சேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்!

எஸ். செந்தில்குமார்

எஸ். செந்தில்குமார்

ஒரு ஊருக்கு அரசின் திட்டம் வருகிறது என்றால் அதை அந்த ஊர் மக்கள் வரவேற்கவே செய்வார்கள் ஆனால் அதற்கு மாறாக அரசின் ஒரு திட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கி என்ன செய்வது என்று அறியாமல் நிற்கிறார்கள் சேலம் மாவட்டத்தின் நான்கு கிராமத்தை சேர்ந்த மக்கள்.

ஓமலூர் அருகே உள்ள  காமலாபுரத்தில் அமைந்துள்ளது   சேலம் விமான நிலையம் . 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.

இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியது. சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு சேலம் – சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் தொடங்கியது. சென்னை – சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும். ஆனால் இந்த முறையும் போதுமான அளவிற்கு மக்களின் ஆதரவைப் பெற முடியாததால் மீண்டும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்த அந்த விமான நிலையத்தை  கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல்  மீண்டும் அங்கு விமான சேவையை துவக்கி இருக்கிறது தமிழக அரசு.

பொதுவாக விமான நிலையங்கள் போன்ற அதிக இடம் தேவைப்படும் திட்டங்கள் மக்கள் குடியிருப்புக்கள் இல்லாத இடங்களிலேயே அமைக்கப்படும் ஆனால் சேலம் விமான நிலையம் மிகுந்த மக்கள் தொகை வசிக்கும் பகுதியாக அமைந்துள்ளது . ஆகையால் இந்த விமான நிலையத்திற்கு ஆரம்பத்திலேயே ஒரு தவறான இடத்தை தேர்வு செய்து விட்டதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

1989 ஆம் ஆண்டு முதன்முதலாக இங்கு விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 50 விவசாயிகளின் 160 ஏக்கர் நிலங்கள் அப்போதைய அரசால் கையகப்படுத்தப்பட்டது. மக்கள் பயன்பாடற்ற தரிசு நிலங்கள்தான் அப்போது எடுக்கப்பட்டன என்று அரசின் ஆவணங்கள் தெரிவித்தாலும் அரசு எங்களை ஏமாற்றி எங்கள் விவசாய நிலங்களை பிடுங்கி கொண்டதாகவே நிலங்களை பறிகொடுத்த விவசாயிகள் தரப்பு தெரிவிக்கின்றது.

salem airport view
தற்போதைய விமான நிலையம்

அவ்வாறு நிலங்களை பறிகொடுத்த விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட அரசின் இழப்பீடும் மிக சொற்பமான அளவிலேயே இருந்திருக்கிறது . அதிக இழப்பீடு வேண்டி விவசாயிகள் தொடுத்த வழக்கு 29 ஆண்டுகளாக இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. வழங்கப்பட்ட நிவாரணத்தில் அதே ஊரில் தங்கள் வாழ்வை தொடர முடியாத சில பேர் அந்த ஊரை காலி செய்துவிட்டு போன அவலநிலைகளையும் அங்கே நம்மால் காண முடிந்தது.

சுமார் முப்பது ஆண்டுகளாக இழப்பின் வலியிலிருந்து மீளமுடியாத விவசாயிகளுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்திருக்கிறது விமான நிலைய விரிவாக்கம் என்ற மற்றுமோர் அதிர்ச்சி அறிவிப்பு . விமான நிலைய விரிவாக்கம் என்பது கடந்த பத்து ஆண்டுகளாகவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தாலும் கடந்த மார்ச் 30 ஆம் தேதிதான் அது அறிவிப்பாக வெளிவந்திருக்கிறது . அறிவிப்பு வெளிவந்து சில நாட்களிலேயே விவசாயிகளின் வீட்டுக்கு அரசு தரப்பிலிருந்து நோட்டீசும் அனுப்பப் பட்டுள்ளது .

அரசின் நோட்டீஸ் வந்தவுடன் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையிட சென்றுள்ளனர். ஆனால் மக்களை உள்ளே அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம் அவர்களின் மனுக்களை மட்டும் வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பி உள்ளது . அரசின் இந்த பாராமுகத்தால் மனமுடைந்த விவசாயிகளில் மூன்று பேர் அதிக மன உளைச்சலின் காரணமாய் மாரடைப்பு வந்து இறந்து போய் இருக்கின்றனர் .

தற்போது விமான நிலையத்தை சுற்றியுள்ள காமலாபுரம், பொட்டிய புரம், தும்பிப்பாடி சிக்கனம்பட்டி என்ற நான்கு கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த  சுமார் 570 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட போவதாக அரசு அறிவித்துள்ளது . இது தொடர்பாக இந்த பகுதியை சேர்ந்த 650 விவசாயிகளுக்கு தற்போது நோட்டீஸ் வந்துள்ளது . ஏற்கனவே விமான நிலைய உருவாக்கத்திற்காக தங்கள் நிலங்களை இழந்த அம்மக்கள் தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக எஞ்சியுள்ள நிலங்களையும் இழந்து முற்றிலுமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

airport extension protest
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் மக்கள்…

இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது என்றும் விவசாயத்திற்கு  ஏற்ற வகையில் இந்த மண்ணை பண்படுத்தவே பல காலங்கள் பிடித்தது என்றும் அதனால் எக்காரணம் கொண்டும் எங்கள் மண்ணை இந்த முறை விட்டு தர முடியாது என்றும் உறுதிபட தெரிவிக்கின்றனர் . விவசாயத்தை தவிர நெசவு தொழில், வெல்ல உற்பத்தி, மண் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில் செய் பவர்களும் இந்த பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் சேலம் இரும்பு உருக்காலை ஏற்படுத்தப்பட்டபோது அப்போதைய அரசால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இங்கு வந்து சேர்ந்ததாக சொல்கிறார்கள் . அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்காகவும் நாங்கள் அகதிகளைப்போல் இடப்பெயர்ந்து ஓட வேண்டி இருக்கிறது என்பதும் இங்கு வசிப்போரின் கவலையாக இருக்கிறது.

சென்னைக்கும் சேலத்திற்குமான பயண நேரம் என்பது தற்போது காரில் பயணிப்பதாக இருந்தால் நான்கு மணி நேர பயணமாகவும் , அது தவிர அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் , மிக விரைவு ரயில் வண்டிகள் என தேவையான போக்குவரத்து வசதி உள்ளதாகவே இருந்து வருகிறது எனவும் எனவே விமான போக்குவரத்து என்பது மக்களின் அத்தியாவசிய தேவையாக இல்லை என்றும் இந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையையும் சேலத்தையும் இணைக்கும் பசுமை வழிச்சாலை ஒன்றும் அரசின் அடுத்த திட்டமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியும் ஒருவேளை அரசு விமான போக்குவரத்தை அவசியமாக கருதினால் அரசின் திட்டங்களுக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சேலம் நகரை ஒட்டியே இருக்கின்றன அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் இங்குள்ளவர்கள் கருத்தாக இருக்கிறது.

தமிழக அரசு உதான் திட்டம் என்கிற மானிய விலையிலான விமான டிக்கட்டை இங்கு பயன்படுத்தி விமான பயன்பாட்டை அதிகரிக்க நினைக்கிறது ஆனால் சாமானிய மக்களுக்கு அந்த டிக்கட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை எனவும் எனவே முற்றிலுமாக இது மக்கள் பயன்பாடற்ற திட்டம் என்றே இங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள் .

தலைமுறை  தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்து வந்த இடத்தை விட்டு இடம்பெயர்வதின் வலியை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அப்படி ஒரு வலியை உண்டாக்கி  அதன் மூலம் உருவாகும் திட்டங்களை மக்களுக்கான திட்டங்கள் என்று மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .

எஸ். செந்தில்குமார், ஊடகவியலாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!

முத்து ராசா

பழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள் தொங்கும்.

என்ன குளிர் அடித்தாலும் சரி மழை அடித்தாலும் சரி தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து பச்சைத் தண்ணீரில் தலைக்கு குளித்து, தான் வளர்த்தச் செடியிலேயே பூக்கும் அரளிப்பூக்களைப் பறித்து சாமி கும்பிடுவார். எப்போதும் எல்லோருக்கும் சேர்த்துதான் வேண்டிக் கொள்வார். சாமி கும்பிட்டுவிட்டு துன்னூறு பட்டை நாமமிட்டு, தலை முடியை ஈரத்துடன் அள்ளி முடிந்து அதற்கென்றே வைத்துள்ள துணியினால் உருமா கட்டிக் கொள்வார்.

வழிபாடுகள் முடிந்து காவி வேட்டியை அவிழ்த்துவிட்டு பழைய டீசர்ட், ஜீன்ஸ் அணியும் வரை யாருடனும் பேசமாட்டார். அதன்பிறகு விநாயகம் அண்ணனிடம் வழிந்து பேச்சு கொடுத்தால்தான் பேசுவார். அப்படி பேசத் தொடங்கினால் அவரது பேச்சுக்கு ‘ம்’ கொட்ட முடியாது. செம்மண் குளத்திலோ, கண்மாயிலோ வறட்சி உண்டாகி தண்ணீர் தேங்கி நின்ற தடம் போல விநாயகம் அண்ணனின் பற்வரிசைகளில் கறைகள் தெரியும். அந்தக் கறைகளோடு விநாயகம் அண்ணன் எல்லோருடனும் சிரித்து பேசுவதைப் பார்த்தாலே ‘இவனுக்கெல்லாம் கஷ்டமே இருக்காது போல’ என்றிருக்கும்.

விநாயகம் அண்ணனுக்கு கூடப்பிறந்த தம்பிகள் பத்து பதினைந்து பேர் இருந்தாலும், அவர் வீட்டில் தங்கியதே கிடையாது. பள்ளிக்கூடம் பக்கமே போகாமல் தனது தாத்தா ‘கரடிகடிச்சான்’ கூடத்தான் ஜவ்வாது மலை முழுக்க சின்ன வயதிலிருந்தே அலைந்து திரிந்தார். தனது தாத்தா என்றால் விநாயகம் அண்ணனுக்கு அவ்வளவு உயிர். தாத்தாதான் ஜவ்வாது மலை பற்றிய ஈர்ப்பையும், காடு, உயிரினங்கள் பற்றிய புரிதல்களையும் விநாயகம் அண்ணனுக்குள் கூடு பாய்ச்சியவர்.

ஒருநாள் காட்டுக்குள் மூலிகை இலைகளை பறிக்கச் சென்றபோது கரடி அடித்து தாத்தா மண்டை பிளந்து இறந்து போக, நகரங்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் பற்றிய எவ்வித கவர்ச்சிகளும் இல்லாமல் பெரும்பான்மையினரின் புறவுலகம், அகவுலகத்தையும் ருசி பார்க்காமலேயே அறுத்துக் கொண்டு வீடுவாசல் போகாமல் ஜவ்வாது மலையிலும், திருவண்ணாமலை சாமியார்களுடனும் சுற்றித் திரிந்து முப்பது வயதை கடந்துவிட்டார் விநாயகம் அண்ணன்.

‘மனுசங்கள விட விலங்கு, செடி கொடிகதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அதுகதான் எந்தக் கெடுதலும் யாருக்கும் நெனைக்காது. அதுக பேசுறது எனக்கு புரியும், நான் பேசுறது அதுகளுக்கும் புரியும். என் தாத்தா எனக்கு இதைத்தான் சொல்லித் தந்தாரு’ என்று அடிக்கடி தத்துவார்த்தமாக பேசும் அண்ணனுக்கு அழுக்கு வெள்ளை நிற ‘ராசாத்தி’ என்ற நாட்டு மாடும் அதற்கு பிறந்த பிள்ளைகளும்தான் எல்லாமும். காலையில் சாணியை அள்ளிப் போட்டு, கொட்டத்தைக் கூட்டிவிட்டு, சாம்பிராணி புகை போட்டு, தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு கட்டிப்போட்டு விட்டு அதுகளோடு தலையை தடவி பேசிக்கொண்டே இருப்பார். அதுகளும் கழுத்துமணிகள் ஆட தலையசைத்துப் பதில் பேசும்.

‘ஊருக்குள்ள மாட்டுக்கு ஊசி போட வந்துருக்காங்க, மாடுகள ஓட்டியா’ என்று யாராவது வந்து சொன்னால் அவ்வளவுதான். ‘மாடுகளுக்கு எதுக்கு ஊசி, அதுக்கு நோய் வந்தா என்ன பச்சிலைக் கொடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும் போ… போ..’ என எரிச்சலாகி விடுவார். வறட்சி காலத்தில் மாடுகளுக்கு வைக்கோலோ புல்லோ இல்லையென்றால் போதும் மனுசன் ஆளாய் பறந்து எங்காவது போய் கொஞ்சம் பச்சையாவது கொண்டு வந்து சேர்த்துவிடுவார். மாடுகளுக்கும் விநாயகம் அண்ணன் மீது அப்படியொரு பாசமும், நம்பிக்கையும் இருப்பதால் இந்த நோய், பசி, வறட்சி போன்றவற்றை கண்டுகொள்ளாமல் அசைப்போட்டுக் கொண்டிருக்கும்.

இதுநாள் வரைக்கும் பாலைக் கரந்து அண்ணன் விற்றது கிடையாது. கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிட்டு பாலைக் குடிக்க விடுவார். கூடவே இவரும் மண்டி போட்டு குடிப்பார். ராசாத்தியும் அசைவுகளில் கூட எதுவும் சொல்வது கிடையாது. இதுபோக எப்பவும் ஏதாவது ஒருவேலையை இழுத்துப் போட்டு வங்காச்சியாக உழைத்துக் கொண்டேயிருப்பார் இல்லை பாடல் கேட்பார்.

அதுவும் இல்லையா காட்டுக்குள் போய் மூங்கில்கள் வெட்டிவந்து அதில் புல்லாங்குழல் செய்வது இல்லை மூங்கில்களில் விதவிதமான இசைக்கருவிகள் செய்வது ஏதாவது கலைப் பொருட்கள் செய்து அதில் பாம்பு, பருந்து என பல பறவைகளை வரைவது, பறவைகளின் றெக்கைகள், பாம்பு சட்டைகளை எடுத்து வைப்பது, ஈசல்களின் றெக்கைகளை சேமித்து மூங்கில் குடுவைக்குள் போட்டு கீழ் துளை வழியே ஊதும் போது பறக்கும் றெக்கைகளைப் பார்த்து மகிழ்வது இந்தப் பொருட்களைப் பிடித்தவர்களுக்கு பரிசாக தருவது என சலிக்காமல் இயங்கிக் கொண்டேயிருப்பார்.

ஒருநாள் நடுநிசியில் குடிலுக்கு வெளியே கயித்துக் கட்டிலில், குளிருக்கு மூன்று போர்வைகள் போர்த்தி கதகதப்பாக விநாயகம் அண்ணன் தனியாக தூங்கிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் ஒரு பெரும் சத்தம் கேட்டிருக்கிறது, அலறியடித்து எழுந்து டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் பார்த்தால் யானைக் குழிக்குள் தடித்த கொம்புகளுடன் நல்ல கொழுத்த மான் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருக்கிறது.

இருளில் காடு உண்டாக்கிய பதட்டத்தை கட்டுப்படுத்தி தாத்தனை வேண்டிக் கொண்டு குழிக்குள் குதித்த விநாயகம் அண்ணன் கட்டிப்புரண்டு, மூச்சைப் பிடித்து அந்த மானை எப்படியோ குழியின் விளிம்பினருகே கொண்டு போக மான் நழுவி நழுவி உள்ளே விழுந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் சோர்வாகி கிடக்க, இறுதியாக பள்ளத்தின் பக்கவாட்டில் தூக்கிவிட்டதில் மான் துள்ளிக்குதித்து வெளியே தாவி ஓடி உள்ளது.

குழிக்குள் இருந்து அடிபட்ட அசதியோடு எழுந்த விநாயகம் அண்ணனை தூர இருளில் போய் நின்று, அந்த மான் திரும்பி பார்த்துள்ளது. அதன் கண்களை உற்றுபார்த்த விநாயகம் அண்ணனுக்கு ஜவ்வாது மலையையே யாரிடமோ இருந்து காப்பாற்றியது போல அப்படியொரு சந்தோசத்தில் ‘ஓடு…ஓடு’ என்று சொல்ல அந்த மான் காட்டினுள் கலந்துவிட்டது. விநாயகம் அண்ணனின் மார்பில் மான் கொம்பு கீறிய ஆழமான காயங்கள் கூட சந்தோசத்தில் வலிக்கவில்லை. தனது தாத்தானை நினைத்துக் கொண்டே பெருமிதம் பொங்க தூங்கியுள்ளார்.

‘அந்த இரவை என்னால் சாகும்வரை மறக்க முடியாது முத்து’ என்று ஒருநாள் இரவு என்னிடம் சொன்னார்.

விநாயகம் அண்ணனிடம் பொறுமையாக கேட்டால் இப்படி நிறைய கதைகள் சொல்வார். ஆனால் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் பொய் என்றும் சொல்வார்கள். கதை சொல்லிவிட்டு உறங்கிப்போன விநாயகம் அண்ணனையே நான் உறங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒருக்களித்து படுத்திருந்தவர் போர்வை விலக மல்லாக்க திரும்பி படுத்தார்.

இரண்டு அட்டைகள் மேலும் கீழும் ஊருவது போல, புடைத்த இரண்டு தழும்புகள் மாரில் இருந்தன. யானைக்குழிக்கு அந்தப்புறம் இருக்கும் கரையில் நின்று கரடிகடிச்சானை சுமந்துக் கொண்டு ஒளிரும் விழிகளில் அந்த மான் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது.

முத்து ராசா, பத்திரிகையாளர்.

எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 100 வது இடத்திற்கு முன்னேரியுள்ளதை மிகப் பெரும்சாதனையாக பாஜக அமைச்சர்கள் விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.

பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,நிதி அமைச்சரின் விளம்பரங்கள் என மிகவும் ஆடம்பரமான வகையில் ,போலியான கருத்துரவக்காத்தை மேற்கொள்ள மோடி அரசு முயற்சித்து வருகிறது.

உலக வங்கி வெளியிட்டு வருகிற இந்த பட்டியலில்.சென்ற ஆண்டில் 130 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரே ஆண்டில் (2016- ஜூன் முதலாக 2017 -ஜூன் )வரையிலான கால கட்டத்தில் முப்பது இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது எவ்வாறு என்பதை சற்று நெருங்கி சென்றுப் பார்ப்போம் .

முதலில் உலக வங்கி வந்தடைந்துள்ள இந்த முடிவில்,சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்கு பிந்தைய,வர்த்தக சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை .ஏனெனில் ஜூன்-2016 முதல் ஜூன் -2017 வரையே உலக வங்கி கணக்கில் எடுத்துக் கொண்டது.மாறாக சேவை வரியோ ஜூலை -2017 முதலாக அமலக்கத்திற்கு வந்தது .

ஆக,நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் முடக்கி போட்ட,புதிதாக எந்த தொழிலளையும் தொடங்குவதற்கு மிகப்பெரிய தடை ஏற்பத்திய கோளாறான ஒற்றை வரி முறை அமலாலக்கதிற்கு பிறகு நிலைமை கீழாகியுள்ளதே எதார்த்த உண்மை.

இரண்டாவதாக,நாட்டு மக்ககளின் பணத்தை சூறையாடிய பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை உலக வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.ஏனெனில் மற்ற நாடுகளில் ,சமகாலத்தில் இது போன்ற நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் இந்தியாவின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை விளைவை கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளது

.எதார்த்தம் என்னவென்றால்,நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 விழுக்காட்டு ரொக்கப் பணத்தை ஒரே நாளில் செல்லாதது என அறிவித்து முடிவானது நாட்டின் ,சிறு குறு வணிகத்தையும் விவசாயத்தையும் சுத்தமாக நசுக்கியது.

ஆக,நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு துணைக் கராணமாக இருந்த மேற்கூறிய இரு முக்கிய முடிவை உலக வங்கி கணக்கில் எடுக்காமாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளது அபத்தமே !

சென்ற ஆண்டில் ,எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 130வது இடத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது பாஜக உருவாக்கியிருந்த போலி பிம்பத்தின் மீது கல் வீசியது.

இதன் காரணமாக,உலக வங்கியின் இந்த ஆய்வு மீது பாஜக தீவிர அக்கறை செலுத்த தொடங்கியது.இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் மேற்கொள்ளப்படுகிற ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகளுக்கு உலக வங்கி வருவதை தெரிந்த கொண்ட மோடி அரசு ,உலக வங்கி அதிகாரிகளை சந்திக்கிற முயற்சியை மேற்கொண்டது.

மகாராஷ்டிரா மாநிலத் முதல்வர் தேவேந்திர பெட்நாவிஸ் தலைமையிலான குழுவொன்று உலக வங்கி அதிகாரிகளை சந்தித்து பேசியது.குறிப்பாக (மும்பையில்) கட்டுமானத் துறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக உள்ள ஆவண நடைமுறை ,மின்சார தொடர்புக்கான அனுமதி நடைமுறை ஆகியவற்றிக்கு அதிக நாட்கள் ஆவதை உலக வங்கி சுட்டிக் காட்டியது.

இதன் அடிப்படையில் கட்டுமானத் துறையில் நடைமுறையில் உள்ள 42 அனுமயை 8 ஆக குறைத்தும்,9 நாட்களில் மின்சார இணைப்பு கிடைக்கிற வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.மேலும் கட்டுமானத்திற்கான கிலிரியன்சை 160 நாட்களில் இருந்து 60நாட்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இவை நடைமுறை படுத்தப் பட்டனவா எனத் தெரியவில்லை,மாறாக செய்தமாதிரி உலக வங்கி அதிகாரிகளிடம் பவர் பாயின்ட் பிரெசென்டேசன் போட்டு காட்டியது முதலமைச்சர் தலைமையிலான குழு.

இவ்வாறாக மும்பை நகரத்தின் கட்டுமானத் துறையில் சில திருத்தங்களை ஆவண ரீதியாக மேற்கொண்டு,உலக வங்கியின் பட்டியிலில் முன்னேற்றம் காட்டுகிற வேலைகளை திட்டமிட்ட கணக்கசிமாக செய்தார்கள்.

எகனாமிக் டைம்ஸ் இதழானது இது குறித்து விரிவாக எழுதுயிள்ளது.பார்க்க https://economictimes.indiatimes.com/…/article…/61428174.cms

இந்திய பொருளாதாரம் முட்டுச் சந்தில் முட்டி நின்றுகொண்டுள்ள சூழலில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டு நாட்டை ஏமாற்றி வருகிறது மோடி அரசு.

ஆண்டுக்கு 1.2 கோடி பேர் வேலை வாய்ப்பு வேண்டி இந்திய நகரங்களில் அலைந்து வருகின்றனர்.தொழில் துறை முதலீடு அதள பாதாளத்தில் உள்ளது.நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளோ போதாமையாக உள்ளது.வங்கிகளில் வாராக் கடனோ ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்க்கான எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை.விவசாய உற்பத்தியும் சரிந்து வருகிறது .சேவை துறையை அடித்தளமாக கொண்டே அதிக ஜிடிபி வளர்ச்சி எனும் பிம்பத்தை காட்டியே காங்கிரஸ் போலவே மோடி அரசும் ஏமாற்றி வருகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதலாக எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வந்தது மட்டுமே இந்த அரசுக்கு சாதமாக இருந்த அம்சமாகும்.தற்போது அதுவும் முடிவுக்கு வருகிறது.இவர்களின் பொய் மூட்டைகள் மக்களிடம் அம்பலமாகிற நாள் வெகு தொலைவில் இல்லை!

நியோலிபரலிச சித்தாந்தமும் மனநலமும்: மனநல மருத்துவர் சிவபாலன்

மனநல மருத்துவர் சிவபாலன்

மரு. சிவபாலன்

…“நான் முன்பு போல இல்லை. என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு பெருந்துக்கம் என் மனம் முழுக்க கவிழ்ந்திருக்கிறது. எத்தனை வெளிச்சத்தில் இருந்தாலும், ஒரு கரிய இருள் மட்டுமே என் கண்ணுக்கு புலப்படுகிறது. அந்த இருளை தாண்டி என்னால் வெளியே வரமுடியவில்லை. அந்த இருளின் நான்கு சுவர்களுக்குள் நான் ஒரு பூனையை போல சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் சாப்பிட முடியும். ஆனால் எதை சாப்பிடுவது? ஒரு கொடிய விஷத்தின் கரிய நாக்குகள் என் உணவு முழுவதும் படர்ந்திருக்கிறது. உறக்கத்தை பற்றி சொல்லவே வேண்டாம். நான் அதற்காக மட்டுமே யாசித்திருக்கிறேன், மீள முடியாத ஒரு உறக்கம் தான் எனக்கு இப்போது தேவையாக இருக்கிறது; குறைந்தபட்சம் ஒரே ஒரு இரவாவது நான் தூங்க வேண்டும். ஆனால் தூக்கத்தை நினைத்து நான் அஞ்சுகிறேன், தூக்கம் வராத இரவுகளை நினைத்து நான் பகல் முழுக்க பெரும் துயரத்தில் இருக்கிறேன்; அந்த நினைப்பே அவ்வளவு பாரமாக இருக்கிறது. இதில் இருந்து இந்த துன்பத்தில் இருந்து நான் மீள வேண்டும் என்பதை விட இந்த துன்பத்திற்கான காரணம் என்ன என்பதே, நான் விடை தேடும் கேள்வியாக இருப்பது ஒரு விந்தை”…

இது யாருக்கோ, எப்பொதோ தோன்றிய எண்ணங்கள் அல்ல. சில கடுமையான நெருக்கடிகளின் போதும், தீராத சிக்கல்களின் போதும் நமக்கு தோன்றும் எண்ணங்கள் தான். மேலே சொன்ன அனுபவங்களில் முழுமையாக இல்லையென்றாலும் கூட, சிறிதளவாவது நாம் நமது வாழ் நாளில் சில சந்தர்ப்பங்களில் கடந்து வந்திருப்போம். மனதில் எழும் இந்த வாதைகள், நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் நம் வாழ்க்கைப் பாதை ஒன்றும் பஞ்சு மெத்தை போல அத்தனை மென்மையானது அல்ல. அதே நேரத்தில் மனதில் எழுதும் இந்த இயல்பான சிக்கல்களை, உபாதைகளை எல்லாம் நாம் அவ்வளவு வெளிப்படையாக யாரிடமும் சொல்வதில்லை. காரணம், இந்த அகசிக்கல்களை எல்லாம் நாம் பெரும்பாலான நேரங்களில் நமது பலவீனங்களாக பாவித்துக் கொள்கிறோம் அல்லது அப்படி பாவித்துக்கொள்ள தயார்படுத்தப்பட்டிருக்கிறோம்.

மனதினை பற்றிய, மனதில் எழும் இயல்பான சிக்கல்களை பற்றிய இந்த வெளிப்படையற்ற தன்மைதான் மனதினை பற்றியும், மனநோய்களை பற்றியும் எல்லாவித ஊகங்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் அடிப்படை. நாம் பேசத் தயங்குவதால் தான், நம்மைத்தவிர எல்லோரும் பேசுகின்றனர்; அவர்களுக்கு தோன்றும் வகையில் அல்லது அவர்களுக்கு தேவையான வகையில் பேசுகின்றனர். இப்படித்தான் நியோ லிபரலிச சித்தாந்தங்கள், மனதினை பற்றிய இந்த அறிவுசார் வெற்றிடத்தை ஆக்ரமிக்க தொடங்கி ஏறத்தாழ கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

நாம் இன்னமும் மனம் என்பதை ஒரு விசித்திர பிம்பமாகவும்; மன நோய்கள் என்பவை யாருக்கோ வரக்கூடிய மிக அரிதான நோய்களாகவும்; மன ஆரோக்கியம் பற்றி பேசுபவர்களை கேலியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மனம் என்பது ஒரு தனிநபர் மட்டும் சார்ந்ததல்ல. ஒரு சமூக, அரசியல்,பண்பாடு மற்றும் பொருளாதாரங்களின் கூட்டு விளைவே மனம். ஒரு தனி மனிதனின் மன ஆரோக்கியத்தில் நிகழும் சிக்கல்களை பேச வேண்டுமானால் நாம் முதலில், அந்த தனி நபர் சார்ந்த சமூக, அரசியல், பண்பாட்டு மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

நியோ லிபரலிசம், இந்த காரணங்களை வசதியாக மறைத்து விட்டு மனநோய்களை ஒரு தனிமனித பலவீனமாக நிறுவ முயல்கிறது. சந்தைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள இயலாத நபர்களை மன ரீதியாக பலவீனமானவர்களாக காட்டும் ஒரு கருத்துருவாக்கம் இங்கு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சியே, அத்தனைக்கும் தீர்வாக முன்னெடுக்கும் இந்த பந்தயத்தில் நாம் நம்மையே இழந்துக் கொண்டிருக்கிறோம். நமது கனவுகள், லட்சியங்கள், ஆசைகள், நுண்ணர்வுகள் என அத்தனையயும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நுகர்வு கலாச்சாரத்தில், நம் எல்லோருக்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்கிறது. அப்படி ஒரு மதிப்பில்லாதவர்கள் இரக்கமில்லாமல் இந்த போட்டியில் இருந்து தூக்கி வீசப்படுகிறார்கள். நாளை, நாமும் அப்படி தூக்கிவீசப்படலாம் என்ற எந்த பிரக்ஞையும் இன்றி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நம் உலகம் நம் கையில் வந்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாம் நமது உலகத்தில் இருந்து எங்கோ விலகி சென்று கொண்டிருக்கிறோம். சக மனித பிணைப்புகள் சுருங்கி போய் விட்ட காலகட்டத்தில் நம்மை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. நாமும் யாரை பற்றியும் கவலை கொள்வதில்லை.

ஒரு மனதின் ஆதார தன்மையே, சக மனிதரோடு இணங்கி வாழ்தல் தான். அதற்கான தேவைகள் குறைந்து போன நிலையில் மனம் மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்?

நம்மிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது?

நான் பத்தாவது படிக்கும் போது, எனக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் இருந்தார். முகலாயர்களை பற்றி அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்தால், பக்கத்து வகுப்பில் உள்ள மாணவர்களும் வந்து சேர்ந்து கொள்வார்கள். முகலாயர்களின் வரலாற்றை பற்றிய அவரின் விவரிப்பில், அக்பராகவே மாறிவிடும் அவரது தோரணையில் நேரம் போவது கூட தெரியாமல் எங்களையும் மறந்து கேட்டுக் கொண்டிருப்போம். அந்த வகுப்பை விட்டு வெளியே வந்தால், அவர் அவ்வளவு எளிமையாக சாந்தமாக மாறிவிடுவார். அந்த பள்ளியில் மேலும் அந்த ஊரில் அவருக்கு ஒரே ஒரு அடையாளம் தான் இருந்தது. அது “ஹிஸ்டரி வாத்தியார்”. அந்த அடையாளத்தை தாண்டி, அவரை பற்றி வேறு எதுவும் தெரியாது. அவர் என்ன சட்டை போடுவார், அவர் வீட்டில் என்ன டிவி இருக்கிறது அவர் என்ன செல்போன் வைத்திருந்தார் என்பதை பற்றியெல்லாம் யாரும் யோசித்ததில்லை. அவருக்கும் அது எதுவும் தேவையில்லை. அவர் வேலையை, அவர் அவ்வளவு நேசித்தார்; அந்த வேலைக்கு அவர் அவ்வளவு உண்மையாக இருந்தார்.

நாம் இன்று நம் வேலையை நேசிக்கிறோமோ? அல்லது நேசிக்கும் வேலையை தான் செய்கிறோமோ? முகம் தெரியாத யாரோ ஒருவரின் நிர்பந்தத்தில், நாம் ஒரு இயந்திரத்தன்மையுடம் நம் வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். நம் சுற்றத்தை மறந்து, அதில் நிகழும் சில அழகான தருணங்களை மறந்து, நம் உணர்வுகளை மறந்து, சக மனிதன் மீதான கருணையை மறந்து ஒரு சாவி கொடுக்கப்பட்ட பொம்மையை போல நம் வேலையை நாம் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னால், நாம் முடிக்க வேண்டிய வேலைகளின் அட்டவணைகள் தான் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதை தாண்டி வேறு எதுவும் இல்லை. இந்த வேலையில் இருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது? ஒரு உயர் ரக செல்போன், அழகான கைக்கடிகாரம், சொகுசான கார், நகரத்தின் மத்தியில் ஒரு வீடு.

இப்படித்தான் நமது இன்றைய வாழ்க்கை சூழ்நிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை விரும்பாத ஒருவர் அல்லது இதிலிருந்து வெளியேறும் ஒருவர் தோல்வி அடைந்தவராக பரிகாசிக்கப்படுகிறார். இத்தனை இயந்திரத்தன்மையான சூழலில் நம் மனம் மட்டும் எப்படி சங்கடமில்லாமல் இருக்கும்? நமது லட்சியங்கள், கனவுகள், ஆசைகள் பறிக்கப்படுவது மட்டுமல்லாமல், போலி லட்சியங்களும், போலி கனவுகளும் நம்மையும் அறியாமலேயே நம் மீது திணிக்கப்படுவதை நாம் எப்படி எந்த உணர்வுகளும் அற்று அனுமதிக்க முடியும்?

“பணியிடத்தில் மனநலம்” (Mental Health at Workplace) என்பதை தான் உலக சுகாதார நிறுவனம் இந்த வருட உலக மனநல நாளின் மைய வாசகமாக அறிவித்திருக்கிறது.

ஏனென்றால், குறைந்தபட்சம் பணியிடத்தில் மட்டுமாவது நாம் மனநலத்துடன் இருக்க வேண்டும் என உலகம் விரும்புகிறது. அப்போது தான் நாம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். ஏனென்றால் இந்த பொருளாதார வளர்ச்சிதான் அத்தனைக்கும் முதன்மையானது என இன்றைய லிபரலிச சித்தாந்தங்கள் நினைக்கிறது.

ஆனால், வளர்ச்சியோடு சேர்ந்து மனநோய்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுக்க கிட்டதட்ட 450 மில்லியன் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல உலகம் முழுக்க தற்கொலைகளின் சதவீதம் வளர்ச்சியடைந்த நாடுகளில் தான் அதிகம், ஸ்காண்டிநேவியா முதல் தமிழ்நாடு வரை எதுவும் இதற்கு விலக்கல்ல.

ஒரு புறம் மனதினை பற்றிய ஒரு திறந்த உரையாடலின் மீதான நமக்கிருக்கும் தயக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனம் தொடர்பான அமைப்பு சார் கட்டுமானங்கள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றன்; மறுபுறம் மனநோய்களும் பெருகி கொண்டே செல்கிறது. மனம் மீதும் மனநோய்கள் மீதும் போலியான சித்தாந்தங்கள், கோட்பாடுகள், தீர்வுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. சமூகம் தனது பொறுப்பில் இருந்து கையை தட்டிவிட்டுக் கொண்டு மனநோய்களுக்கு தனிநபர்களையே காரணாமாக்க தயாரகிவிட்டது.

இவை அத்தனையும் கணக்கில் கொள்ளும் போது, மனதினை ஒரு வணிக பண்டமாக்க நியோ லிபரலிஸ சித்தாந்தங்கள் முயல்கிறதோ என எழும் சந்தேகம் தவிர்க்க முடியாதது.

அதனை தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவுசார் சமூகத்திற்கு நிச்சயம் உண்டு. பொது சமூகத்தில் இதற்கான ஒரு வெளிப்படையான உரையாடலை நாம் தொடங்க வேண்டும். மனதினை பற்றிய வெளிப்படைத்தன்மையை நாம் பொது சமூகத்தில் நிறுவ வேண்டும். இதை இப்போது செய்யாவிட்டால் நாம் இனி எப்போதுமே செய்ய முடியாது.

இனியும் நாம் இதற்கான முயற்சியை தாமதப்படுத்திக் கொண்டிருந்தால், “வறுமை, சாதிய கொடுமைகள், பாலின பாகுபாடுகள் தரும் மனஉளைச்சல்களில் இருந்து மீள, யோகா செய்தால் போதுமானது” என்ற வரிகள் விரைவில் மருத்துவ புத்தகங்களில் அச்சிடப்படுவதை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

அக்டோபர் 10 உலக மனநல நாள் தொடர்பாக மருத்துவர் சிவபாலன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது.

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்து விடுவார். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை பா.ஜ.கவை எப்படி மதிப்பிட்டார்கள் இங்கே? தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மேடையில் ஒரு திண்டொன்றில் ஏறி நின்று உரையாற்றுவதைக் கிண்டலடித்து நிறையப் பதிவுகளைப் பார்த்தேன்.

கேலியும் கிண்டலுமாய் நிறைய புகைப்படங்களைப் பார்த்தேன். அவர் குமரி ஆனந்தனின் பெண் என்ற ஒரு காரணத்திற்காகவே அந்தப் புகைப்படக் கிண்டல்களைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து என இந்தயிடத்தில் சொல்லுவதற்கு உண்மையிலேயே அச்சமாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னும் உடல் பழக விரும்பவில்லை.

அது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் பா.ஜ.க சில முன்னெடுப்புகளைத் துணிந்து இங்கே மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதுதான் நிதர்சனம். வளரவே முடியாது என்று கணித்த அவர்கள்தான் நித்தமும் தொலைக்காட்சி விவாதங்களை அலங்கரிக்கிறார்கள்.

போன வருடம் வரை இப்படி யாரையாவது அழைத்து மாலை மரியாதை செய்திருக்கிறார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். தப்போ சரியோ இவர்கள் அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று கருதிய அவர்கள்தான் விவாதத்தின் முனைக்கு இப்போது வந்திருக்கிறார்கள். மத்தியில் அருதிப் பெரும்பான்மையுடன் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சில விஷயங்களை தமிழ்நாட்டில் நிகழ்த்திப் பார்க்க தயாராகி விட்டனர். அதைத் தவறென்று தெளிவான அரசியல் புரிதல் கொண்டவர்கள் சொல்ல மாட்டார்கள். எல்லோருக்குமே அரசியல் செய்ய வாய்ப்பிருக்கிறது இங்கே. இதுவரை கட்டியாண்டவர்கள் மத்தியில் கட்டியாள நினைக்கிறவர்கள் முன்னகர்ந்து செல்வதை தவறென்று சொல்லவே முடியாது இல்லையா?

தமிழகம் அரசியல் ரீதியில் மிகச் சிறந்த வேட்டைக்களம் இப்போது. இரண்டு பெரிய திராவிடக் கட்சித் தலைமைகள் இங்கே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக கலைஞரின் உயிர்வாழ்வு சம்பந்தமான விஷயத்தை இத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அமங்கலமாக எதையும் சொல்லவில்லை. பருப்பு உளது எனச் சொல்லும் தமிழ் வாழ்க்கை சார்ந்த ஆள்தான் நானும்.

