‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

ஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ்

கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துறை’ ஐ உருவாக்கியது.பாலை கொள்முதல் செய்து ,வீடு வீடாக விநியோகம் செய்தார்கள்.1972 ம் வருடம் திமுக அரசு பால்வளத்துறையை பால்வளக் கழகமாக (Dairy Development Corporation) மாற்றியது. நான் 9.9.1971 ல் பணிக்கு சேர்ந்தேன்.

கேள்வி: நீங்கள் 17 ஆண்டு காலம் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருந்தீர்களே?

பதில் : மதுரை பால்வள தொழிலாளர்கள் 15 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் செய்தது. அவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் 19.11.1980 அன்று செய்தோம்.பேச்சு வார்த்தை நடக்கவில்லை. வேலைநிறுத்தம் 16 நாட்கள் நீடித்தது. ஆகவே 1130 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் (டிஸ்மிஸ்) செய்தது.ஏற்கெனவே ‘உலகவங்கிக் கடன் வேண்டும் என்றால் வலுவான தொழிற் சங்கம் இருக்கக் கூடாது’ என்று அது நிபந்தனை விதித்து இருந்தது. அந்தச் சூழலில் தமிழக அரசும் இதைச் சாக்காக வைத்து, தொழிற்சங்கத்தை பலவீனப்படுத்த எங்களை வேலை நீக்கம் செய்தது. நாங்கள் 1.1.81 அன்று பேரணி நடத்தினோம்.அதில்110 பேர் கைதாகி 23 நாட்கள் சிறையில் இருந்தோம்.ஏற்கெனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சி.கெ.மாதவனோடு (அவர்தான் சங்க தலைவர்) சேர்ந்து 16 பேர் சிறையில் இருந்தார்கள்.சிறையில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்பு முதலமைச்சரைச் சந்திக்க இராமாவரம் தோட்டத்திற்கு குசேலருடன் சென்றேன்.’சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது’ என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். அவையெல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள்.

கேள்வி: நீங்கள் சுப்பராயன் தேர்தலில் நிற்க பாராளுமன்ற தேர்தலுக்கு காப்புத் தொகை செலுத்தினீர்களாமே !

பதில்: இப்போது மட்டுமல்ல; கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின் போதும் தோழர் சுப்பராயனுக்கு எங்கள் சங்கம் காப்புத் தொகை கட்டியது. எம்ஜிஆரினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பால்வளத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி எம்.அப்பாத்துரை, அழகிரிசாமி, ஜி.பழனிசாமி, ரகுமான்கான்(திமுக), முகமது இஸ்மாயில்(ஜனதா), இளைய பெருமாள்(காங்) போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள். தோழர். கே.சுப்பராயன் திமுக ஆட்சியின் போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 1987 ம் ஆண்டு கொடுத்தார். இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 1170 பேரில் 390 பேருக்கு 1989 ல் மீண்டும் வேலை கிடைத்தது. 1997 ல் மீண்டும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விடுபட்ட மற்ற தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கச் செய்தார். சி.கெ.மாதவனுக்குப் பிறகு தோழர் மூர்த்தி எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். அப்போது (1981)மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த வி.பி.சிந்தனோ,அதன் பிறகு அதே வில்லிவாக்கம் தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்ட டபுள்யூ.ஆர்.வரதராஜனோ எங்களுக்காக குரல் எழுப்பவில்லை.

கேள்வி : 17 வருடம் வாழ்க்கையை எப்படி ஓட்டினீர்கள் ?

பதில் : மீண்டும் வேலைக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகளைச் சந்தித்தல்; தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற வழக்குகள் என என்னுடைய பெரும் பகுதிநேரம் கழிந்தது. 1987 முதல் 1996 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளராகவும் இருந்தேன். பால்பண்ணை தொழிலாளர்கள், நண்பர்கள் உதவி செய்தனர்.சி.கெ.மாதவன்தான் கூட்டுறவு துறை தொழிலாளர் சங்க தலைவராக இருந்தார்.அதில் இருந்த சீனு, வேணு, முத்தையா (டியுசிஎஸ்) போன்றவர்களை என்னால் மறக்கவே இயலாது. பல்லாவரம் ரவி அவ்வப்போது உதவி செய்வார். நான் மனச் சோர்வு அடையாமல் இருக்க இவர்கள் எல்லாம் முக்கியமான காரணமாகும்.ஒரு பிரச்சினை யில் காவல்துறை எங்கள் மீது 307 (கொலைமுயற்சி வழக்கு) போட்டுவிட்டது. இதற்காக குரோம்பேட்டையில் இருந்து, கட்சி வழக்கறிஞர் அங்குசாமி எழும்பூர் நீதிமன்றத்திற்கு வருவார்.சாட்சிகளாக வந்திருப்பவர்களுக்கு அவர் வடை,டீ வாங்கிக் பொடுப்பார். அதுவே 200 ரூபாய் வரும்.அவர் என் பையில் நூறு ரூபாய் வைத்து விட்டுச் செல்வார். ரவி சேகர் என்ற வழக்கறிஞர் நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு எங்களுக்காக செஷன்ஸ் கோர்ட்டில் வாதாடினார்.

பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரர் ஆர். பாளையம்

கேள்வி : பால் உற்பத்தியை பெருக்க ஏதும் ஆலோசனை சொல்லியிருக்கிறீர்களா ?

பதில் : ‘தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம்’ என்பது ஏஐடியுசி அமைப்பு.ஆவின் பாலை கலப்படம் செய்து வைத்தியநாதன் என்பவர் சிறைக்கு சென்றார் என்பது உங்களுக்கு தெரியும். இவர் ஆவின் நிறுவனத்தில் மீண்டும் காண்டிராக்ட் எடுக்க முயற்சி செய்து வருகிறார்.ஆளுங்கட்சி பிரமுகர்களும் இவருக்கு ஆதரவு தருகிறார்கள்.இவருக்கு காண்டிராக்ட் மீண்டும் தரக்கூடாது என்று தோழர்.மூர்த்தி கடிதம் எழுதி யுள்ளார்.

இந்தியாவிலேயே பொதுமக்கள் மாதந்தோறும் முன்கூட்டியே பணம் கட்டி,அட்டை வாங்கி பாலை தினந்தோறும் பெற்றுக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெறுகிறது. அந்த அளவுக்கு ஆவின் நிறுவனம் சாதாரண மக்களின் நல்ல பேரை சம்பாரித்து உள்ளது. அதற்கு ஏற்றபடி ஆவின் நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும்.12.75 இலட்சம் பால் தினமும் விற்பனை ஆகிறது. அதில் 7.5 இலட்சம் வாடிக்கையாளர்கள் பால் அட்டை முன்கூட்டியே வாங்கி விடுகின்றனர். மீதி விற்பனை முகவர் மூலமாக நடைபெறுகிறது.

கேள்வி : தனியார் பால் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறதே ?

பதில்: ஆவின் நிறுவனம் தரும் கமிஷனை விட அதிகமான கமிஷனை தனியார் பால் நிறுவனங்கள் தருகின்றன. எனவே, தனியார் பாலை விற்பதில் கடைக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மத்திய சர்க்கார் ஏற்கெனவே 10,000 லிட்டர் வரை விற்பனை செய்யத்தான் தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதை ஒரு இலட்சம் லிட்டர் வரை விற்பனை செய்ய அனுமதி அளித்துவிட்டார்கள். பாலை இறக்குமதி செய்ய போடும் வரி குறைவு.ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய அதிகம் வரி செலுத்த வேண்டும். இப்போது மலேசியா,சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஆவின் நிறுவனம் பாலை ஏற்றுமதி செய்கிறது. இதற்கான வரி அதிகம் என்றால் இயல்பாகவே பால் உற்பத்தி குறையத்தானே செய்யும்.டில்லியிலும் ஆவின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இப்போது ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் காமராஜ் என்பவர் ஆவின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆர்வமாக செயல்படுகிறார். தரமற்ற தனியார் பால் நிறுவனங்கள் மீது தமிழக அரசின் சுகாதாரத்துறை கறாறான நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் தரமற்ற தனியார் பால் விற்பனை என்பது குறையும்.பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜியை பாராட்ட வேண்டும். அவர்தான் முதலில் தனியார் பால் நிறுவனங்கள் தரமற்ற பாலை உற்பத்தி செய்கின்றன என்பதை பகிரங்கமாக அறிவித்த அமைச்சர்.

கேள்வி: ஆவின் நிறுவனம் இலாபத்தோடு இயங்கி வருகிறதா ?

பதில் : “பால் என்றால் ஆவின் – கலப்படம் இல்லாதது ” என்று நாங்கள்தான், சங்க மலரில் முதலில் எழுதினோம். அந்த வசனத்தைதான் இன்று ஆவின் நிறுவனம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருக்கிறது.ஆவின் நிறுவனத்தால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் விவசாயிகளும் பலன் பெற்று வருகிறார்கள்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக பால் தரும் திட்டத்தை காமராஜ் (அய்ஏ.எஸ்) மேலாண்மை இயக்குனராக இருக்கும்போது அமலாக்கினார். சுனில்பாலிவால் ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டுவந்தார்.

ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி நெய்,பால்கோவா,நறுமணப் பால்,மைசூர் பாகு,குலாப் ஜாமுன்,பால்பவுடர், வெண்ணெய், பன்னீர் போன்ற உப பொருட்களையும் விற்பனை வருகிறது.மருத்துவ மனைகள்,பேருந்து நிலையங்களில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தால் விற்பனை பெருகும். கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்த ஆவின் பாலகம் அகற்றப்பட்டு இப்போது தனியார் நிறுவனம் கடை வைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தார்கள். அதோடு அங்குள்ள கழிப்பறைகளையும் பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அதனால் ஆவின் பாலகம் அமைக்க முடியவில்லை.

ஆவின் நிறுவனத்தில் நிகழும் சேதாரம், திருட்டு இவற்றை குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் உள்ள ‘மதர் டைரி’ நிறுவனத்தில் பணியாற்றும் மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே கார் வசதி உண்டு.ஆனால் இங்கு பல அதிகாரிகளுக்கு ஆவின் நிறுவனம் கார் வசதி செய்துள்ள து.கண்காணிப்பு அதிகாரியாக ஒரு உயந்த பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி இருக்கிறார். அவருடைய ஓட்டுநர், உதவியாளர் என இவர்களுக்கு ஆகும் செலவை ஆவின் செய்கிறது. பல தேவையற்ற பதவிகள் தலைமை அலுவலகத்தில் (பொறியியல், திட்டம், கால்நடை சார்ந்த உயர் பதவிகள்) உள்ளன. இவையெல்லாம் ஆவின் இலாபத்தை விழுங்குகின்றன.

மாதவரம்,மதுரை,ஈரோடு என மூன்று இடங்களில் தீவனப் பிரிவு இயங்கி வந்தது.இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தீவனம் கிடைத்து வந்தது. தீவனத்தை விற்பனை செய்ய சந்தை இருக்கிறது. அதற்கான தொகையை பாலின் விலையில் இருந்தே கழித்துக் கொள்ளலாம். இந்த தீவனப் பிரிவை மீண்டும் இயக்க வேண்டும்.

குழந்தைகள்,முதியோருக்கு என கொழுப்பு நீக்கிய பாலை ஆவின் வழங்குகிறது. இவையெல்லாம் நன்மை பயக்கும் செயல்களாகும்.

கேள்வி: இப்போது அரசாங்கம் பாலின் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் கூட்டியிருக்கிறது.இதைக் குறைக்க ஏதும் ஆலோசனை கூறுகிறீர்களா ?

பதில்: ஆவின் நிறுவனம் தேவையற்ற நிர்வாகச் செலவுகளையும்,தேவையற்ற பதவிகளையும், சேதாரத்தையும்(wastage) குறைத்தாலே பால் விலையை உயர்த்த வேண்டியதில்லை. ஆவின் நிறுவனம் நடத்திவந்த தீவனப் பிரிவு நல்ல இலாபத்தோடு இயங்கி வந்தது. தனியார் தீவன உற்பத்தியாளர்கள் தலையீட்டின் பேரில், அதை பால்வளத்துறை மூடிவிட்டது.இதனால் மிக மலிவான விலைக்கு விவசாயிகளுக்கு தீவனம் கிடைத்து வந்தது நின்று விட்டது. அதனால்தான் அவர்கள் கொள்முதல் விலையை அதிகம் கேட்கிறார்கள். இதனை மீண்டும் இயக்கினால் விவசாயிகளும் பலன் பெறுவர். அல்லது அரசு மானியம் வழங்க வேண்டும்.

கேள்வி: சிறப்பாக செயல்பட்ட பால்வளத்துறை அமைச்சர் என்றால் யாரைச் சொல்லுவீர்கள் ?

பதில்: கண்ணப்பன், ப.உ.சண்முகம், குழந்தைவேலு, கே.ஏ.கிருஷ்ணசாமி, வி.வி.சாமிநாதன், மதிவாணன், சுந்தரம், கே.என்.நேரு,ராஜா முகமது என பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் எனக்கு பிடித்த அமைச்சர் இராஜா முகமது. அவர் 1979, 80 களில் அமைச்சராக இருந்தார். 700 தொழிலாளர்கள் அவர் அமைச்சராக இருந்தபோதுதான் நிரந்தரப்படுத்தப்பட்டார்கள். இது ஒரு பெரிய சாதனை. அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். அவர்கள் சொல்லுவதை அப்படியே கேட்க மாட்டார்.

கேள்வி: நீங்கள் எப்போதுமே சிவப்புத் துண்டோடு இருக்கிறீர்களே !

பதில்: என் அப்பா சென்னைத் துறைமுகத் தொழிலாளி. அய்யங்கார் சங்கம் என்று சொல்லப்பட்ட ஏஐடியுசி சங்கத்தில் இருந்தவர்.
சி.கெ.மாதவன் நான்காம் வகுப்புதான் படித்தவர். அவரை ஒரு ‘தொழிற்சங்க பல்கலைக்கழகம்’ என்று சொல்ல வேண்டும். அவர் 1976 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி ‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’ வைத்திருந்தார். நான் 1976 ஆம் வருடத்தில் இருந்து அவர் 1992 ஆம் ஆண்டு இறக்கும் வரை சி.கெ.எம்- மோடு இருந்தேன். அவரோடு சேர்ந்து நாங்கள் 35 பேர் 1984 ல் மாதவரம் பால்பண்ணை பேருந்து நிலையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தோழர். தா.பாண்டியன் முன்னிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டோம். அன்று முதல் இந்த சிவப்பு துண்டை அணிந்து வருகிறேன். இதுதான் எனது அடையாளம். எனக்கு பெருமிதமாகவும் இருக்கிறது.

இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்

உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் பிறகு அந்தப் பொய் உண்மையென்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதை எப்போது இந்த நாடு உணர்ந்துகொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. வானொலியும், செய்தித்தாளும் மட்டுமே ஊடகங்களாக இருந்த ஹிட்லர் காலத்திலும், பல்வேறு செய்தி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கோயபல்ஸின் கூற்று உண்மையாகவே இருக்கிறது. அதன் தீவிரத்தன்மை இக்காலத்தில் அழிவு சக்தியாக மாறிவிட்டது

இஸ்ரோ விஞ்ஞானிகளோடு மானசீகமாக கை கோர்த்து இன்று எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் கொஞ்ச நாளுக்கு முன் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டபோது யாரும் அவர்களோடு இருக்கவில்லை.

மோதி அரசு சந்த்ரயான் – 2 ஏவுவதற்கு கொஞ்சம் முன் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சங்கமான ஸ்பேஸ் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் இஸ்ரோ சேர்மன் டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு கோரிக்கை வைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தைக் குறைத்திருக்கும் மத்திய அரசின் ஆணைகளை ரத்து செய்து உதவுங்கள் என அவரிடம் வேண்டிக்கொண்டது. ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு இந்த ஊதியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு எந்த வழியுமில்லை என்று விளக்கிச்சொன்னது .

ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சென்ற ஆண்டு அரசு இஸ்ரோவை தனியார் மயமாக்குவதற்கு முயன்றபோது யாரும் எதுவும் பேசவில்லை.

சென்ற ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரோ இரண்டு தனியார் கம்பெனிகள் மற்றும் ஒரு பொதுத்துறை அமைப்புடன் இணைந்து 27 செயற்கைக்கோள்கள் உருவாக்க ஒப்பந்தம் செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இஸ்ரோவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. நேவிகெசன் சேட்டிலைட் தயாரிக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை தனியார் துறைக்குக் கொடுத்துவிட்டது.

தனியார் துறைக்கு இப்படியாக 27 செயற்கைகோள்கள் உருவாக்கும் பணியை ஒப்படைத்ததால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிக்கும் அஹமதாபாத் கிளையின் ஸ்பேஸ் அப்ளிகேசன் செண்டரின் இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா மிகவும் கோபமடைந்தார்.

சிவன் அவர்களுக்குப் பிறகு தபன் மிஸ்ரா இஸ்ரோவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவான நிலையில் அவர் தனியார்மயமாவதை எதிர்த்த காரணத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இஸ்ரோவின் ஆலோசகராக மட்டும் நியமிக்கப்பட்டார்.

இஸ்ரோவின் சேர்மன் கே. சிவன் அவர்கள்,

“தபன் மிஸ்ரா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் க்கு தகவல்களை(ரிப்போர்ட்) தர வேண்டும்” என ஒரு ஆணை பிறப்பிக்கிறார்

அப்போது தபன் மிஸ்ரா போன்ற சிறந்த விஞ்ஞானிக்கும் சிவனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு கலையப்பட்டதாக அப்போது செய்திகள் எழுந்தன.

கே.சிவன் மேல் ஐயாவுக்கு அவ்வளவு இரக்கம் பொங்கி வழிந்தது ஏன் என்பது இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். யாருடைய கையசைவில் இந்த உயர் பதவிக்கு அவர் வந்தார் என்பதும் புரிந்திருக்கும்.

தபன் மிஸ்ராவை இவ்விதம் பதவியிறக்கம் செய்தது தொடர்பாக நாட்டின் பல அறிவியல் துறை சார் விஞ்ஞானிகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதி இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஆல்ஃபா டிசைன் கம்பெனியானது பனாமா பேபர்ஸில் இணைந்ததாகும். இந்தக் கம்பெனியானது பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக்கித் தரும் கம்பெனியாகும்.

அதானி சமூகத்துடன் இந்தக் கம்பெனிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆல்ஃபா டிசைன் டெக்னாலாஜிஸ், டிபெண்ஸ் ஃபார்ம் எலக்ட்ரானிக்கின் முக்கியமான இந்திய கூட்டாளியுமாகும். அதன் பெயரானது இந்தியாவில் கமிசன் வழங்கியது தொடர்பான பனாமா பேப்பர்சில் முத்ன்மையாக வந்திருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஸ்ரோவுக்குள் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் ஊடகங்களின் குரலாக வெளிப்படுத்தவும், அனைத்து விசயங்களையும் உங்கள் முன்னால் வைக்கும் துணிவும் ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவை உங்களுக்கு ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளை மட்டுமே படம்பிடித்துக்காட்டுகின்றன. நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கவில்லையென்றால் அவை உங்களை முட்டாளாகவே வைத்திருக்கும்

கிரிஸ் மாள்வியா
தமிழாக்கம்: Naanarkaadan Sara

சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதில், “1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும்,

2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும்,

3) எதிர்காலத்தில் பேசும் கணினிகள் என்று வந்தால், அதற்கு சம்ஸ்கிருத மொழி மட்டுமே சாத்தியமாகும் என்பதை உறுதி செய்யவும் கோரியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘சம்ஸ்கிருதம் அறிவியல் மொழி என்பதை அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசா NASA ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனென்றால், அதன் எழுத்து வடிவமும், பேச்சு வடிவமும் நன்றாக ஒத்துப்போகிறது. நாசாவே அதை ஒத்துக்கொண்டுள்ள போது, இந்தியாவில் அதனை கொண்டு வர என்ன பிரச்னை இருக்கப் போகிறது? அனைத்துக் கோள்களில் உள்ள மொழிகளுக்கும் தலையாய மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே!” என்ற பேராசையை தெரிவித்துள்ளார்.

வேதங்கள் மற்றும் புராணங்கள் சம்ஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ளன. எனவே, சம்ஸ்கிருதத்தை விட பழமையான மொழி ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்’ என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.

IIT & NIT போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதுதான் வேலையா ? என்ற கேள்விக்கு அப்பால்… பாஜக அமைச்சர் முன்வைத்த இக் கருத்துக்கள் சரியானதா எனப் பரிசீலினை செய்வோம்!

தெரிந்து கொள்ளுங்கள், ரமேஷ் போக்கிரியால் :-

“சம்ஸ்கிருத மொழியை விட பழமையான மொழி இருந்தால் தெரியப்படுத்துங்கள் !” எனக் கேட்டுள்ளீர்கள்.

1) இந்தியாவில் தொன்மையாக எழுத்து வரிவடிவங்கள் கொண்ட 18 மொழிகள் நிலவியது ; அவற்றில் சமஸ்கிருதம் இல்லை. பழந்தமிழ் மொழியான திராவிடி / தமிழி மற்றும் பிராகிருதம் தான் தொன்மையான சிறப்புமிகு மொழிகளாக திகழ்ந்திருந்தன.

2)வேதப் பாடல்களை மட்டுமே பாடும் வளர்ச்சியுறாத மொழியாக இருந்த வேத மொழி என்பது வேறு; செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் என்பது வேறு மொழியாகும்.

சமஸ்கிருதத்தின் முன்மொழியாக வேதமொழியை சொல்ல முயற்சிப்பது அடிப்படையில் தவறானதாகும்.

உலகின் பல்வேறு பகுதிகளில், இதுவரை கண்டறியப்பட்ட சுமார் 1500 தொன்மையான கல்வெட்டுகளில் வேதமொழியும் இல்லை ; சமஸ்கிருதமும் இல்லை. கிபி 2 ம் நூற்றாண்டு வரை, பெஷாவரில் துவங்கி தமிழ்நாடு வரை எங்குமே சமஸ்கிருத கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் படவில்லை. சமஸ்கிருத மொழி இலக்கியங்களை பரவலாக கிபி. 2 ம் நூற்றாண்டிலிருந்து தான் அறிய முடிகிறது.

3) இந்தியாவில், 19 ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட மொழிகள் பட்டியலில், 179 மொழிகள், 544 பேச்சு மொழிகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றில் சமஸ்கிருதம் இல்லை.

கர்நாடக மாநிலத்தில், சிமோகா மாவட்டத்தில், இரண்டு கிராமங்களில் மட்டும், புதுக்கோட்டையிலிருந்து குடிபெயர்ந்த சில பிராமண குடும்பங்கள் சமஸ்கிருதம் பேசுகின்றனர். அதுவும் கூட தமிழ் + கன்னடம் + சமஸ்கிருதம் கலந்த ஒருவகையான கலப்பு சமஸ்கிருதமே !

சமஸ்கிருதம் மக்கள் பேசாத, ஒரு செத்த மொழியாகும். பிராமணர்கள் மட்டுமே பாதுகாக்கும் மொழியாகும்.

4) அரசர்கள் / ஆட்சியாளர்கள் தான் சமஸ்கிருதம் வளர்த்தனர். கிமு 3 முதல் கிபி 1 வரையில், வட இந்தியாவில் உருவான மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் பிராகிருதம்தான் ஆட்சி மொழியாக இருந்தது ; அதுவே மக்களின் பேச்சு மொழியாகவும் இருந்தது.

கிபி 1 – ம் நூற்றாண்டு வரையில், சமஸ்கிருதத்திற்கு வரி/எழுத்து வடிவம், இலக்கியம் இல்லை. சமஸ்கிருதம் மக்களிடம் இருந்து உருவாகவில்லை; செயற்கையாக பிராமணர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய மொழியாகும்; பேச்சு மொழி இல்லை. அன்றைய சமூகப்பொருளாதார தேவைக்கு ஏற்ற நிலபிரபுத்துவ சக்திகளின், அரசர்களின் ’புனிதமான, பண்பாடு மிக்க, தூய்மையான ( ! )’ மொழியாக அறிவிக்கப்பட்டது. அடிப்படையில் அது பிராமணர் மொழியாகும்.

5) பிராமணர் ஏற்றமும் சமஸ்கிருத எழுச்சியும் :-

கிமு 5 மற்றும் 4 -ம் நூற்றாண்டுகள் புத்தர் மற்றும் மகாவீரர் காலகட்டம் ஆகும். கிமு 3 அசோகர் காலகட்டமாகும். பிராமணிய மதத்தை வீழ்த்தி பவுத்தம், சமணம் கோலோச்சிய காலகட்டம் ஆகும். பிராகிருதம் செல்வாக்கு பெற்று இருந்தது.

கிமு 2 முதல் கிபி 5 வரையில் மஹாயான பவுத்தம் சமஸ்கிருதத்தை ஏற்றது; சமணமும் தொடர்ந்தது. கிபி 2 ம் நூற்றாண்டில் இருந்து, பவுத்தம் மற்றும் சமண மதங்களில் பிராமணர்கள் கை ஓங்கியது. சாதீயம், சமஸ்கிருதம் அவற்றிலும் வளர்ந்தது. பவுத்த, சமண நூல்கள், இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்டன. கிபி 4 ம் நூற்றாண்டில் இருந்து வட இந்திய ஆட்சியாளர்கள் மீது பிராமணர்கள் தான் செல்வாக்கு செலுத்தினர். சமஸ்கிருதம் போற்றி வளர்க்கப்பட்டது.

தென்னிந்தியாவில் சாதவாகனர் ஆட்சியில் பிராகிருதம்தான் செல்வாக்கு செலுத்தியது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் தான் சமஸ்கிருதம் தமிழகத்தில் நுழைகிறது. சோழர்கள் ஆட்சியில், சாதீய- நிலவுடமை முறை உறுதிப்படுத்தப் பட்ட பிறகு, வழிபாடுகளில் சமஸ்கிருதம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமஸ்கிருதம், ஒரு தேவ பாஷையாக நீண்ட காலம் நீடித்து நிற்பதற்கான காரணம், ஆட்சியாளர்கள் மீதான பிராமணர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகும்.

இந்தியாவிலேயே தலையாய மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை, அமைச்சர் அனைத்து கோள்களிலும் உள்ள மொழிகளுக்கும் தலையாய மொழி என்பது தவறானது மட்டுமல்ல! மக்கள் வாழாத கோள்களிலும் சமஸ்கிருதம் என்பது முட்டாள்தனமானது;
செத்த மொழிக்கு சந்தனம் பூசுவது ஏன்?

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலான, ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியை மக்கள் மத்தியில் திணிப்பது; பிராமணர் உருவாக்கிய சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவது, இதை நாம் ஒருநாளும் அனுமதிக்கக்கூடாது.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும்.

இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது.

1
அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” மற்றும் “முன்னேறித் தாக்கும் போர்” குறித்த சில நடைமுறை உதாரணங்களை முதலில் காண்போம்.

கிழக்கிந்திய கம்பெனியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பின் நாட்டையே முழு காலனியாக மாற்றிய இங்கிலாந்தின் காலனியாதிக்க வரலாற்றை எடுத்துக் கொள்வோம்.1757 ஆம் ஆண்டு முதலாக 1857 ஆம் ஆண்டு வரையிலும், இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவின் மீது முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டார்கள்.இதற்கடுத்த 90 ஆண்டுகளுக்கு பெரும்பாலும் தனது காலனியாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள, நிலை பதிந்த போர் உக்தியை கையாண்டார்கள்.1900 களின் தொடக்கத்தில் இருந்து 1940 கள் வரையிலும் இந்தியாவில் எழுந்த காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டங்கள், இங்கிலாந்து ஆட்சியாளர்களை நிலைபதிந்த போர் உக்திக்கு தள்ளியது.(இவ்வுதாரணம் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமதுடையது)

1940 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தப் போக்கு, இரண்டாம் உலகப் போரின் தொடக்க காலம் ஆகியவை இந்தியாவை மேலும் காலனியாதிக்க நாடாக நிர்வகிக்க முடியாத நெருக்கடி இங்கிலாந்திற்கு ஏற்பட்டது. இந்த சூழலில் தனது காலனியாதிக்க பிடியை தளர்த்திக் கொண்டு சமரசமாக இங்கிலாந்து பின்வாங்கியது. சமுதாய சக்திகளின் பரஸ்பர உறவில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்து இந்த அரசியல் மாற்றமும் ஏற்பட்டது தெளிவு.

ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் செயல்பாடுகள் தொடக்க காலத்தில் நிலைபதிந்த போர் உக்தியானதாக இருந்தது. புரட்சிகர தயாரிப்பு கட்டங்களில் பல்வேறு மார்க்சிய படிப்பு வட்டங்களின் மூலமாக மார்க்கிய தத்துவத்தை பயின்றது,பின்பு ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியை லெனின் நிறுவியது,ஜார் ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது என தொடர்ந்தது. அதன் பின்னரும் 1905 தொழிலாளர் எழுச்சியின் தோல்வியிலிருந்து 1911-12 வரையிலும் ஜார் ஆட்சியின் கையே ஓங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் பாட்டாளி வர்க்க,விவசாய வர்க்க நேச அணியை ஜார் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரட்டுவதில் போல்ஷ்விக் கட்சி கவனம் செலுத்தியது. சமூகத்தின் அரசியல் உணர்வு மட்டுப்பட்டிருந்த சூழலில் டூமாவில் (ரஷ்யாவின் பாராளுமன்றம்) பங்கேற்கவும் செய்தது.

இந்தக் கட்டம் வரையிலும் முன்னேறித் தாக்கும் போரை மேற்கொள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்த காலமாக கருதலாம். அதன் பிறகு, முதல் உலகப் போர் வெடித்தவுடன் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகர அலையானது போல்ஷ்விக் கட்சியின் நிலைபதிந்த போர் உக்தியை கைவிட வைத்தது. சோவியத் எனும் மாற்று அதிகார மையத்தை, ஜார் ஆட்சிக்கு எதிராக நிறுவி ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை முன்னேறித் தாக்கும் போர் உக்தியின் மூலமாக போல்ஷ்விக் கட்சி கைப்பற்றியது வரலாறாகியது. (இது கிராம்சியின் உதாரணம்)

இத்தாலியில் 1917 ஆம் ஆண்டு முதலாக 1926 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பாசிஸ்ட்கள் முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டார்கள். இந்த காலகட்டத்தில் பாசிஸ்ட்கள் டூரிங் தொழிலாளர்கள் எழுச்சியை வன்முறையால் ஒடுக்கினார்கள். பாராளுமன்றத்தை கைப்பற்றினார்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி எதிர் முகாமை நிர்மூலமாக்கினார்கள் அரச நிறுவனங்கள் அனைத்தையும் பாசிசமயமாக்கினர்கள். (இவ்வுதாரணம் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமதுடையது)

அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் நிலவுகிற சமுதாய சக்திகளுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளை கணக்கில் கொண்டும், அன்றைய வரலாற்றுக் கட்டத்தின் நிலவுகிற அரசியல் பொருளாதார கட்டமைப்பு நிலைமைகளைக் கவனத்தில் கொண்டும் முதலாளித்துவ சக்திகள் ஆனாலும் சரி பாசிச சக்திகள் ஆனாலும் சரி புரட்சிகர சக்திகள் ஆனாலும் சரி, ஆட்சி அதிகாரத்தை முன்னேறித் தாக்கி கைப்பற்றுவதா அல்லது தயாரிப்பு செய்துகொள்கிற,தற்காலிக சமரசம் செய்துகொள்ளுகிற நிலை பதிந்த போரை மேற்கொள்வதா என்பதை திட்டமிடுகின்றன, செயல்படுகின்றன.

இந்த வரலாற்று அனுபவத்தில் இருந்து இந்தியாவில் ஆர். எஸ்.எஸ். பாஜகவின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலை பகுப்பாய்வு செய்யலாம்.

2

இந்தியாவின் இந்துத்துவ பாசிச சக்திகள் தங்களுக்கென இந்து ராஷ்டிர திட்டமென்ற ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை கொண்டுள்ளார்கள். அது எத்தகைய அழுகிய கருத்துமுதல்வாத கற்பனாவாத தத்துவமாக, மானுட நாகரிகத்திற்கு எதிரானதாக, ஜனநாயகத்திற்கு எதிரானதாக, பிற்போக்கு குப்பைக் கூளமாக இருந்தாலும், ஆர். எஸ். எஸ். சக்திகளைப் பொறுத்தவரை அத்திட்டத்தை அமலாக்குவதை, தன் கடமையாகக் கொண்டுள்ளது. அதற்காக ஊழியர்களைத் தேர்வு செய்கிறது.தனது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு தயார் செய்கிறது, ஊர்வல அணிவகுப்பு நடத்துகிறது, பிரச்சார கட்டமைப்பை உருவாக்குகிறது. ஒரு இயக்கமாக, சமூகத்தின் பண்பாடு, கல்வி, கலை இலக்கியம், பொருளாதாரம், தகவல் தொடர்பு என அனைத்து துறைகளிலும் ஊடுருவுகிறது.சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கத்தையும் தனது திட்டத்திற்கு உடன்பட அணியப்படுத்துகிறது.

ஆர். எஸ். எஸ். அமைப்பின் அரசியல் முன்னணியாக, முதலில் ஜன சங்கமாகவும் பின்னர் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியாகவும் செயல்படுகிறது.வெளித்தோற்றத்திற்கு பாஜக தனித்த கட்சி கட்டமைப்பாக தோன்றினாலும், ஆர். எஸ். எஸ். சின் சித்தாந்த வழிகாட்டுதலின் பேரிலேயே பாஜக செயல்படுகிறது. ஆர். எஸ். எஸ். ஒரு அரை-ரகசிய அமைப்பாகவும் பாஜக வெளிப்படையான அரசியல் கட்சியாகவும் இயங்குகிறது. பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான/தக்க வைப்பதற்கான சட்டப் பூர்வ கட்சியாக செயல்படுகிறது.

ஆர். எஸ். எஸ். அமைப்பு இங்கிலாந்து காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய அலையடிக்கிற காலகட்டத்தில் 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ஊழியர்களை திரட்டி தன்னை நிலைப்படுத்த, தயார் செய்யத் தொடங்கியது. காந்தி படுகொலைக்கு பின்பான 1948 காலம் முதலாக நேருவின் மறைவு 1964 வரையிலும் காங்கிரசின் இந்திய தேசிய நீரோட்டத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்களின் பாராளுமன்ற எண்ணிக்கை பலம் மற்றும் தொழிற்சங்க பலத்தால் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில், ஆர். எஸ். எஸ். தயாரிப்பில் கவனம் செலுத்தியே இயங்கியது.

பின்னர் 1970களில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார நெருக்கடி அதைத்தொடர்ந்த் எமெர்ஜென்சி காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்துகொண்ட ஆர். எஸ். எஸ்.,தனக்கான வலுவான வெகுஜன அடித்தளத்தை உருவாக்கிக்கொண்டது.

எமெர்ஜென்சிக்கு பிந்தைய தேர்தலில் அமைக்கப்பட்ட ஜனதா அரசாங்கத்தில் முதல்முறையாக பாராளுமன்ற அவையில் இடம்பெற்றது. அரசியல் முன்னணியின் பதவி அதிகார துணையுடன், வெகுஜன செல்வாக்கு பரப்பை, வலைப்பின்னலை வலுப்படுத்தியது. பின்னர் ரத யாத்திரை வடிவத்தை கையிலெடுத்து தனது பிரச்சாரத்திற்கான கருத்தியல் சமூக உடன்பாட்டை உறுதிப் படுத்திகொண்டு, தனது அணிகளை அறைகூவி அழைத்து, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு என்ற முன்னேறி தாக்கும் போரை நடத்தியது.

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்னாலான காலங்களில் பாஜக நாடுதழுவிய கட்சியாக பரிணமித்தது.இதன் தொடர் விளைவாக,முதல் முறையாக வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் கூட்டணி ஆட்சி அதிகார சகாப்தம் தொடங்கியது. இடையில் காங்கிரசின் தொடர் பத்தாண்டு ஆட்சிக்கு பிறகு 2014 இல் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 2019 தேர்தலிலும் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துகொண்டது.

தொகுத்துப் பார்ப்பின், சமுதாய சக்திகளின் பரஸ்பர உறவு அதன் அரசியல் பொருளாதார பிரதிபலிப்பு ஆகியவை ஆர். எஸ். எஸ். இன் முன்னேறித் தாக்கும் போர் உக்தியையோ நிலைபதிந்த போரையோ தீர்மானிக்கின்றது.

ஜனநாயக நீரோட்டங்கள் பலவீனப்படுகிற நிலையில், புறநிலை தனக்கு சாதகமாகிற சூழலில், ஆர். எஸ். எஸ்.-பாஜக, முன்னேறித் தாக்குகிற போரை மேற்கொண்டுவருவதை கண்டு வருகிறோம். அவ்வகையில் 2014-19 கால பாஜக ஆட்சியில் தனது நிலைகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, தேசியம், தீவிரவாதம் என்ற கவர்ச்சிகர பிரச்சாரம் மூலமாக சமூக உடன்பாட்டை உருவாக்கிக் கொண்டு பாராளுமன்ற வடிவத்திலும் அதற்கு வெளியிலும் தனது திட்டத்தை தீர்மானகரமான முறையில் அமல் படுத்த முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டு வருகிறது.

மோடி அரசின் முதல் சுற்று ஆட்சி அதைத் தொடர்ந்த இரண்டாம் சுற்று ஆட்சியின் தொடக்க காலத்திலேயே தனது உக்தியை முன்னேறித் தாக்குகிற முறைக்கு மாற்றியுள்ளதாக நாம் அவதானிக்கிறோம். இந்த சில காலகட்டத்தில் அவை மேற்கொண்டவை எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற முழக்கத்தின் பேரில் காங்கிரசை உடைத்து அதன் வெகுஜன அணிகளை தன்வயப்படுத்துகிற முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் ஆணையம், கல்வி நிறுவனங்கள உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு நிறுவனங்களை வேகமாக கைப்பற்றிவருகிறது. பெயரளவிலான மாநில அதிகாரங்களை பறித்து, ஒற்றை மைய அரசின் கீழ் அனைத்து அதிகாரத்தையும் மையப்படுத்திக் கொண்டது.

கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது.

சம்ஸ்கிருத இந்தி மொழியை நாடு எங்கிலும் திணிப்பது.

இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைப்பது

இராணுவத்தையும் அரசையும் கட்சியும் நெருங்கச் செய்வது பின்னர் இணைப்பது.

பசு குண்டர்களின் வன்முறையை நடவடிக்கையை ஊக்கப்படுத்துவது.

அறிவியலுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது.

தேசிய பாதுகாப்பு சட்டம்,UAPA சட்டம் போன்ற ஆள்தூக்கி சட்டங்களை வலுப்படுத்தி, ஜனநாயக செயல்பாட்டை நசுக்க சட்டபூர்வ வடிவத்தை பயன்படுத்துவது.

முத்தலாக் சட்டத்தை அமலாக்கியது

ஆர். எஸ். எஸ். அமைப்பின் நீண்டகால இலக்கான காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370 ஐ அராஜகமாக நீக்கியது.அங்கு ராணுவத்தை குவித்து காஷ்மீர் மக்களை அச்சத்தில் வைத்திருப்பது…

என அடுத்தடுத்த முன்னேறித் தாக்கும் உக்தியால் நாடாளுமன்ற ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேவும் தனது திட்டத்தை நடைமுறையாக்குகிற முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜனநாயக சக்திகளைப் பொறுத்தவரை, உடனடியாக தனது ஆற்றலை குவிமையப்படுத்தி, பாசிச தாக்குதலுக்கு எதிராக வினையாற்ற இயலாமல் சிதறுண்டு உள்ளன.ஜனநாயக அரசியல் அணியின் பலவீனங்கள் முறையே நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவருகிற மசோதாக்களை தடுத்த நிறுத்துகிற அளவில் பெரும்பாண்மை எண்ணிக்கை பலமானது ஜனநாயக சக்திகளுக்கு இல்லாமல் இருப்பது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே,வெகுஜன மக்களை திரட்டி பாஜகவை தடுக்கிற ஆற்றலும் திட்டமும் எந்தக் கட்சிக்கும் இல்லை.

