பா. ஜெயசீலன்
யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மூடிய போர்வைக்குள்ளிருந்து பறக்க வைக்கிறார்களோ, அதே போலத்தான் வெறும் 7 ஸ்வரங்களை வைத்துக் கொண்டு புதிய புதிய பாடல்களை வடிப்பதாக தான் உட்பட எல்லா இசையமைப்பாளர்களும் மக்களை நம்ப வைக்கிறோம் என்று கங்கை அமரனிடம் இளையராஜா விளக்கும் ஒரு காணொளி எனக்கு பிடித்தமான காணொளிகளில் ஒன்று. ராஜா சொன்னதின் சாராம்சம் தனது இசை என்பது நுட்பம்(technique) மற்றும் கலைவினை(artistic craft) சார்ந்தது என்பதுதானே தவிர அதில் மாயத்தன்மை எதுவும் இல்லை என்பதுதான்.
https://www.youtube.com/watch?v=V5SiFCcvzsk
சமீபத்தில் Lidiyan Nadeswaram இளையராஜாவிடம் தனக்கு இசை கற்றுக்கொள்ள கிடைத்த வாய்ப்பு குறித்து அளித்த பேட்டியில், இளையராஜா மேற்கத்திய செவ்வியல் இசை பாடங்களை இன்னமும் பயின்று வருவதை குறித்தும், மேற்கத்திய செவ்வியல் இசை குறிப்புகளுக்கான பயிற்சியை அவர் இசை தாள்களில் எழுதி பழகியதை தன்னிடம் அவர் காண்பித்ததை குறித்து பகிர்ந்து கொண்டார். நடிகர் கமல், ராஜா பற்றிய ஒரு பேட்டியில் இதே போன்றதொரு வேறொரு தகவலை பகிர்ந்து கொண்டார். ராஜாவின் முதல் நான்கைந்து படங்கள் அசுரத்தனமான வெற்றியை பெற்ற பின்பு கமல் ராஜாவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அப்பொழுது ராஜா அதிகாலையிலேயே எழுந்து கர்நாடக சங்கீதம் கற்க சென்று விட்ட தகவல் தெரிவிக்க பட்டதாக சொல்லி, புகழின் உச்சியை அடைந்து விட்டிருந்த தருணத்திலும் ராஜாவின் கற்கும் ஆர்வம் மேலோங்கியிருந்தது என்று சொல்லி வியந்தோதினார்.
மிக சமீப வருடத்தில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் என்ற திரைப்பட விமர்சகர் உடனான ஒரு பேட்டியில் காதல், காமம், சோகம், தனிமை என்று எல்லா உணர்வுகளையும் எப்படி உங்களால் மிக நேர்த்தியாக உள்வாங்கி வெளிப்படுத்த முடிகிறது என்ற கேள்விக்கு அடிப்படையில் இசை என்பது ஒன்றுதான் என்றும் ஒரு இசை அமைப்பாளராக தன்னால் அந்த இசையை அணுகும் முறையின்(treatment) மூலம் தேவையான உணர்வுகளை உருவாக்க முடியும் என்று கூறினார். வேறொரு மேடை நிகழ்ச்சியில் நிலா அது வானத்து மேல என்ற பாடலை முதலில் தாலாட்டு பாடலாகத்தான் தான் மெட்டமைத்த தாகவும் பின்பு இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை ஒரு துள்ளல் இசை பாடலாக தான் மாற்றியதாக சொன்னார். வேறொரு மேடை கச்சேரியில் கமல் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” போன்றதொரு பாடலை கேட்க, ராஜா அதற்கு நான் அதே பாடலை போட்டு தருகிறேன் என்று இசைத்த பாடல்தான் “புது மாப்பிளைக்கு நல்ல யோகமடா” என்று சொன்னார்.
ராஜாவின் ரமணமாலை தொகுப்பில் “சதா சதா உன்னை” என்ற பாடல் என்னை நெக்குருக செய்த ராஜா பாடல்களில் ஒன்று. அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ராஜா நான்கைந்து பவுர்ணமிகள் ரமணரை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்த போது ஒரு அற்புதமான கண நேரத்தில் அவர் கபாலத்தில் உதித்த பாடலாகத்தான் இது இருக்கும் என்றே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை பாடல் உருவாக அவர் எடுத்து கொள்ளும் நேரம் குறித்த கேள்விக்கு தான் ஒரு முறை பாடல் பதிவில் தனது இசைக்குறிப்பை சரியாக வாசிக்காத சதா என்பவரை “சதா சதா” என்று அவரது பெயரை விளிக்க போய், அந்த இரண்டு வார்த்தையிலிருந்து தனக்கு அந்த “சதா சதா” பாடல் ஒரு நொடியில் வடிவம் கொண்டதாக கூறினார். இதுபோன்ற தகவல்கள் ராஜாவின் தீவிர listener ஆக உள்ள எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ராஜாவின் இசை என்பது அவரது உணர்வின் வெளிப்படுதல் என்று நம்பவே நான் விரும்புவேன். ஆனால், பல்வேறு தருணங்களில் ராஜாவின் வார்தைகளினூடாக நான் உணர்ந்து கொண்டது அவரது இசை என்பது ஒரு கலையை வலிமையோடு பேராளுமை செலுத்தக்கூடிய ஒருவருடைய வெளிப்பாடு என்று உணர்ந்து கொண்டேன். இறைவனை நினைத்து நெக்குருகி கண்ணீர் கசிந்து பாடல் இயற்றிய மாணிக்கவாசகர் வகையறாக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கூட பணியாற்றும் ஒருவர் பெயரை இரண்டு முறை சொல்ல போய், அதை வைத்தே கடவுள் பற்றில்லாதவர்களையும் மெர்சலாக்கும் “சதா சதா” என்ற பாடலை படைக்க தெரிந்தவர்தான் ராஜா. இசையை பொறுத்தவரை மூடிய துணிக்குள் இருந்து புறாவை அல்ல டைனோசரையே பறக்க வைக்கும் அசகாய கண்கட்டு வித்தைக்காரர்தான் ராஜா.