பா.ஜ.க தெளிவாக திராவிடக் கட்சிகள் என்று சொல்லப்பட்ட ஒரு தரப்பை போட்டுச் சாய்த்து விட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அது அதிமுகவை கபளீகரமும் செய்து விட்டது. இனி அதிமுக என்று பேசுவதே வீண்வேலை என்பதுதான் உண்மை.

நேரடியாக பா.ஜ.க அரசு என்று சொல்லி விட்டுப் போகலாம். தினகரன் என்கிற போராளி என்று யாராவது சொல்லி என்னிடம் வந்தால் அவர்களுக்கு அன்பாய் குல்பி ஐஸ் வாங்கித் தருவேன். ஏனெனில் இதே பா.ஜ.க அவருக்கு ஆதரவாய் ஒரு சமிக்ஞை கொடுத்தால்கூட போதும் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து விடுவார். எல்லா பேட்டிகளிலுமே அவர் சமத்காரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, “நம் வீட்டு ஆட்கள் சரியில்லையென்றால் மற்றவர்களை குறை சொல்ல முடியுமா” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் அவருக்கும் அந்தக் குதிரையில் ஏறிப் பயணம் செய்யத்தான் ஆசை. சின்னம்மாவே வெளியே வந்தால்கூட சித்தப்பாவை மருத்துவமனையில் பார்க்கப் போவதற்கு முன்பு சித்து விளையாட்டு ஆடுபவர்களைத்தான் முதலில் போய்ச் சந்திப்பார். அது அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ஆக அந்தப் பக்கம் முடிந்தது கதை. நீதிமன்றங்களும் இந்த கதையில் பாத்திரங்கள் ஆன அம்சத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். ஒரு தரப்பை முற்றிலும் ஒழித்தாகி விட்டது. இன்னும் இருப்பது இன்னொரு தரப்பு.

செப்டம்பர் இருபதாம் தேதிக்குப் பிறகு திகார் முன்னேற்றக் கழகம் என அழைக்கப்படும் என தமிழிசை முன்னோட்டம் கொடுக்கிறார். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் இதுமாதிரி அவர் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்தைத் தன்கையில் வைத்துக் கொண்டு ட்ரெய்லர் விடும் அதிகாரத்தை ஒரு தரப்பின் கையில் கொடுத்திருக்கிறதோ என்கிற ஆழமான சந்தேகம் எனக்கு இருக்கிறது. திமுக சார்பில் சம்பந்தப்பட்ட மேக்ஸிம் வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்த வரலாற்றையும் கொஞ்சம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாருங்கள் என்று இலவச டிப்ஸாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு வழக்கில் இருக்கவே இருக்கிறது அபராதம்.

கொஞ்சம் இரண்டு பக்கமும் இறங்கி அடிக்கிற உத்திக்கு பா.ஜ.க தயாராகி விட்டதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? கள விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மெல்ல அவர்கள் கிராமங்கள் தோறும் வலுவாகவே இறங்கிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதைப் பார்த்தேன். விரைவில் அம்மன் கோவில் கூழ் ஊற்றும் விழாக்கள்கூட, ’ஸ்பான்சர்ட் பை’ என்று வந்தால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.

சிறு கடவுளர்களை ஒன்றிணைத்து பெரிய கடவுளர்களோடு ஒன்றிணைக்கும் வேலைகள் அடிக்கட்டுமானத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அதைத் தெரியாமல் இது பெரியார் மண் என்று சொல்லி எதிர்க்க வேண்டியவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமும் மண்ணாய் போன வரலாற்றை எதிர்காலத்தில் படிக்கத்தான் போகிறோம்.

அரசியல் ரீதியிலாகவும் அடிக்கட்டுமான ரீதியிலாகவும் சில முன்னெடுப்புகள் இந்த ஆட்சியின் ஆசிகள் வழியாக நடந்து கொண்டிருக்கின்றன. கொடுப்பதற்கு எத்தனையோ பதவிகள் இருக்கின்றன இந்த பரந்த தமிழ்நாட்டு அரசாங்கத்தில். எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.

உண்மையில் நீங்கள் கிண்டலாக அவர்களைப் போட்டுச் சாய்த்து விட்டதாக நம்பிக் குதூகலிக்கலாம். ஆனால் ஆழமாக அவர்கள் வேர்விட ஆரம்பித்து விட்டார்கள். “நான் தூங்கும் போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிற பெண்ணையோ தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதைவிட சொல்வதற்கு என்னிடம் உதாரணங்கள் எதுவும் இல்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

நீட் நடைமுறை தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா தனது அரசு பணியை துறந்துள்ளார். மறுபுறம் பொருளாதார கோரிக்கைக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்துகிறது. அமைப்பாக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு சங்கமான ஜேக்டோ ஜியோவில், பல ஆசிரியர்கள் சபரி மாலாவைப் போலவே அரசியல் உணர்வு பெற்று இருப்பர். சமூகநீதிக்க எதிரான, வசதி படைத்தவர்களுக்கான இந்த நீட் நடைமுறைக்கு எதிராக, அனிதாவின் மரணத்தால் உலுக்கப்பட்டவர்கள் நிச்சயமாகவே இந்த சங்கத்தில் இருக்கவே செய்வார்கள்.

ஆனால், ஜேக்டோ ஜியோ தொழில்சங்கத்தின் அரசியல் அற்ற தலையானது,பொருளாதார கோரிக்கைக்காக மட்டுமே சங்கம் உள்ளது என்ற மாயையை உளவியல் ரீதியாக கட்டுகிறது; அரசியல் நீக்கம் பெற்ற தொழில்சங்கவாதத்தால், தொழிற்சங்க உறுப்பினர்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. கூலி உயர்வுக்கான பேரம் பேசுகிற போரட்டமாக, நாள், தேதி, கிழமை, நேரம் அறிவிக்கப்பட்டு சடங்காக கூடி கலைந்துவிட்டுப் போகிற போராட்டமாக தொழிற்சங்க போராட்டங்கள், அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சீரழிந்து போயுள்ளன.

ஜேக்டோ ஜியோ போன்றே போக்குவரத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழில் சங்கங்கங்களின் பிற்போக்குத் தலைமையால், வர்க்க உணர்வு ஊக்கம் பெறாமல், அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக சடங்கு போராட்டம் நடத்துபவர்களாக மாற்றப்பட்டுள்னர். இதன் காரணத்தாலேயே தொழில்சங்கப் போராட்டங்கள் மக்கள் திரளிடம் இருந்து அன்னியப்பட்டு குறுகிய பிரிவினருக்கான கோரிக்கை போலவே பார்க்கப்படுகிறது.

தொழில்சங்க பேரம் முடிந்த பின்னர், போராட்டங்கள் கைவிடப்படுகிறது. காலம் காலாமாக நடைபெறுகிற இந்த பிற்போக்கு நடைமுறையானது, ஓரடி கூட பொருளாதார ஊதிய கோரிக்கையில் இருந்து அரசியல் கோரிக்கையாக முன்னேறவே இல்லை! மாறாக பிற்போக்கு திசையிலேயே முன்னேறுகிறது!

பெரிய எண்ணிக்கையில் அமைப்பாக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான தொழில்சங்கங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வளர்ச்சி நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதே எதார்த்த உண்மை!

அனிதா மரணத்திற்குப் பின்பாக நீட் நடைமுறைக்கு எதிராக பரவலான மாணவர் இளைஞர் போரட்டங்கள் வெடித்து வருகையில், சாலை மறியல்கள் நடக்கையில், போலீசுடன் மாணவர் படைகள் மோதுகையில், மாபெரும் எண்ணிக்கையில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களும், ஊழியர்களும், தொழில்சங்க தலைமையின் செயலற்றப் போக்கால் வெறும் பார்வையாளர்களாக சுருக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச போராட்டத்தைக் கூட நீட்டுக்கு எதிராக இந்த சங்கங்கள் முன்னெடுக்கவில்லை. எங்கே தொழிலாளர்கள் அரசியல் உணர்வு பெற்றுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையும், அரசுக்கு எதிராக நேரடியாக மோதுவது கூடாது என்ற சந்தர்ப்பவாத நோக்கும் தொழில்சங்க தலைமையின் மையமாகியுள்ளன.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ்

நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை எப்படி உருவாக்க முடியும்?

டாக்டருக்கு மட்டுமல்ல, எல்லா பணிக்குமே தகுதியானவர்கள்தான் வரவேண்டும். ஆனால் ஒரு வேலைக்கான தகுதி என்பது வெறுமனே தகுதியான ஆளை தெரிவு செய்வது மட்டுமில்லை. முறையான பயிற்சி, அனுபவம் மற்றும் அதனை அளவிடும் தேர்வுகள் வாயிலாகவே தகுதியானவர்களை உருவாக்க முடியும். மருத்துவப் படிப்புக்கு பெரிய போட்டி இல்லாத நாடுகளில் சராசரி மதிப்பெண் எடுத்த மாணவர்களே மருத்துவப் படிப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியானால் அவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லையா? தரமான மருத்துவர்கள்தான் தேவை என்றால் நாம் செய்ய வேண்டியது மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதுதான்.

இங்கே நாம் தகுதியின் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை தெரிவு செய்வதில்லை. எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நம்மிடையே போட்டி அதிகம் ஆகவே இருக்கும் வழிகளில் ஒன்றான மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்கிறோம். ஜப்பானில் அறுவை சிகிச்சை மருத்துவ சிறப்பு படிப்புக்கு அவர்கள் கை மற்றும் கண்களுக்கு இடையேயான ஒத்திசைவு ஒரு தகுதியாக சோதிக்கப்படும். இங்கே அப்படியெல்லாம் இல்லை. நாம் எளிமையான வழியான மதிப்பெண்ணை வைத்திருக்கிறோம்.

சரியான தகுதித்தேர்வு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அமெரிக்க மாநிலம் ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் சொல்லும் வழி இப்படி இருக்கிறது,

மாணவரின் பொருளாதார சூழல் (வசதியான மாணவர்கள் சுலபமாக படிப்பதற்கான வாய்ப்புக்களை தேடிப்பெற இயலும்)

வீட்டுச் சூழல் (பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டால் மாணவரின் சுமை கூடும், )

பிறப்பு வரிசை (முதல் குழந்தைகள் கடைசி குழந்தைகளைவிட இயல்பாகவே படிப்பில் பிரகாசிப்பதாக தரவுகள் சொல்கின்றன)

மேல்நிலை வகுப்புக்களில் மாணவர்கள் ஏதேனும் பெரிய உடலியல் மற்றும் மனநல பிரச்சினையை சந்தித்து மீண்டிருக்கிறார்களா?

அதோடு 9,10, 11,12 ஆம் வகுப்புக்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்.

இவை அனைத்தையும் பரிசீலித்தே மாணவரின் இறுதியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படவேண்டும்.

கூடுதலாக ஒரு வகுப்பில் பாலின சமநிலை மற்றும் வெவ்வேறு இன மக்களின் இருப்பு ஆகியவற்றையும் பராமரிக்கும்படியாகவே மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் (அதாவது வெறும் ஆண்கள் மட்டுமே இருக்கும்படியாகவோ அல்லது வெள்ளையின மக்கள் மட்டுமே இருக்கும்படியாகவே ”தகுதி” நிர்ணயிக்கப்படக்கூடாது, அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் தகுதியை சற்று சமரசம் செய்துகொண்டு சமநிலை கொண்ட வகுப்புக்கே முன்னுரிமை தர வேண்டும்)

இப்படியும் சில பல்கலைக் கழகங்கள் மாணவர்களை தெரிவு செய்கின்றன. ஆனால் அதனை செயல்படுத்த பெரிய அளவில் ஆள்பலமும், எல்லா துறை பணிகளுக்கும் ஓரளவு சமவிகித ஊதியம் மற்றும் ஓரளவு நேர்மையான கல்வித்துறையும் தேவை. அதற்கு வக்கில்லை என்பதால்தான் நாம் மதிப்பெண்ணை ஒரு  தகுதியாக வைத்திருக்கிறோம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, டோக்கனை வீசியெறிந்து பொறுக்கச்சொல்வது, குலுக்கல் முறை ஆகியவற்றைவிட மதிப்பெண் சற்றே மேம்பட்ட வழிமுறை அவ்வளவே.

அப்படியானால் நீட் எனும் இன்னொரு தேர்வினால் என்ன கெட்டுவிடும்?

12 ஆம் வகுப்புத் தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகியவை அடிப்படையில் வேறானவை. சிந்தனையில் இருந்து சொற்களை எடுத்து அதனை வாக்கியமாக்குவது ஒரு திறமை என்றால் மின்னல் வேகத்தில் சிந்தித்து ஒத்திருக்கும் பதிலில் சரியானதை தெரிவு செய்வது இன்னொரு திறமை. தமிழக மாணவர்கள் பதிலை எழுதுவதில்தான் 12 வருடங்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஏனைய உயர் படிப்புக்களுக்கு அப்படி படித்து வாங்கும் மதிப்பெண்தான் அடிப்படை. அது மாணவர்களுக்கு ஓரளவு பழக்கமாகியிருக்கிறது. இதில் புதிதாக நீட் எனும் தேர்வு நுழையும்போது அது மாணவர்களுக்கு ஒரு கறாரான விதியை நிர்ணயிக்கிறது. நீட் மதிப்பெண்னா அல்லது +2 மதிப்பெண்னா என்பதை முதலிலேயே நிர்ணயித்து அவர்கள் தமது படிப்பை துவங்க வேண்டியிருக்கிறது.

+2 தேர்வை வரையறையாக வைப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் +1 பாடங்களை புறக்கணிக்கின்றன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையே. ஆனால் ஒரு பிரச்சினைக்கான தீர்வு பிர்ச்சினையைவிட மோசமானதாக இருக்கக்கூடாது.  நீட் மாணவர்களை இரண்டு பிரிவாக பிளக்கிறது. மருத்துவமா அல்லது வேறா என ஒற்றை முடிவை நோக்கி அவர்களை அழுத்துகிறது. ஒரே வாய்ப்பை தெரிவு செய்யும்போது அதில் ரிஸ்க் அதிகமாகிறது ஆகவே அவர்கள் அதில் பெரும் முதலீடு செய்யும்படிக்கு மறைமுகமாக தூண்டபடுவார்கள். பெரும் பணக்கார குழந்தைகள் அப்படியான ஒரு ஒற்றை இலக்கை நோக்கி நகர்வது சுலபம். அதற்காக முதலீடு செய்வதும் அல்லது மீண்டும் மீண்டும் முயற்சிப்பதும் சுலபம். வடமாநிலங்களில் 6 ஆம் வகுப்பு முதலே ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளுக்கு வசதியான மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சைத்தன்யா போன்ற பள்ளிகள் இங்கேயும் அதனை செய்கின்றன. ஆனால் இப்படியான ஒற்றை இலக்கை நோக்கி சாமானிய மாணவர்களை விரட்டினால் அது கடுமையான மன அழுத்தத்துக்கு இட்டுச்செல்லும். காரணம் அவர்கள் ஒருவேளை தோல்வியுற்றால் என்ன வழி என்பதற்கு பதில் இல்லை.

மாநில அரசின் வடிகட்டும் முறை மாணவர்களின் ஒரு கையை கேட்கிறது என்பதற்காக மத்திய அரசு எனக்கும் ஒரு கையை கையை வெட்டிக் கொடு என கேட்பது நியாயமாகாது.

அப்படியானால் இது ஒரு நடைமுறை சிரமம், அதனை ஏன் தமிழகத்தின் மீதான பெரும் தாக்குதல் போல ஏன் சித்தரிக்க வேண்டும்?

காரணம் இது மத்திய அரசின் தாக்குதலில் ஒரு அங்கம் என்பதை நம்ப எல்லா முகாந்திரமும் இருக்கிறது. மருத்துவம், கல்வி என எல்லா சேவைகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டுகிறது. அதன் அங்கமாக அரசு அரசுக் கல்வியை ஒழிக்கும் நேரடி நடவடிக்கைகளை மோடி துவங்கிவிட்டார். 3 லட்சம் அரசுப்பள்ளிகளை மூடும் திட்டம், சிறப்பாக செயல்படாத பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் பரிந்துரை, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை குறைப்பது என அரசுக் கல்விக்கு சமாதி எழுப்பும் செங்கற்கல்களை விரைவாக அடுக்குகிறது மோடி அரசு. ஆகவே நீட் தேர்வையும் அதன் அங்கமாகவே நாம் பார்த்தாக வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்க்கையில் நாம் நீட்டை இன்னும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன்னாலும்கூட கிராமப்புற மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் பெரிய அளவில் மருத்துவ சீட் பெறவில்லையே?

உண்மைதான், ஆனால் அதுவே நீட்டை ஏற்றுக்கொள்வதற்கான நியாயமாகிவிடாது. இப்போதைய சூழல் அடுத்த வட்டத்தில் இருக்கும் நடுத்தர வர்க மக்களையும் மருத்துவப் படிப்பு எனும் வாய்ப்பில் இருந்து வெளியேற்றுகிறது. உயர்கல்வியின் பரப்பு சுருங்கி இன்னும் தீவிரமாக பெரும் வசதியான மக்களிடம் மையம் கொள்கிறது. வட மாநிலங்களில் தேர்வுகளில் எத்தனை மோசமான திருட்டுத்தனங்கள் செய்யப்படுகின்றன என்பது தொடர்ந்து அம்பலமாகி வந்திருக்கிறது. டெல்லி எய்ம்ஸில் உயர் மருத்துவக் கல்வி படித்த சரவணன் கொல்லப்பட்டது சீட் போட்டியில்தான்.  இப்படி உயர்கல்வி வய்ப்புக்காக வடமாநிலங்களில் நடக்கும் குற்றங்கள் நம் கற்பனைக்கு எட்டாதவை. நீட்டின் வருகை இப்படிப்பட்ட பல கூடுதல் பிரச்சினைகளை தமிழகத்துக்கும் கொண்டு வரும். இப்போதிருக்கும் +2 மதிப்பெண் முறையை தமிழகமே மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகளை போராடியாவது நம்மால் பெற முடியும். நீட்டை ஏற்றுக்கொள்வது அந்த வாய்ப்புக்களை எல்லாம் எட்டாக்கனியாக்கிவிடும்.

அறிமுகமான முதல் ஆண்டிலேயே 1000க்கும் மேலான வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகும். கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் என துவங்கிய இந்த சுத்திகரிப்பு இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. கிராமப்புற மாணவர்களையும் அரசுப்பள்ளி மாணவர்களையும் இதுநாள்வரை புறக்கணித்த பாவத்தின் பலனைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். அதே பாவத்தை மீண்டும் செய்ய விரும்பாமல் மக்கள் வீதிக்கு வருகிறார்கள் அவ்வளவுதான்.

மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காததற்காக தற்கொலை செய்துகொள்வது எப்படி சரியாகும்? அதனை தியாகப் போராட்டம் என வர்ணிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

தற்கொலையை வெறுமனே விரக்தியின் வெளிப்பாடாக பார்ப்பதன் விளைவுதான் இந்த சிந்தனை. இந்தியாவின் சமூக பொருளாதார சூழலை புரிந்துகொள்ளாமல் நிகழ்வுகளை பார்த்தால் தீர்மானங்கள் இப்படித்தான் இருக்கும். தற்கொலைக்கான பிரதான காரணமாக விரக்தி இருக்கிறதே தவிர அதுவே ஒரே காரணமாகிவிடாது.

இந்தியாவில் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைக்கப்படுவது படிப்புதான். வறுமையா? படி சரியாகிவிடும். சாதீய வன்முறையா? படி சரியாகிவிடும். ஒரு தனி மனிதன் மீதான எல்லா ஒடுக்குமுறைக்கும் தீர்வாக நன்றாக படிப்பது எனும் ஒற்றை யோசனையே முன்வைக்கப்படுகிறது. பாமர மக்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுப்பதற்கே அதிகம் போராடுகிறார்கள். சிறந்த படிப்பின் உச்சபட்ச எல்லையாக இருப்பது அரசுக் கல்லூரி எம்.பி.பி.எஸ்.

சாதி மற்றும் பொருளாதார படிநிலையில் கடைக்கோடியில் இருக்கும் அனிதா போன்ற ஒரு பெண் கல்வியின் உச்சத்தை தொட்ட பின்னும் அவரது வாய்ப்பை பணமிருக்கும் மாணவர்கள் இலகுவாக தட்டிக்கொண்டு போகையில் அந்த மாணவிக்கு இந்த சமூகத்தில் என்ன நம்பிக்கை மிச்சமிருக்கும்? இதுநாள் வரை உள்ளூர் அறிவுரை சப்ளையர்கள் முதல் உலக அறிவுரை சப்ளையர் அப்துல்கலாம் வரை எல்லோரும் படித்தால் போதும் படித்தால் போதும் என ஓதியவற்றை நம்பி தன் பள்ளி காலத்தை முழுமையாக செலவிட்ட ஒரு மாணவியை நீ மருத்துவம் படிக்க லாயக்கற்றவள் என டிஷ்யூ பேப்பரைப் போல தூக்கியெறிந்தால் அவள் எப்படி அதனை இயல்பாக கடந்துபோவாள் என நம்புகிறீர்கள்? 12 ஆண்டுகால உழைப்புக்கு ஊதியம் கேட்கும்போது உனக்கு தகுதியில்லை வேண்டுமானால் பிச்சை வாங்கிக்கொள் என்றால் சகித்துக்கொள்வீர்களா? ஏன் அக்ரி படிச்சா என்ன என்று அனிதாவைப் பார்த்து கேட்பதும் அப்படியானதுதான்

சில தருணங்களில் தற்கொலை ஒரு கூக்குரல், சமூகத்துக்கு விடுக்கும் செய்தி. எப்போதுதான் எங்களை கண்டுகொள்வீர்கள் எனும் ஆற்றாமை. அவர் வாழ்வதற்கான வாய்ப்புக்களை இந்த சமூகமும் அரசும் தரவில்லை. நீங்கள் காரணத்தை ஆராயாமல் விளைவை ஆராய்ந்தால் அனிதாதான் குற்றவாளியாக தெரிவார்.

பாடத்திட்டத்தை மாற்றினால் கல்வியின் தரம் உயரும் அல்லவா?

தரம் என்பதை யார் தீர்மானிப்பது? தரம் என்பதை அளவிட உலகெங்கும் இருக்கும் விதி, அது பயனாளியின் தேவையையும் விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கே பயனாளி தமிழக மக்கள். அவர்களுகான தரத்தை எங்கோ இருக்கும் ஒருவனால் எப்படி தீர்மானிக்க முடியும்?

கல்வியில் தரம் என்பது பல கூறுகளை உள்ளடக்கியது. அரசு, ஆசிரியர்கள், சமூக பொருளாதார நிலையில் குறைந்தபட்ச சமநிலை, அனைவருக்கும் ஒரே தரமுடைய பள்ளிகள் என நீளும் அந்த பட்டியலில் பாடத்திட்டம் கடைசியாகத்தான் வரும். இந்தியாவில் தரமான கல்விக்கான எல்லா அம்சங்களையும் அரசே எட்டி உதைத்து நாசமாக்குகிறது. அந்த எல்லா பாவங்களையும் ஒரு நுழைவுத்தேர்வு கழுவிவிடும் என மக்களில் ஒரு பிரிவினரை நம்ப வைத்திருக்கிறது அரசு. இந்தியா போன்ற நாட்டில் வெறுமனே புத்தகத்தை மாற்றி கல்வியின் தரத்தை மாற்றலாம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த கருத்தை சொல்லும் மனிதர்களிடம் ஒரேயொரு கேள்வியை முன்வையுங்கள். தரமான கல்வி, சமமான போட்டி தேவையென்றால் எல்லா பள்ளிகளையும் அரசே நடத்தி சமமான போட்டியை ஏற்படுத்த வழி செய்யலாமா என கேளுங்கள். அப்போது அவர்களது எதிர்வினையே உங்களுக்கு தரமான கல்வி பற்றிய அவர்கள் அக்கறையை அம்பலப்படுத்தும்.

நீட் வந்துவிட்டது, இனி எப்ப போராடினாலும் அதனை மாற்ற முடியாது. அப்படியானால் இனி அதற்கு தயாராவதுதானே வழி?

மாற்ற முடியாது எனும் வாதம் அனேகமாக சொல்பவரின் விருப்பம் மற்றும் அச்சத்தில் இருந்து வருகிறது. உலகின் பெரிய மாற்றங்கள் எல்லாமே இது நடக்க வாய்ப்பில்லை என பலராலும் நம்பப்பட்டவைதான். அசைக்க முடியாத சக்திகளை எல்லாம் போராட்டங்கள் அசைத்திருக்கின்றன. வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கு மோடி விதித்த கட்டுப்பாடுகளை பெங்களூர் ஆடைத்தொழிலாளர்கள் ஒருநாள் முற்றுகையில் தகர்த்தார்கள். இங்கே கேள்வி நீங்கள் போராடத்தயாரா என்பதும் அதன் நியாயமும்தான். அது வெற்றி பெறும் எனும் கியாரண்டி கார்டை கொடுத்தெல்லாம் யாராலும் யாரையும் போராட்டத்துக்கு அழைக்க முடியாது.

உன் மனைவியையும் மகளையும் எனக்கு கூட்டிக்கொடு என நட்டின் அதிகாரம் மிக்கவர் கேட்டால் அனேகம் பேர் சாவுதான் முடிவென்றாலும் அதற்கெதிராக போராடுவார்கள். சில சமயங்களில் தர்க்க ரீதியான சாத்தியம் போராட்டத்தை தீர்மானிக்கக்கூடாது அது உங்கள் உணர்வை அழுத்தமாக எதிரிக்கு சொல்ல வேண்டும்.

இனி மக்கள் என்னதான் செய்வது?

நீட் தேர்வு என்பது மக்களை சூழ்ந்திருக்கும் ஏராளமான மரண முற்றுகைகளில் ஒன்று. கல்வி, மருத்துவம் என எல்லா சேவைகளையும் முற்றாக தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. பொதுவிநியோகத்தை சிதைத்து அழிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது. பாமர மக்களை அழித்தொழிக்கும்  தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கம் நீட். அதனை எதிர்ப்பது இந்த தொடர் அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான எதிர்வினை. இது குறைந்தபட்சம் உங்களை கொல்லும் செயல்பாடுகளை தள்ளிப்போடும். இதனை மவுனமாக ஏற்றுக்கொள்வது நீங்கள் அரசுக்கு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அழிக்க கொடுக்கும் லைசென்ஸ். அதற்கு தயாரென்றால் அமைதியாக இருங்கள். இல்லையென்றால் சிந்தியுங்கள், பேசுங்கள் வீதிக்கு வாருங்கள்.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடையவலைப்பூ இங்கே

“அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்

எஸ். எஸ். சிவசங்கர்

பெருந்துயரத்திற்கு பின்னான அமைதியில் இருக்கிறோம். அனிதாவின் இழப்பை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து விட முடியாது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழப்பின் வலியோடு தவிக்கிறார்கள்.

கனவுடனான கண்கள். மழலை மாறாத முகம். எண்ணி பேசும் சொற்கள். தலைமுறை வறுமையை பறை சாற்றும் உடல். இதை எல்லாம் தாண்டி அறிவு முத்திரை பதித்து தனி அடையாளம் கண்டாள்.

குழுமூர் கிராமத்திற்கு மருத்துவ சேவையாற்றும் தேவதையாக விரும்பினாள் அவள். சிறு வயதில் அன்னை ஆனந்தியை நோய்க்கு பறி கொடுத்த தாக்கம் குறையவே இல்லை.

இன்னொரு குழந்தைக்கு தாயில்லாமல் போய்விடக் கூடாது என்று, தன் தாயை இழந்த நேரத்தில் கொண்ட உறுதி தான் கல்வியில் அவளை வழி நடத்தியது. அது தான் அவளுக்கான உத்வேகம்.

ஏதோ பன்னிரண்டாம் வகுப்பில் மாத்திரம் எதேச்சையாக மதிப்பெண் எடுத்து விடவில்லை அவள். பத்தாம் வகுப்பிலும் முத்திரை பதித்தவள் தான் அவள். 478 மதிப்பெண்கள்.

நீட் தேர்வில் 86 மதிப்பெண் எடுத்தாள். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த குழந்தைக்கு திடீரென மத்தியப் பாடத்திட்டத்தில் கேள்வி தாள் என்றால் என்ன செய்வாள் பாவம். படித்ததெல்லாம் கிராமப்புற சூழல்.

பன்னிரண்டாம் வகுப்பில் அவள் எடுத்த மதிப்பெண்கள் 1176. மருத்துவப் படிப்பிற்கான மதிப்பெண் 196.25. கடந்த ஆண்டு போல் மாநிலப் பாடத்திட்டத்தின் படி கலந்தாய்வு நடந்திருந்தால் இந்நேரம் அவள் மருத்துவ மாணவி.

அவளது சொந்த ஊரான குழுமூர் கிராமம் இருப்பது செந்துறை ஒன்றியத்தில். அவள் ஊரை சுற்றி பத்து கிராமங்களில் இது வரை ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து மருத்துவர் கிடையாது. அதற்கான வாய்ப்பு அனிதாவிற்கு கிடைத்தது.

இவள் தான் இந்தப் பகுதியின் முதல் பெண் மருத்துவராக வந்திருப்பாள். குழுமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணி புரிந்திருப்பாள். முதுநிலையும் படித்திருப்பாள். நிச்சயம் சாதித்திருப்பாள்.

அதை எல்லாம் நீட் தேர்வு மறுத்து விட்டது. அதனால் தான் நொறுங்கிப் போனாள். அதன் விளைவே போராட்டக் களத்திற்கு வந்தாள். நீட் தேர்வை எதிர்த்து நின்றாள்.

தன்னை போல் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களோடு இணைந்து கட்சித் தலைவர்களை சென்னையில் சந்தித்தாள். நீட் தேர்வில் விலக்கு கோரி கோரிக்கை வைத்தார்கள் மாணவர்கள்.

அப்போது தான் மாநில அமைச்சர்களும், முதலமைச்சரும், மத்திய அமைச்சர்களும் இந்தாண்டு நீட் தேர்விற்கு விலக்கு வழங்கப்படும் என மாறி, மாறி தொலைக்காட்சியில் அறிவித்தார்கள்.

அனிதாவிற்கும் மற்ற மாணவர்களுக்கும் நம்பிக்கை வந்தது. இவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வு அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நேரத்தில் அதில் எதிர்மனுதாரராக சேர்ந்தார்.

காலை வரை தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதாக சொன்ன மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வழக்கு விசாரணையின்றி தள்ளுபடியானது.

நீதியை நிலை நாட்டும் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றமே கைவிரித்த பிறகு, நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து நிற்கதியாகிப் போனார்கள். அதில் அனிதாவும் ஒருத்தி.

ஆனால் பல நண்பர்களும் அனிதாவுக்கு உதவ முன்வந்தார்கள். அனிதா அடுத்த ஆண்டில் நீட்டில் அதிக மதிப்பெண் பெற வேண்டும், அதற்கான பயிற்சி பெற என்ன செலவானாலும் ஒப்புக் கொள்ள என் நண்பர்களும் துடித்தார்கள்.

அனிதா நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்க வேண்டும் என்பது எல்லோரது எண்ணமும். அனிதாவின் அண்ணனிடமும் விருப்பம் தெரிவித்தேன். அவரது தந்தையை சந்திக்க திட்டமிட்டோம். ஆனால் அனிதா அவசரப்பட்டு விட்டாள்.

அனிதா யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அப்பா திருச்சி மார்க்கெட்டில் கூலி வேலை, அதனால் அவர் வீட்டில் இல்லா நிலை. அண்ணன் மணிரத்தினத்திடம் பேசுவாள்.

அடுத்த வீட்டு அக்கா செல்வியிடம் பேசுவாள். “அம்மா ஏன் என்ன விட்டுட்டு போனாங்க?”, இது தான் அந்த அக்காவிடம் அனிதா அதிகம் கேட்ட கேள்வியாக இருக்கும். தன் மருத்துவர் கனவை அடிக்கடி சொல்லுவாள்.

அம்மாவின் பிரிவும், அதன் தாக்கமும் தான் அவளை கல்வியை நோக்கி அவ்வளவு வலுவாக நகர்த்தியது. கல்வியில் சாதிப்பதன் மூலம் மருத்துவராவது கனவு.

கலைந்தது கனவு மாத்திரமல்ல, அந்த குடும்பத்தின் கொழுந்தே காணாமல் போனது.

பல குடும்பங்கள் தம் மகளை இழந்ததாகவே நினைக்கின்றன. அந்த முகம் நினைவை விட்டு அகலாது.

# அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

எஸ். எஸ். சிவசங்கர், திமுக முன்னாள் எம் எல் ஏ.

கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

ஜி. கார்ல் மார்க்ஸ்

இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது  ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி எல்லாரையும் தள்ளியிருப்பதில் அஜித் ரசிகர்கள் இந்த விவகாரத்தில் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

தீவிர மசாலா சினிமாக்கள் தமிழுக்குப் புதிததல்ல. இங்கு எடுக்கப்பட்ட மாற்று சினிமாக்களை ஒப்பிட கருத்தியல் ரீதியாகக் கூட சீர் மிகுந்த வணிக சினிமாக்கள் வெளிவந்திருக்கிறது என்பது வரலாறு. சினிமா தியேட்டர்களில் அடித்துக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வது, சினிமா மோகத்தில் குடும்பத்தைக் கவனிக்காமல் விடுவது, என் தலைவன் உசத்தியா உன் தலைவன் உசத்தியா என்று போட்டி போட்டுக்கொண்டு அது சண்டையில் முடிந்து சார்ந்தோர் சந்தியில் நிற்பது என இதன் உப விளைவுகள் நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டதும் கேட்டதும்தான்.

விஞ்ஞான வளர்ச்சி என்பது மற்ற விஷயங்களில் எப்படியே, திரையரங்குகள், டிக்கெட் கவுண்டர்கள் போன்ற கொலைக்களங்களில் இருந்து மக்களை விடுவித்ததற்காக டிவிக்கும், சிடிகளுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.   சினிமா     உருவாக்கம், சினிமா அரங்கங்கள், திருட்டு விசிடி, ப்ரோமோ, வியாபாரம், விநியோகம், டாரண்ட் போன்றவற்றில் பாரதூரமான மாற்றங்கள் அந்தத் துறையில் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனை குறைகள் இருந்தாலும், அங்கு நிகழ்ந்திருக்கிற மாற்றங்கள் என்பது ஓரளவுக்கு ஜனநாயகப் பூர்வமானவை. அடிப்படை மனித விழுமியங்களுக்கு நெருக்கமானவை. அதற்கு பயனளிக்கக்கூடியவை.

மாறாக நம் சூழலில் சினிமாவில் நிகழ்ந்த எந்த முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஒரு விஷயத்தில் எந்த மாற்றத்தையும் விளைவிக்காமல் தோற்றுப்போனது என்றால் அது தீவிர ரசிகர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற வேறெந்த அடையாளமும் அற்ற சினிமா பொறுக்கிகளிடம்தான். பெரும்பாலும் சினிமா சினிமா என்று அலையும் உதிரிகளை ஒன்றுக்கும் உதவாத சமூக விரோதிகளைப் போல காணும் சமூகப் பண்பு நம்மிடம் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் அத்தகைய ரசிகர்களை நீங்கள் காணமுடியும்.

வந்த அன்றே அந்தப் படத்தைப் பார்த்துவிடுவது, மீண்டும் மீண்டும் பார்ப்பது, ரசிகர் மன்றங்கள் அமைத்துக்கொண்டு கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது, நடை உடைகளில் தனது பிரத்யேக நடிகனின் பாவனைகளை வெளிப்படுத்துவது, போட்டி நாயகனின் குணங்களை கிண்டல் செய்யும் உடல்மொழியை வெளிப்படுத்தி அந்த நாயகனை விரும்பும் மற்ற ரசிகர்களை  சீண்டுவது, பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் தரப்பினரை மேலும் மேலும் ஒடுக்கும் ஆண்மையப் பார்வையை ஆண்மையின் கம்பீரமாக வரித்துக்கொள்வது என்பதாக இதன் குணங்கள் தம்மை வெளிப்படுத்திக்கொண்டன. இது அப்படியே இன்றைய நவீன உலகத்திலும் இருக்கிறது. அதன் வடிவம்தான் வேறு. மேலும் இதற்கு ஒரு சமூக அந்தஸ்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் இந்த விஷயத்தில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி. பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்ஜியார் ரசிகனும் அஜீத் ரசிகனும் ஒன்றுதான். போட்டிருக்கும் சட்டையின் கலர் வேறு, செய்யும் வேலை அடைந்திருக்கும் கல்வித்தகுதி வேறு என்பதைத் தவிர வேறு மாற்றமில்லை.

எம்ஜியார் காலத்து அரசியலுக்கும், இன்றைய சமகால அரசியலுக்கும் இருக்கும் பிரத்யேக வேறுபாடு என்பது நமக்கு முன்னால் மிகுந்து நிற்கிற ஊடகங்கள் மற்றும் அரசியலைத் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கிற வாய்ப்பு என்பதில் இருக்கிறது. மேலும், ஒரு தவறான அரசியல் முடிவு சிவில் சமூகத்தால் எடுக்கப்படுகிறபோது, அந்த மையின் ஈரம் காய்வதற்கு முன்னாலேயே அதன் விளைவுகள் அப்பட்டமாகதெரியத் தொடங்குகிற வேகம் வேறு. இவையெல்லாம் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களுக்கு வாய்க்காதவை. இதை அப்படியே ரசிகர்களுக்குப் பொருத்திப் பார்த்தால், அதன் எல்லைகள் கற்பனைக்கு எட்டாதவை என்பது புரியும்.

இன்று வலைத்தளங்களில் கிடைக்காத ஒன்று என்பதே கிடையாது. ஓரளவு வசதியுள்ள கிராமங்கள் முதல் இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்கள் வரை இணைய வசதி இல்லை என்பதே இல்லை என்று ஆகியிருக்கிறது. ஒரு சினிமா ரசிகனின் முன்னால் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு என்று பார்த்தால், அவனது வாழ்க்கை மொத்தத்தையும் பணயம் வைத்தால் கூட துய்க்க முடியாத அளவுக்கு மலையைப் போல குவித்துவைக்கப்பட்டிருக்கும் உச்சமான கலைகள். வித விதமான ரசனையைத் தூண்டுகிற படங்கள், மேதைமையை வெளிப்படுத்துகிற படங்கள்  என அப்படி ஒரு வாய்ப்பு அவனது முன்னால் கொட்டிக்கிடக்கிறது.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் எம்ஜியாரின் சிவாஜியின் படத்திற்காக தவம் கிடந்த ஒரு ரசிகனும் இருபது வருடத்துக்கு முன்னால் ரஜினியின் கமல்ஹாசனின் படத்திற்காகக் காத்திருந்த ஒரு ரசிகனும் இன்று அஜித்திற்காக விஜய்க்காக காத்திருக்கிற ரசிகனும் ஒன்றா என்ற கேள்வி இருக்கிறது? இதை நாம் திறந்த மனதுடன் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். வயதில் குறைவென்றாலும் மற்ற எந்த கலையையும் விட சினிமா எனும் கலை மனிதப் பரப்பிற்குள் ஊடுருவிய வேகம் என்பது கற்பனைக்கு எட்டாதது. மேலும் அதே வேகத்தில் அது மற்றைய கலைகளைத் தின்றுசெரித்தது. அவற்றை இல்லாமல் ஆக்கியது. நம் இந்தியச் சூழலில் மற்ற எல்லா கலைகளையும் விளிம்பிற்குத் தள்ளியதில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு.

