அஞ்சலி: இயக்குநர் அருண்மொழி

இயக்குநர் அருண்மொழி கடந்த சனிக்கிழமை (9-9-2019) அன்று காலமானார். தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது அருண்மொழியின் பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்‘ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் ‘காணிநிலம்‘ எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் ‘ஏர்முனை‘ எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்…

நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55நிமிட படமிது.

பண்ணை வேலையார் ‘சோடாமாணிக்கம்’, காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று…

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

மூன்றாவது இனம் :

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா – 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் ‘நூரி’யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த ‘ஆஷா பாரதி’ எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

‘இரண்டாம் பிறவி’ (1998) ‘கூடவாகம்’ (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி ‘தோழி‘ எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions :

1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது ஆர்.ஆர்.சீனிவாசனின் ‘ஒரு நதியின் மரணம்’ ஆவணப்படம். இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் ‘விடியல் வரும்‘ (45 நி) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் ‘Key Maker ‘ , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன், இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார் இயக்குநர் அருண்மொழி.

முகநூல் பதிவு

ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்!

த.நீதிராஜன்

சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார்.

தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார்.

1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர்.

நிலங்கள், வீடுகள் வழங்கல், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் எனும் பணிகளில் தொடங்கி, தீண்டாமையையும் சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக, பட்டியல் சாதியினருக்கான சிறப்புக் கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் அவர் உருவாக்கியவையே.

மண்டல் கமிஷன் பரிந்துரைத்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்கச் செய்வதற்கான ஆதாரமான பணிகளையும், அதனை பாதுகாப்பதற்கான பணிகளையும் செய்தவர் அவரே.

சிறுபான்மை மதங்களுக்கு உள்ளே இருக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பாதுகாத்தார். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என இந்திய சமூகத்தில் துன்பப்படுகிற ஒவ்வொரு மனிதர் மீதும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது. அவருக்கான தீர்வு இருந்தது. அதற்கான உழைப்பு இருந்தது.

பி. எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தின் அடியாழத்தில் மிக நெருக்கமான உறவுகளை அவர் உருவாக்கிக்கொண்டார். 70 ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையிலான அவரது சமூகப் பார்வை மிகவும் ஆழமான, தத்துவப் பார்வையாக இயல்பாக உருவாகியிருந்தது. அது அவரை இன்றைய சம கால இந்தியத் தலைவர்களைவிட உயரத்தில் நாட்டின் பிரச்சனைகளை பார்க்க வைத்தது.

சுருக்கமான சொன்னால், இந்த சமூகம் பற்றிய அம்பேத்கரின் லட்சியக் கனவை நிறைவேற்றுபவராக, இரண்டாம் அம்பேத்கராக நம் மத்தியில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அவர் இன்று காலை டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய்க்கான சிகிச்சை பயனளிக்காமல் தனது உழைப்பை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்! உங்களின் செயல்களுக்கும் கருத்துகளுக்கும் மரணமில்லை.

த.நீதிராஜன், செயல்பாட்டாளர்

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி: பேரா. அ. ராமசாமி

பேரா. அ. ராமசாமி

எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த பெரும்பாலான நாடகங்களை வாசித்தவர். ஆண்டன் செகாவின் செர்ரிப்பழத்தோட்டம் நாடகத்தைப் பாடம் நடத்தியபோது நானும் ஓரத்தில் மாணவனாக அமர்ந்து கேட்டிருக்கிறேன். மாணவர்களைத் தள்ளி நிறுத்தாத உரையாடல் அவருடையது.

ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை – கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த வெள்ளி(21-12-2018) அன்று காலமானார். புதுச்சேரி அரசு மரியாதையுடன் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார். வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது.

மனிதாபிமான வெளிப்பாடு நவீனத்துவக் கதைகளின் முதன்மையான கூறாகக் கருதப்பட்ட காலத்தின் பிரதிகளாக அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டன. சிறுகதைகள் அளவிற்கு நாவல்களில் முழுமையை உருவாக்கவில்லையென்றாலும் புதுச்சேரி வரலாற்றை உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுப் புதினங்கள் தமிழ் வரலாற்றுப்புதினங்களில் திசை விலகல்களை ஏற்படுத்தியவை.

அவர் எழுதிய இரண்டு நாடகங்களும் எனக்கு நெருக்கமானவை. புனைகதைகளிலிருந்து விலகியவை. குறியீடுகளைப் பொதிந்து வைத்து எழுதிய முட்டையில் ஒரு நடிகனாக இருந்திருக்கிறேன். ராமாயணக் கிளைக் கதையான அகல்யாவைத் திரும்பவும் எழுத வைத்து இயக்கி வெற்றிகரமான மேடையேற்றமாகத் தந்திருக்கிறேன். முதலில் அவர் எழுதிய பிரதியில் சூர்ப்பனகை இல்லை. எனக்காகச் சூர்ப்பனகையையும் இணைத்து எழுதித்தந்தார். அதற்காக அவரோடு தொடர்ந்து விவாதங்கள் நடத்தியதுண்டு. அவரது எழுத்துகள் குறித்தும் எழுதியதுமுண்டு.

பேரா. அ. ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்.  நாவல் என்னும் பெருங்களம், கதைவெளி மாந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர். 

“நெஞ்சில் உறுத்திய முள்ளை கிளைந்தெடுத்துவிட்டு விடைகொடுத்தார் ம. இலெ. தங்கப்பா”

மீனாட்சி சுந்தரம்

1990களின் இறுதியில் சில மாதங்களே ஒரு வாடகை வீட்டில், இரண்டு நோயாளிகளான என் அப்பா, அம்மா இருவருடன், கோவை கணபதியில் நான் வாழ நிர்பந்திக்கப் பட்டிருந்த காலம் இன்னும் என் அடிமனதில் அழிக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது, என்றாலும் கணபதி என்ற அவ்வூர் R. K. Narayan னின் புதினத்தில் வரும் ஒரு மால்குடியைப் போல அழகாயிருந்தது,
.
அந்தக் கற்பனை நகரில் நாராயண் காட்டும் தொடர்வண்டி நிலையமும், சரயு நதி மட்டுமே இல்லை. வாடகை வீடென்றாலும், எனது சுதந்திரத்திற்கான ஒன்றாய் அது இருந்தது.

அங்கே வேலை இல்லா முதுகலைப் பட்டதாரிகளாய் இருந்த நானும் என் நெருங்கிய கல்லூரி நண்பன் திலகேசுவரனும் ( ஓசை காளிதாசனின் இளவல் ) ‘ வெற்றி தோற்றோரியல் கல்லூரி’ (Victory Tutorial College) என்ற தனிப் பயிற்சி மய்யம் ஒன்றை நடத்திவந்தோம்.

நண்பன் சரவணகுமார் அப்போது கணபதி புதூரில் இருந்தான். காலஞ்சென்ற இன்னொரு நண்பன், எழுத்தாளன், பத்திரிகையாளன், கவிஞன், செந்தில் குமார் இரத்தினபுரியில் வசித்து வந்தான்.

நண்பர்கள் இராம சுப்பிரமணியமும் ( இன்றைய திரைப்பட இயக்குனர் ராம்), திருமுருகனும் ( இன்றைய திருமுருகன் காந்தி ) தவறாமல் வருவார்கள். அப்போது எங்கள் தனிப் பயிற்சி மய்யம், நாங்கள் ஆறுபேரும் சந்தித்து இலக்கியம், அரசியல்..என்று உரையாடுகிற இடமாயிருந்தது.

அதுதவிர நாங்கள் ‘இரு அட்டைகளும் சில பக்கங்களும்’ என்ற ஒரு கையெழுத்து இதழையும் நடத்தி வந்தோம். அன்றைய நாட்களில் மிகத் தாமதமாகவே இரவில் வீடு திரும்புவேன்.

முதுமையிலும் நோய்மையிலும், என் வருகைக்காக காத்திருக்கும் அம்மா, தனக்கே உரிய கொங்குத் தமிழில் கேட்பார்

” ஏம்பா இப்படி அசுலூட்டில் (வாடகை வீடு) குடியிருக்கிறோமே, கொஞ்சம் நேரத்தில் வந்து சாப்பிட்டுட்டு தூங்கினா, எங்களுக்கு ஆறுதலா இருக்காதா ?”

கிணத்துக்கடவு ஒன்றிய பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாய் பணியாற்றி ஒய்வு பெற்ற அம்மாவும் அப்பாவும், தங்கள் இரு குழந்தைகளுக்கு வேண்டியே வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.

உடலாலும் மனத்தாலும் பாதிப்படைந்த அவர்கள், தமது இறுதி நாட்களில் ஒரு வாடகை வீட்டில் என்னோடு, அந்த ‘வீட்டுக்கார அம்மா’வின் ஏச்சுகளுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளாகி துன்பத்தில் உழலுகிற ஒரு காலம் வருமென்று சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள்.

எனது நெருங்கிய கல்லூரி நண்பர்கள் சுதிரும் இளங்கோவும் துன்பம் நிறைந்த அந்த நாட்களை சரிசமமாய்ப் பங்குபோட்டுக் கொண்டவர்கள்.

இதன் பின்னணியில்தான், நான் ம.இலெ. தங்கப்பாவின் மொழி ஆளுமையை அறிந்திருந்தேன்.

சொல்லொணாத் துன்பம் மிகுந்த அக்காலத்திலேயும், அப்பா ஒரு புத்தகப் பிரியராகவே இருந்தார். அகவை முதிர்ந்த தோழர் வே. ஆனைமுத்து நடத்திய Periyar Era ஆங்கிலத் திங்களிதழிற்கு அப்பா அன்றைய நாட்களில் தீவிர வாசிப்பாளர்.

கணபதியில் என் வாடகை வீட்டு முகவரிக்கு அஞ்சலில் வருகிற அந்த இதழின் பின் அட்டை தங்கப்பாவின் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்றைத் தாங்கி வரும்.

ma le thangappa
ம.இலெ. தங்கப்பா, படம்: முகநூலிலிருந்து

அப்போதுதான் என் முதல் ஆங்கிலக் கவிதை நூலான The Wind and a Leaf உத்திரப் பிரதேசத்தில், இந்திய ஆங்கில கவிஞர் காலஞ்சென்ற திரு பல்தேவ் மிஸ்ராவால் அச்சாக்கம் பெற்றுவந்தது. ஆங்கிலக் கவிதை மீதான என் ரசனையை உச்சத்திற்கு கொண்டுசென்றவை தங்கப்பாவின் மொழியாக்க கவிதைகள்.

” கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனி பசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

பாவேந்தரின் இவ்வழகிய பாடலை மேலும் ஆங்கிலத்தில் அழகு செய்வார் தங்கப்பா.

” The flesh of succulent fruits,
Juice of full-grown sugarcane,
Nectar from flowers;
Syrup, cow’s milk
And tender coconuts
All these are sweet indeed;
But, sweeter to me is Tamil,
My life breath ! ”

தங்கப்பா அவர்கள் இக்கவிதையில் கையாண்ட ‘sweet’ மற்றும் ‘sweeter’ என்ற பதங்களின் வழியே, மொழியாக்கத்தில் ‘Comparative degree’ யின் உயிரை ஒரு வாசகனால் உறுதியாய் உணரமுடியும்.

இப்படி எழுத்துக்களின் வழியே 1990 களில் நான் அறிந்த தங்கப்பாவை, 2014ல் தான் கோவையில் நிகழ்ந்த ‘தாயகம் கடந்த தமிழ் ‘ மாநாட்டில் சந்திக்க முடிந்தது. அன்று நிகழ்ந்த ஒரே சந்திப்பில் அவர்மீதான அன்பையும் மதிப்பையும் அந்த சொற்ப நிமிடத்தில் அவர் இதயத்திற்குள் கொட்டிக் குவித்தேன். பிறகு புதுச்சேரி சென்று, ஒருமுறை என்னை அலைபேசியில் அழைத்துப் பேசினார்.

தங்கப்பாவின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை உலகில் ஓரளவு உலவியவன் என்ற அடிப்படையில் அவர் படைப்புகள் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை, நான் பணிபுரியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்த என்னால் அவருக்கு இதழின் பிரதிகளை அனுப்ப இயலவில்லை. காலவெள்ள ஓட்டத்தில் அந்தக் கடமையையும் மறந்தவனாய் நான் இருந்தபோதும், அவ்வப்போது தங்கப்பா என் மனதிற்குள் வந்துபோவார்.

சில மாதங்கள் இருக்கும். தங்கப்பா, தன் முகநூல் கணக்கை தொடங்கி இருந்தார். தனக்கான நட்பையும் என்னிடம் கேட்டிருந்தார். அடியேன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் அனுப்பவேண்டியதாய் இருந்த அக்கட்டுரையைத் தேடி எடுத்து அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். படித்து விருப்பம் தெரிவித்திருந்தார்.

என் நெஞ்சில் உறுத்திய அந்த ஒரு முள்ளையும் கிளைந்தெடுத்துவிட்டு, இப்பூமிக்கு விடைகொடுத்தபடி இன்று போய்க்கொண்டிருக்கிறார், கோவை ஞானியின் மொழியில் சொன்னால், “வாழும் வள்ளுவரான
ம. இலெ. தங்கப்பா”!

மீனாட்சி சுந்தரம், பத்திரிகையாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்

நரேன் ராஜகோபாலன் 

நரேன் ராஜகோபாலன்

ரஜிந்தர் சச்சார் (1923 – ஏப்ரல் 20, 2018)

கடந்த இரண்டு நாட்களாய் கவனம் பிற வேலைகளில் திரும்பியதால், இந்த முக்கியமான அஞ்சலிக் கட்டுரை தாமதமாகி விட்டது.

இந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் ஐயாவும் தான். இவர்களை தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாக பார்ப்பது எல்லோருமே முஸ்லீம்கள் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கொண்டாட வேண்டியதும், தங்களுடைய வீடுகளில் கற்றுக் கொடுக்க வேண்டியதுமான நபர் – ரஜிந்தர் சச்சார்.

சச்சார் கமிட்டி அறிக்கை என்கிறப் பெயரில் 2006-இல் ரஜிந்தர் சச்சார் தலைமையில் வெளிவந்த ஆழமான, விரிவான அறிக்கை தான் இந்தியாவில் முஸ்லீம்களின் உண்மையான நிலையை பட்டவர்த்தனமாக அரசுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. சிக்யுலர் என்றும், மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட், சிறுபான்மையினர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் வலதுசாரிகளும், ஹிந்துத்துவர்களும் சொன்ன எல்லாவற்றுக்கும் ஆதாரப் பூர்வமாக ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை விடவும் (சில காரணிகளைத் தவிர) படுமோசமாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக காட்டியது. சச்சார் அறிக்கையை சமர்பிக்கக் கூடாது, அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அன்று அடம் பிடித்து முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியவர் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

மேலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒரே ஒரு monolith சமூகம் என்கிற பார்வையையும் அடித்து நொறுக்கியது அந்த அறிக்கை. வடக்கத்திய இஸ்லாமியர்களும், தெற்கத்திய இஸ்லாமியர்களுக்கும் அடிப்படையாக இருக்கக் கூடிய சமூக, பொருளாதார, கலாசார, மதம் சார்ந்த வேறுபாடுகளையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் மொத்த அரசு வேலைகளில் வெறும் 3.2% மட்டுமே இஸ்லாமியர்கள். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து அல்லது ஆறில் ஒருவர் இஸ்லாமியர். இஸ்லாமியர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட வரலாற்று துரோகத்தினை தரவுகளோடும், ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இஸ்லாமிய சமூகத்திற்கே சுட்டிக் காட்டியவர் ரஜிந்தர் சச்சார்.

ரஜிந்தர் சச்சாருக்கு கொடுக்கப்பட்ட உச்சக்கட்ட மரியாதையாக பார்க்கப்படுவது சச்சார் கமிட்டியின் உறுப்பினராக இருந்த அபுசாலே ஷரீப் சொன்னது தான்

“Muslims have often told me that for them, Sachar is third after Allah and the Prophet in importance. They look upon him as the savior of their identity. I conveyed this to Sachar.”

தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் அன்னாரை கவுரவித்து, அஞ்சலி செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். என் டைம்லைனில் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் சச்சாரையும் இனி அபுல் கலாம் ஆசாத், காயிதே மில்லத் வரிசையில் உயர்த்திப் பிடித்து, இனி வரக்கூடிய எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு சொல்லிக் கொடுப்பார்கள் என்று மனதார விழைகிறேன்.

வாழ்ந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை மேற்கொள்கள் காட்டாமல், உரைகள் நிகழ்த்தாமல், பிரசங்கங்கள் கொடுக்காமல் ரஜிந்தர் சச்சார் மாதிரியான மனிதர்கள் சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்து விட்டு போய் விடுகிறார்கள்.

Bow with Respect and Rest in Peace Sir!

வரலாறும் ஆகிப்போனார் அர்ஷியா!

ஸ்ரீரசா

நண்பன் அர்ஷியாவின் உள்ளும் புறமுமாக நிறைந்த நண்பன், தோழன், அன்பன் என்று ஒருவர் உண்டென்றால், அவர் மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளி பேருந்து நிலையம் எதிரில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ள சிவா அவர்கள்தான்.

மதங்களைக் கடந்த மனித அன்பின் உச்சம் அவர்களது நட்பு. அர்ஷியாவை பலநேரம் அந்தப்பகுதியில் சிவாவின் கடையில்தான் சந்திப்போம். அருகிலுள்ள தேநீர்க்கடையில்,(இந்தக் கடை நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியினுடையது) அந்த ரோட்டரத்தில் அமர்ந்து பேச்சுக்கள் நீளும்.

சிவா அதிர்ந்து பேசமாட்டார். செல்போன் குறித்த எந்தக் கேள்விக்கும் தெளிவான விடைகளைச் சொல்லுவார். தனது வேலையில் எப்போதும் கவனமாக இருப்பார். சிறந்த பக்திமான். எப்போதும் நெற்றியில் திருநீரும், குங்குமமும் துலங்கும். வருடந்தவறாமல் மாலைபோட்டு, ஐயப்பன் கோவில், பழனி போய் வருவார். திமுக அரசியலிலும் ஈடுபாடு உள்ளவர்.

ஆனால் அர்ஷியாவுக்கும் சிவாவுக்குமான நட்பு அபூர்வமானது. அர்ஷியாவின் மகள் அர்ஷியாவின் திருமணத்தில் கிட்டத்தட்ட அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு அவர்தான் செய்தார்.

அர்ஷியாவின் மரணச் செய்தி அதிகாலை நாலு மணிக்கு என்னை எட்டியபோது, நான் அதனை உறுதி செய்து கொள்ள, சிவாவுக்குத்தான் போன் செய்தேன். போனிலேயே சிவாவின் பெருங் கதறல்… அப்புறம் அவரிடம்தான் வழிகேட்டு அர்ஷியா தற்போது குடியிருந்த வீடு சென்றேன். அர்ஷியாவைப் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தன. அந்த வீட்டில் அத்தனை வேலைகளையும் அவர்தான் ஓடிஓடிச் செய்து கொண்டிருந்தார்.

மாலை முனிச்சாலை மசூதியில் அர்ஷியாவின் நல்லடக்கம் முடிந்தபின்னும். சிவா அங்கிருந்து நகர மறுத்தார். புதையுண்ட நண்பனின் சமாதியருகில் கலங்கிய அழுகையோடு கரைந்து கொண்டிருந்தார். அர்ஷியாவின் சொந்தங்கள், நண்பர்கள், மற்றவர்கள் எல்லாம் கலைந்து சென்றபின்பும் சிவா அங்கேதான் நின்றார். அப்புறம் போய் அவரை அழைத்து வந்தோம். வெளியில் வந்தும் அர்ஷியானி அண்ணன் நின்றிருந்தார். அவரைக் கட்டியணைத்து அத்தனை பெருங்குரலெடுத்து அழுதார். அப்புறம் அவரை அழைத்து வெளியில் வந்தபோது, சிவாவின் முதுகில் தட்டினேன்.

அப்போதும் ஒரு கதறல்…

இத்தகைய மதம் கடந்த மனிதப் பண்பைத்தான் சிதைத்து, இந்து வெறியூட்டி இந்தியாவைச் சிதைக்க நினைக்கிறார்கள் இந்து வெறி அமைப்புகள் என்று வரும் போது தோழர்களிடம் பேசிக் கொண்டு வந்தோம்.

இந்த மசூதிதான், அர்ஷியாவின் முதல் நாவலான ஏழரைப் பங்காளி வகையறாவைத் தோற்றுவித்த முதல் மனிதன் ஜனாப் ஹஜ்ரத் சையத் இஸ்மாயில் தாசில்தார் அவர்களின் சமாதி உள்ள பள்ளிவாசல். அவர் இறந்தது, 1846 ஆம் ஆண்டு. அவரிலிருந்து கிளைத்த வாரிசுகளில் இறந்தவர்கள் அனைவரும் இங்கேதான் துயில் கொண்டுள்ளனர்.

அவரது சமாதியின் மண்டபம் இந்து முறைப்படி உள்ள மண்டபம். மண்டபத்தடியில் உள்ள சமாதி இஸ்லாமிய முறைப்படியானது.
தனியரான உருது முஸ்லிமாக வைகை ஆற்றில் கரையோரம் வேர்விட்ட அவருக்கு, அந்தப் பகுதி மக்கள், மணம் செய்து வைத்தது, தாய் தந்தையற்ற, அவரைப் போலவே அனாதரவான ஒரு பிள்ளைமார் பெண்ணை.

அவர்களுக்குப் பிறந்தவர்கள்தான், ஏழு ஆண் மகவுகளும், ஒரு பெண் மகவும். அவர் பின்னால் வளர்ந்து நிறைய நிலபுலன்கள் வாங்கி, சமூகத்தில் பெரிய பிரமுகராகி, தாசில்தாராகி, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகக்குழுவில் கூட இருக்குமளவு உயர்ந்தார். அவரது இறப்பின் போது, அவர் ஒரு வினோதமான பாகப் பிரிவினையைச் செய்தார். அவர் உருது முஸ்லிம். ஆனால் தன் மத வழக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தன் சொத்தை இரு சம பங்காகப் பிரித்தார். ஒரு பாதியை ஏழு ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகப் பங்கிட்டார். மீதி அரைப்பங்கை அப்படியே பெண் மகவுக்கு அளித்தார். அதிலிருந்துதான் அந்த வாரிசுகள் ஏழரைப் பங்காளி வகையறா ஆனார்கள்.

