வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்

ஏர் மகாராசன்

maharasan
ஏர் மகாராசன்

புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி – மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.

அவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை – உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.

வைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும்.

வைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெளிப்பதும் கூட ஒரு சடங்குதான்.

நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.

இறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.

பால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.

நாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .

ஆனால்,திராவிடர்க்கும், பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம். அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.

முதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை, இளநீர் தேங்காய் வாழைப்பழம் வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள். இரண்டாம் நாள், தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி அல்லது வெல்லமும் சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.

முளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில் நடக்கும் இறப்புச் சடங்கு ஆன்மா, சொர்க்கம் தொடர்புடையதில்லை. இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும் மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும்.

கவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல். சமீபத்தில் சொல்நிலம் என்கிற பெயரில் கவிதை நூல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது!

யமுனா ராஜேந்திரன்

அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் கலைஞருக்குத்தான். வெகுமக்கள் வந்துபோகும் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் இல்லை என்பது இழிவான அரசியல்.

அண்ணா அறிவாலயமோ பெரியாரது நினைவிடமோ கலைஞரது இறுதித் தங்குதலுக்கான இன்றைய உடனடித் தேர்வாகலாம். கலைஞரது நினைவிடத்தை மறுபடி மெரினாவிற்குக் கொண்டுவருவது கடினமான காரியம் ஒன்றும் இல்லை. லெனினது உடல் கிரம்ளினில் இருந்து இரண்டாம் உலகப் போரின் போது சைபீரியா சென்று மறுபடி கிரம்ளின் வந்தது. மார்க்சின் கல்லறை சென்ற நூற்றண்டின் மத்தியில்தான் இன்றிருக்கும் வடிவில் அமைந்தது. இதனது நடைமுறைச்சிக்கல் எவ்வாறானது எனினும் பார்ப்பனியம் ஒரு உணர்ச்சிகரமான தருணத்தில் திராவிட மரபுடன் இழிவான ஒரு சமரில் இறங்கியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது..

டி. அருள் எழிலன்:

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் குருமூர்த்தியின் உத்தரவுப்படி நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார்! கலைஞரை வாழ்ந்த போது மோதி வீழ்த்த முடியாதவர்கள் அவரது மரணத்தின் நிழலில் விளையாடிப்பார்க்கிறார்கள்!

மெரினாவில் நினைவில்லங்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி, பாமக பாலு, வழக்கறிஞர் துரைசாமி ஆகிய மூவரும் தனித் தனி வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.ழஇந்த வழக்குகள் அனைத்துமே ஜெயலலிதாவின் நினைவில்லம் தொடர்பான வழக்குகளே தவிற வேறு நினைவில்லங்கள் தொடர்பான வழக்குகள் அல்ல.

அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள இடம் தொடர்பான விவகாரம் அல்ல. இந்த வழக்குகள் மீது நீதிமன்றம் ஒரு தடையாணையையும் பிறப்பிக்கவில்லை. வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இப்போது வழக்கு தொடர்ந்த மூவருமே தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையில் ஆஜராகியிருக்கிறார்கள்!

ஜி. கார்ல் மார்க்ஸ்:

வெறும் இடம் குறித்ததல்ல இது. வரலாறு முழுக்க மறுக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அடையாளப்படுத்தியதே கலைஞரின் அரசியல். அவரது உடல் அந்த எதிர்ப்பின் தனல்!

#Marina4MK

தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார்.
கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.

தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.

“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.


நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.

அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.

அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.

இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.


ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.
எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.


கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.

காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

07-08-2018
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே..

எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:

காலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை.

இந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி பரம்பரை வாரிசுரிமை (சொத்துரிமையிலும்) சம உரிமைகள் இருக்கும் வகையில் இச்சட்டம் (இந்து வாரிசுரிமை – தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989) நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆணைப் போலவே பெண்ணுக்கும் சொத்துரிமை கிடைத்தது. கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இந்த உரிமை நிலை நாட்டப்பட்டது.

அதேபோல் அனைத்துத் தமிழக அரசுப் பணியிடங்க ளிலும் (இட ஒதுக்கீடுகளை உள்ளடக்கி) பெண்களுக்கு 30% ஒதுக்கப்பட்டு அமலாக்கப் பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான்.

அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.

இந்த மூன்று சட்டங்களுமே பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்குவதிலும் பெண்ணை அதிகாரப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றக்கூடியவை.

பெண்கள் இருக்கும் காலம்தோறும் நினைக்கப்படுவீர்கள் அய்யா கலைஞரே….
என்றும் நிலைத்து நீடித்திருக்கும் ஒரு நூற்றாண்டு கால வாழ்வு உங்களது….

எழுத்தாளர் குட்டி ரேவதி:

சென்ற ஆண்டுகளில் மரித்த அரசியல் தலைவர்கள் தந்த அனுபவங்கள் எல்லாம் வேறாய் இருக்க, கலைஞரின் மறைவு மதிப்புமிக்கதாகவும் முதுபெரும் தலைவருக்கான எல்லா மரியாதைகளுடனும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

போராடி, எழுதி, முழங்கி, சிறைப்பட்டு, மேடையேறி, அரியணையேறி, எதிர்த்து, முரண்பட்டு, விமர்சிக்கப்பட்டு, வீழ்ந்து, எழுந்து, வெளிச்சமாகி நீண்ட காலம் நம்மிடையே வாழ்ந்து பல களங்கள் கண்டு உதயஞாயிறொப்ப உதித்து மறைந்து எழுந்து எவருக்கும் நிகரில்லா தலைவனாகியவரை இவ்வளவு காலத்தொலைவு சளைக்காமல் ஓடிவந்தவரை வழியனுப்ப நாம் புதிய பாதைகளை வகுக்கவேண்டும்! புதிய உணர்வு கொள்ளவேண்டும்! வழக்கமான தலைவரும் அல்ல, வழக்கமான மரணமும் அன்று!

எழுத்தாளர் தீபா ஜானகிராமன்:

நம்மைத் தயார்படுத்திக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனாலும் காலமான செய்தி பார்த்ததும் கலங்கிப் போனது மனம்.

அடிமட்டத்திலிருந்து ஒருவர் அரசியல் தலைமை ஏற்க முடியும் என்பதற்கான கடைசி நம்பிக்கை அவருடன் செல்கிறது.

ஆறுதலுக்கான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. எதுவும் அவருடைய தொண்டர்களுக்கும், அபிமானிகளுக்கும் பயன்படப்போவதில்லை. அது தான் அவரின் பெருஞ்சாதனை.

வரலாறைத் தந்துவிட்டு வரலாறு மறைந்திருக்கிறது.

ஊடகவியலாளர் கார்த்திகா குமாரி:

திமுக வின் முதல் கூட்டத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு கூட்டம் விடாமல் சென்றவர் என் தாத்தா. ஒன்றிரண்டு முறை என்னையும் அழைத்து சென்றது உண்டு. அப்போது எனக்கு ஐந்து ஆறு வயதுதான் இருக்கும். ஒருமுறை அவரிடம் ‘திமுக ன்னா என்ன தாத்தா ‘ என்று கேட்டேன். அதற்கு அவர் யோசிக்காமல் சொன்ன பதில் ‘திரு மு கருணாநிதி என்பதன் சுருக்கம் தான் திமுக’.
இத்தனை வருடங்கள் கடந்தும் மனதில் நிற்கும் பதில் இது. அதற்கு அவர் ஏற்றவரும் கூட.
போய் வா உதயசூரியனே…

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன.

எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு:

“கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!

நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் –

 1. கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.

 1. மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?

 2. பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.

 3. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?

 4. இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.

 5. நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 6. தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாக இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

 7. கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.

 8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர் தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.

 9. நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

 10. நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.

 11. உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.”

விமர்சகர் ராஜன் குறை, தியாகு மீது வைத்த விமர்சனம்:

“கலைஞர் குறித்த விவாதத்தில் தோழர் தியாகு விரிந்த வரலாற்றுப் பார்வையில் சில விமர்சனங்களைக் கூறியது தவறில்லை. விமர்சனத்தை சினத்தால் எதிர்கொள்ளாமல், சினம் காத்து விமர்சனப்பார்வையை வலுப்படுத்தும் விதமாகவே உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

தோழர் தியாகு மார்க்ஸின் “மூலதனம்” நூலை மொழிபெயர்த்தவர். அரசியல் தத்துவப் பயிற்சி உள்ளவர். அவரைப் போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கும் பரிசீலனைகள் என்னவென்று பட்டியல் இட விரும்புகிறேன்.

 1. இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசங்களில், கணிசமான மக்கள் தொகை கொண்ட தேசங்கள் எதிலாவது சமத்துவம், அதிகாரப் பரவல் போன்ற அரசியல் இலட்சியங்கள் முழுமையடைந்துள்ளனவா? அதற்கான சாத்தியமாவது தெளிவாகத் தென்படுகிறதா?

 2. இடது சாரி புரட்சி நிகழ்ந்த தேசங்களில் தனிநபர் ஆளுமைக் கலாசாரம், வழிபாடு தவிர்க்கப்பட்டுள்ளதா? சீன அதிபர் ஆயுட்கால அதிபராக அறிவிக்கப்பட்டிருப்பது எதைக்குறிக்கிறது? அறிவிக்கப்படாத ஆயுட்கால அதிபராகத் தோற்றம் தரும் விளாடிமீர் புடினின் ரஷ்யாவில் நடப்பது என்ன?

 3. பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கம், அதிகாரப் பகிர்வு போன்றவற்றை சுதந்திரவாதம், பொதுவுடமை இரண்டிற்குமான இலட்சியங்கள் என்று கொண்டால் இன்று உலக நாடுகளில் இவை எப்படி உள்ளன? எங்குமே இந்த இலட்சியங்கள் எட்டப்படவில்லை என்றால் முதலீட்டிய கால அரசியலை எப்படி புரிந்துகொள்வது?

 4. கலைஞர் போன்ற ஒரு முழு இறையாண்மை பெறாத மக்கள் தொகுதியின் தலைவரின் செயல்பாடுகளை எப்படிப்பட்ட சட்டகத்தில் வைத்து விமர்சனம் செய்யவேண்டுமே? உலகில் எங்குமே எட்டப்படாத இலட்சியங்களின் அடிப்படையிலா? அல்லது வெகுஜன அரசியலுக்கு உரிய சமரசங்கள் அடங்கிய சாத்தியங்களின் அடிப்படையிலா?”

இந்நிலையில் தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கும் விமர்சனத்தின் மீது வைக்கப்பட்ட எதிர்வினைகளுக்கும் தியாகு தெரிவித்துள்ள கருத்து:

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் // பரந்து கெடுக்க உலகியற்றியான்” என்பது குறள்நெறி. மனிதர்கள் யாவரும் சரிநிகர். நான் யாரிடமும் எந்தப்பிச்சையும் கேட்டதில்லை. எனக்கு யாரும் எந்தப்பிச்சையும் இட்டதுமில்லை. தண்டனைக் குறைப்பு என்பது சட்டப்படியான உரிமை. இந்த உரிமயை ஏற்றுச் செய்வது அரசின் கடமை. நன்றிக் கடன் என்பதெல்லாம் அடிமைச் சிந்தனை. கலைஞர் சட்டப்படி எனக்குச் செய்த உதவிக்கு நன்றி. ஆனால் அதற்காக என் அரசியலை நான் மாற்றிக்கொள்ள முடியாது. கலைஞருக்கு நான் ஓர் உதவி செய்தால் அவர் தன அரசியலைக் கைவி்ட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? நான் தனிப்பட்ட யாருக்கும் நன்றிக் கடன்பட்டவன் அல்ல. என் பெற்றோருக்கே நன்றிக் கடன்பட்டவன் அல்ல என்னும் போது கலைஞருக்கு நன்றி என்ற பேரால் அவரது அரசியலை மறுத்துப் பேசக் கூடாது என்பது எப்படி நியாயம்? ஒன்று உறுதி: நான் என் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவன். இறையன்பர்கள் இறைவனுக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவர்கள் அல்லவா? அதே போலத்தான். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.”

அரசியலில் உதயநிதி; மூன்றாம் கலைஞரா? இரண்டாம் ஸ்டாலினா?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

உதயதியின் அரசியல் பிரவேசம் திறந்து வைக்கப்பட்ட ரகசியமாக வெளியே தெரியத்தொடங்குகிறது. அல்லது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அது அவ்வாறு நடக்க அனுமதிக்கப்படுகிறது. அரசியலை கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இருக்காது. அவரது சினிமா பிரவேசத்தின் போதே, “இது அவரை அரசியலுக்குக் கொண்டு வருவதன் முதல் கட்ட காய் நகர்த்தல்தான்” என்று கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

திமுக அபிமானிகள் என்று பார்த்தால், அவர்கள் இதற்குப் பழகிவிட்டார்கள். அல்லது மிக விரைவாக பழகிக்கொள்வார்கள். இப்போதே கூட அவர்களுக்கு இங்கு சிக்கலாக இருப்பது, “அரசியல் தலைமைக்கு வாரிசுகள் வரலாமா…” என்பது போன்ற விழுமிய மற்றும் சித்தாந்த தயக்கங்கள் அல்ல. அவர்களால் முட்டுக் கொடுக்க முடியாத அளவுக்கு உதயநிதி அசடாக இருக்கிறார் என்பது மட்டுமே.

இரண்டு வார்த்தைகள் திராவிடம், கொஞ்சம் போராளி வேடம், சிறிய அளவிலான முற்போக்கு எத்தனம் என்று ஓரளவுக்கு உதயநிதி ஒப்பேற்றினால் கூட “டான்… டான்… பெத்தாபுரம் பெத்தன்னாவையே அண்ணன் கொன்னுட்டாரு…” என்று இந்நேரம் கண்மணிகள் அவரை அலேக்காகத் தூக்கியிருப்பார்கள். மேலும் இன்றைய பிரதான அரசியலில் இருப்பது ஓபிஎஸ், எடப்பாடி போன்ற போலிகள் என்பதால் கூடுதலாக உதயநிதியின் வரவு ஒன்றும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப் போவதில்லை. கட்சிக்குள்ளேயும் கூட, எல்லா மட்டங்களிலும் வாரிசுகள்தான் அரசியலை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இங்கு கட்சி என்பது திமுக மட்டுமல்ல. அதிமுகவிலும் இதுதான் நிலைமை. ஆக, உதயநிதியின் அரசியல் வருகை இங்கு என்ன விதமான சலனத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதில் நாம் கவனம் செலுத்தலாம்.

முதலாவது, அதிமுக பிரதிநிதிகள் தொடர்ந்து கோமாளிகளாகவே பொதுவெளியில் சித்தரிக்கப்படுவதால் மக்கள் முன்னால் அவர்களது மற்றும் அவர்களது வாரிசுகளின் கொடூர முகம் அம்பலமாவதில்லை. உதாரணத்துக்கு ஓபிஎஸ்ஸின் வாரிசுகள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் உங்களுக்கு உண்மை ஓரளவு விளங்கும். ஒபிஎஸ்ஸை நாம் அடிமையாகவே பார்த்து பழகியிருப்பதால் அவரது ஊழல் முகம் அவ்வளவு வன்மையாக நமக்குப் பதிவதில்லை. ஆனால் திமுகவில் அதன் பிரதிநிதிகள் அறிவாளிகளாக தங்களைக் காட்டிக்கொள்வதால் – அது ஓரளவுக்கு உண்மையும் கூட – அதன் உப விளைவாக அவர்கள் கொடூரர்களாவும் வெளிப்பட நேர்ந்துவிடுகிறது.

இந்த அடிப்படை இடைவெளியைத்தான், அதாவது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் அந்த பிரதான இடைவெளியைத்தான் உதயநிதியின் அரசியல் வருகை தகர்க்கப் போகிறது. திமுகவின் தலைமைக்கு வரும் முதல் அதிமுக ஆளாக அவர் இருப்பார். மேலும் அவரை அறிவாளியாக, அரசியலாளனாக முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்து திமுக தன்னை வெளியேற்றிக்கொள்வதன் வழியாக கீழ் மட்ட அளவில் பெரிய ஆசுவாசத்தை தனது கட்சியினருக்கு வழங்கப் போகிறது. அந்த வகையில் அது அதிமுகவுக்கு மிகச் சரியான போட்டியாக களத்தில் நிற்கும். சம அளவிலான இரு சமரசவாத, ஊழல்வாதிகளின் தரப்பாக தமிழக அரசியல் தளம் சுருங்கும் நிலையை நோக்கி இது நகரும்.

இதன் அடுத்த கட்டமாக, அரசியல் நீக்கத்தின் வழி உதிரிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக திராவிட அரசுகள் சீரழியும். தமிழகம் இதுவரை முன்னெடுத்துச் சென்ற எல்லா மாண்புகளையும் வெகு வேகமாக இழக்கும். இந்த கண்ணோட்டத்தில், இப்போது நடக்கும் எடப்பாடி அரசாங்கம் இதற்கு மிகச் சரியான உதாரணம்.

வரலாறு நெடுக, மாநிலங்களை ஒடுக்குகிற நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குகிற போதெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரலை தமிழகம் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களின் நட்பு சக்திகளை விரைந்து ஒருங்கிணைத்து அதை அழுத்தமாகப் பிரயேகித்து மத்திய அரசை சமரசத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இப்போதும் கூட இந்த வலதுசாரி அரசின் மூர்க்கத்துக்கு எதிராக சில மாநிலங்கள் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன என்றால் அதற்குப் பின்னால் திமுக உருவாக்கி நிலைநிறுத்திய விழுமியங்களுக்கும் மாநில சுயாட்சி குறித்து அது சாத்தியப்படுத்திய கருத்துருவாக்கத்திற்கும் பங்கிருக்கிறது. கலைஞரின் பங்களிப்பு ஒரு உதாரணமாக அரசியல் வரலாற்றில் நிலைக்குமெனில் அது இதற்காகவே இருக்கும்.

ஆனால் இன்று என்ன நிலைமை? எல்லாவற்றையும் கொண்டு போய், மத்திய அரசின் காலடியில் வைக்கும் ஒரு லும்பன் அரசு நம்மை ஆள்கிறது. எந்த மாநிலங்கள் நமது முன்னெடுப்புகளை பிரமிப்புடன் பார்த்தனவோ, சிக்கலான நேரங்களில் நம்முடன் பெருமையாகக் கைகோர்த்தனவோ அவை நம்மை கேலி செய்கின்றன.

“தமிழ் நாட்டில் நடத்துவதைப் போன்ற ஒரு அரசியலை பிஜேபி ஆந்திராவில் நடத்த முடியாது” என்று மத்திய அரசிடம் சொல்வதன் மூலம் சந்திரபாபு நாயுடு தமிழக அரசை நோக்கிக் காறி உமிழ்கிறார். அது குறித்த எந்த வெட்கமும் இல்லாமல் மீதி இருக்கும் சொச்ச காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று தலையைக் குனிந்தபடி நடக்கிறார்கள் இங்கிருக்கும் அரசியல் பொறுக்கிகள்.

விஹெச்பியின் ஊர்வலத்துக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் எடப்பாடி. ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துவிட்டு ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிறார் ஸ்டாலின்.

இப்படி ஒரு சீரழிந்த அரசியல் நிலைமைக்கு நாம் எங்ஙனம் வந்தடைந்தோம்? அங்குதான் எம்ஜியாரின் அரசியல் இருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் இருக்கிறது. இவர்கள் இருவரின் “அரசியலில் இருந்து அரசியலை நீக்குகிற அரசியலின் பெறுமதி” இருக்கிறது. அதற்கு நிகராக கருணாநிதியின் வாரிசு அரசியல் இருக்கிறது. அந்த வாரிசு அரசியல் தனது இறுதி இலக்காக அரசியலில் இருந்து அரசியலை நீக்கும் பண்பாகத் திரிந்து சமரசத்தையும் ஆட்சியில் நிலைப்பதையும் மட்டுமே இறுதி இலக்காகக் கொள்ளும் உதிரிகளின் அமைப்பாக மாற்றமடைகிறது. உதயநிதியின் அரசியல் வருகை அறிவிப்பது இந்த அபத்தத்தின் உச்சத்தைத்தான்.

சமகால இந்திய அரசியல் வலதுசாரி அடிப்படையிலான திரட்சியை நோக்கி நகர்கிறபோது அதை எதிர்கொள்கிற, சமத்துவத்தையும் சமூக நீதியையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற தன்னெழுச்சியாக உருவாகி வருகிற அரசியல் தலைமைதான் இங்கு தேவையே தவிர, எப்போதும் நிழலில் இளைப்பாறுகிற குரோட்டன்ஸ் தலைமைகள் அல்ல. சிறிய அழுத்தத்துக்கே பணிந்துவிடும் அரசியல் தலைமைகளாக அத்தகையவை மாறும் என்பதைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கருணாநிதி இல்லாத அரசியல் வெற்றிடம் அப்பட்டமாகத் தெரிகிறது. இதை நான் ஸ்டாலினின் தோல்வியாக உருவகிக்கவில்லை. இது அவரது தோல்வியே அல்ல. ஏனெனில் “உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளின்” எல்லை என்பது ஒரு குறிப்பிட்ட அளவோடு முடிந்துவிடக்கூடியது. இப்போது நிகழ்வது அதுதான். ஸ்டாலின் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தனது திறன்களின் போதாமையை. அவரால் அவ்வளவுதான் முடியும். இந்த வெளிச்சத்தில் வைத்து உதயநிதியைக் காண்கையில் கண்ணீர் வருகிறது.

அப்படியெனில் திமுகவுக்கு வேறு என்ன மாற்று வழி இருக்கிறது என்று கேட்கலாம். இருக்கிறது. அது ஸ்டாலின் தன்னை ஆட்சியதிகாரத்தில் இருந்து வெளியே வைத்துக்கொள்ள முன்வருவதுதான்.மேலும் திராவிடக் கருத்தியலை, அது உருவாக்கிய விழுமியங்களை, அது செயல்படுத்திக் காட்டிய சமூக நீதிக் கோட்பாடுகளை அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமெனில், அதன் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக இருக்கும் சூழலில், இதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. இதன் பொருள் அவர் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதல்ல. திமுகவை வழி நடத்தும் திறனுள்ள தலைமையை கட்சியின் உள்ளேயிருந்து விரைவாகக் கண்டேடுப்பதே இன்றைய தேவை. அவர்களை வழி நடத்துபவராக ஸ்டாலின் தனது அரசியலைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

இது ஏன் அவசியம் என்றால், கருணாநிதி போன்றதொரு தீவிர செயல்திறனுள்ள அரசியல்வாதி தனது மகனை வாரிசாக நிலைநிறுத்த எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு. கருணாநிதிகள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உருவாவார்கள். அவரால் கூட ஒரு திறன்மிகு வாரிசை உருவாக்கமுடியாதபோது ஸ்டாலினால் எங்ஙனம் அது இயலும். இது திமுகவின் கவலை மாத்திரம் அல்ல. தமிழகத்தின் கவலை. அதுவே அந்த இயக்கத்தின் பெருமை. இவ்வாறு செய்வதன் வழியாக கருணாநிதி செய்த பெரும்பிழையைச் சீரமைக்கும் செயலைச் செய்தவராகக் கூட ஸ்டாலின் வரலாற்றில் அறியப்படும் சாத்தியங்கள் உருவாகும்.

இறுதியாக, அத்தகைய திறனுள்ள மாற்றுத் தலைவர்கள் திமுகவில் யார் இருக்கிறார்கள் என்று கேட்கலாம். இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால், நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆ. ராசாவின் பெயரைச் சொல்வேன். திமுகவின் தலைமைக்கு ஒரு தலித் வருவதை விட பெரும்பேறு என்ன இருக்கமுடியும். பெரியாரின் சிலைகளில் இருந்து அதன் தலை அப்புறப்படுத்தப்படும் ஒரு காலத்தில் அது விடுப்பது மகத்தான செய்தியாக இருக்க முடியும்.

இந்த திசைவழியில் சிந்திப்பதற்கு ஒரு சமூகமாக, கட்சி அபிமானிகளாக, முதலில் நாம் நமது தயக்கங்களில் இருந்து வெளியேறவேண்டும். புதிய உரையாடல்களைத் துவக்கவேண்டும். அத்தகைய உரையாடல்களில் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் ஒரு கூறாக இருக்கலாம். ஆனால், அது மட்டும் தான் உங்களது தயக்கத்துக் காரணமா என்று நீங்கள் மனசாட்சியுடன் பரிசீலிக்கும்போது நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும். வரலாறு என்பது பிழைகளுடன் கூடியதுதான். பிழைகள் மாத்திரமே அல்ல!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

 

திராவிடம் 2.0!

பிரகாஷ் ஜே.பி.

திராவிட நாடு குறித்த விவாதத்துக்கு மிகப்பெரிய நன்றி… இதினால், இதுவரை, “திராவிடத்தால் வீழ்ந்தோம்… கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை…” என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த கும்பல்களே, இப்போது, “தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்.. ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்… அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது” என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..

அதேபோல, திராவிட நாடு விவாதத்தால், தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கீழ்கண்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளது..

 1. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், மத்திய இந்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..

 2. இந்திய அரசுக்கு 33% வரியை, 25% GDPயை வழங்கும் ஐந்து தென் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்குவது வெறும் 18% நிதி மட்டும் தான்..

