ஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..? அவமானமா..?

மு.ஆனந்தன்

தமிழ் இந்து நாளிதழில் இன்று (21/01/2019) கொங்கே முழங்கு பகுதியில் ஜக்கியின் ஆதியோகி சிலையை கோவையின் அடையாளம் என நீட்டி முழங்கியுள்ளது.

நீலியாறு, ராஜ வாய்க்கால், நொய்யலின் நீராதாரங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் , யானை வழித்தடங்களையும், காணுயிர் வாழ்விடங்களையும் அழித்து, பழங்குடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, எந்த அரசுத் துறைகளிலும் அனுமதி பெறாமல், விதிகளை மீறி சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள சிலை எப்படி ஒரு ஊரின் அடையாளம் ஆகும்?

இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கை குழு அறிக்கையிலும் இது யானை வழித்தடங்களை அழித்து உருவாக்கப்பட்டது என்றும் சட்டவிரோதமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது… இது எல்லாம் தமிழ் இந்து நாளிதழிலுக்குத் தெரியும்.. அதே பக்கத்தில் பசுமைப் போராளி என்ற தலைப்பில் சூழலியல் செயல்பாட்டாளர் யோகநாதன் குறித்த கட்டுரையும், தென்னை மரங்கள், துரியன் பழங்கள் குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளது.. பசுமைக்காக போராடுபவர்களையும் பசுமையை அழிப்பவர்களுக்கும் ஒரே பக்கம்.. இது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..

கோவையின் அடையாளமான மேற்குத் தொடர்ச்சி மலையின் அதன் அங்கமான வெள்ளிங்கிரி ஆண்டவர் குடியிருக்கும் வெள்ளிங்கிரி மலையின் பசுமையை, வளத்தை, நீரோட்டங்களை, காணுயிர் வாழ்விடங்களை, கோவையின் பச்சயத்தை, குளிர்மையை அழித்து உருவாக்கப்பட்ட ஆதியோகி கோவையின் அடையாளமல்ல. கோவையின் அவமானமே !… இது கோவையின் அழிவின் சின்னம்….

தமிழ் இந்து ஆசிரியர் குழுவிற்கு உங்கள் கண்டனங்களை தெரியப்படுத்துங்கள்.. தமிழ் இந்து இந்தக் கண்டங்களைக் கண்டிப்பாக பிரசுரிக்க வேண்டும்.

  • மு.ஆனந்தன், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்.

சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ தமிழக பத்திரிகையாளர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பத்திரிகையாளர் மு. குணசேகரன் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பு குறித்த தொடர்ச்சியான பதிவுக்காகவும், மக்களின் குரலை ஒலிக்க வைத்தமைக்காவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது.

2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது. 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தி சொல்கிறது.

ஊடகவியலாளர்களால் தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும், பெருமதிப்புமிக்க இவ்விருதை தமிழ் ஊடகங்களிலிருந்து பெறும் முதல் பத்திரிகையாளர் மு.குணசேகரன். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் அரசு பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முடித்தவர், இதழியில் பணியை தினமணி நாளிதழில் தொடங்கினார். பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மு. குணசேகரன், “எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்” என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மு. குணசேகரன்

மேலும், அந்தப் பதிவில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முழு பதிவு…

“பாராட்டு, வாழ்த்துகள் வழியே நண்பர்கள் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். ராம்நாத் கோயங்கா விருது பெற்றது பெருமிதம் தந்த தருணம்.

இந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.

ஊதியம் கிடைக்கும் பணி என்றாலும், ஊடகப் பணியை, மக்கள் நலன், எளியோர் நீதிபெற உழைப்பது, மக்கள் ஆற்றாது அல்லல்படும் தருணத்தில் அவர்களோடு நிற்பது என்ற உணர்வை எல்லோரும் பெற்றிருந்தது எமது நியூஸ்18 குழுவின் சிறப்பு என்றே கூறுவேன்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், துயரம் கவ்விய கொந்தளிப்பான மனநிலையிலும் குமரிக் கடலோர கிராமங்களில் திரண்டிருந்த ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு சூடான சொற்கள் இருந்தன.

தங்கள் துயரத்தை பரிவிப்பை அரசு எந்திரம் மட்டுமல்ல; கடற்கரைக்கு அப்பால் நிலப்பரப்பில் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அவர்கள் வெளிப்படுத்தி ஆதங்கம் இன்னும் செவிகளில் எதிரொலிக்கிறது. நடுக்கடலிலும் கடலோரத்திலும் மீனவர் வாழ்வின் துயரை, அவர்களது வாழ்க்கை பற்றிய புரிதலை, பரந்துபட்ட பொதுசமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக அது விரிவடைந்தது.

12 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, தமிழ் அச்சு, ஊடகத்துறை சார்பில் முதல்முறையாக நான் பெற்றிருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் திறமையான எனது இளைய தலைமுறை இன்னும் அதிகம் பெற்று சாதிக்கும்; தமிழ்க்கொடியை டெல்லியில் உயரப் பறக்கவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகம்.

தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் காத்திரமான பங்களிப்பை, அற்புதமான களப்பணியை இதழியலில் மேற்கொள்ளும் பலர் வெளிச்சம் பெறாமலே போய்விடுகின்றனர். அந்த நிலை நிச்சயம் மாறும்; மாற வேண்டும்!

எனது கரங்கள் ஏந்தி இருக்கும் இந்த விருதை தங்கள் கரங்களுக்கானது என நினைத்து பெருமிதம் கொள்ளும் நண்பர்களே எனது பெரும்பேறு! ஆம், எல்லா உயர்வும் வெற்றிகளும் சமூகம் தருபவை; நம் சமூகத்திற்கானவை.
நன்றி நண்பர்களே!”.

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி

இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக ‘தமிழ் இந்து’ எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும்.

காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு இந்திய விடுதலையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல செங்கொடி சங்கத்தையும் பொதுவுடைமை இயக்கங்களின் பெயரையும் மறைத்து விட்டுத் தஞ்சைக் களஞ்சியில் நிலவிய நிலவுடைமைத்துவக் கொடுமைகளுக்கு எதிராக நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களை நினைவு கூர இயலாது.
தஞ்சையில் இருந்த பல லட்சம் ஏக்கர் நிலங்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய கோயில்கள், மடங்கள், பண்ணகள் கைகளில் குவிந்துள்ளதே அங்கு பண்ணை அடிமை முறை ஆழமாக இறுகியிருந்ததற்குக் காரணம். இந்தப் பண்ணை அடிமை முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர். இவர்களோடு குத்தகை வார விவசாயிகளும் இருந்தனர். இவர்களிலும் பெரும்பான்மையோர் தலித் மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆவர்.

பண்ணைகள் விவசாயத் தொழிலாளர்களையும் வார விவசாயிகளையும் கொத்தடிமைகள் போல் நடத்தினர். இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் செங்கொடி இயக்கம். இது 25 ஆண்டுகளில் பல களங்களைக் கண்டது. கூலிகளாகவும் வார விவசாயிகளாகவும் இருந்தவர்கள் ஒன்று திரண்டனர். ஒவ்வொரு போராட்டத்திலும் களப்பலி கொடுத்துப் படிப்படியாக முன்னேறினர்.

இந்தப் போராட்டங்கள் கூலி உயர்வு போன்ற பொருளாதாரக் கோரிக்கை களுக்காக மட்டுமல்லாமல் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுக்கு எதிராகவும் நடந்தவை. அதனால்தான் “போடீ என்று சொன்னால் போடா என்று சொல்; அடித்தால் திருப்பி அடி” என்று பி. சீனிவாச ராவ் முழங்கினார். இந்த முழக்கம் தஞ்சைத் தரணி மட்டுமல்லாமல் நிலப்பிரபுத்துவம் நிலவிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது.
ஆனால் போராட்டங்கள் ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

களப்பலிகளை விதைத்து ஒவ்வொரு வெற்றியாகப் பெற்றது. 12 படியாக இருந்த வாரம் 16, 18 25, 55 என உயர்ந்தது; மறுபக்கத்தில் சாணிப்பால், சவுக்கடி, நுகத்தடியில் பூட்டுதல் போன்ற தண்டனைகள் மாறின. மொத்தத்தில் நில உடைமைத்துவத்தின் இறுக்கம் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்த இடங்களில் எல்லாம் தளர்ந்தது. இந்த வயிற்றெரிச்சல் தான் நெல் உற்பத்தியாளர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடுதான் வெண்மணி படுகொலைகள்.

பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் இதனை வர்க்கக் கண்ணோட்ட அடிப்படையில் நிலவுடைமைக் கொடுமைக்கு எதிராக வளர்த்தெடுத்தாலும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக இழிவுகளை ஒழிக்கும் கோரிக்கைகளையும் முன்னெடுத்தனர். இதில் பெரும்பான்மையோர் தலித் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.

அவர்கள் இப் போராட்டங்களைச் சமூகப் படிநிலை அடிப்படையில் முன்னெடுத்திருக்காவிட்டாலும் அக் கோரிக்கைகளையும் உள்ளடக்கியதுதான் செங்கொடி இயக்கம். ஆனால் அவர்கள் இதனை வர்க்கப் போராட்டமாகக் காட்டிக்கொள்வதைப்போல சமூகப் போராட்டமாகக் காட்டிக் கொள்வதில்லை.

ஆகவே தான், கீழத்தஞ்சைப் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு கள ஆய்வான ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ புத்தகத்தின் துணைத் தலைப்பில் ’தலித்’ என்ற சொல்லைச் சேர்த்து ’தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு’ எனத் தலைப்பிட்டேன்.
இப் போராட்டங்களில் செங்கொடி சங்கம் இல்லாத இடங்களில் திராவிடர் கழகம் சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களும் சிறப்பாக இயங்கியுள்ளன.

இப் போராட்டங்களின் விளைவாகக் காவிரி கடைமடை மாவட்டங்களில் நிலப்பகிர்வு அதிகமாக நடைபெற்று நிலக்குவியல் தகர்க்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்த தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் உழுத நிலங்களுக்கு உடைமையாளர்களாக உள்ளனர்.

ஆனால் இன்று எல்லா உரிமைகளும் பறி போகும் நிலைமை உள்ளது. காவிரி கடைமடைப் பகுதிகளில் எதிர்காலத்தில் விவசாயம் இருக்குமா என்பது தெரியவில்லை. தஞ்சையைப் பாலைவனமாக்க கார்ப்பரேட்டுகளும் மத மோதல்களைத் தூண்ட பாசிசமும் கை கோர்த்துள்ளது.

இடதுசாரி சக்திகளும் அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளும் இணைந்து போராட வேண்டிய இச் சூழ்நிலையில் தமிழ் இந்து தலையங்கம் விஷமத்தனமாக இருக்கிறது. இடதுசாரி – அம்பேத்கரிய – பெரியாரிய சக்திகளின் அணி சேர்க்கையை வலியுறுத்தும் தோழர் ரவிகுமாரும் இதே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அப்பணசாமி, எழுத்தாளர்; மூத்த பத்திரிகையாளர்.

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

ஏர் மகாராசன்

ஏர் மகாராசன்

தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.

இத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.

கடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.

ஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும்  வெளிவந்திருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்)  இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.

கடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

இந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.

மீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.

கடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

ஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.

இன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.

அதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளாகும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.   மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.

இழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.

ஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

மீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள்  அருள் எழிலன், ஜெயக்கொடி மற்றும் குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.

தேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல். சமீபத்தில் சொல்நிலம் என்கிற பெயரில் கவிதை நூல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்

புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல் நடத்திவருவதை சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லவிடாமல் பெண்கள் தடுக்கப்படுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின், ‘புதுப்புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் கடந்த 19 – 7 – 2018 அன்று விவாதிக்கப்பட்டது. அப்போது நெறியாளர் கார்த்திகேயன், “மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் தெய்வங்கள் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லுங்கள்” என சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து இந்துத்துவ அமைப்புகள் பொங்குகின்றன. நெறியாளர் கார்த்திகேயன் மிரட்டலுக்கும் ஆபாசத் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். அவரை பணி நீக்கும் வரை ஓயமாட்டோம் என சபதமிடுகின்றனர்.

இப்படி பத்திரிகையாளர்களை மிரட்டுவது, சமூக வலைத்தளங்களில் மோசமாகப் பதிவிடுவது, ஒருமையில் பேசுவது போன்ற உருட்டல் மிரட்டல்களில் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை, நிகழ்வுகளை அப்படியே சொல்வது மட்டுமல்ல பத்திரிகையாளர்களின் பணி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் அதற்கு இடையூறு ஏற்படாமல் குரல் கொடுப்பதும் இணைந்ததாகும்.

கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் விவாதிப்பதற்கும் ஜனநாயகம் தந்திருக்கும் வெளியை சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் பத்திரிகையாளர்களின் கடமையாகும்.

பத்திரிகையாளர்களின் இப்பணிக்கு துணைநிற்பதுடன், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்
கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற தாக்குதலுக்குப் பணிந்து செய்தியாளர் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்களுக்கு தொலைக்காட்சி நிர்வாகங்கள் பணிந்து போகக் கூடாது என்றும் சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (Madras Union of Journalists – MUJ) வேண்டுகோள் விடுக்கிறது.”

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

பா.ஜ.கவின் சார்பாக ஊடகங்களுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடும் பொறுப்பில் இருக்கும் திருப்பதி நாராயணன் பெரும்பாலும் தன்னைத்தானே அனுப்ப தனக்கே உத்தரவிட்டுகொள்வார். இதனால் ஏனைய பா.ஜ.க ஊடக பேச்சாளர்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்று கேள்வி. ஆனால் தமிழ் நாட்டில் தனது பண்ணையார் உடல் மொழியாலும் அராஜக நடவடிகைகளாலும் அதிகமான வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானவர் திருப்பதி நாராயணன். அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண் தெய்வங்கள் தொடர்பான ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக புதிய தலைமுறை கார்திகேயன்மேல் காவி பயங்கரவாத கும்பல் மேற்கொண்டுவரும் தாக்குதல் தற்செயலானதல்ல. இது தொடர்பாக திருப்பதி நாராயணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் ’கார்த்திகேயன் வேறு கார்த்திகைச் செல்வன் வேறு, நாம் கார்த்திகேயனை திட்டவேண்டுமே தவிர கார்த்திகைச் செல்வனை திட்டக் கூடாது’ என்று பயிற்சி கொடுக்கிறார். கார்க்திகேயனுக்கும் கார்த்திகைச் செல்வனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தக் கும்பல்தான் இந்து மதத்தைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் , ‘ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது’ என்று.

