அஞ்சலி: இயக்குநர் அருண்மொழி

இயக்குநர் அருண்மொழி கடந்த சனிக்கிழமை (9-9-2019) அன்று காலமானார். தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது அருண்மொழியின் பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்‘ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் ‘காணிநிலம்‘ எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் ‘ஏர்முனை‘ எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்…

நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55நிமிட படமிது.

பண்ணை வேலையார் ‘சோடாமாணிக்கம்’, காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று…

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

மூன்றாவது இனம் :

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா – 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் ‘நூரி’யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த ‘ஆஷா பாரதி’ எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

‘இரண்டாம் பிறவி’ (1998) ‘கூடவாகம்’ (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி ‘தோழி‘ எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions :

1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது ஆர்.ஆர்.சீனிவாசனின் ‘ஒரு நதியின் மரணம்’ ஆவணப்படம். இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் ‘விடியல் வரும்‘ (45 நி) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் ‘Key Maker ‘ , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன், இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார் இயக்குநர் அருண்மொழி.

முகநூல் பதிவு

பேரன்பு: வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது எப்படி?

கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி

மகள்களை பெற்ற ஆப்பாக்களுக்கு மட்டுமல்ல. மகன்களை பெற்ற அப்பாக்களுக்கும் பொறுப்பு உண்டு. அதனால் பேரன்பு திரைப்படத்தை என்னால் அமேசானில் வரும் வரை பார்க்க முடியவில்லை. சற்று தாமதமான விமர்சனம் தான் என்றாலும் இந்தப் படத்தை பற்றி தாமதமானாலும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் தற்போது எழுதுகிறேன். இதனை விமர்சனம் என்று சொல்வதைக் காட்டிலும், அனுபவப் பகிர்வு என்றே குறிப்பிட வேண்டும். ஒரு ஓடையைப் போல தெளிவான நீரோட்டம் போலச் செல்லும் கதை இது. அதனை மூக்கு உரச அனுபவித்து குடிப்பது மட்டுமே சாத்தியம். அவ்வாறான ஒரு அனுபவமே இது.

பேரன்பு திரைப்படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விட்டேன். அதை பார்த்துக் கொண்டிருந்த போது என் அருகில் கேம்ப் ஃபயருடன் நண்பர் இரவுக் குளிரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அது அத்தகைய படத்தைப் பார்ப்பதற்கான சரியான சூழல் என்று தோன்றியது. கதையின் போக்கில் மேலோட்டமாக காணும் போது அதன் சூழல் முக்கிய கதாபாத்திரமாக விளங்குகிறது. தொடக்கத்தில் லாபியுடனான ஒரு வீடு, பின் ஆளில்லாத புகை மூட்டமான தனி வீடு, பின் ஒரு குறுகலான லாட்ஜ், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம், வாடகை வீடு, கடைசியாக வயலுடனான பண்ணை வீடு என முக்கிய கதாபாத்திரங்களின் நிலையை ஒத்து சூழலும் கூடவே பயணிக்கிறது.

மம்முட்டியின் கதாபாத்திரம் தனக்கு பாதகம் செய்யும் குடும்பத்திற்கும் ஒரு பிரச்சனை இருக்கும் என்று கருதி அவர்களை மன்னிப்பதாக ஒரு புறம் மிகவும் நல்ல வகையில் சித்தரிக்கப் படகிறது. தன் மகளுக்காக அவர் செய்யத் துணியும் காரியங்களை கண்டு ஒரு கணம் வாயடைத்தே போகிறோம். மற்றொரு புறம், தன் பெண்ணுடைய நிலையை அறிந்தவுடன் வீட்டிற்கு வருவதை நிறுத்திய பொறுப்பற்ற கணவனாக, திருநங்கைகளை சமூகத்தில் காணும் அதே கண்ணோட்டத்தில் இவரும் தவறாக புரிந்து கொள்ளும் சாதாரணனாக, தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று புரிதலில்லாத கணவனாக, மனைவியில்லாத கணவன் வேரொரு பெண்ணிடம் சில நிமிட சபலத்தில் விழும் இச்சைகள் கொண்ட மனிதனாகவும் அவர் சித்தரிக்கப் படுகிறார். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள Duality (இரட்டை தன்மை) விளக்கும் அற்புதமான காட்சியமைப்புகள் இவை. மம்முட்டி மெகா ஸ்டார் என்று டைடில் கார்டில் போடப்பட்டிருந்தாலும் ஒரு கார் ட்ரைவராக, குல்லா அணிந்த தந்தையாக, கோடு போட்ட சட்டை அணிந்த மற்றுமொரு கணவனாக அனைத்து ஒப்பனைகளிலும் பொருந்திப் போகிறார். பொதுவாக ஒரு ஸ்டாரின் மனைவி கதாபாத்திரம் சில நிமிடங்களுக்கு வந்தாலும் அது ஒரு தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என்கிற க்ளீஷேவை உடைத்து கடைசி வரை மம்முட்டியின் முதல் மனைவியின் முகத்தை சரியாக காட்டவே இல்லை. இது அவருடைய கதாபாத்திரத்தின் உணர்ச்சியை மதித்து திட்டமிட்டு அவருடைய Identity ஐ மறைக்க முற்பட்டு செய்யப்பட்டது என்பதாலேயே இயக்குநர் மீதான மதிப்பு கூடுகிறது. எல்லா பெண்களும் அன்னை தெரேசாவாக இருந்து விடுவதில்லை. அவர்களை அவ்வாறு இருக்கச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இயலாது.

மம்முட்டியின் தமிழ் உச்சரிப்பு இக்கதையில் மிகவும் கவனத்துடன் கையாளப் பட்டிருக்கிறது. சில இடங்களில் அவர் பின்னணியில் பேசுவது இயக்குநர் ராம் பேசுவது போலவே உள்ளதை சிலர் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு காட்சிகளுக்கும் கூடவும் குறைவும் இல்லாத முக பாவங்களை வெளிப்படுத்தும் அவர் தன்னுடைய முதிர்ந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். மகளுக்காக ஜிப்ரிஷ்-ல் பேசியும் ஆடியும் காட்டும் போது ஒரு கணம் ஏனோ மூன்றாம் பிறை கமல் நினைவில் வந்து போனார்.