தேர்தல் அரசியல் களத்தில் முறியடிக்கப்படவேண்டிய சக்தியாக பாஜகவை எதிர்கட்சிகள் மதிப்பிடுவது. பாஜகவை மாநில சுயாட்சிக்கு எதிரான, மாநில மொழிக்கு எதிரான ஒற்றை, மைய ஆட்சியை திணிக்கிற, ஒற்றை மொழியை திணிக்கிற அரசியல் அதிகார சக்தியாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பது.

பாஜக ஆட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு, கார்ப்பரேட் ஆதரவு ஆகிய பொருளாதார அம்சங்களை கணக்கில் கொண்டு அதன் இந்து ராஷ்டிர திட்டத்தை சுத்தமாக கவனத்தில் கொள்ளாதிருப்பது.

பாஜகவை மொழி இன பண்பாட்டு மேலாதிக்க சக்தியாக மட்டுமே கவனத்தில் கொண்டு அதன் ஏகாதிபத்திய ஆதரவு-கார்பரேட் ஆதரவு மற்றும் வெகுஜன செல்வாக்கை கவனத்தில் கொள்ளாதிருப்பது.

ஆர். எஸ். எஸ். –பாஜக ஆட்சியானது பாசிசமா,பாசிசப் பண்பை கொண்டுள்ள அரைப் பாசிசமா, சர்வாதிகாரமா போன்ற பல்வேறு தத்துவார்த்த நிலைப்பாடுகளில் ஒத்த கருத்து வர இயலாதது, அதன் முன்னேறித் தாக்குகிற உக்திக்கு எதிரான உடனடி எதிர்வினை நடைமுறைப் போராட்டத்தை மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்கிறது.

மேற்கூறிய பல்வேறு போக்குகள் வலது புரட்சிக்கு சாதகமாக உள்ளன. வலது புரட்சிக்கு எதிரான ஒன்றுபட்ட பாசிச எதிர்ப்பு -ஜனநாயக திட்டத்தை மேற்கொள்வதற்கு சவாலாக உள்ள காரணிகளாக உள்ளன.

இந்துத்துவ பாசிசத்தின் முன்னேறித் தாக்கும் போருக்கு எதிராக தற்போதைய சூழலில் ஜனநாயக சக்திகள், நிலைபதிந்த போர் உத்தியை மட்டுமே மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில் இந்திய தேசியம் குறித்த தவறான பொது புத்தி உருவாக்கம், வர்க்கங்களின் பின்தங்கியுள்ள அரசியல் உணர்வு குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பின்தங்கிய அரசியல் உணர்வு, நாடுதழுவிய அளவில் ஜனநாயக சக்திகளுக்கு ஒரு வலைப்பின்னல் இல்லாமை ஆகிய காரணங்களால் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக போராட்ட சக்திகள் சிறுபான்மையாகவே உள்ளனர்.

பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்ட உக்திகளும் நீண்ட நெடுங்காலம் பிடிப்பவை.பல நெளிவு சுழிவுகளை கொண்டவை. நமது உடனடி தேவை போல்ஷ்விக் உறுதியும், அமெரிக்க நிபுணத்துவத்தை கொண்ட கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், ஒருமுகப்பட்ட பிரச்சார முறைகளை நாடுதழுவிய அளவில் மேற்கொள்ளவேண்டியதுதான்.

ஆதாரம்:

கிராம்சி: புரட்சியின் இலக்கணம் – எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா
Fascism and National Culture: Reading Gramsci in the Days of Hindutva- Aijaz Ahmad

அருண் நெடுஞ்செழியன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

முகப்புப் படம் நன்றி: Anastasya Eliseeva

இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!

டி. அருள் எழிலன்

காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் நிலையில், காஷ்மீரில் நிலவும் அமைதியின் உண்மையான பொருளை இந்த ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன.

இரு பிரசவங்கள்

ரஸியா :

“எங்கள் கனவுகள் அனைத்தும் நொறுங்கிவிட்டன. இது அல்லாஹ்வின் விருப்பம் ஆனால், நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை” வெளிறிய தன் முகத்துடனும் இருண்டுபோன கண்களுடனும் விரக்தி உருவாக்கிய மென்மையுடனும் சொல்கிறார் பிலால் மாண்டூ.
ஸ்ரீநகரின் லால் டெட் மகப்பேறு மருத்துவமனையின் மனைவி ரஸியாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதாலும், அந்த புதிய உயிரின் வருகைக்காகவும் அவர் சூழலையும் கடந்து உற்சாகமாக இருந்தார்.

காஷ்மீர் 5-ஆம் தேதி முழுமையாக மூடப்பட்டது. எட்டாம் தேதி ரஸியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் மகப்பேறு மருத்துவமனை உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று 12 மணி நேரம் பிலால் காத்திருந்தார். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்கள் லால் டெட் மருத்துவமனைக்கு உடனே செல்லுமாறு கூற பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரஸியா லால் டெட் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

காஷ்மீரில் மோடி அரசு உருவாக்கிய அசாதரண நிலை ரஸியாவுக்கு கிடைக்க வேண்டிய மகப்பேறு மருத்துவத்தை தாமதிக்க குழந்தை இறந்து விட்டது. காலதாமதம் என்ற ஒற்றை பதிவோடு குழந்தை இறப்புக்கான காரணம் குறிக்கப்பட்டது. ரஸியாவுக்கும் அது தலைப்பிரசவம் குடும்பமே எதிர்பார்த்த அந்த குழந்தை இறந்து விட்டது.

இன்ஷா:

ஆகஸ்ட் 4-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழுமையான ஊரடங்கு உத்தரவை மோடி அரசு அறிவித்தது. தொலைபேசிகள், ஏ.டி.எம் மையங்கள், கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வாகனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டன. தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என சுமார் 500-க்கும் அதிகமானவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். மக்கள் வீடுகளுக்குள் சிறை வைக்கப்பட்டார்கள். தெருவுக்கு தெரு சோதனைச்சாவடிகள்.மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை.

ஆட்டோ ஓட்டுநரான இர்பான் ஷ்மத் ஷேக்கின் மனைவி இன்ஷாவுக்கு 26 வயது தலைப்பிரசவம். மருத்துவர்கள் குறித்த நாளில் மருத்துவமனையில் டெலிவரிக்காக போய் அட்மிட் ஆவது பற்றிய கவலையில் இருந்தார். வீட்டில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லால் டெட் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆக வேண்டும். அவரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்த ஆட்டோ ஓட்டுநர் நிறைமாத கர்ப்பிணியான இன்ஷாவை ஏற்றிக் கொண்டு கிளம்பிய வுடன் போலீஸ் நிறுத்தி ஆட்டோவை நகர்த்த அனுமதி மறுக்கிறது. கர்ப்பிணி பெண்ணை நடந்து செல்லுமாறு கட்டளை இடுகிறது.

வேறுவழியின்றி இன்ஷா நடக்கத்துவங்குகிறார். சில அடிகள் எடுத்து வைத்தவுடன் அடுத்த சோதனைச்சாவடியில் வேறு வழியில் செல்லுமாறு கூறுகிறார்கள். நடப்பவர் கர்ப்பிணி பெண் என்ற பார்வையோ, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற இயல்பான மனித நேயமோ இல்லை.

6 கிலோ மீட்டர் நடந்த நிலையில் சாலையிலேயே இன்ஷாவுக்கு டெலிவரி ஆகிவும் என்ற நிலையில் அவரது தாயும், சகோதரியும் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அடுத்த 15 நிமிடத்தில் இன்ஷா ஒரு பெண்குழந்தையை ஈன்றெடுக்கிறார்.

வசதிகள் எதுவுமற்ற அந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் உடலில் போர்த்த துணிகள் கூட எதுவும் இல்லை. இன்ஷா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்று மூன்று நாட்களாகி விட்டது. தன் மனைவிக்கு குழந்தை பிறந்தது இன்னும் கணவர் இர்பான் அஹ்மத் ஷேக்கிற்கு தெரியாது.

காரணம் அவரை தொடர்பு கொண்டு சொல்வதற்கான ஒரு வழியும் இல்லை. இந்திய அரசால் காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சுதந்திரம் இதுதான். காஷ்மீரில் கடந்த 5-ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவின் இரும்புத்திரை காஷ்மீரில் பிறப்பது இப்படித்தான்!

நன்றி: தி வயர்
டி. அருள் எழிலன், பத்திரிகையாளர்; ஆவணப்பட இயக்குநர்.

“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்…

ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பது உங்கள் கேள்வி. ஆனால் பாருங்கள், என்னுடைய பிறப்பு இரண்டு நபர்களின் இணைவால் நிகழ்ந்தது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடந்திருக்காவிட்டால் நான் பிறந்திருக்கவே மாட்டேன். என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் நடந்தது, அப்புறம், திருமணம் ஆன பிறகு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்ததால் நான் பிறந்தேன். – இரண்டு நபர்களின் இணைவால் என் பிறப்பு நிகழ்ந்தது. ஆக, அதில் இருவரின் இணைவு இருந்தது.

இப்போது ஒன் நேஷன் – ஒரே தேசம் என்ற விஷயத்துக்கு வருவோம். ஒரே தேசத்துக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று கேட்கிறீர்கள். ஆனால், நாடு ஒன்றாகத்தானே இருக்கிறது! இந்தியா என்பது ஒன்றே. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், இந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசமைப்புச்சட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. அந்த அரசமைப்பில் 300க்கும் மேற்பட்ட ஆர்டிகிள்கள் உண்டு.

நீங்கள் சொல்கிறீர்களே ஒன் நேஷன் என்று… அந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றம் இருக்கிறதே, அதில் இரண்டு அவைகள் உள்ளன – மக்களவை, மாநிலங்களவை. அப்புறம், அதற்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களே, அவர்களும் ஒரே ஒரு நபர் அல்ல. அதற்கு 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுச் செல்கிறார்கள்.

நம்முடைய ஒன்னெஸ் – ஒருமைப்பாடு என்கிறோமே அது உண்மையில் பன்மைத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அதில் டைவர்சிடி இருக்கிறது.

நீங்கள் ஜெய் ஸ்ரீராம் பற்றிக் கேட்டீர்கள். நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அதற்கு உங்கள் சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அல்லது ஜெய் ஹனுமான் சொல்லுங்கள், உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள் – இதைச் சொல்வதற்கான சுதந்திரத்தை நமக்கு நம்முடைய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதனால் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அவ்வப்போது ஜெய் அரசமைப்புச் சட்டம் என்று சொல்லுங்கள். ஏனென்றால், உங்களுக்கு கோஷமிடும் சுதந்திரம் கொடுத்தது அதுதான்.

அப்புறம், என்னுடைய விஷயத்துக்கு வருவோம். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – நான் மிதிலையில் பிறந்தவன். என்னுடைய வீடு – நான் பிறந்த இடம் எந்த மாவட்டத்தில் வருகிறதோ – அந்த மாவட்டம் பெகுசராய். அந்த மிதிலை பெகுசராயில்தான் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தால், நீங்கள் மிகவும் வியப்பதற்குரிய விஷயங்களைப் பார்ப்பீர்கள்.

எங்கள் ஊரில் ஆண்டுதோறும் இந்தி ஆக்ரஹண் மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) அயோத்தியாவிலிருந்து மணமகன் ஊர்வலம் வரும். மணமகன்களாக இளைஞர்கள் வருவார்கள். அதில் ராம-லட்சுமணர்கள் மணமகன்களாக இருப்பார்கள். எங்கல் ஊரில் ராம்-ஜானகி கோயில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் ராமன்-சீதை திருமணம் நடைபெறும். இதில் சுவையான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், மிதிலாவின் மக்கள் ராமனைத் திட்டுவார்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால், மிதிலை ராமனுக்கு மாமனார் வீடு. எனவே, இந்த உரிமையின்கீழ் அவர்கள் ராமனைக் கேலி செய்து திட்டுவார்கள். நமது பண்பாட்டின்படி திருமணம் நடைபெறும்போது, மணமகன் தரப்பு ஊர்வலம் வரும்போது மணமகள் தரப்பிலிருந்து கேலியாகத் திட்டுவது வழக்கம். ஆக, எந்த ராமனை மக்கள் கடவுளாக வணங்குகிறார்களோ அந்த ராமனை வரவேற்கும் விதமாகத் திட்டுகிற வியப்பான ஒரு விஷயத்தை எங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் பார்ப்பீர்கள். இது எங்கள் பாரம்பரியப் பண்பாட்டின் ஓர் அங்கம்.

நாங்கள் எந்தப் பண்பாட்டின் கீழ் வளர்ந்தோமோ அங்கே எந்தவொரு கடவுளையும் தனியாகப் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்டீர்களே ஒருமை என்று – கடவுளை ஒருமையில் பார்க்க முடியாது. ராமருடன் எப்போதும் சீதை இருப்பார், கிருஷ்ணனுடன் ராதையும் சேர்த்தே நினைக்கப்படுவார். இதுதான் எங்கள் பாரம்பரியம்.

நீங்கள் யூத் என்றீர்கள். நான் பிஎச்டி முடித்து விட்டேன். நீங்களும் பிஎச்டி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் பிஎச்டி செய்வீர்கள் என்றால், உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு – ராமாயணத்தின் மீதே ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன் – இந்தியாவில் குறைந்தது 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உண்டு. ஆமாம், முந்நூறுக்கும் அதிகம்.

நான் ஒருமுறை இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தேன். அங்கே திரிலோகநாதர் கோயிலுக்குப் போயிருந்தேன். இன்னொரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் – இந்த நாட்டை குறுக்கும் நெடுக்குமாக சுற்றிப் பாருங்கள். நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு இந்த நாடு எவ்வளவு பெருமைகளைக் கொண்டது என்பதைக் காண்பீர்கள். இந்த நாட்டின் முன்னால் உங்களை நீங்கள் சிறு துரும்பாக உணரும் தருணங்களை அடிக்கடி சந்திக்க நேரும். நீங்கள் திரிலோகநாதர் கோயிலுக்குப் போனால், அங்கே பகவான் புத்தரின் சிலையைக் காண்பீர்கள். அந்த புத்தரின் சிலைக்கு மேலே சிவபெருமானின் சிலையைக் காண்பீர்கள். ஆமாம், புத்தரின் தலைக்கு மேலே சிவன் சிலை. அந்தக் கோயிலில் முதலில் இந்து மதப் பூசாரிகள் வந்து பூஜை செய்து விட்டுப் போகிறார்கள். பிறகு புத்த பிக்குகள் வந்து வணங்கிவிட்டுச் செல்வார்கள். இது இந்தியாவின் தனிச்சிறப்பு.

அங்கே – அதாவது லாஹோலில் – லாஹோல் என்னும் மாவட்டத்தைப் பற்றிச் சொல்கிறேன். (நான் சொல்வதில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தவும்.) அந்தக் கோயில் அமைந்திருக்கிற அந்த மாவட்டத்தில் லாஹோலி மொழி பேசப்படுகிறது. அங்கே உலவுகிற ராமாயணத்தில் – அதாவது லாஹோலீ ராமாயணத்தில், ராவணன் சீதையைக் கடத்திச் செல்லவில்லை. மாறாக, சீதையின் தந்தைதான் ராவணன். உண்மையில், அந்த ராமாயணத்தின்படி, ராமன் சீதையைக் காதல் மணம் புரிந்து கொள்கிறான். அதன் காரணமாகக் கோபம் கொண்ட ராவணனுக்கும் ராமனுக்கும் போர் நடக்கிறது.

உங்கள் மூளையில் யார் எதற்காக இதுபோன்ற விஷயங்களை எல்லாம் திணித்து விட்டார்களோ தெரியாது… உஙகளுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் பிறந்த எவருக்கும் இதைவிடப் பெருமை தரக்கூடிய விஷயம் இருக்க முடியாது. அது என்னவென்றால், நீங்கள் இமாச்சலம் சென்றால் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதுபோல உணர முடியும். நீங்கள் மங்களூர் அல்லது கோவா கடற்கரையில் படுத்திருந்தால், மியாமி கடற்கரையில் இருப்பது போல உணர முடியும். இந்த நாட்டின் பரந்த மைதானங்களில் நடக்கும்போது அமெரிக்காவின் கிரீன் மைதானத்தில் நடப்பது போல உணரலாம். நீங்கள் தெற்கின் பீடபூமிகளுக்குச் சுற்றப் போவீர்கள் என்றால் – குறிப்பாக சோட்டா நாக்புர் பகுதிக்குச் சென்றால் ஏராளமான கனிம வளங்களைக் காண்பீர்கள்.

உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான் – இந்த நாடு உங்களுடையது, உங்களுடைய தாய் உங்களுக்கு எப்படிச் சொந்தமோ அப்படி இந்த நாடும் சொந்தம். நீங்கள் உங்கள் தாயை விரும்புகிறீர்கள் என்றால் அது உங்கள் தனிப்பட்ட விஷயம். நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்… அப்போது ஏதேனுமொரு கொடியை ஏந்திக்கொண்டு, ஏதேனுமொரு கோஷம் எழுப்பிக் கொண்டு வருகிறார்கள்… அது எந்த கோஷமாகவும் இருக்கட்டும் – இன்குலாப் ஜிந்தாபாத் ஆக இருக்கட்டும், அல்லது ஜெய் ஸ்ரீராமாக இருக்கட்டும். அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு கொடியை ஆட்டிக்கொண்டு உங்களிடம் வந்து “நீ உன் அம்மாவை நேசிக்கிறாய் என்றால், அதை நிரூபித்துக் காட்டு பார்க்கலாம்” என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இந்த நாடு நம்முடையது. இதை நாங்கள் நேசிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை – இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – எங்களைப் பொறுத்தவரை, நேசம் என்பது கண்காட்சியில் வைப்பது போல விளம்பரப்படுத்தப்படும் விஷயம் அல்ல. நாங்கள் நாட்டை நேசிக்கிறோம், அந்த நேசத்தை எங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு உலவுகிறோம்.

கன்னைய குமாரின் உரை தமிழாக்கம் : ஷாஜகான்

வீடியோ: நன்றி தீக்கதிர்.

அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

அன்புள்ள திரு.வை.கோ

வணக்கம்..

நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்..

பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய மாறுபாடு இல்லை. எது உங்கள் அசல் ஆளுமையோ அதாகவே எஞ்சி இப்போது மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.. இந்த முறை நீங்கள் கட்டாயம் மாநிலங்களவைக்கு போக வேண்டும் என நான் மனதார விரும்பினேன். தமிழ்நாட்டின் உரிமைகள் என நீங்கள் முன்வைக்கும் விசயங்களுக்கும் நான் கருதும் விசயங்களுக்கும் சில மாறுபாடுகள் உண்டுதான்.. ஆனாலும்கூட ஒரு ஒப்புக்கொள்ளத்தக்க பொதுப்புள்ளிகள் இருக்கவே செய்கின்றன என்பதால் தமிழ்ச்சமூகத்தின் குரலாக ஒலிக்கும் அதிகபட்ச சாத்தியங்களை கொண்டவர் என்கிற வகையில் எனது சாய்ஸ் நீங்கள்தான்..

காஷ்மீர் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உங்கள் உரையை மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன். நீங்கள் பேச மூன்று நிமிடம் வழங்கிய அவையின் துணைத்தலைவர் நான் காங்கிரஸை விமர்சித்துப்பேச இருக்கிறேன் என கூற உடனே அமித்ஷா வின் வேண்டுகோளில் உங்களுக்கு பத்துநிமிடங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவை அனைத்தும் தற்செயலான பெருந்தன்மை என நம்பினாலும் நீங்களும் சொன்னபடியே செய்தீர்கள். பத்தில் ஒன்பது நிமிடங்கள் காங்கிரஸையும் கடைசி சில விநாடிகள் அரசையும் குறைகூறி முடித்தீர்கள்.. நீங்கள் காங்கிரஸை விமர்சிப்பதோ, அதுவும் பாராளுமன்ற விவாதங்களில் ஒரு 360 டிகிரி பார்வையை முன்வைப்பதோ சாதாரணமானது என்பதை நான் அறிவேன்.. நீங்கள் கடந்தகால காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்ததாக சொன்னீர்கள். அதில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற வாக்குறுதியை இந்திய அரசுத்தலைவரான நேரு மீறியதாகவும் அதுபற்றி ஐ.நாவுக்கான இந்திய தூதர் எம்.சி.சாக்ளா இரண்டு பொதுத்தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டதால் அதுவே பொதுவாக்கெடுப்பு எனக்கூறி விட்டதாகவும் சொன்னீர்கள். முதலில் காஷ்மீரக்கான பொதுவாக்கெடுப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்கிற இருநாட்டு பகுதிகளைச்சேர்த்தே நடத்த முடியும்.. அந்த சூழல் இல்லாத.நிலையில் நேரு எப்படி இந்திய காஷ்மீருக்கு மட்டும் தனியாக பொதுவாக்கெடுப்பு நடத்த இயலும்..? சங்கிகள் எப்போதும் வரலாற்றின் புழக்கடையில் புழுப்பொறுக்குபவர்கள்.. அவர்களிடம் தர்க்க நியாயம் பேசுவதை விட முட்டாள்தனம் இருக்க இயலாது. ஆனால் நீங்களும் அதே பாணிதானா?

அடுத்து எம்.சி.சாக்ளா பேசியது ஒரு சர்வதேச மன்றத்தில். அந்தவகையில் அது அரசநயவாதம்.(Diplomatic Argument). அதற்கு அரசியல் நோக்கு கிடையாது.

அதன் பின் காஷ்மீர் பிரச்சனை பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் பேச்சுவார்த்தை என மாறிவந்த பல அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன.

மற்றபடி பரூக் அப்துல்லா உங்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதை அவர்தான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியும். அது ஒருபுறம் இருக்கட்டும். மக்களவை உறுப்பினரான பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என உங்கள் நண்பரான அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பொய்யை பரூக் அப்துல்லா தான் சிறைவைக்கப்பட்டதை ஊடகங்களிடம் வெளிப்படுத்தி காறி உமிழ்ந்த எச்சிலை துடைத்துக்கொண்டு அமித் ஷா செய்யும் அநியாயங்களை பேச சில விநாடிகள் போதும் என நீங்கள் முடிவிற்கு வந்ததன் காரணங்களை என்னால் எப்படியும் புரிந்துகொள்ள இயலவில்லை. நீங்கள் செய்வது மிகுந்த ஆபத்தான சவாரி..

நீங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வாக ஏழு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது. உங்கள் கட்சியின் சார்பில் ஈரோடு மக்களவைத்தொகுதியில் போட்டியிட்ட திரு.அ.கணேசமூர்த்தி அவர்களின் வெற்றிக்கு நான் தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். இவை இதை எழுத போதுமான நியாயங்கள் என நினைக்கிறேன். நீங்கள் இன்றைய ஆட்சியாளர்களைப்பற்றி சாவகாசமாக பேசுகையில் நீங்கள் இடம்பெற்ற கூட்டணியிலிருக்கும் காங்கிரஸை Culprit என்கிற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த வகையான அரசியல் நெறிமுறை..?

ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட நாவண்மை மிக்கவரான நீங்கள் சமநிலை தவறி இடறும் இந்த புள்ளியில்தான் நீங்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அரசியல் தலைமையாகும் சாத்தியங்களை தவற விட்ட காரணிகள் இருக்கின்றன.

நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள் என்பதல்ல பிரச்சனை. எந்தச்சூழலில் அதைச்செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை..

இப்போதும்கூட உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் இனி தடம் பிறழாமல் மதச்சார்பற்ற அரசியல் விழுமியங்களுக்காகவும் தமிழச்சமூகத்தின் நலனுக்காகவுமான பொருட்படுத்தக்க குரலாக இருப்பீர்கள்என. இது எனக்கல்ல.. காங்கிரஸிற்கல்ல.. உங்கள் ஆசான்கள் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் சிந்தனைப்பள்ளியின் வார்ப்புதான் நீங்கள் என வரலாறு இறுதியாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காக..

அன்புடன்,
இரா.முருகானந்தம்.

இரா. முருகானந்தம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்.

வட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்

நூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள்

பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.இவரை பல்வேறு இதழ்களுக்காக, பல்வேறு ஆளுமைகள் நேர்காணல் செய்துவந்துள்ளனர். அதன் தொகுப்புதான் இந்த நூல்.

விகடன் தடம், தீராநதி, தலித் முரசு, மாற்றுவெளி, சண்டே இண்டியன், கீற்று போன்ற இதழ்களில் வெளியான நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம், ஆர். ஆர். சீனிவாசன், அப்பணசாமி, சங்கர இராமசுப்பிரமணியன், ச. தமிழ்சசெல்வன், மணா, வ.கீதா உள்ளிட்டோர் இவரை கேள்வி கேட்டுள்ளனர். பரந்துபட்ட கேள்விகளுக்கு தொ.ப.விடையளித்துள்ளார். அவரது முழு பரிமாணமும் வாசகர்களுக்கு கிடைக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல்கள் மூலம் அவரது சிந்தனையில் ஒத்திசைவு இருப்பதை பார்க்கமுடியும்.

நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். தொ. பரமசிவன் கனடா சென்றபோது அவர் தமிழினி இதழுக்காக எடுத்த நேர்காணலான  “இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும்” என்ற தலைப்பிலான கட்டுரையைத்தான் முதலில் படித்தேன். தொ.ப. பேசியதை விவரித்து, அ.முத்துலிங்கம் அவருக்கே உரிய எள்ளலோடு தொ.பரமசிவத்தின் எளிமையை (இரண்டு சட்டை எடுத்த கதை) செல்லுகிறார். ‘ஆயிரம் ஒட்டுப்போட்ட ஒரு பிச்சைக்காரனுடைய உடையை நினைவூட்டும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது’ என்கிறார்.

‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’ என்ற மணா எடுத்த நேர்காணலில் சாதிகுறித்து பேசுகிறார். ‘பிராமணீயம் ஒரு ஒடுக்குமுறை கருத்தியல்’ என்கிறார்; ‘சாதி ஒழிப்பு சாத்தியமில்லை, கரைப்புதான் சாத்தியம்’ என்கிறார். மாரியம்மன் திருவிழாவோடு மழையை தொடர்புபடுத்துகிறார். ரசிக்கத்தக்க வகையில் இவரது பதில்கள் உள்ளன.

‘தீட்டு’ என்பதை எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் வேறுபடுத்துகிறார்கள் என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அவ்வாறே தாய்மாமனுக்கு மரியாதை என்பது திராவிடமொழி பேசுவோரின் பொதுவான குணம் என்கிறார். (சாதி, வர்ணம், நடைமுறை – தமிழ் ஒப்புரவு நேர்காணல்) இது தாய்வழிச்சமூகத்தின் தொடர்ச்சி என்கிறார். இந்த நூல் ஒரு ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவர் போகிற போக்கில் சொல்லுகிற பல செய்திகள் ஆழமான விவாதங்களை எதிர்பார்ப்பவை. தொ.பரமசிவத்தின் பன்முகம் இந்த நூலில் வெளியாகிறது. ஏற்கெனவே ‘செவ்வி’ என்ற பெயரில் வெளியான நேர்காணல்களோடு வேறுசில நேர்காணல்களும் சேர்க்கப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.

தொ.ப. அசராமல் உரையாடுகிறார். இவர் பேசாத பொருள் இல்லை. கல்விமுறை பற்றி பேசுகிறார். தத்துவம் பற்றி பேசுகிறார் (தூய்மை வாதம் ஒரு எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் முடியும்); கால்டுவெல் இடையான்குடியையும், இலண்டனில் அவருடைய பிறந்த ஊரான Shepardyard -ஐயும் ஒப்பிடுகிறார். ‘மிளகு’ போல உறைப்பு உடையது, காயாக இருக்கிறது என்பதினாலேயே 13 ம் நூற்றாண்டில் வெளிநாட்டிலிருந்து அறிமுகமானதற்கு ‘மிளாகாய்’ என்று பெயரிட்டோம் (மொழிக் கல்வியும் மதிப்பீடுகளும்)என்கிறார். சமணமும் புத்தமும் ஏன் தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை என்று சொல்லுகிறார். திருநெல்வேலியில் சாதியத்தை நிலைநிறுத்த வெள்ளாளர் பட்டபாட்டை சொல்லுகிறார்; அதன் எதிர்வினையை சொல்லுகிறார்.

‘அம்பேத்கரை அவர்களால்(பிராமணீயத்தால்) உட்செரிக்க முடிந்தால் கூட பெரியாரை ஒருபோதும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது’ என்று விவாதத்தை தூண்டுகிறார். இது ஒரு வெற்றி பெற்ற நூல்.’கோவணத்தில் இடி விழுந்தமாதிரி’ என்று சொல்லுவார்கள். அது போல இவருடைய பதில்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாத கோணத்தில் இருக்கின்றன.

காலச்சுவடு பதிப்பகம்/ஜனவரி 2019/158 பக்கம்/ரூ.175.

– பீட்டர் துரைராஜ்.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்

ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது.

பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் சங்கங்களே கூறுகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.

இந்த நிலையில் நூறு இலட்சம் கோடி ரூபாய்க்கு கட்டமைப்பு வேலைகளுக்கு செலவிடப் போவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். எங்கேயிருந்து கடன் வாங்கப் போகிறார்கள்? எதில் செலவு செய்யப் போகிறார்கள் என்பது போன்ற எந்த விபரங்களையும் அவர் சொல்லவில்லை. இதனால் குடிமக்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்; முதலாளிகள் பலன்பெறுவர்.இந்த வரவு செலவு அறிக்கையினால் மாணவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பொது மக்களுக்கோ, மருத்துவத்துறைக்கோ பலன் ஏதுமில்லை.

இந்தப் பாராளுமன்றம், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியிருக்கிறது. இதனால் 77 சத தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பிலிருந்து விலகிவிடுவர். அவர்களால் தொழிலாளர் துறையில் தாவா எழுப்ப முடியாது; நீதிமன்றம் போக முடியாது. ஏற்கெனவே வெள்ளைக்காரர்கள் காலத்தில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற, தொழிற்சங்க உரிமைகளை ஒரே உத்தரவின் மூலம் இரத்து செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்குரிய சங்கம் அமைக்கும் உரிமைகளை இந்த திருத்தங்கள் நீர்த்துப் போகச் செய்கின்றன.

குறைந்த பட்ச ஊதியமாக மாதம் 18,000 ரூபாய் தர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால் தொழிற் சங்கங்கள் கொடுத்த ஆலோசனைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு , முதலாளிகள் கோரியபடி நாளொன்றுக்கு 178 ரூபாய் சம்பளம் என்று அரசு கூறுகிறது; (மாதம் 5000 ரூபாய்க்கும் குறைவாக ) அதுவும் 26 நாட்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறுகிறது. தேவைப்பட்டால் பூகோளரீதியாக குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இதன்மூலம் ஏற்கெனவே அதிகமாக வாங்கி வரும் தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படும். மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் என்று அரசு முதலீட்டாளர்களுக்கு இதன்மூலம் கூற விரும்புகிறது. தொழிலாளர் சம்மந்தமான முடிவுகளை நிதி அமைச்சர் எடுத்து தொழிலாளர் துறையை கையகப்படுத்தி விட்டார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது; எந்தவிதமான ஆய்வுகளும் கிடையாது; குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது என்ற நடவடிக்கைகளினால் பெருமுதலாளிகள் பலன்பெறுவர்.இத்தகைய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஏஐடியுசி கடந்த ஆகஸ்டு இரண்டாம் நாள் கண்டன இயக்கங்களை நடத்தியது. இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்படும். இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெறுகிறது.

அமர்ஜித் கௌர் (கோப்புப்படம்)

அணுஆயுத துறையில் பணிபுரிவோரின் பாதுகாப்பு அம்சங்கள் வேறு. சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் நோய் வேறு;மின்துறையில் பணியாற்றுவோரின் துறைசார்ந்த பாதுகாப்பு கவசங்கள் வேறு.ஆனால் இந்திய அரசு எல்லாத் தொழிலுக்கும் சேர்த்து ஒரே சட்டத்தை(Occupational Safety & Health) கொண்டுவந்துளளது. ஒவ்வொரு தொழிலுக்கும் என தனித்தனியான பாதுகாப்புச் சட்டங்கள் வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதன் மூலம் இந்த அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

உலகில், வேலையளிப்போரில் இரண்டாம் இடத்தை வகிக்கும் இரயில்வே துறையின், பெரம்பூர் இரயில் பெட்டி ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இருபது பொதுத்துறை வங்கிகளை ஆறு வங்கிகளாக மாற்ற இந்த அரசு முடிவெடுத்து உள்ளது.இதனால் சாதாரண மக்களுக்கு பலன் ஏதுமில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்ற 36 பேர் வங்கியில் இருந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளனர். வங்கியில் உள்ள பொதுமக்களின் சேமிப்பை பாதுகாக்க, வங்கிகளை இணைக்கும் சட்டம் உதவாது. இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலைளை தனியாருக்கு கொடுக்க இந்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால் ஆவடி தொழிற்சாலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இதுபோன்ற மக்கள் சார்பான கொள்கைகளுக்காக தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

முப்பது வருடம் பணி முடித்த, 55 வயதான தொழிலாளர்களின் நிலைபற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எல்லாத்துறைகளையும் கேட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப எண்ணியுள்ளது. இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற நிறுவனங்களில் இருக்கும் எல்லா நிதியையும் ஒரே நிதியாக்கி பிரதமர் தலைமையில் அதை நிர்வாகம் செய்ய அரசு எண்ணியுள்ளது. அதாவது அந்த தொகையை அரசு எடுத்துக் கொள்ள பார்க்கிறது. இது தொழிலாளர், முதலாளிகளின் பணமாகும். இதில் அரசின் நிதி ஏதுமில்லை.

மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவர்களை ‘ஆண்டி இந்தியன்’ என்றும் ‘அர்பன் நக்சல்’ என்றும் முத்திரை குத்தி கருத்துரிமையை பறிக்கின்றனர். 370 பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக மோடி மாற்றிவிட்டார். இதனால் பதற்றம் அதிகமாகும்; ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கும். இதனால் மக்களின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிடப்படும் தொகை குறையும். தனக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து தொழிலாளர் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை மோடி பறிக்கிறார்.

வெள்ளைக்காரன் காலத்திலேயே போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை என்பது மாற்றப்படுகிறது. வேலைநேரம் என்ன என்பதை அந்தந்த அரசுகள்(appropriate government) முடிவு செய்யும் என்று சொல்லுவதன் மூலம் எட்டு மணி நேர வேலை என்பதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் தொழிலாளிவர்க்கம் எப்பாடுபட்டும் தனது உரிமைகளுக்காக போராடும். அதற்குரிய முன்முயற்சிகளை ஏஐடியுசி எடுக்கும் ” என்று அமர்ஜித் கௌர் கூறினார்.

இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.

சிந்தாதிரிப்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேட்டியின் போது தமிழ்நாடு ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.இரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா

வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரண் ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த ஜம்மு காஷ்மீரில் இன்று நிலவும் அடக்குமுறை கணக்கில் அடங்கா நிலையில் உள்ளது. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதைக் கொண்டாட்டமாகப் பார்க்கும் பலருக்கும் இதன் விளைவுகள் இன்னும் புரியவில்லை. இந்திய அரசியல் சாசனம் மாற்றப்பட்ட இத்தினம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்றும் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஆ சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது மாநில உரிமையின் மீதான அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதனால் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசன விதியை மீறி ஜம்மு காஷ்மீரின் ஒப்புதல் இன்றி இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடன் மட்டும் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏமாற்றுத்தனமான வேலை என்றும் துரோகம் என்றும் ஒமர் அப்துல்லா பாஜக-வை விமர்சித்துள்ளார்.

“எங்களிடம் பொய் சொல்லி எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டு இந்த துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?

பா. ஜீவ சுந்தரி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி மசோதாவைச் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது தோற்றுப் போகிறது. சட்ட மன்றத்திலும் கூட தேவதாசி முறையை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மசோதாவுக்குப் போதிய ஆதரவில்லை. முன்னர் பால்ய விவாகத் தடை கோரியபோதும் இதே எதிர்ப்பு இருந்தது. இவையெல்லாம் அன்று மிகப் பெரிய சம்பிரதாய மீறல்கள்… அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரும் பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டியைப் போற்றினார்கள். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியே சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி உரையாற்றினார். பால்ய விவாகத் தடைச் சட்டத்தை வரவேற்றவர்கள் கூட தேவதாசி ஒழிப்பை ஏற்க மறுக்கிறார்கள் என்று மனம் கசந்து பேசினார். எனென்றால் அம்மசோதாவை அமல்படுத்த முடியாமல் அது தோல்வி அடைந்துகொண்டே இருந்தது.

1912ல் அப்போதைய இந்திய சட்ட மன்றத்தில் தாதாபாய், இந்த மசோதா தாக்கல் செய்தபோது அதை முன் நகர்த்திக் கொண்டு போகவே ஓராண்டு ஆயிற்று. 1914ல் அதை அமல்படுத்த முயலும்போது முதல் உலகப் போர் மூளுகிறது. போரின் காரணமாக இயல்பாகவே அது தள்ளி வைக்கப்பட்டது. 1925ல் முத்துலட்சுமி ரெட்டி மதராஸ் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகிறார். அதன் பிறகு 1927ல் மீண்டும் முயற்சி செய்கிறார். இதை ஒரு நீண்ட நெடிய போராட்டமாகவே நடத்தியிருக்கிறார். ஏன் இந்த மசோதா மட்டும் நிறைவேறாமல் நீண்டுகொண்டே போகிறது என ஆராயும் விதமாக முத்துலட்சுமி ரெட்டி பெரியாரிடம் இது குறித்துக் கருத்து கேட்கிறார். பெரியாரும் ’எனக்கும் தேவதாசியர் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி தெளிவாகத் தெரியவில்லை; எங்கள் இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் என்ற பெண்மணி இருக்கிறார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்கிறார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. அப்போது முத்துலட்சுமி ரெட்டி சொல்கிறார்: “எனக்கு தேவதாசிகள் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி தெரியவில்லை” என்று. முத்துலட்சுமி ரெட்டியின் தாயார் சந்திரம்மா தேவதாசி குலத்தில் பிறந்தவர். ஆனால் அவருடைய தகப்பனார் நாராயணசாமி அய்யர் ஒரு பார்ப்பனர். அதனால், தேவதாசிகள் குடும்ப நடைமுறை, வாழ்க்கைச்சூழல் பற்றிய புரிதல் எதுவும் முத்துலட்சுமி வளர்ந்த சூழலில் இல்லை.