இதன் வசீகரத்திற்கு முக்கியக் காரணம் அதனால் நாம் அடைகிற துய்ப்பின்பம். எந்த உழைப்பும் இல்லாமல் காண்பதன் வாயிலாகவே எல்லா நுகர்ச்சியையும் அனுபவிக்க அது தரும் வாய்ப்பு. மேலும் மிக முக்கியமாக எளிய விஷயங்களைக் கூட பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கிக் காட்ட முடிந்த அதன் வீச்சு. இறுதியாக, அற்பத்தனங்களையும் கூட கலையாக மாற்றி பார்ப்பவனின் முன்னால் பரிமாற முடிகிற அதன் ஜிகினா மினுமினுப்பு. (இப்படி நான் சொல்வதை சினிமா எனும் கலையை மாற்றுக் குறைந்தாக சொல்வதாக புரிந்துகொண்டுவிடக் கூடாது. மற்ற கலைவடிவங்களை விட இங்கு அசலுக்கும் போலிக்குமான கோடு ரொம்பவும் அரூபமானது என்பதே நான் சொல்ல வருவது).

தமிழத்தில் சினிமா அடிமைகள் என்று அறியப்படுகிற பெரும்பான்மை ரசிகர்கள் கலைக்கு அடிமையானவர்கள் அல்ல இந்த ஜிகினாத் தனத்துக்கு அடிமையானவர்கள். அதன் காரணமாக கை நடுங்குகிறவர்கள். சமூக ஊடகங்களில் வெளிப்படும் பெரும்பகுதி ஊளைச் சத்தம் இத்தகைய நோயாளிகளிடம் இருந்துதான் கசிகிறது. கலையமைதி என்பது கூச்சலுக்கு எதிரானது. கூச்சல் மிகுதியாக இருக்கிறது என்றால் கலை தாழ்ந்திருக்கிறது என்று பொருள். ஆனால் இங்கோ, கூச்சல் இல்லாமல் ஒரு ரசிகக் குஞ்சும் உயிர்த்திருப்பதில்லை. மேலும் சினிமா அடிமைகள் உருவாவதில் யாரும் காணாத  புள்ளி ஒன்று உண்டு, அது இத்தகைய அடிமைகளின் உருவாக்கத்தில் மற்றைய கலைகளை அது அழித்ததன் வன்முறைக்கு இருக்கும் பங்கு மற்றும் மேலும் அதன் வழியாக அது சாத்தியப்படுத்திய  அரசியல் சொரணை நீக்கம். இது எங்ஙனம் நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கலையின் ஆதார அடிப்படை என்பது, “தம்மை நோக்கி வருபவர்களிடம்  அது தமது கலைத்துவம் செயல்பட அனுமதிக்கும்” என்பதே. “கலை போலி” என்பதற்கும் இந்த அளவீடே அடிப்படை. போலியான கலை தம்மிடம் வருபவனை வெளிறச் செய்யும். மிக முக்கியமான உண்மையான கலையை நோக்கிய அவனது தேட்டத்தை இல்லாததாக்கும். அதன் மீதான வெளிச்சத்தை மறைப்பதன் வழியாக அவனை சிறைப்படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக நிஜக் கலையின் மீதான ஒவ்வாமையைக் கூட்டி அவனை கலைக்கு எதிரானவனாக நிறுத்திவிடும். ஒருவனை கலைக்கு எதிரானவனாக மாற்றுவது என்பது அவனை அவனால் அடைய முடிந்த ஆன்மீக விடுதலைக்கு எதிராக மாற்றி நிறுத்துவதும்தான். அந்த வகையில் போலியான மசாலா திரைப்படங்கள் செய்வது ஒரு தனிமனிதனை சமூக விரோதியாக மாற்றும் செயலே. அந்த வகையில் இங்கு இருக்கிற பெரும்பான்மைக் கதாநாயகர்கள் குற்றவாளிகளே.

அவர்களை விதந்தோதுகிற, அதற்கு எல்லா வகையிலும் முட்டுக்கொடுக்கிற ஆளுமைகளும் தன்னளவில் உதிரிகளே. தன்னை எதற்குள்ளும் பொருத்திக் கொள்ள முடியாத, கலையின் வழித்தடத்தில் நகரத் தேவையான குறைந்த உழைப்பைக் கூட நல்கத் தயாராக இல்லாத சோம்பேறிகளே மசாலாக் குப்பையில் தலையை நுழைத்துக்கொண்டு திளைப்பார்கள். தனது போதையின் அருவருப்பை தானே சகிக்கமுடியாமல் போகிறபோது, அதை ஹீரோயிசம் போல கட்டமைக்கப் முயல்வார்கள். அந்த வெற்றுக் கூச்சலின் கிளுகிளுப்பில் அடையும் உன்மத்தமே, என் தலயைப் போல வருமா என் தளபதியைப் போல வருமா எனும் அற்பத்தனமாக பொதுவெளியில் வழிந்தோடுகிறது. இதற்கு எந்த பொருளும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

ஏனெனில் இந்த ஹீரோயிசம் மிகவும் போலியானது என்பது மற்றவர்களை விட கத்துபவர்களுக்குத் தெரியும். சினிமாவில் கதை இல்லை என்பதற்குக் காரணம் இந்த தேசத்தில் கதை இல்லை என்பதல்ல அதை எடுக்க திராணியில்லாத பேடிகள் உங்களது கதாநாயகர்கள் என்பதே. ஒரு கதிராமங்கலத்தை உற்றுப் பார்த்தால் நீங்கள் பல்கேரியாவில் போய் பல்டியடிக்கவேண்டிய அவசியம் இருக்காது. அதைப் படமாக எடுப்பதற்கு உண்மையான கலையின் மீதான வெறித்தனம் வேண்டும். அது ஏன் நம் கதாநாயகர்களுக்கு இல்லை என்று கேள்வியை நோக்கிப் போனால் லாப வெறியை கலையாகப் பரிமாறும் அவர்களின் அபத்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். அப்படிப் புரிந்துகொள்ளும்போதுதான் நீங்கள் கிழிக்க வேண்டியது ப்ளூ சட்டையை அல்ல என்றும் தெரியும்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ,  ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள்.  360° ( கட்டுரைகள்) தற்போது வெளியாகியுள்ள நூல்.

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….

ஜி. கார்ல் மார்க்ஸ்

karl marks
ஜி. கார்ல் மார்க்ஸ்

இந்த ஆட்சி கலையாது, அவ்வாறு கலைக்க முயலும் தினகரன் போன்றவர்களைக் கைது செய்து உள்ளே போடுவார்கள். இதைக் கலைப்பதற்காகவா மோடி இத்தனை முறை ஓபிஎஸ் வந்து சந்திப்பதற்கு வாய்ப்பளித்தார், இந்த இணைப்பை சாத்தியப்படுத்தினார்?.

முழு ஆட்சிக்காலத்தையும் ஆள்வதற்கு அனுமதித்து அதிமுக கூட்டணியுடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதும் பிறகு அதிமுகவை மொத்தமாக விழுங்குவதும்தான் பிஜேபியின் திட்டம் என்று சீமான் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். இந்த தியரியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுக்கவும் உண்மையல்ல. ஏன் என்று பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பிஜேபி கடைபிடிக்கிற அணுகுமுறையை ஆராய்வோம். முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அது அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகம் அமைக்கிறது என்றால், பிஜேபியின் செயல்திட்டம் இப்படியா இருக்கும்? அதன் செயல்பாடுகள் எதிலாவது, அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தேவையான மக்கள் நல நடவடிக்கைகளின் சுவடுகள் இருக்கிறதா? நீட் விவகாரம் தொடங்கி Hydrocarbon corridor அறிவிப்புகள் வரை எல்லாவற்றிலுமே, அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளவற்றில் இத்தனை மூர்க்கமாக நடந்துகொள்ள அது விழையுமா? தமிழக மக்களையோ அதன் உணர்வுகளையோ மயிரளவாவது மதித்த பண்பு அதில் தொனித்ததா? இல்லையே ஏன்? இது ஓட்டரசியல் தளத்தில் அவர்களுக்கு பின்னடைவைத்தானே ஏற்படுத்தும்.

ஆக அரசியல் ரீதியாக பிஜேபி பின்னடைவை நோக்கிதான் நடந்து கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி வருகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதே. அரசியல் ரீதியாக அது தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் “அரசியல் ரீதியாகக் காலூன்றுவது” என்றால் என்ன என்பதை அதன் அடிப்படை அர்த்தத்துடன் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பிஜேபி கையாளும் செயல்திட்டம் என்பது மக்களுடன் உரையாடலின் வழியாக உட்புகுவது அல்ல. மாறாக இங்கு நிலைபெற்றிருக்கிற அரசியலை அதாவது திராவிட அரசியலை அழித்தொழிப்பதன் வழியாக அரசியல் வெற்றிடத்தை உருவாக்குவதும் அதன் வளர்ச்சிப்போக்கில் அந்த வெற்றிடம் வலதுசாரித் தன்மையாக கனிவதை உறுதிப்படுத்துவதுமே.

மற்ற எந்த காலத்தையும் விட தமிழகம் மிகப்பெரிய வாய்ப்பை இப்போது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கான ஒளிக்கீற்று கருணாநிதியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. திராவிட இயக்க அரசியலின் வெற்றிகளுக்கும் அது சாதித்தவைகளுக்கும் கருணாநிதிக்கு எத்தகைய பங்களிப்பு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்களிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சீரழிவிலும் அவருக்கு இருக்கிறது. அதைச் சென்ற பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அவரிடம் செய்து காண்பித்தது. எந்த மிசாவிற்கு எதிரான நெஞ்சை நிமிர்த்தி நின்றாரோ, எந்த எமர்ஜென்சியின் போது அடங்காமல் திரிந்தாரோ அதே கருணாநிதியை தனது காலடியில் கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ்.

அது காங்கிரசோ பிஜேபியோ அவர்கள் திராவிட இயக்கங்களை சிந்தாந்த ரீதியிலான அச்சுறுத்தும் இயக்கங்களாகத்தான் பார்த்தார்கள். ஏனெனில் வரலாற்றில், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு சமூகத் தளத்தில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு. சமூக சீர்திருத்தம், சமத்துவம், எளியவர்களின் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை தேர்தல் அரசியலுடன் இணைத்ததில் அவை அடைந்திருந்த வெற்றி அத்தகையது. அதுதான், காங்கிரசை தமிழகத்தில் இருந்து முழுக்கவும் அப்புறப்படுத்தியது. பிஜேபி என்னும் சொல்லையே தமிழகத்தில் இல்லாமலாக்கி வைத்திருந்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசும் யாரையும் மனிதகுல விரோதிகளாகப் பார்க்கும் பண்பை அவை வளர்த்தெடுத்து அரசியல் தளத்தில் நிறுவியிருந்தன. இவையெல்லாம் நேர்மறை அம்சங்கள்.

இதன் மற்றொரு பக்கத்தில், எல்லா சாதனைகளையும் தனிமனித சாதனைகளாக முன்வைக்கிற அரசியல்வாத அபத்தத்தை கருணாநிதி செய்தார். மேலும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாரிசு அரசியல்’ என்னும் பண்பு திராவிட இயக்கங்களின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான சுய சீரழிவை ஊக்கப்படுத்தியது. அது இயக்கத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நோயைப் போல வளர்ந்தது. ஆக அது இரண்டு வகையில் இயக்கப் பண்பை அழித்தது.

ஒன்று, இயக்கம் என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்து தனி மனிதத் துதி, கொள்கையற்ற குழு அரசியல் என்பதாகத் திரியச் செய்தது. இரண்டாவது, சமரசங்களுக்கு எதிராகப் பேசும் தார்மீகங்களை இழந்ததன் வழியாக காத்திரமான புதிய தலைவர்கள் உருவாகும் வழியை அடைத்துவிட்டது.

மேலும் கடந்த பதினைந்தாண்டுகளில் அரசியல் குறித்த புரிதலுக்கு வந்திருந்த இளைஞர் திரளின் முன்னால் கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது. எழுபதுகளில் எது இளைஞர்களின் கோஷமாக இருந்ததோ அதன் முன்னால் இன்றைய தலைமுறை வெட்கித் தலை குனிய நேர்ந்தது.

இதன் மற்றொரு பக்கத்தில் எம்ஜியாரின் அரசியல் என்பது ‘அரசியல் சொரனையை இல்லாமலாக்குவதன் வழியாக மக்களைத் திரட்டுவது’ என்கிற ஆதார அரசியல் அடிப்படையைக் கொண்டதொரு லும்பன் அமைப்புமுறை. அடித்தட்டு மக்கள் பங்கேற்பு, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியது போன்ற ஜிகினா வார்த்தைகளைப் போட்டு அவரது அரசியலை எவ்வளவு முட்டுக்கொடுத்து நிப்பாட்டினாலும், அதிமுக என்னும் கோபுரம் அடிமைத்தனம் என்னும் அஸ்திவாரத்தில் மட்டுமே நிற்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் பொன்மனச்செம்மல்.

அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உள்ளடக்கி அரசியல் செய்ய வேண்டிய நெருக்கடியாவது கருணாநிதிக்கு இருந்தது. எம்ஜியாருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதன் அடுத்த கட்டம் ஜெயலலிதா. எம்ஜியாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த தத்துவார்த்தப் பின்புலம் பிளஸ் பார்ப்பன மேட்டிமைத்தனமும் சேர்ந்துகொள்ள புதுவித அரசியல் ஃபார்முலா ஒன்று உருவானது. ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாம் அடங்கிப்போனது.

ஜெயலலிதாவுக்கு, “தனக்குப் பிந்தைய அதிமுகவின் எதிர்காலம் என்ன..?” என்பது குறித்த எத்தகைய மதிப்பீடுகள் இருந்தன என்பது அடிப்படையான ஒரு அரசியல் கேள்வி. அவருக்குத் தெரியாதா, தான் உருவாக்கி உலவவிட்டிருப்பது முழுக்கவும் பொறுக்கிகளையும் திருடர்களையும்தான் என்று. தெரியும். அது மட்டுமல்ல, தமக்கு தமது கட்சி நிர்வாகிகள் மீது என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்புதான் அவர்களுக்கும் தன் மீதும் இருக்கும் என்றும் அவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இங்கு இப்போது நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் எது குறித்தும் அதிர்ச்சியே இருக்காது. ஏனெனில் அதனுள்ளேதான் அவரும் இருந்தார். முறையாக கணக்கு வைத்து ஒவ்வொரு அமைச்சரிடம் பணத்தை வாங்கிக் குவித்தது, கணக்கில் ஏமாற்றிய அமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்து மிரட்டியது என்று அவரது செயல்கள் அவர் மீது சுமத்தப்படும் புனித வரையறைகளுக்கு சற்றும் தொடர்பில்லாதவை.

இன்று நம்முன்னால் வளர்ந்து நிற்கிற எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆபாச ஆகிருதிகளின் ஆதித்தாய் ஜெயலலிதா. இங்கு தகர்த்து எறியப்பட வேண்டியது அவர் மீதான புனித பிம்பம். அவரை அரசியல் ரீதியாக கறாரான விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் யாரும் செய்யவேண்டியது. அவர் இந்நேரம் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, அது நடந்திருக்காது என்பது போன்ற சொல்லாடல்கள் எல்லாம் வெற்று உளறல்கள் அல்லாமல் வேறில்லை. நாளையே மோடி இல்லை என்றால் பிஜேபி சிதைந்துவிடுமா? இல்லையல்லவா? அப்படி ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதும் நிலைக்கச் செய்வதும்தானே தலைமைத்துவம்.

இந்த விஷயத்தில் திமுகவும் இன்னொரு அதிமுகதான். இல்லை… இல்லை… இங்குதான் எங்கள் ஸ்டாலின் இருக்கிறாரே என்று உடன்பிறப்புகள் நினைக்கலாம். ஸ்டாலினுக்குப் பிறகு யார்? இந்த கேள்விக்கான பதிலை நேர்மையாகப் பரிசீலித்து பதில் சொல்ல முயலுங்கள். திமுகவின் எதிர்காலம் அடுத்து யாரை நம்பி இருக்கிறது? உதயநிதியையா? இல்லையா? வேறு யார்…? உங்களால் கைகாட்ட முடிந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே…? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது பிஜேபி கடைபிடிக்கும் மூர்க்கத்திற்கான பதில்.

ஒரு நாற்பதாண்டு காலம் பட்டி தொட்டியெங்கும் நடந்து நடந்து பேசிப் பேசி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் சுயமோகத்தின் பலிபீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நமது சாய்வுகளின் மீதான தீவிர மறுபரிசீலனை என்பது நமது முன்னால் தேர்வு அல்ல. தப்பித்துக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால் எதார்த்தம் மிகக் கசப்பானதாக இருக்கிறது. அச்சமூட்டுவதாக இருக்கிறது.

நுணுக்கி நுணுக்கி வார்த்தைகளைத் தேர்ந்து தேர்ந்து மோடியை விமர்சிக்கிறார் ஸ்டாலின். அபத்தமாக இருக்கிறது. நீங்கள் ஓட்டு ஜெயலலிதாவுக்குதானே போட்டீர்கள், இப்போது வந்து ஸ்டாலின் ஏன் நீட்டுக்காகப் போராடவில்லை என்று கேட்காதீர்கள் என்று கொக்கரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். சரிதான். அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தெருவில் அலையட்டும். உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்காக என்ன நொட்டினீர்கள் என்று 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வைத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது கடமை இல்லையா.

அதிமுகவின் தற்போதையை நிலைமையில் இருந்து திமுக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்த படிப்பினைகள் மட்டுமே திமுகவைக் காப்பாற்றும். அத்தகைய ஒரு திமுக மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

செந்தில்

1

நடப்பவை யாவும் கேலிக் கூத்து அல்ல, நாடாளுமன்ற சனநாயகத்தின் சட்டப் பூர்வமான நகைச்சுவைப் பக்கங்கள்..

மேகதாத்தின் குறுக்கே அணை, பிளஸ் 2 மதிப்பெண்படி மருத்துவ இடங்களை நிரப்புதல், கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் உரிமைப் போராட்டம், நடுக்கடலில் அடித்து விரட்டப்படும் மீனவர்கள், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என ‘அற்பமான’ விசயங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அணிகள் இணைப்புக்காக நடந்த அடுத்ததடுத்த காட்சிப் படங்களால் அரசியல் சூழல் பரப்பரப்பாகிக் கிடக்கிறது. மக்களின் மாபெரும் ஜனநாயக உரிமை என்று பறைசாற்றப்படும் வாக்குகளைப் பெற்று சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆனவர்கள் கோமாளிகளாகவும் நாளுக்கொரு பேச்சு பேசியபடி ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள்’ என்று நம்ப வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகின்றனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்நடிகர்கள் நாடக மன்றத்தில் தங்கள் ஆடைகளை களைந்து வெவ்வேறு வேடம் பூண்டுக் கொள்ளவும் இடம். ராமனாய் நடித்தவன் ராவணன் ஆகலாம், இலட்சுமனன் வாலியாகலாம், ஏன் சீதையாய் நடித்தவர் கூனியாகலாம், கைகேயி சீதையாகலாம்.. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்களோ நாடகம் முடியும் வரை அதாவது ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திவிட்டால் மீண்டும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு பார்வையாளர் ஆக வேண்டிய மாபெரும் ஜனநாயக உரிமையை மக்களின் எஜமானர்கள் வழங்கியுள்ளனர்.

.பி.எஸ். ஸின் நீதிக்கான ’தர்மயுத்தம்’ நிதி அமைச்சகம் கிடைத்தவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. சேர்வதற்கோ, பிரிவதற்கோ ஆசி வழங்குவதற்கு அம்மாவின் ஆன்மா இருக்கிறது. .பி.எஸ். தியானம் செய்துதான் தனது கலகக்கார வேடத்தை வெளிப்படுத்தினார். அம்மாவின் கல்லறை மீது சத்தியம் செய்து சிறைக்குப் போயுள்ளார் சின்ன அம்மா. அம்மாவின் ஆன்மாவின் ஆசிக்காக கல்லறையின் முன்பு எடப்பாடி விழுந்து எழுகிறார் டி.டி.வி. அணியில் உள்ள 19 பேரும் அம்மாவின் கல்லறையில் தியானத்தில் இருக்கிறார்கள். மோடி, மோடி என்று நாடெங்கும் உச்சாடனம் நடந்து கொண்டிருந்த வேளையில் மோடியா? லேடியா? என முழங்கிய ’அம்மா’ இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே அவசர அவசரமாய் அவரது பக்த கேடிகளால் அடக்கம் செய்யப்பட்டு லேடிக்குப் பின் மோடி என காலில் விழுந்தனர். மோடியோ, லேடியோ பதவிக்காக விழ வேண்டிய கால்கள் எது? என்பது மட்டும்தான் இங்கே கேள்வி. அம்மாவின் அருளாசி யாருக்கென்று அவர்களுக்கு தெரியாது. ஆனால், யாருக்கும் விதிவிலக்கில்லை. கல்லறையில் வந்து விழுந்து கும்பிட்டாக வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.

கேலிக்கூத்து நடக்கின்றது, பதவி பேரம் நடக்கின்றது, ஊழல், ஊழல் என்று மேடையைச் சுற்றிலும் அரிதாரம் பூசிய நடிகர்கள் குழு சத்தம் எழுப்பியபடி இருக்கின்றன. ஏனென்றால் அவர்கள் எவ்வளவுக்கு உரக்கப் பேசுகிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் அடுத்த நாடக மன்றத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால் – மிக தொன்மையான வரலாறு கொண்ட, பாரம்பரியமிக்க கலை, இலக்கிய, பண்பாட்டுச் செழுமை கொண்ட, கீழடி சொல்லும் காலந்தொட்டு நகர நாகரிகம் கண்ட, இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருக்கும் ஏழரை கோடி மக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தை ஓ.பி.எஸ்., .பி.எஸ். டி.டி.வி. போன்ற கோமாளி நடிகர்கள் சேர்ந்து முட்டாளாக்கிவிட முடியுமா?

மனிதர்கள் தமது வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்படி அவர்களால் அதை உருவாக்க முடிவதில்லை. தமக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட வரலாற்று நிலைமைகளில், கடந்த காலம் தம் முன் விரித்துள்ள சூழ்நிலைமைகளின் மீது வினையாற்றுவதன் மூலம்தான் தமது வரலாற்றை உருவாக்கிக் கொள்கின்றனர். அது போலவே, பிரிவும் இணைப்பும் என கேலிச் சித்திரங்களால் நிரப்பப்பட்ட இந்தக் காட்சிகளைத் தீர்மானித்த வரலாற்று நிலைமைகள் என்ன?

2.

பளபளக்கும் பாத்திரத்தில் கமகமக்கும் பழைய கஞ்சி…

மகாராணி அப்பல்லோவில் அட்மிட் ஆனதொரு படலம். அங்கேயே மரித்தது முதல் அடுத்த படலம். மகாராணியின் ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்டு சின்னம்மா அவதாரம் எடுத்தவர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அடுத்த படலம். சிறையில் அடைக்கப்பட்ட சின்னம்மாவின் தளபதி திகாரில் பூட்டப்பட்டது துணை படலம். மகாராணியின் கால் பிடித்து நடந்து பழகியவர்கள் தில்லி சக்கரவர்த்தியின் கால் பிடித்து எழுந்த ‘தில்’ இருந்து ’நாயக’னின் தர்மயுத்தப் படலம் தொடங்கியது. அம்மா ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்டதாக எண்ணிக் கொண்ட சின்னம்மாவால் நியமிக்கப்பட்ட சேவகனின் உடம்பில் ஓ.பி.எஸ். ஸின் ஆவி புகுந்து கொள்ள அவனும் தில்லியிடம் மண்டியிட்டது திருப்பம். சிறைமீண்ட தளபதி தோள்தட்டி திமிறி எழ சேவகர்களை கரம் கோர்க்கச் சொன்னார் சக்கரவர்த்தி. இணைந்த கைகளாய் பிக் பிரேக்கிங் நியூஸால் பரபரப்பூட்டி, மன பாரத்தை இறக்கி வைத்து முடி சூடியபடி காட்சிகள் தொடர்கின்றன.

அம்மா மீளக் கூடிய சிறைக்குப் போன அழுது கொண்டே பதவியேற்ற காட்சி, அம்மா மீள முடியாத கல்லறைக்குப் போன போது இறுக்கமாக பதவி ஏற்றக் காட்சி, அம்மாவின் ஆன்மாவை உள்வாங்கிய சின்னம்மா சிறையில் இருக்கும்போது சக்கரவர்த்தியின் கால்களை இறுகப் பிடித்தப்பிடி சிரித்த முகத்துடன் துணை முதல்வரென முடிசூட்டிய காட்சி..மக்களுக்குப் பிரமிப்பூட்டும் வகையில் நவரசத்தையும் காட்டி அதிரடி ஆக்சனுடன் நடிகர் திலகமாய் முன்னாள் தேநீர் கடைக்காரர். படலங்கள் ஒவ்வொன்றிலும் விலை பேசப்படும் பதவிகள். பதவிகள் கைமாறும் போதெல்லாம் மறை பொருளாய் தமிழக மக்களின் சொத்துக்களும் வளங்களும் கண்ணுக்கு தெரியாதபடி கைமாறிக் கொண்டே இருக்கின்றன.

மன்னர்கள் மரித்துவிட்டார்கள். அரண்மனைகள் அருங்காட்சியகங்கள் ஆகிவிட்டன. குறுநிலம், பேரரசு , சக்கரவர்த்தி போன்றவை எல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் , சட்டமன்றம், ஆளுநர் மாளிகை, வாக்குச் சாவடிகள், தலைமைக் கழக அலுவலகங்கள், தேர்தல் அறிக்கைகள், நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் ஆணையம் என அலங்கரிக்கப்பட்ட முதலாளித்துவ சனநாயகத்தின் பட்டு உடுப்புகள். அதனை அன்றாடம் புனிதமாக்கி வரும் நேருக்கு நேர், நேசன் வாண்ட்ஸ் டு நோ, சுட சுட விவாதங்கள், தலையங்கப் பக்கங்கள் என ஊடக பாராயணங்கள். ஆனால், மன்னர் கால நினைவுகள் சமூகத்தின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. மன்னர் கால கலாச்சாரம் மறையவில்லை. மன்னர் கால மறுபதிப்புகளே காட்சிக்கு காட்சி இடம் பெறுகின்றன. குறுநில மன்னர்கள், மாமன்னர்கள், சக்கரவர்த்திகள், அரண்மனை அமைச்சரவை, முடி சூட்டும் ஆச்சாரியர்கள், மகாராணிகள், அந்தப்புரத்து அழகிகள், ரத்த வாரிசுகள், ரத்த வாரிசுகளை பின்னுக்கு தள்ளி முன்னேறி தூரத்து உறவுகள் என எல்லாக் கதாப்பாத்திரங்களுக்கும் இங்கேயும் இடமுண்டு. ஒரு மதக்குரு( துக்ளக் சோ) மறைந்துவிட்டால் அவ்விடத்தில் அடுத்தவர்( குரு மூர்த்தி). இப்போதும் கூட வாரிசு இல்லாத குறைதான். சேக் அப்துல்லாவுக்கு இருந்தது போல் நேருவுக்கு இருந்தது போல், முலாயம் சிங்குக்கு இருப்பது போல், கருணாநிதிக்கு இருப்பது போல் மகாரணியோ மகனோ மகளோ என உடனடி ரத்த உறவொன்று ஜெயலலிதாவுக்கு இல்லாத குறைதான் நாடக மன்ற சனநாயகத்தின் நிர்வாணக் கோலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

1300 களில் குலசேகரப் பாண்டியனான தன் தந்தையைக் கொன்றுவிட்டு பதவிக்கு வந்தான் சுந்தர பாண்டியன். ஆனால், இதை ஏற்காத குலசேகரப் பாண்டியனின் அதிகாரப்பூர்வமற்ற மனைவியின் மகன் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனை விரட்டி ஓடவிட்டான். தில்லையை ஆண்டுவந்த அலாவுதீன் கில்ஃசியின் தளபதி மாலிக் கபூர் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வர அவனோடு கைக் கோர்த்தான் சுந்தர பாண்டியன். அது போல் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் படையெடுத்து வந்த தில்லிக்கார மோடியுடன் கைக்கோர்த்து கொங்கு நாட்டு பழனிச்சாமிக்கு கிடுக்கிப்பிடி போட்டு அரியணையில் அரைபாதி பங்கு பெற்றது பாண்டிநாட்டு சிங்கம். பூசாரியோ(ஆளுநர்) அரசியின் தோழிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற தருணத்தில் முதுகைக் காட்டிக் கொண்டு போனதையும் கண்டோம். பதவிப் பங்குப்பிரிப்பு உற்சவத்திற்கு தம்பிமார்கள் சேர்ந்து வந்தபோது மந்திரங்களை உச்சாடனம் செய்து முடிசூட்டியதையும் கண்டோம். சக்கரவர்த்தியின் கட்டளைக்கு இணங்கப் பூசாரியின் கைங்கர்யங்கள் அமைகின்றன.

சட்டை புதிது. அழுக்கேறிய புண்களால் நிரம்பிய உடல் பழையது. பாத்திரம் புதிது, கஞ்சி பழையது. கட்டிடம் புதிது. ஆனால், செங்கோலும் ஓலைச் சுவடிகளும் வாளும் வேலும் வெட்டரிவாளும் பலிபீடங்களும் சிறைக் கொட்டடிகளும் பாதாள சிறைகளும் அரியணைகளும் கிரீடமும் அந்தப்புரத்து அழகிகளும் மகாராணியின் பணிப் பெண் தோழிகளும் மதக்குருமார்களும் தேரோட்டிகளும் அடிமைச் சேவகர்களும் தளபதிகளும் அன்னியப் படையெடுப்புகளும் தங்க நாணயங்களும் பொற்கிலிகளும் பரிசில்களும் அவைப்புலவர்களும் என பொருட்களும் மனிதர்களும் சிந்தனையும் செயல்களும் என யாவும் பழையது. முதலாளித்துவ அரசும் அதன் வடிவங்களும் புதிது. ஆனால், மன்னர் கால நினைவுகள், நிலவுடைமைப் பண்புகள் நிரம்பி ததும்பும் சமூக வளர்ச்சி நிலையின் காட்சிப் படிவங்களாக ‘பிக் பிரேக்கிங் நியூஸ்கள்’ வந்து போகின்றன. எழுபது ஆண்டுகாலமாக நாம் பார்த்து வரும் நாடகத்தின் கேலிக் கூத்தான படலங்கள் இவையென்றால் இதன் திரைக்கதை, வசனம், இயக்கம், மற்றும் ஒத்திகைகள் தொடங்கியது எங்கே?

3.

நகைச்சுவைப் படலங்களுக்கான ஒத்திகை தொடங்கிய இடம் ராபின்சன் பூங்கா!

ஓரிரவில் எல்லாம் மாறிவிட்டதா? இந்த கோமாளிகள், பதவிப் பித்தர்கள், யாருடைய கால்களையாவது பிடிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கொள்கையும் அற்றவர்கள் என்கிறார் பங்காளித் தளபதி. ஆனால், இவர்களோடு இத்தனை ஆண்டுகாலமாய் சண்டைப் போட்டு தோற்றுக் கொண்டு இருக்கிறார்கள் கொள்கை குன்றுகள்? கொள்கை குன்றுகள், சமூக நீதி வீரர்கள், பதவியை தோளில் போடும் துண்டென சொல்லி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்தவர்கள் திரை நடிகரிடமும் அவரது ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்ட நடிகையிடமும் அவரது ஆன்மாவை உள்ளிழுத்துக் கொண்ட கோமாளிகளிடமும் சண்டைப் போட்டு மூச்சிறைத்தனர். ஓய்ந்து வயதாகிச் செயலற்றுப் போன மன்னரும் அவரைத் தொடர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளத் துடிக்கும் வாரிசுத் தளபதியும் என பங்காளிச் சண்டை தலைமுறைத் தாண்டி நீண்டுக் கொண்டே போகிறது. ஆனாலும் இவர்கள் கொள்கை வீரம் பற்றிய கூப்பாடும் குடைப் பிடித்தலும் மட்டும் குறைந்தப் பாடில்லை. ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது போல் வெவ்வேறானவைப் போல் முரண்பட்டது போல் தோற்றம் காட்டிக் கொண்டே ஒன்றாய் ஒன்றின் பலவாய் உருவான இவர்களின் ஆதிமூலம் மட்டும் புனிதமாக்கப்பட்ட பிம்பமாய் இன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது. இவர்கள்தான் ஓரிவில் கொள்கைகளை விற்று பதவிக்காக சல்யூட் போட்டவர்கள் என திட்டித் தீர்த்துவிட்டு இவர்களுக்கு முன்னாள் இருந்தவர்களின் புனிதத்தின் பெயரால் நாடக மன்றங்களின் புனிதத்தனம் புதுப்பிக்கப் படுகிறது. எனவே, கோமாளிகளின் , கோமகன்களின் தலைவனைத் தேடிச் சென்று அவனது அலங்கரிக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கிப் பார்க்கச் சொல்கிறாள் வரலாற்றுக் கிழவி. இந்தக் கண்டிப்பான கிழவியின் கட்டளைக்கு கீழ்படியாவிட்டால் கிழவியின் கைத்தடி நம்மைப் பதம் பார்த்துவிடும்.

இன்றைய கோமாளிகளின் மறைந்த தலைவி அடிக்கடி புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆவியெழுப்புவார். அவரும் சரி இவர்களது பங்காளிகளும் சரி என எல்லோரும் சேர்ந்து அண்ணன்களுக்கும் அம்மாக்களுக்கும் எல்லாம் அண்ணனாக விளங்கியவரின் ஆவி எழுப்பி ஆனந்தக் கூத்தாடுவர். பதவி தோளில் போடும் துண்டென்று ஒரு நாள் சொல்வார். கொள்கையா? கட்சியா? என்றால் கட்சி என்பார் மறுநாள். அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு? என்பார் ஒரு நாள். மறுநாள் சுடுகாட்டுக்கு எல்லோரும் தான் போகப் போகிறார்கள். அதற்கு முன்பு நாங்கள் சட்டமன்றத்திற்கு போகிறோம் என்பார். காரணங்கள் உயிரோடு இருக்கின்றன. ஆனால், கோரிக்கையைக் கைவிடுகிறோம் என்பார். அந்த மடக்கி நறுக்கிய வாசகத்தைச் சொல்லி சொல்லி சிலாகித்து அவரது நேர்மையை இன்றும் கொண்டாடும் தம்பிமார்கள் எத்தனைப் பேர்!. வன்முறையின்றி வறுமையை ஒழிப்போம் என்று அரை வாக்கியத்தில் புரட்சியைப் புதைத்து வறுமையை வாழ வைக்கும் வார்த்தை ஜாலம் கொண்ட தமிழ்மகனொருவன் இன்றுவரை பிறக்கவில்லை தான்.

சேக் அப்துல்லா கொடைக்கானல் சிறையில் இருக்க, சுதந்திர இந்தியாவின் இராணுவத்தால் தெலங்கானாவில் உழவர் புரட்சியின் இரத்தம் பெருக்கெடுத்து ஓட, ’சோசலிச’ நேரு ஈ.எம்.எஸ் ஸின் ஆட்சியைக் கலைக்க என காட்சிகள் இத்தனையையும் பார்த்தபின்பும் பண்ணையாருக்கும் கூலிக்கும் மூலதனத்திற்கு உழைப்புக்கும் சமரசம் செய்து வைக்கும் வேலையைச் செய்ய மறுப்பதற்கு அவரொன்றும் அடிமுட்டாள் அல்ல, தமிழ்நாட்டின் சாதாரண அறிஞரல்ல, பேரறிஞர் என்று பட்டம் பெற்ற ஒரே நபர் அல்லவா? ஆனால், அவர் அடைந்தது அகால மரணம் என்றும் அவர் ஒரு நிறைவேறாத கனவென்று சொல்வாரும் உண்டிங்கே.

தம்பிமாருக்கு சேதி சொல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த அண்ணன், இந்திய சீனப் போரின் நேரம் பார்த்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டதாய் சொன்னார். திசம்பர் 5 அன்றே ஜெயலலிதா இறந்தாரென்று சொன்னால் மக்களாகிய நாம் நம்பித்தானே ஆக வேண்டும். ஏற்கெனவே செத்துப் போன திராவிட நாடு கோரிக்கை என்ற உடல் அப்போது அடக்கம் செய்யப்பட்டது. தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டோம் என அண்ணனின் தி.மு.. அறிவித்துவிட்டது. பங்காளி சண்டையில் சொத்துப் பிரித்த தம்பிமார் ஒருவர் அண்ணனின் வழியில் பத்தடி பாய்ந்து அண்ணனின் பெயரோடு ’அனைத்து இந்திய’ என்று முதல் எழுந்துகளைச் சேர்த்து வெளிப்படையாக்கினார் விலைபோன கதையை! அந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமெனும் நாடகப் பயிற்சிப் பட்டறையில் தவழ்ந்த குழந்தைகளின் கோமாளித்தனங்களைத் தான் பரப்பரப்புடன் பார்த்து வருகிறது தமிழகம்.

