாடகத்துல நடிகன் தான் கருவி; சினிமாவுல நடிகனும் ஒரு கருவி. கேரக்டரை கவனிச்சி, உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தறது பெரிய ப்ராசஸ். பொதுவா நாடகத்துக்கு ரிவ்யூ எழுதும்போது நாடகத்துல இருக்க மத்த விஷயங்களைப் பத்தியெல்லாம் எழுதுவாங்க. லைட்டிங்க இப்படியிருந்தது, மேடை அமைப்பு நல்லாயிருந்தது, டைரக்டர் அப்படி பண்ணியிருந்தாரு இப்படித்தான் எழுதுவாங்க. ஆனா எல்லாத்தையும்  தன்னகத்துல வெச்சிருக்கிறது நடிகன்தான். கிட்டத்தட்ட அது மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்போல. அதை ஏன் பேசாமலே இருக்கோம்? மூணு நாலு நாடகங்களுக்கு இப்படி வொர்க் பண்ணி பார்த்தேன். எப்படி ஆக்டர், ஸ்ரிப்டை வாங்கிக்கிறான். டைரக்டர் எப்படி ஸ்கிர்ப்டை வாங்கிக்கிறார். அங்க சுத்தியிருக்கிற சூழல் நடிகனை எப்படி பாதிக்குது. இந்த எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி நடிகன் நடிப்பை வெளிப்படுத்தறான். வொர்க் ஒவ்வொரு ஸ்டேஜைலேயும் மாறிக்கிட்டேயிருக்கு. நடிகன் ஒரு டயலாக்கை எப்படி வாங்கிக்கிறான்; எப்படி வெளிப்படுத்தறான்ங்கிறது மாறிக்கிட்டே இருக்கு. அதுவொரு மாஜிக் தான். இதையெல்லாம் பேசறதுக்குத்தான் ‘நடிப்பு’ இதழ் ஆரம்பிச்சோம்.

ஆனா இதையெல்லாம் பேசறோமான்னா இல்ல. ஏன்னா நடிப்பைப்பத்தி எழுதறதுக்கு ஆள் இல்லை. பொத்தாம்  பொதுவா சினிமாவைப் பத்தி, பொத்தாம் பொதுவா நாடகத்தைப் பத்தி எழுத ஆட்கள் இருக்காங்க. அதுல ‘அந்த நடிகர் அற்புதமா செய்தார்’னு ஒரு வரில எழுதிட்டுப் போயிடுவாங்க. ஆனா என்ன பண்ணான்னு சொல்லமாட்டாங்க. அதை இப்பதான் ட்ரைப் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுல யார் டீப்பா எழுதறாங்களோ அவங்களைக் கேட்டுக் கேட்டு எழுத வெச்சிக்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய செய்யணும்.

முதல் இதழ்ல என்ன வரணும்னு ஒரு பொருளடக்கம் போட்டிருந்தோம். அதுபத்தி 20 வருசமா நாடகத்துறையில இயங்கிக் கிட்டு இருக்க ராமானுஜன் போல பலபேர்கிட்ட காட்டினேன். கமர்ஷியலா கே. என். சிவராமன், அப்பணசாமி போல சிலருக்கிட்டே காட்டினேன். எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க. ஆனா அது வரல. முதல் இதழ் வெளியிடும்போதே மேடையில என்ன சொன்னேன்னா, நான் சொன்னது வந்துடுச்சின்னா அதோட இதழை நிறுத்திடுவேன். ஏன்னா ஒரு ட்ரெண்டை நாம கிரியேட் பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் எல்லோரும் எழுதுவாங்க. அப்படீன்னு சொன்னேன். அதுதான் என்னோட விருப்பமாவும் இருக்கு”

நடிப்பு இதழ்:2
நடிப்பு இதழ்:2

நடிப்பு’க்கு வரவேற்பு எப்படியிருக்கு…?

“இதை பிஸினஸா பண்ணலைன்னு சொல்ல வறலை. ஆனா பிஸினஸா எனக்குப் பண்ணத் தெரியல. படித்துறையில கிடைச்ச அஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் மட்டும்தான். ஒரு வருசத்துக்கு முன்னாடி முதல் இதழ் வந்தது. ரெண்டாவது இதழ் சிவாஜி ஸ்பெஷலா வந்தது. ரொம்ப பெரிய வரவேற்பு கிடைச்சது. சிவாஜி ரசிகர் மன்றம் இப்பவும் இயங்கிட்டு இருக்குன்னு அப்பதான் தெரிஞ்சது. அவங்க மாதாமாதம் கூடுறாங்க. சினிமா பத்தி பேசறாங்க. எங்களுக்குத் தொடர்ந்து இதழ் அனுப்பனும்னு சொல்லி பணத்தையும் அனுப்பி வெச்சாங்க.

மூணாவது இதழ் ‘அவள் அப்படித்தான்’ சிறப்பிதழா வந்திருக்கு. நடிப்பு மாறுகிறது போல, எழுத்துருவும் மாத்திக்கிட்டே இருன்னு ட்ராஸ்கி மருது 10 எழுத்துருக்களை எழுதுக்கொடுத்தார். அட்டைப்பட வடிவமைப்பு இதழுக்கு இதழ் மாத்திக்கிட்டு இருக்கேன். முதல் இதழ் தலித் முரசுல செஞ்சோம். ரெண்டாவது இதழ் அட்டைப்படம் இயக்குநர் நண்பர் வடிவமைச்சது. மூன்றாவது இதழ் சந்தோஷ் நாராயணன் வடிவமைச்சது. இது அடுத்த கட்ட பாராட்டைப் பெற்றிருக்கு.

