#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்!

பார்வையற்றவன்

இலவசம்! இலவசம்! நான் எழுதி அமேசானில் வெளியிட்ட நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை இன்று மதியம் ஒரு மணியிலிருந்து நாளை நண்பகல் 12 59 வரை இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம். இதுதான் இந்த போஸ்டின் முக்கிய செய்தி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதனைத் தொடர்ந்து நீண்ட write-up ஒன்று இருக்கிறது. சில வரிகளை மட்டும் வாசிக்கும் அன்பர்களுக்காக போஸ்டின் மெயின் மேட்டரை மேலே குறிப்பிட்டு விட்டேன்.

பார்வையற்றவர்களுக்கு என்று எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் தான் ஆகிறது. பிரெயில் எழுத்தின் வரவுதான் உலகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி கதவைத் திறந்தது. பிரெயில் அவர்களிடயே வாசிப்பு பழக்கத்தை உருவாக்கியது. கணினியும் இணையமும் அவர்களது வாசிப்பு எல்லையை விரிவடையச் செய்ததோடு அவர்களை படைப்பாளியாகவும் மாற்றியது. அதன் பிறகு, உலக இலக்கியங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்வாறு சித்திரித்து இருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவலில் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினர். அங்கே பெரும் அதிர்ச்சி எங்களுக்காக காத்திருந்தது. அதன்பிறகு பொது சமூகத்தோடு உரையாடும் நோக்கில் தங்கள் வாழ்வியலை பார்வை மாற்றுத்திறனாளிகள் எழுதத் தொடங்கினர்.

தமிழ்ச்சூழலில் பத்தடி தூரத்தில் இருந்து ஒரு பார்வை மாற்றுத்திறனாளியை வேடிக்கை பார்த்துவிட்டு எழுதியதும் சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து விட்டு நிலவைப் பார்க்கமுடியவில்லை, இயற்கையை ரசிக்க இயலவில்லை போன்றவைதான் பார்வையற்றோரின் துயரங்கள் என எழுதுவதும், பார்வை இன்மையை கொண்டு தத்துவ விசாரம் செய்வது, பார்வை மாற்றுத்திறனாளியை ஒரு தன்னம்பிக்கை நாயகனாக படைப்பதும்… அதற்கு மிகச் சிறந்த உதாரணம் உத்தம சோழனின் தேகமே கண்களாய் நாவலைச் சொல்லலாம்.

இப்படி மேலே குறிப்பிட்டவைகளே பார்வையற்றோருக்கான இலக்கியமாக சுட்டப்படுகின்றன. தன்னம்பிக்கை நாயகர்களாக சுட்டுவதுகூடத் தவறா என நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை என்ற வார்த்தை கூட நீ கீழிருந்து வந்தவன் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் ஒன்றுதான். நீங்கள் உயரத்தில் வைக்க வேண்டாம் எங்களை இயல்பானவர்களாக பாருங்கள் என்று தான் சொல்கிறோம். சாலையை கடக்கும் போது அல்லது ஏதோ ஒரு இடத்தில் எங்களை பார்க்கும் போது யாரோ ஒருவர் ”உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது” என ஒவ்வொரு முறையும் பாடுகின்றனர்.. அதைக் கேட்கும் போது எரிச்சல் தான் வருகிறது.

குக்கூ திரைப்படம் வந்தபோது, அதற்கு வந்த முக்கியமான விமர்சனம், பார்வை மாற்றுத்திறனாளிகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் படத்தோடு ஒன்ற இயலவில்லை. அவர்கள் துயரப் படுவது போல் அதிக காட்சிகள் வைத்திருந்தால் ரசிகர்களின் உள்ளத்திற்கு நெருக்கமாக சென்றிருக்கும். இங்கே கலைப்படைப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. விடுதியில் யாராவது பேசும்போது நான் கவுண்டர் கொடுத்தால், நீங்கள் ஜோகெல்லாம் அடிப்பீர்களா என கேட்கிறார்கள்.

நூதன பிச்சைக்காரர்கள் நாடகத்தை படித்துப் பாருங்கள், அங்கே பார்வை மாற்றுத்திறனாளிகள் சிரிக்கிறார்கள், கோவப்படுகிறார்கள் ஏமாற்றப்படுகிறார்கள் இப்படி எத்தனையோ விடயங்கள் அதில் இருக்கின்றன. அது உங்களுக்கு ஒரு புதிய உலகைக் காட்டும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதனோடு தொழில்நுட்பம் குறித்த ஒரு கட்டுரையையும் இணைத்துள்ளேன். அது உங்களுக்கு பல புதிய செய்திகளைச் சொல்லும். இதுபோன்ற நூல்கள் அதிகப் பேரை சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை. கொண்டு சேர்க்க உங்கள் கரங்கள் சேரும் என நம்புகிறேன். இந்த ஒரு நாள் புத்தகம் இலவசம். என்பதால் அமேசான் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தரவிறக்கி முழுமையாக படிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக என் மனதை பாதித்த ஒரு விடயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இலக்கியங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து உருவாக்கிய கட்டுக்கதைகளில் என் மனதை மிகவும் பாதித்தது, பார்வை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்யத் தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு மேட்டர் பண்ணவே தெரியாது என்பதுதான்!

இன்னும் பயங்கரமான கட்டுக்கதைகளை கட்டிவிடும் முன்னரே பார்வை மாற்றுத்திறனாளிகள் சுதாரித்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் அழைக்கிறேன், பார்வை மாற்றுத்திறனாளிகளே பெருந்திரளாக நம் வாழ்வியலைப் பற்றி எழுத வாருங்கள்.

நூதன பிச்சைக்காரர்கள் நூலை வாங்க இங்கே வாங்கலாம்.

பார்வையற்றவன் என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் பொன்.சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர். பிறவியிலேயே பார்வையை இழந்த இவர், தற்போது காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். மேலும் பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியர் இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். மேடைப்பேச்சு, பாடல் பாடுதல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், விளையாட்டு வீரர் என பன்முகத் திறமை கொண்டவர்.

இது இவரது இரண்டாவது நூல்.

 நூதன பிச்சைக்காரர்கள் நூலைப்பற்றி:

மாற்று உரை தொழில்நுட்பம் என்றால் என்ன! அங்கே அனைத்து உள்ளடக்கங்களுமென்றால் அனைத்துந்தான். நீங்கள் ரம்யா பாண்டியனை கொண்டாடும் போது விசயம் தெரியாமல் நாங்கள் தேமேன்னு இருந்தோம்.

பார்வையற்றவர்கள் என்ற சொல்லைக் கேட்கும் போதே உங்களுக்குள் கருணை பிறக்கும், உங்கள் மனம் துயரத்தில் கசிந்துருகும். அவற்றோடு அவர்களது திறமைகளைக் காணும்போது, அதுகூட வேண்டாம் அவர்களது இயல்பான செயல்பாடுகளைக் காணும்போதே, உங்களுக்கு வியப்பு மேலிடும். பார்வையற்றோர், அவர்களால் உங்களுக்குள் பிறக்கும் துயரம், கருணை, வியப்பு இதுதான் இன்று வெற்றிகரமான பொருளீட்டும் சூத்திரமாகத் திகழ்கிறது.

உதாரணமாக ஊடகத் துறையை எடுத்துக் கொள்வோம். ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் பாடலை கேட்டதும் சில்லறைகளைச் சிதற விட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட காட்சி ஊடகங்கள், ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைப் பங்கேற்பாளராகச் சேர்த்துக்கொள்கிறது. அவர்களது ரேட்டிங் உயர்வதற்காக சில சுற்றுகளுக்கு அவர் முன்னிலைப் படுத்தப் படுவார். இதுதான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அம்மேடைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்தெல்லாம் நாடகங்கள் அரங்கேற்றப்படும். ஆனால், அவர்களது ஊடகங்களில் ஒருபோதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பணி வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒரு ரேட்டிங்கிற்கான காட்சிப்பொருள் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே, இச் சூத்திரத்தைப் பொருளீட்ட வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனங்கள். இத்தகைய அமைப்புகளைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் தொடங்கி நடத்தி வருகின்றனர். விழிச்சவாலர்கள் வாழ்வில் இவ்வமைப்புகள் ஏற்றங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வமைப்புகளின் மறுபக்கத்தைப் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அழகான கட்டட அமைப்பு, கணினி கூடம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இவை போதும் வெளியிலிருந்து வருபவர் அந்நிறுவனம் சிறப்பாக இயங்குகிறது என நம்ப. அதற்குப் பின்னால் நடக்கும் மாணவர்கள் மீதான சுரண்டல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றைத்தான் “நூதன பிச்சைக்காரர்கள்” எனும் இந்நாடகம் பேசுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கதை அல்ல. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒடுக்கப்படும் பல நிறுவனங்களின் கதை.

தொடர்பிற்கு
மின்னஞ்சல்: paarvaiyatravan@gmail.com
கைபேசி: 9159669269

நூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’

பீட்டர் துரைராஜ்

தொழில்நுட்பம் குறித்தும், இணையம் குறித்தும் தொடர்ந்து பத்திரிக்கைகளிலும், தனது வலைப்பக்கத்திலும் எழுதி வரும் சைபர்சிம்மன். ‘மொபைல் ஜர்னலிசம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.அவர் ஏற்கனவே எழுதியுள்ள நான்கு நூட்களும் இணையம், தொழில்நுட்பம் தொடர்பானவையே.

நேர்த்தியோடு வெளிவந்துள்ள இந்த நூலை நான் போகிற போக்கில் படித்துவிட்டேன். எளிய சொற்கள், சின்னஞ்சிறு வாக்கியங்களில் மொபைல் ஜர்னலிசம் குறித்த ஒரு பருந்துப் பார்வையை இந்த நூல் தருகிறது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு நூலாசிரியர் தான் எடுத்தாண்ட மூலநூட்கள், இணைய பக்கங்களின் சுட்டிகள் போன்றவற்றை இணைப்பாக கொடுத்துள்ளார். இந்த நூலை ஒரு பார்வைநூலாக (reference book) கருதிக் கொள்ளலாம்.

செல்போன், ஸ்மார்ட் போன், ஐ போன் போன்ற கையடக்க சாதனங்கள் ஊடகத்துறையில் எப்படி இயல்பாக பயன்படுத்தப்படுகின்றன; அவை எப்போது முதல் பயன்படுத்தப்பட்டன, அதற்கான தேவை என்ன என்பதை விளக்குவது மூலம் மொபைல் ஜர்னலிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அழகாக சொல்லுகிறார் நூலாசிரியர். சைபர் சிம்மன் என்கிற நரசிம்மன் இலோயோலா கல்லூரியில் பயிலும் இதழியல் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவர். எனவே ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு அமர்வுக்கு தேவைப்படும் உரைபோல பாந்தமாக இருக்கிறது. ஆசிரியர் என்பதால் சொல்லக்கூடிய தகவல்களும் புதிதாக, சரியானதாக இருக்கலாம். இது ‘மொபைல் ஜர்னலிசம்’ குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் நூல்.

“இதழியலை மக்கள் நலன், மாற்றத்திற்கான வழியாகக் கருதி, அந்த நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்ட மறைந்த பத்திரிக்கையாளரும், நண்பருமான (எம். யு. ஜே. தலைவர்) மோகன் நினைவுகளுக்கு” இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் சைபர் சிம்மன். அதனால்தானோ என்னவோ அவர் சொல்லும் உதாரணங்களும் மக்களை முதன்மைப்படுத்தியே உள்ளன. சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரின் போது கெடுபிடிகளுக்கு இடையில் ‘அகதிகள் வலியை உணரவைத்த’ ஜெர்மானியின் இளம் நிருபரான பால் ராம்சைமர் (Paul Ronzheimer); சதீஷ்கர் மாநிலத்தில் ‘சிஜிநெட் ஸ்வரா’ என்ற ‘ஆதிவாசிகளுக்காக செல்போன் வானொலி’ நடத்தும் சவுத்திரி போன்றோர் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

‘மொபைல் ஜர்னலிசம்’ – ‘செல்பேசி இதழியல்’ ஆங்கிலத்தில் மோஜோ என்றே பிரபலமாகக் குறிப்பிடப்படுகிறது என்று சொல்கிறது இந்த நூல். 2005 ம் ஆண்டு அமெரிக்காவின் ‘தி நியூஸ் பிரஸ்’ என்ற நாளிதழால் மோஜோ என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்கிறார் சைபர்சிம்மன். மோஜோ’ – மொபைல் ஜர்னலிசம், மோஜா வரலாறு, மோஜோ அடிப்படைகள், மோஜோ நுணுக்கங்கள், மோஜோ செயலிகள் – சாதனங்கள் என்ற அத்தியாயங்களில் 37 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் மூன்று, நான்கு பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன. மொபைல் போனை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம், அதன் சாத்தியங்கள், இத்துறையில் இதுவரை நடந்துள்ள மாற்றங்கள் என்னவென்பதை ஒரு தொகுப்பாக இந்த நூல் நமக்கு காட்டுகிறது.

ஒரு செய்தியை வெளியிடத் தீர்மானிக்கும்போது பொதுநலனே அதற்கு ஆதார அம்சமாக உள்ளது. அதேபோல ஒரு செய்தியை வெளியிடாமல் இருக்கத் தீர்மானித்தாலும் ‘பொதுநலனே அதற்கான காரணமாக அமைகிறது’ என்று ‘செல்பேசி இதழுக்கான அறம்’ அத்தியாயத்தில் கூறுகிறார். ‘எப்படியும் இணையத்தில் வெளியாகும் வாய்ப்பிருப்பது என்பது அறம் மீறிய செய்திகளை வெளியிடுவதற்கான நியாயமாகாது’ என்றும் கூறுகிறார்.

‘1776 ல் நிகழ்ந்த அமெரிக்க பிரகடனம் பிரிட்டனில் உள்ள மக்களுக்கு தெரிய 48 நாட்கள் ஆனது’. ஆனால் இப்போது உடனுக்குடன் செய்திகள் தெரிய வருகின்றன. எனவே நவீன தொழில்நுட்பங்களை ஊடகங்கள் உடனுக்குடன் கைகொள்வது அவசியமாகிறது. சைபர் சிம்மன் சொல்லுவது போல இது ஒரு ‘நவீன இதழியல் கையேடுதான்’. இதற்கு முன்பாக இருந்த வி.ஜெ.(வீடியோ ஜர்னலிசம்) பற்றியும் இந்த நூலில் சொல்லப்படுகிறது. குறுஞ்செய்தி மூலமாக செய்தி அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

காமிராவை எப்படி பிடிக்க வேண்டும், வெளிச்சம் எங்கிருந்து விழவேண்டும், படக்காட்சி எப்படி இருக்க வேண்டும், இப்போது இருக்கும் செயலிகள் யாவை என்பது போன்ற தொழில்நுட்ப விபரங்களையும் இந்த நூலில் விளக்குகிறார். இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு இக்குறிப்புகள் பயனுள்ளவையாக இருக்கும். உடனடிச் செய்திகளை எப்படி சொல்லுவது, கதை சொல்லுவதன் அடிப்படைகள் எத்தகையது என்பதையும் சொல்லுகிறார். மனித குல வரலாறு கதைகள் மூலம்தான் பரப்பப்டுகிறது, எனவே சம்பவங்களை கதையாகச் சொல்ல வேண்டும் என்பது இவரது கருத்தாகும்.

மொத்தத்தில் இந்த நூல் இத்துறையில் முக்கியமான நூல்; முதல் நூல். பத்திரிக்கையாளர்களுக்கு இதிலிருந்து பயனுள்ள குறிப்புகள் கிடைக்கலாம். பொதுமக்கள் இதிலிருந்து பல அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும். வித்தியாசமான முயற்சி. கிட்டத்தட்ட ஒரு பாடநூல் போல உள்ளது. ‘இதழியல் என்பதே ஒரு குறிப்பிட்ட நோக்கோடு கதை சொல்லுதல்’ என்று சொல்லும் சைபர்சிம்மன் ‘இதழாளர்களைப் பொறுத்த வரையில் கதைதான் எல்லாமும்’ என்கிறார்.

‘மொபைல் ஜர்னலிசம்’, கிழக்கு பதிப்பகம்/216 பக்கங்கள்/செப்டம்பர் 2019/ரூ.225

தொழிற்சங்க செயல்பாட்டாளரான பீட்டர் துரைராஜ், பல்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களின் நேர்காணல்கள், நூல் அறிமுகம் ஆகியவற்றை எழுதிவருகிறார்.

நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

ரங்கநாயகம்மா எழுதிய ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது,மார்கஸ் அவசியத் தேவை’ என்ற நூலை கொற்றவை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் ஏராளம். கொற்றவை இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்தான் ஆனாலும் அடிப்படையில் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். எனவே அந்த நூலை மையப்படுத்தி எழுந்த விவாதங்களை தொடர்ந்து நடத்த விரும்பியிருக்கக் கூடும். எனவே ஏறக்குறைய அதன் அடுத்த பாகமாக இந்த நூலை கொற்றவை தொகுத்து, மொழிபெயர்த்துள்ளார் போலும். குறளி பதிப்பகம்தான் இந்த நூலையும் (264 பக்கங்கள்/ரூ.200) வெளியிட்டுள்ளது (2016).

இந்த நூலுக்கான முன்னுரையில் இந்த நூலுக்கான அவசியம் பற்றி பேசுகிறார். ‘மக்களுக்கு சில சலுகைகளை,நிவாரணங்களை பெற்றுத் தருவது, பூர்ஷ்வா பாராளுமன்ற அரசியலில் பங்கு பெறுவது என்பதைத் தவிர ‘தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷ்வா அரசியலுக்கு’ ‘ சாதி ஒழிப்பிற்கான எந்த செயல்திட்டமும் இல்லை’ என்பதை அறுதியிட்டு சொல்லுகிறார்.’மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை அம்பேத்கர் வளர்த்துக் கொண்டதால்’ உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.சாதி ஒழிப்பானது வெறும் அடையாள அரசியலால் சாத்தியம் இல்லை. இது பல்முனைகளில் நடத்த வேண்டிய போராட்டம்.’சாதி ஒழிப்பிற்கான தீர்வு மார்க்சியத்தில் இல்லை’ என்று சொல்லுவதே சாதி ஒழிப்பிற்கு எதிரானது என்று கொற்றவை சொல்லுகிறார்.

இது தொகுப்பு நூல். கொற்றவை கட்டுரைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து உள்ளார். அரவிந்த் மார்க்சிய கல்வியகம் சார்பில் ‘சாதியப் பிரச்சினையும்,மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் 2013ல் சண்டிகரில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பித்த ஒரு உரைதான் இந்த நூலின் முதல் அத்தியாயம். இந்த 120 பக்க கட்டுரை பல குறிப்பான செய்திகளைப் பேசுகிறது.

‘தலித் அறிவுஜீவிகள் பாட்டாளிவர்க்க நலனில் எந்த அக்கறையும் கொள்வதில்லை’,’எந்தவிதமான ஆய்வுகளுக்கும் அவர்கள் தயாராக இல்லை’,’சாதிய அடையாளங்களை கொண்டாடுகின்றனர்’,’தலைவர்களை திருவுருவாக்கி’ வழிபடுகின்றனர் என்பது போன்ற பல செய்திகளை இக்கட்டுரை அக்கறையோடு சொல்லுகிறது. இதனை நட்பு விமர்சனமாகத்தான் பார்க்கமுடிகிறது.

கம்யூனிஸ்டுகளையும் இது விட்டுவைக்கவில்லை.’கம்யூனிஸ்டுகள் மதச் சின்னங்களை அணிவது ஒரு சமூக கோழைத்தனம்’ என்று முடியும் இந்த கட்டுரை, சாதி ஒழிப்புக்காக தனிமனிதனும், அரசும், சமூக நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டிய நெடிய நடவடிக்கைகளைப் பற்றி பேசுகிறது.

அடையாள அரசியலின் போதாமையை இது பேசுகிறது. அதன் வெற்றுத் தன்மையை, சந்தர்ப்பவாதத்தை சொல்லுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டினால் நடைபெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது. பெரும்பாலான தலித் சிந்தனையாளர்கள் ‘பாராளுமன்றம் மற்றும் சீர்திருத்தம் என்னும் வாய்ப்பைத் தாண்டி அடிப்படைக்கூறு சார்ந்த எந்த நடவடிக்கையையும் தவிர்க்கின்றனர்’ என்று சொல்லுகிறது.

‘சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத்திட்டம்’ என்னும் கட்டுரையைச் சுருக்கி குறிப்புகளாக ஒரு துண்டுப்பிரசுரம் கூட வெளியிடலாம். மிகுந்த பொறுப்போடு எழுதப்பட்டுள்ளது. சாதி உருவான விதம், அது இறுகிய விதம் என்பதை பேசுகிறது. அம்பேத்கரின் போதாமை, அவரது தத்துவ வெறுமையை ஒரு புறம் பேசுகிறது. அதே சமயம் இது குறித்து தீர்க்கமான விமர்சனத்தை வைக்காத கம்யூனிஸ்டுகளை அது கேள்வி கேட்கிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து, பாட்டாளிவர்க்க நலனுக்காக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள்; அதேபோல தலித் மக்களின் மேம்பாட்டிற்கு இட ஒதுக்கீடு கோரி அம்பேத்கரும் போராடியவர். இருவரும் முரண்பட்ட புள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்வது இந்த இயக்கங்களுக்கு நல்லது.

அம்பேத்கரை கடவுள் நிலையில் வைத்து பூஜிப்பது மூலம் தலித் அறிவுஜீவிகள் தவறு செய்கின்றனர். பௌத்த மதத்திற்கு மாறுவதால் சாதி ஒழிப்பு சாத்தியமா? அமைச்சராக அம்பேத்கர், தலித் மக்களின் ஆதாரமான வாழ்க்கை மேம்பாட்டிற்கு என்ன திட்டத்தை கொடுத்தார்? இட ஒதுக்கீடு மட்டுமே பெரிய நிவாரணத்தை தந்து விடுமா? நிலம் என்பது தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு அவசியம் இல்லையா ? நில உரிமைக்காக போராடி வரும் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக பார்ப்பது ஏன்? வர்க்கப் புரிதல் பற்றிய அரசியலை கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கு பதிலாக, தலித் அறிவுஜீவிகள் சொல்லும் அவதூறுகளுக்கு இணங்கி எண்ணற்ற தியாகங்கள் புரிந்தும், கம்யூனிஸ்டுகள் தற்காப்பு மனநிலையில் (defence mode) எதிர்வாதம் புரிவது ஏன் என்ற எண்ணற்ற கேள்விகளை இந்த நூல் முன் வைக்கிறது.

‘சாதி ஒழிப்பு சில பத்தாண்டுகளில் சாத்தியம்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறது. மரபார்ந்த கம்யூனிஸ்டுகளின் நிலைபாடுகள் குறித்தும் இந்நூலில் ஒருசில இடங்களில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் அது விவாதத்தின் போக்கை மாற்றவில்லை. இந்த நூலை தலித் அறிவுஜீவிகளும் கம்யூனிஸ்டுகளும், சமூக மாற்றம் கோருவோரும் அவசியம் படிக்க வேண்டும். இது ஒரு ஆவணம் என்பதில் ஐயமில்லை. இந்த நூலுக்காக கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்த கொற்றவையை பாராட்ட வேண்டும். நூல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இரண்டாம் பதிப்பு வரவிருக்கிறது.

இந்த நூலில் ரங்க நாயகம்மாவும், பி. ஆர். பாபுஜியும் கூறிய கருத்துக்களுக்கு வந்த எதிர்வினைகளுக்கு அவர்கள் பதிலாக எழுதியுள்ள கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலைப் படித்து இதனை பாராட்ட வேண்டும் அல்லது தவறு என்று சொல்ல வேண்டும்; அதாவது எப்படி தவறு என்று சொல்ல வேண்டும். கள்ள மௌனம் தேவையில்லை.

இறுதியில் வாசகர்களுக்காக என்ற பிரிவில் 25 கேள்விகளை கொற்றவை பட்டியலிடுகிறார்.(வாடகை, வரி, வட்டி, உழைப்புச் சுரண்டல், அரசு, இராணுவம், நிதித்துறை பற்றிய அம்பேத்கரின் புரிதல் எத்தகையது? தெலுங்கானா, தெபாகா எழுச்சி பற்றி அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்? அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்த முன்னேற்றம் என்ன?) இதற்கு பதில் தேடும் விதமாக நூட்களின் பட்டியல் ஒன்றை அவர் கொடுத்துள்ளார். இப்போது வாசகர்களாகிய நாம்தான் இக்கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்க வேண்டும்.

சாதி ஒழிப்பில் காந்தி, பெரியாரின் பாத்திரம் என்ன என்பது பற்றியும் இது பேசுகிறது. கல்வி நிறுவனங்கள், பங்குச்சந்தை, கூட்டுப் பண்ணை, வீட்டுவசதி, மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், திருமண உறவுமுறை போன்றவைகளை நாம் எப்படி அணுகவேண்டும்.சாதி ஒழிப்பில் இவைகளின் பாத்திரம் என்ன என்பதையும் இது பேசுகிறது. இந்த நூலை படித்து முடிக்கையில் சாதியை நம் தலைமுறையிலேயே ஒழித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது.

பீட்டர் துரைராஜ்

வட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்

நூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள்

பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.இவரை பல்வேறு இதழ்களுக்காக, பல்வேறு ஆளுமைகள் நேர்காணல் செய்துவந்துள்ளனர். அதன் தொகுப்புதான் இந்த நூல்.

விகடன் தடம், தீராநதி, தலித் முரசு, மாற்றுவெளி, சண்டே இண்டியன், கீற்று போன்ற இதழ்களில் வெளியான நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம், ஆர். ஆர். சீனிவாசன், அப்பணசாமி, சங்கர இராமசுப்பிரமணியன், ச. தமிழ்சசெல்வன், மணா, வ.கீதா உள்ளிட்டோர் இவரை கேள்வி கேட்டுள்ளனர். பரந்துபட்ட கேள்விகளுக்கு தொ.ப.விடையளித்துள்ளார். அவரது முழு பரிமாணமும் வாசகர்களுக்கு கிடைக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல்கள் மூலம் அவரது சிந்தனையில் ஒத்திசைவு இருப்பதை பார்க்கமுடியும்.

நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். தொ. பரமசிவன் கனடா சென்றபோது அவர் தமிழினி இதழுக்காக எடுத்த நேர்காணலான  “இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும்” என்ற தலைப்பிலான கட்டுரையைத்தான் முதலில் படித்தேன். தொ.ப. பேசியதை விவரித்து, அ.முத்துலிங்கம் அவருக்கே உரிய எள்ளலோடு தொ.பரமசிவத்தின் எளிமையை (இரண்டு சட்டை எடுத்த கதை) செல்லுகிறார். ‘ஆயிரம் ஒட்டுப்போட்ட ஒரு பிச்சைக்காரனுடைய உடையை நினைவூட்டும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது’ என்கிறார்.

‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’ என்ற மணா எடுத்த நேர்காணலில் சாதிகுறித்து பேசுகிறார். ‘பிராமணீயம் ஒரு ஒடுக்குமுறை கருத்தியல்’ என்கிறார்; ‘சாதி ஒழிப்பு சாத்தியமில்லை, கரைப்புதான் சாத்தியம்’ என்கிறார். மாரியம்மன் திருவிழாவோடு மழையை தொடர்புபடுத்துகிறார். ரசிக்கத்தக்க வகையில் இவரது பதில்கள் உள்ளன.

‘தீட்டு’ என்பதை எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் வேறுபடுத்துகிறார்கள் என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அவ்வாறே தாய்மாமனுக்கு மரியாதை என்பது திராவிடமொழி பேசுவோரின் பொதுவான குணம் என்கிறார். (சாதி, வர்ணம், நடைமுறை – தமிழ் ஒப்புரவு நேர்காணல்) இது தாய்வழிச்சமூகத்தின் தொடர்ச்சி என்கிறார். இந்த நூல் ஒரு ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவர் போகிற போக்கில் சொல்லுகிற பல செய்திகள் ஆழமான விவாதங்களை எதிர்பார்ப்பவை. தொ.பரமசிவத்தின் பன்முகம் இந்த நூலில் வெளியாகிறது. ஏற்கெனவே ‘செவ்வி’ என்ற பெயரில் வெளியான நேர்காணல்களோடு வேறுசில நேர்காணல்களும் சேர்க்கப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.

தொ.ப. அசராமல் உரையாடுகிறார். இவர் பேசாத பொருள் இல்லை. கல்விமுறை பற்றி பேசுகிறார். தத்துவம் பற்றி பேசுகிறார் (தூய்மை வாதம் ஒரு எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் முடியும்); கால்டுவெல் இடையான்குடியையும், இலண்டனில் அவருடைய பிறந்த ஊரான Shepardyard -ஐயும் ஒப்பிடுகிறார். ‘மிளகு’ போல உறைப்பு உடையது, காயாக இருக்கிறது என்பதினாலேயே 13 ம் நூற்றாண்டில் வெளிநாட்டிலிருந்து அறிமுகமானதற்கு ‘மிளாகாய்’ என்று பெயரிட்டோம் (மொழிக் கல்வியும் மதிப்பீடுகளும்)என்கிறார். சமணமும் புத்தமும் ஏன் தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை என்று சொல்லுகிறார். திருநெல்வேலியில் சாதியத்தை நிலைநிறுத்த வெள்ளாளர் பட்டபாட்டை சொல்லுகிறார்; அதன் எதிர்வினையை சொல்லுகிறார்.

‘அம்பேத்கரை அவர்களால்(பிராமணீயத்தால்) உட்செரிக்க முடிந்தால் கூட பெரியாரை ஒருபோதும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது’ என்று விவாதத்தை தூண்டுகிறார். இது ஒரு வெற்றி பெற்ற நூல்.’கோவணத்தில் இடி விழுந்தமாதிரி’ என்று சொல்லுவார்கள். அது போல இவருடைய பதில்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாத கோணத்தில் இருக்கின்றன.

காலச்சுவடு பதிப்பகம்/ஜனவரி 2019/158 பக்கம்/ரூ.175.

– பீட்டர் துரைராஜ்.

நூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..? காவியா..?

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க இருக்கிறது. நம் சமூகத்தில் கருத்துருவாக்கத்திலும், அணிச் சேர்க்கையிலும் சாதி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர் தி.லஜபதி ராய் ‘நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?’ என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

நூல் வெளியீட்டு விழாவை மதுரை, உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்கள்.இறுதி நேரத்தில் அரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பு அதே இடத்தில், அதே நாளில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. கருத்துரிமைக்கு எதிரான சூழல் நிலவி வரும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சம்பவம் இயற்கையாகவே முக்கியத்துவம் பெறுகிறது. உண்மைதான்; இந்த நூல் சங்கடமான கேள்விகளை ‘தமிழிசைகளை’ நோக்கி எழுப்புகிறது. நீங்கள் நடந்து வந்த பாதை எது? நீங்கள் பிடிக்க வேண்டிய கொடி எது என்று கேட்கிறார் நூலாசிரியர்.

தி. லஜபதி ராய் புதிதாக எந்த சம்பவங்களையும் சொல்லவில்லை. சிறு நூல்தான். கடந்த நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நாடார்கள் (அப்போது கிராமணி, சாணார் என்று அழைக்கப்பட்ட) நடத்திய பல்வேறு போராட்டங்களை சொல்லுகிறது. வர்க்கப் புரிதலோடு பார்க்கிறது. உனக்கு நண்பர்களாக யார் யார் இருந்தார்கள் என்று சொல்லுகிறது. யாரோடு தீ பயணிக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டுகிறது. எண்பதுகளில் நடந்த மண்டைக்காடு கலவரம், சிபிஎஸ்இ- க்கு எதிராக நடந்த வழக்கு விவரம் வரை இந்த நூலில் குறிப்புகள் வருகின்றன. செறிவான நூல் இது.

முதல் அத்தியாயத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நாடார் ஆளுமைகளை இந்த நூல் சொல்லுகிறது. அதன்பின்பு அந்த சாதி குறித்து வந்த ஆய்வுகளை சொல்லுகிறது. அதனைத் தொடர்ந்து கமுதி மீனாட்சி அம்மன் கோவில் ஆலைய நுழைவுப் போராட்டம் (1897), சிவகாசி வன்கொடுமை(1899), வைக்கம் போராட்டம் (1925), சுசீந்திரம் கோவில் நுழைவு போராட்டம் (1933), தோள் சீலைப் போராட்டம் (1812 -1859), அய்யா வைகுண்டர் பங்களிப்பு, வடக்கன்குளம் தேவாலயத்தில் வெள்ளாளர் – நாடார் சாதியினரைப் பிரிக்கும் சுவர் இடிப்பு (1910), (மண்டைக்காடு ) வேணுகோபால் ஆணையம் போன்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இது பல கதைகளை மீண்டும் சொல்லுகிறது இந்நூல். சாணார் என்ற பெயரை நாடார் என்று மாற்ற நடந்த இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 சத இசுலாமியர்களும், கிறிஸ்தவவர்களும் இருக்கும் வரலாற்றுத் தேவை, நாடார்களின் உயிரைக் காப்பாற்றிய இசுலாமிய, கிறித்தவ மக்கள், சாதிப் போராட்டத்தில் வேளாள, கம்மாளர், மறவர் இன மக்களுக்கு எதிராக, நாடார் மக்களின் பக்கம் நின்று தடுப்புச் சுவரை உடைத்த சேசு சபையினர், அதனால் இந்து மதத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பலவற்றை சொல்லியபடியே நூலை நகர்த்துகிறார் லஜபதிராய்.

தோள் சீலை அணிய வேண்டுமெனில் கிறித்தவ மதத்திற்கு மாற வேண்டும்; அங்கு போனால் இலவசமாக நிலவுடமைக்காரர்களுக்கு அடிமை உழைப்புத் தர வேண்டியதில்லை. அதன் விளைவாக வருவதுதான் சிவகாசி வன்கொடுமைகள்.

இதன் தொடர்பாகத்தான் சுய மரியாதை இயக்கங்கள் வளர்கின்றன. சௌந்திர பாண்டியன் போன்ற சிறந்த ஆளுமை முகிழ்கிறது. இவர் மனித குல மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகள் கவனிக்கத் தக்கன; இன்றும் பொருத்தம் உடையன. (தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இடமில்லை என்றால் கல்வி மானியம் ரத்து). மூன்று முதல் ஐந்து சதம் வரை இருக்கும் நாடார்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான விகிதாச்சாரத்தைவிடவும் அதிகம் அடைந்துள்ளனர்.

“வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே இந்த நூலின் நோக்கம்” என்று சரியாகவே சொல்லுகிறார் ஆசிரியர்.  கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் திரு.பாஸ்கர சேதுபதி ( கோவிலின் பரம்பரை அறங்காவலர்) இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப்(1893) பொருளுதவி செய்தார்”. மன்னரை எதிர்த்து வைகுண்டர் நடத்திய தீரம் நிறைந்த போராட்டம்; அது இன்றைக்கும் அம்மா வழி ? அய்யா வழி என தொடர்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் இன்று முடிந்து விட்டதா ? “2019 ம் ஆண்டிலும் கன்னியாகுமரி மாவட்டம் தேவசம் போர்டுக்கு கட்டுப்பட்ட கோவில்களில் மேலாண்மை அதிகாரம் உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதும் நாடார்கள் காவலர்களாக பணியாற்றுவதும் உண்மை” என்கிறார் லஜபதிராய்.

தீண்டத்தகாத சாதியினர் என்று சொல்லி நாடார்களை கோவில்களிலோ, தெருக்களிலோ, நுழையவிடாமல் தடுத்த அதே உயர்சாதியினர்தான் தங்களால் உரிமை மறுக்கப்பட்ட மிச்சமிருக்கும் எளிய மக்களை இந்துக்கள் என்று முத்திரை குத்தி இந்து மதத்தின் காலாட்படையினராக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

வெறுமனே சாதிப்பிரச்சினை என்றும் இந்த நூலை ஒதுக்க முடியாது. ஏனெனில் பெரும் நிலவுடமையாளர்களான சில நாடார் குடும்பங்கள் (பொன்.ராதா கிருஷ்ணன்கள்) ஆலய நுழைவு போராட்டத்தின் போது உரிமைக்காக போராடிய மக்களுக்கு எதிராக இருந்தனர் என்பதும், தோள் சீலை அணிய அனுமதிக்க கூடாது என்று திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு விண்ணப்பம் அளித்தனர் என்பதும் வரலாறு. எனவே பொன்.’ராதாகிருஷ்ணன்கள்’. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெற்றிகரமான காலாட் படையினராக இருக்கலாம்! மற்றவர்கள் ? மண்டைக்காடு கலவரத்தில் மீனவர்களும், நாடார்களும் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால் பலனை அறுவடை செய்தது?

லஜபதி ராய் போற்றதலுக்கு உரியவர். இந்த நூல் மிகப் பெரிய சலனத்தை , விவாதத்தை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தும்.

வெளியீடு: லஜபதிராய், மனை எண் 39, ஐஸ்வர்யம் நகர், புதுத் தாமரைப் பட்டி, மதுரை- 625 107/ரூ100/140 பக்கம்/2019.

நூலை ஆன்லைனில் வாங்க…

https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

தீஸ்தா செதால்வாட்: அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

‘Foot Soldier of the Constitution- A Memoir’ என்ற நூலை Left word Books வெளியிட்டுள்ளது. தீஸ்தா செதால்வாட் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச.வீரமணி – தஞ்சை ரமேஷ் மொழிபெயர்த்து உள்ளனர்.

தீஸ்தா செதால்வாட்டின் கொள்ளுதாத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்தவர்.இவருடைய தாத்தா எம்.சி செதால்வாட் இந்திய அரசாங்கத்தின் முதல் அரசு வழக்கறிஞர்.ஒரு அரசு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.இவருடைய நடவடிக்கையால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி (முந்த்ரா ஊழல்) செய்த செயல்கள் விமர்சிக்கப்பட்டன. இவருடைய அப்பா (அடுல் செதால்வாட்), பால்தாக்கரே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல் செய்தவர். இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்தான் தீஸ்தா செதால்வாட். இந்த நூலில் இவருடைய தன்வரலாறு (அவை சாகசங்கள்) எழுதப்பட்டுள்ளது. ‘வங்காள தேசத்தில் எல்லைகளைத் தாண்டி அச்சமின்றி பாயும் ஓர் ஆறு’ என்பதுதான் இவருடைய பெயர்காரணம்.

இவருடைய நினைவுக் குறிப்புகள் என்பது ஒவ்வொரு குடிமகனோடும் தொடர்பு கொண்டவை. இவர் எழுதியது முதலில் இந்தியா டுடே – இதழில், அவருடைய 14 ம் வயதில், வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகிறது;பின்னர் கல்லூரி மலரில் வெளியாகிறது. தி டெய்லி, பிசினஸ் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார். அதனால்தானோ என்னவோ இந்த நூல் செறிவாக இருந்தாலும் படிக்க எளிதாக இருக்கிறது; வார்த்தைகள் வீண்டிக்கப் படவில்லை.

1984 ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த போது 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட னர். அதில் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட்டு இருந்தால் 1993 ல் மும்பை கலவரம் நடைபெற்றிருக்காது. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருந்தால் 2002 குஜராத் கலவரங்கள் நடைபெற்று இருக்காது. நமது நாட்டிலுள்ள அரசு இயந்திரங்கள், சிறுபான்மை ஆணையம், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள் போன்ற அமைப்புகளின் ‘திறன்’ இது போன்ற சமயங்களில்தான் தெரியவருகின்றன. குடிமக்களை பாதுகாப்பதில் இந்த அமைப்புகள் ஆற்றியுள்ள பங்கு என்ன? குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் இந்த அமைப்புகளின் திறன் எத்தகையது? இது குறித்த பார்வையை இந்த நூலைப்படிப்பதன் மூலம் ஒருவர் பெற இயலும்.

ராஜஸ்தான் வறட்சி, சீக்கியர் படுகொலை என இவரது செயல்பாட்டில் ஆரம்பம் முதலே ஒரு தொடர்ச்சி தெரிகிறது. மும்பைக் கலவரம் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் இவர் கொடுக்கும் சித்திரம் வித்தியாசமானது.இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். ‘நீதிமன்ற தீர்ப்புகளின் மீது சிறுநீரை கழிப்பேன்’ என்று கூறிய பால்தாக்கரே மீது அரசு எடுக்கவில்லை .இவருடைய தந்தை அடுல் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பால்தாக்கரே சொல்லுவதை முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கும்போது ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி? ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் அளித்த பரிந்துரைகளை காங்கிரஸ் அரசும் அமலாக்கவில்லை. இதனால் நமது ஜனநாயக அமைப்புகளின் தோல்வி வெளிப்படவில்லையா?

கோத்ரா ரயில் சம்பவத்தினால்தான் பிப்ரவரி 28 ல் 2002 ல் குஜராத் கலவரம் தன்னெழுச்சியாக நடந்தது என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்று நிரூபிக்கிறது இந்த நூல்.2001 ல் குஜராத் மாநில இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தவுடன் கொண்டுவரப்பட்டவர்தான் நரேந்திர மோடி.2002 க்கு முன்னரே ‘முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில் தேர்வு எழுத வேண்டி இருந்தது’. ‘போரா, கோஜா பிரிவு முஸ்லிம்களின் வர்த்தகத் துறை வெற்றியினால் பொறாமை உருவானது’. பொறுப்பு ஏற்றுக் கொள்ளாத, பெயரிடப்படாத , விஷத்தை கக்கும் துண்டறிக்கைகள் மூலம் தொடர்ந்து இனப்பகை கட்டமைக்கப்பட்டு வந்தது. முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்க முடியும் என்ற தற்காப்பு மனநிலைக்கு வந்து விட்டனர்.சமையல் எரிவாயு வன்முறையாளர்களுக்கு எப்படி கிடைத்தது. முஸ்லிம்கள் தங்கியிருந்த இடங்கள் எப்படி துல்லியமாக தாக்கப்பட்டன என்ற விபரங்களை எந்த விசாரணை அமைப்புகளும் கண்டு கொள்ள வில்லை. குஜராத் வன்முறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுக் காரண காரியங்களை விளக்கி விசாரிக்கச் சொல்லுகிறார்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் எப்படி குஜராத் அரசிடம் இருந்து இலட்சக் கணக்கில் பணப்பலன்களை பெற்றனர்.எப்படி குற்றவாளிகளை தப்பிக்க விட்டனர்.ஆவணங்களை, தொலைபேசித் தகவல்களை கண்டுகொள்ளாமல் விட்டனர். குற்றவாளிகளை விட , உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ‘ஆர்.கே .ராகவன்கள்’ போன்ற அதிகாரிகள் மீதுதான் நமக்கு கோபம் வருகிறது.
இவையெல்லாம் ஏதோ குஜராத்தில் மட்டும் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம்.இதுதான் மற்ற இடங்களிலும் நடக்கும்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட தீஸ்தா எடுத்த வைத்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் அவரைக் கோவில் கட்டி கும்பிட வேண்டும். எவ்வளவு அவதூறுகள். வழக்குகள். உயரைப் பணயம் வைத்து அவர் செய்த பல விஷயங்களை அரசியல்கட்சிகள் கூட செய்யவில்லை.இவை அனைத்தும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மோடி பிரதமராகிறார்.விட்டுவிடுமா அரசாங்கம். இவரையும் , இவரது கணவரையும் பண மோசடி வழக்கில் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.அவரை கைது செய்ய முனைந்த தருணங்களுக்கும் , அவர் பாதிக்கப்பட்டோர் சார்பாக தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு வந்த சமயங்களுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறார்.அரசு எத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு இவரை அவதூறு செய்கிறது என்பதை சொல்லுகிறார் .

தன் கணவர் ஜாவித்தோடு இணைந்து வெளியிட்டு வரும் ‘கம்யூனலிசம் கம்பாட்’ இதழ் பற்றியும் இந்த நூல் சொல்லுகிறது.தான் வளந்த சூழல், தன்னை உருவாக்கிய ஆளுமைகள் பற்றி ‘வேர்கள்’ அத்தியாயத்தில் கூறுகிறார்.

இவருடைய முயற்சியானால்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சரான மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். (எந்தக் கொடுங் குற்றத்திற்கும் இவர்கள் மரண தண்டனை கோரவில்லை)
இதில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் தப்பி இருக்கலாம்;அதிகாரத்தை அடைந்து இருக்கலாம்.ஆனால் தீஸ்தா செதால்வாட் நடத்திக் கொண்டு இருப்பது ஒரு நெடிய போராட்டம். அது நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு ரேஷன் வாங்கித் தருவதாக இருந்தாலும் சரி; மற்ற அமைப்புகளை நீதி கேட்கும் நெடும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதாக இருந்தாலும் சரி; இந்த நூல் ஒரு வகையில் இதிகாசமே .ராஜூ ராமச்சந்திரன், இந்திரா ஜெய்சிங், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், நீதிபதி எச்.சுரேஷ் ,ஜாகிரா ஷேக், மிகிர் தேசாய் போன்ற பலரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

குடிமக்களின் உயிர் ,உடமைகளை பாதுகாத்தற்காகவே இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதியம் என பல வழிகளில் இன்னல்களைச் சந்தித்த அதிகாரிகள்; அதற்கு நேர் விரோதமான மற்றொரு வகை அதிகாரிகள், அவர்கள் அடைந்த பலன்கள் எல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஜனநாயகத்தை வலிமைப் படுத்துவதில் இந்த நூல் முக்கியப் பங்காற்றும். பாரதி புத்தகாலயம் ஒரு முக்கியமான அரசியல் கடமையை நிறைவேற்றி இருக்கிறது. இது ஒரு முக்கியமான கையேடு என்பதில் ஐயமில்லை.

பாரதி புத்தகாலயம்/ஜூலை 2018/231 பக்கம்/ ரூ.200.

நூல் அறிமுகம்: ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

“என் ஆசான் காரல் மார்க்ஸ்” என்ற பெருமிதத்தோடு தொடங்கும் இந்த நூல் அம்பேத்கரை ஆய்வு செய்கிறது. அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூல் புத்தர் குறித்து பேசுகிறது.அது பரவலாக வாசிக்கப்பட்டும் வருகிறது. இந்து மதத்திலிருந்து விலகிய அம்பேத்கர் பகுத்தறிவுவாதியாக மாறவில்லை; கிறிஸ்தவ மதத்திற்கோ,இஸ்லாமிய மதத்திற்கோ,சீக்கிய மதத்திற்கோ மாறவில்லை. அவர் பௌத்த மதத்தை தழுவினார்.இதன் காரண,காரியங்கள் குறித்து வசுமித்ர நூல் விரிவாக,மிக விரிவாக ஆய்வு செய்கிறது.

“எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா,அ.மார்க்ஸ், ரவிக்குமார், பிரேம்,முத்துமோகன்,அருணன் என எவரும் அம்பேத்கர் குறித்து ஆய்வுப்பூர்வமான ஒரு நூலைக்கூட மார்க்சியத்தின் அடிப்படையில் அம்பேத்கரது பார்வையை வைத்து ஒரு கட்டுரையைக் கூட எழுதியதில்லை” என்று சொல்லுகிற வசுமித்ர அந்தப் பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, கோசாம்பி,ராகுல சாங்கிருத்யாயன், போன்ற மார்க்சிய அறிஞர்கள் வழிநின்று ஒரு நெடிய நூலைப் படைத்துள்ளார்.புத்தகம் 920 பக்கங்களில் உள்ளது.இந்தப் புத்தகம் உடனடியாக கவனம் பெறாமல் போகலாம்;வசுமித்ர அவதூறுகளுக்கு ஆளாக நேரிடலாம்.ஆனாலும் இது ஒரு முக்கியமான நூல்.

நடை சாதாரண நடை; கடினமான சொற்கள் இல்லை.’வாசகனிடம் நேரடியாக பேசுவது போல இருந்தது’ என்று வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த க.சந்தானம் பேசினார். அவர் சொன்னது உண்மைதான்.

பௌத்த மதத்தை விமர்சனப் பார்வையோடு அம்பேத்கர் அணுகினாரா என்பதுதான் இந்த நூல் எழுப்பும் ஆதாரமான கேள்வி. “அம்பேத்கரது பௌத்தத்திற்கு மாறியவர்கள் இதுவரையிலும் சாதியை ஒழித்துக்கட்டியதற்கான சிறு தடயம் கூட இதுவரை கிடைக்கவில்லை” என்கிறார் வசுமித்ர. பௌத்தம் தோன்றியதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம்.ஆனால் பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்ற ஒரே நோக்கத்தில் பௌத்தத்தை விமர்சனம் இன்றி அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார் என்கிறார் நூலாசிரியர்.

புத்தரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்திற்கு ஏற்றாற்போல விஷயங்களை சொல்லியும், சொல்லாமலும், வெட்டியும், ஒட்டியும் அம்பேத்கர் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் எழுதி இருக்கிறார் என்று விமர்சிக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகளை இன்றைய ஒழுக்க மதிப்பீடுகளை அளவுகோல்களாகக் கொண்டு அம்பேத்கர் பார்க்கிறார் என்று சொல்லுகிறார்.

புத்தரை ஆய்வு நோக்கில் அம்பேத்கர் பார்க்கவில்லை. பௌத்தம் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்தது; வட்டித் தொழிலுக்கு ஆதரவாக இருந்தது. அதானால்தான் கடனாளிகளையும், அடிமைகளையும் புத்த பிக்குகளாக புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. வியாபாரிகள் ஆதரவு அளித்ததால்தான் பௌத்தம் அவ்வளவு வேகமாகப் பரவியது; பெருஞ்செல்வம் சேர்த்தது. அரசர்களை பௌத்தம் எதிர்க்கவில்லை. அதனால்தான் படைவீரர்கள் பிக்குகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு பலநூறு கிராமங்களில் இருந்து மானியம் வந்ததால்தான் அத்தனை ஆயிரம் பிக்குகளுக்கு உணவளிக்க முடிந்தது. இப்படி அரச ஆதரவோடு, வியாபாரிகள் ஆதரவோடு இருந்த மதம் புத்தரை கடவுளாக பார்த்தது. அவரை சிலைகளாக்கி வழிபட ஆரம்பித்தது என்கிறார் வசுமித்ர. அம்பேத்கரது பௌத்தம் சுரண்டலுக்கு ஆதரவாக இருந்தது; ‘பொருளாதார அமைதியை’ சீர்குலைக்கவில்லை. பௌத்தர் சொத்துடமை வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தது பிரச்சனை இல்லை. ஆனால், எந்தவித விமர்சனப் பார்வையும் இல்லாமல் அம்பேத்கர் புத்தரை ஏற்றுக்கொண்டதைத்தான் வசுமித்ர கேள்விக்குள்ளாக்குகிறார்.

ஆய்வுத் தளத்தில் இது போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய அறிவுப் பகுதியினரும் அதற்குரிய பங்களிப்பை செலுத்தவில்லை என்கிறார் வசுமித்ர. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாக, தத்துவ ரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை” என்கிறார்.

“அமைப்புசாரா மார்க்சியர்களில் சிலர், உள்ளார்ந்த அக்கறையோடு அம்பேத்கரை மார்க்சியத்தின் பக்கம் இழுத்து நிறுத்துவதன் மூலம், ஏதேனும் மாற்றம் நடக்கலாம் என்ற கனவோடு,அம்பேத்கரை மார்க்சியத்தின் பக்கம் இழுக்கும் முயற்சியில், மார்க்சியத்தை திரிபுக்குள்ளாக்குவதில் போய் நிற்கின்றனர். மறுபுறத்தில், பௌத்தத்தை மார்க்சியத்திற்கு ஏற்றாற் போல வளைப்பதில் பௌத்தத்தையும், அம்பேத்கரையும் பொருந்தாத சித்திரத்தில் அடைக்கின்றனர்” என்கிறார் வசுமித்ர. அடையாள அரசியலினால் உண்மையில் பலனடைவது ஆதிக்க சக்திகளே என்கிறார்.

தான் சொல்லுவதை நிரூபிக்க கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட நூல்களை பயன்படுத்தி உள்ளார். அவை மிக விரிவாகவே மூல ஆசிரியர்கள் மொழியில் மேற்கோள்களாக காட்டப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் அவர்கள் அடையாள அரசியல் பேசுபவர்களாக இருந்தாலும் சரி, மார்க்சிய அரசியல் பேசுபவர்களாக இருந்தாலும் சரி விவாதத்தில் வந்து செல்கின்றனர். அவர்கள் சொன்னவைகளை அப்படியே எடுத்தாண்டு இருப்பதால்தான் இது நெடிய நூலாகிவிட்டது போலும். ஒரு சில இடங்களில் கூறியது கூறல் வருகிறது.

எப்படி இருந்தாலும் நூல் வெற்றி பெற்று இருக்கிறது. நூலைப் படித்துவிட்டு பேசுங்கள் என்கிறார். ‘ஆதிக்க சாதி’ என முத்திரை குத்துவது விவாதத்திற்கு பலன் அளிக்காது என்கிறார். முன்னோட்டமாக 120 பக்கங்களில் தன் கருத்தை பதிவுசெய்துள்ளார் வசுமித்ர. இதை நிரூபிப்பதற்காகத்தான் எஞ்சிய பக்கங்களை பயன்படுத்தி இருக்கிறார். புத்தரது குலம், பிறப்பு, துறவு, ஞானம், துக்கம், மறு உடல் என பல அத்தியாயங்கள் உள்ளன.