மம்முட்டியின் மகளாக நடித்துள்ள சாதனாவின் கதாபாத்திரம் பல்வேறு படிமங்களை கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை அப்பாவை முதலில் வேற்று மனிதனாகப் பார்க்கிறாள். பின்பு அவளுக்கும் குருவிக்குமான நெறுக்கத்தை காணும் போது தான் அப்பாவுக்கு அவளை பற்றி புரியத் தொடங்குகிறது. இந்த இடத்தில்,

“மனுசங்க இல்லாத இடமா…குருவிங்க சாகாத இடமா ஒரு இடம்
வேணும்” என்கிற வசனம் அதற்கு முந்தைய காட்சியில் மனிதர்களின் சுயநிலத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அப்பாவுக்கும் மகளுக்குமான இணக்கத்தை உருவாக்க சில நிமிடங்களை எடுத்துக் கொண்டு மெதுவாக நகரும் திரைக்கதை, அஞ்சலியின் வருகையில் சுவாரசியமாகிறது. எப்போதும் போல தன் மகளுடைய நிலையை சுட்டிக் காட்டி மற்றொரு பெண்ணிடம் ஆதாயம் தேடும் ஆணிக மாறி விடுவாரோ என்கிற யோசனை ஏற்படும் வேளையில் மம்முட்டி அஞ்சலியின் மாமனாக வருபவரை வீட்டிற்கு அழைத்து வந்து செய்யும் வந்து அளப்பறை, ஒரு ஆவணப் படம் போல் செல்லும் கதையில் ட்ராமாவை கூட்டுகிறது.

சாதனா தன்னுடைய புதிய அம்மாவாக அஞ்சலியை பார்க்கத் தொடங்கும் முன்பு அவளை விட்டு பிரிகிறார் அஞ்சலி. அதற்கான காரணமாக ஒரு முக்கிய பொருளியல் சார்ந்த பிரச்சனையை வைத்து பேசியுள்ளது இயக்குநரின் சாதுர்யத்தை காட்டுகிறது. இயற்கையை அரசியல் எப்படி விழுங்க கழுகு போலக் காத்திருக்கிறது என்பதை முதல் காட்சியில் இருந்தே காட்டத் தொடங்கி விடுகிறார் இயக்குநர்.
சாதனாவின் நடிப்பு மிக முக்கியமான சில காட்சிகளில் கம்பியின் மேல் நடப்பது போன்ற ஆபத்தால் சோதனைக்கு உள்ளாகியிருந்தது. அதனை எளிதாகக் கடந்து சாதித்துள்ளார்.

அவருடைய பிரச்சனையான Spastic cerebral palsy-ன் தாக்கம் சாதனா பூப்பெய்தும் போது எவ்வாறு அவளை மாற்றுகின்றது என்பதை அவளுடைய முகபாவனைகளை வைத்தே எளிதில் பேசி விடுகிறார் இயக்குநர். முகத் தசைகளை பக்கவாட்டில் இழுத்துக் கொண்டபடி அதில் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிகிறது. இத்தகையவர்களை தெருவில் மார்கழியில் புணரும் நாயை கல்லால் அடிப்பது போல யோசனையின்றி நடத்தும் சமூகத்தை கிழித்தெறியும் வசனமாக,

“நீங்க சர்ச் நடத்துறீங்க. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை” என மம்முட்டி கூறும் போது,

“சர்ச்சும் ஊருக்குள்ள தானே இருக்கு?” என்று கேட்கும் அந்த கதாபாத்திரம் மேலும் பேசும் வசனம், கனத்த இதயத்துடன் சில நாட்கள் நம்மை விட்டு நீங்காமல் தொடர்ந்து வருகிறது.
சாதனாவின் குறைபாடு ஒரு நோயல்ல. அதற்கு எந்த நாட்டு மருந்திலும் தீர்வில்லை என்கிற உண்மையை கதை பேசும் போது, என் இரண்டாம் நாவலில் “வெண்புள்ளிகள்” பற்றிய காட்சிகள் எனக்கு நினைவுக்கு வந்தது. நானும் என் மனைவியும் (வெண்புள்ளிகள் கொண்ட பெண்) ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம், என் மனைவியின் வெண்புள்ளிகளை காட்டி இதற்கு தீர்வுண்டு என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக சொல்வார். நான்,

“இது ஒரு நோயல்ல. தீர்வு இல்லை என்று ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்களை கவனிக்காதீர்கள்” என்பேன். என் மனைவிக்கு இது ஒரு பொருட்டே இல்லை என்றாகி விட்டது. ஆயினும் அதற்கு அம்மன் கோயிலுக்கு போனால் சரியாகிவிடும் என்று ஒருவர் சொல்வதை கேட்கும் போது சிரிப்பு வரும். இந்தப் படத்திலும் அத்தகைய ஒருவர் வருகிறார். மற்றொரு குறி சொல்லும் பெண் சாதனா நன்றாக படித்து டாக்டர் ஆவார் என்று பொருத்தமே இல்லாமல் ஜோசியம் சொல்கிறார். இவர்கள் எல்லோரும் நம்மை சுற்றித் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளும் இதெல்லாம் மற்றொருவருக்கு பிரச்சனையை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது படி அவர்களுடைய நம்பிக்கை கடிவாளம் போட்டிருக்கிறது. இந்த அதிகம் தொடப்படாத பிரச்சனையை தொட்டதற்கே இயக்குநருக்கு என் பாராட்டுக்கள்.

திருநங்கையாக வரும் அழகுப் பதுமை பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் அழும் போது கண்ணில் மை கலைந்து பெண் போலவே காட்சி தருவதும், பெண்ணுக்கான நாணத்துடன் தன்னை அவர் அழைத்து செல்கிறார் என்பதை வைத்து கனவு காண்பதும், தன்னிடம் செக்ஸ் தொடர்பான செய்தியை பெறுவதற்கு அவர் அழைத்து வந்தார் என்பதை அறிந்து கோபத்தில் எழுந்து செல்வதும் மிக மிக அருமையான காட்சியமைப்புகள். சுதந்திரத்தை தேடும் அவருடைய முகத்தை காற்றோட்டத்தில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

யுவனின் இசை இந்தக் கதையில் மற்றொரு தூண். சூழலுக்கும் காட்சிகளுக்கும் ஏற்றபடி அவர் புதிதாக இசைத் துணுக்குகளை இறக்கிக் கொண்டே இருக்கிறார். ஒரே ட்யூனை உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி மாற்றி மாற்றி போட்டுக் கொண்டே இருக்கும் செயற்கை தனத்தில் இருந்து தப்பிக்க இந்த படம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. பாடல்கள் திரைக்கதையோடு ஒட்டியே வருகிறது.

