“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”

ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார்.

கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்?

பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் என்னை தொழிற்சங்க அரங்கத்தில் பணியாற்றச் சொன்னார்கள். மறைந்த திபங்கர் தத்தா எனக்கு குரு. 1992 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் அரங்கத்திலும், பிறகு அமைப்புச் சாரா அரங்கத்திலும் பணியாற்றி னேன். இப்போது ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளராக இருக்கிறேன். 1994 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானேன். இப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

ரெமன்தாஸ்

கே: அசாம் மாநிலத்தின் சிறப்பு பற்றி சொல்லுங்களேன்?

ப: அசாம் மாநிலத்தில் நான்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு இருக்கும் வாயு சுத்திகரிப்பு நிலையம் (gas based refinery)ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஆலையாகும். இங்கு நீர்வளம் அதிகம். இந்தியாவின் நீளமான நதியான பிரம்மபுத்திரா இங்கு ஓடுகிறது. இதிலிருந்து நீர்மின்சாரம் உற்பத்தி ஆகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான 80 சத மின்சாரத்தை அசாம் உற்பத்தி செய்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற, இயற்கையான காடுகள் அசாம் மாநிலத்தில் உள்ளன. இதிலிருந்து மரச் சாமான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இரும்புத்தாது, நிலக்கரி போன்ற கனிம வளங்கள் அதிக அளவில் அசாமில் கிடைக்கிறது. இப்போது இந்தியாவில் முதன்முதலாக, அசாமில் உயிரி சுத்திகரிப்பு நிலையம் (Bio refinery) நிர்மாணிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் மூங்கிலில் இருந்து எரிபொருள்(எதனால்) உற்பத்தி ஆகும். இது வாகனங்ளுக்கு எரிபொருளாக பயன்படும்.இதனால் அந்நியச் செலாவணி மிச்சமாகும். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அசாமில் அதிக அளவு கிடைத்தாலும் இம் மாநிலத்தை மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் கண்டு கொள்ளவில்லை. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, இப்போது உள்ள பாஜக அரசாக இருந்தாலும் சரி.

கே: மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் ?

ப: நிறைய தொழிற்சாலைகளை அசாமில் நிறுவ வேண்டும் என்று கோரி வருகிறோம். ஏற்கனவே இருக்கும் ஆலைகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த ஆலைகளில் உள்ளூரில் உள்ள அசாம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். வேலையற்ற அசாம் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் இயற்கை வளங்களுக்கு உண்மையான பங்குத்தொகை (royalty) தர வேண்டும். அசாம் மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள்; உதிரியாக இருக்கிறார்கள்; அவர்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

கே: தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி… ?

ப: 1979 முதல் 1983 வரை அசாம் மாணவர்களும்,இளைஞர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தை நடத்தினார்கள். இதனை காங்கிரஸ் அரசு மூர்க்கமாக எதிர் கொண்டது. இந்தப் போராட்டங்களில் 855 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக 1985 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கையெழுத்து இட்ட ‘அசாம் ஒப்பந்தம்’ உருவானது. அசாம் மாநிலத்தில் குடியிருக்கும் வெளிநாட்டினரை பற்றி இந்த ஒப்பந்தம் பேசுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி 25.3.1971 ஆம் நாளை கணக்கிடும் நாளாகக் (cut of date) கொண்டு அதற்கு பின்பு அசாமில் குடியேறியவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காகதேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் அசாம் மக்களின் தனித்தன்மை, கலாச்சாரம், வன உரிமைகளை பாதுகாக்க உறுதியளித்தது.

ஆனால் 2005 ஆம் ஆண்டு வரை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணி தொடங்கப்படவில்லை. பிறகு இதற்கான பூர்வாங்க வேலைகளை காங்கிரஸ் அரசு செய்தது. 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் நேரடியான வழிகாட்டுதலின் கீழ் தேசிய மக்கள் பதிவேட்டிற்காண பணிகள் முழு வீச்சில் நடந்தன; தேசிய குடிமக்கள் மசோதா தாயாரானது.

அதன்படி 2019 செப்டம்பர் மாதம், 40 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அசாமில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர்கள் தொடர்பு அலுவலரிடம் (nodal officer) முறையிட்ட பின்பு 19 இலட்சம் பேர் அத்துமீறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்திடம் (foreigners tribunal) முறையீடு செய்ய வேண்டும் என்று இருக்கும் போதுதான் இப்போது பாஜக அரசு தற்போதய தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அசாமில் நடந்துவரும் போராட்டம்…

கே: தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அசாமியர்களுக்கு என்ன பாதிப்பை கொண்டு வரும் என்று நினைக்கிறீர்ரகள் ?

ப: இந்தச் சட்டம் அசாம் ஒப்பந்தத்திற்கு விரோதமானது. அசாம் ஒப்பந்தம் 25.3.1971 க்கு முன்பு குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஆனால் இப்போது பாஜக கொண்டு வந்துள்ள சட்டப்படி கணக்கிடும் தேதியானது 31.12.2014 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வங்க தேசத்தில் இருந்து, மேற்கு வங்காளத்தில் இருந்து அசாமில் குடியேறும் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அசாமியர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையினராக மாற்றப்பட்டு விடுவோம் என அஞ்சுகின்றனர். தங்கள் அடையாளம் பறிபோகும்; தங்கள் வேலைவாய்ப்பு பறிபோகும்; அலுவல் மொழியாக வங்காளம் மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். எனவே இராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களின் போராட்டம் நூறு சதம் நியாயமானது. இதுவரை இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி உள்ளனர்.

கே: இந்த போராட்டத்தை ஏஐடியுசி எப்படி பார்க்கிறது ?

ப: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சினையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. கணக்கிடும் தேதியாக 25.3.1971 ஐ கட்சி கொடுத்த ஆலோசனையைத்தான் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது. நமது ஏஐடியுசி தோழர்களும்,கட்சி தோழர்களும் போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். மத்திய அரசு இந்தச் சட்டத்தை கைவிட வேண்டும்.இது அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மதரீதியில் மக்களை பிளவுபடுத்தக் கூடியது.

இப்போது உரிய ஆவணம் இல்லாமல் இருக்கும் 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். கணக்கிடும் தேதியை மாற்றி 12 இலட்சம் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுப்பதன் மூலம் அவர்களை அப்படியே தங்களின் வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்ளமுடியும் என பாஜக நம்புகிறது. அசாம் மக்களின் உணர்வுகளை அது புரிந்து கொள்ள தயாராக இல்லை. குரூரமாக (cruel) நடந்துகொள்கிறது.

கே: இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் ?

ப: வங்க தேசத்தில் இப்போது இந்துக்கள் நல்ல நிலமையில் இருக்கின்றனர். அங்குள்ள அரசாங்கத்தில் மூன்று, நான்கு பேர் அமைச்சர்களாக உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் இந்துக்கள் வெற்றி பெற்றுள்ளனர். வியாபாரத்தில் முன்னிலையில் உள்ளனர். அங்குள்ள அவாமி லீக் கட்சியைச் சார்ந்த ஷேக் ஹசீனாவின் அரசு மதச் சார்பற்ற அரசாக உள்ளது. ஆனால் இந்த சட்டம் வந்த பிறகு வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை சொல்லி பிரச்சாரம் செய்து அவர்களை இந்தியாவிற்கு துரத்தி விடுவார்கள். முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் வங்க தேசத்தில் இனி வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டம் வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

வங்க தேச இந்துக்கள்…

பாஜக மிகப் பெரிய தவறு இழைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் தீவிரவாதம் குறைந்து அமைதி திரும்பி உள்ளது. இந்தச் சட்டத்திற்கு பிறகு அங்கு மீண்டும் தீவிரவாதம் மோலோங்கும்.

கே: அசாம் மாநிலத்தில் ஏஐடியுசி எப்படி இருக்கிறது ?

ப: அசாமில் ஏஐடியுசி ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. எண்ணெய், மின்சாரம், நிலக்கரி, அமைப்புச் சாரா துறைகளில் நமது சங்கம் நன்கு செயல்படுகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகள் நம்மை மதிக்கிறார்கள். ஏஐடியுசியில் இரண்டு இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.புதிய சங்கங்கள் வருகின்றன. நமது போராட்டம், தொடர்ச்சியான செயல்பாடுகளினால் சமீப காலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இப்போது உள்ள பாஜக அரசு பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் 30,000 கோடி ரூபாய்களை அரசுக்கு ஈவுத்தொகையாகவும், வரியாகவும் தருகிறது. இதை தனியாருக்கு விற்பனை செய்தால் அதன் துணை நிறுவனமான(subsidiary), NRL(Numaligarh Refinery Limited) என்ற எண்ணெய் நிறுவனமும் தனியார் வசம் போய்விடும். அசாம் ஒப்பந்தத்தினால் உருவான இரண்டு எண்ணெய் நிறுவனங்களில் NRL-ம் ஒன்று. இதனை ஏஐடியுசி எதிர்த்துப் போராடி வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களுக்கு 80 சத மின்சாரத்தை தரும் NEEPCO (North East Electric Power Corporation) என்ற நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய பாஜக முனைந்துள்ளது. பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க இது போன்ற லாபம் தரும் நிறுவனங்களை விற்கிறது.

இத்தகைய கொள்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவில் நடைபெற உள்ள ஜனவரி 8 ம் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம். முழு கடையடைப்பாக மாற்றுவோம்.

நன்றி: ஜனசக்தி டிசம்பர் 22-28, 2019.

BSNL நட்டத்துக்கு என்ன காரணம்? முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்

தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறார். தடைம்ஸ் தமிழ்.காமிற்காக இந்த நேர்காணலை செய்தவர் பீட்டர் துரைராஜ்.

ஆர்.பட்டாபிராமன்

கேள்வி : பி.எஸ்.என்.எல். கடுமையான நெருக்கடியில் இருக்கிறதே, இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: தொலைத்தொடர்பு துறையே நெருக்கடியில் இருக்கிறது. அது பிஎ.ஸ்.என்.எல். நெருக்கடியாக சித்தரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ், ஜியோ, வோடாபோன் போன்ற நிறுவனங்கள் வருவாய் மார்க்கெட்டையும் பிடித்திருக்கிறார்கள்; வாடிக்கையாளர் மார்கெட்டையும் பிடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத்துறை 7 இலட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. ஆனால், இதில் பி.எஸ்.என்.எல். வாங்கியுள்ள கடன் 15,000 கோடி மட்டுமே. ஆனால் பி.எஸ்.என்.எல் மட்டுமே கடன் பொறியில் சிக்கித் தவிப்பது போல சித்தரிக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்போகாம் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு 40,000 கோடி வருவாயில் இருந்த நிறுவனம்; பிறகு கடனில் சிக்கியபோது அவரது அண்ணன் முகேஷ் அம்பானிதான் 350 கோடி ரூபாய் கொடுத்து தனது தம்பி அனில் அம்பானியை காப்பாற்றினார். ரிலையன்ஸ் ஜியோவின் வருகை இந்த நெருக்கடியை இந்தத் துறையில் தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே தொலைபேசித்துறைதான் (DoT), இந்த துறையில் ஏகபோகமாக இருந்தது. அது ரிலையன்ஸ் ஜியோ ஏகபோகமாக மாறும் சூழல் இருக்கிறது. ரிலையன்சை தவிர மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. தொலைத்தொடர்பு தொழிலுக்கு கடன் கொடுக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. தொலைத்தொடர்பு தொழிலின் வருவாய் குறைந்து உள்ளது; இலாபம் குறைந்து உள்ளது. ஒரு சந்தாதாரர் மூலம் கிடைக்கும் சராசரியான வருவாய் (Average Revenue Per User) குறைந்துள்ளது. ARPU என்று சொல்லுவார்கள். ஆனால் பி.எஸ்.என்.எல். மட்டும்தான் நெருக்கடியில் இருப்பதாக பேசுகிறோம்.

கேள்வி : தொழிலாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சம்பளமே வழங்காதபோது ‘பென்ஷன் பிதாமகன் ஓ.பி.குப்தா’ என்ற நூலை வெளியிட்டவர் நீங்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்று உங்கள் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் முகநூலில் எழுதி வருகிறார்ரகளே?

பதில்: ஓ.பி.குப்தா ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் அரசு ஊழியர்களுக்கு சங்கம் நடத்தியவர். ஆள் எடுப்பு தடைச் சட்டம் அமலில் இருந்தபோதே ஒரு இலட்சம் காண்டிராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வைத்தவர். அவர் இருந்திருந்தால் பேச்சுவார்த்தையில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். தொழிலாளர்களை அணி திரட்டுவதில், அரசாங்கத்தை அணுகுவதில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் வத்திருக்கிற நெருக்கடி பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு வந்துள்ள நெருக்கடி. இதை ஒரு தனிநபர் சார்ந்த விஷயமாக பார்க்க முடியாது.

கேள்வி : பி.எஸ்.என்.எல். ஏன் நஷ்டம் அடைந்தது?

பதில்: 2009 வரை பி.எஸ்.என்.எல். இலாபமாகத்தான் இயங்கியது. 2012 ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல். தனது கையிருப்பில் இருந்த 40,000 கோடியில் இருந்து, 18,500 கோடி ரூபாயைக் கொடுத்து 3G அலைக்கற்றையை வாங்கியது. ஆனால் ,மற்ற தனியார் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி அலைக்கற்றையை வாங்கின.

பிஎஸ்என்எல்- ன் செயல்பாடு குறித்து ஆராய நாடாளுமன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் எல்.கே.அத்வானியும் உறுப்பினராக இருந்தார். அந்தக்குழுவில் பி.எஸ்.என்.எல்.-ம், தொலைபேசித்துறையும் (DoT) தெரிவித்துள்ள காரணங்களில் ஒன்பதாவது காரணம்தான் ஊழியர் சம்மந்தப்பட்டது. ஆனால் நாடாளுமன்றக் குழு அறிக்கையைப் பார்க்காமலேயே, ஊழியர்கள் அதிகமாக இருப்பதுதான் அதன் நட்டத்திற்கு காரணம் என்று பத்திரிக்கைகளும், ஊடகங்களும் சொல்லுகின்றன; அதைப் பெரிதுபடுத்துகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் பி.எஸ்.என்.எல். சேவை தருகிறது; குன்றுகள் நிறைந்த பகுதிகளுக்கு சேவை தருகிறது; அந்தமான் போன்ற பகுதிகளில் உள்ள சிறு, சிறு தீவுகளுக்கு சேவை தருகிறது. மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் சேவை தருகிறது. இங்கிருந்தெல்லாம் இலாபம் கிடைப்பதில்லை. அதேபோல இஸ்ரோவிற்கு (ISRO) பணம் செலுத்திதான் சாட்டிலைட் தொடர்பை வாங்குகிறது. இவையெல்லாம் அதன் நட்டத்திற்கு முக்கியமான காரணங்களாகும். இதுபோன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனமே மூடப்பட்டு விடுமோ என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை.

கேள்வி : இதனைப் போக்க என்ன வழி ?

பதில் : தொலைபேசித்துறையை ஒரு கேந்திரமான துறையாக மத்திய அரசும், நிதி ஆயோக் -ம் அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் செலவு செய்ய கட்டுப்பாடு இருக்காது. நஷ்டம் அடைந்தாலும் தபால்துறையை அரசு நடத்துகிறதல்லவா? அரசாங்கத்தின் நேரடியான கவனத்தை பி.எஸ்.என்.எல். பெறும். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் பி.எஸ்.என்.எல்.- ஐதான் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்போது இரயில்வே துறையில் ரிலையன்ஸ் போன் உபயோகிக்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். பொதுப் பணித்துறை (BSNL Public Works Organization) என்ற கட்டுமான பிரிவு இருக்கிறது; இது வெளி மார்கெட்டுகளில் கட்டுமான வேலையை (Civil Works) செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு காரணம் கருதி இராணுவ தளவாட ஆலைகள் பி.எஸ்.என்.எல்.- ஐத்தான் பயன்படுத்துகின்றன. 2011 முதல் 2017 வரை பி.எஸ்.என்.எல். சேவையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை தரப்பட்டது; தெருத் தெருவாக சிம் கார்டு விற்றார்கள்; வாடிக்கையாளர் சேவைகள் மேம்படுத்தப்பட்டன; தொலைபேசி வருமானம், பிராட்பேண்ட் வருமானம் என பிரிக்கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் போதுமான வெற்றியைத் தரவில்லை. இந்த சூழலில்தான் பி.எஸ்.என்.எல். ஐ புத்தாக்கம் (revival), சீரமைப்பு (restructure) செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்படி செய்வதற்கு ஏற்கெனவே வழிமுறைகள் உள்ளன. ஆனால் பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு இத்தகைய நடவடிக்கைகள் புதிது.

கேள்வி : பி.எஸ்.என்.எல். ஐ புத்தாக்கம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் என்ன ?

பதில்: ஏர் இந்தியா நிறுவனம் 50,000 கோடி ரூபாய் கடனில் இருந்தது. பத்து ஆண்டுகளில் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு 30,000 கோடி ரூபாய் கடனை வழங்கியது. ஊழியர்களுக்கு போனஸ் தரக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால் இன்செண்டிவ் என்ற பெயரில் ஏர் இந்தியா பணம் தருகிறது. அதேபோல 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பொதுத்துறைக்கு 2012 ஆம் ஆண்டு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய அரசு 4500 கோடி ரூபாய் பண உதவி கொடுத்தது. ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கச் சொன்னது. 2018 ல் அது இலாபம் ஈட்டியது. ஓய்வு பெறும் வயதை 60 ஆக மீண்டும் உயர்த்தி விட்டார்கள். இந்த அனுபவங்கள் நமக்கு முன்பு உள்ளன. ஆனால் பி.எஸ்.என்.எல்.-ன் கடன் 15,000 கோடி மட்டுமே.

உலகத்திலேயே மலிவான விலைக்கு தொலைபேசி சேவையைத் தருவது இந்தியாதான். அதேபோல உலகிலேயே சீனாவிற்கு அடுத்த பெரிய தொலைபேசி வலைப்பின்னல் இந்தியாவில்தான் உள்ளது.

கேள்வி : பி.எஸ்.என்.எல்.- ன் புத்தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் ?

பதில்: பி.எஸ்.என்.எல்.-ஐ புத்தாக்கம் செய்வதற்கு செய்ய வேண்டிய ஆலோசனகளை தரச் சொல்லி DoT (தொலைபேசித்துறை), ஐ.ஐ.எம். அகமதாபாத்தை கேட்டது. ‘4 ஜி லைசென்சை பி.எஸ்.என்.எல். க்கு இருபது ஆண்டுகளுக்கு வேண்டாம்; பத்து ஆண்டுகளுக்கு கொடுக்கலாம்; ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும்; விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்; பி.எஸ்.என்.எல். டவர்- க்கு தனி கார்ப்பரேசனை உருவாக்க வேண்டும்; கண்ணாடி இழைகளுக்கு (optical fiber) தனி பிரிவை உருவாக்க வேண்டும்; நிலத்தை விற்பனை செய்ய வேண்டும்” என்று அது ஆலோசனை வழங்கியுள்ளது.

இது பொதுதளத்தில் விவாதிக்கப்பட வில்லை. இது குறித்து தொழிற்சங்கங்கள் கருத்து சொல்லவில்லை. இந்தப் பரிந்துரைகள் குறித்து பி.எஸ்.என்.எல்.-ன் கருத்து என்னவென்று DoT கேட்டது. “பி.எஸ்.என்.எல். நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு பணம் தர வேண்டும். ஏற்கெனவே 15,000 கோடி கடன் உள்ளதால் வங்கிகள் கடன் தராது. அன்றாட செலவுகளை செய்ய பணம் இல்லாததால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அவப்பெயர் உண்டாகிறது.

85 சதமான டேடா டிரான்ஸ்பர் 4ஜி மூலமாகத்தான் நடைபெறுகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் போன்ற மூன்று தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே 4 ஜி வசதி உள்ளது. 14 சதவீத டேடா டிரான்ஸ்பர் 3 ஜி மூலமாக பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் என்ற நான்கு நிறுவனங்கள் மூலமாக நடக்கிறது. ஒரு சதவீத டேடா டிரான்பர் 2 ஜி மூலமாக நடைபெறுகிறது.

4 ஜி வசதி வேண்டுமானால் 14,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். உடனடியாக 7000 கோடி ரூபாயும், 16 தவணைகளில் மீதமுள்ள 7000 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும். 4 ஜி இல்லையென்றால், கொஞ்சம், கொஞ்சமாக பி.எஸ்.என்.எல். தனது சந்தையை இழக்கும். எனவே மத்திய அரசு, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டு உள்ளது. அநேகமாக விரைவில் 4 ஜி கிடைத்து விடும் என்றே நினைக்கிறேன்.

‘கடந்த 13 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாகி விட்டது. எனவே ஊதிய உயர்வை கொடுத்துவிட்டு வி.ஆர்.எஸ். அல்லது ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கலாம்’ என பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளதாக அறிகிறோம். அதேபோல கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் கடன் வாங்க அரசின் அனுமதியை அது கோரியுள்ளது.

சம்பளம் கேட்டு போராடும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்

கேள்வி: 80,000 பேர் வேலையில் உபரியாக இருப்பதுதான் நட்டத்திற்கு காரணம் என்று சொல்வது பற்றி ?

பதில்: அடிப்படையில் பி.எஸ்.என்.எல்.- கும் மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சமதளப் போட்டி (Level Playing Ground) இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆயிரம் இணைப்புகள் இருந்தால் இத்தனை பணியாட்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் இல்லை. தனியார் தொலைபேசி நிறுவனங்கள் காட்டுவது ‘வேலையில்லாத வளர்ச்சி’. அரசு கொள்கைகளை பி.எஸ்.என்.எல். அமலாக்குகிறது. நஷ்டம் வந்தாலும் தொலைபேசி இணைப்பகங்களை பி.எஸ்.என்.எல். நடத்துகிறது. நக்சலைட்டுகளால் பாதிப்புக்கு உள்ளான 2650 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். இணைப்பகங்கள் உள்ளன. இதுபோன்ற பொறுப்பு எதுவும் தனியாருக்கு இல்லை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா இல்லையா ? பி.எஸ்.என்.எல். அரசியல் சட்டப்படி தொழிற்சங்க உரிமைகளை அனுமதித்துள்ளது. ஊடகத்தின் பார்வைக்கு பி.எஸ்.என்.எல். உள்ளாகி வருகிறது. பாராளுமன்றக் கண்காணிப்புக்கு, பாராளுமன்றக் குழுக்களின் கண்காணிப்பிற்கு, மத்திய அரசின் தணிக்கைக்கு, நிதி ஆயோக் கண்காணிப்பிற்கு பி.எஸ்.என்.எல். உட்படுகிறது. எனவே தனியார் நிறுவனங்களோடு பி.எஸ்.என்.எல்.- ஐ ஒப்பிடக் கூடாது.

கேள்வி : தாராளமயமாக்கலால் தொலைத்தொடர்புத்துறை எப்படி மாற்றம் அடைத்துள்ளது?

பதில்: உலகத்திலேயே மலிவான விலைக்கு தொலைபேசி சேவையைத் தருவது இந்தியாதான். அதேபோல உலகிலேயே சீனாவிற்கு அடுத்த பெரிய தொலைபேசி வலைப்பின்னல் இந்தியாவில்தான் உள்ளது.

‘தாராளயமாக்கலின் மாபெரும் அடையாளம் தொலைபேசித்துறை’ என்று என்று உலகமயமாக்கலின் இருபதாம் ஆண்டு விழாவின் போது மன்மோகன் சிங் சொன்னது உண்மைதான். இன்று 120 கோடி பேரிடம் செல்போன் வசதி வந்துள்ளது; இது உலகமயமாக்கலின் விளைவுதான். அரசு மட்டுமே மூலதனம் போட்டு இவ்வளவு பெரிய வீச்சை உருவாக்கி இருக்க முடியாது. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கிறதா? 10 சதம் சந்தையை வைத்துள்ள பி.எஸ்.என்.எல். 1.75 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் 90 சத சந்தையை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் இரண்டு இலட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

கேள்வி: பொதுமக்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ?

பதில்: 10 சதம் சந்தாதாரரே பி.எஸ்.என்.எல்.-ஐ பயன்படுத்துகின்றனர். தனியார் நிறுவனங்களை விட பி.எஸ்.என்.எல்.-ன் விலைக் கட்டணம் (tariff) குறைவுதான். இளைஞர்கள் தனியார் செல்வசதியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். கார்பரேட் நிறுவனங்களின் சந்தை இலாபம் தருவதாகும். ஆனால், அவை தனியார் நிறுவனங்களை பயன்படுத்துகின்றன. பொதுத்துறை வங்கிகள் பி.எஸ்.என்.எல். ஐதான் பயன்படுத்துகின்றன. மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரின் போது சென்னையில், ஒரிசாவில், சமீபத்தில் கேரளாவில் பி.எஸ்.என்.எல். ன் சிறப்பான சேவையை பார்த்து இருப்பீர்கள். எனவே சாதாரண பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். என்ற பொதுத்துறைக்கு முன்னுரிமை தர வேண்டும். இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் பேர் பி.எஸ்.என்.எல். இணைப்பு வைத்துள்ளனர்.

.

“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு’ அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ்.

கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் எனக்குச் சொந்த ஊர். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி படித்து இருந்தேன். 1974இல் சென்னைக்கு வேலைதேடி வந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆறுமாத காலம் எரிவாயு நிரப்பும் ஒப்பந்தப் பணியாளராகப் பணி புரிந்தேன். பின்பு 1975ஆம் ஆண்டு டியுசிஎஸ் என்கிற திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகச் சேர்ந்தேன்.

இயல்பிலேயே இருந்த தன்னூக்கம் என்னை தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடச் செய்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் 25 தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து சென்னை நகரம் முழுவதும் சைக்கிளிலேயே நான்கு நாட்கள் பயணித்து எல்லாக் கடைகளுக்கும் போய் தொழிலாளர் பிரச்சினையைப் பேசினோம். அதைத் தொடர்ந்து நடந்த சங்கப் பேரவையில் புதியவர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். பூ.சி.பாலசுப்பிரமணியம் செயலர் ஆனார். 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தொழிற்சங்க அனுபவங்களைச் சொல்லுங்களேன்…

1981ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்துநாள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் ஒன்றை தொடங்கினோம். டியுசிஎஸ் பொறுப்பில் ரேஷன் கடை, மண்ணெண்ணெய், மளிகை, எரிவாயு விநியோகம் என சென்னையில் இருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. புதிய பணியாளர்களை நியமிக்க அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். காவல்துறையைக் கொண்டு எங்கள் போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க அரசு முடிவெடுத்திருந்தது.

அப்போது கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக இருந்த மரியாதைக்குரிய பிரகாசம் அவர்களும் தொழிலாளர் துறை துணை ஆணையாளராக இருந்த செல்லத்துரை அவர்களும் தந்த ஆலோசனையின்படி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டு நாங்கள் பணிக்குத் திரும்பிவிட்டோம்.

அடையாளம் தெரியாதவர்களை வைத்து ரேஷன் கடைகளை சூறையாடும் நிலைமையெல்லாம் இருப்பதாக உணர்ந்ததால் அந்தப் போராட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தோம். மாதவரத்தைச் சார்ந்த சி.கெ.மாதவன் எங்கள் சங்கத்தின் தலைவர். சங்கம் தொடங்கிய 1952ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளிகள்தான் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்கள்.

1978ஆம் ஆண்டுதான் வெளியிலிருந்து சி.கெ.மாதவன் அவர்களை தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்தோம்.போராட்டத்தை ஒத்திவைத்து பணிக்கு செல்ல வேண்டிய நிலை குறித்து அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

எங்கள் போராட்டம் முடிந்த ஆறுமாதத்திற்குப் பிறகு மதுரையில் உள்ள பால்பண்ணைத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாதவரம் பால்பண்ணைத் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். இரவோடு இரவாக 1200 பேரை வேலைநீக்கம் செய்து காலையில் புதிய ஆட்களை பணிக்கமர்த்தினார்.

எனவே, டியுசிஎஸ்ஸிலும் ஆவினிலும் தொடர்ந்து கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. நாங்கள் போடும் கோரிக்கை நோட்டீசை அவர்கள் பால்பூத் முன்பு ஒட்டுவார்கள். அவர்கள் போடும் நோட்டீசை நாங்கள் டியுசிஎஸ் கடைகள் முன்பு ஒட்டுவோம். இந்தக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை.

இந்த இரண்டு சங்கங்களுக்கும் மாதவன்தான் தலைவர் என்பதால், அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்காகவே 1200 தொழிலாளர்களை எம்ஜிஆர் பணிநீக்கம் செய்தார். சிகெஎம் தலைமையில் ஊர்வலம் என்றால் ஆயுதம் தாங்கிய போலீஸ் பந்தோபஸ்துக்கு வரும். அவ்வளவு வலிமையாய் தொழிற்சங்கங்கள் செயல்பட்ட காலம் அது.

உங்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்களாமே!

அரசுத் துறைகளிலேயே ஊழல் மலிந்த துறை என்றால் அது கூட்டுறவுதான்.ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும். கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1987ல் போராடி வந்தோம். அப்போது டியுசிஎஸ் சங்கத்தின் தனி அலுவலராக இருந்த கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் திரு. ஆர்.எஸ்.நடராஜன் அவர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர் பெரிய ஊழல் அதிகாரி. ஒரு பொய்யான குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்வதற்கு காவல்துறை மூலம் முயற்சி செய்தார்.

பின்பு சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே நான் உட்பட ருக்மாங்கதன், வேணு என சங்க முன்னணித் தோழர்கள் 15 பேரை சட்ட விதிமுறைகளை மீறி வேலைநீக்கம் (டிஸ்மிஸ்) செய்தார். அப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

தேர்தல் முடிந்து 1989ல் திமுக அரசு பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவுத் துறையில் அவர் செய்த ஊழலை விசாரிக்கச் சொல்லி கலைஞரிடம் மனு கொடுத்தோம்.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். ஓய்வு பெறும் நாளன்று அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நான்கைந்து வருடங்களில் இறந்தும் விட்டார். வழக்கு நிலுவையிலேயே இருந்ததால், இறக்கும்வரை ஓய்வூதியப் பலன்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக ஊழல் அதிகாரிகள் நேர்மையான தொழிற்சங்கங்களை விரும்புவதில்லை என்பதுதான் எனது அனுபவம்.

கூட்டுறவு அமைப்பை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

நுகர்வோர், பால், விவசாயி, மீன், நெசவாளி என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திமுக, அதிமுக ஆட்சியில் தனி அலுவலர்களை நியமித்து கூட்டுறவு அமைப்பையே நாசப்படுத்தி விட்டார்கள். உண்மையான பயனாளிகளை மட்டுமே கூட்டுறவு அமைப்புகளில் சேர்க்க வேண்டும். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மாதிரிக் கூட்டுறவுச் சட்டத்தை அமலாக்க வேண்டும். அதன்படி கூட்டுறவு அமைப்புகளில் ஏற்படும் நட்டத்திற்கு நிர்வாகக்குழு இயக்குநர்களையும் பொறுப்பேற்கச் செய்யமுடியும்.

உற்பத்தியாகும் இடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு மலிவாக விற்பனை செய்யவேண்டும். தும்கூரில் புளி வாங்கினார்கள். குல்பர்காவில் துவரம் பருப்பு வாங்கினார்கள். நெல்லூரில் அரிசி வாங்கினார்கள். இப்போது இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வியாபாரிகளிடம் பொருளை வாங்குகிறார்கள். இதனால் நுகர்வோருக்கும் பலனில்லை; விவசாயிகளுக்கும் பலனில்லை; கூட்டுறவு அமைப்புகளுக்கும் பயனில்லை. கூட்டுறவின் நோக்கமே சிதைந்து கொண்டிருக்கிறது.

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா

கூட்டுறவுத் துறையில் ஊழியராக இருந்த உங்களுக்கு பத்திரிகைத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

தொழிற்சங்கப் பணிகளில் முனைப்பாகச் செயலாற்றி வந்த்தால் தினமணியில் பணியாற்றி வந்த சந்தான கிருஷ்ணன், சுகதேவ், இராயப்பா போன்ற பத்திரிகையாளர்களின் நட்பு எனக்கு ஏற்பட்டது. எங்கள் தொழிற்சங்கம் சார்பில் ‘போரணி’, ‘போர்க்களம்’, ‘போர்க்குரல்’ என்கிற பத்திரிகைகளை அவ்வப்போது நடத்தி வந்தோம். திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க.திருநாவுக்கரசு அவர்களிடமிருந்து (இவர் டியுசிஎஸ்சின் முன்னாள் பணியாளர்) ‘நக்கீரன்’ இதழுக்கான உரிமையை வாங்கி 1980ல் நடத்தினோம். அதற்கு க.சுப்பு அவர்கள் ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டார். நக்கீரன் இதழை புலனாய்வு இதழாகக் கொண்டுவந்தோம்.

திமுக சார்பாக வில்லிவாக்கம் தொகுதியில் நின்று அவர் தோற்கடிக்கப்பட்டிருந்த சமயம் அது. அந்தவகையில் முதல் முதலாக புலனாய்வு பத்திரிகையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். மாதம் இருமுறை இதழாக ஆறு மாதங்கள் கொண்டுவந்து விட்டோம். கட்சி சாராமல் நடத்தினோம். அதிமுகவை எதிர்த்து காங்கிரசை எதிர்த்து திமுகவை விமர்சித்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.

‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சொல்லி திமுக காங்கிரசோடு ஓரணியில் இருந்த நேரம் க.சுப்பு திமுகவில் இருந்த காரணத்தால் அவரால் கட்சியின் நெருக்கடியைத் தாங்க முடியவில்லை. சுதந்திரமாக பத்திரிகையை நடத்தவும் முடியவில்லை. ஆனால் பத்திரிகையை எங்களிடம் விட்டுக்கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் அவரோடு சேர்ந்து இயங்க எங்களால் முடியவில்லை. எனவே ‘நக்கீரன்’ இதழை அவரிடம் கொடுத்துவிட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.

அதோடு உங்கள் முயற்சியை கைவிட்டு விட்டீர்களா?

இல்லை. நக்கீரனுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அடுத்த பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை வந்தது. எனவே இளவேனில், க.சந்தானகிருஷ்ணன், கேரள மணி, வேணு (டியுசிஎஸ்), மீனாட்சிசுந்தரம் இவர்களோடு சேர்ந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பொதுநலத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.

அப்போது பத்திரிகையாளர் இரா.ஜவகர் அவர்களிடம் ‘வசந்தம் வருகிறது’ என்ற பத்திரிகை(title) இருந்தது. அதை வாங்கி ‘வசந்தம்’ என்ற பெயரில் நடத்தினோம். ‘வருகிறது’ என்பதை சிறிய எழுத்துக்களில் போட்டுவிடுவோம்.சென்னையிலேயே 4000 பிரதிகள் விற்பனை ஆகும். அப்போது வடசென்னை, தென்சென்னை என இரண்டு முகவர்கள்தான் இருந்தார்கள். வாசகர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆசிரியராக தாம்பரம் வழக்கறிஞர் எஸ்.சி.சிவாஜி இருந்தார்.

எங்கள் வளர்ச்சியைப் பார்த்து, நாங்கள் கணக்கு வைத்திருந்த கனரா வங்கியின் மேலாளர், இதனை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றினால் வங்கிக் கடன் தருவதாகச் சொன்னார். எனவே ‘டான் பப்ளிகேஷன்ஸ்’ (இரஷ்யா – தான் நதி) என்று கம்பெனியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் செய்தோம். ஆனால் இதில் ஆசிரியராக இருந்த சிவாஜிக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் திமுக எம்பியாக இருந்த கம்பம் நடராஜன் இறந்ததையொட்டி நடந்த பெரியகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியிலிருந்த அதிமுக தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் செய்தது. தெருவெங்கும் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டன;பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. எனவே ‘இனி ஒரு எம்.பி எப்போது சாவார்’ என தலையங்கம் எழுதியிருந்தோம். காவல்துறை நெருக்கடி தந்தது. மேலும் சண்முகம் செட்டியார் எனச் சொல்லிக்கொண்டு ‘வசந்தம்’ என்கிற பெயர் தனக்கானது என சொல்லிக்கொண்டு ஒருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வளவுதான்! அத்தோடு அந்த இதழும் நின்று போனது.

காக்கைச் சிறகினிலே இதழைத் தொடங்கிய வரலாற்றைச் சொல்லுங்களேன்!

2010ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது எங்கள் சங்கத்திற்கு ஏ.எம்.கோபு தலைவராக இருந்தார். அவர் ஏஐடியுசி அலுவலகத்தில் வந்து நான் பணிபுரிய வேண்டும் என்று அழைத்தார். இதற்கிடையில் நண்பர்கள் கூடுமிடம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக திருவல்லிக்கேணியில் ஒரு அறை எடுத்தோம். மாலைப் பொழுதுகளும் விடுமுறை நாட்களிலும் நிறையப் பேசுவோம் விவாதிப்போம்.

வைகறை, க.சந்திரசேகரன், இரா.எட்வின் போன்ற நண்பர்களுடன் இணைந்து காக்கைச் சிறகினிலே இதழைக் கொண்டுவந்தோம். 2011 அக்டோபரில் முதல் இதழ் வெளியானது. மறு ஆண்டே ‘கரிசல் விருது’ கி.ராஜநாராயணன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பல விருதுகள். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சுதேசிமித்திரன் தமிழ் இதழ் விருது வழங்கி மகிழ்வித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

ஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ்

கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துறை’ ஐ உருவாக்கியது.பாலை கொள்முதல் செய்து ,வீடு வீடாக விநியோகம் செய்தார்கள்.1972 ம் வருடம் திமுக அரசு பால்வளத்துறையை பால்வளக் கழகமாக (Dairy Development Corporation) மாற்றியது. நான் 9.9.1971 ல் பணிக்கு சேர்ந்தேன்.

கேள்வி: நீங்கள் 17 ஆண்டு காலம் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருந்தீர்களே?

பதில் : மதுரை பால்வள தொழிலாளர்கள் 15 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் செய்தது. அவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் 19.11.1980 அன்று செய்தோம்.பேச்சு வார்த்தை நடக்கவில்லை. வேலைநிறுத்தம் 16 நாட்கள் நீடித்தது. ஆகவே 1130 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் (டிஸ்மிஸ்) செய்தது.ஏற்கெனவே ‘உலகவங்கிக் கடன் வேண்டும் என்றால் வலுவான தொழிற் சங்கம் இருக்கக் கூடாது’ என்று அது நிபந்தனை விதித்து இருந்தது. அந்தச் சூழலில் தமிழக அரசும் இதைச் சாக்காக வைத்து, தொழிற்சங்கத்தை பலவீனப்படுத்த எங்களை வேலை நீக்கம் செய்தது. நாங்கள் 1.1.81 அன்று பேரணி நடத்தினோம்.அதில்110 பேர் கைதாகி 23 நாட்கள் சிறையில் இருந்தோம்.ஏற்கெனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சி.கெ.மாதவனோடு (அவர்தான் சங்க தலைவர்) சேர்ந்து 16 பேர் சிறையில் இருந்தார்கள்.சிறையில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்பு முதலமைச்சரைச் சந்திக்க இராமாவரம் தோட்டத்திற்கு குசேலருடன் சென்றேன்.’சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது’ என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். அவையெல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள்.

கேள்வி: நீங்கள் சுப்பராயன் தேர்தலில் நிற்க பாராளுமன்ற தேர்தலுக்கு காப்புத் தொகை செலுத்தினீர்களாமே !

பதில்: இப்போது மட்டுமல்ல; கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின் போதும் தோழர் சுப்பராயனுக்கு எங்கள் சங்கம் காப்புத் தொகை கட்டியது. எம்ஜிஆரினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பால்வளத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி எம்.அப்பாத்துரை, அழகிரிசாமி, ஜி.பழனிசாமி, ரகுமான்கான்(திமுக), முகமது இஸ்மாயில்(ஜனதா), இளைய பெருமாள்(காங்) போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள். தோழர். கே.சுப்பராயன் திமுக ஆட்சியின் போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 1987 ம் ஆண்டு கொடுத்தார். இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 1170 பேரில் 390 பேருக்கு 1989 ல் மீண்டும் வேலை கிடைத்தது. 1997 ல் மீண்டும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விடுபட்ட மற்ற தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கச் செய்தார். சி.கெ.மாதவனுக்குப் பிறகு தோழர் மூர்த்தி எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். அப்போது (1981)மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த வி.பி.சிந்தனோ,அதன் பிறகு அதே வில்லிவாக்கம் தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்ட டபுள்யூ.ஆர்.வரதராஜனோ எங்களுக்காக குரல் எழுப்பவில்லை.

கேள்வி : 17 வருடம் வாழ்க்கையை எப்படி ஓட்டினீர்கள் ?

பதில் : மீண்டும் வேலைக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகளைச் சந்தித்தல்; தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற வழக்குகள் என என்னுடைய பெரும் பகுதிநேரம் கழிந்தது. 1987 முதல் 1996 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளராகவும் இருந்தேன். பால்பண்ணை தொழிலாளர்கள், நண்பர்கள் உதவி செய்தனர்.சி.கெ.மாதவன்தான் கூட்டுறவு துறை தொழிலாளர் சங்க தலைவராக இருந்தார்.அதில் இருந்த சீனு, வேணு, முத்தையா (டியுசிஎஸ்) போன்றவர்களை என்னால் மறக்கவே இயலாது. பல்லாவரம் ரவி அவ்வப்போது உதவி செய்வார். நான் மனச் சோர்வு அடையாமல் இருக்க இவர்கள் எல்லாம் முக்கியமான காரணமாகும்.ஒரு பிரச்சினை யில் காவல்துறை எங்கள் மீது 307 (கொலைமுயற்சி வழக்கு) போட்டுவிட்டது. இதற்காக குரோம்பேட்டையில் இருந்து, கட்சி வழக்கறிஞர் அங்குசாமி எழும்பூர் நீதிமன்றத்திற்கு வருவார்.சாட்சிகளாக வந்திருப்பவர்களுக்கு அவர் வடை,டீ வாங்கிக் பொடுப்பார். அதுவே 200 ரூபாய் வரும்.அவர் என் பையில் நூறு ரூபாய் வைத்து விட்டுச் செல்வார். ரவி சேகர் என்ற வழக்கறிஞர் நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு எங்களுக்காக செஷன்ஸ் கோர்ட்டில் வாதாடினார்.

பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரர் ஆர். பாளையம்

கேள்வி : பால் உற்பத்தியை பெருக்க ஏதும் ஆலோசனை சொல்லியிருக்கிறீர்களா ?

பதில் : ‘தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம்’ என்பது ஏஐடியுசி அமைப்பு.ஆவின் பாலை கலப்படம் செய்து வைத்தியநாதன் என்பவர் சிறைக்கு சென்றார் என்பது உங்களுக்கு தெரியும். இவர் ஆவின் நிறுவனத்தில் மீண்டும் காண்டிராக்ட் எடுக்க முயற்சி செய்து வருகிறார்.ஆளுங்கட்சி பிரமுகர்களும் இவருக்கு ஆதரவு தருகிறார்கள்.இவருக்கு காண்டிராக்ட் மீண்டும் தரக்கூடாது என்று தோழர்.மூர்த்தி கடிதம் எழுதி யுள்ளார்.

இந்தியாவிலேயே பொதுமக்கள் மாதந்தோறும் முன்கூட்டியே பணம் கட்டி,அட்டை வாங்கி பாலை தினந்தோறும் பெற்றுக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெறுகிறது. அந்த அளவுக்கு ஆவின் நிறுவனம் சாதாரண மக்களின் நல்ல பேரை சம்பாரித்து உள்ளது. அதற்கு ஏற்றபடி ஆவின் நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும்.12.75 இலட்சம் பால் தினமும் விற்பனை ஆகிறது. அதில் 7.5 இலட்சம் வாடிக்கையாளர்கள் பால் அட்டை முன்கூட்டியே வாங்கி விடுகின்றனர். மீதி விற்பனை முகவர் மூலமாக நடைபெறுகிறது.

கேள்வி : தனியார் பால் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறதே ?

பதில்: ஆவின் நிறுவனம் தரும் கமிஷனை விட அதிகமான கமிஷனை தனியார் பால் நிறுவனங்கள் தருகின்றன. எனவே, தனியார் பாலை விற்பதில் கடைக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மத்திய சர்க்கார் ஏற்கெனவே 10,000 லிட்டர் வரை விற்பனை செய்யத்தான் தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதை ஒரு இலட்சம் லிட்டர் வரை விற்பனை செய்ய அனுமதி அளித்துவிட்டார்கள். பாலை இறக்குமதி செய்ய போடும் வரி குறைவு.ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய அதிகம் வரி செலுத்த வேண்டும். இப்போது மலேசியா,சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஆவின் நிறுவனம் பாலை ஏற்றுமதி செய்கிறது. இதற்கான வரி அதிகம் என்றால் இயல்பாகவே பால் உற்பத்தி குறையத்தானே செய்யும்.டில்லியிலும் ஆவின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இப்போது ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் காமராஜ் என்பவர் ஆவின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆர்வமாக செயல்படுகிறார். தரமற்ற தனியார் பால் நிறுவனங்கள் மீது தமிழக அரசின் சுகாதாரத்துறை கறாறான நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் தரமற்ற தனியார் பால் விற்பனை என்பது குறையும்.பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜியை பாராட்ட வேண்டும். அவர்தான் முதலில் தனியார் பால் நிறுவனங்கள் தரமற்ற பாலை உற்பத்தி செய்கின்றன என்பதை பகிரங்கமாக அறிவித்த அமைச்சர்.

கேள்வி: ஆவின் நிறுவனம் இலாபத்தோடு இயங்கி வருகிறதா ?

பதில் : “பால் என்றால் ஆவின் – கலப்படம் இல்லாதது ” என்று நாங்கள்தான், சங்க மலரில் முதலில் எழுதினோம். அந்த வசனத்தைதான் இன்று ஆவின் நிறுவனம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருக்கிறது.ஆவின் நிறுவனத்தால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் விவசாயிகளும் பலன் பெற்று வருகிறார்கள்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக பால் தரும் திட்டத்தை காமராஜ் (அய்ஏ.எஸ்) மேலாண்மை இயக்குனராக இருக்கும்போது அமலாக்கினார். சுனில்பாலிவால் ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டுவந்தார்.

ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி நெய்,பால்கோவா,நறுமணப் பால்,மைசூர் பாகு,குலாப் ஜாமுன்,பால்பவுடர், வெண்ணெய், பன்னீர் போன்ற உப பொருட்களையும் விற்பனை வருகிறது.மருத்துவ மனைகள்,பேருந்து நிலையங்களில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தால் விற்பனை பெருகும். கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்த ஆவின் பாலகம் அகற்றப்பட்டு இப்போது தனியார் நிறுவனம் கடை வைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தார்கள். அதோடு அங்குள்ள கழிப்பறைகளையும் பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அதனால் ஆவின் பாலகம் அமைக்க முடியவில்லை.

ஆவின் நிறுவனத்தில் நிகழும் சேதாரம், திருட்டு இவற்றை குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் உள்ள ‘மதர் டைரி’ நிறுவனத்தில் பணியாற்றும் மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே கார் வசதி உண்டு.ஆனால் இங்கு பல அதிகாரிகளுக்கு ஆவின் நிறுவனம் கார் வசதி செய்துள்ள து.கண்காணிப்பு அதிகாரியாக ஒரு உயந்த பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி இருக்கிறார். அவருடைய ஓட்டுநர், உதவியாளர் என இவர்களுக்கு ஆகும் செலவை ஆவின் செய்கிறது. பல தேவையற்ற பதவிகள் தலைமை அலுவலகத்தில் (பொறியியல், திட்டம், கால்நடை சார்ந்த உயர் பதவிகள்) உள்ளன. இவையெல்லாம் ஆவின் இலாபத்தை விழுங்குகின்றன.

மாதவரம்,மதுரை,ஈரோடு என மூன்று இடங்களில் தீவனப் பிரிவு இயங்கி வந்தது.இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தீவனம் கிடைத்து வந்தது. தீவனத்தை விற்பனை செய்ய சந்தை இருக்கிறது. அதற்கான தொகையை பாலின் விலையில் இருந்தே கழித்துக் கொள்ளலாம். இந்த தீவனப் பிரிவை மீண்டும் இயக்க வேண்டும்.

குழந்தைகள்,முதியோருக்கு என கொழுப்பு நீக்கிய பாலை ஆவின் வழங்குகிறது. இவையெல்லாம் நன்மை பயக்கும் செயல்களாகும்.

கேள்வி: இப்போது அரசாங்கம் பாலின் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் கூட்டியிருக்கிறது.இதைக் குறைக்க ஏதும் ஆலோசனை கூறுகிறீர்களா ?

பதில்: ஆவின் நிறுவனம் தேவையற்ற நிர்வாகச் செலவுகளையும்,தேவையற்ற பதவிகளையும், சேதாரத்தையும்(wastage) குறைத்தாலே பால் விலையை உயர்த்த வேண்டியதில்லை. ஆவின் நிறுவனம் நடத்திவந்த தீவனப் பிரிவு நல்ல இலாபத்தோடு இயங்கி வந்தது. தனியார் தீவன உற்பத்தியாளர்கள் தலையீட்டின் பேரில், அதை பால்வளத்துறை மூடிவிட்டது.இதனால் மிக மலிவான விலைக்கு விவசாயிகளுக்கு தீவனம் கிடைத்து வந்தது நின்று விட்டது. அதனால்தான் அவர்கள் கொள்முதல் விலையை அதிகம் கேட்கிறார்கள். இதனை மீண்டும் இயக்கினால் விவசாயிகளும் பலன் பெறுவர். அல்லது அரசு மானியம் வழங்க வேண்டும்.

