அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

அன்புள்ள திரு.வை.கோ

வணக்கம்..

நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்..

பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய மாறுபாடு இல்லை. எது உங்கள் அசல் ஆளுமையோ அதாகவே எஞ்சி இப்போது மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.. இந்த முறை நீங்கள் கட்டாயம் மாநிலங்களவைக்கு போக வேண்டும் என நான் மனதார விரும்பினேன். தமிழ்நாட்டின் உரிமைகள் என நீங்கள் முன்வைக்கும் விசயங்களுக்கும் நான் கருதும் விசயங்களுக்கும் சில மாறுபாடுகள் உண்டுதான்.. ஆனாலும்கூட ஒரு ஒப்புக்கொள்ளத்தக்க பொதுப்புள்ளிகள் இருக்கவே செய்கின்றன என்பதால் தமிழ்ச்சமூகத்தின் குரலாக ஒலிக்கும் அதிகபட்ச சாத்தியங்களை கொண்டவர் என்கிற வகையில் எனது சாய்ஸ் நீங்கள்தான்..

காஷ்மீர் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உங்கள் உரையை மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன். நீங்கள் பேச மூன்று நிமிடம் வழங்கிய அவையின் துணைத்தலைவர் நான் காங்கிரஸை விமர்சித்துப்பேச இருக்கிறேன் என கூற உடனே அமித்ஷா வின் வேண்டுகோளில் உங்களுக்கு பத்துநிமிடங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவை அனைத்தும் தற்செயலான பெருந்தன்மை என நம்பினாலும் நீங்களும் சொன்னபடியே செய்தீர்கள். பத்தில் ஒன்பது நிமிடங்கள் காங்கிரஸையும் கடைசி சில விநாடிகள் அரசையும் குறைகூறி முடித்தீர்கள்.. நீங்கள் காங்கிரஸை விமர்சிப்பதோ, அதுவும் பாராளுமன்ற விவாதங்களில் ஒரு 360 டிகிரி பார்வையை முன்வைப்பதோ சாதாரணமானது என்பதை நான் அறிவேன்.. நீங்கள் கடந்தகால காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்ததாக சொன்னீர்கள். அதில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற வாக்குறுதியை இந்திய அரசுத்தலைவரான நேரு மீறியதாகவும் அதுபற்றி ஐ.நாவுக்கான இந்திய தூதர் எம்.சி.சாக்ளா இரண்டு பொதுத்தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டதால் அதுவே பொதுவாக்கெடுப்பு எனக்கூறி விட்டதாகவும் சொன்னீர்கள். முதலில் காஷ்மீரக்கான பொதுவாக்கெடுப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்கிற இருநாட்டு பகுதிகளைச்சேர்த்தே நடத்த முடியும்.. அந்த சூழல் இல்லாத.நிலையில் நேரு எப்படி இந்திய காஷ்மீருக்கு மட்டும் தனியாக பொதுவாக்கெடுப்பு நடத்த இயலும்..? சங்கிகள் எப்போதும் வரலாற்றின் புழக்கடையில் புழுப்பொறுக்குபவர்கள்.. அவர்களிடம் தர்க்க நியாயம் பேசுவதை விட முட்டாள்தனம் இருக்க இயலாது. ஆனால் நீங்களும் அதே பாணிதானா?

அடுத்து எம்.சி.சாக்ளா பேசியது ஒரு சர்வதேச மன்றத்தில். அந்தவகையில் அது அரசநயவாதம்.(Diplomatic Argument). அதற்கு அரசியல் நோக்கு கிடையாது.

அதன் பின் காஷ்மீர் பிரச்சனை பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் பேச்சுவார்த்தை என மாறிவந்த பல அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன.

மற்றபடி பரூக் அப்துல்லா உங்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதை அவர்தான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியும். அது ஒருபுறம் இருக்கட்டும். மக்களவை உறுப்பினரான பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என உங்கள் நண்பரான அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பொய்யை பரூக் அப்துல்லா தான் சிறைவைக்கப்பட்டதை ஊடகங்களிடம் வெளிப்படுத்தி காறி உமிழ்ந்த எச்சிலை துடைத்துக்கொண்டு அமித் ஷா செய்யும் அநியாயங்களை பேச சில விநாடிகள் போதும் என நீங்கள் முடிவிற்கு வந்ததன் காரணங்களை என்னால் எப்படியும் புரிந்துகொள்ள இயலவில்லை. நீங்கள் செய்வது மிகுந்த ஆபத்தான சவாரி..

நீங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வாக ஏழு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது. உங்கள் கட்சியின் சார்பில் ஈரோடு மக்களவைத்தொகுதியில் போட்டியிட்ட திரு.அ.கணேசமூர்த்தி அவர்களின் வெற்றிக்கு நான் தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். இவை இதை எழுத போதுமான நியாயங்கள் என நினைக்கிறேன். நீங்கள் இன்றைய ஆட்சியாளர்களைப்பற்றி சாவகாசமாக பேசுகையில் நீங்கள் இடம்பெற்ற கூட்டணியிலிருக்கும் காங்கிரஸை Culprit என்கிற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த வகையான அரசியல் நெறிமுறை..?

ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட நாவண்மை மிக்கவரான நீங்கள் சமநிலை தவறி இடறும் இந்த புள்ளியில்தான் நீங்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அரசியல் தலைமையாகும் சாத்தியங்களை தவற விட்ட காரணிகள் இருக்கின்றன.

நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள் என்பதல்ல பிரச்சனை. எந்தச்சூழலில் அதைச்செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை..

இப்போதும்கூட உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் இனி தடம் பிறழாமல் மதச்சார்பற்ற அரசியல் விழுமியங்களுக்காகவும் தமிழச்சமூகத்தின் நலனுக்காகவுமான பொருட்படுத்தக்க குரலாக இருப்பீர்கள்என. இது எனக்கல்ல.. காங்கிரஸிற்கல்ல.. உங்கள் ஆசான்கள் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் சிந்தனைப்பள்ளியின் வார்ப்புதான் நீங்கள் என வரலாறு இறுதியாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காக..

அன்புடன்,
இரா.முருகானந்தம்.

இரா. முருகானந்தம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்.

நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ

சுபவீ

கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன்.

கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், ‘இடக்கு மடக்கான’ பல வினாக்களை என்னிடம் கேட்டார். சில வினாக்களுக்கு விடை சொல்வதில், எனக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்தன. .

நான் விடை சொல்வதற்கு முன்பே அடுத்த கேள்வியைக் கேட்டுவிடும் அவரது போக்கை மனத்தில் வைத்துக் கொண்டு, “நீங்களெல்லாம் நண்பர் பாண்டேயிடம் பாடம் படித்துக் கொண்டு வருகின்றீர்களோ?” என்று நேர்காணல் முடிந்தபின், வேடிக்கையாகக் கேட்டேன். எப்படி இருந்தாலும், வளரும் இளைஞர் நீங்கள், வளருங்கள் என்று வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்தநாள் தொடங்கி, இரண்டுவிதமான பின்விளைவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நேர்காணலை, என்னை விரும்பாதவர்கள், எனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாஜக வினரும், நாம் தமிழர் கட்சியினரும் அதனைப் பரப்பினார்கள். நான் விடை சொல்ல முடியாமல் தடுமாறியதாகவும், என் நிலை பரிதாபமாக இருந்ததாகவும் பதிவுகள் இட்டனர். நேர்காணலில் நான் தொற்றுப் போய்விட்டதாக எழுதினர்.

பாஜக வை விட என்னை எதிர்ப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நாம் தமிழர் தம்பிகள்தாம். ஆர்எஸ்எஸ் நண்பர்களாவது என்னை எதிர்ப்பதும், மிரட்டுவதுமாக இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர்கட்சியினரோ, நான் இறந்துபோய்விட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தம்பி சீமானே ஒரு பேட்டியில்,, அவர் (நான்) இறந்துபோய்விட்டார் என்று
சொன்னார். உடனே அவர் தம்பிகள் அடுத்தநாள், என் படத்திற்கு மாலை அணிவித்தும், சவப்பெட்டியில் என் உடல் இருப்பது போன்று படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர். சீமான் மேடையில் இருக்கும்போதே, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில், திமுக வை நான் ஆதரிப்பது குறித்துப் பேசுகையில், “நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவி சுபவீ” என்று பேசினார். சீமான் கண்டித்ததாய்த் தெரியவில்லை. (மகிழ்ந்திருப்பாரோ!)

இப்படி ஒரு சாரார் அந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்க, என்னிடம் அன்பு கொண்ட நண்பர்கள் பலர் வருத்தப்பட்டனர். அந்த நேர்காணலுக்கு நீங்கள் போயிருக்கக் கூடாது என்றனர். இவ்வளவு மென்மையாகப் பேசியது சரியில்லை என்றனர். நீங்கள் தோற்றுப் போய்விட்டதாக வலதுசாரியினர் மகிழ்வதற்கு இடம் கொடுத்து விட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டனர்.

“எல்லா நேரமும் நாமே வெற்றிபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது கூட ஒரு விதமான பாசிசம்தான், ஒருமுறை தோற்றால் குற்றமில்லை” என்று நான் சமாதானம் சொன்னேன்.

இவையெல்லாம் ஒருபுறமிக்க, காவேரி தொலைக்காட்சியில் நான் எதிர்பாராத வேறு சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில நாள்களுக்குப் பிறகுதான் அது எனக்குத் தெரிய வந்தது. அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த திரு ஜென்ராம், அந்தப் பேட்டி குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அங்கு பணியாற்றிய சில பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மறுநாள் கருப்பு உடையுடன் அலுவலகம் வந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜென்ராம் அவர்களை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மறுத்துவிட்டார்.

இதனால் கோபம் மொண்ட நிர்வாகம், ஜென்ராம் அவர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 23.07.19 அன்று பணி நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியர்களும் வேலைக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், காவேரி தொலைகாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சோஷலிச தொழிலாளர் மையம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது. நண்பர் வன்னி அரசு போன்றவர்கள்,ஜென்ராம் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, இனிமேல் காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். .

நான் மிகவும் மதிக்கும் மூத்த ஊடகவியலாளரான ஜென்ராம் அவர்களும், நான் அறிந்திராத அந்தப் பெண் ஊடகவியல் நண்பர்களும், என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் என்னை நெகிழ வைக்கின்றன. அந்தப் பெண்களை நினைக்கும்போது, நான் பெற்ற பிள்ளைகளை விட, பெறாத பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை உணர முடிகிறது.

நான் நேர்காணலில் தோற்றுப்போனேன் என்று எண்ணி மகிழ்கின்ற என் இனிய எதிரிகளே! நேர்காணலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும்.

ஆனால் நான் இன்னொரு விதத்தில் தோற்றுத்தான் போனேன் என்பது உண்மை. யாருக்கோ எதோ ஒரு மரியாதைக் குறைவு நடந்தால் நமக்கென்ன என்று இருக்காமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தோழர் ஜென்ராமுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்ற வினாவிற்கு விடை தெரியாமல் தோற்றுப்போனேன். அவரை விடுங்கள், அவராவது என் நண்பர், அந்தப் பெண் பிள்ளைகள் யார், அவர்களுக்கு நான் இதுவரையில் என்ன செய்திருக்கிறேன்? அவர்கள் ஏன் எனக்காகத் தங்கள் பணியிலும், வாழ்விலும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்?

கண்கள் கலங்குகின்றன. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், கருத்துரிமையின் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்புக்கும் முன்னால் நான் தோற்றுத்தான் போனேன்!!

க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை

அன்புள்ள ஜெயமோகன்..

க்ரீஷ் கர்னாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்..

ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது..

அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பி வந்த ஒருவரைப் பற்றி நீங்கள் இப்படி ஒரு கோணத்தை யாருக்கு எடுத்துக்கொடுக்கிறீர்கள்.?

அவரின் “துக்ளக்” நாடகம் நேருவை விமர்சித்தது என்பதையும், இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர் அவர் என்பதையும் வசதியாக மறந்துவிட்டு “காங்கிரஸ் மேலிடத்தின்” செல்லப்பிள்ளையாக அவரை சித்தரிப்பில் இருக்கும் வடிகட்டும் தன்மை சந்தேகமில்லாமல் உள்நோக்கம் கொண்டது.. தினத்தந்தியிடம் கடன்வாங்கி பிரயோகித்திருக்கும் அந்த “காங்கிரஸ் மேலிடம்” என்பது அதில் வந்த கன்னித்தீவுக்கு இணையான கற்பனைமிளிரும் உருவகம்..

ஆனால் ரொம்ப பழையது.. ஆனால் யாரும் கண்டிராதது. அவ்வளவுதான் மற்றபடி அவர் வகுப்புவாதத்தையும் பிற்போக்கு மதிப்பீடுகளையும் தனது வாழ்நாளின் இறுதிவரை எதிர்த்தவர் என்கிற இழையில் மட்டுமே காங்கிரஸோடு தத்துவார்த்த நெருக்கம் கொண்டிருப்பவர்.. மற்றபடி அவர் பெற்ற அங்கீகாரத்திற்கு முழுத்தகுதி கொண்டவர் என்றே ஒரு இலக்கிய வாசகனாகவும், காங்கிரஸ்காரனகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

நீங்கள் கன்னட இலக்கிய முன்னோடிகளான சிவராம்காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்பா ஆகியோருடன் ஒப்பிட்டு க்ரீஷின் தகுதிக்குறைவை சுட்டுகிறீர்கள்.. இது விஷமத்தனமானது.. காரணம் க்ரிஷ் கர்னாட் இயங்கியது மேற்சொன்னவர்கள் பிரதானமாக இயங்கிய நாவல் சிறுகதை போன்ற வடிவங்களில் அல்ல.. அவர் இயங்கியது ஒட்டு மொத்த இந்திய நவீன இலக்கியச்சூழலில் அரிதான நவீன நாடகம் என்கிற வடிவத்திற்குள். எனவே இந்த ஒப்பீடு நேர்மையற்றது.. இதன்பொருள் மேற்சொன்ன படைப்பாளிகள் மதிக்கத்தக்கவர்களல்ல என்கிற பொருளில் அல்ல.. பைரப்பாவிற்கு ஞானபீடம் விருது அளிக்கப்படாதது வருந்தத்தக்கதுதான்.. எப்படி தமிழில் சுந்தராமசாமிக்கு வழங்கப்படாததைப்போல ஒப்ப முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதை வழங்கும் தனியார் அறக்கட்டளையை “காங்கிரஸ் மேலிடம்” நடத்தவில்லை. அதேபோல் இதற்கு க்ரீஷ் கர்னாட் எந்தவகையிலும் காரணம் அல்ல. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 1975லேயே அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்டாயிற்று.. அவரின் இந்துத்துவ அரசியல் சார்பு அவரின் இலக்கியத்தகுதியை குறைத்து மதிப்பிடப்போதுமானது என நான் ஒருபோதும் கருதவில்லை.. கருதவும் மாட்டேன்.

பொதுவாக இந்திய இலக்கியச்சூழலில் நவீன நாடக அரங்குகள் உயிர்ப்புடன் இருக்கும் மொழிச்சூழல்கள் என்றால் அது கன்னடமும், மராத்தியும்தான்.. ஆரோக்யமான கன்னட நாடகச்சூழலின் இருப்பிற்கு க்ரீஷின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே அவரின் இலக்கிய பங்களிப்பை இந்த கோணத்தில் சக கன்னட நாடகாசிரியரான சந்திரசேகர கம்பாருடனோ, மராத்திய நாடகாசிரியரான விஜய் டெண்டுல்கருடனோ ஒப்பிட்டு மதிப்பிடுவதல்லவா பொருத்தம்..?

ந.முத்துசாமியை ஜெயகாந்தனுடனும், அசோகமித்திரனுடமா ஒப்பிடுவீர்கள்..?

அவரை சுமாரான நடிகர் என்கிறீர்கள்.. இருக்கட்டும்.. அவர் பெரும்பாலும் வணிகநோக்கிலான வெகுசன படங்களில் நடித்தார்.. அது தனது வருவாய்க்கான வழியாக.. நீங்கள் எழுதும் திரைக்கதைகள் கூட அப்படித்தானே..? அவற்றை நீங்கள் எழுதும் நோக்கம் என்னவோ அதே நோக்கம்தான் அவர் நடித்ததற்கும்.. ஆனால் என் மதிப்பீட்டில் அவர் வெற்றிகரமான குணச்சித்திர நடிகர்தான்..

எல்லாவற்றிற்கும் மேலாக தான் நம்பிய மதிப்பீடுகளுக்காக, வலியுறுத்திய விழுமியங்களுக்காக, கடைப்பிடித்த அரசியல் கொள்கைகளுக்காக ஔிவுமறைவின்றி நேர்மையாக நின்றமைக்கான வாழ்வே எல்லாவகையிலும் மேலானது.

கர்நாடக காவல்துறை புலனாய்வு பிரிவு, கவுரி லங்கேஷின் கொலைகாரர்கள் அவருக்கு முன்பாக கொலைசெய்யப்பட வேண்டியவராக க்ரிஷ் கர்னாட்டையே வைத்திருந்ததாக குறிப்பிட்டது. வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், படைப்புரிமைக்கு ஆதரவாகவும், எத்தனை உக்கிரமான கருத்தியல் போராளியாக இருந்தார் என்பதற்கான சான்று அது..சமகால இந்தியாவில் விரல்விட்டு எண்ணத்தக்க பொது அறிவுஜீவிகளில் (public intellectual ) ஒருவராகவும் அவர் இருந்தார்.. இதையெல்லாம் குறிப்பிடாமல் கூட நீங்கள் எழுதலாம்.. ஆனால் ஒரு குற்றப் பத்திரிக்கைக்கு அஞ்சலி கட்டுரை என்று பெயரிட்டிருக்க வேண்டாம்..

அன்புடன்,
இரா.முருகானந்தம்,
13.06.2019.

இரா. முருகானந்தம், அரசியல் செயல்பாட்டாளர்.

ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை

ஆளும் பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து நீக்க இந்திய மக்களை வாக்களிக்க கோரி திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை.

நமது நாடு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் சோதனைக்குரிய காலத்தில் இருக்கிறது. பண்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், நாம் ஒற்றுமையாகவே இருந்துவந்துள்ளோம். ஒரு தேசமாக, இவ்வற்புத நாட்டின் குடிமக்களாக இருப்பதென்பது மிகவும் பெருமையான உணர்வாகும்.

ஆனால், இப்போது அவை பெரும் ஆபத்தில் உள்ளன.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்யாவிட்டால், கொடுங்கோன்மை அதன் அனைத்து வலிமையையும் கொண்டு நம் கடுமையாக தாக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

2014-ஆம் ஆண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டு நிலைமை மோசமாக மாறிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம். நமக்கு தெரிந்த இந்திய நாடு, மத அடிப்படையில் துருவப்படுத்தப்பட்டது அன்று. தவிர, பி.ஜே.பி-யும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்டன. வகுப்புவாதத்தை புகுத்தி நாட்டை இரண்டாக்க பசுப் பாதுகாப்பு, கும்பல் கொலை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட தலித் இஸ்லாமிய மக்கள் அவர்களின் விளையாட்டுப் பொருள் ஆகிவிட்டன. இணையதளம் மற்றும் சமூக ஊடகத்தின் மூலமாக அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகின்றனர். தேசபக்தி தான் அவர்களின் துருப்பு சீட்டு. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ சிறிய கருத்து வேறுப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அவர்கள் ‘தேசத் துரோகிகள்’ என்று பட்டம் சூட்டப்படுகின்றனர். ‘தேசபக்தி’யை கொண்டே அவர்களின் வாக்குவங்கியை பெருக்குகின்றனர். மாற்று கருத்தை முன்வைக்க துணிந்ததன் விளைவாக சில புகழ்பெற்ற எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இராணுவத்தையும், ஆயுதப்படைகளையும் சிலாகிக்க செய்து சுரண்டுவது அவர்களின் யுத்திகளில் ஒன்று. நம் நாட்டை தேவையற்ற போரில் ஈடுபடுத்தும் பேராபத்திலும் கூட அதனை செய்வார்கள். நாட்டின் பண்பாட்டு மற்றும் அறிவியல் நிறுவனங்கள் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. சர்வதேச அறிவியல் கருத்தரங்குகளில் கூட விஞ்ஞானபூர்வமற்ற, அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகளை முன்வைக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாத, அனுபவமற்ற நபர்களை துறைத் தலைவர்களாக நியமித்து, ஒட்டுமொத்த உலகின் கேலிப்பொருளாக்கி நம் மக்களின் கூட்டு நுண்ணறிவை பகடி செய்கின்றனர்.

‘கலை படைப்புகள்’, குறிப்பாக அவற்றின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களான – திரைப்படம் மற்றும் நூல்கள் ஆகியவற்றை தடை செய்வதும், தணிக்கை செய்வதுமே மக்களை உண்மையிலிருந்து விலக்கி வைக்கும் அவர்களின் வழிமுறை.

விவசாயிகள் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டனர். உண்மையில், ஒரு சில வணிகர்களின் நிர்வாகச் சொத்தாகவே இந்நாட்டை மாற்றியிருக்கிறது பி.ஜே.பி அரசாங்கம். கடுமையான பேரழிவாக முடிந்த மோசமான பொருளாதார கொள்கைகள் கூட, விளைவுகள் மறைக்கப்பட்டு வெற்றியடைந்தது போல காட்டப்பட்டன. பொய் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தும் உதவிகளோடு இவை செவ்வனே செய்யப்படுகின்றன. இது, நாட்டில் பொய்யான நம்பிக்கையை உருவாக்க உதவியது.

புள்ளியியல் மற்றும் வரலாற்றை திரிப்பது அவர்களுக்கு விருப்பமான திட்டங்களில் ஒன்றாகும். ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவது பெருந்தவறாகும். அது, உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கும் கடைசி ஆணியாகவும் இருக்கலாம்.

எனவே, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு வரமால் செய்யுமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். இந்திய அரசமைப்பை மதிக்கும், பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும், அனைத்து விதமான தணிக்கைகளையும் தவிர்க்கும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது உங்களின் தேர்வு கட்டளையாக இருக்கட்டும்.

ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு!

தினமணியின் பார்ப்பனீய விஷமத்தனம்!

சந்திரமோகன்

தினமணி தமிழ் நாளேட்டில், நடுப்பக்கத்தில் “இட ஒதுக்கீடு சலுகை : விட்டுக் கொடுக்க தயாரா? ” என்ற தலைப்பில், பூ.சேஷாத்ரி என்ற தினமணியில் பணியாற்றும் பார்ப்பனர் கட்டுரை எழுதியுள்ளார்.

எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள் & பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.

1) “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது ” எனத் துவங்கி, “பொருளாதாரத்தில் மேம்பட்ட SC &ST பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இட ஒதுக்கீடு எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும் ” என முடிக்கிறார்.

பொருளாதாரத்தில் மேம்பட்ட என்பதற்கு “ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் – 5 ஏக்கர் நிலமா ” என அவர் எந்த அளவுகோளும் சொல்லவில்லை ; எவ்வளவு பேர் வருவார்கள் என்றும் சொல்லவில்லை. பார்ப்பன குசும்பும், காழ்ப்புணர்ச்சியும் இத்துடன் நிற்கவில்லை.

2) “10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார்” என மொட்டையாக ஒரு கருத்து சொல்லுகிறார். எப்போது தெரிவித்தார்? கல்வி, வேலைவாய்ப்பு விசயத்தில் சொன்னாரா? என்பது பற்றி எல்லாம் விளக்கவில்லை. பலரும் இவ் விசயத்தில் குழம்புகிறார்கள்.

இரட்டைவாக்குரிமை பற்றிய விவாதத்தில் தான் அம்பேத்கர் , மக்கள் மன்றங்களில் 10 ஆண்டு கால அரசியல் இட ஒதுக்கீடு பற்றி முன்மொழிகிறார். காந்தி தலையீட்டால் இரட்டை வாக்குரிமை முடிவுக்கு வந்துவிட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே! சாதீயஅமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடுதொடர வேண்டும் என அம்பேத்கர் பல இடங்களில் தெரிவித்து உள்ளார்.

3) அம்பேத்கர் இயக்க ஆய்வாளர் சுஹாஸ் சோனாவணே என்பவர் ‘தலித் அமைப்புகளோ, அம்பேத்கரியவாதிகளோ அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரவில்லை; இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை ; இது தேவையில்லாதது” எனக் கூறிவிட்டாராம். !😢

எனவே பூ.சேஷாத்ரி அய்யர் தாங்களாகவே பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததுபோல … பொருளாதாரத்தில் மேம்பட்ட SC & ST யினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என விட்டு தரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள முன்னேறிய சாதிகளுக்கு, வசதி படைத்த பார்ப்பனர்கள் விட்டு கொடுக்கலாமே! பின்வரும் RTI தகவல் ஒன்றை பாருங்கள்!

Kind Attention : பூ.சேஷாத்ரி & வைத்யநாதன்!

1- ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த பதவிகள் – 49.
‘இவர்களில் 39 பிராமணர்கள்.
SC’ ST – 4. ஓ.பி.சி – 06

2- துணை ஜனாதிபதி செயலகத்தின்
பதவிகள் – 7
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்சி – எஸ்டி – 00. ஓ.பி.சி. -00

 1. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
  பிராமணர்கள். 17
  SC’ . ST- 01 . ஓ.பி.சி.-002

4- பிரதமரின் அலுவலகத்தில்
மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள். 31
SC ST – 02 OBC – 02

 1. விவசாயத் திணைக்களத்தின்
  மொத்த இடுகைகள் – 274.
  பிராமணர்கள். 259
  SC’ . ST-05. ஓ.பி.சி.-10
 2. மொத்த அமைச்சகத்தின்
  பாதுகாப்பு அமைச்சகம் 1379.
  பிராமணர்கள். 1300
  SC’ ST- 48. ஓ.பி.சி. -31

7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 209.
பிராமணர்கள். 132
SC’ ST- 17. ஓ.பி.சி. -60

8 – நிதி அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 1008.
பிராமணர்கள். 942
SC’ ST- 20. ஓ.பி.சி.-46

9 – பிளானட் அமைச்சகத்தில்
மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள். 327
SC’ ST-19. ஓ.பி.சி.-63

10- தொழில் அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 74.
பிராமணர்கள். 59
SC. SI- 4. ஓ.பி.சி. -9

11- கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. பிராமணர்கள். 99
SC- SI. 00 ஓ.பி.சி. -22

12 – கவர்னர் மற்றும் லெப்டினன்ட்
கவர்னர் ஒட்டுமொத்தம் – 27
பிராமணர்கள். 25
-SC- SI. 00. ஓ.பி.சி. -2

13- தூதுவர்கள் வெளிநாட்டில்
வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள். 140
SC’ ST-00. ஓ.பி.சி.-00

14- மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.
பிராமணர்கள். 100
SC’ . ST -03. OBC- 05

15 – மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் 26.
பிராமணர்கள். 18
SC’ . ST- 01. ஓ.பி.சி.-7

16- உயர் நீதிமன்ற நீதிபதி 330.
பிராமணர்கள். 306
SC’. ST- 04. ஓ.பி.சி. -20

17 – உச்ச நீதிமன்ற நீதிபதி 26.
பிராமணர்கள். 23
SC’. ST-01: ஓ.பி.சி.-02

18- மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
பிராமணர்கள். 2750 SC & ST
-300 மற்றும் 350 ஓ.பி.சி..