இந்தப் பெண்கள் இருவரும் சந்தித்துப் பேசும்போதுதான் தேவதாசி முறையிலுள்ள நடைமுறைகள் பற்றி முத்துலட்சுமியால் தெளிவடைய முடிகிறது. அதுவரை நகர்ப்புறப் பகுதிகளில்தான் தேவதாசி முறை தீவிரமாக இருக்கிறதென்று முத்துலட்சுமி ரெட்டி எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், கிராமப்புறங்களில் குறிப்பாக உள்ளடங்கிய கிராமங்கள், குக்கிராமங்கள் இங்கெல்லாம் தேவதாசி முறை மிக மோசமான நிலையில் இருந்தது. பாலியல் தொழிலை மேற்கொண்டுதான் அங்கிருந்த பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள். அனைத்துக் கோயில் தேவதாசிகளும் வசதியானவர்களாக இல்லை. அவர்களுக்குக் கோயில் ஊழியத்தின் மூலம் மானியம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்திலிருந்து உணவுக்காக நெல் படியளக்கப்பட்டது. தங்குவதற்கு வீடு கொடுக்கப்பட்டிருந்தது. பாலியல் தொழில் மூலமாக ஜமீன்தார்களுக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் ஆசை நாயகிகளாக, வைப்பாட்டிகளாக அவர்கள் இருந்தார்கள். அதன் மூலமாக அவர்கள் வருமானம் பெற்றார்கள்.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் கோயில் நிலத்திலிருந்து நெல் வராது. வீடும் கோயில் வசமாகும். மூவலூர் ராமாமிர்தம் சில ஆலோசனை களை முத்துலட்சுமி ரெட்டிக்குத் தெரிவித்தார். பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெற்றால்தான் ஒரு பெண் துணிச்சலாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும். இது தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தும் நடைபெற்றிருக்கிறது. தேவதாசி முறை கிராமப் புறங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப் பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கிடையேயான கடிதப் போக்குவரத்து என்பது மிக முக்கியமானது. கிராமப்புறங்களில் இருக்கும் தேவதாசிப் பெண்கள் பொருளாதார வசதி இல்லாததனால்தான் தேவதாசி மசோதாவை எதிர்க்கிறார்கள். அவர்கள் ஆதரவைப் பெற வேண்டுமெனில் கோயில் நிலங்கள், மானிய நிலங்களாக இருப்பதை அவர்களுக்கே உரிமை ஆக்கி அளிப்பது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதான நிலங்கள் எனச் சொல்லப்பட்டது. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் தேவதான நிலங்களாக ஏராளம் இருந்தன. அதில் விவசாயம் செய்யப்படும் நிலங்களும் உண்டு; வெற்றிடங்களும் உண்டு. தேவதாசிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே சாசனம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்று மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சொன்ன ஆலோசனையை ஏற்று, முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்றத்திலும் பேசுகிறார்.

1929ல் சட்ட மன்றத்தில் தேவதாசி தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டும் அவ்வளவு எளிதாக நடைமுறைக்கு வரவில்லை. அதன் பிறகு 1937ல் முதலமைச்சர் ராஜாஜி, இதற்கு ஆதரவில்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கிறார். இதற்கு முன்னதாக 1910ல் மைசூர் சமஸ்தானத்தில் தேவதாசி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாகத் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது மைசூர் சமஸ்தானத்தில்தான். அதன் பின்னர் கொச்சியிலும் இறுதியாக சென்னை ராஜதானியிலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. முதலில் இங்குதான் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால், மசோதா கிடப்பில் போடப்பட்டதால் அவர்கள் முந்திக் கொண்டார்கள். மைசூரும் கொச்சியும் இந்த விஷயத்தில் நமக்கு முன்னோடிகள். அப்போது ராஜாஜி காங்கிரசில் இருந்தபோதும், பெரும் பாலானவர்களின் எதிர்ப்பினால் தேவதாசி நடைமுறையை ஒழிப்பதற்கு அவர் சம்மதிக்க வில்லை. அதனால் ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தார். அவருடைய அரசு ராஜினாமா செய்த பிறகு 1947ல் இச் சட்டம் அமலுக்கு வருகிறது.

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகுதான் தேவதாசி ஒழிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஒரு ஷரத்தும் சேர்க்கப்பட்டது. இதுவரை தேவதாசிப் பெண்கள் அவர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலத்தையும் வீட்டையும் அவர்களே சொந்தமாக அனுபவித்துக் கொள்ளலாம். எந்தப் பணி செய்வதற்கென்றும் அவர்கள் இனி கோயிலுக்கு வர வேண்டாம் என்று சட்டத்தில் கடைசியாக ஒரு வரியைச் சேர்க்கிறது. ’கோயிலுக்கு இறைவனை வணங்க மட்டும் வாருங்கள், ஆனால் கோயிலுக்குச் சேவை செய்கிறோம் என்கிற பெயரில் கடவுளுக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அடிமையாக இருக்க வேண்டாம்’ என்று சொல்லி அந்தச் சட்டம் நிறைவு பெறுகிறது.

மூவலூர் ராமாமிர்தம் பற்றி தன் சுயசரிதையில் குறிப்பிடாமல் அவரைப் புறக்கணித்ததன் பேரில் முத்துலட்சுமி ரெட்டியின் மீது வருத்தம் இருந்தாலும், அவரது பணிகளை முற்றிலும் புறக்கணித்து விட இயலாது. பால்ய விவாகத் தடைச் சட்டம், அடையாறு புற்று நோய் மருத்துவமனை, ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லம் இவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு உண்டு.

இன்று(30-07-19) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்த தினம்.

பா. ஜீவ சுந்தரி, பத்திரிகையாளர்; எழுத்தாளர்.

நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ

சுபவீ

கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன்.

கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், ‘இடக்கு மடக்கான’ பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன. .

நான் விடை சொல்வதற்கு முன்பே அடுத்த கேள்வியைக் கேட்டுவிடும் அவரது போக்கை மனத்தில் வைத்துக் கொண்டு, “நீங்களெல்லாம் நண்பர் பாண்டேயிடம் பாடம் படித்துக் கொண்டு வருகின்றீர்களோ?” என்று நேர்காணல் முடிந்தபின், வேடிக்கையாகக் கேட்டேன். எப்படி இருந்தாலும், வளரும் இளைஞர் நீங்கள், வளருங்கள் என்று வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்தநாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாஜக வினரும், நாம் தமிழர் கட்சியினரும் அதனைப் பரப்பினார்கள். நான் விடை சொல்ல முடியாமல் தடுமாறியதாகவும், என் நிலை பரிதாபமாக இருந்ததாகவும் பதிவுகள் இட்டனர். நேர்காணலில் நான் தொற்றுப் போய்விட்டதாக எழுதினர்.

பாஜக வை விட என்னை எதிர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நாம் தமிழர் தம்பிகள்தாம். ஆர்எஸ்எஸ் நண்பர்களாவது என்னை எதிர்ப்பதும், மிரட்டுவதுமாக இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர்கட்சியினரோ, நான் இறந்துபோய்விட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தம்பி சீமானே ஒரு பேட்டியில்,, அவர் (நான்) இறந்துபோய்விட்டார் என்று
சொன்னார். உடனே அவர் தம்பிகள் அடுத்தநாள், என் படத்திற்கு மாலை அணிவித்தும், சவப்பெட்டியில் என் உடல் இருப்பது போன்று படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர். சீமான் மேடையில் இருக்கும்போதே, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில், திமுக வை நான் ஆதரிப்பது குறித்துப் பேசுகையில், “நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவி சுபவீ” என்று பேசினார். சீமான் கண்டித்ததாய்த் தெரியவில்லை. (மகிழ்ந்திருப்பாரோ!)

இப்படி ஒரு சாரார் அந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்க, என்னிடம் அன்பு கொண்ட நண்பர்கள் பலர் வருத்தப்பட்டனர். அந்த நேர்காணலுக்கு நீங்கள் போயிருக்கக் கூடாது என்றனர். இவ்வளவு மென்மையாகப் பேசியது சரியில்லை என்றனர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர்.

“எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால் குற்றமில்லை” என்று நான் சமாதானம் சொன்னேன்.

இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில நாள்களுக்குப் பிறகுதான் அது எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அங்கு பணியாற்றிய சில பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுநாள் கருப்பு உடையுடன் அலுவலகம் வந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜென்ராம் அவர்களை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மறுத்துவிட்டார்.

இதனால் கோபம் மொண்ட நிர்வாகம், ஜென்ராம் அவர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 23.07.19 அன்று பணி நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், காவேரி தொலைகாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சோஷலிச தொழிலாளர் மையம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது. நண்பர் வன்னி அரசு போன்றவர்கள்,ஜென்ராம் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, இனிமேல் காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். .

நான் மிகவும் மதிக்கும் மூத்த ஊடகவியலாளரான ஜென்ராம் அவர்களும், நான் அறிந்திராத அந்தப் பெண் ஊடகவியல் நண்பர்களும், என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் என்னை நெகிழ வைக்கின்றன. அந்தப் பெண்களை நினைக்கும்போது, நான் பெற்ற பிள்ளைகளை விட, பெறாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை உணர முடிகிறது.

நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும்.

ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை. யாருக்கோ எதோ ஒரு மரியாதைக் குறைவு நடந்தால் நமக்கென்ன என்று இருக்காமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தோழர் ஜென்ராமுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமல் தோற்றுப்போனேன். அவரை விடுங்கள், அவராவது என் நண்பர், அந்தப் பெண் பிள்ளைகள் யார், அவர்களுக்கு நான் இதுவரையில் என்ன செய்திருக்கிறேன்? அவர்கள் ஏன் எனக்காகத் தங்கள் பணியிலும், வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்?

கண்கள் கலங்குகின்றன. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், கருத்துரிமையின் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்புக்கும் முன்னால் நான் தோற்றுத்தான் போனேன்!!

உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

மனுஷ்யபுத்திரன்

அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை ‘என்கவுண்டர்’ செய்கிறது. அல்லது ‘ கேரக்டர் அசாசினேஷன் ‘ செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு. ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் போது அவனுக்கு சமூகத்திடமிருந்து கிடைக்கவேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்கவிடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனை படுகொலை செய்வதற்கு சமமானது.

தருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டார் என்பதால் மட்டுமா? அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தது என்பதால்தான். ஒரு பெண் விவகாரத்தை பயன்படுத்தி அவர் வேட்டையாடப்பட்டார். இது சர்வதேச அளவிலும் நடக்கிறது. அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாக துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம்தான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற விவகாரங்களில் கண்ணை மூடிக்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்க்க குதிப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை ஆராயும்வரை காத்திருப்பதில்லை. குற்றம் சொல்பவர் வேறு நோக்கங்கள் உடையவராகவோ வேறு யாராலோ தூண்டப்பட்டவராகவோ இருக்கலாம் என்கிற வாய்ப்பைக்கூட சிந்திப்பதில்லை. வைரமுத்துமீதான மீ டு குற்றச் சாட்டுகள் ஆண்டாள் விவகாரத்திற்குப் பிறகு எழுப்பப்பட்டது தற்செயலானதுதானா?

காணாமல் போன ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி முகிலன் காவல்துறையால் இழுத்துச் செல்லப்படும் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கவிஞர் தாமரையின் ‘முகிலன் வரட்டும் ..பெண் விவகாரம் காத்திருக்கிறது’ என்ற பதிவைக் கண்டு அதிர்ந்தேன். முகிலன் காணாமல் போன சமயத்தில் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட இந்த பெண் விவகாரம் ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அப்போதுகூட அரசதிகாரத்தால் உரிமைகளுக்கான போராட்டத்தில் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

நாம் நம் வாழ்வின் வெளிச்சங்களாக கொண்டிருக்கக்கூடிய பல மகத்தான ஆளுமைகளின் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளின் வழியாக மட்டுமே அந்த ஆளுமைகளின் வரலாற்றுப்பாத்திரத்தை மறுக்க முடியுமா? காந்தியின் பாலியல் சோதனைகள் மட்டுந்தான் காந்தியா? காரல் மாக்ஸுன் பணிபெண்ணுடனான உறவு குறித்த கதைகள்தான் காரல் மார்க்ஸா? எர்னஸ்டோ சேகுவேராவின் பெண் வேட்கை அவரது வரலாற்றில் ஒரு பகுதியாக நிலைத்து நிற்கிறதே…

ஆண் பெண் விவகாரங்களை நமக்குச் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையில் ஏதோ ஒரு ஒற்றைப்பரினாணத்தில் புரிந்துகொண்டு யாரை வேண்டுமாலும் தூக்கில் போடுவோம் என்பது அபத்தமானதும் ஆபத்தானதுமான சூழல். தனிமனித உறவு சார் பிரச்சினைகளை பெரும் அரசியல் பிரச்சினைகளில் ஒரு திசை திருப்ப்புன் கருவியாக பயன்படுத்துவதை தொடர்ந்து ஏற்கபோகிறோமா?

ஒரு பெண்ணின் உறவு சார்ந்த மீறல்களை சமூக வெளியில் வைத்து விவாதித்து அவளை அவமதிப்பதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித்தான் ஒரு ஆண் இந்த விவகாரங்களால் பொதுவெளியில் வேட்டையாடபடுவதையும் ஏற்கமுடியாது. ஆண்களின் பலியாக பெண்களும் பெண்களின் பலியாக ஆண்களும் எந்த நேரமும் மாறக்கூடிய ஒரு பின் நவீனத்துவ பண்பாட்டுச் சூழலில் அதை அந்தத் தளத்தில்தான் விவாதிக்கவேண்டுமே தவிர அரசியல் பிரச்சினைகளாக்குவது என்ன நியாயம்?

அரைவேக்காட்டுப் பெண்ணுரிமைபோராளிகள் அரசின் வேட்டைக்கருவிகளாவது பெரும் அவலம்.
தாமரை யாருடைய ஏஜெண்ட் என்பதை இந்த விவகாரம் இன்னும் தெள்ளத் தெளிவாக்குகிறது..

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்!

அ. மார்க்ஸ்

ராஜராஜன் புகழ் பாடும் ஒரு வீடியோ கிளிப்பிங்கை பார்த்தேன். முற்றிலும் வரலாற்று உணர்வு இல்லாமல் ராஜராஜன் வழிபாடு இங்கே அரங்கேற்றப்படுகிறது,. அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மடமை தமிழ் சமூகத்தில் இப்படிப் பரவுவது ஒரு பேராபத்து. நீதிபதிகள் எல்லாமும்கூட இந்தச் சூழலுக்குப் பலியாகிறார்கள்.

நான் பார்த்த வீடியோவில் பேசுகிற நபர் முன்வைக்கும் ராஜராஜப் புகழின் பின்னுள்ள வரலாற்றுப் புரிதலற்ற வழிபாட்டு மனோபாவத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் ராஜராஜனின் இலங்கைப் படை எடுப்பைப் பற்றி அவர் சொல்வதைச் சுட்டிக்காட்டலாம். இலங்கையர்கள் ஐந்தாம் மகிந்தனின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வெந்து கிடந்த நேரத்தில் அவர்களை அவனிடமிருந்து விடுவித்த மகா மனிதநேயப் பணியைச் செய்தவனாம் ராஜராஜன்.

எல்லாப் படை எடுப்பாளர்களும் தாங்கள் அடித்த கொள்ளை, அத்கன்மூலம் பெற்ற அரசியல் பலன்கள் ஆகியவற்றை மறைக்கச் சொல்லும் மகாக் கேவலமான வாதம் இது. அந்தக் கால படை எடுப்பாளர்கள் முதல் இந்தக் கால புஷ், ட்றம்ப் வரை பயன்படுத்திய / பயன்படுத்துகிற கொடூரமான தந்திரம்தான் இது. சதாம் உசேனிடமிருந்து ஈராக் மக்களைக் காப்பாற்றப் படை எடுத்ததாகத்தானே புஷ்சும் சொல்லிக் கொண்டான். இட்லர், முசோலினி, ராஜபக்க்ஷே எவன்தான் இதற்கு விதிவிலக்கு? தமிழர்களைக் ம்காப்பாற்றுவதுதான் தன் நோக்க்ம் என ராஜபக்சே சொல்லிக் கொள்ளவில்லையா? இலங்கைத் தீவையும் பொலனறுவை, அநுராதபுரம் முதலான பௌத்த புண்ணியத் தலங்களையும் அழித்து அவற்றுக்குத் தன் பெயரான ஜனநாத மங்கலம் எனப் பெயரிட்டு ஒரு தீராத சிங்கள – தமிழ்ப் பகைக்கு வித்திட்ட ஒரு ஆக்ரமிப்பாளன்தான் ராஜராஜன்.

தேவரடியார்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்களை தேவதாசிகளுடன் ஒப்பிடக் கூடாது என ராஜராஜ சேவை செய்யும் இந்தச் சுயமரியாதை அற்ற அடிமைகள் சொல்வதும் அப்படித்தான். அப்படிக் கொண்டுவந்த பெண்கள் ராஜராஜன் வழியில் வந்த குலோத்துங்கன் காலத்தில் அந்தப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை எதிர்த்து அக்கால மக்களே கிளர்ச்சி செய்தனரே அதற்கு என்ன சொல்கிறார்கள் இந்த ராஜராஜப் புகழ்பாடிகள். குலோத்துங்கன் செய்ததற்கு ராஜராஜன் என்ன செய்வான் என மகா புத்திசாலித்தனமாகக் கேட்கலாம். யார் செய்தார்கள் என்பதல்ல. தேவரடியார் எனும் நிறுவனம் எங்கு கொண்டுபோய் விடும் என்பதுதான் நாம் இதன் மூலம் புரிந்துகொள்வது. அப்படி மன்னர்களின் போகங்களுக்குப் பலியானவர்கள் நம் மக்கள். நம் தமிழ் மக்கள்.

தேவதாசிப் பாரம்பரியத்திற்கு எதிராக இங்கே சுயமரியாதை இயக்கம் போராடியபோது அந்தக் கேவலத்தைக் காப்பற்ற முனைந்த சத்திய மூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரி ஆகிோரின் குரலில் இன்று பேசுகிறவர்கள்தான் இந்த ராஜராஜன் புகழ்பாடிகள்.

சோழர்காலம் குறித்து “புலமை” ஆய்விதழில் நானும் வேல்சாமியும் எழுதிய கட்டுரையை நான் சென்னை சென்றவுடன் இங்கு பதிவு செய்வேன். சற்றுமுன் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது ராஜராஜன்தான் என்பதை பல நூறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாகக் “கண்டுபிடித்துச் “ சொன்னது வெள்ளைக்கார அறிஞர்கள் தான். அது எப்போது தெரியுமா? 1907ல். இடைப்பட்ட ஆயிரம் ஆண்டு காலத்தில் ராஜராஜன்தான் அந்தக் கோவிலைக் கட்டினான் என எந்தத் தமிழ் நூல்களிலும் பதிவில்லையே ஏன்? ஏன் ராஜராஜனைத் தமிழ் மக்கள் மறந்தனர்?

அவ்வளவு ஏன், அத்தனை தமிழ் நூல்களையும் அழிவிலிருந்து காப்பாற்றினாரே உ.வே.சா அவருக்கு 1907 வரை ராஜராஜன் யார் என்றால் தெரியாதே?

தலித் ஒருவரின் பெயரை கல்வெட்டில் பொறித்தான் ராஜராஜன் எனக் கூறுகிறார்கள்.முதல் முதலில் தலித்களுக்குத் தனிச் சுடுகாடு கட்டியதும் அவன்தானே! கராஷிமா, சுப்பராயலு முதலானோரின் சோழர்கால ஆய்வுகளைக் கருத்தூன்றிப் படித்திருப்பார்களா இவர்கள்.

இன்று இப்படி மன்னர்களின் புகழ்பாடிச் சேவுகம் செய்யும் கேவலம் தமிழகத்தை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. இது தமிழனின் பெருமையல்ல. வீழ்ச்சி.

இந்த விடயத்தைப் பொருத்தமட்டில் சுயமரியாதை உள்ள தமிழர்கள் ரஞ்சித் பக்கம்தான் நிற்க இயலும்.

அ. மார்க்ஸ், எழுத்தாளர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

கழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்

ஆர்த்தி வேந்தன்

இப்போதாவது இதைக்குறித்துப் பேச எனக்குப் போதுமான தைரியம் வந்திருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்லப்போகிறேன். என்னை யாரேனும் இரவு விருந்துக்கு அழைத்தாலோ, என்னை மொழிபெயர்ப்பு பணி சார்ந்து அழைத்தாலோ நான் கேட்கிற முதல் கேள்வி அது தான். ஒரு வங்கிக்கு போவது என்றாலும், ஷாப்பிங் செய்ய அழைக்கப்பட்டாலும் அதே கேள்வி தான் முதலில் வந்து விழும். “நாம போற இடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கா?”.

நான் ஒரு பேருந்தில் பயணிக்க நேரிடுகிற போதெல்லாம், அந்தப் பேருந்து ஓட்டுநர் நான் சொல்கிற இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்துவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இதை வாசிக்க எளிமையாக இருந்தாலும், இதற்காக நான் மேற்கொள்ளும் போராட்டங்கள் வலிமிகுந்தவை. அந்தத் தருணங்களில் நான் எதிர்கொண்டவை ஏளனம் மிகுந்த பார்வைகள். எதோ கேட்க கூடாததைக் கேட்டுவிட்டதைப் போல என்னைப் பார்ப்பார்கள். இதற்கு முன் வேலை பார்த்த அலுவலகத்தில் அடிக்கடி என்னுடைய இருக்கை காலியாக இருப்பதைக் கண்ட என்னுடைய பாஸுக்கு என் மீது எக்கச்சக்க சந்தேகங்கள். அவர் கழிவறையில் என் காதலனுடன் நான் அலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பதாகச் சந்தேகப்பட்டார். ஒருவர் அத்தனை முறை கழிப்பறையைப் பயன்படுத்த நேரிடும் என்பதை அவரால் நம்பமுடியவில்லை.

என்னுடைய திருமணக் கொண்டாட்டங்களின் போது என்ன ஆடை அணிய வேண்டும், எப்படி மணவிழா நடக்க வேண்டும் என்றெல்லாம் எனக்குக் கனவுகள் இருக்கவில்லை. எப்படிப் பல மணிநேரம் நின்று கொண்டே இருப்பது என்கிற பேரச்சம் மட்டுமே என்னைச் சூழ்ந்தது. கல்யாண ஆடையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணப்பெண்ணாக நின்றுகொண்டிருக்கும் நான், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் என்னுடைய கல்யாணப் புடவையைப் பல நூறு மக்கள் முன்னால் ஈரப்படுத்தாமல் எப்படித் தப்பிப்பது எனத் தவித்துப் போனேன்.

என்னுடைய சகாக்கள் என்னைக் கேலி செய்வதிலிருந்து தப்பிக்க நான் மூன்று மாதகாலம் பணி விடுப்பு எடுத்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட வெம்மை மிகுந்த அனுபவங்கள் குறித்து ஒரு தனிப்புத்தகமே எழுதலாம். ஒரு முறை ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். மருத்துவரின் அறைக்குள் மட்டுமே கழிப்பறை இருந்தது. அதைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவசரமாகக் கழிப்பறையைத் தேடுகிற போது பக்கத்தில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. மருத்துவமனைக்கு வருகிற போதெல்லாம், அந்த உணவகத்தின் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயமானது. அப்போதெல்லாம் எனக்கு அந்த உணவகத்தில் இருந்து எதையாவது பார்சல் வாங்கிக்கொள்வது வழக்கமானது.

ஒரு பேருந்தில் 9 மணிநேரம் பயணிக்க நேரிட்டது. நான் பல முறை கெஞ்சி கூத்தாடியும் பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. கண்களில் கண்ணீர் முட்ட நின்ற போதும் அவரின் மனம் இரங்கவில்லை. இந்த உலகத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு என்னைத் தள்ளும் சிறுநீர்ப்பை எனக்கு மட்டும்தான் உண்டா என நான் வியந்திருக்கிறேன்.

ஒரு ஐஸ்க்ரீம் கடைக்குப் போன போது அங்கே கழிப்பறை இல்லை என்பதைக் கண்டதும் ஏமாற்றம் ஏற்பட்டது. அங்கே இருந்த பணிப்பெண் என்ன செய்வார் என்கிற கவலையோடு கேட்டேன். அவரோ அருகில் இருந்த வணிக வளாகத்துக்குச் செல்ல வேண்டும் என்றார். அதுவும் உணவு இடைவேளையின் போது மட்டுமே போகமுடியும், மற்ற நேரங்களில் கடையைவிட்டு வெளியேறினால் உடனே முதலாளி அலைபேசியில் அழைத்து விடுவாராம். சிசிடிவி புண்ணியத்தில் இந்தச் சித்திரவதை அனுதினமும் நடக்கிறது என அந்தப் பணிப்பெண் விவரித்தார். இப்படி மனதை பிழியும் பல்வேறு கதைகளைக் கேட்டுவிட்டேன்.

ஏன் நம்மூரில் ஒரு கழிப்பறை கேவலமாகப் பார்க்கப்படுகிறது? ஒருமுறை ஒரு நேர்முகத்துக்குச் சென்று இருந்தேன். அவர்கள் நேர்முகத்தை முடித்து இருந்தார்கள். நான் உடனே இருக்கையை விட்டு எழவில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். என்னைப் பதற்றம், படபடப்பு, நடுக்கம் சூழ்ந்து கொண்டன. நான் உடனே எழுந்தால் சிறுநீர் கசிந்து என் ஆடையை ஈரப்படுத்தி விடும் என்கிற அச்சம் என்னைப் பிடுங்கி தின்றது. என் காதலனிடம், ‘நான் இப்படி இருக்கிறதால என்னை வெறுத்துடாதே’ என்று முட்டாள்தனமாகக் கேட்கிற அளவுக்கு நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

இப்படிப்பட்ட குற்ற உணர்ச்சியைப் பல பேர் சுமந்து கொண்டே வாழ்கிறார்கள். ஏன்? இப்படி நரக வேதனையை மௌனமாக ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்? “நான் ரெஸ்ட்ரூமை யூஸ் பண்ணிக்கவா?” என்று கேட்க ஏன் இப்படித் தயங்க வேண்டும்?
என் வீடு வரும் வரை நான் ஏன் சிறுநீரை அடக்கிக்கொண்டு பரிதவிக்க வேண்டும்? ஒரு தனியார் நடத்துகிற அலுவலகத்தில், உணவகத்தில், பள்ளியில் கழிப்பறை இருந்தாலும் அதைத் தனியார் சொத்து என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் வேலை பார்க்கவில்லை, அல்லது அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் இல்லை என்பதற்காகவே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல். எனக்கு இருக்கும் ‘urinary incontinence’ (சிறுநீர் அடக்க முடியாமை) மோசமான ஒன்றில்லை, அதைக் குறித்துச் சொரணையற்று இருப்பதே மோசமானது என உணர்ந்து கொண்டேன்.

சமீபத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஒரு மொழிபெயர்ப்பை செய்யச் சொன்னார். அதற்காக அவர் வர சொன்ன அலுவலகத்தில் கழிப்பறை இல்லை என்று தெரிந்தது. அங்கே வர முடியாது, கழிப்பறை இருக்கும் அலுவலகத்துக்குச் சந்திப்பை மாற்ற சொன்னேன். அவரும் அப்படியே செய்தார். என்னைப் போலவே சிறுநீரை அடக்க முடியாத மருத்துவப் பிரச்சினை உங்களுக்கும் இருக்கிறது என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு உரிமை இல்லாத இடத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் தவறில்லை. அங்கே யாரையுமே தெரியாவிட்டாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதில் பிழையில்லை. வேலைக்கு நடுவே எத்தனை முறை வேண்டுமானாலும் எழுந்து போய்க் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் பாவமில்லை. அலுவலகக் கூட்டத்தில் உங்கள் பாஸை இடைமறித்து அனுமதி கேளுங்கள். பேருந்தில் பயணிக்கிற போது ஓட்டுனரை வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள். நேர்முகம் நடத்தும் நபரிடம் கழிப்பறைக்குப் போக வேண்டும் என்று கம்பீரமாகக் கேளுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாத நபரிடம் கூடக் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள உதவி கேட்கலாம்.

உங்களுடைய உடல்நலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. அதைப் பேணுவது உங்களுடைய அடிப்படை உரிமை. தாகத்தோடு வரும் விருந்தினருக்குத் தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு என்கிறோம். நம் வீட்டிற்கு வரும் வேலைக்காரர், எதோ பழுது பார்க்க வரும் சர்வீஸ் மேன் ஆகியோர் நம்முடைய கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கனிவோடு தெரியப்படுத்துவதும் நம் பண்பாடாக ஆகட்டும். மனிதர்களை இன்னமும் மனிதத்தோடு புரிந்து கொள்வோம். அவர்களைக் கண்டு நக்கலாகச் சிரிக்க வேண்டாம். ‘தண்ணி கம்மியா குடி, ஏசியிலேயே இருக்காதே, நாப்கின் போட்டுக்கோ’ முதலிய மூடத்தனமான அறிவுரைகளால் முடக்காதீர்கள். சிறுநீரை அடக்க முடியாமல் தவிப்பவர்களின் வேதனையைத் தீர்க்க வழிமுறைகளை நாடாமல் எந்த இசம் பேசியும் பயனில்லை. அவர்களுக்கு உதவும் ஒரே வழி, ‘ஏன் அடிக்கடி ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணுற’ மாதிரியான கேள்விகளை அறவே தவிர்ப்பது மட்டுமே.

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஆர்த்தி வேந்தன் பத்திரிகையாளர்.

பூ.கொ.சரவணன் மொழிபெயர்ப்பாளர்.

பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது கருத்துரிமையின் பேரில் வருமே தவிர, அது அவதூறு அல்ல.

தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ராஜன்ராஜன் குறித்து எழுதிய பல்வேறு கருத்துக்கள், வெகுமக்கள் அறியாதவை; விவாதத்துக்குரியவை. பா. ரஞ்சித் இல்லாத ஒன்றை பேசிவிடவில்லை.

சமூகத்தின்பால் அக்கறை கொண்ட படைப்பாளியாக ஒவ்வொரு சமூக பிரச்சினையிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பா. ரஞ்சித், அதே அக்கறையின்பேரிலேயே ராஜராஜன் குறித்த கருத்தை பேசியுள்ளார். இந்தக் கருத்து குறித்து விவாதிக்க வேண்டுமே அன்றி, அதைச் சொன்னார் என்றே ஒரே காரணத்துக்காக, பா. ரஞ்சித் மீது வழக்குகள் தொடுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

அடுக்கடுக்கான வழக்குகள் போடப்படுவது, பா. ரஞ்சித் என்னும் சமூக அக்கறை கொண்ட படைப்பாளியை அலைக்கழிக்க வைக்கும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகளை வாயடைக்க வைக்கும்.

எனவே, இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று, கருத்துரிமையைக் காப்பாற்ற வேண்டும் என தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, சக கலைஞரான பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம்.

இவண்
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.

க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை

அன்புள்ள ஜெயமோகன்..

க்ரீஷ் கர்னாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்..

ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது..

அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பி வந்த ஒருவரைப் பற்றி நீங்கள் இப்படி ஒரு கோணத்தை யாருக்கு எடுத்துக்கொடுக்கிறீர்கள்.?

அவரின் “துக்ளக்” நாடகம் நேருவை விமர்சித்தது என்பதையும், இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர் அவர் என்பதையும் வசதியாக மறந்துவிட்டு “காங்கிரஸ் மேலிடத்தின்” செல்லப்பிள்ளையாக அவரை சித்தரிப்பில் இருக்கும் வடிகட்டும் தன்மை சந்தேகமில்லாமல் உள்நோக்கம் கொண்டது.. தினத்தந்தியிடம் கடன்வாங்கி பிரயோகித்திருக்கும் அந்த “காங்கிரஸ் மேலிடம்” என்பது அதில் வந்த கன்னித்தீவுக்கு இணையான கற்பனைமிளிரும் உருவகம்..

ஆனால் ரொம்ப பழையது.. ஆனால் யாரும் கண்டிராதது. அவ்வளவுதான் மற்றபடி அவர் வகுப்புவாதத்தையும் பிற்போக்கு மதிப்பீடுகளையும் தனது வாழ்நாளின் இறுதிவரை எதிர்த்தவர் என்கிற இழையில் மட்டுமே காங்கிரஸோடு தத்துவார்த்த நெருக்கம் கொண்டிருப்பவர்.. மற்றபடி அவர் பெற்ற அங்கீகாரத்திற்கு முழுத்தகுதி கொண்டவர் என்றே ஒரு இலக்கிய வாசகனாகவும், காங்கிரஸ்காரனகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

நீங்கள் கன்னட இலக்கிய முன்னோடிகளான சிவராம்காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்பா ஆகியோருடன் ஒப்பிட்டு க்ரீஷின் தகுதிக்குறைவை சுட்டுகிறீர்கள்.. இது விஷமத்தனமானது.. காரணம் க்ரிஷ் கர்னாட் இயங்கியது மேற்சொன்னவர்கள் பிரதானமாக இயங்கிய நாவல் சிறுகதை போன்ற வடிவங்களில் அல்ல.. அவர் இயங்கியது ஒட்டு மொத்த இந்திய நவீன இலக்கியச்சூழலில் அரிதான நவீன நாடகம் என்கிற வடிவத்திற்குள். எனவே இந்த ஒப்பீடு நேர்மையற்றது.. இதன்பொருள் மேற்சொன்ன படைப்பாளிகள் மதிக்கத்தக்கவர்களல்ல என்கிற பொருளில் அல்ல.. பைரப்பாவிற்கு ஞானபீடம் விருது அளிக்கப்படாதது வருந்தத்தக்கதுதான்.. எப்படி தமிழில் சுந்தராமசாமிக்கு வழங்கப்படாததைப்போல ஒப்ப முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதை வழங்கும் தனியார் அறக்கட்டளையை “காங்கிரஸ் மேலிடம்” நடத்தவில்லை. அதேபோல் இதற்கு க்ரீஷ் கர்னாட் எந்தவகையிலும் காரணம் அல்ல. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 1975லேயே அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்டாயிற்று.. அவரின் இந்துத்துவ அரசியல் சார்பு அவரின் இலக்கியத்தகுதியை குறைத்து மதிப்பிடப்போதுமானது என நான் ஒருபோதும் கருதவில்லை.. கருதவும் மாட்டேன்.

பொதுவாக இந்திய இலக்கியச்சூழலில் நவீன நாடக அரங்குகள் உயிர்ப்புடன் இருக்கும் மொழிச்சூழல்கள் என்றால் அது கன்னடமும், மராத்தியும்தான்.. ஆரோக்யமான கன்னட நாடகச்சூழலின் இருப்பிற்கு க்ரீஷின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே அவரின் இலக்கிய பங்களிப்பை இந்த கோணத்தில் சக கன்னட நாடகாசிரியரான சந்திரசேகர கம்பாருடனோ, மராத்திய நாடகாசிரியரான விஜய் டெண்டுல்கருடனோ ஒப்பிட்டு மதிப்பிடுவதல்லவா பொருத்தம்..?

ந.முத்துசாமியை ஜெயகாந்தனுடனும், அசோகமித்திரனுடமா ஒப்பிடுவீர்கள்..?

அவரை சுமாரான நடிகர் என்கிறீர்கள்.. இருக்கட்டும்.. அவர் பெரும்பாலும் வணிகநோக்கிலான வெகுசன படங்களில் நடித்தார்.. அது தனது வருவாய்க்கான வழியாக.. நீங்கள் எழுதும் திரைக்கதைகள் கூட அப்படித்தானே..? அவற்றை நீங்கள் எழுதும் நோக்கம் என்னவோ அதே நோக்கம்தான் அவர் நடித்ததற்கும்.. ஆனால் என் மதிப்பீட்டில் அவர் வெற்றிகரமான குணச்சித்திர நடிகர்தான்..

எல்லாவற்றிற்கும் மேலாக தான் நம்பிய மதிப்பீடுகளுக்காக, வலியுறுத்திய விழுமியங்களுக்காக, கடைப்பிடித்த அரசியல் கொள்கைகளுக்காக ஔிவுமறைவின்றி நேர்மையாக நின்றமைக்கான வாழ்வே எல்லாவகையிலும் மேலானது.

கர்நாடக காவல்துறை புலனாய்வு பிரிவு, கவுரி லங்கேஷின் கொலைகாரர்கள் அவருக்கு முன்பாக கொலைசெய்யப்பட வேண்டியவராக க்ரிஷ் கர்னாட்டையே வைத்திருந்ததாக குறிப்பிட்டது. வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், படைப்புரிமைக்கு ஆதரவாகவும், எத்தனை உக்கிரமான கருத்தியல் போராளியாக இருந்தார் என்பதற்கான சான்று அது..சமகால இந்தியாவில் விரல்விட்டு எண்ணத்தக்க பொது அறிவுஜீவிகளில் (public intellectual ) ஒருவராகவும் அவர் இருந்தார்.. இதையெல்லாம் குறிப்பிடாமல் கூட நீங்கள் எழுதலாம்.. ஆனால் ஒரு குற்றப் பத்திரிக்கைக்கு அஞ்சலி கட்டுரை என்று பெயரிட்டிருக்க வேண்டாம்..

அன்புடன்,
இரா.முருகானந்தம்,
13.06.2019.

இரா. முருகானந்தம், அரசியல் செயல்பாட்டாளர்.

பா. ரஞ்சித்தும் சோழர்களும்

வாசுகி பாஸ்கர்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்;

1 . இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம்

2 . சைவ மடங்களிடம் குவிந்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மீட்பு

தமிழ்த்தேசியம், திராவிடம், பார்ப்பனீயம் – என்னும் இந்த மூன்று முனைகள் தத்தம் காரணங்களுக்காக தேர்வின் அடிப்படையில் மௌனம் காத்தாலும், இந்த விவகாரத்தை பொறுத்த மட்டில் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பரந்துபட்ட தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. இதை நேர்மையோடு அணுகி அறத்தொடு பேச முடியுமேயானால், அது தலித் தரப்பிலிருந்தோ அல்லது பழமைவாத கருத்துகளையும் ஜனநாயகமற்ற போக்கையும் நிராகரிக்கும் முற்போக்கு இடதுசாரி தரப்பிலிருந்தோ மட்டுமே சாத்தியம். சம்மந்தப்பட்டவர்களை குற்றங்சாட்டும் நோக்கமின்றி, இதை தரவுகளின் படி பரிசீலித்து விவாதத்திற்குள்ளாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வழக்கம் போல இக் கருத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தான் வரலாற்றில் முதன்முதலாக சொல்லியிருப்பதை போல கண்டங்களும் எதிர்வினைகளும் வந்த வண்ணமிருக்கின்றன. தலித்துகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றை ஒரு தலித் பேசுவதற்கு ஆயிரமாண்டு கால வரலாறு தேவையில்லை, ஐம்பதாண்டுக் கால தமிழக அரசியலே போதுமானதாக இருந்தாலும், ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர் தம் சொந்த அனுமானத்திலிருந்து வெளிப்பட்டவை அல்ல, மாறாக அது ஆய்வுகளின் அடிப்படையிலானது.

பார்ட்டன் ஸ்டெயின், நொபோரு கரோஷிமா, ஒய்.சுப்புராயலு, சுரேஷ் பி. பிள்ளை, நா. வானமாமலை, மே. து. ராசுகுமார் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளும், “சோழர்கள் ஆட்சியொன்றும் பொற்கால ஆட்சியல்ல” என்பதை ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், து.ரவிக்குமார், போ.வேலுசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டவர்கள் பல சந்தர்ப்பங்களில் எழுதி வந்தவை தான்.

என் இந்த பதிவு மேற்சொன்ன அறிஞர்கள் எழுதியவற்றை மேற்கோளிட்டு, “இராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது?” என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நோக்கமல்ல, இணைய வாசிப்பு மட்டுமே அதற்கு உதவாது, இணையத்தில் வரலாற்றை சுருக்கி விடவும் முடியாது, ஆனால் இந்த விவாதங்கள் எந்தெந்த முனைகளில் இருந்து மழுங்கடிக்கப்படுகின்றன, “அதையொட்டிய மௌனங்கள் ஏன்?” என்பது விவாதிக்கப்பட வேண்டியவை.

1. தமிழ்த்தேசியம்

ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு கோட்பாடுகளை தாண்டி சில அடையாள உருவகங்கள் தேவைப்படுகிறது, இங்கே தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் சோழர் காலத்தையும் இராஜராஜனையும் தமிழ் அரசியலின் குறியீடாக்கி, சமகால அரசியல் போக்கை வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி தமிழர் அரசியலாக முன்னிறுத்த சோழ வரலாறும் இராஜராஜனும் தேவைப்படுகிறது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு பேசும் சாதிகள் பெற்ற அதிகாரம் தான் தமிழகத்தின் மொத்த சீரழிவுக்கும் காரணமென முன்னிறுத்தவும் இவர்களுக்கு சோழர்கள் ஆட்சி தேவைப்படுகிறது.