 3. உத்திர பிரதேசம் ஒரு ரூபாயை வரியாக கொடுத்து, 1.79 ரூபாயை திரும்ப பெறுகிறது.. ஆனால், தமிழ் நாடோ, ஒரு ரூபாயை வரியாக மத்திய அரசுக்கு கொடுத்து, வெறும் 0.40 பைசாவை திரும்ப பெறுகிறது…

 4. தென்மாநிலங்கள், மத்திய பிஜேபி அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.. நிதி ஒதுக்கீடுகளும் இல்லை.. மத்திய அரசின் புதிய திட்டங்களும் இல்லை.. ஏற்கனேவே இருந்த திட்டங்களும், நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது..

 5. தமிழ்நாட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா — இந்த தென் மாநிலங்கள்தான் இந்திய மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன.. தென்மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளும், தனியார் நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசால் திருப்பிவிடப்படுகிறது….

 6. அனைத்து தரப்பும் பலன் பெரும், ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட வளர்ச்சி, இன்குளுசிவ் வளர்ச்சி தென் மாநிலங்களில் உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் இருந்த தமிழ் நாடு, இப்போது இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் முதல் மூன்று இடங்களில் உள்ளது.. தமிழ் நாட்டின் தனிநபர் வருவாய் 1,40,000 ரூபாய்.. ஆனால், உத்திரபிரதேசத்தின் தனிநபர் வருவாய் 43,000 ரூபாய் மட்டுமே..

 7. தென் மாநிலங்களின் வரியில், அவர்களுடைய மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த பெரிய நிதியையும் ஒதுக்காமல், அவர்களுடைய வரிகளை கொண்டு, ஹிந்தி மொழிக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்குகிறது..

 8. தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில், திட்டமிட்டு, உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநில இளைஞர்கள், பல்வேறு முறைகேடான வழிகளில் ஆக்கிரமிகிறார்கள்.. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அங்கெல்லாம், வட மாநில இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..

 9. சமூக சீர்திருத்தவாதிகளால், சாதி சமய வேறுபாடுகள் குறைந்து, தென் மாநிலங்கள் மேம்பட்டு, தங்களது வளர்ச்சி திட்டங்களால், ஹிந்துத்துவா மூடநம்பிக்கைகளால் பீடிக்கபட்டுள்ள வட மாநிலங்களை விட பல மடங்கு சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார & மருத்துவ குறியீடுகளில் முன்னேறியுள்ளன..

 10. 1920-40 கள் வரை ஆந்திரா (பகுதி), கர்நாடகா (பகுதி), தமிழ் நாடு உள்ளடங்கிய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்த செயல்பாடுகளாலும், இடஒதுக்கீடு போன்ற திட்டங்களாலும், தந்தை பெரியார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளாலும், இங்கு அதிகமாக செயல்பட்ட கிருஸ்துவ கல்வி & மருத்துவ நிறுவனங்களாலும், தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட, மேம்பட்ட சமூக கட்டமைப்பும் குறைவான சாதி மத வெறுப்புணர்வும், கல்வி & சுகாதார முக்கியத்துவமும் கொண்டுள்ளன.. இவற்றால், இம்மாநிலங்களின் வளர்ச்சி துரிதமாக நடந்தேறியது. ஆனால், வட மாநில நிலைமை தலைகீழ்.. சமூக சீர்திருத்தம் பெரியளவில் இல்லை.. மிக அதிகமான சாதி மத வெறுப்புணர்வு.. RSS ஹிந்துத்துவா போன்ற மக்களை பிளவுபடுத்தும் சக்திகளின் ஆதிக்கம்… சரியாக நடைமுறைப்படாத இடஒதுக்கீடு முறைகள்.. ஒருசில முன்னேறிய சாதிகளே அனைத்து கல்வி & வேலைவாய்ப்புகளை ஆக்கிரமித்ததுகொண்டு, OBC, SC, ST பிரிவினர்களுக்கு அவர்களின் உரிமைகளை மறுப்பது.. இவைகளால், அம்மாநிலங்களில் வளர்ச்சி பெரியளவில், சம அளவில் இல்லை..

ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, ஹிந்துத்துவா RSS பிஜேபி கும்பல், ஏதோ பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் வளர்ச்சியடைந்து முன்னேறிவிட்டதை போலவும், தமிழகம் போன்ற பின்தங்கிய மாநிலங்களும் அவ்வாறு வளர்ச்சியடைய, “கழகங்கள் இல்லாமல்” பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் என பொய் பிரச்சாரம் செய்துவருகிறது.

பிரகாஷ் ஜே.பி., அரசியல் செயல்பாட்டாளர்.

 

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….

ஜி. கார்ல் மார்க்ஸ்

karl marks
ஜி. கார்ல் மார்க்ஸ்

இந்த ஆட்சி கலையாது, அவ்வாறு கலைக்க முயலும் தினகரன் போன்றவர்களைக் கைது செய்து உள்ளே போடுவார்கள். இதைக் கலைப்பதற்காகவா மோடி இத்தனை முறை ஓபிஎஸ் வந்து சந்திப்பதற்கு வாய்ப்பளித்தார், இந்த இணைப்பை சாத்தியப்படுத்தினார்?.

முழு ஆட்சிக்காலத்தையும் ஆள்வதற்கு அனுமதித்து அதிமுக கூட்டணியுடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதும் பிறகு அதிமுகவை மொத்தமாக விழுங்குவதும்தான் பிஜேபியின் திட்டம் என்று சீமான் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். இந்த தியரியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுக்கவும் உண்மையல்ல. ஏன் என்று பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பிஜேபி கடைபிடிக்கிற அணுகுமுறையை ஆராய்வோம். முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அது அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகம் அமைக்கிறது என்றால், பிஜேபியின் செயல்திட்டம் இப்படியா இருக்கும்? அதன் செயல்பாடுகள் எதிலாவது, அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தேவையான மக்கள் நல நடவடிக்கைகளின் சுவடுகள் இருக்கிறதா? நீட் விவகாரம் தொடங்கி Hydrocarbon corridor அறிவிப்புகள் வரை எல்லாவற்றிலுமே, அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளவற்றில் இத்தனை மூர்க்கமாக நடந்துகொள்ள அது விழையுமா? தமிழக மக்களையோ அதன் உணர்வுகளையோ மயிரளவாவது மதித்த பண்பு அதில் தொனித்ததா? இல்லையே ஏன்? இது ஓட்டரசியல் தளத்தில் அவர்களுக்கு பின்னடைவைத்தானே ஏற்படுத்தும்.

ஆக அரசியல் ரீதியாக பிஜேபி பின்னடைவை நோக்கிதான் நடந்து கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி வருகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதே. அரசியல் ரீதியாக அது தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் “அரசியல் ரீதியாகக் காலூன்றுவது” என்றால் என்ன என்பதை அதன் அடிப்படை அர்த்தத்துடன் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பிஜேபி கையாளும் செயல்திட்டம் என்பது மக்களுடன் உரையாடலின் வழியாக உட்புகுவது அல்ல. மாறாக இங்கு நிலைபெற்றிருக்கிற அரசியலை அதாவது திராவிட அரசியலை அழித்தொழிப்பதன் வழியாக அரசியல் வெற்றிடத்தை உருவாக்குவதும் அதன் வளர்ச்சிப்போக்கில் அந்த வெற்றிடம் வலதுசாரித் தன்மையாக கனிவதை உறுதிப்படுத்துவதுமே.

மற்ற எந்த காலத்தையும் விட தமிழகம் மிகப்பெரிய வாய்ப்பை இப்போது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கான ஒளிக்கீற்று கருணாநிதியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. திராவிட இயக்க அரசியலின் வெற்றிகளுக்கும் அது சாதித்தவைகளுக்கும் கருணாநிதிக்கு எத்தகைய பங்களிப்பு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்களிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சீரழிவிலும் அவருக்கு இருக்கிறது. அதைச் சென்ற பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அவரிடம் செய்து காண்பித்தது. எந்த மிசாவிற்கு எதிரான நெஞ்சை நிமிர்த்தி நின்றாரோ, எந்த எமர்ஜென்சியின் போது அடங்காமல் திரிந்தாரோ அதே கருணாநிதியை தனது காலடியில் கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ்.

அது காங்கிரசோ பிஜேபியோ அவர்கள் திராவிட இயக்கங்களை சிந்தாந்த ரீதியிலான அச்சுறுத்தும் இயக்கங்களாகத்தான் பார்த்தார்கள். ஏனெனில் வரலாற்றில், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு சமூகத் தளத்தில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு. சமூக சீர்திருத்தம், சமத்துவம், எளியவர்களின் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை தேர்தல் அரசியலுடன் இணைத்ததில் அவை அடைந்திருந்த வெற்றி அத்தகையது. அதுதான், காங்கிரசை தமிழகத்தில் இருந்து முழுக்கவும் அப்புறப்படுத்தியது. பிஜேபி என்னும் சொல்லையே தமிழகத்தில் இல்லாமலாக்கி வைத்திருந்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசும் யாரையும் மனிதகுல விரோதிகளாகப் பார்க்கும் பண்பை அவை வளர்த்தெடுத்து அரசியல் தளத்தில் நிறுவியிருந்தன. இவையெல்லாம் நேர்மறை அம்சங்கள்.

இதன் மற்றொரு பக்கத்தில், எல்லா சாதனைகளையும் தனிமனித சாதனைகளாக முன்வைக்கிற அரசியல்வாத அபத்தத்தை கருணாநிதி செய்தார். மேலும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாரிசு அரசியல்’ என்னும் பண்பு திராவிட இயக்கங்களின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான சுய சீரழிவை ஊக்கப்படுத்தியது. அது இயக்கத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நோயைப் போல வளர்ந்தது. ஆக அது இரண்டு வகையில் இயக்கப் பண்பை அழித்தது.

ஒன்று, இயக்கம் என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்து தனி மனிதத் துதி, கொள்கையற்ற குழு அரசியல் என்பதாகத் திரியச் செய்தது. இரண்டாவது, சமரசங்களுக்கு எதிராகப் பேசும் தார்மீகங்களை இழந்ததன் வழியாக காத்திரமான புதிய தலைவர்கள் உருவாகும் வழியை அடைத்துவிட்டது.

மேலும் கடந்த பதினைந்தாண்டுகளில் அரசியல் குறித்த புரிதலுக்கு வந்திருந்த இளைஞர் திரளின் முன்னால் கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது. எழுபதுகளில் எது இளைஞர்களின் கோஷமாக இருந்ததோ அதன் முன்னால் இன்றைய தலைமுறை வெட்கித் தலை குனிய நேர்ந்தது.

இதன் மற்றொரு பக்கத்தில் எம்ஜியாரின் அரசியல் என்பது ‘அரசியல் சொரனையை இல்லாமலாக்குவதன் வழியாக மக்களைத் திரட்டுவது’ என்கிற ஆதார அரசியல் அடிப்படையைக் கொண்டதொரு லும்பன் அமைப்புமுறை. அடித்தட்டு மக்கள் பங்கேற்பு, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியது போன்ற ஜிகினா வார்த்தைகளைப் போட்டு அவரது அரசியலை எவ்வளவு முட்டுக்கொடுத்து நிப்பாட்டினாலும், அதிமுக என்னும் கோபுரம் அடிமைத்தனம் என்னும் அஸ்திவாரத்தில் மட்டுமே நிற்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் பொன்மனச்செம்மல்.

அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உள்ளடக்கி அரசியல் செய்ய வேண்டிய நெருக்கடியாவது கருணாநிதிக்கு இருந்தது. எம்ஜியாருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதன் அடுத்த கட்டம் ஜெயலலிதா. எம்ஜியாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த தத்துவார்த்தப் பின்புலம் பிளஸ் பார்ப்பன மேட்டிமைத்தனமும் சேர்ந்துகொள்ள புதுவித அரசியல் ஃபார்முலா ஒன்று உருவானது. ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாம் அடங்கிப்போனது.

ஜெயலலிதாவுக்கு, “தனக்குப் பிந்தைய அதிமுகவின் எதிர்காலம் என்ன..?” என்பது குறித்த எத்தகைய மதிப்பீடுகள் இருந்தன என்பது அடிப்படையான ஒரு அரசியல் கேள்வி. அவருக்குத் தெரியாதா, தான் உருவாக்கி உலவவிட்டிருப்பது முழுக்கவும் பொறுக்கிகளையும் திருடர்களையும்தான் என்று. தெரியும். அது மட்டுமல்ல, தமக்கு தமது கட்சி நிர்வாகிகள் மீது என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்புதான் அவர்களுக்கும் தன் மீதும் இருக்கும் என்றும் அவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இங்கு இப்போது நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் எது குறித்தும் அதிர்ச்சியே இருக்காது. ஏனெனில் அதனுள்ளேதான் அவரும் இருந்தார். முறையாக கணக்கு வைத்து ஒவ்வொரு அமைச்சரிடம் பணத்தை வாங்கிக் குவித்தது, கணக்கில் ஏமாற்றிய அமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்து மிரட்டியது என்று அவரது செயல்கள் அவர் மீது சுமத்தப்படும் புனித வரையறைகளுக்கு சற்றும் தொடர்பில்லாதவை.

இன்று நம்முன்னால் வளர்ந்து நிற்கிற எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆபாச ஆகிருதிகளின் ஆதித்தாய் ஜெயலலிதா. இங்கு தகர்த்து எறியப்பட வேண்டியது அவர் மீதான புனித பிம்பம். அவரை அரசியல் ரீதியாக கறாரான விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் யாரும் செய்யவேண்டியது. அவர் இந்நேரம் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, அது நடந்திருக்காது என்பது போன்ற சொல்லாடல்கள் எல்லாம் வெற்று உளறல்கள் அல்லாமல் வேறில்லை. நாளையே மோடி இல்லை என்றால் பிஜேபி சிதைந்துவிடுமா? இல்லையல்லவா? அப்படி ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதும் நிலைக்கச் செய்வதும்தானே தலைமைத்துவம்.

இந்த விஷயத்தில் திமுகவும் இன்னொரு அதிமுகதான். இல்லை… இல்லை… இங்குதான் எங்கள் ஸ்டாலின் இருக்கிறாரே என்று உடன்பிறப்புகள் நினைக்கலாம். ஸ்டாலினுக்குப் பிறகு யார்? இந்த கேள்விக்கான பதிலை நேர்மையாகப் பரிசீலித்து பதில் சொல்ல முயலுங்கள். திமுகவின் எதிர்காலம் அடுத்து யாரை நம்பி இருக்கிறது? உதயநிதியையா? இல்லையா? வேறு யார்…? உங்களால் கைகாட்ட முடிந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே…? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது பிஜேபி கடைபிடிக்கும் மூர்க்கத்திற்கான பதில்.

ஒரு நாற்பதாண்டு காலம் பட்டி தொட்டியெங்கும் நடந்து நடந்து பேசிப் பேசி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் சுயமோகத்தின் பலிபீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நமது சாய்வுகளின் மீதான தீவிர மறுபரிசீலனை என்பது நமது முன்னால் தேர்வு அல்ல. தப்பித்துக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால் எதார்த்தம் மிகக் கசப்பானதாக இருக்கிறது. அச்சமூட்டுவதாக இருக்கிறது.

நுணுக்கி நுணுக்கி வார்த்தைகளைத் தேர்ந்து தேர்ந்து மோடியை விமர்சிக்கிறார் ஸ்டாலின். அபத்தமாக இருக்கிறது. நீங்கள் ஓட்டு ஜெயலலிதாவுக்குதானே போட்டீர்கள், இப்போது வந்து ஸ்டாலின் ஏன் நீட்டுக்காகப் போராடவில்லை என்று கேட்காதீர்கள் என்று கொக்கரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். சரிதான். அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தெருவில் அலையட்டும். உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்காக என்ன நொட்டினீர்கள் என்று 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வைத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது கடமை இல்லையா.

அதிமுகவின் தற்போதையை நிலைமையில் இருந்து திமுக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்த படிப்பினைகள் மட்டுமே திமுகவைக் காப்பாற்றும். அத்தகைய ஒரு திமுக மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்

வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய எழுதப்பட்டு வருகின்றன. தி இந்துவின் செய்தியாக்க முறை கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதில் நான் முழுக்க உடன் படுகிறேன். ஆனால் இதில் தி இந்து ஏட்டை மட்டும் விமர்சிப்பது ஒரு பகுதி உண்மை என்றே சொல்ல வேண்டும்.செய்தி எழுதுபவர், எடிட்டர், சப் எடிட்டர் வரை இதில் பொறுப்பிருக்கிறது எனினும் அதைப் பற்றி யாரும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை.குறிப்பாக செய்தி எழுதியவர் பற்றி.அதையும் சேர்த்து பார்க்கும் போது தான் தமிழ் இதழியல் உலகில் நடந்திருக்கும் பிற புலப்படாத பக்கங்களும் தெரிய வரும்.

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.

 

தி இந்து பிராமணர்களால் நடத்தப்படும் நிறுவனம். இந்நிலையில் இத்தகு செய்திகளுக்கு அது ஏன் சம்மதிக்க வேண்டும்? தெரியாமல் நடந்து விட்ட பிழை, செய்தியாளர்களின் அனுபவம், நம்பகத்தன்மை போன்றவை மட்டுமே இதற்கான காரணங்களில்லை. வேறு சில விசயங்களும் இதில் செயலாற்றுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும், பொதுவாக அச்சு ஊடகங்கள் பலவும் ‘பாரம்பரியம்’ காரணமாக பிராமண வகுப்பினர் வசமே இருந்து வருகின்றன. அது தொடர்பான விமர்சனங்கள் இங்குள்ளன.அதே வேளையில் அதில் மாற்றங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விமர்சனங்களில் இப்புதிய மாற்றங்கள் கணக்கெடுக்கப்படுவதில்லை என்பது தான் இப்பதிவை எழுதக் காரணம்.

கடந்த சில பத்தாண்டுகளாக நடந்து வந்திருக்கும் சமூக அரசியல் அதிகார மாற்றங்களின் காரணமாக பிராமணரல்லாத தொகுப்பில் அதிலும் பெரும்பான்மை எண்ணிக்கை சாதிகள் பலவும் மையத்திற்கு வந்துள்ளன. அதன்படி ஊடகங்களிலும் எண்ணிக்கைக்கு அதிகமாகவே சேர்ந்துள்ளனர். (இங்கு ‘சமூக நீதி ‘ பற்றிய பேச்சு பிராமணர்கள் அதிகமாய் இருந்தால் மட்டுமே எழும் ) இவ்வாறு வாசகர் மற்றும் பணியாற்றுவோர் சார்ந்து உருவாகியிருக்கும் பிராமணரல்லாதோர் பெரும்பான்மை என்ற எதார்த்தத்தை இப்பாராம்பரிய நிறுவனங்கள் புரிந்து கொண்டிருக்கின்றன.

வாஞ்சிநாதன்

இப் பின்னணியில் தான் குறிப்பிட்ட பெரும்பான்மை சாதிகளின் கதைகள், அடையாளங்கள் ,வரலாறு போன்றவை இந்தச் சாதிகளால் மையத்திற்கு கொணப்படுகின்றன. நிறுவனங்களும் இதற்கு வழிவிட்டு தங்களை வணிக ரீதியாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் நடப்பது பிராமணர் பிராமணரல்லாதார் கூட்டு அல்லது சொல்லப்படாத புரிந்துணர்வு .இதற்கான மற்றொரு உதாரணத்தையும் இங்கு சொல்லலாம். கடந்த 40ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதிகமாய் விதந்தோதப்பட்டு வரும் பிம்பமாய் தேவர் இருக்கிறார். அவர் பெயர் சொல்லி புகழ்ந்து பாடும் பாடல்கள் பத்துக்கும் மேலிருக்கின்றன. இவையெல்லாம் எவ்வாறு நடந்தன? இப்போக்கை ஆரம்பித்து – தக்கவைத்து வருவது யார், எப்போதிருந்து? இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் தேவருக்கான பிம்பங்களை காப்பது தான் தேவர் சாதித் தொகுப்பிற்கு செய்யும் தொண்டாகக் கருதும் சிலர் கம்யூனிஸ்டுகள் பெயரில் வலம் வருவதையும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது. இச்செய்தி அவ் வகையிலான விளைவுகளில் ஒன்றே.

இதையெல்லாம் சேர்த்துப்பார்க்கும் போது தான் வெகுஜன நாளேடு ஒன்றில் இத்தகைய வரலாறு எழுதப்படுவதையும் அதை அந்நிறுவனங்கள் அனுமதிக்கிற கராணத்தையும் புரிந்து கொள்ள முடியும். தமிழ் ஊடகங்களில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுடைய பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சு ஏன் இங்கில்லை? குறிப்பிட்ட சாதிகளே இவ்வாறுதான் என்பது இதன் பொருளில்லை.இவர்களில் பலர் தலித் பிச்சினை உள்ளிட்ட சமூக சிக்கல்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் அய்யமில்லை. ஆனால் எல்லாவற்றை பற்றியும் நாங்களே பேசுவோம் என்கிற அதிகாரம் அதில் தொக்கி நிற்பதை பார்க்கிறோம். இந்த விதத்தில் தி இந்து மட்டுமல்ல விகடன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் இணைத்து பார்க்கப்பட வேண்டும்.

எனவே இப்பிரச்சினையில் தி இந்துவை மட்டுமல்ல அதன் செய்தியாக்க குழு, எழுதியவரின் அரசியல் என்றும் நீட்டித்து பார்க்கும் போது தான் சினிமா உள்ளிட்ட தமிழ் ஊடகத் துறையில் நெடுங்காலமாகநிலவி வரும்பிரதிநிதித்துவ ஏகபோகத்தையும் அதன்மூலம் கட்டமைக்கப்பட்டு வரும் கருத்தியல் ஏகபோகத்திற்கான காரணத்தினையும் அறிய முடியும். பாண்டே பற்றி பேச வரும் போது பாண்டேவை பேசிவிட்டு அவர் ஏன் தந்திடிவியில் அனுமதிக்கப்படுகிறார் என்றஅரசியலை பேசாது விடுவதும் இப்போது வாஞ்சி-தேவர் செய்தி பற்றி பேச வரும் போது தி இந்து பற்றி பேசிவிட்டு எழுதியவரை நோக்காமல் இருப்பதும் ஒரு அரசியல்தான். இரண்டு தரப்பின் அரசியலையும் இணைத்து பேசுவதே இன்றைய தேவை.

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்; ஆய்வாளர்.

 

இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?

மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் வேண்டும். இந்திய சுதந்திரபோராட்ட காலம் பிற இந்திய மொழிகளில் பிரதிபலிக்கப்பட்ட அளவு தமிழ் புனைகதையில் ஏன் பிரதிபலிக்கப்படவில்லை? சுதந்திரபோராட்டத்தைவிடுங்கள். திராவிட இயக்க எழுச்சி, இந்தி எதிர்ப்பு போர், சமூக நீதிக்கான போராட்டங்கள் எத்தனை இலட்சம் தமிழக்குடும்பங்களை நேரடியாக பாதித்திருக்கின்றன என்பதை அறிவோம். அதன் சமூக பண்பாட்டு விளைவுகள் மிக ஆழமானவை. ஆனால் நவீன எழுத்தாளர்கள் இந்த இயக்கத்தை ஏன் முற்றாக புறக்கணித்தார்கள்? நவீன இலக்கியப் போக்குகளை முன்னெடுத்தவர்கள் தமிழகத்தில் நடந்த சமூம் மாற்றங்களை ஏன் புறக்கணித்தார்கள்? ஜே.ஜே. சில குறிப்புகளை போன்ற தமிழ் பண்பாட்டின்மீது கடும் உரையாடலை ஏற்படுத்திய பிரதிகள்கூட தேசிய திராவிட இயக்கங்களின் தாக்கங்களை ஏன் பிரதிபலிக்கவில்லை? நவீன இலக்கியப்போக்குகளை முன்னெடுத்தவர்கள் பிராமணர்களாக இருந்ததால் அவர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் ஒரு சமூக வரலாற்றையேமுற்றாக ஒதுக்குவதற்கு காரணமாக இருந்ததா? பிராமணரல்லாத எழுத்தாளர்களும்கூட இந்த இலக்கிய சிந்தனைப் பள்ளிக்கு ஆட்பட்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்களா? இடது சாரி எழுத்துக்கள், வானம்பாடிகள், தலித் எழுத்துபோக்குகள் அழகியல் சார்ந்த இலக்கியப் பள்ளியால் ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் சமூக இயக்கங்களுக்கும் உயர்சாதி நவீன இலக்கிய மரபினர்க்கும் இடையில் நிகழ்ந்த முரண்பாடுகளால்தானா?

தமிழ்மகன் போன்ற ஓரிரு எழுத்தாளர்கள்தவிர யாரும் ஏன் திராவிட இயக்கத்தின் கொந்தளிப்பு மிக்க காலங்களை பதிவு செய்ய முன்வரவில்லை? திராவிட இயக்க சார்புள்ள எழுத்தாளர்கள்கூட எழுதவில்லை. இந்தியா முழுக்க இடது சாரிகள் அவர்களது போராட்ட வரலாறுகளை இலக்கியமாக்கியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் திராவிட சார்புள்ள எழுத்தாளர்கள் ஏன் தங்கள் வரலாற்றை இலக்கிய்மாக்கவில்லை? இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எடுத்துக்கொண்டால் அதை ஒரு கும்பல் வன்முறைக் காட்சியாகக் காணும் திலிப்குமாரின் ஒரு சிறுகதை தவிரவேறு எந்தப் பதிவும் நினைவுக்கு வரவில்லை. தமிழ் புனைகதையாளர்களுக்கும் அவர்களின் காலத்திற்கு இடையிலான பெரும் இடைவெளிகள் பற்றிய பல சிந்தனைகளை இக்கட்டுரை எழுப்புகிறது. தமிழ் எழுத்தாளர்கள் – திராவிட இயக்கத்தினர் என இரு தரப்பினருமே இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ்க்விதை சமகால சமூக வரலாற்றுப்போக்குகளை பிரதிபலித்த அளவுநவீன புனைவிலக்கியம் பிரதிபலிக்கவில்லை என்ற சாருவின் மதிப்பீடும் கவனத்திற்கு உரியது

 மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்.