அந்த ஏழரைப் பங்காளி வகையறாவில் பல்வேறு சொத்து பத்துக்களுடன் இருந்து, சொந்த பந்தச் சதிகளால் சூழப்பட்டு வறுமைப்பட்ட தகப்பனின் கடைசி மகவுதான் நண்பர் அர்ஷியா. ஆனால் இவர்கள் மீண்டார்கள். வரலாற்றில் வாழ்ந்தார்கள். தன் எழுத்து உழைப்பால், கால தேச எல்லைகளைக் கடந்து, மனித ஆற்றலின் மகத்துவத்தால் வரலாறும் ஆகிப்போனார் அர்ஷியா…

ஸ்ரீரசா, எழுத்தாளர்.

எழுத்தாளர் அர்ஷியாவுக்கு இரங்கல்!

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அர்ஷியா மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 58 . பத்திரிகையாளராக பணியாற்றிய அர்ஷியா எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பல நூல்களை இயற்றியுள்ளார்.

எழுத்தாளர் அர்ஷியாவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் அ. ராமசாமி:

ஒருவருடத்திற்கு முன்பாக இருக்கலாம்.

இதயத்தின் இயக்கம் சரியில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவை என்பதை உணர்ந்தே அந்தக் குறிப்பை முகநூலில் எழுதியிருந்தார். இடதுகைப்பக்கம் வலியிருப்பதாகவும், முதுகு வலியும் தெரிகிறது என்று சொல்லியிருந்தார். அவரது வயது, தொடர்ச்சியான செயல்பாடு, நகைச்சுவையுணர்வு போன்றவற்றைக் கவனித்திருந்த நண்பர்கள் பலரும் உடல் காட்டிய அந்தக் குறிப்புகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. வாயுக்கோளாறாக இருக்கும் என்பதுபோல ஆலோசனைகளை வழங்கினார்கள். நான் அந்தக் குறிப்பின்கீழ் உடல் சொல்லும் சங்கேதங்களைப் புரிந்துகொள்ளுங்கள் என்று எழுதியதாக நினைவு.

வரலாற்று நூல்கள் எழுதுபவராகவும் வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பவராகவும் வெளிப்பட்ட அர்ஷியாவின் ‘ மதுரை நாயக்கர் வரலாறு” ( ஆர். சத்தியநாதய்யர் எழுதிய ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்) நூலின் வெளியீட்டுக் கருத்தரங்கில் தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அந்த நூலின் ஆங்கில மூலத்தை நான் எனது முனைவர் பட்டத்திற்காகப் படித்த நூல். அந்த மொழிபெயர்ப்பு சரளமான மொழிபெயர்ப்பு. அவரது பெயரோடு கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் முதலான சிறுகதை நூல்களும், மொழிபெயர்ப்புகளாக நிழலற்ற பெருவெளி, திப்பு சுல்தான், பாலஸ்தீன், மதுரை நாயக்கர் வரலாறு, பாலைவனப்பூ, கோமகட்டுமாரு போன்றனவும், சரித்திரப் பிழைகள், ஆதாரம் போன்றனவும் கிடைக்கின்றன.

அவரது எழுத்துகள் நெருக்கமாகத் தோன்றியதின் காரண்ம் இழந்ததின் மீதான காதல் வகைப்பட்ட விருப்பம்தான். வேலைக்காக வெளியூர்களில் வாழ நேரும்போதுதான் சொந்த ஊர்ப்பற்று அதிகமாகிவிடுகிறது. சொந்த ஊரைப் பற்றிய எழுத்துகளும் அதிகம் பிடித்துப் போய் விடுகின்றன. வட்டார எழுத்து அதன் தீவிரத்தன்மையைக் காட்டிய 1970- 80-களிலும் எழுதிய மதுரைமாவட்ட எழுத்தாளர்கள் அந்த அடையாளங்களை எழுத்தில் கொண்டு வந்துவிட வேண்டுமென நினைக்கவில்லை. மைய நீரோட்ட எழுத்தில் கலந்துபோகவே விரும்பினார்கள். சி .சு.செல்லப்பாவின் வாடிவாசல் தொடக்க விதிவிலக்கு. ஜி.நாகராஜனின் கதைகளின் கதைகளுக்கான நிலவியல் பின்னணியாக மதுரை நகரம் இருந்தது என்றாலும் கதைகளின் மையவிவாதங்கள் எல்லாம் மதுரைக்கும், மதுரை மாவட்டத்திற்குமானவை என்று சொல்லமுடியாது. கர்ணனின் எழுத்துகளுக்கான அடையாளமும் அப்படித்தான் .

இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பின்னணியிலும் புனைகதைகள் வந்துகொண்டிருக்கின்றன. உமாமகேஸ்வரி, சு.வேணுகோபால் போன்றவர்களின் கதைகளை அப்படி வாசித்திருக்கிறேன். இவர்கள் எல்லாரையும்விட அரஷியாவின் புனைகதைகள் முழுமையாக மதுரை நகரின் பின்னணியில் எழுதப்பெற்றவை. ஏழரைப் பங்காளி வகையறா என்ற தலைப்பில் இருந்த மதுரை வாசமே வாசிக்கத்தூண்டியது.மதுரையின் வட்டார வரலாற்றை நிலவியல் முரண்பாடுகளோடு எழுதியவராக அவரது, பொய்கைகரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, சொட்டாங்கல் போன்றன வெளிப்படுத்தின. பரபரப்பான செய்திக்கட்டுரையாளராகத் தராசு பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் அவரது புனைகதைகளின் மொழிநடையில் தாக்கம் செலுத்தியுள்ளன, கரும்பலகை, அதிகாரம் போன்ற நாவல்களின் மொழிநடையில் இதனைக் காணமுடியும்.

தொடர்ந்து எழுதிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் பயணித்துக்கொண்டும் இருந்த அர்ஷியா இயக்கத்தை நிறுத்திவிட்டார் என்ற தகவல் ‘ நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதிவ் வுலகு’ என்ற வலிமையான சொற்கூட்டத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் மீரா கதிரவன்:

எழுத்தாளர் திரு.அர்ஷியா அவர்களின் மரணச்செய்தி அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.அவருடைய ” பொய்கைக்காரப்பட்டி ” எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. படித்து விட்டு அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

தொடர்ந்து,அவருடைய ஏழரைப்பங்காளி வகையறா நாவல் பற்றியும் மொழி பெயர்ப்புகள் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டோம். நல்ல மனிதர். முதல் நாள், முதல் காட்சியில் விழித்திரு படம் பார்க்கச் சென்று படம் ரீலிசாகாமல் திரும்பி வந்தேன் தம்பி என்று கவலையுடன் குறுஞ்செய்தி அனுப்பினார்.

புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போது பிரியத்தோடு கை குலுக்கினார். திப்பு சுல்தான் பற்றி பல புத்தகங்கள் வந்திருந்தாலும் இவர் மொழிபெயர்த்த மொஹிபுல் ஹசனின் “ஒரு வளர்பிறையின் வரலாறு- திப்பு சுல்தான்” திப்புவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த புத்தகம். பாலைவன இருட்டுச் சிறையைப் பின்புலமாகக்கொண்ட “நிழலற்ற பெருவெளி” யும் திரு.அர்ஷியா அவர்கள் மொழிபெயர்த்த நல்ல புத்தகம்

உங்களுடன பேச இன்னும் நிறைய இருந்தது அண்ணா…

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா:

“என்னவெல்லாமோ ஆக ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை”

– மார்ச் 23ம் தேதி அர்ஷியாவின் இந்தப் பதிவு மிகக் கடுமையாக என்னை தொந்தரவு செய்தது. அவரை அழைத்துப் பேசவேண்டுமென மனம் அவாவியது. தவறவிட்டுவிட்டேன். இனி எப்போதும் அழைத்துப் பேசமுடியாதவராகிவிட்டார் அர்ஷியா. அஞ்சலி எனச் சொல்லமுடியாமல் அரற்றுகிறது மனம்.

எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூழாங்கற்கள் நிகழ்வில் கரும்பலகை நாவல்குறித்த கூட்டம் நடைபெற்றபோது அர்ஷியா அண்ணன் பழக்கம். தனக்கு மிக நெருக்கமானவர்களை ராசா என்று அழைக்கிற அதே தொனியில் தான் என்னையும் அழைத்தார். ரொம்பவும் நேசம் அந்தக் குரலில் இருக்கும்.

நூலாசிரியராக அறிமுகமாகி, ‘அண்ணே’
என்று உரிமையோடு அழைத்துக் கொள்கிற இடத்தை அவரே உருவாக்கித் தந்தார். சரியாக ஆறுநாட்கள் முன்பு, கூழாங்கற்கள் இலக்கியக்கூட்டம் முடித்து அன்றைக்கு மாலையில் நானும் ரெங்காவும் அர்ஷியா அண்ணனோடு சேர்ந்துகொண்டு சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மதுரை மாடவீதிகளைச் சுற்றிவந்துகொண்டிருந்தோம்.

அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டடங்களைப் பற்றியும், அதன் வரலாறுகளையும், இன்னார் ஜமீனுக்குச் சொந்தமான இடம் இது என்பதையும், மாரட் வீதி உருவாகக் காரணமாக இருந்த மேஸ்திரியின் யோசனைகளையும், நியூ சினிமா அரங்கையும் மாதக்கணக்கில் அங்கு ஓடின திரைப்படங்களையும், டவுன்ஹால் சாலையையும் என எல்லா இடங்களிலும் அவர் சொல்கிற கதைகேட்டுக்கொண்டே நடைபோட்டோம்.

அண்ணே உங்க காதல் கதையைச் சொல்லுங்களேன் என்று விளையாட்டாக உசுப்பியவனைச் சிரித்துக்கொண்டே சமாளித்தார். எங்களுடன் சேர்ந்து பருத்திப்பால் குடித்துக் கொண்டிருந்தவரிடம் கையில் இருந்த பண்டையத் தமிழக வரலாறு நூலைக் காண்பிக்க நாயக்க மன்னர்கள், சொக்கநாதர் பற்றிய செய்திகள் என்று சொல்லிக்கொண்டே அறை வாசல்வரை வந்து எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

அடுத்த திங்கள் கிழமை (நாளை மறுதினம்) பத்திரிகை எடுத்துட்டு வீட்டுக்கு நேர்ல வருவம்ணே என்றதும்.. அவசரமே இல்ல ராசா.. என்று புன்னகைத்தார்.

மதுரை சையது உசேன் பாஷா என்கிற இயற்பெயர் கொண்ட அந்த மனிதர் தன் மகள் பெயரில் எழுதத் துவங்கியதில் இருந்து இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு, ஏழு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆறு மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

1987 முதல் 1994 வரைக்கும் மதுமலரன்பனாக இயங்கிய தன் பத்திரிகைத் துறை அனுபவங்களை “அசை(ஸ்டோரீஸ்)” என்ற பெயரில் தொகுத்தெழுதினார். அந்த நூலை கடந்த ஆண்டு என் கையில் கொடுத்து, நீ கொண்டுவா ராசா என்றார்.

முன்பாக 2017ம் ஆண்டு மதுரை புத்தகச் சந்தையில் அந்நூலின் ரஃப் டிராப்ட்டை என் கையில் கொடுத்து வாசிக்கச் சொன்னபோது முதல் பக்கத்தில் “பத்திரிகையாளன் கார்த்திக் புகழேந்திக்கும், புகைப்படக்காரன் பிரபு காளிதாஸுக்கும்” என்று சமர்ப்பணம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

2018 ஜனவரியில் நிகழ்ந்த தொடர்ச்சியான அவருடனான உரையாடலில் அடுத்த நாவலை எழுதும் வேலைகளைச் சில வாரங்களில் துவங்குகிறேன் எழுத அமர்ந்தால் நூறு நாட்களில் முடிந்துவிடும். நாவலை ஜீவா படைப்பகம் வெளியிடும். சரிதானே.. என்று அவரது அன்பை வெளிப்படுத்தினார்.

நியாயமாக அவர் ஏன் என்மீது, எங்கள்மீது இவ்வளவு அன்பு செலுத்தினார் என்ற கேள்விகளுக்கு என்னிடம் எந்தப் பதில்களும் இல்லை…

ஓராண்டுக்கு முன்பு அவரது மகளின் நிச்சயதார்த்தம் மதுரையில் நடந்தபோது அவரது பல நண்பர் குழாமோடு நானும் குமரேசன் அண்ணனும் கலந்துகொண்டோம். நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் தெரிந்தது மணமகன் திருநெல்வேலி வழுக்கோடையைச் சேர்ந்தவர் என்றும், அவர் எங்களது அண்ணனின் நெருங்கிய நண்பருக்குத் தம்பி என்றும்.

“எங்க ஊர்ல பொண்ணு கொடுத்திருக்கீங்க அண்ணே! சம்மந்தக்காரர் ஊருக்காரன். இனி மதுரைக்காரங்க மட்டும் உங்களச் சொந்தம் கொண்டாட விட்ருவமா..” என்று நான் உரிமையாகக் குரல் எழுப்பும்போது சிரிப்பார்.

சமீபமாக நடைபெற்ற அவரது நூலுக்கான இலக்கியக் கூட்டத்தின் மீது தீவிரமான விவாதங்கள் எழுந்தபோது, நீண்ட நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
“நான் யாரோடெல்லாம் நெருக்கமாக இருக்கிறேனோ அவர்களெல்லாம் நான் விழுந்துவிட்டேன் என்று குதுகலிக்கிறார்கள். எனக்கு ஏன் இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மட்டும்தான் புரியவில்லை’ என்று மனம்விட்டு வருந்தினார்.

ஆனாலும், அப்படி குதுகலித்தவர்கள் பொதுவில் அவரோடு கைகுலுக்க வரும்போதும் புன்னகையோடே அவர்களை எதிர்கொண்டார். மற்றபடி எதிர்வினைகள் ஏதும் ஆற்றுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. இது என் சாட்சி.

சமீபத்தில் பல்கலைக்கழக நூலகம் ஒன்றிற்குச் சென்றபோது திப்புசுல்தான் (மொழிபெயர்ப்பு) நூலின் பிரதியைப் பார்த்ததும் அப்போதிருந்த மனநிலையை நினைவுபடுத்தி, ரொம்ப கர்வமா இருக்கு அண்ணே.. இந்த புத்தகத்தை எழுதினவர் எங்க அண்ணன் தான் என்று நூலகரிடம் சொன்னதை அவருடனான கடைசி சந்திப்பில் பகிர்ந்துகொண்டேன்.

தோளில் வலுவாகக் கைபோட்டுக்கொண்டு ராசா அதில் என்ன கர்வம் இருக்கு உனக்கு என்றார்.

“தோணுச்சு சொன்னேன்.” என்றேன்.

அசை – கட்டுரைகளில் அவர் சேர்க்காத சில பாகங்களை கதையாகச் சொன்னபோது, அண்ணே இதையும் புத்தகத்தில் சேர்த்து கொண்டு வரலாம்ணே என்றேன். அப்போது ‘ஸ்டோரீஸ்’ புத்தகம் அச்சாகி கையில் வந்திருந்தது.

” அந்தப் பதிப்பு அப்படியே இருக்கட்டும் புதிய பதிப்புக்கு “அசை” என்றே பேர்வைத்து இதெல்லாம் சேர்த்து முழுமையாகக் கொண்டுவரலாம் என்றபிறகு தினமும் மின்னஞ்சல்களில் எழுதி அனுப்புவதும் பிறகு அதன் தொடர்ச்சியாக இன்னொரு கதை வளர்வருமாக அசை பெருத்துக் கொண்டிருந்தது.

‘நவம்பர் 8’ டிமானிடேசனை முன்வைத்து அவர் ஊதியிருந்த நாவல். தன் குடும்பத்து சுபகாரியம் எப்படி டிமானிசேஷனால் திட்டமிட்டபடி நடைபெறமுடியாமல் தள்ளிப்போனது என்பதை மையக்மருவாக வைத்து அந்நாவலை எழுதியிருந்தார்.

அதிகாரம், கரும்பலகை, சொட்டாங்கல், பொய்க்கரைப்பட்டி, அப்பாஸ்பாய்தோப்பு, ஏழரைப்பங்காளி வகையரா என எல்லா நாவல்களுமே கிட்டத்தட்ட அப்படிச் சொந்த நிகழ்வுகளின் மையச் சரடுகொண்டு முந்தைய, சமகால வரலாற்று நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி கதாபாத்திர சிருஷ்டியுடன் நாவலாக்கியிருப்பார்.

சமீபமாக ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கும் தயாராகிக் கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இப்படி தன்னுடைய விவசாயப் பணிகளுக்கு இடையில் எழுத்து தான் அவருக்கு ஊக்கமருந்தாக இருந்தது. இருந்திருக்கவேண்டும்.

அவ்வளவு எழுதியும் எழுத்துலகில் தனக்கான இடம் எது என்பதைத் தக்கவைக்கும் போராட்டங்கள் எதையும் அவர் செய்துகொண்டிருக்கவில்லை. விமர்சனமாக அவரை குற்றஞ்சாட்டினாலுமே கூட தான் எந்தக் கூட்டுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கவேண்டி விதிக்கப்பட்டவனில்லை என்கிற சுய தெளிவு அவருக்கு இருந்தது.

அர்ஷியா வேறு கூடாரங்களின் மனிதராகிறார் என்று பிறர் குறைபட்டபோதும் நான் எப்போதுமே எந்த கூடாரங்களிலும் இல்லையே ராசா என்றுதான் தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்திருந்தார்.

மதுரை அர்ஷியாவை எவ்வளவு நேசித்தது என்பதை என்னால் அளவிடமுடியாதுதான். ஆனால் மதுரையை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை எழுத்துவழியாகப் புரிந்துவைத்திருக்கிறேன்.

மதுரையை முன்வைத்து சிறப்பிதழ் ஒன்று கொண்டு வருவோம்ணே என்றபோது, பட்டறைக்காரன் தெருவை மட்டுமே முன்வைத்து ஒரு நீண்ட கட்டுரையைத் தயாரித்துத் தந்தார். அவரிடம் மதுரைபற்றிச் சொல்ல அவ்வளவு விசயங்கள் உண்டு. வரலாறு கேட்கும் காதுகளைச் சென்றடையும் அர்ஷியாவின் குரல் இன்றைக்கு மௌனப்பட்டுவிட்டது.

தன் கல்லூரி வாழ்க்கையைச் ஒல்லும்போது, “மூடாக்கு நிறைந்த சமூகத்தில் பிறந்து, பொருளாதார நசிவிலிருந்து மீளவே வழியற்று, தட்டுத்தடுமாறி பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி, ‘Fee adjusted in Scholarship’ பிரிவில் கல்லூரி வாசலை மிதித்தவன்” என்பார்.

தராசு’ அரசியல் சமூக வார இதழின் ஒரு கண்ணியாகவும், நமது ‘கழுகு’ தர்பார் அரசியல் இதழின் சிறகுகளாகவும் அவர் இருந்த காலத்தைத் தான் தன் வாழ்க்கையில் திரும்பக் கிடைக்காத என் பொற்காலம் என்று நேர்பேச்சில் நினைவுகூர்வார். அதனாலே நான் பணிபுரியும் பத்திரிகைத் துறை சார்ந்த கடுமையான போக்குகளைப் பற்றி அவரிடம் பேசும்போதெல்லாம் தன் அனுபவத்திலிருந்தே கதைகளைச் சொல்லி என்னை வழிநடத்தியிருக்கிறார்.

“யாரையும் புனிதப்படுத்தவோ அல்லது யாரையும் காயப்படுத்தவோ நான் முயலுவதில்லை. அதேவேளையில், நெஞ்சத்தின் கரைகளைத் தொட்டுவிட்டுத் திரும்பும் எண்ண அலைகளில் சில சிப்பிகளையும், சில முத்துகளையும் கொஞ்சம் கடல் நுரையையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வது மட்டுமே என் நோக்கம்” என்று அவர் தன் சொந்தக்கதையை நேரடியாக அசைபோட்ட புத்தகத்தில் எழுதியிருந்தார். உண்மையில் அவர் வாழ்வும் கூட நானறிந்தவகையில் அப்படியாகத்தான் இருந்திருக்கிறது.

என் பிரியத்திற்குரிய தம்பி என்று அழைத்த மனிதர் ஒருநாள் “என்னை நெய்யத் தொடங்கியிருக்கும் எழுத்து நெசவாளி” என்று என்பேரைக் குறிப்பிட்டு எழுதியபோது சண்டைக்குப் போனேன். அதெப்படி நீங்க தான அண்ணே எனக்கு மூத்த வழிகாட்டி என்று. அப்போதும் அவர் சிரித்துத்தான் வைத்தார்.

ஜீவா படைப்பக நண்பர்கள் சார்பாக எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஞ்சலி: ம.நடராசன்

புதிய பார்வை இதழின் ஆசிரியரும் வி.கே. சசிகலாவின் கணவருமான ம. நடராசன் காலமானார்.  இதுகுறித்து வெளியான சில அஞ்சலி பதிவுகள்…

ஊடகவியலாளர் செந்தில்குமார்

பின்னால் இருந்து கொண்டே இயக்கியதால் அரசியலில் முன்னுக்கு வராமல் போனவர் மதிப்பிற்குரிய ம.நடராசன் அவர்கள். ஜெயலலிதாவின் அத்தனை அரசியல் தந்திரங்களுக்கும் பின்னால் இருந்த மந்திர சக்தி இவர். நம் அரசியல் தந்திரங்களின் சூத்திரதாரி இவர்தான் என்று மக்களுக்கு தெரிந்து விட்டால் தன்னுடைய அரசியல் வளர்ச்சி பாதிக்கப் படும் என்பதால் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். கற்றுக்கொண்டதே கருணாநிதியிடம் தான் என்றாலும் கடைசிவரை அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா வாக இருந்தாலும் அவரின் அத்தனை காய் நகர்த்தல்களிலும் எங்கிருந்தோ நடராஜனின் பங்கும் இருக்கும். நவீன அரசியல் சாணக்கியன் ..நாம் இப்போது வாய்பிளந்து பார்க்கும் டிடிவி தினகரனுக்கு இவர் உறவில் மட்டுமல்ல அரசியலிலும் அப்பன். அதனால்தான் இவர் அதிகாரத்தில் இல்லா விட்டாலும் இவரை சுற்றி எப்போதும் அரசியல் பருந்துக்கள் பறந்து கொண்டே இருக்கும்.. எவ்வளவு சர்வ வல்லமை கொண்டிருந்தாலும் காலத்தின் காலடியில் சரணடைந்து தானே ஆக வேண்டும்…

மூத்த அரசியல்வாதி ம.நடராசனுக்கு கண்ணீர் அஞ்சலி…

எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ் எழுதிய பதிவு…

இரங்கல்: ஸ்டீஃபன் ஆக்கிங்!

