பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரோபஷனல் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குர்சங் ப்ரீத் கவுர் என்ற உதவி பேராசிரியை, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது ராமரை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்குப்படி இந்துத்துவ கும்பல் வலியுறுத்திய நிலையில், பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பேராசிரியை, “ராவணன் மிகவும் நல்ல மனிதர் எனவும் ராமர் நல்ல மனிதர் அல்ல. ராமர் மிகவும் தந்திரமானவர் என தான் நினைப்பதாகவும் கூறியிருந்தார்.
சீதையை கவர ராமர் திட்டமிட்டார் எனவும் சீதையை துன்பத்தில் தள்ளிய ராமர், ராவணன் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டார் எனவும் கருத்து சொன்ன பேராசிரியை யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை நாம் எப்படி முடிவு செய்ய முடியும். ஒட்டுமொத்த உலகமும் ராமரை வழிபடுகிறது. ராவணனை தீயவன் என்கிறது. ஆனால் அனைத்து திட்டங்களையும் தீட்டியது ராமர் தான். அப்படி இருக்க அவர் எப்படி நல்லவராக இருக்க முடியும். அவர் தந்திரமானவர் என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை இந்துத்துவ ட்ரோல் படை வைரலாக்கிய நிலையில், இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இந்த சம்பவம் பலரையும் காயப்படுத்தியுள்ளது என்பதை உணர்வதாகவும் பேராசிரியை குர்சங்கின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து எனக் கூறி அவரை பல்கலைக்கழக விதியை மீறி பேசியதற்காக வேலையை விட்டு நீக்கியுள்ளதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் அசோக் குமார் மிட்டல் வருத்தம் தெரிவித்ததுடன் பேராசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அசோக் குமார் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விவகராம் தொடர்பாக பேராசிரியை குர்சங் தரப்பில் எந்தவித விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. சமூக வலைத்தளத்தில் இந்துத்துவ குண்டர்படை தொடுத்த தாக்குதல் காரணமாக அவர் தனது பேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் பக்கங்களை டீ ஆக்டிவேட் செய்துள்ளார்.
தென்மாநிலங்களைப் பொறுத்தவரை இராவணன் கதாநாயகனாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.