“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்…

ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பது உங்கள் கேள்வி. ஆனால் பாருங்கள், என்னுடைய பிறப்பு இரண்டு நபர்களின் இணைவால் நிகழ்ந்தது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடந்திருக்காவிட்டால் நான் பிறந்திருக்கவே மாட்டேன். என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் நடந்தது, அப்புறம், திருமணம் ஆன பிறகு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்ததால் நான் பிறந்தேன். – இரண்டு நபர்களின் இணைவால் என் பிறப்பு நிகழ்ந்தது. ஆக, அதில் இருவரின் இணைவு இருந்தது.

இப்போது ஒன் நேஷன் – ஒரே தேசம் என்ற விஷயத்துக்கு வருவோம். ஒரே தேசத்துக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று கேட்கிறீர்கள். ஆனால், நாடு ஒன்றாகத்தானே இருக்கிறது! இந்தியா என்பது ஒன்றே. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், இந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசமைப்புச்சட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. அந்த அரசமைப்பில் 300க்கும் மேற்பட்ட ஆர்டிகிள்கள் உண்டு.

நீங்கள் சொல்கிறீர்களே ஒன் நேஷன் என்று… அந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றம் இருக்கிறதே, அதில் இரண்டு அவைகள் உள்ளன – மக்களவை, மாநிலங்களவை. அப்புறம், அதற்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களே, அவர்களும் ஒரே ஒரு நபர் அல்ல. அதற்கு 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுச் செல்கிறார்கள்.

நம்முடைய ஒன்னெஸ் – ஒருமைப்பாடு என்கிறோமே அது உண்மையில் பன்மைத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அதில் டைவர்சிடி இருக்கிறது.

நீங்கள் ஜெய் ஸ்ரீராம் பற்றிக் கேட்டீர்கள். நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அதற்கு உங்கள் சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அல்லது ஜெய் ஹனுமான் சொல்லுங்கள், உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள் – இதைச் சொல்வதற்கான சுதந்திரத்தை நமக்கு நம்முடைய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதனால் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அவ்வப்போது ஜெய் அரசமைப்புச் சட்டம் என்று சொல்லுங்கள். ஏனென்றால், உங்களுக்கு கோஷமிடும் சுதந்திரம் கொடுத்தது அதுதான்.

அப்புறம், என்னுடைய விஷயத்துக்கு வருவோம். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – நான் மிதிலையில் பிறந்தவன். என்னுடைய வீடு – நான் பிறந்த இடம் எந்த மாவட்டத்தில் வருகிறதோ – அந்த மாவட்டம் பெகுசராய். அந்த மிதிலை பெகுசராயில்தான் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தால், நீங்கள் மிகவும் வியப்பதற்குரிய விஷயங்களைப் பார்ப்பீர்கள்.

எங்கள் ஊரில் ஆண்டுதோறும் இந்தி ஆக்ரஹண் மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) அயோத்தியாவிலிருந்து மணமகன் ஊர்வலம் வரும். மணமகன்களாக இளைஞர்கள் வருவார்கள். அதில் ராம-லட்சுமணர்கள் மணமகன்களாக இருப்பார்கள். எங்கல் ஊரில் ராம்-ஜானகி கோயில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் ராமன்-சீதை திருமணம் நடைபெறும். இதில் சுவையான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், மிதிலாவின் மக்கள் ராமனைத் திட்டுவார்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால், மிதிலை ராமனுக்கு மாமனார் வீடு. எனவே, இந்த உரிமையின்கீழ் அவர்கள் ராமனைக் கேலி செய்து திட்டுவார்கள். நமது பண்பாட்டின்படி திருமணம் நடைபெறும்போது, மணமகன் தரப்பு ஊர்வலம் வரும்போது மணமகள் தரப்பிலிருந்து கேலியாகத் திட்டுவது வழக்கம். ஆக, எந்த ராமனை மக்கள் கடவுளாக வணங்குகிறார்களோ அந்த ராமனை வரவேற்கும் விதமாகத் திட்டுகிற வியப்பான ஒரு விஷயத்தை எங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் பார்ப்பீர்கள். இது எங்கள் பாரம்பரியப் பண்பாட்டின் ஓர் அங்கம்.

நாங்கள் எந்தப் பண்பாட்டின் கீழ் வளர்ந்தோமோ அங்கே எந்தவொரு கடவுளையும் தனியாகப் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்டீர்களே ஒருமை என்று – கடவுளை ஒருமையில் பார்க்க முடியாது. ராமருடன் எப்போதும் சீதை இருப்பார், கிருஷ்ணனுடன் ராதையும் சேர்த்தே நினைக்கப்படுவார். இதுதான் எங்கள் பாரம்பரியம்.

நீங்கள் யூத் என்றீர்கள். நான் பிஎச்டி முடித்து விட்டேன். நீங்களும் பிஎச்டி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் பிஎச்டி செய்வீர்கள் என்றால், உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு – ராமாயணத்தின் மீதே ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன் – இந்தியாவில் குறைந்தது 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உண்டு. ஆமாம், முந்நூறுக்கும் அதிகம்.

நான் ஒருமுறை இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தேன். அங்கே திரிலோகநாதர் கோயிலுக்குப் போயிருந்தேன். இன்னொரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் – இந்த நாட்டை குறுக்கும் நெடுக்குமாக சுற்றிப் பாருங்கள். நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு இந்த நாடு எவ்வளவு பெருமைகளைக் கொண்டது என்பதைக் காண்பீர்கள். இந்த நாட்டின் முன்னால் உங்களை நீங்கள் சிறு துரும்பாக உணரும் தருணங்களை அடிக்கடி சந்திக்க நேரும். நீங்கள் திரிலோகநாதர் கோயிலுக்குப் போனால், அங்கே பகவான் புத்தரின் சிலையைக் காண்பீர்கள். அந்த புத்தரின் சிலைக்கு மேலே சிவபெருமானின் சிலையைக் காண்பீர்கள். ஆமாம், புத்தரின் தலைக்கு மேலே சிவன் சிலை. அந்தக் கோயிலில் முதலில் இந்து மதப் பூசாரிகள் வந்து பூஜை செய்து விட்டுப் போகிறார்கள். பிறகு புத்த பிக்குகள் வந்து வணங்கிவிட்டுச் செல்வார்கள். இது இந்தியாவின் தனிச்சிறப்பு.