நலங்கிள்ளி

ஸ்டீஃபன் ஆக்கிங் – நானாக அவருடன் ஏற்படுத்திக் கொண்ட அறிவியல் நட்பு என்றும் தொடரும். நான் யாருடனும் ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அவர் நான் வியக்கும் மனிதராக இருக்க வேண்டும் எனக் கருதுபவன். நான் அப்படி சந்தித்து ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்களுள் ஆக்கிங்கும் ஒருவர். யார் நிதியுதவி பெற்றேனும் லண்டன் சென்று அவருடன் ஒரு நிமிடம் பேச வாய்ப்புக் கிடைக்குமா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை. ஸ்டீஃபன் ஆக்கிங் என்னை விட்டு, நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி இன்று காலை என் செவியில் இடியாய் வந்து இறங்கியது.

நான் 23 அகவையில் A Brief History of Time நூலைப் படித்தேன். அசந்து போனேன். பல இரவுகள் தூக்கமில்லை. அறிவியலை, அண்டவியலை, கடினமான இயற்பியல் விதிகளை இதை விட எளிமையாக, விறுவிறுப்பாக, நகைச்சுவை இழையுடன் எவரும் சொல்ல முடியுமா? என்று வியந்தேன். தமிழ்வழிக் கல்வி ஆதரவாளன் என்ற வகையில், என் மனத்தில் உடனே தோன்றியது, இந்த அருமையான அறிவியல் அழகு தமிழில் வந்தால் எத்தனை எத்தனை தமிழர்கள் அறிவியல் வளம் பெறுவர் என நான் ஏங்கிய நாட்கள் பல. யாரைப் பார்த்தாலும் புலம்புவேன்.

இப்படித்தான் நிழல் திருநாவுக்கரசிடம் ஒரு முறை புலம்பினேன். அவர் உடனே நீங்களே செய்தால் என்ன என்றார். எனக்குத் தலைகால் புரியவில்லை. என்னால் முடியவே முடியாது என்றேன். என்னால் முடியும் என எனக்கு ஊக்கம் கொடுத்தவர் தோழர் தியாகு. என் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை இது.

உடனடியாகத் தொடங்கினேன் பணியை. தியாகுவின் பதிப்பாசிரியப் பணியுடன் வேலை நிறைவடைந்தது. ஸ்டீஃபன் ஆக்கிங் அழகு தமிழில் பேசினார். காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பெயரில் புத்தகம் வந்தது. அதுவே இன்று வரை எனக்கான அறிமுக அட்டை.

வாழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்டவர் இன்று வாழ்வை இழந்து விட்டார்.

அவருக்கு அகவை 20. அப்போது மருத்துவர் அவருக்கு நரம்பியல் இயக்க நோய் வந்திருப்பதாகவும், அவரால் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது எனவும் அறிவித்து விட்டனர். அதனையும் மீறி சில ஆண்டுகள் கடந்தன. அவர் உயிர் போகவில்லையே தவிர, உடலின் முழு இயக்கத்தையும் இழந்தார். அப்போது மருத்துவர்களிடம் அவர் கேட்ட கேள்விதான் அவரை என் மனத்தில் மாமனிதராக உயர்த்தி நிறுத்தியது. எனக்கு உடல் செயலிழந்தது விட்டது, சரி, என் மூளை? என மருத்துவரிடம் கேட்டார் ஆக்கிங். மூளைக்கு ஒரு குறையும் இல்லை என மருத்துவர்கள் கூறியதுதான் தாமதம், ஆக்கிங் சொன்னார். அப்பாடி, இனி எனக்கென்ன கவலை. என் உயிர் அறிவுத் தேடல். அறிவுத் தேடலுக்கு உடல் தேவையில்லை, மூளைதானே தேவை, அந்த மூளை சிறப்பாக வேலை செய்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேண்டும் எனச் சொன்னார் ஆக்கிங்.

என்னைப் பொறுத்த வரை, உடலியக்கம் இழந்து ஊனமுற்றோரின் வரலாற்றில், என்றும் முதலிடம் ஆக்கிங்குக்கு மட்டுமே. அந்த இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.

இரண்டே ஆண்டுதான் வாழ முடியும் என மருத்துவர் அறிவித்தும் எவருக்கேனும் ஆக்கிங் அளவுக்கு நீண்ட ஆயுள் வாய்த்திருக்குமானால், அது கடவுள் அருள் என நிச்சயம் நம்புவர். ஆனால் ஆக்கிங் தீவிர நாத்திகர். அவருடைய கிண்டலான நாத்திகக் கருத்துகளைக் காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகம் முழுதும் காணலாம்.

அவர் ஓரிடத்தில் சொல்வார், கடவுள் என்று ஒருவர் இந்த அண்டத்தில் இருந்தாலும், அந்தக் கடவுளுமே கூட இயற்பியல் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் கடவுளாகத்தான் இருக்க முடியும்.

கருந்துளை, காலக் கணை, புழுத்துளைப் பயணம், காலப் பயணம் என அவர் கண்ட அறிவியல் கனவுகள் பல.

அந்த அறிவியல் கனவுகள் உலகத்தினர் மனத்தில் நிறைந்து நிற்கும். அது புதுப் புது அறிவியலர்களைக் கட்டாயம் உருவாக்கிக் காட்டும்.

ஆக்கிங் தூவிய அறிவியல் கண்ணோட்டம் தமிழர்கள் மனத்திலும் ஊன்றி நிற்க வேண்டும் என்பதே அவர் மறைந்த இன்றைய நாளில் எனக்கிருக்கும் கனவு!

நலங்கிள்ளி, ஸ்டீபன் ஆக்கிங்கின் காலம்;சுருக்கமான வரலாறு நூலை தமிழாக்கம் செய்தவர். இந்நூல் எதிர் வெளியீடாக வந்துள்ளது.

மேலாண்மை பொன்னுசாமி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

சிறுகதை எழுத்தாளரும், சிறந்த சமூக சிந்தனையாளருமான ‘மேலாண்மை’ பொன்னுசாமி காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். விருதுநகர் மாவட்டம் மேலமறைநாடு என்ற கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த ‘மேலாண்மை’ பொன்னுசாமி தனது சொந்த கிராமத்தில் சிறு மளிகை வியாபாரம் செய்து வந்தார்.

சமூக மாற்றம் குறித்து சிந்தித்தவர். மார்க்சிய கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பல்வேறு நிலைகளில் வாழும் மக்களை அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர். சோவியத் இலக்கியத்தின் தாக்கத்தால் மக்களின் வாழ்நிலைகளை எடுத்துச் சொல்லும் சிறுகதைகள் 1972 முதல் எழுதத் தொடங்கியவர். 23 சிறுகதைகளையும் 6 நாவல்களையும் படைத்து வழங்கியுள்ளார்.

இவரது ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதை 2008 ஆம் ஆண்டில் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை நிறுவிய தலைவர்களில் முதன்மையானவர். இவரது மறைவு படைப்புலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரை இழந்து நிற்கும் அவரது மனைவி திருமதி.பொன்னுதாய், மற்றும் குழந்தைகளுக்கும், முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

”கருணையுடன் திரைக்கதை எழுதும் மனம் காலத்துக்கு இல்லை”: எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷுக்கு அஞ்சலி

அஜயன் பாலா

எம். ஜி. சுரேஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பின் நவீனத்துவம் என்ற சொல், தமிழ் சூழலில் உண்டாக்கிய அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு சம்பந்தமே இல்லாத குழந்தை போன்ற சுபாவம் மிக்கவர். எண்பதுகளில் துவங்கி சிறுகதைகள் எழுதி வந்தவர் 90 களின் பிற்பகுதியில் தொடர்ந்து பின் நவீனத்துவம் க்யூபிசம் என தன் நாவல்களை அடையாளப்படுத்தி பரபரப்பை உண்டாக்கினார். அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், யுரேகா என்றொரு நகரம், சிலந்தி ஆகியவை அவரது குறிப்பிடத்தகுந்த நாவல்கள்.

தமிழவன், நாகார்ஜுனன், கோணங்கி, சாரு நிவேதிதா, எஸ். ராமாகிருஷ்ணன், ஜெயமோகன் என பலரும் புனைவு மொழியில் பின் நவீனத்துவ படைப்புகளை உருவாக்கி வந்த காலத்தில் மிகவும் எளிமையான எழுத்தில் நாவல்களை எழுதியவர். இதனால் இவரது படைப்புகள் கடும் விமரசனத்திற்கு ஆளான அதே சமயம் சுந்தர ராமசாமி மட்டும் எம் ஜி சுரேஷின் நாவல்களே உண்மையான பின் நவீனத்துவம் என கொண்டாடினார்.

எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ்

இவற்றை விட பின் நவீனத்துவ கொட்பாடுகளையும் அறிஞர்களையும் எளிமையாக அறிமுகம் செய்யும் விதமாக இஸங்கள் ஆயிரம் என்ற நூலை எழுதினார். மருதா பதிப்பகம் பாலகுரு வெளியிட்ட இந்த புத்தகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகவும் சிக்கலான தத்துவங்களையும், தெரிதா அல்தூசர், லக்கான் போன்ற ஆளுமைகளையும் அதில் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார். ரவி எனும் அவருடைய நெருங்கிய நண்பரோடு இணைந்து பன்முகம் என்ற சிற்றிதழை கொண்டுவந்தார்.  வெறும் பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் திரைப்படத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மாப்பசானின் நெக்லஸ் கதையை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதை எழுதி இயக்குனராவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிகையாளர் இந்தியா டுடே கல்யாணகுமாருடன் அடிக்கடி பார்ப்பேன். தங்கர்பச்சானுடன் அழகி படத்தின் திரைக்கதையில் பணி புரிந்தார். பட டைட்டிலில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது. சந்திக்கும் போதெல்லாம் சினிமா துறை பற்றி தீவிரமாக பேசுவார். மறைந்த நண்பர் ஓவியர் இயக்குனர் கிட்டான் எனும் கிருஷ்ண வேல் அவரோடு சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருந்தார். இருவரும் என்னிடம் அதை வாசிக்க கொடுத்தனர். ஒரு தீவிரமான இசையமைப்பாளன் பற்றிய திரைக்கதை அது. ஆனால் அந்த திரைக்கதைக்கு தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருக்கும் போதே கிட்டான் இறந்தார். இதோ ஐந்து வருடங்கள் கழித்து எம். ஜி. சுரேஷும் இறந்து விட்டார். அவர்கள் எழுதிய திரைக்கதையில் இறுதிக்காட்சி மகிழ்ச்சி முடிவு. ஆனால் அவர்களை போல கருணையுடன் திரைக்கதை எழுதும் மனம் காலத்துக்கு இல்லை. மரணம் அவரது திரைப்பட கனவுகளுக்கும் மண் மூடிவிட்டது.

அஜயன் பாலா, எழுத்தாளர்; பதிப்பாளர்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்

நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் உணர்வுப்பூர்வமான உரைகளாலும் வளம் சேர்த்துவந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் எதிர்பாரா மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக நெருக்கமான தோழராகவும் இயங்கி வந்த அவரது மறைவு, தமிழக முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்குப் பேரிழப்பாகும்.

சமகால வாழ்வின் நெருக்கடிகளைத் தன் நுட்பமும் கவித்துவமும் மிக்க மொழியில் படைப்புகளாக்கித் தந்தவர். தன் சமூகத்துக்குள் நிலவும் பிற்போக்கான நம்பிக்கைகள், கருத்துக்களுக்கு எதிராக பகுத்தறிவுப் பார்வையுடன் இடையறாத கருத்துப்போரை நடத்தியவர். மார்க்கத்துக்கு உள்ளிருந்தே எழுந்த அவரது ஆரோக்கியமான குரலை அடிப்படைவாதிகள் நெரிக்க முயன்றனர். “இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை வாப்பா” என்கிற அவரது கவிதை வரிகளுக்காக அவர் மதவிலக்கம், ஊர்விலக்கம் செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தாரும் கடுமையான நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையிலும் அவர் மன உறுதி குலையாமல் சட்டபூர்வமாகவும் இயக்கரீதியாகவும் அந்தப் புறக்கணிப்புக்கு எதிராக இறுதிவரை போராடி வென்றார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து தமுஎகசவும் அப்போராட்டத்தில் தோளோடு தோள் நின்றது. அவரது ‘இஸ்லாத்தில் குடிக்கலாச்சாரம்’, ‘இஸ்லாத்தில் பெண்ணியம்’ போன்ற கட்டுரைகள் பெரும் விவாதத்தைக் கிளப்பின. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று தன் படைப்புக்களையும் கருத்துப் போராட்டத்தையும் முன்னெடுத்தவர் கவிஞர் ரசூல்.

தமுஎகசவின் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகளில் எம்மில் ஒருவராக உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்த அவரது தோழமை மறக்க முடியாதது. திருப்பூரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் ” எந்த நிலையிலும் எமக்கு மரணமில்லை” என்கிற கருத்துரிமைக்கு ஆதரவான நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய நெகிழ்ச்சி மிக்க உரையில் மாநாடே கலங்கி நின்றது.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருற்று நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமன்றத் தோழர்களுக்கும் தமுஎகசவின் மாநில செயற்குழு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது. இழப்பின் துயரத்தில் பங்கேற்கிறது.
*
– ச.தமிழ்ச்செல்வன், தலைவர்
சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

அஞ்சலி: கவிஞர்; விமர்சகர் ஹெச்.ஜி ரசூல்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்:

கவிஞரும் விமர்சகருமான இன்று ஹெச்.ஜி ரசூல் மரணமடைந்தார். அவருக்கு முகநூலில் பிரபலங்கள் எழுதிய அஞ்சலி குறிப்பு..

தமிழின் மிக முக்கிமான கவிஞரும் இஸ்லாமிய நவீன விமர்சகருமான ஹெச்.ஜி ரசூல் இன்று மாலை காலமானார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை சற்று முன் ஹெச். பீர்முகமதிடமிருந்து கேட்டு மனம் கலங்கிவிட்டது. பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர் ரசூல். உயிர்மையில் வெளிவந்த அவரது ஒரு கட்டுரைக்காக ஜமாத்தினால் அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்து வசித்தார். ‘ ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை?’ என்று அவர் கவிதையில் கேட்ட கேள்விக்காக கடும் மிரட்டலுக்கு ஆட்பட்டார். ஒரு கவிஞராகவும் விமர்சகராகவும் தமிழ் கவிதை மரபிற்கு நவீன இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அவரது பங்களிப்புகள் ஆழமானவை.

திருநெல்வேலியிலில் நான் படித்துக்கொண்டிருந்தபோது எனது இருப்பிடத்திற்கு வெகு அருகாமையில் அவரது அலுவலகம் இருந்தது. அடிக்கடி சந்தித்து பேசினோம். ஒருமுறை திற்பரப்பு அருவிக்கு நானும் அவரும் சென்றபோது நான் துணிகளை களைந்து அருவியில் இறங்கிவிட்டேன். ரசூல் கூச்சப்பட்டுக்கொண்டு வெளியிலேயே நின்றார். ‘ உடம்பக் காட்ட கூச்சப்பட்டா நீ என்னய்யா கவிஞர்? ‘ என்று தண்ணீருக்குள் இருந்து நான் கத்தியபோது அவர் முகம் நாணத்தால் சிவந்தது. ரசூல் இன்று உடலாகிவிட்டார். நீண்டகால நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன். எனக்கு ஆவேசமாக பத்து மைல் நடக்க வேண்டும் போல இருக்கிறது..

என்ன எழவு வாழ்க்கைடா இது?

பா. ஜீவசுந்தரி: 

தோழர், கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் காற்றில் கரைந்து போனார்.

அன்புசெல்வம்:
சமூக மாற்றத்தின் முன் மொழிதலில் சளைக்காமல் இயங்கிய மனம் கவர்ந்த கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!
சுகிர்தராணி:
அன்பு நண்பர் ஹெச் ஜி ரசூல் சற்றுமுன் காலமானார்… உன் புன்னகையையும் அன்பையும் எப்படி மறவேன்..?
நந்தகுமாரன்:
கவிஞர் எச்.ஜி.ரசூலின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்லாமிய மத கோட்பாடுகளின் சில அம்சங்களை கவிதை நடையில் கேள்வி எழுப்பி தோலுரித்துக் காட்டினவர். இதற்காகவே அவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பத்வா விதிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டார். அப்படிப்பட்ட மாபெரும் கவிஞனுக்கு இதய அஞ்சலிகள்.

நியாஸ் அகமது:

பழமைகளுடன் போர் தொடுத்த கவிஞர்
ஹெச்.ஜி. ரசூல் காலமானார்!

யாழன் ஆதி:

அமைதியானப் புன்னகையில் எப்போதும்
கலகம் செய்யும்
கவிதந்த ரசூலே
யாது செய்தாய்
என் செய்வேன் யான்?

லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!

திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ‘நான்’ தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன்.

அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால் அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய வீட்டின் முகவரியைப் பெற்றேன். ‘நான்’ தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய பலரைத் தேடிச் சென்றதை சிறப்பான அனுபவமாகக் கருதுகிறேன். அதில் மறக்க முடியாத அனுபவம் அஃக் பரந்தாமனுடனானது. திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார்.  அவர் வசித்த வீடு என் பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. எனக்குப் பிடித்திருந்தது.

என்னை வரவேற்றவர் பரந்தாமனின் மனைவி. அவர் பெயர் சத்யா . ஒல்லியான அவருடைய உருவமும் சிநேகமான அணுகுமுறையும் நினைவில் இருக்கின்றன. முதல் தளத்தில் இருந்த அவருடைய வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த அறையில் பரந்தாமனின் அறை இருந்தது. ஒரு மரப்பெட்டியின் அருகே ஜன்னலிலிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சத்தை பார்த்து அமர்ந்திருந்த பரந்தாமனின் அருகே போய் அமர்ந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பேட்டி எடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது…அதெல்லாம் வேண்டாம் என்றுதான் மறுத்தார். நான் அவரை ஒப்புக்கொள்ள வைப்பதில் தீவிரமாக இருந்தேன். முதலில் என்னைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள் என சொன்னார்.

அவருக்கு அப்போது பார்வை மங்கியிருந்தது. தன் அருகே இருந்த பெட்டியிலிருந்து சில கையெழுத்து பத்திரிகைகளை என்னிடம் காட்டினார். ‘அஃக்’ இதழ் தொடங்கப்படும் முன்பு அவர் முயற்சித்த கையெழுத்து இதழ்கள் அவை. வசீகரமான கையெழுத்தில் தாளின் விளிம்புகளில் விதவிதமான வடிவங்களுடன் இருந்த அவ்விதழ்கள். அஃக் பரந்தாமன், இதழ் வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்றவர். தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் இலக்கிய இதழ் அஃக் என்றும் பரந்தாமன் சொன்னார். நிறைய இலக்கிய விஷயங்களை, சர்ச்சைகளை, மோதல்களை பேசினார். நடுவே அவருடைய மனைவி எங்களுக்கு தேநீர் அளித்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தன்னுடைய சொத்துக்களை விற்று அச்சுக்கூடத்தை வாங்கியது, அஃக் இதழ்களை பொருளாதார சிரமங்களைக் கடந்து கொண்டுவந்தது, ஒரு கட்டத்தில் அதில் அனைத்தையும் இழந்து சென்னை வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் சொன்னார். இருட்டத் தொடங்கியது நான் கிளம்ப வேண்டும் என சொன்னேன்.

’அஃக்’ பரந்தாமன்

சொல்லிக் கிளம்புவதற்காக சமையலறைக்குச் சென்றேன். பரந்தாமனின் மனைவி சத்யாவிடமும் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. வறுமையின் கதைகள் அவை; லட்சியக்காரனின் குடும்பத்தை பீடித்திருக்கும் தொடர் துன்பங்களின் கதைகள் அவை. தங்களுடைய ஒரே மகள்தான் தங்கள் குடும்பத்தின் தற்போதைய ஆதாரம் என்றும் மகன் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார் என்று சொன்னார். அவரை நான் நெருக்கமாக உணர்ந்தேன். அவரும் என்னை நெருக்கமாகவே உணர்ந்திருப்பார் போலும். பத்து நிமிடங்களில் எல்லா கதைகளையும் சொல்லிவிட வேண்டும் எத்தனிப்போடு பேசினார். அடுத்த தெருவில் உள்ள பூனைகளுக்கு தினமும் உணவிடுவது வரை சொன்னார். நான் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அஃக் பரந்தாமன் கொடுத்த கையெழுத்து பிரதிகளை பிரதியெடுத்துக்கொண்டு, அதை திருப்பித் தரவும்  அவர் பேசியவற்றை இதழில் எழுத ஒப்புதல் பெறும்பொருட்டும் அவர் வீட்டுக்கு மீண்டும் சென்றேன். இந்த முறை காலை நேரத்தில் சென்றேன். அப்போது என் ஊரிலிருந்து கொடுத்தனுப்பியிருந்த நிலக்கடலையையும் உடன் எடுத்துக்கொண்டு போனேன். பரந்தாமனுடன் எனக்கிருந்தது தொழில் முறையிலான அணுகுமுறை. ஆனால், அவர் மனைவியுடன் என் தாயைப் போன்றதொரு நெருக்கத்தை உணர்ந்தேன்.

அதன் பிறகு, அஃக் பரந்தாமனின் பேட்டி வெளியானது. மீண்டும் ஒரு முறை அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய மகள் அங்கே பார்த்த நினைவு. பேட்டி வெளியான சில மாதங்கள் கழித்து அதைப் படித்த ஒருவர் பரந்தாமனின் கண்சிகிச்சைக்காக உதவுவதாகச் சொல்லி இதழுக்கு எழுதியிருந்தார். அத்தோடு பரந்தாமன் – சத்யாவுடனான தொடர்ந்து முடிந்தது. சத்யா நினைவில் வந்துபோவார். ரெண்டு வருடங்களுக்கு முன் சத்யா இறந்துவிட்டதாகவும் பரந்தாமன் ஒரு இல்லத்தில் இருப்பதாகவும் முகநூலில் படித்தேன்.

வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளை எழுதுபவர்களுக்கு பொதுவாக இந்தச் சிக்கல் இருக்குமா என்று தெரியவில்லை… அவர்களுடைய துன்பங்களை, வறுமையை, தோல்வியை நமக்குள்ளே தேக்கிக்கொள்கிற நிலை. சில சமயம் சிக்கலான மனப்பிரச்னைகளைக்கூட இது ஏற்படுத்துவதுண்டு.