‘தீண்டப்படாதவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆதரவாக இருந்ததை தவிர அவருடைய பிற கருத்துக்களில் முரணற்ற உறுதியில்லை’ என்று W.N .குபேர் வார்தைகளில் அம்பேத்கர் பற்றி கூறுகிறார். புத்தரா? காரல் மார்க்ஸா? என்ற நூலில் புத்தரை காரல் மார்ஸை விட மேலானவராக அம்பேத்கர் சித்தரிப்பதில் எந்த நியாமும் இல்லை என்கிறார்.

பேரா.தி்.சு.நடராசன் ‘சமயம்-சாதி-அரசியல் என்ற இந்த மூன்றையும் அடிமொத்தமாக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது என்பது தர்மசஙகடமானது. துணிச்சலுடன் இந்தக் காரியத்தை செய்கிறது இந்த நூல்” என்று முன்னுரையில் சரியாகவே மதிப்பீடு செய்கிறார். “அம்பேத்கரை புறவயமான ,வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பார்வையோடு அணுகி விமர்சிக்கின்ற முதல் தமிழ் நூல் இது ” என்று மொழிபெயர்ப்பாளரும்,மார்க்சிய ஆய்வாளருமான கோவை எஸ்.பாலச்சந்திரன் இந்த நூல் பற்றிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

எப்படி இருந்தாலும் இந்த நூலை புறக்கணித்து விட்டு சமூகநீதி பேசும் யாரும் பயணிக்க முடியாது.

குறளி பதிப்பகம்/ 920 பக்கம்/ ரூ.890/ஜனவரி 2019.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்

பீட்டர் துரைராஜ்

‘வசுமித்ர’ எழுதிய ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் புதன் அன்று ( 2.1.2019) நடைபெற்றது. குறளி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் பெற்றுக்கொண்டார்.
விடிவெள்ளி வாசகர் வட்டமும், குறளி பதிப்பகமும் நடத்திய இந்த விழாவில் மொழிபெயர்ப்பாளரும், மார்க்சிய ஆய்வாளருமான கோவை எஸ்.பாலச்சந்திரன் இந்த நூல் குறித்து நீண்ட, பொருள்பொதிந்த உரை ஆற்றினார்.

“சாதி மறுப்பிற்காக அதிக தியாகத்தையும், அதிக போராட்டத்தையும் அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றது இடதுசாரி இயக்கம்; அதே சமயம் நிறைய கெட்ட பேரையும் அது பெற்றுள்ளது. இந்தியாவில் சாதி இயக்கங்கள் அடையாள அரசியலை பேசுகின்றன. அவை பொருளாதார காரணிகளை புறக்கணித்து விட்டன; மார்க்சியத்தை புறக்கணித்து விட்டன. சாதி மறுப்பு போராட்டம் புறக்கணிக்கப் பட்டது. மார்க்சியர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழில் அசலான சிந்தனையில் வெளிவந்துள்ள முதல் நூல் இது என்று உறுதியாகச் சொல்லுவேன். அடையாள அரசியல், நுண்ணரசியல் போன்ற புதுப்புது பெயர்களில் வரும் விவாதங்கள் எப்படி மார்க்சியத்திற்கு எதிராக நடைபெறுகின்றன என்பதையும் பார்த்துவருகிறோம்.

முஸ்லிம்கள் மத அடிப்படையில் தனிநாடு கோரி வெற்றி பெற்றதைக் கண்ட அம்பேத்கர் அதே வழியில் சாதி அடையாளத்தை அடிப்படையாக்க் கொண்டார்; ஆங்கிலேய அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். சாதியவாதியாக அம்பேத்கர் சுருங்கிப் போனார். பௌத்த மதத்தை பின்பற்றினால் மரியாதை கிடைக்கும் என்ற காரணத்தால் பகுத்தறிவுக்கு விரோதமாக இருந்தாலும் அதனைப் பின்பற்றினார். இந்தியாவின் மார்க்ஸ், அம்பேத்கர்தான் என்று சொல்லும் அளவுக்கு அடையாள அரசியல் சென்றுவிட்டது.

நுண் அரசியலும், அடையாள அரசியலிலும் பேசப்படுவதன் மூலம் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது. இது வகுப்புவாத அரசியலுக்கே உதவிகரமாக அமையும். இந்தச் சிக்கலை அடையாள அரசியலைப் பேசுபவர்களும், இடதுசாரி அரசியலைப் பேசுபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நூலில் எந்தவித பிழைகளும்(factual error) இல்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இது தைரியமானப்பணி. யாரையும் புனிதப்படுத்திவிடக் கூடாது என்கிறார். இந்த நூலை தூற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என அஞ்சுகிறேன்.

‘உச்சாலியா’, ‘உபாரே’ போன்ற தலித் இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய நாங்கள்தான் இந்த நூலையும் வரவேற்கிறோம். சாதி ஒழிப்பிற்கு ஒருங்கிணைந்த சிந்தனை உருவாகும் வகையில் விவாதங்கள் அமைய வேண்டும்’ என்ற நெடிய உரையை அரங்கு நிறைந்த சபையில் பேசினார் எஸ்.பாலச்சந்திரன். இவர்தான் இந்த நூலின் உருவாக்கத்தில் முக்கிய வழிகாட்டியாக(Editing) இருந்தவர்.

fb_img_1546448263430

“இந்த நூலுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த தி.சு.நடராசன் முன்னுரை எழுதியுள்ளார். அதே சமயம் எங்கள் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் ந.முத்துமோகனையும் இந்த நூலில் வசுமித்ர விமர்சித்து உள்ளார். எப்படி இருந்தாலும் அறிவுத்தளத்தில் நாம் ஈவிரக்கமின்றி பேசுவது அவசியம். புத்தர் சொன்ன துக்கம், மார்க்ஸ் சொன்ன சுரண்டல் இரண்டும் ஒன்றாக? என்ற கேள்வியை எழுப்புகிறார் வசுமித்ர. புத்தரை கடவுள் என்று அவதாரமாக்கி விக்கிரக வழிபாட்டில் சேர்த்தாகிவிட்டது. அந்த புத்த மதத்தில்தான் அம்பேத்கர் சேருகிறார்.

இந்த நூலில் வசுமித்ர பேசும் மொழி நல்ல மொழி;வாசகனிடம் நேரடியாக பேசுவது போல உள்ள மொழி.900 பக்கங்கள் உள்ள நூல்; பல தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட முக்கியமான நூல் இது ” என்று பேசினார் க.சந்தானம்.

இந்த நூல் சிந்தன் பதிப்பகத்தில் ( ரூ.890) கிடைக்கும். இறுதியில் நூலாசிரியர் வசுமித்ர ஏற்புரை வழங்கினார்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

நூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’

பீட்டர் துரைராஜ்

“நாவலைப் பாதி எழுதி முடித்தபோது, எங்கே உண்மை விடைபெறுகிறது, எங்கே கற்பனை நுழைகிறது என்பதில் எனக்கே சந்தேகம் தோன்றிவிட்டது ” என்று அ.முத்துலிங்கம் இந்த நாவல் பற்றி அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இலங்கை , கொக்குவில் கிராமத்தில் ‘ரயிலை வைத்து மணி சொன்ன நாளில்’ இருந்து தனது அனுபவங்களை, நினைவுகளை கோர்வையாக 46 அத்தியாயங்களில் இந்த நூலில் எழுதியிருக்கிறார் அ.முத்துலிங்கம்.

கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது அனுபவங்களை அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை நாவல் என்றே நாம் ஒப்புக்கொள்ளுவோம்.2008 ஆம் ஆண்டு தனது முதல் பதிப்பை இந்த நூல் கண்டுள்ளது.

ஊர்திருவிழாவில் தன் அம்மாவைத் தொலைத்த கதையில் தொடங்கும் இந்த நூல் , தன் ‘அக்காவின் சங்கீத சிட்சை’, தான் ‘பாடகன் ஆன கதை’ என பள்ளிக்காலம்,கல்லூரிக் காலம், உத்தியோக காலம்,சந்தித்த கதாபாத்திரங்கள் என 46 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு. ஆனால் இதை நாம் கதை என்று சொல்ல முடியாது. எந்த அத்தியாயத்திலிருந்தும் படிக்கலாம்.’ இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் ” என்ற பொறுப்புத் துறப்போடு(disclaim) இந்த நூல் தொடங்குகிறது.

நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். இந்த நூலும் எந்த வஞ்சனையும் இல்லாமல் இருக்கிறது. இதில் உள்ள பல வாக்கியங்களை நான் அடிக்கோடிட்டு ரசித்துச் சிரித்தேன்.

அம்மாவுடன், அய்யாவுடன், அக்காவுடன், தங்கையுடன், மனைவியுடன், பேத்தியுடன் அவருக்கு உள்ள நினைவுகளின் கோவையே இந்த நூல். ஐ.நா.வில் பணிபுரிந்த போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். பல மனிதர்களை பார்த்து இருக்கிறார். இதில் கதை என்று ஏதும் இல்லாததால் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசிக்கக் கூடிய ஏகப்பட்ட சம்பவங்கள் உண்டு.

‘உருப்படமாட்டாய்’ என்று சொன்ன ஆசிரியர் சொன்ன கட்டடத்தின் முன் சிறுநீர் கழித்த கண்ணதாசன், காதலியை சைக்கிளில் துரத்திய மதியாபரணம், 14 சமையல் புத்தகத்திலும் இல்லாத வட்டிலப்பம், தமிழ் ஈழத்தின் வரைபடத்தை ஒரு வரியில் பத்திரிக்கையாளர்களுக்குச் சொன்ன கேர்ணல் கிட்டு, ‘நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். சரி எனக்கு எப்போது ஓய்வு?’ என்று அவர் மனைவி கேட்ட கேள்வி போன்ற துணுக்குகள் மூலம் அ.முத்துலிங்கத்தின் ஜனநாயக பார்வையை, அரசியலை நாம் அவதானிக்க முடியும்.

மொத்தத்தில் துணுக்குத் தோரணங்களைக் கொண்ட நூல் இது.

உயிர்மை பதிப்பகம்/ 287 பக்கம்/ரூ.240/இரண்டாம் பதிப்பு 2014.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழில் தன் வாசித்த நூல்கள், ரசித்த சினிமாக்கள் குறித்து சமூக செயல்பாட்டாளர்களை நேர்கண்டும் எழுதி வருகிறார்.

நூல் அறிமுகம்: தொ. பத்தினாதனின் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’

தினகரன் செல்லையா

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் சென்றபோது மதுரையை ஒட்டி ஈழ அகதிகள் இருக்கும் முகாமிற்கு சென்று வந்ததிலிருந்து அவர்களின் அவல நிலை அடிக்கடி மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதில் பலவித சிக்கல்கள்.
உண்மையில் தமிழ்நாட்டில் உரிமைகளே இல்லாத கடைக்கோடி மனிதர்களாக,அடிமைகள் போல், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைவிட கொடுமையான நிலையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு ஆதரவாய் குரல் எழுப்புவோர் எவருமில்லை.

சமீபத்தில் தொ. பத்தினாதன் எழுதியிருக்கும் “தமிழகத்தின் ஈழ அகதிகள்” நூலை வாசிக்கும்போது எழுந்த எண்ணத்தை, மனவலியை விவரிப்பது கடினமே. விளிம்பு நிலைக்கும் கீழிருக்கும் தமிழகத்தின் ஈழ அகதிகளின் உரிமைக் குரலின் மொத்த பதிவாக இந்த நூல் இருப்பது வாசிக்கும் யாருக்கும் எளிதில் விளங்கும்.

“ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நடத்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத் தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே ‘போரின் மறுபக்கம்’ என்னும் சுயசரிதை நூலை எழுதிக் கவனம் பெற்ற பத்தினாதன் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாகக் கேட்கும் வினாக்கள் கூர்மையும் காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது.” என இந்த நூல் பற்றி பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் ஈழ அகதிகள் நூலின் சில வரிகள் :

// ஓட்டுரிமையிருந்தால் மட்டும் நாடிவரும் இடைநிலைச் சாதிச் சமூகம் எதுவுமற்ற அகதிகளுக்கு என்ன செய்வார்கள்? கொடுக்கல்-வாங்கல் -வியாபாரம் அதுவே நமக்கு உலகமயமாக்கல் மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுத்த பாடம்; அகதிகளிடம் திருப்பிக் கொடுக்க என்ன இருக்கிறது? ஓட்டு இருக்கிறதா? தலித் மக்களையும்விட ஒதுக்கப்படுகிறார்கள் அகதிகள். ஓட்டுரிமை உள்ள தலித்துகளின் நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அதற்கும் கீழ்நிலையே அகதிகளின் நிலை.

‘கல்வி அறிவில்லாத, அறியாமையின்
இருளில் தவிக்கும் இந்த ஏழை
தனக்கெதிரான சட்டங்களையோ
ஆட்காட்டிகளின் தீச்செயல்களையோ
வேலை கொடுப்போரின் கொடுமைகளையோ
எதிர்க்கும் சக்தியற்றவர்கள்’

என்று இந்திய வம்சாவழித் தமிழருக்காக முதன் முதலில் குரல் கொடுத்த பொன்னம்பலம் அருணாச்சலம் 1916 ஆம் ஆண்டு கூறியது இன்று தமிழ்நாட்டு ஈழத்தமிழ் அகதிகளுக்குக் கனகச்சிதமாகப் பொருந்துவதை எண்ணி என்ன செய்ய? //

// மெத்தப்படித்தவர்களின் அறிவுதான் இன்று உலகம் முழுவதும் அகதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆயுத உற்பத்தி பெருக பெருக அகதிகளும் பெருகிக்கொண்டேதான் இருப்பார்கள்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். //

//தண்ணீர் இல்லை, மின்சாரமில்லை, கழிவறையில்லை, ரேஷன் கடையில்லை. 90களில் கட்டிக் கொடுத்த ஓலைக் கொட்டில் இன்றுவரை அப்படியே இருக்கிறது. இத்தனையும் மனிதன் வாழத் தேவையில்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சுதந்திரம் மட்டுமாவது வேண்டாமா?//

//இலங்கையில் சிங்களவர்களிடத்தில் அடிமையாக வாழ்வது கேவலமா? தமிழ்நாட்டிலே தமிழர்கள் வாழும் பகுதியில் “தொப்புள் கொடி உறவு” என்று அடிமையாக வாழ்வது கேவலமா?//

வலிகளோடு இந்த நூலை படிக்கும்போது ஒரு விடயம் நன்றாகவே விளங்கும், ஈழப் போரை முன்னிறுத்தி ஆதாயம் தேடும் எந்த ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ எவருமே தமிழ்நாட்டில் அடிமைகளை விட மோசமான நிலையில் இருக்கும் ஈழ அகதிகளை கண்டுகொள்வதில்லை என்பது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லாதவரையில் இவர்களுக்கு ஒரு விடிவு இல்லை என்பதைக் காரணம் கூறி கைகழுவுவதில் வல்லவர்கள் இவர்கள்!.

இந்திய அரசைக் சாக்காட்டி, வெளிநாடுகளில் வசதியாய் வாழும் ஈழத் தமிழர்கள் தமிழத்தில் உள்ள அகதிகளுக்கு உதவாமல் இருப்பது ஏனோ?

காலச்சுவடு பதிப்பகம்/96 பக்கம்/ரூ.80.

தினகரன் செல்லையா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்.

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. இளந்தமிழகம் இந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது.மேலும் பல கூட்டங்களுக்கு பொருத்தமானதுதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலி செய்யும்படி விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள். ‘புலிகள் சொன்னால் ஏதோ காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று யாழ்பாணம் நகரை மக்கள் காலி செய்கிறார்கள்; அனைவரும் காட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். இந்த நூலுக்கு ‘ வனமேகு காதை’ என பொருத்தமான அடைமொழி இட்டிருக்கிறார் நாவலாசிரியர். கிட்டத்தட்ட இந்த இடப்பெயர்வின் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலிசெய்யும் மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழி தன் காதலை இந்தக் கதை முடிவதற்குள் தனது சீனியர் டாக்டர் மதிக்குமாரிடம் சொல்லிவிடுவாளா ? தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும்? அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள்? ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக புலம்பெயர்கிறார்கள். இவர்களோடு நாம் மனரீதியில் பயணம் செய்கிறோம். ஒருவேளை அதில் உங்கள் அப்பா இருக்கலாம்; அத்தை இருக்கலாம், சகோதரன் இருக்கலாம். யார் கண்டது ?

யாழ்நகரை வெற்றி கொள்கிறது இராணுவம்; யாழ் கோட்டையில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம்? யார் பெயரை தட்டிக் கொள்வது ? இராணுவமா ! அரசியல் தலைமையா! இவையெல்லாம் இந்த நாவலில் பேசப்படுகிறது.

சிங்கள அரசியல்வாதி ஆரிய ரத்னா இந்த வெற்றியைக் கொண்டாட குயின்ஸ் ஹோட்டலில் விருந்து வைக்கிறார். இதில் இராணுவ மேஜர் நுவான், சட்டத்தரணி காரிய விக்ரமசிங்க , நீதிபதி,எஸ்.பி, பத்திரிக்கையாளர் கமால , மகளிர் அணித்தலைவி சந்திரா களுநாயக்கா கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் கேளிக்கை, சல்லாபத்திற்கிடையே இலங்கை அரசியல் பேசப்படுகிறது; புலிகள் வீழ்ச்சி பேசப்படுகிறது. மிக நுட்பமாக தகவல்களை தந்திருக்கிறார். ” பாத்திரங்கள் என்னோடு மெய் பேசுவதுபோல மனிதர்கள் ஒருபோதும் பேசுவது இல்லை ” என்று ஆசிரியர் சொல்லுவது உண்மைதானோ என்னவோ !

இந்த விருந்திற்காகும் செலவை ஒரு மத்தியதர சிங்கள குடும்பத்திலிருந்து வந்த விஜயதாசா செய்கிறான்; ஆரிய ரத்னா செய்ய வைக்கிறார். அவனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் தான் செய்து வரும் மரக்காலை ( மரம் அறுக்கும் ஆலை!) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும்! இவன் தன் மைத்துனன் மனைவியோடு உறவு கொள்ளும் அத்தியாயம் நாவலில் வரும் ஒரு ரசிக்கத்தக்க பகுதி.

இந்த நாவல் தமிழ் மக்களின் அவலம் குறித்த நாவல். ஆனால் இதில் என் மனதைக் கொள்ளை கொண்டது சிங்களக் குடும்பம்தான். தன் பேரன் சுனில் இராணுவத்தில் சேருவதை சீயா(தாத்தா) ரத்னாயக்கவால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை துவக்கை தூக்குவது என்பதே காசுக்காக கொலை செய்வதுதான். அறம் சார்ந்த வழியில் இருந்து கிஞ்சிற்றும் விலக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வளவுக்காரர்களை ( அப்படி என்றால் யார்?) எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மகன் விஜயதாசாவைக் கெடுத்தது அவர்கள்தான். தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க போராடுகிறார்கள் ; அதில் தவறு ஏதும் இல்லை என்பது அவர் கருத்து. மன்னர் காலத்தில் இருந்து தன் குடும்ப தொடர்ச்சியை அவரால் பகுத்தாராய முடிகிறது. தன் குடும்பம் தழைத்து இருப்பதற்கு காரணம் கடனாக புகையிலை, சுருட்டைத் தந்து விற்கச் செய்த தமிழ்க் குடும்பம்தான். அவர் மூத்த மகன் முன்பொரு காலம் புரட்சியில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் இன்னமும் அவசியமானவை. இடதுசாரி அரசியல் குறித்த சாதகமான பார்வை நாவலில் வருகிறது..

சிங்கள சுனிலுக்கு ஏறக்குறைய சம கால தமிழ்ச் சிறுவன் கதிர். இவனுக்கு வரலாறெல்லாம் தன் தாத்தா நாகமணி மூலம் சோற்றோடும், கதையோடும், பேச்சோடும் சொல்லப்படுகிறது. தன் நிலத்தை இடப்பெயர்வில் வரும் மக்களுக்கு கொடுத்து தங்க வைப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த சுணக்கமும் இல்லை. தன் மருமகள் முணுமுணுப்பைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மனிதாபிமானம்தான் அவருக்கு அளவுகோள்.

கதை , சிறுவன் கதிர் ‘ இடம் வலம் இடம் வலம் இடம் வலம் ‘ என்று சொல்லுவதில் கதை தொடங்குகிறது என்றால் சிங்கள இராணுவச் சிப்பாயாக இருக்கும் சுனில் ‘ லெப்ட், ரைட். லெப்ட் ,ரைட் என்று நடப்பதில் முடிகிறது. வன்னிக்காட்டில் கதை தொடர்ந்து நடக்குமோ ? ஒருக்காலத்தில் பரஸ்பரம் ஆதரவோடு இருந்த ரத்னாயக்க – நாகமணி வாரிசுகள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுமோ !

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நாவலின் கட்டுக்கோப்பும் அழகியலும் இவருடைய மற்ற நாவல்களை படிக்க தூண்டுகிறது.

அகல் வெளியீடு, 348 டிடிகே சாலை,சென்னை-14 / பக்கம் 336/ விலை ரூ.300/முதல் பதிப்பு ஜனவரி 18.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

காணாததைக் கண்ட ஆமான்: மு.வி. நந்தினியின் சூழலியல் குறித்த கட்டுரைகள்

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

குங்குமம், விகடன், தினகரன் போன்ற இதழ்களில் பத்திரிக்கையாளரான மு.வி.நந்தினி சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். 2007-ம் ஆண்டு முதல் எழுதிய கட்டுரைகள் இந்த 165 பக்க நூலில் இடம் பெற்றுள்ளன.

நகர்மயமாக்கல் வெகுவேகமாக நடந்து வருகிறது; விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப் படுகின்றன; நீர்நிலைகள் தூர்க்கப்படுவதால் குடிநீருக்கு கோடையில் அலைவதும், மழைக்காலத்தில் நகரங்கள் மூழ்குவதும் வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. புவி வெப்பமயமாதல் என்ற பிரச்சினைகள் புதிய விவாதங்களை உண்டாக்குகின்றன. சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவது பரவலாகிவருகிறது. பசுமைத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகள் உருவாகின்றன.

இந்த நூல் அப்படி ஒரு தேவையிலிருந்து எழுகிறது. சூழலியல் இதழ்களுக்கு தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வரும் மு.வி.நந்தினி “காணாத்தைக் கண்ட ஆமான்” என்ற பெயரில் ஆமான் என்று சங்க இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் காட்டுமாடு பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.அதுவே இந்த நூலின் பெயராயிற்று. இந்த நூலில் பல்வேறு பொருளில் 43 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஓரிரண்டு பக்கங்களில் எளிமையாக உள்ளது.

இந்த நூல் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்; பருந்துப் பார்வையைக் கொடுக்கும். சுற்றுச்சூழல் குறித்த தமிழ்நாட்டின் தற்போதைய முக்கிய ஆளுமைகள் இந்த நூல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் விரவிக் கிடக்கின்றனர்; அதேபோல பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் கோடிட்டு காட்டப்படுகின்றன. இந்த நூலை பள்ளிகளில் துணைப்பாட நூலாக வைக்கலாம்.

விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் இயற்கை உழவாண்மை முன்னோடி கோ.நம்மாழ்வாரைச் சந்தித்து எழுதிய கட்டுரை, ‘அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை, வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது’ என்று இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி ஏதும் தெரியாது என்ற சொல்லும் ச.முகமது அலி கட்டுரை, மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் பற்றிய கட்டுரை, சூழலியல் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் பற்றிய கட்டுரை, ஒரு நகரத்துக்கு குறைந்தது 20 சத பசுமைப் பரப்பு தேவை என்று சொல்லும் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் குறித்த கட்டுரை, பாதரசக் கழிவு, அணு ஆயுதக் கழிவு பற்றி ஆவணப் படம் எடுத்த ஆர்.பி்.அமுதன் பற்றிய கட்டுரை என பல அத்தியாயங்கள் வருகின்றன. இதுதவிர ஜீவசுந்தரி, ச.பாலமுருகன், மாலதி மைத்ரி, ஆதவன் தீட்சன்யா, தமயந்தி, ரவிக்குமார், ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ், பேரா.முருகவேள், ஜோதி மணி, பாரதிதாசன், கோவை சதாசிவம், ப.ஜெகநாதன் என பல ஆளுமைகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

சிட்டிசன் சைண்டிஸ்ட் , காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், பறவைகள் ஒளிப்படக் கலைஞர் என பல புதிய புதிய வார்த்தைகள் நமக்கு இந்த நூல் மூலம்  அறிமுகமாகின்றன. “அணுகுண்டு தயாரிக்கத் தெரிந்தவர்களுக்கு பனியன் தயாரிக்கத் தெரியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார் இரா.முருகவேள்.

இது தவிர காவிரி டெல்டாவில் மீதேன், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், வேடந்தாங்கல், பாம்பு, புலி போன்ற பல பிரச்சினைகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் அது வெளியான தேதி குறிப்பிட்டு இருக்கலாம். வெகுஜன இதழ்களில் ஓரிரு பக்கங்களில் வந்து இருப்பதால் கட்டுரைகளில் ஆழமில்லை; ஆனால் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை இது கண்டிப்பாக கொடுக்கும்.

பெட்ரிகோர் பதிப்பகம் ( தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்பு) , 7 மேற்கு சிவன் கோவில் தெரு,வடபழனி,சென்னை -26/ரூ.160/பக்கம் ரூ.165/வெளியீடு 2018.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு!

இயல்வாகை
மண்கட்டிடத்தை முதன்முதலாக காட்டுப்பள்ளியில் எழுப்ப நமக்குள் எண்ணம் உதித்த காலச்சூழலில் எல்லோருக்கும் ஒரு சின்ன கோரிக்கையை பொதுவில் முன்வைத்தோம். அந்த கோரிக்கை பொருளையோ தொகையையோ சார்ந்தது அல்ல.
அவரவர்களுக்கு பிடித்தமான, மனதுக்கு அந்தரங்கமான ஆத்ம உறவுடைய, எப்போதுமே வாழ்விணைத்து நினைத்துக்கொள்ள விரும்புகிற நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணோ, நீரோ, சிறுகல்லோ… எதுவாயிருந்தாலும் தொட்டெடுத்து அனுப்பிவையுங்கள் என்பதே அந்த வேண்டல்.கற்கள்கற்களாக அப்படி நிலமெழும்பின அந்த மண்கூடு தன்னளவில் முழுமைகொண்டிருந்த நாளில், அதற்கான திறவுக்காக அரவிந்த் குப்தா குக்கூவுக்குள் உள்நுழைந்த தருணத்தில் நூற்றுக்கணக்கான காகிதக் கொக்குகள் ஒரு மரத்தின் கிளைகளில் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தன.

அந்தமரம் பாறையில் வேரூன்றியிருந்த இலைகளுதிர்ந்த ஒரு பாலை மரம். மாடு கன்று ஈன்ற பின்பு சினைநஞ்சு கட்டப்படுகிற மரங்களாகவே பாலைமரம் பூமியில் நிற்கிறது. பறக்கும் அவ்வண்ணக் கொக்குகள் எல்லாம் விதவிதமான விரல்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து காகிதங்களை மடித்துமடித்து உருவம் கொடுத்தவைகள்.