கேள்வி: சிறப்பாக செயல்பட்ட பால்வளத்துறை அமைச்சர் என்றால் யாரைச் சொல்லுவீர்கள் ?

பதில்: கண்ணப்பன், ப.உ.சண்முகம், குழந்தைவேலு, கே.ஏ.கிருஷ்ணசாமி, வி.வி.சாமிநாதன், மதிவாணன், சுந்தரம், கே.என்.நேரு,ராஜா முகமது என பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் எனக்கு பிடித்த அமைச்சர் இராஜா முகமது. அவர் 1979, 80 களில் அமைச்சராக இருந்தார். 700 தொழிலாளர்கள் அவர் அமைச்சராக இருந்தபோதுதான் நிரந்தரப்படுத்தப்பட்டார்கள். இது ஒரு பெரிய சாதனை. அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். அவர்கள் சொல்லுவதை அப்படியே கேட்க மாட்டார்.

கேள்வி: நீங்கள் எப்போதுமே சிவப்புத் துண்டோடு இருக்கிறீர்களே !

பதில்: என் அப்பா சென்னைத் துறைமுகத் தொழிலாளி. அய்யங்கார் சங்கம் என்று சொல்லப்பட்ட ஏஐடியுசி சங்கத்தில் இருந்தவர்.
சி.கெ.மாதவன் நான்காம் வகுப்புதான் படித்தவர். அவரை ஒரு ‘தொழிற்சங்க பல்கலைக்கழகம்’ என்று சொல்ல வேண்டும். அவர் 1976 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி ‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’ வைத்திருந்தார். நான் 1976 ஆம் வருடத்தில் இருந்து அவர் 1992 ஆம் ஆண்டு இறக்கும் வரை சி.கெ.எம்- மோடு இருந்தேன். அவரோடு சேர்ந்து நாங்கள் 35 பேர் 1984 ல் மாதவரம் பால்பண்ணை பேருந்து நிலையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தோழர். தா.பாண்டியன் முன்னிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டோம். அன்று முதல் இந்த சிவப்பு துண்டை அணிந்து வருகிறேன். இதுதான் எனது அடையாளம். எனக்கு பெருமிதமாகவும் இருக்கிறது.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ்.

கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் : இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார்:

“பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை. அது எங்களுக்கு அவசியமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று சொல்லுவதற்குத் தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும். அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம் கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

Marx Anthonisamy

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, “பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

பதில் : 1930 களில் பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன்.

அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர். கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும் கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது.

1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம் இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம் முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம் “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில் மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே.

கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை. முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன் (Samuel P.Huntington) போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக, இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே. .

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்த ‘சம வாய்ப்பு ஆணையம்’ என்ற கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. நிரந்தரமான வேலை, ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும். தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம்.

ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை. ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிகமயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும் இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழை மக்களை அதிகாரப்படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி, அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும் தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின் நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில் இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. மாட்டுக்கறியின் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynching) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும் எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

கேள்வி : வரவிருக்கிற தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா ?

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி எனது முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும்.

பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன.

.ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம் கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் கட்டணத்தை முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான்.

விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

கேள்வி : மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள் ?

பதில் : அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளை திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர்.

இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. சிறுபான்மையினர் மட்டுமின்றி தலித், ஆதிவாசிகள் முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். .

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை. தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

கேள்வி : சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சின்னத்தில் நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே ?

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பது என்பது கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத் தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர் வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே ?

பதில் : தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். 2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர்.

SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

கேள்வி : வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில் ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடகாவில் நிற்கலாமே? வயநாட்டில் போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல் மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும் ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியச் சிறைவாசிகள், வீரப்பன் வழக்கில் சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும். சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA) திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

கேள்வி: இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான அமைப்புகளில் இயங்கி வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும். 1905 தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது. காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை. அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

கேள்வி; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

கட்டட தொழிலாளர்களின் நிதியை அம்மா உணவகத்துக்கு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது அரசு: கட்டட சங்க தலைவர் கே.இரவி

கட்டட தொழிலாளர் சங்கத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கே. இரவி (66). தமிழ்நாடு ஏஐடியுசியின் துணைப் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். கட்டுமான தொழிலாளர் நிலமை பற்றி தடைம்ஸ்தமிழ்.காமிற்காக பேசுகிறார். இந்த நேர்காணலை செய்தவர் பி. பீட்டர் துரைராஜ்.

கேள்வி : கட்டட தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளாரே?

பதில்: இப்படி ஒரு கோரிக்கையை கட்டட தொழிலாளர்களோ, சங்கமோ கேட்கவில்லை. கட்டட தொழிலாளர்கள் எத்தனை பேர் சாப்பிடுவார்கள், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை. உணவுப் பண்டங்களின் முழு உற்பத்திச் செலவை (மற்றவர்களுக்கு தரும் சலுகை விலை அல்ல) வாரியம் தரவேண்டும். கூட்டுறவு நிறுவனமான டியூசிஎஸ் அம்மா உணவகத்திற்கு காய்கறி, அரிசி போன்ற பொருட்களை வழங்கியதற்காக 40 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி தர வேண்டியுள்ளது. நிதி நெருக்கடியில் அம்மா உணவகம் தள்ளாடுகிறது. வாரியத்தில் உள்ள நிதியை, அம்மா உணவகத்திற்காக தமிழக அரசு எடுத்துக் கொள்ளப் பார்க்கிறது..

கேள்வி: இதனால் பலன் ஏதுமில்லை என்று சொல்லுகிறீர்களா?

பதில்: கட்டுமான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ,பி.ஃஎப், போனஸ், மகப்பேறு உதவி போன்ற ஒன்பது விதமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ அமலானால் கட்டுமான தொழிலாளி மட்டும் இல்லாமல், அவர் குடும்பத்தினரும் மருத்துவ உதவி பெறுவர். மகப்பேறு உதவி சட்டப்படி ஆறுமாத சம்பளத்திற்கு ஈடான தொகையை தரவேண்டும். குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூபாய்15,000 என்று வைத்துக் கொண்டால் 90,000 ரூபாயாவது ஒரு பிரசவத்திற்கு தர வேண்டும். ஆனால், இப்போது 6000 ரூபாய் மட்டுமே வாரியம் தருகிறது. அதற்குரிய Formula (சூத்திரம்)படி தருவது இல்லை. இது போன்ற நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

 நலத்திட்டங்களைச் செய்யாமல் அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடுங்கள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருகிறார்களே?

பதில்: அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஒரு தொழிலாளிக்கு, அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதாவது 15000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளிக்கு அதில் பாதி அதாவது 7,500 ரூபாயாவது ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அதில் பாதியை அவர் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கட்டுமான தொழிலாளிக்கு மாதம் 1000 ரூபாய்தானே ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால், வாரியத்தில் 2763 கோடி ரூபாய் நிதி உள்ளது. இதை வைத்து ஓய்வூதியத்தை அதிகமாக்கித் தரலாம்.

கட்டட தொழிலாளர்களை உரிமைபெற்ற தொழிலாளர்களாக்க அரசு தயாராக இல்லை. அவர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் மதிப்பதில்லை.

கேள்வி: நல வாரியத்தில் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் இருக்கிறார்கள் அல்லவா?

பதில்: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், எல்பிஎப் என எந்த மத்தியச் சங்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளாக, எட்டு உறுப்பினர்களையும் அதிமுக தொழிற்சங்க ஆட்களை வைத்து தமிழக அரசு நிரப்பி உள்ளது.

அப்படியே அந்த வாரியம் தொழிலாளர்களுக்கு சாதகமாக ஏதும் முடிவு எடுத்தாலும் அதை அமலாக்க முடியாது. அரசுதான் அதில் முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஆலோசனை வாரியம் உள்ளிட்ட எந்த முத்தரப்பு குழுக்களும் (முதலாளி + அரசு + தொழிலாளி) செயல்படுவதில்லை.

அதனால்தான் ‘தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு கமிட்டியாக கட்டுமான வாரியம் செயல்பட வேண்டும்’ என்று நாங்கள் கேட்கிறோம். அதில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் கட்டட சங்கத்தில் தேசிய அளவில் பணிபுரிகிறீர்கள். இது பற்றி?

பதில்: நான் ஏழு ஆண்டுகளாக அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் மகாசம்மேளனத்தின் (All India Confederation of Building and Construction Workers) பொதுச் செயலாளராக இருக்கிறேன். இந்தியா முழுவதும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சீரான, ஒரே மாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். ஒரு மாநிலத்தில் பதிவு செய்து கொண்ட கட்டுமான தொழிலாளிக்கு மற்ற மாநிலத்திலும் பலன் கிடைக்க வேண்டும். மத்திய சட்டப்படி ஒன்று முதல் இரண்டு சதம் வரை நலவரி வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு சதம்தான் நலவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டு சதமாக உயர்த்த வேண்டும்.

ஒன்றை மகிழ்ச்சியோடு இங்கே சொல்ல வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம், கல்வி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டம் நடத்தினோம். அப்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். நாங்கள் சென்னை வருவதற்குள் தில்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். கல்வி உதவி போன்ற வேறு சில கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா விலேயே முன்மாதிரியான கல்வி உதவித்திட்டத்தை ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை அரவிந்த் கெஞ்ரிவால் அரசு சிறப்பாக அமலாக்கி வருகிறது.

கேள்வி : மற்ற மாநிலங்களில் வாரியம் எப்படி செயல்படுகிறது?

பதில் : பல மாநிலங்கள் இப்படி சேகரமாகியுள்ள நிதியை தவறாக பயன்படுத்துகின்றன. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்துளளது. வி.ஆர்.கிருஷ்ணய்யரால் தொடங்கப்பட்ட National Campaign Committee for Construction workers என்ற அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதில் நாங்களும் சேர்ந்து வழக்காட இருக்கிறோம்.

தமிழ் நாட்டில் வாரிய நிதியைப் பயன்படுத்தி 100 கோடி ரூபாய் செலவில் நான்கு இடங்களில் தொழிலாளர்கள் தங்க Dormitory கட்டியுள்ளார்கள். அதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு அருகே 50 ஏக்கர் இடம் வாங்கி ஒரு Training School ,கட்டுமான தொழிலாளர்களுக்காக ஆரம்பித்தார்கள். எந்த தொழிலாளி பள்ளி சென்று பயிற்சி பெற்று கட்டட வேலைக்கு போகப் போகிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வாரியம் சம்பளம் வழங்குகிறது. இது போன்ற செயல்கள் மூலம் நிதி வீணடிக்கப்படுகிறது.

வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் தொழில் நுட்பம் அதிகமானதால் வேலை நேரம் குறைந்துள்ளது. எல்லாவிதமான சமூக நலத்திட்டங்களும் கட்டுமான தொழிலாளிக்கு கிடைக்கின்றன. இங்கும் அது சாத்தியம்தான்.

கேள்வி: வேலையில்லா காலங்களில் நிவாரணம் கேட்கிறீர்களே?

பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை,திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒரு தொழிலாளிக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட நூறு கோடிக்கு மேல் செலவாகியிருக்காது. ஆனால் அரசு அதை செய்யவில்லை.

கேள்வி : டாஸ்மாக் கடைகளுகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை உங்கள் சங்கம் நடத்தியதே ! இது சாத்தியமான ஒன்றா?

பதில்: பாதிக்கப்பட்ட தொழிலாளி தங்களது கோரிக்கை அமலாக போராடுகிறார். பெண் கட்டட தொழிலாளர்கள், குடியினால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் நடத்திய போராட்டம் இது. அவர்களே டாஸ்மாக கடைகளுக்கு பூட்டுப் போட்டார்கள். இந்தப் போராட்டம் மற்ற இடங்களுக்கும் பரவியது.

கட்டட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கே. இரவி

கேள்வி: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதாக பிரதம மந்திரி மோடி அறிவித்து உள்ளாரே ?

பதில்: இந்தியா முழுவதும் சுமாராக 40 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு ஒதுக்கி உள்ள நிதி 500 கோடி ரூபாய்.அப்படி என்றால் ஒரு நபருக்கு எத்தனை பைசா ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

மோடி அறிவித்துள்ள ஓய்வூதியம் இப்போது வராது. நாற்பது வயதான தொழிலாளி இந்த திட்டத்தில் இப்போது சேர்த்தால், அவரது அறுபதாவது வயதில், இருபது ஆண்டுகள் கழித்துதான் வரும்.அப்போது மூவாயிரம் ரூபாயின் மதிப்பு என்ன? 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அமைப்புச்சாரா தொழிலாளி, மாதாமாதம் 55 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பிரிமியம் செலுத்தினால் 60 வயது ஆனவுடன் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இதற்கு Nodal Agency- ஆக LIC யை அறிவித்து உள்ளார்கள். ஏனெனில் அதற்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. இது ஒரு அரசுத் திட்டம் இல்லை. இது நாங்கள் கேட்ட ஓய்வூதியமும் இல்லை.

கேள்வி: மேற்கு வங்காளம், கேரளாவில் உதவித் தொகை எப்படி வழங்கப்படுகிறது.

பதில்:1996 ல் மத்திய சட்டம் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் அதற்கான விதிகளை அரசு உருவாக்கவில்லை. அவர்கள் அரசு போகிற நேரத்தில் விதிகளை உருவாக்கினார்கள். இடதுசாரி அரசு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டாமா? மேற்கு வங்காள இடது முன்னணி ஆட்சியில் தொழிலாளர் இயக்கம் பலமாக வரவில்லை; பலன் தரவில்லை.

ஆனால் கேரளாவில் அப்படியில்லை. முன்னுதாரணமான பல திட்டங்கள் அங்கு உருவாகின.

கேள்வி: ஒரு அரசுத் துறையில் பணிபுரிந்த நீங்கள் எப்படி கட்டட தொழிலாளர் சங்கத்தில் ஈடுபாடு காட்டுகிறீர்கள்?

பதில்: 1982 ல் பெங்களூரில் கூடிய ஏஐடியுசி மாநாடு ‘அமைப்புச்சாரா தொழிலாளர்களை அமைப்பாக்கு” என்று அறைகூவல் விடுத்தது. சென்னை பெருநகர ஆட்டோ ஓட்டுநர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், வங்க கடலோர மீனவர் சங்கம் போன்றவை உருவாயின. இதையொட்டி 1989, 1990 -ஆம் வருடங்களில் சென்னை பெருநகர பகுதியில் கட்டட தொழிலாளர்களை அணி திரட்டும் பணி நடந்தது.

சி.கெ.மாதவன், ஆர்.செல்லப்பன் ஆகியோரோடு சேர்ந்து நானும் இந்த இந்த வேலைகளில் ஈடுபட்டேன். 11.8.1991 ல் திருச்சியில் கூடி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் என்ற மாநில அமைப்பை உருவாக்கினோம்.1982 ல் வந்த உடலுழைப்புத் தொழிலாளர் சட்டப்படி உள்ள திட்டங்களை அமலாக்கு, கேரளாவில் பனைமரத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள, கட்டட தொழிலாளர்களுக்கு உள்ளது போல கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை உருவாக்கு என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம்.

குலசேகரன், சுப்பு, கீதா,பொன். குமார் போன்ற தோழர்கள் கட்டட தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஏஐடியுசி தலைவர்களை அழைத்தார்கள். 1984 ல் ,கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக எம் .கல்யாண சுந்தரம், ராஜ்ய சாபாவில் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டிஆர்எஸ் மணியோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டோம். இந்த சங்கத்தை அமைப்பாக்கினோம்.

கட்டுமான தொழிலாளர்களை அரசியல் படுத்துவதில், குழுவாக இணைத்துச் செல்லுவதில் ஒரு தேக்கம் இருக்கிறது.

கேள்வி: எல்லா சங்கங்களையும் இணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தினீர்கள். அது பற்றி?

பதில் : தமிழ்நாடு முழுவதும் 4000 கட்டுமான, அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அவைகளில் பல LIC முகவரைப் போல செயல்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில் எல்லா சங்கங்களையும் ஒன்றிணைத்து ‘கட்டுமானத் தொழிலாளர் போராட்ட முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கினோம். மாவட்ட அளவிலும் சங்கங்களின் ஒற்றுமை உருவானது. அதில் கீதா, பொன்.குமார், சுப்பு போன்றவர்களும் இருந்தனர். அதற்கு என்னை மாநில அமைப்பாளராக தேர்ந்தெடுத்தனர். கூட்டாகப் போராட்டத்தை நடத்தினோம். முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதனால் கலைஞர் ஆட்சியில் சில சாதகமான ஆணைகளைப் பெற்றோம். ஆனால் இந்த கூட்டு முயற்சி தொடரவில்லை. சிஐடியு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ‘போராட்ட முன்னணி’ என்ற பெயர் இருக்க வேண்டாம், அது ஒரு அரசியல் கட்சி பெயர்போல இருக்கிறது என்றார்கள். அது கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றார்கள். தேவைப்படும்போது கூட்டுப் போராட்டம் நடத்தலாம் என்றார்கள். இதுபோன்ற காரணங்களால் அதில் தொய்வு ஏற்பட்டது.

இப்போதும் நான் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் விவசாய தொழிலாளர் சங்கத்தில் பணிபுரிந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப்பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1. 10.1970 ல் சென்னைக்கு வந்தேன். ஸடான்லி மருத்துவ கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து பாதுகாப்புத்துறையைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்பான கண்டோன்மெண்ட்டில் பணியில் சேர்ந்தேன். அங்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு என சங்கம் ஆரம்பித்து அந்த சம்மேளனத்தின் பொறுப்புக்கும் பின்னாளில் உயர்ந்தேன்.

கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஒரத்தநாடு பகுதியில் மருத்துவர் இளவழகன் பணிபுரிந்து வந்தார். அவரது அறிமுகம் எனக்கு ஏற்கெனவே இருந்ததால், ஒன்றுபட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராக பணி புரிந்து இருக்கிறேன். அப்போது ஆர்.நல்லக்கண்ணு அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

ஒரு சமயத்தில் வறட்சி ஏற்பட்ட போது இடைக்கழிநாட்டில், 18 கிராமங்களிலும் உள்ள மா,பலா, தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. இழப்பீடு கேட்டு போராடினோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த எஸ்.அழகர்சாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்; விவசாயிகள் சங்க தலைவர்.அவர் வழிகாட்டினார்.

குசேலரின் அண்ணணான அரங்கண்ணல் விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடினார். ஏகாட்டூர் என்ற கிராமத்தில் இருந்த தலித்துகளுக்கு வேலையை மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கிராமம் முழுவதும் சவுக்கை நட்டனர். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கறவை மாடு இரண்டு வேண்டும் என்று போராடினார்கள்; பாலைக் கறந்து சென்னைக்கு அனுப்பினார்கள். இவையெல்லாம் முக்கியமான போராட்டங்கள். இதில் நான் முழுமையாக பங்கு பெற்றேன் என்று சொல்ல முடியாது. உடன் இருந்தேன். அவ்வளவுதான்.

இருங்குன்றம்பள்ளி என்ற கிராமத்தில் இருந்த வோரியண்ட் கெமிக்கல்ஸ் என்ற கம்பெனியில் இருந்து வெளியான கழிவு நீர் பாலாற்றில் கலந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடந்தது. பின்னர் கழிவு நீர் விவசாய நிலங்களில் விட்டு அவை பாழாயின. அந்த ஆலை ஓ.வி.அளகேசன் என்ற முன்னாள் ரயில்வே அமைச்சரின் குடும்ப உறவினருக்கு சொந்தமானது. அவர் ஜமீன்தார். கிராமமே திரண்டு போர்களமாக இருந்தது. இது போன்ற நிகழ்வுகளில் வாலாஜாபாத் விசுவநாதன், ,வழக்கறிஞர் அங்குசாமி,ஏகாம்பரம், ஊஞ்சான் போன்றவர்கள நேரடியாக களத்தில் இருந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. நட்ட ஈடு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இந்தப் போராட்டங்களை ஒரு வரலாறாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

ஒரு வருடம் வெண்மணி நினைவு நாளின் போது 27 கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கொடியேற்றி அன்று மாலை கடப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளில் ஆதிமூலம், ஆர்.நல்லகண்ணு,ப.மாணிக்கம் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேல்நல்லாத்தூரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த பத்து கிராமவாசிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. போராடி இருநூறு பேருக்கு மேல் வேலை பெற்றுத்தந்தோம் இதற்கான போராட்டத்தில் என் வாழ்வின் பெரும்பாலான நேரம் கழிந்தது. அதன் தொடர்ச்சியான பணி இன்றும் கூட தொடர்கிறது.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்

‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ்.

கேள்வி : ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற உங்களுடைய நூலை வாசித்து விட்டேன். கடின உழைப்பின் ஊடாக, பல சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உள்ளீர்கள்.  அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக இருக்கிறார்; ஆதர்சம் தருகிறார். பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் அவரை விமர்சித்து இப்போது புத்தகம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

பதில் : அம்பேத்கர் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். நீங்கள் சொல்லுவதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அம்பேத்கரை பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ஆவணப்பூர்வமாக அணுகவில்லை. அதே சமயம் அம்பேத்கர் பற்றி பல விமர்சனப்பூர்வமான நூல்கள் ஏற்கனவே வந்துள்ளன. இது ஒன்றும் முதல் நூல் அல்ல. இங்கும் கூட எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் ‘அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான்’ என்று கூறியிருக்கிறார். அவரும் தலித்திய ஆய்வாளாராக இருக்கிறார். டெல்டும்ப்டேவின் நூல்களை தமிழாக்கம் செய்கிறார். ஆய்வுத்தளம் இப்படி இருக்க, இவர்கள் ஏன் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அம்பேத்கருக்கு ‘மார்க்சிய நூட்கள் கிடைக்கவில்லை’ என்று, ஏன் சொல்லுகிறார்கள் என்பதுதான் என் கேள்வி. அம்பேத்கர் குறித்த பல ஆய்வுநூல்கள் வருவதற்கான அடிப்படையை இவர்கள் ஏன் செய்யவில்லை. பௌத்தரை கடவுளாக மாற்றிவிட்டார்கள். விடுதலையை பௌத்தம் தராது. அதனால்தான் இந்த நூலே பிறக்கிறது.

அதற்கு முன்னதாக ரங்கநாயகம்மா நூலை (சாதியப் பிரச்சினைக்கு புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை) இவர்கள் அணுகிய விதம் என்பது முக்கியமானது. விமர்சனம் என்று வந்துவிட்டாலே இவர்கள் ஏன் பதட்டம் அடைகிறார்கள். மார்க்ஸ் இறந்து 200 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மார்க்சியத்தை சிதைத்தும், திரித்தும், தத்துவம் போதவில்லை என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளன. மார்க்சியவாதிகள் யாரும் பரபரப்பு அடையவில்லை; பதட்டம் அடையவில்லை. அதனை தத்துவார்த்த ரீதியாக எதிர் கொண்டுள்ளனர். மார்க்சியம் பெண்ணியத்தை பேசவில்லை, சூழலியலை பேசவில்லை என்று பல விமர்சனங்கள் வந்துள்ளன. இதை எதிர்த்து மார்க்சியர்கள் சமர் புரிந்துள்ளனர். மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது என்று விவாதிக்கிறார்கள். ரங்கநாயகம்மா நூல் தமிழில் முதலில் வந்தது. அது மொழிபெயர்ப்பு நூல். இப்போது என் நூல் வந்துள்ளது. அதற்கு ஏன் வசைகளையே பதிலாக சொல்லுகிறார்கள்.

அம்பேத்கரது எழுத்துக்களைக் காலவரிசைப்படி தொகுக்கவில்லை. உதாரணமாக பூனா ஒப்பந்தம் முடிந்தவுடன் அதனைப் பாராட்டுவார். ஆனால் பிறகு பூனா ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டோம் என்பார். கலப்புத் திருமணத்தை ஆதரிப்பார். வேறு ஒரு இடத்தில் கலப்புத் திருமணம் பெரிதாக ஒன்றும் செய்துவிடாது என்பார். இதில் எது அவரது கருத்து? எது அவர் இறுதியாக சொன்ன கருத்து என்ன என்று நமக்குத் தெரிய வேண்டாமா? அவரது நூல்களை காலவரிசைப்படி தொகுத்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அம்பேத்கரை அரசியல் நிர்ணயசபை தலைவர் என்பார்கள், தேசியத் தலைவர் என்பார்கள். ஆனால் அவரை விமர்சித்தவுடன் எங்கள் சாதித் தலைவரை எப்படி விமர்சிக்கலாம் என்று சொல்லத்தொடங்கிவிடுவார்கள்.

“அம்பேத்கர் தலித் அரசியலை மையப் பகுதிக்கு கொண்டு வந்தவர். அம்பேத்கரை விட்டுவிட்டெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நாம் பேச முடியாது. அந்தக் கவனமெல்லாம் எனக்கு இருக்கிறது.”

கேள்வி: அப்படி என்றால் சமூக விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் புறக்கணித்து விட முடியுமா?

பதில்: அம்பேத்கர் தலித் அரசியலை மையப் பகுதிக்கு கொண்டு வந்தவர். அம்பேத்கரை விட்டுவிட்டெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நாம் பேச முடியாது. அந்தக் கவனமெல்லாம் எனக்கு இருக்கிறது. மகத்தான பங்களிப்பு அவருடையது.  ஆனால், அதற்கான விளைச்சல்கள் என்ன ? என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கேள்வி.

அம்பேத்கரை மகாத்மாவாக அழைக்கலாமா என்று சொல்லுகிறார்கள். எனவே, அந்த சட்டகத்துக்குள் என் கேள்வியை வைக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் ஆளும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு பத்து நிமிடம் கூட அவர் ஆட்படவில்லை. அவரை நான் எப்படி மகாத்மா என்று அழைப்பேன். தங்கள் ஆளுகைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவராக அம்பேத்கரை ஏன் பிரிட்டிஷ் அரசு ஏன் நினைக்கவில்லை. அவருடைய நோக்கம் அற்புதமான நோக்கம். அவருடைய நோக்கங்களையோ, எண்ணங்களையோ நான் தவறு சொல்லவில்லை. ஆனால் போய்ச் சேர்ந்த வழிகள் எல்லாம் தவறுதலாகவே இருக்கின்றன. அவருடைய தொகுப்பு நூட்களை படித்தாலே தெரியும். அவருடைய முடிவுகள் அனுமானங்கள் அடிப்படையில் வைக்கப்பட்டவை.

கேள்வி : நீங்கள் தலித்தாக இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள் என்கிறார்களே? ஆதிக்க சாதி மனோபாவம் என்கிறார்களே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : முதலில் தங்களை தலித்தாக நினைக்கிற அறிவுஜீவிகள் ஏன் அம்பேத்கர் குறித்து ஆவணப்படுத்துகிற வேலையைச் செய்யவில்லை. இரண்டாவது நான் என்னுடைய செயல்பாடுகளில் எப்போதாவது ஆதிக்கச்சாதி மனநிலையோடு செயல்பட்டு இருக்கிறேனா? ஆதிக்கசாதிக்கு ஆதரவாக நான் எதுவும் எழுதியுள்ளேனா? ஒருவன் மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்ட பிறகு அவன் எழுத்துக்களைப் பார்க்காமல் அவன் சாதியைப் பார்ப்பது ஆதிக்கப் பார்வை. இதுதான் பார்ப்பனக்கூறு. இது எங்கே போய் முடியும் என்றால் அம்பேத்கர் எழுத்தை ஒரு தலித் எழுத்தாக பார்ப்பதில் முடியும். இவர்கள் எனக்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு அம்பேத்கருக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

இந்திய தத்துவ மரபில் 80 சத நூல்கள் இறைமறுப்பு நோக்கம் கொண்ட நூல்களே. நான் சமஸ்கிருத நூல்களையும் சேர்த்துதான் சொல்லுகிறேன். பார்ப்பனியத்தை தோலுரித்துக் காட்டியவர்களில் பெரும்பாலர் பார்ப்பனர்களே. அவர்களை இவர்கள் எப்படி பார்ப்பார்கள்.

ஆதிக்கச் சாதியாக இருப்பவர்கள் அம்பேத்கரை பாராட்டிவிட்டால் தலித் விடுதலையாளராகவும், விமர்சித்து எழுதிவிட்டால் ஆதிக்கச் சாதியினராக முத்திரை குத்துவதும்தான் இவர்களின் தூய பார்ப்பனியமாக இருக்கிறது. வாக்குவங்கி அரசியலில் தலித் தலைவர்கள் கூட்டணி வைக்கும் போது அவர்களின் சாதி குறித்து இவர்கள் பேசுவது இல்லையே. அம்பேத்கரை பெருமளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது கம்யூனிஸ்டுகளும் இடைநிலைச்சாதியனரும்தான் என்று எஸ்.வி.ராஜதுரை சொல்லுகிறாரே? கம்யூனிஸ்டுகளும், என்சிபிஎச் போன்ற கம்யூனிஸ்டு பதிப்பகங்களும்தானே இதை செய்தன. அம்பேத்கரை பாரட்டுபவர்களைப் பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை. ஒரு நூலை ஆய்வாளன் எழுதிய நூலாக பார்ப்பதா ? அல்லது அவன் சாதியைப் பார்ப்பதா?

இந்த நூலைப் படிப்பதனால் இவர்களின் பிழைப்புவாதத்திற்கு இடைஞ்சல் வருகிறது. அதனால்தான் இதனை நான் தலித் அடையாள அரசியல் என்று சொல்லுகிறேன்.

கேள்வி: தலித் அடையாளத்தை மையப்படுத்தி பேசுகிற விஷயம் நல்லதுதானே ? இதை ஏன் தவறாகப் பார்க்க வேண்டும்.

பதில்: அடையாள அரசியலில் இருந்துதானே இதற்கான கேள்வியே வருகிறது. கம்யூனிஸ்டுகள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.’ பார்ப்பன கம்யூனிஸ்டுகள்’ என்று பேசுகிறார்கள்.பெரியார் தலித்துக்களைப் பற்றி யோசிக்கவே இல்லை என்ற குரல் எங்கிருந்து வருகிறது. அடையாள அரசியலை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியானால் இடைநிலைச் சாதியினர் தங்கள் சாதி குறித்துப் பேசுவார்களே? இப்படிப்பட்ட பார்வை சாதிப் பார்வைக்கு உதவும் அடையாள அரசியலாகத்தான் இருக்குமே ஒழிய அது எப்படி சுதந்திர அரசியலாக இருக்க முடியும். நான் ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். அம்பேத்கரை புகழ்ந்து எழுதியவர்களைப் பார்த்து உங்கள் சாதித் தலைவர்களை புகழ்ந்துவிட்டு உங்கள் சாதி அம்பேத்கரை புகழுங்கள் என்று சொல்லுவார்களா ? இதில் ஏதும் logic இருக்கிறதா?  நூல் குறித்துப் பேசாமல் பார்ப்பனியம் குறித்து ஏன் பேசுகிறார்கள். இவர்கள் தலித் பார்ப்பனர்களுக்கான மனநிலையை வைத்துள்ளார்கள். அதனால்தான் இவர்களை தலித் பார்ப்பனர்கள் என்று சொல்லுகிறேன். ஒரு சில தலித் அறிவுஜீவிகள் பார்ப்பான் புத்தி பார்ப்பான் புத்தி என்று சொல்லும் போது, மற்ற சாதி புத்திகளும் தானாகவே வந்து விடும்தானே ? பிறப்பின் அடிப்படையில் ஒரு புத்தி இருக்கும் என்பது அசல் பார்ப்பனியம் இல்லையா ?

கேள்வி: இந்த புத்தகத்திற்கு நீங்கள் எவ்வளவு காலம் உழைத்தீர்கள் ?

பதில் : எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் உழைத்து இருப்பேன். மற்றபடி நான் தொடர்ந்து வாசித்து வருபவன்.

கேள்வி: நீங்கள் எதுவும் அரசியல் கட்சியில் இருக்கிறீர்களா ?

பதில் : இளவயதில் மூன்று ஆண்டு காலம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், இளைஞர் பெருமன்றத்திலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். மாவட்ட அலுவலக ஊழியனாகவும் இருந்திருக்கிறேன். சென்னை வந்த பிறகு ஆறுமாத காலம் தாமரையில் பணியாற்றி இருக்கிறேன். இப்பொழுது எந்தக் கட்சியிலும் இல்லை. வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: உங்கள் சினிமா அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.

பதில்: என் வாழ்நாள் தோழி கொற்றவை மூலம் சசிகுமார் அறிமுகம் கிடைத்தது. கிடாரி,அசுர வதம் படங்களில் நடித்தேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்.

கேள்வி: உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு க.சந்தானம், மொழிபெயர்ப்பாளரும்,மார்க்சிய ஆய்வாளரான கோவை.எஸ்.பாலச்சந்திரனை அழைத்து உள்ளீர்கள்.  இருவருமே இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர்கள். அதற்கு ஏதும் விசேஷமான காரணம் உண்டா?

பதில் : தோழர் கோவை பாலச்சந்திரன் தத்துவ அளவிலும் இலக்கியத்திலும் தேர்ந்தவர். அவருடன் பலமுறை விவாதித்திருக்கிறேன். கற்றிருக்கிறேன். மிகுந்த வாசிப்பும் களச் செயல்பாடும் கொண்டவர். அதே போல்தான் தோழர். க.சந்தானம் அவர்களும். கட்சியில் பணிபுரிந்த போது எனக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தவர். இவர்கள் இருவருமே கறாரான தத்துவப் பின்புலத்தைக் கொண்டவர்கள். எனவே இவர்களை அழைத்தேன். மற்றபடி கட்சி வித்தியாசமெல்லாம் எனக்கு இல்லை.

கேள்வி: மார்க்சிஸ்ட் கட்சியை, எம்.எல்.கட்சியையோ சார்ந்த யாரையும் அழைக்கவில்லையே?

பதில் : ரங்கநாயகம்மா புத்தகங்களை தெலுங்கில் உள்ள மார்க்சிய கட்சி பதிப்பகம் இன்றும் விற்பனை செய்து வருகிறது. அவருடைய கட்டுரைகளை மார்க்சிஸ்ட் கட்சி நாளிதழ் இன்றும் வெளியிடுகிறது. ஆனால் இங்குள்ள பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த சிலர் குழுவாதச் செயல்பாடோடு அவதூறுகளை பரப்பினர். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றதோடு, அங்கு அது அடுத்த அம்பேத்கரைக் கூட அவசரத்தில் கண்டெடுத்த நிலைமையும் நடந்தது. அவர்களைத் தவிர ஏன் மற்றவர்களுக்கு கருத்துரிமை கிடையாதா? அவர்கள் வலதுசாரிக்கு எதிரான கருத்துரிமையைத்தான் ஆதரிப்பார்களா? தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி நிகழ்வில் எஸ்.வி.ராஜதுரையை ‘மார்க்சிய அறிஞர் ‘ என்று அழைப்பிதழில் போட்டு இருந்தார்கள். எஸ்வி.ராஜதுரையை திரிபுவாதி என எஸ்.தோதாதிரி எழுதிய கட்டுரை செம்மலரில் வெளியாகி இருக்கிறது. பிரகாஷ் காரத்திற்கும், டபுள்யூ.ஆர்.வரதராஜனுக்கும் அரசியல் அறிவு குறைவாக இருக்கிறது என எழுதியவர். அவர் எப்போது மார்க்சிய அறிஞரானார் என்று நான் கேள்வி கேட்டேன். என்னை கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். அப்போது அங்கு இருந்த தமிழ்ச் செல்வனும், எஸ்.ஏ.பெருமாளும் மார்க்சிய அமைதியோடு இருந்தனர்.. எஸ்.வி.ராஜதுரை பேசுவது பிராங்க்பர்ட் மார்க்சியம்தானே என்று தி.சு.நடராசன் அங்கேயே பேசியதாக தமிழ்ச்செல்வன் பின்னர் கூறினார். மேலும் ரங்கநாயகம்மா நூல் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக கி.இலக்குவன் அவர்கள் மிக மோசமான ஒரு பொய்யை பொதுத்தளத்தில் வைத்து, அதற்கு பதிலும் எழுதியிருந்தேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், குழுவாதத்தை இலக்கியமாகவும், சார்பை முன்னெடுப்பவர்கள் கோலோச்சும் இடமாகவும் அது இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ரங்கநாயகம்மா புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தில் வைத்து விற்பதா வேண்டாமா என்பது அங்கு தனிநபர் முடிவாக இருந்தது. முரண்பாடுகளை தனிநபர் ரீதியாகப் பேசும்பொழுது என்னால் வேறு என்ன செய்ய முடியும்.

கேள்வி: புத்த மதம் ஒப்பீட்டளவில் முற்போக்கான மதம் தானே! அதை ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?

பதில்: பார்ப்பன கம்யூனிஸ்டுகள் என்றும், பெரியாரை பொம்பிள பொறுக்கி என்றும் சொல்லும் தைரியம் எப்படி அவர்களுக்கு வந்தது. இதைத்தான் நான் என்னுடைய நூலில் கேள்வி கேட்கிறேன். இந்து மதத்தை எப்படி வரையறை செய்வீர்கள். இங்கு சிறுதெய்வ வழிபாடுகள் உண்டு. ஆனால் அம்பேத்கர் கிருஷ்ணனை கடவுளாக வைக்கிறார். இது அனுமானத்தின் உச்சமாகும். பகவத் கீதையை எத்தனை பேர் படிக்கிறார்கள்.பௌத்தம் வைதிக பௌத்தம், அவைதீக பௌத்தம் என்று இல்லையா? காஞ்ச அய்யலய்யா புத்தரை, அம்பேத்கரை, கார்ல் மார்க்சை இறைதூதர் என்று அடித்துக் கூறுகிறாரே. இதற்கான காரணங்கள் என்ன..?

கேள்வி: அனைத்து அறிவுஜீவிகளையும் கேள்வி கேட்கிறீர்களே?

பதில்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாக, தத்துவரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை. அ.மார்க்ஸ் ,வ.கீதா இருவரும் காந்தி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அம்பேத்கர் பற்றி எழுதவில்லை. ந.முத்துமோகன் மூளை களவாணித்தனம் செய்கிறார். எந்த அறிவுஜீவியும் செய்யக் கூடாத ஒன்றை செய்கிறார். அம்பேத்கரின் பௌத்தமும், அயோத்திதாசரின் பௌத்தமும் ஒன்று என்று கூறுமளவுக்குச் சென்றதோடு, ஒரே கட்டுரையில் பெயரை மட்டும் மாற்றிப் போட்டு எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு அறிவுஜீவி செய்யக் கூடாத செயல்கள். மார்க்சியர்கள் தத்துவ தளத்தில் மாபெரும் உழைப்பைக் கொட்டியவர்கள். ந.முத்துமோகன் உழைக்க மறுப்பது ஏன் ?

கேள்வி : கி.வீரமணியைப் பற்றி கூட விமர்சித்து எழுதி யிருக்கிறீர்களே?

பதில்: அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்தை தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்வி கி.வீரமணி மொழிபெயர்ப்பில் வெட்டப்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலின் முன்னுரை பெரியார்தாசன் மொழிபெயர்ப்பில் வெட்டப்பட்டுள்ளது. (இந்த முன்னுரையை அம்பேத்கரை எழுதவில்லை என்பது இன்னொரு செய்தி).இது போன்ற நழுவல்வாதங்கள் எல்லாம் தேவையில்லை. இது எப்படி இறைமறுப்பு பௌத்தமாகும். அம்பேத்கர் எங்குமே நவயான பௌத்தம் என்று பேசவில்லை. அம்பேத்கர் புத்தரின் 32 அங்கலட்சணங்களை விதந்தோதுகிறாரே? புத்தரின் ஆணுறுப்பு ‘உறைபோட்டு ‘ இருந்தது என்கிறாரே? அதோடு மட்டுமல்லால், அவ்வுறுப்பை சிலருக்கு மாயம் செய்து காட்டி தன்னை ததாகதராக நிரூபித்தார் என்கிறாரே? இவையெல்லாம் எப்படி பகுத்தறிவாகும். ஆனால், ஒன்றை சொல்கிறேன் மேலே நான் விமர்சித்த முத்துமோகனோ, ராஜதுரையோ, அ.மார்க்ஸோ, வ,கீதா உட்பட யாவரும் மதவாதத்திற்கு எதிராக உறுதியாக நின்றவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் அவர்களது சார்பையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

கேள்வி: அம்பேத்கர் மகர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்லுகிறீர்களே?

பதில்: ஆமாம். மத மாற்ற முடிவு உட்பட பல முக்கியமான முடிவுகளை அம்பேத்கர் மகர் சாதிக் கூட்டத்தில்தான் அறிவித்தார். மாங்க்குகள், சாம்பர்கள் சாதி குறித்து அவரது பார்வை சரியானதாக இல்லை.

கேள்வி: அருண்சோரி Worshiping false gods* என்ற நூலை எழுதி யிருக்கிறாரே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : அந்த நூலை நான் படித்தது இல்லை. தமிழில் வந்திருக்கிறதா?

எழுத்தாளர் வசுமித்ர

கேள்வி: அம்பேத்கரை இந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்றனரே?

பதில்: அதற்கான கருத்தியலை அம்பேத்கரே வழங்கியிருக்கிறார். அம்பேத்கரிடம் உள்ள கம்யூனிச வெறுப்பும், இஸ்லாமியர்கள் குறித்து அவர் முன்வைத்துள்ள சில பதிவுகளும்தான் அவரை இந்துத்துவர்களுக்கு உகந்தவராக மாற்றியிருக்கிறது. மேலும் அம்பேத்கரின் பௌத்தமும் மதவகைப்பட்ட புராணங்களை முன்னெடுக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் நாம் எதை எதிர்பார்க்க முடியும். ஆர்எஸ்எஸ் தனது இறை வணக்கப் பாடலில் எப்போதோ அம்பேத்கரை இணைத்துக் கொண்டு விட்டது. நான் ஏற்கனவே கூறியதுதான், இந்துத்துவ அம்பேத்கர் சாத்தியம், இந்துத்துவ காந்தியோ, இந்துத்துவ பெரியாரோ சாத்தியமில்லை. காந்தியின் புகைப்படத்தைக்கூட அவர்கள் இன்னமும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி : நீங்கள் வேறு எதுவும் எழுதியிருக்கிறீர்களா?

பதில் : நான்கு கவிதை நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு தொகுதிகள் கருப்புப் பிரதியிலும், இரண்டு தொகுதிகள் உயிர் எழுத்து பதிப்பகத்திலும் வந்துள்ளது. இப்பொழுது ஐந்தாவதாக ‘தடை செய்யப்பட்ட புத்தகம்’ என்ற கவிதை நூல் சிந்தன் பதிப்பக நூலாக வெளிவந்துள்ளது. புத்தர் குறித்த புனைவு ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் பெயர் ‘புத்தனின் மதுக்குடுவை’.

கேள்வி: உங்கள் இயற்பெயரே இதுதானா?

பதில்: என் இயற்பெயர் வடிவேல் முருகன். எனது நண்பனின் பெயரையும், தோழமை என்னும் பொருள்படும் மித்ர-வை பெயரில் சேர்த்துக்கொண்டேன்.

கேள்வி: இவ்வளவு நேரம் நீங்கள் எங்களோடு பேசியதற்கு நன்றி.

பதில்: மிக்க நன்றி. ஒரு வாசகனாக முதலில் இந்த நூலை நீங்கள் படித்து இருக்கிறீர்கள். எனது விமர்சனம் அனைத்தையுமே நட்புமுரணாகத்தான் நான் பார்க்கிறேன். இதற்கு அது பரவாயில்லை என்ற வாதம் ஒரு பகுத்தறிவுவாதிக்கு தேவையில்லை. தத்துவத்தில் சமரசமும் தேவையில்லை.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

* பதிப்பாளர் குறிப்பு : பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் சோரி, அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதிய நூல் ‘Worshiping false gods'(2012). பக்க சார்புடன் இந்நூல் எழுதப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் நூல் வெளியான காலத்தில் வைக்கப்பட்டன. இந்திய வரலாறு மார்க்சியர்களால் எழுதப்படுகிறது என்பதை விமர்சித்து Eminent Historians: Their Techniques, Their Line, Their Fraud என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். கே.என். ஜா போன்ற வரலாற்றாசிரியர்கள், அவதூறாக எழுதப்பட்ட நூல் இது என இந்நூலை ஒதுக்கிவிட்டனர். மோடிக்காக பிரச்சாரம் செய்த இவர், தற்போது மோடியை விமர்சிக்கும் பிரதான பாஜக பிரமுகர் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.

“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்

‘யாதும்’ – ஆவணப்படம் மூலம் அறியப்பட்டவர் கோம்பை எஸ். அன்வர். வரலாற்று ஆய்வாளர், பத்திரிக்கையாளர் , புகைப்பட கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக அளித்த நேர்காணலில் இசுலாமியர்களின் கல்வி, அவர்களின் பன்மைத்துவம்,வியாபாரத்தால் இஸ்லாம் வளர்ந்த விதம், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போன்ற பல விஷயங்களை பேசுகிறார். சென்னையில் அவரது இல்லத்தில் நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

kombai
பத்திரிக்கையாளர் கோம்பை எஸ். அன்வர்

கேள்வி: தமிழ் முஸ்லிமான நீங்கள் வளர்ந்த சூழல் பற்றி சொல்லுங்கள். உங்கள் எண்ணவோட்டத்தை எது உருவாக்கியது?

பதில் : எனக்கு தேனி மாவட்டத்திலுள்ள கோம்பைதான் சொந்த ஊர். என் அப்பா ஏலக்காய் வியாபாரி. திராவிட இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்டவர். அப்பா மட்டுமல்ல உறவினர் அனைவரிடமும் தமிழர் என்பதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தி திணிப்பை எதிர்ப்பது என்பது எங்களுக்கு சிறு பிராயத்திலேயே இயல்பாக அமைந்த ஒன்று. ஊரில் மத வித்தியாசம் என்னவென்றே தெரியாது.

வெளியூரில் பள்ளியில் படிக்கும் போது மதம் குறித்த லேசான உராய்வுகள் வந்தன. தமிழ் முஸ்லிம்கள் பேசும் தமிழ்தான் அருமையான தமிழ் என்று என்னுடைய தமிழாசிரியராக இருந்த செல்வராஜ் வகுப்பறையில் பாராட்டுவார். அது உராய்வுகளுக்கு அருமருந்தாக அமைந்தது. அதே கால கட்டத்தில் நான் சந்தித்த பெரும்பாலான இஸ்லாமிய மதகுருமார்கள் (ஹஜ்ரத்மார்கள்) சற்று பிற்போக்காகவே எனக்கு தெரிந்தார்கள். பெண்கள் மேற்படிப்பில் ஆர்வமற்றவர்களாக, புகைப்படம் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், முஸ்லிம்களுக்கு சினிமா (ஹராம்) தடுக்கப்பட்டது என்றும் அவர்களில் பலர் உரக்கக் கூறிக் கொண்டிருந்த காலம். இது போல் இன்னும் பல. எனவே நான் மதத்திலிருந்து சற்று விலகியே இருந்தேன்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த சமயம் என்று நினைக்கின்றேன், Tariq Ali என்ற இடது சாரி சிந்தனையாளர் எழுதிய “Shadows of Pomegranate Tree” என்ற நாவலைப் படித்தேன். 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் மூர்களின் (இஸ்லாமிய ஆட்சியாளர்களர்களின்) இறுதி ஆட்சி காலத்தைப் பற்றிய கதை. அறிவைத் தேடுபவர்களாகவும், விஞ்ஞானத்தை போற்றுபவர்களாகவும், ஐரோப்பிய கிறித்துவ உலகம் வெறுத்து ஒதுக்கிய யூதர்களுக்கு பாதுகாப்பாக இஸ்லாமிய சமூகம் இருந்த வரலாற்றை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது அந்த நாவல். அந்நாவலைப் படித்த பின்னர்தான் இங்கிருக்கும் இன்றைய முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது, புரிந்து கொள்வது தவறு என்று முடிவுக்கு வந்தேன். குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எனது புரிதல் மாறுபடத்துவங்கியது.