அங்கே – அதாவது லாஹோலில் – லாஹோல் என்னும் மாவட்டத்தைப் பற்றிச் சொல்கிறேன். (நான் சொல்வதில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தவும்.) அந்தக் கோயில் அமைந்திருக்கிற அந்த மாவட்டத்தில் லாஹோலி மொழி பேசப்படுகிறது. அங்கே உலவுகிற ராமாயணத்தில் – அதாவது லாஹோலீ ராமாயணத்தில், ராவணன் சீதையைக் கடத்திச் செல்லவில்லை. மாறாக, சீதையின் தந்தைதான் ராவணன். உண்மையில், அந்த ராமாயணத்தின்படி, ராமன் சீதையைக் காதல் மணம் புரிந்து கொள்கிறான். அதன் காரணமாகக் கோபம் கொண்ட ராவணனுக்கும் ராமனுக்கும் போர் நடக்கிறது.

உங்கள் மூளையில் யார் எதற்காக இதுபோன்ற விஷயங்களை எல்லாம் திணித்து விட்டார்களோ தெரியாது… உஙகளுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் பிறந்த எவருக்கும் இதைவிடப் பெருமை தரக்கூடிய விஷயம் இருக்க முடியாது. அது என்னவென்றால், நீங்கள் இமாச்சலம் சென்றால் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதுபோல உணர முடியும். நீங்கள் மங்களூர் அல்லது கோவா கடற்கரையில் படுத்திருந்தால், மியாமி கடற்கரையில் இருப்பது போல உணர முடியும். இந்த நாட்டின் பரந்த மைதானங்களில் நடக்கும்போது அமெரிக்காவின் கிரீன் மைதானத்தில் நடப்பது போல உணரலாம். நீங்கள் தெற்கின் பீடபூமிகளுக்குச் சுற்றப் போவீர்கள் என்றால் – குறிப்பாக சோட்டா நாக்புர் பகுதிக்குச் சென்றால் ஏராளமான கனிம வளங்களைக் காண்பீர்கள்.

உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான் – இந்த நாடு உங்களுடையது, உங்களுடைய தாய் உங்களுக்கு எப்படிச் சொந்தமோ அப்படி இந்த நாடும் சொந்தம். நீங்கள் உங்கள் தாயை விரும்புகிறீர்கள் என்றால் அது உங்கள் தனிப்பட்ட விஷயம். நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்… அப்போது ஏதேனுமொரு கொடியை ஏந்திக்கொண்டு, ஏதேனுமொரு கோஷம் எழுப்பிக் கொண்டு வருகிறார்கள்… அது எந்த கோஷமாகவும் இருக்கட்டும் – இன்குலாப் ஜிந்தாபாத் ஆக இருக்கட்டும், அல்லது ஜெய் ஸ்ரீராமாக இருக்கட்டும். அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு கொடியை ஆட்டிக்கொண்டு உங்களிடம் வந்து “நீ உன் அம்மாவை நேசிக்கிறாய் என்றால், அதை நிரூபித்துக் காட்டு பார்க்கலாம்” என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இந்த நாடு நம்முடையது. இதை நாங்கள் நேசிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை – இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – எங்களைப் பொறுத்தவரை, நேசம் என்பது கண்காட்சியில் வைப்பது போல விளம்பரப்படுத்தப்படும் விஷயம் அல்ல. நாங்கள் நாட்டை நேசிக்கிறோம், அந்த நேசத்தை எங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு உலவுகிறோம்.

கன்னைய குமாரின் உரை தமிழாக்கம் : ஷாஜகான்

வீடியோ: நன்றி தீக்கதிர்.

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்?

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? பிரதமர் மோடியின் பிரச்சாரம் பாஜகவுக்கு கைக்கொடுக்குமா? சித்தராமையா ஆட்சியை தக்க வைத்துக்கொள்வாரா?

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்…

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை: இந்த அரசு யாருக்கானது?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அனைத்து மக்களுக்குமான அரசு, அனைத்து மக்களுக்குமான நீதி என அனைத்து மக்களின் நலன்களுக்கான சாதனமாக ஒரு முதலாளித்துவ அரசு இயந்திரம் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அதன் வர்க்க குணாம்சத்தை அது வெளிப்படுத்தியே தீரவேண்டும்!

நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற ஜனநாயகவாதமானது, முழுவதுமான ஒரு முதலாளித்துவ நலன்களுக்கான அரசு என்பதையும், முதலாளித்துவ நலன்களைத்தான் நாடாளுமன்ற வாதம் வெளிப்படுத்துகிறது என்பதையும் வர்க்கப் போராட்டத்தின் வழியேதான் மக்கள் உணர்ந்துகொள்கின்றனர்.

சமூகத்தின் பணமுள்ள வர்க்கத்திற்கு மட்டுமே இனி மருத்துவமும், பொறியியல் படிப்பும் என இந்த அரசு நீட் தேர்வு நடைமுறையை கொண்டு வருகிறது. கல்வி உரிமை மறுக்கப்படுகிற ஏழை எளிய மக்கள்,மாணவர்கள் நீட் நடைமுறைக்கு எதிராக வீதியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது… போராடுபவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

உள்ளடக்கத்தில் நடைபெறுகிற மாணவர் போராட்டமானது, ஒரு வர்க்கப் போராட்டம். நாடாளுமன்ற ஜனநாயகவாத அரசியலை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளோ, நிலை எடுக்க இயலாமல் போராட்டத்தை வேடிக்கை பார்கின்றன. இதை வாய்ப்பாக கொண்டு ஆட்சியை அகற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுக்கிறதே அன்றி, வர்க்கப் போராட்டத்தின் மெய்யான கோரிக்கையின் பக்கம் நிற்ப்பதில்லை, வாய்திறப்பதில்லை.

மக்களின் வர்க்கப் போராட்ட காலங்களில், வாய் வீச்சு வீரர்கள் அம்பலப்பட்டு போகின்றனர். ஆளும்வர்க்க வடிவத்தில் கரைந்து போகிறவர்கள் இந்த வர்க்கப் போராட்ட காலங்களில் சந்தர்ப்பவாத அரசியலை தேர்ந்துகொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்கின்றனர்.

வர்க்கப் போராட்ட காலங்களின் போது மட்டுமே, முதலாளித்துவ நாடாளுமன்ற வாதத்தின் உண்மை வடிவத்தை மக்கள் கண்டுகொள்கின்றனர். அதன் பிரதிநிதிக் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலை புரிந்துகொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் தான் மக்கள்,முதலாளித்துவ ஜனநாயகம் மீதான தப்பெண்ணங்களை களைகின்றனர்.