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

1

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்

அண்மைக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள், கேலிச் சித்திரமாக மக்கள் முன்னே தோன்றியுள்ளது. ஜெ மறைவிற்கு பின்பாக தமிழக அரசியல் அதிகார மையத்தை கைப்பற்றுவது என்ற அச்சை சுற்றி நடைபெறுகிற இந்த சம்பவத் தொகுப்புக்கள்,சின்னத்திரை நாடகங்களையும் பெரியத்திரை சினிமாக்களையும் சில நேரத்தில் பின்னுக்கு தள்ளுகிறது.அம்மாவிற்கு பின்னான அரசியல் அதிகார கைப்பற்றல் நாடகத்தில், சின்னம்மா, ஒ பி எஸ், ஈ பி எஸ், டி டி வி, ஸ்டாலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், மோடி அமித் சாக்கள் மறைமுக கதாபாத்திரங்களிலும் திறம்படவே நடித்தி வருகின்றனர். இடையே நீதிமன்ற தீர்ப்பு, சிறை, சபதம், தியானம், சிறை மீண்டல், தீர்மானம், பொதுக்கூட்டம் என திரைக்கதையில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

தனது சொந்த வரலாற்றை உருவாக்குவதற்காக சின்னம்மாவும் ,ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும்,டி டி வியும்,ஸ்டாலினுன் யதார்த்த சூழலுடன் மல்லுக்கு நிற்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உணர்ச்சிகரமான வேகத்தில் உள்ளவர்கள், இறுதித் தீர்ப்பிற்காக முன்பு ஆளுநர் மாளிகையில்,பின்பு தேர்தல் ஆணையதில், நீதிமன்றத்தில், பிரதமர் அலுவலகத்தில் கோவில் பூசாரியின் அருள்வாக்கிற்கு காத்து நிற்கிற பக்தர்கள் போல நிற்கிறார்கள்.

அதிகாரத்திற்கான இந்த போட்டியில்; வெற்றியடைவதற்காக நடத்துகிற சாதிய, பணபல அரசியல் சதுரங்க காய் நகர்த்தலால் இவர்கள் யாவரும் தங்களது எதிராளியை மட்டும் வீழ்த்துவதில்லை. பதவி அதிகாரத்திற்கான தங்களின் இழிவான செயல்களின் வழி நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் அதன் உண்மை நடத்தைகளையும், தங்களுக்கு அறியாமலேயே துகில் உரிக்கிறார்கள். நாடகத் தன்மை வாய்ந்த காட்சிகளில், உண்மையற்ற வெற்றுரைகளில் உணர்ச்சியற்ற நாடகங்களில் முதலாளித்துவ ஜனநாயக முகமுடிகள் கழண்டு விழுகின்றன.

நிகழ்கால அதிகார மையத்திற்கான இப்போட்டியில், கடந்த கால அதிகார மையங்களின் கல்லறை ஆன்மாக்கள் துணைக்கழைக்கப்படுகிறது. எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும், ஒட்டு வங்கி அரசியலுக்காக பேனர்களிலும் ஒளி விளக்குகளிலும் உயிர் கொடுக்கப்படுகிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒட்டு வங்கி அரசியலுக்காக செத்துப்போனவர்களின் ஆவிகளையும் பெயர்களையும்முழக்கங்களையும் கடந்த காலத்தில் இருந்து கடன் பெறப்படுகிறது. புரட்சித் தலைவி அம்மா, டாக்டர் இதய தெய்வம் எம் ஜி ஆர், அம்மாவின் ஆணைக்கினைங்க என்ற சொற்களின் வழி, செத்துப்போனவர்களின் அனுமதியுடன் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மக்கள் சொத்தை சூறையாடி வருகின்றனர். டாஸ்மாக்கை திறக்கிறார்கள், டெண்டர்களில் கொள்ளை அடிக்கின்றார்கள், இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பதவிக்காக மத்திய அரசின் அடிமையாக வெக்கமின்றி வலம்வருகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், கூட்டங்களில் உணர்ச்சிகள் அற்ற உண்மைகளையும் உண்மைகள் அற்ற உணர்ச்சிகளையும் மிகத் தீவிரமாக பரிமாறிக் கொள்கின்றனர். சின்னம்மா, டி டி வி பின்னால் நின்ற ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும் அதிகார பேரத்திற்காக தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்கின்றனர். பேரம் படிவது போல தெரிவதால் ஈ பி எஸ் ஆட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்துள்ளார். அப்பல்லோவில் நாட்கணக்கில் இருந்தவர், அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என பேரத்திற்காக அடம் பிடிக்கிறார். ஒரு கிணற்றை ஊருக்கு கொடுக்க வக்கற்றவர் “நீதி” வேண்டி தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அநேகமாக ஒரு அமைச்சர் பதவியோ கட்சிப் பதவியோ இந்த தர்ம யுத்தத்தை முடித்து வைக்கும் என நினைக்கிறன்!

துணைப் பொதுச் செயலாளர் நியமனத்தின்போதும், முதல்வராக பதவி ஏற்கும் போதும் டிடிவியிடமும் சின்னம்மாவிடமும் பவ்யம் காட்டியவர், ஆர் கே நகர்த்த தேர்தலின் போது “கவாஸ்கர்” தோப்பி போட்டு டி.டி.விக்கு வாக்கு சேகரித்தவர், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு சிறை சென்று மீள்வதற்குள் தனி அணியை உருவாக்குகிறார். சிறை மீண்டவரோ, காட்சியும் கோலமும் மாறியது கண்டு கொதிப்படைந்த தூது விட, இறுதியில் ஒருவக்கொருவர் மாறி மாறி 420 பட்டங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி. அரசியல் அதிகார போட்டியில் வெக்கம் கூச்சத்திற்கு இடமில்லை என அமைதிப்படை அமாவாசையின் நிஜ பாத்திரமாக டிடிவி அலைந்து திரிகிறார்.

டிடிவின் அருளால் நகரப் பொறுப்பு முதல் அமைச்சர் பொறுப்பு வரை கிடைக்கும் என்ற பதவி அதிகார ஆசையில் டிடிவின் பொதுக் கூடத்திற்கு ஆட்களை கூட்டுவதற்கு கோடிக் கணக்கில் முதலீடு போடப்படுக்கிறது. இந்த முதலீடுகள் அனைத்தும் வீண் போகாது, இவை யாவையும் வட்டியும் முதலுமாக ஒரு டெண்டரில் எடுத்து விடலாம் என உடன் பிறப்புக்கள் டிடிவின் பேச்சுக்கு விசில் அடித்து மலர் தூவுகின்றனர்.

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகமானது; தனி நபர்களின் சாமர்த்தியமான அசட்டுத் தனங்களாலும், தான்தோன்றித்தன நடத்தைகளாலும் தனது சொந்த முரண் இயல்புகளால் அழிக்கப்பட்டுவருகிறது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகிறது!

2

“பொது மக்கள்” ஆட்டத்தின் பார்வையாளர்களா? ஆட்டத்தை மாற்றியமைக்கப் போகிறவர்களா?

மக்கள் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்துகிற இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் யாவும் பிரேக்கின் செய்திகளாக,நேர்பட பேசுவாக, காலத்தில் குரலாக உடனுக்குடன் சுடச் சுட விவாதத்திற்கு வருகின்றன. பரபரப்பு உச்சமடைந்து தணிகிற வரையில் பிரேக்கின் செய்திகளுக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. சில நாட்களுக்கு மக்கள் பிக் பாஸிடம் இருந்து சற்றே விடுபெற்று தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்கின்றனர்.

சட்டமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த இம்மக்கள், கோட்டை சர்வாதிகார ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஏதேனும் அதிசயம் நிகழாதா என பரப்படைகின்றனர்.ஏதும் நடைபெறாததால் பின்பு சலிப்படைகின்றனர்.அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிற கும்பலோ உலகைக் காப்பதாக கூறிக் கிளம்பி தனது சொந்த நலனுக்காக அற்ப சூழ்ச்சிகளில் அனுதினமும் ஆழ்ந்துள்ளது. மக்கள் நலனுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தனிநபர் அதிகார பேர சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருள்கின்றனர்.பிரதிநிதிகள்தானா பகடைக்காய்கள்தானா என சட்டமன்றத்திற்கு அனுப்பிய மக்களோ செய்வதறியா பார்வையாளர்களாக சில நேரத்தில் உணருகின்றனர்!

அரை நூற்றாண்டு அரசியல் சாசனமும், சட்டமன்றமும், புனிதக் குடியரசு ஜனநாயகமும், உரிமைக்கான மக்கள் போராட்டங்களும் அரை நாளில்,மந்திர உலகில் திடுமென காணாமல் போய்விட்டதபோன்றதொரு அரசியல் பிரம்மை பூதங்கள் மக்களை அச்சுறுத்துகிறது. மாயவித்தை சம்பங்களாக நிஜ உலகில் கண்முன்னே நிகழ்ந்துவருகிற இம்முரண்பாடுகளை, மோசடிக் கட்சிகளும் மோசடிக்காரர்களும் போட்டு போட்டுக்கொண்டு எவ்வாறு சூழ்ச்சிகளின் ஊடாகவே அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

சட்டமன்ற பிரதிநிதிகளை வாக்கெடுப்பின் மூலமாக தேர்தெடுத்த மக்களோ, அலுப்பூட்டுகிற இந்த பரபரப்புகளால் சலிப்படைகிறார்கள். சட்டமன்ற பிரதிநிதிகளோ மக்கள் மனங்களில் உடல்களற்ற நிழல்களாக,உண்மையற்ற உருவங்களாக வந்து போகின்றனர். நாம் எவ்வாறு ஓட்டுபோட்டு பின், மோசடிகாரர்களின் இந்த புனித குடியரசு ஆட்சிமுறையில் இருந்து விளக்கி வைப்பட்டுள்ளோம் என சமகால நிலைமைகளில் பொறுத்தி புரிந்துகொள்ளவேண்டும்!!

பாட்டாளி வர்க்கத்தின் மீதான துரோகத்தின் மேல் எழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு, அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் இன்று அதற்கெதிராக திரும்பியுள்ளது.

சட்டமன்ற ஆட்சி முறைகள், தேர்தல் அரசியல் முறைகள் கோல்டன் பே ரிசார்ட்டில், பெங்களூர் ரிசார்ட்டில் அடமானம் வைக்கப்பட்டது.ஆளுநர் மாளிகையும், போயஸ் கார்டனும், கிரீம்ஸ் ரோடுகளும்,தலைமை கழகமும் அரசியல் சதிகளால் நிரம்பி வழிகிறது. அதன் நாற்றத்தை மக்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை!

தற்போது,முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவங்கள், சட்டமன்ற வடிவங்களின் அறுபதாண்டுகால தேன்நிலவு கட்டம் நிறைவை எட்டுகிற நிலைக்கு வருகிறது.உத்தராகண்டில், அருணாச்சல பிரதேசத்தில், குஜராத்தில், தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கான முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் அருவருப்பான அரசியல் சதுரங்க ஆட்டத்தை மக்கள் யதார்த்த உண்மையில் கண்டுகொண்டார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகழிகளுக்குள்ளே கமுக்கமாக மக்கள் அறியா வண்ணம் அரங்கேற்றப்பட்ட அரண்மனை சதிகள்,தற்போதைய நவீன முதலாளித்துவ குடியரசு கட்டத்தில் வெட்ட வெளிச்சமாக காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.வாக்கு உரிமையால் மட்டுமே முதலாளித்துவ ஜனநாயகத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நடைபெறுகிற அதிகாரத்திற்காக இப்போட்டியை உழைக்கும் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பதில்லை.வருங்கால மக்கள் குடியரசு ஜனநாயகத்திற்கான புரட்சிகர சேமிப்பு சக்திகளாக மக்களின் மனங்களிலே இம்முரண்பாடுகள் பதியப்படுகிறது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!

ராஜ்தேவ்

1) முரசொலிக்கு விழா முக்கியம் போன்று அதனை கருத்தியல் ஆயுதமாக தொடர்ந்து நடத்துவதும் முக்கியம். அன்றாட அரசியலுக்கு அப்பால் திராவிட இயக்கக் கண்ணோட்டம் சார்ந்த கட்டுரைகளுக்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். அதுவே அடுத்த தலைமுறையை தயார்படுத்தும்.

2) முரசொலி விழாவில் பத்திரிகையாளர்கள் பலர் எவ்வித தயக்கமும் இன்றி வந்தது கவனிக்கத்தக்கது. திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் செய்பவர்கள் அவர்கள் என்பது திமுகவின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் நம்பிக்கையின் ஆதாரமாக அது இருந்தது.

3) ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் அற உணர்வு மிக்க எவரையும் முகஞ்சுளிக்க வைக்கும். இந்துத்துவத்தை எதிர்க்கும் வலுவான மேடையாக திராவிட இயக்கத்தை கருதுவதை என். ராமின் உரை காட்டியது.

4) ரஜினி இந்த கூட்டத்தில் பேசாமல் சென்றது எந்த இழப்பும் இல்லை. அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் கொண்ட அவரை இந்த நிகழ்ச்சி நன்முறையில் பாதிக்கட்டும்.

5) கமல்ஹாசனின் உரையின் முத்தாய்ப்பு பூணூல் போடாத கலைஞன் என்ற அவருடைய பிரகடனம். இது பார்ப்பனர்களை கடுமையாக சினம் கொள்ள வைக்கும் ஒன்று. இந்துத்துவ கும்பலை அவர் கடுமையாக வெறுப்பது தெரிகிறது. கமல் உரையை இந்து ராம் ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தார்.

6) இந்துத்துவ கும்பல் தம்மிடம் முழுவதுமாக ஒப்புக்கொடுக்காத பார்ப்பனர்களிடம் மிகவும் வன்மத்துடன் நடந்து கொள்ளும். தமிழிசை, கி.சாமி ஜென்மங்கள் மீது நமக்கு ஆத்திரம் வருவது போல.

7) ஆனந்த விகடன் மீது என்னென்ன வசை சொற்கள் வீசப்படும் என்ற பட்டியலை சீனிவாசன் வாசித்தார். முசிலிம் மக்களை இன்னின்ன சொற்களில் ஆர்.எஸ்.எஸ் ஏசுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் மேடையில் சென்று பேச முடியுமா? சீனிவாசன் பேசியதை தவறென கூறவில்லை. அதற்குரிய பதிலை சிநேகபாவத்துடன் யாரேனும் கூறியிருக்கலாம்.

8) தினமலர் ரமேசின் உரையில் இருந்த நேர்மை தினமணி வைத்தியிடம் இருக்கவில்லை. தினமணியை இன்னமும் சீரியசான பத்திரிகை என்று எப்படி நம்ப முடிகிறது?

9) ஆர்தர் மில்லர், மார்குவேஸ் போன்ற எழுத்தாளர்களை குறிப்பிட்டு மிரட்டிய என். ராமின் உரையின் சிறப்புக்கு சற்றும் குறைவில்லாதது நக்கீரன் கோபாலின் உரை. ஜெயலலிதா கட்டவிழ்த்த பாசிசத்தை சமரசமின்றி எதிர்கொண்டவர் கோபால்.

10) இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும். அதற்காகவே இந்த விழா முயற்சி போற்றத்தக்கது.

ராஜ்தேவ், சமூக-அரசியல் விமர்சகர்.

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில்,

“தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு,சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை. தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது-சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா

charu-nivethitha-1-e1496647006527.jpg
சாருநிவேதிதா

சாருநிவேதிதா

கருணாநிதி குறித்து எதுவுமே எழுதக் கூடாது என்று இருந்தேன். என் நெருங்கிய நண்பர்களைப் புண்படுத்தக் கூடாது என்ற ஒரே காரணம்தான். ஆனால் கார்ல் மார்க்ஸின் கருணாநிதி துதி என் கை விலங்கை உடைத்து விட்டது. தமிழக அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு:

 1. 1920-இலிருந்து மெட்ராஸ் மாகாணத்தின் முதல்மந்திரியாக இருந்தவர்கள் சுப்பராயலு ரெட்டியார், பனகல் ராஜா, பி. சுப்பராயன், முனுசாமி நாயுடு, பி.டி. ராஜன், ராஜாஜி, ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா முதலியோர். இவர்களில் பி.டி. ராஜன், ராஜாஜி பற்றி நூற்றுக் கணக்கான பக்கங்கள் எழுதலாம். இவர்கள் அனைவருமே அப்பழுக்கற்ற, ஊழலின் கரை படியாத தலைவர்கள். இவர்களின் கொள்கைகளில், எடுத்த முடிவுகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் இவர்கள் காலத்தில் ஊழல் என்ற வார்த்தையே இல்லாமல் இருந்தது. இவர்களுக்குப் பிறகு வந்தவர்களில் காமராஜரும் அண்ணாதுரையும் மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருமே அரசியல்வாதி என்ற வார்த்தைக்குக் கொடுத்த அர்த்தம் வேறாக இருந்தது. இவர்களுக்குப் பிறகு வந்த கருணாநிதி தான் அரசியல்வாதி என்ற வார்த்தைக்கு வேறு விதமான அர்த்தம் கொடுத்தவர். இன்று காமராஜரின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? அண்ணாதுரையின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுடைய சொத்துக் கணக்கு என்ன? அவர்களெல்லாம் வெறும் நடுத்தர வர்க்கத்து மனிதர்கள். கக்கனின் வாரிசுக்கு ஒரு வேளை சோறு இல்லை. ஆனால் கருணாநிதிதான் முதல்முதலாக ஆசியாவின் பெரிய பணக்காரர்களைக் கொண்ட குடும்பத்துக்குச் சொந்தக்காரராக இருந்தார். அந்த வகையில் அரசியல் தன் அறத்தை இழக்கக் காரணமாக இருந்தார். மகாத்மா காந்தியிலிருந்து ராகுல் காந்திக்கு இறங்கிய அரசியல் அறத்தின் தென்னக வடிவம் கருணாநிதி.

 2. சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அகிம்சை என்ற போராட்ட வடிவத்தைக் கொடுத்தார். உலக அரசியலுக்கு ஒரு இந்திய ஞானி கொடுத்த கொடை அது. அந்தப் போராட்டத்துக்காகத் தன் உயிரையே கொடுத்தார் மகாத்மா. உண்ணாவிரதம், அதிகாரத்துக்கு முன்னே தலை வணங்காதிருத்தல், தர்ணா போன்றவை அந்த அகிம்சைப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் அர்த்தத்தையே மாற்றி நீர்த்துப் போகச் செய்த முதல் அரசியல்வாதி கருணாநிதி. ஓடாத ரயிலின் முன்னே தலையை வைத்துப் படுத்து இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் கருணாநிதி. ஆனால் இந்திய சுதந்திரத்துக்காக ஆயிரக் கணக்கான மக்கள் பிரிட்டிஷ் போலீசாரின் தடியடிகளைத் தங்கள் தலையில் வாங்கினார்கள்; ரத்தம் சிந்தினார்கள். அப்படியும் அச்சம் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அந்தத் தடியடிக்கு மனிதக் கூட்டம் போய்க் கொண்டே இருந்தது. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தும் நம்முடைய சமூகத்தின் நோய்க்கூறான பழக்கவழக்கங்களை எதிர்த்தும் பலமுறை மகாத்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். பல நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த எலும்பும் தோலுமான பைத்தியக்காரக் கிழவனைப் பார்த்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே நடுங்கியது. ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தின் மீது ராஜபக்ஷே என்ற இனவெறியன் தன் ராணுவத்தை ஏவிப் படுகொலை செய்து கொண்டிருந்த போது காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை உண்ணாவிரதம் இருந்து மகாத்மாவின் உண்ணாவிரதப் போராட்டங்களையே அசிங்கப்படுத்தியவர் நம் கருணாநிதி.

நேற்று ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கியவர் கருணாநிதி என்று போட்டிருந்தது. உண்மைதான். ஆனால் அதே சமயத்தில் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி ஆக்ஸ்ஃபோர்ட் ஸ்கூல், கேம்ப்ரிட்ஜ் ஸ்கூல் என்ற குடிசைப் பள்ளிகள் தோன்றி தமிழ்நாடு பூராவும் இங்கிலிபீஸ் பள்ளிகள் புற்றீசல் போல் பல்கிப் பெருகக் காரணமாக இருந்தவர் யார்? 40 ஆண்டுக் காலமாக தமிழே தெரியாமல் ஒரு இளம் சமுதாயம் உருவாகி இருக்கிறதே, அதற்குக் காரணம் யார்?

 1. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, திமுகவின் அடிமட்டத் தொண்டனின் நிலை என்ன? எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் அவர்களின் தொண்டர்கள் தங்களின் உயிருக்கு உயிரானவர்களாகக் கருதினார்கள். அப்படிப்பட்ட தொண்டர்கள் திமுகவில் உண்டா? கருணாநிதியின் பேச்சுத் திறமையைப் பாராட்டுவார்கள். கடும் உழைப்பைக் கண்டு அசந்து போவார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களின் கருத்து என்ன? தீப்பொறி ஆறுமுகத்தின் கதி என்ன ஆனது? திமுக என்ற மாபெரும் கட்சியின் ரத்தமும் சதையும் தீப்பொறி ஆறுமுகம் போன்ற ஆயிரக் கணக்கான பேச்சாளர்கள்தான். ஆனால் அவர் தன் மகனுக்கு ஒரு வேலை வேண்டும் என்று தலைவரிடம் போய்க் கேட்டால், என்னய்யா, நான் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சா வைத்திருக்கிறேன் என்று கேட்டவர் நம் கருணாநிதி. தீப்பொறி அதிமுகவில் போய்ச் சேர்ந்தார். அப்போது என் நெஞ்சம் வலித்தது. எங்கள் குடும்பமே திமுக தான். என் நண்பர்கள் அத்தனை பேரும் திமுக தான். நான் இங்கே உண்மையை மட்டுமே பேசுகிறேன். நான் பேசுவது என் நண்பர்களின் மனசாட்சிக்கு உண்மை எனத் தெரியும்.

எல்லாவற்றையும் மறந்து விடலாம். தன் மகன் ஸ்டாலினுக்குக் கருணாநிதி இழைத்த அநீதியை என்னால் மறக்கவே முடியாது. ஓ.பன்னீர்செல்வமெல்லாம் மூன்று முறை நான்கு முறை முதலமைச்சர் ஆகி விட்டார். யாருக்குமே தெரியாத எடப்பாடி முதலமைச்சராக இருக்கிறார். நம் தேவகௌடா பிரதமர் ஆன மாதிரி. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக திமுகவுக்காக ஒரு அடிமட்டத் தொண்டனைப் போல் உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் 64 வயதாகியும் இன்னும் முதல்வராக முடியவில்லை. சென்ற தேர்தலில் அதற்கு வாய்ப்பு இருந்தது. ஸ்டாலின் தான் முதல்வர் என்று அறிவித்திருந்தால் இப்போது நடக்கும் அல்லோலகல்லோலங்களை நாம் பார்த்திருக்க வேண்டிய அவலம் நடந்திராது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும். பிடித்திருந்தால் உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் சமாதியை மெரினா கடற்கரையில் நாம் காண வேண்டிய அவலம் நேர்ந்திராது.

ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று அறிவிக்காதது மட்டும் அல்ல; என் உயிர் உள்ளவரை நான் தமிழக மக்களுக்குப் பாடுபடுவேன் என்று வேறு சொன்னார். என்ன அர்த்தம்? நான் இருக்கும் வரை நான் தான் முதல்வர், நீ கம்னு கெட மகனே என்றுதானே? இந்த அறிவிப்புக்கே மக்கள் அரண்டு விட்டார்கள்.

மேலும், ஒரு அரசியல் தலைவர் என்றால் எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பவராக இருக்க வேண்டும். இந்துக்களைத் திருடர் என்று சொல்ல ஒரு தலைவரின் மனம் கூச வேண்டாமா? மேலும், அவரிடமிருந்த பிராமண எதிர்ப்பும் மிகக் கசப்பான ஒரு விஷயமாகும். பெரியாரிஸ்ட் அப்படி இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பணியாற்ற வேண்டிய ஒரு முதல்வர் அப்படி இருக்கக் கூடாது.

கருணாநிதியிடம் எனக்குப் பிடித்த விஷயங்களும் இருக்கின்றன. விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்பார். விமர்சிப்பவர்களை குண்டாந்தடியால் அடிக்க மாட்டார். அந்த ஒரு பண்பு தான் இத்தனை காலம் அவரை செயல்பட வைத்தது. இன்னொன்று, அவரது கடுமையான உழைப்பு. இப்போதைய சோம்பேறிகளின் உலகத்தில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் நம்புவதற்கே அரிதானவர்.

இது கருணாநிதி பற்றிய முழுமையான கட்டுரை அல்ல; என் மதிப்புக்கு உரிய கார்ல் மார்க்ஸ்செண்ட்டி செண்ட்டியாக எழுதியிருந்த ஒரு குறிப்பைப் படித்து எழுதிய ஒரு சிறிய எதிர்வினையே.