இயக்குநர் ராமின் மெனக்கெடலை இடையிடையில் பேசியிருக்கிறோம். தனியே அவருடைய முயற்சியை வெற்றியாக்கிய சிறப்பம்சத்தை குறித்து பார்க்க வேண்டும். இக்கதையை இயற்கையின் பல்வேறு முகங்களை காண்பித்து அதனை மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு காட்டியிருப்பது தான் வெறுமையான ஒரு சோகக் கதையை மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக மாற்றியுள்ளது. இயற்கையின் நல்ல முகத்தையும் கெட்ட முகத்தையும் மாற்றி மாற்றி காட்டியிருப்பது இவ்வாழ்க்கையின் சுக துக்கங்கள் மாறி மாறி வரும் என்பதனை உணர்த்துகிறது. அதனை எப்படி கடந்து வருவது என்பதை தான் இக்கதை அற்புதமாக விளக்குகிறது.

மனநலம் குன்றியவர்களின் வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. அது ஒரு தனி உலகம். அதற்குள் நுழைய தனித்திறமை தேவைப்படுகிறது. சிலருக்கு அது வாய்க்கிறது. சிலர் அந்த சோதனையில் கறிந்து பொசுங்கிப் போக நினைக்கிறார்கள். சிலர் கடலுக்கு அடியில் மூழ்கிப் போக நினைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இந்தக் கதையில் வருவது போன்ற பேரன்பு மிக்க துணை கிடைத்தால்? அந்த சோதனையை கடந்து வரலாம் இல்லையா? அத்தகைய ஒரு உத்வேகத்தை உருவாக்கிக் கொள்ளவே இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு மட்டுமில்லாது, நாம எல்லாம் எவ்ளோ நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் என்பதை உணரவும் இதைப் பார்க்க வேண்டும்.

கண்ணன் ராமசாமி, எழுத்தாளர்.

“ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர் இன்குலாப்”: அ. மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயலாத துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார் எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ். இதுகுறித்து தன்னுடைய முகநூல் குறிப்பில் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளவை:

“என்னுடைய இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர் இன்குலாப்”. என்னுடைய முதல் நூல் ‘எதுகவிதை’ யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.

சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய தி.மு.க அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.

தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.

எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்…

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனகளும் இன்றி அதை ஆதரித்தார். தமிழ்த் தேசிய உணர்வுடன் அவர் செயல்பட்ட காலம் அது.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.

இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது.

என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்!

முகப்புப் படம்: புதூர் சரவணன்

அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் மூர்த்தி மறைவு; அஞ்சலி!

உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் து. மூர்த்தி, திங்கள்கிழமை காலமானார். அவருடைய உடல் வேலூரில் புதன்கிழமை மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பேராசிரியர் து. மூர்த்திக்கு பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள் செலுத்திய அஞ்சலிகளின் தொகுப்பு இங்கே:

தெய்வ சுந்தரம் நயினார்:

பேரா. து. மூர்த்தி

மனிதர்… தனித்துவம் வாய்ந்த மனிதர்… சமூக உணர்வுடைய தோழர்… முற்போக்கு எழுத்தாளர்… சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரகராதி திட்டத்தில் முதலில் பணிபுரிந்தார். அவரது பதவியே சில காரணங்களால் பறிக்கப்பட்டது. அவரது நேர்மையின் காரணமாகப் பழிவாங்கப்பட்டார்! பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்குள்ள தொழிலாளிகளுக்காகப் போராடிய காரணத்தால் அன்றைய ”புகழ்வாய்ந்த” ஜனநாயக விரோதத் துணைவேந்தரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துத் தஞ்சாவூரில் அன்று பல முனைகளில் முழக்கங்கள் ஒலித்தன. ஆனால் ஜனநாயகம் அற்ற அன்றைய அந்தப் பல்கலைக்கழகத்தின் காதுகள் மூடிக்கொண்டன. பின்னர் பல இன்னல்களுக்குப் பிறகு அலிகார் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதிவரை அங்கே பணியாற்றினார்.

பெரியார் பற்றாளர். ஐயா ஆனைமுத்து அவர்களின் இயக்கத்திற்குத் துணையாக நின்று செயல்பட்டவர். தமிழகத்தில் 80 களில் தமிழகத்தின் மூன்றாவது அணியின் செயல்பாடுகளுக்குத் துணைபுரிந்தவர். மூன்றாம் அணியினரின் இலக்கிய, பண்பாட்டு இயக்கங்களில் பங்கேற்றவர்.

சமூக இயக்க உணர்வின் காரணமாக 80-களில் நான் பாதிக்கப்பட்டபோது, எனக்குத் துணைநின்றவர். எனது அத்தனை துன்பங்களிலும் துணைநின்றவர். எனக்காக… நான் வெளியுலகில் இல்லாதபோது… எனது புத்தகத்தை வெளியிட்டு உதவியவர். ஈழத் தமிழர்களின் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் உதவிபுரிந்தவர்.

அவரது பாதிப்புகளுக்கு ஒரே காரணம்….. அவரது வெளிப்படையான சமூக உணர்வும் செயல்பாடுகளுமே ஆகும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு மனிதர். கொள்கைகளில் சமரசம் செய்யாதவர்.

மொத்தத்தில் ஒரு நேர்மையான மனிதர்! அதுபோன்ற மனிதர்களைக் காண்பது அரிது.

அவரது எதிர்பாராத மறைவு… என்னைத் திணறவைக்கிறது! என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மறுபடியும் தோழர் து. மூர்த்தியைப் பார்க்கமுடியாதா? என் உயிரைக் காப்பாற்றி, இன்று நான் நடமாடுவதற்கு வழிவகுத்த மூர்த்தி மறைந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை!

 

அ. மார்க்ஸ்:

கண்ணீர் மல்க ஒரு இரங்கல்..பேரா.முனைவர் து.மூர்த்தி (1952 – 2016)

தோழர், பேராசிரியர், அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் து.மூர்த்தி அவர்கள் நேற்று அகால மரணம் அடைந்த செய்தி சற்று முன் அறிந்தேன்.

இன்றிரவு தோழரின் உடல் இங்கு கொண்டுவரப்பட்டு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள அவரது மூத்த சகோதரரின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இறுதி அஞ்சலி நாளை மாலை 3- 4 மணி அளவில் என அறிகிறேன்.