காங்கிரசு செய்யும் வேலையை நாங்கள் செய்துவிட்டுப் போகிறோம்?. தில்லியில் தலைமையகம் கொண்ட கட்சி எதற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்ய வேண்டும்?. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டும், அவ்வளவுதானே! அந்தக் கோட்டை நீங்களும் தாண்டக் கூடாது, நாங்களும் தாண்டமாட்டோம் என்ற ஒப்பந்தத்துடன் பிறப்பெடுத்தது தி.மு.. அண்ணன் கொள்கை உடுப்புகளோடு நிர்வாண உடல் மறைப்பானென்றால் பங்காளி தம்பியோ நிர்வாணத்தை நிர்வாணமாக காட்டும் வெள்ளாடை போட்டுவிடுவான். இந்தியாவிற்கு காங்கிரசு என்றால் தமிழகத்திற்கு அதன் இரட்டைப் பிள்ளைகளாக தி.மு.., .தி.மு.. ஒன்று நேருவின் வாரிசென்றால், மற்றொன்று வல்லபாய் படேலின் வாரிசு. உடல்கள் ஒன்றுதான் உடுப்புகள் வேறாகும். நடைமுறை ஒன்றுதான். கொள்கை கூப்பாடுகள் வெவ்வேறு. செயல் ஒன்றுதான். சொற்கள் வேறு வேறு. கட்டிடம் ஒன்றுதான், வண்ணங்கள் வேறுவேறு. காட்சிகள் ஒன்றுதான், நடிப்புத் திறன் வெவ்வேறு. வேர்கள் ஒன்றுதான். கிளைகள் வேறுவேறு. நடிகர்கள் வேறு வேறு. கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என ஒத்திக்கை தொடங்கியது என்னவோ தி.மு.. தொடங்கிய ராபின்சன் பூங்காதான்…

ஆனால், நடிகர்களோ ஒருவரை ஒருவர் பார்த்து திட்டிக் கொள்கிறார்கள், பரிகசிக்கிறார்கள், கேலி பேசுகிறார்கள், துரோகிகள் என்கிறார்கள், கேலிக் கூத்து என்கிறார்கள், புனிதம் கெட்டது, குதிரை பேரம் என்கிறார்கள், கூவத்தூரையும் பெங்களூரையும் சொல்லி சொல்லி ’சனநாயகத்தை இவர்களெல்லாம் விலை பேசும் வேடிக்கையைப் பாருங்கள், பாருங்கள்’ என்று மக்களிடம் சொல்கிறார்கள். துயில் உரிக்கப்பட்ட திரெள்பதிகள் விம்மி அழ துச்சாதனனும் துரியோதனனும் சகுனியும் மாறிமாறி ’துரோகி , துரோகி’ என்று திட்டிக் கொள்ளும் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

4.

துரோகம், துரோகம் என்று குமுறி அழும் துரோகிகள் பாரீர்!

இங்கு சட்டத்தின் படி எல்லாம் சரி. ஆனால், நடிகர்களைப் பொருத்தவரை நடிக்கிறோம் என்பது தெரியாத படி நடிப்பது தான் சரி. அந்த விதியை மீறி நாடக மேடையிலேயே வெட்ட வெளிச்சத்திலேயே அரிதாரம் பூசுவது, ஆடையைக் கழற்றி மாட்டுவது, கதாபாத்திரங்களை மாற்றிக் கொள்வது குற்றம், கேலிக் குரியது. நிர்வாணம் பிரச்சனையில்லை, அது திரை மறைவில் இருக்கும் வரை. வாக்குச்சாவடிக்கு வந்து பக்தி சிரத்தையுடன் வாக்களித்து சனநாயகத்தை வாழ வைக்கும் பார்வையாளர்களுக்கு இவையெல்லாமே நாடகம் என்று புரிந்துவிட்டால் பேராபத்தாய் போய் விடுமே சனநாயகத்திற்கு?

நாடாளுமன்ற சனநாயக வானில் இப்போது ’துரோகி’ என்ற ஒலம் கேட்டப்படி இருக்கிறது. சசிகலாவை துரோகி என்கிறார் ஓ.பி.எஸ். .பி.எஸ்., .பி.எஸ் ஸையும் துரோகி என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நிதிஷை துரோகி என்கிறார்கள் லாலுவும் சரத் யாதவும். மோடியையும் அமித் ஷாவையும் துரோகி என்கின்றனர் அவரால் பதவி விலக்கம் செய்யப்பட்ட பா... மூத்த தலைவர்கள். .தி.மு.. என்ற கட்சி இருந்தே ஆக வேண்டும் என்பதென்ன தமிழனின் தலையெழுத்தா? என குரல்கள் கேட்கின்றன. சனநாயக வழியில் ஆட்சியைப் பிடிப்போம், இந்த ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என ராஜகுமாரனும் இளவரசியும். ’சனநாயகம்’ பேசுகிறார்கள். வெவ்வேறு கூத்துப் பட்டறையைச் சேர்ந்தவர்களும் கைகொட்டி சிரிக்கிறார்கள். அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றிவிட்டார்கள் என ஒரு நடிகர் தன் பங்குக்கும் அம்மாவின் ஆவி எழுப்பி மகிழ்கிறார்.

துரோகக் கூச்சல் போடும் இந்த மாவீரர்கள் மக்களை ஒடுக்கும்போதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் போதும் மட்டும்தான் தங்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள். பேராசிரியர் ஜெயராமன், வளர்மதி, திருமுருகன், டைசன், கதிராமங்கலம் மக்கள் எனப் பலரையும் சிறையில் அடைப்பதில் வீரம் காட்டியவர்கள் இவர்கள். வாளேந்தி வீரம் காட்டி யிருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் வெள்ளைக் கொடி ஏந்தி விடுகிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மேகதாட்டில் அணைக் கட்டுவதை எதிர்க்க, மீனவர் வாழ்வாதாரத்தைக் காக்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்க, அணு உலைப் பூங்காவை நிறுத்த, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை எதிர்க்க என்று வீரம் காட்டும் நேரத்தில் வாளையும் வேலையும் தூக்கி வீசிவிட்டு வெள்ளைக் கொடி ஏந்திய 23 ஆம் புலிகேசிகள்தான் துரோகக் கூச்சல் போட்டு வருகிறார்கள், தர்ம யுத்தம் நடத்துகிறார்கள்.

இவர்களின் துரோகக் கூச்சலைக் கேட்டப்படி கதிராமங்கலம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; சிறைக் கொட்டடியில் வளர்மதி கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசு ஏப்பம் விட்ட பென்சன் தொகை கேட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த கூச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் இந்த ஆரவாரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நெடுவாசலும் இடிந்தகரையும் துரோகக் கூச்சல்களையும் பட்டாபிசேகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரிட்சோவின் தாயார் பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆன்மா கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கெடுத்து உலகூட்டும் காவிரியைக் காணாத வறண்ட நிலங்கள் பதவிப் பேரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வாதாரம் சிதைந்து போன சிறு குறு தொழில் செய்வோரும், நள்ளிரவில் கருப்புக் கொடி காட்டிப் போராடிய சிறு குறு வணிகர்கள், மருத்துவ கனவைத் தொலைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் என எல்லோரும் இவர்களின் துரோகக் கூச்சலைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார், யாருக்கு துரோகம் செய்துள்ளார்கள்?

எழுபது ஆண்டு முடிந்துவிட்டது என நினைவு கூறி அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்போம் என துரோக வரலாற்றை தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களின் துரோகிகளின்தான் துரோகம், துரோகம் என்று உரக்கப் பேசுகிறார்கள். நடிகர்களின் குற்றமென்று நமக்குச் சொல்லிவிட்டு நாடக மன்றத்திற்குள் அடியெடுத்து வைத்து துரோகப் படலங்களைத் தொடர்வார்கள். நாடக மன்றத்தின் குற்றமென்று உழைக்கும் மக்கள் உணர்ந்துவிட்டால் நடிகர்கள் மட்டுமின்றி நாடகமன்றமும் கொளுத்தப்படும் அல்லவா. ஆனால், அதை நடிகர்களின் குற்றமாக்கி நாடக மன்றத்தையும் அதன் புனிதத்தையும் பாதுகாக்க துடிப்பவர்கள் பலர். அதற்கு காமராஜரின் ஆவி எழுப்புவோர், காந்தியின் ஆவி எழுப்புவோர், நேருவின் ஆவி எழுப்புவோர், மா.பொ.சியின் ஆவி எழுப்புவோர் என பலரகம் உண்டிங்கே. இன்னும் சிலர் பகத் சிங்கின் இரத்ததை தெளித்து இந்த நாடக் மன்றத்தின் புனிதத்தை மீட்கப் போராடுவர். பகத் சிங் குண்டு வீசிய நாடக மன்றத்திற்கு இன்று புனித மாக்கப்பட்டிருக்கும் நாடக மன்றத்திற்கும் ஆறு வித்தியாசங்களையாவது காட்டச் சொல்லுங்கள் இவர்களை.

ஆனாலும், இந்த நாடக மன்றம் புனிதக் குடியரசினுடையது. அதன் நடிகர்கள் தான் பிரச்சனை. அதன் சட்ட விதிகள் அல்ல. தெலங்கான உழவர்களின் இரத்தம் பெருக்கெடுத்தோடியதை கண்டபின்பும் இராணுவத்தின் நுகத்தடியில் துடிக்கும் காஷ்மீரைக் கண்டப் பின்பும், பிணக் குவியலாய் கிடக்கும் பழங்குடி மக்களின் உடல்களைக் கண்டப் பின்பும் வாக்குச்சாவடிகளில் உழைக்கும் மக்கள் வரம் கேட்டுப் பெற்றால் நாடக மன்றத்தி\ற்குள் தேவதைகள் சென்று சொர்க்கத்தைப் படைப்பார்கள் என்று வேதம் ஓதும் சிவப்பு அரிதாரம் பூசிய நடிகர் குழாமும் உண்டிங்கே..

அழுகிய உடலுக்கு எத்தனை முறை பன்னீரை தெளித்து புனித இரத்தத்தால் உயிரூட்டப் பார்த்தாலும் அது உயிர் பெறுமா? நாடாளுமன்ற முதலாளித்துவ சனநாயகம் அழுகி நாற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகாலமாக அது மென்மேலும் சீரழிந்து கூவத்தூரிலும் பெங்களூரிலும் குதிரை பேரங்களிலும் இருந்து பாதுகாக்கப்படுகிறது. முஃப்தி மெக்பூபாவும் மாயாவதியும் மம்தா பானர்ஜியும் ஸ்டாலினும் நிதிஷும் லாலுவும் முலாயம் சிங்கும் சந்திரபாபு நாயுடுவும் எனப் பலரும் அழுகிய நாடக மன்றத்திற்கு உயிர் கொடுக்கும் கொள்கை மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவோ மேலும் மேலும் கேலிப் பொருளாகிறது. இங்கு கள்ள உறவுகள் ஒளியும் ஒலியுமாக மக்கள் முன்பு ஒலிபரப்பப்படுகிறது. இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை, எல்லாம் பச்சை உண்மைகளாய் திரை விலகிக் கொண்டிருக்கிறது. புதிய புதிய வடிவத்தில் ஆடை அலங்காரத்தில் வரிசைக் கட்டி வரும் நடிகர்களை மென்மேலும் எச்சரிக்கையாய் விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். பார்வையாளர் பதவிக் கொடுக்கப்பட்டு எல்லோரும் இந்நாட்டு மன்னர்களென்ற மயக்கம் தெளிந்து கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ சனநாயகத்தின் எல்லைக் கோடுகள் பிக் பிரேக்கிங் நியூஸில் பளிச்சென தெரியத் தொடங்கிவிட்டன. சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வைபோகமாய் தேர்தல் காலமும் மக்கள் தம்மை சுரண்டு வதற்கு தரும் லைசென்ஸாக வாக்குகளும் நாடக மன்றங்களாய் சட்டமன்ற நாடாளுமன்றமும் காட்சி தருவதை தூரத்து புள்ளிப் போல் உழைக்கும் மக்கள் கண்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தீப்பந்தங்களோடு நாடக மன்றத்தின் கூரையை நோக்கி மக்களின் கரங்கள் நீளும் காலம் நம்முடைய மனத் திரையில் பிக் பிரேக்கிங் நியூஸாக தெரிகிறது!

செந்தில்இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் புதிதாக அணை கட்டுகிற கர்நாடக அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு மறைமுகமாக இசைவு தெரிவித்துள்ளது, காவிரி சமவெளிப் பாசனத்தை நம்பியுள்ள லட்ச்சக்கணக்கான விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கட்டப்போகிற இந்த புதிய அணையை கர்நாடக அரசு கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக (மூன்றாம் நபர்)சுயாதீன பொறியமைப்பின் கீழ் அணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால், தமிழகத்திற்கு வேண்டிய நீரை அது தருமானால், புதிய அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

தமிழக அரசு தரப்பு வழக்கறிகளின் இந்த யோசனையானது, உண்மையிலேயே வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையை ஒத்துள்ளது. கர்நாடக எல்லைக்குள்ளாக சுமார் 320 கி மி ஓடுகிற காவிரியின் குறுக்கு நான்கு பெரும் அணைகள் கட்டியுள்ள கர்நாடக அரசு, பெரும்பாலும் இந்த அணைகளின் வழியே, மேட்டூருக்கு உபரி நீரை மட்டுமே திறந்துவிடகிறது. மாறாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியான, நீர் பங்கீட்டை செய்தததில்லை என்பதை நமது வழக்கறிஞர்கள் சுலபமாக மறந்து விட்டனர் போலும். மேலும் கர்நாடக எல்லைக்குள்ளாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலையில் வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு காபித் தோட்டங்கள் பயிர் செய்வதைக் கூட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டலாம்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை முறையாக காப்பாற்றவில்லை எனில் காவிரி பாசனத்தை நம்பியுள்ள அனைத்து மாநில மக்களின் நிலை அதோகதிதான் என்ற எதார்த்த உண்மையை ஆணித்தனமாக சுட்டிக் கட்டி, புதிய அணை கட்டுவதால் ஏற்படுகிற இழப்பை குறிப்பிட்டாலே போதுமானது.மேலும் கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து வருகிற உபரி நீரும் ,கிருஷ்ணசாகர் அணையில் இருந்தும் வருகிற உபரி நீரும் ஒன்றுகலந்துதான் மேகதாட்டு வழியாக மேட்டூர் வந்தடைகிறது. இவ்வாறு வருவதால்தான் 93 TMC என்ற கொள்ளளவில் மேட்டூர் அணையில் நீர் தேக்கப் பட்டு,கல்லணை வழியாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியே காவிரி டெல்ட்டாவிற்கு நீர் விநியோகிக்கப் படுகிறது.

ஆக,மேட்டூர் அணையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்தின் தொடக்கப் புள்ளியில், நீர் வரத்து குறையுமானால், ஒட்டுமொத்த காவிரி டெல்டாவிற்கும் நீர் கிடைக்காது. கிருஷ்ணசாகர் நீரையும், கபினி நீரையும் சேர்ந்து தமிழகத்தை நோக்கி ஓடி வருகிற காவிரியின் குறுக்கு ஆடு தாண்டுகிற அகலத்தில் (மேக்கா -ஆடு,தாடு-தாண்டு) குறுகலாகுகிற காவிரியின் குறுக்கு அணை கட்டி தமிழகத்திற்கு வருகிற நீரை கர்நாடக அரசு தடுத்துவிட்டால், தமிழக காவிரி டெல்ட்டாவே சீர்குலையும்.

காவிரி என்பது நீர் ஓடிவருகிற ஆறு மட்டுமல்ல, அது பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களுடன் ஒன்றுகலந்துள்ள ஜீவனாக உள்ளது. இந்த ஆற்றங்கரையோரம் தழைத்த மக்களின் வாழ்வாதாரம் மட்டும்மல்ல, அம்மக்களின் பண்பாடிற்கும் ஆதாரமாக உள்ளது.

எப்போது இந்த ஆறு, பெரும் அணைகள் ஊடாக மையப் படுத்துப் பட்டு, நீர் பங்கீடுகள் கட்டுப்படுத்தப் பட்டதோ, அன்று முதல் ஒட்டுமொத டெல்ட்டா விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது. வழக்கறிஞர்கள் இந்த சிக்கலை மேலும் மோசமாக்கி வருகின்றனர்.


உலகமயம், தாராளமயம் ,தனியார் மயத்திற்கு முன்புவரை நிலச் சீர்திருத்தத்தை முறையாக மேற்கொள்ளாமை, பசுமைப் புரட்சி போன்ற காரணிகள் உழவர்களை விவசாயத்தை விட்டி வெளியேற்றியது. 90 களுக்கு பின்பு விவசாய உற்பத்தி பொருளின் வீழ்ச்சி, பாசன வசதிகளின் பராமரிப்பின்மை என்ற சிக்கல்களும் சேர்ந்து கொள்ள, இதோடு காடழிப்பு, காலநிலை மாற்றத்தால் பருவம் தப்பிய பருவமழையும் கூடுதல் காரணியாக ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும் பெரும் குலைவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. கிராமங்கள் காலியாகி வருகிறது. உயிரற்ற உடல்கள் அங்கு அலைந்துகொண்டுள்ளது. நகரங்களின் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.

 

ஒரு ஏக்கர் அரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தினக் கூலிகளாக நகரத்தில் அலைந்து திருகின்றனர். கிராமத்திற்கும் நகரத்திற்குமான முரண்பாடு மீட்கமுடியாது எல்லைக்கு சென்றுகொள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்போக்கு தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கிற தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சி அதிகார பேர நாடகத்தில் மும்முரம் காட்டுகிற கும்பல்கள், தமிழக மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது.

வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது, ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜக முயல்வது போன்ற காரணங்களுக்கு தேர்தல் ஓட்டுவங்கி அரசியலுக்கு காவிரிநீர்பங்கீட்டு விவகாரம் பெரும் வாய்ப்பாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

1

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்

அண்மைக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள், கேலிச் சித்திரமாக மக்கள் முன்னே தோன்றியுள்ளது. ஜெ மறைவிற்கு பின்பாக தமிழக அரசியல் அதிகார மையத்தை கைப்பற்றுவது என்ற அச்சை சுற்றி நடைபெறுகிற இந்த சம்பவத் தொகுப்புக்கள்,சின்னத்திரை நாடகங்களையும் பெரியத்திரை சினிமாக்களையும் சில நேரத்தில் பின்னுக்கு தள்ளுகிறது.அம்மாவிற்கு பின்னான அரசியல் அதிகார கைப்பற்றல் நாடகத்தில், சின்னம்மா, ஒ பி எஸ், ஈ பி எஸ், டி டி வி, ஸ்டாலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், மோடி அமித் சாக்கள் மறைமுக கதாபாத்திரங்களிலும் திறம்படவே நடித்தி வருகின்றனர். இடையே நீதிமன்ற தீர்ப்பு, சிறை, சபதம், தியானம், சிறை மீண்டல், தீர்மானம், பொதுக்கூட்டம் என திரைக்கதையில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

தனது சொந்த வரலாற்றை உருவாக்குவதற்காக சின்னம்மாவும் ,ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும்,டி டி வியும்,ஸ்டாலினுன் யதார்த்த சூழலுடன் மல்லுக்கு நிற்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உணர்ச்சிகரமான வேகத்தில் உள்ளவர்கள், இறுதித் தீர்ப்பிற்காக முன்பு ஆளுநர் மாளிகையில்,பின்பு தேர்தல் ஆணையதில், நீதிமன்றத்தில், பிரதமர் அலுவலகத்தில் கோவில் பூசாரியின் அருள்வாக்கிற்கு காத்து நிற்கிற பக்தர்கள் போல நிற்கிறார்கள்.

அதிகாரத்திற்கான இந்த போட்டியில்; வெற்றியடைவதற்காக நடத்துகிற சாதிய, பணபல அரசியல் சதுரங்க காய் நகர்த்தலால் இவர்கள் யாவரும் தங்களது எதிராளியை மட்டும் வீழ்த்துவதில்லை. பதவி அதிகாரத்திற்கான தங்களின் இழிவான செயல்களின் வழி நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் அதன் உண்மை நடத்தைகளையும், தங்களுக்கு அறியாமலேயே துகில் உரிக்கிறார்கள். நாடகத் தன்மை வாய்ந்த காட்சிகளில், உண்மையற்ற வெற்றுரைகளில் உணர்ச்சியற்ற நாடகங்களில் முதலாளித்துவ ஜனநாயக முகமுடிகள் கழண்டு விழுகின்றன.

நிகழ்கால அதிகார மையத்திற்கான இப்போட்டியில், கடந்த கால அதிகார மையங்களின் கல்லறை ஆன்மாக்கள் துணைக்கழைக்கப்படுகிறது. எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும், ஒட்டு வங்கி அரசியலுக்காக பேனர்களிலும் ஒளி விளக்குகளிலும் உயிர் கொடுக்கப்படுகிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒட்டு வங்கி அரசியலுக்காக செத்துப்போனவர்களின் ஆவிகளையும் பெயர்களையும்முழக்கங்களையும் கடந்த காலத்தில் இருந்து கடன் பெறப்படுகிறது. புரட்சித் தலைவி அம்மா, டாக்டர் இதய தெய்வம் எம் ஜி ஆர், அம்மாவின் ஆணைக்கினைங்க என்ற சொற்களின் வழி, செத்துப்போனவர்களின் அனுமதியுடன் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மக்கள் சொத்தை சூறையாடி வருகின்றனர். டாஸ்மாக்கை திறக்கிறார்கள், டெண்டர்களில் கொள்ளை அடிக்கின்றார்கள், இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பதவிக்காக மத்திய அரசின் அடிமையாக வெக்கமின்றி வலம்வருகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், கூட்டங்களில் உணர்ச்சிகள் அற்ற உண்மைகளையும் உண்மைகள் அற்ற உணர்ச்சிகளையும் மிகத் தீவிரமாக பரிமாறிக் கொள்கின்றனர். சின்னம்மா, டி டி வி பின்னால் நின்ற ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும் அதிகார பேரத்திற்காக தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்கின்றனர். பேரம் படிவது போல தெரிவதால் ஈ பி எஸ் ஆட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்துள்ளார். அப்பல்லோவில் நாட்கணக்கில் இருந்தவர், அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என பேரத்திற்காக அடம் பிடிக்கிறார். ஒரு கிணற்றை ஊருக்கு கொடுக்க வக்கற்றவர் “நீதி” வேண்டி தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அநேகமாக ஒரு அமைச்சர் பதவியோ கட்சிப் பதவியோ இந்த தர்ம யுத்தத்தை முடித்து வைக்கும் என நினைக்கிறன்!

துணைப் பொதுச் செயலாளர் நியமனத்தின்போதும், முதல்வராக பதவி ஏற்கும் போதும் டிடிவியிடமும் சின்னம்மாவிடமும் பவ்யம் காட்டியவர், ஆர் கே நகர்த்த தேர்தலின் போது “கவாஸ்கர்” தோப்பி போட்டு டி.டி.விக்கு வாக்கு சேகரித்தவர், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு சிறை சென்று மீள்வதற்குள் தனி அணியை உருவாக்குகிறார். சிறை மீண்டவரோ, காட்சியும் கோலமும் மாறியது கண்டு கொதிப்படைந்த தூது விட, இறுதியில் ஒருவக்கொருவர் மாறி மாறி 420 பட்டங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி. அரசியல் அதிகார போட்டியில் வெக்கம் கூச்சத்திற்கு இடமில்லை என அமைதிப்படை அமாவாசையின் நிஜ பாத்திரமாக டிடிவி அலைந்து திரிகிறார்.

டிடிவின் அருளால் நகரப் பொறுப்பு முதல் அமைச்சர் பொறுப்பு வரை கிடைக்கும் என்ற பதவி அதிகார ஆசையில் டிடிவின் பொதுக் கூடத்திற்கு ஆட்களை கூட்டுவதற்கு கோடிக் கணக்கில் முதலீடு போடப்படுக்கிறது. இந்த முதலீடுகள் அனைத்தும் வீண் போகாது, இவை யாவையும் வட்டியும் முதலுமாக ஒரு டெண்டரில் எடுத்து விடலாம் என உடன் பிறப்புக்கள் டிடிவின் பேச்சுக்கு விசில் அடித்து மலர் தூவுகின்றனர்.

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகமானது; தனி நபர்களின் சாமர்த்தியமான அசட்டுத் தனங்களாலும், தான்தோன்றித்தன நடத்தைகளாலும் தனது சொந்த முரண் இயல்புகளால் அழிக்கப்பட்டுவருகிறது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகிறது!

2

“பொது மக்கள்” ஆட்டத்தின் பார்வையாளர்களா? ஆட்டத்தை மாற்றியமைக்கப் போகிறவர்களா?

மக்கள் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்துகிற இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் யாவும் பிரேக்கின் செய்திகளாக,நேர்பட பேசுவாக, காலத்தில் குரலாக உடனுக்குடன் சுடச் சுட விவாதத்திற்கு வருகின்றன. பரபரப்பு உச்சமடைந்து தணிகிற வரையில் பிரேக்கின் செய்திகளுக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. சில நாட்களுக்கு மக்கள் பிக் பாஸிடம் இருந்து சற்றே விடுபெற்று தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்கின்றனர்.

சட்டமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த இம்மக்கள், கோட்டை சர்வாதிகார ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஏதேனும் அதிசயம் நிகழாதா என பரப்படைகின்றனர்.ஏதும் நடைபெறாததால் பின்பு சலிப்படைகின்றனர்.அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிற கும்பலோ உலகைக் காப்பதாக கூறிக் கிளம்பி தனது சொந்த நலனுக்காக அற்ப சூழ்ச்சிகளில் அனுதினமும் ஆழ்ந்துள்ளது. மக்கள் நலனுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தனிநபர் அதிகார பேர சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருள்கின்றனர்.பிரதிநிதிகள்தானா பகடைக்காய்கள்தானா என சட்டமன்றத்திற்கு அனுப்பிய மக்களோ செய்வதறியா பார்வையாளர்களாக சில நேரத்தில் உணருகின்றனர்!

அரை நூற்றாண்டு அரசியல் சாசனமும், சட்டமன்றமும், புனிதக் குடியரசு ஜனநாயகமும், உரிமைக்கான மக்கள் போராட்டங்களும் அரை நாளில்,மந்திர உலகில் திடுமென காணாமல் போய்விட்டதபோன்றதொரு அரசியல் பிரம்மை பூதங்கள் மக்களை அச்சுறுத்துகிறது. மாயவித்தை சம்பங்களாக நிஜ உலகில் கண்முன்னே நிகழ்ந்துவருகிற இம்முரண்பாடுகளை, மோசடிக் கட்சிகளும் மோசடிக்காரர்களும் போட்டு போட்டுக்கொண்டு எவ்வாறு சூழ்ச்சிகளின் ஊடாகவே அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

சட்டமன்ற பிரதிநிதிகளை வாக்கெடுப்பின் மூலமாக தேர்தெடுத்த மக்களோ, அலுப்பூட்டுகிற இந்த பரபரப்புகளால் சலிப்படைகிறார்கள். சட்டமன்ற பிரதிநிதிகளோ மக்கள் மனங்களில் உடல்களற்ற நிழல்களாக,உண்மையற்ற உருவங்களாக வந்து போகின்றனர். நாம் எவ்வாறு ஓட்டுபோட்டு பின், மோசடிகாரர்களின் இந்த புனித குடியரசு ஆட்சிமுறையில் இருந்து விளக்கி வைப்பட்டுள்ளோம் என சமகால நிலைமைகளில் பொறுத்தி புரிந்துகொள்ளவேண்டும்!!

பாட்டாளி வர்க்கத்தின் மீதான துரோகத்தின் மேல் எழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு, அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் இன்று அதற்கெதிராக திரும்பியுள்ளது.

சட்டமன்ற ஆட்சி முறைகள், தேர்தல் அரசியல் முறைகள் கோல்டன் பே ரிசார்ட்டில், பெங்களூர் ரிசார்ட்டில் அடமானம் வைக்கப்பட்டது.ஆளுநர் மாளிகையும், போயஸ் கார்டனும், கிரீம்ஸ் ரோடுகளும்,தலைமை கழகமும் அரசியல் சதிகளால் நிரம்பி வழிகிறது. அதன் நாற்றத்தை மக்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை!

தற்போது,முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவங்கள், சட்டமன்ற வடிவங்களின் அறுபதாண்டுகால தேன்நிலவு கட்டம் நிறைவை எட்டுகிற நிலைக்கு வருகிறது.உத்தராகண்டில், அருணாச்சல பிரதேசத்தில், குஜராத்தில், தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கான முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் அருவருப்பான அரசியல் சதுரங்க ஆட்டத்தை மக்கள் யதார்த்த உண்மையில் கண்டுகொண்டார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகழிகளுக்குள்ளே கமுக்கமாக மக்கள் அறியா வண்ணம் அரங்கேற்றப்பட்ட அரண்மனை சதிகள்,தற்போதைய நவீன முதலாளித்துவ குடியரசு கட்டத்தில் வெட்ட வெளிச்சமாக காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.வாக்கு உரிமையால் மட்டுமே முதலாளித்துவ ஜனநாயகத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நடைபெறுகிற அதிகாரத்திற்காக இப்போட்டியை உழைக்கும் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பதில்லை.வருங்கால மக்கள் குடியரசு ஜனநாயகத்திற்கான புரட்சிகர சேமிப்பு சக்திகளாக மக்களின் மனங்களிலே இம்முரண்பாடுகள் பதியப்படுகிறது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் என்று மாநிலங்களின் பெயர்கள் மாற்றி மாற்றி சொல்லப்பட்டாலும், கும்பலாக சேர்ந்து ஒரு ஆணையும் பெண்ணையும் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோக்கள் சைபர் வெளியில் குவிந்து கிடக்கின்றன. அப்படியான ஒரு ஒளித்துணுக்கு சமூக ஊடகங்களில் வெளிவருகிறபோது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுகிற பலரும், அது இப்போது நடந்ததல்ல, அது இந்த மாநிலத்தில் நடந்ததல்ல, அவர்கள் தலித்துகள் அல்ல, அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் அல்ல, அவர்களை அடிப்பவர்களும் தலித்துகள்தான், அவர்களை அடித்தது அவளது புருஷனும் அவனது உறவினர்களும்தான் என்று கருத்துதிர்க்கிறார்கள்.

அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிபவர்களில் ஒரு பிரிவினர், அடிப்பவர்கள் மனிதர்களே அல்ல, அவர்களையும் இதே போல நிர்வாணப்படுத்தி அடித்தால்தான் அதன் வலி புரியும் என்பது தொடங்கி ஆத்திரத்தின் உச்சிக்கு போகிறார்கள். இத்தகைய கும்பல் வன்முறைக்கும், நாம் கலாச்சாரம் என்று நம்புகிற ஒன்றுக்கும் அதை சாத்தியப்படுத்துகிற அரசியலுக்கும் இருக்கும் உறவைப் புரிந்துகொள்ளாமல் தனிமனிதர்களாக நமது பொறுப்பை வடிவமைத்துக்கொள்ள முடியாது. அதன் கண்ணிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

முதலில் கலாச்சாரம். ஒரு உதாரணத்துக்கு, நமது ஊரில் இருக்கும் ஒரு வட்டச் செயலாளரிடம் போய் எனது மனைவி பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள், நீங்கள்தான் எதாவது செய்யவேண்டும் என்று சொன்னால், ‘சரி… அவதான் ஓடிப்போய்ட்டாளே… இனி ஆகுற வேலையைப் பாரு என்று சொல்வார்களே தவிர, சரி வா.. கும்பலாகப் போய் அவர்களது உடைகளை உருவி ஊர்வலம் விடுவோம் என்று கிளம்பமாட்டார்கள். பாரம்பரியக் கட்சி வட்டச் செயலாளர் முதல் நேற்று முளைத்த கட்சியின் வட்டம் வரை இதை இவ்வாறுதான் எதிர்கொள்வார்கள். ஏன்? ஒரு சமூகம் அரசியல் ரீதியாக எவ்வளவு முன்னகர்ந்திருக்கிறது என்பதன் அளவீடு அது. இதன் பொருள், ஆண் பெண் உறவு சார்ந்த, விமர்சன ரீதியான உரையாடல்கள் அரசியல் தளத்தில் எவ்வளவு வீச்சுடன் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பொருத்தது அது. உரையாடல் என்று வருகிறபோது அதன் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கித்தான் யோசிக்கமுடியும். முக்கியமாக அதன் பிறழ்வுகள்.

அதில், நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு அம்சம், அரசியலை முன்னெடுக்கும் தனிப்பட்ட ஆளுமைகள் தங்களது சொந்த வாழ்க்கையில் கைகொள்ளும் கலகமோ, பிறழ்வோ, மீறலோ ஒரு பொது சமூகத்துக்கு என்ன மாதிரியான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது என்பது. சோர்வூட்டுகிற அளவில் மீண்டும் மீண்டும் நான் இதை சொல்லிக்கொண்டே இருந்தாலும், திரும்பவும் சொல்கிறேன். தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேலான நமது சமூகம் நமது சொத்தான இலக்கியப் பாரம்பரியத்துக்கு வெளியே இருக்கிறது. அதனால் அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய கலாச்சார நெகிழ்வுக் கூறுகளை தவறவிடுகிறது. ஆனால் அரசியல் என்று வருகிறபோது அது மிகவும் நெருக்கமாக அதனுடன், அதை முன்னெடுக்கும் பிம்பங்களுடன் பிணைந்திருக்கிறது.

நேரடியாக சொல்வதென்றால்அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் சொந்த வாழ்க்கையை, அதனதன் அளவிலான கிசுகிசுத்தன்மையுடன் உள்வாங்கிக்கொள்ளும் பொது சமூகம் ஆண் பெண் உறவு சார்ந்த மீறல்களில் சமரசத்தை நோக்கியே நகரும். ஒரு வகையான கலாச்சார நெகிழ்வுத் தன்மைக்கு நான் சொல்லும் தலைவர்களின் அரசியல் வாழ்க்கை பயன்பட்டது. ஆக, இங்கு நிகழ சாத்தியமாகியிருந்த கலாச்சார வன்முறைக் கட்டமைப்பில் உடைப்பை ஏற்படுத்தியதில் அவர்களது மீறலுக்குப் பங்கிருக்கிறது என்றே நான் புரிந்துகொள்கிறேன். நேருவையும் இந்த இடத்தில் பொருத்தி நாம் புரிந்துகொள்ளலாம்.

இதன் பொருள் பிறழ்வுகளை ஊக்கப்படுத்துவது என்பதல்ல. மாறாக எப்படி சுதந்திரப் போராட்டம் என்பதே மேல்தட்டு வர்க்கத்திலிருந்து தொடங்கிய ஒன்றாக இருக்கிறதோ அதே போல கலாச்சார மறுவரையறை என்பதும் மீறல்களைக் கைகொள்ள சாத்தியம் உள்ள பிரவினரால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும் என்பதுதான். அத்தகையவர்கள் அரசியல் தளத்தில் இருக்கிறபோது நேர்மறையான அதன் வீச்சு அதிகம். திரைப்படம் உள்ளிட்ட கலைகள் சார்ந்த ஆளுமைகளின் அரசியல் வருகையும் நிலைத்தலும் இதற்கு அளித்த பங்களிப்பையும் சேர்த்தே சொல்கிறேன்.

இதற்கு மாறாக இன்னொரு தரப்பில், இத்தகைய தனி மனித ஒழுக்க மீறல்களை குற்றப்படுத்திக்கொண்டே இருக்கிற அதை ஒரு ஆயுதமாக மாற்று கருத்துடையவர்கள் மீது பிரயோகிக்கிற, ஆண் பெண் உறவுகளையும் அது தொடர்பான மீறல்களையும் புனிதத்துவ அடிப்படையில் மட்டுமே கண்டு அதை அடக்க முயல்கிற வலது சாரி சார்பு அரசியலும் மேலெழுந்து வந்தது. இந்த விஷயத்தில் இடது சாரி அரசியலும் வலது சாரிக்கு நெருக்கமானதுதான். ஆனால் அதை முதலாளித்துவ சில்லறைத்தனமாக மட்டுமே கவனப்படுத்தி கடக்கமுயல்கிறது.

ஆனால் வலது சாரி அரசியல் மிகத் தீவிரமாக இத்தகைய மீறல்களை தண்டனைக்குரிய ஒன்றாக வரையறுக்கிறது. அத்தகைய தண்டனைக் கருத்தாக்கம்தான் இத்தகைய ஒளித்துனுக்குகளைக் கண்டு அதிர்பவர்களிடம் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறது. காத்திரமாக “இது வன்முறைதான், மனிதத் தன்மைக்கு எதிரானதுதான்” என்று சொல்வதை விடுத்து அவர்கள் பசப்ப முயல்வது அதனால்தான். தம்மை வலது சாரிகளாக அறிவித்துக்கொண்டவர்கள் மிக நேரடியாக இத்தகைய மீறல்களை கலாச்சாரச் சீரழிவு என்று பிரகடனப்படுத்துகிறார்கள். அந்தப் பிரகனடம்தான் தண்டனை கொடுக்கும் பண்பாக கீழே உள்ள உதிரிகளிடம் திரிகிறது. இங்கு உதிரிகள் என்று சொல்வதில் கீழ்மட்டத்தில் செயலாற்றும் போலிஸ் உள்ளிட்ட அரசின் கண்காணிப்பு அமைப்புகளையும் சேர்த்தே சொல்லவேண்டும்.

ஆக, வலதுசாரி அரசியல் தனது உள்ளடக்கமான தன்மையில் கொண்டிருக்கும் கலாச்சார ஒழுங்கு என்னும் கருத்தாக்கம் கீழ்மட்ட அளவில் நெகிழ்வைப் பிரதானப்படுத்தாமல் வன்முறையை நோக்கியே நகர்த்தும். அதன் எதார்த்த உதாரணங்களே இத்தகைய வன்முறைகள். இந்த இடத்தில் கவனமாக வலதுசாரித்தனம் என்பதை வெறும் பிஜேபி சார்ந்ததாகப் பார்க்காமல், விரிந்த தளத்தில் நோக்க வேண்டும். இதன் பொருள் அவர்களும் மற்றவர்கள் போன்றே என சொல்வதல்ல. மேலும் இத்தகைய வன்முறைகளுக்கு ‘அரசியல் ஆளுமைகளின் புனித பிம்பம்’ எத்தகைய அளவில் ஊக்கத்தைத் தருகிறது என்பது குறித்தும் நாம் விவாதிக்கவேண்டும்.

எப்போதுமே சர்வாதிகாரிகள் ஒழுக்கவாதிகளாக தம்மை முன்னிறுத்துவதில் கவனம் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மோடி. நீங்கள் மோடியை ஆண் பெண் உறவு சார்ந்த விஷயங்களில் ஒரு நேருவாக கற்பனை செய்துபார்க்க முடியுமா? வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ஒருமுறை, “நீங்கள் குடையுடன் இருக்கும் புகைப்படத்தை நான் ட்விட்டரில் பார்த்தேன்” என்று ஒரு பெண் பத்திரிகையாளரிடம் சொல்லும்போது அவரது உடல்மொழியில் இருந்த தயக்கத்தையும், சங்கடத்தையும், செயற்கைத் தன்மையையும் நீங்கள் கவனித்திருக்கீர்களா? அது ஏன் என்று எப்போவாவது யோசித்திருக்கிறீர்களா? அது வெறுமே பெண்களைப் பொது வெளியில் எதிர்கொள்வதன் சங்கடம் மாத்திரம் அல்ல; தாம் கைகொண்டிருக்கிற புனித பிம்பங்களுடன் எதிர்கொள்வதன் சுமை.