பாலை மரத்தடியில் நின்று அரவிந்த் குப்தா அண்ணாந்து பார்க்கும்போது, விரிந்துநிற்கும் கிளைக்குச்சிகள் முழுக்க கொக்குகளாக பறப்பதும், அவைகளின் பின்புலத்தில் ஆகாயவெளி நீலம் பூத்திருந்ததும் கண்களை விட்டகலாதவை. கொக்குகளின் சிறகில் அமைதியை எழுதிக்கொண்டிருக்கும் சசாகியின் தீராப்பிரார்த்தனையாகவே அந்த தருணத்தை எல்லோரும் மனதுற்றோம்.

தியாகசேகர், வாழ்வினை விடாப்பிடியான தீவிரத்தோடு வாழ விரும்புகிற… அவ்வளவு நெருக்கடிகள், அத்தனை துயரங்கள் எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் மீண்டும்மீண்டும் வாழ்வட்டத்துக்குள் வந்துவிழுந்த சகஆள். சமூகப்பணிக்கான கல்லூரிக்கல்வியை முடித்திருந்தும், தனியார் தொண்டுநிறுவன வேலைகளில் மிதமிஞ்சிய சம்பளத்திற்கான வாய்ப்புச்சூழல் இருந்தும்… முழுதையும் தவிர்த்துவிட்டு இந்த நிலப்பரப்பெங்கும் அலைந்துதிரிகிறார்.

காகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.

பத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாகசேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த கொக்குகளுக்காகவே வானம், தமிழ் ஓரிகாமிப் புத்தகம் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். கடந்த இருவாரங்களாக அவர்கொண்ட மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகம் இயல்வாகை பதிப்பில் வெளிவருகிறது.

நம்மாழ்வார் மிகவும் நேசித்த, தன்னோடு இருக்கவேண்டுமென அவர் ஆசைப்பட்ட மனிதர்களில் தியாகசேகரும் ஒருவர். ஆனால், நம்மாழ்வாரைத் தாண்டி குழந்தைகளிடம் செல்வதே சரி என்று அய்யாவின் கரங்களிடமிருந்து தன்னை வழிய விடுவித்துக்கொண்டு குழந்தைகளிடம் சென்றடைந்ததை இக்கணம் மனதில் நினைக்கிறோம். 

இப்போது… ஏதோவொரு பள்ளிக்கூடத்தில் இவர் சொல்லித்தரும்போது நம்மாழ்வாரும் உட்கார்ந்து ஒரு குழந்தையின் கைவிரல்களாக இருந்து கற்றுகொள்வதாகவே மனதார நம்புகிறோம். தியாக சேகருக்கு எங்களின் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துகளும்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் எளிய இப்புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு வாருங்கள்.

ஈரோடு புத்தக கண்காட்சி

இயல்வாகை பதிப்பகம்

அரங்கு எண் 154

காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை

9942118080

 

நூல் அறிமுகம்: “கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள “: பாலகோபால்

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

“மறைந்த டாக்டர் பாலகோபால் என மதிப்பிற்குரிய வழிகாட்டி. அவர் தெலுங்கில் எழுதிய 36 கட்டுரைகளை நீண்ட காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த மாதவ்,  வி.பி. சிந்தன் நினைவில் தொடங்கிய சிந்தன் பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழுக்கு இந்தக் கொடையை அளித்துள்ளார்” என்று தன் முகநூலில் குறிப்படுகிறார் பேரா. அ.மார்க்ஸ்.

1983 முதல் 2009 வரை தெலுங்கில் இந்துத்துவம் தொடர்பாக மனித உரிமைப் போராளி பாலகோபால் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் புலமையுடைய மாதவ் அழகுற மொழிபெயர்த்துள்ளார். ‘ மேற்தோற்றத்தில் வெளிப்படும் எளிமைக்கு அப்பால் மிக ஆழமாக நம்மைச் சிந்திக்க தூண்டுபவை இதிலுள்ள கட்டுரைகள்’.

‘பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல .ஜனநாயக பெருமதிகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது ‘.இந்நிலையில் இந்நூல்  புதிய வெளிச்சத்தை நமக்கு கொடுக்கிறது. பாலகோபால் முன் வைக்கும் முன்மொழிவுகள், கருத்துகள், விமர்சனங்கள் அனைத்துமே ‘ நோய்நாடி’ குறளின் அடியொட்டி எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.

‘ பிராமண தர்மத்தில் ஜனநாயகம் ‘ என்ற 70 பக்க கட்டுரையில் மனு குற்றவியல் நியதி – குடியுரிமைகள், உடல்சார் வன்முறை, பாலியல் குற்றங்கள்,  அரசு இயந்திரம், அதிகார இயந்திரம், நிதி அமைப்பு போன்றவைகளை ஆழமாக விவாதிக்கிறார். சட்டக் கல்லூரியில் சட்டவியலின் வளர்ச்சியைப் (jurisprudence) படிப்பவர்களுக்குக் கூட இது கற்பிக்கப்படுமா எனத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வரக் கூடாது என சிவசேனா வெறியர்கள் கூச்சலிட்டதை அநாகரிக போக்காக அனைவரும் திட்டினர். ஆனால் கார்கில் யுத்தம் நடைபெறுகையில் வாஜ்பாயி அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்தது என்று சோனியா காந்தி வைக்கிற குற்றச்சாட்டின் வித்தியாசம் தன்னைப் போன்ற ‘ மந்தபுத்தியினருக்கு ‘ புரிவது கடினம் என்று (தாமரை பூத்ததில் யாருக்கு எவ்வளவு பங்கு?) கவலைப்படுகிறார்.

சம அந்தஸ்து வேண்டும் போராட்டங்கள், ஆதிவாசிகள் போராட்டங்கள், ஜமீன்தார் கையிலுள்ள நிலங்கள் நிலமற்றவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனும் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் போன்றவைகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பின்பற்றியோரை காணமுடியும். ஆனால் என்றைக்கும் எந்தப்பெயரில் இருந்ததாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் போராட்டங்களுக்கு மட்டும் பரிவார் கும்பல் துவக்கம் முதல் எதிரானவர்களே என்று கல்வி – கருத்தியல் கட்டுரையில் கூறுகிறார்.

‘ தலித் பகுஜன  அரசியல் ஊழல் மயமான அமைப்பின் பகுதியாகவே வளர்கின்றது ‘ என்று வருத்தப்படுகிறார்.பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இந்துக் கோவில்களை இடித்ததைப் பற்றி அந்த நாடுகளின் பிரமுகர்கள், அறிஞர்கள் பெரிய அளவில் கிளர்ச்சி செய்தனர் ‘ என்கிறார்.

சவுதி தவிர அரபு நாடுகள் அனைத்தும் மதச் சார்பற்ற அரசுகளே என்கிறார். தனிநபர் சட்டங்கள் ஜனநாயகப் படுத்தப் பட வேண்டும் என்கிறார். தொகாடியாவின் ‘ ஆவேசம்’ பற்றி பேசுகிறார்; நீதிமன்றங்களின் சாய்வு பற்றி பேசுகிறார். திருமலையில் ஒரு உள்ளாட்சி அமைப்பு இல்லாதது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைப்பு இல்லாதது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்கிறார் (திருப்பதியில் மத அரசு வேண்டுமா?)

பேரா.அ.மார்க்ஸ் முன்னுரையும், 2009 – 2015 என்ற தலைப்பில் ஆழமான பின்னுரையும் எழுதியுள்ளார். ‘ கடினமே ஆனாலும் இதுதான் வழி ‘ என்று பிஜூ மேத்யூ தெலுங்கு பதிப்பிற்கு எழுதிய முன்னுரையும் இதில் உள்ளது. இந்த நூலுக்காக தனியான ஆய்வரங்குகள் நடத்தலாம்.

மொத்தத்தில் இந்த நூல் அதன் பெயர் காரணத்தை நூறு சதவீதம் உண்மையாக்கி இருக்கிறது.

கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள / பாலகோபால்/ தமிழில்- மாதவ்/ 343 பக்கம்/ ரூ.245/ சிந்தன் புக்ஸ், 132 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

நூல் அறிமுகம்: ‘பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்’

சம்சுதீன் ஹீரா

சம்சுதீன் ஹீரா

இரண்டு மணிநேர ஓய்வு கிடைத்தால் என்ன செய்வீர்கள்..? ஒரு புத்தகம் படிக்கலாம், இசை கேட்கலாம், அல்லது ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் இரண்டு மணிநேரத்தில் உலகின் மிகச் சிறந்த 26 திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்..?

இரண்டு மணிநேரத்தில் 26 படங்களா..? முடியுமா என்றுதானே கேட்கிறீர்கள். முடியுமென்றே சொல்கிறது தோழர் கருப்பு கருணா எழுதிய பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும் என்கிற புத்தகம்.

இது வெறுமனே திரைப்படங்கள் குறித்த விமர்சன நூலல்ல. உலகின் சிறந்த திரைப்படங்கள் குறித்த அறிமுகத்தை அதன் உள்ளார்ந்த சுவையோடு தெவிட்டத்தெவிட்ட ஊட்டுகிற புத்தகம். நான் உங்களுக்கு ஒரு உறுதியைத் தரமுடியும். நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அந்த 26 உலகப் படங்களையும் பார்த்து முடித்த நிறைவை உணர்வீர்கள் என்பதே அது.

அதோடு அந்தத் திரைப்படங்கள் சொல்கிற அரசியலை, மனித மாண்பை, போர்களின் கொடூரத்தை, வரலாற்றின் கருப்புப் பக்கங்களை, அதை எதிர்கொண்ட எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அதில் உள்ளார்ந்து பொதிந்துள்ள வலியை, போராட்ட உணர்வை திரைப்படத்தின் அதே அழகியலோடு எழுத்து வடிவில் தொகுத்துக் கொடுத்திருப்பதே இந்நூலின் சிறப்பு.

கருணா தோழரின் உரையாடல் மொழி போலவே எழுத்து மொழியிலும் அவரது வழக்கமான நக்கலும் நையாண்டியும் கொட்டிக் கிடக்கிறது. கொஞ்சமும் சலிப்பூட்டாத, விறுவிறுப்பான காட்சிகளாகக் கண்முன் விரியும் வெகு எளிமையான நடை.

Battleship Potemkin, the pianist, caterpillar, life is beautiful, bicycle thieves, the day i become a women, the cyclist, LA strada போன்ற திரைப்படங்களை அறிமுகப்படுத்திய விதம், புத்தகத்தின் தாள்களே நம் முன் திரையாய் விரிந்து நின்று விட்டதைப்போல உணர வைத்திருப்பதே இந்நூலின் வெற்றி.
சினிமாவின் வழியே உலகப் போர்களின் காலத்திய சூழலை ஒரு அவசரப் பார்வை பார்க்கும் வாய்ப்பை இந்தப் புத்தகம் நமக்கு கொடுக்கிறது…

திரைப்படம் எனும் கலைப்படைப்பின் வழியே வரலாற்றையும், வரலாற்று வழிப்பட்ட மக்களின் துயரார்ந்த வாழ்க்கையையும், போர்களின் மூலம், இனவழிப்பின் மூலம் மனிதகுலம் சந்தித்த பேரழிவுகளையும், சின்னச் சின்ன நம்பிக்கைகளையும், மனித உறவுகளின் ஆழத்தையும், வெவ்வேறு பரினாமங்களில் சொல்லிச்செல்லும் உலகின் மிகச்சிறந்த 26 திரைப்படங்களை தோழர் கருணாவின் எழுத்துகளின் வழியே அதே அழகியலோடு தரிசிக்க முடிகிறது.
அவ்வளவு நெருக்கமாக நுனுக்கமாக அந்த அற்புத அனுபவங்களை நமக்கு வழங்கிய ஆசிரியருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

புதியகோணம் பதிப்பகம்,
பாரதி புத்தகாலயம்,
₹120 ரூபாய்,
ஆசிரியர். எஸ். கருணா

சம்சுதீன் ஹீரா, கோவை கலவரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலின் ஆசிரியர்.

 

புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்

ஏ.சண்முகானந்தம்

ஏ.சண்முகானந்தம்

கடந்த 1970-களில் தொடங்கி நாளது வரை தமிழ்ச் சூழலில் ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பு தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. தாய், அன்னா கரீனைனா, தந்தையரும் தனயரும், கசாக்குகள், புத்துயிர்ப்பு, குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், முதல் ஆசிரியர், ஜமீலா, வெண்ணிற இரவுகள் என தமிழர்களை ஈர்த்த ரஷ்ய இலக்கியங்களின் வரிசை மிக நீண்டது. அந்த வரிசையில், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின், ‘வீரம் விளைந்தது’ நாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

செர்மன் நாட்டு படையின் ஊடுருவல், உள்நாட்டு முதலாளிகளின் போர், ஜார் மன்னரின் வழித்தோன்றல்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களுக்கு இடையில் செஞ்சேனையின் வீரம் செறிந்த போராட்டத்தையும், இந்நாவலின் நாயகன் பாவெல் கர்ச்சாகினின் தீரத்தையும் வெளிப்படுத்துவதாக இன்றளவும், ‘வீரம் விளைந்தது’ நாவல் நினைவுக்கூறப்படுகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நாவல் வெளிவந்திருந்தாலும், இன்றளவும் உலகெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இந்நாவலின் பேசுபொருள் அமைந்துள்ளது.

கடந்த 1917-ஆம் ஆண்டு லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சியால் (ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி) வழி நடத்தப்பட்ட தொழிலாளர், உழவர் புரட்சி மாபெரும் வெற்றிப் பெற்றது. ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்த்தப்பட்ட ஜார் மன்னரின் வழித்தோன்றல்கள், முதலாளிகள் புரட்சிக்கெதிராக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தனர். மறுபக்கம் செர்மனியின் படையும், புரட்சிக்கெதிரானவர்களின் உள்நாட்டு போரும் மூளத்தொடங்கின. இவற்றை எதிர்த்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்கள் இணைந்த செஞ்சேனை போராட ஆரம்பித்தது.

தனது சிறுவயதில் செஞ்சேனையில் இணைந்த பாவெல் பல போர்களில் ஈடுபட்டு காயமடைந்தாலும், சற்று உடல் நலம் தேறி மீண்டும் போர்க்களத்திற்கு சென்றார். அவரது இடையறாத போர்க்களப் பணிகளால் உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, முழுமையாக ஒய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. போர்க்களம் செல்ல முடியாத, உடல் நலம் குன்றிய நிலையில் இளைஞர் சங்கப் பணிகள், எழுத்துப் பணி என பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

போரில் பல முறை குண்டுகள் தாக்கியதன் பின் விளைவாக உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், கை கால்கள் செயல் இழக்க ஆரம்பித்தன. பார்வையும் மோசமடைந்து, சிறிது காலத்தில் முழுமையாக பறிபோனது. தனது இளம் வயதிலேயே போர்க்களங்களில் செயலாற்றி, நடக்க இயலாமல் படுகாயமடைந்தாலும், மக்களுக்கான பணிகளில் தன்னை எந்த வகையிலாவது ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாவெல் செயல்பட்டு வந்தார். அவர் முன் இருந்த ஒரே வாய்ப்பு எழுத்து மட்டுமே. அதையும் அவர் சொல்லச் சொல்ல ஒருவர் எழுத வேண்டும் என்ற நிலையில், தன்னுடைய போராட்ட வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்த நாவல்தான், ‘வீரம் விளைந்தது’.

‘புரட்சி’, ‘மக்கள் எழுச்சி’ என்ற சொல்லாடல்களுக்கான முதன்மை பங்கு, இளைஞர்கள், தங்களது சமூக பங்களிப்பை எந்த வகையில் செயலாற்ற வேண்டும் என்பதை நாவல் எடுத்துரைத்தது. 1932-ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் ‘வீரம் விளைந்தது’ நாவல் வெளியானது. உடல் நலம் மோசமடைந்து 1936-ஆம் ஆண்டு நிக்கொலாய் இறந்தாலும், அவரது நாவல் உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இளைஞர்களால், எளிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாவலின் கதாநாயகன் பாவெல்லும், தாய் நாவலின் பாவெல்லும் இன்றளவும் இளைஞர்களுக்கான முன்னுதாரணமாக உள்ளனர் என்றால் மிகையல்ல.

உலக அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்நாவலின் இளையோர் பதிப்பை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மறு ஆக்கம் செய்துள்ள ஆதி வள்ளியப்பன் மிகுந்த பாராட்டிற்குரியவர். வடிவமைப்பும், அழகிய ஓவியங்களும், எளிய தமிழாக்கமும், தரமும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் வீரம் விளைந்தது நூல் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

ரூடால்ஃப் கார்க்லின் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் அழகிய ஓவியங்களுடன் தரமான முறையில் புக்ஸ் பார் சில்ரன்ஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக ரஷ்ய இலக்கியங்களின் நீண்ட வரிசையை இளையோர் பதிப்பாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் புக்ஸ் பார் சில்ரன்ஸ் ஈடுபடும் என்ற நம்பிக்கையை இப்பதிப்பு தருகிறது.

‘உலகெங்கும் சாதாரண, எளிய மக்களின் உரிமைகளுக்காப் போராட வேண்டிய, புரட்சி நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய முக்கிய படைப்பான வீரம் விளைந்தது, காலம் காலமாக உத்வேகம் அளித்து வரும் நாவல்களில் ஒன்று’ என குறிப்பிடும் ஆதி வள்ளியப்பனின் இம்முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. அந்த வகையில், அடுத்தடுத்து ரஷ்ய இலக்கியங்களை இளையோர் பதிப்பாக வெளிக் கொண்டு வரவேண்டிய பணியை ஆதி வள்ளியப்பன் மேற்கொள்வார் என நம்பலாம். இளையோருக்கான நூல் வரிசையில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாக மட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாகவும் ‘வீரம் விளைந்தது’ நாவல் உள்ளது.

வீரம் விளைந்தது
வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்ஸ்
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி (ஆங்கில மொழிபெயர்ப்பு; ஷீனா வேக்ஃபீல்ட்)
தமிழில் மறுஆக்கம்; ஆதி வள்ளியப்பன்
ஓவியங்கள்; ரூடால்ஃப் கார்க்லின்
விலை ரூ.50.00

ஏ. சண்முகானந்தம், ‘காடு’ இதழின் ஆசிரியர்.  ‘தமிழகத்தின் இரவாடிகள்’, ‘வலசை பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்’, ‘பூச்சிகளின் உலகம்’, ‘பூச்சிகள் ஓர் அறிமுகம்’, ‘தமிழர் மருத்துவம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். இந்நாவலைப் படித்து முடித்தபிறகு நாம் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக உணரமுடியும் என அறுதியிட்டு கூறுகிறார் தி.க. வழக்கறிஞர் அருள்மொழி. இவ்வளவு அங்கீகாரத்திற்கும் பொருத்தமானது இந்த நாவல்.

கிட்டத்தட்ட 1983 முதல் 1990 வரை இலங்கையில் ‘போரால் அலைக்கழிக்கப்படும் ‘ ‘பரணிகளையும் ‘ ‘வானதிகளையும்’ பற்றித்தான் இந்தக்கதை.

இலங்கையின் ஒரு சாதாரண கிராமத்திலிருந்து 12 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேருகின்றனர்.அவர்களில் ஒருவன் பரணி. ( அவனை அழைத்துச் சென்றவர் வேறு இயக்கத்தில் சேர்த்திருந்தால் அதில் சேர்ந்திருப்பான்). இந்தியாவில் பயிற்சி எடுக்கிறான்; படிக்கிறான், விவாதிக்கிறான், மக்களை நேசிக்கிறான், மக்களோடு இருக்கிறான், தாக்குகிறான்,சக போராளிகளுக்கு தண்டனை வழங்குகிறான். உயிருக்கு பணயம் வைத்து ஓடுகிறான். இவ்வளவு தியாகம் புரிந்த அவன் எப்படி புரிந்து கொள்ளப்படுவான். தியாகியாகவா? துரோகியாகவா?

 

அவன் கிராமத்தைச் சார்ந்த வானதி முதலில் பள்ளியில் பின்னர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். பரணியும் வானதியும் காதலிக்கிறார்கள். அவள் தன் குடும்பத்தோடு தொடர்ச்சியாக இடம் பெயர்கிறாள்; அல்லல் படுகிறாள். முதலில் சிங்கள இராணுவத்தால் பின்னர் இந்தியனாமியால். அவள் தந்தை அருமைநாயகம், அம்மா தனபாக்கியம் அற்புதமான கதாபாத்திரங்கள்; ஒரு அல்லலுறும் குடும்பம் எனலாம். ஜீவானந்தம் போன்ற பொது மனிதன் எழுப்பும் கேள்விகளுக்கு என்னமாதிரியான எதிர்வினை ஆற்றப்படும் ?

கதை எளிய வார்த்தைகளில், ஒரே நேர்க்கோட்டில் செல்லும் யதார்த்தமான நாவல். பல அழகு தமிழ்வார்த்தைகள் ( திறப்பு(சாவி), வதையடி(ராகிங்), கைலேஞ்சி(கைக்குட்டை),உள்ளரசியல்) பயன்படுத்தப்பட்டுள்ளன. அறம் சார்ந்த பல கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. அந்தரங்க சுத்தியோடு சுய விமரிசனங்கள் வருகின்றன. சக போராளிகளின் உயிருக்கு மதிப்பு உண்டா இல்லையா ?மாத்தையாவோடு முரண்பட்டதால் ‘ தன்னைகொல்லக் கொடுப்பதற்கான’ பணியை கொடுப்பதன் அதிகார அகம்பாவம் இயக்கத்தில் வரலாமா?

பார்த்த்தீனியம் செடி இந்தியாவில் இருந்த வந்த தீங்கற்றதாய் தோன்றும் செடி. ஆனால்’ நிலத்தில் இருக்கிற சத்தையெல்லாம் உறிஞ்சிப்போடும். அதைவிட தனக்குப் பக்கத்தில் எந்தவொரு செடியையும் அழிச்சிப்போடும்’ ‘ இந்தியாவும் பார்த்தீனியமும் ஒன்றுதான் ‘, என்பது கதை சொல்லும் சேதி. ஒருவேளை சுதந்திர ஈழம் மலர்ந்திருந்தால் ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து ஆட்சி விடுபட்டிருக்குமா? சாதிய படிநிலை உடைக்கப்பட்டு சமநிலை எய்வதற்கான உள்ளீடு அந்த விடுதலை இயக்கத்திற்குள் இருந்ததா? சுதந்திர ஈழத்தில் “மாத்தையாக்கள் ” கையில்தான் நிர்வாகம் இருந்திருக்கும். அந்த நிர்வாகத்தில் பரணிகள் நிலை என்ன? இது போன்ற பல கேள்விகளை அழகுணர்ச்சி சற்றும் குறையாமல் எழுப்புகிறார் தழிழ் நதி. இந்நாவல் பல்லாண்டு காலம் பேசப்படும்.

நற்றிணை பதிப்பகம்/ 512 பக்கம்/ ரூ.450/ ஏப்ரல் 2016.

”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில் 

“சுஜாத்தா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல்.

அதைவிட சக பெண்படைப்பாளியை ஆபாசமாக திட்டி எழுதிய மனுஷ்ய புத்திரனுடன் நட்புப் பாராட்டும் நூலைப் போடும் பெண்களின் பொதுவெளி நோக்கி எழும் பெண்ணிய அறச்சீற்றத்தைத்தைத்தான் தாங்க முடியல.

ஒரு பதிப்பகமும் விருது கடையும் அரசியல் கட்சியும் அதிகாரமும் இருந்தால் டயரை வணங்க அறிஜீவிகளும் தயார். சும்மா ஊருக்கு இளைத்த அம்மா அடிமைகளை கரித்துக் கொட்டி நம்மை யோக்கியவனா புனிதனா எவ்வளவு காலம்தான் பிலிம் காட்டறது.” என எழுதியுள்ளார்.

அதுபோல கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் கருப்பு நீலகண்டன்:

பார்ப்பன உணர்வோடே
தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு
பார்ப்பன சங்க மாநாட்டில் கூட பங்கேற்று தன்னை பார்ப்பனராகவே
பிரகடனப்படுத்திக் கொண்டு
எழுதி இயங்கி மாண்ட புனைகதையாளர் சுஜாதாவின் பெயரிலான விருதை வாங்குவதற்கு பெருமிதமும் வாங்க இயலாமைக்கு பொச்சரிப்புமாய் இருக்கிறது
நமது சமகால எழுத்தாளர்களின் பதிவுகள்.
நேற்று ஒரு புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது ஆய்வாளர், காவலரைப் பார்த்து
‘ரைட்டர் எங்கப்பா’ என்ற
போது என்னவோ போலிருந்த அந்த உணர்வு இப்போதும் கமறலாக எழுகிறது” என கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக,

“சுஜாதா என்ற பிராமணர் பெயரிலான விருதை பகுத்தறிவை முன்வைக்கும் உயிர்மை எப்படிக் கொடுக்கலாம் என கவிஞ்ஞர் மாலதி மைத்ரி கேள்வி எழுப்பி இருக்கிறார். (அவரது கணிணி விசைப்பலகை ‘சுஜாத்தா’ என்று தான்தோன்றித்தனமாய் தட்டச்சியது போல் என்னுடையதும் ‘கவிஞ்ஞர்’ என்று தட்டச்சி விட்டது. பலகையைக் கொஞ்சம் கண்டித்து வளர்த்ததால் பெயரில் அல்லாமல் அடைமொழியில் மட்டும் பிழை செய்திருக்கிறது.)

சுஜாதா தன் இறுதி ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட கூடுதலாகத் தன்னை ஒரு வைஷ்ணவராக உணர்ந்தார் என்பது உண்மையே. அதை வெப்படுத்தவும் செய்தார். பிராமணர் சங்க விழாவில் பங்கெடுத்ததும் நடந்தது. அது வயோதிகத்தின் நெகிழ்வு. ஆனால் அவரது எழுத்தில் எப்போதேனும் பிராமணியத்தையோ சாதிய வன்மத்தையோ வெளிப்படுத்தியதைச் சுட்ட முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அசோகமித்திரன் பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக ஆதங்கப்பட்டதைப் போல் கூட சுஜாதா எழுதினாரில்லை. பிறகேன் அவரைப் பிராமண அடையாளத்துக்குள் போட்டு அடைக்க வேண்டும்?

அப்பதிவில் ஒருவர் காலச்சுவடு பதிப்பகத்தில் தலித் எழுத்தாளர்கள் பங்கெடுப்பதைச் சுட்டியதற்கு “ஊடகங்கள் பதிப்பகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் நடத்தும் பார்ப்பன சார்போடுதான் இயங்குகின்றன. அதில் குறைந்தப்பட்ச அறத்தோடு இயங்கும் வெளியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் அவர்களின் அரசியலுக்கு பலியாடுகளாக மாறக்கூடாது.” என்று மாலதி மைத்ரி விளக்கம் சொல்கிறார். அது நிச்சயம் ஏற்கத்தக்க, சரியான‌ கருத்து தான்.