நீட் போராட்டத்திற்கு தடை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அமைப்பிற்கு எதிராக போராடக் கூடாது என்ற மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்..

மக்களுக்காகத் தான் அரசு இயந்திரமே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல என்ற முழக்கங்கள் ஓங்கட்டும்..!

அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார்.

இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் ஸ்வரா வைத்தி..

கிருஷ்ணசாமி தன்னுடைய மகளுக்கு சீட் வாங்கிய விடயத்தை சொன்னவர் 2014-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம். இந்தச் செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இணைப்பு இங்கே: http://timesofindia.indiatimes.com/city/chennai/Minister-says-state-govt-never-discriminated-on-basis-of-caste/articleshow/38891516.cms

கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.

எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்..

“எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த பிசிறும் இல்லாமல் நின்று பெய்யும் மழை போல நிதானமான நதியோட்டம் போல பேசி இருக்கிறார். இதற்காக 70 நூல்களை 6 மாதங்களாக வாசித்து உள் வாங்கி அந்த உலகை மாற்றிய மானிடனிற்கு பெரும் மரியாதை செலுத்தி இருக்கிறார் . ஒவ்வொரு காட்சிகளாக மனதில் பதியனிட்டே போகிறார். கவித்துவமாக அ புனைவு எழுத்தாக எஸ். ரா. நூறு நூறு பூக்களை தம் சொல்லால் பூப்பித்துக் கொண்டே போகிறார். எளிதில் உணர்ச்சி வயப்படாத நான் இந்த உரையை கேட்க கேட்க எஸ். ரா மீதான என் அன்பு வளர்ந்து கொண்டே போகிறது. விரைவில் சந்திப்போம் எஸ்.ரா. இந்த உரைக்காக நாம் கொண்டாடுவோம் ஒரு நாளை”.

 

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஜோ. டி. குரூஸ், கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததன் காரணத்தை விளக்கினார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியுடன் ஒரே மேடையில் தோன்றி அவரை ஆதரித்ததற்காக தமிழக அறிவுஜீவிகள் மட்டத்தில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

இணைப்பில் உள்ள வீடியோவில் ஜோ. டி. குரூஸின் விளக்கம்…

#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. அந்த யானைகளை ஜக்கியின் ஆட்கள் விரட்டியடிக்கிறார். உயிர்பயத்தில் அவை வேகமாகக் கடந்து செல்கின்றன.

 

சூழலியலாளர் ராமமூர்த்தியின் முழுபதிவும் இங்கே:

நமக்கு(மனிதர்களுக்கு)முன்பாகவே இந்த மண்ணில் தோன்றியவை மற்ற உயிரினங்கள் தார்மீக ரீதியில் பார்த்தால் நம்மைவிட அவற்றிற்குதான் இந்தபூமியின் மீதான உரிமை மிக அதிகம் இதை மனித மனம் ஒத்துக்கொள்ளுமா ?…மற்ற உயிரினங்கள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரிந்திருந்தால் இந்த பூமியில் மனித இனம் பூண்டோடு என்றோ அழிக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை….

அந்த வகையில் அதன் காட்டிலேயே உட்கார்ந்துகொண்டு உலகை அமைதிப் படுத்துகிறேன்னு சொல்லிட்டு விலங்குகளை அமைதியில்லாம செய் இந்தக் காணொளியில் காணுங்கள் இதைப்பார்த்து உங்கள் மனம் மகிழ்ச்சிக்குண்டானால் நீங்கள் அங்கே போய் தியானம் செய்ய முழுத்தகுதி பெற்றவர்களாவீர்கள்… மாறாக மனம் பதைபதைத்தால் ஆசிரமத்தின் ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல் கொடுங்கள்….

சாமிக்கு முன்னாடி அனைத்துயிர்களும் சமம் என்றால் இந்த காட்டுவிலங்குகள்மீது ஏன் இந்த தாக்குதல்கள்? சாமிக்கு மனித உயிர் மட்டும் தான் உயிரென்றால் அந்த சாமியே எமக்கு தேவையில்லை….காட்டுக்குள்ள மரத்தை வெட்டியெறிந்துவிட்டு நாட்டிற்குள்ளே மரத்தை வளர்த்தால் செய்கிற குற்றம் சரியாகிவிடுமா ?

இதுபற்றி பேசும்போது ஒருவர் என்னிடம் சொன்னார் அது பட்டாபூமி அங்கு ஆசிரமம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு விவசாயம் செய்யப்பட்டு வந்ததாம் அப்படியே பார்த்தால்கூட அது வனக்காடாகவே இருக்க வேண்டாம்…தமிழ்நாட்டில் நீராதாரத்தோடு இருக்கும் சொற்பமான வளமான நிலப்பரப்பு எங்கும் ஆசிரமத்தை அமைத்துவிட்டால், பசிக்கும் வயிற்றுக்கு, நாலு மந்திரத்தை உச்சரித்து, சின்னதாக ஒரு தியானத்தை செய்தால் போதுமா?…

காட்டைக்கெடுப்பவன் சூழலைச் சிதைப்பவன் எந்தமதமானாலும் அவன் மனிதகுலத்திற்கு தீங்கை உண்டாக்குபவனே அது காருண்யாவாக இருந்தாலும் ஈஷாவாக இருந்தாலும் எல்லோருமே இயற்கை சூழலுக்கான எதிரிகள்தான்…

இங்கு குடிக்கவே நீரற்ற நிலை…நீரில்லாமல் பாசனப்பரப்பு வெகுவாக சுருங்கிவிட்டது,ஏதோ பச்சையா கொஞ்சம் நீர் இருக்கிற மலையடிவார நிலங்களை ஏதோவது ஒரு மதசாமியாரிடம் கொடுத்துவிட்டு,புதிது புதிதாய் இறக்குமதி செய்யும் பக்தர்களைப் பார்த்து வாய்பிளந்து நிற்கும் தமிழன்தான் ஊருக்கு இளைச்சவன்….ஏமாளி….”

“தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா

தமிழ்ச் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் சல்மா. சல்மாவின் இரண்டாவது நாவலான மனாமியங்கள், 2016-ஆம் ஆண்டு வெளியானது. அதையொட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காம் அவருடன் நேர்காணல் நடத்தியது. அப்போது உலக அளவில் தன்னுடைய எழுத்துகளுக்கு அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில், தமிழ் இலக்கிய சமூகம் தன்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது என்றார். முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளியான போது, பலவித அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய அரசியல் வாழ்க்கை, உலக எழுத்தாளர்களுடான அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

துவரங்குறிச்சியிலிருந்து புறப்பட்டு உலகம் முழுக்கப் பயணப்படுகிறீர்கள். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“துவரங்குறிச்சி என்பது சின்ன உலகம். அந்த உலகத்தில் இருக்கிற மற்ற பெண்கள், ஆண்களுக்கு அந்த வாழ்க்கை இப்பவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அது சின்ன உலகம் எனப் புரிய ஆரம்பித்தது இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தவுடந்தான். இலக்கிய புத்தகங்கள் மூலமாக கனவு உலகத்தைப் பற்றிய விரிந்த உண்டானது. இங்கெல்லாம் பயணிக்க வேண்டும் என்கிற கனவை புத்தகங்கள் உருவாக்கின. இவ்வளவு பெரிய மாற்றம் என் வாழ்க்கையில் வரும் என நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு கிராமத்து படிக்காத இளம்பெண்ணுக்கு இருந்த ஏக்கமும் கனவும் நிறைவேறும் என நம்பிக்கைகள் இருந்ததில்லை. குருட்டு நம்பிக்கை அது. என் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னதுண்டு, ‘நான் எழுத்தாளர் ஆவேன்; உலகத்தைச் சுற்றி வருவேன்” என பேச்சுவாக்கில் சொன்னதுண்டு. அது விருப்பமாக இருந்தது. நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது அது நடக்கிறது. என்னுடைய பயணம், வெளி பரந்ததாக மாறியுள்ளது. இது எனக்கே நம்ப முடியாதது. சாதாராண இடத்திலிருந்து இருந்து, அசாதாரண இடத்துக்குப் போவது என்பதை எனக்கு உண்மையிலே நடந்ததா என்பதை எதிர்கொள்ளவே முடியவில்லை.”

எழுத்தின் மூலம் வெளியுலகை அடைய விரும்பி நீங்கள், அதற்கான இன்னொரு வழியாக அரசியலைத் தேர்ந்தெடுத்தீர்களா?

“எழுத்து, இலக்கியத்தின் மேல் மனவேட்கை எனக்கு இருந்தது. இலக்கியத்தின் மேல் ஆர்வம், எழுத வேண்டும் என்கிற தவிப்பு, அதற்கான போராட்டம். கடினமான காலக்கட்டம் அது. ஒரு போராட்டத்தின் மூலமாகத்தான் பெற வேண்டியிருந்தது. கேட்டதும் கிடைக்கக்கூடியது பொருளாக அது இல்லை. இது ஒரு தனிமையான ஒருஅ பயணம். இதை அனுமதிக்க அந்த சமூகத்தில் யாருக்கும் மனதில்லை என்கிறபோது, என்னை நானே வெளியே கொண்டு என்னை நானே முன்னெடுக்க வேண்டும். சண்டையிட வேண்டும். என்னை நிரூபிக்க அடையாளங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்படியாக போராட்டமாக இருந்தது.

ஆனால், அரசியலுக்கு வந்தது போராட்டத்தோடு நடந்தது அல்ல,  குடும்பமே வழிநடத்தி அழைத்து வந்தது. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் குடும்பத்தின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் அதுதான் நிலைமை. அப்படிப்பட்ட சூழலில் அரசியல் மீது விருப்பங்கள் இல்லாதபோதும் குடும்பமே என்னை அரசியலுக்குக் கொண்டுவந்தது.  என்னுடைய தளமாக அரசியலை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. சந்தர்ப்பம்தான் என்னை அழைத்து வந்தது.

ராஜுவ்காந்தி ஆட்சிக் காலத்தில் பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33% அமல்படுத்தப்படுத்தப்பட்டது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில் என் கணவருக்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் இருந்தது. கணவர் செல்வாக்கான அரசியல்வாதி. பல வருடங்களாக அரசியல் பணிகளில் இருந்தவர். ஆனால் அவரால் போட்டியிடமுடியவில்லை. இடஒதுக்கீடு காரணத்தால் என்னை நிற்க வைத்தார்.  இப்போது பல இடங்களில் வேற வழியில்லாமல் பெண்கள் அரசியலுக்கு குடும்பத்தாரால் அழைத்து வருவது இப்படித்தான்.

தேர்தலில் போட்டியிட்டுத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தின்பேரில் அரசியலுக்கு வந்தேன். ‘கையெழுத்து போட்டுட்டு போயிடலாம். கூட்டத்துக்கு அழைக்கும் போது வந்தால் போதும்’ என்று சொல்லித்தான் தேர்தலில் நிற்க வைத்தார்கள்.

சுயேட்சையாகத்தான் நின்றேன். பெண்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினராக இருப்பது அதுவும் இஸ்லாமிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கட்சி உறுப்பினராக இருப்பது சாத்தியமில்லாத விஷயம். இன்றைக்கும் அப்படித்தான். சுயேட்சையாக தேர்தலில் நின்றாலும் கணவருடைய செல்வாக்கு பின்புலம் காரணமாக‌ வென்றேன்…” என்றவரிடம் அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்தோம்…

முதல் நாவலான இரண்டாம் ஜாமங்களின் கதை வெளிவந்த பிறகு, உங்களுடைய இலக்கிய செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நேரத்தில் எதனால் அத்தகைய நிலைப்பாடு எடுத்தீர்கள்?

எத்தகைய அச்சுறுத்தல்களை சந்தித்தீர்கள்?

இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலின் தொடர்ச்சியாக மானாமியங்கள் நாவலைப் பார்க்கலாமா? இரண்டுமே ஒரே சமூகத்தின் பின்னணியாக வைத்து எழுதப்பட்டவையில்லையா?

 இஸ்லாமிய சமூகம் முன்பைக் காட்டிலும் இறுக்கமான சமூகமாக மாறிவருவதாக ஒரு கருத்து இருக்கிறது. இது பற்றி…

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே பெண்கள் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனாமியங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இது குறித்து விமர்சனமாகவோகூட தமிழ்ச் சூழலில் யாரும் பேசவில்லை. இதை ஒருவகையில் புறக்கணிப்பாக கருதலாமா?

பொதுவாக ஆண் எழுத்தாளர்களைப் போல பெண் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக படைப்புகளைத் தருவதில்லையே..?