கே:’யாதும்’ என்ற ஆவணப்பட த்தை எடுத்தீர்கள். அதை எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

பதில்: தமிழ் எனக்குத் தாய் மொழி. கல்லூரிக்காக சென்னைக்கு வந்த புதிதில் எனது பெயரைக் கேட்டவுடன் பலரும் இந்தியில் அல்லது உருதுவில் உரையாடத் துவங்குவார்கள். அவர்கள் பலருக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட கணிசமான முஸ்லிம்கள் தமிழகத்தில் வசிக்கின்றார்கள் என்பதே தெரியாது. தமிழகத்திற்கும் அரேபியாவிற்குமான நீண்ட கால வணிகத் தொடர்புகள் மூலமாக இஸ்லாம் இங்கு 7 ஆம் நூற்றாண்டிலேயே வந்தடைந்தது என்ற உண்மை நமது வரலாற்று புத்தகங்களில் சொல்லப்படுவது இல்லை. தப்பும் தவறுதலுமாக நம் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றை இந்து சகாப்தம் (Hindu Era) இஸ்லாமிய சகாப்தம் (Islamic Era) என்று ஆங்கிலேய காலனியம் தவறாக பிரித்துக் கையாண்டது. ஆனால் இப்படி தனித்த வரலாறாக இந்திய வரலாறு என்றுமே இருந்ததில்லை. அடிப்படையில் இஸ்லாம் பன்மைத்துவத்தை வலியுறுத்தி வருகிற மதம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்த ஒரு பன்மைத்துவமான சமுதாயமாகத்தான் நாம் வாழ்ந்துள்ளோம். மன்னரை வைத்து ஆட்சியை எடை போடுவது தவறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பொறுப்பில் இந்துக்களும், இந்து மன்னர்களின் ஆட்சியில் பெரும் பொறுப்பில் இஸ்லாமியர்களும் இருந்திருக்கின்றார்கள். இன்று பெரிதும் பழித்துச் சொல்லப்படும் அவுரங்கசீப்பின் படையில்தான் அதிகமான இந்துக்கள் இருந்திருக்கின்றார்கள். செஞ்சியை முகலாய படைகள் கைப்பற்றியவுடன், அது அவுரங்கசீப்பின் உத்தரவுப்படி சுவரன் சிங் என்ற ராஜபுத்திரனுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப் பட்டது. சுவரன் சிங் இஸ்லாமியரா?

அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியம் மட்டும் இதனால் மறுதலிக்கப்படவில்லை, போரோடு சம்பந்தப்பட்ட சகல கொடுஞ் செயல்களும் மதத்தோடு பின்னிப் பிணைக்கப் படுகின்றது. எனவே இது போன்ற தவறான பிரச்சாரங்கள் பத்திரிக்கைகளில் வரும் போது அதை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து எழுதினால் சரியாகிவிடும் என்று வெகுளித்தனமாக அப்போது நம்பினேன்.

எழுத்தாளர் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா தன்னுடைய ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் ஸ்ரீரங்கம் வரலாற்றைக் கூறும் “கோயில் ஒழுகு” வின் புதிய பதிப்பு குறித்து ஒருமுறை எழுதி இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் தேர்திருவிழாவின் போது பிராமணர்கள் நோஞ்சானாக இருந்ததால் விவசாயிகள் தேரை இழுப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் பாடும் நாட்டுப் புற பாடல்களை ஆய்வு செய்தால் 13000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் முகமதியர்களால் கொல்லப்பட்ட தகவல் குறித்து தகவல் தெரிய வரலாம் என்றும் எழுதி இருந்தார். அவர் குறிப்பிட்ட நூலை வாசித்தேன். நூல் ஆசிரியரே இதற்கு சான்றுகள் இல்லை என்று எழுதியிருந்தார். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை சுஜாதா போன்றவர்கள் முன்னிலைப் படுத்துவது தவறு என்று நானும் , Dr. ராஜா முகம்மது என்ற மூத்த ஆய்வாளரும் சில சான்றுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் “இனிமேல் இஸ்லாமியர்கள் பற்றி எழுதமாட்டேன்”; இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற ரீதியில் சுஜாதா விவாதத்தை முடித்துவிட்டார்.

சுஜாதாவுடனான இந்த விவாதங்கள் ‘காலச்சுவடு’ இதழில் வெளியானது. அதனடிப்படையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தேசிய அளவிலான ஆய்வரங்கம் ஒன்றில் பேச அழைத்தார்கள். இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து வந்திருந்த அறிஞர்களுக்கு தமிழ் இஸ்லாமியர் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்து நான் எடுத்து வைத்த பல கருத்துக்கள் புதிதாக, ஆச்சரியமாக இருந்தன. உடனடியாக சென்னைப் பல்கலைக் கழகத்திலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் பேச அழைததார்கள். தொடர்ந்து மேலும் பல அழைப்புகள். பேசிய இடங்களிலெலலாம் இஸ்லாமியர் வரலாறு குறித்த தவறான கண்ணோட்டத்தை எனது உரை மாற்றியது என்று பாராட்டினர். இது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக ‘யாதும்’ ஆவணப்படத்தை எடுத்தேன்.

கே: ‘யாதும்’ ஆவணப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது ?

ப: நான்கு ஆண்டுகள் கடும் உழைப்பின் விளைவாக 2013 ல் “யாதும்” உருவானது. கிட்டத்தட்ட 15 இலட்ச ரூபாய் செலவானது. ஒரு ஆய்வுப் பட்டத்திற்கு உரிய விவரங்கள் இதில் உள்ளன. பொது சமூகத்தில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை அறிஞர்கள் மத்தியில், தமிழ் இஸ்லாமியர் குறித்த வரலாற்று பார்வையில் ஒரு பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பேன். படத்தை தமுஎகச (தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) மற்றும் சில அமைப்புகள் பல இடங்களில் திரையிட்டன. இஸ்லாமியர்களிடமிருந்து பலதரப்பட்ட எதிர்வினைகள்( mixed reactions) வந்தன. இஸ்லாமிய அறிஞர்கள், சில முஸ்லீம் ஜமாத்துகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இது திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது, இதுவரை அவ்வளவாக பேசப்படாத வரலாற்றை பேசுவதால், வெளிநாடுகளில் இருந்து கலாச்சாரம், பண்பாடு குறித்து ஆய்வு செய்ய வரும் பல அறிஞர்கள் சென்னை வரும்போது என்னிடம் விவாதிக்க விரும்புகிறார்கள்.

கே: நீங்கள் திராவிட இயக்கத்தின்பால் பற்று கொண்டவர். கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த முக்கியமான சாதனை என்று எதனைச் சொல்லுவீர்கள் ?

பதில்: தி மு க ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சிகளில் இஸ்லாமியர்கள் பறிகொடுத்த பலவற்றை, .உரிமைகளை மீட்டெடுக்க முடிந்தது. இஸ்லாமியர்களுக்காக கல்லூரி (காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி), அண்ணாநகரில் யுனானி படிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது விழாவிற்கு அரசு விடுமுறை. இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் கிடைத்தது, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ( 3.5 %) கொடுக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் காரணமாக அரசு இயந்திரத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து வருகின்றனர். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, நீதிபதிகளாக, மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு தளங்களில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்திற்கு வித்திட்டவர் கலைஞர்.

கலைஞர் மு. கருணாநிதி

இவை அனைத்தையும் மீறி கலைஞர் செய்த சாதனை தமிழக இஸ்லாமியர்களுக்கு கொடுத்த பாதுகாப்பு உணர்வுதான். சமீபத்தில் டெல்லியைச் சார்ந்த ஒரு முஸ்லீம் பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.அவர சொன்னார் “வீட்டிலிருந்து வெளியே போனால் திரும்பி பத்திரமாக வருவோமா என்ற கவலை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கிறது ” என்றார்.அது போன்ற அவல நிலை தமிழ் நாட்டில் இல்லை என்பதுதான் கலைஞரின் தலையாய சாதனை என்பேன்.

கே: பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: எண்பதுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தபிறகு உலக அளவில் மேற்கத்திய உலகிற்கு பொது எதிரி தேவைப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மீண்டும் மேற்கத்திய உலகம் செயல்பட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்துத்துவத்திற்கும் மேற்கத்திய நவீன காலனியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கங்கள் பக்கம் திரும்பினர். சுதந்திர இந்தியா மத அடிப்படைவாதத்தை ஒழிக்க இன்னும் சிரத்தையுடன் செயல் பட்டிருந்தால் இன்று நாடு இந்த நிலையில் இருந்திருக்காது. அடிப்படைவாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். மத நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையும் சரிவர வித்தியாசப் படுத்திப் பார்க்க முந்தைய அரசாங்கங்கள் தவறி விட்டன. அதன் விளைவுதான் இது.

ஆனால் இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.

கே: பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ப: இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு எந்த தடையும் இல்லை. மிகப் புனிதத் தலமான மக்காவில் உள்ள கவ்பாவில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. முன்பு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு போவதில்லை. எனவே வீட்டிலேயே தொழுது வந்தார்கள். இப்போது பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். எனவே காலம் மாறி வருகிறது. சென்னையிலும் சில பள்ளிவாசல்களில் அண்மைக்காலமாக பெண்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

கேரள மாநிலத்தில் நடந்த வனிதா மதில் போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமிய பெண்கள்…

கே: பத்திரிகைத்துறையில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: தவறு . தமிழகத்தை பொறுத்த வரை நிச்சயமாக பத்திரிகை உலகில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்படுவதில்லை. பெரும்பாலான ஊடகங்களில் முஸ்லிம்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும் இஸ்லாமியர் குறித்து தவறான செய்திகளை சில பத்திரிக்கைகள் அவ்வப்போது உள்நோக்கத்தோடு வெளியிடுகின்றன. மறுப்பதற்கில்லை. அவர்களிடம் பத்திரிக்கை இருக்கின்றது. எழுதுகின்றார்கள். ஆனால் இஸ்லாமியர் பத்திரிகை நடத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதும் இல்லையே. அப்படியிருக்க பொது சமூகத்தை சென்றடையக் கூடிய வகையில் இஸ்லாமியர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது சமூகத்தின் தவறு.

கே: சென்னை, அதனையொட்டிய சுற்றுப் பகுதிகளில் நீங்கள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய பயணங்கள் குறித்து.

ப: நான் ஒரு வரலாற்று ஆய்வாளன். நமது பல பிரச்சனைகளுக்கான தீர்வு வரலாற்றில் இருக்கின்றது என்று நம்புகிறேன். ஆனால் வரலாறு நமக்கு முறையாக சொல்லித் தரப்படுவதில்லை. உதாரணமாக தமிழர்களுக்கு மிகப் பெரிய கடல் பாரம்பரியமுண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்து சென்று பொருளீட்டிய சமூகம் இது. அவ்வாறு சங்க காலத்திலிருந்து, கடல் கடந்து ஈட்டிய பொன்னும் பொருளும் தமிழகத்தை வளப்படுத்தியது. இன்று தமிழர்களுக்கு இந்த வரலாறு பெரும்பாலும் தெரியாது. பலவற்றை மறந்து விட்டோம், சிலது நம்மிடமிருந்து மறைக்கப் பட்டது. இவ்வாறு மறைக்கப்பட்ட, மறக்கபப்ட்ட, பேசப்படாத வரலாற்றை பேசுவதுதான் எனது பாரம்பரிய நடை பயணத்தின் நோக்கம். எனவே இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு செல்கிறோம்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.  டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை நேர்காணல் செய்து வருகிறார் பீட்டர் துரைராஜ். 

”காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காக போராடியிருப்பார்”: காந்தியவாதி அண்ணாமலை

புதுதில்லி, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருக்கும் அண்ணாமலையுடன் நடந்த நேர்காணல் இது. காந்தி பிறந்த 150 வது ஆண்டை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடக்கும்வகையில் ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்துவரும் அவரை தி.நகரில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் சந்தித்துப் பேசினோம். காந்தியின் இன்றையப் பொருத்தப்பாடு, தூய்மை இந்தியா, மதக் கலவரம், சர்தார் பட்டேல் சிலை என பல விஷயங்கள் குறித்துக் கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

கேள்வி: நீங்கள் புதன்கிழமைதோறும் நடத்திவரும் வாராந்திரக் கூட்டம் பற்றி சொல்லுங்களேன்?

பதில்: எனக்கு முனைவர் பட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர். கே.ஜே.சார்லஸ். அவர் கனடா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்தவர். மார்க்சிய சிந்தனைகள் குறித்து முதலில் பத்து வகுப்புகள் எடுத்தார். பின்னர் தத்துவம் குறித்து எடுத்தார். அவர்தான் சொன்னார் ” கூட்டம் என்றால் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். யார் வந்தாலும், வராவிட்டாலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிவிட வேண்டும் ” என்பார். காந்தியவாதி என்பதால் நேர ஒழுங்கு என்பது எனக்கு இயல்பானது. கூட்டத்தை மிகச்சரியாக 6.45 மணிக்கு ஆரம்பித்து விடுவோம்; அதே போல மிகச் சரியாக 745 மணிக்கு முடித்து விடுவோம். ஒவ்வொரு புதன்கிழமையும் இங்குள்ள காந்தி கல்வி நிலையத்தில் நடக்கும். இதற்கு ‘புதன் வட்டம்’ என்று பெயரிட்டுள்ளோம்.கூட்டத்திற்கு சராசரியாக 15 முதல் 20 பேர் வரை வருவார்கள் பேசக்கூடிய நூலைப் பொறுத்து, பேச்சாளரைப் பொறுத்து இந்த எண்ணிக்கை கூடும்.காந்தியச் சிந்தனகளை ஒட்டிய புத்தங்கள், படிக்க வேண்டிய நல்ல புத்தகங்கள், கவனம் பெற வேண்டிய மற்ற புத்தகங்கள் குறித்தும் பேசுவோம். 1995 ஆண்டு முதல் நடைபெறுகிறது. பொங்கல், தீபாவளி போன்ற நாட்கள் தவிர எல்லா புதன்கிழமைகளிலும் தவறாமல் நடந்துவருகிறது.

கேள்வி: சுதந்திர இந்தியாவில் காந்தியத்தின் மிக முக்கியமான சாதனை என்று எதனைச் சொல்லுவீர்கள்?

பதில்: காந்தி ஒரு போராசைக்காரர். பல விஷயங்களை அவர் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது சாதனைகளில் மிக முக்கியமானது என்று கருதுவது இதைத்தான்:’சாதாரண மனிதன் தன் கருத்தை ஆள்வோரிடம் பேசும் சூழல் வரவேண்டும்’ என்பார். காந்தி விரும்பிய அந்த சூழல் இப்போது இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.நீதி மீதான நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. இது காந்தியத்தின் அடிப்படையான வெற்றி என்றே கருதுகிறேன்.தவறு செய்யும் போதெல்லாம் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பொதுமக்கள் வாக்களித்து அவர்களை நிராகரித்து இருக்கிறார்கள். இவையெல்லாம் காந்தியத்தின் வெற்றிதான்.

கேள்வி: காந்தி பிறந்த குஜராத்தில்தானே மிகப்பெரிய மதக் கலவரம் நடந்தது. இது அவருக்கு தோல்வி இல்லையா?

பதில்: காந்தி தோற்றுவிட்டார் என்று ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன். நாம்தான் தோற்றுவிட்டோம்.காந்தி குஜராத்தில் பிறந்தாலும் அவருக்கு குஜராத் மக்களைவிட மகாராஷ்டிராவிலும்,பீகாரிலும்,உத்திரப் பிரதேசத்திலும்,தமிழ்நாட்டிலும் உள்ள மக்கள்தான் பெருமளவில் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.மதக்கலவரங்களுக்கு மதம்தான் காரணம் என்று நாம் சொல்ல முடியாது. தென்னாப்பிரிக்காவில் கூட இங்கிருந்து அங்கு சென்ற இந்தியர்கள் மீது அடக்குமுறை ஏற்பட்டது.அதற்கு காரணம் இந்தியர்களின் உழைப்பு, அதனால் அவர்கள் பெற்ற செல்வம், நிலம் போன்றவை காரணமாக அவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்கள் மீது அடக்குமுறை நிகழ்ந்தது. இதை காந்தி எழுதியிருக்கிறார்.மதக் கலவரங்களுக்கு பொருளாதார காரணங்கள் முக்கியமாக அமைகின்றன.நம் மதம் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அதை சரிவர புரிந்து கொண்டால் மத வெறி ஏன் ஏற்படுகிறது ? மத வெறுப்பு , போட்டி, பெறாமை ஏன் ஏற்படுகிறது?

கேள்வி: நீங்கள் காந்தியவாதியாக எப்படி மாறினீர்கள்?

பதில்: இராணுவத்தில் சேர்ந்து ஒரு அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்பதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது. அதனால்தான் கல்லூரியில் தேசிய மாணவர் படையில் ( NCC) சேர்ந்தேன்.அப்போது இராணுவத்தோடு சேர்ந்து எனக்கு 45 நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். அப்போது bayonet training ( துப்பாக்கியுடன் இணைந்திருக்கும் கத்திப் பயிற்சி) கொடுத்தார்கள். அக்கத்தியை வைத்து போர்க்களத்தில் குற்றுயிரும் கொலை உயிருமாக இருக்கும் எதிர்நாட்டு இராணுவ வீரனைக் கொல்ல வேண்டும். ஏனெனில் இறக்கும் தருவாயில் இருப்பவன் அதிக உயிர்களை எடுத்துவிடுவான்.எனவே அவனைக் கொல்ல வேண்டும்.அவனுக்காக ஒரு துப்பாக்கி குண்டை வீணாக்க கூடாது. எனவே அந்த துப்பாக்கி கத்தியால் அந்த வீரனை குத்திக் கொல்ல வேண்டும். இது என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவேதான் வேதியியல் பட்டப்படிப்பு படித்த நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய எம்எஸ்சி( அமைதியாக்கம்- peace making) வகுப்பில் சேர்ந்தேன்.அங்குதான் அந்தப் படிப்பு இருந்தது.பின்னர் M.Phil(காந்தி சிந்தனை) முடித்தேன். காந்தியப் பொருளாதாரத்தில் Phd பெற பதிவு செய்துகொண்டேன். அந்த சமயத்தில்தான் வேலை நிறைய இருக்கிறது வருகிறாயா? ஆனால் சம்பளம்தான் பெரிதாக தர முடியாது என்றார் காந்தி கல்வி நிலையத்தில் இருந்த திருமலை.அப்போது நான் முழுமையாக காந்தியத்தில் ஈடுபாடு கொண்டுவிட்டேன்.எனவே மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து காந்தி கல்வி நிலையத்தில் பணிபுரிய ஆரம்பித்தேன்.அதுமுதல் காந்தி கருத்துகளைப் பரப்புவதே எனது தலையாய பணி ஆயிற்று.நான் பிஎச்டியை முடிக்கவே இல்லை. எனது வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் சார்லஸ் ரொம்ப பெருமையாகச் சொன்னார் ” What you are doing is greater than your Phd.!”.

கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?

பதில்: என் மனைவி பிரேமா. அவரும் ஒரு காந்தியவாதிதான். என்னைப் போல அல்லாமல் அவர் பிஎச்டியை முடித்து விட்டார். காந்திக்கும் அவர் மனைவி கஸ்தூரிபாயிக்கும் நிலவிய உறவு பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றார்.அவரும் காந்தி கருத்துகளைப் பரப்பி வருகிறார். எனது மகள் வல்லபி . ஐந்தாம் வயது வரை அவரை நாங்கள் காந்தி சொன்னபடி பள்ளிக்கு அனுப்பவில்லை. இந்த காந்தி கல்வி நிலைய சூழலில்தான் நன்கு வளர்ந்தாள். இப்போது இயன்முறை சிகிச்சை(Physiotherapy) இறுதியாண்டு படித்து வருகிறாள்.

கேள்வி: புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனராக செயல்படுகிறீர்கள். இது பற்றி?

பதில்: உண்மையில் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.இந்த அருங்காட்சியகம்தான் காந்தி வைத்திருந்த எல்லா பொருட்களுக்கும், அவரது எழுத்துக்களுக்கும் பாதுகாவலர். காந்தி கருத்துகளைப் பரப்ப ஒரு நல்ல வாய்ப்பு;பல புதிய தொடர்புகள் கிடைத்ததுள்ளன.மொழிச்சிக்கல் இருந்தாலும், சென்னையிலிருந்து சென்றாலும் ஊழியர்கள், உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளேன்.நீங்கள் பேட்டி எடுக்கும் இந்த நாளில் எனது முதலாவது ஐந்தாண்டு பணியை ( I term) நிறைவு செய்து இரண்டாவது ஐந்தாண்டுக்கான பணியை தொடங்கியுள்ளேன்.

கேள்வி: காந்தி பிறந்த 150 ஆண்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.இதற்காக நிறைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறீர்கள். இது தொடர்பாக ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இயன்ற வழிகளில் எல்லாம் காந்தி கருத்துகளை பரப்புரை செய்து வருகிறோம்.பல நாட்டு தூதரகங்களை தொடர்பு கொண்டு வருகிறோம். இத்தாலி, பிரான்சு, அமெரிக்கா நாட்டு தூதரகங்களில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள்,ICMR,FICCI போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு வருகிறோம். ரயில்வே உடன் இணைந்து கண்காட்சிக்கான ஒரு ரயிலை தனியாக ஏற்பாடு செய்து வருகிறோம். சென்னை விமான நிலையத்தில் ‘காந்தி கார்னர்’ வைத்துள்ளோம் . ஓராண்டு காலத்திற்கு அது இருக்கும். காந்தி கல்வி நிலையம் எப்போதும் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தாது;மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தும்.பள்ளி, கல்லூரி களில் வினாடி வினா, கண்காட்சி, காந்தி பற்றி ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கி நான்கு மணிநேரத்திற்கு ஒரு பேக்கேஜாக தயார் செய்துள்ளோம்.காந்தி குறித்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.இந்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷனுடன் இணைந்து புதிய காந்திய நூல்கள், பழைய நூட்களை மறுபதிப்பு செய்தல், பிற மொழிகளிலிருந்து மொழி மாற்றம் செய்யும் நூட்கள் என 150 புத்தகங்களை வெளியிட உள்ளோம்.

கேள்வி: காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்தை எப்படி பார்த்திருப்பார்?

பதில்: காந்தி எந்தக் கோவிலுக்கும் போனதில்லை. தீண்டத்தகாதவர்களோடு சேர்ந்து அவர்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்களுடன் கோவிலுக்குச் சென்றவர் காந்தி்.’எந்தத் தடையும் இல்லாமல் எல்லாரும் கடவுளை தரிசிக்க உரிமை உண்டு’ என்று நம்பியவர் காந்தி. எனவே காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்துவார். வைக்கம் போராட்டம் மூலம் தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியவர் அல்லவா காந்தி?

கேள்வி: காந்தி பெயரில் ‘ தூய்மை இந்தியா’ திட்டத்தை நரேந்திர மோடி அரசு அமலாக்கி வருவது பற்றி?

பதில்: எல்லாரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் தானே! ‘தூய்மையான இந்தியா’ மட்டுமல்ல;’தூய உள்ளம்’ கொண்ட இந்தியா வேண்டும்;’ஊழலற்ற இந்தியா’ வேண்டும்;’ஒழுக்கமான இந்தியா’ வேண்டும். பெரும் பொருட்செலவில் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமலாக்கி வருகிறது. இந்தத்திட்டம் பெரிய தோல்வி என்றே நினைக்கிறேன். நிறைய கழிப்பறைகளை கட்டுகிறார்கள்.அதற்கு போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? இல்லையென்றால் அது குடோனாகத்தான் மாறும். அக்கழிப்பறைகள் நவீனமாக்கப்பட்டுள்ளதா? இதனை பராமரிக்கப் போவது துப்புரவுப் பணியாளர்கள்தானே? அவர்களை துப்புரவுப் பணியையே மீண்டும் செய்ய வைப்பது போல ஆகாதா ! நாளுக்கு நாள் மனிதன் உற்பத்தி செய்யும் திடக்கழிவுகள்(Solid waste) அதிகமாகி வருகிறதே.உற்பத்தி ஆகும் இடத்திலேயே உபயோகம் இருப்பதில்லை; இதனால் பேகிங் மெடீரியல்ஸ் பயன்பாடு அதிகமாகிறது. அந்தப் பொருட்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேதிப் பொருட்களை சேர்க்க நேரிடும். இதனால் அடக்க விலை உயரும். இதன் மூலம் உற்பத்தி ஆகும் குப்பைகளை குறைப்பது பற்றி தூய்மை இந்தியா பேசுகிறதா?

கேள்வி: குஜராத்தில் பட்டேலுக்கு 3000 அடி சிலை வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சர்தார் பட்டேல் இதை விரும்பியிருப்பாரா என்று தெரியவில்லை. டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். சிறிய கார் போதுமானது. ஆனால் பெரிய கார்தான் மதிப்பு என்று எல்லாரும் பெரிய கார்களையே வைத்து இருப்பார்கள். இதில் ஒரு பெருமை! இது நம்மிடம் உள்ள Social Ego, Political Ego . இதன் வெளிப்பாடுதான் 3000 அடி உயர சிலை. அந்தச்சிலை அருகில் சென்றால் பட்டேலின் கால்விரலைத்தான் நாம் பார்க்க முடியும். இது மோசமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். மகாராட்டிராவில் சத்திரபதி சிவாஜி சிலையை இதைவிட பெரிதாக அமைக்கப் போவதாக சொல்லுகிறார்கள். உ.பி.யில் இராமர் சிலையை இதே போல கட்டப் போவதாக சொல்லுகிறார்கள்.

கேள்வி: காந்தியின் 150 வது பிறந்த ஆண்டு விழாவை ஒட்டி அரசு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: காந்தி எப்போதும் அரசுக்குச் சொந்தமானவர் அல்ல.மக்களுக்கு சொந்தமானவர். அரசு செய்வதைச் செய்யட்டும்.எல்லா தரப்பு மக்களிடமும் குறிப்பாக அவரை தவறாக புரிந்து கொண்டவர்களிடம் காந்தியை எடுத்துச் செல்ல வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ‘மேவாத்’ என்ற இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தினோம்.இதே போல சேரிப் பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்.காந்தி கல்வி நிலையம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த பொறுப்பேற்றுள்ளது;தமிழ்நாடு சர்வோதய மண்டலும், தமிழ்நாடு காந்தி நினைவு நிதியும் தென்மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த பொறுப்பேற்றுள்ளது.காந்தியின் குரல், காந்தி பற்றி ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம், அவரது ஆசிரம வாழ்க்கை, காந்தி எழுதிய, காந்தி குறித்து மற்றவர்கள் எழுதிய 30 அடிப்படையான நூட்களை உள்ளடக்கிய ஒரு பென்டிரைவ் வெளியிட்டுள்ளோம். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் இது கிடைக்கும். இதன் விலை ரூ.300. இதைப் பார்த்தால் காந்தி குறித்த முழுமையான சித்திரம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

கேள்வி: பூரண மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

பதில்: தமிழ் மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு பூரண மதுவிலக்கு அவசியம். ஒரு கட்டத்தில் இது சாத்தியம் ஆகும் நிலை வந்தது. திமுக இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. படிப்படியான மதுவிலக்கிற்கு அதிமுக ஒத்துக் கொண்டது. எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டன. இந்த நிலை வர தமிழ்நாட்டில் உள்ள காந்திய இயக்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன.இது முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.பூரண மதுவிலக்குதான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நல்லது. மதுவிலக்கை அமலாக்கினால் அவர்களே தொலைக்காட்சி போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

கேள்வி: உங்களுடைய இத்தனை ஆண்டு உழைப்பிற்கு போதுமான அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: நான் தவறு இழைத்து விட்டேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக உள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் தானாக வரும்; அப்படியே வராது போனாலும் உற்சாகமாக பணியாற்றும் மன உறுதியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்; த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை நேர்காணல் செய்து எழுதி வருகிறார்.

தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்

சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், இரத்தநாள அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குனராகவும் இருந்தவர் அமலோற்பநாதன் ஜோசப். தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (Transplant Authority of Tamilnadu) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி, அதன் உறுப்பினர்-செயலாளராக இருந்தவர். த டைம்ஸ் தமிழ்.காம் இவருடன் ஒரு நேர்காணலை நடத்தியது. தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு பற்றிய பருந்துப் பார்வையை இதன் மூலம் பெற முடியும்.  தூய்மை இந்தியா, யோகா, தன்பாலின உறவு போன்ற கேள்விகளுக்கு எளிய வார்த்தைகளில் கூர்மையான பதிலை சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் தருகிறார். நேர்காணல் செய்தவர்: பீட்டர் துரைராஜ்

கேள்வி: சிசு மரண விகிதம், தடுப்பூசி , மருத்துவமனைகளின் எண்ணிக்கை போன்ற பல சுகாதார அளவீடுகளில் ( Health Indicators) தமிழ்நாடு நன்கு முன்னேறி உள்ளது. இதற்கு காரணம் அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

பதில்: இருவருக்குமே சம பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். புனித ஜார்ஜ் கோட்டை இங்குதான் கட்டப்பட்டது. சாலை வசதி, இருப்புப் பாதை வசதி, விமான நிலையம் போன்றவை இங்கு இருந்தன. இதனால் பெரிய மருத்துவமனைகள் சென்னையில் உருவாயின. 1920 களில் திராவிட கட்சிகள் எழுச்சி பெற்றன; இடைநிலை சாதியினர் அதிகாரம் பெற்றனர்; மகளிர் கல்வி விகிதம் அதிகரித்தது. இதுபோன்ற காரணிகளால் ஏற்கெனவே தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட சிறந்து விளங்கியது. ஆங்கிலேயர்கள் ஒரு நல்ல கட்டமைப்பை விட்டுச் சென்றனர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சுகாதார திட்டங்களை செயல்படுத்தினால் ஓட்டு கிடைக்கும் என்று தெரிந்து கொண்டார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு சிறந்து விளங்க முக்கிய காரணங்களாகும்.

கேள்வி: உங்களுடைய அனுபவத்தில் சிறந்த சுகாதார அமைச்சர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

பதில்: அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

கேள்வி: சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியராக இருந்திருக்கிறீர்கள். உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் தொடர்பான பணியில் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறீர்கள். இப்போது அது தொடர்பாக புகார் சமீபத்தில் வந்ததே?

பதில்: இப்போதுள்ள விதிகள் நன்றாக உள்ளன. பெரிதாக தவறு நடக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து திட்டவட்டமான புகார் ஏதும் வரவில்லை. அப்படியே ஏதும் வந்தால் அவை நன்கு விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நேர்மை, Moral Authority யோடு (ஆன்ம பலம்) செயல்பட முடியும்.

கேள்வி : ஆயர்வேதா, சித்தா, யுனானி முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுப்பப்படுகிறதே?

பதில்: மனிதனுக்கு தனது 4000 வருட வாழ்க்கைமுறை குறித்த அறிவு இருக்கிறது. தனது அனுபவத்தில் அசதி,காய்ச்சல், ஆஸ்மா போன்ற நோய்களுக்கு கை மருத்துவம் பயன்படுத்துகிறான். அதில் தவறு இல்லை. நான் கூட தலைவலி என்றால் மிளகுரசம் குடிப்பேன். ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. பல நூறு மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி பல நூறு சோதனைகளைச் செய்கிறோம். பழைய முறை என்பதற்காக யாரும் ஓலைச்சுவடியில் எழுதுவது இல்லை. கணினியை பயன்படுத்துகிறோம்.
இலைகள், வேர்கள் போன்றவைகளில் வேதிப் பொருட்கள் உள்ளன. வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

கேள்வி: மருத்துவக் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக ஓராண்டுக்கு தேவையான அடிப்படையான மருந்துகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. அவை மாவட்ட கிட்டங்கிகளுக்கு அனுப்ப படுகின்றன. அங்கிருந்து தாலுகா மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற்றுக்கொள்கின்றன. இதுதான் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கிறது. இது நல்ல முறைதான். பொதுவாக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் ஊழல் குறையும்.

கேள்வி : தமிழ்நாட்டில் இன்னமும் மேம்பாடு செய்ய வேண்டியவை இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

பதில்: தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களை பலப்படுத்திவிட்டோம். பல முன்னோடி திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் செயலாக்கப்படுகின்றன. ஆனால்
தமிழ்நாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும். பீகார், ராஜஸ்தானை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான். இது ஒருவிதமான சோம்பேறித்தனத்தை உருவாக்குகிறது. ஆனால், நமது தாலுகா மருத்துவமனைகளை, மாவட்ட மருத்துவமனைகளை இன்னமும் நாம் பலப்படுத்த வில்லை. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நோயாளிகள் சென்னை, மதுரை போன்ற நகரங்களை நாடி வருவது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையானது அனைத்தும் தாலுக்கா, மாவட்ட அளவில் கிடைக்க வேண்டும். சுகாதாரத்திற்கு நாம் ஒரு சதவீத ஜி.டி.பியைத்தான( GDP) ஒதுக்குகிறோம். ஒருசில நாடுகள் 10 சதம்வரை கூட சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன.

கேள்வி : தன் பாலின உறவு ஒரு நோயல்ல என்று சுகாதார நிறுவனம்(WHO) ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு ஒரு குற்றம் அல்ல என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் சமூகத்தில் இதனை இன்னமும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு முற்போக்கான தீர்ப்பு. இதனை வரவேற்கிறேன். ஒருவனுடைய படுக்கை அறையில் நுழைந்து பார்க்க யாருக்கும் உரிமையில்லை. பொது ஒழுங்கு சீர்குலையாத வரையில் தனியுரிமையில் யாரும் நுழைய முடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு என்ன கேள்வி வரும் என்றால் தன்பாலின உறவு கொண்டவர்கள் தத்து எடுக்க முடியுமா? இதில் யார் தந்தை? யார் தாய்? இருவரும் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்குழந்தையை தத்து கொடுக்க முடியமா? அவர்கள் பிரிந்தால் யார் குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது போன்ற கேள்விகள் எழும். இதற்காக விதிகள் காலப்போக்கில் உருவாகும். இது ஒரு பெரிய விஷயமல்ல.

கேள்வி : மாற்றுப்பாலின (transgender)உரிமை குறித்து?

பதில்: தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் அவர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.சென்னை மருத்துவ கல்லூரியில் Sex Change Operation (ஆணைப் பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக மாற்ற அறுவை சிகிச்சை) நடைபெறுகிறது. அதற்கான உளவியல் சோதனை, மற்ற பரிசோதனைகளுக்குப் பிறகு இது நடைபெறுகிறது. தேவை ஏற்பட்டால் இந்த சிகிச்சையை மதுரை, திருநெல்வேலியிலும் விரிவுபடுத்தலாம்.

கேள்வி: நீங்கள் முகநூலை நன்கு பயன்படுத்தி வருகிறீர்கள். அன்றாட முக்கிய நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் முகநூலில் கருத்து சொல்லுகிறீர்கள். நீங்கள் பல இடங்களில் பணியாற்றி இருந்தாலும் முதலில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய படத்தை நீண்ட காலமாக முகப்புப் படமாக(Profile Picture) வைத்து இருக்கிறீர்கள்? ஏதேனும் விசேட காரணம் உண்டா?

பதில்: சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

கேள்வி: டெங்கு காய்ச்சல் சமயத்தில் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை அரசாங்கம் சரியாக சொல்லுவதில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: அது எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கம் எதையும் மக்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை. பூகம்பம் வந்து இறந்தால் அரசு என்ன செய்ய முடியும்? கொள்ளை நோய் பற்றிய விவரத்தை உடனடியாக சொல்ல முடியவில்லை என்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல்களை மறுக்கக் கூடாது. அரசு தகவல்களை மறைத்தால் தவறான தகவல்களை பரப்புவார்கள். அரசு செய்ய வேண்டியதெல்லாம் நோய் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டதா? அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கை எடுத்ததா? உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்களா? உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதுதான்.

கேள்வி : நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு தரக்கூடாது என்று ஞாநி ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் பேசினீர்கள்?

பதில்: ஆமாம். நில வேம்பு கசாயம் என்பது சிகிச்சை(treatment) அல்ல. அரசு மக்களை ஏமாற்றக்கூடாது. அரசு மருத்துவ மனைகளில், MBBS படித்த மருத்துவர்களை வைத்து இந்த கசாயத்தை கொடுக்கக்கூடாது. தேவையானால் ஆயுர்வேதா, சித்தா மருத்துவர்கள் மூலமாக கொடுக்கட்டும்.

Dr. Amalorpavanathan
தூய்மை இந்தியா திட்டம் நகராட்சி மட்டத்தில் சிறிய அளவில்( Micro Level) திட்டமிட்டு நடத்த வேண்டியது. அதற்கான தொழில் நுட்பம், நிதி, வசதி செய்தால் போதும். இதற்காக ஒரு நாட்டின் பிரதம மந்திரி துடைப்பத்தை எடுத்து பெருக்க வேண்டியதில்லை. பெருக்கிய குப்பையை எங்கே போடப்போகிறார்? – மரு. அமலோற்பவநாதன்

 

கேள்வி: நீட் தேர்வு குறித்து?
பதில்: நீட் என்பது இப்போது நிஜமாகிவிட்டது. மாநில அரசு முடிந்தவரை எதிர்த்துப் போராடவில்லை. வலிமையான மாநில அரசுகள் உருவானால்தான் இத்தகைய போக்குகளில் மாற்றம் வரும். GST போன்ற வரிவிதிப்பு கூட மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான்.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி சொன்னார். ஏறக்குறைய இப்போது எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அது காலப்போக்கில் சரியாகிவிடும்.

கேள்வி: தூய்மை இந்தியா திட்டத்தை ( ஸ்வச் பாரத்) இந்திய அரசு அமலாக்கி வருவது பற்றி?

பதில்: இவையெல்லாம் நகராட்சி மட்டத்தில் சிறிய அளவில்( Micro Level) திட்டமிட்டு நடத்த வேண்டியவை. அதற்கான தொழில் நுட்பம், நிதி, வசதி செய்தால் போதும். இதற்காக ஒரு நாட்டின் பிரதம மந்திரி துடைப்பத்தை எடுத்து பெருக்க வேண்டியதில்லை. பெருக்கிய குப்பையை எங்கே போடப்போகிறார்? நம்முடைய குப்பையை ஏன் வேறு ஒருவர் எடுக்க வேண்டும்.
ஒருசில மாற்றங்கள் தனிநபர் அளவில் உருவாக வேண்டும். நான் துணிக்கடைக்குப் போனால் சட்டையை மட்டும்தான் பெற்றுக்கொள்வேன். அந்த அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பை போன்றவற்றை பெற்றுக்கொள்ள மாட்டேன்; கடையிலேயே கொடுத்து விடுவேன். சமையலறை குப்பைகளை காய்கறித் தோட்டத்தில் பயன்படுத்த முடியும். கூடுமான வரை குப்பையை உற்பத்தி(Reduce)செய்யக் கூடாது. மறு பயன்பாட்டிற்கு(Reuse) குப்பையை பயன்படுத்த வேண்டும். நாம் ஒரு எளிய வாழ்க்கை வாழத் தவறிவிட்டோம். ஒவ்வொருவரும் 20 சட்டை, 30 புடவை என்று வைத்து இருக்கிறோம். shopping கலாச்சாரம் வந்துவிட்டது. கங்கையை சுத்தப்படுத்துவதும் இந்த திட்டத்தில் ஒரு பகுதி. பெரிய தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை கங்கையில் கலக்கின்றன. இதை தடுக்காமல் கங்கையை எப்படி சுத்தப்படுத்துவது.

கேள்வி : யோகாவை அரசு முன்னெடுப்பது பற்றி?

பதில்: மனித உடலுக்கு உடற்பயிற்சி(Physical activity) அவசியம். உணவு, நல்ல காற்று, சுத்தமான தண்ணீர் போல உடற்பயிற்சியும் அவசியம் ஆண்,பெண் இருவருக்கும் அது அவசியம். அது நீ்ச்சலாக இருக்கலாம், ஓட்டமாக இருக்கலாம்.யோகாவும் ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான்.அது வந்து 300 அல்லது 400 வருடங்கள் இருக்கும். அதனை ஏன் ஒரு தேசிய உடற்பயிற்சியாக (National Exercise) அரசு முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இறந்த பிறகு உடல் தானம் செய்வது பற்றி?

பதில் : நல்ல விஷயம்தானே.உடல் மண்ணுக்குப் போவதைவிட, எரிப்பதை விட ஆராய்ச்சிக்குப் பயன்படட்டுமே. மருத்துவ கல்லூரிகளில் உடலியல் துறையில் (anatomy) இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் கத்தோலிக்க மாணவர் சங்கத்தில் இருந்து இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்களேன்.

பதில்: நான் சென்னையில் படித்த மாணவன். நான் AICUF ல் (அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கம்) சேர்ந்தது என் வாழ்வில் ஒரு மகத்தான திருப்பம் என்று சொல்லுவதில் எனக்கு தயக்கமே இல்லை. அதில் சேர்ந்த பின்புதான் கிராமங்களுக்குச் சென்றேன். அவர்கள் வாழ்முறையை புரிந்து கொண்டேன். அந்த அமைப்பின் இதழான ‘தேன்மழை’யின் ஆசிரியராகவும் மூன்று ஆண்டுகள் இருந்தேன்.

கேள்வி: உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி?

பதில்: மனைவியும் மருத்துவர். ஒரு மகள், ஒரு மகன்; இருவரும் படிக்கிறார்கள்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்காக பல்வேறு தரப்பட்ட ஆளுமைகளை நேர்காணல் செய்து எழுதிவருகிறார். சினிமா, புத்தகங்கள் குறித்தும் எழுதுகிறார்.

”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

கேள்வி: எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?

பதில்: கேரளா. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அல்ல. மேற்கு வங்காளச் சிறைகள் தமிழ்நாட்டை விட மோசமாக இருக்கும். ”போல்ஷ்விக்குகள் அதிகாரத்திற்கு வந்ததால் உருசியாவில் சிறைகள் நன்றாக இருந்தன. அதற்கு காரணம் அவர்கள் போல்ஷ்விக்குகள் என்பதால் அல்ல; மாறாக அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் என்பதால்” என்று பகத் சிங் எழுதியுள்ளார். கேரளாவில் இஎம்எஸ், ஏ.கே.கோபாலன் போன்றோர் சிறையில் இருந்தனர். வி்.ஆர். கிருஷ்ணய்யர் வழக்கறிராக, சட்டமன்ற உறுப்பினராக, சிறைத்துறை அமைச்சராக, நீதிபதியாக பல அனுபவங்களைப் பெற்றவர். எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், கம்யூனிஸ்டு ஆட்சி செய்தாலும் சிறைகள் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும். கேரளாவில் கைதிகளின் உழைப்பிற்கு தரும் ஊக்க ஊதியத்தை (incentive) அதிகப்படுத்தினார்கள். அதை வைத்து டோக்கன் கொடுத்து சிறை கேண்டீனில் வடை, தேநீர் போன்றவை கைதிகள் வாங்கிச்
சாப்பிட முடியும். வெளியே போகும் போது பணமும் கிடைக்கும். அதே போல கேரளாவில்தான் வேலைக்கு மட்டும் சீருடை, அறையில் இருக்கும் போது வேட்டி அணிந்து கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவந்தார்கள். சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலைப் படித்தால் அப்போதைய சிறை எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ள முடியும். மொழிப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், விலைவாசிப் போராட்டம் என்று திமுக பெற்ற சிறை அனுபவத்தால் இயல்பாகவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஓரளவு சிறப்பாக நடைபெற்றன. 1967இல் திமுக ஆட்சி , கைதிகள் குல்லாய் அணியத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். வாரம் ஒரு முறை கடிதம் எழுதலாம், 15 நாட்களுக்கு ஒருமுறை நேர்காணல் பார்க்கலாம் என்ற வசதிகள் திமுக ஆட்சிக் காலத்தில் மேம்பாடு அடைந்தன. 1974 நாங்கள் நடத்திய சிறைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1977 எம்.ஜி.ஆர். ஆட்சியில் நீதிபதி நரசிம்மன் கமிசன் அமைக்கப்ட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில்தான் புழல் சிறை கட்டப்பட்டது. நெருக்கடி நிலைக்கால சென்னை சிறைக் கொடுமைகள் பற்றிய இசுமாயில் கமிசன் அறிக்கையும் சிறைச் சீர்திருத்தங்களுக்குப் பரிந்துரைகள் செய்தது. என்னுடைய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களில் இவை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். சிறைச்சாலைகளை எல்லா அரசுகளும் வைத்துள்ளன. முதலாளித்துவ அரசாக இருந்தாலும் சரி; கம்யூனிஸ்டு அரசாக இருந்தாலும் சரி. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி. சிறைகளற்ற சமூகம் இதுவரை அமையவில்லை. சிறைச்சாலைகள் ஒரு மனிதனின் நுரையீரல் போல. நுரையீரல் சரியாக இருந்ததால்தான் மூளை, இதயம், கை, கால் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக இருக்கும்.

கேள்வி: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட கால சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் போவதாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளாரே?

பதில்: காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா என்று ஏற்கெனவே கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர். கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. முன்னர் விடுதலை அறிவிப்பு வந்தால் குறிப்பிட்ட ஒரே நாளில் கைதிகளை விடுதலை செய்வார்கள். கைதிகள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டாடுவார்கள். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு வத்து சில மாதங்கள் ஆன பின்னரும் இதுவரை நூறு கைதிகள் கூட விடுவிக்கப்படவில்லை; அதுவும் பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அரசு விதித்த நிபந்தனைகளின் படியே விடுதலைக்கு தகுதியான 1500 பேர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. மத மோதல் வழக்கு (communal cases) வழக்கு என்ற காரணத்தைக் காட்டி பல இசுலாமிய சிறைப்பட்டோர் விடுவிக்கப்படவில்லை. அவர்களில் ஒரு சிலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே உள்ளனர். இப்படி முன்விடுதலை செய்யும் போது செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது; குற்றவாளியை மட்டும்தான் பார்க்க வேண்டும்.

நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தையும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைகள். எனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுதலை செய்யக் கூடாது போன்ற வாதங்கள் சரியல்ல. எத்தனை ஆண்டு கழிந்தாலும் அவர் முன்னாள் பிரதமராகத்தான் இருப்பார். குற்றத் தீர்ப்பு பெற்று தண்டனையும் விதிக்கப்பட்டு பல்லாண்டு காலம் சிறையில் கழித்த ஒருவரை விடுதலை செய்ய வேண்டிய நேரத்தில் குற்றத்தைச் சொல்லி விடுதலை மறுப்பது தண்டனையின் நோக்கத்தையே அபத்தமாக்கி விடும்.

குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு நான்கு நோக்கங்கள் சொல்வார்கள்: ஆங்கிலத்தில் நான்கு R சொல்வார்கள்: Revenge, Retribution, Reformation, Rehabilitation! அதாவது Revenge – பழிக்குப் பழி; Retribution – வஞ்சம் தீர்த்தல்; Reformation – சீர்திருத்தம்; Rehabilitation – மறுவாழ்வு. வரலாற்று வழியில் இந்த நோக்கங்களின் முக்கியத்துவம் மாறியுள்ளது. சீர்திருத்தத்துக்கும் மறுவாழ்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டிய இக்காலத்தில் அரசே வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியை வளர்ப்பதை ஏற்க முடியாது. சிறை என்பது சீர்திருத்தக் கூடமாக இருக்க வேண்டும். எவரையும் நிரந்தரமாகச் சிறையிலடைத்து வைத்து சீர்திருத்தம் செய்ய முடியாது. எந்த ஒருவரையும் கால் நூற்றாண்டு காலம் சிறையில் வைத்துக் கொண்டு விடுதலை செய்ய மறுப்பது சீர்திருத்தக் குற்றவியல் நெறிகளுக்கு முரணானது.

கேள்வி: ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே?

பதில்: மன்னிப்பு, தண்டனை நீக்கம், தண்டனைக் கழிவு, தண்டனைக் குறைப்பு என்பதெல்லாம் சட்டத்தில் இருப்பவைதான். ஒரு கைதியைப் பற்றி, அவர் குடும்பச் சூழல் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கே தெரியும். சட்டம் ஒழுங்கும், சிறைகளும் மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளன. இந்த அதிகாரங்களில் மாநில அரசு இறைமை (sovereign)கொண்டது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161 ன் கீழ் ஒரு கைதியை முன்விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. இப்படித்தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசை எதிர்த்து சி.ஏ. பாலன் தூக்குத் தண்டனைக் குறைப்பில் நிலை எடுத்து வெற்றி பெற்றார். நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலையில் யாரும் முடிவு எடுக்கத் தயங்குகிறார்கள்; நீதிமன்றம் உட்பட!

நான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து சாகும் நிலையில் உள்ள பல கைதிகளை சிறைக் கண்காணிப்பாளரே மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அரசின் இசைவை எதிர்பார்த்து, விடுதலை செய்து இருக்கிறார். இறக்கும்போது ஒருவர் தன் வீட்டில் இறக்க வேண்டும் என்ற கருத்துப்படி (pleasure of dying at home) இதைச் செய்தார்கள். இப்போது அபு தாகீர் என்பவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. அவரை விடுதலை செய்ய மாநில அரசு தயாராக இல்லை. நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, அரசுச் செயலாளர்களுக்கே தங்கள் அதிகாரம் என்னவென்று தெரியவில்லை. முன்விடுதலை பற்றிய கோரிக்கை வந்தால் அதைக் காவல்துறைக்கு அனுப்புகிறார்கள்.. காவல்துறைக்கும் முன்விடுதலைக்கும் என்ன தொடர்பு? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. இங்கு நடப்பது மக்களாட்சியா? காவல் துறை ஆட்சியா? அரசாங்கம் பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதுதான் மனிதத் தன்மையுள்ள செயலாக இருக்கும். அதுவே நாகரிக சமுதாயத்திற்கான பண்பாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் சிறைத்துறை அமைச்சராக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?

பதில்: கியூபா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள சிறைகள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் சிறைகள் மோசமாக உள்ளன. பிரான்சு நாட்டுத் தண்டனை முறையின் கொடுமையைப் பட்டாம்பூச்சி புத்தகத்திலிருந்து அறியலாம்.