இந்த விவகாரத்தில் திருப்பதி நாராயணனின் கருத்து ‘’ தவறான,குரூரமான, கேவலமான ஹிந்து மதத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்தோ, கிருஸ்துவ தெய்வங்கள் குறித்தோ பேசிவிட்டு ரோட்டில் நடக்க முடியாது. உங்கள் நண்பரை அல்லது உங்களுக்கு தெரிந்தவரை ஒரு கவிதை எழுதி விட்டு ரோட்டில் நடந்து போக சொல்லுங்கள். வெட்டி போட்டு விடுவார்கள். ’’ என்பதுதான். ராமகோபாலனிலிருந்து ஹெச்.ராஜாவரை முகமது நபிகள் பற்றியும் அவரது துணைவியார் பற்றியும் இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றியும் எவ்வளவு ஆபாசமாக இழிவாக கேவலமாக பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரஙகள் இருக்கின்றன. நாராயணன் ஆசைப்படுவதுபோல யாரும் யாரையும் வெட்டிபோட்டுவிடவில்லை. ஏன் கவிஞர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்திற்குள் இருந்தே ’’இத்தனை நபிகளில். ஏன் ஒரு பெண் நபி இல்லை?’ என்று கேட்டதற்காக சில அடிப்படைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.. அவரை யாரும் வெட்டிப்போட்டுவிடவில்லை. கிறிஸ்தவ மதம் மீது இங்கு எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கபட்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் யாரும் வெட்டிபோட்டுவிடவில்லை. மாறாக நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டுகொன்ன்றவர்கள் இந்த்துவா வெறியர்களதான். நாராயணன் தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது.

திருப்பதி நாராயணன் ‘சமூக வலைத்தளங்களில் நம் நண்பர்கள் / கட்சியினர் மிகவும் வேகமாக, உணர்ச்சிப்பெருக்கோடு தங்களின் ஆதங்கங்களை, கோபத்தை பதிவு செய்து இந்த விமர்சனத்தை கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கார்த்திகேயனை தொடர்ந்து கண்டித்து கொண்டிருப்பது நமது தெய்வங்களை பழித்து பேசுபவர்களை இனியும் நாம் சகித்து கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தியுள்ளது’’ என்று சங்கிகளை உற்சாகபடுத்துகிறார். மாதவிலக்கான பெண்களை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும் கூற்றுக்கு எதிராக பெண் தெயவங்கள் அந்த மூன்று நாட்களும் பெண் தெய்வங்கள் எங்கே இருப்பார்கள்? என இந்துமதத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார். அதை இந்து மதத்தைச் சேர்ந்த கார்திகேயன் கேள்வி கேட்கிறார். அதுவும் இவர்கள் கேட்பது இஸ்லாமிய , கிறிஸ்துவ பெண்களுக்கு கோயிலில் நுழைய உரிமை கேட்டு போராடவில்லை. இந்துக்களான இவர்கள் இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதில் மதப்பிரச்சினை எங்கே வந்தது? இந்த லட்சணத்தில் திருப்பதி நாராயணன் சொல்கிறார்.

‘எஸ் வி சேகர் விவகாரத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டபிறகும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டு, அவர் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியவர்கள் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் கவிதையை, சொற்களை, எழுத்துக்களை போற்றி பாதுகாக்க முற்படுவது முறையாகாது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று முற்போக்குகள் ஏற்றுக்கொள்வார்களேயானால், அந்த பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோவது வக்கிர சிந்தனையே என்பதை உணர வேண்டும்.தமிழகத்தில் நாத்திக சிந்தனையாளர்கள் 0.01 விழுக்காடே உள்ளனர் என்கிற நிலையில், பெண் தெய்வங்களை அவமானப்படுத்தும் யாரையும், எந்த கருத்துக்களையும் ஹிந்து பெண்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.’

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்? அதற்குப் பெயர் நாத்திகமா? எஸ்.வி சேகர் ‘ ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் யாரிடமாவது படுத்துதான் சலுகை பெறுகிறார்கள்’ என்று சொன்னதும் இந்துப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் ஒன்றா? என்ன உளறுகிறோம் என்றுகூட தெரியாத பேத்தல்.

மேலும் உடல் சார்ந்து விஷயங்கள் எதுவும் இந்துக் கடவுள்கள் மரபில் பேசபட்டதே இல்லையா? நமது கோயில் பிரகாரங்களில் காணப்படும் நிர்வாண சிலைகள் மற்றும் ஆண் பெண் உறவுக் காட்சிகள் உடல் சார்ந்த அனைத்தையும் இந்துமதம் புனிதமாக கருதுகிறது என்பதையே காட்டுகிறது. நமது புராணங்களை சங்கிகள் கொஞ்ச நேரம் புரட்டிப்பார்க்க வேண்டும். யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் கீழ்கண்ட விஷயஙகளை சுட்டிக்காட்டுகிறார்.

‘சக்தி பீடங்களில் தலையாயது அஸ்ஸாமில் இருக்கும் ‘காமாக்யா’. ஆண்டுக்கு ஒருமுறை (அதாவது ஜூன் மாதம் மூன்றாம் வாரம்) இங்கே தேவிக்கு மூன்று நாட்கள் ‘தீட்டு’ ஆகிறதாம். போலவே -செங்கனூர் பகவதியம்மனுக்கு மாதாமாதம் ‘தீட்டு’ ஆவதாக ஐதீகம். இந்த தீட்டுத்துணிக்கு மார்க்கெட்டில் செம டிமாண்டாம். இதை வைத்து பூஜை செய்பவருக்கு சகல சம்பத்துகளும் கிடைக்குமென்று நம்பிக்கை.சக்தி வழிபாடான ‘சாக்தம்’, பெண்களின் மாதாந்திர உடல் செயல்பான ‘தீட்டு’வை, புனிதமான நடைமுறையாக கருதுகிறது.’

இந்துமதத்ததைப் பற்றியோ அதற்குள் இருக்கும் கலாச்சார பன்முகத்தனமை பற்றியோ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி சங்கிகள் இந்துமதத்தை மற்றவர்கள் அவமதிப்பதாக அலறுகிறார்கள்.

எந்த தர்க்கமும் இல்லாமல் ‘ இந்து மதத்தை அவமதிக்கிறார்கள் என்று போலியான காரணங்களை உருவாக்கி கூச்சல் போடுவது என்பது கருத்து சுதந்திரத்தையும் ஊடகங்களையும் ஒடுக்குவதற்கான தொடர் நிகழ்வு. ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து ஒரு மேற்கோளை பயன்படுத்தியதற்காக எவ்வளவு களேபரத்தை உண்டாக்கினார்கள் என்று பார்த்தோம். ஊடகங்களில் சங்கிகளுக்கு மண்டியிடாத ஊடகவியாலளர்களை மிரட்டுவது , அந்த நிறுவன நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றவைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களில் பணியாற்றும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளார்களை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டமிட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படுகிகின்றன. ஜென் ராம், குணசேகரன், நெல்சன் சேவியர், செந்தில், கார்த்திகைச் செல்வன் வரிசையில் இப்போது கார்த்திகேயன் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.கவை கடுமையாக விமர்சிக்கும் என்னைபோன்றவர்களை விவாதங்களில் தவிர்க்கும்படி அழுத்தங்கள் ஊடகங்களுக்கு தரப்படுகின்றன. நாள் முழுக்க சங்கிகளின் ஊது குழலாக பெரும்பாலான ஊடகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அதற்காக நடுநிலையான ஊடகவியலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும்[’ பா.ஜ.கவிற்குகோபம் வராத எந்த தலைப்பை விவாதிக்கலாம், அதற்கு யாரை அழைக்கக் கூடாது , பா.ஜ.க தரப்பில் இருந்து அதற்கு என்ன எதிர்வினை வரும்’’ என்பதுதான் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகத்திலும் விவாதிக்கப்படுகிறது. இதைவிட துயரமான நிலை வேறொன்றும் இல்லை. எமெர்ஜென்சியைவிட மோசமான காலம் இது. எமெர்ஜென்சியைக்கண்டு பயப்படாத ஊடகங்கள் இன்று திருப்பதி நாராயணன் போன்ற ஒரு மூன்றாம்தர பேச்சாளரைக் கண்டு அஞ்சுகின்றன. சங்கிகள் இந்த ஊடகங்களின் மீது எவ்வளவு தாக்குதலை தொடுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களைப் போய் மறுபடி மறுபடி தாஜா செய்கின்றன.

திருப்பதி நாராயணன் சார்… இந்தப் பதிவை படித்துவிட்டு எல்லா தொலைக்காட்சிக்கும் போன் செய்து ” இனி மனுஷ்ய புத்திரனை அழைக்காதீர்கள் ‘’ என்று உத்தரவு போடாதீர்கள்.. என்ன இருந்தாலும் நாம் ‘ ஸ்டுடியோ தோழர்கள்’ இல்லையா?

மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

“பெருங்கடல் வேட்டத்து: அரசு மீதான மூடபக்தியை ஒழிக்கும் ஆவணம்!”

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தோழர் அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கணவனை இழந்த, மகனை இழந்த பெண்களின் மரண ஓலங்கள் நமது நெஞ்சில் இறங்கும்போதெல்லாம் இப்பாடல் நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது. போலவே, படகோட்டி படத்தில் மீனவனாக அம்மக்கள் துயரத்தை பாடியும் நடித்தும் அம்மக்கள் மனதை வென்றும் அதை தேர்தல் அரசியலில் அறுவடை செய்து ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் ,எதார்த்தத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததும் நினைவிற்கு வந்து போனது.

கரைக்கு அப்பால் இயற்கை பேரிடர்,கரையைத் தாண்டி சமவெளியிலோ வழிந்தோடுகிற துரோகங்கள். அரசின் தொடர் ஒடுக்குமுறைகள், படத்தில் மகனை இழந்த தாய் ஒருவர்,

‘எவ்வளவு பெரிய புயலையும் சூறாவளியையும் எதிர்கொள்கிற ஆற்றல் கொண்டவர்கள் எம்மக்கள், துண்டு மரத்தை பலமணி நேரம் பற்றிக் கொண்டு உயிர் பிழைக்க முயற்சிப்பார்கள். ஆனால் இரு பகல் இரு இரவு கடந்தும் மீட்பதற்கு எவரும் வராதபோது எவ்வாறு தப்புவது? உங்கள் பிள்ளைகளை உங்களிடம் சேர்ப்பேன் என வாக்கு கொடுத்து சென்ற அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் ஒரு பெண் தானே?’ என கேள்வியெழுப்புகிறார்.

ஆனால், அரசு எந்திரம் எதார்த்தத்தில் என்ன செய்தது? படத்தில் ஒருவர் சொல்வதுபோல, கரை தெரிகிற தூரத்தில் மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள். அதுவும் 30 ஆம் தேதியில் இருந்து தேடுதலை தொடங்குகிறார்கள். சொந்த முயற்சியில் தப்பித்தவரை தாங்கள் காப்பாற்றியது போல ஜோடிப்பதிலும்  பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதிலும் அரசு அக்கறை கொள்கிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!அனைத்து மக்களுக்குமான அரசு என அலங்காரம் செய்துகொண்டு சமூகத்தின் எஜமானனாக, நமது வரிப்பணத்தில் ஆட்சி செய்பவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்பதையே முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி கால வரலாறாக உள்ளது.

ஓக்கி புயலில் அரசின் செயல்பாடின்மை என்பது தற்செயலானது, அல்லது நிர்வாக தொழில் நுட்ப குளறுபடியோ அல்ல. மாறாக, எந்த மக்களை காக்க வேண்டும் எந்த மக்களின் நலனுக்காக செயல்படவேண்டும் என்ற தெளிவான ஆளும்வர்க்க கொள்கை முடிவின்படி, மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். இந்த ஆவணப்படுத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு குரலும் இதையே எதிரொலிக்கிறது. இந்த அரசு எங்கே போனது? என்பதுதான் மக்களின் கேள்வி.

போலவே, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை துயரின் வடிகாலாக அதேசமயம் தனது வாழ்நிலை துயருக்கு எதிரான ஆட்சேபனையாக மதத்திடம் அடைக்கலம் தேடிய மக்களின் உணர்வை சர்சுகள் எவ்வாறு அறுவடை செய்கிறது என்பதை இப்படத்தில் தோழர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மத்திய கால பழமைச்சின்ன அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய பழமைவாத பொருட்கள், சமகாலத்தில் உயிர்ப்போடு உலாவி வருவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை கட்டுப்படுத்துவது நிகழ்கால கொடுமையின் உச்சம்.

பெருங்கடல் வேட்டத்து ஆவணப் படம், ஆன்மாவற்ற ஆளும் வர்க்கப் பண்பை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது. சிவில் சமூகத்தின் பொது புத்தியில் அரசு மீதான மூடபக்தியை ஒழிப்பதில் சமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்.

அருண் நெடுஞ்செழியன், அரசியல்-சமூக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.

புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்!

டி. அருள் எழிலன்

ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஆளும் அதிமுக அரசாக இல்லை. பாஜகவின் பொம்மை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், அரசு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையுமே பாஜக தன் கட்டுப்பாட்டில் நேரடியாக எடுக்க திவீரம் காட்டுகிறது.

ஓகி மரணங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் மரணங்கள் என கெட்டதாக நடக்கும் அத்தனை விஷயங்களிலும் பழி மாநில அரசு மீது சுமத்தப்படுகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையை என தன் கட்டுப்பாட்டில் வைத்து நேரடியாக பாஜக ஆள்வதை ஜெயலலிதா மரணத்திற்குப் பிந்தைய தமிழகத்தில் நிலையில் நாம் காண்கிறோம்.