இத்தாலியின் முன்னால் பிரதமர் பெர்லுஸ்கோனி ஒருமுறை ஒரு அலுவலகத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு வெளியே வருவார். அப்போது அருகே இருக்கும் இன்னொரு காரின் மீது குனிந்தபடி ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் பின்னால் போய் அவரைப் புணர்வது போல நடித்துவிட்டு காரில் ஏறிச் செல்வார். யூடியூபில் அந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். அது இத்தாலிய மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன? எல்லாரும் பிறழுங்கள் என்பதா? அல்லது பொதுவெளியில் ஒரு பெண்ணை அவமதிப்பதன் வழியாக ஒரு சமூகத்தையே பெண் அவமதிப்பை நோக்கி உந்துவதா? அதுவொரு கேலி. அது ரசிக்கத்தக்க கேலியாக மட்டுமே எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது? இப்படி ஒரு கேலியான விளையாட்டில் மோடி போன்ற ஒருவர் ஈடுபடுவதை நம்மால் கற்பனை செய்யமுடியுமா? அதே சமயம் பெர்லுஸ்கோனியிடம் போய் யாராவது இந்த ராஜஸ்தான் சம்பவத்தை சொன்னால், அவர் அதிர்ச்சியடைவார்தானே? ஆனால் மோடிக்கு ராஜஸ்தான் சம்பவம் அதிர்ச்சியைத் தராதுதானே? இந்த அபத்தம் குறித்த விசாரணையைத் தொடர்வதுதான் நவீன வாழ்வியலுக்கு முகம் கொடுப்பதன் அடிப்படை.

இத்தகைய புரிதல்களே, ஒரு வலதுசாரி அரசாங்கம் அரசதிகாரத்துக்கு வரும்போது தனிமனிதத் தன்னிலைகள் அந்தரங்கமாக அடையும் பதட்டங்கள் குறித்த எச்சரிக்கைகளை நமக்கு உண்டாக்கும். ஒரு கும்பலால் துகிலுரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட காதலியைத் தானும் நிர்வாணமாகத் தோளில் சுமந்த படி நடந்த ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது, நேரு மவுண்ட்பேட்டனின் மனைவிக்கு சிகரெட் பற்றவைக்கும் புகைப்படமா அல்லது ஆதித்யாநாத் கங்கையில் பாலூற்றும் புகைப்படமா என்பது வெறும் கேளிக்கைக் கேள்வி அல்ல ஆழ்ந்த பொருளுள்ள அரசியல் கேள்வி. எல்லாரும் பதில் சொல்லவேண்டிய ஒரு காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

இணையதள குறிப்பு : வேறு எந்த புகைப்படத்தை தலைப்பிற்கு பயன்படுத்தினாலும் அது சர்சையாக்கப்படும் என்பதால் பாதுகாப்பாக இந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளோம்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

முகநூலில் பிந்தொடர Karl Max Ganapathy

சிலிண்டர் மானியம் ரத்து ஏன்?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

சமையல் எரிவாவு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வருகிற மானியத்தை அடுத்த ஆண்டு முதலாக ரத்து செய்யப்போவதாகவும், மேலும் ஆண்டுதோறும் சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்வதற்கு அனுமதி வழங்குவதகாவும் மத்திய அரசின் எண்ணெய் எரிசக்தி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? எதன் அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என விளங்கிக்கொள்வது அவசியம்.

ஏகாதிபத்திய கட்டத்தில், அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் பெரும் நிதி மூலதனக்காரர்கள், இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு பெரும் நிதி மூலதனங்களை கடனாக வழங்குகிறார்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியகம் போன்ற பெரும் நிதி கட்டமைப்பு மூலமாக இந்த கடன் உதவிகள் வழங்குவதும் பெறுவதும் முறைப்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு நாடு, தனது சொந்த வருமானத்தைக் கொண்டு நாட்டின் உட்கட்டுமானத்திற்கும், இதர திட்டங்களுக்கும் முதலீடு செய்கிறதோ, அந்நாடு விரைவாகவும் வேகமாகவும் “சுயமாக” வளர்ச்சி பெரும். மாறாக இந்த ஒரு நாடு, தனது நாட்டின் உட்கட்டுமானம் மற்றும் இதர திட்டங்களுக்கு அந்நிய மூலதனத்தை கடனாக பெற்று உள்நாட்டில் முதலீடு செய்கிறதோ, அந்நாட்டின் வளர்ச்சி மெதுவாகவும் ஆபத்து மிக்கவையாகவும் “வெளிநாட்டை சார்ந்துள்ள” வளர்ச்சியாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நேருவின் காலம் தொட்டே, சொல்லளவில் சோசலிசம், நடைமுறையின் அந்நிய மூலதனத்தை, அன்னிய தொழில்நுட்ப முதலீட்டை சார்ந்தே உள்நாட்டு வளர்ச்சியை முடுக்கிவிடப்பட்டு வந்தது.

இதன் காரணமாக நாட்டின் அந்நிய கடன் சுமை நாளுக்கு நாள் பெருகியது. கடனுக்கு வட்டி கட்டுவது, அரசின் மற்ற செலவீனத்தை கட்டுப்படுத்தியது. 80 களின் இறுதியின், நாட்டின் வரவு செலவில் பெரும் இடைவெளி ஏற்பட, வேறு வழியில்லாமல் பன்னாட்டு நிதி மூலதனக் காரர்களிடம் முழுவதுமாக இந்திய அரசு சரணடைந்தது. இதற்கு கைமாறாக நாட்டின் முக்கிய துறைகள், அந்நிய முதலீட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

இது ஒருபுறம், மறுபுறம் இந்திய ஆட்சியாளர்கள் பெரும் நிதி மூலதனக்காரர்களிடமிருந்து கடன் வாங்குவதை நிறுத்தவே இல்லை. நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றது.

சாலை போடுகிற திட்டமென்றாலும், குளம் தூர்வாருகிற திட்டம் என்றாலும், மின்சார கம்பம் நடுவதென்றாலும் அந்நிய கடனை சார்ந்த உலக வங்கி திட்டமாகவே இருந்தது..

ஒரு கட்டத்தில், இந்த கடன் சுமையும் வட்டி சுமையும் நாட்டின் நிதி நிலையை நெருக்கடிக்கு கொண்டு வருகிறது.
நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதில் சென்றுவிடுகிறது. ஆக, வரவிற்கும் செலவிற்குமான நிதிப் பற்றாக் குறையை சமாளிப்பதற்கு அரசானது “அனாவசிய” செலவீனங்களை நிறுத்திக்கொள்கிறது..

அதாவது, நாட்டின் வருமானத்தை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டு வந்த நிதிகள் அனாவசிய செலவாக கருதப்பட்டு, இந்த செலவுகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதி, சுகாதாரம் மற்றும் கல்விக்கு ஒதுக்கப்படுகிற நிதி அனாவசிய செலவாக வெட்டப்படுகின்றன.

தற்போது மோடியின் ஆட்சியில் இந்திய அரசின் அந்நியக் கடன் சுமையானது. அதன் வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி தகவலின்படி இந்தியாவின் அன்னிய கடன் சுமார் 485.6 பில்லியன் டாலர் ஆகும்.

தற்போது இந்தியாவிற்கு கடன் வழங்கி வருகிற நாடுகள், கடன் தருவதை நிறுத்திவிட்டால் நிலைமை மோசம்தான். வேறு வழியில்லாமல், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கிரீசில், ஸ்பெயினில் இதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் வங்கியில் பணம் எடுக்கக்கூட இயலாமல் மக்கள் ரோட்டிற்கு வந்தனர். இந்தியா இந்நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. அதன் ஒரு அறிகுறிதான் சமூக நலத்திட்டங்கங்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை வெட்டுகிற நடவடிக்கையாகும்.

நியாய விலைக்கடை விநியோகம் ஆகட்டும், சிலிண்டர் மானியமாகட்டும், அல்லது சிறு குறு கடன்கள் ஆகட்டும், அல்லது சுகாதாரம் கல்வி ஆகட்டும் இதுதான் நடைபெறப் போகிறது. நடைபெறவும் தொடங்கிவிட்டது.

இன்று நம்முன் இரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒன்று இந்த அராஜக முதலாளித்துவ ஆட்சியை ஏற்றுக் கொள்வது, அல்லது நமக்கான பொன்னுலகை நாமே படைத்துகொள்வது.. முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனமா? அல்லது சோசலிசமா?

 அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது

“பன்றி” யார் ?

ப. ஜெயசீலன்

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சாதி பெயர் குறித்தான விவாதத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் திரு. கரு. பழனியப்பன் இறுதி சிறப்புரை ஆற்றுகையில் சொன்ன கருத்துக்கள் ஒரு சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கான ஆதரவு கருத்து என்னும் ரீதியில் முக நூலில் பலராலும் பகிரப்பட்டது..அதில் தலித்திய தளத்தில் இயங்குபவர்களும் அடக்கம்…உண்மையில் அவர் சொன்னது மிக ஆபாசமான அயோக்கியத்தனமான தற்குறி கருத்து. அவர் சொன்னதின் சாராம்சம் ” சாதி இந்துக்கள் தங்கள் சாதிகளின் வரலாற்று பெருமிதம் குறித்தான உவகையில் தங்கள் பெயருக்கு பின் தங்கள் சாதி பெயரை இட்டுக்கொள்வது சரியில்லை…ஏனென்றால் தலித்துகள் தங்களின் சாதி குறித்து அவமானமும் சிறுமையுற்றும் இருக்கிறார்கள்…அவர்கள் முன் சாதி இந்துக்கள் தங்கள் சாதி பெயரை சூட்டி மகிழ்வது சோற்றுக்கு வழி இல்லாதவன் முன் விருந்துண்ணும் அநாகரீகம் போன்றது” என்பதே. இவரின் கருத்தை நிதானித்து கவனித்தால் இதை விட கேவலமாக தலித்துகளை கேவலப்படுத்த முடியாது என்பது புரியும்.

வரலாற்றுரீதியாக சாதி இந்துக்கள் மங்கோலியர்கள், ஸ்பார்ட்டன்கள், சாமுராய்கள், வைகிங்ஸ் போன்று உலகை நடுங்க வைத்த  வீரர்களா? கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின்  போன்று உலக அறிவியலின் திசை வழி போக்கை மாற்றி அமைத்த மேதாவிகளா? அல்லது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அரச குடும்பங்களை போல உலகில் பாதியை ஆண்டவர்களா? அந்தளவு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வாங்க முடிந்ததா/முடியுமா? வருடா வருடம் நோபல் பரிசுகளை சாதி இந்துக்கள் வாங்கி சலித்து விட்டார்களா?. இப்படி எதுவுமே வாய்க்கப்படாத “லோக்கல் தாதாக்கள்” என்னும் அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் சாதி இந்துக்கள் தங்களை குறித்து பெருமிதம் கொள்வதற்கான காரணம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா? அப்படி ஒன்று இருந்தாலும் அது உண்மையில் வரலாற்றுரீதியாக அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள கூடியதா? இப்படி எதுவுமே இல்லாத சாதி இந்துக்களுக்கு  தங்களின் சாதி  பெயரை பின்னிட்டு கொள்வது பெருமிதம் என்று ஏன் தோன்றுகிறது? இந்த தர்க்கம் தவிர்க்கும் பிறழ்ந்த மனநிலை அவர்களுக்கு தோன்றும் காரணம் என்ன?. பதில் பார்ப்பனிய தத்துவம்.

பார்ப்பனிய வர்ணாஸ்ரம தத்துவம் என்பது அடிப்படையிலேயே அறிவியலுக்கு எல்லாவகையிலும் புறம்பானது என்பதும் ஜனநாயக விரோதமானது என்பதும் மனித நாகரீகத்திற்கு எதிரானது  என்பதும் கிஞ்சிற்று அறிவுள்ளோரும் ஏற்று கொள்ளும் உண்மை. அதன் அடிப்படையில் அமைந்த சாதிய கட்டமைப்பில் நம்பிக்கை உள்ளவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் முறையில்,  ஒரு முறைதான் சாதி பெயரை சூடி கொள்வது. இப்படி சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.

மனுதர்மம் தலித்துகளுக்கு  எதிராக சாதி இந்துக்களை எப்படி செயல்பட வைக்கிறதோ அதேபோல ஹிட்லர் வடித்தெடுத்த நாசி தத்துவம் யூதர்களுக்கு எதிரான ஜெர்மானியர்களின் எல்லா வன்முறைகளையும் வன்மங்களையும் ஊக்கப்படுத்தியது, நியாப்படுத்தியது. உலகிலேயே ஜெர்மானிய இனம்தான் உயர்வானது என்று சொல்லும் Aryan supremacy theoryயை நம்ப வைத்தது. லட்ச கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நாஜிகள் உச்சத்தில் இருந்தபொழுது  கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜெர்மானிய வீட்டிலும் ஹிட்லரின் படம் இருந்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஜெர்மனியே நாஜிக்களாக மாறிப்போனது. நாஜிக்களின் ஜெர்மனி  உலகை கிட்டத்தட்ட அதன் முன் மண்டியிட வைத்தது.

fandry 1
Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் திரு. வசந்தபாலன் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது…

அப்படிப்பட்ட ஜெர்மனியில் இப்பொழுது ஹிட்லர் என்னும் பெயர் கெட்டவார்த்தை ஆகிப்போனது. நாஜி ஜெர்மனி நிகழ்த்திய வன்முறையை மனித விரோதப் போக்கை எல்லோரும் ஒரு கொடுங்கனவாக நினைத்து கடந்து போக முயற்சிக்கிறார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியா நாட்டில் விளையாட்டுக்காக ஒரு கால்பந்து வீரர் கோல் அடித்து விட்டு நாஜி சலுயூட் அடித்தார் என்பதற்காக அவரது விளையாட்டு லைசென்ஸ் பறிக்கப்படுகிறது. ஜெர்மனியில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஹிட்லர் என்று பெயர் வைக்க எந்த ஜெர்மானியரும் துணிவதில்லை. ஏனென்றால் மனித குலத்திற்கே எதிரான கெட்டப்பெயராக அந்த பெயரும் அந்த பெயர் சார்ந்த அடையாளங்களும் மாறிப் போய் விட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம் ஹிட்லர் என்று பெயர் சூடினால், ஹிட்லர் வீரம் பற்றி பேசினால், உலகை நடுங்க வைத்த ஹிட்லரின் தேசமிது என்று பிதற்றினால்  நம்மால் விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்ட யூதர்கள் தங்களை குறித்து அவமானம் கொள்வார்கள். ஏனென்றால் நம்மை போல் பெருமையாக அவர்களுடைய அடையாளத்தை அறிவித்துக்கொள்ளமுடியாது. இந்நிலையில் அவர்கள் முன் நாம் ஹிட்லர் என்று பெயரிட்டு கொள்வது யூதர்களை பார்க்கவைத்து  விருந்துண்ணுவதை போல் இருக்கும் என்ற காரணத்தினால் அல்ல. மாறாக ஹிட்லர் குறித்து ஜெர்மானியர்களுக்கு இருக்கும் அவமானத்தாலும் குற்றஉணர்ச்சியினாலுமே தான். ஹிட்லரின் பெயர் தங்கள் மேல் விழுவதின் மூலம் எங்கே ஹிட்லரின் மனிதவிரோத கொடுஞ்செயல்களின் சாயல் தங்கள் மேல் விழுந்துவிடுமோ அன்று அஞ்சி நடுங்கி கூசிப்போகிறார்கள்.

இந்நிலையில் ஆயிரமாண்டு காலமாய் தலித்துகளின் உழைப்பை சுரண்டி தின்றவன், தலித் பெண்களை வன் புணர்ந்தவன், தலித் குடியிருப்புகளை கொளுத்தியவன், தலித்துகளின் கலை கலாச்சாரத்தை திருடிக்கொண்டவன்/அழித்தவன், பெரும்பான்மை எண்ணிக்கை தரும் தைரியத்தில் தலித்துகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவன், தலித்துகளின் நியாமான வாய்ப்புகளை பறித்தவன் என்று ஒவ்வொரு சாதி இந்துக்களின் சாதிக்கும் பின்னேயும் ஒரு அயோக்கியத்தனம் இருக்கிறது. அதனால் தங்களின் சாதியை மிக பெரிய அவமானமாகவும், சாதியை பயின்ற தங்களது மூதாதையர்களின் மடமைத்தனத்தை குறித்தும் அயோக்கியத்தனத்தை குறித்தும் அவர்கள் கூனி கூசி குறுகி சாதி பெயரை சூடும் இழி செயலிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என்று சொல்வதும் எதிர்பார்ப்பதும்தான் நியாமாக தர்க்காமாக இருக்க முடியும். ஆனால் உலகில் யாராலுமே சிந்திக்கமுடியதா அயோக்கியத்தனமான சுத்தமான சாதி இந்துவால் மட்டுமே சிந்திக்க முடிகிற கோணத்தை திரு கரு பழனியப்பன் வந்தடைகிறார். அது என்ன கோணம் என்றால் “தலித்துகள் பாவம் நாம பார்த்து எதாவது அவங்களுக்கு செஞ்சாதான் உண்டு” என்கின்ற கோணம். அதாவது சாதி இந்துக்கள் திருட்டு பசங்க சில்லறை பசங்க அயோக்கியபசங்க என்பதை மறைத்து தலித்துகள் வாழ்க்கையே சாதி இந்துக்களின் கருணையில்தான் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை கட்டமைப்பது. அதனைவிட நுட்பமாக தலித்துகளின் மீட்சி என்பது சாதிஇந்துகளின் கருணையை பொறுத்தது என்று தலித்துகளுக்கே நிறுவுவது.

ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளையர்கள் ஆஸ்திரேலியா பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்க 1998 முதற்கொண்டு மே 26ஐ national sorry day என்று கடைபிடிக்கிறார்கள். 2008ல் பிரதமராக இருந்த கெவின் ரட் மே 26ஆம் நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் சார்பாக ஆஸ்திரேலியா பூர்வகுடிகளிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கேட்போர் எவரும் அழுது விடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மன்னிப்பு கோரும் கடிதத்தை வாசித்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் நிகழ்த்திய வன்முறைக்கு  ஆஸ்திரேலியா சமூகத்தை மன்னிப்பு கோரத்தூண்டிய குற்றவுணர்ச்சி ஏன் சாதி இந்துக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் துளியும் ஏற்படுவது இல்லை? ஒருவனால் அடிமைப்படுத்தப்பட்டவன் வெட்கப்படவேண்டியவன் இல்லை மாறாக அடிமைப்படுத்துபவனே ஒரு காட்டுமிராண்டியாக தன்னையே உணர்ந்து நாகரீக சமூகத்தில் வெட்கம் கொள்கிறான் என்று சாதி இந்துக்களுக்கு எப்பொழுது புரியும்? எவனையும் ஏய்க்காத, எவன் உழைப்பையும் சுரண்டி தின்று கொழுக்காத, எவன் குடியையும் கெடுக்காத தலித்துகளின் மூத்திரத்தை குடிக்கக்கூட சாதியை பயிலும் கடைபிடிக்கும் சாதி இந்துக்களுக்கு தகுதி இல்லாத போது தலித்துகளாக அறிவித்து கொள்ள தலித்துகளுக்கு தயக்கம் இல்லை ஆனால் அவர்கள் சாதியற்ற ஒரு சமூகத்தை அண்ணலின் வழியில் கனவு காண்கிறார்கள் என்று திரு கரு பழனிய்யப்பனிடம் யார் சொல்வது?

ஒரு நாகரீகமான சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த அநீதியை இழைத்தவனிடம் நாம் முதலில் எதிர்பார்ப்பது guilt குற்றவுணர்ச்சி. அடுத்தது குற்றம் குறித்தான வேதனை remorse. இந்த நிலையில் இருந்துதான் நாம் apology, reconciliation போன்ற நிலைக்கு நகர முடியும். பழனியப்பன் அவர்களின் கருத்து நமக்கு உணர்த்தியது நம் சமூகம் இன்னும் சாதி குறித்து குற்ற உணர்ச்சியே கொள்ளவில்லை என்பதுதான். இந்நிலையில் நம் சமூகம் remorse என்னும் நிலையை அடைய இன்னும் பல ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டியிருக்கும் என்று எனக்கு தோன்ற வைத்தார் திரு. வசந்தபாலன். Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது.

தொடரும்.

தோழர்கள் செந்தில் ,பரிமளா கைதும் போலி முற்போக்காளர்களின் சதிகளும்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

ஒட்டுமொத்த தமிழகமும் மதுக்கடை எதிர்ப்பு போராட்டம்,ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, ஒ ஏன் ஜி சி எண்ணெய் எரிவாவு திட்டத்திற்கு எதிரான போராட்டம், ஒரே நாடு ஒரே வரிக்கு எதிர்த்து போராட்டம், இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு, மீனவர் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டம் என தினந்தோறும் போராட்ட அலை வீசிவருகிற அசாதாரண அரசியல் சூழலை எதிர்கொண்டு வருகிறது. இப்போராட்டங்களின் ஊடாக ஆளும் வர்க்கத்தின் வர்க்க குணாம்சத்தை, மக்களிடத்தில் எடுத்துச் சென்று,  மக்களிடம் ஆளுவர்க்க அரசியல் அம்பலப் படுத்தல்களை மாற்று இயக்கங்கள் மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக போராட்ட சக்திகள் அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகிறது. இச்சூழலில் ஆளும்வர்கத்திற்கு எதிராக நாம் போராடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல மாற்று இயக்கங்கள்-முற்போக்குப் போர்வையில் அடையாள, சுயலாப அரசியல் நடத்துகிற பிழைப்புவாதிகளையும் நாம் இனம் கண்டு ஒதுக்குவதும் அவசியம் என்கிற பிரச்சனையானது இன்று முக்கிய விஷயமாக முன்னுக்கு வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த தன்முனைப்பு பிழைப்புவாதிகளின் அற்ப சில்லறை அரசியலை பயன்படுத்திக் கொள்கிற ஆளும்வர்க்கமானது, இவர்களை கைப்பாவையாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் போராட்டங்களையும் மாற்று அரசியல் சக்திகளை முடக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர் மன்றத்தின் தலைவர் தோழர் பரிமளா மீதான பொய் வழக்கும் அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் இந்த ஐயத்தை உறுதியாக்குகிறது. ஒரே நாடு ஒரே வரி என்ற தலைப்பில் கூட்டம் நடத்திகொண்டிருந்த இயக்கத் தோழர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களை அழைத்து வந்த ஸ்நாபக் வினோத், நியூஸ் 18 இல் வேலை செய்கிற நாசர், வசுமதி, பட்டுராசன், இளையராஜா, அப்துல் ஆகியோர் உள்ளே நுழைந்து தோழர்களை தரக்குறைவாக பேசியும் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் சென்ற இந்த சிக்கலை, திட்டமிட்டபடி தோழர்கள் செந்தில் மற்றும் பரிமளா மீது திருப்பியுள்ளார்கள்.

தமிழகத்தில்,ஊடக வெளிச்சத்தின் ஊடாக சூழல் போராளி வேஷம் போடுகிற கும்பல், மார்க்சிய அரசியலை கைவிட்டோடிய உதிரி லும்பன்கள், திரிபு வாதிகள் என அதிகார /அடையாள பசிகொண்ட சக்திகளின் பெரும் வலைப்பின்னலே இதற்கு பின்னால் சதிகளை மேற்கொண்டு வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. புரட்சிகர அரசியலுக்கும் பிழைப்புவாத தன்முனைப்பு அரசியலுக்குமான இந்த முரண்பாட்டை ஆளும்வர்க்கமானது மிக லாவகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.  

நமது போராட்டத்தில், ஆளும்வர்க்கதிற்கும் நமக்குமான தெளிவான எல்லைக் கோட்டை நம்மால் வரைந்து கொள்ள இயலுகிற நிலையில், முற்போக்கு முகமூடியுடன் உலாவி, உறாவடிக் கெடுக்கிற துரோகக் கும்பல்களை இனம் கண்டு ஒதுக்குகிற அரசியல் கலையில் தேர்ந்துகொள்ள வில்லையென்றால் முதலுக்கே மோசம் என்ற வகையில்,நமது அனைத்து போராட்டங்களையும் இந்த பிழைப்புவாத கும்பல்கள் அறுவடை செய்துவிடுகிற ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் எதிர்ப்பரசியல், ஊழல் எதிர்ப்பரசியலைத் தாண்டி ஓரடி கூட மாற்று அரசியல், மக்கள் திரள் அரசியல் என முன்னோக்கி வர இயலாத இந்த நகர்ப்புற போலி முற்போக்கு கும்பல்களின் இழிவான சதிகளை முறியடிப்பது நமது முதன்மையான பணிகளில் ஒன்றாகியுள்ளது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது

”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

அ. குமரேசன்

அ. குமரேசன்

அது ஒரு முழு நீளக் கதைத் திரைப்படம் அல்ல. ஒரு ஆவணப்படமே. ஆகப்பெரும்பாலும் இந்தியாவில் ஆவணப்படங்கள், கருத்துடன்பாடு உள்ள அவையோர் முன்னிலையில் திரையிடப்படுகின்றன. பொதுவெளியில், பொதுமக்களிடம் நேரடியாக வருவது மிக மிகக் குறைவு.

அப்படியொரு ஆவணப்படம் ‘Argumentative Indian’ (வாதாடும் இந்தியர்). நோபல் விருது பெற்றவரான பொருளாதார ஆய்வாளர் அமர்த்தியா சென் பற்றிய அந்த்ப் படம். இந்த ஒரு மணிநேரப் படத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கியவர் இயக்குநர் சுமன் கோஷ். அமர்த்தியா சென்னும் அவரது மாணவரான கவுஷிக் பாசு என்ற பொருளாதார வல்லுநரும் உரையாடுகிறார்கள். இடையிடையே பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் சென் பற்றிய தங்களது கருத்துகளைக் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே நியூயார்க், லண்டன் நகரங்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப்படம் முந்தாநாள் கொல்கத்தாவில் காட்டப்பட்டது, நேற்று திடீரென திரைப்படத் தணிக்கை வாரியம், அந்தப் படத்தில் அமர்த்தியா சென் வாயிலிருநது வருகிற நான்கு சொற்களை நீக்கினால்தான் அல்லது ‘பீப்’ ஒலியால் மறைத்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறிவிட்டது. (அதுவும், பெரியவர்களோடு வரக்கூடிய குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ‘யுஏ’ சான்றிதழ்.)

அந்த நான்கு சொற்கள் என்ன தெரியுமா? “பசு”, “குஜராத்”, “இந்து இந்தியா”, “இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இந்தியா” ஆகியவையே அந்த நான்கு சொற்கள் என என்டீடிவி செய்தி கூறுகிறது..

தணிக்கை வாரிய ஆணையால் இந்தியாவில் வேறு எங்கும் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“அரசாங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அது பற்றிப் பேசட்டும். மற்றபடி நான் இந்த நிபந்தனை பற்றி எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை,” என்கிறார் சென்.

தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநரான கோஷ், “கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,” என்று கூறுகிறார்.

தணிக்கை வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்றும் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதே படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் வெளியிட முடியும்! அதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் வாரியத்திற்கு இல்லை!

இணையத்தில் பார்ப்பதற்கு வழியில்லாத, அப்படிப் பார்க்க விரும்பாத ஆவணப்பட ஆர்வலர்கள் சார்பாகக் கேட்கிறேன், அந்த நான்கு சொற்கள் குறித்து அரசுக்கு என்ன அச்சம்? அமர்த்தியா சென்னோ, ஆவணப்படமோ தவறான கருத்துகளைச் சொல்வதாக அரசு நினைக்குமானால், அதைச் சுட்டிக்காட்டலாம், கடுமையாக எதிர்க்கலாம், உறுதியாக மறுக்கலாம், உண்மை நிலவரம் என்ன என்பதை உரக்கச் சொல்லலாம். அதிகார பலம், பண பலம், ஊடக பலம், பிரச்சார பலம் எல்லாம் இருக்கிறபோது, ஒரு ஆவணப்படத்தில் வருகிற விமரிசனங்களை எதிர்கொள்ளும் அரசியல் அறம் இல்லாமல் போனது ஏன்? அதை விடுத்து, அந்த நான்கு சொற்களை மறைக்க நிர்ப்பந்திப்பதன் மூலம் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

பார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி

“ஆமாம் நான் பாப்பாத்தி தான், இப்ப என்ன அதுக்கு?” என்று பார்ப்பனப் பெண்கள் திராவிடத்தை திட்டும் ஒவ்வொரு முறையும், அவர்கள் மீது கோபம் வருவதை விடவும், எப்படி இன்னமும் தங்களின் சுய வரலாறு குறித்த விழிப்புணர்வில்லாமல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதையெண்ணி பரிதாபமே தோன்றுகிறது.

கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், பின்னாட்களில் காவி புடவையுடுத்த வலியுறுத்தி மொட்டை அடிக்கும் வழக்கமும் பார்ப்பனர்களிடையே தான் இருந்தது. குழந்தைத் திருமணம் பரவலாக இருந்ததும், கைம்பெண் மறுமணம் மறுக்கப்பட்டதும் பார்ப்பன சமூகத்தில் தான். ஏன், குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை மட்டும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதும் பார்ப்பன சமூகம் தான்.

ஆனால், இப்படியான கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுத்து, சமூக வேறுப்பாடின்றி பார்ப்பன பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் காரணமாக இருந்தது திராவிடம் என்றால் அது மிகையல்ல.

நான் சிறுபிள்ளையாக இருந்த போது கூட ‘மொட்டை பாப்பாத்தி’ என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த சொல்லாடல் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் திராவிடம். கோயில், வேண்டுதல் என்ற பெயரில் மற்ற சமூகப் பெண்கள் மொட்டையடித்துக் கொள்வார்களே ஒழிய, பார்ப்பனப் பெண்கள் ஒருபோதும் மொட்டை அடித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதன் பின்னணி இதுவே!

விதவைகள் என்ற பெயரில் பெண்களின் எதிர்காலத்தை சிதைத்துவந்த கொடுமைகளை எதிர்த்து விதவைகள் நிலைமை, மறுமணம் தவறல்ல என்பன குறித்து பல கூட்டங்களை நடத்தி பார்ப்பனர்களின் வசவுகளுக்கு ஆளானது திராவிடம்.

பெண்ணுரிமை என்ற ஒன்றே ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், பெண்களின் சொத்துரிமை குறித்து பேசியது திராவிடம். ஆனால், ‘இவாளுக்கெல்லாம் சொத்துரிமை வந்துட்டா கண்டவனோட ஓடிருவாளே’ என்று பெண்களின் மாண்பை கொச்சைப்படுத்தியது பார்ப்பனியம்.

பெண்களுக்கு சம உரிமை, பெண் விடுதலை, சொத்துரிமை, மறுமணம், கற்பு எதிர்ப்பு, காதல், மறுமணம் போன்ற அத்தனையையும் பேசிய திராவிடத்தை எதிர்த்தவாறே, அதனை செரித்துக்கொண்டு, அவையெல்லாம் சட்டமாக வந்தவுடன் பார்ப்பனப் பெண்களை வேலைக்கு அனுப்புவது, காதல் திருமணம் புரிய அனுமதிப்பது, கணவனை இழந்தப் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்தியது என்று தங்களை முன்னேறியவர்களாக காட்டிக்கொண்டாலும், இந்துத்துவ பார்ப்பனிய சனாதான ஆகம விதிகளை பாதுகாத்து அவற்றிற்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.

இவைகுறித்த அறிவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களின் சுயசமூக பெருமைக்காக ‘பாப்பாத்தி’ என்று திராவிடத்தை திட்டினாலும் கூட, பார்ப்பன ஆண்களுக்கு இணையாக ஏன் பார்ப்பனப் பெண்களுக்கு பூணூல் அணிவிப்பதில்லை, கோயில் கருவறைக்குள் பெண்களுக்கு அனுமதி என்று பார்ப்பனப் பெண்களின் உரிமைகளுக்காக இன்று பேசுவதும் அதே திராவிடம் தான் என்பதை அவ்வப்போது அவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர். சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

 

 

எண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் வள வேட்டைகளை நடத்தி வருகின்றன.குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, அங்கோலா நாடுகளிலும் கொலம்பியா, ஈராக் போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் எண்ணெய் வள வேட்டை அதிகமான அளவில் நடந்து வருகின்றன. எண்ணெய் வள சூறையாடலுக்கு உள்ளாகிற நாடுகளில் இந்நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்தன. அதில் முக்கியமான போராட்டம்தான் நைஜீரியா நாட்டில் ஒகோனி இன மக்கள் மேற்கொண்ட வீரமிக்க போராட்டமாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றுதான் நைஜீரியா. இங்குள்ள நைஜர் ஆற்றுப் படுகையில் சுமார் ஐந்து லட்சம் ஒகோனி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எல்லாம் நன்றாகதான் இருந்தது, அந்த பாகாசுர எண்ணெய் நிறுவனம் இங்கு வரும்வரை. இங்கிலாந்து நாட்டின் சேல் நிறுவனம், நைஜர் ஆற்றுப்படுகையில் எண்ணெய் எடுக்க ராட்ச கரங்களோடு ஒகோனியர்கள் வசிக்கிற பகுதியில் நுழைந்தது. இந்நிறுவனத்திற்கு ஆதரவாக நைஜீரிய நாட்டு அரசோ, இராணுவத்திலேயே, சேல் இராணுவப் படைப்பிரிவை உருவாக்கி இந்நிறுவனத்திற்கு காவல் காத்தது.

இந்நிறுவனந்தில் எண்ணெய் சுரண்டல் நடவடிக்கையால் சுமார் 300 ஹெக்டர் வயல்களும், நன்னீர்க் குளங்களும், பழந்தரும் மரங்களும் அழிந்து போயின. சுமார் ஐயாயிரம் இடங்களில் 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் கொட்டியதால் புறச்சூழல் மோசமாக பாதிப்படைந்தது. சேல் நிறுவனத்தின் இந்த நாசகர விளைவுகளால் கிளிர்ந்தெழுந்த ஒகோனிய இன மக்கள் தோழர் கென் சரோவிவா தலைமையில் ஒகோன் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தை உருவாக்கி போராடினர். சேல் நிறுவனத்திற்கு எதிரான இந்த மக்கள் இயக்கத்தின் முதல் பேரணி 1993 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டு போராடினர்.

நிலைமை கட்டுபாட்டை மீறிச் செல்வதை உணர்ந்த நிறுவனம், ராணுவத்திற்கு நேரடியாக நிதியும் ஆயுதமும் வழங்கிப் போராட்டத்தை ஒடுக்கக் கோரியது. பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலி அரசோ, உடனடியாக இயக்கத்தின் தலைவர் கென் சரோவிவா உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பத்து பெயரை கைது செய்தது. பின்னர் போலிக் குற்றச்சாட்டு சுமத்தி, பத்து தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கி அவர்களை சிரைச் சேதம் செய்து கொன்றது.

கென் சரோவிவா

அரசின் இந்த கொடூர செயலால் அதிர்வும் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த மக்கள் அலை அலையாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்த தனமாக நைஜீரிய ராணுவம் சுட்டுக் கொன்றது. 1993 ஆம் ஆண்டின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் ஒகோனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் கிராமங்களும் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அடுத்த சில ஆண்டுகளில், போராடிய இரண்டாயிரம் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  நைஜர் ஆற்றுப்படுகையில் ஒகோனியர்களை வேட்டையடியாடுவதை போல தற்போது காவிரிப்படுகையில் எண்ணெய் எடுப்பிற்காக தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்… கதிராமங்கல ஒடுக்குமறை அதன் ஒரு பகுதிதான்….

சர்வதேச, உள்ளூர் முதலாளித்துவ நலன் சார்பில், காட்டுமிராண்டித்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகிற இவ்வழிவு பாணியிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர்களுக்கு எடுபிடியாக வேலை செய்கிற இவ்வரசின் கொள்கைகளையும் முற்றாக புறக்கணிப்போம்.

ஆளும்வர்க்க நலன்களுக்காக அடித்தள மக்களின் நலனை இயற்கை வளத்தை பறிக்கிற சக்திகளுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னகர்த்துவோம்.

ஆளுநரின் தலையீடு; கேள்வியாகும் மாநில சுயாட்சி!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

மேற்கு வங்காள மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பாஜக ஆளுநர்கள் தங்களின் ஆட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய பாஜக அதிகார மையத்திற்கும் பாஜக அல்லாத மாநில அதிகார மையத்திற்குகமான மோதல் நாளுக்கு நால் தீவிரப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுனர் கிரண் பேடிக்குமான மோதலும், மேற்கு வாங்க முதல்வர் மம்தாவிற்கு திரிபாதிக்குமான மோதலும் வேகமாக வெளிப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற சில நாட்களில் ஆளுனர் கிரண் பேடியின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆளுநர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் மத்திய ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வகையான சிக்கல் இல்லை. ஏனெனில் வடிவேலு நகைச்சுவை போல “படுத்தேவிட்டானய்யா”  கதையாக நெடுஞ்சாங்கடையாக பாஜகவின் காலில் எடப்பாடி அரசு விழுந்து கிடைக்கிறது. மத்திய அரசின் மாநில அங்ககக் கட்சியாக செயல்பட்டு வருகிறது.

அறுபதாண்டுகளாக மத்தியில், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட மாநில உரிமை பறிப்பை, மைய அதிகார குவிப்பு அரசியலின் மறுபதிப்பை தற்போது பாஜக மேற்கொண்டு வருகிறது.

மேலும், வரி வசூலிப்பு அதிகாரத்தை கூட மாநில அரசுகளிடம் இருந்து ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை பறித்துவிட்டது. ஜி. எஸ்.டி. கவுன்சில் என்ற மைய அதிகார மையம் மட்டுமே, இனி மறைமுக வரி வருவாய் மீது செல்வாக்கு செலுத்துகிற சர்வாதிகார நிர்வாக அலகாக செயல்படும்.

மாநில அரசின் சுயாட்சி உரிமைகள், உலகமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சில சமயங்களின் தடையாக உள்ள காரணத்தால், 90 களின்
தொடக்கம் தொட்டே, மத்திய அரசின் மைய அதிகார குவிப்பு நடவடிக்கைகள் மாநில அதிகாரங்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியது.

பிராந்தியக் கட்சிகளோ மைய அரசின் உலகமய கொள்கை அமலாக்கத்தில் கரைந்து, சர்வதேச முதலாளிகளுடன் இணைந்து தேசவளத்தை சூறையாடிக் கொழுத்தனர். இந்திய அளவில் மாநில உரிமை, மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்த திமுக, ஒருகட்டத்தில் தேசிய கட்சிகளின் அங்கமாக மாறியது.

தனதுகடந்த கால “கொள்கை சமரசங்கள்” நிகழ்கால வாய்ப்பிற்கு தடையாகி உள்ளது.