கோயில்கள், வழிபாட்டு தலங்கள், திருமணங்கள் & கருமாதிகளில் பிராமணர்கள் வாய்ப்பு 99% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைகளைப் பெற்றனர்.

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றது.)

பூ.சேஷாத்ரி அய்யர் அவர்களே!

இது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்ற வகையான தகவல் ஆகும். மத்திய, மாநில அரசுகளின், பொதுத்துறையின் கணிசமான உயர்பதவிகளை, இடைநிலை பதவிகளை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது தாங்கள் அறியாத செய்தியல்ல! (தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், IT துறைகளை ஆக்கிரமித்துள்ள பார்ப்பனர்கள் பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. )

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பார்ப்பனர்கள் தாமாகவே முன்வந்து “இத்தகைய அரசுப் பணிகள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் – ஏழை பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் ” என்று சொன்னால், உயர்சாதி ஏழைகள் பயனடைய வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

தாங்கள் இதைப் பற்றியும் கட்டுரை ஒன்றை தினமணியில் எழுத வேண்டும்.

பின்குறிப்பு :

அய்யா,
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.

”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”

ஆரா

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

இன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று ஊடகங்களில் திருமாவளவன் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். ‘வெண்மணி விவகாரத்தில் இடதுசாரிகளின் தியாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதை நன்றி உணர்வோடு கூற விடுதலைச் சிறுத்தைகள் கடமைப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.

வெண்மணியை வர்க்கப் போரின் அடையாளமாகவே நிலை நிறுத்தியது கம்யூனிஸ்டு கட்சி. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெண்மணிக்குள் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி செலுத்துகிறேன் என்று நுழைந்து இதை தலித் படுகொலை என்று கூறினர். அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும், சிறுத்தைகளுக்கும் ஓர் கருத்து வேறுபாடு தோன்றியது. அது அங்கே களத்திலும் காணப்பட்டது.

வெண்மணிப் படுகொலைகள் நடந்ததற்கு முக்கியக் காரணம் என்று தன் கட்டுரையில் பட்டியலிடும் ரவிக்குமார் 1. கூலி உயர்வுக் கோரிக்கை, 2. சாதியப் பாகுபாடு, 3. நிலவுடமை என்று கூறுகிறார். அதற்குப் பின்னான இரு பத்திகளில் வெண்மணியில் நடந்தது ஒரு சாதியப் படுகொலை என்கிறார்.

கீழத் தஞ்சை மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள், அதன் பின் சாதி இந்துக்கள் என்ற நிலையில் இதை ஓர் வர்க்கப் போராக பார்ப்பதா சாதிக்குள் குறுக்கி தலித் பிரச்னையாக பார்ப்பதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சீனிவாச ராவ் ஆண்டான் -அடிமைத் தனத்தை எதிர்த்தே புரட்சி செய்தார். இடதுசாரிகளின் கூலி, உரிமைப் போராட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மாகொடிய படுகொலையின் நினைவு நாளில், இடது சாரிகள் என்ற தடமே இல்லாமல் ஓர் வெகுஜன இதழில் கட்டுரை எழுதிவிட்டு… சரித்திரத்தை மாற்றுகிறார்கள் என்று பிறர் மீது நாம் குற்றம் சொல்ல என்ன முகாந்திரம் இருக்கிறது!

ஆரா, பத்திரிகையாளர்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், பட்டியலின எம்.ஏ.க்கள், எம்.பிக்கள் தங்களை தேர்ந்தெடுத்த பட்டியிலின மக்களின் நலனுக்காக பேச வேண்டும் என பேசினார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பா. ரஞ்சித் பேசிய சில கருத்துக்கள் விவாதமாகியுள்ளது.

“தலித் மக்களுக்காக பேச முடியாவிட்டால், பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை தூக்கிப் போட்டு வந்தால் நாங்கள் அவர்களை வெற்றி பெற வைப்போம். தலித் அமைப்புகளுக்கிடையே கூட்டணியை உருவாக்குவோம். குறைந்தது 7 லோக்சபா தனி தொகுதிகளில் உழைப்போம்.. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தலித் அமைப்பினரை தேர்ந்தெடுப்போம்” என்றார். பா. ரஞ்சித்தின் கருத்து குறித்து வந்த சில முகநூல் எதிர்வினைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

எழுத்தாளர் கொற்றவை:

பட்டியலின மக்களுக்கான பிரதிநிதிகள் கூட்டணி என்றால் மற்ற சாதி தொழிலாளர்களுக்காகவும், விவசாயக் கூலிகளுக்காகவும், இவர்களையெல்லாம் விட இன்னும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அனைத்து சாதிப் பெண்களுக்காகவும் எப்படி தொகுதிகளைப் பிரிக்கலாம்.. கூட்டணி வைக்கலாம்… என்பதை கேள்வியாக வைக்க வேண்டியுள்ளது.

அப்படியென்றால் மேற்சொன்னவர்களுக்கான தலைவர்கள் யார்? சாதிய அரசியலுக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் இளைஞர்களை, பெண்களை, அனைத்து சாதி உழைக்கும் வர்க்கத்தை மீட்பதற்கான மீட்பர்கள் யார்?
தொகுதிகள் யாது?

பெண்களின் ஓட்டுகளைப் பெற்று அந்தப் பன்றித் தொழுவத்திற்குள் நுழைந்தவர்கள் பெண்களுக்காக என்ன செய்துவிட்டார்கள்?

ஏழைகளின் ஒட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் அவர்களுக்காக என்ன செய்துவிட்டார்கள்… இப்படியும் கேட்கலாம்!

நாம் வெறும் சாதி மட்டுமல்ல வர்க்கமும் கூட… அதுவே அடிப்படை… மற்ற சாதி உழைக்கும் வர்க்கத்தை வென்றெடுக்காமல் இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

திராவிட அரசியலின் போதாமைக்கு மாற்று தலித்திய (பட்டியல் இன மக்களை மட்டும் உள்ளடக்கிய) அரசியல் அல்ல.. அதற்கு மாற்று பாட்டாளி வர்க்க அரசியல் தலைமை அமைத்தல்…

விலக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் அதே அடையாளத்தின் கீழ் மீண்டும் மீண்டும் சிதறுண்டு போதல் என்பது நம்மை பலவீனப்படுத்தும்.. நம்மை பெரும்பான்மை ஆக்கிக்கொள்ளும் பொருளாதார நிலை சார்ந்த அணித்திரட்டலே மாற்று அரசியலாக இருக்க முடியும்.

சமத்துவம் நாடுவோர் சாதி, வர்க்கம், அரசு, ஆளும் வர்க்க பாராளுமன்ற நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சுரண்டல் என்றால் என்ன ஒடுக்குமுறை என்றால் என்ன என்பன குறித்து மார்க்சிய சமூக அறிவியலைக் கொண்டு காணும்போது புரட்சிகர அடிப்படை மாற்றம் உண்டாக்கத் தேவையான பாதையை, உத்தியை கண்டடைய முடியும்.

சுரண்டல் சமூகத்தை ஒழித்தால் மட்டுமே ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும்! இந்த சமுக அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு சாதியை ஒழிக்க முடியாது!

ஊடகவியலாளர் வேந்தன். இல

இயக்குனர் ரஞ்சித் பேசியது இது தான். “புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுக்கொடுத்த தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிக்கு வரும் பிற கட்சிகளின் MLAக்கள், MPக்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து பேச மறுக்கின்றனர். ஜாதிய ஆணவப்படுகொலைகள் நடைபெறும் போது தலித் இயக்கத்தைச்சேர்ந்த தலைவர்கள் தான் கண்டித்து பேசுகிறார்கள், களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்.

ஜாதி ஆணவ படுகொலையை கண்டிக்க திராணியில்லாதவர்கள் பதவிக்கு செல்வதை விட, தொடர்ந்து களமாடும் விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், BSP, RPI போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து MLAக்களாக வேண்டும் MPக்களாக வேண்டும். அப்போது இன்னும் கூடுதலாக பொறுப்போடு பேசுவார்கள்”

உடனே ரஞ்சித் தலித் கூட்டணி பேசிவிட்டார் என்று பலர் தலித் அரசியல் பேசுபவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க தொடங்கிவிட்டனர்.

தலித் வன்கொடுமைகள் நடக்கும் போது அதை பற்றி பேசுங்கள் என்று ‘தான் ஆதரிக்கும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்காத முற்போக்காளர்கள் (சிலர் கொடுத்தனர்)’ ரஞ்சித்தின் கோபத்தை விமர்சிக்கும் முன் தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளவேண்டும்.

ரஞ்சித்தின் கோபம் நியாயமானது. ஆனால் அதற்கான தீர்வை கொடுப்பதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். விசிக தலைவர் திருமா தேர்தல் பார்வையை ஒட்டி அதற்கு கொடுத்த பதில் சிறப்பு. அது தான் தோழமை சக்தியை அரவணைத்து அறிவுறுத்தும் பண்பு.

தலித் கூட்டணி நடைமுறைக்கு சாத்திமற்றது. தேர்தல் அரசியலில் பிளவை ஏற்படும் என்று விவாதிப்பது வேறு. ஆனால் அதைத் தாண்டி ‘இது பார்ப்பனீய கண்ணோட்டம்’ ‘சனாதன ஆதரவு’, ‘பார்ப்பன சக்திகளின் கையாள்’ என்று ஜாதி சேற்றை வாரி பூசி முத்திரை குத்துவது அயோக்கியத்தனம். அது முற்போக்காளர்களுக்கு அழகல்ல.

சமூக-அரசியல் விமர்சகர் பிரபா அழகர்:

நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசிய முன்னாள் எம்.எல்.ஏ முனைவர் செ.கு.தமிழரசன் (அம்பேத்கர் ஆரம்பித்த இந்திய குடியரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர்), அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்தது சரியில்லையென்றும், அது சதிச்செயலென்றும், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தின் முன் நிற்காது என்றும் சொல்கிறார். (யாரும் இதுவரை உச்சநீதிமன்றதில் வழக்கு தொடுக்கவில்லை என்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.)

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தாய் கழகமான புரட்சி பாரதம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய இன்னொரு தோழமை கட்சியான பகுஜன் சமாஜ் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத நிலைதான். ரஞ்சித் தன்னுடைய சமீபத்திய உரையில் பெயர் குறிப்பிட்ட நான்கு தலித் கட்சிகளுமே அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஏற்காத அல்லது வெளிப்படையாக ஆதரிக்காத கட்சிகள்தான்.

கலைஞருக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய ரஞ்சித், கலைஞர் மீது தனக்கு விமர்சனங்களும் இருக்கின்றன அதை தற்போது பேசவிரும்பவில்லை என்றார். அந்த அளவுக்கு அறவுணர்வு கொண்ட ரஞ்சித், தன்னுடைய உரையில் கலைஞர் தலித் மக்களுக்காக செய்த சில சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டியவர், மிக மிக கவனமாக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று பாராட்டமல் தவிர்த்தார். பல ஆவேசங்களை கொட்டி தீர்க்கிற அவர், அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசமுடியாத நெருக்கடி எங்கே இருந்து வருகிறது??

ரஞ்சித் தன் மனதளவில் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர் என்று நான் நினைக்கவில்லை, காரணம் அவர் சந்தையூர் தீண்டாமை சுவர் சிக்கலில் அருந்ததியர்கள் பக்கம்தான் நின்றார் என்பதை நான் மறைக்கநினைப்பவனில்லை. அதேபோல, ரஞ்சித் தயாரிப்பில் படம் இயக்கிய மாரி செல்வராஜ், தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக உயிர்விட்ட தோழர் நீலவேந்தனுக்கு தன்னுடைய முதல் விருதினை காணிக்கையாக்கிவர் என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால், இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய அரசியல் என்பது, வெளிப்படையாக தலித் ஒற்றுமைக்கு எதிராக இயங்குபவர்களையும், இன்னொரு தலித் சமூகத்தின் நலனுக்கு விரோதமாக செயல்படுபவர்களையும் தன்னுடைய தோழமை சக்தியாகவும், அருந்தந்தியர் உள் இட ஒதுக்கீட்டை சாத்தியப் படுத்திய திமுகவை தலித் விரோத கட்சியாகவும் சித்தரிக்கும் அரசியல் என்பது ஆபத்தானது. தலித் மக்களுக்கே ஆபத்தானது.

தன்னை ஒரு புரட்சிகர தலித் விடுதலை வீரனாக வளர்த்துக்கொண்டிருக்கிற தோழர் ரஞ்சித் அவர்களே இவ்வளவு நேக்குபோக்காகவும், காரியவாத கள்ள மவுனவாதியாகவும், வரலாற்று இருட்டடிப்பாளராகவும் இருக்கும் போது, மூன்று பெரும் தலித் சமூகத்திற்கு மத்தியில் தான் சார்ந்த பெரும்பான்மை சமூகத்தின் மனம் நோகாதவாறுதான் தோழர் ரஞ்சித்தே பேசமுடிகிறது என்பதுதான் எதார்த்த சிக்கலாக இருக்கும்போது, ஒரு ஓட்டுக்கட்சியில் இருக்கிற சாதாரண எம்.எல்.ஏ , எம்.பிக்கள் பல சாதக பாதகங்களையும் அனுசரித்து வார்த்தைகளை அளந்து பேசுவது ஒன்றும் பஞ்சமா பாதகமான செயல் கிடையாது!!!

#ஜெய்பீம்

’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்

‘திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’ என்கிற இயக்குநர் பா. ரஞ்சித்தின் கேள்விக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பதில்…

“முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.
அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் – தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல்லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா – அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர்களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?
அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள் விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில்லையா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம்பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு – சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே ?

ஒரு எடுத்துக்காட்டு
கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.
பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.
சென்னை பெரம்பூரில் பெரியார் தலைமையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி… ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார்.
(நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.
தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர்வானவர்கள் என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன், பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.
(குடிஅரசு – 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன்னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடுமையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது – மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)
கள்ளக்குறிச்சி – தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)
சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)
இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)
திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)
சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)
திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)
தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)
லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)
அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932
லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)
சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)
தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)
சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)
சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)
திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)
பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)
சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)
சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)
ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)
திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு – இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிரயோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

” எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் – தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள் தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே.

முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது, மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன். அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும் கூட!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது – சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது. மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது. அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

நடந்திருக்கின்ற மாற்றங்களை பரிகசிப்பதோ, உதாசீனப்படுத்துவதோ, ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும், இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் – கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில் உசத்தி – தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.
இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற்றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது, பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு – சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா – இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? – அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி – தீண்டாமை ஒழிப்பு – மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே! திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது – யாருக்கோ தான் பயன்படும். கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல.

ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் – அதற்குமேல் விமர்சிக்கலாமா?

விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் – வரவேற்கிறோம். பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும்.

தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும். ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது.

தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.!

கவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்

பா. ஜீவ சுந்தரி

பா.ஜீவசுந்தரி

அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள LLA பில்டிங் என்ற தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் அரங்குகள் முன்பு வசதியாக இருந்தன. அதற்கும் ஆப்பு வைத்தது அப்போதைய அம்மாவின் அதிகார மமதை கொண்ட ஆட்சி.

இப்போதும் அதே அம்மா பெயரைச் சொல்லி ஆளும் எடுபிடி அரசு கவிக்கோ மன்றம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று மாலையில் கூட தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. கண்ணில் விழுந்த மண் துகளாக அரசுக்கு அதுவே உறுத்தியிருக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக அங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கவிக்கோ மன்றம் உரிமம் பெறாமல் (PRL) இயங்கி வருவதாக இன்று உதவி ஆய்வாளர் பாலமுருகன் அம்மன்றத்தின் உரிமையாளர் முஸ்தபா மீது E 1 Cr No, 426/18 U/s 34 (1) TNP act-ல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தோழர் பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதற்காகத் தோழர்கள் பாலபாரதி, சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த மேரி, கிருஷ்ணவேணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பள்ளப்பட்டி காவல் நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாசிசத்தின் கொடுங்கரங்கள் உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பா. ஜீவசுந்தரி, எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

சென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்!: மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

சென்னையில் கவிக்கோ மன்றம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியின் இன்னொரு அத்தியாயம். ஏற்கனவே பொதுகூட்டங்கள் நடத்துவதற்கு கடும் கெடுபிடிகள் இருக்கின்றன. இப்போது அரங்க கூட்டங்கள்மீதும் கைவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் கூட்டம் நடத்துவதற்காக இருந்த பல இடங்கள் படிப்படியாக குறைந்துவிட்டன.

கவிக்கோ மன்றம் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் சிறு அமைப்புகளும் கூட்டம் நடத்துவதற்கான சகல வசதிகளும் கொண்ட மிகவும் நேர்த்தியான அரங்கம். ஒலி-ஒளி அமைப்பில் கவிக்கோ மன்றம் அளவுக்கு சிறப்பான அரங்கம் சென்னையில் அரிது. மேலும் யார் அரங்கு கேட்டாலும் மிகுந்த நட்புணர்வுடன் கொடுப்பார்கள். வருடம் முழுக்க அங்கு ஏதாவது ஒரு கூட்டம் நடந்துகொண்டே இருக்குமளவு சென்னையின் அறிவுலக அடையாளமாக கவிக்கோ மன்றம் திகழ்கிறது. அதன் உரிமையாளர் முஸ்தபா மிகுந்த ஜனநாயக பண்பும் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் மிக்கவர். எல்லா தரப்பினருக்கும் பயன்படும் ஒரு சிறந்த அரங்கமாக அதை அவர் மிகுந்த கனவுடன் உருவாக்கி நடத்தி வருகிறார். கட்டண விஷயங்களில் கூடகறார்தன்மை அற்ற நெகிழ்வான முறையையே கவிக்கோ மன்றம் கடைபிடித்து வந்திருக்கிறது.

உயிர்மை கடந்த மூன்றாண்டுகளாக தனது பெரும்பாலான கூட்டங்களை கவிக்கோ மன்றத்திலேயே நடத்தி வந்திருக்கிறது. கவிக்கோ மன்றத்திற்கு நெருக்கடிகள் தரப்ப்பட்டால் அது தமிழ் இலக்கிய களத்திற்கும் மாற்று சிந்தனையாளர்களுக்கும் பெரும் இழப்பாக இருக்கும். மேலும் இது ஒரு மோசமான முன்னுதாரணமாகி எலலா அரங்க கூட்டங்களையும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வருவதற்கு காரணமாகி விடும்.

கவிக்கோ மன்றம் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிககான ஒரு களம். எனவே தமிழக அரசு கவிக்கோ மன்றத்தின் மீதான வழக்கை கைவிட வேண்டும். பேசுகிற மனிதர்களின் வாயை மட்டுமல்ல, பேசுகிற இடங்களின் வாயில்களையும் அடைக்க நினைத்தால் அது நீண்ட நாட்கள் நீடிக்காது. எல்லாவற்றையும் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பா? இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

குடும்பம் என்ற அமைப்பில் எவ்வளவோ பலவீனம் இருந்தாலும், அதுதான் நம்மைப்போன்ற நாடுகளில் பெண்களுக்கு மிச்சமுள்ள பாதுகாப்பு அமைப்பு. குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
– எழுத்தாளர் இமையம், ஒரு நேர்காணலில்…!

இதில் உண்மை இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும் வன்முறையானதாக இருந்தாலும் “நமது சமூகத்தில்” குடும்பங்களே பெண்களுக்கான குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. வன்முறை என்று பார்க்கிற போது, தனித்து வாழும் பெண் எதிர்கொள்கிற வன்முறை, குடும்ப அமைப்பிற்குள் வாழும் பெண்ணின் வன்முறைக்கு நிகரானதாகவோ அல்லது அதிகமானதாகவோதான் இருக்கிறதே ஒழிய குறைவானதாக இல்லை. இங்கு மட்டும் என்றில்லை, முன்னேறிய நாடுகளிலும் கூட இதுதான் நிலைமை.

தனிமனித சுதந்திரத்தின் பொருட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை, உற்றுக் கவனிக்கும் மற்ற பெண்கள், அத்தகைய முடிவைத் தாங்கள் எடுக்காமல் இருப்பார்கள் என்பதே எனது அவதானம். நம் சூழலில் பல பெண்ணியலாளர்கள் இந்த எதார்த்தத்தைப் புரிந்த புத்திசாலிகள்.

தனித்து வாழ முயலும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலில் பிரதானமானது பொருளியல் தேவை. குறுகிய காலத்திற்குள் சோர்வை நோக்கித் தள்ளும் சூழலே இங்கிருக்கிறது. இரண்டாவது எந்த தனிமனிதர்களுக்கும் தேவைப்படுகிற “அரவணைப்பு”. இதனுள் காதல், காமம் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதைக்கடந்த புரிதலும் அதனுள்ளேதான் இருக்கிறது. இந்த அரவணைப்பு எனும் கருத்து “security” என்பதோடு ஆழமாகப் பிணைந்தது. புற பாதுகாப்பு அல்ல நான் சொல்வது. ஒட்டு மொத்த வாழ்வு குறித்த அச்சமின்மையையே சொல்கிறேன்.

குடும்ப அமைப்பிற்குள் இருக்கும் ஒரு பெண் இத்தகைய அரவணைப்பைப் பெறுவதை அந்த நிறுவனம் ஓரளவுக்கு உறுதி செய்கிறது. கண்காணிக்கிறது. அதில் முழு அளவிலான காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒருவித நிச்சயம் உண்டு. இந்த விவகாரங்களில் தேர்ச்சியுள்ள ஒரு பெண், தனது இணையை “manipulate” செய்வதன் வழியாக, தான் பெறும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதன் வழியாக, வீட்டை விட்டு வெளியேறாமலேயே தேவைப்படும் சுதந்திரத்தை எட்டுகிறாள். அதன் உபவிளைவாக அவளால் ஒருவித அதிகாரத்தையும் நிறுவமுடிகிறது. இதுதான் ஆண் X பெண் எனும் எதிர்நிலை தகர்ந்து போகிற இடம். இந்த அதிகாரத்தின் வழியாக அத்தகைய மன உறவுகளிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தையும் அவள் இல்லாமலாக்குகிறாள். ஆக ஒரு கட்டத்தில் அவளே சுரண்டுபவளாகவும் பரிணாமம் அடைகிறாள்.

குடும்பம் என்கிற அமைப்பின் ஆதாரப் பிரச்சினையே அதுதான். அங்கு சமத்துவத்துக்கு வாய்ப்பில்லை. யாரால் தந்திரமாக இருக்க முடிகிறதோ, யாரால் தனது இணையை நுணுக்கமாக manipulate செய்யமுடிகிறதோ அவர்களது கை உயர்கிறது. யாராவது ஒருவர் விட்டுத்தர வேண்டியிருக்கிறது. பூசல்கள் முளைக்கும் இடமும் அதுதான். எல்லாவற்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகுபவர்கள் இதில் தோற்பார்கள். குடும்பம் என்பது “சராசரித்தனத்தை” நிபந்தனையாக வைக்கும் அமைப்பு. அதுகுறித்த புரிதல் இருப்பவர்கள் தங்களது சுயத்துக்கு பங்கம் வராமல், தேவைப்படும் இடங்களில் விட்டுக்கொடுத்து அதை நகர்த்துகிறார்கள். அதனுடன் பொருந்த முடியாதவர்கள் ஒன்று வெளியேறுகிறார்கள் அல்லது தங்களது அடிமைத்தனத்தை ஒத்துக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என இரண்டு தரப்புமே உண்டு.

உணர்வின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேறுகிற பெண்கள், ஒருவித அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதன் தொடக்க காலத்தில் அது தரும் எல்லையற்ற சுதந்திரம் களிப்பை நோக்கி உந்துகிறது. ஆனால் அதன் உபவிளைவாக வரும் “நிச்சயமின்மை” ஒரு பூதத்தைப் போல் அவர்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் அரவணைப்புக்காக ஏங்கத் தொடங்குகிறார்கள். குடும்பம் எனும் அமைப்பின் வன்முறையற்ற, அதே நேரம் குடும்பம் எனும் அமைப்பு தரும் கதகதப்பைப் பெற விழைகிறார்கள். அது அத்தனை எளிதானது அல்ல என்பதே எதார்த்தம். ஏனெனில் வன்முறையும் அரவணைப்பும் சேர்ந்தே குடும்பம் எனும் அமைப்பாக உருக்கொள்கிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இல்லாமல் அதன் சாதகங்களை அனுபவிக்க முடியாது என்பதே அதன் அபத்தம்.

குடும்ப அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு சுரண்டுபவர்களாக மாறும் ஒரு பகுதி பெண்களைப் போல, வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் ஒரு பகுதி உதிரிகளாக மாறுகிறார்கள். குடும்ப அமைப்பிற்குள் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டிருந்த போது, அதுவே அவர்களது சமூக அமைப்பாகவும் இருந்தது. அதனால் குடும்பத்தை விட்டு வெளியேறும் அத்தகைய பெண் தான் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்டதாக நினைக்கிறாள். அதனால்தான் தமது தான்தோன்றித்தனத்தை இந்த சமூகத்தின் முன்னால் கலகமாக முன்வைக்கிறாள். அதன் வழியாக ஒன்று தனது பதட்டங்களை மறைத்துக் கொள்ள முயல்கிறாள், அல்லது தனது முந்தையை இணையைப் பழி வாங்குவதாக திருப்தி அடைகிறாள். சமூக ஊடகங்களில் நாம் கேட்கும் பெரும்பான்மை கலக ஊளைகளுக்குப் பின்னால் இருப்பது இந்த அற்பத்தனமே.

இத்தகைய இடத்துக்கு நகரும் ஒருத்திக்கு தனது முந்தைய இணையைப் பழி வாங்குவதும் சமூகத்தைப் பழி வாங்குவதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். ஆனால் இது அவளுக்குள் ஆழமான பிளவை ஊக்குவிக்கிறது. அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று அவள் தீவிரமாக யோசிக்கிற போது, “நமக்கு இப்போது தேவை நம்மைப் புரிந்துகொள்கிற, அல்லது நமக்கு அடங்கிப்போகிற ஒரு ஆண்தான்” என்கிற முடிவை நோக்கி அவளை நகர்த்துகிறது. அதன் பொருட்டு அவள் எல்லாவற்றையும் பணயம் வைக்க முனைகிறாள். அவள் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் ஒரு ஆண் என்பவனின் தேவை பிரதானமானதாக இருக்கிறது. அந்த ஆணுக்கான நிபந்தனை அவன் பாதுப்புணர்வைத் தருபவனாக இருக்கவேண்டும் என்பதே. அன்பெல்லாம் இரண்டாபட்சம்தான். இப்படித்தான் ஒரு வட்டம் நிறைவடைகிறது. தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது.

