கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளும், மேற்கின் ஆதரவு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்தும் வருகின்றன. பொருளாதார தடைகள் மட்டுமல்லாது ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு எனத் தொடரும் இந்தத் தடைகளின் பட்டியலில், தற்போது ஜெர்மனிக்காரான் கார்ல் மார்க்ஸும் இணைந்துள்ளார்.
கடந்த வாரம், புளோரிடா பல்கலைக்கழகம், தனது மாணவர்கள் படிப்பறை ஒன்றுக்கு இட்ட பெயரான ‘கார்ல் மார்க்ஸ் குழு ஆய்வு அறை’ என்ற பெயரை நீக்கி, ‘குழு ஆய்வு அறை 229’ என மாற்றியுள்ளது.
“உக்ரைன் மற்றும் உலகின் பிற இடங்களில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளின் அடிப்படையில், 2014 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் குழு ஆய்வு அறையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்குவது பொருத்தமானது என்று நாங்கள் தீர்மானித்தோம்’’ என புளோரிடா பல்கலைக்கழகம் இதுகுறித்து தெரிவித்துள்ளது.
1848 ஆம் ஆண்டு வெளியான மார்க்ஸின் ‘கம்யூனிச சித்தாந்தம், சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் புரட்சிக்கு உத்வேகம் அளித்தது. எனினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் மார்க்ஸ் நினைத்த விதத்தில் அது செயல்படுத்தப்படவில்லை என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
சோவியத் ரஷ்யா சிதறுண்டு, தற்போதைய ரஷ்யாவுக்கு அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல் மாறிவிட்டது. ஆனாலும் மேற்குலகம் ரஷ்யாவை கம்யூனிச நாடாகவே கருதிவருகிறது.
செய்தி ஆதாரம்: https://www.indy100.com/news/karl-marx-university-florida-russia