2. திராவிடம்

திராவிட அரசியலின் தொடக்க காலந்தொட்டு சைவம் / தமிழ் / வெள்ளாள / தெலுங்கு சாதிகளுக்கு உள்ள வரலாற்றுத் தொடர்பு முக்கியமானது. திராவிட அரசியலின் பார்ப்பன எதிர்ப்பென்பது ஆதிக்கத்திற்கு எதிரானது என்று மட்டுமே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, திராவிட அரசியலை ஆதரிப்பவர்கள் எல்லோருமே அக்கரணம் கொண்டே ஆதரிப்பவர்களும் அல்ல. அது பார்ப்பனர்களுக்கும் – வெள்ளாள நிலவுடமைச் சாதிக்கு எதிரான அதிகாரப் போட்டியாகவும் வரலாறு இருந்திருக்கிறது. பெரியாருக்கும் சைவ வெள்ளாளர்களுக்கும் நடந்த வாக்குவாதங்கள், முரண்பாடுகள் தனிவொரு நீண்டக் கட்டுரையாக எழுதக்கூடியவை. பார்ப்பனரை எதிர்க்கும் வரை முற்போக்கு வேடமிட்டுச் சிரிக்கும் வெள்ளாள சாதியினர், அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்கத்தனத்தையும், சமூக அதிகாரத்தையும், பிற்போக்குத்தனங்களையும், நிலங்களையும் கேள்விக்குட்படுத்தினால் சீற்றம் கொள்வார்கள், அந்தச் சீற்றத்திற்கு பெரியாரும் தப்பவில்லை என்பது வரலாறு.

3 . பார்ப்பனர்கள்

சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லா விதமான சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள், தமிழகத்தில் பார்ப்பன வைதீகம் ஆழமாக கோலூன்றிய காலமாக சோழர் காலத்தை குறிப்பிடலாம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், கொடுக்கப்பட்ட நிலங்கள் என எல்லாமே வைதீகத்திற்குட்பட்டவை. சதுர்வேதி மங்களம் என்றழைக்கப்படும் பகுதி சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊர், “சதுர்”என்றால் நான்கு, நான்கு வேதங்கள் ஓதும் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலமாதலால் சதுர்வேதி மங்களம் என்று அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்து பிரிட்டிஷ் வருகையையொட்டி நிலங்களை வைத்து இனி பிழைக்கலாகாது என்றெண்ணிய பார்ப்பனர்கள் நிலங்களை விற்று நகரங்களிலும், கல்வி கற்றும் முன்னேறும் வேலையைத் தொடங்கினார்கள், அதனாலவே பிரிட்டிஷ் சர்காரில் முக்கிய பதவிகளை முன்கூட்டியே பெறும் நிலைக்கு முன்னேறினார்கள்.

இம்மூன்றையும் இணைப்புள்ளியாக கொண்டு இதன் உள்ளீடுகளை இணைத்துப் பார்த்தால்,

தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் நாயக்கர் ஆட்சிக்காலத்தை counter செய்வதற்காகவே, சோழர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களும், அவர்களுக்கிணையாக அதிகாரத்திலிருந்து வெள்ளாளர் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. தலித் சமூகத்தவர் அடிமைகளாக்கப்பட்டதும், அடிமை முறையினை சட்டமாக்கியதும், கூலிகளாக்கப் பட்டதையும் பேசாமல், அந்த வரலாற்றை மறக்கடித்து நல்லதோர் தமிழ்ச் சமூகத்தை உருவாக்கி விட முடியாது. அப்படி உருவான கூலிச்சமூகங்களை சுரண்டித்தின்னது பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வெள்ளாள நிலவுடமைச் சமூகத்தாரும் தான்.

அதே போல சோழர்கள் ஆட்சியில் கணிசமாக நிலங்களோடும் அரசு பட்டங்களோடும் அதிகாரமாயிருந்த வெள்ளாளர்கள், சோழர் ஆட்சியின் முடிவில் பெரும் நிலக்கிழார்களானார்கள். நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் அது தொடர்ந்தது, திராவிட அரசியல் சார்புடைய வெள்ளாள சாதியினர் பலர், சோழர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பேசுவார்களேயொழிய, சோழர்கள் காலத்திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்த வெள்ளாளர்களை பற்றியோ, தெலுங்குச் சாதியினரை பற்றியோ பேச மாட்டார்கள். இது பற்றியான விவாதங்கள் வருகிற போது Diplomatic ஆக நழுவி, மேலோட்டமான கருத்துக்களை முன் வைப்பார்கள். தெலுங்கு சாதிகளின் ஆதிக்கத்தை குறித்து திராவிட அரசியலை கேள்வி கேட்கும் தமிழ் தேசியவாதிகளும், வெள்ளாள சாதி குறித்து கேள்விகேட்பதில்லை. பார்ப்பனர்களை அதிகார போட்டிக்காக மட்டுமே எதிர்க்கும் வெள்ளாளச் சாதிகளும் அரசியல் காரணங்களுக்காக தெலுங்கு சாதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டது வரலாறு.

சோழர் ஆட்சிக்கால தொடர்பில் இப்படி நேரடியாகவே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பதால், அவரவர் தமக்கு வசதிப்பட்ட வரலாற்றை பேசிக்கொள்கிறார்கள், மறைக்கிறார்கள். ஆனால் சோழர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை தலித்துகளை “இழி பிறவிகள்” என்றும் சொல்லும் கல்வெட்டுகளும், அடிமைப்படுத்தப்பட்ட வரலாறும் எங்கும் விரவிக்கிடக்கிறது.

இதையெல்லாம் கடந்து தமிழக அரசியல் சூழலில் இராஜ ராஜ சோழனை “திராவிட ஐகானாக” மாற்ற முனைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி. இராஜராஜன் பெயரில் விருது அறிவித்தார், 1000 வது ஆண்டு விழாவில் அதுவரையில் இல்லாமல் பட்டு வேஷ்டி சட்டையோடு தோன்றினார், மனு நீதியின் படி ஆட்சி நடத்திய சோழனுக்கு சிலை வைத்தார், சோழர் பெருமை பேசினார்.

மு. கருணாநிதி இக்காரியங்களை செய்வதற்கு முன்பே வரலாற்று ஆய்வாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும், Subaltern விளிம்பு நிலை கருத்தியலின் படி புதிய கண்ணோட்டத்தில் மன்னராட்சி கால ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும், அடிமைத்தனத்தையும், ஜனநாயகமாற்றத் தனத்தையும் பேசத் தொடங்கி விட்டனர், அதன் பின்னும் இராஜராஜ சோழன் மோகத்தில் தன்னையே ராஜராஜனாக நினைத்து கருணாநிதி செய்ததெல்லாம் தனியே ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுகொண்டு இக்காரியங்களில் கவனம் செலுத்தியவையானாலும், விளிம்பு நிலை அரசியலை முற்போக்கு கண்ணோட்டத்தோடு அணுகும் அரசியலெல்லாம் அறிந்த கருணாநிதி இதைச் செய்தது விந்தை.

அதனால் தான் கவிஞர் இன்குலாப் “கண்மணி ராஜம்” என்னும் கவிதையில்

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன் ஜீவித்திருந்த இம்மன்னண்
என்ன செய்து கிழித்துவிட்டானாம்?”

என தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

அரசு பாடத்திட்டத்திலிருந்த இந்த இன்குலாபின் கவிதையை மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டதென்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் திமுகவின் சம்மதத்தோடு நீக்கப்பட்டதென்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன, எது எப்படியாயினும் அது யாரால் நீக்கப்பட்டது என்பதல்ல விவாதம்.

இராஜ ராஜ சோழன் குறித்த விமர்சனத்தை சமூக தளத்தில் வைக்கவே முடியாதளவு விமர்சனமற்ற மன்னனாக உருவகப்படுத்தியதில் அரசுக்கும் மு. கருணாநிதி போன்ற சமூகத்தளத்தில் முக்கிய பங்காற்றிய ஆளுமைக்கும் இருக்கும் தொடர்பு கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான் ஆதாரபூர்வமாகக் கூட நிலங்களை பற்றியும், ஆயிரமாண்டு முன்னே வாழ்ந்த மன்னராட்சி காலத்தின் கொடுமைகளையும் பேச முடியாத சூழலில் சமூகத்தை நிறுத்தியிருக்கிறோம்.

காலத்தின் அவசியமாக இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தமிழக பகுத்தறிவாளர்களோ, பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக அவ்வப்போது தங்களை சமாதானப்படுத்துக்கொண்டார்கள், ஒரு வகையில் அது அவர்களின் அரசியலுக்கான வசதியும் கூட. ஜனநாயகவாதிகளையும், இதை பேச வேண்டிய கட்டாயத்திலுள்ள தலித்துகளை தவிர இதை வேறாரும் பேசுவதற்கில்லை.

நெடுங்காலமாக இந்த மன்னராட்சிக் காலம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தமிழ்ச்சூழலில் இல்லாதமையாமல், அது பொற்காலமென்னும் கருத்து பள்ளிக்கூடத்திலிருந்து சமூக, அரசியல் தளம் வரை பரந்துகிடந்தமையால், பல்வேறு சாதிகளும் அந்த பொற்காலத்தின் ஆட்சியை தான் சார்ந்த சாதியின் சாதனையாக உருமாற்றிக்கொள்ள தங்களை சோழ வம்சத்தோடு இணைத்துக்கொள்ளும் போக்கு தொடங்கியது. எந்த சமூக மக்கள் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் இந்த கொடுங்கோல் மன்னராட்சி காலத்தை எதிர்க்க வேண்டுமோ, யார் சுரண்டப்பட்டார்களோ, அவர்களே முன்னேறிய சாதிகளின் ஆண்டை பெருமைகளை பார்த்து அந்த மாயையில் விழுந்தது தான் பெருந்துயரம், “இந்நிலைக்கு எந்த வரலாறு துணை போனது?” என்பது தான் என் பதிவின் சாராம்சம்.

ஆய்வுகளாகவும், தரவுகளாகவும் பல புத்தகங்களில் இருக்கும் வரலாற்றுத் தரவுகளை பேச முடியாத சூழலில் தான் நாம் சமூகநீதி சமூகத்தை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், மீண்டும் முதல் பத்திக்கு போகிறேன், பா. ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் ரஞ்சித்தின் கருத்துக்கள் அல்ல, ஆனால் அதை ஒவ்வொரு காலத்திலும் யாரவது ஒருவர் பேசியே தீர வேண்டும், இதையெல்லாம் பேசுபொருளாக்க முடிகிற இடத்திலிருந்து இவ்விவாதத்தை பா.ரஞ்சித் தொடக்கி வைத்திருக்கிறார், இது வரலாற்றை கிளறும், மீள வைக்கும், பேசுபொருளாக்கும், அது தான் முக்கியம், பேச முடியாத நிர்பந்தத்திலிருப்பவர்கள் குறைந்தபட்சம் பேசுகிறவர் பேசட்டும் என்றாவது இதை கடக்க வேண்டும்.

காலத்தை கடத்தி விட்டால் வரலாறு மறையுமென்பவன் மூடன், காலம் கூடக்கூட வரலாறு புதிய வேகத்தோடு மீளும், துரோகத்தையும் இழந்ததையும் பேசினால் தான் எதை பெற வேண்டுமென்பது விளங்கும், பேசுவோம், நாம் பேசுவோம்.

வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்

அன்புள்ள திரு ரங்கராஜ் (பாண்டே) அவர்களுக்கு,

வணக்கம். ‘ஹிந்தி திணிப்பு உண்மையா?’ என்னும் தலைப்பில், சாணக்கியாவில் நீங்கள் ஆற்றியுள்ள உரையைக் காணொளி வடிவில் முழுமையாகப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்,’புரட்சி வெடிக்கும், கிளர்ச்சி வெடிக்கும்’ என்னும் குரல்கள் கேட்பதாக, ஒரு மெலிதான ஏளனத்துடன் தொடங்கும் அந்த உரை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதன் பிறகு, 2017 ஜூன் மாதம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுமான செய்திகளையும், அவர்கள் இப்போது 484 பக்கங்களில் பரிந்துரை வழங்கியுள்ளனர் என்னும் செய்திகளையும் எல்லாம் கூறிவிட்டு, அந்த அறிக்கையை ‘நுனிப்புல்’ மேயாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறியுள்ளீர்கள்.

உங்கள் அறிவுரை சரிதான். நுனிப்புல் மேய்வது அறிவுக்கு ஏற்றதன்று. ஆனால், அந்த அறிக்கையைக் கூட, மத்திய அரசு, எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வகையில், அவரவர் தாய்மொழியில் கொடுக்கவில்லை. குறைந்தது, மும்மொழித் திட்டம் பற்றிப் பேசும் அந்த அறிக்கையை மூன்று மொழிகளில் கூடத் தரவில்லை. எந்த ஆங்கில மொழியை வேண்டாம் என்கின்றனரோ, அதே ஆங்கிலத்த்தில் மட்டும்தான் தந்துள்ளனர். அதனை எத்தனை இந்தியப் பாமர மக்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்? புரிந்து கொண்டு, ஒரே மாதத்தில் தங்கள் கருத்தை அரசிடம் பதிவு செய்ய முடியும்? தலைமுறை தலைமுறையாக ஆங்கிலம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள உங்களைப் போன்றவர்களுக்குத்தானே அதுவெல்லாம் எளிதாக இருக்கும். நாங்கள் பாமரர்கள், நுனிப்புல்தான் மேய வேண்டியிருக்கும். பிறகு உங்களைப் போன்ற சாணக்கியர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

போகட்டும், பிறகு மும்மொழிக் கொள்கை என்றால் என்ன என்று விளக்கிவிட்டு, 1968 முதல் தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருவதைச் சுட்டியுள்ளீர்கள். இதன் பிறகுதான் உங்கள் கச்சேரி தொடங்குகிறது.

இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ‘இந்த ஒரே காரணத்தினால்’ இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழகம் அனுமதிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றீர்கள். இடையில் கல்வி அமைச்சராக இருந்த மாபாய் பாண்டியராஜன் அதனைக் கொண்டுவர முயன்றதாகவும், அதுவும் பயனின்றிப் போய்விட்டதெனவும் கூறுகின்றீர்கள்.

நவோதயா பள்ளிகளைத் தமிழகம் மறுத்தது அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமில்லை. நவோதயா பள்ளிகள் திட்டம், 1985 ஆகஸ்டில் முன்மொழியப்பட்டு, 1986 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல்வராக இருந்த எம்ஜிஆர் அதனை இங்கு மறுத்துவிட்டார். பிறகு 1992 முதல் ஜெயலலிதா அதனை நடைமுறைப்படுத்த முயன்றார். பரதநாட்டிய வகுப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதே அவரின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவரால் அதனை இங்கு கொண்டுவர இயலவில்லை.

நவோதயா என்பது உண்டு, உறையும் பள்ளி என்பதும், அதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்பதும், மாணவர்களுக்கு எல்லாம் இலவசம் என்பதும் உண்மைதான். ஆனால் அந்தப் பள்ளி ஒரு மாவட்டத்திற்கு ஒன்று மட்டுமே திறக்கப்படும். அந்தப் பள்ளியில் ஒரு வகுப்பில், இரண்டு பிரிவுகளில் 40 முதல் 80 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில் பல லட்சம் பிள்ளைகள் இருக்கும்போது, 80 மாணவர்களுக்கு மட்டும், இந்தியைக் கட்டாய பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன், எல்லா உதவிகளும் அளிக்கப்படும். இது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆதி திராவிட நலப் பள்ளிகள், பழங்குடியினருக்கான பள்ளிகள் உள்ளன. கள்ளர் சமூக மக்களுக்கான மேம்பாட்டுப் பள்ளிகள் கூட உள்ளன. மத்திய அரசு, நவோதயா பள்ளிகளுக்கு வழங்க முன்வரும் 40 கோடி ரூபாய் பணத்தை எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து தரக் கூடாதா என்பதே நம் கேள்வியாக இருந்தது. இந்தி படித்தால் பணம் தருகிறேன் என்று சொல்வது, நம்மை விலைக்கு வாங்குவது ஆகாதா என்றே நாம் கேட்டோம்.

பிறகு கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.சி பள்ளிகளில் எல்லாம் இந்தி இல்லையா என்று கேட்கிறீர்கள். இந்தியா முழுவதும் மாற்றுப்பணிகளுக்கு உட்பட்டவர்கள் (transferable jobs) பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்டவை அவை. ஆனால் இன்று, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாம், சிபிஎஸ்சி பள்ளிகள் ஆகிவிட்டன. 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் 55 சிபிஎஸ்சி பள்ளிகள்தாம் இருந்தன. அம்மையார் முதல்வராக 2011இல் பதவியேற்றபின், அவற்றின் எண்ணிக்கை மளமள வென்று ஏறிற்று. இன்று இங்கு 941 பள்ளிகள் உள்ளன. இப்படி வணிகமயமாக்கியது யார் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டாமா?

இந்திப் பிரச்சார சபாவில் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர் என்று பெருமையோடு சொல்கின்றீர்கள். நன்றாகக் படிக்கட்டும். யார் வேண்டாமென்றது? இந்தித் திணிப்பை மட்டும்தான் நாம் எதிர்க்கிறோம்.

அடுத்ததாக, நெஞ்சறிய ஒரு பொய்யைக் கூறுகின்றீர்கள். 2015 வரையில், தமிழே படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் எல்லாப் படிப்பையும் படிக்கலாம் என்ற நிலைமை இருந்ததா இல்லையா என்று கேட்கின்றீர்கள். அதாவது ஜெயலலிதா அம்மையார் வந்தபிறகுதான். தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது என்பது போன்ற உண்மைக்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நீங்கள் தருகின்றீர்கள். ‘எல்லாம் அறிந்த நீங்கள்’ 2006 ஜூன் மாதம், கலைஞர் ஆட்சியிலேயே, தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, முதல் வகுப்பு தொடங்கி தமிழ் அட்டாயப் பாடம் ஆக்கப்பட்டதை அறியவில்லை போலும் நீங்கள். அல்லது அதனைச் சொல்ல மனமில்லையோ என்னவோ!

சரி, முதன்மையான சிக்கலுக்கு வருவோம். இந்தி கட்டாயம் கற்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால் அதற்கு ஒரு ‘வியாக்கியானம்’ தருகின்றீர்கள். இந்தி பேசும் மாநிலங்களிலும், மும்மொழிக் கொள்கை உள்ளதே என்கிறீர்கள், அங்கே தாய்மொழி, ஆங்கிலம், ஏதேனும் ஓர் இந்திய மொழி என்றும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அங்கே, இந்தியாவின் ஏதேனும் ஒரு மொழி, இங்கே இந்தி மட்டும்தான். மலையாளமோ, பஞ்சாபியோ படிக்க முடியாது. இதுதானே பரிந்துரை? இது எப்படிச் சமத்துவமாகும்? நமக்கும், ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழி என்று சொல்லியிருந்தால் சமத்துவம் இருக்கிறது. இங்கே இந்திதான். நமக்கு வேறு விருப்பம் தெரிவிக்கும் உரிமையில்லை. அவர்களோ, சமஸ்கிருதம், குஜராத்தி என்று எந்த ஒரு மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது என்ன நீதி?

எனவே கொல்லைப்புற வழியாக இந்தியை, அதன் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதுதான் இதன் நோக்கம். இதனைத் தமிழகம் ஒருநாளும் ஏற்காது, ஏற்கவும் கூடாது.

ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டும்மானாலும் தங்கள் விருப்பத்திற்கும், தேவைக்கும், திறமைக்கும் ஏற்பக் கற்றுக் கொள்ளட்டும். யாரும் தடுக்கவில்லை. ஆனால் மொழிகளைக் கற்றுக் கொள்வது மட்டுமே அறிவாகாது. மொழி அறிவு சிறப்பானதுதான். எனினும், மொழியின் மூலம் பெறும் அறிவே அதனினும் சிறப்பானது.

ஏதேனும் ஒரு வழியில் இந்தியை, அதன் வழி சமஸ்கிருதத்தை ஏன் திணிக்க விரும்புகின்றார்கள், அதற்கு உங்களைப் போன்றோர் ஏன் துணை போகின்றீர்கள் என்பதைத் தமிழகம் அறியும். சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டு வல்லாண்மை.

அந்த ஆரியப் பார்ப்பன வல்லாண்மைக்குத் தமிழகம் என்றும் அடிபணியாது.

நன்றி ரங்கராஜ்! (முடிந்தால் அந்தப் பாண்டேயை விட்டுத் தொலையுங்களேன், அது நீங்கள் படித்து வாங்கிய பட்டமில்லையே)
#rangarajpandey #stophindiimposition #மும்மொழிகொள்கை
அன்புடன்
சுப. வீரபாண்டியன்

மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?

பாவெல் தருமபுரி

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பிற்பாடு மு.க. ஸ்டாலின் அவர்களை கதாநாயகனாகவும், ரட்சகன் போலவும் பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன.

இன்னொரு பக்கம் இது பெரியார் மண் என்றும் இங்கே எந்த காலத்திலும் பா.ஜ.க குடியேற முடியாது என்றும் பரவலாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இது உண்மைதானா? ஸ்டாலினின் கள வியூகமும், அவரின் தொடர் பிரச்சாரங்களும், திராவிட கோட்பாடும்தான் தி.மு.க கூட்டணிக்கு வெற்றியினை கொண்டுவந்து கொடுத்ததா? நிச்சயமாக இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுங்கள், இங்கே பலமான கூட்டணி அமைத்திடும் சாமர்த்தியத்திலும் கூட அவர் ஒருபடி பின்தங்கியேதான் இருந்தார்.

மாநில கட்சி ஒன்றின் தலைவர் என்கின்ற முறையில் ஸ்டாலினின் நோக்கம் யாவும் மாநில ஆட்சி அதிகாரத்தை நோக்கித்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் மத்திய அரசில் பங்களிப்பு எல்லாம். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இதைத்தான் செய்திருப்பார். ஆனால் கடைசி வரை ‘எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்ற முழக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்படவே இல்லை. மோடிக்கு எதிரான பிரச்சாரத்தின் பகுதி அளவுக்கு கூட எடுபிடி எடப்பாடி அரசுமீது கை காட்டப் படவில்லை. விளைவுதான் எடப்பாடி மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருப்பது.

ஸ்டாலின் மத்தியில் ஆட்சிமாற்றம் வருமென உறுதியாக நம்பினார். எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்கும் பா.ஜ.க இல்லாது போனால் எளிதாக எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்பது அவர் கணக்கு. அரசனை நம்பி புருஷனை கைவிடுவது போன்ற இந்த முடிவு ஸ்டாலினின் பலவீனமன்றி வேறு என்ன?

நாம் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு நீங்கள் கேட்கலாம் ‘ஸ்டாலின் பலவீனமானவர் என்றால் பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு மாபெரும் வெற்றி சாத்தியமானது?’. உண்மைதான் இது மாபெரும் வெற்றிதான். தேனி தகிடு தித்தங்களை கடந்து பார்த்தால் இது நூறு சத வெற்றிதான். ஆனால் வெற்றிக்கு உங்கள் ஸ்டாலினோ, கூட்டணியோ, திராவிட கொள்கைகளோ, தேர்தல் அறிக்கைகளோ எவையும் பிரதான காரணமல்ல. வெற்றிக்கான காரணம் ஓட்டரசியலுக்கும் அப்பார்பட்டது.

ஸ்டெர்லைட், கெய்ல் குழாய், ஹைட்ராேகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு, எட்டுவழிச் சாலை என எங்கெங்கெல்லாம் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான திட்டங்கள் கொண்டுவரப் படுகிறதோ அதை அப்பலப்படுத்தி கைமாறு கருதாமல் மகத்தான மானுடப்பற்றோடும், தியாக உணர்வோடும் தேர்தல் சாரா மக்கள்நல இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கமே மக்களின் இந்த முடிவுக்கு காரணம்.

மக்கள் அதிகாரம் போன்ற எண்ணற்ற இந்தக் குழுக்களின் போராட்டம்தான் உள்ளபடி மத்திய அரசினையும், அதன் மக்கள் விரோதக் கொள்கைகளையும், மாற்றாந்தாய் மனோபாவத்தையும் மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. தி.மு க அல்ல, மாற்றாக அடுத்த இடத்தில் யார் நின்றிருந்தாலும் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கும். இதில் எந்தவித பீற்றலுக்கும் இடமில்லை.

உண்மை என்னவென்றால் மக்களிடம் தங்களின் செயல்பாடுகள் குறித்த தாக்கத்தினை உணராமலேயேதான் பலவேறு இயக்கங்கள் இன்றைக்கும் களமாடிக் கொண்டிருக்கின்றன.கூடுதலான ஒரு செய்தி.. இந்த தேர்தல் சாரா அமைப்புகள் தங்களுக்குள் பொதுவானதோர் நோக்கத்தோடு ஒரு ஐக்கியத்தை உண்டாக்க வில்லை என்றால் இத்தனையாண்டுகால உழைப்பு அதிகபட்சம் இது போன்றதை மட்டும்தான்(தி.மு.க கூட்டணி வெற்றி) சாதிக்க முடியும்.

இப்படியாக யாரோ சம்பாதித்து யாரோ தின்ற கதையாகத்தான் ஸ்டாலினின் வெற்றி அமைந்தது என்பதை தி.மு.க அணியினர் புரிந்துகொள்ள வேண்டும். துதிபாடல்களை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு யதார்த்தத்தை யோசிக்க வேண்டும்.

“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

ஆழி செந்தில்நாதன்

ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது?

இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று கூட இதை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் போல சித்தரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் தொகுதி அல்லது மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. வெறுமனே குரல் கொடுப்பதற்காகவும் அவர் அங்கே செல்லவில்லை. இந்திய அரசமைப்பின்படி உச்சபட்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தில் இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்த்தே அவரும் செயல்படுகிறார். தன் தொகுதியில் பாலம் கட்டுவதற்கான நிதியைக் கோருவதற்காக அவர் அங்கே செல்லவில்லை. அவர் ஒரு சட்டமியற்றி – Law Maker.

சட்டமியற்றும் (legislative) அவையான பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதை நிறைவேற்றும் பொறுப்பு காபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு (executive) இருக்கிறது. அந்தச் சட்டம் மீறப்படாமல் பாதுகாக்கப்படவே நீதித்துறை (judiciary) இருக்கிறது. ஆனால் மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்தான் உச்சபட்ச அதிகாரமுள்ளவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தனிக்குரலாக ஒலிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் தமிழக எம்.பிகள். குறிப்பாக தோழர்கள் தொல். திருமாவளவன், கனிமொழி, ஆ ராசா, ரவிக்குமார், ஏ கணேசமூர்த்தி, சு வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மீது ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பே இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையிருந்த ஆட்சிகளின்போது மக்களவை அல்லது மாநிலங்களவையில் அண்ணாவும் சம்பத்தும் செழியனும் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆக்கபூர்வமாகவும் எதிர்க்குரலாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மொழித்திணிப்பு இருக்காது எனறு ஈ வி கே சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உறுதிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு.

எங்கள் நாட்டுக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் பேசும் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று குரல் கொடுத்த அண்ணா, இந்திய அரசின் நிதிக்கொள்கை, வெளியுறவுக்கொள்கை உட்பட எல்லா மத்திய அரசு அதிகாரங்களையும் கிழித்துத் தொங்கப்போட்டார். போர்க்காலத்தில் அரசோடு சேர்ந்தும் நின்றார்.

எமர்ஜென்சியின் போது இரா செழியன் இந்திரா காந்திக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியதை நாம் மறக்கமுடியுமா? அவரது அந்தப் புகழ்பெற்றப் பேச்சு எல்லோருக்கும் பாடநூல்.

எத்தனை தடவை வைகோவும் கணேசமூர்த்தியும் திருச்சி சிவாவும் அண்மையில் கனிமொழியும் தமிழ்நாட்டின் குரலை ஒலிக்கச்செய்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் எனறு தமிழ்நாட்டுக்காக இங்கே தான் வங்காளத்து கம்யூனிஸ்ட் பூபேஷ் குப்தா குரல்கொடுத்தார். இந்த அரங்கில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்சி, பிஸி மக்களுக்கான சமூக நீதிக்குரல்களை திராவிடக் கட்சிகளின் எம்பிகள் எழுப்பினார்கள். இதே மன்றத்தில்தான் எங்கள் நிதியைத் தின்று தீர்க்கின்றன வட மாநிலங்கள் என்று ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். இப்படி எவ்வளவோ சொல்லமுடியும்.

எனவே மாநிலக் கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் ஒன்றுதான். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிற திமிர்.

தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது, மோடிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடும் மோடி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் வருந்த வேண்டிய நிலைமை வரும் என்கிற நிலை ஏற்படுமானால், ஆள்பவர்கள்தான் தேச விரோதிகளாக ஆவார்கள்.

ஆழி செந்தில்நாதன், பதிப்பாளர்; அரசியல் விமர்சகர்.

தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!

தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
லாரன்ஸ் ஃபெர்லிங்கிட்டி
(கலீல் ஜிப்ரானின் இதே தலைப்பிட்ட கவிதையை முன்வைத்து)
—-
எந்த தேசத்தில் மக்கள்
ஆட்டு மந்தைகளாக உள்ளனரோ
எங்கு மேய்ப்பர்கள்
அவர்களை
வழி தவறச் செய்கின்றனரோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

எந்த தேசத்து தலைவர்கள் பொய் பேசுகின்றனரோ
எங்கு சான்றோர் வாய்ப் பேச்சற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனரோ
எங்கு சிறுமதியாளர்கள் குரல் காற்றில் கலந்து
உரத்து ஒலிக்கின்றதோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
வெற்றிவாகைச் சூடிய தலைவனை வாழ்த்த மட்டும்
குரல் உயர்த்தும்
அடாவடித்தனத்தை வீரமென விளிக்கும்
வன்முறை மூலமும் சித்திரவதை செய்தும்
பூமியை ஆள நினைக்கும்
மக்கள் உள்ள தேசத்துக்காக
மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
தன் மொழியன்றி வேறு மொழியறியா
தன் பண்பாடு அன்றி வேறு பண்பாடு அறியா
தேசத்துக்காக மனம் இரங்குங்கள்

மனம் இரங்குங்கள்
பணத்தை உயிர் மூச்சாக நினைக்கும் தேசத்துக்காக
வயிறு முட்ட உண்டு தூங்கும் தேசத்துக்காக

மனம் இரங்குங்கள்
அத்தகைய தேசத்துக்காக
தமது உரிமைகள் அழிவதை
தமது விடுதலை
வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை
அனுமதிக்கும் மக்களுக்காக

என் தேசமே, உனது கண்ணீர்
விடுதலையை விரும்பிய இனிய நாடே

தமிழில் – வ. கீதா

எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?

கா. ஐயநாதன்

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன.

முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன.
பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி 247 முதல் 336 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 86 முதல் 168 இடங்கள் வரை பெறும் என்றும் இவ்விருக் கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் 148 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் பல்வேறு தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன.

இந்த கணிப்புகள் யாவும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சில நூறு முதல் ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு முடிவை அறிந்து தொகுக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி சில நூறு / ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு இந்நாட்டின் 90 கோடி வாக்காளர்களில் 67% வாக்களித்த தேர்தல் முடிவுகளை இவ்வளவு துல்லியமாக கூற முடியுமா என்று கேட்டால் புள்ளியியல் வழிமுறைகள் (Statistical Methodology) படித்தவர்கள் நிச்சயம் சிரிப்பார்கள். ஏனென்றால் வாக்களித்த 67% வாக்காளர்களின் எண்ணிக்கையானது 60.30 கோடி பேர்! அவர்களின் வாக்கு முடிவுகளைத் சில இலட்சம் வாக்காளர்கள் சொன்னதை வைத்து நிச்சயம் கூற முடியாது என்றே கூறுவார்கள்.

ஆனால் இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் யாவும் இதே தொலைக்காட்சிகள் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே அமைந்துள்ளன என்பது ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்படியான கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் ஏற்கனவே பல தேர்தல்களில் வெளியாகியிருக்கின்றன. அவை யாவும் இறுதியில் வெளியான தேர்தல் முடிவுகளை பிரதிபலித்ததா என்றால் நிச்சயம் இல்லை என்பதே வரலாறாகும். அப்படியிருந்தும் எதற்காக இப்படிப்பட்ட வாக்குக் கணிப்புகள் வெளியிடுகிறார்கள்? பிசினஸ், பெரும் பிசினஸ்.

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை விட வாக்குக் கணிப்பு முடிவுகள் மக்களை பெரிதும் ஈர்க்கின்றன என்பதை அறிந்து அதனை பெரும் வருவாய் பார்க்கும் வர்த்தக வாய்ப்பாக இதை நடத்தும் நீல்சன், சி வோட்டர், சாணக்கியா போன்ற நிறுவனங்களும் அவற்றோடு ஒப்பந்தம் போட்டு வெளியிடும் தொலைக்காட்சிகளும் பெரும் பயன் ஈட்டியுள்ளன. இந்த அமைப்புகள் எதுவும் தேர்தல் முடிவு வெளியாகி அந்த முடிவுகள் இவர்கள் அளித்த முடிவுகளுக்கு மாறாக அமைந்தபோதெல்லாம் அது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை ஏற்றமும் முதலீடும்!

விளம்பரங்களால் கிடைக்கும் இலாபம் மட்டுமேயல்லாமல் மற்றொரு இடைக்கால பெரும் இலாபத்தையும் இந்த வாக்குக் கணிப்புகள் உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, நேற்று இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கூறிய பிறகு, இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தை தொடங்கிய ஒரு நிமிடத்த்திலேயே அதன் குறியீடு 900 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது!

இதன் வணிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? இன்று காலை முதல் சில மணி நேரங்களில் இந்தியப் பங்குச் சந்தைகளில் 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது!

கடந்த இரண்டு வருடங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் பெருமளவிற்கு குறைந்திருந்தன. மும்பை பங்குச் சந்தை 39,000 புள்ளிகளுக்கு மேல் இருந்த நிலை மாறி 37,000 புள்ளிகளுக்கு இறங்கியிருந்து. மக்களவைத் தேர்தலின் 4வது கட்டத் தேர்தல் முடிந்தபோது தேர்தல் முடிவுகள் இப்போதுள்ள ஆட்சிக்கு எதிராக வரும் என்று செய்திகள் வந்தபோது பங்குச் சந்தை வர்த்தகத்தில் இறக்கம் ஏற்பட்டது, குறியீடுகள் குறைந்தன. இந்த நிலையில்தான் நேற்று வந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று கூறியதன் விளைவாக காலை வர்த்தகத்திலேயே சற்றேறக்குறைய ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. பல இலட்சம் கோடிகளுக்கு பங்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இப்படி சில நிமிடங்களில் பங்கு வர்த்தகக் குறியீடுகள் உயர்ந்துள்ளதன் பின்னணியை கூர்ந்து நோக்கி வருவதாக பங்குச் சந்தை வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபி கூறியுள்ளது. ஆக மீண்டும் மோடி ஆட்சிதான் என்ற நம்பிக்கையை உருவாக்கியதன் பின்னணியில் இந்த அளவிற்கு வர்த்தகம் பெருகியுள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் மாறினால்…? அதன் விளைவாக பங்கு வர்த்தகத்தில் இன்றைக்கு ஏற்பட்ட உயர்வு அன்று சரிவாக மாறும். அதனால் இன்று முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படியானால் யாருக்கு இதனால் இலாபம்? கண்காணிப்பு அமைப்பான செபி என்ன சொல்லப் போகிறது என்று பார்ப்போம்.

இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவின் மற்றொரு கோணம் என்ன என்பதைத்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கையாக கூறியுள்ளார். மோடி ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று சொல்வதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகளை மாற்றும் சதிகள் அரங்கேற்றப்படலாம் என்று எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதில் பொதிந்துள்ள உண்மையை உணர வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பொத்தான்கள் எதை அழுத்தினாலும் வாக்கு தாமரைக்கு விழுந்த பல நிகழ்வுகள் செய்திகளாக வந்துள்ளன. அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் – தேவைக்கும் அதிகமாக அங்கும் இங்கும் கொண்டு வரப்பட்டதும் செய்திகளாக வந்துள்ளதைக் கண்டோம். இந்தக் கூடுதல் இயந்திரங்களின் வருகை எதற்காக என்கிற கேள்வி தேர்தல் நிகழ்வுகளை உற்று நோக்கும் எவருக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து தீர்ப்பை மாற்றி எழுதிட முடியும் என்பது கடந்த தேர்தல்கள் வரை பல இடங்களில் நடந்துள்ளதை ஒரு பத்திரிகையாளனாக அறிந்தவன் நான். இதையே பரவலாக செய்ய முடியும் என்றால் நாட்டின் தலையெழுத்து மாற்றப்படுமே? என்கிற கவலையும் எனக்குண்டு. இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே… அதனை இயக்குபவரே விளைவுகளை உருவாக்குகிறார் என்பதை நன்கு அறிந்துள்ளோம். எனவே தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தலை நடத்தும் அலுவலர்கள் வரை நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகவுள்ள இன்றைய நிலையில் இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் அப்படிப்பட்ட தேர்தல் முடிவுகளை நியாயப்படுத்த உதவும் அல்லவா?

“தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்குக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன” என்று ஒற்றை வாக்கியத்தில் எல்லாவிதமான தகிடுதித்தங்களையும் நியாயப்படுத்திட முடியுமன்றோ? அதுவும் ஆளும் கட்சியினரின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயமானவை என்று வாதிடுவதற்கான அறிவார்ந்த பெருமக்கள் அருகிப் பெருகியுள்ள நமது நாட்டில் எதையும் நியாயப்படுத்த முடியும் அல்லவா? எனவேதான் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கை அர்த்தமுடையதாகிறது.

தங்களுக்கான அரசை தாங்களே வாக்களித்து தீர்மானிக்கும் உரிமைதான் சுதந்திரம் பெற்றதன் மூலம் இந்நாட்டு மக்கள் பெற்றுள்ள மாபெரும் உரிமையாகும்.

அவர்கள் வாக்களித்து அதன் முடிவு ஒரு தொங்கு மக்களவை ஏற்பட்டாலும், மக்கள் அளித்த முடிவுகளை ஒட்டியே அடுத்த ஆட்சி அமைவது நடக்க வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை இயந்திரங்களைப் பயன்படுத்தி மாற்றியமைப்பது போன்று எவ்விதமான தகிடுதித்தங்கள் நடந்தாலும் அது இந்நாட்டு மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமையை நேரடியாக பறிக்கும் அடாத செயலாகும். அதனை ஏற்கவும் முடியாது, அதை செய்யும் அரசியல் கட்சிகள் இந்நாட்டு அரசியலில் நீடிக்கவும் கூடாது என்பதில் ஜனநாயக விரும்பிகள் உறுதியாக நிற்க வேண்டும்.

23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் மக்களின் தீர்ப்பும் எதுவாக இருப்பினும் அதனை நேர்மையாக ஏற்பதே கட்சிகள் அனைத்தும் ஏற்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பாகும். எனவே திசைதிருப்பல்களுக்கு மதிப்பளிக்காமல் மக்கள் தீர்ப்புக்காக காத்திருப்போம்.

கா. ஐயநாதன், அரசியல் விமர்சகர்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்

ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

“…இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன்.

இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் வளர்க்கின்ற மாய்மாலத்தையும், ஆரியப் பெருமையையும் தமிழர்கள் ஆப்பறைந்து தகர்த்திருக்கிறார்கள். இனியும் தகர்ப்பார்கள்.

இவர்களது இயக்கத்துக்கு எதிரான, எதிர்மறை அவசியமாகவே திராவிடர் இனப்பற்றும், தமிழர் படைகளும், தமிழகத்தில் பெருகி வளர்ந்தன! இந்த வெறியர்களுக்கும் கொலைகாரர்களுக்கும்தான் கடவுள் பக்தி என்றால், அது காரணமாகவே இவர்களுக்கு எதிராக நாத்திகக் கொள்கையும் நம் இளைஞர்களிடையே பரவிற்று.