இப்போது இமையம் சொல்லியிருப்பதை மீண்டும் படித்துப் பாருங்கள். அவர் செல்போன் குறித்து சொல்லியிருப்பது பற்றி பிறகு பேசலாம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?

கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்ற பிரதிநிதிகளை சந்தித்துவருகிறார். பெண் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த ரஜினி, அவர்களுக்கு மனுஸ்மிருதியை பரிசளித்தார். பெண்களை பாகுபாட்டுடன் சித்தரிக்கும் மனுஸ்மிருதியை பரிசளிப்பதுதான் ஆன்மீக அரசியலா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Prabaharan Alagarsamy

பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிற மனுதர்ம சாஸ்த்திரத்தை, தன் கட்சியின் மகளிரணியினருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி.இதுதான் ஆன்மீக அரசியல்..

சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாக சொல்கிற ரஜினி, அதை சரி செய்வதற்கு வைத்திருக்கும் கையேடு (manual) இந்த மனுநீதியைதான்…

கெட்டப்பய சார் இந்த ரஜினி…

கி. நடராசன்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?-ரஜினி விடை மனுநீதி.. பெண்களை இழிவு படுத்தும் நூலை பெண்கள் அமைப்பு தலைவிக்கு பரிசளிக்கும் ரஜினி

இந்துக்கள்’ இழந்தனர். இந்துக்களின் நலன்கள் பாதிக்கப்பட்டன ஆகிய ஆர்.எஸ்.எஸ் புகார்களில் இந்துக்கள் என்பதன் அர்த்தம் இந்து ஆதிக்கச் சாதிகள்,அதிலும் ஆண்கள் என்பதே!

பெண்கள் பேச்சை நம்ப முடியாது. அதனால் நீதிமன்றங்களில் பெண்களின் சாட்சியம் செல்லாது- பார்ப்பனீய தர்மம் எனும் நாரத ஸ்மிருதி

கணவன் – மகன் அனுமதி இல்லாமல் பெண்கள் செய்யும் விற்பனை, வாங்குதல், கணக்கு, தானம் ஆகிய சொத்து லேவாதேவிகள் செல்லாது – மனுஸ்மிருதி

கணவன் இல்லாத நேரத்தில் மனைவி மகிழ்ச்சியாக பொழுது போக்க கூடாது. அலங்கரித்து கொள்ள கூடாது -விஷ்ணு ஸ்மிருதி

தான் உயர்ந்தவளென, தன் வீட்டார் உயர்வானவர்கள் என்று கருதி கணவன் பால் தனது கடமைகளை அலட்சியப்படுத்தும் பெண்கள் அனைவரையும் காணும் இடத்தில் உயிருடன் நாய்களை கடிக்கவிட்டு சாகடிக்க வேண்டுமென்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவளுக்கு சாதாரணமரண தண்டனை போதாது.
தான் உயர்ந்தவள், தன் வீட்டார் உயர்ந்தவரென கணவன்பால் கடமையை அலட்சியப்படுத்தும் பெண்களை நாய்களை கடிக்கவிட்டு சாகடிக்க வேண்டும்- மனு

நிரபராதியை தண்டிப்பதும் குற்றவாளியை விட்டுவிடுவதலும் இரண்டும் சமமான பாவச்செயல்களே- பார்ப்பனீய தர்மம்

பெண்ணுக்கு சுதந்திரமாக வாழும் தகுதி இல்லை- மனுஸ்மிருதி மட்டுமல்ல பெளதாயன், யாக்ஜ்வல்கியன், வசிஷ்டன், விஷ்ணு, நாரதனும் அதே அதே

மார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்

சந்திர மோகன்

சந்திர மோகன்

“கம்யூனிஸ்டுகள் ஏன் மாற மறுக்கிறார்கள்? “இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு லெனினை விட பெர்ன்ஸ்டைன் நல்ல முன்மாதிரி” என்ற சான்றிதழுடன் எழுத்தாளர், காந்திய சோசலிச வகையான வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா இன்று தி இந்து வில் கட்டுரை எழுதியுள்ளார். முக்கியமான கருத்துகள் மட்டும் பின்வருமாறு…

1) லெனின் பழிவாங்கும் எண்ணம் உள்ளவர்… அமைதியான முறையில் தான் ஜனநாயகத்திற்கு மாற வேண்டுமே தவிர வன்முறை மூலம் புரட்சியைக் கொண்டு வரக்கூடாது… என்ற பெர்ன்ஸ்டைன் இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்க முடியும்.

2) லெனின் ரஷ்யாவில் கொடுங்கோலர் ஜார் மன்னரின் ஆட்சியை அகற்றிவிட்டு, அதை விடக் கடுமையான ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்த போல்ஸ்விக்குகளின் ஆட்சியை கடைப்பிடித்தார்.

3) லெனின் கொள்கைப்படியான ‘ஒரு கட்சி ஆட்சிமுறை ‘மீதான நம்பிக்கையை… மார்க்சிஸ்டுகள் விலக்கிக் கொண்டு விடவில்லை… மார்க்சிஸ்டு கட்சியில் லெனினின் விசுவாசிகள் மத்திய குழுவில் இருந்ததால் தான் 1996 ல் ஜோதிபாசு பிரதமராகக் கூடாது எனத் தடை விதித்தனர்.

4) 2004-ல் வரலாற்றுப் பிழையை செய்தனர்… லெனினின் கொள்கைகள் காரணமாக வாய்ப்பு வந்த போதும் கூட… ஐ.மு.கூ அரசில் சேராமல் தவிர்த்தனர்… மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மார்க்சிஸ்டுகள் சேர மறுத்த தவறுக்கான விலையை கொடுத்து விட்டனர்.

5) மன்மோகன் சிங் முதலாவது அரசில் மார்க்சிஸ்டுகள் பங்கேற்று இருந்தால்… நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு நாடு முழுக்க மக்களின் பாராட்டுக்கு ஆளாகியிருப்பார்கள் ; மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் தவிர இந்தி பேசும் மாநிலங்களிலும் எளிதாக செல்வாக்கு பெற்றிருப்பார்கள்.

 • இவை எல்லாம் ராமச்சந்திர குஹா முன்வைத்துள்ள கருத்துக்கள்.

சிபிஎம் கட்சி மாநாடு நடைபெறும் தருணத்தில் பிரதிநிதிகளை காங்கிரஸ் கட்சியை_நோக்கித் தள்ளவே ராமச்சந்திர குஹா போன்ற எழுத்தாளர்கள், இந்து பத்திரிக்கை குழுமம் போன்றவை விரும்புகிறது எனத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆனால், ஒரே வரியில் காங்கிரஸ் உடன் சேருங்கள் என நேரடியாக சொல்வதை விட்டு விட்டு லெனின் மீதான தாக்குதலுக்குள் செல்கிறார் குஹா. “லெனின் எதிர் பெர்ன்ஸ்டைன்” என்ற விவாதத்தை முன்வைக்கிறார். லெனினை கொடுங்கோலனாக சித்தரித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொச்சைப் படுத்துகிறார். மறைமுகமாக பாஜக விற்கு உதவுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது வெறுப்பு அரசியல் தாக்குதலை கட்டமைக்கிறார். அனைத்தும் நாம் விரிவாக விவாதிக்க போவதில்லை. சில அடிப்படையான விவாதங்கள் மட்டும் பரிசீலிப்போம்.

அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்வோம்!
Back To Basics

யார் இந்த பெர்ன்ஸ்டைன்?

மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்தில் வாழ்ந்த ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் தான் பெரன்ஸ்டைன், காவுட்ஸ்கி போன்றோர் ஆவர். பெரன்ஸ்டைனை திரிபுவாதத்தின் தந்தை எனலாம்.

மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் ஏங்கெல்ஸ் உடன் நெருக்கமாக இருந்தனர். 1895 ல் அப்போது ஜெர்மனியில் நிலவிய குறிப்பான சூழலில், பாராளுமன்ற தேர்தலில் ஜெர்மன் கட்சியானது பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்த தருணத்தில், குறிப்பான அய்ரோப்பிய சூழலில், முதலாளித்துவ வளர்ச்சியின் குறிப்பிட்ட தொரு காலத்தில்…. செயல்தந்திரத்தில் tactical மாற்றம் என்ற வகையில் சர்வஜன வாக்குரிமை என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டியதை வலியுறுத்தினார்.

ஆனால், அதே முகாந்திரத்தை முன்வைத்து போர்தந்திரத்தில் Strategy யில் மாற்றத்தை பெர்ன்ஸ்டைன் முன் வைத்தார் ; பரப்புரை செய்தார்.

#மார்க்சிய_மதிப்பீடு களிலிருந்து மாறுபட்டு….உற்பத்தி ஒன்று குவிதல் மிகமிக மெதுவாக நடப்பதாகவும், சிறுவீத தொழில்கள் பெருவீத உற்பத்தியால் ஒழித்துக் கட்டப்படவில்லை எனவும் கருதினார். மேலும், முதலாளித்துவமானது கார்ட்டல்கள், டிரஸ்டுகளை உருவாக்கியதன் மூலம், சுய ஒழுங்கு அமைப்பை உரவாக்கி விட்டதாகவும், ஆகையால் எவ்விதமான தீவிர நெருக்கடியையும் தவிர்க்கும் என்றார். மேலும், சமூகத்தில் இரண்டு வர்க்கங்களுக்கிடையில் மட்டுமேயான அணிசேர்க்கை நடக்க வில்லை, மத்திய தர வர்க்கம் மறையவில்லை, முதலாளிகள், சொத்துடமையாளரகள், பங்குதாரர்கள் எண்ணிக்கை மட்டுமே கூடியுள்ளது …எனச் சொன்னார்.

நவீன தேசங்களின் அரசியல் நிறுவனங்கள் எல்லாம் சனநாயகமாகி விட்டது எனவும், மூலதனத்தின் / முதலாளித்துவத்தின் சுரண்டல் முயற்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து விட்டதாகவும், வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைகளை களைந்து விட்டதாகவும் கருதினார் ; பாராளுமன்ற ஜனநாயகம் வலுவாக உள்ள இடங்களில், அரசை வர்க்கப்போராட்டத்தின் கருவியாக பார்க்க கூடாது என்றும் சொன்னார். பெர்ன்ஸ்டைன் சொன்னார் : தொழிலாளர்கள் அதிகாரத்தை புரட்சியின் மூலமாக கைப்பற்ற சிரமப்பட வேண்டாம், மாறாக அரசை சீர்திருத்த கவனம் செலுத்த வேண்டும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் உடனான அடிப்படை வேறுபாடு

மார்க்ஸ் மூலதனம் நூலில் கூட்டு பங்கு கம்பெனிகள் Joint stock companies என்ற நிகழ்ச்சிப் போக்குப் பற்றி சொல்கிறார்; எங்கெல்ஸ் அவ் வளர்ச்சியை கார்ட்டல்கள் மற்றும் டிரஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார். கார்ட்டல்கள் Cartels மூலதனக் குவிப்பின் உச்சக் கட்ட வளர்ச்சியை குறிப்பிட்டதுடன், “சுதந்திர போட்டி” என்ற முதலாளித்துவ கோட்பாடு ஓட்டாண்டி ஆகிவிட்டதை அம்பலப்படுத்தியது.

பெர்ன்ஸ்டைன் மூலதனக் குவிப்பு மத்தியத்துவத்தை அகற்றுதல், சுய ஒழுங்கு, சனநாயகம் ஆகியவற்றை தானே கொண்டு வரும் என நினைத்துக் கொண்டார். ஆனால், மூலதன ஒன்றுகுவிப்பானது ஆக்கிரமிப்பு மிக்க காலனித்துவ கொள்கைகளையும், ஏகாதிபத்தியம் ஆக வளர்ந்து உலகப் போர் வரை கொண்டு சென்றது என்பதையும் பார்த்தோம்; லெனின் இந்த வளர்ச்சி பற்றி தனது ” ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ” நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

திரிபுவாதிகள் குடியரசு அமைப்புகளில் பகைமைக்கான அடிப்படை தகர்ந்து விடுவதாக கருதிய போது, லெனின் தெளிவு படுத்தினார், முதலாளித்துவத்தின் சுய முரண்பாடுகள் வர்க்கப் போராட்டத்திற்கான விளை நிலத்தை வழங்குகிறது.

பாராளுமன்றத்தின் தன்மை பற்றி

மன்மோகன் சிங் அரசாங்கத்தில் சில அமைச்சகங்களை எடுத்து பணியாற்றி இருந்தால் மார்க்சிஸ்டுகள் நாடு முழுவதும் புகழ் பெற்று இருப்பார்கள் என்கிறார், குஹா. அப்படியா ?

பாராளுமன்றம் என்பது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனம் என்றும், பாட்டாளி வர்க்கம் சாதாரணமாக நுழைந்து, பெரும்பான்மையை பெற்று விட்டால், எளிதாக சோசலிசம் நோக்கி கொண்டு சென்று விட முடியும் என்பது வழிவிலகலாகும்; வெறும் சுகமான கற்பனையே ஆகும்.

ஆயிரத்து ஒரு வழிகளில் முதலாளித்துவத்தால் இணைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் தான் பாராளுமன்றம் இயங்குகிறது. உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஆகச் சிறந்த கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள், நிலவுகிற இந்த முதலாளித்துவ அமைப்பில் சில சீர்திருத்தங்களை செய்யலாம். அவ்வளவே! கம்யூனிஸ்டுகள் தனது சோசலிச இலட்சியத்தை அடைவதற்கு ஏற்கெனவே ரெடிமேடாக உள்ள முதலாளித்துவ அமைப்பை பயன்படுத்த முடியாது. பழைய அரசமைப்பு தகர்க்கப்பட வேண்டும். புதிய அரசு பொறியமைவு புதிதாக கட்டி எழுப்பப்பட வேண்டும்!

அமைதி வழியில் புரட்சி!

மார்க்சீய சிந்தனையில், அமைதி வழி புரட்சி என்பது, வர்க்க சக்துகளின் சமன்நிலையில் ஏற்படும் சில குறிப்பிட்ட சிறப்பு நிலைமைகளில் உருவாகிற அரிதிலும் அரிதான, விதிவிலக்கான வாய்ப்பு ஆகும்.

மார்க்ஸ், அமெரிக்காவில் நிலையான ராணுவமும், அதிகார வர்க்கமும் உருவாகாத போது அப்படி ஒரு சாத்தியப்பாட்டை பேசினார்.

லெனின், அத்தகையதொரு சாத்தியப்பாட்டை ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சியின் போது குறிப்பிட்டார்.

சீனாவிலும் கூட, வெற்றிகரமான ஜப்பானிய எதிர்ப்பு போருக்குப் பிறகு, உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர, சியாங்கே சேக் உடன் ஒரு கூட்டணி அரசு உருவாவது என்ற பின்னணியில் அத்தகையதொரு வாய்ப்பு இருந்தது.

ஆனால், உண்மையிலேயே எதுவும் நடைபெறவில்லை. எனினும், இன்னமும் தத்துவ தளத்தில் இத்தகையதொரு வாய்ப்பை மார்க்சீயம் நிராகரிக்கவில்லை. அமைதி வழி புரட்சி பற்றி விவாதிக்கும் போது இந்தோனேசியா, சிலியில் கம்யூனிஸ்டுகள் சிந்திய ரத்தம், அனுபவம் மறந்து விடக் கூடாது.

அமைதி வழிப் புரட்சி என்பது எதிரி எந்தவொரு சண்டையும் இல்லாமல் சரணடைவதற்கு ஒப்பானதாகும். அப்படிப்பட்ட விதிவிலக்கான வாய்ப்பு அது! அதற்கு எந்தளவு கம்யூனிஸ்ட்டுகளின் தயாரிப்பு இருக்க வேண்டும் என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த விதிவிலக்கான வாய்ப்பை மறந்து விட்டு, பெர்ன்ஸடைனை முன்வைத்து பொதுவானதாக்கப் பார்க்கிறார், குஹா.

காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்திற்குள் சென்று நற்பெயர் பெற்று விடலாம் என்றும், அதற்கடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று விடலாம் என்றும், பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படைகளை மாற்றி சோஷலிசத்தை கட்டிவிடலாம் எனவும் நம்பச் சொல்கிறார்.

போகமுடியாத ஊருக்கு வழி சொல்கிறார்

செல்வாக்கு மிக்க மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சியானது, அத்தகைய முதலாளித்துவ அரசாங்கங்களை வர்க்கப்போராட்டத்தை Class struggle வளர்க்க பயன்படுத்துவதா அல்லது நிர்வகிப்பது Governance என்ற அளவில் சுருங்கிப் போய் அவற்றையும் இழந்து விடுவதா என்ற முரண்பாட்டை தீர்க்க தீவிரமாக விவாதிக்க வேண்டிய தருணத்தில், மீண்டும் மார்க்சிஸ்டு கட்சியின் செயல்தந்திர வழியை நீர்த்துப் போய் விடவே அக்கறையுடன் வழிகாட்டுகிறார்.

மார்க்சிஸ்டுகளை வலுப்படுத்த வழி காட்டாத ராமச்சந்திர குஹாவின் கட்டுரையின் அனைத்து கருத்துக்களும் வெறும் குப்பை; மார்க்சிய சொல்லாடலில் அப்பட்டமான திரிபுவாதம். முறியடிக்கப் படவேண்டும்.

சந்திரமோகன், இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். 

 

“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

தன்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைவதாக  சாதி ஆவணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் செயல்பாட்டாளருமான கௌசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு…

திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சாதி ஒழிப்பாளர்களாக இருக்கலாம். இவை அனைத்தும் வேறு. சமூகநீதி சார்ந்து திமுக செய்திருக்கிற சில நல்ல நடவடிக்கைகளையும் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதேநேரம் எனக்கிருக்கும் மையமான கேள்விகள்:

இத்தனை காலம் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகளில் திமுக வின் நிலைப்பாடு என்ன? முரணின்றி தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக அது ஒலித்துள்ளதா? சாதி கேட்டும் சாதி பார்த்தும் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சி வன்கொடுமை நிகழ்வுகளில் யார் பக்கம் நிற்கும்? நின்றிருக்கிறது? காங்கரசோடு இணைந்து இந்துத்துவத்தை ஒழிப்பது எப்படிச் சாத்தியம்? ராமராஜ்ய கனவு காங்கிரசுக்கும் உரியதா இல்லையா?இந்தக் கேள்விகளுக்குத்தான் விடை வேண்டும்.

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் ஈழ உணர்வாளராக ஈழத்திற்கு தீவிர ஆதரவாளராக இருக்கலாம், அதை நானும் நம்புகிறேன். ஆனால் 2009 ம் ஆண்டில் திமுக எடுத்த நிலையைத்தான் நாம் கருத்தில் கொள்ள முடியும். இதுதான் சமூகநீதியில் நான் முன்வைப்பதற்கும் அடிப்படை.

மு.க.ஸ்டாலின் அவர்கள் சங்கர் படுகொலை நிகழ்வு குறித்துத் தெரிவித்திருக்கிற கண்டனத்தை எடுத்துக்கொள்வோம். அதில் அவர் சங்கர் எதற்காக இறந்தான். நான் எதற்காகப் தாக்கப்பட்டேன் என்ற உண்மையை கூறாமல் வெறுமனே படுகொலை என்று கூறியிருக்கிறார். எங்களை தாக்குவதற்குக் காரணம் சாதியம், நடந்தது ஆணவப் படுகொலை. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவிக்க முடியும் என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார். அந்தக் கண்டனம் யாரைக் காப்பாற்ற? அந்தக் கண்டனம் இறுதி விளைவாக யாருக்குச் சாதகம்? நீங்களே சொல்லுங்கள்.

இதேபோல் பல சாதிய வன்கொடுமைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை பட்டியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன். அதையும் எடுத்து வைத்துப் பேசுவோம். சளைக்காமல் அதேநேரம் பொறுமையாக விவாதிக்க அணியமாக இருக்கிறேன். இனி நான் பின்வாங்கப் போவதில்லை.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வளவு காலம் பதில் தராமல் தாழ்த்தியதற்குக் காரணம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக ஒன்று. நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள். இது என் சுயமரியாதையைச் சீண்டுவதாக உள்ளது. என்னை வழிநடத்த சில மூத்த தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் பேச்சை எழுத்தை சரிபார்த்து வழிநடத்துகிறார்கள். மற்றபடி நான் எழுதுவதும் பேசுவதும் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் என்னுடைய சுயமே. யாரோ ஒருவர் என்னை இயக்க நான் இயந்திரம் அல்ல. எதையும் ஆராய்ந்து தெளியும் சுயசிந்தனை கூட இல்லாதவராக எனைக் கருதுவது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. கருத்தைப் பேசுங்கள். இனி திமுக குறித்து நான் கொடுக்கும் பட்டியல் சார்ந்தும் பேசுங்கள். இனி அவதூறுகளை உதறிவிடுவேன். கருத்துகளுக்கு மட்டுமே பதில். விரைவில் பதிவிடுகிறேன். அன்பு மாறாது சாதி ஒழிப்பு இலக்குக்கு உண்மையாக நின்று விவாதிப்போம். நன்றி!

”பெரியார் கள்ளிச்செடிதான்; அவரின் முட்கள் உங்களை குத்திக்கொண்டே இருக்கும்!”: பி. ஏ. கிருஷ்ணனுக்கு ஒரு எதிர்வினை

பூ.கொ. சரவணன்

பூ.கொ.சரவணன்

தன் சாதிப்பற்றை விடாமல், வெறுப்போடு மட்டும் ஆளுமைகளை அணுகுகிறவர்களுக்கு மகத்தான தலைவர்கள், மக்கள் சேவகர்கள், அடையாளங்களைத் தாண்டி அயராது இயங்கியவர்கள் ஒற்றைப்படையாகவே தெரிவார்கள்.

பெரியாரை ஹிட்லரோடு ஒப்பிட்டு எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார். திராவிட நிலப்பரப்பில் அறிவுஜீவிகளே இல்லை என்றும் அதில் முளைத்த கள்ளிச்செடியே பெரியார் என்றும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார். இது தமிழ் அறிவுப்பரப்பை முற்றாகத் தட்டையாக அணுகும் மேட்டிமைப்பார்வை.

பெரியாரின் நாத்திகவாதம் தட்டையானது என்கிற பி.ஏ.கிருஷ்ணன் இந்துவாக நம்பிக்கை அதன் மீது நம்பிக்கை இல்லாதவரும் இருக்கலாம் என்று எழுதிய முத்துக்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்கு கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும்.

சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் ‘சவார்க்கர் தேசபக்தர்’ என்கிற பதிவில் கேட்டதற்கு ‘அது தனிக்கதை’ என்ற நடுநிலையாளர் அவர். அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு ‘இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்’ என முத்தை உதிர்த்தார். நேரில் பார்த்து உரையாடிய போது, ‘தேசியக்கட்சிகள் ஆட்சி செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றீர்களே பி.ஏ.கிருஷ்ணன். எப்படி என்று இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கிறேன். தமிழ் பரப்பின் அறிவுஜீவியாக ராஜாஜி மட்டுமே உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடும். மகிழ்ச்சி.

பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, ‘பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்’ எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார். வேறு பல அரசியல் அறிஞர்களும் அதையே வழிமொழிவதை ஆதாரத்தோடு அடுக்கினாலும் பெரியார் மீதான வெறுப்பால் ‘ஆஸ்டினே அத்தாரிட்டி’ என்றீர்கள். இட ஒதுக்கீட்டை தாராளமாகத் தந்த நேரு ஏன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பை 1953-ல் இழுத்து மூடினார் எனத் தெரிந்து கொள்ளலாமா? திறமைக்கு இட ஒதுக்கீடு தடை என உறுதியாகக் கருதிய நேரு மனம் உவந்து தானாகவே தமிழகத்திற்கு இட ஒதுக்கீட்டை ஈந்தார் எனக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். எதேனும் கேள்விகள் கேட்டால், ‘பெரியாரிய நாஜி’ என முத்திரை குத்திவிட்டே உரையாடுவீர்கள். இனவாதம் பேசினார் பெரியார் என்கிற நீங்கள் அவர் இடைநிலை சாதிகளைக் கண்டித்துப் பேசியது குறித்து மூச்சு விடாதீர்கள். முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா?

ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது. ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். அவரின் உழைப்பின் கனிகளாகவே நாங்கள் இருந்து விட்டுப்போகிறோம்.

பூ. கொ.சரவணன், ஊடகவியலாளர்; எழுத்தாளர்.

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

விகடனில் கமல் பேட்டி படித்தேன். அவர் இதுவரை ஆற்றிய செய்யுளுக்கு வெள்ளைவாரணர் மாதிரி உரை இயற்றியிருக்கிறார். வேறொன்றுமில்லை. பொதுவாகவே படித்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள் யூகங்களை நம்ப மாட்டார்கள். ஜோதிடங்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த ஆட்சி அதுவா கலைஞ்சிரும் என்கிற ஜோதிடத்தை எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதெப்படி கலையும் சொல்லுங்கள். நீங்கள் ஆயிரம் சொல்லலாம். அந்த நூத்தி இருபத்துச் சொச்சம் பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பூனை போல் எழுந்து நின்றார்களே? ஒட்டு மொத்த பொது மனசாட்சியே அவர்களை உலுக்காத போது வேறெது உலுக்கி விடும்.

அவர்களுக்குத் தெரியும். அடுத்த எலெக்‌ஷனில் பலர் நிற்கவே மாட்டார்கள். தோற்றாலும் பரவாயில்லை. மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சம்பாதித்து விடுவோம் என்பதைச் சொல்லி விட்டார்கள். இந்த விஷயத்தில் நீர் அடித்து நீர் விலகாது என கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

ஆட்சி கலைந்தால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பது தெரியாத மடையர்களா என்ன? சவுண்ட் அவ்வப்போது விடுவதெல்லாம் சம்பாதிக்கத்தான். சும்மா சொல்லக்கூடாது. எடப்பாடி வஞ்சகம் இல்லாமல் எதிர்கட்சிகளுக்குக்கூட முறைவாசல் செய்து விடுகிறது. ச ம உக்கள் கெளிக்கிறார்கள். உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென பண்ணாரி அம்மன் கோவிலில் எதிர் முகாம் ஆட்கள் தீ மிதிக்கிறார்களாம். தீயாய் எல்லா பக்கமும் பாய்கிறது பணம்.

நானே நாலுபேரை அழைத்து சவுண்ட் விட்டால், லம்ப்பாக செட்டில் பண்ணுவார்கள். குறிப்பாக ஆட்சி மாற்றம் சம்பந்தமான டாக்குகள் முன்னமே அரசு நிழல் காரியங்களைச் செய்கிற மட்டத்தில் உலவும். திமுக அரசு வந்தால் செட்டிலாகி விடலாம் என்று குத்த வைத்து காத்திருந்த டிக்கெட்டுகள் தாய்லாந்திற்கு டிக்கெட் போட்டுக் கிளம்பி விட்டன. ரெண்டு வருஷம் கழிச்சு வர்றோம் என அட்டியை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டனர்.