இன்றைய அரசியல் சூழல் பெண்களை வரவேற்கக்கூடியதாக உள்ளதா?

புகழ்பெற்ற ஆளுமைகளுடனான சந்திப்புகள் உங்களுக்குள் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன? போன்ற கேள்விகளுக்கு எழுத்தாளர் சல்மா அளித்த பதில்களை வீடியோவில் காணலாம்..

 

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே…

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.

லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்…உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கு புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன் என்கிறார். இந்த வீடியோவில்  பதிப்பகம் தொடங்கியதன் பின்னணி குறித்தும் பதிப்பகத்துக்கு ’மோக்லி’ என பெயர் வைக்க பிரத்யேக காரணம் குறித்தும்  தான் எந்த அளவுக்கு புரபஷனலா செயல்படப்போகிறேன் என்பதையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்…

விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

‘விவசாயிகள் துயரத்துக்கு யார் காரணம்?’ என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் திங்கள்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், உடனடியாக அரசு செய்ய வேண்டியது என்ன? என பல முக்கியமான பொருள்களில் விவாதம் நீண்டது.

இந்த விவாதத்தில் கே.கனகராஜ் (மார்க்சிஸ்ட்), பி.ஆர்.பாண்டியன் (விவசாயிகள் சங்கம்), ஜெ.ஜெயரஞ்சன் (பொருளாதார வல்லுநர்), எம்.ஜி.தேவசகாயம் (ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)), கோலப்பன் ( பத்திரிகையாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.  நெறியாள்கை செய்தார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் மு.குணசேகரன்.

காணொலியின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை.

பணம் மாற்ற வந்த எளியவர்களை காரணமே இல்லாமல் தாக்கும் அதிகாரத்தை காவலருக்கு யார் கொடுத்தது எனவும் இதுதான் மோடி அரசு சாமானியர்களுக்கு தரும் பரிசா எனவும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

 

“எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!

மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம்.

“நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும்.  இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள்.

படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி...
படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி…

மதுரை, தலப்பாகட்டு, நெய்வேலி போன்ற இடங்களில் நடந்த ஒரு சில மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் பதிவாயுள்ளன.  அக்டோபரில் தொடங்கி இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து 16 மலக்குழி மரணங்கள்.  மறைக்கப்பட்ட மரணங்கள் இன்னும் இருக்கலாம். ஒவ்வொரு மரணத்தின் பின்னணியையும் படமாக்கும் பொருட்டு 15 மாவட்டங்களுக்குப் பயணமானோம். மலக்குழி இறப்புகளை மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதையும் செய்திருக்கிறோம்.” என ஆவணப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட திவ்யபாரதி அளித்த முழு பேட்டியை இங்கே படிக்கலாம்.

‘கக்கூஸ்’ ஆவணப்பட டிரெயிலர் இங்கே:

 

வணக்கம் மிஸ் தமிழச்சி: ஜெயலலிதா குறித்த அவதூறு பதிவுக்கு ஃபேஸ்புக் பிரபலத்தின் வீடியோ!

இணையம் மூலம் பிரபலமானவரான ஃபிரான்சில் வசிக்கும் தமிழச்சி, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளை எழுதிவருகின்றனர்.

இந்நிலையில் தமிழச்சியின் பதிவுக்கு ‘வணக்கம் மிஸ் தமிழச்சி’ என வீடியோ பதிவொன்றை இட்டிருக்கிறார் ஃபேஸ்புக் பிரபலமான ஸ்வாரா வைத்தி..

வீடியோ இணைப்பில்

நூல் அறிமுகம்: ’பசி’

சோவியத்தின் லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு ‘பசி’ நாவல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்).

இந்நூல் குறித்து அறிமுகம் தருகிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். “போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும்கூட வீரமே. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இதனை நினைவூட்டுகின்றன” என்கிறார் கார்த்திக். வீடியோவில் அறிமுகம்.

வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!

கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவர சூழல் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டபோதும், பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். போலீஸார் இருந்தும் இந்து முன்னணியினரின் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை. அதோடு, மசூதிகளின் மீதும் இஸ்லாமியர்களின் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான பின்னணி

சசிகுமார் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் அவர் பெண்ணின் சமூகத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையை திசை திருப்பி, தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்து முன்னணி, பாஜக போன்ற இந்துத்துவ கட்சிகள் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை தினம்: மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா?

மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா? கறுப்பர் நகரம் நாவலாசிரியர் கரன் கார்க்கி அறியப்படாத சென்னையைப் பற்றி பேசுகிறார்…

#வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்

சினிமா திரை விலகும்போது புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் குறித்து அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்நூலை வாங்கலாம். இந்நூலில் இடம் பெற்றுள்ள சில தலைப்புகள்…

மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர்

வீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை!

காதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா!

காதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை

அழகி : ஒரு அற்மனிதனின் அவலம்!

அஞ்சலி: அனுதாபத்திலும் ஆதாயம் தேடுகிறார் மணிரத்தினம்

ரோஜா‘ அரசாங்கச் செய்திப் படம்!

வேதம் புதிது

தாக்கரேயின் ஆசிபெற்ற மணிரத்தினத்தின் பம்பொய்

ஜென்டில்மென்: 21ஆம் நூற்றாண்டின் சாணக்கியன்

தமஸ் ‘ இருளிலிருந்து ஒளி பிறக்கட்டும்!

பாரதி : பாரதி அவலம்

இருவர்: இருவரின் வெற்றி! மணிரத்தினத்தின் தோல்வி !

ஹேராம் : கதையா? வரலாறா?

அன்பே சிவம்: சி.பி.எம்இன் திரை அவதாரம்

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை!

ராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு!

பொதெம்கின், டைட்டானிக் : வரலாற்றுக் கப்பலும் வரவுக் கப்பலும்

ஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு

பி.பி.சி செய்திப்படம்: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்: பிஞ்சுக் குமரிகள்

தீக்கொழுந்து : உருவாகிய கதை

வீடியோ: யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவல்-நூல் அறிமுகம்

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். இந்நாவல் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்றது. நாவலை மலைச்சொல் பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன்.

சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?; முழுவீடியோ…

நான் துன்புறுத்தப்பட்டேன்; அவர் என்னை அறைந்தார்: ஜெயலலிதா குறித்து சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முழு வீடியோ…

#வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’

இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிமகனாக ஆக்கப்பட்டவர்களை பற்றிய கட்டுரைகள்தான் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மன குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்காண தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே.
நூல்: மலத்தில் தோய்ந்த மானுடம்

ஆசிரியர் : அ. முத்துக்கிருஷ்ணன்

நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன்

 

இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!

ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு வசூல் சாதனை செய்த திரைப்படங்களான பாகுபலி, அஜித்தின் வேதாளம், இந்த ஆண்டு வெளியான விஜயின் தெறி ஆகிய படங்களின் அனைத்து வித சாதனைகளையும் ரஜினியின் கபாலி உடைத்து புதிய சாதனை புரிந்திருக்கிறது என்கிறது நியூஸ் 7 செய்தி.

ஆனால், பாடலாசிரியர் வைரமுத்து, கபாலி ஒரு தோல்விப்படம். விரும்பியோ, விரும்பாமலோ அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார். வீடியோ இணைப்பில் பாருங்கள்.

கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.  கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர்.

இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை

இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் தியாகச்செம்மல். இதற்கு பதிலளித்த பியூஸ் மானுஷ்,

“நான் சில சமயம் ரூடாக நடந்துகொண்டது உண்மை. அந்தப் பெண் வழக்கறிஞர், உறுதியானவர். ஆனால் இந்த நேரத்தில் அவர் இதைப் பேசியிருக்க வேண்டும். ஐந்து வருடம் கழித்து பேசியிருக்கிறார். அப்போதே அவர் இதைப் பற்றி பேசியிருக்கலாம். ஒருத்தர் ரெண்டு பேரை நான் புண்படுத்தியிருக்கேன். நான் நடந்துகொண்ட விதத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என தெரிவித்தார்.

வீடியோ இணைப்பு கீழே..

#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா?

அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பார்க்க முடிகிறது. மேலும் படிக்க இங்கே செல்லவும். பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூல் குறித்து அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன்.

#வீடியோ: நூல் அறிமுகம் ‘பிம்பச் சிறை’

எம் ஜி ஆர் என்ற ,பிம்பச் சிறைக்குள் தமிழக மக்கள் இப்பொழுதும் இருப்பது ஏன் என்று அக்கு வேர் ஆணி வேராய் அலசும் நூல் ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை வெளியீடு). நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன்.

ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ

நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு சரியான திசையில் செல்லவில்லை என சந்தேகங்கள் கிளம்பிவருகின்றன. இந்த சந்தேகங்களைத் தொகுத்து ஒரு வீடியோ பதிவாக்கி, அதை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் முகநூல் பாஸ்வேர்டை வழக்கறிஞர் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், நீதிமன்றமும் ஊடகமும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிக்காத நிலையில் தங்களுடைய சந்தேகங்களை மக்கள் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

பதிவு வீடியோவும் கீழே…

Ram Kumar

‪#‎ஸ்வாதிய_அறஞ்சவன்_எவன்டா‬?

வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக புழல் சிறையில் ராம்குமாரிடமிருந்து Facebook password வாங்கப்பட்டது…

உண்மையை நீதிமன்றமும், ஊடகமும் கண்டுக்கொள்ளாததால்.. ராம்குமாரின் முகநூலிலேயே இந்த வீடியோவை பகிர்கிறோம்..

ராம்குமார்தான் உண்மையான குற்றவாளி எனும் பட்சத்தில் நீதிமன்ற தண்டனைக்கு கட்டுப்படுவோம்.

ராம்குமார் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறோம்..

நன்றி.. வீடியோவை முழுதும் பார்க்கவும்.. பகிரவும்..

இது எங்களின் சில கேள்விகள் மட்டுமே. 🙂 பல கேள்விகள் கேட்கப்படாமலே உள்ளது…

இதில் கேக்கப்படாத முக்கிய கேள்விகள்..

ஸ்வாதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எங்கே?

ஸ்வாதியின் மொபைல பத்தி போலிசார் பேசாததின் காரணம் என்ன?

‪#‎justice4swathi‬

Hell Yeah..

#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார்.

பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை.

“ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க இனக்குழு மக்களை போட்டோ பிடிச்சி காட்டறுங்கிற மாதிரி, இந்தியாவுல சில இனக்குழுவுல காட்டுமிராண்டி மக்களுன்னு காட்டுகிறதுக்கு ஃபண்டிங் வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்” என்பன அவர் உதித்த சில கருத்துகள்.

வீடியோ இணைப்பு கீழே…

சாருவின் கருத்துரிமை விவாத கருத்துக்கு முகநூலில் வந்த எழுத்தாளர் Yamuna Rajendran எதிர்வினை:

லூசு எழுத்தாளர்கள் லிஸ்ட்டை அ. ராமசாமி கேட்டிருந்தார். நகைச்சுவை எனும் பெயரில் சக எழுத்தாளர்களை பிற எவரையும் விடவும் அவமானப்படுத்துகிற, இழி சொல்லால் பட்டப் பெயர் தருகிற சாரு நிவேதிதா என்கிற நபர்தான் அந்த லிஸ்ட்டின் முதல் பெயர். பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் பெண்களை அவமானப்படுத்துகிறது என்று பேசுவதற்கான எந்த அருகதையும் இல்லாத ‘ரெட்டை நாக்குப் பேர்வழி’ சாரு நிவேதிதா. என்னோடு முரண்படுகிற அவரது அபிமானிகள் குழந்தை வன்புணர்வு தொடர்பான அவரது ‘உன்னதசங்கீதம்’ சிறுகதையை வாசித்துவிட்டுப் பேசவும். இந்த இரு பிரதிகளையும் முன்வைத்துப் பேசும் எந்த நெடிய விவாதத்திற்கும் நான் காத்திருக்கிறேன்..

விடியோ: சிவப்புச் சந்தை நூல் அறிமுகம்

“மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது சிவப்புச் சந்தை (The Red Market)” அடையாளம் பதிப்பக வெளியீடு.

நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன்

வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே…

பைபாஸ்: ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை

தளவாய் சுந்தரம்

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள் மீது பல சந்தேகங்களை முன்வைக்கிறது இந்தப் படம்.

மிக முக்கியமானது என வலியுறுத்திச் சொல்லப்படும் மூன்று சந்தேகங்கள்:

1) போஸ்ட்மார்ட்டம் அறிக்கைபடி போட்டோகிராபர் ஹரிபாபு முகமும் மார்பு பகுதியும் கடுமையாக பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஆனால், இதன் அருகே இருந்த கேமரா பாதிக்கப்படவில்லை, எப்படி?