திமுக தலைவர் மு. கருணாநிதி

கருணாநிதி-2

கார்ல் மார்க்ஸ் பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இப்போது மீண்டும் பேச வைத்து விட்டார். ”அதிகாரக் குவிப்பை நோக்கியும், ஒற்றை மத மேலாதிக்கத்தைமுன்னிறுத்தியும் மைய அரசியல் நகரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாமல் இங்கு இருக்கும் ஆளும் தரப்பு கிட்டத்தட்ட படுத்தேவிட்ட சூழலில், இந்த வைரவிழா கூடுகையின் அரசியல் முக்கியத்துவத்தை கவனப்படுத்துவதும் எனது நோக்கமாக இருந்தது” என்று பதில் எழுதுகிறார். ஒரு ஆபத்தை எதிர்கொள்வதற்காக இன்னொரு ஆபத்தை வரவேற்கலாமா? ஊழல் காங்கிரஸ் வேண்டாம் என்று மோடியை ஆதரித்தது எத்தனை தவறு என்று இப்போது இந்தியர் அனைவரும் வருந்துகிறார்களே? அப்படி, ஒற்றை மத மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக இத்தாலி மாஃபியா கும்பலை ஆதரிக்கப் போகிறோமா? அப்படித்தானே தமிழகத்தில் திமுகவை எதிர்க்கப் போய் மன்னார்குடி மாஃபியாவில் விழுந்தோம்? மாற்றி மாற்றி நம் கதி இதுதானா?

சரி, கார்ல் மார்க்ஸ் நான் கருணாநிதியின் கடைசி இருபது ஆண்டுகள் பற்றியே கவனப்படுத்தியிருப்பதாக எழுதியிருக்கிறார், அவருடைய பதிலில். ஆகா, ஆகா. கருணாநிதியின் முதல் இருபது ஆண்டுகள் பற்றி எழுதினால் என் கணினியே வெடித்து விடும் கார்ல். அப்போது நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள். நானே கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். 1973 ஜூலை 18-ஆம் தேதி அன்று கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதல் தான் போலீஸ் துறை மக்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடப் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி. அது அவரது இரண்டாவது முதல்வர் பதவி. அண்ணாதுரையின் மரணத்துக்குப் பிறகு நெடுஞ்செழியன் தாற்காலிக முதல்வராக இருந்து பின்னர் மு.க. பதவிக்கு வந்தார். வி.பி. சிந்தன் உயிர் பிழைத்ததே பெரும் அதிர்ஷ்டம் என்று கருதப்பட்டது அன்று. சிம்சன் தொழிலாளர் யூனியனின் துணைத் தலவராக இருந்த வி.பி. சிந்தன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது என்றால் ஒரு கவுன்சிலர் கூட மூன்று நான்கு கார்களில் அடியாட்கள் சூழ பயணம் செய்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர் சிந்தன் சென்னை டவுன் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று இருபது ஆளும் கட்சித் தொண்டர்கள் பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்தினார்கள். அவர்கள் கையிலிருந்த இரும்புத் தடி, சைக்கிள் செயின் (அப்போதுதான் ராட்டை என்ற போராட்ட ஆயுதம் சமாதிக் குழியில் புதைக்கப்பட்டு சைக்கிள் செயின் போராட்ட ஆயுதமாக தமிழக அரசியலில் இடம் பிடித்தது) அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களைப் பார்த்த பயணிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்க, சிந்தன் மேற்கண்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இரும்புக் கம்பி மார்பில் பாய்ந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார். சாதாரணமாக அல்ல; மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. யூனியன் தேர்தலில் குசேலரும் சிந்தனும் வெற்றி அடைந்ததைத் தன்னுடைய தனிப்பட்ட தோல்வி என்று முதல்வர் கருணாநிதி கருதியே அந்தத் தாக்குதலுக்குக் காரணம். இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கருணாநிதி திண்டுக்கல்லில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்: ”கம்யூனிஸ்டுகளைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதுதான் நம் திமுகவின் முதல் பணி.” இப்போது மோடியைப் பார்த்து இந்தியர்கள் எப்படி மிரள்கிறார்களோ அவ்வாறே தமிழ் மக்கள் கருணாநிதியைக் கண்டு மிரண்டார்கள். அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கம் அண்ணாதுரை காலம் வரை இல்லாமல் இருந்தது. கருணாநிதியே அதைத் துவக்கி வைத்தவர். அதன் முதல் நிகழ்ச்சியையே மேலே விவரித்திருக்கிறேன்.

1972-இல் நடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சம்பவம் உலகச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இதையெல்லாம் நான் ஒரு நாவலுக்கான குறிப்புகளாக சேகரித்து வைத்திருந்தேன். கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஜெயலலிதாவை மாரியாத்தா, கன்னி மேரி என்றெல்லாம் வர்ணித்துப் படம் போட்டு நூறு அடி உயர கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டதை நாம் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தோமே, அதற்கெல்லாம் குருநாதர் யார் தெரியுமா? நம் கருணாநிதிதான். அப்போதெல்லாம் அவர் பூம்புகார்ச் சோழன் என்றும், கரிகால்வளவன் என்றும்தான் கொண்டாடப்படுவார். மலர்க் கிரீடம் எல்லாம் வைக்கப்பட்டது. அதன் ஒரு அங்கம்தான் டாக்டர் பட்டம். அதை எதிர்த்தது
Students Federation of India. அதில் ஒரு மாணவன் ஒரு கழுதையைப் பிடித்து அதன் மீது டாக்டர் என்று எழுதி விட்டான். மாணவர்கள் என்றால் அப்படித்தானே இருப்பார்கள்? போலீஸ் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவன் இறந்து விட்டான். அவன் உடலைத் தூக்கிக் குளத்தில் போட்டு விட்டது பூதம். பூதம் எது என்பது உங்கள் யூகத்துக்கு. உதயகுமாரின் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். உதயகுமாரைப் பார்த்தார்கள். இது எங்கள் மகனே இல்லை என்று கதறி அழுதார்கள். மகன் இல்லை என்றால் எதற்கு ஐயா கதறி அழ வேண்டும்? மகன் என்று சொன்னால் தொலைத்து விடுவோம் என்று சொன்னது பூதம். இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது இந்திய மாணவர் சங்கம். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் இன்றைய மனித உரிமை ஆர்வலரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே. சந்துரு.

மற்றொரு பொன்னெழுத்து சம்பவம் திருச்சி கிளைவ் ஹாஸ்டலில் நடந்தது. புகழ் பெற்ற செயிண்ட் ஜோசஃப் கல்லூரியின் ஹாஸ்டல் அது. மேற்கண்ட சம்பவங்கள் நடந்த அதே எழுபதுகளின் முற்பகுதிதான். ஹாஸ்டலில் இருந்த மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்கியது போலீஸ். மிகப் பயங்கரமான காட்டுமிராண்டித் தாக்குதல் அது. பிரின்ஸிபாலும் வார்டனும் இதை விசாரணை கமிஷன் முன்னே சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் முதல் பதவிக் காலகட்டத்தின் போது. அப்போது நான் திருச்சியில் பெரியார் கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கடுமையான திமுக ஆதரவாளரான என் தந்தை என்னுடைய தீவிர திமுக எதிர்ப்பைக் கண்டு மிகவும் மனம் புழுங்கியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

நண்பர்களே, இதெல்லாம் ஒரு நாவலுக்கான குறிப்புகள். இப்போது எழுதி விட்டேன். மேலும் மேலும் கிளறாதீர்கள். ஊழல், அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கம், முகஸ்துதி, கட் அவுட் கலாச்சாரம் போன்றவற்றையெல்லாம் தமிழக அரசியலில் அறிமுகப்படுத்திய பெருமை கருணாநிதியையே சாரும்.

ஜி. கார்ல் மார்க்ஸ்

கருணாநிதி – 3

சரி, இவ்வளவு எழுதி விட்டு மிச்சத்தையும் எழுதாமல் விட்டால் கார்ல் மார்க்ஸ் கோவித்துக் கொள்வார். ஆனால் இது கருணாநிதி பற்றி அல்ல. என் நைனா, சின்ன நைனா பற்றியது. தமிழகத்தில் தஞ்சம் புகுந்த எல்லாத் தெலுங்குக் குடும்பங்களையும் போல இவர்களும் தீவிர திமுக. தீவிர தமிழ்ப் பற்று. சமீபத்தில் மதம் மாறியவர்கள்தான் தீவிரமான மதச் சார்பு கொண்டவர்களாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்த மாதிரி மனநிலை இது. பேசுவது அண்ணன் தம்பிகளுக்குள் எழுதுவது எல்லாமே தெலுங்கு. ஆனால் உயிர் தமிழுக்கு. என் அம்மா வைத்த ரவி என்ற அழகான பெயர் அறிவழகன் ஆனது இப்படித்தான்.

என்னை எப்படியாவது திமுகவுக்குள் இழுத்து விட வேண்டும் என்று மிகவும் பாடுபட்டார்கள் சின்நைனா. அவர்களுக்கு என்னை என் நைனாவுக்குத் தெரிந்த அளவுக்குத் தெரியாது இல்லையா, அதுதான் காரணம். அதனால் அவருடைய குருநாதர்கள் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி போன்றவர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். ரொம்ப ரொம்ப ஜாலியாகப் பேசுவார் மன்னை. இப்போதைய துரை முருகனைப் பார்த்தால் எனக்கு மன்னை தான் ஞாபகம் வருகிறார். ஆனால் மன்னை கருப்பாக இருப்பார். நான் அந்த இருவருக்கும் எடுபிடி வேலையெல்லாம் செய்து கொடுப்பேன். ஒருமுறை அன்பிலோடு அவர் காரிலேயே சென்னை வரை என்னை அழைத்து வந்தார். காரில் மன்னையும் இருந்ததால் அவர் அடித்த ஜோக்குகள் இன்றும் எனக்கு மறக்கவில்லை. எல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்து சமாச்சாரம்.

ஆண்டு ஞாபகம் இல்லை. ஒரு பெரிய திமுக மாநாடு திருச்சியில் நடந்தது. பொன்மலை வட்டச் செயலாளர் சின்நைனா. அந்த மாநாட்டுப் பந்தலைப் பார்த்து அசந்து போன கருணாநிதி அன்பிலை அழைத்துப் பாராட்ட, அன்பில் என் சின்நைனாவை அழைத்து இவன் தான் – பெயர் ராகவன் – எல்லாம் பண்ணினது என்று சொல்ல, அந்த நேரம் சின்நைனாவுக்கு வாழ்வின் குறிக்கோள் நிறைவேறியது.
நைனாவுக்கும் சின்நைனாவுக்கும் மூச்சே திமுகதான். please read it literally. அதாவது, சுவாசக் காற்று வரும் போது பாதி கருப்பாகவும் மீதி சிவப்பாகவும் வெளிவருவதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நானோ சம்ஸ்கிருதம் படித்துக் கொண்டு, இந்தி படித்துக் கொண்டு, ரவிஷங்கரின் சிதார் கேட்டுக் கொண்டு, ஹிப்பி முடி வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். கேட்க வேண்டுமா? குடும்பத்தில் நான் ஒரு அந்நியனாகக் கருதப்பட்டதற்கு இலக்கியமெல்லாம் காரணம் இல்லை. திமுகதான் காரணம். அதனால்தான் தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.
முடிந்தது. இதற்கு மேல் நாவலில் காணலாம்.

கருணாநிதி 4:

நான் பாட்டுக்கு ரொபர்த்தோ பொலான்யோவின் 1200 பக்க நாவல் 2666-ஐப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த கார்ல் மார்க்ஸ் என்னைக் கிளப்பி விட்டு விட்டார். சரி, இந்த நாலோடு முடித்துக் கொள்கிறேன்.
மன்னையோடும் அன்பிலோடும் காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது – சின்நைனா சென்னை வரவில்லை, அன்பிலின் வலது கையாக விளங்கினார் சின்நைனா ராகவன் – நான் மன்னை பற்றியும் அன்பில் பற்றியும் யோசித்தேன். என் வயது அப்போது 19. திருச்சி பெரியாரில் ஆங்கில இலக்கியம் பி.ஏ. முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஏன் ஊர்ப் பெயரை வைத்து இவர்களை அழைக்கிறார்கள் என்று ஓடியது யோசனை. கருணாநிதியின் பெயர் (அப்போது மனதில் கூட கலைஞர் என்று வராது, தலைவர் என்றோ கருணாநிதி என்றோதான் வரும். கலைஞர் என்று வந்தால் நீ சிந்தனையாளனே கிடையாது என் குருநாதர் ஜெயகாந்தன் சொல்லியிருந்தார்) கருணாநிதியின் ஊர்ப் பெயரோடு சேர்ந்து ஞாபகம் வந்தது. தலைவர் பேரிலேயே திமுக இருக்கிறது. திருக்குவளை மு. கருணாநிதி. மனதில் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லி விட்டேன் போல. மன்னைக்கு என்னை ரொம்பப் பிடித்து விட்டது. இனியும் சின்நைனாவோடு சேர்ந்தால் ஆள் என்னைத் தலைவரிடமே கொண்டு சேர்த்து விடுவார் என்று அதோடு தஞ்சாவூர் சரஃபோஜி வந்து பிஸிக்ஸில் சேர்ந்து குட்டிச் சுவர் ஆனேன்.

நான் மட்டும் மன்னை பேச்சைக் கேட்டு அவர்களோடனேயே போய் கருணாநிதியைப் பார்த்திருந்தால் மாணவர் அணியில் சேர்ந்து, இன்றைய தினம் துரை முருகனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருப்பேன். மனுஷ்ய புத்திரன் என்னை சாரு என்பதற்கு பதிலாக அண்ணே என்று தான் அழைத்திருக்க வேண்டும்.

விதி என்னை வேறு மாதிரி அழைத்துச் சென்றது. விதி அல்ல. அறம்தான் என்னைக் காப்பாற்றியது. நீதிதான் என்னைக் காப்பாற்றியது. தர்மம்தான் என்னைக் காப்பாற்றியது. அப்போது எனக்கு நீதியின் பாதையை, தர்மத்தின் பாதையைக் காண்பித்த ஆசான் ஜெயகாந்தனுக்கு நன்றி.

எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னுடைய முகநூலில் திமுக தலைவர் மு. கருணாநிதி குறித்து எழுதியுள்ள பதிவுகள் இவை. கருணாநிதி குறித்தும் திமுக குறித்து சாருவின் கருத்துகள் சமூக ஊடகங்களில் எதிர்வினைகளை கிளப்பியுள்ளன.

கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

கருணாநிதி தனது தொண்ணூற்று நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அது அறுபதாம் ஆண்டு வைர விழாவாக அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். முதல் முறையாக சமூக ஊடகங்களில் அவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவுகளை எல்லா தரப்பிலிருந்தும் காணமுடிகிறது. Hindu உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் தலையங்கமாக, கட்டுரையாக அவரைப் பாராட்டியும், அவரது குறைகளை கவனப்படுத்தியும் உன்னிப்பான பத்திகள் இன்று எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படிப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய இந்திய மற்றும் தமிழக அரசியலின் வெளிச்சத்தில் வைத்து அவரது அரசியல் உத்திகளை மதிப்பிட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியின் வாழ்க்கையில் லட்சியவாதத்துக்கு எப்போதும் இடம் இருந்தது என்பதில் தொடங்குகிறது அவரது அரசியல் இருப்பு. அதை எதார்த்தத்துடன் மிகச் சரியாக பொருத்திக்கொள்வதில் அவர் சமர்த்தர் என்பதுதான் அவரது அரசியல் வெற்றி. நிலைத்த நீடித்த சமரசங்களை உள்ளடக்கிய அரசியல் பயணம் அவருடையது. அன்றைய காலகட்டத்தில் எல்லாராலும் மிகக் கீழாக பார்க்கப்பட்ட சாதியப் பின்னணியில் இருந்து வந்தவர். இப்போது வரை, அவரை அவமதிப்பதற்கு அவரது சாதி சுட்டப்படுகிறது என்பதிலிருந்து அவர் எத்தகைய வழிகளைக் கடந்துவந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவரிடம் ‘அவமதிப்பிற்கு எதிரான மூர்க்கம்’ வெளிப்பட்டதே இல்லை. தனது சாதி ரீதியான காயங்களை அவர் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டதே இல்லை. அது அவரை முடக்கவே இல்லை என்பதை ‘ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்’ அரசியலை முன்னெடுக்கும் இளைய தலைமுறையினர் கவனிக்கவேண்டும். ஆனால், அவரிடம் அந்த மூர்க்கம் இல்லையே தவிர சாதி வேற்றுமைகளுக்கு எதிரான உறுதியான குரல் அவருடையது.

மதம் என்று வருகிறபோது, இந்தியாவில் நிலைத்த மிக முக்கியமான மதச்சார்பற்ற அரசியல் குரல் அவருடையது. இத்தனை வருடங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோதும், ஒப்பீட்டளவில் வேறு எந்த கட்சியும் கைகொள்ள முடியாத அளவுக்கு நேர்மையைக் கடைபிடித்தது திமுகதான். அதை உறுதிசெய்தவர் கருணாநிதி. நிர்வாகம் என்று பார்த்தால், அவருடையது அசுர உழைப்பு. இன்று கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் யாருக்கும் அந்த உழைப்பு மலைக்க வைக்கும் தூரத்தில் இருக்கும் ஒன்று. ஸ்டாலின் உட்பட. அதை பதவி மீதான வெறி என்றோ, அதிகாரத்தின் மீதான ஆசை என்றோ நாம் கருதிக்கொள்ளவேண்டியதில்லை. அவர் அரசியலின் மீது தீராத வேட்கை கொண்டவராக இருந்தார் என்பதே முக்கியக் காரணம். அதன் அலைக்கழிப்புகள் எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கும் மனநிலை அவருக்கு இருந்தது. பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் மற்றும் தமிழின் அருமையான இலக்கியப் பாரம்பரியத்தின் மீதான அவரது பரிச்சயத்தில் இருந்து அவர் பெற்ற உத்வேகம் அது.

அவரது கலை மீதான வேட்கையும் அத்தகையதே. வெகுமக்களிடம் தொழிற்பட்ட கலைகளின் பின்னணியில் வைத்துப்பார்த்தால் அவரது மேதைமை உச்சம் தொட்டதே எப்போதும். அதை கட்சிக்கும், கட்சியினது கொள்கைக்கும் அவர் பயன்படுத்திய விதம் முன்னுதாரணம் இல்லாதது. மிக முக்கியமாக அது வெறுப்பைப் பரப்புவதற்கு பயன்பட்டதே இல்லை. பல சமயங்களில் அவரது மோசமான சமரசங்களுக்கு முட்டுகொடுக்க தனது மொழியை அவர் லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அப்படி முட்டுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று கருதிய போனதலைமுறை அரசியல்வாதி அவர். ஆனால், அப்படி எந்த அவசியமும் இல்லை என்று மதர்ப்பாகத் திரியும் அரசியல் தலைமைகளால் நிரம்புகிறது இன்றைய நமது அரசியல். மாட்டுக்கறி அரசியல் குறித்து குழந்தை கூட படம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் நாட்டில், ‘உங்களது ட்வீட்டைப் பார்த்திருக்கிறேன்’ என்று வெளிநாட்டில் கிண்டலடித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் நமது பிரதமர். அரசியல் உறுதிக்கும், மக்களை துச்சமாக மதிக்கும் ஃபாசிசத்துக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டே வரும் காலத்தில் கருணாநிதி போன்றவர்களின் ஆகிருதிகள் இதயத்தில் இருத்திக்கொள்ளப்பட வேண்டியவை.

Karuna 75

கருணாநிதியை முன்னிட்டு நிகழ்ந்துகொண்டிருக்கும் இப்போதை ‘வைர விழா’ கொண்டாட்டமும், அதன் கூடுகையும் அரசியல்ரீதியாக பெறுமதி மிகவும் வாய்ந்தவை. நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு. கருணாநிதியின் சிறப்பே, ‘ஒற்றை அதிகாரத்துக்கு எதிரான’ அவரது அரசியல் முன்னெடுப்புகள்தான். மாநில சுயாட்சி என்பதை குறைந்த பட்சமாவது மத்திய அரசுகள் கவனத்தில் கொள்கின்றன என்றால் அத்தகைய அழுத்தத்தை இந்திய அளவில் உருவாக்கி நிறுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது. பிஜேபிக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் திமுக இப்போது செய்திருப்பது ஒரு பிரகடனம். மோடியின் காலில் விழுந்துகிடக்கும் இன்றைய அதிமுக தலைமையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்து நாம் இந்த செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘தேசிய முன்னணி’ போன்ற மாற்று அரசியல் குழு உருவாக்கத்தில் அவரது பங்கு மகத்தானது. அவருக்காக நடத்தப்படும் இந்த வைரவிழா அந்த பாதையில் ஒரு உத்வேகத்தைத் தருமெனில் இந்திய ஜனநாயகத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரதான கட்சியான காங்கிரஸ் பல மட்டங்களில் வலுவிழந்திருக்கும் சூழலில் திமுக போன்ற கட்சிகள் முன்னெடுக்கும் இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைள் மிக முக்கியமானவை. மூர்க்கமான சிந்தனையைக் கொண்ட அமைப்பு ஒன்றின் வழிகாட்டலில் நாட்டின் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரக் குவிப்பை நோக்கி அரசின் உறுப்புகள் உந்தப்படுகின்றன. அதைக் கொஞ்சமேனும் தடுப்பதற்கு நமக்கு சில பெயர்கள் வேண்டும். பெரும் மக்கள் திரளால் காதலுடன் உச்சரிக்கப்படும் பெயர்களாக அவை இருக்கவேண்டும். கருணாநிதி எனும் பெயர் இந்திய அரசியலில் அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் அப்படி ஒரு பெயர். அவரை வாழ்த்துவது நாம் அவருக்கு செய்யும் சலுகை அல்ல. நன்றியுணர்ச்சியுடன் கூடிய கடமை அது!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவர் நூல்கள்.

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

 

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்

திராவிடநாடு மட்டுமல்ல எந்த நாடும் கேட்டுப் பிரிவினை கேட்பதுதான் இங்கு சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. திராவிடநாட்டுக்கு மட்டும் போடப்பட்ட சட்டம் இல்லை என்பதை முதலில் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்..

அடுத்து, திராவிடநாடு என்பது சாத்தியமாகுமா ஆகாதா என்பதற்கு அப்பால் அப்படியான ஒரு அடையாளம் இயல்பானது என்பது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை, இந்த இருநூறு ஆண்டுகளில் யாராலும் தவறு எனச் சொல்லப்படவில்லை. தொடர்ந்த ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்தியே உள்ளன.

இரண்டாவது: இன்றளவும் திராவிட மொழி பேசும் மாநிலங்கள் பல அம்சங்களில் பொதுமைத் தனமை உடையவையாகவே தொடர்கின்றன. இப்பகுதிகளில்தான் பா.ஜ.க இன்றளவும் பெரிய அள்வில் தம் செல்வாக்கை வளர்க்க இயலவில்லை. மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 2 சத அளவே அவர்கள் உள்ளனர்.

மூன்றாவதாக: இப்பகுதிகளில்தான் வடமாநிலங்களைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி, Human Development Index ஆகியன வடமாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. குழந்தை இறப்பு வீதம் குறைவாக இருத்தல் என்பனபோன்ற பல அம்சங்கள் இதில் உள்ளடக்கம். நீண்ட காலமாகவே திராவிட மொழிப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிறபடுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இதன் அடிப்படை.

நான்காவதாக: இன்று பாஜக கொண்டுவர முனையும் மாட்டுக்கறித் தடை பிரச்சினையிலும் திராவிடமொழி பேசும் மாநிலங்களில்தான் கடுமையான எதிர்ப்புகள் அலைமோதுவதையும் நாம் இணைத்துக்கொள்ளலாம்.

எனவே திராவிடநாடு எனும் அடிப்படையில் இப்படியான ஒரு அடையாள உருவாக்கம் புத்தியிர்ப்புப் பெறுவது முற்றிலும் நியாயமானது, வரவேற்கத் தக்கது” என்றேன்.

திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை எதிர்த்துத் தீவிரமாகப் பேசிய குழுக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனீயத்தைப் புகழும் இழிநிலைக்குத் தாழ்ந்து கிடப்பதையும் (எ.கா மணியரசன் போன்றோரின் இயக்கங்கள்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடநாடு‘ என ‘ஹேஷ் டாக்’ குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸின் முகநூல் பதிவு.

 

சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது; கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது.

இந்நிலையில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக்கூறி அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. அதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். சுகேஷ் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக‌ டிடிவி தினகரன் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இத்தகையதொரு சூழ்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் முயற்சிகளை எடுத்தனர். ஓ.பி. எஸ் அணியினரும் இணங்கி வந்தனர். பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி இருந்துவந்த நிலையில், டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட பிறகு அதிமுக தலைமையகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கும் முன் தலையகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா, டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை பற்றி ஊடகங்களில் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் சுபமுகூர்த்த நாளில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காத்திருந்தோம் என பேசினார்.

அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!