மைய அரசின் அதிகார குவிப்பிற்கு எதிரான போராட்ட சக்தியாக தன்னை நிறுவக் கொள்ள ஸ்டாலின் முயன்றாலும் திமுகவின் இந்த மறுவருகை அரசியல் மக்களிடம் எடுபடவில்லை. அறுபதுகளில் திமுக ஒரு ரெபெல் சக்தியாக மக்கள் நம்பினார்கள். இன்று மக்கள் நம்பத் தயாராக இல்லை.

நாட்டின் ஒற்றை அதிகார மையமாக பாஜக வளர்வது என்பது ஒரு வகையில் இந்திய ஆளும் வர்க்கமானது தனக்கான சவக்குழியை வேகமாக தோண்டுவதற்கு ஒப்பாகும். நாட்டின் அரசியல் பொருளாதார முடிவுகள் கூடவே மத அடிப்படைவாத சர்வாதிகார ஆட்சியானது, அரசின் மீதான மக்களின் நல்லெண்ணங்களை ஒரே அடியில் அடித்து நொறுக்கி வருகிறது.

இந்திய முதலாளித்துவ ஆட்சியின் அவலங்களை வேகமாகவும் ஆழமாகவும் மக்களிடம் எடுத்துச் செல்வதும், உழைக்கும் வர்க்கத்தையும், இளைஞர்களையும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒன்றுபடுத்துவது மட்டும்தான் இன்று நம்முன் உள்ளே ஒரே முதனமையான பணியாகும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?

அ. குமரேசன்

அ. குமரேசன்

முகத்தைத் துப்பட்டாவால் மூடியபடி தனது டூவீலரில் வருகிற பெண்ணைப் பார்த்து வழிகிறான் அவன். அவள் முக்காட்டை விலக்கிக் காட்ட, ஒடுங்கிய முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அவன் அலறுவான். “இதை மறைக்கிறதுக்காகத்தான் முகத்தை மூடிக்கிட்டு போறீங்களாடீ” என்று சாடுவான்… இது ஒரு தரமான நகைச்சுவையா என்ற உறுத்தலே இல்லாமல் திரையரங்கில் இருந்தோர் சிரித்தார்கள்; அவ்வப்போது தொலைக்காட்சிகளின் சினிமா காமெடி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்களும் சிரிக்கிறார்கள். பெண்களை ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் பரிகசிப்பதற்கு ஊக்குவிக்கிற சந்தானம் படங்களில் ஒன்று என அதை விட்டுவிட்டோம்.

இப்போது ஹரியானா அரசு செய்திருப்பதை அந்த மாநிலப் பெண்கள் விட்டுவிடத் தயாராக இல்லை.

“பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”

-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. பெண்களை ஏன் முக்காட்டுப் பெருமைக்குள்ளேயே மூடி முடக்குகிறீர்கள் என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளன. பெண்ணுரிமைக்கு எதிரான மாநில பாஜக அரசின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளன.

இப்போது அமைச்சர் ஒருவர் “எல்லாப் பெண்களும் முக்காடு போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தவில்லை. அது ஹரியானாவின் பாரம்பரியம் என்ற அர்த்தத்தில்தான் அந்தப் படம் அரசுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது,” என்று “விளக்கம்” அளித்திருக்கிறார்.

பெருமை, அடையாளம், பாரம்பரியம் என்ற சொற்களின் அர்த்தம் என்னவோ? அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பெண்கள் காப்பாற்ற வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவதுதானே? அதை மீறுகிற பெண்கள் அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் கெடுக்கிறார்கள் என்று சித்தரிப்பதுதானே?

(“இஸ்லாமியப் பெண்கள் பர்தா போடுவதை மட்டும் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள்” என்று சிலர் கிளம்புவார்கள் பாருங்களேன். அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது: ஹரியானாவில் இதைச் சொன்னது ஒரு மத நிறுவனமோ அதன் பத்திரிகையோ அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இப்படி வந்திருக்கிறது. அடுத்து, பர்தா போடுவது குறித்து இஸ்லாமிய நண்பர்களிடமும் கேள்வி எழுப்பி வெளிப்படையாக விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.)

அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956

பிகினி உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்!

கலையரசன்

பேஷ‌ன் உல‌கில்‌ பிகினி நீச்ச‌ல் உடை அறிமுக‌மான‌த‌ற்குப் பின்னால் நூற்றுக் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் க‌ண்ணீர்க் க‌தை ம‌றைந்திருக்கிற‌து. முத‌லில் அத‌ற்கு ஏன் பிகினி என்ற‌ பெய‌ர் வ‌ந்த‌து என்ற‌ விப‌ர‌ம் ப‌ல‌ருக்குத் தெரியாது.

ப‌சுபிக் ச‌முத்திர‌த்தில் உள்ள‌ மார்ஷ‌ல் தீவுக‌ள், இன்று அமெரிக்காவின் கீழான‌ “சுத‌ந்திர‌மான‌ நாடு”. அது ஆயிர‌ம் மைல் தூர‌த்திற்குள் உள்ள‌ தீவுக் கூட்ட‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. அதில் ஒன்று தான் பிகினித் தீவு.

இர‌ண்டாம் உல‌க‌ப் போர்க் கால‌த்தில் ஜ‌ப்பானிய‌ர் வ‌சமிருந்த‌ மார்ஷ‌ல் தீவுக‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி த‌ன‌தாக்கிக் கொண்ட‌து. அது பின்ன‌ர் அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ க‌ட‌ல் க‌ட‌ந்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் ஒன்றான‌து.

1946 ம் ஆண்டு, உல‌கின் முத‌லாவ‌து நைட்ர‌ஜ‌ன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அணு குண்டை விட‌ ச‌க்தி வாய்ந்த‌ நைட்ர‌ஜ‌ன் குண்டு ப‌ரிசோதிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், பிகினித் தீவில் இருந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அமெரிக்க‌ இராணுவ‌ம் அவ‌ர்க‌ளுக்கு பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கி இன்னொரு தீவில் த‌ங்க‌ வைத்த‌து.

சில‌ வார‌ங்க‌ளில் ஊர் திரும்ப‌லாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிக‌ள், வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ அக‌திக‌ளாக‌ வாழ‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

1970 ம் ஆண்ட‌ள‌வில், க‌திர்வீச்சு அபாய‌ம் இல்லையென்றும், திரும்பிச் செல்வ‌து பாதுகாப்பான‌து என்றும் சொல்ல‌ப் ப‌ட்ட‌து. அதை ந‌ம்பி திரும்பிச் சென்ற‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கு புற்றுநோய் வ‌ந்த‌து. குழ‌ந்தைக‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் என்றில்லாம‌ல் ப‌ல‌ர் குறுகிய‌ காலத்திற்குள் ம‌ர‌ண‌முற்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையே பிகினித் தீவு ம‌க்க‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் நிர‌ந்த‌ர‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌து. அதாவ‌து, நைட்ர‌ஜ‌ன் குண்டு வெடிப்பால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பாதிப்புக‌ளை ஆராய்வ‌த‌ற்காக‌, அவ‌ர்க‌ளை ப‌ரிசோத‌னை எலிக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. சில‌ர் அமெரிக்கா கொண்டு செல்ல‌ப் ப‌ட்டு ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அப்போதெல்லாம் அமெரிக்க‌ அர‌சு அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌வே ம‌திக்க‌வில்லை.

க‌திர்வீச்சின் தாக்க‌ம் இர‌ண்டாம் த‌லைமுறையின‌ரையும் விட்டு வைக்க‌வில்லை. அத‌னால் த‌ம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிக‌ள் அமெரிக்க‌ அர‌சை கேட்டுக் கொண்ட‌ன‌ர். ஆனால் அந்த‌ வேண்டுகோள் செவிட‌ன் காதில் ஊதிய‌ ச‌ங்காயிற்று. இறுதியில் கிறீன்பீஸ் அமைப்பின் க‌ப்ப‌ல் வந்து தான் அவ‌ர்க‌ளை பாதுகாப்பான‌ இட‌த்திற்கு அழைத்துச் சென்ற‌து.

நைட்ர‌ஜன் குண்டு ப‌ரிசோத‌னையின் விளைவாக‌ ஏற்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளுக்கு ந‌ஷ்ட‌ஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷ‌ல் தீவுக‌ளுக்கு “சுத‌ந்திர‌ம்” கொடுப்ப‌தாக‌ அமெரிக்கா தெரிவித்த‌து. ஆனால் ந‌ஷ்ட‌ஈட்டுப் ப‌ண‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் ம‌ருத்துவ‌ச் செல‌வுக்கே போதாது.

இர‌ண்டாம் உல‌க‌ப் போர் வ‌ரையில் பிகினித் தீவில் வ‌றுமை என்ற‌ சொல்லே இருக்க‌வில்லை. இன்று இன்னொரு தீவில் அக‌திக‌ளாக குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இன்றி வ‌றுமைக்குள் வாழ்கின்ற‌ன‌ர்.

அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் இராணுவ‌வெறி பிகினித் தீவுட‌ன் நின்று விட‌வில்லை. மார்ஷ‌ல் தீவுக‌ளில் ஒன்றில் ந‌வீன‌ ஏவுக‌ணை த‌ள‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்குள்ள ஏவுகணைகள் சீனாவை நோக்கி குறி வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

ஏவுக‌ணை த‌ள‌ம் உள்ள‌ தீவில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்டு அய‌லில் உள்ள‌ தீவில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் தின‌ச‌ரி ப‌ட‌கில் சென்று ஏவுக‌ணைத் த‌ள‌ ப‌ராம‌ரிப்பு வேலைக‌ளை செய்கின்ற‌னர்.

முன்பு அந்த‌ மக்க‌ளுக்கு சொந்த‌மான‌ நில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌ அமெரிக்க‌ இராணுவ‌ம், அவ‌ர்க‌ளை அங்கு வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ள் ஆக்கியுள்ள‌து. அந்த ம‌க்க‌ளின் குடியிருப்புக‌ள் இருந்த‌ இட‌த்தில் கோல்ப் விளையாட்டு மைதான‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கிருக்கும் புல்த‌ரைக்கு த‌ண்ணீர் ஊற்றும் வேலையிலும் அந்த‌ ம‌க்க‌ளே ஈடுப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

பிகினித் தீவில் நைட்ர‌ஜன் குண்டு வெடித்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து, ச‌ரியாக‌ நான்காவ‌து நாள் பிகினி என்ற‌ நீச்ச‌ல் உடை உல‌க‌ ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. ஒரு பிரெஞ்சு ஆடை அல‌ங்கார‌ நிபுண‌ர் த‌யாரித்த‌ பிகினி உடை, அப்போது உல‌கம் முழுவ‌தும் பிர‌ப‌லமாகப் பேச‌ வைக்க‌ப் ப‌ட்ட‌து.

இத‌னால் அமெரிக்க‌ இராணுவ‌த்தின் அணுகுண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. இன்று எல்லோருக்கும் பிகினி என்றால் நீச்ச‌ல் உடை தான் நினைவுக்கு வ‌ரும். யாருக்கும் அமெரிக்க‌ அணு குண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றித் தெரிய‌ வ‌ராது.

பிகினி உடைக்கும், அணுகுண்டு ப‌ரிசோத‌னைக்கும், அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்திற்கும் தொட‌ர்பிருக்கிற‌து என்று சொன்னால் இன்று யார் ந‌ம்ப‌ப் போகிறார்க‌ள்?

கலையரசன், எழுத்தாளர். ‘காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்”,  ‘ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?’,  ‘ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியும் முறையை பிள்ளைகள் கற்றனர். அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க தொடங்கிய பெற்றோர்கள் மெட்ரிக் மற்றும் ஆங்கில வழிக்கல்வி என்ற தனியார் தூண்டிலுக்கு இரையாக்கினர்.

தனியார் பள்ளி மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என தெரிந்த பல தொழிலதிபர்கள் பள்ளிக்கூடங்களை வியாபார நோக்குடன் பார்க்க ஆரம்பித்தனர். தெருவிற்கு தெரு ஒரு பள்ளி என்ற அளவிற்கு தனியார் பள்ளிகள் பெருக ஆரம்பித்தது. ஓர் அரசு பள்ளி இருக்கும்போது அடுத்த அரசு பள்ளி ஒரு குறிப்பிட்ட போதுமான இடைவெளி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உண்டு. ஆனால் இதுபோன்ற விதிமுறை தனியார் பள்ளிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை.

புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் தங்களை அடையாளப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் சமீபத்தில் எடுக்கும் ஆயுதம் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி. கல்வி முறை. பெற்றோரை கவர்வதற்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை கரக்க நாடும் புது யுக்திதான் இந்த உயர்தர கல்வி முறை என்ற விளம்பரம்.

தாங்கள் வசிக்கும் குறுநகரங்களில், பெரும்பாலான பெற்றோர் கொஞ்சமும் யோசிக்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாய் நினைத்து, பள்ளியில் மொத்தம் பத்து பிள்ளைகள்தான் இருக்கின்றன என்றாலும், நல்ல கண்கவர் கட்டிடம், வசதியான வகுப்பறை போன்றவற்றால் மயங்கி பிள்ளையின் அறிவை மழுங்கடிக்கின்றனர்.

பொதுவாக இந்த உயர்தர பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் பெரும்பாலும் அதே பகுதியில் ஆங்கில வழிக் கல்வி முறை கற்றவர்கள் அல்லது ஆங்கில வழி கல்விமுறை என்று பெயரளவில் பலகை கொண்ட பள்ளியில் பணியாற்றி இருப்பவர்கள்தான். இவர்களால் இந்த உயர்தர கல்வி முறை பாடத்திட்டத்தை நிச்சயம் செம்மையாய் நடத்த இயலாது. இவர்களுக்கு நிர்வாகமும் எந்த விதத்திலும் பயிற்சி கொடுக்க முன்வந்ததும் இல்லை. எனவே, இவர்கள் அந்தப் பாடப் புத்தகத்தில் தங்களுக்கு தெரிந்த அளவில் மட்டுமே பிள்ளைகளுக்கு நடத்துகின்றனர். அதில் மட்டுமே கேள்விகள் கேட்டு பிள்ளைகளின் தேர்ச்சி விகிதத்தை சரிகட்டிவிடுகின்றனர்.

உண்மையில் இந்த உயர்தர கல்விமுறையின் நோக்கம் நுண்ணிய சிந்தனை, கற்கும் திறனை மேம்படுத்துதல், கற்பனை வளத்தை செம்மைப்படுத்துதல் போன்றவை. ஆனால், இவை எதும் நடக்காமல் மாணவர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பத்திரமாய் வைத்து பாதுகாக்கப்படுவதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பை உயர்தர கல்விமுறையில் முடித்து இருந்தாலும்கூட எளிய போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் பிள்ளைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, சிறு – குறுநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள், முந்தைய நாள் மழைக்கு முளைத்த காளானாய் பல பல பளப்பள கட்டிடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் முதல்வர், லட்சங்களைத் தொடும் பள்ளி கட்டணம் மட்டும் தரமான கல்வியை கொடுத்துவிட முடியும் என்ற மூடநம்பிக்கையை கைவிடவேண்டும். கொஞ்சம் சிரத்தை எடுத்து தங்கள் பிள்ளைகளுக்கான கல்விக்கூடத்தை தேர்வு செய்வது பெற்றோரின் கடமை.

 

கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

கருணாநிதி தனது தொண்ணூற்று நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அது அறுபதாம் ஆண்டு வைர விழாவாக அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதல் முறையாக சமூக ஊடகங்களில் அவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவுகளை எல்லா தரப்பிலிருந்தும் காணமுடிகிறது. Hindu உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் தலையங்கமாக, கட்டுரையாக அவரைப் பாராட்டியும், அவரது குறைகளை கவனப்படுத்தியும் உன்னிப்பான பத்திகள் இன்று எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படிப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய இந்திய மற்றும் தமிழக அரசியலின் வெளிச்சத்தில் வைத்து அவரது அரசியல் உத்திகளை மதிப்பிட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியின் வாழ்க்கையில் லட்சியவாதத்துக்கு எப்போதும் இடம் இருந்தது என்பதில் தொடங்குகிறது அவரது அரசியல் இருப்பு. அதை எதார்த்தத்துடன் மிகச் சரியாக பொருத்திக்கொள்வதில் அவர் சமர்த்தர் என்பதுதான் அவரது அரசியல் வெற்றி. நிலைத்த நீடித்த சமரசங்களை உள்ளடக்கிய அரசியல் பயணம் அவருடையது. அன்றைய காலகட்டத்தில் எல்லாராலும் மிகக் கீழாக பார்க்கப்பட்ட சாதியப் பின்னணியில் இருந்து வந்தவர். இப்போது வரை, அவரை அவமதிப்பதற்கு அவரது சாதி சுட்டப்படுகிறது என்பதிலிருந்து அவர் எத்தகைய வழிகளைக் கடந்துவந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவரிடம் ‘அவமதிப்பிற்கு எதிரான மூர்க்கம்’ வெளிப்பட்டதே இல்லை. தனது சாதி ரீதியான காயங்களை அவர் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டதே இல்லை. அது அவரை முடக்கவே இல்லை என்பதை ‘ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்’ அரசியலை முன்னெடுக்கும் இளைய தலைமுறையினர் கவனிக்கவேண்டும். ஆனால், அவரிடம் அந்த மூர்க்கம் இல்லையே தவிர சாதி வேற்றுமைகளுக்கு எதிரான உறுதியான குரல் அவருடையது.

மதம் என்று வருகிறபோது, இந்தியாவில் நிலைத்த மிக முக்கியமான மதச்சார்பற்ற அரசியல் குரல் அவருடையது. இத்தனை வருடங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோதும், ஒப்பீட்டளவில் வேறு எந்த கட்சியும் கைகொள்ள முடியாத அளவுக்கு நேர்மையைக் கடைபிடித்தது திமுகதான். அதை உறுதிசெய்தவர் கருணாநிதி. நிர்வாகம் என்று பார்த்தால், அவருடையது அசுர உழைப்பு. இன்று கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் யாருக்கும் அந்த உழைப்பு மலைக்க வைக்கும் தூரத்தில் இருக்கும் ஒன்று. ஸ்டாலின் உட்பட. அதை பதவி மீதான வெறி என்றோ, அதிகாரத்தின் மீதான ஆசை என்றோ நாம் கருதிக்கொள்ளவேண்டியதில்லை. அவர் அரசியலின் மீது தீராத வேட்கை கொண்டவராக இருந்தார் என்பதே முக்கியக் காரணம். அதன் அலைக்கழிப்புகள் எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கும் மனநிலை அவருக்கு இருந்தது. பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் மற்றும் தமிழின் அருமையான இலக்கியப் பாரம்பரியத்தின் மீதான அவரது பரிச்சயத்தில் இருந்து அவர் பெற்ற உத்வேகம் அது.

அவரது கலை மீதான வேட்கையும் அத்தகையதே. வெகுமக்களிடம் தொழிற்பட்ட கலைகளின் பின்னணியில் வைத்துப்பார்த்தால் அவரது மேதைமை உச்சம் தொட்டதே எப்போதும். அதை கட்சிக்கும், கட்சியினது கொள்கைக்கும் அவர் பயன்படுத்திய விதம் முன்னுதாரணம் இல்லாதது. மிக முக்கியமாக அது வெறுப்பைப் பரப்புவதற்கு பயன்பட்டதே இல்லை. பல சமயங்களில் அவரது மோசமான சமரசங்களுக்கு முட்டுகொடுக்க தனது மொழியை அவர் லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அப்படி முட்டுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று கருதிய போனதலைமுறை அரசியல்வாதி அவர். ஆனால், அப்படி எந்த அவசியமும் இல்லை என்று மதர்ப்பாகத் திரியும் அரசியல் தலைமைகளால் நிரம்புகிறது இன்றைய நமது அரசியல். மாட்டுக்கறி அரசியல் குறித்து குழந்தை கூட படம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் நாட்டில், ‘உங்களது ட்வீட்டைப் பார்த்திருக்கிறேன்’ என்று வெளிநாட்டில் கிண்டலடித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் நமது பிரதமர். அரசியல் உறுதிக்கும், மக்களை துச்சமாக மதிக்கும் ஃபாசிசத்துக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டே வரும் காலத்தில் கருணாநிதி போன்றவர்களின் ஆகிருதிகள் இதயத்தில் இருத்திக்கொள்ளப்பட வேண்டியவை.

Karuna 75

கருணாநிதியை முன்னிட்டு நிகழ்ந்துகொண்டிருக்கும் இப்போதை ‘வைர விழா’ கொண்டாட்டமும், அதன் கூடுகையும் அரசியல்ரீதியாக பெறுமதி மிகவும் வாய்ந்தவை. நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு. கருணாநிதியின் சிறப்பே, ‘ஒற்றை அதிகாரத்துக்கு எதிரான’ அவரது அரசியல் முன்னெடுப்புகள்தான். மாநில சுயாட்சி என்பதை குறைந்த பட்சமாவது மத்திய அரசுகள் கவனத்தில் கொள்கின்றன என்றால் அத்தகைய அழுத்தத்தை இந்திய அளவில் உருவாக்கி நிறுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது. பிஜேபிக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் திமுக இப்போது செய்திருப்பது ஒரு பிரகடனம். மோடியின் காலில் விழுந்துகிடக்கும் இன்றைய அதிமுக தலைமையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்து நாம் இந்த செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘தேசிய முன்னணி’ போன்ற மாற்று அரசியல் குழு உருவாக்கத்தில் அவரது பங்கு மகத்தானது. அவருக்காக நடத்தப்படும் இந்த வைரவிழா அந்த பாதையில் ஒரு உத்வேகத்தைத் தருமெனில் இந்திய ஜனநாயகத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரதான கட்சியான காங்கிரஸ் பல மட்டங்களில் வலுவிழந்திருக்கும் சூழலில் திமுக போன்ற கட்சிகள் முன்னெடுக்கும் இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைள் மிக முக்கியமானவை. மூர்க்கமான சிந்தனையைக் கொண்ட அமைப்பு ஒன்றின் வழிகாட்டலில் நாட்டின் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரக் குவிப்பை நோக்கி அரசின் உறுப்புகள் உந்தப்படுகின்றன. அதைக் கொஞ்சமேனும் தடுப்பதற்கு நமக்கு சில பெயர்கள் வேண்டும். பெரும் மக்கள் திரளால் காதலுடன் உச்சரிக்கப்படும் பெயர்களாக அவை இருக்கவேண்டும். கருணாநிதி எனும் பெயர் இந்திய அரசியலில் அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் அப்படி ஒரு பெயர். அவரை வாழ்த்துவது நாம் அவருக்கு செய்யும் சலுகை அல்ல. நன்றியுணர்ச்சியுடன் கூடிய கடமை அது!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவர் நூல்கள்.

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி

ஏர் மகாராசன்

மகாராசன்

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்போ, மக்களோ, மொழியோ, பண்பாடோ, தொழிலோ, வாழ்வியலோ ஒரே தன்மை கொண்டவை அல்ல. தமிழக நிலப்பரப்பும் தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பரப்பும் கூட பன்மையின் இருப்பிடமாகவே இருக்கின்றது. இங்கே இருக்கிற ஒவ்வொரு சமூகக் குழுவினருக்கும் ஒரு தனித்த பண்பாட்டு அடையாளமும் இருக்கத்தான் செய்கின்றது.

பசி என்கிற உயிரியல் தேவை தான் அனைத்து உயிரினங்களின் இருப்பை உறுதி செய்கின்றது. ஒவ்வோர் உயிரினமும் தத்தமது புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தான் தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. மனித வாழ்வும் அவ்வாறு தான்.

வட்டாரம், தொழில், பொருளாதாரம், உடலியல், உளவியல், பண்பாடு, வாழ்நிலை சார்ந்து ஒவ்வொருவரும் ஒரு வகையான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாகி இருப்பது இயற்கை. அந்த வகையில், அந்த உணவுப் பழக்கம் சைவம் எனும் காய்கறி உணவாக இருக்கலாம் அல்லது அசைவம் என்கிற புலால் கறி உணவாக இருக்கலாம். புலால் கறியிலேயே கோழியாகவோ ஆடாகவோ மாடாகவோ மீனாகவோ கூட இருக்கலாம்.

ஒருவரின் உணவுப் பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்று. மனிதரில் மேல் கீழ் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு உயர்த்திக் கொண்ட சாதிகள், மதங்கள் மேலானதாகவும், அச்சாதிய, மத வட்டத்திற்கு வெளியிலிருக்கிற அனைத்தும் கீழான சாதிகளாகவும் மதங்களாகவும் கருதப்படுகிற பொதுப்புத்தி எனும் மேலாதிக்கச் சிந்தனை தான் வெகுகாலமாகத் தம் அதிகாரத்தைப் பரப்பிக் கொண்டு வந்திருக்கிறது. அத்தகைய காவி பயங்கரவாதம் தான் பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் விலங்கு வதைத் தடுப்பு குறித்த இந்திய அரசின் அறிவிப்பு.

விலங்கு வதை இருக்கிறது எனச் சொல்லித்தான் ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பல வகைகளில் முயன்று பார்த்துத் தோற்றுப் போனவர்கள் தான், அதே விலங்கு வதை எனும் பேரில் மாடு உள்ளிட்ட சில விலங்குகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள்.

ஏறு தழுவுதல் தமிழ் இனத்தின் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று. அதே போல கோழி ஆடு மீன் போன்ற இறைச்சி உணவும் தமிழ் இனத்தின் உணவுப் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று என்பதைப் போலவே, மாட்டிறைச்சியும் தமிழர் உணவுப் பண்பாடுகளுள் ஒன்றே.

தமிழர் பண்பாட்டு மரபு பன்மைப் பண்பாடுகளின் தொகுப்பு தான். இதில் உயர்ந்தவை எதுவுமில்லை, தாழ்ந்தவை எதுவுமில்லை.

மாடு தழுவுதல் அவரவர் உரிமை. உணவைத் தெரிவு செய்வதும் அவரவர் உரிமை. மாட்டுக்கறி உண்பதும் அவரவர் உரிமை. இந்த உரிமை பறிக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் மேலாதிக்கமன்றி வேறில்லை.

தமிழர்களாய் அணி திரளத் தடையாய் இருக்கும் சாதிய முரண்களைக் கூர் தீட்டிப் பிரித்தாளுவதைப் போலவே, தமிழர்களிடம் பண்பாட்டுப் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராகத் தமிழர்களாய் இணைய வேண்டியது கட்டாயம்.

ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்த போது அது பண்பாட்டு மேலாதிக்கமே. இன்று மாட்டிறைச்சிக்கான தடையும் பண்பாட்டு மேலாதிக்கமே.

மாட்டுக்கறி விலக்கு உடையவர்களும், மாட்டுக்கறிப் பழக்கம் உடையவர்களும் இணைய வேண்டும்.

மாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்குப் போராடியபோது மாட்டுக்கும் எனக்கும் தொடர்பில்லை என ஒதுங்கி இருந்தவர்களைப் போல, மாட்டுக்கறி உணவுப் பழக்கத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என எவரும் ஒதுங்கி இருப்பதும் கூட பண்பாட்டு மேலாதிக்கத்திற்குத் துணை போவதற்குச் சமம்.

மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் மீதும் பாய்ந்தாலும் அதற்கு எதிராக நிற்பதே நேர்மையான மனிதராக இருக்க முடியும்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை ஆதரிப்பதற்காக மாட்டுக்கறி உண்டாக வேண்டும் என்பதில்லை. எனக்கு மாட்டுக்கறி உணவுப் பழக்கமில்லை. அதே வேளையில், மாட்டுக்கறி உண்போரின் உணவுப் பண்பாட்டை நான் ஆதரிக்கவே செய்கிறேன். இது பண்பாட்டை மதிப்பது மட்டுமல்ல, மனிதர்களை மதிப்பதும் அவர்களது உரிமைகளை மதிப்பதும் ஆகும்.

பண்பாட்டுப் பிளவுகளுக்கான சூழ்ச்சி வலைகளை முறியடிக்கப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சியாய் அணி திரள்வோம்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று சான்று தருவது குறிப்பிடத்தக்கது.

“வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309

ஓவியம்: Ravi Palette

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். மீபத்தில் வெளியான இவருடைய நூல் ஏறு தழுவுதல்.

‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே!

ராஜசங்கீதன்

ராஜசங்கீதன்

லென்ஸ் படம் பார்த்துவிட்டேன். முக்கியமான பிரச்சனையைத்தான் கையாண்டிருக்கிறது. ஆனால் நல்ல படமா என கேட்டால், ஆமென சொல்வதில் பல தயக்கங்கள் இருக்கின்றன.
அவை:

  1. பெண்ணே பாதிக்கப்பட்டாலும் ஆண் பாதிக்கப்பட்டதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சமாச்சாரமாக மட்டும் இப்பிரச்சினையை சமூகம் அணுகுவதால், பெண்ணின் கோணத்தில் சொல்லப்படுவதே சரியாக இருந்திருக்க முடியும். நடக்கவில்லை.

  2. ஏற்க கஷ்டமாக இருந்தாலும் நீலப்படம் பார்த்தல் என்பது இன்றைய யதார்த்தமாக மாறிவிட்டது. இரு பாலினத்தாரும் பார்க்கின்றனர். கலவியை தூக்கி கொண்டு போய் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்ட சமூகத்தில், நீலப்படம் தவறு என்ற வாதத்தை தாண்டி விட்டோம் என்பதே நடைமுறை யதார்த்தம்.

  3. அதற்காக பெண்களுக்கு தெரியாமல் நீலப்படம் எடுத்து வாழ்க்கையை நாசமாக்கலாமா என கேட்கலாம். நீலப்படமோ புகைப்படமோ வெளிவந்தாலும் பிரச்சினை ஏதும் கிடையாது என்ற சிந்தனையைத்தான் உருவாக்க வேண்டும். தன் அந்தரங்க காட்சி வெளியாகி விட்டதே என குற்றவுணர்ச்சியில் பெண் சாவது எல்லாம் என்ன பார்வை என தெரியவில்லை. அதில் அவளின் குற்றம் என்ன இருக்கிறது? இல்லை, கலவியை குற்றமாக பார்க்கும் சமூகத்தைத்தான் விரும்பி அடையாளப்படுத்துகிறோமா? அதனால்தான் இக்கதை பெண்ணின் பார்வையில் அணுகப்பட்டிருக்க வேண்டும் என்றேன்.

  4. நீலப்படம், பெண்ணுக்கு அவமானம் என்றெல்லாம் பேசும் படத்தை எடுக்கும் இயக்குநர், படத்திலேயே அதைத்தான் செய்திருக்கிறார். கருப்பு மச்சத்துக்கு க்ளோசப், முதலிரவு என்ற பெயரில் suggestive கலவியை பெண் வழி மட்டுமே காட்டி, காம இச்சை உணர்வுகளை exploit செய்தல் எல்லாம் எந்த கணக்கில் சேர்த்தி?

  5. ‘இது ஒரு கதை. கதையாக பாருங்கள். நீங்கள் சொல்வது போலவெல்லாம் படம் எடுக்க முடியுமா’ என கேட்கலாம். முடியாதுதான். தமிழ்சினிமாவின் சாபம் ஒன்று இருக்கிறது. முக்கியமான விஷயத்தை எடுத்து கொண்டு, வியாபாரத்துக்காக அதை மொத்தமும் நீர்த்து போக செய்து விடுவார்கள். இதிலும் அது நேர்ந்திருக்கிறது என்ற வேதனைதான் பதிவுக்கு காரணம். இது வெறும் படமே. இது பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே. பிரச்சினை அதனளவில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டிய வெளி இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது என சொல்லும் முனைப்பில்தான் இந்த பதிவு.

  6. முடிவின் முடிவாக பாலியல் விழிப்புணர்வு நம் சமூகத்தில் இல்லை. பெண்ணுடல் சார்ந்த அரசியல் பற்றிய புரிதலும் இல்லை. இவற்றை பற்றிய சிந்தனை வறட்சி மட்டுமே இயக்குநர்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. ஆகவே, இவற்றை சரியாக பேசும் படங்களை எதிர்நோக்கி இன்னமுமே நாங்கள் காத்திருக்கிறோம்.

ராஜசங்கீதன், ஊடகவியலாளர்.

வீடியோ: “பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” : Tamil studio Arun interview

பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

தமிழக அரசியல் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பத்மவியூகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் இன்னும் அவர்கள் பிரம்மாஸ்திரத்தை வீசவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் மொழிகளிலே உணர்த்தி விடுகிறார்கள். சுவாரசியமாகச் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் சொல்லி அடிக்கிற கில்லிகள்.

அரசு எந்திரத்தை ஏற்கனவே கைக்குள் போட்டாகி விட்டது. ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன? கொந்தளிப்பான கடலில் கப்பலின் ஹேண்டில் பாரை அரசியல் களம் பக்கமும் சீக்கிரமாகவே திருப்புவார்கள் பாருங்கள். இன்றைய தேதியில் ஒருசாரரால் அவர்கள் விரும்பப்படவும் துவங்கியிருக்கின்றனர். கோவையிலிருந்து அரசியல் ஆசையுடைய கிறிஸ்துவத் தம்பி அழைத்து, அவர்களுடைய கட்சியின் சிறுபான்மை பிரிவில் போஸ்டிங் வாங்கித்தர முடியுமா? என போன வாரம்தான் கேட்டான்.

தகவலுக்காகச் சொல்கிறேன். அவர் அரசியல் களத்தில் வீச நினைக்கிற பிரம்மாஸ்த்திரம், ரோலக்ஸ் வாட்ச் நாவல் நாயகனைப் போல ஒரு புரோக்கரின் டைரி. சேகர் ரெட்டி என்கிற குத்தகை மாபியாவின் டைரி. சகலத்தையும் குத்தகைக்கு எடுப்பார்கள் என்கிற நிலையில் மணலெல்லாம் ஒரு மேட்டரா என்ன? அதில் சற்றேறக்குறைய எல்லா கட்சிகளும் மாட்டிக் கொள்ளும். அவர்கள் பெரிய கட்சியாக இருந்தால் அவர்களும் மாட்டிக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை இருக்கக்கூடச் செய்யலாம் யார் கண்டது?

இந்த மாஃபியாக்களின் வலைப் பின்னல் அப்படி. ரெண்டாம் நம்பர் தொழில்தான் என்ற போதிலும் அதிலும் ஒரு நேர்மை உண்டு. சொன்னபடி கமிஷனை எந்த பார்மட்டிலும் தந்து விடுவார்கள். எல்லா கட்சிகளுக்கும் வஞ்சகம் இல்லாமல் தந்து விடுவார்கள். நாலு பேரை அழைத்துக் கொண்டு அவர்கள் தொழில் பார்க்கும் ஏரியாவில், சும்மா பீடி குடிக்க வந்தோம்ணே என்று சொன்னால்கூட தலைக்கு நூறு ரூபாயை பாக்கெட்டில் சொருகி அனுப்புவார்கள்.

காட்டுன்னு சொன்னால் நம்ம ஆட்கள்தான் காட்டு காட்டு என்று காட்டி விடுவார்களே? எல்லா கட்சிகளும் லிஸ்ட்டில் உண்டு. தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிகையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் சில ரகசியமாக வாங்கியிருக்கிறார்கள். மக்கள் சில இடங்களில் இன்னமும் மாதாமாதம் மணல் மாபியாக்களிடம் பணம் வாங்குகிறார்கள். கோவில் கும்பாபிஷேம் என தலையைச் சொறிந்து கொண்டு போய் நிற்பார்கள் நேர்மையின் சிகரங்கள்.

இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. நாங்கள் மட்டும்தான் நேர்மையின் சிகரங்கள் என்று சொல்லி, அந்த டைரியை வைத்து ஒரு புயல் வீசக்கூடும். சாதாரணமாக நினைக்காதீர்கள். ஒரு அரசாங்க அமைப்பிடம் எழுத்துப் பூர்வமான ஆவணம் சிக்குவது சாதாரண காரியம் அல்ல. சிக்கிக் கொள்வார்கள் சிந்துபாத்கள். உன் கட்சி மாவட்டச் செயலாளர், என் கட்சி முதன்மைச் செயலாளர் என்று வந்தால் எந்த முகத்தைத் தூக்கிக் கொண்டு ஊளையிடுவோம் சொல்லுங்கள். ஏற்கனவே நீதித் துறை நிர்வாக விஷயங்களில் தலையிட ஆரம்பித்தாகி விட்டது.

அரசியல், சட்டம் என அந்த ஒரு விஷயத்தில் தமிழக கட்சிகளுக்கு எதிராகவே இருக்கப் போகிறது என்று தோன்றுகிறது. நான் சொல்லவில்லை. யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது. ஏற்கனவே தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டிய பலமான எதிர்க்கட்சி தடுப்பு ஆட்டம் ஆடுகிறதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். ஆக அவர்கள் காட்டில் அடை மழை.

இந்தக் குறிப்பிற்கு தலைப்பு வைத்தால் இப்படித்தான் வைப்பேன். பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

வீடியோ : புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்

அ.சவுந்தரராசன்

போக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம் துண்டுப் பிரசுரத்தை மக்களுக்கு வழங்கினார்கள். பொதுமக்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு பேராதரவு தந்தனர்.

கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள் அரசும், அரசு அதிகாரிகளுந்தான். ஆனால் போக்குவரத்து ஊழியர்களை சிலர் வசைபாடுகின்றனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இதில் சேர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில்குமரய்யா என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் எம்.வி. முரளி தரன், என். சேஷசாயி ஆகியோர் ‘‘போக்குவரத்து ஊழியர்கள் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பாவிட்டால் அவர்கள் மேல் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர். இது வரம்பு மீறிய செயல். நீதிபதிகள் தங்களை அனைத்திற்கும் மேம்பட்டவர்களாக கருதிக் கொள்வதன்வெளிப்பாடு இது. நீதிபதிகள் சட்டத்திற் கும், இயற்கை நீதிக்கும், சாதாரண மனித இயல்பிற்கும் விரோதமாக செயல்பட்டுள் ளனர்.

உண்மை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் போது அவர் சேமித்த பணம் ரூ. 15 லட்சத்திற்கு மேல் ரூ. 20 லட்சம் வரை கணக்கில் இருக்கும். அதிகபட்சம் ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் இந்தப் பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம். போக்குவரத்துக் கழகங்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தொழிலாளர்களின் பணத்தை 7 ஆண்டுகளாக வழங்க வில்லை.

ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகை மட்டும் 1700 கோடி ரூபாய். இப்போது பணியாற்றுவோரிடமிருந்து வைப்பு நிதிக்காகவும், காப்பீட்டிற்காகவும், கடன் சொசைட்டிக்காகவும் பிடித்த பணத்தை உரிய இடத்தில் செலுத்தாமல் போக்குவரத்து கழகங்களே பயன்படுத்திக் கொண்ட பணம் சுமார் 4500 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் வட்டிக்கு கடன்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் வாடிக் கொண்டிருக்கின்றன.