2) போட்டோகிராபர் ஹரிபாபு என்று ஒப்படைக்கப்பட்ட உடலுக்கு 30 வயது என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. ஆனால், ஹரிபாபு வயது அப்போது 22 தான். மேலும், அந்த உடல் சுன்னத் செய்யப்பட்டிருந்தது. ஹரிபாபுவோ ஓர் இந்து. ஆக, அந்த உடல் 30 வயதான ஒரு முஸ்லீம் ஆண் உடலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவர் யார், அந்த உடலைக் கேட்டு ஏன் யாரும் வரவில்லை.

3) எரிக்கக்கூடாது; புதைக்க மட்டுமே செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கியே ஹரிபாபு உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எரித்துள்ளார்கள். இது, இதுவரை ஏன் யாராலும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை.

ராஜீவ் கொலை வழக்கு தடயவியல் ஆதாரங்கள் அறிவியல்பூர்வமாக இல்லாமல் அனுமானங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது; அனுமானங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதுதான் இந்தப் படம் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. இந்த கேள்விகளை எழுப்பும் டாக்டர் ரமேஷ், டாக்டர் புகழேந்தி இருவரும் தடயவியல் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் கொலை விசாரணை பற்றி டாக்டர் ரமேஷ் விளக்கிக்கொண்டே வருவதற்கு நடுவே அவ்வப்போது கண்ணகி, கோவலன், மாதவி, மணிமேகலை, பாரி வள்ளல், அங்கவை, சங்கவை, கபிலர், ஒளவை போன்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும், அந்த சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டே ஒரு நீண்ட பயணத்தையும் மேற்கொள்கிறது, இப்படம். இடையிடையே இதுகுறித்து பேசிக்கொண்டே வருகிறார் பொன் சந்திரன். 2.45 மணி நேரம் என்ற நீளத்தை கடக்க இது உதவுகிறது. தமிழ் சரித்திரத்தை அறிந்துகொள்வதுடன், சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்த்த உணர்வையும் தருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மீதான சந்தேகங்கள் வலுவாக சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. படம் முழுக்க டாக்டர் ரமேஷ் சொன்ன விஷயங்களை, கடைசியில் டாக்டர் புகழேந்தி மீண்டும் ஒருமுறை சுருக்கமாக சொல்கிறார். இதனைத் தவிர்த்து தமிழ் முன்னோர்கள் கதைக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். அப்படி செய்திருந்தால், ‘ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை’ என்ற பரபரப்பைக் கடந்தும் ‘தமிழ் முன்னோர்கள் சரித்திரக் கதையாக’ எப்போதும் பார்க்கக்கூடிய ஒரு படமாக இருந்திருக்கும் என்பது என் ஆதங்கம். புகழேந்தி, ரமேஷ், பொன் சந்திரன் மூவரும் இவர்கள் குழுவினரும் இது தொடர்பாக வேறொரு புதிய படம் தரவேண்டும்.

பைபாஸ் படத்தை இங்கு பார்க்கலாம்

பெங்களூரு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட இளையராஜா!

பெங்களூருவுக்கு கோயிலுக்குச் சென்ற இளையராஜா, விமான நிலைய சோதனையின்போது பிரசாதம் எடுத்துச் சென்றதற்காக காக்க வைக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு. காணோலி கீழே…

“புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா

சென்னை புத்தக விழா தொடங்கியுள்ளது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் பரபரப்பாகியுள்ள நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, புத்தக விழாவால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார்.

வீடியோ பேட்டி ஒன்றில், “புத்தக திருவிழா என்ற பெயரில் இப்போது இருக்கிற நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தக திருவிழாவில் இருக்கும் கடைகளில் ஜோசியம், சமையல் புக், பல்ப் ஃபிக்‌ஷன், காமிக்ஸ் புத்தகங்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. வெறும் 10% கடைகளில்தான் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் 95% கடைகளில் இலக்கியம்தான் விற்கப்படும்.

கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பதாக சொல்கிறார்கள். என்னமாதிரியான புத்தகங்கள் விற்கின்றன என்பது விவாதத்துக்குரியது. பிரபல இலக்கிய ஜாம்பவான்களின் புத்தகங்களே 100, 200 தான் விற்கின்றன.

சமூகத்தில் குழந்தைகள் புத்தகம் படிப்பதை ஏதோ குற்றமாகப் பார்க்கிற போக்குதான் இருக்கிறது. குடிப்பதைப் பற்றி கூட வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படுவதில்லை, படிக்கிற புத்தகங்கள் வாங்கினால் திட்டுகிறார்கள் என்று பல ஆண்கள் சொல்கிறார்கள். பெண்கள் புத்தகங்கள் வாங்குவதற்கும் படிப்பதற்கும்கூட இதே போன்ற தடைகள் வருகின்றன.

தமிழ் சமூக இன்னமும் 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டில் தான் இருக்கிறது. மகாபாரதத்தைத் தாண்டி அவர்கள் வரவில்லை. அதையும்கூட அவர்கள் படிப்பதில்லை. காதால் கேட்கவே விரும்புகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் வாசகரை எதிர்பார்த்து புத்தகத் திருவிழாவுக்கு எழுத்தாளர்கள் காத்திருப்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம். இங்கே வந்தால் பதிப்பாளரைப் பார்க்கலாம். நான்கு வாசகரைப் பார்க்கலாம், அவ்வளவுதான்” என்று பேசியிருக்கிறார்.

வீடியோ இணைப்பு கீழே

 

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில்.

ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு,

“ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” என பதிலளித்தார்.

 

 

 

வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய‌ வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பா.ம.க சார்பில் களம் காணும் பாலு, வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் அலுவலரை சந்தித்த பாலு, பணியில் இருந்த வட்டாட்சியர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை அவர் தலையில் கொட்டியும், முகத்திற்கு எதிரே எரிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தப் பணம், அதிமுக, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார்.

வட்டாட்சியர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், பாமக வேட்பாளர் பாலு உள்ளிட்ட 47 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

#வீடியோ: ஆவடி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன்…

ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன் மீது பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய படம் போட்ட கவர்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து அதிமுகவினர் புதன்கிழமை இரவு பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

“தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதிகள்..தெரியாது”: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியலற்ற இளைஞர்கள்!

Shahjahan R

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள், அதில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன்.