நேற்றைய பாவி இன்றைய புனிதராகலாம்; இன்றைய பாவி நாளை புனிதராகக் கூடாதா என்ன? சிறைத் துறையை மேம்படுத்துவதில் அரசின் அங்கங்களான சட்டமியற்றும் பேரவைகள், நீதிமன்றங்கள், அரசு எந்திரம் என்ற அனைத்திற்கும் பங்கு உண்டு. நான்காவது கொற்றம் (Fourth estate ) என்று அழைக்கப்படுகிற ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு.

அமெரிக்காவில் சிறைப்பட்டவர்களை அரசின் அடிமைகள் (Slaves of States) என்று சொல்லும் காலம் ஒன்று இருந்தது. பிறகு நாகரிகம் வளர்ந்து ”சிறைக்குரிய கட்டெல்லைக்கு உட்பட்டு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் சிறைப்பட்டோருக்கு உண்டு” என்ற கருத்து அங்கும் இங்கும் வளர்ந்துள்ளது.

சிறைப்பட்டோருக்கு வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த தடையும் இருக்கக் கூடாது. நீதிமன்றம், அரசு, மனித உரிமை ஆணையம், ஊடகம் போன்றவற்றோடு தடையற்ற தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு சில வரையறைகளோடு, இணையதள வசதிகள் கூட ஏற்படுத்தலாம். இப்படிச் செய்தால் சிறைக்கைதிகள் மீது நடைபெறும் அடக்குமுறைகள் குறையும். கிருஷ்ணய்யர் சொல்லும் Sight Proof, Sound Proof prisons என்ற நிலை மாற வேண்டும். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது எங்களைப் பார்க்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கல்யாண சுந்தரத்தைக் கூட பார்க்க அனுமதி மறுத்து விட்டார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தன்னை king of kings (அரசருக்கு அரசர்) என்றுதான் சொல்லிக் கொள்வார். நெருக்கடி காலகட்டத்தின் போது ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி போன்ற திமுக தலைவர்களே இழிவுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றால் சாதாரணக் கைதிகளுக்கு யார் பாதுகாப்பு? கோவைச் சிறையில் சினிமா அரங்கு போன்றவற்றைக் கட்டிக் கொடுத்த ஒரு கண்காணிப்பாளரே பின்பு பாம்புத் தோல் கடத்திய வழக்கில் சிறைக்கு வந்தார். நாளை யார் வேண்டுமானாலும் சிறைக்கு வர நேரிடும் என்பது அனைவருக்கும் நினைவிருக்க வேண்டும். .

கேள்வி: கிரண் பேடி போன்ற அதிகாரிகள் சிறையில் நல்ல பணி ஆற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: இருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் மேலிருந்து வரும் சீர்திருத்தம் பெரிய மாற்றம் கொண்டுவராது. இங்கு கூட நடராசன் என்ற அதிகாரி பற்றி பெருமையாகச் சொன்னார்கள். நான் சொன்னேன் அவரை ஒரே ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்லுங்கள் என்றேன். அதாவது நேர்காணலின் போது கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கும்பல், கும்பலாக இரும்புத் தடுப்பிற்கு வெளியே இருப்பார்கள். இதை மாற்றி கண்ணாடித் தடுப்பு வைப்பாரா? புல்லட் புரூப் கண்ணாடி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் அவர்களும் இவர்களும் அமைதியாகப் பார்த்துப் பேசிக் கொள்ள வழி செய்யுங்கள் என்றேன். உறவினர்களும் கைதிகளும் தூதரகங்களில் இருப்பது போல மைக், கேட்கும் கருவி மூலம் தடையறப் பேசலாமே! செலவும் அதிகம் ஆகாதே! கைதிகளின் கண்ணியம் பற்றியெல்லாம் அக்கறை இல்லை என்றால் நல்லது எப்படி நடக்கும்?

அரசியல் செயல்பாட்டாளர் தியாகு

கேள்வி: நீதிமன்றங்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா ?

பதில்: ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல நல்ல தீர்ப்புகளைத் தந்துள்ளது. கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, சந்திரசூட், தேசாய், பகவதி போன்ற நீதிபதிகள் பல நல்ல தீர்ப்புகளை தந்துள்ளனர். இவை செயலாகின்றனவா என்று யார் பார்ப்பது? வாரம் ஒரு முறை மாவட்ட நீதிபதி சிறைச்சாலையைப் பார்வையிட வேண்டும், புகார்ப் பெட்டி வைக்க வேண்டும், உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கின்றன. இந்தியா முழுக்க ஒரே ஒரு மாவட்ட நீதிபதி கூட இதைச் செய்வதில்லை. நடைமுறையில் நிலைமை படுமோசமாக உள்ளது. கைதிகளின் முன்விடுதலை பற்றி முடிவு செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அறிவுரைக் கழகங்கள் (Advisory Board) கூடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அது கூட்டப்படுவதே இல்லை. அதனால்தான் முக்கியத் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அறிவுரைக் கழகங்கள் வழமையாகச் செய்த பணிதான் இது. இதைப் பற்றி எந்த பத்திரிகையாவது கேள்வி எழுப்புகிறதா? இப்போது கூட தினமலர் நாளிதழ் இந்த முன்விடுதலை பற்றி எள்ளலாகத்தான் செய்தி வெளியிடுகிறதே ஒழிய, 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருப்போரின் உளவியல் பற்றியெல்லாம் அதற்கு அக்கறை இல்லை.

கைதிகளுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டும். சிறைச்சாலையில் வெளி உலகத்தின் பார்வை வேண்டும். (Social oversight of Prisons), அதனால்தான் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் போராட்ட சமயங்களில் கைதிகள் ஏறிக் கொண்டு பொது மக்களுக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். தரையில் இருந்து முழங்கினால் சிறைக் கைதிகளின் மண்டையைப் பிளந்து விடுவார்கள். 1983 ல் நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது தேர்தல் நடத்தி எங்கள் பிரதிநிதிகள் மூலம் சிறை நிர்வாகத்தில் பங்கு எடுத்தோம். சிறை அதிகாரியை துரை என்று கூப்பிடுவதை நிறுத்தினோம் .போதைப் பழக்கம், சீட்டு விளையாட்டு குறைந்தது; குறள் வகுப்புகள் நடத்தினோம். உணவின் அளவு, தரம் இவற்றைப் பார்த்துக் கொண்டோம். கண்காணிப்பாளர் வீட்டு நாய்க்குக் கூட சிறையிலிருந்து சாப்பாட்டு தர மாட்டோம் என்று ஊழலை எதிர்த்து நின்றோம்.

1974ஆம் ஆண்டு தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் தலைமையில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் என்ற ஒன்றை அமைத்து பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடினோம். போராட்டத்தால் கிடைத்த பலன் குறித்து ஏ.ஜி.கே. “அப்ப நீர்ல மோர் கலந்தாங்க; இப்ப மோர்ல நீர் கலக்குறாங்க” என்று சொல்வார்.” சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட தோழர்கள் என்பார்.

கேள்வி: நீங்கள் நீதிபதியாக இருந்தால் எஸ்.வி.சேகருக்கு பிணை கொடுத்திருப்பீர்களா?

பதில்: கொடுத்திருப்பேன். எதிரியாக இருந்தாலும், குற்றவாளிக்குரிய உரிமைகளை மதிக்க வேண்டும். Bail is the rule, and jail is an exception (பிணை என்பது விதி; சிறை விதிவிலக்கு) என்பதுதான் கொள்கை, வழக்குகளை விரைவாக நடத்த வேண்டும். குற்றவாளியா இல்லையா என்பது விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்.

கேள்வி: இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

பதில்: வழக்கம் போல் இயக்கம், எழுத்து தவிர இப்போது சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறேன். சிறையிலிருந்த போது கார்ல் மார்க்சின் தாஸ் கேபிடல் மூன்று பாகங்களையும் தமிழில் மூலதனம் என்று மொழி பெயர்த்து அவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்தன. வெளிவந்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன. இப்போது அதன் முதல் பாகத்தையே மூலமுதல் என்ற பெயரில் தூய தமிழில் மீள் மொழியாக்கம் செய்து வருகிறேன். முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்துள்ளோம். வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடலாம் எனக் கடுமையாக உழைத்து வருகிறோம். நீங்கள் வரும் போது கூட அந்த வேலைதான் செய்து கொண்டிருந்தேன்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழ் இணையத்துக்காக பல்வேறு சமூக அரசியல் சார்ந்த செயல்பாட்டாளர்களை நேர்காணல் செய்து எழுதிவருகிறார்.

ஒளிப்படங்கள் நன்றி: தோழர் தியாகு முகநூல் பக்கம்.

குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது!: எழுத்தாளர் தமயந்தி

தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சொற்ப பெண்களில் தமயந்தி தனித்துவமானவர். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் வன்முறைகளை  சிறுகதைகளில் பதிவாக்கியவர். தான் எழுதிய அப்படியானதொரு சிறுகதையை படமாக்கியுள்ளார் தமயந்தி. ‘தடயம்’ என்ற பெயரில் அந்தப்படம் வெளியாக உள்ளது.  இதுகுறித்து தமயந்தியுடன் நடத்திய உரையாடல் இங்கே…

எழுத்தாளர், இயக்குநர் தமயந்தி

நீங்கள் சிறுகதை எழுத்தாளராகவும் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். பின், சினிமா வசனகர்த்தாக அறிமுகமானீர்கள். இப்போது இயக்குநராக… ஆக, இயக்குநராவதுதான் இலக்காக இருந்ததா?

“இது சிக்கலான கேள்விதான். நான் தென்மாவட்டத்திலிருந்து, மத கட்டுப்பாடு மிக்க குடும்பத்திலிருந்து வந்தவள். அங்கே, சினிமா பார்ப்பது பாவமாக கருதப்பட்டது. ஆனாலும் எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ராஜாவின் இசையில் வாழ்க்கையைப் பார்த்தேன்.  வீட்டில் அம்மா அதிகாரம் மிக்கவராக இருந்தார். அப்படியானதொரு சூழலில், அந்த இறுக்கத்திலிருந்து விடுபட நான் நிறைய பொய்களை புனைந்தேன். ஒரு விஷயத்தை நூறாக்கி சொல்வது, புனைவது.  அம்மா வெகுஜென இதழ்களை வாசிப்பவராக இருந்தார். அதன்மூலம் எனக்கு வாசிப்பு பழக்கமானது. எழுதத் தொடங்கினேன்.  எனக்கு பாடல்கள் எழுதப் பிடிக்கும். வெளியான ஒரு பாடலின் மெட்டில் வேறு வார்த்தைகளைப் போட்டு எழுதுவேன்.  சினிமாவைப் பொறுத்தவரை பாடலும் வசனமும் தான் என்னுடைய cup of tea (திறமை அல்லது விருப்பம்) என நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாகத்தான் சினிமா இயக்கம் நிகழ்ந்தது. இதன் காரணமாக இருந்தவர் சௌபா அண்ணன். ‘தடயம்’ கதை வெளிவந்தபோது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இதை படமாக்குவதாக கூறினார். வெரொரு நண்பரும் அணுகியிருந்தார்.  ஆனால், இது என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை. மீன் முள் தொண்டையில் சிக்கியவர்களால் மட்டுமே அதோட வலியை உணர முடியும். அதுபோல், இந்தக் கதையை நானே இயக்க முடிவெடுத்தேன். எழுத்தாளர் குட்டிரேவதியோடு திரைக்கதை, வசன பணிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆவணப்படங்கள் இயக்கினாலும் இதுதான் நேரடியான சினிமா இயக்கும் அனுபவம்”.

தடயம்’ படத்தில்

 இது சுயாதீன படத்தை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

“என்னைப் போல அனுபவம் இல்லாதவர்கள் படம் இயக்குவது, அதுவும் ஒரு பெண் படம் இயக்குவது இங்கே சவாலான விஷயம். எனவே, crowdfunding மூலம் தயாரிப்பு செலவுக்கான பணத்தை திரட்ட முடிவெடுத்தேன். என்னுடைய தோழி ஒருவரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருக்க, அவருக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி முதல் நிதியை சேகரித்தார். அதுபோல தெரிந்த பலரிடம் கேட்டு பெற்ற நிதியைக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றேன். சௌபா அண்ணனின் தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். அவர் இந்தப் பட உருவாக்கத்தில் மிக உறுதுணையாக இருந்தார். அவருடைய இறுதி காலக்கட்டத்தில், இறப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பு வரை அவருடனேயே இருந்தேன்.

மனநிலையில், உடல்நிலையில் சோர்வு கொண்டிருந்தபோது அவர் என்னோடு இருந்தவர். இது உனக்கு பிறந்த வீடுபோல என அவர் சொல்வார். அவருடைய தோடத்தில், அவர் பயன்படுத்திய தேநீர் கோப்பை, கட்டில் என அவர் நினைவுகளை தேய்க்கி வைத்திருக்கிறது ‘தடயம்’.

தயாரிப்பு அனுபவத்தைப் பொறுத்தவரை இனி ஒரு முறை சுயாதீன பட முயற்சியில் இறங்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வரவைத்துவிட்டது. நிறைய பேர் உதவினார்கள். உதவுகிறேன் என சொன்னவர்கள் இறுதிவரையில் உதவவேயில்லை.  சில நாட்கள் கையில் வெறும் 100 ரூபாயை வைத்துக்கொண்டு, பத்து பேருக்கு உணவு வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தேன். முதல் நாள் நான்கு விளக்குகளை பயன்படுத்தியிருப்போம், அடுத்த நாள் படப்பிடிப்புக்கு இரண்டு விளக்குகளை வாடகை எடுக்கத்தான் காசு இருக்கும். உண்மையில் படத்தை முடித்தபின், சுயாதீன படம் எடுப்பவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என தோன்றியது. ”

இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு குறித்து…

“கனி குஸ்ருதி திறமையானவர். அவருடைய நடிப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தொலைபேசியில் சிறுகதையை வாசித்து காண்பித்தேன். கதையை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார். கணபதி முருகேஷ், நாடகங்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பேசும் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இவர்கள் இருவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். துணை கதாபாத்திரங்களாக என்னுடைய உதவியாளர் உத்ராவும் குறும்பட இயக்குநர் சத்யாவும் நடித்தார்கள்”

‘இது பெண்களுடைய பார்வையில் சொல்லப்படும் கதை’ என இந்தப் படம் குறித்த சமூக ஊடக பதிவில் சொல்லப்பட்டிருந்தது. அதுகுறித்து மேலதிகமாக பகிரமுடியுமா?

“அப்பாவுக்கு திருமணத்துக்கு முன் காதல் இருந்தது என ஏற்றுக்கொள்ளும் சமூக மனநிலை, அம்மாவின் திருமணத்துக்கு முன்பான காதலை ஏற்றுக்கொள்வதில்லை. திருமணத்துக்குப் பின் காதலியை நினைத்து உருகும் ஒரு ஆணின் பார்வையிலான ‘அழகி’ படம் பெற்ற வரவேற்பை, திருமணத்துக்குப் பின் காதலனை நினைத்து உருகும் ஒரு பெண்ணின் பார்வையிலான ‘பூ’ படம் வரவேற்பைப் பெறவில்லை. பெண்களும் ரத்தம், சதை, நரம்பு, எலும்புகளால் ஆனவர்களே. அவர்களுக்கும் காதல், காமம் போன்ற உணர்வுகள் இருக்கும். சட்டம், குடும்பம் என்கிற பெயரில் ஆணையும் பெண்ணையும் ஒரு கூரையின் கீழ் போட்டு அடைத்து வைக்கும் அமைப்பு இங்கே இருக்கிறது. மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என ஒரு இரவில் அறிவித்ததைப் போல, உங்கள் திருமணம் செல்லாது என அறிவித்தால் எத்தனை பேர் குடும்பத்தை இறுகப் பற்றிக் கொள்வார்கள்?”

இந்த இடத்தில், சமீபத்தில் ஒரு எழுத்தாளர் ‘குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பானது’ என சொல்லியிருந்தார். அதற்கு நீங்கள் உங்களுடைய முகநூலில் எதிர்வினையாற்றியிருந்தீர்கள்…

“இந்தப் படம் அதைப் பற்றித்தான் பேசுகிறது. இந்தப் படத்தின் நாயகி ஒரு இடத்தில் கேட்பார், ‘இசையே பிடிக்காத ஔரங்க சீப்பும் சிறந்த பாடகியான பி.சுசீலாவும் ஒரே வீட்டில் இருக்க முடியுமா?’ என்று. ஒரு உறவு பிடிக்கவில்லை என்றால், அந்த உறவிலிருந்து வெளியேற ஒருவருக்கு உரிமையுள்ளது. இங்கே உறவு சிக்கல் உள்ளது. பெரும்பாலும் குற்றம்சாட்டி கூண்டுக்குள் ஏற்றுவது நடக்கிறது.

படத்தின் நாயகியும் நாயகனும் செல்போன் பேசுவதன் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். திருமணமாகி விவாகரத்தான நாயகியும் திருமணமான நாயகனும் சந்திக்கிறார்கள். கட்டியணைக்கிறார்கள். என்னோட குடும்பம் பாதுகாப்பு இல்லை என்றுதான் வெளியேறுகிறேன் என்கிறார் நாயகி. இப்போது என் கதாபாத்திரத்தை அந்த எழுத்தாளர் என்ன சொல்வார்? நான் சவாலாகவே கேட்கிறேன். குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது”

‘தடயம்’ எப்போது வெளியாகவிருக்கிறது?

“மாலா மணியன் தன்னுடைய ஃபஸ்ட் காபி புரக்‌ஷன் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார். இங்கே ஜானர் பற்றி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மணி நேர படத்தை குறும்படம் என்பார்கள். சிலர் டெலிஃபிலிம் எடுத்திருக்கிறீர்களா? என்பார்கள். தியேட்டர் கிடைப்பது இப்போது சிரமமாகிவிட்டது. எனவே, டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியிட முயற்சித்து வருகிறோம்.”

தொடர்ந்து சினிமாவில் இயங்கும் திட்டமா? சுயாதீன திரைப்படமா? அல்லது வெகுஜென படங்களா? உங்களுடைய திட்டம் என்ன?

“அடுத்து ஒரு படத்துக்கான திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன். சரியான தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் சுயாதீன சினிமா எடுக்கப்போவதில்லை. எழுத்தாளர் குட்டி ரேவதி இயக்கவுள்ள படத்தில் வசனம், திரைக்கதையில் பங்காற்றியிருக்கிறேன். இப்போதைக்கு சினிமாதான்!”

எழுத்தாளர்-இயக்குநர் தமயந்தியுடனான உரையாடலை ஆடியோவாக கேட்க…

‘தடயம்’ திரைப்படம் குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான தமயந்தி நேர்காணல்

‘தடயம்’ திரைப்படம் குறித்து எழுத்தாளர் தமயந்தி நேர்காணல் ஆடியோ வடிவில்

“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்

(ஆதார் என்று சொல்ல மாட்டேன்; UID எண் என்பது அடித்தள மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் செயல்பாட்டாளர் உஷா ராமநாதன். ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் ஒழுங்கு செய்திருந்த திரையிடல் ஒன்றில் கலந்துரையாட சென்னை வந்திருந்தார். மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்)

கேள்வி : சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற நீங்கள் நீதிமன்றத்தில் வழக்காடுவது இல்லையே ஏன்?

பதில்: எனக்கு சொந்த ஊர் சென்னைதான். நான் இங்குதான் சட்டத்தையும், சமூகவியலையும் படித்தேன். தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். நான் சட்டத்தை பற்றியும், வறுமையைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறேன். என்னுடைய செயல்பாடுகள் பெரும்பாலும் வறுமையைப்பற்றி இருக்கிறது. சட்டமானது வசதியானவர்களுக்கு அதிகம் கொடுக்கிறது; ஏழைகளை ஒடுக்குகிறது. இந்த நிலைமாற வேண்டுமானால் நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும். அதன் அங்கமாக இருந்தால் விமர்சிக்க முடியாது; எனவே நான் நீதிமன்றத்தில் வாதிடுவது இல்லை என முடிவெடுத்தேன். பிச்சை எடுப்பதை தொல்லையாகத்தான் சட்டம் பார்க்கும்; சேரியை ஒழிப்பது என்பது மத்திய தர வர்க்கத்தை பொறுத்தவரை அது அழுகுபடுத்தும் வேலைதான்; ஸ்மார்ட் சிட்டியில் ஏழைகளுக்கு இடமில்லை. வசதி இருந்தால்தான் சட்டப்பூர்வநிலையையே நீதிமன்றத்தில் பெற இயலும். எனவேதான் நான் நீதிமன்றத்தை விட களத்தில் பணிபுரிவது மேலானது என தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

செயல்பாட்டாளர்  டாக்டர். உஷா ராமநாதன்

கேள்வி: வாக்காளர் அடையாள அட்டைதான் ஏற்கெனவே இருக்கிறதே ? ஏன் ஆதார் திட்டத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் ?

பதில்: 1990 களில் வாக்காளர் அடையாள அட்டையை , தேர்தல் ஆணையம் அமலாக்கியபோது ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்;  தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுவார்கள் என்று நினைத்தோம். அது நடைமுறைக்கு வந்த போது சில இடங்களில் அவர்களுக்கு அதனால் பலன்கூட கிடைத்தது.  உதாரணமாக குடிசையை அகற்றும் போது இந்த அட்டையைக் காட்டி தாங்கள் அந்த இடத்தில குறிப்பிட்ட தேதியில் குடியிருந்ததாகச் சொல்லி மாற்று இடம் பெற்றார்கள். இந்த அட்டை பொதுமக்களிடமே இருந்தது. இதைக்காட்டி ரேஷன் கடையில் பதிவு செய்தார்கள். அரசு நிறுவனங்களிடம் பதிவு செய்ய முடிந்தது. UID அது போல இல்லை. முதலில் இது அட்டை அல்ல; கைரேகையுடன் இணைந்த எண் அவ்வளவுதான். எனவே கைரேகை தெரியவில்லை என்றால் உங்கள் அடையாளம் மறுக்கப்படும். பல மாநிலங்களில் இதுதான் நடந்தது. பட்டினிச் சாவினால் பலர் இறந்தனர். வாக்காளர் அடையாள அட்டை மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. இப்போதுள்ள UID மூலம் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.இதை மாற்றுத்திறனாளிகளுக்கு, குடிசைவாசிகளுக்கு,விபச்சாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும்; பயன்படுத்தப்படுகிறது.

குடிசையில் இருப்பவர்கள் இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது என அரசு சொல்ல முடியும். அட்டை வைத்து இருக்கவில்லை என்பதற்காக ஒருவரை குற்றவாளியாக்க முடியும்.

2009 ல் இந்த UID தொடர்பாக அறிவிப்பு வந்தபோது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி இருக்கிறது என நினைத்தோம். ஆனால் இதற்கான பூர்வாங்க கூட்டம் பெங்களூருவில் 2009 நவம்பரில் நடந்தபோது எங்களுக்கு சந்தேகம் வந்தது. இது பற்றி கொள்கை அறிக்கை வெளியிடவில்லை; சாத்திய அறிக்கை வெளியிடவில்லை.

கேள்வி : ஆதார் அட்டை என்று சொல்ல மாட்டேன் , UID என்றுதான் சொல்லுவேன் என்கிறீர்களே ஏன் ?

பதில்: நந்தன் நீலகேணியும் அவரது மனைவி ரோகினி நீலகேணியும் உருவாக்கிய தனியார் அறக்கட்டளைதான்- ஆதார் டிரஸ்ட். பிறகு இந்திய அரசு பொது மக்களிடையே போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற பெயர் ‘ ஆதார்’ என்றனர். எனவே நான் இதை நம்பவில்லை. ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டு பெயர். எனவே நான் UID அல்லது UID எண் என்றுதான் சொல்லிவிருகிறேன்.

இது போன்ற அட்டை உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நமது அரசு கூட ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைத் தருகிறது. அதில் வழங்கியவர் கையொப்பம் இருக்கும்; எதற்காக இது வழங்கப்படுகிறது என்று இருக்கும். வெள்ளி இலச்சினை ( ஹாலோகிராம்) பதிக்கப்பட்டு இருக்கும். அவை நம்மிடமே இருக்கும். விவரங்கள் அரசிடம் இருக்கும். அரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது.

ஆனால் UID -ஐ யார் வேண்டுமாலும் தரவிறக்கம்(download) செய்து கொள்ள முடியும். நமது கைரேகை ( Bio Metric) ,விழித்திரை போன்ற விவரங்கள் ஏதோ ஒரு கம்பெனியிடம் இருக்கும். அவை குறித்த தரவுவங்கி ( data base) உருவாக்கப்படும். அவை வெளிநாட்டு கம்பெனியிடம் இருக்கும் என்பது போன்ற சம்பவங்கள் இந்தத் திட்டம் குறித்த ஐயப்பாட்டை அதிகப்படுத்துகின்றன.  “கைரேகையும், விழித்திரையும் UID எண் பெற்ற 48 % பேரிடம் சோதிக்கப்பட்டது. அதில் 8 % பேருக்கு கைரேகையும், 6.5 % பேருக்கு விழித்திரையும் வேலை செய்யவில்லை” என்று UIDAI வின் தலைமை நிர்வாகி அஜய் பூஷன் பாண்டே உச்சநீதிமன்றத்திலேயே சொன்னார். எனவே அதில் உள்ள நபர்கள் நீங்கள் இல்லையென்று அவர்கள் சொல்லுவார்கள். அப்புறம் எப்படி இது ‘உங்களுக்கான எண்’   (Unique ) என்று சொல்ல முடியும்.

கேள்வி : ஆனால் அரசு இதை இந்த திட்டத்தை கறாறாக அமலாக்கி வருகிறதே?

பதில்: இந்த திட்டத்தில் பலன் பெறப்போவது கார்பரேட் நிறுவனங்களே.நீலகேணிக்கு ஒரு மத்திய மந்திரியின் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.எல்லாப் பணிகளையும் அவர்தான் செய்தார்.ஆனால் அவர் பாராளுமன்றத்திற்கு, மக்களுக்கு பதில் சொல்லவில்லை.அவருக்காக அப்போதைய அமைச்சர் நாராயணசாமிதான் பதில் சொன்னார்.மக்களிடம் பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு அடையாளம் சார்ந்த வியாபாரங்களை (Identity based Business) முன்னெடுக்க, கார்ப்பரேடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப அவர்கள் algorithm ஐ (நிரைநிரலை)உருவாக்கி, தங்களுக்கேற்ற வாடிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிய விரும்புகிறார்கள். கடன் வழங்க கூடிய அளவுக்கு நீங்கள் பொருத்தமானவரா என அவர்களுக்கு தெரிய வேண்டும். நந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். எனவே அவர் இதில் ஈடுபட்டுள்ளார். அதனால்தான் இப்போது பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளிலும் இதனை அமலாக்கத் தொடங்கி உள்ளனர்.

நந்தன் நீல்கேணி, ஆதார் தொடர்பான நிகழ்வொன்றில்…

மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். பாராளுமன்ற கூட்டுக் குழு UID க்கு எதிராக முடிவெடுத்தது. உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் இதற்கு எதிரான உத்தரவுகளை கொடுத்து இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து இதனை அமல்படுத்த துடிக்கிறார்கள்.

கேள்வி: ரேஷன் கடைகளை சீர்திருத்தம் செய்யவே அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்கிறார்களே?

பதில்: உண்மையிலேயே இது போன்ற duplication ஐ குறைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. மக்கள் பங்கேற்புடன் தமிழ்நாடு , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ரேஷன் கடைகள் நன்றாக செயல்படுகின்றன.இதனை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தி இருக்கலாமே? இந்த அட்டையை பயன்படுத்த ரேஷன்கடைகள் அதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டும். அந்த செலவுகளை எல்லாம் இந்த திட்டத்திற்கு ஆகும் செலவோடு சேர்க்கவில்லை. அரசு பொருளாதாரத்தை முறைப்படுத்துகிறது(formal economy);வேலைவாய்ப்பை, முறைசாரா வேலைவாய்ப்பாக (non formal employment) மாற்றுகிறது. உங்களது பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அதனால்தான் அட்டை, செல்பேசி, வங்கிக் கணக்கு இவைகளை இணைக்கிறார்கள்.

கேள்வி: இதுபற்றி பத்திரிக்கைகளில் யாரும் பெரிதாக எழுதக் காணோமே?

பதில்: இந்தத் திட்டம் பற்றி எழுத யாரும் தயாராக இல்லை.முக்கிய ஊடகங்கள் அமைதி காத்தன; தொலைக்காட்சிகள் அமைதி காத்தன. வெகுகாலம் கடந்து 2013 ல் statesman பத்திரிக்கை தொடர் கட்டுரைகள் வெளியிட்டது. quint, the wire, news laundry போன்ற இணைய இதழ்களில் எழுதி வருகிறேன். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ இதற்கு எதிராக முடிவெடுத்து உள்ளது. ஆனால் திரிபுரா முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் நாங்கள் 96% பேருக்கு ஆதார் திட்டத்தை அமலாக்கி விட்டோம் என்கிறார். கர்நாடகாவில் கோகரன் (Gokaran) என்ற இடத்திலும், ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் குறைந்தது 13 பேர் பட்டினியால் இறந்தனர்.

ராஜஸ்தானில் 90 வயது பாட்டி பசியினால் இறந்து போனார். ஏனென்றால் அவர்களிடம் UID இல்லை; எனவே ரேஷன் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட பட்டினிச் சாவுகளுக்குப் பிறகுதான் பத்திரிக்கைகள் UID க்கு எதிராக எழுத ஆரம்பித்தன. மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் பணியிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் இருக்கும் ஒருவரை இந்த அட்டைக்குள் கொண்டுவருவது இந்த இழிநிலை தொடருவதையே உறுதிப்படுத்தும் அதனால் தான் மக்சேசே விருது பெற்ற பேஸ்வாடா வில்சன் எதிர்க்கிறார்.

கேள்வி: நீதிமன்றங்கள் இதுகுறித்து என்ன சொல்லுகின்றன?

பதில்: அப்போதைய பாராளுமன்றத்தின் கூட்டுக் குழு ஆதார் அட்டைக்கு எதிராக முடிவு எடுத்தது. உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக பேஸ்வாடா வில்சன், அருணா ராய், குழந்தை உரிமை செயற்பாட்டாளர் சாந்தா சின்ஹா ஆகியோர் வழக்கு தொடுத்து இருக்கின்றனர். மூவருமே மக்சேசே விருது பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான அந்தரங்கம் (Privacy judgment) தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிஅற்புதமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இது UID தொடர்பான தீர்ப்பை பாதிக்க வேண்டும்; பார்ப்போம். 1980களில் பொதுநல வழக்கு என்ற கருத்தாக்கம் வந்த போது இந்திய நீதிமன்றங்கள் உலக அரங்கில் புகழ்பெற்றன. அரசு தன் கரங்களை நீட்டும் போது அதைக் கட்டுப்படுத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. அப்படி இருந்தால்தான் அரசியலமைச் சட்டம்(Constitutional Law) வளரும்.

இந்தியா போன்ற அரைக் கல்வி பெற்றவரகள் உள்ள நாட்டில் இப்படிப்பட்ட எண்கள் மூலம் ஆட்சி செய்வது மிக ஆபத்தானது. மருத்துவமனை போன்ற இடங்களில் ஒரு சில தகவல் மாறிவிட்டால் நோயாளிக்கு சிகிச்சை ஆகும் என்று பாருங்கள். வங்கிக் கணக்கிலிருந்து சங்கேத வார்த்தை (password), மூலம் பணம் பறிபோவதை நாம் இப்போதே பார்க்கிறோமே? வெளிநாட்டு கம்பெனிகளிடம் நமது கைரேகை software கொடுப்பது மிக ஆபத்தானது. ‘பணமில்லாத, காகிதம் இல்லாத, வருகை இல்லாத'(Cashless, Paperless & Presenceless) வியாபாரத்திற்கு இந்த ஏற்பாடு முக்கியம். இப்படிப்பட்ட சிக்கல்கள் நிறைந்த UIDAI சட்டத்தை பணமசோதாவாக மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.

கேள்வி: இதன் முடிவு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் எங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அரசாங்கத்திடமிருந்தோ, UIDAI வின் தலைமை நிர்வாகியிடமிருந்தோ பதில்கள் இல்லை. ஆனால் மக்கள் ஒன்று சேர்ந்தால் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது. தூத்துக்குடியையே பாருங்கள். துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நீதிமன்றம் மாறிவிட்டது. இலண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா குழுவை நீக்கி வட்டார்கள். மோடி அரசாங்கம் எப்படியோ அதிகாரத்திற்கு வந்துவிட்டது. இதை தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மோடி அரசாங்கத்தில் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் இல்லை. அரசியல் முதிர்ச்சி இல்லை. அவர்களை நான் அனுதாபத்தோடுதான் பார்க்கிறேன். ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்த போது GSTN என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். அது தனியார், அரசு கூட்டு நிறுவனம். ஜிஎஸ்டி அமலானதில் பெரிய நிறுவனங்கள் நிலை பெற்றுவிட்டன. சிறு, குறு தொழில்கள் அழிந்தன.அவர்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்று அரசு நினைக்கிறது. அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்.எனவே இப்போது GSTN ஐ முழுமையான அரசு நிறுவனமாக மாற்ற அரசு நினைக்கிறது. 2016 ல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை வந்த போது Pay TM திடீரென பலன் அடைந்தது.இது நந்தன் நீலகேணி ஏற்கெனவே உருவாக்கி வைத்து இருந்த FIN TEK கம்பெனிக்கு போட்டியாகிவிட்டது.இது போன்ற உள் முரண்பாடுகளால் ஆதாரின் உண்மையான நோக்கம் மேலும் அம்பலமாகும். இதில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் நீலகேணியோடு தொடர்பு உள்ளவை. எனவே, இதில் முரண்பாடான நலன் (Conflict of Interest) இதில் இருக்கிறது என்று சொல்லுகிறோம்.

கேள்வி: இப்படி அயராது உழைக்கிறீர்களே உங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்ரகளா?

பதில்: எனக்கு அங்கீகாரம் என்பதை விட இப்போது ஆதார் தொடர்பாக விவாதங்கள் மேலெழும்பி வருகின்றன. இதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.

(“Speak Truth to Power, Make the truth powerful and Make the powerful truthful” என்ற தென் ஆப்பிரிக்க கவிஞர் Jeremy cronin ன் கவிதை வரிகளை என் நண்பர் ஒருவர் தான் அனுப்பும் மின்னஞ்சலில் எப்போதும் வைத்து இருப்பார். உஷா ராமநாதனுடனான நேர்காணல் முடிந்தவுடன் எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது என்கிறார் நேர்காணல் செய்த பீட்டர் துரைராஜ்.)

 

“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்

தமிழகம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. போராடும் மக்கள் மீதும் மக்கள் பணிகளுக்காக சிறு அமைப்புகள் மீதும் அரசு ஒடுக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான தணிக்கை உத்தரவையும் அரசு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து அரங்கக்கூட்டம் நடத்தினால், அரங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. இத்தகையதொரு நேரத்தில் வெளியாகியிருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ என்கிற ஆவணப்படம். ஒகி புயலின் போது செயலிழந்த அரசு நிர்வாகத்தினை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் டி. அருள் எழிலன். சமூக-அரசியல் குறித்த பதிவுகளை களப்பணி செய்து தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் ஒருசில பத்திரிகையாளர்களில் டி. அருள் எழிலன் முக்கியமானவர். தன்னுடைய பத்திரிகை பணிக்காக பல அங்கீகாரங்களைப் பெற்றவர். பெயர்பெற்ற ஆவணப்பட, குறும்பட இயக்குநரும்கூட. ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் குறித்து அவருடன் உரையாடினோம்…

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் குறித்த பின்னணி பற்றி சொல்லுங்கள்.. ஒகி புயலின் தாக்கம் குறித்து ஆவணப்படம் இயக்கும் எண்ணம் ஏன் வந்தது?

“பத்திரிகை பணிகளினூடே ஆவணப்படங்கள், குறும்படங்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறேன். ஓவியர் ஆதிமூலம், நாடோடிகள் குறித்தெல்லாம் ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன். பல படங்களில் பிரதியைக்கூட பாதுகாக்க முடியவில்லை. ‘ராஜாங்கத்தின் முடிவு’ என்ற குறும்படம் சிறப்பான விமர்சனத்தைப் பெற்றது. அதுபோல ‘கள்ளத்தோணி’ என்ற படம் பேசப்பட்டது. மீனவர்கள் தொடர்பாக, ஆலைக்கழிவுகளால் கடற்கரையோர மக்கள் எதிர்கொள்ளும் சூழலியல், உடல் ரீதியான கேடுகள் குறித்து ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். சுனாமிக்குப் பிறகு மீனவ மக்களின் நிலையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் ஒகி புயல் என்கி்ற பேரிடர் நிகழ்ந்தது.

ஒகி புயலை இயற்கை பேரிடர் என முடிவுசெய்ய இயலவில்லை. இது அரசுகள் திணித்த பேரிடராக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்குப் பதிலாக கைகழுவிட்டன. அவர்கள் புயலோடு போராடி மடிந்து பிணங்களாக கடலில் மிதந்து ஒதுங்கினார்கள். இந்தியா தன்னை ராணுவ வல்லமைமிக்க நாடாக அறிவித்துக்கொள்கிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தன் குடிமக்களை காக்க அந்த வல்லமையை பயன்படுத்தியிருக்க வேண்டும். வானிலை ஆய்வுகள் தோல்வியடைந்துவிட்டன. புயல் வீசி முடிந்த பிறகு, புயல் வரப்போகிறது என்றார்கள். சென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை இந்திய ராணுவத்தின் தாழ்வாரங்களில் ஒன்றாக பெரும் பொருள்செலவுடன் செய்ய முனைகிறது அரசு. இவ்வளவு உள்கட்டமைப்பை செய்கிற அரசு, ஏன் மீனவர்களை காப்பாற்றவில்லை? கண்முன்னே அரசு மீனவ மக்களை கைவிட்டது. ஒகி புயல் பாதிப்புகளை நேரில் காணச் சென்றிருந்தேன். அந்த உந்துதலில் அரசுகளின் அலட்சியத்தை ஆவணப்படமாக்கும் பணியில் இறங்கினேன். என்னுடன் ஜவகர், ஜோ, ஜெயக்கோடி ஆகிய நண்பர்கள் தாமாக முன்வந்து இணைந்துகொண்டார்கள்.

’பெருங்கடல் வேட்டத்து’ படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் டி. அருள் எழிலன்…

அரசை விமர்சிக்கக்கூடாது; அரசுக்கு எதிராக போராட்டங்கள் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இந்த நேரத்தில், அரசின் இயலாமையை பதிவு செய்திருக்கும் உங்களுடைய ஆவணப்படத்துக்காக ஏதேனும் மிரட்டல்கள் எச்சரிக்கைகள் வந்தனவா?

“எழுத வந்த காலம் முதல் சமூக பிரச்சினைகள் குறித்து பேசும்போதெல்லாம் காவல்துறையின் கண்காணிப்புகளுக்கும் விசாரணைகளும் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம்தான். இந்தப் படம் மிக அழுத்தமாக அரசை, அரசு கட்டமைப்பை காட்சியங்கள் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலேயே போராட்டங்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான் என்றும் அந்தப் போராட்டங்களை புஸ்வானம் ஆக்கிவிட்டோம். இனியும் அப்படித்தான் ஆக்குவோம் என்றும் ஆணவத்துடன் பேசியிருக்கிறார். தங்களைக் காட்டிலும் பாஜக அரசை, மோடியை விமர்சிப்பதை ஆபத்தாக இவர்கள் பார்க்கிறார்கள். மோடிக்காக ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இவர்கள்தான் 13 பேரைக் கொன்றார்கள், அனிதாவை கொன்றார்கள்..எத்தனை தற்கொலைகள்.மார்ச்சுவரிகள் நிரம்பி வழிவதாக சொல்கிறார்கள். பொருளாதார பிரச்சினைகள், போலீஸ் கொலைகள், கூட்டுக்கொலை அதிகரித்திருக்கிறது. பொம்மை ஆட்சியாளராக இருந்துகொண்டு போராட்டங்களை புஸ்வாணமாக்கிவிட்டதாக முதல்வர் சொல்கிறார். இவர்கள் பகைத்துக்கொள்வது யாரை? மக்களைத்தான். அதிமுக ஆட்சியாளர்களைப் பற்றி மக்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள். அதிமுக கவுன்சிலர் ரெண்டு ஜேசிபி வண்டிகளை வைத்திருக்கிறார்கள். 40% கமிஷன் வாங்கிக்கொண்டு, மக்களின் நிலங்களை அடித்து, பிடிங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆராஜகங்களை விமர்சிக்காமல் என்ன செய்வது? ஆவணப்பட இயக்குநராக என் படத்துக்கு வரும் எதிர்வினைகள், அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன். இதுவரை அப்படியேதும் இல்லை.”

உங்களுடையது ஆவணப்படமா? அரசியல் பிரச்சாரப் படமா?

“இரண்டு குழந்தைகள் பெத்துக்கோங்க. பெண்சிசுக்கொலை செய்யாதீங்க’ என சொல்வது பிரச்சாரப் படம். தூத்துக்குடியில் போராடுகிறவர்களை சமூக விரோதிகள் என்பது பிரச்சாரம். இல்லை நீங்கள்தான் தீவிரவாதிகள் என்பது எதிர்பிரச்சாரப் படம். புயலால் தூக்கிவிசப்பட்டவர்களை நீங்க மீட்கவில்லை, அவர்கள் கடலில் மிதந்து இறந்து போனார்கள் என்பது எதிர் பிரச்சாரப்படம்.

என்னுடைய படத்தில் படல்களையோ, இசையையோ சேர்க்கவில்லை. படத்தில் வரும் இருபாடல்களும் படப்பதிவின்போது பதியப்பட்டவை. ஆவணப்பட ட்ரைலரை பார்த்தவர்கள் இது கலைத்தன்மையோடு வெளிப்பட்டிருப்பதாக சொன்னார்கள். பார்வையாளர்கள் பார்க்கட்டும். அவர்களே இறுதி தீர்ப்பு எழுதுகிறவர்கள்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். சமூகத்தில் வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்படுவதுபோல், கலை சூழலிலும் வர்ணாசிரமம் இருக்கிறது. இவர் நம் இயக்கத்தவர், அமைப்பைச் சேர்ந்தவர்கள், கட்சியைச் சேர்ந்தவர் என பிரித்து ஒதுக்கியே விருதுகளும் அங்கீகாரங்களும் தரப்படுகின்றன. நான் விருதுக்காகவோ அங்கீகாரங்களுக்காகவோ படம் எடுக்கவில்லை. நான் உயிர்வாழவும் மக்களுக்காகவுமே படம் எடுக்கிறேன்”.

குறுநேர்காணலாக இருந்தாலும் டி. அருள் எழிலனின் பேச்சு, அவருடைய எழுத்தைப் போல அழுதத்துடன் முடிகிறது.  ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் திரையிடல் ஞாயிறு(08-07-2018) மாலை கவிக்கோ அரங்கத்தில் நிகழ்கிறது.

ஆவணப்படம் குறித்த மேலதிக தகவலுக்கு arulezhilan@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

“கேரளாவில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்கூட தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன !”: வேளாண் செயல்பாட்டாளர் க.சரவணன்

விகடனின் மாணவப் பத்திரிக்கையாளராக தன் வாழ்வைத் தொடங்கிய க.சரவணன், PUCL- ன் மாநில இணைச் செயலாளராகவும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். பாமரர் ஆட்சியியல் கூடம்( Barefoot Academy of Governance) என்ற அமைப்பின் மூலமாக பெரம்பலூரில் பணி புரிந்துவருகிறார். நீர் மேலாண்மை, சிறுதானிய உற்பத்தி, விவசாயிகள் தற்சார்பு குறித்து இந்த நேர்காணலில் கூறுகிறார். முகமறியா வீரராகப் பணிபுரிந்து வரும் இவரை தடைம்ஸ்தமிழிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

கேள்வி:வேதியியல் பொறியியலுக்குப் படித்த நீங்கள் எப்படி பொது வாழ்க்கைக்கு வந்தீர்கள்?

பதில்: எனக்கு சொந்த ஊர் செய்யாறு. நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்த போது பாரதி இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி கோவில் சுத்தம் செய்வது , ரத்த தானம் செய்வது, நூலகச் சீரமைப்பிற்கு உடல் உழைப்புச் செய்வது , +2 படிக்கும் மாணவர்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளைச் செய்து வந்தோம்.வேலூர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டேன். அது எனக்கு ஒரு பரந்த பார்வையைக் கொடுத்தது. பின்னர் 2008ல் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில்(PUCL) தன்னார்வலராக பணி புரிய ஆரம்பித்தேன். இது எனக்கு சமூக, அரசியல் புரிதலையும், மனித உரிமைகள் பிரச்னைகள் பற்றிய தெளிவான பார்வையையும் கொடுத்தது. பாமரர் ஆட்சியியல் கூடம், ஆட்சியியல் பற்றி ஒரு புரிதலைக் கொடுத்தது. PUCL ல் இணைந்து பணிபுரியத் தொடங்கிய பிறகு அரசுப் பணிக்கு போக வேண்டும் என்று தோன்றவில்லை. அதுவரை மூன்று முறை சிவில் சர்வீசில் சேர தேர்வு எழுதியிருந்தேன். தொடர்ந்து தேர்வு எழுதவும் தோன்றவில்லை.

கே: நீர் மேலாண்மை பற்றி பேசி, எழுதி வருகிறீர்கள்? இதற்கு ஏதும் குறிப்பான காரணங்கள் இருக்கிறதா?

பதில்: முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்களால் பூனாவில் நடத்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் ஆட்சியியல் குறித்து ஒரு பட்டயப்படிப்பு ( PG Diploma Master’s Program in Government) படித்தேன். அந்தப் படிப்பின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் மனிதர் (Water man) என்று அழைக்கப்படுகிற ராஜேந்திர சிங்கைச் சந்தித்தேன். இவர் பெருமைக்குரிய , நோபல் பரிசுக்கு இணையான ‘ ஸ்டாக்ஹோம் விருது’ பெற்றவர். பல நீர்நிலைகளை மக்கள் பங்கேற்போடு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர். இவரோடு நான்கு மாதங்கள் உடனிருந்து பணியாற்றினேன்.என்னை அவரோடு கூடவே பணி புரியச் சொன்னார். ஆனால் வீட்டில் எனக்கு வேறு சில பொறுப்புக்கள்; காதல் திருமணம் போன்ற காரணங்களால் சென்னை திரும்பி விட்டேன். ஆனால் அவர் என் மீது செலுத்திய தாக்கத்தின் காரணமாக நீர்நிலைகள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

செயல்பாட்டாளர் க. சரவணன்

கே: பியூசிஎல்( PUCL) மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறீர்கள். இந்தப் பணிக்கு எப்படி வந்தீர்கள்?

பதில்: ராஜஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு பியூசிஎல்(People’s Union of Civil Liberties) – ஐச் சார்ந்த வி.சுரேஷைச் சந்தித்தேன். அவர் நீர்வளம் குறித்து பல ஆராய்ச்சி செய்து இருக்கிறார். அதே போல MIDS(Madras Institute of Development Studies) ஐச் சார்ந்த ஜனகராஜூம் நீர்வளம் குறித்து ஆராய்ச்சி செய்து இருந்தார். நீர் ஆய்வுகளுக்காக சுரேஷுடன் பணிபுரியத் தொடங்கிய நான் பியூசிஎலில்லும் பணிபுரிய ஆரம்பித்தேன். இது எனக்கு அரசியல் முதிர்ச்சியைக் கொடுத்தது. பியூசில் அமைப்பில் கடந்த பத்தாண்டில் பெரும் அனுபவம் கிடைத்துள்ளது. மாநகர ஏழைகளின் வாழ்வு அவலமானது. காலா படத்தில் வருவது போல, பெரிய ஆக்கிரமிப்புகளை அரசு கைவைப்பது இல்லை.ஆனால் சென்னை மாநகராட்சி குடிசைவாசிகளை அப்புறப்படுத்தியது.இதுகுறித்து அமைக்கப்பட்ட உண்மையறியும் குழுவில் சுரேஷ், பாடம் நாராயணன், பேரா. சண்முக வேலாயுதம், வெனசா பீட்டர், சுந்தர், போன்றோர் இருந்தனர்.அவர்களோடு நானும் பணிபுரிந்தேன். நாங்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கைக் கொடுத்தோம். அதே போல பாலாறு , அதன் கிளை ஆறான செய்யாறு இவற்றில் நடைபெறும் மணற்கொள்ளை தொடர்பாக PUCL உண்மையறியும் குழு மூலம் அறிக்கை கொடுத்தோம். பேரா. சரஸ்வதி, பேரா. சுதிர், பேரா. சங்கரலிங்கம் மற்றும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுடன் நானும் இந்த ஆய்வுக் குழுவில் இருந்தேன். அறிக்கை வெளிவந்தபின், மாவட்ட ஆட்சியர் உட்பட ஏழு பேரை ஜெயலலிதா தற்காலிக பணி நீக்கம் செய்தார். இது தவிர கொள்கை ஆய்வு(policy research), உணவு உரிமை தொடர்பாகவும் சென்னையை ஒட்டி பணிபுரிந்து இருக்கிறேன்.

