கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது ‘ஹலால்’ இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.
கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கியுள்ளனர்.
அரபு மொழியில் ‘ஹலால்’ என்றால் ‘அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள். இது இஸ்லாமிய சட்டங்களின்படி வெட்டப்படும் இறைச்சியாகும், மேலும் இது முஸ்லிம்களால் நுகர்வுக்காக விற்கப்பட்டாலும், இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் ‘ஹலால்’ கடைகளிலும் இறைச்சியை வாங்குகிறார்கள்.
இருப்பினும், ஆண்டுதோறும் உகாதிக்கு மறுநாள், இந்துக்களில் ஒரு பகுதியினர் அசைவ உணவுகளை தயாரித்து உண்பது வழக்கம். – இந்த நாளில் இறைச்சி விற்பனை இரட்டிப்பாகும் நிலையில்,- இந்துத்துவா அமைப்புகள் ’ஹலால்’ இறைச்சியை வாங்கக்கூடாது எனக் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகள் ஹலால் இறைச்சியைப் பயன்படுத்த வேண்டாம் என வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றன. துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்து வருகின்றனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த இயக்கத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கியுள்ளது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மார்ச் 29, செவ்வாய்க்கிழமை, ஹலால் உணவை “பொருளாதார ஜிஹாத்” என்று அழைத்திருந்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒரு நாள் கழித்து, மார்ச் 30 அன்று, ஹலால் இறைச்சி மீதான ‘கடுமையான ஆட்சேபனைகளை’ மாநில அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மார்ச் 31, வியாழன் அன்று, இந்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு வரையறுக்கப்பட்ட பங்கு உள்ளது எனவும் இதை மக்களின் முடிவுக்கே விடப்படுவதாகவும் கூறினார்.
அதே நாளில் ஷிவமொக்கா பத்ராவதியில் முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர் தாக்கப்பட்டார். ஹலால் அல்லாத இறைச்சியை விற்குமாறு பஜ்ரங் தள் அமைப்பினர் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். இனிமேல்தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறிய கடைக்காரரை அடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் மூவர் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், “ஹலால் அல்லாத” இறைச்சியை வழங்காததற்காக ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதே பஜ்ரங் தள் அமைப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களால் பாஜக தலைமையிலான அரசு கர்நாடக மாநிலத்தை உத்தர பிரதேசமாக மாற்றி வருவதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.