பரந்தாமன், தன்னை ஒரு கவிஞராக, ஓவியராக, பத்திரிகையாளராக, சினிமாக்காரராக சொல்லிக்கொண்டார். தான் ஒரு உலக சினிமாவை இயக்க வேண்டும் என விரும்பினார். உலகத் தரத்தோடு ‘அஃக்’ இதழை கொண்டு வர வேண்டும் என சொன்னார். சத்யாவுக்கு தன்னுடைய இறுதிகாலமாவது வறுமையில்லாமல் இருந்திருக்குமா? அவர்களுடைய மகள் என்ன ஆனார்? உதவி இயக்குநராக இருந்த அவர்களுடைய மகனின் நிலை என்ன? கனவுகளை சுமந்தபடியே வாழ்ந்த பரந்தாமனின் இறுதி கணத்தில் என்ன நினைத்திருப்பார்? என் மனம் கணத்துக்கிடக்கிறது…

படம்: புதூர் சரவணன்

நன்றி: குங்குமம்.

 

அஞ்சலி: நக்சல்பாரி மூத்த தலைவர் கோவை ஈஸ்வரன்

கி. நடராசன்:

விழுதுகள் பரப்பி தழைத்த பெரும் ஆலமரம் இன்று தனது சுவாசத்தை நிறுத்தி கொண்டது. 1960-65 இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், தமிழ் தேச விடுதலை, மார்க்சிஸ்ட் கட்சி, நக்சல்பாரி பேரியக்கம், தியாகு போன்ற தோழர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க போராடிய மனித உரிமை போராளி, மனிதன் – செந்தாரகை இதழ்கள் ஆசிரியர், தீக்கதிர் ஆசிரியர் குழு, அறிவார்ந்த எழுச்சி பேருரை பேச்சாளர்.. மிக சிறந்த மொழி பெயர்ப்பாளர்.. இப்படி ஆலமரமாய் பரந்த விரிந்த தோழர் கோவை ஈஸ்வரன் இன்று காலமானார்.

பாரதிநாதன்:

தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள் காலமானார். கடந்த சில நாட்களாய் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தின் மூத்த நக்சல்பாரி தோழரின் இழப்பு ஈடு செய்ய முடியாதவொன்று. அந்த கம்பீரமான மேடை பேச்சு நின்று விட்டது. சிந்திப்பதை நிறுத்தி கொண்ட தோழர் இயற்கையுடன் ஐக்கியமானார். 

சற்றேத்தாழ முப்பது வருடங்களுக்கு முன், எங்களது ஊரான ஜலகண்டாபுரத்தில் ஒரு பொதுக்கூட்டம். தமிழகத்தில், முதன் முதலில், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களான தோழர்கள் அர்த்தநாரீஸ்வரன் மற்றும் வி.ஆர் மணியின் மீதான கறுப்புச் சட்டத்தை எதிர்த்து தான் அந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துக் கொள்ள மூத்த நக்சல்பாரி தோழரான ஈஸ்வரன் வருகிறார் என எனக்கு சொல்லப்பட்டது. அதுவரை அவரை நான் பார்த்தது இல்லை. தோழர் இன்னும் வந்து சேராத நிலையில் நான் மேடையேறி பேசிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்குப் பிறகு, தோழர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்து விட்டார் என சொல்லப்பட்டது. நான் மூத்த தோழருக்கு வழி விட்டு என் பேச்சை முடித்துக் கொள்ள முயன்றேன். ஆனால், தோழர் ஈஸ்வரன் என்னை முடிக்க விடாமல் தொடர்ந்து பேசுமாறு கை ஜாடை செய்தார். பேச்சை முடித்து கீழிறங்கியதும் என்னிடம் கை கொடுத்து நன்றாக பேசினீர்கள் என கரகரத்த குரலில் கூறினார். அதுதான் முதல் சந்திப்பு. அதன் பிறகு, தமிழகம் முழுவதும் நடந்த பல நக்சல்பாரி மேடைகளில் அவருடன் பேசியிருக்கிறேன். மேடைப் பேச்சில் அவர் தான் எனக்கு ஆசான். போய் வாருங்கள் தோழர் உங்கள் குரல் சாகும் வரையில் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். செவ்வணக்கம்.

சந்திரமோகன்:

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், தமிழ்நாடு நக்சல்பாரி இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) வர்க்கப் போராட்டத்தின் மாநில செயலாளருமான தோழர். கோவை ஈஸ்வரன் மறைந்தார்.

கடந்த ஆண்டில் மறைந்த CPML மக்கள் விடுதலை மூத்த தலைவர் தோழர்.அண்ணாதுரை மற்றும் CPIML-Liberation கட்சி மூத்த தலைவரும், த.நா. நக்சல்பாரி இயக்க நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான பி.வி.சீனிவாசன் நினைவஞ்சலி கூட்டங்களில், கணீரென்ற குரலில், மாறாத புரட்சிகர உணர்வுடன் அவர் ஆற்றிய எழுச்சிகரமான உரை நினைவிலாடுகிறது.

செவ்வஞ்சலி!

மதிவாணன்:

சிதைந்து போன கனவுகளை மீட்டெடுத்தவர்

தோழர் கோவை ஈஸ்வரன் காலமானார். தமிழ் உணர்வில் துவங்கி தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி, நக்சல்பாரி இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் விதையிட்டவர்.. அதேசமயம், இடது ஒற்றுமைக்காக அந்தக் காலத்திலும் பணியாற்றியவர்.

வறுமை விரட்டியபோதும், நோய் தாக்கியபோதும், தனக்குச் சரியென்று பட்டதற்காகப் போராடியவர்…

மனிதநேயம்தான் கம்யூனிசம் என்று வாழ்ந்த காட்டியவர்…

எமது கட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டிய தோழர் பி.வி சீனிவாசனின் உறவினர். இருந்தாலும் கருத்துவேறுபாட்டால் பிரிந்து தோழமையால் இணைந்தவர்.

அவருக்குச் செய்யும் பெரிய அஞ்சலி எது? அவரைப் போல வாழ்வதுதான்.

ஜமாலன்:

தோழர் கோவை ஈஸவரன் மரணம் என்ற செய்தியை தோழர் பாரதிநாதன் பதிவில் பார்த்தேன். தமிழக இடதுசாரி இயக்க வரலாற்றில் முக்கியமானவரான தோழர் ஈஸவரன் இறுதிவரை தனது வாழ்வை இயக்கத்திற்கும் அதன் அரசியலுக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். பலமுறை கல்லூரிக்காலங்களில் அவரைச் சந்தித்து அவரொடு பல மேடைகளில் பேசிய அனுபவம் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர், சிறந்த உரையாடலாளர், நுட்பமான அரசியல் உணர்வு கொண்டவர். சிறந்த போராட்டக்காரர். பலமுறை சிறை செள்றவர். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவருக்கு செவ்வஞ்சலி.

தோழர் கோவை ஈஸ்வரன் உழைப்பதை நிறுதிக்கொண்டார்….

யமுனா ராஜேந்திரன்:

ஓவ்வொருவரும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறார்கள். வாழ்வில் எங்கோ ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்துப் பிரிகிறோம். இன்குலாப், கோவை ஈஸ்வரன் போன்றோர் கிளாசிகல் மார்க்சிஸ்ட்டுகள். ஓன்ஸ் எ மார்க்சிஸ்ட் ஆல்வேஸ் எ மார்க்சிஸ்ட் என இவர்களை வைத்துத்தான் பேச முடியும். கோவை ஈஸ்வரனது ஆசிரியத்துவத்தில் வெளியான ‘மனிதன்’ இதழில் எனது பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியாகின. அவருக்கு அஞ்சலி. முன்செல்க தோழரே, சந்திப்போம்..

மாதவ் கட்டா:

அவர் பேசும் நிலையில், கடைசியாக அவரை சந்தித்தபோது Historical and Polemical Documents of the Communist Movement of India எனும் 1400 பக்கங்களுக்கு மேலான இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவண தொகுப்புகளை மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாக கூறினார்….

செவ்வணக்கம் தோழர்….

நக்சல்பாரி புரட்சியாளரும், மாெழிப்பாேர் தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) இயக்கத்தின் மையக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலச் செயலாளருமான தாேழர்.காேவைஈஸ்வரன் நேற்று இரவு 7.30 மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். தாேழருக்கான இரங்கல் கூட்டம் மதியம் 2.00 முதல் 3.00 மணிவரை நடைபெறும். தாேழரின் இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணிக்கு தாேழரின் இல்லத்திலிருந்து புறப்படும்.

இவண்…
மா.குணாளன், மாநிலக்குழு உறுப்பினர் இ.க.க.(மாலெ) தமிழ்நாடு
02-7-2017.சென்னை நந்தனம் சிஐடிநகர்.

 

நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு

திருநெல்வேலி மாவாட்டம் கழுநீர்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன், சென்னையில் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கழனியூரன், சிகிச்சை பலினின்றி இறந்தார். சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் அவருடைய உடல், நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

பள்ளி ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கழனியூரனி இயற்பெயர் எம்.எஸ்.அப்துல்காதர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகள் என தொகுத்து 40-க்கும் அதிகமான நூல்களாக கொண்டுவந்துள்ளார்.

அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகளின் தொகுப்பு…

கவிஞர், பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்:

நாட்டுப்புற ஆய்வாளரும் எனது நீண்ட நாள் நண்பருமான கழனியூரன் இன்று காலை மறைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் கிடைத்தது. நாட்டார் கதைகளை சேகரிப்பதில் கிராவுடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. உயிர்மை அவரது பல நூல்களை பதிப்பித்திருக்கிறது. இன்னும் இரண்டு நூல்கள் வரவிருக்கின்றன. நேற்று மாலை அவருடன் தொலைபேசியில் அந்த நூல்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன். இன்று அவர் இல்லை. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்த ஒரு மனிதரை இழந்துவிட்டேன். சற்று முன் தான் உயிர்மையில் அவர் எழுதிவரும் கி.ரா குறித்த தொடரின் அத்தியாயத்தின் இறுதி மெய்ப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவே இறுதி அத்தியாயம். இனி அந்தத் தொடர் வராது.

ஊடகவியலாளர் தயாளன்:

கழனீயூரன் மறைவு செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு பேரிழப்பு. அவர் எங்களின் குடும்ப நண்பராக இருந்தார். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் முக்கியமானவர்களில் ஒருவர். யாதும் ஊரே: தென்காசி நிகழ்ச்சிக்காக ஒரு மணி நேரம் எங்களோடு உரையாடினார். தென்காசி, நெல்லை வட்டார வழக்குகள், கதைகள் சொலவடைகள் குறித்து அற்புதமாக பதிவு செய்திருந்தார். ஆழ்ந்த இரங்கல்.

 

எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி:

கரிசல் நாட்டார் கதைகள், வட்டார மொழி வழக்கு, வசவுகள், விடுகதைகள், தமிழ் தெலுங்கு சொலவடைகள் என்று தேடித்தேடிச் சேகரித்தவர் கழனியூரன். கி.ராவின் அத்யந்த சீடனாகவே தன் வாழ்நாள் முழுக்கவும் செயலாற்றியவர்.

உடல்நலப் பாதிப்புகளுக்குப் பிறகு, களப்பணிகளைச் சுருக்கிக் கொண்டாலும் சிகிச்சைகளுக்காக சென்னைக்கும், ஓய்வுக்காக கழுநீர்குளத்துக்கும் சென்று வந்துகொண்டிருந்த இடைவெளிகளும் கூட, ஒரு தேனியைப் போல தன்னுடைய துறைசார்ந்த தேடல்களை பதிவுகளாக்குவதில் அவர் ஓய்ந்ததே இல்லை. நாட்டுப்புற கதைக் களஞ்சியம் தொடங்கி, வசவுச் சொற்கள் சேகரிப்பு வரைக்கும் கி.ரா தனக்கிட்ட ஒவ்வொரு பணிகளையும் தன் சிரமேற்று செய்துமுடித்தவர் கழனியூரன்.

என்ன நன்மை செய்தேனென்று தெரியாது என் வாழ்வில் பெருவதற்கரிய பல நல்வாய்ப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தித் தந்தவர் கழனியூரன். கதைசொல்லியில் பணியாற்றின காலத்தில் ஒரு தேர்ந்த பொறுப்பாசிரியராக என்னை வழிநடத்தினதோடு, நாட்டுப்புறத் தேடல்களிலும் என்னை ஊக்குவித்தவர் கழனியூரனே!

கீராவின் 95ம் வயதில் அவரை கௌரவிக்கும் முயற்சியாக, “கி.ரா-95” நூலினை உருவாக்கும் பொறுப்புக்களை என்னிடம் ஒப்படைத்ததோடு, அந்தப் பணிகள் ஒவ்வொன்றிலும் தனித்த ஈடுபாட்டோடு கவனம் செலுத்தினார். அதேயளவு அக்கறையை என் சொந்த வாழ்க்கையின் மீதும் செலுத்தினவர்.

இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் ஐயா, என்று முதல்முதலில் கழனியூரன் முன்னாள் தான் போய் நின்றேன். எங்கள் இரண்டு பேரையும் கனிவோடு உபசரித்து, உணவு பரிமாறி, ஆசீர்வாதம் பண்ணி வழியனுப்பினார்.

கடைசியாக ஐந்து நாட்கள் முன்பு கழனியூரனிடமிருந்து வந்த கடிதம் வந்திருந்தது. என் வாழ்நாளில் எனக்கு அதிக கடிதங்கள் வந்தது அவரிடமிருந்துதான் என்றே நினைக்கிறேன். கிரா-95 நூல் உருவாக்கம் குறித்து எழுதியிருந்தார்.

கூடவே, மனிதர்களின் குணாதிசயங்களை முன்வைத்து, கிராமத்துப் பெரியவர்கள் சொல்லியுள்ள சொலவடைகளைச் சேகரித்து அது தொடர்பாக நூல் ஒன்றை உருவாக்க வேண்டும். அதை நீங்களே வெளியிடுங்கள் என்றும் பணித்திருந்தார்.

எங்களுடைய பதிப்பகத்திற்கு, ‘ஜீவா படைப்பகம்’ என்று பெயர் வைத்ததுமே முதல்முதலில் உச்சிமுகர்ந்து பாராட்டியவர் கழனியூரன் தான். உயிர்மைக்காக கழனியூரன் எழுதிய ‘இலை மறைவு காய் மறைவு’ நூலை திருத்தம் பார்த்து, வடிவமைப்பு முடித்து இறுதிப்படுத்தும் பணிகளுக்காக போன் பேச்சில் அவரோடு கடைசியாக ஓரிருவாரம் முன்புவரைக்கும் தொடர்பிலே இருந்தேன்.

“நீங்கள் கி.ராவை தலைமேலேற்றிக் கொண்டாடினவர், உங்கள் காலத்திலே உங்களது படைப்புகளுக்காக நான் உங்களைக் கொண்டாடுவேன்” என்று அவரை முழுமையாக மூன்றுமணி நேரம் நேர்காணல் செய்து காணொளியாகப் பதிவு பண்ணி வைத்திருக்கிறேன். மிகுந்த ஆசையோடு, இதை என் பேரப் பிள்ளைகளுக்குப் போட்டுக் காட்டவேண்டும் என்று கண் கலங்கினார்.

இன்றைக்கு காலை வந்த செய்திகளின்படி, கழனியூரன் உயிரோடு இல்லை அவர் காலமாகிவிட்டார் என்கிறார்கள். ’காலம்’ ஆனவர் எப்படி உயிரோடு இல்லாமல் இருக்க முடியும். என் தந்தை ஸ்தானத்து மனிதர் கழனியூரன். நெல்லை கிருஷியிடம் இதைச் சொன்னபோது, நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைக்கு முற்றிலும் தகுதியான மனிதர் தான் அவர் என்றார்.

கழனியூரன் எனக்குச் சொன்ன ஒவ்வொரு சொல்லிலும், அவருடைய ஒவ்வொரு கதைகளுலும், அதைச் சேகரித்த அனுபவங்களைக் கதை கதையார் பகிர்ந்துகொண்ட நினைவுகளிலும், கி.ராவுக்குப் பிறகு எழுத்து முயற்சிகளில் என்னிடம் காட்டிய அன்பிலும், பரிவிலும் அவர் நிலைத்தே இருக்கிறார்.

நாளை கழுநீர்குளத்தில் நடைபெற இருக்கும் அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்ள இன்று மாலை திருநெல்வேலிக்குப் புறப்படுகிறேன்.

 

 

மஹாதேரே போதிபாலாவுக்கு இரங்கல் !

அன்புசெல்வம்

என்னுடைய பாலி மொழி பேராசிரியர் மதுரையில் இன்று பரிநிப்பாணம் எய்தினார் என்கிற செய்தி மனவருத்தத்தை தருகிறது. மரணத்தை தழுவும் வயதும், உடல்வாகும் கொண்டவர் அல்லர். எனினும் தன்னுடைய பணியைத் தொடர ஒவ்வொருவராக அழைத்து, கைவிடப்பட்ட நிலையில் இறுதிக்காலத்தை முழுமையாக ஆழ்தியானத்தில் நிறுத்திக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். பிறப்பால் யாதவராக இருந்தாலும் சாதியைத்துறந்து, இறையியல் கற்று, அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி,. முதுகலையில் பௌத்தத்தையும், பாலி மொழியையும் நிறைவு செய்து அவுரங்காபாத்தில் விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் விஹார் ஒன்றை நிறுவி தியானப்பயிற்சிகளை நடத்தி வந்தார். பிறகு தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பாலி – பௌத்தம் பாடங்களை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாக நடத்தி வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணையோடு தமிழில் பாலியை போதித்த முதல் பேராசிரியர் இவர்.

பேராசிரியர் வி. ஃபுஸ்போல், எச். ஓல்டன்பெர்க், டி, டபிள்யூ. ரைஸ்டேவிட் போன்றோர் மேற்கு அய்ரோப்பிய, ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருந்து பாலி ஆய்வுகள் பலவற்றை இறக்குமதி செய்த போதிலும், இலங்கையிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் பாலி பாடநூல்கள் மேற்கத்திய அணுகுமுறைகளை உள்வாங்காமல் சிறிதளவு ஆசிய ஆன்மிகத்தின் வழியில் தனித்து நிற்பதற்கு தனித்த பொருள் கோளியல் முறையைக் கையாண்டவர். ரங்கூன் கல்லூரி பாலி மொழித்துறை பேராசிரியர் சாஸ். துரைசெல், இந்திய-பர்மாவில் கிரேய்ஸ் பாலி பாடநூல்கள், இலங்கையில் எஸ், சுமங்களாவின் எழுத்தேடுகள் மற்றும் புத்ததத்தா, சங்கை ரத்தினஜோதி தேர‌ போன்றோரின் நூல்கள் அனைத்தும் கிழக்கு ஆசிய பவுத்த ஆன்மீகத்தின் வெளிச்சத்தில் நின்று போதிக்கப்பட்டு வருவதை தமிழ்ப்பாலியில் நிறுவியவர்.

இந்த உண்மையை மேற்கத்திய பாலி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கை ஆனந்தா கல்லூரி, கொழும்பு பாலி பவுத்தப் பல்கலைக்கழகம் முயற்சிகளில் வெளியான பாலி “பாஷாவதாரணா” தான் தற்போது பாலி மொழிக் கல்வியை தமிழ்ச் சூழலில், பவுத்த்துடன் புரிந்து கொள்ள பேருதவி செய்கிறது என்பதை ஏற்று தமிழில் பாலி மொழிக்கல்வியை உயர் கல்வி வளாகத்தில் பரவலாக்கும் முயற்சியை மேற்கொண்டார். பண்டிதரின் மகட பாஷைக்கும் இவரின் பாலி விளக்க முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் (நான் உட்பட)

பல்கலைக்கழகங்கள் அவரின் ஆக்கப்பூர்வமான பௌத்த – பாலி மொழிக்கல்வியை தமிழ்ச்சூழலுக்கு கொண்டு செல்லவில்லை என்கிற குற்ற உணர்வோடு அவரை நினைவு கூர்வதும், இரங்கல் தெரிவிப்பதும் இயலாமை மட்டுமல்ல ! ஒரு வகையில் சடங்காகிப்போன பிழையறிக்கை ! எனினும், கனத்த இதயத்தோடு அருள்திரு சங்கை போதிபாலாவுக்கு தம்மம் தழுவிய அஞ்சலிகள் !

வானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்!

இளங்கோ கிருஷ்ணன்

கவிஞர் அப்துல் ரகுமான் மரணம். வானம்பாடி மரபில் தனித்துவமானவர் ரகுமான். அவரது இஸ்லாமிய பிண்ணனி இதற்கு ஒரு முக்கிய காரணம். தான் வானம்பாடியில் எழுதினேனே தவிரவும், வானம்பாடி கவிஞர் அல்ல என்பார். அதற்கு காரணங்களும் உள. வானம்பாடி மரபின் ரொமாண்டிசைஸ்டு மொழியைப் பயன்படுத்தினாலும் கவிதையை லெளகீக தளத்தில் அல்லாமல் ஆன்மிக தளத்தில் பயன்படுத்தியவர் ரகுமான். என் இளமைப் பருவத்தில் என்னை மிகவும் வசீகரித்த கவிஞர்.

இவரது பால்வீதி, ஆலாபனை, பித்தன் மூன்றும் முக்கியமானவை. இதில் ஆலாபனை, பித்தன் இரண்டும் எதிரெதிர் நூல்கள். அதாவது, ஆலாபனை மேதையின் பாவனையிலும் பித்தன் அதற்கு எதிரான பாவனையிலும் எழுதப்பட்டிருக்கும். இவ்விரண்டிமே சூஃபி மரபின் இயல்புகள். தமிழில் சூஃபி மரபை ரொமாண்டிசைஸ் செய்த கவிஞர் அப்துல் ரகுமான் என்பது என் மதிப்பீடு.

தொடக்க காலத்தில் கலீல் ஜிப்ரான் இவரின் ஆதர்சமாய் இருந்தார். பிறகு அரேபிய, பாரசீக, உருது மரபு இலக்கியங்களின் தாக்கத்துடன் எழுதினார். புதுக்கவிதை பற்றிய இவரது ஆய்வு நூல் முக்கியமானது. கவிதையியல் பற்றி பேச முற்பட்ட கவிஞர்களில் முக்கியமானவர்.

தமிழ் கவிதை… சங்க காலம், சுதந்திர இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் தசமங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் வருகையான தற்காலம் என மூன்று முறை பேரளவில் ஜனரஞ்சகமாகி இருக்கிறது.

இதில் எழுபது, எண்பதுகளில் ஜனரஞ்சகமானபோது அப்துல் ரகுமான் செய்த பங்களிப்புகள் முக்கியமானவை. கவியரங்களில் செவிநுகர் கனிகளான இவரது கவிதைகளும் சமத்காரமான பேச்சும் பெரிதும் கொண்டாடப்பட்டன. பெரியவருக்கு என் அஞ்சலிகள்.

இளங்கோ கிருஷ்ணன், கவிஞர்; ஊடகவியலாளர்.