அரசியல் ரீதியிலாகப் பார்த்தாலும் இந்த ஆட்சி இப்போது கலைந்தால் யார் ஸ்கோர் செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் போது பிஜேபிக்குத் தெரியாதா? எவரோ ஒருத்தர் கட்டிலில் அமர அந்தக் கட்சி கலைத்து எதற்கு உழைக்க வேண்டும். ஆக இந்த சடுகுடு ஆட்டம் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது ஓடும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு ஆட்டத்தில் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ரம்மி சேர்கிறது. எல்லோரும் டிக் அடிக்கிறார்கள். தங்களது காலத்தை சம்பாதிப்பதற்கான காலமாக வரிந்து கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தின் இருண்ட காலம் என ஒருநாள் இது அறியப்படும் என்கிற கவலை அவர்களுக்குப் பொருட்டா என்ன? பணம் அதன் இன்னொரு குணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அது எதனைக் காட்டிலும் வலியது.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

 

சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

இன்றைய தமிழ் இந்து நடுப்பக்கத்தில் “ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்” என்ற தலைப்பில் “குடியரசு” குறித்த அபார தத்துவ விளக்கத்தை திரு சமஸ் முன்வைத்துள்ளார். இந்த விளக்கமானது பாகற்காய் கசப்பையும் மீறியதாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் முழுவதுமாக உண்ணவேண்டியதாகிவிட்டது!

முதலாவதாக குடியரசு குறித்த சமசின் வாதத்தை “கொச்சை குடியரசுவாதம்” என நாம் அழைப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. திரு. சமசின் கட்டுரையின் சாரமானது, நடப்பில் உள்ள இந்திய ஜனநாயகக் குடியரசு, காந்தியின் கொள்கைக்கு எதிரானது, மையப்படுத்தப்பட்ட ஆட்சி அமைப்பிற்கு ஆதரவானது, தேர்தல் அரசியல், பெரும்பான்மை காரணம் கூறி இந்த குடியரசு நியாயப்படுத்தப்படுகிறது. இதுதான் சாரம்..

இங்கு நாம் திரு சமசிற்கு சுட்டிக் காட்ட விரும்புவதெல்லாம் இதுதான்: ஜனநாயகக் குடியரசு என்பது இரு வகைப்பட்டது, ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சிகர ஜனநாயகம்.

முன்னது முதலாளித்துவ நலனை பிரதிநிதிப்படுத்துவது. பின்னது விவசாயிகள், தொழிலாளர்கள் நலனை பிரதிநிதிப் படுத்துவது. இதற்கு இடைப்பட்ட நிலையிலோ வர்க்க சமரசமுடைய எந்த “ஜனநாயகக் குடியரசும்” இல்லை என்பதே!

முதலாளித்துவ ஜனநாயகம் அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம் என பெயரளவில் காட்டிக் கொண்டாலும் பெரும் லஞ்சம், ஊழல், வங்கிகள், பங்குச் சந்தைகள் வழியே நாட்டின் உற்பத்தி-மறு உற்பத்தி மற்றும் விநியோகத்தை முதலாளித்துவ சக்திகள் கட்டுப்படுத்தும். லாபத்தை சுரண்டிக் கொழுக்கும். உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும்.

இந்நிலையில், இந்தியாவில் நடப்பில் உள்ள ஜனநாயகமானது, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சி மாதிரியை முன் உதாரணமாக கொண்டு, அதையே சுவிகரித்து கொண்டது என திரு சமஸ் கூறுகிறார். இதன் வழியே இந்தியாவில் நடப்பில் உள்ளது இங்கிலாந்து நாட்டின் முதலாளித்துவ ஜனநாயக மாதிரியே என அவரை அறியாமையாலேயே நாம் மேற்குறிப்பிட்ட இரு வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒரு பக்கம் வந்து சேர்ந்துவிடுகிறார்.

சிக்கல் என்ன வென்றால், இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை. ஏனெனில் காந்தியின் கொள்கையே முதலாளித்துவ ஜனநாயக குடியரசு என அவரால் துளியும் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அல்லது விளங்கியும் விளங்காது போல நடிக்கிறார்!அது அவ்வாறு இல்லாது போனால் பிர்லாவிற்கு காந்தியிடம் என்ன வேலை என அவரையே அவர் கேட்டுக் கொண்டாக வேண்டும்!

ஆக, ஒரு முதலாளித்துவ குடியரசு அமைவதற்குபோராடிய காந்தி(சொல்லப்போனால் ஒரு முதலாளித்துவ குடியரசில் “வர்க்க சமரசத்தை”நம்பிய) அதன் அமைப்பின் உறுப்புகள் சுதந்திரமாக இருக்கும் (குறிப்பாக கிராம சபைகள்) என கூறுவதை விட ஒரு கொச்சை வாதம் இருக்க இயலுமா?

முதலாளித்துவ குடியரசின் ஒரு கற்பனை சமூகத்தை கனவு கண்ட காந்தியின் கொள்கையை வரித்துக் கொண்ட திரு சமசம் இந்த குழப்பத்தை மேலும் வளப்படுத்துவதில் வியப்பொன்றுமில்லை.

திரு சமஸ் அவர்கள்அவரை்அறியாமலேயே நடப்பில் உள்ள ஜனநாயகத்தை முதலாளித்துவ ஜனநாயகம் என்கிறார், அதேபோல அவரை அறியாமலேயே காந்தியவாதம் என அதே முதலாளித்துவ ஜனநாயகத்தை வேறு சட்டை போட்டு அலங்கரித்து ஆதரிக்கிறார்!

முதலாளித்துவ பொருளாதார நான் சார்ந்த குடியரசில் அனைத்து ஆட்சி உறுப்புகளும் நிர்வாக உறுப்புகளும் முதலாளித்துவ நலன் சார்ந்தே இயங்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இதில் நேரு, படேல், அம்பேத்கருக்கு மாற்றாக காந்தி முன் வாய்த்த குடியரசு அல்லது ஆட்சி நிர்வாக முறையும் திரு சமஸ் சற்று விரிவாக விளக்கினால் அது குடியரசின் பரிணாம வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலைக் கூட ஏற்படுத்தலாம்!

ஒரு முதலாளித்துவ குடியரசின் கீழ் பல லட்சம் கோடி சம்பாதிக்கிற, சொத்து சேர்க்கிற முதலாளியும், தினக்கூலிக்கு தன் உழைப்பை விற்கிற ஏழையும் “ஒரு அரசியல் சாசன சட்டத்தின்”கீழ் ஒன்றிணைப்பது அல்லது ஒன்றுகலப்பது என்பது அடிப்படையிலேயே முரணாகத் தெரியவில்லையா சமஸ்?

அறுபது வருடத்திற்கும் மேலாக சொத்து சேர்க்கிற வர்க்கத்திற்கு சார்பாக இயங்கிக் கொண்டிருக்கிற இந்த குடியரசானது, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருவதிற்கு இந்த முரண்பாடுதான் அடிப்படைக் காரணமாக உள்ளது என்பது ஏன் உங்களுக்கெல்லாம் உரைப்பதில்லை?

நிலத்துடன் பிணைக்கப்பட்ட கூலி விவாசாயத் தொழிலாளர்கள், கப்பல் போக்குவரத்து, தபால் தந்தித் தொழிலாளர்கள், இந்திய ராணுவ வீரர்கள் (சுபாஸ் சந்திர போஸ்)என விவசாயிகள், தொழிலாளிகள், படை வீரர்கள் இங்கிலாந்து காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தீரமுடன் மேற்கொண்ட போராட்டத்தை தலைமையேற்ற இந்திய ஆளும் வர்க்கமானது அரசியல் சாசன ஆட்சி, சட்டத்தின் பெயரிலான ஆட்சி எனக் பெரும் மேற்பரப்பில் பெரும் ஜிகினா வேலைகளை காட்டி விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, படை வீரர்களுக்கு துரோகம் இழைத்தை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? இதற்கு மாற்று என்பதே, கீழிருந்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என ஏன் உங்களுக்கு உரைக்க வில்லை சமஸ்?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வழியே,முதலாளிகளின் தனிச் சலுகைகளை ஒழித்து, நிரந்தர போலீஸ், ராணுவம் போன்ற படைகளை கலைத்து சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தை கோருகிற, முதலாளிகளின் எதிர் புரட்சியை நசுக்குகிற ஒரு விவசாயி-தொழிலாளர்கள்-படை பிரிவின் புரட்சிகர ஜனநாயகமும் அதன் புரட்சிகர ஆட்சியும்தான் தான் மாற்று என்ற உண்மையை ஏன் உங்கள் மூளை சிந்திப்பதில்லை?

உலகின் அனைத்து குடியரசின் தோற்றத்திற்கும் அடித்தளத்தை அமைத்தது பிரஞ்சுப் புரட்சி. இந்தப் புரட்சியால் விளைந்த குடியரசு குறித்து முதலில் படியுங்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் புரட்சிகர ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா உங்களுக்கு? பாரீஸ் கம்யூனை தெரிந்துகொள்ளுங்கள்…

அறுபதாண்டு கால சுரண்டலை மீண்டும் வேறு பெயரில் தூக்கி திரியாதீர்,உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்க முயலாதீர்!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது

‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்

தன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ.

சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.

என்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பல செய்திகளைப் பேசியது. ஆனால் அதற்குவிடையளித்த அவரோ, பல்வேறு தனிமனிதத் தாக்குதல்களை என் மீது தொடுத்திருக்கிறார். அரசியலற்ற தனிமனிதச் சண்டைகளில் ஈடுபட எனக்கு எப்போதும் விருப்பமில்லை. எனவே இனிமேல் அவருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதியில் அக்கறை கொண்ட மக்களுக்கான விளக்கமாய் இந்தப் பதிவை நான் பொதுவெளியில் முன்வைக்கின்றேன்.

“சாதி மதம் என்பது அவரவருக்குத் தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும், மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்” என்று சே.வி சேகர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சாதிப்பற்றை இதனை விடத் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டமைக்கு அவருக்கு நம் நன்றி.

99 சதவீதம் மதிப்பெண் (முதலில் 99.9 சதவீதம். இப்போது அது 99 ஆகக் குறைந்துவிட்டது) பெற்ற பிராமண மாணவர்களுக்கு இடம் இல்லை என்று நான் சொன்னது உண்மை என்று மறுபடியும் கூறியுள்ளார். இது கலப்படமற்ற பொய் என்பதற்குப் பெரிய சான்றுகள் தேவை இல்லை. எந்த ஒரு கல்வி நிலையத்தின் புள்ளி விவரத்தை எடுத்தாலும் உண்மை புலனாகும்.

“எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஒட்டு போட்டு முதன்முதலாக திமுக ஆட்சி அமைந்தது” என்று எஸ்.வி.சேகரால் கூசாமல் எழுத முடிகிறது. அப்படியானால், ராஜாஜி திமுகவைக் கடுமையாக எதிர்த்த 1971 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைத் திமுக பெற்றதே எப்படி?

“பார்ப்பான் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொதுவெளியில் நாகரிகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன்” என்பது சேகரின் கூற்று. ‘பார்ப்பனர்’ என்பது வசைச் சொல்லோ,ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் சொல்லோ அன்று. அவ்வாறு எவர் ஒருவரையும் வாசை பாடுதல் நம் பழக்கமும் அன்று. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர், பார்ப்பார், பார்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். அதனால்தான் அந்தச் சொல்லை அவ்வையார், போன்ற புலவர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ளனர். “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் சொரிந்து” என்கிறது அவ்வையின் பாடல் (புறநானூறு – 367). வள்ளுவரும் ஒரு குறளில் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்/ பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்கிறார். எங்கள் பாரதி, எங்கள் பாரதி என்று சேகர் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், ஓரிடத்தில், “நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்” என்கிறார்.இன்னொரு இடத்தில், மிகக் கடுமையாக, “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்கிறார். அவ்வை, வள்ளுவர், பாரதியார் எல்லோருமே மதிமாறனைப் போல மதியில்லாதவர்கள்தானா?

பிராமணன் என்று எம் போன்றவர்கள் குறிப்பிட மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. அச்சொல்லுக்குப் பிரமனில் இருந்து உதித்தவன் என்று பொருள். பிரம்மனையே நம்பாத நாங்கள், பிராமணனை எப்படி ஏற்போம்? பிரமனை நம்புகிறவர்கள் கூட ஒரு வினாவைத் தொடுக்க வேண்டும். ‘நீங்கள் பிரம்மனிடமிருந்து வந்தவர்கள் என்றால், நாங்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் என்று கேட்க வேண்டாமா?

எனக்கு ஸ்டாலின் நண்பர், 2010 முதல் மோடியும் நண்பர் என்கிறார் சேகர். இப்போது என் தம்பி மனைவிதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதிகார மிரட்டல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். நியூஸ்7 தொலைகாட்சி நெறியாளருக்கும் ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம், இனி எல்லா ஊடகங்களும், ஊடக நெறியாளர்களும் எங்களுக்குப் பயந்து, எங்களுக்குச் சாதகமாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர்.

சேகரின் கடிதத்தின் அடித்தளமாக ஒரு விருப்பம் இடம்பெற்றுள்ளது. எப்படியாவது திமுகவினர் என்னை வெளியே தள்ளி விட வேண்டும் என்பதுதான் அது. கழகத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும், கழகத் தலைமை என்னிடம் கொண்டுள்ள அன்பும் ‘சேகர்களை’ மிகவும் துன்பப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘என் நண்பர்’ என் நண்பர்’ என்று கழகச் செயல் தலைவர் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றார். ஆனால் 2ஜி தீர்ப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் எழுதுகிறார். ‘தன் நண்பர்’ மீது அவர் கொண்டுள்ள நட்பின் ‘லட்சணம்’ இதுதான்.

இறுதியாக, என் மீது கூறப்பட்டுள்ள சில அவதூறுகளைப் பற்றிச் சில வரிகள் – என் முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் சொந்த சாதியிலேயே பெண் எடுத்துள்ளேன் என்று வாட்ஸ் அப்பில் வந்துள்ளதாம். அதனை மேற்கோளாகக் காட்டிவிட்டு, ‘ஊருக்கு மட்டுமே உபதேசமா? என்று கேட்டுள்ளார். ஒன்றை எழுதுவதற்கு முன் அந்தச் செய்தி உண்மைதானா என்று சரி பார்த்து எழுதுவது பொறுப்புள்ளவர்களின் கடமை. அதை எஸ்.வி.சேகரிடம் எதிர்பார்க்கக் கூடாதுதான்! எனக்கு இரண்டில்லை, மூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச் சாதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்.

‘வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக’ இருந்ததாகப் படித்தாராம். நண்பர் அவர்களுக்கு ‘அறிவு நாணயம்’ இருக்குமானால், இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப! அதில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கிற வன்முறைக் கும்பல், மதிமாறன் போன்ற தோழர்களின் மீது ‘குறி’ வைக்கிறதோ என்ற ஐயம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாக இருக்கிறது. கவனம் தோழர்களே!

எஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

 1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. “சாதியும் மதமும் நமக்குத் தாய், தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல” என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், ‘சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.

 2. “எந்தப் பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி விட்டனர் என்பீர்கள்!

ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது?

 1. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச் சொல்ல முடியவில்லையே?

 2. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள். மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய ‘பிரபலங்களைத்’ தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா?

அன்று மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

 1. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்.

ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின் மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!

செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால், உங்களின் கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள் சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே!

இப்போதும் அன்புடன்
சுப. வீரபாண்டியன்

இந்தக் கடிதம் சுப. வீயின் வலைத்தளத்தில் வெளியானது.

பிடிமண் எடுத்தது பிற்போக்கா?: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

ச. தமிழ்ச்செல்வன்

ச. தமிழ்ச்செல்வன்

தமுஎகச ஜூன் 26 அன்று சென்னையில் நடத்தும் “தமிழர் உரிமை மாநாட்டுக்கு” கீழடியிலிருந்து பிடிமண் எடுக்கப்ப்பட்டு அது மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளோடு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.மிகுந்த உற்சாகத்துடன் அனைத்துப்பகுதிப் பொதுமக்களும் இநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.மத்திய பாஜக அரசின் சதிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப இந்நிகழ்வு பயன்பட்டுள்ளது.

ஆனால் முற்போக்கு என்று பேர் வைத்துக்கொண்டு ஒரு இந்து மதச் சடங்கான பிடிமண் எடுத்தலை நீங்கள் எப்படி கைக்கொள்ளலாம் என்கிற கேள்வி முகநூல் பக்கங்களில் விவாதப்பொருளாகி இருக்கிறது.மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களிலிருந்து மொழிச்சுடர் எடுக்கும் நிகழ்வும் இதே நேரத்தில் நடக்கிறது.அதுவும் ஒரு சடங்குதான். அதை யாரும் கேள்வுக்குட்படுத்தவில்லை. பிடிமண் எடுக்கும் நிகழ்வை நாடகீயமாக நிகழ்த்தும் வடிவத்தில் நாட்டுப்புற சாமியாடிகள் / கோடாங்கிகள் கோலத்தில் இரண்டுபேர் செவ்வாடையும் காவி ஆடையும் அணிந்து பங்கேற்றது ஒருவேளை கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கலாம்.

முதலில் இந்து மதத்தில் பிடிமண் எடுக்கும் நடைமுறை கிடையாது. ஆகவே இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு. நாட்டுப்புற தெய்வங்கள் கடவுளர் அல்லர்.வாழ்ந்து மறைந்த மனிதர்கள் மனுஷிகள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்கள் எல்லோருமே சாதி மறுத்த காதலுக்காகவோ பாலியல் வல்லுறவிலிருந்து தப்பிப்பதற்காகவோ கொல்லப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள்.நேற்றைய இளவரசனும் கோகுல்ராஜும்தான் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் காத்தவராயனும் என்று புரிதல் வேண்டும். இவர்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இவர்களை கொலையில் உதித்த தெய்வங்கள் என்பார்.

இத்தெய்வங்களை சிறுதெய்வங்கள் என்று இழிவாகப் பேசிய ( சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்) சைவமும் வைணவமும் அத்தெய்வங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் கண்டு தங்கள் மத அரசியல் பரப்பலுக்காக அம்சங்கள்,அவதாரங்கள் என்கிற தத்துவங்களை உருவாக்கி சிவபெருமானின் அம்சம்தான் சுடலைமாடன் என்பதாக உழைப்பாளி மக்கள். படைத்த இந்த சனங்களின் சாமிகளை கபளீகரம் செய்தார்கள்.வறட்டு நாத்திகம் பேசிய நாம் சனங்களின் சாமிகளை மதவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம். இன்றும் கிராமக் கோயில் பூசாரிகள் சங்கத்தை விஸ்வஹிந்து பரிஷத்காரன் தான் லபக்கியுள்ளான். நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி என்றொரு சிறு நூலைப் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதினேன்.அவர்களோடு நாம் தேவை அடிப்படையில் ஒரு கூட்டணி வைக்கலாம் என எழுதினேன்.அத்தெய்வங்களில் பெரும்பாலானவை சாதிகளோடு இறுக்கமாக பின்னப்பட்டிருப்பதால் அத்திசையில் பயணிப்பதிலும் சிக்கல் உள்ளது. நாட்டுப்புற தெய்வங்கள் குறித்து அறிஞர்கள் நா.வா, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், கோ.கேசவன், அருணன், டி.தருமராஜ் எனப்பலரும் காத்திரமான நூல்களை வழங்கியுள்ளனர்.அவை தரும் வெளிச்சத்தில் என்னுடைய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்கிற சிறு நூலும் வந்துள்ளது.ஆகவே நாட்டுப்புற வழிபாட்டு மரபிலிருந்து நாம் எதையேனும் எடுக்கும்போது எச்சரிக்கை வேண்டும்.ஒவ்வாமை தேவையில்லை. இஸ்லாமிய தர்காக்களும் கிறித்துவ குருசடிகளும் புனிதர்களின் கோவில்களும் நாட்டுப்புற தெய்வங்களே ஆகும்.

தான் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி வெளிச்செல்லும்போது. தன் முன்னோர்களை வணங்கி அவர்களின் காலடியிலிருந்து பிடிமண் எடுத்துச்செல்வது நாட்டார் மரபு.அ து அவர்களின் மண்ணுரிமையோடு சேர்ந்தது என தோழர் ஆர்.நல்லக்கண்ணு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார்.ஆதவன் தீட்சண்யா தன்னுடைய ஒரு கவிதையில் சொன்னது போல ” என்னைக்கருவுற்றிருந்தபோது என் தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர. இப்பரந்த தேசத்தில் எங்கள் மண் எது?” என்கிற வரிகளோடு இணைத்துப் பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தப்பிடிமண்ணைத்தவிர வேறேதும் இல்லை இந்த தேசத்தில். அந்தப் பிடிமண்ணைத்தான் நாம் கீழடியில் எடுஹ்த்திருக்கிறோம். அந்த மண்ணையும் அதானிகள் விழுங்குமுன் அரசு கையகப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்காக தலைநகருக்கு எடுத்துச் செல்கிறோம்.

தந்தை பெரியார் சொன்னார்: “அர்த்தம் அறியாமலும் அவசியம் இல்லாமலும் செய்யப்படும் காரியங்களே மூடச் சடங்குகள்” நாம் பிடிமண்ணின் அர்த்தம் அறிந்து ஒரு அவசியத்தின் அடிப்படையில் ஒரு நிகழ்த்துகலையாக மக்களின் கவனத்தை ஈர்க்கவே பிடிமண் எடுத்து வருகிறோம்.எந்தக் குழப்பமும் இல்லாமல் நம் பயணம் தொடரும்.

ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர்.

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

 

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்

திராவிடநாடு மட்டுமல்ல எந்த நாடும் கேட்டுப் பிரிவினை கேட்பதுதான் இங்கு சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. திராவிடநாட்டுக்கு மட்டும் போடப்பட்ட சட்டம் இல்லை என்பதை முதலில் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்..

அடுத்து, திராவிடநாடு என்பது சாத்தியமாகுமா ஆகாதா என்பதற்கு அப்பால் அப்படியான ஒரு அடையாளம் இயல்பானது என்பது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை, இந்த இருநூறு ஆண்டுகளில் யாராலும் தவறு எனச் சொல்லப்படவில்லை. தொடர்ந்த ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்தியே உள்ளன.

இரண்டாவது: இன்றளவும் திராவிட மொழி பேசும் மாநிலங்கள் பல அம்சங்களில் பொதுமைத் தனமை உடையவையாகவே தொடர்கின்றன. இப்பகுதிகளில்தான் பா.ஜ.க இன்றளவும் பெரிய அள்வில் தம் செல்வாக்கை வளர்க்க இயலவில்லை. மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 2 சத அளவே அவர்கள் உள்ளனர்.

மூன்றாவதாக: இப்பகுதிகளில்தான் வடமாநிலங்களைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி, Human Development Index ஆகியன வடமாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. குழந்தை இறப்பு வீதம் குறைவாக இருத்தல் என்பனபோன்ற பல அம்சங்கள் இதில் உள்ளடக்கம். நீண்ட காலமாகவே திராவிட மொழிப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிறபடுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இதன் அடிப்படை.

நான்காவதாக: இன்று பாஜக கொண்டுவர முனையும் மாட்டுக்கறித் தடை பிரச்சினையிலும் திராவிடமொழி பேசும் மாநிலங்களில்தான் கடுமையான எதிர்ப்புகள் அலைமோதுவதையும் நாம் இணைத்துக்கொள்ளலாம்.

எனவே திராவிடநாடு எனும் அடிப்படையில் இப்படியான ஒரு அடையாள உருவாக்கம் புத்தியிர்ப்புப் பெறுவது முற்றிலும் நியாயமானது, வரவேற்கத் தக்கது” என்றேன்.

திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை எதிர்த்துத் தீவிரமாகப் பேசிய குழுக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனீயத்தைப் புகழும் இழிநிலைக்குத் தாழ்ந்து கிடப்பதையும் (எ.கா மணியரசன் போன்றோரின் இயக்கங்கள்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடநாடு‘ என ‘ஹேஷ் டாக்’ குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸின் முகநூல் பதிவு.

 

சமுத்திரக்கனி நீங்கள் எந்த வகை?

ராஜராஜன்

ராஜராஜன்

ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டால், முடிவை வேகமாக எடுத்துவிட வேண்டும். அப்போது தான் ஒரு பயம் வரும்.

வன்கொடுமைக்கு எதிராக என்கவுண்டர்களுக்கு ஆதரவாக சமுத்திரக்கனி இப்படி சொல்லி இருக்கிறார் .

லஞ்சத்தினால் நாடு முன்னேறவில்லை. கடுமையாக தண்டனைகள் இருந்தால் இந்தியா வல்லரசாகிவிடும். இது போன்ற மொண்ணைத்தனமான பாசிஸ்டு பார்வையை வைத்திருக்கும் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் பிடிப்பதில் ஆச்சரியமில்லை.

சில நாட்களுக்கு முன்னர், பெண்கள் தாலி ஏன் அணியவேண்டும் என்று வந்த ஒரு பார்வேர்ட் மெசேஜை சமுத்திரக்கனி என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்து இருந்தது. அதற்கு 8000+ லைக்ஸ் வந்து இருக்கிறது.

பெண்களின் மார்புக்குழிக்கு அருகே ஒரு முடிச்சி இருக்கிறது. அது ஆண்களுக்கு கிடையாது. அந்த முடிச்சை சரி செய்ய தான் நம் முன்னோர்கள் தாலியை கண்டுபிடித்து ராஜராஜசோழனிடம் சொன்னார்கள் என்று அந்த பதிவு போகும். இம்மாதிரியான பிற்போக்கு கருத்துக்களை முகநூலில் பரப்புவது போலவே தான் அவரது படங்களும் பரப்பிக்கொண்டு இருக்கிறது.

சமுத்திரக்கனியின் சர்ச்சைக்குரிய பேட்டி
சமுத்திரக்கனியின் சர்ச்சைக்குரிய பேட்டி

மருத்துவமனைக்கு சென்று பிள்ளை பெறவேண்டாம். வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அவரது அப்பா படம் பேசியதாக சொன்னார்கள். மரபை பேசுகிறேன் பேர்வழி என்று அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார் சமுத்திரக்கனி. இவரது அடுத்த படமான தொண்டன் என்ன கிறுக்குத்தனங்களை நியாயப்படுத்துப்போகிறதோ என்று பயமாக இருக்கிறது.

ஒன்றே ஒன்று மட்டும் தான் சொல்லவேண்டும்..

இந்திய அரசியலில் யாரெல்லாம் சும்மா சிஸ்டம் சரியில்லை, மரபை மீட்டெடுப்போம், இயற்கையை காப்பாற்றுவோம், முப்பாட்டன் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பதை “மட்டும்” பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை இருவகையாக பிரிக்கலாம்.

1) அறியாமையில் பேசுகிறார்கள்
2) பார்ப்பனீய அடிமைகள்

சமுத்திரக்கனி எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ’புதிய தலைமுறை’ இதழுக்கு அளித்த பேட்டியில் உ.பி. முதல்வர் ஆதிய்நாத்தின் அதிரடி செயல்பாடுகள் பிடிக்கும் என சொல்லியிருந்தார். அதற்கு முகநூலில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!