தோழர் மூர்த்தி குறித்து சில மாதங்கள் முன் நான் முகநூலில் எழுதியிருந்தேன். அன்றிரவுதான் நான் அவருடன் கடைசியாகப் பேசியது. தான் அலிகர் பலகலைகழகத்தின் இந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு ப்கிர்ந்து கொண்டார். எனினும் இனி ஓராண்டுதான் பணி உள்ளதென்பதையும் குறிப்பிட்டார்.

தூய தமிழிலேயே இலக்கணமாக உரையாடும் அளவிற்குத் தமிழ்ப் பற்றுடையவர். தந்தை பெரியார் மீதும் அவர் வழி வந்த ஆனைமுத்து அவர்கள் மீதும் மிக்க மரியாதை உடையவர். இறுதிவரை பெரியவர் ஆனைமுத்து அவர்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்.

கல்லூரிப் பருவத்தில், அன்று அவரது வட ஆற்காடு மாவட்டத்தில் எழுச்சியுடன் இருந்த நக்சல்பாரி இயக்கங்களின் தாக்கத்தால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர். தோழர் பாலன் காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட போது சென்னை அரசு மருத்துவ மனை வாசலில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கடும் போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் காத்திருந்த கதையை அவர் விவரிக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்படும் காட்சியை என்னால் மறக்க இயலாது.

மாநிலக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் “தமிழ், மலையாளத்தில் உள்ள பொதுவான சொற்கள் குறித்த ஆய்வு” எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது விரிவுரையாளர்களில் ஒருவராகப் பணி ஏற்றார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் நெருங்கிய பழக்கம், ‘கைலாசபதி இலக்கிய வட்டம்’ எனும் பெயரில் நான், அவர், பேரா. இராம சுந்தரம் ஆகியோர் இணைந்து செய்த பணிகள், நடத்திய ஆய்வரங்குகள் ஏராளம். 1983 யூலை படுகொலையை ஒட்டி இங்கு ஒரு ஈழ ஆதரவு அலை எழும்பியபோது தஞ்சையில் நாங்கள் நடத்திய ஆதரவுக் கூட்டங்கள் வெளியிட்ட இரண்டு முக்கிய பிரசுரங்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் அனைவரது கவனத்தியும் ஈர்த்தன. ஈழத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர் தோழர் ஷன் அதற்கு ஒரு மறுப்புரை எழுதும் அளவிற்கு அது கவனம் பெற்றது. டானியல் அவர்களின் பஞ்சமர் நாவலைத் தஞ்சையில் நாங்கள் வெளிய்யிட்ட நிகழ்வும் குறிப்பிடத் தக்க ஒன்று.

என்ன காரணமோ, இன்று வரை அறியோம், தமிழ்ப் பலகலைக் கழகத் துணை வேந்தர் வ.ஐ. சுப்பிரமணியத்திற்கு மூர்த்தியைப் பிடிக்காமல் போயிற்று. மூர்த்தி ஒரு நாள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது பல்கலைக்கழக ஆசிரியர்களால் அநுதாபம், அதுவும் இரகசியமாகத் தெரிவிக்க மட்டுமே முடிந்தது. வெளியிலுள்ள இயக்கங்களை எல்லாம் இணைத்து எங்களின் ஆரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்டங்கள் நடத்தினோம்.பேரா. ப.சிவகுமார் முதலானோர் சென்னையிலிருந்து வந்து இங்கு போராட்டங்களில்ல் கலந்து கொண்டார்.

ஒரு நாள் இரவு அவரது பணி நீக்கத்தைக் கண்டித்து என் வீட்டில் என் மனைவி பசை காச்ச, என் இரு குழந்தைகளும் நானும் மூர்த்தியும் காத்திருந்து சுவரொட்டிகளை எடுத்துச் சென்று ஊரெங்கும் ஒட்டி வந்த நிகழ்ச்சியை அதற்குப் பின் அவர் என்னைக் காணும்போதெல்லாம் குரல் நடுங்கச் சொல்லாமல் இருந்ததில்லை.

சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் போலந்தில் வார்சாப் பலகலைக் கழகத்தில் தமிழ்த்துறைக்குப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் பணி புரிந்தார்.

பின் இறுதிவரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

என்னை விட மூன்று வயது இளைஞர். ஆனால் என்னை விட பத்து வயது மூத்தவரைப்போலத்தான் என்னை அணுகுவார். என் மனைவி, மகள்கள் எல்லோருக்கும் இனியவர். என் குடும்ப நண்பர். அரசியல் தோழர். தீவிர தமிழ் மற்றும் பெரியார் பற்றாளர்.

அவர் மிகவும் நேசித அவரது மனைவி, ஒரே மகன் ஆகியோரை அவர் நிரந்தரமாகப் பிரிய நேர்ந்த துயரத்தை அவரால் இறுதிவரை கடந்து வர இயலவில்லை. தோழர் கே.டானியல், நான், தம்பிராஜா இளங்கோவன் மூவரும் டேனியல் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர் கடலூர் சென்று மூர்த்தியின் மனைவி (அவரும் ஒரு முனைவர், பேராசிரியர்) அவர்களைச் சந்தித்து அவர்கள் இருவரையும் இணைக்கச் செய்த முயற்சி தோல்வியுற்றது.

அவரது மகன் குறித்த அவரது நினைவுகளை ஒரு சிறு நூலாகியுள்ளார். சுமார் ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார் என நினைவு.

நாகர்கோவிலில் இருக்கிறேன். இறுதியாக அவரது முகத்தை ஒருமுறை பார்ப்பேனோ தெரியவில்லை.

அவர் குறித்து நான் சென்ற ஆண்டு முகநூலில் எழுதிய கட்டுரை கிடைத்தால் தேடிப் பதிவிடுவேன்.

பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் எதிர் எதிராக நிறுத்தாமல் நேசித்த இன்னொரு அன்பர் நம்மை விட்டுப் போய் விட்டார்.

செந்தலை கவுதமன்:
தோழமை கனிந்த பேரா. து.மூர்த்தி நினைவானார்!