உதிர்ந்த கறுப்பு மலருக்கு அஞ்சலி

இரவிக்குமார்
இரவிக்குமார்
“கறுப்புமலர்கள்”, “சகாராவைத் தாண்டாத” ஒட்டகங்கள் முதலான தனது புதுக்கவிதைகளால் ஒரு காலத்தின் தமிழ்க் கவிதைத் தேரை முன் நகர்த்திய 75 வயது வரை வாழ்ந்த கவிஞர் நா.காமராசன் மறைவுக்கு கவியார்ந்த அஞ்சலி!

நா. காமராசன், தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், “கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்” என்றும் அழைக்கபடுகிறார்.

“தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது” என்று கவிஞர் வைரமுத்து நா.காமராசனைப்பற்றிச் சொல்லியுள்ளார்.

1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்கு தைப்பாவை என்ற மகளும்,தீலீபன் என்ற மகனும் சாந்தி என்ற பிரியா மருமகளும்,கீர்த்தனா என்ற பேத்தியும் உள்ளனர்.

1964ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு காலில் விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

எம்.ஜி. இராமச்சந்திரனால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990 இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார், மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991 ல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

நா.காமராசனின் நூல்கள்


கறுப்புமலர்கள், கிறுக்கன், நாவல்பழம், மகாகாவியம், சுதந்திர தினத்தில். ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு அந்த வேப்பமரம், பெரியார் காவியம் போன்றவை இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது.

இலக்கியத்துறை,திரைப்படத்துறை,அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர்,இவர் சிறந்த பேச்சாளர்.

நா.காமராசன் பெற்ற விருதுகள்

கலைமாமணி விருது
சிறந்த பாடலாசிரியர் விருது
பாரதிதாசன் விருது

இவரது பாடல் இடம்பெற்ற சில திரைப்படங்கள்

பல்லாண்டு வாழ்க, நீதிக்குத் தலைவணங்கு,
இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம், ஊருக்கு உழைப்பவன், வெள்ளைரோஜா, கோழிகூவுது, நல்லவனுக்கு நல்லவன்,இதயகோவில், உதயகீதம், நான் பாடும் பாடல், பாடும் வானம்பாடி, தங்கமகன், அன்புள்ள ரஜினிகாந்த், கை கொடுக்கும் கை, காக்கிச்சட்டை, காதல்பரிசு, முந்தானை முடிச்சு, வாழ்க வளர்க, பெரியவீட்டு பண்ணக்காரன், எங்கவீட்டு காவக்காரன், அன்புக்கட்டளை. ஓசை. ஆனந்தக் கண்ணீர், அந்த ஒரு நிமிடம், மந்திரப் புன்னகை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், மனிதனின் மறுபக்கம், ஒரு நல்லவன் ஒரு வல்லவன், கற்பகம் வந்தாச்சு, ஊர்க்குருவி, சொல்லத் துடிக்குது மனசு

வசனம் எழுதிய திரைப்படம்

பஞ்சவர்ணம்.

 

வினுச்சக்ரவர்த்தி: நம் மூதாதையரை நினைபடுத்திய கலைஞர்!

கவிஞர் மகுடேசுவரன்

மகுடேசுவரன்

எண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். “யோவ் கோணைவாத்தி… இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா… கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்… கர்ரஸ்பாண்ட்டு… பார்த்து நடந்துக்குங்க…” என்று பேசுகையில்தான் பயந்தோம்.

அந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.”மண்வாசனை” திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும் அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்தான் வினுச்சக்ரவர்த்தி. “என் தம்பி மட்டும் மருந்து வெக்கலைன்னா அந்த மாட்டை உங்க ஊரு ஆளு தொட்டிருக்க முடியுமா ?” என்று சாராயக்கடைக்காரி கேட்க, “இதா பாரு… மாட்டைப் புடிச்சது நாங்கதான்னு ஊர் முழுக்க மார்தட்டிப்புட்டோம். இனிமே முன்வெச்ச கால பின்ன வெச்சோம்… எங்க ஊர் மானமே போயிடும். மாட்டப்புடிச்ச ரகசியத்த உன் நெஞ்சுக்குள்ளயே வெச்சுக்க… மத்ததை அப்புறம் பார்த்துக்குவோம்…” என்று சொல்கின்ற அந்தக் கொடுமிடுக்கு மறக்கக்கூடியதா என்ன ?

மண்வாசனை நாயகி முத்துப்பேச்சி தன் மாமனைச் சேர்வாளா என்ற பதற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியதில் அதில் நடித்த வினுச்சக்ரவர்த்தியின் தோற்றத்திற்கும் பங்குண்டு. அப்படத்திற்குப் பிறகு அதில் நடித்தவர்கள் எல்லாரும் ஒரு வட்டம் வந்தார்கள்.

அடுத்து “மண்ணுக்கேத்த பொண்ணு” என்னும் திரைப்படம். நடிகர் இராமராஜன் நடிக்க வருவதற்கு முன் இயக்கிய முதல்படம். நல்ல திட்டமான திரைக்கதை. நாயகியின் தந்தை வேடம் வினுச்சக்ரவர்த்திக்கு. மண்வாசனையில் சம்பாதித்த “கொடுமைக்காரன்” என்னும் பெயர் இப்படத்தில் “ஆள் நல்ல மனுசன்தான்பா” என்று நினைக்குமளவுக்கு மாறியது. ஏறத்தாழ அதே நடிகர்கள். மனைவியிடம் எந்நேரமும் மையல் தீராமல் திரியும் பெரியவர் வினுச்சக்ரவர்த்தி. மனைவி காந்திமதி. தங்கள் சரசத்தை வீட்டு வேலைக்காரனும் மகளும் கண்டுவிட்டாலும் ஆள் ஓயமாட்டார். தொண்டையைச் செருமியபடி “சரிசரி… மோர எடுத்துட்டு உள்ள வா…” என்று மனைவிக்குக் கட்டளையிட்டுச் செல்பவர்.

அடுத்து வந்த படம் முதல் வசந்தம். தொடக்கத்தில் அப்பாவிப் பாண்டியனைப் புரட்டியெடுக்கும் குடிகார அடியாளாக வினுச்சக்ரவர்த்திக்கு வேடம். கதாபாத்திரங்களை மிரட்டுவோராகச் சித்தரிப்பதில் மணிவண்ணன் எப்போதும் சளைத்தவரல்லர். வினுச்சக்ரவர்த்திக்குத் தரப்பட்ட அந்தப் பாத்திரத்திற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து படம் முழுக்கவே கொண்டுசென்றிருப்பார்.

முதலில் அப்பாவி நாயகன் பாண்டியனை அடித்துதைப்பதும் பிறகு அவன் வீரமானவனாய்த் திரும்பி வருகையில் அடிவாங்குவதும் ஊரே திரண்டு பண்ணையாரை எதிர்ப்பதற்கு முதல் ஆளாக முன்நிற்பதுமாய் வினுச்சக்ரவர்த்தி நின்று விளையாடியிருப்பார்.

இடையில் கமல்ஹாசனோடு “தூங்காதே தம்பி தூங்காதே” என்னும் படம். செந்தாமரை, வினுச்சக்ரவர்த்தி, கவுண்டமணி ஆகிய மூவரும் தீயவர்கள். அளப்பரிய சொத்துகளின் வாரிசான கமல்ஹாசனுக்குப் போதை ஊசிபோட்டு இன்பத்தில் திளைக்கடித்து சொத்துகளைச் சுருட்டுவது இவர்கள் வேலை.

நடுவாந்திரமான தொந்தியும் முழுக்கைச் சட்டையுமாய் இரண்டு கைகளையும் இடுப்பில் சிறகுபோல் வைத்துக்கொண்டு வசனம் பேசினாலே போதும். வினுச்சக்ரவர்த்தி அந்தக் காட்சியை எடுத்து நிறுத்துவார்.

வினுச்சக்ரவர்த்தியின் தொந்தியைக் குறைப்பதற்கு கமல்ஹாசன் ஓர் யோகாசன வகையைப் பரிந்துரைத்திருக்கிறார். படுக்கையை விட்டு எழுமுன் பத்து மணித்துளிகள் கவிழ்ந்து படுத்தபடி கையைமட்டும் முழுமையாய் ஊன்றி நிற்றலைப்போன்ற ஆசனம் அது. மயிலாசனம் போன்றது. அதைச் செய்தாலே தொந்தி குறையும் என்பது அவர் பரிந்துரை. வினுச்சக்ரவர்த்தி எப்போதும் அதைச் செய்ய முயன்றதில்லையாம். ஒரு நேர்காணலில் மகிழ்ந்து சொன்னார்.

முதல் படத்திலிருந்து கடைசிப் படம்வரைக்கும் அவருடைய தொந்தியில் எந்த மாற்றமும் இல்லை. விகே இராமசாமியும் ஏறத்தாழ அப்படித்தான், முதல் படத்திலிருந்து தம் கடைசிப் படம் வரைக்கும் ஒரே மாதிரியான புடைவயிற்றோடு இருந்தவர். அகல்திரைப் படங்களுக்கு முந்திய நாயகப் படங்கள் பெரும்பாலானவற்றிலும் வினுச்சக்ரவர்த்தி தவறாது பங்குபெற்றிருந்தார். தீயவர் குழுவில் ஒருவராக வருவார். இடையிடையே குணவடிவமான பாத்திரங்களிலும் அவர் தோற்றம் இருந்தது.

அவர் நகைச்சுவைப் படங்களில் செய்த சேட்டைகள் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகளாக அமைந்துவிட்டன. குருசிஷ்யனில் லஞ்சம் வாங்கியதால் நாயகர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காவல் ஆய்வாளர். இன்ஸ்பெக்டர் நல்லசிவம். “இப்ப என்ன செய்வீங்க…? இப்ப என்ன செய்வீங்க…?” என்று அவர் இடவலமாய் இடுப்பாட்டியது குபீர்ச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.

வினுச்சக்ரவர்த்தி அறிமுகமான ‘வண்டிச் சக்கரம்’ திரைப்படத்தைப் பிற்பாடுதான் பார்த்தேன். வண்டியிழுக்கும் கூலிக்காரர்களின் வாழ்க்கை முறையைச் சொல்கின்ற படம். “என்னிக்குமில்லாம இன்னிக்குப் பசிக்குதுன்னு சொல்றியே அண்ணாத்த… உனக்கு வாங்கித்தர இப்ப என்கிட்ட ஒன்னுமில்லையே…” என்பதுபோல் நெகிழ்கின்ற காட்சி வரும். முதல்படம் என்பதை மீறிய நடிப்பை அவ்விடத்தில் வெளிப்படுத்தியிருந்தார் வினுச்சகரவர்த்தி. வினுச்சக்ரவர்த்தியின் குரல்வளம்தான் அவர் உடலசைவை மீறிய நடிப்பை வெளிப்படுத்தும். ழகரப் பலுக்கம் தெளிவாக இருக்கும். வில்லனாய் அவர் உறுமிச் சூளுரைக்கும் குரல்நடிப்பே போதுமானது. ஏனோ பல்குரல் கலைஞர்கள் அவர் குரலை மிகுதியாய்ச் செய்யத் தவறினார்கள்.

வண்டிச்சக்கரத்தை இயக்கியவர் கே.விஜயன் என்னும் இயக்குநர். எண்பதுகளின் வர்த்தகப்பட இயக்குநர்களில் இவரே மிகச்சிறந்தவர் என்பது என் கணிப்பு. விதி என்ற திரைப்படத்தைப் பார்த்தபோது இதை உணர்ந்தேன். கே. விஜயனைப் பற்றி இன்று யார்க்கும் எதுவும் தெரியாது. இணையத்தில் அவரைப் பற்றிய சிறுகுறிப்பும் காணவில்லை. வினுச்சக்ரவர்த்தியின் திரைப்பயணம் ரோசாப்பூ இரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் போன்ற படங்களிலிருந்து தொடங்குகிறது.

தமிழ்த் திரையுலகைக் கறுத்த முகங்கள் எப்போதும் ஆண்டுகொண்டே இருந்தன. நடிகையரிலும் ராஜகுமாரி முதல் சாவித்திரி, வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா என்று கனமான பட்டியல் உண்டு.

நடிகர்களில் பெரும்பான்மையரும் கறுத்த நிறத்தவர்களே. தங்கள் நிறத்தால் மக்களிடத்தில் உறங்கும் ஏதோ ஒரு தொன்மையைச் சுண்டி நினைவூட்டும் தன்மையோடு அவர்கள் இருக்கின்றார்கள். தேவர் மகன் என்ற திரைப்படத்திற்குப் பிறகு மாரடைப்பால் இறந்த ‘நாகராஜசோழன்’ என்னும் நடிகர் அப்படிப்பட்ட தோற்றமுடையவர். தேவர்மகன் திரைப்படத்தில் கண்மாய்க்குக் குண்டு வைத்தமைக்காக கமல்ஹாசன் ஒருவரைச் சேற்றில் புரட்டியெடுப்பாரே, அவர்தான் நாகராஜசோழன்.

அத்தகைய கறுத்த கோவிந்தமான நிறங்களில் நாம் நம் மூதாதைகளின் நிழல்களை காண்கின்றோமோ என்னவோ ! வினுச்சக்ரவர்த்தியின் தோற்றமும் நடிப்பும் அப்படிப்பட்ட மன நெருக்கத்தை நம்மிடையே தோற்றுவித்தன.

கடைசியாக அவருடைய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைக் காண்கையில் நிறைவான சொற்களையே கூறினார். தாம் உடல்நலிவுற்றிருக்கையில் தம்மைக் கவனித்துக்கொண்ட செவிலிக்குப் பட்டுப்புடவையும் பரிசும் தந்து வணங்கி வந்ததாகத் தெரிவித்தார். மண்வாசனையில் கண்ட காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துப் பிரசிடெண்டை அப்போது அவர்வழியாய்க் காணவில்லை என்றாலும் முதிர்ந்த மனிதராய்க் கண்களில் அன்பூறத் தென்பட்டார்.

எம்காலத்தில் எங்களையெல்லாம் களிப்பித்த கலைஞர் மண்ணைவிட்டு நீங்குகின்றார். இந்த இரவு ஆழ்ந்த மௌனத்தின் எடைதாங்கவியலாமல் மேலும் கறுப்படைகிறது, வினுச்சக்ரவர்த்தியைப்போலவே.

கவிஞர் மகுடேசுவரனின் சமீபத்திய நூல் விலைகள் தாழ்வதில்லை (கட்டுரைத் தொகுப்பு) தமிழினி வெளியீடு.

அஞ்சலி: கார்ல் மார்க்ஸ் கண்ணன்

கி. நடராசன் :

காரல் மார்க்ஸ் நூலகம் மரியாதைக்குரிய மூத்த தோழர் கண்ணன் காலமானார். அவரது வீட்டை நூலகமாக்கி ஆயிரக்கணக்கான அரிய நூல்களை, இதழ்களை அனைவரும் – குறிப்பாக தோழர்கள் படிக்க வாய்ப்பை வழங்கியவர். பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பல பத்தாண்டுகளாக உதவியவர். அவர் வயது 93..
அவரது உடல் மருத்துவமனைக்கும் மதியம் 3 மணிக்கு அவரது விருப்பப்படி வழங்கப்பட உள்ளது..பேரிழப்பு. செவ்வஞ்சலிகள்…

யமுனா ராஜேந்திரன்:

அறிவு ஊற்றுக்கு ஆதார வேர் காணமுடியாது. அநாதி காலம் இவரது ஆயுள். கார்ல் மார்க்ஸ் நூலக ஸ்தாபகர் தோழர்.கண்ணனுக்குத் தலைதாழ்ந்த அஞ்சலி..

ஞாநி:

இன்னொரு மரணம். இன்னொரு நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவரின் மரணம். கார்ல் மார்க்ஸ் கண்ணன் என்று எங்களால் குறிக்கப்படும் ச.சீ.கண்ணன் இன்று தன் 94வது வயதில் காலமானார். செய்தி கிடைத்து அவர் வீட்டுக்குச் சென்றபோது உடல் அவர் சகோதரர் கல்வியாளர் ச.சீ ராஜகோபாலனால் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையளிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. மருத்துவமனைக்கு நானும் பத்மாவும் விரைந்தோம். மார்ச்சுவரியில் உடல் ஒப்படைக்கப்படும்போது காண முடிந்தது. இறுதி வரை மார்க்சிய அரசியலிலும் எளிமையான காந்திய வாழ்க்கை முறையிலும் நம்பிக்கையுடன் வாழ்ந்தவர் கண்ணன். சுமார் நாற்பதாண்டு காலமாக அவரை நான் அறிவேன். பொதுத் தொண்டுக்கு என் ஆதர்சங்களில் அவர் முதன்மையானவர்.

தமிழக மின் வாரியத்தில் தலைமை கண்காணிப்புப் பொறியளராகப் பணியாற்றி அவரது இடதுசாரிப் பார்வையினால் தலைமைப் பொறியாளர் பதவி மறுக்கப்பட்டு ஓய்வு பெற்றவர். ஆனால் அவர் ஓய்ந்திருக்கவே இல்லை. அவரும் தோழர் எஸ்.வி ராஜதுரையும் சேர்ந்து கார்ல் மார்க்ஸ் நூலகத்தை தொடங்கினார்கள். கண்ணன் வீட்டு மாடியே பல்லாண்டுகள் நூலகமாக இருந்தது. மார்க்சியம் தொடர்பாக அங்கு இல்லாத நூல்கள், சஞ்சிகைகளே இல்லை.

கண்ணனின் இன்னொரு மாபெரும் சமூகப் பணி பார்வையற்ற கல்லூரி மாணவருக்காக இறுதி வரை உழைத்ததாகும். பார்வையற்ற மாணவர்கள் பட்டதாரிகள் சங்கத்தை ஏற்படுத்த உதவி, அதன் வழியே படிப்புக்கும் தேர்வுக்கும் உதவிகள் அளிப்பதோடு உரிமைகளுக்கான களப் போராட்டங்களிலும் அவர் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். கடும் வெயிலில் தன் எழுபதாம் வயதில் அவர் சென்னை தார் சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்று பார்வையற்ற மாணவருக்கான ஸ்காலர்ஷிப், சான்றிதழ் இவற்றுக்கெல்லாம் அலைந்த காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது.

எங்கள் பரீக்‌ஷா குழுவின் செயல்பாடுகளில் ஆரம்பம் முதல் ஈடுபாடு காட்டி வந்தார். நாடகம் முடிந்ததும் அவரிடமிருந்து விமர்சனமாக ஓர் அஞ்சலட்டை வரும். ஹிரண்ய கசிபு நாடகத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் அவரையும் நடிக்க வைத்தேன். என் முதல் வீடியோ படமான 48.2 % படத்தில் அசோகமித்திரனின் நண்பராக ஒரு காட்சியில் நடித்தார். அவர் வீடு எப்போதும் பார்வையற்ற மாணவர்கள் கூடி மகிழும் நந்தவனமாக இருந்தது. கண்ணனைப் போன்று சமூக அர்ப்பணிப்பும், மனித நேயமும் கொள்கை உறுதியும் கொண்ட தலைமுறை மனிதர்கள் விடை பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

‘ நவீன திருமூலர்’ எழுத்தாளர் மா. அரங்கநாதன் காலமானார்

திருப்பூர் கிருஷ்ணன்: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இன்று(16-4-2017) புதுச்சேரியில் காலமானார். மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர்,

இவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

“முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் அரங்கநாதனுக்கு உண்டு. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர் அரங்கநாதன். நீதிபதியும் சிறந்த ஆன்மிகப் பேச்சாளருமான ஆர். மகாதேவன் இவரது புதல்வர். (தொலைபேசி 09444031255).

இளங்கோ கிருஷ்ணன்:

மா.அரங்கநாதன் தமிழில் தனித்துவமான எழுத்தாளர். அகவயமான கதைகள் எழுதியவர். சிறுகதைகளில் சிறப்பாக இயங்கியவர். அவர் கதைகளில் சித்தர் மெய்யியலின் மிஸ்டிசிசம் இருந்தது. நவீன எழுத்தாளர்களில் அரங்கநாதனிடமே தமிழின் மரபான மெய்யியல் துலக்கமுறுகிறது. தமிழ் மதம், தமிழ் கலை என்று சிந்தித்தவர்.
புதுமைப்பித்தன் மெளனியை ‘ நவீன திருமூலர்’ என்கிறார். உண்மையில் அந்தப் பட்டம் மா.அரங்கநாதனுக்கே முழுமையாகப் பொருந்தும். முன்னோடிக்கு என் அஞ்சலிகள்!

சண்முகம் சுப்ரமணியம்:

தமிழின் மூத்த சிறுகதையாசிரியர்
திரு. மா.அரங்கநாதன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

<

div class=”text_exposed_show”>

அவரது இறுதி சடங்கு புதுவையில் நாளை மாலை (17-4-2017) 4-00 முதல் 6.00 மணிக்குள்ளாக நடைபெறுதிகிறது.
No. 3, 4th cross street
Venkata Nagar
Pondicherry
(Near: Tamizh Sangam Building)

சமயவேல்:

எனது பேரன்புக்குரிய நண்பர் மா.அரங்கநாதன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னை பழவந்தாங்கலில் ஓராண்டு இருந்தபோது தினமும் அவரை சந்தித்து வந்தேன். மாலையில் இருவரும் வாக்கிங் போகத் தொடங்கினோம். சிற்பக்கலையை வைணவம் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது என நான் ஏன் எழுதினேன் என்று தொடங்கிய உரையாடல் பல திசைகளிலும் விரிந்தது. தமிழ் நிலம், மொழி, பண்பாடு, கலைகள் எல்லாம் குறித்த அவரது ஆழ்ந்த புலமையிலிருந்து, ஒரு மாணவனாக நான் கற்றுக் கொண்டது ஏராளம். அவர் பிறந்த ஊரான ஆரல்வாய்மொழி பற்றி நிறைய பகிர்ந்து கொண்டார். அவரது சிறுகதைகளில் இருந்த Mysticism முழுக்க தமிழ் சித்தர்களின் மாயையியல் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் அது அப்படியான ஒரு சித்த வாழ்விலிருந்து மட்டுமே வரமுடியும். அவருக்குள் வாழ்ந்த சித்தரையும் அறிந்து கொண்டேன். பாண்டிச்சேரி சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே போனது.