இந்நிலையில்தான், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்தும் ‘வட்டமேஜை’ நிகழ்ச்சியை பாஜகவினரும், இந்துத்துவ சக்திகளும் பாதியில் பிரச்சனை செய்து நிறுத்தியிருக்கிறார்கள். வட்ட மேஜை வடிவிலான நிகழ்ச்சியை நெறியாள்கை செய்வது எளிதான காரியம் அல்ல, காரணம் அதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் பொது மக்கள் அல்ல. அரசியல் பிரமுகர்கள் வெவ்வேறு தளங்களில் தங்களின் ஆதரவாளர்களை உற்பத்தி செய்து வைத்திருக்கும் இவர்களின் தொண்டர்களோ, அபிமானிகளோதான் இந் நிகழ்வின் பார்வையாளர்களாக வருகிறார்கள்.

ஆனாலும் கார்த்திகைச் செல்வன் இவைகளை சமாளித்து இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். கோவையில் விவாதிக்க அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு முக்கியமானது. தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் ஏன் நடக்கிறது என்பதுதான். அதில் ஆளும் அதிமுக, பாஜக தவிற அத்தனை தரப்பினருமே இந்த இரு கட்சிகளையும் விமர்சனம் செய்து பேசுவதற்கான வாய்ப்புள்ள இந்த விவாத நிகழ்வில் திரைப்பட இயக்குநர் அமீர் பேசும் போது கோவை சசிகுமார் படுகொலையையொட்டி நடந்த வன்முறைகள் பற்றி பேசத்துவங்கியதும் பாஜகவினர் , இந்துத்துவ அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள். அமீரை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உள்ளிட்டோர் பாதுகாப்பாக அரங்கத்தை விட்டு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களை தட்டிக் கேட்டு அப்புறப்படுத்தாத போலீசார் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நெருக்கடி கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மீதும், புதிய தலைமுறை மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளது தமிழக அரசு. இதுவரை அரசுக்கு எதிராக செயல்படும் ஊடக நிறுவனங்களை தமிழ் நாடு அரசு கேபிள் நெட்வோர்க்கில் இருந்து நீக்கி மிரட்டும் தமிழக அரசு. இப்போது நேரடியாக போலீசை வைத்தே ஊடகங்களை அச்சுறுத்துகிறது.
வெறுமனே அட்ஜஸ்ட் பண்ணி மட்டும் நடந்து கொண்டால் போதாது ஆளும் பொம்மை அரசின் ஊதுகுழலாக ஊடகங்கள் மாற வேண்டும் என்ற செய்தியைத்தான் ஓபிஎஸ்- இபிஎஸ் அரசு இதன் மூலம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது.
புதிய தலைமுறை மீதும், அமீர் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேஜை நிகழ்வுக்கான கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

டி. அருள் எழிலன் பத்திரிகையாளர்; ஆவணப்பட இயக்குநர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி: அ. மார்க்ஸ் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.  

“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.

இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

சற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

அந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

இம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

பத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.

இப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

சன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.

இது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கார்பொரேட் உலகின் சட்ட விரோத பணிநீக்கங்கள் : விகடன் மட்டும் விதிவிலக்கா என்ன?

பரிமளா

பரிமளா

1926 இல் சிறிய அளவில் ஆரம்பித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை, இன்று வார இதழ்,மாத இதழ்,விளம்பரங்கள் என 26 நிறுவனங்களாக வளர்ந்து ஊடகத் துறையில் ஆண்டுக்கு சுமார் 140 கோடி வர்த்தகம் (turnover) செய்கின்ற ஒரு பெரும் கார்பொரேட் நிறுவனமாக மாறி இருக்கிறது. அத்தோடு தமிழ்ச் சமூகத்தின் ஒரு முக்கிய முற்போக்கு ஊடகமாகவும் இருக்கிறது. இந்த பெரிய வளர்ச்சிக்குப் பின்னால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது, விகடன் நிர்வாகமும் மறுக்காது.

விகடன் குழும நிறுவனங்களின் அனைத்து அச்சு பணிகளையும் செய்யும் அச்சகம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக நிரந்தர தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். மாதத்திற்கு 50 லட்சம் பிரதிகள் விகடன் குழுமம் வெளியிடுகிறது.

சமீப காலமாக நடப்பது என்ன?

இந்த அச்சகத்தில் செய்யப்பட்டுக்கொண்டு இருந்த வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த செலவில் செய்து கொடுப்பவர்களோடு ஒப்பந்தம் போட்டு வேலையை முடிப்பது என்ற அவுட்சோர்ஸ் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. திருச்சியில் வேறு ஒரு அச்சகம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நிரந்தர தொழிலாளர்களுக்கு பதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

தற்போது அம்பத்தூர் அச்சகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 100 பேர் விகடன் நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேலையை விட்டு போக மறுத்த தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதை நிர்வாகம் நிறுத்தி இருக்கிறது. அச்சகத்தில் உள்ள அச்சிடப்படாத காகித பண்டல்களை எடுத்துச் செல்ல நடந்த முயற்சியை தொழிலாளர்கள் தட்டிக் கேட்டு, ‘நிர்வாகம் தங்களுக்கு ஏன் வேலை தர மறுக்கிறது?’ எனக் கேட்டு போராடி இருக்கிறார்கள். தொழிலாளர் நல அலுவலகத்தில் முறையிட்டு இருக்கிறார்கள்.

தொழிலாளர் அலுவலகத்தில் நிர்வாகம் அச்சகம் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக பொய்யான தகவலை கூறி இருக்கிறது. இதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரி போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார். இந்த அறிவுரை அடிப்படையில் விகடன் நிர்வாகம் முன் அனுமதி இன்றி தொழிலாளர்கள் ‘வேலை நிறுத்தம்’ செய்தார்கள் என்ற பொய்யான காரணத்தை காட்டி சட்ட ரீதியாக அவர்களை பணி நீக்கம் செய்வதை நோக்கி செல்கிறது.

உலகம் முழுவதும் முதலாளித்துவ நிறுவனங்கள் தங்கள் லாப விகிதத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள குறைந்த செலவில் ஒப்பந்த முறையில் வேலையை முடித்தல் (outsourcing), நிரந்தர தொழிலாளர்களை குறைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் (contract workers) எண்ணிக்கையை அதிகரித்தல் என்ற முறையை நோக்கி தீவிரமாக நகர்கின்றன. விகடன் நிர்வாகத்தின் அச்சக தொழிலாளர்களின் பிரச்சினையும் இதன் ஒரு பகுதியே.

ஆண்டுக்கணக்கில் இரவும் பகலும் உழைத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், எதிர்கால பாதுகாப்பு என எதைப் பற்றியும் எந்த கவலையுமின்றி எந்த நியாயமான காரணமும் இல்லாமல் அச்சகத்தை மூடுவது என்பது விகடன் நிர்வாகத்தின் ஒரு சட்ட விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கையே ஆகும். விகடன் நிர்வாகத்தின் சட்ட விரோத பணி நீக்க நடவடிக்கைகளை கண்டித்து எ.ஐ.டி.யு.சி (AITUC) யின் தமிழ் நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனை சேர்ந்த அச்சக தொழிலாளர்கள் 22.03.2018 அன்று சேப்பாக்கத்தில் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள் என தமிழ்ச் சமூகத்தின் எந்த மூலையில் இருந்து குரல் எழுந்தாலும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பி ஓர் முற்போக்கு ஊடக நிறுவனமாக அடையாளப்பட்டு இருக்கும் விகடன் நிர்வாகம் தனது சொந்த தொழிலாளர்களின் நியாயமான குரலை நசுக்குவது நியாயமா?

விகடனின் வளர்ச்சியில் தங்கள் வாழ்வை கரைத்த தொழிலாளர்களின் வேலையை சூழ்ச்சியாக சட்டத்தின் துணை கொண்டு பறிக்க நினைப்பது முற்போக்கானது ஆகுமா?

நிறுவனங்கள் லாப வெறியில் நடத்தும் தொழிலாளர்களின் சட்ட விரோத பணிநீக்கத்தை, உழைப்பு சுரண்டலை தொடர்ந்து எதிர்த்து வரும் விகடன் அதே லாப நோக்கத்திற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தையும் நிர்கதியாய் வீதியில் விடலாமா?

எனவே இது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், விகடன் போன்ற முற்போக்கான ஊடக நிறுவனத்திற்கு அறமாகாது என ஐ.டி.பணியாளர்கள் மன்றம் கருதுகிறது.

விகடன் நிர்வாகம் வாழ்வாதாரத்திற்காக, தங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என பைட் தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் போராடும் ஜனநாயக சக்திகள் அனைவரும் விகடன் குழும அம்பத்தூர் அச்சக தொழிலாளர்கள் கோரிக்கைக்கு துணை நிற்க வேண்டும் என ஐ.டி தொழிலாளர்களின் பைட் தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பரிமளா, தமிழ் நாடு ஐ.டி பணியாளர்கள் மன்ற(FITE)த்தின் தலைவர்.

நன்றி: http://fiteorg.in/…/popular-tamil-magazine-group-vikatan-d…/

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரின் பேட்டி…

தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு:

“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா?”: தொழிலாளர்களின் குமுறல்

“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா?”: தொழிலாளர்களின் குமுறல்

“கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பேன்”: எழுத்தாளர் பொன்னீலன்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பொன்னீலனின் “மறுபக்கம்” நாவல் The Dance of flames என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வுக்காக குமரியிலிருந்து வந்திருந்த பொன்னீலனோடு (வயது 77) நடந்த நேர்காணல் இது. த டைம்ஸ் தமிழிற்காக நேர்காணல் செய்தவர்: பீட்டர் துரைராஜ்

கேள்வி: சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லுங்களேன்?

பதில்: என்னுடைய மறுபக்கம் நாவல் மண்டைக்காடு கலவரத்தை(1982) மையமாக வைத்து 2010 ல் வெளியானது.நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. வெறுப்பு அரசியல் மேலோங்கி இருக்கும் இந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் முயற்சியில் இது ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.கன்னியாகுமரியைச் சார்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மிசியா டேனியல் (Mysia Daniel) இதனை அற்புதமாக மொழிபெயர்த்து உள்ளார். இந்த நாவல் The Dance of Flames என்ற பெயரில் வெளியாகிறது. இதனை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (ரூ.700) வெளியிட்டுள்ளது. இந்த நாவல் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

எழுத்தாளர் பொன்னீலன்
படம்: முகநூலிருந்து எடுக்கப்பட்டது.

கே: கரிசல், புதிய தரிசனங்கள், தேடல், உறவுகள், ஊற்றில் மலர்ந்தது, கொள்ளைக்கார்கள், மறுபக்கம் போன்ற நாவல்களை எழுதி இருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்த நாவல் எது?

பதில்: நெருக்கடி நிலை காலகட்டத்தில் 1975 முதல் 1977 வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை புதிய தரிசனங்கள். என்னுடைய 14 ஆண்டு கால உழைப்பின் பயனாக வெளியான நாவல் இது. இந்த நாவல் குறித்து தமிழகம் முழுவதும் இலக்கியத் துறையில் விவாதங்கள் நடந்தன. ஆனால் இந்த நாவல் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியோ , மார்க்சிஸ்ட் கட்சியோ , மார்க்சிய லெனினிய கட்சியோ விவாதம் நடத்தவில்லை.

இந்த நாவல் அரசியல் நாவல் என்று பரவலாக அறியப்பட்டாலும் இது மெய்யியல் துறையில் அறம் சார்ந்த பல கேள்விகளை எழுப்புகிறது; இதனை பலரும் பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில் புதிய தரிசனங்களை ஒரு முக்கியமான நாவலாக பார்க்கிறேன். இது எனக்கு பிடித்த நாவல்.

மூன்று பதிப்புகள் வெளிவந்து விட்டன. நாவலும் தீர்ந்து விட்டது. ஆனால் அடுத்த பதிப்பை 17 ஆண்டுகளாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் கொண்டு வரவில்லை. ஏன் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இந்த நாவலுக்குத்தான் 1994ல் எனக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அப்போது நான் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். கல்வித்துறையில் பணியாற்றிய யாருக்கும் கிடைக்காத விருது இது. ஆனால் கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை.அதே போலத்தான் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூமணிக்கு ‘அஞ்ஞாடி” நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. கூட்டுறவுத் துறையும் கண்டு கொள்ளவில்லை.

கே: புதிய திருமண முறையை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். பொதுவுடமை திருமண முறை என்று இதைச் சொல்லலாமா?

பதில்:  பொதுவுடமை என்ற வார்த்தை பொருளாதாரத்தை மட்டும்தான் குறிக்கும். நான் எப்பொழுதும் சமதர்மம் என்ற வார்தையைதான் பயன்படுத்துவேன். இந்த முறையில் திராவிட இயக்க திருமண கூறுகளும் உண்டு. மனித விரோத கூறுகளை விலக்கி, நமது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி, சாதி கடந்து, மதம் கடந்து, சமதர்ம கண்ணோட்டத்தில் நாங்கள் உருவாக்கிய இந்த திருமண முறையில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி இம்முறையில் திருமணம் செய்துள்ளனர். இந்த முறையில் மாமனார், பங்காளிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் இம்முறைப்படி திருமணம் பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது.

கே: குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி என்ற நூலை மார்க்சியவாதியான நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இதனை எப்படி புரிந்து கொள்ளுவது?

