பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுப்பதோடு, கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார். இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதால் சிலர் அதிருப்தியும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்து மதுரையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய பழனிவேல் தியாகராஜன், ‘தாலிக்குத் தங்கம் திட்டம் நான்கு வருடங்களாக பெயரளவுக்கு மட்டுமே இருந்ததாகவும் அதை காலத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியிருந்ததாகவும் கூறினார்.
பள்ளி கல்வியில் மாணவிகள் தேர்ச்சி மதிப்பெண் அதிகமாக உள்ளது. ஆனால் கல்லூரி படிப்பில் மாணவிகள் பயிலும் சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டே 1000ரூபாய் வழங்கப்படுவதாகவும் மீண்டும் விளக்கமளித்தார்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் திருமணம் என்பதாக இருந்தது அது தற்போது சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதாக மாறியுள்ளது என்றார். தி.மு.க.,வினர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் கொள்கை அரசியல்வாதிகளாகவே இருந்து வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இது குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெண்ணுரிமை, பெண் கல்வி, சமூக நீதி என்ற அடிப்படையிலேயே திருமண உதவித்திட்டம், உயர் கல்வி உரிமைத்திட்டமாக மாற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார். பெண்களுக்கு கல்வியே நிரந்தர சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன், கல்வி எனும் நிரந்தர சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியது தாலிக்கு தங்கம் சர்ச்சையை முடித்து வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.