ஆயினும் இந்த ஆர்.எஸ்.எஸ்.க்குத் தகுந்த பதில் தர வேண்டுமாயின் அவர்கள் இயங்குவதைப்போல நமது தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளும் விவேகாநந்தர், காந்திஜி, பாரதி, ராமலிங்க அடிகளார் போன்றோரின் சமரச சத்திய ஞான போதனைகளைப் பயிற்றுவிக்கிற இளைஞர் இயக்கங்களை ஊர்கள் தோறும் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம். இன்று இந்தியா அமைக்கப் போராடுவது – ஹிந்து ராஷ்டிரம் அல்ல, சோஷலிச பாரதமே என்று உணர்த்த வேண்டும்!

சிவப்பு உடையணிந்த சிங்கங்கள் அணி அணியாய் நின்று ஊர்கள் தோறும் கவாத்துப் பழக வேண்டும். கரலாக்கட்டை சுழற்ற வேண்டும். கம்பெடுப்பார்க்குக் கம்பெடுத்துக் காட்ட தசையில் முறுக்கேற்றி நமது இளைஞர் பட்டாளத்தைத் திரட்டிக் காட்ட வேண்டும். சோஷலிச சமுதாய லட்சியங்களை அவர்கள் கொள்கைகளாக நிற்கச் செய்தல் வேண்டும்.

நமது `ஹிந்து ராஷ்டிர’த்தின் உயர்வுக்குக் காரணம் இங்கு பிற மதத்தினரும் பிற கொள்கைகளும் தழைத்ததே ஆகும். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பௌத்த இன்னும் பல சமயங்களைச் சார்ந்தும் சாராமலும் இந்தியாவை இயக்கி வாழ்கிற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்குத் தனியுடமை தவிர்த்த சோஷலிச சமூகமே வேண்டும் என்ற விவேகாநந்தரின் பெரு நெறியை நாம் கைக் கொள்ளுதல் வேண்டும்.

தமிழகமே உஷார்! இவர்களைச் சந்திக்கத் தயார் நிலையில் நில்! ஆர்.எஸ்.எஸ். பற்றிய எனது பார்வை வெறும் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டவை அல்ல; ஆதாரபூர்வமான தஸ்தாவேஜுகளையும் நம் காலச் சரித்திர நிகழ்ச்சிகளைக் கவனித்து வந்த அனுபவத்தாலும் உருவான எச்சரிக்கை ஆகும்.
இதனைச் சித்தாந்த ரீதியில் எழுத்திலும் மேடையிலும் சந்தித்துச் சமர்புரிந்து நம்மால் வென்றுவிடுவது முடியும். ஆயினும் அது மட்டும் போதாது; ஆர்.எஸ்.எஸ்.ன் செயற்பாடு அந்த நாகரிகத்தின் எல்லைகளை மீறிவிடும். வெல்ல முடியாத காந்தியைக் கொல்ல முடியும் என்று நமக்குக் காட்டிக் கொக்கரித்தவர்கள் இவர்கள்!

ஆகவே தசை வலிமையும் , வாளெடுப்போர்க்கு வாளால் பதில் சொல்லும் வலிமையும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி இது எமது படை என்று தேசிய, சோஷலிச – லட்சியம் கொண்ட இயக்கத்தினர் செயல்படத் தொடங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!’’

(எழுத்தாளர் ஜெயகாந்தன் கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் 2-வது பகுதி இது.)

குஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்!

சந்திரமோகன்

குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது.

“பெப்சி நிறுவனம் லேஸ் என்ற பிராண்ட் சிப்ஸ்க்கு பயன்படுத்தும் FC5, FL- 2027 என்ற ரக உருளைக்கிழங்கை நான்கு விவசாயிகள் கள்ளத்தனமாக பயிர் செய்கிறார்கள் ; எனவே ஒவ்வொருவரும் ரூ.1.05 கோடி நட்ட ஈடு தர வேண்டும் ” என்பது வழக்காகும்.

துப்பறியும் நிபுணர்களை வைத்து விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவதை வீடியோ செய்து வழக்கு போட்டுள்ளது. இந்திய விவசாயிகளை துப்பறியும் நிலைமையில் அமெரிக்க பெப்சி உள்ளது!?

இதனால், பெப்சிகோ PepsiCo கம்பெனிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகியுள்ளது; பெப்சி லேஸ் சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களை புறக்கணிக்க இயக்கம் வலுப் பெற்றுள்ளது.

தங்களுடைய ரக உருளைக் கிழங்கை தங்களுக்கே தர வேண்டும் ; வேறு யாருக்கும் விற்கூடாது எனவும், கோர்ட்டுக்கு வெளியில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் தற்போது பேரமும் நடக்கிறது ; ஜூன் 12 வழக்கு விசாரணைக்கு மீண்டும் வருகிறது.

பெப்சியும் காண்ட்ராக்ட் விவசாயமும்

அமெரிக்காவின் பெப்சி கம்பெனியானது, குளிர் பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் உலக விற்பனையில் ஜாம்பவான் ஆகும்.

Lays chips /லேஸ் சிப்ஸ் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கொடி கட்டி பறக்கிறது ; சிப்ஸை தயாரிக்க ஆண்டிற்கு தேவைப்படும் சுமார் 1 இலட்சம் டன் உருளைக் கிழங்குகளை இந்தியாவில் பஞ்சாப், குசராத், உபி, பீகார், மே.வங்காளம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் 24,000 விவசாயிகள் உற்பத்தி செய்து தருகின்றனர்.

2002 ல் துவங்கி, ஒப்பந்த விவசாயம் Contract farming என்ற முறையில் உருளை, பாசுமதி அரிசி எனப் பலவற்றையும் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செய்து வாங்குகிறது. விவசாயிகளுக்கு தான் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு சந்தையுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு மேல், “ஒப்பந்த விவசாயம்” பெரியளவு இலாபகரமான விவசாயமும் இல்லை.

பெப்சி போன்ற பன்னாட்டு கம்பெனிகள், விவசாயிகளிடம் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான உருளை ரகத்தின் விதைகளை வழங்கி விடுகின்றன. அதற்கான விலையை, உற்பத்தி செய்து தரவேண்டிய size தரம், உற்பத்தி இலக்கு (Price, Quality & Quantity) ஆகியவை மீது ஒப்பந்தம் செய்து விடுகின்றன.

உருளைக் கிழங்கு சைஸ் குறைந்தால் அல்லது பெரிதானால் விலை குறைந்துவிடும்; பச்சைக் கலர் வந்துவிட்டால், அறுக்கும் போது அடிபட்டால் அந்த கிழங்குகளை பெப்சி எடுக்காது.

மலிவான விலைக்கு உருளை தருவதற்காக அதிக உரம் பயன்படுத்தப்பட்டு விவசாய மண் கெடுகிறது ; தொடர்ந்து ஒரே பயிரை (சுழற்சி இல்லாமல்) பயிரிடுவதால் சுற்று சூழல் பிரச்சினையும் ஏற்படுகிறது.

சிப்ஸ் விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்க, அற்பசொற்ப விலையில் விவசாயிகளிடம் உருளை கிழங்கை வாங்குவதும் இல்லாமல், விவசாயியின் பயிர் செய்யும் உரிமை மீதும் போர் தொடுத்துள்ளது, பெப்சி PepsiCo நிறுவனம்.

சட்டம் கூறுவது என்ன?

PPV & FR Act 2001 தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டம் 2001 ( Protection of Plant varieties and Farmer’s Rights Act 2001) பிரிவு 64 ன் அடிப்படையில் தங்களுடைய ரகத்தை பயிர் செய்ய கூடாது என்கிறது, பெப்சிகோ நிறுவனம்.

ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 39 ன் அடிப்படையில் “…. இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு பயிர் ரகம் உள்ளிட்டு, ஒரு விவசாயி தனது வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க, பயன்படுத்த, விதைக்க, மீண்டும் விதைக்க, பரிமாறிக் கொள்ள அல்லது விற்பனை செய்ய ” அனுமதிக்கப்படுகிறார். அதாவது, விவசாயியின் உரிமைகள் என்பதன் கீழ் வந்து விடுகிறது. ஆனால், பெப்சி நிறுவனம் மிரட்டிப் பார்க்கிறது.

‘நிலம் எனது உரிமை  விதை எனது உரிமை’ எனப் போராடும் நிலை உருவாகியுள்ளது.

காண்ட்ராக்ட் விவசாயத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய சட்டம், நீதி ஒரு பிடியளவு வாய்ப்பு வழங்கினால் கூட, விதைகளின் மீதான சுயாதிபத்தியத்தை  உணவு பாதுகாப்பை விவசாயத்தை இழந்திடுவோம்!

விவசாயிகள் உரிமைகளுக்காக நாடு முழுவதும் எழுந்து நிற்க வேண்டும்!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !

எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம்.

…………………………………………………………………………………………

எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன்

`ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது.

1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது போல் தோற்றம் காட்டி, பெருகிவரும் காளமேகம் போல் விரிந்து பரந்து தமிழ் இளைஞர்களைக் கவர்ந்துகொள்ள முயன்றது. ஓரளவு நாடெங்கிலும் நம்மீது இது கவிந்து பற்றியது என்றும் சொல்லலாம்.

என் வயதொத்த ஆரம்பப் பள்ளிச் சிறுவர்கள் முதல், கல்லூரி மாணவர்கள் வரை, ஏன் – பல வயதான ஆசிரியர்கள்கூட அதனால் அக்காலத்தில் வசீகரிக்கப்பட்டிருந்தனர்.

மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவர்களை அவர்களத்து பெற்றோர்களே “தம்பி சங்கத்துக்குப் போகலியா நீ! சீக்கிரம் போய்விட்டு வா’’ என்று ஊக்கப்படுத்தி அனுப்புகிற அளவுக்கு இந்தச் சங்கத்தின் நடவடிக்கைகள் பெரியோர்களையும், பெற்றோர்களையும் தன்பால் ஈர்த்திருந்ததை நான் அறிவேன்.

இந்தச் சங்கம் நமது இளைஞர்களுக்கு மதப் பற்றும், தெய்வ பக்தியும் ஊட்டி, தேக ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி, இளைஞர்கள் மத்தியில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உருவாக்கி, சமூகப் பணிபுரிவதாகவும் அக்காலத்தில் பெரிதும் நம்பப்பட்டது.

பார்த்துக் கொண்டிருந்தேன்…

எனது பாலிய கால நண்பர்களும், எனது சகோதரர்களுக்கு இணையான என் சுற்றத்து இளைஞர்களும் `சங்கம், சங்கம்‘ என்று ஜபித்துக் கொண்டு இதில் சங்கமமானதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பருவத்தில் எனக்கிருந்த விசேஷ மனோநிலையின் காரணமாய் நான் பொதுவாக குழந்தைகளின் இயல்பிலிருந்து மாறுபட்டவனாக இருந்தேன். பொதுவாக நான் வீதியாட்டங்களிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடாத `சீரியஸ் டைப்’ குழந்தையாகக் கன்னத்தில் ஊன்றிய கையுடன் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்கினேன். ஆயினும் ஓர் வேடிக்கைபோல் அவர்களது நடவடிக்கைகள் என்னையும் ஈர்த்ததால் அவர்களிடமிருந்து நான் சற்று விலகி நின்று, ஆனால் அவர்களை உன்னிப்பாகக் கவனித்தேன்.

அவர்களில் முஸ்லிம் சிறுவர்களோ, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சிறுவர்களோ, கிறிஸ்துவர்களோ ஒருவர்கூட இருக்கவில்லை. எனது பாலியப் பருவத்தில் நான் சிலகாலம் ஒரு முஸ்லிம் பள்ளியில் படிக்க நேர்ந்தது. எனது நண்பர்களில் சிலர் முஸ்லிம்கள்; சிலர் கிறிஸ்துவர்கள்; சிலர் பிராமணச் சிறுவர்கள்; சிலர் பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துப் பையன்கள். எனது பிராமண நண்பர்களும், பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துச் சிறுவர்களும்தான், – அனேகமாக அவர்களனைவருமே இந்த ஆர்.எஸ்.எஸ்.-ல் பங்கு பெற்றிருந்தனர்.

எல்லா ஊர்களிலும் ஒரு மைதானத்தில் இவர்கள் கூடிப் பலவித விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள். மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற தீர விளையாட்டுக்களைப் பயிற்றுவிப்பார்கள். ஒருமுறை கேடயமும் வாளும் ஏந்தி இரண்டு வீரர்கள் அங்கே போர் பயின்றனர். அந்த வீர விளையாட்டை அனைவரும் புகழ்ந்தனர். எனக்கு ஏனோ அதைக் காணும்போதும், மற்றவர்கள் அந்த வாட்போரைப் புகழ்ந்தபோதும் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

காட்டுமிராண்டிகளே போல்…

ஏனெனில் அக்காலத்தில்தான் டாங்கிகளும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நவீன யந்திரத் துப்பாக்கிகளும் குண்டு மழை பொழிந்து உலகைக் குலுக்கிய இரண்டாவது மகாயுத்தம் நடந்து முடிந்திருந்தது. பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக்கால காட்டுமிராண்டிகள்போல் ஆடுகிறார்களே என்று எனக்கு வேடிக்கையாக இருந்ததில் அதிசயம் என்ன!

இவர்கள் தங்களுக்கு அரசியல் நாட்டமில்லை என்று சொல்லிக் கொண்டார்கள்; ஆனால் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் அடிக்கடி உட்கார்ந்து அரசியல் விமர்சனங்களே செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசியல் விமர்சன விவாதங்களில் மட்டும் நான் ஆர்வமாகக் கலந்துகொண்டேன்.

நான் ஒரு ஹிந்து' என்று ஒருவகை, அருவறுக்கத்தக்க ஆவேசத்துடன் இவர்கள் கூறிக் கொண்டார்கள். அமைதியும் சாந்தமும் அகிம்சையும் வடிவமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மகாத்மா காந்ந்திஜியின் மூலம் இந்தஹிந்து’ என்ற வார்த்தைக்கு உயரிய பொருள் கொண்டு – நானும் ஒரு ஹிந்துவே என்று உணர்ந்தவன் நான். ஆயினும் இந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் நான் ஹிந்து… ஹிந்து‘ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு நின்றபோது -நான் ஹிந்து இல்லை… ஹிந்து இல்லை‘ என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

இரண்டாம் உலக மகாயுத்த நிகழ்ச்சிகள் அக்காலத்தில் என்னுள் உலகத்தைப் பற்றிய விரிவான பார்வையை உருவாக்கி விட்டிருந்தன போலும்!

நான ஹிட்லரைப் பற்றியும், நாஜிசத்தைப் பற்றியும் அறிந்திருந்தேன். அந்த யுத்தத்தைப் பற்றியும், ஹிட்லரைப் பற்றியும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் வேறுபட்ட விபரீதமான கருத்துக்களை வைத்திருந்ததையும் அவர்களோடு பேசி, விவாதித்து அறிந்தேன்.

ஆனால் ஹிட்லர் தோற்றொழிந்தான். அவனது ஸ்வஸ்திக் கொடிகள் செஞ்சேனையின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வீறு அழிந்தன! அவை பறந்த இடங்களிலேயே அவற்றின் சுவடற்றுப் போயிற்று. ஆரிய இனவெறியின் ஆதிபத்தியம் என்கிற கோஷமே சமாதிக்குள் நிரந்தரம் கொண்டது. உலகையே அழித்து அடிமை கொள்ளும் அந்த மாபெரும் அச்சுறுத்தலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து பாசிசத்தின் மீது உலகமே வெற்றி கொண்டு விழாக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் நம்மூர் மைதானத்தில் அதே ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஒரு காவி முக்கோணக் கொடியை ஏற்றி நெஞ்சில் கை வைத்து சல்யூட் அடித்து நின்றனர்… எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்!

`என்ன அநியாயம் அல்லது அறிவீனம்!‘ என்றுதான் நான் அப்போது அலட்சியமாக எண்ணினேன். இது என்ன ஆபத்து என்று எனக்குத் தோன்றவே இல்லை. எனக்குத் தோன்றாததில் அதிசயம் ஒன்றும் இல்லை. யாருக்குமே தோன்றவில்லை அக்காலத்தில் – அது ஒரு புதிய ஆபத்தின் அறைகூவல் என்று!

நான் எனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டேன். அவர்களனைவரும் ஒன்று – தேசியவாதிகள்; அல்லது – கம்யூனிஸ்டுகள். அவர்கள் தந்த தகவல்களின் உதவியோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளையும் வாதங்களையும் சீர்தூக்கிச் சிந்தித்ததில் இவர்கள் முற்றமுழுக்க பாசிசத்தையே ஹிந்து வர்ணம் பூசித் தரித்துக் கொண்டவர்கள் என்று கண்டேன். அப்போதுகூட அது ஒரு வேஷம் அணிந்துகொண்டு பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத் தனம் என்றே நினைத்தேன்.

அப்போது நான் விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளிகளின் பிள்ளைகளோடு இருந்தேன். ரயில்வே காலனி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாலை நேரங்களில் கூடிக் கவாத்து பழகுவார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் ரயில்வே காலனிக்கு வெளியிலிருந்து வருவார்கள். காக்கிக் கால்சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் அணிந்திருப்பர். ஒரு சிலர் தலையில் கறுப்புக் குல்லாயும் தரித்திருந்தனர். விளையாடும் மைதானத்தின் நடுவே தங்களுடைய காவிக் கொடியை நட்டு வைத்து வணங்குவார்கள்.

நானும் சில ரயில்வே தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் நாள்தோறும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர்களோடு சேர்வதில் எனக்கிருந்த கடுமையான ஆட்சேபம் மற்ற நண்பர்களை அவர்கள்பால் செல்லாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல அவர்களில் சிலர் சற்றுத் தயக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். விளையாட்டில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது:

இவர்களிடம் இவர்களுக்குத் தெரியாத அரசியல் பற்றியும் உலக விவகாரங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் ஏற்படாது. அவற்றைப் பேச வேண்டிய இடமும், பேச வேண்டிய நபர்களும் வேறு. நாம் சிறுவர்கள். சிறுவர்களான நமக்கு விளையாட்டும், தேகப் பயிற்சியும், கட்டுப்பாடும் மிக மிக அவசியமே! அதை மற்ற தேசியக் கட்சிகளிடமும் கம்யூனிஸ்டு கட்சியிடமும் பெற முடியாத சிறுவர்கள் ஒரு சில நல்ல நோக்கங்களுடனே இந்த ஆர்.எஸ்.எஸ் விளையாட்டு அரங்கத்தில். புகுந்துவிடுகிறார்கள். பிறகு மெள்ள மெள்ள அவர்களுக்கு மிக இணக்கமான முறையில் எண்ணற்ற விஷக் கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன்ன. இறுதியில் இவர்கள் கடைந்தெடுத்தஹிந்து வெறி’யர்களாக உருவாக்கப்படுகிறார்கள். அதாவது அவரவர் தரத்துக்கேற்ப இந்த வெறி பிரயோகிக்கப்படுகிறது. இதுவே இவர்களின் செயல்திட்டம்; இயக்க நடைமுறை!

இதிலிருந்து நமது நண்பர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாமும் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்க வேண்டும். கவாத்துப் பழக வேண்டும். மல்யுத்தம், சிலம்பம், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் சற்றும் விருப்பமில்லாத ஒரு `பிரகிருதி‘ நான். எனினும் இதில் விருப்பமுள்ளவர்களை ஒன்றிணைக்க நாமும் முயற்சி எடுத்தல் வேண்டும்!’ என்று தீர்மானித்தேன்.

எனது எண்ணத்தை எனது நண்பர்களிடம் பல நாட்கள் பேசியதன் விளைவாக விழுப்புரம் ரயில்வே காலனியில் ஆர்.எஸ்.எஸ்.. விளையாட்டு அரங்கத்துக்குப் பக்கத்திலேயே ரயில்வே காலனி பாலர் சங்கம்’ என்றொரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆர்கனைசரான நான் அதில்கேப்டன்!’

எங்கள் பாலர் சங்க முயற்சிகள் நல்ல பலன் அளிக்க ஆரம்பித்தன. ஐம்பதிலிருந்து எழுபது வரை அதன் அங்கத்தினர்கள் பெருகியிருந்தனர். ரயில்வே காலனி மைதானத்தில் ஒரு பக்கம் காவிக் கொடியும், இன்னொரு பக்கம் செங்கொடியும் பறந்தன. தோளில் சாத்திய செங்கொடியுடன் ரயில்வே காலனி குழந்தைகளை அணிவகுத்துக் கொண்டுவந்து – மைதானத்தின் நடுவே செங்கொடியை நட்டுவிட்டு, ஓர் ஓரமாய் ஒதுங்கிக் கன்னத்தில் ஊன்றிய கையுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் வருகிற வரை விளையாடுவதில்லை என்று எனக்கு ஒரு சிறுபிள்ளை வைராக்கியம் உள்ளூர இருந்ததே!

சுதந்திரத்துக்குப் பின்னால்…

இந்தியா சுதந்திரம் பெற்றது! மிக விபரீதமான ஒரு சூழ்நிலையில் நாம் சுதந்திர துவஜத்தைப் பறக்க விட்டோம். நாடு துண்டாடப்பட்டது! நம்மில் பலருக்கு அதில் சம்மதமில்லை. ஒன்றுபட்ட அடிமை இந்தியாவா? துண்டாகிப் பிளவுண்ட சுதந்திர இந்தியாவா? விடுதலை பெற்ற நாடுகளாக இருந்தால் நாம் மறுபடியும் ஒன்றுபட்டு விட முடியாதா என்ற நம்பிக்கை போலும்! பாகிஸ்தானைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற மூர்க்கமான நிலைமையில் இந்தியா தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது.

`நாடு பிரிவது என்றால் என் பிணத்தின் மேல்தான் அந்தப் பிரிவினை நடக்கும்‘ என்று உறுதியாகச் சொல்லி விட்டார் மகாத்மா காந்தி. இந்திய தேசிய அரங்கில் விவாதங்களும் சமாதானங்களும், வேண்டுகோள்களும் ஒரே குழப்படியாயிருந்தன. இவற்றிலிருந்து விலகுவதற்குப் பிரிவினையை ஒத்துக்கொள்ளுவதைத் தவிர அதை விரும்பாதவர்களுக்கு வேறு வழியில்லாது போயிற்று. நாட்டுப் பிரிவினையும் நாட்டுச் சுதந்திரமும் ஒரே போதில் நமக்கு நேர்ந்தது.

எனினும் இந்தியா இருநூறாண்டு அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றது.
இந்தச் சுதந்திர தின மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியாமல் மகாத்மா காந்த்தி மனம் நொந்து கிடந்தார்.

அதே நேரத்தில் புனாவில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

திலகரும் கோகலேயும் ஒரு காலத்தில் சுதந்திர முழக்கமிட்ட அந்தப் பழம்பெரும் பாரம்பரியம் மிகுந்த நகரமே சுதந்திரக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் ஒரு மைதானத்தில் அந்தக் காவிக் கொடி ஸ்வஸ்திகா சின்னத்துடன் பறக்கவிடப்பட்டு, ஐநூறு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு இந்திய நாஜிகளின் கொடியை ஏற்றி வணங்கினர். ஆம்; இந்தக் கொடியும் ஹிட்லரின் மூன்றாவது ரீச்சினுடைய கொடியும் சிறு வித்தியாசத்துடன் ஒரே கோஷத்தைத்தான் பொறித்துக் கொண்டிருந்தன.

ஸ்வஸ்திகா ஆரியர்களின் சின்னமாம்! புனாவில் கூடியிருந்த இந்த இளைஞர்களும் தாங்கள் மகத்தான ஆரியர்களின் வழித் தோன்றல்கள் என்றே நம்பியிருந்தனர். இதில் கலந்துகொண்ட சிலர், தனிமனிதர்களைக் கொல்லும் தவநெறியை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.
ஹிந்து சாம்ராஜ்யம்‘
சிந்து நதியின் தலைப் பகுதியிலிருந்து கிழக்கே பர்மா வரையிலும், திபெத்திலிருந்து குமரி முனை வரையிலும் விரிந்து பரந்த ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதையே தங்களது
உன்னத லட்சியமாக‘க் கொண்டவர்கள் இவர்கள்.

இந்திய மக்களின் நவீன கால அடிமைத்தனத்துக்கெல்லாம் ஆணி வேரான மத வேற்றுமையைக் களைந்து `ஹிந்து – முஸ்லிம் ஏக்ஹோ!’ என்று சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் நம்மிடையே கட்டிக் காத்து நின்ற மகாத்மா காந்தியை இவர்கள் தங்கள் முதல் எதிரியாகக் கருதினர். அவர்கள் கருத்துப்படி காந்திஜியும் அவரது இயக்கமும்தான் ஹிந்து ராஷ்டிரத்தின் ஆகப் பெரிய முதல் எதிரி! தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு!

காந்திஜியின் அகிம்சை எனும் ஆத்ம வீரத்தை, ஆண்மையற்ற கோழைத்தனம் என்று இவர்கள் அறுதியிட்டுக் கணித்தனர். ஹிந்துக்களின் பலத்தையும் வீரத்தையும் காந்திஜியின் அகிம்சை தத்துவம் மாசுபடுத்திவிட்டது என்று இவர்கள் குற்றம் சாட்டினர்!

ஆம்! இந்தியாவில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட எல்லா மதத்தினரும் சகோதரர்களே! இவர்கள் மத்தியில் சமத்துவமும் சகோதரத்துவமும் ஏற்படுவதே இந்தியாவின் லட்சியம் என்று மகாத்மா நமக்குக் கற்பித்து நிலை நாட்டிய கொள்கைக்கு இவர்கள் கனவு கண்ட, காண்கிற, அந்த ஹிந்து ராஷ்ட்டிரத்தில் இடம் கிடையாதே…!

ஆரியர்களின் வாரிசுகளும், அகண்ட ஹிந்துஸ்தானத்தின் அதிபர்களுமான இவர்கள் இந்திய உபகண்டத்துக்கே தாங்கள்தான் உரிமையானவர்கள் என்று ஜெர்மன் நாஜிகள் போன்றே நம்பினார்கள்! இந்தியாவைத் தாக்கி அடிமை கொண்ட முகலாயர்களின் தற்கால வாரிசுகளாகவே கருதி இந்தியாவிலுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களை இவர்கள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து வெறுத்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அகண்ட ஹிந்து ராஷ்டிரத்தைத் துண்டாடுவதற்கு இறுதியில் காந்தியும் ஒப்புக் கொண்டார் என்று விஷந்தோய்ந்த குற்றச்சாட்டை அவர்கள் கூர்மை ஆக்கினர். இறுதிவரை பிரிவினையை ஏற்காத தேசத் தந்தையை இவர்கள் அபாண்டமாகச் சந்தேகித்துப் பழித்துக் கூறி, அதை மன்னிக்க முடியாத மாபெரும் துரோகமாகக் கருதினார்கள்.

கோட்ஸேயின் குருநாதன்

இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஒருவனாகவே 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் நின்றிருந்தான் நாதுராம் விநாயக கோட்ஸே! முப்பத்தேழு வயதுடைய ஒரு பத்திரிகைக்காரன், ஹிந்து ராஷ்டிரம் என்ற பத்திரிகையின் ஆசிரியன். தனிப்பட்ட முறையில் ஓர் ஊனமுற்ற ஆத்மா இவன்.

கோட்ஸேயின் தந்தை ஒரு தபால்காரர்; சநாதன பிராமணர்; மஹாராஷ்டிர பிராமணர்களுக்கே உரிய உயர் ஜாதி மனோபாவம் உடையவர். கோட்ஸே மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ண முடியாதவன் என்றாலும் மராத்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் பாண்டியத்யம் உடையவன். சிறு வயதிலேயே மாந்திரீக சக்தி நிறைந்த குழந்தையாக மதிக்கப்பட்டவன். அவன் வாழ்க்கை நடத்துவதற்குப் பலவித முயற்சிகள் மேற்கொண்டு எல்லாவற்றிலும் தோல்வி கண்டவன்.

இவன் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்தான். அதன் அதிதீவிரக் கொள்கைகளுக்கு இவனது வெறியுள்ளம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. தீவிர ஹிந்து மறுமலர்ச்சியின் தோற்றத்தைக் காண்பதைவிட, அதன் எதிரிகளை ஒழிக்கிற துர்த் தேவதையாகத் தன்னை அவன் பாவித்துக் கொண்டான். அவன் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த இந்தப் பாத்திரத்தில் தோல்வி அடைய மாட்டான் என்றே நம்பினான்! இவன் ஒரு சாமியார்த்தனம் கொண்ட நபர்; பெண்களை வெறுக்கிறவன், கண்டாலே கூசி ஒதுங்கும் சுபாவம் உடையவன். அவனது தாயைத் தவிர வேறு பெண்களை அவன் மதிப்பதோ, நேசிப்பதோ இல்லை. இவனது குருவாகவும், வழிகாட்டியாகவும், சூத்திரதாரியாகவும் திகழ்ந்தவர் வீர சவர்க்கார்.
புனாவில் வாழ்ந்த ஹிந்து வெறியர்கள் – சிவாஜி, பேஷ்வாக்கள் வரிசையில் வைத்து வீர சவர்க்காரைப் பூஜித்தனர்.

சவர்க்கார் ஹிட்லரைப் போலவே, தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இளைஞர்களின் நெஞ்சை அள்ளும் நாவன்மை படைத்தவர். காந்தி, நேரு போன்றே இங்கிலாந்தில் சட்டப் படிப்பை முடித்தவர். அவர் காங்கிரஸில், காந்திஜியின் சாந்நியத்தின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியதற்குக் காரணம் – சவர்க்காரிடம் உள்ளார்ந்து குடிகொண்டிருந்த தனி மனிதக் கொலைவெறியே ஆகும். அரசியல் கொலையை ஒரு கலையாகப் பயின்றவர் அவர்.

இந்திய நாஜிகள்…

1910-ல் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்ய உத்தரவிட்டு உதவி செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார் சவர்க்கார். விசாரணைக்குக் கொண்டு வரும்போது கப்பலிலிருந்து தப்பினார் அவர். பிரான்சுக்குள் பதுங்கியிருந்தபோது பிடிபட்டு வெளியேற்றப்பட்டார். பின் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமானில் தீவாந்திர சிட்சை பெற்றார். இரண்டாவது மகாயுத்தம் வெற்றிகரமாக முடிந்த காரணத்தால் கிடைத்த சலுகையினால் பின்னர் விடுதலையானார் வீர சவர்க்கார். அதேபோல பஞ்சாபிலிருந்த ஒரு கவர்னரையும் பம்பாயிலிருந்த ஒரு கவர்னரையும் கொலை செய்ய முயன்ற திட்டத்தில் தோல்வியும் கண்டார் சவர்க்கார்.

அந்தமான் வாழ்க்கைக்குப் பிறகு கொலையாளிகளுடன் தமக்குள்ள உறவை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டார் சவர்க்கார். இவரோடு மிகவும் அத்யந்த தொடர்பும் அளப்பரிய குருபக்தியும் கொண்டிருந்த அந்த மாறுகண்ணன் நாதுராம் விநாயக கோட்ஸேயின் தலைமையில்தான் சுதந்திர தினத்தன்று புனாவில் இந்திய நாஜிகளின் புதிய தாக்குதலுக்கு முஸ்தீபு செய்யப்பட்டது.

தேசம் சுதந்திரம் பெற்ற நாளன்று வெளியான கோட்ஸேயின் பத்திரிகையில் தலையங்கப் பகுதியில் வெற்றிடம் விட்டுச் சுற்றிலும் கறுப்புக் கட்டித் துக்கம் கொண்டாடப்பட்டது!

அந்தக் கொடியேற்று விழாவில் கோட்ஸே பேசினான்:

“நமது தேசம் துண்டிக்கப்பட்டது ஒரு பேராபத்தான நிகழ்ச்சியாகும். பல கோடி ஹிந்துக்களை துன்பத்திற்கு இழுத்துச் செல்லும் நாள் இது. இந்தக் கொடுமைக்கு காங்கிஸைவிட காந்தியின் செயலே காரணமாகும்.‘’

நாதுராம் கோட்ஸேயின் தலைமையில் நின்ற ஆர்.எஸ்.எஸ். வீரர்கள் அன்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை இதோ:

“நான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டுக்காக எனது உயிரைத் தரச் சித்தமாக இருக்கிறேன்‘’ என்பதே இந்திய நாஜிகளின் பிரதிக்ஞை!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இங்கு மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், தேசப் பொருளாதாரத்தைப் பெருக்கி, சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை நிர்மாணிக்கப் பெரும் தியாகங்களை நாம் மேற்கொள்ள சித்தமாக இருந்த நேரத்தில், பகைமையும் வெறுப்பும் ஆரிய இனவெறியும் கொண்டு ஓர் ஹிந்து ராஷ்டிரத்தை ஸ்தாபிக்க இவர்கள் விரதம் மேற்கொண்டு எதிர்ப்புரட்சிக்காரர்களாக உருவாயினர்.

இன்று, பிரிந்துபோன பாகிஸ்தானில் எப்படி ஒரு மதத்தின் பேரால் ஆதிக்க வெறியர்களும் ராணுவ சர்வாதிகாரிகளும் ஆட்சி நடத்துகின்றனரோ அதே போன்று ஹிந்து மதத்தின் பேரால், இங்கே வாளேந்தி மற்ற மதத்தினரைப் பூண்டோடு அழிக்கவும் சர்வாதிகார ஆட்சியை நிறுவவும் இவர்கள் அன்றே போர் சன்னத்தர்களாயினர்.

வேதத்தையும் கீதையையும் ஆரிய நாகரிகத்தின் பெருமையையும் வெறும் வெளிப்பூச்சாக, அலங்காரக் கவசமாக அணிந்து இவர்கள் தேசமெங்கும் மதவெறிக் கலகங்களையே விசிறிவிட்டனர்.

ரத்த ஆறு…

நவகாளியிலும் பஞ்சாபிலும் கல்கத்தாவிலும் டெல்லியிலும் சங்கிலித் தொடர் போன்ற வகுப்புக் கலவரங்களினால் ஹிந்து- முஸ்லிம் சகோதரர்களின் ரத்த ஆறு பெருக்கெடுத்தோடச் செய்தனர். வீடிழந்த, மானமிழந்த அகதிகளின் கூட்டம் அலை அலையாய் நாடெங்கும் தோன்றச் செய்தனர்.

மகாத்மா காந்தி கல்கத்தாவில் 1947 செப்டம்பர் முதல் தேதி இந்த வகுப்புக் கலவரங்களைக் கண்டனம் செய்து சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது மந்திர சக்தியால் கல்கத்தா நகரில் மூன்று தினங்களில் அமைதி நிலவியது. அப்போது ராஜாஜி வங்காள கவர்னராக இருந்தார். காந்திஜியின் உண்ணாவிரதத்தால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று எண்ணிய ராஜாஜி “பாபுஜி தாங்கள் குண்டர்களை எதிர்த்து உண்ணாநோன்பு இருப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?‘’ என்று வினவினார்.

“அந்தக் குண்டர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பின்னாலிருந்து தூண்டிவிடுகிறவர்களின் மனமாற்றத்துக்காக நான் உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்‘’ என்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தமது எழுபத்தியெட்டாவது வயதில் காந்திஜி தொடங்கியது கண்டு தேசமே பதை பதைத்தது.

மூன்று தினங்களுக்குப் பிறகு கல்கத்தா நகரத்தில் வாழ்ந்த ஹிந்துக்களும், முஸ்லிம்களும், பிற மதத்தினரும் காந்திஜியிடம் வந்து தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், எந்த மாற்று மதத்தினருக்கும் இன்னொரு மதத்தினரால் துன்பம் நேராமல் பாதுகாப்பதாகவும் உறுதி தந்தனர். மக்கள் ஒன்றுபட்டு அமைதிகாத்த அதே நேரத்தில் நினைத்தால் நெஞ்சு விம்முகிற நிகழ்ச்சியும் நடந்தது.
இருபது கொலைகாரர்கள் தங்கள் கொலைக் கருவிகளுடன் மகாத்மாவின் முன்னால் வந்து நின்று தங்களை மன்னிக்கும்படியும் காந்திஜி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும், தலை தாழ்ந்து வேண்டியபடி கண்ணீருகுத்து நின்றனர்.

காந்திஜி அந்த ஹிந்து வெறியர்களைத் துன்பப்படுகிற முஸ்லிம் மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களின் மன்னிப்பைப் பெறுமாறு புத்திமதி கூறி அனுப்பினார். இந்த நிகழ்ச்சி இந்தியர்களின் உள்ளத்தில் மகாத்மாவைப் பற்றியும் அவரது தலைமையில் ஒன்றுபடுகிற மகத்துவத்தைப் பற்றியும் புது நம்பிக்கை ஊட்டியது!

படுகொலைகள்

கல்கத்தாவில் தோல்விகண்ட ஆர்.எஸ்.எஸ். மதவெறி, டில்லியில் அன்றே பேயாட்டம் தொடங்கியது. இந்த டெல்லிக் கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் அகாலி சீக்கியரும் ஆர்.எஸ்..எஸ். குண்டர்களுமே ஆவர். டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முற்பகல் நேரத்தில் கூலி வேலைக்கு காத்திருந்த 12 முஸ்லிம் போர்ட்டர்கள் அங்கேயே படுகொலை செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து டெல்லியின் கேந்திரமான பகுதி கனாட் சர்க்கஸில் உள்ள முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டு அங்கிருந்த முஸ்லிம் வியாபாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது டில்லி போலீஸ் செயலற்று நின்றது. உள்துறை மந்திரியாக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். போலீஸ்காரர்கள் வாளாவிருந்த அந்த நேரத்தில் கனாட் சர்க்கஸில் அந்த பயங்கர கலவரத்தின் நடுவே கதர்க்குல்லா அணிந்த ஒரு மனிதர் தமது கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு அந்தக் கலகக்காரர்களின் மேல் பாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களைச் செயல்படத் தூண்டிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அவரே இளைய பாரதத்தின் பிரதமராக பதவி ஏற்றிருந்த ஜவஹர்லால் நேரு.

இந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். அரசாங்க யந்திரத்தையே ஊடுருவி நின்றது…
பழைய டில்லி, – ஆயிரக்கணக்கான முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டும், முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டும் ரத்தக் களமாகக் காட்சி தந்தது. நேருவின் வீட்டுத் தோட்டத்தில் அபயம் பெற்று ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்காக ஓடிவந்து தங்கியிருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு, அவர்கள் பெண்களாயினும் குழந்தைகளாயினும் வயோதிகர்களாயினும் அடைக்கலம் தருகிறவர்களின் வீடுகள் தீயிட்டுப் பொசுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அறிவிப்புச் செய்திருந்தனர்.

பல ஹிந்துப் பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்த ஏழை முஸ்லிம்களை அவர்களது எஜமானர்கள் வீட்டை விட்டுப் பயத்தால் வெளியேற்றிவிட்டனர். உடனே நடுத்தெருவில் அவர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்க முயன்றதற்காக அந்த ஆர்.எஸ்.எஸ். படையினர் பிரதமர் நேருவின் வீட்டுக்கு முன்னாலேயே, பர்தா அணிந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை இழுந்து வந்து பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர். டில்லி நகரப் போலீஸாரில் பாதிப் பேர் முஸ்லிம்களாக இருந்தபடியால் அவர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். டில்லி நகரின் போலீஸ் எண்ணிக்கையே 900 ஆகக் குறைந்து போயிற்று.

கருணை முகில்…

மகாத்மா காந்தி கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு ஓடினார்…
ஒரு பக்கம் மதவெறி என்ற ஆர்.எஸ்.எஸ். நெருப்பும், இன்னொரு பக்கம் அதன் நடுவே நடந்து அன்பு மழை பொழிந்து அதை அணைத்து அடக்கிய காந்தி எனும் கருணை முகிலும் நாட்டில் போட்டியிட்டுச் சமராடின… காந்தியின் வலிமை எத்தகையது; அவர் எவ்வளவு மகத்தானவர் என்றெல்லாம் அக்காலத்தில் நான் நேரிடப் பெற்ற அனுபவத்தால் அறிந்தேன். இன்றுள்ள நிலையில், அந்த அனுபவமில்லாதிருப்பின் எனக்கே அவற்றை நம்புவது சிரமமாயிருக்கும். அன்று அது நாம் கண்ட பிரத்யட்சம். மதவெறியை காந்திஜி வியக்கத்தகுந்த முறையில் ஆத்ம பலத்தால் வென்று அடக்கிக் காட்டினார்.