இப்போதைக்கு சந்தா வசூலிக்கலை. ஆயிரம் பிரதிகள்தான் ஆச்சடிக்கிறோம். என்னுடைய தொடர்புகள் மூலமா தமிழகத்துல இருக்க சில கடைகளுக்கு அனுப்புறேன். தொழில் முறை விநியோகம் செய்யலை. என்னுடைய மெண்டர், ஜென் மாஸ்டர் அவர், நடிப்புக்குன்னு ஒரு மேகஸின் இந்தியாவுல இல்ல, இப்போதைக்கு பண்ணு, பிறகு அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகலாம்னு சொன்னார். ஐந்து இதழ்களுக்குப் பிறகு, இன்னும் வேற லெவலுக்குக் கொண்டுப் போகலாம்னு இருக்கேன்.”

தம்பிச் சோழன், ஷீலா
தம்பிச் சோழன், ஷீலா

 ஷீலாவை எங்க சந்திச்சீங்க?

“இமையத்தோட ‘பெத்தவன்’ நாவலை படமா எடுத்தேன். எடிட்டிங் வரை போய் அந்தப்படம் ட்ராப் ஆகிடுச்சு. அதுல ஷீலா என்னோட ஒர்க் பண்ணாங்க. செம்மனார் கோயில்ல ஷூட்டிங். ஒரு வாத்தியார் வீட்ல பஞ்சாயத்து சீன் எடுத்தோம். பஞ்சாயத்துல உட்கார தலித்துகளை அழைச்சுட்டு வந்திருந்தோம். அது பெரிய பிரச்சினையாகிடுச்சு. எங்க தெருவுக்குள்ளேயே நாங்க அவங்களை விடமாட்டோம். நீ என்னடான்னா வீட்டுக்குள்ள விட்டுருக்கன்னு, இனிமே ஷூட்டிங் நடத்த முடியாதுன்னுட்டாரு. அவரைக் கெஞ்சி, பேசி ஷூட்டிங் செஞ்சோம். இப்படி 10 நாள்ல முடிக்க வேண்டியது 17 நாள் ஆயிடுச்சி.

இந்த 17 நாட்கள்ல நானும் ஷீலாவும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சிக்கிட்டோம். என்னோட ஃபீமேல் வெர்ஷனா அவங்களும் அவங்களோட மேல் வெர்ஷனா நானும் இருந்தோம். ஒரேமாதிரியான வளர்ப்பு, ஒரேமாதிரியான மனப் பிரச்சினை, சிக்கல் எல்லாம் இருந்தது. அவங்க அகாடமிக்கா போயிட்டாங்க. நான் இப்படி இருந்தேன். எங்க காதலுக்கு எதிர்ப்பு வந்து, கோர்ட், கேஸுன்னு ஆகி இரண்டு வருடத்துக்கு  முன்ன திருமணம் செஞ்சிக்கிட்டோம். அவங்க பரதநாட்டியம் படிச்சவங்க. பள்ளிகள்ல பரதநாட்டிய வகுப்பு எடுக்குறாங்க. நான் மவுலிவாக்கத்துல ஆக்டிங் ஸ்கூல் வெச்சிருக்கேன். ஒஹோன்னு இல்லாம ச்சீ ப்போன்னு இல்லாம போயிட்டிருக்கு”

ஆக்டிங் ஸ்கூல்னா நாடகத்துக்கான நடிப்பு பயிற்சியா? சினிமாவுக்கான பயிற்சியா?

“இல்ல நான் நாடகத்துக்கான பயிற்சிகளை எடுக்கிறதில்லை. சினிமாவுக்காக மட்டும்தான். நாடகத்துக்கான நடிப்பு பத்தி சொல்லித்தர பல்கலைக்கழகங்கள் இருக்கு. சினிமாவுக்கான பயிற்சிகளையும்கூட நான் தனித்தனியாதான் எடுக்கிறேன். குழுவா எடுக்கிறதில்லை. காரணம் இப்ப இருக்க சமூகமே தனித்த சமூகமா இருக்குங்கிறதும், தனியா எடுக்கும்போது தனிப்பட்ட நபரின் திறமைகளை அறிந்து அதுக்கேத்த பயிற்சிகளைக் கொடுக்க முடியும் என்பதும்தான். குழுவா எடுக்கும்போது அதுல விருப்பம் இல்லாத ஒருத்தனால அந்த குழுவோட மொத்த திறனும் வீணடிக்கப்படும். விருப்பம் இல்லாதவனை ஒழுங்குபடுத்துறதுல என்னோட கவனம் போயிடும். வெளியில நடிப்பு பயிற்சி எடுக்க கூப்பிடறவங்ககிட்ட நான் இதைத்தான் சொல்றேன். பட்டறைங்கிற பேர்ல நடிப்பு சொல்லித்தர்றவங்க  பிராய்லர் கோழி பண்ணை மாதிரி காலையில் 40 பேர், மாலையில 40 பேருக்கு சொல்லித் தர்றாங்க. நாங்க இருந்த காலக்கட்டம் வேற. இப்போதைய நிலைமை வேறயா இருக்கும். சினிமாவில் மாஸ்டர் ஷாட்ல மட்டும்தான் கலெக்டிவ்வா நடிக்க வேண்டியிருக்கும். மத்தபடி தனிப்பட்ட நடிப்புத் திறனை வெளிப்படுத்துற வாய்ப்புதான் அதிகம்.”

முகப்புப் படம்:மார்டின் தன்ராஜ்