கருத்தாழமும் நெஞ்சுரமும் மிக்க தமிழாசிரியராய்த் திகழ்ந்தவர் முனைவர் து.மூர்த்தி. அலிகர் பல்கலைக் கழகப் பேராசிரியர். அங்கேயே 24.10.2016 இல் மறைந்து விட்டார்.  அறிவுலகிற்கு நேர்ந்த இழப்பு இது! சென்னைப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துணைவராய் அவர் பணியாற்றி வந்தபோது, நான் சென்னை ஆசிரியர் கல்லூரியில் (1975இல்) பயின்று வந்தேன். எங்கள் இருவரையும் இணைத்து வைத்தவர் உவமைப் பாவலர் சுரதா. மூவரும் கடற்கரை மணலிலும் அண்ணாசாலை நூலக அரங்கிலும் கலந்துரையாடிய செய்திகள் இன்றும் மனத்தில் ததும்புகின்றன.

பெரியாரிய, மார்க்சியத் தோழமையால் எங்கள்நட்பு தொடர்ந்தது. இரு துறையிலும் பெற்ற பெரும்புலமையைத் தமிழாய்வுத் தடமாக்கியவர் அவர். அவர் எழுத்தாக்கியும்
நூலாகாதவை மிகுதி. விடியல் பதிப்பகம் சிவா, கோவை மருத்துவமனையில் இறுதி
நிமையங்களைத் தொட்டுக்கொண்டிருந்த போது து.மூர்த்தி பறந்தோடி வந்து விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அன்றுதான் மருத்துவமனையில் – சிவாவுக்கு அருகில் அமர்ந்தபடி -அதிகம் பேசினோம். நாற்பதாண்டு நினைவு வெள்ளத்தில் மனம் மூழ்கித் தவிக்கிறது.

வி. ரி. இளங்கோவன்:

பேராசிரியர் து. மூர்த்தி காலமானார்..!

நினைவுகள் சாவதில்லை..!!

எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார்.

அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் – பொ. வேல்சாமி – து. மூர்த்தி – இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள்.

இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ”பஞ்சமர்” நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் “கோவிந்தன்” நாவல் அச்சாகி வெளிவந்தது.

“கோவிந்தன்” நாவல் வெளியீட்டு விழா – அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி, து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார்.

மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் – வேலணை – வடமராச்சி – திருமலை – கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

வடபகுதியில் பட்டதாரி மாணவர்க்கான கல்வி நிலையங்கள் சிலவற்றிலும் மூர்த்தி உரையாற்ற ஒழுங்கு செய்தேன். பல்வேறு இலக்கியச் சந்திப்புகளை நடாத்தியபின் கொழும்புக்கு அவரை அழைத்துச் சென்றேன். கொழும்பில் “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வு முடிந்தபின் இலக்கியத்துறையினர் பலர் அவரைச் சந்தித்து உரையாடினர். இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பினை டானியல் என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரமுகர்களான பிரேம்ஜீ – சோமகாந்தன் ஆகியோர் து. மூர்த்தியுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்து அழைத்திருந்தனர். சோமகாந்தன் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது. நண்பர் முருகபூபதி உட்பட மற்றும் சிலரும் அங்கிருந்ததாக ஞாபகம். கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. அவர்களின் கருத்துக்களை திரிபுவாதமென மூர்த்தி கடுமையாகச் சாடினார். இருப்பினும் சிநேகபூர்வமாகவே பேச்சுக்கள் அமைந்தன.

கொழும்பிலிருந்து அவரை கட்டுநாயக்கா விமான நிலையம்வரை சென்று அனுப்பிவைத்தமை இன்றும் ஞாபகத்திலுண்டு.

மூர்த்தி கலந்துகொண்டு உரையாற்றிய கூட்ட நிகழ்வுகளின் செய்தித் தொகுப்புகளை யான் பத்திரிகைகள் யாவற்றுக்கும் வழங்கியிருந்தேன். அவை பத்திரிகைகளில் நன்கு பிரசுரமாகியிருந்தன. அவற்றையும் எனது கடிதங்களுடன் பின்னர் மூர்த்திக்கு அனுப்பிவைத்தேன்.

1986 -ம் ஆண்டு டானியலும் நானும் தமிழகம் சென்றபோது சென்னையில் மூர்த்தி எங்களைச் சந்தித்து உரையாடினார்; அவ்வேளை அவர் மிகுந்த சோகமான நிலையில் காணப்பட்டார். வேலை நிறுத்தம் காரணமாகத் தஞ்சைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை இழந்திருந்தார். ”கிரியா” பதிப்பகத்தில் தற்காலிகமாக தமிழ் அகராதி தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
குடும்பப் பிரச்சினை அவரை வாட்டியது. ஆசைமகன்மீது கொண்ட அளவுகடந்த பாசம் அவரை வதைத்தது.

பாண்டிச்சேரியில் இலக்கியச் சந்திப்புகளை மேற்கொண்ட பின்னர் பேராசிரியர் அ. மார்க்ஸ் – பேராசிரியர் இராமசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைப்படி திருமதி மூர்த்தியைச் சந்தித்துப்பேச டானியலும் நானும் சென்றோம்.
உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் டானியலும் நானும் திருமதி மூர்த்தியைச் சந்தித்து அவர்களது குடும்பப் பிணக்கிணைச் சுமூகமாகத் தீர்த்துவைப்பதற்காகத் திருமதி மூர்த்தி விரிவரையாளராகக் கடமையாற்றிய கல்லூரிக்குச் சென்றோம்.
கல்லூரி மதிய இடைவேளையின்போது அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அவர் எம்மை வீட்டிற்கு அழைத்து மதிய உணவும் அளித்து அன்பாக உரையாடினார்.

மீண்டும் மூர்த்தியுடன் பேசி அவர்களை ஒருங்கிணைக்கலாம் என்று சொல்லி வந்த ஓரிரு நாட்களிலேயே டானியல் காலமாகிவிட்டார்.
பின்னர் அவர்களுடன் பேச எனக்கு அப்போது வாய்ப்பு இருக்கவில்லை.
மூர்த்தியும் சென்னையைவிட்டு புதுடில்லிப் பக்கம் போய்விட்டாரென அறிந்தேன்.

2012 -ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி எனது சிறுகதைத் தொகுதியின் இந்தி மொழிபெயர்ப்பு புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள பேராசிரியர் சந்திரசேகரனிடம் மூர்த்தி குறித்துப் பேசினேன். அவர் உடனே அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூர்த்தியுடன் தொடர்புகொண்டு என்னைப் பேசவைத்தார்.

