சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக பல காலமாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஐஐடி ஆய்வு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அதுகுறித்த புகாரை நீர்த்துப்போக வைக்க ஐஐடி சென்னை நிர்வாகம் முயன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அண்மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஐஐடி-மெட்ராஸைச் சேர்ந்த 30 வயது பெண் பிஎச்டி பட்டதாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்தது.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, மார்ச் 29, 2021 அன்று பதிவுசெய்யப்பட்ட வழக்கை வேண்டுமென்றே நகர காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்து வருவதாகவும் குற்றச்சாட்டைக் கூறியது. விசாரணைக்கு பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியது.
ஆய்வு மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார். அதில் சக ஆய்வு மாணவர் கிங்சுக் தேப்சர்மா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் தன்னை ஐஐடியில் சேர்ந்த 2016- ஆம் ஆண்டிலிருந்து பலமுறை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அவர் தேசிய மகளிர் ஆணையம் (NCW), SC/ST ஆணையம் மற்றும் பிற அமைப்புகளுக்கும் தன்னுடைய புகாரை அனுப்பியுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது.
மேலும், ஜூலை 2021 இல் எட்டு பேர் (முக்கிய குற்றவாளியான தேப்சர்மா உட்பட) மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 இன் கீழ்) சேர்க்கப்படவில்லை. புகார் அளித்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் (SC/ST சட்டம்) கீழ் எந்தப் பிரிவும் பயன்படுத்தப்படவில்லை.
புகார்தாரரின் கூற்றுப்படி, அவர் 2016 இல் நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து, அவர் பலமுறை உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
காவல்துறையை அணுகுவதற்கு முன், ஆய்வு மாணவி ஐஐடி சென்னையின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழுவில் (CCASH) ஜூலை 17, 2020 அன்று புகார் செய்தார்.
புகாரில், டெப்சர்மா தன்னை இரண்டு முறை உடல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறினார் – ஒருமுறை கல்லூரி ஆய்வகத்தில் மற்றும் மீண்டும் கூர்க் பயணத்தின் போது; ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தது; மற்ற ஆய்வாளர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் உடன் சேர்ந்து, அவரைப் பற்றி ‘கொச்சையான’ கருத்துக்களைச் சொல்லி, அவரைத் தாழ்த்தியுள்ளார்;
ஜூலை மற்றும் செப்டம்பர் 2021 க்கு இடையில் அவர் ஒன்பது முறை CCASH க்கு ஆன்லைன் புகார்களை சமர்ப்பித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, CCASH தேப்சர்மா உட்பட 3 ஆய்வாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க ஒரு இடைக்காலப் பரிந்துரையை அளித்தது.
புகார்தாரர் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்று CCASH பரிந்துரைத்தது. மேலும் அவரது ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை மேலும் விசாரணையை ஒத்திவைத்தது.
பரிந்துரைகளில் காவல்துறையில் புகார் செய்வது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. CCASH பரிந்துரைகள் இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பதைப் பார்த்த பிறகு, புகார்தாரர் காவல்துறையை அணுக முடிவு செய்தார்.
இந்த நிலையில், AIDWA தமிழ்நாடு தலைவர் S. வாலண்டினா மற்றும் செயலாளர் P. சுகந்தி ஆகியோர் இந்த வழக்கை கையில் எடுத்து, இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டுகள் சொன்ன பிறகு, மிகவும் மெத்தனமாக வழக்கு நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினர்.
வாலண்டினா மற்றும் சுகந்தி மேலும் கூறுகையில், முக்கிய குற்றவாளி தன்னை வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டினார், ஆனால் பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், புகைப்படங்கள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
AIDWA சேப்பாக்கம்-டிரிப்ளிகேன் பகுதியின் பொறுப்பாளர் கவிதா கஜேந்திரன், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அனுபவித்த துயரத்தை மேலும் விரிவாகக் கூறினார். விசாரணை அதிகாரி தனது அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும், வழக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் புகார்தாரர் கூறியதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் சோர்வடைந்து புகாரை கைவிட்டுவிட வேண்டும் என்று காவல்துறையினர் விரும்பினர். மேலும் எந்த பிரச்சனையும் உருவாக்காமல் பாதிக்கப்பட்ட பெண் வளாகத்தை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்த காவல்துறையினர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுவதாகவும் கவிதா குற்றம்சாட்டியிருந்தார்.
இது பேசுபொருளான நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை நேற்று இரவு மேற்குவங்கம் சென்றது.
இதனையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான கிங்சோ தெப் சர்மாவை கொல்கத்தாவில் இன்று கைது செய்தனர். டைமண்ட் ஹார்பர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கிங்சோ தெப்சர்மா தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து வாரண்ட் பெற்ற பின் கிங்சோ தெப்சர்மாவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.