“நான் உயிருடன் இருக்கும் வரை நாடு பிரியாது என்றாரே காந்தி; இன்று நாடு பிரிந்த பிறகு காந்தி உயிருடன் இருக்கிறாரே!‘’ என்று புனாவில் ஹிந்து ராஷ்டிரம் பத்திரிகை ஆபீசில் குமுறிக் கொண்டிருந்தான் கோட்ஸே!

`காந்திஜியைக் கொல்வது ஒன்றே வழி’ என்று அந்தத் தோற்றுப்போன மதவெறிக் கும்பல் கூடித் திட்டம் போட்டது. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்களே ஆவர்.
அவர்கள் 1. நாராயண ஆப்தே (34 வயது), 2. வீர சவர்க்கார் (65 வயது), 3. நாதுராம் கோட்ஸே (37 வயது), 4. விஷ்ணு கர்க்காரே (34 வயது), 5. திகம்பர பாட்கே (37 வயது), 6. சங்கர் கிஸ்தயா, 7.கோபால் கோட்ஸே (29 வயது, வினாயக கோட்ஸேயின் தம்பி), 8. மதன்லால் பேஹவா (20 வயது) ஆகிய எட்டு பேர் சேர்ந்து திட்டமிட்டு, அகண்ட ஹிந்து ராஷ்டிர அமைப்புக்குக் குறுக்கே நிற்கிற காந்திஜியைக் கொலை செய்வது என்று தீர்மானித்தனர்.

உலகமே அதிர்ந்து நிலைகுலையத் தக்க அந்தக் கொடுமையை நிகழ்த்திக் காட்டினர். பாபுஜி என்று நாம் அனைவரும் அன்போடு துதித்த நமது தந்தையின் மிருதுவான, தெய்விகம் குடியிருந்த இதயத்தை கோட்ஸேயின் கைத்துப்பாக்கியிலிருந்து சீறிய மூன்று ரவைகள் துளைத்து வழிந்த குருதியில் ஆர்.எஸ்.எஸ். என்று எழுத்துக்கள் வரையப்பட்டிருந்ததை உலகமே கண்டது.

ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது!

சுதந்திர இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் அழிக்க முடியாத கறையாக அந்தக் கொலை இன்று வரை திகழ்கிறது!

எந்த ஒரு தனி மனிதனின் கொலையையும் விசாரிப்பது போலவே காந்திஜி கொலைக்கு விசாரணை நடத்தப்பட்டது. கோட்ஸேயும், ஆப்தேயும் இரண்டாண்டு முடிவதற்குள்ளாகவே 1949 நவம்பர் மாதம் 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். காமன்வெல்த் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள நேருஜி வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து ஆர்.எஸ்.எஸ். மீதிருந்த தடையை சர்தார் படேல் நீக்கினார். வீர சவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார். 1966-ல் தமது 83 வயது வரை வாழ்ந்துதான் செத்தார். இன்னும் சிலர் சிலகாலம் சிறைவாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற கோட்ஸேயின் தம்பியும் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனுமான கோபால் கோட்ஸே வரப் போகிற தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வருகின்றன… இவ்வளவு காலத்துக்குப் பிறகு!

மீண்டும் பசப்பல்!

இவ்வளவு காலத்துக்கு இடையில் தடை விதிக்கப்பட்டு, பல கட்சிகளிலும் இயக்கங்களிலும் ஊடுருவிச் செயல்பட்டும் இந்த ஆர்.எஸ்.எஸ். மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து நாடெங்கிலும் கிளம்பி இருக்கிறது! இதன்மீது எமர்ஜென்சியின்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஜனதா ஆட்சியில் தடை நீக்கம் பெற்று, ஜனதா கட்சியில் ஊடுருவி நின்றது.

இப்போது மீண்டும் ஹிந்து ராஷ்டிரத்தைப் பசப்பி, அரசியல் அரங்கில் சுயநலமிகளும் ஊழல் பேர்வழிகளும் பெருத்துவிட்டார்கள் என்ற ஓலத்தோடு, இளைஞர்களின் விரக்தி மனோநிலையை மூலதனமாக்கி `ஞான உபதேசம்’ புரிந்து உலாவ ஆரம்பித்திருக்கிறது.

அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், கோட்ஸே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லவென்றும், மாற்று மதத்தினரைத் தாங்கள் நேசிப்பதாகவும், ஆயிரம் பொய்களைப் பேசி அழகாக முடிச்சவிழ்க்க முயல்கிற காரியங்கள் நிறையவே நடக்கத் தொடங்கியிருக்கின்றன! …’’

பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர்

நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில், “பாசிச பாஜக வந்துடும்” என்று சொல்லிக்கொண்டே பல பேர் பாசிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இதை தேர்தல் நேரத்திலேயே எழுதியிருக்கலாம், ஒரு பாதகமுமில்லை. ஆனால் தங்களின் முகநூல் பதிவுகள் மூலம் தான் மக்கள் திரண்டுபோய் வாக்களிப்பதாக நம்பிக்கொண்டிருந்த பலர் ஏற்படுத்திய கருத்துருவாக்கத்திற்கு நானும் மதிப்பளித்து, இதை தேர்தல் முடிவடைந்ததும் எழுதுவது என்று திட்டமிட்டுக்கொண்டேன்.

அம்பேத்கரை அம்பேத்கரின் எழுத்துக்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள நாம் முயன்றோமானால், ஜனநாயகம் / அதிகாரம், இவையிரண்டையுமே அவர் எப்படி அணுகியிருக்கிறார் என்பதனை புரிந்துகொள்ள முடியும்.

தேர்தல் உட்பட நமது அரசியலமைப்பு சட்டத்தின் இயங்கியலை பகுப்பாய்ந்தால், அதிகாரத்தை பல பிரிவுகளாக பிளவுபடுத்தி இயங்கச் செய்திருப்பதை நாம் கவனிக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரமென்பது அப்படித்தான் இயங்க முடியும். நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை என்றாலும், அதன் நியதி அதிகாரத்தை பரவலாக்கச்செய்வதுதான்.

இந்திய தேர்தல் முறை என்பது ஒவ்வொரு தனி வேட்பாளருக்குத் தானே ஒழிய, ஒரு சின்னத்திற்கோ கட்சிக்கோ நடத்தப்படுவது அல்ல. இந்தியாவின் ஆகச்சிறந்த ஜனநாயகவாதியான அம்பேத்கர் இந்த தேர்தல் முறையைப் பற்றி குறிப்பிடும்போது “எருது சின்னத்திற்கு வாக்களிக்கச் சொன்னால் எருது சின்னம் மட்டும்தான் கருத்தில் கொள்ளப்படுகிறதேயொழிய, அந்த எருது சின்னத்திற்கு பின்னால் இருக்கும் வேட்பாளரை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை” என்கிறார், இந்த போக்கை எதிர்க்கிறார்.

மார்க்சின் வளர்ப்புகளாக வலம் வருகிறவர்கள், அம்பேத்கரின் தோன்றல்களாக தங்களை பிரகடனப் படுத்திக்கொள்பவர்கள், பெரியாரின் சுயமரியாதை வழிவந்ததாக சொல்லிக்கொள்கிறவர்கள் நிச்சயம் அம்பேத்கரின் மேற்சொன்ன வரிகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருக்க வேண்டும்; அதனடிப்படையில் அவர்கள் முன்னிறுத்துகிற வேட்பாளர் தேர்வு இருந்திருக்க வேண்டும். இம்மாதிரியான ஜனநாயக பண்பை கடைப்பிடிப்பதை முன்னிறுத்திதான் அவர்கள் பாசிஸ்டுகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முடியும்.

இல்லையேல் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சக்தியாக தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு “தாங்கள் மட்டுமே மீட்க வந்த மீட்பர்கள்” என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

நடந்த முடிந்த தேர்தலில் எதை சாதித்துக் கொண்டார்களென்றால், அசாதாரணமான ஒரு சூழலை சுட்டிக்காட்டி அண்ணல் சொன்னதைப்போல தங்களின் எருது சின்னத்திற்கு பலத்தை சேர்த்துக்கொண்டார்கள் அவ்வளவே. அந்த எருது சின்னத்தை காட்டி கல்விக்கொள்ளையனை நிறுத்தினாலும், வாரிசுகளை நிறுத்தினாலும், சாதித் தலைவனை நிறுத்தினாலும், நீங்கள் வாக்களித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தத்திற்கு வாக்காளர்களை தள்ளியிருக்கிறார்கள்.

ஒருபடி மேலே போய், தேர்தல் மட்டுமே சமூக அரசியலின் நிறைவுக்காட்சி என்பதை போல, பாசிசத்திற்கு எதிராக பேசுகிற யாரொருவரையும் “யாருக்கு வாக்களிக்க வேண்டும்?” என்கிற கேள்வியை முன் வைத்து, அதற்கு பதிலளித்தால் தான் அவர் நம்பகத்தன்மையான சமூகநீதி போராளி என அவரது சமூகம் குறித்த மதிப்பீடுகள் வரையறுக்கப்பட்டது. இதுவொரு ஆதிக்க மனோபாவம், அதிகாரத் திமிறினால் உற்பத்தியாகிற கருத்துக்கள்.

அதிகாரமென்பது இங்கே கட்சியாக இருக்கிறது, அந்த அதிகாரத்தை, அங்கீகாரத்தை பயன்படுத்தி கணிசமான சீட்டுக்களை கூட்டணி தலைமையிடம் இருந்து அவர்களால் பெற முடிகிறது, அவர்கள் பெற்று விட்டதுனாலவே அவர்கள் சார்ந்த ஏதோவொரு கட்சியின் ஏதோவொரு வேட்பாளருக்கு வாக்களிப்பது அறமாக பார்க்கப்பட்டது, 2016 ல் நடந்ததைப் போல மூன்றாவது அணி ஒன்று உருவாகி முற்போக்கு பேசும் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் நான் என்ன செய்திருக்க வேண்டும்? அப்போதைய அறமாக எது இருக்கும்? அது போல இனி நடக்கவே நடக்காது என்றோ அல்லது நடந்ததில்லை என்று நம்மால் மறுக்க முடியுமா? அறம் என்பதும் தர்மம் என்பதும் கட்சிகள் வகுக்கின்றனவையாகத்தான் இருக்க முடியும் என்று நான் ஒருபோதும் நம்புபவனல்ல.

ஒரு தொகுதியில் பத்து வருடமாக உழைத்து களப்பணியாற்றிய சுயேட்சையாகவோ, அல்லது இக்கூட்டணியில் இடம் பெற முடியாத சிறிய கட்சியாகவோ, அல்லது கடைசி நேரத்தில் துரத்தியடிக்கப்பட்ட வேறொரு கட்சியாகவோ இருந்தால், நான் அவர்களுக்கு வாக்களிக்க கூடாதா? மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கான சூழலிருந்ததையும், அந்த பேச்சு வார்த்தையும் யாவரும் அறிந்ததே. ஒருவேளை பாமக இடம் பெற்றிருந்தால் அந்தச் சூழல் எப்படியிருந்திருக்கும்? நாம் யார் பக்கம் வாக்களிப்பது? ஆக கூட்டணி பேரத்தின் அடிப்படையில் Probability யால் இங்கே முற்போக்கு என்று ஒன்று இருந்திருக்கிறது.

இந்த பைனரி அரசியலை உலகத்தில் எந்த ஜனநாயகவாதியும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதிகாரம் / பிரதிநித்துவம் / அரசியல் என்பது பல மட்டங்களில், பல தனிநபர்களால், பல இயக்கங்களால், பல கட்சிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டியவை. மாற்றம் என்பது திரட்சியானது, குறிப்பிட்டவரால் சாத்தியப்படக்கூடியவை அல்ல, அதில் தேர்தல் அரசியல் ஒரு துணுக்கு, அதில் ஈடுபடுவோர் ஈடுபடுங்கள், வியூகங்கள் வகுத்து முடிவெடுங்கள், பிரச்சாரம் செய்யுங்கள், ஒரு பாதகமுமில்லை. ஆனால் “நாங்கள் மட்டுமே சமூகத்தை மாற்ற வந்த தேவ தூதர்கள், எங்களை ஆதரிப்பது மட்டுமே முற்போக்கு” என்று ஆணவம் பேசாதீர்கள்.

இந்தத் தேர்தல் முறை சிறிய கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கிறது, சின்னம் ஒதுக்குவதில் அரசியல் இருக்கிறது, அம்பேத்கர் சொல்வதைப்போல எருமையானாலும், கழுதையானாலும், நாயானாலும் அவர்களை வெற்றி பெற வைக்க சின்னம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏற்கனவே establish ஆன கட்சிகளை தவிர தமிழகத்தில் தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி கூட இரண்டாம் நிலைக்கு வருவதற்கான சாத்தியங்களில்லை. அதிமுகவை அடிமை கட்சி என்பார்கள், ஆனால் அந்த அடிமை அதிமுக அழிந்து கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டாம் நிலைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.

மத்தியில் காங்கிரசுக்கு பிஜேபி வேண்டும், பிஜேபிக்கு காங்கிரஸ் வேண்டும், மாநிலத்தில் திமுகவுக்கு அதிமுக வேண்டும் அதிமுகவுக்கு திமுக வேண்டும். வசதியானதொரு அரசியல் செய்ய இந்த கட்டமைப்பு இவர்களுக்கு அவசியம். இந்த கட்டமைப்பில் இருக்கும் யாரும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து அழுத்தம் கொடுக்கவோ, போராட்டம் செய்யவோ போவதில்லை. இந்த குரலே வெகு சிலரால் எழுப்பப்படுகிறவையாக தான் இருக்கும், அவர்கள் எந்த நேரத்திலும் உங்களை இந்தக் கேள்வி கேட்பார்கள், அவர்களை தேர்தலை காரணம்காட்டி character assassination செய்வதும் பாசிசம் தான், அரசியலில் “எந்த நேரத்தில் எதை பேச வேண்டும்” என்கிற விதியே இருக்கக்கூடாது. ஆனால் அந்த விதியை நானும் என்னையறியாமல் ஏற்று தான் காலம் கடந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன்.

ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை பற்றி மட்டும் தான் நாம் பேசுகிறோம், ஆனால், இந்த தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் புழங்கிய பணம் மட்டுமே நாலாயிரம் கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள். இவையல்லாமல் சாதித்தலைவனுக்கு தலை வணங்க வேண்டியிருக்கிறது, கொலைகாரனுக்கு வணக்கம் வைக்க வேண்டியிருக்கிறது, வருடம் முழுக்க பேசும் முற்போக்கிலிருந்து விலகி நின்று முற்றிலும் வேறான நிலைபாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது, இத்தனை பிழைகளையும் பொறுத்து “இது தான் யதார்த்தம்” என்று நீங்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்த அரசியலுக்கு எதிராக நீங்களே திரும்பும் போது அதை கேள்விகேட்பது தான் அந்த தத்துவத்தின் வெற்றி.

தேர்தல் என்பது குறிப்பிட்ட கட்சிகளின் வெற்றி / தோல்வியை மட்டுமே தீர்மானிக்கக்கூடியதல்ல. உங்களை நம்பி தேர்தலை சந்தித்தவருக்கு உங்கள் வாக்குகள் ஊக்கத்தை கொடுக்கிறது, அவர்தம் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது, அவரை மேலும் உத்வேகப்படுத்துகிறது, பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டு சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறது.

தனிநபர் திறனாய்வு அவசியம், இல்லையேல் தோழர் ஆதவன் தீட்சாயாவின் சிறுகதையை போல கழுதையை நிறுத்துவார்கள், நாயை நிறுத்துவார்கள், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை.

“எனக்கு வாக்களித்தால் தான் நீ ஜனநாயகவாதி என்று எந்த ஜனநாயகவாதியும் சொல்ல மாட்டான்”

வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்; விமர்சகர்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது !

சந்திரமோகன்

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை கிளை மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது.

இன்று பதில் அளித்த மத்திய தொல்லியல் துறையானது, Carbon dating / கார்பன் பரிசோதனைக்காக ஃபுளோரிடாவிற்கு அனுப்பப்பட்டு கிடைத்த பதிலாக, ‘ ஒரு தொல்பொருள் கி.மு 905 எனவும், மற்றொரு பொருள் கி.மு 971-ம் ஆண்டு வரை பழமையானது’ என அறிக்கை தந்துள்ளது.

தமிழர் நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்வரை செல்கிறது என்ற மகிழ்ச்சி இருப்பினும் … 2005 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தின் வாயிலாக தான், தமிழ் கூறும் நல்லுலகம் பெற முடிந்துள்ளது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சங்க காலத்திற்கு முந்தைய நாகரீகம் !

ஆதிச்சநல்லூர் வட்டாரத்தில் 1876 முதல் பலகட்ட ஆய்வு நடைபெறுகிறது. 1904 மற்றும் 1914 ஆய்வுகள் வரலாற்று உலகத்தை ஆதிச்சநல்லூர் நோக்கி திரும்பி பார்க்க வைத்தன.

116 ஏக்கர் நிலப்பரப்பில் தாழிக்காடு கண்டு பிடிக்கப்பட்டது; பெருங் கற்கால சின்னங்களான, நூற்றுக்கணக்கான தாழிகள் கண்டறியப்பட்டது. இவை 3 அடி உயரமுள்ள கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள் BRW ஆகும்.

இறந்த மனிதர்களுடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களாக கிடைத்த 90 வகையான இரும்பு பொருட்கள், கருவிகள், வெண்கல பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றிய ஆச்சரியத்தை உருவாக்கின.

1400° C வரை சூடேற்றும் தொழில்நுட்பம் கொண்டு, உருவாக்கப்பட்ட நன்கு வளையக்கூடிய வெண்கலப் பொருட்கள் பற்றி ஆய்வாளர் சாரதா சீனிவாசன் வியந்து எழுதியிருக்கிறார்.

இரும்பு பயன்பாடு தமிழரை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறது !

3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களிடம் நிலவியிருந்த இரும்பின் பயன்பாடு தமிழர் நாகரீகத்தை உலக வரலாற்றின் முக்கிய இடத்தில் நிறுத்துகிறது.

வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் இரும்பு பயன்பாடு கி.மு. 1400 ஹிட்டைட் (துருக்கி) களிடம் காணப்பட்டது ; நாகரிகத்தில் ஓங்கியிருந்த கிரேக்கத்திலும் கி.மு.1000 ல் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

எகிப்தில் கி.மு. 700 லும், அய்ரோப்பாவின் பகுதிகளில் கி.மு. 500 லும் தான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது. சிரியாவில், டமஸ்கஸில் தயாரிக்கப்பட்ட உருக்கு இரும்பு பொருட்களுக்கான இரும்பு மணிகள், தென்னிந்தியாவில் இருந்து தான் சென்றன, என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழர் தொன்மையை விரும்பாத ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் தான், மாலன் நாராயணன் போன்ற மேதாவிகள் தான், ஆரியரிடமிருந்து தான்/ அதாவது இந்தோ அய்ரோப்பிய சமூகத்திடமிருந்து தான், தமிழர் அறிவை பெற்றதாகவும், தமிழ் நாட்டு இரும்பு தரம் தாழ்ந்ததாகவே இருந்ததாகவும் இப்போதும் தொடர்ந்து உளறுகின்றனர்.

ஏற்கனவே, ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள கொற்கையில் கிடைத்த பொருட்கள் மீது கார்பன் பரிசோதனை வழியாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வு முடிவுகள் கி.மு. 800 என தெளிவாக தெரிவித்திருந்தது.

ஆழமான ஆய்வு தொடர வேண்டும் !

ஆட்சியதிகாரத்தில் உள்ள, பார்ப்பனீய – இந்துத்துவா சக்திகள் கடந்த 14 ஆண்டு காலமாக, இந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது ஏன்?

கீழடி ஆய்வுகளை ஊற்றி மூட முயற்சி செய்வது ஏன்?

மேலும் எழும் கேள்விகள் ?

1) ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்டையோடுகள் காலம் கி.மு. 1750 வரை கொண்டு செல்லப்பட்டது. சில பொருட்கள் வாயிலாக, தற்போதைய காலம் கி.மு. சுமார் 1000 வரை தான் சொல்லப்படுகிறது ! இங்கு ஆய்வு ஆழமாக செல்ல வேண்டியிருக்கிறது.

2) 2005 ம் ஆண்டில் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் “ஆதிச்சநல்லூர் பகுதி நாகரீகம் கி.மு. 1400 வரை செல்லும் ” எனத் தெரிவித்து இருந்தார். அவரது ஆய்வு உதவியை தமிழக அரசு பெறவேண்டும்.

வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு !

1) உணர்ச்சி வசப்பட்டு, சிந்துவெளி நாகரீகத்துடன், இதை தொடர்புபடுத்த விரும்புவதை தவிர்க்க வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதுமக்கள் தாழிகள் நிறைந்த சமூகமாகும். சிந்துவெளி நாகரிகத்தில் அவை இல்லை என்பதிலிருந்து துவங்கி வேறுபாடுகளை அணுக வேண்டும்.

2) சங்க கால இலக்கியங்களில் ஆதிச்சநல்லூர் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை; திட்டவட்டமாக ஒரு செழிப்பான தமிழர் பண்பாடு – வரலாறு தென் தமிழகத்தில் இருந்திருக்கிறது. அய்ரோப்பியர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, நமது தமிழ் சமூகம் இரும்பு மற்றும் தொழில்நுட்பத்தில், வணிகத்தில், பண்பாட்டில் உயர்ந்து இருந்திருக்கிறது.

பார்ப்பனீய இந்துத்துவா நோக்கம் வேறுபட்ட பண்பாடுகளை மறுப்பது ஒற்றைப் பண்பாட்டை திணிப்பது ஆகும். ஆதிச்சநல்லூர் கீழடி ஆய்வுகள் தொடர ஒரு இயக்கம் உருவாக வேண்டும்! தமிழர் தொன்மை கண்டறியப்பட வேண்டும்.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ்.

கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் : இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார்:

“பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை. அது எங்களுக்கு அவசியமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று சொல்லுவதற்குத் தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும். அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம் கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

Marx Anthonisamy

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, “பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

பதில் : 1930 களில் பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன்.

அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர். கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும் கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது.

1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம் இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம் முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம் “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில் மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே.

கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை. முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன் (Samuel P.Huntington) போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக, இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே. .

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்த ‘சம வாய்ப்பு ஆணையம்’ என்ற கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. நிரந்தரமான வேலை, ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும். தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம்.

ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை. ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிகமயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும் இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழை மக்களை அதிகாரப்படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி, அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும் தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின் நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில் இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. மாட்டுக்கறியின் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynching) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும் எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

கேள்வி : வரவிருக்கிற தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா ?

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி எனது முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும்.

பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன.

.ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம் கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் கட்டணத்தை முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான்.

விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

கேள்வி : மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள் ?

பதில் : அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளை திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர்.

இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. சிறுபான்மையினர் மட்டுமின்றி தலித், ஆதிவாசிகள் முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். .

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை. தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

கேள்வி : சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சின்னத்தில் நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே ?

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பது என்பது கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத் தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர் வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே ?

பதில் : தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். 2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர்.

SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

கேள்வி : வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில் ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடகாவில் நிற்கலாமே? வயநாட்டில் போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல் மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும் ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியச் சிறைவாசிகள், வீரப்பன் வழக்கில் சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும். சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA) திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

கேள்வி: இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான அமைப்புகளில் இயங்கி வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும். 1905 தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது. காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை. அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

கேள்வி; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை

ஆளும் பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து நீக்க இந்திய மக்களை வாக்களிக்க கோரி திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை.

நமது நாடு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் சோதனைக்குரிய காலத்தில் இருக்கிறது. பண்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், நாம் ஒற்றுமையாகவே இருந்துவந்துள்ளோம். ஒரு தேசமாக, இவ்வற்புத நாட்டின் குடிமக்களாக இருப்பதென்பது மிகவும் பெருமையான உணர்வாகும்.

ஆனால், இப்போது அவை பெரும் ஆபத்தில் உள்ளன.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்யாவிட்டால், கொடுங்கோன்மை அதன் அனைத்து வலிமையையும் கொண்டு நம் கடுமையாக தாக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

2014-ஆம் ஆண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டு நிலைமை மோசமாக மாறிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம். நமக்கு தெரிந்த இந்திய நாடு, மத அடிப்படையில் துருவப்படுத்தப்பட்டது அன்று. தவிர, பி.ஜே.பி-யும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்டன. வகுப்புவாதத்தை புகுத்தி நாட்டை இரண்டாக்க பசுப் பாதுகாப்பு, கும்பல் கொலை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட தலித் இஸ்லாமிய மக்கள் அவர்களின் விளையாட்டுப் பொருள் ஆகிவிட்டன. இணையதளம் மற்றும் சமூக ஊடகத்தின் மூலமாக அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகின்றனர். தேசபக்தி தான் அவர்களின் துருப்பு சீட்டு. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ சிறிய கருத்து வேறுப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அவர்கள் ‘தேசத் துரோகிகள்’ என்று பட்டம் சூட்டப்படுகின்றனர். ‘தேசபக்தி’யை கொண்டே அவர்களின் வாக்குவங்கியை பெருக்குகின்றனர். மாற்று கருத்தை முன்வைக்க துணிந்ததன் விளைவாக சில புகழ்பெற்ற எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இராணுவத்தையும், ஆயுதப்படைகளையும் சிலாகிக்க செய்து சுரண்டுவது அவர்களின் யுத்திகளில் ஒன்று. நம் நாட்டை தேவையற்ற போரில் ஈடுபடுத்தும் பேராபத்திலும் கூட அதனை செய்வார்கள். நாட்டின் பண்பாட்டு மற்றும் அறிவியல் நிறுவனங்கள் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. சர்வதேச அறிவியல் கருத்தரங்குகளில் கூட விஞ்ஞானபூர்வமற்ற, அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகளை முன்வைக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாத, அனுபவமற்ற நபர்களை துறைத் தலைவர்களாக நியமித்து, ஒட்டுமொத்த உலகின் கேலிப்பொருளாக்கி நம் மக்களின் கூட்டு நுண்ணறிவை பகடி செய்கின்றனர்.

‘கலை படைப்புகள்’, குறிப்பாக அவற்றின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களான – திரைப்படம் மற்றும் நூல்கள் ஆகியவற்றை தடை செய்வதும், தணிக்கை செய்வதுமே மக்களை உண்மையிலிருந்து விலக்கி வைக்கும் அவர்களின் வழிமுறை.

விவசாயிகள் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டனர். உண்மையில், ஒரு சில வணிகர்களின் நிர்வாகச் சொத்தாகவே இந்நாட்டை மாற்றியிருக்கிறது பி.ஜே.பி அரசாங்கம். கடுமையான பேரழிவாக முடிந்த மோசமான பொருளாதார கொள்கைகள் கூட, விளைவுகள் மறைக்கப்பட்டு வெற்றியடைந்தது போல காட்டப்பட்டன. பொய் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தும் உதவிகளோடு இவை செவ்வனே செய்யப்படுகின்றன. இது, நாட்டில் பொய்யான நம்பிக்கையை உருவாக்க உதவியது.

புள்ளியியல் மற்றும் வரலாற்றை திரிப்பது அவர்களுக்கு விருப்பமான திட்டங்களில் ஒன்றாகும். ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவது பெருந்தவறாகும். அது, உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கும் கடைசி ஆணியாகவும் இருக்கலாம்.

எனவே, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு வரமால் செய்யுமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். இந்திய அரசமைப்பை மதிக்கும், பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும், அனைத்து விதமான தணிக்கைகளையும் தவிர்க்கும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது உங்களின் தேர்வு கட்டளையாக இருக்கட்டும்.

ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு!

அம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா!

இரா. எட்வின்

பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார்.

தனது வேட்புமனு தாக்கலின்போது அவர் கணக்கில் காட்டியுள்ள சொத்து விவரங்களை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது.

அவர் காட்டியுள்ள கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு 30,49,00,000 ரூபாய். வாசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால் எழுத்திலும் தருகிறேன். அவரது சொத்தின் மதிப்பு முப்பது கோடியே நாற்பத்தியொன்பது லட்சம் ரூபாய். இதில் நமக்கொன்றும் பிரச்சினையில்லை.

இவ்வளவுதானா என்ற கேள்விக்குள்ளும் நானிப்போது போகவில்லை. இவ்வளவாகவே இருக்கட்டும். அதில் 17,56,00,000 ரூபாயை ஏறத்தாழ 280 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்.

அதாவது காட்டப்பட்ட கணக்கின் 58 சதவிகித சொத்தை 280 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். அதுகூட போகட்டும்.

இவற்றில் சல்லி காசைக்கூட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை என்பதும் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களிலுமே முதலீடு செய்திருக்கிறார் என்பதும் மட்டுமே நாம் கவனத்தில் கொள்ளும் விஷயங்கள்.

1) இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களை நிராகரித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான் தேசபக்தியைப் பற்றி சதா போதித்துக்கொண்டே இருக்கும் தேசத்தை ஆளும் கட்சியின் தேசியத் தலைவரது தேசபக்தியா?

2) இவரே கார்ப்பரேட் கம்பெனிகளில் முதலீடு செய்யும்போது அவர்களது தவறுகளை அரசு எப்படி தட்டிக் கேட்கும்?

3) அம்பானி நிறுவனங்களில் மட்டும் 2.15 கோடி அதாவது தனது காட்டப்பட்ட சொத்து மதிப்பில்7.05 சதமும் முதலீடு செய்துள்ள தொகையில் 12.24 சதமும் முதலீடு செய்திருப்பது ரபேலில் இவர்களது சார்பைக் காட்டாதா?

இரா. எட்வின், எழுத்தாளர்.

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்

ஈஸ்வரி

சென்னை போக்குவரத்தில் சூப்பர் டீலக்ஸ் பேருந்து வரவினால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இத்தகையை பேருந்துகளினால் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி கரைந்தது.

சாதாரண பேருந்து கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகம்! இதனால் அத்தி பூத்தாற்போல் வரும் சாதாரண பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு திருவிழா கூட்டத்தை போல ஏறும் ஆண்களுக்குக்கிடையே இடிப்பட்டு ஏறும் பெண்களின் நிலை சொல்லி மாளாது. அலுவலகத்திலும் வீட்டிலும் உழைப்பு சுரண்டலினால் சக்கையாய் பிழியப்பட்டு வரும் பெண்கள் இக்கூட்டத்தில் யார் நம்மை உரசுகிறார்கள், யார் நமது அங்கங்களை தொடுகிறார்கள், யார் வக்கிரத்தின் உச்சத்தில் ஆடையை பிசு பிசுக்க வைக்கிறார்கள், தனது ஆடை விலகுதல் மூலம் யார் இன்பம் அடைகிறார்கள் என்பதை அவ்வப்போது எழும் கூச்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட அனைத்து பாலியல் வக்கிரத்தை தீர்க்க கொள்ள சூப்பர் டீலஸ் ஆண்களுக்கு வசதிதான். அதுபோல தான் தற்பொழுது திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் டீலஸ் படமும் இருக்கிறது. கொண்டாடப் படவேண்டிய நேர்த்தியான திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் அபாரம்! ஆனால், அது யாருக்கான திரைப்படம்? யாருக்கு பயன்பட போகின்ற படம்? பெண்களின் உடல் ஆண்கள் உறவு கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதா? பெண் எப்போதும் பாலியல் பண்டமா?

சமமான அளவில் சுதந்திரமாக இருக்கும் ஆணும் பெண்ணும் மட்டுமே ஒடுக்குமுறையற்ற, சுதந்திரமான பாலியல் உறவுகளை உருவாக்க முடியும். எனவே, பெண்விடுதலை இல்லாமல் பாலியல் ஒடுக்கு முறைகளுக்கு தீர்வு காண முடியாது.

  1. படத்திற்கு வருவோம் முகிலனின் மனைவி, தன் முன்னால் காதலனை சந்திக்கும் பொருட்டு உடலுறவு கொள்ள நேரிடுகிறது. அதில் காதலன் இறந்துவிட, இறப்பு கணவனுக்கு தெரிய வருகிறது.

“நான் எனது குற்றத்தை ஒத்து கொண்டு காவல் துறையிடம் சரண்அடைந்து விடுகிறேன்” என்று கூறுகிறாள் அவள். தன்னைத்தான் ஊர் இவ்வளவு கேவலமான பொண்டாட்டியை கட்டிருக்கிறேன் என்று பழி தூற்றும், அதன் காரணமாக இந்த உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டு விவாகரத்து செய்து கொள்ளாம் என்று கணவன் கூற அதற்கு மனைவி சம்மதிக்கிறாள். உடலை அப்புற படுத்தும் முயற்சியில் இருவரும் ஈடுபடுகின்றனர். இதனை மறைமுகமாக நோட்டம் விட்டு கொண்டு வந்த காவல் அதிகாரி ஒருவன் இதனை கண்டுபிடித்து விட, இதனை அனைத்தையும் மறைக்க வேண்டும் என்றால் உன் மனைவியை தன்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று காவல் அதிகாரி கேட்கிறார். தன் மனைவியை அதற்கு தயார் படுத்துகிறான் அந்தக் கணவன்!

இறுதியாக கைவிலங்கு பூட்ட பட்ட கணவன் கையறு நிலையில் இருக்கும் மனைவி
அப்போது எங்கிருந்தோ விழும் டிவி காவல் அதிகாரின் தலையில் விழுகிறது. இறுதியில் கணவன் மனைவி காப்பாற்றப் படுகிறார்கள்.

ஆணாதிக்கத்தை ஊட்டி வளர்த்து கொண்டிருக்கும் சமூகத்தின் பின்னணியில் இதைப் பார்ப்போம். படத்தில் (முகிலன் மனைவி) தனக்கு பிடிக்காத ஆணுடன் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து தனக்கு பிடித்த இணையுடன் கை கோர்த்து செல்வதை விடுத்து, ஒரு ஆணின் ஒடுக்கு முறை மற்றும் சமூகத்தின் ஒடுக்கு முறையினாலும் பெண் தனது முன்னால் காதலனுக்கு பாலியல் பண்டமாக மாற்றப்படுகிறாள். மற்றும் இந்நாள் கணவனுக்கான அவன் சமூதாய மதிப்பீட்டைக் காப்பாற்ற ஆணின் பகடையாய் மாற்றப்பட்டு மற்றோரு ஆணுடன் உடல் உறவு கொள்ள கணவன் மூலமாகவே உந்தப்படுகிறாள்.

கற்பு, நெறிமுறை கோட்பாடு, போன்ற வற்றை உடைகிறேன் என்ற பெயரில் இறந்து போன மனைவின் முன்னால் காதலின் ஆண் குறி தன்னை விட பெரிதா என்று சொல்லி கொண்டு பார்வையின் வழியாக பிணத்தில் ஆண் குறி நீளத்தை தேடுவது என்பது ஒட்டு மொத்த வக்கிரத்தின் பிரதிபளிப்பு.

கணவன் முகிலன் ஒரு இடத்தில் பதிவு செய்கின்றான்: இதற்கு முன்பு தனக்கு 3 பெண்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்புகளை எல்லாம் தான்தான் முறித்து கொண்டேன்; அப்பெண்கள் அல்ல என்று கூறி விட்டு ஒருவித பெருமிதம் கொள்கிறான்.

முன்னால் காதலன் தவிர வேறு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளதா என்று முகிலன் மனைவியை பார்த்து கேக்கும் போது வெளிப்படையாக அறிவிக்காமல் காதில் சொல்லும் போது பின்னால் சங்கின் ஒலி.

மனைவியின் முன்னால் காதலன் பிணத்துடன் பேசிக்கொண்டு வரும் அவன், ‘பிணத்துடனே செட்டான உன்னால் ஏன் நமக்குள் செட் ஆகவில்லை’ என்ற கேள்வியை முன் வைக்க அதற்கு பதில் சொல்லப்படுவதில்லை.

நிலவுடைமை சிந்தனையும், முதலாளித்துவ சிந்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஆணாதிக்க கட்டமைப்பில்,பெண்களின் உடல் வெறும் பாலியல் கருவி இச்சமூகம் நியாயப் படுத்தி கொண்டிருக்கிற வேளையில் இத்திரைப்படம் மேலும் பார்வையாளர்களின் ரசனையை மட்டுப்படுத்துகிறது. அதற்கு துணை போகின்ற வேலையைத்தான் படம் முழுக்க கையாண்டு உள்ளார் இயக்குநர்.

  1. க்ரூப் ஸ்டடி என்ற பெயரில் ஆபாச படம் பார்க்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் ஒரு வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது அதில் நடித்திருப்பது தன் அம்மா என்பதை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவன் டிவியை உடைக்கிறான். தன் அம்மாவை கொலை செய்ய நினைத்து கூர்மையான ஆயுத்துடன் செல்ல அது தவறுதலாக அவன் வயிற்றில் குத்த, அதனை அறிந்த தந்தை தான் அந்த ஆபாச வீடியோவை பார்த்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த தன்னை கர்த்தர் காப்பாற்றியது போல் மகனையும் காப்பாற்றுவார் என்கிறார். கிருஸ்தவ மதத்திற்கு மாறிய அற்புதம் மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தன் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி கொண்டு ஜெப கூடத்திற்கு அழைத்து செல்கிறான் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் தன் மகனை மீட்டு எடுத்து மருத்துவமையில் சேர்க்கிறாள் அந்த தாய். ஆனால் அவளிடம் காசு இல்லை. அற்புதத்திற்கு தன் கடவுள் மீது சந்தேகம் வர கடவுளின் சிலை உடைக்கப்பட்ட அதில் உள்ள சில வைரங்கள் அதன் மூலம் தன் மகன் காப்பாற்றப்படுகிறான்.

அற்புதத்தின் மனைவி -லீலா. தான் நடித்த ஆபாச வீடியோவை மகன் பார்த்ததை உணர்ந்த அவள் “ஒரு லட்சம் பேர் பாக்குறது தப்பில்லைனா நான்கு பேர் நடிக்கிறது எப்படி தப்பாகும்” என்ற கேள்வியை தன் மகன் முன் வைக்கிறார்.

பொள்ளாச்சி போன்ற கூட்டு பாலியல் வக்கிரத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்ட 273 பெண்களும் அந்த ஒரு லட்சம் பார்வையாளருக்கத்தான் வன்புணர்வு செய்யப்பட்டார்களா? என பொருத்தி பார்க்கவேண்டும். ஆம், தன் சந்தையை விரிவ படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் முதலாளித்துவம் இதைத்தான் சொல்கிறது இந்த வசனம்.

மக்களுக்கு கேடு தரக்கூடிய குடிக்கிற பானம் முதல் உண்கிற உணவு வரை, பண்பாடு, கலாச்சாரம் முதல் அனைத்திலும் தன் உற்பத்தியை பெருகிவிட்டு இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் குடிக்க வேண்டும், இதனைத்தான் பார்க்க வேண்டும் என்று உருவாக்கிய நிலையில், லீலா கதாபாத்திரத்தின் மூலம் நியாயப்படுத்தி கொண்டாட வைக்கிறது இந்த கொடூரமான முதலாளிய சந்தை.

ஆதி சமூகத்தின் ஆடை சுதந்திரத்தையும், வருகிற சமூத்தின் ஆடை சுதந்திரம் எப்படி இருக்கும் என்று தன் மகனிடம் பேசும் லீலா அவர் தன் கணவன் அற்புதம் கிருஸ்தவமதத்தை தழுவிய பின்னும், கையாலாகாத தன் கணவனிடம் இருந்து விடுபட்டு ஏன் பொருளாதார ரீதியான தன்னை நிலை நிறுத்தி கொள்ளாமல் மகனின் மருத்துவ செலவிற்காக அனைவரின் முன் மன்றாடுகிறார்?

