மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் தீர்ப்பு வரலாம்.
அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுகிறேன். தமிழகத்தில் மத பதட்டத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்தால் உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம். ஆர்.எஸ்.எஸ் எங்கே இருந்தாலும் அங்கே செல்வோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம். அதன் குகைக்குள் செல்வோம். மதச்சார்பின்மையை குலைக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் செய்யும் எல்லா செயல்களையும் தடுத்து நிறுத்துவோம்.
கோயில்கள் இறை நம்பிக்கை வாழ்கிற இடம். அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளில் மட்டுமல்ல, கோயில் நிகழ்வுகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும். கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம், மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்வோம்.
பாஜகவை விரட்டும் போரில் மு.க.ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரத்தில் முதலமைச்சர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்கு உரியது. ஆனால், அவரை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றம். அந்த சட்டத்தின் படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு நிலைமை என்ன? சாதிய ஆணவ வெறிக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக என்ன விலையையும் கொடுக்க தயாராக உள்ளோம்.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். சிறுகுறு தொழில்களை மீட்டெடுக்க வேண்டும், கி்ராம புற விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மிரட்டல் வர தொடங்கியுள்ளது. இதனை நியாயப்படுத்தி முதல்வர் பேசக்கூடாது. நீட் தேர்வு விதிவிலக்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அது போல நீர்நிலைகளில் வசிப்பவர்களையும், கோவில் இடங்களில் வசிப்பவர்களையும் பாதுகாக்க புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.