கேள்வி: உங்களது சொந்த ஊரான செய்யாறை விட்டு விட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறீர்களே ஏன்?

பதில்: நாங்கள் பாமரர் ஆட்சியியல் கூடம் (Barefoot Academy of Governance) என்ற அமைப்பின் மூலமாகச் செயல்பட்டு வருகிறோம். பியூசிஎல் வி.சுரேஷ், வன உரிமைச் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த பிரதீப் பிரபு, ரகு அனந்தநாராயணன் போன்றோர் இந்த அமைப்பு உருவாக காரணமாக இருந்தனர். தமிழ்நாட்டின் பின் தங்கிய மாவட்டம் பெரம்பலூர்; அதில் பின் தங்கிய ஒன்றியம் – வேப்பூர் . எனவே இந்தப் பகுதியை தேர்ந்து எடுத்து வேலை செய்கிறோம். மாநில திட்டக் கமிஷன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு மாதிரி ஐந்தாண்டு திட்ட அறிக்கையை இந்த வேப்பூர் ஒன்றியத்திற்காக தயாரித்து தமிழக அரசுக்கு கொடுத்து உள்ளோம். அதில் நீராதாரம், விவசாயத்திற்கு கடன், விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திக்கு பதிலாக சிறு தானிய விவசாயம் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த அறிக்கைக்குப் பின், களத்திலும் இறங்கி செயல்படத் தொடங்கினோம். இதற்கு UNDP (United Nations Development Programme ) போன்ற அமைப்புக்கள் உதவி செய்துள்ளன. மக்களிடம் வெளிப்படையாக இருப்பதால் அவர்கள் நம்புகிறார்கள்.கூட்டங்கள் , பயிற்சிப் பட்டறை வாயிலாக விவசாயிகளை வேளாண்மை மற்றும் நீர் ஆட்சியலை கையிலெடுக்கத் தயார்படுத்தி வருகிறோம்.

கேள்வி: மரபணுமாற்றம் செய்யப்பட்ட பிடி வகை பருத்தி உற்பத்திக்கு எதிராக பேசி, எழுதி வருகிறீர்கள்?

பதில்: பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டம் 28 வது இடத்தில் இருக்கிறது.தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே மழை பொழிவு மாறிக்கொண்டே இருக்கும். மழை குறைவு. பருவநிலை மாற்ற பாதிப்பு அதிகமிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிறுதானியங்கள் போன்ற வறட்சியைத் தாங்கும் பயிர்கள்தான் உகந்தவை.ஆனால் இந்தப் பருத்திக்கு அதிகம் நீர் வேண்டும்.இந்தப் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி பருத்தியை ‘ இளஞ்சிவப்பு காய் புழு’ தாக்காது என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் தாக்குகிறது. இதற்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடித்ததினால் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 9 பேர் இறந்து போனார்கள். அதில் 5 பேர் பெரம்பலூர் மாவட்டத்தினர். ஆனால் அரசு இரண்டு பேருக்கு மட்டுமே நட்ட ஈடு கொடுத்தது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும், விவசாயத்துறை இணை இயக்குநரிடமும் வேண்டுகோள் வைத்தோம்.ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி விதையை ஒவ்வொரு வருடமும் கம்பெனிகளிடமிருந்தே வாங்க வேண்டும். அதுதவிர உரமும், ஏராளமான பூச்சிக் கொல்லியும் பிடிபருத்திக்குத் தேவை. எனவே விதை,பூச்சிக்கொல்லி, உரம் இதை வாங்குவதிலேயே விவசாயி ஓட்டாண்டி ஆகிவிடுவார். இது பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும், கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் தொழில்; எனவே அரசு கண்டு கொள்வதில்லை. உலகில் தடைசெய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லி மருத்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளா அரசு கூட மோனோகுரோட்டோபாஸ் போன்ற சில பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு மௌனம் காப்பது ஏன்?

கேள்வி: “இலாபம் தரும் விவசாயம்” என்று கூறி வருகிறீர்களே? இது சாத்தியமா?

பதில்: அதிகம் நீர் தேவைப்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசும், விவசாயப் பல்கலைக் கழகங்களும் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்துவிட்டன. பசுமைப் புரட்சி விவசாயிகளின் தற்சார்பை உடைத்துவிட்டது.நம்மாழ்வார் ஆற்றிய பணியினால் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் சத்தமில்லாத ஒரு புரட்சியாக நடந்து வருகிறது. இதில் நாம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக இருக்கிறோம்.இந்த இயற்கை விவசாயத்திற்கும் சான்றுபெறுவது அவசியம் என்று ஜூலை முதல் கட்டாயமாக்க இருக்கிறார்கள். இது நல்லதல்ல. வளர்ந்துவருகிற ஒரு துறையை கட்டுப்படுத்தும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். வரகு, குதிரைவாலி, இருங்குச் சோளம் (காக்கா சோளம்), தினை, சாமை, பனிவரகு போன்ற போன்ற சிறு தானியங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் செய்ய ஊக்குவித்து வருகிறோம். இதற்கு தண்ணீர் அதிகம் தேவை இல்லை; இவற்றின் தழையே தீவனமாக மாறுகிறது. விவசாயிகள் தங்கள் நுகர்வுக்கும் சிறுதானியங்களைப் பயன்படுத்துகிறார்கள். பெரம்பலூரில் வேப்பூர் ஒன்றியத்தில் மட்டும் கடந்த இரண்டு சீசனில் 40 டன் அளவுக்கு சிறு தானியங்களை விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளார்கள்.தங்கள் ஒருங்கிணைப்பின் மூலம் விவசாயிகளுக்கு பேரசக்தி அதிகரித்து உள்ளது. உற்பத்தி செய்த இடத்திலேயே நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் தலையீட்டை குறைக்க முடிகிறது. பெரம்பலூரில் சந்தை விலையை விட அதிக லாபம் சிறுதானிய விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

கேள்வி: மக்கள் பங்கேற்புடன் ஏரிகளை மீட்டெடுக்கும் பணி புரிந்து வருகிறீர்கள். இதுபற்றி உங்கள் அனுபவங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்?

பதில்: தமிழ்நாடு முழவதும் 39,202 ஏரிகள் உள்ளன. இதனை முன்னர் விவசாயிகளும், பொதுமக்களும்தான் பராமரித்து வந்தார்கள். அப்போது அவைகளின் மீது அவர்களுக்கு உரிமை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முறை பொதுப்பணித் துறை மூலம் நீர்நிலைகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது. சுதந்தரத்திற்குப் பின்பும், அரசின் கொள்கைகளால் விவசாயிகள் நீர்நிலைகளிலிருந்து அந்நியமாகிவிட்டனர். நீர்நிலைகள் கிராமசபை வசம், விவசாயிகள் வசம், பொது மக்கள் வசம் இருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக பரம்பூர் ஏரியை அங்குள்ள பரம்பக் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம்தான் வெற்றிகரமாக பராமரித்து வருகிறது.

பெரம்பலூரில் வேப்பூர் ஒன்றியத்தில் வெள்ளாறு, சின்னாறு என்ற ஆறுகள் இருக்கின்றன. இவற்றுக்கிடையில் 10 ஏரிகள் உள்ளன. அங்குள்ள வடக்கலூர் ஏரி, வடக்கலூர் அகரம் என்ற ஏரிகளின் முக்கிய வரத்து வாய்க்காலைகளை , 2016 ஆண்டு அங்குள்ள விவசாயிகளை வைத்தே தூர்வார வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். 539 விவசாயிகள் தலா ஏக்கருக்கு 150 ரூபாய் கொடுத்து இதனைச் சாதித்தனர். கடந்த ஆண்டு பொழிந்த மழையில் ஏரி நிரம்பியது. ஏரிகளை தங்களது ஏரி என விவசாயிகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இது போன்ற மக்கள் பங்கேற்புடன் நீர்மேலாண்மை செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட வேண்டும். இப்போது எடப்பாடி அரசு கொண்டுவத்திருக்கிற 10 லட்சத்திற்கு கீழேயுள்ள குடிமராமத்துப் பணிகளை விவசாய அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும் என்பது அவரது பிரியமான திட்டம். ஆனால் நடைமுறையில் ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒப்பந்தக்காரர்களே லாபம் அடைகின்றனர்.

கேள்வி: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில செயலாளராக இருக்கிறீர்கள்?

பதில்: கடந்த ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஐந்து விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார்கள். சமீபத்தில் மகாராட்டிராவில் நடந்து பேரணியை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். விவசாயிகள் போராட்டம் எங்கும் நடைபெறுகிறது. விவசாயிகள் தாங்கள் செய்யும் செலவுகளை ஆவணப்படுத்துவது இல்லை. தங்கள் உழைப்பிற்கான ஊதியத்தை எடுத்துக் கொள்வதும் இல்லை; நிலமதிப்பை கணக்கில் கொள்வது இல்லை. உற்பத்தியாகும் பொருளுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்வது இல்லை. கடந்த ஆண்டு 190க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவை(AIKSSCC) உருவாக்கினார்கள். அதன் தமிழகப் பிரிவுக்கு நான் தற்காலிகமாக செயலாளராக இருக்கிறேன். விவசாயத்திற்கு ஆகும் செலவைவிட 50 சதம் லாபம் வைத்து விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரியும், கடனிலிருந்து விடுதலை கோரியும் எங்கள் அமைப்பு இரு மசோதாக்களை உருவாக்கி இருக்கிறது. இதற்கு 20க்கும் மேற்பட்ட பாஜக உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இது அமலாகும் சாத்தியம் இருக்கிறது; பார்ப்போம்.

கேள்வி : பசுமை விகடனில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரை இப்படி எழுதுவதும் ஒரு சமூகப் பணிதான். நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், வேளாண்மை போன்றவை குறித்து எழுதி வருகிறேன்.

தருமபுரியில் ‘சிட்டிலிங்கி’ என்ற கிராமத்தில் 500 பேர் சேர்ந்து இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். இதனால் வேலையில்லாமல் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்தவர்கள் கூட கிராமத்திற்கு திரும்பி வந்தார்கள். இது குறித்து தொடர் கட்டுரைகள் எழுதினேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மகாராஷ்டிராவின் ஹிவரே பசார், தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் பற்றியும் தொடர் கட்டுரைகளை பசுமை விகடனில் எழுதினேன். ரீஸ்டோர் அனந்து மற்றும் பேரா. சுல்தான் இஸ்மாயில் ஆகியோரின் தொடர்களையும் தொகுத்து எழுதி வருகிறேன்.

கேள்வி: நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: அம்மா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். எனது மனைவியும் ஆசிரியை. இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சமூகப்பணி சாத்தியமில்லை. 16 ஆண்டுகளாக21 வயதிலிருந்தே பொதுவாழ்வில் இருக்கிறேன். எனக்கு வயது இப்போது வயது 37. ‘நான் எனது இலக்கு நோக்கி பயணம் செய்கிறேன்’ என்பதே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்தான்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். டைம்ஸ் தமிழில் நூல்கள் குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் நேர்காணல்களையும் எழுதிவருகிறார்.

ஜுலை 6-ஆம் தேதி சில தகவல் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

“வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

தமிழகத்தின் கவனம் கொள்ளத்தக்க ஆளுமையான இரா.முருகவேள் சென்னை வந்திருந்தார். வாசக சாலை சமீபத்தில் நடத்திய காரல் மார்க்ஸ் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தோம். மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட இரா. முருகவேளை எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

இரா.முருகவேள்

கேள்வி : உங்களுக்கு ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் பற்றி சொல்லுங்களேன் ?

பதில்: என் அப்பா ஒரு தமிழ் ஆர்வலர், அம்மா ஆசிரியை. அவர்கள் மூலம் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட பின்பு சோவியத் நூல்கள் அறிமுகமாயின. மனைவி, இரு மகள்களுடன் கோயமுத்தூரில் வழக்கறிஞராக இருக்கிறேன்.

கேள்வி: மிளிர்கல், முகிலினி,செம்புலம் என மூன்று நாவல்களை இதுவரை எழுதியிருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்த நாவல் எது ?

பதில்: நான் முதலில் எழுத ஆரம்பித்த நாவல் முகிலினி. ஆனால் மிளிர்கல்தான் முதலில் வெளியானது. முகிலினியில் உள்ள பல பாத்திரங்கள், குடும்பங்கள் எனக்கு நேரடியாக அறிமுகம் ஆனவர்கள். சௌத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் திருட்டு அப்போது பிரபலமானது. அனேகமாக நாளிதழ்களில் இந்த திருட்டு குறித்து தொடர்ச்சியாக செய்தி வரும். ஒரு வழக்கறிஞராக இதில் குற்றவாளிகளாக வரும் பலரை நான் அறிவேன்.அதைத் தொடர்ந்து நான் எழுத ஆரம்பித்ததுதான் இந்த நாவல். எனவே என் மனதுக்கு நெருக்கமான நாவல் முகிலினி.

கேள்வி : இந்த நாவலில் இயற்கை வேளாண்மை வலிந்து சேர்க்கப்பட்ட பகுதியாக ஒரு வாசகனாக எனக்கு தோன்றுகிறதே?

பதில்: இன்றைக்கும் சத்தி முதல் கோபி வரையுள்ள 67 கி.மீ. பகுதியில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. விஸ்கோஸ் எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வும் அதற்கு ஒரு காரணம். போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் ஈடுபட்ட பலர் பல வழிகளில் பிரிந்து சென்றார்கள். அதில் ஒன்று இயற்கை வேளாண்மை. எனவே நான் எதையும் வலிந்து சொல்ல முயற்சிக்கவில்ல்லை. தென்னிந்தியாவில் சுற்றுச்சூழலை காக்க வெற்றிகரமாக நடந்த போராட்டங்கள் மூன்று. அமைதி பள்ளத்தாக்குப் போராட்டம்; பிளாச்சிமடாவில் நடந்த கோகோ கோலாவை எதிர்த்து நடந்த போராட்டம்; சௌத் இந்தியா விஸ்கோஸ் ஆலை மூடல் போராட்டம். முகிலினி நாவலில் வரும் விஸ்கோஸ் போராட்டத்தை முதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழி நடத்தியது. பின்னர் அது மக்களாலேயே தன்னெழுச்சியாக நடந்து வெற்றி பெற்றது. இது ஒரு முக்கியமான போராட்டம். இந்தப் போராட்டத்தின் விளைவாக பலர் ஏதேனும் ஒரு வகையில் எதாவது ஒரு தளத்தில் இயங்கிவருவதை நாம் இப்போதும் காணமுடியும். நாவலில் சட்டைபோடாமல் வரும் குமரன் பாத்திரம் உண்மையான மனிதர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை எதிர்த்து உணர்வுரீதியாக எதிர்த்து முழுக்க முழுக்க தன் வாழ்வை பரிசோதனைக்கு உட்படுத்திய நபர்கள் உண்டு. ஆனால் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தில் இது போன்ற தாக்கங்களை( traces) நாம் காணமுடியாது. வாழ்க்கையையே விலையாகக் கொடுத்துச் செய்யப்படும் இந்தப் பரிசோதனைகளைப் பதிவு செய்ய இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கே: அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டம் என்று சொல்லுகிறீர்களே அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

பதில்: கோயமுத்தூருக்கும் மன்னார்காட்டுக்கும் இடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் சோலைக்காடுகள்தான் அமைதிப் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. சிறுவாணி, பவானி, குந்தா ஆகிய நதிகள் பாயும் அடர்ந்த பசுமைமாறாக் காடுகளைக் கொண்ட பகுதி இது. இந்தக் காடுகளை அழித்து மலையைக் குடைந்து அனல்மின் நிலையம் ஆரம்பிக்க இந்திரா காந்தி காலத்தில் ஒரு திட்டம் எழுபதுகளின் பிற்பகுதியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அமலானால் காடு அழியும், பாலைவனமாகும் என போராட்டம் நடந்தது. இதுதான் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இதுதான் நவீன இந்தியாவில் முதலில் நடந்த போராட்டம். அறிவுஜீவிகள்,மேல்தட்டு வர்க்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.இவர்களை “ஜோல்னா பையர்கள் வர்க்கம்” என்று அழைத்தார்கள. (அதற்கு முன்பு நக்சலைட்டினர்தான் ஜோல்னாபை அறிவுஜீவிகள் என்றழைக்கப்பட்டனர்)இப்போது அந்த இடத்தில அந்தப் போராட்டம் பற்றி எந்த சுவடுகளும் (traces) இல்லை. ஆனால் இந்தப் போராட்டத்திற்கு பின்பு நர்மதா பள்ளத்தாக்கு போராட்டம் போன்ற பல போராட்டங்கள் வட மாநிலங்களில் நடக்க இதுதான் உந்துதலாக இருந்தது.

கே: 60 ஆண்டுகால கோவை மாவட்ட வரலாற்றை முகிலினி  நாவலாக வடித்து இருக்கிறீர்கள். இதற்கு அரசியல் கட்சிகள், வர்தகர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள் பாராட்டி இருக்கின்றனவா ?

பதில்: இந்த நாவல் குறித்து பேச ஆறு,ஏழு கூட்டங்கள் கோவையிலேயே நடந்தன. கலை இலக்கியப் பெருமன்றமும், த.மு.எ.கசவும் இந்த நாவலுக்கு சிறந்த நாவல் விருது வழங்கி இருக்கிறது. இந்த நாவலைப் படித்துதான் பிளேக் நோய் கோயமுத்தூரில் வந்தது பற்றி தெரிந்து கொண்டதாக பலர் தெரிவித்தனர்.இந்த நாவலில் வரும் சம்பவங்களோடு ஒவ்வொரும் தம்மை ஏதோ ஒருவகையில் சம்மந்தப்படுத்திக்கொண்டு பேசுபவர்கள் இருக்கிறார்கள். விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஸடேன்ஸ் ஆலை போராட்டம் பற்றி சொல்லுவார். இதில் வரும் தொழிலதிபரின் மனைவி சௌதாமினி பற்றி பலர் வியந்து பேசுகின்றனர். திட்டியவர்களும் உண்டு. எனவே எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் சொல்லுவது போல அரசியல் கட்சிகள்,வர்த்தகர் சங்கங்கள் பாராட்டு எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இப்படி ஒரு நாவல் வந்திருப்பது தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நாவல் போதுமான கவனத்தைப் பெற்றிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

கே: நீங்கள் மொழி பெயர்த்த எரியும் பனிக்காடு நாவல்தானே பரதேசி படமாக எடுக்கப்பட்டது. இது வெற்றி பெற்றது என நினைக்கிறீர்களா?

ப: இயக்குநர் பாலா இந்த நாவலை சரிவர உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். இந்தப் படம் ஓடியிருக்கலாம்; பொருளாதார ரீதியாக கூட லாபம் அடைந்து இருக்கலாம். ஆனால் படத்தின் உயிர் போய்விட்டது. இது ஒரு புத்தம்புது களம்.உலக அரங்கில் இதுபோன்ற தேயிலைத் தொழிலாளர்கள் வாழ்வை சித்தரிக்கும் படங்கள் இல்லை. கொஞ்சம் பேசும் ஸ்பானிஷ் படங்கள் உள்ளன.வங்காளத்தில் வெளிவந்துள்ள பத்மா நதிப் படகோட்டி (பத்மா நதிர் மோஞ்சிர்) என்ற படம் ஆளில்லாத தீவுகளில் மக்களைக் குடியேற்றும் முயற்சிகளைப் பற்றியது. ஆனால் முழுமையாக அந்தப் பாழ்நிலங்களின் வாழ்வைப் பற்றிப் பேசவில்லை. பரதேசியில் இதனை சிறப்பாக சித்தரித்து இருக்கலாம். எரியும் பனிக்காட்டில் வரும் மக்கள் முதன்முதலாக புகைவண்டியை அப்போதுதான் பார்க்கிறார்கள். எப்படி இதைக் காட்டியிருக்க வேண்டும். தேயிலை தொழிலாளர்களின் கூரை இரும்புத்தகடால் வேயப்பட்டு இருக்கும். பனியில் நீர்த்திவலைகள் கோர்த்து வீட்டின் உள்ளே மழைபோல பெய்யும். இதையெல்லாம் சித்தரித்து இருக்கலாம். எனக்கு மிகுந்த வருத்தம்தான். மலைகளின் தனித்துவமான இயற்கையமைப்பு, சமவெளிகளில் நிலவிய பஞ்சம், தேயிலைத் தோட்டங்களின் நிர்வாக அமைப்பு தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளில் வாழ்க்கை எதையும் ஒழுங்காகச் சித்தரிக்கவே இல்லை.

கே: உங்களின் மிளிர்கல் நாவலும் திரைப்படமாகப் போகிறது என்கிறார்களே?

பதில்: ஆமாம். ஏற்கெனவே எனக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தினால் வெளிநபர்களுக்கு என் கதையை கொடுக்க தயக்கமாக இருக்கிறது. மீரா கதிரவன் என் நண்பர்; தோழரும் கூட. மிளிர்கல் நாவலை படம் எடுப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை.பார்ப்போம்.

கேள்வி : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலை மொழிபெயர்க்க ஏன் தேர்ந்து எடுத்தீர்கள் ?

பதில்: அப்போதெல்லாம் அடிக்கடி விடியல் சிவாவை நான் பார்க்கப் போவேன். அவர் தமிழும் ஆங்கிலமும் தெரிந்த, படிக்கின்ற ஆட்களை கண்டால் விடமாட்டார். இதைப் படியுங்கள்; அதை மொழிபெயருங்கள் என்று ஊக்கப்படுத்துவார். அவர் காட்டிய புத்தகங்கள் தலையணை போல பெரிதாக இருந்தன. அவர் காட்டிய புத்தக அடுக்கில் இந்த நூல்தான் கையடக்கமாக இருந்தது. இந்த நூல் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் படித்தது இல்லை. பொதுவாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் உளவாளிகளின் நினைவுக் குறிப்புகள் எல்லாம் வருத்தப்படுவது போல தன் புகழ் பாடுவதாகவே இருக்கும்.

தான் செய்த அயோக்கியத்தனத்தை எல்லாம் பெருமையாக விவரித்து இருப்பார்கள. தன்னைத்தானே பாராட்டிக் கொண்டவையாக இருக்கும். ஆனால் இந்த நூல் உண்மைக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன்; ஒரு கதைபோல இருந்தது; வறட்டுத்தனமாக இல்லை. எனவே இந்த நூலை மொழி பெயர்த்தேன். வெற்றி பெற்ற நூலாக அது மாறிவிட்டது. விடியல் பதிப்பகம் ஏழு பதிப்புகளையும் பாரதி புத்தகாலயம் ஆறு பதிப்புகளையும் வெளியிட்டது. உண்மையில் சொல்லப் போனால் இந்த நூல் மேம்போக்கானதாக (populist) இருக்கும் என ஓரிரு நல்ல தோழர்களே சொன்னார்கள். அவர்களின் கணிப்பை இந்த நூல் பொய்யாக்கி விட்டது.

கே: மொழிபெயர்க்கப்பட வேண்டிய வேண்டிய நூட்கள் பற்றிய பட்டியல் ஒன்று கொடுத்து இருந்தீர்கள் ?

ப: கலை கலைக்காகவே என்கிற வாதம் எப்போதும் இருக்கிறது. ஆனால் அப்படி வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை விளக்குவதுதான் மைக்கேல் ஆஞ்சலோ வாழ்க்கையை சித்திரிக்கும் Irwing Stone எழுதிய the agony and ecstasy (வேதனையும் பெருமகிழ்ச்சியும்) என்கிற நூல். மைக்கேல் ஆஞ்சலோ தான் வடிக்கும் சிற்பங்கள் கிரேக்க, ரோமானிய சிற்பங்கள் போல இல்லை என நினைக்கிறார். அதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து , இரவில் பிணங்களை சட்டவிரோதமாக பிணவறையிலிருந்து எடுத்து, அறுத்துப் பார்த்து மனித உடல்களின் இரத்த ஓட்டம், சதை, எலும்புகளின் அமைப்பை ( முப்பரிமாணம்) பார்க்கிறார். அதன் பின்புதான் அவர் புகழ்பெற்ற டேவிட் சிற்பத்தை வடிவமைத்தார். இந்த நூலின் இப்பகுதியைப் படிக்கையில் உங்கள் மீது பிணவாடை வீசும்.இதில் அரசியல் இல்லை.கலையை உண்மையாக நேசிக்கும், முழுமைக்காக (perfection) அலையும் ஒருவனின் பயணம்தான் இது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால். Robert Frisk எழுதிய Pity the Nation என்கிற நூல் படிக்க வேண்டும். அது லெபனானில் இஸ்ரேல் தலையீடு தொடர்பான நூல்; அவரே எழுதிய The Great war of Civilizations போன்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். The new face of war என்ற வியட்நாம் போர் பற்றிய நூல் கொரில்லா போர் பற்றி ஓரளவு ஆழமான பார்வையை அளிக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சி, வாசிப்பின்பம் போன்றவற்றுக்காக ரூத் பவார் ஜாப்வாலாவின் டு ஹூம் ஷி வில் என்ற நாவல், தாகூரின் ஹங்ரி ஸ்டோன்ஸ் என்ற குறு நாடகம் ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன். நூல்கள் மட்டுமல்ல சில நல்ல ஆவணப்படங்களும் கூட மொழிபெயர்க்கப்பட வேண்டும். The crusades என்ற பிபிசி ஆவணப்படம், Silence of the panda என்ற WWF என்கிற NGO வுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்தும் ஆவணப்படம், Soviet storm, Niyamgiri என்று இன்னும் ஏராளம் இருக்கிறது. ஒரு வேளை பின்பு ஒருமுறை பட்டியல் இடலாம்.

கே: உலகமயமாக்கல் எழுத்துலகை எப்படி பாதிக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ப: உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் தொலைக்காட்சி முன்பு , பூங்கா முன்பு , டீக்கடை முன்பு மக்கள் ஒன்றுகூடி கதைத்தார்கள். சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. தொழிற்சங்கங்கள் இருந்தன. மன்றங்கள் இருந்தன. குறைந்த பட்சம் அரச மர, ஆலமர மேடையாவது இருந்தன. எனவே எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில் நிலவும் extreme individuvalism காரணமாக தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.இது குறித்த பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கால்செண்டரில் நடைபெறுவது குறித்து ஒரு அற்புதமான நாவல் வந்துள்ளது. இதுபோன்ற பல படைப்புகள் வந்துள்ளன. ஒருவரை விட்டு ஒருவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கை முறை பற்றி எழுதுகிறார்கள். இவர்கள் எழுத தகவல்களை( input) இங்குள்ள அரசியல் கட்சிகள் , சமூக ஆய்வாளர்கள், அமைப்புகள்தான் தர வேண்டும். புரிவதுபோல சொல்ல வேண்டும் என்றால் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் வரலாறு நூல்தான் பொன்னியின் செல்வனுக்கு ஆதாரம். The Holy Blood , Holy grail என்ற நூல் வந்ததால்தான் Davinci code என்ற நாவல் வந்தது. கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.

கே: தமிழ் மக்களின் கவனம் பெற வேண்டிய நூல் , ஆனால் போதுமான அளவு கவனிக்கப்படாத நூல் என்று எதையாவது உங்களால் சொல்ல முடியுமா?

ப: ம்ம்ம் …. யோசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஒன்று நிச்சயம் சாதாரண மக்கள் நல்ல நூட்களை கண்டுகொள்கிறார்கள். குறைகள் இருந்தாலும் சற்று விட்டுக் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். படித்துவிட்டு போகிற போக்கில் ஓரிரண்டு வரிகளில் முகநூலில் எழுதுகிறார்களே. பேர் பெற்ற எழுத்தாளர்கள் குழு மனப்பான்மையால், தான் என்கிற எண்ணத்தால் பேசாமல் இருக்கலாம். ஆனால் வாசகர்கள் இதைப் பொருட்படுத்துவது இல்லை. ச.பாலமுருகன் சோளகர் தொட்டி எழுதும்போதோ , நக்கீரன் காடோடி எழுதும் போதோ அவர்களை யாருக்கும் தெரியாது. இந்த தமிழ் மக்கள்தானே இந்த படைப்புகளை கொண்டாடினார்கள். நான் எரியும் பனிக்காடு தமிழாக்கம் செய்யும்போது பெரிய எழுத்தாளர்களிடம் மதிப்புரை வாங்கிப்போடலாம் என்பதே எனக்குத் தெரியாது. இதற்கு ராயல்டி வரும் எனத் தெரியாது. ஆனால் இதுவரை பத்து பதிப்புகள் வந்துவிட்டன. நாம் எழுதுவது மக்களுக்கு புரிய வேண்டும், சரியான அரசியலைச் சொல்ல வேண்டும்.உண்மையைச் சொல்ல வேண்டும். முடிந்தவரை அழகாக சுவாரஸ்யமாக, நேரடியாகப் பேச வேண்டும். அவ்வளவுதான்.

கே: என்.ஜி.ஓக்கள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறீர்கள்?

ப: ஆமாம் கார்ப்பரேட் என்ஜிஓக்களும் புலிகள் காப்பகமும். என்ஜிஓக்களால் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தியாவின் பல ரிசர்வ் காடுகள் புலிகள் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு காலங்காலமாக வாழ்ந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றபப்டும் சூழல் உருவானது. மனிதனும் விலங்கும் ஒன்றாக வாழ முடியாது என்ற மேற்கத்திய கருத்தாக்கம் தீவிரமாக நமது மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இடையே பரப்பப்பட்டது. இந்த புலிகள் காப்பகம் என்று சொல்கிற அமைப்புக்களின் பொறுப்பாளர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் எலிசபெத் ராணியின் கணவர் பிலிப், நெதர்லாந்து மன்னர் என்று மூன்றாம் உலகைச் சுரண்டிக் கொழுத்த மன்னர் பரம்பரையாக இருக்கிறது. மனிதனும் விலங்கும் ஒன்றாக வாழ முடியாது என்பது போன்ற கருத்துக்களை இவர்கள் ஏன் பரப்புகிறார்கள், மக்களைக் காடுகளில் இருந்து வெளியேற்றுவதால் ஏகாதிபத்தியங்களுக்கு என்ன நன்மை என்று தேடிக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட ஒரு சிறிய முயற்சிதான் அந்தக் கட்டுரைத் தொகுப்பு.

கே: செம்புலம் நாவலில் என்.ஜி.ஓக்கள்,வன்கொடுமை தடுப்புச் சட்டம், உண்மை அறியும் குழு குறித்து பேசி இருக்கிறீர்கள்?

ப: நான் பல உண்மை அறியும் குழுக்களில் பங்குபெற்று இருக்கிறேன்.எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 97 சதம் வழக்குகளில் குற்றவாளி இல்லையென்றே தீர்ப்பு வருகிறது. இப்போது புகார் கொடுத்ததும் சாதிக் கொடுமை இழைத்தவரைக் கைது செய்வதையும் கடினமானதாக ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. செம்புலம் நாவல் சாதி சங்கம் பற்றி பேசும் நாவல் என்பதால் கொஞ்சம் அச்சத்தோடேயே இருந்தேன். நல்லவேளை ஏதும் பிரச்சினை வரவில்லை.

கே: அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள் ?

ப: கொஞ்சம் வரலாறு பற்றி எழுதலாம் என இருக்கிறேன். கொஞ்ச நாள் போகட்டுமே !

Wrapper photo: பெருமாள்சாமி தியாகராஜன்

பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் ரஞ்சித், பினராயி விஜயன், பிஜேபியின் மொழி அரசியல், பெரியாரின் இன்றைய தேவை, நாட்டார் வழக்காற்றியல், ஆகமங்கள் என்று நீண்ட உரையாடல் இது. பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது முடியாது முடியாது என்று தீர்க்கமாகவும் ஆழமாகவும் பறைசாற்றுகிறார். இனி தொ.பவுடன்…

தயாளன்: பினராயி விஜயன் ஒரு கம்யுனிஸ்ட்காரர். அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்னு ஒரு சட்டம் கொண்டு வர்றாரு. தலித்துகள் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 26 பேரை பாடசாலைக்குக் கூப்பிட்டு இன்னிக்கு அவங்க அர்ச்சகரா பூஜை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அவங்க மலையாள மொழில அர்ச்சனை பண்ணாம சமஸ்கிருத மொழிலதான் அர்ச்சனை பண்றாங்க. மலையாள மொழில அர்ச்சனை பண்றதா? சமஸ்கிருத மொழில அர்ச்சனை பண்றதா? பெரியாரிஸ்டா உங்க கருத்து என்ன?

தொ.ப: மலையாள மொழிலதான் பண்ணனும். ஏன்னா மதத்தின் வழியாத்தான் ஆதிக்கம் ஊடுருவுது. வடமொழி வழியாதான் சமஸ்கிருத ஆதிக்கம் ஊடுருவுது. எனவே, மலையாள மொழிலதான் அர்ச்சனை பண்ணனும். கடவுளுக்கு மலையாள மொழி தெரியாதா? மலையாள மொழி தெரியலைனா அவர் எப்படி மலையாளிகளோட கடவுளா இருக்க முடியும்? மறுபடியும் பிராமணியம் ஜெயிக்குதுன்னுதான் பொருள். அதனால பெரிய அளவுல வெற்றிகண்டதா நாம சொல்ல முடியாது. பார்ப்பனியம் ஜெயிக்குதுன்னுதான் அர்த்தம். ஆனாலும் பேசறதும், எழுதறதும்னு வந்துட்டோம்ல. ஒரு Step Forward தான். ஒரு அடி முன்னேற்றம்தான்.

தயாளன்: இதை பார்ப்பனியத்திற்கு ஏற்பட்ட சறுக்கல்னு சொல்லலாமா? அல்லது அவைதீக மரபுக்கு கிடைத்த பலம்னு சொல்லலாமா?

தொ.ப: பலம்தான். உடனே, எல்லாம் வந்திராது. 60 வருஷமா பெரியார் எவ்வளவு பொறுமையா பத்திரிக்கை நடத்தினாரு? மேடைக்கு மேடை பேசிட்டு வந்தாரு. மெல்ல மெல்லத்தான் வரும். எறும்பு ஊறக் கல்லும் தேயுங்கிற மாதிரி, பெரியார் என்ற எறும்பு ஊர்ந்து ஊர்ந்து தான் இந்த சாதிய ஒடுக்குமுறைங்கிற கல்லைத் தேச்சுது. பெரியார் மதத்தை விட சாதிதான் கொடுமையானதுன்னு கண்டிச்சாரு. அவர் தெளிவா சொன்னாரு. உங்கள் வேதம், புராணம் எல்லாம் சாதியின் பேரில் உள்ளது. நான் அவற்றை எதிர்க்கிறேன். உங்கள் கடவுள் சாதியின் பேரில் உள்ள கடவுள், நான் அதை நிராகரிக்கிறேன்.

உங்கள் கோயில் சாதியின் மேல் உள்ள கோயில், நான் அதை நிராகரிக்கிறேன். உங்களுடைய கலை இலக்கியங்கள் எல்லாம் சாதியை மேலிடுகின்றன. நான் அவற்றை நிராகரிக்கிறேன். உங்கள் சாதியின் பேரில் உள்ள எல்லாவற்றையும் நான் நிராகரிக்கின்ற பொழுதுதான் இவை எல்லாவற்றையும் நான் நிராகரிக்க வேண்டியதாகிறது. இன்னிக்கு பார்க்கிறோம், மதம் அழிஞ்சாலும் சாதி அழியாது போல இருக்கு.

தயாளன்: இந்துமதம் அழிஞ்சா சாதி அழிஞ்சிருமான்னுதான் பொதுவா கேட்க வேண்டியிருக்கு?

தொ.ப: சாதி அழியனும்னா இந்துமதம் அழியனும். ஆனால் அழியாது. சாதி தன்னைத்தானே எளிதாக மறு உற்பத்தி செய்து கொள்ளும். ஏன்னா இந்துமதத்தோட Strong Point அதுதான். மறுபடியும் மறுபடியும் மறு உற்பத்தி செய்து கொள்ளும். மதம் மாறினாலும் சாதியைக் காப்பாத்திறான்ல.

தயாளன்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனுன்ற விஷயத்தை, ஒரு இடதுசாரி அரசாங்கம் செஞ்சிடுச்சு. ஆனா 50 ஆண்டுகாலமா தமிழ்நாட்டுல ஆட்சியில் உள்ள, பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லிக்கிற திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவங்க இதைச் செய்யவேயில்லையே?

தொ.ப: திராவிட இயக்கத்துக்கு தோல்விதான். நான் திராவிடக் கட்சிகளைக் கலைத்துவிடலாம்னு எழுதறேன்ல? இதுதான், திராவிடக் கட்சிகள் இந்த நாடாளுமன்ற ஜனநாகத்தினுடைய மோசமான பக்கங்கள்ல போய் விழுந்திடுச்சு. ஊழல்ல விழுந்திட்டது, அதனால அவங்களால செய்ய முடியல. காசு சேர்க்க ஆரம்பிச்ச உடனே, கொள்கையை தெருவில விட்டாங்க.

தயாளன்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனுன்ற விசயத்துல ஆகமம்ணு ஒரு விசயத்தை சொல்றாங்க, ஆகமம்னா என்னய்யா? இந்து மதம், ஆகமம் இதற்கெல்லாம் என்ன பொருள்? ஆகம விதினா என்ன?

தொ.ப: “நான் இந்து அல்ல நீங்கள்”-னு நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். இந்துமதம்ங்கிறது ஒரு Fraud. அதே மாதிரி ஆகமங்கிறது பிராமணர்கள் உருவாக்கின ஒரு Fraud. அது பிராமணர்களோட Text.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: சங்கராச்சாரியார் ஆகம விதிப்படி இருக்கிற கோயில்களுக்குத்தான் போறாரே?

தொ.ப: ஆமாம். அதுதான், அது பிராமணர் Text. சங்கராச்சாரியார். அப்படித்தான் சொல்றாரு, அப்படி சொன்னாதான் அவர் சங்கராச்சாரியார். ஆகம விதி எல்லாம் புனிதமானவையல்ல. காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே வர்றதுதான் ஆகமங்கள். ஆகமம்-ன்றது Code தான். Codeஐ காலத்துக்கு காலம் மாத்தலியா? Financial Code-ஐ மாத்தலியா? PF கிடையாதுன்னு சொல்லலியா? அதுமாதிரி Code-ஐ மாத்திட்டுப்போறது. ஆகமங்களை மாத்திட்டுப்போறது. ஆகமம்-ன்றதே ஒரு Fraud, வேதங்கள் எப்படி ஒரு Fraudஓ அதேமாதிரி ஆகமங்கிறது ஒரு Fraud.

தயாளன்: வழக்கமா நீங்க சொல்லிட்டு வர்ற இந்த கடவுள் அல்லது தெய்வம் இந்த இரண்டுக்குமான ஒரு இடைவெளி இருக்குல்ல, அதாவது கடவுளை முன்னிறுத்தறது மூலமா நாட்டார் தெய்வங்களை பின்னுக்குத் தள்ளற இந்த அரசியல் போக்குல, இப்போ நாட்டார் தெய்வங்கள் கோயிலுக்குள் கும்பாபிஷேகம் நடத்தறது, ஆர்எஸ்எஸ்காரங்க உள்ள புகுந்து வர்றது, கிராமப் பூசாரிகள் மாநாடு நடத்தறது, இதையெல்லாம் ஒரு வகையான நாட்டார் தெய்வங்களை உள்விழுங்குவதற்கான முயற்சிகள்ன்னு பார்க்கலாமா?

தொ.ப: நாட்டார் தெய்வங்களை ஆகம மதம் உள் விழுங்க முடியாது, முடியாது, முடியாது. ஏன்னா, ஆகம மதம் ரத்த பலி ஏற்குமா? பெண் சாமியார்களை ஆகம விதி ஏற்குமா? இதெல்லாம் ஏற்றால்தான் நாட்டார் தெய்வங்களை வரவு வெச்சதா அர்த்தம்.

தயாளன்: ஆனால் சில கோவில்கள்ல ரத்தபலியைக் கைவிடறாங்க, கும்பாபிஷேகம் நடத்தறாங்களே!

தொ.ப: தப்பு! ஒரு கோவில்ல சங்கராச்சார்யார் வந்து கும்பாபிஷேகம் நடத்தறதாலதான் ரத்தபலி வேண்டாம்னு கோயில் தர்மகர்த்தா சொல்லிட்டிருந்தாரு. அவரைத் தர்மகர்த்தா பதவில இருந்து நீக்கிட்டாங்க.

தயாளன்: தமிழகம் பூரா இருக்கிற கிராமங்கள்ல சுடலைமாடன் கோயில்லையும், கருப்பசாமி கோயில்லையும் இப்போ கும்பாபிஷேகம் நடக்குது.

தொ.ப: அதான், அது ஆபத்தானது. கருப்பசாமி கோயில்களிலேயும், சுடலைமாடன் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கும்பாபிஷேகம் நடத்தறது ஆபத்தானது. அங்க கொடைதான் நடக்கும், கூத்து நடக்கும். கும்பாபிஷேகம் நடத்தும்போது பிராமணனுக்கு பொழப்பு ஓடும். அப்பவும் நாட்டார் தெய்வங்களை பிராமனைஸ் பண்ண முடியாது.

தயாளன்: ஒரு சாமி அல்லது தெய்வம் பிராமனைஸ் ஆகறதுக்கும், ஆகாததுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கறீங்க?

தொ.ப: நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை முழுமையாக இழுத்துப் போடுவதற்கு ஆகம மதங்களால முடியாது. அதாவது மீனாட்சி அம்மன் கோயில்ல சாமியாடவிடுவானா? ஆடு பலி கொடுக்க விடுவானா? விடமாட்டான்ல. நாட்டார் தெய்வக் கோவில்ல பெண்ணுக்கு கிடைக்கிற மரியாதை கிடைக்குமா? நாட்டார் தெய்வக் கோயில்ல பெண் சாமியாடலாம். மீனாட்சி அம்மன் கோயில்ல பெண் சாமியாட முடியுமா? பெண் திருநீறு எடுத்து கொடுக்க முடியுமா? இது மாதிரி நிறைய விசயங்களை உள்ளிழுத்தாதான் நாட்டார் தெய்வங்களை விழுங்கியதா அர்த்தம். அது முடியாது. ஒரு எல்லைல வாமிட் பண்ணிடும். அதால செரிக்க முடியாது.

தயாளன்: இந்த Contextல மேல்மருவத்தூர் அடிகளாரை எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: அவர் ஓரளவுக்கு வெற்றிபெற்றாரு. Mensterual Termங்கிறது, உலகத்தின் மிகப்பழைய விசயம் அது. அதை உடைச்சாரு. அவருடைய வெற்றியின் ரகசியமே அதுதான். அதுக்குமேல அவரால போக முடியல. தோத்துப் போயிட்டார். தன்னையே தெய்வமா நிறுவுறார். அவரை வெச்சுகிட்டே அவர உலகத்தை படைச்சவருனு சொல்லிட்டிருக்காங்க. நான் கேட்டேன், எனக்கு ‘சீன்னு’ போச்சு! உலகத்தை படைச்சுட்டு தெய்வம் இப்படி வந்து உட்கார்ந்திருக்கான்னு கேட்டேன். நான்தான் தெய்வம்னு உட்கார்ந்திருக்காம், அது ஒப்பேறாது. அவரோட அந்த இயக்கம் போயிரும். இந்த சொத்துக்கள் இருக்கிறதால கொஞ்சகாலம் தாக்குபிடிக்கும்.

தயாளன்: தமிழ்தேசியம், திராவிட இயக்கத்துக்கு எதிரான விசயம் அல்லது திராவிட இயக்கம் தோத்துப் போச்சு, பெரியார் தமிழ்தேசியத்தோட எதிரியா இன்னிக்கு கட்டமைக்கப்படறாங்க. திராவிடம்னு அவர் சொன்னது வந்து நாலு ஸ்டேட்டும் சேர்த்து, அது இன்னிக்கு சாத்தியமில்லை. தமிழ்தேசியம்தான் சாத்தியம்னு சொல்றாங்களே?

தொ.ப: அதை பெரியாரே கைவிட்டுட்டாரே! அதைச் சொல்ல மாட்டாங்களே! 1938-லேயே தமிழ்நாடு தமிழர்க்கே என்ற கோஷத்தை வெச்சிட்டார்ல. அப்படினா தமிழ் தேசியத்தை பெரியார் கையில எடுத்துடாருன்னுதான அர்த்தம். அதை பேசமாட்டாங்க! தமிழ்தேசியம், திராவிட தேசியத்துக்கு எதிரானது அல்ல. உள்ளடங்கியது தான்.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: இன்னிக்கு தலித் அரசியல் பேசறவங்க, அல்லது இனவெறி பேசறவங்க பொரியாரைத் திட்றத ஒரு ஃபேஷனா வெச்சிருக்காங்க. என்ன காரணம்?

தொ.ப: தங்களுக்கான அடையாளம் தேடுதலாக இருக்குமே, அதுதான். பெரியாரை வையறுதுலதான் தங்களுக்குள்ள அடையாளம் இருக்குனு இவங்க நினைக்கிறாங்க. இவங்க தோத்துப்போவாங்க. ஏன்னா, பெரியார் வந்து வெறும் சொல்வீரர் அல்ல, செயல்வீரர், சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர். இவர்களால் பெரியாரை வெல்லவே முடியாது, முடியாது, முடியாது.

தயாளன்: பெரியார் தமிழ் மரபு சார்ந்த விசயங்களை, தமிழோட அறிவு நுட்பங்களை மழுங்கடிச்சிட்டாரு. அது, கட்டிட கலையா இருக்கட்டும், மருத்துவமா இருக்கட்டும், எல்லாத்தையுமே அவர் திட்டிட்டாரு. ஆங்கில மருத்துவம்தான் சரின்னு சொல்றாரு. ஒரு கட்டத்துல, தமிழ் நாட்டு மருத்துவமெல்லாம் குப்பைல தூக்கி எரிச்சுப்போடனும்னு சொல்றாரு, இதெல்லாம் தமிழ் அறிவு வளம் குறித்து பெரியார் பெரிய அளவுல கணக்குல எடுத்துக்கலன்னு சொல்றாங்களே.

தொ.ப: அது பெரியாருடைய சறுக்கல்தான். இல்லைனு சொல்லமுடியாது. இன்னிக்கு சித்த மருத்துவத்தை அறிவியல்பூர்வமா நிறுவறாங்கள்ல, நிலவேம்பு குடிநீர் எடுக்கறாங்கல்ல, நிலவேம்பு குடிநீர்தான டெங்குக்கு மருந்தா இருக்குது. தமிழ் அறிவுலகம் அதை மீட்டெடுக்கும். தமிழ் கட்டடக்கலை, தமிழ் அறிவு எல்லாத்தையும் அது மீட்டெடுக்கும். பெரியார் ஒரு கட்டத்துல சொன்னாரு, உங்களுக்கெல்லாம் தமிழ் பேச முடியவில்லை என்றால், ஆங்கிலம் பேசுங்கள்னு கூட சொன்னாரு. அது ஒரு கோபத்துல ஒரு தந்தைக்கு வர்ற கோபத்துல, உருப்புடமாட்டான்னு பையன வைவாங்கள்ல, நீ உருப்புடுவியானு அப்பா வந்து பையன கேட்பாங்கள்ல, அது பையன் உருப்புடக்கூடாதுனு அவரோட நோக்கமில்ல. எல்லா அப்பாவும் அப்படித்தான் கேட்பாங்க, நீ உருப்புடமாட்டனுதான் சொல்லுவாங்க. அதுமாதிரிதான் பொரியாருடைய கோபமும்! ஒரு தந்தையுடைய கோபம், பொரியாருடைய கோபம். கோபத்தில் பேசுகிற பேச்சுக்கள் வேற. பெரியார் தமிழ்தேசியத்திற்கான எதிரியில்லை. தமிழ்நாடு தமிழர்க்கேங்கிற கோரிக்கையை 1938-ல் வெச்சதே பொரியார்தான்றப்போ, அவரைத் தமிழ் தேசியத்திற்கு எதிரின்னு எப்படிச் சொல்றீங்க?

தயாளன்: ஒரு பக்கம் பொரியாரைக் கன்னடர்னு சொல்லி திட்றாங்க, இன்னொரு பக்கம், அவரு தலித்துகளுக்காக ஒன்னும் பேசல, இடைநிலை சாதிகளுக்காக மட்டும்தான் பேசினார்னு ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாங்க. தீவிரமா தமிழ்தேசியம் பேசறவங்க முற்றிலுமா பெரியாரை நிராகாரித்துப் பேசறாங்க.

தொ.ப: பெரியார் BC விடுதலைய பேசல. அவர் மனித குல விடுதலைய பேசறாரு. அவருடைய பேச்சினால அதிக பயன்பெற்றவர்கள் BCதான். அதுக்காக பெரியார் BCக்காக பேசினாரு அப்படின்றது இல்ல. பெரியார் மனுசனுக்காக பேசினாரு. அவரு BCக்காகவும் பேசினாரு, SCக்காகவும் பேசினாரு. பிள்ளையார் சிலையை உடைச்சது யாருக்காக? BCக்காகவா? ஆலயங்களுக்குள்ள முழுமையா நுழையனும்னு சொன்னாரு. மனித குல விடுதலைய பேசினாரு. அதுல BC விடுதலையுமுண்டு, SC விடுதலையுமுண்டு. BCக்கள் முதல்ல கல்வியறிவு பெற்றதால அவங்க அத பயன்படுத்திக்கிட்டாங்க. அவங்கதான் அதிக பயன்பெற்றவர்கள்னு சொல்லுங்க. நான் ஒத்துக்கிறேன். அதுக்காக பெரியார் அவங்களுக்காக பேசினார்னு சொல்றது உண்மையில்லை.