ஆக, நிறுவனத்தை நடத்துபவர் பிராமணராக இருப்பதோ, விருதின் பெயரில் பிராமணர் இருப்பதோ பிரச்சனை அல்ல; மாறாக அவர்கள் அதில் பிராமணியத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்களா என்பதே முக்கியமானது. அந்தத் தெளிவு உள்ளவர் பிராமணர் பெயரிலான விருது என்ற சவலையான குற்றாச்சாட்டை சுஜாதா விருதின் மீது வைக்க வேண்டியதில்லையே!

இந்த‌ விருதுகளுக்குக் கண்மூடித்தனமாகக் கைத்தட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எல்லா விஷயங்களுமே விமர்சனத்துக்கும் மறுஆய்வுக்கும் உட்பட்டவையே. எப்போதும் எதுவுமே புனிதம் இல்லை. ஆனால் எதிர்வினையாய் எதையாவது சொல்ல வேண்டும் என்று போகிற போக்கில் அடித்து விடுவதை நல்ல படைப்பாளிகள் கூடச் செய்வது தான் ஆதங்கம் அளிக்கிறது” என்கிறார்.

 

உலக புத்தக தினத்தில் 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடியில் நூல்கள்!

உலக புத்தக தினத்தை ஒட்டி 50% வரையிலான சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன பதிப்பகங்கள்.

சினிமா தொடர்பான நூல்களை வெளியிடும் பேசாமொழி பதிப்பகம்:

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் பேசாமொழி பதிப்பக புத்தகங்கள்(மிஷ்கின், வஸந்த், சாரு நிவேதிதா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்) புத்தகங்கள் அனைத்தும் 50 சதவீத கழிவிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் 15 சதவீத கழிவிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

 

முற்போக்கு-ஈழம் தொடர்பான நூல்களை வெளியிட்டு வரும் புலம் வெளியீட்டகம்:

உலக புத்தக தினத்தை ஒட்டி புலம் நூல்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி. ஏப்ரல் 21 முதல் 23 வரை இச்சலுகை. வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் வருக!

புலம், 97/55, நாத்திகம் கட்டிடம், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், (கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில்)
தொடர்புக்கு: 9840603499/ 9840974053

இலக்கிய நூல்களை வெளியிட்டுவரும் உயிர்மை பதிப்பகம்:

உலக புத்தக தினத்தை முன்னிட்டு உயிர்மை நூல்களை 30% சிறப்பு தள்ளுபடியில் உயிர்மை அலுவலகத்தில் பெறலாம் . ஏப்ரல் 20 முதல் 23 இச்சலுகை.. வெளியூர் வாசகர்களுக்கும் இச்சலுகை உண்டு. உள்ளூரில் இருப்பவர்கள் உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை – 18 என்ற முகவரிக்கு நேரில் வரலாம். வெளியூர் வாசகர்கள் uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு எழுதினால் நூல் பட்டியல அனுப்புகிறோம். பணம் செலுத்தும் முறையும் தெரிவுக்கப்படும். தொலைபேசி எண்: 044- 24993448, அலைபேசி எண்: 9003218208

எதிர் வெளியீடு:

ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு எதிர் வெளியீடு புத்தகங்களுக்கு சிறப்பு சலுகை. எதிர் வெளியீடு புத்தகங்களை 50% கழிவிலும் பிற பதிப்பகங்களின் புத்தகங்களை 10% முதல் 30% கழிவிலும்
பெற்றுக்கொள்ளலாம்.

இச்சலுகையை உங்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்த வாசகர்களிடம் தெரிவித்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வெளியூர் வாசகர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களின் புத்தக தேவையை தெரியப்படுத்தலாம். தபால் செலவு தனி.

தொடர்புகளுக்கு : 04259 226012, 99425 11302

விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

‘அகநாழிகை’ பொன்வாசுதேவன்

பொன் வாசுதேவன்

இலக்கியம் என்பது கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் செய்பவர்களின் நிலை இதுதான். கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்து அதை வெளியிடுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறி. ஓடுகிற குதிரையின்மீது அல்லது விரட்டி ஓட வைக்க முடியுமென்று நம்பிக்கை உள்ளவர்களின் மீதுதான் பதிப்பகங்களின் கவனமெல்லாம். புகழ், புகழ விடு என்பதான முதுகுசொறிதல்களில் எழுத்தின் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள யத்தனிப்பவர்கள் இவர்கள்.

வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம்கொண்ட புதிதாக எழுத வந்திருக்கும் பலரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தைய புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அனேகமாக புதிதாக எழுதத் தொடங்கியவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் பலவற்றைப் படித்துவிட்டேன். தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டுமே படித்ததால், ஒன்றும் பிடிக்காமல் போகவில்லை. இந்நிலையில்தான், புதிதாக எழுதும் இவர்கள் எல்லோருமே மிகக் குறைந்த அளவில் அறியப்பட்டவர்களாகவும், பத்திரிகைகளில் கதை வெளியாகும் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அப்படியே இருந்தாலும் ஒன்றிரண்டு கதைகளை எழுதியவர்களாகவும், முதல் முறை அச்சேறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

அகநாழிகை இதழை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொண்டுவரும் எண்ணம் உதித்தது. முழுக்க புதிய, இளம் படைப்பாளிகளின் படைப்புகளுடன் சிறுகதைச் சிறப்பிதழாகக் கொண்டு வர நினைத்தேன். அதன் அடுத்தகட்டமாக, சிறுகதைச் சிறப்பிதழை புத்தகமாகவே கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் ‘விளிம்புக்கு அப்பால்’ சிறுகதைத் தொகுப்பு. இது அகநாழிகையின் சிறுகதைச் சிறப்பிதழ், அதேசமயம் சிறுகதைத் தொகுப்பு புத்தகமும் கூட. பதிமூன்று புதிய, இளம் படைப்பாளிகளின் சிறுகதையை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் 160 பக்கங்களில் ரூ.120 விலையில் வெளிவருகிறது.

தேர்ந்தெடுத்துத் தொகுத்த வகையில் இந்தக் கதைகளை வாசித்து ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறேன் சமகால எழுத்தின் பிரயாசைகள், வகைகள் (Genres), உத்திகள் என இளம் படைப்பாளிகளின் ஆற்றோட்டமான எழுத்தின் வாயிலாக இந்தத் தொகுப்பில் வாசித்து ரசிக்கலாம்.

எழுத்தின் புதிய போக்குகளை புதிய படைப்பாளிகளின் எழுத்துகளின் வாயிலாக அடையாளங்காணவும், இந்த சிறுகதைத் தொகுப்பு / சிறுகதைச் சிறப்பிதழ் என்பதான இந்த புதிய முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

பொன். வாசுதேவன், எழுத்தாளர்; பதிப்பாளர்.

விளிம்புக்கு அப்பால்
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
(புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்)
தேர்வும், தொகுப்பும்: பொன். வாசுதேவன்
160 பக்கங்கள்
ரூ.120

#புத்தகம்2017: பொய்-வேடங்களில் மன்னன்… இப்பொழுது தலைநகர் டெல்லியில்!

மோடியின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் ‘பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் !’ நூலிம் பின்னணியில் உள்ள தகவல்கள் இங்கே…

● தமிழில் வெளிவந்துள்ள “பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் (பாகம் 1) …..!” நூலின் மூலப்பிரதியின் தலைப்பு “Fekuji Have Dilli Ma” . இந்த குஜராத் பதிப்பானது , மிகச்சரியாக மைய அரசில் மோடி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நாளான மே 26 2016 அன்று குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் வெளியிடப்பட்டது.

● புத்தகம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே , பி.ஜே.பி உறுப்பினரும் , மோடியின் ஆதரவாளருமான சோலங்கி நர்சிங்பாய் கோவிந்த்பாய் என்பவர் இப்புத்தகத்தை தடை செய்யவேண்டும் என அகமதாபாத் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். ”ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகி உள்ள சூழ்நிலையில் மோடியின் அரசை இப்புத்தகம் விமர்சிக்கிறது.இப்புத்தகம் பேசும் கருத்துகள் பிரதமர் மோடியை ஏளனம் செய்வதோடு , அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. இப்புத்தகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு மோடியின் கண்ணியத்தை குறைக்கிறது. எனவே இப்புத்தகத்தை குஜராத்திலும் , வேறு எந்த ஒரு இடத்திலும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் “ என வழக்குதொடுத்தார்.
● ”இப்புத்தகம் நாட்டின் ஒற்றுமைக்கும் , இறையாண்மைக்கும் எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் ஜெயேஷ் ஷா அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களையே இப்புத்தகம் கொண்டுள்ளது. இப்புத்தகத்தினை தடை செய்வது அவருடைய கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும். எனவே அரசியலமைப்பு விதி 19 உறுதிப்படுத்தும் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திர உரிமையின் படி ஜெயேஷ் ஷா இப்புத்தகத்தினை வெளியிட முழு உரிமை உள்ளது. இப்புத்தகத்தினை விற்பனை செய்வதற்கு இதன் எழுத்தாளருக்கும் , வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் தடை விதிக்கவேண்டும் என்று சோலங்கி நர்சிங்பாய் தொடுத்திருக்கும் வழக்கை இந்நீதிமன்றம் நிராகரிக்கிறது ” எனக்கூறி சிவில் நீதிமன்ற நீதிபதி A.M.தவே இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
●மீண்டும் சோலங்கி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.ஆனால் வழக்கு தொடுத்த அடுத்த நொடியே “இப்புத்தகத்தினை தடை செய்வதற்கு மனுதாரர் மேற்கோள் காட்டும் காரணங்களை இந்த நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை” எனக் கூறி நீதிபதி S.H.வோரா மனுவை தள்ளுபடி செய்கிறார்.
●ஆங்கில பதிப்பு “BLUFF-MASTER NOW IN DELHI …! என்ற பெயரில் 2016 ஜூலை மாதம் அகமதாபாத்தில் வெளியிடப்பட்டது. 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மோடிக்கு இணைய வழி பிரச்சாரத்திற்கு தானே முன் வந்து உதவிசெய்த மனித வளத்துறை ஆலோசகர் நந்திதா தாகூர் “ இந்நாள் வரை புகழ்பெற்று விளங்கும் , பிரபலமான பிரதம மந்திரினுடைய பிம்பத்தில் இதைப்போன்ற புத்தகங்கள் வடுவை ஏற்படுத்திவிட முடியாது “ எனக் குறிப்பிட்டார்.
●ஆங்கில பதிப்பு வெளிவந்த உடன் சென்னையைச் சேர்ந்த ’மொழிபெயர்ப்பு நூல்களின் களமான’ சிலம்பு பதிப்பகம் தமிழ் , மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றது. இது குறித்து TIMES OF INDIA குஜராத் பதிப்பும் , TELEGRAPH பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டன.
●2017 ஜனவரி 4 –ஆம் தேதி தமிழ் பதிப்பான “பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் …..!” சென்னையில் வெளியிடப்பட்டது.
●தமிழ் பதிப்பு வெளிவந்த அடுத்த வாரம் இந்தி பதிப்பு அகமதாபாத்தில் வெளியிடப்பட்டது.
● 2017 ஜனவரி 19 அன்று யோகேஷ் நங்தாஸ் ஜோஷி என்பவர் “ வட இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் இந்தி பதிப்பு பரவக் கூடிய வாய்ப்புள்ளதால் இப்புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் “ என குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். வழக்கு நிலுவையில் உள்ளது.
● இப்புத்தகத்தின் மலையாள பதிப்பு “உண்டயில்லாத்த வெடி பொட்டிக்குந்ந ராஜாவு” என்ற தலைப்பிலும் , கன்னட பதிப்பு “மங்க்கு பூதிய ஸரதாரா” என்ற தலைப்பிலும் வெளிவர இருக்கின்றது. தெலுங்கு பதிப்பு இன்னும் பெயரிடப்படவில்லை.
●“பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் (பாகம் 2) …..!” வெளிவர இருக்கின்றது.
● மேலும் மூன்று மொழிகளில் வெளிவரும் தருணத்தில் ஏழு இந்திய மொழிகளில் இப்புத்தகம் தயாராக இருக்கும்.
● “BLUFF-MASTER NOW IN DELHI …! ஆங்கில பதிப்பை இந்தியாவிலும் , உலக அளவிலும் விற்பனை செய்வதற்கான உரிமையை சிலம்பு பதிப்பகம் பெற்றுள்ளது.
● சென்னையில் புத்தகம் கிடைக்கும் இடங்கள் : பாரதி புத்தகாலயம் , சிலம்பு பதிப்பகம் , டிஸ்கவரி ஃபுக் பேலஸ் , பனுவல் புத்தக நிலையம்
கோவை : விஜயா பதிப்பகம்
மதுரை : மல்லிகை புக் செண்டர்
திருச்சி : கார்முகில் புத்தக நிலையம்
திருப்பூர் : பின்னல் புத்தகாலயம்
பொள்ளாச்சி : எதிர் வெளியீடு
ஈரோடு : பாரதி புத்தகாலயம்
சேலம்: பாலம்

● தமிழ்பதிப்பு கிடைக்கும் வலைதளங்கள் : discoverybookpalace.com, http://www.nhm.in , http://www.silambubooks.com/web, wecanshopping.com, udumalai.com, panuval.com http://marinabooks.com/detailed?id=6946
● ஆங்கிலப் பதிப்பு கிடைக்கும் வலைதளங்கள் : amazaon.in, www.flipkart.com, www. snapdeal.com.

நெடுஞ்சாலை வாழ்க்கையும் நான் தீண்டிய இரும்புக் குதிரையும்!

கே.ஏ.பத்மஜா

ஏ.கே.பத்மஜா
ஏ.கே.பத்மஜா

நூல்: நெடுஞ்சாலை வாழ்க்கை | நூலாசிரியர்: கா.பாலமுருகன் | வெளியீடு: விகடன் பிரசுரம்

சிறுவயது முதல் பயணத்தில் ஜன்னல் வழியில் பார்க்கக்கூடிய அழகிய உலகத்தை நான் ரசித்ததே இல்லை. வாந்தி வரக்கூடும் என்பதால் வாகனத்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தலையைக் கவிழ்த்தபடியே பயணிப்பேன். இதுவே பயணங்களை வெறுப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.

இந்த ஆண்டில் இருந்து அதிகம் வாசிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்த எனக்கு, பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம், கா.பாலமுருகன் எழுதிய ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’. இந்தப் புத்தகத்தை படிக்க தொடங்கியபோது எனக்குள் ஓர் எதிர்பார்ப்பு, இது ஒரு நாவலாகவோ அல்லது யாராவது ஒருவரது வாழ்க்கைச் சம்பவமாக இருக்கும் என்று. முதல் சில பக்கங்களை கடக்கும்போது லாரி குறித்த டெக்னிக்கல் தகவல்களும் விளக்கங்களும் அதிகம் இருந்தன.

பாடி சேஸ், லிட்டருக்கு இத்தனை கி.மீ., என்ஜின் போன்ற வார்த்தைகளை பார்த்தபோது, இது ஏதோ ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த புத்தகம் போல; இது நம் ரசனைக்கு ஏற்ற புத்தகம் அல்ல என்று அலுத்துக் கொண்டேன். இதற்கு இன்னொரு தனிக் காரணமும் உண்டு. நான் வளர்ந்த வீட்டில் அண்ணனின் தொழில், பட்டாசு லாரி சம்பந்தப்பட்டது. புகுந்த வீட்டில் கணவர் தொழிலோ மணல் லாரி தொடர்பானது. எனவே, இந்த வார்த்தைகள் எல்லாம் புளித்துப் போனவை என் காதுகளுக்குள். இருந்தாலும் பக்கங்களைப் புரட்டினேன். நான்கு பக்கங்கள் தாண்டும்போது எழுத்து நடை முழுவதுமாக என்னை இழுத்துப் போவதை உணர முடிந்தது. குறிப்பாக, அந்த ”சேலம் – கொல்கத்தா” பயணம். ஆம், இந்தப் புத்தகத்தில் லாரியில் தான் இந்தியா முழுவதும் பயணம் பயணம். கொல்கத்தா, டெல்லி, நாக்பூர், காஷ்மீர் என எல்லா திசைகளிலும் லாரியில் டிரைவர் மற்றும் சரக்கு லோடு உடன் பயணிப்போம். இப்படி ஒவ்வொரு திசையிலும் பயணம், அதன் அனுபவம், டிரைவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் ஒவ்வொரு அத்தியாமும்.

கிட்டத்தட்ட நானும் எல்லா பயணத்திலும் லாரி கேபின் உடன் பயணித்த அனுபவத்தை தந்தது நூலாசிரியர் (கா.பாலமுருகன்) எழுத்து நடை. நெடுஞ்சாலை இருட்டு, மரங்கள், வேகத்தடையில் ஏறி இறங்கும் குலுக்கல், வெயில், குளிர், கசகசப்பு, பயண அலுப்பு அத்தனையும் வாசிக்கும்போது நமக்கும் தொற்றிக்க்கொள்வது ஆச்சரியம். ஒவ்வொரு முறையும் அந்த லாரி டிரைவர்கள் ‘இந்த அநியாயத்தை எல்லாம் எழுதுங்க சார்’ என்று ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளும்போது அது வெளி உலகக்கு தெரியாமல் நடக்கும் ஓர் அவலம் என்று தெரியும். இதை தெரிந்துகொள்ள முயற்சிக்கதாக நமது மெத்தனப் போக்குக்கு சாட்டையடி போல இருக்கும். இப்போது எனக்கு இந்தியாவின் அனேக நெடுஞ்சாலைகள் நெருக்கமானவை. ஆம், அவற்றை நான் என் மனக்கண்ணால் ரசித்துவிட்டேன். பயணித்துவிட்டேன்.

இந்தப் புத்தகத்தில் இதயத்தை வருடும் காதல் கதை எதிர்பார்த்த எனக்கு, மூளையை வருடும் பல நூறு அனுபவக் கதைகள் கிடைத்தது, தனிப்பட்ட முறையில் கூடுதல் சிறப்பு. இந்தப் புத்தகத்தை படித்த முடித்த பின்பு ஒருநாள் மாலையில் நான் சாலையில் நடந்துசெல்லும்போது, இடது ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆள் இல்லாத இரும்புக் குதிரையை பார்த்தும் மனதுக்குள் மிகவும் நெருக்கமானவரை பார்த்த உற்சாகம் ஏற்பட்டது. என்னையும் அறியாமல் அந்த லாரியைப் பார்த்து புன்னகைத்தேன். எனக்கு உன்னை நல்லா தெரியும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே யாருக்கும் தெரியாமல் அந்த லாரியை என் கைகளால் வருடியபோது ஒருவித பரவசம்.

இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு பல அனுபவமும் சிறந்த புரிதலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதி. இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியாதவர்களுக்கு, இந்தப் புத்தகம் சொல்லும் ஓர் எளிய சேதியை மட்டும் இங்கே பகிர்கிறேன். அது: “குறைவான வேகத்தில் சென்றால் கூட பிரேக் பிடித்தால் ஐந்து மீட்டராவது தாண்டித்தான் லாரி நிற்கும். இதை டூ வீலர் ஓட்டுபவர்கள் புரிந்துகொள்வதே இல்லை. எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலே டூ விலர்கள்தான்.” இப்போதெல்லாம் டூ வீலரில் செல்லும்போது சாலையில் கொஞ்சம் பெரிய வாகனங்கள் வரும்போது நான் முந்துவதே இல்லை. இனி நீங்களும்தான் என்று நம்புகிறேன்.

கே.ஏ.பத்மஜா, பத்தியாளர்.

விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

காவிரி விவசாயிகள் தற்கொலைகள் குறித்து
பூவுலகின் நண்பர்கள் நடத்தும் கண்டனக் கூட்டம்

இறந்தாய் வாழி காவிரி – விவசாயிகள் தற்கொலை -ஆவணப்படத் தொகுப்பு திரையிடல்

நாள்-04-02-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி,

BEFI அரங்கம்- 17, அமீர்ஜான் சாலை, சூளைமேடுசென்னை

கருத்துரை

பாமயன், இயற்கை வேளாண் அறிஞர்
முனைவர் விஜயபாஸ்கர், MIDS
பார்த்தசாரதி, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு

இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்திலே தண்ணீர் நின்று விட்டது,கடை மடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை,,பயிர்கள் கருகியது…சாகும் பயிர்களைக் காணச் சகிக்காமல் விவசாயிகள் மாரடைப்பாலும்,,களைக்கொல்லிகளைக் குடித்தும் உயிரை விடுகின்றனர்..மணற்கொள்ளையால் நிலத்தடி நீரும் இல்லாமல் ஆகி விட்டது..விவசாயிகளின் மாடுகள் இன்று வயலை மேய்ந்து வருகின்றன,,,

1.மத்திய அரசின் துரோகத்தாலும்
2.ஆட்சி புரிந்த மாநில அரசுகளின் அலட்சியத்தாலும்
3.தமிழக அ.தி.மு.க,,,தி.முக அரசுகளின் மணற்கொள்ளையாலும்..
4.எம்.எஸ்.சுவாமிநாதன், சி.சுப்ரமணியன் உருவாக்கிய
பசுமைப் புரட்சியின் வன்முறையாலும்…
5.அதிக அளவு செயற்கை உரங்களினால்
அதிக தண்ணீர் தேவையினால் காவிரியின் தண்ணீர் பயன் பாடு
ஒவ்வொரு வருடமும் அதிகமாகி வந்ததாலும்….
6,கர்நாடக அரசின் வஞ்சகத்தாலும்,,,,
7.மோடியின் பணமதிப்பிழப்பு நாடகத்தாலும்,

இன்றும் இக்கொலைகள் தொடர்கின்றன…
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை 42% உயர்வு |
விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது..
தமிழகம் சந்திக்கக் கூடாத கொடூரம் இது…. ஏன் இது நடந்தது?
என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான உரைகள்

பூவுலகின் நண்பர்கள்
9444065336, 9841624006
poovulagumagazine@gmail.com


சோவியத் படம் திரையிடலும் நூல் விமர்சனமும்

‘படி’அமைப்பு நடத்தும் 13ஆம் நிகழ்வு இது!

உரை
’சோவியத் சினிமா’
ம. சிவகுமார்
பிரசாத் டி.வி & பிலிம் அகடமி

திரையிடல்
ரசியத் திரைப்படம்
ஃபூல் (Fool)

நூல் விமர்சனம்
’சமகாலத் தமிழ் சினிமாவும் அரசியலும்’
திறனாய்வு : நடிகர் அம்பேத்

நாள் : 4 – 2 – 2017 சனிக்கிழமை
மாலை 5.30 மணி

டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு

ஒருங்கிணைப்பு
இயக்குநர் சிதம்பரம்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே  நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்…சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என எந்த துறை சார்ந்தும் அவர் படிப்பதில்லை; வாங்குவதில்லை” என்ற அருண், இந்த ஆண்டு பேசாமொழி பதிப்பகம் கொண்டுவந்துள்ள புத்தகங்கள் குறித்தும், சினிமா புத்தக விற்பனை குறித்தும் நம்மிடம் பேசினார்…

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே…

நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்

தொடர்ந்து ஈழப் படைப்பிலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழப் போருக்கும் தமிழின அழித்தொழிப்புக்கும் பிந்திய அவலச் சுவை இலக்கியங்கள். எனினும் தமிழ்ப் படைப்பாக்கத்தின் புதிய எல்லைகளைத் தொட்டுப் பேசுபவை. மேச்சேரி, ‘களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மன்றம்’ சேலத்தில் நடத்திய முழு நாள் கருத்தரங்கை முன்னோட்டு. இதுபோன்ற கருத்தரங்குகளில்தான் ஈழத் தமிழனுக்கு எதிரான முற்போக்குப் பகை முகங்களும் திரை கிழிபட்டுக் கோசம் காட்டுவதைக் காண முடிகிறது. கருத்தரங்குக்காக வாசித்ததைத் தொடர்ந்தும் சில புத்தகங்கள் வாசித்தேன்.

குணா கவியழகனின், ‘நஞ்சுண்ட காடு’, ‘விடமேறிய கனவு’, ஷோபா சக்தியின் ‘முப்பது நிறச் சொல்’, ‘box கதைப் புத்தகம்’, தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, தமிழ்க் கவியின் ‘ஊழிக் காலம்’, சயந்தனின் ‘ஆறாவடு’, ‘ஆதிர’, தமிழ் நதியின் ‘பார்த்தீனியம்’ என்பவை. வாசித்து மிகுந்த மனச்சோர்வுடன் திரிந்து கொண்டிருந்தேன். அது 3000 பக்கங்க வாசித்த சோர்வல்ல. தமிழன் என்ற ஒற்றைக் காரணத்துக்காக திட்டமிட்டு, இந்தியத் துணைக் கண்டத்தின் மாயச் சதியுடன், சர்வதேசப் போர் அரங்குகளில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளாலும் (Cluster Bombs), இரசாயனக் குண்டுகளாலும் (Chemical Bombs) சிதைத்துக் கொல்லப்பட்ட கிழவன், கிழவியர், ஆடவர், பெண்டிர், சிறுவர், மழலையரின் வதை வரலாறு என்பதால்.

கையாலாகாத கண்ணி பாடுவதை விடுத்து இந்தியத் தமிழரால் எதுவும் செய்ய இயலவில்லை. தமிழினத் தலைவர்கள் என்று தமக்கு முடிசூட்டிக் கொண்டவர்களோ, வீட்டு மாச்சாரியன் பாணியில், ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்று கை மலர்த்தி, Under dog போல மல்லாக்க விழுந்து தமிழ் வளர்க்கவும் தத்தம் குடும்பம் போற்றவும் முனைந்து நின்றனர்.

இந்தச் சூழலில், ‘வையாசி 19’ என்ற இன்பா சுப்ரமணியன் எழுதிய 632 பக்க நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. மனநிலையின் மாற்றத்துக்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால் இதுவும் மலேசியாவை வாழிடமாகக் கொண்ட தமிழர்கள் பற்றிய நாவல். வாழிடமாகக் கொண்டாலும் பூர்வ குடியாக இருந்தாலும் தமிழன் பாடு தனிப் பெரும்பாடுதான் போலும்!

வையாசி 19’ என்பது வைகாசி 19 என்பதன் நாட்டார் வழக்கு. நாவலின் முழு Narative Languageம் நாட்டு வழக்கில் அமைந்திருக்கிறது. அதனை முன்மொழிவதைப் போலிருக்கிறது. ‘வையாசி 19’ என்ற தலைப்பு. முழு நாவலுமே உரையாடல் மட்டுமன்றி, நாவலின் செப்பல் மொழியும் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் வட்டாரத் தமிழில் இயங்குகிறது. குறிப்பாகக் காரைக்குடி நகரத்தார் மொழி, அவருள்ளும் சில பிரிவுகள் உண்டடென்பதை நாமறிவோம். அது சார்ந்த மொழித் தடய வேறுபாடுகளை எம்மால் கண்டடைய இயலவில்லை.