பதில்: ” நான் கடவுளை நம்புகிறேன், ஆனால் மனிதனை கீழ்மைப்படுத்தும் எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ” என்ற உறுதியான கொள்கை கொண்டவர் குன்றக்குடி அடிகளார். கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை தவிர மார்க்சியத்திற்கும் சைவத்திற்கும் வேறுபாடு இல்லை என்று நம்பியவர் அடிகளார். அறிவியல் வழி செயல்பட வேண்டும் என்றவர் அவர். அவருடைய மடம் இருந்த பகுதிகளில் திடீர், திடீரென்று குடிசைகள் எரியும். வேறு யாராவது இருந்தால் மக்கள் நம்பிக்கையை தவறாக வழி நடத்தி இருப்பர். ஆனால் அவர் சிக்கரியிலிருந்து விஞ்ஞானிகளை வரவழைத்து ஆராய்ச்சி செய்து காரணத்தை (கந்தகம்) கண்டுபிடிக்கச் செய்தவர். மண்டைக்காடு கலவரம் நடந்த போது மற்ற மதத் தலைவர்களை நேரில் சந்தித்து அமைதி ஊர்வலம் நடத்தி சகஜ நிலையை கொண்டு வந்தவர். வாழ்ந்த குன்றக்குடி அடிகளாருக்கு ஈடாக வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியாது.

கே: நீங்கள் நடத்திய பாதயாத்திரை பற்றி?

பதில்: சமாதானத்தை, நல்லிணக்கத்தை வலியுறுத்தி என் தலைமையில் குமரி முதல் சென்னை வரை 22 நாட்கள் 22 பேர கலந்து கொண்ட பாதயாத்திரை நடந்தது. உலக சமாதான கழகம் கொடுத்த அறைகூவலுக்கு இணங்க 1985 ஆண்டு இந்த இயக்கம் நடந்தது.

கே: மத்திய அரசு கருத்துரிமைக்கு எதிராக இருப்பதை கண்டித்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் விருதை திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால், தமிழ் நாட்டிலிருந்து யாரும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மூன்று தமிழ் அறிஞர்களால் தேர்வு செய்யப்பட்டுதான் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இதில் யாரும் தலையிட முடியாது. இந்நிலையில் நான் விருதை திருப்பிக் கொடுப்பது என்பது தமிழறிஞர்களை அவமதிப்பதற்கு சமம். எனவே நான் விருதை திருப்பிக் கொடுக்கவில்லை. இது சரியான முடிவு என்றுதான் நான் இப்பொழுதும் நினைக்கிறேன்.

கே: ‘நல்ல இலக்கியங்கள் படமாக்கப்பட வேண்டும். அதனைச் சாதனையாக நிகழ்த்திக் காட்டும் ஞான. ராஜசேகரன் மோகமுள்கள் பெருக வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறீர்கள் ?

பதில்: என்னுடைய ‘உறவுகள்’ நாவலை ‘பூட்டாத பூட்டுகள்’ என்று மகேந்திரன் எடுத்தார். இது வணிக ரீதியிலும் வெற்றி பெறவில்லை; நல்ல கலைப்படமாகவும் இல்லை. மோகமுள் நல்ல படம், ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. நல்ல இலக்கியங்கள் திரைப்படமாக்கப்பட வேண்டும். அவை வணிக ரீதியிலும் வெற்றி பெற வேண்டும்.

கே: மக்களுடைய வாசிப்பு பழக்கம் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: நூலகத்துறை நல்ல நூட்களை வாங்குவது இல்லை. நாளுக்கு தாள் இது மோசமாகிக் கொண்டு வருகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்வுக்குழுவை அமைத்து தரமான நூட்களை தேர்வு செய்ய வேண்டும்.

கே: ‘திராவிட இயக்கச் சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கு யாரும் கொண்டாடுவது இல்லை’ என்ற தமிழ் மகன் சொல்லுகிறாரே இது பற்றி என்ன நினைக்கிறார்கள்?

பதில்: தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. பொதுவாக அரசியல்வாதிகள் சமூக நாவல்களை படிப்பதும் இல்லை; விமர்சிப்பதும் இல்லை. ஆனால், இது கேரளத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டு அரசியல் மீது எனக்கு திருப்தி இல்லை. இங்கு இருப்பது இரவல் அரசியல்தான். அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை.

கே: உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக தினைக்கிறீர்களா?

பதில்: என்னுடைய சிந்தனைகளை பெரிய அளவு இங்கு யாரும் அங்கீகரிக்கவில்லை. என்னை அங்கீகரித்தால் என்னுடைய படைப்புகளை அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு யாரும் தயாராக இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை நான் கேரளத்தில் இருந்திருந்தால் மிகப் பெரிய அளவுக்கு (அழுத்திச் சொல்லுகிறார்) அங்கீகரிக்கப்பட்டு இருப்பேன்.

கே: நீங்கள் படைப்பாளியாக, அரசு அதிகாரியாக, இலக்கியப் போராளியாக பல தளங்களில் பணி புரிந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு இதில் எது மிகவும் பிடிக்கும்?

பதில்: நான் மூன்று துறையிலும் திருப்தியோடு பணிபுரிந்து இருக்கிறேன். குறிப்பிடத்தக்க வெற்றிகளை அனைத்து தளங்களிலும் பதித்து இருக்கிறேன். அனைத்து பணிகளையும் சம ஆர்வத்தோடுதான் செய்கிறேன்.

நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைந்தநிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழக சூழலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தொலைக்காட்சிகள் நடத்திய விவாதங்களில் பங்கேற்றார் மருத்துவர் கிருஷ்ணசாமி. நியூஸ் 7 விவாதத்தில் நெறியாளர் விஜயனிடம் கடுமையாக நடந்துகொண்ட கிருஷ்ணசாமி, ஊடகங்கள் கருத்துகளை புகுத்துவதாக குற்றம்சாட்டினார். புதிய தலைமுறை விவாத்தில் நெறியாளர் கார்த்திகை செல்வன், நீங்கள் எந்த அடிப்படையில் மருத்துவர் ஆனீர்கள் என கேட்டதற்கு, நீங்கள் எந்த அடிப்படையில் ஊடக பணிக்கு வந்தீர்கள் என ஆவேசப்பட்டார் மரு. கிருஷ்ணசாமி.

நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய விவாத்தின் நெறியாளர் குணசேகரன், ‘விக்டீம் மீதே பழிபோடுகிறீர்களே, மத்திய-மாநில அரசுகள் நீட் குறித்து இறுதிவரை சரியான வழிகாட்டுதலை தரவில்லையே? என்று மரு. கிருஷ்ணசாமியிடம் கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி, ‘நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

மருத்துவர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலை குறித்தும் கேள்வி எழுப்பிய ஊடகங்களை அவதூறு செய்ததும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஜெயசந்திர ஹாஸ்மி

ஜெயசந்திர ஹாஸ்மி

ஒருவாரமா பிக் பாஸ் பாக்குறது இல்ல. நேத்து ரொம்ப கடுமையான மனஅழுத்தத்துல இருந்து வெளிய வர்றதுக்கு என்னென்னமோ செஞ்சு பாத்து எதுவும் முடியாம கடைசியா சரணடைஞ்ச இடம் பிக் பாஸ். சத்தியமா கமலுக்காக மட்டும்தான். And i did not regret a bit !!

அழகுன்னு நினைச்சுகிட்டு இருக்கற பலபேர நான் பாத்துருக்கேன். மூஞ்சிய ஒருவாகா வச்சுகிட்டா மட்டும்தான் அழகா தெரியும். அதுக்காக கொஞ்சம்கூட கோணலா முகத்த மாத்தாமலே இருப்பாங்க. ஆனா ஒரு மனுசன் ரசம் ரசமா பாவனைகள மாத்தி, அத்தனையிலும் அட்டகாசமா இருக்க முடியும்னா அது கமல் தான்.

வெறுமனே தோற்றம் மட்டுமே அழகில்ல. அதத்தாண்டி நம்மள எப்படி ஒரு அரங்குல நிலைநிறுத்துறோம்ன்ற ஒன்னு இருக்கு. இந்த மனுசனுக்கு அது மூச்சு வாங்கற மாதிரி இயல்பா வருது. ஆளுமை (திரை/மேடை) என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் இந்த ரெண்டு நாள் கமல்தான். கமலுக்கு ஏன் இந்த வேலை, அவருக்கு ஆங்கரிங் வரலனு சொன்ன அத்தனை பேரும் நேத்து எபிசோட்ட கண்கொட்டாம பாத்துருப்பாங்க.

And, கமல் ஒருத்தர தவிர தமிழ்ல யோசிச்சுப் பாத்தாலும் இந்த ஷோ க்கு இன்னொருத்தர பிடிக்க முடியாது. எனக்குத் தெரிஞ்சு பிக் பாஸ் எத்தன சீஸன் போதோ, அத்தன சீஸன் வரைக்கும் கமல் வருஷா வருஷம் 25 கோடிய செக்யூர் பண்ணிட்டாருன்னு நினைக்குறேன். .

நேத்து பாத்த எபிசோட இன்னைக்கு மறுபடியும் போட்டுப் பாத்தேன். கமல் கமல் கமல். முழுமையா நிறைஞ்சுருக்காரு. உள்ள இருக்கறவங்க யாராச்சும் கொஞ்சம் பொய்யா எதாவது சொன்னா, வெளிய இருந்து நாம அசிங்கமா திட்டலாம். ஆனா கமல் அப்படி சொல்ல முடியாது. ஆனா அதுக்கு பதிலா ஒரு ரியாக்சன் வருது பாருங்க. ப்பா..நம்ம திட்டறதவிட பலமடங்கு காரி துப்புது அது. உடல்மொழி, சின்ன சின்ன Nuances, டக்குனு வர்ற Counter, நுணுக்கமான நகைச்சுவை உணர்வுனு நேத்து முழுக்க சூரசம்ஹாரம் .

மனநலம் பாதிக்கப்பட்டவங்கள கிண்டல் பண்ணத கண்டிச்சது, மருத்துவ முத்தம், காயத்ரிட்ட முடிய தூக்கி காமிச்சது, சக்திட்ட டக்குனு மலையாளத்துல சம்ஸாரிச்சது, திராவிடத்த பத்தி நறுக்குனு சில பாயிண்ட் எடுத்து விட்டது, சைடு கேப்ல பரணிய சப்போர்ட் பண்ணது, என் தங்கைய வெளிய அனுப்பறேன்னு ஜுலிய பாதுகாத்ததுனு ஒவ்வொன்னும் அப்படியொரு ராஜதாண்டவம். A Pure Bliss to Watch him on Screen !!

தெரிஞ்சோ இல்ல தெரியாமலோ கமல் ஒரு சூப்பரான Scenario வ தன்ன சுத்தி கட்டமைச்சுகிட்டாரு. ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்களோட உரையாடக்கூடிய இந்த ஷோ, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளுடனான உரசல், அதபத்தி அப்பப்ப இங்க ஒன்னு ரெண்டு வார்த்தைனு ஒரு சூப்பரான பேக்கேஜ் இது. பாக்கறவன ஈசியா ‘ஆண்டவருக்கு வெளிய எத்தன பிரச்சினை..அமைச்சர்களோட தகராறு, கோர்ட்ல கேஸ் அதுஇதுனு…ஆனா எல்லாத்துக்கும் நடுவுலயும் இங்க வந்து செமயா கலக்குறாரு பாரேன்’னு முடிய நட்டுக்க வைக்குற ஒரு பேக்கேஜ். And he is enjoying every bit of it 🙂

ஆனா கமல தாண்டி இதுல கவனிக்க நிறைய விஷயம் இருக்கறதா நான் உணர்றேன். இதுக்கு பெர்ஃபெக்ட் உதாரணம் ஜுலி. உள்ள வரும்போது எல்லாரோடயும் அதிகமான கைத்தட்டல்களோட வந்தது ஜுலிதான். ஆனா போகும்போது எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் கூட கைத்தட்டல. கமல்ட்ட பேச வரும்போது கேட்ட கைத்தட்டல்கூட எடிட்டிங்ல சேத்தமாதிரி தான் இருந்துச்சு.

ஒரு சின்ன ஆனா பிரபலமான மேடை கிடைச்ச பரபரப்புல, நிறைய பொய், அதை மறைக்க நாடகங்கள், துரோகம், அடிமை மனோபாவம்னு தன் இருப்பை தக்க வைக்க பண்ண அத்தனை விஷயமும் இறுதில என்ன மாதிரியான விளைவுகள திருப்பிக்கொடுக்கும்னு எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும். ஜுலிக்கு கண்டிப்பா புரிஞ்சுருக்கனும். அப்படியே ஆப்போசிட் ஓவியா. உண்மையா இருக்கறோமோ இல்லையோ, உண்மையா இருக்கறவங்கள நமக்கு உள்ளாற புடிக்கும்ன்றதுக்கு ஓவியாக்கு கிடைக்கற இவ்ளோ அன்பும் உதாரணம்.

ஜுலிய அசிங்கப்படுத்தும் அந்த வீடியோவ அங்க போட்டுக் காட்டுனது பயங்கரமான உத்திதான். ஆனா அத கன்பெஷன் ரூம்லயோ, இல்ல வேறெப்படியோ போட்டுக் காட்டிருக்கனும்ன்றது என்னோட கருத்து. அத்தன பேருக்கு முன்னாடி தன்னோட முகமூடி கிழிஞ்ச அவமானத்த மறைக்கத் தெரியாம அந்த பொண்ணு பட்ட பாடு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு.

அதேமாதிரி மனசோட ஆழத்துல ஊறுன மேட்டுக்குடி மனோபாவம் என்ன ஆனாலும் மாறாதுன்றதுக்கு காயத்ரி பக்கா எடுத்துக்காட்டு. தான் பண்ண தப்ப சுட்டிக்காட்டுனா கூட சுட்டிக்காட்டறவன குறை கண்டுபுடிக்கறதுலாம் அல்டிமேட் சில்லறத்தனம். அதுவும் கமல பத்தி பொறணி பேச ஆரம்பிச்சதும், அசிங்கமா பேசுனதுக்கு தன்னோட வேலய காரணமா சொன்னதும், மயிறுனு சொன்னதே என்னப் பொறுத்தவரைக்கும் கம்மிதான்னு சொல்றதுலாம் என்னா திமிர்ல வர்ற வார்த்தைகள்ல?