Floyd Mayweather Jr என்ற மிக பிரசித்தி பெற்ற, சமகாலத்தின் மிக முக்கியமான குத்துச்சண்டை வீரர் தன்னை பற்றிய டாக்குமெண்ட்ரியில் தன்னை சமகாலத்தில் இருக்கும் எந்த குத்துச்சண்டை வீரராலும் வீழ்த்த முடியாது என்று சொன்னார். தனக்கு பின்னால் 20 வருட கடுமையான பயிற்சியும், சிதறாத கவனகுவிமையும் உள்ளதாகவும், தன்னை வீழ்த்த நினைப்பவர்கள் அந்த 20 வருடத்தை தாண்டி வர திராணி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் அது யாராலும் முடியாது என்று சொன்னார். இதைப்போலவே இளையராஜாவின் மேதமை என்பது சிறிதும் கவன சிதறல் இல்லாமல் இசையை நோக்கி மட்டுமே அவர் முன்னகர்ந்த முதல் 10,15 ஆண்டுகள் மூலம் அடைந்த ஒரு இடம். இன்னொரு இளையராஜாவாக மாற துடிப்பவர்கள் சில ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், தனது வாழ்நாளில் 10 வருடங்களை ஒரு பித்தனை போல இசைக்கு மட்டுமே செலவிட யாரும் துணியமாட்டார்கள்.மிக கடுமையான முயற்சியின் மூலமும், பயிற்சியின் மூலமே தனது இசை நிகழ்கிறது என்று ராஜா எங்குமே சொன்னதில்லை. இசையென்பது ஒரு கண்கட்டு வித்தை என்று சொல்லி அதை விளக்கியும் காட்டிய அதே ராஜா தனது இசை என்பது இறைவன் அருளியது என்றும், தனது இசை எங்கிருந்து வருகிறது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் கூறுவது ஒரு தமாஷான விஷயம். 80 வயதிலும் இசையை பயிற்சி செய்து தாளில் எழுதி பழகும் இளையராஜா தனது இசை எங்கிருந்து வருகிறது என்று தனக்கு தெரியவில்லை என்று சொல்வது யூ ட்யூபில் பிரபலமாக உள்ள ஜாபார் பாய் தனது பிரியாணி எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை என்று சொல்வதை போன்றது.
திரு.T.தர்மராஜ் அவர்கள் இளையராஜாவை குறித்து பேசியிருந்த ஒரு நீண்ட உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ராஜாவை பற்றி பிறர் பேச கேட்டதில் ஒரு மிக முக்கியமான உரையாக அதை உணர்ந்தேன்.அதில் அவர் ஒரு நுட்பமான உளவியல் அவதானிப்பை இளையராஜா குறித்து விளக்கி இருந்தார். கங்கை அமரனின் உடல்மொழி/பேச்சுமொழி என்பது சாதி ஹிந்துக்கள் மத்தியில் புழங்கும் தயக்கமும், கூச்சமும், குழைவும் நிறைந்த ஒரு அரசியல் விழிப்புணர்வு பெறாத, பெற முயலாத, பெற முடியாத ஒரு தலித்தின் உடல்மொழி/பேச்சு மொழி பாவனை. இந்த உளவியல் சிக்கலை எதிர்கொள்ள தன்னை கோமாளியாக வெளிப்படுத்தி தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்க முயன்று கொண்டே இருப்பது, அதன் மூலம் தீவிர தன்மை மிகுந்த எல்லா விவாதத்திலிருந்தும், உரையாடலில் இருந்தும் தப்பித்துக்கொள்வது. இத்தனைக்கும் அமரன் தன்னளவில் ஒரு அசாத்தியமான திறமையாளர். அவர் எழுதிய பாடல்களில் இருக்கும் கவித்துவமும், லாவகமும் அசாத்தியமானவை. அவர் இசையமைத்த, இயக்கிய படங்களின் வெற்றியும் வீச்சும் புறம்தள்ளமுடியாதவை. அப்படியிருந்தும் அவருடைய பாவனையும், உடல்மொழியும் கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்திற்கு வந்து சாதி ஹிந்துக்களுடன் புழங்கும் ஒரு பாமர தலித்தின் உடல்மொழியாகவே வெளிப்பட்டது. இதை திரு.தர்மராஜ் அடிக்கோடிட்டு கவனப்படுத்தினார்.