அஜயன் பாலா:

வேறு மாநில டயணம் காரணமாக மா.அரங்கநாதன் இறுதியாத்திரையில் கலந்து கொள்ளமுடியாத சூழல் வருத்தமளிக்கிறது. அகநாழிகை வாசுதேவன் தான் என்னை சென்னைக்கு அழைத்து வந்து முன்றில் இலக்கிய முகாமில் அறிமுகம் செய்தான். தொடர்ந்து. என் சென்னை வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகள் ஏறக்குறைய தினசரி மாலை அவரோடுதான். மாலை முன்றில் புத்தக கடையிலும் இரவு கடை மூடியபின் மாம்பலம் நிலையத்தில் தொடர்வண்டியில் ஏறி பழவந்தாங்கல் நிலையத்தில் இறங்கி வீடு வரை பேசிக்கொண்டே கழித்திருக்கிறேன். .நவீன இலக்கியம் தாண்டி தத்துவம். தமிழ மரபு தொன்மம் சைவநெறி ஆகிவற்றை குறித்து 24மணிநேரமும் தீவிரமாக சிந்தித்துக்கொண்டே இருப்பவர். ஹாலிவுட் சினிமாக்களின் காதலன். எ 40 50 60களின் படங்கள் பற்றியும் நடிக நடிகையர் இயக்குனர்கள் குறித்து தகவல் களஞ்சியமாக கொட்டிக்கொண்டேயிருப்பார். நேரம் வாய்க்கும்போது கட்டுரை எழுதவேண்டும்.

அகநாழிகை பொன்வாசுதேவன்:

எந்த வெளிச்சங்களையும் தேடாத, தன்னை எங்கும் பிரதிநிதித்துவமும் செய்து கொள்ளாத , எளிமையின் பேருருவான எனது மதிப்பன்பிற்குறிய, எழுத்தாளர் “முன்றில்’ மா. அரங்கநாதன் அய்யா அவர்கள் புதுச்சேரியில் இன்று காலமானார். மனோ மோகன் திருமணத்திற்கு புதுச்சேரி சென்ற போது எழுத்தாளர் ரவி சுப்பிரமணியனுடன் கடைசியாகச் சந்தித்தேன். அவருடைய பணி ஓய்வு காலத்திற்குப் பிறகு நடத்திய முன்றில் புத்தகக் கடைக்கு என் இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் பெரும்பங்கு இண்டு. நான் என் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் அண்ணா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மா.அரங்கநாதன் அப்பாவுடைய சிறுகதைகள் தனித்துவமானவை. அவருடைய பெரும்பாலான கதைகளின் கதாபாத்திரமான முத்துக் கறுப்பன் என்றும் நம்மோடிருப்பான்.

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!

சிவனடியார் ஆறுமுகசாமி இன்று (8.4.2017) மதியம் இயற்கை எய்திவிட்டார். தில்லைக் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி கண்ட எளிய மனிதர் அவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அவர் வந்தார். தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடிய தன்னை தீட்சிதர்கள் கையை முறித்து கீழே தள்ளிவிட்டார்கள் என்ற அவரது முறையீடு கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருக்குத் துணை நிற்க உறுதியளித்தோம்.

“தமிழ்நாட்டுக் கோயிலொன்றில் தமிழர்கள் தம் தாய்மொழியில் பாடி வழிபடக் கூடாது” என்று தடுக்கப்படும் அநீதியை தமிழகம் அறிந்திருக்கவில்லை. இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் பாடும் உரிமைக்காக சிதம்பரத்தில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தியது. எல்லாப் போராட்டங்களிலும் முன் நின்றார் ஆறுமுகசாமி.

உயர் நீதிமன்றம் சென்றோம். “தேவார மூவரே சிற்றம்பலத்தில் நின்று பாடியது கிடையாது” என்று திமிர்வாதம் புரிந்தார்கள், தேவாரப் பதிகங்களை கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள்.  தடை பல தாண்டி தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டினோம். “பக்தர்கள் அனைவரும் சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடி வழிபடலாம்” என்று அறநிலையத்துறை ஆணை பிறப்பித்தது. அரசாணையின் படி பாடச்சென்ற சிவனடியாரை சிற்றம்பலத்தில் ஏற விடாமல், தீட்சிதர்கள் நடத்திய கைகலப்பையும், தாக்குதலையும் தொலைக்காட்சிகளில் கண்டு தமிழகமே கொதித்தது. அஞ்சிப் பணிந்தார்கள் தீட்சிதர்கள். ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடினார். தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டது.

தில்லைக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருப்பதுதான் இத்தகைய அநீதிகளுக்கு காரணம் என்பதால், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான சட்டப்போராட்டத்தைத் தொடங்கினோம். வழக்கில் தீட்சிதர்களுக்கு எதிரான மனுதாரராக ஆறுமுகசாமி முன் நின்றார். “அறநிலையத்துறையிடம் தீட்சிதர்கள் கோயிலை ஒப்படைக்க வேண்டும்” என்று 2009 இல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம்.

உடனே போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவிடம் முறையிட்டார்கள் தீட்சிதர்கள். சுப்பிரமணியசாமியின் தலையீட்டால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மிக விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் கள்ளத்தனமான ஒத்துழைத்தது ஜெ அரசு. கோயிலை தீட்சிதர்களுக்கே உரிமையாக்கி ஜனவரி 2014 இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி மனமுடைந்தார். இத்தகையதொரு அநீதியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க முடியும் என்ற அதிர்ச்சியை அவரால் தாங்கமுடியவில்லை.

சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை. அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.

சிற்றம்பலத்தில் நின்று அனைவரும் தேவாரம் பாடும் அரசாணையைப் பெற்ற பின்னரும், தன்னைத் தவிர யாரும் அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லையே என்று அவர் பெரிதும் வருந்தினார். “போராடிப் பெற்ற உரிமை பயன்படுத்தப்படாத காரணத்தால் பறிபோய்விடக் கூடாதே” என்று கவலைப்பட்டு, தள்ளாத வயதிலும், தட்டுத்தடுமாறி மெள்ள நகர்ந்து சென்று, சிற்றம்பல மேடையேறி, தனது நடுங்கும் குரலில் பாடி வழிபட்டு வந்தார். நடக்கவே முடியாத நிலை எய்தும்வரை அவர் அயரவில்லை. அவர் போராடிப் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவதுதான் பக்தர்கள் அவருக்குச் செலுத்தக் கூடிய நன்றி.

குறிக்கோளில் வெல்லும் வரை அவர் ஓய்ந்ததில்லை. மற்றவர்களை ஓயவிட்டதும் இல்லை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது. இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

– மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.  

 வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

 

அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!

முத்துகுமார்

வாழ்வின் (பல்வேறு தருணங்களில்) நித்திய அபத்தங்களிலும் அபத்த நித்தியங்களிலும் உழலுபவர்கள் பற்றிய கரிசனையைக் கடந்து சென்று சாந்தி நிறைவுறும் ஆன்மீகமோ, கொதிநிலை, கொந்தளிப்பு அரசியலோ, தத்துவமோ அசோகமித்திரனின் படைப்பு வரைபடத்திற்கு அப்பாற்பட்ட இன்மையே. சமயமற்ற ஆன்மீகம் என்பது அவரது கொள்கையாக இருக்கலாம், ஆனால் அப்பாலைத் தேட்டம் இல்லை, (no trancendance) அற உணர்வு உள்ளார்ந்து அமைதி நிலையில் காந்தியமாக, ஜே.கிருஷ்ணமூத்தியியமாக, பகவத் கீதையியமாகச் சுவடு காட்டுகிறது… என்றாவது ஒருநாள், ஆழமாக உணரும் வாசகர்கள் அவரது நீண்ட நெடும் கதை வரிகளின் இடைவெளிகளில் புதைந்து கிடக்கும் அப்பாலைத் தேட்டச் சாத்தியத்தை கண்டுணரும் சாத்தியமேற்பட்டால் அது அதிசயம்தான்.

வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது திநகரில் அவர் குடியிருந்தார். நேர்காணல் செய்ய தொலைபேசிய போது நடுக்கம், வாய் குளறல், ஏனெனில் எனக்கு பத்திரிகை உலகம் அப்போது வெகுபுதிது. இது நான் எடுக்கும் முதல் நேர்காணல். மருத்துவப் பிரதிநிதி வேலையிலிருந்து நேரடியாக ஜென்ராமின் அரிய நட்புச் சந்திப்புக்குப் பிறகு வெப் உலக வாசம். ஆனால் அசோகமித்திரன் நிதானமாக ‘எப்ப வருவீங்க?’ என்றார். நான் நேரத்தைச் சொன்னதும், தலைவலி பயங்கரமாக இருக்கிறது மறுநாள் வாங்களேன் என்று கூறினார். அவர் ஆஸ்துமாவுக்காக இன்ஹேலர் உறிஞ்சிக் கொண்டிருந்த காலக்கட்டம், இன்ஹேலர் மருந்து கடும் தலைவலியை ஏற்படுத்தக் கூடியவை என்பது எனது சொந்த அனுபவமும் கூட.

நேர்காணலில் நான் கேட்ட கேள்விகள் அபத்தமானவையா அல்லது அவரை முகம் சுளிக்கவைப்பவையா என்பது கூட தெரியாத காலக்கட்டம், ஆனால் அவர் எந்தக் கேள்வியையும் அப்படி உணரவில்லை என்பது தெரிந்தது. காரணம் அவர் பதில்களில் அவ்வளவு தெளிவு.

பேட்டியை முடித்த பிறகு என்னைப் பற்றி கேட்டார். என் சம்பளத்தைப் பற்றி கேட்டார். நான் என் சம்பளம் 3,000 என்றேன், உங்க எடிட்டர் எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொண்டீர்களென்றால் mind boggling-ஆக இருக்கும் என்றார். 1999 வாக்கில் நான் சென்னை ஐக்கஃப் மன்றத்தில் நடந்த பின் நவீனத்துவம் பற்றிய கருத்தரங்கில் கோணங்கியை விமர்சனம் செய்திருந்தேன், அதையும் அவர் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டு நீங்க பின்நவீனத்துவ வாதியா என்றார். நான் அப்படிக் கூறிக்கொள்ளும அளவுக்கு எனக்கு வாசிப்பு இல்லை என்றேன். அப்போதைக்கு எனக்கு இந்த சம்பாஷணை ஒரு சந்தோஷ அதிர்ச்சி அளித்தது. எனக்கு நியூ டைரக்‌ஷன்ஸ் என்ற ஒரு பின்நவீனத்துவ படைப்புகள் அடங்கிய நூலையும் சீன நாவல் ஒன்றையும், ஜான் அப்டைக்கின் The Coup என்ற மேஜிக்கல் ரியலிச satire நாவல் ஒன்றையும் எனக்குப் அன்பளிப்பாக அளித்தார். அது பின் காலனிய ஆப்பிரிக்கா பற்றிய ஒரு நையாண்டி நாவல். நிச்சயம் அசோகமித்திரனின் கப் ஆஃப் டீ அதுவல்ல என்று பின்னால் புரிந்தது. ’ஆமா… இந்த Metaphor பத்தி பின்நவீனக்காரா என்ன சொல்றா?’ என்று திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். எங்கும் எப்போதும்-ஏற்கெனவே அனைத்தும் உருவகம்தான் என்று கூறுவார்கள் என்று நான் கூறியதாக நினைவு. பிறகு அவரது தண்ணீர் என்ற ரியலிஸ்ட் நாவலில் கூட தண்ணீர் என்பதை உருவகமாக (தத்துவார்த்த) பேராசிரியர் ஆல்பர்ட் விளக்க முயன்றதைக் குறிப்பிட்டேன். அவர் ஓரளவுக்கு மேல் இதில் ஆர்வம் காட்டவில்லை.

அவர் வில்லியம் பாக்னர், ஹெமிங்வே, ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ் இன்னும் பல மேதைகளை ஊன்றி வாசித்தவர், ஆனால் அதைப்பற்றியெல்லாம் இப்போது சிலர் பீற்றிக்கொள்பவர்கள் போல் அவர் ஒருநாளும் பீற்றிக் கொண்டதில்லை. அவரை, பேட்டிக்குப் பிறகு வெவ்வேறு நபர்களுடன் ஒரு 4-5 முறையாவது சந்தித்திருப்பேன்.

பேட்டி முடிந்து வெளியே வந்து என் சைக்கிளை எடுக்க வேண்டும், அந்தக் குடியிருப்பில் விளக்கு வெளிச்சம் போதாமையினால் சைக்கிள் பூட்டை திறப்பது கடினமாக இருந்தது. நான் கஷ்டப்படுவதை பார்த்த அவர். உடனே, ‘அந்தப் பக்கவாட்டில் சாவி போட்டு திறப்பது போல் இருந்தால் என்ன கெட்டுவிடப்போகிறது, சைக்கிள் திருடர்கள் பூட்டை உடைத்து எடுத்துச் செல்வது என்ன இமாலய வேலையா? பக்கவாட்டில் இருந்தால் சவுகரியமாக இருக்கும், சைக்கிள் கேரியருக்குள் சாவியை விட்டு திறக்கற மாதிரியான பூட்டு என்னத்துக்கு? இதெல்லம் ‘ரொம்ப கஷ்டம்’! இருங்க நான் டார்ச் லைட் எடுத்துட்டு வரேன்’என்று டார்ச் லைட் எடுத்து வந்தார். நான் பூட்டைத் திறந்தவுடன், இந்தக் காலத்திலும் சைக்கிளில் வரும் பத்திரிகைக்காரராக இருக்கிறீர்கள் என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் என்னை சுயபச்சாதாபம் பீடித்துக் கொள்ளும் விதமாக கூறிவிட்டு உள்ளே சென்றார்.

எனக்கும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை நிச்சயம் இந்த சைக்கிள் பூட்டு சம்பவம், என் குறைந்த சம்பளம், எனது மிடில் கிளாஸ் உருவம், என்று நான் விரைவில் அவரது கதைமாந்தராக அவரது கதையில் உள்ளே நுழைந்து விடுவேன் என்று கருதினேன். அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான்!

அவரது மணல் குறுநாவல் என் தாயின் இறப்பு என் குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு முன் கூட்டியே சூசகமாக அறிவுறுத்திய அற்புதப் படைப்பு என்றே இப்போதும் என்னால் கருத முடிகிறது. குடும்பத்தினரிடையே இருந்த ஒரு பிடிப்பு தளர்ந்து அனைவருமே ஒட்டுதல் இல்லாமல் ஒரே கூரையின் கீழ் கிட்டத்தட்ட நடைபிணமாகவே வாழ்வார்கள். எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைக் கொண்ட சரோஜினி மீது தாய் இறந்த பிறகு அனைத்துப் பொறுப்புகளும் விழும், தன் வயதுக்கான இயல்பான காதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் சரோஜினி, கடைசியில் அந்த போட்டோ கடைக்காரர் அழைப்பிற்கு இணங்க சுந்தரம் பார்க் நோக்கி சென்றாள் என்று முடித்திருப்பார். என்னுள் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய குறுநாவல் இது. என் தாயின் இறப்புக்குப் பிறகு என் குடும்பத்திற்கு நேர்ந்ததை அவர் உளவியல் ரீதியாக படம்பிடித்துக் காட்டியது மட்டுமல்ல, அதன் பிறகு இந்த நாவல் பற்றி நான் பகிர்ந்து கொண்டவர்களிடத்திலும் அவர்கள் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளதை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். மிக அரிதாகவே இம்மாதிரியான நெருக்கம் ஒரு படைப்பு கொடுக்கும். அதில் மணல் குறுநாவலை மறக்க முடியாது.

மனித வாழ்க்கையில் நாம் பெரிதும் பொருட்படுத்தாத, எளிதில் கடந்து சென்று விடுகிற சிறுசிறு சிரமங்கள் அதன் இயல்பைத் தாண்டி மனிதனை கூனிக்குறுக செய்பவை என்பதுதான் அவரது பார்வை. நாம் அன்னியமாகிப் போன நிலையில் அனுபவிக்கும் அன்றாட சவால்கள் அவரது பார்வையில் பூதாகரமாக இருக்கும், ஆனால் அவர் வெளிப்பாட்டு வடிவத்தில் அது பூதாகரமாக இருக்காது, அவர் அந்த சிரமங்களை எதிர்கொண்ட விதம் அவருக்கு அதனை பூதாகாரமாகக் காட்டும் போல் தெரிகிறது.

ஆனால் சிறுசிறு சிரமங்களை அனுபவிக்கும் மத்திய தர வர்க்கத்தினரின் பாடுகளை வேதனையுடனும், அபத்த, அவல நகைச்சுவை உணர்வுடனும் அணுகும் இவர் சாதிப்படிமுறை, அடக்குமுறை கொண்ட சமூகத்தில் ஒரு பிரிவினர் இதை விடவும் மிக மோசமான இழிவுகளைச் சந்தித்தது அவருக்கு உறுத்தாதது நமக்கு உறுத்தலாகவே உள்ளது.

மானசரோவர் நாவல் அதன் வடிவம் அப்போது புதிதானதாகும். ஆனால் கோபால்ராவ் குடும்பத்தில் முஸ்லிம் நடிகர் ஏற்படுத்திய இடையூறு, கோபால்ராவ் மனைவியை மனநிலைப் பிறழ்வுக்கு இட்டுச் சென்றதும் இதனால் தன் குழந்தையையே பலிகொடுத்த பயங்கரமும் அதன் பயங்கரத்துடனேயே அமைதியான முறையில் கூற முடிகிறது அவரால், ஆனால் கடைசியில் மெஹர்பாபா என்ற சாமியார் சத்யன் குமார் என்ற அந்த பாகிஸ்தான் ஆரிஜின் முஸ்லிம் நடிகரை மானசரோவர் புனித நீர் மூலம் பாவ நிவர்த்தி செய்து கொள்ளுமாறு வைத்திருப்பது அவரிடம் உள்ள ஒரு இந்து சநாதனியை வெளிப்படுத்துகிறது. அதாவது குரங்குகள் கதையில் கடைசியில் பண்டிதர் ஒருவர் கூறும் தீர்வுக்கும் இதற்கும் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படையில் ஒரு சநாதன மனோபாவமே. அவரது மிக முக்கியமான பரிசோதனை நாவலான “இன்று” நாவலில் ஒரு ஆர்.எஸ்.எஸ். குரல் இருக்கிறதே என்று நான் என் பேட்டியில் கேட்ட போது, அவர் ஆம், என்று ஒப்புக் கொண்டார், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரிடையே உள்ள கட்டுக்கோப்பு, ஒழுக்கம் தனக்கு பிடித்தமானது என்றே கூறினார்.

ஒற்றன் நாவலிலும் அயல்நாட்டு எழுத்தாளர் தன் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கும் அசைவ உணவுகள் பற்றிய சித்தரிப்பும் இத்தகைய மனோநிலையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் காதல் உறவுகள், சிக்கல்கள் பற்றி கூறும் இன்னொரு இளம் பெண் எழுத்தாளரின் பிரச்சினை என்னவென்றே அவருக்குப் புரியாததுதான் ஒற்றனில் தெரியவரும். முதன்முதலாக அமெரிக்காவில் இறங்கும் ஒரு நபர் என்ன வயதாக இருந்தாலும் அந்த ஆச்சரியம், குதூகலம் அவரிடம் இல்லை, சென்னயிலிருந்தே அவர் தன் அன்றாடங்களை சுமந்து அமெரிக்கா செல்கிறார், இவ்வாறு குழந்தைமையை இழந்த ஒரு எழுத்தாளராகவே அவர் இருந்திருக்கிறார். ஜான் அப்டைக், ஹென்றி மில்லர் போன்றோரை அவர் வாசித்திருந்தாலும் செக்‌ஷுவாலிட்டி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகப்பெரிய உளவியல் தாக்கங்களும் அவர் கதைகளில் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் அதுவும் சூழலின் நிர்பந்தம் காரணமாக என்று ஒரு சிச்சுவேஷனிஸ்ட் பார்வை மூலமே வலம் வரும்.

செக்‌ஷுவாலிட்டியும் மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகளுள் மிக முக்கியமானவை, அந்தரங்கமானவை, ”தனி ஒருவனுக்கு ” சிறுகதையில் சூசகமாகவே அது தெரிவிக்கப்படும். செக்‌ஷுவாலிட்டி என்பது வெறும் தேவை என்ற அளவில் பயன்படுவது என்ற பார்வையைத் தாண்டிய சிக்கல்கள் அவரது கருத்திற்கு எட்டவில்லையா, அல்லது எட்டியும் அது எழுதுவதற்கு உகந்ததில்லை என்று நினைத்தாரா என்பது தெரியவில்லை.

இன்னல்களே அன்றாட வாழ்க்கை சவால்களே அவரது லிட்டில் டிவினிட்டீஸ், யேட்ஸ் கூறும் கேஷுவல் காமெடி, சிறுசிறு புனிதங்கள். different sort of little things நபகோவ் கூறும் divine details, லக்கான் கூறும் particular absolutue இந்தச் சட்டகத்தில்தான் அன்றாட நிகழ்வுகள் அவருக்கு அர்த்தமுள்ளதாகின்றன. ஆனால் இந்த அன்றாட இன்னல்கள் தன்னளவிலேயே ஏற்பட்டு தன்னளவிலேயே வாழ்ந்து விடப்படுவதாகவே காட்டப்படுகிறது, அன்றாடச் சமனிலைக் குலைவுக்கு, தடம்புரளலுக்கு உளவியல் ரீதியான ஒரு அடிப்படைத் துன்பம் (traumatic) எதுவும் அவர் கதைகளில் காட்டப்படுவதில்லை. அதனால் பல வேளைகளில் அவரது கதைக்களங்கள் ஆயாசமூட்டுபவையாகவே இருக்கின்றன.

தன் கேரக்டர்களுடன் ஒரு Pathological attachment உள்ளவர் அசோகமித்திரன். இந்தக் கதாபாத்திரங்கள், இந்தக் கதைவெளிதான் அவரது fantacy space ஆனால் இந்த ஃபான்டசி ஸ்பேஸில் கதாபாத்திரங்களுக்கென பிரத்யேகமான ஃபாண்டசி ஸ்பேஸ் இல்லை. இவர்கள் உழல்பவர்களே. இந்த அன்றாடக்கடமை, நித்திய நிரந்தரங்கள் நம்மைக் கட்டிப்போடும் ஒரு அபத்த பந்தம், அசட்டுத்தனமானவை என்ற ஏதோ ஒரு வேதாந்தம் அவரிடம் உள்ளது. காந்தியம், கிருஷ்ணமூர்த்தியியம் ஆகியவற்றுடன் ஒரு சங்கர வேதாந்தியும் அவரிடத்தில் உள்ளார். எனவே அவருக்குள் அவரை விடாது பிடித்திருக்கும் ஒரு சனாதனியை அவரது எழுத்துக்கள் மூலம் எளிதில் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

முத்துக்குமார், ஊடகவியலாளர்.

அசோகமித்திரன் எனும் பால்கனி தாத்தாவுக்கு அஞ்சலி!

அதிஷா

அதிஷா

நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபாரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவர் நம்முடைய வாழ்வின் அவலங்களை புன்னகையோடு எளிய கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். அவை இலக்கியத்தரத்தோடு இருந்தன.