நெடிய நாவலில் உரையாடலும் வட்டார மொழி, செப்பல் மொழியும். வட்டார மொழி என்னும் போது சற்று வாசிப்புச் சோர்வு தவிர்க்க இல்லாதது. சில சமயம் எத உரையாடல், எது செப்பல் மொழி என்ற மயக்கம் ஏற்படுத்துவது. செப்பல்மொழி எது என்பதும் உரையாடல் மொழி எது என்பதும் நாவலாசிரியரின் தேர்வு என்றாலும், வாசகனாகச் சொல்லிப் போவது நமது உரிமை.

கடல் கடந்து தன வாணிகம் செய்யட்ப போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும் இடர்ப்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. நாவலின் காலகட்டம் 1923 முதல் 1945 வரை. அந்தக் காலகட்டத்தின் மொழித் தொன்மை புலப்படுகிறது. படைப்புக்களம் இரண்டாம் உலகப் போரின் தாக்கம் கண்ட மலாயாவின் சமூக, வரலாற்றுப் பின்னணி. அதில் அல்லற்பட்டு அலைக்கழிக்கப்பட்ட மலாய், சீன, தமிழரின் வாழ்க்கை – சப்பானிய ஆக்கிரமிப்புக்கு அஞ்சி ஓடியழிந்த துயர்கள் – யுத்தத்துக்கும் கூலிப் பணிகளுக்கும் ஆள் சேர்க்க அலைந்த ஆங்கிலேயருக்கு அஞ்சி ஒளிகிறார்கள் தோட்டத் தொழிலாளர்கள். சாவு துரத்திய இலட்சக்கணக்கான ஈழத் தமிழனின் அவலத்துக்கு இஃதோர் கட்டியம் கூறல். ஆனால் மலாயாப் புலம் பெயர்வில் இனப் படுகொலைகளும் சித்திரவதைகளும் கற்பழிப்புகளும் இல்லை. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம், சப்பானிய ஆக்கிரமிப்பு எனப் பல தகவல்கள் கிடைக்கின்றன.

மேலும் நகரத்தார் செட்டியார்கள் செய்த தன வணிகம், கடற் பயணம், கிட்டங்கிகள், திரும்பு காலில் சேகரிக்கும் பொருள்கள், காசுப் பைகள், நவரத்தினக் கற்கள், உணவு என நமக்கு அறிமுகம் இல்லாத வாழ்க்கை நிலைகள். பிழைக்கவும் தொழில் பழகவும் போன செட்டிப் பிள்ளைகள், பிள்ளைமார், இசுலாமியரின் பெட்டியடி வாழ்க்கை… செட்டியார்கள் மலாய் தேசத்தில் வாங்கிய தோட்டங்கள், அங்கு கூலி வேலை செய்த மலாய், சீன, தமிழ் மக்கள். அவர்கள் வாழிடம், உணவு எனப் பற்பல செய்திகள் பேசப்படுகின்றன. இங்கே நம்மூரில் நகரத்தாரின் வீடுகளின் அமைப்பு, விருந்தோம்பல், உணவுகள், உறவு முறைகள், தெய்வங்கள், வழிபாடுகள், சடங்குகள், மணவினை என்பனவும் விரிவாகப் பேசப்படுகின்றன.

திரைக்கடல் ஓடித் திரவியம் தேடப் போனவரின் இளம் மனைவியர் நோன்பு காத்துக் கிடக்கின்றனர். கணவர்கள் திரும்பி வர இரண்டு வருடமோ, ஐந்து வருடமோ, ஏழு வருடமோ, ஏன் பதினைந்து ஆண்டுகளோ கூடக் கடந்து விடுகின்றன. தாம்பத்யம் துறந்து பிள்ளை வளர்ப்பதிலும் தோட்டம் துரவு மேற்பார்ப்பதிலும் கோயில் குளம் என்று விரதம் பேணுவதிலும் எதிர்பார்ப்புகளிலும் காலம் கொண்டு செல்லும் பெண்டிர். ஊர் திரும்புவோர் வசம் கொடுத்தனுப்பப்படும் காசு, கடிதம் எனக் காத்திருப்போம். தொலைபேசி அழைப்புக்காக அஞ்சல் அலுவலகங்களில் காத்துக் கிடப்போர்… அவர்கள் ஒழிய, மறுமணம் செய்ய வகையற்றுக் காலம்பூரா அடுக்களைப் பணி செய்து சொந்த அவலத்தைச் சுவடு இன்றிப் பேணும் இளம் விதவையர்… நூலாசிரியர் ஒரு பெண் என்பதால் உடல் ஏக்கம் சார்ந்தும் மன ஏட்ககம் சார்ந்தும் ஆன நுண்ணிய உணர்வுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.

ஆனால் கடல் கடந்த பொருள் தேடப் போனவர் பலர், பெண் தேகச் சூடு இல்லாமல் அலைக் கழிந்து சீன, மலாய் பெண்களைச் சேர்ந்துக் கொண்டு அங்கேயும் குடும்பம் பேணுகிறார்கள். ஆதரித்துப் பராமரிக்கப்படும் மலாய், சீனப் பெண்களின் உண்மையான நேசமும் உரைக்கப்படுகிறது.

பல கோணங்கள் நாவலுக்கு என்றாலும் நாவலின் முற்பகுதி தீர்மானத்துடன் செப்பம் செய்திருக்கப்பட வேண்டும் என்று தோன்றிற்று எனக்கு.

மீனா எனும் காதல் மனைவியுடன் சில ஆண்டுகளாகப் புதுமண மதுவின் தேறல் ஏக்க உண்டு இருந்த காலை, அவளையும் அவள் குழந்தைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு, சர்ப்பம் தீண்டி, அண்ணாமலைச் செட்டியார் இறந்த பிறகு நாவலுக்கு புதுப்பொருள் சேர்கிறது.

செத்தப் பிணத்தை எரிக்க விடாமல் தடுத்து, சாவு வரி கேட்டு நான்கு நாட்களாக ஆங்கிலேய அதிகாரிகள் பேசும் நாகரிகமும் கண்ணியமும் கருணையும் அற்ற பேரம். மூத்த குடியாள் மகன், தனது பாகம் குறித்த உறுதி பெறாமல், பிணம் தூக்க விடாமல் மறியல் செய்யும் குரோதம். வயிற்றில் இரண்டு மாதம், மசக்கை ஒரு பக்கம், எட்டு மாதக் கைக் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பால் நெறி கட்டிப் படும் உபாதை என நாவலின் கோரமான காட்சிகள் நடந்தேறுகின்றன. நாவலின் தீவிரமான சில பக்கங்கள் அவை.

முப்பத்திரண்டு வயதில் விதவையாகிப் போன மீனா ஆச்சி, குடும்பத்தையும் சின்னக் குழந்தைகளையும் கொள்ளை போகக் காத்திருக்கும் கணவன் சேர்த்திருந்த மலாய் நாட்டுச் சொத்துக்களையும் லேவாதேவிக் கணக்கு வழக்குகளையும் காபத்து பண்ணக் கப்பலேறிப் பயணம் போகும் தீரம் நாவலின் முக்கியமான இறுதிப் பகுதி. அங்கு சந்திக்கும் இடர்கள், பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப் பயணம் மேற்கொள்ளாத பெரியப்பா ராமய்யா செட்டியாரின் ஆறுதலும் அரவணைப்பும், ஆங்கிலேய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் நேர்மை என நாவல் உயிர் பெற்று ஓடுகிறது.

தனது மகனைக் காணாமற் போக்கி, நீண்ட ஆண்டுகளாகத் தேடி இறுதியில் கண்டடையும கிம் என்னும் சீனத்தாயின் துயரம் விவரிக்கப்படுகிறது. நாடு கடந்து தொழில் செய்யப் போன செட்டியார்களின பாலியல் வாழ்க்கை, ‘செட்டியார் கப்பலுக்குச் செந்தூரான் துணை’ என்று காத்திருக்கும் ஆச்சிகளுக்கு வாய்த்த மனத்திட்பம் பேசப்படுகிறது.

இராமைய்யா செட்டியார், கிம்மின் மகன் சீனச் சிறுவன் சூபி ஆகியோரின் நூதனமான பாசப் பிணைப்பு அற்புதமாக அமைந்துள்ளது. சின்னச் சின்ன, கணக்கற்ற கதாபாத்திரங்கள் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நாவல் மூலம் வாசகருக்குக் கிடைக்கும் புதிய செய்திகள் சில முப்பத்திரண்டு வயது பெண், நாட்டு வைத்தியத்தினால் தனது மாதச் சுழற்சியை நிறுத்த முடியும் என்பதொன்று. மூல நோய்ப்பட்ட பெண் ஒருத்தியின் அவஸ்தை எத்தனை கொடூரமானது என்பது மற்றொன்று. வேறெங்கும் நாவல் அல்லது சிறுகதை மூலம் இந்தப் பதிவுகள் உளவா என்று தெரியவில்லை. 1937ஆம் ஆண்டு, மாசி மாதம் 28ஆம் தேதி, மலாயா நாட்டில், பினாங்கில், காந்தாம்பட்டி மூனா சீனா தானா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறந்தார். ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு என்பது பிறிதொன்று. அதன் மூலம் செட்டியார்கள் கப்பல் மூலம் காசுப் பை சுமக்கும் அபாயம் நீங்கியது என்பது வேறொன்று.

ஒரு கணித மாணவன் என்ற வகையில், தமிழன் அறிந்திருந்த பின்னங்கள் பதறிய நெடிய தகவல், எனக்கு பிரமிப்பூட்டியது. ஒன்றில் தொடங்கி, பாதாளம் வரை பாய்கிறது கணிதம். சில சுவாரசியமான பின்னங்கள் – காணி என்பது 1/80, முந்திரி என்பது 1/320, இம்மி என்பது 1/2150400, அணு என்பது 1/165580800, நாக விந்தம் என்பது 1/5320111104000, வெள்ளம் என்பது 1/57511466188000000, தேர்த்துகள் என்பது 1/2323824530227200000000. ஸ்பெக்டம் ஊழல் கோடிகளையே எண்ணால் எழுதத் தெரியதாவர் நாம்.

மற்றுமொரு சுவாரசியமான தகவல், கிருஷ்ண தேவராயரின் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டை வெற்றி கொண்ட பிறகு, திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி. 1570-1572), வராக உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. வராகம் எனில் பன்றி. அதன் பிறகு நமது மொழிக்குள் வராகன் எனும் சொல் தங்கத்தின் எடையைக் குறித்தது. பிறகே பவுன், சவரன், குதிரைப் பொன், முத்திரைப் பவுன் எனும் சொற்கள் வந்தன.

இன்பா சுப்ரமணியன் அவர்களை சென்னையில் ஒன்றிரண்டு இலக்கியச் சந்திப்புகளில் கண்டிருக்கிறேன் உரையாடியதில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புகள் இரண்டு வாசித்திருக்கிறேன். இன்று அவை எம் கைவசம் இல்லை. இந்த நாவல் கையில் கிடைத்தபோது வியப்பும் மகிழ்ச்சியும் மீதுற்றது. கடந்த காலத்தின் கடல் கடந்த தமிழ் வாழ்வைச் சொல்ல, அவர் ஆறேழு ஆண்டுகள் உழைத்திருக்க வேண்டும். அந்த முயற்சிக்கு நமது பாராட்டுகள். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார்கள். பெரிதாகக் கனவு கண்டிருக்கிறார். தமிழ் நாவல் பரப்பில், ‘வையாசி 19’ நாவலின் இடத்தைக் காலம் தீர்மானிக்கும்.

வையாசி 19’ நாவலுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய மதிப்புரை…

நூல்: ‘வையாசி 19

ஆசிரியர்: இன்பா சுப்ரமணியன் 

பதிப்பகம்: யாவரும்

ஆன்லைனில் வாங்க..

 

#புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்
“நான் பேசிவிட்டேன் …என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன் …”

கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சன நூலில், கார்ல் மார்க்சின் இறுதி வரிகள் இவை ..

கோத்தா செயல்திட்டம் என்றால் என்ன? இது குறித்து மார்க்ஸ் பேசாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் 1875 ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய கோத்த செயல்திட்டம் மீதான விமர்சனம் எந்தளவு பொருத்தப்பாடு உள்ளது? சுருக்கமாக பார்ப்போம் ..

மார்க்சும் எங்கெல்சும் அக்காலகட்டத்தில் இருந்த ஏனையே தொழிலாளர்கள் இயக்கங்களைக் காட்டிலும்.ஜெர்மன் தொழிலாளர்கள் இயக்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்தனர். இதை எங்கெல்சே கூறியுள்ளார்.

ஜெர்மன் தொழிலாளர்கள் இயக்கத்தில் பெமல்,லீப்நெட் குழு ஒரு முகாமாகவும், லாசல் குழு ஒரு முகாமாகவும் இருந்துவந்தனர்.இவ்விரு குழுவும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து ஜெர்மன் தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒன்றாக இணைந்து வேலை செய்ய முன்வந்தனர்.கோத்தா எனும் நகரில் இந்த ஒற்றுமை காங்கிரஸ் நடைபெறுவதாக முடிவுசெய்யப்பட்டது. இக்காங்கிரசின் செயல்திட்டமே கோத்தா செயல்திட்டம் எனப்பட்டது. இந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பாக, இக்கட்சியின் செயல்திட்டத்தை மார்க்சின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த செயல்திட்டத்தின் மீதான மார்க்சின் விமர்சனமே இந்நூல்.கட்சித் தலைவர்களிடம் விமர்சனத்தை காட்டும் படி, தனது நண்பர் பிராகேவிற்கு இந்த விமர்சனத்தை மார்க்ஸ் எழுதி அனுப்பினார்.

1875 இல் எழுதப்பட்ட இந்த விமர்சனத்தை 1891 இல் எங்கெல்ஸ் அவரது முன் உரையுடன் நூலாக வெளியிட்டார். கட்சியின் செயல்திட்டத்தின் மீது மார்க்சும் எங்கெல்சும் நம்பிக்கை கொள்ளவில்லை. அப்போது நிலவிய ஜெர்மன் முதலாளிய அரசுடன் சமரசவாதம் மேற்கொள்வதே செயல்திட்டத்தின் இறுதி அர்த்தமாக இருந்தததே அதற்கு காரணம். நிலை இவ்வாறு இருக்க,கட்சியின் போக்குகள் அனைத்திற்கும் மார்க்ஸ்,எங்கெல்சையும் பொறுப்பாக்குகிற(பக்கூனின்) அயோக்கியத்தன வேலைகளை சிலர் செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில்,இந்த செயல்திட்டம் எவ்வளவு பிற்போக்கானது என்ற மார்க்சின் விமர்சனத்தை வெளியிடுவதன் அவசியம் கருதி 1891 இல் எங்கெல்ஸ் இந்நூலை வெளியிட்டார்.

ஏனெனில் 1875 ஐக் காட்டிலும் 1891 களில் மேலதிக சந்தர்ப்பவாத தன்மையுடன் ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சி செயல்படத் தொடங்கியது.இச்சூழலில்தான் மார்க்கின் “இரக்கமற்ற” “கடுமையான”விமர்சனத்தை எங்கெல்ஸ் வெளியிட்டார்.ஒருவேளை இந்த விமர்சனம் வெளிவராமல் போயிருந்தால் மார்க்சே கூறிவிட்டார்,என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவி பெற்று
அமர்வதே புரட்சி என கூறி மார்க்சியத்தை திருத்தி முடித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனாலும் ஜெர்மன் தொழிலாளர்களை பீடித்த சந்தர்ப்பவாத போக்கு, காலம் செல்ல செல்ல மென்மேலும்
சந்தர்ப்பவாத தன்மைகளின் உச்சத்தை நோக்கி பயணித்த கொடுமையும் நடந்தன. மார்க்சும் எங்கல்சும் பெபேல்,லசலை விமர்சித்ததைப் போல அடுத்த சுற்றில் ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் கார்ல் கவுட்சிக்கியின் சந்தர்ப்பவாத போக்கை லெனி னின் “இரக்கமற்ற” வகையில் மார்க்சை விட மேலதிகமாகவே விமர்சித்தார்.

சுமார் நூறாண்டுகள் சென்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனினின் “இரக்கமற்ற” விமர்சனங்கள் இன்றும் அதே முக்கியத்துவம் குறையாமல் உள்ளது.

முன்பு ஜெர்மனியை பீடித்த இந்த சந்தர்ப்பவாதம்,சமரசவாதத்தை புரிந்துகொள்ள தற்போதைய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகளின் நடவடிக்கைளை பார்த்தாலே விளங்கும்.

நாடளுமன்றங்களை அலங்கரிப்பது, சட்டவதாக முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்திற்குள் சுமூகமாக சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வது, தொழில் சங்கங்களை பொருளாதார சலுகை வாதத்திற்குள் முடக்குவது இந்த சந்தர்ப்பவாத கட்சிகளின் குறிப்பான பண்புகளாக உள்ளன.

நிலவுகிற முதலாளித்துவ சுரண்டல்வாத அமைப்பை,புரட்சிகர நிகழ்வுப் போக்கால் மட்டுமே தகர்க்க முடியும்,அதை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான நேச அணியாலே நிகழ்த்தமுடியும், நிலவுகிற முதலாளித்துவ சுரண்டல்வாத அமைப்பை, புரட்சிகர நிகழ்வுப் போக்கால் மட்டுமே தகர்க்க முடியும்,அதை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான நேச அணியாலே நிகழ்த்தமுடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தால் இந்த புரட்சி காப்பற்றப்படும்,பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி அடைந்த கட்டத்தில் வர்க்க பேதங்கள் மறையும், அரசும் உதிர்ந்து உலரும். சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்கிற புரட்சிகர அரசியலில் சமரசமும், சந்தர்ப்பவாதமும் உச்சம் பெற்றிருக்கிற இந்த சூழலில், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான மார்க்சின் இரக்கமற்ற விமர்சனத்தை, புரட்சிகர அரசியலில் உள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பொது விதியாக பயிலவேண்டும்..

புதிய தமிழ் மொழிபெயர்ப்பாக தோழர் மு.சிவலிங்கம் இந்நூலை சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.சமகாலத்தில் பெரிதும் மதிக்கிற, மார்க்சியத்தின் மீதும், புரட்சியின் மீதான நம்பிக்கைகளை அணு அளவிலும் நெகிழ்ந்து கொடுக்காத தோழர் சிவலிங்கத்தின் காலம் கருதிய இப்பணி காலத்தே அவசியமானதும் முக்கியமானதாகும்.

குறிப்பு: இப்புதிய மொழிபெயர்ப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது..சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

#புத்தகம்2017: கதைச் சொல்லிகளின் கதை!

இனியன்

இனியன்
இனியன்

ஒரு தலைமுறை சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி நிகழுகிற பொழுது அதற்கு நேர் எதிரான முந்தைய தலைமுறையினரின் இழப்புகள் மற்றும் மனோநிலைப் போன்றவற்றை எப்படி அவதானித்திட இயலும். அதிலும் குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வரை நிகழத் துவங்கிய 80களின் காலக்கட்டத்திலிருந்த முந்தைய தலைமுறையினரின் வாழ்வியல் முறைகள், அதன் அழகு, சிக்கல்கள், மனிதர்களின் பண்புகள், அப்போதிருந்த ஏற்றத்தாழ்வுகள், சாதிய நிலைகள், வன்மங்கள், பழிவாங்கல் என அனைத்தையும் பேசியிருக்கிற நாவல் புத்தகம்தான் அப்பணசாமியின் “கொடக்கோனார் கொலை வழக்கு”.

திண்ணைகளிலும், முச்சந்திகளிலும், குளக்கரைகளிலும் பேசப்பட்ட கதைகளின் சுவாரசியம் என்பது அதனை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர்ந்துக் கொள்ளக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட கரிசக்காட்டுக் கடைவீதித் திண்ணையொன்றிலிருந்து ஆராம்பமாகி, கதைசொல்லிகள் சொல்கிற கதைகளுக்கு இணையாக அவர்களுக்குள்ளும் இருக்கிற கதைகளோடும் பயணமாகிறது கதைகளம். இதுபோன்ற கதையுரையாடலில் திண்ணைவாசிகள் அனைவருமே கதைசொல்லிகள்தாம். விதிவிலக்காகக் கதைகளைச் சுமப்பவர்களாகவும் சிலர் இருப்பர். அப்படிப்பட்ட கதை சொல்லிகளாக கொடக்கோனாரும், அருணாசல நாடாரும். கதைச் சுமப்பவராக ஏகாம்பர முதலியாரும் அறிமுகமாகின்றார். மேலும் அறிமுகமாகிற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கதைகளின் வாயிலாகவே அறிமுகப்படுத்த படுகிறார்கள்.

பொதுவாக நிலவமைப்புச் சார்ந்த கதைகளத்தில் அந்நிலைவமைப்பைச் சார்ந்த குறிப்பிட்ட இனம், சாதி மற்றும் சமயம் அல்லது வாழ்வீதிகளை மையமாக வைத்தே எழுதப்படும். அவற்றிக்கு மாற்றாக ஒரு நிலவமைப்பைப் புழங்குகின்ற அத்துணை இனமக்களையும், அவர்கள் அதில் நிலைபெற எம்மாதிரியான மாற்றங்களைத் தங்களுக்குள் அடைந்திருகிறார்கள் என்பதைத் தீவிர அவதானிப்புகளுக்குப் பிறகும், தன்னுடைய இளவயது திண்ணைக் கதைகள் மூலமாகவுமே எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் தலைப்பை வைத்து இதுவொரு கொலைவழக்கு மற்றும் அதனைச் சுற்றி நிகழக்கூடிய திகில் நிறைந்த வழக்காடுக் கதையாக இருக்குமோ என்கிற முன்முடிவில் படிக்கத் துவங்குபவர்களுக்கு நிச்சியம் ஏமாற்றமிருக்காது. ஆனால் கொலை எப்போது நிகழும் என்கிற எதிபார்ப்பு நிச்சயம் சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஆனால், கொலைக்கான காரணத்தை சற்று ஆராய்தலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கவுரவக் கொலைகள் என இன்றளவும் பெருமையாக சொல்லப்பட்டுவருக்கிற ஆணவக் கொலைதான் கொடக்கோனாரின் கொலையும். அதிலும், கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் பழிவாங்கக் கூடிய சாதிய ஆணவக் கொலை. கதையின் போக்கில் புலப்படாமால் போகக்கூடிய இப்புரிதல் மிகவும் கவனமாகக் கையாளக் கூடியதும் ஒன்று. கதையின் காலக்கட்டத்தையும் இன்றைக்கும் தொடர்ந்துக் கொண்டிருக்கூடிய ஆணவக் கொலைகளின் முன்னோடியாகத் தான் கருத்தில் கொள்ளவேண்டும். அதுசரி, இங்கு பெரும்பாலான சிறு தெய்வங்களும் ஆணவக் கொலைகளின் நீட்சிதானே.

மேலும் கொலை நிகழ்வதற்கு முன்பாகச் சொல்லப்படுகின்ற கிளைக் கதைகளும், வருகிற கதாபாத்திரங்களும், கரிசக்காட்டு நிலவமைப்பும் தான் நாவல் பேசுகிற மையக் கருவாகச் சுழண்டு கொண்டேயிருகிறது. சொல்லப்பட்டிருக்க ஒவ்வொரு கிளைக்கதைகளும் அடுத்தடுத்த படைப்புகளுக்கான கரு என்று சொன்னாலும் அது மிகையாகது. அவையனைத்தையும் முழுவதுமாக எழுதப்பட்டிருக்குமானால் மற்றுமொரு தலையணைப் புத்தகமொன்று நமது கையில் இருந்திருக்கும்.

அப்படியென்ன கிளைகதைகளின் தாக்கமென்று யோசித்துப் பார்த்தால் கடலங்குடி ஜமீன் பேரனான சாயுபு, கோவணாண்டி நாயக்கர், மாடக்கண்ணு ஆசாரி, நடுவன், சின்னவன் மற்றும் சக்கிலியப் பெண்மீது வைத்திருந்த அவனது காதல், ஏகாம்பர முதலியாரின் குடும்ப வாழ்க்கை என அனைத்துக் கிளைக் கதைகளுமே தனித்தனி நாவல்களாக வரவேண்டியவை. இவை அனைத்தையுமே மிக நேர்த்தியான தனது கதைசொல்லல் முறையால் சுருக்கமாகவும் அதேவேளையில் நடக்கவிருக்கின்ற கொலைக்கு எவ்விதத் தொடர்பில்லாமல் கதைமாந்தர்களின் தொடர்பை மட்டுமே சொல்லிச் சென்றிருப்பதும் கூட ஆழமான அழகியல்தான்.

அதேபோல் தலைமுறை மாற்றங்கள் நிகழுகின்ற போது பேசப்படுகிற சாமானியர்களின் திண்ணை அரசியல் பேச்சுகளும் தலைமுறை தாண்டிய ஆதங்கங்களைளும் எளிய மக்களின் வாயிலாகவேப் பேசிச் செல்வது நடப்பு அரசியலின் சூழிலில் மக்களின் மனதினைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. உதாரணமாக இந்தியாவில் பசுமைப் புரட்சியென்ற பெயரில் உள்நுழைக்கப்பட்ட வேதியல் உரங்களினால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவுகளையும், கிராமங்களிலும் நுழைந்த பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளையும் குறித்து எழுகிற சாமானியனின் குரல்களால் பதிவு செய்திருப்பது அதன் எதார்த்த நிலையையே காட்டுகிறது. அந்த எதார்த்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்றைய இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் இடமிருந்திருக்காது. இங்குதான் சாமானியர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது வல்லுனர்களின் குரல்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருகிறோம் என்பதையும் கதை சொல்லிகளின் கதைகளாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நினைவுகள் அழிவதில்லை. நினைவுகள் வரலாற்றை எழுதுகின்றன. நினைவுகள் தலைமுறைக்குத் தலைமுறை கைமாறுவதன் மூலம் வரலாறு மறுபடியும் நினைக்கப்படுகிறது. நினைவுகளைத் தொலைத்து விட்டுப் பாதை தடுமாறும் உலகமிது என்கிற தன்னுடைய வரிகளைப் போலவே தான் பிறந்து வளர்ந்தக் கரிசக்காட்டு நிலத்தின் வரலாற்றையும், மனிதர்களையும் தனது நினைவுகளின் வழியாகவே படைத்திருக்கிறார் அப்பணசாமி.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற நினைவுகள் அழிவதில்லைதான். ஆனால் அவையனைத்தும் வடிவங்களாகவோ, படைப்புகளாகவோ வெளிவருவதில்லை. அப்படி வெளிவரும் படைப்புகளில் நினைவுகளைத் தூண்டும் பணியைச் செய்கிற படைப்புகளும் வெகுசிலவே. அந்த வரிசையில் வாசிப்பவர்களின் நினைவுகளைத் தூண்டுவதிலும், நம்முள் சூழ்ந்து இருக்க கூடிய கதைகளை மீளுருவாக்கம் செய்யத் தூண்டுவதிலும் கொடக்கோனார் கொலை வழக்கிற்கு தனியிடமுண்டு.

