மாட்டு சாணத்துக்கு பணம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கோமியத்தையும் கொள்முதல் செய்ய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காமதேனு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாட்டு கோமியம் சேகரிப்பு, தர பரிசோதனை மற்றும் அதிலிருந்து என்னென்ன பொருட்களைத் தயாரிக்கலாம் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பசுவின் கோமியத்தில் இருந்து உயிர் உரங்கள் மற்றும் உயிர் நொதிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சத்தீஸ்கர் அரசு மாட்டுச் சாணத்தைப் போன்றே கால்நடைகளின் சிறுநீரையும் வாங்கும். நாங்கள் கிராம கௌதன் (பசுக் கொட்டகை) சமிதி மூலம் மாட்டு கோமியத்தையும் வாங்குவோம். மேலும் கால்நடை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பணம் செலுத்தப்படும்’’ என்று முதலமைச்சரின் ஆலோசகர் பிரதீப் ஷ்ரமா தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கரில் 2,61,503 கால்நடைகள் இருந்தன. ஜூலை 2020 இல், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசாங்கம் கோதன் நியாய் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் மாநில அரசு விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோவுக்கு ஒன்றரை ரூபாய் என்ற விகிதத்தில் மாட்டு சாணத்தை கொள்முதல் செய்கிறது.
அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும், பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இதுபோன்ற திட்டங்களை இன்னும் முறையாக நிறுவவில்லை என்றாலும், இதேபோன்ற பாதையை பின்பற்றுகிறது. கடந்த வாரம், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பசு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாட்டு சாணம் உள்ளிட்ட அதன் பொருட்களின் பொருளாதார திறன் குறித்து பேசினார்.
“மாநிலத்தில் மாட்டுச் சாணத்தை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பசு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, மத்திய பிரதேசத்தில் புதிய பணிகள் தொடங்கப்படும், என்றார்.
பசுவின் சாணம் மற்றும் கோமியம் மூலம் வருமானம் இருந்தால், சாதாரண குடிமக்கள் மாடு வளர்ப்பில் உந்துதல் பெறுவார்கள். ‘கௌசாலாக்களை’ (பசுக் காப்பகங்கள்) சுயமாக நிலைநிறுத்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சவுகான் கூறினார்.
ம.பி.யில் உள்ள இந்தூரில் சாணத்திலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் பயோ -சிஎன்ஜி ஆலை வெற்றிகரமாக செயல்பட்ட பிறகு, கோபர்தன் திட்டம் மாநிலத்தின் பிற நகரங்களிலும் செயல்படுத்தப்படும், என்றார்.
பசுவளைய மாநிலங்களில், பசுவைக் கடந்த சமூகத்தை முன்னேற்றம் காண வைக்கும் பிற பொருளாதார திட்டங்கள் தீட்டுவது, அமலாக்குவது குறைவாகவே உள்ளது. காங்கிரசும் பாஜகவும் போட்டிப் போட்டுக்கொண்டு பசு அரசியலை கையில் எடுக்கின்றன. மாட்டுச் சாணமும், மாட்டுக் கோமியமும் எவ்வித மருத்துவ குணங்களையோ, புரட்டிப்போடும் பொருளாதார பலன்களையோ கொண்டவை அல்ல என நிரூபிக்கப்பட்ட போதும், மக்களின் வரிப்பணத்தை வீண் கோமிய ஆய்வுக்கு செலவிடுவதாக பல அறிவியலாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.