பின்பு தர்மராஜ் இளையராஜாவின் உடல் மொழி குறித்தான பார்வையை முன்வைத்தார். ராஜாவின் நடை, உடை, பாவனை, தோரணை, பேச்சு உள்ளடக்கிய பேச்சு/உடல்மொழி என்பது மிகுந்த ஆளுமையும், அதிகாரமும், சுயமரியாதை மிகுந்ததாகவும் வெளிப்படுவதற்கான காரணம் ராஜா “தனது சமூக வரலாற்று அனுபவங்களை/நியாபகங்களை வெற்றிகரமாக மறந்து விட்டார்” என்றும் இளையராஜா “நினைவில் மறதி உள்ள மனிதராக” தன்னை தானே வெற்றிகரமாக தகவமைத்து கொண்டார் என்று சொன்னார். தர்மராஜ் அவர்களின் இந்த அற்புதமான உளவியல் சார்ந்த observation என்னை பொறுத்தவரை இளையராஜாவை நாம் புரிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான கூறு. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒரு மன நல மருத்துவரை அணுகினால் அந்த மனநல/உளவியல் நிபுணர் நடந்த சம்பவத்திற்கு அந்த பெண் எந்தவகையிலும் காரணம் இல்லையென்றும், அந்த சம்பவம் குறித்து சுய வெறுப்போ, அவமானமோ நீ கொள்ள தேவையில்லை என்று விளக்கி அந்த சம்பவத்தை எப்படி நினைவிலிருந்து மறக்கடிக்க/கடந்து போக வைக்க முடியும் என்பதற்கான உளவியல் ஆலோசனைகள் அளிப்பார்கள். ஒரு traumatic அனுபவம் ஒருவருக்கு ஏற்படும்போது அந்த அனுபவத்தை அவர் எவ்வளவு விரைவாக தனது நினைவிலிருந்து மறந்து விட்டு முன்னகர்கிறாரோ அது அவருக்கு அவ்வளவு நல்லது.
45 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சமூக சூழலில், அதுவும் தென்தமிழகத்தில் இருந்து கிளம்பி வந்து திரையிசையில் வாய்ப்பு தேடிய ராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் சந்தித்த சாதி ரீதியான discrimination, புறக்கணிப்புகள், அவமானங்கள் போன்றவற்றை நம்மால் எளிதாக யூகித்து கொள்ள முடியும். தனது அசாத்தியமான திறமையையும் தாண்டி தனது சாதியின் காரணமாக தான் சந்தித்த சவால்கள் இளையராஜா போன்றதொரு மேதைக்கு ஒரு traumatic அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஏனென்றால் எனது மேதைமையை இவர்கள் ஏன் தனது சாதியை வைத்து உதாசீனப்படுத்துகிறார்கள் என்கிற கேள்வி அவரை மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கும். கிராமங்களில் இருந்து கிளம்பி நகரத்துக்கு வந்து வெற்றியடைந்த சாதி இந்துக்கள் தனது கிராமம் குறித்த நினைவுகளை விலாவாரியாக விளக்கி அசைபோட்டு புளங்காகிதம் படுவார்கள். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்துவிட்ட தலித்துகள் தங்களது கிராமத்து வாழ்க்கையை எண்ணி ஏக்கப்பட மாட்டார்கள். நல்லவேளை அந்த கருமத்திலிருந்து வெளியேறினோம் என்னும் நிம்மதி பெருமூச்சே இருக்கும். அம்பேத்கர் கிராமத்திலிருக்கும் தலித்துகளை நகரத்திற்கும் நகரத்திலிருக்கும் தலித்துகளை வெளிநாட்டிற்கும் குடிபெயர சொன்னதின் உளவியலை நாம் இங்கு பொருத்திப் பார்க்கலாம். இளையராஜா தனது பால்யம் குறித்தும், கிராமம் குறித்தும் பகிர்ந்து கொண்ட நினைவுகள் மிக மிகக் குறைவு. இன்னும் சொன்னால் இளையராஜா அவரது வெற்றிக்கு முந்தய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டது மிக குறைவுதான். அவரது கடந்த காலம் குறித்த விவரணையில் எப்போதுமே ஒரு restraint இருப்பதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இளையராஜா தனக்கு நிகழ்ந்த traumatic experience எல்லாவற்றையும் எந்த உளவியல் நிபுணரின் உதவியும் இல்லாமலேயே வெற்றிகரமாக, deliberate ஆக மறந்து விட்டார். அப்படி அவர் மறந்தது மூலம் தன்னை ஒரு புதிய மனிதனாக “ராஜாவாக” வடிவமைத்துக் கொண்டார்.
வன்புணர்வுக்கு ஆளான பெண் அதை மறந்து, கடந்து விட்டு ஒரு மகிழ்ச்சியான, கொண்டாட்டமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் போய் நீ ஏன் அந்த வன்புணர்வை மறந்து போனாய்? இப்போது நீ மகிழ்ச்சியாக கொண்டாட்டமாக இருந்தால் நீ வன்புணர்வு செய்யப்பட்டவள் இல்லை என்றாகிவிடுமா? தினமும் வன்புணர்வு நடந்து கொண்டிருக்கும்போது நீ எப்படி வன்புணர்வை பற்றி பேசாமல் இருக்கிறாய் என்று கேட்கும் ஒருவன் கொடூர உளவியல் கொண்டவனாகத்தான் இருக்க முடியும். அது போன்றதொரு காரியத்தைத்தான் சாதி இந்து வெறியர்கள் இளையராஜாவிடம் செய்கிறார்கள். சாதி வெறி கொண்டு தற்குறிகளை போல திரியும் தனது சுய சாதியினரிடம் பொச்சை மூடிக்கொண்டு இருந்துகொண்டு, அறிவிலிகளை போல இன்னமும் சகஜமாக பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட சுயசாதி திருமணங்கள் செய்து கொண்டு, அனுதினமும் பன்றிகளை போல பார்ப்பனியத்தின் முன் மண்டியிட்டு கிடக்கும் தமிழக சாதி இந்துக்கள் இளையராஜாவிடம் மட்டும் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூன்றும் கலந்த சிட்டு குருவி லேகியம் தின்றவர்கள்போல ஆகிறார்கள்.