அரசே காரணம்

இந்த இழிநிலைக்கு முடிவு கட்டுங்கள் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. கழகங்களின் நட்டத்தை ஈடுகட்டவும் அரசு முன்வரவில்லை. புதியஒப்பந்தம் பேசவும் மறுத்து இழுத்தடித்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்த அறிவிப்பை பிப்ரவரி மாதமே வழங்கிவிட்டனர். அதற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேல் பொறுமையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் யார் இருப்பார்கள்?

கட்டப் பஞ்சாயத்து

உழைத்த பணத்தை கையாடிய வர்கள் குற்றவாளிகளா? பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் தொழிலாளர்கள் குற்றவாளிகளா? நீதிபதிகள் யாருக்கு ஆதரவு தருகிறார் கள்? இதே உயர்நீதிமன்றத்தில் இந்தப் பணத்தைக் கொடுக்க உத்தரவிடுமாறு வழக்குகள் போடப்பட்டன. பணிக் கொடையை 30 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. நீதிபதிகள் 12 தவணையில் இதைக் கொடுத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள். நீதிபதிகளுக்கு பணிக்கொடை சட்டம் தெரியாது என்பதுதான் இதன் பொருள். அல்லது தெரிந்தே அரசிற்கு துணை நிற்கிறார்கள் என்று பொருள். நீதிபதிகள் நடு நிலையோடு தீர்ப்பு வழங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது எப்படி சரியாகும்? தொழிலாளிக்கு உரிய பணத்தை 12 தவணையில் பெற்றுக் கொள் என்று உத்தரவு போட்டால் நீதிபதிகள் கையாடலுக்கு உடந்தை என்றே அர்த்தம்.

நீதிபதிகள் தவணையில் பெறுவார்களா?

இதே நீதிபதிகள் ஓய்வு பெற்றுப் போகும் போது பணிக்கொடையை, லீவு சம்பளத்தை அந்தத் தேதியிலேயே வாங்கிச் செல்கிறார்கள். இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா? தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?

ஒரு தலைப்பட்சம்

தீர்ப்பு வழங்கும் முன்பு எங்கள் கருத்தையே கேட்காமல் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடுவது சட்டவிரோதம். எங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வாய்ப்பே தராமல் தீர்ப்பு வழங்கினால் அது சர்வாதிகாரம். அத்தோடு எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்குகின்றனர். இவர்கள் நீதிபதிகளா அல்லது அரசின் ஆலோசகர்களா? நடுநிலை எங்கே இருக்கிறது? இதில் நீதிபதிகளுக்கு என்ன ஆதாயம்?

அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதே தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு. வேலை நிறுத்த உரிமை சட்ட உரிமை. வெள்ளைக்காரன் காலத்திலேயே நிலைநாட்டப்பட்ட உரிமை. மாவீரன் வ.உ.சி.யின் தொழிற் சங்க போராட்டத்தை ஒடுக்க வெள்ளை அரசு கையாண்ட அடக்கு முறைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

வேலைநிறுத்த உரிமையை, போராடும் உரிமையை பறிக்கும் முறையில்ஒரு தலைப்பட்சமான திடீர் தீர்ப்புகளை வழங்குவது நீதிபதிகளின் வரம்பு மீறிய செயல். இதை பொது சமூகம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும், நீதித்துறையும் நேர்ப்பட வேண்டும்.

அ.சவுந்தரராசன், சிஐடியு தமிழ்மாநிலக் குழு தலைவர்.
நன்றி: தீக்கதிர்

Watch video: Police misbehaving protesting women in Chennai 

இப்போது பரிணாமம் நிகழவில்லையா?

அருண் பகத்

அருண் பகத்

எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாம கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும் , உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
உயிரின வளர்ச்சி ஏணிப்படி குறித்து பரிணாமக் கோட்பாடு சொல்வது என்னவென்றால்..
ஒற்றை செல் உயிர்களிலிருந்து புழு வகை உயிர்கள் தோன்றின..
புழு வகை உயிர்களிலிருந்து மீன்கள் தோன்றின..
மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் தோன்றின..
ஊர்வன வகைகளில் ஒரு பிரிவு பாலூட்டிகளாக பரிணாமம் அடைந்தன..
பாலூட்டிகளில் ஒரு பிரிவு குரங்குகளாக பரிணாமம் அடைந்து, அந்தக் குரங்கில் ஒரு பிரிவிலிருந்து மனிதன் பரிணமித்தான்.
என்று கூறுகிறது டார்வினின் பரிணாமத் தத்துவம்.

ஆனால், பரிணாமம் என்ற ஒன்று நடைபெறவே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு.அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி அப்படி ஒரு உயிர் வகைகளிலிருந்து தான் மற்றொன்று தோன்றியதென்றால்..இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? அது ஏன் நடைபெறவில்லை என்ற அவர்களது கேள்வி பரிசீலிக்கப்பட்டு பதில் கூறப்பட வேண்டியதே..

அந்த கேள்விக்கு பதிலை இயற்கையே கூறி விட்டது. இதோ நிலத்திற்கு வந்து வாழ முயற்சிக்கும் இந்த மீன் தான் அந்தக் கேள்விக்கான விடை, இந்த மீனால் நிலத்திற்கு வந்து சுவாசிக்க முடிகிறது, தனது துடுப்புகளின் உதவியோடு நிலத்தில் நடைபோட முடிகிறது, நிலத்தில் வெகு நேரம் இருக்க முடிகிறது. இந்த மீனின் சந்ததிகள் இபப்டி நிலத்திற்கு வருவதை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தால், அவைகள் அடுத்தக் கட்டமாக amphipians ஆக பரிணாமம் அடையும். அதாவது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினமாக இந்த மீனின் சந்ததிகள் பரிணாமம் அடையும். அதற்கு அடுத்தக் கட்டமாக அவைகள் ஊர்வனவாக பரிணாமம் அடையும். அவைகளின் துடுப்புகள் கால்களாக மாறும், பின் துடுப்பு வாலாக மாறும். பல மில்லியன் வருடங்களுக்கு முன் இது தான் நடந்தது.

ஆனால், இங்கு நாம் இன்னொரு கோணத்திலும் பேச வேண்டும்.. இந்த மீன் amphipians ஆகவோ, ஊர்வனவாகவோ பரிணாமம் அடையாமலும் போகலாம். ஏனெனில், பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நிலத்திற்கு புலம் பெயர்ந்த மீன்கள் நிலத்தில் சுதந்திரமாக வளர ஆரம்பித்தன, அப்போது நிலத்தில் தாவரங்களைத் தவிர வேறு உயிர்கள் இருந்திருக்கவில்லை.

ஆனால், தற்போது இந்த மீன்கள் நிலத்தில் வாழ முயற்சித்து, நிலத்தில் போதிய வலிமை பெறும் முன்னரே பாலூட்டிகளால் கொல்லப்படலாம், ஊர்வன வகைகளால் கொல்லப்படலாம், இதனையடுத்து இதன் அடுத்த சந்திகள் நிலத்திற்கு வரும் முயற்சியை கைவிட்டு விடலாம்.பல மில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த பரிணாம நிகழ்ச்சி தற்போது ஏன் நடைபெறுவதில்லை என இப்போது புரிகிறதா, ஆம், தற்போது நிலம் amphipiansகளாலும், ஊர்வன வகைகளாலும், பாலூட்டிகளாலும் நிரம்பியிருக்கிறது . இச்சூழலில், சில மீன்களால் நிலத்திற்கு வந்து பரிணாமம் அடைய முடியாது. கடலுக்குள் இருக்கும் புழு வகைகளால் தற்போது ஏன் மீன்களாக பரிணாமம் அடைய முடிவதில்லை என்றக் கேள்விக்கும் இது தான் பதில்.

சரி, அப்படியென்றால் ஊர்வன வகைகளிலிருந்து பாலூட்டிகள் பரிணாமம் அடைவதற்கு என்ன தடை அது ஏன் நிகழவில்லை என்றக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கான விடை என்னவென்றால்.. ஊர்வன வகைகளில் டைனோசார்கள் தோன்றி, அவைகள் பல்வேறு விதமான டைனோசார்களாக வளர்ச்சியடைந்து, அதில் ஒரு வகையிலிருந்து தான் பாலுட்டிகள் தோன்றின. டைனோசார் இனம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில், இனி ஊர்வன வகைகளிலிருந்து பாலூட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. அடுத்ததாக ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது.

சரி, தற்போது ஏன் குரங்கு பிரிவில் ஏதேனுமொன்று , மனிதனாக பரிணாமம் அடைவதில்லை, அதில் என்னத் தடை? என்று கேட்கிறார்கள் பரிணாம மறுப்பாளர்கள்.

அதற்கான விடை என்னவெனில்..
ஒரு குரங்கு பிரிவிலிருந்து, மனிதன் பரிணாமம் அடைந்தே ஆக வேண்டுமென்பது.. இயற்கையின் நியதியோ, விருப்பமோ அல்ல. அது ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து என்றுக் கூட சொல்லலாம். கிழக்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் மரத்திலிருந்து தரையிறங்கிய ஒரு குரங்கு பிரிவு காலப் போக்கில் மனிதனாக பரிணாமம் அடைந்தது. இதே விபத்து, இதே தற்செயல் நிகழ்வு மீண்டும் நடந்து தான் ஆக வேண்டுமென்பதில்லை, ஏனெனில் அது ஒரு நியதி அல்ல, அது ஒரு தற்செயல் நிகழ்வு.

மற்ற உயிர்கள் தற்போது ஏன் பரிணாமம் அடைவதில்லை என்றக் கேள்விக்கும் இந்த பதில் பொருந்தும். ஆம், பரிணாமம் என்பது முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட நியதி அல்ல. ஒவ்வொரு உயிரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, அது வேறு திறன்களை வளர்த்துக் கொண்டு புதிய உயிராக மாறுகிறது. இது தான் பரிணாமம்.

தற்போதும் பரிணாமம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது, அது முன்னர் நடந்த அதே பாதையில் தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வேறு வேறு விதங்களில் அனைத்து உயிர்களும் பரிணாமம் அடைந்துக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்களும் பரிணாமம் அடைந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சுமார் 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய நமது ஆதி பாட்டன்களும், பாட்டிகளும்.. 7 அடி உயரமும், அசாத்திய உடல் பலமும் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், நமது உயரம் சராசரியாக ஐந்தரை அடி முதல் 6 அடி வரை இருக்கிறது, அவர்களுக்கு இருந்த உடல் பலம் நமக்கு இல்லை.

இது தான் பரிணாமம், ஏன் இந்த மாற்றம்? ஏனெனில் 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களைப் போல் ஓநாய்களுடனும் சிறுத்தைப் புலிகளுடனும் மம்மூத் யானைகளுடனும் சண்டை போட வேண்டிய அவசியம் நமக்கில்லை. ஆனால், நமது ஆதி பாட்டன்களையும் பாட்டிகளையும் விட நமது மூளைத் திறன் மிகவும் வளர்ச்சியடைந்தது. ஏனெனில், இப்போது நமக்கு அறிவுத் திறனே மிக அவசியம். ஆம்… தேவையிலிருந்து திறனும் அந்த திறனினால் உயிரினத் தன்மையில் மாற்றமும் ஏற்படுகிறது. இதுவே பரிணாமம்.

அருண் பகத், ஆவணப்பட இயக்குநர்.

Video watch: Home Garden how prepare the soil before planting? Prof. Sultan Ahmed Ismail

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் ‘வான்னா க்ரை’ (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.

சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த ‘வான்னா க்ரை’ ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும். தகவல்களை மீண்டும் பெறுவதற்காகப் பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரான்சம்வேர் என்றால் என்ன?

கணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது.

இ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது. மீண்டும் கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ரான்சம்வேர் எச்சரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் மிரட்டுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, செலுத்த வேண்டிய தொகையானது இரட்டிப்பாகும்.

பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இதன் காரணமாகவே, ஹேக்கர்கள் பொதுவாக ரான்சம்வேர் மூலம் தாக்குதல் ஏற்படுத்தும்போது, பிட் காயின் மூலமாகவே பணத்தைப் பெறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்பது தான் ரான்சம்வேர்.

பாதுகாப்பு வழிமுறைகள் :

இ-மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இதே போல கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது. ‘வான்னா க்ரை’ போன்ற ரான்சம்வேர் தாக்குதல் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அப்டேட் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ரான்சம்வேர் கணினியைத் தாக்கி, தகவல்களை லாக் செய்தால் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணம் செலுத்தினாலும் கூட தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மெயில்களில் வரும் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்து திறப்பதற்கு முன்பும் ஸ்கேன் செய்வது அவசியம்.
உங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. ஏனெனில், = கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.

முன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல்துறையின் சைபர்கிரைம் தடுப்புப் பிரிவு, இன்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.

இந்தியாவிலுள்ள கணினிகளில், ‘வான்னா க்ரை’ ரான்சம்வேர் விரைந்து பரவிவருவதால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.கேரளாவில் சில இடங்களில் பாதிப்பு என செய்திகள் வந்துள்ளன. “இந்தியாவில் அச்சப்பட வேண்டாம் ” என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர்.

காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை பார்ப்பதை எந்த விதத்திலும் உறுத்தாதவாறு அலட்சியம் நிறைந்தவர்களாய் பெற்றோர் மாறி வருகிறோம்.

தமிழ் சினிமாவில் மலிந்து போன காமெடி காட்சிகள் எல்லாம் முழுநேர நிகழ்ச்சியாக காமெடி சேனல்களில் வருகின்றன. அதில் வரும் டயலாக், குழந்தைகளுக்கு அத்துப்பிடி. ஒரு விஷயத்தை திரும்பப் திரும்ப பார்க்கும்போது அது நம் மனதில் வெகு இயல்பான நிகழ்வாய் பதிந்துவிடும். அதனால்தான் இன்றும் பல வீடுகளில் வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் பாலியல் தொழிலாளிகளிடம் போய் அடிவாங்கும் கட்சியை ரசித்து பிள்ளைகளோடு சேர்ந்து சிரிக்கிறோம்.

பிள்ளைகளின் இசைத் திறமையை வெளிப்படுத்த பல தனியார் சேனல்கள் நீ நான் என போட்டிப் போட்டு தமிழகத்தின் குரல் தேடல் என்று விளம்பரத்துடன் வரிந்துகட்டி நிற்கின்றன. பிள்ளைகளைப் பாடாய்படுத்தித் தயார்படுத்தும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் மழலை மாறாத குழந்தைகள் பாடும் இசை வரிகளை கவனிக்க மறந்து விடுகின்றனர். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது, “மே மாதம் தோண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே” என்ற பாடலை வீட்டிற்குள் பாடிக்கொண்டு இருந்தபோது, துடைப்பத்தால் என் அம்மாவிடம் அடி வாங்கியது. “என்ன கண்றாவி பாட்டு இது?” என்று அம்மா உதைத்தபோது, “சினிமா பாட்டுதான்” என்று வீறுகொண்டு கோபப்பட்டேன்.

இன்று அதே பருவ வயதில் இருக்கும் என் மகள், நான் வீட்டிற்குள் முணுமுணுக்கும் “ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்… பெண்ணில் உள்ள ஆணை கொஞ்சம்… கொஞ்ச சொல்லி, கொஞ்ச சொல்லி யாசித்தோம்” என்ற பாடல் வரிகளை அடிக்கடி கேட்டு, அவள் வயதில் அவள் பாடும்போது அது அருவருப்பாய் இருப்பதை உணர்ந்தேன். இன்று மேடைகளில் இசைப் போட்டியில் “நான் முத்தம் தின்பவள்” என்று ஆறு வயது குழந்தை பாட்டுக்கு ஏற்றார் போல் அரைகுறை ஆடையுடன் பாடும்போது, அதை கைத்தட்டி ரசிக்கும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, இப்படி குறுக்கு வழியில் குழந்தையை பிரபலம் ஆக்கி என்ன சாதிக்க போகிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது.

குழந்தைகளுக்கான இன்னொரு நிகழ்ச்சியில் நான்கு பிள்ளைகளை பிடித்து ஒய்யாரமான சேரில் அமர்த்தி, “உங்க அம்மா, அப்பாவை எப்படி அடிப்பாங்க? உங்க அப்பா, உங்க அம்மாவை எப்படி கொஞ்சுவாங்க?” என்று குழந்தைகள் யோசிக்க வேண்டியது இல்லாத கேள்விகளை கேட்கின்றனர். அந்த மழலைகள் மாறி மாறி சொல்லும் பதில்களுக்கு மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரிக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே தேவையற்ற மனமுதிர்ச்சி அடைவதற்கு நாமே அத்தனை வேலைகளையும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது.

இன்னும் ஒரு சேனலின் குழந்தைகள் பங்குபெறும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையிடம் கேட்கும் கேள்விக்கு, பெற்றோரும் குழந்தையும் ஒரே பதில் சொல்லும்போது மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அதில் அம்மாவிடம் ஒரு கேள்வி: “உங்கள் குழந்தை கோபம் வந்தவுடன் என்ன செய்வாள்?” அந்த அம்மாவின் பதில்: “எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பாள்.”

இதைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், இதே கேள்வி அந்தக் குழந்தையிடம் கேட்கப்பட்டது. “கோபம் வரும்போது என்ன செய்வீங்க?”

“எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பேன்” என்று அந்தக் குழந்தைச் சொன்னதும் ஒரே கரகோஷம்.

“முழு மதிப்பெண்” என்று சொல்கிறார் தொகுப்பாளர்.

உண்மையில் அந்தக் குழந்தை தான் கோபத்தில் தூக்கிப்போட்டு உடைப்பதை ‘சரி’ என்று நியாயப்படுத்துவது போல இருந்தது, அந்த கரகோஷம். இனி என்று யார் புரியவைப்பார்கள் அந்தக் குழந்தைக்கு, “கோபத்தில் உடைப்பது தவறான பழக்கம்” என்று.

இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தைகள் நடிப்பு திறமை, காமெடித் திறமையை வெளிப்படுத்த என புதிது புதிதாய் முளைக்கும் நிகழ்ச்சியில் கைத்தட்டலும் பரிசுகளும் வாங்க வேண்டும் என்று அவர்களுக்குள் வயதிற்கு மீறிய விஷயங்களை உள்ளே திணிப்பதும், அதைக் குழந்தைகள் சர்வ சாதாரணமாக மேடையில் நடித்துக் காட்டுவதுமான அவலங்கள் அரங்கேறுகின்றன.

“பிள்ளைகள் முன்பு சண்டைப் போடாதீர்கள். அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும்” என்று பெற்றோரிடம் உளவியல் நிபுணர்கள் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே நிகழ்ச்சியிலோ குழந்தைகள் அப்பா – அம்மா வேஷம் போட்டு மேடையில் சண்டை போடுவதும், மாமியாரை திட்டுவதும், பொருந்தாத காதல் பற்றி பேசுவதும் என சமூகத்தில் குழந்தைகள் கண்ணுக்கு மறைக்கப்பட வேண்டிய அத்தனை அசிங்கங்களுக்கும் வசனம் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யவைத்து நடிக்கவைத்து ரசிக்கும் பெற்றோர்களை என்ன சொல்ல?

இப்போது உணவில் பெரும் விழிப்புணர்வு புரட்சி ஒன்று ஏற்பட்டு வருகிறது. பிராய்லர் கோழியை தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு குறைந்த நாளில் நல்ல விலைபோக கொடுக்கப்படும் தேவையற்ற ஊசிகள், மருந்துகள் மற்றும் எடையைக் கூட்டும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.

உண்மையில் நாமும் நம் குழந்தைகளை இப்படி தொலைக்காட்சி சேனல்களுக்கு தீனிபோட்டு, குறுகிய காலத்தில் பெயர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன், தேவை இல்லாத வயதிற்கு மீறிய விஷயங்களை திணித்து ப்ராய்லர் கோழிகளாய்தான் குழந்தைகளை வளர்க்கிறோம். டிஆர்பி மோகம் கொண்ட டிவி சேனல்களின் வதைமுகாம்களின் நம் பிள்ளைகளை அடைக்கிறோம்.

கே.ஏ. பத்மஜா, கட்டுரையாளர்.

நீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஒரு பிரச்சினையை சரியான விதத்தில் அணுக முடியாவிட்டாலும் தவறான விதத்தில் அணுகாமல் அமைதியாக இருந்தாலே பாதி தீர்வு கிடைத்துவிடும். நீட் விவகாரம் இதற்கு சரியான உதாரணம்.

அச்சு, காட்சி ஊடகங்களும் மற்றும் இணையமும் தேர்வு மையங்களில் சட்டையை வெட்டியதையும், தோடு வளையலைக் கழட்டியதையுமே தலையாய பிரச்சினையாக உணர்ச்சிப்பெருக்கோடு எழுதி உண்மையான ஆபத்து எதுவென்பதை வழக்கம்போல இருட்டடிப்பு செய்துவிட்டன.

மீதி இருப்பவர்களும் நீட் தேர்வை ஏழை, கிராம, அரசு பள்ளி மாணவர்களுக்கான பாதிப்பாக குறிப்பிடுகின்றனர். அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பினும், நீட்டுக்கு முன்பான மருத்துவ மாணவர் சேர்க்கையில் எத்தனை சதம் அத்தகைய மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பதையும் பார்க்க வேண்டும். புள்ளி விவரங்கள் 5% க்கும் குறைவு என்கின்றன. ஆக இந்த நீட்டால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மீதமுள்ள 95% நகர்ப்புற, தனியார் பள்ளி மாணவர்கள் என்று கருத இடமிருக்கிறது.

அவர்கள் ஏன் நீட் தேர்வு குறித்து அஞ்சவேண்டும்?அவர்கள்தான் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட நூறு சதவிகித மதிப்பெண் எடுக்கிறார்களே? பிறகு என்னதான் பிரச்சினை? நாமக்கல் பள்ளிகளைப்போல, கல்வியை ஓட்டப்பந்தயத்திற்கு முன்பு கொடுக்கப்படும் ஊக்கமருந்துபோல கொடுத்து, +1 பாடங்களை நடத்தாமல் +2 பாடத்தை மட்டுமே இரண்டு வருடங்களுக்கு உருவேற்றி எந்திரங்களைப் போல வெளித்தள்ளப்படும் மாணவர்களின் உண்மையான திறன் குறித்த கவலை அது.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது நமது மதிப்பீட்டு முறைகள் பொருத்தமற்றவை என்பதே. பதினொன்றாம் வகுப்பு பாடங்களைப் புறக்கணித்துவிட்டு செல்வது உண்மையில் கல்வி முறைக்கு எதிரான செயல்பாடு. இந்த நீட் மாத்திரம் அல்ல, இதற்கு முன்பே competitive தேர்வுகளில் நாம் உருவாக்கும் மாணவர்கள் சோபிப்பதில்லை என்பது விவாதிக்கப்படுகிறதுதான்.

இது பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. இதை சரி செய்துவிடவும் முடியும். மேலும் +1 க்கும் பொதுத்தேர்வு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த நீட்டின் மூலம் நாம் உண்மையாக இழக்கப்போவது வேறு ஒன்று என்பதுதான் இதில் இருக்கும் ஆபத்து. இதை ஊடகங்கள் முதல் சாமானிய மக்கள் வரை கவனம் கொள்ளவில்லை என்பதுதான் கவலைக்குரியது. அது என்ன என்று பார்ப்போம்.

சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது ஐஐடி. சென்னையைச் சுற்றி உள்ள மக்களுக்கும் ஏன் மொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே அது தொடர்பில்லாத ஒன்றாக இருக்கிறது. அங்கு எதாவது போராட்டமோ கலவரமோ வந்தால் மட்டுமே அப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பதே சமூகப் பரப்புக்கு வரும். அதில் படிப்பவர் யார்? மிக மிக குறைந்த அளவிலேயே நம் மாநிலத்தவர். பல மொழிகள் பேசும் மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள். அந்த உலகமே முழுக்கவும் வேறானது. அது சென்னையில் இருக்கிறது என்பதைத் தவிர நாம் பெருமைப்பட அதில் ஏதுமில்லை. ஆனால் நமது மருத்துவக் கல்லூரிகள் அப்படி அல்ல.

நம்மிடம் உள்ள 45க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு விட்டுக்கொடுத்தது போக மீதமிருந்த இடங்களை நான் நிரப்பிக்கொண்டிருக்கிறோம் (இதுவும் பழைய புள்ளி விபரம்). இதன் பொருள் நமது மாணவர்கள் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டு அதற்கான இடத்தை அடைகிறார்கள் என்பதே. அந்த போட்டியிலேயே ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் ஐந்து சதவிகிதத்தைதான் அடைய முடிகிறது. இந்த நீட் தேர்வின் மூலம் அது இன்னும் குறைந்துவிடும். ஆனால் பெரும் பாதிப்பை அடையப்போவது மீதமுள்ள நகர்ப்புற மாணவர்கள்தான்.

ஏனெனில் இந்திய அளவிலான போட்டியை அவர்கள் எதிகொள்ளவேண்டும். அது அவ்வளவு சிரமமா? நமது மாணவர்கள் திறன் குறைந்தவர்களா என்றால் இல்லை. அவர்கள் இதை சமாளிப்பார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த நிலையை மருத்துவத்துறையில் எட்டுவதற்கு நாம் நிறைய உழைத்திருக்கிறோம். எவ்வளவு குறை சொன்னாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிட நமது அரசியலாளர்கள் செய்திருப்பது இங்கு நிறைய. அந்த உழைப்பின் பலன்களை நாம் இந்த நீட் தேர்வின் மூலம் விட்டுதரப்போகிறோம் என்பதுதான் இங்கு கவனத்திற்குரியது.

மருத்துவத்துறையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்திருப்பது புரட்சி. மிகப்பெரிய அளவிலான ஆபரேஷன்களைக்கூட அரசு மருத்துவமனைகளில் சாத்தியப்படுத்திய, ஒப்பீட்டு அளவில் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கக்கூடிய தனியார் மருத்துவமனைகளை வைத்திருக்கிற, நிறைய super specialty மருத்துவர்களை உருவாக்கி தமிழகத்தை Medical Tourism கேந்திரமாக உருவாக்கி நிலைநிறுத்திய நாம் அந்த சொகுசுகளை இழக்கப்போகிறோம் என்பதே இதன் பின்னுள்ள பிரச்சினை. நமது மருத்துவக் கல்லூரிகள் ஐஐடிகளைப் போல நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகும் என்பதே இதன் பின்னுள்ள ஆபத்து. அதற்கு எதிரானதே நமது மருத்துவர்கள் நிகழ்த்திய போராட்டம். அதை மக்களிடம் கொண்டு செல்வதில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாமே தவறியிருக்கின்றன.

மேலும் இந்த தேர்வின் மூலம் மாநில அரசுகள் தங்களது சமூக நீதி செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் வேலைபார்க்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய மாநில அரசின் செயல்பாடு ‘அரசு மருத்துவமனைகளில் நிபுணர்களை உறுதிபடுத்தும் மக்கள் நல செயல்பாட்டின்’ ஒரு அங்கமே. இந்திய மெடிக்கல் கவுன்சிலின் இந்த குறுக்கீடு அதில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதன் பின் World Health Organization’ போன்றவற்றின் கைகள் உண்டு.

Super Specialty போன்றவற்றில் நாம் ஏற்கனவே நிறைய இடங்களை இழந்துவிட்டோம். அவை மற்ற மாநிலத்தவர்களுக்குப் போய்விட்டன. அதனால் அத்தகையை நிபுணர்களை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
இப்போது இளங்கலையில் இந்த நீட் அறிமுகம் பொருத்தமற்ற ஒரு போட்டியை ஏற்படுத்தி நமது மாணவர்களை மருத்துவத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு அப்புறப்படுத்தப்போகிறது. இப்போது இல்லாவிட்டாலும், நீண்ட கால நோக்கில் இதன் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும்.

நாம் எதிர்நோக்கி இருக்கும் ஆபத்து இதுவே… சட்டையைக் கிழிப்பதும் தோட்டைக் கழட்டுவதும் அல்ல பிரச்சினை!

(Vidhya Varadaraj நீட் குறித்து எழுதியிருந்ததில் சிறிய திருத்தங்களுடன் மேலும் கொஞ்சம் தகவல் சேர்த்திருக்கிறேன். அவருக்கு நன்றி!)

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.

தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!

சரவணன் சந்திரன்

இந்தச் சூழலில், வேறு யார் முதல்வரானாலும் சரி தமிழகத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றுதான் தோன்றுகிறது. நாக்கு வெளியே தள்ளி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர் ஆகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே நம்பிக்கையின்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய குடை மர்மம் போலத் தமிழகத்தை மூடியிருக்கிறது.

இந்த மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் அத்துவானக் காட்டில் ஊற்றுகளில் நள்ளிரவில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு ஊற்றாவது தோண்டித் தாருங்கள் அல்லது, பாம்புக் கடியால் இப்படி நிறையப் பேர் இறந்து விட்டதால் விளக்கு வசதி செய்து தாருங்கள் எனப் பரிதாபமாகக் கேட்கிறார்கள். விவசாயிகள் நீரில்லாமல் ஏற்கனவே பலவற்றை இழந்து விட்டனர். ரியல் எஸ்டேட் துறை படுத்து விட்டது. தொழில்துறை நசுங்கிப் போயிருக்கிறது. அரசு சார் தொழில்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கார் கம்பெனி ஒன்று சென்னைக்கு தொழிற்சாலை அமைக்க வந்த போது, ஒட்டுமொத்த ப்ராஜெக்ட்டில் பாதித் தொகையை லஞ்சமாகக் கேட்டதால், விட்டால் போதுமென ஆந்திராவிற்கு ஓடி விட்டது. இது உதாரணம்தான். எல்லா வகைகளிலும் கொத்துப் பரோட்டா போடுகின்றனர். தொழிற்துறை இப்படியான பலவித அரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

சேவைத் துறை இன்னொரு வகையில் சிக்கலைச் சந்திக்கிறது. ஏதோ ஒருவிதமான அழுத்தத்தில் இருப்பதால் வாங்கும் தன்மை குறைந்திருக்கிறது. பொதுவாகவே மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள். ஒரு நிச்சயமற்ற தன்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே பணிபுரியும் நிறுவனங்களில் வேலை போய்க் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதே மாதிரி தன் மாநிலம் குறித்த அவநம்பிக்கையில் இருக்கிறார்கள். யாரையும் நம்புவதில்லை எனத் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றிடம் உண்மையிலேயே உருவாகியிருக்கிறது. உண்மையிலேயே குட்டை ரெம்பவும் குழம்பிப் போய்க் கிடக்கிறது.

ஆளாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். வெளியே இருந்து பெரிய படை பரிவாரத்துடன் மத்திய அரசு ஆட்டிப் படைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நானே முதல்வரானாலும் என்ன செய்து விட முடியும் சொல்லுங்கள்? எனக்குக் கீழே இருப்பவர்களின் எல்லோர் ஜாதகமும் அத்தனை உளவுத் துறைகளிடமும் இருக்கிறது. இந்தப் பக்கம்/அந்தப் பக்கம் ஒரு அங்குலம்கூட நகர விட மாட்டார்கள். சாதி சாதியாய்க் கிளம்பி வந்து சாத்துவார்கள். நித்தம் நரக வேதனையாக இருக்கும்.

காலையில் பல் விளக்கும் போதே சசிகலாவின் ஒன்று விட்ட பேரனுடைய மாமனாரின் மகன் என்று சொல்லிப் பஞ்சாயத்து எட்டிப் பார்க்கும். தாவூ தீர்ந்து விடும். மக்கள் பணியெல்லாம் நினைப்பிலேயே வராது. கூடவே கட்சிக்குள்ளேயே முரட்டுக் குத்து வேலைகள் எனப் படுத்தி எடுத்து விடும். பிபி இருந்தால் சுகர் நிச்சயம். சுகர் இருந்தால் மாரடைப்பு லட்சியம்.

அடப் போங்கடா, சம்பாதித்த வரைக்கும் போதும், இனியாவது திருந்துங்கள் என்று சொல்லி இந்த ஆட்டையை மூர்க்கமாகக் கலைத்து விட வேண்டும். தமிழகத்தின் தலைவிதியை காலம் தீர்மானிக்கட்டும் என விட்டு விட வேண்டும். தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல். இல்லாவிட்டால் இன்னும் இருபது வருடங்கள் பின்னோக்கிப் போய் விடுவோம். நம்புங்கள்.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

வீடியோ : புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

சந்திரமோகன்

சந்திர மோகன்

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக டெல்லியில் பல நாட்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராடினார்கள். நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டு, 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.

குற்றவாளிகளில் 6 பேரில், முதன்மைக் குற்றவாளியான ராம்சிங், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதுக்கு குறைவான குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறைக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங், அக்‌ஷய் தாகூர், வினய் ஷர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையைக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.

ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு முன் மேல்முறையீட்டு மனு விவசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

அதிகரிக்கும் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை !

2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2013ல் இரண்டு மடங்காக அதாவது 1, 441 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 923 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 3 பலாத்காரங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது.கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.

நந்தினி பலாத்காரம் & கொலை!

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்த நந்தினியை கடந்த டிசம்பரில் இந்து முன்னணியை சேர்ந்த ஆதிக்க சாதிக் கயவர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.அவரது உடல் கொடூரமான முறையில் கிணறுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள், அவளது வயிற்றில் இருந்த கருவை கிழித்து எடுத்து எரித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகே சிலரை கைது செய்தது காவல்துறை. முக்கியமான VIP க்கள் வெளியில் தான் உள்ளனர்.

நந்தினிக்கும் நீதி கிட்டுமா?

நந்தினி போல தமிழகத்தில் பல தலித் சிறுமிகள், சிறு பிஞ்சுகள் கசக்கி எறியப்பட்டுள்ளனர். போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள்.

உயர்சாதி, பலமானவர்கள் எனப் பாரபட்சம் பாராமல், ஏழை தலித் பெண்களின் மரணத்திற்கும் சமமான நீதி கிடைக்குமா ? நமது நீதியும் நிர்வாகமும் சாதி, மதம் கடக்குமா ?

பெண் என்றால், எந்த சாதியாக இருந்தாலும் பெண் தானே ! ஒரே சட்டம், ஒரே நீதி தானே! நந்தினி வழக்கில் நீதித்துறையும், காவல்துறையும், ஆட்சியாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள் ? பார்ப்போம்!

 சந்திரமோகன், சமூக – அரசியல் விமர்சகர்.

அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!

சரவணன் சந்திரன்

 

சரவணன் சந்திரன்

குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை விடுவித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யத் தெரியாது குரங்கிற்கு. அது பழத்தையும் விடாமல் கையையும் வெளியே எடுக்காமல் மாட்டிக் கொள்ளும். விகடனில் ஹாசிப்ஹான் கருத்துப் படத்தைப் பார்த்துவிட்டே இந்தக் குரங்கு உதாரணத்தைச் சொல்கிறேன். பழத்திலிருந்து கையை எடுக்கிற புத்தி வாய்க்காத நிலையில் அவை படும் பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

அதேநிலைதான் தமிழக அரசியலிலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தனியாய் நின்று கம்பு சுற்றி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றத் திராணியில்லாத நிலையில் ஓபிஎஸ் அணி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கௌரவர்கள் போல அவர்கள் ஒன்றாக அணிவகுத்திருக்கிறார்கள். இவர்கள் பாண்டவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு தர்மயுத்தம் அதர்ம யுத்தம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாரதியார் பாடல்களில் இருந்து தர்மம் மறுபடியும் வெல்லும் என்கிற வரிகளை மட்டும் நீக்கி விட்டால் நல்லது என்று தோன்றுகிறது. இவர்களின் தர்மமெல்லாம் பல்லிளிக்கிறது.

கடந்த வாரம் முழுக்க தமிழகத்தின் பல ஊர்களில் பயணம் செய்த போது மக்களிடம், தர்மயுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது கேப்டன் நடித்த படமா என்று கேட்கிறார்கள். மக்களுக்குத் தெளிவாக எல்லாம் தெரிந்திருக்கிறது. நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த ஆட்டை சீக்கிரம் கலைந்து விடும் என்பதும் புரிந்திருக்கிறது. சசிகலா வகையறாக்கள் எதிரிக்கு இருபது கண்ணும் போகணும் என கண்டிப்பாகச் செயல்படுவார்கள் என்பது தெரிந்த கதைதான். அப்புறம் இன்னொரு கோணத்தில் கேட்கிறேன். தினகரனை அழைத்து நீ வேண்டாம்ப்பா என்று சொன்னால், உடனடியாக சரியென்று சொல்லி விடுவது ஒரு தலைவனுக்கு அழகா? அவருக்கே, நாம் செய்வது தர்மமில்லாத வேலை என்று புரிகிறது. அதனால்தான் பம்முகிறார். கைவிலங்கை வாசலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, என்னப்பா சமாச்சாரம் என்று கேட்டால், நான்கூட பல்டி அடித்து விடுவேன். எடப்பாடியார் ஒரு படி மேலே போய் காரிலிருந்த சைரனை அவரே அகற்றிக் கொண்டிருக்கிறார். சொன்னால் ரெண்டு நிமிஷத்தில் ஆட்கள் அகற்றித் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் அகற்றியதன் வழியாக கையில் தலை வைத்துக் கும்பிட்டதை மறுபடியும் செய்து காட்டியிருக்கிறார்.

இந்த எபிசோடில் தினகரன் மறுபடி மறுபடி சொல்வது, எதற்காகவோ பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை. உண்மைதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லா தலைகளையும் மறைமுகமாக மிரட்டுவதன் வழியாக தோதான ஆட்சியை உருவாக்க பிஜேபி முயல்கிறது. இதற்கு ஓபிஎஸ் துணை போகிறார். சரிக்குச் சரியாக மோதுவதுதான் பந்தயம். ஆனால் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை மிரட்டுவது சரிக்கு சமமான பந்தயம் இல்லை. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இதைச் செய்திருக்கின்றன என்பதால் இதைப் பெரிய விஷயமாகக் கருத முடியாது. ஆனால் இன்னொன்றை உரக்கச் சொல்ல முடியும்.

இவர்கள் அரசியல் செய்து பழக்கப்படாதவர்கள். ஆடு ராமா என்றால் ஆடிப் பழக்கப்பட்டவர்கள். பாடு ராமா என்றால் படுத்தே விடுவார்கள். நுணுக்கமான அரசியலை இதுவரை அவர்களின் தலைமை செய்ய விட்டதே இல்லை. ஒருசிலர் செய்திருக்கலாம். இப்போது எல்லோருடைய கைவிலங்குகளும் அறுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் குழப்பங்களும் சந்தேகங்களும் அலங்கரிக்கிற சபையாக அது இருக்கிறது. இவர்களுக்கு கம்பிக்குள் கையை விட்டு பழத்தில் கைவைக்க மட்டுமே தெரியும். கையை உதறி பழத்தை விடுவித்து விட்டு, சுதந்திரமாக காட்டுக்குள் ஓடத் தெரியாது. அப்படி ஓட அவர்கள் பழக்குவிக்கவும் படவில்லை. மாட்டிக் கொள்வார்கள் சிக்கிரமே. அது தெரியாமல் நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர்.