தயாளன்: திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், தமிழ்தேசியம் என்பது நடைமுறைக்கு சாத்தியமேயில்லை. தமிழர்கள் சாதியா பிரிஞ்சு கிடக்காங்க. சாதியா பிரிஞ்சு கிடக்கிறவரைக்கும் தமிழ் தேசியம் சாத்தியமில்லை, தமிழ் தேசியம் பேசறதெல்லாம் சுத்த அறிவுகெட்டத்தனம்னு சொல்றாரு. தமிழ்தேசியம் வளரனும்னா சாதி ஒழியனுங்கிறது முன் நிபந்தனையா? நீங்க எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: முன் நிபந்தனைனு சொல்ல முடியாது. முன் நிபந்தனையில்லை, நிபந்தனை, பக்க நிபந்தனை. Side By sideஆக சாதி ஒழியணும், தமிழ் தேசியம் வளரணும். இது ஒழிஞ்ச பிறகு அது வளர்றதும், அது வளர்ந்த பிறகு இது ஒழியறதும், அப்படிங்கிறது சாத்தியமில்லை. பிறப்பிற்கு முன்னாலேயே அவனுடைய சாதி, அவனோட இருக்கு. ஒருவன் பிறக்கிறதுக்கு முன்னாலேயே அவன் தோன்றின சாதிய பச்ச குத்திக்கிறோம். இனிமே அந்த பச்சைய ஒழிக்கணும். சாதி ஒழிப்பு அவ்வளவு எளிதான விசயமல்ல. அதனாலதான் பொரியார் சாதியதான் ரொம்ப கடுமையான எதிரியா பார்த்தாரு. மதத்தைப் பார்க்கலை. ஏன்னா மதம் மாற முடியும், சாதி மாற முடியுமா? இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மூன்றுமுறை மதம் மாறலாம். நீங்க ஒரு தடவை கூட சாதி மாற முடியாது. அதனால மதத்தை விட கொடுமையான எதிரி வந்து சாதிதான். அதனால சாதி ஒழிப்பு இல்லாம தமிழ்தேசியம் இல்லேங்கிறத நான் ஒத்துக்கறேன்.

தயாளன்: ஒரு தடவை நீங்க பேசும்போது சாதிய ஒழிக்கிறதை விட, சாதியை கரைக்கலாம்னு சொன்னீங்க, சாதியை கரைக்கிறதுனா என்ன? ஒழிக்கிறதுனா என்ன?

தொ.ப: ஒழிக்கிறதுங்கிறது, சாதி இல்லை அப்படிங்கிறது. கரைக்கிறதுங்கிறது சாதி மறுப்பு திருமணங்களை ஊக்கப்படுத்தறது. சாதிமறுப்பு திருமணம் செஞ்ச 2 குடும்பங்கள், திருமணம் பண்ணிக்கிச்சுனா பொறக்குற குழந்தைக்கு எந்த சாதி, நாலு சாதில எந்த சாதிய நீங்க அடையாளப் படுத்துவீங்கக? இசுலாமியர்கள்கிட்ட சாதி கரைந்து போனது. கிறித்தவம் சாதியை தக்க வெச்சுக்கிச்சு. சாதி கிறித்தவத்துல அப்படியே இருக்கு. நாடார், நாடார் கிறித்துவாகத்தான் இருக்கிறார். ஆனால் இசுலாத்துல அப்படி இல்லை. அவங்க எந்த சாதியிலே இருந்து மதம் மாறினாங்களோ அந்த சாதி அடையாளம் அவங்ககிட்ட இல்ல. சாதி இசுலாத்துல கரைஞ்சு போச்சுல்ல. எந்த சாதியில இருந்து இசுலாமா ஆனன்னு கேட்டா அவங்க என்ன பதில் சொல்வாங்க? தெரியாது! கிடையாது! அதைத்தான் நான் சாதி கரைப்பு என்கிறேன். இசுலாம் சாதியை கரைக்கிறது. கிறித்தவம் சாதியை தக்க வைத்துக் கொள்கிறது. இரண்டுக்குமான வேறுபாட புடிச்சா புரிஞ்சுக்கலாம்.

தயாளன்: ஆனா அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு வெளியேறி பௌத்த மதத்துக்கு போனாரு, அதனால சாதி இறுக்கம் தளர்ந்திருக்கா? கரைஞ்சிருக்கா?

தொ.ப: எங்க கரைஞ்சிருக்கு? நியோ புத்திஸ்ட்டுனு தனியா Scholarship formல ஒரு Column இருக்குல்ல? அவங்க தனி சாதியா இருக்காங்க, நியோ புத்திஸ்ட்டுகள் அதாவது, புதிய பௌத்தர்கள்னு தனி சாதியா இருக்காங்கல்ல.

தயாளன்: அப்போ அம்பேத்கருடைய அந்த முயற்சி தோல்விதானா?

தொ.ப: ஆம். தோல்விதான்! தெளிவான தோல்வி.

தயாளன்: பெரியார் அம்பேத்கரோட இந்த மதமாற்றம் பத்தி ஏதாவது பேசியிருக்காரா?

தொ.ப: ஆமாம்! நான் வரலைன்றார்லா? பெரியாரை அம்பேத்கார் வாங்க பௌத்தத்திற்கு போவோம்னு கூப்பிட்டார். ஆனா, பெரியார், இங்க இருந்துக்கிட்டேதான் போராடுவேன், நான் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு.

தயாளன்: இந்துமத சீர்திருத்தத்துக்குதான் பெரியார் ஒரு வகைல துணை புரிஞ்சிருக்காரு. இந்து மதத்துல சாதிய கட்டுமானத்தை தகர்த்தறதுல ஒரு சீர்திருத்தவாதியாத்தான் அவரைப் பார்க்கிறோம். நம்ம நினைக்கிற மாதிரி ஒரு பெரிய புரட்சியாளர் இல்லை அப்படினு வலதுசாரிகள் ஒரு கருத்தை வைக்கிறாங்க.

தொ.ப: அவர் புரட்சியாளரா இல்லாம இருந்துட்டு போறாரு, என்ன கெட்டு போச்சு? அவர் நான் புரட்சியாளன்னு எப்பவாவது சொன்னாரா? நான் வேலை செய்றேன், அவ்வளவுதான்னு சொன்னாரு. அவர் புரட்சியாளரா இல்லாம இருந்துட்டுப் போறாரு. பெரியர் புரட்சியாளர் இல்லைனு எல்லா சிலையிலேயும் எழுதிட்டுப் போங்க. என்ன கெட்டுப்போச்சு? தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேராவது சாதி மறுப்பு திருமணம் பண்ணிட்டாங்கள்ல? வெற்றிகரமா இருக்காங்கள்ல? அது யார் கொடுத்த தைரியம்?.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: ஒரு இடத்துல நீங்க பேசும்போது பெரியாரை திட்டுறது இந்த கல்வியமைப்பு கொண்டுவந்த கொண்டுவந்த ஒரு வக்கிரம்னு சொல்றீங்க? கல்வி அமைப்பு நல்லாதான இருக்கு? அது கல்வியைக் கொடுத்திருக்கு, பெரியரிய சிந்தனையை வக்கிரமா பார்க்கிறதுனா என்ன? எதனால அப்படிச் சொல்றீங்க?

தொ.ப: கல்வி அமைப்பு எதையும் கேள்வி கேட்காம அப்படியே விட்டிருச்சு. சாதிய, சாதிய கட்டமைப்பு, சாதிய உள்முரண்பாடு எல்லாத்தையும் இந்த கல்வி அமைப்பு அப்படியே ஒத்துக்கிட்டதாலதான் இந்தச் சிக்கலே வருது. இந்த கேள்வியே அங்கதான் பிறக்குது. இந்த கல்வி அமைப்பு செஞ்ச வக்கிரம்தான் சாதி மாநாடுகள், சாதிச் சங்கம், கல்விக் கூடங்கள்ல சாதி இப்படி நிறைய. கயிறு கட்டுறாங்க தெரியும்ல இப்ப? நெல்லை மாவட்டத்துல பையன் பள்ளிக்கூடத்துக்கு போறபோது, ஏழாங்கிளாஸ், எட்டாங்கிளாஸ் பையன் கையில் சிகப்பு கயிறு அல்லது பச்சை கயிறு கட்டியிருக்கான். சிகப்பு கயிறு கட்டினா தேவர், பச்சை கயிறு கட்டினால் SC. பள்ளிக்கூடத்துல சிகப்பு கயிறு கட்டின பயலுகள்லாம் ஒரு செட். இது இந்த கல்வி முறையின் வக்கிரம்தான? நான் படிக்கிறபோது இப்படி இல்லையே.

தயாளன்: இவ்வளவு காலம் பெரியார் செஞ்ச வேலைகளுக்கு இது எதிரா மாறுதே?

தொ.ப: நிச்சயமா, ஆனால் ரொம்ப நாள் நீடிக்காது. இது மோதி, அழிஞ்சு, நிறைய இழந்த பிறகுதான் அறிவு வரும். இழப்பிற்கு பின்னால வர்ற அறிவு அழுத்தமானதா இருக்கும். ஆனால் இழக்க வேண்டாமேனு நாம சொல்றோம். அவ்வளவுதான்.

தயாளன்: ஆனால், இழப்பு தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்களா?

தொ.ப: ஆமாம்!

தயாளன்: இப்போ மத்திய பாஜக வலதுசாரி அரசு அடித்தடுத்து மாநில உரிமைகளை பறிக்கிற மாதிரி நிறைய திட்டத்தை கொண்டு வர்றாங்க. GST கொண்டு வர்றாங்க, மாநில அரசுக்கு வரிபோடற உரிமையில்லை. அப்புறம், கல்வியில, உயர்கல்வியில மருத்துவத்துல NEETனு ஒரு தேர்வு கொண்டு வந்தாங்க. NEET தேர்வு இட ஒதுக்கீட்டுக்கு நேர் எதிரா வேற ஒரு வடிவத்துல இருக்கு. எந்த நாட்டுல இருக்கிறவனும் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளுக்கு வரலாம். அனிதான்னு ஒரு பொண்ணு இறந்து போச்சு. அனிதா இறந்து போனதுக்கு காரணமான நீட் திட்டத்தை ஒரு தலித் கட்சியோட தலைவரே வரவேற்கிறார். கிருஷ்ணசாமி வரவேற்கிறார். இத எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: டக்டர் கிருஷ்ணசாமி முட்டாள்தனமா பேசறார். ரிசர்வேசன் வேண்டாங்கிறார் அந்த ஆளு . ரிசர்வேசன் வேண்டாம், யாரு கேட்டா அப்படிங்கிறார். ஆனால் இந்திய தேசியம் உடையுது. உடைஞ்சுகிட்டே இருக்கு. எப்போ வேகமா உடையும்னு சொல்லமுடியாது.

தயாளன்: டாக்டர். கிருஷ்ணசாமி பள்ளர்கள் தலித்துக்களே இல்லை. பட்டியல் சாதியிலிருந்து வெளியேத்தனும்னு சொல்றாரு.

தொ.ப : இதுதான் வீழ்ச்சிக்கு முதல் அடையாளம். விளங்காம போறதுக்குதான்.

தயாளன்: இன்னிக்கு பெரியாரும் அம்பேத்கரும் இருந்தா, ஆர். எஸ். எஸ்ல சேர்ந்து இருப்பாங்கன்னு டாக்டர். கிருஷ்ணசாமி சொல்றாரே?

தொ.ப : ஹா…. ஹா…..ஹா….. சிரிச்சுக்கலாம். வேற என்ன செய்ய? அவர் பிஜேபி கவர்ன்மெண்ட் கிட்ட எதையோ எதிர்பார்க்கிறாரு. இவருக்கு மட்டும்தான் பெரியாரைத் தெரியுமா? அம்பேத்கரைத் தெரியுமா? கிருஷ்ணசாமி ரொம்ப ஆபத்தான ஆளு. சுய நலத்துக்காக சமூக அமைதியைக் கெடுத்துருவாரு. இதை அவர் கான்சியஸா செய்யுறார்.

தயாளன்: நீட் தேர்வைப் பத்தி என்ன நினைக்ககிறீங்க? அனிதான்னு ஒரு பொண்ணு 198 மார்க் எடுத்தும் சீட் கிடைக்காம இறந்து போயிருக்கு. அது தலித்களோட பிரச்சனை இல்ல, மத்த சாதிகளோட பிரச்சனை. இதுவே ஒரு தலித் பொண்ணு இறந்து போனா, தலித் மரணங்ககள் நிகழும் போது வராத இவங்கள்லாம் மார்க் விசயத்துக்கு மட்டும் போராடறாங்க, தமிழர்கள் தலித் இறந்து போனா வர்றதில்ல அப்படின்னு சொல்றாங்களே?

தொ.ப: அது வந்து திராவிட திராவிடக் கட்சிகளுடைய துரோகம். அனிதாவுக்கு மட்டுமா எல்லா சாதிக்காரனும் வரல? திண்ணியத்துல மலம் தின்ன வச்சானே அப்ப மட்டும் எல்லா சாதிக்காரனும் வந்தானா? வரலேல்ல? திராவிட கட்சிகளுடைய போக்கு வேறு, திராவிட இயக்கங்களுடைய போக்கு வேற. மாநில உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமா பறிச்சது, ஏக இந்தியாங்கிறதுதான் பிஜேபியோட இலக்கு. அதைத்தான் அது செஞ்சிட்டிருக்கு, அது நிக்காது, இந்தியா உடைஞ்சிடும்.

தயாளன்: இந்தியா உடையறது மூலமா சாதி கட்டுமானத்துல ஏதாவது தளர்ச்சி ஏற்படறதுக்கு வாய்ப்பு இருக்கா? ஆமான்னா எப்படி ஏற்படும்?

தொ.ப: ஆமாம், இந்த சாதிய கட்டுமானத்தை பாதுகாக்கிறதே இந்திய தேசியம்தான். எனவே இந்திய தேசியம் உடையும் போது சாதியக் கட்டுமானமும் உடையும்.

தயாளன்: இந்திய தேசியம் உடைஞ்சு, அதனால தமிழ் தேசியம் உருவாகும்னு ஒரு கருத்து உருவாவதற்கான அடிப்படையில, சாதி ஒழிப்புதான் அடிப்படையா இருக்கணும்னு பெரியார் நினைச்சாரா?

தொ.ப: ஆமாம், ஆமாம் பெரியார் நினைச்சதுதான் சரி. இன்னிக்கும் அததான் நாம பார்க்கிறோம். கர்னாடக முதல்வர், இந்தி வேணாம்னு மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதப் போறேங்கிறாரு. தமிழ்நாடும், கேரளாவும் ஹிந்தி வேணாம்னு சொல்றப்போ ஏன் கர்நாடகம் சொல்லக் கூடாது அப்படிங்கிறார். இப்ப இந்தி எதிர்ப்பு எல்லா மாநிலங்கள்லேயும் வலுக்குது. அதுதான் இந்திய தேசியத்துக்கான முதல் சவால்.

தயாளன்: இந்து மதத்தோட ஒரு பிரிவான லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல, நாங்க தனிமதம்னு சொல்றாங்க, போராட ஆரம்பிச்சிட்டாங்க.

தொ.ப: அதுவே, இந்துமதத்தினுடைய உடைவுதான். அதாவது மதம் பெரிசில்ல, ஜாதி பெரிசுங்கறான். அப்படித்தான? சுருக்கமாகச் சொல்லப்போனால் லிங்க்யாத்துங்கிறது ஜாதி. சைவங்ககிறது மதம், எங்களுக்கு மதம் வேண்டாம் ஜாதி வேணுங்கிறான். குமரி மாவட்டத்துல கத்தோலிக்க கிறித்தவ நாடார் சங்கம்னு வெச்சிருப்பாங்க. கத்தோலிக்கனாகவும் இருக்கனும், கிறித்தவனாகவும் இருக்கனும், நாடாராகவும் இருக்கனும். இந்த மூன்றும் சேர்த்து சங்கம் வெச்சிருக்கான். குமரி மாவட்டத்துல நிறைய ஊர்கள்ல கத்தோலிக்க கிறித்தவ நாடார் சங்கம்-னு இருக்கு. கத்தோலிக்க கிறித்தவ நாடார் ஆசிரியர் சங்கம்னு ஒன்னு பாளையங்கோட்டையில இருக்கு. ஆசிரியனாகவும் இருக்கனும், கிறித்தவனாகவும் இருக்கனும், நாடாராகவும் இருக்கனும், கத்தோலிக்கனாகவும் இருக்கனும். சாதி காப்பாத்தப்படுதல்தான் இதெல்லாம்.

தயாளன்: லிங்காயத்தோட கோரிக்கை வந்து புதுசா வந்திருக்கா? இதமாதிரி தமிழ்நாட்டுல வேற கோரிக்கைகள் வரவாய்ப்பு இருக்கா? அப்புறம் இந்துங்கற விஷயத்துக்கு அடிப்படை கோட்பாடென்ன?

தொ.ப: தமிழ்நாட்டில் நடந்திருக்கு, ஆனால் இந்த மாதிரி பிரபலமாகவும், அழுத்தமாகவும் நடக்கல, கல்வித்துறைல நடந்திருக்கு. கல்வி நிறுவனங்கள் தரப்புல நடந்திருக்கு. நாங்க இந்துமதத்துல தனி ஜாதி, நாங்க மைனாரிட்டி, மைனாரிட்டி ஸ்டேட்டசை வாங்கினா நிறைய லாபமிருக்கு, அதுக்காக, அதை வாங்கறதுக்காக நடந்திருக்கு.

தயாளன்: நீட் மாதிரியான சட்டங்கள் சமூக நீதிக்கு எதிரா இருக்கு?

தொ.ப : இந்திய தேசியம் இறுக்கிப் பிடிக்குது. ஆனா கட்டவிழ்த்து விட்டு போயிரும். மாட்டிறைச்சி தொடர்பா பினராயி விஜயன் கேட்டார். மலையாளிகள் என்ன சாப்பிடனும்னு டெல்லியும் நாக்பூரும் முடிவு பண்ண முடியாதுன்னு சொன்னாருல்ல. அதுதான் இதுக்கும்.

தயாளன்: Neet தேர்வு வந்தா, தகுதி அடிப்படைல நல்ல மார்க் எடுக்கறவங்க வரப்போறாங்க? இத ஏன் எதிர்க்கனும்?

தொ.ப: இந்த நல்ல மார்க்குங்கிறதே ஒரு பொய். 36 ஆண்டுகள் ஆசிரியரா இருந்திருக்கிறேன், நான் சொல்றேன், நல்ல மார்க்ங்கிறதே ஒரு பொய். இதை நான்தான் சொல்ல முடியும். பெற்றோர்கள் இந்த மார்க்க நம்பி ஏமாறாங்க. இந்த கல்வி முறையினுடைய அடிப்படை கட்டுமானமே தப்பு. அப்துல்கலாம் என்ன மார்க் எடுத்தாரு, School First வந்தாரா? District First வந்தாரா? என்ன வந்தாரு? கருணாநிதி என்ன வந்தாரு? எம்.ஜி.ஆர் என்ன வந்தாரு? காமராஜர் என்ன வந்தாரு? மார்க் விசயமே பொய். மார்க்தான் தகுதின்னு நினைக்கிற மூடத்தனம் அது. கல்வி உலக மூடத்தனம் அது. இதை வேற யாரும் சொல்ல முடியாது. நான் ஆசிரியர்ங்கிறதால நான்தான் சொல்ல முடியும், அழுத்தமா சொல்ல முடியும். ஒரு 36 ஆண்டுகாலம் ஆசிரியரா வேலைபார்த்த பிறகு சொல்றேன், மார்க்கே தகுதிங்கிறது மூடத்தனம். Brilliant Student மார்க் எடுக்க மாட்டான்.

தயாளன்: இப்போ எல்லாத்துக்கும் ஒரு பொதுவான நுழைவுத்தேர்வுக்குள்ள கொண்டு வந்து சமத்துவமா நடத்துறது தப்பில்லையா?

தொ.ப: சார் எல்லாம் சமங்கிறது, சமத்துவம்-ங்கிறது அப்படியல்ல. ஆனைக்கும் 4 படி, பூனைக்கும் 4 படிங்கிறது சமத்துவமா? அது மார்க்சிய தத்துவம். ஆனைக்கும் 4 உருப்படி பூனைக்கும் 4 உருப்படிங்கிறது சமத்துவமா? அது மார்க்சிய சமத்துவம். ஆனைக்கும் 4 உருப்படி, பூனைக்கும் 4 உருப்படினு இருந்தா பூனை வயிறு வீங்கி செத்துப்போகும், ஆனை பட்டினில செத்துப்போகும். எப்படியோ ரெண்டும் செத்துப்போகும். அப்போ சமத்துவம் அது அல்ல. அது அது உழைப்புக்கு தகுந்து அது அது உணவு, அதான் சமத்துவம், இல்லையா? யானை மரம் இழுக்கும், யானைக்கு அதுக்கு தகுந்த மாதிரி உணவு கொடுக்கணும். பூனை ஒரு வேலையும் செய்யாது, பூனை அதுக்கு தகுந்தாப்புல எளிது உண்ணும், அதுக்கு தகுந்தாப்புல உணவு கொடுக்கிறோம். சமத்துவங்கிறத தப்பா புரிஞ்சுக்க கூடாது. “யானைக்கு யானை அளவு உணவு, பூனைக்கு பூனையளவு உணவு” – இதுதான் சமத்துவம்.

தயாளன்: 36 ஆண்டுகால ஆசிரியர் பணி, அப்புறம் ஒரு பெரியாரிஸ்ட்டா நீங்க இருக்கிறீங்க, இந்த கல்வி முறை எப்படியிருந்தா நல்லதுனு நினைக்கறீங்க? உங்ககிட்ட ஒரு பாடத்திட்டத்த உருவாக்கனும்னாலோ, கல்வி முறையை புதுசா உருவாக்கச் சொன்னாலோ, நீங்க எப்படி விதமான கல்வி முறையை உருவாக்குவீங்க?

தொ.ப: கேள்வி கேட்கக்கூடிய உணர்வை, எல்லாவற்றையும் மறுத்துப்பார்க்கிற, நிராகாரிக்கக் கூடிய உணவை ஊட்டணும். இருக்கக்கூடிய சமூக அமைப்பை, கேள்வி கேட்கக்கூடிய கல்வி முறை உருவாகனும். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார் பெரியார். எல்லாத்தையும் கேள்வி கேட்கிற ஒரு கல்வி முறை அடிப்படையிலிருந்தே உருவாகனும். அப்படி வந்தா நல்லாயிருக்கும்.

தயாளன்: திராவிடக் கட்சிகளையெல்லாம் கலைக்கனும்னு சொல்றீங்க, ஏன் அவ்வளவு கோபம் உங்களுக்கு?

தொ.ப: இவங்க அவ்வளவு பேரும் ஒழுக்கம் இல்லாதவங்களா போயி, அதனாலேயே கட்சியையும், கொள்கையையும் நீர்த்துப் போக வெச்சிட்டாங்க. ஒழுக்கம் இல்லாத இவங்களை வெச்சு கட்சி நடத்த முடியாது. அதனால கலைக்கனும்னு சொல்றேன்.

தயாளன்: காந்தி காங்கிரஸைக் கலைக்கனும்னு சொன்னமாதிரியா?

தொ.ப: ஆமாம்!

தயாளன்: இவங்க பெரியாரை கைவிட்டுட்டாங்களா?

தொ.ப: ஆமாம், பெரியாரைக் கைவிட்டு ரொம்ப காலமாச்சு.

தயாளன்: அதனால பெரியாரியம் தோத்துப்போயிருமா?

தொ.ப: பெரியாரியம் தோத்துப் போகாது. இவங்க தோத்துப்போவாங்க. இவங்க கட்சிகள் தோத்துப்போச்சு.

தயாளன்: ஒரு பக்கம் அமித்ஷா நாடார்கள் மத்தியில வேலை செய்யுறார். இன்னொரு பக்கம் பிஜேபி பள்ளர்கள் மத்தியில தொடர்ச்சியா வேலை செய்யுறாங்க?

தொ.ப: ஆமாம். வேலை செய்யுறாங்க. ஆனா உறுதியா ஜெயிக்க முடியாது. ஏன்னா சாதியத் தாண்டி போக முடியாதுல்ல. சாதி தாண்டி மதத்துக்கு போக வேண்டி இருக்கு. அது தலித்துக்கு இல்ல. நாடாருக்கு சாதிதான் முக்கியம். மதம் இல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில அந்தோணிமுத்து நாடாரும், அருணாசல நாடாரும் தினந்தினம் சம்பந்தம் பண்ணிக்கிறாங்க. பத்து கல்யாண பத்திரிகையில அஞ்சு கல்யாணப் பத்திரிகையில இந்து கிறிஸ்தவ கல்யாணங்கள பாக்கலாம். அவன எப்படி ஆர் எஸ் எஸ்ல சேப்பீங்க? அங்கே பொன். ராதா ஜெயிக்கிறார்னா அது கிறிஸ்தவ எதிர்ப்பு ஓட்டுதான். அது கிறிஸ்தவ மிஷினரிகள் மீதான எதிர்ப்பு ஓட்டுதான் அவர ஜெயிக்க வைக்குது.

தயாளன்: தமிழ்நாட்டுக்குள்ள பிஜேபி, ஆட்சி அதிகாரத்த கைப்பற்றதுக்கும், செல்வாக்கு உருவாக்கவும் எவ்வளவோ முயற்சிகள் பண்றாங்களே?

தொ.ப: எவ்வளவோ முயற்சிகள் பண்றாங்க, நானும் ஒத்துக்கறேன். அவங்க ஒரு போதும் வெற்றிபெற மாட்டாங்கங்கிறத நீங்க ஒத்துக்கங்க. ஏன்னா, நான் முன்னால சொன்ன மாதிரிதான், பிஜேபிக்கு மதம் முக்கியம். தமிழனுக்கு சாதி முக்கியம். தமிழன் மதத்தை விட ரெடி. ஜாதியை விட மாட்டான். மொத்தமா மதம் மாறினா, மீனாட்சிபுரம் பார்த்தோம்ல! ஒரு ஆள் மதம் மாறினா சரின்றலாம், மொத்தமா மதம் மாறினா, ஒரு கிராமம் மதம் மாறினா தலித் முஸ்லீம் அப்படிங்கான். சாதிய விட மாட்டான், அதனால பிஜேபி வெற்றிபெற முடியாது. அவங்க பயங்கரமா முயற்சி பண்றாங்கன்றது உண்மை.

தயாளன்: இன்னிக்கு மறைமுகமா தமிழ்நாட்டையே அவங்கதான ஆண்டுகிட்டிருக்காங்க?

தொ.ப: அது உண்மை! குருமூர்த்திதான் ஆண்டுகிட்டிருக்கான். அவங்க எப்பவும் கிங்ஆக இருக்கிறத விட கிங் மேக்கராக இருப்பதைத்தான் விரும்புவாங்க. ராஜாஜியே அப்படித்தான் இருந்தாரு. கிங் மேக்கராக இருந்தால் ஆபத்தில்லை அந்த fileல கையெழுத்து நான் போடலைல, எவனோ போட்டான், எவனோ மாட்டிக்கிட்டான், போன்னுட்டு போயிரலாம்.

தயாளன்: பெரியார் பார்ப்பனியத்து மேல, கடுமையா தாக்குதல் நடத்தறாரு, இந்துத்துவத்த தொடர்ந்து தாக்கறாரு. ஆனால் தனிமனித அளவுல எந்த பார்ப்பனரையும் அவர் வெறுப்பா நடத்தினது இல்ல. ஆனால் இன்னிக்கு வர்ற, பெரியாரை பின்பற்ற நினைக்கிறவங்க தனிமனித வெறுப்பை சுமந்து, இது தான் பெரியாரியம்னு பேசறாங்க?

தொ.ப: ஒன்பது ஆண்டுகளாக என்னுடைய அறை நண்பரா இருந்தவர் ஒரு பிராமணர். திருமணம் ஆகாத பிராமணர் சுத்த பிராமணர், அதாவது ராஜாஜி பக்தன். நாங்க 9 வருஷம் ஒன்னா இருந்தோம். உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். சாகப்போறப்போ, அவரு கட்டில்ல இருந்து விழறாரு, அவருக்கு தெரிஞ்சு போச்சு, தான் செத்துப்போவோம்னு. புரொபசருக்கு சொல்லுங்கோ, அப்படின்னு சொல்லிட்டு செத்துப் போனாரு. அவர் கடைசியா சொன்ன வார்த்தை அதுதான். அவ்வளவு தூரத்துக்கு நாங்க நண்பர்களாயிருருந்தோம். என்னுடைய பெர்சனல் அனுபவம். ராத்திரி அப்படி சண்டை போடுவோம், காலைல எனக்கு முன்னாடி எந்திரிச்சு காபி வாங்கப் போயிருவாரு, எனக்கும் சேர்த்து. அது தனி நபர் சார்ந்த விஷயம். பெரியார் ஒருக்காலத்திலும் தனி மனித வெறுப்போட இருந்தவரில்லை. பெரியார் ராஜாஜி கூட நட்பாதான் கடைசி வரைக்கும் இருந்தாரே

தயாளன்: தனிமனித வெறுப்பு, வன்முறையா தாக்கறதெல்லாம் எதுவுமே இல்லையா? அவர் எந்தக் கோயிலையும் போய் இடிக்கவும் இல்ல. ஆனால், சாமி வேணும், சாமி இருக்குனு சொல்றவங்கதான் அடுத்தவங்க மசூதியையும், கோயிலையும் இடிக்கிறாங்க. இன்னிக்கு ஒரு விதமான வெறுப்பு அரசியல் வந்து கட்டமைக்கப்படுக்கப்படுது. அது பற்றி?

தொ.ப: வெறுப்பை சீக்கிரமா விதைக்கலாம். சீக்கிரமா அறுவடை பண்ணலாம். ஆனால் நிரந்தரமா அறுவடை பண்ணமுடியாது. இவரு மகா மோசமான ஆளுன்னு இவர் மேல ஒரு வெறுப்ப, முகம் தெரியாத ஒரு மனுஷன் மேல உண்டாக்கனும்னா எளிதில் உண்டாக்க முடியும். ஆனால் நிக்காது, அப்படித்தான். வெறுப்பு அரசியல்தான் பிஜேபி அரசியல்.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: மாட்டிறைச்சி கூடாதுங்கறாங்க, ஆனால் ஆடு கோழிய கொல்றது தப்பில்ல, மாட்டைக் கொன்னு சாப்பிடறதுதான் தப்புன்னு ஒரு திட்டத்த முன் வைக்கறாங்க. அப்புறம் பயங்கரமா தோத்துப்போறாங்க. இது என்ன காரணம், எதுக்காக மாட்டிறைச்சி, மாடு மட்டும் குறிப்பா செய்யறாங்க?

தொ.ப: அவங்க சொல்லுகிற இந்துத்துவ புனிதம் என்பது பசுவிலதான் இருக்கு. “பசுவே புனிதம்”னு அ.மார்க்ஸ் ஒரு சின்ன புத்தகம் எழுதியிருக்காரு. படிங்க.

தயாளன்: ஏன் குறிப்பா மாட்டு விசயத்தை மட்டும் கையில எடுக்கறாங்க?

தொ.ப: அதுதானே கோமாதா!

தயாளன்: அது குறிப்பிட்ட மக்களோட உணவுப்பழக்க வழக்கமா இருக்கே?

தொ.ப: இவங்க அத வெச்சுதான் மதத்தை பில்டப் பண்ணாங்க . இன்னும் அது அப்படியேதான் இருக்கு.

தயாளன்: தமிழ்நாட்டுல மாட்டிறைச்சிக்கு பயங்கர எதிர்ப்பு வரல, ஆனால் கேரளாவுல பயங்கர எதிர்ப்பு வந்தது. இதுக்கு என்ன சமூக காரணம்?

தொ.ப: அங்க நிறைய மலையாளி மாட்டிறைச்சி சாப்பிடுறான்! அங்க எதிர்ப்பு வந்தது. இங்க மாட்டிறைச்சியை சாப்பிடல. இப்போ கொஞ்சம் சாப்பிடறாங்களே தவிர மாட்டிறைச்சி சாப்பிடனும்னு சாப்பிடல. கேரளாவுல மாட்டிறைச்சி சாப்பிடனும்னு சாப்பிடறான். அதனால அங்க எதிர்ப்பு வந்தது, இங்க எதிர்ப்பு வரல.

தயாளன்: குறிப்பா மாட்டிறைச்சிய தொழிலா பயன்படுத்தற முஸ்லீம்கள் அப்புறம் தலித், இந்த ரெண்டு பேரையும் கார்னர் பண்றாங்க. இந்த ரெண்டுபேரையும் கார்னர் பண்ணத்தான் மாட்டிறைச்சி தடை கொண்டு வர்றாங்கனு புரிஞ்சுக்கணுமா?

தொ.ப: ஆமாம்! அதுதான் உண்மை!

தயாளன்: இதுவே ஆடு, கோழிகளை தடை பண்ணியிருந்தா இடைநிலை சாதிகள் எந்திரிச்சிருக்கும், அவங்க பயங்கரமா கோபப்பட்டிருப்பாங்க இல்லையா?

தொ.ப: ஆமாம், உயிரிப்பலி தடைச்சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்துச்சு? தோத்துப் போச்சுல்லா? அந்தச் சட்டம் தோத்துப் போச்சுல்ல? இந்த அம்மா கௌரவமா பின் வாங்கிருச்சுல்ல.

தயாளன்: அந்த இடத்துல கி. வீரமணியும் ஒரு குரல்ல பேசறாரு, ராமகோபாலனும் ஒரு குரல்ல பேசறாரு?

தொ.ப: ஆமாம், நான் அதைக் கண்டிச்சு எழுதியிருக்கேன்.
சரியான புரிதல் இல்லை கி.வீரமணிக்கு. பெரியாரை அவர் சரியா உள் வாங்கிக்கலனுதான் பொருள்.

தயாளன்: கி. வீரமணியோட சறுக்கல் எங்க தொடங்குது ஐயா?

தொ.ப: உயிர்ப்பலி தடைச்சட்டத்தை ராமகோபாலனும் வரவேற்கிறாரு, வீரமணியும் வரவேற்கிறாரு. இந்த இடத்துலதான் வீரமணியோட சறுக்கல் தொடங்குது. பெரியார் இருந்தா என்ன சொல்லியிருப்பாரு? எல்லா சாதியினரும் கருவறைக்குள்ள நுழையட்டும், அப்புறம் இதை பேசிக்கோ, போன்னு சொல்வாரு. வீரமணி அதைச் சொல்லல. வீரமணி தோத்துப் போனாரு, பெரியார் ஜெயிச்சாரு.

தயாளன்: உயிர்ப்பலியை மூடநம்பிக்கைனு அவர் சொல்றாரு.

தொ.ப: நான் நல்லவன்னு நீங்க நம்புவீங்க! நம்பிக்கை. நான் கெட்டிக்காரன்னு நீங்க நம்புவீங்க! நம்பிக்கை எப்போ ஆபத்துனா, ஒரு நம்பிக்கை அவர் மேல பாயுறபோது, இவர் மேல பாயுற போதுதான் ஆபத்து, அது மூடநம்பிக்கை. அவனைவிட நான் கெட்டிக்காரன் என்பது மூடநம்பிக்கை. நான் நல்லவன்னு நீங்க நம்பறது நம்பிக்கை. நம்பிக்கை இல்லாம மனுஷன் இருக்க முடியாது.

தயாளன்: ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழ்நாட்டுல பெரிய அளவில நடந்தது. அப்பவும் இதே தலித் அரசியல் பேசறவங்க எல்லாருமே, இது வந்து ஒரு இடைநிலைச் சாதியோட பிரச்சனைதான்னு சொன்னாங்க?

தொ.ப: சாதி சார்ந்த பிரச்சனைதான், ஆனால் இடைநிலை சாதிகளோட பிரச்சனையில்லை. அடித்தட்டு சாதியோட பிரச்சனை. ஏன்னா எல்லா ஊரிலேயும், எல்லா சாதியும் நடத்துது. கிறித்தவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துறாங்கள்ல? தெரியுமா? பொங்கலுக்கு கிறித்தவர்கள், சர்ச்சுல ஜல்லிக்கட்டு நடத்துவாங்க. அப்ப அது என்னது? அது சாதி சார்ந்ததும் இல்ல, மதம் சார்ந்ததும் இல்ல. அது பண்பாடு சார்ந்தது. திருச்சி மாவட்டத்துல பாத்தீங்கன்னா, சர்ச்சுகள் முழுக்க சல்லிக்கட்டு நடத்துவாங்க, அல்லது ஜாதி வித்தியாசம் இல்லாம, மதம் சார்ந்து மஞ்சுவிரட்டு நடத்துவாங்க.

தயாளன்: ஒரு விசயத்தை இது சாதி சார்ந்தது, அல்லது பண்பாட்டோட விழுமியம்னு எப்படி பிரிச்சு பார்த்து புரிஞ்சுக்கிறது ஐயா?

தொ.ப: இப்போ இத பாருங்களேன், சல்லிக்கட்டு மதுரை மாவட்டத்துல ஒரு சாதிக்காரங்க அதிகமா ஆர்வம் காட்டுவாங்க. திருச்சி மாவட்டத்துல வேற சாதிக்காரங்க நடத்தறாங்க. திண்டுக்கல் மாவட்டத்துல மத்த சாதி நடத்தறாங்க. அப்போ இது சாதிக்குரியது இல்லை. அப்படினு உறுதிப்படுத்தணும். இது மனுசனுக்குரியது. இது ஒரு Sports and passion.

தயாளன்: இதை தடை செய்ய முடியாதா?

தொ.ப: முடியாது.

தயாளன்: எதிர்காலத்துல தமிழ்நாடு, தமிழ்தேசியம் அல்லது சாதி ஒழிப்பு இது பத்தின உங்க நம்பிக்கை எப்படி இருக்கு ஐயா? ஒட்டு மொத்தத்துல எதிர்காலத்துல?

தொ.ப: சாதிய முரண்கள் கூர்மையடையும். நிறைய இழப்புகளை சந்திப்பாங்க! அந்த இழப்புகளுக்கு பிறகு அறிவு வரும் அப்படிங்கிறதுதான் என்னோட நம்பிக்கை. வந்துதான் தீரணும், ஆனால் அதுக்காக நிறைய இழப்புகளைச் சந்திச்ச பிறகு அறிவு வரும்.

தயாளன்: ஆனால், சாதியற்ற சமூகம்னு ஒன்னு உருவாகும்னு நம்பறீங்க?

தொ.ப: ஆமாம், நான் நம்பறேன். ஆனால், அது என் காலத்துல இல்ல. என் பையன் காலத்துலேயும் இல்ல, என் பேரன் காலத்துல இருக்கலாம். இன்னிக்கு அந்தமான்ல இருக்குல்ல. அந்தமான்ல மதமே ஒரு பிரச்சனையே இல்லப்பா, இந்து கிறித்தவ திருமணங்கள், கிறித்தவ இசுலாமிய திருமணங்கள், இந்து இசுலாமிய திருமணங்கள் தினம் தினம் நடக்குதுல்ல. தமிழந்தான் இருக்கிறான். தமிழ் இந்துவும், தமிழ் முஸ்லிமும் கல்யாணம் பண்ணிக்கிறான். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. தமிழன் நல்லாத்தான் இருக்கான். அப்படி ஒரு சமூகம் இங்கேயும் வரும்.

தயாளன், ஊடகவியலாளர். ‘மானுட வாசிப்பு: தொ.ப .வின் தெறிப்புகள்’ என்ற நூலை ஏ. சண்முகானந்தத்துடன் இணைந்து தொகுத்துள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என பேசும்போது புறக்கணிக்கப்படுகிறோம்: இயக்குநர் மீரா கதிரவன் நேர்காணல்

இயக்குநர் மீரா கதிரவனின் ‘அவள் பெயர் தமிழரசி’ தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யாத படமாக இருந்தாலும், அந்தப் படம் தனித்துவமாக இருந்தது.  அழிவின் விளிம்பில் இருக்கிற தோல் பாவை கூத்தை ஆவணப்படுத்துவதாகவும் தமிழ் நிலத்தை பதிவு செய்யும் முயற்சியும் ‘அவள் பெயர் தமிழரசி’யின் தனித்துவத்துக்குக் காரணங்கள். இயக்குநர் மீரா கதிரவனுக்கு ‘அவள் பெயர் தமிழரசி’ குறித்து பல கசப்புகள் சுவடுகளாக தேங்கியிருக்கின்றன. ஆனாலும் அந்தப் படம் அவருக்கொரு அடையாளத்தை உருவாக்கியிருப்பதையும் அவர் மறுக்கவில்லை.  தமிழ் சினிமா முதலில் வரும் குதிரையின் பின்னால் ஓடக்கூடியது. எல்லாவித சமரசங்களுக்கு ஆட்பட்டே பலர் சினிமா எடுக்க வேண்டியிருக்கிறது. அடுத்தடுத்து இயங்குவதற்கு இதையெல்லாம் செய்தே ஆக வேண்டும். தான் செய்துகொண்ட சமரசங்கள், கற்ற பாடங்கள், இனி செய்யவிருப்பது என நம்முடன் வெளிப்படையாக பல கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் மீரா கதிரவன். சினிமா ரசிகர்களுக்கும் சினிமாவில் காலூன்ற நினைக்கிறவர்களுக்கும் மீராவின் அனுபவ பகிர்வு உதவியாக இருக்கும். தன்னுடைய எழுத்து அனுபவங்கள், இலக்கியங்களை நாவலாக்குவது குறித்து பேசுகிறார். இந்த நேர்காணல் மீராவின் இல்லத்தில் பதிவு செய்யப்பட்டது.

உங்களுடைய பின்புலம் பற்றி பகிர்ந்துகொள்ளுங்களேன்…

“திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகாவில் உள்ள திருகூடபுரம் என்னுடைய ஊர். என் அப்பா அப்துல் ஹமீது, தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா நல்ல மீரா. இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தாலும் பொது அடையாளத்தோடு சினிமாவில் இயங்க வேண்டும் என்பதற்காக அம்மா பெயரான மீராவையும் சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆதர்சமான பெயரான கதிரவனையும் சேர்த்து மீரா கதிரவன் என வைத்துக்கொண்டேன். 1998 வருடத்தின் கடைசியில் சினிமா கனவோடு சென்னை வந்தேன். 2003-வருடத்திலிருந்து உதவி இயக்குநராக தங்கபச்சான், லோகிததாஸ் ஆகியோரின் உதவி இயக்குநராக இருந்தேன். 2007ஆம் வருடம் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னுடைய முதல் படமாக வந்தது.”

சினிமா ஆர்வம் எப்படி வந்தது?

“மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் தோன்றியதுதான் சினிமா ஆர்வம். சினிமா சார்ந்து எங்கள் குடும்பத்துக்கு எந்த பின்புலமும் இல்லை. தெரிந்தவர்கள் மூலமாக சினிமாவில் சேரலாம் என்று என்னுடைய 17 வயதில் சென்னைக்கு வந்தேன்”.

இயக்குநர் மீரா கதிரவன்

சினிமா இயக்குநராகவது எளிதானதாக இருந்ததா?

“சினிமா இயக்குநராக நான் பட்ட பாடுகளை ஒரு நாவலாகவே எழுதலாம். இப்போது உள்ளதுபோன்ற சூழல் அப்போது இல்லை. ஒரு இயக்குநரை பார்த்து பேசுவதற்கே பல வருடங்கள் ஆகும். முதலில் அவருடைய ஆஃபிஸ் பாயிடம் பேச வேண்டும். பிறகு உதவி இயக்குநரை பார்க்க வேண்டும். அடுத்து இணை இயக்குநர். அவர் மனது வைத்தால் மட்டுமே இயக்குநரை சந்திக்க முடியும்.

இரவு நேரங்களில் சின்ன சின்ன வேலைகள் செய்வேன்; பகலில் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அலைவேன். அந்த நேரத்தில், 2001-ல் நண்பர் மூலம் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு புதிய வழியை காண்பித்தது. எழுத ஆரம்பித்தேன். உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி வரும் 10 பேரில் நாம் தனித்து தெரியவேண்டுமென்றால், நம் எழுத்து நம்மை தனித்து காட்ட வேண்டும் என தீர்மானித்தேன். ‘காலக்குறி’ இதழில் ‘வதை’ என்ற என்னுடைய முதல் சிறுகதை வெளியானது. கவிஞர் யுகபாரதி ஆசிரியராக இருந்த ‘கணையாழி’இதழில் அடுத்த சிறுகதை வந்தது. ‘அழகி’ படத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதியிருந்தேன். என்னை தனித்துவமாக பார்க்க ஆரம்பித்தார்கள். இயக்குநர் தங்கர்பச்சானிடம் வா. கௌதமன் என்னை அறிமுகப்படுத்தினார். தங்கர்பச்சானின் ‘தென்றல்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.

இடையிடையே மலையாளத்திலிருந்து புகழ்பெற்ற சில படைப்புகளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் கல்கி இதழில் ‘மழைவாசம்’ என்ற சிறுகதை வெளியானது. அந்த சிறுகதையை சீனு ராமசாமி, இயக்குநர் பாலு மகேந்திராவின் மனைவி அகிலாம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டது. பாலு மகேந்திரா அந்தக் கதையை படித்துவிட்டு பாலு மகேந்திரா, என்னை சந்திக்க விரும்புவதாக, ஆட்டோ சிவதாணுவிடம் சொல்லி அனுப்பினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. பாலு மகேந்திரா என்ற மிகப்பெரிய இயக்குநரை சந்திக்கப் போகிறோம் என்கிற பிரமிப்பும் பயமும் இருந்தது. நேரில் சந்தித்தபோது, என்னுடைய சிறுகதையை குறும்படமாக எடுக்கப்போவதாக சொன்னார். அதைவிட எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை சார் என்று அவரிடம் சொன்னேன்.

பாலு மகேந்திராவின் அறிமுகம் என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். உலக சினிமாக்கள், புத்தகங்கள் பற்றி அவர் பேசியது பயனுள்ளதாக இருந்தது. அதோடு அவருடைய அனுபவங்களை கேட்பதும். மகேந்திரன், மணிரத்னம், பரதன் போன்ற பிரபலமான பல இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவாக இருந்தவர் பாலு மகேந்திரா. அத்தகையவரோடு ஏற்பட்ட அறிமுகம் பல விஷயங்களைக் கற்றுத்தந்தது.

அந்த நேரத்தில் எனக்கு மலையாளம் தெரியும் என்ற காரணத்தால் இயக்குநர் லோகிததாஸின் கஸ்தூரிமான் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எனக்குக் கிடைத்த இரண்டு இயக்குநர்களும் சினிமாவின் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தந்தார்கள். குறைவான படங்களில் பணியாற்றியிருந்தாலும் நிறைவான அனுபவம் கிடைத்தது. எனவே, தனியாக படம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். இயக்குநர் மணிரத்னம் சகோதரர் ஜி. ஸ்ரீனிவாசனிடம் ‘அவள் பெயர் தமிழரசி’ திரைக்கதையை கொடுத்தேன். அதைப் படித்த அவர், ஐந்து நிமிடங்கள் ப்ரீ ட்ரெய்லர் செய்து காட்டுங்கள் என்று சொன்னார். இப்போது படங்களுக்கு இணையாக குறும்படங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அப்போது ப்ரீ ட்ரெய்லர், குறும்படம் எடுத்து காண்பிப்பது போன்ற நடைமுறை அறிமுகமாகியிருக்கவில்லை. நண்பர்களிடன் ஆயிரம், ஐநூறு வாங்கி ‘அவள் பெயர் தமிழரசி’ ப்ரீ ட்ரெய்லர் எடுக்க ஆரம்பித்தேன். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஷ்ரதா தாஸ், ஒளிப்பதிவாளராக சுஜித்துடன் இணைந்து ட்ரெய்லர் ஷுட்டிங் போனேன்.

ஷுட்டிங்கின் இரண்டாவது நாள். பெரிய படத்துக்கு முன் தயாரிப்புகளை செய்வது போல, இரவு பகலாக பணியாற்றியதாலோ என்னவோ, லோகேஷன் போன இடத்தில் விபத்து நேர்ந்தது. அதிகாலை 2 மணிக்கு நடந்த விபத்து, கிட்டத்தட்ட 3 மணிநேரம் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்திருக்கிறேன். அதிகாலையில் வாக்கிங் செல்ல வந்த ஒருவர், விபத்தாகி நான் இறந்துகிடப்பதாக நினைத்து போலீஸை அழைத்திருக்கிறார். அவர்கள் உயிர் இருப்பதை அறிந்து திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 13 தையல்களுடன் மூன்று நாட்கள் கழித்து கண் விழித்து பார்த்தேன். அருகில் நண்பர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நடிகர் ராமச்சந்திரன், ராமகோபால் ஆகியோர் அந்த சமயத்தில் ஆதரவாக நின்றார்கள். மருத்துவர்கள் உடல் நிலை தேறிவர ஆறுமாதம் ஆகும் என சொல்லிவிட்டார்கள். மெட்ராஸ் டாக்கீஸில் 10 நாட்களில் ட்ரெய்லர் தருவதாக சொல்லியிருக்கிறோமே..எப்படி தருவது என ஒரே யோசனை. இந்த சந்தர்ப்பம் மீண்டும் வருமா என்கிற கேள்வியுடன் மருத்துவரின் ஆலோசனையையும் மீறி சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஷுட்டிங் வேலைகளில் இறங்கிவிட்டேன். இன்று யோசித்தால் இந்த விபத்து நடக்காமல் இருந்திருக்கலாமே எனத் தோன்றும். இந்த விபத்து நடந்தது நல்லதற்கா? கெட்டதுக்கா என இதுவரை தெரியவில்லை.

