புதன்கிழமை, விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்பு சிறையில் ஆறு விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பத்திரிகையாளர்கள் அல்லது புகைப்படக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க இராணுவம் செய்த தவறுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான் ஜூலியன் அசாஞ்சே மீது 18 உளவு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தியுள்ளது.
தற்போது பிரிட்டன் அரசு சிறையில் அசாஞ்சே உள்ளார். அமெரிக்கா 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், தன்னை நாடு கடத்தக்கூடாது என அசாஞ்சே வழக்காடி வருகிறார். மூன்று வாரங்களுக்குள் அவரை நாடு கடத்துவது குறித்து தீர்ப்பளிக்க உள்ளது.
லண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் அகதியாக அசாஞ்சே தஞ்சமடைந்திருந்தபோது, வழக்கறிஞர் மோரிஸ் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது பிறந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் திருமணத்தில் பங்கேற்றனர்.
சிறைக்கு வெளியே, அசாஞ்சேயின் ஆதரவாளர்கள் இந்த இணையருக்கு வாழ்த்து தெரிவிக்க ஒன்று கூடியிருந்தனர்.
“எனக்குத் தெரிந்து மிகவும் வியப்பூட்டக்கூடிய நபர் அசாஞ்சே. நாங்கள் இப்போது மனிதாபிமானமற்ற தன்மையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் காதல் எங்களை வாழவைக்கும்’’ என்று மோரிஸ் கண்ணீருடன் கூறினார்.
தங்களது திருமணம் குறித்து உணர்ச்சிகரமான குறிப்பொன்றை அவர் தி கார்டியன் இணையத்தில் எழுதியுள்ளார்.
அதில், ‘இன்று என் திருமண நாள். நான் என் வாழ்க்கையின் அன்புக்குரியவரை மணப்பேன். என் கணவராகப் போகிறவர். எங்கள் இரு மகன்களின் தந்தை, அவர் ஒரு அற்புதமான மனிதர், புத்திசாலி மற்றும் வேடிக்கையானவர். அவர் சரி மற்றும் தவறு பற்றிய ஆழமான உணர்வைக் கொண்டவர். மேலும், அவர் ஒரு தைரியமான வெளியீட்டாளராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இன்று மதிய உணவு நேரத்தில், நான் நாட்டின் மிகவும் அடக்குமுறையான உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள வாயில்கள் வழியாக சென்று, அரசியல் கைதியான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை திருமணம் செய்து கொள்வேன்.
நிச்சயமாக, நாங்கள் விரும்பிய திருமணம் விழா இது அல்ல. வெளிநாட்டு சதியின் மூலம் ஜூலியனை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதன் காரணமாக, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அநியாயமாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று ஒரு தனிப்பட்ட தருணமாக நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் அன்பை உறுதிப்படுத்துவோம். ஜூலியனின் நண்பர்களான டேம் விவியென் வெஸ்ட்வுட் மற்றும் ஆண்ட்ரியாஸ் க்ரோன்தாலர் ஆகியோரால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அழகான படைப்பை அணிந்திருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த கொடூரமான சூழ்நிலையை எதிர்கொள்வதில் இது எங்கள் அன்பின் மற்றும் எதிர்ப்பின் சின்னமாகும்.
இது சிறைத் திருமணம் அல்ல, சிறைச் சுவர்களை மீறி, அரசியல் துன்புறுத்தலுக்கு மத்தியிலும், தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்தும், ஜூலியனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட தீங்குகள் மற்றும் துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், இது அன்பின் மற்றும் நெகிழ்ச்சியின் அறிவிப்பு. அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது.
இந்த தனிப்பட்ட நிகழ்வின் ஒவ்வொரு பகுதியும் எங்களின் விருந்தினர் பட்டியல் முதல் திருமணப் படம் எடுத்தல் வரை தீவிர காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’ என எழுதியுள்ளார்.