பொருளாதார சுகத்திரத்தை பேச மறுத்து வெறும் உடல் அரசியலை மட்டும் பேசும் முதலாளித்துவ பெண்நிலைவாதிகள் கருத்தைத்தான் இயக்குநர் லீலாவின் மூலம் பேச வைத்துள்ளார். வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்களா? என்று மகன் கேட்டக ஆபாசப் படத்தில் தனது கதாபாத்திரத்தை விரும்பித்தான் நடித்துள்ளேன் என்று ஒரு பெண்ணின் வாயால் கூறவைத்திருப்பது இன்னும் அதிகப்படி.

ஆபாச பண்பாட்டினால் பெண்களின் இருத்தலே கேள்விக்குள்ளாகி பல்வேறு வக்கிரதை அசரே ஊக்குவித்து கொண்டாடுகின்ற இன்றைய காலத்தில் இத்தகைய சந்தையில் பெண்ணையே தனது விருப்பத்தின் பெயரில் துணைக்கு அழைத்தல் முதலாளியத்தின் உச்ச வக்கிரமாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆபாச வீடியோவில் நடித்தது மற்றோரு பெண் என்றால் தன் இந்திரியத்தை இயல்பாக வெளியேற்றி விட்டு கடந்து சென்று இருப்பார்கள். ஆனால், அதில் நடித்தது தன் மனைவி, தன் அம்மா என்று தெரிய வரும் போதுதான் பொங்கி எழுகின்றன ஆண் கதாபாத்திரங்கள்.

  1. தன் கணவனுக்காக தனது குழந்தையுடன் 7 வருடமாக காத்திருக்கும் மனைவிக்கு கணவன் திருநங்கையாக திரும்பி வந்திருப்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. ஒரு மனைவி இறந்தாலோ அல்லது விட்டு பிரிந்தாலோ கணவன் உடனடியாக மற்றோரு திருமணத்திற்கு தயாராகின்ற ஆணாதிக்க கட்டமைப்பில் அத்தகைய சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுவது இல்லை.

ஆனால் இப்படத்தில் இக் கட்டமைப்பில் கல் எறிவதற்கு பதிலாக தன் மகளிடம் “இப்படி அவன் (திரு நங்கை) திரும்பி வருவான் என்று தெரிந்து இருந்தால் நீ யாரையாவது இழுத்து கொண்டு ஓடிருக்கலாமே” என்று அம்மாவின் ஆறுதல் மொழிகள். கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிட பெற்றவர்களுக்கு அவர்களின் மறுமணத்தை ஆதரிக்காமல் சமூத்தில் அவர்களை அங்கிகரிக்க மறுத்து பின் வாசல் வழியாக ஓட சொல்வது தான் இயக்குநரின் பெண்ணிய சிந்தனையா?

அதைவிட திருநங்கையாகக்கூட திரும்பி வந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும் என்று அன்பின் வழியில் கருணை அற்ற இரகத்தினை போதித்தல் மூலம் பெண்ணின் உணர்வுகளை இன்னமும் அதல பாதளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது இந்தப் படம்.

ஷில்பாவின் கதாபாத்திரம் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்குள் அனுதினமும் நேரடியா பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவரின் கதாபாத்திரத்தை தன்னால் முடிந்த அளவிற்கு,
தன் பண்டம்(படம் )சந்தை படுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அக்கதாபாத்திரத்தை இயக்குநர் கேலிக்கூத்தாகி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவல் ஆய்வாளனை ஷில்பா மூலமே “அவர் எனக்கு புருஷன் மாதிரி” என்று சொல்லுவது எல்லாம் காவல் துறையினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அத்துணை திருநங்கைகளையும் கொச்சைபடுத்திய விதத்தை துளி அளவும் ஏற்று கொள்ள முடியாது.

படம் முழுவதும் பெண்களின் மைய கதாப்பாத்திரம் அனைத்தும் பொருளாதார தன்னிலை அடைந்தவராக காட்டாமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேலைக்கு செல்லும் பெண், வேலைக்கு செல்லாத கணவனிடம் மதியம் சாப்பாடு சமைத்து எடுத்துக் கொண்டு வா என்று கட்டளை இட்டு செல்வது, மிகப்பெரிய அபத்தமான பதிவாகவே உள்ளது. சமமான உழைப்பு பிரிவினையும், பொருளாதார சுகத்திரத்தை பேச தயாராக இல்லாத அறை வேக்காட்டுத்தனம்தான் இது.

மேற்கண்ட அனைத்து படி நிலைகளின் சாராம்சத்தை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக பாலியல் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் எல்லாக் கொடுமைகளையும், இன்னல்களையும் இயல்பாக காட்டுதல், மற்றோன்று தான் பாலியல் பண்டமாக மாற்றப்படுவதையே பெண்களுக்கான விடுதலையாக சொல்லுதல் ஆகிய இரண்டையும் தெளிவாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

நமது நிலவுடைமை சமூகத்தில் பெண்ணின் மதிப்பீடுகள் அனைத்தும் ஆணுக்கு கீழ் ஆனவள் என்றும் கணவன் எத்தயைய குணம் கொண்டவனாக இருந்தாலும், பரதேசியாக, பிறன் மனைவியை விரும்பினாலும், துரோகம் இழைத்த கணவனுக்கு நல்ல மனைவியாக இருக்கவேண்டும்.

மறுபுறம் ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு, பெண் சமூக உற்பத்தியில் மலிவான கூலிக்கு பெரும் அளவில் பெண்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. இதனால் பெண்கள் படிப்பதற்கு, தொழிலுக்கு என்று சமூகத்தை நோக்கி வரவேண்டிய தேவையையும் அதிகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் பெண்ணுக்கு போலியான சுந்ததிர மாயையை உருவாக்கி தந்துள்ளது அந்த அமைப்பு.

மேற்கண்ட இரண்டு வகையிலும் ஆணாதிக்க கட்டமைப்பை வலுவாக்கியுள்ளது. தரகு முதலாளிகளின் பெரும் லாபத்திற்காக பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை நுகர்வு பண்டங்களாக மாற்றுதல் அல்லது அவர்களே விரும்பி நடிக்கிற சினிமாவாகட்டும் அல்லது ஆபாச படங்களும் அவர்களின் லாபவெறிக்கே….

மேலும் சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை தமது இச்சைகளுக்காக பயன்படுத்துவதும்,தனக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஆணை தூக்கி எறியாமல் அவளை ஒரு கள்ள உறவு மூலம் சுதந்திரத்தை அடைய சொல்லுவதும் இதனால் அவள் சுதந்திரத்தை வேறு வழியில் திருப்பிவிடுதல் மூலம் அதுவும் ஆண்களுக்கே சாதகமாக பயன்படக்கூடிய சூழ்நிலைதான் நிலவுகிறது.

நிலவுடமை கருத்துக்களை தூக்கி எறியாமல் கற்றற்ற பாலியல் உறவுகளின் மூலம் ஆண்களுக்கு கன்னியாக(பொறி) மாற்றப்படுகிறார்கள். இதனால் பெண்கள் தனக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை கொடூரமாக கொலை செய்வதும், ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டுவதும், தன் இச்சைக்கு அடிபணிய வைப்பதும், கூட்டு வன்புணர்ச்சிகளை மேற்கொள்வதும் இதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு ஆளும் வர்க்கமும் பெரும் அளவில் துணை போகக்கூடிய அளவில் செயல்படுகிறது.

இத்தயை சமூக சூழ்நிலையையுடன் நாம் படத்தை பொருத்தி பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அனைத்து நிலவுடைமை கருத்துக்களையும் தாங்கி பிடித்து கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு முழுக்க முழுக்க வால் பிடித்து கொண்டு, பாலியல் சார்ந்த உறவில் முற்போக்கு சொல்ல வருகிறேன் என்று கூறிக் கொண்டு அனைத்து பிற்போக்கு தனத்தையும் உள்ளடக்கிய ஒரு செக்ஸ் டீலக்ஸாக மட்டுமே திரைக்கதை முழுவதும் கரும்புகையை படம் மெங்கும் வெளியேற்றி கொண்டு செல்கிறார் இயக்குநர்.

கதை நேர்த்தி என்ற பெயரில் உலகத்தில் தீமை, நன்மை என்றும், இன்று தவறு என்று சொல்லுவது நாளை சரியென்று சொல்லப்படும், இதுதான் இயற்கை என்றும், அநீதிக்கு எதிராய் எழும் குரல்கள் அனைத்தையும தற்செல் நிகழ்விற்குள் அடக்கம் செய்துவிட்டார் இயக்குநர்.

இச்சமூத்தில் பல்வேறான ஒடுக்கு முறைகளை இந்த ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிடுகின்ற சூழ்நிலையில் பாலியல் ரீதியான சுரண்டல்களையும், ஒடுக்குமுறையையும் மற்றோரு வடிவத்தில் கையாலுக்கின்றது இந்தப் படம்.

பெண்ணை பண்டமாகி மனித இனத்திற்கான மதிப்பை இந்த சமூகம் மறுக்கிற வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. திரைத்துறையும் அதற்கு விதி விலக்கு அல்ல. அனைத்து ஆபாச பண்பாட்டையும் தங்கிப் பிடித்து கொண்டு பெண்களின் உடல்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க நிலவுடமை பண்பாட்டையும், ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கத்தை தூக்கி எறிய வீரம் செறிந்த போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாக்க இயலுமே தவிர கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடுவது ஒருபோதும் தீர்வு ஆகாது.

ஈஸ்வரி, ‘திரையாள்’ இதழின் ஆசிரியர். தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் பொதுச்செயலாளர்.

அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!

அறிவழகன் கைவல்யம்

அறிவழகன் கைவல்யம்

நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் – ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட.

நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து நாட்டின் எரிபொருள் பாதுகாப்பில் ஒரு நிலையான இடம் பெற்ற இந்த நிறுவனம். பன்னாட்டு வணிகச் சந்தைப் பொருளாதாரத்திற்குப் பிறகு 1990 களில் 28 மிக முக்கியமான எண்ணெய்ப் படுகைகளையும், எரிவாயு நிலைகளையும் கண்டறிந்தது. இவற்றில் ஒன்று கூட இன்று இந்திய அரசிடம் இல்லை, நாட்டின் பாதுகாவலராக ஐயா திருவாளர் மோடி தனியார் நிறுவனங்களுக்கு இவற்றைத் தாரை வார்த்து விட்டார்.

உலக வங்கியிடமிருந்து 450 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெற்று இன்னும் சில மாநில அரசு நிறுவங்களின் துணையோடு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட இந்த நிறுவனம், தொடர்ந்து நாட்டின் பணக்கார நிறுவனமாக நீடித்தது. உள்நாட்டு உற்பத்தியில் 70 % இந்த நிறுவனத்தின் கைகளில் தான் இருந்தது.

கடந்த நான்காண்டுகளில், ஊர்க்காவலன் மோடியின் தலைமையிலான திருட்டு அரசாங்கம் லாபகரமான அரசின் பொது நிறுவங்களின் உபரிப் பணத்தை குருதி உறிஞ்சும் அட்டையைப் போல குடிக்கத் துவங்கியது, இன்று ONGC தன்னுடைய உபரிப் பணத்தை இழந்தது மட்டுமல்ல, மலைபோல் குவிந்திருக்கும் கடனுக்கும் சொந்தக்காரனாகி இருக்கிறது. நாட்டின் காவல்காரர் மோடி கடந்த 2018 நவம்பரில் ONGC யின் 60 % பங்குகளை தனக்கு வேண்டிய தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கமிஷன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. முயற்சி முறியடிக்கப்பட்டது, ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் காவல்காரன் ONGC யை அம்பானிக்கோ, அதானிக்கோ மடை மாற்றி விட்டிருப்பான்.

நீங்கள் ONGC யின் இந்த வெற்றிகரமான வீழ்ச்சியைப் பார்க்க அதிகம் மெனெக்கெட வேண்டியதில்லை, நிறுவனத்தின் Balance Sheet – http://www.bseindia.com இல் கிடைக்கிறது. 2017 – 18 ஆண்டுகளில் ONGC யின் 90 % வீழ்ச்சி வேதனை அளிப்பது மட்டுமல்ல, மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு எவ்வளவு பெரிய கொள்ளைக்கூட்டம் என்பதையும் உணர வைக்கிற ஒரு சோற்றுப் பதம்.

2014-15 களில் காவல்காரர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 74 % வீழ்ச்சியை அடைந்த இந்நிறுவனம், இதே நிதி ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” 18,334 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியது, அதாவது காவல்காரர் மோடி ONGC யின் கோவணத்தை உருவி அம்பானிக்கு ONGC யை பட்டாப் போட்டார் என்று நானோ நீங்களோ சொன்னால் தேசத் துரோகி ஆகி விடுவோம். பரிதாபமாக ONGC மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்று அதாவது காவல்காரர் மோடி ஆட்சியை விட்டு வெளியேறும் 2018-19 நிதி ஆண்டில் மட்டும் ONGC யின் 92 % நிதி சூறையாடப்பட்டு வீதியில் நிற்கிறது.

இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு, இந்தியாவின் லாபகரமான பொதுத் துறை நிறுவனங்களை காவல்கார மோடி அரசு எப்படி சீரழித்தது என்பது இந்திய வரலாற்றில் அழியாத கறையாக நிலைத்திருக்கும், ஆனால், இந்தியப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும், மலை முழுங்கி மோடியை, அவரது ஆட்சியின் மிகப்பெரிய ஊழல்களை எல்லாம் மறைத்து இஸ்லாமிய எதிர்ப்பு, தேசபக்தி, பாகிஸ்தான் மீதான காழ்ப்பு என்று திசை திருப்புவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான அரசு இந்திய இயற்கை வளங்களை தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்று விட்டது மட்டுமில்லை, இனி ஒருமுறை இந்தத் திருடர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் திவாலாகி காங்கோவைப் போலவோ உகாண்டாவைப் போலவோ குழந்தைகளைத் தெருவில் பிச்சை எடுக்க விடும் நாடுகளில் ஒன்றாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை, உலகின் மிகவும் ஏழையான நாடுகளில் இப்போது இந்தியாவின் இடம் 19 என்பதை நினைவில் கொள்ளுங்கள், தேசபக்தி, இந்து என்று சொல்லிக் கொண்டு உணர்வு மயமாக்க வருகிற பார்ப்பனர்களையும், பார்ப்பன அடிவருடிகளையும் செருப்பால் அடித்து விரட்டுங்கள். உயிர் வாழ்வதற்கான தேர்தல் இது, தேசபக்தி பம்மாத்துகளை நம்பி மோசம் போகாதீர்கள்.

Images & Statistics Sources : scroll.in, bseindia.com & ongcindia.com

அறிவழகன் கைவல்யம், சமூக-அரசியல் விமர்சகர்.

ஐந்து ஆண்டுகளில் வெறும் 30 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சௌகிதார் மோடி!

மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு, செயலாளருமான பினாய் விஸ்வம் பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

மதிப்பிற்குரிய சௌகிதார் திரு நரேந்திர மோடி அவர்களே ,

உங்களுக்கு நீங்களே சௌகிதார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்ட போது, நீங்கள் இந்த நாட்டின் காவலாளி என்று நாட்டு மக்களிடம் சொன்னீர்கள். பாராளுமன்றத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கிற பொறுப்பை நீங்கள் எடுத்துள்ளதாக பலர் நம்பினார்கள். ஆனால், நீங்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் உள்ள இடைவெளி பலரை திகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையான தூண்களாக பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை உள்ளன என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்லுகிறது. நிர்வாகத் துறை பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டது என்பதும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைப்படி மறுக்கமுடியாத ஒன்றாகும். இந்த நெறிமுறைகள் உங்களுக்கும் பொருந்துமா என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

உங்களுடைய ஐந்து வருட “சௌகிதார்காலம்”( காவலாளி) முடிய இருக்கும் நேரத்தில் நீங்கள் எவ்வளவு பொறுப்போடு பாராளுமன்றத்திற்கு இருந்திருக்கிறீர்கள்? இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை நாட்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இருக்கிறீர்கள்? நீங்கள் பாராளுமன்றத்திற்குள் சௌகிதாராக நுழைந்த தருணத்தை நம் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஜனநாயகத்தின் புனிதமான இடமான பாராளுமன்றத்திற்குள் நுழையும் முன்பு, ரகசிய காப்பு பிராமணம் எடுக்கும் முன்பு பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை முத்தமிட்டீர்கள்.

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தை மதிக்காத பிரதமர் நீங்கள்தான் என்பதை நிருபித்து இருக்கிறீர்கள். நீங்கள் சௌகிதாராக இருந்த காலத்தில்தான் பாராளுமன்றம் மிக குறைவான நாட்களே கூடியுள்ளது. 2014 ஜூன் மாதத்திற்கும் 2019 பிப்ரவரி மாதத்திற்கும் இடையில் 331 நாட்களே பாராளுமன்றம் கூடியுள்ளது. கடந்த காலங்களில் ஐந்து வருடம் ஆட்சி நடந்த சமயங்களில் பாராளுமன்றம் சராசரியாக 468 நாட்கள் நடந்துள்ளது. இது நீங்கள் நடத்தியது எவ்வளவு வெற்றான ஒன்று( hollowness) என்பதைக் காண்பிக்கிறது. 331 நாட்கள் நடந்துள்ள பாராளுமன்றத்தில், நீங்கள் எத்தனை நாட்கள் கலந்து கொண்டீர்கள் என்று இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது இயல்புதான்.

அதிகாரப்பூர்வமற்ற வகையில் நீங்கள் 30 நாட்களே பாராளுமன்றத்திற்கு வந்துள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. சரியான தகவல் குடிமகனுக்கு தெரிய வேண்டும் என்று நம்புகிறேன். பாராளுமன்ற மேலவையான, மாநிலங்களவை உறுப்பினரான நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன்.இந்த சாதாரண , எளிய கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்
இந்த மன உளைச்சலை பிரதம மந்திரியாகிய தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன்.

“16 வது பாராளுமன்றத்தில்,எத்தனை நாட்கள் ஒட்டுமொத்தமாக பிரதம மந்திரி அவையில் இருந்தார்? என்பதுதான் எனது கேள்வி. பாராளுமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போது உரிய கால இடைவெளி கொடுத்து 11.2.2019 அன்று பதில் வரும் வகையில் நோட்டீஸ் கொடுத்து இருந்தேன். ஆனால் பாராளுமன்றக் கூட்டம் முடியும் வரையில் எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு, 22.2.19 தேதியிட்ட கடிதம் ராஜ்ய சபை செயலகத்தில் இருந்து அஞ்சலில் எனக்கு வந்தது. எனது கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது( inadmissible) என்று அந்தக் கடிதம் சொல்லியது.ஏனெனில் அது மாநிலங்களவை/மக்களவையின் அதிகாரவரம்பிற்குள்(Purview) அது வருகிறது. அந்தக் கடிதம் நடைமுறை விதி( Rules of procedure) 47(2) ஐ எனக்கு சுட்டிக்காட்டியது. எனவே சம்மந்தப்பட்ட விதிகளை நான் பார்த்தேன். அரசு அல்லது அமைச்சர்களின் அலுவல் அல்லாத எந்தக் கேள்வியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த விதி கூறுகிறது.

மரியாதைக்குரிய சௌகிதார் அவர்களே அதுதான் உண்மையான பிரச்சினை. பாராளுமன்றத்தில் அமைச்சர் இருப்பது என்பது ஒரு அரசாங்கத்தின் அலுவல் இல்லையா? பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் இருப்பது தேவையற்றது என்று கருதும் ஒரு அரசு எப்படி பாராளுமன்றத்திற்கு பொறுப்போடு நடந்து கொள்ள முடியும். இதற்கு நான் உங்களிடமிருந்து பதிலை எதிர் பார்க்கலாமா? பூமியிலும், ஆகாயத்திலும் வெளியிடங்களிலும் (outer space) ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் சுறுசுறுப்பாக தேடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
பினாய் விஸ்வம்,
பாராளுமன்ற உறுப்பினர்.

உள்நாட்டுச் சட்டங்களை மதிக்காத ராயல் என்பீல்டு நிறுவனம்

சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆனாலும், சங்கம் அமைக்கும் உரிமையையும், கூட்டுப் பேர உரிமையையும் நமது அரசுகளால் உறுதி செய்யமுடியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் ராயல் என்பீல்டு.

ஒரகடம் & வல்லம் பகுதியில் இயங்கி வருகிற இந்த வெளிநாட்டு நிறுவனம் இரு சக்கிர வாகன உற்பத்தி செய்கிறது. இதில் 8000 பேர் பணிபுரிந்தாலும் 1000 தொழிலாளர்களே நிரந்தரமான தொழிலாளர்கள்; இதர 7000 பேரும் ஒப்பந்தம், தினக்கூலி,பயிற்சியாளர், என பல்வேறு பெயர்களில் வேலை வாங்கப்படுகிறார்கள். இது நல்ல லாபம் தரும் நிறுவனம் ஆகும்.

சில வருடங்களாக பணிபுரியும் காஷூவலாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்ற சட்டப்பூர்வமான கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பித்தனர்.

இதனைக் கண்டு வெகுண்டு எழுந்த ராயல் என்பீல்டு நிறுவனம் முக்கியமான சங்க நிர்வாகிகளை புது தில்லி,மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு இடமாற்றம் செய்து இருக்கிறது. இதில் சங்க பொதுச் செயலாளரும் உண்டு. பெண் தொழிலாளிகளும் இது தவிர நிரந்தரம் ஆகும் தருவாயில் உள்ள பல தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இவையெல்லாம் தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையையும், சங்கம் அமைக்கும். உரிமையையும் தடுக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

தொழிலாளர் நலத்துறையும்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் கொடுத்த அறிவுறுத்தல்களை நிர்வாகம் மதிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு மேலாக 300 தொழிலாளர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.

சென்னையில் தொழிற் சங்க தலைவர் ஆர்.குசேலர் தலைமையில் கூடிய மைய தொழிற் சங்கங்கள் இந்தப் போக்கை கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் எல்பிஎப், எச்எம்ஸ, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பதினொரு சங்கங்கள் கையெழுத்து இட்டுள்ளன. கூட்டுப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ !

வினி சர்பனா

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்…

ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ இருப்பார்கள் லாட்ஜ் லேகிய டுபாக்கூர் வைத்தியர்கள். அப்படிப்பட்ட, லாட்ஜ் லேகிய வைத்தியர் போல்தான் படம் முழுக்க பாலியல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் ‘காம’ ராஜா.

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் வீட்டில் இணைந்திருக்கும்போது திடீரென்று காதலன் இறந்துவிட்டால்?

பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் நண்பர்களுடன் ‘ஏ’ படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தமாதிரி படத்தில் தனது அம்மாவே நடித்திருப்பதைப் பார்த்தால்?

அம்மாவை விட்டு ஓடிப்போன அப்பா பலவருடங்கள் கழித்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது அந்த அப்பா திருநங்கையாக மாறி திரும்பிவந்தால்? என்னென்ன நடக்கும் என்பதுதான் கதை.

இதில், முதல் சம்பவம் கடந்த வருடம் சென்னை திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம்தான். ஆனால், அச்சம்பத்தில் இருவரும் திருமணமாகாதவர்கள். காதலன் இறந்த துக்கம்… வேதனை… சுற்றுச்சூழல் கொடுத்த மன அழுத்தத்தின் காரணமாக அந்த இளம்பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

அதுவும், இப்படத்தில் வரும் காட்சியில் இறந்துபோன காதலனுக்கு கடைசியாக வந்த போன்கால் காதலி சமந்தாவிடமிருந்து என்பதால் ஈஸியாக காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிடும் என்பதுகூட தெரியாமல்காதலனின் மரணத்தை மறைக்க ப்ளான் பண்ணும் காட்சிகளில் ரசிகர்களை மிகவும் ஈஸியாக ஏமாற்றுகிறார் இயக்குநர். அதுவும், அவர்களுடைய காரிலேயே பிணங்களை வைத்துவிட்டு கிளம்புகிறார்கள்.

சமந்தா காதலனுடன் அப்படி இருந்ததை கணவனிடம் விவரிக்கும் வார்த்தை உச்சரிப்பு, அதையே போலீஸிடமும் உச்சரிப்பது எதார்த்தமாக இல்லை.

ஆர்.சி. எனப்படும் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் சிலை வழிபாடு செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள், யாரும் உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஜெபித்துக் கொண்டிருப்பதில்லை.

வேலூர் சி.எம்.சி உள்ளிட்ட மருத்துவமனைகளை கொண்டுவந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ததே கிறிஸ்தவ சி.எஸ்.ஐ பிரிவினர்தான்.

புதிதாக மதம் மாறிய பெந்தகோஸ்தே கிறிஸ்துவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. ஒரு அடையாளத்திற்காக சிலுவைக்கு முன்னால் ஜெபிப்பார்கள். பெரும்பாலும் வெள்ளைநிற உடை உடுத்தியிருப்பார்கள். ஏதாவது, ஒரு சபைக்குச்செல்வார்கள். இப்படி, பலப்பிரிவுகளில் ஒரு சிலர்தான் மருத்துவமனைக்கே செல்லாமல் எல்லாவற்றிற்கும் அற்புதம் நடக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி, அறியாமையில் இருப்பவர்கள் அனைத்து மதத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க, மிஷ்கின் காதாப்பாத்திரத்தின்மூலம் ஒரு சிறுபான்மை மதத்தை இழிவுபடுத்திவிட்டு பகத் ஃபாசில் கதாப்பாத்திரத்தின் மூலம், தேசப்பற்று போல் சாதிப்பற்று இருந்தால் என்னத் தவறு? என்று கேட்டு சாதிவெறியை ஊக்குவித்திருக்கிறார் இயக்குநர்.

அதுமட்டுமா? வக்கிரம் பிடித்த சப்- இன்ஸ்பெக்டர் பெயரும் கிறிஸ்துவ பெயரான பெர்லின்.

பாசிச பா.ஜ.கவுக்கு ஆதரவாக படம் எடுத்தால் சென்சார் போர்டில் ஈஸியாக அனுமதி கிடைத்துவிடுகிறது என்று நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் தற்போதைய இயக்குநர்கள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது விஜய்சேதுபதியின் திருநங்கை கதாப்பாத்திரம்தான். காவல்நிலையங்களில் சிக்கிக்கொள்ளும் சராசரி திருநங்கைகள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒருநாள் அப்படியொரு கொடூரத்தை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள். அவரைச்சுற்றி நடக்கும் காட்சிகள் அனைத்தும் நெகிழ வைக்கின்றன. ஆனால், டீன் ஏஜ் பருவத்தை அடையத்தொடங்கும்போதே தான் ஆண் இல்லை… ஒரு பெண் என்பதை முழுமையாக உணர ஆரம்பித்துவிடுவார்கள் திருநங்கைகள். அதனால், அவர்களுக்கு ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு ஏற்படும். திருமணமாகும்வரை தன்னை எப்படி உணராமல் இருந்தார் என்பது கேள்விக்குறி. ஆனால், குடும்ப நிர்பந்தத்தின் காரணாமாக திருமணம் செய்துகொள்வதுமுண்டு. திருநங்கைகளின் வாழ்வியல் வலியை விஜய்சேதுபதியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதற்கு பாராட்டுகள்!

தியாகராஜன் குமாரராஜா சேலம் சித்த வைத்திய சாலை சிவராஜிடம் உதவியாளராக இருந்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எந்தக் காரணத்தைக்கொண்டும் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழைத்தவிர வேறு சான்றிதழ் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே சிரமப்பட்டு படம் முழுக்க ஆபாச வார்த்தைகளை அள்ளிக்கொட்டி, மெனக்கட்டிருக்கிறார்.

அதுவும், குழந்தைகள்… பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் சிறுவர்கள் ‘ஏ’ படம் பார்ப்பதை மட்டுமே மையப்படுத்தியும் பெண்களைக் கண்டால் ஏங்குவது போலவும் எடுத்து தவறான பாதைக்குத்தான் படத்தின்வழி கொண்டு செல்கிறார்.

பெண்களை இழிவுபடுத்தும் “தே…” போன்ற வசனங்களை அதிகம் வைத்து, தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதற்கு “அவரே சாட்சி”.

எஸ்.ஜே. சூர்யா, சாமி போன்ற இயக்குனர்கள் எப்படி காணாமல் போனார்களோ, அப்படித்தான் பாலியல் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர்கள் தொடர்ந்து நீடிக்க முடியாது. படம் சுமார் டீலக்ஸ்தான். ஆஹோ… ஓஹோ என்று கொண்டாடும் அளவுக்கு சூப்பர் டீலக்ஸ் இல்லை!

” டிஸ்லைக்ஸ்”!!!

வினி சர்பனா, பத்திரிகையாளர்.

நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க இருக்கிறது. நம் சமூகத்தில் கருத்துருவாக்கத்திலும், அணிச் சேர்க்கையிலும் சாதி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர் தி.லஜபதி ராய் ‘நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?’ என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

நூல் வெளியீட்டு விழாவை மதுரை, உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்கள்.இறுதி நேரத்தில் அரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பு அதே இடத்தில், அதே நாளில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. கருத்துரிமைக்கு எதிரான சூழல் நிலவி வரும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சம்பவம் இயற்கையாகவே முக்கியத்துவம் பெறுகிறது. உண்மைதான்; இந்த நூல் சங்கடமான கேள்விகளை ‘தமிழிசைகளை’ நோக்கி எழுப்புகிறது. நீங்கள் நடந்து வந்த பாதை எது? நீங்கள் பிடிக்க வேண்டிய கொடி எது என்று கேட்கிறார் நூலாசிரியர்.

தி. லஜபதி ராய் புதிதாக எந்த சம்பவங்களையும் சொல்லவில்லை. சிறு நூல்தான். கடந்த நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நாடார்கள் (அப்போது கிராமணி, சாணார் என்று அழைக்கப்பட்ட) நடத்திய பல்வேறு போராட்டங்களை சொல்லுகிறது. வர்க்கப் புரிதலோடு பார்க்கிறது. உனக்கு நண்பர்களாக யார் யார் இருந்தார்கள் என்று சொல்லுகிறது. யாரோடு தீ பயணிக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டுகிறது. எண்பதுகளில் நடந்த மண்டைக்காடு கலவரம், சிபிஎஸ்இ- க்கு எதிராக நடந்த வழக்கு விவரம் வரை இந்த நூலில் குறிப்புகள் வருகின்றன. செறிவான நூல் இது.

முதல் அத்தியாயத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நாடார் ஆளுமைகளை இந்த நூல் சொல்லுகிறது. அதன்பின்பு அந்த சாதி குறித்து வந்த ஆய்வுகளை சொல்லுகிறது. அதனைத் தொடர்ந்து கமுதி மீனாட்சி அம்மன் கோவில் ஆலைய நுழைவுப் போராட்டம் (1897), சிவகாசி வன்கொடுமை(1899), வைக்கம் போராட்டம் (1925), சுசீந்திரம் கோவில் நுழைவு போராட்டம் (1933), தோள் சீலைப் போராட்டம் (1812 -1859), அய்யா வைகுண்டர் பங்களிப்பு, வடக்கன்குளம் தேவாலயத்தில் வெள்ளாளர் – நாடார் சாதியினரைப் பிரிக்கும் சுவர் இடிப்பு (1910), (மண்டைக்காடு ) வேணுகோபால் ஆணையம் போன்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இது பல கதைகளை மீண்டும் சொல்லுகிறது இந்நூல். சாணார் என்ற பெயரை நாடார் என்று மாற்ற நடந்த இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 சத இசுலாமியர்களும், கிறிஸ்தவவர்களும் இருக்கும் வரலாற்றுத் தேவை, நாடார்களின் உயிரைக் காப்பாற்றிய இசுலாமிய, கிறித்தவ மக்கள், சாதிப் போராட்டத்தில் வேளாள, கம்மாளர், மறவர் இன மக்களுக்கு எதிராக, நாடார் மக்களின் பக்கம் நின்று தடுப்புச் சுவரை உடைத்த சேசு சபையினர், அதனால் இந்து மதத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பலவற்றை சொல்லியபடியே நூலை நகர்த்துகிறார் லஜபதிராய்.

தோள் சீலை அணிய வேண்டுமெனில் கிறித்தவ மதத்திற்கு மாற வேண்டும்; அங்கு போனால் இலவசமாக நிலவுடமைக்காரர்களுக்கு அடிமை உழைப்புத் தர வேண்டியதில்லை. அதன் விளைவாக வருவதுதான் சிவகாசி வன்கொடுமைகள்.

இதன் தொடர்பாகத்தான் சுய மரியாதை இயக்கங்கள் வளர்கின்றன. சௌந்திர பாண்டியன் போன்ற சிறந்த ஆளுமை முகிழ்கிறது. இவர் மனித குல மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகள் கவனிக்கத் தக்கன; இன்றும் பொருத்தம் உடையன. (தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இடமில்லை என்றால் கல்வி மானியம் ரத்து). மூன்று முதல் ஐந்து சதம் வரை இருக்கும் நாடார்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான விகிதாச்சாரத்தைவிடவும் அதிகம் அடைந்துள்ளனர்.

“வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே இந்த நூலின் நோக்கம்” என்று சரியாகவே சொல்லுகிறார் ஆசிரியர்.  கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் திரு.பாஸ்கர சேதுபதி ( கோவிலின் பரம்பரை அறங்காவலர்) இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப்(1893) பொருளுதவி செய்தார்”. மன்னரை எதிர்த்து வைகுண்டர் நடத்திய தீரம் நிறைந்த போராட்டம்; அது இன்றைக்கும் அம்மா வழி ? அய்யா வழி என தொடர்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் இன்று முடிந்து விட்டதா ? “2019 ம் ஆண்டிலும் கன்னியாகுமரி மாவட்டம் தேவசம் போர்டுக்கு கட்டுப்பட்ட கோவில்களில் மேலாண்மை அதிகாரம் உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதும் நாடார்கள் காவலர்களாக பணியாற்றுவதும் உண்மை” என்கிறார் லஜபதிராய்.

தீண்டத்தகாத சாதியினர் என்று சொல்லி நாடார்களை கோவில்களிலோ, தெருக்களிலோ, நுழையவிடாமல் தடுத்த அதே உயர்சாதியினர்தான் தங்களால் உரிமை மறுக்கப்பட்ட மிச்சமிருக்கும் எளிய மக்களை இந்துக்கள் என்று முத்திரை குத்தி இந்து மதத்தின் காலாட்படையினராக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

வெறுமனே சாதிப்பிரச்சினை என்றும் இந்த நூலை ஒதுக்க முடியாது. ஏனெனில் பெரும் நிலவுடமையாளர்களான சில நாடார் குடும்பங்கள் (பொன்.ராதா கிருஷ்ணன்கள்) ஆலய நுழைவு போராட்டத்தின் போது உரிமைக்காக போராடிய மக்களுக்கு எதிராக இருந்தனர் என்பதும், தோள் சீலை அணிய அனுமதிக்க கூடாது என்று திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு விண்ணப்பம் அளித்தனர் என்பதும் வரலாறு. எனவே பொன்.’ராதாகிருஷ்ணன்கள்’. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெற்றிகரமான காலாட் படையினராக இருக்கலாம்! மற்றவர்கள் ? மண்டைக்காடு கலவரத்தில் மீனவர்களும், நாடார்களும் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால் பலனை அறுவடை செய்தது?

லஜபதி ராய் போற்றதலுக்கு உரியவர். இந்த நூல் மிகப் பெரிய சலனத்தை , விவாதத்தை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தும்.

வெளியீடு: லஜபதிராய், மனை எண் 39, ஐஸ்வர்யம் நகர், புதுத் தாமரைப் பட்டி, மதுரை- 625 107/ரூ100/140 பக்கம்/2019.

நூலை ஆன்லைனில் வாங்க…

https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

கமலஹாசன் பேசுவது மாற்று அரசியலா? மநீம குறித்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

நடிகர் கமலஹாசன் உருவாக்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியானது, காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக கூட்டணியில் இடம் பெற செய்த முயற்சி தோல்வியுற்றதால், தனித்து போட்டியிடுகிறது.

ஆனாலும், MNM கட்சிகாரர்களும், சில செய்தி ஊடகங்களும் மாற்று அரசியல் மூன்றாவது அணி என்றெல்லாம் ஊதிப் பெருக்க முயற்சிக்கின்றன. உண்மை என்ன?

தமிழகத்தில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள்/ இயக்கங்கள் வரவேற்பு பெறுவதில்லை!

சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சி வாயிலாக மயிலாப்பூர், மாம்பலம் பார்ப்பனர்கள், சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற தலைவர்களின் முயற்சிக்கு பிறகு, 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள், இயக்கங்கள் உருவானதாகவோ, வெற்றி பெற்றதாகவோ வரலாறு இல்லை.

பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பிறகு, பார்ப்பனர்கள் தலைமையில் கட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை. ஜெயலலிதா வின் வருகை & எழுச்சியும் கூட, ஏற்கெனவே இடைநிலை சாதிகளின் கட்சியாக உருவெடுத்து இருந்த அதிமுக வில், திறமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் இருக்கிறது.

2009 ல் தாம்பிராஸ் பிரமாணர் சங்கம் ஆதரவுடன் எஸ்.வி.சேகர் கட்சி அமைக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை vacuum கைப்பற்ற பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். கமல், ரஜினி முயற்சிகளை இப்படியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் முயற்சி ஊக்கமான அரசியல் பிரவேசம் அல்ல ! திரையுலகில் ஓய்வு பெற்ற காலத்தில், அரசியல் புகலிடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறார்கள். நடக்குமா?

கொள்கை அறிக்கை இல்லாத மய்யமும், அரசியல் கருத்தியல் குழப்பவாதியான கமலஹாசனும்

மக்கள் நீதி மய்யம் உருவாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அதற்கு கொள்கை அறிக்கை என்று எதுவும் உள்ளதா? பிப்ரவரி 2018 ல் கட்சியை அறிவித்த போது, தரமான கல்வி, ஊழல், வேலைவாய்ப்பு பற்றி பேசினார். புதிய தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும் என்றார்.

ம.நீ.ம.வுக்கு கொள்கை என்னவென பலரும் கேள்வி எழுப்பிய பிறகு … ஏப்ரல் 2018 ல், ஐந்து மாதங்களில் வெளியிடுவதாக தெரிவித்தார். இன்னமும் வெளியிடவில்லை.

ஆனால்,

1)வலதும் இல்லை, இடதும் இல்லை ; மய்யம் என்றார்.

2) திராவிடமும் இல்லை, தேசியமும் இல்லை என்றார். கட்சியின் சின்னமான- Logo. 6 கரங்கள் கோர்த்திருப்பது, தெற்கிலுள்ள 6 மாநிலங்களுக்கிடையிலான கூட்டுறவு என்றார்.

3) கிராமங்களில் சுற்றுப் பயணம் சென்று வந்த பிறகு, சமீபத்தில் கிராமிய தேசீயம் என்கிறார்.

ம.நீ.ம.வுக்கு என்று தீர்க்கமான, அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லாததால், நம்மை பொறுத்தவரை, நிறுவனத் தலைவர் கமலின் கருத்துக்கள் தான் கட்சி கொள்கை எனக் கருதி கொள்ளலாம்.

அவரே தயாரித்த மற்றும் நடித்த படங்கள் பலவும், தேவர்மகன் (1992), ஹேராம் (2000), விருமாண்டி (2004), விஸ்வரூபம் (2013) அனைத்தும், சாதீயவாத, மதவாத தன்மைகளை, பிற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்தன.

அவ்வப்போது அவர் பேசியது, எழுதியது எனப் பார்த்தால் … அவரது சித்தாந்தம்… பகுத்தறிவு, அத்வைதம், மார்க்சீயம், மனிதாபிமானம், பார்ப்பனீயம் ஆகியவற்றின் காக்டைல் கலவை ஆகும்.

பார்ப்பனர்களின் உயர்குடியினரான அய்யங்கார் சாதியின் இஷ்ட தெய்வமான விஷ்ணு இவரது திரைப் படங்களில் இடம் பெற்று இருப்பார். இவைகளிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்வது? கமலஹாசன் இடது இல்லை. வலதின் பக்கத்தில் நின்று கொண்டு மய்யம் என பொய் சொல்லும் குழப்பவாதி!