அசோகமித்திரனின் கதைகளின் மொழி மூளையை அஷ்டபங்காசனம் பண்ண வைக்கிற வகையில் என்றைக்குமே இருந்ததில்லை. தண்ணீரும் ஒற்றனும் மானசரோவரும் கரையாத நிழல்களும்… ஒவ்வோரு சிறுகதைகளும் மக்களின் மொழியில்தான் உணர்வுகளை கடத்தின. அந்த உணர்வுகளின் அழுத்தம் என்றென்றைக்குமானவை.

எழுத்தில் இன்னமும் அரிச்சுவடியைக்கூட தாண்டிடாத நானே ஒரு நானூறு லைக் வாங்கினால் ஆட்டம் போடத்தோன்றுகிறது. ஆனால் எத்தனையோ மகத்தான கதைகளை எழுதிவிட்டு எப்படி இந்த ஆளால் இப்படி தேமேவென்று பால்கனி தாத்தாவாக இருக்கமுடிகிறது என வியந்திருக்கிறேன்.

அவர் எப்போதும் பால்கனியில் அமர்ந்துகொண்டு இலக்கிய உலகை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டிருந்தார். தான் எழுதுவதை சமகால எழுத்தாளர்களை போல சமூகத்திற்கு செய்கிற தொண்டாக, தியாகமாக, எது எதுவாகவோ அவர் நினைத்ததே இல்லை.

“உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’ என்கிற கேள்விக்கு அவருடைய சமீபத்திய விகடன் தடம் பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

“பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’

அசோகமித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் இதுதான். அவருக்கு எழுத்து என்றைக்கும் மகிழ்ச்சிக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஒற்றனின் ஒவ்வொரு வரியிலும் அந்த மகிழ்ச்சியை நான் உணர்ந்திருக்கிறேன். எழுதுவதன் மகிழ்ச்சி… அத்தனை எளிதில் வாய்க்காது. மன திருப்திக்காக மகிழ்ச்சிக்காக எழுதுதல் பெரிய வரம். அதைநோக்கித்தான் எழுதுபவர்கள் முன்னகர வேண்டும். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.

தமிழ்மகனின் நூல்வெளியீட்டில்தான் அவரை கடைசியாக பார்த்தது. அவருடைய பேச்சையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவரே குறிப்பிட்டு சிரித்தார். அந்த சுய எள்ளலை அவருடைய சிறுகதைகளை இனி நிறையவே மிஸ் பண்ணுவோம். மற்றபடி இது கல்யாணச்சாவுதான்.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் அசோகமித்திரனின் முழுமையான சிறுகதை தொகுப்பை (காலச்சுவடு) ஒரு நண்பர் பரிசளித்தார். அதை இந்த ஆண்டு இறுதிக்குள் வாசித்து முடிப்பதுதான் அவருக்கு செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

என்னைப்போன்ற பேரன்களுக்கு ஏராளமாக எழுதி வைத்துவிட்டுத்தான் செத்துப்போயிருக்கிறார் இந்த எழுத்து தாத்தா. அதையெல்லாம் வாசித்து பகிர்வதை விடவும் வேறென்ன பெரிய அஞ்சலியை செய்துவிடப்போகிறோம்… தமிழின் மகத்தான எழுத்தாளனுக்கு!

அதிஷா, எழுத்தாளர்; ஊடகவியலாளர்.

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைந்தார்…

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை(6-2-2017) உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் தமிழறிஞர் மணவை முஸ்தபா.  அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணவை முஸ்தபா சென்னையில் காலமானார். இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் கட்சியினர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள அறிஞர் முஸ்தபா, சுமார் 8 லட்சம் அறிவியல் தமிழ் கலைச் சொற்களை உருவாக்கியுள்ளார்.

31 நூல்களை எழுதியுள்ள மணவை முஸ்தபா, 7 நூல்களை ஆங்கிலத்தில் இருந்தும், 3 நூல்களை மலையாளத்தில் இருந்தும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்து சிறப்பாக வெளிகொணர்ந்தார். எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களால் 5 விருதுகள் அளிக்கப்பெற்று பாராட்டப்பட்ட ஒரே தமிழறிஞர் மணவை முஸ்தபா என்று புகழாரம் சூட்டியிருக்கிறது நியூஸ் 7 தமிழ்.

தமிழறிஞர் மணவை முஸ்தபா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தமிழுக்கும் அறிவியலுக்கும் ஒரே நேரத்தில் மணவை முஸ்தபா அவர்களுக்கு இணையான பங்களிப்பு செய்தவர்கள் யாருமில்லை. தமிழை செம்மொழியாக்க முஸ்தபா மிகக் கடுமையாக உழைத்தார். இதற்காக பல்வேறு யோசனைகளை தமிழக அரசுக்கு மணவை முஸ்தபா அவர்கள் தான் வழங்கினார்.
அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த ஏராளமான நூல்களை இவர் பிறமொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினார். கடந்த 2005-ஆம் ஆண்டு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சங்க தமிழ் மற்றும் மொழிப் போராட்டம் பற்றி தொடர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 8 வாரங்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழா 27.03.2005 அன்று நடைபெற்றது.
அதில் மணவை முஸ்தபா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தமிழ் மொழியில் சிறப்புகள், ஆற்றல்கள் குறித்து விளக்கச் செய்ததுடன், தமிழ் இலக்கியம், பிழையின்றி தமிழ் பேசுவது குறித்தும் பயிற்சி அளிக்கச் செய்தேன். இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் மனவை முஸ்தபா அவர்கள் எழுதிய தூய தமிழ் சொற்கள் அடங்கிய நூலை அனைவருக்கும் பரிசாக வழங்கினேன். தமிழ் மொழி வளர்ச்சி குறித்து மணவை முஸ்தபா அவர்கள் என்னுடன் பலமுறை விவாதித்திருக்கிறார்.
மணவை முஸ்தபா அவர்களின் மறைவு அறிவியலுக்கும், தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
மணவை முஸ்தபா அவர்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞராக விளங்கியவர். லட்சக்கணக்கான கலைச் சொற்களை தமிழுக்குத் தந்தவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதராக நிறைவேற்றியவர். கணினி, அறிவியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொற்களை தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மொத்தம் எட்டு தொகுதிகளாக அவர் வெளியிட்ட அகராதி, மிகவும் சிறப்பிற்குரியது.தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு அவரது முன்முயற்சிகளும், ஆய்வுகளும் பெரிதும் உதவின.
எனது மாணவப் பருவம் முதலே மணவை முஸ்தபா நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். குறிப்பாக, மீரா பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்திய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் குறித்து தொடர் சொற்பொழிவுகள் சென்னை மண்ணடியில் நடத்திவந்தது மிகவும் சிறப்பிற்குரியது.
பல்வேறு தமிழ் அறிஞர்கள் குறிப்பாக சிலம்பொலி செல்லப்பனார் போன்றவர்களுக்கு தமிழ் இஸ்லாமியக் காப்பியங்கள் வாயிலாக இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமும், இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வும் செய்ய பெரிதும் காரணமானவர் மணவை முஸ்தபா என்பதை நான் இங்கு நினைவு கூறுகின்றேன். எனது மாணவப் பருவத்திலே தொலைக்காட்சி இல்லாத அக்காலக் கட்டத்தில் சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகளை ஆங்கிலத்திலிருந்து தொகுத்து தமிழில் யுனெஸ்கோ கூரியர் என்ற தமிழ் இதழ் மூலம் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மணவை முஸ்தபா அவர்கள்.
மருத்துவம், இயற்பியல், தொழில்நுட்பம், வாகனஇயல் என உயிர்காப்பு மருந்து முதல் உதிரி பாகங்கள் வரை எல்லாவற்றுக்குமே தமிழ் பெயர்கள் இருக்க வேண்டும் என பேராவல் கொண்டவர் மணவை முஸ்தபா அவர்கள். நமது சமகாலத்தில் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு, மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழில் அறிவியல் சொற்கள் நிறைந்து காணப்படக்கூடிய வகையில் தமிழை செழுமைப் படுத்தியதற்கு மணவை முஸ்தபா அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார். அவருடைய இழப்பு தமிழ்பேசும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.
மணவை முஸ்தபா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மறுமையில் அவருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.

அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா தமிழுக்குத் தொண்டு ஆற்றிய தனி ஒருவர்

வைகோ புகழ் அஞ்சலி

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழ்ச் சொற்களை ஆக்கித் தந்து, தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தன்னிகர் இல்லாத் தொண்டு ஆற்றிய அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நீண்ட காலம் அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த யுனெஸ்கோ கூரியர் இதழ்களைப் படித்து வியந்து இருக்கின்றேன். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாள்களில், உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் புதிய செய்திகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த இதழை விரும்பி படித்து இருக்கின்றேன். அதன் ஒவ்வொரு பதிப்பிலும், நூற்றுக்கணக்கான புதிய தமிழ்ச்சொற்களை ஆக்கி அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தரமான அந்த இதழ் நிறுத்தப்பட்ட பிறகு, கலைச்சொற்கள் ஆக்கும் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். தனி ஒரு மனிதனாக எட்டு கலைச் சொற்கள் அகராதிகளை வெளியிட்டுச் சாதனை படைத்தார்.

‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற இவரது நூல் தமிழக அரசின் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதை வென்றது.

இவரது அரும்பணிகளைப் பாராட்டித் தமிழக அரசு கலைமாமணி விருது அளித்துச் சிறப்பித்தது.

மணவை முஸ்தபா அவர்களுடைய இல்லத்திற்கு மூன்று முறை சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்து இருக்கின்றேன்.

அன்னாரது மறைவு எனக்கு மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கே பேரிழப்பு.

அவரது மறைவால் துயருறும் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் மரணம்; அன்பர்கள் இரங்கல்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான க.சீ. சிவக்குமார், மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.  அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Aadhavan Dheetchanya

எங்கோ இருந்திருப்பாய், நன்றாக வாழவேண்டும் என்று நான் தானடா சிவா நீ பெங்களூரில் குடியேறக் காரணம். இப்படி அகாலத்தில் சாவதற்கா…?

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மாடியிலிருந்து தவறி விழுந்து இன்று மாலை நம்மை விட்டுப் பிரிந்தேவிட்டான்.

கருப்பு கருணா

அண்ணே…அண்ணே..என மனம் நிறைந்தழைக்கும் அன்புத்தம்பி..தோழன்…எழுத்தாளன் க.சீ.சிவக்குமார்..இன்று மாலை பெங்களூரில் அகால மரணம்.

கன்னிவாடியின் சிவப்பு நிலா மறைந்தது…கொடுமையடா க.சீ…

Vaa Manikandan

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். அவரது உடல் பெங்களூரு பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு நாளை காலை கன்னிவாடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Yamuna Rajendran

எப்போதும் பால்கணியில் நிற்கும்போது பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. குழந்தைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு முடிந்தவரை வீட்டினுள் ஒரு காலை இழுத்து வைத்துக் கொண்டு எட்டிப் பார்க்க அனுமதிப்பேன். மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்திருக்கிறார் சிறுகதையாசிரியர் க.சீ.சிவக்குமார். குழந்தைகளுக்காகவாவது வாழ வேண்டும் எனும் ஆசை இப்போதெல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. விபத்தில் ஏற்படும் மரணம் கொடுமையானது. அதனை இரு முறை சொந்த வாழ்வில் அனுபவத்திருக்கிறேன். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பல தமிழக எழுத்தாளர்களை நேரில் அறிந்ததில்லை. அவரை நேசித்தவர்களுக்காக மனம் கலங்குகிறது..

யெஸ். பாலபாரதி

எழுத்தாளர் க.சீ.சிவக்குமாருக்கு அஞ்சலி

Saraa Subramaniam

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்… விகடன் பிரசுரத்தில் இருந்தபோது ‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ புரட்டியவுடன், ‘யார் சார் இவரு… எனக்கே பார்க்கணும் போல இருக்கு’ எனும் ரேஞ்சில் கேட்டு, அடுத்த வாரமே அவருடன் தேநீர் அருந்தியது சட்டென நினைவுக்கு வருகிறது. மனதில் தோன்றியதை யோசிக்காமல் செய்து திகைக்கவைப்பதில் ஃபாரஸ்ட் கம்ப் ரகம். அவரது மறைவுச் செய்தி, அதிர்ச்சியையும் கவலையையும் கலந்த இனம்புரியாத மனநிலையைத் தருகிறது.

இந்த விரக்தியான சூழலிலும், க.சீ.சிவக்குமார் அவர்களின் எழுத்துகளையும் வாக்கியங்களையும் நினைவுகூர்ந்து அசைபோட்டால் எல்லாம் மறந்து சிரிப்பு பீறிட்டு வரும். அதுதான் அவரது எழுத்தின் வல்லமை.

வேறென்ன சொல்ல… இவ்ளோதான் வாழ்க்கையா?

Vijaianand Subbaraj

கரகப்பான குரல்
நலம் விசாரிக்குமுன்பே
சிரிக்கும் உன் முகம்
க.சீ.சிவக்குமார்.

Thamizhnathy

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மாடியிலிருந்து தவறுதலாக விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இவருக்கு கோபமே வராதோ என்று எண்ணும்படியாக, எப்போதும் சிரிப்பில் மலர்ந்த முகம்….அவரது பேச்சும் எதிரிலிருப்பவரை மலர்த்துவதே. சேலத்தில் ‘முரண்களரி’யில் முதன்முதலில் கண்டேன். பெரிய பரிச்சயமில்லை. ஆனால், தெரியும்.

வாழ்வு குறித்து எத்தனை கனவுகளைக் காண்கிறோம்! திட்டங்களை வகுக்கிறோம்! எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் மணற்கோட்டைபோல சரிந்திடத்தானா?

வாழ்வின் அநிச்சயம் அச்சுறுத்துகிறது!

க.சீ.சிவகுமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்…

Krishna Prabhu

அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் நையாண்டியும் பகடியும் குசும்பும் செய்வதில் இவர் மிகுந்த திறமைசாலி. எப்பொழுதாவது தொலைபேசியில் அழைப்பார்.

‘சொல்லுங்க சிவா… என்ன ஸ்பெஷல்’ என்று கேட்டால், ‘உங்க குரல்தான் ஸ்பெஷல்… உங்கக் குரல கேக்கனும் போல இருந்தது. அதான் கூப்பிட்டேன்’ என்பார். மேலதிக நலம் விசாரித்துவிட்டு செல்பேசியைத் துண்டிப்பார்.

எங்கெங்கோ பயணிக்கிறோம். எங்கெங்கோ செல்கிறோம். ஒரு திருப்பம் வாழ்வையே புரட்டிவிடுகிறது. எனக்கான குரல்களில் ஒன்று இனிமேல் இல்லை என்றான கொடிய தினம் இன்று.

க. சீ. சிவகுமார்…

Hugs & love to you siva… Bye bye to you siva…

Lakshmi Saravanakumar

ப்ரியத்திற்குரியவர்கள் ஏன் இத்தனை சீக்கிரமாய் பிரிந்து போகிறார்கள்.

Jeevasundari Balan

புத்தகக் காட்சியில் கடைசியாகப் பார்த்தேன். இனி அப்படித்தான் சொல்ல வேண்டும். மகளின் புத்தகம் வந்திருப்பதாகப் பெருமை பொங்கச் சொன்னவனை இனி எப்போது பார்ப்பது? பெங்களூரில் செந்திலுக்கு போன் செய்து கேட்டால், அவனும் பேச முடியாமல் திணறுகிறான். இரண்டு நாட்களின் முன் கூட கேலி பேசிச் சிரித்தோமே….

சாந்தியும் குழந்தைகளும் நினைவில் நிழலாடுகிறார்கள்.
எவ்வளவு மென்மையானவன் நீ. அண்ணனையும் மதினியையும் இனி கனிவாக அழைப்பாயா? விடை பெறாமலே சென்று விட்ட மைத்துனனே…. கண்களில் கண்ணீர் திரையிடுகிறது.

சென்று வா தோழனே…..

Chandra Thangaraj

எவ்வளவு துயரத்தையும் நகைச்சுவையாக கடந்து செல்லும் மனிதன் எழுத்தாளர் க.சீ.சிவக்குமார். அவர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி வேதனையாக இருக்கிறது. அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.

Arul Ezhilan

வாழ்வின் எவ்விடத்திலும் வன்முறையற்று வாழ்ந்ததோடு, பிரத்தியார் மீது அதை பிரயோகிக்காமலும் வாழ்ந்த நண்பன் சிவக்குமார்.மிஸ் யூ சிவக்குமார்!

ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன்

தீபச்செல்வன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் இதனை சுட்டிக் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா இத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பிற்காலத்தில் தமிழக மக்களின் மனநிலை உணர்ந்தும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றும் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் அவ்வாறு பேசியிருந்தாலும் தமிழகத்தின் ஆதரவையும் அனைத்துலக ஆதரவையும் புலிகள் அமைப்பு தொடர்ந்து கோரியது.

ஈழத்தில் போர் நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் நடந்த போலிப் போராட்டங்களைக் கண்டித்த ஜெயலலிதா “இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது ஈழத்தில் இனப்படுகொலை நடந்த காலத்தில்தான்.

செப்டம்பர் 16 2015 கடந்த வருடம் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டசபையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து “இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.” என சட்டசபையில் உரையாற்றினார்.

10 மார்ச் 2015ஆம் நாள் வடக்கு மாகாண சபை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழக முதல்வர் தன்னுடைய தீர்மானத்தை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபை என்பது வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை, உணர்வை, போராட்டத்தை வெளிப்படுத்தும் மக்களின் ஜனநாயக சபை. அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தார்.

இதேவேளை இந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐ.நா போன்ற அனைத்துலக அரங்கில் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்தியா செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் 2013இல் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோசிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம். ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும் என்றும் தன் கடித்தில் எழுதியிருந்தார்.

இதேவேளை 2013 மார்சட 27ஆம் திகதி ஈழப் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு சட்ட சபையில் உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. அதில் “இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் முழங்கினார்.

போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று 2011இல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பின்னர் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உலுப்பிய இந்தி அரசியல் தலைவராகவும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்குபவராகவும் ஜெயலலிதா காணப்பட்டார். ஜெயலலிதாவின் நிலைப்பாடுகளைக் கண்டு சில சமயங்களில் சிங்களப் பேரினவாதிகளும் சில சிங்கள ஊடகங்களும் அவரை தரம் தாழ்ந்து சென்று கொச்சைப்படுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் மெரீனா கடற்கரையில் உள்ள விடுதியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும்போது சட்டசபைக்கு செல்லும் முதல்வரை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அவை இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறன. ஈழத் தமிழர்கள்சர்வதேச மட்டத்தில் நீதியை வலியுறுத்தும் அதேவேளை இலங்கையில் சுயமரியாதையுடன் வாழ சுயாட்சியை கோரும் ஒரு அரசியல் போராட்டத்தில் வாழும் இன்றைய சூழலில் தமிழக முதல்வரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். சிங்கள அரசு இழைத்த அநீதிகளுக்கு நீதி வேண்டும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தனி ஈழமே தீர்வு முதலிய ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை தமிழகத்தின் பெருங்குரலாக வலியுறுத்தியவர் என்ற வகையில் ஈழச் சரித்திரத்திலும் தமிழக முதல்வரின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது ஆகும்.

தீபச்செல்வன், ஈழக் கவிஞர்.

முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார்.

கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: முன்னாள் துணை வேந்தர் திரு வா.செ.குழந்தைசாமி அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து வைத்து அஞ்சலி செலுத்தினேன்.

கல்வி உலகத்திற்கும், தமிழகத்திற்கும் அவரது மறைவு பேரிழப்பு ஆகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருந்த அவர், கல்வி துறைக்கு மகத்தான சேவை ஆற்றினார். கழக அரசின் கல்வி கொள்கைகளுக்கும், உலக செம்மொழி மாநாட்டிற்கும் உற்ற துணையாக இருந்தவர். தமிழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக உருவாக்க அரும்பாடு பட்டவர். துணை வேந்தர் பதவிக்கே பெருமை சேர்த்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கல்வியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், ஈடற்ற தமிழ்ப் பற்றாளரும், பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தராக நிர்வகித்து அப்பல்கலைக் கழகங்களின் தரத்தையும், பெருமையையும் உயர்த்திய இப்பெருமகனார், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை நிறுவி, தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் ஈடு இணையற்ற சேவை செய்தார்.

தமிழ் இனத்தின் மீதும், குறிப்பாக மரண பூமியிலே தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீதும் எல்லையற்ற வாஞ்சையும், பரிவும் கொண்டிருந்தார்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற குறள்மொழிக்கு ஏற்ப, ‘நிறைகுடம் ததும்பாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னடக்கத்தோடும், அனைவரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயத்தோடும் வாழ்ந்த உத்தமர்தான் முனைவர் குழந்தைசாமி அவர்கள் ஆவார்கள்.

அவர் கல்வித்துறைக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை ஆகும். அவரது மறைவால் கண்ணீரில் துயர்ப்படும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: தமிழகத்தின் தலைசிறந்த நீரியல் வல்லுனரும், முன்னாள் துணைவேந்தருமான வா.செ. குழந்தைசாமி சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவி தலைமையேற்று நடத்திய பெருமையும் இவருக்கே உண்டு. மதிப்புமிக்க பொறியியல் வல்லுனராகவும், கல்வியாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்.

தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கல்விக் கொள்கையை மனம் திறந்து பாராட்டியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5,6,7 தேதிகளில் சென்னையில் நடந்த ‘‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’’ என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்று யோசனைகளை தெரிவித்தார்.

பொதுவாக பொறியியல் வல்லுனர்கள் தமிழ் ஆர்வலர்களாக இருப்பது அரிது. ஆனால், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார். ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தார். அவரது மறைவு கல்வித்துறைக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன்:  கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புக்களிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட்டுள்ளார். யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்து நம் அனைவருக்கும் சிறப்புச் சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழில் பத்து கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள், ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்துக் கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கியப் பங்களிப்புக்காகச் சாகித்ய அகாதெமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காகப் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரிவடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும் வந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழகச் சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாதெமி தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரா.முத்தரசன்: தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட வா.செ.கு., தனது படைப்புகள் மூலம் என்றென்றும் வாழ்வார். இவர் குலோத்துங்கன் என்ற புனை பெயரில் எழுதியுள்ள கவிதைகளும், ஏராளமான கட்டுரைகளும் மனித குலத்தின் சகல பிரச்சனைகளையும் பேசியுள்ளன. இவர் மழைநீர் சேகரிப்பு குறித்தும் நிலத்தடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளை சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட இவர் தனது படைப்புகளில் என்றென்றும் வாழ்ந்திருப்பார். எனினும் அன்னாரது மறைவு ஆய்வுத்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும். அன்னாரது மறைவுக்கு அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கி.வீரமணி: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாள ரும், தமிழ்மொழி அறிஞரும், நீரியல் (Hydrology) துறையில் உலக நிபுணர்களில் ஒருவரும், நம் தமிழர்களின் பெருமைக் குரிய செம்மொழிச் சிந்தனையாளரும் ஆன ‘டாக்டர் வி.சி.கே.’ என்று அனைவ ராலும் அழைக்கப்படும். அருமை நண்பர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இன்று (10.12.2016) விடியற்காலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, நாம் கலங்கிப் போனோம் (அவருக்கு வயது 87).