சரவணன் சந்திரன்

 

சரவணன் சந்திரன்

குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை விடுவித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யத் தெரியாது குரங்கிற்கு. அது பழத்தையும் விடாமல் கையையும் வெளியே எடுக்காமல் மாட்டிக் கொள்ளும். விகடனில் ஹாசிப்ஹான் கருத்துப் படத்தைப் பார்த்துவிட்டே இந்தக் குரங்கு உதாரணத்தைச் சொல்கிறேன். பழத்திலிருந்து கையை எடுக்கிற புத்தி வாய்க்காத நிலையில் அவை படும் பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

அதேநிலைதான் தமிழக அரசியலிலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தனியாய் நின்று கம்பு சுற்றி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றத் திராணியில்லாத நிலையில் ஓபிஎஸ் அணி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கௌரவர்கள் போல அவர்கள் ஒன்றாக அணிவகுத்திருக்கிறார்கள். இவர்கள் பாண்டவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு தர்மயுத்தம் அதர்ம யுத்தம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாரதியார் பாடல்களில் இருந்து தர்மம் மறுபடியும் வெல்லும் என்கிற வரிகளை மட்டும் நீக்கி விட்டால் நல்லது என்று தோன்றுகிறது. இவர்களின் தர்மமெல்லாம் பல்லிளிக்கிறது.

கடந்த வாரம் முழுக்க தமிழகத்தின் பல ஊர்களில் பயணம் செய்த போது மக்களிடம், தர்மயுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது கேப்டன் நடித்த படமா என்று கேட்கிறார்கள். மக்களுக்குத் தெளிவாக எல்லாம் தெரிந்திருக்கிறது. நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த ஆட்டை சீக்கிரம் கலைந்து விடும் என்பதும் புரிந்திருக்கிறது. சசிகலா வகையறாக்கள் எதிரிக்கு இருபது கண்ணும் போகணும் என கண்டிப்பாகச் செயல்படுவார்கள் என்பது தெரிந்த கதைதான். அப்புறம் இன்னொரு கோணத்தில் கேட்கிறேன். தினகரனை அழைத்து நீ வேண்டாம்ப்பா என்று சொன்னால், உடனடியாக சரியென்று சொல்லி விடுவது ஒரு தலைவனுக்கு அழகா? அவருக்கே, நாம் செய்வது தர்மமில்லாத வேலை என்று புரிகிறது. அதனால்தான் பம்முகிறார். கைவிலங்கை வாசலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, என்னப்பா சமாச்சாரம் என்று கேட்டால், நான்கூட பல்டி அடித்து விடுவேன். எடப்பாடியார் ஒரு படி மேலே போய் காரிலிருந்த சைரனை அவரே அகற்றிக் கொண்டிருக்கிறார். சொன்னால் ரெண்டு நிமிஷத்தில் ஆட்கள் அகற்றித் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் அகற்றியதன் வழியாக கையில் தலை வைத்துக் கும்பிட்டதை மறுபடியும் செய்து காட்டியிருக்கிறார்.

இந்த எபிசோடில் தினகரன் மறுபடி மறுபடி சொல்வது, எதற்காகவோ பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை. உண்மைதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லா தலைகளையும் மறைமுகமாக மிரட்டுவதன் வழியாக தோதான ஆட்சியை உருவாக்க பிஜேபி முயல்கிறது. இதற்கு ஓபிஎஸ் துணை போகிறார். சரிக்குச் சரியாக மோதுவதுதான் பந்தயம். ஆனால் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை மிரட்டுவது சரிக்கு சமமான பந்தயம் இல்லை. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இதைச் செய்திருக்கின்றன என்பதால் இதைப் பெரிய விஷயமாகக் கருத முடியாது. ஆனால் இன்னொன்றை உரக்கச் சொல்ல முடியும்.

இவர்கள் அரசியல் செய்து பழக்கப்படாதவர்கள். ஆடு ராமா என்றால் ஆடிப் பழக்கப்பட்டவர்கள். பாடு ராமா என்றால் படுத்தே விடுவார்கள். நுணுக்கமான அரசியலை இதுவரை அவர்களின் தலைமை செய்ய விட்டதே இல்லை. ஒருசிலர் செய்திருக்கலாம். இப்போது எல்லோருடைய கைவிலங்குகளும் அறுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் குழப்பங்களும் சந்தேகங்களும் அலங்கரிக்கிற சபையாக அது இருக்கிறது. இவர்களுக்கு கம்பிக்குள் கையை விட்டு பழத்தில் கைவைக்க மட்டுமே தெரியும். கையை உதறி பழத்தை விடுவித்து விட்டு, சுதந்திரமாக காட்டுக்குள் ஓடத் தெரியாது. அப்படி ஓட அவர்கள் பழக்குவிக்கவும் படவில்லை. மாட்டிக் கொள்வார்கள் சிக்கிரமே. அது தெரியாமல் நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”

அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார்.

மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை எடுத்துவிடுங்கள் என ஜெயலலிதா சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.

 

இளம் ஜோடிகளை தெருவில் ஓடவிட்டு அடித்த காவிகள்: பெண்கள் தினத்தில் கேரளாவில் நடந்த அவலம்…

பெண்கள் தினமான நேற்று, கொச்சியின் மிகப் பிரபலான மெரைன் ட்ரைவில், “குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்” என்று எழுதப்பட்ட பேனர்களுடன் வலம் வந்த சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள், அங்குக் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளைச் சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், கையில் பிரம்புடன் பெண்களின் பின்னால் சென்ற அந்த அமைப்பினர், அவர்களிடம் மிக மோசமான வசைகளை உதிர்த்ததுடன், அந்தப் பிரம்பினால் அவர்களை அடித்து விளாசியுள்ளனர்.

moral-police-kochi-shiv-sena.jpg.image.784.410.jpg

இதைத் தடுக்க வேண்டிய போலீசார், கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன், சிவசேனா கட்சியினரின் தங்களின் அராஜகங்களை அரங்கேற்றி கொள்ளவும் அனுமதி அளித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குப் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த சுமார் பத்து போலீசார் பணியிட மாற்றம் செய்யபப்ட்டுள்ளனர்.

moral-police-shiv-sena-kochi.jpg.image.784.410.jpg

சிவசேனா அமைப்பின் இந்த அராஜகம் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் “கலாச்சார காவலர்களுக்கோ, ரவுடித்தனத்திற்கோ இடமில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காவலர்களின் லத்தி என்பது இது போன்ற நபர்களுக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவுக்கு நேர்ந்த அவமானம் இது என்று சுட்டிக்காட்டியுள்ள பினராயி விஜயன் “பெண்களை அடிமைபப்டுத்தியே வைத்திருக்க விரும்பும் ஆணாதிக்கத்தின் வழியில் செயல்பட இது போன்ற மனிதர்கள் விரும்புகிறார்கள். பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கவே இவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஒன்றாக காபி அருந்திக்கொண்டிருக்கும் இளைஞி, இளைஞன் , ஒன்றாக பயணிக்கும் இளைஞி, இளைஞன் , ஒன்றாக பணிபுரியும் இளைஞி, இளைஞன் மீது வன்முறையை பிரயோகித்த மனிதர்கள், மனதளவில் ஊனமுற்றுவர்கள். இன்றைய காலகட்டத்தில் கலாச்சார காவல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பினராயி கூறியுள்ளார்.

‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்திலிருந்து வந்தவன் என்றும் பாராமல் திமுகவினர் நடந்துகொண்டதாக தெரிவித்த கருத்துகள் விவாத்தை கிளப்பியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வாக்குவாதத்திலும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையை 1 மணிக்கு ஒத்திவைத்து கிளம்பினார் சபாநாயகர். சபாநாயகரை அங்கேயே இருக்கும்படி திமுக எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தினர். அவைக்காவலர்கள் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் தன் சட்டை கிழிந்ததாக சபாநாயகர் தெரிவித்தார். அவையில் திமுக எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்ட விதத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குச் சென்று வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் அவை கூடியது. அமளியில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். வெள்ளை சீருடை அணிந்த காவலர்கள் அவர்களை வெளியேற்ற முற்பட்டனர். அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. மு. க. ஸ்டாலின் அவைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரையும் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். சட்டை கிழிந்த நிலையில் சட்டப்பேரவைக்கு வெளியே வந்த மு.க. ஸ்டாலின் தான் தாக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டு நீலிக் கண்ணீர் வடித்தார் எனவும் கூறினார்.

அவையில் திமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற பின் நடந்த வாக்குப் பதிவுக்குப் பின் பேசிய சபாநாயகர் தனபால், ‘தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற சம்பவங்களை மறந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாக சட்டப்பேரவைக்கு வெளியே புகார் கூறியுள்ளார். இதனால் வேதனையுடன் ஒருசில விஷயங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக கூறினார்.

‘மிக மிக தாழ்த்தப்பட்ட, சாமானிய எளிய குடும்பத்தில் இருந்த தன்னை பள்ளத்தில் இருந்து தூக்கி தொடர்ந்து இரண்டாவது ஆவது முறையாக இப்பதவியில் அமர்த்தியது ஜெயலலிதா தான்’ என கூறிய அவர்,

“சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த, இந்த எளியவனை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தி ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவ்வாறு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த நான், அவை விதிகளுக்கு கட்டுப்பட்டு ஜனநாயக மரபுகளை கடைபிடித்து பேரவையை நடத்தியதால் தான் மீண்டும் இந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் இங்கே திமுக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதலை நடத்தியிருந்தால் கூட கவலைபட மாட்டேன். பேரவைத் தலைவர் முறையில் நான் பணியாற்றுகையில் அந்த பதவிக்கு மரியாதை தராமல், நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் நடந்துகொண்டது அவர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகமாகவே கருதுகிறேன்.

ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட இன மக்களை அடக்கிவிடலாம், இந்த சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுக-வினர் செயல்பட்டு இருப்பாராயின் உண்மையில் நான் சாந்துள்ள சமுதாயத்தின் சார்பில் தனபால் என்னும் தனிமனிதனாக அதனை என்றென்றும் எதிர்க்க கடமைப்பட்டிருக்கேன்.

சுதந்திரம் பெற்று, 69 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த சமூகம் முன்னுக்கு வரக் கூடாது. இந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் யாரும் உயர்பதவியில் இருக்கக் கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடகவே இங்கே நடைபெற்ற குழப்பத்தை கருதுகிறேன்” என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சபாநாயகரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து திமுக துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி, அறிக்கை வெளியிட்டார். அதில், தி.மு.க‌.வை தாழ்த்தப்பட்டோரின் விரோதி என சபாநாயகர் தனபால் கூறியதை, தாழ்த்தப்பட்ட மக்களே மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘சட்டமன்ற ஜனநாயகத்தில் கருப்பு நாள் ஒன்றை உருவாக்கி மரபுகளையும், நெறிமுறைகளையும் சபாநாயகர் தனபால் புதைகுழிக்கு தள்ளியுள்ளார். தாழ்த்தப்பட்டவன் ‌என்பதால்தான் தன்னை அவமதிக்கிறார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை தனது பதவிக்குரிய கண்ணியத்தையும் மறந்து தி.மு.க மீது சுமத்தியிருப்பதற்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

சபாநாயகர் கண் முன்னே, கா‌வலர்களால் எழும்பூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் தாக்கப்பட்டார். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகர் தான் முழு பொறுப்பு. சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாவிட்டால், சபாநாயகர் பதவியிலிருந்து தனபால் ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் தனபாலின் ‘தாழ்த்தப்பட்ட’ கவசம் குறித்து கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் மதிவாணன்:

தனபால் அவர்களுக்குக் கடைசியாகத் தான் அருந்ததியர் என்பது நினைவுக்கு வந்து விட்டது.

அருந்ததியர்களின் “நலம்விரும்பி”களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்ணீருடன் கை தட்ட, தாம் அருந்ததியர் என்பதற்காக அவமானப்படுத்தப் பட்டதாகக் கூறியிருக்கிறார்.

உங்கள் கட்சியையும் ஆட்சியையும் கடைசியில் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?

இவ்வளவு நாள் அருந்ததியருக்கான நலன்களை முன்னிறுத்திதான் உங்கள் ஆட்சி நடந்தது என்பதை எடப்பாடியின் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கும் போலீஸ் வேலையிலிருக்கும் அருந்ததியரின் புலம்பல் தமிழக வீதிகளில் அநாதையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

“என்னைப் பார்க்க கட்சிக் காரர்கள் வரலாம். அருந்ததியர் என்ற என் சாதிக்காரர் யாரும் வரக்கூடாது” எனச் சொன்ன தனபாலுக்கு இந்நேரம் எங்கள் சாதி தேவைப் படுகிறதோ? சாதிவெறிக் கவுண்டர்களுக்கு எப்போதும் போல எம்மக்களை காட்டிக்கொடுக்கப் போகும் தங்களுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள் !

எழுபத்தேழாம் ஆண்டிலிருந்து ரெண்டாயிரத்து பதினெழு வரையான (1977-2017) நாற்பது ஆண்டுகளில் ஐந்து முறை சமஉ/ MLA வாகவும் ஒருமுறை மந்திரியாகவும் இருந்த காலங்களில் இந்த பாவப்பட்ட சாதிக்குத் தாங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

உங்கள் பிரச்சனையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் சாதி என்ன உங்களுக்கு என்ன ஊறுகாயா?

சுபா உலகநாதன்:

தனபாலை சபாநாயகராக நியமித்ததே இப்படி இக்கட்டான சூழலில் தலித் என்று சொல்லி ஆட்சியாளர்கள் மீதுள்ள கரையை துடைப்பதற்கே. நாமும் உணர்வு பூர்வமாக மட்டுமே அணுகக் கூடியவர்களாக இருக்கிறோம்.

தற்போது தனபாலை நாம் ஆதரித்தால் அ.தி.மு.க.வினர் என்ன காரணத்திற்காக அவரை நியமித்தார்களோ அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். தனபாலை ஆதரிக்க வேண்டாம் என்பதால் அதை தி.மு.க.விற்கு ஆதரவாக எடுத்துக்கொள்ள முடியாது.

திமுக வும் அதே காரணத்திற்காக துரைச்சாமியை துணை சபாநாயகராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. எப்படியாக திமுக ராசாவை ஊழல் வழக்கில் மாட்டிவிட்டு தலித் என்பதால் திட்டமிட்டு பொய்வழக்கு போட்டு விட்டதாக கலைஞர் கூறினாரோ, அதே போன்ற நிலைதான் தனபால் சூழலும்.

தனபாலோ, துரைச்சாமியோ தனக்கு கிடைத்த சபாநாயகர் பதவியை வைத்து இந்த சமூகத்திற்கு ஒன்று செய்துவிட்டதாக இல்லை. நமக்கு பிரச்சினை வரும் போது அவர்கள் வீதிக்கு வந்த நிகழ்வுண்டா? அதே போன்று அவர்களுக்காக நாம் துயரப்பட வேண்டிய அவசியமில்லை.

வள்ளியூர் அருகே மகாராஜா என்ற அருந்ததியர் சமுதாய மாணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டது இங்கு அநேகருக்கு மறந்திருக்கலாம். ஆனால் அந்த மாணவன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது பேச அனுமதி மறுத்தவர் தான் அதே அருந்ததியர் சாதியை சார்ந்த இந்த தனபால்.

அருந்ததியர் என்று சாதியை குறிப்பிட்டு பேசுவது தவறு என்றாலும் சொல்ல வேண்டிய கட்டாயம் தற்போது.
மன்னிக்கவும் !

அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!

சி. மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது சாட்டப்பட்ட குற்றங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டுகிறது.

ஆனால், கண்ணுக்குத் தெரியாத மற்றொரு அம்சம் இருக்கிறது. தமிழகத்தின் சாதிகளைப் பயன்படுத்தி, அந்த சாதிகளில் உள்ள முன்னேறிய ஆட்களை தன் பிடிக்குள் கொண்டுவந்து கொள்ளையடிக்க அனுமதித்து கமிஷன் பெறுவது ஜெவின் வழிமுறை. (திமுக உள்ளிட்ட கட்சிகளும் இதுபோன்ற சாதி வழிமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.)

தமிழக அமைச்சரவையின் தற்போதைய நிலையைப் பார்ப்போம்.

கவுண்டர் சாதியைச் சேர்ந்த 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 5. (அதாவது ஏறக்குறைய 6 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

தேவர் சாதியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 9.(அதாவது ஏறக்குறைய 2 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

வன்னியர் சாதியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 5. (அதாவது ஏறக்குறைய 4 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

தலித் சாதிகளைச் சேர்ந்த 31 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 3. (அதாவது ஏறக்குறைய 10 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்)

பிற சாதிகளைச் சேர்ந்த 32எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் மந்திரிகளின் எண்ணிக்கை 10. (அதாவது ஏறக்குறைய 3 எம்எல்ஏவுக்கு ஒரு அமைச்சர்) (இச்சாதிகளில், மீனவர், நாயுடு நாடார் போன்ற சாதிகள் அடங்கும்)

கவனித்துப் பார்த்தால், தமிழகத்தின் ஆதிக்க சாதிகளாக இருக்கும் சாதிகளான தேவரும், கவுண்டரும் அதிக இடத்தைப் பெற்றிருப்பதையும், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் கொண்டிருந்தும் மிகக் குறைந்த மந்திரிகளைப் பெற்றிருப்பதையும் பார்க்க முடியும். இந்த நிலையில் தனபாலுக்கு பதவி கொடுத்தது பற்றி பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

தலித்துகளை சமூக விரோதிகள் என்று சட்டமன்றத்தில் சொன்ன ஜெ, தன்னை ஒரு பெருமைமிகு பார்ப்பனப் பெண் என்றும் சொல்லிக்கொண்டார்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணை கொன்றவன் என்று தலித் இளைஞன் ஒருவனைப் பிடித்து கொலை செய்ய வேகம் காட்டிய ஜெ அரசு, நந்தினி, அதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட தலித் பெண்கள் குறித்து, ஆணவக் கொலைகள் குறித்து காட்டிய ஆமை வேகமும், காவல்துறை அதிகாரி விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம் மூடி மறைக்கப்பட்டது குறித்த செய்திகளையும் நாம் அறிவோம். அரசின் இச்செயல்பாடுகள்/ செயலின்மைகள் சாதிக் கட்டமைப்பின் அதிகாரம் ஆட்சியைக் காட்டுவதாகவே உள்ளது.

ஆக, சாதிக் கட்டமைப்பை சட்டமன்றத்துக்கு உயர்த்தி, முதலாளிகளுக்குச் சேவை, ஆதிக்க சாதிகளின் செல்வாக்கு மிக்க நபர்களைக் கையில் வைத்துக்கொண்டு வோட்டுகளைக் கைப்பற்றுவது, கொள்ளை அடிப்பது என்பதுதான் ஜெயலலிதா கண்ட ”கொள்கை”.

அப்படி கொள்ளையடித்து மாட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தப் போகிறோம் என்றுதான் ஓபியும் எடப்பாடியும் சொல்கின்றனர்.

சமூக நீதி விரும்புபவர்கள் அதற்கு வழிவிடலாமா?

சி. மதிமாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்

அருண் பகத்

அருண் பகத்
அருண் பகத்

அ.தி.மு.க அதிகாரம் திணறிச் சிதறிக் கொண்டிருக்கிறது. குனிந்து குனிந்து திருடித் தின்ற அடிமை எம்.எல்.ஏ க்களும் , பல மா.செ க்களும் , கவுன்சிலர்களும் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள். கையில் தற்போது இருக்கும் கனமான பொட்டியும் ,அரசியல் எதிர்காலம் குறித்த கவலையும் ஒன்றோடொன்று கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசியலில் எளிதாக காய்களை நகர்த்திய பார்ப்பன லாபி திடீரென மாயமாகிப் போனதில்.. கொள்கைகளற்ற , அரசியலற்ற ஒரு அதிகார மமதைக் கட்சி , அரசியல் சதுரங்கத்தில் கடும் கட்டம் கட்டலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

திமுக அளவுக்கான ஜனநாயகமோ , அரசியல்படுத்தலோ கூட இல்லாமல்.. நீண்ட நாள் aeroplane mode ல் இருந்த அடிமைக்கூட்டத்தின் மூளைகளுக்கு , இப்போது சுய சிந்தனை signal கள் கிடைப்பதில் இயற்கையாகவே தடைகள் ஏற்படுகிறது.

டி.டி.வி தினகரனிடம் சரணாகதி அடைவதற்கும் , அவருக்கு டைட்டில்கள் சூட்டுவதிலும் , புதிய அருள் கிரக பார்வைக்கு தவமிருப்பதிலும் மகிழ்ந்து போக அடிமைத் திருடர்கள் தயாரய் இருந்தாலும்.. திருட்டையும் , நக்கிப் பிழைத்தலையுமே வாழ்வாக வைத்திருக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை , பாகிஸ்தானின் ரானா பந்துவீச்சை சிதறடிக்கும் சேவாக்கைப் போல்.. வெகு சுலபமாக சிதறடிக்கிறது மத்திய பா.ஜ.க.

சசி , எடப்பாடி , டி.டி.வி என்று அவர்களது எல்லா நம்பிக்கைகளையுமே ஓ.பி.எஸ் மூலமாகவும் ஆளுனர் மூலமாகவும் எள்ளி நகையாடுகிறது மத்திய பா.ஜ.க.

சின்னம்மா என்று கதறுவதும் , டி.டி.வி அய்யா என உருகுவதுமான காட்சிகளுக்குள் அடிமைக் கூட்டத்தால் கரைந்து போக முடியாதளவுக்கு அரசியல் காய் நகர்த்தல்கள் கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.

மதவாதம் போன்ற கேவலமான கொள்கைகள் கூட அற்று… வெறுமே காட்டிக் குடுப்பது , ஜால்ரா அடிப்பது , நக்கிப் பிழைப்பது , திருடித் தின்பது மட்டுமே அரசியல் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிற அடிமை ஜந்துக்களால்.. தமிழகத்தைப் போன்ற சுரண்டல் ஊற்றெடுக்கிற , அரசியல் பிரஞ்கை பெரிதுமற்ற மக்களைக் கொண்ட சமூக அமைப்பில் கூட survive பண்ண முடியாது என்பதைத் தான் நடப்பு நிகழ்வுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில்.. சீழ்படிந்த சமூக அமைப்பின் பொது உளவியலுக்குள்ளேயும் மாற்றத்திற்கன ஏக்கம் தகித்துக் கொண்டெ இருக்கிறது. அந்த ஏக்க சிந்தனை அரசியல்படாமல் மந்திரத் தருணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . ஜல்லிக்கட்டுப் புள்ளியில் பெரும் Mass இப்படியே கூடியது.. பின்னர் அது ஆக்கப்பூர்வமான் அரசியலை நோக்கி நகர்ந்தது வேறு விவாதம்.

அத்தகையதொரு மந்திரத் தருணமாய் தான் தற்போதைய சூழலை பொது உளவியலின் பெரும்பான்மை பகுதி பார்க்கிறது. சீழ்படிந்த சமூக அமைப்பு முறைக்குள் அதற்கு எதிராக எழுகும் எதிர்விசை , அப்பல்லோ குழப்பத்தையும் சேர்த்து தற்போது மொத்தமாக சசி மீது மையம் கொண்டிருக்கிறது.

இச்சூழலை புரியத் திராணியின்றி.. மக்களையும் தொண்டர்களையும் மிக மலிவாக எடை போட்டு , திருட்டு நிர்வாகிகளை மட்டுமே கருத்தில் கொண்ட சசியது நகர்த்தல்களின் எதிர்வினையை மிக லாவகமாக பயன்படுத்திக் கொள்கிறது பா.ஜ.க .

மக்களுக்கான அரசியல் கொஞ்சமுமற்ற அடிமைத் திருட்டுக் கூட்டத்தின் நகர்வுகள் இவ்வாறாக மட்டுமே இருக்க முடியும். அதன் சிதறல்களும் இவ்வாறாகவே இருக்க முடியும் , சீரழிவுகளும் இவ்வாறாகவே இருக்க முடியும் , அதன் அழிவும்.. மிக அருகிலேயே இருக்கிறது என்று புரிந்துக் கொள்வதில் துளியும் மிகை இல்லை.

தங்களை சிதறடிக்கும் ஒரு பாசிச எதிரியை எதிர்கொள்ளக் கூடிய அரசியலும் , கொள்கையும் , ஜனநாயக உணர்வும் கொஞ்சம் கூட இல்லாத.. வெறும் பேனர்களில் ஜால்ரா அடிப்பதும், நிலங்களில் கொள்ளை அடிப்பதும் என்று மட்டுமே இருந்த கூட்டம்.. தங்கத்தாரகை இருந்தபோதெல்லாம் அடித்த கூத்துக்கான எதிர்வினையை காலம் இப்போது எள்ளலோடு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அழிவில் பா.ஜ.க அறுவடை செய்யப் பார்க்கிறது.. ஆனால்..

ருத்ரா என்கிற பாக்யராஜ் படத்தின் இறுதி சண்டைக் காட்சியில்.. ‘அட்டை டப்பா குவியலுக்கு அடியில் சென்று விட்ட துப்பாக்கியை எடுக்க நெடு நேரமாக டப்பாவை எடுத்து வைத்துக் கொண்டிருப்பான் வில்லன் … துப்பாக்கி தென்பட்ட நேரத்தில் பாக்யராஜ் வந்து அத்துப்பாக்கியை எடுத்துச் செல்லும் நகைச்சுவைக் காட்சி வரும்..

அது போல பா.ஜ.க தனது கனவோடு அதிமுக என்கிற வெத்து பெருங்காய டப்பாவை பிரித்து மேய்கிறது. இந்த சிதறடித்தலில் ஏற்படும் வெற்றிடத்தை… முற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க வை கோமாளியாக்க வேண்டும்.

