“இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும் என சங் பரிவாரங்களின் வன்முறையை ஆதரிக்கும் வகையில் பேசினார்.
சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவான ‘அகண்ட பாரதம்’ இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் எனவும் இப்போதிருக்கும் வேகத்தில் சென்றால் 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறிய மோகன் பகவத்,
வேகத்தை அதிகரித்தால், 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே சுவாமி விவேகானந்தர் கற்பனை செய்த இந்தியாவைப் பார்ப்போம் எனப் பேசினார்.
‘இந்து ராஷ்டிரம்’ என்பது ‘சனாதன தர்மம்’ தான். ‘மதமே இந்தியாவின் உயிர்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே, மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை என முழங்கினார்.
அந்த வகையில், இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கி விட்டது. இப்போது ஒரு வாகனம் செல்லத் தொடங்கி உள்ளது. இந்த வாகனத்தில் வேகத்தைக் கூட்டும் ஆக்சிலேட்டர் மட்டுமே இருப்பதாகவும் நிறுத்துவதற்கான பிரேக் கிடையாது எனவும் பேசி அச்சத்தை ஏற்பத்தியுள்ளார்.
மேலும் பேசிய பகவத், அதனால் யாரும் குறுக்கே வந்து விடாதீர்கள் எனவும் தேவையென்றால், எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் அல்லது ஸ்டேசனில் இருந்து கொள்ளலாம். மாறாக, பயணத்தை மட்டும் தடுத்து நிறுத்த நினைக்க வேண்டாம் என எனவும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள் என மோகன் பகவத் பேசியுள்ளது நாட்டின் கொந்தளிப்பான சூழலுக்கு மேலும் பெட்ரோல் ஊற்றுவதுபோல் உள்ளது என சமூக நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.