பல வருடங்களுக்குப் பின் சில நிமிடங்கள் மூர்த்தியுடன் அன்பாகப் பேச முடிந்தது. பணி நிமித்தம் உடன் சந்தித்துப் பேச முடியவில்லையென்றும் ஒரு சில நாட்களில் சந்திப்பதாகவும் கூறினார்.
ஆனால் நான் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிட்டேன். அதனால் நேரில் சந்தித்துப்பேச முடியவில்லை.

இம்முறை இந்தியா போகும்போது புதுடில்லி சென்று நண்பர்கள் பலரையும் சந்திப்பதுடன் மூர்த்தியையும் சந்தித்து நிறையப் பேசவேண்டுமென எண்ணியிருந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தியா..?

உணர்ச்சிகரமான மனிதன் மூர்த்தி. அவ்வாறே அவரது மேடைப் பேச்சும் உணர்ச்சிகரமாக அமைந்து மக்களைக் கவரும்.
இலங்கை வந்தபோது அவருடன் பழகிய சில நாட்கள் என்றும் மறக்க முடியாத இனிய இலக்கிய அரசியல் கருத்தாடல் நிறைந்த பொழுதுகளாக அமைந்தன.

தோழர் டானியல் மூலம் அறிமுகமாகிய மூர்த்தியும் டானியல் போன்றே என் நெஞ்சில் நிறைந்துள்ளார்..!

 

அழகுசுப்பையா:

Last Journey of Prof.D.murthy.

மார்க்சிய பெரியாரிய சிந்தனையாளர் பேரா.து.மூர்த்தி அவர்களின் இறுதிப் பயணம். இன்று இரவு 10 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை பேராசிரியரின் உடல் வேலூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதன் பிறகு வேலூர் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்கப்படவுள்ளது…

தொடர்பிற்கு

குருநாதன் – 9600010989
ராமநாதன் – 9884431860

முகவரி
வள்ளலார் பள்ளி நிறுத்தம்,
துரைசாமி இல்லம்,
சத்துவச்சாரி அருகில்,
வேலூர்.

தோழமை அன்பின் திருவுடையான்: ஸ்ரீரசா

ஸ்ரீரசா

2016 ஆகஸ்டு 29ம் தேதியின் காலைப் பொழுது ஒரு கலைஞனை விழுங்கிக் கொண்டா விடிய வேண்டும்?

ஓர் அகால நேரத்தில், வாடிப்பட்டியின் நெடுஞ்சாலையோரம் மரணத்தின் பாடலால் இசைக்கப்பட்ட அபூர்வக் கலைஞன் திருவுடையான். தானே பாடுவான், அருமையாகத் தபேலாவோடு விரல்களை விளையாட விடுவான். தபேலா வாசித்துக் கொண்டே பாடுவான். பழம பாடல்களின் தீராக் காதலன். புதிய பாடல்களுக்கு மெட்டமைப்பதிலும் வல்லவன்… திரையிசையிலும் தலைகாட்டியவன்.. ஆனால் மக்கள் அரங்க மேடைகள் தோறும் தனித்துவத்தோடு தன் குரலைப் பரவ விட்டவன். இசையின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமுஎகச, மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும், தோழர்கள் மீதும் தீராத அன்பைப் பொழிபவன். ஓர் ஓவியனாகத் துவங்கி இசைக்கலைஞனாக நிலைத்தவன். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வண்ணத்துண்டு என்று தன் பண்பாட்டை வடிவமைத்துக் கொண்டவன்… எல்லாவற்றுக்கும் மேலாய்ப் பார்க்கும் போதெல்லாம் புன்னகையோடும் பாசத்தோடும் அன்பைப் பொழிகிற மனிதன்…

திருவுடையானைப் பணமும் புகழும் என்றும் மயக்கியதில்லை. இளையராஜா இசையில் பாடியபோதும் கூட, சென்னைக்கே வந்து விடுங்கள் என்று அவர் அன்போடு அழைத்தபோதும், மக்கள் மேடைகளில் பாடுவதே தன் மனசுக்கும் இயக்கத்துக்கும் உகந்தது என்று எளிமையாகப் புன்னகைத்துக் கொண்டே சொன்னவன். கைகொள்ளாப் பணம் தருகிறேன் என்று பல இயக்கத்தவர்கள் அழைத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தன் பற்றுறுதியை விட்டுக் கொடுக்காமல் இயக்கப் பணியாற்றியவன்.

யார் எத்தனை கிண்டல் செய்தாலும், தன் அன்பான புன்னகையையே அதற்குப் பதிலாகப் பரிசளிப்பவன். தட்டி எழுதும் வேலையோடு, தபேலாவைத் தட்டி முழக்கித் தன் வெண்கலக் குலரால் மக்கள் முன் கசிந்துருகுபவன். தமிழ் மீதான அவனது காதல் அபூர்வமானது. இடதுசாரி இயக்கத்தவர்களுக்கு மொழி குறித்த அக்கறை இல்லை என்று புழுதிவாரித் தூற்றுவோர்கள், திருவுடையானைக் கண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பர். தமிழின் பெருமை சொல்லும் பாடல்களை எங்கிருந்தும் அவன் எடுத்துக் கொண்டு தன் குரலால் மெருகேற்றிப் பாடத் தயங்கியதில்லை. ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலான “தமிழா.. நீ பேசுவது தமிழா….?” என்கிற பாடலை இடதுசாரி மேடைகளில், கலை இரவு மேடைகளில் அவன் முழங்கத் தவறியதில்லை.

மத வெறிக்கு எதிராக, சாதி வெறிக்கு எதிராக, பெண் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை என்று அவனது பாடற்களங்கள் மானுட விடுதலையிலிருந்து எப்போதும் வழி தவறியதில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்த குடும்பச் சூழலோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாலும், “பாடல் எடுத்துப் பாடுக மனமே” என்று தன் தபேலாவிலிருந்து இசை கிளப்பும் மனம் அவனுக்கு வாய்த்திருந்தது.

எவரிடமும் மரியாதைக் குறைவாக நடக்க அவனுக்குத் தெரியாத அபூர்வப் பிறவி. நல்ல பாடல்கள், ஓவியங்கள், இசை நயங்கள் என்று எங்கு கண்டாலும் மனதார மகிழ்ந்து பாராட்டும் பன்முகக்கலைஞன் அவன்.

தூரிகை பிடித்து எழுதும் போதும், தபேலாவில் விரல்கள் தவழும் போதும், தாராபாரதியின் “வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்” என்று அவன் பாடுகிற பாடலுக்குத் தனி அர்த்தம் இருந்த்து.