இப்பவரைக்கும் ஓவியாக்கும் கிடைச்ச ஓட்டுக்களும் கைத்தட்டல்களும்தான் ஓவியா மேல காயத்ரி கொண்ட வன்மத்துக்கு காரணம்னு நான் நம்புறேன். காயத்ரி நாளைக்கு வெளிய வந்து கமல்ட்ட பேசும்போது, காயத்ரிக்கு வரவே வராத, ஆனா ஓவியானு பேர சொன்னா அதிரப்போற கைத்தட்டு மட்டுமே போதும், காயத்ரி வயிறெரிய. ஹாட்ஸ்டார்ல பாத்து வயிறெரியுறதுலாம் அப்பறம்.

ட்விட்டர்ல முந்தி ஒரு ட்வீட் படிச்சேன். ‘காயத்ரி இந்த வாரம் பிக் பாஸ் எடிட்டர நாமினேட் பண்ணப்போறா பாரேன்’னு. அதுக்கான வாய்ப்புகள் பிரகாசமா தெரியுது. ஆனா பண்ணப்போறது காயத்ரியா ஆரவ்வானு தெரியல 🙂 காயத்ரி வெளிய போகப்போறது தெரிஞ்சு, நானே விரும்பித்தான் போறேன்ற இமேஜ உருவாக்கதான் அழுத மாதிரி எனக்குத் தோனுது.

ரைசா, சிநேகன், வையாபுரி மேல நிறைய மரியாதை வந்துருக்கு. கணேஷ் வெங்கட்ராம பாத்தா மைக்கேல் மதன காமராஜன்ல வர்ற பீம்பாய் தான் ஞாபகத்துக்கு வருது. யார் கௌம்புனாலும் பெட்டிய தூக்கிட்டு போய் வழியனுப்பறது. சக்தி பத்தி சொல்றதுக்கு நெஜமா எதுவும் இல்லை. காயத்ரியோடு மேல் வெர்ஷன். ஓவியா இல்லாததாலயா இல்ல ஜுலி இல்லாததாலயானு (நிஜமா நாம ஜுலியயும் மிஸ் பண்ணுவோன்றது என் நம்பிக்கை) தெரியல..ஆனா இன்னைக்கு எபிசோட் ரொம்ப மொக்க. ரைசா ஆரவ்வ குடஞ்சு குடஞ்சு கேட்டத தவிர.

மத்தபடி கமல் சொன்ன மாதிரி 100 சதவிகிதம் இது ‘Social Experiment’ தான். அத நாம எப்படி எடுத்துக்கறோமோ அப்படி இருக்கு. சுயபரிசோதனையா எடுத்துக்கலாம். திண்ணைப்பேச்சா எடுத்துக்கலாம். நம் மனசுல இருக்கற அழுக்குகள இன்னொருத்தர் தலைல கட்டி, அவங்கள திட்டுற வடிகட்டியா எடுத்துக்கலாம். இல்ல சும்மா சீரியல் மாத்ரி ஒரு கதையா எடுத்துக்கலாம். யார் யாருக்கு எப்படி உள்ளே செல்கிறதோ, அப்படியேதான் வெளிய வரும்னு நம்புறேன். எது எப்படியோ, கமல் மேடைல ரியாக்ஷன்களால ஆடப்போற ருத்ரதாண்டவத்துக்காகவே வார இறுதிகள்ல பிக் பாஸ் பாக்கப்போறது உறுதி.

அண்ணாத்த பயங்கரமா ஆடுறார். ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஜெயசந்திர ஹாஸ்மி

அர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

சரியாக நூறாண்டுகளுக்கு முன்பாக உழைக்கும் மக்களுக்கான முதல் அரசை, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி சோவியத் ரஷ்யாவில் நிறு வியபோது,முதலாளித்துவ பத்திரிக்கையை மூடுவதற்கு லெனின் ஆணையை வெளியிடுவார் .

அப்போது,இது ஜனநாயக விரோதம், ஜார் செய்வதை நாம் திரும்ப செய்வதாகாதா என கட்சிக்குள்ளேயே விவாதங்கள் கிளம்புகிறது …இதற்கு பதிலுரைக்கிற லெனின், பத்திரிக்கை ஜனநாயகம் என்பது வர்க்க நலனுக்கு ஏற்பவே செயல்படும் என்றும், நாம் இப்போதுதான் பாட்டாளிகளின் புதிய அரசை நிறுவியுள்ளோம்,தற்போது அவர்களை அனுமதித்ததால், நமது புரட்சியை திரித்தும் புரட்டியும் அவதூறு செய்து,மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள், நமது முன்னேற்ற பணிகளை முடக்கிவிடுவார்கள் என பாட்டாளி வர்க்க நலனின் பெயரில் விளக்குவார்.. .

இன்று பத்திரிக்கையின் வளர்ந்த தொழில்நுட்ப வடிவமாக காட்சி ஊடகம் உள்ளது.
ஒவ்வொரு ஊடக சேனலும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள்,முதலாளிகள்,தேசிய முதலாளித்துவ கட்சிகள் அவர்களின் பிரதிநிதிகள் சார்பாக நடத்தப்படுகின்றன.

தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனுக்கு ஒரு சேனல், திமுக கொள்ளை கும்பலுக்கும் அதிமுகக்கவிற்கும் ஒரு சேனல். தேசிய அளவிலும் இதுபோல டைம்ஸ் நவ், CNN IBN என பல சேனல்கள்.இந்தியாவின் முதலாளித்துவ ஜனநாயக சார்பாளார்களாக,முதலாளித்துவ நலன்களின் பெயரிலேயே அவர்களின் பிரதிநிதிகளால் இந்த சேனல்கள் நடத்தபப்டுகிறது.

தேசிய வெறியூட்டல் அரசியல், இஸ்லாம் வெறுப்பு, பாகிஸ்தான் வெறுப்பு, இராணுவ வெறியூட்டல், சூடோ செக்குலரிசம் பேசுவதுதான் இவர்களின் ஊடக விவாத மையம்.தேசிய வெறியூட்டல் அரசியலை சேனலுக்கான சந்தை வியாபாரமாக பயன்படுத்தப்படுகின்றன.

செய்திகள் ஆனாலும் விவாதங்கள் ஆனாலும் இந்த சட்டகத்திற்கு ஏற்ற நபரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். காட்டுக் கத்தல் கத்துவது, டி ஆர் பி ரெடிங் ஏற்றுவதுதான் இவர்களின் அதிக பட்ச நோக்கம்..

இந்த வியாபாரத்திற்கு ஏற்ற நபர்களை நம்பி முதலாளிகள் முதலீடுகள் செய்கின்றனர்.அதிலொரு புதிய வரவுதான் அர்னாபை வைத்து வந்துள்ள ரிபப்ளிக் சேனல்.எவ்வாறு “நம்பிக்கை” என்ற பொருள் வழங்குகிற ரிலைன்ஸ் அம்பானிகள் அதற்கு நேரதிராக இருக்கிறார்களோ அது போலவே குடியரசு என்ற பெயருக்கு எதிரான நேரதிரனான கருத்துப் பரப்பு அரசியலை குடியரசு என்ற பெயரில் இந்த கும்பல் மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக அணு உலை எதிர்ப்பு செயற்பாட்டாளரும் பச்சை தமிழக கட்சியின் தலைவருமான தோழர் சுப உதயகுமார் மீது ஸ்டிங் ஆபெரசன் என்ற பெயரில் மலிவான குற்றச்சாட்டை முன்வைத்து அவதூறை பரப்பி வருகிறது அர்னாப் கும்பல்.அணு உலைப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமையிடமான சர்சிக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும்,தோழர் உதயகுமாருக்கும் பல்வேறு வழிகளில் வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது என்றும் பழைய பல்லவியை புதிய வழியில் மீண்டும் கூச்சலிட்டு திரிகின்றனர்.

வெறும் டி ஆர் பி அதிகரிப்பிற்கும் தேசிய வெறியூட்டல் பிற்போக்கு அரசியல் நலனின் பெயரில் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இந்த வெக்கங்கெட்ட வேலையை கூச்ச நாச்சமின்று சாதனை போல விளம்பரப் படுத்தி வருகின்றனர்.

மோடி ஆட்சியில் இதுபோன்ற அவதூறு கருத்துப் பரப்பல் ஒன்றும் புதிதானது அல்ல.மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உளவுத் துறை அறிக்கை ஒன்றை வேண்டுமென்ற தனது அல்லக்கை ஆதரவு ஊடகங்களில் கசியவிட்டு இவ்வகையான அவதூறுகளை அவர்கள் பரப்பியது நினைவிருக்கலாம்.

அப்புலானாய்வு அறிக்கையின் சாராம்சம் இதுதான்: மேற்குலக நாடுகளிலிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைத் தன்னார்வ தொண்டு நிறுவன‌ங்கள் முடக்குகின்றன! இந்த அறிக்கையின் நவீன கால மருப்பதிப்புதான் அர்னாப் கும்பலின் அயோக்கியதன அவதூறுகள்…கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் 5,6 அணு உலைகள் நிறுவுவதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை திசை திருப்ப தற்போதே திட்டமிட்டு இந்த கருத்துப் பரப்பலை துவக்கியுள்ளார்கள்..


இந்த தேச பக்தாசை பொறுத்தவரை, அரசின் குற்றவியல் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் அந்நிய நாடுகளிடமிருந்து பணம் வாங்கிப் போராட்டத்தை நடத்தும் அந்நிய நாட்டுக் கைக்கூலிகள்,இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பவர்கள், இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானவர்கள்!

ஆனால் நாட்டின் பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிதியை ஆதரிப்பவர்கள்,சொந்த நாட்டு மக்களின் மரபு விதை உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பவர்கள், பூர்வகுடி மக்களை விரட்டிவிட்டு மலைகளையும் அதன் கனிம வளங்களையும் உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பவர்கள், தேசிய இன மக்களின் அரசியல்-கலாச்சார-மொழி உரிமையை/விடுதலையை நசுக்குபவர்கள், ஆற்றை நீரோடும் கரையோடும் அந்நிய நிறுவனத்திற்கு கையளிப்பவர்கள்,சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நிலத்தை, நீரை, உழைப்பைச் சுரண்டி கொழுப்பவர்கள், இத்யாதி…… இத்யாதி இவர்கள் அனைவரும் தேசத்தின் பாதுகாவலர்கள், வளர்ச்சியின் நாயகர்கள்.!

உண்மை என்னவென்றால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கு வருகின்ற வெளிநாட்டு நிதியால்தான் மனித நாகரிகத்திற்கு சவால் விடும் வகையிலான மிக மோசமான மத பயங்கரம் கட்டவிழ்த்துப்படுகிறது. உதாரணமாக “இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டிலிருந்து பாஜக கட்சிக்கு நிதி வாங்குவதற்கு அந்நிய நிதி பரிமாற்ற கொள்கையையே மாற்றம் செய்த அயோக்கிய கும்பல்தான் வெளிநாட்டு நிதி குறித்து அதிகம் அக்கறை கவலைப்படுகிறது!

தனது வர்க்கசார்பு கொள்கை முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் “இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து” “நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை”,”வல்லரசுக் கனவை நசுக்க மேற்குலக நாடுகளின் சதி” போன்ற கருத்துநிலை மேலாதிக்கச் சொல்லாடல்களின் வாயிலாக தனது மக்களுக்கு எதிரான,இந்திய தரகு முதலாளிகள், அந்நிய முதலாளிகளுக்கு ஆதரவான குற்றவியல் நடவடிக்கைகளை வெகுசனப் பரப்பில் அர்னாப் போன்ற ஊடக வியாபார கும்பல்கள் நியாயப்படுத்துகிறது.

ஆளும் வர்க்கத்திற்கு எடுபிடிகளாக இருக்கின்ற பிழைப்புவாத காட்சி அச்சு ஊடகங்களை அம்பலப்படுத்துவோம் ..மண்ணின் மக்களின் நலன்களுக்காக போராடுகிற ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவையும் அரவணைப்பையும் வழங்குவோம்..அவ்வகையில் தோழர் சுப உதயகுமார் மீதான பாஜக கும்பலின் அவதூறுகளுக்கு எதிராக அரசியல் கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

அர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன? சுப. உதயகுமாரன் விளக்கம்

அர்னாப் கோஸ்சுவாமியின் ரிபப்ளிக் டிவி, செவ்வாய்கிழமை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு செயல்பாட்டாளரும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகிய சுப. உதயகுமாரன் மீது வெளிநாட்டு நிதி பெற்றதாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது. இதற்கு ‘ஆதாரமா’க ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ ஒன்றையும் அந்த டிவி ஒளிபரப்பியது. அந்த வீடியோ குறித்தும், ரிபப்ளிக் டிவி சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.

“வட இந்திய டிவி ஒன்றில் என்னைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி பரப்பப்படுவது எனக்குத் தெரியும். அவர்கள் நிகழ்ச்சியிலேயே மதியம் 2 மணிக்கு பதில் சொல்லிவிட்டேன். கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணு உலைகள் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து, அடுத்த மாதம் அஸ்திவாரப் பணிகளைத் துவங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நாங்கள் நெல்லையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் ஒன்றை மே மாதம் நடத்தினோம். ஊர் ஊராகச் சென்று மக்களை சந்திக்கவும் முடிவு செய்தோம். இந்த நிலையில்தான் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பணமும், சர்ச் பணமும் வந்திருக்கின்றன என்கிற அவதூறைக் கிளப்புகிறார்கள். இது கேட்டுக் கேட்டு புளித்துப்போனக் குற்றச்சாட்டு. என்ன நடந்தது?

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஓர் இளம்பெண் வீட்டுக்கு வந்து தான் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு செய்வதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். நிறையப் புத்தகங்கள் இலவசமாகக் கொடுத்தேன். கேள்விகள் கேட்டாள், பதில் சொன்னேன். வீட்டில் டீ போட்டுக் கொடுத்தார்கள்.

தனது பேராசிரியர் ஒருவர் கொஞசம் நிதியுதவி செய்ய விரும்புவதாகச் சொன்னாள். நான் இயக்கத்துக்கு எப்போதுமே வங்கிக் கணக்கு கிடையாது அதனால் நான் அந்த உதவியைப் பெற முடியாது என்றேன். வேறு எந்த வழியிலும் உதவ முடியாதா என்று கேட்டாள். எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எங்கள் கட்சிக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதிலும் வெளிநாட்டு பணம் போட முடியாது என்றெல்லாம் சொன்னேன்.