ஒரு கிராமத்தில் (வாங்கலாம் பாளையம்) ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமது உழைப்பாலும், ஆற்றல் – அறிவுத் திறனாலும் எவரும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்கு கல்வித்துறையில் வளர்ந்த தமிழ்க்குடி பெருமையடையத் தக்க சான்றோர் பெருமகனாவார்.

அவர் அடக்கமான ஒரு பகுத்தறிவுவாதி மாணவப் பருவம் தொட்டே!

பல்துறை தொழில் கல்வித்துறையில் பல பதவிகள், பிறகு மதுரை, அண்ணா பல்கலைக் கழகம், இந்திரா காந்தி பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் பதவிகள், பல்கலைக் கழக மான்யக் குழு இவைகளோடு, செம்மொழித் தமிழ் அமைப்பில் அது வருவதற்கும் வந்த பின்பும் பெரிதும் பெரும் பங்காற்றிய பெம்மான்.

தந்தை பெரியார் அவர்களது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வரவேற்று ஆதரித்ததோடு அதற்கு அடுத்தக் கட்டத்திற்கும் நாம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தவர் தமிழ்ப் புலமை, தொழிற் கல்வித் துறைப் புலமை, ஆங்கிலப் புலமை – இவைகளை இணைத்தவர் – தமிழ்கூறு நல்லுலகத்தில் டாக்டர் வி.சி.கே. என்ற வா.செ.கு. அவர்களேயாவர்!

“குலோத்துங்கன்” என்ற புனைப்பெயரில் அவர் சீரிய கவிஞராகவும் திகழ்ந்தவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற தலைவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தியவர்.
தந்தை பெரியார் அவர்கள்பற்றி அவர் எழுதிய கவிதையில் உயிரோட்டமான பகுதியின் துடிப்பை எவரும் மறக்கவே முடியாது.
நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின்
நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று; எம்மோர்
உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ?
என்பதுதான் அவரின் பொன்னான பொருள் பொதிந்த வரிகள்.

நம்மிடம் அன்பு பாராட்டிய குடும்ப நண்பராவார். சீரிய பண்பாளர்.

அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் டாக்டர் திருமதி சவுந்தரவல்லி, அவரது பிள்ளைகள், உறவுகள் ஆகிய குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எளிதில் ஆறுதல் அடைய முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!

அந்த மாமேதைக்கு நமது வீர வணக்கம்.

முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,

“சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இன்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக் கூடிய அதிமுக தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்தில் சத்துணவு உயர் மட்டக் குழு உறுப்பினராக , ராஜ்ய சபை உறுப்பினராக, அதிமுகவின் பொதுச் செயலாளராக குறிப்பாக தமிழக முதலமைச்சராக பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய போது தன்னுடைய ஒவ்வொரு பொறுப்பிலும் தனி முத்திரை பதித்தவர் அம்மையார் ஜெயலலிதா என்பது பாராட்டுக்குரியது மட்டுமின்றி சிறப்புக்குறியதாகவும் அமைந்திருக்கிறது. அம்மையார் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நான் துணை முதலமைச்சராக இருந்து பணியாற்றியிருக்கிறேன். அண்மையில் அவர் மீண்டும் முதலமைச்சராக தேர்வு பெற்று, தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஆகவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து, அதனை நிறைவேற்றுவதில் தன் உணர்வை எந்த அளவிற்கு தொடர்ந்து அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் உள்ளபடியே அவருக்கு பாராட்டுதலை தெரிவித்தாக வேண்டும். ஆகவே அவரை இழந்து இன்றைக்கு தமிழக மக்களும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் எந்த அளவிற்கு வேதனையில் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வேதனையில், துயரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் குறிப்பாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டேன்” என எழுதியிருக்கிறார்.

எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர்: சிபிஎம் இரங்கல்

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிக்கு மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக்குழு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக முதலமைச்சர் அம்மையார் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்திருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். தமிழகத்தினுடைய மாநில உரிமைகளை பெறுவதில் போராடி வெற்றி கண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடக் கூடிய லட்சோப லட்ச அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை உரித்தாக்குகிறேன் என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா ஏன் மக்களால் நேசிக்கப்படுகிறார்?

ஜி. கார்ல் மார்க்ஸ்

நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள்.

சென்னையை நோக்கி வந்த வாகனங்கள், சென்னையில் இருந்து வெளியேறிய வாகனங்கள் எல்லாமே அதீத அச்சத்தில் சென்றுகொண்டிருந்ததை உணரமுடிந்தது. நிறைய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் சாலையின் இருபுறமும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்வதையும் காண முடிந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசலுக்கு மட்டும் எந்த குறையுமில்லை.

தாம்பரத்தைக் கடந்து சென்னைக்குள் நுழைந்தால் அது சென்னை போலவே இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஏழு மணி தான் இருக்கும். அப்போது தான், தொலைகாட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட செய்தி தவறு என்றும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது என்றும் அப்பல்லோ மறுப்புச் செய்தி வெளியிட்டிருப்பதாக மீண்டும் வீட்டிலிருந்து சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. செய்தி என்னவோ உண்மைதான்; நள்ளிரவில் அறிவிப்பதற்காக இப்போது மறுத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

செல்லும் வழியெங்கும், சென்னையின் பல தெருக்களில் வாசல்களில் மக்கள் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. வன்முறையின் சுவடுகள் இல்லாமல் இருந்தது ஆசுவாசமாக இருந்தது. சென்னையை நெருங்கும்போது இருந்த பதட்டம் சென்னையின் உள்ளே இல்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பே மக்களிடம் இந்த செய்தி பரவியதால், எல்லாரும் வீட்டை அடைந்துவிட்டிருந்தார்கள். வன்முறை எதுவும் இல்லையே ஒழிய அது குறித்த அச்சம் பரவியிருந்ததை நண்பர்களின் குரலில் அறிய முடிந்தது. மீடியாக்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் இந்த செய்தியைப் பரப்பியிருந்தன.

போயஸ் கார்டன் வழியாக இரவு எட்டு மணியளவில் மைலாப்பூர் சென்றபோது அந்த சாலை முகப்பில் வழக்கத்தை விட கூடுதலான போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. அது சொன்ன செய்தி மிகத் தெளிவானது. அப்பல்லோவின் மறுப்பு என்பது நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை செய்வதற்கான அரசு எடுத்துக்கொள்ளும் அவகாசம்.
காலை ஐந்து மணிக்கு எழுந்ததில் இருந்து அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் கண்ணீரால் நிறைகிறது ஓமாந்தூரார் தோட்டம். ஆனால் அந்தக் கண்ணீர் எட்ட முடியாத உயரத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். எல்லா காலத்திலும் அவர் அவ்வாறு தான் இருந்தார்.

அழுது அழுது மயங்குகிறார்கள் பெண்கள். படிக்கட்டுகளில் வரிசை மாறாமல் அமர்ந்திருக்கிறார்கள் மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும். சசிகலா நீண்ட நேரமாக அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அவரது உறவினர்கள். எப்போதும் ஜெவை சுற்றி அவர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெள்ளமென பாய்கிறார்கள். இந்த மூர்க்கமான அன்புதான் தனது அரசியல் வாழ்வில் ஜெயலலிதா சம்பாதித்த மிகப்பெரும் சொத்து. அவர் மீதான எல்லா விமர்சனங்களையும் மீறி அவர் பெரும் மக்கள் திரள் ஒன்றால் மிகத் தீவிரமாக நேசிக்கப்பட்டார். எப்போதும் நேசிக்கப்படுவார்.

அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!

 

தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!

சந்திரமோகன்

தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79.

டில்லியில் உள்ள CPIML Liberation கட்சி அலுவலகத்தில் தோழரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதைக்குப் பிறகு எரியூட்டப்படவுள்ளது.

செவ்வணக்கம்!

நக்சல்பாரி இயக்கத்தின் ஆளுமை : புரட்சிகர இலட்சியங்களை நெஞ்சில் ஏந்திய, களத்தில் இறங்கிய தலைவர் பி.வி.எஸ்

60 களில், வறுமையின் காரணமாக பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு குடியேறி, தாசப் பிரகாஸில் ஒரு ஓட்டல் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கி, சென்னைத் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். CPIM கட்சியில் குறுகிய காலம் செயல்பட்டார். நெருக்கடிமிக்க 1965 காலகட்டத்தில் CPIM கட்சியை கட்டி அமைக்க தலைமறைவாக பணியாற்றினார். சிறந்தப் பேச்சாளர். தமிழ் மொழிப்பற்று மிக்கவர்.

இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்ததாலும், தேசிய இனப் பிரச்சினை தொடர்பான வேறுபாடுகளாலும் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தோழர்கள் அப்பு, கோவை ஈஸ்வரன், ஏஎம்கே, குசேலர்,புலவர் கலியபெருமாள் மற்றும் சிலத் தோழர்களும் இணைந்து தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை கட்டியபொழுது முக்கியமான பங்கு வகித்தவர்.

விவசாயப் புரட்சி என்ற இலட்சியத்தை மனதிலே ஏந்தி, 1970-1990 இடையே சுமார் இருபதாண்டு காலம், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் புரட்சிகரமான நடவடிக்கைகள் மற்றும் கட்சியைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டார். தென் மாவட்டங்களில், தஞ்சை பிராந்தியத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்தார். பழனி அருகில் நடைபெற்ற அழித்தொழிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

44 தலித் விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு எரித்துக் கொன்ற கீழவெண்மணி படுகொலைக்கு காரணமான கொடூரமான நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் ‘குற்றம் அற்றவர்’ என விடுதலை செய்த போது, 80 களில், மக்கள் மன்றத்தில் அவனை தண்டிப்பதற்கு திட்டம் தீட்டி வழிநடத்தியவர்.

தென் மாவட்டங்களில், தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான உறுதியானச் செயல்பாடுகளுக்கு கட்சியை ஈடுபடுத்தினார்.

தொழிலாளராகத் துவங்கி கட்சியின் உயர்தலைவராக….

CPIML Liberation மாநில செயலாளராகவும், மத்திய கமிட்டி அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். 80 களின் துவக்கத்தில், கட்சி நான்காவது காங்கிரஸில் தேசிய செயலாளராகவும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமறைவு காலம் துவங்கி, மக்கள் இயக்கமாக நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கும் காலம் வரை, தமிழக மா.லெ இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தார்.

தொழிற்சங்க இயக்கம், மாணவர் இயக்கம் மத்தியில் இருந்து மா.லெ கட்சிக்கு வந்து உயர்ந்துள்ள தலைவர்கள் பலரும் அவரால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவார்.

இன்றைய CPIML Liberation கட்சியின் தூண்களை கட்டி எழுப்பியவர் என்றால் மிகையாகாது!

தலைமையகத்தில்…

90 களின் துவக்கத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

விடுதலை ஆன பிறகு, சுமார் 25 ஆண்டு காலம், டில்லியில் கட்சித் தலைமையகத்தில் இருந்து செயல்பட்டார். கட்சியின் வெளிவிவகாரத் துறை பொறுப்பு, தத்துவ பணிகளில் பங்கேற்பு எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தொழிலாளியாக மாறி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராளியாக மாறி, தலைவராக வளர்ந்து ஆங்கிலம், இந்தி ஆகியவற்றை கற்றுத் தேர்ந்து அறிவாளியாகவும் உயர்ந்து நின்றார். தமிழகத்தில் இருந்த இடதுசாரி அறிவாளிகள் பலரோடும் (மக்கள் கவிஞர் இன்குலாப் உட்பட) நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.

தோழரோடு இணைந்த எனது பயணம்!

நான், இளம் கட்சி செயல்வீரராக கிராமப்புற புரட்சிகர வேலைகளில் பணியாற்றிய பொழுது, 80 களின் பிற்பாதியில், தஞ்சை பிராந்தியத்தில் அவரது தலைமையில் பணியாற்றினேன். நான் நாகை—கீழ் வெண்மணிக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என விரும்பினார்.அதை ஏற்று, கட்சி முடிவாக சிறிது காலம் அங்கு சென்று பணியாற்றினேன்.

அவரது நக்சல்பாரி கனவுகள் அப்போதும் மாறாமல் கற்பனையில் இருந்தது. நாகை விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகரமான ஆற்றல் குறித்து அளப்பரிய நம்பிக்கையை அவர் கொண்டு இருந்தார். அங்கிருந்து உருவாக்கப்படும் புரட்சிகரமான அணிவரிசை முக்கியப் பங்கு வகிக்கும் என நம்பினார். சூழ்நிலைமைகள் மாறிவிட்ட போதும் கூட, நக்சல்பாரி இயக்கத்தின் வழிமரபான கிராமப்புற புரட்சிகர இயக்கம் என்பதை எப்போதுமே உயர்த்திப் பிடித்தார்.

தோழருக்கு செவ்வணக்கம்!

அவரது எளிமை,கம்யூனிஸ்ட் பற்று உறுதி, கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்சியையே வாழ்க்கையை வாழ்ந்தது….
நக்சல்பாரியின் கனவுகள்.. நமக்கு வழிகாட்டும் பண்புகள் ஆகும்.

தோழர்.கணேசன் /பிவிஎஸ் (PVS) அவர்களுக்கு செவ் வணக்கம்!

‘அம்மா.. அம்மா..’ என அலறி நின்ற அடித்தள மக்களிடம்தான் நாம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்”

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தன்னுடைய முகநூலில் எழுதிய குறிப்பு…

“முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரது ஆளுகை என்பது மற்ற எல்லா ஆளுகையையும் போல இன்னொரு ஆளுகை. ஒரு populist அரசாக அது இருந்தது.

எல்லா மனிதர்களையும் போல அவரும் மாறிக் கொண்டிருந்தார். காலம் அவரிடமும் மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மதமாற்றத் தடைச் சட்டம், பா.ஜ.க ஆதரவு, ஈழப் போராட்ட எதிர்ப்பு முதலான அவரது முதற் கட்ட மோசமான நடவடிக்கைகளை அவரது பிந்தைய ஆட்சிகளில் அவர் தொடரவில்லை. சங்கராசாரி, சுப்பிரமணிய சாமி முதலான நபர்களுக்கும் அவர் எதிராக இருந்தார். மக்கள் அவர் மீதுகொண்டிருந்த நேசம் கவனமான ஆய்வுக்குரிய ஒன்று.

யாருடைய மரணத்திற்கும் அஞ்சலி செலுத்தச் செல்லும்போது அவரது ரத்த பந்தங்களின் கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்லி அகல்வோம். இங்கு யாருடைய கரங்களைப் பற்றி நாம் ஆறுதல் சொல்வது. நேற்று முழுவதும் எங்கெங்கிருந்தோ ஓடி வந்து ‘அம்மா.. அம்மா..’ என அலறி நின்ற அந்த அடித்தள மக்களிடம்தான் நாம் நம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அஞ்சலிகள்..”

கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியவர்: ராமதாஸ் இரங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் சற்று முன் உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் அனைத்து வழிகளிலும் குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. எதிர்நீச்சலும், போராட்டமுமே அவரது வாழ்க்கையாக இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவர் தலைமையேற்று இருந்த இயக்கத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் சென்றார் என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தின் முதலமைச்சராக நான்கு முறையும், எதிர்க்கட்சித் தலைவராக இரு முறையும் பதவி வகித்த ஜெயலலிதா, அவரது பதவிக்காலத்தில் பலமுறை முத்திரை பதித்திருக்கிறார். 1992-ஆம் ஆண்டில் பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகம் செய்தது, ஏழைக் குடும்பங்களை சீரழித்த பரிசுச் சீட்டுக்களை ஒழித்தது, புதிய வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு முடிவு கட்டியது ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில குறிப்பிடத்தக்க திட்டங்கள் ஆகும்.

ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அ.தி.மு.கவினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பாமக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்:

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அவரது மறைவுச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை அன்னை இந்திராகாந்திக்கு அடுத்து தமது வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலம் நிரூபித்த தலைவர் ஜெயலலிதா ஆவார். அன்னை இந்திரா அரசியல் பின்புலமுள்ள குடும்பத்திலிருந்து வந்த நிலையில், எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் ஜெயலலிதா.

தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா. 1991-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் சமூக நிகழ்ச்சி எனது திருமணம் தான். 28.08.1991 அன்று சென்னையில் நடந்த எனது திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அதேபோல், 2001-ஆம் ஆண்டில் பலமுறை என்னை அழைத்து அரசியல், திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறார்.

ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைநோக்கு பார்வை கொண்டவர்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

தமிழக முதல்வர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

“தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் அளப்பரிய பங்கு நீண்ட நாட்களுக்கு நினைவு கூறப்படும். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் பொருளாதார-சமூக முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. லட்சக்கணக்கான மக்களின் தலைவராக விளங்கிய அவர், தொலைநோக்கு பார்வை கொண்டவராக விளங்கியவர்” என தெரிவித்துள்ளார்.

“சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்”

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் உட்பட தமிழக மக்ககள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவாற்றலும் மதிநுட்பமும் நிறைந்திருந்த அரசியல் தலைவராக விளங்கினார். தனக்கு சரியென தெரிந்ததை மிகுந்த துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தும் மன வலிமையுடையவராக அவர் திகழ்ந்தார். கட்டுக்கோப்புடன் ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுக விளங்கியது. பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் தனது அரசியல் வாழ்வில் சந்தித்தாலும் மிகுந்த துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிப் பெற்ற ஒரு இரும்பு மங்கையாக விளங்கியவர் காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

தமிழகத்தில் நிலவும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை காப்பாற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அதனை இடம் பெற வைத்து சமூக நீதியை தக்கவைத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இந்தி திணிப்பு, நீட் போன்ற தொழில் கல்விக்கு நுழைவுத் தேர்வு, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய சட்டங்கள் முதலியவற்றை உறுதியுடன் எதிர்த்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுடன் 1999 முதல் அரசியல் ரீதியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் வெடிக்காத
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை அப்பாவி முஸ்லிம்களை கைதுச் செய்து வருவது தொடர்பாக அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவை முதன் முறையாக அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முறையிட்டோம். அப்போது துணிச்சலாக அவர் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காவல்துறையின் தீவிர விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

1999 ஜீலை 4 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முனனேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் பங்குக் கொள்ள அழைத்த போது உடனடியாக அவர் மாநாட்டிற்கு வருகை தர இசைவு தந்தார். மாநாட்டில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உரையில்

“இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன்.நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்த தவறுக்குப் பரிசாரமாகத் தான் பிஜேபி ஆட்சியை நானே கவிழ்த்தேன் இனி ஒரு போதும் அஇஅதிமுக பிஜேபியுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்.” என்று உரையாற்றினார்.

இதன் பிறகு தமிழகத்தில் பாஜகவிற்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதற்கு செல்வி ஜெயலலிதா பெரிதும் காரணமாக இருந்து வந்தார். அவ்வப்போது சங் பரிவாரைச் சேர்ந்த சில அதிதீவிரவாதிகள் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படும் போது துணிச்சலாக அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்ததையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன். தவறு செய்தவர் சங்கராச்சாரியாராக இருந்தாலும் எவ்வித சமரசமும் இல்லாமல் அவரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அவர் நிலைநாட்டியதும் அவரது 15 ஆண்டு கால ஆட்சியின் மணிமகுடங்களில் ஒன்று. அவரது இந்த நிலைப்பாட்டை எதிர்காலத்திலும் அஇஅதிமுகவினர் உறுதியுடன் கடைபிடிப்பர் என்று நம்புகிறேன்.

2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களை பிரதிதிநிதித்துவப் படுத்தும் கட்சி சொந்த சின்னத்தில் இரண்டு இடங்களில் வெற்றிப் பெற செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதுணையாக இருந்தார் என்பதை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

வடநாட்டில் இருப்பது போல் முஸ்லிம்களை அழைத்து தனது செலவில் ரமலான் நோன்பு திறப்பு விழாக்களை நடத்தி தமிழகத்தில் ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்தியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

14வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் அவர் உணர்ச்சிகரமாக நான் மறைந்த பிறகும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டார். 3வயதில் தந்தையும் 22 வயதில் தாயையும் இழந்து வாழ்வில் கடுமையான சோதனைகளை எதிர்கொண்டு கோடிக்கணக்கான தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறைவு ஒத்துமொத்த தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அனைவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு இறைவன் அழகிய பொறுமையை அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.

சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: விஜயகாந்த்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்‍.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்‍.

அஞ்சாமையும் அயராமையும் கொண்டபேராற்றல் மிக்க தலைவராகத் திகழ்ந்தவர்: தொல்.திருமாவளவன் இரங்கல்

அஞ்சாமையும் அயராமையும் கொண்டபேரா ற்றல் மிக்க தலைவராகத் திகழ்ந்தவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்:

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு கடந்த இரண்டரை மாத காலமாகத் தீவிர சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள இந்த சமூகக் கட்டமைப்பில் எண்ணற்ற சவால்களையும் ஏராளமான நெருக்கடிகளையும் துணிச்சலாய் எதிர்கொண்டு, பகைவென்று சாதனைகளைப் படைத்த ஒரு மகத்தான தலைவராக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெருமைக்குரியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

சாதி, மதம், மொழி-இனம் போன்ற வளையங்களை மீறி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கிற பேராற்றலைக் கொண்டவராக விளங்கியவர். சமூகத்தில், அரசியலில், பொருளியலில் எவ்வளவு வலிமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்க்கவேண்டிய சூழல் வருமெனில், சிறிதும் அஞ்சாமல், சமரசமில்லாமல், துணிச்சலாய் மோதக்கூடிய வல்லமைமிக்கவராகத் திகழ்ந்தவர்.

தனது கட்சியையும் கட்சித் தொண்டர்களையும் தமிழக மக்களையுமே தனது குடும்பமாகக் கருதி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அஞ்சாமை . அயராமை என்னும் ஆளுமை தான் அவருடைய மகத்தான வெற்றிக்கு அடிப்படையாகும். அவருடைய இழப்பு எவ்வகையிலும் எவராலும் ஈடுசெய்ய இயலாததாகும்.

அவரது இழப்பால் வாடும் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

“ஜெயலலிதா மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு:`

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.