அவனது சகபாடகன் கரிசல் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்த்து, அவனது துணைவியார் உடல் நலமில்லாதவர் என்பதும், தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்க அவரது ஒற்றை வருமானத்தையே நம்பியிருந்தான் என்பதுவும். ஃபிளக்ஸ் தொழில் நுட்பத்தின் வருகை அவன்போன்ற போர்டு ஓவியர்களின் வாழ்வில் விளையாடியதுபோல அவர் வாழ்விலும் விளையாடியுள்ளது. அதன் பின்னர் பெரும் பகுதியும் அவர் இசைக்கச்சேரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே தனது குடும்ப வண்டியை நகர்த்தியுள்ளான்.

அவனுக்கு இரட்டைப் பெண்களாய்ப் பிறந்த அன்பரசிக்கும், அறிவரசிக்கும், மகன் பழனி பாரதிக்கும், மனைவி சங்கர ஆவுடையம்மாளுக்கும் யார் ஆறுதல் சொல்லித் தேற்றுவது.

ஸ்ரீரசா, கவிஞர்; ஓவியர்.

மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்ற போது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

“இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் மேடைகளில் தமிழகம் முழுவதும் தனது அற்புதமான குரல் வளத்தால் செங்கீதங்களை இசைத்து மக்களைக் கவர்ந்த கலைஞன் தோழர் திருவுடையான்.

கட்சியின் சங்கரன் கோவில் நகரச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான், தற்போது தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். சிறந்த பாடகரும், இசைக் கலைஞனுமான தோழர் திருவுடையானின் அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் குறிப்பாக தமுஎகசவிற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும், கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழுவிற்கும், தமுஎகச தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

மக்கள் பாடகர் திருவுடையானுக்கு சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்ட சில அஞ்சலி குறிப்புகள்…

வண்ணதாசன்

கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.

திருவுடையானை இழந்திருக்கிறேன்.

திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.

என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார்.

நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.

இரா.நாறும்பூநாதன்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் திருவுடையான். இளம் வயதிலிருந்தே இசை மீது ஆர்வம். கைத்தறி சேலைக்கு பார்டர் போடும் பேட் மேஸ்திரியாக இருந்த அவரது தந்தை பழனிச்சாமி, தனது மகனின் இசையார்வத்தை ஊக்குவித்தார். உள்ளூர் கோயில்களில் அந்தச் சிறுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எல்லாமே பக்திப் பாடல்கள்தான். ஓவியத்திலும் நல்ல ஆர்வம் இருந்தது. வறுமை காரணமாக எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலில் பாடிக்கொண்டிருந்த அவருக்குப் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைக் கொடுத்துப் பாட வைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திடம் அழைத்து வந்தவர்கள் நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன், தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்திவரும் ஆசிரியர் சங்கர்ராம் ஆகியோர்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993-ல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடியவர் அவர். ‘தமிழா… நீ பேசுவது தமிழா?’, ‘பாடல் எடுத்துப் பாடுக மனமே’, ‘அன்பு மணம் கமழும் அறிவு மலர்ச் சோலையிலே’ போன்ற பல பாடல்களுக்குத் தனது குரலால் தனி வடிவம் தந்தார்.

அ. குமரேசன்

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தனது ஒரு நிறுவனத்தின் பாடகராகப் பொறுப்பேற்க அழைத்தார். மாதாமாதம் பெரியதொரு தொகை வழங்குவதாகக் கூறினார்.

“நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர். இந்த இயக்கப் பணிகளைத் தொடரவே விருமபுகிறேன். உங்கள் அமைப்பில் இணைய முடியாது, மன்னியுங்கள்,” என்று பணிவோடு சொன்னார் தோழர். சொந்தப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் செங்கொடி இயக்கத்தின் கானமாய் ஒலித்துவந்தார்.

முற்போக்கு மேடைகளின் முன்னணிப் பாடகராக மட்டுமல்ல முன்னுதாரணத் தோழராகவும் திகழ்ந்த திருவுடையானுக்கு எவ்விதம் அஞ்சலி செலுத்துவது?

சு. இரவிக்குமார்

இசை மனிதனுக்கு ஒரு பையன், இரண்டு பெண் குழந்தைகள்… பையன் கல்லூரியில், பெண்கள் (இரட்டையர்கள்) இப்போதுதான் +2 படித்துக் கொண்டிருக்கிறார்கள்… மனைவி, தம்பி, தம்பி குடும்பத்தினர், அம்மா , அப்பா எனச் சேர்ந்து வாழும் குடும்பம்.. அவர்களின் துயரம் நினைத்துப் பார்க்க முடியா அளவினது… இத்தனை வெள்ளந்தியாக ஒரு மனிதனை வைத்திருக்கும் குடும்பம் எத்தனை பண்பு மிக்கதாகவும், அன்பு மிக்கதாகவும் இருக்க வேண்டும்…? அன்பின் கூட்டுக்குள் மரணம் திணித்த வலி துயர்மிகுந்ததுதானே? யாரை யார் தேற்றுவது?

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார். அவருக்கு வயது 92.  டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஏ.பி.பரதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஏ.பி.பரதன் பதவி வகித்தவர்.

ஏ.எஸ்.பொன்னம்மாள் மறைவு: இரங்கல்

ஸ்டாலின் ராஜாங்கம்

எழுத்தாளர்

திருமிகு ஏ.எஸ்.பொன்னம்மாள் எனக்கு நேரடி பழக்கமில்லை.காங்கிரஸிலிருந்த தலித் என்ற முறையில் என் கவனத்திலிருந்தவர்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பதை அறிந்து நானும் நண்பர் அன்பு செல்வமும் சென்ற தருணத்தில் அவர் ஊருக்கு திரும்பிவிட்டிருந்தார். இந்நிலையில் 24.11.2015 ம் நாளில் மரணமெய்தியிருக்கும் அவருக்கு எம்முடைய அஞ்சலி.

நான் பழைய வட ஆற்காடு பகுதியை சேர்ந்தவன். வெறெந்த பகுதியை காட்டிலும்அம்பேத்கர் அமைப்புகள் செயல்பட்ட பகுதி அது.எனவே காந்தியும் காங்கிரஸும் பற்றிய எங்களின் எதிரான மனநிலை புரிந்துக்கொள்ளக் கூடியதே.ஆனால் தென் மாவட்டங்களில் தலித்துகளிடம் காங்கிரஸே அதிகம் பணியாற்றியிருப்பதை பின்னரே தெரிந்துக்கொள்ள முடிந்தது.மதுரைப் பகுதியில் விசிக, பு த வருவதற்கு முன் ஒரளவு செயல் பட்டது அம்பேத்கர் மக்கள் இயக்கம்.மற்றபடி காங்கிரஸ் தான் இயங்கியி ருக்கிறது.