அதி நுட்ப அரசியல் செய்யும் பா.ஜ.க , அதன் பலனை அறுவடை செய்யாமல் கோமாளியாவதற்கு வாய்ப்புண்டா ??

உண்டு நிச்சயம் உண்டு.. ஏனெனில் இது பெரியார் , ஜீவா அவதரித்த தமிழ் பூமி.

அருண் பகத், குறும்பட இயக்குநர்.

முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் ‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற போக்கில் தி.மு.க. மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை திருமதி சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்து கொள்ள வேண்டும்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் திருமதி சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா?

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தது, அவர் திடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, அம்மையார் ஜெயலலிதாவின் பூத உடலின் அருகில் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடு மட்டுமே! அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், அதே அரசியல் நாகரீகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது ஒரு வேளை திருமதி சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது. ஆகவே அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப் பார்த்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது. அதை விட தனது எடுபிடியாக இருக்கும் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை மூலமாக ஒரு பேட்டி கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” கேவலமான செயல் என்பதை திருமதி சசிகலா நடராஜன் உணர வேண்டும்.

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு தி.மு.க.வை சீண்ட வேண்டாம் என்று திருமதி சசிகலா நடராஜனை எச்சரிக்க விரும்புகிறேன். அமைச்சர்களை வைத்து, பாராளுமன்ற துணை சபாநாயகரை வைத்து, அதிகார பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” இதழை வைத்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அவமானப்படுத்தியது திருமதி சசிகலா நடராஜனும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தானே தவிர தி.மு.க. இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய திருமதி சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும் இப்போது முதலமைச்சரையே மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத திருமதி சசிகலா நடராஜன் முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலைத்த ஆட்சியின் சக்கரம் தடுமாறி நிற்கிறது.

இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர் மறைந்த பிறகு செயல்பட விடாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசால் இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து கிடக்கிறது. ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் பொறுப்பு ஆளுநர் அவர்கள் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை பாதுகாக்க நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.

சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்…

LR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் மட்டுமே விமர்சித்தனர். இன்று ஜெயலலிதாவின் கால்நூற்றாண்டுகால உடனுறை தோழியாக ஒரே வீட்டில் வாழ்ந்த, அதிமுக என்கிற கட்சியிலும் அதன் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்து 28 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சசிகலா முதல்வராகும்போது கால்நூற்றாண்டுகாலம் அதிமுகவைத் தாங்கிப்பிடித்தவர்களும் அந்த கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்களுமே “தமிழக அரசியலின் தரம்” அதளபாதாளத்தில் விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள். குமுறுகிறார்கள். நல்லது. ஒப்பாரி ஓய்ந்த பிறகாவது ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்தபோது அவருக்கிருந்த எந்த தகுதி, தராதரம் மற்றுமுள்ள வேறுபல “திறன்கள், தகைமைகள்” இன்று இவர்கள் சசிகலாவிடம் காணாமல் தவிக்கிறார்கள் என்று பட்டியலிட்டால் மற்றவர்கள் தெரிந்து தெளிவடைய உதவியாக இருக்கும். நடுநிலை நல்லவர்கள் அந்த திறனாய்வுப்பட்டியலை வெளியிட்டு தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் மேம்படுத்த உதவுவார்கள் என்று நம்புவோமாக. சந்தடி சாக்கில் ஓபிஎஸ் நல்லவர் வல்லவர் என்கிற குட்டிக்காமெடியன்கள் வேறு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வடிவேலு படத்தின் ஓரமாக வரும் சந்தானத்தின் “சின்னப்புள்ளத்தனம்” மாதிரி. தம்பிகளா ஓரமா இருங்க. ஓடறது வைகைப்புயல் படம். உங்களுக்கு இதில் எந்த ரோலும் இல்லை.

மற்றவர்களின் “அதிர்ச்சி”யை கூட புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஊடகத்துறையினர் வெளிப்படுத்தும் “அதிர்ச்சி” தான் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வஸ்துவாக படுகிறது. ஐயா ராசா, அம்மா ராசாத்தி அம்புட்டு வெள்ளந்திகளா நீங்க? உண்மையை சொல்லுங்க, இது நடக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்லையா? ஏறக்குறைய எல்லோருக்குமே தெரிந்த, எல்லோருமே எதிர்பார்த்த ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது “அதிர்ச்சியடையவும் அறச்சீற்றம்” கொள்ளவும் என்ன இருக்கிறது? இன்றைய நிலைமைக்கும் நிகழ்வுக்கும் வெறும் கட்சி அரசியல் மட்டுமேவா காரணம்? காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட “நம்மினத்தின் நடுநிலைப் பங்களிப்பு” கொஞ்சமா நஞ்சமா? நாமே பங்கேற்று உருவாக்கி வளர்த்துவிட்ட ஒரு நாடகம் அரங்கேறும்போது அதன் ஒரு காட்சியில் திடீரென தோன்றி “அதிர்ச்சி”யடைவதாக நடிப்பதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? நம் “நடுநிலைக்கு” அது இழுக்கில்லையா? உடனே ஊடகங்களுக்கே உரிய default நிலைக்கு திரும்புங்கள். காரணம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போனபோது அதிமுக அமைச்சர்கள் அழுத அழுகையைவிட இன்றைய ஊடகத்துறையினரின் திடீர் குபீர் “அதிர்ச்சி” மிகப்பெரிய நாடகத்தனமாகபடுகிறது. அவ்வளவு செயற்கை. அஜித் நடிப்பைப்போல…

Yamuna Rajendran: லிபரல் ஜனநாயகத்தில் யார் பலம் வாய்ந்தவர்கள் மக்களா அல்லது லிபரல் ஜனநாயக நிறுவனங்களா எனும் விவாதம் உலக அளவில் நடந்துவருகிறது. கிரேக்கத்தில் வெகுஜன வாக்கெடுப்பின் ஒப்புதலைப் புறக்கணித்து ஐஎம்எப்-ஐரோப்பிய வங்கி-கார்ப்பரேட்டுகள் கூட்டமைப்பு அம்மக்களின் மீது நிதிவெட்டுக்களைச் சுமத்தியிருக்கிறது.வெகுமக்கள் வாக்கெடுப்பின் பயனாக விளைந்த பிரிக்சிட் விவகாரத்தில் பாராளுமன்றமே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது என்கிறது பிரித்தானிய நீதியமைப்பு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநிதிமன்றத் தீர்ப்புக்கு ஏன் தமிழக அரசு சவாலாகத் திகழ்கிறது என உச்சநிதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்திருக்கிறது. தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு வெகுமக்கள் எழுச்சி காரணம் என்பதை அறிக. மக்களது விருப்பம் எங்களுக்கு எதற்கு என அதிமுக எம்எல்ஏக்கள் தமது முதலமைச்சரைத் தேர்தெடுத்திருக்கிறார்கள். குடிமைச் சமூகமா, பாராளுமன்ற அதிகார நிறுவனங்களா, உச்சநீதிமன்றம் எனும் அமைப்பா எனும் கேள்வி நம் காலத்தின் மிக முக்கியமான கேள்வி. குடிமைச் சமூகம், தமது அதிகாரத்தின் பொருட்டுத்தான் அனைத்தும் என நிறுவ வேண்டிய நேரம் இது..

Arul Ezhilan : சசிகலா முதல்வராவதால் சிலர் பதட்டமடைவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது!

Su Po Agathiyalingam: பொங்குவோரே ! கவனம் ! யாரைப் பொதுச் செயலாளர் ஆக்குவது என்பது அக்கட்சியின் உள்விவகாரம் ; யாரை முதல்வராக்குவது என்பது பெரும்பான்மை பெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை ; அங்கீகரிப்பது சட்டத்தின் கடமை ; ஆட்டிப்படைப்பது சுரண்டல் கூட்டத்தின் வேலை ; அனைத்தையும் ஏற்க மறுப்பதும் திமிறி எழுவதும் சுயமரியாதையுள்ளோரின் உரிமை ; காலம் விடுத்துள்ள கட்டளை

Sap Marx: சசிகலா உறுதி

அம்மா வழிநடப்போமாம்-ஆற்றுமணல் தாதுமணல் கிரானைட் வனமரக்கொள்ளை லஞ்ச ஊழல் தொடரும் என்பது -சர்வாதிகாரியாய் இருந்தது–தமிழக மக்களை நாலுலட்சம்கோடி கடனாளியாக்கியது இவைதான் தொடருமோ??

ஜோ ஸ்டாலின்: தமிழகத்தின் நாலரைச் சசி : எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதில் எம்.ஜி.ஆர் தப்பி பிழைத்தது எம்.ஜி.ஆரின் அதிஷ்டம். எம்.ஆர்.ராதா சரியாக குறிபார்த்து சுடத் தவறியது, தமிழகத்தின் துரதிருஷ்டம். அப்போது தமிழகத்தை பீடித்த சனி, ஏறத்தாழ 40 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்தக் கேடு தொடரும். அல்லது அதிகபட்சமாக வரப்போகும் நாலரை ஆண்டுகளும் இந்த ஏழரை சனி நீடிக்கலாம்.

Senthil Kumar:  முதல் முறை ராஜிவ் காந்தி மரணமும் இரண்டாவது முறை மிகப்பெரிய கூட்டணி பலமும் மூன்றாவது முறை தேமுதிக வும் நான்காவது முறை திமுகவின் தவறான தேர்தல் அணுகு முறையும் தான் ஜெயலலிதாவை நான்கு முறை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது மற்றபடி எம்ஜியாரின் விருப்பத்திற்குரியவர் என்பதை தவிர ஜெயலலிதாவுக்கே எந்த அரசியல் தகுதிகளும் கிடையாது வரலாறே இப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் வருபவர்களிடம் அந்த தகுதியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் …

கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது என்று சொல்லி அமைதியாக ஏன் இருப்பதில்லை? மக்களின் நம்பிக்கைக்கு மக்களின் கொண்டாட்டத்திற்கு எதிராக இருப்பதாகச் சொல்லி களத்தில் இறங்குவதில்லையா?

அதைப் போலத்தான் சட்டப்படி சசிகலா முதல்வர் ஆவதைத் தடுக்க முடியாது. ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் கொல்லைப்புறம் வழியாக உடனடியாக முதல்வர் நாற்காலிக்கு நகர நினைப்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தார்மீக அரசியல்படி வலுவாக எதிர்க்கலாம். ஆனால் அதை அவர் செய்யத் தவறுகிறார். அவர் இந்த விவகாரத்தில் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துக்கள்கூட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சுட்டிக் காட்டியபின்பு சொன்னவையே. ராமதாஸிற்கு முந்திக் கொண்டு சில விசயங்களை அவர் சொல்லியிருக்கலாம். என் நினைவிற்கு அவை தப்பிக்கூடப் போயிருக்கலாம். அப்படியே ஸ்டாலினே முந்திக் கொண்டு சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும், அவை எல்லாமும் சாதாரண அடையாள ரீதியிலான எதிர்ப்பே தவிர, வலுவானது அல்ல.

ஒருவேளை இதுமாதிரியான நெருக்கடி தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு வந்திருக்குமேயானால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட இப்படித் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் நாற்காலிக்கு நகர்வது குறித்து அஞ்சத்தான் செய்வார்கள் என்பதுதான் என்னுடைய புரிதல். ஆனால் அதிமுக அது பற்றி எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாததற்குக் காரணம் என்னவெனில், எதிர்கட்சிகளின் செயல்படாத போக்குதான். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தார்மீக அழுத்தம் தரவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாகப் போய் 30 எம்.எல்.ஏக்களை மனோகரா பாணியில் கட்டி இழுத்துவரவெல்லாம் சொல்லவில்லை. உறுதியான ஒரு போர்க்குரல். அது ஏன் அவர் தரப்பில் இருந்து இன்னமும் வரவில்லை என்பதுதான் கேள்விக்குறி. அவர் இதுவரை எழுப்பியதெல்லாம் உறுதியானது என்று சொல்வார்களேயானால், இனி அவர்கள்தான் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மக்களின் நலன்களுக்கு எதிரான சட்டச் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதையும் கேள்விக்குட்படுத்துவதுதான் ஒரு உறுதியான எதிர்கட்சித் தலைவரின் நியாயமான செயல்பாடாக இருக்க முடியும். மக்கள் எதிர்பார்ப்பது இப்படியான போர்க்குரலைத்தான். காவிரி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதை எழுப்பும் போது, சசிகலா விவகாரத்தில் அதை எழுப்ப முடியாதா? எழுப்ப முடியாதளவிற்கு எது அவர்களைத் தடுக்கிறது? அந்தத் தடுக்கும் விஷயத்தைத் தகர்த்தெறியச் சொல்லித்தான் மக்கள் வேண்டுகிறார்கள். நமக்கு நாமே என மக்களை நடையாய் நடந்து சந்தித்தவர், அப்படி சந்தித்தவர்களில் ஒரு நாலு பேர் நம்பரையாவது வாங்கி வைத்திருக்க மாட்டாரா? ஓய்வாய் இருக்கும்போது அந்த நம்பர்களில் ஒரு சிலவற்றையாவது டயல் செய்து பார்க்கலாம். மிச்சத்தை அவர்கள் சொல்வார்கள். சொச்சத்தைச் செய்ய இவர்கள் விழித்தெழ வேண்டும்.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது.

கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் விரும்பமாட்டான்தான். அதுவொரு எரிச்சல். அதைத்தாண்டி, ஒரு அதிமுக தொண்டன், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வான் என்பதும் மிக சீக்கிரமாகவே அதற்கு பழகிக்கொள்வான் என்பதுமே உண்மை. அதிமுகவின் முந்தைய வரலாறு சொல்வதும் அதைத்தான்.

கட்சிக்குள் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சசிகலா விரைவாக உறுதிபடுத்திக்கொள்ள முயல்கிறார். அதனால் தான் ஜெயலலிதாவின் சமாதி முன்பு அவர் பவ்யமாக நின்று கொள்கிறார். சமாதியின் மீது மலர் தூவி விட்டு நகரும் கட்சியினர், அவரது காலில் விழுந்து எழுகிறார்கள். அதை அவரும் அசையாத மிடுக்குடன் ஏற்றுக்கொள்கிறார். அதிகார மாற்றம் அதிமுகவுக்கான பிரத்யேக வழியில் உறுதி செய்யப்படுகிறது.

அதிமுக ஒரு அரசியல் கட்சி என்பதை விட ‘அதிமுகயிசம்’ என்பதே மிகவும் சுவராஸ்யமானது. ‘ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்பதற்கு, எவ்வித அரசியல் அறிவும் தேவையில்லை’ என்பதை உறுதிபடுத்தியதன் வழியாக பெரும் மக்கள் திரளை கட்சிக்குள் ஈர்த்ததுதான் எம்ஜியாரின் வெற்றி. இதன் பொருள், அதிமுகவிற்கு அரசியல் இல்லை என்பதல்ல. அது கைகொள்ளும் அரசியலில் தொண்டனுக்கு எந்த பங்கும் தேவையில்லை என்பதே அது.

ஒரு அரசியல் தொண்டன் கொண்டிருக்க வேண்டிய ‘அடிப்படை அரசியல் புரிதல்’ என்னும் சுமையை இல்லாமல் ஆக்கியதன் வழியாக கட்சியினருக்கு விடுதலை வழங்கியவர் எம்ஜியார். அதனால்தான் அவர் புரட்சித்தலைவர். எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த புரட்சி அது. இதன் அடுத்த கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும் கூட அந்த சுமை தேவையில்லை என்பதை உறுதி செய்தவர் ஜெயலலிதா. புரட்சியின் அடுத்த கட்டம் அது. இந்த அரசியல் நீக்கம்தான் அதிமுகவின் பலம். அதுதான் ஒரு தலைமையின் முன்பு கேள்விகளற்று சரணடையும் பண்பாக, கட்சித்தலைவரை கடவுளாக்கித் தொழும் நிலையாக தொண்டனிடம் திரிந்தது.

இந்த மனநிலை, தொண்டனிடம் எவ்வாறு செயல்பட்டதோ அதற்கு நேர் எதிரான ஒரு ஆளுமையை தலைமையிடம் எதிர்பார்த்தது. ஆமாம். அதிமுகவின் தலைமை என்பது முழு சர்வாதிகாரத்தோடு மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அப்போதுதான் ஒரு தொண்டன், தலைமைக்கு விசுவாசமாக இருப்பான். தலைமையை நம்புவான். எளிய மக்களை அரசியல் ரீதியாக காயடித்துவிடுகிறபோது, அந்த இடத்தை தலைமையின் வசீகரத்தைக் கொண்டுதான் நிரப்ப முடியும். அதிமுகவில் நிகழ்ந்தது அதுதான்.

இந்த அரசியல் அற்ற மனநிலை, மூர்க்கத்தை ராஜதந்திராமாகவும், நிலபிரபுத்துவ மனநிலையை அன்பாகவும் வரித்துக்கொள்ளும். பெரும் மக்கள் திரளால் ஜெயலலிதா கொண்டாடப்படுவதன் அடிப்படை இதுதான். உறுதி செய்யப்பட்ட தொண்டனின் இந்த சரணாகதி மனநிலையை பூர்த்தி செய்யும் பண்பு யாரிடம் இருக்கிறதோ அவர்தான் அதிமுகவின் கட்சித்தலைமைக்கு வர முடியும். ஆக, சசிகலா தலைமைக்கு வருவதை எதிர்க்கும் அரசியல் ரீதியான பின்புலங்கள் எதுவும் அந்த கட்சிக்குள் இல்லை. மாறாக அவரை ஏற்றுக்கொள்ளும் கூறுகளே விரவிக் கிடக்கின்றன.

இந்த அம்சங்களைப் பற்றி பேசாமல் சசிகலாவை கடுமையாக விமர்சிப்பவர்களை நான் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். ஏனெனில் சசிகலா தலைமைக்கு வருவதை அல்ல, ‘சசிகலாக்கள் மட்டுமே தலைமைக்கு வர முடியும்’ என்பதை உறுதி செய்தது ‘ஜெயலலிதாயிசம்’ தான். சசிகலாவை ஊழல்வாதி என்று தூற்றும் அதே நேரத்தில் ஜெயலலிதாவை புனிதப்படுத்தும் வேலையை மறக்காமல் செய்கிறார்கள். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக செயல்படும் மூன்று முக்கியமான தரப்புகள் உண்டு. அவை என்ன?

முதலாவது, ஜெயலலிதாவை ‘உள் மனதில்’ தங்களது பிரதிநிதியாக வரித்துக்கொண்டிருந்த ‘பிராமணீய மத்திய தர வர்க்க மனநிலை’. இனி ஜெயலலிதாவைப் போன்ற ஒரு ‘bold lady’ பிறந்து தான் வர வேண்டும் என்ற அரற்றலாக அது முடிகிறது. திராவிட அரசியலில் எழுச்சிப் போக்கில் ஒதுக்கப்பட்ட ‘பிராமணிய மேட்டிமைத்தனத்தை’ ஜெயலலிதா கைவிடாமல் வைத்திருந்தார் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களால் ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை வைத்துப் பார்க்கமுடியவில்லை. அவர்களது பொருமலுக்குப் பின்னால் இருப்பது விழுமியங்கள் குறித்த கவலை அல்ல. சொந்த விழுமியங்களின் எதிர்காலம் குறித்த ஆற்றாமை.

இந்த இடத்தில் ‘பிராமணீய மனநிலை’ என்று சொல்வது குறியீடுதான். பொதுவான சாதிய மேட்டிமைத்தனத்துடனும் பொருத்திக் கொள்ளலாம். ‘சோ’ போன்ற வலதுசாரி அறிவுஜீவிகள், கண்மூடித்தனமாக ஆதரித்த பத்திரிகைகள், கண்ணீர் மல்க காலில் விழுந்த கட்சிக்காரர்கள் என எல்லாரிடமும் ஜெயலலிதாவின் சாதி குறிப்பிடத்தகுந்த அளவில் ஆதிக்கம் செலுத்தியது. இதை சசிகலா எவ்வாறு கையாள்கிறார் என்பதில் இருக்கிறது, அவர் அடுத்த ‘ஜெயலலிதாவாக’ ஏற்றுக்கொள்ளப்படுவாரா இல்லையா என்பது.

இரண்டாவது, திமுகவை ஆதரிக்கிற மக்கள் சசிகலாவை எவ்வாறு பார்ப்பார்கள் என்பது. திமுக ஆதரவாளர்கள் என்று வருகிறபோது, அவர்களது பெரும் வாக்கு வங்கியான தேவ, வன்னிய, கவுண்ட, தலித் சாதிகள் இதை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே முக்கியம். திமுக கட்சினர் என்று பார்த்தால், சசிகலாவின் மீது வைக்கிற எல்லா விமர்சனங்களும் சொந்த கட்சிக்குள்ளும் உண்டு என்ற நிதர்சனத்துக்கு முகம் கொடுத்துக்கொண்டே கையைப் பிசைந்தபடி அவர்கள் சசிகலாவை எதிர்ப்பார்கள். சசியை விட ஜெயா மேல் என்ற மொண்ணை வாதமாக ஒரு கட்டத்தில் அது முடிவடையும். ஜெயாவை விட எம்ஜியார் மேல் என்ற அதன் பழைய நிலைப்பாட்டின் அடுத்த எபிசோட் அது.

காத்திரமாக சசிகலாவை நிராகரிக்க வேண்டும் எனில், அவர்கள் முதலில் ஸ்டாலினை நிராகரிக்க வேண்டியிருக்கும். உதயநிதியைக் கூட ஆதரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை அவர்களுக்கு இருப்பதால் அதில் மேற்கொண்டு யோசிக்க ஒன்றுமில்லை. அதையும் மீறி அவர்கள் எழுப்பும் கேள்விகளை, நடராஜனின் சட்டைப்பையில் இருக்கும் சில தமிழ் தேசியர்களே எளிதாக சமாளிப்பார்கள். இந்த இடத்தில் கம்யூனிஸ்ட்கள் என்ன செய்வார்கள் என்பதற்கான பதிலை, நல்லகண்ணு போன்றவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். எம்ஜியார் முன்னெடுத்த புரட்சிக்கு முன்னால், தாங்கள் முன்னெடுக்கும் புரட்சி ஒன்றுமே இல்லை என்று புரிந்துகொண்டவர்கள் அவர்கள்.

மூன்றாவது தரப்பு மிகவும் மைனாரிட்டியான அறிவுஜீவித் தரப்பு. இன்னும் கூட மதிப்பீடுகள், விழுமியங்கள், மக்களாட்சித் தத்துவம் போன்ற தேய்ந்த வார்த்தைகளைக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் ‘சிறிய கும்பல்’ அது. அதற்கு நமது சூழலில் எந்த பெறுமதியும் இல்லை. அவர்கள் பேசுவதை ‘முனகல்’ என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் ஒரு ‘சீரிய கருத்து நிலையை’ மக்களிடம் தக்க வைக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருப்பார்கள். அதற்காக அவர்களது சாதனைகள் ஒன்றுமே இல்லையென்று அர்த்தம் அல்ல.

ஆனாலும், வரும்காலத்தில் இந்துத்துவ எதிர்ப்பைக் கூட தனக்கு சாதகமாக சசிகலா பயன்படுத்திக்கொள்ள முனையும்போது அவர்கள் மவுனமாக அழுதபடி கையசைப்பார்கள். சசிகலாவின் தலைமைக்குப் பின்னால் இருக்கும் நடராஜனின் ஆகிருதியைப் போன்ற அபத்தம் அது. அரசியல் என்றால் அபத்தமும் ஆபத்தும் இல்லாமல் இருக்குமா!

 ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்

ஓய்வெடுங்கள் சசிகலா!

அறிவழகன் கைவல்யம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்த பெண்ணாக சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும், சடங்குகள் செய்யவும், எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது, செல்லுமிடங்களுக்கு எல்லாம் (சிறை உட்பட) இணைபிரியாது சென்று வந்தவர். ஆக, ஜெயலலிதாவின் குருதி சார் உறவுகளைவிட சசிகலாவுக்கு இந்த நேரத்தில் (நல்லடக்க காலம் வரை) அதிக உரிமைகளும், அதிகாரமும் கொடுக்கப்படலாம்.

நிற்க, ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிவு பெறுவதோடு சசிகலாவின் பங்களிப்பு நிறைவு பெறுகிறது, ஒரு உற்ற தோழியாக அவருக்கான பங்களிப்பும், அதிகாரமும் அவ்வளவுதான்.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என்கிற இருபெரும் தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கட்சிக்கு கோட்பாட்டு உரமிட்டு வளர்க்க அநேகமாக வேறு யாரும் இல்லாத ஒரு சூழல் தான் நிலவியது, கடந்த 20 ஆண்டுகளில் வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும், ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் தனி ஒரு மனிதராக ஜெயலலிதாவே பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்குக் கூடை தூக்கிச் சென்றதாலேயே சசிகலாவோ அவர்களின் குடும்பத்தாரோ அரசியல் அதிகாரத்தைக் குறுக்கு வழியில் அடைய முற்படுவது, ஜெயலலிதாவின் அரசியல் உழைப்புக்குச் செய்கிற துரோகம், சசிகலாவோ, அவரது உற்றார் உறவினர்களோ அதிமுகவின் அதிகார மையமாக உருவெடுக்க வேண்டுமென்றால், அடிப்படையில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர்களாகி, கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றுப் பின்பு பொதுக்குழு செயற்குழு என்று பயணித்தே வர இயலும், வர வேண்டும்.