“டுவிட்டரில் அரசியல் செய்து கொண்டுருந்த என்னை, ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டம், பணமதிப்பு நீக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போன்றவை தான் நேரடியாக ஈடுபட தூண்டியது” எனக் கூறும் கமலஹாசன், இவற்றிற்கு காரணமான பாஜக_மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு, சமூக நீதி & பன்மைத் தன்மை எதிர்ப்பு ஒற்றை கலாச்சார பாசிச பாஜக முகாமை தாக்குவதற்கு பதிலாக, திமுக – ஸ்டாலின் & காங்கிரஸ் மீதான தாக்குதலுக்கு அதிக அழுத்தம் தருகிறார்.

திமுக_காங்கிரஸ் கூட்டணியில் ஒதுக்கீடு கேட்டு கிடைக்காமல் தனித்து போட்டியிடும் கமல், இப்போது புதிதாக கண்டு பிடித்தது போல, ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு திமுக-காங்கிரஸ் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்.

எல்லோரும் போல ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதிலிருந்து பெரிதாக படிக்க வேண்டியதில்லை.

பாஜகஅதிமுக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்று விடாமல் மடைமாற்றம் செய்வதற்கான பாஜகஅதிமுக அணியின் B Team ஆக செயல்படுவதே கமல் & மக்கள் நீதி மய்யத்தின் அரசியலாக இருக்கிறது.

கட்சி வேட்பாளர் தேர்வு விஷயங்களில் பார்ப்பனீய அணுகுமுறை!

சுப்பிரமணிய சுவாமி சொல்வது போல, “பிராமணர் வேலை கருத்து சொல்வது மட்டுமே! ” என்பது போல, கமலஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை. கிணற்றுக்குள் குட்டிகளை அனுப்பி விட்டு, ஆழம் பார்த்து விட்டு பிறகு தான் முடிவு செய்வார்!

37 ஆண்டு காலமாக ரத்த தானம், சமூக சேவை அது இது வென வேலை பார்த்த நற்பணி மன்ற தூண்களுக்கு கல்தா கொடுத்து விட்டார்.

கோலிவுட் யுனிவெர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்ற கமலஹாசன், படித்தவர்களுக்கு தான் சீட்டு கொடுக்கப்படும் என்ற பார்ப்பனீய தருமத்தை முன்வைத்து மன்றத்துக் காரர்களுக்கு சீட்டுகள் இல்லை என கைவிரித்து விட்டார்.

முதல் பட்டியலில் ஓய்வு பெற்ற IPS போலீஸ் அதிகாரி& நீதிபதி , 3 டாக்டர்கள், 5 வக்கீல்கள், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், 8 தொழிலதிபர்கள், முதலாளிகள், சினிமாக்காரர்கள் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இரண்டாம் பட்டியலும் இதே போல தான்! வேறுபாடு என்னவெனில், சின்னஞ்சிறு அமைப்புகளான இந்திய குடியரசு கட்சி -தமிழரசன் பிரிவு, வளரும் தமிழகம், தமிழ் விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் சீட்டுக்கள் கொடுத்துள்ளது தான்!

கட்சி நடத்தவும் புதிது புதிதாக ஆட்கள் (மருத்துவர் மகேந்திரன், விஜய் டிவி மகேந்திரன், சினேகன், சிரிபிரியா எனப் பலரும்) வந்துவிட்டார்கள். கமல் ரசிகர் மன்றத்தினர் கொடி பிடிப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஓட்டு கேட்பது என்ற வேலைகளை தான் பார்க்க வேண்டும்.

நடிகர் கட்சிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை!

கடந்த காலம் போல, ஆளும் & எதிர்கட்சிகள் மீது அவநம்பிக்கை, நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மாற்று அரசியல் சக்தியை எதிர்பார்ப்பது – என்ற மனோநிலையிலிருந்து தமிழக மக்கள் மாறிவருகின்றனர். பகுதி/ பிராந்திய மடடங்களில், பிரச்சினைகள் அடிப்படையிலான பல்வேறு மக்கள் திரள் போராட்டங்கள் வீதிகளில் தினம் தினம் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன; மாணவர்- இளைஞர் எழுச்சிகளும் உருவாகி வருகின்றன.

ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வெற்றிடம் நிலவிய போது, திரைப்படங்களில் அநீதிக்கு எதிரானப் போராளியாக சித்தரித்துக் கொண்ட நடிகர் விஜயகாந்த் கருப்பு எம்ஜியார் ஆக முன்வந்தார். பாமக, விசிக கட்சி அணிகளையும் ஈர்த்தார். 2009 தேர்தலில், 10% வரை வாக்கு பெற்றார். [ இந்த சதவீதத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்களும் கணிசமாக இணைந்து கொண்டனர் என்பதையும் பார்க்கத் தவறக்கூடாது.)

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டு விஜயகாந்த்தை தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து மூன்றாவது அணி/ மாற்று அரசியல் என்ற அரசியல் கட்சிக்குரிய பணிகளை செய்யாமல் போனதால், 2014 சட்டமன்ற தேர்தலில் 2.4% தான் வாக்குகள் கிடைத்தது. படிப்படியாக தேமுதிக கரைந்து வருகிறது.

தற்போதைய தேர்தல் கூட்டணி அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக அமைந்துவிட்டது. ஆக்சன் ஹீரோ ஒரு டெடி பியர் /பொம்மை கரடி போல மாறிய சோகம், மொத்த கட்சிக்கும் ஏற்படப் போவது உறுதி.

மாற்று அரசியல் வேண்டும் என மக்கள் கோரவில்லை. மக்கள் விரோத பாஜக அதிமுக ஒழிந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இத்தகைய வாய்ப்பற்ற தருணத்தில் மாற்று அரசியல் என்ற கிலுகிலுப்பையை விற்க முயற்சி செய்கிறார், கமலஹாசன். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் வாங்கவே படாதபாடு படப் போகிறார்கள், மநீம வேட்பாளர்கள்.

கமலஹாசன் மய்யத்தின் அரசியல் வரலாறு என்ன? அறிக்கை அரசியலா, போராட்ட அரசியலா?

1) கடந்த ஆண்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் – தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தது.

2) பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தமிழக அரசு தாக்குதல்களை கண்டித்து அறிக்கை விட்டது.

3) பல்வேறு இடங்களில் கிராமசபை என்ற கூட்டங்களை கூட்டியது போன்றவையே அவரது அரசியல் ஆகும்.

வலதுசாரி பாசிச சக்திகள் மத்திய அரசில் உட்கார்ந்து கொண்டு… மதவெறி, சாதிவெறி கும்பல் கொலைகள், நிலங்கள், கனிமவளங்கள் & வங்கிநிதி மீதான கார்ப்பரேட் கொள்ளைகள், சமூக நீதி மறுப்பு, அரசியலமைப்புச் சட்டம் & சனநாயக மறுப்பு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒற்றை ஆட்சி என்ற பாசிச ஆட்சிமுறையை நடத்தி கொண்டிருக்கும்போது,

விவசாயிகள் தற்கொலைகள், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, சிறு தொழில்கள் அழிவு, 1% பெரும் பணக்காரர்கள் : 99% ஏழைகள் என்ற நிலை உருவாகியிருப்பது போன்ற சமூகபொருளாதார, அரசியல் சூழலில் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடத்தும் வலிமையான அமைப்புகளே நாட்டுக்கு தேவையாகும்.

நிஜவாழ்க்கை சினிமா அல்ல!

கமலஹாசனிடம் துளியளவும் போராட்ட சிந்தனையோ, பாரம்பரியமோ இல்லை! காவிப் பாசிசத்தை அச்சமின்றி விமர்சிக்கும் பிரகாஷ் ராஜின் துணிச்சலும் இல்லை. கமலஹாசன் மாற்றத்திற்கான சக்தியே கிடையாது!

முற்போக்கு முகாம் தோழர்களுக்கு…

நேற்று வரை, ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களுக்குச் சென்று, கைதட்டி, விசிலடித்து கொண்டாடிய சில தோழர்கள் விமர்சனம் செய்யாமல் மறைமுகமாக அவர்களுக்கு உதவக் கூடாது; இன்றைய அரசியல் விவகாரங்களில், சீரியசாக, பொறுப்பாக செயல்பட வேண்டும். அரசியல் களத்திலிருந்து இந்த நடிக சிகாமணிகளை அகற்றிட, தோலுரித்துக் காட்ட வேண்டும்.

சனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள்!

நாடு ஒரு தீவிரமான தேர்தல் போராட்ட களத்தில் உள்ளது. மக்கள் விரோத பாசிச பாஜக- அதிமுக கூட்டணியை, தமிழ் நாட்டில் வீழ்த்த வேண்டிய கடமை நம் முன்னுள்ளது.

தமிழகத்தில் அதிமுக வின் வாக்கு வங்கியை உடைக்க கூடிய ஆற்றல் ஓரளவுக்கு தினகரன் அணி அ.ம.மு.க இடமே உள்ளது. அதே சமயத்தில் பாஜக_அதிமுக விற்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் வலுவான மாற்று வேட்பாளர்களுக்கே செல்ல வேண்டியுள்ளது.

ம.நீ.மய்யம் அதிமுக வாக்குகளை உடைக்கவோ, கவரவோ பிரச்சாரம் செய்யவில்லை. கட்சி சாரா வாக்காளர்கள், சனநாயக சக்திகள், அதிருப்தி வாக்குகளை தன் பக்கம் திருப்பி, வலுவான எதிர்கட்சி வேட்பாளருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் சில ஆயிரங்களை சிதறடிக்க திட்டமிட்டுள்ளது. கமலஹாசன் பேச்சும், அரசியலும் அத்தகைய திசையில் இருக்கிறது.

இது ஒரு முக்கியமான தேர்தல் போராட்டம்! சில ஆயிரம் வாக்குகள் கூட சில இடங்களில் பாசிச சக்திகளுக்கு மீண்டு வரும் வாய்ப்பை வழங்கிவிடலாம்! நீங்கள் அதற்கான வாய்ப்பு அளித்துவிடக் கூடாது!

தமிழக வாக்காளர்களே!

பாசிச பாஜக-அதிமுக கூட்டணியை ஒட்டுமொத்தமாக தோற்கடியுங்கள்!

மக்கள் நீதி மய்யம் போன்ற துண்டு துக்காணி B டீம்களை நிராகரியுங்கள்!

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.

கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

கட்டட தொழிலாளர் சங்கத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கே. இரவி (66). தமிழ்நாடு ஏஐடியுசியின் துணைப் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். கட்டுமான தொழிலாளர் நிலமை பற்றி தடைம்ஸ்தமிழ்.காமிற்காக பேசுகிறார். இந்த நேர்காணலை செய்தவர் பி. பீட்டர் துரைராஜ்.

கேள்வி : கட்டட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளாரே?

பதில்: இப்படி ஒரு கோரிக்கையை கட்டட தொழிலாளர்களோ, சங்கமோ கேட்கவில்லை. கட்டட தொழிலாளர்கள் எத்தனை பேர் சாப்பிடுவார்கள், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை. உணவுப் பண்டங்களின் முழு உற்பத்திச் செலவை (மற்றவர்களுக்கு தரும் சலுகை விலை அல்ல) வாரியம் தரவேண்டும். கூட்டுறவு நிறுவனமான டியூசிஎஸ் அம்மா உணவகத்திற்கு காய்கறி, அரிசி போன்ற பொருட்களை வழங்கியதற்காக 40 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி தர வேண்டியுள்ளது. நிதி நெருக்கடியில் அம்மா உணவகம் தள்ளாடுகிறது. வாரியத்தில் உள்ள நிதியை, அம்மா உணவகத்திற்காக தமிழக அரசு எடுத்துக் கொள்ளப் பார்க்கிறது..

கேள்வி: இதனால் பலன் ஏதுமில்லை என்று சொல்லுகிறீர்களா?

பதில்: கட்டுமான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ,பி.ஃஎப், போனஸ், மகப்பேறு உதவி போன்ற ஒன்பது விதமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ அமலானால் கட்டுமான தொழிலாளி மட்டும் இல்லாமல், அவர் குடும்பத்தினரும் மருத்துவ உதவி பெறுவர். மகப்பேறு உதவி சட்டப்படி ஆறுமாத சம்பளத்திற்கு ஈடான தொகையை தரவேண்டும். குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூபாய்15,000 என்று வைத்துக் கொண்டால் 90,000 ரூபாயாவது ஒரு பிரசவத்திற்கு தர வேண்டும். ஆனால், இப்போது 6000 ரூபாய் மட்டுமே வாரியம் தருகிறது. அதற்குரிய Formula (சூத்திரம்)படி தருவது இல்லை. இது போன்ற நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

 நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருகிறார்களே?

பதில்: அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஒரு தொழிலாளிக்கு, அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதாவது 15000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளிக்கு அதில் பாதி அதாவது 7,500 ரூபாயாவது ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அதில் பாதியை அவர் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கட்டுமான தொழிலாளிக்கு மாதம் 1000 ரூபாய்தானே ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால், வாரியத்தில் 2763 கோடி ரூபாய் நிதி உள்ளது. இதை வைத்து ஓய்வூதியத்தை அதிகமாக்கித் தரலாம்.

கட்டட தொழிலாளர்களை உரிமைபெற்ற தொழிலாளர்களாக்க அரசு தயாராக இல்லை. அவர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் மதிப்பதில்லை.

கேள்வி: நல வாரியத்தில் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் இருக்கிறார்கள் அல்லவா?

பதில்: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், எல்பிஎப் என எந்த மத்தியச் சங்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளாக, எட்டு உறுப்பினர்களையும் அதிமுக தொழிற்சங்க ஆட்களை வைத்து தமிழக அரசு நிரப்பி உள்ளது.

அப்படியே அந்த வாரியம் தொழிலாளர்களுக்கு சாதகமாக ஏதும் முடிவு எடுத்தாலும் அதை அமலாக்க முடியாது. அரசுதான் அதில் முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஆலோசனை வாரியம் உள்ளிட்ட எந்த முத்தரப்பு குழுக்களும் (முதலாளி + அரசு + தொழிலாளி) செயல்படுவதில்லை.

அதனால்தான் ‘தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு கமிட்டியாக கட்டுமான வாரியம் செயல்பட வேண்டும்’ என்று நாங்கள் கேட்கிறோம். அதில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் கட்டட சங்கத்தில் தேசிய அளவில் பணிபுரிகிறீர்கள். இது பற்றி?

பதில்: நான் ஏழு ஆண்டுகளாக அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் மகாசம்மேளனத்தின் (All India Confederation of Building and Construction Workers) பொதுச் செயலாளராக இருக்கிறேன். இந்தியா முழுவதும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சீரான, ஒரே மாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். ஒரு மாநிலத்தில் பதிவு செய்து கொண்ட கட்டுமான தொழிலாளிக்கு மற்ற மாநிலத்திலும் பலன் கிடைக்க வேண்டும். மத்திய சட்டப்படி ஒன்று முதல் இரண்டு சதம் வரை நலவரி வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு சதம்தான் நலவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டு சதமாக உயர்த்த வேண்டும்.

ஒன்றை மகிழ்ச்சியோடு இங்கே சொல்ல வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம், கல்வி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டம் நடத்தினோம். அப்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். நாங்கள் சென்னை வருவதற்குள் தில்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். கல்வி உதவி போன்ற வேறு சில கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா விலேயே முன்மாதிரியான கல்வி உதவித்திட்டத்தை ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை அரவிந்த் கெஞ்ரிவால் அரசு சிறப்பாக அமலாக்கி வருகிறது.

கேள்வி : மற்ற மாநிலங்களில் வாரியம் எப்படி செயல்படுகிறது?

பதில் : பல மாநிலங்கள் இப்படி சேகரமாகியுள்ள நிதியை தவறாக பயன்படுத்துகின்றன. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்துளளது. வி.ஆர்.கிருஷ்ணய்யரால் தொடங்கப்பட்ட National Campaign Committee for Construction workers என்ற அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதில் நாங்களும் சேர்ந்து வழக்காட இருக்கிறோம்.

தமிழ் நாட்டில் வாரிய நிதியைப் பயன்படுத்தி 100 கோடி ரூபாய் செலவில் நான்கு இடங்களில் தொழிலாளர்கள் தங்க Dormitory கட்டியுள்ளார்கள். அதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு அருகே 50 ஏக்கர் இடம் வாங்கி ஒரு Training School ,கட்டுமான தொழிலாளர்களுக்காக ஆரம்பித்தார்கள். எந்த தொழிலாளி பள்ளி சென்று பயிற்சி பெற்று கட்டட வேலைக்கு போகப் போகிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வாரியம் சம்பளம் வழங்குகிறது. இது போன்ற செயல்கள் மூலம் நிதி வீணடிக்கப்படுகிறது.

வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் தொழில் நுட்பம் அதிகமானதால் வேலை நேரம் குறைந்துள்ளது. எல்லாவிதமான சமூக நலத்திட்டங்களும் கட்டுமான தொழிலாளிக்கு கிடைக்கின்றன. இங்கும் அது சாத்தியம்தான்.

கேள்வி: வேலையில்லா காலங்களில் நிவாரணம் கேட்கிறீர்களே?

பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை,திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒரு தொழிலாளிக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட நூறு கோடிக்கு மேல் செலவாகியிருக்காது. ஆனால் அரசு அதை செய்யவில்லை.

கேள்வி : டாஸ்மாக் கடைகளுகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை உங்கள் சங்கம் நடத்தியதே ! இது சாத்தியமான ஒன்றா?

பதில்: பாதிக்கப்பட்ட தொழிலாளி தங்களது கோரிக்கை அமலாக போராடுகிறார். பெண் கட்டட தொழிலாளர்கள், குடியினால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் நடத்திய போராட்டம் இது. அவர்களே டாஸ்மாக கடைகளுக்கு பூட்டுப் போட்டார்கள். இந்தப் போராட்டம் மற்ற இடங்களுக்கும் பரவியது.

கட்டட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கே. இரவி

கேள்வி: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதாக பிரதம மந்திரி மோடி அறிவித்து உள்ளாரே ?

பதில்: இந்தியா முழுவதும் சுமாராக 40 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு ஒதுக்கி உள்ள நிதி 500 கோடி ரூபாய்.அப்படி என்றால் ஒரு நபருக்கு எத்தனை பைசா ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

மோடி அறிவித்துள்ள ஓய்வூதியம் இப்போது வராது. நாற்பது வயதான தொழிலாளி இந்த திட்டத்தில் இப்போது சேர்த்தால், அவரது அறுபதாவது வயதில், இருபது ஆண்டுகள் கழித்துதான் வரும்.அப்போது மூவாயிரம் ரூபாயின் மதிப்பு என்ன? 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அமைப்புச்சாரா தொழிலாளி, மாதாமாதம் 55 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பிரிமியம் செலுத்தினால் 60 வயது ஆனவுடன் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு Nodal Agency- ஆக LIC யை அறிவித்து உள்ளார்கள். ஏனெனில் அதற்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. இது ஒரு அரசுத் திட்டம் இல்லை. இது நாங்கள் கேட்ட ஓய்வூதியமும் இல்லை.

கேள்வி: மேற்கு வங்காளம், கேரளாவில் உதவித் தொகை எப்படி வழங்கப்படுகிறது.

பதில்:1996 ல் மத்திய சட்டம் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் அதற்கான விதிகளை அரசு உருவாக்கவில்லை. அவர்கள் அரசு போகிற நேரத்தில் விதிகளை உருவாக்கினார்கள். இடதுசாரி அரசு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டாமா? மேற்கு வங்காள இடது முன்னணி ஆட்சியில் தொழிலாளர் இயக்கம் பலமாக வரவில்லை; பலன் தரவில்லை.

ஆனால் கேரளாவில் அப்படியில்லை. முன்னுதாரணமான பல திட்டங்கள் அங்கு உருவாகின.

கேள்வி: ஒரு அரசுத் துறையில் பணிபுரிந்த நீங்கள் எப்படி கட்டட தொழிலாளர் சங்கத்தில் ஈடுபாடு காட்டுகிறீர்கள்?

பதில்: 1982 ல் பெங்களூரில் கூடிய ஏஐடியுசி மாநாடு ‘அமைப்புச்சாரா தொழிலாளர்களை அமைப்பாக்கு” என்று அறைகூவல் விடுத்தது. சென்னை பெருநகர ஆட்டோ ஓட்டுநர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், வங்க கடலோர மீனவர் சங்கம் போன்றவை உருவாயின. இதையொட்டி 1989, 1990 -ஆம் வருடங்களில் சென்னை பெருநகர பகுதியில் கட்டட தொழிலாளர்களை அணி திரட்டும் பணி நடந்தது.

சி.கெ.மாதவன், ஆர்.செல்லப்பன் ஆகியோரோடு சேர்ந்து நானும் இந்த இந்த வேலைகளில் ஈடுபட்டேன். 11.8.1991 ல் திருச்சியில் கூடி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் என்ற மாநில அமைப்பை உருவாக்கினோம்.1982 ல் வந்த உடலுழைப்புத் தொழிலாளர் சட்டப்படி உள்ள திட்டங்களை அமலாக்கு, கேரளாவில் பனைமரத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள, கட்டட தொழிலாளர்களுக்கு உள்ளது போல கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை உருவாக்கு என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம்.

குலசேகரன், சுப்பு, கீதா,பொன். குமார் போன்ற தோழர்கள் கட்டட தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஏஐடியுசி தலைவர்களை அழைத்தார்கள். 1984 ல் ,கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக எம் .கல்யாண சுந்தரம், ராஜ்ய சாபாவில் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டிஆர்எஸ் மணியோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டோம். இந்த சங்கத்தை அமைப்பாக்கினோம்.

கட்டுமான தொழிலாளர்களை அரசியல் படுத்துவதில், குழுவாக இணைத்துச் செல்லுவதில் ஒரு தேக்கம் இருக்கிறது.

கேள்வி: எல்லா சங்கங்களையும் இணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தினீர்கள். அது பற்றி?

பதில் : தமிழ்நாடு முழுவதும் 4000 கட்டுமான, அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அவைகளில் பல LIC முகவரைப் போல செயல்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில் எல்லா சங்கங்களையும் ஒன்றிணைத்து ‘கட்டுமானத் தொழிலாளர் போராட்ட முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கினோம். மாவட்ட அளவிலும் சங்கங்களின் ஒற்றுமை உருவானது. அதில் கீதா, பொன்.குமார், சுப்பு போன்றவர்களும் இருந்தனர். அதற்கு என்னை மாநில அமைப்பாளராக தேர்ந்தெடுத்தனர். கூட்டாகப் போராட்டத்தை நடத்தினோம். முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதனால் கலைஞர் ஆட்சியில் சில சாதகமான ஆணைகளைப் பெற்றோம். ஆனால் இந்த கூட்டு முயற்சி தொடரவில்லை. சிஐடியு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ‘போராட்ட முன்னணி’ என்ற பெயர் இருக்க வேண்டாம், அது ஒரு அரசியல் கட்சி பெயர்போல இருக்கிறது என்றார்கள். அது கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றார்கள். தேவைப்படும்போது கூட்டுப் போராட்டம் நடத்தலாம் என்றார்கள். இதுபோன்ற காரணங்களால் அதில் தொய்வு ஏற்பட்டது.

இப்போதும் நான் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் விவசாய தொழிலாளர் சங்கத்தில் பணிபுரிந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப்பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1. 10.1970 ல் சென்னைக்கு வந்தேன். ஸடான்லி மருத்துவ கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து பாதுகாப்புத்துறையைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்பான கண்டோன்மெண்ட்டில் பணியில் சேர்ந்தேன். அங்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு என சங்கம் ஆரம்பித்து அந்த சம்மேளனத்தின் பொறுப்புக்கும் பின்னாளில் உயர்ந்தேன்.

கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஒரத்தநாடு பகுதியில் மருத்துவர் இளவழகன் பணிபுரிந்து வந்தார். அவரது அறிமுகம் எனக்கு ஏற்கெனவே இருந்ததால், ஒன்றுபட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராக பணி புரிந்து இருக்கிறேன். அப்போது ஆர்.நல்லக்கண்ணு அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

ஒரு சமயத்தில் வறட்சி ஏற்பட்ட போது இடைக்கழிநாட்டில், 18 கிராமங்களிலும் உள்ள மா,பலா, தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. இழப்பீடு கேட்டு போராடினோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த எஸ்.அழகர்சாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்; விவசாயிகள் சங்க தலைவர்.அவர் வழிகாட்டினார்.

குசேலரின் அண்ணணான அரங்கண்ணல் விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடினார். ஏகாட்டூர் என்ற கிராமத்தில் இருந்த தலித்துகளுக்கு வேலையை மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கிராமம் முழுவதும் சவுக்கை நட்டனர். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கறவை மாடு இரண்டு வேண்டும் என்று போராடினார்கள்; பாலைக் கறந்து சென்னைக்கு அனுப்பினார்கள். இவையெல்லாம் முக்கியமான போராட்டங்கள். இதில் நான் முழுமையாக பங்கு பெற்றேன் என்று சொல்ல முடியாது. உடன் இருந்தேன். அவ்வளவுதான்.

இருங்குன்றம்பள்ளி என்ற கிராமத்தில் இருந்த வோரியண்ட் கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியில் இருந்து வெளியான கழிவு நீர் பாலாற்றில் கலந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடந்தது. பின்னர் கழிவு நீர் விவசாய நிலங்களில் விட்டு அவை பாழாயின. அந்த ஆலை ஓ.வி.அளகேசன் என்ற முன்னாள் ரயில்வே அமைச்சரின் குடும்ப உறவினருக்கு சொந்தமானது. அவர் ஜமீன்தார். கிராமமே திரண்டு போர்களமாக இருந்தது. இது போன்ற நிகழ்வுகளில் வாலாஜாபாத் விசுவநாதன், ,வழக்கறிஞர் அங்குசாமி,ஏகாம்பரம், ஊஞ்சான் போன்றவர்கள நேரடியாக களத்தில் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. நட்ட ஈடு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இந்தப் போராட்டங்களை ஒரு வரலாறாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

ஒரு வருடம் வெண்மணி நினைவு நாளின் போது 27 கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கொடியேற்றி அன்று மாலை கடப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளில் ஆதிமூலம், ஆர்.நல்லகண்ணு,ப.மாணிக்கம் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேல்நல்லாத்தூரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த பத்து கிராமவாசிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. போராடி இருநூறு பேருக்கு மேல் வேலை பெற்றுத்தந்தோம் இதற்கான போராட்டத்தில் என் வாழ்வின் பெரும்பாலான நேரம் கழிந்தது. அதன் தொடர்ச்சியான பணி இன்றும் கூட தொடர்கிறது.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

பேரன்பு: வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது எப்படி?

கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி

மகள்களை பெற்ற ஆப்பாக்களுக்கு மட்டுமல்ல. மகன்களை பெற்ற அப்பாக்களுக்கும் பொறுப்பு உண்டு. அதனால் பேரன்பு திரைப்படத்தை என்னால் அமேசானில் வரும் வரை பார்க்க முடியவில்லை. சற்று தாமதமான விமர்சனம் தான் என்றாலும் இந்தப் படத்தை பற்றி தாமதமானாலும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் தற்போது எழுதுகிறேன். இதனை விமர்சனம் என்று சொல்வதைக் காட்டிலும், அனுபவப் பகிர்வு என்றே குறிப்பிட வேண்டும். ஒரு ஓடையைப் போல தெளிவான நீரோட்டம் போலச் செல்லும் கதை இது. அதனை மூக்கு உரச அனுபவித்து குடிப்பது மட்டுமே சாத்தியம். அவ்வாறான ஒரு அனுபவமே இது.

பேரன்பு திரைப்படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விட்டேன். அதை பார்த்துக் கொண்டிருந்த போது என் அருகில் கேம்ப் ஃபயருடன் நண்பர் இரவுக் குளிரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அது அத்தகைய படத்தைப் பார்ப்பதற்கான சரியான சூழல் என்று தோன்றியது. கதையின் போக்கில் மேலோட்டமாக காணும் போது அதன் சூழல் முக்கிய கதாபாத்திரமாக விளங்குகிறது. தொடக்கத்தில் லாபியுடனான ஒரு வீடு, பின் ஆளில்லாத புகை மூட்டமான தனி வீடு, பின் ஒரு குறுகலான லாட்ஜ், மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம், வாடகை வீடு, கடைசியாக வயலுடனான பண்ணை வீடு என முக்கிய கதாபாத்திரங்களின் நிலையை ஒத்து சூழலும் கூடவே பயணிக்கிறது.

மம்முட்டியின் கதாபாத்திரம் தனக்கு பாதகம் செய்யும் குடும்பத்திற்கும் ஒரு பிரச்சனை இருக்கும் என்று கருதி அவர்களை மன்னிப்பதாக ஒரு புறம் மிகவும் நல்ல வகையில் சித்தரிக்கப் படகிறது. தன் மகளுக்காக அவர் செய்யத் துணியும் காரியங்களை கண்டு ஒரு கணம் வாயடைத்தே போகிறோம். மற்றொரு புறம், தன் பெண்ணுடைய நிலையை அறிந்தவுடன் வீட்டிற்கு வருவதை நிறுத்திய பொறுப்பற்ற கணவனாக, திருநங்கைகளை சமூகத்தில் காணும் அதே கண்ணோட்டத்தில் இவரும் தவறாக புரிந்து கொள்ளும் சாதாரணனாக, தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று புரிதலில்லாத கணவனாக, மனைவியில்லாத கணவன் வேரொரு பெண்ணிடம் சில நிமிட சபலத்தில் விழும் இச்சைகள் கொண்ட மனிதனாகவும் அவர் சித்தரிக்கப் படுகிறார். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள Duality (இரட்டை தன்மை) விளக்கும் அற்புதமான காட்சியமைப்புகள் இவை. மம்முட்டி மெகா ஸ்டார் என்று டைடில் கார்டில் போடப்பட்டிருந்தாலும் ஒரு கார் ட்ரைவராக, குல்லா அணிந்த தந்தையாக, கோடு போட்ட சட்டை அணிந்த மற்றுமொரு கணவனாக அனைத்து ஒப்பனைகளிலும் பொருந்திப் போகிறார். பொதுவாக ஒரு ஸ்டாரின் மனைவி கதாபாத்திரம் சில நிமிடங்களுக்கு வந்தாலும் அது ஒரு தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என்கிற க்ளீஷேவை உடைத்து கடைசி வரை மம்முட்டியின் முதல் மனைவியின் முகத்தை சரியாக காட்டவே இல்லை. இது அவருடைய கதாபாத்திரத்தின் உணர்ச்சியை மதித்து திட்டமிட்டு அவருடைய Identity ஐ மறைக்க முற்பட்டு செய்யப்பட்டது என்பதாலேயே இயக்குநர் மீதான மதிப்பு கூடுகிறது. எல்லா பெண்களும் அன்னை தெரேசாவாக இருந்து விடுவதில்லை. அவர்களை அவ்வாறு இருக்கச் சொல்லி கட்டாயப் படுத்தவும் இயலாது.

மம்முட்டியின் தமிழ் உச்சரிப்பு இக்கதையில் மிகவும் கவனத்துடன் கையாளப் பட்டிருக்கிறது. சில இடங்களில் அவர் பின்னணியில் பேசுவது இயக்குநர் ராம் பேசுவது போலவே உள்ளதை சிலர் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு காட்சிகளுக்கும் கூடவும் குறைவும் இல்லாத முக பாவங்களை வெளிப்படுத்தும் அவர் தன்னுடைய முதிர்ந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். மகளுக்காக ஜிப்ரிஷ்-ல் பேசியும் ஆடியும் காட்டும் போது ஒரு கணம் ஏனோ மூன்றாம் பிறை கமல் நினைவில் வந்து போனார்.

மம்முட்டியின் மகளாக நடித்துள்ள சாதனாவின் கதாபாத்திரம் பல்வேறு படிமங்களை கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை அப்பாவை முதலில் வேற்று மனிதனாகப் பார்க்கிறாள். பின்பு அவளுக்கும் குருவிக்குமான நெறுக்கத்தை காணும் போது தான் அப்பாவுக்கு அவளை பற்றி புரியத் தொடங்குகிறது. இந்த இடத்தில்,

“மனுசங்க இல்லாத இடமா…குருவிங்க சாகாத இடமா ஒரு இடம்
வேணும்” என்கிற வசனம் அதற்கு முந்தைய காட்சியில் மனிதர்களின் சுயநிலத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அப்பாவுக்கும் மகளுக்குமான இணக்கத்தை உருவாக்க சில நிமிடங்களை எடுத்துக் கொண்டு மெதுவாக நகரும் திரைக்கதை, அஞ்சலியின் வருகையில் சுவாரசியமாகிறது. எப்போதும் போல தன் மகளுடைய நிலையை சுட்டிக் காட்டி மற்றொரு பெண்ணிடம் ஆதாயம் தேடும் ஆணிக மாறி விடுவாரோ என்கிற யோசனை ஏற்படும் வேளையில் மம்முட்டி அஞ்சலியின் மாமனாக வருபவரை வீட்டிற்கு அழைத்து வந்து செய்யும் வந்து அளப்பறை, ஒரு ஆவணப் படம் போல் செல்லும் கதையில் ட்ராமாவை கூட்டுகிறது.

சாதனா தன்னுடைய புதிய அம்மாவாக அஞ்சலியை பார்க்கத் தொடங்கும் முன்பு அவளை விட்டு பிரிகிறார் அஞ்சலி. அதற்கான காரணமாக ஒரு முக்கிய பொருளியல் சார்ந்த பிரச்சனையை வைத்து பேசியுள்ளது இயக்குநரின் சாதுர்யத்தை காட்டுகிறது. இயற்கையை அரசியல் எப்படி விழுங்க கழுகு போலக் காத்திருக்கிறது என்பதை முதல் காட்சியில் இருந்தே காட்டத் தொடங்கி விடுகிறார் இயக்குநர்.
சாதனாவின் நடிப்பு மிக முக்கியமான சில காட்சிகளில் கம்பியின் மேல் நடப்பது போன்ற ஆபத்தால் சோதனைக்கு உள்ளாகியிருந்தது. அதனை எளிதாகக் கடந்து சாதித்துள்ளார்.

அவருடைய பிரச்சனையான Spastic cerebral palsy-ன் தாக்கம் சாதனா பூப்பெய்தும் போது எவ்வாறு அவளை மாற்றுகின்றது என்பதை அவளுடைய முகபாவனைகளை வைத்தே எளிதில் பேசி விடுகிறார் இயக்குநர். முகத் தசைகளை பக்கவாட்டில் இழுத்துக் கொண்டபடி அதில் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிகிறது. இத்தகையவர்களை தெருவில் மார்கழியில் புணரும் நாயை கல்லால் அடிப்பது போல யோசனையின்றி நடத்தும் சமூகத்தை கிழித்தெறியும் வசனமாக,

“நீங்க சர்ச் நடத்துறீங்க. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை” என மம்முட்டி கூறும் போது,

“சர்ச்சும் ஊருக்குள்ள தானே இருக்கு?” என்று கேட்கும் அந்த கதாபாத்திரம் மேலும் பேசும் வசனம், கனத்த இதயத்துடன் சில நாட்கள் நம்மை விட்டு நீங்காமல் தொடர்ந்து வருகிறது.
சாதனாவின் குறைபாடு ஒரு நோயல்ல. அதற்கு எந்த நாட்டு மருந்திலும் தீர்வில்லை என்கிற உண்மையை கதை பேசும் போது, என் இரண்டாம் நாவலில் “வெண்புள்ளிகள்” பற்றிய காட்சிகள் எனக்கு நினைவுக்கு வந்தது. நானும் என் மனைவியும் (வெண்புள்ளிகள் கொண்ட பெண்) ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம், என் மனைவியின் வெண்புள்ளிகளை காட்டி இதற்கு தீர்வுண்டு என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக சொல்வார். நான்,

“இது ஒரு நோயல்ல. தீர்வு இல்லை என்று ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்களை கவனிக்காதீர்கள்” என்பேன். என் மனைவிக்கு இது ஒரு பொருட்டே இல்லை என்றாகி விட்டது. ஆயினும் அதற்கு அம்மன் கோயிலுக்கு போனால் சரியாகிவிடும் என்று ஒருவர் சொல்வதை கேட்கும் போது சிரிப்பு வரும். இந்தப் படத்திலும் அத்தகைய ஒருவர் வருகிறார். மற்றொரு குறி சொல்லும் பெண் சாதனா நன்றாக படித்து டாக்டர் ஆவார் என்று பொருத்தமே இல்லாமல் ஜோசியம் சொல்கிறார். இவர்கள் எல்லோரும் நம்மை சுற்றித் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாளும் இதெல்லாம் மற்றொருவருக்கு பிரச்சனையை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது படி அவர்களுடைய நம்பிக்கை கடிவாளம் போட்டிருக்கிறது. இந்த அதிகம் தொடப்படாத பிரச்சனையை தொட்டதற்கே இயக்குநருக்கு என் பாராட்டுக்கள்.

திருநங்கையாக வரும் அழகுப் பதுமை பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் அழும் போது கண்ணில் மை கலைந்து பெண் போலவே காட்சி தருவதும், பெண்ணுக்கான நாணத்துடன் தன்னை அவர் அழைத்து செல்கிறார் என்பதை வைத்து கனவு காண்பதும், தன்னிடம் செக்ஸ் தொடர்பான செய்தியை பெறுவதற்கு அவர் அழைத்து வந்தார் என்பதை அறிந்து கோபத்தில் எழுந்து செல்வதும் மிக மிக அருமையான காட்சியமைப்புகள். சுதந்திரத்தை தேடும் அவருடைய முகத்தை காற்றோட்டத்தில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

யுவனின் இசை இந்தக் கதையில் மற்றொரு தூண். சூழலுக்கும் காட்சிகளுக்கும் ஏற்றபடி அவர் புதிதாக இசைத் துணுக்குகளை இறக்கிக் கொண்டே இருக்கிறார். ஒரே ட்யூனை உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி மாற்றி மாற்றி போட்டுக் கொண்டே இருக்கும் செயற்கை தனத்தில் இருந்து தப்பிக்க இந்த படம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. பாடல்கள் திரைக்கதையோடு ஒட்டியே வருகிறது.

இயக்குநர் ராமின் மெனக்கெடலை இடையிடையில் பேசியிருக்கிறோம். தனியே அவருடைய முயற்சியை வெற்றியாக்கிய சிறப்பம்சத்தை குறித்து பார்க்க வேண்டும். இக்கதையை இயற்கையின் பல்வேறு முகங்களை காண்பித்து அதனை மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு காட்டியிருப்பது தான் வெறுமையான ஒரு சோகக் கதையை மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக மாற்றியுள்ளது. இயற்கையின் நல்ல முகத்தையும் கெட்ட முகத்தையும் மாற்றி மாற்றி காட்டியிருப்பது இவ்வாழ்க்கையின் சுக துக்கங்கள் மாறி மாறி வரும் என்பதனை உணர்த்துகிறது. அதனை எப்படி கடந்து வருவது என்பதை தான் இக்கதை அற்புதமாக விளக்குகிறது.

மனநலம் குன்றியவர்களின் வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. அது ஒரு தனி உலகம். அதற்குள் நுழைய தனித்திறமை தேவைப்படுகிறது. சிலருக்கு அது வாய்க்கிறது. சிலர் அந்த சோதனையில் கறிந்து பொசுங்கிப் போக நினைக்கிறார்கள். சிலர் கடலுக்கு அடியில் மூழ்கிப் போக நினைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் இந்தக் கதையில் வருவது போன்ற பேரன்பு மிக்க துணை கிடைத்தால்? அந்த சோதனையை கடந்து வரலாம் இல்லையா? அத்தகைய ஒரு உத்வேகத்தை உருவாக்கிக் கொள்ளவே இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு மட்டுமில்லாது, நாம எல்லாம் எவ்ளோ நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் என்பதை உணரவும் இதைப் பார்க்க வேண்டும்.

கண்ணன் ராமசாமி, எழுத்தாளர்.