ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டில் மெக்காலே கல்வித் திட்டத்தை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிப்பதுடன், கல்வித்திட்டம் இந்திய மயமாவதற்கு அச்சாணியாகத் திகழும் என்றார். கல்விமுறையில் காவியை புகுத்த முயற்சிப்பதாக சிலர் குற்றம் சாட்டுவதாகக் கூறிய அவர், ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.
வசுதேவ குடும்பம் போன்ற தத்துவங்கள் நமது பண்டைய காலத்தில் கூறப்பட்டவை. தற்போதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளாக அவை இருக்கின்றன என்று தெரிவித்த அவர், முடிந்தவரை இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவின் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றும் கூறினார்.
குடியரசு துணை தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி வெளிப்படைய காவிமயத்தை ஆதரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.