உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் மொபைல் போனில் பாகிஸ்தான் பாடலை வெறும் 40 நொடிகள் கேட்ட இரண்டு மைனர் முஸ்லிம் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பூட்டா பகுதியைச் சேர்ந்த சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான நயீம் மற்றும் முஸ்கிம் ஆகியோர் தங்களுடைய உறவினர் நடத்தி வந்த மளிகைக்கடையில் வேலை செய்துள்ளனர். அப்போது கை தவறுதலாக சிறுமி ஒருவர் பாடிய பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை போனில் ஒலிக்க விட்டுள்ளனர். அப்போது கடைக்கு வந்த ஒருவர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். அவர் அந்தப் பாடலை நிறுத்தும்படி கேட்டபோது, அதை நிறுத்தி மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
ஆனால், ஆஷிஷ் என்ற அந்த நபர் சிறுவர்கள் வேண்டுமென்றே பாகிஸ்தான் பாடலை ஒலிக்க விட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு, சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான கூற்றுகளை கூறுதல், வேண்டுமென்றே அவமதித்தல், குற்றம் சார்ந்த மிரட்டல் ஆகிய பிரிவுகள் வழக்கு போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன கர்நாடக பெண் ஒருவரை கைது செய்தது அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு.
முஸ்லீம்கள் தும்மினாலும் இருமினாலும் குற்றம் என வழக்குப் போடும் ஆதித்யநாத்தின் உத்தர பிரதேச அரசு, சிறுவர்கள் என்றும் பாராமல் வழக்கு போட்டுள்ளது. முஸ்லீம்களை கண்காணிக்க இந்துத்துவ குண்டர்களையும் பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.