தமிழில் தொகுதி என்றால் என்னவென்று தெரியாது.
எத்தனை தொகுதிகள் என்று தெரியாது.
மெஜாரிட்டி என்றால் என்னவென்று தெரியாது
மெஜாரிட்டிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்றும் தெரியாது.
பிரதமர் எந்தக் கட்சி என்று தெரியாது.
குடியரசுத் தலைவர் மோடியா பிரணாப்பா தெரியாது.

என்னதான் பேஸ்புக்கில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தாலும் படித்த இளைஞர்களிடம் பொது அறிவு இவ்வளவு குறைவாகவா இருக்க முடியும்?
Shame on us. Shame on them.

பேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் வரமல்ல, சாபம்

Umanath Selvan

RJ பாலாஜி நான்கு இளைஞர்களுடன் பேசும் வீடியோ வாட்ஸப்பில் வேகமாக ஓடுகின்றது. தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கின்றன, தொகுதி என்றால் என்ன? எதற்கு தேர்தல் நடக்கின்றது? யார் யார் முதலமைச்சர் வேட்பாளர்கள்? எத்தனை தொகுதியில் வென்றால் வெற்றி? வெற்றி பெற்றால் என்ன? என்ற குறைந்தபட்ச அறிவு எதையும் காணவில்லை. ஒரு டாக்டர், MBA மாணவர், இரண்டு பொறியாளர்கள். இரண்டு கேள்விகளுக்கு சிரிக்க முடிந்தது பின்னர் அவர்களின் அறியாமை கடுப்பேத்தியது. இது நிச்சயம் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தின் சாம்பிள். ஏன் ஓட்டு போட வேண்டும் எப்படி எல்லோரும் திருடர்கள் தான் என அச்சுபிசிராமல் எல்லா இளைஞர்களும் பேசும் பேச்சு இது.

RJ பாலாஜியின் பற்பல வீடியோக்களையும் பேச்சுக்களையும் கேட்டிருந்தாலும் அந்த 14 நிமிட வீடியோவில் கடைசி ஐந்து நிமிட பேச்சில் அசற வைத்துவிட்டார். வெறும் பட்டனை அழுத்துவதல்ல கடமை, ஒரு செல்போன் வாங்கவே ஆராய்ச்சி செய்து, ஆலோசனை செய்து முடிவெடுக்கின்றோம் நாட்டினை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும்போது எத்தனை பொறுப்பு தேவை என அவர் ஸ்டைலில் அற்புதமாக பேசினார். முன்னெப்போதைவிட அவரை இப்போது அதிகம் பிடிக்கின்றது

வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!

மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு செல்வாக்கை உண்டாக்கியிருக்கிறது.

பீம்ராவ் செய்த பணிகள் என்னென்ன?

சமீபத்தில் வாக்கு சேகரிக்கும் இடங்களில் பேசிய க.பீம்ராவ்,  “பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பீர் கம்பெனி அகற்ற பெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 11வது மண்டலத்தில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 357 கோடி ரூபாய் பெற்றுத் தந்துள்ளேன். வளசரவாக்கம் குப்பை மேடு அகற்றப்பட்டுள்ளது. சாலைகள் மேம்படுத்தப்பட்டு, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்கப்படுகிறது. சின்ன போரூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அஞ்சலகத்தை மூட முயற்சித்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

“அடுத்தமுறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், அனைத்து பகுதிகளுக்கும் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் அனைத்து பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தாசில்தார் அலுவலகம், போரூர் லட்சுமி நகரில் குப்பை மேடு அகற்றப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படும். பெண்கள், குழந்தைகளுக்கென்று சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார்.

க. பீம்ராவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராமின் உரை கீழே…

“என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. அப்பாவைக் கொன்றது போர்” கார்கில் போரில் தந்தையை இழந்த மகளின் செய்தி!

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

இவர் குர்மெஹர் கவுர். 19 வயது. கார்கில் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட கேப்டன் மன்தீப் சிங்கின் மகள். அப்போது அவளுக்கு வயது 2. வளர்ந்தபோதுதான் தெரிந்து கொண்டாள் தன் தந்தை பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டார் என்பதை.

அப்போது மனதில் வேர் விட்டது முஸ்லிம் வெறுப்பு. முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தானியர்கள். தன் தந்தையைக் கொன்றவர்கள். இந்தியர்களைக் கொல்பவர்கள். அவர்கள் நம் எதிரிகள். அவர்களால் நமக்கு ஆபத்து. அவர்களைச் சும்மா விடக் கூடாது.

குர்மெஹருக்கு 6 வயதாகும்போது பர்தா அணிந்து சென்ற ஒரு முஸ்லிம் பெண்ணை அவள் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றாள்.

குர்மெஹரின் அம்மாதான் அவளுக்கு உண்மையை உணரவைத்தார். அது சற்றுச் சிரமமான காரியம்தான். ஆனால் இப்போது குர்மெஹருக்குப் புரிந்தது.

“என் அப்பாவைக் கொன்றது ஒரு முஸ்லிமோ இல்லை பாகிஸ்தானியோ அல்ல. அப்பாவைக் கொன்றது போர்”

அன்று தொடங்கி குர்மெஹர் போரற்ற உலகைக் கனவு காண்கிறாள். இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக நிலைக்கும் காலத்தை எதிர்நோக்குகிறாள்.

ஏன் முடியாது? இரண்டு உலகப் போருக்குப் பின்னும் ஃப்ரான்சும் ஜெர்மனியும் நட்பு நாடுகளாக இருக்க முடியும் என்றால்….
அணுகுண்டு வீச்சுக்குப் பின்னும் அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து வளர்ச்சியை நோக்கி நகர முடியும் என்றால்…

ஏன் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக முடியாது…

போதும் எல்லாம் போதும் இழந்தவை போதும்.இரு நாட்டு ஆட்சியாளர்களும் மனப்பூர்வமாகச் சமாதானத்தை நோக்கிக் களம் இறங்க வேண்டும்.

இதுதான் இந்தப் பத்தொன்பது வயது இளம் பெண் போர் வெறியர்களாகிய நமக்குச் சொல்லும் சேதி..

ஒரு ஐந்து நிமிடம் செலவிட்டு இந்த வீடியோவைப் பாருங்கள். பகிருங்கள்..

(இந்த வீடியோவை உருவாக்கி அமைதிப் பரப்புரை செய்யும் ராம் சுப்பிரமணியனுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்)