நீ கூட வெளி நாட்டிலிருந்து பணம் போட முடியாது, ஆனால் உன் பெற்றோர் இந்தியாவுக்குள்ளே இருந்து பணம் போட முடியும் என்பது போன்ற விபரங்களைச் சொன்னேன். பணம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ரசீது கொடுத்துவிடுகிறோம் என்பதையும் சொல்லி, வெளிநாட்டுப் பணம் பெற நான் விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் நடந்தது. அவளிடம் என் புத்தகங்களுக்குக்கூட காசு வாங்கவில்லை. வருங்காலத்தில் பணம் அனுப்பு என்றும் சொல்லவில்லை.” என தெரிவித்துள்ளார்.

”திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; ஸ்டாலின் உருண்டு வந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது”: டிவி விவாதத்தில் ஆவடி குமார்

திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாதும் என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ஆவடி குமார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தெரிவித்தார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ‘காலத்தின் குரல்’ என்ற விவாத நிகழ்ச்சியில், “எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் அதிமுக அணிகள் மீது புகார் சி.பி.ஐ. விசாரணை அவசியமா?” என்ற தலைப்பில் செவ்வாய்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை மு.குணசேகரன் நெறியாள்கை செய்தார்; அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சாளர் ஆவடி குமார், திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன், பத்திரிகையாளர்கள் ப்ரியன், கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

விவாத நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் எம் எல் ஏக்கள் விலைபோனது குறித்து பேசப்பட்டது. அப்போது திமுகவின் பரந்தாமன் வாக்களித்த மக்கள் பாவம்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக அத்தியாயம் ஒரு கரும்புள்ளி’ என தெரிவித்தார்.  அதற்கு எதிர்வினையாற்றிய ஆவடி குமார்,  “திமுகவின் கடைசி முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு பிறகு வாய்ப்பில்லை, இதை நீங்கள் வரலாற்றில் பார்ப்பீர்கள். ஸ்டாலின்(திமுக செயல்தலைவர்) தமிழகம் முழுவதும் உருண்டு வந்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என தெரிவித்தார்.

குறுக்கிட்டு பதிலளித்த பரந்தாமன், “தளபதிதான் அடுத்த முதல்வர்; நீங்கள் விரும்பி சட்டையைக் கிழித்தாலும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்றார்.

 

தீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சமீபத்தில் போயஸ் இல்லம் சென்றிருந்தார். அப்போது போயஸ் இல்லத்தில் தன்னையும் தன் கணவரை சிலர் தாக்கியதாக தெரிவித்திருந்தார். மேலும் தன் அண்ணன் தீபக் வேண்டுமென்றே தன்னை வரவழைத்து கொல்ல முயற்சித்ததாகவும் ஜெயலலிதாவை சசிகலாவுடன் சேர்ந்து கொல்ல தீபக் உடந்தையாக இருந்ததாகவும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. போயஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீபாவின் படத்தை முன் அட்டையில் போட்டு ‘நான் தான் சொப்பனசுந்தரி, என்னை யாரு வெச்சிருக்கா?’ என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை.

குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த அட்டைப்படத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது.

பாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா?

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்தது. அதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விவாதம் ஒன்றை நடத்தியது. அந்த விவாதத்தை நெறியாள்கை செய்தவர் நிதி ரஸ்தான் என்ற பத்திரிகையாளர்.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரதிநிதி, மனித உரிமை செயல்பாட்டாளர், திமுக பிரதிநிதி, பாஜக செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் கட்சியில் இருக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். அதுகுறித்து நிதி ரஸ்தான் கேட்ட கேள்விக்கு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா என்பவர், “உங்களுக்கு(எண்டீடிவிக்கு) மறைமுக அஜெண்டா இருக்கிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதற்கு இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை பேச வேண்டாம் என அறிவுறுத்தினார் நிதி. சம்பித் பாத்ரா தொடர்ந்து ‘மறைமுக அஜெண்டா’ குறித்து பேச நீங்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் என அறிவித்தார் நெறியாளர்.

இந்நிலையில் இந்த வெளியேற்ற நிகழ்வுதான் எண்டீடிவி நிறுவனர் வீட்டில் சிபிஐ சோதனைக்குக் காரணம் என பலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

“ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”: சிபிஐ சோதனை குறித்து எண்டீடிவி

வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய எண்டீடிவி நிறுவனர் பிரனாய் வீட்டில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தவறனான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலை எண்டீடிவி மீதும் அதன் புரோமோட்டர்கள் மீதும் சிபிஐ ஏவிவிட்டுள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொடர்ந்து பல்வேறு வழிகளில் தங்கள் மீது ஏவிவிடப்படும் இத்தகைய தாக்குதலை சோர்வில்லாமல் எதிர்கொள்வோம். இந்திய ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் குறைத்து மதிப்பிடும் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.

எங்களைப் போன்றோரை அழிக்க காத்திருக்கிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்..எங்கள் நாட்டுக்காக போராடுவோம்; இத்தகைய சக்திகளை முறியடிப்போம்” என எண்டீடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பலரும் எண்டீடிவி நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

NDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு

எண்டீடிவி இணை நிறுவனரான பிரனாய் ராயின் டெல்லி மற்றும் டெராடூனில் உள்ள வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 48 இழப்பு ஏற்படுத்தியதற்காக பிரனாய் ராய் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ராய் மீதும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரான பிரனாய் ராய் தன்னுடைய மனைவி ராதிகா ராயுடன் இணைந்து 1988-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது எண்டீடிவி நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார்.

2015-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தின் மீது சட்டவிரோதமான வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அது குற்றச்சாட்டு பொய்யானது என எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் வங்கி முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை இன்று நடத்தப்பட்டிருக்கிறது. எண்டீடிவி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

எண்டீடிவி ஊடகங்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் போக்குகளை தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுதான் சிபிஐ ரெய்டுக்கு காரணம் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் திராவிட இயக்க செயல்பாட்டாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தம்பி தமிழரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்து புராண-இதிகாசங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் குறித்து சுப.வீ பேசினார். நாராயணன் பசுவின் புனிதம் குறித்து விளக்கினார். மிருகவதை குறித்து கவலைப்படும் பாஜக அரசு, ஆடுகள், கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது குறித்து கவலைப்படவில்லையா? என விவாதத்தின் ஒரு கட்டத்தில் சுப.வீ கேட்டார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத நாராயணன், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசினார். இடையில் தொகுப்பாளர் அத்தியாவசியமான உணவில் கைவைக்கலாமா? என கேட்டார்.

அதற்கு  நாராயணன் நீங்கள் யார் ஜட்ஜ் செய்ய? என கொந்தளித்து தனது மைக்கை கழற்றினார். தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்க நாராயணன் மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்பச் திரும்பச் சொன்னார்.

வீடியோ இணைப்பு கீழே…

தர்மம் மறுபடி வென்றது!

கதிர்வேல்

கதிர்வேல்

குமுதம் கேஸ் என்னது என்று மீடியாவுக்கு வெளியே உள்ள நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக சுருக்கம்.

எஸ்.ஏ.பி.அண்ணாமலை செட்டியார் தொடங்கியது குமுதம். நிர்வாகியாக வேலைக்கு வந்த நண்பர் பி.வி.பார்த்தசாரதி அய்யங்காரை பார்ட்னர் ஆக்கினார். 2/3 செட்டியாருக்கு, 1/3 அய்யங்காருக்கு. நல்ல நண்பர்கள். சண்டை வரவில்லை.

அண்ணாமலையின் மகன் ஜவகர் பழனியப்பன் டாக்டர். அமெரிக்காவில் செட்டிலானார். இதய சிகிச்சையில் ஓகோ என்று தொழில் போனது.

பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் இங்கே நிர்வாகத்தை கவனித்தார். நாள்போக்கில் எடிட்டோரியல் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார். வேறு பல வேலைகளும் செய்து தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார்.

அந்த வேலைகள் ஜவகர் பார்வைக்கு சென்றதும் அவர் கணக்கு கேட்டார். விவகாரம் வெடித்தது. சமூக, அரசியல் பெரியவர்கள் சமாதானம் பேசினார்கள்.

உடன்பாடு ஏற்பட்டது. ரிப்போர்ட்டர், சிநேகிதி வரதராஜனுக்கு; குமுதம் உள்ளிட்ட ஏனைய 7ம் ஜவகருக்கு. இருவரும் கையெழுத்து போட்டனர்.

பிரிந்து செல்ல கெடு நெருங்கியதும் வரதராஜன் மனம் மாறினார். ஒப்பந்தம் செல்லாது என்றார். கையெழுத்து போட நிர்பந்தம் காரணம் என்றார்.

அதோடு நிற்கவில்லை. வெளிநாட்டு பிரஜையான ஜவகர் இந்திய பத்திரிகை கம்பெனியில் பங்குகள் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை; ஆகவே குமுதத்தில் அவருக்கு உரிமை இல்லை என்றார்.

ரிசர்வ் பேங்க், கம்பெனி லா போர்ட் விசாரித்தன. ஜவகர் வெளிநாட்டு பிரஜை ஆனபிறகு குமுதம் பங்குகளை வாங்கவில்லை; வாரிசு என்ற முறையில் கிடைத்த பங்குகள் வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கின.

வரதராஜன் விடவில்லை. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்டை – ஈடி – அணுகினார். அதில்தான் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அவரது முயற்சிகள் தோற்று, ஜவகரின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன.

ஜவகருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். கிருஷ்ணா மெய்யம்மை. எழுத்தாளரும்கூட. சில காலம் எடிட்டோரியல் பொறுப்பை கவனித்த அனுபவமும் உண்டு. அவரும் அவரது தாயார் கோதை ஆச்சியும் குமுதம் வளாகத்துக்குள் நுழைய முடியாதவாறு கெடுபிடி காட்சிகள் வரதராஜனால் அரங்கேற்றப்பட்டது.

25 கோடிக்கு மேல் வரதராஜன் மோசடி செய்ததாக கோதை ஆச்சி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எழுபது வயதாகும் குமுதம், ஜவகர் தலைமையில் அடுத்த அத்தியாயத்தை இளமைத் துடிப்புடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்.

ஒரு இளைஞனின் வாழ்வை சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகை!

கருப்பு கருணா

கருப்பு கருணா

இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..?

இந்த கொடுமையான செய்தியை பாருங்கள்.

திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன்.படித்த..முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.மார்க்சிய,அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர்.

இவரைப்பற்றி ” விவசாயிகள் போர்வையில் தீவிரவாதி ? ” என்று தலைப்பிட்டு தமிழக அரசியல் என்ற வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 42 நாட்களும் கலந்துகொண்டார் என எழுதியுள்ளது அப்பத்திரிகை.ஆனால் அவரோ கடந்த 16 ஆம் தேதி புறப்பட்டு 18 ஆம் தேதிதான் அங்கு போய் சேர்ந்தார்.23 ஆம் தேதி போராட்டம் முடிந்தவுடன் அய்யாக்கண்ணுவுடன் ரயிலிலேயே புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார். மொத்தம் 6 நாட்கள்தான் அங்கு இருந்தார்.ஆனால் 42 நாளும் இருந்தார்ன்னு பொய்யை எழுதி கதையை துவக்குகின்றனர்.

இவர் முகநூலில் போட்ட பதிவுகளை வைத்து இவர் காஷ்மீர் தீவிரவாதி என்று புனைகிறார்கள். அப்சல் குருவை தூக்கிலிட்டதை விமர்சித்து பதிவு போட்டிருப்பதால் தீவிரவாதிதான் என முடிவுக்கு வருகிறார்களாம். நானும்கூடத்தான் அப்சல்குருவை தூக்கிட்டதை எதிர்த்தேன்.ஆனால் அவரை மட்டும் தீவிரவாதி எனக்குறிப்பிட அவரது இஸ்லாமிய பெயர்தானே காரணம்.

சில நாட்களுக்கு முன் 99 wiki என்ற காவி இணைய இதழிலும் இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பினார்கள்.அதுகுறித்து பலரும் என்னிடம் தெரிவித்தனர்.இப்போது காவிகளின் பொய்யை வைத்து தமிழக அரசியல் இதழும் ஒரு இளைஞனை…அவன் இஸ்லாமியன் என்பதாலேயே தீவிரவாதி என முத்திரை குத்துவது எந்த வகையில் நியாயம்.இப்படியொரு செய்தியை எழுதும் முன்பு சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்தீர்களா..? அல்லது போராட்டத்தை நடத்திய அய்யாக்கண்ணுவிடமாவது கேட்டீர்களா..?

இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல். இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும்.மனித உரிமை அமைப்புகள் இதனை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இதனை பரவலாக பகிர்ந்து காவிகளை…போலி பத்திரிகைகளை அம்பலப்படுத்துவோம். ஒரு நல்ல மனிதனை பாதுகாப்போம்.

கருப்பு கருணா, தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்.

சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்

சன் செய்தி ஆசிரியர் ராஜா, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அந்த பெண்ணைப் பற்றியே அவதூறாக பேசியும் இழிவான தகவல்களை வெளியிட்டு, ராஜா நல்லவர் என்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வேலை செய்துவந்த எட்டு பெண் செய்தி வாசிப்பாளர்களும் பொய் சாட்சியம் அளித்தனர். இது தொடர்பாக சன் நியூஸ் ராஜாவால் பாதிக்கப்பட்ட‌ அந்த பெண், தன்னை இழிவாக சித்தரித்த எட்டு பெண் செய்தி வாசிப்பாளர்கள் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, விசாரணைக்காக அந்த எட்டு பெண்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் ஆஜராகாததைத் தொடர்ந்து  இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த எட்டு பெண்களும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் சன் நியூசில் வேலை செய்யும் முறையே 1. அர்ச்சனா, 2. கிருத்திகா, 3. பானுமதி, 4. காமாட்சி (சத்தியம் டிவி), 5. அருணா (தந்தி டிவி), 6. திவ்யா (நியூஸ் 18) உள்ளிட்ட ஏழு பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து  நீதிபதி உத்தரவிட்டார்.