ஒரு பார்ப்பனர் தனது பார்ப்பனிய அடையாளத்தை முன்னிறுத்தாமல்தான் பூணுல் போடுவதில்லை என்றோ, சிக்கன் பிரியாணி சாப்பிடுவேன் என்றோ, எனது ஆத்துக்கு எல்லா சாதியினரும் வருவார்கள் என்றோ ஒரு liberal பார்ப்பனராக தன்னை முன்னிறுத்தினால் சூப்பர் அப்பு என்று ஆர்ப்பரிக்கும் சாதி ஹிந்துக்கள் இளையராஜா தனது தலித் சாதி அடையாளத்தை முற்றிலுமாக மறந்து விட்டு/துறந்துவிட்டு தான் பற்றிக்கொண்ட சாங்கிய, சம்பிரதாய ஹிந்து வாழ்க்கை முறைக்கு நகர்ந்தால் டென்ஷன் ஆகிறார்கள், அவரை கேலி செய்கிறார்கள். ஒரு தலித்தின் புரட்சி என்பது தலித்தாக, தலித்துகள் மத்தியிலிருந்து எழுப்பும் ஒரு ஓலமாக இருக்க வேண்டும் என்கிற அவர்களின் எதிர்பார்ப்புக்கு ராஜாவின் செயல்பாடுகள் முரணாக தெரிகிறது. தர்மராஜ் சொன்னதை போல “நினைவில் மறதி உள்ள மனிதராக” தன்னை வடிவமைத்து கொண்ட ராஜாவை இவர்கள் தங்களது கோவில் திருவிழாவில் மேளம் அடிப்பவர் என்று (சமீபத்திய “தபேலா வாசிப்பவர் எல்லாம் இசையமைப்பாளர் ஆக முடியாது” என்று பேசிய evks இளங்கோவன் பேச்சு ஒரு உதாரணம்) பார்க்கும் மனநிலை சாதி ஹிந்து போக்கிரித்தனத்திலிருந்தே வருகிறது.
“முள்ளும் மலரும்” படத்தில் ரஜினி ஒரு காட்சியில் தன்னை கடந்து போகும் மேளம் அடிப்பவர்களை மிரட்டி வாசிக்க வைக்க “வாசிங்க சாமி” என்று நிறுத்தி “,,,,,வாசிங்கடா டேய்” என்பார். எனக்கு மிகுந்த நெருடலான காட்சியது. சேது திரைப்படத்தில் முதல்காட்சியிலேயே மாணவர் தேர்தலில் வெற்றி அடைந்த விக்ரம் வாத்தியக்காரர்களை பார்த்து “அட்ரா” என்பார். தாய்மாமன் திரைப்படத்தில் கிராமத்தில் வந்திறங்கும் வாத்தியக்காரர்களை சத்யராஜ் “நாயனம்” என்று சொல்லி விசிலடித்து அழைத்து அவர்களை வாசிக்கச் சொல்வார். அவர்கள் தயங்க கவுண்டமணி “கொளந்தப்பய ஆசைப்படறான் லொள்ளு மயிறு பேசுறீங்க..அட்ரா” என்பார். சமீபத்தில் வந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி பாடலுக்கு முன்பாக “யோ என்னய அடிக்கிறீங்க..காசு வாங்குறீங்க இல்ல…வேகமா அடிங்கயா” என்று ஒரு வசனம் வரும். இந்த காட்சிகளை பார்த்த எந்த சாதி ஹிந்துக்கும் மனதில் எந்த சலனமும் ஏற்பட்டிருக்காது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். பறை கருவியை பற்றியும், பறை இசைப்பவர்களை பற்றியும் சாதி ஹிந்துக்களின் மனதில் உள்ள மதிப்பீடு, பார்வை என்ன என்பதற்கான சாட்சியே நான் மேலே அடுக்கிய சில உதாரண காட்சிகள். violin வாசிப்பவர்களையோ, piano வாசிப்பவர்களையோ டேய் வாசிடா என்று சொல்லும் காட்சி வைத்தால் பார்வையாளர்களுக்கே அது அருவெறுப்பாக,வித்தியாசமாக (absurd) இருக்கும். பறையிசை கலைஞர்களை அட்ரா என்று சொல்லும் காட்சி வரும் போது மிக இயல்பாக முகத்தில் புன்னகை தவழ அந்தக் காட்சியை பார்ப்பார்கள். சாதி ஹிந்துக்களின் பறையிசை/பறையர்கள் குறித்தான சமூக/காலாச்சார மதிப்பீடு மற்றும் பார்வை கொண்டே ராஜாவை அணுகுகிறார்கள். “டேய் அட்ரா” என்றவுடன் ராஜா இவர்களுக்கு தவில் எடுத்து அடித்து குஷி படுத்த வேண்டும் என்பது இந்த சில்லறைகளின் உளவியல். ஆனால், ராஜாவின் இசை மேதமை என்பது இந்திய இசை வரலாற்றில் எந்த ஒரு இசை கலைஞரும் அடைய முடியாத உயரங்களை தொட்டது. கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கேற்ப இந்த சில்லறைகள் உணர்ந்துகூட கொள்ள முடியாத உயரத்தில் ராஜா நின்றுகொண்டிருக்க இந்த வெறியர்கள் ராஜா இருக்கும் திசையை நோக்கி “டேய் அட்ரா,,டேய் அட்ரா” என்று பைத்தியக்காரர்கள் போல பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=h2yM2gbO_0Y
https://www.youtube.com/watch?v=HxXZtm0EtZs
“ராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை” என்ற T.தர்மராஜ் எழுதிய புத்தகத்தை நான் இன்னும் படிக்கும் வாய்ப்பு பெறவில்லை. ஆனால் அந்த தலைப்பு எனக்கு ஆழமான கேள்விகளை எழுப்பியது. தமிழகத்தில் பல்வேறு தருணங்களில் தமிழகத்தை வழிநடத்த போவது யார் என்ற கேள்வி வரும்போதெல்லாம் பல்வேறு பெயர்கள் குறிப்பாக திரைப்பட துறையிலிருந்து பரிசீலிக்கப்படும். ஒரு முறை கூட ராஜாவின் பெயர் பரிசீலனைக்கு கூட வந்ததில்லை. ரஜினி, கமலுக்கு இணையான அல்லது அதற்கும் மேலாக ரசிகர்களை கொண்டிருந்த ராஜாவை, தமிழகத்தின் கலை/கலாச்சார முகத்தின் தவிர்க்கமுடியாத மனிதராக விளங்கிய ராஜாவை ஏன் தமிழகத்தை வழிநடத்தக்கூடியவராக யாரும் தப்பித் தவறிகூட முன்மொழியவில்லை? விஜயகாந்த்தையும், ரஜினியையும், கமலையும் முதல்வர் வேட்பாளர்களாக கற்பனை செய்து பார்த்த தமிழ் சமூகம் கற்பனையில்கூட ராஜாவை அந்த இடத்தில் வைத்து பார்த்ததில்லை. ஏன் என்றால் ராஜா தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை just a music provider, not a leader. தமிழ்ச்சமூகத்தின் தகுதிக்கு/ரசனைக்கு மீறிய ராஜாவின் உலகத்தரமான இசையை தமிழ்ச்சமூகம் consume செய்து கொண்டே ராஜா சார்ந்த சமூகத்தின் மீதான பார்வையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் கள்ள அமைதி காத்த/காக்கும் கல்லுளி மங்கன்கள்தான் தமிழ் சமூகம்.

ஜெர்மனிய இசைமேதை Richard Wagner தனது வாழும் காலத்தில் தீவிரமான யூத விரோத கருத்துக்களை தனது பேச்சிலும், எழுத்திலும், இசையிலும் வெளிப்படுத்தியவர். அவரது இசையை குறித்து எழுதுபவர்கள் வாக்னர் தனது இசையில் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைப்பாணிகளில் இருந்து முற்றாய் விலகி “alienation/விலகியிருத்தல்” மிக கவனமாக ஒரு தூய்மையான ஜெர்மனிய செவ்வியில் இசை பாணியை கட்டமைத்தவர் என்றும், இதன் மூலம் தீவிர ஜெர்மனிய தேசியவாதத்திற்கான உத்வேகத்தையும், தேசிய பெருமிதத்தையும் கட்டமைத்தார் என்றும் சொல்கிறார்கள். ஹிட்லருக்கும், நாஜிக்களுக்கும் விருப்பமான இசை கலைஞராக வாக்னர் இருந்தார். வாக்னர் பிரெஞ்சு/இத்தாலிய சாயல்களை தனது இசையிலிருந்து முற்றாய் விலக்கிய(alienate) அதே நேரத்தில் தனது ஜெர்மனிய தேசிய இன பெருமிதத்தை தீவிரமாக பற்றி கொண்டார்(belonging). இதற்கு 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் நிலவிய சமூக, பொருளாதார, கலை இலக்கிய சூழல்கள் காரணமாக அமைந்தன.
ராஜாவை பொருத்தவரை தனது தனிப்பட்ட வாழ்வில் தனது தலித் அடையாளத்திலிருந்து முழுவதும் விலகிவிட்டவர்(alienate) தனது இசையிலும் இசை குறித்தான பேச்சுகளிலும், கருத்துக்களிலும் தனது தலித்திய அடையாளத்தை எந்த தயக்கமும் இல்லாமல் பிரகடனப்படுத்துவதின் மூலம் தனது தலித்திய பின்புலத்தை (belonging)பற்றிக்கொண்டார். ராஜா தனது இசையில் எந்த பாரபட்சமும் தயக்கமும் இல்லாமல் கிராமிய, சாஸ்திரிய, மேற்கத்திய இசை எல்லாவற்றையும் ஒரு தராசில் நிறுத்தியதையும், எந்த இசையும் எந்த இசைக்கும் குறைந்தது இல்லை என்று திரும்ப திரும்ப சொன்னதின் மூலமும், செய்து காட்டியதன் மூலமும் “திமிரு எழு திருப்பி அடி” என்ற அண்ணன் திருமாவளவனின் கலக குரலை இசையில் நிகழ்த்தி காட்டினார். மிக உயர்வான சாஸ்திரிய சங்கீத ராகம் என்று சொல்லப்பட்டவைகளை குத்து பாட்டாக்கி டீ கடைகளில் ஒலிக்க வைத்தார். தியாகய்யர் எழுதிய “மரி மரி நின்னே” என்ற பாடலின் வரிகளை மட்டும் பிரித்து எடுத்து தான் அமைத்த மெட்டுக்குப் பொருத்தி இளையராஜா remix செய்து அவர்களை மண்டையைக்காய வைத்ததோடு, தான் அமைக்க போகும் மெட்டுக்கென்றே தியாகய்யர் “மரி மரி நின்னே” எழுதியதாக தனக்கு தோன்றியதாக மேடைக்கு மேடைக்கு சொல்லி பார்ப்பனிய புனிதங்களை காமெடி ஆக்கினார்.