அ.தி.மு.க வின் எளிய வெள்ளந்தியான உறுப்பினர்கள் “எம்.ஜி.ஆர்” என்கிற ஒரு மக்கள் தலைவருக்குப் பிறகு “அம்மா” என்கிற ஒற்றைச் சொல்லையே நம்பி வாக்களித்தார்கள், வேறு யாருடைய நிழலும் அங்கே படிந்த வரலாறே இல்லை. இடைக்கால அல்லது தற்காலிக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிற மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் செய்யவேண்டிய மிகப்பெரிய பணி கடந்த மூன்று ஆண்டு காலமாக முடங்கிக் கிடந்த அரசு எந்திரத்தை முடுக்கி தொய்வடைந்து போயிருக்கிற நம்பிக்கையை வளர்ப்பதும், தேவையற்ற அதிகார மையங்கள் உருவாகாமல் தடுப்பதுமேயாகும்.
“திராவிட அரசியல் இயக்க வரலாற்றில் வெற்றிடம் உருவாகி விட்டது, இனி தேசியக் கட்சிகள் பங்காற்ற வேண்டிய நேரம்” என்றெல்லாம் குறி சொல்லியபடி நடுச்சாம உடுக்கை அடிக்கும் காவிக் கூட்டத்தின் கனவுகள் ஜெயலலிதாவின் அடக்கம் செய்யப்பட்ட உடல் ஈரம் காய்வதற்கு முன்பாக உயிர்த்து எழுந்து வருவதை நம்மால் உணர முடிகிறது.

ஜெயாவின் மரணம் திராவிட இயக்கத்தின் வெற்றிடம் என்று மணல் கயிறு திரிக்கும் ஒரு பார்ப்பனீய லாபி இனி வரும் காலங்களில் தீவிரமாக கூடுதல் நேரப் பணியாற்றும், அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும், வலிமையான எதிர்க்கட்சியாக இங்கே இன்னொரு திராவிடக் கட்சியை அதற்காகவே மக்கள் அமர வைத்திருக்கிறார்கள், தேவைப்பட்டால் அ.தி.மு.க வின் மக்களாட்சி வேர்களையும், திராவிடக் கோட்பாட்டு மாண்புகளையும் மீட்டெடுத்து மதம் மற்றும் பிரிவினைவாதப் பார்ப்பனீய லாபியை இங்கிருந்து விரட்ட திமுக எப்போதும் துணை நிற்கும்.

இன்னும் 6 மாதங்களுக்கான தமிழக அரசியல் மிகக் கடுமையான அழுத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டதாகவே இருக்கும், மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பின்னின்று ஜெயலலிதாவின் அரசியல் கனவுகளை மண்மூடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு அதிமுகவின் தொண்டனுக்கும் இருக்கிறது, அதேபோலக் காவி நரிகளின் குறுக்கு வழி அரசியல் அதிகாரப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மதவாத, சாதியவாத பாரதீய ஜனதாவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கவும் எதிர்க்கட்சியாகவும், திராவிட இயக்க அரசியலின் அடுத்த பரிணாமமாகவும் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையாகப் பணியாற்ற வேண்டிய காலமும் இதுவே.

இறுதி ஊர்வலத்தோடு உங்கள் அரசியல் பங்களிப்பு முடிந்து விட்டது திருமதி. சசிகலா நடராஜன் அவர்களே, இனி நீங்கள் நன்கு ஓய்வெடுக்கலாம்.

அறிவழகன் கைவல்யம், பத்தியாளர்; திராவிட அரசியல் பற்றாளர்.

முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!

எஸ். எஸ். சிவசங்கரன்

வழக்கமாக கான்வாய் கிளம்பினால், பயணிக்கப் போகும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். போயஸ் கார்டன், வேதா நிலையத்தில் இருந்து முதல்வர் கான்வாய் கிளம்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா சாலைகள் அலர்ட் ஆகும். சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள் நிற்பார்கள். காவல்துறையினர் பந்தோபஸ்த்திற்கு நிற்பார்கள்.

கான்வாய் என்பது ஒரு தொடராக வாகனங்கள் பயணிப்பது. முக்கியப் பிரமுகர்களின் வாகன அணிவகுப்பை கான்வாய் என அழைப்பது வழக்கம். மாநில முதல்வர்களின் வாகன அணிவகுப்பில் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் இணைந்து பயணிக்கும். சைரன் முழங்க கான்வாய் செல்வதே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்.

அதிலும் ஜெயலலிதா அவர்களின் கான்வாய் சற்று சிறப்பு வாய்ந்தது. பிரதமர் கான்வாய்க்கு நிகரான இவருக்கு. காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் என சற்றே நீண்டது. பாதுகாப்பு வாகனங்களும் கூடுதல். காவல்துறையின் கூடுதல் பாதுகாப்போடு அந்த அணிவகுப்பு மிரட்டலாக இருக்கும்.

காவல்துறை அணிவகுப்போடு செல்லும் முதல்வர் கான்வாய், இன்று ராணுவ அணிவகுப்போடு செல்கிறது. உடன் காரில் பயணித்தவர்கள் எல்லாம் நடை போட்டு செல்கிறார்கள். காரில் அமர்ந்து கம்பீரமாக சென்றவர், இன்று படுக்கையில் செல்கிறார். சாலையில் இருமருங்கிலும் இன்று எதையும் எதிர்பார்க்காத தொண்டர்கள்.

வழக்கமாக பயணிக்கும் அதே மெரினா சாலை. ஆனால் போயஸில் இருந்து புறப்பட்ட கான்வாய் இடையில் ராஜாஜி ஹால் சென்று வந்தது. மெரினாவில் பயணித்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல வேண்டிய கான்வாய், இடையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு திரும்புகிறது.

ராணுவ டிரக்கோடு இணைக்கப்பட்ட வாகனத்தில் பயணித்த முதல்வர் இதோ. வழக்கமாக வாகனத்திலிருந்து எல்லோரையும் பார்த்து வணங்கும் முதல்வரை, இன்று மற்றோர் வணங்க வருகிறார். வழக்கமாக பூக்கும் அந்தப் புன்னகை தான் இல்லை.

கடைசி கான்வாய் பயணம். கான்வாயில் வரும் அவர் காரில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி இப்போது அவர் மீது. காவலுக்கு வந்த துப்பாக்கிகள் இன்று இறுதி மரியாதைக்கு முழங்குகின்றன. கோடி கண்கள் துக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு கண்கள் திறக்காமலே இருக்கிறது.

அவர் முகத்தின் மீது ஒளி உமிழ்ந்த விளக்குகள் அணைந்து விட்டன. அவர் முன் காத்திருக்கும் ஒலி வாங்கி மௌனித்து விட்டது. அவர் பயணித்த வாகனத்திற்கு இனி ஓய்வு. இனி கான்வாய் தொடராது.

நீண்ட பயணம் நிறைவிற்கு வந்தது. புகழ் பயணம் துவங்குகிறது !

எஸ். எஸ். சிவசங்கரன், திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”

ஜெயநாதன் கருணாநிதி:

ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

 • யுத்த காண்டம், கம்ப இராமாயணம்.

நிற்க .

அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம். யார் வழி கேட்கப்போகிறோம், தெரியவில்லை.

நிற்க .

அன்று அண்ணா சொன்னார், “வாசலிலே உள்ள பூனையை விரட்டப்போகிறோம் ! புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. அங்கோர் ஓநாய், இரத்த வெறியுடன் நிற்கிறது! அது உள்ளே நுழையக்கூடாதே”.

 

“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”

அறிவழகன் கைவல்யம்

திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் உள்நுழைய விடாமல் மறைமுகமாகவேணும் தடுத்தது.

இவற்றை எல்லாம் தாண்டி, ஆண்களின் தனிப்பெரும் கோட்டையாக இருந்த அரசியல் களத்தில் ஒரு பிடரி சிலிர்க்கும் ஒரு ஆவேசப் பெண்ணாக, தான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை (அகந்தையை) முதல் குறியீடாகக் கொண்டிருந்தார், ஒருபோதும் அரசியலில் அவர் சந்தித்த பின்னடைவுகளையும், அவமானங்களையும் “பெண்” என்கிற அடைப்புக்குள் அவர் கொண்டு சென்றதில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாக்கம் தமிழ்ச் சமூகப் பெண்களிடம் அரசியலைத் தாண்டி வெகு ஆழமாக உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது, சக மனிதர்களின் துயரம் விலை மதிப்பற்றது, நேற்று இரவில் இருந்தே துணைவியார் அழுது கொண்டிருக்கிறார், அம்மாவைப் பார்த்து நிறைமொழியும் அழுததாகச் சொன்னார்கள்.

என்னோடு வாழும் இந்த சக மானுடர்களின் கண்ணீரில் பொதிந்திருக்கும் நுட்பமான அன்பையும், அளவற்ற துயரத்தையும் சக மனிதனாக என்னால் உணர முடிகிறது. அதற்காகவே உங்கள் மரணம் சொல்லமுடியாத ஒரு துயர மனநிலையை உருவாக்குகிறது. தமிழகம் என்றில்லை, நான் வாழும் கர்நாடக மாநிலத்தின் பெண்களில் பலர், மாணவர்களில் பலர் முதல்வர் ஜெயலலிதா குறித்த ஒரு பிரம்மாண்ட வரைபடத்தைத் தங்கள் இதயங்களில் வரைந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சில காலங்களுக்கு முன்பு வரை தலைவர் கலைஞரை அவர் ஒருமையில் கருணாநிதி என்று மேடைகளில் அழைப்பது நெருடலாகவும், வெறுப்பைக் கூட்டுவதாகவும் இருந்தது, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மேடைகளில் இருந்து திரு.கருணாநிதி என்று அழைக்கத் துவங்கினார். மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது.

“சகிப்புத்தன்மையைப் பழகும் ஒரு பயிற்சியில், உங்கள் எதிரியே உங்கள் ஆகப்பெரிய ஆசிரியன்” என்று சொல்வார் “தலாய் லாமா”, அப்படித்தான் ஜெயலலிதா ஒரு மதிப்புக்குரிய எதிரி எங்களுக்கு…

உங்களைப் பிரிந்து இந்த இரவில் தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் கதறிக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைக்கும் எளிய மக்கள் எமது மக்கள், அந்த எளிய மக்களின் அன்புக்கும், துயருக்குமான அடையாளமாய் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினனாய் கண்ணீர் அஞ்சலி.
முதன் முறையாக எந்தக் குறியீடுகளும், அடைமொழிகளும் இல்லாமல் அந்த ஒற்றைச் சொல்லை எழுதுகிறேன்,

“அம்மா”…..சென்று வாருங்கள், அமைதியுறுங்கள்.

அறிவழகன் கைவல்யம், பதிவர்; சமூக-அரசியல் விமர்சகர்.

திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?

வா. மணிகண்டன்

வா. மணிகண்டன்
வா. மணிகண்டன்

கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக பற்றிய செய்திகள் இல்லை.

என்ன ஆயிற்று?

‘ஒன்று எதிர்க்கலாம் அல்லது பாராட்டலாம் ஆனால் கலைஞரை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழக அரசியலைப் பேச முடியாது’ என்பார்கள். இன்றைய தலைமுறை திமுகவை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறதா என்பதை திமுகதான் பரிசீலிக்க வேண்டும். இளந்தலைமுறையின் நம்பகத் தன்மையை மீட்டெடுக்கவும், திமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பாதை குறித்தும் தலைமைதான் யோசிக்க வேண்டும்.

இன்றைய தமிழகத்தில் ஆளுங்கட்சியில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களும் அமைதியாக இல்லை. இந்தச் சூழலில் பழைய திமுகவாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்க முடியும். அரசாங்கம் செயல்படுகிறதா இல்லையா? தமிழக அரசில் முக்கிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? பிரச்சினைகளில் தமிழக அரசின் வெளிப்படையான நிலைப்பாடு என்ன? என்று அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் கேள்விகளை மையமாக வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட தொண்ணூறு எம்.எல்.ஏக்களைக் கொண்ட எதிர்கட்சியான திமுக துணிந்து இறங்கியிருந்தால் இன்றைக்கு தமிழகமே கலகலத்திருக்கும். ஆனால் கட்சி ஏன் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வென்றிருக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெல்வது இயல்பானதுதான். விட்டுவிடலாம். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே தவறைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. அதிமுக பணம் கொடுக்கிற தொகுதிகளில் பணமே கொடுக்காமல் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது அதிமுக கொடுப்பதைவிடவும் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அதிமுக ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திமுக ஐநூறு ரூபாய் கொடுக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் இதே தவறைத்தான் செய்தார்கள். ‘ரெண்டு பேருமே திருட்டுப்பசங்கதான்’ என்று சொல்லிவிட்டு அதிகமாகக் கொடுத்தவனுக்குக் குத்துகிற மனநிலைதான் மக்களிடம் இருக்கிறது. இப்படியே காசைக் கொடுத்துக் கொடுத்து தோற்றுக் கொண்டிருந்தால் ‘நின்று பார்க்கலாம்’ என்கிற மனநிலை கூட முடங்கிவிடாதா? எழுபதுகளிலும் எண்பதுகளிலுமிருந்த திமுகவாக இருந்தால் நிச்சயமாக பணமில்லாமல் தேர்தலைச் சந்தித்திருக்கும். ஆனால் இப்பொழுது திமுகவுக்கு அந்த தைரியம் கிடையாது. சத்தியமே செய்யலாம்.

எம்.ஜி.ஆர் காலத்தில் ஏதாவது போராட்டம் என்று கலைஞர் அறிவித்தால் சென்னையே நடுநடுங்கிப் போகும் என்பார்கள். காவலர் ஒருவர் துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கும் போது தனது சட்டைப் பொத்தான்களை கழற்றிவிட்டுவிட்டு ‘சுடு பார்க்கலாம்’ என்று நெஞ்சைக் காட்டுகிற ஒரு தொண்டனின் படம் அன்றைக்கு ஏக பிரபலம். இன்றைக்கு அப்படியான வேகமும் துணிச்சலும் கொண்ட திமுக தொண்டர்கள் எங்கே போனார்கள்? கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி; தன் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி- ‘காசைக் கொடுத்தால்தான் செலவு செய்வோம்’ என்று அடம் பிடிக்கிற நிர்வாகிகளை உள்ளே விட்டது யாருடைய தவறு?

ஒரு முறை நண்பர் குமணன் பொதுக்குழுவில் பேசும் போது ‘அண்ணா காலத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் கழகத்துக்கு இருந்தார்கள். இன்றைக்கு எழுபது லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கு இருக்கிறது. ஆனால் அண்ணா காலத்தில் இருந்த அதே ஒரு லட்சம் பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். மீதமெல்லாம் போலி உறுப்பினர்கள்’ என்று பேசியதாகச் சொன்னார். துரதிர்ஷ்டவசமாக அந்த ஒரு லட்சம் பேரில் கூட முக்கால்வாசிப் பேர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். போலிகள்தான் கட்சியின் பதவிகளில் இருக்கிறார்கள். ஒன்றியச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை; நகரச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை என்று பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் பணம் வசூலிக்கிறார்கள். காசு கொடுத்து பதவிக்கு வந்தவன் ஒவ்வொருத்தனும் ‘எங்கே வாய்ப்பு கிடைக்கும்’ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அடிமட்டத்திலிருந்து போராடி களம் கண்டு பதவிகளுக்கு வருகிறவர்கள் போராட்டங்கள் நடக்கும் போது ‘இது நம் கட்சி; என் தலைவன் அறிவித்த போராட்டம்’ என்று களத்தில் நிற்பார்கள். பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும், பணம் வைத்துக் கொண்டு டைம்பாஸூக்கு அரசியலில் இருப்பவர்களுக்கும் பதவியைக் கொடுத்தால் வெள்ளை வேஷ்டி கசங்கிப் போகும் என்றும் சட்டைக் காலரில் வியர்வை படியும் என்றும் மர நிழலில் ஒதுங்கத்தான் பார்ப்பார்கள். போராட்டம் பிசுபிசுக்காமல் என்ன ஆகும்?

இன்றைக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் காசு கொடுத்து, சிபாரிசு பிடித்து பதவிக்கு வந்தவர்கள்தான். இல்லையென்று மறுக்க முடியுமா?

இப்படி மோசமான உட்கட்டமைப்புகளாலும், கட்சி மீது பற்றுக் கொண்ட நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டதாலும் மெல்ல மெல்ல கரையானைப் போல கட்சி அரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தலைமைக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்தான்.

இப்பொழுது உண்மையான திமுக விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். சகல செல்வாக்கும் படைத்த கனிமொழியே கூடத் திணறிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? கனிமொழி ஏன் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை? தஞ்சையில் கொடிகட்டிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இடைத்தேர்தலில் என்ன செய்தார்? நிறையக் கேட்கலாம். உட்கட்சி விவகாரம் என்பார்கள். கனிமொழி மாதிரியான முகங்கள் மேலே வருவதும் அவருக்குப் பின்னால் கூட்டம் சேர்வதும் நல்ல விஷயம்தான். ஆனால் விடமாட்டார்கள். ஓரங்கட்டுகிறார்கள்.

ஓரங்கட்டுவது எல்லாக் கட்சியிலும் உண்டுதான். தமக்கு எதிராக மேலே வந்துவிடக் கூடும் என்று பயப்படும் போதெல்லாம் தலைமை தட்டி வைப்பது வாடிக்கைதான். ஆனால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்கள் தமக்கான ஆட்களைத் திரட்டிக் கொண்டு கட்சிக்கு எதிராகச் செயல்பட முடியாது. ஆனால் திமுகவில் செய்ய முடியும். ‘நானே போகல..நீ ஏண்டா போறீங்க?’ என்று எடுபிடிகளைக் கேட்க முடியும். அதுதான் பிரச்சினை. அதிமுகவில் இருப்பது சர்வாதிகாரம். திமுகவில் இருப்பது போலி ஜனநாயகம். கட்சியின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் போலி ஜனநாயகத்தைவிடவும் சர்வாதிகாரம் எவ்வளவோ தேவலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி மூன்றாவது சக்தி எதுவுமே தென்படவில்லை. இவர்களில் யாரோ ஒருவர்தான் வெல்ல முடியும். ஒருவரே வெல்லாமல் மாறி மாறியாவது வெல்லட்டும் என்றுதான் மனம் விரும்புகிறது. ஆனால் இனி அதிமுகவை வெல்ல வேண்டுமானால் திமுகவின் போர்க்குணத்தால்தான் முடியுமே தவிர, பணத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது.

அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும், கலைஞரும் உருவாக்கி வைத்திருந்த போர்க்குணத்தால்தான் இனி அது சாத்தியம். ஆனால் அதைத் திரும்ப மீட்டுவது சாதாரணக் காரியமில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கட்சி குறித்தான நல்லெண்ணத்தை விதைக்க வேண்டும். எவ்வளவோ இருக்கிறது. அட்டைக் கத்தி வைத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் சுழற்றுகிறவர்கள் கட்சியின் மீதான வெறுப்பைத்தான் வளர்க்கிறார்களே தவிர கட்சியின் மீதான அபிமானத்தை வளர்ப்பதாகத் தெரியவில்லை.

தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு கடந்த தேர்தலின் போது மாறிய நண்பர் ஒருவரிடம் பேசிய போது கடந்த ஐந்தாண்டுகளாக தேமுதிக அறிவிக்கும் போராட்டங்கள் இப்படித்தான் இருந்ததாகச் சொன்னார். தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாகக் கூடுவார்கள். அரை மணி நேரம் கோஷமிடுவார்கள். பிறகு தேநீர் அருந்திவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். மறுநாள் ‘வெற்றி வெற்றி’ என்று அறிக்கை வரும். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கிடக்கிறது. நோட்டாவில் விழும் வாக்குகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த சட்டமன்றத்தின் எதிர்கட்சி. ‘அப்படித்தான் மனிதச் சங்கிலி இருந்தது’ என்றார்.

திமுகவையும் தேமுதிகவையும் ஒப்பிடுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. தேமுதிகவெல்லாம் கட்சியே இல்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்த திமுகவின் ஆற்றலும் வலிமையும் இப்பொழுது என்ன ஆகியிருக்கிறது என்பதைக் கட்சிதான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஓரங்கட்டுதலும், பணமும் மட்டுமே கட்சியை ஆட்சிக்கட்டிலுக்கு எடுத்துச் சென்றுவிடாது என்பதை கலைஞருக்கு அடுத்து இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எழுதி வைத்துக் கொள்ளலாம். கட்சியின் அடிப்படையில் மாறுதல்களைக் கொண்டு வராமல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தால் திமுக நாறடிக்கப்பட்டுவிடும். அதிமுக எல்லாவிதத்திலும் தயாராக இருக்கிறது. இன்னொரு ஐந்தாண்டுகளுக்கு கீழ்மட்ட அதிகாரங்கள் கைவசமாகவில்லையென்றால் கட்சியின் நிலைமை விபரீதமாகிவிடும்.

வா.மணிகண்டன், எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நாவல்மூன்றாம் நதி.

முகப்புப் படம்: காவிரி பிரச்சினை தொடர்பாக திமுக நடத்திய மறியல் போராட்டம்.

திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. புதனன்று (நவ. 23) 4வது முறையாக மு.க.ஸ்டாலின் நீதிமன் றத்தில் நேரில் ஆஜாராகி மனுதாரரின் வழக்கறிஞர் ராமானுஜத்தின் குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தார். அப்போது, திருமங்கலம் பார்முலா போல் கொளத்தூர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதா என்ற கேள்விக்கு,

“திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன ? எனக்கு புரியவில்லை, எனக்கு தெரியவில்லை. நான் பணப்பட்டுவாடா செய்ததாக கூறுவதை மறுக்கிறேன்’’ என்றும் பதிலளித்தார். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எதிர் தரப்பு வழக்கறிஞரின் 30க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு முக.ஸ்டாலின் பதிலளித்தார்.இதனையடுத்து ஸ்டாலினிடம் சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்களுக்காக டிசம்பர் 8 தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீக்கதிர் செய்தி

”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி

இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

புதுவை நெல்லித் தோப்பு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், அருமை நண்பர், புதுவை முதல்வர் வி. நாராயணசாமி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை. நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர் காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறேன். பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது; அதுவே இந்த இடைத்தேர்தல்! செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!” எனத் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்

திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (5-11-2016) மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப்பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு “தீப்பொறி” என்ற அடைமொழியைக் குறிப்பிட்டு, பின்னர் காலப் போக்கில் “தீப்பொறி” என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவிற்கு பெயர் பெற்று விட்டார்.

“மிசா” கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனி கூட்டம் கூடுவதுண்டு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திமுக சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாய் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு காவேரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களும் கதி கலங்கி கண்ணீர் மல்க என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போய் நிற்கிறார்கள்.

தொடர்ந்து ஐந்து வருடங்களாக மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் காவேரி டெல்டா நீர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வில்லை. மழைக்காலங்களில் ஆற்றில் ஓடிவரும் நீரை உரிய முறையில் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கிடைக்கின்றன சிறிதளவு நீரும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணடிக்கப்படுகிறது.

இதனால் குறுவை, சம்பா ஆகிய இரு சாகுபடிகளும் செய்ய முடியாமல் போய் விட்டது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. வருமானம் இல்லாமல் வறுமையில் வாடுவதால் வாங்கிய விவசாய கடன்களையும் அடைக்க முடியாததால் வங்கி அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் தொல்லைகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கடனில் வாங்கிய டிராக்டர்களை ஜப்தி செய்வது, கல்வி கடன் பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்வது போன்ற செயல்களை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கிறார்கள்.

அடுக்கடுக்கான சோதனைக்கு அதிமுக ஆட்சியில் உள்ளாகும் விவசாயிகள் இப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் அதிமுக அரசோ காவேரி டெல்டா பகுதியை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் தமிழகத்தில் நிகழும் விவசாயிகள் தற்கொலை எல்லாவற்றையும் மூடி மறைத்து மன்னிக்க முடியாத துரோகத்தை காவேரி டெல்டா விவசாயிகளுக்கு செய்து விட்டது.

கழக அரசு 7000 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தது. ஆனால் பிறகு வந்த அதிமுக ஆட்சியோ விவசாயிகளை தற்கொலை செய்யக்கூடிய சூழலுக்குத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து அவர்களின் வாழ்வை இருள் சூழ வைத்து விட்டது . அதுமட்டுமின்றி விவசாயிகள் வருமானத்தை பெருக்க செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதிலும் தமிழகத்தை பின் தங்கிய மாநிலமாக்கி விட்டது அதிமுக அரசு. விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டிய சீர் திருத்தங்களை நிறைவேற்றுவதில் நூற்றுக்கு 17.7 புள்ளிகள் மட்டும் பெற்று தமிழகம் இந்தியாவில் 25 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வின்படி, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றும் தமிழகம் 25 ஆவது இடத்திலும் இருக்கிறது என்றும் வெளிவந்துள்ள அறிக்கை அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு அத்தாட்சியாக விளங்குகிறது. இப்படி ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரே வேதனையான சாதனையை மட்டுமே அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்து வருகிறது என்பது கவலை தருவதாக அமைந்திருக்கிறது.