ஷுட்டிங் போனபோது முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஷ்ரதா தாஸ், மலையாள படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகிவிட்டார். அதுபோல சுஜித்துக்கும் ஒளிப்பதிவு வாய்ப்பு வந்துவிட்டது. பின்நாளில் ‘பாபநாசம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். இவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்களைத் தேடியபோது, ‘கஸ்தூரிமான்’ படத்தில் மீரா ஜாஸ்மீனின் உதவியாளராக இருந்தவர், காஞ்சிபுரத்தில் பெண் இருக்கிறார் என மனோசித்ரா பற்றி சொன்னார். கதாநாயகனாக நடித்துக்கொடுத்தவர் பாபி சிம்ஹா. பர்சனலாகவும் என்னுடைய கஷ்டங்களில் பங்கெடுத்தவர் பாபி சிம்ஹா. முத்தையா ஒளிப்பதிவு செய்தார். ட்ரெய்லர் முடித்து, என்டீடிவியில் பணியாற்றிய முருகேசன் உதவியுடன் எடிட்டிங் வேலையை ஆரம்பித்தேன். எடிட்டிங் செய்த இடத்துக்கு மணிரத்னம் வீட்டைக் கடந்துதான் போகவேண்டும். அப்போது வீட்டு வாசலில் ஸ்ட்ரெக்சர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் யாரோ பெரியவர்கள் இறந்திருப்பார்கள் போல என நினைத்துக்கொண்டேன். எடிட் செய்ய ஆரம்பித்தபோது, அதைப் பார்த்த நண்பர் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என சொன்னார். இப்படி பணிகள் போய்க்கொண்டிருக்கும்போது, எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. அதை எடுத்து பேசாமல் வேலை கெட்டுவிடும் என தவிர்க்கிறேன். இறுதியாக குறுஞ்செய்தி வருகிறது, மணிரத்னம் சகோதரர் ஸ்ரீனிவாசன் இறந்துவிட்டார் என! நானும் பாலு மகேந்திரா சாரும் இறுதி சடங்கில் கலந்துகொண்டோம். பெசண்ட் நகர் மயானத்தில் வைத்து பாலு மகேந்திரா, “நிச்சயம் இந்த திரைக்கதைக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள்” என. அந்த வார்த்தைகள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் ஒரு காட்சியில் நடிகர் ஜெய், நடிகர் மனோசித்ரா..

அதன் பிறகு, இயக்குநர் ஷங்கர் ட்ரெய்லர் பார்த்துவிட்டு கதை கேட்க அழைத்தார். அப்போது அவருடைய உதவி இயக்குநரும் என்னுடைய நண்பருமான அறிவழகனும் ‘ஈரம்’ கதை சொல்லியிருந்தார். ‘அவள் பெயர் தமிழரசி’ டாகுமெண்ட்ரி போல இருக்கும் என்பதாலோ அல்லது தன்னுடைய உதவி இயக்குநருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதாலோ எனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் வெவ்வேறு இடங்களில் முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ‘குங்குமம்’ இதழில் திரு. தனஞ்செயனின் பேட்டியைப் படித்தேன். அதில் அவர், திரைக்கதையை மட்டும் நம்பி படம் இயக்க நினைக்கிறவர்கள் என்னை அணுகலாம் என பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நம்பிக்கை வந்தது. என்னுடைய நண்பர் எழுத்தாளர் ஷாஜி, தனஞ்செயனின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டபோது திரைக்கதையையும் ட்ரெய்லரையும் அனுப்பச் சொன்னார். மோசர்பேயர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். 316 பக்கங்கள் கொண்ட திரைக்கதை ஒரே நாளில் படித்துவிட்டு, ஓகே சொன்னார். 2007-ஆம் ஆண்டு கமிண்ட் ஆன படம். ஆனால் 2010-ஆம் ஆண்டுதான் வெளியானது. தனஞ்செயன், கலை ரசனையுள்ள தயாரிப்பாளர். சமரசம் செய்துகொள்ளாத ஆட்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று சொன்னவர்களே பல சமரசங்களை செய்ய வைத்தார்கள். ஜெய்யின் ‘சுப்ரமணிய புரம்’ படத்துக்குப் பிறகு ரிலீஸாக வேண்டிய படம். அந்த நேரம் வெளியாகியிருந்தால் சுமாரான வெற்றியைக் கண்டிருக்கும். ஜெய்யின் மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெளியானது. அப்பாவுக்கு நிகராக நான் பாலு மகேந்திராவை நினைக்கிறேன். இப்போதும் அப்படித்தான். திரைக்கதையில் இருப்பது போலவே, படம் எடுத்துவிட்டால் இந்திய அளவில் பேசப்பட்டுவிடும் என அவர் சொன்னார். மனோசித்ராவை இன்னொரு ஷோபாவாக வருவார் என்று சொன்னார். அவர் சொன்னதாலேயே ட்ரெய்லரில் நடித்த மனோசித்ராவை படத்திலும் ஒப்பந்தம் செய்தேன். ஆனால் அந்த கேரக்டரின் அழுத்தத்தை தாங்கி அவரால் நடிக்க முடியவில்லை. ‘அவள் பெயர் தமிழரசி’யின் தோல்வி எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அடியாக இருந்தது”

‘அவள் பெயர் தமிழரசி’க்குப் பிறகு ஏன் இத்தனை இடைவெளி…

“தோல்வியின் உச்சமாக ‘அவள் பெயர் தமிழரசி’ நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்தது. நடிக்கலாம் என கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய் உடம்பை முயற்சி பண்ணேன். நமக்கு என்ன தெரிகிறதோ அதை நன்றாக செய்தால் போதும் என நடிக்கும் யோசனையை கைவிட்டுவிட்டேன். தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதுவும் என்னைப் புரட்டிப் போட்டது. அதன் பிறகுதான் நான்காண்டுகளுக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டில் ‘விழித்திரு’ ஆரம்பித்தேன்”.

’விழித்திரு’ படப்பிடிப்பில் இயக்குநர் மீரா கதிரவன்…

‘விழித்திரு’ என்னமாதிரியான படம்..?

“ ‘விழித்திரு’ ஒரு இரவில் நடக்கும் கதை. நான்கு ஆண்டு இடைவெளியில் நான்கு கதைகளை படமாக்கியிருக்கலாமே என்ற குறையை ‘விழித்திரு’ ஒரே படமாக தீர்த்து வைத்திருக்கிறது. நான்கு நபர்களை மையப்படுத்திய நான்கு கதைகள் அவர்களை ஓர் இரவு எப்படி ஒரு புள்ளிக்கு நகர்த்துகிறது என்பதே ‘விழித்திரு’. பரப்பரப்பான சென்னையின் இரவு வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். இரவில் படமாக்க வேண்டியிருந்ததால், நான்கு இரவுகள் கண்விழித்திருந்தால் நான்கு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படத்தின் உருவாக்கத்துக்கு இந்த தாமதம் தேவைப்பட்டது.

படத்தை இயக்கியிருப்பதோடு நானே தயாரித்திருக்கிறேன். முந்தைய அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம். அதோடு, நான் ஒரேமாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என நினைப்பவனும் அல்ல. வேறு, வேறு ஜானரில் எடுக்க வேண்டிய படத்தை, புது ஜானரில் ஒரே படமாக எடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் படம் பார்த்தவர்கள் இது புது ஃபார்முலாவாக இருக்கிறது என்று சொல்லிருக்கிறார்கள். பரபரவென்று நகரும் திரைக்கதையில் எனக்குள்ள சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளேன். எளிய மனிதர்களின் மீதான ஒடுக்குமுறையை, சாதி, மதத்தின் பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை ஆங்காங்கே பேசியிருக்கிறேன். கமர்ஷியலான படத்திற்குள் இதைச் செய்திருக்கிறேன்.
சென்னையின் இன்னொரு பக்கத்தை இந்தப் படம் காட்டும். பகல் வேளைகளில் பரபரப்பாக இயங்கும் சென்னையின் சாலைகள், இரவு நேரத்தில் இன்னொரு எக்ஸ்ட்ரீமான நிலையில் இருக்கும். அதை பதிவு செய்திருக்கிறது ‘விழித்திரு’. ஜியோகிராபிக்கலாகவும் சென்னையை பதிவு செய்திருக்கிறோம். இரவில் நடப்பது என்பதால் இருட்டாக இருக்கும் என நினைக்க வேண்டாம். இது கார்த்திகை தீபத்தில் நடக்கும் கதை என்பதால், அகல் விளக்கின் ஒளியையும் மின் விளக்கின் ஒளியையும் விஷுவல் ட்ரிட்டாக மாற்றியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் சரணும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இரவில் நடக்கும் கதைகள் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ‘விழித்திரு’ தனித்ததொரு படமாக தெரியும்.

‘விழித்திரு’ படத்தில் நடிகர்கள் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளதா?

“பத்து படங்கள் செய்துவிட்டு பனிரெண்டாவது படமாக இயக்கியிருக்க வேண்டிய படம் ‘அவள் பெயர் தமிழரசி’. 23 வயதில் எழுதி 26 வயதில் இந்தப் படத்தை இயக்கினேன். ஆனால், ஆழமான அந்தக் கதைக்கு அந்த வயதும் அனுபவமும் போதாது. நான் செய்த முக்கியமான தவறு நடிகர்கள் தேர்வு. ட்ரெய்லரில் நடித்த பெண், பாலு மகேந்திராவே சொல்லிவிட்டார் என்பதற்காக நாயகியை தேர்வு செய்தேன். ஆனால் அவரால் அந்த கேரக்டரை தூக்கி சுமக்க முடியவில்லை.

‘விழித்திரு’ படத்திற்கு நடிகர்கள் தேர்வை கவனமாக செய்தேன். ‘கழுகு’ படம் பார்த்த பிறகு கிருஷ்ணாவின் நிறமும் பக்கத்துவிட்டு பையன் போன்ற தோற்றமும் என்னை ஈர்த்தது. அவரை நடிக்க வைக்க அணுகியபோது, கதையே கேட்காமல் ஒப்புக்கொண்டார். விதார்த்துக்கு இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும். வெங்கர் பிரபுவின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அவர் நல்லதொரு கேரக்டர் ஆர்டிஸ்ட். அவரிடம் அணுகியபோது இப்போது நடிப்பதில்லையே என்றார். கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். தன்ஷிகாவின் கேரக்டர் இதுவரை போர்ட்ரெயிட் பண்ணப்படாத ஒன்று. அவருடைய சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்கும். எஸ். பி. பி. சரண், சிரஞ்சிவியின் சகோதரர் நாகபாபி, வில்லனாக நடித்திருக்கிறார். அவர் தயாரிப்பாளர், நடிகர். ஆனால், வில்லனாக நடித்ததில்லை. கதையைக் கேட்டு ஒப்புக்கொண்டோர்.

விழித்திரு படத்தில் ஒரு காட்சி…

மொழியாக்க தொடர் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான எரிகா பெர்னாண்டஸ், நடித்திருக்கிறார். அபிநயாவுக்கு ஆர்.ஜே கதாபாத்திரம், ரொம்ப சாதாரணமாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா நடித்திருக்கிறார். ராகுல் பாஸ்கர், ‘அலைபாயுதே’ மாதவன் போல ஒரு கிரேஸ் அவர் மீது உருவாகும். டி. ஆர். ஒரு பாடலை அவரே எழுதி, டான்ஸ் செய்திருக்கிறார். ‘பெரிய, பெரிய டைரக்டர் கேட்டே நான் செய்யவில்லை’ என்று முதலில் மறுத்தார். திரும்ப திரும்ப பேசிய பிறகு ஒப்புக்கொண்டார். முக்கியமாக கிளைமேக்ஸில் வரும் ஒரு வசனம், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இந்த வசனம் பேசப்படும். இதைக் கேட்டு ஒப்புக்கொண்டார்.

படத்தின் எடிட்டர் பிரவீன். இசையமைப்பாளராக சத்யன் அறிமுகமாகியிருக்கிறார். ‘கலக்கப்போவது யாரு’ பாடலை பாடியவர். பாடகர், இசையமைப்பாளராக அறிமுகமானதால், இசையமைப்பாளர்களை பாடகர்களாக்கிவிட்டார். ஆறு இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். சந்தோஷ் சாராயணன் பாடிய டைட்டில் பாடல், இசைக்கருவிகள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பாடல். புது அனுபவமாக இருக்கும்.

2015ல் தயாரான படம். அப்போது வெள்ளம் வந்தது. மக்கள் தியேட்டருக்கு வருவதே குறைந்திருந்தது. அடுத்து தேர்தல், கபாலி ரிலீஸ், அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது – இறந்தது என ஏதாவது ஒரு விஷயம் ‘விழித்திரு’ படம் வெளியாவதில் தடையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது”.

எது நல்ல சினிமா என்கிற விவாதத்தில் உங்களுடைய கருத்தென்ன?

“சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த விவாதம் வந்துகொண்டிருக்கிறது. சினிமா ஒரு கலை வடிவம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது வணிகம் தொடர்புடையதும்கூட. நான்கு ஃபார்முலா படங்கள் வெளியாகும்போது, இரண்டு நல்ல படங்களும் வெளியாகின்றன. ஃபார்முலா படம் என்பது அதீத கற்பனைகள், அதீத உணர்ச்சிகளைக் கொண்ட படம். ஏன் இப்படியான படங்கள் எடுக்கப்படுகின்றன? இன்று தியேட்டருக்கும் வருகிறவர்களின் 18- 22 வயதுள்ளவர்கள் தான். தேர்ந்த சினிமா ரசிகர்கள் படத்தைப் பற்றிய மதிப்பீடுகளுக்குப் பிறகே தியேட்டருக்கு வருகிறார்கள். சினிமா என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று சுருங்கும்போது, இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்காகத்தான் சினிமா எடுக்க வேண்டியிருக்கிறது. இவர்களுடைய வயதுக்கு ஆழமான விஷயங்களை சொல்ல முடியாது. கேட்காத காதுகளுக்காக எப்படி பேச முடியும் ?

நல்ல சினிமா எடுப்பது மட்டுமல்ல, எது நல்ல சினிமா என்பதை சொல்லித் தரவேண்டும். கல்வி நிறுவனங்கள்தான் அடிப்படை ரசனையை வளர்த்தெடுக்க வேண்டும். பாலு மகேந்திரா சொன்னார் பள்ளிக்கூடங்களில் சினிமாவை பாடமாக வையுங்கள் என்றார். அது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்”.

தமிழ் சினிமாவில் இலக்கியத்தை படமாக்குவது மிகவும் அரிதாகத்தான் நிகழும். எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவலை படமாக்குவதாக அறியமுடிந்தது.

“மேற்கத்திய நாடுகளில் இலக்கியத்தை தழுவி சினிமா எடுப்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. வங்காளத்திலும்கூட அப்படியான நடைமுறை உள்ளது. அங்கெல்லாம் திரைக்கதாசிரியர்கள் இருக்கிறார்கள். தமிழில் அப்படியானதொரு நிலை வரவேண்டும். படமாக்கப்பட எத்தனையோ படைப்புகள் இங்கே உள்ளன. ‘மிளிர்கல்’ எனக்குப் பிடித்த நாவல்.

தமிழ் வரலாற்றை பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. அப்படி அரிதாக பேசினாலும் உண்மைத்தன்மை இருப்பதில்லை. சிலப்பதிகாரம் எனக்குப் பிடித்த காப்பியம். பெண்கள் மீதான ஒடுக்குமுறை இந்த காலத்திலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கண்ணகி கோபம் எனக்குப் பிடிக்கும். அந்தக் கோபம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும். அரசனையே கேள்வி கேட்ட கோபம் அது. அவர் அரசவை கூடத்தில் பேசிய வசனங்கள் முக்கியமானவை. இன்றைக்கு வரைக்கும் அரசன் அரசனாகவும் எளியவர்கள் எளியவர்களாக உள்ள நிலையில் அந்த வசனங்களின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

தோல்பாவை பற்றி எழுதியபோது, நேரில் தோல்பாவை கூத்து பார்த்தது கிடையாது. ஆனால் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இருந்தது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து யாரோ ஒருவர், ‘தமிழ் சினிமாவில் நாட்டுப்புறக் கலைகள்’ என ஆய்வு செய்தால், நிச்சயம் அந்த ஆய்வில் ‘அவள் பெயர் தமிழரசி’யும் இருக்கும். தோல்பாவை இன்று பரவலாக அறியப்படுகிறது. நாட்டுப்புறக் கலைகளை நிலப்பரப்பை வரலாற்றை பதிவு செய்வதை கடமையாகவே நினைக்கிறேன்.

‘மிளிர்கல்’ பூம்புகாரில் ஆரம்பித்து, கேரள கொடுங்கையூர் வரைக்கும் நடக்கிற பயணம். விலைமதிப்புள்ள ‘கல்’ மீதான வர்த்தகம்தான் கதை. சாதாரண சிலம்பெனில் கோவலன் கொள்ளப்பட்டிருக்க மாட்டான். வரலாற்றை நிகழ்காலத்தோடு பொறுத்தி போகிற கதை. ரசித்து செய்திருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான சினிமாவாக ‘மிளிர்கல்’ இருக்கும்!”.

சிறுகதை எழுதியிருப்பதாக சொன்னீர்கள். முழு நேர எழுத்தாளராகும் எண்ணமிருக்கிறதா?

“ஞானபீடம், சாகித்ய அகாதமி வாங்குவதற்காக எழுதவில்லை. சினிமா இயக்குநராகத்தான் எழுதினேன். என்னை ஆக்கிரமித்த எழுத்தாளர்களின் நடையில் எழுதினேன். எனக்கென்ற பிரத்யேக நடையை உருவாக்கவில்லை. சினிமாவில் நூறுவிதமான சமரசங்களுக்கு ஆட்பட்டு செயல்பட வேண்டியிருக்கிறது. சினிமாவில் செய்ய முடியாத நிலையில் எழுதுகிறேன். இப்போதுகூட பலர் சிறுகதை தொகுப்பு போட கேட்கிறார்கள். தொகுப்புக்குரிய கதைகளை இன்னும் எழுதவில்லை என்பதால் மறுத்துவருகிறேன்.”

தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டேமேயானால் தொடக்க கட்டத்தில் மேல்சாதியினரின் ஆதிக்கத்திலும் அடுத்து இடைச்சாதியினரின் ஆதிக்கத்திலும் இருந்தது; இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினருக்கான சினிமாவுக்கான களம் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியிருப்பதாக பேசப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்தென்ன?

“தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினரை பேசுவதாகத்தான் இருக்கும் என பேசும்போதே புறக்கணிப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நூறு சதவீதம் அது தலித் சினிமாவாகவோ, சிறுபான்மையினர் சினிமாவாகவோ இருக்கக்கூடாது. நம்முடைய ஐடியாலஜியை மக்களிடம் சொல்லலாம். அவர்களிடம் திணிப்பது வன்முறை. அடுத்து இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். ஒரு சாதிக்காரனுடன் சேர்ந்திருப்பது, ஒரு சாதிக்காரனுடன் மட்டும் செயல்படுவது எவராக இருப்பினும் முன்னுதாரண செய்கை அல்ல. என் படத்துக்கு ட்ராலி ஓட்டுகிறவரிலிருந்து படம் பார்க்கிறவர் வரை எல்லோரும் ஒரே சாதியாக இருக்க முடியுமா?

இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களின் சினிமாவாக சாய்ரத், ஃபாண்ட்ரி போன்ற படங்கள், மோடி ஆட்சி காலத்தில் வருகின்றன, கருத்துக்களை பேசுகின்றன. அடுத்த தலைமுறையினர் இதை வலிமையாகவே செய்வார்கள்!”.

இயக்குநர் மீரா கதிரவனின் நேர்காணல் வீடியோவாக...

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்…

“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்

ஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ‘துரத்தப்படும் மனிதர்கள்’ என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் நீதிமுறைமை பற்றி யதார்த்தமாக பேசுகிறார். டைம்ஸ் தமிழுக்காக உரையாடியவர் : பீட்டர் துரைராஜ்.

ம.இராதாகிருஷ்ணன்

கேள்வி: நீங்கள்  எழுதிய “துரத்தப்படும் மனிதர்கள் ” நூலின் பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் ?

பதில்: தமிழ்நாடு ஒட்டர் – குறவர் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 2010 ல் எழுதிய நூல் இது. ஹென்றி திபேன் அணிந்துரை எழுதியிருந்தார்; மக்கள் கண்காணிப்பகம் இதனை வெளியிட்டது. கல் ஒட்டர், ஒட்டர், குறவர் ,மலைக் குறவர் பற்றி இதில் எழுதியிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை , விழுமியங்கள் , சந்திக்கும் இன்னல்கள் பற்றி எழுதி இருக்கிறேன். பொய் வழக்கிற்கான ‘ரிசர்வ் போர்ஸ் ‘ ஆக இவர்களை காவல்துறை எப்படி வைத்திருக்கிறது என்பதை எழுதியுள்ளேன்.

களத்தில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்கள் இதனை அதிகம் வாசித்தார்கள். சிறந்த ஆய்வு நூலுக்கான விருதை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இதற்கு வழங்கியது. குற்றப் பரம்பரைச் சட்டத்தின் நீட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்  அவசியம் படிக்க வேண்டிய நாட்களில் இது ஒன்று  என்று பேராசியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியதை பெருமையாக கருதுகிறேன்.

கேள்வி: குற்றப் பரம்பரையினர் சட்டம் என்ன சொல்கிறது?

பதில்: இதனை ரேகைச் சட்டம் என்றும் சொல்லுவார்கள் .குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த ஒட்டுமொத்த மக்களையே திருடர்கள் என  இந்த சட்டம் சொன்னது. அந்த சாதியைச் சார்ந்த ஆண்கள் அனைவரும் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் ரேகை வைக்க வேண்டும். இரவு வெளியில் தங்க முடியாது. சாவு, கல்யாணத்திற்கு கூட வெளியே போக முடியாது. அப்படி போக வேண்டுமென்றால் கடவுச்சீட்டு வாங்கித்தான் போகமுடியும். 1871 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இதனை நீக்க கோரி  இந்தியாவில் காங்கிரஸ் சோசலிஸ்டுகள், நேரு போன்றோர் போராடினர். தமிழ் நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோர் போராடினர். தமிழ் நாட்டில் 1947 லும் இந்தியா முழுவதும் 1952 லும் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.

தமிழ் நாட்டில் 68 சாதி பிரிவினர் சீர் மரபினராகவும் ஏனையோர் மற்ற பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாடோடிகளாக இருப்போரை  பேராசிரியர் தனஞ்செயன்தான் முதலில் அலைகுடி என அழைத்தார்.  (நிலைகுடிக்கு எதிர்பதம்). நாடோடியின் சமகாலப் பெயர்தான் அலைகுடி. எல்லா சீர்மரபினரும்  அலைகுடிகள் அல்ல.

இந்தியா முழுவதும் 11 கோடி பேர் இருப்பதாக தேசிய சீர்மரபு , நாடோடி, அரை நாடோடி, பழங்குடி ஆணைய அறிக்கை  (Denotified, nomadic, semi-nomadic tribes commission 2008) சொன்னது. காவல்துறை பயிற்சியிலேயே kurava crimes என்று வைத்து இருக்கிறார்கள். இப்படி பயிற்சி எடுத்த அதிகாரிகள் எந்த மனோபாவத்தில் இருப்பார்கள்?

ஆனால் அலைகுடி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆனால் பிறவியிலேயே திருடர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

கேள்வி: நீங்கள் கைத்தறி தொழில் செய்தவர், இவர்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது?

பதில்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற் சங்க தலைவர் சுந்தர் ராஜன் தான் என்னை இப் பணியில் ஈடுபடுத்தியவர். மதுரை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒத்துழைப்பு கொடுத்தது. யாரும் செய்ய விரும்பாத வேலை; செய்ய துணியாத வேலை. தமிழ்நாடு ஒட்டர் குறவர் வாழ்வுரிமை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டேன். மதுரை சோகோ அறக்கட்டளை மகபூப் பாஷா, வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் சங்கம் உருவாவதில்  உதவி புரிந்தனர். அலைகுடி  மக்கள் நலச் சங்கம்  என்ற பெயரில் இப்போது அது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே  பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார்.

கல் ஒட்டர் சாதிகளைச் சார்ந்தவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் அடையாளத்தை காட்டாமல் கைது செய்வதும், அவர்களை நாட்கணக்கில் நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தாமலேயே, சித்திரவதை முகாம்களில் வைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறையில் அடைப்பதும் வழக்கம். பலர் இதில் அப்பாவிகள்.

தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் பக்தவச்சல பாரதி, தனஞ்செயன் ஆகியோர் நாடோடோடிகள்  இனவரைவியல்  குறித்து நிறைய எழுதி உள்ளனர். விடியல் பதிப்பகம் மகாராஷ்டிராவைச் சார்ந்த லெட்சுமண் கெய்க்வாட் எழுதிய உச்சாலியா என்ற (உச்சாலியா என்பது இனக்குழுவின் (சாதி பெயர்) தன் வரலாற்று நூலை வெளியிட்டுள்ளது. இதற்கு சாகித்திய அகாதமி விருதும் கிடைத்துள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே  பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார். மும்பையைச் சார்ந்த திலிப் டிசௌசா எழுதிய ” குற்ற முத்திரை ” நூலும் முக்கியமானது. 1950 ல் அந்ரோல்கர்  ஆணையத்தின் அறிக்கை ஒரு முக்கியமான ஆவணமாகும்.

கே : நீங்கள் காவல்துறை குறித்து மிகவும் எதிர் மறையான கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள் ?

பதில்: எனக்கு நம் நாட்டின் குற்ற நீதிமுறைமை ( criminal judicial system ) மீது சுத்தமாக மரியாதை கிடையாது. நிச்சயமாக அது ” சமூக அநீதிக் கொள்கையை ” கடைபிடிக்கிறது. விசாரணை கைதிகளாக ஆண்டுக் கணக்கில் சிறையில் இருப்போரின் சாதி , மதம் சார்ந்த சார்ந்த விகிதாச்சாரத்தை கணக்குப் பாருங்கள். உங்களுக்கே அது தெரியும்.  மீண்டும் மீண்டும் கைது செய்யப் படுபவர்களின் அகில இந்திய சராசரி 5 சதவிகிதம். தமிழ் நாட்டில் இது 19.5 சதவீதம்.

நகையை திருடு கொடுத்த யாருக்காவது அவர்களுடைய சொந்த நகை கிடைத்து இருக்கிறதா? அப்படியானால் என் நகையை எடுத்த உண்மையான குற்றவாளி எங்கே? இந்த நகை  எங்கே இருந்து எடுக்கப்பட்டது? நேர்மையான அதிகாரி என்று எல்லா பத்திரிக்கையாளர்களாலும் புகழப் பட்ட ஒரு காவல் அதிகாரி இருந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரிடம் யாரும்  அவருக்கு கீழ் பணி புரிபவர்கள் திருமண பத்திரிகை கொடுத்தால் 5 பவுன், 10 டவுன் என விருப்பம் போல கொடுக்கச் செய்வார்.

திருட்டை கண்டு பிடிக்கும் சதவீதம் தமிழ்நாட்டில் அதிகம் என்கிறார்கள். அப்படியானால் திருட்டு ஏன் குறையவில்லை. மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக அஸ்ரா கர்க் என்ற அதிகாரி இருந்தார். பொய் வழக்கு போட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவர் பொறுப்பில் இருக்கும் போது குற்றத்தை கண்டுபிடிக்கும் சதவீதம் குறைவாக இருந்தது. இது ஒரு குறையாக இருந்தது என்றார்கள்.

காவல்துறை சொல்லுவதை அப்படியே ஊடகங்கள் எழுதுகின்றன. பாதிக்கப்பட்டவன் சொல்லுவதை எழுதுவதில்லை. ஆனால் பொது மக்களாகிய நாம் ஏதும் சொன்னால் காவல்துறையிடம் கேட்க வேண்டும் என்பார்கள். காவல் துறையை நவீன படுத்துவது என்றால் ஆயுதங்கள், வாகனங்கள் வாங்குவது இல்லை; திறமையான, விஞ்ஞான பூர்வமான விசாரணையை நடத்துவதுதான்.

குற்றப் பரம்பரையினர் சட்டம் அமலில் இருக்கும் போதே வழக்கமாக சட்டத்தை மீறுவோர் சட்டம் (Habitual Offenders Restrictions​  Act – HORA) கொண்டு வந்தார்கள். பின்பு குண்டர் சட்டம் கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் ரேகைச் சட்டத்தின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

கே: அரசியல் கட்சிகள் இதுபற்றியெல்லாம் பேசுவது இல்லையா ?

பதில்: குறவரில் 27 பிரிவு ( சாதி) குற்றப் பழங்குடியினர் பிரிவில் உள்ளன. நான் மதுரை, தேனி மாவட்டங்களில் பணிபுரிந்த போது அலைகுடி மக்கள் சங்கம் உருவானது.
மார்க்சிஸ்ட் கட்சி, குறவர் பழங்குடி அமைப்பு என  வட மாவட்டங்களில் வைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குறவர் பழங்குடி அமைப்பு வைத்துள்ளது. அந்தந்த தல மட்டங்களில் கட்சி உறுப்பினர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த கட்சியின் கொள்கையாக இது மாறவில்லை. மற்ற கட்சிகளைப் பற்றி பேசவே வேண்டாம். காஞ்சிபுரம் , விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இவர்களைப்பற்றி யாருமே பேசுவதில்லை.

வழக்கறிஞர்கள் “திருட்டு கேசுல நான் ஆஜராவதில்லை” என்று பெருமையாக சொல்லுவார்கள். “இந்த கேசுக்கு எல்லாம் நீங்க வரலாமா சார்?”  என்று காவல்துறையினரே  சொல்லுவார்கள். இப்படித்தான் இவர்களை தனிமைப்படுத்தும் வேலை நடக்கிறது; பொதுப் புத்தி கட்டமைக்கப்படுகிறது. கல் ஒட்டர் சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை விரும்புவதில்லை. ஏனெனில் அவர்கள் காவல்துறையினரின் வேட்டைப் பொருளாவர்.

கேள்வி : அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: ஒண்ணும் செய்ய வேண்டாம்.சட்டப்படி விசாரணை, கைது, வழக்கு நடத்தினாலே போதும். இவர்கள் ” குற்றவாளிகள் ” என்று இலக்கு நிர்ணயம் செய்துவிட்டு விசாரணை நடத்தக் கூடாது. விசாரணைக்கு சம்மன் கொடுங்கள்; கைது செய்தால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு, கல்வி போன்ற உரிமைகளைத் தந்தால் போதும். வாக்குரிமை இல்லாததால் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை.

கேள்வி: சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டில் எதுவுமே நடக்கவில்லையா?

பதில்: இந்திய அளவில் அவர்களை Denotified Tribe என்கிறார்கள். ஆனால் தமிழில் சீர்மரபினர் என்று மொழி பெயர்க்கின்றனர். அதாவது ஏற்கெனவே கெட்டவர்கள் என்ற பொருள் அதிலே தொக்கி இருக்கிறது DNT எனில் SC க்கு சமம். DNC_ MBC க்கு சமம் என்று தமிழ்நாட்டில் உள்ளது.

சமூக நீதி பேசும் மாநிலம் DNT யை DNC யாக கொண்டுள்ளதுதான் சமூக அநீதி. எனவே சலுகைகள் தமிழ்நாட்டில் குறைவு.

கேள்வி: ஆராயா தீர்ப்பு – என்ற ஆவணப் படம் வந்ததாக சொல்லுகிறார்களே?

பதில்: அரசு அதிகாரியாக இருக்கும் இளங்கோவன் கீதா இந்த நாடோடி , அரை நாடோடி மக்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராயா தீர்ப்பு என்ற 30 நிமிட ஆவணப்படம் எடுத்தார். இதில் குத்சியா காந்தி IAS கூட பேசியுள்ளார். நல்ல படம். பல இடங்களில் திரையிடப்பட்டது. ஆனால் இவர் எடுத்த மாதவிடாய் என்ற  படம் பேசப்பட்ட அளவுக்கு, திரையிடப்பட்ட அளவுக்கு இது பேசப்படவில்லை .

கேள்வி: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இறுதியாக ஏதாவது சொல்லுங்களேன்.

பதில்: நான் இப்போது சென்னையில் ஏஐடியுசி தொழிற் சங்க செயலாளராக இருக்கிறேன்; தொழிற் சங்க செய்தி ஆசிரியர் குழுவில்  இருக்கிறேன். மனைவி காமாட்சி. நான் கம்யூனிஸ்டு கட்சியின் முழு நேர ஊழியன். அலைகுடி மக்களுக்காக வேலை செய்ததில் எனக்கு மன நிறைவு இருக்கிறது.

”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி

வாசிப்பு பழக்கம் அருகி வரும் காலமிது. பெரும்பாலான நேரத்தை நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் புத்தக வாசிப்பு என்பதே பலருக்கு புதிதான விஷயமாக இருக்கிறந்து. வாசிப்பின் மூலம் புதிய புதிய திறப்புகளை அறிந்துகொள்ள வேண்டிய குழந்தைகளோ மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள் தூசி படர்ந்த நூலக அலமாறிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை தூசி தட்டி, அவற்றில் இருக்கும் உலகங்களை திறந்து பார்க்க வைக்கும் பணியை சிலர் அவ்வவ்போது செய்துகொண்டு இருக்கிறார்கள். பல்லாங்குழி அமைப்பைச் சேர்ந்த இனியன், அத்தகையதொரு முயற்சியை தொடங்கிவைத்திருக்கிறார். அது என்ன? 

“நூல்விமர்சன அரங்கு, தமிழுக்கு புதிதில்லைதான்..ஆனால் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட நூல்கள் குறித்து, குழந்தைகளே ஒரு அறிமுக உரையாற்றுவது தமிழுக்கு புதிது. இது எவ்வளவு முக்கியமானது என்பது இப்போது நமக்கு புரியாது. ஆபத்தான கட்டங்களை நோக்கி குழந்தைகள் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த மண்ணில் எல்லா துவேசத்தையும் இந்தப்பிஞ்சுகள் தன் படையணிகளால் சாய்த்துவிடும் காலத்தை கடக்கும் போது அது புரியக்கூடும்.

நூல்களை படிக்கத்தொடங்கும்போதும். படித்தபின்னும் குழந்தைகளிடம் பல மாற்றங்களை உணர்வதாக பேசப்போகும் குழந்தைகளின் பெற்றோர்கள் தனிப்பட்டமுறையில் சொல்கிறார்கள்.” என எழுத்தாளரும் கள செயல்பாட்டாளருமான ஒடியன் லட்சுமணன் தன்னுடைய முகநூலில் எழுதியிருக்கிறார்.  உணர்ந்து எழுதிய வார்த்தைகள் இவை. மேலதிக விவரங்களை தெரியப்படுத்த இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் இனியனுடன் த டைம்ஸ் தமிழ் பேசியது…

இனியன்

“இந்நிகழ்வு குறித்து நீண்ட நாட்களாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஜெர்மனி நண்பர்களின் உரையாடலுக்குப் பிறகு அதைச் செய்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானமான முடிவுக்கு வந்தேன். மனிதருடைய வாழ்க்கையில் கலை பிரதானமான ஒன்று. ஏதோ ஒரு வடிவத்தில் அது மனிதருள் இருந்துகொண்டே இருக்கும். எளிய மனிதர்கள், எலைட் மனிதர்கள் என அனைத்து வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் கலை இயல்பாகவே இருக்கக்கூடியது. கலைக்கான இயல்பை விளையாட்டுகள் பல வடிவங்களில் தருகின்றன. விளையாட்டுகள் குறையக் குறைய கலைத்தன்மையும் குறைகிறது. இந்தப் புள்ளிகளை இணைக்க புள்ளிதான் வாசிப்பு!

வாசிப்பை முதல்கட்டமாக செயல்படுத்துவதன் மூலம் எந்த அளவுக்கு கலையை பரவச் செய்யமுடியுமோ அதைச் செய்ய வேண்டும் முடியும் என நினைக்கிறேன். இங்கே டிவியில் பாட்டுப்பாடிவிட்டால் அது ஒரு கலையாகிவிடுகிறது.  நடன நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதுவொரு கலை வெளிப்பாடாகிறது. இது மாயை.  எல்லா மனிதர்களும் தன்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏதோ ஒரு கலைவடிவம் தேவைப்படுகிறது. ஒரு குழந்தை பாட்டுபாடினால் அதை அங்கீகரிக்கும் சமூகம், அதே குழந்தை மவுத் ஆர்கன் வாசித்தால் அங்கீகரிப்பதில்லை. அந்தக் கலையில் உயர்வுக்கு வந்தால் மட்டுமே கலையை கொண்டாடுகிறார்கள்.  வாசிப்பையும் விளையாட்டையும் ஒன்றிணைப்பதன் மூலமாக கலையை கொண்டுவர முடியுமா என்கிற ஒரு பரிட்சார்த்த முயற்சிதான் இது! வெகுதூர பயணம் இது.  எல்லா தரப்பு குழந்தைகளையும் இந்த வாசிப்பில் உட்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும்” என்கிற இனியன், ‘பல்லாங்குழி’ என்ற அமைப்பின் மூலம் மரபு விளையாட்டுக்களை ஆவணப்படுத்திவருகிறார். பள்ளிக்குழந்தைகளிடையே மரபு விளையாட்டுக்கள் நிகழ்த்திவருகிறார்.

“மரபுசார்ந்த விளையாட்டுக்கள் குறித்து ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. மரபுசார்ந்த விளையாட்டுக்களை ஆவணப்படுத்தி வருகிறேன். அவற்றை குழந்தைகளிடம் நிகழ்த்தி அவர்களின் அதை எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள், வெளிப்படுத்துகிறார்கள், அதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதையும் சேர்த்து ஆவணப்படுத்த விரும்புகிறேன். இப்போதைக்கு பயணங்கள்தாம் என்னுடைய தேர்வு. ஓய்ந்து அமரும் காலத்தில் ஆவணங்களை நூலாக்குவேன்” என்று தன்னுடைய ‘பல்லாங்குழி’ பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

This slideshow requires JavaScript.

கணினி துறையில் பட்டயப் படிப்பு முடித்திருக்கும் இனியன், 2014-ஆம் ஆண்டிருந்து மரபு விளையாட்டுக்களைத் தேடி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

“வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள், மருத்துவமனை வாழ்க்கை..இப்படிப்பட்ட பயணம் தொடங்க காரணமாக இருந்தது. இந்த பயணத்துக்கான சிந்தனையை உண்டாக்கியது எட்டு வயதிலிருந்து எனக்கிருந்த வாசிப்பு பழக்கம்தான். விளையாட்டு, வாசிப்பு, கலை ஆகிய மூன்றையும் ஒன்றோடு ஒன்று கலந்து தரவேண்டும் என்பதே என் விருப்பம். ஈடுபாட்டோடு செய்தால் கலைக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும். பெற்றோருக்கும் மற்றவர்களிடம் இதை உணரச்செய்வதையும் ஒரு பணியாகப் பார்க்கிறேன்” நிறுத்துகிற இனியன், நண்பர்களின் உதவியால் இந்தப் பயணங்கள் சாத்தியமாகின்றன என்கிறார். பள்ளிகளில் நிகழ்வுக்கு அழைக்கிறவர்கள் பணம் அளித்தால் வாங்கிக்கொள்வேன், இல்லையென்றாலும் கேட்கமாட்டேன் என்கிறார்.

இந்நிகழ்வில் 20 குழந்தைகள் 20 நூல்களை அறிமுகம் செய்துவைக்கிறார்கள். சரி, நூல் அறிமுக நிகழ்வுக்காக குழந்தைகளை எந்த அளவுக்குத் தயாராகியிருக்கிறார்கள்?

“உண்மையைச் சொன்னால், நாங்கள் அவர்களை தயாரிக்கவில்லை, அவர்களாகவே தயாராகியிருக்கிறார்கள். நூல் அறிமுகம் செய்யும் 20 பேரில் நான்கு பேர் மேடையை, கூட்டத்தைப் பார்த்து பயப்படக்கூடும். என்னுடன் இரண்டு, மூன்று நண்பர்கள் சேர்ந்து மேடை பயத்தைப் போக்க சில பயிற்சிகளை தந்தோம். மற்றபடி நூல்களை தேர்ந்தெடுத்தது, வாசிக்க முன்வந்தது அனைத்தும் அவர்கள் முடிவெடுத்ததே!

குழந்தைகள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை இலகுவாக அணுகக்கூடிய தளம்தான். நூல் அறிமுகத்தில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்த்து பார்வையாளராக அமர்ந்திருக்கும் குழந்தைகள் ‘நானும் வாசிக்க விரும்புகிறேன்’ என்கிறார்கள். இதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்.” என்கிறார் நம்பிக்கையோடு!

நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையை அணுகும் இனியன் போன்றவர்களை ஆதரிப்பது பொதுசமூகத்தின் கடமை. இப்போதைய தேவையும்கூட!

இனியனின் முகநூல் பக்கம்

“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், வாசகராக எழுத்தாளர் தமிழ்மகனின் எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். இருவருக்குமிடையேயான உரையாடலை, ஒருங்கிணைத்து தொகுத்திருக்கிறது த டைம்ஸ் தமிழ்.

எழுத்தாளர் தமிழ்மகனுடன் தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ்..

“தமிழ்மகன் என்பது உங்களுடைய புனைப்பெயரா? இயற்பெயரா?”

“என்னுடைய இயற்பெயர் வெங்கடேசன். நான் மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 83-ஆம் வருடம் என்னுடைய கவிதைத் தொகுப்பு வந்தது. அப்போது வெங்கடேசன் என்ற பெயரை ஒரு கவிஞனுக்குரிய பெயராக நினைக்கவில்லை. கவிஞர் மு. மேத்தா என்னுடைய பேராசிரியர். கவிதைத் தொகுப்புக்கு அவர்தான் முன்னுரை அளித்தார்.  வேறொரு கவித்துவமான பெயரை ஐய்யாவிடம் கேட்டேன். அப்போது அவர் தமிழ்மகன் என வைத்தார். கவிதைத் தொகுப்பில் ‘தமிழ்மகன்’ என வந்தது முதல் கல்லுரிக்குள்ளும் என்னை தமிழ்மகன் என்றே அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, போலீஸ் செய்தி, மின்மினி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றும்போதும் தமிழ்மகன் என்ற பெயரிலேயே எழுதினேன். வண்ணத்திரை, குங்குமம், தினமணி, விகடன் என நான் பணியாற்றிய அத்தனை இடங்களிலும் என்னை தமிழ்மகன் என்றே அறிவார்கள். வெங்கடேசன் என்பதுதான் என்னுடைய இயற்பெயர் என்பது பலருக்குத் தெரியாது. அது குடும்பத்துக்குள் மட்டுமே தெரிந்த பெயராகிவிட்டது”.

“பத்திரிகையாளர் பணியை விரும்பி தேர்ந்தெடுத்தீர்களா? இரண்டுமே எழுதுவது என்கிற தொடர்பில் பத்திரிகையாளர் ஆனீர்களா?”

“முழு நேர எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஒரு கவிதைத் தொகுதி வந்தது. அந்த நேரத்திலேயே மணியன் ஆசிரியராக இருந்த ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் நாவல் போட்டி நடத்தினார்கள். டிவிஎஸ் நிறுவனமும் ‘இதயம் பேசுகிறது’ இதழும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தினார்கள். நான் அப்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். தேர்வு நேரம் அது. தேர்வு எழுதுவதைவிட, நாவல் எழுதுவதுதான் எனக்குப் பெரிதாகப் பட்டது. நான் தேர்வுக்குப் போகவேயில்லை. தேர்வும் நாவலை சமர்பிக்கும் தேதியும் ஒரே நேரத்தில் வந்தன. நான் நாவல் எழுதத்தான் கவனம் செலுத்தினேன். அந்தப்போட்டியில் முதல் பரிசும் வாங்கினேன். அப்போது எனக்கு டிவிஎஸ் 50 கொடுத்தார்கள். அது எனக்கு நம்பிக்கை அளித்தது. எழுதியே நாம் வாழ முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் உண்டாக்கியது. ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. டிவிஎஸ் 50 கொடுத்தார்களே தவிர, அப்போதைய பெட்ரோல் விலை ஆறு ரூபாயோ ஐந்து நூபாயோ, அதை வாங்கவே எனக்குச் சிரமமாக இருந்தது. தினமணி கதிரில் ஒன்றிரண்டு கதைகள் வரும். ஒரு சில சிறுபத்திரிகைகளில் காசு தரமாட்டார்கள். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பத்திரிகைகளில் வரும். படைப்புகளைப் போய் பத்திரிகைகளில் கொடுத்துவிட்டு வருவேன். அங்கே வேலை கேட்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

இந்த நேரத்தில் எனக்குத் திருமணமாகி, குழந்தையும் பிறந்திருந்தது. அதற்குப் பிறகும் நான் எழுத்தாளானாகத்தான் இருப்பேன் என வீம்பு பிடிக்கமுடியவில்லை. ஒரு தோல்விதான், முழு நேர எழுத்தாளனாக இருக்க விரும்பி பத்திரிகை பணிக்குப் போவது! அதுகூட நான் கேட்கவில்லை. பெரியார் திடலில் ஏதோ கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தபோது, என்னுடைய நண்பர் கவிதாபாரதி ‘என்ன தமிழ் பண்றீங்க’ எனக் கேட்டார். பத்திரிகைகளில்தான் ஏதாவது வேலை தேட வேண்டும் என்று சொன்னேன். அவரைப் பார்க்கும் அப்படியொரு யோசனை எனக்கும் இல்லை. அவர் கேட்டதால் சொன்னேன். சொன்ன உடனே ‘அப்போ நாளைக்கு வாங்க’ என சொன்னார். கவிதா பாரதி தான் பணியாற்றி போலீஸ் செய்தி இதழிலிலிருந்து விலகும் முடிவில் இருந்திருக்கிறார். அந்த இடத்துக்கு என்னை பணியமர்த்த வரச்சொல்லியிருக்கிறார். அப்போது ஆரம்பித்ததுதான் பத்திரிகையாளர் வாழ்வு. 82ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். தினகரனில் கவிதை வரும் தினமணி கதிரில் ஏதாவது ஒரு படைப்பு வரும். குங்குமம், முத்தாரம் என எழுதிக்கொண்டிருந்தாலும், 1989-ஆம் ஆண்டிலிருந்துதான் முழுநேர பத்திரிகையாளராக மாறினேன்.”

“82-ஆம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது அறியப்பட்ட எழுத்தாளராக இருக்கிறீர்கள். இதுவே போதும் என நினைக்கிறீர்களா?”

“இருபது வயதிலிருந்தே எழுதிக்கொண்டிருந்தாலும் கூட உண்மையான பக்குவம் வர இந்த வயது தேவைப்படுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அரை நூற்றாண்டு வயது என்பது ஒரு பெரிய பக்குவத்தையும் சமுதாயத்தைப் பற்றிய ஒரு பார்வையை ஏற்படுத்துவதற்கு தேவையாகத்தான் இருக்கிறது. இருபது வயதில் உடனே புரட்சி ஏற்பட்டுவிடவேண்டும் என நினைக்கிற, ஒரு நக்சல்பாரியா மாறிவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கும். இன்றைக்கே ஏன் புரட்சி வரவில்லை; இன்றைக்கே மாற்றம் வரவில்லை என்கிற எண்ணம்தான் இருந்திருக்கும். அந்த வயதில் இருந்த வேகம் முழுமையானதாக இல்லை. அப்படி ஒரே நாளில் புரட்சி வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுகூட அப்போது தெரியாது.

அப்போது நிறைய குழுக்கள் இருந்தன, ஆங்காங்கே கூட்டங்கள் நடக்கும். மவுண்ட் ரோடு எல் எல் ஏ பில்டிங் போவோம். அங்கிருந்து பெரியார் திடலுக்குப் போவோம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்வோம். தொடர்புகள் இருந்தது; நிறைய தெரிந்துகொள்ளவும் முடிந்தது. அந்த ஆர்வம் குவிந்து, இதுதான் நாம் செய்ய வேண்டியது என எந்தவித தெளிவையும் ஏற்படுத்தவில்லை. பிறகு, புரட்சி ஒரு இரவில் ஏற்படாது, இது கனிய காலம் பிடிக்கும், இங்கே என்னென்ன கட்டுமானங்கள் இருக்கின்றன; சாதிய கட்டுமானங்கள் என்ன? வர்க்க கட்டுமானங்கள் என்ன? வர்ணாசிரமம் என்றால் என்ன? மதச் சிக்கல்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள காலங்கள் தேவைப்பட்டன.