இந்த புள்ளி ராஜாவின் உளவியலை புரிந்து கொள்வதற்கான முக்கியமான புள்ளியாக நான் பார்க்கிறேன். ராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த ராகம்/இந்த இசைக்கருவி/இந்த இசைமரபு இதற்கு இதற்குத்தான் என்னும் புனிதங்களுக்கெதிரான கலகம்(சுதந்திரம்), எல்லா இசை மரபுகளுக்கும் சமமான இடத்தையும்/அங்கீகாரத்தையும் அளிப்பது(சமத்துவம்), வெவ்வேறு இசை மரபுகளுக்கு இடையேயான தொடர்புகளை/நெருக்கங்களை/உரையாடல்களை/பரிவர்த்தனைகளை தனது இசைக்கோர்ப்பில் நிகழ்த்தி காட்டுவது(சகோதரத்துவம்) என்று ராஜாவின் இசை அம்பேத்கர் முன்மொழிந்த புத்த நெறிகளை கொண்டதாக உள்ளது. இது இயல்பாக அமைந்த அவரது இசை பாணி என்று என்னால் கடந்து போக முடியவில்லை. ராஜாவின் இசையில் வெளிப்படும் அரசியல், ராஜாவின் traumatic past அவருக்குள் ஏற்படுத்திய ஒடுக்குமுறைக்கு, ஆதிக்கத்திற்கு, பாகுபாட்டிற்கு எதிரான ஆவேசமான உளவியலே காரணம் என்று நம்புகிறேன்.(இந்த இடத்தில காக்கி சட்டை படத்தில் வரும் பட்டுக்கன்னம் என்ற பாடலை பரிந்துரைக்கிறேன். நான் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அரசியல் பார்வையோடு இந்தப் பாடலை கேட்டால் உங்கள் கண்கள் கசியும்).
அந்த வகையில் ராஜாவின் இசை இங்கு இருக்கும் எல்லோரையும்விட அம்பேத்காரியத்தை உள்வாங்கிய ஒருவனின் வெளிப்பாடு. அம்பேத்காரின் சனாதனத்திற்கு/ஹிந்து தர்மத்திற்கு எதிரான அனல் கக்கும் வாதங்களை இசையாக மொழி பெயர்த்தால் அது ராஜாவின் இசையாகத்தான் ஒலிக்கும். 1000 பீரங்கிகளோடு நிற்கும் ஒரு படைக்கு எதிராக தன்னந்தனியாக அவர்களை எதிர்த்து களம் புகுந்து எதிரிகளை சிதறடித்த சாகசத்தை நான் ராஜாவின் இசையில் காண்கிறேன். இந்திய, தமிழக சமூக/கலாச்சார உளவியலில் சாதியை தாண்டி எதுவும் நிகழாது, சாதியை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வீழ்த்த முடியாது என்று கொக்கரித்தவர்கள் மத்தியில், அவர்கள் கண் முன்னே தனது இசையில் பாகுபாடு, தீட்டு, புனிதம், விதி போன்ற சாதிய கோட்பாட்டு கற்பிதங்களை செதில் செதிலாக பிய்த்து காற்றில் ஊதினார். தனது இசைத் துறையில், கோட்பாட்டு ரீதியாக சாதியை கட்டமைக்கும் எல்லா விதிகளையும் தலைகீழாக தொங்கவிட்டு தனது இசையால் கொட்டை எடுத்தார். ஒரு வகையில் தனது அடையாளத்தை மறைத்து/மறந்து வாழும் சூழ்நிலைக்கு தன்னை உட்படுத்திய சாதிய சமூகத்திற்கு எதிரான தனது ஆவேசத்தை, கோபத்தை, ஆற்றாமையை, கலகத்தை தனது இசையால் ராஜா தீர்த்துக்கொண்டார்.
ராஜாவை தலைக்கனம் பிடித்தவன் என்று சொல்கிறார்கள். ஒரு மேடையில் ms விஸ்வநாதனை பார்த்து எனது இசை என்பது அண்ணன் துப்பிய எச்சில் என்றார் ராஜா. நாயிற் கடையேன் என்று மாணிக்கவாசகர் தன்னை இறைவனிடத்தில் தாழ்த்தி கொண்டதையும்விட ஒரு dramatic statement ராஜா சொன்னது. ராஜா போன்றதொரு ஒரு இசை மேதை தனது சம காலத்தில் வாழும் இன்னொரு இசை கலைஞரை பார்த்து எனது இசை நீங்கள் துப்பிய எச்சில் என்று சொல்ல எவ்வளவு பணிவும், அடக்கமும் வேண்டும்? இப்படிப் பட்ட ஒருவரை நாம் எப்படி தலைக்கனம் பிடித்த மனிதர் என்று கடந்து போக முடியும்? ராஜா இவ்வளவு ஆளுமை மிக்கவராக இருக்கும்போதே முதுகுக்குப் பின் வந்து அவர்கள் எங்கள் வீட்டில் கஞ்சி குடித்தவர்கள், ராஜா எங்கள் ஊர் தெருவில் தலை குனிந்துதான் நடந்து செல்வார், பார்பனர்களோடு புழங்கினால் பார்ப்பனர் ஆகிவிடுவாரோ, தபேலா வாசிப்பவர் எல்லாம் இசையமைப்பாளராக முடியுமா என்றெல்லாம் பிதற்றும் இந்த மண்டயன்களிடம் ராஜா msvயிடம் காட்டும் பணிவைக் காட்ட வேண்டும் என்று நாம் சொல்ல முடியுமா ? ராஜாவின் இறுக்கம்/ஆணவம் என்பது இந்த சாதி வெறியர்களிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள, விலகி இருக்க அவர் ஏற்படுத்திக்கொண்ட defensive mechanism என்றே நான் பார்க்கிறேன்.