“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி

சந்தோசம்ம்ம்ம்…

’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்…

தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா?

‘தி இந்துவின்’ மனித குல விரோத, தமிழின விரோத, சிங்கள ஆதரவு-பார்ப்பனிய ஆதரவு செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுமா?

‘இட ஒதுக்கீடு’ குறித்தும், ‘தலித்துகள் வேலைவாய்ப்பு” குறித்தும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் ‘தி இந்துவில்’ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு பெரும்பான்மை இட ஒதுக்கீடு வேலையில் கிடைக்குமா?

குறைந்த பட்சம் இனிமே ‘தி இந்து’ அலுவலகத்துல அசைவ உணவாவது சாத்தியமாகுமா?…

‘பெரியார் திராவிட இயக்கத் தோழர்களை” தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தாலும் ’திராவிட சித்தாந்தத்தை கைவிடவில்லை’ என்று சொல்லும் திமுகவின் தலைமை, ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிரை எதிர்கொள்ளுமா?..

இருந்தாலும், ’அம்பானி’யோட கம்பெனிக்கு, ’அதானி’ தொழிற்சங்க தலைவர் ஆன ஃபீலிங் வருவதைத்தான் தவிர்க்க முடியவில்லை.

திருமுருகன் காந்தி, சமூக செயல்பாட்டாளர்.

ஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், மகப்பேறு விழிப்புணர்வு கட்டுரை..” ஆ.விகடனை விமர்சிக்கும் இயக்குநர்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் குற்றங்களை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’.  அறிவழகன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். சினிமா விமர்சனங்களுக்காக தனித்த அடையாளம் உள்ள ஆனந்தவிகடன் ‘குற்றம் 23’ படத்துக்கு பிற்போக்கான விமர்சனம் தந்திருப்பதாக படத்தின் இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

“ஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், மகப்பேறு விழிப்புணர்வு கட்டுரை. ஆனால் முற்போக்கான தத்தெடுப்பதை வலியுறுத்திய திரைமொழிக்கு பிற்போக்கான விமர்சனம்” என ஆனந்த விகடன் பெயரை குறிப்பிடாமல் அவர் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்.

ஜக்கியின் தரப்பை கேட்டதுபோல செயல்பாட்டாளர்களின் தரப்பையும் ஊடகங்கள் கேட்க வேண்டும்!

ஒடியன் லட்சுமணன்

ஒடியன் லட்சுமணன்
ஒடியன் லட்சுமணன்

வழக்கமான ஜக்கிவாசுதேவின் பேட்டிக்கும் நேற்று அவர் அளித்த பேட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது . தன்மேல் வீசப்படுகின்ற குற்றச்சாட்டுகளை அவர் நிச்சயமாக மகிழ்வுடன் எதிர்கொள்ளவில்லை. அவரின் உடல்மொழியும் கண்களும் பதட்டத்தையே காட்டியது.அந்த சிரிப்புகூட வரட்டுத்தனமாகவே இருந்தது அவரிடம் இருப்பது ஞானமல்ல சாதரணமான பொதுப் புத்திதான் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

அவர் சொன்னது பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானதுதான்.

செயல்பாட்டாளர்கள் 3 வருடங்களாக ஆவணங்களைத்திரட்டும் வேலைகளை மட்டுமே செய்துவந்தனர். அது முழுமையடைந்த பிறகே பேசவும் எழுதவும் போராடவும் செய்தனர்.

குற்றம் ஏதுமில்லையென்றால் நீர் மற்றும் யானை வழித்தடங்களை மீட்கப்போராடும் போராளிகளை இரண்டு கோடிக்கு அவருடைய ஆட்களைவிட்டு விலைபேசவேண்டிய அவசியமிருந்திருக்காது.

உணமையில் செயல்பாட்டாளர்கள் மதப்பாரபட்சம் பார்க்கவில்லை. அவர்கள் காருண்யாவையும் ஈசா மையத்தையும் ஒரே தட்டில்தான் வைத்துப்பார்க்கிறார்கள். சொல்லப்போனால் அதில் 96 சதமான பேர் சான்றிதழ்படி அவர்களின் குடும்ப வழக்கப்படி இந்துக்களே… வெள்ளிக்கிழமை தவறாமல் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக்கொண்டவர்கள்.

நேற்றைய பேட்டியை நான் இணையம் வழியேதான் பார்த்தேன். அங்கு போடப்பட்ட கமெண்டுகள் பல ஈசாவை எதிர்த்தே இருந்தது . இஸ்லாமியப்பெயர்களில் பல கமெண்டுகள் போடப்பட்டது.. அது தற்செயலானதல்ல.. அதைத்தொடர்ந்து செல்வன் என்பவர் இஸ்லாமிர்களே வெளியேறு என்று கமெண்டுகளை போட்டுக்கொண்டிருந்தார் . ஈசாவை ஆதரித்து ஜெகனோடு குறைந்த எண்ணிகையிலான நபர்களே சத்குரு ராக்ஸ் என்று நூறு கமெண்டுகளை தொடர்ந்துபோட்டுக்கொண்டிருந்தார்கள்.

உரிமைப் பிரச்சினைகளுக்காக செயல்படும் நண்பர்கள் ஒரு வரியோ இரண்டு வரியோ மக்களுக்கு புரியும் மொழியில் எழுதுவதற்க்கும் பேசுவதற்கும் நல்ல பலன் இருக்கிறது என்பதற்கான சாட்சியாகத்தான் அதை என்னால் பார்க்கமுடிகிறது.

ஊடகபலம் அதிகார பலம், பணபலம் பொது புத்தி இவற்றை எதிர்த்து இந்தப் பிரச்சினையை இவ்வளவுதூரம் இழுத்து வந்திருப்பது சாதரணமான விசயமல்ல… நிச்சயமாய் ஏதாவது ஒரு தொலைக்காட்சி, செயல்பாட்டாளர்களை ஒரு கூட்டுப்பேட்டிக்கு அழைத்து வாய்ப்பளிக்கவேண்டும்.

ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் கொலை வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வழக்கில் காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ததாக மிகப்பெரிய பொய்யை லட்சக்கணக் கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சியில் பேசுகிறார்.

இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். குற்றவாளி யார் என்பதை நந்தினியின் தாயார் குறிப்பிட்டும் காவல்துறை குற்றவாளி மணிகண்டனை அழைத்து விசாரித்துவிட்டு திரும்பி அனுப்பிவிட்டனர். 16 தினங்கள் கழித்து நந்தினியின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பின்னரே மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அரிய லூரில் ஜனநாயக மாதர்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்புதான் விசாரணை துரிதமாக்கப்பட்டு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே இவ்வழக்கு விசாரணையில் அரியலூர் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கை அதிமுக செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் நிர்மலா பெரியசாமி அப்பட்டமான பொய்யை சொல்லி மூடி மறைத்துள்ளார்.

மேலும் இவ்வழக்கில் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினியின் தாய் ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை எனவும், அதுவே இதுபோன்ற படுகொலைகள் நடப்பதற்கு காரணம் என்றும் குறிப் பிட்டார்.
நிர்பயா வழக்கில் இரவு 11 மணிக்கு அவள் பயணம் செய்ததும், சுவாதியின் படுகொலைக்கு அவளது செயல்பாடுகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஆணாதிக்க கருத்துக்களை கேட்டு கேட்டு புளித்துவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இத்தகைய பேச்சுக்களை பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.

நிர்மலா பெரியசாமி போன்றோரின் இத்தகைய பேச்சு குற்றவாளிகளின் நடத்தை குறித்து என்றுமே பேசுவதில்லை. இப்படிப்பட்ட பேச்சுக்கள் குற்றங்களை குறைக்க உதவாது மாறாக குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டும் வகையில்தான் அமையும்.

இவரது அத்தகைய பேச்சுக்கள் பெண்களின் முன்னேற்றத்தை பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் செயலாகும்.

எனவே பெண்களை இழிவாகப்பேசிய அதிமுக வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமியின் அரசியல் ஆதிக்க, ஆணாதிக்க, சாதியாதிக்க கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

– எஸ்.வாலண்டினா, மாநிலத் தலைவர்
பி.சுகந்தி, மாநிலப் பொதுச்செயலாளர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; டியூஜெ கண்டனம்

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் போடாமல் மூடிவைத்திருக்கும் வங்கி நிர்வாகங்களையும், மத்திய அரசையும் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில், வாலிபர் சங்கம்&சிபிஎம் கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியால், பலர் படுகாயமடைந்தனர். அந்த செய்தியை படம் பிடித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் தாக்கப்பட்டதுடன் அவர், எடுத்திருந்த புகைப்படங்களையும் போலீசார் அழித்தனர்.

இந்த சம்பவத்திற்கு டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாதென அறிவித்தும், 50 நாட்களாகியும் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள், உரிய அளவில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இல்லாததால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த அவலமும் தொடர்ந்து வருகிறது.

50நாட்களில் இப்பிரச்சனை தீரும் என்று அறிவித்த மத்திய அரசு 50 நாட்கள் கடந்த பின்னும் உரிய நடவடிக்கை எடுக்காதது பொது மக்கள் தரப்பில் கடும் கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்செயலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மேடவாக்கத்தில் பணம் இல்லாமல் மூடி இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் எதிரே தென் சென்னை வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

இதை கண்டித்து சி.பி.எம். கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியால் கட்சியின் முக்கிய தலைவர் செல்வாவுக்கு மண்டை உடைந்தது.

வாலிபர் சங்க பொருளாளர் தீபா, சிபிஎம் வனஜா உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிகழ்வால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. போராட்டம்& போலீசார் தடியடியை படம் பிடித்து செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கருக்கு அடி உதை விழுந்தது. அவரது கேமிரா பறிக்கப்பட்டு படங்கள் அழிக்கப்பட்டன.
இந்த தகவல் அறிந்ததும் டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் பத்திரிகையாளர் பிராச்சினைகள் தீர்க்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனரால் நியமிக்கப்படட ஐ.பி.எஸ். அதிகாரியும், துணை கமிஷனருமான ஜெயக்குமாருக்கு தொடர்பு கொண்டு தோழர் கவாஸ்கர் தாக்கப்பட்டதையும், கேமிரா பிடிங்கி படங்களை அழத்ததையும் கூறி இச்செயலை கண்டித்தத்தோடு கவாஸ்கரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கேமிராவை திரும்ப தரக்கோரியும் வலியுறுத்தினார். அதை ஏற்று கொண்ட துணை கமிஷனர், உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு, பின்னர் தொடர்பில் வந்து, அங்குள்ள உதவி கமிஷனரிடம் கூறிவிட்டேன். கேமிராவை திருப்பி தந்து விடுவார்கள். இதர நடவடிக்கையும் எடுப்பார்கள் எனக்கூறினார். அவர் கூறும் போது மணி இரவு 9மணிக்கு இருக்கும். ஆனால் துணை கமிஷனர் கூறியும் எந்த நடவடிக்கையையும் பள்ளிகரணை சரக உதவி கமிஷனர் எடுக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு, தோழர் சமீர் உட்பட பத்திரிக்கையாளர்கள் திரண்டு போராடிய பிறகு இரவு 2 மணிக்குதான் படங்களை அழித்து விட்டு கேமிராவை மட்டும் திருப்பி தந்துள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பிரஸ் கிளப் இணைச்செயலாளர் தோழர் பாரதி தமிழன், எம்.யு.ஜெ. தலைவர் மோகன், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் தோழர் சகாயராஜ் உள்ளிட்ட தோழர்கள் டி.சி ஜெயக்குமாரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தோழர் கவாஸ்கர் மீது தாக்குதல் நடத்தி, கேமிராவை பிடுங்கி புகைப்படங்களை அழித்ததற்கும் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க இயக்கத்தோழர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலையும் இதற்கு நியாயம் கேட்க சென்ற சிபிஎம் தலைவர்கள், வாலிபர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் டி.யூ.ஜெ. வன்மையாக கண்டிக்கிறது.

இச்சம்பவத்திற்கு காரணமான பெண்தோழர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக முதல்வரையும், உள்துறை செயலாளரையும், காவல்துறை தலைவரையும் டி.யூ.ஜெ வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும், தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது. தோழர் ஜாபர் மீது தாக்கு, தினமலர் டிவி செய்தியாளர் மீது தாக்கு, வடஇந்திய தொலைக்காட்சி பெண் செய்தியாளர் மீது தாக்கு, கவாஸ்கர் மீது தாக்கு என தொடர் கதையாகி வருகிறது. இது பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பத்திரிகையாளர்களின் கடமையை செய்யவிடாமல் தடுக்கும் காட்டுமிராண்டி செயலாகும்.

இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவுசெய்யும் டி.யூ.ஜெ. அமைப்பு, இதர பத்திரிகையாளர்கள் சங்கங்களுடன் கலந்து பேசி பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன இயக்கம் திட்டமிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டி.யூ.ஜெ. மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.யூ.ஜெ. தலைவர் புருஷோத்தமன் வலியுறுத்தியுள்ளார்.

தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்!

மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பணம் வராத ஏடிஎம் மையத்தின் முன்பாக மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவலர்கள் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அதை எதிர்த்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனை படம் பிடிக்க சென்ற தீக்கதிர் நிருபர் காவஸ்கர் மீதும் தாக்குதல் நடத்தி அவருடைய கேமராவையும் பறித்து காவல்துறையினர் அரஜாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்துறையினரின் செயல்பாட்டை தடுக்கும் காவல்துறையினரின் ஜனநாயக போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர். சென்னையில் இயங்கும் ஊடக சங்கங்கள் மவுனம் காத்துவரும் நிலையில், கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சாதிக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மேடவாக்கத்தில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பள்ளிக்கரனை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இதனை செய்தி சேகரிக்கச் சென்ற தென்சென்னை தீக்கதிர் நிருபர் செ. கவாஸ்கர் மீது பள்ளிக்கரணை போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரது கேமிரவையும் பறித்துச் சென்றுள்ளனர். பள்ளிக்கரனை காவல்துறையினரின் இந்த செயலை கோயமுத்தூர் பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. செய்தியாளர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமல் காவல்துறையினர் தங்கள் மீதான தவறை ஊடகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்கு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், சமீப காலமாக ஊடகத்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடப்பதும், ஊடகவியலாளரின் உடமைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையின் தலைவரும் உடனடியாக தலையீட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோயமுத்தூர் பிரஸ்கிளப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தீக்கதிர் செய்தி உதவியுடன்

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா’ன்’ ராம்மோகன் ராவ்; மண்ணுக்குள் புதையும் பத்திரிகை தர்மம்…

இன்றைய தினமலர் நாளிதழில் , வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள  ராம் மோகன் ராவ் பற்றி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“நீக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவை “அவன்” என்று ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது, நாளிதழை வாசித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலரின் அந்த வரிகளை உங்களுக்காக இங்கே எழுத்து வடிவில் தருகிறோம்.

/வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை செயலர் பதவியில் இருந்து, ராமமோகன ராவ் நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான். புதிய தலைமை செயலராக, நில நிர்வாக கமிஷனர், கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது./

/ தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அவனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 131 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. /

/ரெட்டி கொடுத்த தகவல்படி, வருமான வரித்துறை அதிகாரிகள், ராமமோகன ராவ் வீட்டி லும், அவனது உறவினர்கள் வீடுகளிலும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்; இதில், ஏராளமான ஆவணங்கள், ரொக்கம் மற்றும் தங்க நகைகள் சிக்கின. /

 /இதையடுத்து நேற்று, தலைமை செயலர் பொறுப்பில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு புதிய பணியிடம் எதுவும் வழங்கப்படவில்லை; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான்./

இப்படியாக, ராம் மோகன் ராவ் நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது பற்றிய அந்த கட்டுரை முழுவதும் “அவன், இவன்’ என்றே ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதையடுத்து சமூக வலைதளத்தில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.

https://twitter.com/ZhaGoD/status/812118801852420097

கடைகோடி தமிழனுக்கும் பத்திரிகையை கொண்டு போக வேண்டும் என்பதற்காக, சில பல எளிய மொழி நடையை அறிமுகப்படுத்தியதாக பெருமை பட்டுக்கொள்ளும் பிரபல நாளிதழான தினமலர், இதழியல் தர்மங்களை காலில் போட்டு மிதித்தே வந்திருக்கிறது இது வரையில். ஆனால், தற்போது பத்திரிகை தர்மங்களை மண்ணுக்குள் போட்டு மூடத் தொடங்கி விட்டதோ என்றும் யோசிக்க தோன்றி இருக்கிறது.

ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி டிவி. ஜெயலலிதா இறு ஊர்வல படத்தைப் போட்டு இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/thoatta/status/811830557940150272

எச்சரிக்கை: துக்ளக் ஆசிரியராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்!

அரசியல் விமர்சகர் என அறியப்பட்ட நடிகர் சோ. ராமசாமி, துக்ளக் என்ற வலதுசாரி பத்திரிகையை நடத்தி வந்தார். அண்மையில் அவர் மரமடைந்ததையொட்டி, அவர் ஆசிரியராக வகித்த பொறுப்புக்கு ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி வந்திருப்பதாக அந்த இதழ் அறிவிப்பு வெளியிட்டுருக்கிறது. வழக்கமாக ஊடகங்களில் புதிய பொறுப்புகளை அறிவிப்புகளாக வெளியிடுவார்கள். துக்ளக் பத்திரிகையை அறிவிப்பை எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் இயக்க செயல்பாட்டாளராக அறியப்படுபவர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தகுந்தது.

படம்: சஞ்சய் மூசா

அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்!

இரவிலிருந்து ஒரேயாரு செய்தி தொலைக்காட்சியை மட்டும் பார்த்து வருக்கிறோமே, சற்று மற்ற சேனல்களிலும் என்ன சொல்றாங்கன்னு பார்க்க ரிமோட்டை எடுத்து மாற்றினானால், ‘விஜய் டிவி’ ல அவங்களோட காமெடி வல்லுநர்களின் காமெடி நிகழ்ச்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில லோக்கல் சேனல்கள் கூட அம்மாவின் பழைய நேர்காணல்கள் மற்றும் அரசாங்க துக்க நிகழ்வு போன்றவற்றை ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் டிவி மட்டுமல்ல, அனைத்து சினிமா தொலைகாட்சிகளான ஆதித்தியா, சிரிப்பொலி, இசையருவி மற்றும் சன் மியூசிக் போன்ற அனைத்தும் ஆடலுடன் கூடிய பாடல்களையும், கே டிவியில் ஞான பழம் படமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரசாங்க துக்கம் என்றால் இவற்றையெல்லாம் ஒளிபரப்ப அனுமதி உண்டா இல்லையா? அனுமதி உண்டு என்றாலும் கடைபிடிக்க படுவது அரசாங்க துக்கமல்லவா அதற்காகவாது இவர்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டுமல்லவா.

நேற்று முதல் இங்கு தந்தி டிவி க்கு தடை விதிக்க வேண்டுமென குரல்கள் எழுகிறது. அதையெல்லாம் விட முதலில் இவற்றை தான் தடை செய்ய வேண்டும். ஒரு அரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இவர்களை என்ன செய்வது?

”இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ?”

விஜய் பாஸ்கர்

விஜய் பாஸ்கர்
விஜய் பாஸ்கர்

சக்தி விகடனில் ஏழே வயதான இச்சிறுவன் செய்யும் சிவத்தொண்டு (?) பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள் கழுத்தில் போட்டிருக்கும் நான்கு மாலைகளை தாங்கக் கூடிய வலு அவனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.

அப்பாவும் அம்மாவும் சிவபக்தர்கள். அதனால் பையனையும் அப்படியே வளர்த்துவிட்டார்களாம். சிவனைப் பற்றி கதாகாலட்சேபம் செய்து அதன் மூலம் வரும் பணத்தை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்களாம்.

சிவன் என்றொருவர் இருக்கிறார் அவர் கழுத்தில் பாம்பெல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று சக்தி விகடன் ஆசிரியர் நம்புகிறாரா? சரி அது ஒரு நம்பிக்கை என்று இருந்துவிட்டு போகட்டும்.

அந்தப் பையனுக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் அப்படி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இதெல்லாம் கூட பிரச்சனையில்லை. ஆனால் அதை ஏதோ ஒரு சாதனை மாதிரி சக்தி விகடன் கட்டுரை போடுவது சமூக நலனுக்கு எதிரான விஷயமாகும்.

இந்தப் பையனுக்கு கிடைக்கும் இந்த இமேஜை இப்படி பரப்புவது மூலம் அவனுக்கு கிடைக்கப் போகும் மக்கள் (மூடத்தனமான) ஆதரவால் அவன் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்று விகடன் குழுமம் நினைத்துப் பார்த்ததா?

இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ?

அட்லீஸ்ட் தியானம் யோகம் மனம் ஒஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரி ஆன்மிகத்தையாவது வளந்துவிடுங்கள் சக்தி விகடன் கோஷ்டிகளே.

இது மாதிரி காரியத்தை எப்போதும் செய்யாதீர்கள்.

தமிழர்களிடம் மதுப்பழக்கம் அதிகம் இருக்கிறது என்பதற்காக ”மதுவிகடன்” என்றொரு மதுப்புகழ் பாடும் இதழ் ஆரம்பித்து விட மாட்டீர்கள்தானே…

விஜய் பாஸ்கர், சமூக-அரசியல் விமர்சகர்.

கிளப்புற புரளியெல்லாம் செய்தியாக்குற ஊடகங்கள்தான் உண்மையான கரசேவர்கள்!

cartoon modi-new-2 unnamed

கருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா?…

பதான்கோட் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக “என்.டி.டிவி’யின் இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இதை அனைத்து எதிர் கட்சிகளும் கண்டித்தன. குறிப்பாக காங்கிரசும், திமுக.,வும் கடுமையாகவே கண்டித்தன.

இந்நிலையில் “காங்கிரஸ் – தி.மு.க., ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ‘டிவி’ சேனல்கள்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள தினமலர், அதில், “கருத்துரிமையை பேசும் தகுதி திமுக, காங்கிரஸ்க்கு இருக்கிறதா ?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் திமுக ஆட்சில் தினமலர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளது. அந்த விளக்கம் கீழே.

திமுக., தலைவர் கருணாநிதி, ‘ கருத்துரிமையை நசுக்கும் பாஜ., அரசு ‘ என்று குறிப்பிட்டிருந்தார். ( இவருடைய ஆட்சியின் போது,’ தினமலர்’ நாளிதழ் மற்றும் இதர இதழ்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்தாரோ? 2009 அக்.,7ல், ஒரு செய்தி வெளியிட்டதற்காக, ‘தினமலர்’ நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய,’ தினமலர்’ அலுவலகத்திற்கு போலீசை அனுப்பியவர் கருணாநிதி. அவர் உண்மையிலேயே கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருந்தால், வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது என்று கருதியிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தற்போதைய ஜெயலலிதா அரசு செய்வதுபோல், சட்டப்படி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி, பின்னர் அதை கோர்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன செய்தார்? ரஜனிகாந்த் மற்றும் சில நடிக, நடிகையர் கேட்டுக் கொண்டதற்காக, பத்திரிகை அலுவலகத்திற்கு செய்தி ஆசிரியரைக் கைது செய்வதற்காக போலீசாரை, பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக அனுப்பியவர் கருணாநிதி)

Capture.JPG

இந்தளவிற்கு, தினமலரை கருத்துரிமைக்காக பேச வைத்த கட்டுரை ஏது தெரியுமா ??? இதுதான். 

“பல தமிழ் நடிகைகள் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை காவல்துறை அதிகாரிகளிடம் நடிகை புவனேசுவரி வெளிப்படுத்தியதாகவும் தினமலரில் வெளியான செய்திக்காகத்தான் தினமலர் இத்தனை கருத்துரிமை பேசி இருக்கிறது”.

இந்த கட்டுரையை படித்தபின் இதுதான் தோன்றியது…

காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா????

என்டிடிவிக்கு தடை: தமிழக ஊடகங்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?

என்டிடிவி நிறுவனத்தின் இந்தி ஒளிபரப்புக்கு நரேந்திர மோடி அரசு ஒரு நாள் தடை விதித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இதற்குத் தமிழக ஊடகங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொறுப்புப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் இருவரும் ஞாயிறன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கை:

ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தொடர்தாக்குதல்களின் புதிய பதிப்பாக, என்டிடிவிதொலைக்காட்சி நிறுவனத்தின் மீதுஒரு ஒடுக்குமுறை நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அதன்படி, வருகிற 9ம் தேதியன்று அந்த நிறுவனத்தின் இந்தி மொழிப்பிரிவு ஒரு நாள் முழுக்க தனது நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பக் கூடாது என்றுதடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டுஜனவரியில் பதான்கோட் முகாமை தீவிரவாதிகள் தாக்கியபோது அந்த நிறுவனம் ஒளிபரப்பிய காட்சிகளைக் காரணம் காட்டி இந்த முடிவை அமைச்சகங்கள் குழு எடுத்து, அதற்கான ஆணையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை பிறப்பித்துள்ளது.

ஊடகச் சுதந்திரத்திற்காக நிற்கிற தமுஎகச அதே வேளையில் ஊடகங்களின் பொறுப்பையும் வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய பாஜக அரசு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒரு நாள் ஒளிபரப்புக்குத் தடை என்கிற ஆணை பக்குவமான அணுகுமுறையைக் காட்டுவதாக இல்லை. குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், அதே சட்டவிதியின் கீழ், இதை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று அதன் ஆணைப்படி செயல்படுகிற எண்ணம் ஏன் அரசுக்கு ஏற்படவில்லை? இதை யோசிக்கிறபோது, இது குறிப்பிட்ட ஒளிபரப்புக்கான நடவடிக்கை என்பதை விட, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அரசை விமர்சிக்கக்கூடிய ஊடகங்களை வாயடைக்கச் செய்கிற உத்தியாகவே, மறைமுக அவசரநிலை ஆட்சி போன்ற கட்டளையாகவே தோன்றுகிறது. இதனை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு உடனடியாக இந்தத் தடையாணையை விலக்கிக்கொள்ளவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இது ஒருபுறமிருக்க, பிற ஊடக நிறுவனங்கள், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள், இது தொடர்பாகக் கடைப்பிடிக்கிற மவுனம் வருத்தமளிப்பதாக இருக்கிறது. இந்த மவுனமே ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு சாதகமாகிறது என்பதை ஊடக நிறுவனங்கள் புரிந்துக்கொள்ள வேண்டாமா? வேறு ஒரு நிறுவனத்தின் பிரச்சனை என்று பார்க்காமல், இதற்கு ஒருஅடையாளப்பூர்வ எதிர்ப்பை, குறைந்தது ஒரு மணி நேர வேலைநிறுத்தம் போன்றதொரு செயல்பாட்டின் மூலம் வெளிப்ப டுத்த ஊடக நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு:

“’என்டிடிவி இந்தியா’ செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான தடையும் தணிக்கையும் நாளை எல்லா ஊடகங்களுக்கும் தனிநபர்களுக்கும் பரவும். மட்டுமல்ல, அரசின் பொல்லாப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்கிற அச்சத்தில் சுயதணிக்கைக்கும் வழிவகுக்கும். இந்த நிலை ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளுக்கே எதிரானது.

எனவே, என்.டி.டி.வி ஒளிபரப்பை மத்திய அரசு முடக்கும் அதே நவம்பர் 9ம் தேதியை அரசின் இம்முயற்சிக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கும் நாளாக மாற்றுவது அவசியமாகிறது. அதன்பொருட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓர் இயக்கத்தை முன்னெடுக்கலாமா என்பதை பரிசீலியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முகப்புப் படம்: க்விண்ட்