இப்போது எழுத்தினால் என்ன சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான, நேர்மையான மனிதாக என்னுடைய வாசகருக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அதன் மூலமாக ஒரு சலனம் ஏற்பட வேண்டும். அதைப்பற்றி அவன் குடும்பத்தாரிடமோ, நண்பர்களிடமோ விவாதிக்க வேண்டும். இந்த அனுபவங்களெல்லாம் பெருக வேண்டும். நல்லெண்ணம் பெருக வேண்டும் என்பதே இப்போது எனக்குள்ள எதிர்பார்ப்பு.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பு ‘பூமிக்குப் புரிய வைப்போம்’ என்பது, அப்படியொரு புரட்சி சிந்தனை. ’கவிதை மென்மையான பூகம்பம்; அது படிக்கும்போதே வெடிக்கும்’ என்றொரு கவிதை ஆரம்பிக்கும். இதுபோன்று எழுதுவதெல்லாம் போலியாக இருக்கிறது. ‘ஆறறிவு மரங்கள்’ என்ற இரண்டாவது கவிதை தொகுப்பு மக்கள் எல்லாம் மூடத்தனத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திய கவிதைகள். இதையெல்லாமே அவசரப்பட்டு எழுதிவிட்டோமே என்று கட்டத்தில் அப்படி எழுதுவதையே விட்டுவிட்டேன். எங்கும் அந்தக் கவிதைகள் குறித்து சொல்வதுகூட இல்லை.  ‘ஏன் தமிழ் நீங்கள் கவிஞர் தானே, ஏன் கவிதை எழுதுவதில்லையா?’ என்று ஜெயமோகன்கூட ஒரு முறை கேட்டார். 80களில் எழுதிய கவிதைகளை படித்திருப்பார் போல. ஆனால் நான் கவிதைகள் எழுதுவதை 85க்குப் பிறகு நிறுத்திவிட்டேன்.

அதன்பிறகு, ஒரு பொறுப்பான எழுத்தின் மேல் கவனம் வந்தது. பக்குவப்பட்ட எழுத்துக்கு இந்த வயது தேவைப்படுகிறது. இனிதான் ஆரோக்கியமான, ஒரு நல்ல நாவலை எழுதப்போகிறேன் என நினைக்கிறேன்.”.

1916ல் தென்னிந்திய நல உரிமை சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜஸ்டிஸ் பார்டியாகி, திக.வாகி, திமுக.வாகி, அதிமுக.வாகி போய்க்கொண்டே இருக்கிறது. நூறு வருடமாக இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் ஒரு இடத்தில்கூட அது பதிவாகவில்லை.

“உங்களுடைய பின்புலம் பற்றி…”

“அப்பா பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே சென்னைவாசியாகிவிட்டார். மின்சார வாரியத்தில் சென்னையிலேயே பணியும் கிடைத்தது. திருமணமாகி அவர் இங்கே நிரந்தரமாக தங்கிவிட்டார். அப்பா-அம்மாவுடைய சொந்த ஊர் என்று பார்த்தால், அது திருவள்ளூர் மாவட்டம்தான். அங்கே நிலம் இருந்தது. விழாக்களுக்கும் விடுமுறைகளிலும் சென்று வரும் ஊராக அது இருந்தது. மற்றபடி சென்னைதான் என்னுடைய ஊர். நாங்கள் ஓட்டேரி என்ற பகுதியில் வசித்தோம். தி. நகர் ராமகிருஷ்ணா பள்ளியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்தேன். மாநிலக்கல்லூரியில் பி.எஸ்ஸி பிஸிக்ஸ் படித்தேன்.

எனக்கு அறிவியல் ஆர்வமும் இருந்தது, தமிழின் மேலும் ஆர்வம் இருந்தது. அப்போது என்னுடைய தமிழ் பேராசிரியர்களாக இருந்தவர்கள், மிக முக்கியமானவர்கள். கவிஞர் மு. மேத்தா ‘சோழ நிலா’ எழுதி பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தார். எங்கு பார்த்தாலும் ஆனந்தவிகடன் பரிசு பெற்ற நாவல் என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அவர்தான் எங்களுடைய பேராசிரியர் என்றால் எப்படி இருக்கும்? பொன். செல்வகணபதி என்னுடைய பேராசிரியர். தமிழறிஞர் இலக்குவனார் மகன் மறைமலை ஐயா என்னுடைய பேராசிரியர். டாக்டர். இளவரசு ஐயா என்னுடைய பேராசிரியர். இப்படி அங்கே ஒரு அருமையான தமிழ் சூழல் இருந்தது.

இந்தப் பக்கம் அறிவியல் மாணவன், இயற்பியல் கருவிகளை வைத்துக்கொண்டு அளவீடுகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். சர். சி. வி. ராமன், சந்திரசேகர் என மாநில கல்லூரியில் பணியாற்றிய இரண்டு பேராசிரியர்கள் நோபல் விருது பெற்றவர்கள். அவர்களும் இயற்பியல் துறையைச் சேர்ந்தவர்கள். அந்தப் பக்கம் தமிழ் சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும். அவ்வை நடராசன் வந்து பேசுவார். திடீரென்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து போனார் என்பார்கள். தமிழறிஞர்களுடன் அப்போது அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. மாநிலக் கல்லூரிக்கு வந்து போயிருக்கிறார். இப்படி அறிவியல் பெருமையும் தமிழ் உணர்வுவாக நான் வளர்ந்தேன். இன்றைக்கும் நான் ஒரு அறிவியல் புனைகதைகள் எழுதுவதற்கும் தமிழில் இலக்கியங்கள் படைப்பதற்கு மாநிலக் கல்லூரியின் பின்புலம் காரணம்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்த என் தந்தை டாக்டர் மு. வ.வின் மாணவர். அ.ச. ஞானசம்பந்தன், அன்பழகன் என முக்கியமான தமிழ் பேராசிரியர்கள் எல்லாம் அப்பாவுக்கு பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அப்பாவும் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். நிறைய தமிழ்க் கவிதைகள் எழுதியிருக்கிறார். முடிக்கப்படாத இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். நிறைவேறாத அப்பாவின் கனவுகளின் ஒரு பகுதியாகத்தான் நான் எழுதுவதைப் பார்க்கிறேன். அவருடைய தொடர்ச்சியாக என்னை எப்போதும் நினைப்பேன். அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகிற பொறுப்பைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என நினைத்துக்கொள்வேன். நாம் ஒரு சமூகப் பொறுப்பை உணர்கிறோம். மு. வ.வின் காலக்கட்டம் வேறு, நாம் எழுதிக்கொண்டிருக்கும் காலக்கட்டம் வேறு என்றபோதிலும் நான் எழுதுவதை அப்பாவின் கனவினுடைய நீட்சியாகத்தான் நினைக்கிறேன்.

என்னுடைய கிராமம் ஜெகன்னாதபுரம். என்னுடைய அம்மாவிடைய ஊர். அப்பாவுடைய அப்பா-அம்மா இறந்துவிட்டார். அதனால் அம்மாவினுடைய ஊரில்தான் பெரும்பாலும் நான் இருப்பேன். என்னுடைய ‘வெட்டுப்புலி’ நாவலின் மையம் அதுதான். அங்கே இருந்துதான் நாவல் கிளைக்கும். திருவள்ளுவர் மாவட்டம் முழுக்க வேறோடும். கிட்டத்தட்ட சென்னை வரை வேறொடுகிற நாவலாக அதை படைத்தேன். அந்த ஊரின் மீது எனக்கிருந்த ஈடுபாடும் அந்த மக்களும் என்னை எழுதத் தூண்டிய காரணங்கள்.

என்னுடைய மனைவி பெயர் திலகவதி. இரண்டு குழந்தைகள் எங்களுக்கு. மகன் பெயர் மார்க்சிம். மார்க்சிம் கார்கி என்ற எழுத்தாளரின் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டினோம். மகள் அஞ்சலி. இருவருமே மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டார்கள். மகன் விஜய் டிவியின் ‘நியா நானா’ நிகழ்ச்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

“ ‘வெட்டுப்புலி’ சினிமாவை உள்ளடக்கி, வரலாற்றை உள்ளடக்கி, சென்னை-செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டங்களை பதிவு செய்த முதல் நாவல். திராவிட இயக்க வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தீர்களா?”

“நான் படித்த பல நாவல்களில் திராவிட இயக்கம் இருந்ததாக எங்கேயும் ஒரு பதிவுகூட இல்லை. நாவல்களில் அப்படி பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்கலாம். அப்படி அவசியம் இல்லைதான். ஆனால் கல்கி ‘அலையோசை’ நாவல் எழுதுகிறார். சி.சு. செல்லப்பா ‘சுதந்திர தாகம்’ என எழுதுகிறார். எழுதுவதற்கான விஷயமாக அதை நினைத்து எழுதுகிறார்கள் இல்லையா? தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலில் கதாநாயகன் பாபு, கும்பகோணத்தில் அமர்ந்திருப்பார், அப்போது அங்கே ஒரு பூங்காவில் காந்தி பாட்டு ஒலித்துக்கொண்டிருந்து, அதைப் பற்றி கதாநாயகன் சிந்திப்பதாக எழுதுகிறார். வரலாற்று ரீதியான பதிவு இது. இந்த இயக்கம் 1916ல் தென்னிந்திய நல உரிமை சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, ஜஸ்டிஸ் பார்டியாகி, திக.வாகி, திமுக.வாகி, அதிமுக.வாகி போய்க்கொண்டே இருக்கிறது. நூறு வருடமாக இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் ஒரு இடத்தில்கூட அது பதிவாகவில்லை. ‘வெட்டுப்புலி’ நாவல் எழுதுவதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தது இதுதான்.

திராவிட இயக்க வரலாற்றை வலிந்து சொல்லவேண்டும். ஒரு திக குடும்பத்தையே மையக் கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டால் நமக்கு வசதியாக இருக்கும் என நினைத்தேன். அந்தக் குடும்பத்தில் எப்படி பேசுவார்கள், அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கும். பெரியாரை, அண்ணாவை அவர்கள் எப்படி கொண்டாடுவார்கள்? கலைஞர் வசனத்தில் ‘மனோகரா’ படம் வருவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என ஒவ்வொன்றையும் அதைத்தொட்டே சொல்ல நினைத்தேன்.

இன்னொன்று…எப்படி தீண்டாமை மனிதர்களிடம் இருக்கிறதோ, அதுபோல மாவட்டங்களிலும் இருக்கிறது என நினைக்கிறேன். திருவள்ளூர் என்றொரு மாவட்டம் இருப்பதே பலருக்குத் தெரியாது. மதுரை என்று சொன்ன உடனே, வைகை, மீனாட்சி அம்மன் கோயில் என்பார்கள். நெல்லை என்றால் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில், அங்கு 15 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். கோவைக்கு, திருச்சிக்கு பெருமைகளை பட்டியலிடுவார்கள். தஞ்சாவூர் என்றால் ஒரு பெரிய எழுத்தாளர்களின் பட்டியலே வரும். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறதா என்றே பலரும் கேட்பார்கள்.

இந்தத் திருவள்ளூர் மாவட்டம்தான் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். முன்னோடி தொல்லியல் அறிஞர் ராப்ர்ட் ப்ரூஸ் ஃபுட், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகைகளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் அங்கே வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டுபிடிக்கிறார். பேலியோ லித்திக் காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்களை குவியல் குவியலாக கண்டெடுக்கிறார் அவர். இவையெல்லாம் முதுமனிதன் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்கிறார் ஃபுட்.

ஆப்பிரிக்காவில் முதல் மனிதனின் எலும்பு கூடு என இரண்டு லட்சம் வருடங்களுக்கு முந்தைய எலுக்குகூடு கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இங்கே எலும்பு கூடுகள் கிடைக்கவில்லை. ஆயுதங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இமயமலைக்கு வயது 20 லட்சம் வருடங்கள் என சொல்கிறார்கள். கோண்டுவானாவிலிருந்து துண்டாகி, ஆசியாவின் ஒரு பகுதியில் மோதி இமயமலை உருவாகிறது. ஆனால் குடியம் பகுதியில் இருக்கும் குன்றின் வயது பல கோடி வருடங்கள். கோண்டுவானாவிலிருந்து துண்டாகிவந்த மலை இது. இங்கே ஆதிமனிதன் வாழ்ந்த 16 மலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இரண்டே இரண்டு மலைகளில்தான் ஆய்வு நடந்திருக்கிறது. 1850ல் ஃபுட் அங்கே ஆய்வு செய்தார். இன்னும்கூட அவருடைய முழுமையான ஆய்வறிக்கை நம்முடைய தொல்லியல் துறையால் வெளியிடப்படவில்லை. அங்கே கிடைத்த கருவிகளை எடுத்து வைத்திருக்கிறார்களே தவிர, மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தப்படவில்லை. தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சாந்தி பப்பு என்பவர் 16 லட்சம் வருடங்களுக்கு முன்பு முதுமனிதர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார். ஹீமோ எரக்டஸ் மக்கள் இங்கே வாழ்ந்திருக்கலாம் என்கிறார் அவர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கீழடியில் அகழ்வாய்வு நடக்கிறது. அதை சொல்லும்போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய என்றுதான் சொல்வார்கள். எல்லாவற்றையும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாகவே நினைத்துக்கொள்வார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எத்தனை முன்னிறியதாக இருந்திருக்க வேண்டும்?

குகைகளில் வாழ்ந்த மனிதர்கள், சமுதாயமாக வாழத்தொடங்கி, குடியிருப்புகள் கட்டி, கழிவுநீர் கால்வாய் அமைத்து, தெருக்கள் அமைத்து, குழந்தைகள் விளையாட பொம்மைகள் செய்து கொடுத்த சமூகமாக வளர்த்திருக்கிறது. பல ஆயிரம் வருடங்களாக மெல்ல, மெல்ல வளர்ந்த சமூகமாக அது இருந்திருக்கிறது என்பதை இவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்றால் இரண்டு லட்சம் வருடம் என நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழடியில் ஒரு ஏக்கரில்தான் அகழாய்வு செய்திருக்கிறார்கள். அங்கே 130 ஏக்கர் அளவுக்கு நகரம் புதைந்து கிடக்கிறது என்கிறார்கள். கீழடிக்கு முன்பு ஆதிச்சநல்லூர் கிடைத்தது. 15-20 ஏக்கரில் மனிதர்களை புதைத்த இடத்தை மட்டுமே அகழாய்வு செய்தார்கள். அப்படியென்றால் அவர்கள் வாழ்ந்த குடியிருப்பும் அருகில் தான் இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிறது ஆதிச்சநல்லூர். இடுகாடு இருந்த இடத்திலேயே குடியிருப்புப் பகுதியும் இருந்திருக்க வேண்டும். அது தெரிந்த உடனே அகழாய்வுப் பணிகளை நிறுத்திவிட்டார்கள்.
தொடர்ந்து அகழாய்வுகள் நடத்தப்படுவதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்துவிடும் என நினைக்கிறார்களோ என்னவோ? சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 1920களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்துவந்தன. எப்போது சிந்துசமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம், அங்கே கிடைத்த எழுத்துகள் தமிழ் தொடர்புடைய எழுத்துகளாக இருக்கின்றன என சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. தொல்லியல் துறையில் நடக்கிற சதி போலத்தான் இது தெரிகிறது. பூம்புகார் மூழ்கிவிட்டது. அங்கே பெரிய நகரமே மூழ்கியுள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன என தெரிந்தும் அதை மேற்கொண்டு ஆராயவில்லை. இவையெல்லாம் ஆரியர்களின் நாகரிகமாக இருக்கும் என சொன்னால் ஒருவேளை ஆராயப்படலாம். திராவிட நாகரிகம் என சொன்னால் உடனே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஆய்வு மனப்பான்மை உள்ள சமூகத்துக்கு இது நல்லதல்ல.

நான் சொல்லவந்துது இதுதான்… குடியம் குகைகள், இந்தியாவிலேயே பழமையானவை. அது திருவள்ளூர் மாவட்டத்தில்தான் இருக்கிறது என்பதையே! அதேபோல கொசஸ்தலை ஆற்றின் கரைகளில்தான் அதிராம்பாக்கம் இருக்கிறது. அதிராம்பாக்கத்திலும் நிறைய கற்கருவிகள் கிடைத்தன. இந்த ஆற்றின் கரையில் இருக்கும் ஜெகன்னாதபுரம் கிராமத்தில்தான் ‘வெட்டுப்புலி’நாவல் ஆரம்பிக்கும்.”

“தினமணி பத்திரிகையில் அப்போது உங்களுக்கு ஆசியராக இருந்த இராம. சம்பந்தன் குறித்து பல நேரங்களில் பேசியிருக்கிறீர்கள். அந்தளவுக்கு தனிப்பட்ட முறையில் தாக்கத்தை ஏற்படுத்தினாரா?”

“ஒரு பத்திரிகையாளராக அவர் மிகவும் முக்கியமானவர் என நினைக்கிறேன். ஃபயர் பேண்ட் என்பார்களே அப்படியான ஆசிரியர் அவர். சின்ன சின்ன பத்திரிகையில் பணியாற்றினாலும்கூட, அங்கே நண்பர்கள் போன்ற பணிச்சூழல்தான் இருந்தது. தினமணிக்கு வந்த பிறகுதான், அவர் செயல்பாடுகளைப் பார்த்தேன். அவர் எத்தனை நேர்த்தியாக ஆசிரியர் பணியை செய்கிறார், ஒரு சிறு பிழை கண்டுவிட்டால்கூட எப்படி துடிக்கிறார் என்பதைப் பார்த்தேன். அதுமில்லாமல் அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆசிரியரைப் பார்க்க அலுவலகம் வந்தார், அவர் பெயர் வேண்டாம். ஆசிரியருக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஆசிரியரை சந்திக்க வருகிறவர்கள். பழங்கள், இனிப்புகள் என வாங்கிக்கொண்டு வருவார்கள். ஆசிரியர் மேசையில் இருக்கும் அவற்றை ஆசிரியர் குழுவில் உள்ள எல்லோரும் எடுத்து உண்போம். அப்படித்தான் அரசியல் தலைவர் கொடுத்த பரிசை நானும் என் நண்பரும்தான் பிரித்தோம். அந்த பரிசுப் பெட்டியில் அழகான தங்க செயின் ஒன்று இருந்தது. அதை ஆசிரியரிடம் சொன்னோம். அதைப் பற்றி மேற்கொண்டு என்ன வென்றுகூட ஆசிரியர் கேட்கவில்லை. உடனே வாயில் காவலரை போனில் அழைத்து, வெளியேறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதியை மேல வரச்சொன்னார். அந்த செயினை கைவிரலில் பிடித்து சுற்றிக்கொண்டே அறைக்கு வந்த அரசியல்வாதியிடம்,‘என்னை கேவலப்படுத்த இங்கே வந்தீர்களா?’ எனக் கேட்டார். அவரோ, ‘இல்லை இது அன்புப் பரிசு’ என்றார். ‘அன்பு என்றால் மறைத்துதான் தருவீர்களா?’ என அவரிடம் விட்டேறிந்தார் ஆசிரியர். இந்த சம்பவம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

நேர்மையானவர், சின்சியரானவர், பத்திரிகையை நேசித்தவர். அவர் இறக்கும் நேரத்தில்கூட அவர் தலைக்கு அருகே, தினமணி பத்திரிகை இருந்தது. கேன்சர் வந்து இறந்துபோனார். தினமணியை அந்தளவுக்கு நேசித்தார் அவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.”

“ ‘வெட்டுப்புலி’ நாவலில் திராவிட இயக்கத்துக்காக சாதாரண மக்கள் பலர் உழைத்திருக்கிறார்கள் என்பதை பதிவு செய்துள்ளீர்கள். இதை அங்கீகரிக்கும் வகையில் திமுக ஏதேனும் விருது கொடுத்திருக்கிறதா?”

“திமுக கட்சி ரீதியாக செய்யவில்லை என்றாலும் கட்சியைச் சேர்ந்த பலர் இந்த நாவலைப் படித்துவிட்டு மனப்பூர்வமாக பாராட்டினார்கள். நண்பர் எம். எம். அப்துல்லா போன்றோரை சொல்லலாம். இந்த நாவலை வெளியிட்ட நண்பர் மனுஷ்யபுத்திரன் இப்போது திமுககாரர்தானே. சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள், திமுக அனுதாபிகள் கொண்டாடிய நாவலாக இதைச் சொல்லலாம்.

இன்னொன்று…’வெட்டுப்புலி’ நாவல் 2008-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது வலைத்தளங்கள் மிகவும் பிரபலம்.  இந்நாவல் வந்தவுடனே கிட்டத்தட்ட 80 பேர் இதைப் பற்றி எழுதினார்கள். அது எப்படி நடந்ததென்றே தெரியவில்லை. ஒரு நல்ல படைப்பு, அதற்கான தாங்கு சக்திகளை அதுவாகவே உருவாக்கிக் கொள்ளும். இப்படி தனிப்பட்ட நபர்கள் இந்த நாவலைக் கொண்டாடினார். அடுத்தடுத்த பதிப்புகளும் வெளிவந்தன. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், வண்ணதாசன், கலாப்ரியா போன்ற எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது இது நல்ல படைப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; கொண்டாடினார்கள். இருந்தாலும் இது அடைந்த தொலைவு என்பது குறைவுதான்.

இது எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை என தோழர் தொ. பரமசிவம் சொன்னார். இது முக்கியமானதொரு ஆவணம் என்றால். திருநெல்வேலியில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அவர்தான் தலைமை தாங்கி பேசினார். அரைமணி நேரத்துக்கும் மேலே அவர் பேசியதன் சாரம்.. திராவிட இயக்கத்தைப் பற்றி தமிழில் வந்த முதல் நாவல் இதுதான். நேர்மையாக அந்த இயக்கத்தை பதிவு செய்திருக்கிறார். வெறுமனே துதி பாடலாக இல்லாமல் ஏகப்பட்ட விமர்சனங்களையும் உள்ளடக்கிய, இந்த இயக்கத்தின் தேவை என்ன? என்ன நோக்கத்துக்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது? எப்படி அது இயங்கிக்கொண்டிருக்கிறது? அது எப்படியாக மாற வேண்டிய தேவை உள்ளது என நாவல் பேசுவதாக தொ. பரமசிவம் பேசினார். நான் மிகவும் மதிக்கும் பண்பாட்டு ஆய்வாளர் அவர். அவருடைய கருத்தை முக்கியமானதாக கருதுகிறேன். பிரபஞ்சன், வெளி ரங்கராஜன் போன்றவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கூட கட்சி ரீதியாக கொண்டாடப்படவில்லை.

2014-ஆம் ஆண்டும் திராவிடர் கழகம் தைப்பொங்கல் விழாவின் போது சிறந்த நாவல் என்று சொல்லி, பெரியார் விருது அளித்தார்கள். திமுக ஏன் எதையும் செய்யவில்லை என்ற காரணம் எனக்குத் தெரியாது. திமுகவில் உள்ள எழுத்தாளர் இமையம், இந்நாவல் குறித்தும் என்னைப் பற்றியும் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என எழுதியிருக்கிறார். அதையும் நான் பெருமையாக நினைக்கிறேன்.”

“திராவிட இயக்க செயல்பாடுகளில் ஆர்வம் உள்ள நீங்கள் கோயிலுக்கு செல்வதுண்டா? கடவுள் நம்பிக்கை உண்டா?”

“கோயிலுக்குப் போவேன்; ஆனால் சாமி கும்பிட்டது கிடையாது. தஞ்சை பெரிய கோயிலையோ, கங்கை கொண்ட சோழபுரத்தையோ பார்த்தால் அந்த வரலாறுதான் எனக்கு முதலில் தோன்றும். இந்த சிற்பம் செதுக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்? அரசர்கள் ஏன் இதைக் கட்டினார்கள்? கோயிலைக் கட்டிய உழைப்பாளிகள் யார்? மக்களை சுரண்டி இந்தக் கோயில்கள் கட்டப்பட்டனவா? என பல கோணங்களில் யோசிப்பதுண்டு. அப்பா திமுக அனுதாபி. அவர் முரசொலி மட்டும்தான் படிப்பார். குங்குமம் மட்டும்தான் வாங்குவார்; வேறு இதழ்களை வாங்க மாட்டார். ‘வெட்டுப்புலி’யில் நானும் ஒரு கதாபாத்திரமாக வருவேன். ‘குங்குமம்’ இதழில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, தினமணியில் போய் சேர்ந்துவிடுவேன். அப்பா ரொம்ப கோபப்பட்டார் என எழுதியிருப்பேன். அது உண்மைதான். ஆயிரத்து ஐநூறு சம்பளத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு மாறியிருந்தும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் இதர சலுகைகளை பெற்றபோதும் அப்பாவுக்கு வருத்தம்தான். அதுவரைக்கும் பணியாற்றிய போலீஸ் செய்தி, குங்குமம், வண்ணத்திரை போன்ற பத்திரிகைகளில் எல்லாம் அந்தந்த மாதத்துக்கு ரசிதில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சம்பளம் தருவார்கள். தினமணியில் அரசு ஊழியரைப் போன்ற சலுகைகள் இருந்தன. அந்தப் பெருமையே எனக்குப் பெரிதாக இருந்தது. கோயாங்கா கட்டிடமே பிரமாண்டமாக இருக்கும். பெரிய கேண்டின், வந்து செல்லும் வண்டிகள் என அந்த இடம், நான் இதுவரை பார்த்திராத ஒன்று.

அந்த பரவசத்துடன் பணி மாறியதை வந்து அப்பாவிடம் சொன்னபோது, ‘நீ ஏன் அங்கு போனாய்? நீ கலைஞரிடம் வேலைப் பார்ப்பதைவிட அந்த வேலை முக்கியமா?’ எனக் கேட்டார். தினமணியில் நான் பெறவிருந்த தொகையும் பெரிதுதான். குடும்பச் சூழலுக்கு அது உதவியாக இருக்கும்தான். ஆனாலும், பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் பத்திரிகையில் மகன் போய்விட்டார் என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது. பிறகு, புரிந்துகொண்டார். ஆசிரியர் இராம. சம்பந்தன், உண்மையில் பெரியாரிஸ்ட்; தமிழில் ஆர்வம் உள்ளவர் என்று சொன்னபோது அப்பா ஏற்றுக்கொண்டார்.

அப்பா, பெரியார் பற்றி எனக்குப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியவர். மு.க. அழகிரியின் திருமணத்துக்கு பெரியார் திடலுக்கு அழைத்துச் சென்ற நினைவுகள் பசுமையாக உள்ளன. அந்தத் திருமணத்துக்கு பெரியார்தான் தலைமை தாங்கினார். காமராசர், ஜெகஜீவன்ராம், எம்.ஆர். ராதா என அந்த மேடை முழுக்கவே, இன்று வரலாறாக மாறிவிட்ட மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு என் அப்பாதான் காரணம். அப்போது கலைஞர் மிக எளிமையாக பெரியார் திடலின் நுழைவாயிலில் வருகிறவர்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். முதல்வர் அவர், மிக எளிமையாக இருந்தார். அப்பா அப்போதுதான் மின்சார வாரியத்தில் ஒரு சங்கம் தொடங்கி, கலைஞரை தலைமை தாங்க அழைத்திருந்தார். அதை நினைவில் வைத்திருந்த கலைஞர் வாங்க வாங்க என அழைக்கிறார். இதுதான் பையன் என அப்பா என்னைப் பார்த்து சொல்கிறார். அப்போதுநான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பெரிய மனிதர்கள்; நல்ல மனிதர்கள் இருக்கிற இடத்தை அப்பா காண்பித்திருக்கிறார் என்பதுபோல என் மனதில் பதிந்துவிட்டது.

பெரியார் எல்லாவற்றையும் மறுதலிக்கிற மனிதராக இருந்தார் என அப்பா சொன்னார். மனிதர் சக மனிதரை ஏன் சமமாக நடத்தவில்லை என்பதை அவர் முதன்முதலில் வைத்த கேள்வி. மதங்கள், வர்ணாசிரமம், அதற்கு பின்னால் இருக்கும் கடவுள் கற்பிதங்கள் என ஒவ்வொன்றாக ஒதுக்குகிறார். அதேசமயம் தமிழர்கள், திராவிடர்கள் என்பனவற்றையும் கொண்டாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மொழி, இனம் அடையாளத்தையும் விட்டுவிட வேண்டும், மனிதனாக மட்டும் இருக்க வேண்டும் என்றார். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஆரியர்களை எப்படி வெறுத்து பேசினரோ அதுபோல திராவிடர்கள் ஒருவேளை இன்னொரு மனிதனை தீண்டத்தகாதவராக நினைத்தால் அவரையும் எதிர்க்கும் முதல் ஆளாக இருப்பேன் என்றார் பெரியார்  . அதனால்தான் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. திராவிட வெறியோ, தமிழ் வெறியோ அவருக்கு இருந்ததில்லை. அவர் எல்லோரும் சமமாகவே இருக்க விரும்பிய மனிதர். அதனால்தான் என்னுடைய கதைகளிலும் எழுத்திலும் பெரியார் பார்வையை வைத்து எழுதுகிறேன். ”

திருவள்ளூர் போன்ற பிற்படுத்தப்பட்ட மாவட்டத்திலிருந்து, திராவிட இயக்க சிந்தனையோடு, எந்தவொரு கட்சியும் ஆதரிக்காத தனி எழுத்தாளனாக இருப்பதாலோ என்னவோ பெரிதாக என்னுடைய நாவல்கள் கொண்டாடப்படவில்லை. ஆனால் வாசகர்கள் கொண்டாடினார்கள்.

“கல்லூரி முடித்த காலத்தில் அன்றைக்கு இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், மாணவர்களை முன்னிலைப்படுத்தி ‘மானுட பண்ணை’ நாவலை எழுதியிருந்தீர்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வரலாற்று நாவல் என்கிற அடையாளத்துடன் ‘வெட்டுப்புலி’ வந்தது. நடுவில் ஏன் இத்தனை கால இடைவெளி…”

“ ‘மானுட பண்ணை’ வந்த காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது. அன்றைய சினிமாக்கள் ‘நிழல்’,’வறுமையின் நிறம் சிவப்பு’ என இதை மையப்படுத்தி சினிமாக்களும் வந்தன. அவையெல்லாம் இப்போது நகைச்சுவையாகத் தோன்றுகிறது. ஏதோ ஒரு வேலைக்குப் போக வேண்டியதுதானே என்கிற கேள்வி இப்போது வருகிறது. உலகமயமாக்கள் ஏதோ ஒரு விதத்தில் நன்மையளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சரியான ஊதியம் கிடைக்கிறதா, நிரந்த வேலை கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். ஆனால் ஏதோ ஒரு வேலையை எல்லோரும் செய்கிறார்கள். யாரும் சும்மா இருப்பதில்லை. அந்த காலத்தில் அப்படியில்லை. தாடியை வளர்த்துக்கொண்டு, குட்டிச்சுவற்றின் மீது அமர்ந்துகொண்டு வேலையில்லா பட்டதாரி என சொல்லிக்கொண்டு, வீட்டில் தண்டச்சோறு என சொல்வார்கள் என்கிற நிலைமையெல்லாம் இப்போது இல்லை.

நான் ‘மானுட பண்ணை’ எழுதிய போது ஏராளமானவர்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். வீட்டில் அப்பா-அம்மா தினமும் ஏசுவார்கள். இளைஞர்கள் படித்திருப்பார்கள், எங்கே போவது, என்ன வேலை செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ரேசன் கடைக்கு அனுப்புவார்கள். அங்கு போனால் காலையிலிருந்து மாலை வரை வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். மிகத் துயரமான காலகட்டம். பிடி,சிகரெட் பிடித்துக்கொண்டு டீ குடித்துவிட்டு இளைஞர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள். அதை பதிவு செய்வததாக என்னுடைய ‘மானுட பண்ணை’ நாவலும் இருந்தது, ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ என்ற நாவலும் பேசியது. 1989ல் மொத்தத்தில் சுமாரான வாரம் வெளியானது. அசோகமித்திரன் ‘கணையாழி’ஆசிரியராக இருந்தார். பென்ஸ் சாலையில் ஒரு அச்சகம் இருந்தது. அங்கே மை பூசியபடி ஆட்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அங்கே தான் கணையாழி அலுவலகம். அசோகமித்திரனை அங்கே சந்தித்து கதையை கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு, கணையாழி அது பிரசுரமானது. கணையாழி நடத்தில் குறு நாவல் போட்டியில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் நாவல்களுடன் இந்த நாவலும் தேர்வாகி பிரசுரமானது. அந்த நாவல் குறித்து அசோகமித்திரனுடன் எப்போது பேசினாலும் நினைவிருப்பதாக சொல்வார்.

‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ நாவல் வித்தியாசமான முயற்சியாக செய்திருந்தேன். ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு தலைப்பு தந்திருப்பேன். ஞாயிற்றுக்கிழமையில் கதை ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமையில் தூர்தஷனில் திரைப்படம் போடுவார்கள். காலையிலிருந்தே அன்று மாலை ஒளிபரப்பும் படம் குறித்துதான் பாத்திரம் துலக்கிக் கொண்டும், துணி துவைத்துக்கொண்டும் பெண்கள் பேசிக்கொள்வார்கள். நடுநடுவே வேலைத்தேடும் இளைஞனின் பாடுகளையும் சொல்வேன். திங்கள் கிழமை என்றால் அதற்கான முக்கியத்துவம் என்ன? என ஏழு கிழமைக்கு ஒரு கதையை சொல்லியிருப்பேன். நிறைய பேர் அந்த நாவலை பாராட்டினார்கள். சமீபத்தில் இளைய பெருமாள் என்ற ஆய்வாளர் ‘கணையாழி குறுநாவல்கள்’ என்ற பெயரில் தன்னுடைய ஆய்வை நூலாக்கியிருந்தார். நாமும் கூட நாவல் எழுதியிருந்தோமே என அந்த நூலை புரட்டியபோது, ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ குறித்து பிரமாதமாக எழுதியிருந்தார்.

நண்பர் கவிதா பாரதி சொன்னார் ‘வேலையில்லா பட்டதாரி’ கதை ‘மானுட பண்ணை’ போலவே இருக்கிறதென்று. அந்தக் கதையிலும் நாயகம் சிவில் இன்ஜினியர், கட்டடம் கட்டுவதாக கதை போகும். அதனால் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். ‘மானுட பண்ணை’ முக்கியமான நாவல். நாவலுக்கு பிரபஞ்சன் பிரமாதமான முன்னுரை எழுதியிருந்தார். கலாபூர்வமாகவும் கதாபூர்வமாகவும் எழுதப்பட்ட நாவல் என்று எழுதியிருந்தார். பிற்காலத்தில் இளைஞர்களின் கையேடாக இருக்கும் எனவும் எழுதியிருந்தார். படிக்கும்போது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ என இதயம் பேசுகிறது இதழில் ஒரு தொடர்கதை எழுதினேன். அதன் பிறகுதான் மானுட பண்ணை, பிறகு மொத்தத்தில் சுமாரான வாரம். ஒவ்வொன்றுக்கும் கால இடைவெளி அதிகம். காரணம் பத்திரிகையாளராக இருந்ததுதான்.

திருவள்ளூர் போன்ற பிற்படுத்தப்பட்ட மாவட்டத்திலிருந்து, திராவிட இயக்க சிந்தனையோடு, எந்தவொரு கட்சியும் ஆதரிக்காத தனி எழுத்தாளனாக இருப்பதாலோ என்னவோ பெரிதாக என்னுடைய நாவல்கள் கொண்டாடப்படவில்லை. ஆனால் வாசகர்கள் கொண்டாடினார்கள். கொண்டாடப்படவில்லை என்பது தேசிய அளவில் போகவில்லை, சாகித்ய அகாடமி விருது பெறவில்லை என்பதைத்தான்”.

“அரசுகளின் செயல்பாடுகளை கண்டிக்கும் பொருட்டு எழுத்தாளர்கள் சாகித்ய விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?”

“சாகித்ய விருதுகள் மொழிக்கு தரப்படும் அங்கீகாரம். நம்முடைய கண்டனத்தை சொல்வதற்கு இத்தகைய செயல்பாடுகள் பயன்படலாம். கண்டனத்தை விருதை திரும்பத் தந்துதான் சொல்ல வேண்டும் என்பதில்லை. இங்கே இருக்கிற நிறைய எழுத்தாளர்கள் திரும்பத்தரவில்லை. பிரபஞ்சன், வண்ணதாசன் உள்பட. நாம் அவர்களையெல்லாம் குறை சொல்வதுபோல இருக்கும். கொடுக்க வேண்டும் என்கிற அவசியல் இல்லை. ஆனால் கண்டித்திருக்கலாம். இது இந்திய மொழிகளுக்குத் தரக்கூடிய அங்கீகாரம் திரும்பத்தருவதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. வாங்கிய விருதை தருவதல்ல நோக்கம், அரசை கண்டிப்பதும், அரசுக்கு சுட்டிக்காட்டுவதுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”

“தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”

“புதுமைப்பித்தன். அவர் கதைகளில் நையாண்டி வரிக்கு வரி இருக்கும். திராவிட இயக்கத்தைப் பற்றி இலக்கிய பதிவுகள் இல்லையென்று சொன்னேன் இல்லையா..? புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறார். “நீ என்ன சுயமரியாதை கட்சிக்காரனா?” என்ற ஒரு வரி அவருடைய கதையில் வரும். புதிய நந்தன் என்ற ஒரு கதையில் காந்தியவாதம் பெரிதா பெரியாரியம் பெரிதா என்பதே கதை. இதை ஒரு கதைக்களமாக எழுத அவரால் மட்டுமே முடியும். அதனாலேயே அவரை எனக்குப் பிடிக்கும். அப்புறம் கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. மௌனி ஆகியோரை படித்து வந்தாலும்கூட எனக்கு அடுத்து தடாலென வந்து இறங்கியது சுஜாதாவின் எழுத்துதான். அவர் தொடாத துறையே இல்லை. அவர் மேலோட்டமாக எழுதினார் என்பதே குறையாக இருந்ததே தவிர, அவர் பரவலாக நிறைய எழுதினார். ஆழம் குறைவு; பரந்து விரிந்த அகலம் அவருடைய எழுத்து. தலைமைச் செயலகம் என மூளையைப் பற்றி எழுதினார். ஏன்? எதற்கு எப்படி? எழுதினார். கற்றதும் பெற்றதும் என புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். ஆறு பெரிய வார இதழ்களிலும் தொடர்கள் எழுதினார். பெரிய சாம்ராஜ்ஜியமே நடத்தினார்”.

“உங்களுடைய எழுத்து பிரபஞ்சனையும் சுஜாதாவையும் நினைபடுத்துவதாக வாசகனாக உணர்கிறேன்”

“உண்மைதான். சொல்லவதை அழகாக, நாகரீகமாக சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அவருடைய எழுத்தில் சுஜாதாவின் சின்ன சின்ன கிண்டல்கள் சேர்த்தேன்.

அ.முத்துலிங்கத்தின் ஆங்கில கலப்பற்ற நடை, புதிய உலகத்தை நமக்குக் காட்டும் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர்கள் இல்லாத பாகிஸ்தானில் ஒரு கதை நிகழ்விடத்தை அமைப்பார். செவ்வாய்கிழமையில் ஆரம்பிக்கிற கதை திங்கள் கிழமையில் வந்து முடியும். அதாவது முந்தைய நாளில் வந்து முடியும். உலகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விமானத்தில் கதை பயணித்துக்கொண்டிருக்கும். இந்த விஷயங்களே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கதைக்குள் கொண்டு போகும். அதை மிகவும் விரும்புகிறேன்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியலை சொல்ல வேண்டுமென்றால்… புதுமைப்பித்தன். தி.ஜ., சுஜாதா, முத்துலிங்கம் என வைத்துக்கொள்ளலாம். பாதிப்பு என்று பார்த்தீர்கள் என்றால், பிரபஞ்சன் என்னை அதிகமாக பாத்தித்தவர். நான் தினமணியில் பணியாற்றியபோது தினமணி கதிரில் வந்த ‘வானம் வசப்படும்’ தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் அச்சுக்கு போகும் முன்பே படித்துவிடுவேன். அந்த அளவுக்கு அவர் என்னை பாதித்தவர். நல்ல நண்பரும்கூட.”

“அறிவியல் புனைகதை எழுத ஆரம்பித்தது பற்றி…”

“முன்பே சொன்னதுபோல நான் அறிவியல் மாணவன். அறிவியல் மீது ஆர்வம் கொண்டவன். அறிவியலாளராக இருக்கும் என்னுடைய நண்பரின் உதவியும் எனக்கு அறிவியல் புனைகதைகள் உருவாக்க உதவியாக இருக்கிறது. வரலாற்று நாவலான ‘வெட்டுப்புலி’யையும் அறிவியல் புனைகதையான ‘ஆபரேஷன் நோவா’யையும் இணைத்ததுபோல ஒரு நாவலை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ என்பது அந்நாவலின் பெயர். இந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட திட்டம், பார்க்கலாம்!.”

“சமீபத்தில் வந்தது ‘தாரகை’ ஜெயலலிதாவின் கதை என்று பேசப்பட்டதே?”

“அரசியலுக்கு வருவதற்கு சினிமாவில் நடிப்பதை ஒரு பாதையாக நினைக்கிறார்கள் இல்லையா..? எப்படி ஒரு நடிகை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார் என்பதை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதாவின் கதை என்று சொல்ல முடியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கும் இந்தக் கதை பொருந்தும்.”

“தமிழ் சினிமாவை அழித்தது திராவிட கட்சிகள்தான் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?”

“நாதா…சுவாமி என திரைப்பட கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருந்த காலம் அது. ‘சந்திரலேகா’ படத்தில் மன்னனான ரஞ்சன் கேட்பார், ‘அவாளெல்லாம் வந்துட்டாலா?” என்று. ‘மனோகரா’ படத்தைப் பாருங்கள். ‘திருத்திக்கொள்ளுங்கள், அழைத்து வரவில்லை…இழுத்து வந்திருக்கிறீர்கள்’ என்று பேசிக் கேட்டபோது நெருக்கமாக இருந்தது. நாடகத்திலிருந்து சினிமா வந்த காரணத்தினால் வசனங்கள் அதிகமாக இருந்தன. அந்தக் காலக்கட்டதில் வந்த ஆங்கில படங்களில்கூட பெரிய பெரிய வசனங்கள் இருந்தன. திமுகவினர் ஆங்கிலப்படத்தையும் சேர்த்து அழித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ரோமியோ ஜுலியட்’, ‘பென்ஹர்’ படங்களைப் பாருங்கள்,  வசனங்கள் அதிகமாகவே இருக்கும். உலகம் முழுவதுமே இந்த நிலைமைதான்.

‘அவாள்; இவாள்’ என்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் நல்ல தமிழை கொண்டுவந்தது திராவிட இயக்கத்தார்தான். அது மக்களிடமும் எதிரொலித்தது. மக்கள் நல்ல தமிழை பேச ஆரம்பித்தார்கள். மந்திரி என சொல்லிக்கொண்டிருந்ததை, அமைச்சர்கள் என்று சொல்லத்தொடங்கினார்கள். இது திமுக காலத்தில் வந்த வசன புரட்சியாகவே பார்க்கிறேன்.

தோளில் துண்டுபோடும் உரிமைகூட சிலருக்கு ஒரு காலத்தில் இல்லை. அந்த நேரத்தில் பொன்னாடை போர்த்தும் வழக்கத்தை அரசியல் மேடைகளில் அறிமுகப்படுத்தியது திமுகதான். இப்போது நமக்கு அது கேலியாகத் தெரியலாம். ஆனால், உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் அந்த உரிமையைப் பெற்றுதந்தது திமுக.

திராவிட கட்சிகள் இல்லையென்றால் நல்ல தமிழ் பேசவும், தோளில் துண்டு அணியும் உரிமை கிடைக்கவும் இன்னும் காலம் தேவைப்பட்டிருக்கும். இந்த மாற்றத்துக்கு திமுக காரணமாக இருந்தது. உடனடியாக 2 ஜியை வைத்து ஒட்டுமொத்தமாக திமுகவை எடை போட்டுவிட முடியாது. அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்தது என சொன்னார்கள். இப்போது ரூ. 200 கோடி வரைக்கும் ஊழல் நடந்திருக்கலாம் என சொல்லுகிறார்கள். ஊடகங்கள் எவ்வளவு மிகைப்படுத்தி கூறின? 200 கோடி ஊழல் செய்ததற்காவது ஆதாரங்களை கொடுங்கள் என்றுதான் ஆ. ராசா சொல்கிறார். இந்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மக்களுக்கு நன்மைதான் கிடைத்தது. இப்போது எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், திமுகவின் தவறுகளை மிகைப்படுத்துகிற ஊடகங்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை சொல்லுவதில்லை. சாதிப்பெயரை சொல்ல நாம் எவ்வளவு கூச்சப்படுகிறோம்? வெளி மாநிலங்களில் பாருங்கள்… அம்மாநில ஆட்சியாளர்கள்கூட சாதி பெயரை தவிர்ப்பதில்லை. ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்றேதான் அறியப்படுகிறார். ஜோதி பாசுவின் பெயரிலும்கூட சாதிப்பெயர் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது. நமக்குள்ளுமே சாதி இருந்தாலும்கூட, வெளிப்படையாக சாதியை பொதுவெளியில் சொல்லக்கூச்சப்படுகிறோம் இல்லையா? அதற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம்.”

.

“மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்

அமுதன் ராமலிங்கம் புஷ்பம் (46 வயது)  பரவலாக அறியப்பட்ட ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர். ஆவணப்படங்களை இயக்குதல், திரையிடுதல் , கல்லூரிகளில் வகுப்பு எடுத்தல், பயிலரங்குகள் நடத்துதல் என்பதை முழுநேரப் பணியாக செய்துவருபவர். மதுரையைச் சார்ந்த இவர் இப்போது சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். த டைம்ஸ் தமிழுக்காக ஆர்.பி. அமுதனுடன் பீட்டர் துரைராஜ் நடத்திய நேர்காணல் இது.

கேள்வி: ஆவணப்படங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

பதில்: என் அப்பா ஒரு கம்யூனிஸ்டு , அம்மா தீவிர எம்ஜிஆர் ரசிகை. இது போதாதா ? இரண்டு பேரின் கலவைதான் நான். என் வீட்டில் தோழர்கள் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். எட்டாவது படிக்கும் போதே நான் சினிமா இயக்குநராவேன்  என்றுதான் சொன்னேன் . 1994  ல் நான் கல்லூரியில் எம்.ஏ. படிக்கும்போது  BBC எடுத்த Children of Chernobyl  என்ற படத்தை திரையிட்டேன்.

கே: உங்களுக்கு முன்னோடி என்று யாராவது இருக்கிறார்கள்?

பதில் : தில்லியில் செண்டிட் என்ற அரசு சார்ந்த அமைப்பு 5 நாட்கள் ஆவணப்பட பயிலரங்கம் நடத்தியது.. அதில் 25 ஆவணப்படங்கள் திரையிட்டனர்; விவாதித்தோம். பிறகு இரண்டு ஆண்டுகள் தில்லியில் பயிற்சி எடுத்தேன். இதுதான் நான் ஆவணப்படம் எடுக்கக் காரணமாயிற்று.

amudhan RP
ஆர்.பி.அமுதன்

கே: நீங்கள் இயக்கியுள்ள  ஆவணப்படங்கள் பற்றி சொல்லுங்களேன்!

ப: மார்க்சிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் படுகொலையை மையப்படுத்தி லீலாவதி என்ற ஆவணப்படத்தை நான் முதலில் 1997 ல்  இயக்கினேன். அடுத்த ஆண்டு குண்டுப்பட்டி தலித்துக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையை பற்றி  ” தீவிரவாதிகள் ” என்ற படம் இயக்கினேன். மரணதண்டனைக்கு எதிரான “தொடரும் நீதிக் கொலைகள் “, திருப்பூர் நகரைப்பற்றி கடந்த ஆண்டு ” டாலர் சிட்டி “என 19 ஆவணப்படங்கள் இதுவரை இயக்கி உள்ளேன். இப்போது ” என் சாதி ”  என்ற படம் எடுத்து வருகிறேன். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்  இந்த துறையில்  நான் ஒரு முக்கியமான முன்னோடி என்று சொல்லலாம்.

கே: ஆவணப்படங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்களா ?

ப : ஆவணப்படம் சொல்லும்  செய்தி என்பது எளிமையானது; ஆழமானது; தல மட்டத்தோடு தொடர்பு கொண்டது( local ness) ;நேரடியானது;நாணயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில்  சுயாதீனமான அரசியல் படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது ஆரோக்கியமானது. 2003 ல் நான் எடுத்த ” பீ ” ஆவணப் படத்திற்கு மதுரை மாநகராட்சி நல்ல எதிர்வினை ஆற்றியது. ஆணையாளராக இருந்த கார்த்திக் பொதுக் கழிப்பிடங்களின் பாராமரிப்பை சுய உதவிக் குழுக்களிடம் கொடுத்தார். பல இடங்களில் தமுஎகச இதனை திரையிட்டது; அப்படி திரையிட்டதே சில சமயங்களில் பின்னர்தான் எனக்கு தெரியவரும். இந்தப் படத்தினால்  துப்புரவு தொழிலாளர்களின் நிலை குறித்த விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இது ஒரு முன்முயற்சி என்று சொல்லாம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 80ம் ஆண்டு விழா பம்பாயில் நடைபெற்ற போது அதில் அரைநாள் நிகழ்வை திரைப்படங்களிற்காக ஒதுக்கி இருந்தார்கள். அதில் இந்தப்படத்தையும் ஆனந்த் பட்வர்தன் பரிந்துரையின்பேரில்  திரையிட்டார்கள். நான் இய