நிகழ்கால சங்கதிக்கு வருவோம். ராஜா அளித்த முகவுரை சம்பவத்தை இரண்டு பகுதியாக பார்க்கலாம். முதல் பகுதி முகவுரை எழுத ராஜா சம்மதித்தது. இரண்டாவது பகுதி அந்த முகவுரையில் அம்பேத்கரோடு மோதியை ஒப்பிட்டது. பிரதமர் மற்றும் அம்பேத்கரை பற்றிய புத்தகத்தில் உங்கள் முகவுரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்களும், பிரதமர் அலுவலகமும் நினைக்கிறது. நீங்கள் முகவுரை அளித்தால் பிரதமர் மகிழ்ச்சி அடைவார் என்று ராஜாவை ஒருவர் அணுகினால், திரை துறையில் எந்த அரசியல் பின்புலமும், அரசியல் செயல்பாடும் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கும் ஒரு இசை கலைஞர் என்ன பதில் சொல்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நடந்து கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசாங்கம் இந்திய முழுவதும் என்ன செய்கிறது என்று பார்க்கிறோம். 4 முறை முதல்வராக இருந்த மாயாவதி தேர்தலில் போட்டியிட கூட அஞ்சி இன்று அமைதி கடைப்பிடிப்பதை பார்க்கிறோம். சமீபத்தில் ராகுல் காந்தி தாங்கள் மாயாவதியை முதல்வர் வேட்பாளராக ஏற்று தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவித்தும் மாயாவதியிடம் இருந்து பதில் இல்லை என்று சொன்னதை அறிவோம். ஒரு காலத்தில் பிரதம வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள மாயாவதி போன்றவர்களே பாஜகவிடம் பம்மும்போது தேர்தல் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத எந்த அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாத ராஜா “முகவுரை தர முடியாது போடா மயிறு” என்று சொல்லியிருக்க வேண்டாமா என்று தமிழக சாதி இந்துக்கள் கொந்தளிப்பது நகைப்புக்குரியது.
சரி முகவுரைக்கு சம்மதித்து விட்டார். அதில் என்ன எழுதுவது? அந்த முகவுரை படித்து பார்த்த எல்லோரும் சொல்ல முடியும் அது நிச்சயம் ராஜா எழுதியிருக்க முடியாது. அம்பேத்கர் பல்வேறு துறைகளில் ஆளுமை செலுத்தியவர், பங்களித்தவர். அந்த முகவுரையில் அம்பேத்கரின் மின்சார துறை கட்டமைப்பு , நீர் மேலாண்மை, பெண்ணிய பார்வைகள்/பங்களிப்புகள் குறித்து கூறி அதில் மோதியின் செயல்பாடுகள் மற்றும் அதில் அவர் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டுகிறார். இதை செய்ய ராஜா அம்பேத்கரின் நான்கைந்து புத்தகங்களையாவது படித்திருக்க வேண்டும், தினசரி தினமலர் படிக்க வேண்டும், தினசரி republic tv பார்க்க வேண்டும். ராஜா அதை செய்யக்கூடியவராக எனக்கு தோன்றவில்லை. என்னை பொறுத்தவரை அவர் குறைந்தபட்சம் செய்தித்தாள் படிப்பவராகக்கூட தெரியவில்லை. எப்படி சொல்கிறேன் என்றால் அவருடைய கடந்த 30 வருட பேச்சுகளையும், பேட்டியையும் பார்த்தவர்களுக்கு அவர் current affairs பற்றி பேசியதோ, கருத்து சொன்னதே இல்லை.
இதனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் பிரதமர் அம்பேத்கர் பற்றிய புத்தக முகவுரையை உங்கள் பெயரில் எழுதி கொள்கிறோம் என்று கேட்டு, ரெண்டு வருமானவரித்துறை நோட்டிசையும் அனுப்பி, சம்மதம் வாங்கி அவர்களே எழுதி கொண்டார்கள் என்று. இதைத்தான் எழுத்தாளர் கவுதம சன்னா அந்த புத்தகத்தின் உள்ளடக்கம் சார்ந்த நடையிலேயே அந்த முகவுரையின் நடையும் அமைந்திருப்பதை சுட்டி காட்டினார்.
இதைத் தாண்டி இளையராஜா வரும் நாட்களில் வெளிப்படையாக வந்து மோதிக்கு வாக்கு சேகரித்தாலுமேகூட நாம் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. நந்தன் தான் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட திருச்சிற்றம்பலத்தை குண்டு வைத்து தகர்த்தெறிந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பலாம். ஆனால், நீங்கள் நந்தனின் மனநிலையிலிருந்து அணுகினால் தான் அவன் ஏன் தீ குண்டத்தில் இறங்கினார் என்பது புரியும். கட்டை விரலை கேட்ட துரோணாச்சாரியை தொங்கவிட்டு கொட்டையில் அம்பு எய்து ஏகலைவன் கொன்று இருக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆனால் ஏகலைவனின் மனநிலையிலிருந்து அணுகினால் தான் அவன் ஏன் கட்டை விரலை வெட்டிக் கொண்டான் என்பது புரியும். தலைகீழாக தொங்கி தவமிருந்துகொண்டிருந்த சம்பூகனை நீ என்ன சாதி என்று கேட்ட ராமனிடம் நான் என்ன சாதிய இருந்தா உனக்கென்னடா மூடிட்டு போடா மயிரு என்று சொல்லி இருக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆனால் சம்பூகனாய் இருந்து யோசித்தால் தான் அவன் ஏன் தன் சாதியையும் சொல்லி தலையையும் கொடுத்தான் என்பது புரியும்.