நூல்: கொடக்கோனார் கொலை வழக்கு (நாவல்)
ஆசிரியர்: அப்பணசாமி
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை : 200/-

#புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

பிரதமர் மோடியின் பல்வேறு காலகட்ட நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ’BLUFF – MASTER …NOW IN DELHI’ எனும் ஆங்கில புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

எழும்பூர் இக்சா அரங்கில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வில், ஆங்கிலப் புத்தகத்தை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட, சென்னை பல்கலைக்கழக அரசியலறிவியல் துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

தமிழாக்கமான ‘பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் பிரதமர் பதவிக்கு வந்த பின்னரும் மோடி எனும் அரசியல்வாதி, எப்படியெல்லாம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவருகிறார்; ஜனநாயகத்துக்கு எதிராக, ஜனநாயக அமைப்புகளை சேதப்படுத்தும்வகையில் நடந்துகொள்கிறார் என்பதைப் பற்றி எடுத்துவைத்தார், இராமு மணிவண்ணன்.

நிகழ்ச்சியில் பேசிய அ.மா.,” காங்கிரசின் நிலைப்பாடுகளோடு நமக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன; இருந்தபோதும் மோடியின் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். அளவுக்கு காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டைநிலையை, முரண்பட்ட நிலையைப் பார்க்கமுடியாது. சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பிருந்தே அவர்கள் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இந்துத்துவ அபாயத்தின் இன்னொரு ஆபத்தான அம்சம், வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். போன்ற நாடுகடந்த எச்.எஸ்.எஸ். சக்திகளின் வேலைகள். நாடு முழுவதும் நடுத்தட்டு மக்கள் மத்தியிலான இந்துத்துவ சக்திகளின் செயல்பாடும் கவனத்துக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.

அ.மார்க்சின் இக்கருத்தை வழிமொழிந்த ஆய்வாளர் கஜேந்திரன், “ இந்தியாவுக்கு வெளியில் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க அரசுகளில், அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவுக்கு அங்குள்ள வலதுசாரிகளுடன், பாசிச சக்திகளுடன் இந்துத்துவ சக்திகளின் உறவுநிலை இருக்கிறது. அவர்களின் வளர்ச்சியைத் திடீரென உருவாகிவிட்டதாக கருதிவிடமுடியாது. இன்னொரு அம்சம், வலதுசாரி சக்திகளுக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள நெருக்கம் மிகமுக்கியமானது. இந்த இரண்டு நோக்கிலும் இந்தப் புத்தகத்தின் உருவாக்கம், வரவேற்கத்தக்கது” என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதில் வழக்கமாக நடக்கும் முறைமைக்கு மாறாக, புதிய முயற்சியைச் செய்திருந்தது, சிறப்பு. ஒவ்வொரு பேச்சாளரும் பேசும் முன்னர் அவரின் விமர்சனப் பார்வையையும் பேசிமுடித்த பின்னர் அவர் வைத்த கருத்துகளையும் பற்றி பிரதமர் மோடி எப்படி எதிர்கொள்வார் எனும் கற்பனையில், மோடியின் முகமூடியுடன் தொகுப்புரையாற்றினார், தமிழ்ப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரும் சிலம்பு பதிப்பகத்தின் நிறுவனருமான ஆனந்தராஜ்.

  • ஆதி ஆதன்

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.

லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்…உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கு புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன் என்கிறார். இந்த வீடியோவில்  பதிப்பகம் தொடங்கியதன் பின்னணி குறித்தும் பதிப்பகத்துக்கு ’மோக்லி’ என பெயர் வைக்க பிரத்யேக காரணம் குறித்தும்  தான் எந்த அளவுக்கு புரபஷனலா செயல்படப்போகிறேன் என்பதையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்…

#புத்தகம்2017: அப்புவும் ஆச்சியும் எழுத்தில் இருக்கிறார்கள்

agaramudalvan
அகரமுதல்வன்

அகரமுதல்வன்

ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது.

வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப்பறக்கின்றன. ஆனால் அவைகளுக்கு சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு.

கார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ்இலக்கியப்பரப்பில் அறியாதவர் இருக்கமாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத்தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன்.

பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்கு செல்லும் வழியில் உலவிக்கொண்டிருக்கிறது.

கவிஞர் யுகபாரதி அவர்களின் “நடைவண்டி நாட்கள்” புத்தகத்தின் பக்கங்களை புரட்டிமுடிக்கிற போது நகரத்தின் பட்டினி வதைக்கும் வயலுக்குச் சொந்தமானவராய் யுகபாரதி இருந்தார். அது நகரத்தில் யுகபாரதி இருந்த வனவாசம். ஆனால் கார்த்திக்புகழேந்தியின் இந்த தொகுப்பு சற்று வித்தியசமான பாணியாலானது. அவர் கடந்தகாலங்களை எழுதவில்லை. அதன் நினைவில் தோய்கிறார். சொந்த ஊர்ப்புழுதியில் இருந்தும், டீசல் புகை நகரத்திலிருந்தும் குபு குபுவென கொப்பளிக்கிறது கார்த்திக் புகழேந்தியின் நினைவிட தோயும் கட்டுரைகள்.

உலகமயமாதலின் இறுக்கமான பிடியில் தகர்ந்துபோய்விட்ட கிராமங்களின் தனித்துவங்களை, உணவுப் பழக்கவழக்கங்களை, உறவுகளை, ஒட்டு மொத்தமாக இழந்துபோய்விட்ட நம் பாரம்பரியங்களை இப்போது நினைவுகளாய் ஆக்கிவிட்ட துயரத்திற்கு புகழின் சில கட்டுரைகள் சாட்சி.

அந்த ஆட்டுரல் தாத்தாவுக்கு தாத்தா காலத்தையது என்பாள் ஆச்சி. எட்டாள் சேர்ந்து தூக்கினால்தான் உண்டு. ஆட்டுரல் மட்டுமல்ல, திருகை, அம்மி, குழவி,கல்தொட்டி என்று தொகுப்பே வைக்கலாம். “அத்தனையும் ஒரே கல்லு. அதான் வெஞ்சனத்துக்கு அந்த ருசி” என்பாள். கல்லில் செய்த பண்டபாத்திரங்களுக்கும் மனுஷ ஜென்மத்துக்கும் காலகாலமாக அப்படி ஒரு உறவு. ஆதி மனுஷன் உணவுத்தேவைக்குத் தேர்ந்தெடுத்த முதல் ஆயுதமே கல் தானே.

தொகுப்பின் முதல் கட்டுரையில் உள்ள பந்தியிது. இன்றைக்கு அவையாவும் காணாமல்போய்விட்டன. ஆச்சி சொல்லும் தாத்தாவுக்கு தாத்தா காலத்தின் எச்சமாக இன்று எம்மிடம் இருப்பது தான் என்ன? புகழிடம் இருக்கும் வேதனை என்பது அரசியல்பூர்வமானது. அவரின் எழுத்துக்களில் பனைமட்டையின் கருக்கைப் போல அரசியல் கரையிலிருந்தாலும் அதற்குமொரு வினோதமான கூர்மையுண்டு. மண் வாசத்தை தனது எழுத்துவெளியின் பலமாகவும் பெருமையாக எண்ணுகிற கார்த்திக் புகழேந்தி கரிசல் இலக்கியத்தின் இன்றைய தலைமுறைக்கு பெருத்த நம்பிக்கைக்கு உரியவர்.

இந்த தொகுப்பின் மூலம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் இன்னொரு வாழ்வை அவரின் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். இரக்கமற்ற காலத்தின் சக்கரங்களுக்குள் மாட்டுப்பட்டு வழியற்று முழிக்கும் எத்தனையோ மாந்தர்களை அவர் தரிசித்திருக்கிறார். ஊரிலிருந்து வேலைக்காக நகரங்களுக்கு இடம்பெயரும் ஒவ்வொரு கிராமத்தானுக்கும் ஏற்படுகிற துயரங்களில் ஒன்றை கிழக்கு கடற்கரைச் சாலையில் புகழேந்தி பார்க்கிற பொழுது பணத்தை எடுத்து நீட்டும் மாந்தநேயம். அது கிராமத்து மண்ணின் பண்பு.

மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பிருக்கு என்பதை நம்புபவன் நான். புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டிகட்டி கோவிலுக்கு பயணிப்பது போலிருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகிற மீன்கள் போல அவரிடமிருக்கும் சொலவடைகள் அபாரமானது.

புகழேந்தியிடம் கதைத்துக் கொண்டிருந்தால் ஆச்சியோ அப்புவோ நினைவுக்கு வந்துவிடுவார்கள். அது அவருக்கு வாழ்வளித்த கொடை. அப்படிப்பட்ட ஒரு கரிசல் மொழிப்புலத்தைக் கொண்டு குட்டிவீடாக தன் வாழ்வின் துளியைச் சொட்டியிருக்கிறார். கார்த்திக் புகழேந்தியோடு ஊருக்கு செல்லும் வழியில் நான் இணைகிறேன்.

அகரமுதல்வன், எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள் ‘நன்றேது ? தீதேது? – ஆளுமைகளுடான உரையாடல்’ (மோக்லி வெளியீடு), ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு- சிறுகதைத் தொகுப்பு (டிஸ்கவரி புக் பேலஸ்).

#புத்தகம்2017: சயாம் ரயில் பாதையின் ரத்த சாட்சியங்கள்!

எங்கள் எம்டி Ramesh Rmr இல்லையேல் இந்த நூல் சாத்தியமாகி இருக்காது. 2013ம் ஆண்டு கோடையில் ஒருநாள் கைபேசியில் அழைத்தார். அப்போது அவர் தெற்காசிய சுற்றுப் பயணத்தில் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் குறித்து ஒரு தொடரை எழுதும்படி சொன்னார்.

இதை ஏற்று அதற்கான ஆராய்ச்சியில் இறங்கியபோது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதில் முதன்மையானது தமிழர்கள் இறந்தது குறித்த பதிவுகள் ஏதும் இல்லாதது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அனைத்து நூல்களிலும் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த போர்க் கைதிகள் மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. இந்த நிகழ்வு குறித்து எடுக்கப்பட ஹாலிவுட் படத்திலும் இவர்களே பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

யோசிக்கும் திறன் படைத்த அனைவருக்குமே இதில் இருக்கும் அபத்தம் புரியும். ஏனெனில் 1939ம் ஆண்டில் தொழில்நுட்பங்கள் பெரிதாக வளரவில்லை. பணிகளை சுலபமாக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது புழக்கத்துக்கு வரவில்லை. மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி சாலைகளும், ரயில் பாதைகளும் அந்தக் காலகட்டங்களில் எல்லா நாடுகளிலும் அமைக்கப்பட்டன.

உடல் உழைப்பு சார்ந்த இந்த வேலைகள் ஆங்கிலேயர்களுக்கு அந்நியமானது. பொருளாதார மட்டத்தில் கீழ் நிலையில் இருக்கும் ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாற்றில் எங்குமே பதிவாகவில்லை. தப்பித்தவறி இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட சதவிகித அளவில் குறைவானவர்களே. மற்றபடி காலணி நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களே / மக்களே இக்காலத்தில் உடல் உழைப்பில் ஈடுபட பணிக்கப்பட்டார்கள்.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சயாம், பர்மா, மலாய் நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்த மறுநிமிடமே அந்தந்த நாடுகளில் வசித்து வந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களை சிறைப்பிடித்தது. இப்படி கைதான அனைவருமே தொழில்நுட்ப வல்லுனர்கள் அல்லது அலுவலகங்களில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் நிச்சயம் சுத்தியலால் மலைக்குன்றுகளை உடைத்திருக்க மாட்டார்கள். கோடரியால் மரங்களை வெட்டி இருக்க மாட்டார்கள். ஆற்றில் இறங்கி மரப்பாலங்களை அமைத்திருக்க மாட்டார்கள்.

எனில், இந்தப் பணிகளை எல்லாம் யார் செய்தது?

இதற்கான பதில்தான் இந்த நூல்.

சர்வநிச்சயமாக இது கற்பனைப் புனைவு அல்ல. நடந்த கொடூரத்தின் ரத்த சாட்சியங்கள். எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை. வேண்டுமானால் சம்பவங்களின் வீரியம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இதற்கான காரணம் கூட இந்த நூலை எழுதியவனின் போதாமைதான். வருங்காலத்தில் வேறு எழுத்தாளர் இதைவிட ரத்தமும் சதையுமான உயிர்ப் படைப்பை படைக்கலாம். படைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் மூதாதையர்கள் அனுபவித்த வேதனை, ரணம், புரியும்.

சயாம் – பர்மா இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்து வந்தவர்களின் அனுபவங்கள் / நேர்காணல்கள் ஏற்கனவே நூல்களாக வந்திருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து மலேசிய எழுத்தாளர்களான அ.ரெங்கசாமி, சண்முகம் உள்ளிட்டவர்கள் நாவல் எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் உரிய தகவல்களை திரட்டி சீ.அருண், அற்புதமான நூல் ஒன்றை படைத்திருக்கிறார்.

கோவையை சேர்ந்த ‘தமிழோசை’ பதிப்பகம் மேலே குறிப்பிடப்பட்ட இந்த நூல்களை எல்லாம் வெளியிட்டிருக்கிறது.

இவை அனைத்தின் தொகுப்பாக இந்த நூலை சொல்லலாம்.

ஆரம்ப அத்தியாயங்களில் இடம்பெற்றிருக்கும் ‘தாய்’(லாந்து) மொழிக்கான தமிழ் அர்த்தங்களை சொல்லி என்னை வழிநடத்தியவர் நண்பர் ‘மாயவரத்தான்’ கி.ரமேஷ்குமார்.

போலவே ரத்தம் தோய்ந்த இந்த வரலாற்று தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது சட்டென்று ‘உயிர்ப் பாதை’யை தந்தவர் ‘வண்ணத்திரை’ சினிமா வார இதழின் ஆசிரியரான நண்பர் யுவகிருஷ்ணா.

என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து என்னை எழுத வைப்பவர் எங்கள் எம்டி, திரு. ஆர்.எம்.ஆர். அவர் இல்லையேல் நானும் இல்லை. என் எழுத்துக்களும் இல்லை.

தொடர்ந்து உற்சாகப்படுத்தி என் எழுத்துக்கு உறுதுணையாக இருப்பவர் ‘குங்குமம்’ வார இதழின் முதன்மை ஆசிரியரான தி.முருகன்.

இவர்கள் அனைவருக்கும் என் அன்பு.

‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் இது தொடராக வெளிவந்தபோது உடனுக்குடன் படித்துவிட்டு பாராட்டிய வாசகர்களையும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தன் ஓவியம் வழியே உயிர் கொடுத்த நண்பர் அரஸையும் நன்றியுடன் இந்த இடத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்
கே.என்.சிவராமன்

சூரியன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ‘உயிர் பாதை’ நூலின் முன்னுரை இது.  விலை: ரூ.200/-

கே. என். சிவராமன், எழுத்தாளர்; பத்திரிகையாளர்.

கவிஞர் குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதைத் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளியீடு!

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

“ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. வெளிவந்த மூன்று மாதங்களிலேயே அத்தொகுப்பின் அனைத்து பிரதிகளும் தீர்ந்துவிட்டமையால் கவிஞர் மாமா குமரகுருபரன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” வாயிலாக கொண்டுவர விரும்பி திரு.வேடியப்பன் அவர்களை அழைத்து இது தொடர்பாக பேசிவந்ததை அடுத்து “ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 04.01.2017 அன்று வெளியிடப்பட்டது.

எங்கள் குடும்பத்தின் வழக்கமான எந்தவொரு நிகழ்வைப் போலவே, இந்நிகழ்வும் அழைக்கப்பட்டவர்களுக்கானதாகவே இருந்தது.

ஞானம் நுரைக்கும் போத்தல் கவிதை தொகுப்பு குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டமையால் இந்நிகழ்வை ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சியாகவே வடிவமைத்திருந்தோம். என்னதான் வரையறைகளை வகுத்தாலும் பங்கேற்றவர்களால், நான் உட்பட, எங்கள் கொண்டாட்ட நாயகனுடனான நினைவுகள் குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை.

கவிதை வாசிப்பு, நினைவுகள் பகிர்வு என்று இருந்த நிகழ்ச்சியில், பீத்தோவனின் இசையில், இருள் சூழ்ந்த அறையில் சாரு நிவேதிதா மீது மட்டும் நிலவொளியை ஒத்த வெளிச்சம் பாய, அவர் குமரகுருபரன் மாமாவின் கவிதைகளை வாசிக்க கேட்க நேர்வதென்பது ஒரு வரம். அத்தனை சிலாகிப்பான கவிதை கேட்பு அனுபவத்தை அனைவருக்கும் வழங்கிய சாருவுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்!

தமிழச்சி அக்காவின் உரை என்பது இயல்பாகவே கவிதைகளோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், மனதிற்கு நெருக்கமானவரின் கவிதையை தமிழச்சி அக்கா வாசித்தால் கேட்கவா வேண்டும்! கம்யூனிஸ்ட் கவிதையால் காதல் பெருகுவது எங்கள் மாமாவின் தனித்துவம். அதை தமிழச்சி அக்கா வாசிக்க கேட்கப்பெற்றதோ இன்பங்களுள் பேரின்பம்.

பலரும் அவருடன் பழகியதை, அவர் கவிதையை பேச, திரு.ஆனந்த் அவர்களோ தமிழும், கவிதையும், காதலும், கொண்டாட்டமும் இருக்கும் இடங்களிலெல்லாம் குமரகுருபரன் மாமா நிறைந்திருக்கிறார் என்று இயல்பாக பேச அரங்கமே நெகிழ்ச்சியில் சிலிர்த்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் அவர்களுக்கு பிடித்த கவிதையை வாசிக்க, நானும் என் பங்கிற்கு எனக்கு பிடித்த வரிகளையும், கவிதைகளையும் இடையிடையே வாசித்து என் நீண்ட நாள் ஆசையை தீர்த்துக்கொண்டேன்.

எங்கள் மாமாவிற்காகவே நேரத்தை ஒதுக்கி, வேலைநாள் என்றும் பாராது, சிரமத்திற்கிடையேயும் கூட மிகுந்த அன்போடும், மகிழ்ச்சியோடும் இந்நிகழ்வோடு தங்களை ஒரு பகுதியாக்கிக்கொண்ட அனைவருக்கும் அனைவருக்கும் அன்பும், நன்றியும்!

நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்ட ஸ்ருதி தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

இக்கவிதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டு, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” பதிப்பாளர் திரு. வேடியப்பன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்!

இத்தனை சிறப்பானதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கவிதா அக்காவிற்கு அளவில்லா அன்பும், பாராட்டுக்களும்!

ஓம் பகார்டி!

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர். 

#புத்தகம்2017: பா. ஜீவசுந்தரியின் ‘குரலற்றவர்களின் குரல்கள்’!

பா. ஜீவசுந்தரி

பா.ஜீவசுந்தரி
பா.ஜீவசுந்தரி

அதிகார வர்க்கம் தமது செயல்பாடுகள், அலட்சியங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் சமூகத்தின் ஒரு பிரிவு பாதிக்கப்படும் போது பாதிப்பற்ற சமூகம் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அதே பிரிவு பாதிப்புக்குள்ளாகும்போது அமைதியைக் குலைத்துக் கொந்தளிக்கிறது.

பெண்கள் எப்போதும் இரண்டாம் படிநிலையில் நிறுத்தப்படும் நிலை பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக இருக்கிறது. பாலினப் பாகுபாடு குறித்தும் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பும் நிலை சமூகத்தில் நிலவுவது மன ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதன் வெளிப்பாடுகளே பெரும்பான்மையான என்னுடைய கட்டுரைகள்.

தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீதான தாக்குதல்களின் மீது இத்தகைய பார்வையைத்தான் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் முன் வைக்கிறார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பிரிவினர் எப்போதும் சகிப்புத்தன்மையோடுதான் வாழ வேண்டும் என்ற நிலைபாட்டையே ஊடகங்களும் திரும்பத் திரும்ப ஊதுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இக் கட்டுரைகளில் விலக்கப்பட்ட பிரிவுகளுக்காக உரக்கக் குரல் கொடுத்த நிறைவு ஏற்படத்தான் செய்கிறது.

நூலின் முன்னுரையிலிருந்து……

குரலற்ற பொம்மைகள்
கட்டுரைத்தொகுப்பு
வெளியீடு : போதிவனம்
பக்கங்கள் 175
விலை : ரூ. 150/

சென்னை புத்தக்காட்சியில் ஞானபாநு, அரங்கு எண் : 498 ல் கிடைக்கும்

புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றன. எங்கே, என்ன நிகழ்வுகள் நடக்கின்றன…இதோ ஒரு தொகுப்பு…

மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவு நூல் தொகுப்பு வெளியிடுகிறது ‘புலம்’. இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

kanmani
இடம்: கவிக்கோ மன்றம்

நாள்: 31.12.2016 மாலை 5 மணி

வரவேற்பு: வீ. ரேவதிகுணசேகரன்

தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

முன்னிலை: கே.ஏ.கருணாநிதி

நூல் வெளியிடுதல்: தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நூல் பெறுதல்: பேரா.அ.மார்க்ஸ், பேரா.அரங்க மல்லிகா, பேரா.த.மார்க்ஸ்.

வாழ்த்துவோர்கள்: சி.மகேந்திரன் சிபிஐ, மாநில துணைப் பொதுச் செயலாளர்,

எழுத்தாளர்கள்: அஸ்வகோஷ், ரவிக்குமார், பேரா.வீ.அரசு, பேரா.பஞ்சாங்கம், ச.தமிழ்ச்செல்வன், பிரளயன், அம்சன்குமார், பேரா.வ.ஆறுமுகம், பேரா.கி.பார்த்திபராஜா, பேரா இரா.கண்ணன், பேரா.வீ.வாலசமுத்திரம், அன்புசெல்வம்.

மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாடடுகிறது பியூர் சினிமா!

சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தக அங்காடியில் அதிகாலை 1 மணிவரை தொடர் நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. இதில் இரவு 11 மணிக்கு இயக்குனர் மிஷ்கினுடன் பார்வையாளர்கள், சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 1 மணிவரை பியூர் சினிமா புத்தக அங்காடியில் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் புத்தகங்களுக்கு தள்ளுபடியும் உண்டு.

முன்பதிவு செய்ய. 9566266036, 044 42164630

31-12-2016, சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 12 மணி வரை.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

இசை, கவிதை, சிறுகதை, சினிமா குறித்த விவாதங்கள் பரிசலில்!

மாலை 6 மணி தொடக்கம்
———————————-
இரவினை இசைத்திட கவின்மலர் குழுவினருடன் (கரோக்கி)
—————————————————————————————-
பேசும் புத்தகம்
———————
தலைமை: தோழர் ஜி. செல்வா,
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் சைதை ஜெ
இயக்குனர் பா. ரஞ்சித்
எழுத்தாளர் ஜெயராணி
———————————–
இரவு 7 மணி
அன்புள்ள வண்ணதாசன்
சரஸ்வதி காயத்திரி
———————————–
இரவு 7.30 மணி
சிறுகதை தொகுப்பு திறனாய்வு
——————————————-
– ஈட்டி (குமார் அம்பாயிரம்) – த. ராஜன்
– கடல் மனிதனின் வருகை (சி. மோகன்) – கிருஷ்ணமூர்த்தி
– பட்டாளத்து வீடு (சாம்ராஜ்)-த. ஜீவலட்சுமி
—————————————————————————-
இரவு 8.30 மணி
தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு வீச்சு
———————————————————————-
சிறப்புரை: அரவிந்தன்
————————————————————————–
இரவு 9 மணி
நூற்றாண்டின் கதைசொல்லி கி.ரா – கார்த்திக் புகழேந்தி
————————————————————————-
இரவு 9.30 மணி
தமிழ்சினிமா புத்தகங்கள் – தமிழ்ஸ்டியோ அருண்
————————————————————————
இரவு 10 மணி
ஈழத்து இலக்கியம் – கவிஞர் அகரமுதல்வன்
————————————————————————
இரவு 10.30 மணி
தமிழ் சினிமா – குறும்படம் – ஆவணப்படம்
———————————————————————–
ஒவியர் மருது, இயக்குனர் அம்ஷன் குமார், இயக்குனர் கவிதாபாரதி, கவிஞர் ரவிசுப்பிரமணியன், இயக்குனர் ஜெ.
வடிவேல், இயக்குனர் பொன் சுதா, எழுத்தாளர் சாம்ராஜ், இயக்குனர் மோகன், இயக்குனர் சோமிதரன், ஆவணப்பட இயக்குனர் R.P அமுதன்.
——————————————————————————————
இரவு 12 மணி
புதிய சிற்றிதழ் ‘இடைவெளி’ முகப்பு அட்டை வெளியீடு – கி. அ. சச்சிதானந்தன், தேவகாந்தன், பிரவீன் மற்றும் ஆசிரியர் குழுவினர்
——————————————————————————————
இரவு 12.15 மணி2016ம் ஆண்டின் மிகச் சிறந்த ஐந்து கவிதைகள் -கவிஞர்கள் வெயில், இளங்கோ கிருஷ்ணன்
——————————————————————————————
தொகுப்பாளர்கள்: பாரதி செல்வா, ராமராஜன், தினேஷ், விஜய குமார் , விஜய் பாஸ்கர் விஜய், பரிசல் சிவ. செந்தில்நாதன்

டிசம்பர் 31-12-2016 முதல் ஜனவரி 31-1-2017 வரை 10% அனைத்து பதிப்பக புத்தகங்களுக்கும் கழிவு தரப்படும்

Contact: 9382853646

நாச்சியாள் சுகந்தியின் கவிதை நூல் வெளியீட்டுடன் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தாண்டு கொண்ட்டாட்டம்!

nachi

#புத்தகம்2017: செல்லாக் காசின் அரசியல்

எந்த ஒரு முதலாளித்துவ அரசும்,தனது வர்க்கச் சார்பு நடவடிக்கையை பட்டவர்த்தனமாக அறிவித்துக்கொண்டு செயல்படுத்துவதில்லை. அது, முதலாளித்துவ வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகவும், அதற்கு சேவை செய்வதை நாட்டின் நலன் கருதிய சேவையாகவுமே காட்டும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பகைவர்களைக் கட்டமைத்து தனது சமூக மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முயலும். எனவே கறுப்பு பண மீட்பு, கள்ளப் பண ஒழிப்பு, தீவிரவாத பணத்தை கட்டுப்படுத்துவது போன்ற விவகாரங்களை அம்பலப்படுத்துவது எவ்வளவு அவசியமோ, அதன் விளைவுகளை கண்டிப்பது எவ்வளவு அவசியமோ, அது போலவே இந்த நடவடிக்கைக்கு பின்னாலான பொருளியில் பகுப்பாய்வை மேற்கொள்வதும் அவசியமானதாகும். ஆழமான பொருளாதார பார்வையுடன் அருண் நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அருண் நெடுஞ்செழியன் எழுதிய பல கட்டுரைகள் டைம்ஸ் தமிழில் வெளியாகி வாசகர்களிடம் வரவேற்பை பெற்றவை.
நூல் : செல்லாக் காசின் அரசியல்
ஆசிரியர்: அருண் நெடுஞ்செழியன்
விலை: ரூ. 40
தொடர்புக்கு: எண் 6, எழுபது அடி சாலை, சுப்புப்பிள்ளைத் தோட்டம், தி.நகர், சென்னை.
Ph: 9042274271.

இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிக்கையாளர் இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா இன்று  (17.12.2016) மாலை 6 மணி அளவில் உமாபதி அரங்கம்(பழைய ஆனந்த் திரையரங்கம்) இண்ணா சாலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி, பேரா.மங்கை, எழுத்தாளர் ஜீவசுந்தரி, பேரா. க.கல்பனா, ஆராய்ச்சி மாணவர் தீபா, ஜான்சி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு ஏற்கனவே பழக்கமான களம்தான் இது. இங்கிருந்துதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இடையில் கொஞ்ச வருடங்கள் பிழைப்புத் தேடி வேறு வேறு நிலங்களில் சுற்றினேன். அது அனுபவங்களைக் கொட்டிக் கொடுத்தது.

அந்த அனுபவங்களைத் தோளில் சுமந்து கொண்டு ஒரு நாடோடி போல, முறையான பயிற்சிகள் இல்லாமல், போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் திரும்பவும் நான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தேன். பிழைப்பில் கிடைத்த அனுபவங்களின் காரணமாக மனம் திருந்திய மைந்தனாகவும் வந்தேன். குடுகுடுப்பைக்காரனைப் போல எல்லாவற்றையும் கொட்டி விடலாம் என்கிற மனநிலையில் வந்தேன். எங்கள் ஊர் குடுகுடுப்பைக்காரனின் கதைகளை இன்னொரு குடுவைக்குள் அடைத்துச் சொல்கிறேன். குடுவையில் இருக்கிற மருந்தின் வேர் தேடினால், அது மஞ்சணத்திச் செடியாகத்தான் இருக்கும். கருவேல முட்களின் கதையை உலகளாவிய அனுபவங்கள் வழியாக கருவேலத்தின் குணம் கொண்ட டிராகன் பழத்தில் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.

டிராகனும் கருவேலமும் வேறு வேறல்ல. ஆனாலும் ஒன்று வளர்ச்சியின் குறியீடு. இன்னொன்று அழிவின் குறியீடு. அதேசமயம் இந்த இரண்டும் சேர்ந்ததுதான் நான் என்னுடைய நாவல்களின் வழியாக வடிவமைக்கிற வாழ்க்கை. இந்த வாழ்க்கையை அருளிய பாண்டி முனி அய்யாவை என் சக்திக்குத் தகுந்த மாதிரி ஏர் ஏசியா விமானத்தின் எகனாமிக் கிளாஸில் அழைத்துச் செல்லப் ப்ரியப்படுகிறேன். பாண்டி முனி அய்யாவாக இருப்பவர்களெல்லாம் இதை விரும்பத்தான் செய்வார்கள்.

பாண்டி முனி அய்யாவும் எத்தனை காலம்தான் அந்தக் கருவேலங் காட்டிற்குள் நின்று வெந்து கிடப்பார்? அவர் விரும்புகிறாரோ இல்லையோ, ஆட்டு எலும்புகளை மென்று கொண்டு இருப்பவருக்கு ஒரு இளைப்பாறுதலுக்காக மெக்சிகன் சிஸிலரை தர விரும்புகிறேன். எனக்கு இந்தப் படையல்தான் தெரியும். இந்தப் படையலுக்கான வாழ்க்கையைத்தான் அவர் எனக்கு அருளியிருக்கிறார். அதையே நான் நன்றியுடன் திருப்பித் தர விழைகிறேன். அதை அவர் விரும்பவும் செய்வார் என்கிற உறுதி என்னிடமுண்டு.

தெரிந்ததையெல்லாம் கொட்டுகிற அந்த முதல் தலைமுறை குடுகுடுப்பைக்காரனை முற்றத்தில் அமர வைத்து அகத்திக் கீரையும் நீச்சத் தண்ணீரும் தந்து உபசரித்தவர் மனுஷ்ய புத்திரன் சார். அவர்தான் அந்தக் குடுகுடுப்பைக்காரன் தன்னுடைய கதையை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தார். அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை  நாவல்களை ‘போஸ்ட்மார்டன் கிளாசிக்ஸ்’ என்று சொல்லி என் மீது ஒளி பாய்ச்சியவர் சாரு நிவேதிதா. ஒரு துறையில் புதிதாக நுழையும் ஒருவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தத் தயங்காதவர் என்கிற வகையில் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருக்கிறேன். அவருக்கு இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்கிறேன். சென்னையில் என்னுடைய தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தவர் அப்பணசாமி சார். அவர் இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்ததை உணர்ச்சிகள் மேலிடும் ஒரு அனுபவமாகத்தான் கருதுகிறேன்.

என்னைத் தூக்கிச் சீராட்டிய எனக்கு முன் எழுத வந்த முன்னோடிகளான விநாயகமுருகன், அபிலாஷ் சந்திரன், கே.என்.சிவராமன், யுவகிருஷ்ணா, ஜி.கார்ல் மார்க்ஸ், எஸ்.செந்தில்குமார், லக்ஷ்மி சரவணக்குமார், தம்பி கார்த்திக் புகழேந்தி ஆகியோரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே எழுதியவற்றைப் படித்துவிட்டு வார்த்தைகளின் வழியாக வழிநடத்தும் என் மூத்த முன்னோடிகளான எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்மகன், டி.ஐ.அரவிந்தன், இரா.முருகவேள், ந. முருகேச பாண்டியன், இமையம், அ.ராமசாமி, உதயசங்கர், நெல்லை க்ருஷி, பாலநந்தகுமார், மதுரை அருணாசலம் ஆகியோரை எப்போதும் நினைவில் நிறுத்துவேன். என்னை எல்லா வகைகளிலும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் என்னுடைய நண்பர்களான செல்வி ராமச்சந்திரன், சந்தோஷ் நாராயணன், பிரபுகாளிதாஸ், ஆனந்த் செல்லையா, கலாநிதி, கட்டுமரம் கண்ணன், திருமகன் ஈ.வே.ரா, ராஜா குள்ளப்பன், டைட்டஸ், சஞ்சீவி குமார், கவிதா முரளிதரன், குணசேகரன், பாரதித்தம்பி, செல்லையா முத்துச்சாமி, லோகேஸ், ஏ.எம்.கணேஷ், ஜெயா, பிரவீண், எட்வர்ட், ஆவுடையப்பன், ஸ்ரீரங்கன், அஜய், வழக்கறிஞர் கோவை எம்.சரவணன், ஜார்ஜ் ஆண்டனி, வழக்கறிஞர் அழகர்சாமி, இளங்கோவன் முத்தையா, கடங்கநேரியான், ஜி.பச்சையப்பன் ஆகியோரை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய புத்தகங்களைப் படித்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் முகநூலில் விமர்சனம் செய்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர்களின் கருவி நான். சிலர் விடுபட்டிருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன். வழக்கம் போலவே பவித்ராவை முன்னிறுத்திய இந்த வாழ்க்கையைக் கொடுத்ததற்காக அந்தப் பேருண்மைக்கு நன்றி சொல்கிறேன். ஒரு குடுகுடுப்பைக்காரனுடன் வாழ்வது சாதாரணமான காரியமா என்ன? ஆயுள் முழுவதும் பவித்ராவிற்குக் கடன்பட்டிருக்கிறேன்.

நாடோடியான இந்தக் குடுகுடுப்பைக்காரன் உங்களுடைய கதைகளைத்தான் சொல்கிறான். ஒருநாள் அவன் நள்ளிரவில் நகர்வலம் போனபோது, இறப்பில்லாத வீடொன்றில் கடுகு தேடிப் போன தாயொருத்தியைப் பார்த்தான். அந்தத் தாயாகத்தான் அஜ்வா என்கிற பேரிச்சம் பழத்தைப் பார்க்கிறேன். என்னுடைய சகோதரர்கள் பிறந்தார்கள். வாழ்வென்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே வீழ்ந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இருந்து அவர்களது ஆசியுடன் ஒருத்தன் பிழைத்து மேலேறி வந்தான். அப்படி பிழைத்து வந்த ஒருவனின் கதைதான் அஜ்வா. அவன்தான் ஐந்து முதலைகளின் கதை நாவலில் இருந்தான். அவன்தான் ரோலக்ஸ் வாட்ச் நாவலில் இருந்தான். அவன்தான் வெண்ணிற ஆடையிலும் இருந்தான். இப்போது அஜ்வாவிலும் இருக்கிறான்.

ஏனெனில் நான்தான் அது. நான் என்பது நானல்ல இங்கே. இது என் தலைமுறையின் கதை. என் முன்னோர்களின் முன்பு அமர்ந்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமலேயே எடுத்துக் கொண்ட அவர்களது வாழ்க்கையைத் திரும்பவும் எனக்குத் தோதான வடிவத்தில் சொல்கிறேன். கரிசல் நிலத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நாவலை அடையாளப்படுத்த விரும்புகிறேன். புரிந்து விரும்பி, என் முன்னோர்கள் எனக்கு அகத்திக் கீரையும் நீச்சத் தண்ணீரும் வழங்குவார்களாக; என் சகோதரர்கள் வழக்கம் போல என்னைத் தாங்கிப் பிடிப்பார்களாக; இங்கே வந்து என்னைச் சேர்த்த பேருண்மை, அங்கேயும் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்கிற நம்பிக்கை நிறைய இருக்கிறது. அதுவரைக்கும் பொறுப்பதற்கான மனமும் இருக்கிறது.

  •  சரவணன் சந்திரன்

சென்னை

எழுத்தாளர் சரவணன் சந்திரனின் வரவிருக்கும் நாவலான ‘அஜ்வா’வின்  முன்னுரை.

#புத்தகம்2017: ஏர் மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’!

ஆசைத்தம்பி

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை

என ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது.

அடுத்து ” அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா ” என அப்பாவும் ” “ஒழைக்காம உட்க்கார்ந்து சாப்புட்டா ஒடம்புல ஒட்டாது ” என அம்மா சொன்னதையும் ஆசிரியர் நினைவு கூறும் போது யாரவது ஒரு பையன் வீட்டில் இருக்கலாம்ல ஏன் கஷ்டப்படுறீங்க என்று கேட்ட என்னிடம் என் ஐயாம்மா சொன்னது என் காதுகளில் ஒலித்தது ,” “உண்ணப் பார்த்துக்கிட்டு இருந்தாலும் உழைக்க பார்த்துகிட்டு இருக்க கூடாது ”

தனது எழுத்துக்களைப் பற்றி ஏர் மகராசன் ( ஏர் என்பது எங்கும் இல்லாத நிலையிலும் தனது பெயரில் அதை சேர்த்து நமக்கெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ) கூறுகிறார் இப்படி . “பகட்டும் பூடகங்களும் புனைவுகளும் இல்லாத எளிய மக்களின் வாழ்வியல் கோலங்கள் போலத்தான் எமது எழுத்துக்களும் அழகியல் , கோபம் , திடம் , மானுட வாசிப்பு போன்றே எனது எழுத்துக்களும் எளிமையானவை . எளிய மக்களுக்கானவை ” . ஆனால் கருத்துப் பட்டறையோ ,” நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான் , நிலம் பற்றிய தவிப்பை ஏர் மகராசனால் புலப்படுத்த முடிகிறது அவருடைய பதிவுகளை வாசிக்கும்போது ஒட்டு மொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன ” என்று கூறும் போது இந்நூல் வாசிப்பின் அவசியத்தை உணர்த்திக் செல்கிறது

தனது முதல் கட்டுரையில் ( பெண் ஆண் உடல்கள் சொல்லாடல்களும் பொருள் கோடல்களும் ) பெண்ணைக் குறித்த அறங்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டவை ஆண் நோக்கிலானவை ஆண்களின் நலனுக்கானவை என்பதை அழகாக கூறுகிறார் . இறுதியில் ஆணுடன் வேறு பெண்ணுடல் வேறு . இந்த வேறுபாட்டை இயல்பாய் இயற்கையாய் அமைந்த ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையை இருக்க முடியும் . இந்த வேறுபாடுகளின் மீது ஏற்றது தாழ்வு காண்பிக்கும் போதுதான் செயற்கையாகவும் பொய்யாகவும் மாறி போகின்றன . பொய்யானவை நிலைப்பதுமில்லை வென்றதும் இல்லை என்கிறார்

ஏர் மகாராசன்
ஏர் மகாராசன்

பண்டைத் தமிழர்களுக்கான பண்பாடுகளை , இலக்கண மரபுகளை அறிய முடியாமல் நாம் தவிக்கும்போது தொல்காப்பியம் தான் தன்னை தாய் தந்தையாய் நம்மை தோளில் ஏற்றி வேடிக்கை பார்க்க வைக்கிறது என்று கூறும் ஆசிரியர் ஆனால் தொல்காப்பியர் பார்த்தது வேறு ( நம் மரபு ) . அவர்களின் மீதேறி நாம் பார்ப்பது வேறு ( எதையும் மீளாய்வு செய்து பார்க்கிற புதுப் பார்வைகள் ) என்கிறார் . தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றைய வரையில் பெண்ணாடக்கல் என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது . எல்லா மதங்களும் பெண்ணுக்கு எதிராக பெண்ணுடலைப் சிறுமைப்படுத்துவதிலும் அடிமைப்படுத்துவதிலும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன என்று ஆதங்கப்படும் ஆசிரியர் , தொல்காப்பியம் , மனு சாஸ்திரம் , பைபிள் , திருக்குரான் , பௌத்தம் , சமணம் , டார்வின் ,புருத்தோன், சிக்மண்ட் பிராய்டு ஆகியோர் அமைத்த கட்டுமானங்கள் உண்மையானதுமில்லை : உறுதியானதுமில்லை என்பதை சமூக மாற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன . வலுவானவை வாழும் .வலுவற்றவை வீழும் என்பதை மேற்குறித்த கட்டுமானத்திற்கு பொருத்திப் பார்க்கலாம் என்கிறார்

இரண்டாவது கட்டுரை பெண் கவிஞர் கனிமொழியின் கவிதை பற்றியது

” என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதை தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு “

தேநீர்க்கடை மேசையில்
ஒடுங்கியபடிக் கிடந்த
உன் கைகளை பற்றி
உன்னிடம் ஏதாவது பேசி இருக்கலாம்
ஒரு பிறழ்ந்த தருணத்தின்
தவறிய கணங்களில்
சிதறுண்டு போனது நம் உலகம்
தொலைந்து போன சில கணங்களைத்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கறந்து போன நம் காதலை நியாயப்படுத்த “

இருவர் தலைகளும் சிதைக்கப்பட்டன
தலைகள் இருந்த இடத்தில்
கிரீடங்கள் வைக்கப்பட்டன
பீடத்தில் இருந்தவன் அட்சதை தூவினான்

இது போன்ற கவிதைகள் இன்னும் சில

மூன்றாவது கட்டுரை சல்மாவின் கவிதைகளைப் பற்றி

“என்னை மீறித்
தீர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
தீரவே தீராத
தனிமையுடன் நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்”

” என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை

பனி படர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

என்னை எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த எதையுமே “

குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்று தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் அருவருப்பூட்டுவதாய்
சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும்
மாறுவதில்லை

இது போன்ற கவிதைகள் இன்னும் சில

அடுத்தது நான்காவது கட்டுரை லதாவின் கவிதைகளைப் பற்றி

“வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே
அணுவைத் துளைக்க
தாங்குமா என் சிறு பூ”

“தீயில் விறைத்து
நின்ற காலம்
நீர் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன”

அடுத்து ஐந்தாவது கட்டுரை உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து

” நான் யார் ? பெரியவளா , சிறியவளா நீயே சொல்
அனு கேட்கையில் மரப்பாச்சி விழிக்கும்
எனக்குன்னு யார் இருக்கா ? நான் தனிதான ?
அனுவின் முறையாடல்களை
அது அக்கறையோடு கேட்கும் “

ஒரேயொரு முறை புரண்டு
விழித்துக் கொள்ளுங்களேன்
உடம்புக்கென்ன என்று
ஒரு வார்த்தை கேளுங்களேன்

ஏகப்பட்ட கவிதைகள் ஆசிரியரின் உரையாடல்களோடு

ஆறாவது பண்பாட்டு மார்க்சிய உரையாடல்

மார்க்சியத்தைப் பற்றி நடந்த ஒரு உரையாடலைப் பற்றி ஒரு உரையாடல்

அடுத்து ஏழாவது தினை மொழி எடுத்துரைப்புகள்

குறுந்தொகை கவிதையுடன் காதலர்களின் சங்கமங்கள் பற்றியது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நிகழ் காலத்திய வாழ்க்கையின் வூடே நகர்ந்து செல்வதை பற்றிய ஒரு உரையாடல்

எட்டாவது முல்லைப் பாட்டு பற்றியது

உரையாடல் முல்லைப்பாட்டு கவிதைகளைப் பற்றி

ஒன்பது தற்கொலை செய்து கொண்ட உழவுக்குடிகள்

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்க படைகளால் அழிக்கப் பட்டபொழுது
மனிதத்தை நேசிக்கக் கூடிய கலைஞர்களிடையே பெரும் கொதிப்பு இருந்தது . அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா அக்கா தங்கை உடுத்திய பழைய சேலை தாவணி பாவாடைத் துணிகளைக் கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவர் முருகபூபதி என்னும் கலைஞர் .அவரின் பெரும்பாலான நாடகங்கள் மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததால் வந்ததாகும் .

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை
எனப் பாடியபடி ஒருவர்
முன் செல்ல மற்றவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள் . வேளாண்மைத்தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் ஒப்பாரியும் தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரி பாடல் உணர்த்தியது

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப் போன சம்சாரிகளின் ஆன்மாக்கள் அழுது புலம்புகின்றன . உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள்

பத்தாவது கோமாளிக்கூத்து

ஈழம் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடல்

போர் என்றால் வன்முறை . அழிக்கப்படுவது அநேகமாக பெண் உடல்களாக தான் இருக்கும். அதிக விதவைகள் வாழும் இடமாக ஈழம் போனது ஏன் ? விதைகளை விருட்சங்கள் ஆக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது மிகப் பெரிய சோகம் . எம் தொப்பூள்க் கொடி உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என மரண விளிம்பிலும் நம்பிக்கை வைத்திருந்த அவர்களின் நம்பிக்கையை மண்ணோடு மண்ணாய் ஆக்கியது நாமல்லவா ? நம்மை ஆண்ட அரசுகள் அல்லவா? ஈழத் தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை மிருக விதூஷகம் நடக்கமாய் ஆக்கியிருக்கிறார் முருக பூபதி .

எங்கள் வூரில் மலர்கள் இல்லை . பறவைகள் இல்லை வண்ணத்துப் பூச்சிகள் இல்லை . வண்டினங்களின் பாடல்கள் இல்லை பாதைகள் குழம்பிய பிரதேசத்திலிருந்து அவை திரும்பவே இல்லை . வூர் வூராய் தேடி வருகிறோம் . என அழுகிறார்கள் . மரணித்தவர்களுக்காகவும் மரணித்தவைகளுக்காகவும் அழுகிறார்கள் .

நாடற்ற மனித வாழ்வை நிலமிழந்த உயினங்களின் வாழ்வை, காடிழந்த மரங்களின் வாழ்வை ,வீடிழந்த மக்கள் வாழ்வை, கூடிழந்த பறவைகள் வாழ்வை, புதர் இழந்த பூச்சிகள் வாழ்வை ,கடல் இழந்த நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள் அரங்கேற்றுகின்றார்கள்

11- ஆவது கட்டுரை புதைகுழி மேட்டிலிருந்து வேளாண்குடிகளின் ஒப்பாரி

அறமும் அதிகாரமும் ஆதிக்க சக்திகளின் உடைமை அன்றும் . இன்றும் என்றும் . தலைப்புக்கேற்ப வேளாண்குடிகளின் பாதிப்புகளை விரிவாக பேசுகிறார் ஆசிரியர் . சிந்திக்க வேண்டியவை . வேளாண்குடிகளுக்கான கோரிக்கையையும் வைக்கிறார் . எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விஷயம் உரைக்க வேண்டிய விஷயம் , உறைக்கும்மா நமக்கு ?
இறுதிக்கு கட்டுரை 12 – ஆவது புதைக்காட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்

பழங்கால பண்பாட்டு அடையாளப் பதிவுகளை மக்கள் தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகராசன் கண்டறிந்து விளக்கி இருக்கிறார் . எல்லோரும் அறிய வேண்டிய விஷயங்கள் இவை

“மொழியில் நிமிரும் வரலாறு” படித்தேன். இவர் மொழியால் நிமிர்ந்தது என் உணர்வு . வாழ்த்துக்கள்….. மகாராசனுக்கு.. இல்லை இல்லை ஏர் மகாராசனுக்கு ..

மொழியில் நிமிரும் வரலாறு , ஆசிரியர் – ஏர் மகாராசன். பக்175 , விலை ரூ150 கருத்து பட்டறை வெளியீடு , மதுரை.

பேச : 9842265884

சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

விநாயக முருகன்

விநாயக முருகன்
விநாயக முருகன்

ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். மாம்பலத்தில் மாம்பலம் கால்வாய் இருந்தது. கொளத்தூர், பெரியார் நகர் எல்லாம் ஒரு காலத்தில் குளம், குட்டை நிறைந்த கிராமங்கள். நிலத்தடி நீர் சுவையாக இருந்தது. இப்போது சென்னையில் எங்கு எங்கு ‘போர்’ போட்டாலும் உப்பு நீரும்தான், இரும்புகலந்த பழுப்பு நிற நீரும்தான் வருகிறது. சில பகுதிகளில் குடிநீருடன், சாக்கடை நீர் கலந்துவிடுகிறது. சென்னையின் நான்கு நதிகள் அடையாறு, கூவம், கொசஸ்தலை மற்றும் பாலாறு. முக்கிய கால்வாய் பக்கிங்காம் கால்வாய். இன்று இவை எல்லாம் நகரின் பிரதான சாக்கடைகள்.

தற்போது சென்னையில் 419 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 1261, திருவள்ளூரில் 920, என மொத்தம் 2,600 ஏரிகள் மட்டும் இருப்பதாக பொதுப்பணித்துறை ஆவணப்பதிவேடு தெரிவிக்கிறது. மீதமுள்ள 2400 ஏரிகள் மறைந்துவிட்டன. நகரம் விரிவடையும்போது ஏரிகள் காணாமல்போகின்றன. காலம் மாறும்போது ஒரு பிரதேசத்தின் நிலவமைப்பு மாறுவது இயல்புதான். என்னதான் காலம் மாறினாலும் சில அடிப்படை விதிகளை மட்டும் மாற்றக்கூடாது என்பதில் சமூகம் எப்போதும் தெளிவாகவே வந்துள்ளது.

எல்லா காலங்களிலும் உழைக்கும் மக்கள், விளிம்புநிலை மக்கள், வறியவர்கள் பள்ளத்திலும், உயர்வர்க்கம் மேடுகளிலுமே வசித்துவந்துள்ளார்கள். பள்ளர்கள், மேட்டுக்குடிசமூகம் போன்ற வார்த்தைகளின் பின்னால் உள்ள அரசியலை நாம் கவனிக்க வேண்டும். பிரிட்டிஷ் காலத்திலும் அதேதான் நடந்தது. சென்னையின் பூர்வகுடிகள் மீனவர்களும், தலித்களுமே. பிரிட்டிஷ் ஆட்சியின்போது சென்னையின் முதல் மாபெரும்குடியேற்றம் நடந்தது. நரிமேட்டை ஒட்டியிருந்த மேட்டை அழித்து பிரிட்டிஷார் வெள்ளையர் நகரத்தை உருவாக்கியதும் கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களை கறுப்பர் நகரங்களாக, சேரிகளாக உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு பிறகும் சேரிகளின் நிலைமை மாறவில்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. பன்னாட்டு நிறுவனங்கள் வந்தபிறகு சென்னையை நோக்கி படையெடுத்து வந்த மக்கள் தொகை அதிகரித்தது. சென்னையின் இரண்டாம் குடியேற்றம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் நடந்தது. பெருகும் மக்கள் தொகையை சமாளிக்க வேண்டுமே. ரியல் எஸ்டேட் வணிகர்கள் சென்னையை சுற்றியிருந்த விவசாய நிலங்களை, ஏரிகளை அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்தார்கள். நடுத்தர மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி தனக்கென ஓர் இடத்தை வாங்கிபோட்டார்கள். அதற்கு இணையாக அரசும் ஏரிகளை தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கும். பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து கொடுத்தது. முறையான திட்டமிடல் இல்லாத இந்த மாநகரம் இப்போது சிறுமழைக்கே நரகமாகிவிடுகிறது. இருக்கும் சொற்ப ஏரிகளையும் சரியாக பரமாரிக்க முடியாததால் கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம். சென்னையின் பிரதான பிரச்சினை நீர்தான்.

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையின் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 4.94 மீட்டர் இருந்தது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 5.06 மீட்டர் ஆழத்திற்கு சென்றது. 2015ம் ஆண்டு 7.34 மீட்டர் ஆழத்துக்கு சென்றுள்ளது. ஒரே ஆண்டில் 1.65 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் சென்னையில் 400 அடிக்கு கீழ் தான் போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. நிலத்தடிநீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரில் கலக்கிறது. புதுவண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், இந்திரா நகர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புநீர் கலப்பது அதிகரிகிறது. அது மட்டுமல்லாமல் கடற்கரை ஓரம் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளிலும் நீர்வளம் வெகுவாக குறைந்து விட்டது. அதாவது கடல் மெல்ல மெல்ல நமது கால்களுக்கு கீழே பரவுகிறது. சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இந்த குறுநாவலின் மையபுள்ளி வேறு என்றாலும் இந்த பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதன் மூலம் வரபோகும் ஆபத்தை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்ளவோ, தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கவோ உதவும்.

விநாயக முருகன், எழுத்தாளர். சென்னைக்கு மிக அருகில்ராஜீவ்காந்தி சாலைவலம் ஆகிய நாவல்களின் ஆசிரியர்.  விரைவில் வரவிருக்கும் ‘நீர்’ நாவலின் முன்னுரையின் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

நீர் நாவலில் அட்டை வடிவமைப்பு சந்தோஷ் நாராயணன்.