பழனி ஷஹான்

பழனி ஷஹான்

கிருஷ்ணசாமி யார் என்பதை, அவர் எங்கே விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார். முன்னர் இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசினார், இப்போது மாட்டுக் கறித் தடையை ஆதரிக்கிறார்.

இராமதாஸின் வழியில் பயணிக்கத் தொடங்கிய கிருஷ்ணசாமி, மாட்டுக்கறிப் பிரச்சினையில் படுத்தேவிட்டார். தனக்கான இருப்பு கேள்விக்குள்ளாகியதை தக்க வைத்துக்கொள்வதற்குப் புலம்புகிறார் கிருஷ்ணசாமி. தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.

1996இல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்று முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி. அது எஸ்.சி., ரிசர்வ்ட் தொகுதி. அந்த இடஒதுக்கீட்டை முன்வைத்துத்தான் அவர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இனித்த இடஒதுக்கீடு பதவி போனதும் கசக்கிறது என்றால், அவரின் சுயநல அரசியலுக்கு வேறு எடுத்துக்காட்டுகள் தேவையே இல்லை.

Dr. கிருஷ்ணசாமி

திருநெல்வேலியிலும், மதுரையிலும் அவர் மருத்துவம் பயின்றது இதே இடஒதுக்கீட்டில்தான். அன்று அவருக்கு எதுவுமே உரைக்கவில்லை. இப்போது எப்படியேனும் இருப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக, தன்னை உயர்த்திய சமூகத்தின் நலத்திற்கு எதிராக கூசாமல் பேசிக்கொண்டிருக்கிறார். இதுவரை எம்.பி. பதவிக்குப் போட்டியிட்டுத் தொடர் தோல்வியைக் கண்டவர், இப்போது அதனை அடையும் திட்டத்தில் கொள்கையை மாற்றிக் கொண்டுவிட்டார் அவ்வளவுதான். எதுவெல்லாம் பா.ஜ.க.வின் கொள்கையோ, அதுவெல்லாம் இனி புதிய தமிழகம் கட்சிக்கும் பொருந்தும்.

தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தி இழிவுபடுத்தும் வர்ணாசிரமத்தை எதிர்க்க வேண்டிய கிருஷ்ணசாமி, தங்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரும் இடஒதுக்கீட்டைப் பார்த்து இழிவுபடுத்தும் செயல் என்கிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் டிஸைன்.

பழனி ஷஹான், எழுத்தாளர்.

“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”

சீனி. விடுதலை அரசு

தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம்.

முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? திராவிடர் இயக்கங்களையா? திராவிடக் கட்சிகளையா? தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள்.

தேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு அதிகாரத்தில் அமர்ந்து இயன்றவரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவை திராவிடக்கட்சிகள்.

முன்னது இனத்தின் அடிப்படையிலானது. பின்னது நிலத்தின் அடிப்படையிலானது. இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும், ”திராவிடர்” ”திராவிடம்” என்பதற்கான வேறுபாட்டையும் அறியாத குழப்பம் கட்டுரை முழுவதும் பரவிகிடக்கிறது.

கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா “ஒன்றே குலம் ஒருவனே ஒருவனே தேவன்’ என்று சொன்னது கொள்கை மாற்றமல்ல; அரசியல் சறுக்கல்.  கடவுள் நம்பிக்கையுடன் தனது கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து ஒட்டு போடும் வாக்காளர்களின் மனதை கவர்ந்திழுக்கும் தேர்தல் அரசியல்.

ஆனால்…அண்ணா இறுதிவரை நாத்திகர் – கடவுள் மறுப்பாளர்! இன்றளவும் இந்தியாவின் எந்த அரசியல் கட்சிகளைவிடவும் திராவிட அரசியல் கட்சிகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

அதே நேரத்தில் வாக்காளர்களின் மனதை கவர வேண்டிய தேவையற்ற, சாகும்வரை நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியார் எந்த இடத்திலும் பொதுத்தளத்தில் இணைந்து செயல்படுவதற்கு நாத்திகத்தை முன் நிபந்தனையாக வைத்ததில்லை. அதனால்தான் அவரால் பழுத்த ஆன்மீகவாதிகளான குன்றக்குடி அடிகளார், மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்களோடு சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்படமுடிந்தது.

அடுத்து, ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை தாண்டி திராவிட என்ற சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? என்று கேட்கிறார் சமஸ்.  முதலில் ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை நம் சமூகம் தாண்டிவிட்டதா? அல்லது கட்டுரையாளர் தாண்டி விட்டாரா?
மூவேந்தர்களின் முடியாட்சி காலத்திலிருந்து இன்றைய மக்களாட்சி காலம் வரை நடப்பவை அனைத்தும் அரசியல் போரட்டமல்ல, ஆரியர் – திராவிடர் போரட்டமே.

மனுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியை ஒரு எருமை மாடு அடித்திருந்தால் பசு மாட்டிற்கு கிடைத்த நீதி கிடைத்திருக்குமா? இந்த ”மாட்டு அரசியல்” இன்றுவரை தொடர்கிறதா? இல்லையா? அன்றிலிருந்து இன்றுவரை பசுவின் புனிதம் எதன் பெயரால் காப்பற்றப்படுகிறது?

காலம் மாறிவிட்டது என்று நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ளலாம். ஆம், காலம் மாறிவிட்டது. எந்த அளவில்? பஞ்சமனுக்கு பசு வளர்க்கும் உரிமையில்லை என்பதை மாற்றி இன்று சேரியின் தொழுவத்தில் பசு வந்திருக்கிறது. அந்த அளவில் தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று வரை அக்ரகார தொழுவத்தில் எருமை மாடுகள் இல்லையே ஏன்? இந்த கேள்விக்கான பொருத்தப்பாடுதான் திராவிடம்!

இன்றளவும் கோவில்களில் அர்ச்சகராக முடிவதில்லை என்பதை விடுங்கள். கருவறைக்கு வெளியே இருக்கும் மடப்பள்ளியிலும், அந்த மடப்பள்ளியில் தயாராகும் உணவுகளை விற்கும் கோவில் பிரசாத கடைகள் கூட பார்ப்பனர்கள் தவிர பிற சமூக மக்கள் நடத்த முடியாத நிலையில் நாம் எப்படி ஆரியர் – திராவிடர் கருத்தாக்கத்தை தாண்டுவது?

திராவிடம் என்பது தோராயமாகவோ வெறும் தென்னிந்தியா என்ற நிலப்பரப்பை மட்டுமோ குறிக்கும் சொல் அல்ல.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்த மக்களின் அரசியல் குறியீடு! அதனால்தான் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும், டாக்டர் நடேசனாரும், பெரியாரும் திராவிடர் என்ற சொல்லை தொலை நோக்கோடு பயன்படுத்தினார்கள்.

ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்த பாரதியார் ”ஆரியபூமி” “ஆரியநாடு” ”ஆரிய மைந்தன்” என்ற சொல்லாடலை தன் பாடல்களில் தாராளமாக பயன்படுத்தியதையும், திராவிடர் என்ற சொல்லை தவிர்த்ததையும், இந்து பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரான ஜி.சுப்பிரமணிய அய்யர் 1888 இல் தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்திற்கு ”ஆரியன் உயர்பள்ளி” என்று பெயரிட்டதையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் திராவிடர் என்ற சொல்லின் வீரியம் புரியும்.

கால்டுவெல் 1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிடுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே, சர். வில்லியம் ஜோன்ஸ், வில்கின்ஸ் ஆகியோர் பகவத்கீதை, சாகுந்தலம், கீதகோவிந்தம் உள்ளிட்ட சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்.

1847 இல் ரிக்வேதத்தை மாக்ஸ்முல்லர் மொழி பெயர்க்க தொடங்கி விட்டார். சமஸ்கிருதமும், அய்ரோப்பிய மொழிகளும் ”ஆரிய மொழிக்குடும்பத்தை” சார்ந்தவை என்று மாக்ஸ்முல்லர் கூறியது இந்தியாவில் இருந்த பார்ப்பனர்களை உற்சாக கடலில் மிதக்க வைத்தது.

வெள்ளையர் காலத்தின் முதல் இந்திய நீதிபதி முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகள் சங்கத்தில் உரையாற்றும் போது. ”ஆரிய இனத்தின் இருபிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டிஷ் ஆட்சிக்குத்தான் திறமையிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆக, இந்த வரலாற்று சூழலில்தான் ஆரியமொழி, ஆரிய இனம் என்ற பெருமிதங்களை பார்ப்பனர்கள் உயர்த்தி பிடித்ததற்கு எதிர்வினையாக ”திராவிடம்” எழுந்தது.  வினை இன்னும் செயலாற்றிவரும் நிலையில் எதிர்வினைக்கான பொருத்தப்பாடு இன்னும் நீடிக்கவே செய்கிறது.

இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் திராவிட அரசியல் எப்போது தமிழ் மேலாதிக்கத்தை முன் வைத்தது? தமிழில் வழிபாடு செய், தமிழில் பெயர்பலகை வை, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டு, தமிழில் வழக்காடும் உரிமையை கொடு என்கிறது
திராவிட அரசியல், நாங்கள் இதை உத்திரபிரதேசத்திலோ, குஜராத்திலோ, ஆந்திரா, – கர்நாடகாவிலோ கேட்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் உரிமைக்கு குரல் கொடுக்கிறோம்; – போராடுகிறோம். இது உங்கள் பார்வையில் தமிழ் மேலாதிக்கமா?

பிறரை மேலாதிக்கம் செய்வதற்காக அல்ல; சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்டதே திராவிடர் இயக்கம்! முதல் வரியில் தமிழ் மேலாதிக்கம் என்று சொல்லும் நீங்களே, கடைசி வரியில் ”யாரையும் மேலாதிக்கம் செய்யும் நோக்கம் நமக்கு இல்லை” என்று எழுதுகிறீர்கள். இவ்வளவு தெளிவாக வேறுயாரும் குழப்பமுடியாது.

ஆரிய ஜனதாகட்சி அல்லது ஹிந்து ஜனதாகட்சி என்று இல்லாமல் பாரதிய ஜனதாகட்சி என்றே ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் முகத்திற்கு பெயரிட்டிருக்கிறது என்று பூரித்து போகிற நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியா – பாரதம் என்பதற்கு இந்திய மொழிகளில் உள்ள வேர்ச்சொல் என்ன?

”ஹிந்து யா” என்பதன் திரிபுதானே இந்தியா! பரதன் ஆண்ட நாடு என்பதன் சுருக்கம்தானே பாரதம், பாரதீயம். இவை ஆரிய கருத்தாக்கம் அன்றி வேறென்ன? நேரடியாக ஆரிய ஜனதாகட்சி என்று பெயர் வைத்தால் இந்து ஒற்றுமை என்கிற முகமூடி கழன்று விடுமே, அதனால்தான் பாரதிய, ராஷ்டிரிய என்ற சொல்லுக்குள் தங்களை ஒளித்து கொள்கிறார்கள்.  எங்களுக்கு மறைமுக திட்டங்கள் எதுவுமில்லை. எனவே பல்வேறு பெயர்களுக்குள் ஒளிந்துக்கொள்ள தேவையுமில்லை.

இந்திய அரசியல் அரங்கில் நீங்கள் குறிப்பிடுகிற சமூகநீதி, மாநில சுயாட்சி, மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பு போன்றவற்றை இந்தியாவின் எந்த மாநிலக்கட்சியும், அல்லது தேசியக்கட்சியும் செய்து விடமுடியும். ஆனால் ஆரியர் – ஆரிய தேசம், ஹிந்துத்துவா என்பதற்கான எதிர் அரசியலை திராவிடகட்சிகளும், பெரியாரிய இயக்கங்களும் மட்டுமே செய்ய முடியும்; திராவிட கட்சிகளின் தேவை இதுதான்.

சட்டசபையில் ஒரேயொரு பிராமணர்தான் உறுப்பினராக இருக்கிறார் என்று அங்கலாய்க்கிற நீங்கள்தான் ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க. வந்தபோது பிராமணர் ஒறுத்தல் முடிவிற்கு வந்து விட்டதாகவும் எழுதுகிறீர்கள்.  உண்மையற்ற ஒன்றை எழுதும்போது இப்படி வளைத்து, வளைந்து தடுமாறித்தான் ஆக வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் தெரியும் சமஸ்.

திராவிட அரசியல் கட்சி ஒன்றுக்கு ஜெயலலிதா தலைமையேற்றது அரசியல் விபத்து. விபத்துகள் எப்போதும் நேர்வதில்லையே. பார்ப்பனரான ஜெயலலிதா தான் தலைமை வகித்த அ.தி.மு.கவில் எத்தனை பார்ப்பனர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்? அவர் நினைத்திருந்தால் 234 இடங்களில் சுமார் அய்ம்பது இடங்களிலாவது பார்ப்பனர்களை நிற்க வைத்திருக்க முடியுமே? இரட்டை இலை சின்னத்தில் கழுதை நின்றால் கூட வெற்றி பெறும் என்ற பிம்பம் இன்றைய வரை இருக்கிறதே? ஏன் பெருவாரியாக பார்ப்பனர்களை வெற்றிப்பெற செய்ய முடியவில்லை? அதுதான் இந்த மண்ணின் குணம்.

நூற்றாண்டுகளுக்கு பின் கிட்டதட்ட தமிழ் அரசியல் களத்தை விட்டே பிராமண சமூகத்தை வெளியேற்றி விட்டார்களே என்று வேதனைப்படுகிற நீங்கள் இன்றளவும் பொது சமூகத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டு, ஆவணி அவிட்டத்தில் பூணூலை புதுப்பித்து தனது உயர் ஜாதி தன்மையை வெளிப்படுத்திக்கொண்டு, நேக்கு – நோக்கு என்கிற தங்கள் நாக்கு நீளத்தை பொது தமிழாக மாற்றி மொழியை சிதைத்துக் கொண்டு, சமஸ்கிருதம் தேவபாஷை என்று அலட்டிக் கொண்டு, தங்கள் சமூகத்திற்குரிய இட ஒதுக்கீட்டை பெறவிரும்பாமல் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டையும் குழித் தோண்டி புதைக்க காத்துக்கொண்டு இருக்கிற ”அவாளுக்கு” என்றைக்காவது அறிவுரை கூறியதுண்டா?

வேத, ஸ்மிருதிகளை படித்து, பிரம்மத்தை உணர முயல்பவன்தானே பிராமணன்? பிரம்மத்தை தேடுபவர்களுக்கு அரசியல் எதற்கு? இட ஒதுக்கீடு எதற்கு? இல்லையில்லை! நாங்கள் வைதீகத்தை விட்டு லவுகீகத்திற்கு வந்து விட்டோம் என்று சொன்னால் உபநயனம் எதற்கு? பூணூல் எதற்கு?

நீங்கள் சொல்கிறபடி மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டையோ, மக்கள் தொகையில் அவர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டையோ எவரும் மறுக்கவில்லையே?  1921 இல் நீதிக்கட்சி கொண்டு வந்த முதல் வகுப்புவாரி உரிமை ஆணையில் பார்ப்பனர்களுக்கு நூற்றுக்கு பதினாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை 1950 இல் வழக்கு தொடர்ந்து ஒழித்தவர்கள் யார்? பார்ப்பனர்கள்தாம்.

பார்ப்பனர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டின்படி இடஒதுக்கீட்டை பிராமணர் சங்கங்கள் ஒப்புக் கொள்கிறதா? கேட்கிறதா? நடிகர் எஸ்.வி.சேகர் இதற்கான முயற்சியை முன்னெடுத்தபோது தடுத்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் தங்களுக்குரிய ஒதுக்கீட்டை பெறுவதில்லை. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ஒழிப்பது, தகுதி – திறமையின் பெயரால் அனைத்து இடங்களையும் அபகரிப்பது.

நீதிக்கட்சியின் தொடக்க காலத்தில் தெலுங்கு பிராமணர் ஒருவரின் சொந்தக்காரர்கள் 49 பேர் வருவாய்த்துறையில் பணியாற்றியதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; இன்று வரை அதே நிலை நீடிக்கிறதே… தமிழ்நாட்டின் உயர் அதிகாரபீடமாக விளங்கும் தலைமை செயலகத்தில் உச்சகட்ட அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர், அவர்தம் உறவினர்கள் எத்தனைபேர் எத்தனை பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும், இதைப்போன்றே இன்னும் பல்வேறு அதிகார மையங்களில் நிறைந்து இருக்கும் பார்ப்பனர்களையும்,  இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாத தனியார் துறை நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் கும்பல் கும்பலாக பார்ப்பனர்கள் ஆக்ரமித்துள்ளனர் என்பதற்கான பட்டியலையும் எங்களால் தரமுடியும்.

அரசியல்ரீதியாக பிராமணர்களை உள்ளிழுக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். தங்களுக்கென்று ஒரு வேலி அமைத்துக்கொண்டு பொதுத்தளத்திற்கு வராமல் ஒதுங்கி நிற்பவர்களை நாங்கள் ஏன் வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்க வேண்டும்?

உங்கள் வாதத்தை ஒப்புக்கொண்டால்கூட திராவிடர் இயக்கத்தில்தான் பார்ப்பனர்கள் சேர்க்கப்படுவதில்லையே தவிர, திராவிட அரசியல் கட்சிகளில் சேரத் தடையில்லையே. எத்தனை பார்ப்பனர்கள் திராவிடக்கட்சிகளில் சேர்ந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார்கள்? போராட்டங்களில் சிறை சென்று இருக்கிறார்கள்? தடியடிபட்டு கொடிபிடித்து முழங்கியிருக்கிறார்கள்? பசை வாளியை கைகளில் ஏந்தி சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள்? களப்பணி செய்து களைத்திருக்கிறார்கள்? முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற வரலாற்றுத்துயரம் நிகழ்ந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் வீதிக்கு வந்து போராடியது, அப்போது அமைதியாக இருந்தது அக்ரகாரம் மட்டும்தானே?

ஆக, எந்த சமூக பங்களிப்புமின்றி, எந்த பிரச்சினைக்கும் முகம் கொடுக்காமல், பதட்டப்படாமல் பவிசாக உட்கார்ந்திருக்கும் பார்ப்பனர்கள் வாயில் தாம்பூலத்தை மடித்து வைக்க வேண்டும், அவர்கள் காறி உமிழ்ந்தால் கைகளில் ஏந்தி கொள்ளவேணடும். இல்லையென்றால் திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?

தலித்துகள் – முஸ்லீம்கள் மேம்பாடு என்கிறீர்களே திராவிடர் இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கத்தில், திராவிடகட்சிகள் ஆட்சியில் உள்ள தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்தில் இவர்களின் நிலை மேம்பாட்டுடன் இருக்கிறது என்று தரவுகளுடன் பட்டியல் போட்டு விட்டு பிறகு எங்களிடத்தில் வந்தால் அது அறிவு – நாணயம்.

அன்றைய சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1947 இல்.
ஆனால் அதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்பே ஆதி திராவிடர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் வழங்கி 1921 இல் நீதிக்கட்சி ஆணை பிறப்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?

பிராமணியத்தை மட்டுமல்ல நீங்கள் பட்டியிலிடுகிற தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் அனைத்தையும் திராவிடர் இயக்கங்கள் எதிர்த்தே நிற்கின்றன. இவர்களெல்லாம் தங்களை மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, பார்ப்பனர்கள் பார்வையில் சூத்திரர்களே! இவர்கள் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள். நாங்கள் புலி வேட்டையாடும் அதேவேளையில் பூனைகளின் இடையூறுகளையும் எதிர்கொண்டே வருகிறோம்.
ஆதிக்க சாதிகளால் தலித்துகள் பாதிக்கப்படும்போது பெரியாரிய இயக்கங்கள் தலித்துகளின் பக்கமே கைகோர்க்கிறது.

இன்று பிராமணியத்தை எதிர்ப்பது இனத்துவேஷம் என்று எழுதும் உங்கள் எழுதுகோல், நாளை தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், நாடாரியம் போன்றவற்றை எதிர்க்கும் எங்களை பார்த்து ”ஜாதிதுவேஷம்” என்று எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாது என்பதை நாங்கள் அறிவோம்.

திராவிடர் இயக்கங்களின் இஸ்லாமியர்களுடனான உறவு பற்றிய புரிதல் எப்படிப்பட்டது என்பது வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள்! புரியும்.

இத்தனை முஸ்லிம் கட்சிகள் பெருகிவிட்டதே என்ற உங்களின் ”நுட்பமான” வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் இது திராவிடர் இயக்கத்தின் மீதான நம்பிக்கை குறைவால் ஏற்பட்டதல்ல.  பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நம்பிக்கையிழந்த இஸ்லாமிய இளைஞர்கள் புதிய வீரியம்மிக்க இயக்கங்களை தேடுகிறார்கள். இது திராவிடர் இயக்கத்தின் மீதுள்ள அதிருப்தியல்ல;
இந்திய அரசு, பார்ப்பனிய நிர்வாக இயந்திரம், நீதித்துறை, ஊடகம் என இந்த சமூக அமைப்பின் மீது ஏற்பட்ட அதிருப்தி.

தொன்னூறுகளுக்கு முன்பு வரை வஹாபியத்தின் பக்கம் இங்குள்ள இஸ்லாமியர்கள் ஈர்க்கப்படவில்லையே? இந்துத்துவம் வளர்வதற்கான சூழலை வஹாபியம் உருவாக்குகிறதா? அல்லது வஹாபியம் வளர்வதற்கான சூழலை இந்துத்துவம் உருவாக்குகிறதா? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்தும் தவறான விடையை தாங்கள் எழுதுவது அறியாமை நிலையல்ல…
அறம் பிறழ்ந்த நிலை!

இஸ்லாமியர்களை ஆதரித்தால், இவர்கள் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சிப்பார்கள் என்பதும், இஸ்லாத்தை பகுத்தறிவு நோக்கில் விமர்சித்தால் இஸ்லாமியர்களை அரவணைக்க வேண்டும் என்பதும், தலித்துகளின் உரிமைக்குரலை எதிரொலித்தால் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தூற்றுவதும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் போது, தலித்துகளை புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதும் நாங்கள் முன்பே பலமுறை கேட்டு பழகிய செய்திதான்.

இரண்டு பக்கமும் அடி வாங்கினாலும் கிழிந்து போக திராவிடர் இயக்கம் மத்தளமல்ல, இடிதாங்கும் இரும்புக்கோட்டை !

எழுபது ஆண்டுகளுக்கு முன்பே பறை, மாட்டுக்கறி, பவுத்தம், இராமாயணம், பகவத்கீதை என அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்து நுணுக்கமான எதிர் வினையாற்றியவர்கள் இந்தியாவில் இருவர்தான்… ஒருவர் – பெரியார், இன்னொருவர் – அம்பேத்கார். இருவரது சிந்தனைகளையும் உள்வாங்கித்தான் திராவிடர் இயக்கம் களத்தில் நிற்கிறது.

இன்று உங்களைப்போன்ற பலர் அடுத்த நூற்றாண்டுக்கான திராவிடர் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதை வரவேற்கிறோம். ஆனால்… இத்தனை நூற்றாண்டுகளில் காலத்திற்கு தகுந்தவாறு பார்ப்பனீயம் தனது வர்ணாஸ்ரம தர்மத்தை மாற்றிக் கொள்ளவேண்டுமென்றோ, சக மனிதர்களை சமமாக நடத்த வேண்டுமென்றோ, மற்ற சமூக மக்களை எப்படி உள்ளிழுத்து கொள்வது என்றோ, மனுநீதியால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எப்படி பரிகாரம் தேடவேண்டுமென்றோ, ஜாதிய அடுக்கு முறையை எப்படித் தகர்க்க வேண்டுமென்றோ பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஒருவர் கூட தங்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறவோ, அதற்காக அமைப்புகளை உருவாக்கிடவோ, களப்பணி ஆற்றவோ முன்வராதது மட்டுமல்ல; தங்களது அறிவு – ஆற்றல் அனைத்தையும் இந்த கொடுமைகளை நியாயப்படுத்துவதற்கே பயன்படுத்தி வருவதையும் காணும்போது…
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இதே வீச்சுடன் திராவிடர் இயக்கம் இயங்க வேண்டும் என்ற தேவையை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

சீனி. விடுதலை அரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா; தமிழிசை நீங்களே இப்படி பேசலாமா?

கதிர்வேல்

கதிர்வேல்

காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்கிறார் தமிழிசை.

வட இந்தியர்கள் எப்படியும் பேசட்டும். தமிழிசை பேசலாமா?

குமரி அனந்தனும் வசந்த குமாரும் கோடிக் கணக்கான காங்கிரஸ் குடும்பத்தினரும் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்களா?

காங்கிரசை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்று சொல்லுங்கள். ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை வீழ்த்துவோம் என்று பேசுங்கள். அதெல்லாம் அரசியல் நாகரிக வரம்புக்குள் வருபவை.

காங்ரஸ் முக்த் பாரத் என்ற இந்தி கோஷத்தை தமிழில் மொழி பெயர்க்காதீர்கள். முஸ்லிம் முக்த் பாரத் கோஷத்தை முதலில் உருவாக்கியவர்களே இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

அந்த கோஷத்தை மீறிதான் பஞ்சாப், மணிப்பூர், கோவா மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

வறுமை இல்லாத இந்தியா. ஊழல் இல்லாத இந்தியா. குற்றங்கள் இல்லாத இந்தியா. பெண்கள், குழந்தைகளை வதைக்காத இந்தியா. தகுதியும் திறமையும் உள்ளவர்களை நிராகரிக்காத இந்தியா…

இன்னும் எத்தனையோ இந்தியாக்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அனைத்தையும் மறந்துவிட்டு, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸ் ஃபோபியாவுடன் நடமாடப் போகிறீர்கள்?

ஊழல், நிர்வாக மெத்தனம், குடும்ப ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் ஒரு வாழ்க்கை முறையாக, இந்திய அரசியலின் ஓர் அடையாளமாக மாறிக்கிடக்கிறது. குடிமக்களில் எந்தப் பிரிவுக்கும், உடன்படாத எந்தக் கருத்துக்கும் கதவை சாத்தாத ஒரே அரசியல் இயக்கம் அதுதான்.

All inclusive Indian liberalism அதன் இதயமாக துடித்துக் கொண்டிருக்கிறது. ஏனைய சித்தாந்தங்களுடனான நம் மக்களின் பரீட்சார்த்த உறவுக் காலங்கள் முடிவுக்கு வந்தபின் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதற்கு எத்தனை ஆண்டுகளும் ஆகலாம்.

அன்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய வலிமையான தலைமை இல்லாமல் போனால் அக்கட்சியை உரிய இடத்தில் வைப்பார்கள் மக்கள். அப்போதும் அந்தப் பொறுப்பை இன்னொரு கட்சிக்கு தாரை வார்க்க மாட்டார்கள்.

கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்.

வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…

வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே!

மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும், திராவிடர்களுக்கும் ட்விட்டரில் அறிவுரை சொன்னதை நான் காண நேர்ந்தது. அடேங்கப்பா எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நானுணர்ந்தேன்.நவம்பர் 8,2016 இரவு 8 மணி இருக்கும் தொலைக்காட்சியில் தோன்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி செல்லா காசு அறிவிப்பின் மூலமாக டிசம்பர் மாதம் வரை அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்தார். அதை திராவிட கழகம் உட்பட எல்லா திராவிட இயக்கங்களும், திராவிட கட்சிகளும், நீங்கள் சொன்ன திராவிடர்களும் இது மக்களுக்கு எதிரனாது என்று மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதே சமயம் நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? அறிவிக்கப்படாத அந்தப் பொருளாதார நெருக்கடியை நீங்கள் தலை வணங்கி வரவேற்றதும் இல்லாமல் கட்சி பேதமின்றி அம்முடிவை கொண்டாட வேண்டும் என்று சொன்னீர்கள். அதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா திரு. கமல்ஹாசன் அவர்களே ஏடிஎம் வரிசையிலும், பேங்க் வரிசையிலும் நின்ற 300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதை விடுங்க கமல்ஹாசன் அவர்களே உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்.

பாபநாசம்னு ஒரு ஊரு! நீங்க நடிச்ச படமில்லை திரு. கமல்ஹாசன் அவர்களே! கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊர். அந்த ஊரில் ஒரு பெரியவர் அவர் கடின உழைப்பால் சம்பாதித்தப் பணம் திடீரென செல்லாது என்று சொன்னதால் அதை மாற்றுவதற்காக வரிசையில் நின்று உயிரிழந்தார். அதில் கொடுமை என்ன தெரியுமா கமல்ஹாசன் அவர்களே அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் (ஒருவேளை தெரியாது போல) இருக்கலாம் அவரை அப்புற படுத்தாமல் அல்லது அங்கிருந்து நகர்ந்தால் எங்கு வரிசை போய்விடுமோ! அப்படி போய்விட்டால் செலவுக்கு காசில்லாமல் என்ன செய்வது? மனிதநேயம் கொன்று வரிசையில் நின்றார்கள் மக்கள். அதற்கு யார் காரணம் தெரியுமா? நீங்கள் புகழ்ந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திமோடி தான்!

தமிழகம் முழுவதும் நீங்கள் வரவேற்ற பண மதிப்பிழப்பால் சுமார் 150 கும் மேற்பட்ட விவசாயிகள் நெருக்கடி சாவுக்கு தள்ளப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒருவேளை நீங்கள் அறிந்திருந்தால் அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

திரு. கமலஹாசன் அவர்களே! கருவறுத்தல் என்றால் என்னவென்று தெரியுமா? திரு. கமல்ஹாசன் அவர்களே! நீங்கள் இங்கு சல்லிக்கட்டுக்காக மெரினாவில் இருந்தவர்களை நீங்கள் ட்விட்டரில் உற்சாகப் படுத்திய போது நிகழ்ந்தது திரு.கமல்ஹாசன் அவர்களே! ஆம் அரியலூர் அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சார்ந்த நந்தினி எனும் 17 வயது பெண் ஆர்எசுஎசு பிரமுகரின் கருவை சுமந்து வந்தாள். அவள் எப்படி கொன்று வீசப்பட்டாள் தெரியுமா? ஆர்எசுஎசு கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு அவள் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவறுத்து கொலை செய்து நிர்வாணமாக கிணற்றில் வீசப்பட்டார் திரு. கமல்ஹாசன் அவர்களே! இச்சம்பவத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள் திரு. கமல்ஹாசன் அவர்களே?

கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் திரு.கமல்ஹாசன் அவர்களே! நடுக்குப்பத்திலும் இன்னும் பல்வேறு குப்பங்களையும் கொளுத்தியது நீங்கள் ஆதரிக்கும் பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சியில் தான் என்பதை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

மேலே குறிப்பிட்ட எல்லா சம்பவங்களுக்கும் திராவிட கழகத்தினரும், மற்ற திராவிட இயக்கத்தினரும், திராவிடர்களும் மக்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் களத்தில் நின்றவர்கள் என்று உங்களுக்கத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். அதுசமயம் நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு.கி. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும் இன்னும் ஏனைய திராவிடர்களுக்கும் சொன்னதை நீங்கள் கடைப்பிடியுங்கள்!

புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் வரிகளை உங்களுக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன்!

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன் !

இவ்வளவு சொல்றீயே இதெல்லாம் எனக்கு சொல்ல நீ யார் என்று கேட்டால் நானும் உங்களைப் போல ஒருவன் A Common Man

முரளிகிருட்டிணன் சின்னதுரை

திருட்டு பொறுக்கிகள்; பத்ரி சொன்னதில் என்ன தவறு…?

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

சசிகலா, ஜெயலலிதாவின் கல்லறையில் அறைந்து சத்தியம் செய்ததை ‘பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு’ என்பதாக கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கூற்றுக்காக சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதையொட்டிய பலரது கண்டன நிலைத்தகவல்களில், பத்ரியின் மீதான வசைகள் பின்னூட்டப் பெட்டியை நிறைக்கின்றன. வெறும் கோபம் மட்டும் அல்லாது, ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது இதே ‘பொறுக்கி என்ற வார்த்தையே ஏன் நீங்கள் சொல்லவில்லை…? சங்கராச்சாரி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் இத்தகைய அற ஆவேசத்தை நீங்கள் காட்டினீர்களா…? போன்ற கிடுக்கிப் பிடி கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்படுகின்றன. ஒரு கட்டத்தில், ‘பொறுக்கி’ என்ற வார்த்தையை அவரது நிலைத்தகவலில் இருந்து நீக்கிவிட்டு யாரும் கருத்து கூற முடியாதபடி அந்தத் திரியையும் மூடி வைத்திருக்கிறார் அவர். இந்த விவகாரத்தின் ஊடாக, இங்கு நிலவும் அரசியல், மற்றும் நமது சாதியப் புரிதல் குறித்த ஒரு உரையாடலைத் துவங்கலாம்.

badri

முதலில் சசிகலாவின் ஆவேசத்தை ‘பொறுக்கித்தனம்’ என்று வரையறுத்த பத்ரியின் கோபத்தை நாம் வரவேற்போம். இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அது என்ன மாற்றுக்கருத்து? சசிகலாவின் அரசியல் முழுக்க ஊழலும் பொறுக்கித்தனமும் மிகுந்தது என்பதிலா? இருக்க முடியாது…! ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் இதைவிட வன்முறையான எதிர்வினையைத்தான் அவர் மீது கடந்த ஒரு மாதமாக காண்பித்துவருகிறது. இன்று பத்ரிக்கு எதிராக கொந்தளிப்பவர்களில் பெரும்பான்மை சசிகலாவை இதை விட கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்தவர்கள்தான். அதில் எல்லா அரசியல் இயக்கத்தவர்களும் உண்டு. திமுகவினர், திகவினர், அதிமுகவினர், பிஜேபியினர், நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் நான்காம் தரப்பினர் என்று சசியை வசை பாடியதில் எல்லாரும் இருந்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் எதிர்வினை புரிய இருக்கும் உரிமை பத்ரிக்கு எங்கு இல்லாமல் போகிறது என்று பார்த்தால், ‘அவர் ஒரு பார்ப்பனராக இருப்பதனால்’ இல்லாமல் போய்விடுகிறது. மேலும் குற்றம் புரிந்த மற்ற பார்ப்பனர்கள் மீது கடுமையாக அவரது எதிர்வினையைப் பதிவு செய்து தனது நேர்மையை நிரூபிப்பதிலும் அவர் தவறியிருக்கிறார் என்கிற போது பத்ரி மீது வசை பாடும் உரிமை சசியைக் கழுவி ஊற்றியவர்கள் உட்பட எல்லாருக்கும் வந்துவிடுகிறது.

‘பத்ரி ஒரு பார்ப்பனர் இல்லையா…? அவர் எப்படி பார்ப்பனரல்லாத சசிகலாவின் செயலைப் பொறுக்கித்தனம்  என்று சொல்லலாம்…? என்று வாதிட்டால், வந்திருக்கும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாட பார்ப்பனர்கள் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்றே நான் சொல்வேன். ஏன்…?

முதலில் இந்த வழக்கைத் தொடுத்தது சுப்ரமணிய சாமி என்கிற பார்ப்பனர். பிறகுதான் அன்பழகன்  என்கிற சூத்திரர் அதில் இணைந்துகொள்கிறார். அதை விடாப்பிடியாக ஏற்று நடத்திய, எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காமல், உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராடிய கர்நாடக உயர்நீதி மன்ற வக்கீல் B. V ஆச்சார்யா ஒரு பார்ப்பனர். இதைச் சொல்கையில், இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்த, இதை இந்த அளவுக்கு இழுத்தடிப்பதில் உதவிய பார்ப்பனர்கள் இல்லையா…? என்று கேட்கலாம். மேலும் இந்த வழக்கில் தண்டனை அனுபவிக்காமலேயே இறந்து போன ஜெயாவுக்கு அவர் பார்ப்பனராக இருந்த தகுதி உதவவில்லையா என்றும் கேட்கலாம். அது மிகச் சரியான கேள்வி.

அதற்கான பதில் என்னவென்றால், மற்ற எல்லா சாதிகளிலும் இருப்பது போலவே பார்ப்பனர்களிலும் சாதி வெறி கொண்ட, மேட்டிமைத்தனம் கொண்ட, ஒடுக்குமுறையைக் கையிலெடுக்கிற ஒரு தரப்பும் இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிற, அதற்காக தனது உயிர் உள்ளிட்ட சக்தி முழுவதையும் பணயம் வைக்கிற மற்றொரு தரப்பும் வரலாறு நெடுக இருந்துகொண்டே இருக்கிறது என்பதுதான். ஆனால், நாம் பார்ப்பனராக இல்லை என்கிற ஒரு காரணத்தாலேயே, இதில் கருத்து சொல்கிறவன் ஒரு பார்ப்பனன் என்கிற ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கம்பு சுத்துவது ஆபாசம் இல்லையா என்பதுதான் எனது கேள்வி. முத்தாய்ப்பாக குமாரசாமி என்ன சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் பொது சமூகம் அமைதியாக இருப்பது கள்ள மவுனத்தில் வருமா வராதா என்பதும் முக்கியமான கேள்விதான்.

இதுதான் ஒரு எதிர்வினைக்கான அடிப்படை என்றால், இவ்வாறுதான் விமர்சிப்பவர்களின் தகுதியை வரையறை செய்வோம் என்றால், இந்த அடிப்படையில்தான் பத்ரி தகுதி இழக்கிறார் என்றால் சசிகலாவின் ஊழல் வழக்கு மீது கருத்து சொல்லும் தகுதியை யார் யாரெல்லாம் இழக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் ஊழலுக்கு எதிரான ஒரு வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ளும் தகுதியே திமுகவுக்கு கிடையாது. திறமையாக ஊழல் செய்யும் திறமையை வைத்திருப்பதாலேயே அதற்கு அந்தத் தகுதி வந்துவிடுமா என்ன ? திமுக தகுதியிழக்கிறது என்றால், திமுக அபிமானிகளுக்கும் இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை இல்லையா? அவர்கள் இப்போது பட்டியலில் இல்லை. வெளியேறிவிடுகிறார்கள். இரண்டாவது, தாம் யாரைக் கடவுளராகக் கொண்டாடுகிறோமோ அவர் முதல் குற்றவாளியாகவும் அவருக்கு உதவி புரிந்த நபர் இரண்டாவது குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழலில், அந்த இரண்டாவது குற்றவாளி முதல்வராவதை எதிர்க்கிறார்கள் என்பதால் மட்டும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி பட்டாசு வெடிக்கும் அதிமுகவினரின் செயல் ஆபாசம் இல்லையா? ஆக, அவர்களும் நாக் அவுட்.

அடுத்ததாக பன்னீர் செல்வம். இப்போதும் கூட முதல் குற்றவாளியின் ஆன்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும், இதுவரை நிரூபிக்கப்படாததாலேயே ஊழல் விவகாரத்தில் நிரபராதியாக இருந்துகொண்டிருக்கும் பன்னீரின் அரசியல் நிலைப்பாடு மக்கள் விரோதம் இல்லையா? எளிமையின் திருவுருவாக பன்னீரை முன்னிறுத்திய, ‘அதோ அங்கிளை பார்…’ என்று தனது குழந்தையைத் தோளில் தூக்கி பன்னீரின் முகத்தைக் காட்டியவர்கள் இதோ இந்த தீர்ப்பு வந்த பிறகும் கூட முதல் குற்றவாளியை தலையிலேயே சுமந்து திரியும் பன்னீரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டாமா? சசிகலா குற்றவாளி என்றால் அம்மாவும் குற்றவாளிதானே அதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவேண்டாமா? தனது குழந்தையிடம் ஒரு குற்றவாளியின் காலில் விழுவதும் இன்னொரு குற்றவாளியின் முதுகில் குத்துவதும் இந்த அங்கிளுக்குப் பிடிக்கும் என்று சொல்லித்தர வேண்டாமா ஒருவன். அப்படி கேள்வி எழுப்பாத பட்சத்தில், பன்னீரின் மீது இந்த அரசியல் அழுத்தத்தை தர திராணி இல்லாத பட்சத்தில், அவரை ஆதரித்த நடுநிலை சமூகத்தின் செயல் பாரபட்சமானது இல்லையா? ஆக இங்கு யார்தான் அறத்தின் பாற்பட்டு கேள்வி எழுப்புபவர்களாக இருக்கிறீர்கள் என்ற கேள்வி நியாயமானதா இல்லையா? ஆக அவர்களும் அவுட்.

நடந்த ஊழலுக்கு எதிராக அதன் ஆரம்ப காலத்திலேயே போராடியிருக்க வேண்டிய திகவின் வீரமணி போன்றவர்களின் பாராமுகம் மானத்திற்கு எதிரானதா இல்லையா? பார்ப்பனர்கள் X பார்ப்பனரல்லாதவர்கள் என்ற இருமையில் மட்டுமே எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்றால், ஒரு பாப்பாத்தியுடன் சேர்ந்துகொண்டு இவ்வளவு ஊழல்கள்  செய்த சசிகலா இன துரோகியா இல்லையா? அவரை பார்ப்பன அடிவருடி என்று வரையறுப்பதை விட்டுவிட்டு ஒடுக்கப்படுபவனின் நியாயத்தையும்  சேர்த்து அவர் பார்ப்பனரல்லாதவர் என்கிற ஒரே காரணத்துக்காக  அவரது காலடியில் கொண்டு சமர்ப்பிக்கும் வீரமணி, நெடுமாறன் வகையறாக்களின் அரசியல் அயோக்கியத்தனம் இல்லாமல் வேறென்ன. இவர்களுக்கெல்லாம் பத்ரியின் செயலை அயோக்கியத்தனம் என்று வரையறுக்கும் தகுதி எங்ஙனம் வந்துவிடும். மட்டுமல்லாது, சசிகலாவின் அரசியல் அதன் தொடக்கம் முதலே தலித் விரோத அரசியல். ஜெயலலிதாவின் பிறப்பின் அடிப்படையான மனநிலை துத்துவார்த்தரீதியாக இந்து உயர்சாதி ஒடுக்கும் அடிப்படையைக் கொண்டது என்றால், சசிகலாவின் பிறப்பு என்பதும் அந்த ஒடுக்குமுறைக்கு ஸ்தூலமான ஆதரவை வழங்குகிற அதை செயல்படுத்தும் உடல் வலிமையை வழங்குகிற ஆதிக்கசாதிக் கருத்து நிலை. ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்கமுடியாது. அந்த அளவுக்கு பின்னிப்பிணைந்து அவை ஒன்றுக்கொன்று உதவிக்கொள்பவை. உதவிக்கொண்டவை. ரத்தப்பூர்வமான அவ்வளவு உதாரணங்கள் உண்டு. பரமக்குடி முதல் தற்போதையை ஜல்லிக்கட்டு போராட்ட குடிசை எரிப்பு வரை.

இந்த ஊழல் விவகாரத்தில், சசிகலாவை ‘ஒடுக்கப்படும் தரப்பாக’ மக்கள் முன் வைக்கும் செயல், அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது. அவருக்கு அந்த சலுகையை வழங்குவதன் மூலம், அவரை மட்டும் இவர்கள் விடுவிப்பதில்லை. அவருடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் ஆபத்தையும் சேர்த்தேதான் இவர்கள் மூடிவைக்கிறார்கள். பத்ரி சேஷாத்திரி போன்ற ‘மத்தியதர வர்க்க  லௌகீகப் பார்ப்பனரை’ ஒரு தத்துவ அடிப்படை கொண்ட ஆளும் வர்க்கப் பிரதிநிதியாக வரித்து மக்கள் முன்பு நிறுத்துவதன் மூலம் இந்த அரைவேக்காட்டு முற்போக்காளர்கள் செய்வது ஒரு வகையில் பார்ப்பன சேவைதான். போட்டியின்போது காட்டப்படும் சிவப்புத் துணியை நோக்கி மூர்க்கத்துடன் பாயும் காளை தன் முதுகில் ஈட்டியால் குத்து வாங்குவது போல ஓரளவு அற அடிப்படை கொண்ட பொது சமூகம் இந்த போலி சமூகநீதியாளர்களால் காயடிக்கப்படுகிறது என்பதே உண்மை. ஆமாம். பத்ரி போன்றவர்களின் ஆகிருதியை ஊதிப் பெரிதாக்கி அந்தத் திரையின் பின்னால், ஊழல்வாதிகளை மறைந்துகொள்ளச்செய்யும் அற்பத்தனமே இங்கு நிகழ்வது. இதன் பொருள் பத்ரி புனிதர் என்பதல்ல. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அல்ல. இதே போன்ற ஒன்றிற்கு பழைய உதாரணம் ஸ்பெக்ட்ரம் ராசாவை தலித் என்றும் அதனாலதான் வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் என்றும் இவர்கள் வைத்த ஒப்பாரி.

மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது அவர்கள் முன்னால் பொருத்தமற்ற ‘conspiracy theory’ களை கடைவிரித்து அவர்களை வெருட்டுவது அல்ல. அவர்கள் செய்வது தவறு என்றாலும் அவர்களது முகத்திலடித்தாற்போல் அதைச் சொல்வதுதான். அதுதான் மார்க்சீய, பெரியாரிய, அம்பேத்காரிய அடிப்படை. குறைந்த பட்சம் நான் அவ்வாறுதான் அதைப் புரிந்துகொள்கிறேன். மேலும் பத்ரியை வலதுசாரி ஆதரவாளராக புரிந்துகொள்வது வேறு. அவரை வலதுசாரி ஆதிக்க அரசியல் பிரதிநிதியாக புரிந்துகொண்டு எதிர்வினை புரிவது வேறு.

தாம் அரசியலை விட்டு துரத்தப்படும் சூழலில் கூட, ‘இந்த குழப்பங்களுக்குப் பின்னால், பிஜேபி இருப்பதாக நினைக்கிறீர்களா…? என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறபோது, ஆமாம்… இருக்கிறார்கள், என்று சொல்லத் திராணியற்ற கோழை சசிகலா, ‘உங்கள் எல்லாருக்கும் உண்மை தெரியும், நான் சொல்ல என்ன இருக்கிறது’  என்று பசப்புகிறார். அந்த பதிலின் பின்னுள்ளது ஊழலில் ஊறிப் போன சொரணை உணர்வு மங்கிய கபடம்.

பத்ரியிடம் ஒரு முறை IIT களில், இப்போதும் பார்ப்பன ஆசிரியர்கள்தானே பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்த போது எச்சில் விழுங்கிக்கொண்டே அந்தக் கேள்வியை எதிர்கொள்வதில் இருந்து நழுவினார். அதுவொரு மேட்டுக்குடி பார்ப்பனரின் லௌகீக மொன்னைத் தனம் என்பதைத் தாண்டி அதற்கு அரசியல் ரீதியான எந்த பெறுமதியும் கிடையாது.

அவரை முன்வைததெல்லாம், பார்ப்பன பயங்கரவாதம் என்று முட்டியை மடக்குவதும் அந்த அடிப்படையில் சசிகலாவை முட்டுக்கொடுப்பதும் அரசியல் புரிதலில் சேராது. சொந்த நலன்களுக்கான சோரம் போவது என்பதே அதன் பொருளாக வரலாற்றில் நிலைக்கும்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் கொலை வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வழக்கில் காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ததாக மிகப்பெரிய பொய்யை லட்சக்கணக் கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சியில் பேசுகிறார்.

இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். குற்றவாளி யார் என்பதை நந்தினியின் தாயார் குறிப்பிட்டும் காவல்துறை குற்றவாளி மணிகண்டனை அழைத்து விசாரித்துவிட்டு திரும்பி அனுப்பிவிட்டனர். 16 தினங்கள் கழித்து நந்தினியின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பின்னரே மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அரிய லூரில் ஜனநாயக மாதர்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்புதான் விசாரணை துரிதமாக்கப்பட்டு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே இவ்வழக்கு விசாரணையில் அரியலூர் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கை அதிமுக செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் நிர்மலா பெரியசாமி அப்பட்டமான பொய்யை சொல்லி மூடி மறைத்துள்ளார்.

மேலும் இவ்வழக்கில் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினியின் தாய் ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை எனவும், அதுவே இதுபோன்ற படுகொலைகள் நடப்பதற்கு காரணம் என்றும் குறிப் பிட்டார்.
நிர்பயா வழக்கில் இரவு 11 மணிக்கு அவள் பயணம் செய்ததும், சுவாதியின் படுகொலைக்கு அவளது செயல்பாடுகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஆணாதிக்க கருத்துக்களை கேட்டு கேட்டு புளித்துவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இத்தகைய பேச்சுக்களை பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.

நிர்மலா பெரியசாமி போன்றோரின் இத்தகைய பேச்சு குற்றவாளிகளின் நடத்தை குறித்து என்றுமே பேசுவதில்லை. இப்படிப்பட்ட பேச்சுக்கள் குற்றங்களை குறைக்க உதவாது மாறாக குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டும் வகையில்தான் அமையும்.

இவரது அத்தகைய பேச்சுக்கள் பெண்களின் முன்னேற்றத்தை பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் செயலாகும்.

எனவே பெண்களை இழிவாகப்பேசிய அதிமுக வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமியின் அரசியல் ஆதிக்க, ஆணாதிக்க, சாதியாதிக்க கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

– எஸ்.வாலண்டினா, மாநிலத் தலைவர்
பி.சுகந்தி, மாநிலப் பொதுச்செயலாளர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்!

ஏ.பாக்கியம்

ஏ. பாக்கியம்
ஏ. பாக்கியம்

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். மேலும், ஏதாவது மெசேஜ் அனுப்புவது என்றால் அவரைக் கேட்டுக் கொண்டு, அவரது அனுமதி பெற்றுவிட்டுத்தான் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தொனியிலும் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்று குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இந்த போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்கள் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளத்திலும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமல்ராஜ் மற்றும் ஜார்ஜின் கருத்துக்கள் அவர்களைப் பொருத்தவரை நியாயமானதுதான். போலீஸ் அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி; ‘பிரிடேட்டர்கள்’. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், நியாயத்துக்காக போராடுபவர்களை அடித்து நொறுக்கு, சுட்டுத் தள்ளு, கொளுத்து, உள்ளே தள்ளு என்பவைதான். இந்த வார்த்தைகள், செயல்கள்தாம் அவர்களுக்குள் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இந்த மனித எந்திரங்களிடம் இருந்து எப்படி அன்பு, பாசம், நேசம், தோழமையை எதிர்பார்க்க முடியும்?அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, மக்கள் எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் ‘காவலர்’களுக்கும் போராட்டக்காரர்கள் சமூக விரோதிகளாக, தேச விரோதிகளாகத்தான் தெரிவார்கள்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற மகத்தான இயக்கத்தின் வீரஞ்செறிந்த வரலாறும் இணையற்ற தியாகமும் பாவம் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அமல்ராஜூக்கு எப்படித் தெரியும்? பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் தேச ஒற்றுமையை சீர்குலைத்தபோது, அதை எதிர்த்துத் தீரமுடன் போராடியவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள்.

தேச ஒற்றுமைக்காக குர்ணாம் சிங் உப்பல், சோகன் சிங் தேஷி உட்பட நூற்றுக்கணக்கான டிஒய்எப்ஐ தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.டிஒய்எப்ஐ பஞ்சாப் மாநிலத் தலைமையே தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது. அசாமில் உல்பா, போடோ போன்ற தீவிரவாத அமைப்புகளையும், காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளையும் எதிர்த்து எவ்வித சமரசமுமின்றி போராடியதும், அதற்காக பல தோழர்களை இழந்ததும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான். மேற்கு வங்கத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க, பக்ரேஷ்வர் மின்திட்டத்தை கொண்டு வந்தபோது, மத்திய அரசு நிதி உதவி செய்ய மறுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் லட்சக்கணக்கான தோழர்கள் ரத்ததானம் செய்து பக்ரேஷ்வர் மின்திட்டத்திற்கு நிதி திரட்டினார்கள். தங்கள் உயிர் சக்தியான ரத்தத்தை கொடுத்து, மனித குலத்தின் தவிர்க்க முடியாத சக்தியான மின் சக்திக்கு உயிர் கொடுத்தார்கள். இப்படி தேசம் முழுக்க வாலிபர் சங்கத்தின் தியாகத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி, வேலையில்லாத காலத்தில் நிவாரணம் கோரி 1977ல் தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் நடத்திய அமைப்பு டிஒய்எப்ஐ. இதன் பிறகுதான் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வேலையில்லா கால நிவாரணத்தை அறிவித்தார்.சென்னையில் 1986ம் ஆண்டு மார்ச் 23ல் (பகத்சிங் நினைவு தினம்) டிஒய்எப்ஐ ரத்ததான கழகத்தை ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து அதிகளவில் ரத்த தானம் செய்ததற்கான விருதுகளை குவித்து வருகிற இயக்கம் டிஒய்எப்ஐ.அப்போதெல்லாம் ரத்தம் கொடுத்தால் செத்துப் போயிடுவோம் என்ற பயத்தில், அது உண்மையில்லை என்றாலும் கூட, யாருமே ரத்த தானம் செய்ய வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நகர்ப்பகுதி குடிசைகளில் இருந்து குக்கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வரை நம்பிக்கையூட்டி ரத்த தானம் செய்த அமைப்பு டிஒய்எப்ஐ.ரத்த தானம் வழங்கியதில் டிஒய்எப்ஐ தோழர்கள் காக்கி, காவி என்றெல்லாம் நிறபேதம் பார்த்ததில்லை.

நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாலிபர் சங்கத் தோழர்கள்தான் ரத்த தானம் செய்துள்ளனர். இது அமல்ராஜுக்கோ, ஜார்ஜூக்கோ தெரியாது போலும்.1992-ல் சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கத்தை டிஒய்எப்ஐ நடத்தியது. இதற்காக 3000 இளைஞர்களைத் திரட்டி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், காமராஜர் அரங்கத்தில் கருத்தரங்கும் நடைபெற்றது.போதைப் பொருளை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்திற்கு டிஒய்எப்ஐ ஏற்பாடு செய்தது. அதற்கு அன்றைய காவல்துறை, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாரத்தான் நடத்த வேண்டாம் என்று சொன்னது. நீதிபதியும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஓட்டம் கைவிடப்பட்டு தீர்மானம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இப்போது சொல்லுங்கள்… சட்டத்தை மதித்த… மதிக்கிற எங்கள் வாலிபர் சங்கமா சமூகவிரோதி?கல்வி என்பதும், எழுத்தறிவு என்பதும் சென்னை மாநகரக் குடிசைப் பகுதிகளில் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச இரவுப் பள்ளியை துவங்கி நடத்தியது டிஒய்எப்ஐ. அப்போது ‘இங்கெல்லாம் வந்து நடத்தாதீங்க, இவனுங்க உருப்பட மாட்டானுங்க’ என்று ஏளனம் செய்தார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆனால், குடிசைப் பகுதிகளில் டிஒய்எப்ஐ – செய்த கல்விப் பணியால் நிலைமை மாறியதைத் தொடர்ந்து லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் உள்ள போலீஸ்காரர்கள் ‘இந்த ஊர் மாறியிருக்குன்னா அதுக்கு டிஒய்எப்ஐ தான் காரணம்’’ என்று பாராட்டினார்கள். இது, மக்கள் போராட்டங்களில் லத்தியைச் சுழற்ற மட்டுமே தெரிந்த அமல்ராஜூக்கு தெரிய வாய்ப்பில்லை.1992ல் தமிழகத்தில் வேலையின்மையைப் போக்கக் கோரியும், தொழில் வளர்ச்சியைப் பெருக்க கோரியும் குமரியில் இருந்தும் கோவையில் இருந்தும் 2500 கிலோ மீட்டர் கிராமம் கிராமமாகச் சென்று லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அணி திரட்டிய இயக்கம்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.அதே ஆண்டில் (1992) ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் மறியல் செய்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர். சிறையில்தான் அவர்கள் தீபாவளி கொண்டாடினர். வாலிபர்களின் எழுச்சியை கண்ட ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை குறைத்தது.1994ல் வேலை நியமனத் தடைச் சட்டத்தை எதிர்த்து அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தி சுமார் 60 ஆயிரம் வாலிபர் சங்கத் தோழர்கள் சிறை சென்றனர். இது சமூகம் சார்ந்த அரசியல் போராட்டம். மக்களை நேரடியாகப் பாதித்த பிரச்சனைகளுக்கான போராட்டம்.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்று 1994-ம் ஆண்டே சுற்றுச்சூழலுக்காக கவலைப்பட்டது வாலிபர் சங்கம். சென்னையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 4000 மரக்கன்றுகளை நட்டது.ஊருக்குத்தான் உபதேசம், எங்களுக்கு இல்லை என்று எப்போதும் இருந்ததில்லை நாங்கள்.

கண்தான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தியதோடு 1994-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 1200 டிஒய்எப்ஐ தோழர்கள் கண்தானம் செய்கிறோம் என்ற உறுதிமொழிப் படிவத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். 1994-ல் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மதுரை மீனாட்சிபுரத்தை ஒட்டிய பல இடங்களில் வீடுகள் சகதியால் மூழ்கடிக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் விக்கித்து நின்றார்கள். 15 நாட்கள் சகதியோடு சளைக்காத போராட்டம். சேற்றை அள்ளி சுத்தப்படுத்தி வீட்டைக் கழுவி, விக்கித்து நின்ற மக்களை குடியேறச் செய்தது டிஒய்எப்ஐ. இது காக்கிக் கனவான்களுக்கு தெரியாது. கள்ளச்சாராயத்தை எதிர்த்து கடலூரில் கடும் போராட்டத்தை நடத்தியது டிஒய்எப்ஐ தான். இதனால் குமார், ஆனந்தன் ஆகிய டிஒய்எப்ஐ தோழர்கள் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எஸ்.பி. ஆக இருந்தவர் சைலேந்திரபாபுதான். எஸ்.பி. ஆபீசிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நடந்த இந்த படுகொலையில் சைலேந்திர பாபு தலைமையிலான காவல்துறை யாருக்கு சாதகமாக நடந்து கொண்டது என்பதும் ஊரறிந்த ரகசியம்.ராமச்சந்திரா மருத்துவமனையை அரசுடைமையாக்கக் கோரிய போராட்டத்தை சென்னையில் வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இணைந்து நடத்தியது. இதற்காக காவல்துறையின் அடக்குமுறை, சிறைவாசம் டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ தோழர்களுக்கு பரிசாக கிடைத்தது. எங்களது போராட்டத்தின் விளைவாக ராமச்சந்திரா மருத்துவமனையை அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு அதை உடையாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள் என்பது வேறு விசயம்.மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தில், சமூக விரோதிகளை சமரசமின்றி எதிர்த்த போராட்டத்தில் விருதுநகர் சந்துரு, மண்டபம் முத்து, வியாசர்பாடி ராஜூ, நெல்லை வி.கே.புரம் குமார், குமரி அருமனை சுதாகர் என ஏராளமான தோழர்களை டிஒய்எப்ஐயும் எஸ்எப்ஐயும் இழந்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக போராடியவர்கள் அல்ல. மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியவர்கள்.

அதற்காக மரணத்தைப் பரிசாக ஏற்றவர்கள்.தமிழகம் முழுவதும் டிஒய்எப்ஐ பொங்கல் விழா கொண்டாடி வருகிறது. அந்த நேரத்தில் குடிசை மக்களுக்கான பல்வேறு போட்டிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களோடு மக்களாக டிஒய்எப்ஐ செயலாற்றி வருகிறது. 2004 டிசம்பர் 26-ல் ஆழிப்பேரலை (சுனாமி) அடித்து நொறுக்கிய போது நிவாரணப் பணிகளில் முழு மூச்சோடு ஈடுபட்டது டிஒய்எப்ஐ. எண்ணூரில் இருந்து சீனிவாசபுரம் வரை ஒரு பகுதி, கடலூரில் இருந்து நாகப்பட்டினம் மற்றும் குமரி வரை மற்றொரு பகுதி என கடலில் அழுகி மிதந்த பிணங்களை தோளில் சுமந்து கரைசேர்த்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் டிஒய்எப்ஐ தோழர்கள்தான். 2015 நவம்பர், டிசம்பரில் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது மீட்புப் பணி, மருத்துவ உதவி, உணவு வழங்குதல் உள்ளிட்ட நிவாரணப்பணிகளை சென்னை நகரம் முழுக்கச் செய்தது டிஒய்எப்ஐ. தங்களுடைய வீடுகளில் பலத்த சேதம் இருந்தாலும் அதைவிடுத்து மற்றவர்களுக்காக உயிரைக் கொடுத்து உதவி செய்தனர் டிஒய்எப்ஐ தோழர்கள். காவல்துறையே நுழையத் தயங்கிய இடத்திலெல்லாம் டிஒய்எப்ஐ தோழர்கள் உயிரைப் பணயம் வைத்து மரணத்தின் வாயிலில் நின்று மக்களை காத்தார்கள்.இப்படி கலை, பண்பாடு, சமூகம், அரசியல், அடிப்படை பிரச்சனைகள் என்று மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக போராடும் எங்கள் வாலிபர்களும் மாணவர்களுமா சமூகவிரோதி? தேசவிரோதி?நாடு முழுவதும் மக்கள் இயக்கங்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்த முயற்சிக்கிறது காவிக்கூட்டம். தமிழகத்தில் காக்கிச் சட்டைகளும், காவிக்கு நிறம் மாறுகிறதோ?

நன்றி: தீக்கதிர்

வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

ஆர் எஸ் எஸ்,அமைப்பு சாரா நிறுவனங்களின் கூட்டு சதியின் ஊடாக துவங்கிய ஜல்லிக்கட்டு உரிமை மீதான போராட்டமானது, அது துவங்கப்பட்ட திசையில் இருந்து நேர் எதிர் திசையில் வளர்ச்சிபெற்று பாஜக மோடி அரசிற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் வெற்றியாக மாறியுள்ளது.

சிவில் சமூகத்தின் பொது புத்தியில் தேசிய இன உணர்வெனும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இந்திய மாயைக்கு எதிரான தன்னியல்பாக எழுந்த இந்த மக்கள் திரள் போராட்டமானது உலகளவில் தனித்துவம் மிக்கது.

இந்த மாபெரும் வெற்றியை பொறுத்துக் கொள்ள இயலாத ஆளும் வர்க்கம், வன்முறைகளை கட்டவிழ்த்து போராட்டத்தை மேற்கொண்ட இளைஞர்கள் மீதும் ஆதரவாக நின்றவர்கள் மீதும் சமூக விரோதி தேச விரோதி எனும் பிம்பத்தை பொது மக்களிடம் உளவியல் ரீதியாக கட்டமைக்க முனைகிறது.

கடந்த இரு நாட்களாக மேற்கொண்டு வருகிற போலீஸ் வன்முறை வெறியாட்டங்களை திசை திருப்ப ஜனநாயக இயக்கங்கள் மீது தேசத் துரோக முத்திரை குத்த முனைகிறது. அதைத்தான் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மதுரை போலீஸ் ஆணையர் அமல்ராஜின் செய்தி கூறமுனைகிறது.

CPML போன்ற ஜனநயாக கட்சிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. அறவழியில் போராடிய மாணவர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்ற மீனவக் குப்பத்து மக்கள் மீதும் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்த அரச வன்முறையாளர்கள், ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என கூறுவதை விட நகைச்சுவை இருக்க முடியுமா? இந்த அரச வன்முறையை, அரசின் இந்த பாசிச போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். போராடிய மாணவர்களுக்கு துணை நிற்போம்.

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்:

http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece…

கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் பணியாமல் எதிர்த்து பேசிவந்தார். மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு எதிரான மறைந்த முதல்வரின் குறிப்பான எதிர்ப்புகளையும் ஜெயா அம்மையாரின் சொந்த வாக்கியங்களையும் இதற்கு ஆதரவாகத் தருகிறார்.

அவரது கட்டுரையில் இருந்து சில மேற்கோள் காட்டுவதென்றால்
//”மாநில உரிமைகள் தொடர்பான ஜெயலலிதாவின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதோ இல்லையோ, தொடர்ச்சியானது என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லா முதல்வரையும்போல அவரும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்தான். ஆனால், அவரை எல்லாச் சமயங்களிலும் டெல்லியைக் கண்டு பயந்து நடுங்கியவர் என்று சொல்ல முடியாது. எந்தப் பிரதமரையும் ஆளுநரையும் அவர் தள்ளித்தான் வைத்திருந்தார். அவரது எதிர்ப்பைவிட அவரது ஆதரவைக் கண்டுதான் டெல்லிக்காரர்கள் அதிகம் பயந்தார்கள்! அவருக்கு டெல்லியின் அரசியலும் உள்நோக்கமும் நன்றாகத் தெரிந்திருந்தது”//

அதேநேரத்தில் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிரான ஜெயா அம்மையாரின் சமரை முன்மாதிரியாகக் கொள்ளவும் முடியாது, அதில் சில குறைகளும் உள்ளன, ஆனாலும் அவரது சமரை தவிர்க்க முடியாது எனக் கூறி கட்டுரையை முடிக்கிறார். அவரது சொற்களில் சொல்வதென்றால்

//“நாம் மேற்கொள்ள விரும்புகிற மாநில உரிமைகளுக்கான போராட்டத்தின் முன்மாதிரியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்று ஒருபோதும் கூற முடியாது. இத்தகைய ஆட்சிகளோ கட்சிகளோ டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான சவால் என்றும் கூற முடியாது. ஆனால், டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் “நீ மகாராஜா என்றால், நான் மகாராணி” என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட – அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும்”//

ஆக, மாநில அரசுகளின் அரசியல்-பொருளியில் அதிகார நலனைப் பறிக்கிற மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக (ஆனாலும் சில குறைகள் இருப்பினும்!) போராடிய ஜெயா அம்மையாரின் போராட்டத்தை தொடர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும் என்கிற தோழரின் ஆதங்கம் நியாமானதே.

ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக ஆளும் வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான முரண்பாட்டிற்கான அரசியல் பொருளியில் காரணிகளை கூற மறந்துவிடுகிறார். ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பினில், மத்திய மாநில அரசுகளின் “சேம நல அரசு” முறையானது பாட்டாளி வர்க்க, உழைக்கும் வர்க்க நலனுக்கு சேவை செய்யாத சூழலில் இந்த அம்மைப்பின் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே எழுகிற முரண்பாடுகளை வர்க்க நலன் கொண்டே விளக்கே வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், அவரது விளக்கம் நேரடியாக ஆளுவர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக முறைக்கே சேவை செய்யும். இந்த அம்மைப்பின் சீர்திருத்தமே தீர்வு என்று பேசும். கட்டுரையின் போதாமை இரண்டு அம்சங்களில் வெளிப்படுகிறது. ஒன்று மத்திய அரசு ஏன் இதற்கு முன் இல்லாத வகையில் அதிகாரக் குவிப்பை தீவிரமாக மேற்கொள்கிறது? இரண்டாவது தமிழ்நாட்டின் அதிமுக அரசு (சில இடங்களில்) ஏன மத்திய அரசுடன் முரண்பட்டன?

1
மத்திய அரசு கடந்து அறுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏன் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதில் தீவிரம் காட்டுகிறது? கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் முழு பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் இன்று பிரதம மந்திரியின் அலுவலகத்தில் குவிமையப்படுத்துப்பட்டுள்ளது. முன்னதாக செல்லாக் காசு அறிவிப்பின் ஊடாக, நாட்டின் பொருளியில் அலகுகளை வங்கிகளில் மையப்படுத்த முனைவது, சிறு குறு வணிகத்தை ஏகபோக நிறுவனங்கள் விழுங்கச் செய்வது, வரி வசூலிப்பை மையப்படுத்துவது என ஏகாதிபத்திய சகாப்தத்தின் “தாராளமய இந்துத்துவ சர்வாதிகார அரசு” என்ற தனது முழு வடிவத்தை பாஜக வெளிப்படுத்துகிற பண்பு மாற்றப் போக்கின் குறிப்பான வெளிப்பாடாகும்.

அதாவது மத்திய அரசின் வேகமான இப்பண்பு மாற்றப் போக்கானது ஏகாதிபத்திய கட்டத்தைய பெருமுதலாளிய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்கவே இயலாத தன்மைகளின் குறிப்பான வெளிப்பாடாகும். ஆளும்வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான இந்த முரண்பாடானது, இதற்குமுன் இல்லாத வகையில் இந்திய முதலாளித்துவ அமைப்பின் பசகாவால் தீவிரப்படுத்துவருகிறது. ஒரே நாடு ஒரே சந்தை, பொது அரசியல் பொருளியில் கொள்கை என்ற முழக்கத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற பொது சேவை வரி மசோதாவானது, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிற முக்கிய பொருளாதார நடவடிக்கையின் வெளிப்பாடாகும். மாநிலங்களின் குரலை பிரதிபலிக்கிற மேலவை அமைப்பையும் தற்போது நீர்த்துப்போக செய்கிற நடவடிக்கைகளை பசக மேற்கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியானது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது முழுவதும் தனியார்மயப்படுத்துவது,குறிப்பாக வங்கிகள், ரெயில்போக்குவரத்து, நீர் விநியோகம் என அரசின் வசமுள்ள அனைத்து நிறுவன அலகுகளும் முதலாளிய வர்க்கத்தின் கைகளில் வழங்கப்படும். சுகாதாரம், கல்வி போன்ற மக்கள் தேவைகளுக்கான அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். நிலவுகிற பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகமும் பறிக்கப்படும். போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும். ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கன்ட் போன்ற மாநிலங்களின் கனிமவளங்களை சூறையாடத் தடையாக நிற்கிற மாவோயிச அரசியல் சக்திகளை வேகமான வகையில் போலி மோதலில் அழித்தொழிக்கிற பணிகள் துரிதப்படுத்தப்படும். காடுகளில் இருந்து பலவந்தமாக பழங்குடிகள் வெளியேற்றப்படுவார்கள். எதிர்ப்புகளை கட்டுப்படுத்த இராணுவம்,போலீஸ் துறைகள் நவீனமயப்படுத்தப்படும். இவையெல்லாம் சமூகப் பொருளியில் அரசியல் அரங்குகளில் ஏற்படுவுள்ள அரசின் பண்பு மாற்றப் போக்குகள்

2
மைய அரசின் இந்த அதிகார-பொருளியில் ஒன்றுகுவிப்பிற்கு எதிரான மாநில அரசுகளின் எதிர்ப்பரசியலில் திருணாமுல் காங்கிரசும், அதிமுகவும் முக்கிய தடை சக்தியாக நின்றுவருகிறது. குறிப்பாக மைய அரசின், தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மைய உருவாக்கம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் திட்டம், சேவை வரி மசோதா போன்ற முடிவுகளுக்கு அதிமுக தீவிரமான எதிர்ப்பைக் காட்டிவந்தது. பெரும் மக்கள் திரளை வோட்டு வங்கி அரசியலுக்கு திரட்டுவது, அதிகாரத்தை தக்க வைப்பதற்க்கான செயலுக்திகளை வகுப்பது,  நடைமுறைப்படுத்துவது, நிலவுகிற அமைப்பின் சட்ட வரம்பிற்குட்பட்ட சீர்திருத்தல் அரசியலை சமூக முரண்பாடுகளுக்கு இறுதியான தீர்வாகப் பேசுவது, பெரு முதலாளிகளுக்கு சேவை செய்வது என்கிற நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு நலனுக்கு சேவை செய்கிற அரசியல் கட்சிகளின் பண்புகளில் அதிமுகவும் திருணாமுல் காங்கிரசும் விதி விலக்கல்ல. மாறாக மாநிலங்கள் மீதான மத்திய அரசின் நிதி மூலதன பறிப்பின் பாற்பட்ட அர்த்தத்திலும் வோட்டு வங்கி அரசியல் நலனுக்குமே எதிர்த்து வந்தன.

……..
ஆக,முதலாளித்துவ அமைப்பிற்கு சேவை செய்வது என்ற உள்ளடக்கம் மாறாமல் மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்கிற சண்டையில் உழைக்கும் வர்க்கத்திற்கு அணு அளவிலும் லாபம் இல்லை. மாறாக துன்பத்தை யார் வழங்குவதே யார் பொறுப்பேற்பது மட்டுமே கேள்வி. உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுகிற கும்பலில் யார் ராஜாவாக இருந்தாலும் யார் ராணியாக இருந்தாலும் பாட்டாளி வர்க்க சுரண்டலை, இயற்கை வள சுரண்டலை மேற்கொள்கிற கும்பல்கள் வீழ்த்தப்பட வேண்டியவர்களே.

மாறாக ஆளும்வர்கதிற்கு இடையிலான முரண்பாட்டில் ஒரு பக்கத்திற்கு நின்று முட்டுகொடுப்பது உழைக்கும் வர்க்க அரசியலுக்கு செய்கிற பச்சைத் துரோகம். இந்தப் பிரச்சனையை அதாவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசின் சுயாதின செயல்பாட்டை முடக்குகிற இந்து தேசியவாதத்தை அதன் அதிகார சுற்றுவளைப்பை,நலன்களை இழக்குற பெரும்பாலான உழைக்கும் மக்கள் திரள் அரசியல் ஊடாகவே முறியடிக்க இயலும். இப்போராட்டமானது அரசியல் சட்டகத்திற்கு உட்பட்டும் வெளியேவும் நடைபெற்றேத் தீரவேண்டும்.பிற தேசி இனங்களை ஒடுக்குவது போல, தமிழ்ச்சமூகத்தை ஒடுக்குகிற மைய இந்து தேச அரசின் பிரதிநிதியான பசகவின் ஒடுக்குமுறையையும் அதன் அங்கங்களாக திகழ்கிற சந்தர்ப்பவாத சக்திகளையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான உறுதியான சோசலிச, ஜனநாயக போரட்டத்தாலேயே தீர்க்கமுடியும்.

 அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?

ஷாஜஹான்

ஷாஜஹான்
ஷாஜஹான்

ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும் முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன.

 1. அப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க வேண்டும்? இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டோம் என்று கூறுவதால் கடந்த ஓராண்டு கணக்கு விவரங்களை அல்லவா தரச் சொல்ல வேண்டும்?

 2. அதையும் கட்சித் தலைவருக்குக் கொடுக்கச் சொல்வதில் மக்களுக்கு என்ன தெரியப்போகிறது? கட்சித் தலைவர் சத்தியசீலரா?

 3. எம்எல்ஏக்கள் எம்பிகள் தமது பினாமிகளின் கணக்கில் செலுத்தியிருந்தால் அது எப்படி தெரிய வரும்?

 4. இதைக்கூட கொடுக்கச் சொல்லத் தேவையில்லையே? பிரதமர் நினைத்தால் அத்தனை பேரின் கணக்கு விவரங்களையும் வங்கிகளிடமிருந்து தானே பெறலாமே?

 5. நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான கணக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி செய்திருந்தால் அதில் ஏதோ கொஞ்சம் அர்த்தம் உண்டு. இன்று – நவம்பர் 29ஆம் தேதி அறிவிப்பு கொடுத்தது ஏன்? இன்னும் மீதமிருக்கிற ஒரு மாதத்தில் போடப்போகிற பணத்தை உங்கள் கணக்கில் போட்டு விடாதீர்கள், வேறு யார் கணக்கிலாவது போடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்கா?

 6. கறுப்புப்பணம் என்பது ரொக்கமாகத்தான் இருக்கிறது என்கிற மாயையை இன்னும் உறுதி செய்வதற்குத்தான் இந்த அறிவிப்பா?

 7. கூடவே, கடந்த ஓராண்டில் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், கட்சி வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த தயாரா?

ஷாஜஹான், எழுத்தாளர்; சமூக-அரசியல் விமர்சகர்.

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தகைய அவதூறு எழுத்துகளுக்கு பின்னணியில் இருக்கும் மனநிலையை விவரித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரை மீது சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே:

எழுத்தாளர், விமர்சகர் ராஜன் குறை கிருஷ்ணன்: 

வெறுப்பிற்கும், கோபத்திற்கும், கண்டனத்திற்கும் வேறுபாடு புரியாமல் யார் யாரை காரணங்களுடன் கண்டித்தாலும் “வெறுக்கிறீர்கள்” என்று கூறுவிடுகிறார்கள். மெள்ள பணத்தை எண்ணுகிறார் என்ற அடிப்படையை மட்டும் வைத்துக்கொண்டு “கிழவி” “கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்” என்று எழுதுவது அந்த பெயர் தெரியாத நபரின் மீதான வெறுப்பல்ல. வெறும் கோபமும் அல்ல. திறமையற்றவர்கள் மீதான நவீன உலகின் வெறுப்பு. இதற்கு மன்னிப்பு கேட்டபோதுகூட ஜெயமோகன் தான் சாதாரண குடிமகனைப் போல உணர்ச்சி வசப்பட்டதாகத்தான் சொன்னார். இப்படி சாதாரணக் குடிமகன்களின் உணர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் பாசிசம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. ஜெயமோகன் தீவிரமான ஒரு சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். இதெல்லாம் விளையாட்டான விஷயமல்ல. விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மூச்சுக்கு மூச்சு நான் எழுத்தாளன் சமூகத்தின் ஆன்மா என்று கூறுபவர் சாதாரண மனிதர்களைப் போல எதையும் எழுதக்கூடாது. கட்டுரை எழுதிய அரவிந்தன் சிவகுமார் “நான் கடவுள்” படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன். விபரீதமான அர்த்த தளங்களை உள்ளடக்கிய படம் அது. தத்துவார்த்த தளத்திற்கு கருணைக்கொலையை நகர்த்துவது.

மொழிபெயர்ப்பாளர் குப்புசாமி கணேசன்:

ஜெயமோகனின் மனவிகாரங்களை இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் விளக்கியதில்லை. அரவிந்தன் சிவகுமாரின் கட்டுரைக்கு ஜெயமோகன் பதில் எழுதினால், தன்னை மேலும் தெளிவாக வெளிப்படுத்திக்கொள்வார். சிலருக்கு கொஞ்சம் போல இருக்கும் சந்தேகங்களும் அப்போது தீர்ந்துவிடும்.

பொன் கந்தசாமி:

சாதாரண மனிதர்களின் உணர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட துதான் பாசிசம் . அருமை. அமெரிக்க ட்ரம்ப் வரை

Sundara Raj:

Dr.அரவிந்தன் சிவகுமார் அவர்களுக்கு முதலில் என் நன்றி . இக்கட்டுரையை படித்த பின்னர்தான் ஜெயமோகனின் ஆழ்மனதில் இருக்கும் ஈவு இரக்கமற்ற பாஸிஸ மனித நிலையின் முழு வீரியத்தை உணரும்போது மனம் நடுங்குகிறது.

இதுபோன்ற கருத்தியல் கொண்டவர்கள் மனித குலத்திற்கு பெரும் பேரழிவை செய்பவர்களுக்கு தார்மீக நியாயம் கொடுக்கும் ஆன்மாக்கள் .

ஒரு மன நிலை பிறழ்ந்த நோயளியையும்விட ஆபத்தானது . ராஜன் குறை சுட்டிக்காட்டியது போல் நான் கடவுள் படத்தின் முடிவுவோடு இணைத்து பார்த்தால் ஜெமோ முன் வைக்கும் பாஸிஸ அரசியலின் நோக்கம் தெளிவாக புரியும். நான் தான் கடவுள் என்று சொல்பவர்கள் கடவுளைவிட ஆபத்தானவர்கள் போல.

நாடகக் கலைஞர் ப்ரீதம் சக்ரவர்த்தி: 

The moment when Arya states his mother is ‘thoomam’ was enough to know what Jayamohan thinks of women in general.

எழுத்தாளர் அம்பை:

இந்தத் தருணத்திற்கான மிக முக்கியமான கட்டுரை. எழுதியவர் மன நல மருத்துவர் என்பதும் தமிழில் எழுதியிருப்பதும் கூடுதல் முக்கியத்துவம்.

Those who have read Pin Thodarum… novel of his would have known his view of women in any case. He says every profession has a way to relax like the army has access to liquor and so on. He says for women the relaxation is prostitution. At another part of the novel he says a single woman looks like the mother who offers milk from her breasts and a group of women look like bandicoots.

jayaseelan.ganapathy:

நான் மிகவும் ரசித்த எழுத்து கலைஞன். ஆனால் அவரது தளத்தில் கருப்புப்பண விவகாரம் குறித்த கட்டுரையை படித்து என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. விஜய் மல்லையா குறித்த அவரது கருத்து எனக்கு அவர் மீதிருந்த அபிப்ராயத்தை மாற்றியது, வருந்துகிறேன்.

எழுத்தாளர் வாசுதேவன்:

அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை… இந்த செல்லாத நோட்டு பஜனைக்கும், ஜெயமோகனின் உளவியல் பின்ணனியையும் கூர்மையாக எழுதியுள்ளார். ஒரு வக்கிரம் விகாரமான மனிதர் மட்டுமே இப்படி எழுதமுடியும். ஜெ.மோகன் அபுனைவில் இப்படி வக்கிரமாக மட்டும் எழுதவில்லை. அவருடைய புனைவிலும் லட்சியவாதத்தை முன்வைத்து பெண்கள், இடதுசாரிகளை மிகக்கேவலமாக எழுதியுள்ளார். வக்கிர மனநிலையில் ஜெ,மோகன் எழுதிய சில குரூர அவதூறுகள்..