ராஜா தனது இசையை கருவியாக்கி தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் தலித் எழுச்சியை, கலகத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ராஜாவின் மனநிலையிலிருந்து பார்த்தால் தான் அவர் ஏன் “ரமணமாலை” “திருவாசகம்” என்று பாடல்கள் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரியும். நந்தனையும், ஏகலைவனையும், சம்பூகனையும், ராஜாவையும் ஒருவன் சங்கி, துரோகி என்று திட்ட துணிந்தால் அவனைவிட ஒரு சைக்கோ மண்டையன்/முட்டாள்/போக்கிரி யாரும் இருக்க முடியாது.
ராஜா அளித்த முன்னுரை, அதில் அவர் பெயரில் வந்த ஒப்பீடு அரசியல் ரீதியாக மிக மிக கண்டனத்துக்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் அதற்கு வரும் எதிர்வினைகளில் உள்ள அதிதீவிர தன்மை proportionate ஆக இல்லை. ராஜா தமிழக முதல்வராக வர மொத்த தமிழகமும் அவர் ஸ்டுடியோ வாசலில் காத்து கிடந்ததை போலவும், ராஜாவின் மீதுள்ள பற்றினால் ஒவ்வொரு வீட்டிலும் இளையராஜா என்ற பெயருடைய ஒருவர் இருப்பதை போன்றும், ராஜாவின் இசையை ரசித்து,ருசித்து அனுபவித்த சாதி ஹிந்துக்கள் ராஜாவிற்கு காணிக்கையாக பறையர்கள் மீதான எல்லா ஒடுக்குமுறைகளையும் நிறுத்தி விட்டதை போலவும் இதை எல்லாம் மறந்துவிட்டு ராஜா சங்கிகள் பக்கம் போய்விட்டதை போல அதீதமாக கோமாளித்தனம் செய்கிறார்கள். இந்த முகவுரை வாய்ப்பை வைத்து “தக்காளி நீ சிம்பொனி இசைத்தாலும் எங்கள பொறுத்தவரை பறையன்தான்” என்று இத்தனை காலம் தங்கள் உளவியலில் ஒளித்து வைத்திருந்த வன்மத்தை தீர்த்துக் கொண்டார்கள்.
taoist பழமொழி ஒன்று உண்டு. நிலவை சுட்டும் விரலை ஆராய்ந்து கொண்டிருந்தால் நிலவை காண முடியாது என்று. ராஜா என்பவர் விரல், ராஜாவின் இசை என்பது அந்த விரல் சுட்டும் நிலவு. சங்கிகள் நம்மை நிலவிலிருந்து விரலுக்கு நகர்த்தி விரலில் இருக்கும் சுருக்கங்களையும், கொப்பளங்களையும், நகத்தில் இருக்கும் அழுக்கையும் காட்டி நிலவைக் காட்டும் விரல் எங்களுடையது என்கிறார்கள். நாமும் விரல் சுட்டிய நிலவை மறந்து விட்டு விரலை விமர்சித்து கொண்டிருக்கிறோம். சங்கிகளால் இளையராஜாவை கைப்பற்ற முடியலாம். அவர்களால் அவரது இசையை கைப்பற்ற முடியாது. இளையராஜாவின் இசை சங்கிகளின் எல்லா புனிதங்களுக்கும் எதிராக அவர் அடித்த சாவு பறை சிம்பொனி. இளையராஜாவின் இசை நமக்கு கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதத்தை நமக்கு எதிரான எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதை பிறகு பார்ப்போம். குறைந்தபட்சம் நம்மிடையே நமக்குள்ளேயே புழங்கும் சாதிய பன்றிகளை அடிப்பதற்காவது நாம் இதுவரை பயன்படுத்தி இருக்கிறோமா? ராஜாவின் இசை முன்மொழியும் அரசியல் கோட்பாட்டை விவாத்திருக்கிறோமா? கட்டுப்பெட்டித்தனமான இந்திய இசை மரபில் தியாகய்யரின் பாட்டை remix செய்து அந்தப் பாடலுக்கு தேசிய விருதை பெற்ற ராஜாவின் சாகசத்தில் இருந்து நாம் உத்வேகம் பெற்றிருக்கிறோமா? இருள் சூழ்ந்த சூன்ய இரவில் ராஜாவின் இசை பவுர்ணமி நிலவென ஒளியை கக்கி ஒளியில் தகித்துக் கொண்டிருக்கிறது. நாம் அந்த ஒளியில் வரப்போகும் விடியலுக்கான புரட்சிக்கு திட்டம் வகுப்போம். ராஜாவின் விரலை விட்டு விடுவோம்.
பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.
அரசியல் சூழல் என்னவென்று தெரியாமல், புரியாமல், இராசாவின் இசையிந் கூறுகளை மட்டும் விதந்தோதி, அவரின் அரசியலைப் பற்றி யாரும் மூச்சுவிடக்கூடாது எனும் தன்சாதிமட்டுமே தலித்து இயம் பேசக்கூடிய ஒரு தரப்பாரின் குரலைப் போல பாய்ந்து குதறுகிறது. அரசியல் உரையாடலுக்கு அடையாள/ கும்பல் அரசியல் மனப்பாங்கிலிருந்து விடுபடுவது முதல் தேவை. போலவே இசைச் சுவையே தூக்கலாக இருப்பது எல்லாவற்றுக்கும் தகுதியாகிவிட முடியாது. கரு. அழ. குணசேகரனெல்லாம் செய்யாததை இராசா என்ன கிழித்துவிட்டார் என்றும் கேட்கமுடியும், பதிலுக்கு… கட்டுரையாளரின் தர்க்கப்படி!
LikeLike
மருத்துவர் இனிப்பு தடவி மாத்திரை கொடுத்தது போல,
உளவியல் கூறுகளுடன் விளக்கியது அருமை
LikeLike