ஆகவே காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, “குறுவை, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால், விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவிற்கேனும் குறைத்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது ” என்ற தீர்மானத்தை மதித்து உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவியும், அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை

‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில்,

“தமிழகத்தின் பழம்பெரும் இதழ் “ஆனந்த விகடன்”. அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய “ஆனந்த விகடன்” குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் “ஜுனியர் விகடன்”. 9-11-2016 தேதிய “ஜுனியர் விகடன்”இதழில் “மிஸ்டர் கழுகார்” பகுதியில் வந்துள்ள ஒரு செய்தி; நம் அனைவரையும் அதிர்ச்சி அடையத் தக்கச் செய்தியாகும். அது வருமாறு :-

“நாட்டுக்கு அவர் ஒரு மன்னர். அவரின் பிரம்மாண்ட பங்களா. அந்த மன்னருக்கு நெருக்கமான அரண்மனைவாசிகளான சிலர் செல்வ மிதப்பில் மிதக்கிறார்கள். ஊழல் மற்றும் கொள்ளையடித்த கரன்சி கட்டுகள், தங்கம், வைடூரிய நகைகளை அந்த அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள். ரகசிய சுரங்கம் வெட்டி, அதில் அந்தப் பொருள்களைப் பாதுகாத்து வைக்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருந்த மன்னரின் காலடியில் அவர் ஆளும் நாட்டின் செல்வந்தர்கள், பிசினஸ் புள்ளிகள்…. பல நுhறு கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்களை வைத்து விட்டுப் போகிறார்கள்.
“காஷ்மோரா”படத்தில் வரும் பிரம்மாண்ட பங்களா போன்ற அவரது அரண்மனையில் வெளியார் யாரும் உள்ளே நுழைய முடியாது. 24 மணி நேரம் காவல் காக்கும் வீரர்களைக் காவல் போடு கிறார்கள். திடீரென ஒரு நாள் மன்னருக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. வைத்தியத்திற்காக சித்தர் குடிலுக்குக் கொண்டு போகிறார்கள். சிகிச்சை ஆரம்ப மாகி சில மாதங்கள் ஆகின்றன.

அடுத்த காட்சி….. மன்னரின் பங்களாவில் நடப்பது! வண்டி வண்டியாக பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருள்களை அரண்மனைவாசிகள் அள்ளிச் செல்லுகிறார்கள். மன்னர் எப்போது திரும்புவார்? மீண்டும் பழைய மாதிரி சுறுசுறுப்புடன் ஆட்சி செய்வாரா…. என்கிற சந்தேகத்துடன் இருந்த அந்த அரண்மனைவாசிகள் பங்களாவைக் காலி செய்து விடுகிறார்கள்…..

டெல்டாவில் இருந்து சென்னையை நோக்கி மெகா சைஸ் கார்கள் சீறிப் பாய்ந்து வந்தன. கார் வெள்ளை. அவர்களது உடுப்பும் வெள்ளை வெளேர். ஆளும் உருவமும் பயமுறுத்துகிறது. மத்திய தர ஓட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். திடீரென இவர்களுக்கு எங்கிருந்தோ உத்தரவுகள் வருகின்றன. உடனே நாலைந்து பேர் கிளம்புகிறார்கள். சென்னையில் மையப் பகுதியான அந்தப் பெரிய வீட்டில் இருந்து வெளியேறும் வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக தங்கள் வாகனத்தைச் செலுத்த வேண்டியது இவர்களது வேலை. இவர்கள் பயணித்த காரின் முகப்பில் சின்ன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமாம். போலீஸ் மேலிடத்துக்கு மட்டுமே அந்த அடையாளம் தெரியும். வாகனம் இடையில் மறிக்கப்பட்டால் அவர்கள் சென்னையில் உள்ள பிரதான அதிகாரிக்கு போனை போட்டுக் கொடுப்பார்கள். சல்யூட் அடித்து வழி விடுவார்கள். அந்தக் கார்களை எந்த டோல்கேட்டிலும், போலீஸ் செக் போஸ்டிலும் நிறுத்தாமல் அனுப்பி வைக்கின்றனர்.

சென்னையின் மையப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மட்டுமல்ல, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை வீடுகள் சிலவற்றில் இருந்தும் இதே போல் வாகனங்கள் வெளியேறுகின்றன. இந்த வெள்ளை வெளேர் சீருடைக்காரர்கள் அதற்கும் செக்யூரிட்டியாகப் போகிறார்கள். சென்னைக்கு வெளியே கொங்கு மண்டலத்தின் மலையோர பங்களாவில் இருந்தும் இத்தகைய வாகனங்கள் வெளியேறுகின்றன. அங்கும் இதே மாதிரியான ஆட்கள் செக்யூரிட்டியாக இருக்கிறார்கள். வாகனங்கள் எந்தப் பக்கம் இருந்து புறப்பட்டா லும் அவை போய்ச் சேரும் இடம் டெல்டா பக்கமாக இருக்கிறது…..

சென்னை டிராபிக் போலீசார் மத்தியில், அந்தக் கார்கள் எங்கெங்கே சென்றன, எப்போது வெளியே வருகின்றன, என்பதை ஆச்சர்யத்துடன் கவனித்து செல்போனில் சக போலீஸ் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்களாம். சென்னைக்குள் சில கார்களுக்கு பைலட் கார்களாக போலீஸ் வாகனங்கள் சென்றது தான் டிராபிக் போலீசாரையே தலைசுற்ற வைத்ததாம்.

முழுக்க, முழுக்க…. கரன்சிகள், வைரங்கள், பத்திரங்கள், நகைகள்….. என்று பட்டியலிடுகிறார்கள்….மொத்தத்தில், பெரிய பங்களா ஒன்றைத் துடைத்து அனைத்துப் பொருள்களையும் மூட்டை கட்டி கார்களில் எடுத்துச் சென்றதாக காவலுக்கு நின்ற போலீசார் பேசிக் கொள்ளுகிறார்கள். “என்று அந்தச் செய்திக் கட்டுரை மேலும் தொடருகிறது.

இதிலே இடம் பெற்றுள்ள செய்திகள், முழுவதும் உண்மை என்பதை மக்கள் அனைவரும் நன்கறிவார்கள். அவர்களின் கண்களில்பட்ட பல சம்பவங்கள் தான் இவை. ஆனால் இந்தச் சம்பவம் பற்றி மத்திய ஆட்சியிலே உள்ளவர்களுக்கும் தெரியும் என்பதைப் போல அதிலே எழுதப் பட்டுள்ளது. தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் இந்தச் சம்பவங்கள் பற்றி, மத்திய அரசு சி.பி.ஐ. மூலமாக விசாரணை செய்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் பல உண்மைகள் தெரிய வரும். ஜுனியர் விகடன் இதழில் வெளி வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்த மாத்திரத்திலேயே, எந்த பங்களாவிலிருந்து – யாருக்குச் சொந்தமான பணம், நகை, பத்திரங்கள் ஆகியவற்றை – யார் யார் எவரெவரின் துணையோடு எங்கே எடுத்துச் சென்று பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழகத்திலே உள்ள எவரும் எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். இந்தியப் பத்திரிகைத் துறையில் மிகச் சிறந்த நம்பகத் தன்மையை வளர்த்துக் கொண்டுள்ள குழுமத்தி லிருந்து வெளிவரும் இதழ், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போகிற போக்கில் ஏனோ தானோவென்று, இவ்வளவு முக்கியமான செய்திகளை வெளியிட வாய்ப்பே இல்லை. எனவே மத்திய பா.ஜ.க. அரசின் சி.பி.ஐ. மிகக் கடுமையான இந்த நிகழ்வுகளை, வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளதையே புகாராக – முதல் தகவலாக எடுத்துக்கொண்டு, விரிவாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்றும்; மிகப் பெரிய பொருளாதாரக் குற்றத்திற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இவை என்பதால், மத்திய பா.ஜ.க. அரசு, நமக்கென்ன என்று நழுவி விடாமல், சமூக – பொருளாதார விரோத சக்திகளை நாட்டுக்கு அடையாளம் காட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் அடுத்தடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை அதிமுக அரசு வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. அக்கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் இன்றைக்கு சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதையும், அந்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடுகளை வாங்கி விட்டு தவிப்போரின் நிலை பரிதாபமாகவும், வேதனையாகவும் இருப்பதையும் உணர முடிகிறது.தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் அடுத்தடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை அதிமுக அரசு வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. அக்கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் இன்றைக்கு சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதையும், அந்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் வீடுகளை வாங்கி விட்டு தவிப்போரின் நிலை பரிதாபமாகவும், வேதனையாகவும் இருப்பதையும் உணர முடிகிறது.

இந்த கட்டிட விபத்து ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும் நான் ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குரிய இழப்பீடும், நியாயமும் கிடைப்பதற்காகவும், இந்த விபத்தின் பின்னணியை நேர்மையாக விசாரித்து நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் தி.மு.கழகத்தின் சார்பில் எனது தலைமையில் எழுச்சிமிகு 12.07.2014 அன்று பேரணி நடத்தப்பட்டது. எழும்பூர் சி.எம்.டி.ஏ. அருகே உள்ள எல்.ஜி. சாலையில் இருந்து தொடங்கி, ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை பேரணி நடைபெற்றது. அதன் பின்னர் நானும் கழகத்தின் முன்னோடிகளும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கவர்னர் ரோசைய்யாவிடம் நேரில் மனு அளித்து, “மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று அன்று கோரிக்கை வைத்தேன். ஆனால் அதிமுக அரசோ அதற்கு உடன்படாமல் முறைகேடுகளை மறைப்பதற்கு முழு மூச்சுடன் செயல்பட்டது. அடுக்கு மாடிக் கட்டிட விபத்து குறித்து விசாரிக்க 03.07.2014 அன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆர். ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கண் துடைப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 04.08.2014 அன்று நான் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அதே நேரத்தில், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள, இன்று இடிக்கப்பட்ட அந்த ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கோரிக்கை வைத்தேன். இந்நிலையில், அதிமுக அரசு நியமித்த விசாரணை ஆணையம் 25.8.2014 அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கொடுத்த அந்த விசாரணை அறிக்கை முழுக்க முழுக்க மவுலிவாக்கம் கட்டிட விபத்திற்கு காரணமானவர்களையும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கிலேயே அமைந்திருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி அளித்த விசாரணை அறிக்கையைக் கூட சட்டமன்றத்தில் வைக்க மறுத்து அடம்பிடித்தது அதிமுக அரசு. ஆகவே எனது பொதுநல வழக்கு விசாரணையின் போது இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது. அப்போது, “விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவோம்” என்று அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ரகுபதியின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது அதிமுக அரசு.

அந்த அறிக்கை முழுமையான அறிக்கை அல்ல என்றும் தவறு செய்தவர்களைக் காப்பாற்றும் அறிக்கை என்பதையும் அப்போதே எடுத்துச் சொன்னதோடு, அந்த அறிக்கை குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதிக்காததால் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம். அப்போது செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டதற்கு, “நீதிமன்ற உத்தரவின் காரணமாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரகுபதியின் விசாரணை அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. அது முழுமை பெறாத அறிக்கையாக உள்ளது. சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட தகவல் அதில் இல்லை. விசாரணை கமிஷன் விதி 8-ன்படி இந்த விசாரணை நடக்கவில்லை. இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு சில விதிமுறைகளை தளர்த்தி அரசு கட்டிட அனுமதி அளித்துள்ளது. மவுலிவாக்கம் கட்டிடப் பணி தொடங்கப்படும்போதே 2 சிறப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது குறித்த விளக்கம் ஏதும் ரகுபதி கமிஷன் அறிக்கையில் இல்லை. விசாரணை கமிஷன் அறிக்கையின் பக்கம் 224-ல், மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளை வேகமாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஆளும் தரப்புக்கு சாதகமான அறிக்கை. ரகுபதி கமிஷன் அறிக்கை முழுமையாக இல்லாததால், அதன் இணைப்பு அறிக்கை வெளியிட வேண்டும் என்று சபாநாயகர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அளித்துள்ளேன். ஆகவே இது தொடர்பாக, தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்தேன்.

இதுபோலவே, இப்போது இடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிக்கவும் முதலில் முட்டுக்கட்டை போட்டது அதிமுக அரசு. நான் தொடர்ந்த வழக்கின் மூலமாகத்தான் இதற்கான சட்டப் போராட்டத்தையும் நடத்தினேன். உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உடனடியாக கட்டிடத்தை இடிக்க கோரியும், அதற்கு இரண்டு முறை கால அவகாசம் கேட்ட அதிமுக அரசிற்கு உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் கண்டனத்திற்கு பிறகு, “இன்னும் 20 நாட்களில் அந்த கட்டிடத்தை இடித்து விடுகிறோம்” என்று கடந்த 13.8.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஒப்புக் கொண்டது அதிமுக அரசு. அதன்படி இன்றைக்கு அந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிடம், இப்போது இடித்த அடுக்கு மாடிக் கட்டிடம் எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அரசு வழங்க முன்வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆகவே எனது பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் வாயிலாக இன்றைக்கு அடுக்குமாடிக் கட்டிடத்தை இடித்திருக்கும் அதிமுக அரசு கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டாலும், மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே போல் இந்த கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இதில் அதிமுக அரசு மூடி மறைத்துள்ள அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த கட்டிடங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அதிமுக அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான நடைபெற்ற பிரார்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நேத்தாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோயிலில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, தண்டையார்பேட்டையில் உள்ள சேனியம்மன் ஆலயத்தை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற்றது.இதில் கழக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

சென்னை, மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தேனியில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சள், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில், கூட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில் உள்ள ஸ்ரீஅபிஷேக வள்ளி தாயார் சமேத பக்தவச்சலபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்னையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்கிறது இணையதள செய்தி. இவ்வாறு தொண்டர்கள் அலகு குத்திக் கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் குழந்தைகள் அலகு குத்த வைத்து துன்புறுத்துவது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எழுத்தாளர் சரவணன் சந்திரனின் முகநூல் பதிவு இது: 

அமைச்சர்கள், கட்சிக்காரர்களான பெரியவர்கள் இப்படிக் குத்தியிருந்தால், அது அவர்களின் தேர்வு. அது அவர்களின் நம்பிக்கை என்று பேசாமல் கடந்து போயிருந்திருக்கலாம். இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா? இதையெல்லாம் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கெல்லாம் கோபமே வராதா? ஏன் எனக்கும்கூட வருவதில்லை. இத்தனைக்கும் கண்டிசனாக டாடா சால்ட் போட்டுத்தான் சாப்பிடுகிறேன். சே சே மனசைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. உப்பில்தான் பிரச்சினையாக இருக்கும்!

“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு:

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால அவகாசமும் இன்றி, உடனடியாக மனுத்தாக்கல்!! திருமாவளவன் உண்மையிலேயே தான் உணர்ந்ததை வெளிப்படுத்தினார். அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்றார். தமிழ்நாட்டின் மூத்த, இளைய, சாணக்கிய, மெக்கியவில்லிய அரசியல்வாதிகள் அனைவரையும், யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை வெளியிட்டு ஜெயலலிதா ஒரே வீச்சில் வீழ்த்தினார். படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று காமராஜர் சொன்னதாகச் சொல்வார்கள். எம்.ஜி.ராமசந்திரன் ஜெயித்தார். ஜெயலலிதா அப்படி ஒன்றை முயற்சி செய்து பார்ப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் அறிவிப்பே அதிர்ச்சி தந்தது எனும்போது இனிதான் மற்ற அரசியல் கட்சிகள் சுதாரித்துக் கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும். திமுக – காங்கிரஸ் கூட்டணி இதற்கு மேல் கூட்டணி பற்றி பேசப் போவதில்லை. அந்த அணி சற்று சமாளித்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் எதிர்க்க முடியாது என்பதற்கு திருமாவளவன் நீண்ட விளக்கம் தந்துகொண்டிருக்கும்போது, மறுபுறம், மக்கள் நலக் கூட்டணி இப்போதுதான் சில நிகழ்ச்சிகளில், மிகவும் துவக்கமாக, ஒரே மேடையில் காட்சி அளித்தது. அவர்கள் இனிதான் மற்றவர்களை அழைக்க வேண்டும். அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்து நிற்பதற்கு திருமாவளவன் மாற்று விளக்கம் அளிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

ஆனால், அனைவரையும் விட ஜெயலலிதாதான் மிகவும் பயந்திருப்பதைப்போல் தெரிகிறது. மேயர் பதவிக்கு, நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு இருந்த நேரடி தேர்தலை ரத்து செய்தபோதே அது தெளிவாகத் தெரிந்தது. ஜெயலலிதா தனது விருப்பம்போல் அமைச்சர்களை, அதிகாரிகளை மாற்றுவதுபோல், மேயர்களை, நகராட்சித் தலைவர்களை, பேரூராட்சித் தலைவர்களை மாற்ற முடிவதில்லை. இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்திருக்கிற ஜெயலலிதா, அவர்களை மாற்றுவதற்கான அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொள்ள அடுத்து அமைப்புரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றியும் யோசிக்கலாம். நமக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அய்ந்து ஆண்டுகளுக்கும் தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஒரே மேயர் இருந்துவிட்டார் என்றால் பெரிய விசயம்தான். அடுத்தடுத்த பதவிகளுக்கும் இது பொருந்தும்.

இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்ததில் ஜெயலலிதா தனது விருப்பம்போல் பதவிப் பறிப்பு நடத்தலாம் என்பதை விட, நேரடி தேர்தலைச் சந்தித்தால் தோற்கடிக்கப்படக் கூடும் என்ற பயமே விஞ்சி நிற்கிறது. ஏனென்றால், வெளியில் என்ன பேசினாலும், வண்ணவண்ண அறிவிப்புகள் வெளியிட்டாலும், தான் நடத்துவது மிகமிக மோசமான, மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சி என்று அவருக்கே மிக நன்றாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் சென்று அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் துணிச்சல் அவருக்கே இல்லை.

திருவாரூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி, காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு வீட்டில் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து வெளியேறி, வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஊருக்குச் செல்ல காசு வேண்டும் என்று நடுநடுங்கிய நிலையில் கேட்டிருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுமியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அந்தச் சிறுமியை அவரது தாய் ரூ.1,000க்கு விற்றுவிட்டதாகத் தெரிய வந்தது. அந்தச் சிறுமி இப்போது அரசு காப்பகத்தில் இருக்கிறார். அரசு காப்பகங்கள் பாதுகாப்பற்றவை என்பதையும் நாம் பார்த்தோம். அந்தச் சிறுமியை 20 மணி நேரம் வேலை வாங்கினார்களாம். மிகவும் கடுமையான வேலைகளைச் செய்யச் சொன்னார்களாம். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதாக ஜெயலலிதா சொன்ன வசந்தத்தில் வெறும் ரூ.1,000க்கு ஒரு தாய் தன் மகளை விற்றுவிட நேர்கிறது. ஜெயலலிதா மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? வசந்தம் என்றால் இதுதான் என்றா பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

சிறைக்குச் சென்று திரும்பிய பச்சமுத்து உடலில் ஒரு சிறு கீறல் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். பிணையில் வந்தபிறகு கையெழுத்து போடச் சென்ற அவரை காவல் துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பச்சமுத்து அங்கு வருவதற்கு முன்பு அவருக்கு சரவண பவனில் இருந்து சிற்றுண்டி வரவழைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் கண்ணகி நகர் கார்த்திக், காவல் நிலையத்தில் இருந்து பிணமாகத்தான் வீடு திரும்பினார்.

காவல்துறை கண்ணியமாகவும் கறாராகவும் நடந்துகொள்வதாக இந்த இரண்டு சம்பவங்களையும் ஜெயலலிதா விளக்க முற்படுவாரானால், கரூர் காவல்துறையினர் மூன்று பேர் செய்த வழிப்பறி கொள்ளை பற்றி, அது கட்டுப்பாடு வகையைச் சேர்ந்ததா என்று அவர் விளக்க வேண்டும். இந்த கேடு கெட்ட காவல் துறைக்கு ஜெயலலிதாதான் நேரடி பொறுப்பு. மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

இன்னும் எந்தவித விளக்கமும் தராப்படாமல் உடற்கூறாய்வு கூட நடத்தப்படாமல் கிடக்கிறது ராம்குமாரின் உடல். மின்கம்பியாம். இழுத்தாராம். கடித்தாராம். செத்தாராம். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். ஹிலாரி கிளின்டனுக்கு ‘முன்மாதிரியாக’ இருக்கிற ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்துள்ளது என்றால், என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்க பயப்படுகிறார்.

ஜெயலலிதாவின் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த நத்தம் விசுவநாதன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படி வந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

கொத்தடிமைகள் மீட்கப்பட்டதாக வாரம் ஒரு செய்தி வருகிறது. அவர்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்தில் கூட்டம் கூட்டமாய்க் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். சுமங்கலித் திட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்று சட்டமன்றத்திலும் வெளியிலும் அமைச்சர்கள் சொல்வதுபோல் தமிழ்நாட்டில் கொத்தடிமைகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்வாரா? இல்லை என்றால், அவர்கள் யார்? விருப்பப்பட்டு வேலைக்குப் போனவர்களா? மக்களுக்கு வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார்.

ஒரு குடும்பத்தில் வறுமை தாளாமல் மூன்று பேர் மொத்தமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயிற்று வலி அதனால் தற்கொலை செய்துகொண்டார்கள் என இனி ஜெயலலிதா சொல்ல முடியாது. வறுமையால் தற்கொலை என்று போதுமான அளவுக்கு செய்திகள் வந்துவிட்டன. ஜெயலலிதாவோ, அவரது ஆலோசகர்களோ மூன்று உயிர்கள் போனதற்கு என்ன காரணம் கண்டுபிடிப்பார்கள்? வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

 

கொத்தடிமைகளாக வேலை செய்யச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது சிலரது குழந்தைகள் உயிருடன் இருப்பதில்லை. அந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிட்டால், அந்தக் குழந்தைகள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று கூட வெளியில் தெரிவதில்லை.

விழுப்புரத்தில் சந்தப்பேட்டையில் சமீபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பில் இன்னும் ‘மர்மம்’ அவிழவில்லை. மற்றவர்கள் மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிடலாம். பெற்றவர்கள் கேள்வி கேட்பார்கள். ஜெயலலிதா என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

இந்தச் சம்பவங்களில் பல அடுத்தடுத்து ஒரே வாரத்தின் சில நாட்களில் நடந்தவை. இந்த நூறு நாட்களில் அய்ந்து இளம்பெண்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதுபோன்ற இன்னும் பல சம்பவங்களில், பல்வேறு காரணங்க ளால், மக்கள் உயிரிழப்பது ஜெயலலிதாவின் நூறு நாள் சாதனை ஆட்சியில் நடந்து முடிந்துவிட்டன. இதுவரை எதற்கும் எந்தத் தீர்வும், எந்தப் பதிலும் ஜெயலலிதா சொல்லவில்லை. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. சில இடைநீக்கம், சில இடமாற்றம் ஆகியவைதான் நடவடிக்கைகள் என்றால், அது அவர்களுக்கு மயிலிறகால் வருடப்படுவது போன்றதே. யார் மீதும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாததே கடுமையான குற்றம் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு சாட்சி என்றா சொல்வார்?

புதிதாக அறிவிக்கப்பட்ட 107 அம்மா உணவகங்களில் பணியில் யாரும் அமர்த்தப்படாத தால் அருகில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து வந்த உணவு தரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து செய்ய முடியாததால் அவற்றில் சில மூடப்பட்டு விட்டன. பெரம்பூரில் சமுதாய நலக் கூடம் அம்மா உணவகமாக மாற்றப்பட்டது. புரசைவாக்கத்தில் குப்பைத் தொட்டி இருந்த இடத்தில் அம்மா உணவகம் வந்துள்ளது!

விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். காவிரி தாண்டி வேறு ஏற்பாடு பற்றி ஜெயலலிதா ஏதும் சொல்ல மறுக்கிறார். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் அய்ந்து மாதங்களாக கூலி தரப்படவில்லை. ஜெயலலிதா இதற்கு என்ன பதில் சொல்வார்?

தமிழ்நாடு இப்படி கொந்தளித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஜெயலலிதாவுக்குக் காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சல் எதனால் வந்ததென அப்போலோ மருத்துவர்கள் எல்லா கோணங்களிலும் ஆய்ந்தறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளித்திருப்பார்கள். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைவிட, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலோ, அல்லது ‘அந்த’ ஓமந்தூரார் மருத்துவமனையிலோ ஏன் அனுமதிக்கப்படவில்லை? அந்த மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த ஜெயலலிதா அயராது ஆற்றிய பணிகள் பற்றி அவரே கூட கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல முறை பேசியிருக்கிறார். அப்படி தரமுயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் ஏன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்? ஜெயலலிதாவின் இன்றைய ஆகிருதிக்கு அவர் ஒரு பார்வை பார்த்திருந்தாலே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பார்களே. ஆதிபராசக்தி கடைக்கண் பார்க்க ஏன் மறுத்து விட்டார் என்று அவர் குணம் பெற்று பணிக்குத் திரும்பிய பின் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. சட்டம், ஒழுங்கு, பிற நோயாளிகளுக்கு இடையூறு என எந்தக் காரணத்தையும் அவர் சொல்ல முடியாது. இந்த பிரச்சனைகள் அப்போலோ மருத்துவமனையிலும் இருந்தன.

ஜெயலலிதா குணம்பெற்று ‘பணிக்குத்’ திரும்பிய பிறகாவது, அவர் குணம் பெற வாழ்த்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்தக் கேள்விகளை எல்லாம் தமிழக மக்கள் சார்பாக மேலும் வலுவாகக் கேட்க வேண்டும். ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள்!

(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)