மதமும் அரசும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டு நவதாரளமய சந்தைப் பொருளாதாரத்துடன் பிண்ணிப் பிணைந்து, எதிர்ப்புகளை மக்கள் எழுச்சிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிற “துருக்கி மாதிரி” இந்தியாவின் மோடியின் தலைமையிலான “இந்திய மாதிரிக்கு”ஒரு முன்னோட்டமே!

ஒட்டாமன் மன்னராட்சிக்கு எதிராக கேமலிஸ்ட் தலைமையில் 1923 இல் துருக்கியில் குடியரசு ஆட்சிமுறை வந்தது. ஆனாலும், இந்த முதலாளித்துவ அரசு ஒரு முழு நிறைவான ஜனநாயகத்தை பூர்த்தி செய்யவில்லை. ஏகாதிபத்திய முகாம்களின் பங்காளியாக இருந்து,உள்நாட்டு சொந்த வளர்ச்சியை முடக்கியது. இதற்குப் பின்னர் வந்த தாராளமயம், இஸ்லாம் மதத்துடன் ஒன்று கலக்கப்பட்டது. 2002 முதல் எர்டோகன் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.

இந்தியாவில் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1950 இல் மதசார்பற்ற குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டது. இந்திய முதலாளித்துவ அரசு ஒரு முழு நிறைவான ஜனநாயக புரட்சியை நடத்தவில்லை. நிலசீர்திருத்தம், உள்நாட்டில் வளர்ச்சி சாத்தியமாகவில்லை. சோவியத் முகாம், பின்னர் அமெரிக்க முகாம் சார்ந்திருந்தது.தற்போது இந்து மதத்துடன் ஒன்றுகலக்கப்பட்ட நவதாரளமய சந்தைப் பொருளாதார ஆட்சியை பாஜகவின் மோடியின் தலைமையில் ஆர் எஸ் எஸ் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் மோடி அரசும் துருக்கியின் எர்டொகன் அரசும் கிட்டத்தட்ட ஒரே பண்புகளை உடையவை. மோடி அரசானது இந்துத்துவ பிற்போக்கு மதவாதம், தேசியவாதம் கூடவே போலி வளர்ச்சி மாதிரி முழக்க அரசியலை முன்வைத்து இந்திய நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.மக்களின் ஹீரோவாக மோடி உருவாக்கப்படுகிறார். எர்டோகன் அரசானது இஸ்லாம் பிற்போக்கு மதவாதம் கூடவே போலி வளர்ச்சி மாதிரி முழக்க அரசியலை முன்வைத்து துருக்கிய நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. மக்களின் ஹீரோவாக எர்டொகன் உருவாக்கப்படுகிறார்.

எவ்வாறு இந்தியாவில் பஜாகவின் வெறித்தன வளர்ச்சிக்கு வலுவான எதிர்கட்சி இல்லையோ அதேநிலைதான் துருக்கியிலும்.
மோடியின் பிற்போக்கு தேசியவாதம்,வகுப்புவாத அரசியல் மற்றும் போலி வளர்ச்சி மாதிரிக்கு நகர்ப்புற இளைஞர்கள்,கிராமப்புற மக்கள்,குட்டி முதலாளிகள்,பெரு முதலாளிகள் ஆதரவளிக்கின்றனரோ அதேபோல துருக்கியிலும் இந்த சமுதாய சக்திகளிடம் இருந்து எர்டோகனுக்கு ஆதரவு இருக்கிறது.

இந்தியாவில் இந்துத்துவ அரசியல்,முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலை மீறிச் செல்லுமா என்ற ஐயம் பல ஜனநாயகவாதிகளின் ஐயமாக தற்போது இருந்து வருகிறது.குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக வகுப்புவாத வெறியுடைய யோகி ஆதித்தியனாத் பதவியேற்ற பிற்பாடு இந்த ஐயம் பரவலாக எழுந்துள்ளது.

ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத், எங்களது இப்போதைய ஒரே எதிரி மேற்குவங்காள முதல்வர் மம்தா பானேர்ஜிதான் என்கிறார். கேரளாவில் பிரணாயி விஜயன் அரசுடன் ஆர் எஸ் எஸ் நேரடியாக மோதி வருகிறது. தமிழகத்தில் அதிமுக முகாமின் பலவீனத்தை பயன்படுத்தி ஊடுருவி வருகிறது.

இம்மூன்று மாநிலங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக மிகப்பெரும் ஒற்றை தேசியக் கட்சியாக பலம் வாய்ந்து அதிகார மையமாக செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது.ஏகாதிபத்திய சக்திகளின் கருவியாகவும், பெரு முதலாளி வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாகவும்,குட்டி முதலாளிகளின் பிரதிநிதியாகவும் உள்ள பாஜகவின் அரசியல் பரிணாம வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? எர்டோகன் அதை இந்த சட்டத்திருத்தம் மூலமாக தெளிவு படுத்திவிட்டார். துருக்கி மக்களுக்கு ஆபத்து என்ற தீவிரவாத, பயத்தை கட்டியும், நீடித்த வளர்ச்சிக்கு அதிகரா குவிப்பு அவசியம் என்றும் பிரச்சாரம் செய்தும், மக்களிடம் சமூக ஒப்புதலை பெற்றார். ஆனாலும் 49% விழுக்காட்டு மக்கள் இத்திருத்தத்தை ஏற்க்கவில்லை என்பது குறித்து அவருக்கு கவலையில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள பிரதம மந்திரி பதவியையும் தேசிய சபையையும் இந்த சட்டத் திருத்தம் ஒழித்துவிட்டது. செயல்-ஜனாதிபதி என்ற புதிய அதிகார மையமாக அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை உருவாக்கி, தம்மை ஜனாதிபதியாக எர்டொகன் நிறுவிக் கொள்கிறார். நீதிபதிகளையும், அமைச்சர்களையும் நேரடியாக இவரால் நியமிக்கப்படுவார்கள்.

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முறியடித்த பிற்பாடு, சுமார் 1,30,000 அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல ஜனநாயக குரல்கள் நசுக்கப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கை சுதந்திரம் அங்கு முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக துருக்கியின் நவீன முதலாளித்துவ ஜனநாயகம், கடந்த கால பிற்போக்கு முடியரசுவாத சர்வாதிகார சுல்தான் ஆட்சியாக பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வடிவங்களுக்கு சமாதி கட்டப்படுகிறது. ஜனநயாக ஆட்சியின் சட்டத் திருத்தங்கள் மூலமாக எதேச்சியதிகார ஜனநாயகம் வடிவில் சர்வாதிகாரம் மக்களை ஆட்சி செய்கிறது. துருக்கியில் தற்போது நடைபெற்ற வருகிற இம்மாற்றங்கள், இந்திய அரசியல் எதிர்காலத்தை முன்கூட்டியே சொல்லிவருவதாகவே தெரிகிறது! துருக்கி மாதிரியின் இந்தியப் பிரதிபளிப்புதான் மோடி அரசு.

அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக, சர்வாதிகார ஆட்சி முறைக்குள்ளாக நாட்டைத் தள்ளும். இனிவரும் காலங்களில் சண்டையானது காகித அறிக்கைகளில், அடையாள ஆர்ப்பாட்டங்களில், பாராளுமன்றங்களில் வழி நடத்தி பிரயோசனம் இல்லை. சண்டை தெருவில் நடந்தாகவேண்டும். இல்லையேல், இரண்டாயிரம் வருடத்திற்கு பிந்தைய சமூகத்திற்கு நம்மை பாஜகவும் ஆர் எஸ் எஸ்சும் இட்டுச்சென்றுவிடும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

“உலகை குலுக்கிய பத்து நாட்கள்” எனும் நூலை நமது இளைஞர்கள் ஏன் வாசிக்க வேண்டும்?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அந்த பத்து நாட்கள் மெய்யாகவே மானுட குல வரலாற்றையே புரட்டிப்போட்டது. உலகையே குலுக்கியது. இது சாத்தியம்தானா,உழைக்கும் வர்க்கம்தான் அதிகாரத்திற்கு வர இயலுமா என்ற அனைத்து ஐயங்களையும் நிர்மூலமாக்கி ஆளும் வர்க்க கட்டமைப்பையே தகர்த்தெறிந்தது. இதற்கு முன் உலகம் கண்டிராத மாபெரும் மக்கள் திரள் புரட்சி அது .

போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டியின் வழிகாட்டுதலின் கீழ், மாமேதை லெனினின் போர்த்தந்திரத்தின் வழி நடத்தி முடிக்கப்பெற்ற உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசமைந்த மாபெரும் ரஷ்யப் புரட்சியின் நிகழ்வுகளை நேரில் கண்டெழுதிய நூல்தான் உலகை குலுக்கிய பத்து நாட்கள்.

அமெரிக்க சோஷலிச எழுத்தாளர் ஜான் ரீட் எழுதிய இந்த வரலாற்று பொக்கிஷ ஆவணமானது, 1917 இல் ரஷ்யாவில், முதலாளித்துவ வர்க்க ஆட்சியை உழைக்கும் வர்க்கம் தகர்ப்பதையும் புதிய மக்கள் ஆட்சியை கட்டியெழுப்பியது குறித்தும் ஆழ்ந்த ஆய்வுணர்வோடு எழுதப்பட்டு 1919 இல் வெளிவந்தது.

ஒருபுறம் முதலாளித்துவ அரசுசிடம் சோரம் போன, மக்கள் எழுச்சியில் நம்பிக்கையற்ற பிறக் கட்சிகள், மறுப்பக்கம் அரச சதிகாரர்கள், ஜெர்மன் ஏகாதிபத்திய போர் முனைத் தாக்குதல்கள், இதற்கிடையில் கட்சிக்குள் புரட்சி எழுச்சி கட்டத்தையும், பாட்டாளி வர்க்க அரச கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாத மத்திய கமிட்டியின் தோல்வி மனப்பாங்குகள் என பலதடைகளை கடந்துதான் இந்த புரட்சி வெற்றி பெற்றது.

மூன்று நாட்கள் கூட நீடிக்காது என ஆருடம் சொல்லப்பட்ட மாபெரும் மக்கள் திரள் புரட்சியான நவம்பர் புரட்சி பல தசாப்தம் நீடித்து நிலைத்தது. இந்த மாபெரும் நவம்பர் புரட்சி வெற்றி பெற்றதன் அடிப்படைகள் முறையே மாபெரும் மக்கள் திரள் எழுச்சி,மக்களின் ஜீவ சக்திமிக்க புரட்சிகர உணர்வுகள் இந்த மக்கள் எழுச்சிக்கு சரியான தலைமை வகித்து வழி நடத்திய போல்ஷ்விக்குகளின் போர்த்தந்திரம்
குறிப்பாக லெனினின் மகத்தான மேதமை மிக்க ஒருங்கிணைந்த செயல்பாடுகள்.

சந்தர்ப்பாவதத்திற்கு சிறிதும் அசைந்து கொடுக்காத லெனினின் உறுதி மிக்க போர்க்குணப் பண்பு. தோல்வி மனப்பான்மை கொண்டோர்கள், சந்தர்ப்பாவதிகளிடம் அவர் நடத்திய விடாப்படியான போராட்டங்கள்தான் எத்தனை எத்தனை.

மக்களின் மீதான அளவுகடந்த நம்பிக்கை, மக்கள் தான் வராலாற்றை படைக்கிற சிருஷ்டியாளர்கள் என அவர் முழு மனதாக நம்பியது, கடந்த கால தவறுகள் குறிப்பாக பாரீஸ் கம்யூனின் வீழ்ச்சியில் பெற்ற படிப்பினைகள் மார்க்சிய ஆசான்கள் மார்க்சும், எங்கெல்சும் வழங்கிய அறிவுக் கொடைகளை உள்வாங்கி நடைமுறையில் பிரயோகித்த பாங்குதான் மேதமையின் உச்சம்.

இப்போது தற்போதைய காலத்திற்கு வருவோம்.இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய நீண்ட சமாதான காலகட்டம்-1950-80, அதன் பிந்தைய 25 ஆண்டு கால உலகமய கட்டத்தின் முடிவுகளில் வெளிப்படுகிற நெருக்கடி கட்டத்தில் இன்றுள்ளோம்.

இந்த நீண்ட சமாதான காலகட்டம்,அதன் தொடர்ச்சியான உலகமயமாக்கம் என கடந்த 75 காலகட்டத்தில் இல்லாத பெரும் கொந்தளிப்பு நிலைமைகள் இன்று உருவாக்கியுள்ளது.

அதேபோல சம அளவில் சந்தர்ப்பவாத அரசியல் போக்குகளும் வளர்ச்சியடைந்துள்ளது. ட்ரம்ப், மோடி, லீ பென் என மானுட குல விரோத நச்சு சக்திகள் இந்த கொந்தளிப்பு நிலையை சந்தர்ப்பவாத அரசியலால் கைப்பற்றி வருகிறது. மாற்று அரசியல் பேசுவோர்கள் நாடாளுமன்ற முறையை,இந்த அமைப்பை தகர்க்காமல் சமரச பிற்போக்கு பாதையில் நடை போடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு எழுச்சிக்கு பின்பு தமிழகத்தில் பல குழுக்கள் இவ்வாறான மாற்று அரசியல் பேசிவருகின்றன. இந்த நிலையில் “மாற்றம்” என்றால் இந்த சுரண்டல் அமைப்பையே மக்கள் எழுச்சி மிக்க புரட்ச்சியால் தகர்ப்பது,புதிய மக்கள் அரசை உருவாக்குவது என உரக்க உணர்த்துகிற நூல்தான் உலகை குலுக்கிய பத்து நாட்கள். மாபெரும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டில் இந்நூலை நமது இளைஞர்கள் தேடி வாசித்து உள்வாங்க வேண்டும். உண்மையான மாற்றம் என்பது என்ன என்பதின் மெய்யான அர்த்தத்தை உள்வாங்க வேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

போராடும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம்,விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என மாணவர், இளைஞர்கள் பல்வேறு வகைகளில் தங்களது சமூக அக்கரைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முகநூல், வாட்சப் போன்ற நவீன ஊடக தொடர்பு சாதனங்களால் விரைவாக பகிரப்படுகிற கருத்துகள்,அரசியல் உணர்வுகளின் இணைப்பு சாதனமாக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் உணர்வுகள் தீவிரம் பெறுகிறது.

இந்த சூழலில் நமது சமகால பிரச்சனைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது என்ன?அரசு என்றால் என்ன?நாம் கோருகிற மாற்றம் என்ன?போன்ற அடிப்படை கேள்விகளுக்குள்ளாக நாம் சென்றாகவேண்டும்.

மேலும்,கடந்த அறுபதாண்டு கால ஆட்சி அதிகார முறையானது வெளிப்பார்வைக்கு மாபெரும் ஜனநயாக நாடாக காட்சியளிக்கிற காரண த்தாலும்,சினிமா,ஊடகம்,மாற்று சிந்தனை என அனைத்து தளங்களிலும் இந்த அதிகார முறை மீதான மயக்கங்கள் நீக்கமற கலந்துள்ள காரணத்தாலும் சமகால அரசியல் நிலைமைகளை புரிந்துகொள்வது மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

நம்மை ஆட்சி செய்கிறவர்கள் யார்?

நமது சமூகத்தை முதலாளிய ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிய அமைப்பின் பிரதிநிதித்துவ கட்சிகள் ஆட்சி செய்கின்றன.காங்கிரஸ்,பாஜக,திமுக,அதிமுக என எந்தக் கட்சிஆட்சிக்கு வந்தாலும்,அவர்களின் அடிப்படை செயல்பாடுகள் எவ்வகையில் மாறாது.அம்பானி,அதானிக்களுடனான உறவுகளும் மாறாது.இந்த அம்பானிக்கள் அதானிக்கள் போன்ற நாட்டின் 1 % முதலாளிகள்தான் மீதமுள்ள 99% மக்களின் வாழ்வையும் வளங்களையும் சூறையாடி வருகின்றனர்.

பாராளுமன்ற முறை,சட்டமன்றம்,தேர்தல் பங்கேற்பு போன்றவை முதலாளிய ஜனநாயகத்தின் நடைமுறை வடிவங்களாக உள்ளன.இந்த முதலாளிய ஜனநாயக அமைப்பானது உழைக்கும் வர்க்கத்திற்கான ஜனநாயகத்தைவழங்குவதில்லை.மாறாக 1 % முதலாளிகளின் ஜனநாயகமாக உள்ளது.இந்த ஜனநாயக அமைப்பானது தொழிலாளர்கள்,விவசாயிகள்,பழங்குடிகள்,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் சுதந்திரத்தை,அவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதில்லை.மாறாக இந்த 1 % முதலாளிகளின் சுதந்திரத்தை,அவர்களின் நலன்களை உறுதிப்படுத்துகிறது.கல்வி கடன் பெற்ற மாணவனும்,விவசாயக் கடன் பெற்ற விவசாயியும் தூக்கில் தொங்க,மல்லையககள்,அதானிக்கள்,அம்பானிகள் பல லட்சம் கோடி கடன் பெற்று ஏப்பம் விட்டு உல்லாசமாக சுற்றித் திரிகிறார்கள்.இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தில் 99% மக்களின் கோரிக்கைகள் என்றைக்குமே ஏற்கப்பட்டதில்லை.
இந்த 1 % முதலாளிகளே,அவர்களை பிரதிநிதிக் கட்சிகளே நம்ம பாராளுமன்ற ஜனநாயகம்,அரசியல் சாசனம் என்ற பெயரில் நம்ம ஏமாற்றி,சுரண்டி ஆட்சி செய்துவருகின்றனர்.

யாருக்கு எதிராக நாம் போராடுகிறோம்?

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபளிக்காத,பிரதிநிதித்துவம் செய்யாத பாராளுமன்ற நடைமுறையானது,ஜனநாயகத்தின் பெயரில் மக்களை சுரண்டவே வழி செய்துவருகிறது.இந்தியா விடுதலை பெற்ற 1947 முதல் தற்போது வரையிலான அறுபது ஆண்டு காலமாக இதுதான் எதார்த்த உண்மையாக உள்ளது.இந்த இடத்தில்,1990 களுக்கு பின்பாக இந்தியாவில் அதி வேகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறஉலகமயமாக்கம்,தாராளமயமக்கம்,நமது மண்ணையும்,உழைப்பையும் பன்னாட்டுநிறுவனங்களும் இந்திய ஏகபோக நிறுவனங்களும் வரைமுறையற்று சுரண்டுகிற போக்கு தீவிரம்பெறுகிறது.வேதாந்தா,கோக்,பெப்சி நிறுவனங்கள் இவ்வாறு கனிம வளங்களையும் நீர் வளத்தையும் சுரண்டின.உள்ளூர் முதலாளிகள் தாது மணலையும்,ஆற்று மணலையும்,கிரானைட்டையும் சுரண்டிக் கொழுத்தனர்.

மண்ணையும் மக்களையும் சுரண்டுகிற பெரு நிறுவனங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு கையாளாக செயல்படுகிற அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் பெறுகிறது.

இந்தப் புள்ளியில் நமது நோக்கம் என்னவாக இருக்க முடியும்?நமது எதிரி யார்?நமது நண்பன் யார்?யாருக்கு எதிராக போராடினால் நமது அனைத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்?நமது தீர்வுதான் என்ன?உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை எவ்வாறு பெறுவது என்ற கேள்வியை எழுப்புவோம் என்றால் அதற்கான பெரும்பான்மை பதில்கள்,முறையே

இந்த அரசு,அதன் அங்கங்கள் நல்லவை,ஆனால் அதன் நிர்வாகிகள்,அதிகாரிகள் சரியில்லை.
இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் நல்ல கட்சித் தலைமை சரியில்லை.

இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் உறுதியான தலைவர் இல்லை.

இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் இந்த அமைப்பில் புரையோடியுள்ள ஊழலை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை, நாம் அனைவரும் ஒன்றால் கேள்வி எழுப்பி அதன் குறைகளை சுட்டிக் காட்டிய படியே இருக்கவேண்டும்.

இந்த பதில்களில் உள்ள ஒரே ஒற்றுமையை என்னவென்றால் பெரும்பாண்மை மக்களுக்கு இந்த ஆளும் அமைப்பின் பிரதிநிதிகள் மீதே கடும் கோவம் உள்ளது தெளிவாகும்.

ஆனால், பிரச்சனை என்னவென்றால் நாம் எதிர்கொண்டு வருகிற சிக்கல் அனைத்திற்கும் இந்த அரசியல் அமைப்பு முறைதான் அடித்தளக் காரணமாக உள்ளது என காணத் தவறுகிறார்கள்.அல்லது இந்த உண்மையை வலிமையாக உறுதியாக எடுத்துச் செல்கிற வகையிலான சமூக ஜனநயாக சக்திகள் செயல்படவில்லை என்பதே உண்மை.

இந்த அறுபதாண்டு காலத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடுகிற விவசாயிகளும், தொழிலாளர்களும், மீனவர்களும், இளைஞர்களும் கடுமையான வகையில் அடக்கப்பட்டு வருகின்றனர். இதை நாம் பல உதாரனங்களின்வழி எடுத்துக் கூற முடியும். இந்த அறுபதாண்டு காலத்தில் பல வகையில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் நமது வளத்தை ஏப்பம் விட்டு வருகின்றன. இதையும் நாம் பல உதாரனங்களின்வழி எடுத்துக் கூற முடியும்.

ஆக, இந்த சுரண்டல் அனைத்திற்கும் இந்த அமைப்பே காபந்து சக்தியாக உள்ளது.இந்த அமைப்பின் பின்னால் தான் பெரும் முதலாளிகள் ஒளிந்துகொள்கின்றனர்.இவர்களின் நலன்களுக்கு இந்த அமைப்பு எடுக்கிற முடிவுகளையே போலீசும்,இதர அதன் அங்கங்களுக்கும்நடைமுறைப்படுத்துகிறது.இந்த ஆக,இந்த அமைப்பு முறை என்பது “சட்டப்பூர்வ” வடிவத்தில் அராஜகமாக நமது உரிமைகளை பறித்து நசுக்கி வருவது தெளிவாகும்.அதாவது அனைத்து மக்களின் மேலான வாழ்க்கைக்கான உரிமை எனும் ஜனநாயக கோரிக்கையை முதலாளித்துவ “சட்டப்பூர்வ” வழியில் போலீஸ்,நீதிமன்றத்தின் வழி நசுக்குகிறது.தேசத்தை சுரண்டுவோர்கள் தேச பக்தர்கள் என்கிறது.தேச வளத்தை காக்கப் போராடுவோர்கள் அரசுக்கு எதிரான தேசத் துரோகி எனவும் சித்தரிக்க முயல்கிறது.சட்ட விரோத சக்திகள் என்கிறது.

அப்படிப் பார்த்தோமென்றால் இந்த அரசுதான் மக்கள் கண்ணோட்டத்தின்படி சட்ட விரோதாமனது.சட்டமும் அரசியல் சாசனமும் மக்கள் நலனுக்காக இயங்காது போது,இந்த அரசியல் அமைப்பு சட்டவிரோதமானது.இந்த அமைப்பை தாங்கி பிடிக்கிற அதன் கைக்கூலிகள் சட்ட விரோதமானவர்கள்.
அனைத்து குடிமகன்களையும் ஆதார் வழி கண்காணிக்கிற அரசுசட்டவிரோதமானது.மக்கள் நலனுக்காக செயல்படுகிற புரட்சிகர சக்திகளை கண்காணிக்கிற போலீஸ்,உளவுத் துறை அமைப்பு சட்டவிரோதமானது.இந்த அமைப்பின் தாங்கு தூண்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கு எதிராக இயக்குகிற சட்டபூர்வ வடிவிலான சர்வாதிகார சக்திகளாகும்.

நமது பிரச்சனைகளுக்கான தீர்வுதான் என்ன?

ஆக,நமது பிரச்சனைக்கான தற்போதைய தீர்வு என்பது பெரும்மான்மையான உழைக்கும் மக்கள் பங்கேற்கிற,உழைக்கு மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம்செய்கிற மக்கள் ஜனநாயக குடியரசு என்றாகத் தான் இருக்க முடியும்.இந்த சுரண்டல் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிற்கு மாற்றாக மக்கள் ஜனநாயக அமைப்பு நடைமுறைக்கு வரவேண்டும்.
அம்பானிக்களின்,அதானிக்களின்,பெரும் பணக்கார விவசாயிகளின் சொத்தை பறிமுதல் செய்யப்படவேண்டும்.மக்களின் வரிப்பணம் முறையாக மக்களுக்கே பகிர்ந்து வழங்கப்பட வேண்டும்,நிரந்தர ராணுவம்,போலீஸ் கலைக்கப்பட்டு மக்கள் குழு அமைக்கப்படும்.கல்வியும்,மருத்துவமும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பாராளுமன்ற அரசியல் சாசன வடிவங்களின் வழி முதலாளித்துவ சக்திகளின் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை ஒழித்து, தகர்த்தால்தால் இந்த மாற்றங்கள் சாத்தியமாகும். ஏனெனில் இந்த அரசியல் அமைப்பு முறையானது,பெரும் முதலாளிகளின், செல்வந்தர்களின் சொத்தை பாதுகாக்கிற காவலனாக உள்ளது. காவலேனே இவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய இயலாது அல்லவா? எனவே பெரும்பாண்மை மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதிப் படுத்துகிற மக்கள் ஜனநாயக ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.

இந்த பாராளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் பன்றிகளின் தொழுவைக் கூடமாக திகழ்கிற காரணத்தால், அந்த அமைப்பை தகர்த்து மக்கள் பிரதிநிதிகளை அமர்த்தப்பட வேண்டும்.இந்த பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானால் மக்களால் திருப்பி அழைக்கப்படுவார்கள்.

யார் நமது எதிரிகள்?

நமது உழைப்பையும்,வளங்களையும் கொள்ளையடிக்கிற,99 % மக்களை அடக்கி ஒடுக்கி சட்டத்தின் வழி ஆட்சி செய்கிற இந்த 1% முதலாளிகளும்,பணக்கார விவசாயிகளும், இவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளும்,இவர்கள் ஒன்றாக கூட்டு சேர்ந்து இயங்கிற இந்த அரச அமைப்பும் நமது எதிரிகள்.

உழைக்கும் மக்களின் மக்கள் ஜனநாயக குடியரசுக்கு எதிராகவும்,இந்த 1% முதலாளித்துவ ஜனநாயக அமைப்போடு சமரசம் செய்து கொள்கிறவர்கள் அனைவரும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள்.ஆளும் அரசின் கொள்கையை மயில் இறகால் வறுடுவது போல விமர்சிப்பவர்கள்,உழைக்கும் மக்கள் புரட்சிக்கு விரோத சக்திகளாக இருப்பார்கள்.இவர்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை விமர்சித்து,அதன்வழி சட்டமன்ற பதிவிக்கோ,பாராளுமன்ற பதவிக்கு வரத் துடிக்கிற பதவி வெறி மோகர்கள்.மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாக நாடகமாடுகிற இந்த முதலாளித்துவ ஜனநாயக சக்திகள் பதவி வெறி,சுய அடையாள வெறி பிடித்த மக்கள் நல விரோதிகள்.நீடித்த நலன்களுக்கு மாற்றாக,இந்த அமைப்பில் சிறு சமரசம் செய்து கொண்டு,அரசின் சுரண்டலுக்கு வால் பிடிக்கிற அயோக்கியர்கள்.இவர்களே தற்போது தேர்தல் அரசியல் தீர்வு ,நீதிமன்ற தீர்வு, ஹைஜாக் அடையாள போராட்ட அரசியல்,மீடியா அரசியல் மூலமாக “கொச்சை மாற்று அரசியல்” பேசி வருகின்றனர். இவர்களின் பின்னேதான் நமது பெரும்பாலான இளைஞர்கள் உண்மை அறியாமல் அதிகமாக பின்தொடர்கிறார்கள்.

சுற்றுச்சூழல் குழுக்கள், விவசாய சங்கங்கள், தொழில்சங்கள், மீனவர் சங்கங்கள் என அனைத்து துறைகளிலும் இந்த பிற்போக்குவாதிகள், அரசின் வாளாக செயல்பட்டு மக்களை குழப்புகின்றனர். ஊடகத்திலும் இவர்களே ஆதிக்கம் செய்கின்றனர். நமது இளைஞர்கள் இவர்களிடம் மாற்று அரசியல் குறித்து கேள்வி கேட்டாலோ. அரசியல் சாசனம் குறித்த புரிதலை விலக்க கோரினாலோ திரு திருவென்று முழிப்பார்கள், குழப்புவார்கள். இவர்கள் பிற்போக்கு சக்திகள்.

என்ன செய்ய வேண்டும்?

உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடுகிற, அவர்களின் அரசியல் அதிகாரத்திற்காக போராடுகிற புரட்சிகர அரசியலை தேர்ந்துகொண்ட புரட்சிர அரசியல் இயக்கங்கள் கட்சிகளின் பக்கம் இளைஞர்கள் மாணவர்கள் அணி திரளவேண்டும்.
ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டுதலின்தான் அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும்
உழைக்கும் வர்க்க நலனுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் இறுதிவரை உறுதியாக இலட்சியத்திற்காக போராட முடியும்.

முதலாளித்துவ வடிவத்தில் மாற்றில்லை, அதைக் கவிழ்தால்தான் முழு ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியும் என்ற அரசியல் தெளிவு பெற வேண்டும்.  வரலாற்றில் நமக்கு வழக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளை நாம் இவ்வாறு மாற்றிக் கட்டமைக்க வேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

காலனியாதிக்கத்திற்கு எதிராக தேசிய அளவில் எழுச்சிபெற்ற வெகுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, சரியான முழக்கத்தை முன்வைத்து கைப்பற்றியது.

வெள்ளையனே வெளியேறு,உப்புச் சந்தியாகிரகம்,அந்நியத் துணிகளை புறக்கணிப்போம் போன்ற அறைகூவல்கள் வெகுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற வடிவங்களாக அமைந்தது. வெகுமக்களின் பங்கேற்புகளுக்கு இடமளிக்கிற ஜனநாயகப் போரட்டமாக வளர்ச்சிப் பெற்றது.

இப்போராட்டத்தின் வெற்றியானது, இங்கிலாந்து ஆட்சியாளார்களிடம் பேரம் பேசுவதற்கும் அரசியல் விடுதலை பெறுவதற்கும் காங்கிரசிற்கு துணை நின்றது.

வெகுமக்களின் தன்னெழுச்சி போராட்டத்தைக் கைப்பற்றி, பின்னர் சரியான முழக்கத்தை முன்வைத்து வெகுமக்கள் உணர்வை அணிதிரட்டி, இவ்வெற்றியை காங்கிரஸ் சாத்தியப்படுத்தியது.

இந்தியாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இவ்வாறு, வெகுமக்களின் போராட்டத்தின் முதுகின் மீது ஏறிக்கொண்டு வெற்றியடைந்தது. அரசியல் விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில், இப்போக்கின் பகுதியளவிளான மறுபதிப்பு 1960 களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வழி தமிழகத்தில் நடந்தது.

இம்முறை,இளைஞர்கள் மாணவர்களின் தேசிய இன, மொழி உரிமை கோரிக்கை அடிப்படையிலான தன்னேழுச்சிப் போக்கிற்கு, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முழக்கத்தை முன்வைத்து அரசியல் வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்தது. கவர்ச்சிகர மேடைப் பேச்சு,சினிமா ஊடகம் இவ்வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

இவை கடந்த கால வரலாற்று உண்மைகள்.தற்போது எழுந்து வந்த, ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எழுந்து வருகிற தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சி போரட்டங்களை இந்தப் பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதேநேரத்தில், இக்குறிப்பான வரலாற்றுக் கட்டத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள், அதன் மீதான இடைநிலை வர்க்கங்கள், மாணவர்களின் சமகால தன்னெழுச்சி போரட்டங்களை சர்வதேச அளவிலும் கவனிக்கவேண்டியுள்ளது.

கடந்த கால் நூற்றாண்டு கால தாராளமயயுக அரசியல் பொருளாதார அமைப்பின்
போதாமைகள், சமூகத்திற்கும் முதலாளித்துவ அரசு அமைப்பிற்குமான முரண்பாடாக பல நாடுகளில் வெளிப்படுகிறது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி நிலைமைகள் சமூகத்தில் வேலை வாய்ப்பின்மை,வறுமை,குடியிருப்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

இம்முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் தன்னெழுச்சிப்போராட்ட வடிவத்தில் வெளிப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வால் ஸ்ட்ரீட் முற்றுகை எனும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள். 2011 ஆம் ஆண்டில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 15-M முற்றுகைப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது.கிரீசில் இது பற்றிப் படரியது. இதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் அரபுப எழுச்சியாக ஆளும்வர்கர்கத்திற்கு எதிராக எழுச்சி பெற்று, ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.

தற்போது தமிழகத்தில் எழுந்து வருகிற தன்னெழுச்சி அலையானது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், இலத்தீன் அமெரிக்கா நாடுகள்,ஐக்கிய அமெரிக்காவில் அடித்த அலையின் இந்திய பதிப்பாக உருத்திரண்டு வருகிறது.அறுபதாண்டுகால முதலாளித்துவ ஜனநயாக ஆட்சியில் அரசியல் பொருளாதார அவலங்கள், மையநீரோட்ட அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்பாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இப்போராட்டங்கள், ஒரு கட்டத்தில் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக வளர்ச்சியுறுவதை கருக்கொண்டுள்ளது.

டெல்லியில் எழுந்த இந்த அலையை ஆம் ஆத்மி கைப்பற்றி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் வாலாக சுருங்கி நாடாளுமன்ற வடிவில் கரைந்து வருகிறது.

இது ஒருப்பக்கம். தமிழகத்தில் அண்மையில் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தொடங்கிய போராட்டம் முதலில் சிறு குழுவால் துவங்கப்பட்டாலும், ஒருகட்டத்தில் வேறொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு வந்தடைந்தது. மத்திய அரசின் பண்பாட்டு மேலாதிக்கம் மீதான எதிர்ப்பாகவும் செயலற்ற மாநில அரசின் மீதான எதிர்ப்பாகவும் இழக்கப்பட்ட ஜனநயாக உரிமைக்கான போராட்டமாக பரிணாமம் பெற்றது.

சிவில் சமூகத்தின் மீதான அரசின் அழுத்தங்களை வெடித்துவிட்டு செல்கிற இடமாக எதிர்ப்பரசியலின் புதிய வடிவமாக இப்போராட்டம் வெளிப்பட்டது. இவ்வாறாக ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக துவங்கிய போராட்டம் கோக் பெப்சி என பன்னாட்டு நிறுவனத்திற்கும் எதிரான உலகமயத்திற்கு எதிரான போராட்டமாகவும்,விவசாயக் கோரிக்கைக்காகவும் விரிந்தது.

இவ்வாறாக போராட்டத்தின் திசைவழியானது துவங்கிய புள்ளியில் இருந்து மிகப்பெரிய அளவில் விரிந்த வடிவத்தில் மாபெரும் ஜனநயாகக் கோரிக்கைக்கான போராட்ட திசை வழியில் சிவில் சமூகத்தின் தன்னுணர்வின் வெளிப்பாட்டில் சென்றது.

அதன் தொடர்ச்சிதான் தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பில் வெளிப்படுகிற
தன்னெழுச்சி போராட்டங்கள். தகவல் தொழில்நுட்பம் – சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பான அரசியல் போராட்ட வடிவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் பதவி அரசியலுக்காக நிற்பவர்கள்’ என்பதனால்தான் மாணவர்கள் அவர்கள் மீது அதிருப்தி கொண்டனர்.

அரசியல் தலைமை என்ற பெயரில் ஓட்டு வங்கி சுயநலக் கட்சிகள் செய்து வருகிற துரோகங்கள், ஊழல்கள் அவர்கள் கண்முன் விரிந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் இவர்கள் தலைமை வேண்டாம் என்கின்றனர். ’அரசியல் வேண்டாம், கட்சி வேண்டாம்’ என்று கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட கருத்துருவாக்கம் இன்றைக்கு ’இயக்கம் வேண்டாம், தலைமை வேண்டாம்’ என்ற இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த நிலையை சினிமா உதிரிகள் கைப்பற்றிக் கொள்வதையும், அரசியல் ஆதாயம் வேண்டி சில குறுங்குழுவாத மிதவாதக்குழுவும் கைப்பற்ற முனைவதையும் தற்போது
கண்டு வருகிறோம். ஹைஜாக் அடையாள போராட்டங்கள், ஊடக லாபிக்கள் வழியே இந்த தன்னெழுச்சுப் போக்கிற்கு வால் பிடித்து அதை அறுவடை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

ஸ்பெயினில் இவ்வகையில் கவர்ச்சிவாத ஊடக விவாதம், மாற்றுப் பாபுலிச வழி, இடைநிலை வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற பொடாமாஸ் இவர்களுக்கு முன்னுதாரனாக கண் முன் வந்து நிற்கிறது. இந்த மாற்று பாபுலிச கும்பல்கள் தங்களை மாற்றாக நிறுவிக் கொள்கிற முயற்சியில் சில நேரங்களில் வெற்றி அடைந்தாலும், நாடாளுமன்ற வடிவத்திற்கு வெளியே ஜனநாயக போராட்டத்தை
விரித்துச்செல்ல நோக்கில்லாமல் பதவியல் அமர்ந்துகொண்டு ஆதரவழித்தவர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.

கிரீஸ் சிரீசா,ஸ்பெயினில் பொடாமஸ், இந்தியாவில் ஆம் ஆத்மி இதற்கான சமகால உதாரணங்கள். அதேநேரத்தில் ட்ரம்ப் போன்ற வலதுசாரி சந்தர்ப்பவாதிகளும் சமூகத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இனவாத அரசியல் சாயம் பூசி ஆட்சிக்கு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிழைப்புவாத அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்குமான வேற்றுமைகளை அனைத்து மக்களுக்குமான விரிந்த ஜனநாயகத்தின் அவசியத்தை இப்போராட்டத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கள் உணர்த்தவேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடுகிற, அவர்களின் அரசியல் அதிகாரத்திற்காக போராடுகிற புரட்சிகர அரசியலை தேர்ந்துகொண்ட புரட்சிர அரசியல் ஸ்தாபனம் பக்கம் இளைஞர்கள் மாணவர்கள் அணிசேர்க்க வேண்டும். ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டுதலின்தான் அரசின் ஒருமுறைக்கு எதிராகவும் உழைக்கும் வர்க்க நலனுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் இறுதிவரை இலட்சியத்திற்காக போராட முடியும் என உணர்த்தவேண்டும்.

முதலாளித்துவ வடிவத்தில் மாற்றிலை,அதைக் கவிழ்தால்தான் முழு ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியும் என அரசியல் படுத்த வேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.