9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் பாடங்கள் உதவும் எனவும் அவர் கூறினார்.
2022–_ 23 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பகவத் கீதை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என கடந்த மாதம் குஜராத் ஆளும் பாஜக அரசு அறிவித்தது.
கர்நாடக பாஜக அரசும் மாநிலப் பள்ளிகளில் அறநெறிக் கல்வியின் ஒரு பகுதியாக கீதையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியது.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மதம் தொடர்பானவற்றை கற்பிக்கப்படும்போது, அதை தர்க்கத்திற்கும் பகுப்பாய்வுக்கும் உட்படுத்த விரும்பும் மாணவர்களின் கதி என்னவாகும்? பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும், விமர்சன மனப்பான்மையையும் வளர்ப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் கீதையை மனதாரக் கற்கத் தூண்டப்படுவார்கள். நாட்டை ஒற்றை மயமான மதத்தின் கீழ் கொண்டு வருவதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது என பலர் கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், இத்தகைய மதம் சார்ந்த கல்வியை வழங்க மிகவும் ஆர்வமாக இருந்தால், எல்லா மதங்களிலிருந்தும் இத்தைய கல்வியை அளிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் தனக்கு வேண்டியதை மட்டும் செய்வது அவர்களின் நோக்கத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது எனவும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவின் மதப் பன்முகத்தன்மையை மனதில் வைத்து, மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைத்து இந்திய மத நூல்களும் இடம்பெற்றன. அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்ற உன்னதமான மனிதநேயக் கட்டளையை காந்தி பின்பற்றினார். ஆனால், சங் பரிவாரங்கள் மனிதநேயத்தை அழிக்கும் ஒரு மத கோட்பாட்டை பின்பற்றுகின்றன எனவும், கல்விக்கூடங்களில் பகவத் கீதையை பாடமாக்கிய பாஜக அரசுகளை பல கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
உங்கள் நடுநிலை யை தூக்கி குப்பை யில் போடுங்கள்…
LikeLike