2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்வதற்கு முன், சமாதி முன் தியானத்தில் அமர்ந்து தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். சுடச்சுட தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் முடித்து திரும்பிய அவர், ’அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது எனக் கூறி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்தார்.
அப்போது வரை தமிழக அரசியலில் தனக்கென எந்தவொரு தனித்த அடையாளத்தைக் கொண்டிராதவராக, முதலமைச்சராக இருந்தபோதும் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக இருந்தவர் இப்படி தர்மயுத்தம் எனக் கிளம்பியதும் பலர் வியந்தனர்; மக்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது.
மக்கள் யாரிந்த ஓ. பன்னீர்செல்வம் என அவருடைய வரலாற்றைத் தேடிப்பார்க்கத் தொடங்கினர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்லம் சாதாரண தொண்டராக அதிமுக-க்குள் தனது பயணத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அவரது மனைவி தலைமையில் ஜானகி அணி, நடிகர் திலகம் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதாரவாக செயல்பட்டு வந்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்ததும் அவரது தலைமையை ஏற்றார்.
அந்த சமயத்தில் முதன் முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராக அதிகாரத்தை தொட்டு பார்த்த ஓ.பி.எஸ்., 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவால் களமிறக்கப்பட்ட டிடிவி தினகரனுக்காக விஸ்வாசமாக உழைத்து, அப்போது அதிமுகவில் திரைமறைவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த சசிகலா குடும்பத்தின் ஆதரவைப் பெற்றார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரசபை தலைவராக 1996ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது. வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தான் சிறை செல்லும் போதெல்லாம் ஓ.பி.எஸ்.,யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்தவர் ஓபிஎஸ்! ஆனால், 2016 தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே ஓபிஎஸ்.ஸை ஓரங்கட்ட ஆரம்பித்தார் ஜெயலலிதா. அப்போதைய தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அவர் இடம்பெறவில்லை. ஆனாலும் தேர்தலில் சீட் கிடைத்து ஜெயித்து, அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.
பழைய மாதிரி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என ‘வளமான’ இலாகாக்கள் இல்லாமல், நிதித்துறையை மட்டுமே அவரிடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அந்த நேர குழப்பங்களை தவிர்க்க ஓபிஎஸ்.ஸையே முதலமைச்சர் ஆக்க சசிகலா சம்மதித்தார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்.ஸுக்கும் கடந்த 2011-க்கு பிறகு சரியான புரிதல் இல்லை என்பது பின்னர் ஓபிஎஸ்.ஸே ஒப்புக்கொண்ட உண்மை!
ஆனாலும் ஜெயலலிதாவிடம் இருந்ததுபோலவே ஓபிஎஸ் தன்னிடம் பவ்யமாக நடந்து கொள்வார் என சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் ஓபிஎஸ்.ஸுக்கு டெல்லி தொடர்புகள் புதுத் தெம்பைக் கொடுத்தன. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது இடைக்கால முதலமைச்சராக காட்டிய பவ்யத்தை, இப்போது சசிகலாவிடம் அவர் காட்டவில்லை.
வர்தா புயல் சென்னையை உலுக்கியபோது, மக்கள் மத்தியில் தனது இமேஜை உயர்த்தும் வகையில் பம்பரமாக சுழன்றார் ஓபிஎஸ்! சசிகலாவுக்கு இது சந்தேகத்தை உருவாக்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய அவர், முதலமைச்சர் பதவியையும் கைக்குள் கொண்டு வராவிட்டால் மொத்தமும் கை மீறிவிடும் என நினைத்தார்.
எனவே தம்பிதுரை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை வைத்து, ‘கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும்’ என பேச வைத்தார். அதன்படி ஓபிஎஸ்.ஸிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. இரு நாட்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் முடங்கிக் கிடந்த ஓபிஎஸ், 2017 பிப்ரவரி 7-ம் தேதி மாலை 7 மணிக்கு பிறகு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வந்தார்.
யாரிடமும் எதுவும் சொல்லாமல், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்களை மூடி தியானத்தை தொடங்கினார். ஜெயலலிதா மரணம் ஏற்படுத்தியிருந்த துக்கம், அப்பல்லோவில் ஜெயலலிதாவின் முகத்தையே வெளியே காட்டாத சசிகலா மீது மக்கள் மத்தியில் மண்டியிருந்த கோபம் எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த நேரம் அது!
முகத்தை படுசோகமாக வைத்துக்கொண்டு ஓபிஎஸ் கண்களை மூடி தியானமிருந்தபோது, மொத்த தமிழ்நாட்டையும் சில நிமிடங்களில் தன் பக்கம் திருப்பினார் ஓபிஎஸ்! ‘சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் ராஜினாமா செய்தேன். சசிகலாவை பற்றி 10 சதவிகிதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவிகிதத்தை கூறுவேன்’ என்றார் ஓபிஎஸ்!
சொல்லி வைத்தார்போல, ஆளுநர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பதை தள்ளிப்போட, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வந்து, சிறைக்குச் சென்றார் அவர். அதன்பின், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது, தினகரனை முன்நிறுத்த முயற்சித்து பின்வாங்கியது, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்தது என அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்தன.
‘சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது’ ஆகிய இரண்டும்தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகள்! இவற்றை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டதால், அணி இணைப்புக்கு ஒத்துழைத்தார் ஓபிஎஸ்!
அணிகள் இணைந்து அவர் துணை முதலமைச்சர் ஆனது மட்டும்தான் இன்று வரை அவரது தர்மயுத்தத்தின் பலனாக இருந்து வருகிறது. ஏனென்றால், சிபிஐ விசாரணை என்கிற கோரிக்கையை அணிகள் இணைப்புக்கு பிறகு ஓபிஎஸ் தரப்பே வலியுறுத்தவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
எதற்காக தர்ம யுத்தம் தொடங்கினாரோ, அது வெறும் ஊசி வெடி என ஐந்தாண்டு கழித்து நிரூபித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். தங்களது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை துப்பு துலக்க எந்த முயற்சியும் எடுக்காத அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக 8 முறை வாய்தா வாங்கிய அவர், சசிகலாவை சதி செய்கிறார் என குற்றம்சாட்டிய அவர், இப்போது தலைகிழாக கூறியிருக்கிறார். அதாவது ஜெயலலிதா மரணத்தில் சசிகலா எந்தவித சதியும் செய்யவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார்.
அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குபவர்கள் என்கிற கூற்றை ஓ. பன்னீர்செல்வம் ஐந்தாண்டு கால தர்ம யுத்தத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என சமூக ஊடகங்களில் தர்மயுத்தத்துக்கு கைத்தட்டிய மக்கள் இப்போது கொந்தளிக்கிறார்கள்.