-குருவி மண்டை அருந்ததி ராய்
– குடிகாரன் ஜான் அஃப்ரஹாம்
– பாரதி மகாகவியே இல்லை
_ குரூபி கமலாதாஸ்

இதைத்தவிர தமிழில் எழுதுபவர்களை மேல் அபாண்டமான குற்றச்சாட்டுகள், பெண்களை இழிவுப்படுத்தி எழுதியது என இந்தப்பட்டியல் நெடியது.

ஆக இந்த உலகில் யார் வாழவேண்டும், யாரை துன்படுத்தவேண்டும், எவரை வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்பது cleansing (தூய்மைபடுத்தும்) முன்னோக்கிய திட்டம்தான் இவர் எழுத்துகள். அதனால்தான் இவரால் மல்லையாவை ஆதரிக்க முடிகிறது. நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை பற்றி கள்ள மவுனம் சாதிக்கிறார்.

“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”

மாதவராஜ்

எழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது.

இந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு எரிச்சல் அடைந்ததாகவும், இந்தியாவின் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் பெண் வங்கி ஊழியர்கள் இப்படித்தான் வேலை பார்ப்பதாகவும், ஜெயமோகன் எழுதிய காடு நாவலில் வரும் சுறுசுறுப்பற்ற தேவாங்கு போல இருப்பதாகவும், தேசீய வங்கிகளின் நிலைமை கண்டு பொருமியும் ஒரு கடிதம் எழுதுகிறார்.

உலகின் சகல நோய்களுக்கும் மருந்து சொல்வதாய் தெருவில் பாட்டில்களை வைத்து உட்கார்ந்து இருக்கும் ஜெயமோகன் கப்பென்று பிடித்துக் கொள்கிறார். அந்தக் கிழவியை அப்படியே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் என்கிறார். வீட்டில் கீரை ஆயக்கூட லாயக்கில்லை எனவும் மூளையை எதற்குமே உபயோகிக்காததால் இந்த அசமந்தம் ஏற்படுகிறது என கண்டு பிடிக்கிறார். தேசீய மயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் இந்த நிலைமை எனச் சொல்லி சோஷலிசக் கொடுமையாக முடிக்கிறார்.

ஜெயமோகனின் பிற்போக்குத்தனம் அத்தனையும், அவரது கருத்துக்களில் மொத்தமாய் மண்டிக்கிடந்து நாற்றமடிக்கிறது. தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் என்றாலே ஜெயமோகனுக்கு பற்றிக்கொண்டுதான் வருகிறது.

1806ம் ஆண்டு துவங்கப்பட்ட வங்கித் துறையின் வரலாற்றில், 1969ல் வங்கிகள் தேசீய மயமாக்கப்பட்ட பின்னர்தான் வங்கிக் கிளைகள் சாதாரண மனிதர்களை சென்றடைந்தது. கிராமப்புறங்களை எட்டிப் பார்த்தது. இன்று பிரதமர், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அறிவித்தவுடன் தேசீய வங்கிகளே அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன. தனியார் வங்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. நலத்திட்டங்கள் குறித்து அவை கவலைப்படுவதே இல்லை. அதுதான் ஜெயமோகனுக்கு பிடித்திருக்கிறது போலும்.

கடுமையான ஆள் பற்றாக்குறை, தொழில்நுட்பக் கோளாறுகள், போதிய பணிச்சூழல் இல்லாமை, புதிய புதிய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் என்ற நெருக்கடிகளுக்கு இடையே இன்று வங்கி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வெளியே நிற்கும் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்கள் அதிகமாய் காத்துக் கிடப்பதை தாங்க முடியாத ஜெயமோகனுக்கு உள்ளே புழுங்கி, வாடிக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் குறித்து கொஞ்சமும் தெரியப்போவதில்லை.

அதிலும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்னும் கருத்து போகிற போக்கில் தூவப்பட்டு இருக்கிறது. படித்து, வங்கித் தேர்வுகள் எழுதி சமீப வருடங்களில்தான் வங்கிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக வங்கிகளில் பணிபுரிய வந்திருக்கின்றனர். அது ஜெயமோகனுக்கு தாங்க முடியவில்லை.

பணிபுரியும் அந்த ஊழியரைப் பார்த்தால் பாவம் போலிருக்கிறது. அந்த அம்மாவிற்கு வயசு ஐம்பதையொட்டி இருக்கும். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துக்கு உழைத்து விட்டு, அவசரம் அவசரமாக பஸ்ஸில் ஏறி நெரிசலில் பயணம் செய்து, வங்கியில் உழைத்து விட்டு, மீண்டும் பஸ் பயணம் செய்து, வீடு சென்று குடும்பத்துக்காக உழைத்து உழைத்து அயர்ந்திருக்கும் முகம் அவருடையது. ஐம்பது வயதையொட்டி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளில் எவையெல்லாம் அவருக்கு தாக்கி இருக்கிறதோ, எதனால் அவர் அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறாரோ என பதற்றமும், பரிவும்தான் வருகிறது.

வங்கிக் கிளைகளில் சரியாக டாய்லெட் வசதிகள் இருப்பதில்லை. இருந்தாலும் பெண்களுக்கு என்று தனியாக இருப்பது அபூர்வம். இயற்கை அவஸ்தைகளை அடக்கிக் கொண்டு, எவ்வளவோ தருணங்கள் வாடிக்கையாளர் சேவை செய்த பெண் ஊழியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். மாதவிடாய் சமயங்களில் நாப்கினை மாற்றக் கூட முடியாமல் மொத்தக் கூட்டத்திற்கும் நடுவில் கூனிக் குறுகி உட்கார்ந்து வேலை பார்ப்பதை ஆண்கள் அறிவதில்லை. தனிக் கழிப்பறை வசதியில்லாததால், ஹிந்து பேப்பரை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு போய், மாற்றிய நாப்கின்னை அந்த ஹிந்து பேப்பரில் சுருட்டி, ஹேண்ட் பேக்கில் வைத்து திரும்பக் கொண்டு வரும் அனுபவங்கள் ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?.

தொழிலாளர்கள் மீது அக்கறையும், அன்பும் வெளிப்பட வேண்டிய சிந்தனைகளில் எவ்வளவு கேவலமாக, ‘தேவாங்கு;, ‘கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டும், ‘கீரை ஆயக் கூட லாயக்கில்லை’ என அதிகாரம் மிக்க வார்த்தைகள் பொங்கி வருகின்றன. இப்படி தன் கோபத்தை அவர் அம்பானிகள் மீதும், மோடிகள் மீதும் ஒருபோதும் காட்டமாட்டார்.

உண்மைகளை அறியமுடியாமல் மரத்துப் போனவரை மரமண்டை என்றே சொல்லலாம். அந்த மரமண்டைக்காக –

http://www.thehindu.com/…/all-in-a-days…/article7523493.ece…

மாதவராஜ், எழுத்தாளர்; வங்கிப் பணியாளர் சங்க செயல்பாட்டாளர்.

தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?

கிருபா முனுசாமி

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட ‘தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை “வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்” என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் அவர்களுக்கு!

உங்கள் எழுத்துக்களை பொறுக்கித்தனம் என்றும், ‘தி இந்து’ பத்திரிகையை மலம் என்றும் திருமுருகன் காந்தி எழுதினால், அதன் பின்னான உண்மைத்தன்மையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் திருமுருகன் காந்திக்கு எதிராக ஆற்றியிருக்க வேண்டுமேயன்றி, ‘தி டைம்ஸ் தமிழ்’ எதிராக அல்ல. அதுவே ஊடக அறமும் ஆகும். அதைவிடுத்து, யாரோ மீதான வன்மத்தை இதனூடாக நீங்கள் தீர்த்துக்கொள்ளக் கூடாது.

நீங்கள், ‘தி இந்து’வின் ஊழியர் என்ற அடிப்படையில் உங்களிடம் கேட்கிறேன், ‘தி இந்து’வில் வெளிவரும் கட்டுரைகளுக்கான எதிர்வினைகளை வெளியிடுவதற்கான வெளி ‘தி இந்து’வில் இருக்கிறதா? இல்லையெனும் பட்சத்தில், ‘தி இந்து’விற்கான எதிர்ப்புக் குரலை எங்கே தெரிவிப்பது என்பதை சொல்ல முடியுமா?

உங்கள் நிலைத்தகவலினூடாக நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்? உங்களின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய திருமுருகன் காந்தியின் வார்த்தையையே ‘தி டைம்ஸ் தமிழ்’ போடக்கூடாது என்கிறீர்களா? இல்லை, ‘தி இந்து’வில் எது வெளிவந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றிற்கு எதிரிவினையாற்றத் கூடாது என்கிறீர்களா? இது, ஊடக பயங்கரவாதம், எதேச்சிகாரம்! அதனை மீறி எதிர்வினைகளை வெளியிட்டால், வெளியிடுபவர்களை அன்னியக் கைக்கூலி என்ற ரீதியில் விமர்சிப்பதெல்லாம் பச்சை அவதூறு.

‘தி இந்து’ தமிழர்களுக்கான நாளேடு என்பதற்கு வலுவான பத்து ஆதாரங்களையும், தமிழீழப் பிரச்சனையின் போதும், நியூட்ரினோ விவாகரத்தின் போதும், ‘தி இந்து’ நாளேடு தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்றியதற்கான ஆதாரங்களையும் தயவு செய்து மக்களாகிய எங்களுக்கு கொடுத்து, உங்களுக்கு கூலி கொடுக்கும் ‘தி இந்து’ நிறுவனத்தின் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!

பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக நின்ற தனிக் குரல்களுக்கான வெளி தான் ‘தி டைம்ஸ் தமிழ்’.  தலித்துகளின் குரல்கள் பெரும்பான்மை ஊடகங்களால் நிராகரிக்கப்படும் போது, அதை இணையவெளியில் பெருமளவு கொண்டுவந்தது ‘தி டைம்ஸ் தமிழ்’ என்பதை இந்நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

நிராகரிக்கப்படும் எளிய மக்களின் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக ‘தி டைம்ஸ் தமிழ்’ வந்து நிற்கும் என்பதற்கு, “மயிலாடுதுறை அருகேயுள்ள திருநாள் கொண்டச்சேரியை சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்துவின் உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல மறுத்த ஆதிக்க ஜாதியினரை கண்டித்து ஒலித்துக்கொண்டிருந்த ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தோழர்களின் தனித்த குரல்களை ஒன்றிணைத்து முதன்முதலாக வெளியிட்டதோடு, தொடர்ந்து வெளியிட்டு வந்ததே” எடுத்துக்காட்டு.

ஒடுக்கப்பட்ட மக்கள், இந்துவோ, இஸ்லாமியரே, கிருத்துவரோ, பௌத்தரோ, சமணரோ, மதமற்றவரோ, யாராக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுப்பது வக்கிரம் என்றால், தேச துரோகம் என்றால் அதனை ‘தி டைம்ஸ் தமிழ்’ தொடர்ந்து செய்யும். உங்களுக்கு வேண்டுமானால் ‘தி டைம்ஸ் தமிழ்’ எதிராக எப்பேர்ப்பட்ட வழக்கையும் போடுங்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

கிருபா முனுசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர். சமூக செயற்பாட்டாளர்.

ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை

Dharmaraj Thamburaj
thamburaj-dharmaraj
டி. தருமராஜ்

தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன்.  அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல்.  திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன். இதனால், அவருடைய கட்டுரைகளில் ஒரு அமைதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இந்த அமைதி, அலைந்து திரிந்து நிறைய மனிதர்களை சந்திப்பதால் ஏற்படும் அமைதி.

ஆனால், சமீபகாலமாக, சமஸ் இந்த அமைதியை தனது எழுத்துகளில் இழந்து வருகிறாரோ என்றொரு சந்தேகம் எனக்கு இருந்து வந்தது.  அது, இன்றைய “தி இந்துவில்” வெளியான காவிரி பற்றிய கட்டுரையில் உறுதிபட்டிருக்கிறது.

அந்தக் கட்டுரையில் அதிகமான சத்தம் கேட்கிறது, சமஸ்.  திராவிட மேடைப்பேச்சின் சத்தம். நீங்கள் எந்த வகையினரை உங்கள் கட்டுரையில் குற்றம் சாட்டுகிறீர்களோ அவர்களது நாடகப் பேச்சு போலவே உங்களது கட்டுரையும் அமைந்திருக்கிறது.

இயற்கையைப் பேணும் குறைந்தபட்ச அறிவு கூட தமிழர்களுக்கு இல்லை என்பதைத் தான் உங்கள் கட்டுரை தனது ஆகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கிறது.  அதனால், தமிழ் நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்; வரலாற்று நியாயத்தையே எத்தனை காலம் பேசிக்கொண்டிருப்பது என்று கேட்கிறீர்கள்; தமிழர்கள் அலட்சியமானவர்கள் என்கிறீர்கள்; இறுதியில் தமிழினத்தின் மனசாட்சியை குத்திக் காட்டி உங்கள் உரையை முடிக்கிறீர்கள்.

திராவிட மேடைப்பேச்சை கற்றுக்கொண்டதும் அக்கட்சிகளிலிருந்து வெளிவந்து, தன்னை லிபரல் என்றோ அல்லது வேறு ஏதோ ஒன்று என்றோ அறிவித்துக் கொள்ளும் நபர், காவிரியைப் பற்றி மேடையில் பேசுகிறார் என்றால் இப்படித்தான் பேசுவார்.  அதில் சாரம் என்று எதுவும் இருக்காது.  யோசனை இருக்காது.  எதிரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவரை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துவது தான் அந்தப் பேச்சாளரின் நோக்கமாக இருக்கும்.  இதையே தான் உங்கள் கட்டுரையும் செய்கிறது.

 சரி, நீங்கள் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்கு வருவோம்.

உண்மையில், காவிரி நீர் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல், இந்தியாவின் தேசியம் குறித்த நம்பிக்கைகளின் மீது விழுந்த விரிசல் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா என்று தெரியவில்லை.  ஆனால், உண்மை என்னவோ அது தான்.

வரலாற்றில் படை பலம் காட்டியே காவிரியின் உரிமையை நிலை நாட்டி வந்த தமிழகம், இந்திய தேசியம் கொடுத்த நவீனத்துவ வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டே ஜன நாயக வழியில் தனது உரிமைகள் மீட்டுத்தரப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தது.  அதனால் தான் நடுவர் மன்றம், ஆணைகள், நீதிமன்றம், மத்திய அரசு, மா நில அரசு, தீர்ப்பாயங்கள் என்ற நவ நாகரீக அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தோம்.  இது, இந்திய இறையாண்மையின் மீது நாம் வைத்த நம்பிக்கை.

அதே போல, ஜன நாயக தேர்தல் முறையில் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுத்தால் அது, இயற்கையைப் பாதுகாப்பது முதற்கொண்டு அத்தனை காரியங்களையும் செவ்வனே செய்யும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு ஐந்தாண்டும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இதுவும், நாம் நவீன அரசியலமைப்பு மீது கொண்ட நம்பிக்கையினால் தான்.

ஆனால், காவிரி சிக்கலில், இந்த இரண்டு நவீன நம்பிக்கைகள் தான் பொய்த்துப் போகத் தொடங்கியிருக்கின்றன – தேசியம் என்ற சித்தாந்தமும், மக்களாட்சி என்ற அரசியலமைப்பும்.

நாம் நினைத்திருந்தது போல, அவையிரண்டும் நமது சிக்கல்களை தீர்ப்பதாகத் தெரியவில்லை.  மன்னராட்சி காலத்தில், காட்டுமிராண்டித்தனமாய் படையெடுத்துச் சென்று உரிமையை நிலை நாட்டி வந்த நிலை போதும் என்று தான் நாம் இந்தப் புதிய நாகரீக முறைக்கு வந்து சேர்ந்தோம்.  ஆனால், அக்காட்டுமிராண்டிகள் வாங்கித் தந்த உரிமையைக் கூட நவீனர்களால் வாங்கித் தர முடியவில்லை என்றால், நமது நவீனத்துவத்தில் தானே கோளாறு?

ஐந்து வருடத்திற்கொரு முறை, வாக்களித்து தேர்ந்தெடுக்கிற ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்று தொடர்ச்சியாகக் கண்காணிக்கிற வேலை மக்களுடையது அல்ல, சமஸ்.  மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே ஒரு நாளின் 24 மணி நேரம் போதவில்லை.  இதுவெல்லாமே, நமது அரசியல் அமைப்பின் கோளாறு.  அது செயல்படுகிறதா இல்லையா என்று கண்காணிக்க வேண்டிய ஊடகம் போன்ற அமைப்புகள்  தங்களது ஒழுக்கத்தை இழந்ததால் நிகழ்ந்த கோளாறு.  அதாவது,  ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் தான் அந்த நவீன கண்காணிப்பாளர், சமஸ்.  மக்கள் பத்திரிகையாளர்களைத்தான் இதற்காக நம்புகிறோம்.

பிரச்சினை என்னவென்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா?  பிரச்சினை மக்களிடம் இல்லை.  அப்படி இருப்பதாய் ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தி, அவர்களது நதி உரிமையை கேள்விக்குள்ளாக்குவதற்கு முயற்சி செய்கிறீர்கள்.

ஆனால், தோற்றுக் கொண்டிருப்பதென்னவோ, தேசியம், மக்களாட்சி, பத்திரிகையாளர் போன்ற நவீன கருத்தாக்கங்கள் தான்.  நாம் வேறு புதிய நாகரீக சமூக அமைப்பை தேடியாக வேண்டிய தேவை உருவாகிவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.  நவீனத்துவம் நாகரீகமானது என்று இனியும் நம்பிக்கொண்டிருக்க முடியவில்லை.

காவிரி போன்ற பிரச்சினையில் இது தான் சமஸ் நடந்து கொண்டிருப்பது.  இதை, உங்கள் கட்டுரை எங்கே தவற விடுகிறது என்று புரிந்து கொண்டீர்களா?

வாசித்துக் கொண்டிருப்பவரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும் எளிய தந்திரத்தை நீங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்.  அது தான் கோளாறே!.

இது மேடைப்பேச்சின் அழகிய குதர்க்கம்.

கட்டுரையாளர் – Dharmaraj Thamburaj – மதுரை காமராஜர் பல்கலை.யின்  நாட்டுப்புற மற்றும் கலாச்சாரம் ஆய்வுகள் துறை தலைவர். எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நூல் ‘நான் ஏன் தலித்தும் அல்ல’.

”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

பிரேம் 

பிரேம்
பிரேம்

திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்!

செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன்.

அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதி என்பது தெரிந்தது.

நிகழ்ச்சியில் உரையாடலை நடத்தியவர் ஒரு “பெண்“ ஊடகவியலாளர். உட்கார்ந்து பேசியவர் மூன்று நான்கு படம் காட்டிய ஒரு இயக்குநர்.

ஆனால் அவர் காட்டிய தோரணை ரித்விக் கட்டக்கும் மிருனாள் சென்னும் கிம் கி டுக் உடலில் ஆவியாகப் புகுந்து கொண்டது போல இருந்தது.

அது ஒரு பக்கம்.

பலர் சாதியைப் பெயருக்குப் பின்னால் இணைப்பது போல முன்னால் இணைக்கும் மரபைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. முழுமையாகக் கேட்டேன்.

பா.ரஞ்சித் சொன்ன “திரைப்படமே அரசியல், திரைப்படம் ஒரு அரசியல் செயல்பாடு“ என்பதற்கு விளக்கம் கொடுக்க அவர் முன் வைத்த முதல் வாக்கியம். ”ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்னு சேரணும்னு சொல்ல வந்த ரஞ்சித் தமிழர்கள் ஒன்னு சேரணும்னு சொல்லிக்கிட்டே இருக்கார், அதை மறைச்சி மறைச்சி சொல்லிக்கிட்டே இருக்கார். அவர் தமிழர்கள் பற்றியா சொல்லறார். நல்லா பாருங்க.”

அதற்குப் பின் வைக்கப்பட்ட கேள்விக்கு “உங்களுக்கு எல்லாம் அது புரியாது, புரியவே புரியாது, யாருக்கும் புரியாது.“ என்று ஒரு அறிவுத் தாக்குதல்.

அத்துடன் அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை.

78 பேர் கொல்லப்பட்டார்கள் என்று தகவல் தந்தார் ஆனால் படத்தில் 124 பேர் நேரடியாகவும் 120 பேர் கும்பல் வகையிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல்.

தமிழ்த் திரையில் சாதியமே இல்லை என்பது அவரது ஆணித்தரமான கருத்து.

கபாலி படமே ஒரு அரசியல் என்றவர் ”அட்டகத்தி ஒரு காவியம் (!!!) அதுதான் ரஞ்சித் படம் . கபாலி எல்லாம் அவருக்கு எதற்கு? தேவையில்லாத தீவிரங்களப் பேசி ஒட்டடைக்கு முட்டு கொடுக்கறீங்க, (?) அது ஒரு வியாபாரம், பெரிய வியாபாரம் நிகழ்ச்சியை முடியுங்கள்.” எனக் கட்டளையிட்டார்.

இவரது அறச்சீற்றத்தைப் பார்த்து இவரும் இவரது நண்பர்களும் தமது படங்களை எடுத்து முதலில் தெருத்தெருவாக ஒருவாரம் மக்களுக்குத் திரையிட்டுக் காட்டிவிட்டு பிறகுதான் அரங்கத்திற்கு அனுப்புகிற ஒருவித திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எனத் திகைத்து விட்டேன்.

நான் இவரது படங்களைப் பார்த்ததில்லை. உடனடியாக வேறு சில நிகழ்ச்சிகளில் இவர் பேசிய பேச்சுகளைக் கேட்டேன். சாதியைத் தவிர வேறு எதுவும் பேசாத படங்களைப் பற்றி ஓங்கார நாதம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

தணிக்கை அரசியல், வணிக அரசியல், சாதி அரசியல், பிம்ப அரசியல், தேசிய அரசியல், தொடங்கி ஊடக அரசியல், உலக அரசியல் வரை அனைத்தைப் பற்றியுமான பேச்சுகளை கபாலி என்ற ஒரே ஒரு படம் தொடங்கிவைத்துள்ளதை நினைத்த போது இது உலக அதிசயம்தான் என்று தோன்றியது. இது “இயக்கமாக“ வளர்ந்தால் நல்லது.

அவருடைய பேச்சின் வல்லின ஒலியை, உடல் மொழியை ஒரு நாடக ஆசிரியனாக என்னால் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒன்றே ஒன்றுதான் சொல்லுவேன், அதைப் பார்த்து கோபம் வரவில்லையென்றால் இந்திய-தமிழ் சமூக-அரசியல் உங்களுக்குள் இல்லை என்றுதான் பொருள். சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது.  இதற்கெல்லாம் கோபமா என்று கோபமாகக் கேட்பவர்கள் உலக அரசியல், உலகத் திரைப்படம், உலக அமைதி பற்றிப் பேசவே தகுதியானவர்கள்.
நாங்கள் என்ன செய்வது சேரி அரசியலையே இன்னும் சரியாகப் புரி்ந்து கொள்ள முடியாதவர்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். “குற்றம் செய்வது மனித இயல்பு. அதனை மறைத்து வைத்துக் கொண்டாடுவது கலைஞர்கள் இயல்பு“ என்று ஒரு பேச்சு பரவலாக உள்ளது.

[கபாலி காலகாலமாக ஒன்று பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தை இப்படிச் சாதி வெறிபிடித்த சமூகமாக மாற்றிவிட்டதே!!!]

(“மறதிகளால் கட்டப்படும் வரலாறு” கட்டுரை இதற்கு முன் நான் பேசியிருந்த உலக அரசியல் தெரியாத எனது சாதி அரசியலுக்கு! ஒரு உதாரணம்.)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 25 நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது ‘காந்தியைக் கடந்த ககாந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள். 

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா 

ஜி. விஜயபத்மா
ஜி. விஜயபத்மா

ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். மனதிற்கு துளியும் பிடிக்காத ஒரு ஆணை பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டு அருவெருப்புடன் அந்த புணர்ச்சியை காமத்தை உள்வாங்கி வாழ்வது கூட ஒரு பெண்ணுக்கு கட்டாய வன்புணர்வதான் என்பது ஏன் உங்களில் ஒருவருக்கும் புரியமாட்டேன் என்கிறது. ஈஷா யோக மையம் சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் நான் விகடன் நிருபராக பணி புரிந்த காலங்களில் இருந்தே ஜக்கிவாசுதேவை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்ட வகையில்,அவரை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்ட வகையில் அவர் ஜென் தத்துவங்களையே அடித்தளமாக கையாள்கிறார். உங்கள் வாழ்க்கையில் “குடும்பம்”நடத்தி தினம் தினம் செக்ஸ் வைத்துக் கொள்வதால் நீங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் வாழ்கிறீர்களா? அந்த வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை என்று துறவறம் போன பெண்களை மீட்டு வந்து “எவனுடைய காமத்துக்கோ”பலியாக்கிவிட்டால் உங்கள் சமூக வன்மம் தீர்ந்து விடுமா? அவரவர் விருப்பத்திற்கு அவரவரை வாழ விடாமல் சமூக வலைத்தளங்களில் வந்து”பதிவு”என்ற பெயரில்”நாட்டாமை”ஏன் செய்கிறீர்கள். ஏசு, புத்தன், விவேகானந்தர் என எல்லா ஆன்மீகவாதிகளும் அவரவர் வாழ்ந்த காலங்களில் பெரும்பாலான சமுகம் என்றழைக்கப்படும் “வக்கிரமனிதர்களால்” பழிக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டுமே வாழ்ந்தனர் என்றே வரலாறு சொல்கிறது.

இன்றும் அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈஷா உங்களுக்கு பிடிக்கவில்லையா நீங்கள் போகாதீர்கள்.விருப்பபட்டு போகிறவர்களை ஏன் ஆளுமை செய்ய முயல்கிறீர்கள்? சரி அல்லது தவறு என்பதை எந்த அளவீடுகளில் அளக்கிறீர்கள்? ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா? சமகால மக்களின் சீக்குபிடித்த மனநிலை அருவெறுப்பாக உள்ளது. 30 பேர் சேர்ந்து சிறுமிகலைச்செல்வியை பாலியல் வன்புணர்வு செய்வதையும், இரண்டு தலித் பெண்களை உயர்சாதிப்பெண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி அடிப்பதும், அதைக்கேவலமான ஆண்நாய்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் விடுவதும் பார்க்க கொதிக்கிறது மனம். இதை எதிர்க்கவோ பதிவு செய்யவோ ஒரு கூட்டமும் புயலென புறப்படவில்லை. காசு படைத்த ஈஷாவும் ,பணக்கார கபாலி ரஜினியும், ரஞ்சித்துமே பாடு பொருள் இங்கே. இந்த கும்பலுக்குள் புழுவாய் ஊர்வதுவிட மொட்டை அடித்துக் கொண்டு துறவறம் போகலாம் தப்பில்லை.

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குநர்.