காங்கிரஸ் ஒருபுறம் நிலவுடைமை பணக்காரர்களின் சார்பானது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அது தலித்துகளிடமும் நெருக்கம் காட்டியது என்பதும்.இடத்திற்கு இடம் இதன் அம்சம் மாறுபட்டு இருந்திருக்கிறது.காந்தி வழியாக உருவான ‘அரிஜன சேவா’பணிகளின் இணைகோடு தான் இந்த செயல்முறையும்.

இன்றைய காங்கிரஸில் தலித் பிரதிநிதித்துவமும் ‘சுதந்திர’இருப்பும் குறைந்துவிட்ட நிலையில் காங்கிரஸின் பாரம்பரிய முகம் காரணமாகவே எம்எல்ஏவாக இருந்தார் என்பதாகவே கடைசி காலங்களில் இவரின் இடம் சுருங்கிப்போனது என்பது உண்மையே.
ஆனால் காங்கிரஸில் அவர் வருகையும் அக்கால சூழலும் அவ்வாறு இருந்திருக்க வில்லை.அவர் சித்தப்பா ஆயக்குடி பாலக்கிருஷ்ணன் மூலம் அவர் நடத்திய அரிஜன சேவா சங்க கல்விப் பணியின் அங்கமான பள்ளி விடுதிகாப்பாளராக இருந்து அரசியலிலும் நுழைந்தவர்.இவர் காலத்தில் காந்தி இயக்க உதவியோடு வாடிப்பட்டியில் பள்ளி நடத்தி மற்றொரு தலித் பெண் லட்சுமி அம்மாள்.காமராசர் காலத்தில் 1957 தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் வென்று முதன்முறையாக எம்எல்வாக ஆனார். தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவானார். இத்தனை முறை எம்எல்ஏ ஆனதற்கு காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பார். காங்கிரஸிலிருந்து இடையில் விலக நேர்ந்த போதும் கூட பழ.நெடுமாறன், மூப்பனார், ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் பாரம்பரிமுள்ளவர்களோடு தான் அவர் செயல்பட்டார்.

பொன்னம்மாள்
பொன்னம்மாள்

அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புலப்படும்படியாக செயல்பட்ட குறிப்பான தருணங்களைஅறிய முடியவில்லை. ஆனால் செயல்பட்டிருக்க முடியாது என்றும் சொல்லி விடமுடியாது. கக்கன் பற்றி இவ்வாறு சொல்லியே நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அவர் காலத்து வேளைகளும் அவர் பற்றிய சாதாரண மக்களின் நினைவுகூறல்களும் வேறாக இருக்கின்றன. அவர் காலத்தில் தான் அவர் தொகுதி தலித் மக்களுக்கு பட்டா , வீடு போன்றவை அதிகம் வழங்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பறிபோனது பிந்தைய ஆட்சிகளில் தான். அவற்றை மீட்பதே இன்றைக்கு முக்கிய பிரச்சினை. இதேபோல பொன்னம்மாள் செயல்பாடுகளை உள்ளூரில் தேடினால் ஒரு முடிவுக்குவரலாம். இன்றைக்கு நிலக்கோட்டையிலிருக்கும் அரசு பெண்கள் கல்லூரியை கொணர்ந்தது இவரின் முக்கிய பங்களிப்பு. செய்வதை காட்டிலும் அதை விளம்பரம் செய்வதற்கு அதிகம் மெனக்கிடுவதும் காங்கிரஸிக்கு பிந்தைய ஆட்சிகளில் தான் அதிகமாயின. ஆனால் காங்கிரஸிற்கே உரிய எளிமையோடே கடைசி வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

காங்கிரஸில் தலித் தலைமைக்கு கக்கன், இளைய பெருமாள், மரகதம் சந்திரசேகர் என்று பாரம்பாரியமுண்டு. இதில் இளையபெருமாள் மாநில தலைவராகவே இருந்தார். பாரமலை, ராஜாங்கம், போளூர் வரதன், தென்காசி அருணாச்சலம் வரிசையில் இப்போதைய ஜெயக்குமார், வள்ளல்பெருமாள், யசோதா வரை அத்தொடர்ச்சி இன்றுவரை ஏதோ ஒருவகையில காங்கிரஸில் உண்டு. இவற்றோடு மாநில கட்சி ஒன்றையும் ஒப்பிடமுடியாது. காங்கிரஸிலும் கூட இனிமேலும் இதே எண்ணிக்கையில் நிலைமை அமையுமா என்று கூறமுடிய வில்லை. அதேபோல தேவேந்திரர் அரசியலிலும் காங்கிசுக்கு ஓரிடம் உண்டு. பேரையூர் பெருமாள் பீட்டர், இம்மானுவேல் சேகரன், அருணாசலம், பொன்னம்மாள் போன்றோரை இவ்வாறு கூறமுடியும். காங்கிரசிலிருந்த முந்தைய தலித் தலைமுறையின் கடைசி கண்ணிதான் பொன்னம்மாள். சாதிப் பெரும்பான்மைவாதமும் கவர்ச்சிவாதமும் காங்கிரஸையும் சூழ்ந்துள்ள நிலையில் இனியும் கட்சியில் பழைய நிலைமை உருவாக வாய்ப்பில்லை என்றாகிறது.

இந்நிலையில் பொன்னம்மாள் போன்றோரின் மறைவு காங்கிரஸின் தலித் பாரம்பரியத்தை முடிவுக்கு கொணருகிறதா? என்பதே நாம் எழுப்பி பார்க்க வேண்டிய முக்கிய கேள்வி.

காந்தி இயக்க கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மரகதம் சந்திரசேகர், பொன்னம்மாள் என்று அடித்தட்டு சமூக பெண்களுக்கு ஒப்பிட்டளவில் அதிக இடமளித்த காங்கிரஸில் சிவப்பான நடிகைகளுக்கு தரப்படும் முக்கியத்துவமெல்லாம் சேர்ந்து தான் இதுபோன்ற கேள்விகளை எழுப்ப வைக்கிறது.